Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பிரதமரின் இந்திய விஜயம் வலுவான நன்மதிப்பைக் கட்டியெழுப்பியுள்ளது - அலி சப்ரி பாராட்டு 21 Oct, 2025 | 05:16 PM (நா.தனுஜா) அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் இந்திய விஜயம் பரவலாக வலுவான நன்மதிப்பைத் தோற்றுவித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச அரங்கில் எமது நாடு தெளிவுடனும் கௌரவத்துடனும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதைக் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரியவின் அண்மைய இந்திய விஜயம் வலுவான நன்மதிப்பைத் தோற்றுவித்திருக்கின்றது. தான் கல்வி பயின்ற புதுடில்லியின் தேசிய பல்கலைக்கழகத்திலும் என்.டி.ரி.வியின் உலகத்தலைவர் மாநாட்டிலும் பிரதமர் ஆற்றிய உரையானது ஆழமானதாகவும், அறிவுபூர்வமானதாகவும், இலங்கையின் மிகச்சிறந்த தலைமைத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது. எமது நாடு அத்தகையதொரு தெளிவுடனும், கௌரவத்துடனும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதைக் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதேபோன்று தீவிர நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு உதவிய மிக்கடினமான முறையில் வென்றெடுக்கப்பட்ட பொருளாதார அடைவுகள் மற்றும் ஸ்திரமான வெளியுறவுக்கொள்கை என்பவற்றில் பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்வதில்லை என்ற அரசாங்கத்தின் தீர்மானமும் ஊக்கமளிக்கின்றது. எம்மால் பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டுவரும் சுதந்திரமானதும், எந்தவொரு தரப்பினரையும் சாராத போதிலும் நடைமுறைக்குச் சாத்தியமானதுமான வெளியுறவுக்கொள்கை தொடர்ந்து எமக்குச் சாதகமானதாக அமையும். நிதியியல் ஒழுக்கம், வருமான ஒருங்கிணைப்பு, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு, செலவினங்களை ஈடுசெய்யக்கூடிய விலையிடல் முறைமை, இலக்கிடப்பட்ட சமூகப்பாதுகாப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் என்பன சர்வதேச நாணய நிதியத்தினால் அனுசரணையளிக்கப்படும் மீட்சிக்கான செயற்திட்டத்தின் அடிப்படைகளாக அமைந்துள்ளன. இவை தூரநோக்கு சிந்தனை மற்றும் நடைமுறைக்குச் சாத்தியமான தன்மை என்பவற்றின் ஊடாக அணுகப்படவேண்டுமே தவிர, மறுப்புக்கொள்கையின் அடிப்படையில் கையாளப்படக்கூடாது. அத்தோடு சட்ட மற்றும் ஒழுங்கை மீளுறுதிப்படுத்தும் அதேவேளை, ஊழல் மோசடிகளை உரியவாறு கையாள்வது இன்றியமையாததாகும். மறுபுறம் மாற்று நோக்கங்களுக்காக சட்ட அமுலாக்கம் தவறான முறையில் பயன்படுத்தப்படக்கூடாது. பெரும்பாலான இலங்கையர்களைப் பொறுத்தமட்டில் யார் நாட்டை ஆள்கின்றார்கள் என்பதை விட, நேர்மை, இலக்கு, பொறுப்புக்கூறல், ஒழுக்கம் மற்றும் சகலரையும் உள்ளடக்கிய தன்மை என்பவற்றுடன் எவ்வாறு நாட்டை ஆள்கின்றார்கள் என்பதே முக்கியமானதாக இருக்கின்றது. எனவே அதற்கேற்றவாறு கௌரவம் மற்றும் ஒற்றுமையுடன் இலங்கை முன்நோக்கிப் பயணிக்கும் என எதிர்பார்க்கின்றோம் என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/228310
  2. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஒரு பிட்காயின் மத்திப்பு 80,000 டாலருக்கு (சுமார் 67 லட்சம் ரூபாய்) மேல் உயர்ந்தது. 21 அக்டோபர் 2025 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரிப்டோகரன்சி உலகத்தைத் தழுவிட முடிவு செய்துள்ளார். அதற்காக கிரிப்டோகரன்சியை பொருளாதார அமைப்பின் ஒரு பகுதியாக மாற்றும் புதிய சட்டத்திற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். டிரம்ப் குடும்ப உறுப்பினர்கள் கிரிப்டோகரன்சி அடிப்படையிலான வணிகங்களைத் தொடங்கி, கணிசமான லாபத்தைப் பெற்றுள்ளனர். ஆனால், அமெரிக்காவை கிரிப்டோ உலகில் முன்னிலைப்படுத்துவதற்கும், டாலரின் செல்வாக்கை அதிகரிப்பதற்கும் எடுக்கப்படும் இந்த காரியங்களில் ஆபத்துகளும் குறைவாக இல்லை. பிட்காயின் எவ்வாறு பிறந்தது ? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கிரிப்டோகரன்சியான பிட்காயின் 2008 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முயற்சித்துக் கொண்டிருந்தபோது இந்தக் கதை தொடங்கியது. ஒருபுறம், அரசாங்கங்கள் தங்கள் பொருளாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்த முயற்சித்துக் கொண்டிருந்தன. மறுபுறம், ஒரு புதிய சிந்தனை எழுந்தது. அரசாங்கத்தின் நிதி அமைப்புக்கு ஒரு மாற்று இருக்க வேண்டும் என்று சிலர் நம்பினர். 'சைட்டேஷன் நீடட்' என்ற செய்திமடலுக்காக எழுதுபவரும் கிரிப்டோகரன்சி குறித்துத் தொடர்ந்து எழுதி வருபவருமான மாலி ஒயிட் இது பற்றிக் கூறுகிறார். அவரது கூற்றுப்படி, பணத்தின் மீதான கட்டுப்பாடு ஏன் அரசு அமைப்பிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று சிலர் நினைத்தனர். "2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு 2009-ல் பிட்காயின்கள் உருவாகத் தொடங்கின. இது ஒரு டிஜிட்டல் சொத்து. அந்தக் காலகட்டத்தில் அரசாங்கங்கள் நிதி நெருக்கடியைக் கையாண்ட விதம் பலருக்கு அதிருப்தியை அளித்தது. ஒரு மைய வங்கியால் வெளியிடப்படாத மற்றும் எந்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லாத ஒரு நாணயம் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்ததால், அவர்கள் கிரிப்டோகரன்சியை உருவாக்கினர். இவ்வாறு முதல் கிரிப்டோகரன்சியான பிட்காயின் உருவானது. இப்போது ஆயிரக்கணக்கான வகையான கிரிப்டோகரன்சிகள் வந்துவிட்டன," என மாலி ஒயிட் கூறுகிறார். கிரிப்டோகரன்சியைப் பரிவர்த்தனைக்கு ஒரு பணமாக பயன்படுத்த, அதன் முழுப் பதிவையும் பாதுகாக்கும் ஒரு அமைப்பு தேவைப்பட்டது. அதாவது, அது எந்த மத்திய வங்கி அல்லது ஒற்றை நபரின் கட்டுப்பாட்டிலும் இருக்கக்கூடாது. இதற்கு பிளாக்செயின் எனப்படும் புதிய தொழில்நுட்பம் தேவைப்பட்டது. இது ஒரு வகையான டிஜிட்டல் பதிவேடு அல்லது பேரேடு ஆகும், இது கிரிப்டோகிராஃபி மூலம் பாதுகாக்கப்படுகிறது. மக்கள் கிரிப்டோகரன்சியை அனுப்பும் மற்றும் அதன் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையின் பதிவும் இதில் வைக்கப்படுகிறது, இது பரவலாக்கப்பட்ட (Decentralized) அமைப்பில் உள்ளது, என மாலி ஒயிட் கூறுகிறார். இந்த பரவலாக்கல் ஏன் இவ்வளவு முக்கியமானது? இந்த பரவலாக்கமே கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் பணம் ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடு என்று மாலி ஒயிட் கூறுகிறார். மக்கள் வங்கிகள் மூலம் ஒருவருக்கொருவர் அனுப்பும் டிஜிட்டல் பணத்தின் பதிவு வங்கிகளிடம் இருக்கும், ஆனால் கிரிப்டோகரன்சியின் பதிவு எந்த ஒற்றை இடத்திலும் வைக்கப்படுவதில்லை. இந்த தரவு எந்த ஒரு நிறுவனத்தின் அல்லது தனிநபரின் கட்டுப்பாட்டிலும் இல்லை. ஆரம்பத்தில் கிரிப்டோகரன்சியை வாங்குவது அல்லது விற்பது சிக்கலாக இருந்தது. எனவே, முதலீட்டாளர்கள் எளிதாகப் பணத்தைப் போடவும், பரிவர்த்தனை செய்யவும் கிரிப்டோகரன்சி சந்தைகள் (Exchange) உருவாக்கப்பட்டன. ஆனால், இந்த சந்தைகள் மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஜப்பானின் டோக்கியோவில் இருந்த எம்டி காக்ஸ்(MT Gox) அப்படிப்பட்ட ஒரு சந்தை ஆகும். இதன் மூலம் உலகின் பிட்காயின் பரிவர்த்தனையில் சுமார் 70 சதவீதம் நடந்தது. 2014-ல் இந்த எக்ஸ்சேஞ்ச் வீழ்ச்சியடைந்தது, இதனால் முதலீட்டாளர்களுக்குக் கோடிக்கணக்கான டாலர் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 2022-ல் FTX என்ற கிரிப்டோகரன்சி சந்தையும் வீழ்ச்சியடைந்தது, இதனால் பில்லியன்கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. இதில் சாம் பேங்க்மேன் ஃப்ரைட் என்பவர் முக்கியப் பங்கு வகித்தார். மாலி ஒயிட் கூறுகையில், FTX சந்தை முதலீட்டாளர்களின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, இதன் காரணமாக அந்த சந்தை வீழ்ச்சியடைந்தது என்றார். இந்த மோசடி குற்றத்திற்காக சாம் பேங்க்மேன் ஃப்ரைடுக்கு நீண்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் மற்றும் நிச்சயமற்ற தன்மையால், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது ஆபத்தானது என்ற கருத்து உருவானது. "கிரிப்டோ உலகில் எப்போதும் எந்த விதிகளோ அல்லது கட்டுப்பாடுகளோ இருந்ததில்லை. கட்டுப்படுத்தும் நிதி நிறுவனங்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தவில்லை. தற்போதுள்ள கொள்கைகள் மற்றும் விதிகளில் எது கிரிப்டோகரன்சிக்குப் பொருந்தும் என்பதையும் அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. இது தவிர வேறு பல காரணங்களும் உள்ளன," என மாலி ஒயிட் கூறுகிறார். இந்த பல காரணங்களில் ஒன்று பிளாக்செயின் தொழில்நுட்பம். கிரிப்டோ உலகின் ஒரு குறைபாடு என்னவென்றால், அதில் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளை ரத்து செய்து பணத்தைத் திரும்பப் பெற முடியாது என்று மாலி ஒயிட் கூறுகிறார். யாராவது உங்கள் கிரெடிட் கார்டு எண்ணைத் தவறாகப் பயன்படுத்தினால், அந்தப் பணத்தைத் திரும்பப் பெற வழிகள் உள்ளன. ஆனால், யாராவது உங்கள் பிட்காயின்களைத் திருடினால், அதனைத் திரும்பப் பெறுவது கடினம். இந்த ஆண்டு வரை, அமெரிக்காவில் கிரிப்டோ துறைக்குச் சிறப்பான விதிகள் எதுவும் இல்லை. அமெரிக்காவின் நிதி கட்டுப்பாட்டு அமைப்பான செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (SEC) மற்ற துறைகளுக்குப் பொருந்தும் விதிகளால் கிரிப்டோ துறையைக் கட்டுப்படுத்த முயன்றது, இதனால் நிச்சயமற்ற தன்மையும் குழப்பமும் நிலவியது. இந்தக் காரணத்தால், முதலீட்டாளர்கள் அமெரிக்க கிரிப்டோ துறையில் முதலீடு செய்யத் தயங்கினர். இந்த நிச்சயமற்ற தன்மை இருந்த போதிலும், இப்போது இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்சிகள் உள்ளன. கடந்த ஆண்டு அவற்றின் மொத்த மதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்து நான்கு டிரில்லியன் டாலர்களை எட்டியது. இதற்கு காரணம், பல தொழில் அதிபர்கள் ஆவர். இப்போது அமெரிக்க அதிபரே இதில் ஈடுபட்டுள்ளார். டிரம்பின் கிரிப்டோ சாம்ராஜ்யம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, லாஸ் வேகாஸில் நடைபெற்ற பிட்காயின் மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிட்காயினைப் பிடித்துக்கொண்டிருக்கும் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. பல அமெரிக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைப் போலவே, தனது முதல் பதவிக் காலத்தில் அதிபர் டிரம்பும் கிரிப்டோகரன்சிக்கு எதிராக இருந்தார் என பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் ஸ்கூல் விரிவுரையாளர் ஃபிரான்சின் மெக்கென்னா நினைவுபடுத்துகிறார். ஆனால் நவம்பர் 2024-ல் இரண்டாவது பதவிக் காலத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது, அவரது கருத்து முற்றிலும் மாறியது. கிரிப்டோ துறையின் பல செல்வாக்கு மிக்கவர்கள் டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்குப் பெருமளவு நன்கொடை அளித்தனர். அதே சமயம், கிரிப்டோகரன்சியை ஆதரிக்கும் ஜனநாயகக் கட்சித் தலைவர்களுக்கும் அவர்கள் நன்கொடை அளித்தனர். "இந்தத் தேர்தல் பிரசாரங்களுக்காகப் பெரிய அளவில் பணம் செலவழிக்கப்பட்டது. டிரம்ப் மீண்டும் அதிபரானால், அவரது அரசு கிரிப்டோ துறை மீதான பைடன் அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் என்பதே இதன் பின்னணியில் உள்ள நோக்கமாக