Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பங்களாதேஷின் நிலைமைகள் குறித்து ஜனாதிபதி ரணிலுடன் கலந்துரையாடல் 01 SEP, 2024 | 10:23 AM (லியோ நிரோஷ தர்ஷன்) அரசியல் - பொருளாதார நெருக்கடிகளைக் கடந்து ஈராண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் அமைதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்தியமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாராட்டியுள்ள இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் , பங்களாதேசத்தின் அண்மைய முன்னேற்றங்கள் குறித்தும் கொழும்பு விஜயத்தின் போது கவனம் செலுத்தியுள்ளார். இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த வியாழக்கிழமை (09) கொழும்பை வந்தடைந்த இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாடு திரும்புவதற்கு முன்னர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் போதே அஜித் தோவால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாராட்டியுள்ளார். இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுகள் இடையிலான முத்தரப்பு பிராந்திய முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் உள்ளடக்கங்களின் மறுபரிசீலனை குறித்து கவனம் செலுத்தியிருந்த அஜித் கே. தோவால், முத்தரப்பு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திருந்தார். இருப்பினும் இதற்கு அப்பால் அரசியல் சந்திப்புகளுக்கே கொழும்பு விஜயத்தில் அஜித் தோவால் முக்கியத்துவம் அளித்திருந்தார். குறிப்பாக இலங்கையின் அடுத்த ஐந்து ஆண்டுக் காலத்தை அரசியல் ரீதியில் தீர்மானிக்க கூடிய ஜனாதிபதி தேர்தல் இடம்பெற மூன்று வாரங்களுக்கும் குறைவான நாட்கள் இருக்கையில் கொழும்பை வந்தடைந்த அஜித் தோவால் அனைத்து பிரதான வேட்பாளர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.ஆனால் அவர்களுடன் பேசப்பட்ட எந்தவொரு விடயமும் இதுவரையில் இருதரப்பினருமே வெளிப்படுத்த வில்லை. அநுரகுமார திசாநாயக்க, சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர், அஜித் தோவாலை சந்தித்த புகைப்படங்களை கூட வெளியிட வில்லை. அந்த சந்திப்புகளின் உள்ளடக்கங்களின் இரகசிய தன்மையைப் பாதுகாக்கும் வகையில் அனைவருமே செயல்பட்டுள்ளனர். இருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அஜித் தேவாலுக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் போது, முக்கிய தேர்தல் ஒன்று நாட்டில் இடம்பெறவுள்ள நிலையில் , அதற்கான அமைதியான சூழல் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பங்களாதேசத்தில் அண்மைய அமைதியின்மைகள் பிராந்திய ஒருமைப்பாட்டில் தாக்கம் செலுத்தியுள்ளதாகவும், கூடிய விரைவில் நிலைமை சீர்படுத்த புதிய நிர்வாகத்திற்கு ஒத்துழைப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தேர்தல் முடிவடைந்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கான திகதி தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் இதன் போது குறிப்பிடப்பட்டது. எவ்வாறாயினும் இலங்கையின் தேர்தல் இந்தியாவுக்கு மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் என்பதாலேயே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலின் கொழும்பு விஜயம் அமைந்துள்ளதாக புவிசார் அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக சீன கப்பல்களின் இலங்கை நோக்கி தொடர் விஜயங்கள் இந்தியாவை எறிச்சல் ஊட்டுவதாகவே அமைந்துள்ளது. மாலைத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களின் பின்னரான சீனாவின் இந்திய பெருங்கடல் நகர்வுகள் அதிகரித்துள்ளன. இத்தகைய சூழலில் இலங்கையில் முக்கிய தேர்தல் இடம்பெறுகின்ற நிலையில் அஜித் தோவாலின் கொழும்பு விஜயம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/192516
  2. சங்கு சின்னத்துக்கு ஆதரவளிக்க தீர்மானம்; செல்வம் அடைக்கலநாதன் Published By: DIGITAL DESK 7 01 SEP, 2024 | 09:20 AM இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தமிழ் கட்டமைப்பின் சிறந்த முடிவாக பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு ஆதரவளித்து சங்கு சின்னத்தை தீர்மானித்த முடிவு வரவேற்கத்தக்கது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். திருகோணமலையில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (31) இடம் பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் உட்பட கட்சி பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் கருத்துரைத்த அவர் இந்த புரட்சிகரமான முடிவால் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக அனைவரும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும். எங்கள் ஒற்றுமை தமிழ் கட்டமைப்பு ஒற்றுமையை காட்டியுள்ளது. இதனால் தான் 22 உறுப்பினர்களை பெற்றிருக்கிறோம். சங்கு சின்னம் ஊடாக அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கும் ஒரே குடையின் கீழ் ஒன்றினைத்து மக்களுக்கு பலமான செய்தியை சொல்ல வேண்டும். எங்களுக்குள் பிரிவினையற்ற நிலை இல்லாது தமிழ் தேசியத்துக்கு அந்த பலத்தை கொண்டு செல்ல வேண்டும். பிரிவினைகள் மக்களுக்கு கோபத்தை உண்டு பண்ணும், இதனால் இருக்கின்ற 10 பிரநிதித்துவம் ஐந்தாக குறையலாம். இந்த கூட்டு தேர்தலுக்கான கூட்டாகவன்றி மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொனரவும் போராட்டங்களை முன்னெடுக்கவும் ஆலமரமாக இருக்க வேண்டும் திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் முடிவால் கிளிநொச்சி மாவட்ட கட்சி கிளையும் இதே முடிவெடுத்துள்ளது என்றார். இதன் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தமிழ் கட்சிகள் சிறு சிறு கட்சிகளாக இருக்காமல் அனைவரும் ஒன்றினைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாக பயணித்து இழந்த உரிமைகளை மீளப் பெறுவோம். 1948ல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என்றார். https://www.virakesari.lk/article/192512
  3. 31 AUG, 2024 | 10:35 PM எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு முதல் திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் மற்றும் ஐ. ஓ. சி. நிறுவனம் அறிவித்துள்ளன. பெற்றோல் 92 ஒக்டேன் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 332 ரூபாவாகும். பெற்றோல் 95 ஒக்டேன் ஒரு லீற்றரின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 377 ரூபாவாகும். டீசல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 307 ரூபாவாகும். சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 352 ரூபாவாகும். ஆனால் மண்ணெண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/192508
  4. ஹேமா கமிட்டி அறிக்கை: முதல்முறையாக வாய் திறந்த நடிகர் மோகன் லால், தெலுங்கு சினிமா பற்றிப் பேசிய சமந்தா பட மூலாதாரம்,FACEBOOK/MOHANLAL படக்குறிப்பு, மலையாள நடிகர் மோகன் லால் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மலையாள திரையுலகில் வாய்ப்பு தேடி வரும் பெண்களை நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலரும் பாலியல் ரீதியாகப் பயன்படுத்துவதாக (casting couch) எழுந்த சர்ச்சைக்கு மலையாள நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், நடிகருமான மோகன் லால் முதல்முறையாகப் பதிலளித்துள்ளார். “மலையாள திரையுலகை அழித்து விடாதீர்கள்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையை மோகன் லால் வரவேற்றதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பார்கள் என்றும் அவர் கூறினார். மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. பெண் கலைஞர்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் தவறான நடத்தை பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் இந்திய திரையுலகத்தை உலுக்கியுள்ளது. "இதுபோன்ற சம்பவங்கள் முழு திரையுலகையும் அழித்துவிடும். 'அம்மா' சங்கத்தின் மீது மட்டும் குற்றம் சுமாத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்று மோகன் லால் கூறினார். “அம்மா சங்கத்திலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ‘அம்மா’ சங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. ‘அம்மா’ சங்கத்தின் பதவியிலிருந்து விலகியது தப்பிப்பதற்காக அல்ல. தயவு செய்து தேவையில்லாமல் ‘அம்மா’ சங்கத்தைக் குறை சொல்லாதீர்கள். நீதிபதி ஹேமா ஆணையத்தின் அறிக்கையை வரவேற்கிறோம். அந்த அறிக்கையை வெளியிட்டது சரியான முடிவு,'' என்றார். மலையாள இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், முகேஷ் உள்ளிட்ட மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சில நடிகைகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், மோகன் லால் உள்ளிட்ட 'அம்மா' உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். 'கடினமாக உழைக்கும் திரைத்துறை' ஒட்டுமொத்த மலையாள திரையுலகையும் எதிர்மறையாகச் சித்தரிக்க வேண்டாம் என்று ஊடகங்களையும் மக்களையும் கேட்டுக்கொண்டார் மோகன் லால். மலையாள திரையுலகம் மிகவும் கடினமாக உழைக்கும் திரைத்துறை என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மலையாள திரையுலகில் நடிகைகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் குறித்து ஹேமா அறிக்கை குறிப்பிட்டுள்ளது. "அம்மா சங்கத்தை மட்டுமே நோக்கிப் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்தக் கேள்விகளை எல்லோரிடமும் கேட்க வேண்டும். மலையாள திரையுலகம் மிகவும் கடினமாக உழைக்கும் திரைத்துறை. நிறைய பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எல்லோரையும் குறை சொல்லக்கூடாது. யாருக்காகவும் சட்டத்தை மாற்ற முடியாது. இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மலையாள திரையுலகை அழிக்க வேண்டாம்,'' என்றார். "விசாரணை கண்டிப்பாக நடைபெறும். துணை நடிகர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் கவனம் செலுத்தி வருகிறோம். ஒரே நேரத்தில் அனைவரின் பெயர்களும் வெளிவருகின்றன. நாங்கள் ஆதரவற்ற நிலையில் இருக்கிறோம். விசாரணை நடவடிக்கைக்கு நாங்கள் ஒத்துழைப்போம். பிரச்னைகளைச் சரி செய்ய நாங்கள் இங்கு வந்துள்ளோம்" என்று மோகன் லால் தெரிவித்துள்ளார் தெலுங்கு சினிமா குறித்து சமந்தா கருத்து இந்த விவகாரம் குறித்து நடிகை சமந்தா கருத்து தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமா அமைப்பான ‘பெண்களின் குரல்’ (The Voice of Women) என்ற அமைப்பு அரசாங்கத்திடம் அளித்த அறிக்கையை வெளியிடுமாறு, சமந்தா வெள்ளிக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,FACEBOOK/SAMANTHA படக்குறிப்பு, நடிகை சமந்தா "தெலுங்கு திரையுலகில் உள்ள அனைத்து பெண்களும் ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கின்றனர். கேரளாவில் உள்ள நடிகைகள் கூட்டமைப்பான ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’ (WCC) முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். அவர்களின் முயற்சிகள் ‘தி வாய்ஸ் ஆஃப் வுமன்’ இயக்கத்திற்கு வழிவகுத்தது. அதனால் ஈர்க்கப்பட்டு, 'தி வாய்ஸ் ஆஃப் வுமன்' தெலுங்கு திரையுலகில் பெண்களை ஆதரிப்பதற்காக 2019இல் அமைக்கப்பட்டது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அக்குழுவின் அறிக்கையை தெலங்கானா அரசு வெளியிட வேண்டும்” என்று சமந்தா அப்பதிவில் தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு கேரளாவில் உருவான ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’ திரைப்படத் துறையில் பாலின பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடி வருகிறது. பெண்களுக்கு சம உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் கொள்கை மாற்றங்களுக்காகப் பணியாற்றி வருகிறது. மலையாளத் திரையுலகில் பணிபுரியும் பெண்களைக் கொண்டு ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’ உருவாக்கப்பட்டது. நீதிபதி ஹேமா ஆணையத்தின் அறிக்கையில் என்ன இருக்கிறது? மலையாளத் திரையுலகின் நிலைமை குறித்து ஆய்வு செய்யக் கோரி 2017ஆம் ஆண்டு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வுமன் இன் சினிமா கலெக்டிவ் (WCC) ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தது. இதையடுத்து, அதே ஆண்டில் நீதிபதி ஹேமா ஆணையத்தை மாநில அரசு அமைத்தது. பிரபல கதாநாயகியை காரில் வைத்து சிலர் பாலியல் துன்புறுத்தல் செய்ததை அடுத்து, திரையுலகின் நிலைமையை ஆய்வு செய்ய வுமன் இன் சினிமா கலெக்டிவ் உறுப்பினர்கள் மனு அளித்தனர். இந்தக் குழுவில் நடிகை டி.சாரதா, கேரள முன்னாள் தலைமைச் செயலாளர் கே.பி.வல்சலா குமாரி ஆகியோர் இடம்பெற்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES மலையாள திரையுலகில் வாய்ப்பு தேடி வரும் பெண்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்வது (casting couch) ஆழமாக வேரூன்றியுள்ளதாக ஓய்வுபெற்ற கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையம் தெரிவித்துள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை சமீபத்தில் கேரள அரசால் வெளியிடப்பட்டது. “சமரசம்” மற்றும் “ஒத்துப்போதல்” போன்றவை மலையாள திரையுலகின் பல்வேறு மட்டங்களில் “வாய்ப்புக்கான” கடவுச் சொற்களாக இருப்பதாக, அந்த அறிக்கை அடையாளம் கண்டுள்ளது. “தேவைப்படும் போதெல்லாம் பெண்கள் பாலியல் உறவுக்குத் தயாராக இருக்க வேண்டும்” என்பதுதான் இந்த இரு வார்த்தைகளின் அர்த்தம். திரையுலகில் 'காஸ்டிங் கவுச்' நடப்பதாக இருக்கும் பரவலான நம்பிக்கையைப் பயன்படுத்தி, புதிதாக இத்துறைக்கு வருபவர்களுக்கு தயாரிப்பு மேலாளர்கள் (production controllers) இத்தகைய உணர்வை வழங்குகின்றனர். இதற்கு இரையாகும் நபர்களுக்கு “குறியீட்டு எண்களும்” வழங்கப்படுகின்றன. 44 பக்கங்கள் இல்லை நீதிபதி கே.ஹேமா தலைமையிலான குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்து நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, கேரள அரசு அந்த அறிக்கையை வெளியிட்டது. அறிக்கையின் 290 பக்கங்களில் 44 பக்கங்கள் வெளியிடப்படவில்லை. இந்தப் பக்கங்களில், திரையுலகில் தங்களைத் துன்புறுத்தியவர்களின் பெயர்களைப் பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தங்களுக்கு நேர்ந்த துன்புறுத்தல்களை பெண்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு பக்கத்தில், பெண்கள் எப்படித் துன்புறுத்தப்பட்டனர், எவ்வளவு கொடுமையாக நடத்தப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் நீக்கப்பட்ட இரண்டாவது பகுதியில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண், “அடுத்த நாள் முதல் அதே நபருடன் கணவன் - மனைவியாக, கட்டிப்பிடித்துக் கொண்டு நடிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது, இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்த்தும் அதிர்ச்சிகரமான உதாரணம். “இதுவொரு பயங்கரமான சம்பவம். படப்பிடிப்பின்போது அவர் சந்தித்த இந்தக் கசப்பான அனுபவம் அவருடைய முகத்தில் தெரிந்தது. இதனால், ஒரு ஷாட்டுக்கு அவர் 17 டேக்குகளை எடுத்தார். இயக்குநர் அந்தப் பெண்ணை மோசமாகத் திட்டினார்” என்று அந்த அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கை வெளியானதும் கதாநாயகிகள் தங்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தி வருகின்றனர். https://www.bbc.com/tamil/articles/c303rr5pqd4o
  5. 01 SEP, 2024 | 10:43 AM தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பது நல்லிணக்க முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வடமாகாணத்திற்கான மத்திய குழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் யோசனை குறித்து அவர் கடும் கரிசனை வெளியிட்டுள்ளார். தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் திட்டம் நாடு தற்போது முன்னெடுத்திருக்கும் நல்லிணக்க முயற்சிகளிற்கு இடையூரை ஏற்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்கும்போது கொள்கைகள் தகுதிகள் குறித்தே கவனம் செலுத்தவேண்டும், இனஅடிப்படையில் அதனை ஆராயக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். இனப்பிரிவுகளிற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தமிழர்களின் நோக்கம் குறிக்கோள் பாதிக்கப்படும், தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும், இதன் காரணமாக ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகளிற்கு தென்பகுதியை குற்றம்சாட்டக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல்வாதிகளின் பொறுப்புணர்வற்ற செயற்பாடுகள் காரணமாக சாதாரண அப்பாவி தமிழ் மக்களே பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள், என தெரிவித்துள்ள அவர் தீவிரவாதத்தை தூண்டும் ஆபத்துக்களிற்கு எதிராக எச்சரித்துள்ளதுடன், அனைவரையும் உள்ளடக்கிய அமைதியான அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரிவினைக்கு முன்னுரிமை வழங்ககூடாது, வாழ்வாதாரத்தை, வாழ்க்கை தரத்தை, வலுப்படுத்துதல், வடக்கிற்கு முதலீட்டை வரவழைத்தல், அந்த பகுதியை வர்த்தக நடவடிக்கைகளிற்கான தளமாக மாற்றுதல், போன்றவை குறித்தே கவனம் செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/192527
  6. இந்தக் கட்டுரையில் உள்ள தவறைச் சுட்டி மன்னர் மன்னன் ஆற்றிய உரை 5ஆவது நிமிடத்தில் இருந்து 6.30 நிமிடம் வரை கவனிக்கவும்.
