Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. மனைவியை சரமாரியாகக் தாக்கிய கணவன்! Feb 18, 2026 - 03:43 PM கணவனால் சரமாரியாகக் தாக்கப்பட்ட மனைவி படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாகர்கோவில் பகுதியில் நேற்று (17) இரவு 7.20 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆசிரியையான குறித்த பெண், வர்த்தக நிலையம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த கணவர், மனைவியின் தலை, வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் சரமாரியாகக் தாக்கியுள்ளார். தாக்குதலை நடத்திய பின்னர் கணவர் தப்பியோடியுள்ளார், எனினும் இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை சம்பத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmlrvh2eh0004356n6qsq4di6
  2. காயத்திலிருந்து 'விரைவில்' மீள ரிஷப் பண்ட் எடுத்து வரும் சிறப்பு சிகிச்சை என்ன? பட மூலாதாரம்,Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் மார்ச் இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக, இந்திய விக்கெட் கீப்பரும் பேட்டருமான ரிஷப் பண்ட், 'ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி' எனும் ஆக்சிஜன் சிகிச்சை எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் போது, ரிஷப் பண்ட்-க்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது ஒருவரின் தோளில் கைவைத்தபடி, ஒரு காலில் நடந்தவாறு அவர் மைதானத்தை விட்டு வெளியேறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதற்கு முன்னதாக, லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விக்கெட் கீப்பிங் செய்தபோது அவரது இடது கை விரலில் காயம் ஏற்பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தியின்படி, போட்டியின் போது அடுத்தடுத்து ஏற்பட்ட இந்தக் காயங்கள் மற்றும் ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதைக் கருத்தில் கொண்டு, ரிஷப் பண்ட் ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபியைத் தொடங்கியுள்ளார். ஐபிஎல் போட்டிகளுக்குத் திரும்புவதற்கு ரிஷப் பண்ட் நம்பியிருக்கும் இந்த சிகிச்சை எப்படிப்பட்டது? இது எவ்வளவு பயனுள்ளது மற்றும் எந்தச் சூழ்நிலைகளில் வழங்கப்படுகிறது? இது தொடர்பாக, பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் ட்ராமா சிகிச்சை மைய பேராசிரியர் டாக்டர் சௌரப் சிங்கிடம் பிபிசி பேசியது. ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை பட மூலாதாரம்,Getty Images ஹைப்பர்பேரிக் என்ற சொல், சாதாரண அளவை விட அதிகமான என்ற பொருள் கொண்ட 'ஹைப்பர்' மற்றும் அழுத்தம் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் 'பேரிக்' ஆகிய இரு சொற்களின் சேர்க்கையாகும். ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி, சாதாரண அளவை விட அதிகப்படியான ஆக்சிஜனை வழங்கி, உடல் நலம் தேறுவதை விரைவுபடுத்தும் ஒரு சிகிச்சை முறையாகும். அறிவியல் ரீதியாக, நமது வளிமண்டலத்தில் 78% நைட்ரஜன் மற்றும் 21% ஆக்சிஜன் உள்ளது. ஆனால், இதில் சிசிச்சை பெறும் நபருக்கு 100% சுத்தமான ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. இந்த ஆக்சிஜன் ஒரு சிறப்பு அழுத்த கேபினில் வழங்கப்படுகிறது, அங்கு காற்றின் அழுத்தம் சாதாரண நிலையை விட 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருக்கும். அழுத்தம் அதிகமாக இருக்கும்போது, சிசிச்சை பெறும் நபரின் நுரையீரல்கள் சாதாரண நிலையை விட மிக அதிகமான ஆக்சிஜனை உள்வாங்கிக்கொள்ள முடியும். இந்தக் கூடுதல் ஆக்சிஜன், ரத்தத்தின் வழியாக உடலில் காயம், புண் அல்லது தொற்று உள்ள பகுதிகளை சென்றடைகிறது. '' திசுக்கள் அல்லது காயமடைந்த பகுதிகள் அதிக ஆக்சிஜன் பெறுவதால் வேகமாக குணமடைகின்றன. இதன் மூலம் உடலில் புதிய செல்கள் உருவாகும் செயல்முறை மேலும் விரைவாகிறது.'' என்கிறார் சௌரப் சிங். மேற்கத்திய நாடுகளில் இது ஆரம்பத்தில் நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கே பயன்படுத்தப்பட்டது. "ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி தொடர்ந்து ஆராய்ச்சிக்கு உட்பட்டு வருகிறது. முன்னதாக ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே இருந்த இதன் பயன்பாடு, தற்போது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்காக மருத்துவர்களும் நோயாளிகளும் இந்தத் தெரபியைத் தேர்வு செய்யும் அளவில் மேம்பட்டுள்ளது" என்று தெரிவித்தார் சௌரப் சிங். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,2022 ஆம் ஆண்டு, ரிஷப் பண்ட் ஒரு சாலை விபத்தில் படுகாயமடைந்தார். எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? டாக்டர் சௌரப்பின் கூற்றுப்படி, இந்தத் தெரபி மிகவும் நல்ல பலன்களை வழங்கி வருகிறது. குறிப்பாக செல்கள் வேகமாக உருவாகி அழியும் பகுதிகளில், குணமடைய அதிக ஆக்சிஜன் தேவைப்படும் இடங்களில் இந்த சிகிச்சை சிறப்பாக செயல்படுகிறது என்று அவர் கூறுகிறார். "பார்வை இழப்பு, கதிர்வீச்சினால் ஏற்படும் திசு சேதம், கடுமையான ரத்த சோகை, தோல் ஒட்டுதல் அதாவது 'ஸ்கின் கிராஃப்டிங்' எனப்படும் உடலின் ஒரு பகுதியில் உள்ள தோலை நீக்கிவிட்டு மற்றொரு பகுதியின் தோலைப் பொருத்தும் முறை, பலத்த காயம், எலும்பு அல்லது தோலில் ஏற்படும் தீவிரத் தொற்றுகளுக்கும் இதன் மூலம் தீர்வு காணலாம்" என்று கூறுகிறார். "அதேபோல், தீக்காயங்களால் தோல் அல்லது திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு, 'ஆஸ்டியோமைலிடிஸ்' எனப்படும் எலும்பில் ஏற்படும் தீவிரத் தொற்று, கேட்கும் திறன் குறைபாடு ஏற்படும் பிரச்னைக்கும் தற்போது இந்த சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது," என்று டாக்டர் சௌரப் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இந்தச் சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்? இந்தியாவில் இந்த சிகிச்சையை வழங்கும் மையங்கள் அல்லது நிபுணர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சிகிச்சைக் கட்டணத்தைப் பொறுத்தவரை, அரசு மையங்களில் இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளதால், பனாரஸ் இந்து பல்கலைக்கழக மையத்தில் ஒரு அமர்வுக்கு நோயாளியிடமிருந்து 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.'' என்கிறார் சௌரப் சிங். அதே நேரத்தில், தனியார் மையங்களில் ஒரு அமர்வுக்கு 2,500 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அமர்வு எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது உங்கள் காயம் அல்லது உடல்நலப் பிரச்னையைப் பொறுத்தது. சராசரியாக ஒவ்வொரு அமர்வும் 45 நிமிடங்கள் முதல் ஒன்றரை மணி நேரம் வரை இருக்கும். அழகுக்கலையில் பயன்பாடு வயதான தோற்றத்தைக் குறைப்பதற்காகவும், முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதற்காகவும் ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி பயன்படுத்தப்படுவதாக இணையதளங்களில் பார்க்கமுடிகிறது. பல அழகு நிலையங்கள் இந்த வசதியை வழங்குகின்றன. இந்த சிகிச்சை உண்மையிலேயே பாதுகாப்பானதா? இந்தக் கேள்விக்கு பதிலளித்த டாக்டர் சௌரப், "உண்மையில், இந்தத் தெரபியை எடுத்துக்கொள்வதால் சருமம் இளமையாக மாறும் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி தற்போது அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறாத சில விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலர் இந்தச் சிகிச்சைக்குப் பிறகு தங்கள் முகம் பொலிவு பெற்றதாகக் கூறுகிறார்கள், ஆனால் அவை தனிப்பட்ட அனுபவங்களே தவிர, இதற்கான போதிய அறிவியல் சான்றுகள் இல்லை" என்று கூறுகிறார். விடாமுயற்சி ரிஷப் பண்ட் மற்றும் அவரைப் போன்ற மற்ற வீரர்கள் காயங்களிலிருந்து விரைவாக மீண்டு வர இந்த சிகிச்சைமுறையைப் பயன்படுத்தி வருகிறார்கள். 2022-ஆம் ஆண்டு ரிஷப் பண்ட் ஒரு மோசமான சாலை விபத்தில் சிக்கினார். அவருக்கு ஏற்பட்ட காயங்கள் மிகக் கடுமையானவை. பண்ட் 2024-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியது மட்டுமல்லாமல், மிகவும் அதிரடியாகத் தனது வருகையைப் பதிவு செய்தார். இருப்பினும், விளையாட்டின் போது அவருக்கு அவ்வப்போது ஏற்படும் காயங்களில் இருந்து வெளிவர அவர் ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபியை மேற்கொள்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg15gdjvx7o
