Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 27 SEP, 2024 | 03:08 PM சீனாவின் அணுசக்தியில் இயங்கும் புதிய தாக்குதல் நீர்மூழ்கி அந்த நாட்டின் துறைமுகத்தில் தரித்து நின்றவேளை கடலில் மூழ்கியது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மே ஜூன் மாதத்திற்குள் இந்த சம்பவம் இடம்பெற்றது என தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவ அதிகாரியொருவர் துறைமுகத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது என தெரிவித்துள்ளார். புதிய அணுசக்தி தாக்குதல் எதன் காரணமாக மூழ்கியது என்பது தெரியவில்லை. மூழ்கிய வேளை அதில் அணுஎரிபொருள் காணப்பட்டதா என்பதும் தெரியவில்லை என அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார். தனது நீர்மூழ்கி மூழ்கியதை சீன கடற்படை மறைக்க முயன்றுள்ளமை ஆச்சரியமளிக்கவில்லை என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரி நீர்மூழ்கி மூழ்கியமை பயிற்சி மற்றும் உபகரணங்களின் தரம் பற்றிய வெளிப்படையான கேள்விகளிற்கு அப்பால் இந்த சம்பவம் சீன இராணுவம் அந்த நாட்டின் பாதுகாப்பு துறையை எவ்வாறு கண்காணிக்கின்றது என்பது குறித்தும் பொறுப்புக்கூறல் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது என தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்து வழங்குவதற்கு எந்த தகவலும் இல்லை அமெரிக்காவிற்கான சீன தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த சம்பவம் தனது இராணுவ வல்லமையை விஸ்தரிக்க முயலும் சீனாவிற்கு பெரும் அவமானம் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. சீன உலகின் மிகப்பெரிய கடற்படையை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அதனிடம் 370 கப்பல்கள் உள்ளன தற்போது நவீன அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை தயாரிக்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டுள்ளது. https://www.virakesari.lk/article/194925
  2. திருக்கோணேஸ்வரம் ஆலய வழிபாட்டில் பங்கேற்றார் கிழக்கு ஆளுநர் 27 SEP, 2024 | 05:11 PM கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரம் ஆலய வழிபாட்டில் நேற்று வியாழக்கிழமை (26) ஈடுபட்டார். https://www.virakesari.lk/article/194934
  3. எதிரணிகளுக்கு சிம்மசொப்பணமாக விளங்கும் கமிந்து மெண்டிஸ் சாதனை மேல் சாதனை; கிரிக்கெட் ஜாம்பவான் ப்றட்மனின் சாதனையையும் சமன் செய்தார் Published By: VISHNU 27 SEP, 2024 | 08:50 PM (நெவில் அன்தனி) டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் கமிந்து மெண்டிஸின் அபார துடுப்பாட்ட ஆற்றல்கள் தொடர்வதுடன் சாதனைக்கு மேல் சாதனைகளைக் குவித்தவண்ணம் உள்ளார். நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் குவித்த கமிந்து மெண்டிஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் இதுவரை தான் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளிலும் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்ளைப் பெற்ற முதலாவது வீரர் என்ற உலக சாதனையை வியாழன்று நிலைநாட்டியிருந்தார். அவர் எட்டு டெஸ்ட் போட்டிகளில் 9 தடவைகள் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆட்டம் இழக்காமல் 182 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் ஓர் இன்னிங்ஸில் தனது அதிகப்பட்ட எண்ணிக்கையை அவர் இன்று பதிவுசெய்தார். அத்துடன் தனது 13ஆவது இன்னிங்ஸில் 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்ததுடன் கடந்த 75 வருடங்களில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல் சாதனையை எட்டியவர் என்ற பெருமைக்கு உரித்தானார். அது மட்டுமல்லாமல் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தவர்கள் வரிசையில் அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சேர் டொனல்ட் ப்றட்மனின் சாதனையை சமன்செய்தார். இங்கிலாந்தின் ஹேர்பட் சட்க்ளிவ் (1925இல்), மேற்கிந்தியத் தீவுகளின் எவர்ட்டன் வீக்ஸ் (1945இல்) ஆகிய இருவரே மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தவர்களாவர். அவர்கள் இருவரும் தலா 12 இன்னிங்ஸ்களில் நிலைநாட்டிய இந்த அரிய சாதனை தொடர்ந்தும் நீடிக்கிறது. சேர் டொன் ப்றட்மனின் இரண்டு சாதனைகளான குறைந்த (13) இன்னிங்ஸ்களில் 5 சதங்கள், 1000 ஓட்டங்கள் ஆகியவற்றை சமப்படுத்திய கமிந்து மெண்டிஸ் அதன் மூலம் ஆசியாவுக்கான புதிய சாதனைகளைப் படைத்தார். நியூஸிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ் ஆகியோர் குவித்த சதங்கள், ஏஞ்சலோ மெத்யூஸின் அரைச் சதம் என்பன இலங்கையை பலமான நிலையில் இட்டுள்ளன. போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் தனது முதலாவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து இலங்கை, 5 விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது நிறுத்திக்கொண்டது. முதலாம் நாளான வியாழக்கிழமையன்று தினேஷ் சந்திமால் 116 ஓட்டங்களுடனும் திமுக் கருணாரட்ன 46 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். இரண்டாம் நாளன்று மூன்று இணைப்பாட்டங்களில் பங்காற்றிய கமிந்து மெண்டிஸ், மிகவும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 250 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 182 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். 4ஆவது விக்கெட்டில் ஏஞ்சலோ மெத்யூஸுடன் 107 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவுடன் 74 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் குசல் மெண்டிஸுடன் 200 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் பகிர்ந்து இலங்கையை அதிசிறந்த நிலையில் இட்டார். ஏஞ்சலோ மெத்யூஸ் 88 ஓட்டங்களுடனும் தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். குசல் மெண்டிஸ் 149 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 106 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் க்லென் பிலிப்ஸ் 141 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 22 ஓட்டங்களைப் பெற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. டொம் லெதம் (2), டெவன் கொன்வே (9) ஆகியோர் ஆட்டம் இழந்ததுடன் கேன் வில்லியம்சன் 6 ஓட்டங்களுடனும் இரா காப்பாளன் (Nightwatchman) அஜாஸ் பட்டேல் ஓட்டம் பெறாமலும் இருக்கின்றனர். பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 3 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் அசித்த பெர்னாண்டோ 5 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் நாளை தொடரும். https://www.virakesari.lk/article/194952
  4. பொதுத் தேர்தல் ஒன்றை தமிழ் இனம் சார்ந்து தமிழரசுக் கட்சி எதிர்கொள்ளுகின்ற இந்த நேரத்தில், தமிழ் மக்களின் நியாயபூர்வமான சில உணர்வுகளை உங்களுக்கு அறிவிக்கவேண்டியது ஒரு ஊடகமாக எமது கடமையாக இருக்கின்றது. தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில், தமிழ் தரப்பு பலமான பிரதிநிதித்துவத்தை அந்த நாடாளுமன்றத்தில் பெறுவது என்பது தமிழ் மக்களின் இருப்புக்கு பெரிதும் இன்றியமையாத ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. ⁠ ⁠ஊழலற்ற, மாற்றத்திற்கான ஒரு அலை இலங்கை முழுவதும் படுவேகமாக வீச ஆரம்பித்துள்ள இன்றைய நிலையில், தமிழரசுக் கட்சியும்- ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நபர்களை ஒதுக்கிவைத்துவிட்டு தேர்தல் களத்தில் குதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது. ⁠தமிழ் மக்களின் அபிலாசைகளையும், நிலைப்பாடுகளையும் பிரதிபலிக்காத வரலாற்றைக்கொண்ட முன்நாள் பிரதிநிதிகளை இம்முறை நிச்சயமாக தமிழரசுக் கட்சி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் விரும்புகின்றார்கள். குறிப்பாக சுமந்திரன் போன்ற தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் கட்சியையும், தமிழ் மக்களையும் மையப்படுத்திச் செய்த பல காரியங்கள் தமிழ் மக்களின் அரசியல் நீரோட்டத்தில் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்திவருவதாக மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றார்கள். ⁠தமிழ் மக்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி வருவது, தமிழ் மக்களின் போராட்டங்களின் நியாயப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் தமிழ் மக்களை குற்றவாளிகளாக உலகிற்குக் காண்பிப்பது, தென்னிலங்கை மற்றும் சில தூதராலயங்களின் ‘தரகராக’ செயற்படுகின்ற நடவடிக்கைகள்..