Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. பெத்தும் நிஸ்ஸன்க 146 ஆ.இ., தினேஷ் சந்திமால் 93; பலமான நிலையில் இலங்கை Published By: VISHNU 26 JUN, 2025 | 07:26 PM (எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று வியாழக்கிழமை, பெத்தும் நிஸ்ஸன் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதம், தினேஷ் சந்திமால் குவித்த அரைச் சதம் ஆகியவற்றின் உதவியுடன் இலங்கை பலமான நிலையை அடைந்துள்ளது. பங்களாதேஷை முதல் இன்னிங்ஸில் இன்று காலை 247 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இலங்கை, இரண்டாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டபோது 2 விக்கெட்களை இழந்து 290 ஓட்டங்களைப் பெற்று 43 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கின்றது. தனது 18ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பெத்தும் நிஸ்ஸன்க, தான் எதிர்கொண்ட முதலாவது பந்திலிருந்து இரண்டாம் நாள் ஆட்டம் முடியும் வரை மிகுந்த தன்னம்பிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி தனது 4ஆவது சதத்தைக் குவித்தார். பங்களாதேஷுக்கு எதிராக காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியிலும் பெத்தும் நிஸ்ஸன்க சதம் குவித்து அசத்தியிருந்தார். இலங்கையின் முன்வரிசை வீரர்கள் மூவரும் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக்கொண்டு மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடியது அணிக்கு பலம் சேர்ப்பதாக அமைந்தது. குறிப்பாக மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க ஆரம்ப விக்கெட்டில் லஹிரு உதாரவுடன் 88 ஓட்டங்களையும் 2ஆவது விக்கெட்டில் தினேஷ் சந்திமாலுடன் மேலும் 194 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டார். இரண்டாம் நாள் ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் தினேஷ் சந்திமால் அநாவசியமாக ரிவேர்ஸ் சுவீப் ஷொட் அடிக்க முயற்சித்து துரதிர்ஷ்டவசமாக ஆட்டம் இழந்து சதத்தை 7 ஓட்டங்களால் தவறவிட்டார். அவர் 153 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 93 ஓட்டங்களைப் பெற்றார். பெத்தும் நிஸ்ஸன்க, 238 பந்துகளை எதிர்கொண்டு 18 பவுண்டறிகளுடன் 146 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார். அவருடன் இராக்காப்பாளன் ப்ரபாத் ஜயசூரிய 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஆரம்ப வீரர் லஹிரு உதார 40 ஓட்டங்களைப் பெற்றார். இன்றைய தினம் முழு நாளும் துடுப்பெடுத்தாடி 550க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்து பங்களாதேஷுக்கு நெருக்கடிக்கைக் கொடுப்பதே இலங்கையின் திட்டமாகும். பந்துவீச்சில் நயீம் ஹசன், தய்ஜுல் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். முன்னதாக தனது முதலாவது இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்களிலிருந்து இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த பங்களாதேஷ், கடைசி 2 விக்கெட்களை 27 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்தது. தய்ஜுல் இஸ்லாம் திறமையாக துடுப்பெடுத்தாடி 5 பவுண்டறிகளுடன் 33 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார். முதல் நாள் துடுப்பாட்டத்தில் ஷத்மான் இஸ்லாம் 46 ஓட்டங்களையும் முஷ்பிக்குர் ரஹிம் 35 ஓட்டங்களையும் லிட்டன் தாஸ் 34 ஓட்டங்களையும் நயீம் ஹசன் 25 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை பந்துவீச்சில் அறிமுக வீரர் சொனால் தினூஷ 3 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 9.3 ஓவர்கள் பந்துவீசி 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். அசித்த பெர்னாண்டோ 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா, தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/218573
  2. 26 JUN, 2025 | 05:03 PM செம்மணி மனித புதைகுழி குறித்த விசாரணைகள் சர்வதேச கண்காணிப்பின் கீழ் இடம்பெறுவதை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் உறுதி செய்யவேண்டும் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ் செம்மணி மனிதபுதைகுழி காணப்படும் பகுதிக்கு வோல்க்கெர் டேர்க் விஜயம் மேற்கொண்டவேளை அவருடன் சேர்ந்து அந்த பகுதிக்கு சென்ற சட்டத்தரணிகள் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். அவர்கள் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளதாவது, செம்மணி மனித புதைகுழியை தோண்டும் பணிகளிற்கான நிதியை தாமதமின்றி தடையின்றி இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டும். இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும். யாழ்ப்பாணத்தில் சேமிப்பதற்கான பாதுகாப்பு வசதிகள் போதியளவு இல்லாததால் நீண்டகால தீர்வு காணப்படும் வரை மனித எச்சங்களை கொழும்பிற்கு கொண்டு செல்லவேண்டும். மனித எச்சங்களை சேமித்து வைப்பதற்கும், விஞ்ஞான ஆய்வுகளிற்கு அதனை கொண்டு செல்வதற்கும் யாழ்ப்பாணத்தில் தடயவியல் ஆய்வுகூடமொன்றை ஏற்படுத்தவேண்டும். முறையான அகழ்வாராய்ச்சி மற்றும் மனித எச்சங்களை அடையாளம் காண அதிநவீன தடயவியல் கருவிகள் சாதனங்கள் மற்றும் தகுதிவாய்ந்த பணியாளர்கள் அவசியம். பக்கசார்பின்மை மற்றும் தலையீடுகளை தவிர்ப்பதற்காக செம்மணிமனித புதைகுழியை அகழ்வும் நடவடிக்கைளை சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/218552
  3. Published By: DIGITAL DESK 2 26 JUN, 2025 | 04:25 PM வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ராசிக குமாரவுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்றது. சந்திப்பின்போது வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த ஆண்டு விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்குரிய நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாத போதிலும் தற்காலிக பின்னரங்க வேலியை அமைக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. மேலும், மக்களிடம் காணிகளை மீளக்கையளிக்கும்போது அங்கு களவுகள் இடம்பெறுவதாக மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர் அதற்கு அமைவான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் அவற்றைக் கையளிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரினார். வடக்கில் நிலவும் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை தொடர்பிலும் இராணுவத் தளபதி ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார். உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். இந்தச் சந்திப்பின் இறுதியில் நினைவுச் சின்னங்களை ஆளுநரும், இராணுவத் தளபதியும் பரிமாறிக்கொண்டனர். https://www.virakesari.lk/article/218530
  4. உண்மையை கண்டறியக்கூடிய சர்வதேச நிபுணர்களின் உதவியுடன் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் வேதனைகளிற்கு துயரங்களிற்கு முடிவை காணவேண்டும் - வோல்க்கெர் டேர்க் 26 JUN, 2025 | 03:29 PM உண்மையை கண்டறியக்கூடிய தடயவியல் நிபுணத்துவம் கொண்ட சர்வதேச நிபுணர்களின் மூலம் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் வேதனைகளிற்கு துயரங்களிற்கு முடிவை காணவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழிக்கும் அணையாவிளக்கு போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கும் மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் வெளியிட்ட வீடியோ பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நான் செம்மணியில் மனித புதைகுழிகள் காணப்படும் பகுதியில் தற்போது இருக்கின்றேன். எம்மை விடாமல் துரத்துகின்ற கடந்தகாலங்கள் தற்போது வெளித்தெரியும் இடங்களிற்கு விஜயம் மேற்கொள்வது எப்போதும் உணர்வுபூர்வமான விடயம். காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் உறவுகளை நான் சந்தித்தேன். 90களின் நடுப்பகுதியில் தனது உறவினர் காணாமல்போன பெண்ணொருவரை நான் சந்தித்தேன் காணாமல்போனவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவர் கடும் கவலை கொண்டிருந்தார். தங்கள் அன்புக்குரியவர்களிற்கு என்ன நடந்தது என தெரியாதவர்களுடன் உரையாடும்போது இந்த வலியை வேதனையை நீங்கள் உணர்வீர்கள். மிகவும் வேதனைய விடயத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் நீதிக்கும் பொறுப்புக்கூறலிற்கும் இது ஒரு படி முன்னோக்கிய நடவடிக்கை. வலுவான விசாரணைகளின் மூலம் உண்மையை கண்டறியக்கூடிய தடயவியல் நிபுணத்துவம் கொண்ட சர்வதேச நிபுணர்களின் மூலம் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் வேதனைகளிற்கு துயரங்களிற்கு முடிவை காணவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழிக்கும் அணையாவிளக்கு போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கும் மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் வெளியிட்ட வீடியோ பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218526