  3. மீனவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்! Feb 18, 2026 - 05:39 PM இலங்கைக்கு தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் அதே பகுதியில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தொகுதியின் தாக்கம் காரணமாக, குறித்த கடல் பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதுடன், மணிக்கு (50-60) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், இதனால் கடல் பகுதிகள் கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியின் நகர்வுகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ச்சியான அவதானத்தை செலுத்தி வருவதால், இது தொடர்பாக திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மீனவ மற்றும் கடற்படை சமூகம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். https://adaderanatamil.lk/news/cmlrzmkx20002356nxrenk1dx
  4. ஆஸ்திரியாவில் மலையேற்றத்தின் போது காதலி மரணம் ; காதலனுக்கு எதிராக வழக்கு பதிவு Published By: Digital Desk 3 18 Feb, 2026 | 05:10 PM ஆஸ்திரியாவின் மிக உயர்ந்த மலைச்சிகரமான கிராஸ்க்ளோக்னரில் (3,798 மீ), கடந்த ஆண்டு குளிர்காலத்தில் தனது காதலியை கடும் குளிரில் தவிக்கவிட்டு உயிரிழக்கச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மலையேற்ற வீரர் மீதான விசாரணை வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் திகதி அதிகாலையில், 33 வயதுடைய பெண், கடும் பனிப்புயலில் சிக்கி உடல் உறைந்து உயிரிழந்தார். அவருடன் சென்ற 36 வயதுடைய காதலன், காதலி மிகவும் சோர்வடைந்த நிலையில் அவரை மலை உச்சியில் தனியே விட்டுவிட்டு உதவி தேடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்ப்ரூக் அரசாங்க தரப்பு சட்டதரணிகள் காதலன் மீது 'கடுமையான கவனக்குறைவால் நேரிட்ட கொலை' என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது 09 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அனுபவக் குறைவு: போதிய அனுபவமில்லாத காதலியை மிகக் கடினமான குளிர்கால மலையேற்றத்திற்கு அழைத்துச் சென்றது. காலதாமதம்: திட்டமிட்ட நேரத்தை விட 2 மணிநேரம் தாமதமாக மலையேற்றத்தைத் தொடங்கியது. தவறான காலணி: பாறைகளும் பனியும் நிறைந்த பகுதிக்கு, பனிச்சறுக்கு விளையாட்டில் பயன்படுத்தப்படும் மென்மையான 'Snowboard boots'-களை காதலி அணிய அனுமதித்தது. எச்சரிக்கையை மீறியது: மணிக்கு 74 கி.மீ வேகத்தில் காற்று வீசியபோதும், -20 டிகிரி செல்சியஸ் குளிரிலும் மலையேற்றத்தைத் தொடர்ந்தது. உதவியை மறுத்தது: இரவு 10:50 மணியளவில் உதவிக்கு வந்த பொலிஸ் ஹெலிகொப்டரை நோக்கி அவசர சமிக்ஞை எதையும் காட்டாமல் பயணத்தைத் தொடர்ந்தது. தொலைபேசி மௌனம்: பொலிஸார் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது தனது அலைபேசியை 'Silent' முறையில் வைத்தது. பாதுகாப்பின்மை: காதலியை விட்டுப் பிரிவதற்கு முன் அவருக்கு முறையான பாதுகாப்பு உடைகளையோ அல்லது அவசர காலப் போர்வைகளையோ வழங்கத் தவறியது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு, எதிர்காலத்தில் மலையேற்றத்தில் ஈடுபடும் கூட்டாளிகளுக்கு இடையிலான பொறுப்புணர்வை வரையறுக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்," என ஆஸ்திரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காதலன் தரப்பு சட்டதரணி, "இது ஒரு திட்டமிடப்படாத துயரமான விபத்து மட்டுமே. இருவரும் சரிசமமான அனுபவத்துடனும், முழு விருப்பத்துடனமே இந்த மலையேற்றத்தைத் ஆரம்பித்தனர்," என வாதிடுகிறார். https://www.virakesari.lk/article/238980
  5. Live 35th Match, Group A (D/N), Colombo (SSC), February 18, 2026, ICC Men's T20 World Cup Pakistan (14/20 ov) 121/3 Namibia Pakistan chose to bat. Current RR: 8.64 • Last 5 ov (RR): 44/2 (8.80) Live Forecast: PAK 188 போற போக்கில நமீபியா நாமம் போடுமோ?!🤣
  6. வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு அவசர மனிதாபிமான உதவி 18 Feb, 2026 | 03:20 PM CFLI நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் இயலாமையுடன் கூடிய பெண்களுக்கான அவசர மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் CFLI நிறுவனத்தின் அமுலாக்கத்தில் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகங்களிலும் தெரிவு செய்யப்பட்ட இயலாமையுடன் கூடிய 120 பெண் குடும்பங்களுக்கு தலா 35000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதன் முதல் நிகழ்வு கடந்த வருடம் 28.01.2025 இல் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கலாஞ்சலி டர்சன அருனசாந்த தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கனடா நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான உயர் ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தார். 1. வவுனியா வடக்கு நெடுங்கேணி – 40 இயலாமையுடன் கூடிய பெண்கள் 2. வவுனியா நகர் - 30 இயலாமையுடன் கூடிய பெண்கள் 3. வெண்கலச் செட்டிகுளம் – 30 இயலாமையுடன் கூடிய பெண்கள் 4. வவுனியா தெற்கு – 20 இயலாமையுடன் கூடிய பெண்கள் இயலாமையுடன் கூடிய 120 பெண் குடும்பங்கள் பயன் பெற்றனர். https://www.virakesari.lk/article/238956
  7. இரான் அருகே போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா - பிபிசி புலனாய்வு படக்குறிப்பு,உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டையும் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது அடுத்த மூன்று வாரங்களுக்குள் இப்பகுதிக்கு வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. கட்டுரை தகவல் ரிச்சர்ட் இர்வின்-பிரவுன், அலெக்ஸ் முர்ரே 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானுக்கு அருகே அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் நிலை கொண்டிருப்பதை செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது. இரானின் ராணுவத் திட்டம் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான அதன் ஒடுக்குமுறையைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஒரு தாக்குதல் குழுவை வழிநடத்தும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் எஃப்35 போர் விமானங்கள் உட்பட 90 விமானங்கள் மற்றும் 5,680 பணியாளர்களைக் கொண்டுள்ளது. இது ஜனவரி பிற்பகுதியில் வளைகுடா பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது, ஆனால் இப்போது வரை செயற்கைக்கோள் படங்களில் காணப்படவில்லை. இது இரானில் இருந்து சுமார் 700 கிமீ தொலைவில் ஓமன் கடற்கரையில் உள்ளது. உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டையும் அமெரிக்கா மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது அடுத்த மூன்று வாரங்களுக்குள் இப்பகுதிக்கு வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தற்போதைய ராணுவக் கட்டமைப்பைப் பற்றி நாம் அறிந்தவற்றோடு ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலின் வருகையும் இணைகிறது. அங்கு அமெரிக்க போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களின் இருப்பு அதிகரித்துள்ளதை பிபிசி வெரிஃபை பின்தொடர்ந்துள்ளது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,பிப்ரவரியில் அமெரிக்க ராணுவம் அரபிக் கடலில் யுஎஸ்எஸ் ஆப்ரஹாம் லிங்கன் விமானந்தாங்கி போர்க்கப்பலின் படத்தை வெளியிட்டது. மத்திய கிழக்கிற்கு அமெரிக்கா எத்தகைய ராணுவ உபகரணங்களை நகர்த்தியுள்ளது? ஐரோப்பிய சென்டினல்-2 செயற்கைக்கோள்களில் இருந்து பொதுவில் கிடைக்கும் படங்கள், ஓமன் கடற்கரையிலிருந்து சுமார் 150 மைல் (240 கிமீ) தொலைவில் அரபிக்கடலில் ஆபிரகாம் லிங்கன் கப்பல் இருப்பதைக் காட்டுகின்றன. ஜனவரி மாதம் இப்பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டதிலிருந்து இது தென்படவில்லை. ஆனால் செயற்கைக்கோள் கண்காணிப்பு குறைவாக உள்ள திறந்த கடற்பரப்பை இது கடந்து கொண்டிருந்தது. நிலத்தில் உள்ள ராணுவ தளவாடங்கள் மிகவும் தெளிவாகத் தெரிவதோடு, செயற்கைக்கோள்களில் அடிக்கடி படம்பிடிக்கப்படுகின்றன. அதாவது, மத்திய கிழக்கில் 12 அமெரிக்க கப்பல்களை இப்போது செயற்கைக்கோள் படங்கள் மூலம் நாங்கள் கண்காணித்துள்ளோம். அணுசக்தியால் இயங்கும் நிமிட்ஸ்-வகை விமானந்தாங்கி கப்பலான ஆபிரகாம் லிங்கன் ஒரு தாக்குதல் குழுவை வழிநடத்துகிறது. மேலும் நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்ட கப்பல்கள் மற்றும் வளைகுடாவில் உள்ள பஹ்ரைன் கடற்படை தளத்தில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள மூன்று சிறப்புப் போர்க்கப்பல்களும் இதில் அடங்கும். இப்பகுதியில் அமெரிக்க போர் விமானங்களின் வருகையையும் நாங்கள் பின்தொடர்ந்து வருகிறோம். ஜோர்டானில் உள்ள முவாஃபக் சால்டி ராணுவத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள எஃப்-15 மற்றும் இஏ-18 போர் விமானங்களின் அதிகரிப்பையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து மத்திய கிழக்கை நோக்கி நகரும் அமெரிக்க சரக்கு விமானங்கள், எரிபொருள் நிரப்பும் மற்றும் தகவல் தொடர்பு விமானங்களின் அதிகரிப்பையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். இரான் எவ்வாறு பதிலளித்துள்ளது? பிப்ரவரி 6-ஆம் தேதி அரபிக்கடலில் அமெரிக்க மத்திய கட்டளை