Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. வாக்குண்டாம், பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் கடவுள் வாழ்த்து உட்பட 31 வெண்பாக்கள் உள்ளன. கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. பொருள்: பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும் நூல் நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி 'என்று தருங்கொல்?' என வேண்டா - நின்று தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத் தலையாலே தான் தருதலால். பொருள்: ஒருவர்க்கு உதவி செய்யும்போது, அதற்கு ப்ரதியுபகாரமும், நன்றியும் எப்போது கிடைக்கும் என்று கருதி செய்யக்கூடாது. எப்படிப்பட்ட நீரை வேர் மூலம் உண்டாலும், நன்கு தளராது வளர்ந்துள்ள தென்னை மரம் அந்நீரை சுவையான இளநீராக தந்து விடும். அதுபோல ஒருவர்க்கு செய்த சிறு உதவியும் பெரிய விதத்தில் நமக்கு ஒரு காலம் நிச்சயம் நன்மை பயக்கும். நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர். பொருள்: நல்லவர்களுக்கு செய்யும் உதவி, கல்லின் மேல் எழுத்தைச் செதுக்குவது போன்றது. அது எவரும் அறியும் வண்ணம் என்றும் நிலைத்திருக்கும். அப்படியல்லாது இரக்கமற்றவர்களுக்கு செய்யும் உதவி எவர்க்கும் பயன்தராது. அது நீரின் மேல் எழுதும் எழுத்துக்களைப் போன்று பயனின்றி நிலைக்காது போகும். இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால் இன்னா அளவில் இனியவும் - இன்னாத நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே ஆள் இல்லா மங்கைக்கு அழகு. பொருள்: இளமையில் வறுமையும், இயலாத முதுமையில் செல்வமும் பெற்றால் அதனால் துன்பமே. அனுபவிக்க முடியாது. அது பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்றது. அதைப் போல் துணைவனில்லாத பெண்களின் அழகும் வீணே. அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய் நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும். பொருள்: நற்பண்பு இல்லாதோரிடம் நன்கு பழகினாலும் அவர்கள் நண்பர்களாக மாட்டார்கள். நம் நிலை தாழ்ந்தாலும் நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே பழகுவர். அவர்கள் நட்பு எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது. தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப் போன்றது அவர் நட்பு. அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா. பொருள்: கிளைகளோடு கூடிய நீண்ட மரங்களும் பருவத்தில் மட்டும் பழங்களைத் தரும். அது போல மேன்மேலும் முயன்றாலும் நாம் செய்யும் கார்யங்கள் தகுந்த காலம் கூடினால் மட்டுமே பயன் தரும். உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர் பற்றலரைக் கண்டால் பணிவரோ?-கல்தூண் பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின் தளர்ந்து விளையுமோ தான். பொருள்: கல் தூண் ஓரளவுக்கு மேல் பாரத்தை ஏற்றினால் உடைந்து விழுந்து விடுமேயல்லாது, வளைந்து போகாது. அது போலவே மானக்குறைவு ஏற்பட்டால் உயிரை விட்டு விடும் தன்மையுள்ளவர்கள் எதிரிகளைக் கண்டால் பணிவதில்லை. நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத் தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் குலத்து அளவே ஆகும் குணம். பொருள்: அல்லிப்பூ நீரின் அளவு எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவே வளரும். நாம் கற்ற நூல்களின் அளவே நம் அறிவு. முற்பிறப்பில் செய்த புண்ய கார்யங்களின் அளவே நாம் இப்போது அனுபவிக்கும் செல்வம். குணம் நாம் தோன்றிய குலத்தின் அளவே. நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று. பொருள்: நல்லவர்களைக் காண்பதும், நமக்கு நன்மை பயக்கும் அவர் சொல்லைக் கேட்பதுவும், அவர்கள் குணங்களை மற்றவரிடத்தில் சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் நல்லது. தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது. பொருள்: தீயவர்களைப் பார்ப்பதும், பயனற்ற அவர் சொல்லைக் கேட்பதுவும், அவர்களைப் பற்றி அடுத்தவர்களிடத்தில் சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் நமக்குக் கெடுதியே. நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. பொருள்: உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும் புல்லுக்கும் பயனைத் தரும். அது போலவே இந்தப் பழமையான உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை (பலன்கள்) எல்லாருக்குமே பயனைத் தரும். பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமிபோனால் முளையாதாம்-கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி ஏற்ற கருமம் செயல். பொருள்: நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா-கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகி விடும். பொருள்: தாழம்பூவின் மடல் பெரிதாக இருந்தாலும் வாசம் தருவதில்லை. ஆனால் அதனின் சிறிய மகிழம்பூவோ நல்ல வாசனையைத் தருகிறது. பெருங்கடலின் நீர் துணி தோய்க்கக் கூட உதவுவதில்லை, ஆனால் அதனருகிலேயே தோன்றும் சிறு ஊற்று குடிப்பதற்கும் நல்ல நீரைத் தருகிறது. எனவே உருவத்தை வைத்து ஒருவரை எடை போடக் கூடாது. கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவே நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய மாட்டாதவன் நன் மரம். பொருள்: கிளைகளோடும், கொம்புகளோடும் காட்டில் நிற்பவை மரங்கள் அல்ல. சபையின் நடுவே ஒருவர் தரும் ஓலையில் எழுதியிருப்பதைப் படிக்கத் தெரியாதவனும், அடுத்தவர் மனதை அறியாதவனுமே மரம் போன்றவன். கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்து-தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே கல்லாதான் கற்ற கவி. பொருள்: காட்டில் மயில் ஆடுவதைப் பார்த்த வான்கோழி உடனே தன்னையும் அதைப் போலவே நினைத்து தன்னுடைய அழகில்லாத சிறகை விரித்து ஆடுவதை போன்றதே, கல்வி கற்காதவன் சொல்லும் கவிதையும், அதனால் ஒரு பயனும் இல்லை. விஷயமும் இல்லை. வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல்-பாங்குஅழியாப் புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம் கல்லின் மேல் இட்ட கலம். பொருள்: புலிக்கு நோயைக் குணமாக்கிய விஷத்தைப் போக்கும் வைத்யன் உடனே அதற்கே உணவாவது நிச்சயம், அதைப் போன்றதே நன்றி அறியாத அற்பர்களுக்கு நாம் செய்யும் உதவியும். கல்லின் மேல் எறியப்பட்ட பானையைப் போல அந்த உதவியும் நம்மையே உடன் அழித்து விடும். அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு. பொருள்: நீர் பாயும் தலை மடையில் பல சிறு மீன்கள் ஓடிக் கொண்டிருந்தாலும், கொக்கு வாடியிருப்பதைப் போலக் காத்துக் கொண்டிருக்கும். எது வரை? தனக்குரிய பெரிய மீன் வரும் வரை. அதைப் போலவே அறிஞர்களின் அடக்கமும். அதைக் கண்டு அவர்களை அலக்ஷ்யம் செய்து வென்று விட நினைக்கக்கூடாது. அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறவார் உறவு. பொருள்: குளத்தில் நீர் வற்றிய உடன் விலகிச் செல்லும் பறவைகள் போல, நமக்குத் துன்பம் வந்தபோது நம்மை விட்டு விலகிச் செல்பவர்கள் உறவினர் அல்லர். அந்தக் குளத்திலேயே அப்போதும் சேர்ந்து வாடும் கொட்டி, அல்லி, நெய்தல் கொடிகளைப் போல, நம்முடனேயே நம் துன்பங்களையும் பகிர்ந்து கொள்பவர்களே நம் உறவு. சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்?-சீரிய பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும் மண்ணின் குடம் உடைந்தக் கால்? பொருள்: தங்கத்தால் ஆன பானை உடைந்து சிதறினால், அதன் சிதறலும் தங்கமே. ஆனால் மண்பானை உடைந்து போனால்? அதைப் போன்றதே சிறந்த பண்புடையவர்களுக்கும், மற்றவர்களுக்கும் உண்டாகும் தாழ்வும். ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி-தோழி நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம் விதியின் பயனே பயன். பொருள்: தோழி! எவ்வளவு தான் அமுக்கி, பெரும் கடலிலே முகந்தாலும், ஒரு நாழி (படி) அளவுள்ள பாத்ரம் நான்கு படி நீரை முகவாது. நல்ல கணவனும், செல்வமும் நிறைந்திருந்தும் நமக்குக் கிடைக்கும் சுகத்தின் அளவும் அதைப் போன்றதே. அது நம் முன் ஜன்ம நல் வினைகளின் அளவைப் பொறுத்தது. உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும் அம் மருந்து போல் வாரும் உண்டு. பொருள்: வ்யாதி நம்முடனேயே பிறந்து நம்மைக் கொன்று விடுகிறது. எனவே உடன் பிறந்தோர் எல்லாரையும் நம் உறவு என்று நினைக்க முடியாது. உடன் பிறக்காது எங்கோ பெரிய மலையில் இருக்கும் மருந்து நம் வ்யாதியைத் தீர்ப்பது போல, அன்னியரும் நமக்கு நன்மை தருபவராக இருக்கக் கூடும். இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள் வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல் புலி கிடந்த தூறாய் விடும். பொருள்: நல்ல மனைவி மட்டும் அமைந்து விட்டால் அந்த இல்லத்தில் இல்லாதது என்று எதுவுமே இல்லை. ஆனால் அந்த இல்லாள் (மனைவி) குணமில்லாதவளாக (இல்லாள்) இருந்து விட்டாலோ, கடுமையான எதிர் வார்த்தைகள் பேசி விட்டாலோ அந்த இல்லம் புலியின் குகை போலாகி விடும். எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே! கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க் கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினை. பொருள்: மட நெஞ்சே! திட்டத்தோடு கற்பக மரத்திடம் சென்றாலும், எட்டிக்காயே கிடைத்ததென்றால் அது நம் முன் வினைப் பயனே. விதியில் எழுதியுள்ளபடிதான் நமக்குக் கிடைக்குமே அல்லாது நாம் நினைப்பதெல்லாமா நடந்து விடும்? கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப் பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே-வில்பிடித்து நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே சீர் ஒழுகு சான்றோர் சினம். பொருள்: சிறு வேறுபாடு வந்தாலே தாழ்ந்தோர் பிளந்து போட்ட கல்லைப் போலப் பிரிந்து விடுவர். பெரும் சினத்தால் பிரிந்தாலும் பெரியோர், பிளந்த தங்கத்தைப் போல மீண்டும் சேர்ந்து விடுவர். அவர்கள் கோபம், ஒருவர் எய்த அம்பால் நீரில் உண்டான வடுவைப் போன்றதே. நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல் கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம். பொருள்: குளத்தில் பூத்திருக்கும் தாமரையை அன்னப்பறவை சேர்ந்தது போல கற்றவர்களைக் கற்றவர்களே விரும்பிச் சேர்வர். சுடுகாட்டில் பிணத்தைக் காக்கைச் சேர்வது போல, கல்வி அறிவில்லாத மூடரை, மூடர்களே சேர்வர் நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும் அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு-நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத் தவர். பொருள்: தன்னிடம் விஷமிருப்பதை