- இப்படி அவர் தொடர்ச்சியாகச் செய்து வருகின்ற பல காரியங்கள் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த கண்டனத்துக்குள்ளாகி வருகின்றது. அதேபோன்று, ‘பார் லைசன்ஸ்’ உட்பட பல்வேறு தனிப்பட்ட சலுகைகளுக்காக யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மீதும் மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்துவருகின்றார்கள். எந்தவிதக் கொள்கையோ, தர்மமோ இல்லாமல் மூன்று வெவ்வேறு கொள்கைகளையுடைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களித்துவிட்டு, வெட்கமே இல்லாமல் அதனை ஊடகங்களின் முன்பும் கூறிய மாவை சோனாதிராஜா மீதும் மிகுந்த வெறுப்போடு தமிழ் மக்கள் இருந்துகொண்டிருக்கின்றார்கள். எனவே மக்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கின்ற இதுபோன்ற தலைவர்களை தமிழரசுக் கட்சி இம்முறை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள். ⁠ஊழல்பேர்வழிகளையும், தரகர்களையும், உளறுவாயர்களையும் விட்டுவிட்டு, கல்வி அறிவுள்ள, பண்புள்ள, துடிப்புள்ள, தேசியப் பற்றுள்ள இளைஞர்களுக்கு தமிழரசுக்கட்சி இம்முறை வாய்ப்பளித்து களமிறக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது. அப்படியல்லாமல் புதிய மொந்தையில் பழைய கள்ளையே ஊற்றுவோம் என்று வளமை போலவே அடம்பிடித்தால், தமிழரசுக் கட்சி பாதகமான ஒரு மக்கள் ஆணையை களத்தில் சந்திக்கவேண்டி ஏற்படும். https://ibctamil.com/article/peoples-opean-letter-to-itak-1727382220 ஐபிசி தமிழ் தானே எழுதி வெளியிடுகிறதோ?! பகிரங்க மடல் எழுதினவர்கள் யார் என குறிப்பிடப்படாததால் இங்கே இணைத்துள்ளேன்.
  5. முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் அணிகள் கூட்டாக இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் கொழும்பில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் குழுவொன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அறிவிப்பு திகதி இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுக் கூட்டணியாக போட்டியிடுவதற்கு ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. அதன் படி, இது தொடர்பான தகவல் எதிர்வரும் 27 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. https://ibctamil.com/article/ranil-chandrika-sajith-together-general-elections-1727436468#google_vignette
  6. 27 SEP, 2024 | 05:36 PM அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பதில் பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய இன்று (27) நியமிக்கப்பட்டுள்ளார். வடமத்திய மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய இவர் பொலிஸ் சேவையில் 36 வருட காலம் அனுபவமுள்ளவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் முதன்முதலாக பொலிஸ் கான்ஸ்டபிளாக தனது சேவையை ஆரம்பித்துள்ளார். இவரது நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/194943
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் ஐநா பேரவையில் உரையாற்றுகையில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தார் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினர் ஆக்கவேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வியாழனன்று (செப்டம்பர் 26) நடைபெற்ற ஐ.நா. பேரவையின் 79-வது கூட்டத்தில் மக்ரோங் உரையாற்றினார். பாதுகாப்பு சபையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அப்போது அவர் கோரிக்கை விடுத்தார். பாதுகாப்பு சபையில் இந்தியா, பிரேசில், ஜப்பான் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக ஆக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக ஒருவர் மற்றவரை (முன்மொழிவுகளை) நிறுத்தும் வரை முன்னேறுவது கடினம் என்று மக்ரோங் கூறினார். “இங்கே எல்லாம் சரியாக இருக்கிறதா? நான் அப்படி நினைக்கவில்லை. எனவே ஐக்கிய நாடுகள் சபையை பயனுள்ளதாக்க வேண்டும். ஆனால் இதற்கு அதிக உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். எனவே பாதுகாப்பு சபையின் விரிவாக்கத்தை பிரான்ஸ் ஆதரிக்கிறது,” என்று குறிப்பிட்டார். வெளிப்படையான ஆதரவு “ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக்க வேண்டும். இதனுடன் ஆப்பிரிக்காவால் பரிந்துரைக்கப்பட்ட ஆப்பிரிக்க கண்டத்தின் இரண்டு நாடுகளையும் அதன் உறுப்பினர்களாக ஆக்க வேண்டும்,” என்று மக்ரோங் கூறினார். அடுத்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், மற்றும் அமெரிக்கா மட்டுமே நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜி-4 நாடுகளின் கூட்டத்தில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்துக்கான கோரிக்கை இந்தியா உறுப்பினராக உள்ள ஜி-4 நாடுகளின் குழு என்ன கூறியது? இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் நீண்டகாலமாக பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் பதவியைக் கோரி வருகின்றன. இந்த நாடுகளின் அமைப்பான ஜி-4, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை மீண்டும் கோரியுள்ளது. இதனுடன் எல்-69 மற்றும் சி-10 நாடுகளின் குழுவும் இதற்கு ஆதரவளித்தன. நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பேரவையின் 79-வது கூட்டத்தின் பின்னணியில் நடந்த ஜி-4 குழுவின் கூட்டத்தில், ஐ.நா. சபையில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து இந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். ஐக்கிய நாடுகள் சபையைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட பலதரப்பு அமைப்புகள் எதிர்கொள்ளும் தற்போதைய முக்கியமான சவால்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதாக இந்தச் சந்திப்பிற்குப் பிறகு இந்த நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் ஐ.நா-வின் 'எதிர்காலத்திற்கான உச்சி மாநாடு', ஐக்கிய நாடுகள் சபையில் தேவையான சீர்திருத்தங்களுக்கான அழைப்பை வரவேற்றது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களுடன் கூடவே தற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று ஜி-4 நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன. இந்த வார தொடக்கத்தில், ஐ.நா-வின் 'எதிர்காலத்திற்கான உச்சி மாநாடு' ஐக்கிய நாடுகள் சபையில் தேவையான சீர்திருத்தங்களுக்கான அழைப்பை வரவேற்றது. தற்காலிக உறுப்பினர்களின் கோரிக்கை நிரந்தர உறுப்பினர்களுடன், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்று ஜி-4 நாடுகள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் வளரும் நாடுகளுடன் கூடவே சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் நாடுகளும் பிரதிநிதித்துவம் பெறமுடியும் என்று அந்த நாடுகள் கூறின. ஆப்பிரிக்கா, ஆசிய-பசிஃபிக், லத்தீன் அமெரிக்கா, மற்றும் கரீபியன் நாடுகளுக்கு நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பினர்கள் பிரிவில் அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று ஜி-4 நாடுகளின் குழு தெரிவித்துள்ளது. வியாழனன்று செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் (Saint Vincent and the Grenadines) பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எல்-69 நாடுகள் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தின. இந்தியாவும் எல்- 69 இல் உறுப்பினராக உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளின் சி-10 குழுவும் இந்தக்கோரிக்கையை விடுத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 'ஐ.