Everything posted by ஏராளன்
-
ஏன் தோற்றுப்போனோம்?; ஒரு தெளிவான ஆய்வு வேண்டும்!!
க.வைத்திலிங்கம் கடந்த தேர்தலில் மக்கள் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். உண்மைத் தன்மையுடனும் வெளிப்படையாகவும் அவர்கள் வாக்களித்திருந்தனர். யாரும் யாருக்கும் அழுத்தம் கொடுத்ததாக இல்லை. மக்கள் சுய விருப்பின் பேரில் வாக்களித்தனர். அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்கக் கூடிய சூழ்நிலையம் காணப்பட்டது. கடந்த தேர்தலில் பெரும்பான்மை மக்களால் கொடுக்கப்பட்ட தீர்ப்பைப் பலரால் ஜீரணிக்க முடியவில்லை என்பதை, அவர்களதும் அவர்கள் தொடர்பாக வெளிவரும் சமூக வலைத்தளப் பதிவுகளும் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த தேர்தலுக்குப் பிறகு தமிழ் மக்களாகிய நாம் எங்கிருக்கிறோம்? எமது அரசியல் எதிர்காலம் என்ன? எம்மால் இழைக்கப்பட்ட தவறுகள் எவை? அவை எப்படி ஏற்பட்டன? அதற்கு யார் காரணம்? இழைத்த தவறுகளை எப்படி சரிசெய்யப் போகிறோம்? சரியான பாதையில் செல்ல வழிகாட்டாதது தலைமைகள் தவறா? அப்படியாயின் அதனைச் சரி செய்வது எப்படி? மாற்று வழி என்ன? அதற்கான தேடலில் நாம் இருக்கிறோமா? என்றெல்லாம் சிந்திப்பதைவிட்டு விட்டு அநுரவையும், அர்ச்சுனாவையும் பற்றி அதிகம் பேசிக்கொண்டிருக்கிறோம். நாம் எம்மைப் பொருத்தமானவர்களாக வைத்திருக்காததால் தோற்றுப் போய்விட்டோம் என்பதை ஜீரணிக்க முடியாத மனோநிலையில் உள்ளவர்களின் உளவியல் சிக்கலாகத்தான் இதனைப் பார்க்க முடிகிறது. அநுரவின் அரசு நீடிக்காது, அவர் இந்தியாவின் மனதை வெல்லவில்லை, அதனால் இந்தியா கோபமாக இருக்கிறது. அவர் சீனாவின் பக்கம் சார்ந்திருக்கிறார் என இந்தியா சந்தேகப்படுகிறது. அதனால்தான் தேர்தலுக்குப் பின்பு ரணிலை அழைத்து அது பேசி இருக்கிறது. அநுர அரசு ஒரு கம்யூனிஸ்ட் கொள்கை சார்ந்தது. எனவே அமெரிக்கா தலையிடி கொடுக்கும்.அது மட்டுமல்லாது அநுர அணியினர் எளிமைபோல் காட்டுவது தற்காலிக நாடகம். சமூக அரசியல்வாத நீரோட்டத்துக்குள் வந்துவிட்டால் அவர்களும் ஊழல் செய்வர், மோசடிகளிலும் ஈடுபடுவர் – என்றெல்லாம் கற்பனைக் கதைகளை உலாவவிட்டு தமது மனதைச் சாந்தப்படுத்துபவர்களாகத்தான் தமிழர்களைப் பார்க்க வேண்டி இருக்கிறது. இதனைத்தான் எம்மவரை உளவியல் சிக்கலுள்ளவர்கள் என்றேன். தமிழ் அரசியல் தோல்வி பற்றிப் பேசும்போது, “மக்கள் மத்தியில் அரசியல் களம் பற்றிய தெளிவு தாராளமாக உண்டு.ஏன் இப்படி நடந்து கொண்டனர் எனத் தெரியவில்லை” எனச் சொல்லுகின்றனர் ஒருசாரார். “இல்லை அது பற்றிய விழிப்புணர்வு போதாதனாலேயே இப்படி வாக்களித்துள்ளனர் ” என மறு சாரார் சொல்லி வருகிறார்கள். எது எப்படி இருப்பினும் மகேசனின் முடிவு மக்கள் தீர்ப்பாக வந்திருப்பதாக நம்புவோமாக. மக்களுக்கு எங்களைப் பிடிக்கவில்லை. எங்களது செயற்பாட்டைப் பிடிக்கவில்லை அதனால்தான் அவர்கள் வாக்களிக்கவில்லை என்று தோற்றுப்போனவர்கள் யாராவது ஏற்றுக் கொள்ளுகிறீர்களா? வாக்குப் போடாததற்கு மக்களைக் குறைகூறும் நீங்கள் அவர்கள் சார்ந்த விடயங்களில் உண்மையாக இல்லை என்ற உங்கள் குறைகளைக் கண்டு கொள்ளாதது ஏன்? என்னத்தைச் சொல்லி மக்கள் வாக்கைப் பெற்றுக் கொண்டீர்களோ, அதனை நிறைவேற்றாமல், அதற்குரிய காரணத்தையும் சொல்லாமல் மீண்டும் வாக்கைக் கேட்கச் சென்றிருக்கிறீர்கள். அதுவும் இம்முறை, இலத்திரனியல் ஊடகங்களையே அதிகம் நம்பி, குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு, சம்பளத்துக்கு ஆட்களை அமர்த்தி அவர்களினூடாகவே வாக்காளர்களை சந்தித்திருக்கிறீர்கள். உங்களில் பெரும்பாலானவர்கள் துண்டுப் பிரசுரங்களினூடாகவும், பதாதைகளினூடாவும், பத்திரிகைகளினூடாகவுமே மக்களைச் சந்தித்திருக்கிறீர்கள். அதற்கேற்றவாறு மக்களும் வாக்களித்திருக்கிறார்கள். அடுத்தது அமையப்போகும் அநுர அரசில் “சலுகை அரசியலுக்கு இடமில்லை” என்பதை மக்கள் திட்டவட்டமாக அறிந்திருந்தனர். இந்த விடயத்தில் மக்களே சரியான கருத்துக் கணிப்பாளர்கள் எனத் தெரியவருகிறது. அது மட்டுமல்லாது தோற்றுப்போனவர்களின் மௌனமே அவர்கள் தோல்விக்கு காரணம். மத்தியில் பதவி வகித்த சிங்கள மேலாதிக்க அரசுக்கு துணைபோய் கோடி கோடியாகச் சுருட்டிக் கொண்டிருந்த தமிழர்கள் பற்றிப் பேசத் தவறியது யார் குற்றம்? அரசியல் என்ற போர்வையிலே குண்டர்கள் ஆட்சி நடைபெற்றிருக்கிறது. அரசியல்வாதிகளின் வீடுகளிலே சில அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் நடைபெற்று வந்திருக்கின்றன. பல சமயங்களில் அரசியல்வாதிகள் அரச அதிகாரிகளாகவும் செயற்பட்டு தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் மக்களிடையே உண்டு. தமிழர் பரப்பிலுள்ள அரச நிறுவனங்களில் ஊழல்கள் நடைபெற்றிருக்கின்றன. தமிழ் அரசியல்வாதிகளும், அவர்களது செல்லப் பிள்ளைகளாக தம்மை உருவகித்துக்கொண்ட அரச அதிகாரிகளுமே அந்த ஊழல்களுக்கு சொந்தக்காரார்கள் என்பது பலரறிந்த விடயம். அதற்குப் பக்க பலமாக அவற்றை முன்னின்று நடத்தியவர்கள் தமிழர்கள்.அவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் இதர சலுகைகளுக்காக விலைபோனவர்கள் என நன்கு தெரியும். இருந்தும் அவற்றை மக்களுக்கு அடையாளங் காட்டாதது யார் குற்றம்? ஒரு “அறகல” இயக்கத்தை நடத்தி, முப்பது வருட ஆட்சி செய்கின்ற கனவோடு பதவிக்கு வந்த கோத்தபாயவைக் கலைத்து, அரசியல் பாதையைத் திசைதிருப்பி ஒரு கம்யூனிஸ்ட் ஆட்சியை அதுவும் பெரும்பான்மையோடு கொண்டு வந்திருக்கின்ற சிங்கள மக்களைச் சாதனையாளர்கள் என்று சொல்வதா? இல்லை! மத்தியில் வருகின்ற அரசுக்குப் பந்தம் பிடித்து மக்கள் சொத்தைச் சூறையாடி அவற்றைக் கறைபடிந்த சிங்கள அரசியல்வாதிகளோடு பங்கு போட்டுத் தின்றவர்களை ஓட ஓட விரட்ட முடியாதவர்கள் தமிழ் அரசியல் தலைவர்களாக இருப்பதை சாதனை என்று சொல்வதா? முதலில் தோல்வியை ஒப்புக்கொள்வது ஒருவரின் பெருந்தன்மையைக் காட்டும்.மேற் குறிப்பிட்ட விடயங்களின் அடிப்படையில் ஒதுக்க வேண்டியவர்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நின்றவர்கள் என்ற அடிப்படையில் நல்லவர்களும் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள்.அப்படி அதனை நம்புவதற்கு ஏதுவாக கழித்து ஒதுக்கி புறந்தள்ளப் பட்டவர்களின் அரசியல் பின்புலத்தை சற்று ஆய்வோமாகில், மேற்குறிப்பிட்டவைகளைச் சரி என ஒப்புக் கொள்வீர்கள். மக்களை அரசியல்மயப்படுத்தியது போதாமல் நடத்தப்பட்ட தேர்தல் என்ற குற்றச்சாட்டைத் தோற்றவர்கள் முன்வைக்கிறார்கள்.அரசியல்மயப்படுத்துவது என்பது அடிப்படை அரசியலை விளங்கிக் கொள்வதற்கேயன்றி அரசியல் கள்ளர்களை இனங்காண்பதற்கல்ல. திருடரைத் திருடர்களாக அறிய, அயோக்கியர்களை அயோக்கியர்களாக அறிய மக்களைத் தயார்படுத்தத் தேவை இல்லை. அதனை அறியக் கூடிய பக்குவம் இயல்பாகவே மக்களிடம் உண்டு. 2009 க்குப் பின் ஆட்சிக்கு வந்த அரசுகளினால் அவர்கள் புலனாய்வாளர்களினால் உருவாக்கப்பட்ட “கிறீஸ்பூதம்” போன்றவைகளையும் மக்களே அடையாளங்கண்டனர். அது போன்ற பல திட்டமிட்ட விடயங்கள் சமூகத்துக்குள் கொண்டு வந்து விடப்பட்டன.அதனால் சமூகம் பல பின்னடைவுகளை எதிர்கொண்டனர்.அவற்றிற்கெல்லாம் முகம் கொடுத்து அவைகளை வென்றது மக்களே. அந்தக் காலகட்டங்களில் தமிழ் அரசியல்வாதிகள் எவரும் வாய்திறக்கவில்லை என்றதும் மக்களுக்கு நன்கு புரியும்.“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”, “அரசன் அன்று கொல்வான் கடவுள் நின்று கொல்லும்” என்பதற்கு அமைய நீங்கள் பாராளுமன்றத்துக்குச் செல்லும் வாய்ப்பை இழந்திருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. கடந்த காலங்களில் மக்கள் அரசியலை முன்னெடுத்தவர்கள் என இனங்காணப்பட்ட சிலரும் இத்தேர்தலில் தோற்றுப்போய்விட்டனர் என்ற ஆதங்கமும் மக்களிடத்தில் உண்டு.