  5. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனித டிஎன்ஏவின் பகுதிகளை புதிதாக ஆதியில் இருந்து உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் கட்டுரை தகவல் பல்லப் கோஷ் அறிவியல் செய்தியாளர் க்விண்டாஃப் ஹ்யூக்ஸ் அறிவியல் ஒளிப்பதிவாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மனித உடலின் கட்டுமானத் தொகுதிகளான டிஎன்ஏவை புதிதாக உருவாக்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற ஒரு திட்டம் உலகிலேயே முதன்முறையாக தொடங்கப்படுவதாக நம்பப்படுகிறது. எதிர்கால சந்ததியினரை தங்கள் விருப்பம் போல வடிவமைத்துவிடலாம் மற்றும் எதிர்பாராத மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்ற கவலைகள் காரணமாக டிஎன்ஏ ஆராய்ச்சிகள் இதுவரை தடைசெய்யப்பட்டிருந்தன. ஆனால் தற்போது உலகின் மிகப்பெரிய மருத்துவ தொண்டு நிறுவனமான வெல்கம் டிரஸ்ட், இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கான ஆரம்பத் தொகையாக 10 மில்லியன் யூரோ வழங்கியுள்ளது. பல குணப்படுத்த முடியாத நோய்களுக்கான சிகிச்சைகளை விரைவுபடுத்துவதன் மூலம் செயற்கை டிஎன்ஏ, தீமைகளைவிட நன்மைகளையே அதிகமாகச் செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக வெல்கம் டிரஸ்ட் கூறுகிறது. இந்தத் திட்டத்தில் முக்கிய உறுப்பினரும், கேம்பிரிட்ஜில் உள்ள எம்.ஆர்.சி மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் ஜூலியன் சேல், இந்த ஆராய்ச்சியானது உயிரியலில் அடுத்த மிகப் பெரிய முன்னெடுப்பு என்று பிபிசியிடம் தெரிவித்தார். "வானமே எல்லை. முதியவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் சிகிச்சைகள் தேவை. வயதாகும்போது நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமான முதுமைக்கு வழிவகுக்கும் சிகிச்சைகளை நாம் தேடுகிறோம்." "அதற்கு செயற்கை டிஎன்ஏவை பயன்படுத்தலாம், சேதமடைந்த உறுப்புகளை மீண்டும் உயிர்ப்பிக்கலாம். எடுத்துக்காட்டாக கல்லீரல், இதயம், நோய் எதிர்ப்பு மண்டலம் உள்பட, நோய் எதிர்ப்பு செல்களை உருவாக்க செயற்கை டிஎன்ஏவை பயன்படுத்த முடியும்," என்று அவர் கூறினார். மனித மரபணுவை செயற்கையாக உருவாக்கும் முயற்சி ஆனால், மேம்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட மனிதர்களை உருவாக்க முயலும் நேர்மையற்ற ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த ஆராய்ச்சி உதவி செய்துவிடும் என்பதே இந்தத் திட்டத்தை விமர்சிப்பவர்களின் கவலையாக இருக்கிறது. Beyond GM என்ற பிரசாரக் குழுவின் இயக்குநர் டாக்டர் பாட் தாமஸின் கருத்துப்படி, "விஞ்ஞானிகள் அனைவருமே நல்லதுதான் செய்வார்கள் என்று நம்ப வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். ஆனால் தீமைக்கும், போருக்கும்கூட அறிவியலைப் பயன்படுத்த முடியும்." மனித டிஎன்ஏவில் உள்ள மூலக்கூறுகளை வரைபடமாக்கிய மனித மரபணு திட்டம் நிறைவடைந்த 25வது ஆண்டு விழாவில் இந்தத் திட்டம் தொடர்பான தகவல்கள் பிபிசிக்கு வழங்கப்பட்டன. இந்தத் திட்டத்திற்கு வெல்கம் டிரஸ்ட் பெருமளவில் நிதியுதவி அளித்துள்ளது. நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் டிஎன்ஏ எனப்படும் ஒரு மூலக்கூறு உள்ளது. அதில் மரபணு தகவல்கள் இடம் பெற்றிருக்கும். ஏ, ஜி, சி, டி எனக் குறிப்பிடப்படும் நான்கு மிகச் சிறிய தொகுதிகளில் இருந்து டிஎன்ஏ கட்டமைக்கப்படுகிறது. அவை பல்வேறு சேர்க்கைகளில் மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுகின்றன. உடல் ரீதியாக நாம் யார் என்பதை உருவாக்கும் அனைத்து மரபணு தகவல்களையும் டிஎன்ஏ கொண்டுள்ளது என்பது ஆச்சரியமளிக்கும் அறிவியல் உண்மை. விஞ்ஞானிகள் அனைத்து மனித மரபணுக்களையும் ஒரு பார் குறியீடு போலப் படிக்க, மனித ஜீனோம் திட்டம் உதவியது. செயற்கை மனித ஜீனோம் திட்டம் என்று அழைக்கப்படும் புதிய திட்டம், இதை மிகப் பெரிய அளவில் முன்னோக்கி எடுத்துச் செல்லும். இது, டிஎன்ஏவின் மூலக்கூறுகளை ஆய்வாளர்கள் படிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, மூலக்கூறின் பகுதிகளை, (ஒருவேளை அனைத்தையும்) புதிதாக உருவாக்க அனுமதிக்கும். மனித டிஎன்ஏ-வை புதிதாக உருவாக்கும் விஞ்ஞானிகளின் நோக்கம் என்ன? பட மூலாதாரம்,BBC NEWS படக்குறிப்பு, மனித டிஎன்ஏவின் பெரிய பகுதிகளை உருவாக்குவதற்கான கருவிகளை விஞ்ஞானிகள் உருவாக்கத் தொடங்குவார்கள் மனித டிஎன்ஏவின் பெரிய தொகுதிகளை உருவாக்குவதற்கான வழிகளை உருவாக்குவதே விஞ்ஞானிகளின் முதல் நோக்கம். அவை செயற்கையாக மனித குரோமோசோமை உருவாக்கும் வரை இது தொடரும். டிஎன்ஏவின் தொகுதிகள், நமது வளர்ச்சி, பழுது மற்றும் பராமரிப்பை நிர்வகிக்கும் மரபணுக்களைக் கொண்டுள்ளன. பின்னர் இவற்றை ஆய்வு செய்து பரிசோதித்து, மரபணுக்கள் மற்றும் டிஎன்ஏக்கள் நம் உடல்களை எவ்வாறு ஒழுங்குபடுத்துகின்றன என்பதைப் பற்றி மேலும் அறியலாம். "மரபணுக்கள் தவறாகச் செல்லும்போது பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. எனவே ஆய்வுகள், நோய்களுக்குத் தேவையான மேம்பட்ட சிகிச்சைகளை வழங்க வழிவகுக்கும்" என்று கூறுகிறார், மனித மரபணுவின் மிகப்பெரிய விகிதத்தை வரிசைப்படுத்திய வெல்கம் சாங்கர் நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் மேத்யூ ஹர்ல்ஸ் கூறுகிறார். "புதிதாக டிஎன்ஏவை உருவாக்குவது என்பது டிஎன்ஏ எவ்வாறு செயல்படுகிறது என்பதைச் சோதிக்கவும் புதிய கோட்பாடுகளைச் சோதிக்கவும் அனுமதிக்கிறது. ஏனெனில் தற்போது வாழும் அமைப்புகளில் ஏற்கெனவே இருக்கும் டிஎன்ஏவில், புதிய டிஎன்ஏவை மாற்றுவதன் மூலம் மட்டுமே நாம் அதைச் செய்ய முடியும்." செயற்கை மனிதர்கள் உருவாக்கப்பட்டால்... பட மூலாதாரம்,BBC NEWS படக்குறிப்பு, மனித டிஎன்ஏவை படிக்கப் பயன்படுத்தப்படும் இந்த இயந்திரங்கள் விரைவில் டிஎன்ஏவின் பகுதிகளை எழுதவும் பயன்படுத்தப்படலாம் இந்தத் திட்டத்தின் பணிகள் சோதனைக் குழாய்கள் மற்றும் கருவிகளுடன் மட்டுமே இருக்கும். செயற்கை உயிர்களை உருவாக்கும் எந்த முயற்சியும் இந்தத் திட்டத்தில் இருக்காது. ஆனால் இந்தத் தொழில்நுட்பம் ஆராய்ச்சியாளர்களுக்கு மனித வாழ்க்கை அமைப்புகள் மீது இதுவரை இருந்திராத கட்டுப்பாட்டை வழங்கும். இந்தத் திட்டம் மருத்துவ ரீதியிலான நன்மைகளை இலக்கு வைத்து செய்யப்பட்டாலும், நேர்மையற்ற விஞ்ஞானிகள் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வழிமுறைகள் எதுவும் இல்லை. உதாரணமாக, உயிரியல் ஆயுதங்கள், மேம்பட்ட மனிதர்கள் அல்லது மனித டிஎன்ஏ கொண்ட உயிரினங்களை உருவாக்க முயற்சி செய்யலாம் என்று மரபணு விஞ்ஞானி பேராசிரியர் பில் எர்ன்ஷா கவலை தெரிவிக்கிறார். இவர், செயற்கை மனித குரோமோசோம்களை உருவாக்குவதற்கான செயல்முறை ஒன்றை வடிவமைத்தவர். அதோடு, எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பிரபல மரபணு விஞ்ஞானி ஆவார். "பூதம் பாட்டிலுக்கு வெளியே வந்துவிட்டது," என்று அவர் இதுகுறித்து பிபிசியிடம் விவரித்தார். மேலும், "இப்போது நமக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கலாம், ஆனால் பொருத்தமான இயந்திரங்களை அணுகக்கூடிய ஓர் அமைப்பு இதைச் செய்ய முடிவு செய்தால், அதைத் தடுக்க முடியாது என்றே நான் கருதுகிறேன்" என்றார். ஆராய்ச்சிகள் மூலம் உருவாக்கப்படும் சிகிச்சைகளுக்கான மருந்துகளை உருவாக்கும் சுகாதார நிறுவனங்களால் தொழில்நுட்பம், வணிகமயமாக்கப்படும் என்பது குறித்து டாக்டர் பாட் தாமஸ் கவலைப்படுகிறார். "செயற்கை உடல் பாகங்களையோ அல்லது செயற்கை மனிதர்களையோ நம்மால் உருவாக்க முடிந்தால், அவை யாருக்குச் சொந்தமானவை. இந்தப் படைப்புகளில் இருந்து வரும் தரவுகள் யாருடையது?" என்று அவர் கேள்விகளை எழுப்புகிறார். தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் சாத்தியங்களைக் கருத்தில் கொண்டு, அவர்கள் ஏன் இந்த ஆராய்ச்சிக்கு நிதியளிக்கிறார்கள் என்பதுதான் தற்போது வெல்கம் நிறுவனத்திடம் கேட்கப்படும் கேள்வி. இந்த முடிவு இலகுவாக எடுக்கப்படவில்லை என்று நிதியுதவி அளித்த வெல்கம் நிறுவனத்தின் டாக்டர் டாம் காலின்ஸ் கூறினார். "இதற்கு நிதியளிக்காவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வியை எங்களிடம் நாங்களே கேட்டுக்கொண்டோம்," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "இந்தத் தொழில்நுட்பம் கண்டிப்பாக ஒரு நாள் உருவாக்கப்பட உள்ளது. எனவே இப்போதே அதைச் செய்வதில் தவறேதும் இல்லை. குறைந்தபட்சம் பொறுப்பான முறையில் அதைச் செய்ய முயல்கிறோம். அத்துடன், நெறிமுறை மற்றும் தார்மீக கேள்விகளை முடிந்தவரை வெளிப்படையாக எதிர்கொள்ள முயல்கிறோம்." ஒரு பிரத்யேக சமூக அறிவியல் திட்டமும், இந்தத் திட்டத்தின் அறிவியல் வளர்ச்சியுடன் இணைந்து இயங்கும். கென்ட் பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளர் பேராசிரியர் ஜாய் ஜாங் தலைமையில் இந்த சமூக அறிவியல் திட்டம் நடைபெறும். "செயற்கை மனித மரபணு திட்டம் தொடர்பாக, நிபுணர்கள், சமூக விஞ்ஞானிகள் மற்றும் குறிப்பாக பொது மக்களின் கருத்துகளை அவர்கள் தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்கள், அது அவர்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பது பற்றியும், முக்கியமாக அவர்களுக்கு எழும் கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்தும் நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்," என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gdm68j4gdo
  6. கதிர்காம முருகன் ஆலய பாதயாத்திரை: காட்டுவழியாக 5 நாட்கள் பயணம் நிறைவு Published By: DIGITAL DESK 2 26 JUN, 2025 | 04:37 PM யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட 850 கிலோமீட்டர் நீளமுள்ள பாதயாத்திரை, சுமார் 45 நாட்களாக வெவ்வேறு இடங்களை கடந்து பயணித்த பக்தர்கள், வியாழக்கிழமை (26) அன்று கதிர்காம முருகன் ஆலயத்தை சென்றடைந்தனர். இந்த பாதயாத்திரை, நேத்திக்கடனை நிறைவேற்றும் ஒரு ஆளுமைமிக்க பக்திப்பயணமாகும். இந்த ஆண்டுக்கான பாதையாத்திரை, கிழக்கு மாகாணத்தின் பாணமை உகந்தமலை முருகன் ஆலயத்தை கடந்த ஜூன் 19 அன்று சென்றடைந்து, அதனுடன் இணைந்த காட்டுவழிப் பாதை வெள்ளிக்கிழமை (20) சம்பிரதாயபூர்வமாக திறக்கப்பட்டது. இததனையடுத்து, 5 நாட்கள் காட்டுவழியில் பக்தர்கள் கடுமையான நடைபயணத்தை மேற்கொண்டு, இறுதியில் வியாழக்கிழமை (26) கதிர்காமத்தை அடைந்தனர். இந்த ஆண்டுக்கான காட்டுவழி பாதை ஜூலை 4 ஆம் திகதிக்கு பின் மூடப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அதேவேளை, பாதைபயணத்தின் போது தண்ணீர் வசதி இல்லாமல் பக்தர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டதாகவும், இது முந்தைய ஆண்டுகளில் இல்லாத புதிதான பிரச்சினையாக இருந்ததாகவும், அதற்காக பொறுப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218538
  7. செம்மணியில் ஏற்றப்பட்ட அணையா தீபம் தொண்டமனாற்று கடலில் 26 JUN, 2025 | 05:12 PM செம்மணியில் கடந்த மூன்று நாட்களாக அணையா தீபமாக எரிந்து கொண்டிருந்த தீபம் நேற்றைய தினம் புதன்கிழமை (26) தொண்டமனாற்று கடலில் விடப்பட்டது. செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு, யாழ் , வளைவுக்கு அருகில் அணையா தீபம் ஏற்றப்பட்டு, தொடர்ச்சியாக மூன்று நாட்களாக தீபம் அணையாது போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மூன்றாம் நாளான நேற்றைய தினம் மாலையுடன் போராட்டம் நிறைவு பெற்றதனை அடுத்து, அணையா தீபம் தொண்டமனாற்று பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு, கடல் நீரில் விடப்பட்டது மூன்றாம் நாள் போராட்டமான நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் நேரில் வருகை தந்து, அணையா தீபம் முன் நின்று வணங்கி மலரஞ்சலி செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218554
