Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் சமூக நலத்திட்டம்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் நேற்று திங்கட்கிழமை(16) யாழ்ப்பாண மாநகரசபை சுத்திகரிப்பு உத்தியோகத்தர்கள் 44 பேருக்கான பாதுகாப்புக் காலணிகளும் , 10மேற்பார்வையாளர்களுக்கான பாதுகாப்புத் தலைக்கவசங்களும் வழங்கிவைக்கப்பட்டன. மேற்படி பொருட்களானவை லண்டனில் வசிக்கும் கனகசபாபதி விநாயகமூர்த்தி என்பவரால் அன்பளிப்பாக கலைப்பீட மாணவர் ஒன்றியமூடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அனர்த்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்திட்டங்கள் தேவைப்படுகின்றன. அவை இயன்றவரை பலரால் மேற்கொள்ளப்பட்டும் வருகின்ற நிலையில் அனர்த்தங்களினைத் தவிர்ப்பதற்கு களத்தில் நின்று போராடும் சுத்திகரிப்பு உத்தியோகத்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதென்பது அவர்களை ஊக்கப்படுத்துவதும் அனர்த்தத்தினை குறைப்பதற்குமான செயற்பாடாகும். கடந்த வெள்ள அனர்த்தம் , தற்போது எலிக்காய்ச்சல் என்பன மத்தியில் சமூகத்தின் பாதுகாப்பிற்காகச் செயற்படுபவர்களை வலுவூட்டுவதற்காக இவை வழங்கப்பட்டன. மேற்படி நிகழ்வில், கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் , யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் , யாழ்ப்பாண மாநகரசபை பொறியியலாளர் , யாழ் மாநகரசபை உத்தியோகத்தர்கள் , கலைப்பீட மாணவர்கள், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர். ( https://newuthayan.com/article/யாழ்._பல்கலைக்கழகக்_கலைப்பீட_மாணவர்_ஒன்றியத்தின்_சமூக_நலத்திட்டம்!
  2. யாழ். மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் பாதிப்பு! யாழ். மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 21 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் 11 பேரும் இந்நோய்க்காக சிகிச்சைபெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு 9 நோயாளர்களும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு 4 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆம் திகதி இரவு யாழ். போதனா வைத்தியசாலையில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் துன்னாலை கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இத்துடன் இதுவரை யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்களின் குருதி மாதிரிகள் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கும், கண்டி தேசிய வைத்தியசாலைக்கும் அனுப்பப்பட்டிருந்தன. இவர்களில் 7 பேருக்கு எலிக்காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் உயிரிழந்த கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இளைஞருக்கும் எலிக்காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக விவசாயிகளுக்கும், கடல்நீர் ஏரி மீன்பிடித் தொழிலாளர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. யாழ். மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் பணியாற்றும் சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்நோயினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள கால்நடைகளுக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய குருதி மாதிரிகளை ஆய்வு செய்வதற்கு கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் உதவி கோரப்பட்டுள்ளது என தெரிவித்தார். http://www.samakalam.com/யாழ்-மாவட்டத்தில்-எலிக்/
  3. மனோ உள்ளிட்ட நால்வர் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்பு! பத்தாவது பாராளுமன்றத்தில் நான்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிச் சபாநாயகர் கௌரவ (வைத்தியகலாநிதி) ரிஸ்வி சாலி அவர்கள் முன்னிலையில் இன்று (17) பதவிச் சத்தியம் செய்துகொண்டனர். ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக கௌரவ அர்ஜுன சுஜீவ சேனசிங்க, கௌரவ முகம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது, கௌரவ மனோ கணேஷன் ஆகியோரும், புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கௌரவ பைசர் முஸ்தாபா ஆகியோரும் பதவிச் சத்தியம் செய்துகொண்டனர். பிரதிச் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர்கள் கையொப்பமிட்டனர். கடந்த நவம்பர் 21 ஆம் திகதி பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றதுடன், அன்றைய தினம் புதிய உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்தனர். அதுவரை ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடைத்த நான்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கவில்லை. கடந்த 12 ஆம் திகதி இந்தப் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானியை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டிருந்தது. இதற்கு அமைய நான்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் மூவர் இன்றையதினம் பதவிச் சத்தியம் செய்தனர். அதேநேரம், புதிய ஜனநாயக முன்னணிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒருவருடைய பெயர் அறிவிக்கப்படாதிருந்ததுடன், குறித்த பதவிக்கான பெயர் கடந்த 11ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டது. இதற்கு அமைய அக்கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கௌரவ பைஸர் முஸ்தாபா இன்று பதவிச் சத்தியம் செய்துகொண்டார். இதற்கு முன்னர் கௌரவ அர்ஜுன சுஜீவ சேனசிங்க, கௌரவ மனோ கணேஷன் மற்றும் கௌரவ பைஸர் முஸ்தாபா ஆகியோர் இலங்கை பாராளுமன்றத்தின் உறுப்பினர்களாகப் பணியாற்றியுள்ளனர். -(3) http://www.samakalam.com/மனோ-உள்ளிட்ட-நால்வர்-பார/
  4. சீனாவின் ACWF துணைத் தலைவர், பிரதமர் ஹரிணியுடன் சந்திப்பு! adminDecember 17, 2024 அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் (ACWF) துணைத் தலைவியான சாங் டோங்மேய், பிரதமர் ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து, பெண்கள் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பரஸ்பர முயற்சிகள் குறித்து கலந்துரையாடியுள்ளார் சாங் டோங்மேய் மற்றும் அவரது தூதுக்குழுவினரை வரவேற்ற பிரதமர் அமரசூரிய, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீடித்த நட்புறவைப் பாராட்டியதுடன் பெண்களின் சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரப் பங்கேற்பு ஆகியவற்றில் பகிரப்பட்ட சவால்கள் மற்றும் வாய்ப்புகளை மையமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதில்இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong அவர்கள் உட்பட இலங்கை சீனத் தூதரகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கைக் குழுவில் பிரதமரின் செயலாளர் .பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளியுறவு அமைச்சின் கிழக்கு ஆசியாவிற்கான பணிப்பாளர் நாயகம் ருவந்தி தெல்பிட்டிய மற்றும் கிழக்கு ஆசியப் பிரிவின் பணிப்பாளர் உதானி குணவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்த்னர் https://globaltamilnews.net/2024/209370/
  5. இந்திய முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி! adminDecember 17, 2024 மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (16.12.24) பிற்பகல் புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்திய கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலில் இந்தியாவின் முன்னணி தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையில் முதலீடு செய்யுமாறு இந்திய தொழில் முனைவோரிடம் கோரிக்கை விடுத்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை விஸ்தரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்ததுடன், அதற்குத் தேவையான முதலீட்டு வசதிகளை வழங்க இலங்கை அரசாங்கம் உடன்பாடு தெரிவித்தது. தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவும் இந்த சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/209367/
  6. மாற்றத்துக்கான காலம் December 16, 2024 கருணாகரன் – தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததோடு கலங்கிப்போயிருக்கின்றன தமிழ்த்தேசியவாத சக்திகள். இனப்பிரச்சினைக்கு அது எத்தகைய தீர்வை முன்வைக்கப்போகிறது? மாகாணசபையின் எதிர்காலம் என்ன? என்பது தொடக்கம் வடக்குக் கிழக்கில் தமிழ்த்தேசிய அரசியலின் (பிராந்திய அரசியலின்) எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது? அடுத்து வரவுள்ள உள்ளுராட்சி சபை, மாகாணசபைகளுக்கான தேர்தல்களை எதிர்கொள்வது எப்படி? அதில் NPP யை முறியடிப்பதற்கான வியூகத்தை எவ்வாறு வகுக்கலாம்? என்பது வரையில் தலையைப் பிய்க்கும் அளவு நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ளன. அரசியலில் இந்த மாதிரி நெருக்கடிகள் ஏற்படுவதொன்றும் புதிதல்ல. பொதுவாக இரண்டு வகையான நெருக்கடிகள் உருவாகுவதுண்டு. ஒன்று, புறச்சூழலின் விளைவாக, எதிர்த்தரப்புகள், பிராந்திய மற்றும் சர்வதேச அரசியற் சூழலினால் ஏற்படும் நெருக்கடி. மற்றது, அகச்சூழலினால் (தவறுகளினால்) ஏற்படுகின்ற நெருக்கடி. இப்போது உருவாகியிருக்கும் நெருக்கடி இரண்டினாலும் உருவாகியவை. அல்லது இரண்டும் கலந்தவை. ‘ஜே.