இருந்தது." அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்பதற்கு முன்பே, கிரிப்டோ உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் அவரது தேர்தல் பிரசாரத்திற்கு மேலும் அதிக நிதியளித்தனர். அப்படியானால், இந்த நிதி அரசியல் ஆதரவைப் பெறுவதற்கும், கிரிப்டோ உலகிற்குச் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குவதற்கும் ஈடாக வழங்கப்பட்டதா? ஃபிரான்சின் மெக்கென்னா கூறுகிறார், "இது செல்வாக்கை அதிகரிப்பதற்கான ஒரு வழிமுறை. டிரம்ப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கியவர்களுக்கு இந்தத் தொழிலில் லாபம் ஈட்டவும், அவர்களை இந்தத் துறையில் ஈடுபடுத்தவும் முடிந்தால், தங்களுக்கு அவர்களின் ஆதரவு கிடைக்கும் என கிரிப்டோ துறையைச் சேர்ந்தவர்கள் பார்த்தனர்." டிரம்ப் ஜனவரியில் பதவியேற்பதற்கு முன்பே அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்தத் துறையில் ஈடுபட்டிருந்தனர். பதவியேற்றவுடன், டிரம்ப் அரசு கிரிப்டோவை ஆதரிக்கும் கொள்கைகளைச் செயல்படுத்தத் தொடங்கியது. கிரிப்டோ மற்றும் டிஜிட்டல் சொத்துகள் அமெரிக்காவின் பொருளாதார எதிர்காலத்தின் ஒரு பகுதி என்று அறிவிக்கத் தொடங்கியது. டிரம்ப் கிரிப்டோ துறையிலிருந்து லாபம் ஈட்டியதை ஒப்புக்கொண்டார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கூற்றுப்படி, டிரம்பின் கிரிப்டோ சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாகும், இது அவருக்கு சொந்தமான மார்-அ-லாகோ ரிசார்ட் மற்றும் டிரம்ப் டவர் ஆகியவற்றின் மொத்த மதிப்பை விட அதிகமாகும். இப்போது அவர் இவை அனைத்தையும் பெரிய அளவில் செய்து வருகிறார் என ஃபிரான்சின் மெக்கென்னா கூறுகிறார். அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு, அவர் கிரிப்டோ தொடர்பான நடவடிக்கைகளில் விரைவாகப் பங்கேற்கத் தொடங்கினார். புதிய வணிகங்களையும் தொடங்கினார். ஸ்டேபிள்காயின் வணிகத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்கன் பிட்காயின் மைனர் (American Bitcoin Miner), வேர்ல்ட் லிபர்ட்டி (World Liberty) உள்ளிட்ட புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. "டிரம்பின் மகன்கள் இந்த வணிகத்தில் முதலீடு செய்கிறார்கள். அவரது ஆலோசகர் ஒருவரும் இதில் ஈடுபட்டுள்ளார். இந்த அரசில் உள்ளவர்களுக்கு இப்போது இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தத் தொழில்களைக் கண்காணிக்க உருவாக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மிகவும் தளர்ந்துவிட்டன," என அவர் கூறுகிறார். டிரம்ப் கிரிப்டோவில் லாபம் ஈட்டும் முதல் அதிபராக இருக்கலாம், ஆனால் இந்தத் துறையால் ஈர்க்கப்பட்ட முதல் அதிபர் அவர் அல்ல. எல் சால்வடார் நாட்டின் கதை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எல் சால்வடோர் நாட்டின் அதிபர் நயிப் புகேலே. எல் சால்வடார் நாடு அதன் இயற்கை அழகு மற்றும் போதைப்பொருள் தொடர்பான வன்முறைகளுக்குப் பெயர் பெற்றது. ஆனால், 2019-ல் நயிப் புகேலே அதிபராகப் பதவியேற்ற பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. புகேலே தன்னை உலகின் "மிகவும் கூலான சர்வாதிகாரி" அல்லது "உலகின் மிகச் சரியான சர்வாதிகாரி" என்று கூறிக்கொள்கிறார். வன்முறையைக் கட்டுப்படுத்த அவர் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார், அதன் பிறகு எல் சால்வடார் லத்தீன் அமெரிக்காவின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக மாறியது. 2021-ல் பிட்காயினைச் சட்டப்பூர்வ நாணயமாக அங்கீகரித்த முதல் நாடு இதுவாகும். கிரிப்டோகரன்சி நாட்டின் குடிமக்கள் வங்கிக் கணக்கு இல்லாமல் நிதிச் சேவைகளைப் பெறுவதற்கு வழிவகுக்கும் என்று அதிபர் புகேலே கூறினார். வெளிநாடுகளில் பணிபுரியும் எல் சால்வடார் நாட்டவர்கள் குறைந்த செலவில் பணத்தை சொந்த நாட்டிற்கு அனுப்ப முடியும் என்று அவர் நம்பினார். பிபிசி மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்க செய்தியாளர் வில் கிராண்ட் கூற்றுப்படி, "நாட்டின் மக்கள் அனைவரும் அன்றாட பரிவர்த்தனைகள் மற்றும் கொள்முதல்களுக்கு பிட்காயினைப் பயன்படுத்த வேண்டும். இந்த நாணயம் மத்திய அமெரிக்காவின் பொது நாணயமாக மாற வேண்டும் என்பதே புகேலேயின் திட்டமாக இருந்தது." "கிரிப்டோகரன்சி ஆதரவு முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் எல் சால்வடாரை நோக்கி ஈர்க்கப்படும், இது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்" என்று அவர் நம்பினார். இந்த நேரத்தில், புகேலே "சிவோ வாலட்" என்ற டிஜிட்டல் செயலியை அறிமுகப்படுத்தினார். அதன் பயன்பாட்டை ஊக்குவிக்க, செயலியைப் பதிவிறக்கும் ஒவ்வொருவரின் வாலட்டிலும் 30 டாலர் டெபாசிட் செய்யப்படும் என்று அவர் அறிவித்தார், இதனால் மக்கள் பிட்காயினைப் பயன்படுத்தத் தூண்டப்படுவார்கள் என நம்பினார். பெரும்பாலான மக்கள் அந்தக் கணக்கிலிருந்து 30 டாலரை எடுத்துவிட்டுச் செயலியின் பயன்பாட்டை நிறுத்திவிட்டனர் - இதன் விளைவாகத் திட்டம் தோல்வியடைந்தது என்று வில் கிராண்ட் விளக்குகிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டில் பிட்காயின் பரிவர்த்தனைகள் மொத்தப் பரிவர்த்தனைகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தன. உண்மையில், அதிபர் புகேலே எல் சால்வடமாரைக் கிரிப்டோகரன்சி உலகின் மையமாக மாற்ற விரும்பினார். பிட்காயின் மூலம் அனைத்து பரிவர்த்தனைகளும் நடைபெறும் "கிரிப்டோ சிட்டி" என்ற நகரை உருவாக்குவது அவரது கனவாக இருந்தது. "இந்த நகரத்திற்காக கோன்சாகுவா எரிமலையின் வெப்ப ஆற்றலில் இருந்து மின்சாரம் உருவாக்கப்படும் என்று திட்டமிடப்பட்டது. அங்கு வரிகளில் பெரிய தள்ளுபடி வழங்கப்படும் மற்றும் கிரிப்டோகரன்சி உற்பத்தி வசதிகள் உருவாக்கப்படும். ஆனால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நகரத்தின் கட்டுமானப் பணிகள் முறையாகத் தொடங்கப்படவில்லை." என்கிறார் வில் கிராண்ட். எல் சால்வடார் ஒரு ஏழை நாடு, அதன் வருவாயில் கால் பகுதி வெளிநாடுகளில் பணிபுரியும் குடிமக்களிடமிருந்து வருகிறது. பொருளாதார நிலையை மேம்படுத்த, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அது, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) கடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், எல் சால்வடாருக்கு 1.4 பில்லியன் டாலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புக்கொண்டது. ஆனால், பிட்காயினைச் சட்டப்பூர்வ நாணயமாக மாற்றும் கொள்கையை அதிபர் புகேலே முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நிபந்தனை விதித்தது என்று வில் கிராண்ட் விளக்குகிறார். இதன் விளைவாக, இந்தக் கடனுக்கு ஈடாக எல் சால்வடார் தனது கிரிப்டோ கொள்கையிலிருந்து பின்வாங்க வேண்டியிருந்தது. வில் கிராண்டின் கூற்றுப்படி, நாட்டின் சாதாரண குடிமக்கள் ஒருபோதும் பிட்காயினை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் ரொக்கப் பணம் அல்லது வங்கிக் கணக்கை மிகவும் பாதுகாப்பானதாகக் கருதுகிறார்கள் - அவர்களுக்கு பிட்காயின் மீது அத்தகைய நம்பிக்கை இல்லை. கிரிப்டோவின் எதிர்காலம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தேர்தல் பிரச்சாரத்தின்போது, அமெரிக்காவை உலகின் 'கிரிப்டோ தலைநகரமாக' மாற்றுவதாக டிரம்ப் உறுதியளித்தார். கேம்பிரிட்ஜில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் தலைவராக ஜில்லியன் டெட் இருக்கிறார். "நிதி உலகில் ஒரு புதிய சிந்தனை அல்லது அமைப்பு வரும்போதெல்லாம், மக்கள் ஈர்க்கப்பட்டு அதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், பல நேரங்களில் அது நடைமுறை ரீதியில் வெற்றியடையவில்லை" என அவர் கூறுகிறார். ஆனால், பின்னர் அதே யோசனையை மேம்படுத்தி மீண்டும் முன்வைத்தால், அது வெற்றியடையும் வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறுகிறார். கடந்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் கிரிப்டோகரன்சி துறையில் பல புதிய விஷயங்கள் நடந்துள்ளன, அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவிற்கு வெளியே நடந்தன என்று ஜில்லியன் டெட் கூறினார். இப்போது முதல் முறையாக அது அமெரிக்காவில் செயல்படுத்தப்படுகிறது, இதுவே ஒரு பெரிய மாற்றமாகும். "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்க டாலர் உலக வர்த்தகத்தில் முக்கிய நாணயமாக இருந்து வருகிறது, இதன் பலனை அமெரிக்கா தொடர்ந்து அனுபவித்து வருகிறது" என்று அவர் கூறுகிறார். ஆனால், இப்போது கிரிப்டோகரன்சி தொடர்பான நிச்சயமற்ற தன்மையைத் தீர்க்க, அமெரிக்கா ஸ்டேபிள்காயின்களின் (Stablecoin) பயன்பாட்டை அதிகரிக்கும் திசையில் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஸ்டேபிள்காயின்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது, ஆனால் அவை அமெரிக்க டாலருடன் இணைக்கப்படும். ஜில்லியன் டெட் கூற்றுப்படி, டாலரின் ஆதிக்கத்தைத் தக்கவைத்து அதை மேலும் வலுப்படுத்த டாலருடன் இணைக்கப்பட்ட ஸ்டேபிள்காயின்களைத் தொடங்க டிரம்ப் நினைக்கலாம். ஆனால், சீனா மற்றும் பிற நாடுகள் இதில் திருப்தி அடையாது. அவர்கள் தங்கள் நாணயத்தின் செல்வாக்கை அதிகரிக்க புதிய வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். இந்த இழுபறி நீண்ட காலத்திற்கு நீடிக்கும் மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளில் போட்டியின் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்று அவர் கூறுகிறார். அமெரிக்காவை கிரிப்டோகரன்சியின் மையமாக மாற்ற இந்த ஆண்டு ஜூலை மாதம் 'ஜீனியஸ் சட்டம்' (Genius Act) நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் குறிப்பாக ஸ்டேபிள்காயின்கள் மற்றும் டாலருடன் இணைக்கப்பட்ட கிரிப்டோகரன்சிகளைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்திற்குப் பிறகு, கிரிப்டோகரன்சி இப்போது அமெரிக்காவின் முக்கிய நீரோட்ட பொருளாதார அமைப்பின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யும் ஒரு பெரிய நிதி நிறுவனம் அல்லது முதலீட்டாளர் தோல்வியடைந்தால், அது உலகப் பொருளாதாரத்தில் பெருமளவு நிலையற்ற சூழலை ஏற்படுத்தலாம் என்று ஜில்லியன் டெட் எச்சரிக்கிறார். "எதிர்காலத்தில் உடனடியாக இது நடக்காமல் இருக்கலாம், ஆனால் ஆபத்து நிச்சயம் உள்ளது. ஸ்டேபிள்காயின்கள் அல்லது பிற கிரிப்டோகரன்சிகளை டாலருடன் இணைப்பது உலகளவில் பரிவர்த்தனைகளில் டாலரின் பயன்பாட்டை அதிகரிக்கக்கூடும். ஆனால், டாலருடன் இணைக்கப்பட்ட கிரிப்டோகரன்சி ஏதேனும் மோசடிக்கு பலியானால், அதனால் மோசமான விளைவும் ஏற்படலாம். இதனால் உலகம் ஒரே இரவில் மாறாது, எனவே அதன் பயன்பாடு குறித்து அதிக கவலைப்படுவதும் சரியல்ல" என்று அவர் கூறுகிறார். கிரிப்டோகரன்சி ஒரு புதிய விஷயம் அல்ல. பிட்காயின்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டன. ஆனால், கட்டுப்பாடுகள் இல்லாததால் இந்தத் துறையில் பல பெரிய மோசடிகள் நடந்ததால், நிதி நிறுவனங்கள் அவற்றை இதுவரை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது டிஜிட்டல் சொத்துகள் உண்மையில் பயனுள்ளவையாக இருக்குமா என்று நாடுகள் புதிய வழிகளில் சிந்திக்க வேண்டிய நேரம் வந்திருக்கலாம். அப்படியானால், டிரம்ப் உண்மையில் கிரிப்டோ பொருளாதாரத்தை உருவாக்குகிறாரா என்பதுதான் கேள்வி? கடந்த ஆண்டு ஐரோப்பாவும் அமெரிக்காவும் கிரிப்டோகரன்சி தொடர்பான விதிகளைச் செயல்படுத்தின, அதன் பிறகு இந்தத் துறையில் முதலீடு அதிகரித்துள்ளது. டொனால்ட் டிரம்ப் இதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார் என்று தெரிகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c04gn1lq9z9o
