Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. ’அரசியல் கைதிகள் விடயத்தில் இனவாதம்’! - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதிகளாக கணிக்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் நீதி அமைச்சர் அறிவிப்பதற்கு ஒரே காரணம் இனவாதம் தான் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோஷம் மேலோங்கி நிற்கின்றது. இதனை வலியுறுத்தி கையொப்ப போராட்டம் ஊடாகவும், வேறு வழிகளிலும் வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்று கூறுகிறார். அவர் அதனை சொல்வதற்கு அரசியல் பின்னணிதான் காரணம். ஏனெனில் இதற்கு முதல் அவருடைய தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் காலத்தில் வடக்கு, கிழக்குக்கு வந்த பொது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று பேசியிருந்தார். ஆனால், தற்பொழுது நீதியமைச்சர் அந்த விடயத்திலிருந்து பின்வாங்குகின்றார். ஆனால் அதுவொரு அரசியல் காரணமாகத்தான் இருக்கவேண்டும். வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதியாக கணிக்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் நீதி அமைச்சர் அறிவிப்பதற்கு ஒரே காரணம் இனவாதம் தான். இது கண்டிக்கப்படவேண்டிய விடயம் என்றார். https://newuthayan.com/article/’அரசியல்_கைதிகள்_விடயத்தில்_இனவாதம்’!
  2. அரசியல் கைதிகள் எவரும் சிறையில் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்? அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வியெழுப்பியுள்ளார். அவரால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்படல் வேண்டும் என்பதும் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் தமிழர்களின் மிக நீண்ட கால அரசியல் கோரிக்கையாகும். தமிழர் தாயக மண்ணான வவுனியாவில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடையில் நின்று தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாம் பதவிக்கு வந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் இதற்கு தெற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என உறுதியளித்து சென்றதன் ஈரம் காயும் முன்னே அவர் அரசாங்கத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அரசியல் கைதிகள் என்று சிறைகளில் எவரும் இல்லை குறிப்பிட்டுள்ளமை, அவர்களின் அரசியல் அநாகரித்தை அம்பலப்படுத்தி உள்ளதோடு வாக்களித்த தமிழர்களையும் ஏமாற்றி தமிழர்களின் அரசியலை அவமானப்படுத்தி உள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்களை விடுதலை செய்வோம் என்று கூறி பதவிக்கு வந்ததும் அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார் ? இதற்கு முன்னரும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றே குறிப்பிட்டிருந்தார். அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்படவில்லை. இது அரசாங்கத்திற்குள் பிளவையே வெளிபடுத்துகின்றது? தமிழர்களின் அரசியல் சார்ந்த விடயங்களில் எந்த ஒரு துளி நகர்வையேனும் தேசிய மக்கள் சக்தி மேற்கொள்ளப் போவதில்லை என்பதும் இதன்மூலம் தெளிவாகின்றது. கடந்த கால ஆட்சியாளர்களைப் போல் பேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமிழர்களின் அரசியலை பயங்கரவாதத்திற்குள் முடக்கி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுக் கொடுத்து சிங்கள பௌத்த பேரினவாதத்தை மகிழ்விக்கவே முன் நிற்கின்றது என்பது தெளிவாகின்றது. தற்போது சிறைகளில் 10 பேரும் குறைவான அரசியல் கைதிகளை உள்ளனர். இவர்களில் மரண தண்டனை கைதிகளும் உள்ளனர். இவர்களை பயங்கரவா தடை சட்டத்திற்கு வெளியே எடுத்து விடுதலை செய்யக்கூடாது என்பதில் பேரினவாத ஆட்சியாளர்கள் உறுதியாக உள்ளதோடு; தண்டனை காலத்தையும் கடந்து சிறையில் வாடும் அவர்களின் வாழ்வை சிறைக்குள்ளேயே கொலை செய்வதற்கும் முயற்சிப்பதாகவே தோன்றுகின்றது. கடந்த காலங்களில் அரசியல் கைதிகள் தங்கள் விடுதலையை வலியுறுத்தி சிறைக்குள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தையும் தொடர்ந்தனர். இவர்களின் விடுதலைக்காக தமிழர் தாயகத்திலும் கொழும்பிலும் சிங்கள மக்களின் ஆதரவோடு பல்வேறு வடிவங்களில் விடுதலைக்கான முயற்சிகள் மேற்கண்ட போதும் அது என்னால் வரை பலன் அளிக்கவில்லை. நல்லாட்சி எனக்கூறப்படும் மைத்திரி-ரணில் ஆட்சிக்காலத்தில் அமைச்சி பதவிகள் இருந்த தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களும், எதிர்க்கட்சியில் அமர்ந்து அரச சுகபோகங்களை அனுபவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆக்கப்பூர்வமான செயற்பாடுகள் எதிலும் ஈடுபடவில்லை என்பதை வேதனையோடு மீண்டும் வெளிப்படுத்துவதோடு, அரசியல் கைதிகள் விடயத்தில் இவர்களும் ஆட்சியாளர்களின் சிந்தனையிலேயே இருந்தனர் என்பதே உண்மை. விடுதலைக்கான நீலி கண்ணீரையே வடித்தனர். தற்போது எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என ஊடகங்களுக்கு கூறுவது அரசியல் ஏமாற்று நாடகமே. தமிழர் அரசியல் விடுதலைக்கான செயற்பாட்டினை போராளிகளும், மாவீரர்களும், அரசியல் கைதிகளும் உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.இன்றும் வைத்திருக்கின்றனர்(சோரம் போனவர்களைப் தவிர ஏனையோர்) என்பதை மறக்க முடியாது. இவர்களைத் தவிர்த்து அல்லது மறந்து விடுதலை அரசியல் செய்வது என்பது அரசியல் கொலைக்கு ஒப்பாகும். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடகிழக்கு எங்கும் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் மேலும் வலுப்பெறல் வேண்டும். இது குறுகிய அரசியல் நோக்கத்திற்கு அப்பால் நிகழ் வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு. இதற்கு வடக்கு கிழக்கை பிரதிதித்துவப்படுத்துபடுத்தி தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுத்து விடுதலையை துரதப்படுத்தல் வேண்டும் எனவும் தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்பிற்கு எதிராக செயற்பட வேண்டாம் எனவும் கோட்டுக் கொள்கின்றோம். அத்தோடு பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்கவென பல்வேறு நாடுகளிடம் மண்டியிட்டு நாட்டின் இறைமையை, அரசியலை, வளங்களை தாரை வார்த்து சமரசம் பேசி பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யும் ஆட்சியாளர்கள் (மிக அன்மையில் இந்தியாவோடும் தற்போது சீனாவுடன் செய்து கொண்டிருக்கின்ற பந்தங்கள் உட்பட) இந்நாட்டில் மிக நீண்ட கால வரலாற்று பாரம்பரியங்களை கொண்ட தேசிய இனமான தமிழர்களோடு அரசியல் ஒப்பந்தம் செய்ய தயங்குவது ஏன்? நாட்டின் எதிர்காலம் நலன் கருதி தமிழர்களின் அரசியல் அபிலாசைகளோடு முன் செல்ல அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்து ஆட்சியாளர்கள் தம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்கின்றோம். https://akkinikkunchu.com/?p=308316
  3. மாணவர்களின் கல்விக்கு வறுமை தடையாக அமைந்துவிடக்கூடாது – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! January 17, 2025 மாணவர்களின் கல்விக்கு வறுமை ஒருபோதும் தடையாக அமைந்துவிடக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 217 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் சா.சுதர்சன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (16) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், ‘ கல்வி வாழ்க்கைக்கு முக்கியமானது. கல்வியில்லாதவர்கள் இரண்டு கண்களும் இல்லாதமைக்கு சமனானவர்கள். நான் யாழ். மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் என்னை சந்திக்க வந்திருக்கின்றார்கள். பிள்ளைகள் கற்பதற்கு ஆர்வமாக இருந்தபோதும் அவர்களுக்கு சீருடைகள், கற்றல் உபகரணங்கள் இல்லாமல் இருக்கின்றன. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் கல்வியைக் கைவிடக்கூடாது. வறுமையிலிருப்பவர்களுக்கு உதவுவதற்கு எமக்கு எந்தவொரு சுற்றறிக்கைகளும் தடையாக இருக்கப்போவதில்லை. நாம் சரியானதை சரியாகச் செய்தால் எதற்கும் பயப்படதேவையில்லை. யாழ்ப்பாண பிரதேச செயலர் சுதர்சன், ஏனைய பிரதேச செயலர்களிலிருந்து வித்தியாசமானவர். இன்று உங்களுக்கான கற்றல் உபகரணங்களை அவர் பெற்றுத் தந்திருக்கின்றார். வறுமையைப்போக்க அவர் எடுக்கும் நடவடிக்கைகள் சிறப்பானவை. கல்வியில் சிறந்த நிலைக்கு நீங்கள் வருவதே, இன்று நீங்கள் பெற்றுக்கொள்ளும் உதவிக்கு பிரதியுபகாரமாக அமையும். அவ்வாறு உயர்ந்த நிலைக்கு வந்து ஏனையவர்களுக்கு உதவி செய்யவேண்டும். கடினமாக உழைத்தால் எதையும் செய்ய முடியும். உங்களால் முடியும் என்று நினைத்து எதையும் செய்யுங்கள். நீங்கள் வெற்றியடைந்தவர்களாக மாறலாம், என அவர் தனது உரையில் தெரிவித்தார். https://www.ilakku.org/மாணவர்களின்-கல்விக்கு-வற/
  4. முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும், அவரது மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பி.டி.ஐ., கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான், பல்வேறு குற்றவழக்குகளில் சிக்கி சிறையில் இருந்து வருகிறார். பரிசுப் பொருட்கள் பெற்றதில் முறைகேடு, அரசு ரகசியங்களை கசிய விட்டது உள்ளிட்ட வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுள்ளார். இந்த நிலையில், பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் அரசுக்கு வர வேண்டிய பணத்தை, தனி நபர் அறக்கட்டளையில் வரவு வைத்து, அதற்கு லஞ்சமாக பல நுாறு ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு, ஊழலை தடுக்கும் பொறுப்பு நிறுவனமான, பாகிஸ்தானின் தேசிய பொறுப்புடைமை பணியகம் (NAB), இந்த குற்றச்சாட்டை முன் வைத்தது.இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி, தொழிலதிபர்கள் சிலர் மீது இந்த குற்றச்சாட்டு தொடரப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், 3 முறை தீர்ப்பு திகதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (17) இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும், அவரது மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய மற்ற அனைவரும் தலைமறைவு ஆகி விட்டனர். அவர்களை, தேடப்படும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/முன்னாள்-பிரதமர்-இம்ரான்-கானுக்கு-14-ஆண்டு-சிறை/50-350467
  5. எம்.ஜி.ஆரின் 108 ஆவது ஜனன தினம் இன்று January 17, 2025 11:36 am மறைந்த நடிகரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 108 ஆவது பிறந்த தினம் இன்று. இதனை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பாக கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் அவரது புகைப்படம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி மறைந்த முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வீடியோவொன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முயற்சித்தவர். மக்களுக்காக எம்.ஜி.ஆர் மேற்கொண்ட முயற்சிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டோம் என்று அதில் கூறியுள்ளார். https://oruvan.com/today-is-mgrs-108th-birth-anniversary/
  6. ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு January 17, 2025 11:53 am ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பின்யாமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை, ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எடுப்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ஹமாஸுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை கூடி ஒப்பந்தத்திற்கு அனுமதி அளிக்கும் என்றும் நெதன்யாகு அறிவித்தார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான ஒப்பந்தம் காஸாவில் போர் முடிவுக்கு வரவும் பணயக்கைதிகளை விடுவிக்கவும் வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கத்தார் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, பல மாத மத்தியஸ்த பணிக்குப் பிறகு, போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான அமைதி ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக நேற்று அறிவித்தார். கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்கா மற்றும் கத்தார் இடையேயான தீவிர பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஜனவரி 19ஆம் திகதி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார். ஹமாஸ் முதற்கட்டமாக 33 பணயக்கைதிகளை விடுவிக்கும், பதிலுக்கு இஸ்ரேல் சிறைகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியானது, போர்நிறுத்தத்தின் ஆறு வாரங்களுக்குள் பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவிற்கு திரும்புவதற்கும் அனுமதிக்கிறது. மத்தியஸ்தர்களான கத்தார் மற்றும் எகிப்தின் அனுசரணையில் பாலஸ்தீனிய அகதிகள் அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்புவார்கள். காசாவின் புனரமைப்பு மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். இந்த ஒப்பந்தம் முழுமையான போர்நிறுத்தம், துருப்புக்கள் திரும்பப் பெறுதல் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதை உறுதி செய்யும் என்று பைடன் வாஷிங்டனில் தெளிவுபடுத்தியிருந்தார். https://oruvan.com/ceasefire-agreement-reached-with-hamas-israeli-prime-minister-announces/
  7. கோட்டாபய சிஐடியில் ஆஜர் January 17, 2025 11:52 am முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். சற்று நேரத்திற்கு முன்பு அவர் கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அலுவலகத்துக்கு வருகைதந்தார். கதிர்காமத்தில் உள்ள சொத்தின் உரிமை தொடர்பான வாக்குமூலம் பெற சிஐடி விடுத்த அழைப்பின் பேரிலேயே கோட்டாபய ராஜபக்ச, ஆஜராகியுள்ளார். https://oruvan.com/gotabaya-appears-before-cid/
  8. அநுரவின் சீன பயணத்தில் நடத்தப்பட்ட சந்திப்புகளும், எடுக்கப்பட்ட தீர்மானங்களும் January 17, 2025 12:44 pm ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 14ஆம் திகதிமுதல் 17ஆம் திகதிவரை சீனாவுக்கு மேற்கொண்ட நான்கு நாள் அரசுமுறை பயணத்தில் பல்வேறு உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதுடன், இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், வர்த்தகம், சுற்றுலாத்துறை மற்றும் கலாசார தொடர்புகளை வலுப்படுத்தவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைக்க 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு மேற்கொள்ளும் ஒப்பந்தமொன்று இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் சீனா மேற்கொள்ளும் 3.7 பில்லியன் டொலர் முதலீடானது இலங்கை வரலாற்றில் சீனா மேற்கொள்ள உள்ள பாரிய முதலீடாகும். இதற்கு முன்பு போர்ட் சிட்டி, ஹம்பாந்தோட்டை துறைமுகம், தாமரை தடாகம் என பல முதலீடுகள் சீனாவால் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் ஒரே தடவையில் மேற்கொள்ளும் பாரிய முதலீடாக 3.7 பில்லியன் அமைய உள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீனப் பயணம் தொடர்பில் இருநாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கை வருமாறு, சீன மக்கள் குடியரசுத் தலைவர் ஷீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 2025, ஜனவரி 14 முதல் 17 வரையில் சீன மக்கள் குடியரசிற்கான உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி ஷீ ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டதுடன், அரச சபைப் பிரதமர் லீ சியாங் மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுத் தலைவர் ஜாஓ லெர்ஜி ஆகியோரைச் சந்தித்தார். ஒரு சுமூகமான மற்றும் நட்பு சூழ்நிலையில், இரு தரப்பினரும் பாரம்பரிய நட்பை மேலும் வலுப்படடுத்துதல், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையே உயர்தர பெல்ட் அண்ட் ரோட் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் (ஒரே எண்ணக்கருவுடனான ஒரே பாதை), பல்துறை நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆழமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டதுடன், அவை தொடர்பில் விரிவானதும் பொதுவானதுமான புரிதல்களை எட்டினர். வெவ்வேறு அளவிலான பரிமாணங்களைக் கொண்ட நாடுகளான சீனாவும் இலங்கையும் 68 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளில் தொடர்ந்து ஒருவரையொருவர் மதித்து, ஒருவரையொருவர் சமமாக நடத்தி, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்துள்ளதுடன், நட்புரீதியான தொடர்புகள் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றன என்னும் பெருமையை இருதரப்பினரும் பகிர்ந்துகொள்கின்றனர். இறப்பர்-அரிசி ஒப்பந்தத்தில் பொதிந்துள்ள, சுயாதீனத்துவம், தன்னிறைவு நிலை, கூட்டுணர்வு மற்றும் பரஸ்பர உதவி ஆகியவற்றின் உணர்வை முன்னெடுத்துச் செல்லவும், பரஸ்பர மரியாதை, பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர ஆதரவு, இருதரப்பினதும் வெற்றிக்கான ஒத்துழைப்பு மற்றும் பொதுவான வளர்ச்சி ஆகிய கொள்கைகளைப் பின்பற்றவும், நேர்மையான பரஸ்பர உதவி மற்றும் என்றென்றும் நீடிக்கும் நட்பின் அடிப்படையில் சீன-இலங்கை மூலோபாய கூட்டுறவு கூட்டாண்மையை ஆழப்படுத்துவதில் உறுதியாக இருக்கவும், இரு நாடுகளுக்கும் மக்களுக்கும் அதிக நன்மைகளை பயக்கும் பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சீன-இலங்கை சமூகத்தை கூட்டாகக் கட்டியெழுப்பவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இருதரப்பு உறவுகள் தொடர்பில், இரு நாடுகளின் தலைவர்களினதும் வலுவான மூலோபாய வழிகாட்டுதலைப் பேணுவதற்கும், இரு அரசுகள், சட்டமன்ற அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான இருதரப்பு பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்துவதற்கும், அரசியலில் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும், ஒருவருக்கொருவர் ஆட்சி மற்றும் அபிவிருத்திக்கான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும், அவற்றின்மூலம் கற்றுக்கொள்வதற்கும், சீன-இலங்கை உறவுகளை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இரு தரப்பினரும் இணங்கினர். இரு தரப்பினரும், தமது முக்கிய நலன்கள் மற்றும் கவனம் செலுத்தவேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பிலான பிரச்சினைகளில், தமது பரஸ்பர ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தீர்மானம் 2758 இன் அதிகாரத்தை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், சீன மக்கள் குடியரசின் அரசானது, முழு சீனாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே சட்டப்பூர்வ அரசாங்கம் என்பதையும், தாய்வான் சீனப்பிரதேசத்தின் பிரிதத்தெடுக்க முடியாத பகுதியாகும் என்பதையும் அங்கீகரித்து, ஒரே சீனா கொள்கைக்கான தனது, வலுவான உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியது. தேசிய மீள் ஒருங்கிணைப்பை அடைவதற்கான சீன அரசின் அனைத்து முயற்சிகளையும் இலங்கை உறுதியாக ஆதரிப்பதுடன், “சுயாதீன தாய்வான்” எண்ணக்கருவின் எவ்வித நிலையும் எதிர்த்து நிற்கிறது. சீனா தொடர்பிலான எந்தவொரு எதிர் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கும் தனது பிரதேசத்தைப் பயன்படுத்த இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்றும், ஷிசாங் மற்றும் ஷின்ஜியாங் தொடர்பான பிரச்சினைகளில் சீனாவை உறுதியாக ஆதரிக்கும் என்றும் இலங்கை மீண்டும் வலியுறுத்தியது. தேசிய சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இலங்கையை தொடர்ந்து வலுவாக ஆதரிப்பதாகவும், அதன் தேசிய நிலவரங்களுக்கு ஏற்ற வளர்ச்சிப் பாதையை சுயாதீனமான தெரிவுகளில் இலங்கைக்கு மதிபளித்து, அவற்றுக்கு ஆதரிப்பதாகவும் சீனா மீண்டும் வலியுறுத்தியது. சுதந்திரமானதும் அமைதியானதும் வெளியுறவுக் கொள்கைக்கான அதன் உறுதிப்பாட்டை சீனத் தரப்பு மீண்டும் வலியுறுத்தியது. சுயாதீனமான அணிசேரா வெளியுறவுக் கொள்கைக்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்தியது. 