வி.பியையோ தேசிய மக்கள் சக்தியையோ பொருட்படுத்த வேண்டியதில்லை. தமது அரசியலுக்கு ஜே.வி.பியோ, என்.பி.பியோ சவாலாக என்றுமே இருக்கப் போவதில்லை‘ என்ற தவறான மதிப்பீட்டுடனேயே தமிழ்த்தேசியவாதிகள் இதுவரையும் இருந்தனர். அந்தத் தவறான மதிப்பீட்டுக்கு விழுந்திருக்கிறது பலமான அடி. அதைப்போல தாம் எப்படி நடந்தாலும் எதைச் செய்தாலும் அதையெல்லாம் ஏற்றுக் கொண்டு தமிழ் மக்கள் தமக்கே வாக்களிப்பார்கள். தம்மையே ஆதரிப்பார்கள் என்ற இறுமாப்புக்கும் விழுந்துள்ளது சவுக்கடி. ஆக இரட்டைத் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றன தமிழ்த்தேசியத் தரப்புகள். நடந்து முடிந்த தேர்தல்களில் தமிழ்த்தேசியவாதிகள் பின்தள்ளப்பட்டு, என்.பி.பி முன்னிலைக்குக் கொண்டு வரப்பட்டதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியலின் தவறான கணிப்புகள் நொருக்கப்பட்டன. இதனால் தடுமாறிப் போயுள்ளன இந்தத் தரப்புகள். என்றாலும் இந்தத் தோல்வியிலிருந்தும் வீழ்ச்சியிலிருந்தும் கற்றுக் கொள்ள முற்படாமல், ‘விழுந்தாலும் முகத்தில் பலமான அடியில்லை‘ என்ற மாதிரித் தொடர்ந்து கதை விட்டுக் கொண்டேயிருக்கின்றனர் தமிழ்த்தேசியவாதிகள். தமக்கு (தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு) ஏற்பட்ட தோல்வியானது, தாம் பல அணிகளாகப் பிளவுபட்டு நின்ற காரணத்தினாலே ஏற்பட்டது. எதிர்காலத்தில் மீளவும் ஒற்றுமைப்பட்டு, ஒன்றாக – ஒரே தரப்பாக நின்றால் மீண்டும் தம்மால் பெருவெற்றியைப் பெற முடியும். தமிழ்த்தேசியவாதத்தை வலுப்படுத்த இயலும். தமிழ் மக்களைத் (தேசமாகத்) திரட்ட முடியும்‘ என்று அறியாமையில் புலம்பிக் கொண்டிருக்கின்றன. இந்த அடிப்படையிற்தான் ‘உடனடியாக ஒற்றுமை அணியைக் கட்ட வேண்டும்‘ என்று கோரஸ்பாடத் தொடங்கியுள்ளன. இதற்கான முயற்சிகள் உடனடியாகவே ஆரம்பித்து விட்டதாக ரெலோ ஒரு தோற்றத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் வவுனியாவில் கூடிய ரெலோவின் உயர்மட்டக் குழு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மீள் நிலைப்படுத்த வேண்டும் என்று பேசியிருக்கிறது. அதற்கு முன் தமிழரசுக் கட்சியுடன் பேசி உடன்பாட்டுக்கு வருவதற்கு முயற்சிக்கிறது ரெலோ. ஆனால் இதற்கு தமிழரசுக் கட்சி வட்டாரத்திலிருந்து எந்தக் குரலும் எழவேயில்லை. இன்னொரு தரப்பாகிய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) தலைவர் கஜேந்திரகுமார் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார். புதிய அரசாங்கத்துடன் தீர்வைக் குறித்துப் பேசுவதற்கான தயாரிப்புத் தொடர்பாக இந்தச் சந்திப்பு நடந்தாகச் சொல்லப்பட்டாலும் அதற்கும் அப்பால் உள்ளுராட்சிச் சபை, மாகாணசபைத் தேர்தல்களின்போது தேசிய மக்கள் சக்தி தொடர் வெற்றிகளைப் பெறாமல் தடுப்பதற்கான வியூகத்தைப் பற்றிப் பேசவே இந்தச் சந்திப்புகள் என்று தெரிகிறது. சிறிதரனைச் சந்தித்த கையோடு கஜேந்திரன்கள் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனைக் கிளிநொச்சியில் சந்தித்துள்ளனர். இங்கும் அதே விடயம்தான் பேசப்பட்டுள்ளது. வெளியே தீர்வு யோசனைகளைப்பற்றியே பேசப்பட்டது எனக் கஜேந்திரன்கள் சொல்கிறார்கள். கஜேந்திரன்களின் கூற்றுப்படி பார்த்தால், தேசிய மக்கள் சக்தி இனப்பிரச்சினைக்கான தீர்வைப்பற்றி இன்னும் பேசவே தொடங்கவில்லை. அது அரசியலமைப்பு மாற்றம் பற்றியே பேசி வருகிறது. அரசியலமைப்பு மாற்றத்தை அடுத்தே அதிகாரப் பரவலாக்கம் அல்லது அரசியற் தீர்வைப் பற்றிய பேச்சுகள் நடக்கும் என எதிர்பார்க்கலாம். அதற்கு முன்பாக ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க அரசியல் ரீதியான பயணமாக இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார். டெல்லியில் இந்தியப் பிரதமர் மற்றும் இந்த அரசின் உயர்மட்டத்துடனான சந்திப்பில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தல் பற்றி எந்த வகையில் பேசப்படப்போகிறது என்பது முக்கியமானது. அதையும் சேர்த்தே இனப்பிரச்சினைக்கான தீர்வைப்பற்றிய எதிர்கால அணுகுமுறைகளும் நடவடிக்கைகளும் அமையும். அது கூட தேசிய மக்கள் சக்தி வைக்கப்போகின்ற தீர்வு யோசனைகள் அல்லது அரசியலமைப்பைப் பொறுத்தே எதையும் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். அதற்கு முன் இதுதான் நாங்கள் எதிர்பார்க்கின்ற