Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Everything posted by ஏராளன்

  1. வெளிநாட்டுத் தலையீடின் கீழ் எமது நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. வெளிநாட்டு நீதிமன்றங்களால் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது என்பதை நாங்கள் தெளிவாகச் சொல்கின்றோம். சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எட்டி உதைத்து விட்டு இன்று உலக நாடுகள் செயற்படுகின்றன. இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "தேசிய மக்கள் சக்திக்கு சிங்களக் கட்சி என்ற ஒரு குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றது. நாங்கள் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் எமது கட்சி வேட்பாளர்கள் அனைவரும் யாழ்ப்பாணம், கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இதேபோல் எங்கள் மேல் மற்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தியானது சர்வதேச விசாரணைக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. எங்கள் மேல் விமர்சனங்களை முன்வைப்பவர்களிடம் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். அமைச்சரவைத் தீர்மானங்களை முழுமையாக வாசித்துவிட்டு எங்கள் மீது விமர்சனங்களை முன்வையுங்கள். எங்களுக்கு எதிராக தமிழ் மக்களிடம் கூறுவதற்கு எந்த விடயமும் கிடையாது. இதனால் சர்வதேச விசாரணை என்ற விடயத்தை இவர்கள் கையில் எடுத்திருக்கின்றார்கள். தமிழ் மக்களை இனவாத ரீதியாகச் சூடாக்கி அதில் குளிர்காய்கின்ற வேலையைத் தமிழ்க் கட்சிகள் செய்துவருகின்றன. எங்கள் மீது இனவாத சாயத்தைப் பூசுகின்ற நடவடிக்கைகளில் அவர்கள் இறங்கியுள்ளார்கள். வெளிநாட்டுத் தலையீட்டின் கீழ் எங்களுடைய நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. வெளிநாட்டு நீதிமன்றங்களால் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது என்பதை நாங்கள் தெளிவாகச் சொல்கின்றோம். சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எட்டி உதைத்துவிட்டு இன்று உலக நாடுகள் செயற்படுகின்றன. உதாரணமாக பலஸ்தீன பிரச்சினையைக் குறிப்பிடலாம். அங்கு இலட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இதற்கு எதிராக சர்வதேச நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கியுள்ளபோதும் அதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது. இப்படியான நிலைமை காணப்படுகையில் சர்வதேச நீதிமன்றத்திடம் சென்று நீதியைப் பெறுவது என்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதற்கு ஒப்பானது. மேலும், புலம்பெயர் தமிழர்களிடமும் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம். ஒரு சில அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தாங்கள் புலம்பெயர் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் எனக் கூறி அரசியல் சித்து விளையாட்டுக்களை மேற்கொள்கின்றார்கள். குறித்த கட்சிகளுக்கு எவ்வாறு நிதி சேகரிப்பு நடைபெறுகின்றது என்பது சந்தேகத்துக்கிடமானதாகும். வெளிநாடுகளில் இருந்து பணத்தைக் கொண்டு வந்து 70 வருடங்களுக்கு மேலான போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகின்ற கீழ்த்தரமான அரசியலை சில கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் செய்கின்றன. இவை அருவருக்கத்தக்க செயற்பாடுகளாகும். எனவே, புலம்பெயர் தமிழர்களிடம் ஒன்றைக் கேட்டுக்கொள்கின்றோம் எங்களுடைய பெயரைத் துஷ்பிரயோகம் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம் என்றார். https://www.virakesari.lk/article/197292
  2. முல்லைத்தீவு, முத்தையன்கட்டு பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் மரணமடைந்த சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முத்தையன்கட்டு குளப்பகுதியில் நேற்றையதினம் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையை விரட்டி வந்துள்ளனர். அவர்களுடன் இணைந்து குறித்த இளைஞனும் யானையை விரட்டியுள்ளதாக தெரியவருகின்றது. இதன்போது இந்த இளைஞனை யானை தாக்கியுள்ளது. அதனையடுத்து ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இளைஞன் மரணமடைந்துள்ளார். மரணமடைந்த குறித்த இளைஞன் ஒட்டுசுட்டான் முத்துவிநாயகபுரம் பகுதியில் வசிக்கும் 21 வயதுடையதுடையவர் ஆவார். மரணமடைந்த இளைஞனின் சடலம் ஒட்டுசுட்டான் வைத்தியாசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள். https://www.virakesari.lk/article/197295
  3. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகள் சலுகைகள் நிச்சயமாக இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார். பத்தேகமவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பது கவனித்துக்கொள்வது மக்களின் வேலையில்லை என தெரிவித்துள்ள அவர் சுற்றுநிரூபங்கள், நாடாளுமன்ற சட்டங்கள் அரசமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளுக்கு விசேட சலுகைகள் சிறப்புரிமைகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அந்த சுற்றுநிரூபங்களில் சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவருவது குறித்து கவனம் செலுத்துகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197299
  4. இலங்கையின் விண்ணப்பத்தை நிராகரித்த பிரிக்ஸ் அமைப்பு பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் முழு உறுப்பினராக சேர்வதற்கான இலங்கையின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார். அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளை ஒன்பது என்ற எண்ணிக்கையில் தக்கவைக்கும் முடிவைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவரட குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், அமைப்பின் பங்காளி உறுப்பு நாடாக இணைவதற்கு இலங்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இலங்கையின் அமைச்சரவை அத்துடன், உறுப்பு நாடுகளுக்கு நிதி உதவி வழங்கும் பிரிக்ஸின் புதிய அபிவிருத்தி வங்கியில் இணைவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹேரத் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, புதிய அபிவிருத்தி வங்கியில் இணைவதற்கான யோசனைக்கு இலங்கையின் அமைச்சரவை விரைவில் அங்கீகாரம் வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் (BRICS) என்பது உலகின் முன்னணியாக வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களின் சக்திவாய்ந்த குழுவாகும். 16ஆவது உச்சி மாநாடு பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, குறித்த நாடுகளின் பெயர்களது முதல் எழுத்துக்களை கொண்டு பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவை பிரிக்ஸ் உறுப்பு நாடுகளாகும். இந்தநிலையில், பிரிக்ஸ் அமைப்பின் தலைவராக அடுத்த ஆண்டு பிரேசில் பொறுப்பேற்கும். பிரிக்ஸின் 16ஆவது உச்சி மாநாடு, ரஸ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமையில் ரஸ்யாவில் நடைபெற்றது. https://tamilwin.com/article/brics-rejected-sri-lanka-s-request-1730023922
  5. அண்மையில் அறுகம் குடா பகு­தியில் இஸ்ரேலிய சுற்­றுலா பய­ணிகள் மற்றும் அவர்­க­ளது தலங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­படும் அச்­சு­றுத்தல் உள்ள­தாக உளவுத்தக­வல் ஒன்று கிடைக்கப்பெற்­றது. இந்நிலையில், அறுகம் குடா உள்ளிட்ட பல உல்லாச பயணிகளுக்கான விடுதிகளுக்கும் கூட தற்போது பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வெளிநாட்டு நாணயங்கள் மூலம் கிடைக்கப்பெறும் வருமானமானது பெருமளவு உல்லாச பயணிகளின் வருகையிலேயே தங்கியிருக்கின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில சுற்றுலா தளங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையால் டொலரின் வருமானம் பாதிப்புக்குள்ளாகுமா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறிருக்கையில், அரசாங்கத்திலுள்ள அதிகாரிகளுக்கு குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் முன்னதாகவே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் இதன் விளைவுகளை கருத்திற் கொண்டு அதெனை மறைத்து விட்டதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் முக்கிய தகவல்களுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான ஊடறுப்பு நிகழ்ச்சி, https://tamilwin.com/article/arugam-bay-issue-udaruppu-lankasri-1730045113
  6. இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. ராவல்பிண்டியில் நடைபெற்று வந்த 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 267 ஓட்டங்களும் பாகிஸ்தான் 344 ஓட்டங்களும் எடுத்தன. 77 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 9 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 24 ஓடங்கள் எடுத்தது. ஸாக் கிராவ்லி 2, டென் டக்கெட் 12, ஆலி போப் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர். ஜோ ரூட் 5, ஹாரி புரூக் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி நோமன் அலி, சஜித் கான் ஆகியோரது சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 37.2 ஓவர்களில் 112 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோ ரூட் 33, ஹாரி புரூக் 26, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3, ஜேமி ஸ்மித் 3, கஸ் அட்கின்சன் 10, ரேஹான் அகமது 7, ஜேக் லீகச் 10 ஓட்டங்களில் நடையை கட்டினர். பாகிஸ்தான் அணி தரப்பில் நோமன் அலி 6, சஜித் கான் 4 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து 36 ஓட்டங்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 3.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சைம் அயூப் 8 ரன்னில் ஜேக் லீச் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷான் மசூத் 6 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 23 ரன்களும், அப்துல்லா ஷபிக் 5ரன்களும் சேர்த்தனர். முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் விளாசிய சவுத் ஷகீல் ஆட்ட நாயகனாக தேர்வானார். பந்து வீச்சில் 19 விக்கெட்களையும், பேட்டிங்கில் 72 ஓட்டங்களுடன் சேர்த்த சஜித் கான் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருந்தது. மசூத் தலைமையில் முதல் வெற்றி பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் 2021-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. கேப்டன் ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 6 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து இரு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. அவரது தலைமையில் பாகிஸ்தான் வென்றுள்ள முதல் தொடர் இதுவாகும். ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடம் 3-0 என்ற கணக்கிலும், வங்கதேசத்திடம் 2-0 என்ற கணக்கிலும் டெஸ்ட் தொடரை இழந்திருந்தது. தற்போது தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. https://thinakkural.lk/article/311226
  7. புதிதாய் மலர்ந்துள்ள சீன - இந்திய உறவு லோகன் பரமசாமி மிகவேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டான பிறிக்ஸ் நாடுகள் சர்வதேச அரசியலில் தம்மை பலம் கொண்ட ஒருதரப்பாக காட்டிக்கொள்வதில் நடிக்கின்றனவா? அல்லது உண்மையாகவே தமக்குள்ளே காணப்படும் அனைத்து வேற்றுமைகளையும் மறந்து மேலை நாடுகளின் பலத்தை முறியடிக்க வேண்டும் என்பதில் உறுதிகொண்டு செயற்படுகின்றனவா என்பதை அறிவதில் சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் மிகவும் அதிகமான கரிசனையைக் காண்பித்து வருகின்றனர். பிரேசில் ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள், மேலும் சில வலிமை வாய்ந்த, வளர்ந்து வரும் நாடுகளையும் இணைத்து கொண்டு சர்வதேச அரங்கை தம் கைவசம் வைத்து கொள்வதில் மிகவேகமாக நகர்ந்து வருகின்றன. அதேவேளை இந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நான்கு வருடகால பதற்ற நிலையை தணித்துக் கொள்வதற்கு ஏற்ற வகையிலானதொரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக இரு தரப்பும் அறிவித்துள்ளன. இவ்வொப்பந்தம் குறித்த அறிக்கை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாரம் இடம்பெறவிருக்கும் பிறிக்ஸ் மாநாட்டிற்கு செல்வதற்கு சற்று முன்பாக வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ரஷ்யாவில் வோல்கா நதிக்கரையில் இருக்கும் கஸான் நகரில் இடம் பெறும் பிறிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடியும் சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்னும் கடந்த புதன்கிழமை சந்தித்தார்கள். இவ்விரு நாடுகளின் தலைவர்களும் அருகருகே புதிய அங்கத்தவர்களுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர். தமக்குள்ளே இருக்கும் பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு கண்டு விட்ட நிலையை சர்வதேச நாடுகளுக்கு எடுத்து சொல்லும் வகையில் இந்த அறிக்கை வெளியிடபட்டதா என்றொரு கேள்வி எழுகின்றது. ஆசியாவின் இரண்டு மிகப்பெரிய நாடுகளான இந்தியாவும் சீனாவும் 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீரின் லடாக்; இடம்பெற்ற கைகலப்பு யுத்தத்தில் இருபது இந்திய இராணுவ வீரர்களும் நான்கு சீன இராணுவத்தினரும் கொல்லபட்டதாக அறிவிக்கபட்டது. அன்றிலிருந்து இருதரப்பு இராணுவமும் முறுகல் நிலையிலேயே இருந்தன. இருந்தபோதிலும் பதற்ற நிலையை தணித்துக் கொள்ளும் வகையில் இருதரப்பிலும் இராஜதந்திர மட்டத்திலும் இராணுவ மட்டத்திலும் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வந்தன. கடந்த வாரம் நிலையெடுத்திருக்கும் இருதரப்பு இராணுவத்தினரையும் மீளப்பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தம் நிறைவடைந்து விட்டதாக தொலைகாட்சிக்கு பேட்டி அளிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து இந்தியத்தரப்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிசிறியின் அறிக்கையால் இது உறுதி செய்யபட்டிருந்தது. 