நா. தன்னை புதுபித்துக் கொள்ளவில்லை' எல்-69 மற்றும் சி-10 ஆகிய நாடுகளின் முதல் கூட்டுக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கைக்கு கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார். ஜி-20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்ட 'பிரேசில் 2024' கூட்டத்தில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்த விஷயத்தை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எழுப்பினார். "ஐக்கிய நாடுகள் சபை கடந்த காலத்தின் கைதியாகவே உள்ளது. ஆனால் உலகளாவிய தெற்கு (குளோபல் சவுத்) அதன் உண்மையான முக்கியத்துவத்தை விடக் குறைவான முக்கியத்துவம் கொடுக்கும் முறை இந்த அமைப்பில் இனி தொடர முடியாது. ஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தங்களின் கீழ் இந்த நாடுகளுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்குவது அத்தியாவசியமாகிவிட்டது,” என்று அவர் குறிப்பிட்டார். "இன்றைய உலகம் புத்திசாலித்தனமாகவும், ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதாகவும், பல் துருவ முறையிலும் உருவாகி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டதிலிருந்து அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனாலும் கூட அது கடந்த காலத்தின் கைதியாகவே உள்ளது,” என்று ஜெய்சங்கர் தெரிவித்தார். சர்வதேச அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் ஐக்கிய நாடுகள் சபை திணறுவதாகத் தோன்றுவதற்கு இதுவே காரணம். இதன் காரணமாக, அதன் தாக்கம் மற்றும் நம்பகத்தன்மை குறைந்து வருகிறது என்று அவர் கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 25) நடைபெற்ற நிகழ்வில் பேசிய ஜெய்சங்கர், ஐ.நா., பாதுகாப்பு சபையின் நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பினர்கள் பிரிவில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால், 15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பின் தாக்கம் பலவீனமாகவே இருக்கும் என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் தமைமை செயலர் அன்டோனியோ குட்டரெஸ், பாதுகாப்பு சபை 'காலத்திற்கு ஏற்புடையதாக இல்லை’ என்று கூறினார் நிரந்தர உறுப்பினராக இந்தியாவின் முயற்சிகள் ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என இந்தியா நீண்ட காலமாகக் கோரி வருகிறது. 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு சபை 21-ஆம் நூற்றாண்டின் தேவைக்கு ஏற்றதாக இல்லை என்று இந்தியா கூறுகிறது. இன்றைய புவிசார் அரசியல் யதார்த்தங்களைக் கருத்தில் கொண்டு அதில் சீர்திருத்தம் அவசியம், என்று கூறுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்பினராகும் உரிமை தனக்கு உள்ளது என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தியா கடைசியாக 2021-22-இல் தற்காலிக உறுப்பு நாடாக ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்து கொண்டது. ஒருதலைப்பட்சமான பாதுகாப்பு சபை இன்றைய உலகில் அமைதி மற்றும் பாதுகாப்பின் சவால்களை சமாளிக்கும் திறன் கொண்டதாக இல்லை என்று இந்தியா கூறுகிறது. உதாரணமாக, ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் யுக்ரேன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள் விஷயத்தில் மாறுபட்ட கருத்தை கொண்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை செயலர் அன்டோனியோ குட்டரெஸ், பாதுகாப்பு சபை 'காலத்திற்கு ஏற்புடையதாக இல்லை’ என்று கூறினார். அதன் செல்வாக்கு தற்போது குறைந்து வருவதாகவும், அதன் செயல்பாட்டு முறைகளை மேம்படுத்தாவிட்டால் அதன் நம்பகத்தன்மையை இழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார். தாத்தா, பாட்டி காலத்து முறையில் செயல்பட்டு நம் பேரக்குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்க முடியாது என்று அவர் கூறியிருந்தார். இதே கருத்தை வலியுறுத்திய ஜெய்சங்கர், விதிகள் அடிப்படையிலான, பாரபட்சமற்ற, நியாயமான, திறந்தமனம் கொண்ட, உள்ளடக்கிய, சமத்துவமான மற்றும் வெளிப்படையான அமைப்பை இந்தியா விரும்புகிறது என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரவிசங்கர் பிரசாத் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆகாததற்கு நேருதான் காரணமா? ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா உறுப்பினராக இல்லாமல் இருப்பதற்கு, முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை பா.ஜ.க அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறது. 2022-ஆம் ஆண்டு ஒரு செய்தியாளர் சந்திப்பில், 2004-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி வெளியான 'தி இந்து' நாளிதழின் ஒரு நகலைக் காட்டிப் பேசிய முன்னாள் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "இந்தியாவின் முதல் பிரதமர் நேரு பாதுகாப்பு சபையில் உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். சீனா அதை பெறுவதற்கு இது வழி வகுத்தது,” என்று கூறினார். காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணைச் செயலருமான சசி தரூரின் 'நேரு - தி இன்வென்ஷன் ஆஃப் இந்தியா' புத்தகத்தை ’தி இந்து’ நாளிதழின் அறிக்கை மேற்கோள் காட்டியிருந்தது. 1953-ஆம் ஆண்டு வாக்கில், ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகும் முன்மொழிவை இந்தியா பெற்றதாக சசி தரூர் இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். நேருவின் மறுப்பு குறிப்பிடப்பட்டிருந்த கோப்புகளை இந்தியத் தூதரக அதிகாரிகள் பார்த்ததாக தரூர் எழுதியுள்ளார். உறுப்பினர் பதவியை தைவானுக்கு அளிக்குமாறும் அப்படி இல்லாவிட்டால் சீனாவுக்கு அதை வழங்குமாறும் நேரு பரிந்துரைத்தார் என்று அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. சீனா இன்று ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பினராக இருப்பதற்கு நேருவே காரணம் என்றும் அதன் விளைவுகளை இந்தியா அனுபவிக்க நேரிடுகிறது என்றும் ரவிசங்கர் பிரசாத் சொல்ல நினைத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் ஜவஹர்லால் நேரு உண்மை என்ன? இந்த விஷயத்தில் நேருவை விமர்சிப்பவர்கள் வேறு பல உண்மைகளை புறக்கணிக்கிறார்கள் என்று பலர் கருதுகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை 1945-இல் உருவாக்கப்பட்டது. அப்போதுதான் அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் வடிவம் பெறத்தொடங்கியிருந்தன. 1945-இல் பாதுகாப்பு சபையில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டபோது இந்தியா சுதந்திரம் பெற்றிருக்கவில்லை. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு எந்த முன்மொழிவையும் இந்தியா பெறவில்லை என்று 1955-ஆம் ஆண்டு செப்டெம்பர் 27-ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் நேரு தெளிவுபடுத்தினார். அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் டாக்டர். ஜே.என்.பாரேக்கின் கேள்விக்கு பதிலளித்த நேரு, "ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான அதிகாரபூர்வ அல்லது அதிகாரபூர்வமற்ற எந்த முன்மொழிவும் வரவில்லை. சந்தேகத்திற்குரிய சில குறிப்புகள் மேற்கோள் காட்டப்படுகின்றன. அதில் எந்த உண்மையும் இல்லை,” என்றார், "ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை ஐ.நா. சாசனத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. சில குறிப்பிட்ட நாடுகளுக்கு அதில் நிரந்தர உறுப்பினர் பதவி கிடைத்தது. சாசனத்தில் திருத்தம் செய்யாமல் எந்த மாற்றமும் அல்லது புதிய உறுப்பினரையும் சேர்க்க முடியாது. இவ்வாறான நிலையில், இந்தியாவுக்கு இடம் வழங்கப்பட்டதா, இந்தியா அதனை ஏற்க மறுத்ததா என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர் அந்தஸ்து பெறுவதற்கு தகுதியுடைய எல்லா நாடுகளையும் உள்ளடக்குவதே எமது அறிவிக்கப்பட்ட கொள்கையாகும்,” என்று குறிப்பிட்டார். 1950-களில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் சீனா சேர்க்கப்படுவதற்கு இந்தியா பெரிய ஆதரவாக இருந்தது என்று கூறப்படுகிறது. அப்போது இந்த இடம் 'ரிப்பப்ளிக் ஆஃப் சைனா’ என்ற பெயர் கொண்ட தைவானிடம் இருந்தது. 1949-இல் சீன மக்கள் குடியரசு தோன்றியதில் இருந்து சீனாவை ஆளும் சியாங் கய்-ஷேக்கின் சீனக் குடியரசு பிரதிநிதித்துவப்படுத்தி வந்தது, மாவோவின் மக்கள் சீனக் குடியரசு அல்ல. இந்த இடத்தை சீன மக்கள் குடியரசிற்கு வழங்க ஐக்கிய நாடுகள் சபை மறுத்துவிட்டது. ஆனால் பின்னர் அந்த இடம் 1971-ஆம் ஆண்டு வாக்கெடுப்புக்குப் பிறகு சீன மக்கள் குடியரசிற்கு வழங்கப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/clylg4l5grpo
