Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ரெட் அலர்ட் கொடுத்த இடங்களில் ஏன் அதி கனமழை பெய்யவில்லை? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்திருந்தது. ரெட் அலர்ட் (அதி கனமழை) என்பது 20 செ.மீக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதை குறிக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் கனமழை முதல் மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) வரை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் வேலூர், திருப்பத்தூர், திருச்சி, சேலம், தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை (மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டது. பட மூலாதாரம், Getty Images திரும்பப் பெறப்பட்ட ரெட் அலர்ட் ஆனால் அக்டோபர் 22-ஆம் தேதி காலை இந்த ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டது. புதன்கிழமை வெளியான தகவலின்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கே ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது. பட மூலாதாரம், X@ChennaiRmc அக்டோபர் 22-ஆம் தேதி மழை நிலவரம் அக்டோபர் 22ம் தேதி காலை 8.30 மணி முதல் அக்டோபர் 23ம் தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணத்தில் 13 செ.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டம் அரூரில் 11 செ.மீ மழை பெய்துள்ளது. நாமக்கல்லில் மோகனூர், நீலகிரியில் விண்ட் வர்த் எஸ்டேட், திருப்பூரில் வெள்ளக்கோயில் ஆகிய இடங்களில் 9 செ.மீ மழை பதிவாகியது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, நீலகிரியில் க்ளென்மார்கன், விழுப்புரம் ஆவலூர்பேட்டை ஆகிய இடங்களில் 8 செ.மீ மழை பதிவாகியது. சென்னை புறநகர் பகுதிகளில் மேடவாக்கத்தில் 4 செ.மீ மழையும் நுங்கம்பாக்கத்தில் 2 செ.மீ மழையும் பதிவானது. பட மூலாதாரம், Getty Images வலுவிழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் என்று அக்டோபர் 21-ஆம் தேதி சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அன்றே அது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது. அப்போது அது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அது புயலாக மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அக்டோபர் 22-ஆம் தேதி கூற முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அக்டோபர் 22-ஆம் தேதி வெளியான அறிக்கையின்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதன் அடுத்த நிலையான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பட மூலாதாரம், imd.gov.in எச்சரிக்கை கொடுத்த இடங்களில் ஏன் கனமழை பெய்யவில்லை? வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை பொய்யாகி போவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் கனமழையை எச்சரிக்க தவறியது என்ற விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது வானிலை ஆய்வு மையம். அதே போன்று, வானிலை ஆய்வு மையம் எச்சரித்த தினங்களில், எச்சரித்த இடங்களில் மழை பெய்யாமல் போனதும் உண்டு. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கைக்கும் வானிலை நிகழ்வுக்கும் இடையில் உள்ள இடைவெளியை பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து பிபிசி தமிழிடம் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் ஒய்.இ.ஏ. ராஜ் விளக்கமாக பேசினார். வானிலை நிகழ்வுகளை 100% யாராலும் முழுமையாக கணிக்க முடியாது என்பதை முதலில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார். "வானிலை எச்சரிக்கைகள் எப்போதுமே 80-85% சரியாக இருக்கும். 100% சரியாக யாராலும் கணிக்க முடியாது" என்றார். இந்த முறை என்ன நடந்தது என்று விளக்கி பேசிய அவர், "வங்கக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும் என்று முதலில் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அது வலுவிழந்து கரையை கடந்தது என்று கூற முடியாது, நகர்ந்து சென்றது என்றுதான் கூற வேண்டும். எனவே புதன்கிழமை மதியம் முதலே மழை குறைய தொடங்கியது" என்றார். பட மூலாதாரம், Y.E.A. Raj படக்குறிப்பு, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் ஒய்.இ.ஏ. ராஜ் முதலில் இருந்த வானிலை நிகழ்வில் அடுத்தடுத்த நேரத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று சுட்டிக்காட்டும் அவர், "இந்த வானிலை நிகழ்வு தமிழ்நாட்டின் மேல் நிலவினாலும் இதன் மேகங்கள் ஆந்திராவின் பக்கம் குவியத் தொடங்கின. அதனால்தான் இப்போது ராயலசீமா பகுதிகளில் நல்ல மழை பெய்யக்கூடும். வானிலை நிகழ்வு ஒரு புறமும் அதன் மேகங்கள் மறுபுறமும் என சீரான நிலை இல்லாமல் இருப்பது வட கிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படக் கூடும்.'' என்றார் மேலும், ''புயல் போன்ற நிகழ்வில் அதன் மையம் எங்கு உள்ளது என்று தெளிவாக கூற முடியும். எனவே அது குறித்த கணிப்புகளும் சரியாக இருக்கக் கூடும். ஆனால் காற்றழுத்த தாழ்வுப் பகுதி போன்ற நிகழ்வுகளில் அதன் மையம் எங்குள்ளது என்று மிக தெளிவாக கூற முடியாது. எனவே சில மாற்றங்கள் இருக்கும். சென்னையிலிருந்து சுமார் 65 கி.மீ தள்ளி உள்ள அரக்கோணத்தில் 15 செ.மீ மழை பதிவாகியிருந்தது" என்றார். மேலும் வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் முழுவதும் தவறு என்று கூற முடியாது என்கிறார் ஒய்.இ.ஏ. ராஜ். "புதன்கிழமை பரவலாக ஆங்காங்கே மழை பெய்துள்ளது. சென்னையை சுற்றி பல இடங்களில் 3 முதல் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது." என்கிறார். ''வானிலை கணிப்புகளை பொருத்தவரை கடலில் நடக்கும் நிகழ்வுகளை நேரடியாக கண்காணிக்க வழியில்லை. தரையில் உள்ள நிகழ்வுகளை கண்காணிப்பது போல கடலில் கண்காணிக்க முடியாது. கடல் நிகழ்வுகளை பொருத்தவரை செயற்கைக்கோள் தரவுகளை நம்பியிருக்க வேண்டும். அது நிலத்தை நெருங்கி வரும் போதுதான் ரேடார் கொண்டு தகவல்கள் சேகரிக்க முடியும்" என்றார் ஒய்.இ.ஏ. ராஜ். பட மூலாதாரம், B.Amudha படக்குறிப்பு, வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பி. அமுதா இந்த குழப்பத்துக்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பி. அமுதா பிபிசி தமிழிடம் பேசுகையில், "நாங்கள் கொடுத்த ரெட் அலர்ட்டை திரும்பப் பெற்றதில் தவறு இல்லை. மக்களின் பாதுகாப்பு கருதி, அப்போதிருந்த தரவுகள் அடிப்படையில் அதிகனமழை எச்சரிக்கை கொடுத்தோம். ஆனால் நிலைமைகள் மாறிய போது அதை திரும்பப் பெற்றோம்" என்றார். தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான அதே நேரத்தில் மேலும் மூன்று வானிலை நிகழ்வுகள் இருந்தன என்று சுட்டிக்காட்டும் அமுதா, "ஒரு கட்டத்தில் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் இரண்டு பகுதிகளிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. இது மட்டுமல்லாமல் தெற்கு அரைக்கோளத்தில் மேலும் இரண்டு நிகழ்வுகள் நிலவின. அது புயலாக வலுப்பெற்ற போது, தனது ஆற்றலைக் கொண்டு மேகங்களை தன் பக்கம் இழுக்க தொடங்கியது." என்றார். மேலும், ''பிறகு இதிலிருந்து முழுவதும் விலகி வேறு பக்கம் சென்று விட்டது. அப்போது இங்கிருந்த வானிலை நிகழ்வு வலுப்பெற முடியவில்லை. இந்த நிகழ்வை, இது இப்படி நடக்கும் என்று முன்கூட்டியே 100% கணிப்பது என்பது சாத்தியமில்லை. கடல் மீது இந்த நிகழ்வுகள் நடப்பதால் நாம் செயற்கைக்கோள் தரவுகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது" என்றார். பட மூலாதாரம், Getty Images கணிப்புகளை துல்லியமாக்க என்ன செய்ய வேண்டும்? வானிலை கணிப்பு மாதிரிகள் (weather prediction models) என்பவை கணினி அடிப்படையிலான கணிப்புகளே. எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், பல்வேறு இடங்களிலிருந்து கிடைக்கும் வெவ்வேறு தகவல்கள் கணினிக்கு வழங்கப்படும். அதை ஒட்டுமொத்தமாக ஆராய்ந்து ஒரு கணிப்பை கணினி வழங்கும். வானிலை ஆய்வாளர்கள் அந்த கணிப்பை புரிந்து கொண்டு தங்கள் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தின் மூலம் வானிலை அறிக்கைகள் தயாரிக்கின்றனர். கணினிகளுக்கு வழங்கப்படும் தரவுகளை துல்லியமாக்குவது, வானிலை கணிப்புகளை மேலும் துல்லியமாக்க உதவும். "வானிலை கண்காணிப்புகளை மேம்படுத்த வேண்டும், அதன் மூலம் கணிப்புகளை மேம்படுத்த முடியும். இந்திய வானிலை மைய மாதிரிகள் போலவே, Joint Typhoon Warning Centre (JTWC), Global Forecast System (GFS), European Centre for Medium-Range Weather Forecasts (ECMWF) என பல்வேறு வானிலை கணிப்பு மாதிரிகள் உள்ளன. இந்த கணிப்புகளுக்கு இடையே சில வித்தியாசங்கள் இருக்க தான் செய்யும்" என்றார் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் அமுதா. 2021-ஆம் ஆண்டு வெள்ளத்துக்கு பிறகு பேரிடர்களை முன்கூட்டியே கணிக்கும் வகையிலான வானிலை மாதிரிகளை அமைக்க அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறி தமிழக அரசு ரூ.10 கோடியை 2022-23 பட்ஜெட்டில் ஒதுக்கியது. இத்திட்டத்தின் கீழ் சூப்பர் கணினிகள், வானிலை பலூன்கள், இரண்டு ரேடார்கள், 100 தானியங்கி வானிலை நிலையங்கள், 400 தானியங்கி மழை அளவிடும் நிலையங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. "இந்தியாவில் 559 கண்காணிப்பு மையங்கள் இருந்த காலம் மாறி தற்போது 1000க்கும் மேற்பட்ட மழை அளவிடும் நிலையங்கள் மற்றும் வானிலை கண்காணிப்பு நிலையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 65 தானியங்கி வானிலை நிலையங்கள் மற்றும் 80 மழை அளவிடும் நிலையங்கள் உள்ளன. சென்னையில் முதலில் நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் மட்டுமே கண்காணிப்பு மையங்கள் இருந்தன. அந்த தரவுகளை வைத்து மட்டுமே கணிப்புகளை தயாரிக்க வேண்டும். ஆனால் சென்னையிலேயே பல்வேறு இடங்களில் இந்த மையங்கள் இருப்பதால் பரவலான தரவுகள் கிடைக்கின்றன, எனவே கணினி மாதிரிகள் மேம்பட்டுள்ளன" என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2kpvgdjz8yo
  2. பாதாள உலக தலைவர் கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி மற்றும், அவருக்கு உதவிய நபர்களிடம் இருந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் திடுக்கிடும் சம்பவமொன்று வெளியாகியுள்ளது. இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்சென்ற விடயம் குறித்து அண்மைய நாட்களில் கிளிநொச்சி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு அவர் தங்கியிருந்த இடங்களை அடையாளம் காட்டியிருந்தார். இந்த பின்னணியில் அவரை இந்தியாவுக்கு கடத்த ஆனந்தன் என்ற நபர் உதவியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்நிலையில் ஆனந்தன் என்பவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலரை கடல் வழியாக தப்பிச் செல்ல உதவியதாக தெரியவந்துள்ளது. இது தொடடர்பில் தெரிய வருகையில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை, யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு மீன்பிடி படகில் ஏற்றிச் சென்ற ஆனந்தன் என்ற பிரதான சந்தேக நபர், தொடர்பில் மேலும் பல தகவல் வெளியாகியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்களையும் கடல் வழியாக தப்பிச் செல்ல ஆனந்தன் என்பவரே ஏற்பாடு செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், உதயபுரம், மூன்றாம் பாதையில் வசிக்கும் 29 வயதான ஏ.பி. ஆனந்தன் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், நேற்று முன்தினம் இரவு கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த சந்தேக நபருக்கு கிளிநொச்சியில் உள்ள சொந்தமான வீட்டில் இருந்து மைக்ரோ வகை துப்பாக்கியையும் கொழும்பு குற்றப்பிரிவு மீட்டுள்ளது. இந்நிலையில் சந்தேக நபர் திஹாரிய, ஒகொடபொலவில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்தியாவுக்கு கடத்தும் வலையமைப்பு பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற குற்றவாளிகளை படகு மூலம் இந்தியாவுக்கு கடத்தும் வலையமைப்பின் பின்னணியில் உள்ள மூளையாக ஆனந்தன் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனந்தன் தனது தம்பிகள் இருவருடன் இணைந்து இந்த மோசடியை செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. கேரள கஞ்சா மோசடி தொடர்பாக அவரது தம்பிகள் இருவரும் தற்போது காவல்துறையின் தடுப்பு காவலில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழிகள் வழியாக மேற்கொள்ளப்படும் கேரள கஞ்சா வியாபாரத்திலும் இந்த சகோதரக் குழு ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தக் குழுவின் தலையீட்டால் சமீப காலங்களில் பிரதான குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் கடல் வழிகள் வழியாகத் தப்பிச் செல்ல இந்த நபர் உதவி செய்துள்ளதாகவும் கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. அவர் உதவி செய்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சந்தேக நபர்கள் யார் என்பதை மேலும் உறுதிப்படுத்தி வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://ibctamil.com/article/jaffna-man-who-helped-easter-killers-escape-1761202503