அறிந்து நாகப்பாம்பு மறைந்து வாழும். விஷமில்லாத தண்ணீர்ப் பாம்போ பயமில்லாது எங்கும் வெளியில் திரிந்து கொண்டிருக்கும். அதைப் போலவே நெஞ்சில் குற்றம் உடையவர்களும் அதை மறைத்தே வாழ்ந்து கொண்டிருப்பர், குற்றமில்லாதவர்களோ கபடமின்றி வெளியில் திரிந்து கொண்டிருப்பர். மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின் மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்-மன்னர்க்குத் தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு. பொருள்: ஒப்பிட்டு பார்க்கும் போது, அரசனை விட, கசடறக் கற்றவனே மேலானவன். ஏனென்றால், அரசனுக்கு அவன் தேசத்தைத் தவிர வேறெங்கும் சிறப்பு இல்லை. ஆனால் கற்றவனுக்கோ அவன் செல்லுமிடமில்லாம் சிறப்பு. கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம் அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-மெல்லிய வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண். பொருள்: கற்றறிந்தவர் வார்த்தை கற்காதவர்களுக்கு துன்பத்தைத் தரும். தர்மம் தீயவர்களைத் அழிக்கும், மெல்லிய வாழைக்கு அதன் கன்று அழிவைத் தரும். வாழ்க்கைக்குப் பொருந்தி நடக்காத மனைவி அந்த வீட்டிற்கு அழிவைத் தருவாள். சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும் கந்தம் குறை படாது; ஆதலால்-தம்தம் தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால் மனம் சிறியர் ஆவரோ மற்று? பொருள்: தேய்ந்து மெலிந்திருந்தாலும் சந்தனம் மணம் குறைவதில்லை. அதைப் போலவே தாராள குணம் படைத்த அரசர்களும் தன் பொக்கிஷம் குறைந்த காலத்தும் மனம் மாறுவதில்லை மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல உருவும் உயர் குலமும் எல்லாம்- திரு மடந்தை ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது அவளோடும் போம். பொருள்: ஒருவனைச் சூழ்ந்து வாழும் இனிய சுற்றமும், அவனுடைய பெரும் செல்வமும், அவன் அழகும், அவன் குலப் பெருமையும் லக்ஷ்மி கடாக்ஷம் ஒருவனுக்கு இருக்கும் வரையில் தான். அவள் அகலும் போது இவையனைத்தும் போய் விடும். சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர் குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம். பொருள்: தன்னை வெட்டுபவனுக்கும் நிழலைத் தந்து காக்கும் மரத்தைப் போல, அறிவுடையார் அவர்தம் உயிருக்கே தீங்கு செய்பவனையும் இயன்ற வரைக் காக்கவே செய்வர். மூதுரை முற்றிற்று. https://avvaiyaar-vaalviyal.blogspot.com/p/blog-page_21.html
  2. பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும்; பல்கலை கட்டமைப்புக்குள் அச்சுறுத்தும் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும்! - ஜனாதிபதி 20 JUL, 2024 | 06:24 PM பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்க வேண்டுமானால் பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சீர்குலைக்காமல் முறையான கல்வி நிறுவனங்களாக மாற்றுவதற்கான காலம் வந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மட்டக்களப்பு புனானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை இன்று (20) மாணவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்த பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து பல்கலைக்கழகத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, அதனைப் பார்வையிட்டதுடன், மாணவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார். இதன்போது, பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் இலங்கையிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன. மேலும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வையொட்டி நினைவு முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது. மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க: ''1985இல் ஹிஸ்புல்லாஹ்வை நான் முதன் முதலில் இளைஞர் சேவை மன்றத்தில் சந்தித்தேன். அவர் இன்று இந்த சர்வதேச பல்கலைக்கழகத்தை ஆரம்பித்துள்ளார். இந்த பல்கலைக்கழகம் நமது பிள்ளைகளுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதே அரசின் நோக்கமாகும். தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான அறிவைக்கொண்ட மக்களே நமது நாட்டிற்கு அவசியமாகும். அதனால் தான் இந்தப் பல்கலைக்கழகம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. நமது நாட்டின் பிள்ளைகளுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு மிகவும் நன்றி. இப்பல்கலைக்கழகத்துடன் தற்போது கிழக்கு மாகாணத்தில் மூன்று பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் அல்ல. இந்நிறுவனத்திற்கும் கிடைக்கும் நிதி சேமிக்கப்பட்டு, குறித்த நிதி இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கே பயன்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் மட்டுமல்ல, உலகில் இலாபம் ஈட்டாத தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஹார்வர்ட், ஒக்ஸ்போட், கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்களை இலாப நோக்கமற்ற பல்கலைக்கழகங்கள் என்று அழைக்கலாம். கொத்தலாவல பல்கலைக்கழகம், NSBM பசுமைப் பல்கலைக்கழகம், SLIIT நிறுவனம் போன்றவையும் இலாப நோக்கமற்றவை. சிலர் இவற்றை பட்டங்களை விற்பனை செய்யும் கடைகள் என்று கூறினர். அப்படியானால், கேம்பிரிட்ஜ், ஹார்வர்ட், ஒக்ஸ்போட் பல்கலைகழகங்களும் பட்டங்களை விற்கும் கடைகளா? அந்த மனப்பான்மையால்தான் இந்நாட்டின் அரச பல்கலைக்கழகங்கள் வீழ்ச்சியுற்று வருகின்றன. எனினும், இவற்றை நாம் மேலும் மேம்படுத்த வேண்டும். அன்று இருந்தது போன்று இன்று பல்கலைக்கழகங்கள் இல்லை. இன்று பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் குழுக்கள் உள்ளன. அந்தக் குழுக்கள் ஒரு சர்வாதிகாரத்தைப் போல மாணவர்களைக் கையாளுகின்றன. இத்தகைய சூழலில் கற்பிக்கும் விரிவுரையாளர்களைப் பாராட்டுகிறேன். பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களை பட்டங்களை விற்கும் கடைகள் என்ற கேவலமான பேச்சுக்கு நாம் செவிசாய்க்கக் கூடாது. பிள்ளைகள் சுதந்திரமாக கல்வி கற்கும் வகையில் இந்நாட்டில் உள்ள பல்கலைக்கழக முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும். நாளை முதல் சமூக வலைதளங்களில் இதனைச் சொல்லி என்னைக் குறை கூறலாம். பல்கலைக்கழகத்தில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பல்கலைக்கழகக் கட்டமைப்பில் இருந்து அச்சுறுத்தும் அரசியலை அகற்ற வேண்டும். பல்கலைக்கழகத்திற்குள் தங்களுக்கு விருப்பமான கற்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். நமது பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சீர்குலையாமல் முறையான கல்வி நிறுவனங்களாக மாற வேண்டும். இப்பல்கலைக்கழகம் அபிவிருத்தியடைந்தால் ஏனைய பல்கலைக்கழக கட்டமைப்புகளும் அபிவிருத்தியடையும் என்று எதிர்பார்க்கின்றேன். மேலும் இது போன்ற பல பல்கலைக்கழகங்கள் இன்னும் உருவாகும் என்று எதிர்பார்க்கின்றேன். இந்நாட்டில் உயர்கல்விக்காக விசேட பணியை ஆற்றிய லலித் அத்துலத்முதலி பெயரில் கல்வி நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவும் நாம் எதிர்பார்த்துள்ளோம். தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் உட்பட நான்கு கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.'' என்று ஜனாதிபதி தெரிவித்தார். மட்டக்களப்பு சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ''இந்த பல்கலைக்கழகத்தை திறந்து வைக்க வந்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதனை நிர்மாணிக்க பல இடங்களை தேடினோம். இறுதியில் குறைந்த வருமானம் ஈட்டுவோர் அதிகளவில் வாழும் ஊவா, வட மத்திய, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க தீர்மானித்தோம். இந்த பல்கலைக்கழகம் மூன்று மாகாணங்களினதும் மக்களுக்கு பயனளிக்கும் என்று கருதுகிறேன். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை விரைவில் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுரை வழங்கினார். நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் 1,200 மாணவர்கள் தற்போதும் இங்கு கல்வி பயில்கின்றனர். இது ஒரு இனத்திற்காகவோ மதத்துக்காகவோ தனியாக அமைக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்ல. அனைத்து இன, மத மாணவர்களுக்கும் இங்கு இடமுண்டு. நாட்டில் நல்ல பிரஜைகளை உருவாக்குவதே எமது நோக்கமாகும். அன்று எமது நாடு நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. அப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டு நாட்டை கட்டியெழுப்பியதால் நாம் இலங்கையர் என்று உலகத்திற்கு பெருமிதமாக சொல்லிக்கொள்ள முடிகிறது.'' என்று தெரிவித்தார். சர்வமதத் தலைவர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ், இராஜாங்க அமைச்சர்களான பிரமித்த பண்டார தென்னகோன், சிறிபால கம்லத், பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியூதீன், ரவூப் ஹக்கீம், அலி சாஹிர் மவூலானா, பைசால் காசிம், ஜகத் சமரவிக்ரம, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் லால் ரத்னசேகர, பிரதி உபவேந்தர் பேராசிரியர் கே.முபாரக், பதிவாளர் பீ.டீ.ஏ.ஹசன், விஞ்ஞான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவர் ஹிராஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்டவர்களுடன் சவூதி இராஜதந்திரிகளும், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பெருந்திரளான பிரதேச மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/188965
