Jump to content

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2405
  • Joined

  • Last visited

  • Days Won

    49

Everything posted by Kavi arunasalam

  1. கொஞ்ச நாட்களாக கோபிசங்கரை காணவில்லை என்று யோசித்தேன். இப்பொழுதுதான் தெரிகிறது டொக்டருக்கு காய்ச்சல் என்று. இதை வாசிக்கும் போது, பழைய நினைவுகள் வந்து போகிறது. காய்ச்சல் என்றவுடன், பாலில் சீனி கலந்து அதற்குள் பாணை ஊறவைத்து,அதை தோசைச்சட்டியில் வாட்டி எடுத்துத் தரும் அம்மா முன்னால் வந்து நிற்கிறார். நன்றி Dr.கோபிசங்கர்
  2. பெரிய தொழில் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருந்ததுதான் புரொசேகுயர் என்ற நிறுவனம் . யேர்மனியில் ஸ்ருட்கார்ட் நகரில் அமைந்திருந்த அந்த நிறுவனம், தனது வாடிக்கையாளர்களின் நிலையங்களுக்கு சென்று அவர்களின் பணங்களைத் திரட்டி பாதுகாப்பாக வைத்திருந்து அவர்கள் தேவைக்கு ஏற்ப மீண்டும் வழங்கிக் கொண்டிருந்தது. அந்த நிறுவனத்தில்தான் மியர்னேசா வேலை செய்து கொண்டிருந்தாள். 42 வயதான மியர்னேசா தன்னை எப்பொழுதும் அழகாகக் காட்டிக் கொண்டாள்.. வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பது அவள் விருப்பம். ஆனாலும் துணையின்றித் தனியாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தாள். 28 வயதான ரோபேர்ட் அவளைத் தேடி வந்த போது, அமைதியான நதியாக இருந்த அவளது வாழ்க்கையில் ஆனந்த அலைகள் எழ ஆரம்பித்தன. ஒரு மாலை நேரம் மியர்னேசா நகர மையத்தில் உள்ள ‘பார்’ ஒன்றில் தனியாக இருந்து மதுவைச் சுவைத்துக் கொண்டிருந்தாள். எந்தவித அனுமதியும் பெறாமல் அவளுக்கு அருகில் இருந்த இருக்கையில் ஒரு இளைஞன் வந்து அமர்ந்தான். “ஹலோ, தனிமையில் இனிமையா?” நீண்ட நாள் பழகிய நண்பர்களிடம் இருந்து வரும் வார்த்தைகள் அந்த இளைஞனின் கேள்வியில் இருந்தன. முன்பின் தெரியாத ஒரு அழகான இளைஞன். அவனைப் பார்த்ததும், அவன் தன்னைவிட வயதில் குறைந்தவன் என்பது மியர்னேசாவுக்குத் தெரிந்தது. சிரித்துக் கொண்டாள். “உங்கள் தனிமைக்கு நான் இடைஞ்சல் செய்கிறேன் என்றால் சொல்லுங்கள் போய்விடுகிறேன்” “இல்லை. பிரச்சினை இல்லை. நீங்கள் இருக்கலாம்” அவள் தன்னை அறியாமல் அதைச் சொன்னாள். ஏதோ ஒன்று அந்த இளைஞனிடம் இருந்து அவளை ஈர்த்தது. “நன்றி. என்பெயர் ரோபேர்ட்……” அந்தச் சந்திப்பின் பின்னர், அடிக்கடி ரோபேர்ட்டை, மியர்னேசா சந்தித்தாள்.எப்போதும் அந்தச் சந்திப்புகள் எதேச்சையாக நடந்ததாகவே அவள் நம்பினாள். இப்பொழுதெல்லாம் மியர்னேசா தனது தனிமையை உணர்வதில்லை. ரோபேர்ட் அவளுடன் கூடவே இருந்தான். சந்தர்ப்பம் கிடைக்கும் நேரம் எல்லாம் மியர்னேசோவின் அழகை ரோபேர்ட் புகழ்ந்தான். “காதலுக்கு வயதில்லை. பிரான்ஸ் ஜனாதிபதியைப் பார்த்தியா?” என்று அவளுக்கு நம்பிக்கை தந்தான். மியர்னேசாவைச் சந்திக்குப் போதெல்லாம் ஏதாவது ஒரு உயர்ந்த பரிசுப் பொருள் ஒன்று ரோபேர்ட்டின் கையில் இருக்கும். “வாழ்க்கை இனிமையானதுதான். பணம் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். நீயாவது வேலை இடத்தில் கட்டுக் கட்டாகப் பணத்தைப் பார்க்கிறாய். நாலு நோட்டுக்களை ஒரு சேரப் பார்ப்பதே எனக்கு