தீர்வு. இதுதான் நமக்குக் கிடைக்க வேண்டும் என்று வவுனியாவுக்கு இப்பால் பேசுவதால் பயனில்லை. யதார்த்த நிலை இப்படியிருக்க, தமிழ் மக்களுக்கு தீர்வைக் குறித்துத் தாம் படு சீரியஸாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்றொரு தோற்றத்தைக் காட்ட முற்படுகிறார்கள் கஜேந்திரன்ஸ். தேர்தலுக்கு முன்பு கஜேந்திரன்கள் எந்தளவு ரெம்பறேச்சரில் முறுக்கிக் கொண்டிருந்தார்கள் என்று அவர்களை அவதானித்துக் கொண்டிருப்போருக்குத் தெரியும். ஒரு நாடு இரு தேசம் என்றும் அதை ஏற்றுக் கொள்ளாத எந்தச் சக்தியோடும் தங்களுக்கு வாழ்நாளில் அரசியல் உறவே இல்லை என்ற மாதிரியும் அவர்களெல்லாம் தமிழினத் துரோகிகள் எனவும் சுருள் விட்டுக் கொண்டிருந்தார்கள். அதெல்லாம் நடந்து முடிந்த தேர்தலோடு வடிந்து போய்விட்டது. அரும்பொட்டில் கிடைத்த வெற்றி – ஒரு உறுப்பினராவது கிடைத்ததே என்ற நிலை கஜேந்திரன்களின் ஞானக் கண்ணைத் திறந்து விட்டுள்ளது. உண்மையில் அவர்களுடைய இயலாமையே இதுவாகும். இது தேர்தலில் வெற்றியடைந்த அணிகளின் சந்திப்பு என்றால், தேர்தலில் தோல்விடைந்து படுக்கையில் கிடக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ஸ்ரீகாந்தாவின் தமிழ்த்தேசியக் கட்சி, விக்னேஸ்வரனின் தமிழ்த்தேசிய மக்கள் கூட்டணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்றவை அடுத்த கட்டம் என்ன என்றே தீர்மானிக்க முடியாமல் உள்ளன. இந்த நிலைமை நீடித்தால் உள்ளுராட்சி சபைகளில் தமக்கு ஒன்றிரண்டு இடங்களைப் பிடிப்பதே கடினமாக இருக்கும் என்று அவற்றுக்குப் புரிந்துள்ளது. மாகாணசபையில் சொல்லவே வேண்டாம். தேர்தலில் நிற்காமலே மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியதுதான். ஆனாலும் அரசியல் அபிலாசை விடாதல்லவா? அதனால் எப்படியாவது ஒரு கூட்டணியை அமைத்து விடுவோம் என்றே அவை சிந்திக்கின்றன. அதற்கு உடைந்து போயிருக்கும் இடுப்பு எலும்பைச் சரிப்படுத்த வேண்டும். அதாவது ஒரு பலமான தரப்போடுதான் கூட்டமைப்பை உருவாக்க முடியும். அப்படியென்றால் அது இப்போதைக்குத் தமிழரசுக் கட்சிதான். ஆனால், தமிழரசுக் கட்சியோ இந்தத் தரப்புகளைக் கண்டு கொள்ளாமல் விட்டுப் பிடிக்கிறது. ஆகவே அதை இப்போதைக்கு வழிக்கு உடனடியாகக்கொண்டு வர முடியாது. அப்படி வந்தாலும் தமிழரசுக் கட்சியே செல்வாக்கை – ஆதிக்கத்தைச் செலுத்தும். இனிமேல் சம பங்கெல்லாம் கிடைக்காது. தவிர, தமிழரசுக் கட்சிக்குள்ளும் ஏகப்பட்ட உள் வீட்டுப் பிரச்சினைகள் உண்டு. ஏற்கனவே கட்சி நீதிமன்ற வழக்கில் சிக்கியுள்ளது. அதை விட தலைமைப் போட்டியும் பிடுங்குப்பாடுகளும் தொடர்கின்றன. மாவை சேனாதிராஜா இப்போதும் தலைவரா இல்லையா? அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியோடு தமிழரசுக்கட்சியே திணறிக் கொண்டிருக்கிறது. மாவை சேனாதிராஜா விலகி, அந்த இடத்தில் சிறிதரன் வந்தால் நிலைமை மேலும் மோசமடையும். அவர் ஏனைய கட்சிகளைத் தன்னுடைய காலடியில்தான் வைத்திருக்க முயற்சிப்பார். ஏற்கனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக இருந்த காலத்தில், தமிழரசுக்கட்சிக்கு சமநிலையாக ரெலோவும் புளொட்டும் ஈபிஆர்எல்எவ்வும் இருந்தபோதே கிளிநொச்சியிலும் தீவுப் பகுதியிலும் இந்தக் கட்சிகளின் செயற்பாட்டுக்கும் செல்வாக்குக்கும் இடமளிக்காமல் தடுத்தவர் சிறிதரன். என்பதால் உடனடியாகத் தமிழரசுக் கட்சியோடு ஏனைய கட்சிகள் கூட்டு வைத்துக் கொள்ள முடியாது. மட்டுமல்ல, தேர்தலில் வெற்றியடைந்த தரப்புகள் மட்டும் அரசியல் பேச்சுகளுக்காக ஓரணியில் நிற்குமே தவிர, தோல்வியடைந்த தரப்புகளையும் இணைத்துக் கொண்டு செல்ல முடியாது என்று இந்த அணிக்குள்ளிருந்து கலகக் குரல்கள் வேறாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இதேவேளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சிதான் உள்ளுராட்சித் தேர்தலுக்காக வெளியேறியது. தாம் ஒரு போதுமே வெளியேறவில்லை. ஆகவே மெய்யான தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தாமே என்று பிடிவதாகமாகச் சொல்லிக் கொண்டிருந்தவை, ரெலோவும் ஈபிஆர்எல்எவ்வும். இருந்தும் அவை ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (DTNA) என்றே உத்தியோகபூர்வமாகத் தம்மைக் குறிப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படியெல்லாம் கசப்பான பிராந்தியமொன்றிருக்கும்போது அதை எளிதாகக் கடந்து வருமா தமிழரசுக் கட்சி என்பது கேள்வியே! அப்படித்தான் தமிழரசுக் கட்சி இணங்கி வந்தாலும் அது தோற்றுப்போன தரப்புகளுடன் எந்தளவுக்கு இணங்கி ஒட்டும் என்பது இன்னொரு கேள்வியாகும். இப்படி நெருக்கடிகள் நிறைந்த யதார்த்தப் பரப்பிருக்கும்போது அதைப் பொருட்படுத்தாமல் ஒற்றுமையைப் பற்றிக் கனவு காண்கிறார்கள் சிலர். இதை விட தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டுமானால், தனியே ஆயிரம் அணிகளின் சங்கமம் என்று சொல்லிக் கொண்டிருக்காமல் எந்த அடிப்படையில், எதற்காக, எந்த இலக்கை எட்டுவதற்காக எப்படியான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற தெளிவு இவற்றுக்கு ஏற்பட வேண்டும். ஏறக்குறைய ஜே.