மையம் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலுடன் பிற போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள் மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள் சூழ்ந்திருக்கும் படங்களை வெளியிட்டது. இது ராணுவ வலிமையை வெளிப்படுத்தும் நடவடிக்கையாக கருதப்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் இரானும் தனது சொந்தப் படை பலத்தைக் காட்டியுள்ளது. திங்களன்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), ஓமன் மற்றும் இரானுக்கு இடையே வளைகுடாவில் அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணையில் ஒத்திகையைத் தொடங்கியது. இதில், ஒரு கப்பலில் இருந்து ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு முன்பாக ஐஆர்ஜிசி தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது பாக்பூர் ஆய்வு செய்ததாக ஐஆர்ஜிசி-யுடன் தொடர்புடைய தஸ்நிம் செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்த நீரிணை உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாகவும், முக்கியமான எண்ணெய் போக்குவரத்து மையமாகவும் கருதப்படுகிறது. இரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவு உட்பட, உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே செல்கிறது. இரானின் சமீபத்திய ராணுவ நடவடிக்கைகளைக் காட்டும் அந்த அறிக்கையில், பாக்பூர் அந்தத் தீவின் மீது ஹெலிகாப்டரில் பறப்பதைக் காண முடிந்தது. பட மூலாதாரம்,Getty Images வெனிசுவேலா மற்றும் ஆபரேஷன் மிட்நைட் ஹேமருடன் தற்போதைய நடவடிக்கை எவ்வாறு ஒப்பிடப்படுகிறது? கடந்த ஜனவரியில் முன்னாள் வெனிவேசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்வதற்கு முன்னரோ அல்லது கடந்த ஜூன் மாதம் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்திய நடவடிக்கையின் போதோ இருந்ததை விட, மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா தற்போது மேற்கொண்டு வரும் ராணுவ முன்னெடுப்புகள், "அதிக தீவிரமும் நிலைத்தன்மையும்" கொண்டிருப்பதாக ராணுவப் புலனாய்வு நிபுணர் ஜஸ்டின் க்ரம்ப் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார். கடந்த ஆண்டு வெனிசுவேலா மற்றும் இரானில் அமெரிக்கா தனது பலத்தை முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகளில் நிலைநிறுத்தியது. வெனிசுவேலா மீதான தாக்குதல்களுக்கு முன்னதாக அமெரிக்கா யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டை கரீபியன் கடலுக்கு அனுப்பியது, அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் நாங்கள் கண்காணித்த எட்டு போர்க்கப்பல்களில் இதுவும் ஒன்று. இருப்பினும், அது குறைவான விமானங்களையே பயன்படுத்தியது, ஏனெனில் அது அமெரிக்க நிலப்பரப்பில் உள்ள சுற்றியுள்ள அமெரிக்க தளங்களில் இருந்தோ அல்லது பியூர்டோ ரிக்கோவில் உள்ள அதன் தளத்திலிருந்தோ எளிதாக போர் விமானங்களை அனுப்ப முடியும். அமெரிக்கா கரீபியன் பகுதிக்குள் நீர்நில தாக்குதல் கப்பல்களையும் நிலைநிறுத்தியது. இவை மதுரோ பிடிபட்டபோது பார்த்தது போல ஹெலிகாப்டர் நடவடிக்கைகளுக்கான ஏவுதளங்களாகப் பயன்படுத்தப்படலாம். ஆனால் வெனிசுவேலாவின் ராணுவம் பொதுவாகத் தன்னைத் தற்காத்துக் கொள்ளவோ அல்லது அமெரிக்காவிற்கு எதிராகப் பதிலடி கொடுக்கவோ குறைந்த திறன் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' மூலம் அமெரிக்கா இரானைத் தாக்கியபோது, வெனிசுவேலாவை விட மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தைக் கொண்ட ஒரு நாட்டை அது தாக்கியது. இரானின் ராணுவம் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க தளங்களைத் தாக்கும் திறன் கொண்டது. 'மிட்நைட் ஹேமர்' நடவடிக்கையின் போது, அமெரிக்கா அந்தப் பிராந்தியத்தில் இரண்டு விமானந்தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் குழுக்களையும், மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல்களில் போர்க் கப்பல்களையும், வளைகுடாவில் மூன்று போர் கப்பல்களையும் கொண்டிருந்தது. இது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு விமானப் படைகளையும் எரிபொருள் நிரப்பும் விமானங்களையும் நகர்த்தியது, ஆனால் ஃபோர்டோ, இஸ்பஹான் மற்றும் நடான்ஸ் அணுசக்தி தளங்களைத் தாக்கப் பயன்படுத்தப்பட்ட பி2 குண்டுவீச்சு விமானங்கள் உண்மையில் மிசௌரியில் உள்ள அமெரிக்கத் தளங்களிலிருந்தே புறப்பட்டன. அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களின் அதிகரிப்பு, அத்துடன் அந்தப் பிராந்தியத்தில் உள்ள எட்டு விமானப்படை தளங்கள் ஆகியவை, இரானின் எந்தவொரு பதிலடியையும் "பயனற்றதாக" மாற்றும் நோக்கத்துடன், ஒரு நாளைக்கு சுமார் 800 வான்வழித் தாக்குதல்களை "மிகவும் தீவிரமான மற்றும் நீடித்த விகிதத்தில்" நடத்த அனுமதிக்கும் என்று ஆபத்து மற்றும் நுண்ணறிவு நிறுவனமான சிபிலைனின் தலைமை நிர்வாகி க்ரம்ப் கூறினார். "நாம் காண்பது வெறும் தாக்குதல் தயாரிப்பு மட்டுமல்ல, மாறாக அளவை கூட்டவோ குறைக்கவோ கூடிய ஒரு விரிவான தடுப்பு நடவடிக்கையாகும்," என்று அவர் கூறினார். "இதன் பொருள், கடந்த ஆண்டு வெனிசுவேலா அல்லது மிட்நைட் ஹேமர் ஆகியவற்றுக்காக செய்யப்பட்ட முன்தயாரிப்புகளை விட இது அதிக தீவிரமும் நிலைத்தன்மையும் கொண்டது. இது ஒரு மோதலைத் தக்கவைத்து, அந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கச் சொத்துகள் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து சாத்தியமான பதிலடிகளையும் எதிர்கொள்ளவும் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் விவரித்தார். கூடுதல் அறிக்கை : பார்பரா மெட்ஸ்லர், கோன்சே ஹபிபியாசாத், தாமஸ் கோப்லேண்ட், யி மா - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2lrjl1gnrgo
  8. ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு MARKS AND SPENCER PLC இனால் நிதி நன்கொடை 18 Feb, 2026 | 12:25 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு MARKS AND SPENCER PLC இனால் 4,684,139.50 ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை MARKS AND SPENCER PLC இன் பொது முகாமையாளர் ரிபாட் அர்மான் (Rifat Arman) மற்றும் பிராந்திய முகாமையாளர் ஷப்ரி அஹர் Shabry Aher ஆகியோர் செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர். MARKS AND SPENCER PLC இனைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/238941
  9. வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு; மட்டக்களப்பில் அதிக்கூடிய மழை வீழ்ச்சி பதிவு Published By: Digital Desk 3 18 Feb, 2026 | 12:15 PM மட்டக்களப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) அதிகபட்சமாக 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, நுவரெலியாவில் மிகக் குறைந்த வெப்பநிலை 13.4°C ஆக பதிவாகியுள்ளது. நாட்டின் தென்கிழக்கே, தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தொடர்ந்து நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், காலி முதல் அம்பாந்தோட்டை வரையிலான கரையோரப் பகுதிகளிலும், மட்டக்களப்பு வழியாக திருகோணமலை வரையிலான கரையோரப் பகுதிகளிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழவுள்ள பிற கடல் பகுதிகளில், மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். களுத்துறை முதல் புத்தளம் மற்றும் மன்னார் வரையிலான கரையோரப் பகுதிகளிலும், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையிலான கரையோரப் பகுதிகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இந்தக் கரையோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும், அதேவேளை நாட்டை சூழவுள்ள பிற கடல் பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், மேலும் கடல் நிலைமைகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/238940
  10. வடமாகாணத்தில் விதிமீறும் பேருந்து சாரதிகள் குறித்து முறைப்பாடு செய்யலாம் ; போக்குவரத்து அதிகார சபை 18 Feb, 2026 | 12:37 PM வடமாகாணத்தில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 071 909 0900 என்ற இலக்கத்துக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியாச் சாலையைச் சேர்ந்த சாரதி ஒருவர், பேருந்தைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்தியமை தொடர்பில் எமக்கு ஆதாரத்துடன் முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இச்செயற்பாடு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது. அதற்கமைய, சம்பந்தப்பட்ட சாரதிக்கு 3 நாட்கள் கட்டாய 'மீட்டல் பயிற்சி' வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எனக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. தனியார் பேருந்தாகவோ அல்லது அரச பேருந்தாகவோ இருப்பினும், பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறிச் செயற்படும் சாரதிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சாரதிகள் வாகனம் செலுத்தும்போது கைப்பேசி பேசுதல், அதிவேகமாகச் செலுத்துதல் அல்லது கவனயீனமாகச் செயற்படுதல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால், அதனை ஒளிப்படம் அல்லது காணொலியாக எடுத்து 071 909 0900 என்ற இலக்கத்துக்கு வட்ஸ்அப் ஊடாக ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க முடியும். அவ்வாறு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மீது எவ்வித பாரபட்சமுமின்றித் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/238938
