Everything posted by ஏராளன்
-
இருப்பை பாதுகாக்க தமிழ்க் கட்சிகள் அணி திரளுங்கள் - சிவமோகன் அழைப்பு
26 SEP, 2024 | 06:36 PM எதிர்வரும் தேர்தலில் சகல கட்சிகளும், ஒற்றுமை என்று சொல்லி காலத்தை வீணடிக்காமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் ஒன்றாக போட்டியிட வேண்டும் என்று வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், எதிர்வரும் பொதுத்தேர்தலானது தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தி இருப்பை காக்கவேண்டிய ஒரு தேர்தல். அந்த ஒற்றுமையை வலியுறுத்தும் வண்ணம் முன்னாள் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என 11 பேர் நேற்றைய தினம் மாவை சேனாதிராஜாவை சந்தித்து கலந்துரையாடினோம். சகல கட்சிகளையும் உள்வாங்கி தமிழ் தேசிய கூட்டமைப்பாக தமிழ்த் தேசிய அணியாக செயற்படுவதை வலியுறுத்தியே அந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. எனவே அனைத்து கட்சிகளும் ஒற்றுமை என்று சொல்லி காலத்தை வீணடிக்காமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் ஒன்றாக போட்டியிட வேண்டும். இது எனது சொந்த கருத்தாக இருந்தாலும் தமிழரசுக் கட்சியின் அதிகமானோரது நிலைப்பாடும் இதுவே. இது தொடர்பான இறுதி முடிவினை எமது கட்சியின் மத்திய குழு விரைவில் எடுக்கும். அதன் பின்னர், மாவை சேனாதிராஜா அவர்கள் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து அதனை எமது மத்திய குழுவுக்கு அறிவிப்பார். மிக குறுகிய காலமே எமக்கு உள்ளது. எனவே விவேகமாக சிந்திக்கவேண்டும். பிரிந்து நின்று தேர்தலை சந்தித்தால் தமிழர்களது இருப்பு கேள்விக்குறியாக்கப்படும். பாராளுமன்றுக்கு புதியவர்கள் தேவை. இளைஞர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பது உண்மை. அதேநேரம் பாராளுமன்றில் தமிழ்த் தேசிய இருப்பை தக்கவைப்பதற்கு ஆளுமையான அனுபவமுடைய மூத்தவர்களும் தேவை. கடந்த காலங்களில் பங்காளி கட்சிகளுக்கு வன்னி மாவட்டத்தில் அதிகமான ஆசனங்கள் கொடுக்கப்பட்டு யாழ் மாவட்டத்தில் கொடுக்கப்படாத நிலைமை இருந்தது. அதனை ஒற்றுமையாகவே நாம் செய்தோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு கட்சி மேலோங்கி இருக்கிறது. அது ஒரு தீர்க்கப்படமுடியாத பிரச்சினை அல்ல. அத்துடன் தமிழர்களது விடயங்களை முன்னிலைப்படுத்தி கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் தமிழ் மக்களுக்கு தேவையான விடயங்களில் அரசாங்கத்துடன் இணங்கி செல்லவேண்டிய நிலைமையும் ஏற்படும். இது தொடர்பாக பரிசீலிப்போம். இதேவேளை மதுபான நிலையத்துக்கான அனுமதிப்பத்திரத்தை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை இதுவரை நான் பார்க்கவில்லை. அது இன்று வரை எமது கைகளில் கிடைக்கவில்லை என்றார். https://www.virakesari.lk/article/194868
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
லைசென்ஸ் எந்த நேரமும் பறிக்கப்படலாமண்ணை! அதனால வேறு தொழிலில் முதலீடு செய்யுங்கோ. வட்டுக்கோட்டையில ஒருத்தர் வட்டிக்கு எடுத்து கோடியைக் கொட்டி கொடுத்து இப்ப கந்தறுந்து தலைமறைவு.
-
பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்! தப்பியோடப் போவது யார்....!
இந்தக் கருத்தை எனது முகநூலில் பகிரலாமா அண்ணை?
-
147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனை
147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் 'குட்டி ப்றட்மன்' கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனை; டொன் ப்றட்மன், சுனில் கவாஸ்கரினாலும் கூடாமல் போனது Published By: VISHNU 26 SEP, 2024 | 07:49 PM (நெவில் அன்தனி) டெஸ்ட் கிரிக்கெட்டின் 147 வருட வரலாற்றில் இலங்கையின் 'குட்டி ப்றட்மன்' கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனை படைத்து வரலாற்று ஏடுகளில் தனது பெயரைப் பதித்துக்கொண்டுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (26) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அரைச் சதம் குவித்ததன் மூலமே 25 வயதான கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனையை படைத்தார். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 306 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருக்கிறது. இலங்கையின் முதலாவது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களைப் பெற்ற கமிந்து மெண்டிஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுமானது முதல் இதுவரை விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளிலும் 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்ற முதலாவது துடுப்பாட்ட வீரர் என்ற அரிய சாதனையை நிலைநாட்டினார். அத்துடன் 8 டெஸ்ட் போட்டிகளில் 9 தடவைகள் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்ற முதலாவது வீரர் என்ற சாதனைக்குரிய பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் காலி அரங்கில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானதிலிருந்து இதுவரை விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளிலும் கமிந்து மெண்டிஸ் முறையே 61 (எதிர் அவுஸ்திரேலியா - காலி), 102, 164 (எதிர் பங்களாதேஷ் - சில்ஹெட்), 92 ஆ.இ., 9 (எதிர் பங்களாதேஷ் - சட்டோக்ரம்), 12, 113 (எதிர் இங்கிலாந்து - மென்செஸ்டர்), 74, 4, (எதிர் இங்கிலாந்து - லோர்ட்ஸ்), 64 (எதிர் இங்கிலாந்து - தி ஓவல்), 114, 13 (எதிர் நியூஸிலாந்து - காலி), 51 ஆ.இ. (எதிர் நியூஸிலாந்து - காலி) என ஓட்டங்களைப் பெற்று இந்த சாதனையை நிலைநாட்டினார். இதுவரை அவர் 8 டெஸ்ட் போட்டிகளில் 13 இன்னிங்ஸ்களில் துடப்பெடுத்தாடி 4 சதங்கள், 5 அரைச் சதங்கள் உட்பட 79.36 என்ற சராசரியுடன் 873 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார். இதேவேளை, இந்த டெஸ்ட் போட்டியில் அபார சதம் குவித்த முன்னாள் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் தனது குழந்தைக்கு சமர்ப்பணமாக துடுப்பை இரண்டு கைகளிலும் ஏந்தி தாலாட்டு சமிக்ஞை செய்து தனது சதத்தைக் கொண்டாடினார். போட்டியின் முதலாவது ஓவரிலேயே பெத்தும் நிஸ்ஸன்க ஆட்டம் இழந்ததும் இலங்கை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், அடுத்து களம் நுழைந்த தினேஷ் சந்திமால் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அபார சதம் குவித்ததுடன் இரண்டு இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி அணியைப் பலப்படுத்தினார். இரண்டாவது விக்கெட்டில் திமுத் கருணாரட்னவுடன் 122 ஓட்டங்களைப் பகிர்ந்த தினேஷ் சந்திமால், அடுத்த விக்கெட்டில் ஏஞ்சலோ மெத்யூஸுடன் மேலும் 97 ஓட்டங்களைப் பகிர்ந்தார். 208 பந்துகளை சந்தித்த தினேஷ் சந்திமால் 15 பவுண்டறிகளுடன் 116 ஓட்டங்களைப் பெற்றார். தனது 84ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் தினேஷ் சந்திமால் 16ஆவது சதத்தைக் குவித்ததுடன் காலியில் அவர் பெற்ற 6ஆவது சதம் இதுவாகும். திமுத் கருணாரட்ன 46 ஓட்டங்களைப் பெற்றார். இதேவேளை, நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிவரும் ஏஞ்சலோ மெத்யூஸ் 166 பந்துகளில் 6 பவுண்டறிகள் அடங்கலாக 78 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். மறுபக்கத்தில் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய சாதனை வீரர் கமிந்து மெண்டிஸ் 56 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர். இது இவ்வாறிருக்க, காலி விளையாட்டரங்கில் 2000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த ஏஞ்சலோ மெத்யூஸ் மைல்கல் சாதனை ஒன்றை நிலைநாட்டினார். https://www.virakesari.lk/article/194871
-
பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்! தப்பியோடப் போவது யார்....!
சஜித்திற்கு போட்ட நண்பர் இப்ப திசைகாட்டிக்கு போடப்போறாராம்! நானும் நல்லது தமிழர் சார்பாக புதிய இளைஞர்களுக்கு கட்சிகள் வாய்ப்பளித்தால் இளையோருக்கு போடுங்க, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காது பழைய ஆக்கள் வந்தால் உங்கள் விருப்பப்படியே போடுங்க என சொன்னேன். அண்ணை ஆரம்ப காலங்களில் அவருடைய செயற்பாடுகள் பிடிக்கவில்லை தான்! இப்ப தெளிஞ்சிட்டுது! அவரவர் அவரவர் பணியை செய்கிறார்கள், மக்கள் பிடித்தால் வாக்களிப்பார்கள் இல்லையெனில் புறக்கணிப்பார்கள். மிகச் சரியான கருத்து அண்ணை.