அதேசமயம் அயோக்கியர்களாக இருந்தவர்களும், அரச நிதியைக் கையாடியவர்கள், தமிழ் தேசியக் கொள்கையை கொண்டவர்கள் என தம்மைப் போலியாக அடையாளம் காட்டியவர்கள் எனத் தோற்றவர்கள் பட்டியலில் பலர் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர். தேர்தல் என்று வரும்போது மட்டும் மக்கள் அரசியலைக் கையிலெடுப்பவர்களையும் அவ்வாறு அல்லாதவர்களையும் வேறுபடுத்தி பார்ப்பதற்கே விழிப்புணர்வு தேவை என்பதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தேர்தல் என்று வரும்போது அத்தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மட்டும் அல்ல சமூக ஊடகங்களும் ஏட்டிக்குப் போட்டியாக மக்கள் சார்பற்ற பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. சமூக ஊடகங்கள் கட்சி சாராதவைகளாக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் ஒரு அரசியல் உண்டு. ஒன்று தற்காப்பு அரசியல், அதாவது எவ்வாறாயினும் தமது நிதி நிலைமையை மேம்படுத்துவது. உதாரணமாக சொல்லப் போனால் “யூரியூப்” ஊடகத்தைக் கையில் எடுத்தவரானால் தமது பதிவுக்கு பார்வையாளர்களை அதிகரிப்பதே அவர்களது நோக்கமாக இருக்கும். பார்வையாளர்கள் அதிகரித்தால் வருவாய் அதிகரிக்கும் என்ற வகையில் அவர்கள் அரசியல் இருக்கும். அடுத்தது அதனை ஒரு பொழுது போக்காகச் செய்பவர்களும் உண்டு அவர்களிடம் சமூகப் பாதுகாப்பு அல்லது சமூகப் பொறுப்பு என்ற விடயங்கள் இருக்காது.தான்தோன்றித் தனமாக கருத்துகளை வெளியிடுவர்.அதுவும் ஒரு வகையில் ஆபத்தே. அதையும் ஒரு வித போதையாகச் செய்பவர்களும் உண்டு. எனவே இவைகள் அனைத்தையும் எதிர் கொள்வதற்கு ஒரு முன்னரங்க திட்டம் தேவையென உணரப்பட்டிருக்கிறது. அதற்குத்தான் தகுந்த விழிப்புணர்வுத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று சொல்லுகிறோம். கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, நடந்து முடிந்த விடுதலைப் போராட்டம் பற்றிய விடயங்களை மட்டும் பேசிக் காலம் கழித்தவர்கள் இருந்தனர். தேசியப் பற்றாளர்கள் எனப் போலி முகம் காட்டி மக்களை ஏமாற்றியவர்கள் இருந்தனர். விடுதலைப் புலிகளுக்குத் தெரிந்தவர்கள் எனச் சொல்லப்பட்டவர்கள் அவர்ளோடு பல செயற்பாடுகளில் இணைந்திருந்ததாக சொல்லி வாக்குக் கேட்டனர். அரச நிதியுதவியின் மூலம் நடைபெற்ற செயல் திட்டங்களை தான் தன்னுடைய நிதி கொண்டு செய்ததாக பொய்யுரைத்தவர்கள் பலர். இவ்வாறு நீளும் பட்டியலிலே வாக்குக் கேட்டு நின்ற புதியவர்கள் பக்கம் மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கினர்.மக்கள் கவனத்தில் புதிய கட்சியாகவும் அதன் வேட்பாளர்களாகவும் தெரிந்தவர்கள் அநுர சார்ந்த கட்சியினரே. அவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்பதைக் காட்டிலும் அவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கலாம் என்ற வகையில் அவர்களுக்கும் சுயேச்சையாக நின்ற அர்ச்சுனாவுக்கும் வாக்களித்தனர். தமிழரசுக் கட்சியில் வேட்பாளராக நின்றவர்களுள் தனக்குச் சொந்தமாக வாக்குகள் இருக்கு என்ற நம்பிக்கையிலும், தனது கடந்த காலச் செயற்பாட்டில் வைத்த நம்பிக்கையிலுமே களத்தில் நின்றவர் ஸ்ரீதரன். மற்றைய அனைவரும் கட்சி வாக்குகளிலேயே தங்கி இருந்தனர். பழக்க தோஷத்தில் தமிழரசுக்கு மக்கள் வாக்களிப்பர் என்று தலைமைகள் கொடுத்த வாக்கை நம்பியே அவர்கள் களத்தில் நின்றனர். அவர்களுக்கென்று ஒரு சுயசரிதம் இருக்கவில்லை. சுயமான வாக்கு வங்கியும் இருக்கவில்லை. இவ்வாறானதொரு கள நிலைமையை முன் கூட்டியே அறிய தமிழ் அரசுக் கட்சியினுள் ஒரு கட்டமைப்பு இருக்கவில்லை. பெரும்பாலும் மதி நுட்பவியலாளர் என்று கருதப்பட்ட சுமந்திரன் என்ற சட்டத்தரணியை மட்டும் நம்பியிருந்தவர்கள் அவர்கள். தேர்தலுக்கு முன்னும் பின்னும் நான் எழுதிய கட்டுரைகளில் இது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அரசியல் களம் என்பது என்றும் ஆய்வுக்குட்பட்டதாக இருக்க வேண்டும். ஆய்வாளர்கள் ஒருங்கிணைந்த ஒரு கூட்டமைப்பாக அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டும். உள்ளூரிலும் வெளியூரிலும் சர்வதேசங்களிலும் அரசியல் நடைமுறைகள், மாற்றங்கள் பற்றி ஆராயப்பட வேண்டும். கருத்துருவாக்கம் நடைபெறுவதாக கூட்டங்களை நடத்த வேண்டும். அங்கு நடைபெறும் வாதங்களையும் கருத்துகளையும் ஜீரணிக்கக் கூடிய ஆற்றலுள்ளவர்களாக மதியுரைஞர்களும், மக்களும் இருக்க வேண்டும். எதிரான கருத்தை விதைப்பவர்களை பலம் கொண்டு புறந்தள்ளுவது புத்திசாலித்தனம் அன்று. கட்சியைப் பலமாக வைத்திருக்க உதவுபவர்கள் அவ்வாறானவர்களே என்றதை விளங்கிக்கொண்டு அவர்களையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதே எமது முக்கிய நோக்கமாகக் கொள்வதையே கட்சி ஆரோக்கியம் என எண்ணுகிறேன். தற்கால அரசியல் சூழ்நிலையில் மேற்குறிப்பிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கின்ற கட்சி தேசிய மக்கள் சக்தி என நம்பலாம்.தாங்கள் பதவிக்கு வந்தால் என்ன விடயங்களை எப்படிச் செய்வது ? என்றவற்றை புலனாய்வு செய்து, ஆராய்ந்து அறிந்து, அவற்றை கோப்புகளாத் தயாரித்து அவர்கள் வைத்திருப்பதாக அறிந்தேன்.அது உண்மையாக இருக்கலாம்.ஏனெனில் இடதுசாரிகளிடத்து இவ்வகையான நடவடிக்கைகளும், போக்கும் இருப்பது பொதுமை. எதனையும் முன்கூட்டியே திட்டமிடுவது.அதுதான் அவர்கள் வெற்றிக்குரிய காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆவணப்படுத்தலில் பலவீனமானவர்கள் எம்மவர் என்று சொல்லப்படுகிறது.அதே சமயம் திட்டமிடலிலும் நாம் பலவீனமானவர்கள் என்றதை நிரூபிக்க முறையான ஆவணக் காப்பகமும், திட்டமிடலுக்கான முறையான அமைப்பும் எம்மிடத்தில் இல்லை என்ற விடயமே சாட்சி. அது மட்டுமல்லாது எமது நிதி பலத்துக்கேற்றவாறு சமூக நோக்கோடு நாம் எமக்கென்று ஒரு சமூக நிதி நிறுவனத்தை இதுவரை நிறுவவில்லை. அது பற்றிய உரையாடலும் எம்மிடையே நடைபெற்றதாக குறிப்புகளும் இல்லை.“நாம் வாய்சொல்லில் வீரரடி.செயற்திறனில் “வலு வீக்” எடி என்ற நிலைமைய மாற்ற வேண்டும்.அரசியல் களத்தை மாற்றியமைத்தவாறு அதனையும் மக்கள் மாற்றி அமைக்கலாம். மாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் பயணிப்போம். பயணங்கள் முடிவதில்லை என்ற அனுபவக் கோட்பாட்டுக்கு அமைவாக…!!!??? https://thinakkural.lk/article/312778
-
மார்பகப் புற்றுநோயில் இருந்து மீண்ட தன்னம்பிக்கை பெண்
குழந்தைக்கு பால் கொடுக்க முடியாம கஷ்டப்பட்டேன் - Breast Cancer-ல் இருந்து மீண்ட தன்னம்பிக்கை பெண் பாபி ஷகியாவிற்கு மார்பக புற்றுநோய் இருப்பது முதன்முதலில் கண்டறியப்பட்ட போது அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து ஒன்பது மாதங்களே ஆகியிருந்தன. ஆனால் மார்பக புற்றுநோயுடன் போராடினால் கூட, முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் குழந்தைகளை வளர்ப்பது சாத்தியம் தான் என்பதை அவரது கதை நிரூபிக்கிறது. பாபி ஷகியா மார்பகங்கள், எலும்பு மற்றும் தோலில் நான்கு முறை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தவர். அவருக்கு 27 வயதில் முதல்முறையாக மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டது. 2022இல், உலகளவில் 2.3 மில்லியன் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவிக்கிறது. #BreastCancer #Cancer #Health இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
வடிகாலமைப்புகள் சீரின்மையே வெள்ள அனர்த்தத்திற்கு காரணம் - ரவிகரன் எம்.பி.
