Jump to content

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1034
 • Joined

 • Last visited

 • Days Won

  25

Everything posted by Kavi arunasalam

 1. ஈழப்பிரியன், உங்களுடைய கருத்தை கடந்து போக என்னால் முடியவில்லை என்பதால் இதை எழுதுகிறேன். வாழும் போதே தெரிகிறது, நாம் என்றோ ஒருநாள் இறந்து விடுவோம் என்று. பட்டினத்தாரை படிக்கும் போதே தெரிகிறது, ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’ என்று.அதற்காக நாங்கள் எல்லாவற்றையுத் துறந்து விடுவதில்லை. ஒருவர் எங்களுக்கு அறிமுகம் ஆகும் போது, அந்தக்கணமே அவர் அணிந்திருக்கும் ஆடை அவரது முகபாவங்கள், பேச்சு என்று அவரைப் பற்றிய விம்பம் மனதில் உடனேயே பதிந்து விடுகிறது. பல காலத்துக்குப் பின்னும் அவரைப் பற்றிய நினைவு வரும் போது அவரைச் சந்தித்த அந்த முதற் சந்திப்பில் இருந்து ஏதாவது ஒன்று வந்து போகும். அந்த நிலையை இறுதிச் சடங்கிலும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். உதாரணத்துக்கு நான் என் தாயை எடுத்துக் கொள்கிறேன். அவருடைய முகம் என்னுள் நிரந்தரமாகப் பதிந்திருக்கிறது. சில வேளைகளில் கண்ணாடியில் என்னையே நான் பார்க்கும் போது எனது அம்மாவின் முகம் வந்து போகும். தனது பிள்ளைகளைக் காணும் போதெல்லாம் அவர் முகத்தில் தோன்றும் பிரகாசம், கனிந்த அவரது சிரித்த முகம் எப்பொழுதும் என்னுள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இன்னும் சொற்ப நேரத்தில் சாம்பலாகப் போகிறார் என்று அவரது இறுதிச் சடங்கில் அவரது முகத்தில் சடங்கின் பெயரால் செய்வன எல்லாம் அவரது சிரித்த சாந்தமான இயல்பை மாற்றிவிட்டால், கடைசியாக எனது தாயைப் பார்த்த அந்த முகம்தானே பின்னாளில் எனக்குள் வந்து போகும். அதைத்தான் நான் வேண்டாம் என்கிறேன். சடங்கு என்ற சொல்லிக் கொண்டு பழையதையே பின்பற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு என்னுடன் உடன்பாடு இல்லாமல் போகலாம். பிரபா சிதம்பரநாதன், நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்கிறேன். இனி பிழைக்கமாட்டார் எந்தவித சிகிச்சையும் பயனளிக்காது என்ற நிலை வந்த போதும்கூட யேர்மனியில் கருணைக் கொலைக்கு சட்டம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் மருத்துவ விஷயங்களில் முடிவெடுக்க முடியாத ஒரு சூழ்நிலை வரும்போது, இந்த மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் அல்லது மேற்படக்கொள்ளக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக வயதுக்கு வந்தவர்கள் எல்லோரும், யேர்மனியில் ஒரு (Patientenverfügung) வாழும் உயிலை எழுதி வைக்க வசதி இருக்கிறது. தனக்கு விபத்து, நோய் அல்லது முதுமை காரணமாக, எந்தவகையான மருத்துவ சிகிச்சைகள் விரும்பப்படுகின்றன அல்லது தேவையில்லை என்பதை ஒரு கட்டத்தில் கூற முடியாத நிலை யாருக்கும் வரலாம். அந்த நேரத்தில் இந்த உயில் பயன்தரும். இல்லாவிட்டால் கோமாவுக்குச் சென்றாலும் உணவு,தண்ணீர், சுவாசம் எல்லாமே செயற்கை முறையில் தரப்படும். சாக விடமாட்டார்கள். கட்டிலில் அசையாமல் படுத்திருப்பவருக்கு, சிகிச்சை தருபவர்களுக்கு, உறவுகளுக்கு எல்லோருக்கும் சிரமம்தான். நான் Patientenverfügungஐ எழுதி வைத்திருக்கிறேன். இணையத்தில் அதற்கான படிவம் கிடைக்கிறது.