  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஸோ கிளெயின்மேன் பதவி, தொழில்நுட்ப ஆசிரியர் 20 ஜூலை 2024, 13:24 GMT புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர் உலகளவில் தகவல் தொழில்நுட்பச் சேவையில் ஏற்பட்ட பெருங்குழப்பங்கள் தணிந்துவருகின்றன, கணினிகள், செல்போன்களில் மீண்டும் இணையம் செயல்படத் துவங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை (ஜூலை 19) உலகளவில் ஏற்பட்ட பெரும் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக ஏற்பட்ட தாக்கம், டிஜிட்டல் வாழ்க்கையின் அடிப்படைகள் குறித்தும் அது எவ்வளவு வலுவற்றதாக உள்ளது என்பது குறித்தும் சில அசௌகரியமான கேள்விகளை எழுப்புகின்றன. வலுவான பாதுகாப்பு அமைப்பில் அதிகளவில் முதலீடு மற்றும் நிதியாதாரத்தைக் கொண்டுள்ள பெருநிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூட, சுயாதீன சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் மென்பொருள் அப்டேட்டில் திடீரென ஏற்பட்ட தவறு காரணமாக அதிர்ச்சியில் ஆழ்ந்தது. மைக்ரோசாஃப்ட் கணினிகள் நம்முடைய தொழில்நுட்பக் கட்டமைப்பின் மையப்புள்ளியாக விளங்குவதால் மோசமான விளைவைச் சந்தித்தது. தொழில்நுட்பத்தை நாம் எந்தளவுக்குச் சார்ந்திருக்கிறோம் என்பதன் மீது இந்த விவகாரம் வெளிச்சம் பாய்ச்சுகிறது. நம்முடைய கட்டுப்பாட்டை மீறி ஏதேனும் தவறு நடக்கும்போது நாம் எப்படி உதவியற்றவர்களாக இருக்கிறோம் என்பதையும் இது காட்டுகிறது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். கிரவுட்ஸ்ட்ரைக் என்பது என்ன? உலகெங்கும் வங்கி, விமான சேவைகள் எப்போது சரியாகும்?20 ஜூலை 2024 உலகளவில் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு: ஊடகங்கள், வங்கிகள், விமான சேவைகளில் பாதிப்பு19 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தொழில்நுட்ப சேவை கட்டமைப்புகள் ஆட்டம் கண்டால், நீங்களோ நானோ ஒன்றுமே செய்ய முடியாது. மாற்று திட்டம் இருக்காது இந்தக் கட்டமைப்புகள் ஆட்டம் கண்டால், நீங்களோ நானோ ஒன்றுமே செய்ய முடியாது. நேற்று தொலைக்காட்சி ஒன்றில் தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர், இந்த பரபரப்பில் சிக்கிக்கொண்டவர்களை 'அமைதியாக இருக்குமாறு' அறிவுறுத்துகிறார். அந்தச் சமயத்தில் பலரும் கடைசி கட்டமாகத்தான் அமைதியை உணர்வார்கள். ஆனால், நம்மில் பலருக்கும் அந்த சமயத்தில் அமைதியாக இருப்பது ஒன்றுதான் சாத்தியமானது. “நம் அனைவரின் முயற்சிகளையும் ஒன்றின் மீது செலுத்தி, அது தோல்வியுற்றால், நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்து இது,” என்பதை இந்தச் செயலிழப்பு நிரூபிப்பதாக 'கம்ப்யூட்டர் வீக்லி' என்ற இணைய இதழில் ஓவன் சேயர்ஸ் எழுதியுள்ளார். அவர், ஒரே தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனத்தைப் பயன்படுத்தும் பெருவாரியான வணிகங்கள், சேவைகள், மக்களைக் குறிப்பிடுகிறார். அதைப் பயன்படுத்துவது எளிதாகவும் வசதியகவும் இருக்கிறது, ஆனால் அந்தச் சேவையில் ஏதேனும் பிரச்னை என்றால், நமக்கு மாற்றுத் திட்டம் இருக்காது. ஒரு வாடிக்கையாளராக இந்த தொழில்நுட்ப ஆதிக்கத்தைத் தவிர்க்க முடியாது. நீங்கள் ஒரு கடைக்குச் சென்று கார்டு அல்லது செல்போன் மூலம் பணத்தைச் செலுத்தினால், இந்தப் பணப்பரிமாற்றத்தைச் சீராக நிகழ்த்த அங்குள்ள தொழில்நுட்பத்தை நீங்கள் சார்ந்திருக்கிறீர்கள். உங்களிடம் வேறு வாய்ப்பும் இருக்காது, இப்போது அதிகளவிலான வணிகங்கள் பணத்தை நேரடியாக வாங்கிக்கொள்வதில்லை. சிறு வணிகங்களுக்கு பட்ஜெட் நெருக்கடி இருக்கும். “சில சந்தர்ப்பங்களில் ஒற்றை விற்பனையாளர் ஒரு தேர்வாக இருக்கும்,” என, தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பி.சி.எஸ்-ஐ சேர்ந்த அலினா டிமோஃபீவா கூறுகிறார். “தொழில்நுட்பச் சேவை வழங்கும் நிறுவனம் சக்திவாய்ந்தது என்பதால், அது செயலிழக்கும் என நிறுவனங்கள் கருதவில்லை,” என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த செயலிழப்பால் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஹர்திக்கை ஓரங்கட்டி சூர்யகுமார் இந்திய டி20 கேப்டனானது எப்படி? அதில் கம்பீரின் பங்கு என்ன?6 மணி நேரங்களுக்கு முன்னர் கனடா: இந்தியா உள்ளிட்ட பிற நாட்டு மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 4 முக்கிய மாற்றங்கள்20 ஜூலை 2024 தீர்வு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விமானசேவை தொடர்பான தகவல்களை வழங்கும் திரைகள் செயல்படாத நிலையில் விர்ஜின் ஆஸ்திரேலியா, ஜெட்ஸ்டார் நிறுவனங்களின் சில சேவைகள் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டபட்டன. உலகளாவிய ஒற்றைத் தொழில்நுட்பச் சேவை நிறுவனத்துக்குப் பதிலாக, அதிக எண்ணிக்கையிலான சிறிய தகவல் தொழில்நுட்பச் சேவை வழங்குநர்கள் ஒரு தீர்வாக இருக்க முடியுமா? இந்தக் குறிப்பிட்டச் சேவையை குறைந்தளவிலான மக்கள் சார்ந்திருந்தால் இத்தகைய பெரிய சரிவை நீங்கள் சந்தித்திருக்க மாட்டீர்கள். ஆனால் நீங்கள் சாத்தியமான பலவீனங்களைக் கொண்ட பல அமைப்புகளையும் அறிமுகப்படுத்துகிறீர்கள். இது ஹேக் செய்வதை எளிதாக்கும். வெள்ளிக்கிழமை நடைபெற்றது சைபர் தாக்குதல் அல்ல. இந்தச் செயலிழப்பு தங்களின் தவறால் ஏற்படவில்லை என, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உடனடியாகச் சுட்டிக்காட்டியது. எனினும், கிரவுட்ஸ்ட்ரைக்கின் பேரழிவை ஏற்படுத்திய 'ஃபால்கன் அப்டேட்' எப்படி யாராலும் கவனிக்கப்படவில்லை என்ற கேள்வியும் எஞ்சியிருக்கிறது. “இதைச் சரியாகச் செய்யாததால் கிரவுட்ஸ்ட்ரைக்கில் உள்ள யாரோ ஒருவர் இப்போது பெரும் சிக்கலில் இருப்பார்,” என லண்டனில் உள்ள கிரெஷம் கல்லூரியின் பேராசிரியர் விக்டோரியா பைன்ஸ் கூறுகிறார். “மேலும் இந்த வார இறுதியில் நிறைய பேர் வேலை செய்வார்கள்,” என்கிறார். https://www.bbc.com/tamil/articles/cm52jx0v2j7o
  4. ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது 22ஆம் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள போதிலும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/306498
  5. 20 JUL, 2024 | 05:48 PM யாழ்ப்பாணம் மூளாய் வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு பணியாளர்களின் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் கடமை நேரத்தில், அவர்களின் உடமைகளை பாதுகாப்பாக வைப்பதற்காக அறையொன்றினுள் 09 பெட்டகங்கள் வைக்கப்பட்டுள்ளன. வழமை போன்று நேற்றைய தினமும் (19) பணியாளர்கள் தமது உடமைகள் மற்றும் நகைகளை பெட்டகத்தினுள் வைத்து பூட்டிவிட்டு, கடமைகளுக்கு சென்றிருந்தனர். பணியாளர்கள் கடமை முடிந்து வந்து பார்த்தபோது, பெட்டகங்கள் உடைக்கப்பட்டு, பணியாளர்களின் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பணியாளர்களால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/188961
  6. எமது கட்சியை இளையோரிடம் கையளிக்கவுள்ளேன்; சி.வி விக்னேஸ்வரன்! 20 JUL, 2024 | 07:23 PM எமது கட்சி இளையோரின் கட்சி. ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெறுவதற்கு ஒரு செவிலி தாய் எவ்வாறு பார்த்து கொள்வாரோ அதே போல் இந்த கட்சியை நல்லதொரு கட்சியாக உருவாக்கி இளையோரிடம் கையளிக்கவுள்ளேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் மாலை 03 மணிக்கு நடைபெறவுள்ளது. தமிழ் தேசியத்தில் எம்முடன் இணைந்து செயற்பட கூடியவறான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். அவருடன் சிறப்பு விருந்தினராக அரசறிவியல் துறை பேராசிரியர் கே.ரி கணேசலிங்கமும் கலந்து கொள்ளவுள்ளார். எமது மாநாட்டிற்கு அனைத்து தரப்பினரும் வருமாறு அழைப்பு விடுத்துள்ளோம். எங்களுடைய கட்சி இதுவரை பல கஷ்டங்களை எதிர் கொண்டுஇ தற்போது நல்லதொரு நிலைக்கு வந்துள்ளது. எமது கட்சியை பதிவு செய்ய விட கூடாது என்று கூட பலர் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.அது கூட எமக்கு சில காலங்களுக்கு முன்னரே தெரிய வந்துள்ளது. இன்று எமது கட்சி இன்று பதிவு செய்யப்பட்ட பல இளைர்களை தன்னகத்தே கொண்ட கட்சியாக காணப்படுகிறது. நாங்கள் இதுவரையில் என்ன செய்தோம் என கேட்க கூடும். பல நாடுகளின் உயர்ஸ்தானிகர் இ தூதுவர்கள் என பல்வேறு பட்ட தரப்பினர்களுடன் எமது பிரச்சனைகள் தொடர்பில் பேசி இருக்கிறோம். எமது கருத்துக்களை அவர்கள் உன்னிப்பாக செவிமடுத்து சிலதை செய்துள்ளார்கள். இன்று உலக நாடுகள் மத்தியில் இலங்கைக்கான ஆதரவு குறைந்துள்ளது. பல நாடுகள் இலங்கைக்கான தமது ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகியுளள்னர் தமிழர்களின் நிலங்களை திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு தொடர்பில் பல தரப்பிடமும் எடுத்து கூறி வெளிக்கொணர்ந்து உள்ளோம். அது மட்டுமின்றி எங்களுடைய பிரச்சனைகளை பற்றி சிங்களத்தில் பல விடயங்களை கூறி வருகின்றோம். சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களின் பிரச்சனைகள் குறித்து சிங்கள மொழியில் எடுத்து கூறியுள்ளோம். இன்னமும் கூறி வருகிறோம். அதேவேளை எமது மக்களின் வாழ்வாதரத்தையும் மேம்படுத்தி வருகிறோம். அதற்கான உதவிகளையும் செய்து வருகின்றோம். எமது கட்சி இளையோரின் கட்சியாகும். அப்ப நீங்கள் ஏன் தலைவாராக இருக்கிறீர்கள் என கேட்கலாம். குழந்தையை தாயொருவர் பிரசவிப்பதற்கு முன்னர் அந்த குழந்தை ஆரோக்கியமான பிறக்க வேண்டும் என்பதற்காக செவிலி தாயொருவர் கூட இருந்து அந்த தாயை பார்த்துக்கொள்வார். அதேபோலவே இந்த கட்சியை நல்ல நிலையில் வளர்த்து இளையோரிடம் கையளித்து விட்டு சம்பந்தன் போல போய் சேர்ந்து விடுவேன் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/188963
  7. பற்றி எரியும் வங்கதேசம், போராட்டங்களில் கொல்லப்பட்ட 100 பேர் - இந்திய மாணவர்களின் நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அன்பரசன் எத்திராஜன் பதவி, தெற்காசிய பிராந்திய ஆசிரியர் 57 நிமிடங்களுக்கு முன்னர் வங்கதேசம் கடும் கொந்தளிப்பில் உள்ளது. 17 கோடி மக்கள் வசிக்கும் இந்தத் தெற்காசிய தேசத்தில் மக்கள் போராட்டங்கள் புதிதல்ல. ஆனால் கடந்த வாரத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் தீவிரம் மிக மோசமாக இருந்ததாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். வங்கதேசத்தில் அரசாங்க வேலைகளில் மேற்கொள்ளப்படும் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுத்துறை அரசு வேலைகளில் மூன்றில் ஒரு பங்கு 1971-இல் பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான நாட்டின் விடுதலை போரில் உயிரிழந்த படைவீரர்களின் உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமானது என்று மாணவர்கள் வாதிடுகின்றனர், மேலும் தகுதியின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் என்று கோருகின்றனர். பல்கலைக்கழக வளாகங்களில் அமைதியான முறையில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு தழுவிய ஆர்பாட்டமாக உருமாறியுள்ளது. உஷா: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளரின் மனைவி பற்றி சென்னையில் வசிக்கும் உறவினர்கள் கூறுவது என்ன?6 மணி நேரங்களுக்கு முன்னர் 21-ம் நூற்றாண்டிலும் உடன்கட்டை ஏறும் வழக்கமா? சத்தீஸ்கரில் கணவரை இழந்த பெண்ணுக்கு என்ன நடந்தது?9 மணி நேரங்களுக்கு முன்னர் சாதி அடிப்படையில் பணிகளை ஒதுக்கும் சிறைச்சாலைகள் பற்றி உச்சநீதிமன்றம் கூறியது என்ன?18 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES போராட்டம் தீவிரமானது ஏன்? 