Everything posted by ஏராளன்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
வன்னியில் புதிய முகங்கள் மூவர்: மிக குறைந்த வாக்கு பெற்ற செல்வம் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் புதிய முகங்களாக மூவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கின்றார்கள். தேசிய மக்கள் சக்தி சார்பில் செ.திலகநாதன் எனப்படுகின்ற சக்தி டொக்டர் மிருக வைத்தியராவார். கடந்த முறை இவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஊடாக தேர்தலில் பங்கேற்று அதிக விருப்பு வாக்குகளை பெற்றிருந்த போதிலும் பாராளுமன்றத்துக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டிருந்தது. இவர் தற்போது தேசிய மக்கள் சக்தியின் ஊடாக தேர்தலில் போட்டியிட்டு 10652 விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இருக்கின்றார். இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் ஊடாக பாராளுமன்றத்துக்கு தெளிவாகியுள்ள ம.ஜெகதீஸ்வரன் ஆசிரிய சேவா சங்கத்தின் வடமாகாண தலைவராகவும் தேசியமட்ட உப தலைவராகவும் செயற்பட்ட நிலையில் கடந்த அரசாங்கங்களுக்கு எதிராக ஆசியர்கள் சார்பான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று ஆசிரியர்களுடைய கோரிக்கைகளை முன் வைத்து இருந்தார். இவர் தற்போது 9280 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெளிவாகியுள்ளார். மற்றையவர் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரவிகரன். இவர் பல்வேறு மக்கள் சார் போராட்டங்களில் பங்கேற்று இருந்ததோடு குருந்தூர்மலை உட்பட வடக்கில் மேற்கொள்ளப்பட்ட பல போராட்டங்களில் முன்னின்று செயல்பட்ட ஒருவராக காணப்பட்ட நிலையில் பல தடவை பாதுகாப்பு தரப்பினரோடு முரண்பட்டு பல வழக்குகளையும் சந்தித்து இருக்கின்றார். இவர் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினராகவும் செயல்பட்டிருந்தார். இம்முறை பாராளுமன்ற தேர்தலில் 11215 விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார். இதேவேளை பழைய முகங்களாக ரிசார்ட் பதியுதீன் இம்முறை 21,018 விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இருந்த போதிலும் கடந்த முறை 28 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு சென்றிருந்தார். இவரின் தற்போதைய வாக்கு வீதம் சரிந்து இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. கே. கே மஸ்தான் கடந்த இரண்டு தடவைகள் பாராளுமன்றத்திற்கு சென்று ராஜாங்க அமைச்சராக இருந்த போதிலும் தற்போது புதிய சின்னமாக இலங்கை தொழிலாளர் கட்சியினூடக கங்காரு சின்னத்தின் ஊடாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இருக்கின்றார். மஸ்தானை பொறுத்தவரை குறித்த கட்சியையும் சின்னத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பாரிய சிரமத்தை எதிர்கொண்ட நிலையிலும் கூட அவருடைய பிரசாரத்தின் யுக்தியின் அடிப்படையில் அவர் வெற்றி வாய்ப்பை அடைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இம்முறை 13511 க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று அவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாக இருப்பதோடு கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அவர் இதே அளவான விருப்பு வாக்குகளை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அடுத்து செல்வம் அடைக்கலநாதன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினூடாக போட்டியிட்டு வடக்கு கிழக்கில் ஒரே ஒரு ஆசனத்தின் ஊடாக பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கின்றார். இவர் 25 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தற்போது மீண்டும் 5 வருட பாராளுமன்ற உறுப்புரிமையை அலங்கரிப்பதற்காக செல்கின்றார். எனினும் சடுதியான வாக்கு சரிவை சந்தித்து 5695 வாக்குகளை பெற்று இம்முறை பாராளுமன்றம் செல்லும் இவர், அகில இலங்கை ரீதியில் இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவானோரில் மிகக் குறைந்த வாக்குகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/198892
-
தெற்கு அரசியல் கட்சி ஒன்று வடக்கின் நம்பிக்கையை வெற்றிகொண்டுள்ளமை தொடர்பில் எமது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம் - ஐ.தே.க தவிசாளர் வஜிர
(எம்.ஆர்.எம்.வசீம்) ஜனாதிபதி உள்ளிட்ட இந்த அரசாங்கம் மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பல எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன. அதனை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டிருப்போம். என்றாலும் இந்த தேர்தல் மூலம் தெற்கு அரசியல் கட்சி ஒன்று வடக்கின் நம்பிக்கையை வெற்றிகொண்டுள்ளமை தொடர்பில் எமது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். காலியில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் வரலாற்று வெற்றியை பெறுள்ளது. அதுதொடர்பில் நாங்கள் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோன்று இது இலங்கைக்கு விசேட சந்தர்ப்பமாகும். இலங்கை வரலாற்றில் ஒருபோது எமக்கு நிறைவேற்றிக்கொள்ள முடியாமல்போன விடயமொன்றை தற்போதை ஜனாதிபதியும் அதிகாரத்துக்கு வந்துள்ள அரசாங்கமும் வெற்றி வெற்றுள்ளது. அதுதொடர்பில் இலங்கையர்கள் என்றவகையில் நாங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். உதாரணமாக சுதந்திரத்துக்கு பின்னர் டி.எஸ். சேனாநாயக்கவுக்கு பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் தலைவர்கள் அமைச்சரவையில் பிரதிநிதுத்துவப்படுத்தினாலும் அந்த பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சரவையில் தமிழ் தலைவர்கள் அவர்களுக்குரிய கட்சிகளில் வெற்றிபெற்று பிரதிநிதித்துவம் செய்தே வந்துள்ளது. அதாவது கடந்த அரசாங்கத்தில் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் பிரதிநித்தும் செய்தாலும் தெற்கு அரசியல் கட்சி ஒன்றை பிரதிநித்துவப்படுத்தி அமைச்சரவையில் செயற்பட வில்லை. அதனால்தான் இது விசேட சந்தர்ப்பம் என தெரிவித்தேன். தெற்கு அரசியல் கட்சி ஒன்றை பிரதிநிதித்துவம் செய்து வடக்கு, கிழக்கில் பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு சக்திகளுடன் செயற்பட்டு வரும்போது. தெற்கில் ஒரு அரசியல் கட்சி தொடர்பில் நம்பிக்கை வைத்து விசேட வெற்றியை பெற்றுக்கொண்டிருக்கிறது. அதன்போது அவர்களும் அமைச்சரவையின் உறுப்பினர்களாக வருவார்கள். அதனை இலங்கையர்களாக பெற்றுக்கொண்ட வெற்றியாகவே நாங்கள் பார்க்கிறோம். எவ்வாறு இருந்தாலும் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்துக்கு பாரிய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அதனை நிறைவேற்ற முடியாது என தற்போது அவர்களுக்கு தெரிவிக்க முடியாது. தேர்தலை வெற்றிகொண்டாலும் மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பல சவால்கள் இருக்கின்றன. அதனை வெற்றிகொள்வதற்கு முடியாமல் போகும் என்றே நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளோம். அது நாங்கள் பின்பற்றும் பொருளாதார நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே தெரிவிக்கிறோம். எவ்வாறு இருந்தாலும் ஜனாதிபதி உள்ளிட்ட இந்த அரசாங்கம் மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பல எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன. அதனால் இலங்கையராக தெற்கு அரசியல் கட்சி ஒன்று வடக்கின் நம்பிக்கையை வெற்றிகொண்டுள்ளமை தொடர்பில் எமது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோன்று கடந்த எதிர்க்கட்சி அவர்களின் பாெறுப்புக்களை அவர்களுக்கு சரியாக செய்யமுடியவில்லை என நாங்கள் கடந்த காலங்களிலும் தெரிவித்து வந்தோம். எங்களுக்கு புதிய அரசியல் கலாசாரம் தேவையாக இருக்கிறது. புதிய அரசியல் பயணம் ஒன்று தேவையாக இருக்கிறது. நாங்கள் நம்பும் அரசியல் சிந்தனைக்கு அமைய ஆளும் அரசாங்கம் பொருளாதாரம் தொடர்பில் அதேபோன்று தேசிய மற்றும் சர்வதேச அளவில் அவர்கள் ஏற்றுக்கொண்ட சவால்களை வெற்றிகொள்ள வேண்டி இருக்கிறது. அதற்காக அவர்களுக்கு நாங்கள் இடையூறாக இருக்கக்கூடாது. அவர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை நாங்கள் இலங்கையர்களாக பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/198891
-
தேர்தலில் பெரும் வெற்றி ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணை- உலக நாடுகள் ஆதரவளிக்கவேண்டும் - எரிக்சொல்ஹெய்ம்
சிறியண்ணை எழுதின உடன நீங்கள் எழுதியதே மனதில் தோன்றியது!