  8. 27 SEP, 2024 | 05:11 PM மாற்றத்திற்கான மாற்று வழி தொடர்பாக திறந்த உரையாடல் நாளை சனிக்கிழமை (28) வவுனியா வாடி வீட்டில் இடம்பெற உள்ள நிலையில் வடகிழக்கு பகுதியில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியலாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், அரசியல் ஆர்வலர்கள், குறிப்பாக மாற்றத்தை விரும்பும் இளையோர்கள் அனைவரையும் கருத்து பகிர்வில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை (27) அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், கடந்த பல தசாப்தமாக தொழில் முறை அரசியல் வாதிகளால் தமிழ்த்தேசிய அரசியலை விடுதலை அறவுணர்வின்றி தமிழ் மக்களின் நீண்ட கால இருப்பு பற்றிய தொலைநோக்கு சித்தாந்த மின்றி தேர்தல் வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு வலிமையான கோட்பாடின்றி கட்சி கட்டமைப்புகளிலும் மாற்றமின்றி அறிவார்ந்த அணுகுமுறை இன்றி தமது நலன் சார்ந்து தொடர்ந்து செயல்படுவதால் மக்கள் மத்தியிலே வெறுப்புணர்வு ஏற்பட்டு பல கூறுகளாக பிரிவடைந்துள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் இரண்ட கமான செயல்பாடு அனைவரையும் விசனத்துக்கு உள்ளாக்கியது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு சிங்களத்திற்குள் கரைந்து விடும் ஆபத்து உண்டு. தமிழர் தேசம், தேசியம் வலு குன்றாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு. எனவே மாற்றத்திற்கான மாற்று வழி தொடர்பாக திறந்த உரையாடலுக்கு வடகிழக்கு பகுதியிலுள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியலாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், அரசியல் ஆர்வலர்கள், குறிப்பாக மாற்றத்தை விரும்பும் இளையோர்கள் அனைவரையும் கருத்து பகிர்விற்கு உரிமையுடன் அழைக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/194935
  9. நியூஸிலாந்துடனான 2ஆவது டெஸ்டில் மிகவும் பலமான நிலையில் இலங்கை (402 - 5 விக்.) 27 SEP, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆம் நாளான இன்று பகல் போசன இடைவேளையின்போது இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 402 ஓட்டங்களைப் பெற்று மிகவும் பலமான நிலையில் இருக்கின்றது. இன்று (27) காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, ஏஞ்சலோ மெத்யூஸின் விக்கெட்டை முதலாவதாக இழந்தது. அவர் 88 ஓட்டங்ளைப் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார். இதனிடையே கமிந்து மெண்டிஸுடன் 4ஆவது விக்கெட்டில் ஏஞ்சலோ மெத்யூஸ் 107 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவர் 5ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களை கமிந்து மெண்டிஸுடன் பகிர்ந்தார். பகல் போசன இடைவேளையின்போது உலக சாதனை வீரர் கமிந்து மெண்டிஸ் 93 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் க்லென் பிலிப்ஸ் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/194900
  10. 27 SEP, 2024 | 10:59 AM இரண்டு நிறுவனங்களிடமிருந்து 750,000 என் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கும் முன்னைய அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடையை பிறப்பித்துள்ளது. ஐந்து மில்லியன் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக இரண்டு நிறுவனங்களிடமிருந்து 750,000 என் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கும் முன்னைய அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானத்திற்கே நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அமைச்சரவையின் தீர்மானம் கேள்விப்பத்திர நடைமுறையை மீறிய செயற்பாடு, ஊழல் என எபிக்லங்கா நிறுவனமும் அதன் நிறைவேற்று தலைவரும் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். https://www.virakesari.lk/article/194894
  11. ஜனாதிபதி அநுர குமாரவிற்கு ஜோபைடன் வாழ்த்து 27 SEP, 2024 | 08:46 AM அமெரிக்கா ஜனாதிபதி ஜோபைடன் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அநுரகுமாரதிசநாயக்கவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் தாங்கள் பெருமைப்படக்கூடிய சுதந்திரமான நியாயமான அமைதியான தேர்தலின் மூலம் உங்களை தங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளனர் என ஜோபைடன் தெரிவித்துள்ளார். இந்தோ பசுபிக்கில் சமாதானம் பாதுகாப்பு மற்றும் செழிப்பினை ஏற்படுத்துவதற்கு உங்களுடன் இணைந்து செயற்பட ஆர்வமாக உள்ளேன் என ஜோ பைடன் அநுரகுமாரதிசநாயக்க எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194883
  12. Published By: VISHNU 27 SEP, 2024 | 01:25 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கை பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு முகம்கொடுக்கும்போது சீனா எமக்கு வழங்கிய ஒத்துழைப்பை நன்றியுடன் நினைவுபடுத்துவதுடன் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்காக சீன நிதி நிறுவனங்களினால் தொடர்ந்து வழங்கிவரும் ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கை உளப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறது என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். மக்கள் சீனா உருவாக்கத்தின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதன்கிழமை (25) மாலை கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். அதற்காக நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஒர் ஒழுங்கு ஒரு பாதை வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நாடு பல நிகழ்ச்சித்திட்டங்களை வெற்றிகரமாக முடித்திருப்பது தொடர்பாகவும் நினைவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு சம்பந்தமாக தற்போது செயற்படுத்தி வரும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்காக சீன நிதி நிறுவனங்களினால் தொடர்ந்து வழங்கிவரும் ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கை உளப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறது. அதேநேரம் இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பும் சவால்களுக்கு நாங்கள் தொடர்ந்தும் முகம்கொடுக்கும்போது சீனாவின் சகோதரத்துவம், ஒத்துழைப்பு மற்றும் தொடர்ச்சியாக பங்காளியாக இருப்பதை இலங்கை எதிர்பார்க்கிறது. சீனாவின் சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 77ஆயிரத்துக்கும் அதிகமான சீன சுற்றுலா பயணிகள் எமது நாட்டுக்கு வந்துள்ளனர். இலங்கையினால் அண்மையில் அறிமுகப்படுத்திய இலவச விசா அனுமதி பத்திரம் வேலைத்திட்டத்தில் சீனாவும் உள்ளடங்கி இருப்பதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் இருந்துவரும் நட்பு ரீதியான இராஜதந்திர தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் எதிர்பார்க்கிறோம். மக்கள் சீனா உருவாக்கத்தின் 75ஆவது வருட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்ற வாய்ப்பு கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/194879
