Everything posted by ஏராளன்
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு TRC நிதி நன்கொடை Jan 2, 2026 - 05:35 PM இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் மற்றும் நலன்புரி தேவைக்காக ஒதுக்கப்பட்ட நிதி, ஊழியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க,‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு 12,803,174.35 ரூபாவை நன்கொடையாக வழங்கியது. அதற்கான காசோலையை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் (ஓய்வு), பணிப்பாளர் (நிர்வாகம்) விங் கமாண்டர் சேனக ருவன்பத்திரண (ஓய்வு) மற்றும் பணிப்பாளர் (நிதி) எம்.கே. ஜயந்த ஆகியோர் நேற்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர். https://adaderanatamil.lk/news/cmjwtulls03fzo29n2iqzqgew
-
விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்!
'3 ஆண்டுகள் தாமதம்' – சல்லியர்கள் படத்தின் திரையரங்கு வெளியீட்டில் என்ன சிக்கல்? பட மூலாதாரம்,@vhouseofficial கட்டுரை தகவல் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 ஜனவரி 2026, 14:27 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் குறைந்த செலவில் உருவாகும் திரைப்படங்களுக்குப் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில்லை எனவும் இம்மாதிரி திரைப்படங்களுக்கு திரையரங்குகளைத் தர உரிமையாளர்கள் மறுக்கிறார்கள் எனவும் திரைப்படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குற்றம்சாட்டியிருக்கிறார். இதன் பின்னணி என்ன? நடிகர் கருணாசும் பி. கரிகாலன் என்பவரும் இணைந்து 'சல்லியர்கள்' என்ற திரைப்படத்தைத் தயாரித்திருக்கின்றனர். கருணாஸ், சத்யாதேவி, மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை தி. கிட்டு என்பவர் இயக்கியிருக்கிறார். சல்லியர்கள் படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார். இந்தப் படம், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் பணியாற்றிய மருத்துவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தத் திரைப்படத்தை வெளியிட திரையரங்குகளை அணுகியபோது, பெரும்பாலான திரையரங்குகள் முன்வரவில்லையெனக் குற்றம் சாட்டியிருக்கிறார் சுரேஷ் காமாட்சி. சமீபத்தில் அந்தப் படத்தின் பிரத்யேகக் காட்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இந்தப் பிரச்னையின் பின்னணியை விளக்கினார். பட மூலாதாரம்,@vhouseofficial 'படம் எடுத்து 3 ஆண்டுகள்' "சல்லியர்கள் படத்தை எடுத்து முடித்து மூன்றாண்டுகளாகிவிட்டன. படம் எனக்குப் பிடித்திருந்ததால் அதனை வெளியிட முடிவுசெய்தேன். இதற்கு முன்பு, இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு என மூன்று, நான்கு முறை தேதி குறித்தோம். ஆனால், திரையரங்குகள் போதுமான அளவுக்குக் கிடைக்காததால் வெளியிடும் தேதிகளை மாற்றிக்கொண்டே வந்தோம். '' என்றார் சுரேஷ் காமாட்சி. மேலும் ''அடுத்த வாரம் 'பராசக்தி'யும் 'ஜனநாயகனு'ம் வருவதால் இந்த வாரம் எந்தப் படமும் வெளியாகவில்லை. ஆகவே இந்த வாரத்தைத் தேர்வுசெய்து, சல்லியர்கள் படத்தை வெளியிட முடிவுசெய்தோம். ஆனால், இந்த வாரமும் படத்தை வெளியிட இயலாத சூழல் ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாடு முழுவதும் மொத்தமாகவே 27 காட்சிகள்தான் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளை இயக்கிவரும் ஒருபெரிய திரையரங்க நிறுவனம், சல்லியர்கள் படத்திற்கு என ஒரு காட்சியைக்கூட கொடுக்கவில்லை. இந்தப் படத்தை ஏன் புறக்கணிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. வேறு மாநிலங்களில் இதைச் செய்ய முடியுமா? தயாரிப்பாளர் சங்கங்கள் எதுவும் செய்வதில்லை. சின்னப் படங்கள் வந்தால்தானே புதிய நடிகர்கள் வருவார்கள்? புதிய இயக்குநர்கள் வெளியில் வருவார்கள்? தவிர இந்தப் படம் ஈழப் போராட்டம் குறித்த திரைப்படம். அப்படியிருந்தும் இந்த நிலை" என்கிறார் சுரேஷ் காமாட்சி. இதையடுத்து இந்தப் படத்தை, வியாழக்கிழமையன்று (ஜனவரி 1) ஓடிடியில் வெளியிட முடிவுசெய்திருப்பதாகவும் கூறினார் சுரேஷ் காமாட்சி. இதையடுத்து விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேசிய சுரேஷ் காமாட்சி, "சிறிய திரைப்படம் என்றாலே ஓடாது என முடிவுகட்டி, திரையரங்குகளைத் தர மறுக்கிறார்கள். படத்தைத் திரையிடுங்கள். ஆட்கள் வராவிட்டால் தூக்கிவிடுங்கள். தரவே முடியாது என்றால் எப்படி? படம் வெளியாகும் முன்பே, படம் ஓடவே ஓடாது என முடிவுசெய்வதற்கு இவர்கள் யார்? பெரிய நிறுவனங்களின் படங்களைத் தவிர வேறு யாருமே படங்களை திரையிட முடியாத சூழல் வந்துவிட்டது. ஒரு திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி எட்டு வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடிகளுக்கு கொடுக்க வேண்டும் என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். ஆனால், திரையரங்குகளில் அந்தப் படமே வெளியாகவே முடியாது என்றால், என்ன செய்வது? அதனால்தான் நேரடியாக ஓடிடியிலேயே வெளியிட்டுவிட்டேன்" என்கிறார் அவர். பட மூலாதாரம்,@vhouseofficial 'அரங்குகளைத் தர மறுக்கிறார்கள்' 'சல்லியர்கள்' படத்தைத் தயாரித்த கருணாசும் இதே கருத்தையே சொல்கிறார். "ஒரு காலத்தில் திரையரங்குகள் தனித்தனியாக இயங்கிவந்தன. கார்ப்பரேட் நிறுவனங்கள் சிறிய சிறிய திரையரங்குகள், தனி திரையரங்குகள் எல்லாவற்றையும் ஒப்பந்தங்களின் மூலம் தங்கள் பெயரில் இயக்க ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகு சிறிய தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்களுக்கு அரங்குகளைத் தர மறுக்கிறார்கள். அப்படியானால், சிறிய திரைப்படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் என்ன செய்வது? இப்போது முன்னணி நடிகர்களாக, இயக்குநர்களாக இருப்பவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் புதுமுக நடிகர்களாகவும் இயக்குநர்களாகவும் இருந்தவர்கள்தானே? அவர்களது திரைப்படங்களுக்கு அந்த காலகட்டத்தில் திரையரங்குகள் கிடைத்ததால்தானே அவர்கள் வளர முடிந்தது?" எனக் கேள்வியெழுப்புகிறார் அவர். தயாரிப்பாளர்கள் சங்கங்கள் வலுவாக இல்லாததுதான் பிரச்னை என்கிறார் சுரேஷ் காமாட்சி. "தயாரிப்பாளர் சங்கங்கள் இதற்காக குரல் கொடுக்க வேண்டும். திரையரங்க உரிமையாளர்களின் சங்கங்கள், விநியோகிஸ்தர்களின் சங்கங்கள் ஆகியவை அவரவர் நலன்களைக் காக்கும் வகையில் தீவிரமாக இயங்குகின்றன" என்கிறார் அவர். பட மூலாதாரம்,@vhouseofficial ஆனால், இதில் வேறு சில கோணங்களும் இருக்கின்றன என்கிறார்கள் திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் இயங்குபவர்கள். "சிறிய திரைப்படங்களை வெளியிடுவது என்பது இப்போது எல்லாத் தரப்பிற்குமே கடினமான காரியமாகிவிட்டது. சற்று முகம் தெரிந்த நடிகர்கள் இருந்தால்தான் ரசிகர்கள் திரையரங்குகளுக்கே வருகிறார்கள். திரையரங்க உரிமையாளர்களைப் பொறுத்தவரை, நல்ல படமா, மோசமான படமா என்றெல்லாம் பார்ப்பதில்லை. ஒரு காட்சிக்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்றுதான் பார்ப்பார்கள்.'' என்கிறார் இயக்குநரும் விநியோகிஸ்தரும் 'OTTPLUS' ஓடிடியின் சிஇஓவுமான கேபிள் சங்கர். ''ஒரு படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், இயக்குநர்கள் யாரெனத் தெரியவில்லையென்றால் மிகக் குறைவான ஆட்களே வருவார்கள். இதில் திரையிடும் செலவுகூட திரையரங்கிற்கு கிடைக்காது. ஒரு காட்சிக்கு நான்கைந்து பேர் மட்டுமே வந்தால் ஏசிக்கான செலவு, மின்சாரச் செலவு, சுத்தம் செய்யும் ஆட்களுக்கான செலவு போன்றவற்றில் பாதிகூட கிடைக்காது. அப்படியிருக்கும் நிலையில், யார் சிறிய படங்களைத் திரையிட வருவார்கள்?'' என்கிறார் கேபிள் சங்கர் ''ஆனால், சில சிறிய திரைப்படங்கள் ஆச்சரியம் தருகின்றன. சில நாட்களுக்கு முன்பாக பேச்சி என்று ஒரு படம் வந்தது. அந்தப் படத்திற்கு சென்னையிலும் செங்கல்பட்டிலும் சேர்த்து மொத்தமே 12 காட்சிகள்தான் கொடுக்கப்பட்டன. ஆனால், வரவேற்பு இருந்ததால் அடுத்த வாரம் காட்சிகளின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்தது. இதற்கு அடுத்த வாரம் காட்சிகளின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்தது. அந்தப் படம் சுமார் 80 லட்சத்திற்கு மேல் வசூல் கிடைத்தது. ஆனால் எல்லாப் படங்களுக்கும் இதுபோல நடப்பதில்லை என்பதுதான் பிரச்சனை" என்கிறார் அவர் ஆனால், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்கிறார் கேபிள் சங்கர். "சல்லியர்கள் படத்திற்கு நடந்தது அநியாயம். சிறிய திரைப்படங்களுக்கு பெரும் எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைக்காது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மிகப் பெரிய திரையரங்கு குழுமம், ஒன்றிரண்டு திரையரங்குகளைக்கூட தரவில்லை என்பதை எப்படிப் புரிந்துகொள்வது எனத் தெரியவில்லை. எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழி திரைப்படங்களுக்கு முன்னுரிமை தருகிறார்கள். அதுபோன்ற நிலை இங்கும் வரவேண்டும்" என்கிறார் கேபிள் சங்கர். 'முன்பே கூறியிருந்தால் ஏதாவது செய்திருக்க முடியும்' ஆனால், திரையரங்க உரிமையாளர்களின் பார்வை வேறாக இருக்கிறது. குறைந்த செலவில் தயாராகும் திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் பெரும் எண்ணிக்கையில் வெளியாகும் நிலையில், பெரும்பாலான படங்களுக்கு முதல் காட்சிக்கே ஆள் வருவதில்லை என்கிறார்கள் அவர்கள். ஆனால், சல்லியர்கள் திரைப்படத்தைப் பொறுத்தவரை முன்பே தங்களிடம் கூறியிருந்தால் ஏதாவது செய்திருக்க முடியும் என்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன். "ஒவ்வொரு வாரமும் ஐந்து - ஆறு சிறிய திரைப்படங்கள் வருகின்றன. பெரும்பாலான படங்களுக்கு முதல் காட்சிக்கே 4 -5 பேர்கூட வருவதில்லை. ஏதோ இவர்களுக்கு மட்டும்தான் தமிழ் உணர்வு இருப்பதைப் போல பேசுகிறார்கள். எங்களுக்கும் தமிழ் உணர்வு இருக்கிறது. வியாழக்கிழமை படத்தை வெளியிட முடிவுசெய்துவிட்டு, புதன்கிழமையன்று என்னிடம் சொன்னால் என்ன செய்ய முடியும்?'' என்கிறார் அவர் ''மூன்று - நான்கு நாட்கள் முன்னதாகச் சொல்லியிருந்தால்கூட ஏதாவது செய்திருக்க முடியும். ஒவ்வொரு வாரமும் 6 படங்கள் வரும் நிலையில், எத்தனை படங்களுக்கு திரையரங்குகளைத் தர முடியும்? இன்று நாளிதழைத் திறந்து பாருங்கள். எத்தனை படங்களின் வெளியீடு குறித்த விளம்பரங்கள் வந்திருக்கின்றன? இதில் ஏதாவது நாம் அறிந்த படமாக இருக்கிறதா? வரும் படங்களை திரையிடுங்கள், ஓடினால் தொடருங்கள் இல்லாவிட்டால் தூக்கிவிடுங்கள் என்கிறார்கள். காட்சிகளை திரையிடும் செலவுகூட வராத படங்களை போட்டால், அதில் வரும் இழப்பை எப்படி எதிர்கொள்வது? ஆனால், சல்லியர்கள் படத்தைப் பொறுத்தவரை என்னிடம் முன்பே கூறியிருந்தால், சம்பந்தப்பட்ட தொடர் திரையரங்கு நிறுவனத்திடம் பேசி சில திரையரங்குகளைப் பெற்றுத் தந்திருக்க முடியும்" என்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன். தற்போது சல்லியர்கள் திரைப்படம், 'ஓடிடிபிளஸ்' ஓடிடியில் வெளியாகிவிட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgdlzy7edro