-
க.பொ.த சாதரண தரப் பரீட்சைச் செய்திகள்
சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறு 30 ஆம் திகதி வெளியாகிறது 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (30) வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். முடிவுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றிய இந்த ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றது. பெறுபேறுகள் வெளியானதும் doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/309976
-
லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகின்றது - இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரி
லெபனான்: தரைவழித் தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் - போர் நிறுத்தம் கோரும் அமெரிக்கா, பிரான்ஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேல் ராணுவத் தலைவர் தனது படைகளிடம், ஆயுதக் குழு ஹெஸ்பொலாவை குறிவைத்து நடத்தப்படும் விரிவான வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, “எதிரியின் பகுதிக்குள் நுழைய” அவசியம் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார். “மேலே ஜெட்டுகள் போவது கேட்கிறதா? நாம் நாள் முழுவதும் தாக்கி வருகிறோம். இது தரைவழித் தாக்குதலுக்கு களத்தைத் தயார் செய்யவும், ஹெஸ்பொலாவை தொடர்ந்து மட்டுப்படுத்தம் உதவும்” என்று ஜெனரல் ஹெர்சி ஹலெவி கூறியுள்ளார். புதன்கிழமை நடைபெற்ற தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக லெபனான் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் ஹெஸ்பொலாவின் உளவுத்துறை இயக்குநரகம் தாக்கப்பட்டு, அவர்களின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த மோதல்களை மட்டுப்படுத்துவதற்கான ராஜ்ஜீய முயற்சிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா 21 நாட்கள் போர் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளன. அமெரிக்க அதிபரும் ஃபிரான்ஸ் அதிபரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்த மோதல்கள் “பொறுத்துக்கொள்ள முடியாதவை” என்றும் அந்த “பிராந்தியத்தில் நிலைமைகள் தீவிரமடைவதற்கான” ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். இது இஸ்ரேல் மற்றும் லெபனான் மக்களின் நலனுக்கு உகந்தது அல்ல என்று கூறியுள்ளனர். இந்த அறிக்கை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், கத்தார் ஆகிய நாடுகள் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளன. தரை வழி தாக்குதலுக்குத் தயாராகிறதா இஸ்ரேல்? பட மூலாதாரம்,REUTERS ஒரு இஸ்ரேல் மூத்த அதிகாரி தரைவழித் தாக்குதல் விரைவில் நடத்தப்படலாம் என்று நேரடியாகச் சொல்வது இதுவே முதல் முறை. “நாங்கள் அவர்களை எல்லா இடங்களிலும் தாக்கிக் கொண்டிருக்கிறோம்” என்று வடக்கு இஸ்ரேலில் ராணுவப் பயிற்சி ஒன்றில் பங்கேற்ற ஏழாவது பிரிகேட்-ஐ (ராணுவக் குழு) சேர்ந்த வீரர்களிடம் புதன்கிழமை கூறியதாக இஸ்ரேல் ராணுவம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. “இலக்கு மிகத் தெளிவாக உள்ளது. மக்களைப் பாதுகாப்பாக வடக்கில் குடியமர்த்த வேண்டும். அதைச் சாதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் அர்த்தம் உங்கள் பூட்ஸ் கால்கள் எதிரியின் பகுதிக்குள் நுழையப் போகிறது” என்றும் அதில் தெரிவித்திருந்தார். ஜெனரல் ஹலெவி தங்கள் படைகள், “எதிரியை அழிக்கும்”, அவர்களின் கட்டமைப்புகளையும் அழிக்கும் என்று பேசியுள்ளார். இஸ்ரேல் லெபனானுக்குள் உடனே நுழைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன், அது “உடனடியாக” நடைபெறுவதாகத் தெரியவில்லை என்று கூறியிருந்தது. ஆனால் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தனது இரண்டு ராணுவக் குழுக்களை “வடக்கில் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளை” மேற்கொள்வதற்காக அழைத்திருந்தது. அதன் பிறகே, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அதன் தலைவரது கருத்துகளை வெளியிட்டிருந்தது. போர் நிறுத்தம் கோரும் அமெரிக்கா, பிரான்ஸ் பட மூலாதாரம்,REUTERS புதன்கிழமை பிபிசியின் குழு ஒன்று இஸ்ரேல் எல்லையில் உள்ள ஒரு நகரத்தைப் பார்வையிட்டது. அப்போது, ஹெஸ்பொலா போராளிகள் எல்லையிலிருந்து வெகுதொலைவு பின்னால் தள்ளி, அதாவது 2006ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் தீர்மானத்தின்படி, லிதானி ஆற்றுக்கு வடக்கில் இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியது. அமெரிக்கா உட்பட இஸ்ரேலின் நட்பு நாடுகள், அந்தப் பிராந்தியத்தில் ஒரு முழு வீச்சிலான போரைத் தடுக்க முயன்று வருவதாகத் தெரிவித்துள்ளனர். இரு தரப்புக்கும் இடையே சிறிய காலத்துக்குப் போர் நிறுத்தம் ஏற்படுத்த அமெரிக்க மூத்த அதிகாரிகள் முயன்று வருவதாக பல ஊடக செய்திகள் வெளியாகின. பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோன், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நியூ யார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் சந்தித்தபோது, போர் நிறுத்தத்திற்காக எடுக்கப்பட வேண்டிய முயற்சிகள் குறித்து அவருடன் ஆலோசித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளும் “பேச்சுவார்த்தைக்கு இடம் அளிக்கும் வகையில்” 21 நாள் “தற்காலிக போர் நிறுத்தம்” வேண்டும் என்று கோருவதாக பிரான்ஸ் கூறியது. “லெபனானில் போர் ஏற்படக்கூடாது. இதற்காகத்தான் இஸ்ரேலிடம் தாக்குதல்களைத் தீவிரப்படுத்த வேண்டாம் என்று வற்புறுத்துகிறோம். ஹெஸ்பொலாவிடம் இஸ்ரேலுக்குள் நடத்தும் ஏவுகணை தாக்குதல்களை நிறுத்துமாறு வறுபுறுத்துகிறோம்” என்று அதிபர் மாக்ரோன் ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் தெரிவித்தார். “நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது” என்று கவலை தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்று வற்புறுத்தினார். முழுவீச்சிலான போர் தொடங்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES லெபனான் பிரதமர் நஜிப் மிகாதி “இஸ்ரேல் ராணுவத்தின் மிருகத்தனமான நடவடிக்கைகளால் தங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவதாக” பேசினார். ஐக்கிய நாடுகள் கூட்டம் முடிந்து நாடு திரும்பும்போது, “அனைத்து எல்லைகளிலும் உடனடி போர் நிறுத்தம் செய்வதற்கு இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுப்பதில் ஒரு சீரிய முடிவு” எடுக்கப்படும் என்று நம்புவதாகத் தெரிவித்தார். இஸ்ரேலின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் டேனி டேனன், நிலைமை மோசமடைவதைத் தவிர்க்க எடுக்கப்படும் ராஜ்ஜீய முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார். எனினும், “சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு எங்கள் இலக்கை அடைய எங்களுக்கு இருக்கும் எல்லா வழிகளிலும் முயற்சி செய்வோம்” என்றும் தெரிவித்தார். இஸ்ரேல் “முழு வீச்சிலான போரை விரும்பவில்லை” என்றும் அமைதிக்கான தனது விருப்பத்தை ஏற்கெனவே “தெளிவுப்படுத்தி” இருப்பதாகவும் கூறினார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை நியூயார்க் வருவார் என்று கூறிய தூதுவர், அன்று இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்றும் மறுநாள் ஐக்கிய நாடுகள் பொது சபையில் பேசுவார் என்றும் தெரிவித்தார். எல்லை தாண்டிய தாக்குதல்கள் புதன்கிழமை தொடர்ந்தது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்தைத் தாக்கியதாக ஹெஸ்பொலா கூறியது. இஸ்ரேலின் மக்கள் அடர்த்தி அதிகமான டெல் அவிவ் நகரத்தின் மீது ஹெஸ்பொலா தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இஸ்ரேல் தாக்குதல்களைத் தவிர்க்க, லெபனான் பிரதமர் நஜிப் மிகாதி ஐக்கிய நாடுகள் சபையில் கோரிக்கை விடுத்தார் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கர்னல் நாடவ் ஷொஷானி, அந்த “ஏவுகணை மக்கள் வசிக்கும் பகுதிகளை” நோக்கி வந்ததாகவும், “மொசாட் தலைமையகம் அந்தப் பகுதியில் இல்லை” என்றும் தெரிவித்தார். வடக்கு இஸ்ரேல் நோக்கி பத்துக்கும் மேற்பட்ட ட்ரோன்களை கொண்டு ஹெஸ்பொலா தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர். இந்நிலையில், சமீபத்தில் லெபனான் மீது நிகழ்த்திய வான்வழித் தாக்குதல்களில் இஸ்ரேல் போர் விமானங்கள் 280 “ஹெஸ்பொலா இலக்குகளை” தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. லெபனான் சுகாதாரத்துறை அமைச்சர் ஃபிராஸ் அபியாத் செய்தியாளர்களிடம் பேசும்போது, இஸ்ரேல் தாக்குதல்களில் 51 பேர் கொல்லப்பட்டதாகவும் 223 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்தது. ஆனால் இதில் எத்தனை பேர் பொதுமக்கள், எத்தனை பேர் போராளிகள் என்று குறிப்பிடவில்லை. தெற்கு இஸ்ரேலில் சௌஃப் மலைகளில் உள்ள ஜௌன், அதேபோன்று பெய்ரூட்டில் மற்றொரு மலைப் பாங்கான பகுதியில் உள்ள மேய்ஸ்ரா, பேகா பள்ளத்தாக்கின் வடக்கில் எனப் பல இடங்களில் கொடூரமாக இஸ்ரேலிய தாக்குதல்கள் நடைபெற்றதாக லெபனான் சுகாதாரத்துறை கூறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8v131z42po
-
தியாகி திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் காவடி எடுத்த இளைஞர்கள் (படங்கள் இணைப்பு) யாழ்.நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில், இரு இளைஞர்கள் தூக்கு காவடி எடுத்து, நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை, சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/309984
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 300 இலட்சம் ரூபாய் முதல் 400 இலட்சம் ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்தவர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ள அவர்,அவர்களின் விபரங்கள் எம்மிடம் உள்ளன என்றும் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும். அத்துடன் அவ்வாறான சகல தரப்பினர் தொடர்பான விபரங்களும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/309968
-
பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்! தப்பியோடப் போவது யார்....!
பலரும் வெளிப்படையாக எழுதத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் இளையோரிடம் எந்தக் கட்டமைப்புகளும் இல்லை, புதிதாக கட்டமைக்க கால அவகாசமும் இல்லை. மக்கள் ஒன்று செய்யலாம், முன்னர் பா.உ வாக இருப்போரைத் தவிர்த்து இதுவரை வெற்றிபெறாத புதிதாக கட்சிகளூடாக வருவோரைத் தெரிவு செய்யலாம் என நினைக்கிறேன்.