வி.பி தன்னைப் பரிசோதனை செய்து என்.பி.பியாக எப்படி உருவாகியதோ அப்படியாவது இருக்க வேண்டும். தோல்விகள் ஏற்படுவது வழமை. அதைச் சரியான முறையில் மதிப்பிட்டால்தான், ஆய்வுக்குட்படுத்தினால்தான் வெற்றியைப் பெற முடியும். சமாளிக்க முற்பட்டால் படுதோல்விதான் கிடைக்கும். நல்ல உதாரணம், ஐ.தே.க, சு.க போன்றவையாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் போன்றவற்றில் வடக்குக் கிழக்கில் என்.பி.பி வெற்றியைப் பெற்றது என்றால், அதற்குக் காரணம், தமிழ்த்தேசியத் தரப்புகளின் அரசியல் வெறுமையும் அவற்றின் மீது ஏற்பட்ட நம்பிக்கையீனமுமேயாகும். தமிழ்த் தேசியத் தரப்புகள் புதிய சூழலைக் கருத்திற் கொண்டு தம்முடைய அரசியலை வடிவமைக்காமையே பிரதான காரணமாகும். குறிப்பாக போருக்குப் பிந்திய சூழலையும் புலிகளுக்குப் பிந்திய நிலைமையையும் இவை கணக்கிடத் தவறின. பதிலாக 1970 களுக்குத் தமது அரசியலைப் பின்னோக்கி இழுத்துச் சென்றன. இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் எந்த முயற்சி எடுத்தாலும் அதனால் பயன் கிட்டப்போவதில்லை. இது அவர்களுடைய அரசியல் இயலாமையையும் அரசியல் வரட்சியையுமே காட்டுகிறது. வரலாற்றிலிருந்தும் மக்களுடைய மனங்களிலிருந்தும் எதையும் படித்துக் கொள்ள விரும்பாத தன்மையைத் தெளிவாகச் சொல்கிறது. தமிழ்த்தேசியவாத அரசியற் கட்சிகள் மட்டுமல்ல, தமிழ் ஊடகங்கள், அரசியற் பத்தியார்களிற் பலரும் கூட அப்படித்தான் தவறாகக் கருதிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. உண்மையான காரணத்தை ஆராய்ந்தறிந்து கொள்வதற்கு யாருமே தயாராக இல்லை. மக்களின் மனமாற்றத்துக்கு உண்மையான காரணம், வெறுமையான தமிழ்த்தேசியவாத அரசியலின் மீது ஏற்பட்ட சலிப்பும் வெறுப்புமேயாகும். முக்கியமாக அதனுடைய உள்ளடக்கப் போதாமை, புதிய சவால்களைப் புரிந்து கொண்டு செயற்படக் கூடிய வளர்ச்சியின்மை, செயற்திறனின்மை, நம்பிக்கையின்மை போன்ற பல பாதகமான விடயங்கள் தமிழ்த்தேசியவாத அரசியற் கட்சிகளை மக்களிடமிருந்து தூரத் தள்ளியுள்ளன. இவற்றை இனங்கண்டு, புரிந்து கொண்டு தம்மை மீள்நிலைப்படுத்தாமல் வெறுமனே ஒற்றுமைக் கோசம் போடுவதாலோ ஒற்றுமை என்ற நாடகத்தை ஆடுவதாலோ மாற்றமேதும் நிகழப்போவதுமில்லை. வெற்றி கிடைக்கப்போவதுமில்லை. வேண்டுமானால், ஒரு செயற்கையான கட்டமைப்பையோ கூட்டமைப்பையோ தற்காலிகமாக உருவாக்கி, அடுத்து வருகின்ற உள்ளுராட்சி, மாகாணசபை, பாராளுமன்றத் தேர்தல்களில் குறிப்பிட்டளவு தற்காலிக வெற்றியை இவர்கள் பெறலாம். அது தொடர்ந்தும் நீடிக்காது. மட்டுமல்ல, அந்த வெற்றி முன்னரைப்போல சில கட்சிகளின், அணிகளின், சில நபர்களின் வெற்றியாக அமையுமே தவிர, தமிழ் மக்களின் அரசியல் வெற்றியாக அமையாது. வடக்குக் கிழக்கில் என்.பி.பி பெற்ற வெற்றிக்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். அவை சரியானவையா தவறானவையா என்பது ஒருபுறமிருக்கட்டும். தாம் ஏன் தோற்கடிக்கப்பட்டோம் என்பதைச் சரியாக ஆராய்ந்து அறிய வேண்டும். அதற்கென்ன வழிவகை என்பதை விஞ்ஞானபூர்வமாகக் கண்டறிய வேண்டும். இல்லையெனால் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் போக வேண்டியதுதான். https://arangamnews.com/?p=11545
  7. பஷர் அல்-அசாத்தின் ஆட்சியில் 25 கோடி அமெரிக்க டொலர்கள் ரஷ்யாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்! பதவியிலிருந்து விலக்கப்பட்ட சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சிக் காலத்தில், சுமார் 25 கோடி அமெரிக்க டொலர்கள் ரஷ்யாவிற்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக 'பைனான்சியல் ரைம்ஸ்' விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு பகுதியில் இந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன. 100 டொலர் நாணயங்கள், மற்றும் 500 யூரோ நோட்டுக்களைக் கொண்ட தொகுதியாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் விபரங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவிற்கு எடுத்துச் செல்லப்பட்ட இந்த பணத்தொகை, மொஸ்க்கோவில் உள்ள வங்கியில் வைப்பிடப்பட்டன. இந்த நிலையில் ரஷ்யாவில் உள்ள அசாத்தின் உறவினர்கள், ரகசியமாக சொத்துக்களை வாங்கியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணபரிமாற்றல்கள் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டதற்கு இது நல்லதொரு உதாரணம் என 'பைனான்சியல் ரைம்ஸ்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை,கடந்த 2011 ஆம் ஆண்டு சிரிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் இடம்பெற்றன. இந்த போராட்டங்களை அடக்குவதற்கு இராணுவத்தின் பலத்தை அவர் உபயோகித்தார். அந்த காலகட்டத்தில் 5 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் இடம்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.hirunews.lk/tamil/390949/பஷர்-அல்-அசாத்தின்-ஆட்சியில்-25-கோடி-அமெரிக்க-டொலர்கள்-ரஷ்யாவிற்கு-எடுத்துச்-செல்லப்பட்டுள்ளதாக-தகவல்
  8. காவோலைகளுக்கு மேல் காப்பற் வீதி adminDecember 16, 2024 சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் வீதியின் சில இடங்களில் காவோலைகள் போடப்பட்டு , அதன் மீது கற்கள் பரவப்பட்டு , வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வீதி புனரமைப்பின் போது , காவோலைகள் போடப்பட்டு கற்கள் பரவப்படும் முறையை தாம் முதல் முதலாக நேரில் காண்பதாகவும் , இதற்கு காரணம் என்ன என வீதி புனரமைப்பு பணியாளர்களிடம் கேட்ட போது , அதற்கு அவர்கள் விளக்கம் கூறவில்லை எனவும் , அதனால் உரிய தரப்பினர் இது தொடர்பில் விளக்கம் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். https://globaltamilnews.net/2024/209325/
  9. மயோட்டியில் சூறாவளி: நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்! December 16, 2024 சனிக்கிழமையன்று பிரான்சின் இந்தியப் பெருங்கடல் பகுதியான மயோட்டியைத் (Mayotte) தாக்கிய சூறாவளியில் பல நூறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அப் பகுதிக்கான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சிடோ சூறாவளி மணிக்கு 225 கிலோ மீற்றர் வேகத்தில் கடந்து சென்றதுடன், மயோட்டியை முழுவதுமாக தரைமட்டமாக்கியது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டில் மடகாஸ்கருக்கு வடக்கே பிரெஞ்சு இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டத்தைத் தாக்கிய மிகத் தீவிரமான புயலாக மயோட்டி மீது சூறாவளி வீசியதாக பிரான்ஸ் வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது. பிரெஞ்சு உள்துறை அமைச்சர் புருனோ ரீடெய்லியோ குறைந்தது 11 பேர் சூறாவளி தாக்கம் காரணமாக உயிரிழந்ததாக ஆரம்பத்தில் -கூறினார். பின்னர், இறப்பு எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக மயோட் அதிகாரிகளின் தகவல்களை மேற்கொள்ளிட்டு AFP செய்திச் சேவை கூறியுள்ளது. ஆனால் உள்ளூர் ஊடகங்களுடன் பேசிய தீவின் அரசியற் தலைவர் Francois-Xavier Bieuville, ‍‍சூறாவளி தாக்கத்தினால் மயோட்டி முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நிச்சயமாக நூற்றுக்கணக்கில் இருக்கும் என்று கூறினார். இதனிடையே, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மாயோட் மக்களுக்கு பிரான்ஸ் “உடன் இருக்கும்” என்றும் 250 மீட்புப் பணியாளர்களை அனுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மடகாஸ்கரின் வடமேற்கில் அமைந்துள்ள மயோட் ஒரு முக்கிய தீவு, கிராண்ட்-டெர்ரே மற்றும் பல சிறிய தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும். தீவின் 300,000 அல்லது அதற்கு மேற்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் உலோக தகரங்களைக் கொண்ட கூரைகளையுடைய குடிசைகளில் வாழ்கின்றனர். இந்த நிலையில் சூறாவளி தாக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். மின்சாரம், தண்ணீர் மற்றும் இணைய இணைப்புகள் அனைத்தும் முடங்கியுள்ளன. பாரிஸில் உள்ள அரசாங்கம் பொருட்கள் மற்றும் அவசரகால பணியாளர்களுடன் ஒரு இராணுவ போக்குவரத்து விமானத்தை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சனிக்கிழமை (14) காலை சூறாவளி முழு பலத்துடன் தாக்குவதற்கு முன்பே, மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதாகவும், கட்டிடங்களின் கூரைகள் தூக்கி ஏறியப்பட்டதாகவும், மின் கம்பிகள் சாய்ந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 1934 ஆம் ஆண்டிலிருந்து தீவு இதுபோன்ற கடுமையான அனர்த்த நிலைமையை சந்தித்ததில்லை என்று உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர். https://www.ilakku.org/மயோட்டியில்-சூறாவளி-நூற/