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஏற்கனவே நீங்கள் எமது அமைப்பிற்கு நன்கொடை வழங்கி இருந்தீர்கள் அண்ணா. கடந்த வருடத்தில் இருந்து தான் காரைநகரில் 2 குடும்பங்களுக்கு மாதாந்த உதவி, குடிநீர் விநியோகம்(பேர்மிங்காம் 2016 உதவும் கரங்கள்) செய்கிறோம். பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பி ஒவ்வொரு கட்ட பணி முடிவடையும்போதும் அவர்கள் பணத்தை மீளப்பெற்று பயன்படுத்தும்படியும் செய்யலாம். (அரசின் வீட்டுத் திட்ட நிதி தொழிநுட்ப உத்தியோகத்தரின் சிபார்சின் பின்னரே வங்கியில் இருந்து மீளப்பெற முடியும்.) அல்லது பகுதி பகுதியாக ஒப்பந்தகாரர் கட்ட கட்ட அவருக்கு பணம் அனுப்பலாம். இது இரண்டும் சரிவரவில்லை என்றால் எனது பெயரில் வங்கியில் கதைத்து இன்ன நோக்கத்திற்காக என புதிய வங்கிக் கணக்கை திறந்து தருகிறேன். எல்லோருடைய கருத்துகளையும் பெற்று செயற்படுத்துவோம்.
-
அவனை எனக்குத் தெரியும் - ப.தெய்வீகன்
நன்றி கவி ஐயா. பெயரும் மயூரன் என்று நினைவில் இருந்தது. மயூரன் சுகுமாரன் (Myuran Sukumaran, ஏப்ரல் 17, 1981 - 29 ஏப்ரல் 2015), லண்டனில் பிறந்த இலங்கைத் தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த ஓர் ஆத்திரேலியர் ஆவார். இவர் ஒரு தற்காப்புக் கலை விற்பன்னரும், ஓவியரும் ஆவார். அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரப் புறநகரான ஓபன் நகரில் வாழ்ந்தவர். போதைப் பொருள் கடத்தியமைக்காக இந்தோனேசியாவில் பாலியில் 2005 ஏப்ரல் 17 இல் கைது செய்யப்பட்ட "பாலி ஒன்பது" என்ற ஒன்பது பேர்களின் தலைவர்களில் ஒருவராக இவர் கணிக்கப்படுகிறார். மயூரன் பாலியின் டென்பசார் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 2006 பெப்ரவரி 14 இல் இவருக்கு "சுட்டுக் கொலை" செய்யப்படும் முறையிலான மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.[2] https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நன்றி அண்ணா. கள உறவுகள் உங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குவதோடு நின்றுவிடாது உங்கள் உறவினர், நட்புகளை குறைந்த வருமானம் ஈட்டும் / வருமானம் ஈட்ட முடியாதவர்களுக்கு பேருதவியாக அமையும் இவ்வடிப்படைச் சுகாதார வசதித் திட்டத்தை நிறைவுறுத்த உதவுமாறு தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்.
-
அவனை எனக்குத் தெரியும் - ப.தெய்வீகன்
இது இந்தோனிசியாவில் போதைப்பொருள் கடத்தலிற்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ஈழத்தமிழ் இளைஞர் ஒருவரின் உண்மைக்கதை போலவே இருக்கிறது.
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
ஜீவகன் ஸ்ரீராம்.
-
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு : அரசுக்கு நெறியியல், அறநெறிசார் சட்டபூர்வத்தன்மை இல்லை - கிறிஸ்தவ பாதிரிமார்கள், செயற்பாட்டாளர்கள் 61 பேர் கூட்டாகக் கண்டனம்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு : அரசுக்கு நெறியியல், அறநெறிசார் சட்டபூர்வத்தன்மை இல்லை - கிறிஸ்தவ பாதிரிமார்கள், செயற்பாட்டாளர்கள் 61 பேர் கூட்டாகக் கண்டனம் 01 Jan, 2026 | 06:15 PM (நா.தனுஜா) பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளடங்கலாக அடக்குமுறை சட்ட வடிவங்களை நீக்குவோமென வெளிப்படையாக வாக்குறுதி அளித்திருந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது கருத்துச் சுதந்திரத்தையும் நபர்களின் தனியுரிமையையும் அச்சுறுத்தலுக்குள் தள்ளக்கூடிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் மிக மோசமான சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றது. இதன்மூலம் தற்போதைய அரசுக்கும் நெறியியல் மற்றும் அறநெறிசார் சட்டபூர்வத்தன்மை இல்லை என்பது தெளிவாகியுள்ளதாக கிறிஸ்தவ பாதிரிமார்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் 61 பேர் கூட்டாகக் கரிசனை வெளியிட்டுள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார். இந்நிலையில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் தமது கரிசனைகளையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி அருட்தந்தை மா.சத்திவேல், அருட்தந்தை டெரன்ஸ் பர்ணாந்து, அருட்தந்தை எஸ்.விமலசேகரன், அருட்தந்தை மனுவேல் பிள்ளை டேவிட், அருட்சகோதரி தீபா பர்ணாந்து, செனாலி பெரேரா, சேனக்க பெரேரா, ருக்கி பர்ணாந்து ஆகியோர் உள்ளடங்கலாக அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் (கிறிஸ்தவர்கள்) அடங்கிய 61 பேரின் கையெழுத்துடன் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு அனுப்பிவைத்துள்ள மகஜரில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன வரலாற்று ரீதியாக, பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்காகவோ அல்லது அச்சட்டத்துக்குப் பதிலீடாக முன்னைய அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்ட 'பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை' நிராகரிப்பதற்காகவோ மாத்திரம் போராடிய இயக்கங்கள் அல்ல. மாறாக அவர்களது அரசியல் நிலைப்பாடானது, புதிதாக எந்தவொரு அடக்குமுறை சட்ட வடிவங்களும் கொண்டுவரப்படக்கூடாது என்ற தெளிவான மறுப்பையே அடிப்படையாகக் கொண்டமைந்திருந்தது. இந்த நிலைப்பாடு 'பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளடங்கலாக அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்துச்செய்து, மக்களின் சுதந்திரத்தை உறுதிசெய்வோம்' என்றவாறு தேர்தல் வாக்குறுதியாகவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு தெளிவாக அறிவிக்கப்பட்ட உறுதிமொழிகளையும், அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய தமது அரசியல் வரலாற்றையும் முழுமையாகப் புறக்கணித்திருக்கும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மிகக்கொடூரமானதும், அதிகாரத்துஷ்பிரயோகத்துக்கு வாய்ப்பளிக்கக்கூடியதுமான அம்சங்களை மாற்றமின்றித் தக்கவைத்துக்கொண்டு, மேலும் தெளிவற்றதும் அபாயகரமானதுமான புதிய விதிகளின் மூலம் அரச அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கு இடமளிக்கக்கூடிய ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதற்கு இப்போது தயாராகி இருப்பது மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது. அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் இந்த சட்ட வரைவு கருத்துச்சுதந்திரத்தையும், நபர்களின் தனியுரிமையையும் அச்சுறுத்தல் நிலைக்குள் தள்ளியிருக்கின்றது. இந்தச் சட்டத்துக்கு நாங்கள் நிபந்தனையற்ற எமது முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம். இது எமது தனிப்பட்ட நிலைப்பாடு மாத்திரமல்ல. மாறாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் அவர்களாகவே நாட்டுமக்களிடம் அறிவித்த அரசியல் நிலைப்பாட்டின் தொடர்ச்சியாகும். அரசாங்கம் இந்த சட்ட வரைவு குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்கு ஒருமாத கால அவகாசத்தை அறிவித்திருந்தாலும், தேசிய ரீதியில் பல்வேறு அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் நிலவுகின்ற தற்போதைய சூழ்நிலையில், இந்தளவு பரந்துபட்டதும் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதுமான ஒரு சட்டத்தைக் கொண்டுவரும் பணிகளை விரைந்து முன்னெடுப்பது உண்மையான ஜனநாயகப் பங்கேற்பையும், மக்களின் அறிவார்ந்த ஒப்புதலையும் பாதிக்கின்றது. எனவே இது முன்னைய ஆட்சிக்காலங்களில் நடந்ததைப்போல, பொதுக் கலந்தாலோசனையை உள்ளடக்காத ஒரு நடைமுறைச்சடங்காகவே தோன்றுகிறது. பயங்கரவாதத்தடைச்சட்டமானது சிறுபான்மையினர், அரசியல் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் அநீதிக்கு எதிராகக் குரலெழுப்புவோரை இலக்குவைத்துப் பிரயோகிக்கப்பட்டதுடன், அது அவர்கள்மீது மட்டுமீறிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி அந்தச் சட்டத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டோரில் இன்றைய அரசை வழிநடத்தும் அரசியல் இயக்கத்தின் உறுப்பினர்களே முக்கியமானவர்களாக இருந்தனர். இத்தகைய பின்னணியில், அடக்குமுறைச் சட்டத்தின் விளைவுகளையும் பாதிப்புக்களையும் அனுபவித்தவர்களே இந்தச் சட்டத்தின் விளைவுகளை விதி விதியாக விளக்கிக் கூறுவது அவசியமற்றதாகும். முன்னர் ஆட்சியில் இருந்த எதிர்க்கட்சிகளுக்கு இந்தச் சட்டத்தை விமர்சிக்கும் அரசியல் உரிமை இருந்தாலும், அவர்களது சொந்த சட்ட வரலாறுகளை நினைத்துப் பார்க்கும்போது, அந்த விமர்சனங்களுக்கு நெறியியல் நம்பகத்தன்மை இல்லை என்பதையும் நாம் தெளிவாகக் கூறுகின்றோம். அதேபோன்று அடக்குமுறை சட்ட வடிவங்களை நீக்குவோம் என வெளிப்படையாக வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இவ்வாறானதொரு சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கும் தற்போதைய அரசுக்கும் நெறியியல் மற்றும் அறநெறிசார் சட்டபூர்வத்தன்மை இல்லை என்பது தெளிவாகியுள்ளது. இந்த மகஜரில் கையொப்பமிட்டுள்ள நாமனைவரும் பயங்கரவாதத்தடைச்சட்டம் கொண்டுவரப்பட்ட நாள் முதல், அதற்கும் அதனை வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் மீண்டும் உருவாக்கும் சகல முயற்சிகளுக்கும் எதிராகத் திடமான எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்திருக்கின்றோம். எமது கிறிஸ்தவ நம்பிக்கையிலும் ஆன்மீகத்திலும் ஆழ்ந்திருக்கும் நாம், அநியாயத்தை சட்டமாக்கி, அரச அதிகாரத்தின் மட்டுமீறிய விரிவாக்கத்தை இயல்பாக்கம் செய்யும் சட்டங்களுக்கு எதிரான ஒரு அறநெறிசார் சாட்சியமாக இந்த மகஜரை முன்வைக்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234972