  3. வசாவிளானில் தனியார் காணியில் அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சுமந்திரன் Published By: Vishnu 21 Oct, 2025 | 10:15 PM வசாவிளானில் தனியார் காணியில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் காணி உரிமையாளரின் கோரிக்கையை அடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவிகே சிவஞானம் மற்றும் வலி வடக்கு தவிசாளர் சுகிர்தன் ஆகியோர் களத்திற்குச் சென்று காணி உரிமையாளருடன் செவ்வாய்க்கிழமை (21) மாலை 6.00 மணியளவில் கலந்துரையாடினர். தனியார் காணி உரிமையாளருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி சட்டத்தரணி குறித்த இராணுவ வைத்தியசாலை கட்டடத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையை மிக விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக உறுதியளித்தார். https://www.virakesari.lk/article/228330
  4. இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியவரின் வீடு பொலிஸாரால் சுற்றிவளைப்பு Published By: Digital Desk 1 22 Oct, 2025 | 10:01 AM இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் செயற்பட்ட நபர் ஒருவரின் வீடு இன்று (22) யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முளவை சந்தி அருகில் உள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை சோதனை நடத்தப்பட்டது. அண்மைக்காலத்தில் இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் தனது பிறந்த நாள் கொண்டாட்ட காணொளியை பதிவேற்றம் செய்தமை, சட்டவிரோத சொத்துக் குவிப்பு போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடவடிக்கையின்போது குறித்த நபர் வீட்டில் இல்லாத நிலையில், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/228345
  5. மூன்றாவது அணி இயக்குநர் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு பிரச்சினை இருக்கும் - கடந்த பத்தாண்டுகளில் அது நரேட்டிவ் செட் பண்ணுவதாக இருக்கிறது. அரசியலில் இதைத் துவங்கி வைத்தது பாஜக. பகிங்கரமான குற்றச்சாட்டுகள், கதையாடல்கள், எதிரிடைகளை உருவாக்கி மக்களிடையே வெறுப்பை விதைத்து அந்தப் பரபரப்பையும் பதற்றத்தையும் கொண்டு தம்மைப் பெரியோராகக் காட்டுவது, அதே சமயம் தம்மைப் பாதிக்கப்பட்டோராகவும் முன்னிறுத்துவது. ஊடகங்களைத் தம் வசப்படுத்தி தம்மை விமர்சிப்பவர்களை துரோகிகள், குற்றவாளிகள் என்றோ ஒடுக்குபவர்கள், கொடுமைக்காரர்கள் என்றோ, இரண்டுமேதாம் எனவோ சித்தரிப்பது, இதைக் குறித்து அஞ்சி அவர்கள் வாயை மூடும் சூழலை ஏற்படுத்துவது. இதை ஜெர்மனியில் ஹிட்லரும் ரஷ்யாவில் ஸ்டாலினும் முன்பே பண்ணியிருக்கிறார்கள் என்றாலும் நம் நாட்டில் தேசியம், கட்சிக் கட்டுப்பாடு, சித்தாந்த விசுவாசம் ஆகியவற்றை மீறி மூளைச்சலவையாக மட்டுமே இது இருக்கிறது. அவ்வாறு மூளைச்சலவை செய்து சாதி, மதம் உள்ளிட்ட எதிரிடைகளைக் கொண்டு என்னதான் பாசிசத்தை வளர்த்தாலும் ஒட்டுமொத்தமாக அதே சமூக நீதி மக்களாட்சியைத்தான் இவர்களும் செய்ய வேண்டியிருக்கிறது என்பதொரு சுவாரஸ்யம். சினிமாவில் இத்தகைய நரேட்டிவ் செட்டிங் (அதாவது பிரித்தாளும் எதிர்மைக் கதையாடல்கள்) மூன்றாவது அணித் தோற்றத்திற்கான சூழல் வலுப்பெறும்போதே தோன்றுகிறது. தலித் சினிமாவின் துவக்கத்தில் அது நரேட்டிவ் செட்டிங்காக இல்லையென்றாலும் மெல்லமெல்ல அது அந்த இடத்திற்கே செல்கிறது. மூன்றாவது அணிக் கட்சியினரே தலித் சினிமாவின் இரண்டாவது கட்டத்தில் சில படங்களுக்கு நிதியாளர்களாகவும் இருந்திருக்கக் கூடுமோ எனும் ஐயம் பின்னர் நடந்த சில குற்றச் சம்பவங்களைப் பார்க்கையில் ஏற்படுகிறது. குறிப்பாக, திராவிடக் கட்சிகளுக்கு எதிரான நரேட்டிவ்வை செட் பண்ணுவது இங்கு எடுக்கப்பட்ட சில தலித் படங்களின் நோக்கமாக மாறுகிறது. நரேட்டிவ் செட் செய்வது அடிப்படையில் பண்பாட்டுப் பணி அல்ல, அது படைப்பாளர்களின் நோக்கம் அல்ல, அது நேரடி அரசியலின் பிரச்சார இலக்கு மட்டுமே. அது முழுக்கமுழுக்க தேர்தல் அரசியலில் மட்டுமே செல்லுபடியாகிற செயல்பாடு. அதனாலே தமிழிலோ பிற மொழிகளிலோ தலித் இலக்கியம் மத்திய சாதிகளின் மனசாட்சியை நோக்கிப் பேசுகிற, தமது நிலையை முன்வைக்கிற தன்கதைகளாக மலர்ந்தன. சாதியின் நுட்பங்களை, அது சமூகத்தில் செயல்படுகிற வினோதமான வடிவங்களைச் சித்தரித்தன. தலித் இலக்கியத்தின் நோக்கம் மையப் பண்பாட்டு பெருங்கதையாடல் எதிர்ப்பின் வழியிலான சமூக மாற்றமாகவும் இருந்தது. அதாவது மக்களின் மனத்தில் அன்பின் வழியில் மாற்றத்தை உண்டு பண்ணுவது. மக்களைத் திரட்டி தேர்தல் பிரச்சாரம் வழியாக அதிகாரம் பெறுவதாக இருந்ததில்லை - அது தலித் கட்சிகளின் இலக்கு மட்டுமே. தமிழில் தலித் சினிமா ஒரு கட்டத்தில் கட்சி அரசியல் நரேட்டிவ் செட்டிங் நோக்கிப் போனது ஆச்சரியமானது. ஒருவேளை அரசியல் அதிகாரம், முலதனத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றுவது, நிதியாளர்களின் தேவைகள் இதைச் சாத்தியமாக்கி இருக்கலாம். திமுக ஆட்சிக்கு வந்ததும் ரஞ்சித்தை விட்டுவிட்டு மாரி செல்வராஜை எடுத்துக்கொண்டது மேலும் சுவாரஸ்யமானது - ஆனால் மாரி வரலாற்று நிகழ்வுகளின் காலவரிசையை மாற்றுவதை ஒழித்து வேறெதையும் திமுகவுக்கோ அதிமுகவுக்கோ சார்பாகச் செய்யத் தயாராக இல்லை. அவர் செட் செய்கிற நரேட்டிவ் தலித் சமூகத்தினர் தேர்தல் அரசியலில் தனித்திரளாக வேண்டும் என்பதை இதுவரையிலான படங்களைக் கவனித்தால் தெளிவாகப் புரியும். அவருக்குப் பின்னுள்ள சாதித் திரளை பாஜக கவரும் முயற்சியை ஆரம்பித்ததாலே அவர்களை ஆற்றுப்படுத்தும் முயற்சியை திமுக தொடர்ந்து எடுத்து வருகிறது என்பதை அப்பட்டமானது. மாரி இச்சூழலை ஒரு பக்கம் பயன்படுத்திக்கொண்டு தன் படத்துக்கு பரபரப்புகாகவும் தன் மூன்றாவது அணி வெறுப்பு அரசியல் நரேட்டிவ்களை செட் செய்வதற்காகவும் அங்கங்கே மற்றமையையும் சுய-மற்றமையையும் விதைக்கும்வண்ணம் தன் படங்களின் கதையமைப்பை வைக்கிறார். அதாவது கூட்டணியில் சேரும் மூன்றாவது அணியினரைப் போலவே ரெண்டு பக்கமும் நெருப்பு அணையாதபடி பார்த்துக்கொள்கிறார். அவரது 'கர்ணன்', 'மாமன்னன்' போன்ற படங்களில் திமுக அதிமுகவைச் சாடவும் அதிமுக தாம் பாராட்டப்பட்டிருப்பதாகச் சொல்லவும் போதுமான குழப்பத்தை இடைவெளியாக அவர் விட்டுவைத்திருப்பார். இரண்டு பக்கமும் கொந்தளிக்க மாரி "டேய் நீ போய் பருத்தி மூட்டையை குடோன்ல வை" என தன் ஆதரவாலர்கள், எதிர்ப்பாளர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பார். அது மட்டுமல்ல, அதிமுக-திமுக எனப் பந்தை அடித்துக்கொண்டே இருக்கும் அவர் (பா. ரஞ்சித்தைப் போல) பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்குள் வரவே மாட்டார். அந்தக் கதவைத் திறந்தே வைத்திருப்பது தன் மதிப்பை அதிகரிக்கும் என அவருக்கு ஒரு உள்ளுணர்வு இருக்கிறது. அயோத்திதாசர், அம்பேத்கர், இங்கு அதையொட்டித் தோன்றிய தமிழ்த் தேசியம், ஆதி-திராவிடம், பூர்வ பௌத்தம் எனப் போய் இந்துத்துவாவை வைதீக ஒடுக்குமுறையாளர்களின், திருடர்களின் சித்தாந்தம் என்று சொன்னால் பின்னர் தான் அதிமுக, திமுக முகாம்களுக்குள் மாட்டிக்கொள்ளக் கூடும் என்பதால் அவர் பாஜகவை ஒரு வெற்றிடமாகவே பாவிக்கிறார். அவரது திறமையான சினிமா மொழியும் உணர்ச்சிகரமான முன்வைப்பும், தன் கதைகள் தன்னனுபவக் கதையாடல்கள் என்று எளிமைப்படுத்தும் போக்கும் இந்த அரசியல் நோக்கத்தை சுலபத்தில் யாரும் கவனிக்க முடியாதபடி பண்ணுகிறது. சினிமா நடைமுறை அரசியலுக்கு நெருக்கமாக வந்தால் நடக்கிற ஒன்றுதான் இப்போது மாரி செல்வராஜ் விசயத்தில் நடக்கிறது. அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என ஊடகவியலாளர்களை செட் பண்ணி கேள்வி கேட்க வைப்பது, அதற்கு இப்போ நிறைய வேலை கிடக்கு எனப் பதில் சொல்வது, மூன்று பேர்களை அனுப்பி தன் படத்துக்கு எதிராக முழங்க வைத்து அதற்கு விளக்கமும் மறுப்பும் சொல்வதற்கும், ஒரு ஆர்வத்தைத் தூண்டுவதற்கு, மறைமுகச் சேதியைக் கட்சிக்காரர்களுக்கு அனுப்ப ஊடகச் சந்திப்பை நடத்துவது என அவர் செய்வதையெல்லாம் பார்க்க ஜாலியாக இருக்கிறது. இச்சந்திப்பில் நாக்கிப் பிரகி தான் ரொம்பக் கஷ்டப்பட்டு நரேட்டிவ்வை செட் பண்ண முயன்று வருவதாகவும், அதை முப்பது பேர் இணையத்தில் அமர்ந்து விமர்சிப்பதகாவும் சொல்லி சட்டென அதைத் திருத்தி கஷ்டப்பட்டு ஏற்கனவே இருந்த நரேட்டிவை உடைக்க முயற்சி பண்ணுவதாகச் சொல்வதைப் பார்க்க இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. நாக்கு குழறும்போது உண்மை முந்திக்கொண்டு விடும் என பிராயிட் சொன்னார் (அடக்கப்பட்ட காமத்தின் பொருளில்). இதற்கு முன் அடிக்கடி நாக்கு குழறுபவராக நம் அண்ணாமலைதான் இருந்தார் என்பது நினைவுக்கு வருகிறது. எனக்கு மாரியின் படங்களை விட இந்த அரசியல் குசும்பு தான் பிடித்திருக்கிறது. இப்படி ஊரையே ஏமாற்றி ஓடவிட தனித்திறமை வேண்டும். Posted by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2025/10/blog-post_21.html
  6. 21 Oct, 2025 | 12:53 PM அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திடாவிட்டால், அந்த நாடு மீது 155 சதவீதம் வரை வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "சீனாவுடன் அமெரிக்கா மிகவும் மரியாதையுடன் நடந்து வருகிறது. அதேசமயம், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை எனது நிர்வாகம் பொறுத்துக்கொள்ளாது. சீனா ஏற்கனவே 55 சதவீத வரிகளைச் செலுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியும்" என்று குறிப்பிட்டார். மேலும், "சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், நவம்பர் முதலாம் திகதி முதல் சீனா 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும்" என்று திட்டவட்டமாக எச்சரித்தார். அத்துடன், அமெரிக்கா சீனப் பொருட்களுக்கு புதிய ஏற்றுமதித் தடைகளையும் விதிக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார். மலேசியாவில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ள நிலையில், சீனா பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். "கடந்த காலங்களில் பல நாடுகள் அமெரிக்காவைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன, ஆனால் அந்தச் சகாப்தம் முடிந்துவிட்டது. இனி அவர்களால் சாதகமாகப் பயன்படுத்த முடியாது," என்றும் டிரம்ப் கூறினார். முக்கியமான கனிமங்களை வாங்குவது தொடர்பாக அவுஸ்திரேலியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், சீனாவுக்கு இந்த கடுமையான எச்சரிக்கையை டிரம்ப் விடுத்துள்ளார். அண்மையில், அமெரிக்காவிடம் இருந்து சோயாபீன்ஸ்களை சீனா வாங்கவில்லை என்று டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cj3zm6gm46eo
  7. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல்! Published By: Vishnu 21 Oct, 2025 | 07:28 PM யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (21) அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அவர்களது கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். போர் சூழலில் இவர் யாழிலிருந்து, துணிவுள்ள ஊடகவியலாளராக பணியாற்றி இருந்தார். இதன்போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார். கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர், வீட்டின் மீது கைக் குண்டுத்தாக்குதலையும் மேற்கொண்டனர். இதன்போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம், தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228327
