Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. தேர்தலின் போது நிவாரணங்கள், சம்பள உயர்வுகள் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்புக்கள் தேர்தல் சட்டங்களை மீறுவதாகும் ; ட்ரான்ஸ்பரன்சி! 27 AUG, 2024 | 11:12 AM 2024 ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பொது வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கண்காணித்து வரும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது, தேர்தலுக்கு முந்தைய நிவாரணங்கள் மற்றும் சம்பள உயர்வுகள் வழங்குதல் தொடர்பான அரசாங்கத்தின் அண்மைக்கால தீர்மானங்கள் தேர்தல் சட்டங்களை தெளிவாக மற்றும் வேண்டுமென்றே மீறுவதாக அமைகின்றன எனச் சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அனைத்து அரச ஊழியர்களுக்கும் 2025 ஜனவரி முதல் ரூ. 25,000 வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுடன் சேர்த்து, 24 முதல் 35 சதவீத சம்பள உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது. இலங்கையில் சுமார் 1.5 மில்லியன் பொது சேவைப் பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் வாக்காளர்கள். இது தவிர, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.12,000 வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்குவதாகவும் அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளது. மீனவர்களுக்கு எரிபொருள் மானியமும், தேயிலை பயிர்ச்செய்கையாளர்களுக்கு உர மானியமும் ஆகஸ்ட் 22 முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் அண்மையில் ரூ. 1,700 ஆக உயர்த்தப்பட்டது. புதிதாக வாக்குறுதியளிக்கப்பட்ட மானியங்கள் மற்றும் சம்பள உயர்வுகளுக்கான நிதியை எந்த வழியில் திரட்டப் போகிறது என்பதை அரசாங்கம் எங்கும் விளக்கவில்லை. எவ்வாறாயினும், பொதுமக்கள் அல்லது பொது அதிகாரிகளுக்கான மானியங்கள், சம்பள உயர்வுகள் அல்லது நன்மைகளை வழங்குவதை எதிர்க்கவில்லை, மாறாக அவை செயல்படுத்தப்படும் நேரத்தை ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா வலியுறுத்துகிறது. தேர்தல் காலத்தில் ஒரு வேட்பாளரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, ஊக்குவிக்கவோ அல்லது தடுக்கவோ பொது வளங்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று சட்டம் தெளிவுபடுத்துகிறது. இந்த முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கணிசமான எண்ணிக்கையிலான முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 23, வெள்ளிக்கிழமை வரை, பொது வளங்களைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 80 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா சமர்ப்பித்துள்ளது. ஆணைக்குழுவின் தலையீட்டினால் இவ்வாறான பல மீறல் செயற்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆணைக்குழு துரித நடவடிக்கைகளை எடுத்தமைக்காக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா பாராட்டுகிறது. நாட்டின் ஒரு முக்கிய தருணமான ஜனாதிபதித் தேர்தலை அணுகும் போது, பொது நிதியை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் குறிப்பிட்ட வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பாக அதிகரித்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்து ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் 2394/56 சுற்றறிக்கைகள் / வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டல்களை தெளிவாக மீறுவதாகும். சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலின் நேர்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நடைமுறைகளைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா கடுமையாக வலியுறுத்துகிறது. ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் தற்போதைய ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கத்தினால் இவ்வாறான செயற்பாடுகளை தொடர்வது, தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக நிறைவேற்று அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதாகும். ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனமானது, வேட்பாளர்களுக்கான சம வாய்ப்பை இழக்கும் அனைத்து செயல்களையும் கண்டிக்கிறது. தேர்தல்களின் முக்கியமான காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறும் எந்தவொரு நடவடிக்கையும் பிரஜைகளுக்கு சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் வாக்களிக்கும் உரிமையை வழுவிப் போகச் செய்வதோடு அதன் மூலம் ஜனநாயக செயன்முறையை சிதைக்கின்றது. நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்களை உறுதி செய்வதற்கும் ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும் உடனடியான நடவடிக்கைகளை எடுக்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா கோரிக்கை விடுக்கிறது. https://www.virakesari.lk/article/192090
  2. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் இருப்பதால் கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலத்திரனியல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் கையிருப்பு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் கையிருப்பில் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு விநியோகிக்கப்பட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களில் 23 சதவீதமானவை மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அவசர காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுவதாக அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/308411
  3. ஜனாதிபதி தேர்தல் - அனுரகுமாரவிற்கு சாதகமான நிலை - கருத்துக்கணிப்பு 27 AUG, 2024 | 11:52 AM ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்காவிற்கான சாதகநிலை அதிகரித்துள்ளதாக சுயாதீன கருத்துக்கணிப்பொன்று தெரிவித்துள்ளது. இன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த்பொலிசி நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அனுரகுமார திசநாயக்கவிற்கான சாதக நிலை ஜூன் மாதத்தில் காணப்பட்டதை விட 29 புள்ளிகள் அதிகரித்துள்ளதாக இன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த்பொலிசி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கான சாதகநிலைமை 40 புள்ளிகள் அதிகரித்துள்ளது,சஜி;த் பிரேமதாசவிற்கான சாதகநிலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது எனஇன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த்பொலிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/192106
  4. ரஷ்யா – உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. உக்ரைனின் மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது. இதனால், உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022 பெப்ரவரி முதல் போர் நடந்து வருகிறது. கடந்த 6-ம் திகதி ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் 1,263 சதுர கி.மீ. பரப்பளவை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியது. அப்போதுமுதல் இரு நாடுகள் இடையே போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது நேற்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சரடோவ் நகரில் 38 மாடிகள் கொண்ட ‘வோல்கா ஸ்கை’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் 28-வது மாடியில், வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ட்ரோன் பயங்கர வேகத்தில் மோதி வெடித்து சிதறியது. அப்போது, அந்த தளம் மட்டுமின்றி, அதற்கு கீழே, மேலே இருந்த (27, 29-வது மாடிகள்) தளங்களும் நிலநடுக்கம் ஏற்பட்டதுபோல குலுங்கின. இதில் ஒரு பெண் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். 