-
சென்னையில் எலி மருந்து காற்றில் பரவி 2 குழந்தைகள் மரணம் - 'அந்த அறைக்குள் எங்களால் நுழைய கூட முடியவில்லை'
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் சென்னையில் வீட்டில் எலி மருந்து வாயு பரவி இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவன ஊழியர்களின் அலட்சியத்தால் இந்தச் சம்பவம் நடந்ததாக, காவல்துறை கூறுகிறது. மூடிய அறைக்குள் எலி மருந்து வாயுவின் வீரியம் அதிகரித்து உயிரிழப்பை ஏற்படுத்தும் என்கின்றனர், மருத்துவர்கள். எலிகளைக் கொல்வதற்காக வைக்கப்படும் மருந்து மனித உயிரைப் பறிக்குமா? இதுபோன்ற மருந்துகளைப் பொதுமக்கள் எவ்வாறு கையாள வேண்டும்? என்ன நடந்தது? பட மூலாதாரம்,HANDOUT சென்னை, குன்றத்தூரை அடுத்த மணஞ்சேரி பகுதியில் கிரிதரன் என்பவர் வசித்து வருகிறார். தனியார் வங்கியில் பணிபுரியும் இவருக்கு மனைவியும் ஐந்து வயது மற்றும் ஒரு வயதில் மகளும் மகனும் உள்ளனர். வீட்டில் எலித் தொல்லை அதிகரித்ததால், தி.நகரில் செயல்படும் தனியார் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தை கிரிதரன் தொடர்பு கொண்டதாக குன்றத்தூர் காவல்நிலைய போலீஸார் கூறுகின்றனர். புதன்கிழமையன்று (நவம்பர் 13) பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தின் பிரதிநிதிகள், வீட்டை ஆய்வு செய்துவிட்டு எலிகளை ஒழிப்பதற்கான ரசாயன மருந்தை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். மறுநாள் காலை வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் கிரிதரனும் அவரது குடும்பத்தினரும் அவதிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. "குடும்பத்தினருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதால், தனது நண்பர் ஒருவரை கிரிதரன் உதவிக்கு அழைத்துள்ளார். அவர் மூலமாக தனியார் மருத்துவமனையில் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். 11 மணியளவில் ஒரு குழந்தையும் 1 மணியளவில் இரண்டாவது குழந்தையும் இறந்துவிட்டது" என்கிறார் பிபிசியிடம் பேசிய குன்றத்தூர் காவல் ஆய்வாளர் வேலு. "எலி மருந்து காரணமாக குழந்தைகள் இறந்தார்களா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்பே தெரியவரும்" எனக் கூறிய காவல் ஆய்வாளர் வேலு, "ஆனால் குழந்தைகள் இறப்புக்கு அது மட்டுமே பிரதான காரணமாக உள்ளது" என்கிறார். 'எலி மருந்து தான் காரணம்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் இதை உறுதி செய்யும் வகையில், எலி மருந்து வாயுவை உட்கொண்டதால் கிரிதரனுக்கும் அவரது மனைவிக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் சுதாகர் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கணவன், மனைவி இருவரும் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் அடுத்த இரு நாட்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். "கிரிதரன் வசித்த குடியிருப்பின் முதல் மாடியில் இருந்த அந்த அறைக்குள் எங்களால் போக முடியவில்லை. ஓர் அறையில் பிளீச்சிங் பவுடர்களை அதிக அளவு கொட்டினால் என்ன நெடி வருமோ, அப்படியொரு வாடை வீசியது" என்கிறார் ஆய்வாளர் வேலு. நீண்டநாட்களாக பூட்டிக் கிடந்த வீட்டுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கிரிதரன் குடும்பத்தினர் குடியேறியதாகக் கூறும் ஆய்வாளர் வேலு, "அந்த வீடு சரியான பராமரிப்பில்லாமல் இருந்துள்ளது. இடமும் அசுத்தமாக இருந்தது" என்கிறார். தியாகராய நகரில் செயல்படும் தனியார் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் வீட்டை ஆய்வு செய்து மருந்தை வைத்துள்ளனர். "எலிகளைக் கொல்வதற்கு தேவையான மாத்திரைகளை தனியார் நிறுவன ஊழியர்கள் வைத்துள்ளனர். ஆனால், 'நாங்கள் ஏ.சி அறையில் உறங்குவோம். ஹால் பகுதியில் யாரும் வர மாட்டார்கள் என்பதால் அதிக மாத்திரைகளை வைக்குமாறு கிரிதரன் மனைவி கூறியதாக விசாரணையில் தெரியவந்தது" என்கிறார், ஆய்வாளர் வேலு. இதையடுத்து, வீட்டில் மூன்று இடங்களுக்கு பதிலாக பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் எலி மருந்து வைத்ததால் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறுகிறார். இருவர் கைது இந்த வழக்கில், எலி மருந்தை அலட்சியமாக கையாண்டதாக பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவன ஊழியர்கள் தினகரன், சங்கர்தாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பி.என்.எஸ் சட்டப்பிரிவு 106ன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. "முறையான பயிற்சி இல்லாத ஊழியர்களை தனியார் நிறுவனம் அனுப்பியது தான் இப்படியொரு சம்பவம் நடப்பதற்கு காரணம்" என்கிறார், காவல் ஆய்வாளர் வேலு. குன்றத்தூர் சம்பவம் தொடர்பாக, தியாகராய நகரில் செயல்படும் தனியார் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு பிபிசி தமிழ் முயற்சி செய்தது. அந்நிறுவனத்தின் மேலாளர் உள்பட யாரிடமும் பதில் பெற முடியவில்லை. எவ்வாறு கையாள்வது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் எலி மருந்துகளைக் கையாள்வதில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்களைப் பட்டியலிட்டார், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியர் வி.ஆர்.சுவாமிநாதன். * ஜிங்க் பாஸ்பைடு, செல்பாஸ் (அலுமினியம் பாஸ்பைடு) என எந்த ரசாயனத்தைக் கையாண்டாலும் கையில் உறை அணிந்திருக்க வேண்டும். * குழந்தைகளின் கைகளில் எட்டும் தூரத்தில் வைக்கக் கூடாது * முதல் நாள் வைத்த மருந்தை எலி சாப்பிடவில்லை என்றால் மறுநாள் அதை அப்புறப்படுத்த வேண்டும் * செல்பாஸ் மருந்தை எலி வலைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொதுவெளியில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. * ஜிங்க் பாஸ்பைடு வயிற்றுக்குள் சென்றால் உடனே வாந்தி எடுத்துவிட வேண்டும். அது செரிமானம் அடைந்து ரத்தத்தில் கலந்துவிடக் கூடாது. கரப்பான் பூச்சி மருந்தால் பாதிப்பு வருமா? "அதேநேரம், கரப்பான் பூச்சிகளுக்கு வைக்கப்படும் மருந்து இந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை" எனக் கூறுகிறார் வி.ஆர்.சுவாமிநாதன். இதுகுறித்து அவர் கூறும்போது, "கரப்பான்களுக்கு வைக்கப்படும் நச்சு மருந்துகளின் வழியே அவை நடந்து சென்றாலே உயிரிழந்துவிடும். அவற்றின் காலில் உள்ள நுண் துளைகள் வழியாக மருந்து உள்ளே சென்று இறப்பை ஏற்படுத்தும். இந்த மருந்தால் மனிதர்களுக்கு பெரிய அளவு பாதிப்பு ஏற்படுவதில்லை" என்கிறார். குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏன்? பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் அரசர் சீராளர் "எலி மருந்தால் பெரியவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு நுரையீரல் உள்பட உறுப்புகளின் வளர்ச்சி குறைவு என்பதுதான் காரணம்" என்கிறார், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் அரசர் சீராளர். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "எலிகளைக் கொல்வதற்கு வைக்கப்படும் மருந்தில் இருந்து பாஸ்பைன் என்ற வாயு வெளியேறும். இதை வீடுகளில் உபயோகப்படுத்தக் கூடாது. வாயுவை வெளியேற்றும் எந்தப் பொருளாக இருந்தாலும் அதை வெளிப்புறத்தில் வைக்க வேண்டும்" என்கிறார். மூடப்பட்ட அறைக்குள் எலி மருந்து இருந்தால், நேரம் செல்ல செல்ல அதன் வீரியம் அதிகரிப்பதாக கூறும் மருத்துவர் அரசர் சீராளர், "ஒரு மனிதனின் நினைவை பாஸ்பைன் வாயு இழக்கச் செய்துவிடும். அவரால் வேறு எந்த செயலையும் மேற்கொள்ள முடியாது. என்ன நடந்தது என்பதே தெரியாமல் போய்விடும்" என்கிறார். "பாஸ்பைன் வாயுவால் பாதிக்கப்படும் நபர்கள் இறந்து போவதற்கு வாய்ப்பு அதிகம். இது நுரையீரலை அதிகம் பாதிக்கும். வாயு பரவுவதை எவ்வளவு நேரத்துக்குள் கண்டறிகிறோம் என்பது முக்கியம். வாயுவின் அளவைப் பொறுத்து உடலில் விஷத்தின் தன்மை மாறும். அதற்குள் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். விரைவாக, மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் பாதிப்பின் அளவை பெருமளவு குறைக்க முடியும்" என்கிறார், மருத்துவர் அரசர் சீராளர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c33e82ky7d1o
-
கிளிநொச்சியில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வு
கிளிநொச்சியின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறறு வருகிறது என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இவ்வாறு தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வினால் பெறுமதியான வயல் நிலங்கள் உள்ளிட்ட தனியார் காணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரவு நேரங்களில் விவசாய காணிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றனர் என்றும் இதன் காரணமாக தங்களது விவசாய நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுளளது என்றும் கவலை தெரிவித்துள்ள பொது மக்கள். சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்களுக்கும் பொலீஸாருக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதனால் அவர்கள் மீது பொலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர். சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்பினை தடுக்கவும், விவசாய நிலங்களை பாதுகாக்கவும் சட்டவிரோத மணல் அகழ்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/198890
-
பிரபுக்கள் அரசியல் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி - மக்களின் நலனுக்காகவே பெரும்பான்மை பலத்தை பயன்படுத்துவோம் - மக்கள் விடுதலை முன்னணி