 2. இரண்டாவது உலக யுத்தத்தின் போது நான் வசிக்கும் நகரமான Schwäbisch Hall, அந்த மாநிலம் முழுவதற்குமே உணவுப் பொருட்களை வழங்கியது மட்டுமல்லாமல் குண்டுத் தாக்குதலுகளுக்குத் தப்பிய ஒரு அழகான நகரமும் கூட. ஒரு சிறிய நகரமானாலும் தனது கடந்த கால கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள், விளையாட்டுக்கள் கலைகள்,கலாச்சாரங்கள் என எல்லாவற்றையும் காத்து அதை இன்றும் பேணி வருகிறது. நான் இருப்பது சின்ன நகரம் என்பதாலோ என்னவோ ஒரே ஒரு தமிழ்க்கடை மட்டும்தான் இருக்கிறது. பணப் பரிமாற்றங்களால் பெருமளவளவில் இலாபம் கிட்டுவதால் பொருட்களை கொள்வனவு செய்வதில் முதலாளி அம்மாவுக்கு அவ்வளவு நாட்டம் இல்லை. ஏதாவது மனதுக்கு விருப்பமானதை சமைத்து சாப்பிட விரும்பி அந்தப் பொருளைக் கேட்டால், “முடிஞ்சுது அண்ணை. வியாழக்கிழமை ஒருக்கால் வந்து பாருங்கோ” என்பார். வியாழக்கிழமை போனால் மீண்டும் அதே பதில்தான் வரும். அவரது பதிலைக் கேட்கும் பொழுதெல்லாம், ‘நாளை கடன்’ என்று ஊர்ப் பலசரக்கு, தேனீர்க் கடைகளில் அன்று தொங்கிக் கொண்டிருந்த பதாதைதான் எனக்கு நினைவுக்கு வரும். நீண்ட நாட்களாக நண்டு சமைத்துச் சாப்பிட ஆசை இருந்தும் நண்டுகளை எங்களூர் கடையில் காணக் கிடைக்கவில்லை. இப்பொழுது யேர்மனியில் அறிமுகப் படுத்தி இருக்கும் 9 Euro Ticket எனக்கான வழியை காட்டியிருக்கிறது. ஒரு மாதத்துக்கு செல்லுபடியாகும் 9 Euro Ticketஇல் யேர்மனியின் எந்தப் பகுதிக்கும் பயணிக்கலாம். அத்தோடு கொரோனா வீச்சும் குறைந்திருந்தது. ஆக எனது மாநிலத்தின் தலைநகரத்துக்குப் பயணித்து நண்டு வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அங்கு அமைந்திருந்த ஒரு தமிழ்க்கடைக்கு அழைப்பை ஏற்படுத்தினேன். “Fress நண்டு இருக்கோ?” “நீலக்கால் நண்டோ அண்ணை. ஓமோண்ணை இருக்கு” “இண்டைக்கு வந்தால் எடுக்கலாமோ?” “எத்தினை கிலோ வேணும்? எடுத்து வைக்கிறன்” “விலை?” “என்னண்ணை பெரிய விலை. பக்கெற் நண்டு 9யூரோ. ப்ரஸ் நண்டு 17 யூரோ. நீங்கள் வாங்கோண்ணை பாத்துச் செய்யலாம்” “இரண்டு வருசத்துக்கு முன்னர் 12யூரோக்கு வாங்கினனான்” “அண்ணை.. இரண்டு வருசமெண்டால் அது கனகாலம் எல்லோ. எங்களுக்குத் தாறவங்கள விலை ஏத்துறாங்கள். நாங்களென்ன செய்யிறது…?” உண்மையிலேயே அந்தக் கடை முதலாளியில் எனக்கு அவ்வளாக நம்பிக்கையில்லை. முன்பு ஒரு தடவை, “தேங்காய் எப்பிடி நல்லதோ?” என்று இதே முதலாளியிடம் நான் கேட்ட போது, “அது, அவனவனுக்குப் பெண்சாதி வாய்ச்ச மாதிரி” என்று ஒரு அற்புதமான பதிலைத் தந்து என்னை நிறையவே கவலைப்பட வைத்து விட்ட ஆள்தான் அவர். நம்பிக்கையோடு பஸ் ஏறி, ஒன்றரை மணித்தியாலம் ரெயினில், பத்து