28 NOV, 2024 | 04:29 PM வடிகாலமைப்பு சீரின்மையாலேயே அதிகளவான இடங்களில் வெள்ள நீர் தேங்கிய, பாரிய அளவில் வெள்ள அனர்த்தம் ஏற்படக் காரணமாக அமைந்ததாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தொடர்ந்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், உரிய திணைக்களங்கள் வடிகாலமைப்பு விடயத்தில் அதிக கவனத்துடன் செயற்படவேண்டும். வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்குதல், நிவாரணங்கள் வழங்குதலுடன், தறப்பாள் வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது தெரிவித்திருந்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் அனர்த்த நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199944
-
சூரியனை ஆய்வு செய்ய நாளை விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1
ஆதித்யா எல்1: பூமியை தாக்கும் சூரியப் புயல்களை துல்லியமாக கண்டறிய எப்படி உதவுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நமது சூரிய மண்டலத்தில் இருக்கும் மிகப்பெரிய வான் பொருளான சூரியன், பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு இன்றியமையாதது எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி நியூஸ், டெல்லி இந்திய விஞ்ஞானிகள், நாட்டின் முதல் சூரிய கண்காணிப்பு செயற்கைக் கோளான ஆதித்யா-எல்1 நடத்திய ஆய்வில் கிடைத்த “முதல் குறிப்பிடத்தக்க முடிவுகளை” வெளியிட்டுள்ளனர். கடந்த ஜூலை 16ஆம் தேதியன்று, ஆதித்யா எல்1 விண்வெளிக்குச் சுமந்து சென்ற ஏழு ஆய்வுக் கருவிகளில் மிக முக்கியமான ஒன்றான, விசிபிள் எமிஷன் லைன் கொரோனாகிராஃப் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. இதை வெல்க் (VELC) என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்தக் கருவி, கொரோனல் மாஸ் எஜெக்ஷன் (CME) தொடங்கிய நேரத்தைத் துல்லியமாக மதிப்பிட அவர்களுக்கு உதவியது. கொரோனா என்பது சூரியனின் வெளிப்புற அடுக்கு. அதிலிருந்து வெளியேறும் மிகப் பிரமாண்டமான அளவில் இருக்கும் தீப்பந்தமே கொரோனல் மாஸ் எஜெக்ஷன் என்று அழைக்கப்படுகிறது. இவற்றைக் கண்காணிப்பது, இந்தியாவின் சூரிய ஆய்வுத் திட்டத்தின் முக்கியமான அறிவியல் நோக்கங்களில் ஒன்று. “ஆற்றல் துகள்களால் ஆன இந்தத் தீப்பிழம்புகள் அடங்கிய ஒரு சி.எம்.இ (CME) ஒரு டிரில்லியன் கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். அதோடு பயணிக்கும்போது இதனால் விநாடிக்கு 3,000 கி.மீ வேகத்தை அடைய முடியும். இது பூமி உள்பட எந்தத் திசையில் வேண்டுமானாலும் செல்லக்கூடும்,” என்று விளக்கினார் வெல்க் கருவியை வடிவமைத்த இந்திய வான் இயற்பியல் கழகத்தின் பேராசிரியர் ஆர்.ரமேஷ். “இப்போது இந்தப் பெரிய தீப்பந்தம் (CME), சூரியனில் இருந்து வெடித்து வெளியேறி பூமியை நோக்கி வருவதைக் கற்பனை செய்து பாருங்கள். அதன் உச்சக்கட்ட வேகத்தில் வந்தால், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருக்கும் 150 மில்லியன் கி.மீ தொலைவைக் கடக்க, அதற்குச் சுமார் 15 மணிநேரம் மட்டுமே ஆகும்” என்றார் ரமேஷ். சூரியனில் இருந்து பூமியை நோக்கி வந்த பிரமாண்ட தீப்பந்து கடந்த ஜூலை 16ஆம் தேதியன்று, வெல்க் கருவி அவதானித்த சி.எம்.இ வெளியேற்றம் சூரியனில் இருந்து இந்திய நேரப்படி மாலை 6:38 மணிக்குத் தொடங்கியது (GMT 13:08). மதிப்பு மிக்க வான் இயற்பியல் ஆய்விதழ்களில், இந்த சி.எம்.இ பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்ட வெல்க் கருவியின் முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் ரமேஷ், கடந்த ஜூலை 16 அன்று வெளிப்பட்ட சி.எம்.இ பூமிக்குப் பக்கத்தில் உருவானதாகக் கூறினார். “ஆனால், அதன் பயணம் தொடங்கிய அரை மணிநேரத்திற்கு உள்ளாகவே, திசைதிருப்பப்பட்டு, வேறு திசையில் பயணித்து சூரியனுக்குப் பின்னால் சென்றுவிட்டது. அது வெகு தொலைவில் இருந்ததால், பூமியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை,” என்றும் குறிப்பிட்டார் ரமேஷ். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சூரியனின் கொரோனா அடுக்கு பூமியிலிருந்து பார்க்கையில், முழு சூரிய கிரகணத்தின்போது மட்டுமே தெரியும் ஆனால், சூரியப் புயல்கள், சூரியச் சுடர்கள், சி.எம்.இ வெளியேற்றங்கள் ஆகியவை பூமியின் வானிலையை வழக்கமாகப் பாதிக்கின்றன. இந்தியாவில் இருந்து 50க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்கள் உள்பட கிட்டத்தட்ட 7,800 செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள விண்வெளிப் பகுதியின் வானிலையையும் அவை பாதிக்கின்றன. Space.comஇன் கூற்றுப்படி, அவை மனித வாழ்வுக்கு நேரடி அச்சுறுத்தல் எதையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், அவை பூமியின் காந்தப்புலத்தில் குறுக்கிடுவதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முடியும். அவற்றின் மிகவும் தீங்கு இல்லாத தாக்கம் வட மற்றும் தென் துருவத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் அழகான சுடரொளிகளை (Aurora) ஏற்படுத்துகிறது. ஒரு வலுவான சி.எம்.இ வெளியேற்றமானது லண்டன் அல்லது பிரான்ஸ் போன்ற துருவத்தில் இருந்து தொலைவிலுள்ள பகுதிகளின் வானத்திலும்கூட, கடந்த மே மற்றும் அக்டோபர் மாதங்களில் நடந்ததைப் போல, சுடரொளிகள் தென்பட வழிவகுக்கும். ஆனால், இந்த சி.எம்.இ வெளியேற்றத்தின் விளைவுகள் விண்வெளியில் தீவிரமாக இருக்கலாம். அவற்றில் இருக்கும் ஆற்றல் துகள்களால் செயற்கைக்கோளில் இருக்கும் அனைத்து மின்னணுக் கருவிகளையும் செயலிழக்கச் செய்ய முடியும். அவற்றால் செயற்கைக்கோளின் மின் கட்டமைப்பைத் தகர்த்து வானிலை மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களில் பாதிப்புகள் ஏற்படலாம். நமது வாழ்க்கை முழுவதுமாகத் தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களையே சார்ந்துள்ள நிலையில், “சூரியனில் இருந்து வெளிப்படும் சி.எம்.இ.க்களால் இணையம், தொலைபேசி இணைப்புகள், வானொலி என தகவல்தொடர்பு வசதிகள் அனைத்தையும் குலைக்க முடியும்” எனக் கூறும் பேராசிரியர் ரமேஷ், அது முழு வீச்சிலான குழப்பத்திற்கு வித்திடும் என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சி.எம்.இ வெளியேற்றம் பூமியைவிடப் பல மடங்கு பெரிதாகவும் இருக்கக்கூடும் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள சூரியப் புயல்களில், வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த சூரியப் புயல் 1859இல் ஏற்பட்டது. கேரிங்டன் நிகழ்வு (Carrington Event) என்று அழைக்கப்பட்ட அந்த சூரியப் புயல், தீவிரமான சுடரொளிக் காட்சிகளை உருவாக்கியதோடு, உலகம் முழுவதும் இருந்த தந்தி இணைப்புகளைச் செயலிழக்க வைத்தது. கடந்த 2012 ஜூலையில் பூமியை நோக்கி ஒரு வலுவான சூரியப் புயல் வீசியதாகவும், அந்தப் புயலுக்குக் காரணம் சூரியனில் இருந்து வெளிப்பட்ட சி.எம்.இ என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதோடு, இந்த சூரியப் புயல் பூமியைத் தாக்கும் வகையில், மிக நெருக்கமாக வந்ததாகவும், அது மேலும் நெருங்கியிருந்தால் நிலைமை ஆபத்தாகியிருக்கும் என்றும் நூலிழையில் அந்த நிகழ்வு தவிர்க்கப்பட்டதாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதோடு, அந்த சூரியப் புயல் பூமியைத் தாக்குவதற்குப் பதிலாக, விண்வெளியில் இருக்கும் நாசாவின் ஸ்டீரியோ-ஏ (STEREO-A) சூரிய கண்காணிப்பகத்தைத் தாக்கியது. கடந்த 1989ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு சி.எம்.இ வெளியேற்றம், கூபெக்கின் மின் கட்டமைப்பின் ஒரு பகுதியை 9 மணிநேரத்திற்குச் செயலிழக்க வைத்தது. இதனால் 60 லட்சம் பேர் மின்சாரமின்றி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நவம்பர் 4, 2015 அன்று சூரிய செயல்பாடு ஸ்வீடன் மற்றும் சில ஐரோப்பிய விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டைச் சீர்குலைத்தது. இதனால் பல மணிநேரங்களுக்குக் குழப்பம் நிலவியது. சூரியப் புயல்களை கண்காணிப்பது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த அக்டோபர் மாதம், பிரிட்டன் வானில் வண்ணமயமான சூரியப் புயலால் ஏற்பட்ட காந்தப்புலச் சுடரொளி இரவு வானத்தை ஒளிரச் செய்தது சூரியனில் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணித்து, சூரியப் புயல் மற்றும் சி.எம்.இ வெளியேற்றத்தை நிகழ்நேரத்தில் கண்டறிந்து, அவற்றின் பாதையைக் கணிக்க முடிந்தால், மின் கட்டமைப்புகள் மற்றும் செயற்கைக்கோள்களைத் தற்காலிகமாக அணைத்து வைக்கலாம். இதன்மூலம், அவற்றை இந்த நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பதற்கான ஒரு முன்னறிவிப்பாக அந்தத் தகவல்களைப் பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ஜப்பான் மற்றும் சீனா ஆகியவை பல்லாண்டுக் காலமாகத் தங்கள் விண்வெளி சார்ந்த சூரிய ஆய்வுத் திட்டங்கள் வாயிலாக சூரியனைக் கண்காணித்து வருகின்றன. இந்து மதத்தைச் சேர்ந்த சூரியக் கடவுளின் பெயரைத் தொடர்ந்து பெயரிடப்பட்ட ஆதித்யா எல்1 என்ற சூரியனை ஆய்வு செய்யும் செயற்கைக்கோளை இஸ்ரோ இந்த ஆண்டின் தொடக்கத்தில் விண்வெளிக்கு அனுப்பியது. கிரகணங்களின்போது கூட சூரியனை தொடர்ந்து அவதானிக்கவும், அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஆதித்யா எல்1-ஆல் முடியும். “நாம் பூமியிலிருந்து சூரியனை பார்க்கும்போது, ஒளிக்கோளம் அல்லது அதன் பிரகாசமான ஆரஞ்சு நிற நெருப்புப் பந்து போன்ற வெளிப்புறப் பகுதியையே பார்க்கிறோம்,” என்கிறார் பேராசிரியர் ரமேஷ். முழு கிரகணத்தின்போது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வரும் சந்திரன் ஒளிக்கோளத்தை மறைக்கும்போது மட்டுமே, சூரியனின் வெளிப்புற அடுக்கான கொரோனாவை நம்மால் காண முடியும். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, 'ஆதித்யா எல்1-இல் இருக்கும் கொரோனாகிராஃப் கருவியால் சி.எம்.இ வெளியேற்றம் தொடங்கும் நேரத்தையும் அது செல்லும் திசையையும் துல்லியமாக மதிப்பிட முடியும்.' இந்தியாவின் கொரோனாகிராஃப் கருவி, அதாவது வெல்க்-இல், நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் கூட்டுத் திட்டமான சூரிய மற்றும் சூரியவளி மண்டலத்தில் இருக்கும் ஆய்வகத்தில் உள்ள கொரோனாகிராஃப் கருவியைவிடச் சற்றுக் கூடுதல் நன்மை இருப்பதாகக் கூறுகிறார் பேராசிரியர் ரமேஷ். “நம்முடைய கொரோனாகிராஃப் கருவி, கிரகணத்தின்போது சந்திரன் செய்வதைப் போலவே சூரியனின் ஒளிக்கோளத்தைச் செயற்கையாக மறைக்கிறது. இதனால், சூரியனின் பிரகாசமான, ஆரஞ்சு நிற ஒளிக்கோளம் இல்லாமல், ஆதித்யா எல்1-க்கு ஆண்டின் 365 நாட்களும் 24 மணிநேரமும் கொரோனா அடுக்கு தடையின்றிக் காட்சியளிக்கும்,” என்று விளக்கினார் ரமேஷ். நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் கொரோனாகிராஃப் கருவி மிகப்பெரியது. அதாவது, அது ஒளிக்கோளத்தை மட்டுமின்றி, கொரோனா அடுக்கின் சில பகுதிகளையும் மறைக்கிறது. ஆகவே, அந்தக் கருவியால் மறைக்கப்பட்ட பகுதியில் சி.எம்.இ வெளிப்பட்டால், அதன் தோற்றத்தை அந்தப் பெரிய கொரோனாகிராஃப் கருவியால் காண முடியாது. ஆனால், வெல்க் மூலம் ஒரு சி.எம்.இ வெளியேற்றம் தொடங்கும் நேரத்தையும் அது எந்தத் திசையில் செல்கிறது என்பதும் துல்லியமாக மதிப்பிட முடியும் என்கிறார் பேராசிரியர் ரமேஷ். இந்தியாவில் சூரியனை கண்காணிக்க, தெற்கில் கொடைக்கானல், கௌரிபிதனூர், வடமேற்கில் உதய்பூர் என மூன்று கண்காணிப்பு மையங்கள் உள்ளன. ஆகவே, இந்த மையங்களின் அவதானிப்புகளை ஆதித்யா எல்1 உடன் சேர்த்தால், சூரியனைப் பற்றிய நமது புரிதலைப் பெரியளவில் மேம்படுத்த முடியும் என்றும் பேராசிரியர் ரமேஷ் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20738ly2n2o
