ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: சிங்கப்பூர் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடம் : இலங்கை பாஸ்போர்ட் 93 ஆவது இடம்
Everything posted by ஏராளன்
-
இலங்கையின் பிரிக்ஸ் முயற்சி: பொருளாதாரம், அணிசேரா இராஜதந்திரத்தை உயர்த்துவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கை
(லியோ நிரோஷ தர்ஷன்) பிரிக்ஸ் அமைப்பின் இணைவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சாதகமான பதலளிப்புகளை உறுப்பு நாடுகள் வழங்கியுள்ளன. இதன் முன்னேற்றங்கள் குறித்து முழுமையான அறிவிப்பை, வெளிவிவகார செயலாளர் ஹரினி விஜேவர்தன நாட்டுக்கு வழங்குவார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வீரகேசரிக்கு தெரிவித்தார். பிரிக்ஸ் அமைப்பில் சீனாவுடனான இந்தியாவின் ஈடுபாடு இலங்கைக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது. இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்பில் இலங்கையை இணைத்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் வலுவாக உள்ளன. இந்தியா ஊடாக தெற்காசியாவை அணுகும் அமெரிக்காவின் முக்கிய பங்காளியாக டெல்லி இப்போது உள்ளது. மறுபுறம் பிரிக்ஸ் உறுப்பினராக இந்தியா உள்ளதுடன், சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளைப் பேணுகிறது. உலகாளாவிய கிழக்கில் நிகழ்ந்து வரும் பொருளாதார மாற்றத்தை இந்தியா அவதானித்து, அதைச் சாதகமாக்க முயல்கிறது. இந்த நிலைப்பாடு இலங்கைக்கும் பயனளிப்பதாக அமையும் என்பது பொருளாதார நிபுணர்களின் எதிர்வுக்கூறலாகும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரிக்ஸ் உறுப்புரிமையில் இலங்கையின் ஆர்வத்தை வெளிப்படுத்தி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேவேளை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பிரிக்ஸ் நாடுகளின் ஆதரவை கோரியுள்ளார். ஆனால் பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான இந்த முடிவு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் மாத்திரம் எடுக்கப்படவில்லை. முந்தைய அமைச்சரவை இந்த முடிவை அங்கீகரித்திருந்தது. அனைத்து இராஜதந்திர தளங்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்த பின்னர், இந்தியாவின் உத்தியோகபூர்வ ஒப்புதலுடன் இலங்கை பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் இணையும்போது, எந்தவொரு மோதலையும் வளர்க்கும் எண்ணம் இலங்கைக்கு இல்லை என்பதை மேற்கு நாடுகளுக்கு உணர்த்துகிறது. மேலும் இலங்கையின் நீண்டகால அணிசேராக் கொள்கையினை உறுதியாக நிலைநிறுத்தவும் முடிகிறது. எவ்வாறாயினும் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் சமீபத்தில் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ளன. இலங்கை, இந்தோனேசியா மற்றும் அர்ஜென்டினா உட்பட 30 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த அமைப்பில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. 2028 ஆம் ஆண்டில் இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கும் அவசியத்தை எதிர்கொள்வதால், பொருளாதார வளர்ச்சியின் அவசரத் தேவை உள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு, நிலையான கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அவசியமான மூலோபாய துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு நாட்டிற்கு மூலதனம் தேவைப்படுகிறது. பிரிக்ஸ் அமைப்புடன் இலங்கை செய்து கொள்ளும் ஒப்பந்தம், உத்தேசிக்கப்படுகின்ற மூலதனத்தில் குறிப்பிட்டளவை பெறுவதற்கு உதவும். https://www.virakesari.lk/article/197210
-
ஒக்டோபர் 28ஆம் திகதி நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகும் வடக்கு ரயில் சேவை
நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகும் வடக்கு ரயில் சேவை கொழும்பு – கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான வடக்கு ரயில் சேவை நாளை (28) முதல் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான புகையிரதத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்த நிலையில், வடக்கு புகையிரத சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு ரயில்கள் மீண்டும் இயக்கப்படுவதால் ரயில் மார்க்கத்தின் ஊடான கடவுப் பாதைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் ரயில்வே திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. https://thinakkural.lk/article/311187
-
லொஹான் ரத்வத்தவின் வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் பதிவு இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த தனது பிரத்தியேக செயலாளரே குறித்த வாகனத்தை வீட்டின் வாகன தரிப்பு கராஜூக்கு கொண்டு வந்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அவரது மனைவியும் பொலிஸில் சாட்சியமளித்துள்ளனர். முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்கு சொந்தமான மிரிஹான – எம்புல்தெணிய மண்டப வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று இருப்பதாக பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, மிரிஹான பொலிஸார் நுகேகொட நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிவித்ததுடன், குறித்த வீட்டிற்குச் சென்று வாகனத்தை சோதனையிட்டனர். மேலும், முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மனைவியிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். மேற்படி வீட்டில் முன்னாள் அமைச்சரின் மனைவியின் தாயார் வசிப்பதாகவும், சில தினங்களுக்கு முன்னர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர், குறித்த காரை 3 வாரங்களுக்கு முன்பு கராஜுக்கு கொண்டு வந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு இலக்கத் தகடுகள் மற்றும் சாவிகள் இல்லாத சொகுசு கார் மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று அரச பரிசோதகர் வாகனத்தை சோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும் அதன் பின்னர் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். https://thinakkural.lk/article/311189
-
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்கெடுப்பு இன்று தேர்தல் சட்டங்களுக்கு அமைய செயற்படுங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில்தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. காலிமாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பு இன்று இடம்பெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகள் 1 சுயேட்சை குழு ஆகிய போட்டியிட்டன. தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி - 17,295 (15), ஐக்கிய மக்கள் சக்தி - 7,924 (06) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 3,597 (03) பொதுஜன ஐக்கிய முன்னணி-2612(02) சுயேட்சை குழு-2568( 02) பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி-1350( 01) தேசிய மக்கள் கட்சி - 521 (01) https://www.virakesari.lk/article/197205
-
இலங்கையில் பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
அறுகம் குடா தாக்குதல் திட்டத்திற்கு வெளிநாட்டு ஆதரவு? – நிதி பயிற்சி வழங்கப்பட்டதா என விசாரணை வெளிநாடொன்றின் ஆதரவுடனேயே அறுகம் குடாவில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்காக திட்டமிடப்பட்டதாக தெரிவித்துள்ள சண்டே டைம்ஸ் ஒக்டோபர் 19 முதல் 24ம் திகதிக்குள் இந்த தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது. சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் அறுகம் குடாவில் உள்ள அவர்களது வழிபாட்டுதலத்தில் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டிருக்க கூடிய பெரும் ஆபத்தை பொலிஸார் தடுத்துநிறுத்தியுள்ளனர். ஓக்டோபர் 19 முதல் 24 ம் திகதி இந்த தாக்குதலிற்கு திட்டமிட்டிருந்தனர், இந்த வாரத்தில் இஸ்ரேலியர்கள் பெருமளவில் கலந்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறவிருந்தது என புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன. வெளிநாடொன்று இந்த தாக்குதலை மேற்கொள்வதற்கு எவ்வளவு தூரம் ஆதரவு வழங்கியது? எவ்வளவு நிதி வழங்கப்பட்டது? என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலை மேற்கொள்வதற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டனவா? என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. https://www.virakesari.lk/article/197208
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட் - விஜய் சொல்ல வருவது என்ன? பட மூலாதாரம்,TVK IT WING/X படக்குறிப்பு, மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள கட்-அவுட் விவாதங்களை எழுப்பியுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 27 அக்டோபர் 2024, 02:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கட்சி தொடங்கி சுமார் 9 மாதங்களுக்குப் பின், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் அதன் தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார். மாநாடு நடைபெறும் இடத்தில் பல்வேறு தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், மன்னர்களின் கட்-அவுட்கள் இடம் பெற்றிருப்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது. இந்த கட்-அவுட்கள் விஜயின் கொள்கைகளை ஓரளவு தெளிவுபடுத்தும் விதமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதேவேளையில், இன்னும் தெளிவு இருக்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஒவ்வொரு கட்-அவுட்டுக்கும் நோக்கம் இருக்கிறது, அதைத் தங்கள் கட்சியின் தலைவர் கூறினால்தான் அந்நோக்கம் நிறைவேறும் என்கின்றனர், தமிழக வெற்றிக் கழகத்தினர். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்-அவுட்கள் குறித்துப் பரவலாக பேசப்படுவது ஏன்? விஜய் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார். அதுகுறித்து, விஜய் நேரடியாகத் தெரிவிக்காமல், அறிக்கை வாயிலாக அதன் அறிவிப்பு வந்தது. பிறகு, ஆகஸ்ட் 22ஆம் தேதி, கட்சியின் கொடி மற்றும் பாடல் வெளியிடப்பட்டது. இரு நிகழ்வுகளுக்கும் இடையே, விஜய் தன் அரசியல் கொள்கை, நிலைப்பாடு குறித்து நேரடியாக ஊடகங்களிடம் பேசவில்லை. எனினும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை, விமானப் படை சாகச நிகழ்வில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் போன்ற பிரச்னைகள் குறித்த தனது கருத்தை அறிக்கைகள் வாயிலாகத் தெரிவித்து வந்தார். இந்தப் பின்னணியில்தான், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு தமிழக அரசியல் தளத்தில் எழுந்திருக்கும் எதிர்பார்ப்பைப் பார்க்க வேண்டியுள்ளது. கட்சி தொடங்கி, இத்தனை மாதங்கள் கழித்து அவர் என்ன பேசப் போகிறார் என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளாரா? விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியின் வி.