குதிரைக் கொம்பு” “பணம் இருந்தால் நல்லதுதான். அது சும்மா கிடைக்காது” “கிடைக்கும். நீ நினைச்சால்” “எப்பிடி?” “உன் வேலை இடத்தில் இருந்து எடுத்திடு” “எனக்கு சினிமா காட்டுறியா? எவ்வளவு கமரா அங்கே இருக்கு? ஒரு ‘தாள்’ கூட எடுக்கேலாது” பணத்தைப் பற்றிய முதல்நாள் பேச்சில் அவள் கொஞ்சம் நகர்ந்திருப்பதை ரோபேர்ட் உணர்ந்தான். தொடர்ந்த சந்திப்புகளில் அவன், அவள் அழகைப் பற்றி பேசிவிட்டு அடுத்ததாகப் பணத்துக்கு தாவிவிடுவான். கொஞ்சம் கொஞ்சமாக ரோபேர்ட்டின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் மியர்னேசா வந்து சேர்ந்து விட்டாள். ஒரு வெள்ளிக்கிழமை, மதியம் தாண்டி, நேரம் மெதுவாக மாலைக்குள் நகர்ந்து கொண்டிருந்தது. மியர்னேசா நேரத்தைப் பார்த்தாள் 15:10. வார விடுமுறை வருவதால் பலர் 3மணிக்கே வேலையை முடித்து விட்டுப் போய் விட்டார்கள். அவளும் மூன்று மணிக்கு வேலையை முடித்து வீட்டுக்குப் போயிருக்க வேண்டும். ஆனால் அன்று அவள் பத்து நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக் கொண்டாள். பணம் இருக்கும் அறைக்குள் சென்று பணப் பாதுகாப்புப் பெட்டகத்தைத் திறந்து அங்கிருந்த பணத்தை எடுத்து ஒரு அட்டைப் பெட்டிக்குள் அடுக்கிக் கொண்டாள். உடை மாற்றும் அறைக்குள் போய் அந்தப் பணக்கட்டுகளை தனது sports bagக்குள் மாற்றிக் கொண்டாள். கட்டுக் கட்டாக இதுவரை பார்த்த பணம், இப்பொழுது அவள் தோள் பட்டையில் தொங்கிக் கொண்டிருந்த பைக்குள் இருந்தன. வழமைபோல் காவலாளிக்கு மாலை வாழ்த்துக்களை சொல்லிப் போகிறவள் அன்று வார இறுதி நாட்களுக்கும் சேர்த்து வாழ்த்துச் சொல்லி விட்டு, வீதியில் நின்ற ரோபேர்டடின் காரில் ஏறிக் கொண்டாள். “குற்றம் என்று தெரிஞ்சும் பிழையான வேலை ஒன்றை செய்திட்டன். உன்னால்தான் எல்லாம். எனக்குப் பயமாக இருக்கு” “இது உனக்கு முதல் களவு…” “அப்பிடி எண்டால் நீ முந்தியும் களவு செய்திருக்கிறாயா?” ரோபேர்ட் பெரிதாகச் சிரித்தான். “அப்பிடி எல்லாம் இல்லை. நான் உன்னைப் போல பதட்டப்பட இல்லை அவ்வளவுதான்” “அங்கே கமராவிலே எல்லாமே பதிஞ்சிருக்கும்” “நாங்கள்தானே எங்களுடைய அடையாளங்களை மாற்றிக் கொள்ளப் போகிறோமே! பயப்படுறதுக்கு எதுவுமே இல்லை. வழக்கம் போலை பூட்டிப் போட்டு வந்தனிதானே? பணத்தைக் காணவில்லை எண்டு தெரிஞ்சாப் போலைதான் கமராவைப் பாப்பாங்கள். அதுவரை எங்களுக்கு நேரம் இருக்கு. அதாவது திங்கட்கிழமை காலை மட்டும்” “இப்ப எங்கே போகிறோம்?” “சேர்பியாவுக்கு” சேர்பியாவுக்குப் போய் அங்கே பெயர்மாற்றம் செய்யப்பட்ட கடவுச் சீட்டைப் பயன்படுத்தி வேறு ஒரு நாட்டில் புது வாழ்வை தொடங்குவதுதான் அவர்களின் திட்டமாக இருந்தது. சேர்பியாவிற்கு போனதன் பின்னர் மியர்னேசாவுக்கு, அவன் தன்மேல் கொண்டிருப்பது காதல் அல்ல என்பது புரிய ஆரம்பித்தது. ஆடம்பரமாக தன்னுடைய வாழ்க்கையை கற்பனை செய்தவளுக்கு, எல்லாமே இடிந்து போய்விட்டது. ரோபேர்ட் அவளைத் தவிர்க்க விரும்புவது மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. எப்பொழுதும் அவளது அழகைப் புகழ்ந்து பேசுபவன், அவளது முகத்தைப் பார்ப்பதையே இப்பொழுது தவிர்த்தான். வேறு ஒரு பெயரில் அவளுக்கு கடவுச் சீட்டு ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னவன், இப்போது அதைப் பற்றிக் கேட்டால் சத்தம் போட ஆரம்பித்தான். அவளை அவன் பார்க்கும் பார்வையில் ஏளனம் மிகுந்திருந்தது. அவனது உதட்டில் தெரிந்த இழிவான புன்னகை அவளைப் பயமுறுத்தியது. அவனுடன் தொடர்ந்து இருப்பது ஆபத்தானது என்பது அவளுக்குப் புரிய ஆரம்பித்தது. காதல் என்பது அவனுக்குப் பணத்தின் மேல்தான். இப்போது அவனது கையில் அது வந்து சேர்ந்து விட்டது. இனி அவள், அவன் மடியில் தேவையில்லை. பணத்துக்காகத்தான் தன்னுடன் அவன் பழகி இருக்கிறான் என்பது அவளுக்குத் தெளிவானது. அமைதியான நதியாக இருந்து, அலைகள் எழுந்து இப்பொழுது தேங்கி நின்ற நீராகி வாழ்வு அவளுக்குச் சகதியாகிப் போனது. “ஒருவேளை அவன் தன்னை ஏதாவது செய்துவிட்டால்? யாருடைய துணையும் இல்லாமல் தனியாக இருக்கிறேன். குற்றவாளியாகத் தேடப்படும் பட்டியலில் என் பெயர் இருக்கிறது” நினைக்கும் போதே அவளுக்கு பயம் ஏற்பட்டது. அவளைப் பற்றிய தகவல் தந்தால் 50,000யூரோக்கள் சன்மானம் தருவதாக அறிவிப்பும் வந்திருந்தது. அவளது உயரம்,அகலம் தொட்டு அங்க அடையாளம், உடலில் எங்கெல்லாம் பச்சை குத்தியிருக்கிறாள் என்ற விபரங்களோடு புகைப்படமும் இணையத்தில் வெளியிட்டிருந்தார்கள். வெளியில் அவளால் நடமாட முடியவில்லை. வீட்டின் உள்ளே மரணபயம். ரோபேர்ட்டை விட்டு ஓடிவிடு என்ற எச்சரிக்கையை அவள் மூளை விடுத்தது. மொன்ரனேர்குரோவுக்கு இடம் மாறி, மியர்னேசா தன்னை மறைத்துக் கொண்டாள். ஒரு சட்டத்தரணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது நிலமையைச் சொன்னாள். “எனது கட்சிக்கார், கொள்ளைக்காகத் தூண்டப்பட்டார். அவர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதை முழுமையாக ஒப்புக் கொள்கிறார்” என்று சட்டத்தரணி யேர்மனிய பொலிஸுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். ஸ்ருட்கார்ட் நகர நீதிபதியின் ஒப்புதல் மற்றும் மொன்ரனேர்குரோ அரசாங்கத்தின் உதவியுடன் யேர்மனியப் பொலிஸார் மியர்னேசாவுக்கான பயண ஒழுங்கைச் செய்தார்கள். ஸ்ருட்கார்ட் விமான நிலையத்தில் வந்து இறங்கிய மியர்னேசாவை சந்திக்க பொலீஸார் காத்து நின்றார்கள். மியர்னேசாவுக்கு ஏழு மாதங்கள் தடுப்புக் காவலில் போனது. ஏழு மாதங்களின் பின்னர் நடந்த வழக்கில், “சில கண்மூடித் தனமான காதல்கள் முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கும். மியர்னேசாவுக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை” என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். ரோபேர்ட்? அவன் விரும்பிய வாழ்க்கை அவனுக்கு கிடைத்து விட்டது. அப்படியானால் மியர்னேசாவுக்கு? ஒருவேளை, அவள் பணத்தை எங்காவது மறைத்து வைத்திருந்தால், விடுதலைக்குப் பின்னர் அவள் விரும்பிய வாழ்வு அவளுக்குக் கிடைக்கும். அது அவளுக்குமட்டும் தெரியும். உண்மைச் சம்பவம்
  3. தவறுதான் நிலாமதி. சுட்டிக்காட்டயதற்கு நன்றி. ஆங்கிலத்தில் ஜரினா என்பதே சரி. உக்ரைன் மொழியில் இறினா என வரவேண்டும்