  8. Published By: VISHNU 26 JUN, 2025 | 09:02 PM புதன்கிழமை (25) யாழில் தொட்டியில் நீந்திக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் வலிப்பு ஏற்பட்ட நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதன்போது இணுவில் மேற்கு இணுவில் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் ஜீவன்சன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு தெல்லிப்பழை பகுதியிலும் ஒரு வீடு உள்ளது. இந்நிலையில் குறித்த இளைஞன் நேற்றையதினம் தந்தையின் மரக்காலைக்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டு தெல்லிப்பழையில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு தொட்டியினுள் தண்ணீர் நிரப்பிவிட்டு நீச்சலடித்துள்ளார். இதன்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பின்னர் மகனை காணாத நிலையில் பெற்றோர் அவரை தேடியவேளை அவரது சடலம் தண்ணீர் மிதந்தவாறு காணப்பட்டது. பின்னர் அவரது சடலமானது மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகளுக்காக அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். https://www.virakesari.lk/article/218576
  9. தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு Published By: VISHNU 26 JUN, 2025 | 09:32 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கைக்கு இது தனது முதல் விஜயம் என்றும், கடந்த காலங்களில் இலங்கையின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தில் ஆர்வமாக இருந்ததாகவும் கூறிய முன்னாள் ஜனாதிபதி ம்பெக்கி, இதுபோன்ற சமயத்தில் இலங்கைக்கு வருகை தருவது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்று கூறினார். தென்னாபிரிக்காவும் இலங்கையும் புவியியல் ரீதியாக தூரம் இருந்தாலும், வெவ்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் இருப்பதால் இரு நாடுகளும் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதில் இரு நாடுகளும் ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றன என்றும், பல்வேறு வகையான மக்கள் குழுக்களை ஒன்றிணைப்பதில் இலங்கை ஜனாதிபதியுடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள தான் விருப்பத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார். பல்வேறு வகையான மக்கள் குழுக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தற்போதைய பொருளாதார சவால்கள் மற்றும் தேசிய நல்லிணக்க சவால்களை இலங்கை ஜனாதிபதி சமாளிக்க முடியும் என்று ம்பெக்கி நம்பிக்கை தெரிவித்தார். நாடுகளுக்கு இடையே ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை சமாளித்து நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கும் தான் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகர் செண்டில் ஷால்க் ( Sandile Schalk), தபோ ம்பெக்கி நிதிய பிரதம நிர்வாக அதிகாரி மெக்ஸ்வெல் போக்வானா (Maxwell Boqwana), தபோ ம்பெக்கி நிதிய பிரதம செயல்பாட்டு அதிகாரி லுக்ஹன்யோ நீர் (Lukhanyo Neer) ஆகியவர்களும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். கெபிடல் மகாராஜா குழுமத்தின் நிறைவேற்றுக் குழுமப் பணிப்பாளர் ஷெவன் டெனியல் மற்றும் கெபிடல் மகாராஜா குழுமத்தின் பணிப்பாளர் அனுஷ்கா லெவ்கே ஆகியோரும் இந்நிகழ்வில் இணைந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/218578
  10. Published By: DIGITAL DESK 2 26 JUN, 2025 | 11:14 AM சூரிய மின் சக்தி கட்டமைப்புகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு செலுத்தப்படும் கட்டணத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை எதிர்த்து, சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்கள் குழுவினால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மேல் நீதிமன்ற நீதிபதி கே. பிரியந்த பெர்னாண்டோ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றில் ஆஜரான மனுதாரர்கள் கூறியதாவது, ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார நிறுவனம் (LECO) ஆகியவை செலுத்தும் கட்டணத்தை அமைச்சரவை தன்னிச்சையாக குறைத்துள்ளது. மின்சாரச் சட்டத்தின் கீழ், இவ்வாறான கட்டண மாற்றங்களுக்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் (PUCSL) ஒப்புதல் அவசியம். ஆனால், மின்சார கட்டண மாற்றம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இருந்து எந்த ஒப்புதலும் பெறப்படவில்லை. இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்த போதிலும், அரசாங்கம் அதைப் புறக்கணித்துள்ளது.. அமைச்சரவை தீர்மானத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு மின்சார கட்டண குறைப்பு நடைமுறைக்கு வருவது சட்டவிரோதமானது. எனவே சூரிய மின் சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை திருத்தியமைக்க அமைச்சரவை எடுத்துள்ள முடிவை இரத்து செய்யுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். இதனை கருத்தில் கொண்ட நீதவான் இந்த மனு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218484
  11. 26 JUN, 2025 | 07:13 AM அபிலாஷனி லெட்சுமன் இந்தியாவின் கேரள கடற்பரப்பில் இடம்பெற்ற MSC என்ற கப்பல் விபத்தினால் தொன் கணக்கான பிளாஸ்ரிக் துகள்கள் தென் ஆசிய கடற்பரப்பில் கலந்துள்ளளன. பிளாஸ்ரிக் துகள்களினாலான மாசாக்கத்தினால் இலங்கை பாதிக்கப்படுகின்றமையால் அதற்கான பொறுப்புக்கூறலை சிவில் சமூக அமைப்புக்கள் கப்பல் நிறுவனங்களிடம் கோருகின்றன. கொழும்பு 07 இல் அமைந்துள்ள தேசிய நூலகத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து தகவல் வெளியிடுகையிலேயே சிவில் அமைப்புக்கள் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளன. “எக்ஸ்பிரஸ் பேரள் (X-Press Pearl) அனர்த்தம் இடம்பெற்று 4 ஆண்டுகளின் பின்னர் பிளாஸ்ரிக் துகள்கள் தெற்காசியா மற்றும் இலங்கைக் கரையோரங்களை அலைகளினூடு வந்தடைவதை கிறீன் பீஸ் தெற்காசியா வன்மையாக கண்டிக்கின்றது” என Centre for Environmental Justice இன் தலைவர் ஹேமந்த விதானகே தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும், தெரிவிக்கையில், 2025 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி எம். எஸ். சீ. எல்சா - 3 (MSC ELSA 3) எனும் கப்பல் கேரளக் கடற்கரையில் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அதே கடற்பரப்பில் ஜூன் 9 ஆம் திகதி முதல் தீப்பிடித்து எரிந்து வரும் மற்றொரு பாரிய சரக்குக் கப்பலான வான்ஹாய் 503 (WAN HAI 503) இலிருந்து மேலதிக கொள்கலன்கள் காணாமல் போனமையையும் பெரும் அச்சுறுத்தலாக காணப்படுகினது. இதற்கு நாம் கண்டனத்தை தெரிவிக்கின்றோம். தெற்காசிய கடற்பரப்பில் சில வாரங்களுக்குள் குறிப்பிடத்தக்க அளவு எரிபொருள், நச்சுப்பொருட்கள் மற்றும் பிளாஸ்ரிக் துகள்களைக் கொண்ட இரண்டு கொள்கலன் கப்பல் மூழ்கியிருப்பது அல்லது மூழ்கும் அபாயத்திற்கு உள்ளாகி இருப்பது என்பது முன்னெப்போதும் இல்லாத ஒரு நிலமையாகும். பருவப்பெயர்ச்சிக் காலநிலை மற்றும் பருவகால நீரோட்டங்களால் ஆபத்தான பதார்த்தங்கள் கேரளா, தமிழ்நாடு மற்றும் இலங்கையின் கடலோரப் பல்வகைமை மற்றும் உள்ளூர் சமூகங்களை நோக்கி நகர்ந்து வருகின்றது. இதனால் கடல்சார்குழல், மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் பொருளாதாரங்களுக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிறீன் பீஸ் (Greenpeace) மற்றும் பிற கூட்டணி அமைப்புக்கள் இந்தியாவின் இரண்டு மாநிலங்கள் மற்றும் இலங்கைக் கடற்கரையின் மாதிரிகளை பரிசோதனை செய்தபோது பிளாஸ்ரிக் துகள்கள் மற்றும் இரசாயனங்கள் ஆகியவை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் MSC ELSA3 கப்பல் விபத்தினையே சுட்டிக் காட்டுகின்றன. "எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் அனர்த்தத்திலிருந்தே இலங்கை இன்னும் மீளவில்லை. அவ்வாறிருக்க தற்போது இன்னொரு மாசாக்கத்தினை எதிர்கொள்கின்றோம். இது வெறும் விபத்து அல்ல. மாறாக இது ஒரு ஒழுங்குமுறையின் தோல்வி மற்றும் நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மையே ஆகும். எனவே மாசாக்கத்தை பொறுப்பேற்கச் செய்ய வலுவான பிராந்திய வழிமுறை எமக்கு தேவை என மேலும் தெரிவித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த உயிர்ப்பல்வகைமையியல் திட்டத்தின் ஒருங்கிணைந்த ஆராய்ச்சியாளரும் வழிப்படுத்துனருமாகிய ககனி ரணசிங்க தெரிவிக்கையில், "ஏற்கனவே உள்ள பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் உணர்திறன்மிக்க பிரதேசங்கள் மற்றும் கடலோர பிரதேசங்கள் எவ்வாறு இத்தகைய தவிர்க்கப்படக்கூடிய கப்பல் விபத்துக்களால் மோசமடைகின்றன என்பதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகின்றது. பிளாஸ்ரிக்கின் துகள்கள் சிறியதாக இருந்தாலும் அவை எமது சுற்றாடல், சமூகம், சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கம் அளவிடமுடியாதது. அவை நச்சுத் தன்மையை உறிஞ்சவும் வெளிவிடவும் கூடியவை, கடல்வாழ் உயிரினங்களின் சுவாசத்தை பாதிக்க கூடியவை, மற்றும் சூழலில் பல தசாப்த காலத்திற்கு நிலைத்து நிற்கக்கூடியவை. பிளாஸ்ரிக் உற்பத்தியை நிறுத்த அல்லது ஒழுங்குமுறைப்படுத்த தீவிரமான நடவடிக்கை எடுக்காதுவிடின் நாம் எமது நீரை பிளாஸ்ரிக் கூழாக மாற்றிக்கொள்கின்றோம் என தெரிவித்தார். தெற்காசிய அமைப்பின் பிரசாரகர் அனிதா இதன்போது கருத்து தெரிவிக்கையில், "எக்ஸ்பிரஸ் பேர்ள்” இன் விபத்திற்கு நான்கு ஆண்டுகளின் பின்னர் இன்னொரு கப்பல் விபத்தினால் இலங்கையின் கரையோரம் மீண்டும் ஆபத்தை எதிர்நோக்குகின்றது. தன்னார்வலர்களினதும் பொது மக்கள் குழுவினதும் உதவியுடனும் அதனை மீட்டிருந்தோம். இலங்கை அரசாங்கம் தூய்மைப்படுத்தும் முயற்சி எடுத்துக்கொண்டிருந்த நிலையில் இத்தகைய அனர்த்தங்களுக்கு பொறுப்பான தனியார் நிறுவனங்கள் முழுமையாக பொறுப்பேற்காத போது தூய்மைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் செலவு வீணாக பொது மக்களின் மீதே சுமத்தப்படுகின்றது என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். மேலும் "இந்த அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற தன்மையின் தொடர்ச்சி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். கப்பலிற்குரிய தனியார் நிறுவனமே அதற்கான செலவை கொடுக்க வேண்டுமே தவிர மக்கள் அல்ல. இலங்கை அரசாங்கம் பொருளாதார நட்டத்திற்கும் உயிர்ப்பல்வகைமை இழப்பிற்கும் எம்.