  11. சிரியாவிலுள்ள ஐ.எஸ் முகாமிலிருந்து நாடு திரும்ப முயற்சிக்கும் பிரஜைக்கு அவுஸ்திரேலியா தடை Published By: Digital Desk 3 18 Feb, 2026 | 02:38 PM ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவர், சிரியாவிலிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்குத் தடை விதித்துள்ளது. சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள அல்-ரோஜ் தடுப்பு முகாமிலிருந்து 34 அவுஸ்திரேலியப் பிரஜைகள் (11 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள்) இந்த வாரம் நாடு திரும்ப இருந்தனர். அவர்கள் டமஸ்கஸ் வழியாக அவுஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், தொழிநுட்ப மற்றும் நடைமுறைச் சிக்கல்களைக் காரணம் காட்டி சிரிய அதிகாரிகள் அவர்களை மீண்டும் முகாமிற்கே திருப்பி அனுப்பினர். இந்தச் சம்பவம் தொடர்பாக அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று புதன்கிழமை (18) ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் மிகவும் காட்டமாகப் பதிலளித்தார்: "தவறு செய்தவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்தித்தே ஆகவேண்டும். நமது வாழ்க்கை முறையையும் ஜனநாயகத்தையும் அழிக்க முற்பட்ட ஒரு கொடூரமான சித்தாந்தத்துடன் இணைய வேண்டும் என்று அவர்களாகவே விரும்பி வெளிநாடு சென்றனர். அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் எந்தவித உதவியும் செய்யாது." பாதுகாப்பு முகமைகளின் ஆலோசனையின் பேரில், அதிக ஆபத்தானவராகக் கருதப்படும் ஒருவருக்கு மட்டும் 02 ஆண்டுகள் வரை அவுஸ்திரேலியாவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய 33 பேருக்கு அத்தகைய சட்டரீதியான தகுதிகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 34 பேரில் 23 சிறுவர்கள் உள்ளனர். அவர்களின் பெற்றோரின் முடிவுகளால் குழந்தைகள் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது எனப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நாடு திரும்புபவர்கள் செல்லுபடியாகும் அவுஸ்திரேலிய கடவுச்சீட்டுகளை (Passports) வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சட்டங்களின்படி பிரஜைகளைத் தடுப்பது கடினம் என்றாலும், அரசாங்கம் அவர்களுக்கு எவ்வித நிதி அல்லது பயண உதவிகளையும் வழங்கப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது. சிரியாவின் முகாம்களில் இன்னும் 2,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் (முக்கியமாக பெண்கள் மற்றும் சிறுவர்கள்) தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளும் தங்களது பிரஜைகளைத் திரும்பப் பெற இதே போன்ற தயக்கத்தையே காட்டி வருகின்றன. https://www.virakesari.lk/article/238953
  12. மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி Feb 18, 2026 - 01:55 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மழை தொடர்ந்து பெய்வதற்கதன அறிகுறிகள் காணப்படுதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் தென்கிழக்கே நிலவிய சுழற்சியானது தாழ்வுப்பகுதியாகி அதே இடத்தில் நீடிப்பதன் காரணமாக தொடர்ச்சியாக மழையினை எதிர்பார்க்கமுடியும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மட்டக்களப்பு நகரத்தில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது. அத்துடன் தொடர்ந்து மழை பெய்துவருவதன் காரணமாக மட்டக்களப்பின் சில வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் நிலைமை காணப்படுகின்றது. இதேநேரம், தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அறுவடைகளை முன்னெடுத்த விவசாயிகள் நெல்லை பாதுகாப்பதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதேநேரம் பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பிரதான குளமான உன்னிச்சைகுளத்தின் 3 வான் கதவுகள், 2 அடிகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணி வரையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளியில் 104.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 111 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 52 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமமம் பகுதியில் 63.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 70 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடா பகுதியில் 80 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரி பகுதியில் 39.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://adaderanatamil.lk/news/cmlrrnzbe00062a6eh6hrrlej
  13. இலங்கை தெற்காசியாவில் முதன்முதலாக சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்த உலகளாவிய சாசனத்தில் இணைகிறது Published By: Vishnu 18 Feb, 2026 | 05:27 AM சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் இணையும் முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை மாறவுள்ளது. சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் (Global Charter on Children’s Care Reform) இணைவதற்கான உத்தியோகபூர்வ விருப்பத்தை இலங்கை செவ்வாய்க்கிழமை (17) கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் வைத்து வெளிப்படுத்தியது. இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், நீதித்துறை அமைச்சரும் (லோர்ட் சான்சலர்) பிரதிப் பிரதமருமான உயர் கௌரவ டேவிட் லம்மி அவர்கள் கலந்துகொண்டார். இலங்கை அரசாங்கத்தின் சார்பில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்களினால் இதற்கான உத்தியோகபூர்வ விருப்பக் கடிதம் கையளிக்கப்பட்டது. இலங்கை நீண்டகாலமாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் பிரகடனத்தில் (UNCRC) ஒரு பங்காளியாக இருந்து வருவதுடன், சர்வதேச சட்டங்களின் கீழ் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. சிறுவர்களுக்கான மாற்றுப் பராமரிப்பு தொடர்பான 2009 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வழிகாட்டுதல்கள், பெற்றோர் பராமரிப்பு அற்ற சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான 2019 பொதுச் சபை தீர்மானம் (A/RES/74/133), 2022 நிறுவனமயமாக்கலை நீக்குதல் தொடர்பான வழிகாட்டுதல்கள் (CRPD/C/5), 2022 கிகலி (Kigali) பிரகடனம் மற்றும் 2024 சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதலாவது உலகளாவிய அமைச்சர்கள் மாநாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உலகளாவிய சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வரை உலகில் 34 நாடுகள் இந்த சாசனத்தை அங்கீகரித்துள்ளன. தெற்காசிய பிராந்தியத்தில் இதுவரை எந்தவொரு நாடும் இந்த சாசனத்தில் இணையாத நிலையில், அதில் இணையும் முதல் தெற்காசிய நாடாக இலங்கை திகழ்கின்றது. இலங்கையின் தேசிய சிறுவர் பராமரிப்புக் கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவதும், அவற்றை சர்வதேச தரத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்துவதும் இந்த சாசனத்தில் இணைவதன் முதன்மை நோக்கமாகும். இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ அமைச்சர்: "சிறுவர்களின் நலன் என்பது வெறுமனே ஒரு வார்த்தையாக மட்டுமல்லாது, அது ஒரு நடைமுறையாக இருக்க வேண்டும்," எனக் குறிப்பிட்டார். யுனிசெப் (UNICEF) மற்றும் இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. இதில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு ஆண்ட்ரூ பேட்ரிக், இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மாண்புமிகு தெரேசா ஓ மகோனி, இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் திரு.மார்க் அன்ட்ரே பிரான்சே, யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி திருமதி.எம்மா பிரிகம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி.தரங்கனி விக்கிரமசிங்க உள்ளிட்ட அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/238924