-
பூமிக்கு வரும் 'இரண்டாம் நிலா' - எங்கே தெரியும்? எப்படிப் பார்க்கலாம்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த புதிய நிலா மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் இருக்கும் என்பதால் வெறும் கண்களால் தெளிவாக பார்க்க முடியாது. கட்டுரை தகவல் எழுதியவர், மேடி மோலோய் பதவி, பிபிசி காலநிலை & அறிவியல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு வானியல் ஆச்சரியத்தைக் காணத் தயாராகுங்கள். பூமியில் இரண்டு நிலாக்கள் தோன்றும் ஒரு வானியல் அற்புதம் நிகழவுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியின் ஈர்ப்பு விசையால் ஒரு சிறுகோள் (Asteroid) ஈர்க்கப்பட்டு, பூமியைச் சுற்றும் ஒரு தற்காலிகமாக ‘சிறிய-நிலா’ ஆகப் பிரகாசிக்கப் போகிறது. இந்தத் தற்காலிக விண்வெளிச் சுற்றுலாவாசி எதிர்வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி தொடங்கி, இரண்டு மாதங்கள் வரை பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும். அதன் பிறகு பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பித்துச் செல்லும். துரதிர்ஷ்டவசமாக, இந்த இரண்டாம் நிலா மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் இருக்கும் என்பதால், வெறும் கண்களால் அதனைத் தெளிவாகப் பார்க்க முடியாது. ஒரு நல்ல தொலைநோக்கி இருந்தால் இந்தச் சிறிய நிலாவைத் தெளிவாக கண்டு ரசிக்க முடியும். தற்காலிக 'நிலா' இந்தச் சிறுகோள் முதன்முதலில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி அன்று நாசாவின் ‘ஆஸ்டிராய்டு டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம்’ (ATLAS) மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க வானியல் கழகத்தின் ஆய்வுக் குறிப்புகளில், விஞ்ஞானிகள் தற்காலிகச் சிறிய நிலவின் பாதையைக் கணக்கிட்டுள்ளதைத் தெரிவித்துள்ளனர். விஞ்ஞானிகள் இந்தச் சிறுகோளை ‘2024 PT5’ எனக் குறிப்பிடுகின்றனர். இது அர்ஜுனா சிறுகோள் பெல்ட்டில் இருந்து வந்தது. அர்ஜுனா பெல்ட் பூமியின் சுற்றுப்பாதையை ஒத்த பாறைகளைக் கொண்டுள்ளது. எப்போதாவது, இந்தச் சிறுகோள்களில் சில, நமது கிரகத்திற்கு அருகே, 28 லட்சம் மைல்கள் (45 லட்சம் கி.மீ.) தொலைவில் நெருங்கி வருகின்றன. ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, 2024 PT5 போன்ற ஒரு சிறுகோள் சுமார் மணிக்கு 3,540 கி.மீ என்ற மெதுவான வேகத்தில் (ஒப்பீட்டளவில்) நகர்ந்தால், பூமியின் ஈர்ப்புப் புலம் அதன் மீது வலுவான தாக்கத்தைச் செலுத்தும். அதன் விளைவாகத் தற்காலிகமாக பூமியால் ஈர்க்கப்பட்டு, பூமியின் சுற்றுப்பாதையில் இருக்கும். இந்த நிகழ்வு, இந்த வார இறுதியில் தொடங்கி, இந்தச் சிறுகோள் பூமியைச் சுற்றி இரண்டு மாதங்கள் வரை பயணிக்கும். வானியலாளர், மற்றும் ‘Awesome Astronomy’ போட்காஸ்ட் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான முனைவர் ஜெனிபர் மில்லார்ட், பிபிசியின் ‘டுடே’ நிகழ்ச்சியில், இந்தச் சிறுகோள் செப்டம்பர் 29-ஆம் தேதி சுற்றுப்பாதையில் நுழையும் என்றும், பின்னர் நவம்பர் 25-ஆம் தேதி வெளியேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். "2024 PT5 நமது கிரகத்தின் முழு சுழற்சியை முடிக்கப் போவதில்லை, அதன் சுற்றுப்பாதையை மாற்றிக் கொண்டு, பூமியால் ஈர்க்கப்பட்டு, சில காலத்துக்கு பின்னர் அது அதன் சொந்த சுற்றுப் பாதையில் தொடரும்,” என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமிக்கு அருகில் ஒரு சிறுகோள் (மாதிரிப் படம்) எப்படிப் பார்ப்பது? 2024 PT5 சிறுகோள் தோராயமாக 32 அடி (10மீ) நீளம் கொண்டது. இது பூமியின் நிரந்தரமான நிலவுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியது. இது தோராயமாக 3,474கி.மீ விட்டம் கொண்டது. இந்தச் சிறுகோள் அளவில் மிகச்சிறியது என்பதாலும், மங்கலான பாறையால் ஆனது என்பதாலும் வீட்டில் இருக்கும் சாதாரண தொலைநோக்கியைப் பயன்படுத்தி பூமியில் இருந்து பார்க்க முடியாது. "நல்ல தொழில்முறைத் தொலைநோக்கிகளால் இதனைப் பார்க்க முடியும். எனவே, நீங்கள் இந்தச் சிறிய புள்ளி போன்று இருக்கும் அற்புதமான சிறுகோளைப் பார்க்க முடியும். இணையத்தில் வெளியாகும் படங்கள் வாயிலாகவும் பார்க்க முடியும்," என்று முனைவர் மில்லார்ட் கூறினார். இதுபோன்ற சிறிய நிலவுகள் இதற்கு முன்னதாகவும் தோன்றியுள்ளன. மேலும், பல சிறுகோள்கள் கவனிக்கப்படாமல் போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. சில சிறுகோள்கள் மீண்டும் மீண்டும் பூமியின் சுற்றுப்பாதைக்கு வருகின்றன. ‘2022 NX1’ என்ற சிறுகோள் 1981-இல் சிறிய நிலவாக மாறியது. 2022-இல் மீண்டும் அது தோன்றியது. எனவே, இம்முறை நீங்கள் சிறிய நிலவைப் பார்க்கமுடியாவிட்டால் கவலைப்பட வேண்டாம். விஞ்ஞானிகள் ‘2024 PT5’ எனும் இந்தச் சிறுகோள் 2055-இல் மீண்டும் பூமியின் சுற்றுப்பாதைக்குத் திரும்பும் என்று கணித்துள்ளனர். "இந்தச் சிறுகோளின் கண்டுப்பிடிப்பு, நமது சூரியக் குடும்பத்தில் நாம் கண்டுபிடிக்காதது இன்னும் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பிரதிபலிக்கிறது,” என்கிறார் முனைவர் மில்லார்ட். "நாம் கண்டுபிடிக்காத பல்லாயிரக்கணக்கான வானியல் அற்புதங்கள் உள்ளன, எனவே நம் இரவு வானத்தைத் தொடர்ந்து கண்காணித்து இந்த வான்பொருட்கள் அனைத்தையும் கண்டுபிடிப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக் காட்டுகிறது என்று நினைக்கிறேன்," என்கிறார் முனைவர் மில்லார்ட். https://www.bbc.com/tamil/articles/cn4zg37dj4no
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
அவர் கைவிட்டாலும் அவரைச் சூழ உள்ள நிலமை விடவிடாதே! இளமையில் சமஸ்டியை விரும்பிய முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க அதிகாரம் கிடைத்ததும் தலைகீழாக மாறினாரே! அப்பா யாழில் பல பூனைக் குட்டிகள் இருக்குதோ அண்ணை?!
-
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் 492 பேர் பலி - பதிலடியாக ஹெஸ்பொலா 200 ராக்கெட்டுகள் வீச்சு
லெபனான் மற்றொரு காஸாவாக மாறுகிறதா? இஸ்ரேலிய தாக்குதலின் நோக்கம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரிமி போவன் பதவி, சர்வதேச விவகாரங்கள் ஆசிரியர், பிபிசி நியூஸ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் ஹெஸ்பொலா மீதான தாக்குதலால் இஸ்ரேல் தலைவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். வாக்கி-டாக்கி மற்றும் பேஜர் வெடிப்பில் தொடங்கிய இத்தாக்குதல், தற்போது தீவிரமான வான்வழித் தாக்குதல்களாக உருவெடுத்துள்ளது. கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 23) நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் அதற்குப் பாராட்டு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “இன்று (செப்டம்பர் 23) நடந்தது மிகப்பெரிய சாதனை. ஹெஸ்பொலா உருவானதிலிருந்து இந்த வாரம் அதற்கு மிக மோசமான வாரமாக அமைந்தது. அதையே இந்தத் தாக்குதலின் முடிவுகள் உணர்த்துகின்றன,” என்றார். அவர் மேலும் கூறுகையில், “வான்வழித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் அழிக்கப்பட்டன,” என்றார். இந்நிலையில், இஸ்ரேலியத் தாக்குதல்களில் 50 குழந்தைகள் உட்பட 550 பேர் உயிரிழந்ததாக லெபனான் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த 2006-இல் இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையே ஒரு மாதமாக நீடித்த போரில் லெபனானில் உயிரிழந்தவர்களில் கிட்டத்தட்ட பாதியாகும். லெபனான் எப்படி வேறுபட்டது? இத்தகைய தீவிரமான நடவடிக்கைகள் மூலமாக தங்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஹெஸ்பொலாவை கட்டாயப்படுத்த முடியும் என இஸ்ரேல் நம்புகிறது. ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் இரானில் உள்ள அவரது கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்கள், எதிர்ப்பின் விலை மிக அதிகம் என்று முடிவு செய்யும் அளவுக்கு இஸ்ரேல் பாதிப்புகளை ஏற்படுத்த விரும்புகிறது. இஸ்ரேல் தலைவர்களுக்கும் ராணுவத் தளபதிகளுக்கும் வெற்றி அவசியமாக இருக்கிறது. காஸாவில் ஓராண்டாக நடைபெற்று வரும் போர் சிக்கலானதாக உள்ளது. ஹமாஸ் குழுவினர் சுரங்கப்பாதைகளிலிருந்து வெளிவந்து, இஸ்ரேல் படையினரை கொல்கின்றனர், காயம் ஏற்படுத்துகின்றனர். இஸ்ரேல் பணயக்கைதிகளை ஹமாஸ் இன்னும் விடுவிக்கவில்லை. கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் இஸ்ரேலை ஆச்சர்யப்படுத்தியது. அதற்கு முன்பு, இஸ்ரேலியர்கள் ஹமாஸை பெரிய அச்சுறுத்தலாக கருதாததால், அது அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தியது. ஆனால், லெபனான் வேறுபட்டது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை, மற்றும் மொசாட் உளவு முகமை 2006-இல் போர் நடைபெற்றதிலிருந்து ஹெஸ்பொலா மீது போர் தொடுக்கத் தயாராகிவருகிறது. தற்போது நடைபெறும் தாக்குதல் ஹெஸ்பொலாவிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தங்கள் இலக்கை அடைய உதவும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் ஏவுவதை ஹெஸ்பொலா நிறுத்த வேண்டும் என நெதன்யாகு விரும்புகிறார். எல்லையிலிருந்து ஹெஸ்பொலாவைத் திருப்பி அனுப்ப விரும்புவதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. மேலும், இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ராணுவத் தளங்களை அழிக்கவும் இஸ்ரேல் ராணுவம் விரும்புகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செப்டம்பர் 23 அன்று இஸ்ரேல் லெபனானில் தாக்குதல் நடத்தியது மற்றொரு காஸாவா? லெபனானில் கடந்த வாரம் நடந்த சம்பவங்கள், ஓராண்டுக்கு முன்னர் நடந்த சம்பவங்களை நினைவூட்டின. காஸாவில் தாக்குதல் நடைபெறும் இடங்களிலிருந்து வெளியேறுமாறு எச்சரித்தது போன்று தற்போதும் இஸ்ரேல் எச்சரித்தது. குடிமக்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுவதாக ஹமாஸ் மீது சுமத்திய குற்றச்சாட்டையே தற்போது ஹெஸ்பொலா மீதும் இஸ்ரேல் சுமத்துகிறது. இந்த எச்சரிக்கையை இஸ்ரேல் முறையாக வழங்கவில்லை எனவும் குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற போதிய நேரம் வழங்கவில்லை என்றும் இஸ்ரேலின் எதிரிகளும் விமர்சகர்களும் கூறுகின்றனர். ஒரு நாட்டின் குடிமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், ராணுவ பலத்தை கண்மூடித்தனமாக உபயோகிக்கக் கூடாது எனவும் போர் விதிகள் கூறுகின்றன. ஹெஸ்பொலாவின் சில தாக்குதல்களில் இஸ்ரேலில் உள்ள குடியிருப்புப் பகுதிகளும் குறிவைக்கப்பட்டன. இது குடிமக்களைப் பாதுகாப்பதற்கான விதிமுறைகள மீறுவதாக இருந்தது. ஹெஸ்பொலா இஸ்ரேல் ராணுவத்தையும் குறிவைத்தது. இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஹெஸ்பொலாவை பயங்கரவாத அமைப்பாகக் கருதுகின்றன. தங்களது ராணுவம் போர் விதிமுறைகளைக் கடைபிடிப்பதாக இஸ்ரேல் வலியுறுத்திக் கூறுகிறது. ஆனால், காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக உலகின் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. எல்லையில் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளதால், இப்பிரச்னை இன்னும் தீவிரமாகியுள்ளது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பேஜர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் ஹெஸ்பொலா அமைப்பினர் பேஜர் தாக்குதல்கள் உணர்த்துவது என்ன? சமீபத்திய பேஜர் தாக்குதலை எடுத்துக்கொள்வோம். ஹெஸ்பொலாவைச் சேர்ந்தவர்களது பேஜர்களைக் குறிவைப்பதாக இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால், பேஜர்கள் வெடிக்கும்போது அருகே யார் இருப்பார்கள் என்பது இஸ்ரேலுக்குத் தெரியவில்லை. அதனால்தான் வீடுகளில் இருந்த குழந்தைகள், கடைகள், மற்றும் பொது இடங்களில் இருந்த மக்கள் ஆகியோர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர். ஹெஸ்பொலா படையினர் மற்றும் பொதுமக்களுக்கிடையே வித்தியாசத்தை உணராது இஸ்ரேல் கொடிய தாக்குதலை நடத்துவதாகவும் இது போரின் விதிகளுக்கு எதிரானது என்றும் பிரபல வழக்கறிஞர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். ஹெஸ்பொலா மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான மோதல், 1980-களில் துவங்கியது. ஆனால், சமீபத்திய எல்லை போர் 2023-ஆம் ஆண்டு, அக்டோபர் 7-ஆம் தேதிக்குப் பின்னர் துவங்கியது. ஹமாஸுக்கு ஆதரவாகக் கட்டுப்படுத்தப்பட்ட, ஆனால் தினசரித் தாக்குதலுக்கு ஹசன் நஸ்ரல்லா உத்தரவிட்டதால், இஸ்ரேல் ராணுவம் சிக்கல்களை எதிர்கொண்டது. இதனால், எல்லைப்பகுதியில் வசிக்கும் சுமார் 60,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலின் போர் விமானம் கடந்த காலப் படையெடுப்புகள் சமீபத்திய தாக்குதல்களின் தாக்கத்தை 1967-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த தாக்குதல்களுடன் சில இஸ்ரேலிய ஊடகங்கள் தொடர்புப்படுத்துகின்றன. 1967-இல் இஸ்ரேல் எகிப்து மீது திடீரென தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் எகிப்து வான் படை மோசமாக பாதிக்கப்பட்டது. அதன் விமானங்கள் அழிக்கப்பட்டன. இஸ்ரேல், அடுத்த ஆறு நாட்களில், எகிப்து, சிரியா மற்றும் ஜோர்டானை தோற்கடித்தது. இந்த வெற்றி தற்போதைய நெருக்கடிக்கு வடிவம் கொடுத்துள்ளது. அதன்பின் இஸ்ரேல் மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம், காஸா முனை மற்றும் கோலன் குன்றுகளை ஆக்கிரமித்தது. இது சரியான ஒப்பீடு அல்ல. லெபனான் மற்றும் ஹெஸ்பொலாவுடனான போர் இரண்டும் வெவ்வேறானவை. இஸ்ரேல் கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளது. ஆனால், இன்றுவரை ஹெஸ்பொலாவின் தாக்கும் திறனை தடுத்து நிறுத்தவில்லை. இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலாவுடனான கடந்த காலப் போர்களில் இருதரப்பிலும் உறுதியான வெற்றி இல்லை. சமீபத்திய போரிலும் அப்படித்தான் இருக்கும். எனினும், இஸ்ரேல், அதன் உளவு முகமைகள் மற்றும் ராணுவம் ஆகியவை கடந்த வாரத் தாக்குதல்களால் திருப்தியடைந்துள்ளன. ஹெஸ்பொலா தோற்கடிக்கப்பட்டு, எல்லையிலிருந்து பின்வாங்கி, இஸ்ரேல் மீதான சண்டையை நிறுத்தும் என்ற அனுமானம் அல்லது ஒரு சூதாட்டத்தின் அடிப்படையிலேயே இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நடத்துகிறது. இப்பிரச்னையை உற்றுநோக்கும் பலரும் ஹெஸ்பொலா சண்டையை நிறுத்தாது என நம்புகின்றனர். இஸ்ரேல் உடனான சண்டையே ஹெஸ்பொலாவின் இருப்புக்கு முக்கிய காரணமாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செவ்வாய்கிழமை வடக்கு இஸ்ரேலில் பறந்த இஸ்ரேலிய ஜெட் ஹெஸ்பொலா பணியாவிட்டால் என்ன நடக்கும்? ஹெஸ்பொலா இதை நிறுத்தாவிட்டால் போருக்கான வாய்ப்பை இஸ்ரேல் இன்னும் விரிவாக்கும். மற்றொரு புறம், ஹெஸ்பொலா வடக்கு இஸ்ரேலில் தங்கள் தாக்குதல்கள் மூலம் இஸ்ரேல் மக்களை மீண்டும் அப்பகுதிக்கு திரும்பிவருவதை அனுமதிக்காது. அப்போது, தரைவழி மூலம் தாக்குதல் நடத்துவது குறித்து நெதன்யாகு ராணுவம் முடிவுசெய்யும். ஒருவேளை, இஸ்ரேல் ராணுவம் அதன் ஒருபகுதியை கூட கைப்பற்றலாம். இதற்கு முன்பும் லெபனானில் இஸ்ரேல் நுழைந்துள்ளது. கடந்த 1982-ம் ஆண்டில் இஸ்ரேலுக்குள் பாலத்தீன தாக்குதல் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு, இஸ்ரேல் படைகள் பெய்ரூட் வரை சென்றது. பின்னர் இஸ்ரேலின் லெபனான் கூட்டாளிகள் பெய்ரூட்டின் சப்ரா மற்றும் ஷாதிலா அகதிகள் முகாம்களில் பாலத்தீன மக்களை படுகொலை செய்தனர். இந்த நடவடிக்கை பரவலாக விமர்சிக்கப்பட்டதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் பின்வாங்க வேண்டியிருந்தது. லெபனான் எல்லைக்கு அருகே உள்ள பகுதியின் பெரும்பரப்பை 1990-ம் ஆண்டு வரை இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமித்தது. தற்போது இஸ்ரேல் ராணுவத்தில் ஜெனரல்களாக உள்ளவர்கள் அப்போது இளம் வீரர்களாக இருந்தனர். அவர்கள் ஹெஸ்பொலாவுடன் கடுமையான சண்டையில் ஈடுபட்டனர். அப்போதைய இஸ்ரேல் பிரதமர் எஹுட் பராக் 2000-ம் ஆண்டில் ராணுவத்தை அங்கிருந்து திரும்ப பெற முடிவு செய்தார். அப்பகுதியில் நீடித்திருப்பது இஸ்ரேலுக்கு நல்லதல்ல என்றும் இதற்காக அதிக எண்ணிக்கையிலான இஸ்ரேல் வீரர்கள் தங்கள் உயிர்களை இழப்பதாகவும் கருதினார். கடந்த 2006-ம் ஆண்டு இஸ்ரேலிய துருப்புகள் அதிகம் இருந்த எல்லைப் பகுதியை ஹெஸ்பொலா தாக்கியது. இஸ்ரேல் வீரர்கள் பலர் இதில் இறந்தனர், சிலர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். போர் முடிவடைந்த பின்னர், இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் என தான் முன்பே அறிந்திருந்தால் இந்த சண்டையை அனுமதித்திருக்க மாட்டேன் என நஸ்ரல்லா கூறியிருந்தார். அதன்பின், அப்போதைய இஸ்ரேல் பிரதமர் எமுட் அல்மெர்ட் போரை அறிவித்தார். இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதல்களை தங்களின் வான்படை மூலம் தடுத்து நிறுத்த முடியும் என முதலில் இஸ்ரேல் நம்பியது. ஆனால், அது நடக்காத போது, டேங்க்குகளும் படையினரும் நிலைநிறுத்தப்பட்டனர். அந்த போர் லெபனான் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியது. ஆனால், போரின் கடைசி நாளில் ஹெஸ்பொலா இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது. ஹெஸ்பொலாவின் பலம் காஸாவைக் கடப்பதை விட, சரமாரியான ராக்கெட்டுகளின் மத்தியில் லெபனானைக் கடப்பது ஒரு பெரிய ராணுவ சவாலாக இருக்கும் என்பதை இஸ்ரேலிய தளபதிகள் அறிவார்கள். ஹெஸ்பொலாவும் 2006 முதல் திட்டங்களை வகுத்து வருகிறது. அவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் சண்டையிடுவார்கள். தெற்கு லெபனானின் மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் நிலைமைகள் ஹெஸ்பொலாவுக்கு சாதகமாக இருக்கும். அதன் மலைப்பாங்கான நிலப்பரப்பு கொரில்லா உத்திக்கு ஏற்றதாக உள்ளது. காஸாவில் ஹமாஸின் அனைத்து சுரங்கப்பாதைகளியும் இஸ்ரேலால் அழிக்க முடியவில்லை. தெற்கு லெபனானின் எல்லைப் பகுதிகளில், ஹெஸ்பொலா கடந்த 18 ஆண்டுகளாக திடமான பாறைகளின்வழி சுரங்கப்பாதைகளை அமைத்து வருகிறது. ஹெஸ்பொலா இரானால் வழங்கப்பட்ட ஒரு வலிமையான ஆயுதக் களஞ்சியத்தைக் கொண்டுள்ளது. காஸாவில் உள்ள ஹமாஸ் போலல்லாமல், சிரியா வழியாக ஆயுதங்களை மீண்டும் அவற்றுக்கு வழங்கமுடியும். வாஷிங்டன் டிசியில் உள்ள சிந்தனை மையமான ஸ்டிராட்டஜிக் அண்ட் இண்டர்நேஷனல் ஸ்டடீஸ் மையம், ஹெஸ்பொலாவிடம் 30,000 பேர் செயலில் இருப்பதாகவும் 20,000 பேர் தயார்நிலையிலும் உள்ளதாக தெரிவிக்கிறது. இவர்களுள் பெரும்பாலானோர் தரைப்படையின் சிறிய பிரிவுகளாக பயிற்சி பெற்றுள்ளனர். மேலும், பலருக்கு போரில் நல்ல அனுபவம் உள்ளது. இந்த மக்கள் அசாத் ஆட்சிக்கு ஆதரவாக சிரியாவில் சண்டையிட்டுள்ளனர். ஹெஸ்பொலாவிடம் 1.2 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் இருப்பதாக பெரும்பாலான மதிப்பீடுகள் கூறுகின்றன. பல இஸ்ரேலிய நகரங்களை சேதப்படுத்தும் ஆயுதங்களும் இதில் அடங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்தாண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா தாக்குதல் நிகழ்த்திவருகிறது. இதனால் கிர்யோட் ஷ்மோனா போன்ற வடக்கு இஸ்ரேலில் உள்ள பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் இஸ்ரேலிய விமானப்படை காஸாவிற்கு செய்ததை லெபனானுக்கு செய்து விடுமோ என்று பயந்து, மொத்த நகரங்களையும் இடிபாடுகளாக்கி ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்றுவிடுமோ என்ற அச்சத்தில், ஹெஸ்பொலா அந்த அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தாது என்று இஸ்ரேல் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம். லெபனான் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை இரான் விரும்பவில்லை. இரான் தனது அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தைக் கருத்தில் கொண்டு இந்த ஆயுதங்களை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புகிறது. இது மற்றொரு சூதாட்டம். இந்த ஆயுதங்களை இஸ்ரேல் அழிக்கும் முன் ஹெஸ்பொலா அவற்றை பயன்படுத்த நினைக்கலாம். காஸாவில் நடந்து வரும் தாக்குதல்கள் மற்றும் மேற்குக் கரையில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு மத்தியில் இஸ்ரேல் லெபனானுக்குள் நுழைந்தால், அது மூன்றாவது போர்முனையைத் திறக்கும். இஸ்ரேலிய வீரர்கள் உந்துதல் பெற்றவர்களாகவும், நன்கு பயிற்சி பெற்றவர்களாகவும், ஆயுதம் ஏந்தியவர்களாகவும் இருக்கலாம், ஆனால் அவர்கள் ஒரு வருடப் போரினால் சோர்ந்து போயிருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த சில தினங்களாக ஆயிரக்கணக்கிலான வான்வழி தாக்குதல்களை லெபனானில் இஸ்ரேல் நடத்தியுள்ளது அமைதியான தீர்வை அடைவதில் உள்ள சவால்கள் அமெரிக்கா தலைமையிலான இஸ்ரேலின் நட்பு நாடுகள், ஹெஸ்பொலாவுடனான இஸ்ரேலின் போரை அதிகரிக்க விரும்பவில்லை. இந்த நாடுகளும் லெபனானுக்குள் நுழைவதற்கு ஆதரவாக இல்லை. ராஜதந்திர வழிமுறைகள் மூலம் மட்டுமே எல்லைகளைப் பாதுகாக்க முடியும், குடிமக்கள் நாடு திரும்ப முடியும் என்று இந்த நாடுகள் வலியுறுத்துகின்றன. 2006-இல் நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஐ.நா பாதுகாப்பு தீர்மானம் 1701-இன் அடிப்படையில் அமெரிக்கத் தூதுவர் ஒருவர் ஒப்பந்தம் ஒன்றை தயாரித்துள்ளார். ஆனால், காஸாவில் போர் நிறுத்தம் இல்லாததால், ராஜதந்திர ரீதியான அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன. காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்படும்போதுதான் ஹெஸ்பொலாவும் தாக்குதலை நிறுத்தும் என்கிறார் நஸ்ரல்லா. தற்போது, இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், பாலத்தீனக் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும், காஸாவில் போர்நிறுத்தம் செய்வதற்குமான உடன்படிக்கைக்கு இஸ்ரேலும் ஹமாஸும் உடன்படவில்லை. ஏற்கனவே பொருளாதாரச் சவால்களை எதிர்நோக்கும் லெபனானின் சாமானிய குடிமக்களின் வேதனை, இஸ்ரேலின் தாக்குதல்களால் மேலும் அதிகரித்துள்ளது. எல்லையில் இருபுறமும் அச்சம் நிலவுகிறது. ஹெஸ்பொலா கடந்த ஆண்டை விட அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது என்பது இஸ்ரேலியர்களுக்கும் தெரியும். ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுத்து எல்லையில் இருந்து ஹெஸ்பொலாவை பின்னுக்குத் தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று இஸ்ரேல் நம்புகிறது. ஆனால் இஸ்ரேல், திறம்பட ஆயுதம் ஏந்திய, சினம் கொண்ட படைகளை எதிர்கொள்கிறது. ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய பின்னர் கடந்த ஒரு வருடத்தில் ஏற்பட்டுள்ள மிக ஆபத்தான நெருக்கடி இதுவாகும். தற்போது நிலைமை மோசமடைவதைத் தடுக்க யாராலும் முடியாது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyl1y0vgzeo
