Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. நல்லது அண்ணா. சில தகவல்களைப் பகிர்கிறேன், செய்யமுடியுமா எனப்பாருங்கள். நன்றி அண்ணா, தனி மனிதர்களால் எடுக்கப்படும் கூட்டு முயற்சி இது. அடம்பன் கொடியும்.... நல்லது அண்ணா. 1) காரைநகரில் வீட்டுத்திட்டம் ஒன்றுக்கு மலசல கூடம் கட்டித்தருமாறு எமது அமைப்பிடம் பிரதேச செயலகம் ஊடாக வாய்மொழியாக கேட்டுள்ளார்கள். வேண்டுகோள் கடிதம் எழுதி தருமாறு கேட்டுள்ளேன். 2) பொன்னாலையில் 3 பேர் எழுந்து நடமாடமுடியாத சகோதரர்களின் கொமட் உடைந்துவிட்டது, மலசலகூடக் குழி(பிற்) மூடப்பட்ட பிளாற் உடைந்துள்ளது, பாத்றூம் பிளாற் உடைந்துவிட்டது. புனரமைத்து தருமாறு அவசர வாய்மொழி வேண்டுகோள் வந்துள்ளது. வேண்டுகோள் கடிதம் எழுதி தருமாறு கேட்டுள்ளேன். 3) அராலியிலும் மலசலகூடம் அமைத்து தருமாறு கேட்டவர்கள். போதிய விபரம் கிடைக்கவில்லை. முழு விபரம் கிடைத்ததும் தெரியப்படுத்துகிறேன். மேலும் சில விபரங்கள் கிடைத்ததும் தெரியப்படுத்துகிறேன்.
  2. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைத் திரும்பப் பெறக் கோரி நீதி அமைச்சில் கோரிக்கை 30 Dec, 2025 | 04:45 PM இன்று நீதி அமைச்சில் ஒன்றுதிரண்ட இலங்கையின் சமூகச் செயல்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்" (PSTA) குறித்துத் தமது ஆழ்ந்த கவலையையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதற்குப் பதிலாக, அதனை மேலும் வலுப்படுத்தும் ஒரு அடக்குமுறை கருவியாகவே இந்தப் புதிய சட்டமூலம் அமைந்துள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தினர். இந்தச் சட்டமானது குடிமக்களின் அடிப்படை உரிமைகள், பேச்சுச் சுதந்திரம், தனிமனித உரிமை மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைத் தீவிரமாகப் பாதிக்கும் அபாயத்தை உருவாக்குவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, இந்தப் புதிய சட்டமூலத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரத்திற்கு அதீத அதிகாரங்கள் வழங்கப்படுவதாகவும், சாதாரண கருத்து வெளிப்பாடுகள் கூட "பயங்கரவாதம்" எனக் குற்றம் சாட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர். மேலும், அமைப்புகளைத் தடை செய்தல், ஊரடங்கு மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் போன்ற அதிகாரங்கள் இதன் மூலம் விரிவுபடுத்தப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்தச் சூழலில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதாக வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், இந்தப் புதிய சட்டமூலத்தை நிபந்தனையின்றித் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், இத்தகைய சட்டத்தின் அவசியம் குறித்துப் பொதுமக்களுடன் கலந்தாலோசித்து ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும், அதுவரை PTA சட்டத்தின் பயன்பாட்டை நிறுத்தி வைத்து தற்காலிகத் தடையை (Moratorium) நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் போது சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ் காந்த் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/234775
  3. முதுகு வலி வராமல் தடுக்கவும் வந்தால் சமாளிக்கவும் நீங்கள் அறிய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் பட மூலாதாரம்,Getty Images and BBC படக்குறிப்பு,பிபிசி வரைபடம் வெவ்வேறு நிலைகளில் உள்ள மூன்று பேரைக் காட்டுகிறது. ஒவ்வொருவரின் முதுகெலும்பும் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது 30 டிசம்பர் 2025, 01:52 GMT பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வின் ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். பொதுவாக, முதுகு வலி சில வாரங்களில் குறைந்துவிடும் - ஆனால் மீண்டும் மீண்டும் வலி ஏற்பட்டால், அது பாதிக்கப்பட்டவர்களை முடக்கி, அவர்களது அன்றாட வாழ்க்கையை மோசமானதாக மாற்றிவிடும். அதுமட்டுமல்ல, மனித முதுகெலும்பானது விலா எலும்புகள் மற்றும் இடுப்பு எலும்புகளுடன் மட்டுமல்லாமல், தசைநாண்கள், தசைநார்கள், குருத்தெலும்புகள், தசைகள் மற்றும் நரம்பு திசுக்களின் தொகுப்போடும் இணைக்கப்பட்டது. எனவே, இந்த பகுதிகளில் ஏதேனும் ஒன்றில் ஏற்படும் பிரச்னைகளும் முதுகு வலியை ஏற்படுத்தக்கூடும். முதுகு வலி ஏற்படுவது என்பது அனைத்து வயதினருக்கும் பொதுவானது. எனவே, முதுகு வலியைத் தடுக்கவும், முதுகு வலி இருந்தால், அதை சிறப்பாக கையாளவும் முக்கியமான ஐந்து உபாயங்களைத் தெரிந்துக் கொள்வோம். மேல் அல்லது கீழ்? அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் Institute for Health Metrics and Evaluation ஆராய்ச்சியாளர்கள் தயாரித்த 'குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ்' என்ற ஆய்வின் சமீபத்திய பதிப்பின்படி, நாள்பட்ட கீழ் முதுகு வலியுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டு வரையிலான 30 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல் அதிகரிக்க உள்ளது. அப்போதைய காலகட்டத்தில், உலக மக்கள்தொகையில் பத்தில் ஒருவர் முதுகு வலியால் பாதிக்கப்படுவார்கள். உலகளாவிய ஆரோக்கியத்தில் முதுகு வலியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் என்று குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் ஆய்வு கூறுவதையும் தெரிந்துகொள்வோம். பக்கவாதம், இதயம் மற்றும் நுரையீரல் நோய்கள், நீரிழிவு மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள் ஆகியவையே அவை. முதுகுப் பகுதியின் கீழ் பகுதியே உடலின் அதிகளவிலான அசைவுகளுக்குத் துணைபுரிவதாலும், அதிக அழுத்தத்தை உள்வாங்கிக் கொள்வதாலும், அங்குதான் அடிக்கடி வலி ஏற்படுகிறது. இருப்பினும், உடலின் மேல் முதுகுப் பகுதி, குறிப்பாக கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதிகளும் கூட இத்தகைய வலியை உண்டாக்கலாம். படக்குறிப்பு,33 முள்ளெலும்புகளைக் கொண்ட மனித முதுகெலும்பானது பொதுவாக மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்து பிட்டத்தின் உச்சி வரை நீண்டுள்ளது, அதன் கீழ் உள்ள ஒன்பது முள்ளெலும்புகள் ஒன்றாக இணைந்திருக்கின்றன சிகிச்சைக்கு முன் நோயறிதல் சிகிச்சைக்கு முன் நோயறிதல் என்ற மருத்துவக் கொள்கை முதுகு வலிக்கு மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், முதுகு வலி ஏன் ஏற்பட்டது என்பதைக் கண்டறிய ஒரேயொரு குறிப்பிட்ட நோயறிதல் சோதனை என்று எதுவும் கிடையாது. பித்தப்பை அல்லது சிறுநீரக நோய் அல்லது சில வகை புற்றுநோய்கள் என உயிருக்கு ஆபத்தான நிலைகளை மருத்துவர்கள் பொதுவாக முதலில் நிராகரிக்க முயற்சிப்பார்கள். வழக்கமாக, நோயறிதல் என்பது உடல் பரிசோதனை மற்றும் நோயாளியின் மருத்துவ வரலாற்றைச் சரிபார்ப்பதையும் உள்ளடக்கியது. ரத்தப் பரிசோதனைகள் மூலம் புற்றுநோய் அல்லது குருத்தெலும்புகளை சேதப்படுத்தி மூட்டுவலியை உண்டாக்கும் வீக்கங்களைக் கண்டறிய முடியும். மேலதிக உறுதிப்படுத்தலுக்கு, மூட்டுகள், எலும்புகள், டிஸ்க்குகள், உறுப்புகள் அல்லது மென்மையான திசுக்களை ஆய்வு செய்ய எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் அல்லது எம்ஆர்ஐ போன்ற இமேஜிங் சோதனைகள் தேவைப்படலாம். பெரும்பாலான முதுகுவலிகள் லேசான வலி மற்றும் உடல் இறுக்கமானது போன்ற உணர்வாகவே இருக்கும். ஆனால், தசை அல்லது தசைநார் கிழிந்துபோனால் திடீரென கடுமையான வலியை உண்டாக்கும். அதேபோல, பிட்டம் மற்றும் கால்களுக்கு பரவும் வலி, அந்தப் பகுதிகளில் ஊசி குத்துவது போன்ற உணர்வு அல்லது மரத்துப்போதல் போன்ற அறிகுறிகள் தோன்றுவது நரம்புப் பாதிப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம். தசைகளில் உள்ள மின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் 