Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 30 MAY, 2025 | 11:57 AM இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மிகப்பிரமாண்டமான முறையில் கனடா கல்விக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (30) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமானது. கனடா - இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் குலா.செல்லத்துரை, மற்றும் குறித்த சம்மேளனத்தின் இலங்கைக்கான தலைவர் பியந்த சந்திரசேகர மற்றும் பலதரப்பட்ட துறைசார் அதிகாரிகள் பங்கேற்கபுடன் இந்த கண்காட்சியானது சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கனடா கல்விக் கண்காட்சி மற்றும் யாழ்ப்பாணம் முதலீட்டு வர்த்தக மன்றம் 2025 என்ற குறித்த கண்காட்சி வடக்கு கிழக்கின் இளைஞர்களை மேம்படுத்தல் - எதிர்காலத்தை கட்டியெழுப்பல் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்றது. வெள்ளிக்கிழமை (30) சனிக்கிழமை (31) இடமெறும் இந்த கண்காட்சியானது இலங்கை வர்த்தக சபை, இலங்கை கனடா வணிக மன்றம், கனடா உயர் ஸ்தானிகராலயம், கனடா இலங்கை வணிக மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். இந்நேரம் வெள்ளிக்கிழமை (30) பிற்பகல் 2.00 மணிக்கு மற்றுமொரு தனியார் விருந்தினர் விடுதியில் முதலீடு மற்றும் வர்த்தக கண்கட்சி ஆரம்பமாகவுள்ளதுடன் இதில் வடக்கின் ஆளுநர் உள்ளிட்ட பலர் அதிதிகளாகவும் கலந்து பங்கேற்று சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/216065
  2. படக்குறிப்பு,கடும் காற்றுடனான வானிலை காரணமாக மின்சார கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன 30 மே 2025, 08:59 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் கடும் காற்றுடனான வானிலை காரணமாக தலைநகர் கொழும்பு உள்பட பல பகுதிகளில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் வீடுகள் சேதமடைந்தன. மோசமான வானிலை நீடிப்பதால் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. ரயில் சேவையும் பல இடங்களில் தடைபட்டுள்ளது. கொழும்பு நகரில் வீடுகள் சேதம் இலங்கையில் கடந்த ஓரிரு தினங்களாகவே பல்வேறு பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய காற்று வீசி வருகின்றது. இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் வீசிய கடும் காற்று காரணமாக கடும் சேதம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. கொழும்பு நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்றிரவு கடும் காற்றுடனான வானிலை நிலவியிருந்தது. கொழும்பு - கொள்ளுபிட்டி பகுதி முதல் வெள்ளவத்தை பகுதி வரையான கரையோர பகுதிகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வீசிய கடும் காற்றுடனான வானிலை கரணமாக மரங்கள் முறிந்து வீழந்திருந்ததுடன், பல கட்டிடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் வீசிய கடும் காற்றுடனான வானிலை காரணமாக பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இந்த மரம் முறிந்து வீழ்ந்ததில் 6 வீடுகள் சேதமடைந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். மரம் முறிந்து வீழ்ந்தமையினால் எவருக்கும் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. கொழும்பு - தெமட்டகொடை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மதில் சுவரொன்று சரிந்து வீழ்ந்துள்ளது. நேற்றிரவு பெய்த கடும் மழையுடன் கூடிய கடும் காற்று காரணமாகவே இந்த மதில் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படக்குறிப்பு,கடும் காற்றுடனான வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன கண்டியில் தாய் - மகள் காயம் கண்டி பகுதியிலுள்ள வீடொன்றின் மீது தொலைத்தொடர்பு கோபுரமொன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். குறித்த வீட்டில் வசித்து வந்த தாய் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. அவிசாவளை - தெரணியகலை பகுதியில் மரமொன்று வீடொன்றின் மீது முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் காயமடைந்த மூவரும் தெரணியகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் கவலைக்கிடமான நிலையிலிருந்த சிறுமியொருவர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். புத்தளம் - ஆனைமடு பகுதியில் போலீஸ் நிலையத்தின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதை அடுத்து, போலீஸ் நிலையத்தின் கட்டடத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. சுமார் 50 வருடம் பழைமையான மரமொன்றே இவ்வாறு முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படக்குறிப்பு,வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார தடை ரயில் சேவைகளில் பாதிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசி வரும் கடும் காற்றுடனான வானிலை காரணமாக, ரயில் மார்க்கங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது. இதனால், பல ரயில் மார்க்கங்களின் ஊடாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, புத்தளம் ரயில் மார்க்கத்தின் ஊடாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது. வதுரவ மற்றும் கீனவல ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதை அடுத்து, அந்த ரயில் மார்க்கத்தின் ஊடாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மரம் முறிந்து வீழந்தமையினால், குறுந்தூர மற்றும் நெடுந்தூர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் தடை படக்குறிப்பு,நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசிய வரும் கடும் காற்றுடனான வானிலை நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் வீசி வரும் கடும் காற்றுடனான வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. கடும் காற்றுடனான வானிலை காரணமாக மின்சார கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதை அடுத்தே இவ்வாறு மின்சாரம் தடைபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது. தடைபட்டுள்ள மின்சாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை குறிப்பிடுகின்றது. இன்றைய வானிலை படக்குறிப்பு,கொழும்பு நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்றிரவு கடும் காற்றுடனான வானிலை நிலவியிருந்தது மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்றைய தினம் இடைக்கிடை கடும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. மேல், சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினம் 100 மில்லிமீட்டருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது. வடமத்திய மாகாணம், மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்றைய தினம் இடைக்கிடை மழையுடனான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் வேகமானது, 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றத்தை அடுத்து, பொதுமக்களை அவதானித்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8jgw401yxwo
  3. 2022ல தான் மின்சாரப் பிரச்சனை, அதிபர் தப்பியோடினது எல்லாம் அண்ணை. கரண்ட் இருந்தால் தான்.... சரியான வெக்கை!
  4. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நஜானின் மொடாமெதி பதவி, பிபிசி பாரசீகம் 30 மே 2025, 04:22 GMT உங்கள் சமையலறைக்குச் சென்று நீங்கள் உங்களுக்குப் பிடித்த உணவை சமைக்க துவங்குகிறீர்கள். அதற்கு உருளைக்கிழங்கு தேவைப்படுகிறது. நீங்கள் அதனை எடுக்கும் போது, அதில் முளைவிட்டிருந்தால் என்ன நினைப்பீர்கள்? இதை சமைப்பதா? இதனை சமைப்பது உடலுக்கு நன்மை அளிக்குமா? அல்லது குப்பையில் போடுவது சரியாக இருக்குமா என்று ஆயிரம் கேள்விகள் உங்கள் மனதில் எழுகிறதா? அடுத்த நேரம் என்ன சமைப்பது என்ற யோசனையே பெரிதாக இருக்கும் போது, முளைவிட்ட உருளை, வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற பொருட்களை சமைப்பது நல்லதா, கெட்டதா என்ற கேள்வி மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தும். ஆனால் இதற்கான பதிலை ஒரு வரியில் கூறிவிட இயலாது. உருளைக்கிழங்கு முளைவிடும் போது என்ன நடக்கும்? முளைவிடுதல் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. உங்கள் வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கு ஒரு செடியாக வளர போகிறது என்பதன் அறிகுறி அது. இந்த நிலையில், உருளைக்கிழங்கு க்ளைகோலாய்ட்ஸ் (glycoalkaloids) என்ற நஞ்சை அதிகமாக உற்பத்தி செய்யும். இந்த இயற்கையாக உருவாகும் நச்சுத்தன்மை, செடிகளை பூஞ்சைகள் மற்றும் பூச்சிகளின் தொற்றில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இந்த நச்சுகளில் காணப்படும் மற்றொரு கலவை சொலானின். இது உருளைக்கிழங்கு, தக்காளி, பெரிய கத்தரிக்காய் மற்றும் குடைமிளகாய் போன்றவற்றிலும் காணப்படும். அறுவடை செய்து, சேமித்து வைக்கும் போது இந்த நச்சுக் கலவைகளின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கிறது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகள் என இரு தரப்பினருக்குமே அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது. பட மூலாதாரம்,SHUTTER STOCK படக்குறிப்பு,முளைவிட்ட உருளைக்கிழங்குகளை சமைக்க பயன்படுத்தும் போது பசுமையான பகுதி முழுமையாக நீக்கப்பட வேண்டும் இப்படியாக முளைவிட்ட காய்கறிகளை உட்கொள்ளலாமா? "முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் மிகவும் ஆபத்தானது க்ளைகோலாய்டுகள். இது உணவுக்கு கசப்பான சுவையை தருவது மட்டுமின்றி, வாந்தியையும் ஏற்படுத்தும்," என்று டாக்டர் க்ரிஸ் பிஷப் தெரிவிக்கிறார். அவர் லிங்கன் பல்கலைக்கழகத்தில் அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பப்ப் பிரிவில் பணியாற்றுகிறார். 'பொட்டேட்டோஸ் போஸ்ட்ஹார்வெஸ்ட்' என்ற புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். "உருளைக்கிழங்குகள் பச்சை நிறத்தில் தோற்றமளித்தால் அதில் இந்த இயற்கை ரசாயனம் இருப்பது வெளிப்படையாக தெரிந்துவிடும். அதனால் தான் பச்சை நிறத்தில் இருக்கும் உருளைக்கிழங்குகளை உணவில் எடுத்துக் கொள்ளக் கூடாது," என்று பிஷப் பிபிசிக்கு தெரிவித்தார். "இந்த ரசாயனத்தின் செறிவானது, முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் இன்னும் கூடுதலாக இருக்கலாம். எனவே அவற்றை முழுமையாக நீக்கிவிட வேண்டும். சந்தேகம் இருக்கும் பட்சத்தில், முளைவிட்ட பகுதியில் அதன் 'வேர்' வரை சென்று முழுமையாக நீக்கிய பிறகு, மற்ற பகுதியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்," என்றும் அவர் தெரிவித்தார். அதே போன்று பிரிட்டனின் உணவு தரங்களுக்கான முகமை, முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் எப்பகுதியை உணவில் சேர்ப்பது சரியாக இருக்கும் என்று அறிவித்துள்ளது. அதன்படி, "குருத்தை நீக்கிவிட்ட பிறகும், உருளைக்கிழங்கு திடமாக இருக்கும் பட்சத்தில், எந்த சேதமும் இல்லாத பட்சத்தில், அதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்," என்று அறிவுறுத்துகிறது அந்த முகமை. "இருப்பினும், உருளைக்கிழங்கில் பச்சை நிறம் தெரிந்தால், அதனை சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம். ஏன் என்றால் பச்சை நிறம் இருப்பது, அதில் நச்சுத்தன்மை இருப்பதை சுட்டிக்காட்டும் அறிகுறியாகும்," என்றும் குறிப்பிட்டுள்ளது. "முளைவிட்ட உருளைக்கிழங்குகள், தொட்டுப் பார்ப்பதற்கு மிகவும் திடமாக, சுருக்கங்கள் ஏதுமின்றி இருக்கும் பட்சத்தில், குருத்துகள் மிகவும் சிறிதாக இருந்தால், அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது பாதுகாப்பானது. ஆனால், தொடுவதற்கு மிகவும் மிருதுவாகவும், சுருக்கங்களுடனும் காணப்பட்டால் அதில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தையும் அவை இழந்துவிட்டதை சுட்டிக்காட்டுகின்றன. எனவே அவற்றை உட்கொள்ள வேண்டாம்," என்ற முகமை குறிப்பிடுகிறது. பட மூலாதாரம்,SHUTTER STOCK படக்குறிப்பு,உருளைக்கிழங்குகள் முளைவிட்டிருந்தால், அதில் அளவுக்கு அதிகமாக நச்சுகள் உள்ளன என்று அர்த்தம். சொலானின் நச்சு அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு சில நிபுணர்கள் கூறுகின்றனர். கிழக்கு ஆங்க்லியா பல்கலைக்கழகத்தில் தாவர அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் கேத்தி மார்டின், "முளைவிட்ட உருளைக்கிழங்குகளை நீங்கள் உட்கொள்ளவே கூடாது," என்று கூறுகிறார். உருளைக்கிழங்குகளை வெளிச்சத்தில் வைக்கும் போது, அது முளைவிடுதலை தூண்டுகிறது. க்ளைகோலாய்டு, சொலானின் போன்ற நஞ்சுகளின் உற்பத்தியையும் தூண்டுகிறது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு கேடானது. குறிப்பாக நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கு இவை ஆபத்தானவை என்று அவர் விளக்குகிறார். "பச்சை நிறமில்லாத உருளைக்கிழங்குகளில் சொலானின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. இருப்பினும், இது விஷமாக மாறக்கூடிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் ஒருவர் உருளைக்கிழங்கை பச்சையாக