-
அநுரகுமாரவை ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் மூலம் இலங்கை மக்கள் புதிய வரலாற்றை எழுதியுள்ளனர் - சீன தூதுவர்
26 SEP, 2024 | 05:19 PM இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்புகள் இலங்கை இறைமை கௌரவம் பாதுகாப்பு அபிவிருத்தி ஆகியவற்றை பாதுகாப்பதற்கு உதவும் என இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங் தெரிவித்துள்ளார். சீன மக்கள் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டு 75 வருடங்களாகியுள்ளதை குறிக்கும் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றவேளை அந்த நிகழ்வில் சீன தூதுவர் இதனை தெரிவித்துள்ளார். இரு நாடுகளிற்கும் இடையிலான நெருக்கமான ஆழமான ஒத்துழைப்பு காணப்பட்டால் இலங்கையால் தனது இறைமை கௌரவம் பாதுகாப்பு அபிவிருத்தி ஆகியவற்றை அதிகளவிற்கு பாதுகாக்க முடியும் என்பதையும், இலங்கையால் பிராந்திய சர்வதேச விவகாரங்களில் மேலும் அதிகளவு பங்களிப்பு செய்ய முடியும் என்பதையும் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஆற்றியுள்ள முதலாவது உரையில் சீன தூதுவர் இலங்கை மக்கள் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளனர். அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் மூலம் புதிய வரலாற்றை எழுதுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். சீனா மற்றும் பிற நட்புநாடுகளின் ஆதரவு உதவியுடனும் ஜனாதிபதியின் வலுவான தலைமைத்துவம் இலங்கையின் விடாமுயற்சி புத்திசாலித்தனம் வீரம் நிறைந்த மக்கள் மூலமும் இலங்கை நிச்சயமாக அனைத்து ஆபத்துகளையும் சவால்களையும் வெற்றிகொள்ளும் என கருதுவதாக சீன தூதுவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194861
-
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் - மீண்டும் அமைச்சர் ஆவாரா?
பட மூலாதாரம்,TWITTER/V_SENTHILBALAJI/ 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் முன்னாள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிபதி அபய் ஓகா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு இன்று (வியாழன், செப்டம்பர் 26) ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். நீண்ட காலமாக ஜாமீன் வழங்கப்படாமல் அவர் சிறையில் இருப்பதால் மனித உரிமைகளை கருத்தில் கொண்டு அவர் விடுவிக்கப்பட்டிருப்பதாக செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவு கிடைத்த பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கூறுகையில், “15 மாதங்களுக்கும் மேலாக விசாரணைக் குற்றவாளியாக இருந்து வருவதால் அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்றும் நிபந்தனைகள் போடப்பட்டுள்ளன” என்றார். மேலும் அவர் “அமைச்சராக பொறுப்பேற்பதற்கு சட்ட ரீதியாக தடை ஏதும் இல்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார். “உச்சநீதிமன்றம் சமீப காலமாகவே ஒன்றிய அரசால் தொடுக்கப்பட்ட அமலாக்கத்துறை வழக்குகளில், பலரை சிறையில் வைத்து ஜாமீன் வழங்காமல் இருக்க வேண்டும் என்று கூறுவதை அடக்குமுறை சட்டமாக பார்க்கிறது,” என்று அவர் அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா ஆகியோரின் வழக்குகளை குறிப்பிட்டு பேசினார். முதல்வர் வரவேற்பு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், சகோதரர் செந்தில் பாலாஜியை வரவேற்கிறேன் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “அமலாக்கத்துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. முன்னிலும் உரம் பெற்றவராய் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன், உன் தியாகம் பெரிது, உறுதி அதனினும் பெரிது” என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார். வழக்கின் பின்னணி என்ன? தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். 2014-ஆம் ஆண்டில் போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர், இளநிலை உதவியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆள் சேர்க்கை நடப்பதற்கான அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில் ஆள்சேர்ப்பு நடைபெற்றது. இந்தப் பணி நியமனங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட துறை அதிகாரிகள் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்திருந்தனர். காவல்துறை உரிய விசாரணை நடத்தவில்லை எனக்கூறி சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர். 2018-ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்து கழக தொழில்நுட்ப ஊழியரான அருள்மணி என்பவர் போக்குவரத்து கழகத்தில் வேலைகளைப் பெற்றுத்தர பலரிடம் லஞ்சம் பெற்றப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது புகார் அளித்திருந்தார். வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் ஆட்சேர்ப்பு பட்டியல் வந்தபோது தங்களின் பெயர் வராததால் அதிருப்தியடைந்து புகார் அளித்துள்ளனர். முதல் கட்ட புகார்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சுமத்தப்படவில்லை. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் சேர்த்து லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2018-ஆம் ஆண்டு இந்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன் விசாரணை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பட மூலாதாரம்,TNDIPR படக்குறிப்பு, ஒரு ஒன்றிய கவுன்சிலராக தி.மு.கவில் தன் அரசியல் பயணத்தைத் துவங்கிய மீண்டும் திமுகவிலேயே இணைந்து ஒரு முழுச் சுற்றை முடித்தவர் செந்தில் பாலாஜி இந்த நிலையில் 2021-ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுகவில் இணைந்திருந்த செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை அமைச்சர் பதவி தரப்பட்டது. இந்நிலையில், தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2021ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, செந்தில் பாலாஜி மீதான குற்றவியல் வழக்குகளை நிறுத்திவைத்து உத்தரவிட்டது. மனுவில் குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் சாட்சியங்கள் 13 பேரும் சமரசத்தை எட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால் இந்த வழக்கின் விசாரணை நிறுத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டது. இதற்கிடையே, இந்த வழக்கில் பணமோசடி நடைபெற்றதாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்கு வரும்படி அழைப்பாணை அனுப்பியிருந்தது. அதை எதிர்த்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை அழைப்பாணையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. அதேசமயம், செந்தில் பாலாஜி மீதான முந்தைய வழக்குகளில் புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கு கடந்து வந்த பாதை மே 2021 - திமுக ஆட்சிக்கு வந்த பிறகு செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றார். 2022 - அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு மே 2023 - அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை 2 மாதத்தில் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு ஜூன் 2023 - செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு முறை பிணை கேட்டு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே அவருக்கு நீதிமன்ற காவல் 58 முறை நீட்டிக்கப்பட்டது ஜூன் 2023 - செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து அவருடைய துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு தெரிவித்தார். அதனை திமுக ஏற்கவில்லை. ஜூன், 2023 – செந்தில் பாலாஜிக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஜூன் 2023 - செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டார். நள்ளிரவே அந்த உத்தரவை ஆளுநர் வாபஸ் பெற்றார். ஆகஸ்ட், 2023 - செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. ஆகஸ்ட், 2023 : செந்தில் பாலாஜி மீதான பண பரிமாற்ற குற்றங்கள் குறித்து அமலாக்கத்துறை 3,000-பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அக்டோபர், 2023 - செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதால் வழக்கில் சாட்சியங்களை கலைக்கக்கூடும் எனக்கூறி ஜாமீன் மறுக்கப்பட்டது. பிப்ரவரி 2024 - இலாகா இல்லாத அமைச்சராக பொறுப்பு வகித்த செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பிப்ரவரி 2024 - சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஆகஸ்ட் 2024 - வழக்கு விசாரணையில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது. செப்டம்பர் 2024 - செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பட மூலாதாரம்,TNDIPR படக்குறிப்பு, 2018-ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி யார் இந்த செந்தில் பாலாஜி? ஒரு ஒன்றிய கவுன்சிலராக தி.மு.கவில் தன் அரசியல் பயணத்தைத் துவங்கி மீண்டும் திமுகவிலேயே இணைந்து ஒரு முழுச் சுற்றை முடித்தவர் செந்தில் பாலாஜி. கரூரில் உள்ள ராமேஸ்வரப் பட்டியைச் சேர்ந்த வி.செந்தில் குமார் கரூர் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை வணிகவியல் படிக்கும்போது, படிப்பை பாதியில் விட்டுவிட்டு அரசியலில் குதித்தவர். 1996ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், 2000வது ஆண்டில் அ.தி.மு.கவில் சேர்ந்தார். பிறகு தனது பெயரை செந்தில் பாலாஜி என மாற்றிக்கொண்டார். அதற்குப் பிறகு அமைச்சராகும்வரை அ.தி.மு.க-வில் அவரது பயணம் தொடர்ந்து மேல் நோக்கியதாகவே இருந்தது. கட்சியில் சேர்ந்த ஆறு மாதங்களிலேயே மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளரானார். 2004ல் மாவட்ட மாணவரணி செயலாளரானவர் 2006ல் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு, சட்டமன்றத்திற்குள்ளும் நுழைந்தார். 2007ல் கரூர் மாவட்டச் செயலாளராகவும் ஆனார். இதற்குப் பிறகு, ஜெயலலிதா மட்டுமல்ல, சசிகலா குடும்பத்தினருடனும் மிகவும் செல்வாக்கான நபராக உருவெடுத்தார் செந்தில் பாலாஜி. இதையடுத்து 2011லும் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவியை வழங்கினார் ஜெயலலிதா. 2015ஆம் ஆண்டுவரை பல முறை அமைச்சரவையை ஜெயலலிதா மாற்றியபோதும், செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கப்படவில்லை. கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக தனது செல்வாக்கை வளர்த்துவந்தார் செந்தில் பாலாஜி. அ.தி.மு.க-வில் இருந்த முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி தி.மு.கவுக்குச் சென்றார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தம்பிதுரைக்கு பல இடங்களில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புக்குப் பின்னால், செந்தில் பாலாஜியின் கரம் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. கட்சி சசிகலா - ஓ.பி.எஸ் என இரு தரப்பாக இரண்டாகப் பிளவுபட்டபோது, சசிகலா பிரிவுக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் அந்த நேரத்திலும்கூட, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக ஒரு அதிரடியைக் கிளப்பினார் செந்தில் பாலாஜி. அந்த நேரத்திலேயே அதாவது 2017 ஏப்ரலிலேயே அவர் தி.மு.கவுக்கு வரப்போவதாக செய்திகள் அடிபட்டன. அவர் மேலும் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களையும் தி.மு.கவுக்கு அழைத்துவருவார் என்றும் பேசப்பட்டது. ஆனால், எடப்பாடி தரப்பிலிருந்து டிடிவி தினகரன் ஒதுக்கிவைக்கப்பட்டபோது அவர் பக்கம் சென்றார் செந்தில் பாலாஜி. ஆனால், டிடிவி தரப்பிலிருந்து அவருக்கு பல்வேறு விதங்களில் தொடர்ச்சியாக அழுத்தங்கள் இருந்த நிலையிலேயே அவர் தி.மு.க பக்கம் சென்றார் என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு முக்கியத் தேர்தல்களில் தனது பலத்தை அவர் நிரூபித்திருக்கிறார். 2018-ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி. https://www.bbc.com/tamil/articles/c0qzgn0lxe3o