'எலக்ட்ரோடியாக்னோசிஸ்' முறை, தசை மற்றும் நரம்பு கோளாறுகளுக்கு இடையிலான வேறுபாட்டை கண்டறிய உதவும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பிற எலும்புகளை விட முதுகெலும்பு வேகமாக நீளமாகும்போது, அது குழந்தைகளுக்கு வலியை ஏற்படுத்தலாம் இந்த நோயறிதல் அணுகுமுறையானது பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் பொருந்தும். இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குழந்தை நல மருத்துவராகப் பணியாற்றியவரும், தற்போது ஜெர்மனியில் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்துவரும் மருத்துவர் அரினா டிசோசா, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வரும்போது தான் கூர்ந்து கவனிக்கும் விஷயங்கள் என்ன என்பதை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்: "குழந்தைகள் குதித்து விளையாடிக்கொண்டிருப்பார்கள், அப்போது நான் சில விஷயங்களைக் கூர்ந்து அவதானிப்பேன்: அந்தச் செயல்பாடுகளின் போது அவர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டதா? மறைந்திருக்கும் தசைக்கூட்டு குறைபாடுகள் ஏதேனும் உள்ளனவா? பெற்றோர்களுக்கும் முதுகு வலி வரும் வாய்ப்பு உள்ளதா? அவர்கள் சமச்சீர் உணவை உண்கிறார்களா? முழங்கால்களிலும் கால்களிலும் ஏற்படும் வலி அதிகரித்து வருவதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் சில சமயங்களில் இது முதுகிலும் ஏற்படலாம் - ஏனெனில் ஓர் குழந்தையின் முதுகெலும்பு முழுவதுமே, சில நேரங்களில் பிற எலும்புகளை விட மிகத் துரிதமாக நீளமாக வளரும். பட மூலாதாரம்,Getty Images ஆரோக்கியமான மனம், ஆரோக்கியமான உடல் முதுகு வலி மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சமே சில நோயாளிகளின் குணமடையும் செயல்முறைக்கு தடையாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். "முதுகெலும்பு மற்றும் தசைப் பிரச்னைகள் ஏதும் இல்லாதபோதும், மீண்டும் வலி வந்துவிடுமோ என்ற கவலையே சிலர் தங்கள் முதுகைப் பயன்படுத்துவதில் அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது" என இங்கிலாந்தின் Down2U Health and Wellbeing இயக்குனர் ஆடம் சியு, பிபிசியிடம் தெரிவித்தார். மேலும், "இந்த பயம் அவர்களைச் சுறுசுறுப்பற்றவர்களாகவும், மந்தமானவர்களாகவும் மாற்றுகிறது. சிலர் தங்களுக்குப் பிடித்தமான செயல்களைச் செய்வதைக் கூட நிறுத்திவிடுகிறார்கள்," என்று அவர் கூறுகிறார். ஆஸ்திரேலியாவின் மக்வாரி பல்கலைக்கழகத்தின் பிசியோதெரபி பேராசிரியர் மார்க் ஹான்காக் முதுகு வலி பற்றிக் கூறுகையில்: "சில நோயாளிகள் தங்கள் முதுகுப் பகுதிக்கு சேதம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தால், சமூக வாழ்க்கையிலிருந்தே விலகிவிடுகிறார்கள். சமூக அழுத்தம், வலியைப் பற்றிய கவலை, எரிச்சலூட்டும் முதுகு வலி என அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கும்போது, திடீரென்று இதுவொரு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கிறது" என்று கூறுகிறார். எனவே, முதுகு வலி என்பது ஆக்கப்பூர்வமான மற்றும் முழுமையான அணுகுமுறையின் அவசியத்திற்கான தேவையை ஏற்படுத்தியுள்ளது. "உலகெங்கிலும் உள்ள மருத்துவ வழிகாட்டுதல்களும் இப்போது உடல் ரீதியான, உளவியல் ரீதியான மற்றும் சமூகக் காரணிகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசுகின்றன," என்று பேராசிரியர் ஹான்காக் கூறுகிறார். "சி.எஃப்.டி (Cognitive Functional Therapy) எனப்படும் சிகிச்சை முறை, நோயாளிகள் சிகிச்சையாளர்களுடன் கலந்துரையாடி, வலிக்குக் காரணமான பல்வேறு விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள அனுமதிக்கிறது. அதன்பின், அவர்களுக்குப் பிடித்தமான செயல்களைப் படிப்படியாக மீண்டும் செய்வதற்குத் தகுந்த மாற்று வழிகளுடன் கூடிய திட்டம் ஒன்று வகுக்கப்படுகிறது. தேவைப்பட்டால், நோயாளிகளின் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்த சிகிச்சையாளர்கள் அவர்களுடன் இணைந்து செயல்படுவார்கள்." முன்னேறிக் கொண்டே இரு பட மூலாதாரம்,Adam Siu படக்குறிப்பு,முகப்பு மூட்டு மாதிரியைப் பயன்படுத்தி, உட்காரும்போது அல்லது குனியும் போது முதுகெலும்புத் தட்டு எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்குகிறார் ஆடம் சியு மீண்டும் வலி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தால், ஓய்வு எடுப்பது குணமடைய உதவும் என சில நோயாளிகள் நம்புகிறார்கள். ஆனால், அது தவறு எனக் கூறும் பிரிட்டிஷ் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் (BASS), முதுகு வலியைத் தவிர்ப்பதற்கு சுறுசுறுப்பாக இருப்பது முக்கியம் என்று கூறுகிறது. முதுகு வலிக்காக அதிக ஓய்வு எடுப்பது என்பது, வலி குணமாகும் காலத்தை மேலும் நீட்டிக்கும் என கடந்த பத்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஆராய்ச்சிகளும் கூறுகின்றன. "முதுகெலும்புத் தொடர், வெர்டிப்ரே எனப்படும் தனிப்பட்ட எலும்புகளால் ஆனது, இது இயற்கையாகவே வெவ்வேறு பிரிவுகளில் வளைந்திருக்கும்" என ஆடம் சியு கூறுகிறார். "உடலின் எடை மற்றும் அசைவுகளுக்கு முதுகெலும்பு துணைபுரிய முதுகெலும்புத் தொடரின் வளைவுகள் உதவுகின்றன. முதுகெலும்பின் மேல் பகுதியில் உள்ள 24 எலும்புகள் நெகிழ்வுத்தன்மை கொண்டவை; இவை ஒவ்வொன்றும் ஃபேசெட் மூட்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொன்றுக்கும் இடையில் இன்டர்வெர்டெபிரல் டிஸ்க் எனும் மெத்தை போன்ற அமைப்பு உள்ளது. இந்த இயற்கையான அமைப்பு மற்றும் அந்த டிஸ்க்கின் அதிர்வுகளைத் தாங்கும் தன்மை பலவீனப்படாமல் இருக்க வேண்டுமெனில், அமர்வது, குனிவது அல்லது நீண்ட நேரம் நிற்பது என ஒரே நிலையில் இருப்பதைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்." ஆனால் நவீன வாழ்க்கை முறையில், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, ஆன்லைனில் படிப்பது, கேம் விளையாடுவது, வீடியோக்களைப் பார்ப்பது என உடலுழைப்பு குறைந்துவிட்டது. அலுவலக ஊழியர்களில் சிலருக்கு மட்டுமே அவ்வப்போது ஓய்வு எடுப்பதற்கோ அல்லது நடப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்; ஆனால் பல வேலைகளில் இதற்கான வாய்ப்புகளும் இருக்காது. "வாகன ஓட்டுநராக இருந்தால், போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கும் போது அமர்ந்த நிலையிலேயே சில பயிற்சிகளை செய்ய முயற்சிக்கலாம்," என்று ஆடம் சியு கூறுகிறார். "கனமான பொருட்களைத் தூக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள், வேலை செய்வதற்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட உடற்பயிற்சிகளைத் தெரிந்துகொள்ள பிசியோதெரபிஸ்ட்டுகளை அணுக வேண்டும்." கர்ப்பகால முதுகு வலி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கர்ப்பமுற்ற பெண்கள், உடல் தோரணை, உடல் எடைப் பரவல் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அனுபவிக்கின்றனர் கர்ப்ப காலமும் முதுகு வலியை உண்டாக்கக்கூடும் - அதுவும் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களிலேயே இது ஏற்படலாம். கருத்தரித்த சில காலத்திலேயே பெண்ணின் உடலில் 'ரிலாக்ஸின்' என்ற ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கிறது. இது பிரசவத்திற்குத் தயாராகும் வகையில் பெண்ணின் இடுப்புப் பகுதியில் உள்ள தசைநார்களைத் தளர்த்தி, கருப்பை வாயை மென்மையாக்குகிறது. ஆனால், அதே வேளையில் இது முதுகெலும்பில் உள்ள இணைப்புத் திசுக்களையும் மூட்டுகளையும் தளர்த்துவதால், முதுகின் கீழ் பகுதியில் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. கரு வளரும்போது, கர்ப்பிணிகள் தங்களின் உடல் நிலை, உடல் எடை பரவல் மற்றும் மன அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உணர்கிறார்கள். கர்ப்ப காலத்தில் முதுகு வலியைத் தணிக்க சில குறிப்புகள்: உடலைத் திருப்பும் போது, முதுகெலும்பை முறுக்குவதைத் தவிர்க்க உங்கள் கால்களையும் சேர்த்துத் திருப்புங்கள். உங்கள் உடல் எடையைச் சீராகத் தாங்கக்கூடிய வசதியான காலணிகளை அணியுங்கள். மகப்பேறு கால சிறப்புத் தலையணைகள் மற்றும் நல்ல மெத்தையை பயன்படுத்துவது, போதுமான ஓய்வு பெற உதவும். வலி நிவாரண மாத்திரைகளை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்? "முதுகு வலியின் ஆரம்ப கட்டத்தில், மருந்துக் கடைகளில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய வீக்கத்தைக் குறைக்கும் (anti-inflammatory) மருந்துகளை எடுத்துக்கொள்வது தவறில்லை; இது நீங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு உதவும்" என்று சியு கூறுகிறார். "ஆனால், வலி தொடர்ச்சியாக இருந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்யாமல், சில வாரங்களுக்கு மேலாகவோ அல்லது நீண்ட காலமோ இந்த மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டால், அது பிரச்னையை மூடி மறைப்பதாகவே அமையும். துரதிருஷ்டவசமாக, பல ஆண்டுகளாக மருந்துகளை மட்டுமே பயன்படுத்தும் நபர்களை பார்க்கிறேன்." வலியை மரத்துப் போகச் செய்வது என்பது, அந்த வலிக்கான உண்மையான காரணத்தை மேலும் மோசமாக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், பிரிட்டிஷ் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் (BASS) இதை மறுக்கிறது. "இது முற்றிலும் உண்மையல்ல. நம் உடலில் மிகவும் வலிமையான பாதுகாப்பு அனிச்சைச் செயல்கள் உள்ளன. சாதாரண வலி நிவாரணிகளால் அவற்றை அகற்றிவிட முடியாது. அதாவது, வலி நிவாரணிகள் வலியை மட்டுமே குறைக்கும்; ஆபத்தான செயல்களில் இருந்து உங்களைத் தடுக்கும் உடலின் இயற்கையான பாதுகாப்பு உணர்வை அவை நீக்கிவிடாது. இதற்கு உதாரணமாக, சாதாரண வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டவர், கொதிக்கும் நீரில் கையை வைத்தால் என்னவாகும்? உடலின் அனிச்சை செயல்கள் வலியை ஏற்படுத்தும். அதேபோலத்தான், எளிய வலி நிவாரண நடவடிக்கைகளை எடுத்துக்கொண்ட பிறகு நடமாடுவதால் ஒருவரின் முதுகுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. இவ்வகையான மருந்துகளை எடுத்துக்கொள்வதில் உங்களுக்கு சந்தேகம் ஏதேனும் இருந்தால், ஒரு மருந்தாளரிடம் கலந்தாலோசிக்கவும்." மூல உரை: பிபிசி நியூஸ் வேர்ல்ட் சர்வீஸ், குளோபல் ஜர்னலிசம் க்யூரேஷன் கூடுதல் தகவல்கள்: பிபிசி நியூஸ் மராத்தியின் கணேஷ் போல் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c33m37mgy4po
  4. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது Dec 30, 2025 - 12:40 PM முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு சொந்தமான லொறி மற்றும் மேலும் சில வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். அதேநேரம் சம்பளம் மற்றும் கொடுப்பனவு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://adaderanatamil.lk/news/cmjs8znxs03a9o29ndhg8ar4l
  5. உயர்தர மாணவிக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நிலை Dec 30, 2025 - 04:24 PM உயர்தரப் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காகக் கடுமையாக உழைத்து வந்த பாடசாலை மாணவி ஒருவர், எதிர்பாராத விதமாகப் பாதிக்கப்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான நிலைமை குறித்து மத்துகமவிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. மத்துகம, பெலவத்தை பகுதியைச் சேர்ந்த இசுரி கௌசல்யா மீகஹபொல என்ற இந்த மாணவி, மத்துகம அதிகாரம் வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகிறார். தனது வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்ற ஆயிரம் கனவுகளுடன் கல்வியில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த இவருக்கு, தற்போது மிகப்பெரிய சவாலொன்று ஏற்பட்டுள்ளது. அவர் 'லுகேமியா' (Leukemia) எனப்படும் இரத்தப் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதே இதற்குக் காரணமாகும். 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த போதிலும், இந்தத் திடீர் நோய் நிலைமை காரணமாக அவருக்கு அந்த வாய்ப்பு பறிபோயுள்ளது. இந்த மாணவியின் சிகிச்சைக்கு உதவ அல்லது அவருக்குத் தோள் கொடுக்க விரும்பும் எவரும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொண்டு மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்: 072 8441 223 078 3953 506 https://adaderanatamil.lk/news/cmjsgzk5n03aro29nbnzw7dq4
  6. தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை அமைக்க தீர்மானம் Dec 30, 2025 - 03:47 PM தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 14 பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மத்திய, ஊவா, சப்பரகமுவ, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள தேயிலை மற்றும் இறப்பர் தோட்டப் பகுதிகளில் தற்போது 864 பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இப்பாடசாலைகளில் பெரும்பாலானவை நகரங்களிலிருந்து மிகத் தூரமான மற்றும் அசாத்தியமான பிரதேசங்களில் அமைந்துள்ளதால், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்கு சென்று கடமையாற்றுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முறையான தங்குமிட வசதிகள் இல்லாமையால் இப்பாடசாலைகளில் குறிப்பாக இரண்டாம் நிலை வகுப்புகளில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் ஏனைய அரச பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் இப்பகுதி மாணவர்களின் தேர்ச்சி மட்டம் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. இவ்விளைவினால் தோட்டப்புற இளைஞர் தலைமுறையினர் திறனற்ற தொழிலாளர்களாக மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, தோட்டப் பாடசாலைகளின் மனிதவளம் மற்றும் பௌதீக வளங்களை அதிகரிக்க வேண்டியது அவசியமெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, முதற்கட்டமாக 14 தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை அந்தந்த மாகாண சபைகள் ஊடாக நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjsfo5dg03ano29n4ncre58i
  7. முல்லைத்தீவு ஓய்வு பெற்ற அதிபருக்கு எதிரான முறைப்பாடு - நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் செயலகம் பணிப்புரை!! 30 Dec, 2025 | 10:02 AM முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபர் ஒருவரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்குமாறு அவரின் முறைகேடான மற்றும் ஊழல் மிக்க செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த முறைப்பாட்டை கல்வி அமைச்சிற்கு கையளித்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் செயலகம் பணிப்புரை வழங்கியுள்ளது. பிரதமர் செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளர் T. ஸ்ரீமன்ன மேற்கண்ட முறைப்பாட்டை 12.12.2025 ஆம் இலக்க கடிதம் மூலம் கல்வி அமைச்சுக்கு பாரப்படுத்தி உள்ளார். மேற்குறித்த அதிபர் அரச சட்டதிட்டங்களை மீறி சமூக ஊடகங்கள் வாயிலாக நிதி திரட்டியதும் மற்றும் பாடசாலையுடன் தொடர்பு இல்லாத பாடசாலையின் பெயரில் இயங்கும் நிதியம் ஒன்றிற்கு நிதி அனுசரணை வழங்குமாறு கோரிய கடிதம் போன்றன குற்றச்சாட்டுகளாக பிரதமர் அலுவலகத்தில் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234717
  8. அண்ணே, மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களமோ?! https://np.gov.lk/information-officers-and-designated-officers-department-of-road-development/ https://rda.gov.lk/index.php?lang=ta