  3. யாழ். அரியாலையில் தங்கிய இஷாரா - கைதுசெய்யப்பட்ட ஆனந்தன்: 5 லட்சத்துக்கு நடந்த கடத்தல் இஷாரா செவ்வந்தி இந்தியா செல்ல உதவிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் இன்று அல்லது நாளை கைது செய்ய்ப்படுவார் என கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற குற்றவாளிகளை படகு மூலம் இந்தியாவிற்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லும் ஒரு வலையமைப்பை அடையாளம் கண்டுள்ளது. இந்த குழுவின் மூலம் கடந்த சில ஆண்டுகளில் குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் உட்பட சுமார் 100 பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. குழுவின் மூளையாகச் செயல் இந்தக் கும்பலைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கேரள கஞ்சா கடத்தல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சகோதரர்களில் மூத்தவரான ஆனந்தன், இந்தக் குழுவின் மூளையாகச் செயல்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் பிடிக்கப்பட்டு இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 6 பேரில் இஷாரா செவ்வந்தியும் ஆனந்தனால் இந்தியாவிற்குக் கடத்தப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. கொழும்பு குற்றப்பிரிவால் கைது யாழ்ப்பாணத்தின் அரியாலையில் இருந்து இஷாரா செவ்வந்தி ஒரு மீன்பிடிப் படகில் ஏற்றப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டதுடன் அங்கு அழைத்துச் செல்ல அவரிடம் ரூ. 5 லட்சம் பெற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்தப் பணத்தை ஜே.கே. பாய் கொடுத்தது தெரியவந்துள்ளது. இஷாரா செவ்வந்தி கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் ஆனந்தன் என்ற கடத்தல்காரரின் இரண்டு வீடுகளில் தங்கியிருந்துள்ளார். இஷாரா செவ்வந்திக்கு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் தங்குமிடம் வழங்கி நாட்டை விட்டு வெளியேற உதவிய நான்கு பேரும் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் தங்குமிடம் இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்கு எடுத்துச் சென்ற படகையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்தப் படகையும் ஆதாரமாக காவல்துறையினரின் காவலில் எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு, ஆனந்தன் சகோதரர்களின் பாதுகாப்புடன் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லும் பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு ஜே.கே. பாய் மற்றும் சிலோன் பாய் ஆகியோர் இந்தியாவில் தங்குமிடம் மற்றும் வசதிகளை வழங்குகிறார்கள். விசாரணையில், ஆனந்தனும் அவரது சகோதரர்களும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் பல்வேறு குற்றங்களுக்காக காவல்துறையினரால் தேடப்படுபவர்களை இந்த வழியில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவும் வகையில் 500,000 முதல் 1000,000 ரூபாய் வரை வசூலிப்பது தெரியவந்துள்ளது. https://ibctamil.com/article/ishara-stayed-in-ariyalai-jaffna-anandan-will-soon-1761124302
  4. வெலிகம லசா கொலையில் ஜேவிபி! சர்ச்சையை கிளப்பும் முன்னாள் அமைச்சர் வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை அரசாங்க அடக்குமுறையின் இரண்டாம் கட்டமா என்ற சந்தேகம் இருப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள கட்சி தலைமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பியின் முயற்சி இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள துமிந்த, “வெலிகம பிரதேச சபையில் ஜே.வி.பி தலைமையிலான திசைகாட்டி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கடுமையாக முயற்சி செய்தது. அது நம் அனைவருக்கும் தெரியும். தேர்தலின் போது உறுப்பினர்கள் கடத்தப்பட்டனர். ஜே.வி.பி உறுப்பினர் ஒருவர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வெலிகம பிரதேச சபையில் அதிகாரத்தைப் பெற ஜே.வி.பி பெரும் முயற்சி எடுத்தது. ஆனால், அதை ஐக்கிய மக்கள் சக்தி வென்றது. படுகொலை அவர்கள் தேர்தல் மூலம் அதைக் கைப்பற்ற முயன்றனர், பின்னர் அவர்கள் வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தினர். ஆனால் அதிகாரம் எதிர்க்கட்சிக்குச் சென்றது. இந்த நிலையில் அதன் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது அரசாங்கத்தின் அடக்குமுறையின் இரண்டாம் கட்டமா என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது.” என தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/weligama-chairman-murder-govt-crackdown-duminda-1761136664
  5. மனிதன் 3 லட்சம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் எதிர்காலத்தில் தடயமே கிடைக்காதா? பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனிதர்களான நாம் நீண்ட காலமாகப் கடந்த காலத்தைப் பற்றி ஆராய்வதில் ஆர்வம் கொண்டிருக்கிறோம். பூமியின் 4.5 பில்லியன் ஆண்டுகால வரலாற்றின் நினைவுச் சின்னங்களாக இருக்கும் எண்ணற்ற தொல்லுயிர் எச்சங்களை நாம் மண்ணிலிருந்து தோண்டியெடுத்துள்ளோம். நாம் தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பு பண்டைய இனங்கள் எவ்வாறு வாழ்ந்தன என்பதற்கான குறிப்புகளை இவை நமக்கு வழங்குகின்றன. ஆனால், நாம் அழிந்துபோய், பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு புத்திசாலித்தனமான இனம் தோன்றினால் – நாம் இருந்தோம் என்பதை எப்போதாவது அவர்கள் அறிந்துகொள்வார்களா? அல்லது நமது நாகரிகம் எப்படி இருந்தது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வார்களா? எச்சங்களாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவு எதிர்கால தொல்லுயிர் ஆய்வாளர்கள் நமது எச்சங்களைளைக் கண்டுபிடிப்பார்கள் என்று நாம் நம்ப முடியாது என்கிறார் அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியர் ஆடம் ஃபிராங்க். "புவியியல் ரீதியாக ஒரு நாகரிகம் குறுகிய காலம் மட்டுமே நீடித்தால், பூமியின் உயிர்களில் ஒரு சிறிய பகுதி மட்டுமே எச்சங்களாக மாறும்," என்று அவர் விளக்குகிறார். பட மூலாதாரம், Courtney Hale/E+ via Getty Images படக்குறிப்பு, ஆடம் ஃபிராங்க் மற்றும் கேவின் ஷ்மிட் ஆகியோரின் 2018-ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரையின்படி, டைனோசர்களின் இருப்பு இருந்த ஒவ்வொரு 100,000 ஆண்டுகளுக்கும், ஒரு சில முழுமையான டைனோசர் எச்சங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் ஃபிராங்க் இணைந்து எழுதிய 2018-ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரை ஒன்று, 165 மில்லியன் ஆண்டுகளாக டைனோசர்கள் பூமியில் சுற்றித் திரிந்த போதிலும், இதுவரை ஒப்பீட்டளவில் சில முழுமையான எச்சங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டுகிறது. எனவே, நமது மனித இனம் சுமார் 300,000 ஆண்டுகளாகத்தான் (இதுவரை) இருந்து வருவதால், தொல்லுயிர் எச்ச பதிவில் நாம் பெரிய அளவில் எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்லாமல் போகலாம் என்று அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது. இருப்பினும், நாம் வேறு தடயங்களை விட்டுச் செல்லக்கூடும். பூமியின் வேதியியலை மாற்றுதல் பூமியின் இயற்கையான புவியியலின் ஒரு பகுதியாக, பாறைகள் தொடர்ந்து அடுக்குகளாக அல்லது மண் படிவங்களாக மண்ணில் படிய வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு படிவத்தின் வேதியியல் கலவையும் அந்தக் காலக்கட்டத்தில் நிலைமைகளுக்கு ஏற்ப இருக்கும். பேராசிரியர் ஃபிராங்க் கூற்றுப்படி, மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு மற்றும் கடல் மட்ட மாற்றங்கள் ஆகியவை பாறையில் படியும் விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது "இன்னும் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு கூட கண்டறியப்படலாம்" என்கிறார். "மனிதச் செயல்பாட்டால் பூமியின் காலநிலை அமைப்பு மாறியதால், ஆக்ஸிஜன் ஐசோடோப்புகள், கார்பன் ஐசோடோப்புகளில் ஒரு வித்தியாசம் இருப்பதை அவர்கள் காண்பார்கள்," என்கிறார் ஃபிராங்க். பரிணாமத்தை மறுவடிவமைத்தல் நமது எலும்புகள் தொல்லுயிர் எச்சங்களில் அதிகமாகக் காணப்படாவிட்டாலும், நாம் உலகம் முழுவதும் கொண்டு சென்ற அல்லது பல்லுயிர்த் தன்மையை மாற்றியமைத்த மற்ற இனங்களின் எச்சங்களை நாம் மாற்றியிருக்கலாம். படக்குறிப்பு, 2018-ஆம் ஆண்டு ஆய்வின்படி, வாழும் பாலூட்டிகளின் உயிர் எடையை (biomass) ஒப்பிட்டதில், அதில் 4% மட்டுமே காட்டுப் பாலூட்டிகளைக் கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, உலகில் உள்ள அனைத்து பாலூட்டிகளிலும் 96% நாம் அல்லது நம்முடைய கால்நடைகள் என்று உயிர் எடையின் (biomass - அனைத்து உயிரினங்களின் மொத்த எடை) அடிப்படையில் அளவிடப்பட்டுள்ளது. உலகில் உள்ள பறவைகளின் உயிர் எடையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமாக நம்முடைய கோழிப் பண்ணைகளிலிருந்து வருகிறது. அவர் வேர்ல்ட் இன் டேட்டா (Our World in Data) என்ற லாப நோக்கற்ற இதழின்படி, நாம் ஒவ்வொரு ஆண்டும் 75 பில்லியனுக்கும் அதிகமான கோழிகளைக் கொல்கிறோம். எனவே, அதிக எண்ணிக்கையில் இறக்கும் இந்த பறவைகளின் எச்சங்கள் எதிர்காலத்தில் கவனத்தை ஈர்க்கலாம். "நாம் உயிரியல் பரிணாமத்தின் பாதையை மாற்றியுள்ளோம்," என்கிறார் பிரிட்டனில் உள்ள லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர், தொல்லுயிரியியலர் மற்றும் கெளரவ பேராசிரியர் ஜான் ஸலாசியேவிச். "நமது தொலைதூர எதிர்கால ஆராய்ச்சியாளர்கள், 'என்ன நடந்தது? ஏன் இது நடந்தது?' என்று ஆச்சரியப்படுவார்கள்," என்று அவர் கூறுகிறார். "அவர்கள் இவையெல்லாம் தொடங்கிய அடுக்குகளைத் தேடுவார்கள், அது நமது அடுக்குதான்." நமது 'இறுதி மரபுச் சின்னம்' பேராசிரியர் ஸலாசியேவிச் மற்றும் அவரது லீசெஸ்டர் பல்கலைக்கழக சக பேராசிரியர் சாரா கேபோட் இணைந்து எழுதிய "Discarded: How Technofossils Will Be Our Ultimate Legacy" என்ற புத்தகத்தில், நமது அன்றாடப் பொருட்கள் பூமியின் புவியியல் பதிவில் நீடித்து நிற்கும் என்று வாதிடுகின்றனர். ஒரு அலுமினிய பாட்டில், பாலியஸ்டர் ஸ்வெட்டர் அல்லது நிலத்தடி கார் பார்க்கிங் என இவற்றை அவர்கள் தொழில்நுட்பப் எச்சங்கள் என்று அழைக்கிறார்கள். பட மூலாதாரம், Sarah Gabbott படக்குறிப்பு, பூமியின் மண் படிவங்களில் (sediment) தடயத்தை விட்டுச்செல்லும் அன்றாடப் பொருட்கள், நாம் எப்படி வாழ்ந்தோம் என்பது குறித்த குறிப்புகளை எதிர்கால நாகரிகங்களுக்கு வழங்கக்கூடும். 2020-ஆம் ஆண்டு ஆய்வின்படி, நாம் ஆண்டுதோறும் 30 ஜிகா டன் பொருட்களை உற்பத்தி செய்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது பூமியில் உள்ள ஒவ்வொருவரும் வாரந்தோறும் தங்கள் உடல் எடையை விட அதிகமாக உற்பத்தி செய்வதற்குச் சமம். பூமியில் இப்போது உயிருடன் உள்ள பொருள்களைவிட, மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களின் அளவு (அவற்றின் உலர்ந்த எடை) அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மனித உற்பத்தியில் மிகப்பெரிய விகிதம் கான்கிரீட்டிலிருந்து வருகிறது. இது எதிர்காலத்தில் கண்டுபிடிப்பவர்களுக்கு மிகவும் இயற்கைக்கு மாறானதாகத் தோன்றலாம். ''கான்கிரீட் கட்டடங்களின் விளிம்புகள், நடைபாதை கற்கள் என தொல்லுயிர் எச்சங்களில் வடிவங்களை அவர்கள் கண்டால்... அது இயற்கையான படிவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை அறிவார்கள்." என்கிறார் ஜான் ஸலாசியேவிச். படக்குறிப்பு, நேச்சர் (Nature) இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 2020-ஆம் ஆண்டில், உலகில் உள்ள வாழும் விலங்குகளை விட மனிதனால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்கின் அளவு இரு மடங்கு அதிகமாக இருந்தது. நமது பல பொருட்கள் மிக நீண்ட காலத்திற்கு அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் "ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மட்டுமல்ல, மில்லியன் கணக்கான ஆண்டுகள் கூட நீடிக்கலாம்" என்று பேராசிரியர் கேபோட் கூறுகிறார். 2050-ஆம் ஆண்டுக்குள் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் இருக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கும் அளவு நாம் அவ்வளவு அதிகமான பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்கிறோம். ஆனால் இது பிளாஸ்டிக் மட்டும் அல்ல. "நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளில் கிராஃபைட் உள்ளது," என்று பேராசிரியர் கேபோட் கூறுகிறார். "எனவே, பென்சில் வடிவில் உள்ள கிராஃபைட் நான்கு பில்லியன் ஆண்டுகள் நீடிக்கும்." நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிவ இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று இந்தப் தொல்லுயிரியியலர் கூறுகிறார். "காகிதம் செல்லுலோஸால் ஆனது, அது இலைகளின் பொருளே ஆகும். எனவே... சரியான சூழலில் காகிதம் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் நீடிக்கலாம்," என்று அவர் ஊகிக்கிறார். கிரக அளவில் ஏற்படும் மாற்றங்கள் மனிதர்கள் பூமியின் புவியியலில் ஒரு பெரிய தடத்தை ஏற்கனவே பதித்திருக்கலாம். நம் மறைவுக்குப் பிறகு, வேறொரு புத்திசாலித்தனமான இனம் ஒரு நாள் அதைப் பார்க்குமா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு நமது மரபுச் சின்னத்தை கற்பனை செய்ய இவை பயனுள்ளதாக இருக்குமா? என்று கேட்டால் பேராசிரியர் ஃபிராங்க் ''ஆம்'' என்கிறார். "பூமியில் ஏற்படும் இந்த பெரிய மாற்றங்கள் - பல நூற்றாண்டுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகள், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்விளைவுகளை ஏற்படுத்தும்," என்று அவர் கூறுகிறார். பிபிசி உலக சேவையின் கிரவுட் சயின்ஸ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது. கூடுதல் தகவல்கள்: எல்லென் சேங் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crmxj8n4n2lo