2020ஆம் ஆண்டு எழுந்த பதற்றநிலைக்கான தீர்வு காணப்பட்டுள்ளது என்பதுடன் நிலைமைகள் நடைமுறைக்கு சாதகமான வகையில் நகர்ந்து வருவதாகவும் பிரதமர் மோடியும், ஜனாதிபதி ஷியும் தமது சந்திப்பின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். மேலதிக திட்டங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நகர்வுகள் குறித்து சரியான தகவல்கள் எதுவும் இன்னமும் வெளியிடப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான துருப்புகளும், தாக்குதல் கலன்களும் விமானங்களும் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளதாக்கு கைகலப்பு யுத்தத்தை தொடர்ந்து நிறுத்தி வைக்கபட்டிருந்தன. இவற்றை மீளப்பெற்றுக்கொள்வதில் இந்தியத் தரப்பு சாதகமான சமிக்ஞையைக் காண்பித்துள்ளது. இந்தியப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான சிந்தனையாளர்களும் இதனையொரு வரவேற்கத்தக்க விவகாரமாகவே காண்கின்றனர். அதேவேளை சீனத் தரப்பில், இவ்வொப்பந்தம் குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் குறிப்பிடுகையில், ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்றார். இதனையே படைகளைப் பின் வாங்கிக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான நிபுணர்கள் குழு புதுடில்லியை கேட்டுக் கொள்வதாகவும் கூறபட்டது. இது, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் சாதகமாக்குவதற்கும் நீண்ட காலத்திற்கு கொண்டு செல்வதற்குமான முன்னேற்றகரமானதொரு நகர்வாகக் கூறப்பட்டுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் தனது ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அண்மைய காலங்களில் இந்தியாவும் சீனாவும் எல்லை விவகாரங்கள் குறித்து இராஜதந்திர ரீதியாகவும் இராணுவ தொடர்புகள் ஊடாகவும் நாடாத்திய பேச்ச வார்த்தைகளின் பயனாக ஒரு தீர்வை கண்டுள்ளன என்றார். அத்துடன், இந்தியாவுடன் தீர்க்கமான மேலதிக வளர்ச்சியைக் காண்பதிலும் தீர்வை முழு மனதுடன் நடைமுறைப் படுத்தவதிலும் சீனத் தரப்பு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார். சீனச் சிந்தனைத் தரப்புக்களும் இது நிச்சயமாக சீன இந்திய உறவை மேம்படுத்தி கொள்வதற்கான பாரியதொரு முன்னேற்றமே எனக் கூறியுள்ளனர். அதேவேளை சீனத்தரப்பில் கூறபட்டு வரும் பத்திரிகை தகவல்களின் படி கடந்த காலங்களில் இடம்பெற்ற சீன இந்திய உறவில் எற்பட்ட முறிவு ஒரு பொருளாதார நலன்களுக்கான பின்னடைவாகவே பார்க்கபடுகிறது. இது இந்தியாவில் சீன எதிர்ப்புவாதத்தையும் தேசியவாத வசைப்பேச்சுக்களையும் ஊக்குவித்தாகவும் இந்தியாவில் இயங்கும் சீன நிறுவனங்களுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளையும் சீன கம்பனிகளை கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தம் நிலையையும் ஏற்படுத்தியது. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்பையும் நிறுத்தி வைத்திருந்ததாக சீனத் தரப்பால் கருதப்படுகிறது. இந்தியாவின் முதன்மை இறக்குமதி பொருட்களைக் கொண்ட நாடுகளில் சீனா உள்ளது. சுமார் 56.29பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்கள் இவ்வருடம் ஏப்பிரல் மாத்திலிருந்து செப்டெம்பர் மாதம் வரை சீனாவிடமிருந்து இறக்குமதியாகி உள்ளது. இது சீனாவுக்கு இந்திய மிகப்பெரும் சந்தைப்படுத்தல் தளம் என்பதையே காட்டிநிற்கின்றது. சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவை பதிலீடு செய்வதற்கான முதன்மை உற்பத்தி நாடாக தன்னை ஆக்கி கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. ஆனால் இதற்கு இந்தியா தன்னையொரு சீனாவுடனான நட்பு நாடாக வைத்திருப்பதன் ஊடாகவே முடியும் என்பது சீனாவின் பார்வையாக உள்ளது. ஆனால் அமெரிக்க ஆய்வாளர்களின் பார்வை சீன, இந்திய தரப்புகளின் பார்வையில் இருந்த முற்றிலும் வேறுபட்டதொரு விடயமாக உள்ளது. நாடுகளின் வெளியுறவுத்துறை குறித்த ஆய்வுகளை வெளியிடும் புகழ் பெற்ற அமெரிக்க சஞ்சிகையான ‘பொரின்பொலிசியில்’ செல்வாக்கு மிக்க ஆய்வாளர் மைக்கல் கூகெல்மன் என்பவர், “ஒரு பாதுகாப்பு ரோந்துகளை தவிர்த்துக் கொள்ளும் ஒப்பந்தம் வர்த்தக நலன்களை கொண்டு வரலாம். ஆனால் அதற்காக ஒட்டுமொத்த சீன, இந்திய உறவின் நெகிழ்ச்சித் தன்மையாக அதனைக் கண்டு விட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கும் மேலாக சீன, இந்திய எல்லைகளில் இராணுவத்தினர் மத்தியில் நம்பிக்கையீனம் மிகவும் வலுப்பெற்றதாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு, இவை எல்லாவற்றிற்கும் மேலாக சீனா தெற்காசிய நாடுகள் மத்தியல் தனது செல்வாக்கை முன்நகர்த்தி வருகிறது. அத்துடன் இந்து சமுத்திரத்திலும் மிகவும் கசப்பான போட்டிநிலை உள்ளது. இவை அனைத்தம் தொடர்ச்சியாக இருந்த வண்ணமே உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆக அமெரிக்கத் தரப்பு ஆசியப்பிராந்தியத்தில் சமாதான சூழல் ஏற்படும் என்பதில் அதிக நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் பிறிக்ஸ் நாடுகளின் கூட்டு மேலை நாடுகளுக்கு சாவாலாக உண்மையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் மேலும் இறுக்கமான சமாதான முன்னகர்வுகளை எடுத்துக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருப்பதையே இருப்பதையே வெளிப்படுத்தி நிற்கிறது. https://www.virakesari.lk/article/197258
  8. சூடானின் துணை இராணுவ ஆதரவுப் படைகள், எல் கெசிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குறைந்தது 124 பேரைக் கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது அந்த நாட்டில் இடம்பெற்று வரும் 18 மாத காலப் போரின் மிகக் கொடிய சம்பவங்களில் ஒன்றாகும் என்று கருதப்படுகிறது. அத்துடன் குறித்த மாநிலத்தில் நடந்த தாக்குதல்களில் மிகப்பெரியது என்றும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். உயர் பதவியில் இருந்த Abuagla Keikal என்ற துணை இராணுவ அதிகாரி ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டின் இராணுவத்திடம் சரணடைந்ததைத் தொடர்ந்து, சரணடைந்த அதிகாரி வசித்து வந்த விவசாய கிராமத்தின் மீது இந்த பழிவாங்கும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சூடானில் இடம்பெற்று வரும் போரால் 11 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் நாட்டின் சில பகுதிகளை கடுமையான பசி அல்லது பஞ்சத்துக்கும் தள்ளியுள்ளது. 2021 இல் நாட்டில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் அங்கு உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்தது. https://thinakkural.lk/article/311213
  9. மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் ஜாதகம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த நிலையில் அவர்கள் பணத்தை கொடுக்க குடிக்க நீர் கேட்டுள்ளனர். இதன் போது அவர்கள் குடிக்க நீர் கொடுத்து உள்ளனர்.இதன் போது தான் ஜாதகம் பார்த்து கூறுவதாக கூறி பலவந்தப்படுத்தி வீட்டில் இருந்த இருவருக்கு ஜாதகம் பார்த்துள்ளார். இதன் போது குறித்த இருவருக்கும் சுய நினைவை இழக்கச் செய்யும் வகையில் மருந்து பூசிய நிலையில் குறித்த இருவரும் சுய நினைவை இழந்த நிலையில் குறித்த பெண் அவர்களில் ஒருவர் அணிந்திருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக் கொடியை அபகரித்துச் சென்றுள்ளார். மாலை 5 மணிக்கு பின்னர் அவர்களுக்கு சுய நினைவு திரும்பிய நிலையில் குறித்த விடயம் தெரிய வந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதேவேளை சந்தேகிக்கப்படும் குறித்த பெண் சிறுவன் ஒருவருடன் குறித்த பகுதியில் வீதியால் சென்ற சி்.சி.ரி.வி. காணொளி கட்சியும் வெளியாகி உள்ளது. https://www.virakesari.lk/article/197264
  10. ஜனாதிபதியுடனான எமது சந்திப்பு பலருக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கலாம் என்கிறார் டக்ளஸ் ஜனாதிபதி அனுரவின் அணுகுமுறையிலும் செயற்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்தவர் காத்தார் சின்னக்குளம் பகுதியில் உள்ள கட்சியின் தேர்தல் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்திருந்தார். அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய நல்லிணக்கம் ஊடாகவே எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும். புதிய நாடாளுமன்றத்தில் கூடிய ஆசனங்களை பெறுவதன் மூலம் ஆட்சி அமைப்பவர்களுடன் நாங்களும் பங்குகொள்வதன் ஊடாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது அரசியல் இலக்கை அடைவதற்காக அத்திசையை நோக்கி பயணிக்கலாம் என்ற வகையில் பத்து மாவட்டங்களில் இம்முறை போட்டியிடுகின்றோம். இதனூடாக நான்கு அல்லது ஐந்து ஆசனங்களை பெறுவது எமது இலக்காக உள்ளது. இதுவரை நான் எட்டு ஜனாதிபதிகளை சந்தித்துள்ளேன். ஆனால் இவர் என்னைவிட வயதில் இளைமையானவர், அவரது அணுகு முறையிலும் செயற்பாட்டிலும் நல்லதொரு மாற்றம் தெரிகிறது. எனினும் அதனைப் பொறுத்திருந்துதான் நாங்கள் பார்க்கவேண்டும். நாம் வடக்குக்கிழக்கு தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமை பிரச்சனையை பிரதானமாக முன் வைத்துள்ளோம். இந்த தேர்தலில் எமது கட்சி அதிக ஆசனங்களை பெறுவதற்கான வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்திருந்தார். சிலவேளை இந்தசந்தி்ப்பு பலருக்கு புளியை கரைத்திருக்கலாம். நாங்கள் இருதரப்புமே ஆயுதபோராட்டத்தின் பின்னர் நாடாளுமன்றம் சென்றவர்கள். அந்தவகையில் ஒரு புரிந்துணர்வு இருதரப்பிற்கும் உள்ளது. அவர்களது ஆட்சியில் கலந்துகொள்ள போகிறோமா என்ற விடயத்தினை தேர்தலின் பின்னரே தீர்மானிக்கமுடியும். இதேவேளை எல்பிட்டியவில் தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களும் எதிர்த்தரப்புக்கள் 15 ஆசனங்களையும் பெற்றுள்ளது. அவர்கள் பாராளுமன்றிலும் பெரும்பாண்மை எடுப்பதாக சொல்கிறார்கள். அதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஜனாதிபதித்தேர்தலிலும் கணிப்புகள் எல்லாம் பிழைத்து விட்டது. எனவே பொறுத்திருப்போம்.என்றார். https://thinakkural.lk/article/311229
  11. யூத பிரார்த்தனை மையங்களுக்கு வெளியே குவிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு படையினர் அருகம் குடாவில் இஸ்ரேலிய பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, கொழும்பில் உள்ள யூத பிரார்த்தனை மையங்களுக்கு வெளியே விஷேட அதிரடிப்படையினர் ,விமானப்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர். https://thinakkural.lk/article/311220
  12. பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சஹீர் அஹமட்டின் அழைப்பின் பேரில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச, பிராந்தியத்தில் இராணுவப் பயிற்சியை அவதானிப்பதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தலைமையகத்தில் இரு நாட்டு விமானப்படைத் தளபதிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் விமானப்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இங்கு முதன்மையாக பிராந்திய பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. இரு நாடுகளின் விமானப்படைகளின் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/197277
  13. ஆட்சியாளர்கள் குறித்து தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்கிறார் கஜேந்திரன் ஜே.வி.பி. தொடர்பாக தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் அந்தக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், “தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் இவர்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், பிரசாரங்களை முன்னெடுத்து தமது ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். 75 வருடங்களாக ஆட்சிப் பீடத்தில் இருந்த ஐ.தே.க, ஶ்ரீலங்கா.சு.க, மொட்டுக் கட்சியினர் பெரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நாட்டை சின்னாபின்னமாக்கி வங்குறோத்து நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளார்கள். இந்த நிலையிலே சிங்கள மக்களுக்கு நேர்மையாக செயற்பட்ட ஜே.வி.பி. யினர் பல வருடங்களுக்குப் பின் இந்நாட்டின் ஜனாதிபதியாக வந்திருக்கலாம். இவர்கள் அரச புலனாய்வுக்காரர்களுக்கு எவ்வளவு விசுவாசமாக செயற்பட்டிருப்பார்கள் என்பதையும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வடக்குக் கிழக்கிலே பார்பொர்மிட் வழங்கி பெரும் இலஞ்சம் வழங்கப்பட்டதாகவும் அதனை வெளியிடப் போவதாகவும் கூறியவர்கள் அதனைப் பின்னர் ஒழித்துவிட்டார்கள். காரணம் தமக்கு நாடாளுமன்றலே பெரும்பான்மை கிடைக்காத பட்சத்திலே இந்த ஊழல் வாதிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டுமென்பதற்காக அந்த பார் லைசன்ஸ் விவகாரம் ஒழிக்கப்பட்டிருக்கிறது. அதை விட அநுரவுக்கு வாக்களிக்கக் கூடாது சங்குக்கு வாக்களிக்க வேண்டும் என்றவர்கள் தேர்தல் முடிந்து ஒரு வார காலத்துக்குள்ளே ஓடோடிச் சென்று அநுரவின் காலில் விழுந்திருக்கிறார்கள். சங்குக்கு வாக்களித்த மக்களின் கோரிக்கையை முன்வைக்கவில்லை மாறாக தமது ஊழல்களையும் பெற்றுக் கொண்ட சலுகைகளையும் வெளிப்படுத்த வேண்டாம் என்றும் தாம் நாடாளுமன்றிலே உங்களது ஆட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்ற உத்தரவாதத்தையும் வழங்கியதால் தான் அது மூடி மறைக்கப்பட்டிருக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/311218