உண்ணக் கூடாது," என்றும் கேத்தி தெரிவிக்கிறார். உண்மையில் மிகவும் அரிதாகவே சொலானின் நஞ்சால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளன. பிரிட்டனில் 1970-களின் பிற்பாதியில், 78 பள்ளி மாணவர்கள் பச்சை உருளைக்கிழங்குகளை உட்கொண்ட பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவகாரம் அதிகமாக அறியப்பட்ட நிகழ்வாக இன்றும் உள்ளது. மிகவும் குறைவான அளவில் உட்கொண்டால் அதனால் ஏற்படும் பாதிப்பையும் நீங்கள் குறைவாகவே உணர்வீர்கள். சொலானின் நஞ்சால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்படும். மிகவும் தீவிரமான தாக்கம் இருக்கும் பட்சத்தில், தலைசுற்றல், மயக்கம், குழப்பம், பலவீனமாக உணருதல், பார்வை திறனில் பிரச்னை, சுய நினைவை இழத்தல் போன்றவையும் ஏற்படும். சில நேரங்களில் மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய உருளைக்கிழங்குகளை உட்கொள்ளும் போது சிலருக்கு சில நிமிடங்களில் அறிகுறிகள் தென்படலாம். சிலருக்கு இரண்டு நாட்கள் கழித்து அறிகுறிகள் தென்படலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சொலானின் நச்சால் மக்களுக்கு வயிற்றுப்பொக்கு, வாந்தி மற்றும் கடுமையான வயிற்றுவலி போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன முளைவிட்ட உருளைகளை என்ன செய்வது? குருத்துகள் மிகவும் சிறிதாக இருந்தால், சமைப்பதற்கு முன்பு அவற்றை நீக்கிவிடவும் ஒரு அங்குலத்திற்கு மேலாக வளர்ந்திருந்தாலோ, அல்லது உருளைக்கிழங்கு மிகவும் மிருதுவாக இருந்தாலோ அதனை சமைக்க வேண்டாம் பச்சை நிறத்தில் இருக்கும் பகுதிகளை வெட்டி நீக்கவும். இது அதிக அளவில் இருக்கும் நச்சுகளையே குறிக்கிறது. உருளைக்கிழங்கு அழுகியிருந்தால் அதனை குப்பையில் போடுவதே சிறந்தது உருளைக்கிழங்குகளில் குருத்துகள் முளைத்திருக்கும் பட்சத்தில், அதனை பொறுமையாக கையாளவும். அதனை பிடுங்கி எறிவது, உருளையின் அப்பகுதியில் நோய் தொற்றை ஏற்படுத்தும். நம் உடலில் காயங்கள் ஏற்படுவது போன்று தான் அதுவும் நிகழும். நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்திலோ அல்லது பாலூட்டும் தாய்மாராகவோ இருந்தால், எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உருளைக்கிழங்குகளை வீட்டில் எப்படி வைத்திருக்க வேண்டும்? உருளைக்கிழங்குகள் வீணாவதை தடுக்கவும், 'ஃபிரெஷ்ஷாக' இருப்பதை உறுதி செய்யவும் கீழ் காணும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றலாம் 3-10° செல்சியஸ் வெப்ப நிலை கொண்ட, குளிர்ச்சியான, ஈரப்பதமற்ற, இருண்ட இடத்தில் வைக்கலாம். கடைகளில் இருந்து வாங்கிக் கொண்டு வந்த உருளைக்கிழங்குகளை அப்போதே கழுவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஈரப்பதம் அதிகரிக்கும் என்பதால் எளிதில் அழுகிப் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உருளைக்கிழங்குகளையும் வெங்காயங்களையும் தனித்தனியாக வைப்பது நல்லது. ஏன் என்றால் இவ்விரண்டு உணவுப் பொருட்களும் ஈரப்பதம் மற்றும் வாயுவை வெளியேற்றும் தன்மை கொண்டவை. இது முளைவிடுதலை தூண்டும். பட மூலாதாரம்,SHUTTER STOCK படக்குறிப்பு,உருளைக்கிழங்குகளையும் வெங்காயங்களையும் தனித்தனியாக வைப்பது நல்லது. முளைவிட்ட வெங்காயம் மற்றும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா? முளைவிட்ட வெங்காயம் மற்றும் பூண்டு, உருளைக்கிழங்கு போன்று நச்சுத்தன்மை கொண்டவை அல்ல. "மாறாக முளைவிட்ட பூண்டு மற்றும் வெங்காயத்தை உண்பது பாதிப்பை ஏற்படுத்தாது. ஏன் என்றால் அவற்றில் ஆபத்தை ஏற்படுத்தும் நச்சுத்தன்மை ஏதும் இல்லை," என்று கூறுகிறார் பேராசிரியர் மார்டின். "பூண்டு அல்லது வெங்காயத்தில் இருக்கும் ஊட்டச்சத்தில் இருந்து இவை முளைக்கின்றன. இருப்பினும் அவை கசப்பாகவும், மிகவும் மிருதுவானதாகவும் கொண்டிருக்கும்," என்றும் அவர் தெரிவிக்கிறார். பூண்டு, வெங்காயம் போன்ற உணவுப் பொருட்களையும் 3-10° செல்சியஸ் வெப்ப நிலை கொண்ட, குளிர்ச்சியான, ஈரப்பதமற்ற, இருண்ட இடத்தில் வைக்கலாம். ப்ளாஸ்டிக் பைகளில் போட்டு வைக்காமல், காற்றோட்டமான பைகளில் அவற்றை போட்டு வைத்தால் காற்றோட்டத்துடன் அவை இருக்கும். உருளைக்கிழங்குகள் போன்றே, வெங்காயம், பூண்டுகளில் இருந்து நாற்றம் எழுந்தாலோ, அழுகிப் போவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அவற்றை குப்பையில் கொட்டுவதே எப்போதும் நல்லது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgqzqe81xqo
  5. 30 MAY, 2025 | 11:50 AM ஆரோக்கியமற்ற நிலைமைகள் காரணமாக சிறுநீரக நோய்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நமது மாணவர்கள் ஆரோக்கியமான சூழலை நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படல் காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளை கண்காணிக்க சென்ற வேளை மாணவர்கள் பாடசாலையிலுள்ள கழிவறைக்குச் செல்ல ஆர்வம் காட்டாமல் இருப்பதை அறியக்கிடைத்தது. அசுத்தமான மற்றும் துர்நாற்றம் வீசும் கழிவறைகளே இதற்கு முக்கிய காரணம். மலசல கூடங்களை சுத்தப்படுத்த ஆளனிப்பற்றாக்குறை மற்றும் அதற்கான போதிய நிதி உதவியின்மை போன்ற குறைகள் உள்ளன. இதனால் மாணவர்கள் கழிவறைக்குச் செல்ல தயங்குவதுடன் சிறுநீரை வெளியேற்றாமல் வைத்துக்கொள்ள பழகிக் கொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு, சிறுநீர் தொற்று, சிறுநீரக கற்கள் போன்ற நோய்கள் ஏற்பட வழிவகுப்பதோடு பல நடத்தைப் பிரச்சினைகளுக்கும் ஆளாக நேரிடும். இப்பிரச்சினைகள் மிகவும் அவசரமாக பரிசீலிக்கப்பட வேண்டியதுடன் ஆரோக்கியமற்ற நிலைமைகள் காரணமாக சிறுநீரக நோய்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நமது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படல் காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது. இதுகுறித்து பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு மற்றும் பெற்றோர்கள் கவனம் செலுத்தி அதிபருடன் கலந்துரையாடி துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மாணவர்களின் சிறுநீரக நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை என்றார். https://www.virakesari.lk/article/216060
  6. எனது நண்பரும் யாழிணைய உறவும்(புனைபெயர் தெரியாது) புலர் அறக்கட்டளையின் உருவாக்கத்திற்கு உந்துகோலாக இருந்த முன்னாள் உபதலைவர் ஒட்டிசுட்டான் மகாவித்தியால ஆசிரியர் இந்த குளவித் தாக்குதலில் மயக்கமடைந்து தற்போது ஐ.சி.யு வில் இருக்கிறார். விரைந்து நலம்பெற வேண்டுகிறேன்.
  7. 30 MAY, 2025 | 12:24 PM யாழ்.மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதலாம் காலாண்டில் இறப்புகளை விட பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம் பிரபாகர் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கோரப்பட்ட தகவலுக்கமைவாக இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளது . இதன்படி, 2025 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை யாழ்.மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு எண்ணிக்கை ஆயிரத்து 572 ஆகவும் பதிவு செய்யப்பட்ட இறப்புகளாக ஆயிரத்து 373 ஆகவும் பதிவாகியுள்ளன. இறப்புகளை விட 199 பிறப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/216068
  8. Published By: DIGITAL DESK 3 30 MAY, 2025 | 12:17 PM முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள் இன்று வெள்ளிக்கிழமை (30) காலை பாடசாலை சென்ற மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி துரத்தி தேன் குளவிகள் கொட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திற்குள் கட்டிடம் ஒன்றில் தேன் குளவிகள் கூடுகட்டி இருந்துள்ளது. இன்றையதினம் வலயமட்ட விளையாட்டுப் போட்டிகள் ஒட்டுசுட்டான் மகாவித்யாலய மைதானத்தில் இடம்பெற இருந்த நிலையில் திடீரென தேன் குளவிகள் கலைந்து பாடசாலை, மைதானத்தில் நின்றவர்களை துரத்தி கொட்டியுள்ளது. இதனால் அச்சமடைந்த மாணவர்கள் பரவி பாய்ந்து ஒடியுள்ளனர். இப்பாடசாலையின் மாடிக் கட்டிடம் ஒன்றில் பலகாலமாக தேன் குளவிகள் கூடுகட்டி வாழ்வதாக கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/216067
  9. இந்தியாவில் அகதிமுகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த நிலையில் நாடு திரும்பிய ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் - சுமந்திரன் 30 MAY, 2025 | 12:40 PM இந்தியாவில் அகதிமுகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த நிலையில் பலாலியை வந்தடைந்த ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைதுசெய்துள்ளனர். அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து நேற்று பலாலியை வந்தடைந்த 75 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். நாடு திரும்புவதற்குத் தேவையான சகல ஆவணங்களும் அவரிடம் இருந்தபோதும், சர்வதேச சட்டப்படி அவர் ஒரு “அகதி” என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவரை பிணையில் விடுவிக்க எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தினால் ஜூன் 5ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாடு திரும்புவதற்கு தாயாராக இருக்கும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பயந்து வராமல் பண்ணுவதற்கான ஏற்பாடா இது? https://www.virakesari.lk/article/216073
  10. 30 MAY, 2025 | 02:32 PM ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை வியாழக்கிழமை (29) மேற்கொண்டார். இதன்போது, தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், குறித்த தொழிற்சாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் முகாமையாளரிடம் கேட்டறிந்ததோடு, அதனை உடனடியாக தீர்க்கும் வகையிலும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியுடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும், அங்கு பணிபுரியும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் முகமாக தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலின் போது, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் உள்ளிட்ட தரப்பினர் கலந்துக் கொண்டனர். https://www.virakesari.lk/article/216078
  11. தொடர்ந்து சிறப்பாக விளையாட வாழ்த்துகள் பா.அஸ்வின்.
  12. நடப்பு சீசனில் ஆர்சிபி வெற்றிமேல் வெற்றி பெற காரணமான புதிய அணுகுமுறை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 30 மே 2025, 03:14 GMT ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி அணி 4வது முறையாக தகுதி பெற்றுள்ளது. முலான்பூரில் நடந்த ஐபிஎல் டி20 தொடரின் ப்ளே ஆஃப் சுற்றில் முதல் தகுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி அணி. 2009, 2011, 2016ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி ஏறக்குறைய 9 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பைனலில் விளையாடுகிறது. அது மட்டுமல்ல கடந்த 6 சீசன்களில் 5வது முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அதில் 3வது இடத்தை ஒருமுறையும் பிடித்திருந்தது. ஆனால். இந்த முறை பைனலுக்கும் முன்னேறி தன்னை இன்னும் உயர்த்திக் கொண்டிருக்கிறது ஆர்சிபி அணி. நடப்பு சீசனில் ஆர்சிபி வெற்றிமேல் வெற்றி பெற காரணமான புதிய அணுகுமுறை என்ன? ஒருதரப்பான ஆட்டம் வலுவான அணிகள் மோதும் ப்ளே ஆஃப் சுற்று ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு நேற்றைய ஆட்டம் ஏமாற்றம் அளித்திருக்கும். அதுவும், பஞ்சாப் அணி சொந்த மண்ணில் நடக்கும் ஆட்டத்தில் சொற்ப ரன்களில் சுருண்டு விடும் என்று அந்த அணி ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் ஹேசல்வுட், சூயஷ் சர்மா, யஷ் தயால் ஆகியோரின் அபார பந்துவீச்சால் பஞ்சாப் கிங்ஸ் அணி 101 ரன்களில் ஆல் அவுட்டாகிவிட்டது. ஐபிஎல் தடைபட்ட ஒரு இடைவெளியில் தாயகம் சென்றுவிட்டதால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு வருவாரா என சந்தேகிக்கப்பட்ட ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளை சாய்த்து பஞ்சாப் சரிவுக்கு முக்கியக் காரணமானார். பைனலுக்கு முன்னேறக் கிடைத்த அருமையான வாய்ப்பு என்று பயன்படுத்திக் கொண்ட ஆர்சிபி, ஃபில்சால்ட் எனும் பிரம்மாஸ்திரத்தை ஏவி, 10 ஓவர்களுக்குள்ளேயே வெற்றியை தனதாக்கிக் கொண்டது. ஆர்சிபி 10 ஓவர்களில் 2 விக்கெட்இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆர்சிபி தொடக்க ஆட்டக்கார்ர பில் சால்ட் 23 பந்துகளில் அரைசதம் அடித்து 56 ரன்களுடனும், கேப்டன் பட்டிதர் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES பஞ்சாப் தோல்விக்கு காரணம் என்ன? முலான்பூரில் நேற்று போட்டி நடந்த ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கும், பவுன்ஸருக்கும் சாதகமாக இருந்தது. அதை முதல் ஓவரிலேயே ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் கண்டுபிடித்து, ஆடுகளத்தின் தன்மையை சக பந்துவீச்சாளர்களுக்கு கடத்திவிட்டனர். பந்து நன்றாக ஸ்விங் ஆகிறது, பவுன்ஸரும் ஆகிறது என்பதால், அடித்துஆட முற்பட்டால் விக்கெட்டை