3 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. கட்டிட இடிபாடுகள் தரையில் விழுந்ததில், 10 கார்கள் சேத மடைந்தன. அல்கய்தா தீவிரவாதிகள் கடந்த 2001 செப்டம்பர் 11-ம் திகதி விமானங்களை கடத்தி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடங்கள் மீது மோதினர். இதே பாணியில் அடுக்குமாடி குடியிருப்பு மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. “உக்ரைன் ராணுவம் மொத்தம் 20 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு ட்ரோன், அடுக்குமாடி குடியிருப்பை தாக்கியது. மற்ற ட்ரோன்கள் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்க முயன்றன. ரஷ்ய எல்லையில் அத்துமீறி பறந்த அனைத்து ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்திவிட்டோம்’’ என்று ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், ஒடெசா உள்ளிட்ட 12 பெருநகரங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று பலமுனை தாக்குதல்களை நடத்தியது. குறிப்பாக, உக்ரைனின் மின் கட்டமைப்புகளை குறிவைத்து 100 ஏவுகணைகள் வீசப்பட்டன. ரஷ்ய போர் விமானங்கள், 100 ட்ரோன்களும் மின் கட்டமைப்புகளை தாக்கி அழித்தன. இதன்காரணமாக உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. குடிநீர் விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உக்ரைன் பிரதமர் டெனிஸ் கூறும்போது, “ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்’’ என்று தெரிவித்தார். எதிரிகளை உள்ளே வரவழைத்து அவர்களை சுற்றிவளைத்து தாக்கும் வியூகத்தை ரஷ்யா பின்பற்றுவதாக தெரிகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் 5,800-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய ராணுவம் தற்போது நடத்தியுள்ள தாக்குதலில், உக்ரைனின் மின் விநியோக கட்டமைப்பு பெரும்பாலும் அழிந்துவிட்டது. இதை சீரமைக்க பல வாரங்கள் ஆகும் என்று சர்வதேச பாதுகாப்பு துறை நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்தியா சார்பில் அமைதி மாநாடு? – ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூன் 15, 16-ம் தேதிகளில் சுவிட்சர்லாந்தில் அமைதி உச்சி மாநாடு நடத்தப்பட்டது. இதில் அமெரிக்கா உட்பட 92 நாடுகள் பங்கேற்றன. ஆனால், ரஷ்யா புறக்கணித்ததால், மாநாடு தோல்வியில் முடிந்தது. இந்த சூழலில், இந்தியா சார்பில் 2-வது அமைதி உச்சி மாநாடு நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்னோட்டமாகவே, கடந்த ஜூலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும், சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் பிரதமர் மோடி சந்தித்து, போரை நிறுத்துவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/308435
  5. பாகிஸ்தானில் பயங்கரவாதிகளால் 23 பயணிகள் கடத்திக் கொலை 26 AUG, 2024 | 01:28 PM இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகளால் 23 பயணிகள் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்ற பேருந்துகள், பிற வாகனங்களை நிறுத்தி குறிப்பிட்ட சில இனத்தவரை மட்டும் பயங்கரவாதிகள் கடத்திக் கொலை செய்துள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், முசகேல் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், இன்று (திங்கட்கிழமை) அதிகாலை பயணிகள் பேருந்து, லாரி, வேன் ஆகியவைகளை பயங்கரவாதிகள் வழிமறித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, வாகனங்களில் இருந்தவர்களின் அடையாள அட்டைகளை அவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். அதில் குறிப்பிட்ட ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்ற பயங்கரவாதிகள், அவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் காயமடைந்துள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் வசிக்கும் குறிப்பிட்ட இனத்தவரை குறி வைத்த இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், “பஞ்சாப் மாகாணத்தை பலுசிஸ்தானுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் வாகனங்களை நிறுத்தி சில பயணிகளை கடத்திச் சென்றனர். பின்னர் அவர்களை சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து, 10 வாகனங்களுக்கு தீ வைத்தும் எரித்துள்ளனர். பஞ்சாபிற்குச் செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன, மேலும் பஞ்சாபைச் சேர்ந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டு சுடப்பட்டனர்” எனத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை பலுசிஸ்தான் - பஞ்சாப் நெடுஞ்சாலையில் நடந்திருக்கின்றன. பலுசிஸ்தான் பிரிவிணைவாதிகள் பஷ்துன் இனத்தவரை இவ்வாறு படுகொலை செய்வது பாகிஸ்தான் அரசுக்கு நீண்டகால சவாலாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய சம்பவமும் இதே பாணியில் பலுச் இனத்தவரை விட்டுவிட்டு பஷ்துன் இனத்தவரை மட்டும் கண்டுபிடித்து நடத்தப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. https://www.virakesari.lk/article/192018
  6. கொக்கைன் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டார் டிக்வெல்ல இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் நிரோஷன் டிக்வெல்ல கொக்கைன் போதைப் பொருள் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார். தேசிய விளையாட்டு ஒழுக்காற்று குழுவில் அவர் தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. தாம் கொக்கைன் போதைப் பொருளை பயன்படுத்தியமையை இந்த விசாரணைகளின் போது அவர் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு எதிராக விதிக்கப்படவுள்ள தண்டனை தொடர்பில் எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இந்தமுறை இடம்பெற்ற லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போது இலங்கை ஊக்கமருந்து பயன்பாட்டுக்கு எதிரான முகவரகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது நிரோஷன் டிக்வெல்ல ஊக்க மருந்தைப் பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/308303
  7. Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 05:08 PM சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். செல்லத்துரை விமலநாதன் (வயது 66) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றிக்கு சுவிஸ் நாட்டில் இருந்து விடுமுறையில் வருகை தந்த ஒருவர் தங்கியிருந்துள்ளார். குறித்த வீட்டில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த நபரும், அவரது உறவினரும் இரவு மது அருந்திய நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது, சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்தவரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் இவ் இடத்திலேயே மரணமடைந்துள்ளார். இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சம்வவ இடத்திற்கு சென்ற கனகராயக்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் 60 வயது குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/192058
  8. இன்று சர்வதேச நாய் தினம் நாய்களுக்கும் – மனிதர்களுக்கும் இடையில் இருக்கும் ஆழமான பாசத்தை போற்றும் வகையில் சர்வதேச நாய் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26-ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த தினம் கொண்டாடப்படுவதற்கான முக்கிய நோக்கம் ஒரு குறிப்பிட்ட ஹை ப்ரீட் நாய்களை காசு கொடுத்து வாங்கி வளர்ப்பதை விட, ஆதரவற்று இருக்கும் நாய்களையும் தத்தெடுத்து வளர்ப்பதை மக்களிடையே ஊக்குவிப்பதும் ஆகும். தவிர இனம், அளவு, பாலினம் அல்லது வயது உள்ளிட்டவற்றை பொருட்படுத்தாமல் அனைத்து நாய்களின் நலனை உறுதி செய்வதும் இந்நாளின் முக்கிய நோக்கம். விலங்குகள் மீட்பு வழக்கறிஞர், நாய் பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளரான Colleen Paige என்பவர் கடந்த 2004-ல் சர்வதேச நாய் தினத்தை அறிமுகப்படுத்தினார். இவர் ஆகஸ்ட் 26-ஆம் திகதி Sheltie என்ற 10 வயதான நாயை தத்தெடுத்ததன் நினைவாக குறிப்பிட்ட இந்த தேதியே சர்வதேச நாய் தினம் கொண்டாட தேர்வு செய்யப்பட்டது. பெட் ஷாப்-பில் நாய்களை வாங்கும் போது லாபமே முன்னிலையாக இருக்குமே தவிர, அவற்றின் நலன் இருக்காது. தெரு நாய்கள் என்றால் பலரும் புறக்கணிக்கிறார்கள். ஆனால் அவற்றுக்கு சிலர் செய்யும் கொடுமைகள் அவ்வப்போது செய்திகளில் வெளியாகி நம்மை அதிர்ச்சியடைய செய்கின்றன. தெருவில் வளரும் அல்லது வளர்த்து கைவிடப்பட்ட நாய்களுக்கு பாசம், சத்தான உணவு மற்றும் சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை. எனவே இவற்றை தத்தெடுப்பது சிறந்த முடிவாக இருக்கும். நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு செய்வதில் கிராமப்புறங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு நகர்ப்புறங்களில் மட்டுமே செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. நாய்களின் சுகாதாரத்தை கணக்கில் கொள்ளும் போது கூடவே மனிதர்களுக்கு சேர்த்து மிக பெரிய ஆபத்தாக இருப்பது ரேபிஸ். ஏனென்றால் இதனால் ஆண்டுதோறும் சுமார் 50,000 பெருக்கும் மேல் மரணிக்கிறார்கள். நாய்களில் ரேபிஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி இயக்கம் இன்னும் தீவிரமாக இருக்க வேண்டும் என்பதை இந்த தரவு தெளிவுபடுத்துகிறது. பள்ளிகள், குடிசைப்பகுதிகள் மற்றும் பல சமூகங்கள் மத்தியில் ஒரு நாய் அல்லது விலங்கு துன்பத்தில் இருப்பதை கண்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தனிநபர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என்பது விலங்கு நல ஆர்வலர்களின் நீண்டநாள் கோரிக்கை. https://thinakkural.lk/article/308369
  9. மிக வெளிப்படையாக தெரிகிறது! 3 சீன கப்பல்கள் வந்துள்ளன. ஆனால் ஒரு இந்தியக் கப்பல் தான் நட்போடு பயிற்சி கொடுக்க வந்துள்ளது!!