சாலையில் இன்று மாலை 4 மணிக்கு அக்கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் கட்சியின் சார்பாக செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்-அவுட்கள் குறித்து சமூக ஊடகங்களிலும் அரசியல் அரங்கிலும் பரவலாக விவாதிக்கப்படுகிறது. ஒருபுறம் வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், மறுபுறம் அம்பேத்கர், சுதந்திர போராட்டர் வீரர் அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு நடுவே விஜய் நிற்பது போன்று கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்-அவுட்களை வைத்திருப்பதன் மூலம் விஜய் சொல்ல வருவது என்ன? அவர் தனது நிலைப்பாட்டை தெளிவாக்கியுள்ளாரா என்பதை அறிய அரசியல் நோக்கர்களிடம் பிபிசி தமிழ் பேசியது. பட மூலாதாரம்,X/ACTORVIJAY படக்குறிப்பு, பெரியார், அம்பேத்கர், காமராஜர் குறித்து ஏற்கெனவே பேசியுள்ளார் விஜய் (கோப்புப்படம்) “இதுதான் என் கொள்கை என்பதை அவர் முழுமையாகத் தெளிவுபடுத்தவில்லை. கட்-அவுட்கள் வாயிலாக தமிழ் தேசியம், திராவிடம், தேசியம் மூன்றையும் அவர் முழுமையாக, தெளிவாக முன்னிறுத்தவில்லை. அவர் ஒருவேளை திராவிடம்தான் தனது கொள்கை என்று நினைத்திருந்தால், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை எழுந்தபோது ஆளுநரைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும்” என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை உணர்த்தும் வகையில் பெரியார், சமூக நீதிக்காக அம்பேத்கர், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காமராஜர் கட்-அவுட்களை வைத்திருக்கலாம் என ப்ரியன் கருதுகிறார். ஆனால், “பெரியார் கட்-அவுட் வைத்திருப்பதால் கடவுள்-மறுப்பு கொள்கையில் அவரின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை” என்கிறார் ப்ரியன். “எனினும், புதிதாக கட்சி தொடங்குபவர்கள், இன்றைய சூழலில் பெரியாரை முன்னெடுப்பதற்குப் பெரிதும் தயங்குவர். ஆனால், அவரை தைரியமாக முன்னெடுத்ததற்குப் பாராட்ட வேண்டும்.” கடந்த இரண்டு ஆண்டுகளாக, விஜய் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒவ்வொரு தொகுதியிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை கௌரவிக்கும் விதமாக நிகழ்ச்சி நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் அப்படி நடைபெற்ற கல்வி நிகழ்ச்சியில், ‘பெரியார், அம்பேத்கர், காமராஜரை படியுங்கள்’ என்று ஏற்கெனவே கூறியிருந்தார். பெரியாரின் பிறந்த நாளன்று பெரியார் திடலுக்குச் சென்று அவருடைய சிலைக்கு விஜய் மரியாதை செலுத்தினார். மேலும், நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு குறித்தும் அவர் பேசியுள்ளார். பட மூலாதாரம்,LOYOLAMANI/X படக்குறிப்பு, சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்த தனது நிலைப்பாட்டை விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர் அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோருக்கு கட்-அவுட்கள் வைத்திருப்பதன் ‘அரசியல் கணக்கு’ குறித்து விளக்கினார், மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி. “கட்-அவுட்கள் ஓரளவு தெளிவாக இருப்பதாக நினைக்கிறேன். தான் குறிவைக்கும் வாக்கு வங்கியை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அம்பேத்கர் மூலம் தலித் வாக்கு வங்கியை குறிவைக்கிறார். பெரியார் மூலம் சமூக நீதியை முன்னிறுத்துகிறார். காமராஜரை முன்னிறுத்துவதன் வாயிலாக, காங்கிரஸ் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளை குறிவைக்கிறார். வேலுநாச்சியார் மூலமும் குறிப்பிட்ட சமூக வாக்கு வங்கி குறிவைக்கப்படுகிறது,” என்கிறார் அவர். எம்ஜிஆர், அண்ணா இடம்பெறாதது ஏன்? மறைந்த தலைவர்கள் அண்ணா, எம்ஜிஆர் குறித்து நேர்மறையான கருத்துகளைக் கூறி வரும் விஜய், அவர்களுக்கு கட்-அவுட் வைக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், அவ்விரு தலைவர்களுக்கும் கட்-அவுட் வைத்தால் விஜய் தனது தனித்தன்மையை நிரூபிக்க முடியாது என்கிறார் ப்ரியன். ஏற்கெனவே, விஜய் திரைப்படங்களில் எம்ஜிஆர் பாடல்கள், அவர் குறித்த குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தவெக கொடி பாடலில், எம்ஜிஆர், அண்ணாவின் படங்கள் பின்னணியில் இடம் பெற்றிருந்தன. மேலும், செப்டம்பர் 15 அன்று அண்ணாவின் பிறந்த நாளன்று அவரை நினைவுகூர்ந்து விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். இருப்பினும், “அண்ணா, எம்ஜிஆருக்கு கட்-அவுட் வைப்பது நியாயமும் இல்லை. அண்ணா ஆரம்பித்த கட்சியும் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியும் ஏற்கெனவே தமிழகத்தில் உள்ளது. இவர்களை முன்னிறுத்தி வாக்கு கேட்பதாக அக்கட்சியினர் சொல்லிவிடக்கூடாது என்பதால் தவிர்த்திருக்கலாம்” என்கிறார் ப்ரியன். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலேயே வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் கட்-அவுட்களை வைத்திருப்பதாக ப்ரியன் கூறுகிறார். பட மூலாதாரம்,𝗧𝗩𝗞 𝗜𝗧 𝗪𝗜𝗡𝗚/X படக்குறிப்பு, தமிழ் மன்னர்களுக்கு கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளதை விமர்சிக்கிறார், பத்திரிகையாளர் மணி இதுதவிர, தமிழ்த்தாய், சேர, சோழர், பாண்டிய மன்னர்களுக்கும் கட்-அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநாட்டு பந்தலின் நுழைவுவாயிலில் சுதந்திர போராட்ட வீரர்கள், சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துகோன், மன்னர் பெரும்பிடுகு முத்தரையர், தீரன் சின்னமலை, மன்னர் பூலித்தேவன், மருது சகோதரர்கள், ஒண்டிவீரன் உள்ளிட்டோரின் கட்-அவுட்களும் வைக்கப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. “சேர, சோழ, பாண்டியர்களின் கட்-அவுட்களை வைத்திருப்பது, தமிழ் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் விஷயமாக உள்ளது. கட்-அவுட்களில் இடம்பெற்றுள்ள சில தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், மன்னர்களை குறிப்பிட்ட சாதியினர் கொண்டாடுகின்றனர் என்பதற்காக அவர்களை சாதி ரீதியானவர்கள் என முத்திரை குத்துவது சரியில்லை. தமிழ் மன்னர்களை முன்னெடுத்ததால் நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் தமிழ்த் தேசியம் என்று இதைச் சொல்ல முடியாது. ஏனெனில், சீமான் பெரியாரை ஏற்றுக்கொள்ளவில்லை” என்கிறார், ப்ரியன். சிந்தனையில் தெளிவின்மையா? ஆனால், மன்னர்களுக்கு கட்-அவுட் வைத்திருப்பது குறித்த ப்ரியனின் இந்தக் கருத்துடன் முரண்படும் பத்திரிகையாளர் ஆர். மணி, அதைக் கடுமையாக விமர்சிக்கிறார். “மன்னர்களுக்கு கட்-அவுட் வைத்தது அபத்தமாக இருக்கிறது. ஜனநாயகத்தில் மன்னர்களுக்கு எந்த வேலையும் இல்லை. இது, சிந்தனையில் தெளிவின்மையைக் காட்டுகிறது” எனத் தெரிவித்தார். “எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என நினைத்தால் அவரால் வெல்ல முடியாது. தெளிவான பாதை இருக்க வேண்டும். யார் மனதும் கோணக்கூடாது என நினைத்து அரசியல் செய்ய ஆரம்பித்தால் அவர் படுதோல்வியைச் சந்திப்பார்," என்று விமர்சிக்கும் மூத்த பத்திரிகையாளர் மணி, ஒருவேளை அவருக்கு போகப் போக தெளிவு வரலாம் எனக் கருதுவதாகக் கூறுகிறார். பட மூலாதாரம்,TVK HQ படக்குறிப்பு, விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்தியபோது தமிழக வெற்றிக் கழகம் இந்த கட்-அவுட்கள் மூலம் உணர்த்த முயலும் செய்தி என்னவென்று பிபிசி தமிழிடம் பேசிய தவெக செய்தித் தொடர்பாளர் லயோலா மணி, "இவை அனைத்தையும் பற்றி விஜய் இன்று மாநாட்டில் பேசுவார்," என்று தெரிவித்தார். "பெரியார், அம்பேத்கர், காமராஜர் சமத்துவத்திற்காகவும் சமூக நீதிக்காகவும் போராடியவர்கள். அதைத்தான் நாங்களும் வலியுறுத்துகிறோம். விஜய் இந்தத் தலைவர்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறார்” என்றார். மேற்கொண்டு பேசியவர், "பெண் விடுதலை இல்லை என்றால் சமூக விடுதலை இல்லை. பெண்கள் அதிகாரத்திற்கு வந்தால்தான் சமூக விடுதலை கிடைக்கும். பெண் தலைவர்கள், போராளிகளை அடையாளப்படுத்தி, பெண்கள் முன்னேற்றம், பெண் கல்வியை வலியுறுத்தும் விதமாக அவர்களின் கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன" என்றார். இந்த கட்-அவுட்கள் பிரதிபலிக்கும் செய்தியைப் பார்த்தால், அவை ஒரு "ஒட்டுமொத்த கலவையாக" இருப்பதாகவும், "அரசியலில் விஜயின் எண்ண ஓட்டம் என்னவென்பதைக் காட்டும் வகையில் இல்லாமல், அவர் குழப்பமான மனநிலையில் இருப்பதாகவே காட்டுவதாகவும்" கூறுகிறார் ப்ரியன். ஆனால், "இது கலவையாக இல்லை, ஒரு கொள்கையாக இருக்கிறது" என்று கூறும் லயோலா மணி, ஒவ்வொரு தலைவர் குறித்தும் விஜய் கூறும்போது அதன் நோக்கம் சென்று சேரும் எனவும், மன்னர்களை முன்னிலைப்படுத்தியதன் நோக்கத்தையும் அவர் மாநாட்டில் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார். பட மூலாதாரம்,TVK IT WING/X மற்ற கட்சிகளுக்கு உணர்த்துவது என்ன? மற்ற அரசியல் கட்சிகள் மீது மாநாடு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? “திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் மீது தவெக மாநாடு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அக்கட்சியின் கொள்கைகள்தான் தீர்மானிக்கும்” என்கிறார் ப்ரியன். வக்பு வாரியம், சாதிவாரி கணக்கெடுப்பு, ஒரே நாடு-ஒரே தேர்தல் உள்ளிட்ட சமகால பிரச்னைகள் குறித்து அவருடைய நிலைப்பாட்டை வைத்துதான் முடிவெடுக்க வேண்டும் என்கிறார் அவர். “தனது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல்தான் என விஜய் கூறியிருப்பதால், திமுகவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தால்தான், தன்னை நிலைநிறுத்த முடிகிறதோ இல்லையோ, ஓரளவுக்குத் தாக்கத்தையாவது ஏற்படுத்த முடியும்” என்கிறார் பத்திரிகையாளர் மணி. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cd7nn3pxgepo
-
அனுதாப வாக்குகளுக்காக அன்றி, ஆக்கபூர்வமான அரசியலுக்காக பெண்களை உள்வாங்க வேண்டும்!
(புருஜோத்தமன் தங்கமயில்) இளையோருக்கும் பெண்களுக்குமான அரசியல் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்கிற குரல்கள் தேர்தல் காலங்களில் அதிகமாக கேட்பதுண்டு. இம்முறையும் வேட்புமனுத் தாக்கல் முடியும் நாள் வரையில், அந்தக் குரல்கள் பலமாகவே கேட்டன. அதிலும் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், இளையோருக்கும் பெண்களுக்குமான இடத்தை பிடித்து வைத்துக் கொண்டு, பெருந்தடையாக இருக்கும் மூத்த அரசியல்வாதிகளும்கூட அந்தக் குரல்களை எழுப்பினர்கள் என்பதுதான் வேடிக்கையானது. வழக்கமாக மூத்த – பழுத்த அரசியல்வாதிகளினால் நிறையும் இலங்கையின் தேர்தல் களம், ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியோடு இளையோர், புதியவர்களுக்கான களமாக இம்முறை மாறியிருக்கின்றது. அதன் பிரதிபலிப்புக்களை, தமிழ்த் தேசிய அரசியல் களமும் ஓரளவு உள்வாங்கியிருக்கின்றது. பெண்களுக்கான அரசியல் – தேர்தல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதில், தமிழ்த் தேசியக் கட்சிகளோ அமைப்புக்களோ போதிய அக்கறையை வெளிப்படுத்துவதில்லை. அண்மையில் கூடிக் கலைக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் கூட, பெண்களுக்கான பிரதிநித்துவம் என்பது பூச்சியமாக காணப்பட்டது. கட்டமைப்புக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பதின்நான்கு பேரும் ஆண்கள். அதிலும், மூத்தவர்கள். ஒரு பெண்ணைக் கூட இணைக்கவில்லையே என்கிற எந்தவித ஆதங்கமோ அங்கலாய்ப்போ கூட அவர்களிடம் இருக்கவில்லை. ஒருவித ஆணாதிக்க மனநிலையோடு நின்று விடயங்களை அணுகி, கீழே போட்டுடைத்து ஓய்ந்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவின் போதும், ஒப்புக்காகவே பெண்களை இணைத்துக் கொள்ளும் நிலை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் காணப்பட்டது. வெற்றிபெறக் கூடிய, பாராளுமன்ற அரசியலில் பங்களிக்கக் கூடிய பெண்களை உள்வாங்கி, அவர்களுக்கான அங்கீகாரத்தைக் கொடுப்பது சார்ந்து தமிழ்க் கட்சிகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. பெண்களை வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கவில்லை என்றால், விமர்சனங்கள் எழும், அதனைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே வெற்றிக்கு அண்மையில் வரமுடியாத பெண்களை உள்வாங்குவதில் குறியாக நின்றிருக்கின்றன. இது, தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடங்கி அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் பொருந்தும். இலங்கை உள்ளிட்ட தென் ஆசிய நாடுகளில் பெண்களில் அரசியல் வருகை என்பது, பெரும்பாலும் அனுதாப அலையை வாக்குகளாக மாற்றுவதற்காகவே நிகழ்ந்திருக்கின்றன. உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறீமாவோ பண்டாரநாயக்க தொடங்கி, அவரின் மகள் சந்திரிக்கா குமாரதுங்க உட்பட, தமிழ்த் தேசிய அரசியலுக்குள் கடந்த காலங்களில் அழைத்து வரப்பட்ட சசிகலா ரவிராஜ், அனந்தி சசிதரன் வரையில் அதுதான் வரலாறாக இருந்திருக்கிறது. இந்தப் பெண்களின் குடும்ப உறுப்பினர் ஒருவர் அரசியல் ரீதியாக படுகொலை செய்யப்பட்டிருப்பார்; காணாமல் ஆக்கப்பட்டிருப்பார் அல்லது பதவியில் இருக்கும் போது உயிரிழந்திருப்பார். அப்படியான சூழலில், இந்தப் பெண்களைக் காட்டி அனுதாப வாக்குகளைத் திரட்டுவதுதான் இந்தக் கட்சிகளின் பிரதான வேலையாக இருந்திருக்கின்றன. இந்தியாவின் இரும்பு மனுசியாக பார்க்கப்படும் இந்திரா காந்தியே, அப்படியான அரசியல் வாரிசுதான். இதில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் மட்டுமே, அவரின் அரசியல் குருவான எம்.