இழந்துவிடுவார்கள் ஆதலால் லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீச வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருந்தனர். புவனேஷ்வர் குமார் வழக்கமான ஆடுகளத்திலேயே புதிய பந்தில் ஸ்விங் செய்யக்கூடியவர், இதுபோன்ற ஆடுகளத்தில் பேட்டர்களை திணறடித்துவிடுவார். அதைத்தான் நேற்றும் செய்தார். யஷ் தயால் தனது மிதவேக ஸ்விங்கை வெளிப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஹேசல்வுட் மிகவும் கடினமான லென்த்தில் பந்துவீசினார். ஏற்கெனவே ஸ்ரேயாஸ் அய்யரை 3 முறை ஆட்டமிழக்கச் செய்திருந்த ஹேசல்வுட் 4வது முறையாக நேற்றும் அவரது விக்கெட்டை எடுத்தார். ஹேசல்வுட் வீசிய 3 ஓவர்களிலும் தலா ஒரு விக்கெட் என 3 விக்கெட்டுகளை எடுத்தார். சுழற்பந்துவீச்சாளர் சூயஷ் சர்மா, ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் பந்துவீச்சை மாற்றவில்லை. பேட்டர்கள் சிறிது கவனம் தவறினாலும் ஸ்டெம்ப் சிதறிவிடும் என்ற ரீதியில்தான் சூயஷ் சர்மாவின் கூக்ளி, பந்துவீச்சு இருந்தது. இதனால் சூயஷ் சர்மாவின் பந்துவீச்சில் பெரிய ஷாட்டுக்கு முயன்று தவறவிட்டவர்கள் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆடுகளத்தின் தன்மையை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணிக்கு தொடர் நெருக்கடியை கொடுத்து ஆர்சிபி அணி திக்குமுக்காடச் செய்தது. பஞ்சாப் அணியினர் லீக் போட்டிகளை அணுகியதைப் போலவே ஒரே மாதிரியான ஆட்டத்தை ஆடியது மிகப்பெரிய தவறாகும். குறிப்பாக அனுபவம் வாய்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் அதுபோன்ற ஷாட்டை ஹேசல்வுட் பந்தில் அடித்திருக்கத் தேவையில்லை. ரன்ரேட் அழுத்தம், பவர்ப்ளே ஓவர்களை கோட்டை விடுகிறோம் என்ற அழுத்தம்தான் பஞ்சாப் கிங்ஸ் வீரர்களை பெரிய ஷாட்களை அடிக்கத் தூண்டியது. அதுமட்டுமல்ல பஞ்சாப் அணி வீரர்களை தவறு செய்யத் தூண்டி, தங்கள் வலையில் ஆர்சிபி பந்து வீச்சாளர்கள் விழ வைத்தனர். உண்மையில் ஆட்டத்தின் முக்கிய வித்தியாசம் என்னவென்றால், ஆடுகளத்தின் தன்மையை முதல் ஓவரிலேயே ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் புரிந்து கொண்டனர். ஆனால் கடைசிவரை பஞ்சாப் அணியினரால் ஆடுகளத்தை புரிந்து கொள்ள முடியாததுதான் இந்த ஆட்டத்தின் முக்கிய வேறுபாடாகும். 17 ஆண்டுகளாக தீராத தாகம் ஆர்சிபி அணி 4வது முறையாக பைனலுக்குள் நுழைந்துள்ளது. 18 சீசன்களில் 10 முறை ப்ளே ஆஃப்சுற்றுக்கு வந்துள்ள அனுபவம் கொண்ட ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றை எவ்வாறு அணுக வேண்டும் என்ற முதிர்ச்சியை வெளிப்படுத்தியது. அது மட்டுமல்ல ஆர்சிபி அணிக்கு ஐபிஎல் வரலாற்றில் பெரிய, ஆறாத தழும்பு இருக்கிறது. 17 ஆண்டுகளாக ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாத தாகம் அந்த அணியைத் துரத்தி வருகிறது. ஒருமுறை அல்ல இருமுறை இதற்கு முன் 3 முறை பைனலுக்கு முன்னேறி ஆர்சிபி கோப்பையை இழந்திருக்கிறது. இந்த முறை கோப்பையை வென்று 17 ஆண்டு தாகத்தை தணிக்கும் வேட்கையுடன் ஆர்சிபி வீரர்கள் இருக்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES மறக்க முடியாத காயம் 2016 சீசனின் இறுதிப்போட்டியை ஆர்சிபி மறந்திருக்காது. கிறிஸ் கெயில், விராட் கோலி, டீவில்லியர்ஸ் இருந்தவரை ஆர்சிபி பக்கம் இருந்த ஆட்டம் அதன்பின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுபோல் சரிந்து, 9 ரன்களில் கோப்பையை இழந்தது ஆர்சிபி. ஆர்சிபி அணி அப்போது முடிவெடுத்தது, இனிமேல் குறிப்பிட்ட சில வீரர்களை நம்பி அணி இருக்கக் கூடாது, பேட்டிங்கில் ஆழத்தை கடைசி வீரர்கள் வரை கொண்டு செல்ல தீர்மானித்தது. அதன்படியே வீரர்களை ஒவ்வொரு ஏலத்திலும் தேர்ந்தெடுத்து பரிசோசித்துப் பார்த்தது. அப்படித்தான் 2024 ஏலத்தில் வீரர்களை சரியாகத் தேர்ந்தெடுத்ததால்தான் வெளி மைதானங்களில் 7 போட்டிகளிலும் ஆர்சிபி அணியால் வெல்ல முடிந்தது. "ஈ சாலா கப் நமதே" என்ற வாசகத்தை நனவாக்கும் நாளை நோக்கி நம்பிக்கையுடன் ஆர்சிபி நகர்ந்திருக்கிறது. மாதவிடாய் நேரத்தில் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான பழக்கங்கள்28 மே 2025 பாதம் தட்டையாக இருந்தால் அரசு ஓட்டுநர் பணி கிடைக்காதா? என்ன காரணம்?28 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES 2024 சீசனில் திட்டமிடல் நவம்பரில் ஐபிஎல் ஏலம் நடப்பதற்கு முன் ஆர்சிபி அணியின் இயக்குநர் மோ போபத் தங்களது அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர், மென்ட்டர் தினேஷ் கார்த்திக், பந்துவீச்சுப் பயிற்சியாளர் மாலோலன் ரங்கராஜன் ஆகியோருக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியதாக கிரிக்இன்போ தெரிவித்துள்ளது. "வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று பார்க்காதீர்கள், அவர்கள் நமது அணிக்காக எப்படி விளையாடுவார்கள் என்று பார்த்து தேர்ந்தெடுங்கள்" என்று அவர் அறிவுறுத்தியதாக அந்த செய்தி கூறுகிறது. வீரர்கள் தேர்வில் கவனம் புகழ் பெற்ற வீரர்களை கோடிக்கணக்கில் வாங்குவதைவிட, சரியான வீரர்களை, சரியான இடத்துக்கு வாங்க வேண்டும் என்ற கொள்கையை ஏலத்தின் போது ஆர்சிபி அணி கடைபிடித்தது. இதுதான் ஆர்சிபி பைனலுக்கு செல்ல வேண்டும், கோப்பையை வெல்ல வேண்டும் என்ற திட்டமிடலுக்கு அடித்தளமாக அமைந்தது. ஆர்சிபியின் நோக்கம், திட்டம், பாதையை தெளிவாக வைத்துக் கொண்டு ஏலத்தில் களமிறங்கியது. வீரர்களின் பெயருக்கும், புகழுக்கும் கவனத்தைச் செலுத்தாமல் அவர்களின் ஸ்ட்ரைக் ரேட், சராசரி, பவுண்டரி அடிக்கும் சதவீதம், சிக்ஸர் அடிக்கும் திறமை ஆகியவற்றையும், பவர்ப்ளே, டெத்ஓவர், நடுப்பகுதியில் எவ்வாறு பந்து வீசுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு ஏலத்தில் பதற்றப்படாமல் பேட்டர்களையும், பவுலர்களையும் ஆர்சிபி தேர்ந்தெடுத்தது. ஏற்கெனவே கோலி, பட்டிதார், யஷ் தயால் தக்கவைக்கப்பட்டனர். டூப்பிளசிஸுக்கு 40 வயதாகிவிட்டால் தங்களின் திட்டத்துக்கு சரிவரமாட்டார் என்பதால் அந்த அணி கழற்றிவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES சால்ட் எனும் பிரம்மாஸ்திரம் 2024 சீசனில் வில் ஜேக்ஸின் 41பந்துகளில் சதம் அடித்த ஆட்டம் ஆர்சிபியை கவர்ந்ததால் அவரை கழற்றிவிட மனமில்லை இருப்பினும் பில் சால்ட் ஏலத்தில் வந்தவுடன் ஜேக்ஸைவிட சிறந்த அதிரடி பேட்டரான சால்டை ரூ11 கோடிக்கு எடுத்து தன்னுடைய திட்டத்தை செயல்படுத்தியது ஆர்சிபி. மென்டர் தினேஷ் கார்த்திக் ஒருமுறை கூறுகையில் " பில் சால்டின் திறமை என்னவென்றால், எந்த நல்ல ஓவரிலும், பெரிய அளவில் ரன் குவித்துவிடுவார். அதனால்தான் ரூ.11.25 கோடிக்கு அவரை வாங்கினோம்" என்று தெரிவித்தார். அது உண்மைதான் இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக 331 ரன்கள் எடுத்து, 171 ஸ்ட்ரைக் ரேட்டிலும் சால்ட் ஆடி வருகிறார். மிட்ஷெல் ஸ்டார்க், கம்மின்ஸ் என உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் யார் பந்துவீசினாலும் சால்டின் அதிரடி ஆட்டம் தெறிக்கவிட்டது. இந்த சீசனிலும் கோலி,-சால்ட் பார்ட்னர்ஷிப்தான் 3வது அதிகபட்ச ரன்கள் சேர்த்த பார்ட்னர்ஷிப்பாக உள்ளது. ப்ளே ஆஃப் சென்ற அணிகளில் அதிகபட்ச ரன்ரேட் வைத்திருக்கும் அணியாகவும் ஆர்சிபி இருக்கிறது. இதன் மூலம் ஆர்சிபி தனது திட்டத்தை சரியாக செயல்படுத்தத் தொடங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES பிரிக்க முடியாத கோலியும் ஆர்சிபியும் விராட் கோலி ஆர்சிபி அணிக்காக எப்போதுமே தனது முழுமையான பங்களிப்பை வழங்கக் கூடியவர். இந்த சீசனிலும் 600 ரன்களை நோக்கி நகர்ந்துவிட்டார். அதிலும் கடந்த சில சீசன்களைவிட, இந்த சீசனில் அதிரடியான பேட்டிங், 170க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் என அணி நிர்வாகம் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறதோ அதை முழுமையாக கோலி வழங்கி வருகிறார். ஒரு கையளவே உள்ள இந்த சிறு பறவையை ஆந்திர அரசு பல கோடி ரூபாய் செலவிட்டு 40 ஆண்டுகளாக தேடுவது ஏன்?29 மே 2025 சுதந்திர போராட்டத்தின் போது நேரு 3,259 நாட்களை (சுமார் 9 ஆண்டு) சிறையில் கழித்தது எப்படி?29 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES நடுவரிசைக்கு வீரர்கள் தேர்வு அதேபோல தேவைப்படும் நேரத்தில் சிறந்த பேட்டிங்கை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் வீரர்களை பார்த்துப் பார்த்து ஆர்சிபி தேர்ந்தெடுத்தது. ஏலத்தில் ஜிதேஷ் சர்மா, மும்பை அணி கழற்றிவிட்ட டிம் டேவிட், ரோமாரியா ஷெப்பர்ட் ஆகியோரை வாங்கி, அவர்களை நடுவரிசையில் ஆர்சிபி பயன்படுத்தியது. இதில் டிம் டேவிட் 26 பந்துகளில் பஞ்சாபுக்கு எதிராக இந்த சீசனில் அரைசதம் அடித்து தனது தேர்வை நியாயப்படுத்தினார். மும்பை அணி வில் ஜேக்ஸை வாங்கிய போது, ஆர்சிபி டிம் டேவிட்டை எடுத்துக்கொண்டது. ஜிதேஷ் சர்மாவை வாங்கி, அவருக்கு பேட்டிங்கிலும், விக்கெட் கீப்பிங்கிலும் தினேஷ் கார்த்திக், ஆன்டி பிளவர் இருவரும் பயிற்சி அளித்து செதுக்கினர். சீசனுக்கு முன்பே கேப்டனை முடிவு செய்த ஆர்சிபி கேப்டன் யார் என்பதை முடிவுசெய்துதான் ஆர்சிபி அணி சீசனையே எதிர்கொண்டது. ரஜத் பட்டிதார்தான் அணியை சிறப்பாக வழிநடத்தக் கூடியவர் என்பதை அறிந்து அவரை 2024 சீசனிலேயே அடையாளம் கண்டது ஆர்சிபி நிர்வாகம். ஆனால் அவரின் கேப்டன்சியை பரிசோதிக்கவும், கண்காணிக்கவும் வேண்டுமே என்பதற்காக காத்திருந்தனர். மத்தியப் பிரதேச அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பட்டிதார் முஸ்டாக் அலி கோப்பையில் வழிநடத்தினார். மத்தியப்பிரதேச பயிற்சியாளராகவும், கொல்கத்தா அணியின் பயிற்சியாளராகவும் இருந்த சந்திரகாந்த் பண்டிட்டிடம் பட்டிதாரின் திறமை குறித்து இருவரும் கேட்டு அறிந்தனர். முஸ்தாக் அலித் தொடரில் 2வது அதிக ரன் குவித்த வீரராகவும் பட்டிதார் இருந்தார். இது கேப்டனாக்க கூடுதல் உத்வேகத்தை ஆர்சிபி நிர்வாகத்துக்கு அளித்தது. பட்டிதாரை தேர்ந்தெடுக்க கோலியும் முழு ஆதரவு அளித்தார். முதல்முறையாக ஆர்சிபி அணிக்கு கேப்டனாக சூப்பர் ஸ்டார் வீரர் அல்லாத ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதாரின் சாதனைகள் கேப்டனாகப் பொறுப்பேற்ற பட்டிதார் முதல் ஆட்டத்திலேயே கொல்கத்தா அணியை 2019ம் ஆண்டுக்குப் பின் ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து ஆர்சிபி வீழ்த்த முக்கியக் காரணமாக அமைந்தார். சிஎஸ்கே அணியை சென்னை சேப்பாக்கத்தில் 2008-ஆம் ஆண்டுக்குப் பின் வீழ்த்தவும் பட்டிதார் தலைமை காரணமாக அமைந்தது. 2015-ஆம் ஆண்டுக்குப்பின் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை அணியை வீழ்த்தியது ஆர்சிபி. இவை அனைத்தும் பட்டிதார் கேப்டன்ஷிப் வந்தபின்புதான் நடந்தது. அது மட்டுமல்லாமல் கொல்கத்தா அணிக்கு எதிராக ரஸலை வீழ்த்த சூயஷ் சர்மாவை பந்துவீச அழைத்தது, இதனால் 190 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 172 ரன்களில் கொல்கத்தா சுருண்டது. சிஎஸ்கேவுக்கு எதிராக கடைசி 3 ஓவர்களில் 34 ரன்களை பந்துவீச்சாளர்களை வைத்து டிபெண்ட் செய்தது. குறிப்பாக 18வது ஓவரில் சூயஷ் சர்மாவை பந்துவீச துணிச்சலாக அழைத்ததது, யஷ் தயாலை கடைசி ஓவர் வீச வைத்தது ஆகியவை பட்டிதாரின் தீர்க்கமான முடிவுக்கு உதாரணமாக இருந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இளைஞர்களுக்கு வாய்ப்பு காயத்தால் பட்டிதார் விளையாடாத நிலையில் களத்தில் கேப்டன்ஷிப் வாய்ப்பு மற்றொரு இளம் வீரர் ஜிதேஷ் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. ஜிதேஷ் சர்மாவும் லக்னெள அணிக்கு எதிராக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆர்சிபி அணி முதல் தகுதிச்சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்தார். ஜிதேஷ் சர்மா பேட்டிங்கில் மிகப்பெரிய மாற்றமும், சூழலுக்கு ஏற்றபடி பேட்டிங் செய்யும் திறனும் வளர்வதற்கு பயிற்சியாளர் ஆன்டிபிளவர், மென்டர் தினேஷ் கார்த்திக் காரணம் என ஜித்தேஷ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணி மற்றொரு வீரர் மீது அதிக நம்பிக்கை வைத்து ஏலத்தில் எடுத்தது தேவ்தத் படிக்கல். 3வது வரிசையில் விளையாட சரியான வீரர் தேவை என்ற போது ஏற்கெனவே அணியில் இருந்த படிக்கலை வாங்கி மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தது. இந்த வாய்ப்பையும் படிக்கல் சரியாகப் பயன்படுத்தி 247 ரன்கள் இந்த சீசனில் சேர்த்தார், 150 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். இதற்கு முன் படிக்கல் ஸ்ட்ரைக் ரேட் 130 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES துருப்புச்சீட்டு ஹேசல்வுட், புவி ஆர்சிபி அணியின் முக்கியத் திட்டங்களில் ஒன்று ஹேசல்வுட், புவனேஷ்வர் குமாரை வாங்கியது. இருவருமே பந்தை ஸ்விங் செய்வதிலும், புதிய பந்தில் பந்துவீசுவதில் தேர்ந்தவர்கள் என்பதால் இருவரையும் வாங்கியது. ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், கேஎல்ராகுல், வெங்கடேஷ் அய்யர் ஆகியோருக்கு கோடிக்கணக்கில் ஏலத்தில் போட்டி நிலவியபோதும் அதில் ஆர்சிபி கலந்து கொள்ளாமல் தனக்கான வீரருக்காக காத்திருந்தது. ஹேசல்வுட், புவனேஷ்வர் பெயர்கள் அறிவிக்கப்பட்டதுமே களத்தில் இறங்கிய ஆர்சிபி 2 பேரையும் வாங்கியது. பவர்ப்ளேயில் சிறந்த எக்னாமி வைத்திருக்கும ஹேசல்வுட்டை முடிந்தவரை விலைகொடுத்து ஆர்சிபி வாங்கியது. அதற்கு ஏற்றபடி இதுவரை ஹேசல்வுட் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 8.44 எக்னாமி வைத்திருக்கிறார். டெத் ஓவர்களில் சராசரியாக 6 ரன் மட்டுமே ஹேசல்வுட் விட்டுக் கொடுத்துள்ளார். சுழற்பந்துவீச்சு மீதும் கவனம் இது தவிர க்ருணால் பாண்டியா, ஆல்ரவுண்டர்களுக்காக லிவிங்ஸ்டோன், சூயஷ் சர்மா ஆகியோருடன் சுழற்பந்துவீச்சையும் பலப்படுத்தியது. அதிலும் க்ருணால் பாண்டியா இந்த சீசனில் 15விக்கெட்டுகளை வீழ்த்தி தனது தேர்வை நியாயப்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்தத்தில் ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு வந்தது என்பது அந்த அணியின் நீண்டகாலத் திட்டமிடலின் வெற்றிதான். ஆர்சிபி அணியின் வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு, பேட்டிங் என எந்த துறையையும் பெரிதாக குறைகூற முடியாத வகையில், எந்த சூழலையும் சமாளித்து ஆடக் கூடிய வீரர்களைக் கொண்டதாக அணியை ஆர்சிபி மாற்றியது. பட மூலாதாரம்,GETTY IMAGES வீரர்களைப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து அணியைக் கட்டமைத்து, ப்ளேயிங் லெவனை ஒவ்வொரு போட்டிக்கும் சிறந்ததாக உருவாக்கி, அணியை பைனல் வரை வந்துள்ளது ஆர்சிபியின் வெற்றிகரமான திட்டமிடல்தான் என்பதில் சந்தேகமில்லை. இறுதிப்போட்டி வரை ஆர்சிபியின் திட்டமிடல் வெற்றியாக அமைந்துவிட்டது. ஆர்சிபி மட்டுமல்லாது, அத்துடன் இணைந்து 17 ஆண்டுகளாக ஐ.பிஎல் கோப்பையை வெல்லும் தாகத்தில் உள்ள கோலியின் கனவும் இம்முறை நிறைவேறும் என்று அந்த அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் இறுதிப்போட்டியை எதிர்பார்த்திருக்கிறார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjrnjv7z38vo
  13. படக்குறிப்பு,ஆந்திராவைச் சேர்ந்த பழங்குடி பெண்ணான அங்கம்மாள் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 29 மே 2025 "என் மகனைக் கொன்றதற்கான தண்டனை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். நான் பட்ட துன்பத்தை இன்னொரு தாய் படக்கூடாது. என் மகன் எங்கே எனத் தெரியாமல் ரொம்பவே பாதிக்கப்பட்டேன். அந்த வலி இன்னொருவருக்கு வந்துவிடக்கூடாது" எனக் கலங்கியவாறு பேசுகிறார், ஆந்திர மாநிலம், கூடூரைச் சேர்ந்த அங்கம்மாள். மே 19ஆம் தேதியன்று சத்தியவேடு காவல் நிலைத்தில் 9 வயதான தனது மகனை மீட்டுத் தருமாறு அங்கம்மாள் புகார் கொடுத்திருந்தார். அடுத்த 3 நாள்களில் காஞ்சிபுரத்தில் உள்ள பாலாறு படுகையில் அவரது மகன் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில், சிறுவனை குழந்தைத் தொழிலாளராகப் பணியமர்த்திய முத்து-தனபாக்கியம், அவர்களது மகன் ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார் கூறுகிறார். குழந்தைத் தொழிலாளராக வைக்கப்பட்ட ஒன்பது சிறுவன் இறந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவிருப்பதாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். ஒன்பது சிறுவன் கொத்தடிமையாக வைக்கப்பட்டாரா? சிறுவன் மரணத்தின் பின்னணியில் என்ன நடந்தது? 15 ஆயிரம் கடனுக்கு பண்ணை வேலை ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், கூடூரில் உள்ள சாவடபலேம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணான அங்கம்மாள், சத்தியவேடு காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நானும் எனது கணவர் மற்றும் குழந்தைகள் சத்தியவேடு கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவரின் பண்ணையில் வேலை செய்து வந்தோம்." "ஒரு வருடத்துக்கு முன்பு நெலட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் எனது கணவருக்குக் கொடுத்த கடன் தொகையைக் கேட்டார். இதை அறிந்து எனக்கு 15 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து முத்து உதவி செய்தார். இதற்கு ஈடாகத் தனது வாத்துப் பண்ணையில் எங்களைக் குடும்பத்துடன் வேலை பார்க்க வைத்தார்" எனத் தெரிவித்துள்ளார். காலை முதல் இரவு வரை அதிக வேலைகள் கொடுக்கப்பட்டதாகப் புகார் மனுவில் கூறியுள்ள அங்கம்மாள், "எனக்கும் என் குழந்தைகளுக்கும் அதிக வேலைகளைக் கொடுத்தனர். ஆனால், சம்பளத்தை உயர்த்திக் கொடுக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இதற்கிடையில், தனது கணவர் செஞ்சய்யா இறந்துவிடவே அதற்கான சடங்குகளைச் செய்துவிட்டு பணத்தைத் திரட்டி அனுப்புவதாக முத்துவிடம் அங்கம்மாள் கூறியுள்ளார். ஆனால், "42 ஆயிரம் ரூபாய் வரை பணம் தர வேண்டும். ஒன்று பணம் செலுத்த வேண்டும் இல்லாவிட்டால் ஒன்பது வயது மகனை பணத்துக்கு உத்தரவாதமாக வாத்துப் பண்ணையில் விட்டுச் செல்ல வேண்டும்" என முத்து கூறியதாக புகார் மனுவில் அங்கம்மாள் தெரிவித்துள்ளார். இதனால் தனது கடைசி மகனை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு கூடூர் வந்ததாகக் கூறுகிறார், அங்கம்மாள். பிபிசி தமிழிடம் பேசிய அங்கம்மாள், "10 மாதங்களுக்குப் பிறகு (மே 15) பணத்தைத் திரட்டிக் கொண்டு மகனை மீட்கப் போனேன். அப்போது, என் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி, '70 ஆயிரம் தர வேண்டும். அப்படியே பணம் கொடுத்தாலும் உன் மகனை அனுப்ப மாட்டேன்' என முத்துவும் அவரது மனைவி தனபாக்கியமும் மிரட்டினர்" என்றார். வாத்து பண்ணையில் என்ன நடந்தது? படக்குறிப்பு,வாத்துப் பண்ணை உரிமையாளர் முத்து "வாத்துப் பண்ணையில் என் மகன்கள் மிகவும் சிரமப்பட்டனர். வாத்துகளை வயலுக்குள் அழைத்துச் செல்லும்போது சேற்றில் நடந்து காலில் காயங்கள் ஏற்படும். வேலை செய்யாவிட்டால், கடுமையாகத் திட்டி அடிக்க வருவார்கள்" என்கிறார் அங்கம்மாள். தொடர்ந்து பேசிய அவர், "கையில் பணம் தர மாட்டார்கள். அருகில் உள்ள மளிகைக் கடையில் பொருள்களை வாங்கிக் கொள்ள வேண்டும். அதுவும் குறைவாகத்தான் தருவார்கள். ஒரு கட்டத்தில் வெளியில் சென்று வேலை பார்த்து உங்கள் பணத்தைக் கொடுத்து விடுகிறோம் எனக் கூறியும் அவர்கள் விடவில்லை" என்கிறார். தனது மகனை மீட்டுத் தருமாறு சத்தியவேடு காவல் நிலையம் சென்ற அங்கம்மாள் அங்கு தனக்குத் தொடக்கத்தில் எந்த உதவிகளும் கிடைக்கவில்லை எனக் குற்றம் சாட்டுகிறார். அதுகுறித்துப் பேசியபோது, "அங்கிருந்த போலீசார், இரண்டு நாள் அவகாசம் கேட்டனர். அங்கு சரியான பதில் கிடைக்காததால் கூடூர் எம்.எல்.ஏ பாசம் சுனில்குமார் மூலமாக உதவி கேட்டேன். அவர் காவல்துறைக்கு ஃபோன் செய்து பேசியதால் முத்துவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்" எனக் கூறுகிறார் அவர். "மே 21 அன்று முத்து-தனபாக்கியம், அவர்களது மகன் ராஜசேகர் ஆகியோரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், ஏப்ரல் 12 அன்று திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிறுவன் இறந்துவிட்டதாகக் கூறினர்" என்று சத்தியவேடு முதன்மை நீதிமன்றத்தில் காவல்துறை சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாலாற்று படுகையில் சிறுவன் சடலம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் ஆந்திராவின் சத்தியவேடு கிராமத்தில் இருந்து, தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள தங்கள் உறவினரின் வீட்டுக்கு வாத்துகளை மேய்ப்பதற்காக சிறுவனை கூட்டிச் சென்றதாகவும் முத்து மற்றும் அவரது குடும்பத்தினர் விசாரணையில் தெரிவித்துள்ளனர். சிறுவனின் இறப்பு குறித்து பெற்றோருக்குக் கூறாமல், காஞ்சிபுரம் மாவட்டம், புஞ்சை அரசன் தாங்கல் கிராமத்துக்கு அருகில் உள்ள பாலாறு படுகையில் சிறுவனை அடக்கம் செய்தது விசாரணையின்போது தெரிய வந்ததாக காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், சிறார் நீதிச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம், யாருக்கும் தெரியாமல் சடலத்தைப் புதைத்தது உள்படப் பல்வேறு பிரிவுகளில் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாற்றுப் படுகையில் சிறுவனின் சடலத்தை தாசில்தார் முன்னிலையில் காவல் துறை தோண்டியெடுத்தது. அப்போது ஆந்திரா, தமிழ்நாடு என இரு மாநில காவல் துறையும் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட உடற்கூராய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. புத்தூர் டி.எஸ்.பி கூறியது என்ன? ஆந்திர மாநிலம் புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார் இந்தச் சம்பவம் குறித்துப் பேசியபோது, "சிறுவனை கொடிய ஆயுதம் கொண்டு தலையில் தாக்கியதால் மரணம் ஏற்பட்டுள்ளதாக உடற்கூராய்வு முடிவு கூறுகிறது. இதனால் கைதான மூவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மே 19 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மே 21 அன்று இந்த வழக்கில் கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் கைது செய்யப்பட்டனர். உடற்கூராய்வு முடிவுகளுக்குப் பிறகு இது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். படக்குறிப்பு,புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார் அதன்படி, 103(1) BNS (Punishment for murder) எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989, சிறார் நீதிச் சட்டம் 2015, குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம் 1986 உள்படப் பல்வேறு பிரிவுகளில் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவனை ஆயுதங்களைக் கொண்டு தலையில் தாக்கியதால் மரணம் ஏற்பட்டுள்ளதால், அதற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார் தெரிவித்தார். 'கைது செய்வதில் சிரமம் ஏற்படவில்லை' "முதலில் மஞ்சள் காமாலை ஏற்பட்டு சிறுவன் இறந்துவிட்டதாக முத்து கூறியுள்ளார். ஆனால் கடுமையான சித்திரவதைக்குப் பிறகே சிறுவன் இறந்துள்ளார். தலை, தோள்பட்டை ஆகிய இடங்களில் ஆயுதத்தால் கடுமையான காயங்களை ஏற்படுத்தியுள்ளனர்" எனக் கூறுகிறார், வழக்கை கவனித்து வரும் குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர். "சிறுவன் காணாமல் போவதற்குச் சில நாள்களுக்கு முன்பு அவனிடம் அங்கம்மாள் பேசியுள்ளார். அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என சிறுவன் கூறவில்லை. கடுமையான தாக்குதலுக்குப் பிறகே அவர் இறந்துள்ளார். அதைத்தான் பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுகிறது" எனவும் அவர் தெரிவித்தார். "இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களைக் கைது செய்வதில் எந்தச் சிரமங்களும் ஏற்படவில்லை" எனக் கூறுகிறார், புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார். "அவர்கள் மூன்று பேர் மீதும் சந்தேகம் இருப்பதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அவர்களைக் கைது செய்து விசாரிப்பதில் எந்தச் சிரமங்களும் ஏற்படவில்லை" எனத் தெரிவித்தார். கூடூர் பகுதியில் ஏனாதி சமூகத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் அதிகம் வசிப்பதாகக் கூறிய ரவிக்குமார், "அங்கம்மாள் குடும்பம், மிக ஏழ்மையான நிலையில் உள்ளது. விவசாயப் பணிகள், வாத்து மேய்த்தல், மாடு மேய்த்தல் பணிகளில் மாத சம்பளத்துக்குத் தங்கி வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்க வேண்டியதில்லை," என்றும் குறிப்பிட்டார். "முத்துவின் வாத்துப் பண்ணையில் எங்களைப் போல குடும்பமாக யாரும் வேலை செய்யவில்லை. நாங்கள் சென்றபோது, ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த 12 வயது சிறுவனைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஒரு கட்டத்தில் அவரது பெற்றோர் பணம் கொடுத்து கூட்டிச் சென்றனர்" எனக் கூறுகிறார் அங்கம்மாள். 'அந்த வலி இன்னொருவருக்கு வரக் கூடாது' இந்த வழக்கில் கூடூரை சேர்ந்த சிவா ரெட்டி என்பவர், அங்கம்மாள் குடும்பத்தினருக்கு உதவிகளைச் செய்துள்ளார். "அவரது எலுமிச்சம் பழத் தோட்டத்தில் வேலை பார்க்கிறேன். பத்தாவது படிக்க வேண்டிய மகன், இடையில் வாத்துப் பண்ணையில் வேலை பார்த்ததால் படிப்பு பாதியில் நின்றுவிட்டது. விரைவில், அவர் தனது படிப்பைத் தொடரவுள்ளார். மகள், ஏழாவது படித்து வருகிறார்" எனக் கூறுகிறார் அங்கம்மாள். இதற்கான செலவை சிவா ரெட்டி பார்த்து வருவதாகவும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கைதாவதற்கு அவர் பல வகைகளில் உதவி செய்ததாகவும் அங்கம்மாள் குறிப்பிட்டார். "என் மகனைக் கொன்றதற்கான தண்டனை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். நான் பட்ட துன்பத்தை இன்னொரு தாய் படக்கூடாது. என் மகன் எங்கே எனத் தெரியாமல் பல மாதங்களாக ரொம்பவே பாதிக்கப்பட்டேன். அந்த வலி இன்னொருவருக்கு வந்துவிடக் கூடாது" எனவும் வேதனையுடன் கூறினார். 'இறந்தால் மட்டுமே வருகின்றனர்' சிறுவன் மரணம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் அரசு, "ஒரு குழந்தைத் தொழிலாளர் இறந்துவிட்டால் மட்டுமே அனைத்து உதவிகளும் செய்வதற்கு அரசுத் துறைகள் முன்வருகின்றன" எனக் கூறுகிறார். "கிராம குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு முறையாகச் செயல்பட்டிருந்தால் சிறுவன் இறந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது" என விமர்சிக்கும் தேவநேயன் அரசு, "இக்குழுவினர், தங்கள் பகுதியில் உள்ள குழந்தைத் தொழிலாளர் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை கொடுக்க வேண்டும். அதை முறையாகச் செய்திருந்தால் இது நடந்திருக்காது" என்கிறார். படக்குறிப்பு,தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் "தமிழ்நாட்டில் மாட்டுப் பண்ணைகள், கல் குவாரிகளில் வேலை செய்வதற்கு வடமாநிலங்களில் இருந்து குடும்பமாக வருகின்றனர். அவர்களின் வாழ்வுநிலை குறித்தோ, குழந்தைகள் பணி செய்வது குறித்தோ அதிகாரிகள் சரி வர ஆய்வு நடத்துவதில்லை" எனவும் தேவநேயன் குற்றம் சாட்டினார். மேலும், "குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனைகளை நடத்த வேண்டும். அவர்களும் ஆய்வு நடத்துவதில்லை. குழந்தைத் தொழிலாளர்களை மீட்பதற்கு வருவாய்த் துறை, தொழிலாளர் நலத்துறை, சமூக நலத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். ஆனால், அது முறையாக நடப்பதில்லை" என்றார். அமைச்சர் சொல்வது என்ன? தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பிபிசி தமிழ் பேசியது. அப்போது அவர், "ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்திலும் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து ஆய்வு நடத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். எங்கள் கவனத்துக்குத் தகவல் தெரிய வந்தால் உடனே நடவடிக்கை எடுக்கிறோம்" எனக் கூறினார். சிறுவன் இறப்பு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2je05pg48o