  10. Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 04:54 PM யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (26)அதிகாலை உயிரிழந்துள்ளார். காரைநகரை சேர்ந்த ப.ஐங்கரன் என்பவரே உயிரிழந்துள்ளார். தனது மகனை தனியார் வகுப்பில் இருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த வேளை, பிறவுண் வீதியில் நேற்றிரவு 8.45 மணியளவில் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/192052
  11. பட மூலாதாரம்,X/@ARIVALAYAM படக்குறிப்பு, திமுகவில் "ஏகப்பட்ட பழைய மாணவர்கள்" என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசியிருந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 26 ஆகஸ்ட் 2024, 13:57 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மூத்த தலைவர்கள் குறித்து பேசிய கருத்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் “ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கிறார்கள்” என்று ரஜினி பேசினார். முதல்வர் மு.க ஸ்டாலினின் மகனும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று சில தமிழக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் ரஜினியின் கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. திமுகவில் உள்ள நெருடல்களை ரஜினியின் கருத்து பிரதிபலித்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், ரஜினி பேசியதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என திமுகவை சேர்ந்த டி கே எஸ் இளங்கோவன் கூறியுள்ளார். ரஜினிகாந்த் என்ன பேசினார்? தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உட்பட பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் திமுகவின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். விழா மேடையில் உதயநிதி ஸ்டாலின், எ.வ வேலு உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், “புதிய மாணவர்களை எளிதாக சமாளித்து விடலாம். இங்க ஏகப்பட்ட பழைய மாணவர்கள் உள்ளனர். அதுவும் சாதாரணமான பழைய மாணவர்கள் அல்ல. அசாத்தியமானவர்கள். யாரும் ஃபெயில் ஆனவர்கள் இல்ல. எல்லாரும் ரேங்க் வாங்கிட்டு கிளாஸ் விட்டு போக மாட்டேனு இங்கேயே இருப்பவர்கள் '' என்று பேசினார் மேலும் அவர்,'' துரைமுருகன்னு ஒருத்தர் இருக்காரு. கலைஞர் கண்ணுலயே விரல் விட்டு ஆட்டினவர். அவர்கிட்ட ஏதாவது விஷயம் சொன்னால் ‘சந்தோசம்’ என்று சொல்வார். நல்லா இருக்கு என்று சந்தோசம் சொல்கிறாரா, என்னடா இப்படி பண்றீங்கன்னு சந்தோசம் சொல்கிறாரா என்று புரியவே புரியாது” என்று கூறி விட்டு மேட்டையில் அமர்ந்திருந்த முதல்வரை பார்த்து, “ஸ்டாலின் சார் ஹாட்ஸ் ஆஃப் டு யூ” என்றார். அப்போது அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. ரஜினிகாந்த் பேசிய பிறகு மேடையில் உரையாற்றிய முதல்வர் மு.க ஸ்டாலின், “ரஜினிகாந்த் என்னைவிட ஒரு வயது மூத்தவர், அவரது அறிவுரைகளை ஏற்கிறேன். அவர் கூறியதை நான் முழுவதுமாக புரிந்து கொண்டேன்.” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார். பட மூலாதாரம்,X/@ARIVALAYAM படக்குறிப்பு,அமைச்சர் எ வ வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். இந்தநிலையில் அமைச்சர்கள் துரைமுருகனும் உதயநிதி ஸ்டாலினும், ரஜினியின் பேச்சு குறித்து முரண்பட்ட கருத்துகளை தெரிவித்தனர். மூத்த அமைச்சர்களை வைத்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் கஷ்டப்படுகிறார் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அமைச்சர் துரைமுருகன், “அதே மாதிரிதான் மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி போய், தாடி வளர்த்து, பற்கள் விழுந்து, சாகுற வயதில் நடிப்பதால், இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்ன செய்வது?” என்று பதிலளித்தார். மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இளைஞர்கள் நம் பக்கம் வருவதற்கு தயாராக இருக்கிறார்கள். நாம் தான் அவர்களுக்கு வழிவிட்டு, அரவணைத்து வழிநடத்த வேண்டும். நேற்று ரஜினிகாந்த் பேசும் போது எதற்கு தெரியுமா அதிக கைதட்டல் கிடைத்தது. நான் சொல்லக் கூடாது. நான் கூறினால், மனதில் எதையோ வைத்துக் கொண்டு சொல்வதாக நினைத்துக் கொள்வீர்கள்.” என்றார். 'திமுகவுக்குள் அதிருப்தி இருப்பது உண்மையே' - அரசியல் விமர்சகர்கள் பட மூலாதாரம்,X/@ARIVALAYAM படக்குறிப்பு, நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அமைச்சர்கள் ஓய்வு பெற்ற மூத்தப் பேராசிரியரும் அரசியல் விமர்சகருமான வீ. அரசு பிபிசி தமிழிடம், “ரஜினிகாந்த் நோக்கத்துடன் கூறியதாக தெரியவில்லை. திமுகவில் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் பேசப்பட்டத்தை அவரும் மேடையில் பேசியிருக்கலாம். ஆனால் திமுகவுக்குள் இந்த மோதல் இருப்பது உண்மையே. சில நாட்கள் முன்பு, எந்தெந்த திமுக அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று சமூக வலைதளத்தில் ஒரு பட்டியல் வலம் வந்தது. அதில் உதயநிதிக்கு ஆதரவு என கருதப்படும் இளம் அமைச்சர்களின் பெயர்கள்தான் இருந்தன. கட்சிக்குள்ளே இருந்த புகைச்சலை ரஜினி பொதுவெளியில், எளிய மொழியில் பேசியுள்ளார்” என்றார். தான் பேசியது இப்படி ஒரு சர்ச்சையாகும் என்று ரஜினியே நினைத்திருக்க மாட்டார் என்று மூத்தப் பத்திரிகையாளர் பிரியன் பிபிசி தமிழிடம் கூறினார். “ஆனால் அவர் கூறியது உண்மையே. இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்காததால், எல்லா மட்டத்திலும் திமுகவில் அதிருப்தி உள்ளது. பூனைக்கு யார் மணி கட்டுவது என்று திமுகவுக்குள் யோசித்துக் கொண்டிருந்தார்கள், ரஜினி அதை அவர்கள் மேடையிலேயே செய்துள்ளார். ரஜினி சீனியர்கள் குறித்து பேசிய போது அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் அதை வரவேற்று கை தட்டினர்'' என்றார். இந்த கருத்து பரிமாற்றத்தை தொடர்ந்து, இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்தும் துரைமுருகனும், தங்கள் நட்பு எப்போதும் தொடரும் என்று கூறி, இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். “துரைமுருகன் எனக்கு நீண்ட கால நண்பர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் வருத்தமில்லை, எங்கள் நட்பு தொடரும்” என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். “எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக்க வேண்டாம். நாங்கள் எப்போதும் போல் நண்பர்களாகவே இருப்போம்” என்றார் துரைமுருகன். எதிர்க்கட்சிகள் என்ன கூறுகின்றன? இந்த விஷயத்தில் எதிர்கட்சிகளும் தங்களது கருத்தை கூற தவறவில்லை. பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே அண்ணாமலை “ துரைமுருகன், எ.