நிமிசம் S bahnஇல் பயணித்து கொஞ்சம் நடந்து தமிழ்க் கடைக்கு வந்து சேர்ந்தேன். “நண்டு கேட்டனீங்கள் என்ன? அதுக்குள்ளை இருக்கு, பாருங்கோ. இரண்டு கிலோவா கட்டி வைச்சிருக்கிறன்” அவர் காட்டிய குளிர்சாதனப் பெட்டிக்குள் பிளாஸ்ரிக் பைக்குள் கட்டி வைச்ச நண்டுகளின் நீலக்கால்கள், ஜஸில் உறைந்திருந்த போதும் வெளியே தெரிந்தன. “அண்ணை நான் கேட்டது ப்ரெஸ் நண்டு” “அண்ணை அதுதான் அண்ணை. போன சனிக்கிழமை வந்தது. ப்ரெஸ்தான்” திரும்பி எனது நகரத்துக்கான பயணத்தின் போது “முதலாளி எல்லோரோடையும் இப்படித்தானா? இல்லை என்னோடை மட்டும்தானா?” என்ற யோசனையுடனேயே இருந்தேன். -கவி அருணாசலம்
 3. என்னை அகதியாக ஏற்றுக்கொள்ள ஐந்து வருடங்கள் எடுத்துக் கொண்டார்கள். புலம் பெயர் வாழ்வில் எதிர்காலம் என்றால் என்ன என்று தெரியாத ஒரு வாழ்வு இருந்தது. நல்லதொரு கதை கிருபன். நன்றி!
 4. இறந்தவர்களது இறுதி நிகழ்வு ஒவ்வொரு மதங்களிலும் மாறுபட்டிருக்கின்றது. ஆனாலும் கால ஓட்டத்தில் சடங்குகளில் ஆங்காங்கே மாற்றங்கள் நிகழ்கின்றன. சைவர்களைப் பொறுத்தளவில் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த வழிமுறைகள் ஏனென்ற விளக்கங்கள் இல்லாமல் இன்றும் தொடர்வதுதான் புரியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் புலம்பெயர் நாடுகளில் அது ஒரு வியாபாரமாகவே தென்படுகின்றது. சமீபத்தில் உறவினர் ஒருவரது இறுதி நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். இறந்தவரை தூய்மையாக்கி, அழகுபடுத்தி, நல்ல உடை அணிவித்து மரப்பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். தூரத்தில் இருந்து மட்டுமல்ல அருகில் சென்று பார்க்கும் போது கூட அவர் அமைதியாக உறங்குவது போன்ற தோற்றமே தெரிந்தது. இறந்து விட்டார் என்ற எண்ணமே தோன்றாத வகையில் முகத்தில் ஒரு சிறிய புன்னகை தவள அவர் உறங்கிக் கொண்டிருந்தார். அந்தளவுக்கு அழகாக எல்லாவற்றையும் சிரத்தையோடு செய்திருந்தார்கள். இதற்காக உறவினர்கள் அந்த நிறுவனத்துக்கு பணம் கொடுத்திருப்பார்கள் என்பது வெள்ளிடை மலை. இப்பொழுது சைவர் அல்லது சவுண்டி ஐயர் கிரிகை செய்வதற்காக, தன் மனைவியுடன் மண்டபத்திற்குள் வந்தார். சைவர் என்று நான் குறிப்பிட்டிருப்பதில் சிலருக்கு ஒரு குழப்பம் இருக்கலாம். அதற்காக ஒரு சிறிய தகவல். பிராமணர்கள் இறந்தால் மட்டும் குருக்கள் கிரிகை செய்வார். மற்றவர்களுக்கு நான் குறிப்பிட்ட சைவர் (அல்லது சவுண்டி ஐயர்)தான் கிரிகை செய்வார். நான் கலந்து கொண்ட அந்த இறுதிக் கிரிகையில் அந்த சவுண்டி ஐயர் மனைவியுடன் வந்ததற்குக் காரணம் இருக்கிறது. நான் விசாரித்து அறிந்து கொண்ட வரையில் யேர்மனியில் சவுண்டி