  14. 30 MAY, 2025 | 09:22 AM (நா.தனுஜா) பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில், கனடாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தோற்றம் பெறுமாயின், அதன் விளைவாக ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்பில் கனேடிய அரசு நடவடிக்கை எடுக்குமாயின், அதனையும் 'இனப்படுகொலை' என்று வகைப்படுத்துவீர்களா? என கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து விஜயதாஸ ராஜபக்ஷவினால் ஹரி ஆனந்தசங்கரிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த அரசாங்கத்தில் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராகப் பதவி வகித்த நான், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டேன். இலங்கையில் சுபீட்சத்தையும், புரிந்துணர்வையும் கட்டியெழுப்பும் நோக்குடனேயே உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகின்றேன். முதலாவதாக கனடாவின் அரசியலில் உச்சத்தை எட்டியிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்தினைக் கூறுகின்றேன். இலங்கையில் சகல சமூகங்களினதும் மதிப்பைப்பெற்ற தமிழ் அரசியல்வாதியான வீ.ஆனந்தசங்கரியின் மகனான உங்களது அமைச்சு நியமனம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. உங்களது தந்தையின் சார்பில் 2002 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜரான நான், தமிழர் ஐக்கிய விடுதலைக்கூட்டணியின் தலைவராக அவர் பதவி வகிப்பதை வெற்றிகரமாக நியாயப்படுத்தி வென்றேன். அதேபோன்று 2004 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, அவர் தப்பி வந்து எனது வீட்டில் தஞ்சம் புகுந்தார். அவருக்குப் பாதுகாப்பு அளித் நான், அவரை அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் அழைத்துச்சென்றேன். எனது வேண்டுகோளின்படி அவர் உங்களது தந்தைக்கு அரச பாதுகாப்பு வழங்கியதுடன், அது சுமார் இரு தசாப்தங்கள் வரை தொடர்ந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் அண்மையகாலங்களில் வெளியிடப்பட்டுள்ள சில கருத்துக்கள் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஒரு முன்னுதாரணமாகக் காண்பிக்கும் வகையிலான செயற்பாடுகள் தொடர்பில் நான் மிகுந்த அதிருப்தி அடைகின்றேன். தமிழீழ விடுதலைப்புலிகளால் சுமார் 60,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், அவர்களில் சுமார் 27,000 க்கும் மேற்பட்டோர் இராணுவத்தினராவர். அதுமாத்திரமன்றி முக்கிய தமிழ் அரசியல் தலைவர்கள், சமூகத்தலைவர்கள், புத்திஜீவிகள் எனப் பலரும் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டனர். பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில், கனடாவில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் தோற்றம் பெறுமாயின், உயிரிழப்புக்கள் தொடர்பில் கனேடிய அரசு நடவடிக்கை எடுக்குமாயின், அதனையும் 'இனப்படுகொலை' என்று வகைப்படுத்துவீர்களா? இல்லை எனில், இலங்கை மீது அதனை ஒத்தவகையில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தீவிர கரிசனைக்குரியதாகும். தற்போது இலங்கைக்கு தூரநோக்கு சிந்தனையும், கருணையும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் சில புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சில வெளிநாட்டுத்தரப்புக்களின் சந்தர்ப்பவாத அரசியல் செயற்பாடுகள் உள்நாட்டு நிலைவரத்தை மேலும் மோசமாக்குகின்றன. கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் ஆகியோர் இந்தத் துருவமயமாக்கலுக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர். அதற்குக் காரணம் தமிழ் சமூகத்தின் மீதான அக்கறை அல்ல. மாறாக அரசியல் ரீதியான நோக்கங்களும், தேர்தல் அடைவுகளுமே அதற்குக் காரணமாகும் என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/216047
  15. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், யோகிதா லிமாயே பதவி, பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் ரோடின்ஸ்கி நகரத்தில் சங்கடம் தரும் போரின் வாசம் வீசுகிறது. அந்த சங்கடமான வாசம் எங்கிருந்து வருகிறது என்பதை நகரத்திற்குள் நுழைந்த சில நிமிடங்களில் தெரிந்துக் கொள்ள முயன்றோம். 250 கிலோ எடையுள்ள கிளைட் குண்டு ஒன்று நகரத்தின் பிரதான நிர்வாகக் கட்டடத்தை சிதைத்ததுடன் 3 குடியிருப்பு வளாகங்களையும் இடித்துவிட்டது. குண்டுவீச்சு நடைபெற்ற அடுத்த நாள் நாங்கள் அங்கு சென்றிருந்தோம். இடிபாடுகளின் சில பகுதிகளில் இருந்து இன்னும் புகை வெளிவந்து கொண்டிருக்கிறது. நகரின் எல்லைப்புறங்களில் பீரங்கித் தாக்குதல்களின் சத்தத்தையும், துப்பாக்கிச் சூடு சத்தத்தையும் கேட்க முடிகிறது. அது யுக்ரேனிய வீரர்கள், டிரோன்களை சுட்டு வீழ்த்தும் சப்தம். போரின் பிடியில் உள்ள போக்ரோவ்ஸ்க் நகரிலிருந்து வடக்கே சுமார் 15 கிமீ (9 மைல்) தொலைவில் உள்ளது ரோடின்ஸ்கி நகரம். தெற்கிலிருந்து போக்ரோவ்ஸ்க் நகரத்தைக் கைப்பற்ற கடந்த ஆண்டு இலையுதிர் காலத்தில் இருந்து ரஷ்யா முயற்சித்து வருகிறது, ஆனால் யுக்ரேனியப் படைகள் ரஷ்ய வீரர்கள் உள்ளே நுழைவதை தடுத்து வருகின்றனர். எனவே தனது போர்த்திட்டத்தை மாற்றிக் கொண்ட ரஷ்யா, நகரத்தைச் சுற்றி வளைத்து செல்வதற்குப் பதிலாக, நகருக்கான பொருட்கள் விநியோக வழிகளைத் துண்டித்துவிட்டது. கடந்த இரு வாரங்களாக, யுக்ரேனில் போர் நிறுத்த உடன்பாட்டை எட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததால், ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஜனவரி மாதத்திலிருந்து தனது போர்த்திட்டத்தில் மிக முக்கியமான கட்டத்திற்கு நகர்ந்துள்ளது ரஷ்யா. ரோடின்ஸ்கியில் அதற்கான ஆதாரங்களை எங்களால் பார்க்க முடிந்தது. நாங்கள் நகரத்திற்கு வந்த சில நிமிடங்களிலேயே, எங்களுக்கு மேலே ரஷ்ய டிரோன் சத்தம் கேட்டது. அருகில் இருந்த பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினோம், ஒரு மரம் தான் அந்த பாதுகாப்பான இடம். டிரோன் எங்களைப் பார்க்க முடியாதபடி நாங்கள் மரத்தை ஒட்டி நின்று கொண்டோம். சற்று நேரத்தில் மிகப்பெரிய வெடிச் சத்தம் கேட்டது, அது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் இரண்டாவது டிரோனின் தாக்குதல். மேலே வட்டமிட்டுக் கொண்டே இருக்கும் டிரோன், இந்தப் போரின் மிகக் கொடிய ஆயுதமாக மாறியதன் எதிரொலியாக பயங்கரமான சத்தத்தைக் கேட்கிறோம். அந்த சப்தம் சகித்துக் கொள்ள முடியாத அளவில் மாறிய போது, 100 அடி தொலைவில் யாருமே இல்லாத ஒரு கட்டடத்திற்கு சென்று மறைந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்று நாங்கள் மறைந்துக் கொண்டோம். ஆனால், அங்கும் டிரோன் சப்தம் கேட்டது. மரத்தில் இருந்து நாங்கள் கட்டடத்திற்கு சென்றதைக் கண்ட பிறகு அந்த டிரோன் திரும்பியிருக்கலாம். ரோடின்ஸ்கே மீது ரஷ்ய டிரோன்கள் தாக்குதல் நடத்துவது என்பது, போக்ரோவ்ஸ்க் நகருக்கு தெற்கே உள்ள ரஷ்ய நிலைகளை விட, மிக நெருக்கமான நிலைகளிலிருந்து தாக்குதல்கள் தொடுக்கப்படுவதற்கான சான்றாகும். போக்ரோவ்ஸ்கின் கிழக்கிலிருந்து கோஸ்ட்யான்டினிவ்கா வரை செல்லும் ஒரு முக்கிய சாலையில் புதிதாக கையகப்படுத்திய யுக்ரேனின் பகுதியில் இருந்து இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கலாம். நாங்கள் மறைவிடத்திற்கு வந்த அரை மணி நேரத்திற்கு பிறகு டிரோன் சத்தம் நின்றது. பிறகு, மரங்களின் கீழ் மறைவாக நிறுத்தப்பட்டிருந்த எங்கள் காரை நோக்கி ஓடினோம். ரோடின்ஸ்கேவை விட்டு வேகமாக வெளியேறிவிட்டோம். நெடுஞ்சாலையின் ஓரத்தில் புகை மூட்டத்தை பார்க்க முடிந்தது, அதேபோல ஏதோ எரிந்துக் கொண்டிருப்பதையும் கண்டோம். அது சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனாக இருக்கலாம். படக்குறிப்பு,ரோடின்ஸ்கே மீது ரஷ்ய டிரோன்கள் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட சேதங்கள் "அவர்களிடம் இருந்த அனைத்தையும் பயன்படுத்தினார்கள் " அங்கிருந்து தொலைவில் உள்ள பிலிட்ஸ்கேவுக்கு சென்றோம். இரவு முழுவதும் நடைபெற்ற ஏவுகணைத் தாக்குதலால் வரிசையாக இருந்த வீடுகள் அழிக்கப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. ஸ்விட்லானாவின் வீடும், சேதமடைந்த வீடுகளில் ஒன்று. "நிலைமை மேலும் மேலும் மோசமாகி வருகிறது. இதற்கு முன்னதாக, தொலைதூரத்தில் வெடிச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. ஆனால் இப்போது எங்கள் நகரம் குறிவைக்கப்படுகிறது, நாங்களே அதை அனுபவிக்கிறோம்," என்று 61 வயதான ஸ்விட்லானா கூறுகிறார். தனது வீட்டின் இடிபாடுகளிலிருந்து சில பொருட்களை எடுத்துக்கொண்டிருந்த அவர், தாக்குதல் நடந்தபோது வீட்டில் இல்லை. "நகரத்தின் மையப்பகுதிக்குச் சென்றால், அங்கு பெருமளவிலான அழிவைப் பார்க்கலாம். பேக்கரி மற்றும் விலங்கு காட்சி சாலையும் அழிக்கப்பட்டுள்ளன," என்று அவர் கூறுகிறார். டிரோன்கள் வர முடியாத தொலைவில் உள்ள பாதுகாப்பான ஓரிடத்தில், 5வது தாக்குதல் படைப்பிரிவின் பீரங்கி பிரிவு வீரர்களைச் சந்தித்தோம். "ரஷ்ய தாக்குதல்களின் தீவிரம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும். ராக்கெட்டுகள், மோட்டார்கள், டிரோன்கள் மற்றும் நகரத்திற்கு தேவையான பொருட்கள் செல்வதற்கான விநியோக வழிகளைத் துண்டிக்க அவர்கள் தங்களிடம் உள்ள அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள்," என்று செர்ஹி கூறுகிறார். படக்குறிப்பு,"ரஷ்ய தாக்குதல்களின் தீவிரம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்." முன்னேறி வரும் ரஷ்யா தொடர்ந்து அதிகரித்து வரும் மோதலில், மாறிவரும் தொழில்நுட்பத்தால் ஏற்படும் புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் வீரர்களை விரைவாக தகவமைக்க வேண்டியிருக்கிறது. அதிலும், சமீபத்திய அச்சுறுத்தல் ஃபைபர் ஆப்டிக் டிரோன்களிலிருந்து வருகிறது. பத்து கிலோமீட்டர் நீளமுள்ள கேபிள் ஒரு டிரோனின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. ஃபைபர் ஆப்டிக் கேபிள், விமானியிடம் இருக்கும் கண்ட்ரோலருடன் இணைக்கப்பட்டுள்ளது. "வீடியோ மற்றும் கட்டுப்பாட்டு சமிக்ஞை, ரேடியோ அதிர்வெண்கள் மூலம் அல்லாமல் கேபிள் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. இதன் பொருள், சிக்னலை முடக்க முடியாது என்பதால் அந்த டிரோனை செயலிழக்கக் செய்ய முடியாது." என்று 68வது ஜேகர் படைப்பிரிவின் டிரோன் பொறியாளரான மாடரேட்டர் என்ற அழைப்பு அடையாளத்தைக் கொண்ட சிப்பாய் ஒருவர் கூறுகிறார். இந்தப் போரில் டிரோன்கள் பெருமளவில் பயன்படுத்தத் தொடங்கிய சமயத்தில், இரு தரப்பினரும் தங்கள் வாகனங்களில் எதிரிகளின் டிரோன்களை முடக்கக் கூடிய மின்னணு போர் அமைப்புகளைப் பொருத்தினர். ஃபைபர் ஆப்டிக் டிரோன்கள் பயன்படுத்தத் தொடங்கிய போது அந்தப் பாதுகாப்பும் முடிவுக்கு வந்துவிட்டது. ஃபைபர் ஆப்டிக் டிரோன்கள் பயன்படுத்துவதில் தற்போது ரஷ்யா முன்னணியில் உள்ளது என்றால் யுக்ரேன் அதன் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சிக்கிறது. "நாங்கள் ஃபைபர் ஆப்டிக் டிரோன்களைப் பரிசோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ரஷ்யா அவற்றை பயன்படுத்தத் தொடங்கவிட்டது. வழக்கமான டிரோன்களை விட உயரம் குறைவாக செல்ல வேண்டிய இடங்களில் இவற்றை பயன்படுத்தலாம். சொல்லப்போனால், வீடுகளுக்குள் நுழைந்து, வீட்டிற்குள்ளும் தாக்குதல் நடத்தலாம்," என்று 68வது ஜேகர் படைப்பிரிவின் டிரோன் பைலட் வெனியா