  9. கேப்டன் விஜயகாந்த்தின் குரு பூஜையில் பங்கு பற்றி மலரஞ்சலி செலுத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 29 Dec, 2025 | 02:49 PM தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரான கேப்டன் விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு குரு பூஜையை முன்னிட்டு, அவரது நினைவிடத்திற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்து மலரஞ்சலி செலுத்தினார். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினை ஏற்படுத்தி, தமிழகத்தின் நிகரற்ற அரசியல் சக்தியாக திகழ்ந்து மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு குருபூஜை சென்னையில் உள்ள அவருடைய நினைவிடத்தில் நடைபெற்றது. இந்த குரு பூஜையில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கட்சியின் மாநில நிர்வாகிகளும், தொண்டர்களும் அமைதி பேரணியாக வருகை தந்து அவருக்கு குருபூஜை செய்தனர். இந்த தருணத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களான ஜி கே வாசன், எல் . முருகன் உள்ளிட்ட பலரும் பங்கு பற்றி கேப்டன் விஜயகாந்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ. வ. வேலு மற்றும் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் வி பிரபாகர் ராஜா உள்ளிட்ட ஏராளமான திமுகவினரும் இந்நிகழ்வில் பங்கு பற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். https://www.virakesari.lk/article/234667
  10. மலையகப் பாதைகளில் குவியும் மண்சரிவு மண்: சமூக சிக்கலாக மாறும் அபாயம் 30 Dec, 2025 | 03:51 PM மலையகப் பிரதேசங்களில் மண்சரிவு காரணமாகக் குவிந்துள்ள மண் ஒரு சமூகப்பிரச்சினையாக மாறி வருகிறது. கடந்த அனர்த்தின் போது ஏற்பட்ட பல்வேறு மண்சரிவுகள் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் பாதைகளில் இருந்து நான்கு இலட்சம் கியுபிக் மண் அகற்றப்படுள்ளதாக நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர ஆரச்சி தெரிவித்தார். வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மதகதண வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றால் இவை அகற்றப்பட்டுள்ளன. அதே நேரம் இவற்றை அப்புறபப்டுத்தி கொட்டுவதற்குஇடமில்லாது காணப்படுகிறது. பொருத்த மற்ற இடங்களில் கொட்டப்பட்டால் அவை மீண்டும் நீரினால் கழுவப்பட்டு அல்லது மீண்டும் மண் அரிப்பு ஏற்பட்டு நீர் நிரைகளில் சேரக்கூடும். அப்படியாயின் நீர் நிலைகளின் ஆழம் குறைந்து சிறிய மழைக்குக் கூட வௌ்ளப் பெருக்குகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அவற்றை மீளப்பயன்படுத்தும் முறையொன்று கண்டு பிடிக்கப்படாவிட்டால் இன்னும் சொற்ப காலத்தில் சுற்றாடல் பிரச்சினையாக மாறி பின்னர் அது சமூகப்பிரசசினையாக இடமுண்டு என்றார். https://www.virakesari.lk/article/234753
  11. பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை நிறுத்துங்கள் ; வவுனியாவில் போராட்டம் 30 Dec, 2025 | 02:19 PM வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தையிட்டியில் ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், வவுனியா உட்பட வடகிழக்கில் புதிதாக அமைக்கப்படும் விகாரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், சட்டவிரோதமாக தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடியவர்கள் மிலேச்சத்தனமாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒரு மதகுரு என்று கூட பாராமல் மோசமான முறையில் வேலன் சுவாமி நடாத்தப்பட்டிருந்தார். இது தமிழ்மக்கள் மீதானஒரு அடக்குமுறை செயற்பாடாகவே உள்ளது. வடக்கில் குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலை, தையிட்டி, தற்போது வவுனியா கல்லுமலை என்பன ஆக்கிரமிப்பு செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பௌத்த துறவிகளே இப்படியான கலவரங்கள் ஏற்ப்படுவதற்கு தூண்டுகோலாக உள்ளனர். எனவே மறுக்கப்படும் எமது உரிமைகளை அடைவதற்காக நாம் தொடர்ச்சியாக போராட்டங்களை செய்வோம். என்றனர். https://www.virakesari.lk/article/234747
  12. இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட வீரர் அக்ஷு பெர்னாண்டோ காலமானார் Published By: Digital Desk 3 30 Dec, 2025 | 01:16 PM (என்.வீ.ஏ.) South Asians & Diaspora இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) காலமானார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் உயிரும் துரதிர்ஷ்டவசமாக அகால முடிவுக்கு வந்ததை அடுத்து கிரிக்கெட் சமூகத்தினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நியூஸிலாந்தில் 2010இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண் கிரிக்கெட் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அக்ஷு பெர்னாண்டோ, 2018 டிசம்பர் 28ஆம் திகதியன்று கல்கிஸ்ஸை கடற்கரைக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். அன்றைய தினம் கடற்கரையில் நடைபெற்ற அணியின் பயிற்சி அமர்வில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றது. விபத்து இடம்பெற்ற காலப்பகுதியில் பெர்னாண்டோ தனது தலைமுறையினரில் மிகச் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். தனுஷ்க குணதிலக்க, பானுக்க ராஜபக்ஷ, கித்ருவன் வித்தானகே ஆகியோருடன் அவர் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பெற்றார். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக லின்கன் விளையாட்டரங்கில் 2010இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் அக்ஷு பெர்னாண்டோ 52 ஓட்டங்களைப் பெற்றார். பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரியில் கல்வி கற்ற அக்ஷு பெர்னாண்டோ 13, 15, 17 வயதுகளுக்குட்பட்ட அணிகளின் தலைவராகவும் 19 வயதுக்குட்பட்ட அணியின் உப தலைவராகவும் விளையாடினார். கழக மட்டத்தில் அவர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், பாணந்துறை விளையாட்டுக் கழகம், சிலாபம் மேரியன்ஸ் கழகம் மற்றும் றாகமை விளையாட்டுக் கழகம் ஆகிவற்றை பிரதிநிதித்துவப்படுத்தினார். விபத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் விளையாடிய கடைசி போட்டியில் (2018 டிசம்பர் 14) முவர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றார். 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்திலிருந்து கடந்த 7 வருடங்களாக தொடர்ச்சியான தீவிர சிகிச்சைக்குள்ளாகி வந்த அக்ஷு பெர்னாண்டோவின் மறைவு ஒரு கவலைக்குரிய முடிவை குறிக்கிறது. முன்னாள் சக அணி வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் கிரிக்கெட் குடும்பத்தினர் அனைவரிடமிருந்தும் அவருக்கு அஞ்சலிகள் குவிந்த வண்ணம் உள்ளது. அக்ஷு பெர்னாண்டோவை அவரது திறமைக்காக மட்டுமல்ல, அவரது குணம் மற்றும் சிறந்த மனப்பான்மைக்காக கிரிக்கெட் சமூகம் என்றென்றும் நினைவுகூறும் என்பது உறுதி. அவரது ஆத்துமம் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. https://www.virakesari.lk/article/234742