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியமைக்காக இலங்கைக்கு சீனா வாழ்த்து தெரிவித்ததோடு, இலங்கையின் புதிய அரசாங்கம், இலங்கை மக்களை பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு, ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றில் முன்னோக்கி அழைத்துச் சென்றமைக்காக தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தது மட்டுமால்லாமல் இலங்கை அரசாங்கம் நாட்டின் நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு அயராது உழைக்கும் தருணத்தில், சீனா தனது தீவிர ஆதரவை வழங்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தது. புதிய சகாப்தத்தில் சீனாவின் குறிப்பிடத்தக்க சாதனைகளை இலங்கை பாராட்டியதுடன், அனைத்து வகையிலும் சிறந்து விளங்குகின்ற நவீன சோசலிச நாடொன்றைக் கட்டியெழுப்பவும், சீன நவீனமயமாக்கல் பாதையின் மூலமான சீன தேசத்தின் புத்துணர்ச்சியை மேம்படுத்தவும் சீனாவுக்கான தனது ஆதரவைத் தெரிவித்தது. சீர்திருத்தங்களை விரிவுபடுத்தவும், மேலும் ஆழப்படுத்தவும், உயர்தரத்திலான வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கவும், சீனாவின் உந்துதல் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு புதிய வாய்ப்புகளைக் கொண்டுவரும் என இலங்கை நம்புகிறது. இரு நாடுகளின் தலைவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவித்தலின் கீழ், சீனாவும் இலங்கையும் பெல்ட் அண்ட் ரோட் ஒத்துழைப்பில் பலனுறுதிமிக்க பெறுபேறுகளை உருவாக்கியுள்ளன. இலங்கை, அதன் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியிலும், தனது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிலும் பெல்ட் அண்ட் ரோடு ஒத்துழைப்பின் முக்கிய பங்கைப் பாராட்டுகிறது. கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக ஒருங்கிணைந்த அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து முக்கிய திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கக்க்கூடிய செயற்பாட்டு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கும், பட்டுப்பாதைச் செயற்பாட்டுத்திட்டம் போன்ற தளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும், வாழ்வாதாரத்திற்கான நிகழ்ச்சித் திட்டங்களுக்கமைவாக ஒன்றாகத் திட்டமிடுதல், ஒன்றாகக் கட்டியெழுப்புதல் மற்றும் ஒன்றாக பயனடைதல், திறந்ததும், பசுமையானதும் மற்றும் அர்ப்பணிப்புமிக்கதுமான ஒத்துழைப்பு, உயர்தரத்திலான, மக்களை மையமாகக் கொண்ட மற்றும் வளங்குன்றாத நிலையான வளர்ச்சியுடன்கூடிய உயர்தர பெல்ட் அண்ட் ரோடு ஒத்துழைப்பை ஆதரிப்பதற்காக ஜனாதிபதி ஷி ஜின்பிங் அறிவித்த எட்டு முக்கிய படிகளைப் பின்பற்றுவதற்கும் இரு தரப்பினரும் இணங்கினர். சீனா-இலங்கை உயர்தர பெல்ட் அண்ட் ரோட் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், உயர் தர, வலுவான மீள்தன்மை மற்றும் அதிக நிலைத்தன்மையினூடான இருதரப்பினதும் வெற்றியை நோக்காகக் கொண்ட மேம்பாட்டிற்கான புதிய இடத்தை கூட்டாகத் திறப்பதற்கும், பெல்ட் அண்ட் ரோட் ஒத்துழைப்புத் திட்டத்தில் கைச்சாத்திடுவதில் இரு தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனர். கடன் பிரச்சினையை திறம்பட கையாள்வதில் இலங்கைக்கு வலுவான ஆதரவாக விளங்கிய சீனா, கடன்களை மறுசீரமைப்பதில் வழங்கிய முக்கிய உதவி உட்பட, நிதிசார் நெருக்கடி மிகுந்த காலங்களில் சீனாவிடமிருந்து இலங்கை பெற்ற பெறுமதிமிக்க ஆதரவிற்கு இலங்கை தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தது. இலங்கை, சீன நிதி நிறுவனங்களுடன் இணைந்து ஒப்புக் கொள்ளப்பட்டவாறு, கடன் மறுசீரமைப்பு திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியது. சர்வதேச நாணய நிதியத்தில் சீனா தொடர்ந்து நேர்மறையான பங்கை வகிப்பதுடன், இலங்கையின் நிதிச் சிக்கல்களைத் தணிக்கவும், கடன்படு நிலையில் நீடிப்புத்திறனைப் பேணவும் உதவும் வகையில், ஏனைய கடன் வழங்குநர்களுடன் நட்புரீதியான தொடர்பைப் பேணுகிறது. இலங்கை மத்திய வங்கியும், சீன மக்கள் வங்கியும் தங்கள் நாணய மாற்று ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளதுடன், நிதிசார் ஒத்துழைப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளன. பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து, இரு தரப்பினரும் திருப்தி அடைந்துள்ளனர். பல்வேறு வழிகளில் இலங்கையிலிருந்தான, இறக்குமதியை ஊக்குவிப்பதற்காக சீனா மேற்கொண்டுள்ள முயற்சிக்கு இலங்கை தெரிவித்தது. தேயிலை, இரத்தினக்கல் மற்றும் பிற தொழில்களில் ஈடுபட்டுள்ள இலங்கை நிறுவனங்களுக்கு சீன இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கங்களுடன் உறவுகளை ஏற்படுத்துவதில் தொடர்ந்து ஆதரவளிக்கவும், சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி, சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கண்காட்சி, சீன-தெற்காசிய கண்காட்சி மற்றும் இலத்திரனியல் வணிகத் தளங்கள் போன்றவற்றில் இலங்கை பங்கேற்பதை எளிதாக்கவும், பரஸ்பர நன்மை மற்றும் இருதராப்பினரதும் வெற்றிக்கான பெறுபேற்று அடிப்படையில் இரு நாடுகளின் நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தவும் சீனா தனது தயார்நிலையை வெளிப்படுத்தியது. சமத்துவம், பரஸ்பர நன்மை மற்றும் இருதரப்பினதும் வெற்றியை நோக்காகக்கொண்ட கொள்கைகளுக்கு இணங்க, சகலதும் அடங்கிய தொகுப்பொன்றில் விரிவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இலங்கை சீனாவிலிருந்து அதிக வணிக முதலீட்டை வரவேற்பதுடன், இந்நோக்கத்திற்காக உகந்ததொரு முதலீடு மற்றும் வணிக சூழலை வழங்கும். இலங்கையில் பொருளாதார மாற்றம் மற்றும் நிலையான அபிவிருத்தியை எளிதாக்குவதற்காக இலங்கையில் முதலீடு செய்வதில், சீனாவானது அதன் நிறுவனங்களை தொடர்ந்து ஊக்குவிக்கும். உயர்தர மற்றும் பரஸ்பர நன்மை பயக்குகின்ற செயற்பாட்டு ரீதியிலான, ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, ஏற்பாட்டியல், வளங்குன்றாத அபிவிருத்தி மற்றும் இலத்திரனியல் பொருளாதாரம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தரப்பினரும் இணங்கினர். விவசாயம் தொடர்பான பரந்த அளவிலான ஒத்துழைப்பு மற்றும் ஆழமான பரிமாற்றங்கள் குறித்த நேர்மறையான மதிப்பீடுகளை இரு தரப்பினரும் பகிர்ந்து கொண்டனர். இலங்கையின் நிலையானதும், வளங்குன்றாததுமான விவசாய வளர்ச்சிக்கான திறனை மேம்படுத்த உதவும் வகையில் வெப்பமண்டல பயிர்களுக்கான உயிரியற் தொழில்நுட்பங்கள், தாவரப் பெருக்கம் பயிர்ச்செய்கை மற்றும் மீன்வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில் இலங்கையுடன் பயிற்சி மற்றும் செயல்விளக்கத் திட்டங்களை மேற்கொள்வதற்கான தனது தயார்நிலையை சீனா தெரிவித்தது; மேலும் தேயிலை, பழங்கள், இலவங்கப்பட்டை மற்றும் நீர்வள உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட தனித்துவமான பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதை இலங்கை மேலும் விரிவுபடுத்துவதை வரவேற்றது. வறுமைக் குறைப்பு மற்றும் கிராமப்புற மறுமலர்ச்சியில் உன்னிப்பாகக் கவனம் செலுத்துவதன் மூலம் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தயார்நிலையை இரு தரப்பினரும் பகிர்ந்து கொண்டனர். தொடர்புடைய துறைகளில் பணியாளர்களின் திறனை வலுப்படுத்த இலங்கைக்கு உதவ சீனா தனது தயார்நிலையை வெளிப்படுத்தியது. இரு தரப்பினரும் காலநிலை மாற்றத்தை மனித சமூகத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகவும், சீனா மற்றும் இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாகவும் விளங்குகின்றது என்பதை ஏற்றுக்கொண்டனர். காலநிலை மாற்றத்தில், தொடர்ந்தும் தீவிரமாக இணைந்து பணியாற்ற இணங்கினர். கடுமையான வெள்ளப்பெருக்க்கின்போதான, சீனாவின் மனிதாபிமான நிவாரணத்திற்காக இலங்கை நன்றி தெரிவித்தது. பேரிடர் தடுப்பு, அனர்த்தங்களுக்கெதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் அவசரகால மீட்பு போன்ற துறைகளில் இலங்கையுடன் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், அதன் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இலங்கையின் அவசரகால முகாமைத்துவத் திறன்களை மேம்படுத்துவதில் பயிற்சி அளிக்கவும் சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. ஐக்கிய நாடுகளின் 2030 இற்கான நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான கூட்டு முயற்சியின், பகுதியொன்றாக, பெல்ட் அண்ட் ரோட் சர்வதேச வளங்குன்றாத நிலையான அபிவிருத்திக் கூட்டணி மற்றும் ஏனைய தளங்களின் தொடர்புடைய நடவடிக்கைகளில் இலங்கையின் பங்களிப்பை சீனா வரவேற்கிறது. சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் கடல்சார் ஒத்துழைப்பைத் தொடரவும், கடல்சார் விவகாரங்களில் தொடர்ந்து இருதரப்பு ஆலோசனைகளை நடத்தவும் இரு தரப்பினரும் விரும்புகின்றனர். கடல்சார் சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாத்தல் மற்றும் மறுசீரமைத்தல், கடல்சார் கள விழிப்புணர்வு, கடல்சார் மீட்பு மற்றும் பேரிடர் நிவாரணம், கடல்சார் பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும், பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய கடல்சார் சமூகத்தை உருவாக்க தங்கள் பலத்தை திரட்டவும் இரு தரப்பினரும் தயாராக உள்ளனர். நீல (கடல்சார்) கூட்டாண்மைக்கான கடல்சார் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இரு தரப்பினரும் இணங்கினர். கல்வித்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தரப்பினரும் தயாராக உள்ளனர். புரிதல் மற்றும் நட்பை அதிகரிப்பதற்கு கல்வித்துறையிலான பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் முழுமையாக அங்கீகரித்ததுடன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பரிமாற்றங்களை மேலும் மேம்படுத்துவதற்கான தயார்நிலையை இருதரப்பினரும் வெளிப்படுத்தினர். மேலும் அர்ப்பணிப்புள்ள மாணவர்கள் சீனாவில் மேற்படிப்பைத் தொடர்வதனை சீனா வரவேற்று, ஊக்குவிப்பதுடன், அவர்களுக்கு அரசாங்க புலமைப்பரிசில்களுடன்கூடிய ஆதரவை அளிக்கத் தயாராக உள்ளது. லூபன் செயற்பாட்டு அமர்வினூடே சிறப்பான பலனை அளிக்கவும், இலங்கைக்கு தொழிற்பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி மூலம் அதிகபடியான தொழில்வாண்மையாளர்களை வளர்க்கவும், சீனா இலங்கையுடன் இணைந்து செயற்படும். கல்வித்துறையில் சீனாவின் உதவியை இலங்கை பாராட்டுவதுடன், சீனாவுடன் இணைந்து டிஜிட்டல் வகுப்பறை செயற்திட்டத்தின் வெற்றிக்காகச் செயற்படும். இலங்கையில் சீன மொழிக் கல்வியை ஊக்குவிக்கவும், இலங்கையில் உள்ள சீன கலாச்சார மையத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு தரப்பினரும் தயார்நிலையில் உள்ளனர். சீன அறிவியல் கல்வி நிறுவனத்தின் கீழுள்ள, சீன-இலங்கை கூட்டு கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இரு தரப்பினரும் தொடர்ந்து பணியாற்றுவது மட்டுமின்றி, அதனை மேம்படுத்துவதுடன், இரு நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள், ஒத்துழைப்பு மற்றும் கல்வித்துறையை வலுப்படுத்துவதில் ஈடுபாட்டுடன் செயற்படுவர். இரு தரப்பும் தமது, நீண்டகால நட்பை முன்னெடுத்துச் செல்லவும், தங்கள் மக்களை நெருக்கமாகக் கொண்டுவரவும் தயாராக உள்ளனர். பரஸ்பர சுற்றுலா மற்றும் விமானமார்க்க தொடர்புகளை ஊக்குவிக்க இரு தரப்பினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். பட்டுப்பாதை நகரங்களின் சர்வதேச சுற்றுலா கூட்டணியில் இணைத்துள்ள இலங்கை நகரங்களை சீனா வரவேற்கிறது. சீனா மற்றும் இலங்கையில் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இரு தரப்பினரும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பர். இளைஞர்கள், சிந்தனையாளர்கள், விளையாட்டு மற்றும் ஊடகங்கள் போன்ற துறைகளில் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், புத்தமதப் பரிமாற்றங்களின் பிணைப்பைக் கட்டமைக்கவும், மக்களிடையேயும் சகோதர நகரங்களுக்கிடையிலான பரிமாற்றங்களை ஆழப்படுத்தவும் இரு தரப்பினரும் தயாராக உள்ளனர். இலங்கையில் சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும். சீனாவின் யூனான் மாகாணம், ப்ரைட்னஸ் ஆக்‌ஷன் திட்டத்தை செயல்படுத்த இலங்கைக்கு மருத்துவக் குழுக்களை தொடர்ந்து அனுப்பும். ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்புக்கான ஆசிய முன்முயற்சி மற்றும் ஆசியாவில் கலாச்சார பாரம்பரியத்திற்கான கூட்டணி போன்றவற்றில் பங்கேற்பதற்கான இலங்கையின் நேர்மறையான பதிலை சீனத் தரப்பு பாராட்டுகிறது. இக்கூட்டணியின் கீழ் இலங்கையுடன் இருதரப்பு கலாச்சார பாரம்பரிய ஒத்துழைப்பை சீனா மென்மேலும் ஊக்குவிக்கும். நீதித்துறை, சட்ட அமுலாக்கம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு முக்கிய அங்கம் என்பதனை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்வதுடன், தொலைத்தொடர்பு மோசடிகள் மற்றும் இணையத்தள சூதாட்டம் போன்ற நாடுகள் கடந்த குற்றங்களை கூட்டாகக் கட்டுப்படுத்தத் தயாராக உள்ளனர். இலங்கையின் நீதித்துறை, சட்ட அமுலாக்கம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் திறன் மேம்பாட்டை ஆதரிக்கவும், காவல் துறைக்கு உதவி வழங்கவும் சீனா தன்னால் இயலுமான அனைத்தையும் செய்யத் தயாராகவுள்ளது. ஜனாதிபதி ஷீ ஜின்பிங் முன்மொழிந்த உலகளாவிய அபிவிருத்திக்கான முயற்சி, உலகளாவிய பாதுகாப்பு முயற்சி மற்றும் உலகளாவிய நாகரிக முயற்சி ஆகிய மனிதகுலத்திற்கான பகிரப்பட்ட எதிர்காலத்தைக் கொண்ட ஒரு சமூகத்தின் வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், அவ்வளர்ச்சியில் தீவிரமாக பங்கேற்பதற்கும் இலங்கை தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த காலகட்டத்தில் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையானது, 2025 ஆகிய இவ்வாண்டில், தனது 80 வது ஆண்டு நிறைவைக் குறித்து நிற்கிறது. ஐக்கிய நாடுகள் சபையை மையமாகக் கொண்ட சர்வதேச முறைமை, சர்வதேச சட்டத்தால் ஆதரிக்கப்படும் சர்வதேச ஒழுங்கு மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளுகிணங்க சர்வதேச முறைமையொன்றை நிலைநிறுத்துவதற்கான தனது இணைந்த உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர். இரு தரப்பினரும் அமைதியான சகவாழ்விற்கான ஐந்து கொள்கைகளை கடைபிடிப்பதுடன், சமமான மற்றும் சீரான பன்முக உலகம் மற்றும் உலகளாவிய அடிப்படையில் நன்மை பயக்கும் மற்றும் அனைத்தும் உள்ளடங்கலான பொருளாதார உலகமயமாக்கலை கூட்டாக ஆதரிப்பது மட்டுமின்றி, உலகின் அனைத்து நாடுகளுக்கும் அமைதி, பாதுகாப்பு, செழுமை மற்றும் முன்னேற்றத்துடனான பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிச் செயற்படுவர். இவ்விஜயத்தின் போது, விவசாயம், சுற்றுலா, வாழ்வாதார உதவி, ஊடகம் மற்றும் ஏனைய துறைகளில் இரு தரப்பினரும் ஒத்துழைப்பு ஆவணங்களில் கைச்சாத்திட்டனர். ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, தனக்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காக சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன், சீனத் தலைமையை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். சீன ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி விடுத்த அன்பான அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததைத்தொடர்ந்து, இரு தரப்பினரும் இராஜதந்திர ரீதியில் சிறப்பான தொடர்புகளைத் தொடர்ந்தும் சிறப்பாகப் பேண இணங்கினர். https://oruvan.com/meetings-held-and-decisions-taken-during-anurags-visit-to-china/
  9. பெரியார் குறித்து சர்ச்சை… சீமானுக்கு சிக்கல்! BySelvam Jan 15, 2025 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு திமுக, அதிமுக, பாமக, விசிக உள்ளிட்ட பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தநிலையில், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுக்கையிட முயன்ற 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஜனவரி 22-ஆம் தேதி சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று கோவை ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரியாரை இழிவுபடுத்தி கடலூரில் சீமான் செய்தியாளர் சந்திப்பில் பேசியதற்கு ஆதாரம் கேட்டு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புகள் பதிவான போதும் ஆதாரம் கொடுக்காமல் தொடர்ந்து பெரியாரை இழிவுபடுத்தி பேசி வருகிறார். தமிழர்களுக்கு தன்மானத்தை ஊட்டிய பெரியாரை சீமான் இழிவுபடுத்துகிற செயல் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் மன வேதனையையும், கொந்தளிப்பையும் உண்டாக்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் சீமானுக்கு கண்டனம் தெரிவித்த பின்னரும் பெரியார் பற்றி அவதூறு பரப்புவதை சீமான் நிறுத்திக் கொள்ளாத காரணத்தால், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் வருகின்ற ஜனவரி 22 புதன்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை நீலங்கரையில் உள்ள சீமானின் வீட்டை ஆயிரக்கணக்கானோர் திரண்டு முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது. எனவே பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து இயக்கங்களும், தமிழ்நாடெங்கும் உள்ள பெரியார் பற்றாளர்களும், தமிழின உணர்வாளர்களும் அவசர அழைப்பாக ஏற்றுக்கொண்டு, இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார். https://minnambalam.com/political-news/kovai-ramakrishnan-announces-protest-in-front-of-seeman-house/