(இராஜதுரை ஹஷான்) பழைய அரசியல் கலாசாரத்தை நாட்டு மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள். வரப்பிரசாதங்களுடன் வாழ்ந்த பிரபுக்கள் அரசியல் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கிடைக்கப் பெற்றுள்ள பலத்தை அதிகார மோகத்துக்காக பயன்படுத்த மாட்டோம். மக்களின் நன்மைக்காக மிக கவனமாக பயன்படுத்துவோம் என்ற வாக்குறுதியை மக்களுக்கு வழங்குகிறோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். பத்தரமுல்லை பகுதியில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு, கிழக்கு உட்பட மலையகம் என 21 தேர்தல் மாவட்டங்களிலும் அமோக வெற்றிப் பெற்றுள்ளோம். தமிழர்களின் அரசியல் மாற்றம் சிறந்ததொரு வெளிப்பாடாகும். எம்மீதான மக்கள் நம்பிக்கை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுத்தேர்தலில் கிடைக்கப் பெற்றுள்ள வெற்றியின் கனத்தை நன்றாக விளங்கிக் கொண்டுள்ளோம். எம்மீது மக்கள் அதீத நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஆகவே அந்த நம்பிக்கையை நிச்சயம் பாதுகாக்க வேண்டும். இது ஒரு சாதாரன வெற்றியல்ல, பல ஆண்டுகாலமாக அரசியலில் வலுவாக செயற்பட்டவர்களை வீழ்த்தியே வெற்றிப் பெற்றுள்ளோம். பழைய அரசியல் கலாசாரத்தை நாட்டு மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள். வரப்பிரசாதங்களுடன் வாழ்ந்த பிரபுக்கள் அரசியல் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மக்களின் அரசியல் வெற்றிப் பெற்றுள்ளது. நாட்டு மக்கள் எம்மீது இந்தளவுக்கு அதீத நம்பிக்கை கொண்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அப்பாற்பட்ட அதிகாரத்தை மக்கள் அளித்துள்ளார்கள். நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோரவில்லை. இருப்பினும் மக்கள் வழங்கியுள்ளார்கள். ஆகவே இந்த பலத்தை கவனமாக பாதுகாக்கும் பொறுப்பும், சவாலும் எமக்குண்டு. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மக்கள் வழங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதால் தான் எந்த அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை பலத்தை வழங்க கூடாது என்ற நிலைப்பாடு தோற்றுவிக்கப்பட்டது. ஆகவே கிடைக்கப் பெற்றுள்ள பலத்தை அதிகார மோகத்துக்காக பயன்படுத்த மாட்டோம். மக்களின் நன்மைக்காக மிக கவனமாக பயன்படுத்துவோம் என்ற வாக்குறுதியை மக்களுக்கு வழங்குகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/198889
-
தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
சாம்ஸன், திலக் வர்மா சதம்: இந்திய அணி புதிய வரலாறு - தென் ஆப்ரிக்க மண்ணில் பதிவான சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திலக் வர்மா எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் சூர்யகுமார் தலைமையிலான இளம் இந்திய படை அபாரமாக வென்று புதிய வரலாற்றைப் பதிவு செய்தது. ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று நடந்த கடைசி மற்றும் 4வது டி20 ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியை 135 ரன் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது. 284 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 148 ரன்களுக்கு ஆட்டமிழந்து 135 ரன்களில் தோல்வி அடைந்தது. சிக்ஸர் மழையில் நனைந்த ரசிகர்கள் இந்திய பேட்டர்கள் சாம்ஸன், திலக் வர்மா இருவரின் பேட்டிங்கை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இருவரும் சேர்ந்து ரசிகர்களுக்கு நேற்று வாண வேடிக்கை நிகழ்த்திக் காட்டினர். இந்த ஆட்டத்தில் மட்டும் இந்திய அணி சார்பில் 23 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. இதில் 19 சிக்ஸர்களை சாம்ஸன், திலக் வர்மா விளாசினர். இருவரும் சேர்ந்து தென் ஆப்ரிக்கப் பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். ஓவருக்கு 15 ரன்ரேட்டில் ஸ்கோர் உயர்ந்தது. பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் சேர்த்த இந்திய அணி, 8.3 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. 11.4 ஓவர்களில் 150 ரன்களையும், 14.1 ஓவர்களில் 200 ரன்களையும் எட்டியது. 17.5 ஓவர்களில் 250 ரன்களும் குவிக்கப்பட்டன. கடைசி 6 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 84 ரன்கள் சேர்த்தது. 2வது விக்கெட்டுக்கு இருவரும் 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சாம்ஸன் 28 பந்துகளில் அரைசதமும், 51 பந்துகளில் சதத்தையும் நிறைவுசெய்தார். திலக் வர்மா 22 பந்துகளில் அரைசதத்தையும், 41 பந்துகளில் சதத்தையும் எட்டினார். ஆனால், தென் ஆப்ரிக்கா அணியோ தனது முதல் சிக்ஸரை 50 பந்துகளுக்கு பின்புதான் அடித்தது. ராமன்தீப் சிங் பந்துவீச்சில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அணிக்காக முதல் சிக்ஸரை அடித்தார். அதன்பின் வருண் பந்துவீச்சில் மில்லர் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசினார். தென் ஆப்ரிக்கா தரப்பில் 9 சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் அடிக்கப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சஞ்சு சாம்ஸன் இந்திய மிரட்டல் பந்துவீச்சு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா இருவரும் தங்களின் ஸ்விங் பந்துவீச்சால் தென் ஆப்ரிக்க பேட்டர்களை மிரட்டிவிட்டனர். ஹர்திக் பாண்டியா 3 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 8 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங் 3 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருவரும் சேர்ந்து டாப்ஆர்டர் 4 பேட்டர்களையும் சாய்த்து வெற்றியை உறுதி செய்தனர். ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி, மைதானமும் சிறியது. பேட்டர்கள் லேசாக தூக்கி அடித்தாலே சிக்ஸர், பவுண்டரி சென்றுவிடும். இதனால் இந்த ஸ்கோரை அடிக்க தென் ஆப்ரிக்க அணி கடுமையாக போராடும், சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாலை நேரத்தில் லேசான குளிர்காற்றும், ஈரப்பதமும், மின்ஒளியும் சேர்ந்து புதிய பந்து ஸ்விங் ஆக உதவியது. இதனால் அர்ஷ்தீப் வீசிய முதல் ஓவரிலேயே அவரின் பந்துகள் டெஸ்ட் கிரிக்கெட் போன்று ஸ்விங் ஆகியது. ஒரு பந்தை அவுட் ஸ்விங்காகவும், மற்றொரு பந்தை இன்கட்டராகவும் வீசி அர்ஷ்தீப் அசத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஹென்ட்ரிக்ஸ் கிளீன் போல்டானார். தனது 3வது பந்திலேயே ஹென்ட்ரிக்ஸை தனது இன்கட்டர் மூலம் க்ளீன் போல்டாக்கி அர்ஷ்தீப் அசத்தினார். மார்க்ரமுக்கு அருமையான அவுட்ஸ்விங்கை வீச, அதை தூக்கி அடிக்க முற்பட்டு ரவி பிஸ்னாயிடம் கேட்ச் கொடுத்து மார்க்ரம் வெளியேறினார். ரெக்கில்டனும் ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறிய நிலையில் பாண்டியா வீசிய பந்தில் சாம்ஸனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆபத்தான பேட்டர் கிளாசன் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆகினார். அர்ஷ்தீப் இன்கட்டராக வீசிய பந்தை கால்காப்பில் வாங்கிய கிளாசன் அதிர்ச்சியில் வெளியேறினார். ஹர்திக், அர்ஷ்தீப் இருவரும் சேர்ந்தே ஏறக்குறைய ஆட்டத்தை முடித்துவிட்டனர். டாப்ஆர்டர் பேட்டர்கள் 4 பேரும் பெவிலியன் சென்ற நிலையில் தென் ஆப்ரிக்கா தோல்வி உறுதியானது. அக்ஸர் படேல் 2 ஓவர்கள் வீசி 6 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், வருண் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ்(43), மில்லர்(36), யான்சென்(29) ஆகியோர் ஓரளவு ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்கள் ஏமாற்றினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா இருவரும் தங்களின் ஸ்விங் பந்துவீச்சால் தென் ஆப்ரிக்க பேட்டர்களை மிரட்டிவிட்டனர். பலவீனமான நிலையில் தென் ஆப்ரிக்கா தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சில் கட்டுக்கோப்பு இல்லை. இந்த ஆட்டத்தில் மட்டும் 17 வைடு பந்துகளை தென் ஆப்ரிக்க வீரர்கள் வீசினர். ஒரு நோபாலும் வீசப்பட்டது. இந்த ஆட்டம் மட்டுமல்ல இந்தத் தொடரில் இதற்கு முன் நடந்த 3 ஆட்டங்களிலும் வேகப்பந்துவீச்சாளர்களிடம் கட்டுக்கோப்பு, ஒழுக்கம் இல்லாமல் பந்துவீசியதால் உதிரிகள் வாயிலாக அதிக ரன்கள் சென்றன. குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் கோட்ஸி, சிமிலேன் பந்துவீச்சு இந்தத் தொடரில் மோசமாக இருந்தது. தென் ஆப்ரிக்க பேட்டர்களின் பேட்டிங்கும் நேற்று படுமோசமாக இருந்தது. 283 ரன் இலக்கு என்றாலே அழுத்தமும், நெருக்கடியும் ஏற்படுவது இயல்புதான். ஆனாலும், நல்ல பந்துகளுக்கு பேட்டர்கள் மதிப்பளித்து ஆடினால்தான் களத்தில் நிலைத்து நிற்க முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப், ஹர்திக் பாண்டியா வீசக்கூடிய நல்ல, லைன் அன்ட் லென்த், ஸ்விங் பந்துகளைக் கூட சிக்ஸர் அடிக்க வேண்டும் என முற்பட்டு தென் ஆப்ரிக்க பேட்டர்கள் விக்கெட்டுகளை பரிதாபமாக இழந்தனர். ஒரு கட்டத்தில் 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பரிதமாக காட்சியளித்தது. குறிப்பாக கேப்டன் மார்க்ரம் தன்னுடைய மோசமான ஃபார்மிலிருந்து எவ்வாறு மீளப்போகிறார், அணியை எவ்வாறு மீட்கப் போகிறார் என்று அவர் முன் இருக்கும் பெரிய கேள்வியாகும். கடந்த 25 இன்னிங்ஸ்களில் மார்க்ரம் இதுவரை ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார், 10 முறைக்கும் மேலாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து மோசமான ஃபார்மில் இருக்கிறார். ஐபிஎல் ஏலம் நடக்கும் நிலையில் மார்க்ரம் ஃபார்ம் அவரின் ஏலத்தொகையை பெருமளவு குறைக்கும், எந்த அணியும் வாங்காமலும்கூட போகலாம். அதேபோல ரீஸா ஹென்ட்ரிக்ஸ் மோசமான ஃபார்ம் உலகக் கோப்பையிலிருந்து தொடர்கிறது. டி20 உலகக் கோப்பைக்கு முன்பே ஹென்ட்ரிக்ஸ் சரியாக ரன் குவிக்கவில்லை. ஆனால், அனுபவமான பேட்டர் தேவை என்பதற்காக அணியில் சேர்க்கப்பட்டும், அவரின் மோசமான பேட்டிங் தொடர்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேப்டன் மார்க்ரம் தன்னுடைய மோசமான ஃபார்மிலிருந்து எவ்வாறு மீளப்போகிறார், அணியை எவ்வாறு மீட்கப் போகிறார் என்று அவர் முன் இருக்கும் பெரிய கேள்வியாகும். இந்திய அணி மாபெரும் சாதனை தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக டி20 போட்டியில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய அணி 2016 லாடர்ஹில்லில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்ததுதான், வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோராகும். ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்குப்பின் நேற்று ஜோகன்னஸ்பர்க் நகரில் அந்த சாதனையை முறியடித்து 283 ரன்களைக் குவித்தது. 