ஐயர் கிடையாது. பக்கத்தில் சுவிஸ் நாட்டில் இருந்துதான் வரவேண்டும். ஆக யேர்மனி வாழ் சைவ மதத்தார் ஒருவரது இறுதிக் கிரிகை செய்வதாயின் சவுண்டி ஐயர் சுவிஸில் இருந்து வந்து யேர்மனியில் தங்குவதற்கு முதலில் ஹோட்டலில் அறை ஒன்றை பதிவு செய்ய வேண்டும். அதுவும் இரண்டுபேர் தங்குவதற்கான வசதிகள் இருக்க வேண்டும். இங்கே சவுண்டி ஐயர் மனைவியையும் அழைத்துக் கொண்டு வருவதில் அவருக்கு பல அனுகூலங்கள் இருக்கலாம் அது இங்கு தேவை இல்லாத விடயம் என்பதால் விட்டு விடுகிறேன். ஆனால், பொதுவாக இறுதிக் கிரிகைகளில் பெண்கள் முன்னிலைப் படுத்தப் படுவதில்லை அதுவும் ஒரு கணவனுடன் வாழும் ஒரு பெண் அதாவது சுமங்கலி, இறுதிக் கிரிகையில் முன்னிலைப் படுத்தப் படுவதில்லை. ஆனால் சவுண்டி ஐயரிடம் இதுவரை இந்தக் கேள்வியை யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. சவுண்டி ஐயர் விபரமானவர். இறந்த உறவினர்களில் அதுவும் வேட்டி கட்டிக் கொண்டு வந்த இருவரை இனம் கண்டு தன்னுடன் இணைத்துக் கொண்டார். அரப்பு வைத்து, இளநீர் தெளித்து, கற்பூரம் காட்டி, தேவாரம் பாடி ஏதேதோ செய்தார். ஏற்கனவே தூய்மையாகப் படுத்திருப்பவருக்கு ஏன் அரப்பும் இளநீரும் என்று எனக்கு விளங்கவேயில்லை. “யாராவது சிவபுராணம் தெரிஞ்சவர்கள் பாடுங்கோ” என்று சவுண்டி ஐயர் வேண்டுகோள் விடுக்க, அதற்கென்று காத்திருந்தவர்கள் போல் இரண்டு பெண்கள் எழுந்து பாடத் தொடங்கினார்கள். “….வேகங் கொடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க….” அவர்களது சிவாபுராணத்திற்கு நடுவில் பக்கத்தில் அமர்ந்திருந்தவரது முணுமுணுப்பு எனக்குக் கேட்டது. அவரைப் பார்த்தேன். எனக்கு நன்கு பரிச்சயமானவர் என்பதால் மெதுவாகச் சொன்னார். “இரண்டு மணித்தியாலங்கள்தான் கிரிகைக்கு நேரம் ஒதுக்கித் தந்திருக்கினம். இவர் இப்ப சிவபுராணம் முடிச்சு பொற்சுண்ணம் இடிச்சு…” அவரது பேச்சில் உயிரில்லை. எதற்கு வில்லங்கம் என்று நான் ஏதும் பேசாமல் இருந்தேன். அவரே தொடர்ந்தார், “இறந்தவரின்ரை பெருமை பேச பலர் காத்திருக்கினம். போற போக்கைப் பாத்தால் அது முடியாது போல இருக்கு” அவர் ‘பொற்சுண்ணம்’ என்று சொன்ன போது எப்போதோ நான் படித்தது நினைவுக்கு வந்தது. தில்லையம்பல வீதியில் பெண்கள் ஆடிப் பாடிக் கொண்டு வாசனைத் திரவியங்களை உரலில் போட்டு இடித்த காட்சியைக் கண்ட, நரியை பரியாக்கிய மாணிக்கவாசகருக்கு அந்தப் பாடல்கள் பிடித்துப்போக அதை சிவனுக்காக ‘உல்டா’ செய்து பொற்சுண்ணத்தை உருவாக்கி அன்பர்களுக்குத் தந்திருந்தார். தமிழ்நாட்டில் கோவில் கொடியேற்றம், கொடியிறக்கம் நிகழ்ச்சியில் பாடப்படும் பொற்சுண்ணத்தை யாழ்ப்பாணத் தமிழர் இறந்தவர்களின் கிரிகைகளுக்கு