  10. வீழ்த்த முடியாத பெரியார்! வீழப் போகும் சீமான்! ஓயாமல் சர்ச்சைகளுக்குள் செல்ல விரும்பவில்லை. நாளும், பொழுதும் மக்கள் பிரச்சினைகளை ஊன்றி கவனித்தும், அரசின் சட்ட திட்டங்களை பொது நலன் சார்ந்து விமர்சித்தும் அறம் இணைய இதழில் எழுதி வருகின்ற நான் என் கவனத்தை சிதறடிக்க விரும்பவில்லை. ஆனால், தமிழக அரசியல் சூழலில் சில அதிரடி மாற்றங்களுக்கான காலம் கனிகிறது; காரணம், எந்த பெரியாரை முன் நிறுத்தி திராவிட அரசியல் இயக்கங்கள் சுமார் 60 ஆண்டுகள் இங்கு ஆட்சி அதிகாரத்தை செய்து வந்தனரோ.., அந்த பெரியார் இமேஜை உடைத்து சுக்கு நூறாக்கும் வண்ணம் ஒருவர் பேசுவதை ஒன்றும் செய்ய இயலாமல் கையறு நிலையில் திராவிட அரசியல் இயக்கங்கள் இருக்கும் யதார்த்தம் ஒரு அசாதாரண நிலையாகும். திராவிட இயக்க தொண்டர்களோ, மக்களோ இதற்கு மிகப் பெரிய வினையை ஆற்றாமல் இதனை வேடிக்கை பார்த்து வருகின்றனரே.. இதை எப்படி புரிந்து கொள்வது..? ஒரு முகம் தெரியாத அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக கொந்தளித்த அளவுக்கு கூட ஒரு சகாப்ததையே இங்கு நிகழ்த்திய பெரியாருக்கு ஆதரவாக ஒரு பேரலை எழவில்லையே…என்றால், அதற்கு காரணம், திராவிட அரசியல் கட்சி தலைவர்கள் தாங்கள் பேசிய கொள்கைக்கு முற்றிலும் எதிரானாவர்களாக – போலியானாவர்களாக – நடந்து கொண்டிருக்கும் அவலத்தை மக்கள் பார்த்து சலிப்பின் எல்லைக்கே சென்றுள்ள யதார்த்தம் தான்…! பெரியார் அளவுக்கு பெண்ணுரிமையை பேசிய இன்னொருவர் இந்த மண்ணில் உண்டா? பெரியார் பெண்களின் பாலியல் சுதந்திரத்தை முழுமையாக – நிபந்தனைகள் இன்றி ஆதரித்தார் என்பது தான் 100 சதவிகித உண்மை! ”ஒரு பூனையிடம் இருந்து தனக்கு சுதந்திரம் கிடைக்குமென்று எலி எப்படி நம்ப முடியாதோ, அது போல ஆணிடமிருந்து தனக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று ஒரு பெண் நம்ப முடியாது. ஆகவே உன் சுதந்திரம் என்பது பிறரால் உனக்கு தரப்படுவது அன்று. அது உன்னால், நீயே எடுத்துக் கொள்ள வேண்டியதாகும்” என்ற பெரியார் எப்படி ‘உனக்கு இச்சை வேண்டும் என்றால், தாயையோ, சகோதரியையோ புணரலாம்” என்று ஒரு பெண்ணுக்கு எதிராக பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆணுக்கு ஆதரவாக பேசுவார்..? நான் பெரியார் எழுதியவை அனைத்தையும் படித்தவன் அல்ல, என்றாலும், அவரை ஆழமாக உள் வாங்கி நெகிழ்ந்தவன் என்ற வகையில், அறுதியிட்டு நான் உறுதிபடக் கூற முடியும், பெரியார் இவ்விதம் பேசி இருக்க வாய்ப்பே இல்லை. ‘பெரியார் நடத்திய திராவிடர் கழக மாநாடுகளில் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பமாக பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்’ என்ற வரலாறு தெரிந்தவர்கள் இந்த அவதூறை ஒரு போதும் நம்ப மாட்டார்கள்! பெரியாருக்கு இருக்கும் மிகப் பெரிய சிறப்பு என்ன தெரியுமா…? ஒட்டு மொத்த இந்தியாவே எதிர்க்கத் தயங்கிய பார்ப்பனியத்தை துணிந்து எதிர்த்தது தான்! பெரியாரின் இந்த சிறப்புக்கு ஈடு இணை சொல்ல இந்தியாவில் வேறெவருமே இல்லை. இந்த விஷயத்தில் அம்பேத்கரைக் கூட பெரியாருக்கு இணை சொல்ல முடியாது. அதனால் தான் அம்பேத்கரைக் கூட உள்வாங்கி செரிக்க தயாரான பார்ப்பனியம், பெரியாரை விழுங்க முடியாமல் விபீஷணர்களை தூண்டி விடுகிறது. அவர் இமேஜை சிதைக்க பார்க்கிறது. சந்தேகமில்லாமல் சீமான் பாஜகவின் உருவாக்கம் என்பதற்கு அந்தக் கட்சியின் தலைவர்கள் பேசி இருப்பதே சாட்சியாகும். இதோ பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பேசுவதை கவனியுங்கள்; சீமான் எங்கள் வழியில் வந்திருக்கிறார். காரணம், நாங்கள் இத்தனை காலமாக எங்களின் கருத்தியலாக எதனைச் சொல்லிக் கொண்டிருந்தோமோ அதனையே சீமான் இன்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார். எனவே, இதனை எங்கள் கருத்தியலுக்கான பலமாகவும், ஆதரவாகவும் பார்க்கிறேன். இது பாஜகவின் கருத்தியலுக்கான வெற்றியாக பார்க்கிறேன். உதாரணத்திற்கு, இது அண்ணா வளர்த்த தமிழ் அல்ல; ஆண்டாள் வளர்த்த தமிழ். இது பெரியார் வளர்த்த தமிழ் அல்ல; பெரியாழ்வார் வளர்த்த தமிழ் என அவ்வப்போது நான் கூட்டத்தில் சொல்வதுண்டு’’ இதே போல அண்ணாமலை, “சீமான் சொல்வதைப் போன்று பெரியார் பேசவில்லை என்று சிலர் மறுக்கின்றனர். ஆனால், அவர் அப்படித்தான் பேசினார். அதற்கான ஆதாரங்களை நான் கொடுக்கிறேன். பெரியார் எங்கே அப்படியொரு கருத்தை, எந்த புத்தகத்தில் கூறியுள்ளார். என்ற ஆதாரத்தை நான் வழங்குகிறேன். என்கிறார். இன்று சீமானை ஆதரிக்கும் பார்ப்பனிய பாஜக தான், நாளை சீமானை அழிக்க இருக்கிறது…! நான் சொல்வது சத்திய வார்த்தை! தமிழ் சமூகத்தின் மனசாட்சியாய் – அரணாய் – திகழ்ந்த பெரியாரை தகர்த்துவிட்ட பிறகு, தனக்கே இங்கு பாதுகாப்பில்லை என்பதை சீமான் உணருவதற்கு வெகுகாலம் ஆகாது. நான் திராவிட இயக்க ஆதரவாளன் அல்ல, அதே சமயம் திராவிட கருத்தியலில் உடன்பாடு உள்ளவன். அதே போல தமிழ் தேசியத்திலும் பெருமதிப்பு கொண்டவன். தமிழ்நாட்டுக்கு வெளியே செல்லும் போது, நாம் நம்மை தமிழன் என்று தான் அடையாளப்படுத்திக் கொள்கிறோமோ அன்றி, திராவிடன் என்று சொல்வதில்லை. தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன் என்போமே தவிர, திராவிட நாட்டில் இருந்து வருகிறோம் எனச் சொல்வதில்லை. தமிழ் மொழியும், தமிழ் மண்ணும், தமிழ் பண்பாடுமே நம் அடையாளமாகும். இந்தியாவில் பாஜகவின் எழுச்சிக்கு பிறகு பார்ப்பனியத்தின் எழுச்சி வீரியமாக இருக்கிறது. கல்வியில் பார்ப்பனியச் சிந்தனைகளை வீரியமாக விதைத்து வருகிறார்கள். கார்பரேட்களுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச் சட்டங்களை சிதைத்து, உழைக்கும் வர்க்கத்தை அடிமைப்படுத்த விழைகிறார்கள்! இயற்கை வளத்தை அழிக்கும் விவசாயக் கொள்கைகளை அமல்படுத்தி வருகிறார்கள். மதவாத பிற்போக்கு கருத்தியலுக்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் எதிர்ப்பதாக சொல்லிக் கொண்ட திமுக, தான் செய்து கொண்டிருக்கும் பகாசூர ஊழல்களில் தண்டிக்கப்படாமல் இருக்க பாஜகவிற்கு மறைமுக ஆதரவளித்து வருவதே யதார்த்தமாக உள்ளது. ஆக, திராவிட கருத்தியலுக்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கும் திமுக மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. திமுகவின் வீழ்ச்சி பெரியாரின் வீழ்ச்சியாகிவிடாது. திமுக, அதிமுகவே இல்லை என்றாலும், பெரியார் நின்று நிலைப்பார்! ஏனென்றால், உண்மை எப்போதும் நின்று நிலைக்கும். சீமான் தமிழ் தேசிய கருத்தியலுக்கு எந்த அளவுக்கு வளம் சேர்த்தாரோ.., அதைவிட அதிகமாக தற்போது பார்ப்பன ஆதரவு நிலைபாடு எடுத்து தமிழ் தேசியத்தின் பேரழிவுக்கும் காரணமாகிறார் என்ற வருத்ததை நான் இங்கு நான் பதிவு செய்கிறேன். திராவிட இயக்க அரசியல்வாதிகளின் போலிதனங்களை, பொய்மைகளை, துரோகங்களை தட்டிக் கேட்டு அவர்களை நேர்வழிப்படுத்தும் ஆளுமைகளோ, அரசியல் தோழமைகளோ இல்லாத வெற்றிடத்தில், சீமான் சிலம்பம் சுற்றி பார்ப்பனியத்திற்கு தொண்டு செய்து கொண்டிருக்கிறார். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/20443/periyar-seeman-anti-brahmin/
  11. சாத்தியமானவையே வெற்றியின் படிகள் January 14, 2025 — கருணாகரன் — உலகத் தமிழர் பேரவையும் (Global Tamil Forum – GTF) சிறந்த இலங்கைக்கான சங்கம் (Sangha for Better Sri Lanka) என்ற அமைப்பும் கூட்டாக முன்னெடுத்து வரும் இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான (இமாலயப் பிரகடனத்தின் அடிப்படையிலான) தொடக்க முயற்சி, இரண்டாம் கட்டத்துக்கு நகரத் தொடங்கியுள்ளது. இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் கடந்த மாதம் ஆரம்பமாகியிருக்கின்றன. இரண்டாம் கட்ட நடவடிக்கைகளில் முக்கியமாக, ‘இமாலயப் பிரகடன‘த்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைப் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்துவதோடு, அதனை அடிப்படையாகக் கொண்ட உரையாடல்களை மக்களுடன் நேரில் நடத்தும் நிழ்ச்சிகள் அமைகின்றன. இந்த நடவடிக்கைகளின் பரீட்சார்த்தக் கூட்டங்கள் மாவட்ட ரீதியாக நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் இந்தச் சந்திப்புகள் நடந்துள்ளன. பெருமளவு மக்களும் இதில் பங்கேற்றுள்ளனர். இனி இது பிரதேச ரீதியாக, கிராமங்களை நோக்கியதாக அமையும் என்று இந்தப் பணிகளை முன்னெடுத்து வரும் உலகத் தமிழ்ப் பேரவையின் முக்கியஸ்தரான வேலுப்பிள்ளை குகனேந்திரன் (குகன்) தெரிவித்துள்ளார். இதனுடைய முதற்கட்ட நடவடிக்கை, 2023 ஏப்ரலில் நேபாளத்திலுள்ள நாகர்கோட்டில் உலகத் தமிழர் பேரவையினரும் சிறந்த இலங்கைக்கான சங்கத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து ‘இமாலயப் பிரகடனம்‘ என்ற உத்தேச வரைபை உருவாக்குவதோடு ஆரம்பமாகியது. அதனுடைய தொடர்ச்சியாக அந்த வரைபை தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல் கட்சிகள், அரசாங்கம், மத அமைப்புகள், மதத் தலைவர்கள், சமூக அமைப்புகள், ஊடகங்கள் போன்ற பொறுப்புடைய பல்வேறு தரப்புகளைப் பரவலாகச் சந்தித்துக் கையளிப்பதாக இருந்தது. குறிப்பாக உரையாடலுடன் கூடிய சந்திப்புகளாக அமைந்ததால், அதற்கு முதற்கட்ட வெற்றியும் கிட்டியது. இந்த வெற்றியே பலருக்கும் அச்சத்தை உண்டாக்கியது. ஏனென்றால், இதற்கான வரவேற்பென்பது, இனப்பிரச்சினையைப் பற்றிய அரசியல் அரங்கிலிருந்து தம்மைப் படியிறக்கி விடும் என்று பாரம்பரிய அரசியல்வாதிகள் (Traditional politicians) அல்லது ஆதிக்க அரசியலாளர்கள் (Dominant politicians) கருதினர். இதையே நடைமுறைப்படுத்தும் நிலை வளர்ச்சியடைந்தால், தமக்கான இடத்தை இமலயத் தரப்புப் பெற்றுவிடும் என்று அச்சமடைந்தனர். அதனால் இமாலயப் பிரகடனத்தின் உருவாக்கம், அதனோடு இணைந்திருக்கும் தரப்புகள், அவற்றின் கூட்டு முயற்சி அல்லது இணைந்த நடவடிக்கைகள் பற்றிப் பலவிதமான சந்தேகங்களைப் பல தரப்பினரும் எழுப்பத் தொடங்கினர். சிங்கள, முஸ்லிம், மலையகத் தரப்பினரையும் விட தமிழ்த்தரப்பில்தான் எதிர்ப்பும் விமர்சனங்களும் அதிகமாக இருந்தன. புலம்பெயர் சூழலிலும் ஒரு வகையான உட்குமுறலை அல்லது பொருமலை அவதானிக்க முடிந்தது. தமது கையை விட்டு விவகாரம் செல்கிறது என்ற பதட்டம். இந்த எதிர்ப்பு ஐந்து வகையில் அமைந்திருந்தது. 1. தமிழ் மக்களுடைய அரசியலுரிமைப் போராட்டத்தையும் கோரிக்கையையும் நீர்த்துப் போகச் செய்வதற்கு இந்தப் பிரகடனமும் இந்தத் தரப்புகளும் முயற்சிக்கின்றன என்பது. குறிப்பாகத் திம்புக் கோரிக்கையை விடவும் தாழ்ந்த கோரிக்கையை இந்தப் பிரகடனம் தூக்கிச் சுமப்பதாக. 2. இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கான பின்கதவு நடவடிக்கை இது என்பதாக. அதாவது, இந்தப் பிரகடனம் உருவாக்கப்பட்டபோது, கொழும்பில் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி இருந்தது. என்பதால் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியைத் தக்க வைப்பதற்கான மேற்குலகின் தேவைகளோடு இணைந்ததாகவே இது உள்ளதென நோக்கப்பட்டது. இந்த ஊகத்துக்கு அவர்கள் துணைக்குச் சேர்த்துக் கொண்டது, இந்த முயற்சிக்கு அனுசரணை வழங்கிய சுவிற்சர்லாந்து அரசை. ஏனென்றால், மேற்குலகின் விருப்பங்களை நிறைவேற்றும் இடைநிலை ஏற்பாட்டுத் தரப்பு (தரகர்) என்ற வகையில் சித்திரிக்கப்பட்டது – ஊகிக்கப்பட்டது. அதோடு, இமாலயப் பிரகடனத்தை இன முரண்பாட்டுத் தீர்வுக்கான உரையாடலுக்குச் சிறந்ததொரு தொடக்கமாகக் கருதி, இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் யூலி சுங், மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிஸ் தூதுவர் சிறி வோல் போன்றோர் பாராட்டியிருந்ததையும் இந்த நோக்கிலேயே பார்க்கப்பட்டது. 3. இமாலயப் பிரகடனத்தில் வழமைக்கு மாறான முறையில் சிங்கள எதிர்ப்பின்மையும், பௌத்த பீடங்களின் ஆசீர்வாதமும் பௌத்த பிக்குகளின் பங்கேற்பும் இருந்தது என்பது. இது இன்னொரு சந்தேகத்தைக் கிளப்பியது. அதாவது சிங்களத் தரப்பின் கடந்த காலத் தவறுகளிலிருந்து அதைக் காப்பாற்றி விடுவதற்கான வாய்ப்புகளை இந்த முயற்சியும் இமாலயப் பிரகடனமும் உள்ளதாற்தான் அவை எதிர்ப்பின்றி, ஆதரவளிக்கின்றன எனக் கருதப்பட்டது – ஊகிக்கப்பட்டது. 4. வழமையான (ஊகநிலைச் சிந்தனையின்) அடிப்படையில் இதெல்லாம் ஏதோ பின்னணிச் சக்தியின் நிகழ்ச்சி நிரலில், அவற்றின் தேவைக்கேற்ப இயக்கப்படுகின்றன. கையூட்டுப் பெற்றுக் கொண்டு, தமிழர்களுடைய விடுதலைக்கும் உரிமைக்கோரிக்கைக்கும் அதற்கான போராட்டத்துக்கும் எதிராகச் செயற்படும் சக்திகளின் வேலை என்பதாக. 5.இது முன்னர் புலிகளை ஆதரித்த தரப்பின் புதியதொரு வேலை. ஆகவே இதற்கு நாம் எதற்கு ஆதரவளிக்க வேண்டுமென சிலர் ஒதுங்கியிருக்கவும் எதிர்ப்புக் காட்டவும் முற்பட்டமை என்பது. இவ்வாறு பலவகையான ஊகங்களும் அச்சமும் இந்த முயற்சியின்மீது கொள்ளப்பட்டது. குறிப்பாக நடைமுறைச் சாத்தியங்களுக்கு வெளியேயான, தீவிரத் தேசியவாதத்தை முன்னெடுக்கும் தமிழ்த்தரப்பினர், இமாலயப் பிரகடனத்தையும் அதை முன்னெடுத்தோரையும் உச்சமாக எதிர்த்தனர். இமாலயப் பிரகடனம் அரசைப் பாதுகாப்பதோடு, தமிழர்கள் இதுவரையும் பெற்றவற்றையும் இனிமேல் பெறுவதற்கு வாய்ப்பானவற்றையும் இல்லாதொழிக்கிறது எனப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினர். அதேவேளை சிங்களச் சமூகத்தையும் ஆட்சியாளரையும் போர்க்குற்றம், இனவன்முறை உள்ளிட்ட வரலாற்றுத் தவறுகளிலிருந்து விடுவிப்பதாகவும் கூக்குரலிட்டனர். வெளிப்படையாகச் சொன்னால், சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான சூழல் கனிந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை அதைப் பாழாக்கி விடும். அதோடு இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலையும் போர்க்குற்றங்களுக்கான தண்டனை அளித்தலையும் இது இல்லாமலாக்கக் கூடியது எனவும் பேசப்பட்டது. இப்போதும் இவ்வாறே கருதிக் கொண்டிருக்கிறார்கள். (இந்தக் கற்பனைக் குதிரைகள் இன்னும் களைக்கவில்லை!). ஆனால், இதையிட்டெல்லாம் இமாலயப் பிரகடனத்தினர் கவலைப்படவேயில்லை. ஒரு மாற்று முயற்சியை – புதிய வேலைத்திட்டமொன்றை – முன்னெடுக்கும்போது இனவாதம் முற்றியிருக்கும் இலங்கைச் சூழலில் இந்த மாதிரியெல்லாம் நடக்கும் என முன்பே அறிந்திருந்தனர். ஆகவே எதையும் பொருட்படுத்தாமல், அவர்கள் மிக வெளிப்படையாக, திறந்த உளத்தோடு தங்களுடைய செயற்பாடுகளை உற்சாகமாக முன்னெடுத்தனர். மட்டுமல்ல, இனமுரணையும் இனப்பிரச்சினையையும் முடிவுக்கு கொண்டு வருவதாக இருந்தால், முதலில் பரந்த உரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். அது சகல தளங்களிலும் நிகழ வேண்டும். ஆகவே அதற்கு அரசாங்கத்தோடும் அரசியற் கட்சிகளோடும் மட்டும் பேசுவதால் பயனில்லை. அப்படி மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகள் எல்லாம் வரலாற்று ரீதியில் தோற்றுப் போயின. எனவே அரசியற் தரப்புகளுக்குள் மட்டுப் பட்டும் கட்டுப்பட்டும் நிற்காமல், அதற்கப்பால் மக்களுடனும் மக்கள் அமைப்புகள், புத்திஜீவிகள், மதபீடங்கள், ஊடகத் தரப்புகள் எனச்சகலதரப்போடும் இதைப் பற்றிப் பேச வேண்டும். உரையாடலுக்கான களங்களைத் திறக்க வேண்டும். பரஸ்பர நெருக்கத்தையும் நம்பிக்கையையும் கூட்ட வேண்டும். அப்போதுதான் மக்களின் பேரால் நடத்தப்படும் இனவாதத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்ற புரிதலோடு முதற்கட்ட உரையாடல்கள் நடத்தப்பட்டன. இனவாத அடிப்படையில் சிந்திக்கும் – செயல்படும் அரசியற் தரப்புகளை இலகுவாகத் தோற்கடிக்க முடியாது. அவற்றைத் தனிமைப்படுத்தலாம். பலவீனப்படுத்தலாம். அப்படித்தான் நீண்ட கால அடிப்படையில் அவற்றைப் பின்னடையச் செய்ய முடியும். ஆகவேதான் நடைமுறைச் சாத்தியமான ஒரு இடையூடாட்ட அரசியல் செயல்முறையை உருவாக்கலாம் என யோசித்தது இந்தத் தரப்பு. அதைச் செயலுருவிலும் மேற்கொண்டது. இதில் முக்கிய பங்காற்றியது – பங்காற்றிக் கொண்டிருப்பது GTF தான். கதவுகளைத் தட்டத் திறக்க வேண்டும். செவிகளைக் கூர்மையாக்குவதற்குச் சேதிகளைச் சொல்ல வேண்டும். அந்தச் சேதிகள் மனக் கதவுகளைத் திறப்பதாக இருக்க வேண்டும் என GTF சிந்தித்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் இங்கே முக்கியமாகப் பதற்றமில்லாமல் கவனிக்க வேண்டியது, இமாலயப் பிரகடனத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை. இமாலயப் பிரகடனத் தரப்பொன்றும் தீர்வுக்கான முழுப் பொறுப்பையோ, முழு வடிவத்தையோ எடுக்கவுமில்லை, முன்வைக்கவுமில்லை. இதைப் படிக்கும்போது அது தெளிவாகும். 1. எந்தவொரு சமூகமும் தனது அடையாளத்தையும் வாழிடப் பெருமையையும் இழந்துவிடலாமென்ற அச்சமில்லாது வாழக்கூடிய பன்முக அடையாளத்தைப் பாதுகாத்தல், ஊக்குவித்தல்; 2. பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீள்தல், உள்ளூர் உற்பத்தி, புலம் பெயர் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டாரின் முதலீடுகளுக்கு வசதிசெய்து கொடுத்தல், நாடு வளர்ச்சிப் பாதையில் செல்வதை உறுதிசெய்தல் ஆகிய செயற்பாடுகளின் மூலம் இலங்கையை ஒரு உறுதியான மத்திம வருமான நாடாக மாற்றுதல். 3. தனியார் மற்றும் கூட்டுரிமைகள், சகல மக்களின் சமத்துவம், சமக்குடியுரிமை, பொறுப்புள்ள நிறுவனங்கள், மாகாணங்களுக்குப் போதுமான அதிகாரப் பகிர்வு ஆகியவற்றை உறுதிசெய்யவல்ல புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கல்; அது நிறைவேற்றுப்படும்வரை ஏற்கெனவே இருக்கும் அரசியலமைப்பின் பிரிவுகளை விசுவாசத்துடன் செயற்படுத்தல். 4. ஒன்றிணைந்த, பிரிக்கப்படாத நாட்டில் மக்களின் மத, கலாச்சார மற்றும் இதர அடையாளங்களை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கான மதிப்பை வழங்குதல், இன, மத சிறுபான்மைக் குழுக்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுதல். 5. கடந்த காலங்களிலிருந்து கற்றுக்கொண்டு பொறுப்புக்கூறல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் இதுபோன்ற துன்பங்கள் இனிமேல் நிகழாது என்பதை உறுதிசெய்யக்கூடிய நல்லிணக்கம் கண்ட இலங்கையொன்றை உருவாக்குதல். 