-
பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவது வரலாற்று அடிப்படையற்றது! - தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம்
பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவது வரலாற்று அடிப்படையற்றது! - தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் 01 Jan, 2026 | 01:01 PM மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய உரிமைகோரல்களும், தமிழ் பிராந்தியங்களில் சிங்கள பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவதும் வரலாற்று அடிப்படையற்றவை என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. புதுவருட தினமான இன்று (ஜன. 1) வவுனியாவில் இச்சங்கத்தினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். அவர்கள் மேலும் கூறுகையில், இன்று ஜனவரி 1, 2026, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்களாகிய நாங்கள், வவுனியாவில் 3,237வது நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்கிறோம். இந்தத் தியாகம் மற்றும் மன உறுதி நிறைந்த இடத்திலிருந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளைப் பற்றிய உண்மையை வெளிக்கொணர உதவுமாறும், தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடரும் இனப்படுகொலையை நிறுத்தி இறைமையை மீட்டெடுக்க ஆதரவளிக்குமாறு அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் அரசியல்வாதிகளாக அல்ல, மாறாக உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரும் தாய்மார்களாகவே இந்த தார்மீக அடிப்படையில் பேசுகிறோம். தமிழ் வரலாறு காலனித்துவத்திற்குப் பிந்தைய அரசியலமைப்புகளுடனோ அல்லது திணிக்கப்பட்ட அரசியல் கட்டமைப்புக்களுடனோ தொடங்கவில்லை. நவீன எல்லைகளுக்கு மிக நீண்ட காலத்திற்கு முன்பே, இந்தத் தீவு தமிழ் பேசும் மக்களால் வசித்து ஆளப்பட்ட தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த பண்டைய காலங்கள் வரை அது நீண்டு செல்கிறது. இந்தத் தீவில் தமிழர்களின் இருப்பு, பிற்கால அனைத்து அரசியல் மற்றும் இனக் கட்டுமானங்களுக்கும் முந்தையது. ஆயினும்கூட, சமகால தமிழ் தலைவர்கள் பலர் இந்த யதார்த்தத்தைப் புறக்கணித்து, அதற்குப் பதிலாக தனிப்பட்ட வசதி, வெளி அழுத்தங்கள் அல்லது மேட்டுக்குடி நலன்களில் வேரூன்றிய அரசியல் சூத்திரங்களை ஊக்குவிக்கின்றனர். கடந்த மாதம், அமெரிக்கா யாழ்ப்பாண விமான நிலையத்தில் இரண்டு முறை பெரிய இராணுவ விமானங்களைத் தரையிறக்கி மனிதாபிமான உதவிகளை வழங்கியதன் மூலம் தமிழ் பொதுமக்களின் மீது உறுதியான அக்கறையை வெளிப்படுத்தியது. இருப்பினும், எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியோ அல்லது 'சிவில் சமூக அமைப்பு' என்று சொல்லிக்கொள்ளும் அமைப்போ இந்த ஆதரவை பகிரங்கமாக அங்கீகரிக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் ஆகிய நாங்கள் மட்டுமே நன்றி தெரிவித்தோம். இது தமிழர் மத்தியில் உள்ள தார்மீக மற்றும் தலைமைத்துவத் தோல்வியை அம்பலப்படுத்தியது. தென்னிந்தியா மற்றும் தமிழ் தீவான இலங்கையை உள்ளடக்கிய தமிழகத்தில் ஒரு பழங்கால சிங்கள இனம் இருந்ததற்கான வரலாற்று அல்லது தொல்பொருள் சான்றுகள் எதுவும் இல்லை. தமிழ் இனம் சைவ சமயத்தைப் பின்பற்றியது. அதைத் தொடர்ந்து தமிழ் பௌத்தத்தைப் பின்பற்றியது. பின்னர் மீண்டும் சைவ சமயத்திற்கே திரும்பியது. இந்த மாற்றங்கள் மணிமேகலை உட்பட தமிழ் இலக்கியங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய உரிமைகோரல்களும், தமிழ் பிராந்தியங்களில் சிங்கள பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவதும் வரலாற்று அடிப்படை அற்றவை. சிங்கள மக்கள் தெற்கில் சுதந்திரமாக வாழலாம், ஆனால் வடக்கு - கிழக்கு வரலாறு, கலாசாரம் மற்றும் தொடர்ச்சியான இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அது தமிழ் தேசத்திற்கு சொந்தமானது என்றனர். https://www.virakesari.lk/article/234926
-
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு Jan 1, 2026 - 09:36 PM இன்று (1) முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 4250 ரூபாவாகும். அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 65 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 1710 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjvn0ngl03ero29nm693hxhc
-
22 நாடுகளிடம் இருந்து இலங்கைக்கு நிவாரண உதவி
22 நாடுகளிடம் இருந்து இலங்கைக்கு நிவாரண உதவி Jan 1, 2026 - 04:52 PM டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக 22 வெளிநாடுகளிலிருந்து மனிதாபிமான உதவிகள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெளிநாட்டு உதவிகளை முறையாக முகாமைத்துவம் செய்யவும், ஒருங்கிணைக்கவும் மற்றும் அவற்றை மக்களுக்கு வினைத்திறனுடன் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்யவும் ஜனாதிபதியினால் வெளிநாட்டு நிவாரண ஒருங்கிணைப்புக்கான சிரேஷ்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான இந்தக் குழு, பல சந்தர்ப்பங்களில் ஒன்றுகூடி நிவாரணப் பணிகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் அதிகபட்ச வினைத்திறனை உறுதி செய்வதற்குத் தேவையான தீர்மானங்களை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் ஊடாக நாட்டிற்கு கிடைத்துள்ள வெளிநாட்டு உதவிகள் ஒருகொடவத்தை களஞ்சிய வளாகத்தில் பாதுகாப்பாகவும் முறையாகவும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த நிவாரணங்களைச் சரியான நேரத்தில் முறையாக வழங்குவதற்கான பொறிமுறையானது, தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையத்தின் ஊடாக தற்போது வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjvcuuq403e7o29n1utsjkhl
-
15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்
15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் Published By: Digital Desk 3 01 Jan, 2026 | 01:56 PM 2026 ஆம் ஆண்டில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய பிரான்ஸ் இரண்டாவது முறையாக முயற்சிக்கும் என அந்நாட்டு ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டன. இளம் வயதினர் கல்வி கற்கும் பாடசாலைகளில் கையடக்க தொலைபேசிகளுக்கு ஏற்கனவே கட்டுப்படுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை எப்போதும் கட்டாயமாக்கப்படவில்லை. 2023 ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசாங்கம் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு டிஜிட்டல் பயன்பாடு வயது தொடர்பான சட்டத்தை அறிமுகப்படுத்த முயற்சித்தது. இந்த சட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்தது. ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஆதரவுடன் சட்ட வரைபு ஒன்றை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது. இது டிஜிட்டல் திரைகளை அதிகமாகப் பயன்படுத்துவதால் இளைஞர்களுக்கு ஏற்படும் அபாயங்களைக் காட்டும் ஏராளமான ஆய்வுகளை மேற்கோள் காட்டுகிறது. ஜனவரி மாதம் ஆரம்பத்தில் சட்டத்தை சட்ட ஆய்வுக்கு சமர்ப்பிக்கலாம் என பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளை, இந்த தடை செப்டம்பர் மாதம் ஆரம்பத்தில் நடைமுறைக்கு வரலாம் என ஏப்பி செய்தி வெளியிட்டுள்ளது. தடையற்ற ஒன்லைன் அணுகல் சிறுவர்களை "பொருத்தமற்ற உள்ளடக்கத்திற்கு" வெளிப்படுத்துவதாகவும், சிறுவர்களும் சைபர்புல்லிங் மற்றும் பிற தீங்குகளுக்கு இலக்காகலாம் என்பதைக் குறிப்பிடுகிறது. முன்மொழியப்பட்ட சட்டம் சமூக ஊடக தளங்கள் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு தங்கள் சேவைகளை வழங்குவதை சட்டவிரோதமாக்கும், மேலும் மொபைல் போன் பயன்பாட்டின் மீதான தடையை உயர்தர பாடசாலைகளுக்கும் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234921
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நல்லது, மாற்று கருத்து இல்லை அண்ணா. தாயகத்தில் அவர் பெயரைச் சொல்லி செயற்படமுடியாது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். யாழிணையத்தில் அவர் பெயரால் இந்த திட்டம் செயற்படுத்தப்படுகிறது என்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது என நம்புகிறேன். மூன்று மாவீரர் (அதனை வெளிப்படையாக சொல்வதில்லை) கொண்ட குடும்பத்திற்கு ஏற்கனவே காரைநகரில் மலசலகூடம் திருத்திக் கொடுத்து மாதாந்தம் குடிநீரும் வழங்கி வருகிறோம். தந்தையார் பக்கவாதம், பார்வையிழப்பு. மகள் பார்வைக்குறைபாடு. அடுத்த மகள் மனவளக் குறைபாடு. மூத்த மகளுக்கும் பார்வைக் குறைபாடு, அவருக்கு ஒரு மகன் மூட்டை தூக்கும் தொழில் செய்கிறார். இவர்கள் பக்கத்தில் ஓர் வீட்டில் இருக்கின்றனர்.
