Everything posted by ஏராளன்
-
நாட்டின் மக்கள் தொகையில் 16.6% பேர் வறுமையில் வாழ்கின்றனர் - இந்திக உடவத்த
22 Sep, 2025 | 11:43 AM நாட்டு மக்கள் தொகையில் 16.6 சதவீதமானவர்கள் வறுமையில் வாழ்கின்றனர். இது 2030ஆம் ஆண்டுக்குள் 5 சதவீதமாகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது என கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரவித்தார். கண்டி செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு நடைமுறைப்படுத்தும் தேசிய திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இத்திட்டம் குறித்து அரச அதிகாரிகளுக்கு மாவட்ட ரீதியில் தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவே இந்த கூட்டம் கண்டி மாவட்ட செயலாளர் தலைமையில் கண்டியில் நடத்தப்பட்டது. அதன்போதே அவர் தனது தலைமையுரையில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டின் மக்கள் தொகையில் 16.6% பேர் வறுமையில் வாழ்கின்றனர். மேலும் இந்த நிலைமையை 2030ஆம் ஆண்டுக்குள் 5% ஆகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான செயற்றிட்டங்கள் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றார். கண்டி மாவட்ட மேலதிகச் செயலாளர் லலித் அட்டம்பாவல உட்பட மற்றும் பல அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/225732
-
இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண்களை விமான பணிப்பெண்களைப் போன்ற சீருடையில் பணியமர்த்த நடவடிக்கை
Published By: Digital Desk 1 21 Sep, 2025 | 03:35 PM இலங்கை போக்குவரத்து சபைக்கு சாரதிகள் மற்றும் நடத்துநர்களாக பெண்களையும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. அந்தவகையில், அவர்களுக்கு விமானப் பணிப்பெண்களின் சீருடைக்கு போன்ற சீருடை வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 450 சாரதிகள் மற்றும் 300 நடத்துனர்களை பணியமர்த்துவதற்கான நேர்காணல்கள் நடைபெற்று வருவதாகவும், அதில் பெண் ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப கட்டத்தில், இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதற்கு முன்பு, கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை பஸ்களில் பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள். https://www.virakesari.lk/article/225667
-
எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
கரடிக்கு குளிர்பானம் கொடுத்த இளைஞருக்கு தண்டனை! அதிவேகத்தில் வந்த கார், நூலிழையில் உயிர் தப்பிய நபர்!!
-
யாழ். பொது நூலகத்தில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தல்
21 Sep, 2025 | 01:39 PM யாழ்ப்பாணம் பொது நூலகத்தில், சிறுவர் பகுதியில் புத்தக கண்காட்சியும், ஆவணவாக்கல் பகுதியில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தலும் நடைபெற்றது. உள்ளூராட்சி வாரம், மற்றும் தேசிய வாசிப்பு மாத செயற்றிட்டங்களின் தொடர்ச்சியாக அவை நடைபெற்றது. அவற்றை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். https://www.virakesari.lk/article/225662
-
திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு
தியாக தீபம் திலீபனின் 07ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் 21 Sep, 2025 | 01:39 PM தியாக தீபம் திலீபனின் 07ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/225660
-
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரத்துக்குள் முடிவு என்கிறது பிரதான எதிர்க்கட்சி
21 Sep, 2025 | 01:36 PM ஆர்.ராம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுவது தொடர்பில் அடுத்தவார இறுதிக்குள் தீர்மானிக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப்பிரேரணை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி கொறடாவுமான கயந்த கருணாதிலக்க தெரிவிக்கையில், சபாநாயகர் மீதான நம்பிக்கை இழப்பு குறித்து நாங்கள் தற்போது ஆய்வு செய்து வருகிறோம். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவது தொடாபில் பரிசீலிக்க வேண்டும் என்று எங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர். அந்த வகையில் அந்த விடயம் சம்பந்தமாக அடுத்தவாரம் இறுதி முடிவினை எடுப்போம் என்றார். முன்னதாக, எதிர்க்கட்சியின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க சபாநாயகர் தவறினால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார எச்சரிக்கை விடுத்திருந்தார். குறிப்பாக, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக சட்டமா அதிபர் அறிக்கை மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த 10ஆம் திகதி சபாநாயகர் ஜகத் விக்ரமத்ன தனது முடிவினை அறிவித்திருந்தார். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் அந்த அறிவிப்புக்கு எதிராக கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்ததோடு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் சட்டமா அதிபரின் அறிக்கை ஆகியவற்றை சபையில் சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தது. எனினும், அதற்கு ஆளும் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிக்கைகளை நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பித்த உறுப்பினர்கள் சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அடுத்தவாரம், பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த அறிக்கையை பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225657
-
அநுரவின் அரசு பழிவாங்கும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை : சந்திரிகா விசனம்
21 Sep, 2025 | 11:42 AM (நமது நிருபர்) நல்லாட்சியை முன்னெடுப்பதை விடவும், பழிவாங்கும் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகின்றது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விசனம் வெளியிட்டுள்ளார். கொழும்பில் பிரத்தியேகமாக இல்லமொன்றை பெற்றுள்ள நிலையில் அதன் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது. அதேநேரம், எனக்கு மருத்துவச் சிகிச்சைகளையும் பெறவேண்டியுள்ளது. ஆகவே, தற்போதைய அரச இல்லத்தில் தங்குவதற்கு இரண்டு மாத கால அவகாசம் கோரியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்கும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டமை உட்பட சமகால நிலைமைகள் சம்பந்தமாக ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 1994 முதல் 2005 வரை ஆட்சி செய்த எனக்கு டொரின்டனில் அரச இல்லம் வழங்கப்பட்டது. நான் இந்த இல்லத்திற்கு வரும்போது ஒரு புல்கூட இருக்கவில்லை. நிலம் கூட நடக்க முடியாத அளவில் தான் இருந்தது. அப்பணிகளை முன்னெடுப்பதற்கான நிதியை அப்போதைய ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரியபோது, அவர்கள் அதனை வழங்குவதற்கு மறுத்துவிட்டார்கள். அதன்பின்னர் நான் எனது சொந்த நிதியில் இருந்து 14மில்லியன் ரூபா செலவழித்தே புனரமைப்பு பணிகளை முன்னெடுத்தேன். தற்போது சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் நான் விழுந்தமையால் இடுப்பு பகுதியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்கான சிகிச்சையைப் பெற்றுவருகின்றறேன். தினமும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியுள்ளது. ஆகவே, இந்த இல்லத்தில் ஆயுட்காலம் வரையில் தங்கியிருப்பதற்கான அனுமதியைக்கோரி ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கத்துக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தேன். ஆனால் அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனது ரோஸ்மீட் பிளேஸ் வீட்டை விற்ற பிறகு கொழும்பில் தனக்கு வீடு இல்லை. கொழும்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும் முயற்சிகளை நான் முன்னெடுத்தபோது ஜே.வி.பி-சார்ந்த ஊடக மிரட்டல்களால் அவை தடைப்பட்டன. குறிப்பாக வீட்டின் உரிமையாளர்களுடன் உரையாடி அவற்றை பெறுவதற்கான பரிவர்த்தனைகளை முன்னெடுக்க முயன்றபோது அச்செயற்பாடுகளை தடுப்பதற்காக பல்வேறு சாட்டுகள் கூறப்பட்டன. அதற்கான காரணத்தினை ஆராய்ந்தபோது, ஜே.வி.பி தங்கள் அன்பான ஊடகவியலாளர்களை நியமித்து என்னைப்பற்றி அவதூறு பேசியதாக கேள்விப்பட்டேன். இந்த நிலையில் கொழும்பில் பிரத்தியேகமாக தங்குவதற்கான சிறிய இல்லமொன்றை தற்போது பெற்றுக்கொண்டுள்ளேன். அங்கு, புணரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கு இரண்டு மாதங்கள் தேவைப்படுவதால் அதுவரையில் அரச இல்லத்திலேயே தங்குவதற்கு அனுமதி கோரியுள்ளேன். பல நாடுகளில், இதை விட பல சலுகைகள் உள்ளன. இந்தியாவில் கூட, சிறந்த சலுகைகள் உள்ளன. ஆனால் அரசாங்கம் அதுபற்றி கவனம் செலுத்தவில்லை. எனது மகன் லண்டனில் இருந்து நாடு திரும்பியிருந்ததோடு சிறிதுகாலம் ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார். அதேநேரம் ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தற்போதைய அரசாங்கத்தால் விசாரணைக்கு உட்படாதவொரேயொரு நபர் நான் தான். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பது வெளிப்படையாகின்றது. மேலும் அரசாங்கம் நல்லாட்சியை நிலைநாட்டி முன்னெடுப்பதிலும் பார்க்கவும் ஆட்சியை விட பழிவாங்கும் செயல்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றார்கள். அவர்களுடைய சொந்த அரசாங்கத்தில் ஊழலை எவ்வாறு தடுப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. மோசடி செய்பவர்களைப் கைது செய்கின்றமை பற்றி மட்டுமே அவர்கள் தொடர்ந்து கூச்சலிடுகிறார்கள். நாட்டை வளர்ப்பது பற்றி அவர்கள் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. கல்வித்துறை குழப்பத்தில் உள்ளது. சுகாதாரத்துறை குழப்பத்தில் உள்ளது. அவற்றை அவர்கள் கவனிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/225650
-
கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு
உடலுக்காக வாழ்வது கணையம், கல்லீரல் குறித்தெல்லாம் விவாதம் ஓடுவதால் சொல்கிறேன்: வாயைக் கட்டுப்படுத்துவதும், உடலுக்காகத் தேடித்தேடிச் சாப்பிடுவதும், அதை வலுப்படுத்த உழைப்பதும் ஒரு தனி வேலை. அதற்கு குறுக்குவழியெல்லாம் இல்லை. நல்ல உணவுகளை உண்பதை நம் கலாச்சாரம், சந்தைப் பண்பாடு, சமூகமாக்கல் நடத்தைகள் அனுமதிப்பதில்லை. அதாவது இது குறிப்பாக இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பிரச்சினை. லத்தீன் அமெரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலும் இப்பிரச்சினை வலுத்து மக்களின் உடல் ஆரோக்கியம் சீர்கெட்டுப் பாதாளத்தில் கிடக்கிறது. ஆனால் பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளில் நவீன துரித உணவு நுகர்வுக் கலாச்சார சுனாமிக்குள் வந்துவிட்ட மக்களைத் தவிர பிறர் சமச்சீரான உணவையே எடுத்துக் கொள்கிறார்கள். இந்தியாவில் நாம் அப்படிச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. நாம் காலனிய வரலாற்றுக்குள் போனாலே பஞ்சத்திலும் பல்வேறு நோய்த்தொற்றிலும் மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்த சம்பங்களே கிடைக்கின்றன. அதற்குப் பின்னால் போனாலும் மக்கள் அதிகமாக காய்கறிகளும், புரதமும் எடுத்துக்கொண்டு வாழ்ந்த காலம் ஒன்று உள்ளதா, அது எப்போது எனத் தெரியவில்லை. ஆனால் சிந்து சமவெளி நாகரிகச் சான்றுகள் தொடங்கி, வேதகால, சங்க கால, ஆயுர்வேத, பௌத்தப் பிரதிகளைப் பார்க்கையில் மக்கள் சீதோஷ்ணத்துக்கும் தாம் வாழும் மண்ணுக்கும் ஏற்ற சமச்சீரான உணவுகளை உண்டு வந்தார்கள் எனத் தெரிகிறது. நமக்கு சனியன் பிடித்ததே பரங்கிகள் வந்தபோதுதான். அவர்கள் 200 ஆண்டுகள் ஆட்சியில் நம் செல்வத்தை மட்டும் சுரண்டவில்லை, நம் உணவுப் பழக்கத்தையும் மாற்றினார்கள். பணப்பயிர்களை அதிகமாக விளைவிக்க வைத்தார்கள், அதனால் உள்ளூர் பயிர்கள் அழிந்தன. வங்காளப் பஞ்சமே அவர்கள் மக்கள் பயன்பாட்டுக்கான அரிசியை ஏற்றுமதி செய்ததால் ஏற்பட்டதுதானே. ஆனால் பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் காலனியவாதிகளாக இருந்ததால் அவர்களுடைய பாரம்பரிய உணவுக் கலாசாரம் அழியவில்லை. ஜப்பானும் பெருமளவு காலனியத்துக்கு உட்படவில்லை. நாம் ஏற்கனவே சோற்றையும் கோதுமையையும் தாம் சார்ந்திருந்தோம், பஞ்சங்கள் காரணமாக நம் மரபணுக்களும் மாறிப்போய் மாவுச்சத்து கொஞ்சம் மிகுந்தால் எடை அதிகமாகும் நிலை ஏற்பட்டது. ஐரோப்பியர்களுடன் ஒப்பிடுகையில் நம் உடலில் தசைகள் குறைவு என்பது ஒரு காலனிய வரலாற்றுத் தொடர்ச்சியாகவே இருக்க வேண்டும் (தசைகள் குறைவான உடலுக்கு குறைவான ஆற்றலும், குறைவான சத்துணவும் போதும்.) நமக்கு நிகழ்ந்த மற்றொரு துரதிஷ்டம் 'பசுமைப் புரட்சி' - அது நம் சிறுதானியங்களையும் உள்ளூர் அரிசி வகைகளையும் அழித்தது. கொஞ்ச நஞ்சம் இருந்த பன்மையையும் ஒழித்து முழுமையாக மாவுச்சத்து உணவுக்கு அடிமையாக்கியது. அதை முதலாம் கட்ட மறைமுகக் காலனியவாதம் என்று சொல்லலாம். தாராளமயமாக்கல், உலகமயமாக்கலால் சந்தையில் வந்து குவிந்த இனிப்பும் எண்ணெய்யும் மிகுந்த துரித உணவுகளை இரண்டாம் கட்ட மறைமுக காலனியவாதம் எனக் கூறலாம். இந்தச் சூழலில் நாம் ஒழுங்காக உணவை எடுத்துக்கொள்ள தாராளமய சந்தைக்கு, மாவுச்சத்தை குறைந்த செலவில் சுவையாக உணவளிக்கும் உணவுக் கடைகளின் மலிவான மார்க்கத்துக்கு, சுவையை அழுத்தத்தில் இருந்து தப்பிக்கும் போதையாகப் பாவிக்கும் பொதுமக்கள் பண்பாட்டுக்கு, பலவிதமான மூடநம்பிக்கைகளுக்கு (பாக்கெட்டில் கிடைப்பன, இனிப்பானவை நல்ல உணவுகள், சர்க்கரை நோய் இல்லாதவர்கள் நிறைய சர்க்கரை சாப்பிடலாம், ஆரோக்கியமானவர்கள் குண்டாக இருப்பார்கள், நோய் வருவதைத் தவிர்க்க முடியாது) எதிராகப் போராட வேண்டும். ஒரு பண்டிகையோ, திருவிழாவோ, கொண்டாட்டமோ, சந்திப்போ இம்மாதிரி சத்தற்ற மோசமான உணவுகளை உண்ணாமல் சமூகமாக்கல் பண்ண முடியாது. முடிந்த அளவுக்கு தினசரி உணவுகளைச் சமச்சீராக வைத்துக்கொண்டு நண்பர்களுடன் உணவருந்தி சமூகமாக்கல் பண்ண பெரிதாக முயற்சி எடுக்க வேண்டும். காய்கறிகளும் புரதச்சத்து உணவுகளும் விலை அதிகம். நீங்கள் வீட்டில் சமைக்காதவர் என்றால் குப்பையைத் தான் தின்ன முடியும். நான் வீட்டில் உணவு சமைக்காத நாட்களில் என் கல்லூரி வளாகத்தில் முட்டையைத் தவிர வேறொன்றையும் தின்ன முடியாது. அதுவும் அம்முட்டையையும் ஒரே ஒரு கடையில்தான் வைத்திருப்பார்கள். கீட்டோ உணவு எடுத்துக்கொள்வோரு எதிராக 18,000 பேர்கள் இணைந்து நிற்பதாக எனக்கு அப்போது தோன்றும். ஏன் எனக்கு உள்ள கவலை இத்தனை ஆயிரம் பேர்களுக்கு இல்லை என ஆச்சரியம் ஏற்படும். நல்ல உணவு உண்டால் பல்வேறு நோய்கள், வலிகள், மனச்சோர்வு, அழுத்தம் ஏற்படாமல், பிறக்கப் போகும் குழந்தைக்கு மனநல வளர்ச்சியின்மை நோய் ஏற்படாமல் தவிர்க்கலாமே, அதற்காகச் செய்தாலே எவ்வளவு ஆற்றலும் பணமும் மீதமாகும் என யோசிப்பேன். ஆனால் யாருக்கும் அவகாசமோ ஆற்றலோ இல்லை. ஒரு சமூகமாகவே நாம் இன்னும் காலனிய பிரஜை மனநிலையில் இருந்து மீளவில்லை. நம் பண்பாடும் அரசியலும் கூட அதைத் தாண்டி வரவில்லை. நமது பொருளாதார வளர்ச்சி கூட நம் மக்கள் ஆரோக்கியமாக இருப்பது அடிப்படை உரிமை எனக் கருதும் நிலைக்குத் தள்ளவில்லை. பஞ்சம் வந்துவிடுமோ எனும் அச்சம் நம் மனதுக்குள், அரசின் மூளைக்குள் எங்கோ பதுங்கி இருக்கிறது. குடித்து அழிவதை விட நம் மக்கள் மோசமாக உண்டு அழிவதே இன்றுப் பரவலாக உள்ளது. இதையெல்லாம் சொல்ல எனக்கு ஒரு தகுதி உள்ளது - நான் 25 ஆண்டுகளாக நீரிழிவு நோயாளி. எனக்கு இதுவரையில் கண், சிறுநீரகம், தீராப் பசி, ஆற்றலின்மை, ஆறாத காயத்தால் உடல் உறுப்பு துண்டிப்பு என எப்பிரச்சினைகளும் ஏற்பட்டதில்லை. கடந்த மூன்று ஆண்டுகளக எனக்கு சளி கூட வருவதில்லை. என்னைச் சுற்றி நீரிழிவே இல்லாத, பார்க்க பார்க்க ஒல்லியாக உள்ளவர்களுக்கு வரும் நோய்களைப் பார்த்தால் எனக்கு வியப்பாக உள்ளது. அவர்கள் இவ்வியாதிகளைத் தம் விதியென்று ஏற்றுக் கொள்வதைப் பார்த்தால் இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கும் அவர்களுக்கும் ஒரே முக்கிய வித்தியாசம் தான் - நான் வாயைச் சுலபமாகக் கட்டுப்படுத்துகிறேன், வாரத்திற்கு மூன்று நாட்களாவது விரதம் இருக்கிறேன், நல்ல உணவுகளைத் தேடித்தேடி உண்கிறேன். இளவயதிலேயே நீரிழிவு வந்ததால்தான் நான் சுயமுயற்சியில் இதையெல்லாம் பரிசோதனைச் செய்து பார்த்துக் கற்றுக்கொண்டேன். நீரிழிவு அதனால் ஒரு வரமாக அமைந்துவிட்டது. எனக்கு 40-50 வயதுக்கு மேல் நீரிழிவு வந்திருந்தால் அதற்குப் பழகுவது கடினமாக இருந்திருக்கும் - என் உடல் நிலையும் அதற்கு முன் மோசமாக வீழ்ந்திருக்கும். எனக்கு என் நோயின் நிலையை, அறிவியலைப் புரிந்துகொள்ளவே பத்தாண்டுகளுக்குமேல் பிடித்தது. ஆனால் புரிந்துகொண்ட பின்னர் நான் உணவுதான் மருந்து எனக் கண்டுபிடித்தேன். நீரிழிவு நோய் அல்ல, அது ஒரு அறிகுறி எனப் புரிந்துகொண்டேன். மருத்துவர்களல் நம்மைக் காப்பாற்ற முடியாது (அவர்கள் மருந்து கம்பனிகளின் மறைமுக முகவர்கள் என்பதால்) எனத் தெரிந்துகொண்டேன். உடல் என்பது நான் அல்ல, பல கோடி அணுக்களின், குடல் நுண்ணுயிர்களின் கூட்டமைவு. உடல் என்பது ஒரு ஒப்பந்தம். ஒவ்வொரு அணுவும் எனக்காகப் பணியாற்றும்போது நான் அவற்றுக்காகவும் வேலை செய்வேன். இவ்வுடல் அவ்விதத்தில் ஒரு சிறு வனமும்தான். ஒவ்வொரு உயிரும் அங்கு முக்கிய பங்காற்றும். சூழலை நாம் கெடுத்தால் அந்த உயிரினங்கள் அழிந்து சமநிலைக் குலைந்து வனமே அழிவதைப் போலத்தான் நமக்கு நோய்கள் வந்து உடல் அழிகிறது. உடல் அழிவதானது அணுக்களும் நுண்ணுயிர்களும் கடுமையான் அழுத்தத்துக்கு உள்ளாகி துன்புற்று தம்மை அழிப்பதாகும். அவற்றுக்காக உழைக்கவும் முயற்சி செய்யவும் நான் போராடுவதே இவ்வாழ்க்கை. சமூகத்துக்காகவும் பிறருக்காகவும் இலக்கியத்துக்காகவும் தியாகம் செய்வது இரண்டாம் பட்சமே. ஏனென்றால் அவர்களும் எனக்காக வாழவில்லை. - தம்மை உருவாக்கியுள்ள எண்ணற்ற அணுக்களுக்காகவும் நுண்ணுயிர்களுக்காகவுமே வாழ்கிறார்கள். நாம் இரண்டு கால்கள் முளைத்த பல நூறு கோடி குட்டி வனங்கள். நமக்கு வெளியே உள்ள பல்வேறு உயிரினங்களும் கூட அப்படியே வாழ்கின்றன. கணையமும் கல்லீரலும் கூட நமக்கு அந்நியமான தனி உயிர்களே. அவை நமக்காகப் பணியாற்றுவதும் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலே - அவற்றை நாம் துன்புறுத்தினால் நீயும் வேண்டாம் ஒரு புண்ணாக்கும் வேண்டாம் என அவை தற்கொலை பண்ணிக்கொள்ளும் (apoptosis). நாம் ஒரு உடலுடன் பிறந்திருக்கிறோம், உடல் நமக்கான கருவி என்று நினைப்பது ஒரு அபத்தம் - நாம் எண்ணற்ற உயிர்களின் ஒருங்கிணைப்பாளர்கள், பேரணி நிர்வாகிகள், தொழிற்சாலை மேலாளர்கள் என்று சொல்லலாம். உணவுக்காக அவை நம்மைச் சார்ந்துள்ளன. சரியாக உணவளிக்காவிடில் அவை தர்கொலை பண்ணவோ அழிந்து வீணாகவோ கூடும். நாம் நமக்காக, நம் இன்பத்துக்காக வாழவில்லை - நம் பிரக்ஞையும் இன்பங்களும் கூட நுண்ணுயிர்களும் அணுக்களும் சேர்ந்து ஏற்படுத்தும் தோற்றங்களே. 'நாம்' ஒன்றுமே இல்லை, மனித நிலை, மனித உயிர் என ஒன்றுமில்லை. அணுக்களும் நுண்ணுயிர்களுமே நம் கடவுள் என ஏற்றுக்கொண்டாலே பல பிரச்சினைகள் சரியாகிவிடும். Posted 17 hours ago by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2025/09/blog-post_20.html
-
மாகாணசபைத் தேர்தலை அவசரமாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - வட மாகாண முன்னாள் உறுப்பினர்கள் வலியுறுத்தல்
Published By: Vishnu 21 Sep, 2025 | 06:57 PM இந்தியாவை மீறி மாகாண முறைமையை எவராலும் இல்லாது செய்துவிட முடியாது என சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண சபையின் முன்நாள் உறுப்பினர்கள், தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்யும் மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்த தேர்தலை விரைவாக நடத்த அரசு நடவடிக்கி எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். வன் டெக்ஸ்ட் இன்னிஷியேற்றிவின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (21) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் வடமாகாண சபையில் கடந்தகால அனுபவங்கள் மற்றும் மாகாண சபைக்கான தேர்தலை வலியுறுத்தும் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இந்தக்கலந்துரையாடலில் வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் எஸ்.தவராசா, அமைச்சர்களான குருகுலராஜா, கலாநிதி.சர்வேஸ்வரன், உறுப்பினர்களான சபா.குகதாஸ், கேசவன் சயந்தன், கஜதீபன், ஆர்னோல்ட், சுகிர்தன், தவநாதன், கமலேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபையில் நடைபெற்ற கடந்த காலச் செயற்பாடுகள் சம்பந்தமாக ஆராயும் சந்திப்பு ஆக்கபூர்வமானமாக இருந்தது. இதன்போது முக்கிய விடயமாக மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ந்தும் காலதாமதப்படுத்தப்படுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. அத்துடன், மாகாண சபையை வினைத்திறனுடன் கொண்டு செல்வதற்கான ஏதுநிலைகளை குறித்து அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த நிலையில் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தன. அந்தவகையில், இலங்கைத் தமிழரசுக்கட்சியாகிய நாங்கள், தமிழ் மக்களுக்கு கிடைத்த இரண்டாவது அரசியல் தளமாகவே மாகாண சபையைக் கருதுகின்றோம். அந்த வகையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை தாமதமின்றி முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்றார். ரெலோவின் சார்பில் கருத்து வெளியிட்ட சபா குகதாஸ் தெரிவிக்கையில், தற்போதைய ஜே.வி.பி தலைமையிலான அரசாங்கம் மாகாண சபை முறைமையை விரும்பாத ஒன்றாகவே பார்க்கின்றது. கடந்த காலங்களில் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு மாகாணசபை முறைமைக்கு முழுமையாக எதிரானதாகவே இருந்தது. குறிப்பாக கொள்கை ரீதியாக எதிராகவே செயற்பட்டது. அவ்வாறான நிலையில் தற்போது எல்லை மீள்நிர்ணயத்தினை காரணம் காண்பித்து தேர்தலை தாமதப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்கள். குறிப்பாக தேர்தலை பழைய முறையிலா புதிய முறையிலா நடத்துவது என்ற விவாதத்தையும் கையிலெடுத்து காலத்தை தாழ்த்துவதையே இலக்காகக் கொண்டு வருகின்றார்கள். புதிய முறைமையில் தேர்தலை நடத்துவதென்றால் எல்லை நிர்ணய முறைமையில் ஏற்பட்ட குறைபாடுகள் நீக்கப்பட்டால் அல்லது சீர் செய்யப்பட்டால் தான் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே தான் பழைய முறையில் தேர்தலை நடத்த்துவதே இலகுவானது. அதற்கான தனிநபர் பிரேரணை சமர்பிப்பிக்கப்பட்டுள்ள நிலையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார். ஈ.பி.டி.பி.