  4. இறினா பிலோற்சேர்கோவெற்ஸ் (Iryna Bilotserkovets) உக்ரைனில் பெரிதும் அறியப்பட்டவள். சத்திரச்சிகிச்சை நிபுணர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், மொடல் அழகி எனப் பல பின்ணணிகள் உள்ள மூன்று பிள்ளைகளின் தாய். ரஸியா, உக்ரைன் போர் தொடங்கி மூன்றாவது நாள் தனது மூன்று பிள்ளைகளுடன் Kiew வீதியில் காரில் சென்று கொண்டிருக்கும் போது நடந்த தாக்குதலில் படுகாயம் அடைந்திருந்தாள். அதிர்ஷ்டவசமாக அவளது பிள்ளைகள் எதுவித காயங்களும் இன்றி தப்பித்துக் கொண்டார்கள். தாக்குதலில் இறினா தனது ஒரு கண்ணை இழந்திருந்தாள். அவளுக்கு நாலு தடவைகள் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவள் இனி உயிர்வாழ்வது கேள்விக்குறிதான் என வைத்தியர்கள் சொன்ன போதும், வாழவேண்டும் என்று அவள் உறுதியாக இருந்தாள். யேர்மனிக்கு அழைத்து வரப்பட்டு, பேர்லினில் இறினாவுக்குச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. மொடலாக இருப்பதால் அவளுக்கு நடந்தது அழகுக்கான சத்திரசிகிச்சை அல்ல, அது அவளை வாழ வைப்பதற்காக நடந்த சத்திரசிகிச்சை. சத்திரசிகிச்சைக்காக அவளது தலைமயிர் மழுங்க வழிக்கப்பட்டிருந்தது. ஒரு கண் இல்லை. உடல் முழுக்க வயர்களும் குழாய்களும் பொருத்தப்பட்டிருந்தன. காயங்களின் தழும்புகள், ஆங்காங்கே உடம்பில் போடப்பட்டிருந்த தையல்கள், மரக்கிளை போல் இரண்டாகப் பிரிந்திருந்த தாடை என எல்லாமே அவளைப் பயமுறுத்திய போதும், அவள் தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள். இறந்து போவாள் எனப் பலராலும் கணிக்கப்பட்டவள் மெதுவாகத் தேறி வந்தாள். ஒரு கண்ணை மறைக்கும் இதய வடிவான உலோக மூடியுடன் உலோக பிக்னி அணிந்து உக்ரைன் பிளே போய் அட்டைப் படத்தில், கதாநாயகி ஆன மொடல் என்று இப்பொழுது காட்சி தருகிறாள். போர்ச் சூழலில் இடைநிறைத்தப்பட்டிருந்த உக்ரைன் பிளே போய், 18 மாதங்கள் கழித்து வெளியிட்ட முதல் சஞ்சிகையில் ‘பலமான பெண்கள்’ என்ற தலைப்பில் இறினாவின் அட்டைப்படத்தை வெளியிட்டிருக்கிறது. “போரில் காயம் அடைந்தாலும் வாழ்க்கையின் தாகத்தை இழக்காமல் எழுந்து வரும் உக்ரைனின் பெண்கள் என பிளே போய் காண்பிக்கிறது” எனச் சொல்லும் இறினா, தன் முக அழகை இழந்திருக்கலாம். உடல் அழகை இழக்கவில்லை எனக் கூறுகிறார். இறினா இப்பொழுது உக்ரைன் படைகளுக்கான நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
  5. நேற்று ஊர்வசி நடித்த அப்பாத்தா திரைப்படம் பார்த்தேன். ஊர்வசியின் 700வது திரைப்படம் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். படம் ஆரம்பத்தில் அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது. தனது மகன் கேட்டுக் கொண்டதற்காக சென்னை வருகிறார் ஊர்வசி. மகன் பாசத்தால் தாயைக் கூப்பிடவில்லை மாறாக அவன் குடும்பத்துடன் சுற்றுலா போகும் போது தனது நாயை கவனிக்கவே கூப்பிடுகிறான் என்ற கட்டத்தில் இருந்து படம் கலகலப்பாகப் போகிறது. ‘ஊர்வசி ஒரு நடிப்பு ராட்சசி’ என்று கமல்ஹாசன் ஒருதடவை சொல்லியிருந்தார். அது இந்தப் படத்திலும் தெரிகிறது. படத்தை பிரியதர்சன் இயக்கி இருந்தார். பழைய பாணியிலேயே படம் இருந்தது. ஆனாலும் பார்க்கும் போது அடுத்தது என்ன என்ற ஆர்வம் இருந்தது. குடும்பமாகப் பார்க்கலாம்.
  6. போடலாம். பிறகு அவர்களுடைய வீட்டில் பிரச்சனையாகிப் போய்விடும் சொல்லலாம். தமிழ்சிறி கோவிக்காமல் இருந்தால்.