-
🚨 சுவிஸ் பனிச்சறுக்கு விடுதியில் வெடிப்பு: 10 பேர் பலி!
சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் பலி - 100 பேர் காயம் Jan 1, 2026 - 04:26 PM சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தீப்பரவலில் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுவிட்சர்லாந்தில் உள்ள கிரான்ஸ்-மாட்டானா நகரில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றிலேயே அந்த நாட்டு நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் வெடிப்பு ஏற்பட்டு தீப்பரவல் ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. எனினும் இது ஒரு பயங்கரவாத தாக்குதல் அல்லவென முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுவதாக சர்வதேச ஊடங்கள் குறிப்பிடுகின்றன. தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmjvbxxw803e6o29nqko2pzbo
-
தலைவர்களின் 2026 புத்தாண்டு வாழ்த்து செய்திகள்
சவால்களை புத்திசாலித்தனமாக வெல்வோம் - புத்தாண்டு வாழ்த்து செய்தியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் Published By: Digital Desk 3 31 Dec, 2025 | 07:35 PM சவால்களுக்கு முகம்கொடுத்து புத்திசாலித்தனமாக அவற்றை வெல்வோம் - எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் புத்தாண்டு வாழ்த்து செய்தி 2026 புத்தாண்டு நமது தாய்நாட்டிற்கு சவாலான ஆண்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதை நன்கு அடையாளம் கண்டு, உணர்ச்சிகளுக்கு அல்லாமல், அறிவுக்கு இடமளித்து செயல்படுவதற்கு நாம் அனைவரும் இன்றே உறுதிபூணுதல் வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், எதிர்பாராத நெருக்கடி நிலைமையின் பின்னணியில் நாம் எதிர்கொண்ட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்கள் புதிய பரிமாணத்திற்கு விரிவடைந்துள்ளன. இந்த சவால்களை வெல்வதற்கு வெறும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் அல்லது திட்டங்கள் மூலம் முகங்கொடுப்பது கடினமாகும். எனவே ஒத்துழைப்பு இந்த தருணத்தில் சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் வேறு எந்த காலத்தைவிடவும் முக்கியமான அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏமாற்றம் மற்றும் உதவியற்ற நிலையால் துன்புறுவதால் எதையும் செய்யாமல் இருப்பதன் மூலம் நிலைமை சிறந்த திசையில் மாறாது. மாற்றத்திற்குச் செய்ய வேண்டியது அனைவரும் எல்லோருக்காகவும் ஒன்றிணைந்து செயல்படுவதே. எனவே உடன்பட முடிந்த இடத்தில் உடன்படவும், உடன்பாட்டில் செயல்படவும் நாம் பணிவுடன் இருக்க வேண்டும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியது போல், உண்மை மற்றும் நீதி தொடர்பான விடயங்களில் பெரிய மற்றும் சிறிய பிரச்சினைகளுக்கு இடையே வேறுபாடுகள் இல்லை. ஏனெனில் மனிதர்களை நடத்துவது தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை. இந்த சவாலான ஆண்டில் நமது சகோதர மக்கள் எதிர்கொண்டுள்ள ஒவ்வொரு பிரச்சினையையும் ஒரே மாதிரியாக கருதி தீர்வுகளை கண்டறிவதற்காக நாம் செயல்பட வேண்டும். அத்தகைய தொலைநோக்குப் பார்வை மற்றும் முன்னோக்குச் சிந்தனையுடன் செயல்பட அனைத்து மத தலைவர்கள், அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நாட்டின் முழு மக்களுக்கும் தைரியமும் சக்தியும் கிடைக்கும் புத்தாண்டிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/234844
-
“நமது அன்னை பூமியை மீண்டும் ஒன்றிணைக்கும் பணி, தடுத்து நிறுத்த முடியாதது” - போர்ப்பயிற்சி நிறைவில், புத்தாண்டு செய்தி வெளியிட்ட சீன ஜனாதிபதி
“நமது அன்னை பூமியை மீண்டும் ஒன்றிணைக்கும் பணி, தடுத்து நிறுத்த முடியாதது” - போர்ப்பயிற்சி நிறைவில், புத்தாண்டு செய்தி வெளியிட்ட சீன ஜனாதிபதி 01 Jan, 2026 | 12:18 PM தாய்வான் நாட்டை தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகக் கூறி, தாய்வானைச் சுற்றியுள்ள பகுதிகளில் போர்ப்பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் சீனா, நேற்று (டிச. 31) பயிற்சிகளை நிறைவு செய்த நிலையில், சீன ஜனாதிபதி “நமது அன்னை பூமியை மீண்டும் ஒன்றிணைக்கும் பணி, தடுத்து நிறுத்த முடியாதது” எனத் தெரிவித்துள்ளார். நேற்றைய போர்ப்பயிற்சி நிறைவு மற்றும் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்றிரவு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வெளியிட்ட செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார். ஒரே நாடு, 2 அமைப்புகள் என்ற கொள்கையை நாம் அமுல்படுத்தியே ஆகவேண்டும். ஹொங்கொங் மற்றும் மக்காவ் ஆகியவற்றை நமது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக ஒன்றிணைக்க ஆதரவளிக்கவேண்டும். அவற்றுடன் நீண்ட கால வளம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றையும் பராமரிக்க வேண்டும் என்றும் சீன ஜனாதிபதி தெரிவித்தார். எனினும், சீன ஜனாதிபதியின் கருத்துக்கு தாய்வான் நாட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். சுயாட்சி பகுதியாக தன்னை அறிவித்துக்கொண்ட தாய்வான், சீனாவின் நிலைப்பாடு மற்றும் போர்ப்பயிற்சி நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறது. தாய்வானுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்து வரும் நிலையில், தாய்வானின் வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சுற்றி சீன இராணுவம், கடற்படை, விமானப் படை மற்றும் ரொக்கெட் படையினர் ஒன்றிணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்தப் போர்ப்பயிற்சி நடவடிக்கைக்கு “ஜஸ்டிஸ் மிஷன் 2025” என பெயரிடப்பட்டது. இப்போர்ப்பயிற்சி நடவடிக்கைக்கு தாய்வான் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலேயே நேற்று இப்பயிற்சிகளை சீனா நிறைவு செய்துள்ளது. https://www.virakesari.lk/article/234920
-
தலைவர்களின் 2026 புத்தாண்டு வாழ்த்து செய்திகள்
கடந்த ஆண்டில் எதிர்கொண்ட சவால்களை சக்தியாக மாற்றி, புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் புதிய ஆண்டிற்குள் அடியெடுத்து வைப்போம் - பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி Published By: Digital Desk 3 31 Dec, 2025 | 07:32 PM கடந்த ஆண்டில் நாம் எதிர்கொண்ட சகலவிதமான சவால்களையும் சக்தியாக மாற்றிக்கொண்டு, புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்குமாறு என பிரதமர் ஹரிணி அமர சூரிய புத்தாண்டுவாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 2026 ஆம் ஆண்டின் விடியலில் நாம் நின்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்து வந்த 2025ஆம் ஆண்டினை மீளாய்வு செய்வது காலத்தின் தேவையென நான் கருதுகிறேன். 2026 ஆம் ஆண்டின் விடியலில் நாம் நின்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்து வந்த 2025ஆம் ஆண்டினை மீளாய்வு செய்வது காலத்தின் தேவையென நான் கருதுகிறேன். ஒரு மக்கள் நல அரசாங்கமாக, பல தீர்க்கமான மற்றும் முன்னோடியான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்த ஓர் ஆண்டாக 2025ஆம் ஆண்டினை எண்ணி ஒருபுறம் நாம் மகிழ்ச்சியடைய முடியும். புதிய அரசியல் கலாசாரமொன்றின் அடிப்படையில், அரச நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், ஊழலற்ற வினைத்திறன் மிக்க அரச சேவைக்கான அடித்தளத்தை அமைக்கவும் எம்மால் முடிந்துள்ளதென நான் நம்புகிறேன். பொருளாதார ஸ்திரத்தன்மை, சர்வதேச ரீதியாக எமது நாட்டின் மீது கட்டியெழுப்பப்பட்டு வரும் நேர்மறையான கண்ணோட்டம், வெளிப்படைத்தன்மை மிக்க ஆட்சி முறைமை மற்றும் சட்டத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தியமை போன்ற பல பிரதான துறைகளின் ஊடாக 2025ஆம் ஆண்டைப் பற்றி நாம் திருப்தியடையலாம். எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் எதிர்கொள்ள நேர்ந்த துரதிர்ஷ்டவசமான இயற்கை அனர்த்தம், எமது நாட்டிற்குச் சவாலானதொரு காலப்பகுதியாக அமைந்தது. அது நம் அனைவரது மனங்களையும் கவலையில் ஆழ்த்திய போதிலும், அத்தகைய இக்கட்டான தருணத்திலும் இலங்கையர்களாக நாட்டு மக்கள் வெளிப்படுத்திய சகோதரத்துவம், மனிதாபிமானம் மற்றும் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிய விதம் குறித்து இன்று உலகளவில் பேசப்பட்டு வருகின்றது. அந்தச் சவால்களை வெற்றிகொண்டு, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை ஆற்றி, சீர்குலைந்த அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் உறுதியான அர்ப்பணிப்புடனேயே 2026ஆம் ஆண்டிற்குள் நாம் கால்பதிக்கின்றோம். கல்வித் துறையில் தரமான, அதேநேரம் நிலையான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற,கல்வித்துறையின் மாற்றம், அரச சேவை உட்பட அனைத்துத் துறைகளையும் டிஜிட்டல் மயமாக்கல், சாத்தியமான புதிய எண்ணக்கருக்களைக் கொண்ட முயற்சியாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் உலகளாவிய ரீதியில் முன்னேறுவதற்கான சூழலை உருவாக்குதல், போதைப்பொருள் அற்ற - சுற்றாடலை நேசிக்கும் - மனிதாபிமானம் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற பல சிறப்பான நோக்கங்களுடன், இன, மத மற்றும் கட்சிப் பேதங்களற்ற பலமான இலங்கை என்ற அடையாளத்துடன் இந்நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பு அரசாங்கம் உட்பட ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இருக்கின்றது என்பதை இவ்வேளையில் நினைவூட்ட விரும்புகிறேன். கடந்த ஆண்டில் நாம் எதிர்கொண்ட சகலவிதமான சவால்களையும் சக்தியாக மாற்றிக்கொண்டு, புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்குமாறு உங்களை அழைக்கின்றேன். உங்கள் அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த வெற்றிகரமான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/234846
-
மார்ச் மாதம் தொடங்கிக் கொண்டிருந்த புத்தாண்டை ஜூலியஸ் சீசர் ஜனவரியாக மாற்றியது ஏன்?