33 நாட்களுக்குள் டி20 போட்டியில் 2வது அதிகபட்ச ஸ்கோரை இந்திய அணி பதிவு செய்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 297 ரன்களை இந்திய அணி குவித்து சாதனை படைத்திருந்தநிலையில் இப்போது 2வது அதிகபட்சமாக 283 ரன்களைக் குவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரே ஆண்டில் 5 தொடர்கள், உலகக்கோப்பை இதன் மூலம் 2024ம் ஆண்டில் நடந்த அனைத்து டி20 தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. ஆப்கானிஸ்தான்(3-0 ஜனவரி மாதம்), டி20உலகக் கோப்பை(ஜூன்), ஜிம்பாப்வே(ஜூலை1-4), இலங்கை(0-3 ஜூலை) வங்கதேசம்(3-0 அக்டோபர்), தென் ஆப்ரிக்கா(3-1 நவம்பர்) என இந்த 2024-ஆம் ஆண்டில் நடந்த அனைத்து டி20 தொடர்களையும் இந்திய அணி வென்று புதிய வரலாற்றைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் எந்த நாட்டு அணியும் இதேபோன்று அனைத்து டி20 தொடர்களையும் ஒரு காலண்டர் ஆண்டில் கைப்பற்றியதில்லை. அதை இந்திய அணி செய்து சாதனை புரிந்துள்ளது. ஆட்டநாயகன், தொடர்நாயகன் இந்த ஆட்டத்தில் திலக் வர்மா 47 பந்துகளில் 120(10 சிக்ஸர், 9பவுண்டரி), சாம்ஸன் 56 பந்துகளில் 109(9 சிக்ஸர், 6பவுண்டரி) என இருவரும் இந்திய அணி இமாலய ஸ்கோர் குவிப்புக்கு காரணமாகினர். இருவரும் டர்பன்,செஞ்சூரியனில் சதம் அடித்த நிலையில் இந்தத் தொடரில் 2வது சதத்தை இருவரும் பதிவு செய்தனர். ஆட்டத்தின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் திலக் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திலக் வர்மா சாம்ஸன் 4 சதங்கள் சாம்ஸன் தொடர்ந்து இரு சதங்களை அடித்து, அதன்பின் 2 டக்அவுட்களை எதிர்கொண்டு, இப்போது சதம் அடித்துள்ளார். திலக் வர்மா தொடர்ந்து 2 சதங்களைப் பதிவு செய்துள்ளார். குறிப்பாக சஞ்சு சாம்ஸன், 2024 காலண்டர் ஆண்டில் 3 சதங்களை அடித்த டி20 கிரிக்கெட்டில் முதல் பேட்டர், முதல் இந்திய பேட்டர் என்ற பெருமையைப் பெற்றார். ஐசிசியின் முழு உறுப்பு நாடுகளுக்கு எதிராக, ஒரே இன்னிங்ஸில் 2 சதங்களை அடித்த 3வது அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது. அது மட்டுமல்லாமல், ஒரு டி20 தொடரில் 4 சதங்களை அடித்த முதல் அணி என்ற சாதனையையும் இந்திய அணி படைத்தது, இதற்கு முன் 2 சதங்கள் மட்டுமே அடிக்கப்பட்டிருந்தது என கிரிக்இன்போ தகவல் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் டி20 போட்டியில் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் இந்திய ஜோடி சாம்ஸன்- திலக் வர்மா என்ற பெருமையைப் பெற்றது. இதற்கு முன் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோஹித் சர்மா-ரிங்கு சிங் 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துததான் அதிகபட்சமாக இருந்தது. டி20 போட்டிகளில் சதம் அடித்த அதிகமான பேட்டர்களைக் கொண்ட நாடாகவும், அதிக சதங்களை அடித்த அணியாகவும் இந்திய அணி பெருமை பெற்றது. இதுவரை டி20 போட்டியில் இந்திய அணி சார்பில் 23 சதங்களை பேட்டர்கள் அடித்துள்ளனர். 2வது இடத்தில் நியூசிலாந்து சார்பில் அந்த அணியைச் சேர்ந்த 12 பேட்டர்கள் சதம் அடித்திருந்தனர். தென் ஆப்ரிக்கா பரிதாபம் 2022ம் ஆண்டுக்குப்பின் சொந்த மண்ணில் எந்த டி20 தொடரையும் வெல்ல முடியவில்லை என்ற தென் ஆப்ரிக்காவின் சோகம் தொடர்கிறது. 2006-ஆம் ஆண்டு, மார்ச் 12ம் தேதி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி குவித்த 434 ரன்களை ஒரு விக்கெட் வித்தியாசத்தில், ஒரு பந்து மீதமிருக்கையில் தென் ஆப்ரிக்கா வென்று சாதனை புரிந்தது. அதேபோன்று இந்த ஆட்டத்திலும் ஏதாவது அதிசயம் நடக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இந்த கடைசி டி20 ஆட்டம் முற்றிலும் ஒருதரப்பாக நடந்து முடிந்தது. 148 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 135 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று என்று மோசமான தோல்வியை தென் ஆப்ரிக்கா பதிவு செய்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES "எந்த ரகசியமும் இல்லை, ஆகச்சிறந்த வெற்றி" தொடரை வென்ற மகிழ்ச்சியில் கேப்டன் சூர்யகுமார் பேசுகையில் “ இந்த சூழலையும், காலநிலையையும் நாங்கள் பயன்படுத்திக் கொண்டது, ஏற்றுக்கொண்டதில் எந்த ரகசியமும் இல்லை. எங்கள் திட்டம் தெளிவாக இருந்தது. கடந்த முறை இங்கு வந்தபோதுகூட இதே பாணியில்தான் விளையாடினோம், அதையே தொடர முடிவு செய்தோம். போட்டியின் முடிவைப் பற்றி கவலைப்பட வேண்டாம், அது தானாக நடக்கும், உழைப்பை மட்டும் செலுத்துவோம் என வீரர்களிடம் தெரிவித்தேன். அபிஷேக், சாம்ஸன், திலக் 3 பேரும் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இந்த தொடரில் கிடைத்த ஒவ்வொரு வெற்றியும் மகத்தானது. தென் ஆப்ரிக்காவுக்கு பயணம் வந்து தொடரை வென்று தாயகம் செல்வது எப்போதுமே சவாலானது, ஆதலால் இது எங்களுக்கு ஆகச்சிறந்த வெற்றி. ” எனத் தெரிவித்தார் https://www.bbc.com/tamil/articles/cvglv53dj32o
-
தேர்தலில் பெரும் வெற்றி ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணை- உலக நாடுகள் ஆதரவளிக்கவேண்டும் - எரிக்சொல்ஹெய்ம்
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மகத்தான பெரும் வெற்றி ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணையை வழங்குகின்றது என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். சமூக ஊடகப்பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அனுரகுமார திசநாயக்க அல்லது மக்களால் ஏகேடி என அழைக்கப்படும் இடதுசாரி கூட்டணியின் தலைவர் இலங்கையில் முழுமையான தேர்தல் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றார். அனேகமாக அனைத்து தொகுதிகளிலும் அவர் வெற்றிபெற்றுள்ளார். இது இலங்கைக்கு என்ன தேவையோ அதனை செய்வதற்கான வலுவான வாக்குறுதியை வழங்குகின்றது. 1. நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு சிறந்த ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளல் 2. பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமையில் சிக்கியுள்ளவர்களை அதன் பிடியிலிருந்து மீட்பதற்கான பொருளாதார சீர்திருத்தம் 3. தேசிய நல்லிணக்கம் சிறுபான்மை தமிழர்கள் முஸ்லீம்களிற்கான உரிமைகள் 4. ஊழலிற்கு எதிராக கடுமையான போராட்டம் 5. சுற்றுலாத்துறையில் பசுமை பொருளாதாரத்தை உருவாக்குதல், சதுப்பு நிலங்கள் வனங்கள் வலுசக்தி மேலும் சில... இலங்கையின் அனைத்து நண்பர்களும் அதற்கு உதவ தயாராகவேண்டும். https://www.virakesari.lk/article/198900
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில் 5,992,348 பேர் வாக்களிக்கவில்லை (இராஜதுரை ஹஷான்) 2024 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்புக்கமைய பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்த நிலையில், 11,148,006 பேர் வாக்களித்துள்ளதுடன், 5,992,348 பேர் வாக்களிக்கவில்லை. இம்முறை நாடளாவிய ரீதியில் 65 சதவீதமான வாக்குகளே பதிவாகியுள்ளன. பத்தாவது பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் வியாழக்கிழமை (14) நாடளாவிய 13,421 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்றது. 2024 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்புக்கமைய பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் நாடளாவிய ரீதியில் 11,148,006 பேர் வாக்களித்திருந்தனர். அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 667,640 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 11,815,246 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில் 5,992,348 பேர் வாக்களிக்கவில்லை. இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 3,820,738 பேர் வாக்களிக்கவில்லை. 2024 ஆம் ஆண்டு தேருநர் இடாப்புக்கமைய வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்த நிலையில், 13,319,616 பேர் வாக்களித்திருந்தனர். அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 300,300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டு, 13,619,916 செல்லுபடியான வாக்குகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. https://www.virakesari.lk/article/198888
-
மத்திய கிழக்கில் சூழல் என்ன? - முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையில் டிரம்ப்
தெளிவான செய்தியை அனுப்ப முயற்சிக்கும் அரபு நாடுகள்; முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையில் டிரம்ப் - மத்திய கிழக்கில் சூழல் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES சௌதி அரேபியாவும் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இரானுடனான மோதல் போக்கை குறைக்க வேண்டும் என விரும்புகின்றன. அமெரிக்கா - இரானுடனான உறவுகளை மேம்படுத்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சமாதானப்படுத்தப்படுத்த முடியும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். இரானுடனான சௌதி அரேபியாவின் உறவு பதற்றமாகவே உள்ளது. ஆனால் அரபு நாடுகள், டிரம்ப் தனது இரண்டாவது முறை பதவிக்காலத்தில் இரான் மீது சுமூகமான போக்கை கொண்டிருக்க வேண்டும் என்றும், காஸா மற்றும் லெபனானில் நடந்து வரும் ராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் விரும்புகின்றன. இரானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், கடந்த ஆண்டு சீனா மத்தியஸ்தம் செய்த பிறகு, இரான் மீதான சௌதி அரேபியாவின் அணுகுமுறை மாறிவிட்டது. இரானுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அமெரிக்கா சுமூகமாக்க வேண்டும் என்று சௌதி அரேபியா விரும்புகிறது. சௌதி அரேபியா தலைநகர் ரியாத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற அரபு இஸ்லாமிய நாடுகளின் உச்சி மாநாட்டில், இரான் மீதான இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல் குறித்து பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விமர்சித்து பேசியுள்ளார். இரானின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்று சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் கூறினார். டிரம்ப் தனது கடந்த பதவிக்காலத்தில் இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டார், மேலும் அதன் மீது பல தடைகளையும் விதித்தார். சமீபத்தில், ஹெஸ்பொலா மற்றும் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் இஸ்ரேலிய தாக்குதலில் இறந்ததை அடுத்து இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். திங்கட்கிழமையன்று அபுதாபியில் நடைபெற்ற மாநாட்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் ஆலோசகர் அன்வர் கர்காஷ் கூறும் போது, “டிரம்ப் நிர்வாகத்துடன் ஒரு முழுமையான அணுகுமுறையை கட்டமைக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்றார். 