  14. இஸ்ரேலுக்கு பதிலடி தருவது பற்றி முடிவெடுக்க முடியாமல் திணறும் இரான் - என்ன காரணம்? பட மூலாதாரம்,EPA எழுதியவர்,ஜெரேமி போவென் பதவி,சர்வதேச ஆசிரியர் மத்திய கிழக்கில் இரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அங்கு நிலவும் போர்ப் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இரானின் தலைமைத் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியும் அவரின் முதன்மை ஆலோசகர்களும் எடுத்த முக்கியமான முடிவுகளில் போர் மேலும் விரிவடைவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் என்பது முக்கியமாக அமைந்தது. கடினமான முடிவுகளில் குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளனர். இது, இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்பதற்கு நேரெதிராக உள்ளது. இரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலடி தரப்படும் என்று இஸ்ரேல் ஏற்கனவே எச்சரித்துள்ளது. இரான் பதில் தாக்குதல் நடத்தாத பட்சத்தில் அது பலவீனமாக இருப்பது போல் தோன்றக் கூடும். அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் இஸ்ரேலின் ராணுவ பலம் மற்றும் அரசியல் உறுதிப்பாட்டால் மிரட்டப்பட்டு ஒடுக்கப்பட்டதாக தோற்றமளிக்கும். இஸ்ரேலுக்கு குறைவான அளவுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய முடிவை எடுக்க இரான் தலைவர்களும் அவர்களின் ஆலோசகர்களும் முடிவெடுக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்று மிரட்டல்கள்? இஸ்ரேலின் தாக்குதலுக்கு முன்னும் பின்னும், இரானின் அதிகாரப்பூர்வ ஊடகம் வாயிலாக, இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தும் முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டதாக கூறியது. இஸ்ரேலைப் போன்றே, பாதுகாப்பிற்காக திருப்பித் தாக்கும் உரிமை இருப்பதாக இரான் அறிவித்தது. ஆனால் அதன் பின்விளைவுகள் மிகவும் அதிகமாக இருக்கக் கூடும் என்பதால் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியிருக்கலாம். இஸ்ரேல் தன்னுடைய பாதுகாப்பிற்காக தாக்கலாம் என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்ட பிரிட்டனின் பிரதமர் ஸ்டாமரும் இந்த நிலைப்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார். இரானின் தாக்குதலுக்கு எதிராக, தன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்பதில் தெளிவாக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் "அந்த பிராந்தியத்தில் போர் சூழல் பெரிதாகக் கூடாது. அனைத்து தரப்பினரும் தாக்குதலை நிறுத்த வேண்டும். இந்த தாக்குதலுக்கு இரான் பதிலடி தரக்கூடாது" என்று ஸ்டாமர் கூறினார். அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று இஸ்ரேல் மீது இரான் தாக்குல் நடத்திய பிறகு தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. கடந்த வாரம் இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி துருக்கியின் என்.டி.வி. நெட்வொர்க்கில் பேசும் போது, "இரான் மீது நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலும் சிவப்புக் கோட்டை மீறும் செயலாகும். அதற்கு பதில் கிடைக்காமல் போகாது," என்று கூறினார். இஸ்ரேல் தாக்குதலுக்கு சில மணி நேரத்திற்கு முன்பு, இரானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய், "இரான் மீது இஸ்ரேல் நடத்தும் எத்தகைய தாக்குதலுக்கும் முழு அளவிலான எதிர் தாக்குதல் இருக்கும்," என்று அவர் கூறினார். இஸ்ரேலின் சிறிதளவிலான தாக்குதலுக்கு இரான் பதில் தாக்குதல் நடத்தாது என்று இது தவறாக பொருள்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கினார் அவர். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இஸ்ரேலின் அயர்ன் டோம் வான் பாதுகாப்புக் கவச அமைப்பானது இரானின் அனைத்து தாக்குதல்களையும் முறியடித்தது இரானை தடுமாறச் செய்த இஸ்ரேலின் பதில் தாக்குதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி அன்று 70 வெளிநாட்டினர் உட்பட 1,200 பேரைக் கொன்ற ஹமாஸ் தாக்குதலை இரான் ஆதரித்து வருகிறது என்று இஸ்ரேல் நம்புகிறது. இஸ்ரேல் ஒரு தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்று அஞ்சிய இரான், இஸ்ரேலுக்கு எதிராக ஒரு முழுமையான போரை நடத்த விரும்பவில்லை என்று தொடர்ச்சியாக கூறி வந்தது. அதற்காக, இஸ்ரேலுக்கும் அதன் கூட்டாளிகளுக்கு தனது ஆதரவு ஆயுதக் குழுக்கள் வாயிலாக தொடர்ச்சியாகவும், சில நேரங்களில் கொடூர தாக்குதல்கள் மூலமாக அழுத்தம் தருவதை நிறுத்துவதற்கு இரான் தயாரானது என்று அர்த்தமாகிவிடாது. நேரடியான தாக்குதலுக்கு பதிலாக எதிர்ப்பின் அச்சு என்று வரையறுக்கப்படும் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மூலமாக இஸ்ரேல் மீது இரான் தாக்குதலை நடத்தியது. ஏமனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹௌத்தி அமைப்பு, செங்கடலில் கடல் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி அதனை சீர்குலைத்தது. லெபனானில் இருந்து ஹெஸ்பொலா அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது. இதனால் 60 ஆயிரம் இஸ்ரேலியர்கள் அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டது. இஸ்ரேலின் பதில் தாக்குதல் இரண்டு மடங்கு லெபனான் மக்களை வீட்டில் இருந்து வெளியேற்றியது. ஆனால் அதனையும் தாண்டி செயல்படும் முனைப்பில் இருந்தது இஸ்ரேல். இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவிட்டு எல்லைப் பகுதியை விட்டு ஹெஸ்பொலா பின்வாங்காவிட்டால் உரிய பதிலடி தரப்படும் என்று இஸ்ரேல் எச்சரித்தது. அவ்வாறு நடக்காத போது, இரான் திட்டப்படி தன் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடி தர எல்லையை கடக்க இஸ்ரேல் தீர்மானித்தது. இஸ்ரேல் நடத்திய பலமான எதிர் தாக்குதல் இரானின் இஸ்லாமிய அரசை நிலைகுலைய வைத்து, அதன் வியூகங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கியது. இதனால் தான் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலுக்கு பிறகு இரானிய தலைவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இரான் முழு போரில் ஈடுபட விரும்பவில்லை என்று காட்டிய தயக்கத்தை இஸ்ரேல் பலவீனமாக புரிந்து கொண்டது. இரான் மற்றும் அதன் ஆதரவு ஆயுதக்குழுக்கள் மீது அழுத்தத்தை அதிகரித்தது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலின் ராணுவத் தளபதிகள் துணிச்சலாக செயல்பட முடிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விமானப்படை தளத்தில் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது பைடனின் திட்டம் பயனளிப்பது தெரிகிறது இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு கூடுதலாக ஜோ பைடனின் தெளிவான ஆதரவு இஸ்ரேலுக்கு உண்டு. தேவையான ஆயுதங்களை வழங்வதன் மூலம் மட்டும் ஒரு பாதுகாப்பான வளையத்தை இஸ்ரேலுக்காக அமெரிக்கா உருவாக்கவில்லை. இஸ்ரேலை பாதுகாக்க உறுதியேற்ற அமெரிக்கா, தேவையான அளவுக்கு அமெரிக்க துருப்புகள் விமானப்படை மற்றும் போர்க்கப்பல்கள் மூலமாக மத்திய கிழக்கிற்கு அனுப்பி வைத்துள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி அன்று சிரிய தலைநகரான டமாஸ்கஸில் செயல்பட்டு வந்த இரான் தூதரக கட்டடத்தின் ஒரு பகுதியை வான்வழி தாக்குதல் மூலம் அழித்தது இஸ்ரேல். இரானிய பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெஜா ஜஹேதி மற்றும் இஸ்லாமிய புரட்சிகர படையினரின் மூத்த அதிகாரிகளும் அந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். தங்கள் படையினர் எச்சரிக்கையுடன் இருக்க தேவையான நேரத்தை வழங்கவில்லை என்றும் இது குறித்து அறிவிக்கவில்லை என்றும் அமெரிக்கர்கள் கோபம் அடைந்தனர். ஆனாலும், ஜோ பைடன் தன்னுடைய ஆதரவை விலக்காமல் தொடர்ந்தார். ஏப்ரல் 13-ஆம் தேதி இரான் ஆளில்லா விமானங்கள், குரூயிஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜோர்டன் ராணுவத்தினரின் உதவியுடன் அவற்றை சுட்டுவீழ்த்தியது இஸ்ரேல். தற்போது விரிவடைந்து வரும் மத்திய கிழக்குப் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஜோ பைடன் கூறியிருக்கிறார். இரானின் வான் பாதுகாப்பு அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் மூலம் பைடனின் திட்டம் பயனளிப்பது போல் தெரிகிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அக்டோபர் 7ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 1200 நபர்கள் கொல்லப்பட்டனர் கோடை காலம் முதல் இஸ்ரேல் தொடர்ச்சியாக இரான் மற்றும் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது தாக்குதலை நடத்தி போரை விரிவாக்கி வந்தது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்பொலா மீது அது நடத்திய தாக்குதல் மிகப்பெரிய தாக்குதலாக அமைந்தது. தன்னுடைய பாதுகாப்பு கவசமாக செயல்படுவதற்காக ஹெஸ்பொலாவுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி பல ஆண்டுகளாக இரான் அதனை கட்டமைத்து வந்தது. இரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற இஸ்ரேலின் எண்ணமானது, இஸ்ரேல் எல்லையோரம் லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்பொலா பதில் தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தால் சிதறடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற போருக்கு பிறகு உருவாக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த துவங்கியது இஸ்ரேல். ஹெஸ்பொலா பயன்படுத்தி வந்த பேஜர்கள் வெடிக்க வைக்கப்பட்டன. லெபனானில் ஊடுருவிய இஸ்ரேல், அந்த நாட்டை பல ஆண்டுகளாக எதிர்த்து வந்த ஹெஸ்பொலாவின் தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றது. இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதலில் 2500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பெய்ரூட்டில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றன. நிதி நெருக்கடியை சந்தித்து வரும் அந்த நாட்டில் இந்த தாக்குதல் 12 லட்சம் நபர்களின் இடம் பெயர்வுக்கு காரணமானது. ஹெஸ்பொலா தற்போதும் லெபானானில் இருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது அதிக எண்ணிக்கையில் ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை நடத்துகிறது. ஆனாலும், தலைவர் கொல்லப்பட்டது மற்றும் ஆயுதங்கள் தீர்வதால் ஏற்பட்டுள்ள பாதிப்பையும் உணர்ந்துள்ளது ஹெஸ்பொலா. அதன் அனைத்து வியூகங்களும் நொறுங்கத் துவங்கிய போது தான் இரான் பதில் தாக்குதலை நடத்தியது. பதிலடி தராமல் தன்னுடைய ஆதரவு ஆயுதக் குழுக்கள் போரிட்டு உயிரிழக்க அனுமதிப்பது இஸ்ரேலுக்கு எதிரான, மேற்கத்திய படைகளுக்கு எதிரான கூட்டமைப்புக்கு தலைமையேற்று செயல்படும் தனது பொறுப்பை இரான் தட்டிக் கழிப்பதாக அமைந்துவிடும். அதனால்தான், அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று இஸ்ரேல் மீது மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியது இரான். அக்டோபர் 25, வெள்ளிக்கிழமை அன்று இஸ்ரேல் அதற்கு பதில் தாக்குதல் நடத்தியது. பலரும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இந்த பதிலடியைத் தர இஸ்ரேல் அதிக காலம் எடுத்துக் கொண்டது. அவர்களின் ரகசிய திட்டங்கள் வெளியானதும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது. வடக்கு காஸாவில் இஸ்ரேல் பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. காஸா போரின் இருண்ட தருணம் இது என்று ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார். வடக்கு காஸாவில் இருந்து சர்வதேச கவனத்தை திசை திருப்பவே இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதா என்று வெளிநபராக என்னால் உறுதியாக தெரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் இதுவும் ஒரு பகுதியாக இருக்கலாம். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அக்டோபர் 1ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நீண்ட காலம் எடுத்துக்கொண்டு அக்டோபர் 25ம் தேதி அன்று பதில் தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் போர் விரிவாக்கத்தை குறைக்கும் நடவடிக்கை பதில் தாக்குதல் நடத்தாவிட்டதால் நாம் பலவீனமாக இருப்பதாக தோன்றக் கூடும் என்று நினைத்து நாடுகள் பதில் தாக்குதல்களில் ஈடுபடுவதை நிறுத்துவது கடினம். அதுதான் நிலைமை கைமீறிப் போய் பெரும் போர்களில் கொண்டு போய் விடுகிறது. இந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு பதிலடி தர இரான் தயார் நிலையில் இருக்கிறதா என்பதுதான் தற்போது கேள்வியாக எழுகிறது. அக்டோபர் 1-ம் தேதி இரான் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என்ற இஸ்ரேலின் முடிவுக்கு அமெரிக்காவின் பைடன் அரசு ஆதரவு வழங்கியது. ஆனால் மோசமாக போர் விரிவடைவதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இஸ்ரேல் இரானின் முக்கிய சொத்துகளான அணுமின் நிலையங்கள், எண்ணெய் கிடங்குகளில் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பொதுவெளியில் பைடன் கேட்டுக் கொண்டார். தாட் வான் பாதுகாப்புக் கவசத்தை பயன்படுத்தி தன்னை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று இஸ்ரேலுக்கு ஆலோசனை வழங்கினார் பைடன். அதனை ஒப்புக் கொண்டார் நெதன்யாகு. அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அன்று நடக்கும் தேர்தல் மத்திய கிழக்கில் அடுத்து என்ன நடக்கலாம் என்பதை தீர்மானிக்கும் காரணியாக அமைந்துள்ளது. டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால் இரானுக்குப் பதிலடியாக அதன் எண்ணெய், எரிவாயு மற்றும் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக குறைவான அக்கறையையே அவர் செலுத்துவார். இரானின் முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தாததால், பதில் தாக்குதல் நடத்துவதை டெஹ்ரான் தள்ளிப்போடலாம். இது இரு நாட்டு ராஜ்ஜிய அதிகாரிகளும் பேச்சுவார்த்தைக்கு தங்களை தயார் செய்ய கால அவகாசம் கிடைக்கும். கடந்த மாதம் ஐ.நா. பொது சபையில் பேசிய போது இரானியர்கள் அணு ஒப்பந்தம் தொடர்பாக புதிய பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருப்பதாக கூறினர். இவை மத்திய கிழக்கிற்கு வெளியிலும் முக்கியமான நகர்வுகள். அணுகுண்டு தங்களுக்கு வேண்டும் என்ற கருத்தை இரான் இதுநாள் வரை மறுத்தே வந்துள்ளது. ஆனால் அணு ஆயுதம் தொடர்பான அதன் நிபுணத்துவமும், யுரேனிய வளமும் அணு ஆயுதங்களை பெறுவதற்கு அருகில் அதனை கொண்டு வந்துள்ளது. தங்களின் எதிராளிகளை அச்சுறுத்த இரானின் தலைவர்கள் புதிய வழிகளை தேடி வருகின்றனர். பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பயன்படுத்துவதற்கான அணு ஆயுதங்களை உருவாக்குவது அதன் திட்டங்களில் ஒன்றாக இருக்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy5ll07966do