ஜி.ஆரையே கட்சிக்குள் எதிர்த்து நின்று தனித்துவமாக எழுந்து ஆட்சி அதிகாரம் பெற்றவர். அவர் மீது அனுதாப அலைக்கான அடையாளத்தை ஒட்ட வேண்டியதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 2015 பொதுத் தேர்தல் காலத்தில் சசிகலாவை தேர்தல் அரசியலுக்கு அழைத்துவர முயன்றது. குறிப்பாக, மறைந்த இரா.சம்பந்தனின் யோசனையில் அதற்கான வேலைகளில் எம்.ஏ.சுமந்திரன் ஈடுபட்டார். அது, பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை அடிப்படையாக கொண்ட அழைப்பல்ல, மாறாக படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மீதான அனுதாபத்தினை வாக்குகளாக மாற்றும் உத்தி சார்ந்தது. அடிப்படையில், அப்படியான நிலை என்பது அபத்தமானது. அதனால், ஒருபோதும் பெண்களுக்கான பிரதிநிதித்துவப் பங்களிப்பு காக்கப்படுவதில்லை. அதில், பெரும்பாலானவை, வெற்றுக்கனவுகளாவே முடிந்து போயிருக்கின்றன. அனுதாப அலைக்காக அரசியலுக்குள் உள்வாங்கப்பட்ட ஒருசில பெண்கள், தேர்தல் அரசியலுக்குள் வென்று, ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், ஆட்டுவிக்கும் கருவிகளாக அந்தப் பெண்கள் இருந்தார்களா என்றால், அதன் பதில் எதிர்மறையானது. பெண்களின் அரசியல் பங்களிப்பு, அதனூடான பிரதிநித்துவம் என்பது இயல்பாக நிகழ வேண்டும். அதற்கான வாய்ப்புக்களை தடுக்காது, அனுமதிப்பதுதான் கட்சிகள் செய்ய வேண்டிய முதல் வேலை. இம்முறை தேர்தல் களத்தில், தேசிய மக்கள் சக்தியில்தான் கிட்டத்தட்ட 20 வீதமான வேட்பாளர்கள் பெண்கள். அவர்களினால்கூட குறைந்தது 35 வீதத்தைத் தாண்டிய வேட்பாளர் நியமனத்தை பெண்களுக்கு வழங்க முடியவில்லை. ஏனைய கட்சிகளை நோக்கினால், 10 வீதமளவில்தான், ஒப்புக்காக பெண்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றன. அதிலும், தமிழரசுக் கட்சியின் நியமனக்குழுவின் சார்பில் பேசிய சுமந்திரன், தகுதியுள்ள பெண் வேட்பாளர்களைத் தேடுவதில் சிக்கல் இருப்பதாக ஊடகங்களில் தெரிவித்தமை ஒரு மோசமான முன்னுதாரணம். ஏனெனில், அடுத்த நாளே, வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் போது, அதில் உள்ளடக்கப்பட்ட பெண்கள் தொடர்பில் எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும் அபாயம் காணப்பட்டது. அது, தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்துக்கான பட்டியல் வெளியானதும் அதிகமாகவே பிரதிபலித்தது. குறிப்பாக, வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட கிருஷ்ணவேணி ஶ்ரீதரன் (கிட்டு) மற்றும் சுரேக்கா சசீந்திரன் தொடர்பில் எதிர்மறைக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. கிட்டு என்கிற கிருஷ்ணவேணியின் கள அரசியல் பங்களிப்பு என்பது திடீரென ஒருநாளில், சுமந்திரன் வேட்பாளர் பட்டியலை வாசித்ததும் உருவானதல்ல. அவருக்கான கடந்த கால அரசியல் வரலாறு கனதியானது. தமிழ்த் தேசிய அரசியலில், 2004 பொதுத் தேர்தலிலேயே, பாராளுமன்ற பிரதிநித்துவத்தைப் பெற்றிருக்கக் கூடிய ஒருவராக அவர் இருந்தார். அதனை, அன்றைக்கு கூட்டமைப்பின் பிதாமகர்களாக இருந்து, அரசியலை இயக்கிய தமிழீழ விடுதலைப் புலிகளே செய்யத் தலைப்பாட்டார்கள் என்பதுதான் உண்மை. கிட்டு தமிழ்த் தேசிய கள அரசியலுக்குள் அரங்கச் செயற்பாடுகள் ஊடாக வந்தவர். கெடுபிடியான 2000களின் ஆரம்பத்தில், சிதம்பரநாதனின் அரங்கச் செயற்பாட்டுக்குழுவில், முக்கிய இளைஞியாக நின்று கவனம் பெற்றவர். அவர்களின் அரங்கச் செயற்பாடுகளும் சேர்ந்துதான் ‘பொங்கு தமிழ்’ என்ற தமிழ் மக்களின் பேரெழுச்சிக்கு வித்திட்டது. அதிலும், களச் செயற்பாட்டாளராக கிட்டுவின் பங்களிப்பு அதிகம். அன்றிலிருந்து, புலிகளின் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பின் கூறுகளில் பங்களித்து, தமிழ்த் தேசிய அரசியலில் இயங்கியவர். அவர், 2004 பொதுத் தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளராக உள்வாங்கப்பட்ட போது, தன்னுடைய இளைய வயதினைக் காட்டி ஒதுங்கினார். அந்த இடத்தில்தான், பத்மினி சிதம்பரநாதன் வேட்பாளராக பிரதியிடப்பட்டு பாராளுமன்ற உறுப்பினரானார். முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னரான காலத்திலும் அவரை, தேர்தல் அரசியலுக்குள் அழைத்து வருவது சார்ந்து கூட்டமைப்பு, குறிப்பாக தமிழரசுக் கட்சி அக்கறை காட்டியது. 2015 பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலுக்குள் கிட்டுவை உள்வாங்குவதற்கான பேச்சுக்களில் சுமந்திரன் ஈடுபட்டார். 2020 பொதுத் தேர்தல் காலத்திலும் அது தொடர்ந்தது. ஆனால், அப்போதெல்லாம் மறுத்துரைத்த கிட்டு, தற்போது தேர்தல் களம் வந்திருக்கிறார். அப்படியான நிலையில், ‘தகுதியான பெண் வேட்பாளர்கள் இல்லை என்று ஊடகங்களில் நேற்று அறிவித்தோம், இன்று கிடைத்திருக்கிறார்கள்..’ என்று சுமந்திரன் கூறியமை அவசியமில்லாத ஒன்று. அவர், வேட்பாளர் பட்டியலில் கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களுக்காக கிட்டுவை, உள்வாங்கப் பேச்சுக்களை நடத்திய ஒருவர். அதனை, வெளிப்படையாக அறிவித்திருந்தால், எதிர்மறை விமர்சனங்கள் குறைந்திருக்கும். சசிகலாவின் தொலைக்காட்சிப் பேட்டியொன்று கடந்த வாரம் ஒளிபரப்பானது. அதில், தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பிலான சசிகலாவின் பார்வை எவ்வளவு குறுகியது என்பது அப்பட்டமாக வெளிப்பட்டது. அந்தப் பேட்டி முழுவதும், தமிழரசுக் கட்சிக்காரர்கள், அனுதாப வாக்குகளுக்காக அன்றி, வேறெந்த தேவைக்காகவும் சசிகலாவை அரசியலுக்கு அழைக்கவில்லை என்பது புரிந்தது. அவரிடம் மக்களின் பிரச்சினைகள், போராட்டங்கள் தொடர்பில் எந்தவித புரிதலும் இல்லை. அரசியலை, பதவிகளுக்கான கட்டமாகவே பார்க்கும் தன்மை வெளிப்பட்டது. தான் பிரதிநிதித்துவம் செய்யப்போவதாக கூறும், தென்மராட்சியின் தேவைகள், அத்தியாவசியங்கள் தொடர்பிலேயே விளக்கமற்று இருக்கிறார். கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அவர், அதன் பின்னரான அரசியல் செயற்பாட்டுக் களத்தில் எந்தவித பங்களிப்பையும் செய்யவில்லை என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். ரணிலுடனான சந்திப்பு, பெண்களுக்காக வேட்பாளர் நியமனம் உறுதிப்படுத்தலுக்கான சந்திப்பு என்று ஒருசில நிகழ்வுகளில் பங்களித்தமையைத் தாண்டி, அவருக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் எந்தவித தொடர்பும் அற்றே இருந்திருக்கிறார். அப்படியான நிலையில், கிட்டு போன்றவர்களின் கடந்த கால கள அரசியல் பங்களிப்பை, வெளிப்படையாக அறிவித்து, இந்தத் தேர்தல் அரசியலுக்கு அழைத்துவரப் பட்டமைக்கான காரணங்களை தமிழரசுக் கட்சி விளக்கியிருக்க வேண்டும். ஏனெனில், கிட்டு வேட்பாளராக அறிமுகப்படுத்தப்படும் போதே, அவர் சுமந்திரனின் வெற்றிக்காக களமிறக்கப்பட்டவர் என்கிற தோற்றம் உருவாக்கப்பட்டமையானது அவசியமற்றது. தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில், கிட்டுவின் உரை அதனைப் பிரதிபலித்தது. இன்னொரு பக்கத்தில், சுரேக்காவின் வேட்பாளர் நியமனம் பற்றி சமூக ஊடகங்கள் மிகமோசமான கண்ணோட்டத்தில் விடயங்களை அணுகின. இரண்டாந்தர சிந்தனைகள் தொடங்கி, சாதிய அடையாளம் பூசி அவதூறுகளைப் பரப்பியமை வரையில் நடந்தன. அதுவும், தமிழ்த் தேசிய அரசியலைப் பேசுவதாகக் காட்டிக் கொள்ளும் தரப்பினர், அவற்றைச் செய்தார்கள் என்பதுதான், கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. சுரேக்காவின் அரசியல் அணுகுமுறை - கல்வித் தகைமைகள் தொடர்பில் ஆராயப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால், அவரின் சாதியப் பின்னணி, ஆராயப்பட்டு அதற்கு அர்த்தம் கற்பிக்கப்படுவதனை ஒருபோதும் அரசியல் விமர்சனமாக கருத முடியாது. விடுதலைக்காக போராடும் சமூகம், தன்னுள் காணப்படும் சாதிய, பெண் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் நின்று போராட வேண்டும். மாறாக, தடித்த சாதிய, ஆணாதிக்கத் தனத்தில் நின்று அரசியலை அணுகுதல், அதுவும் தமிழ்த் தேசிய அரசியலை அணுகுதல் என்பது, எமக்காக போராடி மாண்ட ஆயிரமாயிரம் உறவுகளை கேலிப்படுத்துவது போன்றது. தமிழரசுக் கட்சி ஜனநாயகப் பாராம்பரியத்துக்குள்ளால் வந்து நிற்கும் கட்சி. ஏனைய முன்னாள் ஆயுத இயக்கங்கள் போன்றதல்ல. அந்த இயக்கங்களில் இருந்த பெண்கள், அந்த இயக்கங்கள் அரச ஆதரவுக் குழுக்களாக இயங்க ஆரம்பித்த தருணத்திலேயே, விலகிக் கொண்டு விட்டார்கள். அந்த இயக்கங்கள் முழுவதுமாக ஆண்களினால் ஆட்சி செலுத்தப்படுவது. ஆனால், தமிழரசுக் கட்சி ஓர் ஆயுத இயக்கமல்ல. அதனை, 2004களில் மீட்டெடுத்துக் கொடுத்த புலிகள், பெண்களுக்கான பிரதிநித்துவம் தொடர்பில் அக்கறையோடு இயங்கிய போராட்ட இயக்கம். அப்படியான நிலையில், பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை காப்பதற்கான முயற்சிகளில் ஆக்கபூர்வமாக இயங்க வேண்டியது, தமிழரசுக் கட்சியின் கடமை. அதனை, அந்தக் கட்சி இதுவரையும் செய்யவே இல்லை. தேர்தல்கள் வந்தால் மாத்திரம், ஒப்புக்காக பெண் வேட்பாளர்களைத் தேடுவது என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கட்சிக் கட்டமைப்புக்குள் முதலில் குறைந்தது 30 வீதமான அளவு, பிரதிநிதித்துவத்தை வழங்கி பெண்களுக்கான அங்கீகாரத்தை உறுதி செய்ய வேண்டும். அப்படியான அங்கீகாரம், பெண்களை கட்சி – கள அரசியலுக்குள் அழைத்து வருவதற்கான உந்துதலை வழங்கும். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில், அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத் திருத்தத்தின் வழியாக, உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களில் பிரதிநிதித்துவம் ஓரளவு காக்கப்பட்டது. அதனால், சில பெண்களுக்கான களம் திறந்தது. குறிப்பாக, ஒரு உள்ளூராட்சி மன்றதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் முப்பது வீதமளவில் பெண்கள் இருக்க வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதனால், வட்டாரங்களில் நேரடியாக பெண்கள் வெற்றிபெறவில்லை என்றாலும், விகிதாரச முறையில் ஆசனங்களை வென்ற கட்சிகள் பெண்களுக்கு அவற்றை ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனால், நேரடியாக வட்டாரங்களை வெல்ல முடியாத கட்சிகள், பெண்களை நியமிக்க வேண்டி வந்தது. அதுவும், விரும்பி நிகழ்ந்தது அல்ல. மாறாக, சட்டம் போட்டுச் செய்யப்பட்டது. அந்தச் சூழல், சில பெண்களை அரசியலுக்குள் அழைத்து வந்தது. ஆனாலும், அவர்களில் எத்தனை பேரை, கள அரசியல் எடுத்துக் கொண்டது அல்லது உள்வாங்கியது என்ற கேள்வி முக்கியமானது. அர்த்தமுள்ள அரசியல் என்பது, அனைத்துக் கட்டங்களிலும் திறக்க வேண்டும். அதனை, தொடர்ச்சியாக போராடும் சமூகக் கூட்டமான தமிழர்கள், அர்ப்பணிப்போடு ஏற்றுச் சுமக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்த் தேசிய அரசியலில் வெற்றுக் கட்டங்கள் உருவாகும். அதனை, கானல் வெளி நிரப்பும். அப்போது, மக்கள் தமிழ்த் தேசிய அரசியல் மீது நம்பிக்கையிழப்பார்கள். பெண்களை வாக்களிக்கும் இயந்திரங்களாகவோ, அனுதாப அலைக்கான கருவிகளாகவோ மாத்திரம் பார்க்காமல், அரசியலின் பெருங்கூறாக உள்வாங்க வேண்டும். அதுதான், பெண்களுக்கான அரசியல் பங்களிப்பையும் பிரதிநிதித்துவத்தையும் உண்மையாக உறுதி செய்யும். -காலைமுரசு பத்திரிகையில் ஒக்டோபர் 20, 2024 வெளியான பத்தி. http://maruthamuraan.blogspot.com/2024/10/blog-post_20.html
-
"இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு இனம் மாறிய சிங்களவர்கள் காரணமா?" / "Are converted Sinhalas responsible for Srilankan Tamil problem?"
பகிர்விற்கு நன்றி ஐயா.