மார்ச் மாதம் தொடங்கிக் கொண்டிருந்த புத்தாண்டை ஜூலியஸ் சீசர் ஜனவரியாக மாற்றியது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜூலியஸ் சீசர் ரோமானிய நாட்காட்டியில் இருந்த குழப்பங்களைத் தீர்க்க சீர்திருத்தங்களை மேற்கொண்டார் கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஜனவரி 1, இன்று உலகம் முழுவதும் மக்கள் புத்தாண்டை வரவேற்கின்றனர். இது இப்போதைய காலகட்டத்தில் இயல்பான ஒன்றாகத் தோன்றினாலும், எப்போதுமே இப்படி இருந்ததில்லை. உண்மையில், நவீன கால நாட்காட்டிகளின் மூலமாக இருக்கக்கூடிய பண்டைய ரோம் அதன் கால அளவுகோல்களில் ஆண்டின் முதல் மாதமாக ஜனவரியை கருதவில்லை. ஆம், அப்போது மார்ச் மாதம்தான் ஆண்டின் முதல் மாதமாகக் கணக்கிடப்பட்டது. ஆண்டின் தொடக்கம் மார்ச் மாதத்தில் இருந்து ஜனவரி மாதத்திற்கு மாறியதன் பின்னணியில் நாட்காட்டி குழப்பங்கள், அரசியல் தேவைகள், வானியல் திருத்தங்கள் எனப் பல காரணிகள் பங்கு வகிக்கின்றன. ஜனவரி எப்போது, எப்படி ஆண்டின் முதல் மாதமாக மாறியது என்பதைப் புரிந்துகொள்ள, ரோமானிய நாட்காட்டி அடைந்த பரிணாம வளர்ச்சிகளை நாம் அறிய வேண்டும். அதில் அடுத்தடுத்து நிகழ்ந்த தவறுகள் எப்படி பெரிய சீர்திருத்தங்களைச் செய்வதற்கான உந்துதலாக அமைந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். மார்ச் முதல் தொடங்கிய ரோமானிய ஆண்டுகள் ஆரம்பக் கால ரோமானிய நாட்காட்டி சந்திரனின் சுழற்சிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டதாக 'அவர் காலண்டர்: தி ஜூலியன் காலண்டர் அண்ட் இட்ஸ் எரர்ஸ்' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. இந்த நாட்காட்டியை நவீன கண்ணோட்டத்தில் பார்க்கும்போது உங்களுக்கு வினோதமாகத் தெரியலாம். அந்த நாட்காட்டியின்படி, மார்ச் மாதத்தில் இருந்து ஆண்டு தொடங்குகிறது. அதோடு, ஓர் ஆண்டுக்கு வெறும் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. அந்தப் பத்து மாதங்களில், ஆறு 30 நாட்களுடனும் நான்கு 31 நாட்களுடனும் இருந்துள்ளன. ஆண்டின் கடைசி மாதமாக டிசம்பர் இருந்துள்ளது. மேக்ரோபியஸ், சென்சோரினஸ் போன்ற பண்டைய ரோமானிய தத்துவஞானிகளின் கூற்றுப்படி, ஓர் ஆண்டுக்கு பத்து மாதங்களும் 304 நாட்களும் மட்டுமே இருந்தன. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது சவப்பெட்டியில் மண்ணுக்குள் புதைந்த நிலையில் 61 நாட்கள் இவர் தாக்குப்பிடித்தது எப்படி? வங்கதேசத்தில் ஜெய்சங்கர் - இந்தியாவின் நகர்வு உணர்த்துவது என்ன? சௌதி அரேபியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரிப்பது ஏன்? தமிழ்நாடு - உத்தரபிரதேசம்: கடன் சுமை எந்த மாநிலத்திற்கு அதிகம்? உண்மை உரைக்கும் புள்ளி விவரம் End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம்,Getty Images ரோமானிய நாட்காட்டியின்படி, மார்ச், மே, குயின்டிலிஸ், அக்டோபர் மாதங்கள் 31 நாட்களைக் கொண்டிருந்தன. ஏப்ரல், ஜூன், செக்ஸ்டிலிஸ், செப்டம்பர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் 30 நாட்களைக் கொண்டிருந்தன. இந்த வரிசையில், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகியவை முறையே ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது மாதங்களாகக் கணக்கிடப்பட்டன. அதில் மொத்தம் 304 நாட்கள் இருந்தன. மேலும் வரலாற்றுப் பதிவுகளின்படி, அப்போது ஜனவரி, பிப்ரவரி என்ற மாதங்களே இருந்திருக்கவில்லை. அப்படியெனில் மீதி நாட்கள் என்னவாயின? அந்த நாட்காட்டியில் குளிர்காலம் கணக்கிடப்படவில்லை. ஆண்டின் அந்த இரு மாதங்களுக்கு விவசாயமே நடக்காது என்பதால், அந்த நாட்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. சூரியன் உதித்தது, மறைந்தது. ஆனால், ஆரம்பக்கால நாட்காட்டியின்படி, அதிகாரபூர்வமாக ஒரு நாள்கூட கடக்கவில்லை. இந்தச் சிக்கலை, நாட்காட்டியில் நிலவிய குழப்பத்தை ரோமின் இரண்டாவது மன்னரான நூமா போம்பிலியஸ் நிவர்த்தி செய்ய முயன்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜூலியஸ் சீசர் ஜனவரி மாதத்தை மீண்டும் ஆண்டின் முதல் மாதமாக கி.மு.45 முதல் கொண்டு வந்தார் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் சேர்க்கப்பட்டது எப்படி? ரோமானிய நாட்காட்டியில் நிலவிய இந்தக் குழப்பத்தைச் சரிசெய்ய, நூமா போம்பிலியஸ்தான் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களைச் சேர்த்தார். கடந்த 1921ஆம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பதிப்பகம் வெளியிட்ட 'தி காலண்டர்: இட்ஸ் ஹிஸ்டரி, ந்ச்சர் அண்ட் இம்ப்ரூவ்மென்ட்' என்ற நூல் இதுகுறித்துப் பேசுகிறது. அதன்படி, "நூமா கூடுதலாக 50 நாட்களைச் சேர்த்து, ஆண்டின் நாள் கணக்கை 354 நாட்களாக உயர்த்தியதாகக் கூறுகிறது. ஆனால், ரோமானியர்கள் இரட்டைப்படை எண்களை துரதிர்ஷ்டமானவை என்று நம்பினர். இதற்காக அவர் பல மாதங்களின் மொத்த நாள் கணக்கை 30இல் இருந்து 29 ஆகக் குறைத்து, கூடுதலாக 50 நாட்களைச் சேர்த்து 12 மாதங்கள் கொண்ட நாட்காட்டியை உருவாக்கினார்." ஜனவரி மாதத்தில் இரட்டைப்படை எண்ணிக்கையில் நாட்கள் இருந்ததால் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்பட்டது. பிப்ரவரி மாதம், பாதாள தெய்வங்களுடன் தொடர்புடையதாக இருந்ததால், அதற்கு இரட்டைப்படை எண்ணிக்கையில் நாட்கள் ஒதுக்கப்பட்டன. இந்தச் சீர்திருத்தத்தை செய்ததன் மூலம் போம்பிலியஸ் ஆண்டின் நாள் கணக்கை 355 ஆக உயர்த்தினார்." கி.மு.700ஆம் ஆண்டு வாக்கில், நூமா போம்பிலியஸ் ஆட்சியின்போது ரோமானிய ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு புதிய மாதங்கள் சேர்க்கப்பட்டன. ஜனவரி ஆண்டின் தொடக்கத்திலும், பிப்ரவரி ஆண்டின் இறுதியிலும் சேர்க்கப்பட்டன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரோமானிய நாட்காட்டியில் சூரிய ஆண்டைவிட 10 நாட்கள் குறைவாக இருந்ததால், பருவங்களின் காலம் மாறிக்கொண்டே இருந்தது குழப்பத்தில் தத்தளித்த ரோமானிய நாட்காட்டி ஒரு நாட்காட்டி சரியாகச் செயல்படுவதற்கு, சிவில் ஆண்டுக் கணக்கு சூரிய ஆண்டுடன் பொருந்தி வரவேண்டும். அப்போதுதான் ஒவ்வோர் ஆண்டிலும் பருவ காலங்கள் ஒரே நேரத்தில் திரும்ப வரும். சிவில் ஆண்டு நீளமாக இருந்தால், பருவகாலங்கள் மெதுவாகப் பின்னோக்கி நகரும். அதுவே மிகக் குறுகியதாக இருந்தால், பருவகாலங்கள் வேகமாக முன்னோக்கி நகரும். 'அவர் காலண்டர்: தி ஜூலியன் காலண்டர் அண்ட் இட்ஸ் எரர்ஸ்' நூலின்படி, "பண்டைய எகிப்தியர்கள் ஆண்டுக்கு 12 மாதங்களையும், மாதத்திற்கு 30 நாட்களையும் கொண்ட எளிய முறையைப் பயன்படுத்தினர். அதோடு, ஆண்டின் இறுதியில் கூடுதலாக ஐந்து நாட்களைச் சேர்த்தனர். ஆனால் அவர்கள் மிகுநாளாண்டு (Leap year) முறையைப் பின்பற்றாத காரணத்தால், ஒவ்வோர் ஆண்டும் கால் பங்கு நாளின் கணக்கு தவறியது. இதன் விளைவாக எகிப்திய புத்தாண்டு ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு நாட்களில் வந்தது. இதனால் எகிப்திய நாட்காட்டி நிலையற்றதாக இருந்தது." இதுவே ரோமானிய நாட்காட்டியை எடுத்துக்கொண்டால், வேறொரு பிரச்னை நிலவியது. நூமா மாதங்களை பன்னிரண்டாக மாற்றி, ஆண்டுக்கு 355 நாட்கள் கொண்ட நாட்காட்டியை கொண்டு வந்தார். இருந்தாலும், இதன்படியான ஆண்டுக் கணக்கு சூரிய ஆண்டைவிட சுமார் 10 நாட்கள் குறைவாக இருந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆரம்பக்கால ரோமானிய நாட்காட்டியில் பத்து மாதங்களே இருந்ததாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன இதைச் சரிசெய்யவில்லை என்றால் ஒவ்வோர் ஆண்டும் பருவங்களின் காலம் மாறிக்கொண்டே இருக்கும். இதற்கு நூமா ஒரு தீர்வைக் கொண்டு வந்தார். அதாவது மற்றுமொரு புதிய மாதத்தை இடைச்செருகலாக சேர்த்தார். இந்தப் புதிய மாதம், பிப்ரவரி 23 மற்றும் 24ஆம் தேதிக்கு இடையே சேர்க்கப்பட நூமா உத்தரவிட்டார். இந்த இடைச்செருகல் மாதத்தில் ஓர் ஆண்டில் 22 நாட்கள், மற்றோர் ஆண்டில் 23 நாட்கள் என மாறி மாறி இருந்து வந்தது. இதனால், நான்கு ஆண்டுகளில் 1420 நாட்களுக்குப் பதிலாக மொத்தம் 