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பூமியைச் சுற்றியுள்ள மூன்றாவது புலத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய நமது புரிதலை மாற்றியமைக்க கூடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். விஞ்ஞானிகள் மூன்றாவது புலத்தை "குழப்பங்களின் முகவர்" என்று விவரிக்கின்றனர். இது பூமியைச் சுற்றியுள்ள "இருமுனை புலம்" (ambipolar field). நாசாவின் எண்டூரன்ஸ் ஆய்வுத் திட்டத்தின் மூலம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமி எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்க இந்த தொலைதூர புலம் இன்றியமையாத அங்கம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது அதனை முதல் முறையாக அளவிட்டுள்ளனர். இதுவரை, நமது கிரகம் இரண்டு தனித்துவமான ஆற்றல் புலங்களை உருவாக்குவதாக அறியப்பட்டு வந்தது. முதலாவது புவி ஈர்ப்பு புலம் (gravitational field). இது நமது வளிமண்டலத்தை பூமியுடன் கெட்டியாக பிடித்து வைத்துள்ளது. போதுமான புவியீர்ப்பு விசை இல்லை என்றால், வளிமண்டலம் பூமியை விட்டு வெளியேறிவிடும். இரண்டாவது புலம் காந்தப் புலம் (magnetic field). இது நமது கிரகத்தை சூரியக் காற்றிலிருந்து பாதுகாக்கும் கவசமாக செயல்படுகிறது. தற்போது, ஆராய்ச்சியின் பலனாக, மூன்றாவது புலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை `ஆம்பிபோலார்’ என்கின்றனர். ஆம்பிபோலார் புலம், புவியீர்ப்பு விசைக்கு எதிர் செயல்பாட்டைக் கொண்டிருப்பதால், துகள்களை விண்வெளியை நோக்கி தள்ளுகிறது. இது புவி ஈர்ப்பு மற்றும் காந்தப் புலங்களைப் போலவே இன்றியமையாதது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பழைய அனுமானம் ஒரு ஆம்பிபோலார் மின்சார புலத்தின் இருப்பு பற்றிய கற்பனை முதன் முதலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. இந்த புலம் நமது கிரகத்தின் வளிமண்டலத்தை பூமியின் வடக்கு மற்றும் தென் துருவங்களுக்கு மேலே உள்ள விண்வெளிக்குள் நுழையச் செய்யும் என்று நம்பப்பட்டது. "ஒவ்வொரு முறையும் ஒரு விண்கலம் பூமியின் துருவங்களுக்கு மேல் பறக்கும் போது, துருவ காற்று (polar wind) எனப்படும் இந்த சூப்பர்சோனிக் காற்று, விண்வெளியில் பாய்வதை நீங்கள் உணர்வீர்கள்" என்று நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தில் என்ட்யூரன்ஸ் ராக்கெட் பயணத்தின் முதன்மை ஆய்வாளர் க்ளின் கொலின்சன் கூறினார். “இந்த சூப்பர்சோனிக் காற்று விண்வெளியை நோக்கி பாய்வதற்கு காரணமான ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி அங்கே இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. ஆனால் எங்களிடம் தொழில்நுட்பம் இல்லாததால் இதற்கு முன்னர் அதை அளவிட முடியவில்லை”என்று நேச்சர் இதழில் இந்த கண்டுபிடிப்பு குறித்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் கொலின்சன் கூறுகிறார். பட மூலாதாரம்,POT படக்குறிப்பு, ஸ்வால்பார்டில் இருந்து என்ட்யூரன்ஸ் ராக்கெட் ஏவப்பட்டது இந்த கண்ணுக்குத் தெரியாத சக்தி எதைப் பற்றியது என்பதை பகுப்பாய்வு செய்ய, ஆராய்ச்சியாளர்கள் குழு என்டூரன்ஸ் ஆய்வுத்திட்டத்தை உருவாக்கியது. மே 2022 இல் அவர்கள் அதை நார்வேயின் வடக்கே உள்ள சிறிய தீவான ஸ்வால்பார்டில் (Svalbard) இருந்து ராக்கெட்டை செலுத்தினார்கள். "துருவக் காற்றின் வழியாகப் பறந்து நமக்குத் தேவையான அளவீடுகளைச் செய்யக்கூடிய உலகின் ஒரே ராக்கெட் தளம் ஸ்வால்பார்ட்" என்று பிரிட்டனில் உள்ள லெய்செஸ்டர் பல்கலைக் கழகத்தின் விண்வெளி இயற்பியலாளரும் ஆய்வின் இணை ஆசிரியருமான சுசி இம்பர் கூறினார். எண்டூரன்ஸ் 768 கிலோமீட்டர் உயரத்தை அடைந்து 19 நிமிடங்களுக்குப் பிறகு கிரீன்லாந்து கடலில் விழுந்தது. பதினைந்து நிமிட சப்ஆர்பிட்டல் பயணத்தின் போது, என்டூரன்ஸ் வெறும் 0.55 வோல்ட் என்ற அளவில் மின்சாரத் திறனில் ஏற்பட்ட மாற்றத்தை பதிவு செய்தது. “அரை வோல்ட் என்பது மிக சிறிய அளவு. அதாவது கைக்கடிகாரங்களின் சிறிய பேட்டரிகளில் இருக்கும் அதே சக்தியின் அளவு தான்" என்று கொலின்சன் விளக்குகிறார். "ஆனால் துருவ காற்று வெளியேறுவதை விளக்குவதற்கு இதுவே போதுமான அளவு" என்று அவர் மேலும் விவரித்தார். ஈர்ப்பு விசைக்கு எதிரான செயல்பாடு பட மூலாதாரம்,POT படக்குறிப்பு, ஆர்க்டிக்கிலிருந்து 768 கிலோமீட்டர் உயரத்தில் என்ட்யூரன்ஸ் ராக்கெட்டில் இருந்து வட துருவத்தின் காட்சி துருவக் காற்றில் மிகவும் பரவலாக காணப்படும் துகள்களான ஹைட்ரஜன் அயனிகள், புவியீர்ப்பு விசையை விட 10.6 மடங்கு வலிமையான வெளிப்புற விசையை இந்த ஆம்பிபோலார் புலத்திலிருந்து எதிர்கொள்கின்றன. புவியீர்ப்பு விசையை எதிராக செயல்பட அந்த ஹைட்ரஜன் துகள்கள் இது போதுமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சூப்பர்சோனிக் வேகத்தில் அந்த துகள்களை விண்வெளியில் செலுத்த இது போதுமானது என்று கருதுகின்றனர். அடிப்படையில், ஆம்பிபோலார் புலம், மேல் வளிமண்டலத்தின் ஒரு அடுக்கான அயனோஸ்பியரை வடிவமைக்கிறது. "இது ஒரு கன்வேயர் பெல்ட் போன்றது, இது இந்த வளிமண்டலத்தை விண்வெளியை நோக்கி தள்ளுகிறது" என்று கொலின்சன் விளக்குகிறார். இந்த புலம் "அம்பிபோலார்” (இருமுனைப் புலம்), ஏனெனில் அது இரு திசைகளிலும் செயல்படுகிறது. அயனிகள் எலக்ட்ரான்களை கீழ் நோக்கித் தள்ளி புவி ஈர்ப்பு விசைக்கு உட்படுத்துகின்றன. அதேநேரத்தில், விண்வெளியை நோக்கிச் செல்ல முயற்சிக்கும் எலக்ட்ரான்கள், அயனிகளை மேல் நோக்கி தள்ளுகின்றன. கூடுதலாக, இது நமது மேல் வளிமண்டலத்தில் உள்ள சார்ஜ் செய்யப்பட்ட துகள்களை அவற்றின் இயல்பை விட அதிக உயரத்திற்கு தள்ளுகிறது. இது நமது கிரகத்தின் உருவாக்கம் பற்றி இன்னும் கண்டுபிடிக்கப்படாத விஷயங்களுக்கு துவக்க புள்ளியாக அமையலாம். என்டூரன்ஸின் இந்த கண்டுபிடிப்பு, பல கேள்விகளை எழுப்புகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எடுத்துக்காட்டாக, இந்த புலத்தின் சரியான செயல்பாடு என்ன? அது நமது கிரகத்தை எவ்வாறு வடிவமைத்துள்ளது? போன்ற கேள்விகள் எழுகின்றன. க்ளின் க்ளிலின்சனின் கூற்றுப்படி, ஆம்பிபோலார் புலம் வளிமண்டலத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் மற்றும் ஒருவேளை கடல் நீரோட்டங்களையும் பாதித்திருக்கலாம் என்கிறார். இன்னும் பல விடை தெரியாத கேள்விகள் இருந்தாலும், பூமியின் இந்த மூன்றாவது ஆற்றல் புலம் முதன்முறையாக அளவிடப்பட்டது என்பது ஆய்வுக்கு பல புதிய வழிகளைத் திறக்கிறது. "வளிமண்டலத்தைக் கொண்ட எந்தக் கிரகமும் இருமுனைப் புலத்தைக் கொண்டிருக்க வேண்டும்" என்று கொலின்சன் கூறுகிறார். "இப்போது நாம் இறுதியாக அதை அளந்துவிட்டோம், காலப்போக்கில் அது நமது கிரகத்தையும் பிற செயல்பாடுகளையும் எவ்வாறு வடிவமைத்துள்ளது என்பதை அறிய முற்படுவோம்" என்று அவர் விவரித்து முடித்தார். https://www.bbc.com/tamil/articles/crlr1dwln65o
  8. எழுத்துப் பிழைக்கான காரணம் இது தான்! | மின்னம்பலம் தமிழ் படிமுறைத் தமிழின் நிறுவனர் சு.இராசரத்தினம் ஐயா அவர்களின் தெளிவுபடுத்தல். தமிழ் என்பது எளிமையான மொழி, எளிமையாகக் கற்கலாம் என "மொழியியலும் பயன்பாடும்" எனும் நூல் வழியாக தமிழர்களுக்கு வெளிப்படுத்தி உள்ளார்.
