Everything posted by கிருபன்
-
13ஆவது திருத்தச்சட்டம் – தமிழக கட்சிகள் மோடிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் ; வரதராஜ பெருமாள்
13ஆவது திருத்தச்சட்டம் – தமிழக கட்சிகள் மோடிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் ; வரதராஜ பெருமாள் December 26, 2024 2:17 pm 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழக கட்சிகள் இந்திய பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என வடக்கு,கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்ததுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய பயணத்தில் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி எவ்வித கருத்துகளை முன்வைத்திருக்கவில்லை. இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வரதராஜ பெருமாள், ”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்றிருந்த போதும், 2023ஆம் ஆண்டு சென்றிருந்த போதும் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்திருந்தார். ஆனால், இம்முறை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான சந்திப்பில் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசப்பட்டதான செய்திகள் எதுவும் இல்லை. இது கவலையளிக்கிறது. இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகளும், தமிழகத்தில் உள்ள கட்சிகளும் பிரதமர் மோடியிடம் 13ஐ அமுல்படுத்தும் அழுத்தத்தை இலங்கைக்கு கொடுக்க வேண்டும் என கோர வேண்டும். 1987ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டின் பிரகாரம்தான் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. எனவே, அதனை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை இந்தியா கொடுக்க வேண்டும்.” என தி இந்து பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். https://oruvan.com/13th-amendment-act-tamil-nadu-parties-should-put-pressure-on-modi-varadaraja-perumal/
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
19 வயது பையன்பா… கோலி வேண்டுமென்றே மோதியதாக குற்றச்சாட்டு! Dec 26, 2024 12:27PM IST ஷேர் செய்ய : ஆஸ்திரேலிய வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று (டிசம்பர் 26) தொடங்கியுள்ளது. டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. 19 வயதே நிரம்பிய அறிமுக வீரரான சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதிரடியில் மிரட்டிய சாம் கொன்ஸ்டாஸ் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் ஓவரில் சிக்ஸர் அடித்தார். பும்ராவின் 4,483 பந்துகளுக்கு பிறகு அவரது பந்து சிக்சருக்கு பறந்துள்ளது. அறிமுக டெஸ்டில் அரைசதம் விளாசி மிரட்டினார். 65 பந்துகளை எதிர்கொண்ட சாம் கொன்ஸ்டாஸ் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 60 ரன்களுடன் எடுத்து ஜடேஜா ஓவரில் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தின் போது, இந்திய பேட்ஸ்டேன் விராட் கோலி சாம் கொன்ஸ்டாஸுடன் வேண்டுமென்றே மோதியதாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. சாம் கொன்ஸ்டாஸின் தன்னம்பிக்கையை உடைக்கும் வகையில் கோலி நடந்து கொண்டதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் வேண்டுமென்றே கோலி இந்த செயலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, விராட் கோலிக்கு போட்டிக்கான ஊதியத்தில் 20 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, கிரிக்கெட்டில் களத்தில் தேவையில்லாமல் பிசிக்கல் கான்டக்ட் செய்வது மிகுந்த குற்றத்தன்மை கொண்டதாக பார்க்கப்படுகிறது. https://minnambalam.com/sports/icc-will-punish-virat-kohli-for-shouldering-sam-konstas/
-
மலையாளத்தின் உன்னத எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவு: கமல்ஹாசன் உருக்கம்!
மலையாளத்தின் உன்னத எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவு: கமல்ஹாசன் உருக்கம்! Kumaresan MDec 26, 2024 11:21AM மாரடைப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் நேற்று (டிசம்பர் 25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 91. தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூரில் பிறந்தவர் எம்.டி. வாசுதேவன் நாயர். மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமானவர். மாடத்து தெக்கேகாட்டு வாசுதேவன் நாயர் என்கிற இயற்பெயரை கொண்ட அவர், கடந்த 1933-ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதிலிருந்தே எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட அவர், வேதியியலில் பட்டம் பெற்றார். The Newyork Herald Tribune நடத்திய போட்டியில் மலையாளத்தில் சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான விருதினை தட்டி சென்றார். அப்போதுதான் அனைவராலும் கவனிக்கப்பட்டார். பின்னர், மாத்ரூபூமி நாளிதழில் பணிக்கு சேர்ந்தார். அங்கு நன்றாக தன்னை பட்டை தீட்டிக் கொண்டார். 1954 ஆம் ஆண்டு ‘மாத்ருபூமி’யில் வெளிவந்த ‘வளர்த்து மிருகங்களி’ல் (வளர்ப்பு பிராணிகள் ) எம்டியின் எழுத்து வாழ்க்கை தொடங்கியது. எம்.டி. வாசுதேவன் நாயர் மொத்தம் ஏழு படங்களை இயக்கியுள்ளார். 1965 ஆம் ஆண்டு முதன் முறையாக முறப்பொண்ணு என்ற படத்துக்கு கதை எழுதினார். 54 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். அவற்றில், ஒரு வடக்கன் வீர கதா, கடவு, சதயம், பரினயம் ஆகிய நான்கு படங்களுக்கு சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். கடந்த 2005-ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு வாசுதேவன் நாயருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் கட்சியின் தலைவருமான கமலஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம். மலையாள இலக்கிய உலகின் மிகப்பெரும் ஆளுமை எம்.டி.வாசுதேவன் நாயர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார். மலையாளத் திரை உலகுக்கு நான் அறிமுகமான ‘கன்யாகுமரி’ படத்தின் படைப்பாளராக அவருடன் நான் கொண்ட சிநேகத்துக்கு இப்போது ஐம்பது வயது. கடைசியாக, சமீபத்தில் வெளியான ‘மனோரதங்கள்’ வரை அந்த நட்பு தொடர்ந்தது. மகத்தான நாவல்களை மலையாள இலக்கிய உலகுக்குக் கொடையாகக் கொடுத்ததோடு, வெற்றிகரமான திரைக்கதாசிரியராகவும் திகழ்ந்தவர். பத்திரிகைத் துறையிலும் தன் தடத்தை ஆழமாகப் பதித்த அவரது மறைவு திகைப்பையும் வேதனையையும் ஒருங்கே ஏற்படுத்துகிறது” என்று கூறியுள்ளார். https://minnambalam.com/cinema/m-t-vasudevan-nair-passes-away/
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
பிரியாணிக்கடை வைத்திருந்தால் பிரபலமாக இருந்திருப்பார். தனிப்படை வேறு அமைத்து பிடித்திருக்கின்றார்கள். திமுக பிரபலம் என்றால் எப்படி காவல்துறை இப்படித் தைரியமாக நடவடிக்கை எடுப்பார்கள்? மாணவிக்கு பாலியல் வன்கொடுமை- கைதானவர் திமுக பிரமுகரா?: புகைப்படம் வெளியிட்ட அண்ணாமலை KaviDec 25, 2024 22:40PM அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் ஞானசேகரன் என்ற பிரியாணி கடை வியாபாரியை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கைதான ஞானசேகரன் திமுகவின் ஆதரவாளர் என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதுதொடர்பாக இன்று (டிசம்பர் 25) சில புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கம் மூலம் பகிர்ந்துள்ள அண்ணாமலை, “கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர், ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரிய வந்துள்ளது. தமிழகம் முழுவதும், இதுபோன்ற குற்ற வழக்குகளில் இருந்து ஒரு தெளிவான திட்டம் புலப்படுகிறது. ஒரு குற்றவாளி, திமுகவில் உறுப்பினராவதோடு, அந்தப் பகுதி திமுக நிர்வாகிகளுடன் நெருக்கமாகிறார். அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் கிடப்பில் போடப்படுகின்றன. மேலும், அவர் சரித்திரப் பதிவு குற்றவாளி என வகைப்படுத்தப்படாமல், பகுதி காவல் நிலையத்தின் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்படாமல் விடுவிக்கப்படுகிறார். அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக, அவர் மீதான வழக்குகளை காவல்துறை விசாரிக்காமல் இருப்பதால், மேலும் குற்றங்களைச் செய்ய அது அவருக்கு இடமளிக்கிறது. தொடர்ந்து தமிழகமெங்கும் நடைபெறும் குற்றங்களில், குற்றவாளிகள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்றால், ஆளுங்கட்சி நிர்வாகிகள் அழுத்தத்தால், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே. தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக, 15 வழக்குகள் உள்ள ஒருவரை, இத்தனை நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவைத்ததால்தான், இன்று ஒரு அப்பாவி மாணவிக்கு இந்தக் கொடூரம் நடைபெற்றிருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க திமுக அரசே பொறுப்பு. எவ்வளவு காலம் தமிழக மக்கள் இந்த நிலையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்? ஆளுங்கட்சியினர் என்றால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழகத்தில் சட்டம் உள்ளதா? முதலமைச்சர் ஸ்டாலின் இப்போதாவது பொதுமக்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். https://minnambalam.com/political-news/sexually-assaulting-a-student-is-the-arrestee-a-dmk-figure-photo-released-by-annamalai/
-
2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