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டவர்களிற்கு இராணுவ புலனாய்வு பிரிவினர் நிதி உதவி?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டவர்களிற்கு இராணுவ புலனாய்வு பிரிவினர் நிதி உதவி? முழுமையான விசாரணைகள் இடம்பெறவேண்டும் என சிஐடியின் முன்னாள் இயக்குநர் வேண்டுகோள் Published By: RAJEEBAN 26 SEP, 2024 | 01:16 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் அதன் பின்னர் இடம்பெற்ற விசாரணைகள் தொடர்பிலும் சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகர அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். பத்திரிகையாளர் சுனந்த தேசப்பிரியவின் நூல் வெளியீட்டின் பின்னர் உரையாற்றுகையில் அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார். விசாரணைகளின் முக்கிய தருணங்களின் போது இராணுவ புலனாய்வாளர்கள் சிஐடியினரை தவறாக வழிநடத்தினார்கள் என தெரிவித்துள்ள அவர் புலனாய்வு அமைப்புகளிற்கும் தாக்குதல்களை மேற்கொண்டவர்களிற்கும் இடையில் நிதி தொடர்புகள் காணப்பட்டிருக்கலாம் என பாரதூரமான கரிசனையை வெளியிட்டுள்ளார். 2019 ஏப்பிரல் 21ம் திகதி 250 பேரை பலிகொண்ட தாக்குதல் தனித்த ஒரு சம்பவம் அல்ல, நன்கு திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட ஒன்று, என தெரிவித்துள்ள அவர் விசாரணைகளின் போது இராணுவபுலானய்வு பிரிவினர் இரண்டு தடவை விசாரணையாளர்களை தவறாக வழிநடத்த முயன்றனர் என தெரிவித்துள்ளார். தெகிவளையில் உயிரிழந்த தற்கொலை குண்டுதாரி தொடர்பாக இராணுவ புலனாய்வு பிரிவினர் தவறாக வழிநடத்தினார்கள் என தெரிவித்துள்ள ஷானி அபயசேகர அந்த தற்கொலை குண்டுதாரிக்கு இராணுவ புலனாய்வாளர்களுடன் தொடர்பிருக்கலாம் இது மறைக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். இரண்டாவதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் இடம்பெற்ற வவுணதீவு படுகொலைகளை( 2018) விடுதலைப்புலிகளே மேற்கொண்டனர் என இராணுவபுலனாய்வு பிரிவினர் குற்றம்சாட்டினார்கள், தங்களின் கதையை வலுப்படுத்துவதற்காக இராணுவ சீருடையை அங்கு மறைத்து வைத்தனர் என சிஐடியின் முன்னாள் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஏப்பிரல் 25 ம் திகதி இந்த படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை சிஐடியினர் ஆயுதங்களுடன் கைதுசெய்த பின்னரே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமான ஜஹ்ரான் ஹாசிம் குழுவினர் இந்த கொலையுடன் தொடர்புபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது என அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரியொருவர் தாக்குதலை மேற்கொண்ட குழுவினருக்கு தாக்குதலிற்கு இலங்கையின் புலனாய்வு பிரிவினர் நிதி உதவி செய்தனர் என தெரிவித்திருந்தார், இது குறித்து முழுமையாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஷானி அபயசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுணதீவு கொலையை விடுதலைப்புலிகளே மேற்கொண்டனர் என நான்கு தடவை இராணுவ புலனாய்வாளர்கள் தவறாக வழிநடத்தினார்கள், என தெரிவித்துள்ள ஷானி அபயசேகர இதற்கான நோக்கம் என்னவென சந்தேகம் வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/194837
-
சுவிட்சர்லாந்து: தற்கொலை சாதனம் பயன்படுத்தி இறந்த பெண், விசாரணை வளையத்தில் முக்கிய நபர்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சார்கோ சாதனத்தின் சமீபத்திய மாடல் - ஜூலை மாதம் சூரிச்சில் காட்சிப்படுத்தப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் இருக்கலாம்.) சுவிட்சர்லாந்தில் ஒரு பெண் `தற்கொலை பாட்’ என்ற சாதனத்தைப் பயன்படுத்தித் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பலரை காவல்துறை கைது செய்துள்ளது. திங்களன்று சார்கோ (Sarco) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தற்கொலை சாதனத்தைப் (suicide pod) பயன்படுத்தி ஒரு பெண் இறந்துள்ளார். அதைத் தொடர்ந்து, ஷாஃப்ஹவுசென் (Schaffhausen) பகுதியில் உள்ள போலீசார், தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் அதற்கு உதவி செய்தல் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் "பல நபர்களை" கைது செய்ததாகத் தெரிவித்தனர். சுவிட்சர்லாந்தில் சில நிபந்தைகளின் கீழ் `அசிஸ்டெட் மரணம்’ (assisted dying) சட்டப்பூர்வமானது என்றாலும், அதில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. சார்கோ நிறுவனத்தின் இந்தத் தற்கொலை சாதனம் பெரும் பிரச்னைகளை எதிர்கொண்டது. காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திலிருந்து ஒரு தற்கொலை சாதனம் மற்றும் பெண்ணின் சடலத்தை மீட்டனர். சர்ச்சைக்குரிய இந்தத் தற்கொலை சாதனத்தைத் தயாரித்த நிறுவனம், ``மருத்துவ மேற்பார்வையின்றி, தனது சொந்த வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பும் நபரால் இந்தச் சாதனத்தை இயக்கி மரணிக்க முடியும்” என்கிறது. காவல்துறையின் கூற்றுப்படி, ஜெர்மன் எல்லைக்கு அருகிலுள்ள சுவிட்சர்லாந்தின் தொலைதூரப் பகுதியான மெரிஷாவுசென் பகுதியில் திங்கள்கிழமை ஒரு வீட்டில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சார்கோ சாதனத்தைப் பயன்படுத்தி நடந்த தற்கொலை குறித்து ஒரு சட்ட நிறுவனம் தகவல் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. மேலும் இறந்தவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. சுயவிருப்ப இறப்பை (Assisted dying) ஆதரிக்கும் ஒரு குழு, கடந்த ஜூலை மாதம், சார்கோ சாதனத்துக்கு ஆதரவு தெரிவித்தது. இந்த ஆண்டு முதல் முறையாக அது பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்த்ததாக அந்தக் குழு கூறியது. இந்த கையடக்க சாதனத்தை 3D மூலம் அச்சிட்டு வீட்டிலேயே கட்டமைக்க முடியும். எனவே இது கருணைக் கொலைக்கான அணுகலை அதிகரிக்கிறது என்றும், மருந்துகள் அல்லது மருத்துவ நிபுணர்களைச் சாராமல் சுயவிருப்ப இறப்பை நிகழ்த்த உதவுவதாகவும் இதை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், சுவிட்சர்லாந்திலும் இந்தச் சாதனம் கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. இந்தச் சாதனத்தின் நவீன வடிவமைப்பு தற்கொலையைத் தூண்டுவதாக விமர்சகர்கள் அஞ்சுகின்றனர். மருத்துவ மேற்பார்வையின்றி அதை இயக்க முடியும் என்பது அதிக கவலைக்குரியது என்கின்றனர். பிரிட்டனிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் சுயவிருப்ப இறப்பு (Assisted dying) சட்டவிரோதமானது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள சுவிட்சர்லாந்திற்கு சென்றுள்ளனர். அங்கு நிபந்தனைகளின் கீழ் சுயவிருப்ப இறப்பு சட்டப்பூர்வமானது. பட மூலாதாரம்,GETTY IMAGES முக்கியத் தகவல் மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும். மேலும் இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணிநேர சேவை) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (224 மணிநேர சேவை) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019 (13 மொழிகளில் சேவைகள் கிடைக்கின்றன) மனித நடத்தை மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம் - 9868396824, 9868396841, 011-22574820 தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் – 080 – 26995000 - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78dj2nejzxo
-
நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது - மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு தெரிவிப்பு
26 SEP, 2024 | 04:33 PM நாட்டில் நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு தெரிவித்தனர். மக்களுக்குத் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி அடுத்த வருடத்திற்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இந்த செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி என்ற வகையில் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (26) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார். ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் கடனுதவிகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டங்களைத் துரிதப்படுத்துவதன் அவசியத்தை தெளிவுபடுத்திய ஜனாதிபதி வெளிநாட்டு உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் வழங்க ஒரு குழுவை நியமிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் வெளிநாட்டு உதவியின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை விரைவுபடுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கிராமிய அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்தி கிராமத்திற்கு பணம் கிடைக்கும் வகையிலான முறைமையொன்றை ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி இதன் ஊடாக பொருளாதாரத்தை விரைவாக பலப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார். இந்தச் செயற்பாடுகளில் அதிகாரிகளுக்கு பெரும் பங்கு இருப்பதாகவும்அதற்கு அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மிகவும் அத்தியாவசியமானது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால உள்ளிட்ட அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர் https://www.virakesari.lk/article/194857
-
உங்கள் தொலை பேசி, கை தவறி கீழே விழுந்தால்... முதலில் நீங்கள் சொல்லும் வார்த்தை என்ன?