  9. வல்லினம் மெல்லினம் இடையினத்தை மிகமிகத் தவறாகச் சொல்லிக் கொடுக்கின்றனர். ண, ன, ந என சொல்லிக் கொடுக்ககூடாது. ண், ன், ந் என சொல்லிக் கொடுக்க வேண்டும். https://web.facebook.com/reel/470398872640559
  10. Published By: DIGITAL DESK 3 31 AUG, 2024 | 08:59 AM யாழில், உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு வியாழக்கிழமை (29) இரத்த வாந்தி ஏற்பட்டது. இதனால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (30) அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/192449
  11. பட மூலாதாரம்,SRI LANKA NAVY படக்குறிப்பு, ஐஎன்எஸ் மும்பை கப்பல் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 31 ஆகஸ்ட் 2024, 13:00 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீன போர் கப்பல்களும், இந்திய போர் கப்பலொன்றும் ஒரே நேரத்தில் இலங்கைக்கு வருகை தந்து, மீண்டும் தத்தமது நாடுகளை நோக்கி பயணித்துள்ளன. இந்த இரண்டு நாட்டு கப்பல்களும் கடந்த 26ஆம் தேதி இலங்கை சென்றன. கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) இலங்கையை விட்டு புறப்பட்டுச் சென்றன. இலங்கையில் இந்திய, சீன போர்க் கப்பல்கள் என்ன செய்தன? சீன போர்க் கப்பல்கள் இலங்கை வருகை சீனாவிற்கு சொந்தமான மூன்று போர்க் கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளன. “HE FEI”, “WUZHISHAN” , “QILIANSHAN” என்ற மூன்று போர்க் கப்பல்கள் இலங்கைக்கு வருகைத் தந்ததாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது. இலங்கைக்கு வருகைத் தந்த மூன்று சீன போர் கப்பல்களும், இலங்கைக்கு சொந்தமான விஜயபாகு போர்க் கப்பலுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டன. பட மூலாதாரம்,SRI LANKA NAVY படக்குறிப்பு, சீன போர்க் கப்பல் போர்க் கப்பல்களுக்கு இடையில் தகவல்களை பரிமாற்றிக் கொள்ளுதல் உள்ளிட்ட பயிற்சிகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன. அத்துடன், இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு கப்பல் தொடர்பான தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன. சீன போர்க் கப்பலில் வருகை தந்த அந்நாட்டு அதிகாரிகளை இலங்கையின் முக்கிய இடங்களுக்கு கடற்படை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேபோன்று, சீன போர் கப்பல் எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்த தெளிவூட்டல்களும் அந்த நாட்டு கடற்படை அதிகாரிகளினால் இலங்கை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது. சீன போர்க் கப்பல்கள் எத்தகையவை? Destroyer ரகத்தைச் சேர்ந்த “HE FEI” என்ற சீனாவின் போர் கப்பலானது, 144.50 மீட்டர் நீளத்தை கொண்டது. அந்த கப்பலில் 267 கடற்படை அதிகாரிகள் பயணிக்கின்றனர். எல்பிடி (Landing Platform Dock) எனப்படும் நீர்-நிலம் இரண்டிலும் செயல்படக் கூடிய கப்பல் ரகத்தைச் சேர்ந்த “WUZHISHAN” போர்க் கப்பலானது, 210 மீட்டர் நீளத்தை கொண்டது. அதில் 872 கடற்படை அதிகாரிகள் பயணிக்கின்றனர். எல்பிடி ரகத்தைச் சேர்ந்த “QILIANSHAN” போர் கப்பலானது, 210 மீட்டர் நீளத்தை கொண்டது. அதில் 334 கடற்படை அதிகாரிகள் பயணிக்கின்றனர். இதன்படி, இந்த மூன்று சீன கப்பல்களிலும் 1,473 கடற்படை அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்தனர். இந்திய போர்க் கப்பல் இலங்கைக்கு விஜயம் இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐஎன்எஸ் மும்பை’ போர்க் கப்பல் கடந்த 26ம் தேதி கொழும்பு துறைமுகத்திற்கு சென்றது. கடந்த வியாழக்கிழமையன்று அந்த போர்க் கப்பல் இலங்கையை விட்டு வெளியேறியது. இந்திய கடற்படை போர்க் கப்பலானது, இலங்கை கடற்படைக்கு சொந்தமான கஜபாகு போர்க்கப்பலுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டது. பட மூலாதாரம்,SRI LANKA NAVY படக்குறிப்பு, பயிற்சியில் ஈடுபட்ட இந்திய கடற்படை அதிகாரிகள் இரண்டு நாட்டு போர்க்கப்பல்களுக்கும் இடையில் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இலங்கையின் முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக இந்திய கடற்படை அதிகாரிகள் இலங்கை கடற்படை அதிகாரிகளினால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அதேவேளை, இரண்டு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் நட்பு ரீதியான கலந்துரையாடல்களும் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கப்பல் 163 மீட்டர் நீளம் உடையது. அந்த கப்பலில் 410 இந்திய கடற்படை அதிகாரிகள் இருந்தனர். சீன - இந்திய அதிகாரிகள் இடையில் கலந்துரையாடல் நடந்ததா? இலங்கை தலைநகர் கொழும்பு துறைமுகத்திற்கு ஒரே தருணத்தில் வருகை தந்த சீன மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு இடையில் எந்தவித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது. இலங்கை கடற்படை பேச்சாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய, பிபிசி தமிழுக்கு இதனை குறிப்பிட்டார். ''எரிபொருள், உணவு போன்ற தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையிலேயே இரண்டு நாட்டு போர்க் கப்பல்களும் இலங்கைக்கு வருகை தந்தன. அந்த சந்தர்ப்பத்திலேயே இந்த பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதை தவிர வேறு ஒன்றும் இடம்பெறவில்லை. இந்திய மற்றும் சீன கடற்படை அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவில்லை. அவர்கள் எந்த இடத்திலும் சந்திக்கவில்லை" என அவர் கூறினார். சீன ஆராய்ச்சி கப்பல் இலங்கை வந்தமைக்கு இந்தியா எதிர்ப்பு சீனாவின் சமுத்திர ஆராய்ச்சி கப்பலான ஷி யென் 6 கப்பல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கைக்கு வருகை தந்து, சமுத்திர ஆராய்ச்சியில் ஈடுபட்டது. கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இந்த ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த கப்பல் இலங்கைக்கு வருகை தந்து, ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்கு இந்தியா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. தென் இந்தியாவிலுள்ள மிக முக்கிய இடங்களை இலங்கைக்கு வருகை தரும் இந்த கப்பலினால் ஆய்வு செய்ய முடியும் என்ற அடிப்படையிலேயே இந்தியா இந்த கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக இந்தியாவின் பிரபல ஊடகங்கள் அந்த சந்தர்ப்பத்தில் செய்தி வெளியிட்டிருந்தன. இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் சீனா ஆராய்ச்சி கப்பல் தனது ஆராய்ச்சிகளை இலங்கை கடற்பரப்பில் நடத்தியிருந்தன. மூன்று சீன கப்பலின் வருகையை இந்தியா எதிர்த்ததா? சீனாவின் சமுத்திர ஆராய்ச்சி கப்பலான ஷி யென் 6 கப்பல், இலங்கைக்கு வருகை தந்த சந்தரப்பத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்ட இந்தியா, தற்போது சீனாவின் மூன்று போர் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்தமைக்கு எதிர்ப்பை பகிரங்கமாக வெளியிடவில்லை. எனினும், சீனா கப்பல்கள் இலங்கை விஜயத்தை நிறைவு செய்து, மீண்டும் நாட்டை விட்டு வெளியேறிய பின்னணியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். பட மூலாதாரம்,SRI LANKA NAVY படக்குறிப்பு, பயிற்சியில் ஈடுபட்ட சீன கடற்படை அதிகாரிகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்தது. இந்த நிகழ்வில் அதிபர் பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இரு நாடுகளுக்கு இடையிலான தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். வல்லுநரின் கருத்து என்ன? சீனாவிற்கு சொந்தமான போர் கப்பல்கள் இலங்கைக்கு வந்ததை சாதாரண விடயமாக பார்க்க முடியாது என சமூக பணி மற்றும் அமைதிக் கல்வித்துறையின் பேராசிரியர் கிளாட்சன் சேவியர் பிபிசி தமிழுக்கு கருத்து வெளியிட்டார். ''இந்தியாவிற்கு இலங்கை ஒரு நட்பு நாடு மாத்திரம் அல்ல. பாதுகாப்பு ரீதியில் இந்தியாவிற்கு இலங்கை ஒரு முக்கியமான நாடு. அதற்கு தகுந்த மாதிரியான வேலைகளை இந்தியா செய்து தான் ஆக வேண்டும். அந்த அடிப்படையில் தான் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இலங்கைக்கு சென்றுள்ளதை பார்க்கின்றோம்” என தெரிவித்தார். “பாதுகாப்பிற்காக ஒரு நாடு கப்பலொன்றை அனுப்பும்போது, இன்னுமொரு நாடும் கப்பலை அனுப்பும். இதனை வினை, எதிர்வினையாகவே பார்க்க வேண்டியுள்ளது. இதுவொரு மோதல் போக்காக மாறுமா? இல்லையென்றால், மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறுமா? என்றால், அப்படியெல்லாம் கிடையாது” என்றார். இரண்டு நாடுகளின் கப்பல்கள் வருவது கண்டிப்பாக தற்செயலாக நடந்ததாக இருக்காது என்றும் ஒரு கப்பல் நாடொன்றிற்குள் வரும் போது, உயர் மட்டத்தின் அனுமதியில்லாமல் உளவு கப்பல்களோ அல்லது ஆய்வு கப்பல்களோ வர முடியாது என்றும் அவர் கூறினார். “சீனா இந்த பிராந்தியத்தில் காலூன்ற வேண்டும் என நினைக்கின்றார்கள். அதற்கு இலங்கையை தளமாக பயன்படுத்த நினைக்கின்றார்கள். இந்த பிராந்தியத்திற்குள் நீங்கள் வந்தால் எங்களுடைய பாதுகாப்பு கப்பல்களும் அங்கு இருக்க தான் போகின்றது என கூறுவதுதான் இதன் நோக்கம் என சொல்லப்படுகின்றது." என அவர் கூறுகின்றார். வழமையான தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வதற்காகவே இந்த கப்பல்கள் இலங்கைக்குள் வந்ததாக இலங்கை கடற்படை கூறிய கருத்து தொடர்பிலும், பேராசிரியர் கிளாட்சன் சேவியர் கருத்து தெரிவித்தார். பட மூலாதாரம்,SRI LANKA NAVY படக்குறிப்பு, இலங்கைக்கு வந்த சீன கப்பல் ''ரணில் விக்ரமசிங்கவின் மிகப் பெரிய வெற்றி என்னவென்று பார்த்தால், எல்லா தரப்புகளையும் நண்பர்களாக வைத்துக்கொள்வது. அது இரானாக இருந்தாலும் சரி, யுக்ரேனாக இருந்தாலும் சரி, ரஷ்யாவாக இருந்தாலும் சரி, அது பாலத்தீனமாக இருந்தாலும் சரி. அவர்களுக்குள் மாத்திரமே மோதலே தவிர, எங்களுக்குள் கிடையாது. நாங்கள் நண்பர்களாகவே இருந்து கொள்வோம் என்று சொல்லி நண்பர்களாக வைத்துக்கொள்வதே இவருடைய வழக்கம்” என்கிறார் அவர். மேலும், “அதே வழி முறையில் தான் இந்த விடயமும் நடக்கிறது. சீனாவிற்கும் தங்களுக்கும் நேரடி பிரச்னை இல்லை, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பிரச்னை இருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை. சீனாவும் வேண்டும். இந்தியாவும் வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை நடக்கின்றது. காரணம் இல்லாமல் கப்பல் வந்தது, வந்த இடத்தில் பயிற்சி அளித்தார்கள் என்றால் நம்ப முடியாது” என்கிறார் அவர். ஒரு பாதுகாப்பு துறையிலுள்ள கப்பல் இலங்கைக்குள் சென்று வெறும் எரிபொருள் மாத்திரம் தான் நிரப்ப வந்தோம், எரிபொருள் நிரப்பும் போது பயிற்சிகளை கொடுத்தோம் என்றால், அதை நம்ப முடியாது என தெரிவித்த அவர், எல்லாமே பிராந்திய ரீதியான நிலையை தக்க வைத்துக் கொள்வதாகவே இதனை பார்க்க வேண்டும் என கூறினார். https://www.bbc.com/tamil/articles/cn47vxmk0wko
  12. இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் சதங்கள் குவித்து சாதனை படைத்தார் ஜோ ரூட்; இலங்கைக்கு வெற்றி இலக்கு 482 31 AUG, 2024 | 08:08 PM (நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் குவித்து அசத்திய ஜோ ரூட், இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் சதங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார். போட்டியின் முதலாம் நாளான வியாழக்கிழமை 33ஆவது சதத்தைக் குவித்து இங்கிலாந்துக்காக அதிக சதங்கள் குவித்த அலஸ்டயார் குக்கின் சாதனையை சமப்படுத்திய ஜோ ரூட் இன்று 34ஆவது சதத்தைக் குவித்து புதிய சாதனையை நிலைநாட்டினார். லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஜோ ரூட் குவித்த 7ஆவது டெஸ்ட் சதம் இதுவாகும். அத்துடன் ஒரே டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் முதல் தடவையாக சதங்கள் குவித்து வரலாறு ஏடுகளில் இணைந்துகொண்டார். அது மட்டுமல்லாமல் 111 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்து தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அதிவேக சதத்தைப் பெற்றார். ஜோ ரூட் 103 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து மிகவும் கடினமான 482 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடுகிறது. எண்ணிக்கை சுருக்கம் இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 427 (ஜோ ரூட் 143, கஸ் அட்கின்சன் 118, பென் டக்கட் 40, அசித்த பெர்னாண்டோ 102 - 5 விக்.,) இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 196 (கமிந்து மெண்டிஸ் 74, தினேஷ் சந்திமால் 23, ஏஞ்சலோ மெத்யூஸ் 22, மெத்யூ பொட்ஸ் 19 - 2 விக்., கிறிஸ் வோக்ஸ் 21 - 2 விக்.) இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 251 (ஜோ ரூட் 103, ஹெரி புறூக் 37, ஜெமி ஸ்மித் 26, பென் டக்கட் 24, அசித்த பெர்னாண்டோ 52 - 3 விக்., லஹிரு குமார 53 - 3 விக்., மிலன் ரத்நாயக்க 38 - 2 விக்.) https://www.virakesari.lk/article/192507