'பங்களாதேஷ் சத்ரா லீக்' என அழைக்கப்படும் காவல்துறையும் ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவினரும் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மிருகத்தனமான நடவடிக்கைகளைப் மேற்கொண்டனர். அவர்களின் செயல்பாடுகள் கோபத்தைத் தூண்டுவதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் மறுத்துள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. வியாழன் (ஜூலை 18) அன்று வன்முறை உச்சகட்டத்தை அடைந்தது. அன்று குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும், வெள்ளிக்கிழமை மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்படனர். இந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இணைய சேவைகளை முடக்கியுள்ளது மற்றும் தொலைபேசி சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. "இது மாணவர்கள் போராட்டம் என்ற கட்டத்தை கடந்து விட்டது. அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்திருப்பது தெரிகிறது," என்று டாக்கா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் உதவிப் பேராசிரியரான டாக்டர் சமினா லுத்பா பிபிசியிடம் கூறுகிறார். போராட்டங்கள் நீண்ட நாட்களாக நடந்து வருகின்றன. வங்கதேசம் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்தாலும், பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் இல்லை என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES விரக்தியில் வங்கதேச இளைஞர்கள் சுமார் 1.8 கோடி வங்கதேச இளைஞர்கள் வேலை தேடி வருவதாக ஆய்வு மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களை விட குறைவாக படித்தவர்களை விட அதிக வேலையின்மை விகிதத்தை எதிர்கொள்கின்றனர். வங்கதேசம் ஆயத்த ஆடைகள் (ready-to-wear clothing) ஏற்றுமதியின் அதிகார மையமாக மாறியுள்ளது. இது உலக சந்தைக்கு சுமார் 40 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 3.3 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது. இந்தத் துறையில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பணியாற்றுகின்றனர், அவர்களில் பலர் பெண்கள். ஆனால் பட்டம் பெற்ற இளைய தலைமுறையினருக்கு இந்த தொழிற்சாலை வேலைகள் போதுமானதாக இல்லை. வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினாவின் 15 ஆண்டுகால ஆட்சியின் கீழ், தலைநகர் டாக்காவில் புதிய சாலைகள், பாலங்கள், தொழிற்சாலைகள் , மெட்ரோ ரயில் என கட்டமைக்கப்பட்டதன் மூலம் வங்கதேசம் புதிய மாற்றங்களைக் கண்டது. கடந்த பத்து ஆண்டுகளில் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 2.5 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த வளர்ச்சி பிரதமர் ஹசினாவின் அவாமி லீக் கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே பலன் அளிப்பதாக பலர் விமர்சித்து வருகின்றனர். டாக்டர் லுத்ஃபா கூறுகையில், "நாங்கள் பல ஊழல்களை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்கள் செய்யும் ஊழல் நீண்ட காலமாக தண்டிக்கப்படாமல் தொடர்கிறது,” என்றார். சமீப மாதங்களில் வங்கதேச சமூக ஊடகங்களில், ஹசினாவின் முன்னாள் உயர் அதிகாரிகள் சிலருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றிய விவாதங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. முன்னாள் ராணுவத் தலைவர், முன்னாள் காவல்துறை தலைமை அதிகாரி, மூத்த வரி அதிகாரிகள் மற்றும் மாநில ஆட்சேர்ப்பு அதிகாரிகள் உட்பட பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. நாகப்பாம்பு விஷத்தை முறிக்கும் மலிவு விலை மருந்து கண்டுபிடிப்பு5 மணி நேரங்களுக்கு முன்னர் குறைமாதப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை செயற்கைக் கருப்பையில் வைத்துக் காப்பாற்ற முடியுமா?4 மணி நேரங்களுக்கு முன்னர் சொத்து குவித்த அரசு அலுவலக பியூன் கடந்த வாரம் ஹசினா செய்தியாளர் சந்திப்பில், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும், இது நீண்ட கால பிரச்னை என்றும் கூறினார். டாக்காவில் நடந்த அந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அவர் 34 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 280 கோடி ரூபாய்) மதிப்பிலான சொத்துக்கள் குவித்ததாக குற்றம்சாட்டப்பட்ட உதவியாளர் (பியூன்) மீது நடவடிக்கை எடுத்ததாகக் கூறினார். "சாதாரணப் பயணங்களுக்கு கூட ஹெலிகாப்டர் பயன்படுத்துகிறார். அவர் எப்படி இவ்வளவு பணம் சம்பாதித்தார்? இதை அறிந்த நான் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்தேன்," என்றார். இருப்பினும் அந்த நபர் யார் என்பதை பற்றி அவர் குறிப்பிடவில்லை. வங்கதேச ஊடகங்களில் இந்த விவகாரம் பற்றிய பல எதிர்வினைகள் எழுந்தன. அரசாங்க ஒப்பந்தங்களுக்கான லஞ்சம், ஊழல் அல்லது லஞ்சம் ஆகியவற்றின் மூலம் இவ்வளவு பணம் குவிக்கப்பட்டிருக்கும் என்பது ஊடகங்களின் கூற்று. ஒரு காலத்தில் ஹசினாவின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்பட்ட முன்னாள் காவல்துறைத் தலைவர் பெனாசிர் அகமது சட்டவிரோதமான வழிகளில் மில்லியன் கணக்கான டாலர்களைக் குவித்ததற்காக வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து வருகிறார். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவும் பொருளாதார நெருக்கடி ஆகிய சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் நாட்டில் உள்ள சாதாரண மக்களுக்கு இந்த செய்திகள் சீற்றத்தை ஏற்படுத்தியது. ஊழல் குற்றச்சாட்டுகள் மட்டுமன்றி, கடந்த 15 ஆண்டுகளில் ஜனநாயக நடவடிக்கைகளுக்கான இடம் சுருங்கிவிட்டதாக பல சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். "தொடர்ந்து மூன்று தேர்தல்களில், நம்பகமான சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்குப்பதிவு செயல்முறை இல்லை," என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் (Human Rights Watch) தெற்காசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி பிபிசி-யிடம் தெரிவித்தார். "எங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படை ஜனநாயக உரிமை இங்குள்ள மக்களுக்கு மறுக்கப்படுவதைப் பற்றி ஹசினா குறைத்து மதிப்பிட்டுள்ளார்," என்று கங்குலி கூறினார். 2014 மற்றும் 2024-ஆம் ஆண்டு தேர்தல்களை பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) புறக்கணித்தது, ஹசினாவின் கீழ் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் சாத்தியமில்லை என்றும், தேர்தல்கள் நடுநிலையான கவனிப்பு நிர்வாகத்தின் கீழ் நடைபெற வேண்டும் என்றும் அவர்கள் விரும்புவதாகக் கூறினர். ஆனால், இந்தக் கோரிக்கையை ஹசினா நிராகரித்துவிட்டார். பட மூலாதாரம்,EPA குற்றச்சாட்டுகளை மறுக்கும் அமைச்சர்கள் கடந்த 15 ஆண்டுகளில் 80-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர், அவர்களில் பலர் அரசாங்கத்தை விமர்சித்தவர்கள், என்றும், அவர்களது குடும்பத்தினருக்கு அவர்கள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் உரிமைக் குழுக்கள் கூறுகின்றன. ஷேக் ஹசினா கடந்த சில ஆண்டுகளில் அரசியல் ரீதியாக எதேச்சதிகாரமாக வளர்ச்சி அடைந்துள்ளார் என்ற பரவலான விமர்சனங்களுக்கு மத்தியில், அரசாங்கம் ஊடகங்களையும் எதிர்பவர்களையும் ஒடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் அமைச்சர்கள் இந்த குற்றச்சாட்டை மறுக்கின்றனர். "அரசாங்கத்திற்கும் ஆளும் கட்சிக்கும் எதிரான கோபம் நீண்ட காலமாக அதிகரித்து வருகிறது," என்கிறார் டாக்டர் லுத்ஃபா. “மக்கள் இப்போது தங்கள் கோபத்தை வெளிப்படுத்து வருகின்றனர். தங்களுக்கு எந்த வழியும் இல்லை என்ற சூழலில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்,” என்கிறார். ஹசினாவின் ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள், போராட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட போதிலும் அரசாங்கம் தீவிர நிதானத்தைக் காட்டியதாகக் கூறுகிறார்கள். இந்த போராட்டங்களுக்கு முக்கிய காரணம் அவர்களது அரசியல் எதிர்கட்சிகள் தான் என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் சில இஸ்லாமியக் கட்சிகளாலும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியதாக அமைச்சர்கள் தரப்பு கூறுகிறது. பிரச்னைகளை நிதானமாக விவாதிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சட்ட அமைச்சர் அனிசுல் ஹக் கூறினார். “மாணவர் போராட்டக்காரர்களை அரசு அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நியாயமான வாதம் முன்வைக்கப்பட்டால், நாங்கள் கேட்க தயாராக இருக்கிறோம்” என்று ஹக் இந்த வார தொடக்கத்தில் பிபிசியிடம் கூறினார். 2009-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஹசினா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக மாணவர் போராட்டங்கள் இருக்கலாம். வங்க தேசத்தில் பிரச்னைகள் எப்படித் தீர்க்கப்படும் என்பது பிரதமர் ஹசினா அமைதியின்மையை எவ்வாறு கையாளுகிறார் என்பதையும், மிக முக்கியமாக, பொதுமக்களின் அதிகரித்து வரும் கோபத்தை அவர் எவ்வாறு நிவர்த்தி செய்கிறார் என்பதையும் பொறுத்தது. ஹர்திக் பாண்டியா: பறிபோன கேப்டன் பதவி, விவாகரத்து என தொடர் சவால்களைச் சமாளிப்பாரா?6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஒருவர் அதிகபட்சம் எத்தனை சிம் கார்டு பயன்படுத்தலாம்? கூடுதலாக இருந்தால் என்ன தண்டனை?7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய மாணவர்கள் நிலை என்ன? வங்கதேசத்தில் சமீபத்திய நிகழ்வுகளின் விளைவாக, டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் சிட்டகாங், ராஜ்ஷாஹி, சில்ஹெட் உதவித் தூதரகங்கள், இந்திய குடிமக்கள் அங்கிருந்து பத்திரமாக தாயகம் திரும்புவதற்கு உதவி செய்து வருவதாக ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, இந்தியத் தூதரகம், இந்தியா-பங்களாதேஷ் சர்வதேச எல்லையில் உள்ள எல்லை கடக்கும் பகுதிகளில், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதுவரை, 778 இந்திய மாணவர்கள் பல்வேறு தரை துறைமுகங்கள் மூலம் இந்தியா திரும்பியுள்ளதாக இந்திய வெளியுறவு துறையின் அறிக்கை கூறுகிறது. மேலும், டாக்கா மற்றும் சிட்டகாங் விமான நிலையங்கள் வழியாக வழக்கமான விமான சேவைகள் மூலம் சுமார் 200 மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர். டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் உதவி தூதரக அலுவலங்களுடன், வங்கதேசத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் நாடு திரும்பாத மீதமுள்ள 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்பில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குகின்றன. நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் கோரிக்கையின் பேரில் இந்தியாவுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/cglk86v4e8vo
  8. நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்....