எஸ்.சி இனை பொறுப்பேற்க செய்ய வேண்டும்" என்றும் தெரிவித்தார். Climate Action Now அமைப்பின் சுற்றுச்சூழல்சார் செயற்பாட்டாளர் மெலனி குணதிலக தெரிவிக்கையில், எல்லைதாண்டிய பிளாஸ்ரிக் மாசுபாடு கடலினுள் சிந்தப்படும் பிளாஸ்ரிக் துகள்கள் மற்றும் பிற அபாயகரமான பொருட்கள் ஆகியவை ஒரு நாட்டின் எல்லைக்குள் மட்டும் இருப்பதில்லை. மாறாக அவை கடந்து பிராந்தியம் முழுவதும் எல்லைகளை உள்ள கடற்சூழலையும் கரையோரப் பிரதேசங்களையும் பாதிக்கின்றது. இந்த தொடர்ச்சியான சம்பவானது அபாயகரமான சரக்குகளின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதிலும் பிளாஸ்ரிக் உற்பத்தியின் உலகளாவிய உற்பத்தியின் அதிகரிப்பையும் கட்டுப்படுத்துவதிலும் உள்ள அமைப்பு ரீதியான தோல்வியை வெளிப்படுத்துகின்றது. எனவே, அரசாங்கம் பிராந்தியங்களின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் மாசாக்கத்திற்கு காரணமான மாசாளர்களை பொறுப்பேற்கச் செய்யவும் சுகாதார ரீதியில் பாதிக்கப்படக் கூடிய சமூகங்களை பாதுகாக்கவும் உணர்திறன்மிக்க சூழலியல் அமைப்புக்கள் மற்றும் கடல்வாழ் உயிரியல் பல்வகைமை ஆகியவற்றிற்கான அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கவும். தொடர்புடைய சர்வதேச விதிகளை ஆதரிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார். எனவே, கிறீன்பீஸ் ஆனது மெடிரறேனியன் கப்பல் நிறுவனத்திடம் (MSC) இருந்து கப்பலிலிருந்த சரக்குப் பொருட்களின் முழுமையான வெளிப்படைத்தன்மையையும் விரைவான துப்பரவு நடவடிக்கையையும், விபத்தினால் ஏற்பட்ட தாக்கத்தின் சுதந்திரமான மதிப்பீட்டிற்கும் எம். எஸ். சீ எல்சா 3 கப்பல் விபத்தினால் ஏற்பட்ட வாழ்வாதார இழப்பு உயிர்ப்பல்வகைமை இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டு திட்டத்தை மேற்கொள்ளவும் வலியுறுத்துகின்றது. மேலும் எம். எஸ். சீ நிறுவனமானது அனர்த்தம் குறித்து இதுவரை எந்த தகவலையும் வெளியிடாமல் உள்ளது. எனவே பொறுப்பு என்பது வெறும் வார்த்தை அல்ல என்பதும் எம். எஸ். சீ நிறுவனத்திற்கு நினைவூட்டுகின்றோம். https://www.virakesari.lk/article/218456
  12. ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்ட செப்பேடு Published By: VISHNU 26 JUN, 2025 | 12:41 AM செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களால் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் 06 அம்ச கோரிக்கைகள் பொறிக்கப்பட்ட செப்பு தகட்டினை கையளித்துள்ளனர். செம்மணி படுகொலைக்கு நீதி கோரி, யாழ். வளைவுக்கு அண்மையில் கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அணையா விளக்கு ஏற்றப்பட்டு , போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மூன்று நாட்களாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு புதன்கிழமை (25) யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் செம்மணி போராட்ட களத்திற்கு சென்ற வேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய் மார்களால் 06 அம்ச கோரிக்கைகள் அடங்கிய செப்பு தகடு கையளிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/218472
  13. பொறுப்புக்கூறலுக்கான அர்த்தமுள்ள செயன்முறை அவசியம்; உயர்ஸ்தானிகரிடம் வடக்கு சிவில் சமூகம் வலியுறுத்தல் Published By: VISHNU 26 JUN, 2025 | 12:36 AM (நா.தனுஜா) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள் தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்த வடக்கின் சிவில் சமூக பிரதிநிதிகள் பொறுப்புக்கூறலுக்கான அர்த்தமுள்ள செயன்முறையொன்றின் தேவைப்பாட்டினை வலியுறுத்தியுள்ளனர். அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகைத் தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் புதன்கிழமை (25) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். இந்த விஜயத்தின் ஓரங்கமாக புதன்கிழமை (25) பிற்பகல் 3.00 மணியளவில் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினரை யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் சந்தித்த உயர்ஸ்த்தானிகர், சுமார் ஒருமணிநேரம் வரை அவர்களுடன் பரந்துபட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் வாழும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வந்து மீளக்குடியமர்த்தல், பட்டதாரிகள் முகங்கொடுத்து வரும் வேலையில்லா பிரச்சினை, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகங்கொடுத்துவரும் பொருளாதார ரீதியிலான நெருக்கடிகள் என்பன தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் சிலர் உயர்ஸ்தானிகரிடம் விரிவாக எடுத்துரைத்தனர். அதேவேளை வடக்கில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை குறித்தும் அதன் விளைவாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் முகங்கொடுத்து வரும் நெருக்கடிகள் குறித்தும் வோல்கர் டேர்க்கிடம் எடுத்துரைத்த மற்றொரு பிரதிநிதி, வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அதேபோன்று ஏனைய பிரதிநிதிகளில் பலர் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், புதிதாக கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழிகள், காணி சுவீகரிப்பு, பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் நிலவும் தாமதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகருக்கு தெளிவுப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பி.ஐங்கரநேசன், தமிழ் சிவில் சமூக அமையத்தின் பிரதிநிதி பி.என்.சிங்கம், சிவகுரு ஆதினம் வேலன் சுவாமிகள், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஏ.டி.தெலீசன், வட-கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதி யோகதாஸா கனகரஞ்சனி, கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் என்.இன்பம், ஜனநாயக தமிழரசுக் கட்சியின் பிரதிச் செயலாளர் கருணாகரன் நாவலன் ஆகியோரின் கையெழுத்துடன் பொறுப்புக்கூறலுக்கான நியாயமான செயன்முறையொன்றின் தேவைப்பாட்டினை வலியுறுத்தி உயர்ஸ்தானிகரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/218471
  14. பட மூலாதாரம்,ISPR படக்குறிப்பு,சையத் மோயிஸ் அப்பாஸ் ஷா கட்டுரை தகவல் எழுதியவர், ஃபர்ஹத் ஜாவேத் பதவி, பிபிசி உருது, இஸ்லமாபாத் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பாகிஸ்தான் ராணுவ மேஜர் சையத் மோயிஸ் அப்பாஸ் ஷா, ராணுவ நடவடிக்கை ஒன்றில் உயிரிழந்தார். பாகிஸ்தானின் தெற்கு வாஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள சரரோகா பகுதியில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையின் போது அவர் உயிரிழந்தார். 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலகோட் தாக்குதலின் போது இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை, ராணுவ அதிகாரி மோயிஸ் ஷா சிறைபிடித்தார். அவரின் இறுதி அஞ்சலி ராவல்பிண்டியில் நடைபெற்றது. பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர் துறையின்(ஐ.எஸ்.பி.ஆர்) தகவல்களின்படி, பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் முனீர், உள்துறை அமைச்சர் மோஹ்சின் நக்வி ஆகியோர் அந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர். 'பணியில் இருந்த மேஜர், வீரத்துடன் தீவிரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற சண்டையின் போது தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்துள்ளார். வீரம், தியாகம் மற்றும் நாட்டுப்பற்றுக்கு ஒரு தலை சிறந்த எடுத்துக்காட்டாக அவர் மாறியுள்ளார்' என்று இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்ற முனீர் குறித்து பேசியதாக ஐ.எஸ்.பி.ஆர் கூறுகிறது. அஞ்சலிக்குப் பிறகு மேஜர் மோயிஸின் உடல் அவருடைய சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது. அங்கு அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும். 'உளவு அமைப்புகள் வழங்கிய தகவல்களின்படி, பாதுகாப்புப் படையினர் தெற்கு வாஜிரிஸ்தானில் தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். இந்த தாக்குதல் நடவடிக்கையில் ரகசியமாக பதுங்கியிருந்த 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 7 பேர் காயம் அடைந்தனர். இரு தரப்பிலும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் காரணமாக மேஜர் மோயிஸ் ஷா மற்றும் லான்ஸ் நாய்க் ஜிப்ரனுல்லா ஆகியோர் கொல்லப்பட்டனர்' என்று ஐ.எஸ்.பி.ஆர் கூறியது. யார் இந்த மேஜர் மோயிஸ்? மேஜர் சையத் மோயிஸ் அப்பாஸ் ஷா (37), சக்வாலைச் சேர்ந்தவர். அவர் 2011-ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார். அவர் அப்போது பாகிஸ்தான் ராணுவத்தின் என்.எல்.ஐ படைப்பிரிவில் சேர்ந்திருந்தார். பிறகு அவர் பாகிஸ்தானின் சிறப்பு சேவைக் குழுவில் இடம் பெற்றார். சமீபத்திய காலத்தில் அவர் வாஜிரிஸ்தானில் பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். 