  14. எங்களுக்கு ஆற்றுப்படுத்தல்கள் மட்டும் போதாது; சமத்துவம் எப்போது? – வன்னி எம்.பி. ரவிகரன் Published By: Vishnu 18 Feb, 2026 | 04:49 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சமத்துவம் என்பது கேள்விக்குறியாகவுள்ள வன்னிப்பெருநிலப்பரப்பில் இந்த அரசாங்கம் அபிவிருத்தி சார்ந்த ஆற்றுப்படுத்தல்கள் சிலவற்றை வழங்குவதை மறுப்பதற்கில்லை. அதற்காக மாறி வரும் ஒவ்வோர் அரசாங்கமும் ஆற்றுப்படுத்தல்களை மட்டும் வழங்கிக்கொண்டிருந்தால் எங்களுக்கான சமத்துவ நிலையை நாங்கள் எப்போது அடைவது? துறைதோறும் புரையோடிப்போயுள்ள சீரற்ற வளப்பரம்பலால் தொடர்ந்தும் வன்னி மண் வஞ்சிக்கப்படுகிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நாடளாவிய வகையில் வடமாகாணம் புறக்கணிக்கப்படுவதையும் வடமாகாணத்திற்குள் வன்னிப்பெருநிலப்பரப்பு புறக்கணிக்கப்படுவதையும் மீள மீள சுட்டிக்காட்டுவதிலேயே எமது பெருங்காலம் கழிகிறது.வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரச கொள்கையின் அடிப்படையில் 1994ஆம் ஆண்டு தொடக்கம் சேவை பிரமாணக்குறிப்பு வலுப்பெறும் திகதி 2011.08.01 வரையான காலப்பகுதியில் பல்வேறு பதவிப்பெயர்களின் கீழ் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு தேசிய சம்பள மற்றும் ஊழியர் தொகை மதிப்பு ஆணைக்குழுவின் சிபாரிசின் பேரில் எம்ஏ-4-2006(ஏ) சம்பள அளவுத்திட்டம் வழங்கப்பட்ட அலுவலர்கள் பின்னர் 2012.02.14ஆம் திகதிய 1745/11 ஆம் இலக்க வர்த்தமானி மூலம் நிகழ்ச்சித்திட்ட அலுவலர் சேவையில் உள்வாங்கப்பட்டனர். பின்னர் 2012.09.07 ஆம் திகதிய 1774/31ஆம் இலக்க வர்த்தமானி மூலம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பெயர் மாற்றம் பெற்றனர். அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனும் அடையாளத்துடன் பணிபுரியும் இவ்வகுதியினருக்கு முறையான இடமாற்றக் கொள்கை ஏன் இன்றுவரை வகுக்கப்படவில்லை.5,6,7 ஆண்டுகள் கடந்தும் ஒரே சேவை நிலையத்தில் பணியாற்றும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சரின் பதில் என்ன? ஓர் ஊழியர் ஓரே சேவை நிலையத்தில் பத்தாண்டுகள் கடந்தும் சேவையாற்ற உங்கள் நிருவாக ஒழுங்கு இடமளிக்கிறதா? ஆயிரத்துக்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்தில் மிகையாக இருப்பதை தங்கள் அமைச்சு இன்னமும் இனங்காணவில்லையா? வடமாகாணத்தில் மேற்படியான சமச்சீரற்ற வள ஒதுக்கம் தங்கள் அரசாங்கத்தில் சீராக்கப்படுமா என்பதை பாதிக்கப்படும் வன்னிப்பெருநிலத்தைச் சார்பாக்கும் பாராளுமன்ற அமைச்சரிடம் வினவுகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/238921
  15. அரபுக்கல்லூரி பதிவு தடைகளை நீக்க சட்டமூலம், பாடத்திட்டம் விரைவில் நிறைவு – அமைச்சர் சுனில் செனவி 17 Feb, 2026 | 03:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அரபுக்கல்லூரிகளுக்கான சட்டமூலம் தயாரித்தல் மற்றும் பாடத்திட்டம் தயாரிக்கும் பணியை விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து, அரபுக்கல்லூரிகளை பதிவு செய்ய இருக்கும் தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என பெளத்த மற்றும் மத நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர்மேலும் குறிப்பிடுகையில், மத்ரசா மற்றும் அரபுக்கல்லூரிகளை பதிவுசெய்ய முடியும். தற்போது குர்ஆன் மத்ரசாக்களை பதிவு செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. குர்ஆன் மத்ரசா என்பது பாடசாலை மாணவர்கள் அல் குர்ஆனை ஓதுவதற்கு கற்றுக்கொள்ள அமைக்கப்பட்டதாகும். அதில் எந்த பிரநச்சினையும் இல்லை. அரபுக்கல்லூரிகள் தொடர்பிலேயே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. 2024,ஏப்ரல் 1ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மத்ரசா பாடசாலை தொடர்பான சட்டத்தை கோரி இருந்தார். அதன்போது அந்த நடவடிக்கை எடும்பெற்றிருந்தது. அதன் பின்னர் 2025, ஒக்டோபர் 13ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதி அனைத்து தரப்பினரையும் அழைத்து இதுதொடர்பில் கலந்துரையாடி இருந்தார்.அரபுக்கல்லூரி உள்ளிட்ட ஏனைய மத பாடசாலைகளை பதிவு செய்வதில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. என்றாலும் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னரே அரபுக்கல்லூரிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டது. அரபுக்கல்லூரிகளை பதிவு செய்யும்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. அதேநேரம் இதுவரை 321 அரப்புக்கல்லூரிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதேநேரம் 82 அரபுக்கல்லூரிகள் பதிவுக்காக காத்திருப்பு பட்டியலில் இருக்கின்றன. அதனால் இந்த நடவடிக்கையை விரைவு படுத்துவதற்கு ஜனாதிபதி மீண்டும் அனைத்து தரப்பினரையும் அழைத்து ஆலாேசனை வழங்கி இருந்தார். அத்துடன் இந்த நடவடிக்கை தாமதிப்பதற்கு காரணம், அரபுக்கல்லூரிகளுக்கான பாட்த்திட்ட தயாரிப்பு இன்னும் முடிவுறுத்தப்படாமல் இருப்பதாலாகும். இதுதொடர்பில் கல்வி அமைச்சு குழுவொன்றின் ஊடாக நடவடிக்கை எடுத்து வருகிறது.மத்ரசா பாடசாலை சட்டமும் பாடத்திட்டமும ஒன்றுக்காென்று சம்பந்தமாகிறது. அதனால் இந்த சிக்கல்களை நீக்கிக்கொண்டு விரைவாக அரபுக்கல்லூரிகளை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க முடியுமாகும். அத்துடன் அரபுக்கல்லூரிகளை முறைப்படுத்தும் சட்டமூலம் தயாரிப்பதற்காக 9பேர்களை உள்ளடக்கிய 3 மீளாய்வு குழுக்கள் செயற்பட்டு வருக்கின்றன. அதனால் மத்ரசா பாடசாலை தொடர்பான சட்டமூலமும் பாடத்திட்டம் தயாரிப்பும் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு விடயங்களை ஒன்றாக ஆராய்ந்து பார்த்து விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றே பிரதமரும் ஆலாேசனை வழங்கி இருக்கிறார். அதேபோன்று அமைக்கப்பட்டிருக்கும் குழுக்களில் இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த நடவடிக்கை பிற்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் இந்த விடயம் தொடர்பில் எனது தனிப்பட்ட கவனத்தை செலுத்தி, இறுதிக்கட்டத்தில் இருக்கும் சட்டமூலம் தயாரித்தல் மற்றும் பாடத்திட்டம் தயாரிக்கும் பணியை விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து, அரபுக்கல்லூரிகளை பதிவு செய்ய இருக்கும் தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார். https://www.virakesari.lk/article/238866
  16. இந்தியாவுடன் கனிம வளம் தொடர்பில் எவ்வித ஒப்பந்தமும் இல்லை - அரசாங்கம் அறிவிப்பு Published By: Vishnu 18 Feb, 2026 | 04:23 AM (எம்.மனோசித்ரா) கனிம வள ஆய்வு ஒப்பந்தம் குறித்து இந்தியாவினால் எந்தவொரு முன்மொழிவும் எமது அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை. அது குறித்து எவ்வித பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை. கனிம வளங்கள் குறித்து தேசிய கனிம வள கொள்கைக்கமையவே எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (17) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அது 2024ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட முன்மொழிவாகும். எமது அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் அவ்வாறு எந்தவொரு ஒப்பந்த முன்மொழிவும் முன்வைக்கப்படவுமில்லை. அது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவுமில்லை. இதுபோன்று பல்வேறு பழைய ஒப்பந்த முன்மொழிவுகள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் எமது அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறிப்பாக பால் உற்பத்தி தொடர்பில் இந்திய நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆனால் எமது அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. நாம் தேசிய கனிம வள கொள்கையொன்றை வகுத்திருக்கின்றோம். அமைச்சரவை அதற்கு அங்கீகாரமளித்துள்ளது. நாம் அதனை பின்பற்றி அதற்கமையவே கனிம வளங்கள் குறித்த தீர்மானங்களை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/238917
  17. பாராளுமன்ற ஓய்வூதிய நீக்கம்: யாரையும் அசௌகரியப்படுத்த அல்ல - அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் Published By: Vishnu 18 Feb, 2026 | 04:21 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற ஓய்வூதியக் கொடுப்பனவு சட்டத்தை இல்லாதொழிப்பதானது எவரையும் அசௌகரியங்களுக்கு உட்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் செயற்பாடு அல்ல என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) திருத்த சட்டம் மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம் என நாம் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் உள்ள இந்த முறைமையை இல்லாதொழிப்பது அவசியமாகும்.இந்த ஓய்வூதிய சட்டம் நிறைவேற்றப்படும் போது நாட்டின் அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஏற்படுகின்றதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். நாட்டில் ஊழல்,மோசடி பாரியளவில் காணப்பட்டது. அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் அது தெளிவுபடுத்தப்படுகிறது. பல தசாப்தங்களாக இந்த நாட்டில் இனவாத பிரச்சினை காணப்படுகிறது. நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்கள் அந்த கோணத்தில் பார்க்கப்பட்டு அசௌகரியத்துக்கு உள்ளாக்கப்பட்டார்கள். நாட்டு மக்களின் நிதியை கொள்ளையடித்தவர்கள் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்களா? அல்லது அவர்கள் நல்லிணக்கத்தை சீர்குலைத்தார்களா என்பதை நாம் பார்க்க வேண்டும். நாட்டு மக்களின் வரிப்பணத்தில்தான் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. அவர்களுக்கே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கடந்த பல தசாப்தங்களாக இதுவே இடம் பெற்றுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/238916