  9. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு! 20 JUL, 2024 | 03:53 PM சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான குழுவினர் அவதானிப்பு விஜயம் ஒன்றை கடந்த 05 ஆம் திகதி மேற்கொண்டிருந்தனர். பொதுமக்கள் தமக்கான சேவைகளை பெற்றுகொள்வதில் இடர்பாடுகளை சந்திப்பதாக அலுவலகத்துக்கு கிடைத்த தொலைபேசி முறைப்பாடுகளுக்கு அமைய அக்கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது. அக்கள விஜயத்தில் எம்மால் பெற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள்சார் பிரச்சனைகள் தொடர்பில் கடந்த 08 ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பளார், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று எமது காரியாலயத்தில் இடம்பெற்றது. அதன் அறிக்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக்காரியாலயத்துக்கு எம்மால் அனுப்பிவைக்கப்பட்டது. அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, மத்திய மற்றும் மாகாண சுகாதார சேவை அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமைக்காரியாலத்தில் இடம்பெறவிருக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு வருமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அக்கலந்துரையாடலுக்கு பின்வருவோர் அழைக்கப்பட்டுள்ளனர். 01. செயலாளர்- சுகாதார அமைச்சு, கொழும்பு 02.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்-சுகாதார அமைச்சு, கொழும்பு 03.மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்- வடக்கு மாகாணம் 04.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்- வடக்கு மாகாணம் 05.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்- யாழ்ப்பாணம் 05.மருத்துவ அத்தியட்சகர்,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை https://www.virakesari.lk/article/188941
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெஸ் பார்க்கர் மற்றும் ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ் பதவி, பிபிசி செய்தியாளர்கள், பெர்லின், கீவ் நகரங்களில் இருந்து 3 மணி நேரங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானால் அது ஐரோப்பாவில் என்ன விளைவை ஏற்படுத்தும்? அமெரிக்காவில் அதிகார மாற்றம் ஏற்பட்டால் இந்த சவாலை எதிர்கொள்ள ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் வியூக வகுப்பாளர்கள் ஏற்கனவே தயாராகி வருகின்றனர். டொனால்ட் டிரம்ப் ஓஹியோவைச் சேர்ந்த செனட்டர் ஜே.டி.வான்ஸை துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தபோது, அதிபரான பிறகு டிரம்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்த தெளிவான செய்தி ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டது. யுக்ரேனில் ரஷ்ய தாக்குதல், பாதுகாப்பு கவலைகள் மற்றும் வர்த்தக விஷயங்கள் ஐரோப்பாவிற்கு முக்கியமானவை. இந்த விவகாரங்களில் டிரம்ப் அதிபரான பிறகு என்ன நடக்கும் என்பது ஐரோப்பாவின் முக்கிய கவலையாக உள்ளது. ஜே.டி.வான்ஸ் யுக்ரேனுக்கு வழங்கப்படும் பொருளாதார உதவியை விமர்சிப்பதில் முன்னிலை வகிக்கிறார். கிழக்கு ஆசியாவை நோக்கி அமெரிக்கா "தன் கவனத்தை" செலுத்த வேண்டும் என்பதை ஐரோப்பா புரிந்து கொள்ள வேண்டும் என்று இந்த ஆண்டு மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் அவர் கூறினார். “அமெரிக்காவின் பாதுகாப்புக் கொள்கையால் ஐரோப்பாவின் பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார். அமெரிக்காவில் குடியரசுக் கட்சி அரசு அமைக்கப்பட்ட பிறகும் அந்த நாடு நேட்டோவில் தொடர்ந்து இருக்கும் என்று தான் நம்புவதாக ஜெர்மன் நாடாளுமன்றத்தில் சமூக ஜனநாயகக் கட்சியின் வெளியுறவுக் கொள்கைத் தலைவருமான நில்ஸ் ஷ்மிட் பிபிசியிடம் கூறினார். ஜே.டி. வான்ஸ் "மிகவும் மாறுபட்ட நிலைப்பாட்டை’ மேற்கொண்டாலும், டொனால்ட் டிரம்ப் "கணிக்க முடியாதவராக" இருந்தாலும் இது நடக்கும் என்கிறார் அவர். எனினும், டிரம்ப் தலைமையிலான ஆட்சியின் போது புதிய "வர்த்தகப் போர்" தொடங்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ஐரோப்பா ஏன் பயப்படுகிறது? டொனால்ட் டிரம்ப் நான்கு ஆண்டுகள் அதிபராக இருந்துள்ளார். எனவே யாரும் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த தூதர் ஒருவர் தெரிவித்தார். "டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியும். துணை அதிபராக அவருடன் யார் இருக்கிறார்கள் என்பது முக்கியமே இல்லை" என்று அவர் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தை புயலுக்கு தயாராகும் படகுடன் அவர் ஒப்பிட்டார். அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும், எதிர்காலத்தில் நிலைமை அவர்களுக்கு கடினமாகவே இருக்கும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அவர் கூறினார். கடந்த இரண்டு வருடங்களாக போரில் சிக்கித் தவித்து வரும் யுக்ரேனுக்கு உதவும் மிகப்பெரிய நட்பு நாடு அமெரிக்கா. "டிரம்ப் அதிபராக வருவதைப் பற்றி நான் பயப்படவில்லை. நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று நம்புகிறேன்." என்று யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி இந்த வாரம் கூறியிருந்தார். பெரும்பாலான குடியரசுக் கட்சித் தலைவர்கள் யுக்ரேனையும் அதன் குடிமக்களையும் ஆதரிக்கிறார்கள் என்று தான் நம்புவதாகவும் ஸெலென்ஸ்கி கூறினார். பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் பொதுவான நண்பர் ஆவார். போரிஸ் ஜான்சன் யுக்ரேனுக்கான பொருளாதார உதவியை ஆதரிக்கிறார். படக்குறிப்பு,டிரம்பை சந்தித்த பிறகு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை போரிஸ் ஜான்சன் வெளியிட்டார். சமீபத்தில் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் முன்னாள் அதிபர் டிரம்ப்பை ஜான்சன் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு அவர் சமூக ஊடகமான X இல் "டிரம்ப்புடன் யுக்ரேன் பற்றி விவாதித்தேன். அந்த நாட்டை ஆதரிக்கவும் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் வலுவான மற்றும் தீர்க்கமான முடிவுகளை அவர் எடுப்பார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை" என்று பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த உணர்வு உண்மையாக இருந்தாலும்கூட அது வான்ஸுக்கு பொருந்தும் என்பது கிடையாது. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு வான்ஸ் ஒரு பாட்காஸ்டில் பேசுகையில் "யுக்ரேனில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி எனக்கு கவலை இல்லை" என்று கூறினார். யுக்ரேனுக்கு வழங்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டாலர் ராணுவ உதவியை தாமதப்படுத்தியதில் வான்ஸ் முக்கிய பங்கு வகித்தார். யுக்ரேன் விவகாரத்தில் டிரம்பின் நிலைப்பாடு என்ன? "நாம் முயற்சி செய்து அவர்களுக்குப் புரிய வைப்பது முக்கியம்," என்கிறார் கீவை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான இன்ஸ்டிட்யூட் ஆஃப் வேர்ல்ட் பாலிசியின் நிர்வாக இயக்குநர் யெவ்ஹென் மஹ்தா. "குடியரசுக்கட்சி அரசு இராக் போரில் ஈடுபட்டது. யுக்ரேனுக்கு வருமாறு டிரம்பை அழைக்கலாம். அங்கு என்ன நடக்கிறது மற்றும் அமெரிக்கா வழங்கிய பொருளாதார உதவிகள் அங்கு எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை அவர் நேரடியாகப் பார்க்கலாம்,” என்று அவர் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டிரம்பின் கணிக்க முடியாத அணுகுமுறை யுக்ரேனுக்கு ஒரு பிரச்னையாக மாறக்கூடும் என்று யெவ்ஹென் மஹ்தா குறிப்பிட்டார். படக்குறிப்பு,ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன், மார்-ஏ-லாகோ சென்று டொனால்ட் டிரம்பை சந்தித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தில் டிரம்ப் மற்றும் வான்ஸ் ஜோடியின் வலுவான ஆதரவாளர் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் ஆவார். ஓர்பன் சமீபத்தில் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோரை சந்தித்தார். அதன் பிறகு அவர் அமெரிக்காவில் டிரம்பை சந்தித்து பேசினார். ஓர்பனுக்கும், புதினுக்கும் இடையில் ஆழமான உறவு உள்ளது. அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால் பதவிப் பிரமாணம் செய்யும் வரை காத்திருக்கப் போவதில்லை என்றும், விரைவில் ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த கோருவேன் என்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஓர்பன் கூறியிருந்தார். இதற்கான விரிவான மற்றும் உறுதியான திட்டம் என்னிடம் உள்ளது என்று ஓர்பன் தனது கடிதத்தில் எழுதினார். இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறவிருக்கும் சமாதான உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஸெலென்ஸ்கி இந்த வாரம் கூறியிருந்தார். சமீபத்தில் ஓர்பன், "சமாதானப்பணி” என்று அழைக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக ரஷ்யா மற்றும் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். ஆனால், அவர் ’ஐரோப்பிய கவுன்சிலை நிர்வகிக்கும் பொறுப்பை துஷ்பிரயோகம் செய்ததாக’ குற்றம் சாட்டப்பட்டது. ஓர்பனின் நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு ஹங்கேரியில் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஐரோப்பிய கமிஷன் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 6 மாதங்களுக்கு ஐரோப்பிய கவுன்சிலை நிர்வகிக்கும் பொறுப்பை, இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி ஹங்கேரி பெற்றது. அதன் பின்னர் ஓர்பன் யுக்ரேன், ரஷ்யா, அஜர்பைஜான், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அவர் அதை "சமாதான பணிக்கான" உலகப் பயணம் என்று அழைக்கிறார். வர்த்தகத்தின் எதிர்காலம் பற்றிய கவலை படக்குறிப்பு,ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில், ஐரோப்பிய யூனியனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியத்துக்கு அமெரிக்கா வரி விதித்தது. ஆனால் அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஜோ பைடன் நிர்வாகம் இந்த இறக்குமதி வரிகளை நிறுத்தி வைத்தது. ஆனால் டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் எல்லா வகையான இறக்குமதிகளுக்கும் 10 சதவிகித வரி விதிக்கும் யோசனையை முன்வைத்துள்ளார். வர்த்தகம் தொடர்பாக அமெரிக்காவுடன் புதுப்பிக்கப்பட்ட பொருளாதார மோதலுக்கான வாய்ப்பு, ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் மோசமான மற்றும் பேரழிவுகரமான விளைவுகளாக பார்க்கப்படுகிறது. "ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது தண்டனைக் கட்டணங்கள் விதிக்கப்படும் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியும். எனவே மற்றொரு சுற்று வர்த்தக போருக்கு நாம் தயாராக இருக்கவேண்டும்," என்று ஜெர்மன் நாடாளுமன்றத்தில் சமூக ஜனநாயகக் கட்சியின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் நில்ஸ் ஷ்மிட் கூறினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜே.டி.வான்ஸ், அதன் ராணுவ தயார் நிலைக்காக ஜெர்மனியை விமர்சித்திருந்தார். தனது நோக்கம் ஜெர்மனியை "விமர்சனம்" செய்வதல்ல. ஆயுதங்களை உற்பத்தி செய்யும் தொழில்களின் கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்று அவர் கூறியிருந்தார். வான்ஸின் இந்த அறிக்கை வருங்காலத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜெர்மனி மீது ’ஐரோப்பிய பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்க’ அதிக அழுத்தத்தை கொடுக்கக்கூடும். 