-
நளபாகம் - தி. ஜானகிராமன்
Tuesday, October 15, 2024 காமேச்வரன் தன்னுடைய சிறு வயதிலேயே அன்னையை இழந்து, பின்னர் தந்தை கல்யாணம் செய்துகொண்ட சித்தியின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறுகிறான். ரயிலில் அவனை சந்திக்கும் வத்சன் என்பவர் அவனைக் கூட்டிச்செல்கிறார. அவருக்கு சமையல் கலை தெரியும் என்பதால் ஒரு கோவிலில் சமைக்கும் வேலை அவருக்கு. அவருடனேயே தங்கி கொள்ளும் காமேச்வரன், சமையலைக் கற்றுகொண்டு அவரையே குருவாக எண்ணிக் கொள்கிறான். அவரின் இறப்புக்கு பின்னர் அவனுடைய நினைவுகளில் அவர் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறார். காமேச்வரன் இப்பொழுது காசி, பத்ரிநாத் எனச் செல்லும் யாத்ரிகர்களுக்கு சமைப்பவனாக தனி ரயிலில் வேலைக்கு இருக்கிறான். அவன் சமையலை அனைவரும் புகழ்கிறார்கள். அப்படி ஒரு பயணத்தில்தான் ரங்கமணி அம்மாள், ஜோதிடர் முத்துசாமி என அவனுக்கு அறிமுகமாகிறார்கள். ரங்கமணி அம்மாவுக்கு கணவர் இல்லை. கல்யாணம் ஆன சில வருடங்களிலேயே கணவனை இழக்கிறார். குழந்தை இல்லாததால் தன்னுடைய மாமியார் சுவீகாரம் எடுத்துக் கொள்ள வற்புறுத்துவதால் சொந்தத்தில் துரை என்பவனை மகனாக ஏற்றுக் கொள்கிறார். ரங்கமணி கணவரின் குடும்பத்தில் சில தலைமுறைகளாகவே குழந்தை பாக்கியம் இல்லை. அதற்கு ஒரு கதையும் சொல்கிறார்கள். இப்பொழுது துரைக்கு திருமணம் ஆகி ஏழாண்டுகள் கழிந்தும் குழந்தை இல்லை. யாத்திரை ரயிலில் போகும்பொழுது எங்களின் குடும்பத்துக்கு பிடித்த பாவம் போகுமா, குழந்தை பாக்கியம் கிடைக்குமா என ஜோதிடர் முத்துசாமியிடம் ரங்கமணி அம்மாள் ஜோசியம் கேட்கிறார். ஜோசியம் பார்க்கும் முத்துசாமி, துரைக்கு புத்திர பாக்கியம் இல்லை, ஆனால் அவனின் மனைவி பங்கஜத்துக்கு பாக்கியம் உண்டு என்கிறார். ரங்கமணி அம்மாள் ஜோதிடரை வியந்து பார்க்கிறாள். பக்தியும், நல்ல அழகும் உள்ள இளைஞன் காமேச்வரனை தனது வீட்டுக்கு அழைக்கிறாள் ரங்கமணி. ரங்கமணிக்கு அவன் மேல் ஏற்பட்ட பிரியம் என்ன வகையானது என்பதை நாவல் விளக்கவில்லை. தான் அடையாத ஒன்றை தன் மருமகள் அடையட்டும் என்ற எதிர்பார்ப்பா என்பதும் அப்படியே. தனது தத்து பிள்ளையாக என் வீட்டில் வந்து இருந்து, உன்னுடைய பூஜைகளை நடத்து என அழைக்கிறாள். முன்பே ஒரு பிள்ளை உங்களுக்கு இருக்க, நான் அங்கே வந்து இருந்தால் பிரச்சினை வரும், என்னால் உங்கள் சொல்லையும் தட்ட முடியாது.. வேண்டுமானால் ஒரு சமையல்காரனாக நான் வந்து இருக்கிறேன் என்கிறான் காமேச்வரன். எப்படியோ நீ வந்து இருந்து, உன்னால் சில நல்ல விஷயங்கள் நடந்தால் நல்லதே என்கிறாள் ரங்கமணி. துரையின் மனைவி பங்கஜத்துக்கு காமேச்வரன் மேல் மோகம் தோன்றியது போல் இருந்தாலும், அவள் தனது கணவனை நேசிக்கிறாள். சக்தி உபாசகனாக இருக்கும் காமேச்வரனை அவள் மிகவும் மதிக்கிறாள். மாமியார் ரங்கமணியின் நோக்கம் புரிந்தாலும் அதற்கு இடம் கொடுக்காமல் துரையுடன் நெருங்குகிறாள். இதற்கு முன்னரே இருவரும் கணவன் மனைவி என்றாலும், இப்பொழுதுதான் காதல் செய்வது போல பழகுகிறார்கள். அதன் விளைவாக பங்கஜம் தாய்மை அடைகிறாள். அதற்கு முன்பாகவே காமேச்வரன் பிடி அரிசி என்ற திட்டத்தின் மூலம் ஊரில் உள்ள பள்ளியில் பயில வரும் குழந்தைகளுக்கு நல்ல உணவு கொடுக்கிறான். அதற்காக எல்லோரிடமும் உதவி கேட்கிறான். அந்த ஊரில் உள்ள சில இளைஞர்கள் அவனுக்கு உதவுகிறார்கள். தொடர்ந்து ரங்கமணி அம்மாவின் வீட்டில் பூஜை செய்கிறான், ஊரில் உள்ள சிலர் அவனிடம் வந்து குங்குமம் வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் ஊரில் உள்ளோர் வதந்தியை கிளப்புகின்றனர். பங்கஜம் தாய்மை அடைய காரணம் காமேச்வரன் தான் என பேசுகின்றனர். இதை அறிந்த காமேச்வரன், ஜோசியர் முத்துசாமியிடம் சென்று கேட்கிறான். அவரோ, உண்மையாய் நடந்தால் என்ன, நடந்தது போல பேச்சு கிளம்பினால் என்ன இரண்டும் ஒன்றுதான். ஜோசியர்களைப் பொறுத்தவரை எல்லாவற்றுக்கும் ஒரு விளக்கம் சொல்வார்கள். அப்படிச் சொன்னீர்களே, இப்படியாகி விட்டது என்றால் அதற்கும் ஒரு காரணம் சொல்லி தான் சொன்னதே சரி என்று நிற்பார்கள். காமேச்வரன் பின்னர் தான் ரங்கமணி வீட்டை விட்டு போக முடிவு செய்கிறான். முன்பு செய்த வேலையான ரயிலில் சமைக்கும் வேலைக்கு திரும்ப போகிறான். அத்தனை வருடங்களாக திருமணத்தை தள்ளிப் போட்ட காமேச்வரன், தனக்குப் பெண் பார்க்குமாறு ரயில் யாத்திரையை நடத்தும் நாயுடுவிடம் சொல்கிறான். ஒரு நல்ல விஷயம் நடக்கிறதென்றால் அதற்கு காரணம் நம்மைச் சுற்றியும் நடக்கும் நல்ல நிகழ்வுகள் மற்றும் நல்ல மனிதர்களே என்பதை நளபாகம் நாவல் சுட்டிக் காட்டுகிறது. ஆன்மிகம், பக்தி என்று ஒருபக்கம் இருந்தாலும் நாம் மனிதர்கள் மேல் வைக்கும் அன்பே நம்மை கடைத்தேற்றுகிறது. யார் செய்த பாவமோ என்று நாம் நினைக்கும் அனைத்தும் அந்த அன்பின் முன்னால் அழிந்து போகின்றன. http://ippadikkuelango.blogspot.com/2024/10/nalapakam.html
-
நாடு முழுவதும் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கியுள்ள 31 பெண் வேட்பாளர்கள்
சி.சிவகுமாரன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஒன்பது மாகாணங்களிலும் 31 பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ள தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியலிலும் நான்கு பெண்களின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது. இலங்கை அரசியலில் பாலின சமத்துவம் என்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் இந்த செயற்பாடு நாடு முழுவதிலும் உள்ள பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் விசேடமான அம்சம் என்னவெனில் பலர் எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாது தேசிய மக்கள் சக்தியில் நேரடியாக இணைந்து கொண்டவர்களாக உள்ளனர். அதிகமான பெண்கள் சட்டத்தரணிகளாகவும் கல்வியலாளர்களாவும் உள்ளனர். ஜனாதிபதி தேர்தலின் போது தனது பிரசாரத்தில் தேசிய மக்கள் சக்தியானது, தாம் ஆட்சியமைத்தால் பெண்களுக்கு அரசியலில் சமவாய்ப்பை வழங்குவோம் என மக்கள் மத்தியில் வாக்குறுதியை வழங்கியிருந்தது. அதில் பிரதானமாக, பெண் ஒருவரையே நாம் பிரதமராக நியமிப்போம் என்று வாக்குறுதியும் அடங்கும். ஏனென்றால் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர்களாக களமிறங்கிய 38 பேரும் ஆண்களாகவே இருந்தனர். இறுதியாக 2019 ஆம் ஆண்டே பெண் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருந்தார் (அஜந்தா பெரேரா) ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய கல்வியியலாளர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமராக்கினார். இவர் இலங்கையின் மூன்றாகவது பெண் பிரதமராக விளங்குகின்றார். இதற்கு முன்னதாக சிறிமா பண்டாரநாயக்க இலங்கையில் மாத்திரமல்லாது உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரியவர். இரண்டாவதாக அவரது மகள் சந்திரிகா பண்டாரநாயக்க பிரதமராக விளங்கினார். ஹரிணி அமரசூரிய அநுரவின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பை வழங்கியவர். எந்த அரசியல் பின்புலமும் இல்லாத அவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை தலைவராகவும் விரிவுரையாளராகவும் விளங்கியவர். ஹரிணி அமரசூரிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டதை நாட்டின் பெண்வர்க்கத்தினர் வரவேற்றுள்ளனர். காரணம் அவர் கல்வித்துறை சார்ந்த ஒருவராக விளங்குகிறார். இதையடுத்து பாராளுமன்றத் தேர்தல்களிலும் துறை சார்ந்த பெண்களை களமிறக்குவதில் தேசிய மக்கள் சக்தி மும்முரமாக ஈடுபட்டது. அதன் படி நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தனது பட்டியலில் பெண்களை தெரிவு செய்துள்ள தேசிய மக்கள் சக்தி. மேல் மாகாணம் கொழும்பு மாவட்டத்தில் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சமன்மலி குணசிங்க, ராய் கெளி பல்தசரர், கலாநிதி கெளசல்யா ஆரியரத்ன, சட்டத்தரணி சாமனி குணசேகர ஆகியோரும், கம்பஹா மாவட்டத்தில் ஹேமாலி வீரசேகர சாமரிகா ஜயசிங்கவும், களுத்துறை மாவட்டத்தில் சட்டத்தரணி நிலாந்தி கோட்டஹாச்சி ,ஒஷானி உமங்கா ஆகியோரும் போட்டியிடுகின்றனர். மத்திய மாகாணம் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, குமுதினி அபேகுணவர்தனவும் மாத்தளை மாவட்டத்தில் தீப்தி நிரஞ்சனி வாசலகே மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் செல்வி கலைச்செல்வி, சட்டத்தரணி தர்ஷனி திலகரத்ன ஆகியோரும் போட்டியிடுகின்றனர். தென்மாகாணம் தென்மாகாணத்தின் காலி மாவட்டத்தில் அனுஷா நிமாலி சருக்காலி சட்டத்தரணி ஹசாரா நயனதாரா , மாத்தளை மாவட்டத்தில் சரோஜா சாவித்ரி போல்ராஜ், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரலதா கருணாரத்ன ஆகியோர் போட்டியிடுகின்றனர். கிழக்கு மாகாணம் திகாமடுல்ல மாவட்டத்தில் முத்துமணிகே ரத்வத்தே, மட்டக்களப்பு மாவட்டத்தில் செல்லப்பெருமாள் வனிதா திருகோணமலை மாவட்டத்தில் ஷீலா கருணாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர். வடமத்திய மாகாணம் அனுராதபுரம் மாவட்டத்தில் லெப்டினட் உதேனிகா சஞ்சீனி விஜேவந்த சப்ரகமுவ மாகாணம் கேகாலை மாவட்டத்தில் சட்டத்தரணி சகாரிகா கங்கானி அதாவுத மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் சட்டத்தரணி நிலுஷா லக்மாலி கமகே. ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் சட்டத்தரணி உபக்சா விஜேதுங்க , அம்பிகா சாமிவேல். மொனராகலை மாவட்டத்தில் சதுரி கங்கானி வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தில் சமிலா பிரசாதினி ரத்னவர்தன, சட்டத்தரணி கீதா ரத்னகுமாரி ஹேரத். புத்தளம் மாவட்டத்தில் சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க. வட மாகாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெண்ணிலா ரோசலிங்கம் வன்னி மாவட்டத்தில் பாத்திமா ஹாஜிஸ்தா. தேசிய பட்டியல் இதே வேளை தேசிய பட்டியலில் நான்கு பெண்கள் இடம்பெற்றுள்ளனர். பேராசிரியர் வசந்தா சுபசிங்க சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, சமிலா குமுது பீரிஸ், பெனிதா பிரிஷாந்தி ஹெட்டிதந்ரி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இப்பட்டியலில் 11 சட்டத்தரணிகள் இடம்பெற்றுள்ளமை முக்கிய விடயம். ஏனைய தேசிய கட்சிகளும் கூட்டணி கட்சிகளும் பெண்களுக்கு பெரிதாக இடம் வழங்காத நிலையில் தேசிய மக்கள் சக்தி சகல மாவட்டங்களிலும் பெண்களை நிறுத்தியுள்ளது. 1931 ஆம் ஆண்டிலிருந்து இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் வரை பார்க்கும் போது 60 பெண்கள் மாத்திரமே இலங்கை பாராளுமன்றத்தை அலங்கரித்துள்ளனர். மேலும் கடந்த மூன்று பாராளுமன்றங்களிலும் 13 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களே இருந்துள்ளனர். இது மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களில் வெறும் 5.7 வீதம் மாத்திரமே. உலகில் பெண்களை தலைவர்களாக கொண்ட நாடுகள் இருபதுக்கும் அதிகமாகவுள்ளன. குறித்த நாடுகளில் மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐம்பது வீதத்துக்கும் அதிகமானோர் பெண்களாக உள்ளனர். ஆனால் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான பெண் சனத்தொகை விகிதாசாரத்தை கொண்டிருக்கும் இலங்கையில் இந்நிலைமை தலைகீழாக உள்ளது. எனினும் இலங்கை அரசியலில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/197190
-
மைக்ரோக்லியா: போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் செல்கள் மூளைக்கு செய்யும் நன்மை, தீமைகள்