  13. நியாயமான காரணிகளுடன் பிறிதொரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க அனுமதி கோர முடியும்; 2024.10.01 ஆம் திகதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழு Published By: VISHNU 27 SEP, 2024 | 01:21 AM தமது வதிவிட பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு மத்திய நிலையத்தில் வாக்களிக்க முடியாத நிலை காணப்படும் வாக்காளர்கள் பிறிதொரு வாக்களிப்பு மத்திய நிலையத்தில் வாக்களிக்க அனுமதியளிக்குமாறு கோரிக்கை விடுக்க முடியும். 2024.10.01 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிலோ அல்லது மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 127 (ஆ) பிரிவின் கீழ் தமக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வாக்கெடுப்பு நிலையத்தில் தனது வாக்கினையளிக்க முடியாது என்று நியாயமான அச்சமடையும் வாக்காளர்கள், பிறிதொரு வாக்களிப்பு மத்திய நிலையத்தில் வாக்களிப்பதற்கு அனுமதியளிக்குமாறு கோரிக்கை ஒன்றை முன்வைக்க முடியும். எவரேனும் வாக்காளர் அவரது விண்ணப்பப்பத்திரங்களை 2024.10.01 ஆம் திகதிக்கு முன்னர் இராஜகிரிய சரண மாவத்தை என்ற முகவரியில் உள்ள தேர்தல்கள் செயலகத்தக்கோ அல்லது தாம் வசிக்கும் மாவட்டத்தின் மாவட்டத் தேர்தல்கள் அலுவகத்துக்கோ சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பதாரர் 2024 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பை அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பப் பத்திரங்களை பூர்த்தி செய்தல் வேண்டும். அந்த இடாப்புக்கள் அனைத்தும் மாவட்ட செயலகங்களிலும் , கச்சேரிகளிலும் மற்றும் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகங்களிலும் வைக்கப்படும். அத்தோடு 2024 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பின் பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்களை www.elections.gov.lk இணையத்தளத்தினூடாக பரீட்சிக்க முடியும். விண்ணபப் பத்திரத்தில் காணப்படும் தகவல்கள் சரியானவையென விண்ணப்பதார் வதியும் பிரதேசத்தின் கிராம அலுவலரினால் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். விண்ணப்பப் பத்திரங்களை மாவட்டத் தேர்தல்கள் அலுவலகங்களில், இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும், அத்துடன் www.elections.gov.lk என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும். https://www.virakesari.lk/article/194878
  14. 27 SEP, 2024 | 12:06 PM ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக இஸ்ரேலிய பிரதமர் நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அதேவேளை அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஐக்கியநாடுகள் தலைமையகத்திற்கு முன்னால் யுத்தத்தை எதிர்ப்பவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பாலஸ்தீன பகுதிகளில் யுத்தம் ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் யூத - இஸ்ரேலிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் என தங்களை தெரிவித்துக்கொண்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் யூதகொடியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றிய ஒருவர் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய பிரதமர் இஸ்ரேலியர்களாகிய எங்களிற்கு பொய் சொல்வதை போல உலகிற்கு பொய்சொல்வார் என அவர் தெரிவித்துள்ளார். சிறுவர்களை கொலை செய்வதை நிறுத்துங்கள்,யுத்தத்தை நிறுத்துங்கள் பணயக்கைதிகளை இஸ்ரேலிற்கு கொண்டுவாருங்கள் இராணுவதீர்வு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் மேலும் பல ஆர்ப்பாட்டங்களிற்கு திட்டமிட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/194898
  15. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவின் ஏவுகணைகள் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி என்.ஜி & ஃப்ரான்செஸ் மாவோ பதவி, பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கண்டம் தாண்டிய இலக்குகளை நோக்கித் தாக்குதல் நடத்தும் தொலைதூர ஏவுகணைகளை (intercontinental ballistic missile - ICBM) வைத்துச் சோதனை நடத்தியுள்ளதாகக் கூறியிருக்கிறது சீனா. சர்வதேச கடல்பரப்பில் சீனா இத்தகைய சோதனையை மேற்கொண்டது அண்டை நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் முதன்முறையாக கடந்த புதன்கிழமை அன்று (செப்டம்பர் 25) இத்தகைய சோதனையை சீனா மேற்கொண்டுள்ளது. இது ஒரு வழக்கமான சோதனை ஓட்டம் தான் என்று கூறிய சீன அரசு, எந்த ஒரு தனி நாட்டையும் இலக்காக வைத்து இத்தகைய சோதனையை நடத்தவில்லை என்றும் கூறியுள்ளது. தொடர்புடைய நாடுகளுக்கு ஏற்கனவே இது சம்பந்தமான அறிக்கையை சீன அரசு அளித்துவிட்டதாகச் சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் சேர்ந்து ஜப்பானும், இது போன்ற அறிக்கை எதையும் தாம் பெறவில்லை என்று கூறியதோடு, சீனாவின் இந்தச் செயலுக்குக் கவலை தெரிவித்துள்ளது. சீனாவின் இந்தச் செயல் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நிபுணர்கள் சீனாவின் அணு ஆயுதங்களின் திறனை இந்தச் சோதனை ஓட்டம் மேற்கோள்காட்டியுள்ளது என்று கூறுகின்றனர். 'அசாதாரணமான சோதனை' சீனா கடந்த ஆண்டு பாதுகாப்புத் தேவைக்காக அணு ஆயுதக் கிடங்கு ஒன்றை உருவாக்கியதற்கு எதிராக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தச் சூழலில், தற்போது நடந்திருக்கும் சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்பட்ட ICBM ஏவுகணைகள் 5,500கி.மீ., தூரம் பயணித்து இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை எனத் தெரியவந்துள்ளது. இது அமெரிக்காவின் பிராதன பகுதியையும் ஹாவாயையும் தாக்கும் எல்லைக்குள் சீனாவைக் கொண்டு வந்துவிடும் திறனைக் கொண்டதாக உள்ளது. ஆனால் பெய்ஜிங்கில் உள்ள அணு ஆயுதக்கிடங்கானது, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் ஆயுதக்கிடங்குகளைக் காட்டிலும் அளவில் ஐந்து மடங்கு சிறியது. மேலும் சீனா தன்னுடைய அணு ஆயுதப் பராமரிப்பு தொடர்பாகக் குறிப்பிடும் போது இது வெறும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்படும் பணிகள் என்றே தெரிவித்து வருகிறது. செப்டம்பர் 25-ஆம் தேதி தொலைதூர ஏவுகணை ஒன்று உள்ளூர் நேரப்படி 08:44 மணி அளவில் சோதிக்கப்பட்டது என்று பெய்ஜிங் தெரிவித்துள்ளது. அந்தச் சோதனை ஓட்டத்தின் போது ஏவப்பட்ட ஏவுகணையின் இலக்கு தெற்கு பசிபிக் பிராந்தியத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், இந்தச் சோதனை ஓட்டம், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பயிற்சியின் ஒரு அங்கமாக வழக்கமாக நடைபெறும் நிகழ்வு தான் என்று சீனாவின் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், 1980-களுக்கு பிறகு கடந்த நாற்பது ஆண்டுகளில், தொலைதூர ஏவுகணையை சீனா ஏவியிருப்பது இதுவே முதல்முறை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இதற்கு முன்பு இத்தகைய ஏவுகணைகளை சீனாவின் மேற்கே ஜின்ஷியாங் பிராந்தியத்தில் உள்ள தக்லமகான் பாலைவனத்தில் தான் ஏவப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்தச் சோதனைகள் அசாதாரணமானவையல்ல. சீனாவுக்கு தான் இது அசாதாரணமானது என்று பிபிசியிடம் கூறுகிறார் ஏவுகணை ஆய்வாளர் அங்கித் பாண்டா. சீனாவில் தற்போது அணு ஆயுதங்களை நவீனப்படுத்தும் நிகழ்வுகள் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்று தெரிவிக்கிறார் அவர். சீனாவின் அணுகுமுறையிலும் இத்தகைய மாற்றம் ஏற்பட்டிருப்பதை இந்தச் சோதனை ஓட்டம் உறுதி செய்கிறது என்று கூறுகிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கண்டம் தாண்டி இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் (மாதிரி