6. இரு-தரப்பு, பல்-தரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச கடமைகளை நிறைவேற்றுதல், சுயாதீனமானதும், மாறியல்பு கொண்டதுமான வெளிவிவகாரக் கொள்கையைப் பின்பற்ற நடவடிக்கைகளை எடுத்தல், உலகின் அமைதியான, வளமான, ஜனநாயக நாடுகளின் மத்தியில் பெருமதிப்பைப் பெற்ற ஒரு நாடாக இலங்கையை உருவாக்குதல் என. இமாலயத் தரப்பின் இந்த முயற்சியை ஓரளவுக்குத் தமிழ்ப் பரப்பில் வரவேற்றது இலங்கைத் தமிழரசுக் கட்சியும் சமத்துவக் கட்சியுமே. சம்பந்தன் இந்தத் தரப்பினரை வரவேற்றுப் பேசி ஊக்கமூட்டினார். சம்பந்தனின் பகிரங்க ஆதரவு தமிழ்த்தரப்பில் மேலும் எதிர்ப்பைக் கூட்டியது. சம்பந்தனுக்கும் கொழும்புக்குமிருந்த நெருக்கத்தைக் காட்டி, இந்த முடிச்சுப் போடப்பட்டது. ஆனால், தாம் செய்ய வேண்டியிருந்ததை, செய்ய வேண்டியதை, செய்யத் தவறியதை, இமாலயப் பிரகடனத்தினர் செய்கின்றனர். அதாவது, தமக்கான வழிகளை – இனப்பிரச்சினையைப் பற்றிய புரிதல், அது உண்டாக்கிய பாதிப்பு அல்லது தாக்கம், அதற்கான தீர்வு போன்றவற்றை சமூகமட்டத்தில், மக்களிடத்தில் – பேசி இலகுவாக்கும் வேலை என சம்பந்தன் புரிந்திருந்தார். ஏனைய தரப்புகள் தொடர்ந்தும் எதிர்த்தும் மறுத்துமே வந்தன. ஆனால், இமாலயப் பிரகடனத்தினர் தமது நோக்கத்தையும் அதற்கான முயற்சிகளையும் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர்; மேற்கொண்டு வந்தனர். “இவர்கள் யார்? மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளா? இந்த மண்ணிலே வாழ்கின்றவர்களா? இவர்களுக்கும் இந்தப் பிரச்சினைக்கும் என்ன தொடர்பு? இவர்களுக்கு என்ன தக்குதி உண்டு..?” என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த அணியோடு இதே தமிழ்த்தேசியத் தரப்புகள் 2011 இல் தென்னாபிரிக்காவில் இனமுரணைத் தீர்ப்பதற்கான சந்திப்புகளில் இணைந்து பங்கேற்றவை. அப்போது அங்கே ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் African National Congress – ANC )ஆலோசனையையும் வழிகாட்டலையும் இணைந்து நின்று வரவேற்றவை. ஆனால், நாட்டுக்குத் திரும்பியபின் மீண்டும் தத்தமது இனவாதப் பெட்டிகளுக்குள் தம்மை அடைத்துச் சிறைப்படுத்திக் கொண்டனர். மட்டுமல்ல, போர் முடிந்த பிறகான கடந்த 15ஆண்டுகளிலும் தீர்வுக்கான எந்த முயற்சிகளையும் இவை முன்னெடுக்கவேயிலை. மட்டுமல்ல, இந்த நாட்டிலுள்ள எந்த அரசியற் தரப்பும் தீர்வுக்கான பணிகளை முழு உறுதிப்பாட்டோடும் அர்ப்பணிப்போடும் முன்னெடுக்கவுமில்லை. ஏன் இப்போது கூட அதற்கான எந்த முயற்சிகளையும் காணவில்லை. அரசியற் தரப்புளுக்கப்பால் புத்திஜீவிகள், சிவில் சமூகத்தினர், ஊடகத்தினர், மதத்தலைவர்கள் என எவருமே முயற்சிக்கவில்லை. ‘வானத்திலிருந்து என்றாவது ஒரு நாள் அதிசயம் நடக்கும்‘ என்றே எதிர்பார்த்திருக்கின்றனர். மாற்றங்களை விரும்புவோர் எவரும் வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இப்படிச் செயற்படாதிருந்து கொண்டேதான், “ஏதோ தங்களால் முடிந்தளவுக்கு முயற்சிப்போம்” என்று முன்வந்திருக்கும் இமாலயப் பிரகடனத்தினரை எதிர்ப்பதென்பது, தமது முரண்பாட்டு ஊக்குவிப்பு அரசியலுக்கு, அதன்வழியான லாபமீட்டலுக்கு பாதிப்புண்டாகிவிடும் என்ற அச்சத்தினாலேயாகும். அதாவது இலங்கையில் எதன் பொருட்டும் அமைதியோ தீர்வோ வந்துவிடக் கூடாது என்பதே இவர்களுடைய சிந்தையாகும். இல்லையென்றால் அமைதியையும் தீர்வையும் எட்டுவதற்குச் சாத்தியமான தளங்களில் உரையாடல்களை நடத்தியிருக்க வேண்டும். எந்தத் தரப்புகள் தடையாக, இடைஞ்சலாக உள்ளன என்றாய்ந்து அதற்கேற்ற வகையில் பொருத்தமான பொறிமுறைகள் ஏதேனும் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும்? அல்லது, இமாலயப் பிரகடனத்தை வரவேற்று, உரையாடி, அதை அடுத்த கட்டத்துக்கு விரிவாக்கி வலுவூட்டியிருக்க வேண்டும். அப்படியெல்லாம் நடந்ததா? இல்லையே? தாமும் எதையும் செய்யாமல், பிறரால் செய்யக் கூடியதையும் செய்ய விடாமல் தடுப்பதென்பது 2009 க்கு முந்திய ஏக நிலைப்பாட்டு உளநிலையின் வெளிப்பாடேயாகும். அதையே தொடர்ந்தும் பின்பற்ற விரும்புகின்றனர். ஆனால், அந்த யுகம் மாறிவிட்டது. இது போருக்குப் பிந்திய சூழல். தீர்வுக்கான காலம். முன்பே கூறப்பட்டுள்ளதைப்போல, இமாலயப் பிரகடனத் தரப்பொன்றும் தீர்வுக்கான முழுப் பொறுப்பையோ, முழு வடிவத்தையோ எடுக்கவுமில்லை, முன்வைக்கவுமில்லை. ஆனால், சுமுக நிலைக்கான ஒரு தொடக்கத்தை உருவாக்க முன்வந்துள்ளது. அதை முழு இலங்கை தழுவிய ரீதியில் முன்னெடுத்தாற்தான் சிங்கள மக்களும் கவனம் கொள்வார்கள். அதைச் செய்யாமல், தனியே வடக்கு – கிழக்கு எனவும் தமிழ் மக்களுடைய பிரச்சினை என்றும் பேசிக் கொண்டிருப்தால்தான் ஏனையோர் இனப்பிரச்சினை விடயத்தில் விலகி நிற்பதும் தீர்வில் கரிசனையற்றிருப்பதும் தொடர்கிறது. இதில் ஒரு மாறுதலை ஏற்படுத்தும் விதமாகவே இலங்கையின் இன்றைய நெருக்கடிகளும் (பொருளாதாரப் பிரச்சினை உட்பட) இமாலயப் பிரகடனத்தில் பேசப்பட்டுள்ளது. இதற்குச் செழிப்பான உதாரணம், வடக்குக் கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்க விரும்பிய இந்தியா, மாகாணசபை முறைமையை தனியே வடக்குக் கிழக்குக்கு மட்டுமாகச் செய்யாமல், முழு இலங்கைக்குமாக கொண்டு வந்தது. நடைமுறைச் சாத்தியமான விடயங்களை அப்படித்தான் பரந்து பட்ட அளவில், பிற சமூகங்களுடைய மனதில் சந்தேகங்களையும் பதட்டத்தையும் உண்டாக்காமற் செயற்படுத்த வேண்டும். இப்போது கூட “வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கான அதிகாரங்களை வழங்குங்கள்”என்றே கேட்கப்படுகிறது. மாறாக “மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை வழங்குங்கள்”என்றே கேட்க வேண்டும். அப்படிக் கேட்டால், சிங்கள மக்கள் சந்தேகப்படுவதற்கான சந்தர்ப்பம் குறைவு. அதுவே சாத்தியமானது. அந்த அடிப்படையில்தான் இமாலய் பிரகடனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வியாக்கியானங்களையும் பார்க்க வேண்டும். அணுக வேண்டும். அப்படிப் பரந்த அடிப்படையில் சிந்தித்தபடியால்தான் இமாலயப் பிரகடனத்தை வெளியுலகம் வரவேற்கிறது. இதேவேளை இன்னொன்றையும் ஆழமாகக் கவனிக்க வேண்டும். தமிழ் மக்கள் பேரவையோ, முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனோ, பிற தரப்பினரோ உருவாக்கிய அரசியற் கோரிக்கைகள் எதையும் வெளியுலகம் கண்டுகொள்ளவில்லை. இந்தியா கூட அதைப்பற்றி அபிப்பிராயம் சொல்லவில்லை என்பதை. வெளித்தரப்பின் ஆதரவைக் கோரும்போது, அவர்கள் எதை விரும்புவர், எதை ஆதரிப்பர்? எப்படிச் சிந்திப்பர் என்பதையும் நாம் சற்று யோசிக்க வேண்டும். தவிர, மக்கள் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் தரப்புகள் உரிய காலத்தில் உரியனவற்றைச் செய்யவில்லை என்றால், இந்த இடைவெளியில் பிற சக்திகளே இயங்கும். இது தவிர்க்க முடியாத பொதுவிதியாகும் என்பதையும். இப்போது இரண்டாம் கட்டமாக மக்கள் சந்திப்புகளை நடத்திவரும் இமாலயப் பிரகடனத்தினரின் யாழ்ப்பாணக் கூட்டத்தில், ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும் மாற்றத்துக்கான அசைவியக்கத்தைச் சேர்ந்தவருமான அழகிரி என்ற இராயப்பு அந்தோனிப்பிள்ளை என்பவர் தெரிவிக்கும்போது, ” நாட்டு மக்கள் என்ற வகையில் இன்று வரை எமக்கிடையில் முரண்பாடுகள் இதுவரையும் இல்லை, எனினும் கடந்த 76 வருடங்களாக அரசியல்வாதிகளால் மக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, எங்கள் மத்தியில் தவறான தகவல்கள் விதைக்கப்பட்டுள்ளது. இமாலயப்பிரகடனம் என்பது திடீரென உருவான ஒன்றல்ல. பல வருட காலமாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக இது ஆராயப்பட்டது. இலங்கையின் இனப்பிரச்சினை என்பது தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களுக்கு இடையில் ஏற்பட்ட ஒன்றல்ல. இன்றைய சூழலில் இமாலய பிரகடன செயற்பாட்டாளர்களுக்கு முக்கிய பொறுப்பு இருக்கின்றது. எங்களுடைய வருங்கால சந்ததியினருக்கு ஏதாவது நல்லது செய்ய விரும்பினால் நாம் ஒருவருக்கொருவர் மனந்திறந்து உரையாட வேண்டும். நாங்கள் எமக்கிடையில் இருக்கும் வெறுப்பை ஒதுக்கி விட்டு, வருங்கால சந்ததியினருக்கு நல்லதொரு வாய்ப்பை பெற்றுக்கொள்ள விரும்பினால், கடந்த தேர்தலில் வைக்கப்பட்ட ஒரு சொற்றொடர் வளமான வாழ்வு, அழகான நாடு நாங்கள் ஒவ்வொருவரும் நினைத்தால் அதை அடைய முடியும்‘‘ என்றார். இந்தச் சேதி முக்கியமானது. இவற்றிலிருந்தெல்லாம் நாம் எதையும் படிக்க முடியவில்லை என்றால், நம்மைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று எஸ்,ஜே.வி செல்வநாயகம் சொன்ன வாய்பாட்டைப் பாடமாக்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான். https://arangamnews.com/?p=11685
  12. வாழைச்சேனை காகித ஆலை மீள இயங்குகிறது வாழைச்சேனை காகித ஆலை மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், காகித ஆலையில் செயலிழந்த இயந்திரங்கள் பழுதுபார்க்கப்பட்டதன் பின்னர் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் ஹந்துநெத்தி தெரிவித்தார். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம், தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்களுக்கான பாராளுமன்றத் துறை மேற்பார்வைக் குழு, வாழைச்சேனை காகித ஆலையை மூடுவதற்கான முன்மொழிவுக்குப் பதிலாக, அரச-தனியார் கூட்டு முயற்சியாக நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக உறுதியளித்தது. வாழைச்சேனை தொழிற்சாலையின் இயந்திரங்கள் 1956 இல் இறக்குமதி செய்யப்பட்டதால், பழுதுபார்ப்பதற்கு சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழித்து இயந்திரங்களை பழுதுபார்த்தால் ஒரு நாளைக்கு 5 டன் உற்பத்தி செய்வதன் மூலம் மாதத்திற்கு 22 மில்லியன் ரூபாய் லாபம் ஈட்டலாம் எனவும் குழு சுட்டிக்காட்டியது. https://www.tamilmirror.lk/செய்திகள்/வாழைச்சேனை-காகித-ஆலை-மீள-இயங்குகிறது/175-350398
  13. அதானி ஒப்பந்தம் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு January 16, 2025 12:41 pm மன்னார், விடத்தல்தீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டம் தொடர்பில் செய்துகொண்ட ஒப்பந்தத்தை வலுவற்றதாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மே மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) உத்தரவு பிறப்பித்தது. குறித்த மனுவை இலங்கை பசுமை அமைப்பின் தலைவர் சந்திம அபயவர்தன சமர்ப்பித்தார். இந்த மனுவை இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம்.யூ.பி. கரலியத்தவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தத் திட்டம் தொடர்பான பல முக்கியமான வழக்குகள் எதிர்வரும் மார்ச் மாதம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக அரச சட்டத்தரணி தெரிவித்தார். இந்தத் திட்டம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். அதன் பின்னர், சம்பந்தப்பட்ட மனுவை மே 23 ஆம் திகதி பரிசீலிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. https://tamil.adaderana.lk/news.php?nid=198837
  14. ஜனாதிபதி சீன விஜயம் - நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய முதலீடு January 16, 2025 12:00 pm ஹம்பாந்தோட்டை பகுதியில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பாக இலங்கையின் எரிசக்தி அமைச்சுக்கும் சீனாவின் சினொபெக் நிறுவனத்திற்கும் இடையே இன்று (16) காலை ஒப்பந்தமொன்று கைச்சாத்தானது. சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய முதலீடாக இது கருதப்படுகிறது. இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், முன்னணி சர்வதேச பெட்ரோலிய நிறுவனங்களில் ஒன்றான சினொபெக்கினால் 3.7 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டில், 200,000 பீப்பாய்கள் எண்ணெயை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக அமையவுள்ளதோடு, இதில் பெரும்பாலான பகுதியை ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளன. இலங்கையில் சீனாவின் இந்த பாரிய முதலீடு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதோடு, ஹம்பாந்தோட்டை பகுதியில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதாரத்தையும் வலுப்படுத்தும். இதன் நன்மைகள் விரைவில் முழு இலங்கை மக்களுக்கும் கிடைக்கும் என்றும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது. இந்த நிகழ்வுகளில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கான சீன தூதுவர் சீ ஜென்ஹோன்க், சீனாவுக்கான இலங்கை தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஆகியார் கலந்துகொண்டனர். https://tamil.adaderana.lk/news.php?nid=198835
  15. பசிலை நெருங்கும் புலனாய்வுத்துறை! முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் சொத்துக்கள் குறித்த உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த காலத்தில் பசில் ராஜபக்சவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணிவந்த தொழிலதிபர்கள் மற்றும் நண்பர்களிடம் புலனாய்வுத் துறை விரிவான விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. அத்துடன், பசில் ராஜபக்சவுடன் தொடர்புடைய சொத்துக்கள் குறித்தும் பாதுகாப்புப் படையினரும் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது. அமெரிக்காவில் எவ்வித தொழிலும் செய்யாத பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் எவ்வாறு பாரியளவான சொத்துகள் உள்ளன என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பசில் ராஜபக்சவின் உறவினர்களுக்கும் பாரிய சொத்துக்கள் இருப்பதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார். இது தொடர்பில் வாக்குமூலமொன்றை குற்றப்புலனாய்வு பிரிவு அண்மையில் விமல் வீரவங்சவிடம் பெற்றிருந்தது. இந்தப் பின்புலத்திலேயே தற்போது புலனாய்வு விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல்நாள் அமெரிக்காவுக்குச் சென்ற பசில் ராஜபக்ச, பொதுத் தேர்தலின் போதுகூட நாடு திரும்பியிருக்கவில்லை. உள்ளூராட்சிமன்றத் தேர்தலை வழிநடத்தும் பொறுப்பும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் கையளிக்கப்பட்டுள்ளதால் பசில் ராஜபக்ச எப்போது நாடு திரும்புவார் என தமக்கே தெரியாதென பொதுஜன பெரமுனவின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://newuthayan.com/article/பசிலை_நெருங்கும்_புலனாய்வுத்துறை!
  16. தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் வடமராட்சி கிழக்கில் திறந்துவைப்பு! தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் வடமராட்சி கிழக்கு தாளையடியில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரனால் நேற்று புதன்கிழமை(15) திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதேச இணைப்பாளர் மாடசாமி செல்வராசா தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் த.தங்கரூபன், பிரதேச கடற்றொழில் சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மருதங்கேணி இலங்கை வங்கி முகாமையாளர், உட்பட கட்சியின் பிரதேச ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://newuthayan.com/article/தேசிய_மக்கள்_சக்தியின்_நிர்வாக_காரியாலயம்_வடமராட்சி_கிழக்கில்_திறந்துவைப்பு!
  17. யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்! வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இன்று யாழ். நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லாப்பட்டதாரிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கல், மக்களின் கருத்துக்களை உள்வாங்கல், போன்ற நிகழ்வுகளை வேலையில்லாபட்டதாரிகளின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வு உலகத்தமிழாராட்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபி முன்றலில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து யாழ். நகர்ப்பகுதிக்குள் பேரணி இடம்பெற்றதுடன், பட்டம் பெற்றுவிட்டு தாங்களும் சாதாரண வேலைகளைத்தான் செய்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டும் முகமாக வீதியை கூட்டுதல், குப்பை வண்டியை தள்ளுதல் போன்ற விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. தமது பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் மக்கள் மயப்படுத்தி தமக்கான தீர்வை பெற்றுக்கொள்ள வலுச்சேர்க்கும் நோக்குடன் இச்செயற்பாட்டை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/யாழ்ப்பாணத்தில்_வேலையில்லா_பட்டதாரிகள்_வித்தியாசமான_முறையில்_போராட்டம்!
  18. ”கஜேந்திரகுமார் போன்றவர்கள் இங்கு துள்ளக்கூடாது.” - மேர்வின் சில்வா ” இலங்கையென்பது சிங்கள, பௌத்த நாடாகும். எனவே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் இங்கு துள்ளக்கூடாது.” என்று எச்சரித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” இலங்கையென்பது சிங்கள தேசமாகும். வடக்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என ஒருவர் இருக்கின்றார். அவர் கூக்குரல் (பௌத்த சாசனத்துக்கு எதிராக) எழுப்புகின்றார். எமது நாட்டில் அவ்வாறு செய்ய முடியாது. பண்டுகாபய மன்னர் முதல் சிங்கள மன்னர்களே இலங்கையை ஆண்டுள்ளனர். எனவே, இது சிங்கள, பௌத்த தேசமாகும். எனினும், பௌத்த தர்மத்துக்கமைய நாம் அனைத்து சமயங்களையும், இனங்களையும் மதிக்கின்றோம். அந்தவகையில் எம்முடன் கைகோர்த்து பயணிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் எமது கரங்களை உடைத்துக்கொண்டு செல்ல முற்பட்டால் வாழ்வதற்கு தனியான உலகை தேடிக்கொள்ள நேரிடும். அதற்காகவே மேர்வின் சில்வா போன்றவர்கள் இருக்கின்றார்கள். வடக்கு, கிழக்கு, தெற்கு என்றில்லை இது ஒரு நாடு. சிங்கள தேசமாகும். பௌத்த சாசனம் பாதுகாக்கப்படும்வரை, புத்த தர்வமத்துக்கமைய வாழும்வரை இயற்கை இந்நாட்டை பாதுகாக்கும். இதற்கு எதிராக ஆட்சியாளர்கள் செயற்பட்டால் இயற்கை நிச்சயம் தண்டிக்கும்.” – என்றார். http://www.samakalam.com/கஜேந்திரகுமார்-போன்றவர/
  19. அந்தப் பெருமை எனக்கும் இருக்கு😊 ஆனால் விசித்திரமான பட்டங்கள் செய்யும் திறமை இருக்கவில்லை! சாதாரண பிராந்துப் பட்டத்திற்கு பலன்ஸ் செய்வதே கஷ்டம். இவர்கள் எப்படித்தான் இந்த விசித்திரமான பட்டங்களைக் கட்டுகின்றார்களோ தெரியவில்லை. aeronautical அறிவு கூடியவர்களாக இருக்கின்றார்கள்! முன்னர் யாழில் எழுதிய பதிவு. தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை! எனது புளக்கில் உள்ளது: https://kirubans.blogspot.com/2017/04/blog-post_1.html?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR3_e0D_c98EKwMBvSfBLI2s0wS6QqBaRJHr4O217e10-4Hj7wwBToOfLCo_aem_OxVa7NUruS_c3ye3Ii9SGQ&m=1