பட மூலாதாரம்,SERENITY STRULL/BBC/GETTY IMAGES மைக்ரோக்லியா என்பது நம் மூளையில் நிரந்தரமாக இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள். நோய்க் கிருமிகளைக் கண்டறிந்து அவற்றை அழித்து மூளையின் ரத்த நாளங்களைப் பாதுகாப்பதுதான் அவற்றின் வேலை. ஆனால், அந்த செல்களே மூளைக்குத் தீங்கு விளைவித்தால் என்ன ஆகும்? நோய் எதிர்ப்பு அமைப்பைப் பாதுகாக்கும் செல்களாகவே அவை பெரும்பாலும் அறியப்படுகின்றன. ஆனால், போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல் முதல் வலியை ஏற்படுத்துதல் வரை பலவற்றில் மைக்ரோக்லியா முக்கியப் பங்கு வகிப்பதாக விஞ்ஞானிகள் தற்போது அதிகளவில் நம்புகின்றனர். அல்சைமர் நோய், மன அழுத்தம், மனப் பதற்றம், கோவிட் தாக்கம், நாள்பட்ட சோர்வு ( chronic fatigue syndrome) என அறியப்படும் மியால்ஜிக் என்செஃபாலோமைலிடிஸ் (ME - myalgic encephalomyelitis) எனப் பல பிரச்னைகளில் இந்த செல்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக சிலர் நம்புகின்றனர். மைக்ரோக்லியா என்பது என்ன? நமது மூளையில் இரு வகையான செல்கள் உள்ளன. ஒன்று நரம்பு செல்கள் என அறியப்படும் நியூரான்கள், இவை மின் தூண்டுதல் மூலம் உடல் முழுவதும் தகவல்களை அனுப்பும் தூதர்களாகச் செயல்படுகின்றன. இரண்டாவது வகை செல்கள், க்லியா (glea). இந்த க்லியா செல் குடும்பத்தின் மிகச் சிறிய உறுப்பினர்தான் மைக்ரோக்லியா. மூளையில் உள்ள அனைத்து செல்களிலும் இது 10 சதவீதம்தான் உள்ளது. மையத்தில் நீள் உருளை வடிவிலான “உடலமைப்பைக்” (body) கொண்டுள்ள இந்தச் சிறிய செல்களில், மெல்லிய கொடி போன்ற கிளைகள் காணப்படும். “தனது சுற்றுப்புறத்தைக் கண்காணிக்கத் தொடர்ச்சியாக நகர்ந்து கொண்டே இருப்பதற்கான அதிக கிளைகளை அவை கொண்டுள்ளன,” என்கிறார், ஜெர்மனியில் உள்ள ஃபிரெய்பெர்க் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணர் பாவ்லோ டி’எரிக்கோ. அவர், “சாதாரணமான சூழல்களில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிய, மைக்ரோக்லியா அந்தக் கிளைகளை நீட்டிவிட்டு பின்னர் மீண்டும் பழையை நிலைக்கே கொண்டு வரும்” என்கிறார். ஆரோக்கியமான மூளை செயல்பாடுகளுக்கு மைக்ரோக்லியா முக்கியமானவை. நம்முடைய இளம் பருவத்தில் நரம்புகளுக்கு இடையிலான தேவையற்ற நரம்பு இணைப்புகளை அழித்து, மூளையின் வளர்ச்சியை இந்த செல்கள் ஒருங்கமைக்கின்றன. எந்த செல்கள் நியூரான்களாக மாறுகின்றன என்பதிலும் அவை தாக்கம் செலுத்துகின்றன. மேலும், மைலின் (myelin ) எனப்படும் நியூரான்களை சுற்றியுள்ள உறை போன்ற பாதுகாப்புப் படலத்தைச் சரிசெய்து அவற்றை நிர்வகிக்கின்றன. இந்தப் பாதுகாப்புப் படலம் இல்லாமல் மூளையின் மின் தூண்டுதல் மூலம் தகவல்களைக் கடத்துவது சாத்தியமில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாக்டீரியா, வைரஸ்களை கண்டறிந்து, அழித்து நம் மூளையை மைக்ரோக்லியா செல்கள் பாதுகாக்கின்றன அத்துடன் மைக்ரோக்லியாவின் பங்கு முடிந்துவிடுவதில்லை. நம் வாழ்நாள் முழுதும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை கண்டறிந்து, அவற்றை அழித்து மூளையை நோய்த்தொற்றில் இருந்து காக்கின்றன. நரம்பு செல்களுக்கு இடையே குவியும் கழிவுகளைச் சுத்தம் செய்கின்றன. மேலும், அல்சைமர் நோயில் பங்கு வகிக்கும் அமிலாய்டு புரதக்கற்றை போன்ற வழக்கத்திற்கு மாறான மடிப்புகளைக் (misshapen proteins) கொண்ட நச்சுப் புரதங்களைக் கண்டறிந்து அழிப்பதும் இதன் வேலையாக உள்ளது. தீங்கு விளைவிப்பது ஏன்? எனினும் சில சூழல்களில் இந்த செல்களும் தீங்கு விளைவிக்கலாம். “மைக்ரோக்லியா செல்களுக்கு நல்லது, கெட்டது என இரு பக்கங்கள் உண்டு,” என்கிறார் கொலரடோ பௌல்டர் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானி லிண்டா வாட்கின்ஸ். “மைக்ரோக்லியா செல்கள் பிரச்னைகளைக் கண்டறியும். மூளையில் நிகழும் அசாதாரண நரம்பியல் செயல்களைக் கண்டறிந்து அழிக்கும். மூளைக்குள் நிகழும் எந்தவிதமான பிரச்னைகளையும் அவை கண்காணித்துக் கொண்டே இருக்கும். ஆனால், அந்த நல்ல செல்கள் தூண்டப்பட்டால், நோய்த்தொற்றை ஏற்படுத்தும் தீய செல்களாகிவிடும்” என்கிறார் லிண்டா வாட்கின்ஸ். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த செல்கள் ஏன் அந்த நிலைக்குச் செல்கின்றன? மூளையில் தொற்று போன்று ஏதோ தவறு நிகழ்வதாக மைக்ரோக்லியா உணரும்போதோ அல்லது அமிலாய்டு புரதக்கற்றை அதிகளவில் இருக்கும்போதோ, அவை உயர்-வினை (super-reactive) நிலைக்குச் செல்கின்றன. “கிட்டத்தட்ட பெரிய பலூன்கள் அளவுக்கு அவை அளவில் பெரிதாகிவிடும். மேலும், தன் இணை உறுப்புகளுடன் நகர ஆரம்பித்து, தீங்குகளை ஏற்படுத்தும்," என்கிறார் வாட்கின்ஸ். இத்தகைய செல்கள் அழற்சி சைட்டோகைன்களை (inflammatory cytokines) வெளியேற்றும். இந்த சைட்டோகைன்கள் மற்ற நோய் எதிர்ப்பு செல்கள் மற்றும் மைக்ரோக்லியாவை இவற்றை எதிர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட வழிகாட்டும். நோய்த் தாக்குதல்களில் இருந்து எதிர்த்துப் போராட இத்தகைய எதிர்வினை அவசியம். வழக்கமாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் மைக்ரோக்லியா செல்கள் தன்னுடைய “நல்ல” நிலைக்குத் திரும்பிவிடும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல் எனினும், சில நேரங்களில் நோய்த்தொற்று காரணி மறைந்துவிட்ட பின்பும், மைக்ரோக்லியா செல்கள் தீய நிலையிலேயே நீண்ட காலத்திற்கு இருக்கின்றன. இந்தக் கட்டுக்குள் இல்லாத மைக்ரோக்லியா பலவித நவீன நோய்கள் மற்றும் நிலைகளுக்குக் காரணமாக உள்ளதாக அறியப்படுகின்றன. போதைப் பொருளுக்கு அடிமையாதலை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். பாதிக்கப்பட்டவரின் அதிகமான போதைப்பொருள் பயன்பாடு காரணமாக, டோபமின் ஏற்ற இறக்கத்தால் ஏற்படும் நரம்பியல் குறைபாடு காரணமாகவே அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவதாக முன்பு அறியப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மூளையில் ஏதோ தவறு நிகழ்வதாக உணரும்போது, மைக்ரோக்லியா செல்கள் உயர்-வினை செல்களாக மாறுகின்றன ஆனால், வாட்கின்ஸ் இதற்கு வேறொரு கோட்பாட்டைக் கூறுகிறார். ஒருவர் போதைப்பொருளை உட்கொள்ளும்போது, அவர்களின் மூளையில் உள்ள மைக்ரோக்லியா அந்தப் பொருளை “தீங்கு ஏற்படுத்தும் ஒன்றாக” கருதுவதாக, சீனா அகாடமி ஆஃப் சயின்சஸை சேர்ந்த விஞ்ஞானிகளும் வாட்கின்ஸும் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் வாதிட்டுள்ளனர். “பலவித ஓபியேட் (opiates) வகை மருந்துகள் (ஓபியத்தில் இருந்து தயாரிக்கப்படுபவை) மைக்ரோக்லியல் செல்களை தூண்டிவிடுகின்றன என்பதை எங்கள் ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளோம். இந்தத் தூண்டுதல், நோய் எதிர்ப்பு அமைப்பின் டி.எல்.ஆர். ஏற்பிகள் (toll like receptor - நோய் எதிர்ப்பு அமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் புரத ஏற்பிகள்) எனும் அமைப்பின் வழியாக நிகழ்கிறது,” என்கிறார் வாட்கின்ஸ். “தீங்கு விளைவிப்பவற்றைக் கண்டறிவதற்காக இந்த டி.எல்.ஆர் ஏற்பிகள் வெகுகாலமாக உள்ளன. பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கண்டறிவதற்காக அவை உள்ளன.” புதிய ஆராய்ச்சி கூறுவது என்ன? ஓபியேட், கொகைன் அல்லது மெத்தம்பெட்டமைன் போன்றவற்றை மைக்ரோக்லியா கண்டறியும்போது, அவை சைட்டோகைன்களை வெளியிடுகின்றன. அத்தகைய போதைப் பொருட்களை எடுத்துக் கொள்ளும்போது தூண்டப்பட்ட நியூரான்களை இந்த சைட்டோகைன்கள் உயர்-வினை கொண்டவையாக மாறுவதற்கு வழிவகுக்கின்றன. இது, நியூரான்களிடையே புதிய மற்றும் வலுவான இணைப்புகளை ஏற்படுத்த வழிவகுக்கிறது. மேலும், அந்த நேரத்தில் அதிகப்படியான டோபமின் வெளியேறுகிறது. இதனால், போதைப்பொருட்கள் மீதான ஆசையை வலுப்படுத்தி, அதன் மீதான நாட்டத்தைத் தூண்டுகிறது. மூளை நியூரான்களின் கட்டமைப்பை மைக்ரோக்லியா மாற்றி, வாழ்நாள் முழுதும் நீடிக்கும் வகையிலான போதைப் பழக்கத்திற்கு வழிவகுக்கும். இந்தக் கோட்பாட்டை ஆதரிக்கும் சான்றுகள் உள்ளன. போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் மூளையில் அழற்சியை ஏற்படுத்தும் சைட்டோகைன்கள் (inflammatory cytokines) அதிகமாக இருக்கும். விலங்குகளில் இதைக் குறைக்கும்போது அவை போதைப் பொருட்களை நாடும் பழக்கமும் குறைகிறது. டி.எல்.ஆர் ஏற்பிகளை தடுப்பதன் மூலமும் மைக்ரோக்லியல் செல்களை தூண்டுவதை தடுப்பதன் மூலமும் எலிகள் தொடர்ச்சியாக கொகைன் போன்ற போதைப்பொருட்களை நாடுவதை நிறுத்த முடியும் என்பதை வாட்கின்ஸ் குழு நிரூபித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES மைக்ரோக்லியா செல்கள், 12 வாரங்களுக்கும் மேல் நீடிக்கும் நாள்பட்ட வலியிலும் முக்கியப் பங்கை வகிக்கலாம். காயம் ஏற்பட்ட பிறகு முதுகுத் தண்டுவடத்தில் உள்ள மைக்ரோக்லியா தூண்டப்பட்டு, வலி நியூரான்களிடையே கூர் உணர்ச்சியை ஏற்படுத்தும் சைட்டோகைன்களை வெளியிடுவதாக வாட்கின்ஸின் ஆய்வு நிரூபித்துள்ளது. “மைக்ரோக்லியா தூண்டப்படுவதைத் தடுப்பதன் மூலம் உங்களால் வலியைத் தடுக்க முடியும்,” என்கிறார் வாட்கின்ஸ். மூத்த குடிமக்கள் அறுவை சிகிச்சை அல்லது நோய்த்தொற்றுக்கு பின்பு ஏன் அறிவாற்றலை இழக்கின்றனர் என்பதற்கு வாட்கின்ஸ் மற்றொரு பார்வையையும் வழங்குகிறார். அறுவை சிகிச்சையோ அல்லது நோய்த் தொற்றோ மைக்ரோக்லியா அதன் தீய பக்கத்தை தகவமைத்துக் கொள்வதற்கான முதல் அடியாகப் பார்க்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளிகளுக்கு வலி நிவாரணியாக ஓபியாய்டுகள் வழங்கப்படுகின்றன, துரதிருஷ்டவசமாக அவை மீண்டும் மைக்ரோக்லியாவை தூண்டுகின்றன. இதனால் நியூரான்கள் அழிவுக்கு வழிவகுக்கின்றன. இதுதொடர்பான ஆராய்ச்சி ஆரம்ப நிலையில் இருப்பதால், இந்த ஆரம்பகட்ட முடிவுகளைக் கவனமாக நோக்க வேண்டும். ஆனால், மைக்ரோக்லியா தூண்டுதலைத் தடுப்பதன் மூலம் அறுவை சிகிச்சைக்குப் பின்னான நினைவாற்றல் இழப்பைத் தடுக்க முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. "எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி நான் உங்களை நோக்கி நடந்து வந்து கண்ணத்தில் அறைந்தால் முதல்முறை நான் அதிலிருந்து விடுபடலாம். ஆனால், இரண்டாவது முறை நீங்கள் என்னை விடமாட்டீர்கள். ஏனெனில், இப்போது நீங்கள் பாதுகாப்புடன் தயாராக இருப்பீர்கள்" என்கிறார் வாட்கின்ஸ். "க்லியல் செல்களும் அப்படித்தான். வயதாகும்போது அவை வினையாற்றத் தயாராக இருக்கும். இதுதான் முதன்மைக் காரணி. இரண்டாவது சவால் என்னவென்றால் அறுவை சிகிச்சையின் காரணமாக அவை தூண்டப்பட்டு முன்பைவிட அதிகமாக வினை புரியத் தயாராக இருக்கும். அறுவை சிகிச்சைக்குப் பின், உங்களுக்கு ஓபியாய்டுகள் வழங்கப்படுகின்றன. இது மூன்றாவது தாக்குதல்." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கட்டுக்குள் இல்லாத மைக்ரோக்லியா செல்கள் பல தீவிர நிலைமைகளுக்குக் காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது மைக்ரோக்லியாவின் இந்த 'முதன்மைக் காரணி'தான் அல்சைமர் நோய்க்குக் காரணமாக இருக்கலாம். இந்த நோய்க்கு வயதுதான் முதன்மையான ஆபத்தாக உள்ளது. நமக்கு வயதாகும்போது மைக்ரோக்லியா அதிக வினை புரிவதற்குத் தயாரக இருக்கும் என்றால், வயதுதான் ஒரு காரணியாக இருக்க முடியும். அதேநேரம், மூளையில் உருவாகும் அமிலாய்டு புரதக் கற்றைகள் இந்நோய்க்கு முக்கியக் காரணியாக உள்ளது. இது பல தசாப்தங்களுக்கு முன்னதாகவே, குழப்பம் மற்றும் நினைவிழப்பு ஆகிய அறிகுறிகளுடன் உருவாகத் தொடங்கிவிடுகிறது. இந்த அமிலக் கற்றைகளைக் கண்டறிந்து நீக்குவதுதான் மைக்ரோக்லியாவின் வேலை. எனவே, மீண்டும் மீண்டும் தூண்டப்படுவதன் மூலம் மைக்ரோக்லியா நிரந்தரமாகத் தீய செல்களாக மாறுவதற்கு வழிவகுக்கின்றன. "இந்த அமிலாய்டு குவிவதன் மூலம் மைக்ரோக்லியா தூண்டப்பட்டு அதீத வினை புரியும் வகையில் மாறுகின்றன," என்கிறார் டி'எரிக்கோ. “இந்த அமிலாய்டு கற்றைகள் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படும்போது, நாள்பட்ட, தீராத அழற்சியை ஏற்படுத்தும். இது, நியூரான்களுக்கு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.” நாள்படத் தூண்டப்பட்ட இந்த மைக்ரோக்லியா, நியூரான்களை நேரடியாக அழித்து நரம்பு செல்களுக்கு இடையிலான இணைப்பை அழித்துவிடும். இந்த அனைத்து நடைமுறைகளும் குழப்பம், நினைவிழப்பு, அறிவாற்றல் செயல்பாடு போன்ற அல்சைமரின் அறிகுறிகள் ஏற்பட வழிவகுக்கும். மூளையைச் சுற்றி இந்த நச்சுத்தன்மை வாய்ந்த அமிலாய்டு கற்றைகளைக் கடத்தி, அல்சைமர் நோய் பரவுவதிலும் மைக்ரோக்லியா பங்காற்றுவதாக டி'எரிக்கோ தனது 2021ஆம் ஆண்டு ஆய்வில் கண்டறிந்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அல்சைமர் நோயை ஏற்படுத்தும் புரதக்கற்றையைக் கண்டறிந்து அழிப்பது மைக்ரோக்லியாவின் முக்கிய வேலையாக உள்ளது இந்த நோயின் ஆரம்பத்தில் புறணி (cortex), மூளையின் பின்புற மேடு (hippocampus), ஆல்ஃபாக்டரி பல்ப் (olfactory bulb) போன்ற மூளையின் முக்கியப் பகுதிகளில் இந்தக் கற்றைகள் திரட்டப்படும்," என்கிறார் டி'எரிக்கோ. "நோயின் அடுத்தகட்டமாக மூளையின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படும். அமிலாய்டு புரதக் கற்றைகளை மைக்ரோக்லியா வெளியிடுவதற்கு முன்பாக, ஏற்கெனவே உள்ளவற்றை வேறு பகுதிக்கு நகர்த்துவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என்றார் அவர். நினைவாற்றல் இழப்பு, அறிவாற்றல் இழப்பு ஆகிய அல்சைமர் நோயின் அறிகுறிகள், நீண்ட கால கோவிட் பாதிப்பின் அறிகுறிகளாகவும் உள்ளன. எனவே, மைக்ரோக்லியா “கவனச் சிதறலுக்கும்” (brain fog) காரணமாக இருக்கலாம். உதாரணமாக மைக்ரோக்லியா தீய செல்களாக மாறுவதற்கு முக்கியக் காரணமாக வைரஸ் தொற்று உள்ளது. “வழக்கத்திற்கு மாறாகத் தூண்டப்பட்ட மைக்ரோக்லியா மூளையின் ஒத்திசைவை நீக்கி, அறிவாற்றல் இழப்பு, நினைவாற்றல் இழப்பு