  15. தமிழ் தலைவர்கள் அநுரவுடன் புகைப்படம் எடுப்பதால் அமைச்சர்கள் ஆகிவிட முடியாது. தேசிய மக்கள் சக்தியிலே போட்டியிட்டு வெல்பவர்களே அமைச்சர்களாக முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டமானது தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிதம்பரநாதன் தலைமையில் நேற்று சனிக்கிழமை (26) இரவு 9 மணியளவில் இடம்பெற்றது. இதன் போது கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில் , அனுரகுமார திஸாநாயக்க ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வாழ்ந்தவர். ரணிலோ, சஜித்தோ, நாமலோ கிராமத்தில் படித்து வளர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் வரிசையில் நின்று அரச வைத்தியசாலையில் மருந்து எடுத்திருப்பார்களா? இல்லை. ஏதாவது ஒரு விடயத்திற்கு வரிசையில் இருந்திருப்பார்களா? அவர்களுக்கு சாதாரண மக்களுடைய பிரச்சினை தெரியாது. ஆகவே எமது வர்க்கத்தை சேர்ந்தவர் தற்போது ஜனாதிபதியாகி இருக்கின்றார். இதிலிருக்கும் கணிசமானவர்கள் யுத்தத்தில் பாதிப்படைந்தவர்களாக இருக்கலாம். பெரும்பாலனவர்களது வீடுகள் சேதமடைந்திருக்கலாம். அதேபோல் அனுர குமார திஸாநாயக்கவின் வீடு 1979 ஆம் ஆண்டு இராணுவத்தால் தாக்கப்பட்டிருந்தது. யுத்தத்தினால் உற்றார், உறவினர்கள் உயிரிழப்புக்களை சந்தித்திருக்கலாம் அதேபோல் அனுர அவர்களது ஒரேயொரு அண்ணா டயர் கொளுத்தி கொலை செய்யப்பட்டார். யுத்தம் மிகவும் வித்தியாசமான யுத்தம். யுத்தத்தின் போது சாதாரண சிங்கள, தமிழ் மக்கள், இளைஞர்கள் தான் கொல்லப்பட்டார்கள். சிறப்பம்சம் என்னவென்றால் சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புரிந்த ஒருவரே ஜனாதிபதி ஆகியிருக்கின்றார். தேசிய மக்கள் சக்தி வடமாகாணத்தில் மக்கள் மத்தியில் பதிந்து கொண்டு வருகின்றபடியால் பல கட்சிகள் அவதூறுகளை பரப்பிகொண்டு வருகின்றார்கள். சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, சிறீதரன் போன்றவர்கள் அனுர அவர்களை சந்தித்து கொண்டு வருகிறார்கள். அவர்கள் எவ்வளவு வங்குரோத்து அடைந்திருக்கிறார்கள் என்பதனை உணரமுடியும். அனுரவோடு படம் எடுத்த 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருப்பார்கள். அமைச்சரவை கொடுப்பதாயின் படம் எடுத்த அனைவருக்குமே கொடுக்க வேண்டும். டீல் அரசியலில் நாம் ஈடுபட மாட்டோம். அடுத்த அரசாங்கத்தில் அடுத்த அமைச்சர்களாக பதவியேற்பதும் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெறும் நேர்மையான ஊழலற்ற நபர்களே என்பதை உறுதியாக கூறுகின்றோம். எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி பிரதமர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கூட்டம் ஒன்றிற்கு வருகின்றார். அதேபோல் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் வருகின்றார். அக் கூட்டங்களிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். அடுத்த 14 ஆம் திகதி தேர்தலுக்கு பின்னர் மிக வேகமாக நாட்டை கட்டியெழுப்பும் பயணத்துடன் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிப்போம் என மேலும் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் பிமல் ரத்னாயக்கா, வன்னி தேர்தல் தொகுதியில் முதன்மை வேட்பாளர் யோகராசா சிவரூபன், யாழ் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் மருங்கன் மோகன், கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/197261
  16. 'கூத்தாடி, கடவுள் மறுப்பு, குடும்ப அரசியல், பிளவுவாத அரசியல்' - விஜய் பேசியது என்ன? முழு விவரம் பட மூலாதாரம்,TVK 27 அக்டோபர் 2024 தமிழ்நாடு அரசியல் அரங்கில் புதுவரவான நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்து முடிந்துள்ளது. கட்சி தொடங்கப்பட்டு சுமார் 9 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அதன் கொள்கைகள் என்ன? அரசியல் எந்த பாதையில் பயணிக்கப் போகிறது? என்று நிலவிய எதிர்பார்ப்புகளுக்கு பதில் தரும் நிகழ்வாக இந்த மாநாடு அமைந்திருந்தது. ஓர் அரசியல் தலைவராக தவெக கட்சி மாநாட்டில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தனது தொண்டர்கள் மத்தியில் நடிகர் விஜயின் முதல் பேச்சு எப்படி இருந்தது? அவர் என்னென்ன விஷயங்கள் பற்றி பேசினார்? ‘அரசியல் ஒரு பாம்பு, ஆனால்…’ தவெக மாநாட்டில் பேச்சைத் துவங்கிய விஜய், ஒரு குழந்தை தனது தாயைப் பார்த்து சிரிப்பதுபோல, தன்முன் ஒரு பாம்பு வந்தால் அதனையும் பயமின்றிப் பிடித்து விளையாடும், என்றார். "அதேபோல, அரசியல் ஒரு பாம்பு. பயமறியா ஒரு குழந்தையைப் போல அதைக் கையில் பிடித்து விளையாடுகிறேன்,” என்றார் அவர். மேலும், “அரசியலில் நான் ஒரு குழந்தை என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அரசியல் பாம்பைக் கண்டு இந்தக் குழந்தைக்கு பயமில்லை,” என்றார். “அரசியல் ஒன்றும் சினிமா கிடையாது, இது ஒரு போர்க்களம். சீரியஸாக, ஆனால் சிரிப்போடு எண்ணங்களைச் செயல்படுத்துவதுதான் என் வழி. அரசியலில் கவனமாகக் களமாடவேண்டும். ஏனெனில், சினிமா பாடல் வெளியீட்டு நிகழ்வில் பேசியதிலிருந்து இது வித்தியாசமான மேடை,” என்றார். ‘அரசியல் மாற வேண்டும்’ பேச்சைத் துவங்கி இவற்றைச் சொன்னபிறகு, தான் உணர்ச்சிவசமாக பேசப்படும் வழக்கமான மேடைபேச்சின் பாரம்பரியத்திலிருந்து விலகி வந்துவிட்டதாகக் கூறினார் விஜய். தனது கட்சி நிர்வாகிகளின் பெயரைச் சொல்லி, ‘அவர்களே… அவர்களே…’ என்று அவர்களை அழைத்தவர், “வழக்கமான அரசியல் பேச்சுகளைப் போல அப்படி ஏன் பேசவேண்டும்? நாம் அனைவரும் ஒன்றுதான்,” என்றார். “அறிவியல் தொழில்நுட்பம் மட்டும்தான் மாறவேண்டுமா? அரசியலும் மாற வேண்டும். மேடைகளில் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேச வேண்டிய அவசியமில்லை. இப்போது என்ன பிரச்னை, அதற்கு என்ன தீர்வு என்பதைச் சொன்னாலே மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடும்,” என்றார் விஜய். “இன்று இருக்கும் தலைமுறையைப் புரிந்துகொண்டால்தான் அரசியலைச் சுலபமாக முன்னெடுத்துச் செல்ல முடியும். மற்ற அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசி நேரம் விரயம் செய்யப் போவதில்லை, ஆனால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கப் போவதில்லை." என்றார். பட மூலாதாரம்,TVK ‘பெரியாரைப் பின்பற்றுவோம், ஆனால்…’ கட்சியின் கொள்கை வழிகாட்டிகள் பற்றி விஜய் பேசினார். ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் கட்சியின் கொள்கை வழிகாட்டியாக இருப்பார், என்ற அவர், “ஆனால், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த விஷயத்தில் அண்ணாவின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கையைப் பின்பற்றுவோம்,” என்றார். “அதாவது, ஒவ்வொரு தனிமனிதரின் கடவுள் வழிபாடு என்பது அவரவர் விருப்பம். அதில் கட்சி எந்த வகையிலும் தலையிடாது. அதேநேரத்தில், பெரியாரின் பெண் கல்வி, பெண் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் கட்சி செயல்படும்," என்றார் நடிகர் விஜய். ‘பெண்களை வழிகாட்டியாகக் கொண்ட முதல் கட்சி’ அதேபோல், காமராஜரின் மதச்சார்பின்மை, நேர்மையான நிர்வாகச் செயல்பாடு, அம்பேத்கரின் வகுப்புவாதிப் பிரதிநிதித்துவ கோட்பாட்டை நிலைநிறுத்துவதும், சாதிய ஒடுக்குமுறையை எதிர்ப்பதுமே நமது நோக்கம், என்றார் அவர். “வீரமங்கை வேலுநாச்சியாரும், த.வெ.க-வின் கொள்கை வழிகாட்டியாக திகழ்வார். பெண்களைக் கொள்கைத் தலைவராக ஏற்று வந்த முதல் கட்சி த.வெ.க தான். முன்னேறத் துடிக்கும் சமூகத்தில் பிறந்து முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட அஞ்சலை அம்மாள் நமக்கு வழிகாட்டியாக இருப்பார். சொத்தை இழந்தாலும், சுயநலமின்றி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் அஞ்சலை அம்மாள்," என்று விஜய் கூறினார். பட மூலாதாரம்,TVK 'நமக்கு ஏன் அரசியல்?’ மேலும் பேசிய விஜய், செயல்தான் முக்கியம் என்றும், சமரசம், சண்டை நிறுத்தத்திற்கு இடமில்லை, ஆனால் வெறுப்பு அரசியலுக்கும் இடமில்லை, என்றும் கூறினார். ஆரம்பத்தில் தானும் எல்லோரையும்போல, 'நமக்கு எதற்கு அரசியல்?’ என்றுதான் நினைத்ததாகவும் ஆனால், அப்படி நினைப்பது சுயநலம் என்றும் தெரிவித்தார். “என்னை, வாழவைத்த மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்று யோசித்தபோது, அதற்குக் கிடைத்த விடை அரசியல்,” என்றார். கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார்? தனது கட்சியின் கோட்பாடாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை அறிவித்த போதே தனது எதிரியை அறிவித்துவிட்டதாகக் கூறினார் விஜய். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம், எனப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் தான் எதிர்க்கப் போவதாகத் தெரிவித்தார். “ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட ‘கலரைப்’ பூசி, ‘ஃபாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை,-பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். நாம் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா?,” என்றார். “இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள்,” என்றார். “பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியர், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி,” என்றார் விஜய். பட மூலாதாரம்,TVK ‘டீசென்ட்டான அரசியல்’ எந்த அரசியல் தனைவரையும் பெயர் குறிப்பிட்டுப் பேசாதது ஏன் என்ற கேள்வி எழும் என்று பேசிய விஜய், தான் அப்படிப் பேசாதது பயத்தால் அல்ல, தான் ‘டீசென்ட்டான அரசியல் செய்ய வந்திருப்பதாகக் கூறினார். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் பற்றி என்ன பேசினார்? மேலும், தனது அரசியல் பயணத்தில் முக்கியப் பங்காற்றப் போவது பெண்கள், என்றார் விஜய். சினிமா நடிகனுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும் என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்வதாகக் கூறிய அவர், "சினிமா என்றால் பாட்டு, நடனம், பொழுதுபொக்கு மட்டுமல்ல, அது தமிழ்நாட்டின் கலை, இலக்கியம், வாழ்வியல், பண்பாடு, என்று அனைத்தையும் உள்ளடக்கியது," என்றார். சினிமா தான் தமிழகத்தில் சமூக-அரசியல் புரட்சிக்கு உதவியது, என்றார். “திராவிட சித்தாந்தத்தை அனைவரிடமும் கொண்டு சேர்த்தது சினிமா தான்,” என்றார் விஜய். “என்னை ‘கூத்தாடி’ என்று அழைக்கின்றனர். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் ஆகியோர் அரசியலுக்கு வந்த போதும் அவர்களை இதே பெயர் சொல்லித்தான் விமர்சித்தனர். ஆனால் அவர்கள் இருவரும் தான் தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தினர்,” என்றார். அதேபோல், தான் சினிமாவுக்கு வந்தபோது தான் எதிர்கொண்ட உருவக்கேலிகளையும், அவமானங்களையும் பற்றிப்பேசினார் விஜய். “நான் சினிமாவுக்கு வந்தபோது என் தோற்றத்தை வைத்து அவமானப்படுத்தினர். ஆனால் அதுபற்றிக் கவலைப்படாமல் உழைத்து மேலே வந்தேன்,” என்றார் விஜய். ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கீடு’ மேலும், “கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை, இரண்டும் நமது இரண்டு கண்கள்,” என்றார். தனது செயல்திட்டத்தின் முக்கிய விஷயமாக, அதிகாரப் பகிர்வைக் கூறினார் விஜய். “2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருந்தாலும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்,” என்று விஜய் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cp3552wgg1qo சில காணொளிக் காட்சிகள்.