-
7 கோடி கொள்ளை! சந்தேக நபர் கைது!
ஏழரை கோடி கொள்ளை - டுபாய்க்கு தப்பிச் சென்ற சந்தேகநபர் மினுவாங்கொடையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் ஏழரை கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் இது தெரியவந்துள்ளது. பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லும் தனியார் நிறுவனமொன்றின் சாரதி மினுவாங்கொடையில் உள்ள தனியார் வங்கிக்கு பணத்தை எடுத்துச் செல்லும் போது, கடந்த நவம்பர் மாதம் 18ஆம் திகதி ஏழரை கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் தப்பிச் சென்றுள்ளார். பின்னர், சம்பவம் தொடர்பில் 03 சந்தேகநபர்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து மூன்று கோடியே 55 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்படி, நேற்று (27) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, திருடப்பட்ட பணம் விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கடந்த 23ஆம் திகதி டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளைச் சம்பவத்திற்குப் பின்னர் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் தமக்கு தெரியாது எனத் தெரிவித்துள்ளனர். எனினும் தரிந்து பெரேரா என்ற சந்தேகநபர் பணப் பையுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வது சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196550
-
புகழ்பெற்ற யானை மின்சாரம் தாக்கி பலி
'தீகதந்து 1' குறித்து நாம் அறியாத தகவல்கள்! உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த 'தீகதந்து 1' என்ற யானை இன்று (28) அதிகாலை உயிரிழந்தது. கலாவெவ தேசிய பூங்காவை தனது வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்த இந்த யானை, கெக்கிராவை ஆன்டியாகல, ஹிங்குருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் உள்ள பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளது. சுமார் 08 அடி உயரம் கொண்ட இந்த யானையின் தந்தங்கள் சுமார் 05 அடி நீளம் கொண்டவையாகும். கலாவெவ சரணாலயத்தில் வாழ்ந்த யானைகள் கூட்டத்தில் உடல் அளவிலும் தோற்றத்திலும் ஒரே மாதிரியான இரண்டு யானைகள் வசித்து வந்ததால் அவை 'தீகதந்து 1' மற்றும் 'தீகதந்து 2' என்று அழைக்கப்பட்டன. இவற்றில் 'தீகதந்து 2' யானை சுமார் 05 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தது. 'தீகதந்து 1' இறக்கும் போது 45 முதல் 50 வயது வரை இருக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். யானை-மனித மோதல்களின் விளைவாக, 2022 இல் 433 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன, மேலும் கடந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் 193 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இந்நாட்டில் காலத்துக்குக் காலம் ஆட்சிகள் மாறினாலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் யானை - மனித மோதலுக்கான திட்டவட்டமான தீர்வை எந்த அரசாங்கத்தாலும் வழங்க முடியவில்லை என்பதற்கு இந்த தரவுகள் வலுவான சாட்சியாகும். https://tamil.adaderana.lk/news.php?nid=196571
-
பயங்கரவாத இயக்கத்தையும் அதன் தலைவரையும் போற்றுவது முன்நோக்கிப் பயணிக்க உதவாது - அலி சப்ரி
தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை வரையறைகளுடன் எவ்வாறு அனுஷ்டிக்க முடியும் - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 28 NOV, 2024 | 04:37 PM (இராஜதுரை ஹஷான்) விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வரையறைகளுடன் மாவீரர் தினத்தை எவ்வாறு அனுஷ்டிக்க இடமளிக்க முடியும். இவ்வாறான செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் இலங்கையில் ஒசாமா பின் லேடனையும் அனுஸ்டிக்க நேரிடும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மனோஜ் கமகே தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வரலாற்றில் என்றுமில்லாத வகையில் இம்முறை வடக்கில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுபாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு அனுமதியளித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் வடக்கு மக்கள் இம்முறை போராளிகளையும் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனையும் பகிரங்கமாக நினைவு கூர்ந்துள்ளனர். விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்யப்பட்டுள்ளது. உலகில் 32 நாடுகளில் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை எவ்வாறு வரையறைகளுடன் அனுஸ்டிக்க இடமளிக்க முடியும். இவ்வாறான செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் ஒசாமா பின் லேடனையும் இலங்கையில் அனுஷ்டிக்க நேரிடும். தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள். தமிழ் மக்களின் ஆணையை அரசாங்கம் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கம் நாட்டு பற்றுள்ள இலங்கையர்களுக்கு கிடையாது. இலங்கையில் வாழும் தமிழர்கள் இலங்கையர்கள் என்ற அபிமானத்துடன் வாழ்வதற்கே விரும்புகிறார்கள். பிரிவினைவாத கொள்கையுடைய தமிழ் அரசியல்வாதிகளே நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறார்கள். வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி அக்காணிகளை உரியவர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அத்துடன் எதிர்வரும் மாதமளவில் பெருமளவான இராணுவ முகாமைகளை வடக்கில் இருந்து அகற்றுவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றி, காணிகளை பகிர்ந்தளித்தல் தொடர்பில் பாதுகாப்பு தரப்புடன் விரிவாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய மீளாய்வுகளுக்கு பின்னர் பொறுப்புடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும். இச்செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்பு சிறிதளவேனும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பது எமது நிலைப்பாடாகும். இலங்கையில் 30 ஆண்டுகள் நீடித்த பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.அனைத்து இன மக்களும் இன்று சுதந்திரமாக வாழ்கிறார்கள்.வடக்கிலும், கிழக்கிலும் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இருத்தல் வேண்டும் என்பதை அரசாங்கமும் அரச தலைவர்களும் மறக்க கூடாது என்றார். https://www.virakesari.lk/article/199946
-
87 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு; 6000 மணிநேர அந்தரங்க வீடியோவுடன் சிக்கிய டாக்டர்
ஐரோப்பாவில் மிக மோசமான பாலியல் தொந்தரவு வழக்காக மருத்துவர் ஆர்னி பையின் வழக்கு மாறி உள்ளது. 87 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் அவர்களுடன் அந்தரங்கத்தில் இருந்த சுமார் 6000 மணி நேர வீடியோ உடன் மருத்துவர் ஒருவர் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடான நார்வேயை சேர்ந்தவர் ஆர்னே பை. 55 வயதாகும் இவர் மருத்துவராக நார்வே நாட்டில் உள்ள பல கிராமங்களில் பணியாற்றியுள்ளார். தொழிலில் திறமை மிக்க நபராக இருந்த போதிலும் பெண்களிடம் பழகுவதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது. இவர் மருத்துவர் ஆகுவதற்கு முன்பாக பயிற்சி நிலையிலிருந்த போதே ஏராளமான பெண்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். மருத்துவரான பின்னரும் இவருடைய பாலியல் தொந்தரவு நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் சுமார் 87 பெண்களிடம் பழகி அவர்களிடம் பாலியல் ரீதியாக மருத்துவர் ஆர்னி பை தொந்தரவு செய்துள்ளாராம். இந்த பெண்கள் அனைவரும் மருத்துவரிடம் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அவர்களது பலவீனத்தை பயன்படுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் ஆர்னி. அது தொடர்பாக சுமார் 6000 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ காட்சிகளை பதிவு செய்து வைத்துள்ளார். இந்த நிலையில் பல ஆண்டுகளாக இதே குற்றச்செயலை செய்து வந்த மருத்துவர் ஆர்னி பை, கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் தான் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு போலீசாரிடம் சிக்கி உள்ளார். இந்த இடத்தில் விசாரணையை தீவிர படுத்திய போலீசார் பல திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருமே 14 வயதில் இருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. மிகவும் திட்டமிட்டு பெண்கள் புகார் அளிக்க முடியாத அளவுக்கு பாலியல் தொந்தரவுகளை அவருக்கு மருத்துவர் ஆர்னி அளித்துள்ளார். https://thinakkural.lk/article/312811
-
9 புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்
28 NOV, 2024 | 06:24 PM இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள ஒன்பது தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். அதன்படி புர்கினா பாசோ (Burkina Faso), பொஸ்னியா மற்றும் எர்செகோவினா (Bosnia and Herzegovina) , அசர்பைஜான் குடியரசு (The Republic of Azerbaijan), ஜோர்ஜியா (Georgia), பெலரூஸ் குடியரசு (The Republic of Belarus), ஆர்மேனியா குடியரசு (The Republic of Armenia), ஸ்பானிய குடியரசு (The Kingdom of Spain), கொங்கோ குடியரசு (The Republic of Congo), மற்றும் கினியா குடியரசு (The Republic of Guinea) ஆகியவற்றின் புதிய தூதுவர்களும் கென்யாவின் புதிய உயர்ஸ்தானிகரும் இவ்வாறு நியமனம் பெற்றுள்ளனர். இன்று நற்சான்று பத்திரங்களை கையளித்த தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகரின் விபரம் வருமாறு, 01.கலாநிதி டிசையர் போனிபஸ் சம் Dr. Desire Boniface Some - புர்கினா பாசோ தூதுவர் (புதுடில்லி) 02. ஹரிஸ் ஹெர்லே Mr.Haris Hrle - பொஸ்னியா மற்றும் எர்செகோவினா தூதுவர் (புதுடில்லி) 03. எல்சின் ஹுசைன்லி Mr. Elchin Huseynli - அசர்பைஜான் குடியரசு தூதுவர் (புதுடில்லி) 04.வக்தாங் ஜவோஷ்விலி Mr. Vakhtang Jaoshvili - ஜோர்ஜிய தூதுவர் (புதுடில்லி) 05.மிகஹல் கஸ்கோ Mr. Mikhal Kasko - பெலரூஸ் குடியரசின் தூதுவர் (புதுடில்லி) 06.வாகன் அப்யான் Mr. Vahagn Afyan - ஆர்மேனியா குடியரசு தூதுவர் 07.யுவான் அன்டோனியோ மார்ச் புஜோல் Mr. Juan Antonio March Pujol - ஸ்பானிய குடியரசின் தூதுவர் (புதுடில்லி) 08. ரேமண்ட் செர்ஜ் பேல் Mr. Raymond Serge Bale - கொங்கோ குடியரசு (புதுடில்லி) 09.முன்யிரி பீட்டர் மைனா Mr. Munyiri Peter Maina - கென்யா குடியரசு உயர்ஸதானிகர் (புதுடில்லி) 10. அலசேன் கொண்டே Mr. Alassane Conte - கினியா குடியரசின் தூதுவர் (புதுடில்லி) https://www.virakesari.lk/article/199958