  8. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உடற்பயிற்சி மூலம் மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. கட்டுரை தகவல் பாமினி முருகன் பிபிசி தமிழ் 21 அக்டோபர் 2025, 08:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமல்ல, மூளையின் ஆரோக்கியத்தையும், செயல்திறனையும் சீராக்குவதில் கூட முக்கிய பங்கு வகிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் நினைவாற்றல், கூர்ந்து கவனித்தல் மற்றும் சிந்தனை திறன் போன்ற மூளையின் செயல்கள் மேம்படும் என்கின்றன அந்த ஆய்வுகள். உடற்பயிற்சி மூலம் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி? மூளை ஆரோக்கியம் என்றால் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மூளை எவ்வாறு செயல்படுகிறது மற்றும் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறது என்பது பல காரணங்களை பொருத்தது. மூளை ஆரோக்கியம் என்பது அறிவாற்றல், யோசிக்கும் திறன், உணர்ச்சி, நடத்தை, அசைவு போன்றவற்றில் உங்களின் மூளை எந்தளவிற்கு நன்றாக செயல்படுகிறது என்பதை குறிப்பதாகும் என உலக சுகாதார நிறுவனம் (WHO) குறிப்பிட்டுள்ளது. இதுபற்றி வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், "மூளை ஆரோக்கியம் என்பது உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் உங்கள் முழு திறனையும் பயன்படுத்த இது உதவுகிறது." என தெரிவிக்கிறது. "நமது மூளை எவ்வாறு செயல்படுகிறது மற்றும் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறது என்பது பல காரணங்களை பொருத்தது. உடல் ஆரோக்கியம், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழல், வாழ்நாள் முழுவதும் கற்றல், சமூக உறவுகள் போன்றவற்றை உள்ளடக்கியது" எனக் குறிப்பிட்டுள்ள உலக சுகாதார மையம், "இந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களிலும் நமது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்" எனவும் தெரிவித்துள்ளது. உடற்பயிற்சிக்கும் மூளை ஆரோக்கியத்திற்கும் என்ன தொடர்பு? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உடற்பயிற்சி, புதிய மூளை செல்கள் வளர உதவுகிறது. உடற்பயிற்சி நேரடியாகவோ மறைமுகமாகவோ நினைவாற்றல் மற்றும் சிந்தனை மேம்பாட்டுக்கு உதவுவதாக ஹார்வர்ட் ஆய்வு தெரிவிக்கிறது. அதில், "உடற்பயிற்சி மூளை செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ரசாயனங்களை வெளியிடுவதன் மூலமாகவும், புதிய மூளை செல்கள் வளர உதவுவதன் மூலமாகவும், மூளையில் புதிய ரத்த நாளங்களை உருவாக்குவதன் மூலமாகவும் மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்யாதவர்களுடன் ஒப்பிடுகையில், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிந்தனை மற்றும் நினைவாற்றலுக்கு உதவும் மூளைப் பகுதிகள் பெரிதாக இருப்பதாக பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உடற்பயிற்சி நினைவாற்றலை மேம்படுத்த உதவும் என நரம்பியல் சிகிச்சை நிபுணர் பிரபாஷ் பிரபாகரன் கூறுகிறார். இதுபற்றி சென்னையில் தனியார் மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சை நிபுணராக பணிபுரியும் பிரபாஷ் பிரபாகரனிடம் கேட்டபோது, "பொதுவாக உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமல்ல, மூளைக்கும் ஆரோக்கியமானது" என்றார். "நமது நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும், மனநிலையை சீராக வைத்துக்கொள்வதற்கும், அறிவாற்றலை அதிகரிப்பதற்கும் உடற்பயிற்சி உதவும்." என்றார். இதுகுறித்து விரிவாக விளக்கிய அவர், "நமது மூளையில் ஃப்ரென்டல் லோப் (Frontal lobe), பரியேட்டல் லோப் (Parietal lobe), டெம்போரல் லோப் (Temporal lobe), ஆக்ஸிபிடல் லோப் (Occipital lobe) என 4 பிரிவுகள் உள்ளன. இதில் இந்த Frontal lobeதான் ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. இதுதான் நமது பாணி, நாம் சிந்திக்கும் முறை போன்றவற்றை தீர்மானிக்கும். அதனால் இந்த இடத்தை பயிற்சிகளால் மேம்படுத்துவதன் மூலம் பலன் கிடைக்கும்" என்றார். மூளை ஆரோக்கியத்திற்கு 2 விதமான பயிற்சிகளை பரிந்துரைப்பதாக மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன் கூறினார். ஒன்று மனம் சார்ந்த பயிற்சி, மற்றொன்று ஏரோபிக்ஸ் பயிற்சி ஆகும். மனம் சார்ந்த பயிற்சி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மூளை ஆரோக்கியத்திற்கு 2 விதமான பயிற்சிகள் உதவுகின்றன. இந்த பயிற்சிகள் நினைவாற்றல், ஒரு விஷயத்தில் கூர்மையாக கவனம் செலுத்துதல், ஒரு பிரச்னையை தீர்க்கும் திறன் போன்ற அறிவாற்றல் சார்ந்த செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது. இதுபற்றி பேசிய மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன், "Fund of information அதாவது பொதுஅறிவு, தகவல்கள் என எந்தளவிற்கு அதிகமான தகவல்களை மூளைக்குள் செலுத்துகிறோமோ அந்தளவிற்கு அறிவாற்றல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து நம்மை நாம் பாதுகாக்க முடியும்" என்றார். இதுபற்றி அமெரிக்க சுகாதாரத்துறையின் ஒரு அங்கமான தேசிய சுகாதார நிறுவனத்திலும் (NIH) ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், "அதிகமாக தகவல்களை மூளைக்கு செலுத்துவதன் மூலம் வயதாவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும், டிமென்ஷியா போன்ற நோய்களை தடுக்க முடியும். வாழ்நாள் முழுவதும் அறிவைப் பெறுவதும், பல உணர்வுப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவதும் மூளையை பலப்படுத்துகிறது. இதனால் மூளையால் பிரச்னைகளை சிறப்பாக கையாள முடியும். மூளையின் செயல்பாடும் நீண்ட காலத்திற்கு சிறப்பாக இருக்கும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சுடோகு, வார்த்தை விளையாட்டு போன்றவை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மனம் சார்ந்த பயிற்சிகளை மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன் பட்டியலிடுகிறார். வாசித்தல் - என்ன வாசிக்கிறோம் என்பதை விட தொடர்ந்து வாசிப்பதுதான் முக்கியம் திறன் மேம்பாடு - இசை, நடனம் என புதிதாக ஏதாவது ஒரு திறனை கற்றுக்கொள்ளுதல், புதிய மொழிகளை கற்பதும் இதில் அடங்கும் புதிர்கள் - சுடோகு, வார்த்தை விளையாட்டு, கணக்கிடுதல். இவை அனைத்தும் மூளை ஆரோக்கியத்திற்கு உதவும் என்று அறிவுறுத்துகிறார். ஏரோபிக்ஸ் பயிற்சி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் பகுதி. உங்கள் இதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தை அதிகரிக்கும் வகையில் தொடர்ச்சியாக நீங்கள் செய்யும் எந்தவொரு உடல் அசைவு அல்லது செயல்பாடும் ஏரோபிக் உடற்பயிற்சி என்கிறார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். அதன்படி, தீவிர நடைபயிற்சி ஓட்டம் சைக்கிள் ஓட்டுவது நீச்சல் என இவை அனைத்தும் ஏரோபிக் உடற்பயிற்சியின் கீழ் வரும். பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் பகுதி விரிவடைகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஹிப்போகேம்பஸ் என்பது டெம்போரல் லோப்-ல் உள்ளது. இது மூளையின் நினைவாற்றல் மற்றும் கற்றலுக்கு உதவும் பகுதியாகும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஏரோபிக் உடற்பயிற்சி மூளை வளர்ச்சிக்கும் உதவும் என மருத்துவர் பிரபாஷ். இதுபற்றி பேசுகையில், "BDNF அதாவது Brain-derived neurotrophic factor என்ற புரதம் உள்ளது. இது வெளியாவதால் நியூரல் இணைப்பு (மூளையின் நரம்பு செல்களான நியூரான்களுக்கு இடையேயான இணைப்புகள், இவை சமிக்ஞைகளை கடத்துவதற்கான பாதைகளை உருவாக்குகின்றன) மேம்படும். நியூரானின் வளர்ச்சியை இது அதிகரிக்கும். இதுவும் நினைவாற்றல் மற்றும் கற்றலை மேம்படுத்த உதவும்" என்கிறார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். "நியூரோகெமிக்கல் (Neurochemical) சமநிலையால்தான் மூளையில் தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள நியூரோ கெமிக்கல்களை ஊக்கப்படுத்துவதற்கும் இது உதவும்" என்றார். 'வாரத்திற்கு 150 நிமிட உடற்பயிற்சி அவசியம்' பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடல் பயிற்சி செய்ய வேண்டும். "மூளை ஆரோக்கியத்திற்கு பெரும்பாலான ஆய்வுகள் நடைபயிற்சி மற்றும் ஓட்டத்தைதான் பரிந்துரைக்கின்றன. நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல் என எதை செய்தாலும் ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் என்ற கணக்கில் செய்ய வேண்டும். அதாவது இந்த 150 நிமிடங்களை தினசரி பிரித்து மேற்கொள்ள வேண்டும். தினமும் உடலுக்கு அசைவுகளை கொடுப்பது அவசியம்" என்றார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். ஹார்வர்ட் ஆய்வில் வாரத்திற்கு 120 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. வாரத்தின் பெரும்பாலான நாட்களில் அரை மணி நேரம் அல்லது வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடலில் செயல்பாடுகள் அவசியம் என பரிந்துரைக்கப்படுகிறது. மூளையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிரச்னைகளை தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் இதுபோன்ற பயிற்சிகள் முக்கியம். உடற்பயிற்சிகள் மூளைக்கு ஆரோக்கியத்தை அளித்து, அதன் செயல்பாடுகளை தூண்டுகிறது என்பது பல ஆய்வுகள் மூலமாகவும் நிரூபணமாகி உள்ளது. லாங்கிடூடினல் ஏஜிங் ஸ்டடி இன் இந்தியா (LASI) 2024ஆம் ஆண்டு 31,464 முதியவர்களை வைத்து ஆய்வு மேற்கொண்டது. இதில் அதிக உடல் அசைவுகளால் ஆண்கள் 0.98 புள்ளிகள் அதிக அறிவாற்றலும், பெண்கள் 1.32 புள்ளிகள் அதிக அறிவாற்றலும் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு விஷயத்தின் மீது கவனம் செலுத்துவதற்கும், பிரச்னைகளை தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் இதுபோன்ற பயிற்சிகள் முக்கியம் என்கிறார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். "அறிவாற்றல் தொடர்பான பிரச்னை (cognitive dissonance) இருப்பவர்களுக்கு பிரச்னைகளை தீர்க்கும் திறன் குறைவாக இருக்கும். உதாரணமாக சாதாரணமானவர்களிடம் வீடு பற்றி எரிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் எனக் கேட்டால், அவர்கள் நான் அங்கிருந்து ஓடுவேன், மற்றவர்களை காப்பாற்றுவேன் என பதில் சொல்லுவார்கள். ஆனால், இந்த பிரச்னை இருப்பவர்களால் இந்த பதிலை சொல்ல முடியாது. அதனால் இந்த உடல் பயிற்சிகள் அல்லது அசைவுகள் இவர்களின் இந்த பிரச்னையை குணப்படுத்த உதவும்" என்கிறார். அதுமட்டுமல்லாமல் உடற்பயிற்சிகள் கார்டிசால் எனப்படும் மன அழுத்த ஹார்மோனை குறைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjw9lnzz8n1o