மற்றும் கவனச் சிதறலுடன் தொடர்புடைய அனைத்து அறிகுறிகளுக்கும் வழிவகுக்கிறது,” என்கிறார், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஃபெடரல் ஃப்ளூமினென்ஸ் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் உயிரியலாளர் கிளாடியோ அல்பெர்ட்டோ செர்ஃபாட்டி. இந்தக் கோட்பாட்டுக்கான ஆதாரம் தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரை தொடர்பாக இவர் பணியாற்றியுள்ளார். புதிய சிகிச்சைகளுக்கு வழிவகுக்கும் பட மூலாதாரம்,GETTY IMAGES இத்தகைய கருத்துகள் புதிய சிகிச்சைக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது. உதாரணமாக, அமிலாய்டுகளை அழிக்கும் வகையில் மைக்ரோக்லியாவின் திறனை அதிகரிக்கக்கூடிய, அல்சைமருக்கான புதிய மருந்துகளை மனிதர்கள் மீது பரிசோதிப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. எனினும், அல்சைமரின் மற்ற மருந்துகளைப் போல இதுவும் பெரியளவில் நரம்பியல் அமைப்பில் அழிவு ஏற்படுவதற்கு முன்பான நோயின் ஆரம்ப நிலையிலேயே சிறப்பாகச் செயலாற்றும் வகையில் உள்ளன. போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல் தொடர்பாக, தீய செல்களாக மாறிய மைக்ரோக்லியாவுக்கு பதிலாக போதைப்பொருட்களைப் பயன்படுத்தாதவர்களின் மூளைகளில் உள்ள “வழக்கமான” மைக்ரோக்லியாவை மாற்றுவது ஒரு யோசனையாக உள்ளது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மூலம் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் மைக்ரோக்லியாவை ஒட்டும் முறையாக இது உள்ளது. ஆனால், இத்தகைய செயல்பாடு மிகவும் கடினமானது. தூண்டப்பட்ட மைக்ரோக்லியாக்கள் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கும் மூளை செயல்பாட்டுக்கும் தேவை என்ற நிலை உள்ளது. "கோட்பாட்டுரீதியாக இது வேலை செய்யலாம், ஆனால் மூளை முழுவதிலும் உள்ள மைக்ரோக்லியாவுக்கு நீங்கள் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. குறிப்பிட்ட பகுதியில் மைக்ரோக்லியாவை செருகுவது அழிவை ஏற்படுத்தலாம். எனவே, இத்தகைய சிகிச்சைக்கு பாதுகாப்பான வழிமுறையை நாம் கண்டறிய வேண்டும்,” என்கிறார் வாட்கின்ஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cjwd80n4n28o
-
யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
இன்றையதினம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் இன்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன் போது முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் அடங்கிய குழு ஒன்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அவர்கள் அந்த தாக்குதலை எதிர்த்தனர். இந்நிலையில் திரும்பிச் சென்ற குழு சுமார் 30 பேர் அடங்கிய குழுவினரை அழைத்து வந்து அங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் மீது மீண்டும் கொலை வெறி தாக்குதலை மேற்கொண்டனர். இந்நிலையில் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு பெண் உட்பட மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பெண் அதிதீவிர சிகிச்சை பிரிவிலும் ஏனைய இருவரும் 24 ஆம் இலக்க விடுதியிலும் சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகிறது.இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197203
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
இஸ்ரேலின் தாக்குதலில் இரண்டு ஈரான் இராணுவத்தினர் பலி இஸ்ரேல் இன்று மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு ஈரான் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் இன்று ஈரானின் இராணுவ இலக்குகளை இலக்குவைத்து வான் தாக்குதல்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. பல மாதங்களாக ஈரான் மேற்கொண்ட தாக்குதலிற்கு பதிலடியாக இந்த தாக்குதல்களை மேற்கொள்வதாகஇஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்குவைக்கவில்லை என தெரிவித்துள்ள இஸ்ரேலிய அதிகாரிகள் அமெரிக்காவின் ஒத்துழைப்புடனேயே இந்த தாக்குதல் இடம்பெறுகின்றது வான் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உதவுகின்றது என தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/197165
-
65 ஆண்டுகளுக்கு பின்னர் நாகர்கோவில் - எழுதுமட்டுவாழ் பிரதான பாலம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் சந்தியிலிருந்து எழுதுமட்டுவாழ் பிரதேசத்துக்கு செல்கின்ற வீதியிலுள்ள பிரதான பாலத்தை புனரமைக்கும் பணியை வட மாகாண ஆளுநர் வேதநாயகம் நேற்று (25) பிற்பகல் ஆரம்பித்துவைத்தார். நாகர்கோவில் - எழுதுமட்டுவாழ் பிரதான பாலம் 1959ஆம் ஆண்டில் ஒரு நீர்ப்போக்கு பாலமாக அமைக்கப்பட்டிருந்தது. இதனால் மாரிக்காலம் தொடங்கி முடிவடைந்த பின்னர் சில மாதங்களாக இந்த பாதையில் நீர் நிரம்பி நிற்பதனால் இப்பாலம் பயன்படுத்த முடியாத நிலையில் இதுவரை காணப்பட்டது. அண்மைய காலமாக பல தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டும் வன ஜீவராஜிகள் திணைக்களம் அது தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்று கூறி பல வருடங்களாக இந்த பாலத்தை அமைக்க, தடைகளை ஏற்படுத்தி வந்தது. இதனால் சுமார் மூன்று ஆண்டுகளாக இப்பாலத்தை புனரமைக்கும் பணிகள் தடைப்பட்டு வந்தது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி மற்றும் நாகர்கோவில் மக்கள் மேற்கொண்ட தொடர் அழுத்தங்கள், முயற்சிகளால் இப்பாலத்தை புனரமைப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் இணங்கியது. இதனையடுத்து, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தியின் ஏற்பாட்டில் வட மாகாண ஆளுநர் வேதநாயகத்தினால் இப்பாலம் புனரமைப்புப் பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வீதியை பயன்படுத்த முடியாத காரணத்தினால் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திலுள்ள எழுதுமட்டுவாழ் சந்திக்கு செல்வதற்கு மருதங்கேணி, புதுக்காடு ஊடாக சுமார் 40 கிலோமீட்டர் தூரம் சுற்றி மக்கள் பயணித்துக்கொண்டிருந்தனர். இப்புனரமைப்பு பணி ஆரம்ப செயற்பாட்டின்போது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகர மூர்த்தி, பகுதி கிராம சேவையாளர், துறைசார் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், துறைசார் பொறியியலாளர்கள், கிராம மக்கள் என பலர் இணைந்திருந்தனர். https://www.virakesari.lk/article/197192
-
தேசிய மக்கள் சக்தியின் உண்மை முகங்கள் வெளிவருகின்றன - முருகேசு சந்திரகுமார்
தேசிய மக்கள் சக்தியினர் தமது உண்மை முகங்களை தற்போது வெளிக்காட்டி தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்டனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை (26) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஏராளமான சுயேட்சை குழுக்கள் களமிறங்கி வாக்குகளை சிதைக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் யார் என்பது பற்றி மக்கள் மத்தியில் தெளிவு இருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தியில் நாம் தேர்தலில் போட்டியிடுகிறோம். ஐக்கிய மக்கள் சக்தியில் மாத்திரமே தான் சிறுபான்மையினர் போட்டியிடுகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மாத்திரமே சிறுபான்மையினர் மீது அக்கறை உள்ளவர்கள். கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இனவாதி அல்ல. அவரே சிறுபான்மையினர் மீது அக்கறை கொண்டவர். தேசிய மக்கள் சக்தியினரின் உண்மை முகங்கள் தற்போது வெளிவர தொடங்கிவிட்டது. அவர்களே எல்லாம் என்ற மாயை உருவாகி அலை ஒன்று ஏற்பட்டிருந்தது. தற்போது அதன் உண்மை வெளிவர தொடங்கிவிட்டது. ரில்வின் சில்வாவின் கருத்து, அவர்கள் யார் என்பதனையும் அவர்களின் உண்மை முகங்களையும் காட்டுகின்றது. தமிழ் மக்களின் இன பிரச்சினைக்கு ஒழுங்கான தீர்வு திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லை. தமிழ் மக்களுக்கு பொருளாதார பிரச்சினை தான் இருக்கிறது என கூறுகின்றனர். தமிழர்களுக்கு சோற்றுக்கு தான் பிரச்சினை என சொல்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் செல்வாக்கை இழந்துவிட்டார்கள். சஜித் பிரேமதாச தலைமையில் தான் பாராளுமன்றம் அமையும். அவரே பிரதமராக பதவியேற்பார். ஊழலற்ற நேர்மையானவர்களே நாடு முழுவதும் சஜித் தலைமையில் போட்டியிடுகின்றனர் என்றார். அதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளரும் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளருமான உமாச்சந்திர பிரகாஷ் கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் கூட்டணியாக நாங்கள் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகிறோம். தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சி பீடம் ஏறி எதனையும் செய்யவில்லை. குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்கள் என எவருக்கும் எதுவும் செய்யவில்லை. அவர்கள் இனியும் செய்யப்போவதில்லை. எனவே தான் சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும். யார் மக்கள் பிரதிநிதியாக போக வேண்டும் என்பதனை மக்கள் தான் தெரிவு செய்ய வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் தமது கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்பது ஜனநாயகம் அல்ல. வேட்பாளர். தெரிந்தவர் அறிந்தவர் அயலவர்கள் என வாக்களித்து வாக்கை சிதறடிக்க வேண்டாம் என்றார். https://www.virakesari.lk/article/197186
-
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கேரதீவு சங்குப்பிட்டிப் பாலப் புனரமைப்பு வேலையினை நேரில் ஆராய்வு
கேரதீவு சங்குப்பிட்டிப் பாலப் புனரமைப்பு வேலைகளை இன்று சனிக்கிழமை (26) காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் நேரடியாக பார்வையிட்டார். அத்துடன் அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடி, புனரமைப்பு வேலைகளின் முன்னேற்றத்தினை கேட்டறிந்து கொண்டார். https://www.virakesari.lk/article/197168
-
மாணவிக்கு கடிதம் எழுதிய பாடசாலை அதிபர் : மக்கள் ஆர்ப்பாட்டம்
ஹட்டன் கல்வி வலய பாடசாலையொன்றின் அதிபர் தனது பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரை தனிமையில் சந்திப்பதற்கு வருமாறு கடிதம் எழுதிய விடயம் அம்பலமானதால் அப்பாடசாலை அதிபருக்கு எதிராக பெற்றோர்களும் பிரதேச மக்களும் நேற்று வெள்ளிக்கிழமை (25) பாடசாலை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாணவியை பாலியல் ரீதியாக அதிபர் சீண்டலுக்கு உட்படுத்தியிருக்கலாம் என்றும் இதன்போது சந்தேகம் எழுப்பியுள்ளனர். அந்த மாணவியும் இதற்கு முன்னர் அதிபர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டமை தொடர்பில் அதே அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதமும் தற்போது வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று அட்டன் வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளனர். இதேவேளை ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள பாடசாலை அதிபர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆர்ப்பாட்டம் செய்த பெற்றோர்கள் கருத்துத் தெரிவிக்கையில், அந்த அதிபர் அரசியல் பின்புலத்தை கொண்டிருப்பதால் பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர். எவரும் முறைப்பாடு செய்யாத நிலையில் தம்மால் உடன் நடவடிக்கை எடுக்க முடியாது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில காலங்களாக ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளில் மாணவர்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை முக்கிய விடயமாகிறது. https://www.virakesari.lk/article/197164
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபடக்கூடாது; அமெரிக்கா - பிரிட்டன் இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து ஈரான் பதில் தாக்குதலை மேற்கொள்ளக்கூடாது என அமெரிக்காவும் பிரிட்டனும் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஈரான் மீண்டும் பதில்தாக்குதலை மேற்கொண்டால் நாங்கள் அதற்கு தயாராகவுள்ளோம் ஈரான் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஜோ பைடன் நிர்வாகத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இது இடம்பெறுவதை அமெரிக்கா விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிற்கும் ஈரானிற்கும் இடையிலான நேரடி மோதல் இத்துடன் முடிவடையவேண்டும், என தெரிவித்துள்ள அவர் லெபனானிலும் காசாவிலும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளிற்கு அமெரிக்கா தலைமை தாங்குகின்றது என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஈரான் பதில் தாக்குதலை மேற்கொள்ளக்கூடாது என பிரிட்டிஸ் பிரதமரும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரானின் வன்முறைக்கு எதிராக பதில் நடவடிக்கை எடுப்பதற்கு இஸ்ரேலிற்கு உரிமையுள்ளது என தெரிவித்துள்ள அவர் பிராந்தியத்தில் மேலும் நிலைமை தீவிரமடைவதை தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/197159