6 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவும் பாகிஸ்தானும் போர் பதற்றத்தில் இருந்த காலத்தில் மேஜர் மோயஸின் பெயர் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றன. பாலகோட் வான்வழித் தாக்குதலின் போது இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டார். பிப்ரவரி 27, 2019 அன்று மோயஸ் மற்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் எல்லை கோட்டை அடைந்து, விமானத்தில் இருந்து அங்கு விழுந்திருந்த அபிநந்தன் வர்தமானை கைது செய்தனர். இந்த வீடியோ பிறகு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பட மூலாதாரம்,HAMID MIR/X படக்குறிப்பு, மோயிஸ் மரணமடைந்த செய்தி வெளியான பிறகு, 2020-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஹமித் மிருக்கு அவர் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அபிநந்தன் பயணித்த போர் விமானம் விபத்துக்குள்ளாகும் போது, பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியில் அபிநந்தன் பாராசூட் மூலம் கீழே விழுந்ததைப் பார்த்தார் அந்த பகுதியில் வசிக்கும் முகமது ரசாக். ரசாக்கும் இதர உள்ளூர் வாசிகளும் அபிநந்தன் விழுந்த இடத்திற்கு சென்ற போது , ஏற்கனவே அங்கே கூடியிருந்த பொதுமக்கள் அபிநந்தன் மீது கல்லெறிந்து தாக்குதல்களை நடத்தினார்கள் என்றும், அங்கிருந்து அபிநந்தன் தப்பிக்க முயன்றார் என்றும் அப்போது பிபிசியிடம் பேசிய ரசாக் கூறினார். மக்கள் அவரை சூழ்ந்துவிட்டனர். ஒரு சிலர் அபிநந்தனை அடிக்க ஆரம்பித்தனர். அப்போதுதான் கேப்டன் சையத் மோயிஸ் தலைமையிலான ராணுவ வீரர்கள் அங்கே வந்தனர் என்றும் ரசாக் தெரிவித்தார். அப்போது வைரலான வீடியோவில் அபிநந்தனின் முகத்தில் காயம் ஏற்பட்டிருப்பதையும், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அவரை அழைத்துச் செல்வதையும் பார்க்க இயலும். அபிநந்தனை கைது செய்த போது நடந்தது என்ன? இந்த விவகாரம் நடந்து முடிந்து ஓராண்டு நிறைவுற்ற நிலையில், அப்போது நடந்தது என்ன என்று, ஜியோ நியூஸின் ஹமித் மிர் என்ற பத்திரிக்கையாளருக்கு பேட்டி அளித்தார் மேஜர் மோயிஸ். இந்திய விமானியை பார்க்க சென்ற அந்த சமயத்தில் உள்ளூர் மக்கள் அவரை சூழ்ந்துவிட்டதாக தெரிவித்தார் மோயிஸ். "இது மிகவும் சிக்கலான பகுதி. இங்கே இது போன்ற நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக செயல்பட்டு அபிநந்தனை உயிரோடு அங்கிருந்து மீட்க வேண்டும் என்பதே எங்களுக்கு முதல் கடமையாக இருந்தது," என்று மோயிஸ் ஹமிதுக்கு தெரிவித்தார். மோயிஸ் மரணமடைந்த நிலையில், செவ்வாய் கிழமை மாலையில் இருந்து அவருடைய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "பொதுமக்கள் அவரை அடிப்பதை நான் கவனித்தேன்," என்று மோயிஸ் தெரிவித்தார். இந்த சம்பவம் நடைபெற்ற சமயத்தில் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்தார். "நான் அங்கே சென்றவுடன் அபிநந்தன் என்னுடைய 'ரேங்க்' என்னவென்று கவனித்தார். பிறகு, 'கேப்டன், நான் விங் கமாண்டர் அபிநந்தன். இந்திய விமானப்படையில் பணியாற்றுகின்றேன். நான் சரணடைகின்றேன். என்னை உயிருடன் காப்பாற்றுங்கள்' என்று கூறினார். அவரின் பாதுகாப்பு என்னுடைய பொறுப்பாக மாறிவிட்டது. ஏன் என்றால் அவர் சரணடைந்துவிட்டார்," என்று அந்த பேட்டியில் மோயிஸ் தெரிவித்தார். அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினர் விசாரணையில் இருந்த போது வெளியான வீடியோ ஒன்றில், அபிநந்தன் அவருடைய பெயர், ரேங்க் ஆகியவற்றை கூறினார். மேலும் அவர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் நன்றாக நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார். "பாகிஸ்தான் ராணுவம் என்னை பார்த்துக் கொள்கிறது. ஆரம்பத்தில் உள்ளூர் மக்களின் தாக்குதலில் இருந்து கேப்டன் ஒருவர் என்னை காப்பாற்றினார்," என்றும் அவர் தெரிவித்தார். அபிநந்தன் ஒரு நாள் கழித்து மார்ச் 2 அன்று இந்தியாவின் வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz9kn45z7x0o
  15. இலங்கையில் தமிழருக்கு பிரச்சினைகள் இருப்பதாகவும்; தீர்வினை அரசாங்கத்துடன் இணைந்துதான் பெற வேண்டிய சூழல் இருப்பதாகவும் - வோல்கர் டேர்க் கருத்து Published By: VISHNU 25 JUN, 2025 | 07:49 PM தமிழ் மக்களுக்கு இலங்கையில் பிரச்சினைகள் இருப்பதை தான் உணர்வதாகவும் இதற்கான தீர்வினை அரசாங்கத்துடன் இணைந்துதான் மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாகவும் திருகோணமலை யுபிலி மண்டபத்தில் புதன்கிழமை (25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலின்போது ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இதனை தெரிவித்தார். திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கிழக்கு மாகாணத்தில் செயற்படுகின்ற சிவில் அமைப்புப் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலரை திருகோணமலை கல்லூரி வீதியில் அமைந்துள்ள யுபிலி மண்டபத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் இந்த கருத்தை தெரிவித்திருந்தார். குறித்த கலந்துரையாடலில் காணி அபகரிப்புகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல், படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நீதி, இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள், சர்வதேச நீதிப் பொறிமுறைகள், போன்ற பல விடயங்கள் பேசப்பட்டிருந்தன. குறிப்பாக யுத்தம் நிறைவுற்றதற்கு பின்னரான சூழ்நிலையிலும் இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள் நிழல் யுத்தம் ஒன்றுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். குறிப்பாக வட கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயற்படுகின்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பெண் மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வரைக்கும் இலங்கை அரசின் புலனாய்வுத் துறையினரால் கண்காணிக்கப்பட்டும் விசாரிக்கப்பட்டும் வருகின்றார்கள். அதுமட்டுமல்லாமல் தமிழ் பேசும் மக்களின் இருப்பை கேள்விக்கறியாக்கும் வகையில் தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு வருகின்றது. இதுவும் ஒரு இன அழிப்பு எனவும் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட மக்கள் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை அவர்களிடத்தில் கையளித்து அவர்களின் குடியிருப்பு மற்றும் தொழில் நடவடிக்கைகளுக்கு உதவுமாறும் வலியுறுத்தி இருந்தார்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தாங்கள் இன்றுவரை 30 ஆண்டு காலமாக தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது? தங்களால் கையளிக்கப்பட்ட உறவுகள் இன்னும் தங்களிடம் மீள வழங்கப்படவில்லை. இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் உண்மையை கண்டறிதல் மற்றும் பொறுப்புக்கூறல் விடையங்களுக்கு அரசாங்கத்துடன் ஈடுபட்டு வருகின்றோம் எனினும் இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் வெளிப்படுத்தாதபடியால் இலங்கை அரசை தாங்கள் நம்ப தயார் இல்லை. இதனால் சர்வதேச அமைப்புகளையே தாங்கள் நம்பி இருப்பதாகவும் உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை எனவே சர்வதேச நீதிப் பொறிமுறைதான் தங்களுக்குத் தேவை என்பதையும் தெரிவித்தனர். இலங்கையின் 30/1 தீர்மானத்தின்கீழ் வந்த 25 தீர்மானங்களை நிறைவேற்றவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், 46/1 ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை பொறுப்புக்கூறல் திட்ட குழுவினர் இலங்கைக்கு வருவதற்கான வீசாவை அரசு வழங்க வேண்டும் இதன்மூலம் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் சந்தித்து உண்மையான சம்பவங்களை பெற்றுக் கொண்டுசெல்ல வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக அதற்கான நீதியை வழங்க வேண்டும் எனவும் இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றுள்ளமை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் பொறுப்புக்கூறல் திட்டமானது 1948 இல் இருந்து இலங்கை தமிழருக்கு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் அன்று தொடக்கம் இன்று வரை ஆவணமாக்கப்பட்டு அறிக்கை இடப்பட வேண்டும். வட கிழக்கில் 40க்கு மேற்பட்ட மனித புதைகுழிகள் காணப்படுகின்றன. இந்நிலையில் 21 புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த உடலங்களை ஆய்வு செய்வதற்கு சர்வதேச நிபுனர்களை இங்கே அழைத்து அவர்கள் கண்காணிப்பில் இந்த அகழ்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பல விடையங்களை கலந்து கொண்டவர்கள் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்ததோடு மட்டுமல்லாது அது தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தார்கள். இதன்போது பதிலளித்த ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இந்த விடையங்கள் இலங்கையில் இருப்பதாக தான் உணர்வதாகவும், இதற்கான தீர்வினை இந்த தேசத்துடன் இணைந்துதான் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும், இருந்தாலும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களே ஆகியுள்ள நிலையில் தொடர்ச்சியாக இந்த அரசாங்கத்தை இலங்கையில் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துவதோடு, நீதிப்பொறிமுறை சார்ந்த விடையங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கின்றது எனவும். அதேபோல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிப் பொறிமுறையினை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் ஜனாதிபதியை தான் சந்திப்பதாகவும், இச்சந்தர்ப்பத்தில் இது தொடர்பாக கலந்துரையாடுவதாகவும் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/218468
  16. ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழ் மக்களை கை விட்டு விட்டது. கொடும் யுத்தம் நடந்த போது ஐ.நா சபை வடக்கில் இருந்து முன்னறிவித்தல் இல்லாமல் வெளியேறி, அங்கே சாட்சியம் இல்லாத யுத்தம் (War without Witness) நடக்க காரணமாக அமைந்து விட்டது. இன்று யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகியும், கொலையானோர், காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்பு கூறல் நடைபெறவில்லை. அரசியல் கைதிகள் பிரச்சினை முழுமையாக முடிவுக்கு வரவில்லை. யுத்தம் நடைபெற மூல காரணமாக அமைந்துள்ள இனப்பிரச்சினை தீர்வுக்கு வரவில்லை. ஆகவேதான், ஈழத்தமிழ் உடன் பிறப்புகள் ஐநா சபை தங்களை கைவிட்டு விட்டதாக நினைக்கிறார்கள். ஈழத்தமிழ் மக்களை கைவிட்டதை போன்று, இந்நாட்டில் வாழும் மலையக தமிழ் மக்களையும் கைவிட்டு விட வேண்டாம் என உங்களை கோருகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் நேரடியாக தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்கும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இலங்கையில் மக்கள் மத்தியில் மிகவும் பின் தங்கிய பிரிவினராக வாழ்கிறார்கள். காணி உரிமை, வீட்டு உரிமை, வறுமை, சிசு மரணம், சுகாதாரம். தொழில் நிலைமைகள் என்ற எதுவாக இருந்தாலும், அவை அனைத்திலும் மிகவும் குறை வளர்ச்சி கொண்ட மக்களாக இலங்கையில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள், இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் இலங்கை வந்த ஐ.நா விசேட அறிக்கையாளர் டொமொயா ஒபொகடா, தனது அறிக்கையில் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் காத்திரமாக குறிப்பிட்டு உள்ளார். அந்த அறிக்கையை அவர் உங்கள் ஐநா மனித உரிமை ஆணையகத்தின் 51ஆவது அவைக்கு சமர்பித்தார். அதை கவனத்தில் கொள்ளுமாறு உங்களை கோருகிறேன். இலங்கையை பற்றி அறிக்கை சமர்பிக்கும் போது, தவறாமல் இலங்கையின் வடகிழக்குக்கு வெளியே வாழும் மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் தொட ர்பில் கவனம் செலுத்தும் படி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் உங்களை மேலும் கோருகிறேன். இலங்கையில் வாழும் மலையக மக்கள் இன்னமும் முழுமையான குடி மக்களாக இந்நாட்டில் வாழ வில்லை. இரண்டாம் தர பிரஜைகளாகவே வாழ்கிறார்கள். காணி உரிமை உட்பட உரிமைகள் உரித்தாகும் போதுதான், அவர்களது குடி உரிமை முழுமை அடையும். அதை ஐ.நா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். https://adaderanatamil.lk/news/cmcbzrn6100dxqp4knhzanbhr