-
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்: பல்லுயிர்ப் பெருக்க மண்டலமான அரிட்டாபட்டிக்கு ஆபத்தா? எதிர்ப்பு ஏன்?
பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc) நிறுவனத்திற்கு மத்திய சுரங்கத் துறை வழங்கிய ஏலத்தை ரத்து செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம். 'சுரங்கத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பம் வந்தால் ஏற்க மாட்டோம்' என தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. டங்ஸ்டன் கனிமத்திற்கான தேவை இருந்தாலும் தமிழ்நாட்டில் அவை போதுமானதாக இல்லை என கூறுகின்றனர், விஞ்ஞானிகள். தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பிய பின்னரும் மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்திடம் இருந்து விளக்கம் எதுவும் வரவில்லை. இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் பேச பிபிசி தமிழ் முயன்றபோது, அவர் இதுகுறித்துப் பிறகு பேசுவார் என அவருடைய தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு எழுவது ஏன்? சுரங்கம் அமைவதால் என்ன பாதிப்பு? மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்க குத்தகை உரிமம் வழங்குவதற்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி, மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை வெளியிட்டது. கடந்த நவம்பர் 7ஆம் தேதி வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (Hindustan Zinc) நிறுவனத்தைத் தகுதியான நிறுவனமாக மத்திய சுரங்க அமைச்சகம் தேர்வு செய்தது. இதுதொடர்பாக, மத்திய சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுரங்கம், கனிம மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 1957-ன் படி ஏலம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. ஆந்திரா மாநிலம் பாலேபாளையம் மற்றும் தமிழ்நாட்டில் மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக்கர்பட்டி கிராமத்தில் 2,015.51 ஹெக்டேர் பரப்பில் டங்கஸ்டன் சுரங்கம் அமைய உள்ளதாக சுரங்க அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் தமிழ்நாடு-புதுச்சேரி அலுவலகம், கடந்த 2018-19ஆம் ஆண்டில் மேலூர் தாலுகாவில் உள்ள எட்டிமங்கலம், அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தியதாகவும் அதை அடிப்படையாகக் கொண்டு ஏலம் விடப்பட்டதாகவும் மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது. அரிட்டாபட்டிக்கு ஆபத்தா? பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, "டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் பல்லுயிர்ப் பெருக்க மண்டலமாக உள்ள அரிட்டாபட்டி அழியும்" என பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர் மத்திய அரசின் ஏல அறிவிப்புக்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் பல்லுயிர்ப் பெருக்க மண்டலமாக உள்ள அரிட்டாபட்டி அழியும்' என்றொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மேலூரில் அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதிகளை தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமாக (Biodiversity Heritage Site) மாநில அரசு அறிவித்தது. தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், 'தமிழில் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள், 2,200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோவில்கள், ஏழு சிறு குன்றுகளைத் தொடர்ச்சியாக இப்பகுதி கொண்டுள்ளதாக” கூறப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளதாகவும் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, பாம்புண்ணிக் கழுகு உள்பட 250 பறவைகளும், அலங்கு, மலைப் பாம்பு, தேவாங்கு போன்ற உயிரினங்களும் வாழ்வதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது. சுரங்க அமைச்சகத்தின் அறிவிப்புப்படி, இங்குள்ள கழிஞ்ச மலை, நாட்டார் மலை, ராமாயி மலை, அகப்பட்டான் மலை, கழுகு மலை, தேன்கூடு மலை ஆகியவை டங்ஸ்டன் கனிமத் தொகுதிக்குள் வருவதாகக் கூறுகிறார், 'பூவுலகின் நண்பர்கள்' எனும் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ.சுந்தர்ராஜன். "சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில் சுரங்கம் அமைக்கப்பட்டால் இயற்கை நீர் சுனைகள் அழிந்து போகும்' என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார், ஆளும் திமுகவின் கூட்டணியில் உள்ள ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. மத்திய சுரங்க அமைச்கத்தின் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே டங்ஸ்டன் கனிமத் திட்டத்துக்கு எதிராக சூழல் அமைப்புகள் போராட்டத்தை அறிவித்தன. தமிழ்நாடு அரசின் விளக்கம் பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை என, தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது இந்த நிலையில், 'டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை' என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'மத்திய அரசால் மதுரை, மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமத்திற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்கக் குத்தகை உரிமம் வழங்க ஏல அறிவிப்பு செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 7ஆம் தேதி, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தைத் தகுதியான நிறுவனமாக சுரங்க அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனத்திடம் இருந்து தமிழ்நாடு அரசு எந்த விண்ணப்பமும் பெறவில்லை; அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை' எனத் தெரிவித்துள்ளது. இதே கருத்தைக் கடந்த 21ஆம் தேதி செய்தியாளர்களிடம் கூறிய வனத்துறை அமைச்சர் பொன்முடி, "டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் வரவில்லை. அப்படியே அனுமதி கேட்டு வந்தாலும் அதை நிராகரிப்போம்," என்றார். மத்திய அரசு அனுமதி அளித்திருந்தால் அதை ரத்து செய்வதற்கு அரசு வலியுறுத்தும் எனவும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். கிராமங்களில் எதிர்ப்பு பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு மேலூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் மாநில அரசு விளக்கம் கொடுத்தாலும் மதுரையில் கள நிலவரம் வேறாக உள்ளது. டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு மேலூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செவ்வாயன்று (நவம்பர் 26) மதுரை அழகர் கோவிலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி, இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, வெள்ளியன்று (நவம்பர் 29) மேலூரில் கடை அடைப்புப் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும், முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் அறிவித்துள்ளனர். சுரங்க ஏலத்துக்கு எதிராக, 30 கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் கூறினார், டங்ஸ்டன் கனிமத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கம்பூர் செல்வராஜ். இதுதொடர்பாக, கம்பூர் ஊராட்சி மன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், 'டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு எந்த அனுமதியும் அளிக்கக் கூடாது. இதுதொடர்பாக சட்டப் பேரவையில் சிறப்புக் கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன கனிமம் உள்ளது என்பதை மத்திய சுரங்கத்துறை ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறும் செல்வராஜ், "மதுரை மாவட்டத்தில் இரண்டு பகுதிகளை டங்ஸ்டன் சுரங்கத்துக்காகத் தேர்வு செய்துள்ளதாக" கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மீனாட்சிபுரத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வரை உள்ள 200 சதுர கி.மீட்டரில் பல்வேறு காலகட்டங்களில் சுரங்கத்துறை ஆய்வு நடத்தியுள்ளது. இதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்" என்றார். எதிர்ப்பை மீறி அமையுமா டங்ஸ்டன் சுரங்கம்? பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன கனிமம் உள்ளது என்பதை மத்திய சுரங்கத்துறை ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார், செல்வராஜ். அதேநேரம், தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையுமா என்ற கேள்வியும் மேலூர் பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. "மாநில அரசின் அனுமதியில்லாமல் கனிம சுரங்கத்தை அமைக்க முடியாது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை" என்கிறார், கோ.சுந்தர்ராஜன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சுரங்கம் அமைப்பதற்கு பொதுமக்கள் கருத்தைக் கேட்பதை மாநில அரசு செயல்படுத்த வேண்டும். இதற்கு தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டால் கட்டாயப்படுத்த முடியாது" என்கிறார். தேனியில் நியூட்ரினோ திட்டம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததையும் ஸ்டெர்லைட் சுரங்கத்தைத் திறப்பதற்கும் தற்போது வரை மாநில அரசு அனுமதி மறுப்பதையும் சுந்தர்ராஜன் மேற்கோள் காட்டினார். தமிழ்நாட்டில் டங்ஸ்டன் உள்ளதா? பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சேலம் மற்றும் திருச்சியில் டங்ஸ்டனுக்கான மூலப்பொருள் கிடைக்கிறது என்கிறார் பொன்ராஜ் இந்த விவகாரத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் விஞ்ஞானி வெ.பொன்ராஜின் கருத்து வேறாக உள்ளது. "தமிழ்நாட்டில் சேலம் மற்றும் திருச்சியில் டங்ஸ்டனுக்கான மூலப்பொருள் கிடைக்கிறது. ஆனால், அவை வணிகரீதியாகப் பயன்படுவதற்கேற்ற வகையில் கிடைப்பதில்லை" என்கிறார், பிபிசி தமிழிடம் பேசிய வெ.பொன்ராஜ், "சீலைட் (scheelite) மற்றும் வால்ஃபிரமைட் (Wolframite) ஆகியவற்றின் தாதுக்களில் இருந்து டங்ஸ்டன் பிரித்தெடுக்கப்படுகிறது. எரிமலைக் குழம்பு மூலமாகவோ, நிலவியல்ரீதியாக பாறைகள் உருவான இடத்திலோ இவை அதிகமாக கிடைக்கும்" என்கிறார். "இந்தியாவில் ராஜஸ்தானில் அதிகளவு டங்ஸ்டன் உள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் டங்ஸ்டன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது" என்கிறார் வெ.