2017-ல் டிரம்ப் அதிகாரத்திற்கு வரும் போது கவலையில்லாமல் இருந்த சௌதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் தற்போது எச்சரிக்கையுடன் இருப்பதாக பார்க்கப்படுகிறது. உறுதியற்ற தன்மை, உலகளாவிய விவகாரங்களில் ஒதுக்கப்படுவது போன்ற அமெரிக்காவின் கொள்கைகள் குறித்த அச்சங்கள் அரபு நாடுகளிலும் அதிகரித்துள்ளது. 2018-ம் ஆண்டு, இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை டிரம்ப் முறித்துக் கொண்டபோது, சௌதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட பிறகு இரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார் டிரம்ப். ஆனால், இந்த முறை இரானுக்கு எதிராக டிரம்ப் எடுக்க நினைக்கும் கடுமையான நிலைப்பாட்டை சௌதியும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஒப்புக்கொண்டதாகத் தெரியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதராக ஆகன்சா மாகாணத்தின் ஆளுநர் மைக் ஹக்கபீயை டிரம்ப் நியமித்துள்ளார் இரான் விவகாரத்தில் அரபு நாடுகள் சொல்வதை டிரம்ப் கேட்பாரா? ஐநாவுக்கான அமெரிக்க தூதராக எலைஸ் ஸ்டெஃபானிக்-கை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். இரானுக்கு அதிகபட்ச அழுத்தத்தை கொடுக்கும் பிரசாரத்திற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக எலைஸ் ஸ்டெஃபானிக், எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், அவர், "நீண்ட காலமாக, பைடன்- ஹாரிஸ் நிர்வாகத்தின் பலவீனம் காரணமாக எங்கள் எதிரிகள் தைரியமாகிவிட்டனர். அதிபர் டிரம்ப் திரும்பிய உடன், வலிமை மூலம் அமைதி திரும்பியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் தொடர்பாக டிரம்ப் மீது அரபு நாடுகள் அழுத்தம் கொடுக்க முயற்சித்தாலும், அது டிரம்பிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதாக தெரியவில்லை. இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதராக ஆகன்சா மாகாணத்தின் ஆளுநர் மைக் ஹக்கபீ-யை நியமிப்பதாக அறிவித்ததன் மூலம், இஸ்ரேல் தொடர்பான தனது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். டிரம்ப் கடந்த முறை அதிபராக இருந்த காலத்தில் இஸ்ரேலுக்கு முழு ஆதரவை அளித்தார். டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே இந்த மாநாட்டை அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஏற்பாடு செய்திருக்கிறது. இதன் மூலம், காஸா மற்றும் லெபனானில் நடக்கும் பிரச்னைகளை விரைவில் நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அறிவுறுத்த அமெரிக்கா மீது அழுத்தம் கொடுக்க விரும்புகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES ஹக்கபீ இஸ்ரேலின் தீவிர ஆதரவாளர். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் யூத குடியிருப்புகள் நிறுவப்படுவதை அவர் ஆதரிக்கிறார். காஸா மற்றும் லெபனான் மீது நடக்கும் இஸ்ரேலிய நடவடிக்கைகள் மற்றும் மத்திய கிழக்கில் அமைதியை மீட்டெடுப்பது குறித்து டிரம்ப் என்ன செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு அறிகுறியாகும். ஹக்கபீயின் நியமனத்தை தனது ட்ரூத் சமூக ஊடக தள பதிவில் அறிவித்த டிரம்ப், "அவர் (ஹக்கபீ) இஸ்ரேலையும் இஸ்ரேலிய மக்களையும் நேசிக்கிறார். இஸ்ரேலியர்கள் அவரை நேசிக்கின்றனர். மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த மைக் ஹக்கபீ அயராது உழைப்பார்” என்று குறிப்பிட்டார். இஸ்ரேலின் ஆதரவாளரும், கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவருமான ஹக்கபீ, 2008-ம் ஆண்டுக்குப் பிறகு இஸ்ரேலுக்கான முதல் யூதர் அல்லாத அமெரிக்கத் தூதராக இருப்பார். 2008-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதராக யூதர் அல்லாத ஜேம்ஸ் கன்னிங்காமை நியமித்தார். டிரம்ப் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செளதியில் நடந்த அரபு இஸ்லாமிய நாடுகளின் உச்சிமாநாடு 2025 ஜனவரியில் டிரம்ப் ஆட்சி பொறுப்பை கையிலெடுப்பதற்கு முன்பே ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை நாட்டுடன் இணைக்க வேண்டிய ஆயத்தப் பணிகளைத் தொடங்குமாறு இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தலைவரும் நிதி அமைச்சருமான பெசலெல் ஸ்மோட்ரிச் இரண்டு நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். “2025 - ஜுடியா மற்றும் சமாரியாவில் இறையாண்மை ஆண்டு” என ஸ்மோட்ரிச் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். (Judea and Samaria = மேற்குக் கரைப் பகுதியைக் குறிக்க பைபிளில் பயன்படுத்தப்பட்ட பெயர்கள்.) திங்களன்று நடைபெற்ற தீவிர வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டிரம்பின் தேர்தல் வெற்றியை வரவேற்று பேசினார் ஸ்மோட்ரிச். மேலும், இஸ்ரேலுடன் பகுதிகளை இணைப்பதற்கான கள ஆய்வுகளை தயாரிக்கத் தொடங்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார். டிரம்ப் தனது கடந்த கால பதவிக்காலத்தில் தைரியத்தையும் உறுதியையும் வெளிப்படுத்தியதைப் போலவே, தனது இரண்டாவது பதவிக்காலத்திலும் இஸ்ரேலின் நடவடிக்கையை ஆதரிப்பார் என்பதில் சந்தேகமில்லை என்று ஸ்மோட்ரிச் கூறினார். டிரம்ப் தனது கடந்த பதவிக்காலத்தில், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, அமெரிக்க தூதரகத்தை இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் இருந்து ஜெருசலேமிற்கு மாற்றினார். கோலான் குன்றை இஸ்ரேல் ஆக்கிரமித்ததையும் அவர் அங்கீகரித்தார். இது இஸ்லாமிய நாடுகளை கோபப்படுத்தியது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைப்பது குறித்த ஸ்மோட்ரிச்சின் கருத்துக்கு ஒரு நாள் கழித்து, டிரம்ப் மைக் ஹக்கபீ-யை இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதராக நியமித்திருக்கிறார். இதன் மூலம் தனது எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் டிரம்ப். இதிலிருந்து இஸ்ரேலுக்கான அவரின் ஆதரவு பழையபடி தொடரும் என்று தெரிகிறது. மேற்குக்கரை இணைப்பு தொடர்பாக இஸ்ரேல் நிதியமைச்சர் தெரிவித்த கருத்துக்கு கத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஸ்மோட்ரிச் கருத்துக்கு எதிராக கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை இணைக்க தேவையான உள்கட்டமைப்புகளை தயார் செய்யுமாறு உத்தரவிட்டுள்ள இஸ்ரேலிய நிதியமைச்சரின் கருத்தை கத்தார் வன்மையாகக் கண்டிக்கிறது. இது சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2334 ஆகியவற்றின் அப்பட்டமான மீறலாகும். இது இந்த பகுதியில் அமைதிக்கான வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கலாம்.” என்று குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம்,GE படக்குறிப்பு, இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தலைவரும் நிதி அமைச்சருமான பெசலெல் ஸ்மோட்ரிச் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் இறையாண்மை குறித்து பேசிய இஸ்ரேல் அமைச்சரின் கருத்துக்கு சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்றகருத்துக்கள், இரு நாடுகளுக்கும் இடையே சமரச தீர்வுகளை அமல்படுத்தி அமைதியை நிலைநாட்டும் மற்ற முயற்சிகளை பலவீனப்படுத்துவதாக சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிரம்பின் கடந்த பதவிக் காலத்தில், அரபு உலகம் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் இருந்தது. ஆனால், அவரது இரண்டாவது பதவிக்காலத்தில், விஷயங்கள் வேகமாக மாறிவிட்டன. டிரம்ப் தனது கடந்த பதவிக்காலத்தில் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் சௌதி அரேபியா. அந்தப் பயணம் அவரது முன்னுரிமைகள் என்ன என்பதை சுட்டிக்காட்டியது. ஆனால், இப்போது அரபு நாடுகள் தங்கள் முன்னுரிமைகளை தீர்மானிக்கின்றன, இவை டிரம்பின் முன்னுரிமைகளுடன் முரண்படலாம். ரியாத்தில் நடந்த அரபு இஸ்லாமிய நாடுகளின் மாநாடு இந்த முயற்சிக்கு சான்றாக கருதப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/c206dp4n73vo
-
உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்கு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
(எம்.மனோசித்ரா) தமிழ்க் கட்சிகள் தனித்துப் போட்டியிட்ட பொதுத் தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக யாழ்ப்பாண மக்கள் தென்னிலங்கையை அடிப்படையாகக் கொண்ட தேசியக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். இந்தத் தருணம் தேர்தல் முடிவுகளில் மாத்திரமின்றி, முழு நாட்டினதும் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட வேறுபாடுகளை விட உண்மையான வேறுபாடுகள் எப்போதுமே அரசியல் சார்ந்தவை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் எமக்கு நினைவூட்டுகின்றன. மேலும் இந்த மாற்றமானது மக்கள் பிளவுகளுக்கு அப்பால் செல்ல தயாராக இருப்பதைக் காட்டுகிறது. ஒன்றாக, நீடித்த நம்பிக்கையை உருவாக்கவும் உண்மையான நல்லிணக்கத்தை அடையவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த புதிய ஐக்கியத்தில் இலங்கை செழிக்கட்டும். மேலும் அனைத்து இலங்கையர்களின் நலனுக்காகவும் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சேவையாற்றுவர் என்று நம்புகின்றோம் என அலி சப்ரி தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198871
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
Srilanka Election Results: தமிழர் பகுதியிலேயே தோற்ற தமிழ் கட்சிகள்; இலங்கை தமிழர்கள் கருத்து என்ன? இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸ்ஸநாயக்க பெரும் வெற்றி பெற்று அதிபரான நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது அவரது கட்சி பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் 225 இடங்கள் உள்ள நிலையில் 159 ஆசனங்களை அனுர குமாரவின் தேசிய மக்கள் கட்சி வென்றுள்ளது. ராஜபக்ஷவின் குடும்பமும், அவரது கட்சியும் படுதோல்வியை சந்தித்துள்ளன. முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் கட்சியும் சஜித் கட்சியும் ஜொலிக்க முடியவில்லை. தமிழர் பகுதிகளில் கூட அநுர கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை தமிழர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை அறிய இலங்கையில் உள்ள சிலரிடம் பேசியது பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
உலகை நடுங்க வைத்த ஐ.எஸ் குழு காணாமல் போனதா? இப்போது அவர்களின் குறி?