  13. அரசு வாக்குறுதி அளித்த நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் Dec 30, 2025 - 03:20 PM இந்த டித்வா சூறாவளி ஏற்பட்ட சமயத்திலும் அதற்குப் பின்னரும், பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும், மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்வைத்து அவற்றை முன்னெடுப்போம் என்று அரசாங்கமும் ஜனாதிபதியும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். ஆனால் அவ்வாறு வாக்குறுதியளித்த சலுகைகள், நிவாரணங்கள், அவற்றுக்குத் தேவையான வளங்கள் மற்றும் நிதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. ஒரு தகரத் துண்டு அடிபட்டுச் சென்றாலும் அதற்கும் 10 இலட்சம் ரூபா தருவோம் என்று உறுதியளித்த அரசாங்கம், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு தருவோம் என்று உறுதியளித்த 50 இலட்சம் ரூபாயையோ, அல்லது வாழத் தகுதியற்ற காணிகளுக்குப் பெற்றுத் தருவோம் என்று உறுதியளித்த மாற்றுக் காணிகளையோ அரசாங்கம் இன்னும் பெற்றுக் கொடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றன. இது பாரதூரமான விடயம். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்று அரசாங்கத்திடம் நாம் கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்டபடி சகல நிவாரணங்களையும் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். டித்வா சூறாவளியினால் சேதமடைந்த வைத்தியசாலைக் கட்டமைப்பை மீள் நிர்மாணம் செய்யும் நோக்கில், ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ் வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடரில் மற்றுமொரு கட்டமாக அநுராதபுரம் மாவட்டம், ராஜாங்கனய யாய 11 பிரதேச வைத்தியசாலைக்கு 28 இலட்சம் ரூபா மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு நான் இவ்வாறு பயணம் செய்யும் வேளைகளில், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் பேசிய சந்தர்ப்பங்களில், அவர்களின் கடன்களை அறவிடும் நடவடிக்ககளை நிறுத்துவதாக ஊடகங்கள் வாயிலாக அரச தரப்பினர் அறிவித்த செய்திகளை நடைமுறையில் காண முடியாதுள்ளதை தெரிந்து கொண்டேன். அரசாங்கம் இவற்றை ஊடகங்கள் மூலம் பொறுப்புடனே விளம்பரப்படுத்தியது. தொழில்முனைவோர், தொழிலதிபர்களுக்கு, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு, விவசாய சமூகத்தினருக்குப் பெற்றுத் தருவோம் என்ற இழப்பீடுகளை அரசாங்கம் உரியவாறு பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்த போகத்தில் விவசாயம் சரியாக செய்யப்படாவிட்டால், உணவு நெருக்கடியும் ஏற்படும். எனவே அனைவர் குறித்தும் சிந்தித்து, இந்த விடயத்தை பரந்த கண்ணோட்டத்தில் நோக்கி, அறிவித்த நிவாரணங்களை உரிய தரப்புக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். வாக்குறுதியளித்த நிவாரணங்களை மக்களுக்கு வழங்காவிட்டால், மக்கள் சார்பாக நாம் சட்ட ரீதியிலான நடவடிக்கைக்குச் செல்வோம். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி சட்டக் குழுவொன்றை ஸ்தாபிக்கவுள்ளது. வர்த்தமானி அறிவித்தல்கள், பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளில் வாக்குறுதியளித்த விடயங்கள், ஏனைய சந்தர்ப்பங்களில் ஆற்றிய உரைகள், தெரிவித்த கருத்துக்கள் ஊடாக வாக்குறுதியளித்த, அறிவிப்புச் செய்த நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் வரை, இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை, ஐக்கிய மக்கள் சக்தி இந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக முன்நிற்கும். இந்த உரிமைகள் மக்களின் மனித மற்றும் அடிப்படை உரிமைகளாகும், ஆகையால் மக்கள் இவற்றைப் பெறும் வரை எதிர்க்கட்சி போராடும். இந்த நிவாரணம், சுயதொழில் செய்பவர்கள் முதல் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். வாக்குறுதியளிக்கப்பட்ட நிவாரணம் வழங்கப்படுவது போல, இந்த நிவாரணத் தொகைகளை குறைக்கக் கூடாது. அரசாங்கம் பொய் சொல்லாமல் இதனைச் செய்ய வேண்டும். இந்த நிவாரணங்கள் மக்களுக்கு கிடைக்கும் வரை எதிர்க்கட்சி கண்காணித்துக் கொண்டே இருக்கும். அவ்வாறே, எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சக்தி மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடியுமான அனைத்து உதவிகளையும் ஒத்தாசைகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmjsephjz03amo29nh9e6dysp
  14. காலிதா ஜியா: 'கூச்ச சுபாவமுள்ள' ஒரு இல்லத்தரசி ராணுவத்தையே எதிர்த்து நின்று பெரும் தலைவரான கதை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,காலிதா ஜியா வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக இருந்தார். 1991 முதல் 1996 வரையிலும் 2001 முதல் 2006 வரையிலும் ஆட்சி செய்தார். 30 டிசம்பர் 2025, 08:22 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான காலிதா ஜியா, தனது 80 வயதில் காலமானார். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அவரது கணவர் ஜியாவுர் ரஹ்மான், 1977-ல் அதிபராகப் பொறுப்பேற்றார். அந்த நேரத்தில், தனது இரண்டு மகன்களுக்காக அர்ப்பணிப்புடன் இருந்த ஒரு "கூச்ச சுபாவமுள்ள இல்லத்தரசி" என்று காலிதா ஜியா விவரிக்கப்பட்டார். ஆனால், 1981-ல் தனது கணவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது கணவரின் வங்கதேச தேசியவாதக் கட்சியை (BNP) வழிநடத்தினார். முதலில் 1990-களிலும் பின்னர் 2000-களின் தொடக்கத்திலும் என இரண்டு முறை பிரதமராக அவர் பொறுப்பேற்றார். வங்கதேச அரசியலின் கடுமையான சூழலில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி பல ஆண்டுகளை அவர் சிறையில் கழித்தார். 2024-ல் போராட்டத்தின் விளைவாக அவரது நீண்டகால அரசியல் எதிரியான ஷேக் ஹசீனா பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, காலிதா ஜியா மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வங்கதேச அதிபர் ஜியாவுர் ரஹ்மான், 1980ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சருடன். பேகம் காலிதா ஜியா 1945-ல் மேற்கு வங்கத்தில் பிறந்தார். ஒரு தேயிலை வியாபாரியின் மகளான இவர், இந்தியப் பிரிவினைக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இப்போது வங்கதேசமாக இருக்கும் பகுதிக்கு இடம்பெயர்ந்தார். காலிதா ஜியா, தனது 15-வது வயதில், அப்போதைய இளம் ராணுவ அதிகாரியான ஜியாவுர் ரஹ்மானை மணந்தார். 1971-ல், மேற்கு பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான கிளர்ச்சியில் இணைந்த ரஹ்மான், வங்கதேசத்தின் சுதந்திரத்தை அறிவித்தார். 1977-ல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அப்போது ராணுவத் தளபதியாக இருந்த ரஹ்மான் தன்னை அதிபராக அறிவித்துக் கொண்டார். அரசியல் கட்சிகளையும் சுதந்திரமாக செயல்படும் ஊடகங்களையும் அவர் மீண்டும் அனுமதித்தார். பின்னர் மக்கள் வாக்களிப்பின் மூலம் அதிபராக அவர் அங்கீகரிக்கப்பட்டார். அவர் சுமார் 20-க்கும் மேற்பட்ட ராணுவப் புரட்சிகளை எதிர்கொண்டு, அவற்றை மிகக் கடுமையாகக் கையாண்டார். அப்போது ராணுவ வீரர்கள் பெருமளவில் தூக்கிலிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. பின்னர் 1981-ல், சிட்டகாங்கில் ராணுவ அதிகாரிகளின் குழுவினரால் அவர் படுகொலை செய்யப்பட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1987ஆம் ஆண்டு அரசு எதிர்ப்பு போராட்டங்களின் போது, காவல்துறையால் காலிதா ஜியா கைது செய்யப்பட்டார். அதுவரை, காலிதா ஜியா பொது வாழ்வில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியே இருந்தார். பின்னர் அவர் பிஎன்பி (BNP) கட்சியில் உறுப்பினராகி, அதன் துணைத் தலைவராக உயர்ந்தார். 1982-ல் வங்கதேசத்தில் ஒன்பது ஆண்டுகால ராணுவ சர்வாதிகார ஆட்சி தொடங்கியபோது, ஜியா ஜனநாயகத்திற்கான போராட்டங்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினார். ராணுவம் அவ்வப்போது தேர்தல்களை நடத்தினாலும், அவை தீவிர கண்காணிப்பிற்கு உட்பட்ட தேர்தல்களாகவே இருந்தன. அந்தத் தேர்தல்களில் பங்கேற்க தனது கட்சியினரை காலிதா ஜியா அனுமதிக்கவில்லை. அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இருப்பினும், காலிதா ஜியா தொடர்ந்து மாபெரும் பேரணிகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்தார். இது இறுதியாக ராணுவத்தை அடிபணியச் செய்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1991 பிப்ரவரியில் வங்கதேச தலைநகரமான டாக்காவில் தேர்தல் பிரசாரம் செய்யும் காலிதா ஜியா 1991-ல், ராணுவ ஆட்சிக்குப் பிந்தைய தேர்தலில் காலிதா ஜியாவும் அவரது பிஎன்பி (BNP) கட்சியும் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தன. பின்னர் அவர் பிரதமராகப் பதவியேற்றார். முந்தைய அதிபர் முறையிலிருந்த பெரும்பாலான அதிகாரங்களைப் பெற்ற அவர், வங்கதேசத்தின் முதல் பெண் தலைவராகவும், ஒரு இஸ்லாமிய நாட்டை வழிநடத்திய இரண்டாவது பெண்மணியாகவும் ஆனார். வங்கதேசக் குழந்தைகள் சராசரியாக இரண்டு ஆண்டுகள் மட்டுமே கல்வி கற்று வந்த நிலையில், அவர் ஆரம்பக் கல்வியை அனைவருக்கும் இலவசமாகவும் கட்டாயமானதாகவும் மாற்றினார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியிடம் அவர் தோல்வியடைந்தார். 