  13. படக்குறிப்பு, விசாகப்பட்டினம் கடற்கரையில் கடல் உள்வாங்குவதால் வெளிப்படும் பாறைகள் கட்டுரை தகவல் எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆகஸ்ட் 28-ம் தேதி விசாகப்பட்டினத்தில் ஆர்.கே கடற்கரைக்குச் சென்று காளிமாதா கோவில் எதிரே அமர்ந்த போது, கடல் உள்வாங்கியது போன்று இருந்தது. அதனால்தான் அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்பட்ட பாறைகள், அன்று அதிகம் தெரிந்தன. கடல் உள்வாங்கியதால் வெளியே அதிகமாக தெரிந்த பாறைகளின் மீது கடற்கரைக்கு வருபவர்கள் செல்ஃபி எடுத்து வருகின்றனர். நல்லபாபு என்ற மீனவர் சிறிய தூண்டில் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்ததை காண முடிந்தது. ஏன் பாறைகள் அதிகமாக தென்படுகின்றன என்று நல்லபாபுவிடம் கேட்டபோது, “கடற்கரை உள்வாங்கியதால், நான்கு நாட்களாக இப்படித்தான் இருக்கிறது” என்றார். ஆர்.கே கடற்கரையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடல் உள்வாங்கியது ஏன்? சூறாவளியும், சுனாமியும் இல்லாத சூழலிலும் கடல் உள்வாங்குவதற்கான காரணங்கள் என்ன? செய்தி சேகரிக்கும் பணியின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில் பிபிசி குழுவினர் ஆர்.கே கடற்கரைக்கு சென்ற போது கடல் சாதாரணமாக இருந்தது. கடற்கரையில் சுமார் ஒரு மணிநேரம் கழித்தும் கடற்கரையில் எந்த மாற்றமும் இல்லை. "கடலோர அலைகள், அலைகளின் உயரம் மற்றும் வேகம் ஆகியவற்றில் இதுபோன்ற மாற்றங்களை நாம் கவனிக்க விரும்பினால், குறைந்தபட்சம் 6 மணிநேரம் கடலைக் கவனித்தால் மட்டுமே வித்தியாசத்தைக் கண்டறிய முடியும்" என்று, ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் கடலியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் பி. சீதாராமுலு ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார். "கடல் ஒரு நாளைக்கு இரண்டு முறை உள்வாங்குகிறது. ஆனால், அது நாம் கவனிக்கும் அளவில் இல்லை. ஆனால், இப்போது கடல் உள்வாங்கியதை எல்லோராலும் கவனிக்க முடிகிறது. அதிக பாறைகள் வெளியே தெரிந்தன” என்றார். “கடந்த வாரத்தில் இருந்து கடல் உள்வாங்கியதாகத் தெரிகிறது. சில நாட்களாக இப்படி நடப்பது புதிது. ஒரு கட்டத்தில் 200 மீட்டர் வரை கடல் உள்வாங்கியிருக்கலாம். ஆனால், 400 மீட்டர் என்பது தவறான செய்தி” என்று சீதாராமுலு ரெட்டி பிபிசியிடம் விளக்கினார். என்ன காரணம்? தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனத்தின் (கிழக்கு கடற்கரை) தலைமை விஞ்ஞானி வி.வி.எஸ்.எஸ்.சர்மா கூறுகையில், “சுனாமி, சூறாவளி, கடல் வெப்பநிலையில் திடீர் மாற்றங்கள், கடல் நீரோட்டங்கள் ஒரு திசையில் இருந்து மற்றொரு திசைக்கு மாறுதல் ஆகிய காரணங்களால் கடல் உள்வாங்குகிறது” என கூறினார். ஆனால், தற்போது விசாகப்பட்டினம் கடற்கரையில் அப்படியொரு நிலை இல்லை. ஓய்வுபெற்ற பேராசிரியர் சீதாராமுலு ரெட்டி, என்னென்ன வானிலை நிகழ்வுகளில் கடல் உள்வாங்குகிறது என்பதை விளக்கினார். “ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கடல் காற்று அதிகமாக இருக்கும். இந்த காற்று கடற்கரைக்கு இணையாக வலுவாக இருக்கும்போது, அவை கடலின் மேற்பரப்பில் உள்ள தண்ணீரை இடமாற்றம் செய்து கடற்கரையிலிருந்து மீண்டும் கொண்டு செல்கின்றன. இது உடனடியாக நிகழலாம், அல்லது பல மணிநேரங்கள், நாட்கள் கூட ஆகலாம். இது உள்ளூர் வானிலையைப் பொறுத்தது,” என்று அவர் கூறினார். தற்போது தங்களிடம் உள்ள `இன்காயிஸ் விண்ட் டேட்டா' (கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம்) எனப்படும் காற்றின் வேகம் குறித்த தகவலின்படி, விசாகப்பட்டினத்தில் கடல் மேற்பரப்பில் வீசும் காற்றால்தான் கடல் உள்வாங்கியது என்றார். பட மூலாதாரம்,BSR REDDY படக்குறிப்பு, காற்று தரவுகள் கடற்கரையில் குவியும் மக்கள் படக்குறிப்பு, கடல் உள்வாங்கி, பாறைகள் வெளியே தெரிவதால், பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கடல் உள்வாங்கி, பாறைகள் வெளியே தெரிவதால், கடற்கரைக்கு வருபவர்கள் அவற்றில் ஏறி புகைப்படம் எடுக்க ஆர்வமாக உள்ளனர். இதையடுத்து, புகைப்பட கலைஞர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டுள்ளனர். “இப்போதெல்லாம் செல்போன்கள், தனிநபர் கேமராக்கள் புழக்கம் அதிகமாகி விட்டதால் கடற்கரையில் எங்களிடம் யாரும் புகைப்படம் எடுத்துக் கொள்வதில்லை. கடல் உள்வாங்கியதன் மூலம் அதிகளவில் பாறைகள் தென்பட்டிருப்பதால், இங்கு நல்ல புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, மக்கள் எங்களிடம் வருகின்றனர். அதனால்தான் நாங்கள் அனைவரும் இங்கேயே இருக்கிறோம்" என்று கடற்கரை புகைப்படக் கலைஞர் ரவி பிபிசியிடம் கூறினார். “நான் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கடற்கரைக்கு வருவேன். ஆனால், சமீப காலமாக, இதுபோன்ற பாறைகள், பாசி படிந்து இருப்பதையோ, கடல் உள்வாங்குவதையோ நான் பார்த்ததே இல்லை,'' என்றார், கடற்கரைக்கு வந்திருந்த நீரஜா. மற்ற கடற்கரைகளில் என்ன நிலை? படக்குறிப்பு, பி. சீதாராமுலு ரெட்டி, ஓய்வு பெற்ற பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம் விசாகப்பட்டினம் கடற்கரையில் மட்டும் தான் கடல் உள்வாங்கியதா அல்லது மற்ற கரைகளிலும் இது தென்பட்டதா என, ஓய்வுபெற்ற பேராசிரியர் சீதாராமுலு ரெட்டியிடம் பிபிசி கேள்வி எழுப்பியது. அவர் கூறுகையில், “விசாகப்பட்டினத்தில் ஆர்.கே கடற்கரை, கோக் பார்க், ருஷிகொண்டா, பீமிலி என ஆங்காங்கே கடல் உள்வாங்கியதை காணலாம். ஆனால், மற்ற கடலோர பகுதிகளில் இப்படி இருக்க வாய்ப்பில்லை. பூகம்பங்கள் மற்றும் சுனாமிகள் போன்ற சூழல்களில் மட்டுமே, மிகவும் தீவிரமாக கடலோரப் பகுதிகளில் கடல் உள்வாங்குகிறது. விசாகப்பட்டினத்தில் கடல் உள்வாங்கியதற்கு உள்ளூர் வானிலையே முக்கிய காரணம் என்பது தெளிவாகிறது” என்றார். மீனவர்கள் கூறுவது என்ன? படக்குறிப்பு, மீனவர் நல்லபாபு கடல் உள்வாங்கியது குறித்து வழக்கமாக அங்குள்ள மீனவர்கள் அதிக கவனம் செலுத்தவில்லை. ஆனால் கடல் உள்வாங்குவது உண்மைதான் என மீனவர்கள் நல்லபாபு, தனராஜூ ஆகியோர் தெரிவித்தனர். கடல் எப்போதெல்லாம் உள்வாங்கும் என, நல்லபாபுவிடம் கேட்டபோது, ”சமீபத்தில் இப்படி நடந்ததில்லை. கடந்த சிவராத்திரியின் போது கடல் இப்படி உள்வாங்கியதை நான் பார்த்தேன். தற்போது மீண்டும் பார்க்கிறேன்” என்று கூறினார். 400 மீட்டர் கடல் உள்வாங்கியது உண்மையா என்று தனராஜிடம் கேட்டபோது, அவ்வளவு தூரம் உள்வாங்கவில்லை என்றார். முன்னெச்சரிக்கைகள் தேவை படக்குறிப்பு, விசாகா கடற்கரை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் விசாகப்பட்டினம் வருபவர்கள் அலைகளின் தீவிரம் மற்றும் கடற்கரையின் நிலைமைகளை கண்காணிக்க வேண்டும் அல்லது அதுகுறித்த தகவல்களை அறிய வேண்டும் என்று சீதாராமலு ரெட்டி கூறினார். “கரையிலிருந்து கடல் வெகுதூரமாக இருக்கிறது என நினைத்து, கடலை நோக்கி செல்லும்போது, உள்வாங்கிய கடல் மீண்டும் வரும்போது விபத்துகள் ஏற்படும். கடல் உள்வாங்கியதால் வெளிப்படும் பாறைகள் பாசியால் மூடப்பட்டிருக்கும். அங்கு புகைப்படம் எடுக்கும் போது, வழுக்கி விழும் அபாயம் உள்ளது,'' என்றார். பெருநகர விசாகப்பட்டினம் மாநகராட்சி அதிகாரிகள் கடற்கரையில் காவலர்களை நியமித்துள்ளனர். பார்வையாளர்கள் உள்ளே செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cy761gj36vyo
  14. 31 AUG, 2024 | 08:16 AM புதுடெல்லி: பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்ற சகாப்தம் முடிந்துவிட்டதாக தான் நினைப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 'மூலோபாய புதிர்கள்: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மறுவடிவமைத்தல்' என்ற தூதர் ராஜீவ் சிக்ரியின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். அப்போது அவர் "பாகிஸ்தானுடனான இடைவிடாத பேச்சுவார்த்தையின் சகாப்தம் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். பாகிஸ்தானின் செயல்களுக்கு விளைவுகள் உண்டு. ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்தவரைஇ சட்டப்பிரிவு 370 நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதில் மாற்றமில்லை. எனவே பாகிஸ்தானுடன் என்ன வகையான உறவைப் பற்றி சிந்திக்கலாம் என்பதுதான் இன்றைய பிரச்சினை. பாகிஸ்தான் உடனான உறவைப் பொறுத்தவரை தற்போதுள்ள நிலையை தொடர்வதில் இந்தியா திருப்தி அடையலாம் என்று ராஜீவ் சிக்ரி தனது புத்தகத்தில் பரிந்துரைத்துள்ளார். சில நேரங்களில் ஆம் என்றும் சில நேரங்களில் இல்லை என்றும் இதற்கு பதில் சொல்லலாம். அமைதியாக இருப்பவர்கள் அல்ல நாங்கள். நிகழ்வுகள் நேர்மறையாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் அதற்கு நாங்கள் எதிர்வினையாற்றுவோம். ஆப்கானிஸ்தானைப் பொறுத்தமட்டில் இந்திய - ஆப்கனிய மக்களுக்கு இடையேயான உறவு வலுவானதாக இருக்கிறது. ஆப்கன் சமூகத்தின் மீது இந்தியாவுக்கு நல்லெண்ணம் உள்ளது. ஆனால் நாம் ஆப்கானிஸ்தான் எனும்போது அங்குள்ள அரசாங்கத்தின் அடிப்படைகள் குறித்து நாம் மறந்துவிடக் கூடாது என்று நான் நினைக்கிறேன். சர்வதேச உறவுகளுக்கு மதிப்பிருக்கிறது. இன்று நாம் நமது ஆப்கானிய கொள்கையை மறுபரிசீலனை செய்யும்போது நமது நலன்கள் பற்றி நாங்கள் மிகவும் தெளிவாகக் கவனிக்கிறோம். நமக்கு முன்னால் இருக்கும் 'பரம்பரை ஞானத்தால்' நாம் குழப்பமடையவில்லை. அமெரிக்க படைகள் இருக்கும் ஆப்கானிஸ்தான் அமெரிக்க படைகள் இல்லாத ஆப்கானிஸ்தானில் இருந்து மிகவும் வித்தியாசமானது. இதற்காக நாம் அந்நாட்டை பாராட்ட வேண்டும். வங்கதேசத்தைப் பொறுத்தவரை அந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அந்த நாட்டுடனான நமது உறவு மேலும் கீழுமாகவே இருந்துள்ளது. தற்போது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது பாதிப்பை ஏற்படுத்தலாம். அதேநேரத்தில் பரஸ்பர நலன்களை கண்டறிவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இதற்காக தற்போதுள்ள அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும். மியான்மருடான உறவைப் பொறுத்தவரை ஒரே நேரத்தில் அது நெருக்கமாகவும் தொலைவாகவும் உள்ளது. அங்குள்ள அரசாங்கம் மற்றும் பிற சக்திகளுக்கு இடையே ஒரு சமநிலையைக் கண்டறிய வேண்டும். ஏனெனில் அதுதான் உண்மை" என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/192447
  15. இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை : அலி சப்ரி தவறாக வழிநடத்த முயல்கின்றார் – அலன் கீனன் Published By: RAJEEBAN 31 AUG, 2024 | 01:24 PM 2000 ஆண்டு முதல் 2009 வரையில் தங்கள் உறவுகள் காணாமல்போனதாக 6047 பேர் மாத்திரமே முறைப்பாடு செய்துள்ளனர். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருப்பது தவறாக வழிநடத்தும் ஒரு நடவடிக்கையாகும் என சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கை குறித்த ஆய்வாளர் அலன் கீனன் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த எண்ணிக்கை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திய வெளிப்படைத் தன்மையற்ற அதிகாரத்துவ பொறிமுறைகளின் புள்ளிவிபரங்களை அடிப்படையாக கொண்டிருக்கலாம். 2000ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு என்பது 1970களின் பிற்பகுதியில் (இரண்டு தசாப்தங்களிற்கு முன்னர்) ஆரம்பித்த அரசாங்கத்திற்கும் தமிழ் போராளிகளிற்கும் இடையிலான கிளர்ச்சி, கிளர்ச்சி எதிர்ப்பு யுத்தத்தின் ஈவிரக்கமற்ற ஒரு சிறிய காலம் மாத்திரமே. இந்த காலப்பகுதியில் பல ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போனார்கள். தங்கள் குடும்பத்தவர்களை காணவில்லை என முறையிட்ட 6047 பேரில் சிலர் அல்லது பலர் குடும்பத்தில் பலரை இழந்திருக்கலாம் எனவே காணாமல்போனவர்களின் எண்ணிக்கை காணாமல் போனவர்கள் குறித்த முறைப்பாடுகளை விட கணிசமான அளவு அதிகமாகயிருக்கலாம். பல தசாப்தங்களாக ஆணையங்கள் குழுக்கள் மற்றும் பல்வேறு பிற தகவல் சேகரிப்பு செயல்முறைகளுக்குப் பிறகு காணாமல் போனவர்களின் பல குடும்பங்கள் சோர்வடைந்துள்ளன சலிப்படைந்துள்ளன கோபமடைந்துள்ளன தாங்களாகவே இறந்துவிட்டன அல்லது போலீஸ் மற்றும் இராணுவத்தால் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன-இதனால் புகார் தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இடதுசாரி சிங்கள ஜேவிபியின் இரண்டு கிளர்ச்சிகளின் போதும் ஆயிரக்கணக்கானவர்கள் அரசபடையினர் துணை இராணுவகுழுக்களால் காணாமலாக்கப்பட்டனர் என்பது நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இவை குறித்து மிகச்சிறிய எண்ணிக்கையிலான வழக்கு விசாரணைகள் மாத்திரம் இடம்பெற்றுள்ளன சில உண்மைகள் மாத்திரம் வெளிவந்துள்ளன. நான்கு தசாப்தகால வன்முறைகளின் போது அனைத்து இனங்கள் மதங்களையும் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு சிலரின் தலைவிதி குறித்து கூட உத்தியோகபூர்வமான தீர்மானங்கள் எதுவும் வெளியாகவில்லை அரசாங்கம் பொறுப்பேற்கவுமில்லை நீதி வழங்கப்படவுமில்லை. பல தசாப்தங்களாக உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த வேண்டுகோள்களிற்கு இலங்கை அரசாங்கங்கள் அளித்து வரும் மறுப்பு மற்றும் பொறுப்பை திசைதிருப்பும் பதிலையே இலங்கையின் வெளிவிவகார அமைச்சரும் பேட்டியில் வழங்கியுள்ளார். காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களும் இலங்கையர்களும் இதனை விட சிறந்த பதில்களிற்கு உரித்துடையவர்கள். https://www.virakesari.lk/article/192467