2022 பிப்ரவரியில் யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் "ராணுவ நடவடிக்கைக்கு" பிறகு, ஜெர்மன் ஆட்சித்துறை தலைவதலைவர் ஓலாஃப் ஷோட்ஸ் நாடாளுமன்றத்தில் தனது உரையில், ’இது வரலாற்றை மாற்றும் நிகழ்வு’ என்று அழைத்தார். யுக்ரேனுக்கு ஆயுதம் கொடுக்க தயங்குவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. யுக்ரேன் தாக்குதலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் ஆயுத ஏற்றுமதிக்கு ஓலாஃப் கட்டுப்பாடுகளை விதித்தார். நாட்டின் பாதுகாப்பு செலவை அதிகரிப்பது குறித்தும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதை தடை செய்வது குறித்தும் அவர் பேசினார். பானிபூரியில் சேர்க்கப்படும் கண்கவர் நிறமிகளால் புற்றுநோய் ஆபத்து - எச்சரிக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை13 ஜூலை 2024 பட மூலாதாரம்,MARYAM MAJD/GETTY IMAGES படக்குறிப்பு,ஜெர்மனி ஆட்சித்துறை தலைவதலைவர் ஓலாஃப் ஷோஷோட்ஸ் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக யுக்ரேனுக்கு ராணுவ உதவி வழங்கக் கூடிய நாடு ஜெர்மனி என்று ஜெர்மனியின் நட்பு நாடுகள் கூறுகின்றன. பனிப்போர் முடிவுக்கு வந்த பிறகு முதல்முறையாக குறுகிய கால வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் இரண்டு சதவிகித பாதுகாப்பு பட்ஜெட் செலவு இலக்கை எட்டுவதில் ஜெர்மனி வெற்றி பெற்றுள்ளது. "நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்று நினைக்கிறேன். கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக கவனம் செலுத்தப்படாத ராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்,” என்று நில்ஸ் ஷ்மிட் கூறினார். ஆனால் திரைக்குப் பின்னால் ஐரோப்பாவின் ஏற்பாடுகள் தீவிரமானவை அல்லது போதுமானவை என்பதை இந்த விஷயங்களை உன்னிப்பாக கவனிப்பவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. வெளியுறவுக் கொள்கை விஷயங்களில் ஓலாஃப் ஷோட்ஸ் தனக்கே உரிய கட்டுப்பாடான அணுகுமுறையைக் கொண்டுள்ளார். மேலும் இந்த விஷயத்தில் முன்னணியில் செல்வதைத் தவிர்க்கிறார். அவர் அரசியல் விஷயங்களிலும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். அடுத்த ஆண்டு தேர்தலுக்குப் பிறகு அவர் ஆட்சியில் இருந்து வெளியேற வேண்டியிருக்கலாம். அதே நேரம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் திடீரென தேர்தலை அறிவித்தார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப்பிறகு பலவீனமான நிலைக்கு அவர் வந்துள்ளார். அந்த நாடு அரசியல் ஸ்திரமின்மையை எதிர்கொண்டுள்ளது. ''ரஷ்யாவிற்கு எதிரான போரில் யுக்ரேன் தோல்வியடைந்தால், மேற்கத்திய நாடுகளுடன் ரஷ்யாவின் போர் வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கும்" என்று போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டுடா செவ்வாயன்று எச்சரித்தார். "போரை விரும்பும் இந்த ரஷ்ய அரக்கன் மேலும் தாக்க விரும்பும்,” என்றார் அவர். https://www.bbc.com/tamil/articles/cljy17p0npdo
  11. நமது உடலில் ஏற்படும் பல பிரச்னைகளை சிறுநீரின் நிறம், தன்மையை வைத்தே பல சமயங்களில் மருத்துவர்கள் சொல்லிவிடுவார்கள். குறிப்பாக, சிறுநீரின் நிறம், பல்வேறு உடல்நல பிரச்னைகளை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. நமது உடலில் உள்ள கழிவுகளை உடலில் இருந்து அகற்றி சிறுநீரை வெளியேற்றுவதுதான் சிறுநீரகங்களின் வேலை. சிறுநீரில் நீர், யூரியா, உப்புகள் ஆகியவை அடங்கியுள்ளன. அதன் நிறம் பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஆரோக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அப்படி இல்லாமல் வேறு சில நிறங்களிலும் சிறுநீர் வெளியேறக்கூடும்? அவை என்ன நிறங்கள்? அப்படி வெளியேறுவது எதை குறிக்கிறது? இந்த காணொளியில் பார்க்கலாம்.
  12. நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதன் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் நிதியைக் கொண்டு எதிர்காலத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிக நிதியை வழங்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார். காலி – வலஹன்துவ பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ருஹுணு பல்கலைக்கழகத்தின் புதிய சுகாதார விஞ்ஞான பீடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் நேற்று(19) கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அமெரிக்கா போன்ற பெரிய பல்கலைக்கழகங்கள் 24 மணி நேரமும் இத்தகைய கட்டிடங்களால் பயனடைகின்றன. அரசுப் பணம் கல்விக்காகப் பயன்படுத்தப்படும்போது, அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வகுப்புகள் சீர்குலைந்தால் உங்களுக்கும் நாட்டுக்கும் பாதிப்புகள் ஏற்படும். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் அந்த கூட்டுதாபனத்துக்காக 700 பில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக இங்கு குறிப்பிடப்பட்டது. ஆனால் அந்த 700 பில்லியன் ரூபாவை பத்து மடங்காக பெருக்கிப் பார்க்க வேண்டும். இவ்வளவு பெரிய தொகையை செலவழித்ததன் விளைவாக மூன்று அரசாங்கங்களின் கீழ் இதனை ஈடுசெய்ய கடன் பெற நேரிட்டது. இதனால், நாட்டின் கடன் தொகை அதிகரித்தது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது, முதலில் கடன் வாங்குவதை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இது கடினமான பணியாகும். ஆனாலும் அதனை செய்ய வேண்டியிருந்தது. அதற்குப் பதிலாக, புதிய முறையில் பணத்தை தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் காணப்பட்டது. ஒவ்வொரு அரசாங்க நிறுவனமும் தங்களது சொந்த செலவுக்கான நிதியை ஈட்டிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினோம். இந்த நிலை அனைத்து துறைகளையும் பாதித்தது. என்னை திட்டித் தீர்த்தனர். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய அனுமதிப்பதா அல்லது அவதூறுகளை ஏற்றுக்கொள்வதா என்பதை நான் தீர்மானிக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்தப் பொறுப்பில் இருந்து விலக முடியாத நிலைமை இருந்தது. அந்த செயற்பாடுகளுக்கு அனைத்து அமைச்சர்களும் ஆதரவு வழங்கினர். அப்போது, அரச நிறுவன மறுசீரமைப்பு திட்டத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று நாட்டின் மின் மற்றும் எரிபொருள் கட்டணங்கள் உலக சந்தையின் விலைக்கு அமைவாக உள்ளன. மேலும், ஏனைய கூட்டுத்தாபனங்களுக்கும் பணம் வழங்குவதை நிறுத்தினர். நாங்கள் தற்போது ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், அந்த கட்டண நடவடிக்கைகளில் இருந்து விடுபட அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அதனால் எஞ்சும் தொகையை நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக பயன்படுத்த முடியும். இந்த நடவடிக்கைகளை செயல்படுத்தும் போது பல விமர்சனங்கள் எழுந்தன. அப்போது, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை நமது தேசிய சொத்தாக கருதுவதா அல்லது இளைஞர்களை தேசிய சொத்தாக கருதுவதா என்ற கேள்வி எழுந்தது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களைப் பாதுகாப்பதா அல்லது கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு பணம் கொடுப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டும். இந்த புதிய வேலைத் திட்டங்கள் மூலம் அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஒன்றுபடுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்தார். https://thinakkural.lk/article/306496
  13. யாழில் குழந்தையை கைவிட்டு காதலுடன் சென்ற குடும்ப பெண்; பெண்ணும் காதலனும் விளக்கமறியலில் Published By: DIGITAL DESK 3 20 JUL, 2024 | 12:39 PM தனது இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு, காதலனுடன் ஊரை விட்டு வெளியேறிய குடும்ப பெண்ணையும், காதலனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவன் மற்றும் தனது குழந்தையுடன் வசித்து வந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது காதலுடன் ஊரை விட்டு சென்று இருந்தார். இது தொடர்பில் கணவனால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண்ணையும், அவரது காதலனான இளைஞனையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, நீதிமன்ற விசாரணைகளை அடுத்து இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/188931
  14. ஹிங்குரக்கொட உள்ளூர் விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நிர்மாணப் பணிகள் நேற்று(19) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்து மற்றும் கப்பற்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்தப் பணிகளை ஆரம்பித்து வைத்தார். நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில், நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதற்காகக் கடந்த பாதீட்டில் 2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. இந்த விமான நிலையம் இரண்டாம் உலகப் போர்க் காலப்பகுதியில் இங்கிலாந்தின் ரோயல் விமானப்படையின் பயன்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டதாகும். https://thinakkural.lk/article/306475
  15. பங்களாதேஷில் உள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு! பங்களாதேஷில் உள்ள இலங்கை மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அங்குள்ள 3 பல்கலைக்கழகங்களில் 50 இலங்கை மாணவர்கள் கல்வி கற்பதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள் தொடர்ந்தும் தொடர்பில் இருக்கின்றனர். குறித்த மாணவர்கள் விரும்பினால் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் வன்முறை சம்பவங்களை அடுத்து அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது. https://thinakkural.lk/article/306512
  16. 20 JUL, 2024 | 12:00 PM புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று (20) சனிக்கிழமை காலை கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருஞ்சாம்பிட்டிய பகுதியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு அலி சப்ரி ரஹீம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளதுடன் அவர் சார்பில் சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதிவானுமான அயோனா விமலரத்ன கடந்த 9 ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தார். இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று கல்பிட்டி பொலிஸில் ஆஜராக வந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/188923
  17. Published By: DIGITAL DESK 3 20 JUL, 2024 | 03:53 PM யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற 4 கடற்தொழிலாளர்கள் சுமார் 12 நாட்களுக்கு மேலாக கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வல்வெட்டித்துறை, முள்ளியான், கல்முனை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 04 கடற்தொழிலாளர்களும் கடந்த 07ஆம் திகதி ஒரு படகில் கடற்தொழிலுக்கு சென்று இருந்தனர். தொழிலுக்கு சென்ற நால்வரும் 05 தினங்களுக்குள் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனாலும் அவர்கள் 12 நாட்களாக கரை திரும்பவில்லை என பருத்தித்துறை போலிஸ் நிலையத்தில் கடற்தொழிலாளர்களின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பருத்தித்துறை பொலிஸார் கடற்படையினருக்கும் தகவல் வழங்கியுள்ள நிலையில் கடற்படையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/188945