2001-ஆம் ஆண்டு தேர்தலில் காலிதா ஜியா சில இஸ்லாமியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வசப்படுத்தினார். தனது இரண்டாவது பதவிக்காலத்தில், பெண் எம்.பி.க்களுக்காக சட்டமன்றத்தில் 45 இடங்களை ஒதுக்க அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். 70% பெண்கள் கல்வியறிவற்றவர்களாக இருந்த அந்த நாட்டில், இளம்பெண்களுக்கு கல்வி வழங்க அவர் பாடுபட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1991 தேர்தலில் காலிதா ஜியாவின் தேர்தல் பிரசாரப் போஸ்டர். அக்டோபர் 2006-ல், திட்டமிடப்பட்ட பொதுத் தேர்தலுக்கு முன்னதாக காலிதா ஜியா பதவியில் இருந்து விலகினார். ஆனால் அப்போது வெடித்த கலவரங்களால் ராணுவம் தலையிட்டது. தேர்தல் தள்ளிப்போனது. இடைக்கால அரசாங்கம் பெரும்பாலான அரசியல் நடவடிக்கைகளைத் தடை செய்ததுடன் ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடங்கியது. இது அனைத்துக் கட்சியினரையும் பாதித்தது. ஓராண்டுக்குப் பிறகு, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் காலிதா ஜியா கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாகவே, வங்கதேசத்தின் முதல் அதிபரின் மகளும், காலிதா ஜியாவின் அரசியல் போட்டியாளருமான அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவும் கைது செய்யப்பட்டிருந்தார். இருபது ஆண்டுகளாக மாறிமாறி ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்த இவ்விரு பெண்களும் திடீரென நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொண்டனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1995 ஆம் ஆண்டு, தனது முதல் பிரதமர் பதவிக் காலத்தில் காலிதா ஜியா. காலிதா ஜியா மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 2008-ல் அவர் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. ராணுவத்தின் ஆதரவுடன் நடந்த தேர்தலில் அவர் பங்கேற்றார். அந்தத் தேர்தலில் ஷேக் ஹசீனா வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்தார். 2011-ல், ஊழல் தடுப்பு ஆணையம் ஜியா மீது ஒரு வழக்கைப் பதிவு செய்தது. மறைந்த கணவரின் பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளைக்காக நிலம் வாங்க, கணக்கில் காட்டப்படாத வருமானத்தைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார். கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டார். 2014-ல், அவாமி லீக் கட்சி தேர்தல் முறைகேட்டில் ஈடுபடும் என்று கூறி, காலிதா ஜியா ஆதரவாளர்கள் பொதுத்தேர்தலைப் புறக்கணித்தனர். அந்தத் தேர்தலின் போது, பிஎன்பி (BNP) ஆதரவாளர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டனர் மற்றும் நாடாளுமன்றத்தின் பாதி இடங்களுக்குப் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஓராண்டுக்குப் பிறகு, தேர்தல் புறக்கணிப்பு நடந்ததன் ஆண்டு நிறைவில் ஜியா புதிய தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்தினார். அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்தவும் அவர் திட்டமிட்டார். இதற்கு எதிர்வினையாக, தலைநகர் டாக்காவில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தின் கதவுகளைப் பூட்டி அவரை வெளியேற முடியாமல் பாதுகாப்புப் படைகள் தடுத்தன. டாக்காவில் அனைத்துப் போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. அப்போது, அரசாங்கம் மக்களிடமிருந்து "துண்டிக்கப்பட்டுவிட்டது" என்றும், அதன் நடவடிக்கைகளால் "முழு நாட்டையும் சிறைபிடித்துள்ளது" என்றும் காலிதா ஜியா விமர்சித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2015 ஆம் ஆண்டு, தனது ஆதரவாளர்களைச் சந்தித்து உரையாற்றும் காலிதா ஜியா. ஜியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அவரது இரண்டாவது பதவிக்காலம் தொடர்பானவை. 2003-ல் சரக்கு முனையங்கள் தொடர்பான ஒப்பந்தங்களை வழங்க அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஒப்பந்தங்களை அங்கீகரிக்க அவரது இளைய மகன் அராபத் ரஹ்மான் கோகோ அவரை வற்புறுத்தியதாகக் கூறப்பட்டது. அவர் பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட ஓர் அனாதை இல்ல அறக்கட்டளைக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 2,52,000 டாலர் பணத்தை முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2018-ல் காலிதா ஜியாவிற்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. டாக்காவின் பழைய மற்றும் தற்போது பயன்பாட்டில் இல்லாத மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட ஒரே கைதி அவர் தான். இந்தத் தண்டனையின் காரணமாக அவர் பொதுத்தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2018 ஆம் ஆண்டு டாக்காவில் ஆயிரக்கணக்கான பி.என்.பி. ஆதரவாளர்கள், ஜியாவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், அவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் அவர் கூறினார். ஓராண்டுக்குப் பிறகு, 73 வயதான காலிதா ஜியாவுக்குக் கடுமையான மூட்டுவலி மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் இருந்ததால், சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இறுதியில், உடல்நிலை காரணங்களுக்காக அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார். 2024-ஆம் ஆண்டில், மக்களின் பெரும் அதிருப்தி அலையால் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டது. அரசுப் பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்பட்ட போது, கடுமையான அரசாங்க எதிர்ப்பு எழுச்சியாக மாறியது. இதனைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார். அவருக்குப் பதிலாகப் பொறுப்பேற்ற இடைக்கால அரசாங்கம், காலிதா ஜியாவை விடுவிக்கவும், முடக்கப்பட்ட அவரது வங்கிக் கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவரவும் உத்தரவிட்டது. இந்த நேரத்தில், அவர் கல்லீரல் பாதிப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான தொடர்ச்சியான பாதிப்புகளால் அவர் அவதிப்பட்டு வந்தார். ஜனவரி 2025-ல், ஜியா வெளிநாடு செல்வதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்ல அனுமதிக்கப்பட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3e0ey3ykz9o