படம்) பதற்றத்தில் உலக நாடுகள் சீனாவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக நாடுகள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. ஜப்பான் இது தொடர்பாக எந்த ஒரு தகவலையும் தாம் பெறவில்லை என்று கூறியதோடு, இது அதிக கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்தப் பிராந்தியத்தைத் தவறாக மதிப்பிடுவதால் உருவாகும் சிக்கல்களை இது அதிகப்படுத்துகிறது என்று ஆஸ்திரேலியா கூறியுள்ளது. மேலும் இந்தச் சோதனை ஓட்டத்திற்கான விளக்கத்தை சீனாவிடம் கேட்டிருப்பதாகவும் கூறியுள்ளது. இது தேவையற்றது என்றும், கவலை அளிக்கக் கூடிய நிகழ்வு என்றும் நியூசிலாந்து கூறியுள்ளது. சீனா ஒரு அரசியல் செய்தியை அளிப்பதற்காக இதை மேற்கொண்டுள்ளது என்பதை நம்பவில்லை என்று பாண்டா கூறுகிறார். ஆசியாவில் தங்களின் அணு ஆயுத நிலைப்பாட்டை உடனுக்குடன் மாற்றிக் கொள்ளும் அமெரிக்காவுக்கும், இந்தப் பிராந்தியத்திலும் இது ஒரு தெளிவான நினைவூட்டலாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு ஒரு அழைப்பு மணியாக இந்தச் செயல் இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவின் இந்தச் செயல்பாடு, தைவான் தொடர்பான விவகாரங்களில் தலையீடு நிகழும் பட்சத்தில் உங்கள் நாடும் தாக்குதலுக்கு ஆளாகும் பலவீனமான நிலையில் தான் இருக்கிறது என்று செய்தியை அமெரிக்காவுக்குக் கடத்துவதாக இருக்கிறது என்று தென்கொரியாவில் உள்ளா எவா பெண்கள் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் லெய்ஃப்-எரிக் ஏஸ்லே கூறுகிறார். ஆசியாவில் உள்ள அமெரிக்கக் கூட்டணி நாடுகளுக்கு, ஒரே நேரத்தில் பலமுனை தாக்குதலை நடத்துவதற்கான திறன் தன்னிடம் இருப்பதை நிரூபிக்க இந்தச் சோதனையை சீனா நடத்தியுள்ளது என்றும் அவர் கூறுகிறார். இது நடந்திருக்கும் நேரம் தான் முக்கியம் என்று கூறுகிறார் சிங்கப்பூரில் உள்ள ராஜரத்தினம் சர்வதேச விவகாரங்கள் துறை பள்ளியில் ஆராய்ச்சியாளராக இருக்கும் ட்ரூ தாம்சன். "சீனா தன்னுடைய அறிக்கையில் எந்த நாட்டையும் இலக்காக வைத்து இதனை நடத்தவில்லை என்று கூறுகிறது. ஆனால் இந்தச் சோதனை ஓட்டம் சீனா, மற்றும் ஜப்பான், பிலிப்பைன்ஸ், தைவான் இடையே அதிக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது," என்று கூறுகிறார் அவர். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு கடந்த ஆண்டு மேம்பட்டு வந்த நிலையில் இந்தப் பிராந்தியத்தில் தன்னுடைய அதிகாரத்தைத் தக்கவைப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது சீனா. கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய இடங்களில் தொடர்ந்து சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டினரின் படகுகள் மோதிக்கொள்வது இவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம், சீனாவின் உளவு விமானம் ஒன்று ஜப்பானின் எல்லைக்குள் உலவியதாகக் குற்றம்சாட்டிய ஜப்பான் அந்த நடவடிக்கையை துளியும் ஏற்றுக் கொள்ள இயலாது என்று குற்றம்சாட்டியிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அலுவலகமான பெண்டகன் சீனாவின் அணு ஆயுத கிடங்களில் 500க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறியுள்ளகூறியுள்ளது 500-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள சீனா சீனாவுடனான தைவானின் உறவும் இந்தப் பதற்றத்திற்கு மற்றொரு காரணம். தைவானின் பாதுகாப்பு அமைச்சர் புதன்கிழமை அன்று சீனா நடத்திய சோதனை ஓட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் தைவானைச் சுற்றி 23 சீன ராணுவ விமானங்கள் செயல்பட்டு வந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். ஊடுருவல்களை நியாயப்படுத்தும் வகையில் ‘கிரே ஸோன் வார்ஃபேர்’ என்ற பெயரில் தைவானின் நீர்வழிகள் மற்றும் வான்வெளியில் சீனா தொடர்ச்சியாகக் கப்பல்களையும் விமானங்களையும் அனுப்பி வருகிறது. தைவானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கியதால் ஜூலையில் சீனா அமெரிக்காவுடனான அணு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை ரத்து செய்தது. அமெரிக்காவைக் காட்டிலும் சீனா குறைவாகவே ஆயுதங்களை வைத்திருக்கும் போதும், கடந்த ஆண்டு சீனாவின் ஆயுதங்களை நவீனப்படுத்தும் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அலுவலகமான பெண்டகன், சீனாவின் அணு ஆயுத கிடங்களில் 500-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் அவற்றில் 350 ஆயுதகங்கள் தொலைதூர ஏவுகணைகள் என்றும் மதிப்பிட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,000-ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யாவும் அமெரிக்காவும் 5,000-க்கும் மேலே இத்தகைய ஆயுதங்களை வைத்துள்ளது. அணு ஆயுதக் கிடங்கை மேற்பார்வையிட்டு வரும் சீனா பாதுகாப்புத்துறையின் ராக்கெட் படையிலும் சர்ச்சைகள் நிலவி வருகின்றன. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் அந்தப் படையின் இரண்டு தலைவர்கள் பணி இழப்புக்கு காரணமாக அமைந்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr75zmnyez9o
  16. காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் : ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு அரசாங்கத்தின் வசம் உள்ள சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். காலிமுகத்திடல் வளாகம் உட்பட பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கும் வகையில் அந்த இடத்தில் இன்று (26) ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஆனந்த விஜேபால மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார். பொதுமக்களின் செல்வங்கள் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஆட்சிக் காலத்தில் பொதுமக்களின் பணம் வீண் விரயம் செய்யப்பட்ட விதத்தை இந்த இடத்தில் கண்டுகொள்ளக் கூடியதாக உள்ளது. ஜனாதிபதி மாளிகையில் உள்ள வாகன தரிப்பிடத்தில் அந்த வாகனங்களை நிறுத்த இடவசதி போதுமானதாக இல்லை. காலிமுகத்திடல் வளாகம் உட்பட பல இடங்களில் 107 வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன இவை கடந்த அரசாங்கத்தினால் பல்வேறு பதவிகளில் இருந்த தமது நண்பர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நாட்டு மக்கள் அன்றாடம் வாழ முடியாத நிலையில் கடந்த 76 வருடங்களாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாக பொதுமக்களின் செல்வங்களை வீணடித்து வருவது மிகவும் வேதனையான நிலையாகும். பொதுமக்களின் சொத்து சுகாதாரத்துறையில் போதிய நோயாளர் காவு வண்டி இல்லாத நிலையிலும், அரச உத்தியோகத்தர்களின் கடமைகளை நிறைவேற்ற போதிய வாகனங்கள் இல்லாத போதும் பலகோடி ரூபா பெறுமதியான வாகனங்களை தருவித்து முன்னைய ஆட்சியாளர்கள் தமது நண்பர்களுக்கு வழங்கியுள்ளனர். பொதுமக்களின் சொத்துக்களைப் பாதுகாக்கவேண்டும் முறை கேடாக பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறித்து முழுமையான ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வாகனங்களை செயற்திறனாக மற்றும் அத்தியாவசியமான சேவைகளுக்கு வழங்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட 59 வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடாக முன்னைய ஆட்சியாளர்களின் நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வாகன இறக்குமதி அதிலும் வாகன இறக்குமதி தடை செய்யப்பட்ட காலப்பகுதியில் மாத்திரம் 16 வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் உள்ள 833 வாகனங்களில் 29 வாகனங்கள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இவ்வாறு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது வருத்தமளிக்கின்றது இது தொடர்பில் முழுமையான மீளாய்வு நடத்தி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றுடன் தொடர்புடையோருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/president-provide-luxury-vehicle-essential-service-1727369857