1,465 நாட்கள் உருவாயின. அதாவது, சராசரி ஆண்டின் நாட்கள் எண்ணிக்கையை 366¼ நாட்கள் என்றானது. இதன் விளைவாக, சூரிய ஆண்டைவிட ஒரு நாள் கூடுதலாகக் கணக்கிடப்படும் நிலை உருவானது. பின்னர், இந்தப் புதிய பிழையைச் சரிசெய்ய, ஒவ்வொரு மூன்றாவது எட்டு ஆண்டு காலத்திலும் நான்கு இடைச்செருகல் மாதங்களுக்குப் பதிலாகத் தலா 22 நாட்களைக் கொண்ட மூன்று இடைச்செருகல் மாதங்கள் மட்டுமே இருக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. இது 24 ஆண்டுகளில் 24 நாட்களைக் குறைத்து, சராசரி ஆண்டை 365¼ நாட்களாகக் குறைத்து, நாட்காட்டி கணக்கீட்டை சூரிய ஆண்டுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு வந்தது. கோட்பாட்டின்படி, இந்த அமைப்பு நன்றாகச் செயல்பட்டிருக்க முடியும். ஆனால் நடைமுறையில் இந்த இடைச்செருகல்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மதகுருமார்களிடம் இருந்தது. அவர்கள் அரசியல் காரணங்களுக்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினர். ஒரு நீதிபதியின் பதவிக்காலத்தை நீட்டிக்க ஆண்டில் ஓர் ஆண்டின் காலகட்டத்தை நீட்டிப்பது, தேர்தல்களை விரைவுபடுத்த ஆண்டை சுருக்குவது போன்றவற்றில் ஈடுபட்டனர். இத்தகைய தந்திரங்களின் விளைவாக, ரோமானிய நாட்காட்டி பெரும் குழப்பத்தில் சிக்கித் தத்தளித்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரோமின் இரண்டாவது மன்னர் நூமா போம்பிலியஸ், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களை ரோமானிய நாட்காட்டியில் சேர்த்தார் மீண்டும் மார்ச் மாதமாக மாறிய ஆண்டு தொடக்கம் "ஓவிட் என்ற ரோமக் கவிஞரின் கூற்றுப்படி, நூமா போம்பிலியஸ் கொண்டு வந்த நாட்காட்டி முறை கி.மு.452 வரை பயன்பாட்டில் இருந்தது" என்று தி காலண்டர்: இட்ஸ் ஹிஸ்டரி, ஸ்டிரக்ச்சர் அண்ட் இம்ப்ரூவ்மென்ட் என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. பின்னர், "டிசெம்வீர் என்று அழைக்கப்படும் பத்து ரோமானிய நீதிபதிகள் அடங்கிய குழு மீண்டும் மாதங்களின் வரிசையை மாற்றி மார்ச் மாதத்தையே முதல் மாதமாக நிர்ணயித்தது." இதன் மூலம் நூமாவுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த பழைய மரபுக்கே ரோம் திரும்பியது. ஆனால், இந்தத் திருத்தங்களும்கூட நாட்காட்டியில் நிலவிய ஆழமான சிக்கலைத் தீர்க்கவில்லை, குழப்பம் தொடர்ந்தது. ஜூலியஸ் சீசரின் காலப்பகுதியில், சூரிய ஆண்டுக்கும் ரோமானிய நாட்காட்டி படியான ஆண்டுக்கும் இடையே சுமார் மூன்று மாதங்கள் வேறுபாடு இருந்தது. குளிர்காலம் இலையுதிர் காலத்திலும், இலையுதிர் காலம் கோடைக்காலத்திலும் வந்தன. இப்படியாக வளர்ந்து வந்த குழப்பம், நாட்காட்டியை முற்றிலுமாகச் சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது. ஜூலியஸ் சீசர் கொண்டு வந்த சீர்திருத்தம் இவ்வளவு குழப்பங்கள் நிறைந்த கால அளவீடுகளைப் பார்த்த ஜூலியஸ் சீசர், கி.மு. 46இல் சோசிஜெனெஸ் என்ற அலெக்சாண்டிரிய வானியலாளரின் உதவியுடன், ரோமானிய நாட்காட்டியில் ஒரு பெரிய சீர்திருத்தத்தை செய்தார். ரோமானிய பண்டிகைகள் அனைத்தும் பருவ காலங்களைச் சார்ந்தே இருந்ததால், நாட்காட்டியிலுள்ள குழப்பங்களைச் சரி செய்வதை அவசியமானதாகக் கருதினார் சீசர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜூலியஸ் சீசர் நாட்காட்டியில் சீர்திருத்தங்களை மேற்கொண்ட கி.மு.46ஆம் ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது அதுவரைக்கும் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு அளவிடப்பட்டு வந்த முறையை முற்றிலுமாகக் கைவிட முடிவு செய்தார் ஜூலியஸ் சீசர். மேலும், சூரியனை அடிப்படையாகக் கொண்ட, 365 நாட்கள் மற்றும் 6 மணிநேரங்களைக் கொண்ட ஆண்டு நாட்காட்டியை ஏற்றுக்கொள்வது அவரது முக்கிய முடிவாக இருந்தது. ஆனால், இதற்காக அவர் கி.மு.46 என்ற ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மட்டும் பற்பல மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. இதனால் அந்த ஆண்டு வரலாற்றில் 'குழப்பமான ஆண்டு (The Year of Confusion)' என்ற பெயரையும் பெற்றது. கி.மு.46இல், பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு, சீசர் வழக்கம் போல 23 நாட்களைக் கொண்ட இடைச்செருகல் மாதம் ஒன்றைச் சேர்த்தார். இதன் மூலம், ஜனவரியில் 29 நாட்கள், பிப்ரவரியில் 28 நாட்கள் மற்றும் இடைச்செருகல் மாதத்தில் 23 நாட்கள் என மொத்தம் 80 நாட்கள் ஆனது. பின்னர், அதே ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையிலும் முறையே 34 மற்றும் 34 நாட்களைக் கொண்ட இரு மாதங்களைக் கூடுதலாகச் சேர்த்தார். இதன் மூலம் கி.மு.46 மொத்தமாக 445 நாட்களைக் கொண்ட ஆண்டாக அமைந்தது. அதோடு, ரோமானிய நாட்காட்டியில் நிலவிவந்த குழப்பங்களும் சரி செய்யப்பட்டன. ஜூலியஸ் சீசர் பல்வேறு மாற்றங்களைப் புகுத்தி, நாட்காட்டியில் நிலவி வந்த குழப்பங்களுக்குத் தீர்வு கண்ட கி.மு.46-ஐ "கடைசி குழப்பமான ஆண்டு" என்று ரோம தத்துவஞானி மேக்ரோபியஸ் விவரித்துள்ளார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கி.மு. 8இல் அகஸ்டஸ் சீசரின் பெயரால், 'செக்ஸ்டிலிஸ்' என்ற மாதம் ஆகஸ்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது ஜூலியன் சீர்திருத்தத்திற்குப் பிறகு... ஜூலியஸ் சீசர் உருவாக்கிய புதிய கால அளவுகோலின்படி, ஓர் ஆண்டுக்கு 365 நாட்கள் இருந்தன. ஒவ்வொரு நான்காவது ஆண்டும் ஒரு கூடுதல் நாள் சேர்க்கப்பட்டு, அது மிகுநாளாண்டாக (Leap Year) கணக்கில் கொள்ளப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்ற மிகுநாள், பிப்ரவரி மாதத்தில் சேர்க்கப்பட்டது. கி.மு.45 சீசரால் சீர்திருத்தப்பட்ட முதல் ஆண்டாக இருந்தது. 'அவர் காலண்டர்: தி ஜூலியன் காலண்டர் அண்ட் இட்ஸ் எரர்ஸ்' நூலிலுள்ள தகவலின்படி, கி.மு.45ஆம் ஆண்டின் முதல் மாதமாக ஜனவரி மீண்டும் முன்னுக்கு கொண்டுவரப்பட்டது. கி.மு.44ஆம் ஆண்டு, சீசரின் நினைவாக 'குயின்டிலிஸ்' என்ற மாதம் ஜூலை எனப் பெயர் மாற்றப்பட்டது. கி.மு.8ஆம் ஆண்டு, அகஸ்டஸ் சீசரின் பெயரால், 'செக்ஸ்டிலிஸ்' என்ற மாதம் ஆகஸ்ட் என்று மாற்றப்பட்டது. இதற்குப் பிறகும்கூட, ரோமானிய மதகுருமார்கள் மிகுநாளாண்டு விதியைத் தவறாகப் புரிந்துகொண்டு, நான்கு ஆண்டுகளுக்குப் பதிலாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகுநாளைச் சேர்த்தனர். இதனால் 36 ஆண்டுகளுக்கு நீடித்த இந்தச் சிக்கல், கி.மு.9 மற்றும் கி.பி.3ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சரிசெய்யப்பட்டது. அதன் பிறகு ஜூலியன் காலண்டர் சரியாகச் செயல்பட்டது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,போப் 13ஆம் கிரிகோரி ஜூலியன் நாட்காட்டியில் இருந்த சிறு பிழை சீசர் ஒரு சூரிய ஆண்டு 365 நாட்கள் மற்றும் 6 மணிநேரம் நீளம் கொண்டது எனக் கருதினார். ஆனால் உண்மையில் அதன் நீளம், 365 நாட்கள், 5 மணிநேரம், 48 நிமிடம் மற்றும் 46 விநாடிகளாக இருந்தது. அதாவது, ஜூலியன் நாட்காட்டியில், ஓராண்டுக்கான கால அளவு 11 நிமிடங்கள், 14 விநாடிகள் நீளமாக இருந்தது. இந்தப் பிசிறு ஆரம்பத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், அடுத்தடுத்து வந்த நூற்றாண்டுகளில் வானியல் கணக்குகளில் சில குழப்பங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஈஸ்டர் நாள் கடைபிடிக்கப்பட்டபோதுதான், இந்தப் பிசிறு பெரும்பான்மையாக கவனத்தை ஈர்த்தது. உதாரணமாக, கி.