வ.வேலு போன்றவர்கள் இருக்கும் போது, அரியணை உதயநிதி ஸ்டாலின் கைக்கு போகும் போது கலவரம் வெடிக்கும் என்பதை ரஜினிகாந்த் சுட்டிக் காட்டியுள்ளார். உதயநிதி பொறுப்புக்கு வந்தால், தனது மகன்கள் அடுத்தது பதவிக்கு வரலாம் என்ற நம்பிக்கையில் மூத்த அமைச்சர்கள் ஜால்ரா அடிக்கின்றனர்” என்று கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே பி முனுசாமி, “ஸ்டாலின் நினைத்ததை ரஜினி கூறுகிறார், ரஜினி கூறுவதை உதயநிதி வழிமொழிகிறார். கட்சிக்கு நீண்ட காலமாக உழைத்த இரண்டாம் நிலை தலைவரை தந்தையும் மகனும் சேர்ந்து அவமானப்படுத்துகிறார்கள். கட்சியில் உள்ள சீனியர்களை வெளியேற்ற முடியாத நிலையில், ரஜினியை பேசவிட்டு சீனியர்களை அவமானப்படுத்தியிருப்பதாக எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது” என்று பேசியிருந்தார். பட மூலாதாரம்,X/@KPMUNUSAMY படக்குறிப்பு, முதல்வர் ஸ்டாலின் நினைப்பதை தான் ரஜினி பேசுகிறார் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே பி முனுசாமி தெரிவித்துள்ளார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறை பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற ராமு மணிவண்ணன், “ரஜினிகாந்த் இந்த கருத்தை திமுக மீதான விமர்சனமாக கூறினாரா அல்லது ஆக்கப்பூர்வமான கருத்தாக கூறினாரா என்று அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும். ரஜினிகாந்த் விமர்சனமாக கூறி இருந்திருந்தால் அது பாஜகவுக்கு சாதகமானதாக இருக்கும்” என்றார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்ற கருத்து திமுக தொண்டர்களிடமும் இருக்கிறது. ஆனால், இந்திய அரசியலில் ஓய்வு என்பதே கிடையாது. ஆட்சியிலும் கட்சியிலும் கடைசி வரை இருப்பார்கள். ரஜினியை வைத்து இந்த கருத்துகளை சொல்ல வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை. மேலும் மூத்த தலைவர்களை எங்கே அனுப்ப முடியும்?'' என்கிறார் திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பிபிசி தமிழிடம், “ரஜினி பேசியதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. நாங்கள் எங்களுக்குள் ஜாலியாக பேசிக் கொண்டோம். அதில் வேறு அர்த்தம் எதுவும் இல்லை. திமுகவில் என்ன நடந்தாலும் அது குறித்து கருத்து கூறுவதற்கு பலர் காத்திருக்கிறார்கள். அவர்கள் பேசிக் கொண்டேதான் இருப்பார்கள்” என்றார். https://www.bbc.com/tamil/articles/cq6r0mqq03do
  12. கொழும்பில் நங்கூரமிட்டுள்ள இந்திய நாசகாரி போர் கப்பல் இந்திய கடற்படையின் போர் நாசகாரி கப்பலான ஐ.என்.எஸ். மும்பை மூன்று நாள் விஜயமாக இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்நிலையில், குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமான வரவேற்பு வழங்கியிருந்தனர். இந்த விஜயத்தின் மூலம் குறித்த கப்பலின் மாலுமிகள் ஓய்வெடுப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அத்துடன், கொழும்பு மற்றும் காலியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களுக்கும் அவர்கள் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/308408
  13. இந்திய போர்க்கப்பலை தொடர்ந்து கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ள 3 சீன போர்க் கப்பல்கள்! Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 04:37 PM சீன இராணுவ கடற்படைக்குச் சொந்தமான 3 போர் கப்பல்கள் இன்று திங்கட்கிழமை (26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. "HE FEI", "WUZHISHAN" மற்றும் "QILIANSHAN" ஆகிய 3 போர் கப்பல்களை கடற்படை மரபுகளுக்கு அமைவாக இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். "HE FEI" 144.50 மீட்டர் நீளமுள்ள போர் கப்பலாகும். கேப்டன் சென் ஜுன்ஃபெங்கின் தலைமையில் 267 பணியாளர்களை கொண்டுள்ளது. "WUZHISHAN" 210 மீட்டர் நீளமுள்ள போர் கப்பலாகும். கேப்டன் ஃபீ ஜாங்கால் தலைமையில் 872 பணியாளர்களை கொண்டுள்ளது. "QILIANSHAN" 210 மீட்டர் நீளமுள்ள போர் கப்பலாகும். கேப்டன் சியோங் பிங்ஹோன் தலைமையில் 334 பணியாளர்களை கொண்டுள்ளது. சீன இராணுவ கடற்படைக்குச் சொந்தமான முப்படை போர்க்கப்பல்களின் கட்டளை தளபதிகள் இன்றையதினம் மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவை சந்திக்க உள்ளனர். இரு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில், இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர் நிகழ்ச்சிகளில் இந்தக் கப்பல்களின் பணியாளர்கள் பங்கேற்க உள்ளனர். அத்துடன், கப்பல்களின் பணியாளர்கள் கொழும்பில் தங்கியிருக்கும் போது நாட்டின் சில சுற்றுலா தலங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். மேலும், இலங்கை கடற்படையினருக்கு கப்பல்களின் செயல்பாட்டு செயல்பாடுகள் பற்றிய விளக்கக்காட்சிகளில் பங்கேற்கவும் வாய்ப்பு உள்ளது. கொழும்பு கடற்கரையில் இலங்கை கடற்படைக் கப்பலுடன் பாசேஜ் பயிற்சிக்குப் பிறகு (பாசெக்ஸ்) மூன்று போர்கப்பல்களும் 29ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/192044
  14. Published By: RAJEEBAN 26 AUG, 2024 | 05:13 PM வடகிழக்கில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் காணாமல்போகச்செய்தல் ஆட்கடத்தல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுவோம் என தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்ளிட்ட அடக்குமுறை சார்ந்த அனைத்து சட்டங்களையும் இல்லாதொழித்து அனைத்து மக்களினதும் சுதந்திரத்தையும் உறுதிசெய்வோம் என தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது. வடக்குகிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பிரதேசங்களிலும் மக்களது சிவில் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலான சிவில் நிர்வாகத்தினை முறைமைப்படுத்தப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அனைத்து பிரஜைகளும் தமது மொழியில் சேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான தேசிய மொழிக்கொள்கையொன்று உருவாக்கப்படும் என தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. சட்டரீதியான அதிகாரங்களைக் கொண்ட பாரபட்சத்திற்கு எதிரான ஆணைக்குழு ஒன்றினைத் (Commission Against Discrimination) தாபித்தல். • வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற மெசியல் படுகொலைகள், காணாமல்போகச் செய்வித்தல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் பற்றி புலன்விசாரணை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுதல். • இனவாதம் மற்றும் மதத் தீவிரவாதம் காரணமாக இடம்பெற்றுள்ள வன்முறைச் சம்பவங்களை புலன்விசாரணை செய்வதற்கான உண்மை மற்றும் மீளிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் செயற்பாட்டினை விரிவாக்குதல். • மதங்களுக்கிடையிலான மோதல்களை தீர்த்துவைப்பதற்கான அனைத்து மதத் தலைவர்களையும் மதம்சார்ந்த கல்விமான்களினதும் உள்ளடக்கத்துடனான சர்வ மதப் பேரவை ஒன்றைத் தாபித்தல். • உலக மதங்கள் பற்றிய சமநிலை வாய்ந்த கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை அமுலாக்குதல். • தேசிய மற்றும் மத ஐக்கியத்திற்கான கலாச்சார நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை தேசிய, மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் ஏற்பாடு செய்தல். • அரசியல் கைதிகளை விடுதலை செய்தலும் அவர்கள் சுதந்திரமாக சமூகமயமாதலை உறுதிப்படுத்துதல் செயற்பாடுகள் 231 • பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உள்ளிட்ட அடக்குமுறைசார்ந்த அனைத்துச் சட்டங்களையும் இல்லாதொழித்து அனைத்த மக்களினதும் சுதந்திரத்தை உறுதிசெய்தல். • வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பிரதேசங்களிலும் மக்களது சிவில் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலான சிவில் நிர்வாகத்தினை முறைமைப்படுத்துதல். • கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்கள் அரசியல் அழுத்தங்களின்றி சகல இனத்தவர்களுக்கும் நியாயமானவகையில் கிடைக்கக் கூடியதாக தகைமைகளின் அடிப்படையில் பெற்றுக்கொடுப்பதனை உறுதிசெய்தல். • மானிய உதவிகள் மற்றும் பாதுகாப்பு அவசியமாகும் யுத்த-விதவைகள், அனாதைகள் மற்றும் மனஅழுத்தங்களுக்கு ஆளானவர்களுக்கான மானிய உதவிகளை பெற்றுக்கொடுத்தல். • காணிகள் மற்றும் வாழ்விடங்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு ஒன்றினூடாக நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணல். • இனக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் குறிக்கோளுடன் மேற்கொள்ளப்படும் மக்கள் குடியேற்றங்களை நிறுத்துதல். • அரசியலமைப்பின் 16ஆவது திருத்தத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய மொழிக் கொள்கையை அவசியமான வளங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுக் கொடுத்து நடைமுறைப்படுத்துதல். • அனைத்துப் பிரஜைகளும் தமது மொழியில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான தேசிய மொழிக் கொள்கையொன்றை அமுலாக்குதல். • தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கூடுதலாக வாழ்கின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பொலிஸ் நிலையங்கள், அரசஅலுவலகம் போன்ற சிவில் சேவைகள் நிலவும் இடங்களில் தமிழ் மொழியில் பணிகளை ஆற்றக்கூடியதாக உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களை நியமித்தல். • 2023. 10. 15 ஆந் திகதி கொண்டதாக தேசிய மக்கள் சக்தி வெளியிட்ட ஹற்றன் பிரகடனத்தில் குறிப்பிட்டவாறு மலையகத் தமிழ் மக்களின் அடையாளத்தையும் உரிமைகளையும் ஏற்றுக்கொண்டு அவர்களின் காணி, வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகளை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல். • மலையக தமிழ் சமுதாயத்தின் சம்பளத்தை வாழ்க்கைச் செலவுக்கு ஏற்று வகையில் அதிகரித்தல். மக்கள் கௌரவமான வருமானத்தினைப் பெறுவதற்குள்ள உரிமையை உறுதிப்படுத்துதல். • வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களின் கடற்றொழில் நடவடிக்கைகளில் வெளிநாட்டு மீனவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள சவால்களை இராஜதந்திர ரீதியாக தீர்த்து, அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளையும் விற்பனை வசதிகளுக்கான வாய்ப்புக்களையும் உருவாக்குதல். https://www.virakesari.lk/article/192059
  15. Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 03:07 PM இந்திய கடற்படையின் முன்னரங்க போர்க்கப்பலான ஐ.என்.எஸ். மும்பை மூன்று நாள் விஜயமாக இன்று 26 ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் சம்பிரதாயபூர்வமான வரவேற்பு வழங்கப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டெல்லி ரகத்தைச் சேர்ந்த நாசகாரி கப்பல்களில் மூன்றாவது கப்பல் ஐஎன்எஸ் மும்பை ஆகும். மஸ்கன் டொக் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இக்கப்பலுக்கு மும்பை நகரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு பெயர் சூட்டப்பட்டது. இக்கப்பல் அதன் தரமுயர்த்தல் பணிகளின் பின்னர் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதி விசாகபட்டினத்தில் உள்ள கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளை பிரிவிடம் சேவையில் இணைக்கப்பட்டது. கொழும்பில் ஐஎன்எஸ் மும்பை தரித்து நிற்கும் காலத்தில் இரு நாட்டு கடற்படையினரதும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளும் இலக்குடன் இலங்கை கடற்படை அதிகாரிகள் இக்கப்பலுக்கு விஜயம் செய்து அனுபவப் பகிர்வு செயற்பாடுகளில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் இக்கப்பலின் விஜயத்தின்போது மேற்கு கடற்படை பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் டபிள்யூ.டி.சி.யு.குமாரசிங்க இக்கப்பலின் கட்டளை அதிகாரி மேற்கு கடற்படை பிராந்திய தலைமையகத்தில் சந்திக்கவுள்ளார். அத்துடன் விளையாட்டுகள், யோகா மற்றும் கரையோரம் சுத்தமாக்கும் பணிகள் போன்ற கூட்டு செயற்பாடுகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து குறித்த கப்பல் விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட உள்ளது. இக்கப்பல் மாலுமிகள் ஓய்வெடுப்பதற்கான சந்தர்ப்பமும் இவ்விஜயத்தின் போது கிடைக்கப்பெறுவதுடன், நகரில் உள்ள பல்வேறு முக்கிய இடங்களுக்கும் அதே போல கொழும்பு மற்றும் காலியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களுக்கும் அவர்கள் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். ஐஎன்எஸ் மும்பை 2024 ஆகஸ்ட் 29ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/192032