  18. வட, கிழக்கில் யுத்தத்தால் குடியிருப்புக்களை இழந்தவர்களுக்கான வீடமைப்பிற்கான நிதியுதவி 20 இலட்சமாக அதிகரிப்பு - அரசாங்கம் Published By: Vishnu 18 Feb, 2026 | 04:13 AM (எம்.மனோசித்ரா) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த நிலைமைகளால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த திட்டத்துக்காக வழங்கப்பட்ட 15 இலட்சம் ரூபா நிதி உதவியை, 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்திய அமைச்சர், வடக்கு, கிழக்கில் யுத்தம் காரணமாக பெரும்பாலானவர்கள் தமது குடியிருப்புக்களை இழந்தனர். அவ்வாறு குடியிருப்புக்களை இழந்தவர்களுக்காக பல்வேறு வீடமைப்புத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 2009ஆம் ஆண்டு முதல் 2025-12-31 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த 277,167 குடும்பங்களைச் சேர்ந்த 919,450 நபர்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டு, அவர்கள் தங்களது சொந்த கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அதற்கமைய இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதி நிலைவரத்தின் படி, அந்த மாகாணங்களில் இன்னும் தமக்குரிய ஒரு வீட்டைக் கொண்டிருக்காத 13,069 இடம்பெயர்ந்த குடும்பங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வீடற்ற இடம்பெயர்ந்த குடும்பங்களில் இரண்டு அல்லது அதற்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 340 சதுர அடி வீட்டை அமைப்பதற்காக 9 இலட்சம் ரூபாவும், இரண்டுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 550 சதுர அடி வீட்டை அமைப்பதற்காக 15 இலட்சம் ரூபாவும் நிதியுதவியாக வழங்க இதற்கு முன்னர் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இந்தத் திட்டம் தொடர்பாக கடந்த ஜனவரி 2ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற முற்போக்கு ஆய்வுக் கூட்டத்தில், பயனாளிகள் குறைந்த வருமானம் பெறுபவர்களாக இருப்பதையும், கட்டுமானப் பொருட்களின் விலை மற்றும் தொழிலாளர் கூலி அதிகரித்துள்ளதையும் கருத்தில் கொண்டு சில மாற்றங்கள் முன்மொழியப்பட்டன. அதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் குறித்த வீடுகளை அமைக்கும் வகையில், தற்போது வழங்கப்படும் உதவித்தொகையை குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கருதாது, 550 சதுர அடி வீட்டிற்காக 2026ஆம் ஆண்டு முதல் 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பது பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டது. அதற்கமைய, இத்திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் உதவித்தொகையை 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/238915
  19. 80க்கும் அதிகமான அரபுக் கல்லூரிகளின் பதிவை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஹிஸ்புல்லா 17 Feb, 2026 | 07:56 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மத்ரசாக்கள், அரபுக் கல்லூரிகளின் பதிவை தொடர்ந்தும் இடைநிறுத்தி இருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள பாரிய அநீதியாகும். அதனால் பதிவுக்காக காத்திருக்கும் 80க்கும் அதிகமான அரபுக் கல்லூரிகளின் பதிவை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 2020ஆம் ஆண்டு புத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சினுடைய செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளை பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிகின்றேன். ஆனால் புத்தசாசன திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற பிரிவெனாக்கள், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற அறநெறி பாடசாலைகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற மிஷனரி பாடசாலைகள் என்பவற்றை பதிவு செய்வதற்கான முறையான அனுமதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படுவதுடன் அது மிகவும் சுமூகமாகவும் இடம் பெற்று வருகின்றது. இலங்கையில் செயல்பட்டு வரும் அரபுக் கல்லூரிகள் மற்றும் மத்ரசாக்களை பதிவு செய்வது தற்போதைய நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு கல்வி, சமூக மற்றும் நிர்வாக ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளை பதிவு செய்வதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அனுமதி வழங்காத காரணத்தினால் நாடு முழுவதிலுமிருந்து பதிவிற்காக விண்ணப்பித்த சுமார் 80 அரபுக் கல்லூரிகளுக்கும், மதரசாக்களுக்கும் பல ஆண்டுகளாக பதிவு செய்வதற்கான அனுமதிகள் வழங்கப்படவில்லை. மேற்படி பதிவு இடைநிறுத்தத்தின் காரணமாக, குறித்த அரபுக் கல்லூரிகள் மற்றும் மத்ரசாக்கள் இயங்குவதில் அதன் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். குறிப்பாக அரபுக் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் அரச ரீதியாக அங்கீகாரம் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் அவர்கள் மேற்படிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டு கல்வி வாய்ப்புகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பல வருடங்கள் கல்வி பயின்ற மாணவர்கள் தங்களது கல்வி முயற்சிக்கு உரிய சட்டபூர்வ அங்கீகாரம் இல்லாத நிலையில் தவிப்பதோடு, மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகள் இஸ்லாமிய மார்க்க கல்வி, ஒழுக்கப் பயிற்சி மற்றும் சமுக வழிகாட்டுதலில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. பதிவு இடைநிறுத்தம் காரணமாக இந்த மார்க்கக் கல்வி தொடர்ச்சியில் இடைவெளி ஏற்பட்டு, சமூகத்தில் தவறான புரிதல்கள் மற்றும் நம்பிக்கை குறைபாடுகள் உருவாகும் அபாயமும் காணப்படுகிறது. அத்துடன், பதிவு இல்லாத கல்வி நிறுவனங்களாகக் கருதப்படுவதால், வங்கி கணக்குகள், நிதி உதவிகள், வெளிநாட்டு நன்கொடைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக சட்டம் மற்றும் நடைமுறை ரீதியான குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளது. நமது நாடும், முழு உலகமும் வேண்டி நிற்கின்ற நல்லொழுக்கங்களையும் உயரிய பண்புகளையும் கற்றுக் கொடுக்கின்ற இம் மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளின் பதிவை தொடர்ந்தும் இடைநிறுத்தி இருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள பாரிய அநீதி . எனவே, மேற்படி நிலைமைகளை கருத்திற்கொண்டு, மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளை பதிவு செய்வது தொடர்பான நடைமுறையை விரைவாக தெளிவுபடுத்தி, பதிவு செயல்முறையை மீண்டும் ஆரம்பிக்க அல்லது உரிய வழிகாட்டுதல்களை வழங்க தங்களது அமைச்சு மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஆவண செய்ய வேண்டும். அதனால் மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளினை பதிவு செய்வதற்கான அனுமதியினை வழங்குவதற்கு ஆவண செய்ய முடியுமா?மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளினை பதிவு செய்வதற்கான அனுமதியினை வழங்குவதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என கேட்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/238910