சுனாமி ஆழிப்பேரலையால் உயிர் நீத்தோரின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் (Photos) சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இரண்டு தசாப்த காலங்கள் கடந்துள்ளன. கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிக்கி நாட்டில் பெருமளவான மக்கள் உயிரிழந்தனர். கடல் கொந்தளிப்பால் பலியானவர்களின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் (26) நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. முல்லைத்தீவு முல்லைத்தீவில் உள்ள சுனாமி நினைவாலயத்தில் இன்று (26) உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரி மலர் தூவி, தீபமேற்றி, உணவுப் பொருட்களைப் படையலிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி மத வழிபாடுகளும் நடைபெற்றன. மேலும், இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபைச் செயலாளர் இராஜஜோகினி ஜெயக்குமார், முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் நடராசா தசரத ராஜகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. வவுனியா வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கான 20ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் பிரார்த்தனை நடைபெற்றது. இதன்போது உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நினைவுத்தூபியானது சுனாமி பேரலை ஏற்பட்டு 31ஆம் நாளில் நரசிங்கர் ஆலய நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையில் முதலாவதாக அமைக்கப்பட்ட சுனாமி தூபியாகவும் விளங்குகிறது. தற்போது இந்த நினைவுத்தூபி நகர சபையால் புனர்நிர்மானம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது. நரசிங்கர்ஆலயத்தின் தலைவர் கோ.சிறிஸ்கந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ. திலகநாதன், முத்துமுகமது மற்றும் இந்து, பௌத்த மதகுருமார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். https://akkinikkunchu.com/?p=304908
-
எட்கா உடன்படிக்கை: தேசிய மக்கள் சக்தி மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – திஸ்ஸ அத்தநாயக்க
எட்கா உடன்படிக்கை: தேசிய மக்கள் சக்தி மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – திஸ்ஸ அத்தநாயக்க December 26, 2024 எட்கா ஒப்பந்தத்துக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி இன்று அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் மக்களிடம் பொய் கூறி அவர்களை ஏமாற்றியமைக்காக தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். இந்தியா – இலங்கை இடையே எட்கா உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பித்தத் தருணம், அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுன) எதிர்க்கட்சி ஆசனத்திலிருந்து இந்த உடன்படிக்கையை கடுமையாக விமர்சித்திருந்தது. இந்த நிலையில்,இந்திய பயணத்தின் போது ஜனாதிபதி அநுர, பிரதமர் மோடி, வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இதையடுத்து நடைபெற்ற இரு தரப்பு கூட்டு ஊடக சந்திப்பில் பிரதமர் மோடி,’இரு தரப்புகளுக்கும் இடையில் வர்த்தக நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக எட்கா உடன்படிக்கையை உடனடியாக கைச்சாத்திட முயற்சிக்கின்றோம்,” என்று கூறியதையடுத்து இலங்கை எதிர்க்கட்சிகள் அநுர அரசாங்கத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில்,எட்கா ஒப்பந்தம் குறித்த கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது இரு நாட்டு அரச தலைவர்களுக்குமிடையில் பிரதான சில விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. எட்கா, மின்சக்தி மற்றும் வலுசக்தி துறை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருந்தது. இவை இதற்கு முன்னரும் பல்வேறு அரசாங்கங்களால் அவதானம் செலுத்தப்பட்ட ஒரு காரணியாகும். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அந்த பேச்சுவார்த்தைகளுக்கு அப்பால் சென்று பதிலளித்துள்ளார். மஹிந்த, மைத்திரி, கோட்டா மற்றும் ரணில் அரசாங்கங்களை விட தற்போதைய அரசாங்கம் விரைவாகச் செல்வதாகவே தோன்றுகிறது. தேர்தலுக்கு முன்னர் எட்கா ஒப்பந்தத்துக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்ட பிரதான தரப்பு தேசிய மக்கள் சக்தி அல்லது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகும். தற்போது இந்த அரசாங்கம் இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளது. ஆனால் மக்களிடம் அதனை மறைக்கின்றனர். எந்தவொரு நாட்டுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து மக்கள் நலன் சார்ந்த தீர்மானங்களை எடுப்பதானால் அதனை வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்க வேண்டும். அதேபோன்று அன்று இவற்றை எதிர்த்து விட்டு, தற்போது சரியென ஏற்றுக் கொள்வார்களானால் அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். அன்று மக்களை நாம் ஏமாற்றி விட்டோம். ஆனால் இதுவே யதார்த்தம் என்பதை அரசாங்கம் நாட்டுக்கு கூற வேண்டும் என்றார். https://www.ilakku.org/edca-agreement-national-peoples-power-should-apologize-to-the-people-tissa-attanayake/
-
டிரம்பின் அச்சுறுத்தல் - கிறீன்ன்லாந்தின் பாதுகாப்பை பலப்படுத்துகின்றது டென்மார்க்
டிரம்பின் அச்சுறுத்தல் - கிறீன்ன்லாந்தின் பாதுகாப்பை பலப்படுத்துகின்றது டென்மார்க் 26 Dec, 2024 | 10:55 AM கிறீன்லாந்தினை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது குறித்து ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளதை தொடர்ந்து டென்மார்க் கிறீன்லாந்திற்கான பாதுகாப்பை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கிறீன்லாந்தின் பாதுகாப்பிற்கான நிதிஒதுக்கீட்டில் அதிகரிப்பை செய்யவுள்ளதாக டென்மார்க் அறிவித்துள்ளது. டென்மார்க் பிரதமர் ட்ரோல்ஸ் லண்ட் பால்சன் இதனை அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பை வெளியிடவேண்டிய தருணத்தை விதியின் முரண்நகைச்சுவை என அவர் வர்ணித்துள்ளார். கிறீன்லாந்தின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்தி இரண்டு கண்காணிப்பு கப்பலல்களையும், இரண்டுநீண்ட தூர ஆளில்லா விமானங்களையும் கொள்வனவு செய்ய முடியும் என கிறீன்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிறீன்லாந்தில் அமெரிக்காவின் விண்வெளி தளமொன்று காணப்படுகின்றது. மேலும் வடஅமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்வதற்கான குறுகிய பாதையில் அமைந்துள்ளதால் கிறீன்லாந்து அமெரிக்காவிற்கு மூலோபாய அடிப்படையில்முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. இங்குபெரும் கனிமவளங்கள் காணப்படுகின்றன. கிறீன்லாந்து விற்பனைக்கில்லை என அதன் பிரதமர் மியுட் எகிட் தெரிவித்துள்ளார். உலகின் பெரிய தீவுகளில் ஒன்றான கிறீன்லாந்தை பாதுகாப்பு காரணங்களிற்காக அமெரிக்கா தன்னுடன் இணைத்துக்கொள்ளும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையிலேயே கிறீன்லாந்து பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கிறீன்லாந்து எங்களுடையது,நாங்கள் விற்பனைக்குரியவர்கள் இல்லை,ஒருபோதும் அது இடம்பெறாது என பிரதமர் மியுட் எகிட் அறிக்கையொன்றி;ல் தெரிவித்துள்ளார். முன்னதாக டென்மார்க்கிற்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் நியமனம் குறித்து விடுத்த அறிக்கையில்ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தேசிய பாதுகாப்பு மற்றும் உலகம் முழுவதும் சுதந்திரம் ஆகியவற்றை கருத்தி;ல் கொண்டு; கிறீன்லாந்தின் உரிமை தன்னிடம் இருப்பது அவசியம் என அமெரிக்கா கருதுகின்றது என குறிப்பிட்டிருந்தார். டென்மார்க் பிரதமரின் அலுவலகம் டிரம்பின் இந்த கருத்தினை நிராகரித்திருந்ததுடன் கிறீன்லாந்து விற்பனைக்கில்லை என தெரிவித்திருந்தது. 2019 இல் டென்மார்க் கிறீன்லாந்து விற்பனைக்கில்லை என தெரிவித்ததை தொடர்ந்து டிரம்ப் அந்த நாட்டிற்கான விஜயத்தை இரத்துச்செய்திருந்தார். கிறீன்லாந்தில் 55000 பேர் வசிக்கின்றனர். https://www.virakesari.lk/article/202184
-
அமெரிக்க விலங்குகள் சரணாலயத்தில் பறவைக் காய்ச்சலினால் 20 புலிகள் பலி
அமெரிக்க விலங்குகள் சரணாலயத்தில் பறவைக் காய்ச்சலினால் 20 புலிகள் பலி 26 Dec, 2024 | 12:45 PM அமெரிக்காவில் வொஷிங்டன் மாநிலத்திலுள்ள விலங்குகள் சரணாலயத்தில் கடந்த பல வாரங்களில் ஒரு வங்காளப் புலி மற்றும் நான்கு கூகர் புலிகள் உட்பட 20 புலிகள் பறவைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளன. "இந்த விலங்குகள் இறந்த சோகம் எங்களை ஆழமாக பாதித்துள்ளது, இந்த நம்பமுடியாத இழப்பால் நாங்கள் அனைவரும் கவலை அடைகிறோம்" என வொஷிங்டனின் வைல்ட் ஃபெலிட் அட்வகேசி சென்டர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்றால் சரணாலயம் தனிமைப்படுத்தப்பட்டு, மூடப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் என்பது கோழி மற்றும் காட்டுப் பறவைகள் போன்ற உயிரினங்களில் காணப்படும் தொற்று நோயாகும். பறவைகள் மட்டுமின்றி, வன விலங்குகளான நரிகள், காட்டு நாய்கள், கடல் மற்றும் நீர்வாழ் உயிரினங்களான சீல், நீர்நாய் போன்ற பாலூட்டிகளையும் இந்த வைரஸ் பாதிக்கிறது. பறவைகளின் எச்சங்கள், எச்சில்கள் அல்லது அசுத்தமான உணவு மற்றும் நீர் மூலம் இந்த நோய் சில நாட்களில் ஒட்டுமொத்த பறவை கூட்டத்திற்கே பரவுகிறது. " அமெரிக்காவில் நவம்பர் மாதம் பிற்பகுதியிலும் டிசம்பர் மாதம் நடுப்பகுதியிலும் வைரஸ் தொற்றுக்குள்ளாகிய விலங்குகள் உயிரிழந்தன. எங்களுக்கு இது போன்ற நிகழ்வு இதற்கு முன்பு நடந்தது இல்லை. விலங்குகள் பொதுவாக முதுமை அடைந்தே இறக்கும். இது ஒரு கொடிய வைரஸ்” என சரணாலயத்தின் பணிப்பாளர் மார்க் மேத்யூஸ் நியூயோர்க் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் கால்நடைகள் மற்றும் கோழிகளிடையே தொடர்ந்து பரவி வருவதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு மனிதருக்கு இந்த வைரஸ் தொற்று பரவுகிறது. ஐந்து ஆபிரிக்க பூனைகள், நான்கு பாப்கேட்கள், இரண்டு கனடா லின்க்ஸ் மற்றும் ஒரு வங்காளப் புலி உள்ளிட்டவைகள் உயிரிழந்துள்ளன. தற்போது 17 புலிகள் மட்டுமே சரணாலயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் நீண்ட காலமாக பண்ணைகளிலுள்ள கோழிகளையே இந்த வைரஸ் பாதித்திருந்தது. ஆனால் மார்ச் மாதத்தில் முதல் முறையாக கால்நடைகளையும் தாக்க ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவில் இவ்வாண்டு ஏப்ரல் மாத்தத்தில் மொத்தம் 61 பறவைக் காய்ச்சல் வழக்குகள் பதிவாகியுள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக இந்த வைரஸ் மனிதர்களைத் தாக்குவதில்லை எனவும். மனிதனிடமிருந்து மனிதனுக்கும் தொடர்ந்து பரவுவது இல்லை எனவும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது. இந்த மாதம் லூசியானாவில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் அவருக்கு லேசான அறிகுறிகளே தென்பட்டுள்ளன. கடந்த வாரம் மாடுகளிடையே பறவை காய்ச்சல் தொற்று பரவியதால் விரைவாக செயல்பட்டு அவசரநிலையை கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/202190
-
பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய ஒன்பது நாடுகளுக்கு வாய்ப்பு – இலங்கைக்கு கிடைக்கவில்லை!
பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய ஒன்பது நாடுகளுக்கு வாய்ப்பு – இலங்கைக்கு கிடைக்கவில்லை! மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பெலருஸ், பொலிவியா, கியூபா, உகாண்டா, கசக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர இலங்கை உட்பட 35 நாடுகள் விண்ணப்பித்திருந்தன. பிரிக்ஸ் அமைப்பில் சேர தமது விருப்பத்தை வெளிப்படுத்திய கடிதமொன்றை இலங்கை வெளிவிவகார அமைச்சு ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கும் அனுப்பியிருந்தது. என்றாலும், விண்ணப்பித்த 35 நாடுகளில் 9 நாடுகளை மாத்திரமே இணைத்துக்கொள்ள கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது. “மாநாட்டின் நோக்கம் பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவடையச் செய்வதாகும். அது தற்போது வெற்றிகரமாக நடந்துள்ளது. இணைக்கப்படும் புதிய நாடுகளுக்கு ஒப்பந்தங்கள் அனுப்பட்டுள்ளன.” என்று ரஷ்ய அதிகாரி யூரி உஷகோவ் தெரிவித்துள்ளனர். மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பெலருஸ், பொலிவியா, கியூபா, உகாண்டா, கசக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் கூட்டமைப்பில் சேர ஒப்புதல் தெரிவித்துள்ளன. அதனையடுத்து, வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர மேலும் நான்கு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களும் அமைப்பில் இணைவார்கள் என்றும் யூரி உஷகோவ் கூறியுள்ளார். 20 இற்கும் மேற்பட்ட நாடுகள் பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளன. ஒரே மாதிரியான சிந்தனைகள் கொண்ட நாடுகள் ஒன்றாக செயல்படுவது சிறப்பு எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இலங்கையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கசான் மாநாட்டுக்குப் பின்னர் சமூக வலைதளங்களில் செய்தி வெளியான போது அதனை இலங்கைக்கான ரஷ்ய தூதரகரம் நிராகரித்திருந்த போதிலும் புதிதாக இணைக்கப்பட உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது சுட்டிக்காட்டதக்கது. https://newuthayan.com/article/பிரிக்ஸ்_கூட்டமைப்பில்_இணைய_ஒன்பது_நாடுகளுக்கு_வாய்ப்பு_–_இலங்கைக்கு_கிடைக்கவில்லை!
-
2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
நீங்கா நினைவுகளுடன் 20 வருடங்களை கடக்கும் சுனாமி! சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 20 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. டிசம்பர் 26, 2004 அன்று சுமாத்ரா பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி எனும் இராட்சத அலைகளை உருவாக்கியது. இந்த அலைகள் தான் எம் உறவுகளை காவுக்கொள்ளப்போகிறது என்பது தெரியாமலேயே அன்றைய தினம் காலை 8.30 மணியளவில் கடலில் நிகழ்ந்த மாற்றத்தை காண கரையோரங்களில் ஏராளமான மக்கள் பிரசன்னமாகியிருந்தனர். அது வரை கண்டிராத அந்த அரிய நிகழ்வை என்வென்று தெரியாமலேயே பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு கால பைரவர் போல் காட்சிக்கொடுத்தது சுனாமி என்னும் ஆழிப்பேரலை. கண்ணிமைக்கும் நொடிக்குள் எல்லாம் அழிந்து போனது. உயரிழந்து, உடமையிழந்து ஏராளமான மக்கள் நிர்கதியாகினர். அதுவரை மானுட பெருமானங்கள் பார்த்து பார்த்து கட்டிவைத்த மாடமாளிகைகள், சொகுசு விடுதிகள், நட்சத்திர பங்களாக்கள் என ஏழை, பணக்கார பாகுபாடு இன்றி அழித்து சென்றது சுனாமி என்னும் இராட்சத அலை. இந்த பேரழிவில் 35,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், 5000 பேர் காணாமல் போயினர். இந்நிலையில் சுனாமி பேரழிவில் சிக்கி உயிரிழந்தவர்களையும், காணாமல்போனவர்களையும் நினைவுக்கூறும் நிகழ்வு டிசம்பர் 26 ஆம் திகதி ஒவ்வொரு வருடமும் முன்னெடுக்கப்படுகின்றது. 2012 முதல் இன்றைய தினத்தை தேசிய பாதுகாப்பு தினமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆழிப் பேரலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக உலகவாழ் மக்களால் மறந்துவிட முடியாது. நத்தாருக்கு மறுதினம் அனைவரும் தங்களது அன்றாட கடமைகளுக்காக தயாரான நிலையில் காலை 6.58 மணியளவில் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுக்கு அருகில் 9.1 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடற்சீற்றத்தினால் ஆசியாவின் 14 நாடுகளைச் சேர்ந்த 2 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். காலி மாவட்டத்தின் பெரலிய என்ற இடத்தில் பயணித்த ரயிலிருந்த 1,700 பேருடன் சேர்த்து எமது நாட்டில் 35,000 மக்கள் வரை உயிரிழந்தனர். இலங்கை ரயில் சேவையில் ஏற்பட்ட விபத்துகளில் அதிகளவான உயிர்களை காவு கொண்ட விபத்து இதுவென இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அன்றைய நாட்களில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அதிகளவில் பேசப்பட்ட சுனாமி பேபி 81 என்ற குழந்தையையும் நாம் மறந்து விட முடியாது. யார் இந்த சுனாமி பேபி 81 ? சுனாமி அன்று கல்முனை ஆதார மருத்துவமனையின் 81ஆம் இலக்க வாட்டில் 2 மாத சிசுவாய் கிடந்தவரே சுனாமி பேபி 81. இதனைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத குழந்தைக்கு சுனாமி பேபி 81 என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த குழந்தைக்கு 7 தாய்மார்கள் உரிமை கோரினார்கள். 52 நாட்களின் பின்னர் மரபணு பரிசோதனையின் மூலம் மட்டக்களப்பு குருக்கள் மடத்தை சேர்ந்த ஜெயராஜ்இ ஜூனிலதா தம்பதியினரின் குழந்தை அபிலாஷ் என உறுதி செய்யப்பட்டு பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது. அந்த தருணத்தில் ஆழி பேரலைப் பற்றி அறிந்திராத சுனாமி பேபி 81 என்ற ஜெயராஜ் அபிலாஷ் ஒவ்வொரு வருடமும் தனது வீட்டில் அமைத்துள்ள நினைவுதூபிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றார். இதேவேளை அனைவரையும் எல்லையற்ற சோகத்தில் ஆழ்த்திய ஆழி பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சர்வதேச ரீதியிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஆழிப்பேரலைப் போன்று மீண்டும் ஒரு முறை இவ்வாறான அனர்த்தம் ஏற்படாதிருக்க எமது செய்திப்பிரிவு பிராத்திக்கின்றது. அதற்கமைய, சுனாமியால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடுமுழுவதும் இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரை 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வலியுறுத்தியுள்ளது. இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள தேசிய பாதுகாப்பு தினத்திற்கு இணையான பிரதான நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் அருண ஜயசேகர தலைமையில் இடம்பெறவுள்ளது. இதுதவிர, மாவட்ட மட்ட நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சுனாமியினால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் நினைவுகளில் வசந்தம் செய்திப்பிரிவும் தன்னை இணைத்துக்கொள்கிறது. https://newuthayan.com/article/நீங்கா_நினைவுகளுடன்_20_வருடங்களை_கடக்கும்_சுனாமி!
-
சவேந்திர சில்வாவின் பதவி பறிபோகின்றது!
சவேந்திர சில்வாவின் பதவி பறிபோகின்றது! பாதுகாப்புப் படைகளின் பிரதானி அலுவலகத்தை இல்லாமல் செய்வதனூடாக அவரது பதவியைப் பறிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடமையாற்றுகின்றார். பாதுகாப்பு படைகளின் பிரதானியாக செயற்பட்ட அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அந்தப் பதவியில் இருந்து ஓய்வுபெற்றபின்னர், அப்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் ஜெனரல் சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்புப் படைகளின் பிரதானி அலுவலகத்தை இல்லாமல் செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, முன்னாள் இராணுவத்தளபதியான சவேந்திர சில்வா, இறுதிப் போர் இடம்பெற்ற போது வன்னிக் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்டிருந்தார். இறுதிப் போரில் நடந்த மனித குலத்துக்கு ஒவ்வாத குற்றச் செயல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர் என்ற அடிப்படையில் அமெரிக்கா சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் பயணத் தடை விதித்துள்ளது. https://newuthayan.com/article/சவேந்திர_சில்வாவின்_பதவி_பறிபோகின்றது!