  17. அறிமுக டெஸ்டில் பந்துவீச்சில் சொனால் தினூஷ அபாரம்; பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் 220 - 8 விக். Published By: VISHNU 25 JUN, 2025 | 07:16 PM (எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (25) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. லிட்டன் தாஸ், முஷ்பிக்குர் ரஹிம் ஆகிய இரண்டு பிரதான வீரர்களின் விக்கெட்களை அறிமுக வீரர் சொனால் தினூஷ கைப்பற்றியதால் பங்களாதேஷினால் பலமான நிலையை அடைய முடியாமல் போனது. சொனால் தினூஷ மட்டுமல்லாமல் இலங்கையின் சகல பந்துவீச்சாளர்களும் பங்களாதேஷின் பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசைக்கு பெரும் மிரட்டலாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. எவ்வாறாயினும் இலங்கை வீரர்கள் களத்தடுப்பில் 3 பிடிகளை தவறவிட்டது பங்களாதேஷுக்கு ஓரளவு சாதகமாக அமைந்தது. இந்தப் போட்டியில் பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப வீரர் அமினுள் ஹக் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். ஆனால், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக் (21) ஆகிய இருவரும் இரண்டாவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷுக்கு சிறு தெம்பைக் கொடுத்தானர். மொமினுள் ஹக் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து அணித் தலைவர் நஜ்முல் ஹொசெயன் ஷன்டோ (8) ஆட்டம் இழந்தார். காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் குவித்து அசத்திய ஷன்டோவிடம் இருந்து பங்களாதேஷ் நிறைய எதிர்பார்த்தபோதிலும் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் அவரால் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் போனது. ஷன்டோ ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் ஷத்மான் இஸ்லாம் 46 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (76 - 4 விக்.) இந் நிலையில் அனுபவம்வாய்ந்த சிரேஷ்ட வீரர்களான முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொத்தனர். ஆனால் அவர்கள் இருவரையும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சொனால் தினூஷ ஆட்டம் இழக்கச் செய்தார். அறிமுக வீரர் தினூஷ முதல் 3 ஓவர்களில் ஓட்டம் கொடுக்காதது விசேட அம்சமாகும். லிட்டன் தாஸ் 34 ஓட்டங்களையும் முஷ்பிக்குர் ரஹிம் 35 ஓட்டங்களையும் பெற்றனர். அதன் பின்னர் சகலதுறை வீரர்களான மெஹிதி ஹசன் மிராஸ் (31), நயீம் ஹசன் (25) ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடினர். ஆனால், அவர்கள் இருவரும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையின் வேகபந்து வீச்சாளர்களால் ஆட்டம் இழக்கச் செய்யப்பட்டனர். ஆட்ட நேர முடிவில் தய்ஜுல் இஸ்லாம் 9 ஓட்டங்களுடனும் ஈபாடொத் ஹுசெய்ன் 5 ஒட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் சொனால் தினூஷ 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா, தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இன்றைய ஆட்ட நேரத்தில் ஒன்றரை மணி நேரம் மழையினால் தடைப்பட்டதால் இரண்டாம் நாள் ஆட்டம் நாளைக் காலை 9.45 மணிக்கு ஆரம்பமாவதுடன் நாளைய தினம் 98 ஓவர்கள் வீசப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/218467
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 25 ஜூன் 2025, 08:46 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் வால்பாறையில் அண்மையில் வட மாநிலத் தொழிலாளரின் 4 வயது மகளை சிறுத்தை கொன்றது மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தைகள் மட்டுமல்லாது, புலிகளும் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அவ்வப்போது நடந்துள்ளன. புலிகளும், சிறுத்தைகளும் இவ்வாறு ஆட்கொல்லிகளாக மாறுவது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. புலிகளும், சிறுத்தைகளும் எளிதில் ஆட்கொல்லிகளாக மாறாது என்றாலும், சில சூழ்நிலைகளில் அவை 'மேன் ஈட்டர்'களாக (man eater) மாறக்கூடும் என்று காட்டுயிர் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு, காட்டுயிர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதற்குத் தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். மனிதன் - காட்டுயிர் மோதல் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை மலைப்பகுதியிலும், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட வனப்பகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி மலைப்பகுதியிலும் மனித–காட்டுயிர் மோதல் என்பது ஒரு பிரச்னையாகவே நீடிக்கிறது. கோவை வனக்கோட்டத்தில் யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதும் நடக்கிறது. இதைக் குறைக்கவும், தடுக்கவும் வனத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என்பது அடுத்தடுத்து நடந்துவரும் உயிரிழப்புகள் உறுதிப்படுத்துகின்றன. காட்டுயிர்களால் பலியான மனித உயிர்கள் பட மூலாதாரம்,NCF படக்குறிப்பு,மனித–காட்டுயிர் மோதலுக்குக் காடு துண்டாடலும் முக்கியக் காரணமாகத் தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் விஞ்ஞானி ரமேஷ் கடந்த ஜூன் 20 அன்று, வால்பாறையில் பச்சமலை எஸ்டேட் பகுதியிலுள்ள குடியிருப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் மனோன் முண்டா–மோனிகா தேவி தம்பதியரின் 4 வயது மகள் ரோஷினி குமாரியை சிறுத்தை தாக்கிக்கொன்றது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஊசிமலை எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனில் அன்சாரி என்பவரின் 6 வயது மகள் அப்சரா சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். 2023 ஏப்ரல் மாதத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனில் ஓரான் என்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சிறுத்தையால் தாக்கப்பட்டார். அவர் உயிர் பிழைத்துவிட்டார். நீலகிரியில் 2014ம் ஆண்டு சோலாடா, அட்டபெட்டு, குந்த சப்பை பகுதிகளில் 3 மனித உயிர்களைக் கொன்ற புலியும், 2015ம் ஆண்டு பிதர்காடு பகுதியில் மகாலட்சுமி என்ற பெண் தோட்டத் தொழிலாளியை கொன்ற புலியும், 2016ம் ஆண்டு கூடலுார் வுட் பிரேயர் எஸ்டேட்டில் வேலை செய்த வடமாநில தொழிலாளி மது ஒரன் என்பவரைக் கொன்ற புலியும் ஆட்கொல்லிகளாக அறிவிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டன. பட மூலாதாரம்,NCF படக்குறிப்பு,தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், ஒரு புலி 'மேன் ஈட்டர்' ஆக மாறியதை ஆதாரப்பூர்வமாக வனத்துறை நிரூபிக்காவிடில் அதை சுட்டுக்கொல்வதற்கு அனுமதியளிப்பதில்லை 2021 ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் 4 பேரை கொன்ற டி23 என்று பெயரிடப்பட்ட புலியை, வனத்துறையினர் உயிருடன் பிடித்து மைசூரு தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். 2023 ஜனவரி 31 அன்று முதுமலை தெப்பக்காடு முகாமிலிருந்து 100 மீட்டர் தொலைவில், காட்டுக்குள் சென்ற பழங்குடி மூதாட்டியை புலி ஒன்று தாக்கிக் கொன்றது. 2025 மார்ச் 26 அன்று கொல்லகோடு பகுதியைச் சேர்ந்த தோடர் இனத்தைச் சேர்ந்த கேந்தர்குட்டன் என்பவர் வனப்பகுதியில் புலி தாக்கி உயிரிழந்தார். காடுகளில் உள்ள மற்ற விலங்குகளை வேட்டையாடும் இயல்புடைய புலியும், சிறுத்தையும் எந்தச் சூழ்நிலைகளில் ஆட்கொல்லியாக மாறுகின்றன என்பது குறித்து மக்களிடம் விவாதங்கள் வலுத்து வருகின்றன. 'மேன் ஈட்டராக' எப்போது மாறுகின்றன? ஒரு புலி 'மேன் ஈட்டர்' ஆகிறது என்றால், அதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன என்று விளக்குகிறார், முதுமலை புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவரான ராஜேஷ். அவரது கூற்றின்படி, சில புலிகளுக்கு வயதாகி வேட்டையாடும் திறனை இழந்திருந்தால், அவை எளிதில் கிடைக்கும் இரையாக மனிதர்களைத் தாக்கும் வாய்ப்புள்ளது. வயது குறைவாக இருந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் காயமடைந்து வேட்டையாட முடியாத சூழலில் மனிதர்களைத் தாக்கி இரையாக்கிக்கொள்வதுண்டு. சில இடங்களில் காட்டுக்குள் செல்லும் மனிதர்களை ஒரு விபத்தைப் போல புலிகள் தாக்குவதுண்டு. பட மூலாதாரம்,NCF ''பெரும்பாலான புலிகள், காயம்பட்டாலும், வயதானாலும் அவ்வளவு எளிதில் காட்டை விட்டு வெளியில் வராது. பல புலிகள் அங்கேயே இருந்து இறந்துவிடும். அத்தகைய சூழலில் யாராவது மனிதர்கள் சிக்கினால் இரையாக்கிக் கொள்ளும். அப்படி ஒரு முறை மனிதரை எளிதாக வேட்டையாடி இரையாக்கிக் கொள்ளும் பட்சத்தில் மீண்டும் மனிதர்களைத் தேடி வரும் வாய்ப்புள்ளது.'' என்கிறார் ராஜேஷ். ஜிம் கார்பெட் எழுதிய 'Man Eaters of Kumaon' என்ற நுாலில், இதுபற்றி விரிவாக எழுதியுள்ளதைக் குறிப்பிடும் நீலகிரி கானுயிர் சங்கத்தின் காட்டுயிர் புகைப்படக்காரர் சத்தியமூர்த்தி, மனிதர்களைக் கொன்று இரையாக்கிக் கொள்ளும் புலி மற்றும் சிறுத்தை ஆகியவை, 'மேன் ஈட்டர்'களாக மாறிவிட்டால் அவற்றைக் கொல்வதே தீர்வு என்று ஜிம் கார்பெட் பதிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டுகிறார். 