கூறுகிறார். "கேபிள்களை வெட்ட கத்தரிக்கோலையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நாங்கள் வேடிக்கையாக பேசத் தொடங்கிவிட்டோம்," என்று பீரங்கி வீரர் செர்ஹி கூறுகிறார். ஃபைபர் ஆப்டிக் டிரோன்கள் மெதுவாக இயங்கும், மரங்களில் அதன் கேபிள்கள் சிக்கிக்கொள்ளலாம் என்பது போன்ற சில குறைபாடுகள் இருந்தாலும், தற்போது, ரஷ்யா அவற்றை பரவலாக பயன்படுத்துகிறது. இதனால் யுக்ரேன் வீரர்கள் தங்களின் நிலைகளுக்கு செல்வதும், இடம் மாறுவதும் கூட சிரமமாகிவிட்டது. படக்குறிப்பு,ஃபைபர் ஆப்டிக் டிரோன்கள் பயன்படுத்துவதில் தற்போது ரஷ்யா முன்னணியில் உள்ளது என்றால் யுக்ரேன் அதன் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சிக்கிறது. ரஷ்யாவின் புதிய ஆயுதம் யுக்ரேன் வீரர்களை ஒரே இடத்தில் முடக்குவது எப்படி? "ஒரு நிலைக்குள் நுழையும்போது, உங்களை யாராவது பார்த்துக் கொண்டிருக்கிறார்களா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது. ஒருவேளை நீங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், அது உங்கள் வாழ்க்கையின் இறுதியான நேரமாக இருக்கலாம்," என்று 5வது தாக்குதல் படைப்பிரிவின் உளவுப் பிரிவின் தலைமை சார்ஜென்ட் ஓல்ஸ் கூறுகிறார். அதாவது, வீரர்கள் தங்கள் நிலைகளிலேயே அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கிறது என்பதையே இது உணர்த்துகிறது. ஓல்ஸும் அவரது ஆட்களும் காலாட்படையில் உள்ளனர், இவர்கள் யுக்ரேன் படைப் பிரிவின் முன் வரிசையில் பணியாற்றுகின்றனர். தற்போதெல்லாம் பத்திரிகையாளர்கள் காலாட்படை வீரர்களிடம் பேசுவது அரிதாகிவிட்டது, ஏனெனில் அங்கே செல்வது மிகவும் ஆபத்தானதாகிவிட்டது. தற்காலிக தளமாக மாற்றப்பட்டுள்ள ஒரு கிராமப்புற வீட்டில், ஓல்ஸ் மற்றும் மாக்சிமை நாங்கள் சந்தித்தோம், பணியில் இல்லாதபோது வீரர்கள் அங்கு தான் ஓய்வெடுக்கிறார்கள். "அந்த நிலையில் நான் அதிகபட்சம் 31 நாட்கள் இருந்திருக்கிறேன், ஆனால் 90 மற்றும் 120 நாட்கள் அங்கேயே கழித்தவர்களும் உண்டு. இந்த டிரோன்கள் வருவதற்கு முன்பு, சுழற்சி அடிப்படையில் நாங்கள் 3 முதல் 7 நாள்கள் வரை மட்டுமே இருந்திருக்கிறோம்," என்று மாக்சிம் கூறுகிறார். "போர் என்பது ரத்தம், மரணம், ஈரமான சேறு மற்றும் தலை முதல் கால் வரை பரவும் குளிர் என மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும் இப்படித்தான் கழிகிறது. மூன்று நாட்கள் தூங்காமல், ஒவ்வொரு நிமிடமும் விழிப்புடன் இருந்த சந்தர்ப்பமும் எனக்கு நினைவிருக்கிறது. அப்போது, ரஷ்யர்கள் அலைஅலையாக எங்களை நோக்கி வந்து கொண்டே இருந்தனர். நாங்கள் செய்யும் சிறிய ஒரு தவறு கூட எங்கள் மரணத்திற்கு காரணமாகும்." ரஷ்யாவின் காலாட்படை அதன் தந்திரோபாயங்களை மாற்றியிருப்பதாக ஓல்ஸ் கூறுகிறார். "முதலில் குழுக்களாக வந்து தாக்கிய அவர்கள், இப்போது சில சமயங்களில் ஓரிருவரை மட்டுமே அனுப்புகிறார்கள். மோட்டார் சைக்கிள்களையும், சில சந்தர்ப்பங்களில், குவாட் பைக்குகளையும் பயன்படுத்துகிறார்கள்." இதன் பொருள் என்னவென்றால், போர் முனையில் இனிமேல் ஒரு புறத்தில் யுக்ரேனியர்களையும் மறுபுறம் ரஷ்யர்களையும் கொண்ட பாரம்பரிய போர் முறை இருக்காது. சதுரங்கப் பலகையில் உள்ள கட்டங்கள் போன்று, இரு தரப்பின் நிலைகளும் பின்னிப் பிணைந்திருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாங்கள் செய்யும் சிறிய ஒரு தவறு கூட எங்கள் மரணத்திற்கு வழிவகை செய்யும் என்று யுக்ரேனிய வீரர்கள் தெரிவிக்கின்றனர் தனிப்பட்ட பிரச்னைகள் ரஷ்யா அண்மையில் வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், போக்ரோவ்ஸ்க் அமைந்துள்ள டொனெட்ஸ்க் பகுதி முழுவதையும் கைப்பற்றுவது துரிதமானதாகவோ அல்லது சுலபமானதாகவோ இருக்காது. யுக்ரேன் மோசமாக பின்வாங்கியுள்ளது, சண்டையைத் தொடர வேண்டுமானால், அதற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும். போர் நான்காவது கோடைக்காலத்திற்குள் நுழையும் போது, மிகப் பெரிய ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக யுக்ரேனின் குறைந்த அளவிலான வீரர்களின் எண்ணிக்கையும் அதற்கு பிரச்னையாக இருக்கும். நாங்கள் சந்தித்த பெரும்பாலான வீரர்கள் போர் தொடங்கிய பிறகு ராணுவத்தில் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு சில மாத பயிற்சியே அளிக்கப்பட்டது, ஆனால் கடுமையான போருக்கு நடுவில், அனுபவத்திலேயே நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ராணுவத்தில் சேருவதற்கு முன்பு பானங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார் மாக்சிம். அவரது குடும்பத்தினர், அவரது வேலையை எப்படி சமாளிக்கின்றனர் என்று கேட்டேன். அதற்கு பதிலளித்த மாக்சிம், "மிகவும் கடினமானது, இது மிகவும் கடினமானதுதான். என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருக்கிறது. எனக்கு இரண்டு வயது மகன் இருக்கிறான், அவனை பார்க்க முடியவில்லை. அவனுக்கு வீடியோ கால் செய்கிறேன், இந்த சூழ்நிலையில் அதுதான் முடியும்… பரவாயில்லை," என்று கண்களில் நீர்மல்க சொல்கிறார். தனது நாட்டிற்காகப் போராடும் மாக்சிம் ஒரு சிப்பாய், ஆனால் அவர் தனது இரண்டு வயது மகனை அருகில் இருந்து கொஞ்ச முடியாத ஒரு தந்தையும் கூட. கூடுதல் தகவல்: இமோஜென் ஆண்டர்சன், சஞ்சய் கங்குலி, வோலோடிமிர் லோஷ்கோ மற்றும் அனஸ்டாசியா லெவ்செங்கோ - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9dq9686xwdo
  16. Published By: DIGITAL DESK 3 30 MAY, 2025 | 09:30 AM வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் (TINs) பதிவு செய்யும் முறையை இலகுவாக்குவதற்ககாக கியூஆர் குறியீடு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.பி.ஜி.எச். பெர்னாண்டோ தெரிவித்தார். இந்த கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி ஏற்கனவே TIN இலக்கத்தை பதிவு செய்தவர்களும் தங்கள் பதிவை சரிபார்த்துக் கொள்ள முடியும். எவ்வாறு இல்லை எனில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை தொடர்பு கொள்வதன் மூலம் அதை எவ்வாறு பெறுவது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். வரி நிர்வாகம் மற்றும் இணக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, 1 கோடிக்கும் அதிகமான TIN இலக்கங்கள் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/216049
  17. 💔மறைந்தார் பிரபல நடிகர் Rajesh😭கண்ணீரில் திரையுலகம்🥲Last Interview">நான் செத்தா இப்படிதான் சாவேன்💔மறைந்தார் பிரபல நடிகர் Rajesh😭கண்ணீரில் திரையுலகம்🥲Last Interview
  18. Kerala Rapper Vedan: யார் இவர்? என்ன செய்தார்? Kerala BJP, Hindu அமைப்புகள் இவரை குறிவைப்பது ஏன்? கடந்த சில நாட்களாக கேரளாவின் சமூக ஊடகங்களிலும் தமிழ்நாட்டின் யூடியூப் சேனல்களிலும் பரவலாக வேடன் என்ற பெயர் பேசப்பட்டு வருகிறது. கேரளாவைச் சேர்ந்த ராப் பாடகரான வேடனை பா.ஜ.கவும் இந்து அமைப்புகளும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருப்பதால், ஒரு பெரிய சர்ச்சையின் மையப்புள்ளியாக அவர் உருவெடுத்திருக்கிறார். வேடனை தேசிய பாதுகாப்பு முகமை விசாரிக்க வேண்டுமென உள்துறை அமைச்சகத்திற்கு பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருவர் கடிதம் எழுதியது தேசிய அளவில் இவர் மீது கவனத்தைத் திருப்பியிருக்கிறது. யார் இந்த வேடன்? இவரை தேசிய பாதுகாப்பு முகமை விசாரிக்க வேண்டுமென பாஜக தரப்பில் கூறப்படுவது ஏன்? #Vedan #KeralaRapper #RapperVedan இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  19. Published By: DIGITAL DESK 2 29 MAY, 2025 | 04:33 PM எமக்கு உடனடியாக உதவிகளைச் செய்யும், எமக்கு மிகவேண்டப்பட்ட நாடாக இந்தியா இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். மனிதாபிமான உதவிகளை வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (28) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: "முல்லைத்தீவில் நான் மாவட்டச் செயலராக பணியாற்றிய அனுபவம் எனக்குள்ளது. இங்கு உள்ள கடற்றொழில் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எனக்கு நன்றாக தெரியும். போருக்குப் பிறகு சட்டவிரோத மீன்பிடி உங்கள் வாழ்வை பாதித்தது. இன்று இந்திய அரசு மற்றும் மக்களிடமிருந்து பெறுமதியான வலைகளும், குளிர்சாதன பெட்டிகளும் கிடைக்கின்றன." அதிகமாக இந்தியாவின் வீடமைப்பு திட்டம், ரயில் பாதை புனரமைப்பு, மற்றும் தற்போது முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை புனரமைப்பை எடுத்துக்காட்டினார். "இந்தியா தொடர்ந்து எமக்கான உதவிகளை வழங்க வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திலகநாதன் மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ. உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/216000
  20. இந்த சிறிய கிராமத்தில் உறவினர்களாக இருப்பவர்களுக்கு அரிய நோய் ஏற்படுவதற்கு என்ன காரணம்? பட மூலாதாரம்,MARIANA CASTIÑEIRAS/CAROLINE SOUZA படக்குறிப்பு,செரின்ஹா டோஸ் பிண்டோஸ் எனும் நகரில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மரபியல் நிபுணர் சில்வானா சாண்டோஸ் அங்கு வரும் வரை, தங்களது நோய் குறித்து அறியாமல் வாழ்ந்து வந்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், கியூலியா கிராஞ்சி மற்றும் வைட்டர் டாவரெஸ் பதவி, பிபிசி பிரேசில் செய்தியாளர்கள், செரின்ஹா டோஸ் பிண்டோஸிலிருந்து 29 மே 2025, 11:58 GMT இருபது ஆண்டுகளுக்கு முன்பு தான் சென்ற ஒரு சிறிய நகரத்தைச் சில்வானா சாண்டோஸ் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். அங்கு, குழந்தைகள் பலர் நடக்க முடியாத நிலையில் இருந்தனர். அந்த ஊரின் நுழைவுவாயிலுக்கு அருகில் இருந்த லோலோவின் மகள்கள், சாலையின் முடிவில் இருந்த ரேஜேன், பெட்ரோல் நிலையத்துக்குப் பிறகு இருந்த மார்க்வினோஸ், பள்ளிக்கூடத்தின் அருகில் பவுலின்ஹா போன்ற பல குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தனர். வடகிழக்கு பிரேசிலில், 5,000 பேர் கூட வசிக்காத ஒரு சிறிய தொலைதூர நகரம் தான் 'செரின்ஹா டோஸ் பிண்டோஸ்'. அங்கு சென்ற உயிரியலாளரும் மரபியல் நிபுணருமான சாண்டோஸ், இதுவரை அறியப்படாத ஒரு நோயை கண்டறிந்து, அதற்கு 'ஸ்போன் நோய்' (Spoan Syndrome) என்று பெயரிட்டார். மரபணு மாற்றத்தால் உருவாகும் இந்த நோய் நரம்பு மண்டலத்தை பாதித்து, படிப்படியாக உடலை பலவீனமடையச் செய்கிறது. ஒரு குழந்தையின் தாய் மற்றும் தந்தையின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு, அது அந்த குழந்தைக்குக் கடத்தப்பட்டால் மட்டுமே இந்த நோய் உருவாகும். உலகளவில் இந்த நோய் குறித்து முதன்முறையாக சாண்டோஸின் ஆராய்ச்சி தான் விவரித்தது. அதற்காகவும், அவரது பிற செயல்பாடுகளுக்காகவும், 2024-ஆம் ஆண்டு பிபிசி வெளியிட்ட உலகின் 100 முக்கியமான பெண்களில் ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சாண்டோஸ் வருவதற்கு முன், எந்த நோயினால் தங்களது குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான விளக்கம் அந்த மக்களிடம் இல்லை. ஆனால் இன்று, அங்கு குடியிருக்கும் மக்கள் ஸ்போன் நோய் மற்றும் மரபியல் குறித்து நம்பிக்கையுடன் பேசுகிறார்கள். "நாங்கள் இந்த நோய்க்கு என்ன காரணம் என்று தெரியாமல் இருந்தோம். சாண்டோஸ் தான் அதனை கண்டறிந்தார். மக்களின் உதவி, நிதி உதவி, சக்கர நாற்காலி போன்ற அனைத்து உதவிகளும் அவரது ஆராய்ச்சிக்குப் பிறகு தான் கிடைத்தது" என்று அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான மார்கினோஸ் கூறுகிறார். செரின்ஹா டோஸ் பின்டோஸ்: தனி ஒரு உலகம் பிரேசிலின் மிகப் பெரிய மற்றும் பணக்கார நகரமான சாவோ பாலோவில் சாண்டோஸ் வசித்து வந்தார். அவரது தெருவில் வசித்து வந்த பலர், 'செரின்ஹா டோஸ் பின்டோஸ்' எனும் ஊரில் இருந்து வந்த பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் ஒருவருக்கொருவர் தொடர்புடைய உறவினர்கள். சிலர் அவர்களுக்குள்ளேயே திருமணம் செய்திருந்தனர். "எங்கள் ஊரில் நடக்க முடியாத பலர் உள்ளார்கள். ஆனால் அதற்கு என்ன காரணம் என்று யாருக்கும் தெரியாது" என்று அங்கு வசித்த மக்கள் சாண்டோஸிடம் தங்களது சொந்த ஊரைப் பற்றி கூறினார்கள் . சாண்டோஸின் பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. அந்தக் குடும்பத்தின் மகள்களில் ஒருவரான சிர்லாண்டியா, ஒரு கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சிறு வயதில் அவரது கண்கள் தன்னிச்சையாக அசைந்தன. நாட்கள் செல்லச் செல்ல, அவரது கை, கால்களில் வலிமை குறைந்தது. பின்னர் அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. எளிமையான வேலைகளைச் செய்யக்கூட, அவருக்கு மற்றவரின் உதவி தேவைப்பட்டது. பட மூலாதாரம்,MARIANA CASTIÑEIRAS/BBC படக்குறிப்பு,இனஸ் என்பவரின் இரு மகன்களும் ஸ்போன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் குறித்து பல வருடங்களாக ஆராய்ச்சி நடைபெற்றது. இதுவரை ஆவணப்படுத்தப்படாத மரபணு கோளாறான 'ஸ்போன் நோயின்' அறிகுறிகள் தான் இவை என்று சாண்டோஸும் அவரது