  6. Published By: Digital Desk 3 23 Oct, 2025 | 03:04 PM சுகாதார அமைச்சிக்கான புதிய 16 மாடி அலுவலக தொகுதியின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும், மேலும் குத்தகை அடிப்படையில் சுகாதார அமைச்சகத்தால் தற்போது இயங்கிவரும் அனைத்து அலுவலகங்களும் புதிய கட்டிடத்தின் முதல் கட்டத்தின் முதல் தளத்தில் நிறுவப்படும். கொழும்பில் உள்ள காசல் வீதியிலுள்ள மகளிர் போதனா வைத்தியசாலைக்கு அருகாமையில் கட்டப்பட்டு வரும் சுகாதார அமைச்சின் புதிய 16 மாடி அலுவலக வளாகத்தின் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்வதற்கான சிறப்பு ஆய்வு விஜயத்தின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். தற்போது, சுகாதார அமைச்சின் கீழ் உள்ள பல அலுவலகங்கள் குத்தகை அடிப்படையில் ஒரு தனியார் கட்டிடத்தில் இயங்குகின்றன, மேலும் அந்த கட்டிடத்தின் குத்தகை காலத்தை வரும் ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டாம் என்றும், புதிய கட்டிடத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்தவும், அந்த அலுவலகங்கள் அனைத்தையும் புதிய கட்டிடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த புதிய கட்டிட கட்டுமானப் பணிகள் நீண்ட காலமாக முடங்கிக் கிடந்தன. மேலும் அரசாங்க நிதியைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 375,000 (முந்நூற்று எழுபத்தைந்தாயிரம்) சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை முடிப்பதற்கான தற்போதைய மதிப்பிடப்பட்ட செலவு சுமார் 14,000 மில்லியன் ரூபாய் ஆகும். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கட்டுமானப் பணிகளுக்காக ரூ. 3,000 மில்லியன் ஒதுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது, மேலும் இந்த ஆண்டு இந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளுக்கும் தேவையான தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கும் மேலும் ரூ. 1,500 மில்லியன் ஒதுக்க அமைச்சகம் தீர்மானித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள ஒன்றரை இலட்சம் சுகாதார ஊழியர்களுக்கான சேவைகள் மற்றும் நாட்டில் உள்ள சுகாதாரத் துறை தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் அமைந்துள்ள இந்த கட்டிடத்திலிருந்து விரைவில் நிறுவப்படும். தற்போது பல்வேறு இடங்களிலிருந்து சேவைகளை வழங்கி வரும் சுகாதார அலுவலகங்களை ஒரே கட்டிட வளாகத்திற்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பை இது வழங்கும், மேலும் வாடகை அடிப்படையில் பராமரிக்கப்படும் கட்டிடங்களுக்கு செலுத்தப்படும் பெரிய அளவிலான பணத்தையும், போக்குவரத்து மற்றும் பிற சேவைகளுக்கு செலவிடப்படும் பெரிய அளவிலான பணத்தையும் மிச்சப்படுத்தும். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ, கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலையைக் கவனித்தார். கட்டுமானப் பணிகள் தொடர்பான சேவைகளை வழங்கும் ஒப்பந்த நிறுவனங்களான மத்திய பொறியியல் சேவைகள் நிறுவனம் மற்றும் மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகத்தின் அதிகாரிகளுடன் கட்டுமான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் நீண்ட கலந்துரையாடலை நடத்தினார். இந்த முழு கட்டிடத்தின் கட்டுமானத்தையும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டங்களைத் தயாரிக்குமாறு மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகத்திற்கு (CECB) அமைச்சர் தெரிவித்தார். இந்த கண்காணிப்பு விஐயம் மற்றும் மற்றும் கலந்துரையாடலில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர்கள் சாலிந்த பண்டார, சுனில் கலகம, ஜனக கித்சிறி குணவர்தன, துணை இயக்குநர் தினிப்பிராலய ஹேரத், மத்திய பொறியியல் சேவைகள் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் மத்திய பொறியியல் ஆலோசனை பணியகத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/228459
  7. ஏஷ்லி, அனாபெல் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்கள் ஆஸியை வெல்ல வைத்தன; இங்கிலாந்துக்கு முதலாவது தோல்வி Published By: Vishnu 22 Oct, 2025 | 10:49 PM (நெவில் அன்தனி) இந்தியாவின் இந்தூர் ஹொல்கார் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (22) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 6 விக்கெட்களால் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா இலகுவாக வெற்றிகொண்டது. ஏஷ்லி கார்ட்னர் ஆட்டம் இழக்காமல் குவித்த அபார சதம், அனாபெல் சதர்லண்ட் ஆட்டம் இழக்காமல் குவித்த அரைச் சதம் என்பன அவுஸ்திரேலியாவின் வெற்றியை இலகுவாக்கின. இந்த வருட உலகக் கிண்ணத்தில் தோல்வி அடையாமல் இருந்த இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து முதல் தடவையாக தோல்வியைத் தழுவியது. இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 245 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 9.3 ஓவர்கள் மிதமாக இருக்க 4 விக்கெட்களை இழந்து 248 ஓட்டங்களைக் குவித்து வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 11 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா மீண்டும் முதலாம் இடத்தை அடைந்தது. அவுஸ்திரேலியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது 16ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 68 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. இதன் காரணமாக அவுஸ்திரேலியா பலத்த அழுத்தத்தை எதிர்கொண்டது. ஆனால், அனாபெல் சதர்லண்ட், ஏஷ்லி கார்ட்னர் ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 148 பந்துகளில் 180 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு அபார வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர். இந்தப் போட்டியில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஏஷ்லி கார்ட்னர் 72 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். முதல் 50 ஓட்டங்களுக்கு 47 பந்துகளை எதிர்கொண்ட ஏஷ்லி கார்டனருக்கு அடுத்த 50 ஓட்டங்களைப் பெற வெறும் 22 பந்துகளே தேவைப்பட்டது. அவர் 73 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டறிகளுடன் 104 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார். அவருக்கு பக்கபலமாக திறமையாகத் துடுப்பெடுத்தாடிய அனாபெல் சதர்லண்ட் துரதிர்ஷ்டவசமாக 2 ஓட்டங்களால் சதத்தைப் பூர்த்திசெய்யத் தவறினார். 112 பந்துகளை எதிர்கொண்ட அனாபெல் சதர்லண்ட் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 98 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவர்களைவிட பெத் மூனி 20 ஓட்டங்களையும் எல்சி பெரி 13 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் லின்சி ஸ்மித் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது. அமி ஜோன்ஸ், டமி போமொன்ட் ஆகிய இருவரும் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அமி ஜோன்ஸ் 18 ஓட்டங்களைப் பெற்றதுடன் அடுத்து களம் புகுந்த ஹீதர் நைட் 20 ஓட்டங்களுடன் வெளியேறினார். அணித் தலைவி நெட் சிவர் - ப்ரன்ட் வெறும் 7 ஓட்டங்களையே பெற்றார். (105 - 3 விக்.) சிறப்பாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த டமி போமொன்ட் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 78 ஓட்டங்ளைப் பெற்று ஆட்டம் இழந்தார். எம்மா லாம்ப் (7), சொஃபியா டன்க்லி (22) ஆகிய இருவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க இங்கிலாந்து (166 - 6 விக்.) சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ஆனால், அலிஸ் கெப்சி (38), சார்ளி டீன் (26) ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 227 ஓட்டங்களாக உயர்த்தி அதே எண்ணிக்கையில் இருவரும் ஆடுகளம் விட்டகன்றனர். சொஃபி எக்லஸ்டோன் 10 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் லின்சி ஸ்மித் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகி: அனாபெல் சதர்லண்ட் https://www.virakesari.lk/article/228420
  8. போதை மருந்து கடத்தலுக்கு மரண தண்டனையா? கடந்த சில வாரங்களாக இலங்கை அரசாங்கத்தினால் போதைப்பொருள் கடத்துபவர்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்கள் என பலதரப்படடவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை மரண தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என சில புத்திஜீவிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் இலங்கையில் மரண தண்டனையினை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என இப்பதிவு விளக்குகின்றது. மரண தண்டனையினை எதிர்ப்பதற்கான காரணங்களாவன இலங்கை போன்ற நாட்டில் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்படும் பொழுது பெருமளவு மனித உரிமை மீறல்கள் நடக்க சாத்தியம் அதிகம் உள்ளது. சட்ட விரோத கைதுகள், வழக்குகள் போன்றவை நடைபெறும். இலங்கையின் தற்போதைய சட்டத்தின் பிரகாரம் 2 கிராம் ஹெரோயின் வைத்திருந்தாலே மரணதண்டனை இந்நிலையில் (மிக சிறிய அளவு – இலகுவாக ஒளித்து வைக்கலாம் ) தனது எதிரிகளை இல்லாது ஒழிக்க பலர் இச்சட்டத்தினை பாவிக்க முற்படுவர் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய சூத்திரதாரிகளான நபர்கள் மற்றும் அதில் ஈடுபடும் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் மற்றும் பண பலத்தினை பாவித்து நிச்சயம் தப்பிவிடுவார்கள். மேலும் அவர்களுக்காக சிறந்த சட்டதரணிகள் வாதாடி சட்டத்தில் உள்ள ஓட்டைகளால் அவர்கள் நிச்சயம் வெளிவந்து விடுவார்கள். பணவசதியற்ற ஏழைகளின் தலைகளே எதிர்காலத்தில் உருளும். மேலும் போதைப்பொருள் கடத்துபவர்கள் பெரும்பாலும் தமது வருமானத்திற்காகவே செய்வார்கள். அவர்களை இயக்கும் நபர்கள் பெரும்பாலும் தப்பிவிடுவார்கள். போதைப்பொருட்கள் தொடர்பான வழக்குகள் குற்றவியல் வழக்குகள் ஆகும். இவ்வாறன ஒரு குற்றவியல் விசாரணையின் பொழுது சம்பந்தப்படும் பல தரப்புக்கள் தவறினை விடலாம். உதாரணமாக போலீசார் உரிய சந்தேக நபரினை கைது செய்யாமல் விடலாம், போலீசார் உரிய சாட்சியினை வழங்காது விடலாம், அதிகாரிகள் தவறான சான்று பொருட்களை சமர்ப்பிக்கலாம், போலீசார் நீதி மன்றினை தவறாக வழிநடத்தலாம் மற்றும் சிறந்த குற்றவியல் சட்ட தரணியின் சேவை சந்தேக நபருக்கு கிடைக்காமல் விடலாம். அரசியல்வாதிகளை பழிவாங்கவும், சிறுபான்மையினரை பழிவாங்கவும் மரணதண்டனை பயன்படலாம் மேலும் இதன் காரணமாக பொருளாதாரத்தில் நலிவுற்றோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நீதித்துறையின் தவறு காரணமாக மரண தண்டனை வழங்கப்படலாம். அமெரிக்காவில் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட 200 மேற்பட்டவர்கள் பிற்பாடு நடந்த தீவிர விசாரணை மீளாய்வு காரணமாக மரண தண்டனையில் இருந்து கடந்த காலங்களில் விடுதலை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மரண தண்டனை போன்ற பாரிய தண்டனைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் குற்றங்கள் குறைக்கப்பட்டதாய் விஞ்ஞான ரீதியில் சான்றுகள் ஏதும் இல்லை. எனவே மரண தண்டனையினை எதிர்ப்போம். https://rb.gy/j0twu8 கட்டுரையாளர் பற்றி பொதுசுகாதார மற்றும் தனி நபர்சுகாதார விடயங்கள் (public and personal hygiene) போன்றவற்றை அறிந்து வைத்திருப்பது போல சட்ட மருத்துவ விடயங்கள் பலவற்றையும் சாதாரண மக்கள் பகுதியளவில்லேனும் அறிந்து இருக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் அனாவசியமான உயிரிழப்புகள் மற்றும் பாரதூரமான காயங்கள் என்பவற்றில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளலாம். மேலும் பாலியல் துஸ்பிரயோகங்கள், பால்நிலைக்கு எதிரான வன்முறைகள், மனித சித்திரவதைகள். தொழிற்ச்சாலை காயங்கள் (Occupational injuries)… போன்றவற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் அத்தோடு அவற்றிக்கு எதிராகவும் போராடவும் முடியும். Dr. கனகசபாபதி வாசுதேவா ஆகிய நான் MBBS , Post Graduate Diploma in Legal Medicine (DLM ), Post Graduate Diploma in Toxicology மற்றும் MD (Forensic Medicine) ஆகிய கற்கை நெறிகளை கற்றுள்ளேன். சட்ட மருத்துவராக மேற்படிப்பு கற்பதற்கும் கடமை ஆற்றுவதற்கும் பெரும்பாலான வைத்தியர்கள் விரும்பாத நிலையில் என்னை ஊக்குவித்து இந்நிலைக்கு உயர்த்திய எனது பெற்றோர்களான திரு. செல்லத்துரை கனகசபாபதி மற்றும் சிவகுரு சிவசக்தி ஆகியோருக்கு எனது இவ்வலைப்பூவினை காணிக்கை ஆக்குகின்றேன்.