  18. ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது தமிழ் மக்களுக்கு நல்லது - சி.வி விக்னேஸ்வரன் Published By: DIGITAL DESK 3 20 JUL, 2024 | 04:09 PM ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது முழு நாட்டிற்கும் நன்மை பயக்கும். அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு நன்மையே. இந்த ஜனாதிபதி தேர்தலை பொறுத்த வரைக்கும் வேட்பாளர் எவரும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற முடியாத நிலைமை காணப்படுகிறது. அதனால் அவர்கள் சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெற முனைப்பு காட்டுவார்கள். அதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் எவரும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத நிலைமை ஏற்படும் போது நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் போகும். ஏற்கனேவே நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் காணப்படுகிறது. அந்நிலையில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாது போனால் நாடும் மிக மோசமான பொருளாதார பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். அத்துடன், தேர்தலுக்காக பெருமளவான நிதிகள் செலவழிக்கப்பட வேண்டிய நிலைமையும் ஏற்படும். அதுவும் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும். எனவே, அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ஒரு வருட காலத்திற்கு ஜனாதிபதி தேர்தலை பிற்போட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/188949
  19. 20 JUL, 2024 | 11:38 AM இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் வெள்ளிக்கிழமை (19) மாலை பாரிய தீ விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த கப்பல் இந்தியாவின் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த போது கோவாவின் தென்மேற்கே உள்ள கார்வார் கடற்பகுதியில் தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. MV Maersk Frankfurt என்ற கப்பலே தீ விபத்துக்குள்ளாகி உள்ளது. தீ விபத்தில் கப்பலின் முன் பகுதி வெடித்துள்ளது. தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கப்பலில் பிலிப்பைன்ஸ், மாண்டினெக்ரின் மற்றும் உக்ரைன் நாட்டவர்கள் உட்பட 21 பணியாளர்கள் இருந்துள்ளனர். கப்பலில் தீ மேலும் பாரவாமல் இந்திய கடலோர காவல்படை தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. “அவசர தீ விபத்தின்போது நீர்த்தாரைக்காக பயன்படுத்தப்படும் டோர்னியர் (Dornier) ரக விமானம் அனுப்பப்பட்டது.இந்தக் கப்பல் சர்வதேச கடல்சார் அபாயகரமான பொருட்கள் (ஐஎம்டிஜி) ஏற்றிச் சென்றதாகவும், கப்பலின் முன் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது” என இந்திய கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/188921
  20. தொடரும் ஆர்ப்பாட்டங்கள் - வன்முறைகள் - நேற்று 35க்கும் அதிகமானவர்கள் பலி – ஊரடங்கை அறிவித்தது பங்களாதேஸ் அரசாங்கம் Published By: RAJEEBAN 20 JUL, 2024 | 09:14 AM அரச வேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டு முறைகளிற்கு எதிரான மாணவர்களின் போராட்டம் பெரும் வன்முறையாக மூண்டுள்ளதை தொடர்ந்துபங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையிலேயே அரசாங்கம் ஊரடங்கை அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை நர்சிங்டி சிறைச்சாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ள நிலையிலேயே பிரதமர் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இராணுவத்தை பயன்படுத்தப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வன்முறைகள் மூண்டதை தொடர்ந்து சுமார் 67 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன எனினும் உண்மையான எண்ணிக்கையை மதிப்பிட முடியாத நிலை காணப்படுகின்றது. ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளை தொடர்ந்து பங்களாதேஸ் தநைகரில் இணையசேவைகள் தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. டாக்காவில் பொதுப்போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது வீதிகளில் பொலிஸார் இராணுவத்தினர் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. மாணவர்கள் தங்கள் ஆர்ப்பாட்டங்களை தொடரப்போவதாக தெரிவித்துள்ளனர்.கடந்த ஒரு வாரகாலமாக காணப்படும் முழுமையான முடக்கல் நிலையை தொடரப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எங்கள் சகோதாரர்களின் இரத்தம் வீணாவதற்கு அனுமதிக்கமாட்டோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர் டாக்கா பல்கலைகழக மாணவர்களிற்கு ஏனைய பல்கலைகழக மாணவர்களும் ஆதரவை வெளியிட்டுள்ளதுடன் அவர்களுடன் போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர். 1971ம் ஆண்டு முதல் நாட்டில் காணப்படும் அரசாங்க வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு முறையை கைவிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மாணவர்கள் தரத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என தெரிவிக்கின்றனர். 1971 ம் ஆண்டு சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிள்ளைகள் உட்பட விசேட குழுவினருக்கு ஆயிரக்கணக்கான அரசவேலை வாய்ப்புகளை ஒதுக்கும் நடைமுறை பங்களாதேசில் காணப்படுகின்றது. இந்த முறையின் கீழ் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் சிறுபான்மை இனக்குழுக்களை சேர்ந்தவர்களிற்கு அரசவேலைகளில் ஒதுக்கீடு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 2018 இல் இந்தஒதுக்கீட்டு முறை இடை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து கடும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இந்நிலையில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு 30 வீத ஒதுக்கீட்டை மீள வழங்கவேண்டும் என உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது . இது புதிய ஆர்ப்பாட்டங்களிற்கு வழிவகுத்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் சிறுபான்மை இனங்களை சேர்ந்தவர்களிற்கு ஆறு வித ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வம்சாவளியினருக்கு ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்க்கின்றனர். இந்த ஒதுக்கீட்டை நான்கு வாரங்களிற்கு ஒத்திவைப்பதாக கடந்த வாரம் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.நான்கு வாரங்களில் இது குறித்த தீர்ப்பை வழங்குவதாக தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் மாணவர்களை கல்விநடவடிக்கைகளை தொடருமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த ஒதுக்கீடு முறையை நிறுத்தவேண்டும் என கோரி திங்கட்கிழமை முதல் பங்களாதேஷ் பல்கலைகழகங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த முறை பிரதமர் ஷேக் ஹசினாவிற்கு ஆதரவு வழங்குபவர்களின் குடும்பங்களிற்கு சாதமாக காணப்படுவதாக விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/188906
  21. 19 JUL, 2024 | 10:13 PM பாலஸ்தீனபகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளமை சட்டவிரோதமான செயல் என நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையிலும் ஜெரூசலேத்திலும் குடியேற்றங்களை ஏற்படுத்துவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் அந்தபகுதிகளிலும் காசாவிலும் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை இஸ்ரேல் விரைவில் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. பாலஸ்தீனபகுதியில் இஸ்ரேல் தொடர்ந்தும் பிரசன்னமாகியிருப்பதை சட்டவிரோதமானதாக கருதுவதாக நீதிமன்றத்தின் தலைவர் நவாஸ் சலாம் தெரிவித்துள்ளார். மிகவிரைவில் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவிற்கு கொண்டுவரவேண்டிய கடப்பாடு இஸ்ரேலிற்குள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 2005இல் காசா பள்ளத்தாக்கிலிருந்து இஸ்ரேல் வெளியேறியமை ஆக்கிரமிப்பை முடிவிற்கு கொண்டுவரவில்லை ஏனென்றால் இஸ்ரேல் தொடர்ந்தும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/188896
  22. Published By: RAJEEBAN 20 JUL, 2024 | 09:34 AM ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா ஆகஸ்ட்மாதம் அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் இராணுவதளபதியின் சிரேஸ்ட ஆலோசகர் ஜகன்ன கிருஸ்ணகுமார், மூலோபாய ஆலோசகர் வெங்கடேஸ் தர்மராஜா ஆகியோரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது. சரத்பொன்சேகா சுயாதீன மக்கள் வேட்பாளராக போட்டியிடுவார் என தெரிவித்துள்ள அவர்கள் அவருக்கு பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முக்கிய பிரமுகர்களும் ஆதரவளிப்பாளர்கள் என தெரிவித்துள்ளனர். சிலவிடயங்கள் குறித்து இறுதிதீர்மானம் எடுக்கவேண்டியிருந்ததால் அவரது அறிவிப்பு வெளியாவது தாமதமானது என அவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/188912
  23. ‘தோட்டா என்னை நோக்கி வந்தபோது…’ - தாக்குதல் முயற்சி குறித்து டிரம்ப் சொன்னது என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,"கடவுளின் கருணையால் உயிரோடு இருக்கிறேன்," என்றார் டிரம்ப் கட்டுரை தகவல் எழுதியவர், மைக் வென்ட்லிங் பதவி, மில்வாக்கியில் நடைபெற்ற குடியரசு கட்சி மாநாட்டிலிருந்து 19 ஜூலை 2024 அமெரிக்க அரசியலை புரட்டிப்போட்ட சில கொந்தளிப்பான வாரங்களையடுத்து, வியாழக்கிழமை (ஜூலை 18) இரவு மூன்றாவது முறையாக குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான வேட்புமனுவை ஏற்றுக்கொண்ட டொனால்ட் டிரம்ப், தேச ஒற்றுமை மற்றும் பலம் ஆகியவற்றை வலியுறுத்தினார். அமெரிக்க இசைக்கலைஞர் கிட் ராக்கின் இசை நிகழ்ச்சி, உலகளாவிய கலப்பு தற்காப்புக் கலை அமைப்பான அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப்பின் தலைவர் டானா ஒயிட்-இன் வரவேற்புரை, தனது அடையாளமாக விளங்கும் மேல்சட்டையை கிழித்தெறிந்து, டிரம்ப்பை ஆதரித்துப் பேசிய முன்னாள் மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன், டிரம்ப்பின் பிரசார பாடலான ‘காட் பிளெஸ் தி யு.எஸ்.ஏ’ பாடலின் இசை நிகழ்ச்சி ஆகியவை இந்த மாநாட்டில் நிகழ்த்தப்பட்டன. டொனால்ட் டிரம்ப் மேடையில் தோன்றியபோது, பிரமாண்டமான மின்விளக்குகளால் எழுதப்பட்ட அவருடைய பெயர் தோன்றியது. ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக அமைந்த டிரம்ப்பின் பேச்சு, தொடக்கத்தில் ஆக்ரோஷமாக அமைந்தாலும் பின்னர் அடிக்கடி தனது உரையிலிருந்து விலகி அமைதியாகப் பேசினார். சமீபத்தில் அவருடைய உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை விளக்கிய டொனால்ட் டிரம்ப், தான் தெய்வீக தலையீட்டால் தான் உயிர்பிழைத்ததாகத் தெரிவித்தார். அமெரிக்க மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை டிரம்ப் வலியுறுத்திய போதிலும், ஜனநாயகக் கட்சி தலைவர்களை அவரால் கேலி செய்யாமல் இருக்க முடியவில்லை டிரம்பின் இந்த உரையில் கவனிக்க வேண்டிய ஐந்து முக்கியமான விஷயங்கள் என்ன? பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"வலது காதின் மேல் பகுதியில் தோட்டா ஒன்று துளைத்துச் சென்றது,” என்றார் டிரம்ப். ‘கடவுளின் கருணையால் இங்கு இருக்கிறேன்’ கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாக்குதல் முயற்சியை டிரம்ப் தன் பேச்சில் நினைவுகூர்ந்தார். குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் மத்தியில் பேசிய அவர், “என் உயிரைப் பறிப்பதற்கு கால் அங்குலம் அளவில் என்னை நோக்கி தோட்டா வந்தது,” என்றார். டெலிபிராம்ப்ட்ரில் குடியேற்றம் தொடர்பான விளக்கப்படத்தைப் பார்ப்பதற்காக தான் லேசாக தலையை சாய்த்ததாக அவர் கூறினார். “அந்த விளக்கப்படத்தைப் பார்க்க என் வலதுபக்கம் திரும்ப தொடங்கினேன். நல்லவேளையாக, நானும் இன்னும் அதிகமாக திரும்பவில்லை. அப்போது, உச்ச ஸ்துதியில் விசில் போன்ற சத்தத்துடன் வலது காதின் மேல் பகுதியில் தோட்டா ஒன்று துளைத்துச் சென்றது,” என்றார் டிரம்ப். “அது என்ன? அது தோட்டாவாகத் தான் இருக்க முடியும் என எனக்குள் நான் கூறிக்கொண்டேன்,” என்றார். விரைவாக மேடைக்கு வந்த ரகசிய சேவை முகவர்கள் 'மிக தைரியமானவர்கள்' என டிரம்ப் தெரிவித்தார். “எல்லாம்வல்ல இறைவனின் கருணையால் தான் உங்கள் முன் நான் இப்போது நிற்கிறேன்,” என அவர் கூறினார். “இது அதிர்ஷ்டவசமானது என பலரும் கூறுகின்றனர். அப்படியும் இருக்கலாம்,” என்றார். தாக்குதல் முயற்சி நிகழ்ந்த பென்சில்வேனியாவின் பட்லரில் நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் குழுமியிருந்த பார்வையாளர்கள் பதற்றம் மற்றும் கூட்டநெரிசலை ஏற்படுத்தாமல் இருந்ததற்காக பாராட்டு தெரிவித்தார். “அவர்கள் என்னை விட விரும்பவில்லை, அவர்களின் முகங்களில் இருந்த அன்பை நீங்கள் பார்த்திருக்கலாம்,” என்றார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"அமெரிக்க வரலாற்றில் மோசமான அதிபர்களுள் ஒருவர் பைடன்." பைடனை ஒருமுறை மட்டுமே குறிப்பிட்ட டிரம்ப் பலவழிகளில் ஜோ பைடனின் கொள்கைகள் குறித்து டிரம்ப் கடுமையாக விமர்சித்தாலும், தன் அரசியல் எதிரியின் பெயரை ஒருமுறை மட்டுமே நேரடியாக குறிப்பிட்டார். தன்னுடைய மற்ற பொதுக் கூட்டங்களில் அடிக்கடி குறிப்பிட்டது போலவே, அமெரிக்க வரலாற்றில் மோசமான அதிபர்களுள் ஒருவர் பைடன் என டிரம்ப் குறிப்பிட்டார். “இந்த நாட்டுக்கு அவர் நிகழ்த்திய சேதங்கள் நினைக்க முடியாத அளவு பெரிது,” என டிரம்ப் கூறினார். அதிபர் தேர்தலில் பைடன் போட்டியிடுவது குறித்து நிச்சயமற்ற சூழல் நீடிக்கிறது. கடந்த புதன்கிழமை கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட பைடன், டெலவாரே-யில் உள்ள தன் வீட்டில் ஓய்வில் உள்ளார். அதிபர் தேர்தலில் பைடன் போட்டியிடுவது குறித்து பாரக் ஒபாமா போன்ற ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் கேள்வி எழுப்புவதாக வரும் தகவல்கள், புதிய வேட்பாளருக்கு வழிவிட்டு போட்டியிலிருந்து விலகுமாறு கூறும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிகரித்துவரும் நிலையிலும், தேர்தலில் போட்டியிடுவதாக பைடன் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2020 அதிபர் தேர்தலில் நடைபெற்ற மோசடி காரணமாகவே தான் தோற்க நேர்ந்ததாக அடிப்படையற்ற வாதத்தையும் பலமுறை முன்வைத்தார் தவறான கூற்றுகள் “தெற்கு எல்லையில் தான் (டிரம்ப் ஆட்சிக்காலத்தில் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் பொருட்டு) எழுப்பிய சுவற்றில் மீதமுள்ள பணிகளும் முடிக்கப்படும்,” என அவர் உறுதியளித்தார். இந்தக் கூற்று துல்லியமானது அல்ல, அவருடைய ஆட்சிக்காலத்தில் 500 மைல் தொலைவுக்கும் குறைவாகவே கட்டி முடிக்கப்பட்டது. “மளிகை பொருட்கள் 50% விலை உயர்ந்துவிட்டது, எரிவாயு 60-70% உயர்ந்துவிட்டது, அடமான விகிதம் நான்கு மடங்கு உயர்ந்துவிட்டது,” என பணவீக்கம் மிக அதிகமாக இருப்பதாக அவர் சித்தரித்தார். அமெரிக்க வாக்காளர்களிடையே பணவீக்கம் முக்கியமான பிரச்னையாக உள்ளது. ஆனால், பைடன் ஜனவரி 2021-இல் அதிபரானதிலிருந்து சுமார் 20% அளவுக்குதான் விலைகள் உயர்ந்துள்ளன. 2020-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் நடைபெற்ற மோசடி காரணமாகவே தான் தோற்க நேர்ந்ததாக அடிப்படையற்ற வாதத்தையும் பலமுறை முன்வைத்தார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,டிரம்ப் உரை நிகழ்த்திய பின்னர் அவருடைய குடும்பத்தினர் மேடையில் தோன்றினர். மேடையில் கூடிய டிரம்ப்பின் குடும்பம் வழக்கமாக நடைபெறுவது போலவே, டிரம்ப்பின் குடும்பத்தினர் மேடையில் கூடியதுடன் மாநாடு நிறைவடைந்தது. ஆனால், டிரம்ப்பின் குடும்பத்தினர் தற்போது இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமல்லாமல், குடியரசு கட்சியின் உண்மையான அதிகார செல்வாக்கு படைத்தவர்களாகவும் கட்சியின் வாரிசுகளாக உருவெடுக்கும் சாத்தியக்கூறு உள்ளவர்களாகவும் திகழ்கின்றனர். டிரம்ப்பின் மகன்கள் எரிக் மற்றும் டான் ஜூனியர் இருவரும் மாநாட்டு பேச்சுகளில் முக்கிய இடம் வகித்தனர், தன் தந்தை துணை அதிபரை தேர்ந்தெடுப்பதில் குறிப்பிடத்தகுந்த செல்வாக்கு செலுத்தும் நபராக டான் ஜூனியர் உள்ளதாக தகவல் உள்ளது. இந்த வார ஆரம்பத்தில், எரிக்கின் மனைவி லாரா டிரம்ப், கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். குடியரசு தேசிய குழுவின் இணை தலைவராக, தேர்தல் பரப்புரையில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். கோல்ஃப் விளையாட்டில் ஆர்வம் மிக்கவரான டிரம்ப்பின் மூத்த பேத்தி கய் டிரம்ப் உள்ளிட்ட அவருடைய குடும்பத்தில் அதிகம் அறியப்படாத சிலர் குறித்தும் இம்மாநாட்டின் வாயிலாக அறிய முடிந்தது. 17 வயதான கய் டிரம்ப், நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க முடியாது. டிரம்ப் குடும்பத்தை சேர்ந்த மற்றவர்கள் அதிகம் அறியப்படாதவர்கள். பொதுவெளியில் அரிதாகவே தோன்றும் மெலானியா டிரம்ப் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார், ஆனால் இத்தகைய நிகழ்ச்சிகளில் அமெரிக்க வேட்பாளர்களின் மனைவிகள் வழக்கமாக செய்வதுபோன்று அவர் மேடையில் உரை நிகழ்த்தவில்லை. அதேபோன்று, தன் கணவர் ஜாரெட் குஷ்னெருடன் கலந்துகொண்ட டிரம்ப்பின் மகள் இவாங்கா, மாநாட்டில் மட்டும் பங்கேற்றார். ஒருகாலத்தில் தன் தந்தைக்கும் நெருங்கிய ஆலோசகராக இருந்த இவாங்கா, கடந்த முறை டிரம்ப்பின் ஆட்சிக்காலம் முடிவுற்ற பின்னர் அரசியலில் இருந்து விலகிக்கொண்டார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,டிரம்ப் பேச்சுக்கு ஆரவாரம் செய்யும் குடியரசு கட்சி பிரதிநிதிகள் ஒற்றுமைக்கான செய்தி தேசிய ஒற்றுமை எனும் கருத்தை டிரம்ப் தனது பேச்சில் மேலோட்டமாக நிறுவ முயற்சி செய்தார். ஆனால், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் அவர்களின் கொள்கைகளை தீவிரமாக விமர்சிப்பதிலிருந்து சில சமயங்களில் அவர் விலகியிருந்தார். தனது பேச்சின் தொடக்கத்தில், “வெவ்வேறு இனம், மதம், நிறம், கோட்பாடுகள் கொண்ட அனைவருக்காகவும் பாதுகாப்பான, வளம்மிக்க, சுதந்திரம் கொண்ட புதிய சகாப்தத்தை நாம் அனைவரும் இணைந்து தொடங்குவோம்,” எனத் தெரிவித்தார். “ஒட்டுமொத்த அமெரிக்காவுக்குமான அதிபராவதற்காக நான் போட்டியிடுகிறேன், பாதி அமெரிக்காவுக்காக அல்ல. ஏனெனில், பாதி அமெரிக்காவுக்கு வெற்றி பெறுவது வெற்றி அல்ல,” என அவர் தெரிவித்தார். எனினும், முக்கிய ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் மீதும் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டின் மிகப்பெரிய சங்கங்களுள் ஒன்றான யுனைடட் ஆட்டோ வொர்க்கர்ஸ் தலைமை மீதும், முன்பு திட்டமிடப்படாத வகையில் உடனடி விமர்சனங்களை முன்வைப்பதிலிருந்து டிரம்ப் விலகவில்லை. பைடன் மீதான அவருடைய விமர்சனங்களுள் ஒன்றாக, அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் முன்னாள் அவைத்தலைவர் நான்சி பெலோசியை 'பித்துப்பிடித்தவர்' என கூறினார். தனக்கு எதிராக உள்ள வழக்குகள் குறித்து குறிப்பிட்ட அவர், “நம் நாட்டை அழிப்பதால் அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார். “ஜனநாயகக் கட்சி நீதித்துறையை பயன்படுத்துவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்,” என டிரம்ப் வலியுறுத்தினார். டிரம்ப்பின் அரசியல் வாழ்க்கை முழுவதும், குடியேற்றம் தொடர்பான பிரச்னை முக்கிய பேசுபொருளாக இருந்துவந்துள்ளது. “இத்தகைய படையெடுப்பு காரணமாக, பல்லாயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் கொல்லப்படுகின்றனர்,” என அவர் சட்ட விரோத குடியேற்றத்தைக் குறிப்பிட்டனர். “பல ஆண்டுகளுக்கு முன்பு அதிபர் டுவைட் டி அய்சன்ஹவ் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்ததைவிட, அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கை (சட்ட விரோத குடியேறிகள் மீது) மேற்கொள்ளப்படும்,” என அவர் உறுதியளித்தார். 1954-ஆம் ஆண்டில் மெக்சிகோவை சேர்ந்த பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வரலாற்றில் மிக நீண்ட மாநாட்டு பேச்சுகளுள் ஒன்றான இந்த உரையில், அதிகமாக குடியேற்றம் குறித்து பேசினார். “இந்த உலகுக்கு நாம் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளோம், நாம் முட்டாள் என நினைத்து உலகம் நம்மை பார்த்து சிரிக்கின்றது,” என அவர் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c897rxwje00o
  24. 19 JUL, 2024 | 08:07 PM (நா.தனுஜா) ஜனாதிபதித்தேர்தல் காலப்பகுதியில் அரச அதிகாரிகளின் நடவடிக்கைகளை மிக உன்னிப்பாகக் கண்காணிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வருடம் ஜனாதிபதித்தேர்தலும், அதனைத்தொடர்ந்து பொதுத்தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் திகதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பதாகவே அரசியல் கட்சிகள் நாடளாவிய ரீதியில் மக்கள் கூட்டங்களை நடாத்துதல், பதாதைகளைக் காட்சிப்படுத்துதல், துண்டுப்பிரசுரம் விநியோகித்தல் உள்ளிட்ட பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. இருப்பினும் இத்தகைய தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் பாராமுகமாக செயற்படும் அரச அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவிருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஜனாதிபதித்தேர்தல் காலப்பகுதியில் அரச அதிகாரிகளின் நடவடிக்கைகளை மிக உன்னிப்பாகக் கண்காணிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, ஜனாதிபதித்தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் அரச அதிகாரிகள் நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களுக்கு அமைவாக செயற்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அத்தோடு சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவேண்டிய கடப்பாடு அரச ஊழியர்களுக்கு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், தேர்தல் சட்டங்களுக்கு முரணான வகையில் சில அரச ஊழியர்கள் குறிப்பிட்ட சில வேட்பாளர்களை ஆதரித்து செயற்படுவதானது மனித உரிமை மீறலாகும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதித்தேர்தல் காலப்பகுதியில் அரச ஊழியர்களும், அரச கட்டமைப்புக்களும் மனித உரிமைகளை மீறும் வகையில் செயற்படக்கூடாது எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/188887
  25. சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்! Published By: VISHNU 19 JUL, 2024 | 11:11 PM யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம் வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமாகி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டமானது, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், பொதுமக்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/188900

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.