  20. வட்டிக்காரர்களிடம் சிக்கிய முன்னாள் போராளி : கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்! 18 Feb, 2026 | 10:32 AM யுத்தக் களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் முன்னாள் பெண் போராளி ஒருவர் , கந்துவட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் மன்னாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார், மூர் வீதி பகுதியில் வசிக்கும் இப் பெண்மணி, தனது குடும்ப வறுமையைப் போக்கவும், சிறு தொழில் செய்யவும் 'சீட்டு' முறையில் பணம் கட்டியுள்ளார். ஆனால், சீட்டு ஆரம்பத்தின் கனிவாக நடந்து கொண்ட பெண் குழுக்கள் மற்றும் வட்டி கும்பல்கள்,காலம் செல்ல செல்ல தங்கள் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். அவர் வாங்கிய பணத்திற்கு சட்டவிரோதமான முறையில் வட்டிக்கு மேல் வட்டி போட்டு, அவரை மீள முடியாத கடன் சுமைக்குள் தள்ளியுள்ளனர். மிரட்டலும் உடல் உறுப்பு விற்பனையும் ஏழ்மை நிலையில் இருக்கும் இப் பெண், மற்றும் இவரது குடும்பம் வாடகை வீடு ஒன்றில் உணவகங்களுக்கு சிற்றுண்டிகளை தயாரித்து வழங்கி வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார். மணலாற்றுப் போர்க்களத்தில் ஒரு கால் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில், யாருடைய உதவியுமின்றி உழைக்க நினைத்த இவருக்கு கந்துவட்டி கும்பல் பெரிய முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. தொடர் மிரட்டல்கள், அவமானங்கள் மற்றும் "பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவோம்" என்ற அச்சுறுத்தல்களுக்கு பயந்து, வேறு வழியின்றி கொழும்புக்குச் சென்று தனது ஒரு சிறுநீரகத்தை குறைந்த விலைக்கு விற்று அந்தப் பணத்தை வட்டி பணத்துக்காக வழங்கியுள்ளார். தீராத கடன் சுமை சிறுநீரகத்தை விற்று பண தொகையைக் கொடுத்த பின்னரும், அந்த வட்டி கும்பல் "இன்னும் வட்டி மீதமுள்ளது" எனக் கூறி அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இப்பெண்மணி, தற்போது தற்கொலை எண்ணம் தோன்றும் அளவிற்கு விரக்தியில் உள்ளதாகக் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார். சமூகத்தின் குரல் மன்னார் மூர் வீதியில் இத்தகைய சட்ட விரோத வட்டித் தொழில் பல குழுக்களால் தங்கு தடையின்றி நடத்தப்பட்டு வருகிறது. இப் பெண்ணைப் போல இன்னும் பல ஏழைப் பெண்கள் அவர்களிடம் சிக்கி, வெளியில் சொல்ல முடியாமல் சித்ரவதைகளை அனுபவித்து வருகின்றனர். "என்னைப் போல இன்னும் பல பெண்கள் இங்கே பாதிக்கப்பட்டுள்ளார்கள். எங்களைக் காப்பாற்ற யாரும் இல்லையா?" என அந்தப் பெண் எழுப்பும் கேள்வி அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டுமா? பாதிக்கப்பட்ட இப் பெண்ணுக்கும், அவரைப் போன்ற மற்றவர்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும், இந்த சட்டவிரோத வட்டி கும்பல்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த பெண்ணுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் அவரது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உதவிகளை முன்னெடுக்க முடியும். https://www.virakesari.lk/article/238933
  21. ஸ்கொட்லாந்தை வீழ்த்தி இன்னும் சாதிப்போம் என்ற செய்தியுடன் ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து விடைபெற்றது நேபாளம் Published By: Vishnu 18 Feb, 2026 | 03:52 AM (நெவில் அன்தனி) ஸ்கொட்லாந்துக்கு எதிராக மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சி குழு போட்டியில் 7 விக்கெட்களால் நேபாளம் அமோக வெற்றியீட்டியது. 2014இல் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் முதல் சுற்றில் 2 போட்டிகளில் வெற்றியீட்டிய நேபாளம், ரி20 உலகக் கிண்ண பிரதான முதல் சுற்றில் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும். இன்றைய போட்டியில் ஸ்கொட்லாந்து வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பே அதிகமாக இருந்தது. ஆனால், நேபாளம் தலைகீழ் வெற்றியை ஈட்டி எதிர்காலத்தில் இதனைவிட சாதிப்போம் என்ற செய்தியை கொடுத்துவிட்டு விடைபெற்றது. நேபாள வீரர்கள் தங்களது வெற்றியை கொண்டாடும் வகையில் மும்பை வான்கேட் விளையாட்டரங்கை சுற்றிவந்து ரசிகர்களுக்கு கைகளை அசைத்து நன்றி தெரிவித்து விடைபெற்றனர். சோம்பால் காமியின் துல்லியமான பந்துவீச்சு, திப்பேந்த்ரா சிங் ஆய்ரீ குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன நேபாளத்தின் வெற்றியில் பிரதான பங்காற்றின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. ஜோர்ஜ் மன்சே (27), மைக்கல் ஜோன்ஸ் ஆகிய இருவரும் 60 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்ற மைக்கல் ஜோன்ஸ் 2ஆவது விக்கெட்டில் ப்றெண்டன் மெக்முலெனுடன் மேலும் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மைக்கல் ஜோன்ஸ் 45 பந்துகளில் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 71 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் ப்றெண்டன் மெக்முலென் 25 ஓட்டங்களுடன் களம் விட்டு வெளியேறினார். இந்த மூவரை விட அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் (10), மார்க் வொட் (10 ஆ.இ.) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றனர். பந்துவவீச்சில் சோம்பால் காமி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நந்தன் யாதவ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 171 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 19.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. குஷால் புர்த்தெல் 43 ஓட்டங்களையும் ஆசிப் ஷெய்க் 33 ஓட்டங்களையும் பெற்றதுடன் 55 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பகிரந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். எனினும், மூன்று விக்கெட்கள் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்ததும் நேபாளத்தின் ஓட்ட வேகம் குறைந்தது. அணித் தலைவர் ரோஹித் பௌடெல் 16 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து அனுபவசாலியான திப்பேந்த்ரா சிங் ஆய்ரீ, குய்சான் ஜா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 36 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறதிசெய்தனர். திப்பேந்த்ரா சிய் ஆய்ரீ 23 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 50 ஓட்டங்களுடனும் குய்சான் ஜா ஒரு பவுண்டறி, 2 சிக்ஸ்கள் உட்பட 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் மைக்கல் லீஸ்க் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: திப்பேந்த்ரா சிங் ஆய்ரீ. https://www.virakesari.lk/article/238913
  22. அத தெரண கருத்துப்படங்கள்.
  23. மக்களுக்கு வழங்கிய ஆணைக்கு அமையவே பாராளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம் - பிரதமர் 17 Feb, 2026 | 07:56 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஊழல்மிக்க அரசியல் கலாசாரத்தால் தான் மக்கள் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பையும் வெறுக்கிறார்கள்.சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். மக்களுக்கு வழங்கிய ஆணைக்கு அமைவாகவே பாராளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வற்காகவோ அல்லது பிரபல்யமடைவதற்காகவோ பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலத்தை கொண்டு வரவில்லை. இந்த சட்டம் 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் இதுவரையான காலப்பகுதியில் இந்த சட்டம் ஐந்து திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற ஓய்வூதிய சட்டம் அரசியல்வாதிகளுக்கு ஏற்றாட்போல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இதனால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை. 1985 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் விரும்பிய ஓய்வூதியத்தை தெரிவு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்பட்ட காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டாவது திருமணம் முடித்தால் அவரது மனைவிக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் முழு அரசியல் கட்டமைப்பையும் இவ்வாறான செயற்பாடுகளினால் தான் மக்கள் எதிர்க்கிறார்கள்.இதனை மாற்றியமைக்க கூடாதா, சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்கினால் தான் சிறந்தவர்கள் அரசியலுக்கு வருவார்கள். நாடும் முன்னேற்றமடையும். ஊழல்மிக்க அரசியல் கலாசாரத்தினால் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.இது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதொரு விடயமல்ல, ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/238908 ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் இரத்துச் செய்வது நியாயமற்றது - தயாசிறி ஜயசேகர 17 Feb, 2026 | 07:56 PM (எம்.ஆர்.எம்.வசீம் , இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற ஓய்வூதியம் (இரத்துச்) சட்டத்தை அரசாங்கம் எதிர்காலத்துக்கு அமுலாகும் வகையில் செயற்படுத்த வேண்டும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு சலுகை வழங்க வேண்டும். அதனை விடுத்து ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் இரத்துச் செய்வது நியாயமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், சிறப்புரிமைகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்து தொடர்பில் ஆராய்வதற்கு சித்ரசிறி குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு 2024.12.02 ஆம் திகதியன்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. சித்ரசிறி அறிக்கையை அரசாங்கம் முழுமையாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். அறிக்கையில் முழு உள்ளடக்கத்தை நாங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். மக்களுக்கு இல்லாத எதையும் தாங்கள் அனுபவிக்க போவதில்லை என்று ஜனாதிபதி உட்பட 159 உறுப்பினர்களும் குறிப்பிட்டார்கள். ஆனால் இன்று அனைவரும் சுகபோகமாக வாழ்கிறார்கள். அனைவருக்கும் வாகனம் வழங்கப்பட்டுள்ளது. 