  9. மலசலக்குழியில் வெடிப்பு சம்பவம் ஏன்?? நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் October 14, 2025 இலங்கையில், கல்சியம் கார்பைட் என்ற இரசாயனப்பொருள் பெரும்பாலும் மலசல கூட மற்றும் சமையலறைக் கழிவு குழாய்களில் ஏற்படும் அடைபாடுகளை நீக்க பயன்படுகிறது. துயர சம்பவம் நடந்த பகுதி, கொழும்பு மாநகரின் புறநகர் பகுதி அக்குடும்பத்தினரின் மலசலகூடம் ஆனது வீட்டுடன் இணைந்த நிலையில் இருந்தது. ஆனால் கழிவுத் தொட்டியானது (Septic tank) ஏறத்தாழ 30 அடி தூரத்தில் வளவின் பின்புறத்தில் அமைந்திருந்தது. அதிக தூர காரணமாக அடிக்கடி அவர்களது மலக்கழிவு கொண்டுசெல்லும் குழாயில் அடைப்பு ஏற்படும். வழமையாக அவர்கள் கல்சியம் காபைட் இணை பாவித்து அடைப்பு எடுப்பார்கள். அன்று மாலையும் அவ்வாறே ஏற்பட்டது. வீட்டு தலைவன், அவரது மச்சான் மற்றும் பிள்ளைகள் உடனடியாக காரியத்தில் இறங்கினர். தலைவர் கல்சியம் காபைட் கல்லுகளை மலக்குழியினுள் (Toilet pan) போட்டு இறப்பர் குழாய் மூலம் கழிவுத்தொட்டியினை நோக்கி தள்ளினார். மற்றவர்கள் கழிவுத்தொட்டியின் மேற்பகுதியில் உள்ள சிறு துவாரம் மூலம் அடைப்பு எடுபடுகின்றதா? என்று மாறிமாறி அவதானித்து வீட்டு தலைவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தனர். வெகுநேரம் ஆகியும் அடைப்பு எதுவும் எடுபட்ட மாதிரி தெரியவில்லை. இருளும் சூழ தொடங்கிவிட்டது. கடைசியாக மச்சான் தனது பொக்கற்றில் இருந்த சிகரற்று லைட்டறினை எடுத்து பற்றவைத்து பார்த்தார். ஒரு சிலவினாடிகள் தான் பெரும் வெடியோசை ஒன்று கேட்டது. மலசல கழிவுத்துத்தொட்டியினை சுற்றி நின்ற சிறுவர்கள், லைட்டரினை பற்ற வைத்து பார்த்த மச்சான் ஆகியோர் பலதூர அடிகளுக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டனர். மலசல கழிவுத்தொட்டியின் சிமெந்து மூடியும் தூக்கி வீசப்பட்டது. அவர்களில் மச்சான் தலையில் ஏற்பட்ட அதிக காயம் காரணமாக உடனேயே மரணித்தார். இராணுவமும் போலீசாரும் குவிக்கப்பட்டு ஏதாவது வெடிபொருள் வெடித்ததா? என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது. 12/10/2025 இல் நடந்த சம்பவம் 2020 இல் நடந்த சம்பவம் கல்சியம் காபைட் ஆனது நீருடன் தாக்கம் அடையும் பொழுது அசற்றலின் வாயு வெளிவரும், இவ்வாயுவானது மிக எளிதாக தீப்பற்றி எரியும் தன்மையுடையது மற்றும் இவ் இரசாயனத் தாக்கம் ஒரு புறவெப்பத் தாக்கம் இதன் காரணமாக தானாகவே தீப்பற்றும் சாத்தியக்கூறு உள்ளது. இங்கு மலசலக்கழிவுத்தொட்டியானது ஓர் இறுக்கமான மூடிய அறை ஆகும். இங்கு அசற்றலின் வாயு தீ பற்றி ஏரியும்பொழுது அதனுள் இருந்த வாயுக்கள் சடுதியாக பெருமளவில் விரிவடையும் அப்பொழுது எவ்வித வெடிபொருளும் இன்றி வெடிப்பு (Blast) சம்பவம் நிகழலாம். இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி பலவீடுகளில் அடிக்கடி நடைபெறுகின்றது. இந்த நிலையில் இவ்வாறு ஏற்படும் அடைப்புக்களை கார்பைட் பாவித்து எடுக்க முயற்சிக்க கூடாது. மாறாக வேறு பின்வரும் வழிமுறைகளில் ஒன்றினை கைக்கொள்வதன் மூலம் தேவையற்ற உயிரிழப்புக்களை தடுத்து கொள்ளலாம் 1. டிஷ் சோப்பும் வெந்நீரும் கழிப்பறை காகிதம் அல்லது மலக் கழிவுகளால் ஏற்பட்ட அடைப்புகளை நீக்க இது உதவும். செய்முறை, அரைக்கட்டி அளவு டிஷ் சோப்பை டாய்லெட் பேசினில் போடவும் பிற்பாடு ஒரு வாளி நீரில், சூடான, ஆனால் கொதிக்காத (போர்சிலின் உடையாமல் இருக்க) நீரை எடுத்துக் கொள்ளவும். அதை இடுப்பு உயரத்திலிருந்து டாய்லெட் பேசினில் ஊற்றவும். இந்த கலவையை 15–30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். சோப் அடைப்பை இளக்கிவிடும். பிறகு, தண்ணீர் ஊற்றி ஃபிளஷ் செய்யவும். 2. பேக்கிங் சோடா மற்றும் வினிகர் பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலவையின் இரசாயனத்தாக்கம் ஆபத்தில்லாத காபனீர்ஓட்ஸைட் வாயுவினை உருவாக்கும், இது அடைப்புகளை உடைக்க உதவும். செய்முறை, ஒரு கப் பேக்கிங் சோடாவை டாய்லெட் பேசினில் ஊற்றவும். பிறகு, இரண்டு கப் வெள்ளை வினிகரை மெதுவாக ஊற்றவும். நுரைக்க 30–60 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பின்னர், டாய்லெட்டை ஃபிளஷ் செய்யவும். 3. பிளன்கர் (Plunger) முறை சாதாரண அடைப்புகளுக்கு, பிளன்கர் மிகவும் பயனுள்ள கருவியாகும். செய்முறை, பிளன்கரின் ரப்பர் முனை முழுவதுமாக நீரில் மூழ்கியிருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். தேவைப்பட்டால், கூடுதல் நீரை ஊற்றலாம். பிளஞ்ச் செய்யுங்கள். பிளன்கரைக் கொண்டு, பம்ப் செய்வது போல, அழுத்தி மேலும் கீழும் வேகமாகக் குலுக்கவும். இதை 15 முதல் 20 வினாடிகள் செய்யுங்கள். அடைப்பு நீங்கிவிட்டதா என்பதைச் சோதிக்க, பிளன்கரை அகற்றிவிட்டு, தண்ணீர் வடியும் வேகத்தைப் பார்க்கவும். 4. விசேடமாக வடிவமைக்கப்பட்ட கம்பிகளை கொண்டு சீர்செய்யும் முறை (Flexible grabber claw) மேற்குறிய முறைகளில் அடைப்பு எடுபடவிட்டால் அடைப்பு மிகவும் கடுமையானதாக இருந்தால், நீங்கள் ஒரு பிளம்பரை அழைக்க வேண்டியிருக்கலாம். அடைப்பை நீக்கும் முன், டாய்லெட் பேசினில் தண்ணீர் நிரம்பி வழிவதைத் தவிர்க்க, ஃபிளஷ் செய்ய வேண்டாம் நன்றி https://tamilforensic.wordpress.com/2025/10/14/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?fbclid=IwVERDUANgJHtleHRuA2FlbQIxMAABHmTVDgNJaTM4KzcFX9t5uWlkPBMD3zlpr5GSgr23YVekpxZ6qKchEvPfRvbY_aem_YQgQfifOdNkqslhk4k2L3w
  10. 23 Oct, 2025 | 11:04 AM பொருளாதாரம் மற்றும் சிறந்த வாழ்வாதாரத்தை நாடி ஐரோப்பிய நாடுகளுக்குச் சட்டவிரோதமாகக் கடல் வழியாகப் பயணித்த 40 பேர் படகு விபத்தில் உயிரிழந்தனர். ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த இந்த அகதிகள், மத்திய தரைக்கடல் பகுதியில் துனிசியா அருகே பயணித்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற ஒரு படகு, மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குப் புறப்பட்டது. துனிசியா நாட்டின் மஹ்தியா நகர் அருகே நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்தப் படகு விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த துனிசியா கடற்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த மோசமான படகு விபத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். கடலில் விழுந்தவர்களில் பலர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிருடன் மீட்கப்பட்ட அகதிகள், துனிசியாவில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆபிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாகவும், அபாயகரமான முறையிலும் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த அபாயகரமான பயணங்களின்போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு அகதிகள் உயிரிழப்பது தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. https://www.virakesari.lk/article/228441
  11. Oct 23, 2025 - 02:06 PM - பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் கருத்துக்களைத் தெரிவித்தார். "தூக்கிலிடப்பட உள்ள 805 ஆண்கள் சிறையில் உள்ளனர். தூக்கிலிடப்பட உள்ள 21 பெண்களும் உள்ளனர். தூக்கிலிடப்பட உள்ள 805 பேரில் 5 பாடசாலை மாணவர்களும் அடங்கியுள்ளனர். தென் மாகாணம் தான் பாதாள உலக நடவடிக்கைகளில் முதலிடத்தில் உள்ளது. இவ்வளவு படித்த சமூகம் கூலிக்கு கொலை செய்யும் சமூகமாக எப்படி மாறியுள்ளது என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. எப்படி பாரிய அளவில் போதைப்பொருட்களை கொண்டு வந்து இந்த நாட்டை அழிக்கும் நிலைக்கு அவர்கள் கொண்டு வந்தார்கள். இதற்கெல்லாம் மூல காரணம் இந்த நாட்டில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள். அவர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும். ஏனென்றால் அவர்கள் ஒரு தேசத்தை அழிக்கிறார்கள். எனவே, பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். அது பாவம் அல்ல." என்றார். https://adaderanatamil.lk/news/cmh3640l70165qplpb1ahhitk
  12. 2026 முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் Oct 23, 2025 - 01:12 PM - 2026 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி சீர்திருத்தங்களுக்கான பாராளுமன்ற துணைக்குழு நேற்று (22) பாராளுமன்றத்தில் கூடியபோது, பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். ஆரம்பப் பிள்ளைப்பருவ பாடத்திட்ட கட்டமைப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், சுமார் 19,000 பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம் 2025 நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஒவ்வொரு மாகாணத்திலும் ஆசிரியர் பயிற்சி நடத்தப்படும் என்றும், புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் படி கற்பித்தல் செயல்முறை செயல்படுத்தப்படும் என்றும் பிரதமர் கூறினார். எந்தவொரு பாடசாலையும் மூடப்படாது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பாடசாலைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதாகும் என்றும் பிரதமர் மேலும் வலியுறுத்தினார். கல்வி முறையின் தரமான வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இது மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmh346tz1015wo29nhwakm7yv
  13. டூத்பிரஷில் வாழும் 12 மில்லியன் நுண்ணுயிர்கள் - கடைசியாக எப்போது மாற்றினீர்கள்? பட மூலாதாரம், Getty Images 7 மணி நேரங்களுக்கு முன்னர் நமது கழிப்பறைகளிலிருந்து வரும் பாக்டீரியாக்கள், வாய்ப்புண்களை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் பூஞ்சைக் காளான்களை உருவாவதற்கானவை. இவை நமது பற்தூரிகைகளில் (toothbrush) செழித்து வளரும். ஆனால் உங்கள் பற்தூரிகைகளை சுத்தமாக வைத்திருக்கவும் பல வழிகள் உள்ளன. கிருமிகள் நிறைந்த மினியேச்சர் அமைப்பாக உங்கள் பற்தூரிகை மாறியிருக்கலாம். அதிலுள்ள தூரிகைகள் வறண்ட புதர் நிலம் போன்று மாறிவிடுகின்றன. இவை நாள்தோறும் தற்காலிகமாக தண்ணீரில் மூழ்கி, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஈரநிலமாக மாற்றப்படுகிறது. உயரமான பிளாஸ்டிக் தண்டுகளின் உச்சியில் இருக்கும் புதர்களுக்கு மத்தியில் லட்சக்கணக்கான உயிரினங்கள் செழித்து வளர்கின்றன. பொதுவாக, உங்களுடைய பல் துலக்கும் கருவி நூற்றுக்கணக்கான வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 1 முதல் 12 மில்லியன் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளுக்கு தாயகமாக உள்ளது. அதே போல் அதில் எண்ணிலடங்கா வைரஸ்களும் உள்ளன. அவை உங்கள் டூத் பிரஷின் மேற்பரப்பில் உயிரியல் படலங்களை உருவாக்குகின்றன, அல்லது நாட்பட்ட பற்தூரிகைகளின் உடைந்த தண்டுகளுக்குள் ஊடுருவிச் செல்கின்றன. நமது வாயிலிருந்து தினமும் வரும் நீர், உமிழ்நீர், தோல் செல்கள் மற்றும் உணவின் தடயங்கள் இந்த நுண்ணுயிரிகளுக்கு அவை செழித்து வளரத் தேவையான அனைத்தையும் அளிக்கின்றன . அவ்வப்போது, அருகிலுள்ள கழிப்பறையை சுத்தம் செய்யும் போது அல்லது ஜன்னலைத் திறக்கும்போது வரும் பிற நுண்ணுயிரிகள் அவற்றுடன் இணைந்துவிடுகின்றன. நாளொன்றுக்கு