பொன்ராஜ். மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவது குறித்துப் பேசும் பொன்ராஜ், "கிரானைட் இருக்கும் பகுதிகளில் டங்ஸ்டன் இருக்கலாம் என்றொரு கருத்து உள்ளது. மதுரை மேலூரில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதை வைத்து இந்த முடிவுக்கு வந்திருக்க வாய்ப்புகள் அதிகம்" என்கிறார். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, 'சுரங்க ஏலத்துக்கு எதிராக, 30 கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது' "உலகளவில் டங்ஸ்டன் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு என்பது மிக சொற்பமான அளவிலேயே உள்ளது. ஆனால், அதற்கான தேவை அதிகமாக உள்ளது" என்கிறார் வெ.பொன்ராஜ். தொடர்ந்து பேசிய அவர், "உலக அளவில் சீனாவில் இருந்து சுமார் 80 சதவிகித டங்ஸ்டன் உற்பத்தி ஆகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு சீனாவில் இருந்து 63.76 மெட்ரிக் டன் டங்ஸ்டனை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதன் மதிப்பு என்பது சுமார் 1.6 மில்லியன் டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் விலை கொடுத்து டங்ஸ்டனை வாங்கியுள்ளனர். இவ்வளவு குறைவான விலையில் டங்ஸ்டன் கிடைக்கும்போது, மதுரையில் ஐந்தாயிரம் ஏக்கர் நிலங்களையும் மக்களையும் இடையூறுக்கு ஆட்படுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது" என்கிறார். ஆத்ம நிர்பார் திட்டத்தின்கீழ் இந்தியாவில் டங்ஸ்டனை தயாரிப்பதற்காக இவை ஊக்குவிக்கப்படுவதாகவும் கூறுகிறார், வெ.பொன்ராஜ். அரசியல் காரணங்களுக்காகத் தடுக்கப்படுகிறதா? பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற திட்டங்கள் தடுத்து நிறுத்தப்படுவதாகக் கூறுகிறார், இணை பேராசிரியர் ஸ்டீபன் ஆனால், அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற திட்டங்கள் தடுத்து நிறுத்தப்படுவதாகக் கூறுகிறார், மதுரை அமெரிக்கன் கல்லூரியின் இயற்பியல் துறை இணை பேராசிரியரான ஸ்டீபன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அதிக வெப்பநிலையைத் தாங்கக்கூடிய உலோகமாக டங்ஸ்டன் உள்ளது. பூமியில் உள்ள அரிதான மூலப் பொருள்களில் ஒன்றான, இதன் கழிவுகளை சூழலுக்குக் கேடின்றி மறுசுத்திகரிப்பு செய்வதற்கான தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன" என்கிறார். டங்ஸ்டன் திட்டம் நிறுத்தப்பட்டால் மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறும் ஸ்டீபன், "கனிம சுரங்கம் தோண்டும்போது தமிழரின் தொன்மை அடையாளங்கள் கிடைத்தால் அப்போது இத்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யலாம்" என்கிறார். தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பிய பின்னரும் மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்திடம் இருந்து விளக்கம் எதுவும் வரவில்லை. சென்னையில் உள்ள மத்திய சுரங்க அமைச்சக அலுவலக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது, அவர்களிடம் பேச முடியவில்லை. இதையடுத்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்க முயன்றது. "நாடாளுமன்றக் கூட்டத்தில் இருப்பதால் இதுதொடர்பாகப் பிறகு பேசுவார்" என அவரது உதவியாளர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn9xrp9dq1lo
-
சேத்தன் கொரடா: இரு கால்களும் இல்லாமலே கார் பந்தயத்தில் சாதிக்கும் வீரர்
சேத்தன் கொரடா சென்னையைச் சேர்ந்த கார் பந்தய வீரர். இரு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளியான சேத்தன், செயற்கைக் கால்களுடன் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் பங்கெடுத்தார். கடந்த 18 ஆண்டுகளாக அவர் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு கார் பந்தய சாம்பியன்ஷிப் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார். மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசும் சேத்தன், “எதையும் எளிதில் விட்டுக்கொடுத்து விடக்கூடாது. நான் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. இப்போது கார் பந்தயங்கள் என் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டன” எனத் தெரிவித்தார். மேலும், பேசிய அவர், “விடா முயற்சி வேண்டும். எது ஒன்றையும் முடிவெடுத்தால் விடக்கூடாது. எந்தவொரு எல்லைகளையும் மனதில் நிர்ணயித்துக் கொள்ளக்கூடாது. எல்லாவற்றையும் செய்து பார்க்க வேண்டும்," என்று ஊக்கத்துடன் தெரிவித்தார். அவர் குறித்து விரிவாக வீடியோவில்... தயாரிப்பு: சிராஜ் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: எ. வில்பிரட் தாமஸ் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgv5pj7573o
-
சட்டவிரோத கட்டடங்களை உடனடியாக அகற்றுங்கள்; பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை; வடக்கு ஆளுநர் அதிரடி
வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்றுமாறு ஆளுநர் பணிப்பு! 28 NOV, 2024 | 08:09 PM வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமை தொடர்பில் ஆராயும், இணையவழி கலந்துரையாடல் வியாழக்கிழமை (28) காலை இடம்பெற்றது. இதன்போதே ஆளுநர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள இடர் பாதிப்புக்கள் தொடர்பில் அந்தந்த மாவட்டச் செயலர்கள் மற்றும் மேலதிக மாவட்டச் செயலர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருவது தொடர்பிலும் ஆளுநரின் கவனத்துக்கு அவர்கள் கொண்டு வந்தனர். அனலைதீவு, எழுவைதீவு போன்ற பிரதேசங்களுக்கு மின்சாரம் பகலில் துண்டிக்கப்பட்டு இரவில் மாத்திரம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. மின்சார விநியோகத்துக்கு தேவையான எரிபொருள் குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருப்பதாகவும், கடல் பயணத்துக்கு ஏதுவான நிலைமை ஏற்பட்டதும் அவற்றை உடனடியாக கடற்படையினரின் உதவியுடன் கொண்டு செல்வதற்கு தயாராக இருப்பதாகவும் இலங்கை மின்சார சபையின் வடக்குப் பிராந்திய முகாமையாளர் கூட்டத்தில் தெரிவித்தார். அதேவேளை, அந்தப் பிரதேசங்களிலுள்ள மருத்துவமனைகள் மின்பிறப்பாக்கி மூலம் மின்சாரத்தை பெற்று இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது பல வெள்ள வாய்க்கால்களில் வெள்ளம் நிரம்பிய நிலையில் இருப்பதால் அதனுள் குப்பைகளைக் கொட்டுவதற்கு முயற்சிக்கக் கூடும் எனவும் அது தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. வெள்ளம் வடிந்தோடாமல் இருப்பதற்கு வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து சட்டவிரோத கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் காரணம் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அவற்றை அகற்ற துரித நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார். அதேபோன்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஏனைய கட்டடங்களையும் அகற்றுமாறும் ஆளுநர் பணித்ததுடன், திரும்பத் திரும்ப இந்த விடயங்கள் தொடர்பில் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு இந்த விடயங்கள் அனைத்தும் சீராக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார். இதேவேளை, வெள்ளம் வடிந்தோடிய பின்னர் கிணறுகளுக்கு குளோரின் இடுவதற்குரிய ஆயத்தங்கள் சுகாதாரத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதேவேளை நோய் நிலைமைகள் தொடர்பில் கண்காணிப்பதற்குரிய ஏற்பாடுகளும் முழுமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரியப்படுத்தினார். தொடர் மழை காரணமாக பெருமளவு பயிர்கள் அழிவடைந்துள்ளதாகவும், வெள்ளம் இன்னமும் வழிந்தோடாமல் இருப்பதால் பயிர் அழிவு தொடர்பில் சரியான மதிப்பீட்டை தற்போது முன்னெடுக்க முடியாது இருப்பதாகவும் வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/199935
-
பயங்கரவாத இயக்கத்தையும் அதன் தலைவரையும் போற்றுவது முன்நோக்கிப் பயணிக்க உதவாது - அலி சப்ரி
28 NOV, 2024 | 08:07 PM (நா.தனுஜா) இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இனவாதத்தைப் பரப்புவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெற்கின் கடும்போக்கு சக்திகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். மாவீரர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (27) கடும் மழைக்கு மத்தியிலும் வட, கிழக்கு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச்சென்று பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகூர்ந்தனர். இந்நிலையில், நினைவுகூரல் தொடர்பில் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, மேலும் கூறியிருப்பதாவது, நாமனைவரும் ஒற்றுமையானதும், அமைதியானதுமான இலங்கையைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திப் பணியாற்றும்போது, பல வருடங்களாக நீடித்த மிகமோசமான யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்த நினைவுகளுக்கு மதிப்பளிக்கவேண்டியது மிக முக்கியமானதாகும். அதற்கமைய கடந்தகால கருத்தியலின் விளைவாக சிலரது பாதை திசை மாறியிருந்தாலும், அவர்கள் உட்பட சகல அன்புக்குரியவர்களையும் நினைவுகூருவதற்கு குடும்பங்களுக்கு இடமளிக்கப்படவேண்டும். இதுவோர் மனித உரிமை என்பதுடன், கடந்தகாலக் காயங்களை ஆற்றுவதற்குரிய மிகமுக்கிய நகர்வாகும். இருப்பினும் இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது. மாறாக அத்தகைய நடவடிக்கைகள் கடந்தகால வலிகளையும், தேவையற்ற பதற்றங்களையும் தோற்றுவிப்பதுடன், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை நலிவடையச்செய்யக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்றன. வன்முறையைக் கொண்டாடுவதன் மூலம் அதன் காயங்களிலிருந்து மீளமுடியாது. மாறாக புரிந்துணர்வு, சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஊடாகவே அதனை அடைந்துகொள்ளமுடியும். அதேபோன்று தெற்கில் உள்ள கடும்போக்கு சக்திகள் இனவாதத்தைப் பரப்புவதற்கு ஏதுவான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். அவர்களுக்கு அத்தகைய வாய்ப்பை வழங்குவதைத் தவிர்ப்போம். அதேவேளை, பல்லினத்தன்மை என்பது பிரிவினைக்கு வழிவகுப்பதாகவன்றி, எமது பலமாகத் திகழக்கூடிய 'இலங்கையர்' என்ற அடையாளத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி நாமனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என அழைப்புவிடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/199923
-
தென் ஆபிரிக்கா - இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
https://www.youtube.com/watch?v=Mo2quoPY4pM வேகப்பந்துவீச்சிற்கு சாதகமான மைதானம் போல!