யின் பிரதிநிதியான தவநான் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கோரிக்கையின் முழுமையான வடிவமாக இல்லாது விட்டாலும் மாகாணசபை முறைமை இனப்பிரச்சினைக்கான தீர்வின் ஆரம்பமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எமது கட்சி, மாகாண சபை முறைமையை தொடர்ச்சியாக வலியுத்தி வருகின்றவொரு தரப்பாகவே உள்ளது. ஆகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தலை தாமமின்றி நடத்த வேண்டும். அதில் அக்கறை காட்டாது இருக்க முடியாது என்றார். புளொட் சார்பில் கலந்து கொண்ட கஜதீபன் தெரிவிக்கையில், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நீண்டகாலமாக இனப்பிரச்சினைக்கான தீர்வை சமஷ்டி முறைமையில் கோரி வருகின்றார்கள். அவர்கள் மாகாண சபை முறைமையை தமக்கான தீர்வாக கருதவில்லை. தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசிய இனத்தின் தீர்வான மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும், முதற்கட்டமாக அரசியலமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு செயற்பாட்டு தளமாக இருப்பது மாகாண சபை முறைமைதான். ஆகவே மாகாண சபைகளுக்கான மக்கள் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். ஈ.பி.ஆர்.எல்.எப்.சார்பில் கலந்து கொண்ட முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு மாகாண சபை முறைமையானது, அவர்களது இருப்புடன் தொடர்புடைய விடயமாகும். ஆனால் ஏனைய மாகாணங்களுக்கு அவ்விதமான நிலைமைகள் இல்லாது இருக்கலாம். அநுர அரசங்கம் தேர்தலை நடத்த விரும்மாவிட்டால் குறைந்த பட்சம் வடக்கு கிழக்கிலாவது தேர்தலை நடத்த வேண்டும். இதை அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்துகின்றோம். சர்வதேச சமூகம் என்று எமது அரசியல் உரிமை குறித்து பேசுகின்றது. இந்திய அரசாங்கமும் மாகாண சபை முறைமையையே ஐ.நாவில் வலியுறுத்துகின்றது. குறிப்பாக ஐ.நாவின் தற்காலிக வரைபில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அர்த்தமுள்ள வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இவ்விடயம் தற்போது சர்வதேச தளத்தில் எழுந்துள்ள குரலாகவே இருக்கின்றது. அதனால் மகாணசபை முறைமை நீக்கப்படாது இருப்ப அவசியமாகும். மேலும் புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகளின் ஊடாக,மாகாண சபை முறைமை நீக்கப்பட்டால் இந்தியாவுடன் இலங்கை நேரடியாக மோதும் நிலைமையையே உருவாக்கும். அதனால் மாகணசபை முறைமையை நீக்க அரசு முயலாது என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றார். https://www.virakesari.lk/article/225686
-
சௌதி அரச குடும்பத்தில் அனைவரையும் தாண்டி குறுகிய காலத்தில் அதிகாரத்தை வசமாக்கிய 'எம்.பி.எஸ்'
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 29 வயதில் முகமது பின் சல்மான் துணை பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டார். கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 21 செப்டெம்பர் 2025, 03:11 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் 2015 ஜனவரி 23ஆம் தேதி, செளதி அரேபிய அரசர் அப்துல்லா நுரையீரல் புற்றுநோயால் இறந்தபோது, சல்மான் பின் அப்துல்அஜிஸ் புதிய மன்னரானார். புதிய மன்னர், உளவுத்துறையின் முன்னாள் தலைவர் முக்ரின் பின் அப்துல்அஜிஸை புதிய பட்டத்து இளவரசராக நியமித்தார், அப்போது அவருக்கு வயது 68. மூன்று மாதங்களுக்குப் பிறகு, யாருமே எதிர்பாராத விதமாக புதிய பட்டத்து இளவரரை மன்னர் சல்மான் பதவி நீக்கம் செய்தார். அவருக்குப் பதிலாக, மன்னர் தன்னுடைய மருமகனான 55 வயது முகமது பின் நயெஃப்-ஐ புதிய பட்டத்து இளவரசராக நியமித்தார். தனது 29 வயது மகன் முகமது பின் சல்மானை துணை பட்டத்து இளவரசராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் நியமித்தார். அதுவரை, முகமது பின் சல்மானின் (MBS) பெயர் செளதி அரேபியாவின் அரசியலில் ஒலித்ததில்லை. அமெரிக்க நிர்வாகத்தினருக்கு நயெஃப் பிடித்தமானவராக இருந்தார். அவர் எஃப்.பி.ஐ.யில் பாதுகாப்பு குறித்த படிப்பை படித்தவர். ஸ்காட்லாந்து யார்டில் பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாயங்களில் பயிற்சியும் பெற்றவர். 2009-ஆம் ஆண்டில், இளவரசர் நயெஃப்பைக் கொல்ல தற்கொலை குண்டுவெடிப்பு முயற்சி நடந்தது, இந்தத் தாக்குதலுக்கு அல்-கொய்தா அமைப்பே காரணம் என்று நம்பப்படுகிறது. பட மூலாதாரம், AP படக்குறிப்பு, முகமது பின் நயெஃப் செளதி மன்னரின் 'கேட் கீப்பர்' ஆக மாறிய சல்மான் "அவர் பாதுகாப்பு அமைச்சராகவும், மன்னரின் அரச நீதிமன்றத்தின் பொதுச் செயலாளராகவும் ஆனவுடன், தனது பதவியைப் பயன்படுத்தி மன்னரின் வாயில் காவலராக மாறத் தொடங்கினார்" என்று டேவிட் ஒட்டாவே தனது 'முகமது பின் சல்மான், தி இக்காரஸ் ஆஃப் செளதி அரேபியா' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். முகமது பின் சல்மான் சுருக்கமாக எம்.பி.எஸ். (MBS) என்று அறியப்படுகிறார். "பல்வேறு காரணங்களுக்காக, எம்.பி.எஸ். தனது தந்தையை குடும்பத்தினரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தினார். மன்னர் சல்மான் தனது மனைவியையும், எம்.பி.எஸ்.-இன் தாயாரையும் சந்திப்பதற்குக்கூட தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது." "தனது தாயையும் இரண்டு சகோதரிகளையும் வீட்டுக் காவலில் வைத்திருந்தார், இந்த விஷயத்தைப் பற்றி அவர் தனது தந்தையிடம் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. தாயைப் பற்றி, தனது தந்தையும் மன்னருமான முகமது பின் நயெஃப் கேட்கும்போதெல்லாம், அவர் சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருப்பதாகக் கூறுவார்." பட மூலாதாரம், Lynne Rienner Publishers Inc படக்குறிப்பு, தி இக்காரஸ் ஆஃப் செளதி அரேபியா புத்தகம் ஏமன் மீதான தாக்குதல் நயெஃப் பட்டத்து இளவரசரான இரண்டு நாட்களுக்குள் அதாவது 2015 ஏப்ரல் 29 அன்று, எம்.பி.எஸ்.-இன் தந்தையான மன்னர் சல்மான், நயெஃபின் அவையைத் தனது அரசவையுடன் இணைத்தார், இதனால் நயெஃபின் அனைத்து அதிகாரங்களும் முடிவுக்கு வந்தன. இந்தக் காலகட்டத்தில், பாதுகாப்பு அமைச்சராக தனது தளத்தை எம்.பி.எஸ். தொடர்ந்து விரிவுபடுத்தி வந்தார். ஏமன் தலைநகரைக் கைப்பற்றிய ஹவுதி கிளர்ச்சியாளர்களை விரட்டியடிக்க மார்ச் 26-ஆம் தேதி அவரது மேற்பார்வையின் கீழ் செளதி அரேபிய விமானப்படை அண்டை நாடான ஏமன் மீது தாக்குதலைத் தொடங்கியது. "முதலில், செளதி அரேபிய மக்கள் இந்தத் தாக்குதலை பாராட்டினார்கள், இரானின் விரிவாக்கத்தை எதிர்க்கும் துணிச்சலை தங்கள் நாடு இறுதியாகக் காட்டிவிட்டதாக அவர்கள் உணர்ந்தார்கள். இருப்பினும், ஒருசில நாட்களுக்குப் பிறகு, இந்தத் தாக்குதல் எம்.பி.எஸ்.-க்கு மாபெரும் பிரச்னையாக மாறியது. இந்தத் தாக்குதலை, அவரது வெளியுறவுக் கொள்கையில் ஒரு பொறுப்பற்ற தன்மையாக சர்வதேச சமூகம் கண்டது." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2015ல் மன்னர் சல்மான், நயெஃபின் அரசவையைத் தனது அரசவையுடன் இணைத்தார். காவலில் வைக்கப்பட்ட நயெஃப் இதற்கிடையில், மன்னர் சல்மான், பட்டத்து இளவரசரான நயெஃப்பை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக தனது மகன் எம்.பி.எஸ்.-க்கு அந்தப் பதவியைத் தர முடிவு செய்துவிட்டார். 2015 ஜூன் 20-ஆம் நாள் இரவு, ரமலான் நோன்பின் இறுதி நாட்களில் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலர் மெக்காவில் கூடியிருந்தனர். அன்று இரவு, நயெஃப் தலைமையிலான அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகார கவுன்சில் கூடுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. கூட்டம் தொடங்குவதற்கு சற்று முன்பு, நயெஃப்-ஐ சந்திக்க விரும்புவதாக மன்னர் சல்மானிடம் இருந்து செய்தி வந்தது. உடனே நயெஃப் தனது இரண்டு மெய்க்காப்பாளர்களுடன், ஹெலிகாப்டரில் சஃபா அரண்மனைக்கு கிளம்பிச் சென்றார். 'தி ரைஸ் டு பவர், முகமது பின் சல்மான்' என்ற தனது புத்தகத்தில் பென் ஹப்பார்ட் இவ்வாறு எழுதியுள்ளார்: "நயெஃப்பும் அவரது இரண்டு மெய்க்காப்பாளர்களும் மன்னரைச் சந்திக்க லிஃப்டில் ஏறினார்கள். முதல் மாடிக்கு சென்றதும், மன்னரின் வீரர்கள் நயெஃப்பின் மெய்க்காப்பாளர்களின் ஆயுதங்கள் மற்றும் மொபைல் போன்களை எடுத்துச் சென்றனர்." "அருகிலுள்ள அறை ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நயெஃப் வெளியேற அனுமதிக்கப்படவில்லை, பட்டத்து இளவரசர் பதவியை ராஜினாமா செய்ய அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு நயெஃப் இணங்கவில்லை." பட மூலாதாரம், William Collins படக்குறிப்பு, ரமலான் நோன்பின் இறுதி நாட்களில் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலர் மெக்காவில் கூடியிருந்தனர். ராஜினாமா செய்த நயெஃப் நயெஃப் வீட்டுக் காவலில் இருந்த அதே இரவில், ராயல் கவுன்சில் உறுப்பினர்களை அழைத்த அரசவை உயர் அதிகாரிகள், எம்.பி.எஸ்.-ஐ பட்டத்து இளவரசராக நியமிக்கும் அரசரின் முடிவுக்கு அவர்கள் உடன்படுகிறார்களா என்று தொலைபேசியில் கேட்டனர். கவுன்சிலின் 34 உறுப்பினர்களில் 31 பேர் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த தொலைபேசி அழைப்புகள் பதிவு செய்யப்பட்டு, நயெஃப்புக்கு போட்டுக் காட்டப்பட்டன. இதன் மூலம் அரசரின் முடிவை அவரது உறவினர்களில் பெரும்பாலானவர்கள் ஆதரித்தனர் என்பது தெரியவந்தது. "அன்றிரவு, நயெஃபுக்கு உணவு மற்றும் நீரிழிவு மருந்துகள் மறுக்கப்பட்டன. மிகவும் சோர்வடைந்திருந்த அவர், ராஜினாமா ஆவணத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டார். அடுத்த நாள் காலையில், மன்னர் சல்மான் இருந்த பக்கத்து அறைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் கேமராக்கள் நிறைந்திருந்தன" என்று பென் ஹப்பார்ட் எழுதுகிறார். "நயெஃப்-ஐ அன்புடன் வரவேற்ற மன்னர், அவரது கையில் முத்தமிட்டார். நயெஃப் தாழ்ந்த குரலில் மன்னரிடம் தனது ஒப்புதலை வெளிப்படுத்தினார். இந்தச் சந்திப்பின் வீடியோ செளதி தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது. அரசருடனான சந்திப்பிற்குப் பின் அறையை விட்டு வெளியேறிய நயெஃப், தனது மெய்க்காப்பாளர்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு அங்கிருந்து ஜெட்டாவில் உள்ள தனது அரண்மனைக்கு வந்த அவர், மன்னருக்கு விசுவாசமான காவலர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எம்.பி.எஸ்.-ஐ பட்டத்து இளவரசராக நியமிக்கும் அரசரின் முடிவுக்கு கவுன்சிலின் 34 உறுப்பினர்களில் 31 பேர் ஆதரவு தெரிவித்தனர். அமைதி காத்த நயெஃப் இந்த விவகாரம் குறித்து கேள்வி கேட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்குப் பதிலளித்த அரசவை செய்தித் தொடர்பாளர், அன்றிரவு நடந்தது என்ன என்பது குறித்து வேறொன்றை சொன்னார். நாட்டின் நலனுக்காக நயெஃப்-ஐ கவுன்சில் நீக்கியது என்றும், அவர் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் ரகசியமானவை என்பதால் அவற்றைப் பகிரங்கப்படுத்த முடியாது என்பதுமே அவர் சொன்ன விளக்கம். அதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, பெயர் குறிப்பிட விரும்பாத செளதி வட்டாரம் ஒன்று ராய்ட்டர்ஸிடம் பேசியபோது, மார்ஃபின் மற்றும் கோகைனுக்கு நயெஃப் அடிமையாகிவிட்டதால், அவரைப் பதவிநீக்கம் செய்ய மன்னர் முடிவு செய்ததாகத் தெரிவித்தது. அந்த ஆண்டின் இறுதியில் நயெஃப்-இன் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அவர் தனது சிகிச்சை குறித்து ஒருபோதும் பகிரங்கமாகப் பேசியதில்லை. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நயெஃப்-இன் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன. முகமது பின் சல்மானின் அரசியல் ஆளுமை 1985 ஆகஸ்ட் 31-ஆம் தேதி பிறந்த முகமது பின் சல்மான் எனும் எம்.பி.எஸ்., ஆறடி உயரம் கொண்டவர். செளதி அரேபியாவின் எல்லா இடங்களிலும் அவர் இருக்கும் சுவரொட்டிகளை காணமுடியும். அரச குடும்பத்தில் வெளிநாட்டுக் கல்வி பெறாத ஒருசில இளவரசர்களில் முகமது பின் சல்மானும் ஒருவர். ரியாத்தில் உள்ள அரசு மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயின்ற அவர், செளதி ராணுவம் அல்லது விமானப்படையில் உறுப்பினராக இருந்ததில்லை. அவரது ஆங்கில ஆசிரியர்களில் ஒருவரான ரஷீத் செகாயிடம் பிபிசி பேசியபோது, "எம்.பி.எஸ். சிறுவயதில் மிகவும் குறும்புக்காரராக இருந்தார். ஆங்கிலம் படிப்பதை விட, அரச மெய்க்காப்பாளர்களுடன் வாக்கி-டாக்கியில் பேசுவதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது" என்று கூறினார். 2007-ஆம் ஆண்டில் எம்.பி.எஸ். பட்டப்படிப்பை முடித்தார். அவருக்கு சாரா பிந்த் மஷூர் என்ற மனைவியும் நான்கு குழந்தைகளும் உள்ளனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அரச குடும்பத்தில் வெளிநாட்டுக் கல்வி பெறாத ஒருசில இளவரசர்களில் முகமது பின் சல்மானும் ஒருவர். பாரம்பரிய பியானோ இசையின் ரசிகர் அமெரிக்காவிற்கு எம்.பி.எஸ். அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியின் வீட்டிற்கு இரவு விருந்துக்குச் சென்றிருந்தார். அது குறித்து பென் ஹப்பார்ட் தனது 'MBS: The Rise to Power of Mohamed bin Salman' என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், "எம்.பி.எஸ். மாலை நேரத்தில் கெர்ரியின் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பியானோவின் மீது அவரது பார்வை சென்றது." "அதைக் கண்ட கெர்ரி, 'உங்களுக்கு பியானோ வாசிக்கத் தெரியுமா?' என்று கேட்டார். உடனே எம்.பி.எஸ். பியானோவில் ஒரு பாரம்பரிய பாடலை வாசித்தபோது, அறையில் இருந்த அனைவருக்கும் வியப்பு மேலிட்டது. வஹாபிகளுக்கு இசையின் மீது வெறுப்பு இருந்ததால், எம்.பி.எஸ். பியானோ வாசிப்பார் என்று கெர்ரி சற்றும் எதிர்பார்க்கவில்லை." நீதிபதியின் மேசையில் வைக்கப்பட்ட துப்பாக்கி ஆரம்பத்திலிருந்தே, முதலீடுகள் மூலம் தனது பொருளாதார சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்புவதில் இளவரசர் சல்மான் முனைப்புடன் இருந்தார். செளதி அரேபியாவின் வரலாற்றை கூர்மையாகக் கவனிக்கும் ரிச்சர்ட் லேசி, "முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராவதற்கு முன்பு, அவரது தந்தை, ரியாத்தில் உள்ள மதிப்புமிக்க நிலம் ஒன்றை வாங்க ஆசைப்பட்டார். ஆனால், நிலத்தின் உரிமையாளருக்கு அதை விற்க விருப்பமில்லை" என்று குறிப்பிடுகிறார். "நில உரிமையாளருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென நீதிபதி ஒருவரிடம் சல்மான் கேட்டுக்கொண்டார். ஆனால், நீதிபதி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. உடனே, நீதிபதியின் மேசையில் துப்பாக்கித் தோட்டாவை வைத்த எம்.பி.எஸ்., தனது பேச்சைக் கேட்கவில்லை என்றால் சுட்டுவிடுவேன் என நீதிபதிக்கு சமிக்ஞை காட்டினார்." எம்.பி.எஸ்.-இன் இந்த நடத்தை குறித்து மன்னர் அப்துல்லாவிடம் நீதிபதி புகார் செய்தார். முகமது பின் சல்மான் இதனை ஒருபோதும் மறுக்கவில்லை. 2011-ஆம் ஆண்டு எம்.பி.எஸ்.-இன் தந்தையை பாதுகாப்பு அமைச்சராக நியமித்தபோது மன்னர் அப்துல்லா அவரிடம் வைத்த நிபந்தனை என்ன தெரியுமா? அவரது மகன் எம்.பி.எஸ். ஒருபோதும் அமைச்சகத்தில் நுழையக்கூடாது என்பதே அந்த நிபந்தனை ஆகும். பட மூலாதாரம், Erin A. Kirk-Cuomo படக்குறிப்பு, சல்மான் பின் அப்துல்அஜிஸ் (கோப்புப்படம்) பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை 79 வயதில் செளதி அரேபியாவின் மன்னராக இளவரசர் சல்மானின் தந்தை பதவியேற்றபோது, அவர் அல்சைமர் நோயால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவின. தனது தந்தை மன்னராக பதவியேற்ற குறுகிய காலத்திற்குள், அதிகாரத்தை அவர் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார். செளதி அரேபியாவின் இளம் தலைமுறையினரையும், பெண்களையும் தனக்குப் பின்னால் அணிதிரட்ட எம்.பி.எஸ். பாடுபட்டு வருகிறார். 2018-ஆம் ஆண்டில், பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டை தளர்த்திய அவர், பொது இடங்களில் பெண்கள் 'அபாயா' அணியத் தேவையில்லை என்றும் அறிவித்தார். அதே ஆண்டில், பெண்களுக்கும் ஓட்டுநர் உரிமம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் ஆண்களின் துணையின்றி வேலைக்குச் செல்வதும், தனியாக ஷாப்பிங் செல்வதும் பெண்களுக்குச் சாத்தியமானது. மார்க் தாம்சன் தனது 'Being Young, Male and Saudi' என்ற புத்தகத்தில் இந்த அனுமதியை இவ்வாறு குறிப்பிடுகிறார். "தாராளமயமாக்கலை நோக்கிய இந்த நடவடிக்கைகள் பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கும் நோக்கத்துடன் மட்டுமல்ல, பொருளாதார காரணங்களுக்காகவும் எடுக்கப்பட்டன. இவை அனைத்தும் பெண்கள் வேலை செய்யவும், தாங்கள் சம்பாதித்தப் பணத்தை ஆண்களின் அனுமதியின்றி செலவிடுவதற்காகவுமே செய்யப்பட்டன." பட மூலாதாரம், AFP படக்குறிப்பு, 2018ஆம் ஆண்டு சௌதி பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெற அனுமதிக்கப்பட்டனர். முடிவுக்கு வந்த 'ஷௌரா' செளதி அரேபியாவை கண்காணிக்கும் நிபுணர்கள், 'ஷௌரா' மற்றும் மூத்த இளவரசர்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவுகளை எடுக்கும் மரபை எம்.பி.எஸ். கைவிட்டுவிட்டதாக நம்புகின்றனர். அவர் தன்னை மட்டுமே முடிவெடுப்பவராகக் காட்டிக்கொள்வதற்காக, தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார். தனது முடிவுகளுக்கும் அரசியலுக்கும் எதிரான எந்தவொரு எதிர்ப்பையும், விமர்சனத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். "செளதி அரச குடும்பத்தின் ஒற்றுமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் 'ஷௌரா'வின் கருத்துகளை முழுமையாக புறக்கணிப்பதாகும்" என 1990 வளைகுடாப் போரின் போது செளதி அரேபியாவிற்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றிய சாஸ் ஃப்ரீமேன் நம்புகிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தன்னை மட்டுமே முடிவெடுப்பவராகக் காட்டிக்கொள்ள முயலும் எம்.பி.எஸ். விலையுயர்ந்த பொருட்கள் மீது விருப்பம் பட்டத்து இளவரசராவதற்கு முன்பே, ஆடம்பரப் பிரியராகப் பிரபலமானவர் எம்.பி.எஸ். ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து, 500 மில்லியன் டாலருக்கு 440 அடி உயர சொகுசு படகை வாங்கினார். 2017 நவம்பர் மாதத்தில், லியோனார்டோ டா வின்சியின் புகழ்பெற்ற ஓவியமான 'சால்வேட்டர் முண்டி'யை வாங்க 450 மில்லியன் டாலர்களை செலவிட்டார் முகமது பின் சல்மான். விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக, அந்த ஓவியத்தை அபுதாபியில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும், ஓவியத்தை வாங்கிய சில நாட்களுக்குப் பிறகு, அது அவரது பிரபலமான சிரீன் படகில் அலங்காரமாக தொங்க விடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 500 மில்லியன் டாலர் செலவில் 440 அடி உயர சொகுசு படகை வாங்கினார் எம்.பி.எஸ். தொடர் கைதுகள் செளதி அரேபியாவில் குறைந்தது பத்தாயிரம் இளவரசர்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதில் சுமார் 100 பேர் மட்டுமே அரசியல் ரீதியாக தீவிரமாக உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மாதாந்திர உதவித்தொகையை அரசு வழங்கிவருகிறது. குறைந்தபட்ச உதவித்தொகை $800 என்றால், அதிகபட்சம் $270,000 கொடுக்கப்படுகிறது. எம்.பி.எஸ். பட்டத்து இளவரசரானதும், இந்த உதவித்தொகைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டன. 2017 நவம்பர் 4-ஆம் தேதி பொது நிதியை மோசடி செய்தக் குற்றச்சாட்டில், இளவரசர்கள், தொழிலதிபர்கள், மூத்த அரசு அதிகாரிகள் என 380 பேர் கைது செய்யப்பட்டனர். "கைது செய்யப்பட்ட 380 பேரில் குறைந்தது 11 இளவரசர்களும் அடங்குவர். பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் அடெல் ஃபகிஹ் மற்றும் நிதி அமைச்சர் இப்ராஹிம் அப்துல் அஜீஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்" என்று பென் ஹப்பார்ட் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். "கைது செய்யப்பட்ட அனைவரின் மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன, அவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலான ரிட்ஸ் கார்ல்டன்-க்கு அழைத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். ஊழல் மூலம் அவர்கள் சம்பாதித்ததாகக் கூறப்பட்ட பணத்தை அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுத்த பின்னரே விடுவிக்கப்பட்டனர். மொத்தம் ஒரு பில்லியன் டாலர் தொகை அபராதமாக வசூலிக்கப்பட்டது." பட மூலாதாரம், AFP படக்குறிப்பு, முகமது பின் சல்மான் உடன் சாத் அல் ஹரிரி செளதி அரேபியாவில் ராஜினாமாவை அறிவித்த லெபனான் பிரதமர் செளதி அரேபியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருந்த லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரியை எம்.பி.எஸ். காவலில் வைத்தபோது, மிகப் பெரிய அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது. "எம்.பி.எஸ்.-ஐ சந்திக்க வாகனங்கள் புடைசூழ லெபனான் பிரதமர் ஹரிரி வந்தார். அவர் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவருடன் வாகனங்களில் வந்தவர்கள் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். லெபனான் பிரதமர் ஹரிரி உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டதாக கூறப்பட்டது" என பென் ஹப்பார்ட் எழுதுகிறார். "லெபனான் நாட்டுக் கொடியின் அருகில் நின்றுக் கொண்டு, லெபனான் பிரதமர் ஹரிரி தனது ராஜினாமா அறிக்கையை வாசித்ததை தொலைக்காட்சி மூலம் உலகமே பார்த்தது. தனது ராஜினாமா, லெபனானை வலிமையாகவும் சுதந்திரமாகவும் மாற்றும் என்று ஹரிரி கூறிய போதிலும், ராஜினாமா அறிக்கையை வாசிக்கும்போது, அவர் பல முறை இடைநிறுத்தினார், அதுவே, அந்த அறிக்கையை அவர் சுயமாக எழுதவில்லை என்பதைக் காட்டுவதாக இருந்தது. ராஜினாமா செய்ய விரும்பியிருந்தால், ஹரிரி அதை ஏன் வெளிநாட்டு மண்ணில் அறிவிக்கவேண்டும் என்ற கேள்விகளும் எழுந்தன." இந்த ராஜினாமா விவகாரத்தில் மற்றொரு திருப்புமுனையாக, சில நாட்களுக்குப் பிறகு நாட்டிற்குத் திரும்பிய லெபனான் பிரதமர், தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுக்கொண்டார். இந்த விசித்திரமான சம்பவத்தைச் சுற்றியுள்ள மர்மமுடிச்சு இன்னும் அவிழ்க்கப்படவில்லை. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரியை எம்.பி.