-
ரயில் ஊழியர்களுக்கு இலவச பயண அனுமதி சீட்டு
அனைத்து ரயில் ஊழியர்களுக்கும் தாம் வசிக்கும் பகுதிக்கும் பணியிடத்திற்கும் இடையில் பயன்படுத்த இலவச ரயில் பயண அனுமதி வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் ஊழியர்கள் தொடர்ந்து பொதுமக்களால் விமர்சிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய போக்குவரத்து அமைச்சகம், இந்நிலையை மாற்றும் நடவடிக்கையாக புதிய பயண அனுமதிச்சீட்டு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கு பயனளிக்கும் வகையில், அனைத்து ரயில் ஊழியர்களையும் அவர்களின் செயல்திறனை மேம்படுத்த ஊக்குவிப்பதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/197153
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இந்தியாவின் உலக சாதனைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி - நியூசிலாந்து வரலாற்று வெற்றியை பெற்றது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரிஷப் பந்த் ஆட்டமிழந்த காட்சி. புனேவில் நடந்த இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 113 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 2 நாட்கள் மீதமிருக்கும் நிலையிலேயே இரண்டாது டெஸ்ட போட்டி முடிவுக்கு வந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களும், இந்திய அணி 156 ரன்களும் சேர்த்தன. நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 103 ரன்கள் முன்னிலை பெற்று ஆடி, 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 359 ரன்கள் இலக்கோடு இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி, 245 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்கறு நியூசிலாந்து அணி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்தியாவுக்கு 359 ரன் இலக்கு நியூசிலாந்து அணி நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து, 301 ரன்கள் என பெரிய முன்னிலை பெற்றிருந்தது. டாம் பிளென்டல் 30 ரன்னிலும், கிளென் பிலிப்ஸ் 9 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். டாம் பிளென்டன் 41 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதைத் தொடர்ந்து கடைசிவரிசை பேட்டர்களான சான்ட்னர் (4), சவுத்தி (0), அஜாஸ் படேல் (1), ரூர்கே (0) என வரிசையாக ஜடேஜா, அஸ்வின், சுந்தர் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். காலை தேநீர் இடைவேளைக்கு முன்பாகவே நியூசிலாந்து அணி 255 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழந்து, இந்திய அணிக்கு 359 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். டி20 போல் அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 359 ரன்கள் இலக்கைத் துரத்த இந்திய அணிக்கு 3 நாட்கள் வரை அவகாசம் இருந்தது. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா இருவரும் இந்திய அணியின் இன்னிங்சைத் தொடங்கினர். ரோகித் சர்மா நிதானமாக பேட் செய்ய, ஜெய்ஸ்வால் அதிரடியாக ரன்களைச் சேர்த்தார். நிதானமாக ஆட முயன்றாலும் ரோகித் சர்மாவால் நீண்டநேரம் நிலைக்க முடியவில்லை. , 8 ரன்களில் சான்ட்னர் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கில், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து ரன்களைச் சேர்த்தார். இருவரும் களத்தில் இருந்தவரை ரன்கள் வேகமாக வந்தன. டி20 போட்டியைப் போல் இருவரும் அதிரடியாக ஆடியதால் 8.2 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது. ஜெய்ஸ்வால் சிக்ஸர், பவுண்டரிகளாக அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் அரைசதத்தைப் பதிவு செய்தார். கில், ஜெய்ஸ்வால் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்து சென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெய்ஸ்வால் சிக்ஸர், பவுண்டரிகளாக அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். இந்திய அணியை சுருட்டிய சான்ட்னர் நிதானமாக பேட் செய்த கில் 23 ரன்களில் சான்ட்னர் பந்துவீச்சில் மிட்ஷெலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர். 15.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை 96 பந்துகளில் எட்டி வேகமாக இலக்கை நோக்கி நகர்ந்தது. அடுத்து கோலி களமிறங்கி, ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். அதிரடியாக ஆடிவந்த ஜெய்ஸ்வால் 65 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்த நிலையில் சான்ட்னர் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதன்பின் இந்திய அணியின் சரிவு தொடங்கியது. அடுத்துவந்த ரிஷப் பந்த் ரன் அவுட் செய்யப்பட்டு டக்-அவுட் ஆனார். பட மூலாதாரம்,GETTY IMAGES சான்ட்னரின் ‘ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப்’ பந்துவீச்சில் காலை நகர்த்தாமல் ஆடி விராட் கோலி 17 ரன்னில் ஆட்டமிழந்தார். சர்ஃபிராஸ் கான் களத்துக்கு வந்தது முதலே தனது காலை நகர்த்தாமலேயே சான்ட்னரின் பந்துவீச்சை எதிர்கொண்டு பல தவறுகளைச் செய்தார். லேசாக டர்ன் ஆகும் வகையில் சான்ட்னர் வீசிய பந்தைத் தடுத்து ஆட முற்பட்ட போது சர்ஃபிராஸ் கானை ஏமாற்றிய பந்து க்ளீன் போல்டாக்கியது. சர்ஃபிராஸ் கான் 9 ரன்னில் ஏமாற்றமளித்தார். அதன் பிறகு இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வரிசையாக இழந்த வண்ணம் இருந்தது. வாஷிங்டன் சுந்தர் (21), அஸ்வின் (18), ஆகாஷ் தீப் (1) என வரிசையாக விக்கெட்டுகளைக் கோட்டைவிட்டனர். கடைசியில் நம்பிக்கையளித்த ஜடேஜா 42 ரன்களில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 96 ரன் என்ற வலுவான நிலையில் ஒரு கட்டத்தில் இருந்தது. ஆனால், அடுத்த 149 ரன்களுக்குள் மீதமிருந்த 9 விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் உலக சாதனைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி நியூசிலாந்து தொடருக்கு முன்பாக, இந்திய அணி 2013-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களை வென்று உலக சாதனையுடன் வீறுநடை போட்டது. இந்திய மண்ணில் நடைபெறும் தொடர் என்பதால், இதனையும் வெற்று சாதனைப் பயணத்தை மேலும் நீட்டிக்கும் முனைப்பில் இந்திய அணி இருந்தது. ஆனால், அதற்கு நியூசிலாந்து அணி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தற்போதைய நிலையில், சர்வதேச டெஸ்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 18 முறை தொடர்களை வென்றதே சாதனையாக இருக்கிறது. ஆஸ்திரேலியா இருமுறை தொடர்ந்து 10 தொடர்களை வென்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கடந்த 1983-ஆம் ஆண்டுக்குப் பின் இந்திய அணி ஒரு காலண்டர் ஆண்டில் உள்நாட்டில் 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தது இதுதான் முதல்முறை. ஏறக்குறைய 41 ஆண்டுகளுக்குப் பின் ஒரே ஆண்டில் உள்நாட்டில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. புதிய வரலாறு இதுவரை, நியூசிலாந்து அணி இந்தியாவில் பல ஆண்டுகள் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடர்களில் விளையாடியிருந்தாலும், ஒருமுறைகூட டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. அந்த வரலாறு இம்முறை மாறியுள்ளது. இந்திய மண்ணில் பெங்களூருவில் நடந்த டெஸ்டில் வென்ற நியூசிலாந்து அணி, புனேயில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES "ஒட்டுமொத்த அணியின் தோல்வி" டெஸ்ட் தொடரை இழந்தபின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “டெஸ்ட் தொடரை இழந்தது வேதனையளிக்கிறது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களைவிட நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினர். களத்தில் வந்த சவால்களுக்கு எங்களால் சரியான பதிலடி கொடுக்க முடியாமல் தோல்வி அடைந்துவிட்டோம்,” என்றார். மேலும், “சரியாக பேட் செய்தோம் என நான் நினைக்கவில்லை, அதனால்தான் போதுமான ரன்களும் கிடைக்கவில்லை. 20 விக்கெட்டுகளை எடுக்கலாம். அதேசமயம், பேட்டர்களும் ரன்கள் குவிக்க வேண்டும். நியூசிலாந்து அணியை முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேலாக முன்னிலை பெற வைத்துவிட்டோம். இதற்கு நாங்கள் சரியாக பேட்டிங் செய்யாததுதான் காரணம். நாங்கள் பதிலடி கொடுத்திருக்க வேண்டும், ஆனால், தோற்றுவிட்டோம்,” என்றார். “இது அதிகமான ஆட்டங்கள் நடந்த பிட்ச் அல்ல, நாங்கள்தான் சரியாக பேட் செய்யவில்லை. வான்ஹடே மைதானத்தில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெல்ல முயல்வோம். இது அணியின் ஒட்டுமொத்த தோல்வி. எங்கள் முன் நின்ற சவால்களை ஏற்பதில் ஓர் அணியாகத் தோற்றுவிட்டோம்,” எனத் தெரிவித்தார். ஆல்ரவுண்டராக கலக்கும் வாஷிங்டன் சுந்தர் - நம்பிக்கை நட்சத்திரமாக மாறியது எப்படி?25 அக்டோபர் 2024 டி20 மகளிர் உலகக் கோப்பையில் நியூசிலாந்து சாம்பியன் - ஆடவர் அணியால் முடியாததை சாதித்தது எப்படி?21 அக்டோபர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES கடினமான பாதை, ஒற்றை மனிதரின் சாதனை இந்தியப் பயணத்துக்கு முன்பாக இலங்கை சென்ற நியூசிலாந்து அணி, அந்நாட்டிடம் டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் அனுபவ கேப்டன் கேன் வில்லியம்ஸன் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. சிறந்த டெஸ்ட் பேட்டரான வில்லியம்ஸன் இல்லாமலே நியூசிலாந்து அணி இந்தியத் தொடருக்கு வந்தது. ஆனால், இந்திய அணி தயாரித்து வைத்த ஆயுதத்தை எடுத்தே இந்திய அணியை வீழ்த்தி 2-0 என்று டெஸ்ட் தொடரை வென்று புதிய சகாப்தத்தை நிகழ்த்தியுள்ளது. நியூசிலாந்து அணி, டெஸ்ட் தொடரை வெல்வதற்கு பிரம்மாஸ்திரமாக இருந்தது மிட்ஷெல் சான்ட்னர் எனும் ஒற்றை மனிதர்தான். முதல் இன்னிங்ஸில் 53 ரன்களுக்கு 7 விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் என ஆட்டத்தையே திருப்பிவிட்டார். 12 ஆண்டுகளுக்குப்பின் முற்றுப்புள்ளி அதேசமயம், கடந்த 2012-ஆம் ஆண்டுக்குப்பின் இந்திய மண்ணில் எந்த நாட்டு அணிக்கு எதிராகவும் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழக்காமல் இருந்து வந்தது. தற்போது 12 ஆண்டுகளுக்குப்பின் நியூசிலாந்திடம் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்து, தனது சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டது. இதுவரை எந்த அணியும் உள்நாட்டில் டெஸ்ட் தொடரை 12 ஆண்டுகளாக இழக்காமல் பயணித்தது இல்லை. ஆனால், இந்திய அணி மட்டுமே அந்தச் சாதனையை செய்திருந்த நிலையில் அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 4,332 நாட்களுக்குப்பின் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்துவிட்டது. மைக்ரோக்லியா: போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் செல்கள் மூளைக்கு செய்யும் நன்மை, தீமைகள்5 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மலையேற்றம் செல்லலாம்? என்ன வழிமுறை? முழு விளக்கம்8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சான்ட்னரின் பந்துவீச்சுத் திட்டத்தை தொடக்கத்திலேயே ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், கில், ரிஷப்பந்த் போன்ற அதிரடி பேட்டர்கள் தகர்த்திருக்கலாம் இந்திய அணிக்கு என்ன ஆச்சு? நியூசிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெற்ற சுழற்பந்துவீச்சாளர்களான மிட்ஷெல் சான்ட்னர், கிளென் பிலிப்ஸ் இருவருமே டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் இல்லை. அதிலும் சான்ட்னர் இதுவரை டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியதே இல்லை. அப்படியிருந்த வீரர் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் சாய்த்தார். ஆனால், டெஸ்ட் சுழற்பந்துவீச்சாளர்கள் என அடையாளம் காணப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா ஆகியோரின் சுழற்பந்துவீச்சு புனேவில் சுத்தமாக எடுபடவில்லை இருவரின் பந்துவீச்சையும் நியூசிலாந்து பேட்டர்கள் எளிதாகக் கையாண்டனர். இதில் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சு மட்டும் விதிவிலக்கு. இந்திய பேட்டர்கள் சிறிதுகூட நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை திணறச் செய்யும் வகையில் பேட் செய்யவில்லை. அவர்களை நிலைகுலைய வைக்கும் விதத்தில் அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுக்கவில்லை. அவ்வாறு அதிரடி பாணியை எடுத்திருந்தால், நியூசிலாந்து