-
கிளிநொச்சியில் கோர விபத்து - குழந்தை பலி
கிளிநொச்சியில் கோர விபத்து - குழந்தை பலி December 25, 2024 08:58 pm கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (25) இரவு 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. A9 வீதியால் பயணித்த ரிப்பர் வாகனம் குறித்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்தினை ஏற்படுத்தியதுடன், விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 100m பாதையை விட்டு விலகி பயணித்துள்ளது. விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளையும் ரிப்பர் வாகனம் குறிப்பிட்ட அளவு தூரம் இழுத்து சென்றுள்ளதுடன், தொழிற்பயிற்சி நிறுவனத்தின் விளம்பர பலகை மற்றும் தொலைத்தொடர்பு கம்பம் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்தியுள்ளது. குறித்த ரிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்ற மக்கள் குறிப்பிடுகின்றனர். விபத்து தொடர்பில் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 6 வயதுடைய குழந்தையும் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். https://tamil.adaderana.lk/news.php?nid=197830
-
விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?
சில படங்கள் பார்த்த பின்னர் பலநாட்கள் தொந்தரவு செய்யும். மகாநதி முன்னர் தொந்தரவு செய்தது. இப்போது விடுதலை.. படத்தின் அரசியல் புரியாது எனக்கு முன்னால் இருந்த சில தமிழக இளைஞர்கள் “தோழர்” என்று தங்களுக்குள் கிண்டலடித்துக்கொண்டிருந்தனர். அவர்களை அதட்டி அமைதியாக்கவேண்டி வந்துவிட்டது. அவர்கள் என்னுடன் சண்டைக்கு வராமல் “சும்மா கலாய்க்கத்தான்” என்று சொல்லி அமைதியாகிவிட்டார்கள். படத்தை நிம்மதியாகப் பார்க்கமுடிந்தது. முகநூலில் வந்த பதிவு ஒன்று.. ஸ்பொயிலர் இல்லை.. —— நம் பாலுமகேந்திராவிடம் பயின்ற வெற்றிமாறன் இயக்கி வெளியாகியிருக்கும் விடுதலை 2 ஒரு செங்காவியம்! முதல் காட்சியிலேயே சுத்தியல் ஒன்று அரிவாளை அடித்து உருவாக்குகிறது! தெளித்திருக்கிறது அரசியல் - ரத்தமாக!! இருந்தாலும் அதையெல்லாம் நல்லதொரு கலைப்படைப்பாக காட்சிக்குக் காட்சி அனுபவித்து உருவாக்கியிருக்கிறார் வெற்றிமாறன். கம்யூனிஸ தத்துவத்தை பெருமைப்படுத்தி தமிழில் இப்படியானதொரு அரசியல் படம் வந்ததே இல்லை. கம்யூனிஸ்ட்டுகள் செய்த தன்னலமற்ற தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயர்நிலைப்பட்டுப் பதியப்பட்டிக்கின்றன. இது படம் அல்ல பாடம். வெற்றிமாறனின் சினிமா அனுபவம் இந்தப்படத்தின்மூலம் துணிச்சலான அரசியலாக மாறியிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் அதிகார அரசியல் மற்றும் காவல்துறை ஊழல்களை அப்பட்டமாகக் கிழித்திருக்கிறது படம். லெனின் படத்தையோ மார்க்ஸ் படத்தையோ காட்டிவிட்டு கம்யூனிஸம் என்று கதைவிடாமல், ஒரு படைப்பாக வசனங்களாலும், கதை மாந்தர்களாலும் ஒரு மாபெரும் புரட்சிகரத் தத்துவத்தை தமிழில் எளிமையாகப் பேச முயன்று தமிழ் சினிமாவையே பெருமைப்படுத்தியிருக்கிறது படம். அதிகாரம், துரோகம், வர்க்கம், சாதி, ஆண்டான் அடிமை முறை, மனித உரிமை மீறல்கள் ஒன்றுடன் ஒன்றும், வரலாற்றுடனும் கொண்டிருக்கும் தொடர்பு படம் முழுவதும் எதிரொலிக்கிறது. ஆனால் விடுதலை1 கொண்டாடப்பட்டதுபோல விடுதலை 2 அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுமா என்பது சந்தேகமே. படம் சிறப்பாகவே இருந்தாலும் அது பேசும் அரசியல் எல்லாருக்கும் புரியாது. (குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர்கள் தனி) இந்திய அதிகாரம் எப்படி இயக்கப்படுகிறது என்பதை இயக்குனர் ராஜிவ்மேனன் ஏற்றிருக்கும் பாத்திரம் பச்சையாகச் சொல்லாமல் சொல்கிறது. ஆசான் கே.கே.யாக வரும் கிஷோர், 'திருட்டுமுழி' சேத்தன், கௌதம் வாசுதேவ் மேனன் மனதில் நிற்கிறார்கள். மஞ்சுவாரியரின் பாத்திரம் மட்டும் சற்று சினிமாத்தனமாக வந்திருந்தாலும், அதற்கும் பெருமளவு அழுத்தம் வெற்றிமாறனால் தரப்பட்டிருக்கிறது. பெண்கள் தலைமுடியை வெட்டி கிராப் செய்து கொள்வதற்கு சொல்லப்படும் காரணம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது - 'விடுதலை பெண்'களை! மஞ்சுவாரியரின் தோற்றம் தோழர் மணலூர் மணியம்மையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. மணியம்மை பிராமணக்குடும்பத்திலிருந்து கட்சிக்கு வந்தவர் என்பது நடந்த வரலாறு. தமிழ்நாட்டில் நடந்த கொடுமையான பிரச்சினைக்குரிய வரலாற்றுச் சம்பவங்கள் சிலவற்றை இந்த அளவு துணிச்சலாக... வசனங்களில்... திரைக்கதையில்... பரபரப்பான காட்சி அமைப்புக்களில்.. இவ்வளவு அழுத்தமாக, ஆழமாக, தத்துவப் பார்வையுடன் வெற்றிமாறனைத் தவிர வேறு தமிழ் இயக்குனரால் தரமுடியுமா? சந்தேகம்தான். தமிழ் சினிமாவில் மணிரத்தினம் "We Do The Lie" என்பது வெளிப்படையாகத் தெரிவதுபோல எடுப்பார்... பா.ரஞ்சித் தாழ்ந்த ஜாதியினர் செய்யும் பிரச்சாரம்போல வெளிப்படையாக எடுப்பார். வெற்றிமாறனோ விசாரணை செய்கிறார். இனி ஆளை 'இயக்குனர்ஞானி' வெற்றிமாறன் என்றும் சொல்லலாம். படத்தின் எடிட்டிங் கதையோட்டத்தை விறுவிறுப்பாக்குகிறது. இசைஞானியின் பின்னணி இசை ஒலிக்கும்போதும்சரி, ஒலிக்காமல் இருக்கும்போதும்சரி படம் மேலும் விறுவிறுப்பாகிறது. இளையராஜாவே எழுதி பாடிய "தினம்தினமும் ஒன் நினைப்பு" முந்தைய அவரது பாடலான "வழிநெடுக காட்டு மல்லி" பாட்டின் பார்ட் 2 + கர்நாடக இசைக்கலைஞர் சஞ்சய் சுப்பிரமணியத்தை பாடவைத்திருக்கும் "மனசில மனசில.." பாட்டில் ஆகாயத்தில் புள்ளி வைத்திருக்கிறார் இளையராஜா. "ஆயுதப் போராட்டம் அரசியல்மயப்படுத்தப்பட வேண்டுமா?", "போராளிகள் திருமணம் செய்யலாமா" என்று 1980களில் ஈழத்தமிழர்கள் கேட்ட கேள்விகளுக்குக்கூட இந்தப்படத்தில் சரியான விளக்கம் வருகிறது. "வன்முறை ஒரு மொழி இல்லை. ஆனால் எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும்" என்கிறார் விஜய் சேதுபதி. விடுதலை 1இல் சூரியை மையமாக வைத்து கதை ஓடியது. இதில் விஜய்சேதுபதி படத்தை முழுவதுமாகத் தாங்குகிறார். விடுதலை 1 தமிழ்நாடு விடுதலைப்படையுடன் தொடர்புற்றிருந்தது. விடுதலை 2ல் தமிழரசன், கலியபெருமாள் போன்ற ஆளுமைகள் பெருமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் செய்த அரசியலின் தீர்க்கத்தை மக்கள் மத்தியிலும், சினிமா ஆர்வலர் மத்தியிலும் எளிமையாக, வலிமையாகக் கொண்டுபோகிறது விடுதலை 2. படத்தில் வரும் வெற்றிமாறன் வசனங்கள் நம்மிடையே பல புரிதல்களையும் விவாதங்களையும் முன்வைக்கிறது. "தத்துவமில்லாத தலைவர்கள் ரசிகர்களைத்தான் உருவாக்குவார்கள். அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது" என்று ஒரு வசனம் வருகிறது. படத்தை பார்க்கும்போது ஜே.வி.பி & ரோகணவிஜயவீரவின் நினைவும் வராமல் போகாது. தமிழ் ஈழத்தின் விடுதலைக்காக முள்ளிவாய்க்கால்வரை சென்று வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த சம்பவம்கூட நுட்பமாக படத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. கண்ணத் திறந்தபடியே கிடக்கும் சடலம், அதை தூக்கி எடுக்கும் காட்சி.. படத்தைப் பாருங்கள். புரியும். https://www.facebook.com/share/18PC8heMXU/?mibextid=wwXIfr
-
மகிந்தவின் பாதுகாப்பு கௌதம புத்தரிடம் - நாமல்
மகிந்தவின் பாதுகாப்பு கௌதம புத்தரிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு கௌதம புத்தரிடம் ஒப்படைக்கப்படுமெனவும் அரசாங்கத்தின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்துவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் குழுவை அமைத்து தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. அந்த தீர்மானங்களை நாங்கள் பிரச்சினைக்கு உட்படுத்தப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவுக்கு நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் புரிதல் இருக்கின்றதா என்பதில் எமக்கு சந்தேகம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இவர்களுடைய தீர்மானங்களை நாட்டின் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு பிரதானிகள் ஏற்றுக்கொள்வார்களானால் அது அவர்களுடைய தீர்மானமாகும். எனவே அதற்கான முழுப் பொறுப்பையும் அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்களுக்கு எப்போதும் மக்களுடைய ஆசீர்வாதமும் பாதுகாப்பும் இருக்கின்றது. எனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு புத்தரின் ஆசீர்வாதம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=304756
-
கிறிஸ்மஸ் தினத்தில் ரஸ்யா உக்கிரம் - உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பு மீது தாக்குதல்
கிறிஸ்மஸ் தினத்தில் ரஸ்யா உக்கிரம் - உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பு மீது தாக்குதல் 25 Dec, 2024 | 12:58 PM உக்ரைன் மக்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தருணத்தில் ரஸ்யாவின் உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பினை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஸ்யா உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்பினை இலக்குவைத்து பாரிய வலுசக்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. கார்கிவ் நகரத்தின் மீது கடும் தாக்குதல் இடம்பெறுவதாக அதன் மேயர் தெரிவித்துள்ளார். டிரோன் தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கையை தொடர்ந்து மக்கள் மெட்ரோ புகையிரத நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். தலைநகர் உட்பட பல பகுதிகளில் வலுச்சக்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் தினத்தன்று அதிகாலையில் ரஷ்யா உக்ரைனை இருளில் மூழ்கடிக்க முயற்சிக்கின்றது என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/202112
-
சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்கு புதிய மதுபான வகை!