  9. Published By: Digital Desk 1 21 Oct, 2025 | 04:01 PM பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை எனவும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில தரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2 முதல் 5 மற்றும் 7 முதல் 11ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஜனவரியில் நடைமுறைக்கு வரும் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் வராததால், அவை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார். இருப்பினும், கல்வி சீர்திருத்தங்களின்படி, 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்றும், அதற்கு பதிலாக, அவை எளிமைப்படுத்தப்பட்ட வகையில் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் கையேடுகளை அச்சிடும் பணிகளும் நிறுத்தப்படவில்லை எனவும், புதிய கல்வி சீர்திருத்தங்களின் தேவைகளுக்கு ஏற்ப, அவை அச்சிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 2 முதல் 5 மற்றும் 7 முதல் 11ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களையும் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கான தொகுதிப் பொருட்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2025 நவம்பர் 15ஆம் திகதிக்குள் பணிகள் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு, அவற்றை விநியோகிக்கும் பணிகளை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/228283
  10. ‘சரணடைந்தவர்கள் துரோகிகள்.. ஆயுதங்கள் மவுனிப்பு இல்லை..’ மாவோயிஸ்டுகள் திடீர் அறிவிப்பு பாதுகாப்பு படைகளிடம் சரணடைந்தவர்கள் துரோகிகள் என்றும் தங்களது ஆயுதங்கள் எப்போதும் மவுனிக்கப்படமாட்டாது என்றும் மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். நாட்டின் 150-க்கு மேற்பட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருந்தது. இந்தியாவில் ஆயுதப் போராட்டம் நடத்துவதன் மூலம் கம்யூனிச அரசாங்கத்தை அமைப்பதுதான் மாவோயிஸ்டுகளின் இலக்கு. கடந்த சில ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மாவோயிஸ்டுகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. மாவோயிஸ்டுகள் இயக்கம் தொடர்ந்து செயல்பட முடியாத அளவு, பாதுகாப்பு படையினரின் நடவடிக்கை இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக சுமார் 2,000க்கும் அதிகமான மாவோயிஸ்டுகள் சரணடைந்து வருகின்றனர். அண்மையில் மகாராஷ்டிரா மாநிலம் கட்ச்ரோலி பகுதியில் மாவோயிஸ்டுகளின் தளபதி உட்பட 60க்கும் மேற்பட்டோர் சரணடைந்தனர்; சத்தீஸ்கரிலும் ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம் என அறிவித்துவிட்டு மாவோயிஸ்டுகள் சரணடைந்து வருகின்றனர். இந்த பின்னணியில் மாவோயிஸ்டுகள் இயக்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “எங்களது ஆயுதங்கள் மவுனிக்கப்படவில்லை; தற்காலிகமாக பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது. ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு சரணடைந்த துரோகிகளுக்கு மக்கள் நிச்சயம் தண்டனை வழங்குவர்; அரசுக்கு எதிராக மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (படம்: A1 மூலம் உருவாக்கப்பட்டது) https://minnambalam.com/surrendered-are-traitors-no-weapon-surrender-happened-maoists-issue-sudden-statement/
  11. ரெட் அலர்ட் : பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து புதுச்சேரி, காரைக்காலில் நாளை (அக்டோபர் 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் சூழலில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரத்தில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளைக்கு வானிலை எப்படி? அதே போன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் நாளை அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழை எதிரொலியாக மழையின் தீவிரத்தை பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில் கனமழை ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (அக்டோபர் 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிக்கான விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. https://minnambalam.com/puducherry-school-college-leave-due-to-red-alert/
  12. Published By: Vishnu 21 Oct, 2025 | 07:48 PM யாழில் பொழிந்த மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழில் மழை பொழிந்தது. இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்தன. அந்த மீன்களை மக்கள் பிடிப்பதை அவதானிக்க முடிந்தது. கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228328
  13. பங்களாதேஷை பரபரப்பான முறையில் வீழ்த்தி மகளிர் உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை சுவைத்தது இலங்கை Published By: Vishnu 20 Oct, 2025 | 11:04 PM (நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (20) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை 7 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது. இந்த மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும். கடைசி இரண்டு ஓவர்களில் பங்களாதேஷ் 5 விக்கெட்களை ஒரு ஓட்டத்திற்கு இழந்ததால் அதன் வெற்றிக்கான முயற்சி கைகூடாமல் போனது. சமரி அத்தபத்துவின் கடைசி ஓவரின் முதல் நான்கு பந்துகளில் ஒரு ரன் அவுட் உட்பட 4 விக்கெட்கள் வீழ்ந்தன. இந்தத் தோல்வியை அடுத்து அரை இறுதி வாய்ப்பை பங்களாதேஷ் இழந்தது. அதேவேளை, இலங்கையின் நிகர ஓட்ட வேகம் எதிர்மறையாக இருப்பதால் அதற்கு அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு இல்லை. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 48.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. விஷ்மி குணரட்ன முதலாவது பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார். இதனை அடுத்து அணித் தலைவி சமரி அத்தபத்துவும் ஹர்ஷித்தா சமரவிக்ரமவும் 2ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். சமரி அத்தபத்து 46 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். இதில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கி இருந்தன. அதற்கு அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு இல்லை. அவரைத் தொடர்ந்து மேலும் 2 விக்கெட்கள் குறைந்த எண்ணிக்கைக்கு வீழந்தன. (100 - 4 விக்.) எனினும் ஹசினி பெரேராவும் நிலக்ஷிக்கா சில்வாவும் 5ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர். நிலக்ஷிக்கா சில்வா 37 ஓட்டங்களைப் பெற்றதுடன் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 8ஆவதாக ஆட்டம் இழந்த ஹசினி பெரேரா 13 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 85 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஷொர்னா அக்தர் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரபேயா கான் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 203 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்று 7 ஓட்டங்களால் தோல்வி அடைந்து. முதல் 3 விக்கெட்களை 44 ஓட்டங்களுக்கு இழந்ததால் பங்களாதேஷ் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. எனினும் ஷர்மின் அக்தர், அணித் தலைவி நிகார் சுல்தானா ஆகிய இருவரும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது துரதிர்ஷ்டவசமாக ஷர்மின் அக்தர் உபாதைக்குள்ளாகி தற்காலிக ஓய்வுபெற்றார். அவர் அப்போது 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். தொடர்ந்து நிகார் சுல்தானாவும் ஷொர்னா அக்தரும் அதே விக்கெட்டுக்காக மேலும் 50 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது அக்தர் 19 ஓட்டங்களுடன் வெளியேறினார். சற்று நேரத்தில் ரிட்டு மோனியும் 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (193 - 5 விக்) கடைசி ஓவரில் பங்களாதேஷின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய சமரி அத்தபத்து முதல் பந்தில் விக்கெட் ஒன்றைக் கைப்பற்றியதுடன் அடுத்த பந்தில் மேலும் ஒரு வீராங்கனை ரன் அவுட் ஆனார். கடைசி 4 பந்துகளில் பங்களாதேஷின் வெற்றிக்கு மேலும் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அதுவரை மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த நிகார் சுல்தானா 77 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அத்தபத்துவின் அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார். அத்துடன் பங்களாதேஷின் வெற்றிக் கனவு கலைந்துபோனது. நான்காவது பந்திலும் அத்தப்பத்து விக்கெட் ஒன்றை வீழ்த்தி இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார். உபாதையிலிருந்து மீண்டுவந்து துடுப்பெடுத்தாடிய ஷர்மின் அக்தர் 64 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஆட்டநாயகி: ஹசினி பெரேரா. https://www.virakesari.lk/article/228241
  14. பட மூலாதாரம், VCG via Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் ஓரியானிட் விண்கல் பொழிவு இந்த ஆண்டும் விரைவில் வருகிறது. அப்போது இரவு வானம் ஒளிரும், இதனை உலகம் முழுவதும் காணலாம் என்று நாசா தெரிவித்துள்ளது. "ஆண்டின் மிக அழகான விண்கல் மழைகளில் ஒன்று" என்று நாசா இந்த விண்கல் பொழிவை வர்ணிக்கிறது. இந்த விண்கல் பொழிவு இந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் நவம்பர் 12 வரை ஏற்படும். நாசாவின் கூற்றுப்படி, அக்டோபர் 22 இரவு முதல் அடுத்த நாள் அதிகாலை வரையிலான நேரத்தில் இது உச்சத்தை எட்டும். பட மூலாதாரம், Anadolu Agency via Getty Images ஓரியானிட் விண்கல் பொழிவு என்றால் என்ன? ஓரியானிடுகள் விநாடிக்கு சுமார் 41 மைல் வேகத்தில் பயணிக்கும் விண்கற்கள் ஆகும். ஓரியன் விண்மீன் குழுமத்திலிருந்து விழுவதைப் போல தெரிவதால், அதன் பெயரிலேயே இவை அழைக்கப்படுகின்றன. ஹாலி வால் நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி மற்றும் சிறு கற்கள் நிறைந்த பாதையை பூமி கடக்கும் போது ஓரியானிட் விண்கல் மழை ஏற்படுகிறது . இந்த தூசி மற்றும் சிறு கற்கள் வினாடிக்கு சுமார் 41 மைல்கள் (66 கிலோமீட்டர்) வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் நுழைகின்றன. இந்த ஹாலி வால் நட்சத்திரம் பூமிக்கு அருகே 75 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வருகிறது. பூமிக்கு அருகே வரும் நிகழ்வு 2061-ம் ஆண்டு கோடைகாலத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. வால் நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி மற்றும் சிறு கற்கள் காற்றுடன் உராயும்போது இவை ஆவியாகி, நமது கண்களுக்கு தென்படுகிற ஒளிக்கீற்றுகளைஉருவாக்குகின்றன. இவை வானில் சில வினாடிகள் முதல் நிமிடங்கள் வரை நீடிக்கலாம். அவை மங்கலாகத் தோன்றலாம், ஆனால் தனித்துவமான ஒளிப் பாதையை விட்டுச் செல்கின்றன. பெரிய விண்கற்கள் பிரகாசமான பாதைகளை உருவாக்கும். சில நேரங்களில் விண்கற்கள் வீனஸ் கோளை விட பிரகாசமாக தோன்றலாம் - இவை ஃபயர்பால்கள் (fireball) என்று அழைக்கப்படுகின்றன. ஹாலியின் தூசி மற்றும் சிறு கற்களால் உருவாக்கப்படும் இரண்டு விண்கல் மழைகளில் ஓரியானிட்ஸ் ஒன்றாகும். மற்றொன்று ஈட்டா அகுவாரிட்ஸ் விண்கல் மழை ஆகும். இது ஆண்டின் முற்பகுதியில், மே மாதத்தில் தோன்றும். ஓரியானிட்ஸ் எங்கே, எவ்வளவு தெரியும்? ரேடியன்ட் என்பது வானில் விண்கற்கள் தோன்றுவதாகத் தெரியும் புள்ளி. ஓரியானிட்ஸுக்கு இது ஓரியன் விண்மீன் குழுமமாகும். ஓரியன் நள்ளிரவுக்குப் பிறகு கிழக்கில் உதிக்கிறது, இது சிவப்பு நிற பீட்டல்ஜியூஸ் நட்சத்திரத்திற்கு அருகே தோன்றும். ஓரியனைக் கண்டுபிடிக்க, ஓரியன்ஸ் பெல்ட் என்று அழைக்கப்படும், நெருக்கமாக அமைந்த மூன்று பிரகாசமான நட்சத்திரங்களின் வரிசையைத் தேடுங்கள். காட்சியின் தரம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் எத்தனை