  10. இன்னொரு மொழியைக் கற்பதால் நாம் குறைந்துவிடப்போவதில்லை. adminDecember 15, 2024 இன்னொரு மொழியைக் கற்பதால் நாம் குறைந்துவிடப்போவதில்லை. மாறாக நாம் வளர்வோம். எமது திறனை – ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சுதுமலை குபேரமஹாலில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சூரிய நிறுவகத்தின் ஸ்தாபகரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவும் கலந்துகொண்டார். அத்துடன் சுவிஸர்லாந்து தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஒலிவர் கௌரவ விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிய பின்னர் பிரதம விருந்தினர் உரையாற்றும் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டச் செயராக பணியாற்றிய காலத்தில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சராக இருந்தவர் கரு ஜயசூரிய. அவர் சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கிய ஒருவர் கரு ஜயசூரியவைப்போன்று நினைவுகூரப்படும் மற்றொருவராக மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இருக்கின்றார் என் யாழ். மாவட்டச் செயலராக பணியாற்றியபோது நிதி அமைச்சராக இருந்த அவர் பல்வேறு வகைகளிலும் உதவினார். இன ஐக்கியத்துக்காகவும் தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும் அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் பாராட்டுக்கள். சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த நாட்டில் எங்கும் சென்று சேவையாற்றக் கூடிய வாய்பை உருவாக்கும். கூடுதலான மொழியறிவு எங்களை மேம்படுத்த உதவும். இதன் ஊடகாக ஆய்வுக்கான திறன் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளை வளர்க்க அது உதவும் என மேலும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாணவர்களால் பல்வேறு கலை நிகழ்வுகள் சிங்கள மொழியிலும் நடத்தப்பட்டன. https://globaltamilnews.net/2024/209309/
  11. இந்திய இராஜதந்திர கலந்துரையாடல்களை ஆரம்பித்த ஜனாதிபதி December 15, 2024 11:39 pm இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தங்கியிருக்கும் புதுடில்லி ITC MAURYA ஹோட்டலுக்கு வருகைத் தந்த இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் (Dr.S. Jaishankar), மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தியா – இலங்கை பொருளாதார ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ளல் மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுபடுத்திக்கொள்வது தொடர்பில் இந்திய நிதி, நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனான இடையிலான சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அதேநேரம் இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அதிகளவில் அழைத்து வருவது மற்றும் இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உடனான சந்திப்பு சிநேகபூர்வமாக இடம்பெற்றதோடு, இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியாவின் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்திக்கொள்வது குறித்தும் அதில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், இந்நாட்டின் சுற்றுலா, முதலீடு மற்றும் வலுசக்தி துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவற்கும் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இதன்போது இணக்கம் தெரிவித்தார். மீன்பிடித்துறை மற்றும் தேசிய ஒற்றுமை மேம்பாடு உள்ளிட்ட இருநாடுகளுக்கும் அன்னியோன்யமான விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. அதனையடுத்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் (Shri Ajith Doval) ஜனாதிபதியை சந்தித்து வலயத்தின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இதன்போது கலந்துகொண்டனர். https://tamil.adaderana.lk/news.php?nid=197356