  16. சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் நாள் அறிவிக்கப்பட்டது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 2025 ஆம் ஆண்டு தான் பூமிக்கு திரும்புவார் என நாசா அறிவித்துள்ளது. 2024 ஜூன் 5 அன்று, சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இரு விண்வெளி வீரர்களும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் கிளம்பி ஜூன் 6 அன்று சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். அந்த விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 80 நாட்களாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. இந்நிலையில் ஸ்டார்லைனர் விண்கலனை ஆளில்லாமல் பூமிக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலனில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார் என்ற தகவலை நாசா தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/308400
  17. நுவரெலியாவிலும் சரத் பொன்சேகாவின் பிரசார கூட்டம் மக்கள் இன்றி வெறிச்சோடியது Published By: VISHNU 26 AUG, 2024 | 09:17 PM நுவரெலியாவில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற முன்னாள் இராணுவ தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள சரத் பொன்சேகாவின் பிரசார கூட்டம் நுவரெலியா பிரதான நகரில் மணிக்கூட்டுக் கோபுரம் அமைந்துள்ள வாகனத்தரிப்பிடத்தில் மேடை அமைத்து நடைபெற்றது இதிலும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைக்கப்பட்ட மேடையில் பொன்சேகா உட்பட சுமார் 10 பேர் இருந்தனர் மேலும் மேடையின் முன் போடப்பட்டிருந்த இருக்கைகளில் எதிர்பார்த்த அளவில் பொது மக்கள் வருகைத்தந்து அமரவில்லை என்பது பெரும் ஏமாற்றத்தை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் தாக்குதலுக்கு உள்ளான காரையும் லொறியில் ஏற்றி மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது அதன் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களும் அங்கு தொங்கவிடப்பட்டிருந்தது. எனினும் குறித்து கூட்டத்தின் போது ஏராளமான பொலிஸார் வரவழைக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/192075
  18. அமெரிக்காவில் உள்ள தலைவர்கள் தூங்கிக் கொண்டு இருப்பதால் மூன்றாம் உலகப்போர் மூள வாய்ப்பு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையே சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; அமெரிக்காவுக்காக மத்திய கிழக்கு நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்துவது யார்? எல்லா இடங்களிலும் குண்டுகள் வீசப்படுகின்றன. ஜனநாயக கட்சியினரால் வெளியேற்றப்பட்ட ஜோ பைடன் கலிபோர்னியாவில் உள்ள கடற்கரையில் தூங்குகிறார். கமலா ஹாரிஸ், துணை ஜனாதிபதி வேட்பாளருடன் வாகனப் பேரணி நடத்தி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இச்சூழல் மூன்றாம் உலகப்போரை நோக்கி செல்கிறது. மீண்டும் உலகப்போர் வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நவம்பர் 5 ஆம் திகதி அமெரிக்க வரலாற்றில் முக்கியமான நாள் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் முதலில் பைடன் போட்டியிட இருந்த நிலையில், பல காரணங்களால் அவர் போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். https://thinakkural.lk/article/308381
  19. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பால் ரிங்கன் பதவி, பிபிசி செய்திகள் 26 ஆகஸ்ட் 2024, 04:16 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் [இன்று, திங்கள், ஆகஸ்ட் 26, உலக நாய்கள் தினம்] நாய்கள் மனிதர்களின் மிகச் சிறந்த நண்பர்கள் என்பது பரவலாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த நட்பு எப்போது துவங்கியது? நாய்களின் டி.என்.ஏ பற்றிய ஓர் ஆய்வு, நாய் உலகில் நமது ‘சிறந்த நண்பன்’ மட்டுமல்ல, நமது ‘மிக மூத்த நண்பனாகவும்’ இருக்கலாம் என்று கூறுகிறது. இந்த ஆய்வின் படி, நாய் வளர்ப்பின் வரலாறு 11,000 ஆண்டுகளுக்கு முந்தையது. கடைசிப் பனி யுகத்தின் இறுதியில் இதற்கானத் தரவுகள் உள்ளன என்பதை ஒரு ஆய்வு வெளிப்படுத்தியது. மற்ற எந்த விலங்கினங்களும் பழக்கப்பட்டதற்கும் முன்பே, நாய்கள் பழக்கி வளர்க்கப்பட்டன என்பதை அந்த ஆய்வு உறுதிப்படுத்தியது. அந்தக் காலகடத்தில், நாய்கள், பூமியின் வடகோளம் முழுவதும் பரவியிருந்தன. அப்போதே அவை ஐந்து வெவ்வேறு வகைகளாகப் பிரிந்திருந்தன. காலனித்துவ காலத்தில் ஐரோப்பிய நாய்களின் பரவல் அதிகமாக இருந்த போதிலும், இந்தப் பண்டைய நாய் இனங்களின் தடயங்கள் இன்று அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் இருக்கின்றன. நமது நெருங்கிய தோழர்களான நாய்களின் இயற்கை வரலாற்றில் உள்ள சில இடைவெளிகளை இந்த ஆராய்ச்சி நிரப்பியது. இந்த ஆய்வின் இணை ஆசிரியரும், லண்டனின் கிரிக் இன்ஸ்டிடியூட்டில் உள்ள பண்டைய மரபியல் ஆய்வகத்தின் குழுத் தலைவருமான டாக்டர் பொன்டஸ் ஸ்கோக்லண்ட், "மக்கள் வேட்டையாடிக் கொண்டிருந்த காலகட்டத்தில், நாய்கள் பழக்கப்பட்டதைப் பற்றி நினைத்தால், ஆச்சரியமாக இருக்கிறது. காரணம் நாய்கள் மிகவும் வித்தியாசமானவை. அவை உண்மையில் வேட்டையாடும் காட்டு விலங்கு. அவற்றின் நெருங்கிய உறவினர்களான ஓநாய்கள் உலகின் பல பகுதிகளில் இன்னும் அஞ்சப்படும் விலங்காகவே உள்ளன,” என்கிறார். "மக்கள் ஏன் நாய்களைப் பழக்கினர்? அதை எப்படிச் செய்தனர்? நாய்களின் மரபணுக்கள் கூறுவது என்ன? ஓரளவிற்கு நாய்களின் மரபணு வடிவங்கள் மனிதர்களது மரபணுக்களைப் பிரதிபலிக்கின்றன. ஏனென்றால் மக்கள் செல்லுமிடமெல்லாம் நாய்களை உடனழைத்துச் சென்றனர். ஆனால் முக்கியமான சில வேறுபாடுகளும் இருந்தன. எடுத்துக்காட்டாக, ஆரம்பகால ஐரோப்பிய நாய்கள் முதலில் வேறுபட்டே இருந்தன. இவை இரண்டு வேறுபட்ட நாய் இனங்களிலிருந்து தோன்றியவை. ஒன்று கிழக்கு நாய்கள், மற்றொன்று சைபீரிய நாய்களுடன் தொடர்புடையது. ஆனால் ஒரு கட்டத்தில் – இது வெண்கல யுகத்தின் தொடக்கத்திற்குப் பிறகு இருக்கலாம் – ஒரு ஒற்றை நாய் இனம் உலகில் பரவி ஐரோப்பாவில் இருந்த மற்ற அனைத்து நாய் இனங்களையும் மாற்றியது. ஐரோப்பாவைச் சேர்ந்த மக்களின் மரபணு வடிவங்களில் இதற்கு இணை இல்லை. இதுகுறித்து பேசிய இந்த ஆய்வில் பங்காற்றிய ஆண்டர்ஸ் பெர்க்ஸ்ட்ரோம்: "4,000 அல்லது 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, நாய்களைப் பொறுத்தவரை ஐரோப்பா மிகவும் மாறுபட்ட இடமாக இருந்ததைக் காணலாம். ஐரோப்பிய நாய்கள் இன்று மிகவும் அசாதாரணமான வடிவங்களில் இருப்பதை நாம் காண்கிறோம். மரபணு ரீதியாக அவை ஏற்கனவே இருந்த பன்முகத்தன்மையின் மிகக் குறுகிய துணைக்குழுவிலிருந்து மட்டுமே பெறப்படுகின்றன," என்கிறார். ஒரு