  16. பட மூலாதாரம்,EPA AND NISHANTH படக்குறிப்பு, கோலாலம்பூரில் நடக்கும் மீட்புப் பணியும்(இடது), 26 அடி பள்ளத்திற்குள் விழுந்த இந்திய பெண்ணும் (வலது) கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி என்ஜி பதவி, பிபிசி நியூஸ் 31 ஆகஸ்ட் 2024, 08:54 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் மலேசியா தலைநகரம் கோலாலம்பூரில் நடைபாதையில் திடீரென ஏற்பட்ட குழிக்குள் (sinkhole) விழுந்து காணாமல் போன இந்திய பெண்ணைத் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எட்டாவது நாளாகத் தொடரும் தேடுதல் பணியில், இதற்கு மேல் முக்குளிக்கும் வீரர்கள்(divers) உள்ளே செல்வது "மிகவும் ஆபத்து" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவை சேர்ந்த விஜயலக்ஷ்மி கலி என்ற 48 வயது பெண் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபாதையில் திடீரென ஏற்பட்ட குழிக்குள் விழுந்து காணாமல் போனார். அவரைத் தேடும் பணியில் 110 மீட்புப் பணியாளர்கள் கடந்த ஒரு வாரமாகத் தீவிரமாக ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் மலேசியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணியில் முதல் 17 மணிநேர தேடுதலில் ஒரு ஜோடி செருப்புகள் மட்டுமே கிடைத்தன. அதன் பிறகான முயற்சிகள் பலனளிக்கவில்லை. வெள்ளிக்கிழமை (30 ஆகஸ்ட்) உள்ளூர் நேரப்படி 04:00 மணியளவில் முக்குளிக்கும் திறனுள்ள இரண்டு மீட்புப் பணியாளர்கள் அந்தக் குழி ஏற்பட்ட பகுதிக்கு அருகே இருந்த கழிவுநீர் வடிகால் வலையமைப்பு வழியாக இறங்கித் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இருவரும் வலுவான நீரின் வேகம் மற்றும் கடினமான குப்பைகளை எதிர்கொண்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை தெரிவித்துள்ளது. குழிக்குள் இறங்கிய வீரர்களில் ஒருவர் தீயணைப்பு வீரர் மற்றொருவர் பாதாள சாக்கடை பராமரிப்புப் பணியாளர். அந்தக் குழிக்குள் செல்லும் பாதை குறுகியதாக இருந்ததால், அவர்களால் அசைய முடியவில்லை. நீண்டநேரம் உடலைத் தட்டையாக (lie flat) வைக்க வேண்டியிருந்தது என்று மீட்புக் குழுவின் இயக்குநர் ஜெனரல் நோர் ஹிஷாம் முகமது தெரிவித்தார். "கான்கிரீட் பிளாக்ஸ் போன்று திடப்படுத்தப்பட்ட குப்பைகளை உடைப்பது சாத்தியமற்றது, இது மிகவும் கடினமான பணி" என்று அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார். "எட்டு நபர்களைக் கொண்டு கயிறுகளால் அந்த திடக் குப்பைகளைத் தகர்க்க நாங்கள் முயன்றபோது முடியவில்லை,” என்றார். முன்னதாக முழு ஸ்கூபா உடையில் சாக்கடையில் இறங்கிய முக்குளிக்கும் வீரர்கள் உள்ளே ஒன்றுமே தெரியவில்லை என்றும் கனமழையுடன் போராட வேண்டியிருந்தது என்று கூறினர். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே மீட்புக் குழுவினர் அந்தக் குழியைச் (sinkhole) சுற்றியுள்ள பகுதியைத் தோண்டியெடுத்தனர் "குழிக்குள் இறங்கும்போது மிகவும் பயமாக இருந்தது, ஆனால் இது உண்மையில் ஒரு தீயணைப்பு வீரரின் கடமை; நான் பயத்தை விடுத்து, பணியில் ஈடுபட வேண்டும். மற்றதை கடவுள் பார்த்து கொள்வார்” என்று தீயணைப்பு வீரர் அலிமடியா புக்ரி இந்த வாரத் தொடக்கத்தில் உள்ளூர் செய்தித்தாள் சிமர் ஹரியனுக்கு அளித்த பேட்டியில் கூறினார். "அந்தக் குழியில் வெளிச்சம் இல்லை. முற்றிலும் இருட்டாக இருந்தது" என்று குழிக்குள் இறங்கிய மற்றொரு வீரர் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் கூறினார். "அந்த சாக்கடைக் குழி முழுவதுமாக மனிதக் கழிவுகள் மற்றும் பிற குப்பைகளால் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு முறையும் தேடும் பணியில் உள்ளே சென்று வெளியே வரும்போது, நாங்கள் உடனடியாகக் கிருமி நாசினி கொண்டு எங்களைத் தூய்மைப்படுத்தி கொள்கிறோம்” என்றார். இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற விஜயலக்ஷ்மி கலி, தனது குடும்பத்தினருடன் அருகிலுள்ள கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஜாலான் மஸ்ஜித் இந்தியா (Jalan Masjid India) தெருவில் திடீரென உருவான 8 மீட்டர் (26 அடி) ஆழமான பள்ளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, குழிக்குள் விழுந்த விஜயலக்ஷ்மி கலி குறித்த செய்திக்காக அவரது குடும்பத்தினர் காத்திருக்கும் நிலையில், மலேசிய அரசாங்கம் அவர்களுக்கான விசாவை ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே மீட்புக் குழுவினர் அந்த குழியைச் (sinkhole) சுற்றியுள்ள பகுதியைத் தோண்டியெடுத்தனர். அதே நேரத்தில் பிற மீட்புப் பணியாளர்கள் மோப்ப நாய்கள் மற்றும் கிராலர் கேமராக்களை பயன்படுத்தினர். நிலத்துக்கு அடியில் என்ன நடக்கிறது என்பதை நன்கு உணரவும், குழியை ஆய்வு செய்யவும் ரோபோடிக் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. உயர் அழுத்த நீர் ஜெட் இயந்திரங்கள், இரும்புக் கொக்கிகள், கயிறுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி கடினமான குப்பைகளை உடைக்க முயன்றுள்ளனர். செவ்வாயன்று, அதிகாரிகள் தரையில் ஊடுருவக்கூடிய ரேடார் சாதனத்தை அந்தக் குழிக்குள் செலுத்தி ஆய்வு மேற்கொண்டனர். அடுத்த நாள், பெண்ணை உள்ளிழுத்த அந்தக் குழி இருக்கும் இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் மற்றொரு குழி தோன்றியது. மலேசிய புவியியலாளர் ஒருவர், உள்ளூர் செய்தித்தாள் மலேசியாகினியிடம் பேசுகையில், தற்போது நடைபெற்று வரும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் விளைவாக இந்தப் புதிய குழி உருவாகியுள்ளது என்று கூறினார். கடந்த இரண்டு நாட்களாக, தேடுதல் பணியின் முக்கியக் குறிக்கோள், விஸ்மா யாகின் அடியிலுள்ள கழிவுநீர் பாதைகளில் இருக்கும் 15 மீட்டர் அடைப்பை அகற்றுவதாகும். மனிதக் கழிவுகள், டயர்கள், முடி மற்றும் திடப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் போன்றவற்றால் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜலான் மஸ்ஜித் இந்தியா என்னும் பகுதியில் சில இடங்களில் தேடுதல் பணி தொடர்கிறது. பொதுவாக சுற்றுலாப் பயணிகளின் வருகையால் பிரபலமான இப்பகுதி, தற்போது இந்தச் சம்பவத்தால் வழக்கத்திற்கு மாறான அமைதியுடன் காணப்படுகிறது. உள்ளூர் செய்திகளின்படி, இந்தப் பகுதியில் வியாபாரிகள் 50% முதல் 70% வரை விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளனர், சிலர் கடைகளைத் திறக்கவே இல்லை. குழிக்குள் விழுந்த விஜயலக்ஷ்மி கலி குறித்த செய்திக்காக அவரது குடும்பத்தினர் காத்திருக்கும் நிலையில், மலேசிய அரசாங்கம் அவர்களுக்கான விசாவை ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. அவர்கள் கடந்த சனிக்கிழமை இந்தியா திரும்ப இருந்தனர். அந்தக் குடும்பத்தினரின் நிலையைக் கருத்தில் கொண்டு, கோலாலம்பூரின் சிட்டி ஹாலில் நடக்க இருந்த தேசிய தின கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் மலேசியர்களிடையே அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது, திடீரென அந்தக் குழி உருவானது எப்படி எனப் பலர் கேள்வி எழுப்புகின்றனர். அதன் காரணத்தைக் கண்டறிய தணிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், மனித செயல்பாடுகள் மற்றும் காலநிலை நெருக்கடியின் கலவையால் இது நடந்திருக்கலாம் என்று ஆரம்ப அவதானிப்புகள் தெரிவிப்பதாகக் கூறினார். கூடுதல் தகவல்கள்: சிங்கப்பூரில் இருந்து கவின் பட்ல https://www.bbc.com/tamil/articles/c7v5qdelnmzo
  17. பராலிம்பிக் சக்கர இருக்கை டென்னிஸ்: முதல் சுற்றில் இலங்கையின் சுரேஷ் வெற்றி Published By: VISHNU 31 AUG, 2024 | 12:43 AM (நெவில் அன்தனி) பாரிஸ் ரோலண்ட் கெரொஸ் 9ஆம் இலக்க டென்னிஸ் அரங்கில் வெள்ளிக்கிழமை (30)நடைபெற்ற பாரிஸ் 2024 பராலிம்பிக்கிற்கான ஆண்களுக்கான சக்கர இருக்கை ஒற்றையர் டென்னிஸ் போட்டியின் முதலாம் சுற்றில் இலங்கையின் சுரேஷ் தர்மசேன வெற்றிபெற்று இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றார். ஆஸ்திரிய வீரர் ஜோசெவ் ரீக்லருக்கு எதிரான முதலாம் சுற்று போட்டியில் 2 நேர் செட்களில் சுரேஷ் தர்மசேன வெற்றிபெற்று இரண்டாம் சுற்றில் பங்கபற்ற தகுதிபெற்றார். 24 நிமிடங்கள் நீடித்த முதலாவது செட்டில் 6 - 1 என்ற புள்ளிகள் அடிப்படையில் தர்மசேன வெற்றிபெற்றார். இப் போட்டியில் சுரேஷ் தர்மசேன 4 - 1 என முன்னிலையில் இருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு சற்றுநேரத்தின் பின்னர மீண்டும் தொடர்ந்தது. இரண்டாவது செட்டில் முதல் 6 ஆட்டங்கள் முடிவில் இருவரும் தலா 3 புள்ளிகளைப் பெற்று சமநிலையில் இருந்தனர். ஆனால், அதன் பின்னர் தர்மசேன தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றிபெற்று 6 - 3 என வெற்றிபெற்றார். இந்த செட் 40 நிமிடங்கள் நீடித்தது. இரண்டாம் சுற்று செப்டெம்பர் 1ஆம் திகதி நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/192438
  18. கமிந்து மெண்டிஸ் துடுப்பாட்டத்தில் மீண்டும் பிரகாசிப்பு; ஆனால், பலமான நிலையில் இங்கிலாந்து Published By: VISHNU 31 AUG, 2024 | 12:41 AM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது போட்டியில் மிக மோசமான நிலையிலிருந்த இலங்கை, கமிந்த மெண்டிஸின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன் மீண்டெழுந்தது. இங்கிலாந்து முதலாவது இன்னிங்ஸில் குவித்த 427 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. முதல் இன்னிங்ஸ் நிறைவில் 231 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலையில் இருந்தபோதிலும் இலங்கைக்கு பலோ ஒன் கொடுக்காமல் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியது. போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அதன் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்த 25 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் மீதமிருக்க 256 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. இந்தப் போட்டியில் சதங்கள் குவித்த ஜோ ரூட், கஸ் அட்கின்சன், 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்த அசித்த பெர்னாண்டோ ஆகியோரின் பெயர்கள், வரலாற்று முக்கியம்வாய்ந்த லோர்ட்ஸ் கௌரவிப்பு (Lords Honounrs Board) பலகையில் பொறிக்கப்பட்டது. இலங்கையின் முன்வரிசை வீரர்கள் கவனக்குறைவான அடி தெரிவுகளால் விக்கெட்களைத் தாரைவார்த்தனர். ஆரம்ப வீரர்களான நிஷான் மதுஷ்க (7), திமுத் கருணாரட்ன (7), பெத்தும் நிஸ்ஸன்க (12) ஆகிய மூவரும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். (35 - 3 விக்.) அனுபசாலிகளும் முன்னாள் தலைவர்களுமான ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகிய இருவரும் அணியை மீட்டெக்க வேண்டிய கட்டாய நிலையில் இருந்தனர். அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஏஞ்சலோ மெத்யூஸ் 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அடுத்து களம் நுழைந்த அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவுக்கு லோர்ட்ஸ் அரங்கு அதிர்ஷ்டம் கொடுக்கவில்லை. அவர் ஓட்டம் பெறாமலேயே ஆட்டம் இழந்தார். (83 - 5 விக்.) மொத்த எண்ணிக்கை 87 ஓட்டங்களாக இருந்தபோது தினேஷ் சந்திமால் (23) களம் விட்டகன்றார். தொடர்ந்து பின்வரசை வீரர்களான மிலன் ரத்நாயக்க (19), ப்ரபாத் ஜயசூரிய (8), லஹிரு குமார (0) ஆகியோருடன் இணைந்து 7ஆம், 8ஆம், 9ஆம் விக்கெட்களில் முறையே 31 ஓட்டங்களையும் 35 ஓட்டங்களையும் 42 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் பகிர்ந்து அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டார். கடைசியாக ஆட்டம் இழந்த கமிந்து மெண்டிஸ் 120 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 74 ஓட்டங்களைப் பெற்றார். தனது 5ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கமிந்து மெண்டிஸ் பெற்ற 3ஆவது அரைச் சதம் இதுவாகும்.. இதுவரை அவர் 8 இன்னிங்ஸ்களில் 6 சந்தர்ப்பங்களில் 50 மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் அவற்றில் 3 சதங்கள் அடங்குகின்றன. பந்துவீச்சில் மெத்யூ பொட்ஸ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கிறிஸ் வோக்ஸ் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கஸ் அட்கின்சன் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஓல்லி ஸ்டோன் 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 358 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 427 ஓட்டங்களைப் பெற்றது. தனது இன்னிங்ஸை 81 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த கஸ் அட்கின்சன் தனது 5ஆவது டெஸ்டில் கன்னிச் சதத்தை லோர்ட்ஸ் அரங்கில் பூர்த்தி செய்து பெருமை பெற்றார். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கஸ் அட்கின்சன் 118 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 118 ஓட்டங்களைக் குவித்தார். அவர் 8ஆவது விக்கெட்டில் மெத்யூஸ் பொட்டுடன் பெறுமதிமிக்க 85 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மெத்யூ பொட்ஸ் 21 ஓட்டங்களைப் பெற்றார். போட்டியின் முதல் நாளன்று ஜோ ரூட் 143 ஓட்டங்களையும் பென் டக்கட் 40 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 102 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 89 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லஹிரு குமார 101 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/192437
  19. ஜேர்மனியில் மீண்டும் கத்திக்குத்து தாக்குதல் - ஆறுபேருக்கு காயம் - 32 வயது பெண் கைது Published By: RAJEEBAN 31 AUG, 2024 | 02:36 PM ஜேர்மனியில் கத்திக் குத்து தாக்குதலில் ஈடுபட்டு ஆறு பேரை காயப்படுத்திய 32 வயது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு ஜேர்மனியில் திருவிழாவொன்றிற்கு சென்றுகொண்டிருந்த பேருந்தில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணே கைதுசெய்யப்பட்டுள்ளார். கத்திக்குத்து தாக்குதலிற்கு இலக்கானவர்களிற்கு உயிராபத்து இல்லை இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் மத நோக்கங்கள் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் 16 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள், இவர்களில் மூவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலோனுக்கு கிழக்கே உள்ள சீகனில் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கடந்த வாரம் ஜேர்மனியில் சிரியாவை சேர்ந்த நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில் மூவர் கொல்லப்பட்டனர். https://www.virakesari.lk/article/192472
  20. பட மூலாதாரம்,PROF. RAMESH படக்குறிப்பு, பனையூர் கோவில் மூலவர் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவில் உள்ள பல கோவில்களில் குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒளி, கருவறையில் உள்ள மூலவர்களின் மீது விழும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இது எப்படிச் சாத்தியமானது? தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இதுபோல வடிவமைக்கப்பட்ட கோவில்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம் சங்கரனார் கோவிலில் செப்டம்பர், மார்ச் மாதங்களில் தலா மூன்று நாட்களில் சூரிய ஒளி மூலவர் சிலை மீது விழும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள பால தண்டாயுதபாணி கோவிலில் ஆவணி மாதத்தின் குறிப்பிட்ட தினத்தில் மூலவர் மீது சூரிய ஒளி விழுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சுவாமிமலைக்கு அருகில் உள்ள எழுத்தறிநாதர் கோவிலிலும் இதுபோல குறிப்பிட்ட தினங்களில் சூரிய ஒளி மூலவர் மீது விழுவதைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பனையபுரத்தில் உள்ள சிவன் கோவிலிலும் இதுபோல சூரிய ஒளி அங்கிருக்கும் மூலவர் மீது விழுகிறது. இந்தக் கோவிலுக்கு வேறு சில சிறப்புகளும் இருக்கின்றன. வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது என்ன? இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செங்கற்களால் கட்டப்பட்டு, பிறகு கருங்கற்களால் புனரமைக்கப்பட்டது என்கிறார் விழுப்புரம் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ். "சோழர் காலத்தில் இருந்து நாயக்கர் காலம் வரை பல்வேறு மாற்றங்களுக்கு இந்தக் கோவில் உட்பட்டிருந்தாலும் கருவறை கட்டுமானம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. ராஜேந்திர சோழனின் அனுக்கியான பரவை நங்கை நினைவாக இந்த ஊருக்கு பரவை புறம் எனப் பெயர் சூட்டப்பட்டது. அது மருவி தற்போது பனையபுரம் என அழைக்கப்படுகிறது," என்று அவர் விளக்கினார். 'இராஜ ராஜ வள நாட்டில் பனையூர் நாட்டு பொறையூர் நாட்டு தனியூர் பரவைபுரம்' என்ற கோவில் கல்வெட்டுத் தொடர் மூலம் இதை அறிய முடியும். கி.பி.1051 - 63ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த இரண்டாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டும் அதி ராஜேந்திரனின் கி.பி.1070ஆம் ஆண்டு கல்வெட்டும் இந்தக் கோவிலில் உள்ளன. "சோழர் காலத்தைச் சேர்ந்த இந்தக் கோவில் 73 சென்ட் நிலப்பரப்பில் கிழக்கு முகமாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோலின் கருவறைச் சிற்பங்கள் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்தவை. இதன் ராஜகோபுரம் 60 அடி உயரத்தில் நான்கு நிலைகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோபுரமும் இதன் அருகே உள்ள சிங்கமுகத் தூண்களும் விஜயநகர காலத்தைச் சேர்ந்தவை. இக்கோவிலின் கருவறையில் மூலவர் வட்ட வடிவ ஆவுடையாராக, கிழக்கு முகமாகக் காட்சியளிக்கிறார். கல்வெட்டுகளில் இம்மூலவர், 'கண்ணப்ப நாயனார்' என்றும் 'பரவை ஈஸ்வரம் உடைய மகாதேவர்' என்றும், 'திருப்பனங்காடு உடைய மகாதேவர்' என்றும் குறிப்பிடப்படுகிறார்," என்று கூறுகிறார் பேராசிரியர் ரமேஷ். கோவில் கட்டுவதற்கான இடத்தின் தேர்வு படக்குறிப்பு, பனையபுரம், இலவனாசூர் கோட்டை, மதுரை போன்ற இடங்களில் உள்ள ஆலயங்கள் சூரிய ஒளி கருவறையில் படுமாறு கட்டப்பட்டுள்ளன சிவன் சன்னிதிக்கு இடதுபுறத்தில் சற்று தொலைவில் அம்பிகைக்கு தனியாக ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவியின் பெயர் மெய்யாம்பிகை. புறவம்மை, சத்யாம்பிகை என்ற பெயர்களும் வழக்கில் உள்ளன. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாளில் இருந்து தொடர்ந்து ஏழு நாட்கள் சூரிய உதயத்தின்போது, சூரியக் கதிர்கள் ராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றையெல்லாம் கடந்து கருவறையில் உள்ள மூலவர் மீது விழுகின்றன. இதற்குப் பிறகு, ஒளி மெல்லக் கீழிறங்கி சிவனின் பாதத்தை அடைகிறது. இங்கே சூரிய ஒளி பாதத்தைத் தொடும் அதேவேளையில் சற்று தொலைவில் உள்ள மெய்யாம்பிகையின் சிரசின் மீதும் ஒளிக்கதிர்கள் விழுகின்றன. இப்படித் தொடர்ந்து ஏழு நாட்கள் நிகழ்கின்றன. குறிப்பிட்ட தினங்களில் சூரிய ஒளி மூலவரின் மீது படுவதுபோல கோவில்கள் எப்படி வடிவமைக்கப்படுகின்றன? அதற்குக் காரணமாக கோவில்களைக் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்ட முறையைக் குறிப்பிடுகிறார் இந்து சமய அறநிலையத்துறையின் உயர்மட்ட குழுவைச் சேர்ந்த ஸ்தபதி தட்சிணாமூர்த்தி. படக்குறிப்பு, தென்னிந்தியாவில் உள்ள பல கோவில்களில் குறிப்பிட்ட தினங்களில் சூரிய ஒளி, அந்தக் கோவில்களின் மூலவர் மீது விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன "கோவில்களை கட்டுவதற்கு ஏற்ற இடங்கள் அக்காலத்தில் மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டன. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட இடங்களில் வானியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இதுபோன்ற கோவில்கள் கட்டப்படுகின்றன," என்கிறார் அவர். பனையபுரம், இலவனாசூர் கோட்டை மதுரை போன்ற இடங்களில் கட்டப்பட்டுள்ள ஆலயங்கள் சூரிய ஒளி கருவறையில் படுமாறு கட்டப்பட்டுள்ளன. இம்மாதிரி கோவில்களில் "கிழக்கு நோக்கிய வகையில் கருவறை அமைக்கப்படும். சூரிய ஒளி விழும் இடத்திற்கான சோதனை பல மாதங்கள் நடைபெற்று, அதன் அடிப்படையிலேயே அந்த இடத்தில் கருவறை நிர்மாணிக்கப்படுகிறது. பனையபுரம் சிவன் கோவில் அப்படித்தான் கட்டப்பட்டது" என்கிறார் ஸ்தபதி தட்சிணாமூர்த்தி. ஸ்தபதிகள் கூறுவது என்ன? ஸ்தபதி தட்சிணாமூர்த்தியின் கூற்றுப்படி, இதுபோன்ற அமைப்புடன் கோவிலைக் கட்டுவதற்கு ஸ்தபதிகளுக்கு நேர்த்தியும் மிகுந்த பொறுமையும் தேவைப்படும். "வெகு நாட்கள் காத்திருந்து, குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒளிக் கதிர்கள் விழும் இடத்தைத் தேர்வு செய்து, கருவறையை அமைத்தனர்." பெரும்பாலும் சித்திரை மற்றும் பங்குனி மாதங்களில் சூரிய ஒளி மூலவர் மீது விழுமாறுதான் இதுபோன்ற கோவில்கள் கட்டப்படும். சில கோவில்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தூண்களில் சூரிய ஒளி விழுமாறும் கட்டப்பட்டுள்ளன. படக்குறிப்பு, பெரும்பாலும் சித்திரை மற்றும் பங்குனி மாதங்களில் சூரிய ஒளி மூலவர் மீது விழுமாறுதான் இதுபோன்ற கோவில்கள் கட்டப்படும் ஆனால், தற்காலத்தில் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்ற நோக்கில் கோவில்கள் கட்டப்படுவதால் இதுபோல கட்டுவதில்லை என்கிறார் தட்சிணாமூர்த்தி. கன்னியாகுமரியில் "மகாத்மா காந்தியின் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் 1956இல் ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி சூரியக் கதிர்கள் காந்தியின் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் விழும்படி இம்மண்டபம் கட்டப்பட்டிருக்கிறது" என்கிறார் தட்சிணாமூர்த்தி. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், மதுரை தெப்பக்குளம் அருகில் உள்ள முக்தீஸ்வரர் கோவில், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு திருமூலநாதர் கோவில், வேலூர் மாவட்டம் மேல்பாடி சோளீஸ்வரர் சிவன் கோவில் ஆகியவையும் இதுபோல குறிப்பிட்ட தினங்களில் சூரிய ஒளி மூலவரின் மீது விழும்படி கட்டப்பட்டுள்ளன. https://www.bbc.com/tamil/articles/c0e852y1rejo