இந்தப் பக்குவம் ஒரு வயதுக்கு பின்னர் கட்டாயம் மதுப்பழக்கம் இருப்போருக்கு வரவேணும் அண்ணை. வாழ்த்துகள்.
-
லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகின்றது - இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரி
26 SEP, 2024 | 10:33 AM லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகிவருவதாக அந்த நாட்டின் முப்படை பிரதானி மேஜர் ஜெனரல் ஹெர்ஜி ஹலேவி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மேற்கொண்டுள்ள வான்வெளிதாக்குதல்கள் ஹெஸ்புல்லா அமைப்பின் உட்கட்டமைப்பினை அழிப்பதை நோக்கமாக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் இந்த தாக்குதல்கள் இஸ்ரேல் எல்லையை கடந்து தாக்குதல்களை மேற்கொள்வதற்கு உதவும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் வடபகுதியில் படையினர் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் நாங்கள் ஒரு இராணுவநடவடிக்கைக்கு தயாராகிவருகின்றோம். இதன் அர்த்தம் என்னவென்றால் உங்களின் இராணுவகாலணிகள் எதிரியின் பகுதிக்குள் நுழையும், என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் பொதுமக்கள் மீதான தாக்குதல்களிற்காக ஹெஸ்புல்லா அமைப்பு இராணுவ நோக்கங்களிற்காக தயார்படுத்தியுள்ள கிராமங்களிற்குள் உங்கள் இராணுவ காலணிகள் நுழையும் என இஸ்ரேலின் உயர் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194823
-
இலங்கை: ராஜபக்ஸ ஆட்சியை வீழ்த்திய போராட்டக்காரர்கள் அநுரவிடம் எதிர்பார்ப்பது என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றார் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு நகரின் காலி முகத்திடலில் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இந்த ஆட்சி மாற்றத்தை எப்படி பார்க்கின்றனர்? புதிய ஜனாதிபயிடமிருந்து அவர்கள் எதிர்பார்ப்பது என்ன? இலங்கையில் புதிய அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் மாறி மாறி இரண்டு தரப்பினர் ஆட்சிப் பீடத்தில் ஏறுவதை மாற்றியமைக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தி இம்முறை ஆட்சிப் பீடத்தில் ஏறியுள்ளது. இலங்கையில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக நாட்டின் 8-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சியானது, பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து 2022-ஆம் ஆண்டில் மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் வீழ்த்தப்பட்டது. ஊழல், மோசடி, வீண்விரயத்தைத் தவிர்க்கும் வகையிலான ஆட்சியொன்று அவசியம் என மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த ஊழல், மோசடி, வீண்விரயம் ஆகியவற்றைத் தவிர்க்கும் வகையிலான பரப்புரைகளைத் தொடர்ச்சியாக தேசிய மக்கள் சக்தி முன்வைத்து வந்தது. இதனூடாக, நடைபெற்று முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கிய அநுர குமார திஸாநாயக்கவை மக்கள் தேர்வு செய்திருக்கின்றனர். இந்நிலையில், ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட அநுர குமார திஸாநாயக்கவின் முதற்கட்டச் செயல்பாடுகள் குறித்து மக்கள் போராட்டம் நடத்திய மக்கள் என்ன சொல்கின்றனர்? இதனை அறிந்துகொள்ள, மக்களின் எதிர்பார்ப்பு, இந்த ஆட்சி மாற்றத்தின் ஊடாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா, அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்று காலி முகத்திடல் போராட்டத்தை நடத்திய போராட்டக்காரர்களிடம் பிபிசி தமிழ் வினவியது. 'இனப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு' மக்கள் போராட்ட முன்னணியின் தேசியச் செயற்குழு உறுப்பினரான ராஜ்குமார் ரஜீவ்காந்த் பிபிசி தமிழிடம் கூறுகையில், “அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மீது எங்களுக்கு விமர்சனங்கள் இருந்தன. இந்த நாட்டிலுள்ள இனப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வுதான் எங்களின் எதிர்பார்ப்பு. “இதற்காகத் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தாண்டி சிந்திக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கின்றது,” என்றார். அதேபோல, தென்னிலங்கை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை, குறிப்பாக ஊழல் தடுப்பு தொடர்பான தங்களது கோரிக்கைகளை புதிய ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் என ராஜ்குமார் கூறுகிறார். “அடிமட்ட மக்களின் பிரச்னைகள் முன்நோக்கிக் கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும்," என்றும் அவர் கூறுகின்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டம் (கோப்புப்படம்) படக்குறிப்பு, மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினரான ராஜ்குமார் ரஜீவ்காந்த் 'நான்கு தேசிய இனங்கள்’ மேலும் பேசிய அவர், “சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எஃப்) இருந்து 16 தடவை நாங்கள் சென்று திரும்பியிருக்கின்றோம். ஐ.எம்.எஃப்-இடம் இருந்து விலக வேண்டும். இறைமை, பிணை முறியாளர்களின் நலனைக் காப்பதற்காகவே ஐ.எம்.எஃப் நடவடிக்கைகளுக்கு முன்பிருந்த அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கியிருந்தது. அவர்களுக்கு திருப்பிச் செலுத்தும் கடனில் மக்களின் வரிப்பணம் இருக்கின்றது. மக்களுக்கு இந்த சுமையைச் சுமத்த வேண்டாம் எனக் கூறுகின்றோம்,” என்றார். மலையகத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம் மக்கள், சிங்கள மக்கள் என்ற நான்கு தேசிய இனங்களும் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார். “அதேபோன்று, மதச்சார்பின்மையைக் கடைபிடிக்க வேண்டும். மதமற்ற நாடு அல்ல. மதச்சார்பின்மையைக் கடைபிடிக்க வேண்டும். அரசியலமைப்பில் இருக்கின்ற 9-வது சரத்தை நாங்கள் முற்றாக எதிர்க்கின்றோம்" எனவும் ராஜ்குமார் ரஜீவ்காந்த் வலியுறுத்தினார். 'பொறுத்திருந்து பார்க்க வேண்டும்' தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியானது, நல்லாட்சியா இல்லையா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட டானிஸ் அலி தெரிவிக்கின்றார். ''இலங்கை அரசியலில் இதுவரை ஒரு தரப்புதான் ஆட்சி செய்தது. ஒரு குடும்பம்தான் ஆட்சி செய்தது. கொள்கை ரீதியில் நாங்கள் இடதுசாரி கொள்கையில் இல்லை. எனினும், இந்த நேரத்தில் மாற்றமொன்று தேவைப்பட்டது. "அந்த மாற்றம் கிடைத்துள்ளது. நாம் போராட்டம் செய்ததைப் போன்றே, தேசிய மக்கள் சக்தி மக்களோடு மக்களாக இருந்தே தேர்தல் பிரசாரத்தைச் செய்தது. இந்தப் பிரசாரத்திலேயே மக்கள் ஆட்சியை விரும்பிய மக்கள் வாக்களித்துள்ளனர். இது நல்லாட்சியா இல்லையா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்," என அவர் கூறுகின்றார். சிறுபான்மையினருக்கு தீர்வு கிடைக்குமா? காலி முகத்திடல் போராட்டத்தின் ஊடாகக் கோரிய விஷயங்கள், தற்போது ஆட்சிப் பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தி மூலம் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றதா என காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பிபிசி தமிழ் வினவியது. இந்தக் கேள்விக்கு காலி முகத்திடல் போராட்டத்தின் பின்னர் அந்தப் போராட்டக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சட்டத்தரணி சுஷ்திகா அருணலிங்கம் பிபிசி தமிழுக்கு பதிலளித்தார். “முறைமை மாற்றம், சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என நாங்கள் கேட்டோம். முறைமை மாற்றம் என்பது ஒரு நீண்ட கால விஷயம். இது ஒரு மாதத்தில் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை,” என்றார். குறிப்பாக, இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற தங்கள் வாக்குறுதியை அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக செய்யக்கூடிய ஒரு விஷயம் எனக் குறிப்பிட்ட அவர், அதனை புதிய ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் எனக் கூறினார். “பொருளாதார, அரசியல், கலாசார ரீதியான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அது இந்த ஒரு தேர்தலில் வந்துவிடும் என நாங்கள் நம்பவில்லை," என அவர் குறிப்பிடுகின்றார். பட மூலாதாரம்,SUSTHIKA ARULLINGAM படக்குறிப்பு, மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சட்டத்தரணி சுஷ்திகா அருணலிங்கம் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு? தமிழர் பிரச்னைக்கு இந்த ஆட்சியின் ஊடாகத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதா என மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்று குழு உறுப்பினர் சட்டத்தரணி சுஷ்திகா அருணலிங்கம் பிபிசி தமிழ் வினவியது. ''சிறுபான்மை மக்களின் உரிமை மற்றும் தேசிய இனப் பிரச்னைக்கான தீர்வு போன்ற விஷயங்கள் இருக்கின்றனவா என்று தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தைப் பார்த்தோம். அந்தக் கொள்கைப் பிரகடனத்தில் அதற்கான தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை. 13-வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவோம் என்றுகூட அதில் போடப்படவில்லை. “அதனால், இவர்களின் ஆட்சியில் சிறுபான்மை மக்களின் உரிமைப் போராட்டத்திற்கும், அரசியல் அபிலாஷைகளுக்கும் ஒரு தீர்வு வரும் என்றுகூட நான் நம்பவில்லை,” என்றார் அவர். இருந்தபோதிலும், முன்னைய காலங்களில் இருந்த அரசாங்கங்களைப் போன்று இனவாத ரீதியாகச் செயற்பட மாட்டார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். “கடந்த ஆட்சியாளர்களால் செய்யப்பட்ட சட்டவிரோதக் குடியேற்றம், பௌத்தமயமாக்கல் போன்றவற்றை இவர்கள் செய்ய மாட்டார்களா அல்லது தொடர்ச்சியாக இதனைச் செய்வார்களா என்பதைப் பார்த்தே ஒரு முடிவுக்கு வர வேண்டும்," என சுஷ்திகா அருணலிங்கம் தெரிவித்தார். புதிய அரசின் மீதான நம்பிக்கை காலி முகத்திடல் போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களால் எதிர்பார்த்த முறைமை மாற்றம் இந்த ஆட்சியில் கிடைத்துள்ளது என நம்புகின்றீர்களா என போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரரான தாஹா ஈன்ஸ்டீனிடம் பிபிசி தமிழ் வினவியது. "மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் எதிரொலி மற்றும் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அவருடைய காய் நகர்வு இருக்கின்றது. "அவர்கள் நியமிக்கின்ற அமைச்சுக்கள் மற்றும் அரச இயந்திரங்களில் பொறுப்பாளர்களைப் பார்க்கின்றபோது நம்பிக்கை வருகின்றது. இது சரியான பாதையில் செல்லும் அரசாங்கம் என்று நம்புகின்றோம்," என தாஹா ஈன்ஸ்டீன் தெரிவிக்கின்றார். படக்குறிப்பு, மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் என நம்புகிறார் தாஹா ஈன்ஸ்டீன் போராட்டக்காரர்களின் அடுத்த நடவடிக்கை? இலங்கை எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடியை அடுத்து 2022-ஆம் ஆண்டு நாட்டில் பாரிய போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தப் போராட்டங்களை அடுத்து, அப்போதைய ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிலையில், ரணில் விக்ரமசிங்க புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்ட நிலையில், நாடு எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடி வழமைக்குத் திரும்ப ஆரம்பித்தது. எனினும், இலங்கை அரசியல் கட்டமைப்பில் முறைமை மாற்றமொன்று அவசியம் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக வலுப்பெற்று வந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி மீதான நம்பிக்கை இலங்கை மக்கள் மீது வலுப் பெற்றது. ஊழல், மோசடி, வீண்விரயத்திற்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த தேசிய மக்கள் சக்தி மீதான நம்பிக்கை காரணமாக, இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக அநுர குமார திஸாநாயக்க தேர்வு செய்யப்பட்டார். காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டோரின் குழுவொன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் களமிறங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2m82p84n1o