அணியின் திட்டம் சிதறி, என்ன செய்வதென்று தெரியாமல் தவறுக்கு மேல் தவறு செய்திருப்பார்கள். ஆனால், சுழற்பந்துவீச்சைக் கவனமாக ஆட வேண்டும் என்ற நோக்கோடு கூடுதலாக செலுத்திய கவனம், ரன்வேகத்தையும் குறைத்தது. தவறு செய்யவும் வழிவகுத்தது. இந்திய பேட்டர்கள் கூடுதல் கவனம் செலுத்தியதை வாய்ப்பாகப் பயன்படுத்திய சான்ட்னர், ‘ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப்’ பந்துவீசி நெருக்கடியும், அழுத்தத்தையும் அதிகரித்து விக்கெட்டுகளை எளிதாகச் சாய்த்தார். சான்ட்னரின் பந்துவீச்சுத் திட்டத்தை தொடக்கத்திலேயே ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், கில், ரிஷப்பந்த் போன்ற அதிரடி பேட்டர்கள் தகர்த்திருக்கலாம். ஆனால், கவனமாக ஆட வேண்டும் என்ற நோக்கோடு ஒவ்வொரு பந்துக்கு ஒவ்வொரு விதமாக செயல்பட்டு அவரை ஃபார்முக்கு இட்டுச் சென்றனர். அதேநேரத்தில், நியூசிலாந்து பேட்டர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோரை நிலைகுலையச் செய்யும் விதத்தில் அதிரடி ஆட்டத்தை கையாண்டனர். இது அஸ்வின், ஜடேஜாவின் பந்துவீச்சு உத்தியை குழப்பிவிட்டது. இலங்கை அணிக்கு எதிராக கல்லே நகரில் நடந்த டெஸ்டிலும் இதே உத்தியைத்தான் நியூசிலாந்து அணி கையாண்டது குறிப்பிடத்தக்கது. சுழற்பந்துவீச்சுக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக ஆடக் கூடியவர்கள் என்று இந்திய பேட்டர்கள் என அறியப்பட்ட காலம் இருந்தது. அதனால்தான் இந்திய ஆடுகளங்கள் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவே அமைக்கப்பட்டன. அப்படியிருந்த இந்திய அணியில் சீனியர் பேட்டர்களான ரோகித் சர்மா, விராட் கோலி போன்றோர் ஜொலிக்காமல் போனது கேள்வியை எழுப்புகிறது. ஜவஹர்லால் நேருவை சங்கடத்திற்கு உள்ளாக்கிய சுதந்திர இந்தியாவின் முதல் ஊழல் விவகாரம்26 அக்டோபர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 6 போட்டிகளில் குறைந்தபட்சம் 4 வெற்றிகள், ஒரு டிராவை இந்திய அணி பதிவு செய்தால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்ல முடியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற முடியுமா? இந்திய அணியின் டெஸ்ட் தொடர் தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குச் செல்லும் அதன் பாதையை கடினமாக்கியுள்ளது. தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியும், முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும் சிறிய புள்ளிகள் வித்தியாசத்தில்தான் இருக்கின்றன. இன்னும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் என 6 போட்டிகளில் குறைந்தபட்சம் 4 வெற்றிகள், ஒரு டிராவை இந்திய அணி பதிவு செய்தால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும். https://www.bbc.com/tamil/articles/cgqy8q79lp8o
-
தமிழ் முற்போக்கு கூட்டணியும், இலங்கை தமிழரசு கட்சியும் வெல்வது காலத்தின் கட்டாயம் - மனோ கணேசன்
தமிழ் முற்போக்கு கூட்டணியும், இலங்கை தமிழரசு கட்சியும் வெல்வது காலத்தின் கட்டாயம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இது குறித்து மனோ கணேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்நாட்டின் தேசிய இன பிரச்சினை என்ற தீரா சவாலுக்கு தீர்வாக முன் வைத்துள்ள ஒரே யோசனை, 2015 முதல் 2018 வரை நல்லாட்சியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கிலான சர்வகட்சி கலந்துரையாடலை முன்னேடுப்போம் என்பதாகும். ஜனாதிபதி அநுரகுமாரவின் இந்த யோசனையை நாம் வரவேற்கிறோம். அனுர ஆட்சிக்கு வந்த இந்த ஒரே மாதத்திற்கு உள்ளேயே நாட்டின் அனைத்து சவால்களுக்கும் பதில் தரவேண்டும் என்ற குறுகிய அரசியலையும் நாம் செய்யவில்லை. புதிய அரசுக்கு நியாயமான அவகாசம் கொடுக்க பட வேண்டும் என நாம் எண்ணுகிறோம். ஆனால், அதேவேளையில் புதிய பாராளுமன்றத்தில், இந்த உத்தேச புதிய அரசியலமைப்பை உருவாக்கும் சர்வகட்சி கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வெற்று காசோலை தரவும் நாம் தயார் இல்லை. புதிய பத்தாவது பாராளுமன்றத்தில் இடம்பெற்று உத்தேச தேசிய கலந்துரையாடலில் பங்கேற்று, நமது மக்களின் நியாயமான அபிலாசைகளை புதிய அரசியலமைப்பில் இடம் பெற செய்ய வேண்டும். இந்நோக்கில், தென்னிலங்கையில் தமிழ் முற்போக்கு கூட்டணியும், வடகிழக்கில் இலங்கை தமிழரசு கட்சியும் வெற்றி பெற்று அரசியல் பலத்துடன் பாராளுமன்றத்தில் இடம் பெறுவது காலத்தின் கட்டாயம். இதை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நல்லாட்சியின் போது (2015-2018) நடந்த நல்ல பல விடயங்களில் ஒன்று, நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சமபல (Balanced) தீர்வுகளை தேடும் புதிய அரசியலமைப்பு ஒன்றை கலந்துரையாடி உருவாக்கும் பணியாகும். அது ஒரு சர்வ கட்சி பணி. 2015 ஆம் ஆண்டு, சபாநாயகர் பாராளுமன்றத்தில் பெயர் குறிப்பிட்டு நியமித்த வழிகாட்டல் குழு (Steering Committee), புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கில், கலந்துரையாடி, வாத விவாதம் செய்து, குறைந்தபட்ச பொது உடன்பாடுகளில் கருத்தொற்றுமை கண்டு முன்னெடுத்தது. இடைக்கால அறிக்கையையும் சமர்பித்தது. இன்னும் பல துறைசார் உப குழுக்ளையும் தனக்கு உதவியாக நியமித்தது. அந்த வழிகாட்டல் குழுவில் இலங்கையின் தேசிய இனங்களையும், அரசியல் சித்தாந்தங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் சர்வ கட்சி பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். வழிகாட்டல் குழுவுக்கு அன்றைய பிரதமர் ரணில் தலைமை தாங்கினார். ஜேவிபி சார்பில் இன்றைய ஜனாதிபதி அனுர, தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நான், மனோ கணேசன், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் மறைந்த இரா. சம்பந்தன், சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவுப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ரிசாத் பதுர்தீன் மற்றும் தினேஷ் குணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க, சம்பிக்க ரணவக்க, டிலான் பெரேரா, ஜயம்பதி விக்கிரமரத்ன ஆகியோர் உட்பட இன்னும் பலர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். சிங்கள, ஈழத்தமிழ், முஸ்லிம், மலையக இலங்கை மக்கள் சார்பாக விரிவான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கபட்டு, கலந்துரையாடி மிக சிறப்பாக நடந்த இந்த பணியை, அதன் இடைகால அறிக்கை வந்ததும், திட்டமிட்டு அரசியல் நோக்கில், மகிந்த ராஜபக்ச தலைமையியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை குழப்பியது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை சார்பில் அன்று வழிகாட்டல் குழுவில் இடம் பெற்றவர்கள், கடந்த மாதம் வரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியிலே பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தன மற்றும் பிரபல அமைச்சராக இருந்த பிரசன்ன ரணதுங்க ஆகியோராகும். வழிகாட்டல் குழுவு செயற்பாட்டை குழப்ப, இந்த இனவாத ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை கும்பல் பயன்படுத்திய கோஷம் “பிரபாகரன் ஆயுத பலத்தால், பெற முடியாததை, சம்பந்தன் பேச்சு வார்த்தையால் பெற முயல்கிறார்” என்பதாகும். இந்த கும்பலுக்கு அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால, இரகசிய ஆதரவு வழங்கி, 52 நாள் திருட்டு அரசாங்கத்தில் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தது வரை அந்த அலங்கோல வரலாறு தொடர்ந்தது. அத்துடன் அந்த புதிய அரசியலமைப்பை எழுதும் “வழிகாட்டல் குழு” (Steering Committee), செயன்முறை இடை நின்றது. இன்று, இனவாதிகள் அரசியல் பரப்பில் கணிசமாக இல்லை. ஆகவே, நாம் அனைவரும் அன்று ஆரம்பித்த, புதிய அரசியலமைப்பை எழுதும் சர்வ கட்சி பணியை தொடர போவதாக ஜனாதிபதி அனுர திசாநாயக்க அறிவித்துள்ளதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். மாறிவரும் இன்றைய அரசியல் சூழலில், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும், அரசியல் யாப்பை உருவாக்கும் உரையாடலில் ஆளுமையும், அனுபவமும் உள்ள சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள் பங்கு பெற வேண்டுமா? இல்லையா? என்பதை தமிழ் வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டும். இந்த நோக்கில், கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரேலியா, பதுளை மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணியும், யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் போட்டியிடும் இலங்கை தமிழரசு கட்சியும் வெற்றி பெற்று அரசியல் பலத்துடன் பாராளுமன்றத்தில் இடம் பெறுவது காலத்தின் கட்டாயம். இதை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197147
-
கிளிநொச்சி அக்கராயன் காட்டுக்குள் எறியப்பட்ட 10 ஆயிரத்துக்கு அதிகமான விதைப்பந்துகள்!
2024ஆம் ஆண்டுக்கான விதைப்பந்து திருவிழாவின் இறுதி மற்றும் பிரதான நிகழ்வாக நேற்று (25) காலை 8.30 மணியளவில் அக்கராயனில் ஒதுக்கப்பட்ட காட்டினுள் விதைப்பந்துகள் வீசுப்பட்டன. ஓராயம் அமைப்பின் அனுசரணையுடன் கிளி/ விவேகானந்த வித்தியாலயத்தினால் இந்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது. இதன்போது விவேகானந்த வித்தியாலய மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட விதைப்பந்துகள் அக்கராயன் காட்டுக்குள் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் அதிகாரிகளாலும் எறியப்பட்டன. இன்று உலகம் எதிர்கொள்கின்ற மிக ஆபத்தான பிரச்சினையாக காலநிலை மாற்றம் காணப்படுகிறது. காடு அழிப்பு உட்பட எமது சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புக்களின் விளைவாக காலநிலை மாற்றம் நிலவுகிறது. எனவே, எமது சூழலை பாதுகாத்து, அடுத்த சந்ததியினருக்கு கொடுப்பதற்காகவும் மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்த நிகழ்வு நடைபெற்றது. விதைப்பந்து வீசும் செயற்பாட்டில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எம்.றியாஸ் அகமட், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர் சி. லதீஸ்குமார், வன பாதுகாப்பு திணைக்களத்தின் வன விரிவாக்க உத்தியோகத்தர், கிளிநொச்சி மகா வித்தியாலய பிரதி அதிபர் அரவிந்தன், சூழலியலாளரும் இலங்கை வனவிலங்குகள் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் வட மாகாண பிரதிநிதியுமான ம.சசிகரன், ஊடகவியலாளரும் சூழலியலாளருமான மு. தமிழ்ச்செல்வன், கிளிநொச்சி மத்திய கல்லூரி, கிளி/ திருவையாறு மகா வித்தியாலயம் மற்றும் கிளி/ இராமநாதபுரம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/197146
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைதான 16 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களும் அடுத்த மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த 16 தமிழக மீனவர்களும் கடந்த புதன்கிழமை இரவு நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்தனர். கைதான மீனவர்கள் விசாரணைகளின் பின்னர் வியாழக்கிழமை (24) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். இதன்போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197140
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
ஈரான் மீதான வான் தாக்குதல்கள் நிறைவு; இஸ்ரேலிய இராணுவம் ஈரான் இராணுவ தளங்கள் மீதான கடும் தாக்குதல் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், சற்று முன்னர் ஈரான் இராணுவ தளங்கள் மீது இலக்கு வைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படைகளால் நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதல் நிறைவடைந்துள்ளது. எங்கள் விமானங்கள் பத்திரமாக திரும்பியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197135
-
முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்கள் குழுக்களாக மோதல்; ஒருவர் வைத்தியசாலையில்!
முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் இரு குழுக்களாக மோதுண்டதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே கருத்துவேறுபாடு முற்றியதில் இரு குழுக்களாக மோதினர். குறித்த மோதலில் ஒரு மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் விசுவமடு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் ஒரு மாணவன் கைதுசெய்துள்ள நிலையில், முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குறித்த பாடசாலையின் பல்வேறுபட்ட நிர்வாக நிதி மோசடிகள் தொடர்பில் ஏற்க்கனவே பல செய்திகள் கடந்த காலங்களில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/197137