எடுத்துக் கொண்டார்கள். ஒருவழியாக சிவபுராணம் முடிஞ்சு சவுண்டி ஐயர் பொற்சுண்ணம் பாடத் தொடங்கினார் பாடல்களில் நடுவே கொங்கைகள், மங்கைகள், செவ்விதழ்கள் எல்லாம் வந்தன. ஒன்பதாம் நூற்றாண்டில் தணிக்கைக் குழுவினர்கள் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும் சிவன் அதை இரசித்திருப்பார். பக்கத்தில் இருந்தவர் சொன்னார், “இப்பவே ஞாயமான நேரம் போட்டுது. பேசுறதுக்கு நேரம் போதாது” இப்பொழுதுதான் நான் என் திருவாய் மலர்ந்தேன். பொற்சுண்ணம் முடிஞ்ச கையோடை உடனேயே நீங்கள் போய் பேசுங்கோ. உங்களைப் பாத்திட்டு மற்றைவையளும் வருவினம்” யாராவது ஒரு ‘சப்போர்ட்’ தர மாட்டினமா என்ற நிலையில் இருந்த அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். பொற்சுண்ணம் இருபது பாடல்களும் முடிந்து ஐயர் இருக்கையை விட்டு எழும்பும் முன்னரே இவர் ஓடிப் போய், இறந்தவரது பெருமையைப் பேச ஆரம்பித்தார். நான் நினைத்தபடியே அவரைத் தொடர்ந்து பலர் வந்தார்கள். நான் முந்தி நீ முந்தி என்று அங்கே முண்டியடித்ததால் இறந்தவரைச் சுற்றி ஒரு கும்பல் கூடிவிட்டது. என்னதான் இறந்தவரைப் பற்றிய பேச்சுக்களில் விடயங்கள் இருந்தாலும், சவுண்டி ஐயர் அப்பப்ப மணி அடித்து தன் வேலையிலேயே கவனமாக இருந்தார். சவுண்டி ஐயரினுடைய பெயர் கெட்டுப் போகக் கூடாது என்பது அவருக்குத் தெரியாதா? இரண்டு மணி நேரம் போய்விட்டது. பலரால் பேச முடியவில்லை என்பது ஒரு புறமாக இருந்தாலும் எனது இறுதி வணக்கத்தைத் தெரிவிக்க இறந்தவர் படுத்திருக்கும் இடத்திற்குச் சென்றேன். அவரது நெற்றியில் பட்டையாக விபூதி, கண்களில் மஞ்சள் களி, அதன்மேல் அவரது கண்ணாடி. ஆங்காங்கே அவர் முகத்தில் எண்ணெய், தண்ணீர், வாய்க்கரிசி, பூக்கள் என பரவி இருந்தன. கிரிகைக்கு முன்னர் நான் பார்த்த இறந்தவரின் சாந்தமான முகத்தை இப்பொழுது காணவில்லை. தூய்மையாகக் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தவரை சவுண்டி ஐயர் ஒரு பாடு படுத்தியிருந்தார். விசாரித்ததில் இறந்தவரைத் தகனம் செய்வதற்காகக் கொடுக்கப் படும் தொகைக்கு சற்றுக் கீழாக சவுண்டி ஐயரின் சன்மானம் இருந்தது. “புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தங்களோடு ஆன்மீகத்தையும் சேர்த்துக் கொண்டு புலம் பெயர்ந்தது மிகவும் கவலை அளிக்கிறது” என்று பேராசிரியர் சுப வீரபாண்டியன் அவர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக “நான் இறந்து விட்டால் சமயச்சடங்குகள் செய்ய வேண்டாம்” என எழுதி வைத்தேன். - கவி அருணாசலம்
 5. தமிழ் சிறி, படம் என்னுடையதானலும் கருத்து கிருபனுடையது
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.