Islamic State: இஸ்லாமிய அரசு என தம்மை தாமே அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ் குழு 10 ஆண்டுகளுக்கு முன் உலகத்தையே உலுக்கியெடுத்தது. தனது கோட்டையான இராக் மற்றும் சிரியாவில் இருந்து இந்த குழு கொடூரமான தண்டனைகள், பொதுவெளியில் கொலை செய்வது உள்ளிட்டவற்றை நடத்தின. இந்த பயங்கரம் உலகம் முழுவதும் பயங்கரவாத அலையாக பரவுவதற்கு முன்பாக, ஐஎஸ் குழுவை எதிர்த்து போராட 80க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்தன. இதன்பின், 2019-ல் தனது கடைசி கோட்டையையும் ஐ.எஸ். இழந்தது. இப்போது ஐ.எஸ். அமைப்பு என்ன செய்கிறது? இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கொழும்பில் வெற்றிப்பெற்ற வேட்பாளர் விபரம் கொழும்பு மாவட்டத்தின் விருப்ப வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்தியில் (NPP) சார்பில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியும் கொழும்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை வென்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி - 13 1. ஹரினி அமரசூரிய -655,289 2. சதுரங்க அபேசிங்க -127,166 3. சுனில் வட்டகல -125,700 4. லக்ஸ்மன் நிபுணராச்சி - 96,273 5. அருண பனாகொட -91,081 6. எரங்க குணசேகர -85,180 7. ஹர்ஷன நாணயக்கார - 82,275 8. கௌசல்யா ஆரியரத்ன - 80,814 9. அசித நிரோஷன் -78,990 10. மொஹமட் ரிஸ்வி சாலி - 73,018 10. சுசந்த தொடவத்த - 65,391 11. சந்தன சூரியராச்சி - 63,387 12. சமன்மலி குணசிங்க - 59,657 13. தேவானந்த சுரவீர - 54,680 ஐக்கிய மக்கள் சக்தி - 04 1. சஜித் பிரேமதாச - 145,611 2. ஹர்ஷ டி சில்வா - 81,473 3. முஜிபுர் ரஹ்மான் - 43,737 4. எஸ். எம். மரிக்கார் - 41,482 https://tamil.adaderana.lk/news.php?nid=195961 கம்பஹாவில் வெற்றிப்பெற்ற வேட்பாளர் விபரம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட அமைச்சர் விஜித ஹேரத் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தி (NPP) - 16 ஆசனங்கள் 1. விஜிதா ஹெராத் - 716,715 2. அனில் ஜயந்த - 162,433 3. மஹிந்த ஜயசிங்க - 137,315 4. கிரிஷாந்த அபேசேன - 121,725 5. மொஹமட் முனீர் - 109,815 6. அசோக ரன்வல - 109,332 7. தர்மப்பிரிய விஜேசிங்க - 83,061 8. ருவன் மாபலகம - 78,673 9. லசித் பாஷனா - 74,058 10. பிரகீத் மதுரங்க - 70,887 11. சம்பிக்க ஹெட்டியாராச்சி - 70,373 12. ஜெயக்கொடி ஆராச்சிகே ருவன்திலக - 68,210 13. ஹேமலி சுஜீவா - 66,737 14. உபாலி பிரியந்த அபேவிக்ரம- 60,595 15. பிரியன் ஸ்டெபானி பெர்னாண்டோ - 57,634 16. சமிந்த லலித்குமார - 53,451 ஐக்கிய மக்கள் சக்தி - 03 1. ஹர்ஷன ராஜகருணா - 67,004 2. காவிந்த ஜயவர்தன - 37,597 3. அமில பிரசாத் - 23,699 https://tamil.adaderana.lk/news.php?nid=195967
-
மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி - ஜனாதிபதி அனுர திஸாநாயக்க !
தனித்துவமான வெற்றிக்கு நன்றி பாராளுமன்ற தேர்தலில் தனித்துவமான வெற்றியை வழங்கிய வாக்காளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது நன்றியை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது 'எக்ஸ்' கணக்கில் குறிப்பை ஒன்றை இட்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் 'மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி' என குறிப்பிட்டுள்ளார். நேற்று (15) நடைபெற்ற 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=195963
-
வரலாற்று வெற்றியை பதிவு செய்த அமைச்சர் விஜித!
2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் விஜித ஹேரத் 716,715 விருப்பு வாக்குகளைப் பெற்று கம்பஹா மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இந்த எண்ணிக்கையான வாக்குகள் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய வாக்குகளாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. அதேநேரம் இந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 655,289 வாக்குகளை பெற்றிருந்தார். இதற்கு முன்னதாக அதிக விருப்பு வாக்குகளை பெற்ற சாதனையை மஹிந்த ராஜபக்சவே வைத்திருந்தார். அவர் 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 527,364 வாக்குகளைப் பெற்றிருந்தார். எனினும் இம்முறை தேர்தலில் அவரின் அந்த சாதனையை ஐக்கிய மக்கள் சக்தியின் இரு பிரதான வேட்பாளர்களும் முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=195965
-
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: 159 இடங்களைக் கைப்பற்றி அநுர குமாரவின் கட்சி பாரிய வெற்றி
பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நடைபெற்று முடிந்த 2024 பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. தற்போது முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதன் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகள் பெற்று 159 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அதேவேளை 1,968,716 வாக்குகளை பெற்று ஐக்கிய மக்கள் சக்தி 40ஆசனங்களையும், 500,835 வாக்குகளை பெற்று புதிய ஜனநாயக முன்னணி 05 ஆசனங்களையும், 350,429 வாக்குகளை பெற்று சிறிலங்கா பொதுஜன முன்னணி 03 ஆசனங்களையும், 257,813 வாக்குகளை பெற்று இலங்கை தமிழரசு கட்சி 08 ஆசனங்களையும், 87,038 வாக்குகளை பெற்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 03 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. https://globaltamilnews.net/2024/208306/
-
சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் தையிட்டிப் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இராணுவத்தினரது தேவைகளுக்காக இராணுவத்தினரால் சட்டவிரோமாகக் கட்டப்பட்ட சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றுமாறு வலியுறுத்தி கடந்த ஒன்றரை வருடங்களாக பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாளைய பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று மாலை 4.30 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமானது. காணி உரிமையாளர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். https://globaltamilnews.net/2024/208298/
-
மாகாண சபை – உள்ளூராட்சித் தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டும்
மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டும். அதனூடாக மாகாண சபை முறைமையையும் மீள அமுல் படுத்த வேண்டும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம் . ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தேர்தலில் எந்த கட்சிக்கும் இப்படியான பெரும்பான்மை கிடைத்ததில்லை. 2010ஆம் ஆண்டு பொது தேர்தலில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவருக்கு கூட மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கவில்லை. கட்சித் தாவல்கள் மூலமே அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றனர். ஆனால் இம்முறை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பதனை தாண்டி 173 ஆசனங்களை பெற்றுள்ளனர். இதொரு உயர் தகு வெற்றியாகும். அவர்கள் தேர்தல் அறிக்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என தெட்ட தெளிவாக கூறியுள்ளார்கள். குறிப்பாக ஜனாதிபதி தேர்தலின் போதான தேர்தல் அறிக்கையில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான நல்லாட்சி காலத்தில் வரைபை பூர்த்தியாக்குவோம் என கூறி இருந்தார்கள். அந்த விடயங்களை அவர்கள் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். அவர்கள் அதனை சரியாக செய்யும் போது அவர்களுக்கு எமது கட்சியின் பூரண ஒத்துழைப்பு இருக்கும். மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டும். அதனூடாக மாகாண சபை முறைமையையும் மீள அமுல் படுத்த வேண்டும். இந்த தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்தே போட்டியிட்டது. அதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்களையும், அம்பாறையில் ஒரு ஆசனம் , திருகோணமலையில் ஒரு ஆசனம், யாழ் . தேர்தல் மாவட்டம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தலா ஒரு ஆசனங்களை பெற்றுள்ளோம். ஆகவே இது எமக்கு தோல்வி அல்ல. இந்த முறை நான் தெரிவாகவில்லை. மக்களின் தெரிவை ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும் தொடர்ந்து தமிழரசு கட்சியுடன் சேர்ந்து இயக்குவேன். பொறுப்புடன் மக்களுடன் சேர்ந்து இயக்குவேன். புதிய அரசியலமைப்புக்கு எமது உதவிகள் தேவைப்பட்டால் , அதனை நான் நிச்சயம் செய்வேன். தமிழரசு கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது. நான் மக்கள் மத்தியில் தேசிய பட்டியலில் செல்ல மாட்டேன் என கூறியுள்ளேன். ஆனாலும் தேசிய கட்சி விவகாரம் மத்திய குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் தான் அமையும் என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/208316/
-
இலங்கையுடனான நீண்டகால உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது - பாக்கிஸ்தான் பிரதமர் ஜனாதிபதிக்கு வாழ்த்து
(எம்.மனோசித்ரா) பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கட்சி அமோக வெற்றியீட்டியமைக்காக பாக்கிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷரீப் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரவின் தொலைநோக்கு மற்றும் தலைமைத்துவத்தின் மீது இலங்கை மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் நம்பிக்கைக்கு இது ஒரு சான்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் ஒத்துழைப்பின் நீண்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இலங்கையுடனான தனது நெருக்கமான மற்றும் நீண்டகால உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் ஷெபாஷ் ஷரீப் குறிப்பிட்டுள்ளார். அவரது வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இரு நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள நெருங்கிய மற்றும் நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்த எமது அரசாங்கம் பாகிஸ்தானுடன் தொடர்ந்து பணியாற்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/198887
-
1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் மீட்பு