  17. இந்த அரசாங்கம் மூன்று மாதங்களிற்கு மேல் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை. மூன்று வாரங்கள் கூட நீடிக்காது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் எனக்கும் பெரும்பான்மை இருக்கவில்லை, அனுரகுமார திசநாயக்கவிற்கும் பெரும்பான்மையில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்படியென்றால் எங்கள் இருவருக்கும் இடையில் என்ன வித்தியாசம் என கேள்வி எழுப்பியுள்ளார். நீர்கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தேர்தலில் தோல்வியடைந்தால் என்னை வீட்டிலிருக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனக்கு பெரும்பான்மையானவர்கள் வாக்களிக்கவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன், நான் பெரும்பான்மை இல்லாத முன்னாள் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதி. நான் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு கோருவதற்காக உங்கள் முன்னால் வந்துள்ளேன். நாடு வீழ்ச்சியடைந்த போது பொறுப்பேற்க எவரும் இருக்கவில்லை. சஜித்தும் இல்லை அனுரவும் இல்லை. பிரதமராவதற்கு எவரும் இருக்கவில்லை. ஒருநாள் நிமால் லான்ச பிரதமராக தயாரா என என்னிடம் கேட்டார் நான் எப்படி என வினவினேன். அதற்கு அவர் அனைவரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என தெரிவித்தார், அதன் பின்னர் நான் ஜனாதிபதியை சந்திக்கசென்று சவாலை ஏற்றுக்கொண்டேன். அந்த சமயம ஜனாதிபதி பதவியை துறந்தவேளை நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்பட்ட வேளை எவரும் இருக்கவில்லை, தற்போது தலைமைத்துவத்தை கோரும் அனைவரும் தப்பியோடினார்கள். நாங்கள் இராணுவத்தை பயன்படுத்தி இந்த நாட்டை காப்பாற்றினோம். மக்கள் அனுரகுமார திசநாயக்க மூன்று மாதங்களிற்கே பதவி வகிப்பார் என தெரிவிக்கின்றனர். நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை. அவர் தனது பதவியை தொடரவேண்டும். அவரது கட்சியிலிருந்து அரசியல் குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்படுமா தெரியாது. அவ்வாறான விடயங்களை செய்யக்கூடாது. ஆனால் அவர்களின் பட்டியலை பார்த்தால் இந்த அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்கும் என நான் நினைக்கவில்லை. மூன்று வாரங்கள் கூட நீடிக்காது. ஆகவே நாட்டிற்கு தலைமை தாங்ககூடியவர்களிற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். அனுபவசாலிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால் ஜனாதிபதியால் மூன்று வருடங்கள் ஆட்சி செய்ய முடியும். அவ்வாறான சூழ்நிலை காணப்படாவிட்டால் நாட்டில் வரிசைகள் யுகம் உருவாகும். தற்போதைய தேங்காய் வரிசைகளிற்கு பதில் புதிய வரிசைகள் உருவாகும். தோல்வியடைந்தால் வீட்டில் இருக்குமாறு அனுர எனக்கு தெரிவித்தார். நான் அதனை ஏற்றுக்கொள்கின்றேன். நான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன் எனக்காக வாக்களியுங்கள் என மக்களை கேட்டுக்கொண்டிருந்தேன். பெரும்பான்மையானவர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை, அதனால் நான் தோல்வியடைந்தேன். ஆனால் எங்கள் இருவருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை தானே 51வீதமானவர்கள் ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லை. ஆகவே அவருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் நான் பெரும்பான்டையில்லாத முன்னாள் ஜனாதிபதி அவர் பெரும்பான்மையில்லாத ஜனாதிபதி அவரை போல எனக்கு பெரும்பான்iயில்லை. ஆகவே இதில் என்ன விசேடமானது நாங்கள் இருவரும் ஒரேமாதிரியானவர்கள். அவர் கஸ்டப்படுகின்றார் என நான் தெரிவிக்கின்றேன். https://www.virakesari.lk/article/197266
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருவின் பாலின பரிசோதனையை ஆதரிப்பதன் மூலம் இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் ஒரு புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளார். (சித்தரிப்புப் படம்) எழுதியவர், சுஷீலா சிங் பதவி, பிபிசி செய்தியாளர் இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தலைவர் டாக்டர் ஆர்.வி. அசோகன், கரு பாலின பரிசோதனையை சட்டப்பூர்வமாக்குவது குறித்துப் பேசியிருப்பது புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கோவாவில் நடந்த ஒரு நிகழ்வின்போது டாக்டர் ஆர்.வி. அசோகன், “30 ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் சட்டத்தால் என்ன பயன் ஏற்பட்டுள்ளது? இதன் மூலம் பாலின விகிதத்தை மாற்ற முடிந்ததா? இந்தச் சட்டம் சில இடங்களில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று கூறினார். டாக்டர் அசோகனின் இந்தப் பேச்சு குறித்த நிபுணர்களின் கருத்துகள் பிளவுபட்டுள்ளன. ஆனால் தற்போதுள்ள சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கருவின் பாலினத்தை அறிந்து, அது பெண் குழந்தையாக இருந்தால் அதை உலகத்திற்குக் கொண்டு வருவதை உறுதி செய்யும் வகையிலான சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்றும் பிபிசியிடம் பேசிய டாக்டர் அசோகன் வலியுறுத்தினார். கருக்கலைப்பில் பலருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆனால் பிசி-பிஎன்டிடி (கருத்தரிப்புக்கு முன் மற்றும் பிறப்புக்கு முந்தைய நோய் கண்டறிதல் நுட்பங்கள் சட்டம்) சட்டத்தின் கீழ் மருத்துவர் மட்டுமே இதற்குப் பொறுப்பாகக் கருதப்படுகிறார் என்று அவர் கூறினார். பிசி-பிஎன்டிடி சட்டத்தின் கீழ் கர்ப்ப காலத்தில் கருவின் பாலினத்தைக் கண்டறியும் தொழில்நுட்பம் சட்டவிரோதமானது. இந்தச் சட்டம் 30 ஆண்டுகளுக்கு முன்பு 1994இல் கொண்டு வரப்பட்டது. ‘பாலின விகிதம் இன்னும் சமமாகவில்லை’ இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகள் கடந்தும் பாலின விகிதம் இன்னும் சமமாகவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். ”சில பகுதிகளில் சட்டத்தைவிட சமூக விழிப்புணர்வு காரணமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பிசி-பிஎன்டிடி சட்டம் மருத்துவர்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது" என்று அவர் கூறுகிறார். "நீங்கள் மகப்பேறு மருத்துவர்களிடம் அல்லது கதிரியக்க நிபுணர்களிடம் பேசினால் அவர்கள் எப்படி துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள். ஒருவேளை இரண்டு அல்லது ஐந்து சதவீத மருத்துவர்கள் இதைச் செய்யக்கூடும். ஆனால் ஒட்டுமொத்த மருத்துவ உலகமும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகிறது,” என்று டாக்டர் அசோகன் குறிப்பிட்டார். ஐஎம்ஏ தலைவர் என்ற முறையில் மருத்துவத்தின் சிறந்த கொள்கைகளை அவர் ஊக்குவிக்க வேண்டும். அதை சட்டப்பூர்வமாக்குவது பற்றிப் பேசக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பிசி-பிஎன்டிடி சட்டம் 1994ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. 2003ஆம் ஆண்டில் அது திருத்தப்பட்டு மிகவும் தீவிரமான முறையில் செயல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின் நோக்கம் பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் விதமாக கருக்களின் பாலினத்தைத் தெரிந்து கொள்வதை நிறுத்துவதாகும். அதேநேரம் இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. வர்ஷா தேஷ்பாண்டே மகாராஷ்டிராவில் பெண் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்காக 'லேக் லட்கி அபியான்' என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். கூடவே அவர் பிசி-பிஎன்டிடி-இன் இரண்டு குழுக்களிலும் உள்ளார். சட்டத்தை மாற்றுவதன் விளைவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிசி-பிஎன்டிடி சட்டத்தின் நோக்கம் பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் விதமாக கருக்களின் பாலினத்தை தெரிந்துகொள்வதை நிறுத்துவதாகும் "ஐஎம்ஏ தலைவர் மனதில் வந்ததைப் பேசுகிறார். இந்தப் பதவியின் கண்ணியத்தை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும்" என்று வர்ஷா தேஷ்பாண்டே பிபிசியிடம் தெரிவித்தார். "ஒரு மருத்துவர் தவறாகச் சிக்க வைக்கப்பட்டால் அவர் புகார் செய்யலாம். ஆனால் மருத்துவர்கள் கருவின் பாலின பரிசோதனை செய்கிறார்கள் என்பதுதான் உண்மை," என்றார் அவர். ‘‘சட்டத்தை மீறி இதுபோன்ற செயல்களைச் செய்யும் ஊழல் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக ஐஎம்ஏ தலைவர் குரல் எழுப்ப வேண்டும். அதில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்று வர்ஷா தேஷ்பாண்டே கூறினார். தனது கவலையை வெளிப்படுத்திய அவர், "இந்தப் பரிசோதனை சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டால் பெண்கள் அதற்கு வரிசையில் நிற்பார்கள். அவர்கள் வீட்டுக்குக்கூட செல்லமாட்டார்கள். மருந்துகளை உட்கொண்டு கருவைக் கலைத்துவிடுவார்கள். அதிக ரத்த இழப்பு காரணமாக அவர்கள் இறக்கும் நிலையும் ஏற்படக்கூடும் அல்லது அவர்கள் கருக்கலைப்பு செய்வார்கள். இதற்கான மருந்துகள் எளிதாகக் கிடைக்கின்றன. சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள கிளினிக்குகளில் போலி வைத்தியர்கள் இப்போதுகூட ரகசியமாக இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு கருக்கலைப்பு செய்து வருகின்றனர்,” என்று குறிப்பிட்டார். மருத்துவர்கள் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்வதேச மக்கள்தொகை அறிவியல் கழகத்தின் பேராசிரியர் எஸ்.கே.சிங் தெரிவித்தார். ஐஎம்ஏ தலைவர் மருத்துவர்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார். ஆனால் அதை பெண்களின் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும் என்று எஸ்.கே.சிங் கூறினார். பேராசிரியர் எஸ்.கே.சிங் இந்த அமைப்பின் சர்வே ரிசர்ச் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் பிரிவின் தலைவராகவும் உள்ளார். சட்டம் பற்றிய சந்தேகம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பாலின விகிதத்தில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது “சமூகத்தின் பல பகுதிகளில் இப்போதும் ஒரு மகனைப் பெற்றெடுக்க வேண்டுமென்று பெண்கள் மீது அழுத்தம் உள்ளது. முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், தாயின் உயிருக்கு ஆபத்து என்ற நிலை இல்லையென்றால், கருவை பரிசோதித்து, கருக்கலைப்பு செய்யப்படுகிறது,” என்று எஸ்.கே.சிங் கூறினார். கடந்த 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பாலின விகிதத்தில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. 1991இல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 926 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், 2011இல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 943 பெண் குழந்தைகளாக அந்த விகிதம் அதிகரித்தது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-4இல், 1000 ஆண்களுக்கு 919 பெண்கள் இருந்தபோது, கணக்கெடுப்பு-5இல் அவர்களின் எண்ணிக்கை 929 ஆக இருந்தது. (0-5 வயதுடைய குழந்தைகளின் பாலின விகிதம்) இருப்பினும், "இந்த அதிகரிப்பு மிகவும் சிறியது மற்றும் பெண் சிசுக் கொலையைத் தடுப்பதில் பிசி-பிஎன்டிடி சட்டம் பயனுள்ளதாக இல்லை" என்று டாக்டர் ஆர்.வி.அசோகன் சுட்டிக்காட்டுகிறார். "பெண் சிசுக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை மருத்துவ சமூகம் ஒப்புக்கொள்வதாக ஐஎம்ஏவின் மத்திய செயற்குழு இரண்டு வாரங்களுக்கு முன்பு இறுதி முடிவை எடுத்துள்ளது." ஆனால் பிசி-பிஎன்டிடி சட்டத்தின் தற்போதைய வடிவம் மருத்துவத் துறையில் பணிபுரிபவர்களுக்கு அநீதி இழைப்பதாக டாக்டர் ஆர்.வி.அசோகன் கூறுகிறார். ஆனால் கருவின் பாலினம் தெரிந்து அதற்குப் பிறகு தம்பதி கருக்கலைப்பு செய்தால், பெண் சிசுக்கொலையை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்ற கேள்வி இங்கு எழுகிறது. ஏனெனில் இதுபோன்ற பல கிளினிக்குகள் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு, இதுபோன்ற கருக்கலைப்புகளைச் செய்கின்றன. பாலின விகிதம் பற்றிய கவலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் “அல்ட்ராசவுண்ட் செய்து பார்க்கும்போது அதன் அறிக்கையை டேட்டாபேஸில் பதிவேற்றி, கருவில் பெண் குழந்தை வளர்கிறது என்று சொல்லுங்கள். F படிவமும் அங்கு நிரப்பப்படுகிறது. இந்தத் தகவல்கள் அரசுக்குச் செல்கின்றன. கர்ப்பிணிப் பெண் மற்றும் கருவின் ஆரோக்கியம் குறித்து அவ்வப்போது பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கர்ப்பத்தின்போது எல்லாம் சரியாக இருந்தும் கருச்சிதைவு ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டால், அது ஏன் நடந்தது என்பது நமக்குத் தெரிந்துவிடும்,” என்று டாக்டர் ஆர்.வி.