இரு முறை பல் துலக்கும் நாம், நுண்ணுயிரிகள் நிறைந்த பற்தூரிகையால் பற்களை துலக்கும்போது, அவை நமது வாய்க்குள் செல்லும். எனவே, நமது பல் துலக்கும் கருவி எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். நமது பற்தூரிகையில் என்ன வாழ்கிறது, அந்த நுண்ணுயிரிகள் என்ன ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன, மேலும் நமது பல் துலக்கும் கருவிகளை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை, பல் மருத்துவர்களையும் மருத்துவர்களையும் ஆராயத் தூண்டுகிறது. பட மூலாதாரம், Getty Images நுண்ணுயிரிகள் எங்கிருந்து வருகின்றன? "பற்தூரிகையில் உள்ள நுண்ணுயிரிகள் முதன்மையாக மூன்று மூலங்களிலிருந்து உருவாகின்றன" என்று ஜெர்மனியில் உள்ள ரைன்-வால் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியலாளர் மார்க்-கெவின் ஜின் கூறுகிறார், இவர் பற்தூரிகையில் உள்ள நுண்ணுயிரி மாசுபாட்டை ஆய்வு செய்துள்ளார். இவை பயனரின் வாய், அவர்களின் தோல் மற்றும் டூத் பிரஷ் வைக்கப்பட்டிருக்கும் சூழல். நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் டூத் பிரஷ்ஷில் மட்டுமல்ல, நாம் கடையில் இருந்து வாங்கும் புதிய டூத் பிரஷ்ஷிலும் நாம் அதை பயன்படுத்துவதற்கு முன்பே, அதில் பல்வேறு நுண்ணுயிரிகள் இருக்கலாம். உதாரணமாக, பிரேசிலில் உள்ள கடைகளில் பல்வேறு உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்பட்ட 40 புதிய டூத் பிரஷ்களை ஆய்வு செய்ததில், அவற்றில் பாதி ஏற்கனவே பல்வேறு பாக்டீரியாக்களால் மாசுபட்டிருப்பது கண்டறியப்பட்டது . அதிர்ஷ்டவசமாக, நாம் பயன்படுத்தும் பற்தூரிகைகளில் காணப்படும் பெரும்பாலான நுண்ணுயிரிகள் அதிக பாதிப்பில்லாதவை. ஆச்சரியப்படும்விதமாக, நமது வாயிலியே பல நுண்ணுயிரிகள் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் நாம் பற்தூரிகையை வாய்க்குள் வைத்து பல்துலக்கும்போது, நுரோதியா டெனோகாரியோசா , ஸ்ட்ரெப்டோகாசியே மைடிஸ் மற்றும் ஆக்டினோமைசஸ் பாக்டீரியா போன்ற நமது வாய்க்குள் இருக்கும் நுண்ணுயிரிகளை டூத் பிரஷ்கள் நீக்குகின்றன. இந்த நுண்ணுயிரிகளில் சில நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், பற்சிதைவை ஏற்படுத்தும் பிற நுண்ணுயிரிகளிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகின்றன. ஆனால் அவற்றிடையே நமக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளும் பதுங்கியிருக்கும். பட மூலாதாரம், Getty Images தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் "இவற்றில் மிக முக்கியமானவை ஸ்ட்ரெப்டோகாக்கி மற்றும் ஸ்டேஃபிளோகோகி, இவை பல் சிதைவை ஏற்படுத்துகின்றன," என பிரேசிலில் உள்ள சாவ் பாலோ பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவப் பேராசிரியர் வினிசியஸ் பெட்ராஸி கூறுகிறார். அவற்றில் சில, நமது ஈறுகளில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும், இது பீரியண்டால்ட் நோய் என்று அழைக்கப்படுகிறது . பயன்படுத்தப்பட்ட பற்தூரிகைகளில் வாழும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வயிற்று தொற்று மற்றும் உணவு விஷத்துடன் (food poisoning) பொதுவாக தொடர்புடைய உயிரினங்களான எஸ்கெரிச்சியா கோலி, சூடோமோனாஸ் ஏருகினோசா மற்றும் என்டோரோபாக்டீரியா ஆகியவை பற்தூரிகைகளில் காணப்பட்டன. இவற்றைத் தவிர, மருத்துவமனை நோய்த்தொற்றுகளுக்கு பொதுவான காரணமான கிளெப்சில்லா நிமோனியா மற்றும் கேண்டிடா ஈஸ்ட்கள் போன்ற நோய்க்கிருமிகள் இருப்பதையும் ஆய்வுகள் அடையாளம் கண்டுள்ளன. இந்த நுண்ணுயிரிகள், நாம் பற்தூரிகைகளை சுத்தப்படுத்த பயன்படுத்தும் தண்ணீரில் இருந்தும், நம் கைகள் மற்றும் "சுற்றுச்சூழலின்" பிற பகுதிகளிலிருந்தும் வருகின்றன. இருப்பினும், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாகும் சூழல் உங்கள் குளியலறையாக இருக்கவும் வாய்ப்புள்ளது. குளியலறைகள் சூடான மற்றும் ஈரப்பதமான இடங்களாகும், அங்கு தொடர்ந்து ஏரோசோல்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ்களை காற்றில் கொண்டு செல்லக்கூடிய மெல்லிய நீர்த்துளிகள் வந்து சேர்கின்றன. இதனால் குளியலறைகளில் வைக்கப்படும் பல் துலக்கும் பொருட்கள் மாசுபடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று ஜின் கூறுகிறார். பொதுவாக நமது குளியலறைகளிலேயே கழிப்பறைகளையும் வைத்திருக்கிறோம். அந்த அறையில் தான், டூத் பிரஷ்களும் வைக்கிறோம். அதனால்தான் டூத் பிரஷ் குளியலறையில் இருக்கும்போது நுண்ணுயிரிகளால் நிரம்புகின்றன. பட மூலாதாரம், Getty Images கழிப்பறை சுத்தம் கழிப்பறையை சுத்தம் செய்யும்(Flush) ஒவ்வொரு முறையும், அதைச் சுற்றியுள்ள காற்றில் 1.5 மீ (5 அடி) வரை சிறிய நீர்த்துளிகள் மற்றும் நுண்ணிய மலத்துகள்கள் தெறிக்கின்றன. இவற்றில் பாக்டீரியா மற்றும் தொற்று வைரஸ்கள் இருக்கலாம், அதாவது காய்ச்சல், கோவிட்-19 மற்றும் வயிற்றுப்போக்குக்கு காரணமாகும் நோரோவைரஸ் போன்றவை இருக்கும். பல் துலக்கும் பிரஷ்ஷை குளியலறையில் கழிப்பறைக்கு அருகில் வைத்திருந்தால், உங்கள் கழிப்பறையின் உள்ளடக்கங்கள் அதில் படிந்துவிடும், தொற்று நுண்ணுயிரிகள் நேரடியாக பிரஷ்ஷில் படியும் ஆபத்து அதிகம். இருப்பினும், கழிவறையை கழுவும்போதும், அதில் நீரூற்றும்போதும் கழிப்பறை இருக்கையை மூடுவது பலனளிக்கும். அதிலும், பிறருடன் பகிர்ந்துக் கொள்ளும் குளியலறைகளில், ஆபத்து ஒருவேளை அதிகமாக இருக்கலாம். பல்கலைக்கழகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பொது குளியலறைகளில் வைக்கப்படும் 60% பற்தூரிகைகளில் மலத்தில் காணப்படும் பாக்டீரியாக்கள் படிந்திருப்பதாகவும், ஒருவரின் பிரஷ்ஷில் உள்ள நுண்ணுயிரிகள் வேறொருவரிடமிருந்து வந்திருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. நிஜ உலக சூழல்களில் நுண்ணுயிரிகள் எவ்வாறு உயிர்வாழ்கின்றன என்பதைப் பற்றி ஆய்வு செய்யும் அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் பொறியியல் இணைப் பேராசிரியரான எரிகா ஹார்ட்மேன், கழிப்பறையில் உள்ள நுண்ணுயிரிகள், உண்மையில் மிகவும் கவலை தரக்கூடியவை அல்ல என்று கூறுகிறார். பொதுமக்கள் அனுப்பிய 34 பற்தூரிகைகளில், எதிர்பார்த்த அளவுக்கு மலம் தொடர்பான பாக்டீரியாக்கள் இருப்பதை அவரது குழுவினர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கண்டறிய முடியவில்லை. குடல் தொடர்பான நுண்ணுயிரிகளில் பல காற்றில் வெளிப்படும் போது நீண்ட காலம் உயிர்வாழாது என்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியை இல்லினாய்ஸில் சுட்டிக்காட்டுகிறார். "பெரும்பாலான மக்கள் தங்கள் பற்தூரிகைகளால் சுகாதார சீர்கேட்டை எதிர்கொள்வதாக நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம், Getty Images இருப்பினும், சில ஆராய்ச்சிகள், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா வைரஸ்கள் போன்ற வைரஸ்கள் பற்தூரிகையில் பல மணிநேரம் உயிர்வாழும், ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ்-1, சளி புண்களை ஏற்படுத்தும் வைரஸ்கள் 48 மணிநேரம் வரை கூட உயிர்வாழும் என்பதைக் காட்டுகின்றன. இது நோய்கள் பரவுவதற்கான சாத்தியத்தைக் காட்டுகிறது. இந்தக் காரணத்திற்காகத் தான், பல் துலக்கும் பொருட்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என பொது சுகாதார ஆலோசனை கூறப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட டூத் பிரஷ்களை ஒன்றாக வைத்தால், அதிலும் குறிப்பாக நம்முடன் வசிக்காத நபர்களுடையவற்றுடன் சேர்த்து வைக்கக்கூடாது என்றும் பொது சுகாதார அமைப்புகள் எச்சரிக்கின்றன. இருப்பினும், ஒரே வீட்டில் வசிப்பவர்களுக்கு இது பெரிய அளவு பிரச்னையை ஏற்படுத்தாது என்று ஹார்ட்மேன் கூறுகிறார். "ஒன்றாக வாழ்பவர்கள் அப்படி இல்லாதவர்களை விட தங்கள் வாயில் உள்ள நுண்ணுயிரிகளின் விகிதத்தை அதிகமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள்" என்று அவர் கூறுகிறார். "இதற்குக் காரணம், முத்தமிடுவது போன்ற நேரடி வழிகளைத் தவிர, டூத் பிரஷ்களை அருகில் வைப்பது போன்ற மறைமுக வழியாகவும் இருக்கலாம் என நினைக்கிறேன்." (நாய் உரிமையாளர்கள் பெரும்பாலும் தங்கள் செல்லப்பிராணிகளிடம் இருக்கும் நுண்ணுயிரிகளில் பலவற்றைப் பகிர்ந்து கொள்வார்கள் என்பது கவனிக்கத்தக்கது ). உண்மையில், பற்தூரிகைகளில் காணப்படும் சில வைரஸ்கள் உண்மையில் நமக்கு சாதகமாக செயல்படக்கூடும் - ஹார்ட்மேனும் அவரது குழுவும் பற்தூரிகைகள் பாக்டீரியோபேஜ்கள் எனப்படும் வைரஸ்களின் செழிப்பான சமூகங்களைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர், அவை மனிதர்களை விட பாக்டீரியாக்களைப் பாதிக்கின்றன மற்றும் அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவும். பட மூலாதாரம், Getty Images பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நோய்க்கிருமிகளால் ஏற்படும் ஆபத்து சிறியது என ஒப்புக்கொள்ளும் ஜின், நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமாக உள்ளவர்கள் தொற்றுநோய்களுக்கு ஆளாகிறார்கள். பல் துலக்கும் போது பாக்டீரியா டிஎன்ஏவை வரிசைப்படுத்திய பிற ஒத்த ஆய்வுகளுடன் ஜின்னின் ஆராய்ச்சி , இந்த பாக்டீரியாக்களில் குறைந்தபட்சம் சில நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எதிர்க்கும் மரபணுக்களைக் கொண்டுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளன. இதன் பொருள் அவை தொற்றுநோய்களை ஏற்படுத்தினால் அவற்றுக்கு சிகிச்சையளிப்பது கடினம். ஆனால் ஜின் தனது ஆய்வில் இந்த மரபணுக்கள் "ஒப்பீட்டளவில் குறைந்த மட்டங்களில்" இருந்தன, எனவே "பொது சுகாதாரக் கண்ணோட்டத்தில் மிதமான கவலையை" மட்டுமே முன்வைக்கின்றன என்று கூறுகிறார். இருப்பினும், இத்தாலியில் உள்ள மாணவர்களிடமிருந்து பல் துலக்கும் போது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அவை அனைத்தும் பல மருந்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பாக்டீரியாக்களைக் கொண்டிருந்தன என்பதைக் கண்டறிந்தது. சில பல் துலக்கும் கருவிகளில் நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சைகள் சேர்க்கப்பட்டுள்ளன, அவை உங்கள் பற்தூரிகையில் வாழும் பாக்டீரியாக்களை கட்டுக்குள் வைத்திருப்பதாக கூறி சந்தைப்படுத்தப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான ஆய்வுகள் இந்த நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சைகளால், உங்கள் தூரிகையில் வாழும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஓரளவே உதவுகின்றன என்றும், மேலும் நுண்ணுயிர் எதிர்ப்பு இனங்கள் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் என்பதையும் காட்டுகின்றன . உங்கள் டூத் பிரஷ்ஷைப் பயன்படுத்திய பிறகு அறை வெப்பநிலையில் நேரான நிலையில் காற்றில் உலர வைப்பதே அதில் வாழும் நுண்ணுயிரிகளைக் குறைப்பதற்கான ஒரு எளிய வழியாகும். இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா வைரஸ்கள் உட்பட பல வைரஸ்கள் , ஈரப்பதம் இல்லாமல் இருந்தால் உயிர்ப்புடன் இருக்காது. பற்சிதைவுக்கு முக்கிய பங்களிக்கும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் போன்ற பாக்டீரியாக்கள், பற்தூரிகைகளில் எட்டு மணி நேரம் வரை உயிர்வாழும், 12 மணி நேரத்தில் அவை இறக்கத் தொடங்குகின்றன. பற்தூரிகையின் தூரிகைகள் உள்ளப் பகுதிகளை மூடவோ அல்லது மூடிய கொள்கலன்களில் சேமிக்கவோ கூடாது என்று அமெரிக்க பல் மருத்துவ சங்கம் மற்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் பரிந்துரைக்கின்றன. ஏனெனில் இது நுண்ணுயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும். பட மூலாதாரம், Getty Images உங்கள் பற்தூரிகையை எவ்வாறு சுத்தம் செய்வது? பல் துலக்கும் பொருட்களை கிருமி நீக்கம் செய்வதற்கு, புற ஊதா ஒளியைப் பயன்படுத்துவது முதல் டிஷ்வாஷர் அல்லது மைக்ரோவேவில் வைப்பது, ஹேர் ட்ரையர் மூலம் காய வைப்பது அல்லது ஒரு கிளாஸ் விஸ்கியில் ஊறவைப்பது ஆகியவை அடங்கும். மைக்ரோவேவ் பெரும்பாலும் மிகவும் பயனுள்ளதாகக் காணப்படுகிறது, இருப்பினும் உங்கள் பற்தூரிகை உருகவோ அல்லது சேதப்படுத்தவோ கூட வாய்ப்புள்ளது. நீங்கள் பயன்படுத்தும் பற்பசையிலேயே நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருக்கலாம், அதுவே உங்கள் பற்தூரிகையில் வளரும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வேலைகளைச் செய்யலாம். தண்ணீரில் நன்றாகக் கழுவுவதும் சில பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவுகிறது, ஆனால் பல பாக்டீரியாக்கள் அதிலேயே இருக்கும். 