(எம்.மனோசித்ரா) கடற்படையினரால் மேற்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென்றும், இது குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடற்படையினரால் இலங்கையின் மேற்கு திசையின் ஆழ்கடலில் வியாழக்கிழமை (14) முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, 1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேகநபர்கள் ஹெரோயின் கடத்தலுக்கு பயன்படுத்திய பல நாள் மீன்பிடிப் படகுடன் வெள்ளிக்கிழமை (15) காலி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். காலி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்ட படகு மேலதிக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போதே அதிலிருந்து 1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 66 கிலோ 840 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 - 34 வயதுக்கு உட்பட்ட மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் கைப்பற்றப்பட்ட படகு மற்றும் போதைப்பொருளுடன் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவ்வாண்டு இதுவரைக் காலமும் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 17,483 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்தும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/198883
-
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அநுர குமார மாபெரும் வெற்றி; மக்கள் சொன்ன செய்தி என்ன? - ஓர் அலசல்
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது. இவ்வளவு பெரிய வெற்றியை அக்கட்சிப் பெறக் காரணம் என்ன? இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, ஒட்டுமொத்தமாக 159 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 3 இடங்களை மட்டுமே கைப்பற்றிய தேசிய மக்கள் சக்திக்கு இது மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. ஆச்சர்யமாகப் பார்க்கப்படும் வெற்றி இலங்கையின் ஜனாதிபதியாக கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலில் தேர்வான அநுர குமார திஸாநாயக்க, பதவியேற்ற அடுத்த நாளே நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார். உடனடியாக புதிய நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 14ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டது. இலங்கை நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்தமாக உள்ள 225 இடங்களில் 196 இடங்களுக்கான பிரதிநிதிகள் மக்களால் நேரடியாகவும் 29 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலமாகவும் நிரப்பப்படுகிறார்கள். தற்போது வந்துள்ள முடிவுகளின்படி, அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி மக்கள் வாக்களிப்பின் மூலம் 141 இடங்களையும் தேசியப் பட்டியலின் மூலம் 18 இடங்களையும் பெற்று, ஒட்டுமொத்தமாக 159 இடங்களை அடைந்துள்ளது. "இந்தத் தேர்தல் குறித்து கருத்துக்களைத் தெரிவித்த எந்த அவதானியும் தேசிய மக்கள் சக்திக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்குமெனக் கருதவில்லை. அவருக்குப் பெரும்பான்மை கிடைக்கலாம் அல்லது பிற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைப்பார் என்றுதான் கருதப்பட்டது. இது யாருமே எதிர்பார்க்காத வெற்றி" என ஆச்சரியம் தெரிவிக்கிறார் மூத்த பத்திரிகையாளரான வீரகத்தி தனபாலசிங்கம். சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் வடக்கு - கிழக்கில் மட்டக்களப்பு தவிர்த்த எல்லா தேர்தல் மாவட்டங்களிலும் அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூடுதல் இடங்களைக் கைப்பற்றியிருப்பதும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் மூன்று இடங்களைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி, ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றியதே பெரும் ஆச்சரியத்தை அளித்த ஒரு ஜனநாயக நிகழ்வாக இருந்தது. இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலிலும்கூட, வெற்றிக்குத் தேவையான 50 சதவீத வாக்குகளைப் பெற முடியாமல், விருப்ப வாக்குகளின் மூலமே அநுரவின் வெற்றி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது தேசிய மக்கள் சக்திக்குக் கிடைத்திருக்கும் வெற்றி எல்லாத் தரப்பினருக்குமே மிகுந்த ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. "இது ஒரு வரலாற்று வெற்றி. ஏற்கனவே தேசிய மக்கள் சக்தியை நோக்கிய அலை இருந்தது. ஆனால், மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் கிடைக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. இதற்கு முக்கியமான காரணம், எதிர்க்கட்சிகள்தான். எதிர்க்கட்சிகள் சீர்குலைந்து போயிருந்தன. அவற்றால், தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஒரு வலுவான போட்டியைக்கூட தர முடியவில்லை" என்கிறார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி அகிலன் கதிர்காமர். 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பேரிடர், இலங்கைக்கு மிகப் பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து 2022-ஆம் ஆண்டில் 'அரகலய' என்று குறிப்பிடப்பட்ட மக்கள் போராட்டம் வெடித்தது. ஒட்டுமொத்தக் கோபமும் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசின் மீது திரும்பியது. இதற்குப் பிறகு, அவர் பதவி விலகி, ரணில் நாடாளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். "இந்நிலையில், மக்கள் கடுமையாக வெறுப்படைந்திருந்தார்கள். ஒரு மாற்றத்தை எதிர் நோக்கியிருந்தார்கள். பழைய அரசியல்வாதிகளை தூக்கியெறிய வேண்டுமென நினைத்தார்கள். இதனால் மற்ற அரசியல் கட்சிகளால் பல இடங்களில் மக்கள் மத்தியில் சென்று பிரசாரம்கூட செய்ய முடியாத சூழலில்தான் இந்தத் தேர்தல் நடைபெற்றது. ஆகவே இவ்வளவு பெரிய வெற்றி அவருக்குக் கிடைத்திருக்கிறது" என்கிறார் அகிலன் கதிர்காமர். பட மூலாதாரம்,GETTY IMAGES அகிலன் சுட்டிக்காட்டுவதைப்போல, பல பாரம்பரிய, மூத்த தலைவர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தே ஒதுங்கிக் கொண்டார்கள். உள்நாட்டுப் போரின் முடிவுக்கு முன்பும் பின்பும் இலங்கை அரசியலில் பெரும் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்து மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சமல் ராஜபக்ஷவின் மகன் ஷஷிந்திர குமார ராஜபக்ஷ மட்டுமே தேர்தலில் போட்டியிட்டார். அவரும் தோல்வியைத் தழுவினர். ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைச் சந்தித்த எதிர்க்கட்சிகள், மீண்டெழுவதற்கு முன்பே நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தி, அந்த வெற்றியின் அலையிலேயே இந்த வெற்றியைப் பெற்றுவிட்டார் அநுரகுமார என்கிறார் தனபாலசிங்கம். "எதிர்க்கட்சிகள் தங்களை ஒரு வலுவான சக்தியாக முன்வைக்கவில்லை. மாறாக, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் அனுபவமில்லாதவர்கள் என்பது போன்ற குறைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இவர்களைத் தேர்வுசெய்தால், 'எல் போர்ட்' நாடளுமன்றம் என்றுதான் பெயர் வைக்க வேண்டும் என்றார்கள். இவர்களைத் தேர்வு செய்தால் மீண்டும் பொருளாதார வங்குரோத்து நிலை ஏற்படும் என்றார். ஆனால், மக்கள் தெளிவாக இருந்தார்கள். இது எதையுமே காதுகொடுத்துக் கேட்கவில்லை" என்கிறார் தனபாலசிங்கம். பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் வடக்கும் கிழக்கும் சொல்லும் செய்தி என்ன? வடக்கிலும் கிழக்கிலும் தேசிய மக்கள் சக்திக்குக் கிடைத்த வெற்றி, பல செய்திகளை குறிப்பிட்டுக் காட்டுவதாகச் சொல்கிறார் அகிலன். "வடக்கிலும் கிழக்கிலும் ஒரு தேசியக் கட்சி இவ்வளவு பெறிய வெற்றியைப் பெற்றது இதுதான் முதல் முறை. இதற்குக் காரணம், அங்கிருந்த தமிழ் தேசியவாத அரசியல்வாதிகளால் எந்தப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வையும் முன்வைக்கவில்லை. உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு, பல்வேறு நெருக்கடிகளை அங்கிருந்த மக்கள் எதிர்கொண்டார்கள். கொரோனா காலகட்டத்திலும் அதற்குப் பிந்தைய பொருளாதார நெருக்கடியின்போதும் அவர்களால் எந்தத் தீர்வையும் முன்வைக்க முடியவில்லை. எந்த நிவாரணத்தையும் தர முடியவில்லை. இந்த பொருளாதார நெருக்கடி வடக்கை பெரிதாக பாதிக்காது என்றெல்லாம்கூட சொன்னார்கள். ஆகவே, தமிழ் தேசியத் தலைமை மீதான கோபத்தில்தான் இப்படி ஒரு தீர்ப்பைத் தந்திருக்கிறார்கள்" என்கிறார் அகிலன் கதிர்காமர். இப்போது மிகப் பெரிய வெற்றியை தேசிய மக்கள் சக்தி பெற்றிருந்தாலும், பொருளாதாரத்தை மீட்பது, விலைவாசியைக் குறைப்பது, ஐஎம்எஃப் விதித்துள்ள பொருளாதார இலக்குகளை எட்டுவது போன்றவை மிகப் பெரிய சவாலாகவே இருக்கும். புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21-ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8ygp2nllqo
-
மக்கள் நிராகரித்தால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வரமாட்டேன்; சுமந்திரன் திட்டவட்டம்
தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் - சுமந்திரன் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கட்சி என்ன தீர்மானம் எடுக்கும் என நான் முன்கூட்டியே தெரிவிக்க முடியாது, கட்சியினது முடிவு இறுதியானதாகயிருக்கும். நான் கட்சியின் சகல முடிவுகளிற்கும் கட்டுப்பட்டவனாகாயிருக்கின்றேன். இந்த விடயத்தில் நான் எனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவாக சொல்லியிருக்கின்றேன். மக்கள் முன்வந்து தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்படாத நிலையில் தேசியபட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வதை நான் விரும்பவில்லை என்பதை நான் தெளிவாக தெரிவித்திருக்கின்றேன். https://www.virakesari.lk/article/198881
-
பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் எனக்கில்லை - அங்கஜன் இராமநாதன்
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் அதேநேரத்தில், காலங்காலமாக பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் எனக்கில்லை என்பதோடு என்னால் எனது சொந்த விடயங்களை கவனிக்க கிடைத்த சந்தர்ப்பமாகவும் இதனை எடுத்துக் கொள்கிறேன் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று வெள்ளிக்கிழமை (15) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதோடு பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த காலங்களில் நாம் மக்களுக்காக பொறுப்பெடுத்து மேற்கொண்ட பொறுப்புகளை மக்கள் எம்மிடமிருந்து எடுத்து புதியவர்களின் கைகளுக்கு கொடுத்துள்ளனர். இம்முடிவை வழங்கிய மக்களிடம் நாம் எவ்வித வெறுப்புகளும் கொள்ளப்போவதில்லை. பல்வேறு தேவைகளோடு வாழும் மக்கள் அவற்றை தீர்ப்பதற்கான வழியை புதிதான முறையில் தேர்ந்தெடுத்த ஓர் தீர்மானமாகவே கருகிறோம். நாம் பதவிகளில் இருக்கும்போது எம்மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் மக்களுடைய தேவைகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்தோம் என்ற மனத்திருப்தி முழுமையாக உள்ளது. ஏனையவர்களைப்போன்று எதையும் செய்யாது காலத்தைக் கடத்திய அரசியல்வாதியாக நான் இருக்கவில்லை என்பது நிதர்சனமானது. இந்த பொறுப்பை மக்கள் இப்போது புதிதாக கையளித்துள்ளவர்களும் இப்பணிகளை சிறப்பாக தொடர்வார்கள் என்ற நம்பிக்கையே மக்களிடத்தில் உள்ளது. இத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், காலங்காலமாக பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் எனக்கில்லை என்பதோடு என்னால் எனது சொந்த விடயங்களை கவனிக்க கிடைத்த சந்தர்ப்பமாகவும் இதனை எடுத்துக் கொள்கிறேன். அதேநேரத்தில் மக்களுக்கு என்னால் ஆற்றக்கூடிய சேவைகளை அங்கஜன் இராமநாதன் என்ற தனிநபராக தொடர்ந்தும் மேற்கொள்வேன். தோல்விகளை சந்திக்காதவர்கள் ஒருபோதும் வெற்றியாளராவதில்லை. அதேநேரத்தில் தோற்றாலும் விட்டுச்செல்வதுமில்லை. இத்தேர்தலில் எம்மீது நம்பிக்கையோடு வாக்களித்த 12,427 யாழ், கிளிநொச்சி மாவட்ட வாக்காளர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198880