விண்கற்கள் தெரியும் என்பதன் மூலம் அளவிடப்படுகிறது - இது ஜெனித்தல் மணிநேர விகிதம் (zenithal hourly rate) என்று அழைக்கப்படுகிறது. அக்டோபர் 22 அன்று ஓரியானிட்ஸின் உச்சத்தின்போது மணிக்கு சுமார் 15 விண்கற்கள் 148,000 மைல் (238,000 கிமீ/மணி) வேகத்தில் பயணிக்கலாம். பட மூலாதாரம், VCG via Getty Images ஓரியானிட் விண்கல் மழையை எப்போது காண முடியும்? ஓரியானிட்ஸ் விண்கல் மழை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் ஏற்படக்கூடும். நாசாவின் கூற்றுப்படி, விண்கற்களைக் காண சிறந்த வாய்ப்பு அக்டோபர் 22 இரவு, அக்டோபர் 23 அதிகாலை வரை ஆகும். இரவு வானில் பிரகாசமான நட்சத்திரங்களின் பின்னணியில் இதைப் பார்க்க முடியும். பட மூலாதாரம், CFOTO ஓரியானிட் விண்கல் மழையை எப்படிப் பார்ப்பது? நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், முடிந்தவரை குறைந்த ஒளி கொண்ட இருண்ட இடத்தைக் கண்டுபிடிப்பது. நகரங்கள் மற்றும் தெரு விளக்குகளிலிருந்து விலகிய பகுதியைக் கண்டுபிடிக்கும்படி நாசா அறிவுறுத்துகிறது - மேலும் வானிலைக்கு ஏற்பவும் சரியான இடம் வேண்டும். "இருளில் 30 நிமிடங்களுக்குள், உங்கள் கண்கள் பழகிவிடும், நீங்கள் விண்கற்களைப் பார்க்கத் தொடங்குவீர்கள்" என்று நாசா கூறுகிறது. பின்னர், நீங்கள் வடக்கு அரைக்கோளத்தில் இருந்தால் தென்கிழக்கு வானத்தையும், தெற்கு அரைக்கோளத்தில் இருந்தால் வடகிழக்கு வானத்தையும் பாருங்கள். இந்தியா தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது. இந்த விண்கல் பொழிவை பார்க்க தொலைநோக்கி தேவையில்லை - சூழ்நிலைகள் சரியாக இருந்தால், வெறும் கண்களால் பார்க்க முடியும். தீபாவளிப் பட்டாசுகள் அலங்கரித்த வானத்தை, விரைவில் ஓரியானிட்ஸ் ஆண்டு காட்சியின் உச்சம் அலங்கரிக்க உள்ளது. வானம் தெளிவாக இருக்குமா? வானில் அதிகமாக மேகங்கள் இருக்கும் போதும், மழைப்பொழி காலத்திலும் விண்கல் பொழிவை பார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம். மூடுபனி, பிரகாசமான கால நிலைகளுடன் இந்த விண்கல் பார்ப்பது சிரமமாகும். வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/clyz56zmp40o
  15. யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை - வைத்தியசாலைக்கு முன் நினைவேந்தல் அனுஷ்டிப்பு 21 Oct, 2025 | 03:31 PM இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களது 38வது நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை (21) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, வைத்தியசாலையில் கடமையாற்றிய 21 பணியாளர்கள் உட்பட 68 பேரை சுட்டுப் படுகொலை செய்ததோடு, இந்த தாக்குதலில் பலரும் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 38ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நடைபெற்றது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களது உறவினர்கள் கலந்துகொண்டனர். இந்த நினைவேந்தலின்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தோருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி, நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/228274
  16. பட மூலாதாரம், IMD website படக்குறிப்பு, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதை காட்டும் வரைபடம் (இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் இருந்து) 21 அக்டோபர் 2025, 03:56 GMT புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர் வங்கக் கடலில் இன்று (அக்டோபர் 21) காலை 5.30 மணிக்கு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும். நாளை (அக்டோபர் 22) மதியம் வேளைக்குள் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின், மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும். இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா, "வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவாகுமா என்பது நாளை (அக்டோபர் 22) தெரியும்" என கூறியுள்ளார். தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை படக்குறிப்பு, வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா "கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதிகபட்சமாக ராமேஸ்வரம் தங்கச்சி மடம் பகுதியில் 17 செ.மீ கனமழை பெய்துள்ளது. தமிழ்நாட்டின் 22 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது" என்று வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 59 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்துப் பேசிய அமுதா, "அக்டோபர் 21 மற்றும் 22, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல 23ஆம் தேதி, தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 24 முதல் 27 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மழை பெய்யும்." என்று கூறினார். இன்று காலை முதல் நாளை காலை வரை, தமிழ்நாட்டின் 8 கடலோர மாவட்டங்கள் (விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம்) மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என்றும் அவர் கூறினார். மேலும், 10 மாவட்டங்களில் மிக கனமழை, 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அமுதா கூறினார். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா அறிவுறுத்தினார். எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்? வங்கக் கடலில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, 20 செ.மீக்கு அதிகமான அதிகனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21 ரெட் அலெர்ட் : கடலூர் மாவட்டத்துக்கு மட்டும் அதிகனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆரஞ்ச் அலெர்ட் : சென்னை, செங்கல்பட்டு, அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை ( 11.5 செ.மீ முதல் 20.4 செ.மீ அளவிலான மழை) பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 22 ரெட் அலெர்ட் : செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்ச் அலெர்ட் : சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர பிற மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. அக்டோபர் 23 ரெட் அலெர்ட் : எந்த மாவட்டத்துக்கும் ரெட் அலெர்ட் விடுக்கப்படவில்லை. ஆரஞ்ச் : சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர பிற மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. (கனமழை என்பது 6.4 செ.மீ முதல் 11.5 செ.மீ அளவிலான மழை அளவை குறிக்கும். மிக கனமழை என்பது 11.5 செ.மீ முதல் 20 செ.மீ வரையிலான மழை அளவை குறிக்கும். அதிகனமழை என்பது 20 செ.மீக்கு அதிகமான மழைப்பொழிவைக் குறிக்கும்.) சென்னைக்கு மாலை 4 மணி வரை ரெட் அலெர்ட் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஒரு மணி நேரத்தில் 15 மி.மீக்கு அதிகமான மழை இடி மின்னலுடன் பெய்யக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் தரைக் காற்று மணிக்கு 62கி.மீ முதல் 87 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை 5 மி.மீ முதல் 15 மி.மீ அளவிலான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 41 கி.மீ முதல் 61 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். அரியலூர், கோவை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, குமரி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணிக்குள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், IMD website படக்குறிப்பு, மாவட்ட வாரியாக மழை எச்சரிக்கையை குறிக்கும் இந்திய வானிலை ஆய்வு மைய வரைபடம். (மஞ்சள் - மிதமான மழை, ஆரஞ்சு - மிக கனமழை) ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை - வீடுகளை சூழ்ந்த மழைநீர் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், அச்சுந்தன்வயல், பரமக்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் மண்டபத்தை அடுத்துள்ள கலைஞர் நகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். தங்கச்சிமடத்தில் ஒரே நாளில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. படக்குறிப்பு, மண்டபத்தை அடுத்துள்ள கலைஞர் நகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. பாலாற்றில் வெள்ளம் - மக்களுக்கு எச்சரிக்கை ஆந்திரா மாநிலம் பெரும்பள்ளம் என்ற இடத்தில் 22 அடி உயர தடுப்பணை நிரம்பி அதன் உபரி நீர் பாலாற்றில் வெளியேறி வருகிறது. தமிழகத்தில் புல்லூர், திம்மம்ப்பேட்டை, ஆவாரங்குப்பம், இராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி வழியாக பாலாறு சுமார் 222 கிலோமீட்டர் பயணம் செய்து இறுதியாக வங்கக் கடலில் கலக்கின்றது. வெள்ளப்பெருக்கு காரணமாக பாலாற்றில் யாரும் இறங்குவோ, குளிக்கவோ கூடாது என்று திருப்பத்தூமாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மேலும் அதிக மழை பெய்தால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தினர் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். வெள்ள அபாய எச்சரிக்கை பவானி சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 101.36 அடியை எட்டியது. வடகிழக்கு பருவமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. எனவே அணையின் நீர் மட்டம் விரைவில் 102 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அணையிலிருந்து உபரி நீர் பவானி ஆற்றில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கன அடி வரை திறந்துவிடப்படலாம் என்றும் அப்படி திறந்துவிடப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை இன்று தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் இந்தப் பகுதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgkmyz0897o
  17. ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததை அடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தமது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அதன் பின்னர், அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி (64) தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றியைத் தொடர்ந்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, அவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே சனே டகாய்ச்சி பிரதமர் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பான் பாராளுமன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கீழவையில் மொத்தம் உள்ள 465 வாக்குகளில் 237 வாக்குகளைப் பெற்று டகாய்ச்சி வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் மேலவையில் நடத்தப்படும் வாக்கெடுப்பிலும் வெற்றி பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால் ஜப்பானின் புதிய பிரதமராக ஏற்றுக் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ஜப்பான் நாட்டின் 104வது பிரதமராக அவர் பதவி ஏற்க இருக்கிறார். இதன் மூலம் ஜப்பான் அரசியல் வரலாற்றில் பதவியேற்க உள்ள முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும், பெருமையையும் சனே டகாய்ச்சி பெறுகிறார். ஜப்பானின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் டகாய்ச்சி, மறைந்த இரும்பு சீமாட்டி என அறியப்படும் பிரித்தானிய பிரதமர் மார்க்ரட் தட்சரின் அரசியல் ரசிகையாக கருதப்படுகின்றார் https://adaderanatamil.lk/news/cmh04iayb014gqplpa9n04kv7
  18. அததெரண கருத்துப் படங்கள்.