  7. சமீப காலமாக ஆபிரிக்க நாடுகளில் இருந்து பலர் புது வாழ்வு தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. பலமில்லாத அரசுகள், பண வீக்கத்தின் உயரங்கள், வரண்டு போன நிலங்கள், வாழ்வில்லாத அவலங்கள், உள்நாட்டுக் கலவரங்கள் என அவர்கள் நிலமை மிகவும் மோசமானது. பல அபாயகரமான கடல் பயணங்கள் மூலம்தான் அவர்களது ஐரோப்பிய வருகை இப்பொழுது தொடர்கிறது. நைஜீரியா நாட்டில் இருந்து ஐரோப்பிய நாட்டுக்கு பயணிக்க விரும்பிய நால்வரைப் பற்றிய கதைதான் இது. நைஜீரியா நாட்டுத் துறைமுகத்தில் இருந்து யூன் 27 இல் புறப்பட இருந்த ஒரு சரக்குக் கப்பலின் சுங்கான்( rudder ) இல் நான்கு இளைஞர்கள் களவாக ஏறி அமர்ந்து கொண்டார்கள். அவர்களிடம் கடவுச் சீட்டு இல்லை. பணம் இல்லை. பத்து நாட்களுக்குப் போதுமான உணவும், ஐரோப்பாவை சென்றடைந்து விடுவோம் என்ற நம்பிக்கையும்தான் இருந்தது. ஆனாலும், கப்பல் பணியாளர்களால் தாங்கள் கண்டு பிடிக்கப் பட்டால் அவர்கள் தங்களை கடலில் தள்ளி விடுவார்களோ என்றொரு பயமும் இருந்தது. நான்கு பேர் சேர்ந்திருக்க நெரிசலான இடமாக சுங்கான் இருந்தது. கப்பல் நகர்ந்ததும், நான்கு பேரும் தண்ணீரில் விழுவதைத் தடுக்க, சுங்கான் பக்கத்தில் வலை இருந்த பகுதியில் தங்களைக் கயிற்றால் கட்டிக்கொண்டனர். ஆழ்ந்த தூக்கம் ஆபத்தானது என்பதாலும் இயந்திரத்தின் இரைச்சல் காரணமாகவும், அவர்களுக்குத் தூக்கம் குறைந்து போனது. குளிர், காற்று, கப்பலுடன் அலைகள் மோதித் தெறிக்கும் தண்ணீர் என இவைகளின் மத்தியில் பத்து நாட்கள் தாக்குப்பிடித்தார்கள். கொண்டுவந்த உணவும் தீர்ந்து விட்டது. இன்னும் எத்தனை நாட்கள் பயணம் என்றும் அவர்களுக்குத் தெரியாது. கப்பல் எப்பொழுது துறைமுகத்தை போய்ச் சேரும்? என்று யாரையும் கேட்க முடியாது. அடுத்து வந்த நாட்கள் பட்டினியுடன் போனது. ஒருவாறாக 14வது நாள் கப்பல் துறைமுகம் ஒன்றில் வந்து சேர்ந்தது. சுங்கானில் இருந்த நால்வரையும் கண்டு பிடித்துக் காப்பாற்றிக் கரையேற்றினார்கள். தங்களைச் சுற்றி நின்ற பொலிஸாரிடம் "இது எந்த நாடு?" என்று கேட்டார்கள். “பிரேஸில்” என்று பதில் வந்தது. நைஜீரியாவில் இருந்து ஏறக்குறைய 5600 கிலோ மீற்றர் தூரம் வரை, உயிரைப் பணயம் வைத்து, 14 நாட்கள் பயணித்து அட்லாண்டிக் கடலின் மறுபுறமாக பிரேஸிலின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள விற்றோரியா துறைமுகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். பிள்ளையாரைப் பிடிக்கப் போய் குரங்கைப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். எங்களது பயணம் ஐரோப்பாவை நோக்கி இருந்தது. ஆகவே தங்களை திருப்பி நைஜீரியாவுக்கே அனுப்பி விடுங்கள் என நால்வரில் இருவர் பிரேஸில் அரசாங்கத்தைக் கேட்க, அவர்களுக்கான பயணத்தை பிரேஸில் அரசு செய்து கொடுத்தது. மற்ற இருவர்களான Matthew Yeye(38), Roman Ebimene(35) இருவரும் பிரேஸிலில் அரசிடம் அகதிக்கான விண்ணப்பங்களைக் கொடுத்துவிட்டு நம்பிக்கையுடன் காத்து நிற்கிறார்கள். ஒரு புது வாழ்வுக்காக, கற்பனை செய்து பார்க்க முடியாததும் மிகவும் பயங்கரமானாதும் ஆபத்தானதுமான வழிகளை மக்கள் தேர்ந்தெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்
  8. கம்பராமாயணம் படித்ததால் கண்ணதாசன் ஆத்திகரானார் என்பதெல்லாம் சும்மா. ஆனால் கம்பராமாயணத்தில் இருந்து எடுத்து பல திரைப்பாடல்களை எழுதி கண்ணதாசன் பணம் பார்த்தார் என்பதுதான் உண்மை. உதாரணத்துக்கு, பால் வண்ணம் பருவம் கண்டு…. நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றமில்லை… இட்ட அடி சிவந்திருக்க எடுத்த அடி கனிந்திருக்க… இப்படிப் பல இருக்கிறது