-
16 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை; அவுஸ்திரேலியாவில் பிரேரணை நிறைவேறியது
அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கான சட்டத்தை இயற்றப்போவதாக, அந்நாட்டுப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அரசின் இந்த திட்டத்திற்கு அந்த நாட்டின் அனைத்து மாகாணங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன. இது குறித்து காணொலி மூலம் பிரதமர் ஆன்டனி ஆல்பனிஸ் எட்டு மாகாணங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்களும் முழு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சிறுவர்களின் அறிவை வளர்க்கும் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு ஒரேயடியாகத் தடை விதிப்பதைவிட, அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த அவர்களுக்கு சொல்லித் தருவதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று இத்தகைய சட்டத்துக்கு சிறுவர்கள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இச்சூழலில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் சட்டத்தை மீறி, சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கு 50 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கும் மசோதாவையும் முக்கிய கட்சிகள் ஆதரித்துள்ளன. இந்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் 102 வாக்குகள் ஆதரவாகவும், 13 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன. #avustreliya# #social media# https://thinakkural.lk/article/312800
-
புகழ்பெற்ற யானை மின்சாரம் தாக்கி பலி
கலாவாவி தேசிய பூங்காவில் மின் வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு! 28 NOV, 2024 | 03:05 PM கலாவாவி தேசிய பூங்காவில் மின் வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளது. நீண்ட தந்தங்களை கொண்ட யானை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. அநுராதபுரம் ஆடியாகல - கிங்குருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக அறுந்து கிடந்த மின் வேலியில் சிக்கி இந்த யானை உயிரிழந்துள்ளது. உயிரிழந்த யானையின் சடலத்தை பார்வையிடுவதற்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/199928
-
வடக்கு, கிழக்கில் கல்வி, சுகாதாரத்துறைகளை மேம்படுத்துவது குறித்து உலக வங்கிக் குழுமத்தின் தலைவருக்கிடையிலான சந்திப்பில் அவதானம்
28 NOV, 2024 | 02:00 PM இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga) ஆகியோருக்கு இடையில் நேற்று புதன்கிழமை (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இணையத் தொடர்பாடல் முறையூடாக இடம்பெற்றது. இதன்போது, புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி சவால்களை வெற்றி கொள்ள இலங்கைக்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் குறித்து அஜே பங்கா (Ajay Banga) கருத்து தெரிவித்ததோடு, சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் புதிய வேலைத்திட்டங்களை செயற்படுத்த நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. பொருளாதார கொள்கைகள், நிதி, போட்டித்தன்மை, முதலீடு, நிறுவன மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட விடயங்களில் தற்போதும் உலக வங்கி இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்ற நிலையில், எதிர்காலத்தில் விவசாய அபிவிருத்து, நீர் முகாமைத்துவம்,பாதுகாப்பு, சுற்றாடல் நிலைத்தன்மை, சமூக மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் பரிமாற்றம் ஆகியவற்றுக்கும் ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கிராமிய பகுதிகளில் வறுமையை ஒழிப்பதற்கு அரசாங்கம் காட்டும் அக்கறை குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வலுசக்தி துறையின் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தியிருப்பதாகவும், சுற்றுலாத் துறை, கடல்சார் தொழில்துறை, அரச நிறுவனங்கள் மற்றும் வலுசக்தி துறைகளை பலப்படுத்தி அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்தல், குறிப்பாக கல்வி, சுகாதாரம், மனிதவள அபிவிருத்தி தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி, இந்த பகுதிகளில் காணப்படும் தொழிற்படையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கல்வி மற்றும் தொழில் கல்வித் துறைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். 2025 ஜூலை 25 ஆம் திகதி திறக்கப்படவிருக்கும் 20 தெற்காசிய கூட்டு அலுவலகங்களின் அனுசரணை நாடாக இலங்கையும் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக கூறிய உலக வங்கியின் தலைவர் உலக வங்கிக் குழுமத்தின் கீழ் காணப்படும் மீள் கட்டியெழுப்பல் மற்றும் அவிருத்திக்கான சர்வதேச வங்கி (IBRD), சர்வதேச அபிவிருத்தி வங்கி (IDA), சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் (IFC) மற்றும் பலதரப்பு முதலீட்டு பிணைகளுக்கான முகவர் நிறுவனம் (MIGA) உள்ளிட்ட நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் மேற்படி அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/199926
-
சட்டவிரோத கட்டடங்களை உடனடியாக அகற்றுங்கள்; பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை; வடக்கு ஆளுநர் அதிரடி
வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளதுடன், இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமை தொடர்பில் ஆராயும், இணையவழி கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்ற போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள இடர் பாதிப்புக்கள் தொடர்பில் அந்தந்த மாவட்டச் செயலர்கள் மற்றும் மேலதிக மாவட்டச் செயலர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருவது தொடர்பிலும் ஆளுநரின் கவனத்துக்கு அவர்கள் கொண்டு வந்தனர். அனலைதீவு, எழுவைதீவு போன்ற பிரதேசங்களுக்கு மின்சாரம் பகலில் துண்டிக்கப்பட்டு இரவில் மாத்திரம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. மின்சார விநியோகத்துக்கு தேவையான எரிபொருள் குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருப்பதாகவும், கடல் பயணத்துக்கு ஏதுவான நிலைமை ஏற்பட்டதும் அவற்றை உடனடியாக கடற்படையினரின் உதவியுடன் கொண்டு செல்வதற்கு தயாராக இருப்பதாகவும் இலங்கை மின்சார சபையின் வடக்குப் பிராந்திய முகாமையாளர் கூட்டத்தில் தெரிவித்தார். அதேவேளை, அந்தப் பிரதேசங்களிலுள்ள மருத்துவமனைகள் மின்பிறப்பாக்கி மூலம் மின்சாரத்தை பெற்று இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது பல வெள்ள வாய்க்கால்களில் வெள்ளம் நிரம்பிய நிலையில் இருப்பதால் அதனுள் குப்பைகளைக் கொட்டுவதற்கு முயற்சிக்கக் கூடும் எனவும் அது தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மேலும், வெள்ளம் வடிந்தோடாமல் இருப்பதற்கு வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து சட்டவிரோத கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் காரணம் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அவற்றை அகற்ற துரித நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். அதேபோன்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஏனைய கட்டடங்களையும் அகற்றுமாறும் ஆளுநர் பணித்ததுடன், திரும்பத் திரும்ப இந்த விடயங்கள் தொடர்பில் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/312826
-
புதுப்பிக்கப்பட்டிருக்கும் இலங்கை பொலிஸ் இணையத்தளம்
பொதுமக்களுக்கு உதவுவதற்கான முக்கிய அம்சங்களை அணுகக்கூடிய வகையில் இலங்கை பொலிஸ் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை புதுப்பித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட இணையத்தளம் www.police.lk நேற்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொலிஸ் நடவடிக்கைகளின் உத்தியோகபூர்வ புதுப்பிப்புகளைப் பகிர்வதைத் தவிர, இந்த இணையதளம் பொதுமக்கள் முறைப்பாடுகளைத் தாக்கல் செய்யவும், பொலிஸ் அனுமதிப் பதிவுகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் அனுமதிக்கும். புதிய இணையத்தளத்தில் ஏனைய அம்சங்களையும் உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/312788
-
விசுவமடுவில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை !
28 NOV, 2024 | 12:09 PM முல்லைத்தீவு, விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் சிறுத்தை ஒன்று வீடொற்றுக்குள் புகுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் கிராமத்தில் திடீரென சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் உள்நுழைந்துள்ளது. இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த சிறுத்தையை மீட்டு கொண்டு சென்றுள்ளனர். தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் காடுகளுக்கு அருகில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199901
-
புகழ்பெற்ற யானை மின்சாரம் தாக்கி பலி
இலங்கையின் புகழ்பெற்ற ‘தீகதந்து 1’ யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட மின்சார வேலியிலிருந்து யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. 40 – 50 வயதுக்கிடைப்பட்ட இந்த யானை, கலா வெவா மற்றும் கஹல்ல-பல்லகெல்ல காப்புக்காடுகளுக்கு அடிக்கடி வந்து செல்வதாக அறியப்படுகிறது. https://thinakkural.lk/article/312832
-
இலங்கை - சீன சட்டவாக்க நிறுவனங்களின் உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் - சீன தூதுவர் சபாநாயகரிடம் வலியுறுத்தல்
28 NOV, 2024 | 12:01 PM இலங்கை - சீன சட்டவாக்க நிறுவனங்களின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன் புதிய பாராளுமன்றத்திலும் இலங்கை - சீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாக சீன தூதுவர் சபாநாயகர் அசோக ரன்வலவிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங்கிற்கும், சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) ஸாவோ லெஜியின் வாழ்த்துக்களை சீன தூதுவர் சபாநாயகரிடம் தெரிவித்தார். இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்ட கால ஒத்துழைப்புக்களை நினைவு கூர்ந்த புதிய சபாநாயகர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையிலான புதிய அரசாங்கத்திலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த சீனத் தூதுவர் க, இரு நாடுகளின் சட்டவாக்க நிறுவங்களின் உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனவும், புதிய பாராளுமன்றத்திலும் இலங்கை - சீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். அத்துடன், பொருளாதார அவிபிருத்தி, கலப்பின விதை வகைகளை விருத்தி செய்தல் உள்ளிட்ட விவசாயம் சம்பந்தப்பட்ட விடயங்கள் நீர் முகாமைத்துவம், மசகு எண்ணெய் சுத்திகரிப்பு, வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதி துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்துவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/199909
-
உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பல குழந்தைகளை காணவில்லை
அம்பாறை உழவு இயந்திர விபத்து - அதிபர் மற்றும் 4 பேர் கைது அம்பாறை-காரைத்தீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மத்ரசா பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 26ஆம் திகதி மத்ரசா பாடசாலை முடிந்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் வீட்டிற்கு செல்ல பஸ் இல்லாததால், தலைமையாசிரியர் குறித்த உழவு இயந்திரத்தில் செல்லுமாறு அறிவுறுத்தியதோடு அதற்காக பணமும் பணமும் வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. வெள்ளம் காரணமாக குறித்த வீதியில் பஸ் சேவைகள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் பணத்திற்காக பயணிகளை ஏற்றிச் செல்லும் உழவு இயந்திரத்தில் பிள்ளைகளை அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த வீதி ஆபத்தானது என்பதால் உழவு இயந்திரத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டாம் என இராணுவத்தினர் அறிவுறுத்தியிருந்தமை மேலும் தெரியவந்துள்ளது. 11 மாணவர்களுடன் சென்ற உழவு இயந்திரம் வௌ்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் மீட்கப்பட்டதே 6 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 6 மாணவர்களே காணாமல் போயுள்ளனர். இதுவரை 5 மாணவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு மாணவனை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர உழவு இயந்திர சாரதி மற்றும் மற்றுமொருவரின் சடலங்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. https://tamil.adaderana.lk/news.php?nid=196562
-
தென் ஆபிரிக்கா - இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
42 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 42 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தது. அதற்கமைய, தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக அவ்வணியின் தலைவர் பவுமா 70 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 3 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர். இந்நிலையில், தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 42 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 13 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் மார்கோ ஜென்சன் 7 விக்கட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. அதன்படி, தென்னாபிரிக்க அணி இலங்கை அணியை விட 149 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டியொன்றில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். முன்னதாக ஆகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1994ஆம் ஆண்டு 71 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=196561
-
பிறந்ததிலிருந்து மூன்று ஆண்டுகளாக குழந்தையை டிராயரில் மறைத்து வைத்திருந்த தாய் - எதற்காக?
பட மூலாதாரம்,CPS படக்குறிப்பு, பிறந்த முதல் மூன்று வருடங்களாக ஒரு தாய், அவரது மகளை டிராயரில் அடைத்து வைத்திருக்கிறார். எழுதியவர், கேட்டி பார்ன்ஃபீல்ட் மற்றும் இவான் காவ்னே பதவி, பிபிசி செய்திகள் பிரிட்டனில் பிறந்த முதல் மூன்று வருடங்களாக ஒரு தாய், அவரது மகளை டிராயரில் அடைத்து வைத்திருக்கிறார். இந்த குற்றத்திற்கு அந்த தாய்க்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிர அலட்சிய செயலுக்காக ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டிராயரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்தச் குழந்தை, வெளி உலகத்தையோ, சுத்தமான காற்றையோ அனுபவித்தது இல்லை என்றும் செஷயரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்திருந்த ஒருவர் அந்த குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டபோதுதான் அவர் கண்டுபிடிக்கப்பட்டார் என்றும் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக, அந்தச் குழந்தையின் பெயரையோ அல்லது அவருடைய குடும்பத்தை பற்றியோ குறிப்பிடவில்லை. இதுவரை நடந்த விசாரணையில், குழந்தையை கொடுமைப்படுத்தியது தொடர்பான நான்கு குற்றச்சாட்டுக்களை அவரது தாய் ஒப்புக்கொண்டார். அதற்காக செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அன்பு, பாசம், உரிய கவனிப்பு, சரியான உணவு, மற்ற மனிதர்களுடன் தொடர்பு, மிகவும் முக்கியமான மருத்துவ கவனிப்பு போன்றவை அக்குழந்தைக்கு அவரது தாய் வழங்கவில்லை என நீதிபதி ஸ்டீவன் எவரெட் கூறியுள்ளார். "புத்திசாலியான அக்குழந்தை, அந்த டிராயரில் நரகமான வாழ்க்கையை வாழ்ந்து வந்திருந்தார், தற்போது அவர் அதிலிருந்து மெல்ல மீண்டு வருகிறார்", என்றும் அவர் தெரிவித்தார். “அத்தாய், தனது மற்ற குழந்தைகளிடம் இருந்தும், அதே வீட்டில் தங்கியிருந்த தனது இணையருக்கும் தெரியாமல் ரகசியமாய் அக்குழந்தையை படுக்கையின் கீழ் உள்ள டிராயரில் மறைத்து வைத்திருந்தார்", என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அவரது சொந்த பெயர் சொல்லி அழைத்தபோதும், அவர் பதிலளிக்கவில்லை. மேலும் போதுமான உணவின்றி, தன்னைத்தானே பாதுக்கத்துக்கொண்டு, நீண்ட நேரம் தனிமையில் அந்த குழந்தை இருந்ததாக கண்டறியப்பட்டது என அரசு வழக்கறிஞர் ரேச்சல் வொர்திங்டன் கூறினார். பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, மூன்று வயது குழந்தையைப் போல் இல்லாமல், ஏழு மாத குழந்தை போல் தோற்றமளித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திகில் சம்பவம் குழந்தைக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாகவும், அவர் மூன்று வயது குழந்தையைப் போல் இல்லாமல், ஏழு மாத குழந்தை போல் தோற்றமளித்ததாகவும், தற்போது அவருக்கு உணவு வழங்கப்படுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தைக்கு மேல் வாய் பிளவு மற்றும் பல உடல்நலப் பிரச்னைகள் இருக்கின்றன. ஆனாலும் அவரது தாய், குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லவில்லை. 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2023-ஆம் ஆண்டின் முற்பகுதி இந்த குழந்தை டிராயரில் அடைத்துவைக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டிற்கு வந்த ஒருவர் மாடியில் சத்தம் கேட்டுச் சென்றபோது, இந்தச் குழந்தையை கண்டுபிடித்தார். குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஒரு சமூக சேவகர் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டார். முடி, உடலில் குறைபாடுகள் மற்றும் தோலில் தடிப்புகளுடன் குழந்தை இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "குழந்தையை நீங்கள் வைத்திருக்கும் இடம் இதுதானா? " என சமூக சேவகர் அவரது தாயிடம் கேட்டதற்கு, "ஆமாம், டிராயரில் வைத்திருக்கிறேன்" என்று தாய் பதிலளித்தார். "அவரது தாய் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை என்பதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.” "தனது தாயின் முகத்தைத் தவிர அக்குழந்தைக்கு பார்த்த ஒரே முகம் எனது மட்டுமே என்பதை அறிந்தபோது திகிலாக உணர்ந்தேன்” என்று அந்த சமூக சேவகர் கூறினார். பட மூலாதாரம்,CPS 'குடும்பத்தில் ஒரு அங்கம் இல்லை' தற்போது அந்த குழந்தைக்கு முறையான பராமரிப்பு வழங்கப்பட்டு வருகிறது. புறக்கணிக்கப்பட்டதன் விளைவாக அவருக்கு ஏற்பட்டுள்ள கடுமையான வளர்ச்சி சார்ந்த பிரச்னைகள் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் கர்ப்பமாக இருப்பது தனக்குத் தெரியாமல் இருந்தது என்றும், அக்குழந்தையை பிரசவித்தபோது உண்மையில் பயந்துவிட்டதாகவும் காவல் துறை விசாரணையில் தாய் கூறினார். குழந்தையை எப்போதும் படுக்கைக்கு அடியில் உள்ள டிராயரில் வைத்திருக்கவில்லை என்றும், டிராயர் மூடப்படவில்லை என்றும் அவர் கூறினார். இந்த குழந்தை அக்குடும்பத்தில் ஒரு அங்கமே இல்லை என்றும் அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். “தான் நன்றாக வளர்த்த மற்ற குழந்தைகள் தன்னுடன் தற்போது வாழவில்லை” என்பதை கண்ணீரைத் துடைத்துக்கொண்டே தாய் விவரித்தார். “அந்தப் பெண் செய்தததை முற்றிலும் நம்பமுடியவில்லை" என்று நீதிபதி எவரெட் கூறினார். "நீங்கள் இந்த சூழ்நிலையை உங்களால் முடிந்தவரை கவனமாக மறைக்க முயற்சித்தீர்கள், ஆனால் தற்செயலாக உங்கள் ரகசியம் கண்டுபிடிக்கப்பட்டது," என்றும் அத்தாயிடம் நீதிபதி கூறினார். "எனது 46 ஆண்டு கால அனுபவத்தில் இது போன்ற ஒரு மோசமான வழக்கை நான் பார்த்ததில்லை" என்று நீதிபதி எவரெட் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cwy5v2v5v4ro