குழுவும் கண்டறிய அந்த ஆராய்ச்சிகள் வழிவகுத்தன. அதன் பின்னர் உலகின் பிற பகுதிகளில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 82 பேரை அடையாளம் கண்டனர். சாண்டோஸின் அண்டை வீட்டாருடைய அழைப்பின் பேரில், விடுமுறையின்போது அவர் செரின்ஹாவுக்குச் சென்றார். அவர் அந்த ஊருக்குச் சென்ற அனுபவத்தை "அதன் சொந்த உலகில் அடியெடுத்து வைப்பதாக" சாண்டோஸ் விவரிக்கிறார். அப்பகுதி பசுமையான இயற்கை காட்சிகள் மற்றும் மலைகளைக் கொண்டிருப்பதால் மட்டுமல்ல, அங்கு குறிப்பிடத்தக்க சமூக மாற்றமும் காணப்பட்டது. உள்ளூர் மக்களுடன் சாண்டோஸ் அதிகமாக பேசி பழகியபோது, அந்த மக்கள் பரவலாக உறவினர்களுக்குள் திருமணம் செய்துள்ளார்கள் என்பது அவரை ஆச்சரியப்படுத்தியது. செரின்ஹா எனும் அந்த ஊரின் தனிமையான சூழலும், மற்ற இடங்களிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் இப்பகுதிக்கு வருகை தருவதும், அங்குள்ள பெரும்பாலான மக்கள் உறவினர்களாக இருப்பதற்கு காரணமாக அமைகிறது. இதனால் உறவினர்களுக்கு இடையே திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கின்றது. பட மூலாதாரம்,MARIANA CASTIÑEIRAS/BBC படக்குறிப்பு,செரின்ஹா டோஸ் பின்டோஸின் நுழைவுவாயில் பல தம்பதிகள் திருமணம் செய்து கொள்ளும் வரை அவர்கள் உறவினர்கள் என்பதை அறிந்திருக்கவில்லை. சிலருக்குத் தெரிந்திருந்தாலும், அத்தகைய உறவுகள் நீண்டகாலம் நிலைத்து வலுவான குடும்ப ஆதரவை வழங்கும் என நம்பியிருந்தனர். உறவினர்களுக்கு இடையேயான திருமணங்கள் உலகளவில் பொதுவானவை. இந்த வகையில், சுமார் 10% திருமணங்கள் நடைபெறுகின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்று உறவினர்களுக்குள் செய்துகொள்ளும் திருமணங்களிலிருந்து பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், தீங்கு விளைவிக்கும் மரபணு மாற்றம் குடும்பத்துக்குள் பரவுவதற்கான ஆபத்தை இத்தகைய திருமணங்கள் ஏற்படுத்துகின்றன. "உறவினர் இல்லாத ஒருவரை திருமணம் செய்து கொள்பவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது, அரிதான மரபணுக் கோளாறு அல்லது மாற்றுத்திறனுடன் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பு சுமார் 2-3% ஆக இருக்கும். ஆனால், உறவினர்களுக்குள் திருமணம் செய்து கொண்டவர்கள், ஒவ்வொரு முறை கர்ப்பம் தரிக்கும்போதும் இந்த ஆபத்து 5-6% வரை உயர்ந்துவிடும்," என்று பிரேசிலின் ரியோ கிராண்டே டூ சுலின் ஃபெடரல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரபியல் நிபுணர் லூசிவன் கோஸ்டா ரீஸ் விளக்குகிறார். செரின்ஹாவில் உள்ள தம்பதிகளில் 30% க்கும் அதிகமானோர் உறவினர்கள் என்றும், அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு குறைந்தது மாற்றுத்திறன் கொண்ட ஒரு குழந்தை உள்ளது என்றும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. நோய் குறித்து அறிந்துகொள்வதற்கான நீண்ட பாதை செரின்ஹாவைச் சேர்ந்த மக்கள் எந்த வகையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிய சாண்டோஸ் புறப்பட்டார். அது தொடர்பாக ஒரு விரிவான மரபணு ஆய்வை மேற்கொள்ள அவர் திட்டமிட்டார். இதற்காக பல பயணங்கள் மேற்கொண்டு, இறுதியில் அந்த பகுதிக்கே இடம்பெயர்ந்தார். அவர் ஆய்வைத் தொடங்கிய காலங்களில், சாவோ பாலோவிலிருந்து செரின்ஹாவுக்கு 2,000 கிமீ தூரம் வரை, சாண்டோஸ் பல முறை பயணம் செய்துள்ளார். வீடு வீடாக சென்று அந்த மக்களின் மரபணு (டிஎன்ஏ) மாதிரிகளை சேகரித்து, அவர்களுடன் காபி குடித்துக்கொண்டே அவர்களது குடும்பக் கதைகளை கேட்டார். இந்த முயற்சிகளின் போது, நோயை ஏற்படுத்தும் மரபணு மாற்றத்தைக் கண்டறிய முயன்றார் சாண்டோஸ். மூன்று மாத களப்பணியாக தொடங்கிய ஆராய்ச்சி, பல வருடமாக அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட செயலாக பின்னர் மாறிவிட்டது. ஸ்போனின் நோய் குறித்து ஆய்வு செய்த ஒரு குழு, 2005 இல் பிரேசிலின் புறநகர்ப்பகுதியில் ஸ்போன் நோய் பரவியிருக்கிறது என்று அறிக்கை வெளியிடுவதற்கு சாண்டோஸின் முயற்சிகள் வழிவகுத்தது. பட மூலாதாரம்,MARIANA CASTIÑEIRAS/BBC படக்குறிப்பு,தனது ஆராய்ச்சியைத் தொடர, ரியோ கிராண்டே டோ நோர்டேவில் சாண்டோஸ் மூன்று ஆண்டுகள் வாழ்ந்தார்.பின்னர் பரைபாவின் உட்பகுதிக்கு இடம்பெயர்ந்து, அங்கு அவர் பிற நோய்களை கண்டறிந்தார். இந்த மரபணு மாற்றம் ஒரு குரோமோசோமின் சிறிய பகுதியை இழப்பதனால் ஏற்படுவதாக சாண்டோஸின் குழு கண்டறிந்தது. மரபணு மூளை செல்களில் முக்கியமான புரதத்தை அதிகமாக உற்பத்தி செய்வதற்கு இந்த மாற்றம் வழிவகுக்கிறது. "எங்கள் குடும்பத்தில் மாக்சிமியானோ என்று ஒரு நபர் இருந்தார். முறையற்ற வழியில் பல பெண்களுடன் உறவு வைத்திருந்த அவரிடம் இருந்து இந்நோய் ஏற்பட்டதாக மக்கள் கூறினார்கள்," என்று விவசாயி லோலோ நினைவு கூர்ந்தார். அவருடைய மகள் ரெஜேனும் ஸ்போன் நோயால் பாதிக்கப்பட்டவர். தற்போது 83 வயதாகும் லோலோ, தனது உறவினரையே திருமணம் செய்து கொண்டவர். அவர் செரின்ஹாவை விட்டு ஒருபோதும் வெளியே சென்றதில்லை. இன்று வரை கால்நடைகளை மேய்த்துவரும் அவர், அன்றாட செயல்களை செய்வதற்கே சிரமப்படும் தனது மகள் ரீஜேனைக் கவனிக்க குடும்ப உறுப்பினர்களின் உதவியை நம்பியுள்ளார். ஆனால், ஸ்போன் நோய்க்கு பின்னால் உள்ள மரபணு மாற்றம், மாக்சிமியானோ குறித்து கூறப்படும் கதையை விட பழமையானது. 500 ஆண்டுகளுக்கு முன், பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் குடியேறிய முற்கால ஐரோப்பியர்கள் வழியாக இந்நோய் வந்திருக்கலாம் . "மரபணு குறித்து வெளியான ஆய்வு முடிவுகள் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் வலுவான ஐரோப்பிய வம்சத்தின் கூறுகள் இருப்பதை வெளிப்படுத்துகின்றன. இது, இந்தப் பகுதியில் இருந்த போர்த்துகீசியர், டச்சுகள் மற்றும் செபார்டிக் யூதர்களின் வரலாற்றுப் பதிவுகளை ஆதரிக்கின்றன," என்று சாண்டோஸ் விளக்குகிறார். இரண்டு ஸ்போன் நோயாளிகள் எகிப்தில் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர், அந்த நோயாளிகளும் ஐரோப்பிய வம்சத்தையே பகிர்ந்து கொள்கின்றனர் என்பது பிந்தைய ஆய்வுகளில் உறுதியாகியது. அதனைத் தொடர்ந்து இந்தக் கோட்பாடு மேலும் வலுவடைந்தது. இதனால், ஸ்போன் நோயின் தோற்றம் ஐபீரிய தீபகற்பத்தில் இருக்கலாம் என்பது தெளிவானது. "இந்த நோயானது 15 ஆம் நூற்றாண்டுகளில் ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளால் தங்களது கோட்பாடுகளை நம்பாதவர்களை தேடி கண்டுபிடித்து தண்டிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுக்களிடமிருந்து தப்பி ஓடிய ஸ்பெயின் பிராந்தியத்தை சேர்ந்த யூதர்கள் அல்லது மூர்களுடன் வந்திருக்கலாம்" என்று சாண்டோஸ் கூறுகிறார். மேலும் உலகளவில், குறிப்பாக போர்ச்சுகலில் இந்த நோயால் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் நம்புகிறார். அபாயங்களைப் புரிந்துகொள்வது பட மூலாதாரம்,MARIANA CASTIÑEIRAS/BBC படக்குறிப்பு,சியூ லோலோ என அழைக்கப்படும் மனோயல் ஃபிர்மினோ, அந்த நகரத்தில் ஸ்போன் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான தனது மகள் ரெஜேனுடன் வசிக்கிறார். இந்த நோயை குணப்படுத்தும் மருத்துவ முறைகளில் பெரிதாக முன்னேற்றம் இல்லை என்றாலும், நோயாளிகளை கண்காணிப்பது சமூக அணுகுமுறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. "முன்பு எங்களை 'மாற்றுத்திறனாளிகள்' என்றார்கள். இப்போது, ஸ்போன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அழைக்கிறார்கள்" என்கிறார் ரெஜேன். சக்கர நாற்காலிகள் சுதந்திரத்தை மட்டும் அல்ல, உடல் சார்ந்த குறைபாடுகளைத் தடுக்கும் வழியையும் வழங்கியுள்ளன. கடந்த காலங்களில், இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பலர் படுக்கையில் அல்லது தரையில் படுத்திருக்கும் நிலை இருந்தது. ஸ்போன் நோயின் பாதிப்புகள் அதிகரிக்கும்போது வயதுக்கு ஏற்ப உடல் தகுதியும் மோசமடைகிறது. 50 வயதுக்குள், கிட்டத்தட்ட அனைத்து நோயாளிகளும் முழுமையாக மற்றவரை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இனெஸின் குழந்தைகளின் நிலையும் இவ்வாறு தான் உள்ளது. செரின்ஹாவில் உள்ள வயதான மக்களில் அவர்களும் அடங்குவர். 59 வயதான சிகின்யோவால், இனி பேச முடியாது, 46 வயதான மார்கின்யோஸ் மற்றவர்களிடம் தொடர்பு கொள்வதில் சிரமப்படுகிறார். "'மாற்றுத்திறன்' கொண்ட ஒரு குழந்தையை வளர்ப்பது கஷ்டமான காரியம். நாங்கள் அவர்களை ஒரே மாதிரியாக நேசிக்கிறோம், ஆனால் அவர்களுக்காக நாங்களும் கஷ்டப்படுகிறோம்," என்கிறார் உறவினரை மணந்த இனெஸ். பட மூலாதாரம்,MARIANA CASTIÑEIRAS/BBC படக்குறிப்பு,தொழில்சார் சிகிச்சை முறை கொண்ட ஆராய்ச்சியின் காரணமாக, பவுலா மற்றும் பல நோயாளிகள் ஏற்கெனவே மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகளைப் பெற்றுள்ளனர். சிக்கினோ மற்றும் மார்க்கினோ ஆகியோரின் உறவினரான 25 வயதாகும் லரிசா குவெய்ரோஸும் அவரது தொலைதூர உறவினரை மணந்து கொண்டார். அவரும் அவரது கணவரான சாலோவும், பல மாதங்கள் பழகிய பின்னர் தான், தங்களுக்கு பொதுவான மூதாதையர் இருப்பதைக் கண்டுபிடித்தனர். "செரின்ஹா டோஸ் பிண்டோஸில், நாங்கள் அனைவரும் உறவினர்கள். எங்களுக்கு எல்லோருடனும் தொடர்பு உள்ளது," என்கிறார் லரிசா . லரிசா மற்றும் சாலோ போன்ற தம்பதிகள் சாண்டோஸ் ஈடுபட்டுள்ள புதிய ஆராய்ச்சி திட்டத்தின் மையமாக உள்ளனர். பிரேசிலின் சுகாதார அமைச்சகத்தின் ஆதரவுடன், இந்த திட்டம் 5,000 தம்பதிகளை தீவிரமான நோய்களுடன் தொடர்புடைய மரபணுக்களுக்காக பரிசோதிக்கின்றது. பட மூலாதாரம்,MARIANA CASTIÑEIRAS/BBC படக்குறிப்பு,சில்வானா சாண்டோஸ் அந்தப் பகுதியில் வசிக்கவில்லை, ஆனால் அந்த ஊருக்கு தொடர்ந்து சென்று வருகிறார். உறவினர்களுக்குள் திருமணம் செய்துகொள்வதை நிறுத்துவதல்ல இந்த ஆராய்ச்சியின் குறிக்கோள். ஆனால், தங்களது மரபணுக்களால் ஏற்படும் அபாயங்களைப் புரிந்துகொள்வதற்கு தம்பதிகளுக்கு உதவுவதாக சாண்டோஸ் கூறுகிறார். இப்போது பல்கலைக்கழகப் பேராசிரியராக உள்ள அவர், மரபியல் கல்வி மையத்தையும் வழிநடத்தி, வடகிழக்குப் பகுதியில் இப்பரிசோதனையை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் செரின்ஹா டோஸ் பிண்டோஸில் வசிக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு முறை அந்த ஊருக்கு வரும்போதும் சொந்த வீட்டுக்கு வருவது போல் உணர்கிறார். சில்வானா சாண்டோஸ் எங்களது குடும்பத்தில் ஒருவரைப் போல" என்கிறார் இனெஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clygnj5g5p2o
  21. 29 MAY, 2025 | 04:31 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் இணைந்த முகாமைத்துவ குழுக் கூட்டம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தலைமையில் கலாசார மண்டபத்தில் புதன்கிழமை (28) நடைபெற்றது. 2023.08.23ஆம் திகதி இணைந்த முகாமைத்துவக் கூட்டம் இறுதியாக நடைபெற்றிருந்த நிலையில், இந்தக் கூட்டத்தை மீண்டும் கூட்டுவதற்கான கோரிக்கையை வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்திருந்தார். அதற்கு அமைய, நேற்று இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தியத் தூதுவர் தலைமையிலான குழுவினர், வட மாகாண ஆளுநர் நா.வேதநாயன், யாழ். மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.டிலானி, கலாசார ஊக்குவிப்பு பணிப்பாளர் பிரசாட் ரணசிங்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் நேரடியாக கலந்துகொண்டதோடு, புத்தசாசன, சமய விவகார கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி இணையவழியில் பங்கேற்றிருந்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215993