சர்வதேசக் குழு, பல்வேறு தொல்பொருள் கலாசாரங்களுடன் தொடர்புடைய 27 பழங்கால நாய்களின் முழு மரபணுக்களையும் பகுப்பாய்வு செய்தது. அவர்கள் இவற்றை ஒன்றுடன் ஒன்றும், நவீன நாய்களுடனும் ஒப்பிட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பண்டைய நாய் இனங்களின் தடயங்கள் இன்று அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் இருக்கின்றன நாய் இனங்கள் எப்படித் தோன்றின? தென்னாப்பிரிக்காவில் உள்ள ‘ரோடீசியன் ரிட்ஜ்பேக்’, மெக்சிகோவில் உள்ள ‘சிவாவா’, சோலோயிட்ஸ்குயின்ட்லி (Xoloitzcuintli) போன்ற நாய் இனங்கள், அந்தந்தப் பகுதிகளில் இருந்து பழங்கால பூர்வீக நாய்களின் மரபணுத் தடயங்களைத் தக்க வைத்துக் கொள்வதாக ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. கிழக்கு ஆசிய நாய்களின் வம்சாவளி சிக்கலானது. சீன நாய் இனங்கள், ஆஸ்திரேலிய டிங்கோ மற்றும் நியூ கினி சிங்கிங் நாய் போன்ற இனங்களிடமிருந்து தோன்றியதாகத் தெரிகிறது. மீதமுள்ளவை ஐரோப்பாவிலிருந்து வந்தவை அல்லது ரஷ்யப் புல்வெளியிலிருந்து வந்தவை. நியூ கினி பாடும் நாய் அதன் இனிமையான சத்தத்திற்காக அவ்வாறு அழைக்கப்படுகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக ஆய்வாளரான கிரெகர் லார்சன், "நாய்கள் நமது பழமையான மற்றும் நெருங்கிய நண்பர்கள். பண்டைய நாய்களின் டி.என்.ஏ. பற்றிய ஆய்வு, நமது நட்பின் வரலாறு எவ்வளவு பின்னோக்கிச் செல்கிறது என்பதைக் காட்டுகிறது. எப்போது, எங்கு இந்த ஆழமான உறவு துவங்கியது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது." என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆரம்ப நாய் வளர்ப்பு எப்போது அல்லது எங்கு நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை நாய் - மனிதன் நட்பு தொடங்கியது எப்போது? உணவு தேடி மனித முகாம்களுக்குள் நுழைந்த ஓநாய்களிலிருந்து நாய்கள் உருவானதாகக் கருதப்படுகிறது. ஓநாய்கள் உணவுக்காக அங்குமிங்கும் மோப்பம் பிடித்து அலைந்து கொண்டிருந்தன. அவை பழக்கப்படுத்தப்பட்டு மனிதர்களின் வேட்டையாடும் தோழர்களாக அல்லது காவலர்களாகச் சேவை செய்திருக்கலாம். அனைத்து நாய்களும் அழிந்துபோன ஒற்றை ஓநாய் இனத்திலிருந்தோ அல்லது அவற்றுக்கு மிக நெருங்கிய தொடர்புடைய சில இனங்களிலிருந்தோ தோன்றியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகெங்கிலும் பல இடங்களில் நாய்களைப் பழக்கப்படுத்தும் நிகழ்வுகள் நடந்திருக்கலாம். ஆனால், அந்த நாய்கள் இன்றைய நாய்களுக்கு அதிகமாக டி.என்.ஏ-க்களைப் பங்களிக்கவில்லை. ஆரம்ப நாய் வளர்ப்பு எப்போது அல்லது எங்கு நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று டாக்டர் ஸ்கோக்லண்ட் கூறினார். "நாய்கள் பழக்கப்படுத்தப்பட்டதன் வரலாறு நிகழ்வுகள் நிறைந்ததாக இருந்தது. அதனால் அந்த வரலாற்றை நாய்களின் டி.என்.ஏ-வில் இருந்து நாம் பெற முடியாது. என்ன நடந்தது என்பது நமக்கு உறுதியாகத் தெரியாது. அதுதான் மிக சுவாரஸ்யமான விஷயம்," என்கிறார் அவர். 6,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் விவசாயம் செய்ய ஆங்காங்கே தங்கிய போது பூனைகள் போன்ற பல விலங்குகள் நம் செல்லப்பிராணிகளாக மாறியிருக்கலாம். மனிதர்கள் அடர்ந்த குடியிருப்புகளில் உருவாகும் கழிவுகளால் ஈர்க்கப்பட்ட எலிகள் போன்ற விலங்குகளைக் கட்டுப்படுத்த பூனைகள் பயனுள்ளதாக இருந்திருக்கும். இதனால், அவை வளர்க்கப்பட்டதன் துவக்கத்தை, மத்திய கிழக்கு போன்ற விவசாயம் தோன்றிய இடத்தொடு நாம் இணைக்கலாம். "ஆனால், நாய்களைப் பொருத்தவரை, அந்தத் துவக்கம் எங்கு வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். சைபீரியக் குளிர் பிரதேசம், சூடான கிழக்குப் பிரதேசம், தென்-கிழக்கு ஆசியா என இப்படி பல இடங்களில் அது நடந்திருக்கலாம். இவை அனைத்தும் சாத்தியங்கள் தான்," என பொன்டஸ் ஸ்கோக்லண்ட் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cvg5mrdeygro
  20. 30 ஆம் திகதி யாழில் போராட்டம் Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 04:10 PM வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே போராட்டம் தொடர்பில் அறிவித்துள்ளனர். யுத்தம் நிறைவுக்கு வந்த நாட்கள் தொடக்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி போராடி வருகிறோம்.இது வரையில் எமக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை. உள்ளக விசாரணைகளின் ஊடாக நீதி கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை எனவே தான் நாம் சர்வதேச விசாரணைகளை கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். அந்த வகையில் எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் திருகோணமலையிலும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். எமது போராட்டத்திற்கு தமது அரசியல் நிலைப்பாடுகளை கடந்து கட்சி பேதங்கள் இன்றி அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும். அரசில் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சங்கங்கள் என அனைத்து தரப்பினரனும் எமது போராட்டத்திற்கு வலு சேர்க்க தமது ஆதரவுகளை வழங்கி போராட்டத்தில் கலந்து கொண்டு எமது குரலை சர்வதேசத்திற்கு கேட்குமாறு கூற வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்டுக்கொண்டுள்ளன. அதேவேளை, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன், அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியன் மற்றும் அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா ஆகியோரும் குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு போராட்டத்திற்கு தமது அமைப்புக்கள் சார்ந்த ஆதரவை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/192035