1% வினிகர் கலந்த கரைசலில் பற்தூரிகையை கழுவுவதை சில ஆராய்ச்சியாளர்கள் பாக்டீரியாவைக் குறைப்பதற்கான மிகச் சிறந்த வழியாக பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், நீங்கள் அடுத்த முறை அதைப் பயன்படுத்தும்போது வித்தியாசமாக இருக்கலாம். எனவே, பற்தூரிகையை கிருமி நாசினி மவுத்வாஷ் கரைசலில் ஐந்து முதல் 10 நிமிடங்கள் ஊறவைப்பதும் பயனுள்ளதாக இருக்கும். 0.12% குளோரெக்சிடின் அல்லது 0.05% செட்டில்பிரிடினியம் குளோரைடு கொண்ட மவுத்வாஷ் கரைசலைக் கொண்டு தூரிகைகளை கிருமி நீக்கம் செய்யலாம் என பெட்ராஸி பரிந்துரைக்கிறார். இருப்பினும், சில ஆராய்ச்சியாளர்கள் வேறுபட்ட அணுகுமுறையாக பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கும் பற்பசைகளை முன்வைக்கின்றனர். நீண்டகாலமாக பயன்படுத்தும் பழைய பற்தூரிகைகளில் பாக்டீரியாக்கள் வளர்வதற்குத் தேவையான திரவம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்கும். அமெரிக்க பல் சங்கம் போன்ற பல் சுகாதார அமைப்புகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை டூத் பிரஷ்ஷை மாற்ற பரிந்துரைக்க இதுவும் ஒரு காரணம் ஆகும். பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இது பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. பல் துலக்குகளில் பாக்டீரியா சுமைகள் சுமார் 12 வார பயன்பாட்டிற்குப் பிறகு உச்சத்தை அடைகின்றன என்பதையும் ஜின்னின் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது . இருப்பினும், ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் வேறுபட்ட அணுகுமுறையை நோக்கித் திரும்புகின்றனர் உண்மையில் பாக்டீரியா வளர்ச்சியை பற்பசைகள் மூலம் ஊக்குவிக்கலாம். வாய்வழி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று அறியப்படும் சில "நட்பு" பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் புரோபயாடிக் பற்பசைகளை பயன்படுத்தலாம். உதாரணமாக, ஸ்ட்ரெப்டோகாக்கஸ் சலிவாரிஸ் , தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அடக்கவும் , பிளேக்கை எதிர்த்துப் போராடவும் உதவுவதாக அறியப்படுகிறது. நியூசிலாந்தில் உள்ள ஒரு நிறுவனத்தால் இது பரிசோதிக்கப்பட்டு வருகிறது. மற்றொன்று, லிமோசிலாக்டோபாகிலஸ் ரியூட்டெரி, ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸுக்கு எதிராக வலுவாக போட்டியிடுகிறது, இது பற்சிதைவிலிருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. "புரோபயாடிக் பற்பசைகள் அல்லது பயோஆக்டிவ் ப்ரிஸ்டில் பொருட்கள் போன்றவை, பற்பசைகளில் ஆரோக்கியமான நுண்ணுயிர் சமநிலையை ஊக்குவிக்க புதுமையான வழிகளை வழங்கக்கூடும்" என்று ஜின் கூறுகிறார். ஆனால் இது தொடர்பாக இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என அவர் எச்சரிக்கிறார். உங்கள் குளியலறையில் உள்ள உங்கள் பற்தூரிகையை நீங்கள் கூர்ந்து கவனித்தால், இது அதை மாற்ற வேண்டிய நேரமா? என்பதைத் தெரிந்துக் கொள்வது அவசியம். அதை உங்கள் கழிப்பறைக்கு அருகில் இருந்து மேலும் அதிக தூரம் தள்ளி வைக்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwypj7v4r9lo
  14. அததெரண கருத்துப் படங்கள்.
  15. Published By: Digital Desk 3 23 Oct, 2025 | 02:51 PM தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் தேவாவின் இளைய சகோதரரும், இசையமைப்பாளர் ஜோடி சபேஷ் - முரளியில் ஒருவருமான சபேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 68. தேவாவிடம் உதவி இசையமைப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கிய சபேஷ், மற்றொரு சகோதரரான முரளியுடன் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தனியாக இவர் 'சமுத்திரம்', 'தவமாய் தவமிருந்து', 'மாயாண்டி குடும்பத்தார்' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அத்துடன், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். இவருடைய மகன் கார்த்திக் சபேஷ், திரைப் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். நடிகர் ஜெய், சபேஷின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சபேஷ், சிகிச்சை பலனின்றி இன்று (அக்.23) உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு நடிகர்கள், இசைத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/228460
  16. Arattai App | Whatsapp | Zoho CEO Sridhar Vembu Interview | அரட்டை With ஸ்ரீதர் வேம்பு
  17. வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர பாதாளக் குழு குற்றவாளி - ஆனந்த விஜேபால 22 Oct, 2025 | 04:49 PM (எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்) வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர பாதாளக் குழு குற்றவாளி பல சமூக விரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறைக்கும் சென்றுள்ளார். பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலின் பிரதிபலனாகவே இது காணப்படுகிறது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வெலிகம பிரதேச சபையின் தலைவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வெலிகம பிரதேச சபையின் தலைவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பல விடயங்களை குறிப்பிட்டார்கள்.இந்த கொலை மற்றும் இதற்கு முன்னரான படுகொலைகளினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. இந்த நாட்டில் பல குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் உள்ளார்கள். அவர்கள் பல குழுக்களாக பிரிந்துள்ளார்கள்.அவர்களிடம் ஆயுதங்கள் உள்ளன. அவர்களுக்கிடையில் மோதல்கள் உள்ளன. இவ்விடயம் தொடர்பில் நான் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி சபைக்கு விடயங்களை வெளிப்படுத்தினேன். வெலிகம பிரதேச சபை உறுப்பினரான லசந்த விக்கிரமசேகர என்ற பெயருடைன இவர் வெலிகம லசந்த என்று அழைக்கப்படுவார்.இவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும், அவர் பாதாளக்குழு குற்றவாளி.இவருக்கு எதிராக 6 வழக்குகள் உள்ளன. சிறைதண்டனை அனுபவித்துள்ளார்.தற்போதும் ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனை ஊடாகவே இருந்துள்ளார்.இவர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புப்பட்டுள்ளார். இந்த நபர் தொடர்பில் பல விடயங்கள் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்பட்டுள்ளன. அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பாதாளக் குழுக்களின் உறுப்பினர்கள் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள். பாதாள குழுக்களுக்கிடையில் மோதல்கள் உள்ளன. இந்த சம்பவமும் அவ்வாறானதே, ஐக்கிய மக்கள் சக்தி இவ்வாறானவர்களை தமது கட்சிக்கு எவ்வாறு தெரிவு செய்தது என்பதை அறிய முடியவில்லை. பாதாள குழுக்கள் மற்றும் ஏனையோர் இவ்வாறு மோதிக் கொண்டு, இறப்பதை ஒருபோதும் அனுமதிக்கபோவதில்லை. இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். பாதாள குழுக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு பின்னர் மக்கள் பிரதிநிதியான ஒருவர் பாதாளக் குழுக்களின் முரண்பாடுகளினால் கொலை செய்யப்பட்டவுடன் அதனை மக்கள் பிரதிநிதி கொலை என்று எவ்வாறு குறிப்பிடுவது. வெலிகம பிரதேச சபையின் தலைவர் பாதாள குழுக்களுடனும், சமூக விரோத செயற்பாடுகளுடன் தொடர்புப்பட்டுள்ளார். இவருக்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதை ஐக்கிய மக்கள் சக்தியினர் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/228395
  18. 22 Oct, 2025 | 05:22 PM (எம்.மனோசித்ரா) 2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற துறவு மாணவர்களுக்கான பாதணி வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய 2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற துறவு மாணவர்களுக்கான பாதணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர் சிட்டைகளை 2025 பாடசாலை தவணை முடிவடையும் போது பயனாளிகளுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வவுச்சர்சிட்டைகள் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சால் நலன்புரிக் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள பரிசு வழங்கும் கைத்தொலைபேசி மென்பொருள் மூலம் ஸ்கான் செய்வதற்கு இயலுமாகும் வகையில் ஞசு குறியீட்டுடன் பாதுகாப்பாக அச்சிட்டு பயன்பெறுகின்ற மாணவர்களுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் கீழ்வரும் வகையில் மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் மாணவர்களின் எண்ணிக்கை 250 இனை விடவும் குறைவான பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் 644,000 பேர், 251-500 இடைப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்ட தோட்டப் பாடசாலை மாணவர்கள் 53,093 பேர், விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்கின்ற 30 பாடசாலைகளில் மாணவர்கள் 2,300 பேர், பிரிவெனாக்களில் தெரிவு செய்யப்பட்ட துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்கள் 30,000 பேர் என இதற்காக மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். https://www.virakesari.lk/article/228397