  20. ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகள் விவகாரம் ; ஜான்சன் பிரிராடோ விசாரணைக்கு அழைப்பு! 13 Jan, 2025 | 11:33 AM வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணை இணைப்பாளர் ஜான்சன் பிரிராடோவை கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, அண்மையில் இலங்கை - முல்லைத்தீவு கடலில் ரோஹிங்கிய முஸ்லிம்களை ஏற்றிவந்த படகானது தமக்கான அடைக்கலம் தேடி வருகை தந்தது. இந்தப் படகில் வந்த சுமார் நூற்றுக்கு அதிகமானவர்கள் விமானப்படையின் கண்காணிப்பில் தடுத்துவைக்கப்பட்டு அவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றன. ரோஹிங்கிய அகதிகளை நாடு கடத்துவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்களை நாடு கடத்த வேண்டாம் என முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்புக் குழு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. இந்தப் போராட்டத்தில் பங்குபற்றிய வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணை இணைப்பாளர் ஜான்சன் பிரிராடோ, மியன்மாரில் பாதுகாப்பு இல்லை; தமக்கு பாதுகாப்புத் தருமாறு அடைக்கலம் கோரிய ரோஹிங்கிய முஸ்லிம்களை இலங்கை அரசாங்கம் மியன்மாரிடம் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்தியிருந்தார். அவர்களை இலங்கையிலிருந்து பாதுகாப்பாக இன்னொரு நாட்டில் சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்களின் கண்காணிப்பில் வைத்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் இப்போராட்டம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வுத் தலைமை அலுவலகத்துக்கு வருமாறு ஜான்சன் பிரிராடோவுக்கு அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/203701
  21. நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை January 13, 2025 11:11 am ஐந்து மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் அதிக மழைக் காரணமாக மொத்தம் 13 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நீர்த்தேக்கங்களில் மகாகந்தராவ, மகாவிலச்சிய, நுவரவெவ, ராஜாங்கன, உன்னிச்சி, முருத்தவெல, வீரவில, எல்லேவெல, வேமெடில்ல, மெதியாவ, உஸ்கல, எதிமலே மற்றும் வான் எல ஆகியவை அடங்கும். இந்த அனைத்து நீர் தேக்கங்களிலும் நீர் கசிவு அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நீர்த்தேக்கங்களின் கீழ் பகுதிகளில் வசிப்பவர்கள் திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். https://oruvan.com/landslide-warning-issued-for-several-parts-of-the-country-2/
  22. சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளுக்கு விசேட வாய்ப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளுக்கு வௌிநபர்களை சந்திப்பதற்கான விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்து மதக் கைதிகளுக்கு இந்த விசேட வாய்ப்பு கிடைக்கிறது. அன்றைய தினம், இந்து கைதிகளின் உறவினர்கள் ஒரு கைதிக்கு மட்டும் போதுமான உணவு மற்றும் இனிப்புகளைக் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்படி, நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் வௌிநபர்களை சந்திப்பதற்கான நடவடிக்கைகள், சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சிறைச்சாலை விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி திசாநாயக்க தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/சிறையில்-உள்ள-இந்து-மதக்/
  23. முடியாட்டம் அஜிதன் கொல்லத்திலிருந்து பத்து மைல் கிழக்கே அஷ்டமுடி காயலின் கரையில் இருக்கும் அந்தப் படகுத்துறை ஆரம்பத்தில் ’பிராந்தன் தம்புரான் கடவு’ என்றே அழைக்கப்பட்டது. பின்னர் ஊர் மக்களின் வழக்கொலியில் அது வெறும் ’பிராந்தங்கடவு’ என்றானது. இப்போது அதை யாரும் எப்படியும் அழைக்க வேண்டியத் தேவை இல்லை. கொல்லத்தில் படகுச் சேவை நிறுத்தப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அருகிலேயே ஐந்து கோடி செலவில் அரசாங்கம் நிர்மானித்த மாபெரும் கான்கிரீட் பாலம் ஒன்று இடைவெளிகள் விழுந்த தன் ராட்சதப் பற்களால் காயலைக் கவ்விப்பிடித்தது போல் குறுக்கே சென்றது. அதில் விரையும் வாகனங்களுக்கும் அவற்றின் பரபரப்புக்கும் தொடர்பே இல்லாதது போல நண்பகலிலும் இறுக்கமான அமைதியில் பிராந்தங்கடவு மூழ்கிக் கிடக்கும். பித்தனின் எல்லா அசைவுகளிலும் பித்தின் சாயலைக் காண்பது போல, அந்தப் பாழடைந்த படகுத்துறையையும், அருகே நூற்றாண்டுகள் பழைமையான நீர் ததும்பும் விழிகளைப் போன்ற சிறுகுழிகள் கொண்ட அந்தப் படித்துறையையும் காணும்போது, எக்கணமும் அவை உயிர்பெற்று ஓலமிடக்கூடும் எனத் தோன்றும். சூழ இருக்கும் தென்னை, ரப்பர் தோட்டங்களில் அவ்வப்போது கொடும் காற்றுவீசும்போது சமயங்களில் அவ்வாறே ஓசை எழும். சருகுகள் இடையே முணுமுணுக்க ’ஓ’வென்ற ஒலியுடன் உச்சவலியில் அவை அலறுவது போலிருக்கும். காயலை ஒட்டிய கரைகளில் நெருங்கிப் படர்ந்த கைதைப் புதர்களில் எப்போதும் குடியிருக்கும் இருட்டுச் சில நேரங்களில் கரிய பாம்பாக யாரும் காணாதபோது ஒற்றையடிப் பாதைகளை ஊர்ந்து கடக்கும். இரவு நெருங்க, அந்தி வெளிச்சத்தில் சற்றும் தோயாமல், ஒழுகும் கூந்தலைப் போல காயல் இருளுக்குள் செல்லும். அஷ்டமுடி காயலின் எட்டுக் கிளைகளில் இருந்தும் இருள் எழுந்து நிலமெங்கும் தழுவிப் பரவும். அந்நேரம் பறவைகளும் ஓசையெழுப்ப அஞ்சும். பிராந்தங்கடவுக்கு மறுபுறம் ஆள் நடமாட்டமற்ற ரப்பர் தோட்டத்தின் நடுவில் உடலெங்கும் நகங்கள் முளைத்த வஞ்சி மரங்கள் நெருக்கமாகச் சூழ ’புல மாடத்தி’ என்றழைக்கப்படும் நங்கேலியம்மாவின் சிறுகோயில் ஒன்று உள்ளது. மிகவும் நேர்த்தியில்லாமல் செய்யப்பட்ட பெண் உருவம் ஒன்று கைகளில் மலர் ஏந்தி தலையில்லாது புடைப்புச் சிற்பமாக அங்கே அமர்ந்திருக்கும். விரி கூந்தலுடன் செதுக்கப்பட்ட அவளது தலை புடைப்பு உருவாகத் தரையில் கண்கள் மூடி வீற்றிருக்கும். நங்கேலியம்மாதான் ராதிகாவின் குலதெய்வம். நாங்கள் ஆண்டுக்கொரு முறை வெவ்வேறு காரணங்களுக்காக இங்கு வருவதுண்டு. ஒவ்வொரு முறை அவள் என்னை அழைத்து வரும்போதும் காரணமில்லாமல் நான் வார்த்தைகள் வற்றி மௌனத்தில் ஆழ்வேன். ஆனால், அவள் கண்கள் துடிப்புற்று ஆயிரம் எண்ணங்களைப் பிரதிபலிப்பதைப் போல படபடத்து இமைக்கும். நீர் பரப்பில் பரல் மீன்கள் என எண்ணங்கள் எழுந்துவருவதை அவற்றில் காணமுடியும். கரிய கழுத்துக் குழியும் மேலுதடும் வியர்வையில் மின்ன உற்சாகப் பதற்றத்துடன் அவள் பேசத் துவங்குவாள். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் அவளது அந்தப் புன்னகை என் நெஞ்சில் ஒவ்வொரு முறையும் துருவேறிய முள்ளெனத் தீண்டிச் செல்லும். இன்னும் நூறு வருடங்கள் அவளுடன் வாழ்ந்தாலும் அது மாறாது எனத் தோன்றும். மெலிந்த அவளது தோள்பட்டையில் புரளும் சுருள்முடி எத்தனை ஆயிரம் முறை கட்டியணைத்து முகர்ந்தாலும் தலைக்குள் சுரந்தெழும் உன்மத்தத்தைத் தணிக்காது. படபடத்துப் பேசும்போது அவளது சிறு நாசிநுனி மிக மென்மையாக, அழகாக அழுந்தி விடைக்கும். அதில் வெளியேறும் மூச்சுக்காற்றின் கூரிய உஷ்ணத்தை நான் நன்கறிவேன். நீரின் அடியாழம் போல குளிர்ந்திருக்கும் அவள் உடலில் எதிர்பாராது எழும் வெப்பம். சிறுதுளியைக் கூட அள்ளிவிட முடியாத காமம் என்பது தூய அழகு மட்டுமே அல்லவா. வைரம் போன்ற அழகு. அதன்முன் எப்போதும் நான் தோற்றே நின்றிருக்கிறேன். அசைவற்றுத் தனக்குள் எனத் ததும்பி நின்ற காயலைக் கண்ணெடுக்காமல் பார்த்து நின்றவள் மெல்ல பின்னால் என் மார்பின்மீது சரிந்து உள்ளங்கையைக் குளிர் விரல்களால் பற்றிக்கொண்டு ஆங்கிலத்தில் சொன்னாள், “நான் உன்னைக் காதலிக்கிறேன்” மேலும், எதையோ சொல்ல நினைத்தது போல, உணர்ச்சியில் அவள் மேலுதடு மென்மையாக அதிர, மெல்ல அதை இறுக்கி அடக்கிக்கொண்டாள். சற்று நேரம் கழித்து தாழ்ந்த குரலில், “போகலாமா? அங்கு நிகழ்ச்சி தொடங்கும் நேரம்” என்றாள். நாங்கள் வந்திருந்தது நங்கேலியம்மாவைக் காணத்தான். திருவோணத்திற்கு இன்னும் ஆறு நாட்கள் இருக்க, விசாகத் தினத்தன்று அந்தச் சிறு கோயிலில் ஓணச் சிறப்பு நிகழ்வு ஒன்று பல வருடங்களுக்குப் பிறகு ஏற்பாடாகியிருந்தது. இன்னும் அந்தச் சுற்றுவட்டத்தில் வாழ்ந்த ராதிகாவின் உறவினர்கள், தெரிந்தவர்கள் பலரும் அன்று அங்கு வர இருந்தார்கள். எனக்கும் ஒருவகையில் பூர்வீகம் இங்குதான். மங்கலங்காவு இல்லம் என்று இங்கிருந்த பழைய தரவாட்டிற்கும் எனக்கும் தாய்வழித் தொடர்பு உண்டு. ஆனால், நாங்கள் யாரும் அதைப் பொதுவெளியில் சொல்வதில்லை. ராதிகா கூட மிகப் பின்னால்தான் அதை அறிந்துகொண்டாள். பிராந்தன் தம்புரானோடு அந்தத் தரவாடும் பழங்கதையாய் மறைந்துபோன ஒன்று. மிகச் சமீபகாலம் வரை அந்தப் பெரிய இல்லத்தின் அஸ்திவாரம் ரப்பர் தோட்டங்களுக்கு நடுவே இடிபாடுகளாக எஞ்சியிருந்தது. பிராந்தன் தம்புரான் என்ற பாஸ்கரன் பிள்ளைக்குக் குழந்தைகள் இருக்கவில்லை. ஆனால், வாரிசாக அவன் தத்தெடுத்த வளர்ப்பு மகன் வழியாக எங்கள் தாய்வழி நீளும். எனவே, பிராந்தன் தம்புரானின் கதை எங்கள் குடும்பத்தில் காரணவர்கள் வழியாக நான் சிறுவயதிலேயே கேட்ட ஒன்று. அது நங்கேலியின் கதையும் கூட. இரவுகளில் மிக அணுக்கமானவர்கள் கூடும்போது, முகம் தெரியாத இருளுக்குள் அமர்ந்து சில கோப்பைகள் மதுவின்மீது அந்தக் கதைகள் சொல்லப்படும். என் பதின்வயதில் ரவியண்ணா என்று எல்லாரும் அழைத்த என் தாய்மாமன் சொன்ன அக்கதை எனக்கு இன்றும் வார்த்தை மாறாமல் நினைவிருக்கிறது. எங்கள் குடும்பத்தில் பழம்பெருமை பேசாத ஒரே ஆள் அவர்தான். திருவனந்தபுரம் புறநகரில் அவருக்கு இருந்த மாபெரும் பங்களாவின் முற்றத்துத் தோட்டத்தில் ஒரு நள்ளிரவு, வீட்டில் விளக்குகள் எல்லாம் அணைந்த பின் அவர் அதைச் சொல்லத் துவங்கினார். ”டா புல்லே, ஆ பிராந்தண்டெ சோரையாடா நம்மளு. கேட்டா?” நீண்ட நேர அமைதிக்குப் பின் அவர் சட்டென்று ஆரம்பித்தார். நான் அவர் கதை சொல்லும்போது எதுவும் பதிலளிப்பது இல்லை. அவ்வபோது அவர் நீட்டிய கோப்பையில் சோடாவை ஊற்றுவதும் தொடுகைகளைப் பிரித்து வைப்பதும் மட்டுமே செய்துகொண்டிருப்பேன். ‘ம்ம்’ என்ற மறுமொழியைக் கூட அவர் விரும்புவதில்லை. மறந்து அவ்வாறு ஏதேனும் ’ம்ம்’ கொட்டிவிட்டால் சட்டென்று கதையை நிறுத்திவிட்டு ‘யாரடா அவன்?’ என்பது போல தலையை நிமிர்த்திப் பார்ப்பார். அன்று நான் எதுவும் பேசவில்லை, செவிகளால் மட்டுமே அங்கிருந்ததைப் போல உணர்ந்தேன். மாமா தன் மயிரடர்ந்த மார்பை இடது கையால் வருடியபடி, எங்கோ வானத்தைப் பார்த்துச் சற்றே கரகரத்த குரலில் பிராந்தனின் கதையைச் சொல்லத் துவங்கினார். இது நடந்தது நூற்றியைம்பது வருடங்களுக்கு முன்பு. அப்போது கொல்லத்தின் இப்பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் தனி ராஜ்ஜியமாக இருந்தது. அன்றெல்லாம் அஷ்டமுடி காயலின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல் வெளிகள். அதில் நில அடிமைகளாக வேலை செய்யும் ஆயிரக்கணக்கான புலையர் குடிகள். பச்சை வெளியெனப் பரந்து விரிந்த பாடங்களில் விளையும் நெல், மூட்டை மூட்டையாகக் காயல் வழி மேற்கே கொல்லம் சந்தைக்கும் அப்படியே அங்கிருந்து தெற்கே திருவனந்தபுரத்திற்கும் சென்றது. அதேபோல மேலும் தானியங்கள் காயல் வழியாகவே வடக்கே வேம்பநாட்டையும் கொச்சியையும் அடைந்தன. கொல்லத்தின் வளத்திற்கெல்லாம் காரணம் இங்கு நிலத்தோடு பிணைக்கப்பட்டிருந்த அடிமை மக்களே. பெரும்பாலும் அவர்கள் ஒற்றைச் சாதியைச் சேர்ந்தவர்கள். தண்டப்புலையர் அல்லது குழிப் புலையர் என்று அவர்கள் அழைக்கப்பட்டனர். அரை நூற்றாண்டுக்கு முன் வடக்கே கொச்சி பகுதிகளிலிருந்து இங்கு குடியேற்றப்பட்டவர்கள். பாலக்காட்டிலும் வட கேரளத்திலும் இருந்த மற்ற புலையர் குடிகளைப் போல அல்லாமல் தண்டப் புலையர்கள் முற்றிலுமாக நில அடிமைகளாக இருந்தனர். அங்கு போல் இவர்களுக்குச் சொந்தமாக நிலமோ தனியாக விவசாயம் செய்யும் உரிமைகளோ இல்லை. ஆற்றோரம் வளரும் தண்டை என்ற ஒருவகை புல்லையே அப்புலைய பெண்கள் ஆடையாக அணிய வேண்டும். அதிலிருந்தே தண்டப்புலையர் என்ற இடுபெயர் தோன்றியது. பனைநார் அல்லது பாக்கு மட்டையால் செய்த கோவணம் ஒன்றை மட்டுமே ஆண்கள் அணிந்தார்கள். பெண்களும் திருமணமாவது வரை அதையே அணிந்தார்கள். திருமணமான சில வருடங்களுக்குப் பின் தண்டக்கல்யாணம் என்ற சிறு சடங்கு நடத்தி, அதில் உறவினர்களாலோ உற்றார்களாலோ புல்லாடை அணிவிக்கப்பட்டனர். நெய்யப்பட்ட ஆடையல்ல அது, புற்களை ஒரு நுனியில் மட்டும் குஞ்சலங்கள் போல சேர்த்துக்கட்டி அதை இடுப்பைச் சுற்றி அணிந்துகொள்வார்கள். புலையப் பெண்கள் யாருக்கும் மேலாடை அணிய உரிமையில்லை. கற்களாலும் செதுக்கிய மரத்துண்டுகளாலும் செய்யப்பட்ட கல்லுமாலை ஒன்றை தங்கள் அடையாளமாக கழுத்தில் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். மாமா சொன்னார், ”நீ படித்திருப்பாய். உத்தரம் திருநாள் மஹாராஜாவின் ஆட்சிக் காலத்தில் திருவிதாங்கூர் அரசு 1854ஆம் வருடம் முதல் அடிமை முறையைத் தடை செய்தது என்றுதான் உனக்குத் தெரிந்திருக்கும். அது பாடபுத்தக வரலாறு, பெயரளவிலேயே நடப்பிலிருந்தது. உண்மையில் அடிமை முறை கொல்லமெங்கும் நீடித்தது. அரசுக்குக் கொல்லம் ராஜ்ஜியத்தின்மீது முழு அதிகாரம் இல்லாதது ஒரு காரணம் என்றாலும், இங்கே விளையும் நெல்லுக்குத் திருவிதாங்கூர் அரசு கட்டுப்பட்டது என்பதுதான் உண்மை.” பெயரளவிலான அந்த ‘அடிமை ஒழிப்பு’முறை அவர்கள் ஒவ்வொருவருக்கும் விலை வைத்தது. தலைக்குப் பதினைந்திலிருந்து இருபது ரூபாய் வரை அது மாறுபடும். புலையர்கள் தாம் பெறும் கூலியைக் கொண்டு அந்தத் தொகையைச் செலுத்தி தங்கள் விடுதலையைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது மொழி. ஒருநாள் கூலியாக இரண்டே இடநாழி நெல் பெற்ற அவர்கள், கூலிபெறாத தங்கள் குழந்தைகள் மற்றும் முதியோர்களின் உணவுத்தேவை போக ஒருபோதும் அந்தத் தொகையை அடைக்கமுடியாது. இரு இடநாழி கூலியிலும் பல சமயம் வெவ்வேறு காரணங்களுக்காகத் தண்டனையாகக் கூலி பிடிக்கப்பட்டது. புலையர்கள் பகல் வெளிச்சம் முழுவதும் நிலத்தில் வேலை செய்தனர். ஆயிரக்கணக்கில் என அவர்கள் இருந்தாலும், அவர்கள் வேலை செய்ய அதேபோல பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உழைப்புக் கோரி காத்திருந்தன. உழவு, நடவு, களை பறித்தல், பள்ளங்களிலிருந்து நீர் இறைத்தல், அறுவடை, களமடித்தல் என அவ்வேலைகள் தீராது பெருகிக்கொண்டே சென்றன. இன்று நாம் கண்கள் குளிர எண்ணிக்கொள்ளும் பசும் வயல்வெளி ஒரு புலையரின் கனவில் முதுகுத்தண்டைச் சொடுக்கச் செய்யும் கொடும் ராட்சசனைப் போலவே காட்சியளித்திருக்கும். அவர்கள் அதன் நடுவிலேயே, ஏறுமாடங்களில் மூங்கில் கழிகளாலும் குழைத்த மண்ணாலும் சுவரெழுப்பி, பனையோலை கூரையிட்ட குடில்கள் கட்டி வாழ்ந்தனர். தரைதளத்தில் எங்கும் அவர்கள் வசிக்கக் கூடாது என்பது விதி. உள்ளங்கை வெள்ளை தெரிவது முதல் மறைவது வரை அவர்கள் வயல்களில் வேலை செய்ய வேண்டும். தினமும் பதினான்கு மணிநேரம். இந்நேரத்தில் அவர்களுக்கு உணவுண்ணவோ நீரருந்தவோ கூட அனுமதி கிடையாது. வயல்களில் நீர் அருந்தினால் புலத் தீட்டெனக் கருதி அவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். வயல் அதற்குப் பின் ’தூய்மை’ படுத்தப்பட்டது. தண்டனைகள் நிர்வாணமாக வெயிலில் கிடத்துவதில் தொடங்கி நூறு கசையடிகள் வரை செல்லும். ஆனால், மரண தண்டனை மிக அரிதாகவே கொடுக்கப்பட்டது. ‘உயர்’சாதி ஆண்களை எதிர்ப்பதோ, ‘உயர்’சாதிப் பெண்களுடன் உறவு கொள்வதோ மரணதண்டனைக்குரியது. மற்றபடி ஒரு புலையரின் இறப்பு என்பது வருமான இழப்பாகவே நாயர்களால் கருதப்படும். இவை போக புலையர்கள் வெவ்வேறு வேலைகளுக்காக வாங்கி விற்க கைமாற்றப்பட்டனர். விவசாய வேலைகள் அதிகம் இல்லாதபோது கிழக்கிந்திய கம்பெனி கூட அவர்களை வாங்கிக்கொண்டது. சிலர் கிழக்கே இடுக்கி பகுதிகளுக்குத் தோட்டவேலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் வாழ்வில் எந்தவிதமான நிச்சயத்தன்மையும் இருக்கவில்லை. ஏழ்மைக்கும் அடிமை முறைக்கும் அடிப்படை வித்தியாசம் அதுவே. தப்பிப் பிழைத்துச் சென்ற புலையர்களைப் பிடித்துவருவதற்கென்றே தனிப்படைகள் இருந்தன. இறப்பது வரை மீட்பில்லாத ஒரு நரகம் எனத் தோன்றினாலும் அதற்குள்ளும் அவர்கள் தங்கள் கொண்டாட்டங்களைக் கண்டுகொண்டனர். மூத்த புலையர்கள் குறி சொன்னார்கள். குழந்தைகள் வரப்புகளில் நண்டுகளும் காயலில் மீன்களும் பிடித்தார்கள். இரவில் கள்ளும் பாட்டும் நடனமும் இருந்தன. நெருப்பை வளர்த்து அதைச் சுற்றி நின்று கோல்களால் அடித்து நடனமாடினர். தோல் வாத்தியங்களைக் கொட்டியும் வாய்மொழிப் பாடல்கள் பாடியும் இரவுகளைக் கழித்தனர். வயலை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பது என்ற பெயரில் இவை அனுமதிக்கப்பட்டன. புலையர்கள் அவர்களது கொண்டாட்டங்களையே தங்கள் தெய்வங்களுக்கும் மூதாதையருக்கும் காணிக்கையாக வைத்தனர். கண்டகர்ணனும் கொடுங்காலியும் அறுகொலையான தெய்வங்களும் அதைப் பெற்று மகிழ்ந்தன. மிஷனரிகள் அவர்களை மீட்க முன்வந்தனர். அவர்கள் தங்கள் தேவனைத் தொட்டு முத்தமிடலாம் என்றனர். தங்கள் வேதத்தைக் கையில் ஏந்தலாம் என்றனர். நில அடிமைகளாக இருந்தவர்களின் தலைக்கான விலையை அளித்தும் கூட தங்களை விடுவிக்கத் தயாராக இருந்தும் பல புலையர்கள் தங்கள் அறுகொலை தெய்வங்களை, மூதாதைகளைக் கைவிடத் தயங்கியே கிறிஸ்தவர்களாக மாறாமல் நீடித்தனர். அதேசமயம் அவ்வாறு மதம் மாறிய சிலர் நல்லாடைகளும் கல்வியும் பெற்றுச் சிறு தொழில்களும் சொந்த நிலங்களுமாக முன்னேற்றம் கண்டனர். அன்று மாமா சொன்னார், “விவேகானந்தன் அக்காலத்தில் இங்கு வந்து பார்த்த பின் சொன்னானே அதுசரிதான், கேட்டாயா? அன்றைய கேரளம் என்பது ஒரு பைத்தியக்கார விடுதிதான். பைத்தியம் என்றால் ஸ்கிசோபெர்னியா. கலெக்டிவ் ஸ்கிசோபெர்னியா. நீ பார்த்திருக்கிறாய் அல்லவா அது போன்றவர்களை? ஹைலி சிஸ்டமெட்டிக் அண்ட் டோட்டலி இம்பிராக்டிக்கல், அன்ரியலிஸ்டிக். சிலர் கேட்கலாம், இந்த நெல் வளமும் பிற வளங்களும் அதிலிருந்துதானே வந்தன என்று. ஒற்றுமையில்லாமல் வலிமையில்லாமல் என்ன வளம் இருந்து என்ன? எல்லாச் செல்வமும் போரிலும் வெள்ளைக்காரனுக்கு அளித்த கப்பத்திலும் அல்லவா சென்றது? எத்தனை போர்கள், எத்தனை பஞ்சங்கள், பெருந்தொற்றுகள். காலராவோ மலம்பனியோ வந்தால் ஒவ்வோர் ஆண்டும் மக்கள் கூட்டம் கூட்டமாகச் செத்தார்கள். கூலியை மிச்சப்படுத்தியதால் மட்டுமே விவசாயத்தில் சிறு இலாபம் வந்தது. தொழிற்நுட்பமோ, கல்வியோ எந்தச் சாதியிலும் கிடையாது. இருபதாயிரம் முப்பதாயிரம் நாயம்மார்களைக் கொண்டு இதே கொல்லத்தில் வேலுத்தம்பி பிரிட்டீஷை எதிர்த்த கதை உனக்குத் தெரியும்தானே? ஆறே மணிநேரம், மொத்தப் படையையும் திரும்ப ஓடவிட்டார்கள் வெள்ளைக்காரர்கள். வெறும் முன்னூறே வீரர்கள் கொண்ட படைதான் கம்பெனியிடம் இருந்தது. போரின் முடிவில் இருநூறு நாயர்களை ஒரே மைதானத்தில் தூக்கில் தூக்கி காட்சிக்கு நிறுத்தினார்கள். பின்னே எப்படி நடக்காது! ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு கட்டுப்பாடு. நம்பூதிரிய நாயர் தொடக்கூடாது, நாயரைக் கண்டா ஈழவர் பன்னிரண்டடி தள்ளி நிக்கணும், புலையர் அறுபத்தாறடி தள்ளி நிக்கணும், பறையர்கள் நூறடி தள்ளி, இதுபோக தோட்டியும் காட்டு நாயக்கனும் பகலில் கண்ணிலேயே படக்கூடாது. மொத்தத்துல ஒரு பிராந்தன் கண்ட சொப்பனம் மாதிரி. அதில் பிராந்தன் தம்புரான் போன்ற ஆட்கள்தான் இயல்பாக இருக்க முடியும் போல.” பிராந்தன் தம்புரானின் மங்கலங்காவு என்ற அந்த இல்லம் கொல்லம் பெரிநாடை அடுத்து இருக்கும் பெரும்பகுதி நிலத்தைக் கையில் வைத்திருந்தது. நிலம் என்றால் அன்றைய கணக்கில் சுமார் மூவாயிரம் ஏக்கர் நெல் வயல்கள், அதுபோக ஊரும் காடும். இல்லத்தில் பாஸ்கரன் பிள்ளை என்ற மூத்தப்பாச்சுதான் மூத்த மகன். அவன் போக இரண்டு இளையவர்களும் இருந்தார்கள். திருவிதாங்கூர் மஹாராஜாவின் வாளும் பட்டும் பெற்ற இல்லம் அது. ஆண்டுக்கொருமுறை அனந்தபத்மநாபன் கோயிலில் நவராத்திரியின்போது முழுதணியில் எழுந்தருளிய மஹாராஜாவை நேரில் சென்று காணும் உரிமையும் இல்லத்திற்கு உண்டு. பெரும் படகுகளில் நெல் மூட்டைகள் ஏற்றிச் செல்ல அஷ்டமுடி காயலில் மட்டும் பதினான்கு படகுத்துறைகள் அவர்களுக்கென்றே இருந்தன. அவை ஒவ்வொன்றை அடுத்தும் மாபெரும் அறுத்தடிப்புக் களங்கள், நெல் பத்தாயங்கள். இவை போக இல்லத்திற்கென்று சொந்தமாக இருந்த மற்றுமொரு முக்கியமான பெருஞ்சொத்து ஏறத்தாழ அறுநூறு புலையர் குடும்பங்கள். அவர்களில் பெரும்பகுதி பேர், ஆண்களும் பெண்களும், பன்னிரெண்டு வயது முதல் அறுபது வயது வரை, முழுநேரமாக வயல்களில் உழைத்தனர். அறுவடை காலத்தில் வடக்கிலிருந்து மேலும் புலையர்கள் கடன் வாங்கப்பட்டனர். கொல்லம் ராஜ்ஜியத்திலேயே மிகவும் இரக்கமற்ற நிலக்கிழார்களாக மங்கலங்காவு இல்லத்தார் அறியப்பட்டனர். அவர்களது கொடுமைகளிலிருந்து தப்பிப் பிழைத்துச் செங்கோட்டை வழி தமிழகம் செல்ல முயன்ற புலையர்கள் எத்தனை மாதங்களானாலும் கைகளில் பச்சை குத்தப்பட்ட சின்னத்தை வைத்து அடையாளம் கண்டு இழுத்துவரப்பட்டனர். மூத்தப் பாச்சு அண்ணனுக்கு இளையவர்கள் இருவரும் இரண்டு கைகளாகத் துணை நின்றனர். கிழக்கிந்திய கம்பெனியுடனும் கொல்லம் சந்தையில் செட்டியார்களுடனும் வியாபாரம் பேசுவதும் கணக்கு வழக்குகளை மேற்பார்வையிடுவதும் (பார்வையிடும் அளவுக்கு அவர்களுக்குப் படிப்பறிவு இருக்கவில்லை) என்று அவர்கள் வருடம் முழுவதும் செல்வந்தர்களுக்கான சத்திரங்களிலும் விடுதிகளிலும் தங்கிக் காலத்தைக் கழித்தனர். பயணத்திலும் தாசிகளிலும் ருசி கண்டுகொண்டதாலோ என்னவோ, அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமணமான மூத்தப் பாச்சு பிள்ளை இல்லத்திலேயே நின்று நிலங்களையும் விவசாயத்தையும் பார்த்துக்கொண்டான். ஆண்டுக்கு ஆண்டு சமஸ்தானத்திற்குக் கொடுக்க வேண்டிய வரிப்பணம் அதிகரித்தாலும் இல்லத்துக்காரர்கள் அதைவிட மும்மடங்கு பொருளீட்டினர். ஈட்டிய பொருளையெல்லாம் செய்வதறியாது பொன்னும் அணிகளுமாக வாங்கிக் குவித்தது போக, கம்பெனியிடமே ஐரோப்பிய பொருட்களுக்காக மீண்டும் செலவிட்டனர். பலசமயம் கம்பெனி பணத்திற்குப் பதில் பரிசுகளாகவே தங்கள் கொடுக்கல்களை நடத்தினர். நீலக் கண்ணாடி, பீங்கான் ஜாடிகள், நிலைக்கடிகாரங்கள், சல்லடைத்துணி இழைகள் என. மங்கலங்காவில் வாங்கிக் குவித்த பொன்னும், பட்டும், கம்பெனித்துணியும் யார் அணிகிறார்கள் என்பதே நாயர் குல வட்டாரங்களில் பேச்சாக இருந்தது. பாஸ்கரன் பிள்ளைக்கு பிராந்தன் தம்புரான் என்ற பட்டம் வந்ததும் அப்படித்தான். மூத்தப் பாச்சு புலையர் பெண்கள் மீது அடங்காத மோகம் கொண்டிருந்தான். பகலில் அறுபது அடிக்கு நெருங்கி வரக்கூடாது என்று விதியமைக்கப்பட்ட புலையர் பெண்கள் இரவுகளில் ரகசியமாக, வலுக்கட்டாயமாக இல்லத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இது அக்காலத்தில் மிகச் சாதாரண வழக்கமாக இருந்ததுதான். புலையப் பெண்களுடன் உறவில்லாத நாயர் தரவாடுகளே இல்லை எனலாம். அதுபோலவே சில நாயர் பெண்களுடன் புலையர் ஆண்களுக்கும் உறவிருந்தது. அவ்வாறான உறவில் நாயர் பெண்கள் கருவுற்றபோது வைத்தியர்கள் அழைத்துவரப்பட்டுக் கருகலைக்கப்பட்டது. ஆனால், புலையர் பெண்களுக்கு அந்த வசதி இருக்கவில்லை. அப்படி அவர்கள் முறைமீறி பெற்ற பிள்ளைகள் ’புலையாடி மக்கள்’ என்ற விளிப்பெயருடன் கைவிடப்பட்டுப் புலையர் குடிகளிலேயே வளர்ந்தனர். அவர்களுக்கு அக்குடிகளிலும் எந்த மதிப்போ அதிகாரமோ இருக்கவில்லை. இவையெல்லாம் அன்றைய கேரளமென்னும் அந்த மாபெரும் பைத்தியக்கார விடுதியின் சாதாரண அன்றாடங்களே. பிராந்தன் தம்புரானுக்கு இதில் மேலும் சில பிரத்யேக நாட்டங்கள் இருந்தன. தனக்குக் கீழ் புலையர் குடிகளில் உள்ள அழகிகளை ஆட்களை வைத்துத் தேடிக் கண்டடைந்து இல்லத்திற்கு அழைத்துவருவான். அதில் பல சமயம் பருவமாகாத பெண்களும் இருந்தனர். அத்தகைய பெண்களுக்காகவென்றே சில குடும்பங்களை அவன் வாங்கவும் செய்ததுண்டு. அவ்வாறு இரவு அழைத்துவரப்படும் பெண்கள் இல்லத்தின் ரகசிய வாசலிலேயே தங்கள் புல்லாடைகளையும் கல்லுமாலையையும் அவிழ்த்து நிர்வாணமாக வேண்டும். பின் இல்லத்திற்குள் நுழையும் அவர்களுக்குத் தந்தத்தில் வேலைப்பாடுகள் கொண்ட மரப்பேழையில் வைக்கப்பட்ட பொன்னணிகளும் பட்டும் வழங்கப்படும். அதை அவர்கள் அணிந்துகொண்டு அவன்முன் செல்ல வேண்டும். மூத்தப் பாச்சு அப்பெண்களை ஓர் அரசியைப் போலவே நடத்துவான். இரவு முழுவதும் அவர்களுக்குச் சேவைகளும் உபசாரங்களையும் செய்வான். தாம்பூலம் மடித்துத் தருவதும், கால்களைப் பிடித்துவிடுவதும் என அது செல்லும். பின்னிரவில் ஏதோ ஒருகட்டத்தில் அந்த நாடகம் முடிவுக்கு வரும். புலையர்கள் மறுநாள் தங்கள் பெண்களை உடலெல்லாம் ரத்தக் காயங்களுடன் காயல் கரைகளில் கண்டெடுத்தனர். நிழலாடிய கரிய நீரில் கூந்தல் நீர்பாசி போல மெல்ல அலைப்பாய கிடந்த அவர்கள் பல சமயம் பொன்னும் பட்டும் அணிந்திருந்தார்கள். கண்டெடுத்தபோதே இல்லையென்றாலும் பெரும்பாலும் அப்பெண்கள் ஓரிரு நாட்களில் இறந்தும் போனார்கள். அவர்கள் விஷமேற்றப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லுவதுண்டு. புலையர்கள் அப்பெண்களைக் காயலோரமாக அவ்வணிகளுடனே புதைத்தார்கள். யாரும் அந்தப் பொன்னைத் தீண்டக்கூட நினைக்கவில்லை. கொடுங்கனவு என அந்த ஆபரணங்கள் அவர்கள் நினைவுகளில் தங்கியது. மூத்தப் பாச்சுவின் இந்தச் செய்கையை இல்லத்தில் யாரும் கேள்வி கேட்கவில்லை. இளையவர்கள் கூட அவரிடம் இதைப் பற்றிப் பேசத் தயங்கினர். இக்கதை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம் வரை நாயர் தரவாடுகளில் பரவியது, வெறும் கேலிப்பேச்சாக. அவர்கள் யாரும் அதில் அநீதியென்றோ கொடுமையென்றோ எதையும் காணவில்லை. சேமித்த தன் சொத்துகளையெல்லாம் வீணாக எரித்தழிக்கும் ஒரு மூடன் என்றே அவர்கள் அவனைக் கண்டார்கள். அப்படித்தான் மங்கலங்காவில் மூத்தப்பாச்சுவுக்கு பிராந்தன் என்ற பெயர் நாயர் தரவாடுகளிலும் புலயர் குடிகளிலும் இருவேறு அர்த்தங்களில் பரவியது. இவ்வாறு ஐம்பதுக்கும் மேற்பட்ட புலையப் பெண்கள் கொலையுண்ட பிறகே ஒருநாள் மாலைப் பொழுதில் பிராந்தன் தம்புரான் இளம் நங்கேலியைக் கண்டான். காயல்கரையில் தூண்டிலிட்டுக்கொண்டிருந்த அம்மையும் மகளுமான இரு பெண்களும் பல்லக்கில் சென்ற தம்புரானைக் கண்டு நீருக்குள் இறங்கி நின்றனர். அக்காலத்தில், புலையர்கள் சட்டென்று ’உயர்’ சாதியினரைக் கண்டுவிட்டால் அறுப்பத்தியாறடி என்ற அந்த எல்லையைக் கடைபிடிக்க முடியாத சூழலில், நீருக்குள் இறங்கி நிற்பது வழக்கம். நீர் அத்தீட்டைக் கழித்துவிடும் என்று கருதப்பட்டது. முழங்காலளவு நீரில் இறங்கி கைகட்டிக் குறுகி நின்ற தாயின் அருகே அந்த இளம் பெண்ணை மூத்தப் பாச்சு கண்டான். காயலோரம் பறித்த பொன்னரளிப்பூ ஒன்றை விரித்திட்ட தன் சுருள் கூந்தலில் சூடியிருந்த அவள் இடுப்பில் ஒரு கையை வைத்தபடி சற்றும் பயமில்லாமல் தம்புரானை ஏறிட்டுப் பார்த்தாள். தாய் அருகிலிருந்து அவளை உலுக்கியபோது அவள் சற்றே ஏளனமாக ஒரு புன்னகைப் புரிந்து திரும்பிக்கொண்டாள். அன்றிரவு முழுவதும் மூத்தப் பாச்சுவுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. அந்தியில் அவன் கண்ட பொன்னரளிச் சூடிய அந்தப் பெண்ணின் சிரிப்பு அவனது கற்பனையில் பலநூறாகப் பெருகியது. உடலெங்கும் பற்றியெரிவது போல, படுக்கையே அனலானது போல அக்காட்சி வருத்தியது. இந்த விரிந்த உலகத்தில் அச்சிறிய தலைக்குள் தான் மட்டும் அனுபவிக்கும் நரகம் ஒன்றை அவன் கண்டுகொண்டான். ஆனால், அங்கு மட்டுமே அவனால் வாழமுடியும், தன் இன்பங்களைத் தேடிக் கண்டடைய முடியும் எனத் தோன்றியது. மற்ற அனைத்தும் பொருள்படாத வெறுமைகள். மட்கி மண்ணாகச் செல்பவை, இந்தப் பாழுடலும் கூட. அவன் அறைக்குள் எழுந்து நடந்தான். இரவு முழுவதும் பித்தனைப் போல நடந்துகொண்டே இருந்தான். ஜன்னல் வழியாகத் தொலைவில் அஷ்டமுடி காயலின் கரிய ஒழுக்கு முழு நிலவொளியில் அவனுக்குத் துணையிருந்தது. மறுநாள் முதல், காயலோரம் கண்ட அந்தப் புலையப் பெண்ணுக்கான தேடுதல் முழுவீச்சில் துவங்கியது. தம்புரானுக்கு அவள் தன் நிலத்தைச் சேர்ந்தவள் என்று மட்டுமே தெரிந்திருந்தது. ஆனால், அவனது நிலங்கள் காயல் கரையோரமாக ஐந்தாறு மைல்கள் வரை நீண்டுகிடந்தன. தம்புரானின் ஆட்கள் அவன் சொன்ன அடையாளத்தைக் கொண்டு ஒவ்வொரு சிறு குடிகளாக விசாரித்து நெருங்கியபடியிருந்தனர். அச்செய்தி மெல்ல புலையர் குடிகள் முழுக்கப் பரவ, நங்கேலியின் தாய்க்கு அவர்கள் தேடுவது தன் மகளைத்தான் என்று உடனே தெரிந்தது. யாரிடமும் சொல்லாமல் கண் காணாத கிணற்றடி ஒன்றிற்குள் சென்று, “ஞன்டே கொடுகல்லூரம்மோ, பெரும்புலையோ, மாவேலியப்போ, ஞன்டே பொன்னுமோளானே, அவளக் காக்கனே!” என வயிற்றிலடித்துக்கொண்டு கதறி அழுதாள். அவள் பெற்ற ஏழு குழுந்தைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்தவை போக தங்கியது நங்கேலி மட்டுமே. அக்குடியில் வேறெந்தத் தாயும் வளர்க்காதது போல அவள் தன் மகளைப் போற்றி வளர்த்தாள். புலையர் குடியில் தன் மகளே பேரழகி என்பதால் அவளை ஒருபோதும் தம்புரானின் பார்வையில் படாதவாறு அதுவரை பாதுகாத்திருந்தாள். நங்கேலியோ கரிய வைரம் போன்ற பெண்ணாக இருந்தாள். சிறுவயதிலேயே எதற்கும் அவள் அஞ்சுவதில்லை. வயலில் ஓடும் கருநாகத்தை இடக்கையில் பிடித்து வீசியெறிந்தாள். எந்நேரமும் அவள் பெரும் பசிகொண்டிருந்தாள். வயலில் செல்கிற நண்டுகளைப் பிடித்து ஓடை நீரிலேயே அலசி உடைத்து உண்டாள். எவர் பார்வைக்கும் அவள் தயங்கவில்லை. பால் வைத்திருந்த பச்சை நெல்லை உருவி வாயிலிட்டு மென்றாள். தோள்களில் ஆண்களுக்கு இணையான திண்மையும் அதே நேரம் உந்தி எழுந்த இளம் முலைகளில் பெண்மையின் அத்தனை அழகும் அவளுக்குச் சேர்ந்திருந்தது. அந்தப் பதினாறு வயது வரை நங்கேலியின் தாய் ஒவ்வொரு நாளும் அவளை நினைத்து வருந்தினாள். இத்தகைய பெண் இந்தப் பாழ் பூமியில் ஏன் பிறக்க வேண்டும், இந்தச் சபிக்கப்பட்ட மண்ணில் ஏன் காலடியெடுத்து நடக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் ’தெய்வங்களே! அவளை நீயே பார்த்துக்கொள்!’ என்று கடைசியாக நினைப்பாள். சென்ற அறுவடையில்தான் நங்கேலிக்குத் தண்டக் கல்யாணம் நடத்திப் புல்லாடை அணிவித்தார்கள். அவளது கணவன் புலையர் குடியிலேயே மிகவும் சாதுவான, உழைக்கும் இளைஞன். ஆனால், நங்கேலி இன்னமும் முழுமையாக அவனுடன் செல்லவில்லை. உடல் நலிந்திருந்த தாயைப் பார்த்துக்கொள்ள பெரும்பாலும் அவளுடனே தங்கினாள். நங்கேலியின் தாய் அன்றிரவு தன் மகளின் கால்களில் விழுந்து கெஞ்சினாள். “நீ எங்காவது ஓடிவிடு மகளே, இவர்களிடமிருந்து எப்படியாவது தப்பிவிடு, இவர்கள் உன்னைக் கொன்றுவிடுவார்கள். என் உடல் மட்டும் நன்றாக இருந்தால் நானும் உன்னுடனே வந்துவிடுவேன். இங்கிருந்து போய்விடு” நங்கேலி சற்றும் யோசிக்காமல் பதிலளித்தாள் “இது ஞன்டெ மண்ணு, ஞன்டெ காயலு, ஞான் எபிடெக்கும் போவில்லா, உவன் இஞ்ஞாடு வரட்டு.” அவளது கண்கள் நம்ப முடியாத அளவுத் தீவிரம் கொண்டிருந்தன. நங்கேலியின் தாய் அப்போதே நடந்தேறவிருக்கும் முழுவதையும் ஒரு நொடியில் அறிந்துகொண்டவள் போல, அதன் முடிவைக் கண்டவள் போல, இரு கைகளையும் தலைமீது கூப்பி அழுதுகொண்டே குடிலின் ஒரு மூலையில் சென்றமர்ந்தாள். பிராந்தன் தம்புரானின் ஆட்கள் நங்கேலியைத் தேடிக் கண்டடைய அதிக நாட்கள் ஆகவில்லை. அன்றிரவு அவர்கள் வந்த செய்திக் கேட்டு நங்கேலியின் தாய் மூர்ச்சையாகி விழுந்தாள். இத்தனை நாள் கதிர் கொய்ய இறங்கும் கிளியைப் போல வளர்த்த பெண்ணை அன்றுதான் கடைசியாகக் காணப்போகிறாள் என்றே நினைத்தாள். ஆனால், நங்கேலியின் முகத்தில் சிறிதும் அச்சமில்லை, சிறு அதிர்ச்சியும் கூட இல்லை. அந்தக் கணத்திற்காகவே காத்திருந்தவள் போல அவர்களுடன் செல்லத் தயாரானாள். செல்லும் முன் கண்களால் கணவனிடம் தாயைப் பார்த்துக்கொள்ளும்படி ஆணையிட்டாள். பருத்தியாடைகள் அணிந்து பந்தம் ஏந்திய ஆண்களின் மத்தியில் இடுப்பில் புல்லாடை மட்டும் அணிந்த நங்கேலி தோள் புரண்ட விரிகூந்தலுடன் ஒரு வன தெய்வத்தைப் போல நடந்துசென்றாள். வயல்வெளியின் இருளுக்குள் பந்தங்கள் அலையாடி ஆடி சிறு புள்ளிகளாகத் தொலைதூரம் சென்று மறைவதை ஏறுமாடங்களில் அமர்ந்து அவர்கள் கண்டனர். மறுநாள் அதிகாலை அதே புல்லாடையும் கல்லுமாலையுமாகத் தனியாகக் குடில் மீண்ட நங்கேலியை அவளது தாய் நம்பமுடியாமல் பார்த்தாள். புல்விரித்தத் தரையில் எழ முடியாமல் கிடந்த தன் தாயை மடியில் கிடத்தி நங்கேலி சொன்னாள், “உவன் என்ன தொட்டில்லம்மா” புலையர் குடியெங்கும் அவள் மீண்டுவந்த செய்திப் பெரும் வியப்பாகப் பேசப்பட்டது. இறந்துபோனவள் மீண்டுவந்ததைப் போல அவள் முதலில் பார்க்கப்பட்டாள். அவளை மீண்டும் குடியில் ஏற்றுக்கொள்வதா ஒதுக்கிவைப்பதா என்று குல மூத்தோர் குழம்பினர். குடிக்குச் சாபத்தைக் கொண்டுவருவாளோ என்று அஞ்சினர். ஆனால், நங்கேலி மறுநாள் எப்போதும் போல வயல் வேலைக்கு வந்தாள். எல்லார் கண்களையும் நேரடியாக எதிர்கொண்டாள். அவளுக்கு எதிராகச் சொல்லெடுக்கக் கூட பிறர் அஞ்சினர். இரவு தன் கணவனிடம் மட்டும் ரகசியமாகச் சொன்னாள், “அவன் என்னை ஒருபோதும் தொடமாட்டான்.” அன்று நடந்தது தம்புரானுக்கும் நங்கேலிக்கும் மட்டுமே தெரிந்தது. தன் புல்லாடையை வாசலில் களைந்து முழுதணி கோலத்தில் அவள் அவன் முன் நின்றாள். அதுவரை எந்தப் பெண்ணும் தொடத் தயங்கிய ஆபரணங்களையெல்லாம் அவள் மிக இயல்பாகத் தொட்டெடுத்துச் சூடிக்கொண்டிருந்தாள். தோள் தழைந்த சுருள்முடியை அள்ளிக் கொண்டையிட்டு, அதில் வைரங்கள் பதித்த நெற்றிச்சுட்டி அணிந்து, சரம் சரமாக முத்து மாலைகள், தொங்கும் தங்கக் காதணிகள், நீலக் கற்களும் பவளமும் பதித்த கசவு மாலையும், பச்சை மரகதம் பதித்த நாகப்பட மாலையும், சரப்பொலி, முல்ல மொக்கு, மாங்கா மற்றும் காசு மாலைகளும், கை ஆரங்களும், வளையல்களும் மோதிரங்களும் ஒட்டியாணமும் கொலுசும் அணிந்து, வெண்பட்டு முண்டும் மார்க்கச்சையும் உடுத்தி, தங்கச் சரிகை வைத்த செம்பட்டுச் சால்வை ஒன்றை அதன்மீது போர்த்தி அவன்முன் சென்றாள். அக்கோலத்தில் அவளைக் கண்ட பிராந்தன் தம்புரானின் உடலெங்கும் வியர்த்துக் குளிர்ந்தது. ஏதோ புரியாத ஓசையெழுப்பி கால்முட்டுகள் நடுங்க அவன் நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்துவிட்டான். அவன் உடல்மீது அக்கணம் மனித வரலாற்றின் ஒட்டுமொத்தச் சுமையும் ஒரு மாபெரும் கரிய யானையொன்றின் பாதத்தைப் போல தோள்களில் படிந்து அவனைப் பின்னிலிருந்து பெரும் எடைகொண்டு அழுத்தியது. சற்றுப் பிசகினாலும் அவனை மண்ணோடு அழுத்தித் தேய்த்துவிடும் எடை. நங்கேலி அவனைக் கண்டு மிக மெல்ல பரிகாசமாகப் புன்னகை புரிந்தாள். தம்புரானின் கண்கள் பெருகி வழிந்தன. நெஞ்சு வெடித்துவிடும் என்பது போல அதிர, அவன் கைகளைக் கூப்பியபடி “தேவி!” என்று கூறி தரையோடு தலை பதித்தான். நங்கேலி மெல்ல மரப்பாதுகையிட்ட தன் வலக்காலை அவன் தலைமீது வைத்தாள். பித்தனின் தலை அந்நொடியே குளிர்ந்த எண்ணெய்க் குடத்தைக் கவிழ்த்தது போல தணிந்திறங்கியது. நங்கேலி மெல்ல நடந்து படுக்கை அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டாள். அன்று தம்புரான் இரவெல்லாம் அறைக்கு வெளியிலேயே படுத்துக்கொண்டான். பல வருடங்களுக்குப் பின் அன்றிரவு அவன் நிம்மதியாக உறக்கமுற்றான், உடலே எழுந்து மிதப்பது போல. அவன் கனவுகளில் அன்று இனிமையான இளமையின் நினைவுகள் தோன்றின. காலை அவன் எழுந்தபோது நங்கேலி அங்கிருக்கவில்லை. புலையன் கேட்டான், “உனக்கு அந்த அணியெல்லாம் பிடித்திருந்தனவா?” அவன் தலையைத் தன் மென்மையான இளம் மார்போடு அள்ளிப்பற்றி அணைத்துக்கொண்டு சொன்னாள், “அவை வெறும் சருகுக் குப்பைகளடா, உனக்காக நான் அணியும் இந்தக் கல்லுமாலை போல அவை ஏதும் வருமோ?” அவன் அவளைத் தழுவி அணைத்துக்கொண்டு விம்மி அழுதான். சில நாட்களில் நங்கேலியை மீண்டும் தம்புரானின் ஆட்கள் வந்து அழைத்துச் சென்றனர். நாளடைவில் அது வெறும் வழக்கமானது. பல நாட்கள் அவள் தேடிவந்த ஆட்களை மறுத்துத் திருப்பி அனுப்பினாள். அவள் குடி யாருக்கும் என்ன நடக்கிறதென்று புரியவில்லை. நங்கேலி அதைக் குறித்து யாரிடமும் பேசிக்கொள்ளவும் இல்லை. அவளது அன்றாடம் எப்போதும் போல வயல் வேலைகளில் கழிந்தது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு அக்குடியில் மதிப்பும் அதிகாரமும் வந்தது. சில நாட்களில் அவளது வார்த்தையே குடியின் கடைசிச் சொல் என்றானது. அது பிற புலையக் குடிகளுக்கும் பரவியது. பிராந்தன் தம்புரான் நங்கேலிக்கு அடிமை என்பது பெரிநாடெங்கும் வாய்ப்பாட்டானது. நங்கேலி புலையர் குடிகளில் பல மாற்றங்களைக் கற்பித்தாள். புலையர்களின் மூத்த மக்கள் கூட அவள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டனர். கெடு மந்திரங்கள் சொல்வதையும் சபித்துக் கட்டுவதையும் அவள் கடுமையாக நிந்தித்தாள். குழந்தைகளை எக்காரணம் கொண்டும் துன்புறுத்துவதை அவள் ஏற்கவில்லை. கருங்காலிகளைக் குடியிலிருந்து எல்லா விதங்களிலும் ஒதுக்கி