  15. பழுதடைந்த அப்பிள் ஐபாட்டினை காட்டி இழப்பீட்டு காசு வாங்கினேன்! Dec 30, 2025 - 02:55 PM - 0 நான் பழைய அப்பிள் ஐபாட் ஒன்றினை காண்பித்து, தண்ணீர் போனதாக கூறி அரசாங்கத்திடமிருந்து 50,000 ரூபாவை வாங்கியேள்ளேன். நாங்களும் பொய் கூறி வாங்குகின்றோம், நீங்களும் பொய்யாவது கூறி வாங்குங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்று (30) காரைநகர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது டித்வா புயலால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அதற்கான நட்ட ஈடுகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், இலத்திரனியல் உபகரணங்கள் பாதிப்புக்கான 50,000 ரூபா இழப்பீட்டிற்கு பதிவு செய்கின்றீர்களா? என பிரதேச செயலரிடம் அருச்சுனா கேள்வி எழுப்பினார். அந்த விண்ணப்ப படிவம் இருப்பதாகவும், அதனை வழங்கவில்லை எனவும் பிரதேச செயலர் கூறினார். அந்த படிவங்களை வழங்கி மக்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குங்கள். தெற்கில் பலர் இந்த கொடுப்பனவுக்கான பதிவுகளை மேற்கொண்டு பணத்தினை பெறுகின்றனர். நானும் பழைய ஐபாட் ஒன்றினை காண்பித்து, அதற்குள் தண்ணீர் போனதாக கூறி 50,000 ரூபாவை எடுத்தேன். நீங்களும் அவ்வாறு பொய்யாவது கூறி அந்த பணத்தை எடுங்கள். 300 வீடுகளுக்கு பாதிப்பு என்று கூறி எனக்கு மக்கள் அழைப்பு மேற்கொண்டு கூறினார்கள். காணொளி, படங்கள் எதுவும் தேவையில்லை. உடனடியாக அந்த கொடுப்பனவுகளை மக்களுக்கு பெற்றுக்கொடுங்கள் என அருச்சுனா கூறினார். இன்போது கருத்து தெரிவித்த சமூகமட்ட அமைப்பு ஒன்றின் பிரதிநிதி, குறித்த பதிவுகள் தொடர்பாக மக்களுக்கு சரியான விளக்கத்தை பிரதேச செயலகம் வழங்கவில்லை. கிராம சேவகர்கள் வீடுகளை வந்து பார்க்கவில்லை என தெரிவித்தார். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmjsdtkh603ako29ntw8e818a
  16. IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வருட ஆரம்பத்தில் நாட்டிற்கு Dec 30, 2025 - 11:44 AM சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வருடத்தின் முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஐந்தாவது மீளாய்வு குறித்து கலந்துரையாடுவதற்காகவே அந்த குழு விஜயம் செய்யவுள்ளது. ஐந்தாவது மீளாய்வு ஏற்கனவே நிறைவடைந்துள்ளதுடன், அதற்கு அனுமதி வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை டிசம்பர் 15 ஆம் திகதி கூடவிருந்தது. எனினும், டித்வா புயலுக்கு பின்னர் அவசர நிதியுதவிக்காக இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைய, அந்தக் கூட்டத்தை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmjs6zdv803a4o29n4syz1a8r
  17. தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் சின்னம் விசிலா? மோதிரமா? 29 Dec, 2025 | 12:40 PM 2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையத்தை மேற்கோள் காட்டி இணையத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி - அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி - நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றி கழகம்- சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி - என நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதல்முறையாக நேரடியாக தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு களம் காணும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக மக்கள் அலை உருவாகி இருக்கிறது என தேர்தல் வியூக நிபுணர்கள் தொடர்ந்து தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இக்கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் தங்களுடைய தேர்தல் சின்னமாக விசில் / மோதிரம் ஆகியவற்றை பரிசீலிக்கும் படி வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் கட்சியின் மேலிட பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதால்.. சேலத்தில் விரைவில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் தலைவர் விஜய் இது தொடர்பான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே திரையில் விஜய் தோன்றினால்.. ரசிகர்கள் விசில் அடித்து தங்களது மகிழ்ச்சியையும், ஆதரவையும் வெளிப்படுத்துவார்கள். தற்போது விசில் தேர்தல் சின்னமாக ஒதுக்கப்படுவதால்.. அதனையும் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் ஆதரவு தெரிவித்து விஜயை- தமிழக வெற்றி கழகத்தை- ஆட்சி கட்டிலில் அமர செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234659
  18. மதுபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தும் சாரதிகளுக்கு கடும் தண்டனை! 29 Dec, 2025 | 12:14 PM மதுபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தினால் அது பாரிய குற்றச் செயலாகும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று திங்கட்கிழமை (29) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார். பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில், மதுபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தினால் போக்குவரத்து விதிமீறல் என்பதற்கு மாறாக பாரிய குற்றச் செயல் என்ற ரீதியில் தண்டனை வழங்கப்படும் வீதி விபத்துக்களுக்கு பிரதான காரணம் மதுபோதையில் வாகனங்களை செலுத்துவது தான். எனவே, மதுபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/234657
  19. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனு Dec 29, 2025 - 03:03 PM மலையகத்தில் பாதிக்கப்பட்ட 1,641 குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனுவொன்றை அனுப்புவதற்காக பேரிடர் நிவாரண செயலணி செயற்பட்டு வருகிறது. இதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) ஹட்டனில் நடைபெற்றது. டித்வா புயல் நாடாளவிய ரீதியில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இதில் மலையகத்தில் 127 பேர் பலியாகி 16 பேர் காணாமல் போய் உள்ளனர். இதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவகின்றனர். இந்நிலையில் பெருந்தோட்டப் பகுதியில் 1,641 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 593 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், அவர்களுக்கு இன்னமும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. அரசாங்கத்தின் அறிவித்தல் படி 4 இலட்சத்து 56 ஆயிரம் பேர் நிவாரணங்களை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அதில் 3 இலட்சத்து 72 ஆயிரம் பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது 82 சதவீத எனவும், 4 இலட்சத்து 672 பேர் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத்திற்கு தகுதியுடையவர்களாகவும் அதில் 3,262 பேருக்கான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிவாரணத்தினை பெற்றுக்கொள்வதற்காக பெரும்பாலான தோட்ட மக்கள் விண்ணப்பித்த போதிலும் ஒரு சில செயலகங்களில் விண்ணப்பப்படிவம் கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கு பிரதான காரணம் அவர்களுக்கு நில உரிமை இல்லாமையும் அவர்கள் தொடர்பான விபரங்கள் தோட்ட முகாமையாளரிடம் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதனால் இந்த நிவாரணங்கள் பெறுவது தொடர்பான சிக்கல்கள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. எனவே, இது குறித்து பேரிடர் நிவாரண செயலணி கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு உண்மையாக பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை திரட்டி மாவட்ட செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த செயலணியின் ஏற்பாட்டாளர் ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்தார். பாதிப்பு என்று வரும் போது அனைவருக்கும் பாகுபாடின்றி செயப்பட வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமை என்றும் இதன் போது பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். -மலையக நிருபர் சுந்தரலிங்கம்- https://adaderanatamil.lk/news/cmjqynuc10397o29nehtzeuow
  20. “முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது! Published By: Digital Desk 1 29 Dec, 2025 | 11:05 AM ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 205 கிராம் ஹெரோயின், 379 கிராம் ஐஸ், 302 கிராம் கஞ்சா, 20,114 கஞ்சா செடிகள், 09 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 03 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 189 போதை மாத்திரைகள், 04 கிலோகிராம் 459 கிராம் 355 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 635 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 737 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், 740 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், இருவர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234648