  19. இஷாரா செவ்வந்தி வழங்கிய தகவலுக்கமைய பிரதான ஆட்கடத்தல்காரர் கைது! 22 Oct, 2025 | 03:23 PM பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களை நாடு கடத்துவதற்கு உதவி செய்த பிரதான ஆட்கடத்தல்காரர் ஒருவர் கிளிநொச்சி பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக இஷாரா செவ்வந்தி தலைமறைவாக இருந்த கிளிநொச்சி பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். “கணேமுல்ல சஞ்சீவ” படுகொலைசெய்யப்பட்டதையடுத்து இஷாரா செவ்வந்தி சுமார் மூன்று நாட்களாக கிளிநொச்சியில் தலைமறைவாக இருந்துள்ள நிலையில் குறித்த ஆல்கடத்தல்காரரின் உதவியுடன் இந்தியாவிற்கு தப்பிச் சென்று பின்னர் அங்கிருந்து நேபாளத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த ஆல்கடத்தல்காரர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த பலரை இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார். நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். இஷாரா செவ்வந்தியுடன் “கம்பஹா பபா” , “ஜேகே பாய்” உட்பட மேலும் பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் 15 நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர். நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228387
  20. Published By: Digital Desk 1 22 Oct, 2025 | 03:53 PM தவிசாளர்களுக்கும் செயலாளர்களுக்கும் இடையேயான முரண்பாட்டை தீர்ப்பது பெரும் தலையிடியாக உள்ளதென தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் எல்லோரும் ஒன்றிணைந்தாலே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், செயலாளர்கள் ஆகியோருக்கான பயிற்சி வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (22) வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை நாம் ஏற்படுத்தவேண்டும். எங்கள் சேவைகளை விரிவாக்குவதுடன் அவற்றையும் நாம் விரைவுபடுத்தவும் வேண்டும். தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் சிலர் துணிவுடன் நடவடிக்கைகள் எடுக்கின்றீர்கள். அதைப் பாராட்டுகின்றேன். ஏனையோரும் அவ்வாறு செயற்படவேண்டும். தவிசாளர்களும் செயலாளர்களும் இணைந்து செயற்படவேண்டும். இருவரும் முரண்பட்டால் அதைத் தீர்ப்பதே எங்களுக்குப் பெரும் தலையிடியாக மாறிவிடும். தவிசாளர்களுக்கும் செயலாளர்களுக்கும் இடையிலான முரண்பாட்டால் பாதிக்கப்படப்போவது அந்தப் பகுதி மக்களே. அந்த மக்களுக்கு சேவை செய்வதற்கே எல்லோருக்கும் இருக்கின்றார்கள். அதை மனதிலிருத்தினாலே போதும். மக்களை அவர்களது சேவைகளை நிறைவேற்றுவதற்கு அலைக்கழிக்காதீர்கள். இதேநேரம், யாழ். மாநகரசபை எல்லைக்குள் உள்ள பெரு வணிக நிறுவனங்கள் குடிபுகு சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளாமல் இயங்குகின்றன. இதனால் அவர்கள் மாநகர சபைக்குச் செலுத்தும் வரியானது, பிரதேச சபையொன்றிலுள்ள குடியிருப்பாளர் செலுத்தும் வரியைவிடக் குறைவானது. இதைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டியது உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பு. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக மாற்றங்களை ஏற்படுத்துவோம் என்றார் . இந்த நிகழ்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், பிரதிப் பிரதம செயலாளர் - ஆளணியும் பயிற்சியும் செ.பிரணவநாதன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/228385
  21. பட மூலாதாரம், Getty Images 21 அக்டோபர் 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் (2021-ஆம் ஆண்டு உலக நாடுகள் மற்றும் தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புக் கட்டுரைகளை 'வரலாற்றுப் பதிவுகள்' என்ற பெயரில் ஞாயிறுதோறும் பிபிசி தமிழ் வெளியிட்டது. அந்த வரிசையில் வெளியான மூன்றாம் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.) மனிதகுல வரலாற்றில் மிகச் சிறந்த ராணுவத் தலைவர்களில் ஒருவராக பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் போனபார்ட் (1769-1821) கருதப்படுகிறார். பிரெஞ்சுப் புரட்சி (1787-1799) நடந்த காலத்தில் முக்கியத்துவம் பெறும் நிலைக்கு உயர்ந்த நெப்போலியன், 1804 முதல் 1814 வரை பிரான்சின் பேரரசராக இருந்தார். 1814இல் ஆட்சியை இழந்த பின் மீண்டும் 1815இல் பிரான்சின் பேரரசராக அவர் இருந்தார். 1803 மற்றும் 1815 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலகட்டங்களில் நடைபெற்ற நெப்போலியப் போர்கள் மூலம் அவர் நினைவுகூரப்படுகிறார். பிரிட்டன் உடனான வாட்டர்லூ போரில் ஜூன் 18, 1815 அன்று நெப்போலியன் போனபார்ட் தோல்வி அடைந்ததும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சரி.. நெப்போலியன் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்? நெப்போலியன் எங்கு எப்போது பிறந்தார் ? ஆகஸ்ட் 15, 1769 அன்று மத்திய தரைக்கடலில் உள்ள கோர்சிகா தீவில் பிறந்தார் நெப்போலியன். இந்தத் தீவு பிரான்சின் ஓர் அங்கம். நெப்போலியன் வரலாற்றில் எதற்காக நினைவுகூரப்படுகிறார்? அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நெப்போலியப் போர்கள் நடந்த காலகட்டத்தில் பிரான்சின் பேரரசராக இருந்ததற்கும், வாட்டர்லூ போரில் தோல்வி அடைந்ததற்கு அவர் நினைவுகூரப்படுகிறார். நெப்போலியனின் குடும்ப பின்புலம் என்ன? பட மூலாதாரம், Getty Images கார்சிகா தீவில் கார்லோ மரியா போனபார்ட் எனும் வழக்கறிஞருக்கும், அவரது மனைவி லெடிசியா ரமோலினா போனபார்ட்டுக்கும் பிறந்த குழந்தைகளில் எட்டு குழந்தைகள் உயிர் பிழைத்தனர். அவர்களில் இரண்டாவது குழந்தை நெப்போலியன் ஆவர். 'போனபார்ட்' என்போர் கார்சிகா தீவில் வாழ்ந்த ஒரு சிறிய மேட்டுக்குடி சமூகத்தினர் ஆவர். நெப்போலியன் இருமுறை திருமணம் செய்து கொண்டவர். அவரது முதல் மனைவியின் பெயர் ஜோசஃபைன் டீ புஹார்னே (1796 - 1810). இரண்டாவது மனைவியின் பெயர் மேரி லூயி, பார்மாவின் கோமாட்டி (1810 - 1821). மேரி மூலமாகத்தான் இரண்டாம் நெப்போலியன் பிறந்தார். தனக்கு 1806ஆம் ஆண்டில் முறையின்றி பிறந்த, சார்லஸ் லியான் என வேறொரு மகன் இருப்பதாக முதலில் ஒப்புக் கொண்ட நெப்போலியன், காலப்போக்கில் அதை மறுத்தார். நெப்போலியனின் உயரம் என்ன? நெப்போலியன் தாம் உயரம் குறைவாக இருப்பது குறித்து அதிகம் வருத்தப்பட்டிருக்கிறார். அவர் ஐந்து அடி இரண்டு அங்குலம் உயரம் என அவர் மரணத்தின் போது எழுதப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டிருக்கிறது. ஆங்கில அளவீட்டு முறைப்படி பார்த்தால் ஐந்து அடி ஆறு அங்குல உயரமிருப்பார். நெப்போலியனின் இளமைக்காலம் எப்படி இருந்தது? நெப்போலியனின் தாய் தந்தையர் கார்சிகா தீவில் வாழ்ந்த ஒரு சிறிய மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்கள் குடும்பம் அத்தனை செல்வாக்கானது அல்ல. நெப்போலியன் பிரான்சின் ராணுவ அகாடமிகளில் ஊக்கத் தொகையில் படித்தார். தன் வகுப்பறை சகாக்களை ஒப்பிடும் போது நெப்போலியன் ஏழை. கார்சியா தீவில் வளர்ந்த போது அவரது முதல் மொழி பிரெஞ்சு அல்ல, இத்தாலி மொழி. அவர் பேசுவது பாமரத்தனமாக இருக்கிறது என அவரது வகுப்பறை சகாக்கள் விமர்சித்திருக்கிறார்கள். நெப்போலியன் எப்போது ராணுவத்தில் சேர்ந்தார்? பட மூலாதாரம், Getty Images தனது 15ஆவது வயதில் பிரான்சின் முக்கிய படைகளில் ஒன்றான 'இகோல் மிலிடைர்' பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால், சேர்ந்த உடன் இரு ஆண்டுகளில் படித்து முடிக்க வேண்டிய படிப்பை ஓராண்டு காலத்தில் படித்து முடிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். நெப்போலியனின் தந்தை வயிற்றுப் புற்றுநோய் காரணமாக மரணமடைந்ததால், நெப்போலியன் ஒருவரே மொத்த குடும்பத்தின் முக்கிய பொருள் ஈட்டுபவர் ஆனார். தன் 16ஆவது பிறந்தநாள் நிறைவடைந்து சில காலங்களுக்குள்ளேயே ராணுவத்தில் உயர் அதிகாரி ஆனார். ஐரோப்பாவில் போர் வெடிக்கும் சூழல் இருந்த போது நெப்போலியன் இரண்டாம் லெப்டினன்டாக கேரிசன் என்கிற நகரத்தில் இருந்தார். அந்த காலகட்டத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு கார்சியாவில் வாழ்ந்து வந்த தன் குடும்பத்தைப் பார்க்கச் சென்றார். நெப்போலியனின் ஆரம்ப கால சாதனைகள் என்ன? 1792ஆம் ஆண்டு, நெப்போலியன் ராணுவத்தில் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். 1796-ல் பாரிஸில் ஆட்சி புரிந்து வந்த புரட்சிகர படைக்கும் எதிராக எழுந்த கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தியதால், அவர் இத்தாலியில் இருந்த பிரெஞ்சு ராணுவத்தில் கமாண்டராக்கப்பட்டார். ஆஸ்திரியாவுக்கு எதிரான பல முக்கிய வெற்றிகள், ஜோசஃபைன் டீ புஹார்னேவை மணந்து கொண்டது நெப்போலியனின் பெயரையும் புகழையும் தேசிய அளவில் உயர்த்தியது. 1799 நவம்பரில் நெப்போலியன் முதல் கன்சுலானார். தன் ராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் ஓர் ஐரோப்பிய சாம்ராஜ்யத்தை நிறுவ வேலை செய்தார். நெப்போலியன் ஆட்சியை மத்திய அரசாக்கினார். மீண்டும் ரோமன் கத்தோலிக்கத்தை நாட்டின் மதமாக்கினார். பல கல்வி சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். பேங்க் ஆஃப் பிரான்ஸ் என்கிற பிரான்ஸின் மத்திய வங்கியை நிறுவினார். நெப்போலியன் பிரான்ஸின் பேரரசரானது எப்படி? 1800ஆம் ஆண்டில் மாரெங்கோவில் வைத்து ஆஸ்திரியர்களை வென்றார் நெப்போலியன். அதன் பிறகு ஒரு பொது ஐரோப்பிய அமைதி ஒப்பந்தத்தைக் குறித்துப் பேசினார். அது ஐரோப்பிய கண்டத்தில் பிரான்சின் ஆதிக்கத்தை நிறுவியது. 1802ஆம் ஆண்டு நெப்போலியன் தன்னைத் தானே நிரந்தர கன்சுலாக நியமித்துக் கொண்டார், இரண்டாண்டுகளுக்குப் பிறகு பிரான்சின் பேரரசரானார். ஐரோப்பாவின் மீது நெப்போலியன் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது எப்படி? பட மூலாதாரம், Getty Images நெப்போலியன் முன் வைத்த அமைதி ஒப்பந்தத்தை மீறி 1803ஆம் ஆண்டு பிரிட்டன், பிரான்சின் மீது போர் தொடுத்தது. பிறகு ரஷ்யாவும், ஆஸ்திரியாவும் பிரிட்டனோடு இணைந்து கொண்டன. பிரிட்டனின் கடற்படை 'ட்ராஃபல்கர் போரில்' வென்ற பிறகு, பிரிட்டன் மீது படையெடுக்கும் திட்டத்தை கைவிட்டு, ரஷ்யா மற்றும் ஆஸ்திரிய படைகள் மீது கவனத்தைச் செலுத்தினார். 'ஆஸ்டெர்லிட்ஸ் போரில்' அவ்விரு படைகளையும் வென்றார். அது அவர் வாழ்நாளில் கண்ட மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்று. அந்த ஆண்டில் அவர் மேலும் பல நிலப் பகுதிகளைக் கைப்பற்றினார். அது அவருக்கு ஐரோப்பிய கண்டத்தில் ஆதிக்கம் செலுத்த வழிவகுத்தது. ஹோலி ரோமன் சாம்ராஜ்யம் கலைக்கப்பட்டு, நெப்போலியனின் உறவினர்கள் மற்றும் விசுவாசிகள் இத்தாலி, நேபிள், ஸ்பெயின், ஸ்வீடன், ஹாலந்து, வெஸ்ட்ஃபெலியா போன்ற பகுதிகளுக்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். நெப்போலியனின் முதல் திருமணம் எப்படி முறிந்தது? ஜோசஃபைன் டீ புஹார்னேவுக்கும் தனக்கும் குழந்தை பிறக்கவில்லை என்பதால், ஜோசஃபைனை 1810ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பிறகு ஆஸ்திரிய பேரரசரின் 18 வயது இளவரசியான மேரி லூயியை திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஆண்டு மேரி இரண்டாம் நெப்போலியனைப் பெற்றெடுத்தார். நெப்போலியன் ஏன் நாடு கடத்தப்பட்டார்? 1810ஆம் ஆண்டிலிருந்து நெப்போலியனுக்கு எதிரான அலைகள் வீசத் தொடங்கின. பிரெஞ்சு ராணுவம் சில பெரிய தோல்விகளைச் சந்தித்தது. அது பிரான்ஸ் நாட்டின் வளத்தை காலி செய்தது. 1812ஆம் ஆண்டு ரஷ்யா மீது படையெடுத்து தோல்வியடைந்தது. நான்கு லட்சம் பேராக சென்ற படை வெறும் 40,000 பேராக சுருங்கி பிரான்ஸ் வந்து சேர்ந்தது. 1814-ல் பாரிஸ் வீழ்ந்தது. நெப்போலியன் எல்பா தீவுக்கு நாடுகடத்தப்பட்டார். அவரது மனைவி மேரி மற்றும் மகன் இரண்டாம் நெப்போலியன் ஆஸ்திரியா சென்றனர். மீண்டும் அதிகாரத்துக்கு வந்த நெப்போலியன் ஓராண்டுக்கும் குறைவான காலத்துக்குப் பிறகு, 1815 பிப்ரவரியில் நெப்போலியன் எல்பா தீவிலிருந்து தப்பித்து பிரான்ஸ் தலைநகரத்துக்குள் நுழைந்து வெற்றிகரமாக அதிகாரத்தைக் கைப்பற்றினார். பிரிட்டன், ப்ருஷ்யா, ரஷ்யா, ஆஸ்திரியா அனைவரும் ஒன்று திரண்டு நெப்போலியன் மீது போர் தொடுத்தனர். இத தான் வரலாற்று புகழ் பெற்ற வாட்டர்லூ யுத்தம் என்றழைக்கப்படுகிறது. இதில் நெப்போலியன் தோல்வியுற்று 100 நாட்களில் மீண்டும் தன் ஆட்சியை இழந்தார் மீண்டும் புனித ஹெலெனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். நெப்போலியன் மரணம் 1821ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவான செயின்ட் ஹெலனாவில் நெப்போலியன் மரணமடைந்தார். அத்தீவில் தன் 51ஆவது வயதில், வயிற்றுப் புற்றுநோயால் இறந்ததாக கூறப்படுகிறது. நெப்போலியன் மரணத்துக்கான காரணம் நீண்ட காலமாக சர்ச்சைக்குறியதாக இருந்து வருகிறது. நெப்போலியன் எங்கு புதைக்கப்பட்டார்? நெப்போலியன் அதே தீவில்தான் புதைக்கப்பட்டார். 1840ஆம் ஆண்டு வரை அவரது எச்சங்கள் பிரான்ஸுக்கு கொண்டு செல்லப்படவில்லை. அதன் பிறகு பிரான்சின் ராணுவத் தலைவர்கள் அடக்கம் செய்யப்படும் பாரிஸில் இருக்கும் லெஸ் இன்வெலிட்ஸ் பகுதியில் நெப்போலியனின் எச்சம் புதைக்கப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czr1l5xdn4no