எஸ். கைது செய்தபோது, மிகப்பெரிய அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் "செளதி அரசாங்கம் 2,305 பேரை ஆறு மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைத்துள்ளது, அவர்களில் 251 பேர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர், ஒரு முறை கூட அவர்கள் நீதிபதி முன் நிறுத்தப்படவில்லை" என்று 2018, மே மாதம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. செளதி அரேபியாவில் 26 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இது சீனா மற்றும் துருக்கிக்குப் பிறகு உலகிலேயே அதிக எண்ணிக்கையிலானது என்றும் நியூயார்க்கை தளமாகக் கொண்ட பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழுவின் அறிக்கை தெரிவித்திருந்தது. 2019-ஆம் ஆண்டில், செளதி குடிமக்களில் ஆயிரம் பேருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டது. ஜமால் கஷோகி படுகொலை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜமால் கஷோகி எம்.பி.எஸ்.-ன் விமர்சகர்களில் ஒருவரான ஜமால் கஷோகி கொல்லப்பட்டபோது எம்.பி.எஸ். அதிக விமர்சனங்களை எதிர்கொண்டார். கஷோகி, அரபு செய்திகள் மற்றும் அல்-வதன் போன்ற செய்தித்தாள்களின் ஆசிரியராக இருந்தார். இந்தக் கொலையில் எம்.பி.எஸ்.-க்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக கூறப்பட்ட போதிலும், எம்.பி.எஸ் அதனை தொடர்ந்து மறுத்தார். டேவிட் ஒட்டவே இவ்வாறு எழுதுகிறார்: "இந்தப் படுகொலை எம்.பி.எஸ்.-இன் இரண்டு நெருங்கிய கூட்டாளிகளின் மேற்பார்வையின் கீழ் திட்டமிடப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, கொலைக்கு உத்தரவிட்டது எம்.பி.எஸ் தான் என சி.ஐ.ஏ. முடிவு செய்தது." "செளதி அரேபியாவுக்குத் திரும்பவில்லை என்றால் கஷோகிக்கு எதிராக தோட்டாக்களைப் பயன்படுத்தப் போவதாக எம்.பி.எஸ். ஒருமுறை பேசியிருந்தார். அந்த பழைய பதிவை தேசிய பாதுகாப்பு ஏஜென்சி கண்டுபிடித்தது." படுகொலைக்கு பொறுப்பேற்ற முகமது பின் சல்மான் 2019 செப்டம்பர் 30-ஆம் தேதி, சிபிஎஸ் (CBS) ஊடக்த்திற்கு எம்.பி.எஸ். பேட்டி அளித்தபோது, தொகுப்பாளர் நோரா டோனல் அவரிடம் கஷோகியின் கொலை பற்றிய கேள்வியை நேரடியாகவே கேட்டுவிட்டார். "கஷோகியைக் கொல்ல நீங்கள் உத்தரவிட்டீர்களா?" என்ற கேள்விக்கு பதிலளித்த எம்.பி.எஸ்., "இல்லவே இல்லை, இது மிகவும் கொடூரமான குற்றம். ஆனால் செளதி அரேபியாவின் தலைவராக, நான் இதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன், ஏனெனில், இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் செளதி அரசாங்கத்திற்காக வேலை செய்ததால் முழுப் பொறுப்பேற்கிறேன்" என்று கூறினார். 2019 டிசம்பர் மாதத்தில் கஷோகி கொலைக்காக செளதி நீதிமன்றம் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்தது. மேலும் மூன்று பேருக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இருப்பினும், 2020-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி கஷோகியின் மகன் சலே கஷோகி, தனது தந்தையைக் கொன்ற கொலையாளிகளை தான் மன்னித்துவிட்டதாக சொன்னபோது உலகமே வியப்பில் ஆழ்ந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce844d8587lo
-
ஹெச்1பி விசா கட்டணம் பன்மடங்கு உயர்வு - டிரம்பின் புதிய உத்தரவால் இந்தியா கவலை ஏன்?
எச்1பி விசா: அமெரிக்க அரசின் புதிய விளக்கம் - இந்தியர்கள் அறிய வேண்டியது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, விசா பற்றிய டிரம்ப்பின் புதிய உத்தரவு அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது கட்டுரை தகவல் இஷாத்ரிதா செய்தியாளர், பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் செப்டம்பர் 20 அன்று, ரோகன் மேத்தா, எட்டு மணி நேரத்தில் 8,000 டாலருக்கும் அதிகமாகச் செலவழித்து, இந்தியாவில் உள்ள நாக்பூரிலிருந்து அமெரிக்காவிற்குப் பறக்க, பல விமானப் பயணங்களை முன்பதிவு செய்து, ரத்து செய்து, மீண்டும் முன்பதிவு செய்தார். விரல்விட்டு எண்ணக்கூடிய சில வழிகள் மட்டுமே இருந்த நிலையில், அவர் செப்டம்பர் 21, அதிகாலை 12:01 EDT (Eastern Daylight Time)மணிக்கு முன் வந்து சேர வேண்டும் என்ற காலக்கெடுவை எப்படியாவது முடித்துவிடவேண்டும் என போராடினார். மும்பையிலிருந்து ஜான் எஃப். கென்னடி விமான நிலையத்திற்கு விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தில் ஏறியவுடன், மேத்தாவுடன் (அவரது வேண்டுகோளின்படி பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிபிசியின் இஷாத்ரிதா பேசினார். "நான் பல வழிகளை முன்பதிவு செய்தேன், ஏனென்றால் பெரும்பாலான வழிகள் காலக்கெடுவுக்கு மிக அருகில் வந்தன. ஒரு சிறிய தாமதம் ஏற்பட்டாலும், நான் காலக்கெடுவைத் தவறவிட்டிருப்பேன்" என்று அவர் கூறுகிறார். ஒரு மென்பொருள் நிபுணரான அவர், தனது குடும்பத்துடன் 11 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் தனது தந்தையின் நினைவு தினத்திற்காக நாக்பூருக்கு வந்திருந்தார். அவர், தங்கள் முதலாளிகளால் நிதியுதவி செய்யப்படும் H-1B எனப்படும் பணி விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியர்களில் ஒருவர். செப்டம்பர் 19 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அதில், புதிய H-1B விசா ஊழியர்களுக்கு ஒரு முதலாளி 100,000 டாலர் கூடுதல் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதி செப்டம்பர் 21, அதிகாலை 12:01 EDT-லிருந்து நடைமுறைக்கு வரும். H-1B விசா என்பது, அமெரிக்காவில் சிறப்புத் துறைகள் மற்றும் பணிகளில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கான ஒரு பணி விசா திட்டமாகும். கடந்த ஆண்டு, அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் 85,000 H-1B விசாக்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமான விசாக்களை இந்தியர்கள் பெற்றனர். இந்த உத்தரவு இந்திய H-1B விசா வைத்திருப்போருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. "என் மனைவியும் மகளும் என்னுடன் வராதது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு அதிர்ச்சியூட்டும் அனுபவமாக உள்ளது. நான் வாழ்க்கையில் எடுத்த முடிவுகளுக்காக வருந்துகிறேன். இந்த நாட்டிற்காக உழைக்க எனது இளமைக்காலத்தின் முக்கிய பகுதியை நான் கொடுத்தேன். இப்போது நான் விரும்பத்தகாதவனாக உணர்கிறேன்" என்று மேத்தா கூறுகிறார். "என் மகள் தன் முழு வாழ்க்கையையும் அமெரிக்காவில் கழித்துவிட்டாள். நான் எப்படி என் வாழ்க்கையை அங்கிருந்து பிடுங்கி, இந்தியாவில் மீண்டும் புதிதாகத் தொடங்குவேன் என்று எனக்குத் தெரியவில்லை." இந்தியர்கள் பயணங்களை ரத்து செய்து, விடுமுறைத் திட்டங்களை கைவிட்டனர் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டிரம்பின் புதிய உத்தரவை குடிவரவு வழக்கறிஞர்கள் முழுமையாக புரிந்துகொள்ள முயன்று வருகின்றனர் பிபிசி இந்தியாவைச் சேர்ந்த பல H-1B விசா வைத்திருப்போரிடம் பேசியது. அவர்களில் பலர் பல தசாப்தங்களாக அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர். தங்கள் முதலாளிகளால் அங்கீகரிக்கப்படாததால், அவர்களில் யாரும் தங்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை. பலர் "கண்காணிப்பு" என்ற காரணத்தைக் குறிப்பிட்டு எங்களுடன் பேச முற்றிலும் மறுத்துவிட்டனர். நாங்கள் பேசிய அனைவரும் இந்த உத்தரவு குறித்துக் கவலை கொண்டவர்களாகத் தோன்றினர். ஆனால், ஏற்கனவே H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து அவர்களுக்கும் உறுதியாகத் தெரியவில்லை. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமெரிக்காவில் உள்ளவர்கள் வெளிநாடு செல்ல வேண்டாம் என்றும், வெளிநாடுகளுக்குப் பயணிப்பவர்கள் காலக்கெடுவுக்கு முன் திரும்பி வருமாறும் குடிவரவு வழக்கறிஞர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஐரோப்பாவில் விடுமுறையில் இருந்த H-1B விசா வைத்திருந்த இந்தியர் ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், "இப்போது நிலைமை மிகவும் தெளிவாக இல்லை. முதலாளிகள் எப்படிச் சிந்திக்கிறார்கள், இது எப்படி அமல்படுத்தப்படும் என்பதை நாம் இன்னும் பார்க்க வேண்டும். நான் புரிந்துகொண்டவரை, இந்த உத்தரவு புதிய H-1B விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும். குடிவரவு வழக்கறிஞர்கள் இன்னும் அதை புரிந்துகொள்ள முயன்று வருகிறார்கள். மேலும், எங்களை திரும்பி வரும்படி அறிவுறுத்தியுள்ளனர்" என்று கூறினார். அமெரிக்க அரசின் விளக்கம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, புதிய விதிகள் புதிதாக வழங்கப்படவுள்ள H-1B விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும் என அமெரிக்க அதிபரின் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லேவிட் விளக்கமளித்துள்ளார் புதிய விசா விதிகள் பற்றிய குழப்பத்தை தொடர்ந்து அமெரிக்க அரசு விதிகள் பற்றிய விளக்கத்தை அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பு செயலாளர் கரோலின் லேவிட் இது குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு விளக்கத்தை தெரிவித்துள்ளார். அதன்படி இது ஒருமுறை மட்டும் செலுத்த வேண்டிய கட்டணம். ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய கட்டணம் அல்ல. இது புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே H-1B விசா வைத்திருந்து தற்போது நாட்டுக்கு வெளியே இருப்பவர்கள் நாட்டுக்குள் மீண்டும் நுழைய 100000 டாலர் கட்டணம் விதிக்கப்படாது. வழக்கமாக அவர்கள் செல்லக் கூடிய அதே அளவில் நாட்டிலிருந்து வெளியேறவும் மீண்டும் நுழையவும் முடியும், நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பால் அவர்களுக்கு இருக்கும் இந்த உரிமை பாதிக்கப்படாது. இது புதிய விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும், விசா புதுப்பித்தல் அல்லது ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது. இந்த விதி, அடுத்த வரவிருக்கும் லாட்டரி சுழற்சியில் தேர்வாவோருக்கு பொருந்தும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c99ggg2gvrko
-
எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
கொத்த முயன்ற ராஜநாகத்தை பாதுகாப்பாக மீட்கும் காட்சி
-
மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை, கனிய மணல் செயல்பாடுகளுக்கு எதிராக வவுனியாவில் இருந்து அணி திரண்ட இளையோர் 21 Sep, 2025 | 08:10 AM மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று சனிக்கிழமை (20) 49 ஆவது நாளாக தொடர்ந்து செல்கின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா பம்பைமடுவில் இருந்து அருட்தந்தை அருட்சகோதரிகள் தலைமையில் இளையோர் குழு ஒன்று வருகை தந்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். குறித்த குழுவினர் சனிக்கிழமை (20) மாலை வருகை தந்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட இளையோர் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக எழுதப்பட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு நாளாந்தம் மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கிராம மக்கள்,பொது மற்றும் சிவில் அமைப்புக்கள் தொடர்ச்சியாக ஆதரவை வழங்கி வருகின்றனர். இந்த நிலையிலே இன்றைய தினம் சனிக்கிழமை (20) மாலை வவுனியா பம்பைமடுவில் இருந்து அருட்தந்தை அருட்சகோதரிகள் தலைமையில் இளையோர் குழு ஒன்று வருகை தந்து தமது ஆதரவை வழங்கி அமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225628
-
எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
யானைக்கு அதிர்ச்சி வைத்தியம்!!