-
அநுர குமாரவின் கட்சி தமிழர் பகுதிகளை கைப்பற்றியது எப்படி? - தமிழ் கட்சிகள் வரலாறு காணாத பின்னடைவு
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக இலங்கையில் மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய கட்சியொன்று தமிழர் பகுதிகளில் அதிகாரத்தைக் கைப்பற்றிய முதலாவது சந்தர்ப்பமாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் அமைந்துள்ளது. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் தமிழ் அரசியல் கட்சிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள தருணமாக இது கருதப்படுகிறது. குறிப்பாக மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் தவிர்த்து, ஏனைய தமிழர் தேர்தல் மாவட்டங்கள் அனைத்திலும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் மீதான தமிழ் மக்களின் விரக்தியும் அதிருப்தியும் ஒரு முக்கியக் காரணம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா. அதோடு, வடக்கில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஒரு வாரத்திற்கு முன்னர் ஆற்றிய உரை, அங்குள்ள மக்களின் மனங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தான் கருதுவதாகக் கூறுகிறார் அவர். இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழர் பிரதேசங்களில் எப்படி இருக்கிறது? தமிழ்க் கட்சிகளின் நிலை என்ன? யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இணைந்த வகையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் அமைந்துள்ளது. இதன்படி, 593,187 வாக்காளர்களைக் கொண்ட யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில், இம்முறை 358,079 வாக்காளர்களே வாக்களித்திருந்தனர். அவர்களில் 325,312 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாகக் கருதப்பட்டதுடன், 32,767 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இதில் தேசிய மக்கள் சக்தி 80,830 வாக்குகளைப் பெற்று, மூன்று ஆசனங்களைத் தன்வசப்படுத்தியது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 63,327 வாக்குகளைப் பெற்று, ஒரு ஆசனத்தையும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 27,986 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தையும் பெற்றுள்ளன. சுயேச்சைக் குழு 17க்கு, 27,855 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், அந்தக் குழுவிற்கும் ஓர் ஆசனம் கிடைத்துள்ளது. வன்னி மாவட்டம் மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இணைந்த வகையில், வன்னி தேர்தல் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, 306,081 வாக்காளர்களை கொண்ட வன்னி தேர்தல் மாவட்டத்தில், இம்முறை 211,140 வாக்காளர்களே வாக்களித்திருந்தனர். இவர்களில் 195,886 வாக்குகளே செலுப்படியான வாக்குகளாகக் கருதப்பட்டதுடன், 15,254 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 39,894 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், 2 ஆசனங்களை அந்தக் கட்சி கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்திக்கு 32,232 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், அந்தக் கட்சிக்கு ஓர் ஆசனம் கிடைத்துள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு 29,711 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளையில், அந்தக் கட்சிக்கு ஓர் ஆசனம் கிடைத்துள்ளது. இதுபோக, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு மற்றும் இலங்கைத் தொழிலாளர் கட்சிக்குத் தலா ஓர் ஆசனம் கிடைத்துள்ளன. வன்னி தேர்தல் மாவட்டத்தின் மன்னார் தொகுதியை 15,007 வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. தேசிய மக்கள் சக்திக்கு மன்னார் தேர்தல் தொகுதியில் 7,948 வாக்குகள் கிடைத்துள்ளன. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு 7,490 வாக்குகள் கிடைத்துள்ளன. வவுனியா தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்திக்கு 19,786 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், வவுனியா தேர்தல் தொகுதியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு 5,575 வாக்குகள் கிடைத்துள்ளன. ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு 5,886 வாக்குகள் கிடைத்துள்ளன. ஜனநாயக தேசிய கூட்டணிக்கு 6,556 வாக்குகள் கிடைத்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி 10,736 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், இலங்கைத் தொழிலாளர் கட்சி வவுனியா தேர்தல் தொகுதியில் 8,354 வாக்குகளைப் பெற்றுள்ளது. முல்லைத் தீவு தேர்தல் தொகுதியில் 14,297 வாக்குகளைப் பெற்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி முன்னிலை வகிக்கிறது. தேசிய மக்கள் சக்திக்கு முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 7,789 வாக்குகளும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு 5,133 வாக்குகளும் கிடைத்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி 4,664 வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 96,975 வாக்குகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. தேசிய மக்கள் சக்தி 55,498 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றது. அடுத்தபடியாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 40,139 வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு மூன்று ஆசனங்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்குத் தலா ஒவ்வொரு ஆசனங்களும் கிடைத்துள்ளன. மொத்தம் 449,686 வாக்காளர்களைக் கொண்ட மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில், இம்முறை 302,382 வாக்காளர்களே வாக்களித்திருந்தனர். இவர்களில் 287,053 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாகக் கருதப்பட்டதுடன், 15,329 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. திருகோணமலை மாவட்டம் திருகோணமலை மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி பாரிய வெற்றியைப் பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி, 87,031 வாக்குகளைப் பெற்று, இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 53,058 வாக்குகளைப் பெற்றதோடு, ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 34,168 வாக்குகளைப் பெற்று, ஒரு ஆசனத்தை கைப்பற்றியது. மொத்தம் 315,925 வாக்காளர்களை கொண்ட திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில், இம்முறை 218,425 வாக்காளர்களே வாக்களித்திருந்தனர். இவர்களில் 204,888 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாகக் கருதப்பட்டதுடன், 13,537 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. திகாமடுல்ல மாவட்டம் (அம்பாறை) திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களைக் கைப்பற்றி, வெற்றியீட்டியுள்ளது. தேசிய மக்கள் சக்திக்கு திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 146,313 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 4 ஆசனங்கள் கிடைத்துள்ளன. இரண்டாவது இடத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு 46,899 வாக்குகளும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு 33,911 வாக்குகளும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு 33,632 வாக்குகளும் கிடைத்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகியவற்றுக்குத் தலா ஒவ்வொரு ஆசனங்கள் கிடைத்துள்ளன. இதுபோக மலையகத் தமிழர்கள் அதிகளவில் வாழும் நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தி தமிழர் பகுதிகளை கைப்பற்றியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் தமிழர் பகுதிகளில் இதுவரை காலம் தமிழ் அரசியல் கட்சிகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், வரலாற்றில் முதல் முறையாக மட்டக்களப்பு தவிர அனைத்து தமிழர் பகுதிகளை அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. அநுர குமாரவின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக, தமிழர்களுக்கு தமிழ் அரசியல்வாதிகள் மீதுள்ள விரக்தியும் அதிருப்தியுமே காரணம் என்று பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா கூறினார். “தென்னிலங்கை மக்களைப் போலவே, வட, கிழக்கு தமிழ் மக்களும் மாற்றத்தை விரும்பியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில்கூட, ஐக்கிய மக்கள் சக்திக்குக் கணிசம் ஆன ஆதரவு வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில் இருந்தாலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் நேரடியாகவே தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். இது, அவர்கள் மாற்றத்தை விரும்பியதைக் காட்டுகிறது,” என்று தெரிவித்தார் சிவராஜா. பட மூலாதாரம்,R.SIVARAJA மேலும், தமிழர் பிரதேங்களில் தமிழ் அரசியல் கட்சிகள் எல்லா இடங்களிலும் பிரிந்து போட்டியிட்டதால், தமிழ் கூட்டமைப்பு இரண்டாக பிரிந்து, அதிலும் சுயேட்சை குழுக்கள் என பிரிந்து பல கோணங்களில் சென்றன. இதைப் பார்த்து அதிருப்திக்கு ஆளான மக்கள் தங்களுடைய கருத்தைத் தேர்தல் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார் அவர். குறிப்பாக வடக்கில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஒரு வாரத்திற்கு முன்னர் ஆற்றிய உரை, அங்குள்ள மக்களின் மனங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்ககூடும் எனவும் அவர் குறிப்பிடுகிறார். “நாங்கள் உங்களுக்குரிய தீர்வை பெற்றுக்கொடுப்போம். வடக்கிற்கும், தெற்கிற்கும் வித்தியாசம் இல்லாத தீர்வை தருவோம்’ என்று ஜனாதிபதி அங்கு ஆற்றிய உரை மக்கள் மனதில் பெரிதாக எடுப்பட்டிருக்கின்றது.” ஆகையால், ஜனாதிபதி தலைமையிலான கட்சிக்கும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கலாமே என்று மக்கள் தீர்மானித்துள்ளதாகத் தெரிவதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் சிவராஜா. மேலும், மலையகத்திலும் இதே நிலைதான் காணப்படுவதாக அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cn7mjj88lyvo