குறைந்த விலை மதுபான அறிமுக முன்மொழிவுக்கு எதிர்ப்பு December 25, 2024 11:41 am குறைந்த விலையில் மதுபானத்தை அறிமுகப்படுத்துவதற்கு கலால் ஆணையாளர் நாயகம் கொண்டு வந்த யோசனை தொடர்பில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சட்டவிரோத மதுபானத்தை குறைப்பேன் என்ற போர்வையில் மதுவின் விலையை குறைத்து நாட்டு மக்களின் மது பாவனையை அதிகரித்து நிறுவனங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒரு நாடு மதுபானம் மற்றும் சிகரெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அதன் மீதான வரியை உயர்த்த வேண்டும் என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மது அருந்துபவர்கள் உட்கொள்ளும் மதுவின் அளவைக் குறைப்பதற்கும் புதிதாக மது பயன்பாட்டிற்கு செல்வதைக் கட்டுப்படுத்தவும் மது வரிகளை அதிகரிப்பதுதான் ஒரு பயனுள்ள உத்தி என்பதை உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட இது தொடர்பாக ஆய்வு நடத்தும் நிறுவனங்களும் அறிவியல் பூர்வமாக உறுதி செய்துள்ளதாகவும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் தடுக்கக்கூடிய 10இல் 8 இறப்புகளுக்கு காரணமான தொற்று அல்லாத நோய்களுக்கான பிரதான பங்களிப்பில் 4இல் 1 பங்கு மது அருந்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, இலங்கையில் மது பாவனையால் நாளொன்றுக்கு 50 பேர் உயிரிழப்பதாகவும், வருடத்திற்கு சுமார் 20,000 இலங்கையர்கள் உயிரிழப்பதாகவும் குறித்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மதுபான பாவனையால் நாட்டு மக்களை நோயுறச் செய்வது அல்ல, மதுபான வரியை சரியாக வசூலித்து சட்டவிரோத மதுபான பாவனையை தடுப்பதே கலால் ஆணையாளர் நாயகம் மற்றும் அவர் சார்ந்த திணைக்களத்தின் பொறுப்பாகும். சந்தையில் கலால் வரி செலுத்தாமல் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை கண்டறிந்து, தொடர்புடைய மோசடி வர்த்தகர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும் அவ்வாறான சூழ்நிலைகள் ஏற்படாமல் தடுப்பதும் கலால் ஆணையாளர் நாயகத்தின் பொறுப்பாகும் என அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=197807
-
அஸ்வெசும தொடர்பில் அதிரடி வர்த்தமானி
அஸ்வெசும தொடர்பில் அதிரடி வர்த்தமானி புதிய விசேட வர்த்தமானி மூலம், அஸ்வெசும நலன்புரி நன்மைக் கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு மாதாந்தப் பலன்களை வழங்குவதற்கான திட்டத்தை அறிவித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 17.05.2024 அன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலும், இது தொடர்பில் இதுவரை அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, புதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம், 2025 ஜனவரி முதல் மார்ச் வரை 480,000 இடைநிலைக் குடும்பங்கள் 5000 ரூபாய். 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை 480,000 பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு 5000 ரூபாய், 960,000 ஏழைக் குடும்பங்கள் 480,000 மாதாந்திர நிவாரணப் பலன்கள் 17,500 ரூபாய் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், இந்த கொடுப்பனவுகளில் பாதிக்கு உரிமை உண்டு. மேலும், 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையில், பிற திறன் கொண்டவர்களுக்கு 7500 ரூபாயும், சிறுநீரக நோயாளிகளுக்கு 7500 ரூபாயும், முதியோர்களுக்கு 3000 ரூபாயும் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது பாராளுமன்றத்தின் ஒப்புதல் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.R https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அஸ்வெசும-தொடர்பில்-அதிரடி-வர்த்தமானி/150-349251
-
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது அசர்பைஜானின் பாகுவில் இருந்து 72 பயணிகளுடன் ட்ரோஸ்னி நோக்கி பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அடர்ந்த மூடுபனி காரணமாக திருப்பி விடப்பட்ட இந்த விமானம் கஜகஸ்தானின் அக்டாவ் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றுள்ளது. அப்போது விமானம் திடீரென கீழே விழுந்தது. இதில் விமானம் வெடித்து சிதறி தீப்பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில் சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயணிகள் விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு விமான நிலையம் அருகே பலமுறை வானில் வட்டமடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழப்பு குறித்த எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/கஜகஸதனல-பயணகள-வமனம-வடதத-சதறயத/50-349267
-
பெண்கள் உடைமாற்றும் இடத்தில் ரகசிய கேமரா… ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி!
பெண்கள் உடைமாற்றும் இடத்தில் ரகசிய கேமரா… ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி! KaviDec 24, 2024 20:36PM ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அருகே பெண் பக்தர்கள் உடை மாற்றும் தனியார் இடத்தில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவி ஒருவர், குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் சென்றுள்ளார். அங்கு தோஷங்களை கழிக்கக்கூடிய அக்னி தீர்த்த பகுதியில் கடலில் நீராடிவிட்டு, கோயில் அருகில் உள்ள தனியார் நபர்கள் நடத்தி வரும் தண்ணீர் தொட்டி (குளிக்கும் இடம்) மற்றும் ஆடை மாற்றும் இடத்திற்கு சென்று உடை மாற்றியிருக்கிறார். அப்போது அங்கு பொருத்தியிருந்த ரகசிய கேமராவை கண்டறிந்து அதிர்ச்சியான மாணவி, பதற்றத்துடன் சென்று கோயில் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரின் இன்ஸ்பெக்டர் முருகேசன், எஸ்.ஐ உக்கிரபாண்டி இருவரும் ஸ்பாட்டுக்கு சென்று ஆராய்ந்ததில் அங்கு பொருத்தப்பட்டிருந்த ஒரு ரகசிய கேமராவை பறிமுதல் செய்தனர். அந்த கேமராவை பொருத்திய அந்த கடையை நடத்தி வந்த ராஜேஷ் குமார் மற்றும் அவருடைய நண்பர் மியான் மைதீன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர். இந்நிலையில் விசாரணை அதிகாரிகளிடம் கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தையும், அங்குநடந்த சம்பவத்தை பற்றியும் கேட்டோம். “ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு பெரும்பாலும் வரக்கூடியவர்கள் பிரம்ம ஹத்திதோஷம் கழிக்க வருவார்கள். அதாவது, ராமர் ராவணனை வதம் செய்துவிட்டு அந்த பாவ தோஷத்தை கழிக்க அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு 21 நாழி கிணறுகளில் தீர்த்தங்களை எடுத்து குளித்துவிட்டு, சிவனுக்கு பூஜை செய்தார். அதனால் இங்குள்ள பூர்வ ஜென்ம பாவங்கள், ஜென்ம ஜென்ம பாவங்கள் இருப்பவர்கள் இங்கே வந்து தோஷத்தை கழிப்பார்கள். அப்படியானால் அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும், எதிரிகள் விலகி போவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படிதான் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினம்தோறும் பல ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள். இந்த கடலில் குளிப்பவர்கள், உப்பு தண்ணீருடனும் நனைந்த உடையுடனும் கோயிலுக்குள் போக முடியாது என்பதால் கோயில் அருகில் தனியார் நபர்கள், தண்ணீர் தொட்டிகளும், பெண்கள்/ஆண்கள் ஆடை மாற்ற தனி தனியாக இடம் வைத்துள்ளனர். ஒரு நபருக்கு 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூல் செய்வார்கள். அப்படிதான் செந்தில் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தை ராஜேஷ்குமார் என்பவர் மாதம் 30,000 வாடகைக்கு நடத்தி வருகிறார். இந்த கடலில் நீராடிவிட்டு தனது இடத்திற்கு குளிக்கவும், ஆடை மாற்றவும் வரக்கூடிய பெண்களை வக்கிரமாக பார்த்து வந்த ராஜேஷ், கடந்த மூன்று மாதமாக பெண்கள் ஆடை மாற்றும் இடத்தில் ரகசிய கேமராவை பொறுத்தி, இரவு நேரங்களில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டு பெண்கள் ஆடை மாற்றும் காட்சிகளை பார்த்து ரசித்து, எச்சை ஆசைகளை தீர்த்து வந்துள்ளார். அந்த வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது. புகார் கொடுத்த மாணவியிடம் எப்படி கேமரா இருந்ததை கண்டுபிடித்தீர்கள் என்று இன்ஸ்பெக்டர் கேட்டார். அந்த மாணவி, நான் ஐஐடியில் படிக்கிறேன். பல விதமான டிடெக்டர் ஆப் கள் உள்ளன. பாதுகாப்புக்காக என் போனிலும் ஒரு டிடெக்டர் ஆப்பை டவுன்லோடு செய்து வைத்துள்ளேன். அதன்மூலமாகத்தான் கண்டுபிடித்தேன். இதுபோன்று ரகசிய கேமராக்கள் வைத்து வீடியோ பதிவு செய்பவர்கள், வேறொருவர் முகத்துடன் பொருத்தி மார்பிங் செய்யவும் வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதை கேட்ட போலீசார், கைது செய்யப்பட்டவர்களிடம் இதுபோன்று வியாபார நோக்கத்துடன் தவறு செய்துள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்” என்றனர். இந்தசூழலில் ராமநாதபுரம் டிஎஸ்பி சாந்தமூர்த்தி, “இனி மாதம் ஒரு முறை விடுதிகள், தனியார் உடை மாற்றும் பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள விடுதிகளில், இதுபோன்று பெண்கள் உடைமாற்றும் இடங்களில் போலீசார் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். https://minnambalam.com/tamil-nadu/secret-camera-at-the-place-where-women-change-clothes-in-rameshwaram-temple/
-
அநுரகுமார முன்னிலையில் 13 வது திருத்தம் பற்றி பேசாமல் மோடி இலங்கை தமிழர்களுக்கு கூறிய செய்தி?