  21. “தங்கள் உறவுகள் காணாமல்போனதாக 6000 பேர் மாத்திரமே முறைப்பாடு செய்துள்ளனர்” - சர்வதேச ஊடகத்திற்கு அலி சப்ரி பேட்டி – ஒரு இலட்சம் பேர் என உங்களிற்கு யார் சொன்னது என சீற்றம் - மேற்குலகின் முட்டாள்தனம் என விமர்சனம் Published By: RAJEEBAN 31 AUG, 2024 | 08:26 AM 2000 ஆண்டு முதல் 2009 வரையில் தங்கள் உறவுகள் காணாமல்போனதாக 6047 பேர்மாத்திரமே முறைப்பாடு செய்துள்ளனர் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்குகிழக்கில் மக்கள் நீதிக்காக காத்திருக்கின்றனர் ஒரு இலட்சம் பேர் வரை - அவர்கள் பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்பட்டமை குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என ஜேர்மனியின் டிடபில்யூவின் செய்தியாளரின் கேள்விக்கு சீற்றத்துடன் பதிலளித்துள்ள அலி சப்ரி உங்களிற்கு எவ்வாறு இந்த எண்ணிக்கை கிடைத்தது. யார் இதனை சொன்னது? இது வெறும் குப்பை மேற்குலகின் முட்டாள்தனம் என தெரிவித்துள்ளார். கேள்வி:- இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்றதுயுத்த குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் தேவை காணப்படுகின்றது – அது குறித்த பரிந்துரைகள் உள்ளன, உண்மை நல்லிணக்க ஆணைக்குழு குறித்து பேசப்படுகின்றது ஆனால் இலங்கை எப்போதும் அதனை நிராகரித்துள்ளது ஏன்? தமிழ் சமூகத்தினருக்கு அர்த்தபூர்வமான நீதியை வழங்குவது எந்த நிலையில் உள்ளது? அலிசப்ரி:- நாங்கள் தமிழ் சமூகத்துடன் போர்புரியவில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.நாங்கள் உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக போராடினோம். இந்த அமைப்பு இரண்டு தலைவர்களை அழித்தது- ராஜீவ்காந்தி. இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச. பல அமைச்சர்கள் தமிழ் தலைவர்கள். இந்த அமைப்பு தற்கொலை குண்டு தாக்குதலில் ஈடுபட்டது300க்கும் மேற்பட்ட தற்கொலை குண்டுதாக்குதல்களில் ஈடுபட்டது. கடந்த காலங்களில் எவரும் இவ்வாறு செயற்பட்டதில்லை. செய்தது இல்லை. அவர்கள் 11. 12 வயது சிறுவர்களை பிடித்து இழுத்துச்செல்வார்கள். அவர்களிற்கு சையனைட் வில்லையை வழங்கி தற்கொலை தாக்குதலில் ஈடுபடுத்துவார்கள். ஆகவே நாங்கள் அவர்களிற்கு எதிராக போரிடவேண்டும், அவர்களின் செய்கைகளை அனுமதிக்க முடியாது. சில மேற்குலக நாடுகள் வேறு நாடுகளிற்கு சென்று போரிடுகின்றன, இது எங்களின் ஆட்புல ஒருமைப்பாடு நாங்கள் அதனை செய்யவேண்டும். ஆனால் அதன் பின்னர் நாங்கள் சமாதானத்தை ஏற்படுத்தியுள்ளோம், சரணடைந்த 12000க்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளிற்கு புனர்வாழ்வளித்துள்ளோம்.. அவர்கள் எங்கள் சமூகத்தின் ஒரு பகுதியினர். நாங்கள் போரிட்டவேளை இராணுவத்திடமிருந்த நிலங்களில் 99 வீதத்தினை நாங்கள் உரியவர்களிடம் - மக்களிடம் கொடுத்துள்ளோம். ஆகவே நிறைய விடயங்கள் இடம்பெறுகின்றன. மேற்குலகில் வாக்குவங்கி அரசியல் என சொல்லப்படும் ஒன்று உள்ளது புலம்பெயர் தமிழர்களில் சிலர் அவர்களின் வாக்குகள் முக்கியமானதாக விளங்கும் பகுதிகளில் சென்று குடியேறியுள்ளனர். ஆகவே அந்த நாடுகளின் இலங்கை தொடர்பான கொள்கை முற்று முழுதாக இந்த புலம்பெயர் தமிழர்களால் தீர்மானிக்கப்படுகின்றது. நாங்கள் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டோம் வெளிநாட்டவர்கள் எங்கள் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம். நாங்கள் என்ன செய்திருக்கின்றோம்? நாங்கள் காணாமல்போனவர்கள் அலுவலகத்தை அமைத்திருக்கின்றோம். தங்கள் அன்புக்குரியவர்களை காணவில்லை என முறைப்பாடளித்த 6075 பேரில்( 2000 - 2009)5776 பேர் அலுவலகத்தை தொடர்புகொண்டுள்ளனர். அதாவது 96 வீதமானவர்கள் இது இலங்கை அதிகாரிகளின் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது. நாங்கள் இந்த விடயத்தில் செயற்படுகின்றோம். அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்தவுள்ளோம், நாங்கள் அது குறித்து வர்த்தமானியில் அறிவித்துள்ளோம். நாங்கள் உள்நாட்டு பொறிமுறையை முன்வைக்கவுள்ளோம், அதன் மூலம் தீர்வை வழங்குவோம். நாங்கள் ஏனையவர்கள் வந்து இதற்கு தீர்வை வழங்குவதற்கு அனுமதிக்கப்போவதில்லை. இலங்கை குறித்து தங்களின் நிலைப்பாடுகளை முன்வைப்பவர்கள் காசா குறித்த தங்களின் நிலைப்பாட்டை ஆய்வு செய்யவேண்டும். காசாவில் என்ன நடக்கின்றது, யார் அவர்களிற்கு இராஜதந்திர பாதுகாப்பை வழங்குகின்றார்கள்? ஆயுதங்களை வெடிமருந்துகளை வழங்குகின்றார்கள்? கேள்வி- ஆனால் நாட்டின் வடக்குகிழக்கை சேர்ந்த மக்கள் இன்னமும் நீதிக்காக காத்திருக்கின்றார்கள்? அவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சம் என தெரிவிக்கப்படுகின்றது பலவந்தமாக காணாமலாக்கப்பட்டமை குறித்து அவர்கள் குற்றம்சாட்டுகின்றார்கள்? இதற்கு என்ன காரணம்? இந்த விடயம் குறித்து விசாரணை செய்ய ஆணைக்குழு தேவை? நீதியான விசாரணை தேவை? ஆனால் நீதி நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருகின்றனவே? இதற்கான காரணங்கள் என்ன? பதில்- உங்களிற்கு எவ்வாறு இந்த எண்ணிக்கை கிடைத்தது. யார் இதனை சொன்னது? இது வெறும் குப்பை மேற்குலகின் முட்டாள்தனம். கேள்வி:- கடந்த காலங்களில் மனிதர்கள் புதைக்கப்பட்ட பாரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவே? பதில்- ஆம் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனித புதைகுழிகள் என்பதை அடிப்படையாக வைத்து ஒரு இலட்சம் என்ற முடிவிற்கு எப்படி வருவீர்கள்? இதனையே நான் உங்களிற்கு தெரிவித்தேன், நாங்கள் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து ஒரு பொறிமுறையை உருவாக்கியுள்ளோம், அந்த இலக்கங்களை நாங்கள் ஐநாவிடமிருந்தே பெற்றுக்கொண்டோம், செஞ்சிலுவை சங்கத்தின் எண்ணிக்கை இல்லை. அவை அனைத்தின் அடிப்படையிலும் 2000 முதல் 2009 வரை 6407 பேர் மாத்திரமே தங்களின் அன்புக்குரியவர்கள் காணாமல்போயுள்ளனர் என முறைப்பாடு செய்துள்ளனர். நீங்கள் ஒரு விடயத்தை புரிந்துகொள்ளவேண்டும் இலங்கை படையினரில் 4000 பேர் காணாமல்போயுள்ளனர், அவர்கள் நடவடிக்கைகளின் போது காணாமல்போனவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் மோதலின் போது கொல்லப்பட்டவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். நீங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் மிகவும் அமைதியான அமைப்பு என கருதுகின்றீர்களா? கேள்வி - நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை. யுத்தத்தின் பின்னர் பல பொறிமுறைகள் உருவாக்கப்பட்டன ஏன் இலங்கையால் எதனையும் சாதிக்க முடியவில்லை என்றே நான் கேட்கின்றேன்? பதில்- ஒரு இலட்சம் பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்பது மிகவும் தவறான விடயம் 6004 பேர் மாத்திரமே காணாமல்போயுள்ளனர். நாங்கள் காணாமல்போனோர் அலுவலகத்தை அமைத்துள்ளோம் 97000 பேர் அந்தஅலுவலகத்திற்கு சென்றுள்ளனர். நாங்கள் அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். ஒரே இரவில் இவ்வாறான குழப்பமான பிரச்சினைக்கு எங்களால் தீர்வை வழங்க முடியாது. கேள்வி - ஆனால் 15 வருடங்களாகிவிட்டதே பதில் - என்ன 15 வருடங்கள் - நீங்கள் கனடாவை கேளுங்கள் 200 வருடங்களின் பின்னர் தனது சுதேசிய மக்களிடம் மன்னிப்பு கோருகின்றது. நெதர்லாந்து எங்களின் தொல்பொருட்களை 300 வருடங்களின் பின்னர் திருப்பி தந்தது. 15 வருடங்கள் என்பது நீண்ட காலமா? நாங்கள் பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளோம். 96 வீதமான நிலத்தை திருப்பி கொடுத்துள்ளோம்? 12917 பேருக்கு புனர்வாழ்வளித்துள்ளோம். முழு உட்கட்டமைப்பையும் உருவாக்கினோம். இலங்கை படையினர் 26000 பேரை இழந்தனர். ஆனால் நாங்கள் விடுதலைப்புலிகளின் 12000 உறுப்பினர்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தவில்லை. இது அரசியல் மோதல் கைமீறிப்போய் பயங்கரவாத அமைப்பாக மாறியது. ஏன் அவர்கள் எங்களை ஏனைய விடயங்களை செய்யுமாறு அழுத்தம் கொடுக்கின்றனர்? கேள்வி - நீங்கள் இணைந்து வாழ்வது பற்றி பேசுகின்றீர்கள்? ஆனால் இலங்கையின் பல பகுதிகளிற்கும் சென்ற போது நான் இலங்கையின் தென்பகுதியில் மேற்கில் பல அபிவிருத்திகள் இடம்பெறுவதையும் ஆனால் வடக்கு கிழக்கில் நீங்கள் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் எதனையும் பார்க்கவில்லை வேலைவாய்ப்பின்மை காணப்படுகின்றது - இரு நாடுகள் போல தோற்றமளிக்கின்றதே? நில ஆக்கிரமிப்பு குறித்த குற்றச்சாட்டுகளும் காணப்படுகின்றன - இலங்கையின் கிழக்கில் நான் பல விவசாயிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன் அவர்கள் இராணுவம் முன்னர் இராணுவத்திலிருந்து தற்போது விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு தங்கள் நிலத்தை இராணுவம் வழங்கியுள்ளது என தெரிவித்தார்கள்? சில விடயங்கள் நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளன இதனை பற்றி என்ன சொல்லவிரும்புகின்றீர்கள்? பதில்- வடக்குகிழக்கில் அபிவிருத்தி வேகமாக இடம்பெறவேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் மொனராகலைக்கு சென்றாலும் இதனையே பார்ப்பீர்கள். இது இலாபத்துடன் தொடர்புடைய விடயம் மக்கள் இலாபம் கிடைக்குமா என்ற அடிப்படையிலேயே முதலீடு செய்வார்கள். கொழும்பிற்கும் வடக்கு கிழக்கிற்கு இடையிலான தொலைவு காரணமாகவும் உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாகவும் மக்கள் அங்கு செல்கின்றார்கள் இல்லை. இதன் காரணமாகவே புலம்பெயர்ந்தவர்கள் இங்கு வந்து முதலீடு செய்யவேண்டும். நாங்கள் மீள்சக்திதுறையில் இந்திய முதலீடு குறித்து ஆராய்ந்து வருகின்றோம். திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, காங்கேசன்துறை அபிவிருத்தி இந்தியாவையும் இலங்கையையும் இணைப்பது குறித்தும் ஆராய்கின்றோம். இதன் காரணமாக மக்களின் நடமாட்டங்களை அதிகரித்து அப்பகுதியில் வாழ்க்கை தரத்தை அதிகரிக்கலாம். நீஙகள் உங்கள் பயணத்தின் போது வீதிகள் சிறந்த நிலையில் இருப்பதை அவதானித்திருப்பீர்கள். பொதுகட்டமைப்பு உள்ளது அரசாங்கத்தினால் அதனை மாத்திரம் செய்ய முடியும். நாங்கள் அனைத்தையும் செய்துள்ளோம் அரசாங்க உட்கட்டமைப்புகள் சிறப்பாக உள்ளன சிறந்த வீதிகள் உள்ளன. மிக நவீன மருத்துவமனைகள் உள்ளன நாங்கள் பெரும் பணத்தை செலவழித்துள்ளோம். கிளிநொச்சி காங்கேசன்துறையில் மிகச்சிறந்த மருத்துவமனைகளை உருவாக்கி வருகின்றோம். பாடசாலைகளை உருவாக்குகின்றோம் இணைய தொடர்புள்ளது அரசாங்கத்தினால் இதனை மாத்திரம் செய்ய முடியும். இதற்கு அப்பால் தனியார் துறையே பொறுப்பு அவர்கள் வர்த்தக ரீதியில் இது சாத்தியமான விடயமா என்ற அடிப்படையிலேயே பார்ப்பார்கள். இதன் காரணமாக உலகின் சில நாடுகளில் சிறந்த நிலையில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் தொடர்ந்தும் தனிநாட்டிற்காக குரல்கொடுப்பதற்கு பதில் இலங்கை மக்களில் ஒரு பகுதியினரை தவறாக வழிநடத்தி மோதலில் ஈடுபடுத்துவதற்கு பதில் இலங்கைக்கு திரும்பி வாருங்கள் இந்த உட்கட்டமைப்பை பாருங்கள் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள் வேலைவாய்ப்பினை உருவாக்குங்கள் மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துங்கள். கேள்வி- டிடபில்யூ இந்த வருடம் விவரணச்சித்திரமொன்றை வெளியிட்டிருந்தது - அதில் சித்திரவதைகளில் ஈடுபட்ட இலங்கையின் உயர் இராணுவ அதிகாரிகள் குறித்தும் அவர்கள் ஐநா அமைதிப்படையில் இணைந்து பணியாற்றியமை குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஐநா இது பற்றி ஏதாவது குறிப்பிட்டிருந்ததா? பதில்- உலகில் மிகவும் மதிக்கப்படும் படையணிகளில் இலங்கை இராணுவத்தினரும் உள்ளனர்! யுத்தத்தின் இறுதியில் விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பொதுமக்களை பயன்படுத்தியவேளை நாங்கள் விடுதலைப்புலிகளை தோற்கடித்தவேளை பொதுமக்கள் இராணுவத்தினரிடமிருந்து தப்பியோடவில்லை படையினரை நோக்கியே ஓடினார்கள்! பாதுகாப்பு என்பது இலங்கை படையினரின் கரங்களிலேயே கிடைக்கும் என்பது அவர்களிற்கு தெரியும். தமிழில் - ரஜீபன் https://www.virakesari.lk/article/192446
  22. Published By: DIGITAL DESK 3 31 AUG, 2024 | 08:49 AM மீற்றர் வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண்ணொருவர் கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த சயந்தன் கேதீசா (வயது 28) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் மீற்றர் வட்டிக்கு கடன் பெற்று கடை ஆரம்பித்துள்ளார். இருப்பினும் வியாபாரம் இல்லாத நிலையில் கடையினை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், வாங்கிய கடனை அடைக்க முடியாமையினால், கடன் வழங்குனர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் இன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/192448