1900 முதல் 1930 -ஆம் ஆண்டு வரை மனித உயிர்களை பலி கொண்ட பல புலிகள் மற்றும் சிறுத்தைகளை சுட்டுக்கொன்ற ஜிம் கார்பெட், புலிகள் மற்றும் சிறுத்தைகளின் வாழ்க்கை முறை, வேட்டையாடல் குறித்து நுணுக்கமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். அதே நேரத்தில் புலிகள், சிறுத்தைகளைக் காப்பதன் அவசியம் குறித்தும் ஏராளமான நுால்களை எழுதியுள்ளார். ''மனிதத் தசைகளில் உள்ள உப்பின் சுவையை ருசிக்கும் புலிகள், மீண்டும் அதைத்தேடி மனிதர்களை வேட்டையாடும் வாய்ப்பு அதிகம் என்று ஜிம் கார்பெட் கூறியுள்ளார். ஆனால், அன்றைக்கிருந்த காட்டுச் சூழலும், இன்றைக்கு உள்ள சூழலும் முற்றிலும் மாறியுள்ளன. காடுகள் துண்டாடப்பட்டு, காடுகளும், மனித குடியிருப்புகளும் நெருங்கி விட்டதால் மனிதர்கள் குறித்த புலி, சிறுத்தை போன்ற காட்டுயிர்களின் அடிப்படைத் தன்மைகளும் மாறியுள்ளன. அதற்கேற்ற புரிதல்கள் மக்களுக்கு வேண்டும்.'' என்கிறார் சத்தியமூர்த்தி. "ஒதுங்கி வாழும் புலி, ஊரைத் தேடி வரும் சிறுத்தை" படக்குறிப்பு,ஜிம் கார்பெட் எழுதிய 'Man Eaters of Kumaon' நூலின் அட்டைப்படம் பொதுவாக, புலிகள் மனிதர்களைக் கண்டால் கூச்சத்தில் ஒதுங்குகிற காட்டுயிர், மனிதர்கள் வாழும் பகுதிகளில் அதனால் வாழ முடியாது என்று கூறும் வனத்துறை மருத்துவர் ராஜேஷ், ஆனால் சிறுத்தைகளுக்கு அந்த அச்சம் கிடையாது, மனிதர்கள் வாழும் பகுதிகளில் எங்காவது பதுங்கிக்கொண்டு, ஆடு, நாய், கோழிகளைப் பிடித்து இரையாக்கிக் கொண்டு வாழக்கூடியவை என்கிறார். இதே கருத்தைச் சொல்லும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் (Nature Conservation Foundation–NCF) மூத்த விஞ்ஞானி ஆனந்தகுமார், ''எந்தப் புலியையும் நகருக்குள் பார்க்கவே முடியாது. ஆனால், சிறுத்தைகள் காடும், குடியிருப்பும் கலந்துள்ள பகுதிகளில் வாழும். கோவை போன்ற பெரு நகரங்களிலே கூட சில நேரங்களில் சிறுத்தைகள் வந்து செல்வதைப் பார்க்க முடியும்.'' என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"சிறுத்தைகள் பெரும்பாலும் அதன் கண்களுக்கு நேராக அல்லது அதற்கான சம அளவில் உள்ள சிறிய உயிர்களை மட்டுமே வேட்டையாடும்" புலிகள், எல்லா வயதினரையும் தாக்கிக் கொல்வதும், சிறுத்தைகள் பெரும்பாலும் குழந்தைகளைக் கொல்வதும் கடந்த கால சம்பவங்களின் மூலமாகத் தெரியவந்துள்ளது. இதற்கும் சில காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர். சிறுத்தைகள் பெரும்பாலும் அதன் உயரம், எடைக்கேற்பவே தனது இரையை வேட்டையாடும் என்கிறார் விஞ்ஞானி ஆனந்தகுமார். "சாதாரணமாக ஒரு பெரிய புலியின் எடை 250 முதல் 300 கிலோ வரை இருக்கும். ஆனால், ஆரோக்கியமான சிறுத்தையாக இருந்தாலும் அதிகபட்சம் 70–80 கிலோ அளவுதான் இருக்கும். புலி 120 செ.மீ. உயரம் வரையிருக்கும். ஆனால், சிறுத்தை அதிகபட்சமே 70 செ.மீ.க்கு உள்ளாகவே இருக்கும். அதனால் அந்த உயரத்துக்குள் இருக்கும் குழந்தைகளை அவை தாக்குவதாக" அவர் கூறுகிறார். ''சிறுத்தைகளின் முக்கிய இரை, காட்டுப்பன்றிகள்தான். புள்ளி மான் குட்டி, கேளையாடு, சருகுமான் (Mouse Deer), காட்டு முயல், காட்டுக்கோழி, தெருநாய் ஆகியவற்றையும் அவை அதிகமாக வேட்டையாடும். சில நேரங்களில் பெருக்கான், தவளை, காமன் லங்கூர், நீலகிரி லங்கூர், சாதாரண குரங்குகள் (bonnet macaque) போன்றவற்றையும் வேட்டையாடி உண்ணும். தேயிலைத் தோட்டப் பகுதிகளில் உள்ள கடமான் குட்டிகள் அவற்றுக்கு விருப்பமான வேட்டை உணவு.'' என்கிறார் வனத்துறை மருத்துவர் ராஜேஷ். சிறுத்தைகள் பெரும்பாலும் அதன் கண்களுக்கு நேராக அல்லது அதற்கான சம அளவில் உள்ள சிறிய உயிர்களை மட்டுமே வேட்டையாடும் என்று கூறும் ராஜேஷ், இதனால்தான் குழந்தைகள் அதிகமாக தாக்கப்படுவதாக கூறுகிறார். குழந்தைகளை சிறுத்தைகள் குறிவைப்பது ஏன்? பட மூலாதாரம்,SCIENTIST RAMESH படக்குறிப்பு,புலி மற்றும் சிறுத்தைகளைப் பொறுத்தவரை, அவற்றின் வாழ்விடங்களைப் பொறுத்து, அதன் வாழ்வியலும், வேட்டையாடலும் அமைவதாகச் சொல்கிறார் விஞ்ஞானி ரமேஷ் சமீபகாலமாக தேயிலைத் தோட்டங்களில் உள்ள குடியிருப்புகளில் வளர்க்கப்படும் தெருநாய்களைக் கொல்லவும் சிறுத்தைகள் அவற்றை நோக்கி வருவதாகச் சொல்கிறார், இந்திய காட்டுயிர் மையத்தின் (WII-Wildlife Institute of India) மூத்த விஞ்ஞானி ரமேஷ். அந்த உயரத்திலுள்ள குழந்தைகளையும் தனக்கான இரை என்று கருதி அவை வேட்டையாடுவதாகச் சொல்கிறார் அவர். ஜிம் கார்பெட் நுாலில் எழுதியுள்ளதைக் குறிப்பிடும் விஞ்ஞானி ரமேஷ், ''இரண்டு சம்பவங்களில் இயற்கை உபாதையைக் கழித்துக் கொண்டிருக்கும் போது, 2 பெண்களை புலிகள் தாக்கிக் கொன்றதை அவர் குறிப்பிட்டுள்ளார். அதுபோன்றே விறகு பொறுக்கக் குனியும் போதும், புலிகள் மற்றும் சிறுத்தைகளால் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் பதிவு செய்துள்ளார். சமீபகால நடைமுறையிலும் இதுபோலவே பல சம்பவங்கள் நடந்து வருகின்றன.'' என்கிறார். இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை விஞ்ஞானி ஆனந்தகுமார் பேசுகையில், ''தெரு நாய்களைத் தேடி சிறுத்தைகள் வருகின்றன. அதே உயரத்தில்தான் குழந்தைகளும் இருப்பதால் அவர்களைத் தாக்குகின்றன. உண்மையில் இதுபற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காடும், குடியிருப்பும் கலந்து இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணமென்பதை மறுக்க முடியாது.'' என்கிறார். புலி மற்றும் சிறுத்தைகளைப் பொறுத்தவரை, அவற்றின் வாழ்விடங்களைப் பொறுத்து, அதன் வாழ்வியலும், வேட்டையாடலும் அமைவதாகச் சொல்கிறார் விஞ்ஞானி ரமேஷ். ''புலிகள் சாதாரணமாக 2 வயதானவுடன் தாயை விட்டுப் பிரிந்து வெளியேறி வேட்டையாடப் பழகும். அப்போது எந்த இரை எளிதாகக் கிடைக்கிறதோ அதைத்தான் அவை தாக்கும். அதேபோன்று, காயம் பட்ட புலிகள் மனிதர்களை வேட்டையாடும். ஆனால், காயம்படும் புலிகள் வெகுநாட்கள் இருக்காது; இறந்துவிடும். '' என்கிறார் ரமேஷ். மனிதரை இரையாக்கிய பின்னும் 'மேன் ஈட்டர்' ஆகாத புலி இதற்கேற்ப முதுமலை புலிகள் காப்பகத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தையும் வனத்துறை அதிகாரி ஒருவர் விளக்கினார். கடந்த 2023 ஜனவரி 31 ஆம் தேதியன்று, முதுமலை தெப்பக்காடு முகாமிலிருந்து 100 மீட்டர் தொலைவில் காட்டுக்குள் விறகு பொறுக்கச் சென்ற ஒரு பழங்குடி மூதாட்டியை அடித்துக் கொன்ற இரண்டரை வயது புலியை, கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாகக் கண்காணித்தும் அதற்குப் பின் எந்த மனிதர்களையும் அது தாக்கியதில்லை என்று அவர் விளக்கினார். இதுபோன்று தற்செயலாக நடக்கும் சம்பவங்களால் புலிகள், உடனே 'மேன் ஈட்டர்'களாக மாற வாய்ப்பில்லை என்பதை இந்த ஆய்வு விளக்குவதாக வனத்துறையினர் விளக்குகின்றனர். அதனால்தான், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், ஒரு புலி 'மேன் ஈட்டர்' ஆக மாறியதை ஆதாரப்பூர்வமாக வனத்துறை நிரூபிக்காவிட்டால் அதை சுட்டுக்கொல்வதற்கு அனுமதியளிப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். புலிகளும், சிறுத்தைகளும் ஆட்களைக் கொல்வதிலிருந்து மக்களைக் காக்க, ஒவ்வொரு பகுதியையும் சம்பவத்தையும் ஆராய்ந்து தீர்வுகளை ஏற்படுத்த வேண்டுமென்பது விஞ்ஞானிகள் பலருடைய ஒருமித்த கோரிக்கையாகவுள்ளது. காடுகளை ஒட்டி வாழக்கூடிய மக்களுக்கு அதற்கேற்ப விழிப்புணர்வை ஏற்படுத்தி, வாழ்க்கை முறையை மாற்ற வேண்டுமென்று இவர்கள் வலியுறுத்துகின்றனர். மனிதன் – காட்டுயிர் மோதலை தவிர்ப்பது எப்படி? மனித–காட்டுயிர் மோதல் குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இயற்கை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஆனந்தகுமார், ''நகருக்குள் சாலைகளை ஒட்டி வீடுகள் இருக்கின்றன. அங்கே வாழும் குழந்தைகளை சாலைக்குப் போகக் கூடாது என்று சொல்லிக் கொடுத்து வளர்ப்பது போல, காட்டை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் இத்தனை மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது, விளையாடக் கூடாது என்று குடும்பங்களுக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.'' என்கிறார். பட மூலாதாரம்,NCF படக்குறிப்பு, புலி, சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிப்பது இதற்கு ஒரு தீர்வு கிடையாது என்கிறார் விஞ்ஞானி ரமேஷ் வால்பாறையில் மட்டுமின்றி, கேரள மாநிலம் வயநாடு, மேற்கு வங்காளத்தின் வடக்குப் பகுதி என இந்தியாவில் குடியிருப்பும், காடும் உள்ள பகுதிகளில் மனித–காட்டுயிர் மோதல் இருப்பதாகக் கூறும் விஞ்ஞானி ரமேஷ், "புலி, சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிப்பது ஒரு தீர்வு கிடையாது, அந்தந்தப் பகுதிக்கேற்ப நுண் திட்டங்களை (Micro Plan) உருவாக்க வேண்டும்" என்கிறார். தங்கள் அமைப்பின் ஆராய்ச்சியில், மனித–காட்டுயிர் மோதலுக்கு காடு துண்டாடப்படுவதும் முக்கியக் காரணமாகத் தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் அவர். ''தேசிய அளவில் மனித–காட்டுயிர் மோதலுக்கான மையத்தை கோவையில் அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தண்ணீர், தெரு விளக்கு என அடிப்படை வசதிகளுக்காக ஊராட்சி அளவில் திட்டம் தீட்டுவதுபோல, இதிலும் ஊராட்சி அளவில் திட்டங்களைத் தீட்டுவதற்கு வாய்ப்புள்ளது. ஒரு பகுதியில் மோதல் வந்தபின் தீர்வு காண்பதை விட வராமல் தடுப்பதற்கான தொலைநோக்கு திட்டங்களை உருவாக்குவது அவசியம்.'' என்கிறார் விஞ்ஞானி ரமேஷ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0j4nq3d7g1o
  19. உயர்தர பரீட்சை விண்ணப்பங்கள் குறித்து வௌியான தகவல் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்திற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 26 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இற்குப் பிரவேசித்து விண்ணப்பிக்கலாம். 2025 ஜூலை 21ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது எனவும், எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmcbwbtmh00dkqp4kyv46edvj