வைத்தாள். ஆண்டுக்கொருமுறை பெரிய அம்பலத்திற்குப் புலையர்கள் வைக்கக் கடமைப்பட்ட காணிக்கையை மறுத்து அனுப்பினாள். அக்காலத்தில் பிராமணர்கள் பூசை செய்யும் கோயில்களுக்குப் புலையர்கள் கால் மைல் தொலைவில் நடப்பட்ட ஒரு கல்லின் அருகில் தங்கள் காணிக்கையாகத் தேங்காயும் காசும் வைத்து விலகிச் செல்ல வேண்டும். அதைக் கோயில் வேலை செய்யும் பணியாள் நீர் தெளித்துச் சுத்தம் செய்து பிராமணரிடம் வைத்துப் பூசை செய்து சந்தனமும் தீர்த்தமும் எடுத்துவந்து அக்கல்லின் அருகே வைத்துச் செல்வார். இது ஆண்டுக்கொருமுறை அறுவடையை ஒட்டிச் செய்ய வேண்டிய சடங்காக நீடித்தது. நங்கேலி அவ்வருடம் புலையர் குடிகள் யாரும் காணிக்கை வைப்பதில்லை என்று முடிவுசெய்தாள். “உவன்டே தெய்வவும் ஞன்டெ தெய்வவும் எங்கனயா ஒன்னாயிரிக்குக? ஞம்மடே கள்ளும் மீனும் உவன்டெ மாடன் தின்னுவோ?” புலையர்களின் இந்த எதிர்க்குரல்கள் ஒவ்வொன்றும் இல்லத்திற்கு வந்த இளைய தம்புரான்மாரை எட்டியது. ஆனால், மூத்தப் பாச்சுவை மீறி அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. மூத்தப் பாச்சுவுக்கு நங்கேலி மீது இருக்கும் அடங்காப் பித்தின் முன் அவர்கள் எதுவும் சொல்ல முடியாதென்று தெரிந்தது. அவன் எதிலும் கவனம் கொள்ளாதவன் ஆனான். எப்போதும் சிந்தனைகளில் மூழ்கிக் கிடந்தான். சரியான உணவில்லாமல் அவனுடல் வேகமாக மெலியத் துவங்கியது. மேலும் மேலும் பொன்னாபரணங்களை வாங்கிக் குவித்தான். அதனால் அவ்வருடத்தின் வரிப் பணத்தையோ கோயில் நிபந்தங்களையோ கூட இல்லத்தால் செலுத்த முடியாமல் ஆனது. சமஸ்தானத்தில் இல்லத்திற்கு இருந்த செல்வாக்கால் தற்காலிகமாக அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இப்படியாகப் பல நாட்கள் சென்ற பின்னொருநாள் பிராந்தன் தம்புரான் நங்கேலியைப் பகல் வெளிச்சத்தில் கண்டான். வயல் நடுவே ஏறுமாடத்தில் தன் குடிலில் அமர்ந்திருந்த அவள், கணவனின் காலை மடியிலேந்தி, அதைக் கைகளால் மெல்லப் பிடித்துவிடுவதை அவன் தொலைவிலிருந்து பார்த்தான். அவர்கள் பேசிச் சிரித்துக்கொண்டதையும் கண்டான். அவளிடம் அந்தக் கணம் அவன் காணும் எந்த நிமிர்வும் பாவனையும் இல்லை. கணவன்முன் முழுமுற்றாக, இயல்பாக, மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தாள். பிராந்தனின் உடலெங்கும் கடும் சினம் மூண்டது. அவனைச் சுற்றிலும் கண்ணெட்டும் தொலைவரை அறுவடைக்குக் காத்திருந்த நெல் வயல்களனைத்தும் மாலை ஒளியில் பற்றியெரிவது போல சிவந்து நின்றன. அக்கணமே அதை மொத்தமும் தீயிட நினைத்தான். அதனுடன் சேர்த்து அக்குடிகள் எல்லோரையும் எரித்தழிக்க வெறிகொண்டான். புழுக்களைப் போல அவர்கள் அத்தீயில் வெந்து கரிவதை எண்ணியெண்ணிக் களிப்புற்றான். தலைக்குள் அவ்வெண்ணங்கள் மீண்டும் மீண்டும் பற்றி எரிந்து கொதிக்கச் செய்தன. “புழுக்கள், எல்லாம் புழுக்கள்!” உடலெல்லாம் கூச அவன் பல்லக்கிலிருந்து காறி உமிழ்ந்தான். அடுத்தமுறை நங்கேலி இல்லத்திற்கு வந்தபோது அவன் சினம் பொங்க “எடீ, ஆரடீ அவன்” என்று கூவி அவள் கையைப் பிடிக்க நெருங்கினான். சட்டென்று திரும்பிய அவள் “ஞீ என்ன தொடுவோடா?” என்று உருமியபடி தன் கால் பாதுகையை எடுத்து அவனை மீண்டும் மீண்டும் அறைந்தாள். தம்புரானின் தசைகள் ஒவ்வொன்றும் முறுக்கேறித் தளர்ந்தன. அவன் தலைக்குள் சிறுமையும் அவமானமும் சினமும் பெருக, அவற்றையெல்லாம் மீறிய பெரும் களிப்பொன்றும் ஒருசேர எழுந்தது. கைகளால் தன் தலையை மறைத்தபடி குருகி அமர்ந்துகொண்டு “இல்லா, இல்லம்மே இல்லா” என்று கேவினான். நங்கேலி அவனைப் பாதுகையிட்ட காலால் மிதித்துத் தள்ளிவிட்டு அங்கிருந்து மறைந்தாள். அன்றிரவே நங்கேலி தன் கணவனுடன் மீண்டும் அங்கு வந்தாள். புல்லாடையும் கல்லுமாலையுமாக அவனைக் கைப்பிடித்து வாயிலைக் கடந்து உள்ளே சென்றாள். மூத்தப்பாச்சு சொல் ஒன்றும் எழாமல் திகைத்து நிற்க, அவள் கணவனுடன் அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டாள். சற்று நேரத்திலேயே பூட்டிய அறைக்குள் அவர்கள் உறவுகொள்ளும் சத்தம் எழுந்தது. வன் மிருகங்கள் புணர்வது போன்ற ஓசை. இறைச்சலும் ஓலமுமாக, பெரும் சுகமும் உச்ச வலியுமாக, இல்லத்தின் மரத்தளம் அதிர, மண்சுவர்கள் அதிர அது எதிரொலித்தது. பற்களைக் கடித்தபடி பிராந்தன் இரு காதுகளையும் அடைத்துக்கொண்டான். ஆனால், அக்கூச்சல் அரம்போல அவன் செவியைத் துளைத்து ஊடுறுவி உடலை நடுக்கியது. அவன் கழுத்து நரம்புகள் புடைத்தெழுந்தன. “கொடு கொடு, வேண்டும் வேண்டும், தீராது தீராது வேண்டும்” என்று மீண்டும் மீண்டும் அக்குரல் சுவரைக் கிழித்துக்கொண்டு எழுந்தது. பிராந்தனின் உடலில் தசைகளனைத்தும் தீப்பட்டது போல எரிய, தாளமுடியாத ஒருகணத்தில் அறைச் சுவரில் பதித்த மஹாராஜாவின் வாளை உருவி கதவை அறைந்தான். மீண்டும் மீண்டும் மூர்க்கமாக அதைத் தாக்கினான். அறைக்குள்ளே புணர்வொலிகள் மேலும் உச்சமடைந்தன. பிராந்தன் தனக்குள் எழுந்த மொத்த ஆற்றலையும் திரட்டிக் கதவை ஓங்கி அறைந்து திறந்தான். விரிந்த கூந்தல் தோள்களில் புரள, கரிய உடலெங்கும் வியர்வையில் நனைந்திருக்க, நகைக் கூச்சலிட்டபடி நங்கேலி தரையில் கிடந்த தன் கணவன் மீது மூர்க்கமாக எழுந்தமர்ந்து உறவுகொண்டாள். தரையில் சுற்றிலும் பொன்னணிகள் சிதறிக் கிடந்தன. முத்துச்சரங்கள் உடைந்து பரல்கள் எங்கும் சிதறியிருந்தன. அவள் உடல் சன்னதம் கொண்டது போல இடுப்பிலிருந்து அலையலையாக நடுக்கமுற்றது. மாபெரும் கரிய கூந்தல் இடமும் வலமுமாகத் துள்ளியெழுந்தது. அவள் பின்னால் அஷ்டமுடி காயல் கரிய மினுக்குடன் ஒளிர்ந்து ஒழுகியது. தம்புரான் வாளை ஓங்கியபடி அவளை நிறுத்தும்படிக் கூவினான். அவன் கண்களைப் பார்த்து உறக்கச் சிரித்தபடி கேட்டாள், “புலயத்திடெ பூர்க்கே கேறனாடா தம்ப்ரானே?” கைகளை தரையில் ஓங்கி அறைந்து மீண்டும் கேட்டாள் “புலையத்தியின் யோனியில் ஏற வேண்டுமாடா தம்புரானே?” அக்கேள்வி தம்புரானின் தலையிலிருந்து முதுகுத் தண்டுக்குச் சிலிர்த்துப் பரவியது. வாளை ஓங்கியபடி அவளை நோக்கி ஓடினான். அவனால் ஒருபோதும் அவளை எதிர்க்க முடியாது என்று அதுவரை எண்ணியிருந்தான். அவன் நெருங்கிய கணம் அவள் “அரிஞ்ஞிடடா தலையே!” என்று கூறி பேய் போல நகைத்து, கையால் முடியை அள்ளி விலக்கிக் கழுத்தைக் காண்பித்தாள். தம்புரான் ஒருகணம் அதில் சிறு அரவைப் போல புடைத்தெழுந்தோடிய பச்சை நரம்பைக் கண்டான். “தேவி!” என அவன் நெஞ்சம் எழுந்தது, அவ்வெண்ணம் அவனைக் கடந்த கணமே அவன் வாள் கையிடறியது. நங்கேலி கணமும் தாளாமல் கீழே விழுந்த வாளை எடுத்து ஒங்கித் தன் கழுத்தை அரிந்திட்டாள். நகைக்கும் அவள் முகம் எடைகொண்டு ஓசையுடன் தரையில் விழுந்து புரண்டு தம்புரானின் காலை வந்து தொட்டது. அன்று தம்புரானின் பேய் போன்ற அலறல் அஷ்டமுடி காயலெங்கும் எதிரொலித்தது. உதறிய அவன் கால்கள் அவள் சுருள்முடியில் சிக்குண்டன. நகைக்கும் அப்பார்வை அவனை விழுங்க வந்தது போல. மீண்டும் மீண்டும் அதை வெறிகொண்டு உதறியபடி அலறிக்கொண்டே ஆடைகளெல்லாம் களைந்து இல்லத்திலிருந்து ஓடி மறைந்தான். மாமா பெருமூச்செடுத்துச் சற்று நிறுத்தினார். “நங்கேலி வெறும் பெண்ணில்லையடா, ஒருபோதும் இறப்பில்லாத ஒன்றின் சொல்” அவர் சொன்னார், “மரணத்தின் மீது குத்திவைத்த எதுவும் அழிவில்லாததே. அவளுடைய அந்தச் சிரிப்பு இருக்கிறதல்லவா, அது அந்தக் காலனின் செய்தியல்லவா?” வானத்தைப் பார்த்திருந்த அவர் கண்களில் சிறிது ஈரம் தங்கியிருந்தது. நங்கேலியின் இறப்பையடுத்து அவள் கணவனும் இரண்டாம் நாள் காய்ச்சலில் இறக்க, மங்கலங்காவு இல்லத்தின் புலையர் குடியினர் மொத்தமும் திரண்டுவந்து இல்லத்தின் மாளிகையைத் தீயிட்டு எரித்தனர். இளைய தம்புரான்களில் ஒருவன் தீயில் இறக்க மற்றவனும் இல்லத்து மக்களும் ரகசிய வாசல் வழி தப்பி பட்டனம்திட்டா சென்றனர். மூன்று நாட்கள் அந்த மாளிகை நின்றெரிந்தது. பத்தாயங்களில் இருந்த நெற்களெல்லாம் எல்லோராலும் பிரித்தெடுக்கப்பட்டுப் பின் அப்பத்தாயப் புரைகள் கொளுத்தப்பட்டன. களமெங்கும் சிதறிய நெல்மணிகளைக் கொத்த காடுகளிலிருந்து கூட்டம் கூட்டமாகக் கிளிகள் வந்திறங்கின. கொல்லத்தில் விடுதலையடைந்த முதல் மக்களாக மங்கலங்காவின் புலையர்கள் இருந்தனர். நங்கேலி, சமூக வரலாறுகளில் மறைந்துபோன அவர்களின் முதல் போராளி. புலையர்கள் பலரும் பல திசைகளில் சிதறிப் பரவினர். வெகு சிலர் காயல்கரைகளிலேயே தங்கிவிட்டனர். சிறு நிலங்களைக் கைப்பற்றிச் சொந்தமாக விவசாயம் செய்தனர். இல்லத்தாரால் பிறகு ஒருபோதும் தங்கள் மைய நிலத்தை மீட்க முடியவில்லை. வெவ்வேறு நாயர் சிறுகுடிகளால் அவை அபகரிக்கப்பட்டன. புலையர்கள் நங்கேலியைப் புதைத்த வஞ்சி மரங்கள் அடர்ந்த ஒரு காயல்கரையில் அவளுக்காக நடுகல் ஒன்றை நட்டனர். பல நாட்களுக்குப் பிறகு ஆடைகளில்லாமல் ஒருவன் புலையர் குடியருகே தோன்றினான். முகமெல்லாம் முடியடர்ந்து, உடல் வற்றி எலும்பும் தோலுமாக இருந்த பிராந்தனை அவர்கள் உடனே அடையாளம் கண்டுகொண்டனர். ஆனால், யாரும் அவனை எதுவும் செய்யவில்லை. தன் உடலில் சிறு துரும்பென எது பட்டாலும் அவன் அலறித் துடித்தான். தலையில் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டான். எப்போதும் கால்களை வெறிகொண்டவன் போல உதறினான். அது பல இடங்களிலும் புண்ணாகிச் சீழ்கட்டியிருந்தது. சிலர் அவன்மீது இரக்கம் கொண்டு உணவு வைத்தனர். புலையர் குடியிலேயே எப்போதும் அவன் படுத்துறங்கினான். சில நாட்களுக்குப் பின் அவன் மீண்டும் காணாமலானான். அந்தியில் ஒருநாள் வெளிறிய அவன் உடல் அஷ்டமுடி காயலின் நடுவே கரிய மாபெரும் கூந்தலில் சிக்கிய சிறு ஈறு போல மிதந்ததை அவர்கள் கண்டார்கள். அவன் உடலெங்கும் நீண்ட பாசிகள் பற்றியிருந்தன. அந்தப் படித்துறைதான் நாளடைவில் பிராந்தன் கடவு என்றானது. கொல்லத்தில் பின் என்னவெல்லாமோ கால மாற்றங்கள் வந்துவிட்டன. அய்யன்காளியும் கல்லுமாலை அறுத்து வீசும் போராட்டமும் நடந்து முடிந்தது. இப்போது அந்தப் பழைய கேரளம் ஓர் அரசியல் நினைவாக, கேரள நவோத்தானம் செழித்த வளமிக்க மண்ணாக நினைவில் நிற்கிறது. “ஆனாலும் அந்தப் பிராந்து விட்டிட்டில்ல மோனே, அது ஒருபோதும் நம்மை விடாது” மாமா ஒருவித விலக்கத்துடன் அக்கதையைச் சொல்லி முடித்தார். அன்று அவரது மனதிற்குள் என்ன எண்ணம் சென்றுகொண்டிருந்தது என்று அப்போது சிறுவனாக என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் கசப்பால் நிரம்பியிருந்தார் என்று இப்போது சொல்ல முடிகிறது. எல்லா அறிவுஜீவி மலையாளிகளைப் போல அவரும் இளம் வயதில் கம்யூனிஸத்திற்குள் சென்று பின் அதன் உள்ளரசியலால் விலகிவந்தவர்தான். ஆனால், இறுதிவரை செங்கொடி கண்டால் கண்ணீர் சிந்தும் ’சகாவு’ ஒருவர் அவருக்குள் இருந்தார். பின்னாளில் பெரிய வியாபாரம் ஒன்றைத் தொடங்கி, அதுவும் மெல்ல நஷ்டத்தைச் சந்தித்தது. தன் தொழிலாளிகள் அனைவருக்கும் நல்ல வசதி ஏற்படுத்திக் கொடுத்து விலகினார். கடன்கள் பெருகின. அன்று அக்கதையைச் சொன்ன காலங்களில் அவர் கசப்பான குடும்பச் சூழலில் இருந்தார். அதன்பின் சில மாதங்களிலேயே மனைவியுடன் திருமண விலக்கம் பெற்றார். கடுமையான குடியில் மூழ்கினார். எனக்கு என் குடும்பத்தில் தொடர்பிருந்த ஒரே ஆள் அவர்தான். அவர் ஒருவர்தான் ராதிகாவுக்கும் எனக்குமான உறவை ஏற்று வாழ்த்தினார். எங்கள் திருமணத்திற்கும் அவர் மட்டும்தான் வந்திருந்தார். ராதிகாவைக் கட்டியணைத்து வாழ்த்திவிட்டுக் கடும் மதுநெடியுடன் என்னருகே வந்து என் கையைப் பற்றிக்கொண்டு சொன்னார் “நெஞ்சில் தீயுள்ள குட்டியானு, நீ ஒன்னும் நோக்கண்டா” சில வருடங்களுக்குப் பிறகு கோவளத்தின் அருகே கடலில் குதித்து மாமா தற்கொலை செய்துகொண்டார். இரண்டு நாட்கள் கழித்துக் கரையொதுங்கிய அவரது ஊதிய மீன்கள் அரித்த உடலை நான்தான் அடையாளம் கண்டு சொன்னேன். ராதிகாவைத் திருமணம் செய்துகொண்ட இந்தப் பத்தாண்டுகளில் எனக்கு என் குடும்பத்துடன் வேறு எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் நின்ற இடத்திலிருந்து நங்கேலியம்மாவின் கோயிலுக்கு அரைக்கிலோமீட்டர்வரை உள்ளே நடக்க வேண்டும். இருபுறமும் ரப்பர் மரங்கள் நெருக்கமாக வைக்கப்பட்டிருந்த தோட்டத்தின் நடுவே தனியாகச் சென்ற ஒற்றையடிப்பாதையில் இறங்கி நாங்கள் நடந்தோம். ஒருகாலத்தில் இவையெல்லாம் நெல்வயல்களாக இருந்தன என்பதை நம்பவே சாத்தியம் இல்லை. கோயிலை நாங்கள் நெருங்க நெருங்கக் கூட்டத்தின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்க ஆரம்பித்தது. சற்று தூரத்தில் வஞ்சிமரங்கள் அடர்ந்த அந்த வளைப்பும் சிறு கோயிலும் கண்ணுக்குத் தெரிந்தது. ராதிகா உற்சாகமாக என்னை நோக்கி “பார்த்தாயா, அதோ” என்று புன்னகைத்தாள். அங்கே ஆண்களும் பெண்களுமாக ஐம்பது பேர் வரை கூடியிருந்தது தெரிந்தது. என்னையறியாமல் சற்று மிகைக் கவனமானேன். ராதிகா ஓடிச் சென்று அங்கே நின்ற பெண்களை வாழ்த்தினாள். அவர்கள் எல்லோரும் அவளது உறவினர்களே. எல்லாரிலும் வெவ்வேறு விதமாக அவளின் சாயல் தெரிந்தது. அவர்கள் என்னைக் கண்டவுடன் புன்னகையுடன் வாழ்த்தினர். “மோனே சுகந்தன்னல்லா?” நான் ‘ஆம்’ என்று தலையசைத்துப் புன்னகையுடன் ராதிகாவைப் பார்த்தேன். அவர்கள் ஒவ்வொருவராக அவளைக் குறித்து என்னிடம் புகார்கள் அளிக்கத் துவங்கினர். அவள் அவர்களுடன் பேசுவதில்லை, அவள் மெலிந்துவிட்டாள், ஆளே மாறிவிட்டாள், அழகிய முடியைக் கத்தரித்துக்கொண்டாள் என. அவர்கள் எல்லாரும் வெகு நாட்களுக்குப் பிறகு அன்று நங்கேலியம்மா கோயிலில் ‘முடியாட்டம்’ என்ற நிகழ்த்துக் கலையை ஆட வந்திருந்தனர். ஓணத்தை ஒட்டி ஆடப்படும் ஒரு வளச்சடங்கு அது. வெகுநாட்களாக நின்றுவிட்ட அதை இப்போது மீட்டெடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. ‘குறிப்பிட்ட’ சாதிக்கே உரிய அச்சடங்கு நிகழும்போது ‘பிற’ சாதியிலிருந்து யாரும் அந்த வட்டாரத்திற்குள் நெருங்கக்கூடாது என்று முறை இருந்தது. அதை மீறி தவறுதலாக அச்சமயத்தில் யாரேனும் கண்ணில் பட்டுவிட்டால் அவர்கள் கடும் துர்வாக்குகளால் சபிக்கப்பட்டனர். சில சமயம் வெறுமனே கைகளால் சுட்டப்பட்டனர். ‘சூண்டல்’ எனும் அச்சாபம் ஏழு தலைமுறைகளைத் தொடரும் என்றும் ‘சூண்ட’ப்பட்டவரின் வீட்டில் மூதேவி குடியேறி தொடர் துர்மரணங்களும் குழந்தையின்மையும் ஏற்படும் என்பதும் நம்பிக்கையாக இருந்தது. எங்கள் குடும்பத்திலும் கூட அந்தச் சாபம் உள்ளதாக மாமா இறந்தபோது பேசப்பட்டது. இப்போது முடியாட்டம் கலை வெறும் கலாச்சார காட்சிப் பொருளாக மாறி தேய்ந்துவிட்டது. அன்றைக்குக் கூட அச்சடங்கைப் படம் பிடிப்பதற்காக ஒரு குழு மைக்கும் கேமராவுமாக வந்து நின்றது. சற்று நேரத்திலேயே நிகழ்ச்சித் துவங்கியது. கூடியிருந்தவர்களில் ஒரு பெண் ஒற்றைக் குரலில் முதலடி பாட பிற பெண்கள் ஒன்றாக அதைத் திரும்பப் பாடுவது போல அது அமைந்திருந்தது. அருகே செண்டையும் மத்தளம் போன்றதொரு வாத்தியத்தையும் இரு இளைஞர்கள் வாசிக்க, முன்னால் நின்ற ஆறேழு பெண்கள் மொத்த உடலையும் இடமும் வலமுமாக அசைத்தனர். அப்பெண்களில் பத்து வயதே ஆகியிருந்த சிறுமியும் இருந்தாள். ஆடத் தொடங்கியபோதே அவள் மிக நளினமாகத் தன் ஹேர் கிளிப்புகளைக் கழற்றி அருகில் நின்ற தந்தையிடம் கொடுத்துவிட்டுப் புன்னகைத்தாள், ராதிகாவின் அதே புன்னகை. பாடல் வரிகள் ஒவ்வொன்றாக அவர்கள் பாடப்பாட ஆடிய பெண்களின் அசைவுகள் தாளத்தோடு சேர்த்து அதிகரித்தன. முடியாடுன்ன கன்யகப் பெண்ணே, காணட்டே முடியாட்டு முடியாடுன்ன கன்யகப் பெண்ணே, காணட்டே முடியாட்டு அந்தப் பெண்கள் மெல்ல தங்கள் சுருள் கூந்தலை எடுத்து ஒருபுறமாக இட்டனர். அழிச்சிட்ட வார் முடிக்கட்டு, மாடி மறிக்கட்டே அழிச்சிட்ட வார் முடிக்கட்டு, மாடி மறிக்கட்டே இப்போது அவர்கள் குனிந்தபடி கைகளால் இருபுறமும் முடியை மாறி மாறி வீசியெறிந்தனர். இடத்தோட்டும் வலத்தோட்டும் அங்கன, ஆடி பொலியம்மே சேலொத்த சோடுகள் வச்சு, ஆடி பொலியம்மே கன்னியும் அன்னையும் ஒன்றான தருணம். அவர்களது ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உக்கிரம் கொள்ளத் துவங்கியது. ஆண்கள் கொண்டாட்டமாகத் தாளம் கொட்ட, பார்த்திருந்த பெண்களின் கண்கள் மட்டும் தீவிரம் கொண்டன. ஒவ்வொருவரும் மனதால் அந்த ஆட்டத்தை நிகழ்த்திப் பார்த்தபடி நின்றது தெரிந்தது. முடியாட்ட களத்திலு வந்நு, ஆடி தெளியம்மே சேலுறு நங்கேலி தேவி, ஆடி தெளியம்மே என்றவுடன் சூழ இருந்த பெண்களெல்லாம் ஓசையெழுப்ப ஆடியவர்கள் வேகமாக முடியைச் சுழற்றிச் சுழற்றி வீசினர். சில பெண்களின் நீண்ட சுருள் கூந்தல் தரையில் வந்து வந்து அறைந்து சென்றது. சுற்றியிருந்த பெண்கள் சிலரும் சன்னதம் வந்தது போல அவர்களுடன் இணைந்துகொண்டனர். முடியாட்ட களத்திலு வந்நு, ஆடி தெளியம்மே சேலுறு நங்கேலி தேவி, ஆடி தெளியம்மே மீண்டும் அதே வரிகள், இம்முறை தாளம் மேலும் வேகமெடுத்தது. என் கண் முன்னால் கருங்கூந்தல் பரப்பொன்று அலையடித்துச் சென்றது. விசையுடன் அள்ளித் தெளித்த நீர் போல, காற்றில் எழுந்து சுடர் விடும் கரிய நெருப்பைப் போல. எங்கோ காலமற்ற ஓரிடத்தில் நின்றுகொண்டு அவை எதையோ சொல்லின. மீண்டும் மீண்டும் அதே உக்கிரத்துடன் மண்ணில் அறைந்தறைந்து சொல்லின. நான் அச்சிறுபெண்ணைப் பார்த்தேன். ஒரு முழமே நீண்டிருந்த அவள் கூந்தலும் அதே உக்கிரத்துடன் சுழன்றாடியது. எத்தனை ஆழம்? அதன் ஆழம் நீண்டு நீண்டு மண்ணின் பாதாளம் வரை தீண்டிவந்தது. அங்கெழுந்த விம்மல் ஒலிகள் கூட அந்த ஆழத்திலிருந்து வருபவை போல. மாபெரும் கரிய ஒழுக்கு, ஒற்றை பேரொழுக்கு, பின்னிப்பிணைந்த மாபெரும் வேர்க்கத்தை. வலியும் வேதனையுமென்றே ஆன ஆதி வேர்க்கத்தை, ஒவ்வோர் உயிரும் அதன் சிறு தளிரிலை மட்டுமே. வேரொன்றே அழிவில்லாதது. கரிய விழுதுகள். இரவில் படர்ந்து உலகை அணைக்கும் ஆதிபேரிருள். அன்னை, அன்னை! நான் அச்சிறிய பெண்ணையே பார்த்தபடி நின்றேன். அவள் உடலே இடமும் வலமும் கொடுங்காற்றில் நாணல் போல அசைந்தாடியது. முடியாட்டம் காணும்போழ் அம்மா, ஆனந்தம் கொள்ளுந்நே முடியாட்டம் காணும்போழ் அம்மா, ஆனந்தம் கொள்ளுந்நே மீண்டும் மீண்டும் அவ்வரிகள். என் உடல் மெல்ல நடுக்கம் கொள்ளத் துவங்கியது, அக்கரிய இருளுக்குள் முடிவில்லாது வீழ்ந்து அழிவதுதானா மானுட விதி? மீட்பில்லாத அந்த மரணக்குழி, கூந்தல் நீரிலென நான் மூழ்கினேன், மூச்சு முட்டுவது போல ஒருகணம். என் கால்கள் உலைந்தன, யாரோ பலமாக அதைப் பற்றிப் பின்னிழுப்பது போல உணர்ந்தேன். அவள் புன்னகை, ஆம் அதுவேதான். நான் நிலைகுலைந்து சட்டென்று அவள் கையைப் பற்றிக்கொள்ள நினைப்பதற்குள் யாரோ நெஞ்சில் உதைத்தது போல் பின்னால் தள்ளப்பட்டேன். கண்கள் இருள, என் உடலெங்கும் கரிய வேர்கள் சூழ்ந்துகொண்டன. உதற உதற என் கால்களும் கைகளுமெல்லாம் அதில் மேலும் மேலும் சிக்குண்டு நிலைத்தன, கோடி வேர் நுனிகளின் தழுவல் என, மிக மென்மையாக, மிகத் தீவிரமாக. உச்சவிசையும் அசைவின்மையும் என அதை ஒருசேர உணர்ந்தேன். காலமற்ற நரகம். காலமற்றது, உருவற்றது, அசைவற்றது. மூச்சில் நிறைந்தது அதன் குளிர்ந்த பாசி மணம். முடிவற்ற இருள். உதறுவதே பிராந்து, மீள முயல்வதே பித்து. “அம்மே!” என நான் பணிந்தேன். மெல்ல ஒப்புக்கொடுத்தேன். “அம்மே பொறுப்பாய், என்னைப் பொறுப்பாய்!” அவள் என் கையை இறுக அணைத்துக்கொண்டாள். அவளது குளிர்ந்த விரல்களும் இளம் சூடான இடமார்பும் என்னைத் தீண்டின. “நான் இருக்கிறேன், நான் இருக்கிறேன்” எங்கோ தொலைவில் அவள் குரல் கேட்டது. கண்களில் கண்ணீர் வழிந்தோட விழித்தபோது என் பார்வை கோயிலின் உள்ளே இருளில் அமர்ந்திருந்த சிலைமீது சென்று படிந்தது. அதன் கைகளில் எங்கோ அடியாழங்களிலிருந்து எடுத்துவந்தது போன்று ஒரு சிறு மலர். கீழே பாதமெங்கும் உதிர்ந்துகிடந்தன பொன்னரளிப் பூக்கள். https://theneelam.com/ajithan-short-story/