  23. Published By: VISHNU 31 AUG, 2024 | 01:37 AM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்படல்களால் தோற்றுவிக்கப்படும் பாதுகாப்பற்ற உணர்வு காணாமலாக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மாறாக அது அவர்களது ஒட்டுமொத்த சமூகத்தையும் கூட்டாகப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரெஞ்ச், நாட்டில் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு பாதிக்கப்பட்ட தரப்பினரின் துன்பத்தையும், ஆற்றாமையையும் மேலும் அதிகப்படுத்துவதாக விசனம் வெளியிட்டுள்ளார். வருடாந்தம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரெஞ்சினால் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை நினைவுகூரும் இவ்வேளையில், இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் உண்மையை வெளிப்படுத்துவதும், அவற்றால் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை உறுதிசெய்வதும் மிக அவசியம் என்பதை நினைவுறுத்துகின்றோம். அதேபோன்று சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழான குற்றமான வலிந்து காணாமலாக்கப்படல்கள் இடம்பெறுவதற்கோ அல்லது அதனை சகித்துக்கொள்வதற்கோ இனி இடமில்லை என்ற உறுதியை இந்நாளில் மீளப்புதுப்பித்துக்கொள்வோம். இலங்கையில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காகப் பல தசாப்தகாலமாகக் காத்திருக்கிறார்கள். வலிந்து காணாமலாக்குதல் என்பது பல்வேறு மனித உரிமைகளை மீறத்தக்க மிகமோசமான குற்றச்செயலாகும். அதன்மூலம் ஏற்படக்கூடிய துன்பம் மற்றும் பாதிப்பு என்பன பல அடுக்குகளைக் கொணடதாக இருக்கிறது. வலிந்து காணாமலாக்கப்படல்களால் தோற்றுவிக்கப்படும் பாதுகாப்பற்ற உணர்வு காணாமலாக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மாறாக அது அவர்களது ஒட்டுமொத்த சமூகத்தையும் கூட்டாகப் பாதிக்கும். தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு பாதிக்கப்பட்ட தரப்பினரின் துன்பத்தையும், ஆற்றாமையையும் மேலும் அதிகப்படுத்துகின்றது. வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் சார்ந்த விடயத்தில் கடந்த சில தசாப்தங்களாக இலங்கை முன்னேற்றகரமான நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றது. வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தில் கையெழுத்திடல், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தை ஸ்தாபித்தல் என்பன அதில் உள்ளடங்குகின்றன. எது எவ்வாறிருப்பினும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல நகர்வுகளை மேற்கொள்ளவேண்டியிருக்கிறது. காணாமல்போனோர் பற்றிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், உண்மையைக் கண்டறிவதற்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதற்கு வழங்கப்பட்டுள்ள பரந்துபட்ட அதிகாரங்களை செயற்திறன்மிக்கவகையில் பயன்படுத்தவேண்டும். முல்லைத்தீவில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகள் கடந்த ஜுலை மாதம் முழுமையாகப் பூர்த்திசெய்யப்பட்டன. இலங்கையில் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் முழுமையாக அகழ்வுப்பணிகள் பூர்த்திசெய்யப்பட்ட முதலாவது மனிதப்புதைகுழி இதுவாகும். அதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான பதில்களை வழங்கக்கூடியவகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என நாம் நம்புகின்றோம். முல்லைத்தீவு மனிதப்புதைகுழி விவகாரத்தில் அடையப்படக்கூடிய குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம், பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு உதவும் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/192440
  24. Published By: VISHNU 30 AUG, 2024 | 11:12 PM (நா.தனுஜா) இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் அவர்களுக்குரிய பதில்களை அறிந்துகொள்வதற்கும், பொறுப்புக்கூறலைப் பெறுவதற்குமான உரித்தைக் கொண்டிருக்கிறார்கள் என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். வருடாந்தம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனை முன்னிட்டு தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், தாம் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உண்மையையும் நீதியையும் கோரும் சமூகங்களுடன் உடன்நிற்பதாகத் தெரிவித்திருக்கிறார். அதுமாத்திரமன்றி தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறியாமல் இருப்பதன் சுமை மிக அழுத்தமானது எனக் கவலை வெளியிட்டிருக்கும் அவர், இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் அவர்களுக்குரிய பதில்களை அறிந்துகொள்வதற்கும், பொறுப்புக்கூறலைப் பெறுவதற்குமான உரித்தைக் கொண்டிருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். https://www.virakesari.lk/article/192436
  25. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்துவதில் சிக்கல்களைச் சந்திக்கும் நடிகர் விஜய் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/ACTORVIJAY கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்கவில்லை. இருப்பினும் உறுப்பினர் சேர்க்கை முன்பே தொடங்கியது. இப்போது தேர்தல் முடிந்து தமிழ்நாடு அரசியல் மாநிலத்தை நோக்கித் திரும்பியுள்ள நிலையில் கொடி அறிமுகம், முதல் மாநாடு என்று விஜய் வேகம் காட்டத் தொடங்கியிருக்கிறார். இந்நிலையில், அவருக்கு எதிரான சக்திகளும் மாநாட்டிலேயே தங்கள் எதிர்ப்பைத் தொடங்கிவிட்டதாக கூறுகின்றனர் நடிகர் விஜய்க்கு நெருக்கமான நிர்வாகிகள். கோட் படம் வெளியான பிறகு மாநாடு தேதி அறிவிப்பா? மாநாட்டை திருச்சியில் நடத்த முடிவு செய்திருந்த தவெகவினர் அங்கு இடம் கிடைக்காததால் சேலம், ஈரோடு எனப் பல்வேறு ஊர்களில் முயன்றனர். தற்போது விழுப்புரம் மாவட்ட விக்கிரவாண்டியில் இடம் தேர்ந்தெடுத்து அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அங்கே காவல்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் உள்ளது. விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான சுமார் 80 ஏக்கர் நிலம் மாநாட்டை நடத்த வசதியாக இருக்கும் என அவர்கள் கருதுகிறார்கள்.‌ எனவே, விழுப்புரம் மாவட்ட காவல் அதிகாரிகளிடமும், ஆட்சியரிடமும் அனுமதி கேட்டு மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. “சுமார் 100 ஏக்கர் பரப்பிலான இடம் எங்கும் கிடைக்கவில்லை, அப்படியே கிடைத்தாலும் பல்வேறு அரசியல் தலையீடுகள் இருந்தன” என்றார் பிபிசியிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஒருவர். மாநாட்டு இடத்துக்கு காவல்துறை அனுமதி கிடைக்குமா? பட மூலாதாரம்,ACTOR VIJAY/INSTAGRAM படக்குறிப்பு,தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாநாடு நடத்துவதற்கான இடம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கிய மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகத்தினர் அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பிபிசி தமிழிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், “மாநாடு நடத்தும் இடத்திற்கு அனுமதி கொடுக்கும் இறுதி முடிவை மாவட்ட ஆட்சியரகமே எடுக்கும். அதற்கு முன்பாக காவல்துறையில் தடையில்லாச் சான்றிதழ் கேட்கப்படும். அதற்காக ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இன்னும் இடம் குறித்து முடிவு செய்யவில்லை,” என்றார். மேலும் பொதுவெளியில் நடத்தப்படும் மாநாடுகளுக்கான அனுமதியைப் பற்றி விவரித்த அவர், தேர்வு செய்யப்படும் இடத்தில் இருக்க வேண்டிய அம்சங்கள் குறித்து விளக்கினார். அவை, மாநாடு நடத்தும் இடம் விசாலமாக இருக்க வேண்டும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் மக்கள் உடனடியாக வெளியேறுவதற்கான வழி இருக்க வேண்டும் அதிக அளவிலான கூட்ட நெரிசல் ஏற்படாமல் பங்கேற்கும் அளவில் வசதியாக இருக்க வேண்டும் பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வந்தால் அவர்கள் பயணிக்கும் வேன் போன்ற பெரிய வாகனங்களை நிறுத்த இடம் இருக்க வேண்டும் முறையான குடிநீர், கழிவறை வசதி இருக்க வேண்டும் பெண்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் இந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று விவரித்தார் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பக அதிகாரி. இப்போது தமிழக வெற்றிக் கழகத்தினர் தேர்வு செய்துள்ள இடம், சுங்கச் சாவடி கேட் அருகிலும், நெடுஞ்சாலைக்கு அருகிலும் இருக்கிறது. மேலும், அந்த இடத்தைச் சுற்றிலும் மூடப்படாத விவசாயக் கிணறுகள் அதிகம் உள்ளன. இந்தக் காரணங்களால் சிக்கல் எழுந்திருப்பதாகத் தெரிகிறது. மாநாடு திங்கள்கிழமை நடப்பது ஏன்? பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE படக்குறிப்பு, கட்சிக் கொடி, கட்சியின் கீதம் ஆகியவற்றை அறிமுகம் செய்து முடித்த கையோடு முதல் மாநாடு குறித்தும் அறிவித்தார் நடிகர் விஜய் "நாங்கள் விடுமுறைக்குக் கூடும் கூட்டம் அல்ல, விடுதலைக்காகக் கூடும் கூட்டம் என்று காட்டுவதற்குத்தான் திங்கள் கிழமையாக இருந்தாலும் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்கிறோம்" என்றார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி. மேலும், "மாநாட்டை நடத்த விக்கிரவாண்டியைத் தேர்வு செய்ததில் சென்டிமென்ட் எதுவும் கிடையாது. எனினும் கட்சியின் முதல் அரசியல் நகர்வு அங்குதான் நடந்தது. அம்பேத்கருடைய பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட தலைவர் அறிவுறுத்திய போது, எங்கள் பொதுச்செயலாளர் விழுப்புரத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது” என்றார் அவர். கட்சியின் கொடியேற்ற நிகழ்ச்சிகள், உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக முடுக்கிவிடப்பட்டு இருப்பதாகக் கூறும் லயோலா மணி கட்சியின் கட்டமைப்புப் பணிகளில் சிரமம் ஏதும் இல்லை என்றார். "விஜய் மக்கள் இயக்கம் ஏற்கெனவே 12 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. அதன் கட்டமைப்பு அப்படியேதான் உள்ளது. கட்சிப் பெயரைச் சொல்லிப் போட்டியிடாவிட்டாலும் 122 கவுன்சிலர்கள், 2 பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளாட்சிகளில் வெற்றி பெற்றுள்ளனர். மக்கள் இயக்கத்தின் மாணவர், மகளிர், வழக்கறிஞர், தொழிலாளர், மீனவர் என 10 அணிகள் உள்ளன. இவற்றில் பல நிலைகளில் நிர்வாகிகள் மட்டும் 5 லட்சம் பேர் உள்ளார்கள்." இவைபோக, தொகுதி வாரியான பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள் எனக் கூறும் லயோலா மணி, கட்சிப் பொறுப்புகளை அறிவிப்பதுதான் மாநாட்டில் நடக்கும் என்று தெரிவித்தார். அதோடு, இந்த அறிவிப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் கூடுதலாக இருக்கும் என்றும் மாநாட்டில் தங்கள் கொள்கை - செயல்பாட்டு பிரகடனத்தைத் தலைவர் அறிவிப்பார்‌ என்றும் கூறினார். பட மூலாதாரம்,LOYOLA MANI, TVK படக்குறிப்பு, லயோலா மணி, செய்தித் தொடர்பாளர் மேலும், பிபிசி தமிழிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத த.வெ.க நிர்வாகி ஒருவர், "எங்கள் தலைவர் விஜய் முதல்வராக வேண்டும். எங்கள் கொள்கைகளைச் செயல்படுத்த வேண்டும். அதற்காகக் கடுமையாக உழைப்போம்" என்றார். ஆனால், கூட்டணிக்கான முகாந்திரம் எதுவும் இல்லை என்று உறுதியாகக் குறிப்பிடும் நிர்வாகிகள் முதன்மை சக்தியாக தமிழக வெற்றிக் கழகம்தான் இருக்கும் என்றும் கூறினார் லயோலா மணி. உறுப்பினர் எண்ணிக்கை மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார் அவர். மேலும், "எங்கள் தலைவர் இதுவரை 2 முறை நிர்வாகிகளை நேரில் சந்தித்துள்ளார். கான்ஃபிரன்ஸ் கால் வழியாக மாவட்ட நிர்வாகிகளிடம் பேசுகிறார். இந்த மாநாட்டில் மாற்றுக் கட்சிகளில் இருந்து ஈர்க்கப்படும் நிர்வாகிகளைச் சேர்ப்பதும் இடம்பெறும்" என்றார். நடிகர் விஜய் திடீரென அரசியலுக்கு வரவில்லை என்றும் கூறும் லயோலா மணி, காவிரி மேலாண்மை வாரியம், நீட் தேர்வு பிரச்னை, தூத்துக்குடி படுகொலைகள், இலங்கைத் தமிழர் பிரச்னை, பண மதிப்பிழப்பு "ஆகியவற்றுக்குக் குரல் கொடுத்துள்ளதாகவும்" கூறுகிறார். மேற்கொண்டு பேசிய அவர், "மக்கள் இயக்கத்தில் இருந்து ரொட்டி-பால் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்களை ஏற்கெனவே செயல்படுத்தி வருகிறோம். எங்கள் தலைவரின் சமூகநீதிப் பார்வை வெளிப்படையாகத் தெரிகிறது. எனவே எங்கள் கட்சி மீது ஈர்ப்பு உள்ளது" என்று கூறினார்‌. விஜய்யின் அரசியல், மாநாட்டில் விளக்கப்படுமா? பட மூலாதாரம்,TVK HQ படக்குறிப்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்த விஜய் விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்துவதால் பாதகம் ஏதும் இல்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பிரியன். “திமுக, மதிமுக தங்கள் மாநாடுகளை நடத்திய இடம்தான் விழுப்புரம் மாவட்டம். மாநாட்டில் அவர் என்ன பேசப் போகிறார் என்பதுதான் முக்கியம்," என்கிறார் அவர். தமிழ்நாட்டில் எந்தவொரு அரசியல் கட்சியும் "இளைஞர்களைத் திரட்டுவதற்குத் திணறும் நிலையில்" தற்போது கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு, ரஜினிக்கு இணையான ரசிகர் கூட்டம் இருப்பதை மறுக்க முடியாது என்கிறார். அவர்களில் 15 - 35 வயதுக்குள்ளாகப் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். விஜய்யை நடிகராக ஏற்றுக்கொண்ட இவர்கள், அரசியல் தலைவராக ஏற்றுக் கொள்வார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறுகிறார் பிரியன். விஜய் இதுவரை சமூக நீதி குறித்து விரிவாக சில விஷயங்களைப் பேசுகிறார். ஆனால் அது மட்டுமே போதாது. நாட்டின் ஒவ்வொரு முக்கிய விஷயத்திலும் அவரது நிலைப்பாடு என்ன என்பதை மக்களிடம் விளக்க வேண்டும். "அந்த விளக்கம் இந்த மாநாட்டில் கிடைத்தால்தான் மக்கள் ஆதரவு அவருக்கு இருக்கிறதா இல்லையா என்பது தெரியும்," என்றும் அவர் மேற்கோள்காட்டினார். https://www.bbc.com/tamil/articles/cg79e4kpe5po

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.