-
ஐ.நா., ஜப்பானுக்கு ஜனாதிபதி அனுர விஜயம்
21 Sep, 2025 | 11:25 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கையின் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகிய முக்கிய நோக்கங்களுடன், ஐக்கிய நாடுகள் சபைக்கும் (ஐ.நா. பொதுச் சபை) மற்றும் ஜப்பானுக்கும் நாளை திங்கட்கிழமை விஜயம் மேற்கொள்கிறார். இந்த பயணங்கள் இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்களையும், எதிர்கால கொள்கைகளையும் உலக அரங்கில் எடுத்துரைக்கும் ஒரு முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை வெளிவிவகார அமைச்சர் விஜய ஹேரத்தின் கூற்றுப்படி, 22 ஆம் திகதி திங்கட்கிழமை நியூயார்க்கிற்குப் புறப்பட்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொள்வார். செப்டம்பர் 24 ஆம் திகதி ஜனாதிபதி பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார். ஜனாதிபதி தனது உரையில், இலங்கை அடைந்துள்ள சமீபத்திய முன்னேற்றங்கள், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அதன் வெளிவிவகாரக் கொள்கை ஆகியவற்றைப் பற்றி விளக்கவுள்ளார். மேலும், இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்புகள், இலங்கையின் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் விஜயம்: எக்ஸ்போ 2025 மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் அமெரிக்க விஜயத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானின் ஒசாகா நகருக்குச் சென்று "எக்ஸ்போ 2025" சர்வதேச கண்காட்சியில் பங்கேற்கவுள்ளார். எக்ஸ்போ 2025, உலகின் பல்வேறு நாடுகள் தங்கள் கலாசாரம், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார பலங்களை வெளிப்படுத்தும் ஒரு மிகப்பெரிய சர்வதேச நிகழ்வாகும். இந்த நிகழ்வில், இலங்கை சார்பில் "இலங்கை தினம்" (Sri Lanka Day) என்ற பெயரில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம், இலங்கையின் செழுமையான கலாசார பாரம்பரியம், துடிப்பான சுற்றுலாத் துறை, மற்றும் பன்முகத்தன்மை கொண்ட வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உலகிற்கு காட்சிப்படுத்த இலங்கை திட்டமிட்டுள்ளது. இது இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்கும் ஒரு சிறந்த தளமாக அமையும். பிரதமர் மற்றும் பேரரசருடன் சந்திப்பு ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 28 ஆம் திகதி ஞாயிற்று கிழமை முதல் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ பயணத்தைத் தொடங்கவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, அவர் பிரதமர் இஷிபாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதுடன், ஜப்பானியப் பேரரசர் நருஹித்தோவையும் சந்திக்கவுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து கவனம் செலுத்தும். ஜப்பானில் உள்ள இலங்கை சமூகத்தினருடன் சந்திப்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது பயணத்தின்போது, ஜப்பானில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரையும் சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்பு, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், அவர்களுடன் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் கலந்துரையாடுவதிலும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. https://www.virakesari.lk/article/225646
-
சாரதிகளுக்கு, அமைச்சர் விடுத்த எச்சரிக்கை
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் 'பொது போக்குவரத்து அனுமதியை பெறுவது கட்டாயம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (20) அம்பாறையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அனுமதிப்பத்திரத்திற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதன்படி, பொது போக்குவரத்து சாரதிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அனுமதிப்பத்திரத்தைப் பெற வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில், இப்போது சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில பேருந்துகள் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட போதே சீட் பெல்ட்கள் இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பேருந்துகளை அலங்கரிக்க முடியும் என்றால் ஏன் சீட் பெல்டை பொருத்த முடியாது? இப்போது சில சாரதிகள் என்னையும் பொலிஸாரையும் ஏமாற்ற தங்கள் பிள்ளைகளது பாடசாலை பைகளின் பெல்ட்களை அணிந்து வருகின்றனர். அவ்வாறானவர்களிடம் 50 பயணிகளை ஒப்படைப்பது பொருத்தமானதல்ல. எனவே நாம் ஒரு முடிவை எடுத்துள்ளோம். எனவே,பொதுப் போக்குவரத்தில் ஒவ்வொரு சாரதியும் பொதுப் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தைப் பெறுவது கட்டாயமாகும். நாங்கள் இதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம், டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் அவர்கள் நிச்சயமாக அந்த அனுமதிப் பத்திரத்தை பெறவேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmft1qwb800jkqplplja0n8o8
-
இராணுவம் – கடற்படை அதிகளவான நீரை எடுத்து செல்வதனால் உவராகும் குடிநீர் கிணறுகள்
நீண்ட காலமாக இது நடைபெறுகிறது.
-
இந்திய கடற்படை கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SATPURA’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நேற்று (20) நாட்டிற்கு வந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய இந்திய கப்பலுக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டை வந்தடைந்த போர்க் கப்பலான ‘INS SATPURA’ 142.5 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 403 பணியாளர்களைக் கொண்டுள்ளது. கப்பல் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் காலத்தில் அதன் பணியாளர்களை இலங்கையின் முக்கியமான இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmft987bi00k8o29n5d59slsa
-
தமிழ்நாட்டில் ஒருவர் மரணம்: தேனீக்கள் கொட்டினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 21 செப்டெம்பர் 2025, 08:17 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் மரணமடைந்திருக்கிறார். பத்து பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தேனீக்கள் கொட்டினால் ஏன் மரணம் ஏற்படுகிறது? இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுர்கம் அருகே கூத்தக்குடி சிவன் கோவில் பகுதியில் அரச மரம் ஒன்று இருக்கிறது. இந்த மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. இந்த தேன் கூட்டை புதன்கிழமையன்று காலையில் சிலர் கலைத்தனர். அதிலிருந்த தேனீக்கள் அங்கிருந்தவர்களை கொட்டத் தொடங்கின. பத்துக்கும் மேற்பட்டோரை தேனீக்கள் தாக்கியுள்ளன. இதில் அதே ஊரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் வீராசாமி என்பவரும் ஒருவர். அவர்கள் அனைவரும் அதே ஊரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த நிலையில் வீட்டில் இருந்த வீராசாமிக்கு அன்று இரவு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவருடைய உறவினர்கள் மீண்டும் வீராசாமியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார். இதையடுத்து தேனீக்களால் பாதிக்கப்பட்ட 10 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். தேன் கூட்டை கலைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, கூத்தக்குடி கிராம மக்கள் கள்ளக்குறிச்சி வேப்பூர் சாலையில் அரை மணி நேரம் சாலை மறியல் செய்தனர். இருப்பினும் சற்று நேரத்தில் வீராசாமி இறந்து போனார். தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 10 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு முன்பாக கடந்த மார்ச் மாதத்தில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பரவக்கம் கிராமத்தில் இதேபோல தேனீக்கள் கொட்டியதில் செந்தில்குமார் என்பவர் பலியானார். மேலும் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தேனீக்கள் கொட்டினால் என்ன நடக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தேனீக்களின் கொடுக்கில் நச்சுப் பொருட்கள் உண்டு என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப். பொதுவாக ஓரிரு தேனீக்கள் கொட்டுவதில் இதுபோன்ற விபரீத சம்பவங்கள் நடப்பதில்லை. தேன் கூட்டை கலைப்பது போன்ற நிகழ்வுகளின் போதுதான் பெரும் எண்ணிக்கையிலான தேனீக்கள் மனிதர்களைக் கொட்டுகின்றன. அதில் ஒரு சிலர் இறக்கவும் நேரிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். "தேனீக்களின் கொடுக்கில் நச்சுப் பொருட்கள் உண்டு. இவற்றில் இரண்டு நச்சுகள்தான் கவனிக்கத்தக்கவை. ஒன்று, மெலிட்டின் (Melittin) என்ற நச்சு. மற்றொன்று, பாஸ்போலைபேஸ் ஏ2 (Phospholipase A2) என்ற நச்சு." என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப். மேலும் "மெலிட்டினைப் பொறுத்தவரை அது ரத்த அணுக்களின் சுவற்றை உடைத்து, உள்ளிருக்கும் பொருட்களை வெளியில் கொண்டுவந்துவிடும்." என்கிறார் அவர் "அதேபோல, தசைச் செல்களையும் உடைத்து, உள்ளே உள்ள பொருட்களை வெளியில் கொண்டுவந்துவிடும். இவை ரத்தத்தில் கலந்து சிறுநீரகத்தை அடையும்போது சிறுநீரகம் பாதிப்படைந்து, அது வேறு பல உறுப்புகளையும் பாதித்து மரணம் ஏற்படலாம். பாஸ்போலைபேஸ் ஏ2 என்ற நச்சைப் பொறுத்தவரை, அதுவும் இதேபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். கூடுதலாக, நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும்" என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப். தேனீக்கள் கடித்துவிட்டால் நிலைமை மோசமாவதை அறிய சில அறிகுறிகள் இருக்கின்றன என்கிறார் நச்சுயியல் (Toxicology) பிரிவில் ஆய்வுகளை மேற்கொண்டவரும் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் பேராசிரியருமான மருத்துவர் வி. ராஜேந்திரன். "தேனீக்கள் கொட்டும்போது அனாபிலாக்ஸிஸ் (anaphylaxis) எனப்படும் அதீத ஒவ்வாமை ஏற்படலாம். ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். தொண்டை அடைக்கும். மாரடைப்பு ஏற்படுவதைப் போன்ற உணர்வு ஏற்படும். இந்த நிலையில் உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும். ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தேனீக்கள் கொட்டினால், நிச்சயம் மருத்துவமனையில் சேர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும்" என்கிறார் மருத்துவர் வி. ராஜேந்திரன். எத்தனை தேனீக்கள் கடித்தால் ஆபத்து? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பொதுவாக 100 தேனீக்கள் கொட்டினால், மரணம் ஏற்படும் என மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப் கூறுகிறார். "ஒரு தேனீ கடித்து உயிரிழந்த நிகழ்வுகளும் உண்டு." என விளக்குகிறார் மருத்துவர் அமலோற்பவநாதன். "காரணம், தேனீயால் கொட்டப்பட்ட நபருக்கு மேலே சொன்ன நச்சுப் பொருட்கள் ஒவ்வாமை ஏற்படுத்துபவையாக இருந்தால், இதுபோல அரிதாக நிகழும். மற்றபடி, ஒரே ஒரு தேனீ கொட்டினால் பெரிய அளவில் ஆபத்து இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்." என்கிறார் அவர். மேலும் "கொடுக்கை எடுத்துவிட்டு வலி அதிகம் இருந்தால் வலி நிவாரணிகளைச் சாப்பிட்டால் சரியாகிவிடும். ஆனால், ஒரே ஒரு தேனீ கொட்டியவுடன் தொண்டை இறுகுவது, நாக்கு தடிப்பது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும்" என எச்சரிக்கிறார் அவர். ஆனால், தேன் கூட்டைக் கலைப்பது போன்ற நிகழ்வுகளில் அருகிலிருப்போரை நூற்றுக்கும் அதிகமான தேனீக்கள் கொட்டிவிடுகின்றன. இதுகுறித்து பேசுகையில், "தேன்கூட்டைக் கலைக்கும் போது தேனீக்கள் அருகிலிருப்போரை துரத்தித் துரத்திக் கொட்டும். அதிலிருந்து தப்புவதற்காக ஓடும்போது எவ்வளவு தேனீக்கள் கொட்டின என்பது தெரியாது." எனக் கூறுகிறார். "பொதுவாக 100 தேனீக்கள் கொட்டினால், மரணம் ஏற்படும்." எனக் கூறும் அவர், "ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் 1,000 தேனீக்கள் கொட்டிய நிகழ்வுகளும் உண்டு." என்றார். "ஆகவே, தேன்கூட்டை கலைத்து தேனீக்கள் கொட்டும் நிகழ்வு நடந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும். குறைந்தது ஒரு நாளாவது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்" என்றார் மருத்துவர் அமலோற்பவநாதன். தேனீக்கள் கடித்தால் என்ன சிகிச்சை அளிக்கப்படும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நச்சுக்களால் ஏற்படும் ஒவ்வாமைக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும். தேனீக்கள் கொட்டினால், நச்சுக்களால் ஏற்படும் ஒவ்வாமைக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும். "தொண்டை கட்டுவது, நாக்கு வீங்குவது போன்றவை நடக்கும்போது ஸ்டீராய்ட்களைச் செலுத்துவார்கள். அதற்குப் பிறகு அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும்" என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன். கடந்த ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஊசிமலை வியூ பாயிண்டில் கேரளா மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 26 வயது சபீர் என்பவர் நூற்றுக்கணக்கான தேனீக்களால் கொட்டப்பட்டு, உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c701xr3wllxo
-
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025
ஆசியக் கிண்ண ரி20 – சூப்பர் 4 சுற்றின் தொடக்கப் போட்டியில் இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ் அணி Published By: Vishnu 20 Sep, 2025 | 11:58 PM ஆசிய கிண்ண கிரிக்கெட் ரி20 தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டில் பங்களாதேஷ் அணி இலங்கை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி லிண்டன் தாஸ் முதலில் பந்துவீச தேர்வு செய்தார், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. தாசுன் ஷனகா 37 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்கள் எடுத்தார், குசல் மெண்டிஸ் 34 ஓட்டங்களும், பாதும் நிஸ்ஸங்கா 22 ஓட்டங்களும் எடுத்தார். அதன்படி, துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.5 ஓவரில்தான் 06 விக்கெட்டுகளை இழந்து தனது இலக்கைத் துரத்த முடிந்தது. சைஃப் ஹசன் 66 ஓட்டங்களும், லிண்டன் தாஸ் 23 ஓட்டங்களும் எடுத்தனர், முதல் கட்டத்திலேயே பங்களாதேஷ் அணி தனது துடுப்பாட்டத்தை வலுப்படுத்தியது. ட்ரோஹிட் ஹீத்ரோவும் 58 ஓட்டங்கள் எடுத்தார். அதன்படி, பதில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 06 விக்கெட்டுகளை இழந்து 19.5 ஓவரில் தனது வெற்றி இலக்கை எட்டியது. https://www.virakesari.lk/article/225616
-