  21. போதையில் வாகனம் செலுத்தினால் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை Dec 29, 2025 - 01:02 PM இனிவரும் காலங்களில் மதுபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக, போக்குவரத்துச் சட்டங்களுக்கு மேலதிகமாகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனையே இந்த விபத்துக்களுக்குப் பிரதான காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இனிவரும் காலங்களில் இத்தகைய விபத்துக்களின் போது போக்குவரத்துச் சட்டங்களுக்குப் மேலதிகமாக குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: "கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வீதி விபத்துக்கள் 271 ஆல் அதிகரித்துள்ளன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317 ஆல் அதிகரித்துள்ளது. இருப்பினும், பாரிய விபத்துக்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி காணப்படுகிறது. குறிப்பாக, சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையான செயற்பாடுகளே இந்த விபத்துக்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. நாளாந்த விபத்துக்களை ஆராயும் போது, பாதசாரிகளே அதிகளவில் விபத்துக்களுக்குள்ளாகின்றனர். வருடாந்த விபத்துக்களில் 31 சதவீதமானவை பாதசாரிகள் தொடர்பானவையாகும். அதேபோல் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பின்னால் அமர்ந்து பயணப்பவர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளும் அதிகளவில் விபத்துக்களுக்கு முகம் கொடுக்கின்றனர். பல விபத்துக்களுக்குப் போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனையே காரணமாகிறது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம். இதற்கமைய, இனிவரும் காலங்களில் மதுபோதையில், போதைப்பொருள் பாவித்துக் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்" என்றார். https://adaderanatamil.lk/news/cmjqublue038to29nasfq1twg
  22. டக்ளஸூக்கு உயிராபத்து ; பாதுகாப்பு வழங்க அழுத்தம் - முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் 29 Dec, 2025 | 03:26 PM முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார், அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பொழுது முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான சுரேன் ராகவன் இவ்வாறு கருத்து தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் , ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கூட்டாட்சிகளில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்பொழுது மகர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு ஆயிரம் கைதிகள் மட்டுமே அனுமதிக்க பட வேண்டிய போதும் மூவாயிரத்துக்கும் அதிகமான கைதிகள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. ஆகவே முன்னர் பல தடவைகள் எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார், அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/234674
  23. அத தெரண கருத்துப்படம்.
  24. மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் கைது 29 Dec, 2025 | 09:15 AM மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட இரண்டு சந்தேக நபர்களை ஞாயிற்றுக்கிழமை (28) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 16ம் திகதி இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அதன்படி, கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவும், மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (28) காலை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. இதன்போது, மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில உள்ள ஒரு விடுதியில் ஒரு கைக்குண்டுடன் மறைந்திருந்த மேற்படி குற்றத்தைத் திட்டமிட்ட பிரதான சந்தேக நபரும், அவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சந்தேக நபர்கள் 22 மற்றும் 38 வயதுடைய உயிலங்குளத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234639
  25. 10,000 சர்வதேச ஓட்டங்கள் குவித்த நான்காவது வீராங்கனை மந்தனா; 4ஆவது ரி20இலும் இலங்கையை வீழ்த்தியது இந்தியா Published By: Vishnu 28 Dec, 2025 | 11:52 PM (நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக திருவனந்தபுரம் க்றீன்பீல்ட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற நான்காவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்ம்ரித்தி மந்தனா மைல்கல் சாதனை ஒன்றை நிலைநாட்ட இந்தியா 30 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிககெட் தொடரை ஏற்கனவே தனதாக்கிக்கொண்டிருந்த இந்தியா, இந்த வெற்றியுடன் 4 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. இந்த தொடரில் ஷபாலி வர்மா தொடர்ச்சியான 3ஆவது அரைச் சதத்தைக் குவித்ததுடன் ஸ்மிரித்தி மந்தனா அரைச் சதம் விளாசினார். அவர்கள் இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி முதலாவது விக்கெட்டில் 92 பந்துகளில் 162 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு கணிசமான மொத்த எண்ணிக்கையை பெற உதவினர். ஷபாலி வர்மா 46 பந்துகளில் 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 79 ஓட்டங்களையும் ஸ்ம்ரித்தி மந்தனா 48 பந்துகளில் 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களையும் பெற்றனர். இதனிடையே இந்தப் போட்டியில் ஸ்மிரித்தி மந்தனா 27ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார். இந்தியாவின் மிதாலி ராஜ் (10,868 ஓட்டங்கள்), நியூஸிலாந்தின் சுஸி பேட்ஸ் (10,652 ஓட்டங்கள்), சார்லட் எட்வேர்ட்ஸ் (10,273 ஓட்டங்கள்) ஆகியோருக்கு அடுத்ததாக 10,000 சர்வதேச ஓட்டங்களைக் குவித்த வீராங்கனைகள் வரிசையில் நான்காவது இடத்தை மந்தானா பெற்றுக்கொண்டுள்ளார். ஷபாலி வர்மாவும் ஸ்ம்ரித்தி மந்தனாவும் ஆட்டம் இழந்த பின்னர் ரிச்சா கோஷ், அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணியை மேலும் பலப்படுத்தினர். ரிச்சா கோஷ் 16 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 40 ஓட்டங்களுடனும் ஹாமன்ப்ரீத் கோர் 10 பந்துகளில் 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். 222 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அணித் தலைவி சமரி அத்தபத்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்றதுடன் முதலாவது விக்கெட்டில் ஹசினி பெரேராவுடன் 59 ஓட்டங்களையும் 2ஆவது விக்கெட்டில் இமேஷா துலானியுடன் 57 ஓட்டங்களையும் பகிர்ந்தார். ஆனால், இலங்கையின் ஓட்டவேகம் போதுமானதாக அமையவில்லை. சமரி அத்தபத்து 37 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களையும் ஹசினி பெரேரா 33 ஓட்டங்களையும் இமேஷா துலானி 29 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைவிட ஹர்ஷித்தா சமரவிக்ரம 20 ஓட்டங்களையும் கவிஷா டில்ஹாரி 13 ஓட்டங்களையும் நிலக்ஷிக்கா சில்வா 23 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வைஷ்ணவி ஷர்மா 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அருந்ததி ரெட்டி 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: ஸ்ம்ரித்தி மந்தனா. https://www.virakesari.lk/article/234619

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.