  19. 20 Oct, 2025 | 05:02 PM தங்காலை துறைமுகத்தில் இருந்த ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை குடித்த ஐந்து நாய்களில் இரண்டு நாய்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) உயிரிழந்துள்ளதாக தங்காலை கால்நடை வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தங்காலை துறைமுகத்தில் கடந்த 14ஆம் திகதி கடலில் மிதந்த 51 பொதிகளில் இருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பொதிகள் கைப்பற்றப்பட்ட பகுதியில் இருந்த நீரை குடித்த ஐந்து நாய்கள் சுயநினைவின்றி ஒரே இடத்தில் சுற்றித்திரிந்த நிலையில் தங்காலை கால்நடை வைத்தியசாலையின் வைத்தியர்கள் அவற்றுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். எவ்வாறிருப்பினும் அவற்றில் இரண்டு நாய்கள் நேற்றைய தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. ஏனைய நாய்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தங்காலை கால்நடை வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/228230
  20. மீகஸ்ஆரே கஜ்ஜா மற்றும் அவருடைய இரு பிள்ளைகள், கணேமுல்ல சஞ்ஜீவ ஆகியோரின் கொலைகள் Dead Cat Theory என்ற அரசியல் கோட்பாட்டின் வெளிப்பாடுகள் என தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கஜ்ஜா மற்றும் அவருடைய இரு பிள்ளைகளின் கொலையில் ஜே.சி.பி சமன் அல்லது பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் வழங்கிய வாக்குமூலத்தில் பெரும் குழப்பங்கள், சந்தேகங்கள் வலுவடைந்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்துள்ளார். கணேமுல்ல சஞ்சீவ கொலை கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வது நீண்ட நாள் திட்டம் என தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வதற்கான சந்தர்ப்பம் வரும் வரை கெஹெல்பத்தர பத்மே காத்திருந்தார். கார் ஒன்றை ஜே.சி.பி சமனுக்கு வாடகைக்கு வழங்கி அதில் பொருத்தப்பட்டிருந்த GPS தொடர்பிலேயே முறுகல் ஏற்பட்டதாக கஜ்ஜாவின் மகன் அண்மையில் நேர்காணலொன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இவ்வாண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்ற வளாகத்திலுள்ள இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில் கொலை செய்யப்படுகிறார். அதற்கு முன்தினம் அதாவது பெப்ரவரி 18 ஆம் திகதி இரவு தனது இரு பிள்ளைகளுடன் கஜ்ஜா கொலை செய்யப்படுகிறார். துப்பாக்கிச் சூட்டு கலாச்சாரம் குறித்த இரு கொலைகளும் துப்பாக்கிச் சூட்டு கலாச்சாரம் தலையோங்கி காணப்பட்ட போது நடத்தப்பட்ட நிலையில், கஜ்ஜாவின் கொலை சாதாரண கொலைச் சம்பவமாகவும், கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை பெரும் பரபரப்பையும் உண்டாக்கியது. இவ்வாறான பின்னணியில், கஜ்ஜா ஒரு யூடியூப் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், தான் கொலை செய்யப்பட்டால் அதற்கு ராஜபக்சர்களே பொறுப்பாளிகள் எனவும் தெரிவித்திருந்தார். கஜ்ஜா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கணேமுல்ல சஞ்சீவ கொலை இடம்பெற்றதால் கஜ்ஜா, தனது மரணத்திற்கு யார் காரணம் என தெரிவித்த கருத்து வலுவிழக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்டது. எந்தவொரு ஊடகத்திலும் அது பேசு பொருளாக்கப்படவில்லை. இங்கு தான் இந்த Dead Cat Theory என்ற அரசியல் கோட்பாடு பயன்படுத்தப்பட்டுள்ளது. Dead Cat Theory Dead Cat Theory (டெட் கேட் தியரி) என்பது அரசியல் மற்றும் ஊடகங்களில் சாதகமற்ற செய்திகள் அல்லது சூழ்நிலைகளிலிருந்து திசை திருப்பப் பயன்படுத்தப்படும் ஒரு தந்திரமாகும். இதனை, அரசியல்வாதியொருவர் ஒரு வாதத்தில் தோல்வியடையும் போது அல்லது எதிர்மறையான ஆய்வுக்கு உள்ளாகும் போது, அதிர்ச்சியூட்டும் அல்லது பொருத்தமற்ற தகவலை வௌியிட்டு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை அசல் பிரச்சினையிலிருந்து திசைதிருப்பக்கூடிய செயற்பாடு என அவுஸ்திரேலிய அரசியல் மூலோபாய நிபுணர் லிண்டன் கிராஸ்பி விளக்கியுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இரவு மித்தெனியவில் இரு பிள்ளைகளுடன் கஜ்ஜா கொலை செய்யப்படுகிறார். அதற்கு அடுத்த நாளான பெப்ரவரி 19 ஆம் திகதி காலை கணேமுல்ல சஞ்ஜீவ நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்படுகிறார். பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி காலை, கஜ்ஜாவின் கொலை தொடர்பில் அவர் முன்கூட்டியே ஊடகங்களில் கூறிய விடயங்கள் ஆழமாக அலசப்பட்டிருக்க வேண்டும். எனினும், அந்த கொலையும் அதற்கான பிரதான காரணங்கள் மறைக்கப்பட்டு கணேமுல்ல சஞ்ஜீவ கொலை பரபரப்பான செய்தியாக்கப்பட்டது. தற்போது இவ்விரு கொலைகள் தொடர்பிலும் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் அடிப்படையில், இவ்விரு கொலைகளுக்கும் உதவியவர் சம்பத் மனம்பேரி. அவர் மொட்டுக் கட்சியில் அரசியல் செயற்பாட்டாளராக இருந்துள்ளார். ஆக, இந்த விடயங்களில் தெற்கின் பிரதானமான ஒரு கட்சி Dead Cat Theory யின் அடிப்படையில் செயற்பட்டுள்ளதை இவ்விடயங்களால் ஓரளவுக்கு ஊகிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/popular-political-party-in-south-dead-cat-theory-1760879786
  21. செவ்வந்தியின் புலனாய்வுப் பயிற்சிகளில் Body Double தொடர்பான தகவல்கள் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ள உளவுத்துறை அதிகாரிகளுக்கும், ஒரு பயனுள்ள முறையாக உருவாக்கப்பட்டதாக கருதப்படும் ஒரு விடயமாக Body Double தந்திரோபாய முறை காணப்படுகிறது. படுகொலையைத் தவிர்ப்பதற்கோ அல்லது எதிரியை வழிதவறச் செய்வதற்கோ ஒரு முறையாகச் செயல்பட இதனை பல அதிகாரத்தவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இன்று இலங்கையை தாண்டி உலகச் செய்திகளிலும் வரிக்கு வரி வெளிப்படுத்தப்படும் கனேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரமும், அதன் சூத்திரதாரியான இஷார தொடர்பான Body Double திட்டமிடல்களும் விசாரணை அதிகாரிகளையே ஒரு நிமிடம் அதிர்ச்சியடைய வைத்திருக்க கூடும் என்பதை கூறியாகவேண்டும். ஒரு நபரை திட்டமிட்டு கொலை செய்து, அந்த கொலையில் இருந்து தப்பித்து நாடுகடந்து சென்று, அங்கு சுற்றிவளைக்கப்பட்டு தற்போது நாட்டில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் இஷார செவ்வந்தி Body Double முறையில் தன்னை மாற்றிக்கொள்ளவும், அதனை கொண்டு ஐரோப்பிய நாட்டுக்கு தப்பித்து செல்ல முடியும் என திட்டமிட்ட விடயங்கள் சாதாரணமானவை அல்ல என்பது சாதாரணமான ஒன்று அல்ல. இது புலனாய்வுகளையும், பல குற்ற பயிற்சிகளையும் பெற்று அதில் இருந்து விடுபட மேற்கொள்ளும் இலகுவில் ஊகிக்க முடியாாத சதித்திட்டம். இவ்வாறு இஷாரா தனக்கென ஒரு Body Double - ஐ உருவாக்கி அதன் மூலம் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்த விடயங்கள் அந்த விடயங்களின் பின்னணி, மேலும் இஷாராவின் கொலை சதி என்பவற்றை விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி... More information about Sevanthi's investigative training, Body Double | Ishara sevanthi | Niraj https://ibctamil.com/article/body-double-in-sewwandi-s-intelligence-training-1760967856
  22. நானும் “கமாண்டோ சலிந்து”வும் மித்தெனியவில் இருந்த போது “கெஹெல்பத்தர பத்மே” எங்களை உடனடியாக கொழும்புக்கு செல்லுமாறு கூறினார் - இஷாரா செவ்வந்தி 20 Oct, 2025 | 04:33 PM நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ' பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ”வை படுகொலை செய்வதற்கு முன்னைய நாள் அதாவது பெப்ரவரி 18 ஆம் திகதி அன்று நானும் “கமாண்டோ சலிந்து”வும் மித்தெனிய பிரதேசத்தில் தங்கியிருந்தோம். இதன்போது “கெஹெல்பத்தர பத்மே” என்பவர் எங்களை உடனடியாக கொழும்புக்கு செல்லுமாறு கூறினார். பின்னர் நானும் “கமாண்டோ சலிந்து”வும் கொழும்புக்கு சென்றோம். இதனையடுத்து நான் சட்டத்தரணி வேடத்தில், புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சென்று “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை கொலை செய்ய உதவி செய்தேன்' என இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இஷாரா செவ்வந்தியும் “கமாண்டோ சலிந்து”வும் அருண விதானகமமகே ஹேவத் கஞ்சா என்பரை கொலைசெய்வதற்காக மித்தெனியவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் பின்னர் திட்டம் மாற்றப்பட்டு “கணேமுல்ல சஞ்சீவ”வை கொலைசெய்வதற்காக இருவரும் கொழும்புக்கு அழைக்கப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார். நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். இஷாரா செவ்வந்தியுடன் “கம்பஹா பபா” , “ஜேகே பாய்”, தக்ஷி என்ற பெண் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் 15 நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர். நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228226
  23. “கணேமுல்ல சஞ்சீவ”வை கொலை செய்ய உடந்தையாக இருந்ததற்கு காரணம் இதுதான் - இஷாரா செவ்வந்தி 20 Oct, 2025 | 04:09 PM பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ”வை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தமைக்கான காரணத்தை இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியுள்ளார். “எனக்கு ஐரோப்பாவுக்கு செல்ல ஆசை. பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'கெஹெல்பத்தர பத்மே' என்பவர் என்னை ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்தார். அதனால் தான் நான் பணத்தை பெற்றுக்கொள்ளாமல் 'கணேமுல்ல சஞ்சீவ'வை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தேன்“ என இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “நேபாளத்தில் தலைமறைவாக இருக்கும் போது ஐரோப்பாவுக்கு செல்வதற்காக போலி கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டது“ எனவும் இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார். நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். இஷாரா செவ்வந்தியுடன் “கம்பஹா பபா” , “ஜேகே பாய்”, தக்ஷி என்ற பெண் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் 15 நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர். நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228222