பி.325இல், வசந்தகாலத்தில் மார்ச் 24ஆம் தேதி வரவேண்டிய சம இரவு நாள் (spring equinox), மார்ச் 21இல் வந்தது. காலம் நகர்ந்து கொண்டேயிருக்க, அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் வசந்தகால சம இரவு நாளும் மேலும் மேலும் முன்கூட்டியே வந்து கொண்டிருந்தது. இதன் நீட்சியாக, 1545ஆம் ஆண்டளவில், சமஇரவு நாள் மார்ச் 11க்கு சரிந்திருந்தது. "ஒவ்வோர் ஆண்டும் வசந்தகால சம இரவு பகல் (Vernal Equinox) நாளுக்குப் பிறகு தோன்றும் முதல் முழு நிலவு நாளை அடிப்படையாக வைத்து பண்டிகை கொண்டாடப்பட்டதாகவும் அதைச் சரியாகக் கணக்கிடுவதில் ஜூலியன் நாட்காட்டி குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும்" 'தி கேலண்டர்: இட்ஸ் ஹிஸ்டரி, ஸ்டிரக்ச்சர் அண்ட் இம்ப்ரூவ்மென்ட்' நூலில் அதன் ஆசிரியர் அலெக்சாண்டர் பிலிப் குறிப்பிட்டுள்ளார். "ஜூலியன் நாட்காட்டியின்படி, ஒராண்டுக்கு 365.25 நாட்கள். ஆனால், உண்மையில் ஓராண்டுக்கு 365.24219 நாட்கள். இதனால், ஒவ்வோர் ஆண்டிலும் சிற்சில நிமிடங்கள் என்ற அளவில் உண்மையான கால அளவு மாறிக் கொண்டே வந்தது. அதாவது 128 ஆண்டுகளுக்கு ஒரு நாள் என்ற கணக்கில் வானியல் நிகழ்வுகள் முன்னதாகவே நிகழ்ந்துகொண்டிருந்தன," என்று எட்வர்ட் கிரஹாம் ரிச்சர்ட்ஸ் தனது மேப்பிங் டைம்: தி காலண்டர் அண்ட் இட்ஸ் ஹிஸ்டரி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இறுதியில், இந்தப் பிரச்னைக்கு 1572ஆம் ஆண்டில் 13ஆம் கிரிகோரி போப் ஆனபோது தீர்வு கிடைத்தது. வானியலாளரும் காலக்கணிப்பு வல்லுநருமான அலோய்சியஸ் லிலியஸ் இதற்குத் தீர்வாக ஒரு திட்டத்தை முன்வைத்தார். அதற்கு, 1582 பிப்ரவரி 24ஆம் தேதியன்று போப் 13ஆம் கிரிகோரி ஒப்புதல் வழங்கினார். அந்த ஒப்புதல் படிவத்தின்படி, நாட்காட்டியை சரி செய்வதற்காக பத்து நாட்கள் நீக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 1582ஆம் ஆண்டில் அக்டோபர் 4ஆம் தேதிக்குப் பிறகு வந்த நாள் 15ஆம் தேதியாகக் குறிப்பிடப்பட்டது என்று அலெக்சாண்டர் பிலிப் தனது நூலில் எழுதியுள்ளார். இப்படியாக, ஆரம்பக்கால ரோமில் மார்ச் மாதத்தில் தொடங்கிய புத்தாண்டு, நூமா, சீசர், 13ஆம் கிரிகோரி ஆகியோரின் காலத்தில் ஜனவரிக்கு மாற்றப்பட்டு, இன்றளவும் ஜனவரியே புத்தாண்டு மாதமாக நீடித்து வருகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2x9x9gkv7o
-
தலைவர்களின் 2026 புத்தாண்டு வாழ்த்து செய்திகள்
மறுசீரமைப்பு, மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியை தோள்மேல் சுமந்த நிலையில் நாம் புத்தாண்டில் கால்பதிக்கிறோம் - வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி Published By: Digital Desk 3 31 Dec, 2025 | 07:30 PM மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், கடந்த 2025 ஆம் ஆண்டு தேசிய அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான அபிவிருத்திக்காக அடித்தளமிடப்பட்ட ஆண்டாக அமைந்தது. 1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையைப் பதிவு செய்தல், 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் கூடுதலான அரச வருவாயை ஈட்டுதல், வரலாற்றில் முதல் முறையாக முதன்மை கணக்கு மிகையை பெற்றமை , பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி வருவாயை சுமார் 17 பில்லியன் டொலர்களாக அதிகரித்தமை , எமது நாட்டு வரலாற்றில் அரச வருவாய் இலக்குகளை விஞ்சும் ஒரே ஆண்டாக 2025 ஆம் ஆண்டை மாற்றியமை மற்றும் அண்மைக் காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் நாட்டிற்கு வருகை தந்த வருடமாக பதிவானமை போன்றன 2025 ஆம் ஆண்டில் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க பொருளாதார சாதனைகளாகும். இலங்கை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த ஊழல் நிறைந்த அரசியல் முறைமைக்கு பதிலாக பொதுமக்களுக்கு நேர்மையாக சேவை செய்யும் ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரத்தை நாட்டில் உருவாக்கவும் எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்பதற்கான ' முழு நாடுமே ஒன்றாக ' தேசிய செயற்பாட்டைப் போன்ற திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு இவை 2025 ஆம் ஆண்டு நாட்டின் அரசியல் மற்றும் சமூக மாற்றத்தில் ஒரு திருப்புமுனையான ஆண்டாக பதியப்படுகிறது. அண்மைக் காலங்களில் நாடு எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவின் சவாலை கடந்த ஆண்டு நாங்கள் ஒன்றாக எதிர்கொண்டோம். நமது மக்களிடையே உள்ள மனிதநேயப் பண்பானது எந்த பேரழிவினாலும் பறிக்க முடியாத ஒரு சிறந்த குணம் என்பதை தெளிவாக நிரூபித்ததோடு நாடு முழுவதும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்ட சகோதர மக்களின் துயரத்தில் கைகோர்த்தார்கள். இந்தச் சவாலை எதிர்கொள்வதில் எங்களுக்கு ஆதரவளித்த வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும், மீளெழுச்சிக்கு நட்புறவின் பலத்தை வழங்கிய உலகெங்கிலும் உள்ள அனைத்து நட்பு நாடுகளுக்கும், அனர்த்த நிலையில் அயராது உழைத்த பொலிஸார் மற்றும் முப்படைகளுக்கும், இந்த நாட்டின் அரச உத்தியோகஸ்தர் களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஒன்றாக, இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. உலக வரலாற்றில் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டையும் கட்டியெழுப்புவதில் அந்த மக்களின் இலட்சியமும் தைரியமும் பக்கபலமாக இருந்தது. நமது அன்பான பிரஜைகளின் அசைக்க முடியாத தைரியத்தின் பலனால், நாம் முன்பு இருந்ததை விட சிறந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். புத்தாண்டு வருகை கடந்த ஆண்டின் அனுபவங்களை மீள்பரிசீலனை செய்வதற்கு வாய்ப்பு அளிப்பதோடு, புத்தாண்டு தொடர்பில் சாதகமான மனப்பாங்குகளுடன் மீள திட்டமிடுவதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகிறது. நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தில் அசைக்க முடியாத உறுதியுடனும் நம்பிக்கையுடனும் சகோதரத்துவத்துடன் கைகோர்க்க அனைவரையும் நான் அழைப்பு விடுகிறேன். மலர்ந்த 2026 புத்தாண்டு உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான புத்தாண்டாக அமைய வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/234842
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் 2026: இலங்கை குழாம்த்தில் யாழ். வீரர்கள் இருவர் 01 Jan, 2026 | 01:11 PM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக இந்த வருடம் நடைபெறவுள்ள 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் பெயரிடப்பட்டுள்ள 15 வீரர்களில் யாழ். வீரர்கள் இருவர் இடம்பெறுகின்றனர். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் வீரரும் தற்போது மருதானை புனித சூசையப்பர் கல்லூரியில் இணைந்துள்ளவருமான விக்னேஸ்வரன் ஆகாஷ், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் குகதாஸ் மாதுளன் ஆகிய இருவரே 19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாத்தில் இடம்பெறும் யாழ். வீரர்களாவர். துபாயில் கடந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் இடம்பெற்ற 11 வீரர்கள், உலகக் கிண்ண குழாத்திலும் பெயரிடப்பட்டுள்ளனர். நால்வர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை திரித்துவ கல்லூரி விக்கெட் காப்பாளர் ஆதம் ஹில்மி, வெஸ்லி கல்லூரி வீரர் ஜீவகன் ஸ்ரீராம் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர். 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக றோயல் கல்லூரி வீரர் விமத் தின்சார தொடர்ந்தும் செயற்படவுள்ளார். பதினாறு அணிகள் 4 குழுக்களில் பங்குபற்றும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஜனவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஏ குழுவில் இலங்கை இடம்பெறுகின்றது. இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஜப்பான் அணியை ஜனவரி 17ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது. தொடர்ந்து 19ஆம் திகதி அயர்லாந்தையும் 23ஆம் திகதி அவுஸ்திரேலியாவையும் இலங்கை சந்திக்கும். இலங்கையின் குழு நிலைப் போட்டிகள் யாவும் நமிபியாவில் விண்ட்ஹோக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். 19 வயதின்கீழ் இலங்கை குழாம் விமத் தின்சார (அணித் தலைவர் - றோயல் கல்லூரி), கவிஜ கமகே (உதவித் தலைவர் - கிங்ஸ்வூட் கல்லூரி), திமன்த மஹாவித்தான, ஆதம் ஹில்மி, செத்மிக்க செனவிரட்ன (மூவரும் திரித்துவ கல்லூரி), விரான் சமுதித்த, சமரிந்து நெத்சார (இருவரும் மாத்தறை சென். சேவேஷியஸ் கல்லூரி), துல்னித் சிகேரா, சாமிக்க ஹீனட்டிகல (இருவரும் மஹாநாம கல்லூரி), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி), ரசித் நிம்சார (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை), விக்னேஸ்வரன் ஆகாஷ், சேனுஜ வேக்குனாகொட (இருவரும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி), ஜீவகன் ஸ்ரீராம் (வெஸ்லி கல்லூரி), மலின்த சில்வா (மொறட்டுவை புனித செபஸ்தியார் கல்லூரி) https://www.virakesari.lk/article/234928 நம்ம ஊர்ப்பையனும் விளையாடப்போகிறார். வாழ்த்துகள் ஜீவகன் ஸ்ரீராம்.