  22. பட மூலாதாரம்,AXIOM SPACE படக்குறிப்பு,'ஆக்ஸியம் 4' திட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரியை சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவுள்ளார்கள் கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அமெரிக்காவின் நாசா தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 'ஆக்ஸியம் ஸ்பேஸ்' எனும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்ஸியம் 4' திட்டத்தின் கீழ் அமெரிக்கா, இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள், ஜூன் 8ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவுள்ளார்கள். இதன்மூலம், 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழையப் போகும் முதல் இந்தியர் என்ற பெருமையை உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார். கடந்த 1984ஆம் ஆண்டு, ஏப்ரல் 3ஆம் தேதி, இந்தியாவை சேர்ந்த ராகேஷ் ஷர்மா, சோயுஸ் டி-11 எனும் சோவியத் விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்றார். விண்வெளியில் அப்போது இயங்கிக் கொண்டிருந்த சல்யூட் 7 (Salyut 7) எனும் சோவியத் விண்வெளி நிலையத்தில் 7 நாட்கள், 21 மணிநேரம் தங்கியிருந்து அவர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அதன் பிறகு, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், ராஜா சாரி உள்ளிட்ட சில இந்திய வம்சாவளியினர் விண்வெளிக்குச் சென்றிருந்தாலும், ஒரு இந்திய குடிமகன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்வது இதுவே முதல்முறை. பட மூலாதாரம்,AXIOM SPACE படக்குறிப்பு,'ஆக்ஸியம் நிலையம்' நிறுவத் தேவையான மாட்யூல்கள் பல கட்டங்களாக விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும். ஆக்ஸியம் 4 பூமியின் கீழ்வட்டப் பாதையில் (Low earth orbit - பூமியிலிருந்து 160-2000 கிமீ வரையிலான உயரம்), மனிதர்கள் தற்காலிகமாகத் தங்கி விண்வெளி ஆய்வுப் பணிகள் மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டதே சர்வதேச விண்வெளி நிலையம். இந்த விண்வெளி நிலையம் 2031இல் செயலிழந்து, பூமியில் விழுந்து நொறுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வளிமண்டல மறுநுழைவின்போது அதீத வெப்பத்தின் காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தின் பெரும்பாலான பகுதிகள் பூமியில் விழும் முன்பே எரிந்துவிடும். அதற்கு மாற்றாக ஒரு புதிய விண்வெளி நிலையத்தை தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிறுவ நாசா விரும்புகிறது. அதன் ஒரு பகுதியே 'ஆக்ஸியம் நிலையம்'. அதை நிறுவத் தேவையான 4 மாட்யூல்கள் (Modules) பல கட்டங்களாக விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும். பின்னர் ஐஎஸ்எஸ் செயலிழக்கும்போது இந்த மாட்யூல்கள் பிரிந்து, ஒரு புதிய விண்வெளி நிலையமாகச் செயல்படும். ஆனால், 2031 வரை காத்திருக்காமல், 2028ஆம் ஆண்டுக்குள் இதைச் செயல்படுத்த ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் விரும்புகிறது. அடுத்த ஆண்டில்(2026), முதல் மாட்யூல் விண்வெளிக்கு அனுப்பப்படும் என நாசா கூறுகிறது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், 'ஆக்ஸியம் நிலையம்' உலகின் முதல் வணிக நோக்கிலான விண்வெளி நிலையமாக இருக்கும். பட மூலாதாரம்,AXIOM SPACE படக்குறிப்பு,பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆக்ஸியம் 4 குழுவினர் இந்தப் புதிய விண்வெளி நிலையத்தை நிறுவுவது தொடர்பான பணிகளுக்கு மட்டுமல்லாது, எதிர்காலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மாற்றாகவும், வணிக விண்வெளி நிலையமாகவும் செயல்பட வேண்டியிருக்கும் என்பதால், அதற்கு முன்னோட்டமாக 2022இல் இருந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிவருகிறது ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம். அதன் நான்காவது கட்ட மிஷன் தான் இந்த ஆக்ஸியம் 4. இதில் பயணிக்கப் போகும் நால்வர் யார்? அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனையும், இந்த 'ஆக்ஸியம் 4' திட்டத்தின் கமாண்டருமான பெக்கி விட்சன் இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, இவர் 'ஆக்ஸியம் 4' திட்டத்தின் விமானி போலந்து நாட்டைச் சேர்ந்த ஸ்லாவோஷ் உஸ்னான்ஸ்கி-விச்நியெவ்ஸ்கி, இவர் 'ஆக்ஸியம் 4' திட்ட நிபுணர் ஹங்கேரியை சேர்ந்த டிபோர் கபு, இவர் 'ஆக்ஸியம் 4' திட்ட நிபுணர் இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுப் பணிகளில் கலந்துகொள்வது இதுவே முதல்முறையாக இருக்கும். யார் இந்த சுபான்ஷு சுக்லா? பட மூலாதாரம்,AXIOM SPACE படக்குறிப்பு,சுபான்ஷு சுக்லா, 2006ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைந்தார். அக்டோபர் 10, 1985, உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் பிறந்தவர் சுபான்ஷு சுக்லா. நேஷனல் டிஃபன்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற பிறகு, 2006ஆம் ஆண்டு இந்திய விமானப் படையின் 'ஃபைட்டர் விங்' பிரிவில் (Fighter Wing- போர் விமானப் பிரிவு) இணைந்தார். சுபான்ஷு, 2000 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர். இதில் இந்திய விமானப் படையின் சுகோய் எஸ்யு-30 எம்கேஐ, மிக்-21, மிக்-29, ஜாகுவார், ஹாக், டோர்னியர், ஏஎன்-32 போன்ற போர் விமானங்களை ஓட்டிய அனுபவமும் அடங்கும். கடந்த 2019ஆம் ஆண்டு, இஸ்ரோவில் இருந்து வந்த ஒரு முக்கியமான அழைப்பு சுபான்ஷுவின் வாழ்க்கையை மாற்றியது. அதன் பிறகு, ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள யூரி ககாரின் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் ஓர் ஆண்டு பயிற்சி பெற்றார். பின்னர் 2024இல், இந்திய விமானப் படையின் குரூப் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். பட மூலாதாரம்,AXIOM SPACE படக்குறிப்பு,கேரளாவை சேர்ந்த பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிட்டுள்ளது. அதற்கு சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த நால்வரில் இருந்து சுபான்ஷு சுக்லா மற்றும் கேரளாவை சேர்ந்த பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் 'ஆக்ஸியம் 4' திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் 'ஆக்ஸியம் 4' திட்டத்தின் பேக்-அப் குழுவில் இருக்கிறார். அதாவது, ஆக்ஸியம் 4 திட்டத்தின் பிரதான 4 உறுப்பினர்களைப் போலவே இந்த பேக்-அப் குழுவின் உறுப்பினர்களுக்கும் அனைத்துப் பயிற்சிகளும் அளிக்கப்படும். ஒருவேளை, இறுதிக் கட்டத்தில் பிரதான உறுப்பினர்களில் யாரேனும் ஒருவரால் விண்வெளிப் பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்றால், அவரது இடத்தை இந்த பேக்-அப் குழு உறுப்பினர் ஒருவர் நிரப்புவார். விண்வெளியில் என்ன பணிகளை மேற்கொள்வார்கள்? பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,ஆக்ஸியம் 4 குழுவினர், 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். வரும் ஜூன் 8ஆம் தேதி, இந்திய நேரப்படி மாலை 6.41 மணிக்கு, ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் உந்தப்படும் டிராகன் விண்கலத்தில் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணிக்க உள்ளனர். ஃப்ளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து தொடங்கும் இந்தப் பயணம், 14 நாட்களுக்கு நீளும். 'ஆக்ஸியம் 4' திட்டத்தின் நோக்கம் "அமெரிக்கா, இந்தியா, போலந்து, ஹங்கேரி, சௌதி அரேபியா உள்பட 31 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 60 விண்வெளி ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது" என்று ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் கூறுகிறது. அவற்றில் முக்கியமானவை, குறுகிய கால விண்வெளிப் பயணங்களின்போது இன்சுலினை சார்ந்திருக்கும் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட விண்வெளி வீரர்களுக்கு எந்தெந்த வழிகளில் உதவலாம் என்பது குறித்து ஆய்வு செய்தல். விண்வெளியில் நிலவும் குறைவான ஈர்ப்பு விசையே மைக்ரோகிராவிட்டி எனப்படுகிறது. அத்தகைய சூழல் மனித மூளையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்தல். மனிதர்கள் விண்வெளிக்கு ஏற்றவாறு எவ்வாறு தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள விண்வெளி வீரர்களிடம் இருந்து உடலியல் மற்றும் உளவியல் தரவுகளைச் சேகரித்தல். குறுகிய விண்வெளிப் பயணங்கள் மூட்டுகள் மற்றும் ரத்த ஓட்டத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை ஆய்வு செய்தல். விண்வெளியில் புற்றுநோய் வளர்ச்சியை ஆராய்தல், குறிப்பாக டிரிபிள்-நெகட்டிவ் மார்பக புற்றுநோயை ஆராய்தல். விண்வெளிப் பயணத்தின்போது ரத்த ஸ்டெம் செல்களில் ஏற்படும் விளைவுகளைப் புரிந்துகொள்வது. 'ஆக்ஸியம் 4' திட்டத்தில் இஸ்ரோவின் ஆய்வுப் பணிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட சில இந்திய வம்சாவளியினர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றிருந்தாலும், ஒரு இந்திய குடிமகன் அங்கு செல்வது இதுவே முதல்முறை. ஆக்ஸியம் திட்டத்தில், நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து இஸ்ரோ தலைமையிலான ஆராய்ச்சிப் பணிகளும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்படும். அவை பின்வருமாறு: கணினித் திரைகள் மீது மைக்ரோகிராவிட்டி சூழல் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்தல். மைக்ரோகிராவிட்டி சூழலில் மூன்று நுண்பாசி திரிபுகளின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் மற்றும் மரபியல் ஆகியவற்றை ஆய்வு செய்தல். பிறகு அதை பூமியில் கிடைத்த தரவுகளுடன் ஒப்பிடுவது. மைக்ரோகிராவிட்டி சூழலில் எலும்புத்தசை செயலிழப்பு (Skeletal muscle dysfunction) குறித்தும் அதற்கான சிகிச்சைகள் குறித்தும் ஆய்வு செய்வது. ஆறு வகையான பயிர் விதைகளில் விண்வெளிப் பயணத்தின் தாக்கங்களை ஆராய்தல். பயிர் விதைகளின் முளைத்தல் செயல்முறை மற்றும் வளர்ச்சியில் விண்வெளிப் பயணத்தின் தாக்கங்களை ஆராய்தல். இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியா, விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காண்பதோடு, இது அடுத்த தலைமுறை இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் என ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் கூறுகிறது. ராகேஷ் ஷர்மா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ராகேஷ் ஷர்மா கடந்த 25 ஆண்டுகளில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 270க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் சென்றிருந்தாலும், அதில் ஒருவர்கூட இந்திய குடிமகன் கிடையாது. ஒரு இந்தியர் மீண்டும் விண்வெளிக்குச் செல்வது குறித்த செய்திக்காகவே தான் 41 வருடங்களாகக் காத்திருந்ததாகக் கூறுகிறார் முன்னாள் இந்திய விமானப் படை விமானியும், விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியருமான ராகேஷ் ஷர்மா. அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய விண்வெளித் துறைக்கு இது மிக முக்கியமான தருணம்" என்றார். மேலும், "நான் விண்வெளிக்குச் சென்றபோது எல்லாமே புதிய விஷயமாக இருந்தது. உலகின் கவனம் எங்கள் மீது இருந்தது, குறிப்பாக மொத்த இந்தியாவின் கவனமும். இப்போது தொழில்நுட்பம் அதீத வளர்ச்சியடைந்துள்ள காலத்தில், விண்வெளிப் பயணத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் சவால்கள் இல்லாமல் இல்லை" என்று கூறினார். கடந்த 1984இல், ராகேஷ் ஷர்மா மற்றும் இரு சோவியத் விண்வெளி வீரர்கள் கொண்ட மூவர் குழு கிட்டத்தட்ட 8 நாட்கள் சோவியத் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை நடத்தியது. குறிப்பாக உயிரி மருத்துவம் மற்றும் ரிமோட் சென்சிங் சார்ந்த ஆய்வுகளை ராகேஷ் ஷர்மா மேற்கொண்டார். அந்தப் பயணத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய 14வது நாடாக இந்தியா மாறியது. இப்போது 41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு இந்தியர் விண்வெளிக்குச் செல்லவுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn5ylklrgklo
  23. Published By: DIGITAL DESK 3 29 MAY, 2025 | 04:52 PM (எம்.மனோசித்ரா) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்வதற்கு வருகைத்தரும் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் சேவையை 24 மணி நேரமும் மேற்கொள்ளும் பணி 2025.02.18 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு அது இன்றுடன் (30) நிறைவடைகிறது. எனவே ஜூன் 2ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் காலை 7 மணி முதல் பி.ப 2.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். அன்றைய தினம் முதல் ஒருநாள் சேவையின் கீழ் முன்கூட்டியே நாளொன்றை ஒதுக்கிக்கொண்டுள்ள விண்ணப்பதாரிகள் அல்லது முன்னுரிமை தேவையுள்ள விண்ணப்பதாரிகளுக்கு மேற்படி காலப்பிரிவிற்குள் தமது விண்ணப்பங்களை ஒருநாள் சேவையின் கீழ் ஒப்படைக்க முடியும். பிரதான அலுவலகத்தில் சாதாரண சேவையின் கீழ் விண்ணப்பங்கள் மு.ப. 7 மணி முதல் பி.ப. 2 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். பிராந்திய அலுவலகங்களில் முன்னர் போன்றே காலை 7 மணி முதல் பி.ப. 2 மணி வரை சாதாரண சேவை மற்றும் ஒருநாள் சேவையின் கீழ் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். https://www.virakesari.lk/article/216011
  24. குருந்தூர் மலை பகுதியில் கைதான இரு விவசாயிகளுக்கு மீண்டும் விளக்கமறியல் 29 MAY, 2025 | 06:38 PM குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளையும் ஜூன் 7ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் இன்றைய தினம் (29) உத்தரவிட்டுள்ளார். குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் குறித்த காணியின் உரிமையாளர் சசிகுமார் என்பவர் தனது பணியாட்கள் மூலம் உழவு இயந்திரத்தின் மூலம் மே 10ஆம் திகதி குருந்தூர் மலை பகுதியில் இரு விவசாயிகளால் உழவு செய்து கொண்டிருந்தபோது தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, புத்த துறவி கல்கமுவ சாந்தபோதி தேரர் தொல்பொருள் திணைக்களத்துக்கு அளித்த புகாரைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணையின் பின்னர் மே 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். தொடர்ந்து மே 29ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். https://www.virakesari.lk/article/216028

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.