  24. புவிசார் அரசியல் சிக்கல்களுக்கு மேலாக கயிற்றில் நடக்க வேண்டிய நிலையில் ஜனாதிபதி அநுரா குமார January 12, 2025 — வீரகத்தி தனபாலசிஙகம் — ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு சென்று சரியாக ஒருமாதம் கடக்கும் நிலையில் இவ்வாரம் சீனாவுக்கு விஜயம் செய்கிறார். வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமால் இரத்நாயக்க சகிதம் செல்லும் அவர் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கையும் பிரதமர் லீ கியாங்கையும் எதிர்வரும் புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாகவும் அவரது விஜயத்தின்போது பல்வேறு துறைகள் தொடர்பில் சுமார் பத்து புரிந்துணர்வு உடன்படிக்கைகள் பெய்ஜிங்கில் கைச்சாத்திடப்படவிருப்பதாகவும் அறிவிக்கப் பட்டிருக்கிறது. இலங்கை ஜனாதிபதிகள் பதவியேற்ற பிறகு முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொள்வதை ஒரு சம்பிரதாயமாக கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். அதே போன்றே ஜனாதிபதி திசாநாயக்கவும் கடந்த மாதம் புதுடில்லி சென்று இந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ஜனாதிபதி டிசம்பர் நடுப்பகுதியில் இந்தியாவுக்கு செல்வதற்கு முன்னதாகவே ஜனவரியில் சீனாவுக்கு விஜயம் செய்வார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இது கடந்த செப்டெம்பரில் அதிகாரத்துக்கு வந்த பிறகு திசாநாயக்க முன்னெடுக்கும் முக்கியமான இரண்டாவது சர்வதேச இரு தரப்பு ஊடாட்டமாகும். ஜனாதிபதியின் சீன விஜயத்துக்கு முன்னதாக கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற இரு நிகழ்வுகளைப் பற்றி முதலில் குறிப்பிட வேண்டியிருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ‘ஒரு சீனக் கொள்கை’ (One China Policy) மீதான அதன் பற்றுறுதியை மீளவும் உறுதிசெய்துகொண்டு மக்கள் சீனக் குடியரசே சீனாவின் சட்டபூர்வமான அரசாங்கம் என்று அங்கீகரிப்பதாகவும் தாய்வானை சீனாவின் ஒரு மாகாணமாக கருதுவதாகவும் அறிவித்தது. இது தொடர்பில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை அங்கீகரித்ததாக அமைச்சரவை பேச்சாளர் நாளிந்த ஹேரத் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் மகாநாட்டில் அறிவித்தார். அண்மைய தசாப்தங்களில் இலங்கையின் எந்தவொரு ஜனாதிபதியும் சீனாவுக்கு முதன் முதலாக விஜயம் செய்வதற்கு முன்னதாக ‘ஒரு சீனக் கொள்கையை’ மீண்டும் அங்கீகரிப்பதாக அறிவித்ததாக நாம் அறியவில்லை. மாவோ சேதுங் தலைமையிலான வெற்றிகரமான புரட்சியை அடுத்து 1949 அக்டோபரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு அமைக்கப்பட்ட மக்கள் சீனக் குடியரசை அதன் ஆரம்பத்தில் அங்கீகரித்த நாடுகளில் இலங்கையும் ஒன்று. செஞ்சீனாவை 1950 ஜனவரி 6 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் அங்கீகரித்தது. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்க காலத்தில் 1952 ஏப்ரிலில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ரப்பர் — அரிசி ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது. கம்யூனிஸ்ட் சீனாவை அங்கீகரித்த முதல் தெற்காசிய நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு ஏழு வருடங்கள் கழித்து பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் அரசாங்க காலத்தில் 1957 ஜனவரியில் ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு அன்றைய சீனப்பிரதமர் சூ என்லாய் இலங்கைக்கு வந்தார். அவரது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த விஜயம் அந்த வருடம் பெப்ரவரி 7 ஆம் திகதி இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு வழிவகுத்தது. இலங்கையில் எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், சகல அரசாங்கங்களுமே சீனாவுடன் சுமுகமானதும் நெருக்கமானதுமான உறவுகளைப் பேணி வந்திருக்கின்றன. இருதரப்பு ஒத்துழைப்பிலும் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கள் உட்பட சர்வதேச அரங்குகளிலும் நீண்டகால நேச நாடாக சீனாவை இலங்கையர்கள் நோக்குகிறார்கள். ‘ஒரு சீனக் கொள்கை’ தொடர்பிலான இலங்கையின் பற்றுறுதியை சீனா ஒருபோதும் சந்தேகித்ததாகவோ அல்லது இலங்கையின் முன்னைய அரசாங்கத் தலைவர் எவரும் சீனாவுக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக ‘ஒரு சீனக்கொள்கை’ மீதான இலங்கையின் பற்றுறுதியை மீளவும் உறுதிப்படுத்தும் அறிவிப்பைச் செய்ததாகவோ நாம் அறியவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் வலுவான உறவைக் கொண்டிருந்தது. அதனால், ஜனாதிபதி திசாநாயக்கவின் விஜயத்துக்கு முன்னதாக ‘ஒரு சீனக் கொள்கை’ பற்றிய மீள் உறுதிப்பாட்டை எதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்ற கேள்வி எழுந்தது. ஜனாதிபதியின் சீன விஜயத்துக்கும் ‘ஒரு சீனக் கொள்கையை’ அரசாங்கம் மீள உறுதிப்படுத்திக் கொண்டதற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளர் கூறினார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் புதிய அரசாங்கம் ஒன்று தெரிவு செய்யப்பட்ட பிறகு முன்னைய அரசாங்கத்தின் அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை புதிய அமைச்சரவை அங்கீகரிக்க வேண்டியிருக்கிறது என்றும் அதன் பிரகாரமே வெளியுறவு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையை புதிய அமைச்சரவை அங்கீகரித்தது என்றும் குறிப்பிட்டார். ஜனாதிபதி திசாநாயக்க சீனாவுக்கு விஜயம் செய்யாவிட்டாலும் கூட, ‘ஒரு சீனக் கொள்கை’ மீதான உறுதிப்பாட்டை அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கும் என்றும் அவர் கூறினார். உண்மையில் அவரது பதில் நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கவில்லை. கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனத் தூதுவரின் முன்னிலையில் சீனாவின் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் போது ‘மக்கள் சீனக் குடியரசு (People’s Republic of China) என்பதற்கு பதிலாக ‘சீனக்குடியரசு’ (Republic of China) என்று தவறுதலாகக் குறிப்பிட்டார். சீனக் குடியரசு என்பது தாய்வானையே குறிக்கும். அதனால் சீனாவின் உதவிக்காக தாய்வானுக்கு பிரதமர் நன்றி கூறியதாக சீனத்தூதுவர் அசௌகரியமடைந்தாக கூறப்பட்டது. ஆனால், பிரதமரும் கூட, தனது தவறைத் திருத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணராமல் ஊடகங்களையே குற்றஞ்சாட்டினார். நாட்டின் பிரதமரே மக்கள் சீனக்குடியரசுக்கும் சீனக்குடியரசுக்கும் இடையிலான வேறுபாட்டை விளங்கிக் கொள்ளாதவர் போன்று பேசியதனால் ஜனாதிபதியின் விஜயத்துக்கு முன்னதாக ‘ஒரு சீனக் கொள்கை’ தொடர்பிலான நிலைப்பாட்டை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று சீனத்தரப்பினர் வலியுறுத்தியிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. அதேவேளை, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுடன் நடத்திய சந்திப்பும் முக்கிய கவனத்தைப் பெற்றது. ஜனாதிபதியின் சீன விஜயத்துக்கு முன்னதாக இந்தியாவுடனான இலங்கையின் உறவுகள் உன்னதமான நிலையில் இருக்கின்றன என்று கூறியதன் மூலமாக அவர் கொழும்புக்கு ஒரு செய்தியைச் சொல்வதற்கு விரும்பியிருக்கக்கூடும் என்று அந்த செய்தியாளர்கள் மகாநாட்டுக்கு சில அவதானிகள் அர்த்தம் கற்பிக்கிறார்கள். இலங்கையுடனான கூட்டுப்பங்காண்மையில் இந்தியா புதிய வருடத்தை நேர்மறையான உணர்வுடனும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் தொடங்கியிருக்கிறது என்றும் ஜனாதிபதி திசாநாயக்கவின் அண்மைய புதுடில்லி விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் புதிய விறுவிறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் உயர்ஸ்தானிகர் கூறினார். திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கமளித்த அவரிடம் வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்கள் இலங்கை கடற்பரப்புக்கு வருகை தருவதற்கு முன்னைய அரசாங்கம் விதித்திருந்த ஒரு வருடகால இடைக்காலத்தடை டிசம்பர் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகியதை தொடர்ந்து சீன ஆய்வுக்கப்பல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா ஏதாவது பேச்சுவார்த்தையை நடத்தியதா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர் இந்தியாவில் திசாநாயக்க செய்த திட்டவட்டமான அறிவிப்பையும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டி, “இலங்கையின் உறுதிமொழியை நாம் கருத்தில் எடுத்துக் கொள்கிறோம். இது விடயத்தில் சரியான நடவடிக்கைகளை இலங்கை எடுக்கும் என்று முற்றுமுழுதாக நம்புகிறோம்” என்று சொன்னார். இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்திய உறுதிப்பாட்டுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கையின் பிராந்தியம் பயன்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்ற தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டையே ஜனாதிபதி திசாநாயக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுவார்த்தைகளின்போது மீண்டும் வலியுறுத்திக் கூறினார். அவரின் உறுதிமொழி மீது இந்தியாவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதை செய்தியாளர்கள் சந்திப்பில் உயர்ஸ்தானிகர் வெளியிட்ட கருத்துக்களில் இருந்து விளக்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இது ஒன்றும் திசாநாயக்க புதிதாக வழங்கிய உறுதிமொழி அல்ல. முன்னைய ஜனாதிபதிகளும் இதையே கூறினார்கள். ஆனால், அவர்களது அணுகுமுறைகளின் விளைவாக இந்தியா விசனமடைந்த பல சந்தர்ப்பங்களை கடந்த காலத்தில் கண்டிருக்கிறோம். வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களின் வருகைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஒரு வருட கால இடைக்காலத்தடை விதித்ததற்கு மூன்றாம் தரப்பு ஒன்றின் நெருக்குதலே காரணம் என்றும் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பாதிக்கக்கூடியதாக வெளியாரின் தலையீடு எதுவும் இருக்கமுடியாது என்றும் சீன அதிகாரிகள் பல தடவைகள் கூறினார்கள். தங்களது ஆய்வுக்கப்பல்களை இலங்கை கடற்பரப்பில் அனுமதிக்கக்கூடாது என்று கொழும்பை இந்தியா நிர்ப்பந்திக்கிறது என்பதே சீனர்களின் மறைமுகமான குற்றச்சாட்டு. ஜனாதிபதி திசாநாயக்க புதுடில்லியில் இருந்து நாடுதிரும்பிய மறுநாள் அவரைச் சந்தித்துப் பேசிய சீன மக்கள் கலந்தாலோசனை மகாநாட்டின் தேசியக்குழுவின் பிரதி தலைவர் கின் போயொங் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகள் குறித்து ஆராய்ந்ததுடன் மீண்டும் கடல்சார் ஆய்வு நடவடிக்கைகளை தொடங்கும் திட்டம் தனது நாட்டுக்கு இருப்பதாகவும் கூறினார். சீனாவின் ஆய்வுக் கப்பல்களை உளவுக் கப்பல்கள் என்று நம்பும் இந்தியா அவற்றின் இலங்கை வருகை தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை தோற்றுவிக்கும் என்று கூறுகிறது. அது விடயத்தில் தனது நிலைப்பாட்டுக்கு விரோதமாக இலங்கை செயற்படுவதை இந்தியா ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. ஆனால், ஆசியாவின் இரு பெரிய நாடுகளுகளுடனான உறவுகளில் ஒரு சமநிலையைப் பேணுவதில் அக்கறை காட்டும் ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு ஆய்வுக்கப்பல் விவகாரம் ஒரு தலையிடியாகவே இருக்கும். அண்மையில் சீனக்கடற்படையின் மருத்துவக் கப்பல் கொழும்புக்கு வருகை தந்தது குறித்து இந்தியாவினால் ஆட்சேபம் தெரிவிக்க முடியவில்லை. ஆனால், மீண்டும் கடல்சார் ஆய்வுகளை ஆரம்பிக்கும் திட்டம் இருப்பதாக சீனா அறிவித்திருப்பதால் அத்தகைய கப்பல்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தெளிவான நடைமுறையொன்றை அரசாங்கம் வகுக்க வேண்டியிருக்கிறது. இலங்கையில் தங்களது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை பேணிப்பாதுகாப்பதற்கு போட்டிபோடும் சீனாவையும் இந்தியாவையும் பகைத்துக்கொள்ளாத வகையிலான அணுகுமுறைகளை கடைப்பிடிப்பது என்பது இலங்கை அரசாங்கத்துக்கு நெடுகவும் இரு பிரச்சினையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இலங்கையில் தங்களது நலன்களைப் பேணுவதை நியாயப்படுத்துவதற்கு இந்தியாவும் சீனாவும் ஏட்டிக்குப் போட்டியாக வாதங்களை முன்வைக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, இலங்கையை தனது செல்வாக்குப் பிராந்தியத்துக்கும் பாதுகாப்பு வளையத்துக்கும் உட்பட்ட அயல்நாடாக அது பார்க்கிறது. ஆழமான வரலாற்று மற்றும் சமகால கலாசார — மதப் பிணைப்புக்களைக் கொண்ட இயல்பான ஒரு நேச நாடாக இலங்கையை நோக்கும் புதுடில்லி பிரத்தியேகமான உறவுமுறை ஒன்றை கொழும்பிடம் இருந்து எதிர்பார்க்கிறது. இந்தியாவுக்கு போட்டியான நாடுகளுடனும் அதற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நாடுகளுடனும் இலங்கை நெருக்கமான உறவுகளைப் பேணுவதை இந்தியா விரும்பாது. இலங்கையில் இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்தாலென்ன, ஆயுதக்கிளர்ச்சிகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலென்ன முதலில் உதவிக்கு ஓடோடி வரும் நாடாக இந்தியாவே விளங்குகிறது. முன்னென்றும் இல்லாத வகையில் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட படுமோசமான பொருளாதார நெருக்கடியின்போது சீனா உட்பட வேறு எந்த நாடும் உடனடியாக கைகொடுக்க முன்வராத நிலையில் 400 கோடி டொலர்கள் அவசர கடனுதவியை இந்தியாவே வழங்கியது. இலங்கையில் தனது நலன்களைப் பேணும் நோக்குடனேயே அந்த உதவியைச் செய்ததாக ஒரு தரப்பினரிடம் இருந்து விமர்சனங்கள் வந்தாலும் கூட, இலங்கை மக்களும் அரசாங்கங்களும் இந்தியாவுக்கு தொடர்ச்சியாக நன்றி கூறியவண்ணமே இருக்கின்றனர். ஆனால், பொதுவில் சீனாவின் திட்டங்களைப் போன்று இந்திய முதலீட்டுடனான திட்டங்களுக்கு இலங்கையில் வரவேற்பு இருப்பதில்லை. இது இந்தியாவுக்கு தொடர்ச்சியாக இரு பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்தியாவின் திட்டங்களுக்கு புதுடில்லியில் வைத்து இணக்கத்தை தெரிவிக்கும் இலங்கைத் தலைவர்கள் கொழும்பு திரும்பியதும் உள்நாட்டில் எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக தங்களது நிலைப்பாடுகளை மாற்றிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் இந்திய உதவியுடன் முன்னெடு்க்க உத்தேசித்திருக்கும் திட்டங்கள் தொடர்பில் புதுடில்லியில் காணப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு கொழும்பில் வேறுபட்ட விளக்கங்களை கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை தலைவர்களுக்கு ஏற்படுகிறது. ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) மார்க்சிய கோட்பாட்டை பின்பற்றிய ஒரு அரசியல் கட்சி என்பதால் தற்போதைய அரசாங்கம் “கம்யூனிஸ்ட்” சீனாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறது என்றும் இலங்கையில் சீனாவின் நலன்களுக்கு அது கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் ஒரு கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால், இன்று சீனா கம்யூனிஸ்ட் நாடு இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் இருந்தாலும் சீனா அமெரிக்காவுக்கு அடுத்ததாக பெரிய முதலாளித்துவப் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக விளங்குகிறது. அதேவேளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் இன்று இடதுசாரி அடையாளம் எதையும் காட்டிக் கொள்வதில் ஆர்வம் கொண்டதாக இல்லை என்பதையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது. இந்தியாவுக்கு மேலாக கூடுதல் அனுகூலத்தைப் பெறுவதற்காக ஜனாதிபதி திசாநாயக்கவின் விஜயத்தின்போது மேலும் கடன் நிவாரணங்களையும் முதலீட்டு வாய்ப்புகளையும் இலங்கைக்கு வழங்குவதற்கு சீன அரசாங்கம் முன்வரக்கூடும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் ஊகிக்கின்றன. இலங்கையில் முன்னெடுக்கப்படக்கூடிய புதிய அபிவிருத்தி திட்டங்களையும் சீனத் தலைவர்களுடன் சேர்ந்து திசாநாயக்கவும் அவரது குழுவினரும் அடையாளம் காண்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிபெறுவதற்கு முயற்சிக்கும் இலங்கை தற்போதைய தருணத்தில் எந்தவொரு வல்லாதிக்க நாட்டுடனும் முரண்படக்கூடிய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது கட்டுப்படியாகாகாது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டிக்குள் இலங்கை சிக்கிக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யக்கூடிய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது என்பது ஜனாதிபதி திசாநாயக்கவைப் பொறுத்தவரை கயிற்றில் நடப்பதைப் போன்றதாகும். இந்தியாவும் சீனாவும் மாத்திரமல்ல, அமெரிக்காவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளை உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றது. கொழும்புடனான அதன் மூலோபாய நலன்களை பேணுவதில் அமெரிக்கா அக்கறை கொண்டிருக்கிறது. அண்மைக் காலத்தில் ஜனாதிபதி திசாநாயக்கவையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலைவர்களையும் அடிக்கடி சந்தித்த வெளிநாட்டு இராஜதந்திரி என்றால் அது அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் தான். தேர்தல்களின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கும் ஜனாதிபதி திசாநாயக்க சிக்கலான புவிசார் அரசியலையும் மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளவேண்டிய பாரிய பொறுப்பைக் கொண்டிருக்கிறார். https://arangamnews.com/?p=11665

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.