அநுரவின் அரசாங்கத்திலும் அடக்குமுறை நீடிக்கிறது ; சிவில் சமூக கூட்டமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டு : ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகளை நிறுத்துமாறும் வலியுறுத்து
21 Sep, 2025 | 11:31 AM (ஆர்.ராம்) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பிரசார காலத்தில் கொடூரமான சட்டங்களை அகற்றுவதாகவும் ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்துவதாகவும் வாக்குறுதி அளித்த போதிலும், அவரது அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் பிரஜைகள் அடக்குமுறைக்கு உள்ளாகுவதாக உலகம் முழுவதும் குடிமக்கள் நடவடிக்கைகளையும் சிவில் சமூகத்தையும் பலப்படுத்தும் நோக்கில் செயற்படும் சிவில் சமூக கூட்டமைப்பின் (சிவிக்கஸ்) புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிப்பதாகவும், நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தின் முரணான விதிகளை திரும்பப் பெறுவதாகவும், ஒரு சுயாதீனமான வழக்குத்தொடுநர் அமைப்பை நிறுவுவதாகவும் உறுதியளித்து. ஆனால் பதவிக்கு வருந்து ஒரு வருடமாகியுள்ள நிலையில், அடக்குமுறைகள் நீடிப்பதோடு புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்களும் தொடர்கின்றன. வட,கிழக்கில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தல், கண்காணிப்பு மற்றும் சட்டரீதியான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கின்றனர். அம்பாறையில் காணாமல் போனவர்களுக்கு நீதி கேட்டுப்போராடும் தம்பிராசா செல்வராணி, கிளிநொச்சியில் பெண்கள் உரிமைகள் அமைப்பாளர் வாசுகி வல்லிபுரம் போன்ற மனித உரிமை பாதுகாவலர்கள் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரால் விசாரிக்கப்பட்டனர். சிவில் சமூக அமைப்புகள் உளவுத்துறை சேவைகளால், குறிப்பாக நிதி தொடர்பாக, கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன, மேலும் அவை செயற்பட பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து பாதுகாப்பு அனுமதியைப் பெற வேண்டியுள்ளது. இவ்வாறான இராணுவமயமாக்கப்பட்ட மேற்பார்வை 'எதிர்ப்பு குரல்களை அடக்குவதற்கும் அவ்விதமான குரல்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்' என்பதோடு சர்வதேச கடமைகளை நேரடியாக மீறுகின்றன. வட,கிழக்கில் உள்ள பெண்கள் உரிமை அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன, கடுமையான அதிகாரத்தடைகள் அவற்றின் அன்றாட வாழ்வியலை அச்சுறுத்துகின்றன. அமைதியான ஒன்றுகூடலுக்கான அரசியலமைப்பு உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், பொலிஸார் ஆர்ப்பாட்டங்கள் மீது பலமுறை ஒடுக்குமுறைகளை மேற்கொண்டுள்ளனர். 2022 வெகுஜன போராட்டங்களுடன் தொடர்புடைய மாணவ அமைப்பாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியான நீதித்துறை துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர். 3,000 க்கும் மேற்பட்டோர் இன்னும் தீர்க்கப்படாத வழக்குகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். 2025 மார்சில், கொழும்பில் 27மாணவ செயற்பாட்டாளர்களை பொலிஸார் கைது செய்ததோடு தமிழர் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்த சம்பவங்களும் உள்ளன. தமிழர்களுக்கு எதிராக நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம், அரசாங்கத்தின் உறுதிமொழிகளை மீறி நடைமுறையில் உள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை எதிர்க்கும் ஸ்டிக்கர்கள் தொடர்பாக 22 வயது முஸ்லிம் செயற்பாட்டாளரான மொஹமட் ருஸ்டி இச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில், மாவீரர் நாள் நிகழ்வின் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றியதற்காக இளைஞர் ஒருவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதேபோன்று ஊடகவியலாளர்களில் குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் தாக்குதல்கள் மிரட்டல்களையும் எதிர்கொண்டுள்ளனர். இன்னும் சிலர் கண்காணிப்புக்குள் காணப்படுகின்றனர். இதேவேளை, ஆயுத மோதலின்போது நடந்த பாரிய அட்டூழியங்கள் குறித்து ஐ.நா.வின் ஏராளமான சான்றுகள் காணப்படுகின்றபோதிலும், அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அரசாங்கம் தொடர்ந்து எதிர்க்கிறது. காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் போன்ற நிறுவனங்களை அரசாங்கம் செயற்படுத்துகின்றனது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் அதனை நிராகரித்துள்ளனர். ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ஆகஸ்ட் மாதம், தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நீதியை வழங்குவதற்கான வரலாற்று வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தற்போதைய அரசாங்கத்தினை வலியுறுத்தியுள்ளார். அது சம்பந்தமான அரசாங்கத்தின் வினைத்திறனான செயற்பாடுகளை அவதானிக்க முடியவில்லை. அரசாங்கம் அரசியல் ரீதியான சீர்திருத்த வாக்குறுதிகளை வெளிப்படுத்தி வருகின்ற போதிலும், இலங்கை அடக்குமுறை கலாசாரத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை. அக்கலாசாரம் ஆழமாக வேரூன்றி உள்ளது என்றுள்ளது. https://www.virakesari.lk/article/225648
-
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025
ஓமான் அணியை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி Published By: Vishnu 20 Sep, 2025 | 03:16 AM 2025 ஆசியக் கிண்ண ரி20 போட்டியின் "A" குழுவின் கடைசிய போட்டியான இந்தியா மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாணய சுழட்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி தமது 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழந்து 167 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. https://www.virakesari.lk/article/225557
-
'ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த நேட்டோ' - ஐரோப்பாவில் என்ன நடக்கிறது?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மிக்-31 போர் விமானங்கள் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் ஜாரோஸ்லாவ் லுகிவ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்ய போர் விமானங்கள் தங்களின் வான் எல்லைக்குள் ஊடுருவியதாகக் கூறும் எஸ்டோனியா, நேட்டோ உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஊடுருவலை "அதிர்ச்சிகரமானது" என எஸ்டோனிய வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது. ரஷ்யாவின் மூன்று மிக்-31 போர் விமானங்கள் எஸ்டோனியா வான் பரப்புக்குள் அனுமதியின்றி நுழைந்து பின்லாந்து வளைகுடா மீது 12 நிமிடங்கள் வரை இருந்ததாக எஸ்டோனியா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேட்டோ படைகள் உடனடியாக எதிர்வினையாற்றி ரஷ்ய விமானங்களை இடைமறித்து திருப்பி அனுப்பியதாகக் கூறும் நேட்டோ செய்தித் தொடர்பாளர், "இது ரஷ்யாவின் அடாவடியான அணுகுமுறை மற்றும் நேட்டோவின் பதிலளிக்கும் திறனுக்கு மற்றுமொரு உதாரணம்." எனத் தெரிவித்துள்ளார். நேட்டோவின் கிழக்கு எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் இத்தாலி, பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் தங்களின் விமானங்களை அனுப்பி வைத்தன. ஆனால் எஸ்டோனிய வான் பரப்புக்குள் அத்துமீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், "போர் விமானங்கள் அனைத்தும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வழித்தடத்தில் தான் பயணித்தன. சர்வதேச வான்பரப்பில், விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டும் மற்ற நாடுகளின் எல்லைகளை மீறாமலும் தான் இது மேற்கொள்ளப்பட்டது என கண்காணிப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளது. இந்த போர் விமானங்கள் எஸ்டோனியாவுக்குச் சொந்தமான வைண்ட்லூ தீவிலிருந்து 3 கிமீ தொலைவில் சர்வதேச எல்லைக்குட்பட்ட பகுதியில்தான் பறந்தன என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எஸ்டோனிய பிரதமர் கிறிஸ்டன் மிக்கேல் கடந்த வாரம் நேட்டோ உறுப்பினர்களான போலந்து மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் தங்களின் வான்பரப்புக்குள் ரஷ்ய டிரோன்கள் அத்துமீறி நுழைந்ததாக கூறியதால் பதற்றம் அதிகரித்தது. இதற்குப் பதிலடியாக, கிழக்குப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த போர் விமானங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை கிழக்கு நோக்கி நகர்த்தப் போவதாக நேட்டோ தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய எஸ்டோனியா பிரதமர் கிறிஸ்டன் மிக்கேல், நேட்டோவில் பிரிவு 4-ன் கீழ் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்த கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். "எந்த விதமாக மிரட்டலுக்கும் நேட்டோவின் பதிலடி ஒன்றுபட்டதாகவும் வலுவானதாகவும் இருக்க வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலை பற்றிய விழிப்புணர்வை உறுதி செய்து அடுத்தக்கட்ட கூட்டு நடவடிக்கைகள் பற்றி ஒப்புக்கொள்ள நமது கூட்டாளிகளுடன் ஆலோசிப்பது அவசியம் என நாங்கள் கருதுகிறோம்." என்றார் அவர். "நான் அதை விரும்பவில்லை. இது நடந்தால் பெரிய பிரச்னையாக மாறும்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் எஸ்டோனியா, இந்த ஆண்டு தனது வான்வெளியில் ரஷ்யா செய்த ஐந்தாவது அத்துமீறல் இது எனக் குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்ய விமானங்கள் வடகிழக்கில் இருந்து எஸ்டோனிய வான்வெளிக்குள் நுழைந்தது. முதலில் பின்லாந்து வளைகுடாவுக்கு மேல் பின்லாந்து ஜெட் விமானங்கள் அதை இடைமறித்தன என்றும் பின்னர், எஸ்டோனியாவை தளமாகக் கொண்ட இத்தாலிய எஃப்-35 போர் விமானங்கள் ரஷ்ய விமானங்களைப் பின்தொடந்து சென்று எஸ்டோனியா வான் எல்லைக்கு வெளியே அனுப்பி வைத்தன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்ய ஜெட் விமானங்கள் எந்தவொரு பயணத் திட்டமும் இல்லாமல், டிரான்ஸ்பாண்டர்களை (transponders) அணைத்து, எஸ்டோனிய விமான கட்டுப்பாட்டுடன் வானொலி தொடர்பு இல்லாமல் இருந்தன என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது. ஆனால் இதற்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. "இந்த ஜெட் விமானங்கள் சர்வதேச வான்வெளியில் விதிமுறைகளுக்கு இணங்க திட்டமிடப்பட்ட வழித்தடத்தில் பறந்தன. பிற நாடுகளின் எல்லைகளை மீறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்றும் அமைச்சகம் கூறியது. எஸ்டோனியாவுக்குச் சொந்தமான வைண்ட்லூ தீவிலிருந்து குறைந்தது 3 கிலோமீட்டர் தொலைவில் பால்டிக் கடல் பகுதியில் தான் அவை பறந்தன என்றும் தெரிவித்தது. 2022ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா, யுக்ரேனில் முழுமையான படையெடுப்பைத் தொடங்கியது. மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்து வருகிறார். சமீபத்தில் அவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அலாஸ்காவில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்கு அழைத்திருந்தார். ஆனால், புதினின் படைகள் போர் நிறுத்தத்திற்கான அழைப்புகளை நிராகரித்து, வான்வழித் தாக்குதல்களை அதிகரித்துள்ளன. தரை வழியாகவும் மெதுவாக முன்னேற்றம் காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா யுக்ரேனில் திட்டமிட்டபடி போர் நடத்த முடியவில்லை என்பதை இந்த ஊடுருவல் காட்டுகிறது என்று எஸ்டோனிய பிரதமர் கூறினார். "நேட்டோ நாடுகள் தங்கள் சொந்த நிலப்பரப்புகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும்படி கட்டாயப்படுத்துவதன் மூலம், யுக்ரேன் மீதான கவனத்தையும், உதவியையும் திசை திருப்புவதே ரஷ்யாவின் நோக்கம்," என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அலாஸ்கா உச்சிமாநாட்டில் டிரம்ப் - புதின் கடந்த வாரம், போலந்து ராணுவம் குறைந்தது மூன்று ரஷ்ய டிரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தது. போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், மொத்தம் 19 ட்ரோன்கள் போலந்து வான்வெளியில் நுழைந்ததாகக் கூறினார். இந்தச் சம்பவம் வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்று ரஷ்யா கூறியது. போலந்து நிலப்பரப்பில் உள்ள வசதிகளை குறிவைக்கும் "எந்தத் திட்டமும் இல்லை" என்றும் அதன் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கியது. ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளியான பெலாரஸ், வழிகாட்டும் கருவிகள் செயலிழந்ததால் டிரோன்கள் தவறுதலாக போலந்து வான்வெளிக்குள் நுழைந்தன எனக் கூறியது. பல நாட்களுக்கு பிறகு, "டான்யூப் (நதியில்) நதிக்கரையில் உள்ள யுக்ரேனிய உள்கட்டமைப்புகளின் மீது ரஷ்யா நடத்திய வான் தாக்குதலுக்குப் பின்", ருமேனிய எல்லையை கண்காணித்துக் கொண்டிருந்த இரண்டு எப்ஃ - 16 (F-16) ஜெட் விமானங்கள் ஒரு ரஷ்ய டிரோனைக் கண்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. பின்னர் அந்த டிரோன் ரேடாரிலிருந்து மறைந்ததாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ரஷ்யா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. போலந்து மற்றும் ருமேனியாவில் நடந்த இந்த ரஷ்ய ஊடுருவல்களுக்கு எதிர்வினையாக, நேட்டோ தனது துருப்புகள் மற்றும் போர் விமானங்களை கிழக்கு நோக்கி நகர்த்துவதாக அறிவித்தது. கூட்டணியின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்தும் முயற்சியில் போலந்து வான்வெளி பாதுகாப்பு பணிகளில் பிரிட்டன் , பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளின் போர் விமானங்கள் ஈடுபட்டுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpvl0g7nxeyo
-
"பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" ஆவணக் காட்சியகம் திறப்பு
Published By: Vishnu 21 Sep, 2025 | 12:31 AM தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் "பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் 20ஆம் திகதி சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் 20ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு வரலாற்று ஆவணக் காட்சியகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆவண காட்சியகத்தில் தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை மூத்த போராளி பஷீர் காக்காவால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் சுடரேற்றி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள், பத்திரிகை ஆவணங்கள் என்பன தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். படங்கள் - ஐ. சிவசாந்தன் https://www.virakesari.lk/article/225621
-
கோவை: வனத்துறையிடம் பிடிபடாத 'ரோலக்ஸ்' - நள்ளிரவில் மருத்துவரை தாக்கிவிட்டு தப்பியது எப்படி?