-
வடக்கு, தெற்கில் 3 வகையான வீட்டுத்திட்டங்களுக்கான இந்திய நிதி உதவி இருமடங்காக அதிகரிப்பு
வடக்கு, தெற்கில் 3 வீட்டுத்திட்டங்களுக்கான இந்திய நிதி உதவி இருமடங்காக அதிகரிப்பு 31 Dec, 2025 | 04:23 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் உயர்தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ், வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் கிராம சக்தி வடக்கு, கிராம சக்தி தெற்கு-ஐ மற்றும் கிராம சக்தி தெற்கு-ஐஐ ஆகிய மூன்று வீட்டுத்திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 2017 ஒக்டோபர் மற்றும் 2018 ஒக்டோபர் மாதங்களில் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்களின்படி, இலங்கை அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், சுயமாக வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு 500,000 இலங்கை ரூபாவை இந்திய அரசாங்கம் வழங்கி வந்தது. கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் அதன் பின்னரான விலை உயர்வு, அத்துடன் 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்கள் காரணமாக, ஒதுக்கப்பட்ட நிதியுதவியுடன் வீடுகளைக் கட்டி முடிப்பதில் பயனாளிகள் சிரமங்களை எதிர்கொண்டனர். இதற்கமைய, இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு வீட்டுக்கான நிதியுதவியை 1,000,000 இலங்கை ரூபாவாக இருமடங்காக அதிகரிக்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட நிதியுதவியை அமுல்படுத்துவதற்கான இராஜதந்திர கடிதங்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் எல்.பி. குமுது லால் ஆகியோரால் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது பரிமாறிக்கொள்ளப்பட்டன. இந்த மூன்று திட்டங்களின் கீழ் 1550-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த அதிகரித்த நிதியுதவியால் பயனடையவுள்ளன. இலங்கையில் மக்களின் அன்றாட வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியாவின் மக்கள் நலன்சார் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்களில் 'வீடமைப்பு' முக்கிய இடம் வகிக்கின்றது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இந்தியாவின் பிரதான வீட்டுத்திட்டத்தின் கீழ் சுமார் 50,000 வீடுகள் கட்டப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் மேலும் 10,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நிதியுதவி அதிகரிக்கப்பட்ட 3 கிராம சக்தி திட்டங்களுக்கு மேலதிகமாக, இலங்கையில் இந்தத் துறையில் ஏனைய உயர்தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டங்களையும் இந்தியா முன்னெடுத்து வருகின்றது. நாட்டின் 25 மாவட்டங்களிலும் தலா 24 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதிகளை வழங்கும் நாடளாவிய மாதிரி கிராமத் திட்டம்; மன்னார் மடுத் திருத்தலத்திற்கு வரும் யாத்திரிகர்களுக்கான இடைத்தங்கல் விடுதிகள்; மற்றும் அனுராதபுரத்தில் அண்மையில் நிறைவடைந்த சோபித நஹிமிகம திட்டம் ஆகியவை இதில் அடங்கும். அத்துடன், தித்வா புயலைத் தொடர்ந்து இந்திய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 450 மில்லியன் டொலர் புனரமைப்பு மற்றும் மீட்புப் பொதியின் கீழ், முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளைக் கட்டுவதற்கான உதவிகளும் முன்மொழியப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/234856
-
2026 புத்தாண்டு நிகழ்வுகள்
2026 புத்தாண்டை வரவேற்க உலகெங்கிலும் கொண்டாட்டங்கள் - கண்கவர் படங்கள் பட மூலாதாரம்,Christophe Petit-Tesson/EPA படக்குறிப்பு,பாரிஸ், பிரான்ஸ் 1 ஜனவரி 2026, 01:40 GMT புதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர் 2026 புத்தாண்டு உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய நகரங்கள் மற்றும் உலக நாடுகளில் புத்தாண்டை வாணவேடிக்கைகளுடன் மக்கள் வரவேற்ற கண்கவர் புகைப்படங்கள்: படக்குறிப்பு,லண்டனில் 12,000 வாணவேடிக்கைகளுடன் தொடங்கிய புத்தாண்டு பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் குழுமியிருந்த மக்கள் மீது சிறு வண்ணத் தாள்கள் தூவப்பட்டன. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,துபை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,புத்தாண்டு பிறந்ததை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மக்கள் கொண்டாடிய போது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வாணவேடிக்கைகளை மக்கள் ஆர்வத்துடன் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சிட்னியின் ஹார்பர் பாலத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டு புத்தாண்டை வரவேற்றனர் பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,தென் கொரியாவில் அதன் மிக உயரமான கோபுரமான லோட்டே வார்ல்ட் டவரில் வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து அமலில் உள்ள ஊரடங்குக்கு முன்பாக யுக்ரேனில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நியூஸிலாந்தின் ஆக்லாண்டில் புத்தாண்டு கொண்டாடப்பட்டபோது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சீன தலைநகர் பெய்ஜிங்கில் புத்தாண்டை வரவேற்க மக்கள் காத்திருந்தபோது பட மூலாதாரம்,Hannibal Hanschke/EPA படக்குறிப்பு,பெர்லின், ஜெர்மனி பட மூலாதாரம்,Bruna Casas/Reuters படக்குறிப்பு,பார்சிலோனா, ஸ்பெயின் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,மும்பை நகரில் மக்கள் தெருக்களில் குழுமி புத்தாண்டை கொண்டாடினர். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,சென்னை மெரினாவில் புத்தாண்டு கொண்டாடப்பட்டபோது இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2glz3lvpdo
-
இலங்கையில் 2026 புத்தாண்டு நிகழ்வுகள்
மட்டக்களப்பில் கோலாகலமாக வரவேற்கப்பட்ட புத்தாண்டு! Jan 1, 2026 - 08:01 AM 2026ஆம் ஆண்டுப் பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று நள்ளிரவு விசேட நிகழ்வுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு நகரில் நள்ளிரவு 12.00 மணிக்கு பட்டாசுகள் கொளுத்தப்பட்டு, இளைஞர்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாவட்டத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பெருமளவான பொதுமக்கள் இன, மத வேறுபாடுகளின்றி மட்டக்களப்பு நகரில் ஒன்றுகூடியதைக் காணமுடிந்தது. சமீபத்தில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாகப் பலர் உயிரிழந்தும், சொத்துகளை இழந்தும் தவிக்கும் நிலையில், இம்முறை புத்தாண்டை அமைதியான முறையில் கொண்டாடுமாறு மாநகர முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். முதல்வரின் அந்த வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கும் வகையில், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நகருக்குள் ஒன்றுகூடி மிகவும் அமைதியான முறையிலும், அதேநேரம் உற்சாகத்துடனும் புத்தாண்டை வரவேற்றனர். மட்டக்களப்பில் தற்போது சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும், மழையைப் பொருட்படுத்தாது மக்கள் திரண்டு வந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://adaderanatamil.lk/news/cmjutx13503dco29njyexr9wm
-
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! - 2026
யாழிணைய உறவுகள் அனைவருக்கும் 2026 புத்தாண்டு வாழ்த்துகள்.