159 பேர் தற்போது பொது போக்குவரத்து சேவையையா, பயன்படுத்துகிறார்கள். அனைவரும் ஏதாவதொரு வழியில் ஊழல் செய்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 55 ஆயிரம் ரூபா அளவில் தான் சம்பளம் கிடைக்கப்பெறுகிறது. அவ்வாறாயின் மாதாந்தம் குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபா ஓய்வூதிய கொடுப்பனவே கிடைக்கப்பெறும். பெரும்பாலானவர்கள் எவ்வித தொழிலும் இல்லாமல் இந்த கொடுப்பனவை நம்பியே வாழ்கிறார்கள். பாராளுமன்ற ஓய்வூதியம் (இரத்துச்) சட்டத்தை அரசாங்கம் எதிர்காலத்துக்கு அமுலாகும் வகையில் செயற்படுத்த வேண்டும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு சலுகை வழங்க வேண்டும். அதனை விடுத்து ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் இரத்துச் செய்வது நியாயமற்றது. தேசிய மக்கள் சக்தியின் 159 உறுப்பினர்களின் மாத சம்பளம், அக்கட்சியின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளம் மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி நிதியத்துக்கு செல்கிறது. இது முற்றிலும் சட்டவிரோதமானது என்றார். https://www.virakesari.lk/article/238909
  24. ஊழல் அரசியல் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – அமைச்சர் ஆனந்த விஜேபால 17 Feb, 2026 | 04:37 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஊழல் அரசியல் கலாச்சாரத்தால் ஊழல், மோசடிகள் நிறைந்த நாடாக இலங்கை இருந்தது. போதைப்பொருள் மற்றும் அரசியல்வாதிகளும் பாதாள குழுக்களும் ஒன்றாக செயற்பட்ட காலம் இருந்தது. அவற்றுக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்து வருகிறோம். இது தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, 'வளமான நாடு அழகான வாழ்க்கை' கொள்கைத் திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம். அதில் குறிப்பிடப்பட்ட விடயங்களில் பிரதானமாக பொருளாதார ஸ்திரத் தன்மையை குறுகிய காலத்தில் ஏற்படுத்தியுள்ளோம். அதனுடன் அரசியல் கலாச்சார மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளோம். இந்த பதவியில் இருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் சிறப்புரிமைகளும் இருந்தன. ஊழல் மிக்க அரசியலும், ஊழல் மிக்க அரசியல்வாதிகளும் இருந்தனர். ஊழல் மோசடிகளை தடுக்கவே பாராளுமனற் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுகின்றார். ஆனால் இந்த ஓய்வூதியம் மூலம் எந்தளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது விசாரணைகள் நடக்கின்றன. எதுவும் இடையில் நிறுத்தப்படாது. சிலரின் வீடுகளில் இராணுவத்தினர் நாய்களை பராமறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இந்தளவுக்கு சிறப்புரிமையை மீறி பயன்படுத்தியுள்ளனர். இந்த சிறப்புரிமை வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் நினைத்தால் எதிர்காலத்தில் இதற்காக மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டு செயற்படலாம். ஆனால் எங்களுக்கு கிடைத்த மக்கள் ஆணையின்படியே நாங்கள் செயற்படுகின்றோம். இது தொடர்பில் எமது கொள்கைப் பிரகடனத்தில் கூறியவாறு அதனை செயற்படுத்தி வருகின்றோம். ஆனால் எதிர்க்கட்சிக்கு அவசியமென்றால் மக்கள் ஆணையுடன் மீண்டும் அதனை பயன்படுத்த முடியும். நாங்கள் ஊழல் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மக்களிடம் செல்லக்கூடிய மக்களுடன் நெருங்கி செயற்படக்கூடிய பிரதிநிதிகளை உருவாக்கி வருகின்றோம். ஊழல் அரசியல் கலாச்சாரத்தால் ஊழல், மோசடிகள் நிறைந்த நாடே இருந்தது. போதைப்பொருள் மற்றும் அரசியல்வாதிகளும் பாதாள குழுக்களும் ஒன்றாக செயற்பட்ட காலம் இருந்தது. அவற்றுக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துவருகின்றோம். நாங்கள் இது தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். இதேவேளை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஏனைய விடயங்களையும் நிறைவேற்றுவோம். கல்வி மறுசீரமைப்பு, கிராமிய வறுமை நிலைமை இல்லாமல் செய்வதற்கான வேலைத்திட்டங்கள் போன்றவற்றை நிறைவேற்றி வருகின்றோம். குறுகிய காலத்தில் சமூக மாற்றத்திற்காக நாங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/238875
  25. பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான பழங்குடி ஓவியரின் மனைவிக்கு அரசுப்பணி பட மூலாதாரம்,Getty Images நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குறும்பர் பழங்குடி ஓவியர் கிருஷ்ணன் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள நிலையில், அவரது மனைவிக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கல்வியைத் தொடரவும் அரசு வழிவகை செய்துள்ளது. கடந்த ஆண்டில் கிருஷ்ணன் மறைந்துவிட்ட நிலையில், அவரின் குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கிருஷ்ணனின் மனைவி சுசீலா, ஒரு மகன், 3 மகள்களுடன், கிருஷ்ணனின் வெள்ளரிக்கோம்பையில் வசித்து வந்தார். கிருஷ்ணன் மறைவுக்குப் பின், பாதுகாப்பு கருதி, கல்லாறு அருகேயுள்ள புளியமரத்தூர் என்ற கிராமத்திற்கு அவரின் குடும்பம் குடிபெயர்ந்தது. சுசீலாவின் தாய், தந்தை, அங்குள்ள ஒரு பாக்குத்தோட்டத்தில் பணியாற்றி வந்தனர். அவர்கள் குடியிருப்பதற்கு அந்தத் தோட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த குடிசை வீட்டில், சுசீலாவும் 4 குழந்தைகளும் வாழ்ந்து வருகின்றனர். சுசீலா அதே தோட்டத்தில் ரூ.300 கூலிக்கு பணியாற்றி வந்தார். இவர்களின் மூத்த மகள் வாசுகி, பிளஸ் 2 முடித்து விட்டு, உதகையிலுள்ள தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியில் பார்மஸி டிப்ளமோ படித்துவந்தார். ஆனால் அதற்கான கல்விக்கட்டணத்தைச் செலுத்த முடியாமல் வீட்டில் இருந்துவந்தார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் ராகுல், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள அரசு உண்டு உறைவிடப்பள்ளி விடுதியிலும், ஏழாம் வகுப்பு படிக்கும் கீதா, நான்காம் வகுப்பு படிக்கும் கீர்த்திகா ஆகிய இருவரும் நீலகிரியிலுள்ள அரசு உண்டு உறைவிடப்பள்ளியிலுள்ள விடுதியிலும் தங்கிப் படித்து வந்தனர். இந்நிலையில்தான் கிருஷ்ணனுக்கு கடந்த மாதத்தில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. தங்களின் குடும்ப நிலை குறித்து சுசீலா, பிபிசி தமிழ் உள்ளிட்ட ஊடகங்களிடம் பேசியிருந்தார். தன்னுடைய கல்வித்தகுதிக்கேற்ப அரசுப்பணி வழங்கவேண்டும், தனது மூத்த மகள் அவள் படித்த அதே கல்லூரியில் படிப்பதற்கும், மற்ற குழந்தைகள் கல்விக்கும் அரசு உதவ வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் விளைவாக, தமிழக அரசு சார்பில் கிருஷ்ணன் குடும்பத்தினரை நீலகிரி மற்றும் கோவை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அணுகினர். அவர்களுடைய விருப்பத்தின்பேரில், தற்போது நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள அரசு ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளியில் தோட்டப்பணியாளர் பணிக்கான ஆணையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா வழங்கினார். அதே பள்ளியில் அவர்கள் குடியிருக்க வீடும் ஒதுக்கப்பட்டுள்ளது. மூத்த மகள் வாசுகி, அவர் படித்து வந்த கல்லூரியில் டிப்ளமோ படிப்பில் தொடரவும், மற்ற 3 குழந்தைகளும் சுசீலா பணியாற்றும் அதே ஏகலைவா பள்ளியில் விடுதியில் தங்கிப்படிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய கிருஷ்ணனின் மனைவி சுசீலா, ‘‘எனது கணவர் இறந்தபின்பும் எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார். அவரால்தான் எனக்கு இந்த பணி கிடைத்துள்ளது. என் மூத்த மகள் வாசுகியை இந்த ஆண்டில் டிப்ளமோ பார்மஸி படிப்பில் தொடரவும், அடுத்த ஆண்டில் அவள் விரும்பியபடி பி.பார்ம் படிப்பில் இணையவும் நீலகிரி ஆட்சியர் ஏற்பாடு செய்திருக்கிறார்.’’ என்றார். மேலும் பேசிய அவர், ‘‘எனக்கு மாதம் ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் பணி ஆணை தரப்பட்டுள்ளது. இனிமேல் என்னுடைய 3 குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. எங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு வேண்டுமென்ற கோரிக்கையையும் அரசிடம் வைத்திருக்கிறோம். அதற்கும் ஆவன செய்வதாக ஆட்சியர் கூறியுள்ளார். வரும் 22, 23 ஆகிய நாட்களில் சென்னை ஆளுநர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் 15 பேருடன் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. அங்கே செல்கிறோம். ’’ என்றார். https://www.bbc.com/tamil/live/clyx48qxzddt?post=asset%3A3cb5d876-3db9-425e-bc74-55638be241d8#asset:3cb5d876-3db9-425e-bc74-55638be241d8

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.