  22. ட்ரம்ப் - புதின் சந்திப்பு இடைநிறுத்தம்! - வெள்ளை மாளிகை 22 Oct, 2025 | 02:40 PM ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புதினை ஹங்கேரியின் புடா பெஸ்ட் நகரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கும் நிகழ்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகிய இருவரும் தொலைப்பேசி ஊடாக உரையாடியதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் இருவரும் தொலைப்பேசியில் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை பொதுவெளியில் தெரிவிக்க முடியாது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை நிறுத்த ட்ரம்ப் கடும் முயற்சி எடுத்து வருவதாக சர்வதேச அளவில் தெரிவிக்கப்படுகிறது. இப்போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் ஜனாதிபதிகளுடனும் ட்ரம்ப பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ட்ரம்ப் - புதின் இடையிலான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெற்றது. எனினும், அந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை. இதனால், மீண்டுமொரு சந்தித்துப் பேசுவோம் என இருவரும் தெரிவித்திருந்தனர். அதன்படி, ஹங்கேரியில் இரு தலைவர்களும் சந்தித்து பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த சந்திப்பும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/228379
  23. 22 Oct, 2025 | 04:49 PM (எம்.ஆர்.எம் வசீம்,இராஜதுரை ஹஷான்) வரிச்செலுத்தும் மக்களுக்கும், பொதுத் திறைச்சேரிக்கும், அரச வங்கிகளுக்கும் பாரிய செலவினச் சுமையாக மாறியுள்ள இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்பட்டு, புதிதாக 6 நிறுவன கட்டமைப்புக்கள் உருவாக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் பதிலளித்ததாவது, வரிச்செலுத்தும் மக்களுக்கும், பொதுத் திறைச்சேரிக்கும், அரச வங்கிகளுக்கும் பாரிய செலவினச் சுமையாக மாறியுள்ள இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க (திருத்த) மின்சார சபைச் சட்டத்தின் பிரகாரம் , 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார சபை சட்டத்தின் முதலாவது உப பிரிவின் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரிக்கு அமைய, 17 ஆவது உறுப்புரைக்கமைய, இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படும். புதிய மறுசீரமைப்பைத் தொடர்ந்து நேஷனல் சிஸ்டம் ஒபரேட் (பிரைவெட்) லிமிடெட், நேஷனல் ட்ரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்விஸ் (பிரைவெட்) லிமிடெட், எலெக்ட்ரிசிட்டி ஜெனரேசன் (பிரைவெட்) லிமிடெட், எலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபூசன் (பிரைவெட்) லிமிடெட், எனெர்ஜி வென்டேர்ஸ் லங்கா (பிரைவெட்) லிமிடெட், சி.இ.பி எம்ப்லோயீஸ் (பிரைவெட்) லிமிடெட், என்ற அடிப்படையில் புதிதாக 6 நிறுவன கட்டமைப்புக்கள் உருவாக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/228394
  24. மழையினால் 3 தடவைகள் தடைப்பட்ட ஆட்டத்தில் DLS முறைமையின் பிரகாரம் 150 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா வெற்றி Published By: Vishnu 21 Oct, 2025 | 11:58 PM (நெவில் அன்தனி) கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மழையினால் 3 தடவைகள் தடைப்பட்ட போதிலும் டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் தென் ஆபிரிக்கா 150 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்கா 10 புள்ளிகளுடன் முதலாம் இடத்திற்கு முன்னேறியது. அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் தலா 9 புள்ளிகளுடன் நிகர ஓட்ட வேக அடிப்படையில் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களில் இருக்கின்றன. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணித் தலைவி லோரா வுல்வார்ட், சுனே லூயி, மாரிஸ்ஆன் கெப், நாடின் டி க்ளார்க் ஆகியோரின் அதிரடி ஆட்டங்களின் உதவியுடன் தென் ஆபிரிக்கா கணிசமான ஓட்டங்களைக் குவித்து பலமான நிலையை அடைந்தது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் அபிரிக்கா 40 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 312 ஓட்டங்களைக் குவித்தது. இரண்டாவது ஓவரில் தஸ்மின் ப்றிட்ஸ் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். அதனைத் தொடர்ந்து 2 ஓவர்கள் நிறைவில் தென் ஆபிரிக்கா ஒரு விக்கெட்டை இழந்து 6 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பிற்பகல் 3.09 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் ஆட்டம் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் தடைப்பட்டது. மழை ஓய்ந்த பின்னர் பிற்பகல் 5.25 மணிக்கு ஆட்டம் தொடர்ந்தபோது அணிக்கு 40 ஓவர்கள் என போட்டி தீர்ப்பாளரால் நிர்ணயிக்கப்பட்டது. இதனை அடுத்து லோரா வுல்வார்ட், சுனே லூயி ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி 92 பந்துகளில் 118 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவர்களில் முதலில் ஆட்டம் இழந்த சுனே லூயி 8 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தெடாந்து ஆன்எரி டேர்க்சன் 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் லோரா வுல்வார்ட், மாரிஸ்ஆன் கெப் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 52 பந்துகளில் 64 ஓட்டங்களை வேகமாக பகிர்ந்தனர். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய லோரா வுல்வார்ட் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 90 ஓட்டங்களைக் குவித்தார். அவரைத் தொடர்ந்து கராபோ மெசோ ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். எனினும் க்ளோ ட்ரையொன், நாடின் டி க்ளார்க் ஆகிய இவரும் 6ஆவது விக்கெட்டில் 6 ஓவர்களில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவின் ஓட்ட வேகத்தை அதிகரிக்கச் செய்தனர். க்ளோ ட்ரையொன் 21 ஓட்டங்களைப் பெற்றார். மறுபக்கத்தில் நாடின் டி க்ளார்க் 16 பந்துகளில் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 41 ஓட்டங்களை விளாசினார். பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சாடியா இக்பால் 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 40 ஓவர்களில் 306 ஓட்டங்கள் என்ற திருத்தப்பட்ட டக்வேர்த் லூயிஸ் முறைமையின் கீழ் பாகிஸ்தான் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியது. 10 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்கள் என்ற இக்கட்டான நிலையில் பாகிஸ்தான் இருந்தபோது இரவு 9.23 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்ததால் ஆட்டம் தடைப்பட்டது. 38 நிமிடங்களின் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது பாகிஸ்தானின் வெற்றி இலக்கு 25 ஓவர்களில் 262 ஓட்டங்கள் என அறிவிக்கப்பட்டது. மறுபக்கத்தில் குறைந்த பட்சம் 15 ஓவர்களைப் பூர்த்தி செய்து போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற வாஞ்சையுடன் விளையாடிய தென் ஆபிரிக்கா ஓவர்களை விரைவாக வீசி முடிப்பதில் குறியாக இருந்தது. ஆனால், ஆட்டம் மீண்டும் ஆரம்பித்து தொடர்ந்தபோது தென் ஆபிரிக்கா 2 ஓவர்களை வீசிய நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் மூன்றாவது தடவையாக இரவு 10.26 மணிக்கு தடைப்பட்டது. ஆனால் சற்று நேரத்தில் மழை நின்றதால் இரவு 10.35 மணிக்கு போட்டி மீண்டும் தொடர்ந்ததுடன் மூன்றாவது முறையாக வெற்றி இலக்கு திருத்தி அமைக்கப்பட்டது. 20 ஓவர்களில் 234 ஓட்டங்கள் என்ற திருத்தப்பட்ட வெற்றி இலக்கை நோக்கி தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 83 ஓட்டங்ககளைப் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் சித்ரா நவாஸ் ஆட்டம் இழக்காமல் 22 ஓட்டங்களையும் நட்டாலியா பெர்வெய்ஸ் 20 ஓட்டங்களையும் சிட் ரா ஆமின் 13 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நொண்டுமிசோ ஷங்கேஸ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நொண்டுமிசோ ஷங்கேஸ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: மாரிஸ்ஆன் கெப் https://www.virakesari.lk/article/228333
  25. 22 Oct, 2025 | 01:00 PM நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றம் கடந்த ஆண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்வதற்கான பிடியானை பிறப்பித்திருந்த நிலையில், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு நெதன்யாகு தடையாக இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, நெதன்யாகு கனடாவில் நுழைந்தால், அவர் சர்வதேச நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்படுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இப்போர்க்குற்றம் இடம்பெற்றதற்காக நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சர்வதேச நீதிமன்றம் கடந்த ஆண்டு நெதன்யாகுவை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த பிடியாணை நிலுவையில் உள்ள நிலையில், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு நெதன்யாகு தடையாக இருப்பதாக கனடா பிரதமர் குற்றஞ்சாட்டினார். அத்துடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கனடாவுக்குள் நுழைந்தால் நிச்சயமாக சர்வதேச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். இதேபோன்று பிரான்ஸ், துருக்கி, பெல்ஜியம் உட்பட பல நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தின் பிடியாணை உத்தரவை நிறைவேற்றக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/228368

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.