  9. பழங்கள்,சூரியகாந்தி விதைகளின் முளைகள், பழக்களிகள்,பழச்சாறுகள் போன்றவைதான் அவளது உணவாக இருந்தது. சைவ உணவு (vegan) உண்பவர் என்று சமூக வலைத்தளங்களில் பெரிதும் அறியப்பட்ட, ரஸ்யாவைச் சேர்ந்த Zhanna Samsonova இப்பொழுது உயிருடன் இல்லை. இறக்கும் போது அவளது வயது 39 மட்டுமே. ஐந்து வருடங்களாக கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த Zhanna Samsonova, அதை வலைத்தளங்களில் Zhanna D’Art என்ற பெயரில் பதிந்து வந்திருக்கிறார். அவர் எதனால் மரணமடைந்தார் என்பது அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை. ரஸ்யாவில் இருந்து வெளிவரும் Vechernyaya Kazan பத்திரிகைக்கு அவரது தாயார், கொலோரா போன்ற ஒரு நோயால் Zhanna இறந்திருக்கிறாள் எனக் கூறியிருக்கிறார். அவள் சோர்வாக இருந்தாள். அவளது எடை சமீபத்தில் வெறும் 41 கிலோதான். அவள் கடைப்பிடித்த உணவுப் பழக்க வழங்கள் அதன் காரணியாக இருக்க வேண்டும் என அவர் பத்திரிக்கைக்கு மேலும் சொல்லியிருக்கிறார். “Zhanna அதிகமாக ஆசிய நாடுகளிலையே அதிலும் குறிப்பாக தாய்லாந்தில் அதிக நாட்களைச் செலவழித்திருக்கிறாள். சில மாதங்களுக்கு முன்னர் அவளை சிறீலங்காவில் நான் பார்த்த போது சோர்வு மிக்கவளாக இருந்தாள். ஒரு வைத்தியரைப் போய்ப் பார்க்கச் சொன்னேன். அதை அவள் கேட்கவில்லை. அவள் இறக்கும் நாளன்று ரஸ்யாவுக்குத் திரும்பத் தீர்மானித்திருந்தாள். ஆனால் அவள் திரும்பிவர முடியாத இடத்துக்குப் போய்விட்டாள்” என்று அவளது நண்பி தனது கவலையை வெளியிட்டிருக்கிறாள். உண்மையில் vegan ஆரோக்கியமானதா? vegan உணவு முறையை அதிலும் தீவிரமாக அதைக் கடைப்பிடிப்பவர்கள் இறைச்சி, மீன்,முட்டை,பால்,சீஸ்,தேன் போன்றவற்றை ஒதுக்கி விடுகிறார்கள். அவர்கள் முக்கிய ஊட்டச்சத்துக்களான விற்றமின் B12, விற்றமின் D, இரும்புச்சத்து, ஒமேகா-3, புரதம் ஆகியனஉடலில் சேருவதற்கான வழிகளைத் தேடவேண்டும். 02.08.2023
  10. யேர்மனியில் உள்ள Spalt நகரத்தில், ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்கும் முதியவர் ஒருவர் குப்பைத் தொட்டிக்குள் காகிதக் கைக்குட்டையைப் போட்டதால் அவருக்கு 78 யூரோக்கள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 10.06.2023 அன்று Klaus-Dieter Heidmann (65) க்கும் Marlies (66)க்கும் 40வது திருமணநாள். மதியம் ரெஸ்ரோரண்டில் சாப்பிட்டுவிட்டு Brombachsee அருகே கொஞ்சம் காற்று வாங்கிக் கொண்டு நடந்து வரலாம் என்று அவர்கள் தீர்மானித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு மதியச் சாப்பாடு சுவையாக இருந்தது. அடுத்தது நடைப்பயணம். நடந்து போகும் போது Enderndorf என்ற இடத்தில் Klaus-Dieter மூக்கைச் சீறி, காகிதக் கைக்குட்டையால் துடைத்து அங்கிருந்த குப்பைத் தொட்டிக்குள் போட்டார். அங்கேதான் பிரச்சனை உருவானது. நாய் மற்றும் குழந்தைகளது கழிவுப் பொருட்களைப் போடுவதற்காக Enderndorf இல் புதிதாக ஒரு குப்பைத் தொட்டி அமைக்கப் பட்டிருந்தது. அதற்குள்தான் அவர் தனது கைக்குட்டையைப் போட்டிருந்தார். அதை அவதானித்த நகரசபை ஊழியர்கள் "குப்பைகளைப் போடுவதற்கென்று தனியாக ஒரு குப்பைத் தொட்டி இருக்கிறது.. அதை விடுத்து இதற்குள் போட்டிருக்கக் கூடாது" என எதிர்ப்புத் தெரிவித்தார்கள். "வேண்டுமானால் அந்தக் காகிதக் கைக்குட்டையை நான் திருப்ப எடுத்து விடுகிறேன்" என Marlies சொல்லியிருக்கிறார்.அதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. Klaus-Dieter, “குப்பையை வீதியில் போட்டால்தான் குற்றம். அது சுகாதாரக் கேடு. ஆனால் நான் குப்பைத் தொட்டிக்குள்தானே போட்டேன்” என்று அவர்களுடன் எவ்வளவோ வாதாடிப் பார்த்தார். நால்வரும் அவரது கூற்றைச் செவிமடுக்கவில்லை. அவரது அடையாள அட்டையை வாங்கி அவரது தகவல்களைப் பதிவு செய்து கொண்டு போய்விட்டார்கள். “நாயின் கழிவுப் பைகள் மற்றும் குழந்தைகள் டியப்பேர்ஸ்(diapers) போடுவதற்காக பிரத்தியேகமாக குப்பைத் தொட்டி அமைக்கப் பட்டிருக்கிறது. அதில் நீங்கள் குப்பையைப் போட்டது தவறு. அதற்கான குற்றப் பணமாக 78யூரோக்களை செலுத்துங்கள்” என நகரசபையிலிருந்து அவருக்குக் கடிதம் போட்டுள்ளார்கள். மேலும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக நீங்கள் எதிர் மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்கள் . Klaus-Dieter ,“குழந்தை டியப்பேர்ஸ், காகிதம் எல்லாம் cellulose ஆல் ஆனதுதானே. நான் போட்ட காகிதக் கைக்குட்டையை மூக்கின் டியப்பேர்ஸ் என்று கருதலாம்தானே” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். நான் ஓய்வூதியம் பெறுபவன். என்னிடம் போதிய பணம் இல்லை. இப்பொழுது மேன் முறையீடு என்று போனால் அதற்குப் புறம்பாக பணம் செலவழிக்க வேண்டும் என்று எனது மனைவி சொல்கிறாள். போனது போகட்டும் என்று 78 யூரோக்களை தண்டமாக செலுத்தப் போகிறேன்” என்று அவர் மேலும் சொல்கிறார். தம்பதிகள் இருவரும்அடுத்த வருடம் தங்களின் 41வது திருமணநாளை வீட்டில்தான் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
  11. மீண்டும் ஒருமுறை கூட்டுப் பாலியல் வன்முறை நடந்திருக்கிறது. இம்முறை பரிசில் உள்ள ஈபிள் கோபுரத்துக்கு அருகே அமைந்துள்ள பூங்காவில் அது நடந்திருக்கிறது. Marsfeld என்றும் அழைக்கப்படும் Parc Champ de Mars இல், மெக்சிக்கோ நாட்டுச் சுற்றுலாப் பயணி (27) ஒருவரை, சிலர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு ஆண்களைத் தாங்கள் கைது செய்ததாக பொலிஸார் அறிவித்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண், நள்ளிரவு 1 மணியளவில் மது அருந்திவிட்டு பூங்கா வழியாக நடந்து கொண்டிருந்தபோது, ஐந்து பேர் திடீரென அவளைத் தாக்கி, பின்னர் பாலியல் வன்புணர்வு செய்ததாக பாரிஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்திருக்கிறது. கூட்டுப் பலாத்காரம் காரணமாக தற்போது விசாரணை நடத்தப்பட்டுள்ளது. Le Parisien செய்தித்தாளின் அறிக்கையின்படி மொத்தம் ஐந்து ஆண்கள் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் சுற்றுலாப் பயணி இப்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதே இடத்தில் இந்த வருடம் ஏப்ரலில் ஒரு யேர்மனிய இளம் பெண் மீது இப்படியான முயற்சி நடந்தது. இருப்பினும், அந்த இளம் ஜெர்மனியச் சுற்றுலாப்பயணி கூச்சலிட, அதைக் கேட்ட ஒரு வீதியோர வியாபாரி உடனடியாக பொலிஸுக்குத் தகவல் கொடுத்ததால் அந்த இளம் பெண்மணி காப்பாற்றப்பட்டு, குற்றவாளி கைது செய்யப்பட்டார். பின்னர் நடந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இப்படியான நிகழ்வுகளின் விளைவாக, இனி இரவு நேரங்களில் பூங்காவை மூடி விடும்படி,பாரிஸின் மேயராக இருக்கும் Rachida Dati அறிவித்திருக்கிறார். சமீபத்தில் மயோர்க்கா நாட்டில் சுற்றுலாவுக்கு வந்த ஐந்து யேர்மனிய இளைஞர்கள், ஒரு பெண்ணைக்(18) கூட்டுப் பாலியல் வன்முறை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அடுத்த பாலியல் வன்முறை பேர்லின் -யேர்மனியில் நடந்திருக்கிறது. பேர்லின் Goerlitzer Park பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு ஜோடியைத் தாக்கி, பெண்ணை(27) பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி அவர்களிடம் இருந்த உடைமைகளையும் கொள்ளையிட்டிருந்தார்கள். இப்பொழுது நடந்திருப்பது பரிஸில்.