அசோகன் தெரிவித்தார். "ஒரு விஷயத்தை சொல்லுங்கள், குழந்தையின் பாலினமே தெரியாதபோது, அது பெண் குழந்தை என்பதால் கருக்கலைப்பு செய்யப்பட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்?" என்ற வாதத்தை அவர் முன்வைத்தார். “கரு பற்றிய தரவுகள் மாநில அரசுக்குச் செல்வதால், பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான அவற்றின் பொறுப்பு அதிகரிக்கிறது. இது பெண் சிசுக் கொலையைக் குறைக்கும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கை. பெண் சிசுக்கொலை சட்டவிரோதமானது, ஆனால் கருவின் பாலினத்தை தெரிந்துகொள்வது அப்படி இருக்கக்கூடாது,” என்றார் டாக்டர் ஆர்.வி.அசோகன். அதேநேரம் “பிசி-பிஎன்டிடி சட்டத்தால் கடந்த 15 ஆண்டுகளில் பாலின விகிதத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை டாக்டர் அசோகனின் முன்மொழிவு தலைகீழாக மாற்றும் அபாயம் உள்ளது. இது கிரிமினல் சிந்தனை. டாக்டர் அசோகன் மருத்துவர்களை மட்டுமே காப்பாற்ற முயல்கிறார்" என்று குற்றம் சாட்டுகிறார் பேராசிரியர் எஸ்.கே.சிங். "இன்று ஒரு பெண்ணுக்கு இரண்டு மகள்கள் இருந்தால், அவர்களில் 63 சதவீதம் பேர் மூன்றாவது குழந்தையை விரும்புவதில்லை. தெற்கில் இது 80 சதவீதம். வடக்கில் இது 60 சதவீதம் வரை உள்ளது. இந்தச் சட்டம் செய்துள்ள உதவியால் மக்கள்தொகை ஆய்வாளர்களான நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்," என்றார் அவர். 'பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்' திட்டத்தால் என்ன பயன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2015இல் பிரதமர் மோதி ’மகளைக் காப்பாற்றுங்கள், மகளைப் படிக்க வையுங்கள்’ திட்டத்தை ஹரியாணாவின் பானிபத்தில் தொடங்கி வைத்தார். "பொருளாதார நலன்களுக்காக கருவின் பாலினத்தை மருத்துவர் பரிசோதனை செய்வார். ஆனால் கருவின் உயிரைக் காப்பாற்றுவது என வரும்போது அதை அரசு செய்ய வேண்டும் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை,” என்று பேராசிரியர் எஸ்.கே.சிங் கூறினார். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நாடாளுமன்றக் குழு மக்களவையில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தபோது, ’பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் (மகளைக் காப்பாற்றுங்கள், மகளைப் படிக்க வையுங்கள்)’ திட்டத்தின் கீழ் 80 சதவீத நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தது. பிரதமர் நரேந்திர மோதி 2015ஆம் ஆண்டு இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் நோக்கம் குழந்தை பாலின விகிதத்தை மேம்படுத்துதல், பாலின அடிப்படையிலான பாகுபாடுகளை அகற்றுதல் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாகும். ஆரம்பத்தில் இதற்கெனெ 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடு அவ்வப்போது அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்திய சமூகத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்ற சிந்தனை இப்போது வளர்ந்து வருகிறது. ஆனால் பாகுபாட்டின் வேர்கள் மிகவும் ஆழமாக இருப்பதால், சிந்தனையில் முழுமையான மாற்றம் ஏற்பட இன்னும் காலம் எடுக்கும். பிசி-பிஎன்டிடி சட்டத்தின் காரணமாக, ஹரியாணா, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பாலின விகிதம் மேம்பட்டுள்ளதாக வர்ஷா தேஷ்பாண்டே கூறுகிறார். 'பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்’ என்பது அழகான முழக்கம். பெண் குழந்தைகள் அதிகாரம் பெற்றால் சமுதாயத்தில் மாற்றம் தெரியும். இது பெரிய பணி. ஆனால் இதற்கு மருத்துவர்களை ஏன் பொறுப்பாக்க வேண்டும்?" என்று டாக்டர் ஆர்.வி.அசோகன் கேள்வி எழுப்பினார். தனது முன்மொழிவை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு எடுத்துச் செல்லப் போவதாகவும், சட்டத்தை மாற்ற அரசு விரும்பவில்லை என்றால் மருத்துவர்களைப் பொறுப்பாக்கும் பிரிவை அதிலிருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/crezdy34nrxo
  19. பிலிப்பைன்ஸில் கடும் மழை, வெள்ளம், மண்சரிவு - 130க்கும் அதிகமானோர் உயிரிழப்பு பிலிப்பைன்ஸ் கடும் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 130க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். டிராமி புயல் காரணமாகவே உயிரிழப்புகளும் சொத்துக்களிற்கும் சேதங்களும் ஏற்பட்டுள்ளன பல இடங்களில் மக்களை காப்பாற்றவேண்டிய தேவையுள்ளது ஆனால் அந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பிலிப்பைன்சின் வடமேற்கினை தாக்கிய புயல் காரணமாக 85 பேர் உயிரிழந்துள்ளனர் 40க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர் என வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியாகியிருந்தது. பிலிப்பைன்ஸ் இந்த வருடம் எதிர்கொண்ட மிக மோசமான புயல் இது. மழைவெள்ளம் மண்சரிவு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகளில் இருந்து உயிரிழப்புகள் குறித்த எண்ணிக்கை வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து பொலிஸார் தீயணைப்பு படையினர் உட்பட ஏனைய மீட்பு குழுவினர் மோப்பநாய்கள் சகிதம் பட்டன்காஸ் பகுதியில் உள்ள தலிசே நகரத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தனது 14 வயது மகளிற்காக காத்திருந்த தந்தை மகளின் உடலை உடல்களை வைப்பதற்கான பையில் மீட்பு பணியாளர்கள் வைத்தவேளை கதறியழுதார். அது அவரது மகளின் உடல் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாத நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.உடல்களை அடையாளம் காணவேண்டிய நிலையில் அதிகாரிகள் காணப்படுகின்றனர். நகரின் மத்தியில் உள்ள ஜிம் ஒன்றில் பல பிரேதப்பெட்டிகளை காணமுடிந்துள்ளது. https://www.virakesari.lk/article/197224
  20. எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக மதுரை நகரில் கடந்த 25ஆம் தேதி 15 நிமிடங்களில் 45 மி.மீ., என்ற அளவில் அதி கனமழை பதிவானது. இதனால் பல குடியிருப்புகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அமைச்சர்கள் வெள்ள நீர் சூழ்ந்துள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்து மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், எதிர் வரும் காலங்களில் அதீத மழை பெழிவு ஏற்பட்டால் வெள்ள நீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரை மாநகராட்சியில் அதிகனமழை என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது? வெள்ளநீர் புகுந்த குடியிருப்புகளின் தற்போதைய நிலை என்ன? மதுரையில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு அதி கனமழை மதுரையில் கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. காலை நேரத்தில் வெயில் இருந்தாலும் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் தல்லாகுளத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ., மழை பதிவாகி இருந்தது. தொடர்ந்து தினமும் மழை பெய்தாலும், இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கைகளின்படி, வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை பல கட்டங்களாகப் பெய்த மழையால் 98 மி.மீ., மழை பதிவானது. குறிப்பாக அன்றைய தினம் மதுரை நகரில் 15 நிமிடத்தில் 45 மி.மீ., மழை பதிவானது. வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) பெய்த கன மழையால் சாலை ஓரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நான்காவது வார்டு பார்க் டவுன் குடியிருப்பை மழைநீர் சூழ்ந்தது. ஆலங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டது. படக்குறிப்பு, மதுரையின் பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது இதனால், முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக சர்வேயர் காலனி, ஒத்தக்கடை, காந்தி நகர் பகுதியில் மழை நீர் வீடுகளைச் சூழ்ந்துள்ளது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய அதிகனமழை பதிவாகி உள்ளதாக மதுரை மக்கள் தெரிவிக்கின்றனர். ராஜகம்பீரம், கொடிக்குளம் கண்மாய்களுக்குச் செல்லும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு அறிக்கை மதுரையில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு தொடர்பாக தமிழக அரசு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “மதுரையில் கனமழை பெய்ததை ஒட்டி முதல்வர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது மேலும், “பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக மேற்கொள்ளவும், களத்திற்குச் சென்று சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் மற்றும் சங்கீதாவிற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்,” என்று அந்த அறிக்கையில் தமிழக அரசு கூறியுள்ளது. வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் வடியத் துவங்கியுள்ள நிலையில் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் வடிகால் மற்றும் கண்மாய்களில் குப்பைகளை அகற்றி அடைப்புகளைச் சரி செய்து தண்ணீர் வடிவதற்கு ஏற்பாடு செய்து வருவதுடன், தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ‘பந்தல்குடி கால்வாய்க்கு இருபுறமும் சுற்றுச்சுவர் தேவை’ இதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் செல்லூர் பகுதியில் பெய்த மழையால் நீர் தேங்கியதாகக் கூறுகிறார் அப்பகுதியைச் சேர்ந்த சங்கர பாண்டியன். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், மதுரையில் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்குத் துவங்கி இரவு 7 மணி வரை தொடர்ந்து அதி கனமழை பெய்தது. அதைத் தொடர்ந்து நள்ளிரவு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை விட்டு விட்டுப் பெய்தது. இதனால் செல்லூர் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் தண்ணீர் புகுந்து பழுதடைந்துள்ளது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் முதியவர்கள் பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இன்னும் தீபாவளி பண்டிகைக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் கடைகளுக்குள் நீர் புகுந்ததால் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மழை நீரில் சேதம் அடைந்தன. கடந்த 1993ஆம் ஆண்டு, அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோல் மழை பெய்து செல்லூர் கண்மாய் உடைந்து பெரியளவிலான உயிரிழப்புகளும் பொருள் சேதங்களும் ஏற்பட்டன. அதன் பிறகு நேற்று பெய்த அதீத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கனமழையால் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செல்லூர், சர்வேயர் காலனி, புதூர், தத்தனேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் முடக்கத்தான், ஆனையூர், சிலையனேரி உள்ளிட்ட சிறிய கண்மாய்கள் நிறைந்து செல்லூர் பெரிய கண்மாய்க்கு உபரி நீர் பாய்ந்து பந்தல்குடி கால்வாய் வழியாக வைகை ஆற்றில் சேரும். படக்குறிப்பு, மதுரையில் நீர் தேங்கி நிற்கும் ஒரு குடியிருப்புப் பகுதி இதற்காக அரை கிலோமீட்டர் தூரம் நீளமான கால்வாய்கள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் கால்வாய் பகுதி முறையாகத் தூர்வாரப்படாததால், பொதுமக்கள் கால்வாயில் குப்பைகளைக் கொட்டுவதால் குப்பை மேடாக மாறி கால்வாய் பரப்பளவு குறைந்து மழை நீர் செல்ல முடியாமல் செல்லூர் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. செல்லூர் கண்மாயை தூர்வாரி பராமரிக்க முதலில் ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக சட்டமன்றத்தில் அறிவிக்கபட்டு பின் நிதித் தொகை ரூ.100 கோடியாக உயர்த்தப்பட்டு, பின் அந்தத் தொகையையும் உயர்த்தி தற்போது ரூ.120 கோடி நிதி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது வரை நிதி ஒதுக்கப்படவில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். செல்லூர் கண்மாயைத் தூர்வாரி இருபுறங்களும் சுற்றுச்சுவர் அமைத்து பந்தல்குடி கால்வாய்க்குச் செல்லும் வழித்தடத்தில் உள்ள குப்பைகளை அகற்றி வைகை ஆற்றில் மழை நீர் சேர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். செல்லூர் கண்மாய்க்கு ஒருபுறம் பந்தல்குடி கால்வாய் இருப்பதைப் போன்று மறுபுறம் கால்வாய் அமைப்பதற்கான பணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செல்லூர் தாகூர் நகர் பகுதியில் நடைபெற்றது. ஆனால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி கைவிடப்பட்டது. எனவே செல்லூர் கண்மாய்க்கு மறுபுறம் கால்வாய் அமைக்க உடனடி நடவடிக்கை எடுத்தால் எதிர் வரும் காலங்களில் மழை நீர் தேங்குவதால் செல்லூர் பகுதியில் பாதிப்பு ஏற்படாது என்கிறார் சங்கர பாண்டியன். பராமரிப்பில்லாமல் கிடக்கும் பிரதான கால்வாய்கள் படக்குறிப்பு, சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது பிரதான கால்வாய்கள் முறையாக தூர்வாரப் படாததால் மழை நீர் வடிய வழியின்றி செல்லூர் உள்ளிட்ட மதுரை வடக்குப் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டுகிறார் மதுரை மாநகராட்சி மன்றத்தின் அ.தி.மு.க குழுத் தலைவரான சோலை எம்.ராஜா. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராஜா, மதுரையில் பந்தல்குடி, கிருதுமால், சிந்தாமணி, வண்டியூர் உள்ளிட்ட 17 பிரதான கால்வாய்கள் உள்ளன, என்றார். “இந்தப் பிரதான கால்வாய்கள் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தூர்வாரப்படாததால் வெள்ளிக்கிழமை பெய்த மழை நீர் செல்லூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் முழுமையாகத் தேங்கியுள்ளது,” என்றார். “இதுகுறித்துப் பல முறை மாமன்றக் கூட்டத்தில் தான் எடுத்துரைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தூர்வாருவதற்கு ஜே.சி.பி இயந்திரங்களைப் பயன்படுத்தினார்,” என்றார். பட மூலாதாரம்,SOLAI M RAJA படக்குறிப்பு, மதுரை மாநகராட்சி மன்றத்தின் அ.தி.மு.க குழுத் தலைவரான சோலை எம்.ராஜா மேலும், “ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு கால்வாயின் ஒருசில இடங்களில் தேங்கியிருந்த குப்பைகள், ஆகாயத் தாமரை உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. ஆனால் ஜே.சி.பி இயந்திரத்தால் முழுமையாகத் தூர்வார முடியாது. ஹிட்டாச்சி இயந்திரத்தைக் கொண்டு தூர்வாரும் பணி செய்தால் மட்டுமே பிரதான கால்வாய்களை முழுமையாகத் தூர்வார முடியும். ஆனால் ஹிட்டாச்சி இயந்திரம் மதுரை மாநகராட்சியில் இல்லாததால் தூர்வாரும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது,” என்றார். “மேலும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் முறையாக வீடுகளில் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் சேகரிக்காததால் வீடுகளில் பயன்படுத்தும் குப்பைகளை பொது மக்கள் வீட்டுக்கு எதிரே உள்ள வாய்க்கால்களில் வீசில் செல்கின்றனர். அந்தக் குப்பைகள் நீர் வழித்தடங்களில் தேங்கி தண்ணீர் போக முடியாமல் தடுத்துள்ளது,” என்றார். மேலும் பேசிய அவர், “அதே போல் ஒவ்வொரு நகர் பகுதிகளில் உள்ள மழை நீர் வடிகால் கால்வாயில் அடைத்துள்ள குப்பைகளை அகற்ற மாநகராட்சியில் போதுமான தூய்மைப் பணியாளர்கள் இல்லாததால் அகற்றபடாமல் உள்ளன. இதனால் மழை நீர், வடிகால் வழியாக குளம், குட்டை உள்ளிட்டவற்றுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது,” என்றார் ராஜா. மாநகராட்சி ஆணையர் சொல்வது என்ன? படக்குறிப்பு, சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளதாகக் கூறுகிறார் மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார். போர்க்கால அடிப்படையில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு மழைநீர் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகள் சரி செய்யப்பட்டு தண்ணீர் வடிந்து வைகை ஆற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அவர் தெரிவித்தார். மேலும், “தண்ணீர் வடியத் துவங்கியதால் குடியிருப்புப் பகுதியில் தேங்கியிருந்த தண்ணீர் குறைந்து, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். மழைக் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க மதுரையில் உள்ள 16 பிரதான கால்வாய்கள் ஹிட்டாச்சி இயந்திரங்களைக் கொண்டு குப்பைகளை அகற்றும் மற்றும் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது,” என்றார். மழைநீர் வடிகாலில் உள்ள அடைப்புகள் அனைத்தும் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து நடைபெற்று வருவதால் மதுரையில் கன மழை பெய்தும் பல இடங்களில் மழை நீர் தேங்கவில்லை எனக் கூறிய தினேஷ் குமார், "இதில் செல்லூர் கண்மாயில் உள்ள பந்தல்குடி கால்வாய் தூர்வாருவதற்கு நடைமுறைச் சிக்கல் இருந்ததால் மழை நீர் குடியிருப்புகளுக்குள் தேங்கி, வெளியேற முடியாமல் சிரமம் ஏற்பட்டது. தற்போது அந்தச் சிக்கல் சரி செய்யப்பட்டு தூர்வாரும் பணி நடைபெற்று வருவதால் தண்ணீர் வடிந்து வைகை ஆற்றில் கலந்து வருகிறது,” என்றார். பொது மக்கள் வடிகால், கால்வாய்களில் குப்பை கொட்டுவதைத் தடுப்பது மதுரை மாநகராட்சிக்கு பெரிய சவாலாக இருப்பதாகவும், குப்பைகளைச் சேகரிப்பதற்காக மாநகராட்சி கூடுதலாக 350 வாகனங்களைப் பயன்படுத்தி வருவதுடன், கூடுதலாக லாரிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிப்பதாகவும் கூறுகிறார் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார். இதுதொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்’ படக்குறிப்பு, மழைநீர் தேங்கியிருக்கும் பகுதியை ஆய்வு செய்யும் அதிகாரிகள் இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டு அமைச்சர்கள் முகாமிட்டுப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார். மேலும், "மொத்தம் 8 இடங்களில் மட்டுமே மழை நீர் சூழ்ந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன," எனவும் தெரிவித்திருந்தார். அமைச்சர்கள் ஆய்வு மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்த பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளரிடம் பேசுகையில், மதுரை வடக்குப் பகுதியில் கடந்த 10 நாட்களாகப் பெய்த கனமழையால் அங்குள்ள கண்மாய்கள் நிறைந்து வைகை ஆற்றை நோக்கி வருவதால் மழை நீர் தேங்கியுள்ளது, என்றார். மேலும், கண்மாய்களில் இருந்த வரும் தண்ணீரை ஆற்றில் கலப்பதற்கு புதிய மாற்று வழிகள் செய்யப்பட்டுள்ளதால் மக்களுக்குச் சேதம் ஏற்படாது என்றார். "தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக கண்மாய்கள் நிறைந்து தண்ணீர் வருவதால் மதுரையில் மழை நின்றாலும் உபரி நீர் வரத்து அதிகமாக இருப்பதால் குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழை நீர் முற்றிலுமாக வடிய மூன்று நாட்களுக்கு மேலாகும்,” என்றார். அதோடு, “பந்தல்குடி கால்வாய்க்கு வரும் தண்ணீரின் அளவைக் குறைப்பதற்கு மாற்று வழியில் தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளதால் படிப்படியாக கால்வாய்க்கு வரும் தண்ணீர் வரத்து குறையும்,” என்றும் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cy0ggrzldexo
  21. யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்துவந்த முதியவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி கேணியடி பகுதியை சேர்ந்த 79 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் நேற்று சனிக்கிழமை (26) டெங்கு ஒழிப்பு கள சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்போது அதிகாரிகள் இந்த முதியவரின் வீட்டுக்குச் சென்றபோது, வீட்டினுள் துவிச்சக்கர வண்டி மீது விழுந்த நிலையில் முதியவர் சடலமாக காணப்பட்டுள்ளார். சடலத்தை பார்வையிட்ட அதிகாரிகள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். அதன் பின்னர், செய்யப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின்போது மாரடைப்பு காரணமாகவே முதியவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/197234
  22. பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 12 இந்திய மீனவர்கள் கைது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 12 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். படகொன்றில் 12 பேரும் பருத்தித்துறை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக்கொண்டிருந்த வேளை, அப்பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அந்த மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களது படகினையும் கைப்பற்றினர். அதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களையும் படகினையும் மயிலிட்டி கரைக்கு கொண்டுசென்ற கடற்படையினர், கைதான மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/197219
  23. ஒக்டோபர் 19 - 24க்கு இடையில் அறுகம் குடாவில் தாக்குதல் நடத்த திட்டம் - மாலைதீவு பிரஜையும் கைது - இருவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம் - விசாரணைகள் தீவிரம் ஒக்டோபர் 19ம் திகதிக்கும் 24ம் திகதிக்கும் இடையில் அறுகம்குடாவில் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என தெரிவித்துள்ள சண்டே டைம்ஸ் சந்தேகநபர்களில் இருவர் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டனர் என தெரிவித்துள்ளது. சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது. இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் அறுகம் குடாவில் உள்ள அவர்களது வழிபாட்டுதலத்தில் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டிருக்க கூடிய பெரும் ஆபத்தை பொலிஸார் தடுத்துநிறுத்தியுள்ளனர். ஓக்டோபர் 19 முதல் 24 ம் திகதி இந்த தாக்குதலிற்கு திட்டமிட்டிருந்தனர். இந்த வாரத்தில் இஸ்ரேலியர்கள் பெருமளவில் கலந்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறவிருந்தது என புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன. வெளிநாடொன்று இந்த தாக்குதலை மேற்கொள்வதற்கு எவ்வளவு தூரம் ஆதரவு வழங்கியது எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலை மேற்கொள்வதற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டனவா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. காசாவிலும் லெபனானிலும் இஸ்ரேலின் தாக்குதலிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதே அறுகம் குடா தாக்குதல் நோக்கம். காசாவிலும் லெபனானிலும் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்ய்பட்டுள்ளனர். கடந்த வருடம் ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னரே இந்த யுத்தம் ஆரம்பமானது. இந்த தாக்குதலில் 1200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் அனேகமானவர்கள் பொதுமக்கள் 250க்கும் அதிகமானவர்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அறுகம்; குடாவிற்கு அருகில் உள்ள முஸ்லீம் கிராமங்களிற்கு ஏற்பட்டிருக்ககூடிய பாதிப்பே இந்த தாக்குதலின் மிக ஆபத்தான விளைவாகயிருந்திருக்க கூடும். அறுகம்குடாவிற்கு அருகில் உள்ள நகரம் பொத்துவில் இங்கு பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள். மிகவும் பிரபலமான கரையோர சுற்றுலாத்தளத்திலிருந்து இந்த நகரம் 3.8 மைல் தொலைவில் உள்ளது. இந்த தாக்குதலை முஸ்லீம்களே மேற்கொண்டனர் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் உண்மையான குற்றவாளிகள் அல்லது சூத்திரதாரிகள் குறித்து கவனம் திரும்பியிருக்காது. ஆகக்குறைந்தது சிறிது நேரத்திற்காவது. இஸ்ரேலியர்கள் அதிகளவில் செல்லும் தென்பகுதியின் கரையோர நகரங்களான அஹங்கம அகுங்க போன்றவற்றிலும் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது. யூதர்களின் வழிபாட்டுத்தலத்தின் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சதிதிட்டங்களை ஒக்டோபர் முதல் வாரத்தில் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்தனர். எனினும் அவ்வேளை அவர்களிற்கு கிடைத்த தகவல்கள் போதுமானவையாக காணப்படவில்லை தெளிவற்றவையாக காணப்பட்டன. இதன் காரணமாக சந்தேகநபர்கள் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து கொழும்பின் புறநகர் பகுதியிலிருந்து ஒருவரும் வடக்கிலிருந்து ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர் மூன்றாவது நபர் மாலைதீவை சேர்ந்தவர். இவர் மாலைதீவு தந்தைக்கும் இலங்கை தாய்க்கும் பிறந்தவர். இவர்கள் அனைவரும் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். சிங்களம் பேசக்கூடிய மாலைதீவை சேர்ந்த நபரிடமிருந்து இரண்டு கையடக்கதொலைபேசிகளை கைப்பற்றியுள்ளனர். இதில் பலரின் விபரங்கள் காணப்படுகின்றன. வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுள்ள இருவரை பொலிஸார் தேடிவருகின்றனர். அவர்கள் பல தடவை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கை சிறைச்சாலையொன்றில் பல குற்றங்களிற்காக தண்டனை அனுபவித்து வந்தவர்கள். பாதுகாப்பு செயலாளர் எயர் மார்ஷல் சம்பத்து யாகொன்த இந்த வாரம் மாலைதீவு தூதுவருடன் மாலைதீவை சேர்ந்த சந்தேகநபர் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இதேவேளை தெகிவளையில் உள்ள இஸ்ரேலின் துணைத்தூதுவரின் இல்லத்திற்கு அருகே நடமாடிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/197215