  20. இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு வோல்கர் டர்க் பாராட்டு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) நேற்று (24) பாராளுமன்றத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்னவும் கலந்துகொண்டனர். இந்த சுமூகமான கலந்துரையாடலின் போது, சபாநாயகர் இலங்கை பாராளுமன்றத்திற்கு உயர்ஸ்தானிகரை வரவேற்றார். இலங்கையில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்கள் வன்முறை சம்பவங்கள் இல்லாமல், மக்களை பிளவுபடுத்தும் இன அரசியலை உறுதியாக நிராகரிப்பதை பிரதிபலிக்கக்கூடிய வகையில் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடத்தப்பட்டதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார். உண்மையான நல்லிணக்கம் ஒவ்வொரு தனிநபரின் இதயத்திலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும் என்றும், மக்களால் வழங்கப்பட்ட ஆணை ஒற்றுமைக்கான அவர்களின் அபிலாஷையைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். சமூகங்களுக்கிடையில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும், இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கும், ஜனநாயகம் மற்றும் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்துவதற்கும் தற்போதைய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார். தற்போதைய பாராளுமன்றத்தின் முற்போக்கான உள்ளடக்கிய தன்மையை எடுத்துக்காட்டிய அவர், இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமை மற்றும் பார்வை குறைபாடுடைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை என்பவற்றை சுட்டிக்காட்டினார். இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டிய மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், குறிப்பாக பல நாடுகள் எதிர் திசையில் நகர்ந்து கொண்டிருக்கும் உலகளாவிய சூழலில் சமூகங்களை ஒன்றிணைத்தல், நம்பிக்கையை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கத்தை அடைதல் என்பன உண்மையில் கடினமான பணியாகும் எனத் தெரிவித்தார். ஒவ்வொரு தனிநபரும் வேறுபாடுகள் இல்லாமல் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுவதற்கான அடித்தளம் மனித உரிமைகள் என்று சுட்டிக்காட்டிய அவர், ஐக்கிய நாடுகள் சபை இந்த இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்படுவதை வலியுறுத்தினார். சபாநாயகருடனான சந்திப்பை அடுத்து, மனித உரிமைகள் ஆணையாளர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் பிரத்தியேக சந்திப்பை நடத்தினார். இதன்போது நாட்டின் சமூக - அரசியல் நிலைமை மற்றும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். அத்துடன், இலங்கையின் மனித உரிமை நிலைமை, நல்லிணக்கச் செயன்முறை, தேவையான சட்ட மறுசீரமைப்புகள் தொடர்பிலும் அவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இலங்கையில் நிலையான நல்லிணக்கம் மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவையும் நிபுணத்துவத்தையும் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து வழங்கும் என்றும் கட்சித் தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர். இந்தச் சந்திப்பில் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ் (Marc-André Franch), மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய - பசுபிக் பிராந்தியத்துக்கான தலைவர் ரோரி முங்கோவன் (Rory Mungoven) உள்ளிட்ட ஐ.நா. பிரதிநிதிகள் குழுவினரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். https://adaderanatamil.lk/news/cmcbvq60e00djqp4k6uihh7n6
  21. செம்மணி “அணையா விளக்கு” போராட்டக் களத்திற்கு சென்றார் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் Published By: DIGITAL DESK 3 25 JUN, 2025 | 05:46 PM யாழ். செம்மணி அணையா விளக்கு போராட்டக் களத்திற்கு சென்று நிலைமைகளை ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் பார்வையிட்டதுடன், செம்மணி அணையா விளக்கு போராட்ட இடத்தில் மலர் தூவி கற்பூர தீபமிட்டு அஞ்சலி செலுத்தினார். குறித்த பகுதிக்கு சென்ற ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், செம்மணி மனிதப்புதைகுழிப் பகுதியை பார்வையிட்டதுடன், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளையும் கேட்டறிந்துகொண்டார். குறித்த பகுதிக்கு சென்ற ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை பார்வையிட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார். https://www.virakesari.lk/article/218460
  22. யாழ் வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்க கோரி ஐந்தாம் நாளாக தொடரும் போராட்டம் Published By: VISHNU 25 JUN, 2025 | 06:55 PM யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிக்க கோரி புதன்கிழமை (25) ஐந்தாம் நாளாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருக்கின்றனர். இந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், வடமாகாண அவைத் தலைவர் சி வி கே சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/218464
  23. செம்மணியில் குழப்பம் விளைவிக்கப்பட்ட சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்; அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு 25 JUN, 2025 | 05:31 PM செம்மணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ''அணையா விளக்கு'' போராட்டத்துக்கு நாம் முழு ஆதரவையும் வழங்குகின்றோம். அதேபோல நீதிக்கான இப்போராட்டத்தை ஒரு சில கும்பல் சுயநல அரசியலுக்காக பயன்படுத்த முற்படுகின்றன என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். செம்மணி போராட்டம் தொடர்பில் யாழில் புதன்கிழமை (25) ஊடக சந்திப்பு ஏற்படுத்தி கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், செம்மணி போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையிலேயே சம்பவ இடத்துக்கு சென்றிருந்தேன். செம்மணி புதைகுழிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யாரென்பது மக்களுக்கு தெரியும். இந்த கொலைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் மக்கள் எம்மிடமும் கூறியுள்ளனர். எனவே, எங்களுக்கும், அதற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. செம்மணியில் இன்று குழப்பம் விளைவித்த இளைஞர்கள் சிலர், செம்மணி புதைகுழி சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் பிறந்திருந்தார்களா என்பதுகூட தெரியாது. இப்படியானவர்களே அரசியல் வாதிகளை விரட்டியடிக்கும் செயலில் ஈடுபட்டனர். அணையா விளக்கு போராட்டத்தை ஆரம்பிக்கின்றோம், அதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர். ஆளுங்கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என சமூகவலைத்தளங்கள் ஊடாக மக்கள் கருத்துகளை முன்வைத்து வந்தனர். ஒரு அமைச்சராக நான் போராட்டத்தில் பங்கேற்பது அப்போராட்டத்தக்கு வலுசேர்க்கும் என்பதே உண்மை. அந்த செய்தி சர்வதேசம் வரை செல்லும். அந்தவகையில் மக்களை சந்திப்பதற்காக இன்று நான் செம்மணிக்கு வந்தபோது ஒரு சில கும்பல், தமது அரசியல் இலாபத்துக்கு குழப்பம் விளைவித்தனர். இது தொடர்பில் மக்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. மக்களின் மனநிலை என்னவென்பதும், அவர்களின் வலி வேதனையும் எங்களுக்கு தெரியும். செம்மணியில் குழப்பம் விளைவிக்கப்பட்ட சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். செம்மணியில் மட்டும் அல்ல நாட்டில் மேலும் பல இடங்களிலும் புதை குழிகள் உள்ளன. எமது கட்சி தலைவர் உட்பட தோழர்களும் கொன்று புதைக்கப்பட்டனர். இப்படியான சம்பவங்களுக்கு நீதி வேண்டும். அதற்கான தேடலை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும். இனவாதம், மதவாத மற்றும் பிரதேச வாதத்துக்கும், பிரித்தாளும் சூழ்ச்சிக்கும் எமது ஆட்சியில் முடிவு கட்டப்பட்டுள்ளது. ஒரு சிறு கும்பல் எம்மை, விரட்ட முற்பட்டாலும் நாம் குரோத மனப்பான்மையுடன் செயற்படப்போவதில்லை. ஒரு அமைச்சராக நான் பாதுகாப்பு தரப்புடன் சென்றிருக்கலாம். சம்பவத்தின் பின்னர் நடவடிக்கை எடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யவில்லை. தனி மனிதனாகவே நான் வந்தேன். ஏனெனில் மக்கள் எம்முடன் இருக்கின்றனர். செம்மணியில் முன்னெடுக்கப்படும் அணையா விளக்கு போராட்டத்துக்கு நாம் முழு ஆதரவையும் தெரிவிக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/218458
  24. Published By: VISHNU 25 JUN, 2025 | 07:05 PM இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் புதன்கிழமை (25) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (25) மாலை வந்திறங்கிய ஆணையாளர், முன்னதாககோவில் வீதியில் அமைந்துள்ள IOM அலுவகத்திற்கு சென்றிருந்தார். அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழி காணப்படும் சிந்துபாத்தி இந்து மயானத்திற்கு சென்று புதைகுழிகளை நேரில் பார்வையிட்டார். அதன் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் போது, களத்தில் நின்ற சட்டத்தரணிகள், மனித புதைகுழி அப்பகுதியில் காணப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தவர்கள் உள்ளிட்ட தரப்பினர்களிடம் புதைகுழிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ். வளைவுக்கு அருகில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் " அணையா விளக்கு" போராட்ட களத்திற்கு நேரில் சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார். அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஏற்றப்பட்ட "அணையா தீபத்திற்கு" முன்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். https://www.virakesari.lk/article/218465
  25. இலங்கையுடனான 2ஆவது டெஸ்ட் : பகல்போசன இடைவேளையின்போது பங்களாதேஷ் 72 - 2 விக். 25 JUN, 2025 | 12:49 PM (எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி) எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (25) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ், முதலாம் நாள் பகல்போசன இடைவேளையின்போது 2 விக்கெட்களை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. போட்டியின் 5ஆவது ஓவரில் அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் அனாமுல் ஹக் (0) ஆட்டம் இழந்தார். (5 - 1 விக்.) தொடர்ந்து ஷத்மான் இஸ்லாம், மொமினுள் ஹக் ஆகிய இருவரும் நிதானத்தைக் கடைப்பிடித்து துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 43 ஓட்டங்களாக உயர்த்தினர். அந்த சந்தர்ப்பத்தில் பந்துவீச்சில் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்ட அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா முதலாவது பந்திலேயே மொமினுள் ஹக்கை (21) ஆட்டம் இழக்கச் செய்தார். பகல் போசன இடைவேளையின்போது ஷத்மான் இஸ்லாம் 43 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 7 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 14 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் தனஞ்சய டி சில்வா 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இன்றைய போட்டியில் இலங்கை அணியில் சொனால் தினூஷ அறிமுகமானதுடன் உபாதைக்குள்ளான மிலன் ரத்நாயக்கவுக்குப் பதிலாக விஷ்வா பெர்னாண்டோ இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218410

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.