  24. பட மூலாதாரம், AFP via Getty Images கட்டுரை தகவல் நிக் மார்ஷ் பிபிசி செய்தி 3 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் உயர்மட்டத் தலைவர்கள் பெய்ஜிங்கில் இந்த வாரம் கூடி, இந்த தசாப்தத்தின் மீதமுள்ள காலத்திற்கான நாட்டின் முக்கிய இலக்குகளைத் தீர்மானிக்க உள்ளனர். சீனாவின் மிக உயர்ந்த அரசியல் அமைப்பான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு ஒவ்வொரு ஆண்டும் கூடுகிறது. இந்தக் கூட்டம் ஒரு வாரம் நீடிக்கும். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், சீனாவின் அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்திற்கான அடிப்படையாக அமையும். 2026 முதல் 2030 வரை, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா பின்பற்ற உள்ள திட்டத்தின் வழிகாட்டியாக இது இருக்கும். முழு ஐந்தாண்டுத் திட்டம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும். ஆனால், வரும் புதன்கிழமை அதிகாரிகள் இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றிய தகவல்களை வழங்குவார்கள். அதன் பிறகு ஒரு வாரத்துக்குள் கூடுதல் விவரங்களையும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. "மேற்கத்திய நாடுகளில், கொள்கைகள் தேர்தல் சுழற்சிகளால் இயங்குகின்றன. ஆனால், சீனாவில் திட்டமிடல், அடிப்படையில் இயங்குகிறது," என்கிறார் ஆசிய சமூகக் கொள்கை நிறுவனத்தின் சீன அரசியல் நிபுணர் நீல் தாமஸ். "ஐந்தாண்டுத் திட்டங்கள், சீனா எதை அடைய விரும்புகிறது என்பதையும், தலைமை எந்த திசையில் செல்ல விரும்புகிறது என்பதையும் காட்டுகின்றன. அரசின் வளங்கள் இந்த குறிக்கோள்களை அடைய வடிவமைக்கப்படுகின்றன," என்றும் அவர் கூறுகிறார். மேலோட்டமாகப் பார்த்தால், நூற்றுக்கணக்கான அதிகாரிகள் கைகுலுக்கி கூட்டம் நடத்துவது சாதாரணமான விஷயமாகத் தோன்றலாம். ஆனால் அவர்கள் எடுக்கும் முடிவுகள் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது. சீனாவின் ஐந்தாண்டுத் திட்டங்கள் உலகப் பொருளாதாரத்தை மாற்றிய மூன்று முக்கிய தருணங்களை இங்கே பார்க்கலாம். 1981-84: "சீர்திருத்தம் மற்றும் புதுமை" சீனா ஒரு பொருளாதார வல்லரசாக எப்போது மாறத் தொடங்கியது என்று சரியாகக் கூறுவது கடினம். ஆனால், பலர் 1978 டிசம்பர் 18-ஐ முக்கியமான தருணமாகக் கருதுகின்றனர். அதற்கு முன், 30 ஆண்டுகளாக சீனாவின் பொருளாதாரம் அரசின் கடுமையான கட்டுப்பாட்டில் இருந்தது. சோவியத் பாணியில் அமைந்த திட்டமிடல் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவில்லை. பலர் வறுமையில் வாடினர். மாவோ சேதுங்கின் கடுமையான ஆட்சியிலிருந்து சீனா மெதுவாக மீண்டு வந்த சமயம் அது. மாவோ சேதுங் ஆட்சியில், 'மகா முன்னேற்றம்' மற்றும் 'கலாசாரப் புரட்சி' போன்ற திட்டங்கள் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் மாற்ற முயன்றன, ஆனால் கோடிக்கணக்கான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தன. பெய்ஜிங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சீனாவின் புதிய தலைவர் டெங் ஜியோ பிங், 'சுதந்திர சந்தைக் கொள்கைகளை ஏற்க வேண்டிய நேரம் இது' என்று அறிவித்தார். அவரது "சீர்திருத்தமும் புதுமையும்" (Reform and Opening Up) என்ற கொள்கை, 1981-இல் தொடங்கிய அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய அங்கமாக மாறியது. சுதந்திர வர்த்தகத்திற்காக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. இவை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, சீன மக்களின் வாழ்க்கையை மாற்றின. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டெங் ஜியோ பிங் தொடங்கிய சீனாவின் பொருளாதார திட்டம், 1979ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் கார்டருடன் கையெழுத்தான ஒரு முக்கியமான ஒப்பந்தத்தையும் உள்ளடக்கியது. அந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்குகளை இதைவிட சிறப்பாக நிறைவேற்றியிருக்க முடியாது என்கிறார் தாமஸ் . "மக்களால் கற்பனை செய்ய முடியாத அளவு சீனா வளர்ந்தது. தேசிய பெருமையையும், உலக வல்லரசுகளில் தனது இடத்தையும் சீனா உறுதிப்படுத்தியது," என்கிறார் நீல் தாமஸ். இந்த மாற்றங்கள் உலக பொருளாதாரத்தை மாற்றின. 21-ஆம் நூற்றாண்டில், மேற்கத்திய நாடுகளின் லட்சக்கணக்கான உற்பத்தி தொழில்கள் சீனாவின் கடலோர தொழிற்சாலைகளுக்கு மாற்றப்பட்டன. பொருளாதார வல்லுநர்கள் இதை "சீன அதிர்வு" (The China Shock) என்று அழைக்கிறார்கள். இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பழைய தொழில்துறை மையங்களில் சில கட்சிகளின் எழுச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது. உதாரணமாக, டொனால்ட் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள், குறிப்பாக அவரது சுங்க வரிகள் மற்றும் வர்த்தகப் போர்கள், கடந்த சில ஆண்டுகளில் சீனாவுக்குச் சென்ற அமெரிக்க உற்பத்தி பணிகளை மீண்டும் அமெரிக்காவுக்கே கொண்டுவரும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. 2011-15: "உத்தி சார்ந்து வளர்ந்து வரும் தொழில்கள்" 2001-இல் சீனா உலக வர்த்தக அமைப்பில் (WTO) இணைந்தபோது, 'உலகின் உற்பத்தி மையம்' என்ற அந்தஸ்தை உறுதிப்படுத்தியது. ஆனால், நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அடுத்த கட்டத்தைத் திட்டமிட்டது. சீனா "நடுத்தர வருமானப் பொறி"யில் (Middle Income Trap) சிக்க விரும்பவில்லை. இது, ஒரு நாடு வளர்ச்சியடைந்த, அதேநேரம் மேம்பட்ட பொருளாதார நாடுகளைப் போல உயர்தரப் பொருட்கள் மற்றும் சேவைகளை உருவாக்கும் புதுமைத் திறன் இல்லாதபோது ஏற்படும் சிக்கல். எனவே, மலிவான உற்பத்திக்கு பதிலாக, சீனா "உத்தி சார்ந்து வளர்ந்து வரும் தொழில்கள்" (Strategic Emerging Industries) என்ற கருத்தை 2010-இல் அறிமுகப்படுத்தியது. இதில் மின்சார வாகனங்கள் (EVs) மற்றும் சோலார் பேனல்கள் போன்ற பசுமை தொழில்நுட்பங்கள் முக்கியமாக இருந்தன. மேற்கத்திய நாடுகளில் காலநிலை மாற்றம் முக்கியத்துவம் பெற்ற போது, சீனா இந்தத் துறைகளில் மிகப்பெரிய வளங்களை முதலீடு செய்தது. இன்று, சீனா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகன உற்பத்தியில் உலக நாடுகளில் முன்னிலை வகிக்கிறது. இவற்றை உருவாக்கத் தேவையான அரிய தாதுக்களின் (Rare Earth Elements) விநியோகச் சங்கிலியில் கிட்டத்தட்ட முழு கட்டுப்பாட்டையும் சீனா பெற்றுள்ளது. இந்த அரிய தாதுக்கள் சிப் தயாரிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளுக்கு முக்கியமானவை. இந்த வளங்களின் மீதான சீனாவின் கட்டுப்பாடு, அதனை உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. சமீபத்தில், அரிய தாதுக்களின் ஏற்றுமதியைக் சீனா கட்டுப்படுத்தியது. இந்த முடிவை, டொனால்ட் டிரம்ப் "உலகை சிறைப்பிடிக்கும் முயற்சி" என்று விமர்சித்தார். "உத்தி சார்ந்து எழுச்சி பெறும் சக்திகள்" (Strategic Emerging Forces) என்ற கருத்து 2011-ஆம் ஆண்டு ஐந்தாண்டுத் திட்டத்தில் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றிருந்தாலும், பசுமை தொழில்நுட்பத்தை வளர்ச்சி மற்றும் உலக அரசியல் சக்தியின் புதிய இயந்திரமாகப் பார்க்கும் சிந்தனையை சீனாவின் அப்போதைய தலைவர் ஹு ஜின்டாவோ 2000-களின் தொடக்கத்திலேயே முன்வைத்திருந்தார். "சீனா தனது பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும், தன்னம்பிக்கையுடனும் தனித்துவம் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் புதிது அல்ல. அது சீன கம்யூனிஸ்ட் கட்சி சித்தாந்தத்தின் அடிப்படை கூறாகவே உள்ளது," என்று நீல் தாமஸ் விளக்குகிறார். 2021-2025: "உயர்தர மேம்பாடு" 2017-ஆம் ஆண்டு ஜின்பிங் அறிமுகப்படுத்திய "உயர்தர வளர்ச்சி" (High Quality Development) என்ற கருத்து, சமீபத்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியிருப்பது ஏன் என்று விளக்குகின்றன. தொழில்நுட்ப துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு சவால் விடுத்து, சீனாவை அந்த துறையில் முன்னிலை பெறச் செய்வது தான் இதன் நோக்கம். வீடியோ பகிர்வு செயலியான டிக்‌டாக் (TikTok), தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாய் (Huawei), மற்றும் டீப்சீக் (DeepSeek) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மாடல் போன்ற உள்நாட்டு தயாரிப்புகள், இந்த நூற்றாண்டில் சீனாவின் அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சிக்கான சான்றுகளாகத் திகழ்கின்றன. ஆனால் மேற்கத்திய நாடுகள் சீன தொழில்நுட்பத்தை அவற்றின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகின்றன. இதனால், சீன தொழில்நுட்பங்களுக்கு தடைகள் விதிக்கப்பட்டன. இது உலகளவில் கோடிக்கணக்கான இணையப் பயனர்களைப் பாதித்ததுடன், கடுமையான ராஜ்ஜீய மோதல்களையும் உருவாக்கியது. பட மூலாதாரம், Grigory Sysoev/RIA Novosti/Pool/Anadolu via Getty Images படக்குறிப்பு, 2017-ஆம் ஆண்டு ஜின்பிங் அறிமுகப்படுத்திய "உயர்தர வளர்ச்சி" என்ற கருத்து இதுவரை சீனா தனது தொழில்நுட்ப வளர்ச்சியை அமெரிக்காவின் புதுமையான கண்டுபிடிப்புகள், குறிப்பாக என்விடியாவின் மேம்பட்ட செமிகன்டக்டர்கள் (advanced semiconductors) மூலம் முன்னெடுத்தது. தற்போது அவற்றை சீனாவிற்கு விற்பனை செய்யும் திட்டத்தை அமெரிக்கா தடுத்து விட்டதால், "உயர்தர வளர்ச்சி" என்ற பழைய முழக்கம், 2023ஆம் ஆண்டு ஜின்பிங் அறிமுகப்படுத்திய "புதிய தரமான உற்பத்தி" என்ற புதிய முழக்கமாக மாறும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த புதிய முழக்கம், உள்நாட்டு பெருமையும் தேசிய பாதுகாப்பையும் முக்கியமாகக் கொண்டது. அதாவது, மேற்கத்திய தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்காமல் , தடைகளால் பாதிக்கப்படாமல், சிப் தயாரித்தல், கணினிமயமாக்கல், செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் சீனாவை முன்னணியில் நிலைநிறுத்துவதே இதன் நோக்கம். இந்நிலையில், அனைத்து துறைகளிலும், குறிப்பாக புதுமையான கண்டுபிடிப்புகளில் தன்னிறைவு (self-sufficiency) அடைவது, அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "தேசிய பாதுகாப்பும் சுயாதீனமான தொழில்நுட்ப மேம்பாடுகளும் இப்போது சீனாவின் பொருளாதாரக் கொள்கையின் முக்கிய நோக்கமாக மாறியுள்ளன," என்று நீல் தாமஸ் விளக்குகிறார். "இது, மீண்டும் சீனாவில் கம்யூனிசத்துக்கு அடிப்படையாக உள்ள தேசியவாத கருத்துக்குத் திரும்பி, வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு சீனா மீண்டும் இடமளிக்காது என்பதை உறுதி செய்கிறது," என்றும் அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yp7kx1z5eo
  25. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை 20 Oct, 2025 | 04:17 PM நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் ஆம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இன்று திங்கட்கிழமை (20) திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை நாளை செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் 2.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்குப் பகுதி கடற்பரப்பில், வங்காளவிரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளிலும் கரையோர கடற்பரப்புப் பகுதிகளிலும் கடல் கொந்தளிப்பாகவோ அல்லது அதிக கொந்தளிப்பாகவோ காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. சிலவேளைகளில் மணித்தியாலத்துக்கு 55 - 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்நிலையில், கடற்படையினர், மீனவர்கள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/228225

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.