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
பொதுத்தேர்தலை சிறந்த முறையில் நடத்த அரச துறையினரும், நாட்டு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழு Published By: VISHNU 26 SEP, 2024 | 03:58 AM (இராஜதுரை ஹஷான்) பொதுத்தேர்தல் குறித்து சுற்றறிக்கைகளை இன்று அல்லது நாளை வெளியிடுவோம். ஜனாதிபதித் தேர்தலை சிறந்த முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதை போன்று பொதுத்தேர்தலையும் நடத்துவதற்கு அரச துறைகளினதும், நாட்டு மக்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் புதன்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசியலமைப்பின் 70 உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதிக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கு அமைய மற்றும் 1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 10 ஆவது பிரிவின் விடயதானங்களுக்கு அமைய 9 ஆவது பாராளுமன்றம் நேற்று (நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ) கலைக்கப்பட்டது. பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளவர்கள் 2024.10.04 ஆம் திகதி முதல் 2024.10.11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் வேட்புமனுக்களை கையளிக்க முடியும். அதற்கமைய 2024.11.14 ஆம் திகதி வியாழக்கிழமை பொதுத்தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்தவும், 10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வை 2024.11. 21 ஆம் திகதி வியாழக்கிழமை நடத்துவதற்கும் தீர்மானித்து ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைய தேர்தல் பணிகளை முன்னெடுப்போம். ஜனாதிபதித் தேர்தலில் போது அரச சொத்துக்கள் பயன்பாடு தொடர்பில் வெளியிட்ட சுற்றறிக்கைகள் மற்றும் நிருபங்கள் பொதுத்தேர்தலுக்கும் ஏற்புடையதாக இருக்கும். பொதுத்தேர்தல் தொடர்பிலான சுற்றறிக்கைகளை இன்று அல்லது நாளை வெளியிடவுள்ளோம். 2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டத்துக்கு அமைவாகவே பொதுத்தேர்தல் நடத்தப்படும். பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 5 நாட்களுக்கு பின்னர் தேர்தல் செலவினங்கள் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவோம். ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமானதாகவும், நியாயமானதாகவும் நடத்தப்பட்டது. எவ்வித பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கு வழங்கிய ஒத்துழைப்பை பொதுத்தேர்தலுக்கும் வழங்குமாறு அரச துறைகளிடமும், நாட்டு மக்களிடமும் வலியுறுத்துகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/194813
-
இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஆதரவுகோரி பேரவையின் உறுப்புநாடுகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் சிவில் சமூகம் - ஒக்டோபர் மாதம் முதலாம் வாரத்தில் ஜெனிவா பயணம்!
25 SEP, 2024 | 05:51 PM (நா.தனுஜா) இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு, காலநீடிப்புச் செய்யப்பட்ட 51/1 தீர்மானத்தை மீண்டும் காலநீடிப்பு செய்யக்கோரி பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புடன் நிறைவேற்றவேண்டிய நிலை ஏற்படலாம் என்பதால், அதற்கான ஆதரவைக்கோரி உறுப்புநாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இலங்கையைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் சிலர் ஒக்டோபர் முதலாம் வாரத்தில் ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமானது. அன்றைய தினம் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் உரை மற்றும் மியன்மார் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை, அதன்மீதான விவாதம் என்பவற்றைத் தொடர்ந்து இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது. அதன்படி இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் என்பன தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றியதுடன் உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் இயங்கிவரும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் அவற்றின் அறிக்கைகளைச் சமர்ப்பித்தன. அவ்வறிக்கைகளில் இலங்கை தொடர்பான ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை மேலும் இருவருடங்களுக்கு நீடிக்கக்கூடியவகையில் அத்தீர்மானத்தைப் புதுப்பிக்குமாறு பேரவையிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, மாலாவி, வட மெசிடோனியா மற்றும் மொன்டெனிக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகளின் ஏற்பாட்டில் இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்புச் செய்வது குறித்தும், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் கடந்த வியாழக்கிழமை (19) பேரவையில் (பக்க அறையில்) ஆராயப்பட்டது. இதில் இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகள், உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களுடன் இலங்கையைச்சேர்ந்த செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சிலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் 'இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பிலான முதல் வரைபு குறித்தும், அதனை வாக்கெடுப்புடனோ அல்லது வாக்கெடுப்பின்றியோ நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடு குறித்தும் ஆராயப்பட்டது. இருப்பினும் அதன்பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றியீட்டி ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், மேற்குறிப்பிட்ட முதல் வரைபில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வரைபு இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டவுடன், அதனை வாக்கெடுப்பின்றி இணையனுசரணை வழங்கி நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உடன்படுமா என்ற சந்தேகம் நிலவுகின்றது. ஆகையினால் இப்பிரேரணையை நிறைவேற்றுவதற்கு பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடிய சாத்தியப்பாடு உயர்வாகக் காணப்படுவதனால், இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு உறுப்புநாடுகளின் ஆதரவைக்கோரி பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இலங்கையின் சிவில் சமூகப்பிரதிநிதிகள் சிலர் ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளனர். இதன்போது அவர்கள் இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகள், உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடாத்தவுள்ளனர். https://www.virakesari.lk/article/194788
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஆவணங்கள் அச்சிடும் பணி ஆரம்பம் பாராளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் அச்சிடும் பணி தொடங்கியுள்ளதாக அரச அச்சகர் கங்காணி கல்பனா லியனகே தெரிவித்தார். பாராளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான போதிய ஆவணங்கள் அரசாங்க அச்சகத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார். பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான அறிவிப்புகள், வர்த்தமானி அறிவித்தல் போன்றவற்றை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 25 மாவட்டங்களில் வேட்பு மனுக்கள் ஏற்கப்படுவதால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 25 வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட உள்ளன. https://thinakkural.lk/article/309954
-
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் 492 பேர் பலி - பதிலடியாக ஹெஸ்பொலா 200 ராக்கெட்டுகள் வீச்சு
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹெஸ்பொல்லா அமைப்பின் படைத்தளபதி உயிரிழப்பு லெபனானில் ஹெஸ்பொல்லா அமைப்பின் ஏவுகணை படைத்தளபதி வான் வெளி தாக்குதல் மூலம் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஒபரேஷன் நார்த்தன் ஆரோஸ் என்ற பெயரில் லெபனான் நாட்டில் உள்ள ஹெஸ்பொல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில், 492 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், நேற்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹெஸ்பொல்லா அமைப்பின் ஏவுகணை மற்றும் ராக்கெட் பிரிவின் படைத்தளபதி இப்ராஹிம் முகமது கபிசி உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. எனினும், ஹெஸ்பொல்லா அமைப்பின் மூத்த தலைவரான அலி கராக்கியை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியதாவும், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஹெஸ்பொல்லா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, இஸ்ரேலின் ஹைஃபா நகர் மீது ஹெஸ்பொல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்திய நிலையில், அந்த ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவத்தினர் வானிலேயே தடுத்து அழித்தனர். 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இஸ்ரேல் – ஹெஸ்பொல்லா இடையே பெரிய அளவில் மோதல் நடைபெற்று வருவதால், லெபனானின் தென் பகுதியில் உள்ள மக்கள் நாட்டின் மற்ற இடங்களுக்கு சாரை சாரையாக புலம் பெயர்ந்து வருகின்றனர். https://thinakkural.lk/article/309961