பட மூலாதாரம், TN Forest Department படக்குறிப்பு, ரோலக்ஸ் யானை கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 20 செப்டெம்பர் 2025 கோவை அருகே 4 பேரைக் கொன்றதாகக் கருதப்படும் ரோலக்ஸ் என்ற ஆண் யானையை, 3 கும்கி யானைகளைக் கொண்டும், மயக்க ஊசி செலுத்தியும் பிடிப்பதற்காக எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. ஆனால் கடந்த 7, 8 ஆண்டுகளில் இந்த யானையால் தாக்கப்பட்டு 8 பேருக்கும் மேல் இறந்திருப்பதாகக் கருதப்படுவதால் இதைப் பிடிக்கும் முயற்சியை வனத்துறை தீவிரமாக்கியுள்ளது. யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் முயற்சியின் போது யானை தாக்கியதில் ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் காயமடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த யானையால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதைப் பிடிப்பதற்கு தலைமை வனக் காப்பாளர் உத்தரவிட்டுள்ளதால் இந்த முயற்சி தொடருமென்றும் வனத்துறை தெரிவித்துள்ளது. ரோலக்ஸ் யானை என்ற பெயர் வந்தது எப்படி? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வனத்துறையிடம் பெறப்பட்ட தகவல்களில், 2011–2022 இடையிலான 12 ஆண்டுகளில், கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட 85 கிராமங்களில், யானைகள் தாக்கி 147 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களில் 102 பேர், வனப்பகுதிக்கு வெளியே இறந்துள்ளனர். இதே காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் 176 யானைகள் இறந்துள்ளன. அவற்றில் 109 யானைகள், மனித நடவடிக்கைகளால் பலியாகியிருக்கின்றன என்றும் தெரியவந்திருந்தது. சமீபகாலமாக கோவை வனக்கோட்டத்தில் குறிப்பாக கோவை மற்றும் போளுவாம்பட்டி ஆகிய 2 வனச்சரகப் பகுதிகளில் யானை தாக்கி, 4 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவருமே ஒரு குறிப்பிட்ட யானை தாக்கியே இறந்திருப்பதும் வனத்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் யானையின் நடமாட்டம், இந்த 2 வனக் கோட்டத்துக்குட்பட்ட தொண்டாமுத்துார், நரசிபுரம், தடாகம், தாளியூர், கெம்பனுார், குப்பேபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை வனக்கோட்டத்தில் யானை–மனித மோதல் அதிகம் நடப்பதால் இதற்கென யானை துரத்தும் காவலர்கள் அடங்கிய குழு, காட்டை விட்டு வெளியேறும் யானைகளை தொடர்ச்சியாகக் கண்காணித்து, 'தடம்' எனப்படும் வாட்ஸ்ஆப் குழுக்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர். இந்த குழுவினர் இந்த யானையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பட மூலாதாரம், TN Forest Department படக்குறிப்பு, தோட்டப் பகுதியில் ரோலக்ஸ் யானை ஏற்படுத்தியுள்ள சேதம். கடந்த சில மாதங்களில் அட்டுக்கல், ஜவ்வுக்காட்டுப்பகுதி, நரசிபுரம், வைதேகி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் செல்வி, ரத்தினம், மருதாசலம் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் அனைத்தும் இந்த யானையால்தான் நிகழ்ந்துள்ளன என்று வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதன் வருகையையும், நடவடிக்கைகளையும் பார்த்து சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், இந்த யானைக்கு ரோலக்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். கமல் நடித்து வெளியான 'விக்ரம்' திரைப்படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து இந்த பெயர் சூட்டப்பட்டிருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த யானை வரும் வீடியோவுடன் ரோலக்ஸ் காட்சிகளில் வரும் பின்னணி இசையையும் கோர்த்து சமூக ஊடகங்களில் பலரும் பரவவிட்டுள்ளனர். அதிலிருந்தே இந்த யானையின் பெயரும் ரோலக்ஸ் என்றே நிலைத்துவிட்டது. இந்த யானையைப் பிடிப்பதற்கு தமிழக அரசின் தலைமை வனப்பாதுகாவலரால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பின் இதைப் பிடிப்பதற்கு, டாப்ஸ்லிப் யானைகள் முகாமிலிருந்து முத்து, நரசிம்மர் ஆகிய 2 யானைகளும், வால்பாறையிலிருந்து கபில்தேவ் என்ற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டுள்ளன. 'ரோலக்ஸ்' யானையை பிடிப்பதில் என்ன சிக்கல்? கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி இரவில், கெம்பனுார்–தாளியூர் ஆகிய இரு ஊர்களுக்கு இடையில், ரோலக்ஸ் யானையை மயக்கஊசி செலுத்திப் பிடிப்பதற்கு முயற்சி நடந்துள்ளது. யானைகள் மீட்புப் பணிகளில் வனத்துறையுடன் இணைந்து நீண்ட காலமாகப் பணியாற்றிய கால்நடை பராமரிப்புத்துறையின் ஓய்வு பெற்ற உதவி இயக்குநர் கால்நடை மருத்துவர் மனோகரன், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் குழுவினர், ரோலக்ஸ் யானைக்கு மயக்கஊசி செலுத்துவதற்காக, அதற்கான துப்பாக்கிகளுடன் காத்திருந்தனர். ஒரே நேரத்தில் இருவரும் மயக்க ஊசியைச் செலுத்திய போது, யானை அதில் சிக்காமல் தப்பிவிட்டதாக வனத்துறையினர் கூறுகின்றனர். படக்குறிப்பு, கால்நடை மருத்துவர் விஜயராகவன் மயக்க ஊசி செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறை கால்நடை மருத்துவர் விஜயராகவன் பிபிசி தமிழிடம் பேசியபோது, ''அன்றிரவு மயக்கஊசி செலுத்த (tranquillize) முயற்சி செய்தோம். ஊசிகளைச் செலுத்தியபோது, அது தவறிவிட்டது. இரவு நேரங்களில்தான் அந்த யானை அதிகமாக வெளியில் வருகிறது. இதனால் அதனை பிடிப்பது சற்று கடினமாக இருக்கிறது.'' எனத் தெரிவித்திருந்தார். பகலிலும் யானை வெளியில் வருகிறதா என்பதற்காக தொடர்ந்து முயற்சிகள் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். பகலில் கும்கிகளைக் கொண்டு அந்த யானையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தால், அதன்பின்னால் பெரும் கூட்டம் கூடிவிடுவதால் அந்த முயற்சியைத் தொடர முடியவில்லை என்று வனத்துறையினர் வருந்துகின்றனர். டிரோன் உதவியுடனும் வனத்துறையினர் ரோலக்ஸ் யானையை தேடி வருகின்றனர். ரோலக்ஸ் யானைக்கு ஒரே நேரத்தில் 2 மயக்க ஊசிகளைச் செலுத்த வேண்டியிருப்பதன் அவசியம் குறித்து, வனத்துறை கால்நடை மருத்துவர்கள் விளக்கினர். அந்த யானை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதுடன், தற்போது இனப்பெருக்கத்துக்குத் தயார் நிலையில் (மஸ்த்) இருப்பதால் அதற்கு 3 விதமான மருந்துகளை இணைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது என்கின்றனர். ஒரே ஊசியில் அவ்வளவு மருந்தைச் செலுத்த முடியாது என்பதால்தான் இரண்டு ஊசிகளில் ஒரே நேரத்தில் செலுத்த முயற்சிப்பதாகக் கூறினர். படக்குறிப்பு, யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி பெயர் கூற விரும்பாத வனத்துறை கால்நடை மருத்துவர் ஒருவர், ''வீட்டுப் பிராணிகளை மயக்கமுற வைப்பதற்கும், காட்டுவிலங்குகளை மயக்கமுற வைப்பதற்கும் வெவ்வேறு விதமான மருந்துகள், வெவ்வேறு விதமான அளவுகளில் (எம்ஜி) மருந்துகள் செலுத்த வேண்டியிருக்கும். அதேபோன்று இரவு நேரமாக இருந்தால் யானை நின்று கொண்டே துாங்குவதற்கு ஒருவிதமான மருந்தும், பகல் நேரமாக இருந்தால் மயங்கி சாயும் வகையிலுமாக மற்றொரு வகை மருந்தும் பயன்படுத்தப்படும்.'' என்றார். அதுபற்றி மேலும் விளக்கிய அவர், ''சமீபகாலமாக யானைகளைப் பிடிக்கும் எல்லா முயற்சிகளிலும் யானைகள் நின்று கொண்டு துாங்கும் மருந்தே (ஹிப்னாடிசனம்) பயன்படுத்தப்படுகிறது. அதற்கான மருந்தை ஊசிகளில் செலுத்திவிட்டு அருகில் சென்றாலும் அதனால் எதையும் செய்ய இயலாது. காட்டுயானைகள் பெரும்பாலும் இரவில் வெளியில் வருகின்றன. ஆனால் இரவு நேரத்தில் இருளுக்கு மத்தியில் யானைகள் நிற்குமிடத்தை துல்லியமாக அறிந்து ஊசியைச் செலுத்துவது பெரும் கஷ்டம்.'' என்றார். ரோலக்ஸ் யானை பற்றி வனத்துறையினர் கூடுதல் தகவல் படக்குறிப்பு, கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் பிபிசி தமிழிடம் பேசிய போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன், ''கடந்த சில மாதங்களில் இந்த யானையால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இரு ஆண்டுகளுக்கு முன் மருதமலை பகுதியிலும் வயதானவர் ஒருவரை தாக்கிக் கொன்றுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 8 முதல் 10 பேர் இந்த யானையால் உயிரிழந்திருக்கலாம் என்று கருதுகிறோம். ஆனால் இந்த யானை ஊருக்குள் ஊடுருவி யாரையும் கொன்றதில்லை. அதன் வழியில் வந்தவர்களைத் தாக்கியுள்ளது.'' என்றார். ரோலக்ஸ் யானையால் கடந்த 2 ஆண்டுகளில் 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்த கோவை வனச்சரக அலுவலர் திருமுருகன், தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவுக்குப் பின் அதைப் பிடிக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது என்றார். இப்போது 3 கும்கி யானைகளுடன், 3 குழுவினர் கண்காணித்து வருவதால் விரைவில் பிடித்துவிடுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மயக்க ஊசி செலுத்தப்பட்டதா, செலுத்தப்படவில்லையா என்பது குறித்து கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''மயக்க ஊசி செலுத்த முயற்சி நடந்தது. ஆனால் செலுத்த முடியவில்லை. அதற்குள் யாரோ ஒருவர் விளக்கு ஒளியைக் காண்பித்ததால் அது நகர்ந்து வாழைத்தோட்டத்திற்குள் புகுந்துவிட்டது. ட்ரோன் மூலமாகக் கண்காணித்தும் அதைப் பின்தொடர முடியவில்லை.'' என்றார். யானை தாக்கி கால்நடை மருத்துவர் காயம் சனிக்கிழமை அதிகாலை தொண்டாமுத்தூரை அடுத்த பரமேஸ்வரன்பாளையத்தில் தனியார் தோட்டத்திற்குள் காட்டு யானையை பிடிக்கும் பணியின்போது கால்நடை மருத்துவர் விஜயராகவனை யானை தாக்கியுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் விஜயராகவனுக்கு முதுகெலும்பு மற்றும் இடது மோதிர விரலில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனரும் கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலருமான வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg4vj37nz1o