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாகை மலர் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 54 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் தனிக்கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், அதன் கொடியை அறிமுகம் செய்த பிறகு வாகை மலர் அதிக அளவில் பேசுபடு பொருளாக மாறியுள்ளது. அந்த கொடியின் மையத்தில் வாகை மலர் இருப்பதே அதற்குக் காரணம். சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வாகை மலர் குறித்த பல்வேறு தகவல்களும் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வாகை மலருக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு? தமிழர் வாழ்க்கையில் அதன் முக்கியத்துவம் என்ன? பட மூலாதாரம்,TVK HQ படக்குறிப்பு, நடிகர் விஜய் தனது கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய காட்சி. போரில் வெல்லும் வீரர்கள் சூடும் வாகை மலர் தாவரவியல் பெயர் : அல்பிசியா லெப்பெக் குடும்பம் : ஃபபேசியா வாகை மரம் 5-20 மீட்டர் உயரம் வளரும தன்மையுடையது. வாகையில் சிறுவகை ,பெருவாகை, நிலவாகை, காட்டு வாகை, செவ்வாகை, கருவாகை, தூங்குவாகை என பல வகைகள் உள்ளன. சங்க காலத்தில் போரில் வெற்றி பெறும் வீரர்கள் வாகை மலர் சூடி வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. தற்போது கூட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை "வெற்றி வாகை சூடினார்" என்று அழைப்பதையும், புகழ்வதையும் கேட்க முடியும் என்கிறார் கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் தமிழ் துறை பேராசிரியர் முனைவர். நாகராஜன். "போரில் வெற்றி பெற்றவர்கள் சூடுவது வாகை மலர்க் கொத்தாகும். வாகைப்பூவை வெற்றிப் பூ என்பர். வாகைப் பூ தமிழ் கடவுள் கொற்றவைக்கு உரியதாகும்" என்று அவர் கூறினார். படக்குறிப்பு, முனைவர். நாகராஜன், பேராசிரியர் இலக்கியங்களில் வாகை மலர் - நாகராஜன் கூறியது என்ன? மிக மெல்லிய இழைகளாலான மயில்களின் தலையில் இருக்கும் கொண்டை போல் உள்ள இந்த வாகை மலர் இலக்கிய பாடல்களில் பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகை என்பது வாழ்க்கையின் மேம்பட்ட வெற்றிநிலையைக் குறிப்பது என்று தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது. வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுதலைக் குறிக்கும் என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது. வாகை என்பதற்குத் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், "ஒழுக்கத்தான் மிகுதல் வாகையாம்" எனக் குறிப்பிடுவது வாகை என்பது வெற்றியின் அடையாளம் என்பதனைத் தெளிவுபடுத்தும் குறிப்பாகும். போர்களில் வெற்றி பெற்றவர்கள் ‘வாகை’ சூடியவராவர். “வடவனம் வாகை வான்பூங் குடசம்” என்று குறிஞ்சிப் பாட்டு பாடல் வரிகள் குறிப்பிடுகிறது. வாகையின் பூ ஆண் மயிலின் தலைக்குடுமி போல் இருக்கும் என்பதை, "குமரி வாகை கோல் உடை நறு வீ மட மா தோகை குடுமியின் தோன்றும்" என்ற குறுந்தொகையின் பாடல் வரிகள் மூலம் அறிய முடியும். வாகைப்பூ பஞ்சுபோல் மென்மையாக இருக்கும், அதன் இலைகள் இரண்டிரண்டாகப் பிரிந்திருக்கும் என்பதை "மென் பூ வாகை புன் புற கவட்டு இலை " என்ற அகத்திணை பாடல் வரிகள் உணர்த்துகின்றது. சிற்றரசன் நன்னனது கொங்கண நாட்டில் வாகை மரம் மிகுதி. அவன் வாகை மரத்தைக் காவல் மரமாகக் கொண்டான். அதனைக் கழங்காய்ச் சென்னி நார் முடிச் சேரல் என்ற மற்றொரு சிற்றரசன் வெட்டி வீழ்த்தினான். இதை, “பொன்படு கொண்கான நன்னன் நன்னாடு ” “பொன்அம் கண்ணி பொலந்தேர் நன்னன் சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்” என்ற வரிகள் மூலம் அறிய முடியும். இலக்கியப் பாடல்களில் வாகை மலர் பற்றி அதிகமான குறிப்புகள் உள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாகை மலர் மருத நிலமும் வாகையும் தமிழர்கள் தங்களின் வாழ்வியல் அடிப்படையில் நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து வகைகளாக பிரித்தனர். அதில் வயலும் வயல் சார்ந்த இடமும் மருத நிலப்பகுதி என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலப் பரப்பிற்கு சொந்தமான மலர் வாகை மலராகும். மருதம் விவசாயம் மற்றும் மேய்ச்சல் நிலப்பரப்பை குறிக்கிறது. "பண்டைய காலத்திலும் தமிழர்கள் விவசாயத்தில் சிறந்து விளங்கினர். அதன்படி அந்த நிலப்பரப்பிற்கு சொந்தமான வாகை மலரை வெற்றியின் அடையாளமாகக் கருதி அதை சூடியிருக்கலாம்" என்று முனைவர் நாகராஜன் கூறினார். மேலும் தொடர்ந்த அவர் "பெண்கள் இதை காதணியாக அணிந்து கொள்வர் என்று சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. அக்கால தமிழ் மக்களின் இறை வழிபாட்டில் பூக்கள் முக்கியத்துவம் கொண்டிருந்தன. அவை சிலைகளை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன. பூக்கள் வெற்றியின் அடையாளமாக மங்களகரமான சின்னமாக பார்க்கப்பட்டன. அப்படித்தான் வெற்றியின் பின்னணியில் வாகை மலர் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்" என்றார். https://www.bbc.com/tamil/articles/cr40dng01ryo
  22. இந்தியா – இலங்கை கூட்டு ராணுவ பயிற்சி நிறைவு இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெறும் இருநாட்டு ராணுவங்களின் கூட்டுப் பயிற்சித் திட்டமான ‘மித்ர சக்தி’-யின் 10வது ஆண்டுப் பயிற்சி நிறைவடைந்தது. இலங்கையில் மதுரு ஓயா பகுதியில் உள்ள ராணுவப் பயிற்சிப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 12-ம் திகதி முதல் இரு வாரங்களாக ‘மித்ர சக்தி’யின் 10வது கூட்டு ராணுவ பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்தியாவைச் சேர்ந்த 106 வீரர்கள் இந்த இராணுவப் பயிற்சியில் பங்கேற்றனர். இருநாட்டு ராணுவத்தின் இயங்குதன்மை, பரஸ்பர புரிதல்களை மேம்படுத்த இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், தொழில்முறையிலான மரியாதை, தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்தல், சிறந்த பயிற்சி முறைகளைக் கற்றல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான உறவினை ஆழமாக்குதல் போன்றவற்றிற்காக இந்தப் பயிற்சி நடத்தப்படுவதாக இந்திய உயர் ஆணையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, நாடுகடந்த பயங்கரவாதத்தை எதிர்த்தல், கூட்டு நடவடிக்கைகள் மூலம் போர்த் திறன்களில் நிபுணத்துவத்தை வளர்த்தல் போன்றவற்றிற்கும் இந்தப் பயிற்சிகள் உதவுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மித்ர சக்தி பயிற்சி நேற்றுடன் நிறைவடைந்தது. ’மித்ர சக்தி’ பயிற்சித் திட்டத்தின் முந்தைய பயிற்சிகள் வெற்றிகரமாக நடைபெற்றதால், இந்த முறை பயிற்சித் திட்டங்கள் ஆயுதப் பயன்பாட்டு முறையிலிருந்து இருமுனை சேவை முறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் பொதுவான அச்சுறுத்தல்களிலிருந்து இரு நாடுகளையும் பாதுகாக்க உதவுமென்றுக் கூறப்படுகிறது. ’அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ மற்றும் ’பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி’ (சாகர்) போன்ற கொள்கைகள் மற்றும் திட்டங்களின்படி இந்த ராணுவப் பயிற்சி நடத்தப்பட்டதாக இந்திய உயர் ஆணையம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/308312

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.