அநுரகுமார முன்னிலையில் 13 வது திருத்தம் பற்றி பேசாமல் மோடி இலங்கை தமிழர்களுக்கு கூறிய செய்தி? December 23, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க கடந்த வாரம் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயம் கடந்த வருடம் அன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட இந்திய விஜயத்தில் இருந்து எந்த அடிப்படையில் வேறுபடுகிறது? இலங்கையின் ஜனாதிபதிகள் பதவியேற்ற பிறகு தங்களது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக புதுடில்லிக்கு செல்வது ஒரு சம்பிரதாயமாக இருந்துவருகிறது. அதன் பிரகாரம் திசாநாயக்கவும் இந்தியாவுக்கு சென்று வந்திருக்கிறார். மூன்றாவது தடைவையாக இந்தியாவின் பிரதமர் பதவியை வகிக்கும் நரேந்திர மோடி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை ஏற்கெனவே நான்கு இலங்கை ஜனாதிபதிகளுடன் கையாண்டிருந்தார். திசாநாயக்க மோடி சந்தித்த ஐந்தாவது இலங்கை ஜனாதிபதியாவார். முன்னைய ஜனாதிபதிகளை விடவும் கூடுதலான அளவுக்கு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற்ற ஜனாதிபதியாக திசாநாயக்க விளங்குவதை அடிப்படையாகக் கொண்டு இந்திய பத்திரிகையாளர் ஒருவர் பிரதமர் மோடி இலங்கையின் மிகவும் பலம்பொருந்திய ஜனாதிபதிகளில் ஒருவரை மாத்திரமல்ல, இடதுசாரி ஜனாதிபதி ஒருவரையும் சந்திக்கிறார் என்று கடந்த வாரம் எழுதியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியுடனும் வழிகாட்டலுடனும் முன்னெடுத்த அதே பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வேறு வழியின்றி தொடருகின்ற ஜனாதிபதி திசாநாயக்க, இந்தியாவுடனான உறவுகளைப் பொறுத்தவரையிலும் கூட விக்கிரமசிங்கவின் அணுகுமுறையே கடைப்பிடிக்கின்றார் போன்று தெரிகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி திசாநாயக்க நடத்திய பேச்சுவார்த்தைகளின் இறுதியில் கடந்த திங்கட்கிழமை புதுடில்லியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை கடந்த வருடம் விக்கிரமசிங்கவின் விஜயத்தின்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டவற்றை விட புதிதாக எதையும் கூறவில்லை என்பதே பரவலான அவதானிப்பாக இருக்கிறது. மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த செயற்திட்டங்களை பொறுத்தவரை பிரதமர் மோடி திசாநாயக்கவிடம் புதிதாக எதையும் கூறியதாக தெரியவில்லை. அது விடயத்தில் முன்னைய இலங்கை அரசாங்கங்கள் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தவற்றையே புதிய ஜனாதிபதியிடமும் மீண்டும் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். ஆனால், இலங்கை செய்யவேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கின்றவை தொடர்பில் எதையும் நடைமுறையில் செய்யப் போவதாக ஜனாதிபதி திசாநாயக்க உறுதியளிக்காமல் அவை தொடர்பில் பேச்சுவார்த்தைகளை தொடருவதற்கு புதுடில்லியில் இணக்கத்தை தெரிவித்துவிட்டு நாடு திரும்பியிருக்கிறார். இந்தியாவுடன் சேர்ந்து முன்னெடுப்பதற்கு முன்னைய இலங்கை அரசாங்கங்கள் இணங்கிக்கொண்ட பல செயற்திட்டங்களை இரு தேசிய தேர்தல்களுக்கும் முன்னதாக கடுமையாக எதிர்த்த தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) வின் தலைவர்கள் தற்போது தங்களது அரசாங்கம் மறுதலையாக எடுத்திருக்கும் நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவதில் பெரிய சவாலை எதிர் நோக்க வேண்டியிருக்கும். குறிப்பாக, இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை (Economic and Technological Cooperation Agreement — ETCA ) செய்துகொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எட்டு வருடங்களுக்கு முன்னர் தொடங்கிய பேச்சுவார்த்தைகளை ஜே.வி.பி.யின் தலைவராக திசாநாயக்க கடுமையாக எதிர்த்தார். எந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று அன்று திசாநாயக்க சூளுரைத்தாரோ அதே உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தைகளை தொடருவதற்கு புதுடில்லியில் இணக்கத்தை தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே முன்னைய அரசாங்கங்களின் கீழ் ‘எட்கா’ உடன்படிக்கை தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் 14 சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஜனாதிபதி திசாநாயக்க தெரிவித்திருக்கும் இணக்கப்பாட்டை முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க கடந்தவாரம் பாராட்டி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை ஆழமாக்கி வலுப்படுத்துவதற்கு ‘எட்கா’ தொடர்பிலும் திருகோணமலையை பிராந்திய சக்திவலு மற்றும் கைத்தொழில் மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி திசாநாயக்க இணங்கியிருப்பதை ஒரு பெரிய முன்னேற்றம் என்று மெச்சுகிறேன்.” என்று விக்கிரமசிங்க அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு எந்த ஒரு சிறிய பிரச்சினையையும் தவறவிடக்கூடாது என்பதில் அதீத அக்கறையாக இருக்கும் எதிர்க்கட்சிகள் இந்திய — இலங்கை கூட்டறிக்கையில் தவறு கண்டுபிடிக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன. இலங்கைக்கு துரோகமிழைக்கும் எந்த உடன்படிக்கையையும் தாங்கள் செய்துவிட்டு டில்லியில் இருந்து திரும்பிவரவில்லை என்று ஜனாதிபதியுடன் இந்தியா சென்றிருந்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் கூறினார். ஜனாதிபதி திசாநாயக்கவை பொறுத்தவரை, 1980 களின் பிற்பகுதியில் இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு எதிராக ஜே.வி.பி அதன் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியை முன்னெடுத்த காலப்பகுதியில் இயக்கத்தில் இணைந்து கொண்டவர். நிச்சயமாக அவரின் சிந்தனையில் இந்திய விரோத அரசியலுக்கு பிரதான இடம் இருந்திருக்கும். தற்போது அவர் நாட்டின் ஜனாதிபதியாக இந்தியாவுக்கு விஜயம் செய்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு உறுதிபூண்டிருப்பதன் மூலமாக தனது அரசியல் வாழ்வில் ஒரு முழு வட்டத்தைச் சுற்றி வந்திருக்கிறார். அவரின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் அவர் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சர்வதேச அரசியல் மற்றும் இராஜதந்திர உறவு முறைமையில் ஒரு முழுமையான அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது எனலாம். இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் பொருளாதார ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் மனந்திறந்து நன்றி தெரிவித்த ஜனாதிபதி திசாநாயக்க இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கும் பிராந்திய உறுதிப்பாட்டுக்கும் குந்தகமான எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கை மண் பயன்படுத்தப்படுவதை தனது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று உறுதியளித்திருக்கிறார். இது முன்னைய ஜனாதிபதிகளும் அளித்த உறுதிமொழிதான். இந்தியாவையும் சீனாவையும் சமதூரத்தில் வைத்து அவற்றுடனான உறவுகளை ஒரு சமநிலையில் பேணுவதில் ஜனாதிபதி அக்கறை கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க நாடுகளை பகைத்துக் கொள்ளாத வகையிலான உறவுகளை பேணுவது இலங்கைக்கு அவசியமாகிறது. இலங்கையிடமிருந்து இந்தியா எதிர்பார்க்கின்றவை தொடர்பான பட்டியலுடன் நாடு திரும்பிய ஜனாதிபதி அடுத்த மாதம் உத்தியோகபூர்வ விஜயமாக சீனா செல்லவிருக்கிறார். பெய்ஜிங்கில் இருந்தும் ஒரு பட்டியலுடன் தான் அவர் நாடு திரும்பவேண்டியிருக்கும். இலங்கையில் தங்களின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை பேணுவதில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டா போட்டிக்குள் இலங்கையை சிக்க வைக்காமல் வழிநடத்திச் செல்வது ஜனாதிபதிக்கு நிச்சயமாக ஒரு சவாலாகவே இருக்கும். இனப்பிரச்சினை: =========== இது இவ்வாறிருக்க, இந்தத் தடவை ஜனாதிபதி திசாநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பிறகு பிரதமர் மோடி இலங்கை இனப்பிரச்சினை குறித்து தெரிவித்த கருத்து முன்னைய ஜனாதிபதிகளின் முன்னிலையில் அவர் கூறியவற்றில் இருந்து ஒரு பிரத்தியேகமான வேறுபாட்டைக் கொண்டிருக்கிறது. முன்னைய ஜனாதிபதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளிலும் அவர்களுடன் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் இந்தியப் பிரதமர் இலங்கை அரசாங்கம் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு என்று கூறினார். ஆனால், கடந்த திங்கட்கிழமை புதுடில்லியில் ஜனாதிபதி திசாநாயக்கவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த வேளையில் மோடி 13 வது திருத்தம் பற்றி எதையும் கூறவில்லை. அந்த விலகல் பிரத்தியேகமான கவனத்தைப் பெற்றிருக்கிறது. அது மாத்திரமல்ல, அரசியல், பொருளாதாரம் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு ஆகியவற்றை தழுவியதாக 31 அம்சங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றியோ, போரின் முடிவுக்கு பின்னரான நல்லிணக்கம் மற்றும் தமிழர்களின் அபிலாசைகள் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. “இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் மாகாணசபை தேர்தல்களையும் நடத்தி அவர்கள் தங்களது கடப்பாட்டை நிறைவு செய்வார்கள் என்று நம்புகிறோம்” என்று மாத்திரம் மோடி செய்தியாளர்கள் முன்னிலையில் கூறினார். 