  12. நல்லதொரு ஓவியர். சினிமா நடிகைகளை மொடலாக வைத்து கதைகளுக்கு ஓவியங்கள் வரைவதில் வல்லவர். கோபுலு,ராமு, ஜெயராஜ், மணியம் செல்வன், வினு, சிற்பி…. போன்ற ஓவியர்கள் மத்தியில் தனக்கென ஒரு பாணி அமைத்துப் பயணித்தவர்.சமீபகாலமாக முகநூல் பக்கத்தில் அவர் தனது ஓவியங்களை பதிவிட்டுக் கொண்டிருந்தார். 😪
  13. ஆசிய நாட்டுக் குளவி(hornets) இனக் கூட்டம் யேர்மனிக்குப் படை எடுக்க ஆரம்பித்திருக்கின்றன. இப்பொழுது யேர்மனியில் Nordrhein-Westfalen, Saarland, Rheinland-Pfalz ஆகிய மாகாணங்களில் அவை பரவலாகக் காணப்படுகின்றன. எழுபதுகளின் பிற்பகுதியில்தான் நாங்கள் புலம் பெயர ஆரம்பித்தோம். அதிலும் 1983க்குப் பின்னர்தான் நாங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகமாக வந்தேறினோம். யேர்மனியில் அப்பொழுதே “புலம் பெயர்ந்து வருபவர்கள் தனியாக வந்து அரசியல் தஞ்சம் கேட்கவில்லை. தலைகளில் பேன் பண்ணைகளையும் கொண்டு வருகிறார்கள்” என்று சொல்ல ஆரம்பித்தார்கள். பாலர்வகுப்பு முதல் கல்லூரிவரை அன்று ‘பேன்’ பிரச்சினை ஒரு புதுப் பாடமாக இருந்தது. ஆசியக் கடைகள் யேர்மனியில் மலர்ந்து கொண்டிருந்த போது கரப்பான் பூச்சிகளை இறக்குமதி செய்கிறார்கள் எனச் சொன்னார்கள். கொஞ்சக்காலத்தின் பின்னர் மூட்டைப் பூச்சிகள் இரத்தத்தை இலவசமாகக் குடிக்கின்றன என்றார்கள். பிறகு, மயிர்கொட்டிகள் உடலில் எரிச்சல்களைத் தருகின்றன என்றார்கள். இப்பொழுது குளவிகள் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுடன் சேர்ந்துதான் ஆசியக் குளவிகள் ஐரோப்பாவிற்குள் வந்தன என்று அடித்துக் கூறுகிறார்கள். ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே ஐரோப்பாவில் இந்தக் குளவிகள் குடியேறிவிட்டன. பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் 2004இல் காணப்பட்ட இவை அங்கிருந்து பெல்ஜியம் பின்னர் நெதர்லார்ந்து வழியாக யேர்மனிக்குள் 2020இல் வந்திருக்கிறது என இயற்கை, சூழல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சொல்கிறது. இந்த வகைக் குளவிகள் கொட்டினால் பெரியளவில் ஆபத்தை விளைவிக்காது. ஆனால் குளவியின் விசக்கொடுக்கு மனித உடலில் தங்கிவிட்டால் கடுமையான வலி இருக்கும். ஆகவே உடனடியாக அந்த விசக் கொடுக்கு அகற்றப்பட வேண்டும் என அறிவுரையும் தந்திருக்கிறார்கள். குளவிகள் கொட்டி, தலைச்சுற்று, மூச்சு விடுவதில் சிரமம், இதயத்துடிப்பு குறைதல் போன்றவை தென்பட்டால் உடனடியாக வைத்தியரைத் தொடர்பு கொள்ளுங்கள் என சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. ஆசிய நாட்டுக் குளவிகள் யேர்மனியத் தேனீக்களின் கூட்டை முற்றுகையிட்டு தேனீக்கள் தங்களுக்கான உணவைத் தேடிப் பறப்பதற்கும் தங்கள் கூட்டுக்குத் திரும்புவதற்கும் பெரும் தடையாக இருக்கின்றன. தேனீக்களுக்கான உணவுகளை குளவிகளே எடுத்துக் கொள்கின்றன. ஆசிய நாட்டுக் குளவிகளின் ஒரு கூட்டினால் பத்தில் இருந்து பதினைந்து யேர்மனியத் தேனிக் கூடுகள் அழிந்து போகின்றன என தேனீக்கள் வளர்ப்பவர்களின் குரல்கள் யேர்மனியில் எழ ஆரம்பித்திருக்கின்றன. இந்தக் கோடைக்காலத்தில் உண்ணிகள் பற்றிய பேச்சு பெரிதாக எழுந்திருக்கிறது. இது சீனா இறக்குமதி என யேர்மனியப் பத்திரிகை ஒன்று செய்தி வேறு வெளியிட்டிருக்கிறது.
  14. இதுக்கு மேலே மேலதிக விசாரணையை எதற்கு முன் எடுக்கவேணும்?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.