  24. லூயிஸ், ரதஃபர்ட் அதிரடிகளால் மே. தீவுகளுக்கு ஆறுதல் வெற்றி; ஒருநாள் தொடர் 2 - 1 என இலங்கை வசமானது (நெவில் அன்தனி) கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (26) நடைபெற்ற மிகவும் பரபரப்பான 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 8 விக்கெட்களால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிகொண்டது. ஏற்கனவே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை பறிகொடுத்திருந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்த வெற்றி ஆறுதல் அளித்திருக்கும் என்பது நிச்சயம். இப் போட்டியில் தோல்வி அடைந்தபோதிலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெற்றியை ஏற்கனவே உறுதிசெய்துகொண்டிருந்த இலங்கை 2 - 1 ஆட்டங்கள் வித்தியாசத்தில் தொடரைக் கைப்பற்றியது. இலங்கைக்கான கிரிக்கெட் விஜயத்தை தம்புள்ளையில் ரி20 வெற்றியுடன் ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அதன் பின்னர் 2 ரி20 போட்டிகளிலும் 2 ஒருநாள் போட்டிகளிலும் தோல்விகளைத் தழுவி இப்போது கடைசிப் போட்டியில் வெற்றியுடன் நாடு திரும்பவுள்ளது. ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் உபாதைக்கு மத்தியிலும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி வெற்றி ஓட்டங்களுடன் சதத்தைப் பூர்த்தி செய்த எவின் லூயிஸும் அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்ற ஷேர்ஃபேன் ரூதஃபர்டும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 45 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெறுவதை உறுதிசெய்தனர். மழை காரணமாக நாணய சுழற்சி தாமதிக்கப்பட்ட போதிலும் போட்டி சரியான நேரத்திற்கு ஆரம்பித்தது. உபாதையிலிருந்து முழுமையாக குணமடைந்த பெத்தும் நிஸ்ஸன்க மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டதுடன் நிஷான் மதுஷ்கவுக்கு விடுகை வழங்க்பபட்டது. பந்துவீச்சில் துனித் வெல்லாலகே நீக்கப்பட்டு நிஷான் மதுஷன்க இணைத்துக்கொள்ளப்பட்டார். மழையினால் ஆட்டம் 5 மணித்தியாலங்களுக்கு மேல் தடைப்பட்டு ஆட்டம் மீண்டும் தொடர்ந்து நடைபெற்றபோது 23 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் இலங்கை 3 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி இலக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 23 ஓவர்களில் 193 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு அமைய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 22 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது. எவின் லூயிஸ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி மூன்று இணைப்பாட்டங்களில் பங்கேற்று அணியின் வெற்றியை உறுதிசெய்தார். ஆரம்ப வீரர் ப்றெண்டன் கிங் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோது 5.4 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 36 ஓட்டங்களாக இருந்தது. அதன் பின்னர் எவின் லூயிஸ், அணித் தலைவர் ஷாய் ஹோப் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஷாய் ஹோப் 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (108 - 2 விக்.) எனினும் எவின் லூயிஸ், ஷேர்ஃபேன் ரதஃபர்ட் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து அபாரமாகத் துடுப்பெடுத்தாடி மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெறுவதை உறுதிசெய்தனர். எவின் லூயிஸ் 61 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 102 ஓட்டங்களுடனும் ஷேர்ஃபேன் ரதஃபர்ட் 26 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 50 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். எவின் லூயிஸ் தனது 4ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் அவற்றில் 3 சதங்கள் இலங்கைக்கு எதிராக குவிக்கப்பட்டவையாகும். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 17.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 81 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் 81 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது அவிஷ்க பெர்னாண்டோ 34 ஓடட்ங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் மழை பெய்ததால் பிற்பகல் 3.42 மணிக்கு ஆட்டம் தடைப்பட்டது. மழை ஒய்ந்த பின்னர் ஆட்டம் இரவு 8.50 மணிக்கு மீண்டும் தொடர்ந்தபோது அணிக்கு 23 ஓவர்கள் என அறிவிக்கப்பட்டது. ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது அதிரடியில் இறங்கிய குசல் மெண்டிஸ் தொடர்சியாக 4 பவுண்டறிகளை விளாச இலங்கையின் ஓட்ட வேகம் அதிகரித்தது. அணியில் மீண்டும் இணைந்த பெத்தும் நிஸ்ஸன்க 56 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். அவரும் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 26 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அடுத்து களம் நுழைந்த அணித் தலைவர் சரித் அசலங்க ஓட்ட வேகத்தை அதிரிக்க விளைந்து சிக்ஸ் ஒன்றை மட்டும் விளாசி ஆட்டம் இழந்தார். மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 22 பந்துகளில் 56 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஆட்டநாயகன்: எவின் லூயிஸ், தொடர்நாயகன்: சரித் அசலன்க. https://www.virakesari.lk/article/197206
  25. படக்குறிப்பு, கொலை செய்யப்பட்ட 32 வயதான ஜோத்ஸ்னா ஆகஸ்ட் 28-ஆம் தேதி காணாமல் போனார் கட்டுரை தகவல் எழுதியவர், பாக்யஶ்ரீ ராவத் பதவி, பிபிசி மராத்திக்காக 26 அக்டோபர் 2024 பாபநாசம் பட பாணியில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கொலை செய்துவிட்டு அதனை மறைக்க ஒருவர் முயற்சி செய்துள்ளார். நாக்பூரில் காதலித்த பெண்ணை கொன்று புதைத்து, அந்த இடத்தை சிமெண்ட் வைத்து அந்த நபர் அடைத்துள்ளார் என்று காவல்துறை கூறியுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர் ஆவார். நாக்பூரில் உள்ள பெல்டரோடி காவல்துறையினர் குற்றம்சுமத்தப்பட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. நடந்தது என்ன? கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஜோத்ஸ்னா பிரகாஷ் அக்ரே (32), குற்றம்சாட்டப்பட்டுள்ளவரின் பெயர் அஜய் வான்கடே (34). ஆகஸ்ட் 28-ஆம் தேதி அன்று ஜோத்ஸ்னா காணாமல் போனார். அவர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக 55 நாட்களுக்குப் பிறகு காவல்துறை கூறியுள்ளது. புட்டிபோரி பகுதியில் ரயில்வே தண்டவாளத்தின் அருகே அமைந்துள்ள புதர் மண்டிய பகுதியில் குற்றம் சுமத்தப்பட்ட நபர் அந்த பெண்ணின் உடலை புதைத்திருக்கிறார் என்று காவல்துறை கூறியுள்ளது. பெரிய குழி ஒன்றைத் தோண்டி அதில் அந்த பெண்ணின் உடல் போடப்பட்டுள்ளாது. அதன் மேல் ப்ளாஸ்டிக் விரிக்கப்பட்டு அதில் கற்கள் கொட்டப்பட்டிருக்கிறது. இறுதியில் சிமெண்ட் கலவை கொண்டு அந்த குழி மூடப்பட்டுள்ளது. ஜோத்ஸ்னாவின் உடலை கைப்பற்றிய காவல்துறை உடற்கூறாய்வுக்கு அனுப்பியுள்ளது. காவல்துறை இந்த வழக்கில் துப்பு துலக்கியது எப்படி? ஜோத்ஸ்னா உடல் எப்படி கிடைத்தது? காவல்துறை துணை ஆணையர் ராஷ்மிதா ராவ் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த கொலை குறித்த முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். 32 வயதான ஜோத்ஸ்னா அக்ரே, கலமேஷ்வர் பகுதியைச் சேர்ந்தவர். நாக்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த ஜோத்ஸ்னா எம்.ஐ.டி.சியில் அமைந்திருக்கும் டி.வி.எஸ். நிறுவன ஷோரூமில் அவர் பணியாற்றி வந்துள்ளார். ஆகஸ்ட் 28-ஆம் தேதி அன்று மாலை 8.30 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் அடுத்த நாள் காலை வரை வீடு திரும்பவில்லை. ஜோத்ஸ்னாவின் சகோதரர் ரித்தேஸ்வர் அக்ரே தன்னுடைய சகோதரியை காணவில்லை என்று பெல்டரோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகார் அடிப்படையில் காணாமல் போன நபர் குறித்து வழக்கை பதிவு செய்தது காவல் நிலையம். அதன் பிறகு காவல்துறையினர் ஜோத்ஸ்னாவின் செல்போன் இருக்கும் இடத்தை கண்டறிந்தது. அவருடைய போன் ஐதராபாத்தில் கண்டறியப்பட்டது. படக்குறிப்பு, நாக்பூரில் உள்ள பெல்டரோடி காவல்துறையினர் குற்றம்சுமத்தப்பட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. பல நாட்கள் ஆன பிறகும் தன்னுடைய சகோதரியை காணவில்லை என்ற காரணத்தால் ரித்தேஸ்வர் மீண்டும் காவலர்களை நாடினார். அப்போது தன்னுடைய சகோதரி கொல்லப்பட்டிருக்கலாம் என்று தன்னுடைய அச்சத்தை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியது காவல்துறை. ஜோத்ஸ்னாவின் போனிற்கு அழைப்பு விடுத்த போது கனரக வாகன ஓட்டுநர் அந்த அழைப்பிற்கு பதில் அளித்தார். தன்னுடைய வாகனத்தில் அந்த செல்போன் கிடந்தது என்றும் தெரிவித்திருக்கிறார். பெல்டரோடி காவல் நிலையத்திற்கு நேரில் வருமாறு அவரிடம் கூற நேரில் வந்து ஜோத்ஸ்னாவின் போனை காவல்துறையிடம் கொடுத்துள்ளார் அவர். காவல்துறையினர் அதில் வந்த அழைப்புகள் அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். பாபநாசம் படத்தில் வருவது போன்று அவருடைய போனை லாரியில் வீசி, காவல்துறையினரின் கவனம் திசை திருப்பப்பட்டுள்ளது. போனை வைத்து விசாரிக்க துவங்கும் போது அந்த நபர் பயணித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு பிம்பம் உருவாகும். அழைப்புகளை ஆய்வு செய்ததில் அஜய் வான்கடே மற்றும் ஜோத்ஸ்னாவுக்கு இடையேயான தொடர் அழைப்புகள் கண்டறியப்பட்டன. பணப் பரிமாற்றம் நடந்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. படக்குறிப்பு, கொலை செய்யப்பட்ட ஜோத்ஸ்னா விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறை காணாமல் போன ஜோத்ஸ்னா மற்றும் குற்றவாளியும் ஒரே இடத்தில் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையின் போது காவல்துறையினர் பேசா சவுக் பகுதியில் இருந்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். அங்கே சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் ஜோத்ஸ்னாவின் சடலம் இடமாற்றம் செய்யப்பட்டது சி.சி.டி.வி. காட்சியில் பதிவானது. காரின் உரிமையாளர் யார் என்று தேடும் போது அது அஜய்யின் கார் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஜயை தேடும் பணியை தீவிரமாக்கியது காவல்துறை. இந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்கள் கழித்து புனேவில் நீரிழிவு நோய்க்காக அஜய் சிகிச்சை எடுத்து வந்தார். மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை அவரை விடுவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. ஆனால் அஜய் அங்கிருந்து உடனே தப்பித்துவிட்டார். நாக்பூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறும் முயற்சியில் அஜய் ஈடுபடவே, காவல்துறையின் சந்தேகம் வலுவடைந்தது. நாக்பூர் நீதிமன்றம் அஜயின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்துவிட்டது. அக்டோபர் 18-ஆம் தேதி அன்று அஜய் காவல்துறையிடம் சரணடைந்தார். பிறகு ஜோத்ஸ்னா கொலை செய்ததையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அஜயின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு ரயில்வே தண்டவாளத்தின் அருகே புதைக்கப்பட்டிருந்த ஜோத்ஸ்னாவின் உடலை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். படக்குறிப்பு, ஜோத்ஸ்னாவின் உடல் புதைக்கப்பட்ட இடம் ஜோத்ஸ்னா கொலை பற்றி காவல்துறை கூறுவது என்ன? நாக்பூர் முனிசிபல் கார்ப்பரேஷனில் பணியாற்றிய முன்னாள் அதிகாரியின் மகன் அஜய். இந்திய ராணுவத்தில் கடந்த 12 ஆண்டுகளாக மருந்தாளராக அவர் இருந்து வருகிறார். தற்போது நாகலாந்தில் அவர் பணியில் இருக்கிறார். ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தான அஜய் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொள்ள பெண் தேடி வந்தார். அப்போதுதான் திருமண இணையம் மூலமாக ஜோத்ஸ்னா அவருக்கு பரிச்சயமாகியுள்ளார். ஜோத்ஸ்னாவும் விவாகரத்தானவர். பெண் பார்க்கும் நிகழ்வானது ஜோத்ஸ்னா வீட்டில் நடைபெற்றது. அந்த திருமணம் சில காரணங்களுக்காக நடைபெறாமல் போனது. ஆனால் இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். இதற்கிடையில் அஜய்க்கு மே மாதம் மூன்றாவது முறையாக திருமணம் நடைபெற்றது. ஜோத்ஸ்னா காணாமல் போன நாளனறும் கூட அஜயுடன் பேசியுள்ளார். அஜயை பார்ப்பதற்காகவே அவர் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். ஜோத்ஸ்னா மட்டுமின்றி வேறு சில பெண்களுடனும் அஜய் தொடர்பில் இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது இந்த நடத்தையே கொலைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஜோத்ஸ்னா கொலைக்கான உண்மையான காரணம் என்ன? அவர் எவ்வாறு கொல்லப்பட்டார்? என்பது குறித்து தொடர்ச்சியாக விசாரணை செய்து வருகிறது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் அது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்று துணை ஆணையர் ராஷ்மிதா ராவ் கூறுகிறார். நீரிவு நோயால் அவதிப்பட்டு வரும் அஜய் எந்த நேரத்திலும் சர்க்கரை அளவு அதிகரித்து மயங்கிவிட வாய்ப்புகள் உண்டு என்று கூறுகின்றனர் காவல்துறையினர். இதனால், விசாரணையை மேற்கொள்வதில் சில சிக்கல்கள் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ஜோத்ஸ்னா கொலைக்கு முன்னதாக பாபநாசம் படத்தை எத்தனை முறை பார்த்தீர்கள்? பாபநாசம் படத்தைப் பார்த்தே இந்த கொலையை செய்தீர்களா? என்பன போன்ற கேள்விகளை கேட்கவிருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர். ஆதாரங்களை அழிப்பதற்காக பெரிய குழி தோண்டி அதில் அந்த பெண்ணின் உடலை அஜய் போட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால் இந்த கொலையை அவர் தனியாக செய்தாரா அல்லது யாராவது அவருக்கு உதவினார்களா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருவதாக கூறியுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9wrk01qz97o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.