13 வது திருத்தத்தை பற்றி குறிப்பிடுவதை அவர் திட்டமிட்டே தவிர்த்தார் என்றே தோன்றுகிறது. அதற்கு பதிலளித்த ஜனாதிபதி திசாநாயக்க, “வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று சகல மாகாணங்களையும் சேர்ந்த சகல சமூகங்களும் எமக்கு கிடைத்த ஆணைக்கு பங்களிப்புச் செய்திருக்கின்றன. மக்களினால் அத்தகைய ஒரு முக்கியமான பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒரு தலைவர் என்ற வகையில், ஜனநாயகத்தின் சாராம்சம் வெவ்வேறு வகைப்பட்ட அரசியல் சிந்தனைகள் மற்றும் குழுக்களின் சகவாழ்விலேயே தங்கியிருக்கிறது என்பதை நான் தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டார். கடந்தகால கூட்டறிக்கைகளில் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய குறிப்புகளில் 13 வது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தல் நிச்சயமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இரு நாடுகளினதும் முக்கியமான பத்திரிகைகளையும் அரசியல் அவதானிகளையும் போன்று இந்த வித்தியாசத்தை அல்லது விலகலை இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் கவனித்து அக்கறை காட்டியதாக் தெரியவில்லை. ‘ நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ‘ பத்திரிகை திசாநாயக்கவின் இந்திய விஜயம் குறித்து வெள்ளிக்கிழமை எழுதிய ஆசிரிய தலையங்கத்தில் 13 வது திருத்தத்தை திசாநாயக்க விரும்பவில்லை என்பதால் மோடி தமிழர் பிரச்சினையில் இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் ஒரு மென்மையான போக்கை கடைப்பிடிப்பதில் நாட்டம் காட்டுகிறார் என்று குறிப்பிட்டிருக்கிறது. இந்து ஆங்கிலப் பத்திரிகையும் 13 வது திருத்தம் பற்றி மோடி குறிப்பிடத் தவறியதை சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆனால், இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அதை ஒரு பிரச்சினையாக பார்க்கவில்லை.13 வது திருத்தமும் ஒரு அங்கமாக இருக்கும் அரசியலமைப்பையே முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் கூறியிருக்கிறார் என்றும் அதை தாங்கள் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்தத் தடவை 13 வது திருத்தத்தைப் பற்றி மோடி குறிப்பிடாமல் இருந்ததன் சூட்சுமத்தை சுமந்திரன் ஏன் மெத்தனமாக நோக்குகிறார் என்று விளங்கவில்லை. ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு உள்நாட்டில் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடியதாக தமிழர் பிரச்சினை தொடர்பில் எந்த கருத்தையும் கூறக்கூடாது என்பதில் மோடி மிகவும் ஜாக்கிரதையாகவே நடந்து கொண்டிருக்கிறார் என்றே தெரிகிறது. பெருமளவுக்கு மாறிவிட்ட அரசியல் சூழ்நிலைகளில் இந்தியா காலப்போக்கில் 13 வது திருத்தம் பற்றி பேசுவதை கைவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு கற்பனாவாத அரசியல் உலகில் சஞ்சரித்துக் கொண்டு அந்த திருத்தத்தை பற்றி அக்கறை காட்டுவதில்லை. சிங்களவர்களும் தமிழர்களும் விரும்பாத ஒரு விடயத்தைப் பற்றி இந்தியா ஏன் வில்லங்கத்துக்கு அக்கறைப்படப் போகிறது? இத்தகைய ஒரு பின்புலத்தில், இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை இந்து பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசன் எழுதிய ‘ இலங்கை தமிழர் பிரச்சினையில் யதார்த்த நிலைவரத்தை தெரிந்துகொள்தல்’ (Reality check on Sri Lankan Tamil question ) என்ற தலைப்பிலான கட்டுரையில் சில பகுதிகளை இங்கு கவனத்துக்கு கொண்டுவருவது தமிழ் அரசியல்வாதிகளுக்கு இல்லாவிட்டாலும் தமிழ் மக்களுக்கு பயனுடையதாக இருக்கும். “இலங்கை தமிழ் அரசியல் சமுதாயம் பெரியதொரு சவாலை எதிர்நோக்குகிறது. அண்மைய பாராளுமன்ற தேர்தலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் ஒரு மாவட்டத்தை தவிர ஏறையவற்றில் பிராந்திய தமிழ் கட்சிகளை தேசிய மக்கள் சக்தி தோற்கடித்திருக்கிறது. தமிழ் வாக்காளர்கள் தெளிவான செய்தி ஒன்றைக் கூறிய பிறகு தமிழ் அரசியல் சமுதாயம் அதன் குரலை மீண்டும் பெறுவதற்கு பெரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ” தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக சர்வதேச சமூகத்தை எதிர்பார்த்து பழக்கப்பட்டுவிட்ட பிறகு தமிழ் அரசியல் தலைமைத்துவம் அதன் சொந்த தோல்வியுடன் மல்லுக்கட்ட நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறது. புதுடில்லியை பொறுத்தவரை இலங்கை தமிழர் பிரச்சினை இந்தியாவிற்குள் நெருக்குதலை தரக்கூடிய ஒன்றாகவோ அல்லது இராஜதந்திர ரீதியில் செல்வாக்கைச் செலுத்த உதவக்கூடிய ஒன்றாகவோ இனிமேலும் இல்லை. பிரச்சினை தீர்வுக்கு இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இந்த உண்மையை விளங்கிக்கொள்வது நல்லது. ” தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் அக்கறையும் செல்வாக்கும் தேய்ந்து கொண்டுபோகிறது என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டிய நேரம் இது. தவிரவும், சிறுபான்மைச் சமூகங்களை நன்றாக நடத்துமாறு இன்னொரு நாட்டைக் கேட்பதற்கான தார்மீகத் தகுதி இந்தியாவுக்கு இருக்கிறதா என்ற கேள்வியையும் அவர்கள் கேட்டுப்பார்க்க வேண்டும். ” மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்திலான ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கள், இந்தியா மற்றும் புலம்பெயர் தமிழ்ச்சமூகம் ஆகியவற்றுடன் ஊடாட்டங்களைச் செய்யும் தமிழ் அரசியல் சமுதாயத்தின் மையத் தந்திரோபாயம் களத்தில் கணிசமான முன்னேற்றத்தை கொண்டு வரவில்லை என்பது தெளிவானது. தமிழ் அரசியல் சமுதாயம் நம்பகத்தன்மையை மீளக்கட்டியெழுப்பி பொருத்தமான ஒரு சக்தியாக நிலைத்திருக்க வேண்டுமானால் அதற்கு தெரிவுகள் குறைவாகவே இருக்கின்றன. ” அவர்கள் தங்களை திருத்தியமைத்துக் கொண்டு, தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகின்ற மக்களை மையப்படுத்திய அரசியலைச் செய்யவேண்டும். வேறு எங்காவது இருக்கின்ற சக்திகளுடன் வருடக்கணக்காக பேசுவதில் மூழ்கியிருக்கும் தலைவர்கள் இப்போது தமிழ் மக்கள் கூறுவதை உற்றுக் கேட்கவேண்டும். இதை அவர்களுக்கு அந்த மக்கள் நினைவுபடுத்த வேண்டும்.” https://arangamnews.com/?p=11562
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்! December 24, 2024 கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது மதுபோதைக்கு எதிரான இயக்கம் மற்றும் வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் சர்வ மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்ததுடன் ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரனிடம் ஜனாதிபதிக்கு கையளிக்குமாறு மகஜர் ஒன்றும் கையளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/கிளிநொச்சியில்-அதிகரிக/
-
அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் பெயரில் பண மோசடி
அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் பெயரில் பண மோசடி December 24, 2024 5:02 pm கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தனது பெயரில் மேற்கொள்ளப்படும் பண மோசடி தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். இன்று (24) பிற்பகல் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்தில் குறித்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார். அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி என அடையாளப்படுத்தப்படும் நபர் அல்லது குழு, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை இலக்கு வைத்து சமூக பராமரிப்பு சேவைகளுக்காக பணம் பெற்றுக்கொள்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி முறைப்பாடு செய்துள்ளார். குற்றப் புலனாய்வுத் தலைமையகத்தில் இந்த முறைப்பாட்டை ஆதாரங்களுடன் சமர்ப்பித்துள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாட்டை வழங்கிய அமைச்சர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். மக்கள் பிரதிநிதியாகவும், பொறுப்பு வாய்ந்த அமைச்சராகவும் இருக்கும் தன்னைப் போன்றவர்களின் பெயரை பயன்படுத்திக் கூட அச்சமின்றி இதுபோன்ற மோசடிகளை செய்து வருகின்றனர் என கூறினார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “இவ்வாறானதொரு பின்னணியில் பொது மக்கள் இலகுவாக இவ்வாறான மோசடியாளர்களின் இலக்காக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. சட்டம் அனைவருக்கும் பொதுவானது, இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டமே இதுபோன்ற மோசடி செய்பவர்களை சட்டத்தின் கீழ் கொண்டு வர போதுமானது. எனக்கும், இதுபோன்ற மோசடிகளில் சிக்கிய மற்றவர்களுக்கும் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று நம்புகிறேன். மேலும், இந்த மோசடியாளர்கள் ஜனவரி 5ஆம் திகதி Zoom தொழிநுட்பம் மூலம் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அது தற்போது பரப்பப்பட்டு வருவதாகவும், அவ்வாறான பொதுக்கூட்டத்தை தானோ அல்லது தனது கட்சியோ ஏற்பாடு செய்யவில்லை” என அமைச்சர் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். மேலும், தனது பெயரில் பணம் கேட்கும் இவ்வாறான மோசடியாளர்களுக்கு பணம் வழங்குவதை தவிர்க்குமாறும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://oruvan.com/money-laundering-in-the-name-of-minister-sunil-handunnethi/
-
பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ் அதிகாரி – காங்கேசன்துறை பகுதியில் பதற்றம்
பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ் அதிகாரி – காங்கேசன்துறை பகுதியில் பதற்றம் December 24, 2024 3:33 pm காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் பாலியல் உறவுக்கு அழைத்தமையனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள இளைஞர்களால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கப்பட்டு காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை மாவிட்டபுரம் தையலகத்தில் தைப்பதற்கு கொடுத்த சீருடையை எடுப்பதற்கு மது போதையில் சென்று தையலகத்தில் பணிபுரியும் பெண்களுடன் தன்னுடன் பாலியல் உறவுக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார். தொடர்ந்து குறித்த கடைக்கு வந்த இரு யுவதிகளிடமும் தன்னுடன் பாலியல் உறவுக்கு வருமாறு கொச்சைத் தமிழில் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குறித்த பெண் தனது கணவருக்கு தொலைபேசியில் தெரிவித்த நிலையில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கபட்டு பொதுமக்களால் முச்சக்கர வண்டி மூலம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளார். இந்நிலையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த பெண்ணை விசாரிக்க முற்பட்ட போது தன்னிடம் கார் உள்ளதாகவும் நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்னுடன் பாலியல் இச்சைக்கு வருகிறாயா? என கேட்டு மதுபோதையில் கலகம் செய்ததாக அப்பெண் கூறினார். இதேவேளை பெண்ணின் உறவினர் தன்னிடம் காணொளியும் உள்ளதாக தெரிவித்தார். உடனே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த பெண்ணின் கணவன் மீது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடாத்தினார். உடனடியாக பொலிஸார் குறித்த உத்தியோகத்தரை தடுத்து நிறுத்திய நிலையில் பொறுப்பதிகாரி தனது அறையினுள் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து சமரசம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதனை அடுத்து குறித்த விடயம் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டு பாரபட்சமற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு யாழ். பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின் த.கனகராஜ் அறிவுறுத்தியுள்ளார். தற்போது இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://oruvan.com/police-officer-invited-for-sexual-intercourse-tension-in-kankesanthurai-area/
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன்🎉🎂🎊
-
ஜனாதிபதி அநுரவுக்கு மனோ கணேசன் எம்.பி அவசர கடிதம்
ஜனாதிபதி அநுரவுக்கு மனோ கணேசன் எம்.பி அவசர கடிதம் December 24, 2024 07:38 pm லயன் குடியிருப்புகளிலிருந்து மக்களை வெளியேற்ற, தோட்ட நிர்வாகங்களுக்கு உடன் தடை விதிக்குமாறு கோரி தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளார். “ஜனாதிபதி அவர்களே, தோட்டங்களில் வாழும் மக்கள் இந்த நாட்டின் சட்டரீதியான குடிமக்கள் என்பது உங்களுக்கு தெரியும். இந்நிலையில், சுமார் 200 வருடங்களாக, தலைமுறை, தலைமுறையாக, லயன் குடியிருப்புகளில், வாழும் அப்பாவி ஏழை மக்களை தோட்ட நிர்வாகிகள், பல காரணங்களை சொல்லி வெளியேற்ற முயல்கிறார்கள். ஏற்கனவே நிர்க்கதி நிலையில் வசிக்கும் மக்களை வெளியே போக சொன்னால் அவர்கள் எங்கே போவார்கள்?” “தற்போது, இரத்தினபுரி, எஹலியகொடை, சன்டர்லேன்ட் தோட்டத்தில் இத்தகையை முயற்சி நடக்கிறது. நமது மக்கள் தோட்டங்களில் வேலை செய்கிறார்களோ, இல்லையோ, தோட்டங்களில் வாழும் மக்கள், எக்காரணம் கொண்டும், தோட்ட நிர்வாகிகளால் வெளியேற்ற படக்கூடாது என்ற அவசர தடை பணிப்புரையை தோட்ட நிறுவனங்களை நோக்கி, நீங்கள் உடனடியாக அறிவிக்க வேண்டும்.” “வெறுமனே தோட்டங்களில் வேலை செய்யவில்லை என்று வெளியேற்ற இது ஒன்றும் டிபார்ட்மென்ட் பணியாளர் வீடுகள் அல்ல. கடந்த காலங்களில் இத்தகைய முயற்சிகள் நடைபெற்ற போது ஸ்தலத்துக்கு சென்று நாம் அவற்றை எதிர்த்து போராடியுள்ளோம். அப்போது பாராளுமன்றத்தில் இவை பற்றி உங்களுடன் நான் பேசியுள்ளேன். இது உங்களுக்கு தெரியும். பெருந்தோட்டங்களில், வாழும் மக்களையும், தோட்டதொழிற்துறையையும் மாற்றி அமைக்கும் “சிஸ்டம் சேன்ச்” என்ற முறை மாற்றம் நடைமுறை ஆகும் வரை, தோட்டங்களில் வாழும் எவரையும் வெளியற்ற கூடாது. நாம் அதற்கு இடம் தர மாட்டோம்.” “அனுரகுமார அரசாங்கம், பெருந்தோட்டங்களில் நிலவும் சிஸ்டத்தை முழுமையாக மாற்றட்டும். புதிய காணி உரிமை வழங்க முன்னர், முதலில் அங்கே ஏற்கனவே வசிப்பவர்களை அடாத்தாக வெளியேற்றுவதை தடுக்கும் தடை உத்தரவை ஜனாதிபதி அனுரகுமார அறிவிக்கட்டும். தமிழ் முற்போக்கு கூட்டணி அதற்கு முழு ஒத்துழைப்புகளை வழங்கும்.” என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை விளித்து, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு, மனோ கணேசன் அனுப்பி வைத்துள்ள அவசர கடிதம் ஊடகங்களுக்கு வழங்க பட்டுள்ளது. இது பற்றி மனோ கணேசன் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது எங்களது ஜனநாயக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க விவகார உபதலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சந்திரகுமார், இரத்தினபுரி, எகலியகொடை, புசல்லாவ பிளான்டேசன் சன்டர்லேன்ட் தோட்டத்தில் வசிக்கும், எஸ். காந்திமதி, எம். தவகுமார் ஆகியோருக்கு இந்த தோட்ட நிர்வாகியால் அனுப்ப பட்டுள்ள கடித நகல்களை எனக்கு அனுப்பி, எனது கவனத்துக்கு இந்த விவகாரத்தை எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். இன்று பாராளுமன்ற சபை நடக்குமானால், உடனடியாக இதை சபையின் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பேன். தற்போது பாராளுமன்ற விடுமுறை. ஆகவே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு, அவசர கடிதம் எழுதியுள்ளேன். இரத்தினபுரி, எகலியகொடை, புசல்லாவ பிளான்டேசன் சன்டர்லேன்ட் நிர்வாகியால், அங்கே வசிக்கும் சம்பந்தபட்ட இருவருக்கு அனுப்ப பட்டுள்ள இக்கடிதங்களின் நகல்களையும், எனது கடிதத்துடன் இணைத்துள்ளேன். இவை அனைத்தும் எனது அலுவலக பணியாளர் மூலம் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் ஜனாதிபதி செயலகத்துக்கு கையளிக்க பட்டுள்ளன. வெள்ளை ஆட்சியாளர்களிடம் இருந்து உள்நாட்டு கம்பனி நிர்வாகம், தோட்டங்களை பெற்றுக்கொண்டு அதே ஆண்டான், அடிமைத்துவ நோக்கில் செயல்படுகிறது. அதன் பெயர் “மொடர்ன் ஸ்லேவரி” என்ற நவீன அடிமைத்துவம் ஆகும். இதுதான் இன்றைய பெருந்தோட்டங்களில் நிலவும் சிஸ்டம். இதை மாற்ற வேண்டும். இந்த சிஸ்டத்தை மாற்றுவது இலேசான காரியம் அல்ல. நாம் தமிழ் முற்போக்கு கூட்டணியாக இந்த சிஸ்டத்தை “ஏழு பேர்ச் காணி, தனி வீடு, மேலதிக பிரதேச சபைகள்” என படி படியாக மாற்றி வந்தோம். இனி இப்போது ஆட்சிக்கு வந்துள்ள அனுரகுமார அரசாங்கம், பெருந்தோட்டங்களில் நிலவும் சிஸ்டத்தை முழுமையாக மாற்றட்டும். புதிய காணி உரிமை வழங்க முன்னர், முதலில் அங்கே ஏற்கனவே வசிப்பவர்களை அடாத்தாக வெளியேற்றுவதை தடுக்கும் தடை உத்தரவை ஜனாதிபதி அனுரகுமார அறிவிக்கட்டும். தமிழ் முற்போக்கு கூட்டணி அதற்கு முழு ஒத்துழைப்புகளை வழங்கும். https://tamil.adaderana.lk/news.php?nid=197783