  17. மொசாட்டும் விலகாத மர்மங்களும்! புரியாமல் தடுமாறும் ஹிஸ்புல்லாக்கள்!! ஒரு தோல்வி எப்பொழுது 'மிகப் பெரிய தோல்வி' என்றாகின்றது என்றால், தாம் எப்படித் தோற்றோம் என்கின்ற உண்மை தெரியாமலேயே இருந்துவிடுவதுதான் அவர்களுக்கான மிகப் பெரிய தோல்வி. எதனால் தோற்றோம்.. எதனால் இப்படியான இழப்பு ஏற்பட்டது என்பதை கடைசிவரை கண்டறியாமலேயே இருப்பது என்பதுதான் உண்மையிலேயே மிகப் பெரிய தோல்வி. இப்படியான மிகப் பெரிய தோல்விகளை எதிரிகளுக்கு வழகுவதில் வின்னர்கள்தான்- இஸ்ரேலிய 'மொசாட் 'அமைப்பினர். https://ibctamil.com/article/mysterious-attacks-of-mosad-in-lebanon-1727355347
  18. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் பயணப் பொதிகளில் இருந்த பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையத்தில் உள்ள பொதிகள் சேமிப்பு வளாகத்தில் பணியமர்த்தப்பட்ட சந்தேக நபர், விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொருட்களை வைக்கும் வளாகத்திற்குள் கடந்த 23-ம் திகதி மலேசியாவில்(malaysia) இருந்து வந்த பயணிகளின் பொருட்களை வைக்கும் வளாகத்திற்குள் மர்மநபர் ரகசியமாக நுழைந்து பொருட்களை திருடிய காட்சிகள் அந்த இடத்தில் உள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்( sril lankan airlines) புலனாய்வுப் பிரிவின் ஊழியர்கள் காணொளியை கண்காணித்து, இது தொடர்பாக விமான நிலைய காவல்துறையில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். பொருட்கள் காணாமல் போனதாக முறைப்பாடுகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் பயணிகளிடம் இருந்து பொருட்கள் காணாமல் போனதாக பலமுறை முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து அவர்கள் அவதானமாக செயற்பட்டதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://ibctamil.com/article/bia-staff-arrested-for-stealing-passengers-goods-1727365645
  19. காலி முகத்திடலில் வாகன கண்காட்சி நடத்தி மக்களை ஏமாற்றும் அரசாங்கம் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர Published By: DIGITAL DESK 2 26 SEP, 2024 | 05:12 PM (எம்.மனோசித்ரா) அரச அதிகாரிகள் பயன்படுத்தி மீண்டும் ஒப்படைத்துள்ள வாகனங்களை காலி முகத்திடலில் நிறுத்தி கண்காட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர். இவை அமைச்சர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் அல்ல. இந்த வாகனங்கள் தேவையில்லை எனில் அவற்றை குத்தகைக்கு வழங்கி அல்லது விற்பனை செய்து திறைசேரிக்கு வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சு.க.வின் ஸ்தாபகத்தலைவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் நினைவு தினம் வியாழக்கிழமமை காலி முகத்திடலில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய மக்கள் கூட்டணியிலேயே பொதுத் தேர்தலிலும் போட்டியிடுவோம். ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த அனைவரும் எவ்வித பிளவுகளும் இன்றி ஒன்றிணைந்து பொதுத் தேர்தலையும் எதிர்கொள்வோம். தற்போதைய அரசாங்கம் வாகனங்களை காலி முகத்திடலில் நிறுத்தி கண்காட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. 2015இல் ஜோன் அமரதுங்க இதே போன்றதொரு நாடகத்தை அரங்கேற்றினார். தற்போது இந்த வாகனங்களைப் பார்த்து மக்கள் அரசியல்வாதிகளையே விமர்சிக்கின்றனர். கடந்த அரசாங்கத்திலுள்ள அதிகாரிகள் பயன்படுத்திய வாகனங்களே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றையே அநுர திஸாநாயக்கவின் அரசாங்க அதிகாரிகளும் பயன்படுத்த நேரிடுடம். எனவே மக்களை ஏமாற்றுவதற்காக இவ்வாறு கண்காட்சிகளை நடத்திக் கொண்டிருக்காமல், அவற்றை குத்தகைக்கு வழங்கி வருமானத்தை பெறுமாறும், அரச சேவைகளுக்குச் செல்லும் போது முச்சக்கரவண்டிகளில் செல்லுமாறும் தற்போதைய அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குகின்றோம். இவை தற்காலிகமாக அரங்கேற்றப்படும் நாடகங்கள் ஆகும் என்றார். https://www.virakesari.lk/article/194858
  20. யாழ். பல்கலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் Published By: VISHNU 26 SEP, 2024 | 08:17 PM ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/194872
  21. Published By: VISHNU 26 SEP, 2024 | 08:35 PM (நா.தனுஜா) எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து, எதிர்வரும் இரு தினங்களுக்குள் தமது தீர்மானத்தை அறிவிப்பதாக தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் சமூகத்தினர் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியிடம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனையடுத்து புதன்கிழமை (25) பி.ப 3.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் கூடிய ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழு, எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது பற்றி விரிவாக ஆராய்ந்தது. அதன் முடிவில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அக்கூட்டணியின் சார்பிலேயே களமிறங்குவதென உறுதியாகத் தீர்மானிக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகளை உள்ளடக்கிய பொதுச்சபையினருடன் நேற்றை தினம் (26) கலந்துரையாடுவதற்கும், அவர்களுடைய நிலைப்பாடுகளைக் கேட்டறிவதற்கும் இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டது. அதற்கமைய வியாழக்கிழமை (26) பி.ப 4.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் கூடிய ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகளும் சுமார் 6.30 மணி வரை இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்தனர். அதனையடுத்து தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா?, அவ்வாறு போட்டியிடுவதாயின் எந்தத் தரப்பின் சார்பில் போட்டியிடுவது?, போட்டியிடவில்லை எனின் தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வதா, இல்லையா? என்பன உள்ளடங்கலாக இதனுடன் தொடர்புடைய சகல விடயங்கள் குறித்தும் ஆராய்ந்து அறிவிப்பதற்கு 2 நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளனர். அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்பட்ட தமிழ் பொதுவேட்பாளர் 'சங்கு' சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், அதே சின்னத்திலேயே பொதுத்தேர்தலிலும் போட்டியிடவேண்டும் என்ற யோசனை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பலரால் முன்வைக்கப்பட்டது. அதனையடுத்து அச்சின்னத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான அடுத்தகட்ட சட்ட நகர்வுகளை மேற்கொள்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/194873
  22. Published By: RAJEEBAN 26 SEP, 2024 | 01:44 PM தமிழ் மக்கள் சொந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகள் போல உணர்வதற்கு காரணமான நீண்ட கால துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அர்த்தபூர்வமன நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்க்கின்றோம் என உலகதமிழர் பேரவை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள உலகதமிழர் பேரவை மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. சாதாரண பின்னணியில் ஆரம்பித்து தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் சாதாரண பொதுமக்களின் நபராக விளங்கிய அனுரகுமார திசநாயக்கவின் அரசியல் பயணம் அவரது சாதனைகள் அனைத்து பின்னணியை சேர்ந்த இளைஞர்களும் பெரும் கனவு காணத்தூண்டும். புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ஹரிணி அமரசூரியவிற்கும் நாங்கள் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம், இலங்கையின் வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமர். தேர்தலும் அதிகாரமாற்றமும் அமைதியான முறையில் இடம்பெற்றமை குறித்து திருப்தியடைகின்றோம், இதன் மூலம் பல உலகநாடுகள் பின்பற்றவேண்டிய முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் பெருமளவிற்கு இனமத பேரினவாத கருத்துக்கள் அற்றதாக காணப்பட்டது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம், இது எதிர்காலத்திற்கான முன்னுதாரணமாக விளங்கும் என எதிர்பார்க்கின்றோம் . எந்த வித சந்தேகமும் இன்றி இலங்கை தனது வரலாற்றின் தீர்க்கமான தருணத்தில் உள்ளது, பொருளாதார நெருக்கடி மற்றும் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வேருன்றியிருக்கும் ஊழலும் மக்கள் அமைப்பு மாற்றத்தை விரும்புவதை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவும் தேசிய மக்கள் சக்தியும் முன்னெடுத்த பிரச்சாரம் மில்லியன் கணக்காண மக்களிடையே நன்கு எதிரொலித்துள்ளது. எனினும் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களை கொண்டுவருவதில் தற்போதைய ஜனாதிபதி கடும் சவாலை எதிர்கொள்வார் என நாங்கள் கருதுகின்றோம். நாட்டின் அனைத்து குடிமகனும் சமூகமும் அதன் வளர்ச்சிப்பாதையில் சமபங்குதாரராக உணரும்போதுதான் உண்மையான மாற்றம் நிகழும் என உலகதமிழர் பேரவை உறுதியாக நம்புகின்றது. புதிய ஜனாதிபதியும் அவரது கூட்டணி கட்சிகளும் அவர்கள் குறித்து சிறுபான்மை சமூகத்தினர் கொண்டுள்ள கணிசமான நம்பிக்கை பற்றாக்குறைக்கும் அச்சத்திற்கும் இன்னமும் தீர்வை காணவில்லை என்பது தேர்தல் முடிவுகள் மூலம் நன்கு தெரியவந்துள்ளது. பல தசாப்தங்களாக இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சமத்துவம் நீதி மற்றும் நியாயமான பிரதிநிதித்துவம் தொடர்பில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டுள்ளதுடன் அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மூலம் தங்கள் மொழி இனஅடையாளங்களை இழப்பது குறித்து அச்சமடைந்துள்ளனர். உள்நாட்டு யுத்தத்தினதும் அதன் எச்சங்களினதும் தாக்கங்கள் தீர்வின்றி அந்த மக்களை அச்சுறுத்துகின்றன. மேலும் பிராந்தியங்களிற்கான அர்த்தபூர்வமான அதிகார பகிர்விற்கான அவர்களது எதிர்பார்ப்புகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. தமிழ் மக்கள் சொந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகள் போல உணர்வதற்கு கருதுவதற்கு காரணமான நீண்ட கால துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அர்த்தபூர்வமன நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்க்கின்றோம். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரசமைப்பு வரைபினை விரைவாக முடிப்பதற்கும், உள்ளுராட்சி அமைப்புகள் மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுடன் அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்களை பகிர்ந்துகொள்வதற்கும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் உறுதியளித்துள்ளமை குறித்து நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். https://www.virakesari.lk/article/194832
  23. தியாகி திலீபனின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் 26 SEP, 2024 | 06:28 PM தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவேந்தல் இன்று (26) நாட்டின் தமிழர் பகுதிகளில் நடைபெற்றது. முல்லைத்தீவு முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்று (26) உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. மௌன அஞ்சலியுடன் தொடங்கிய இந்நினைவேந்தலில், தியாகி திலீபனின் உருவப்படத்துக்கு மலர் தூவி சுடரேற்றப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோருடன் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். கிளிநொச்சி தியாக தீபம் திலீபனின் 37வது நினைவேந்தல் இன்று (26) காலை 10 மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றது. இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்துகொண்டார். வவுனியா தியாகி திலீபனின் 37வது நினைவுதினம் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று (26) அனுஷ்டிக்கபட்டது. அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவரும் வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக அமைந்துள்ள கொட்டகையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது. இதன்போது திலீபனின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி, ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கருத்து தெரிவிக்கையில், எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கும், தமிழர்களுக்குமான தீர்வு கிடைக்கும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேச வழிமுறையூடாகவே எமது பிள்ளைகளை கண்டுபிடிக்க முடியும். நாம் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புக்களை நாடியே எமது போராட்டங்களை முன்னெடுத்து நிற்கிறோம் என்றனர். யாழ்ப்பாணம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் இன்று (26) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இன்று, தியாகி தீலிபன் உயிர்நீத்த நேரமான காலை 10.48 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாயின. மாவீரர்களின் சகோதரி, முன்னாள் போராளி பொதுச் சுடர் ஏற்றியதை தொடர்ந்து, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கை தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். 2) சிறைக்கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும். 3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். 4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாக களையப்படவேண்டும். 5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களை திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும். இந்த ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து திலீபன் உயிர்நீத்தார். மன்னார் தியாக தீபம் திலீபனின் 37வது நினைவேந்தல் இன்றைய தினம் வியாழக்கிழமை (26) காலை மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தலில் மத தலைவர்கள், சமூக செயற்பாட்டளர்கள் என பலர் கலந்துகொண்டனர். அம்பாறை தியாக தீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (26) மாலை 5.30 மணியளவில் அம்பாறை மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் காரைதீவு அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது திலீபனின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/194825
  24. Published By: DIGITAL DESK 2 26 SEP, 2024 | 05:44 PM கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 31 இலட்சத்து 43 ஆயிரத்து 871 சதுரமீற்றர் பரப்பளவு நிலப் பகுதியிலிருந்து 77,908 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார். இன்று (26) அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்ட விபரத்தை தெரிவித்துள்ளார். இலங்கையின் வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதி உதவியுடன் ஈடுபடும் ஸார்ப், மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2024 செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தச்சடம்பன், அம்பகாமம், ஒழுமடு, மாங்குளம், கொக்காவில் பகுதியிலும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை, இயக்கச்சி மற்றும் ஆனையிறவிலும் கண்டாவளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தட்டுவன்கொட்டி பகுதியிலும் 31 இலட்சத்து 43 ஆயிரத்து 871 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து 77,908 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார். தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடி அகற்றும் பணிகளை புதுக்குடியிருப்பு, அம்பகாமம், மாங்குளம், கொக்காவில், தட்டுவன்கொட்டி மற்றும் ஆனையிறவிலும் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/194847

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.