  12. சிரியாவில் இருந்து தனது இராணுவத்தை மீளப் பெறும் ரஷ்யா December 15, 2024 12:45 pm ரஷ்யா வடக்கு சிரியாவின் முன்னணிப் பகுதிகளிலிருந்தும், அலவைட் மலைகளில் உள்ள நிலைகளிலிருந்தும் தனது இராணுவத்தை மீளப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிரியாவில் உள்ள அதன் இரண்டு முக்கிய தளங்களை விட்டு வெளியேறவில்லை என்று நான்கு சிரிய அதிகாரிகள் ரொயிட்டர்ஸிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். ரஷ்யாவுடன் நெருங்கிய கூட்டணியை உருவாக்கிய அசாத்தின் ஆட்சிக்கவிழ்ப்பு, ரஷ்யாவின் தளங்களான லடாகியாவில் உள்ள ஹ்மெய்மிம் விமானத் தளம் மற்றும் டார்டஸ் கடற்படை தளத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை செயற்கைக்கோள் காட்சிகள், ஹ்மெய்மிம் தளத்தில், திறந்த நிலையில், ஏற்றத் தயாராகி வரும் நிலையில், குறைந்தது இரண்டு அன்டோனோவ் AN-124 விமானங்கள் இருப்பதைக் காட்டுகிறது. சனிக்கிழமை லிபியாவிற்கு குறைந்தது ஒரு சரக்கு விமானம் பறந்ததாக, சிரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரஷ்யர்களுடன் தொடர்பு கொண்ட சிரிய இராணுவ மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள், மொஸ்கோ தனது படைகளை முன் வரிசைகளில் இருந்து பின்வாங்கி, சில கனரக உபகரணங்களையும் மூத்த சிரிய அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. ஆனால், நிலைமையின் தீவிரம் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த வட்டாரங்கள், ரஷ்யா தனது இரண்டு முக்கிய தளங்களிலிருந்து வெளியேறவில்லை என்றும், தற்போது அவ்வாறு செய்யும் எண்ணம் இல்லை என்றும் கூறின. சில உபகரணங்கள் மொஸ்கோவிற்குத் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய இடைக்கால நிர்வாகத்திற்கு நெருக்கமான மூத்த கிளர்ச்சி அதிகாரி ஒருவர், சிரியாவில் ரஷ்ய இராணுவ இருப்பு மற்றும் அசாத் அரசாங்கத்திற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான கடந்தகால ஒப்பந்தங்கள் பற்றிய பிரச்சினை விவாதிக்கப்படவில்லை என்று ரொய்ட்டர்ஸிடம் கூறினார். “இது எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கான விஷயம், சிரிய மக்களே இறுதி முடிவை எடுப்பார்கள்” என்று அந்த அதிகாரி கூறினார். “எங்கள் படைகள் இப்போது லடாகியாவில் உள்ள ரஷ்ய தளங்களுக்கு அருகில் உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார். தளங்கள் குறித்து சிரியாவின் புதிய ஆட்சியாளர்களுடன் ரஷ்யா விவாதித்து வருவதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. சிரியாவின் புதிய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், ரஷ்யா அதன் தளங்களிலிருந்து விலகவில்லை என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ரஷ்ய வட்டாரம் தெரிவித்துள்ளது. https://oruvan.com/russia-to-withdraw-its-troops-from-syria/
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🎉🎂🎊
  14. தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை! சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்குத் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றைய தினம் இந்தியா செல்லவுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 75 வருட காலமாகப் பின்பற்றப்பட்டுவந்த கொள்கை மற்றும் தீர்வு காணப்படாத இனப்பிரச்சினை என்பன பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி, அரசியல் ரீதியிலும் வங்குரோத்து நிலைக்கு இலங்கையைக் கொண்டுவந்துள்ளன. எனவே, நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டுமாயின், எதிர்காலத்தை முன்னிறுத்திய கொள்கைகளும் முன்னரைக் காட்டிலும் மாறுபட்டவையாக இருக்கவேண்டும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஆணையானது 'முழுமையான கட்டமைப்பு மாற்றத்தைக் கோருவதாக அமைந்திருப்பதுடன், இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள் இனிமேல் பொருந்தாது என்பதையும் காண்பித்திருக்கிறது. இந்நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு பிரதான காரணமாகும். 13 ஆவது திருத்தத்தை ஏற்பதன் மூலம் தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பை அங்கீகரித்திருப்பதனால் இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு இலங்கை அரசு வரக்கூடும். ஆகையினாலேயே 13 ஆம் திருத்தத்தை ஏற்க மறுப்பதுடன், ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு அப்பால் செல்வதன் ஊடாகவே தீர்வை அடைந்துகொள்ளமுடியும் என்ற விடயத்தைப் பெரும்பான்மை தலைமைகள் மக்களிடம் கூற வேண்டும் என வலியுறுத்துகிறோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவின் இடைக்கால முன்மொழிவுகளை பூரணப்படுத்துவதாக வாக்குறுதியளித்திருக்கிறது. இருப்பினும் இந்த முன்மொழிவுகள் பொதுவில் 'ஏக்கிய இராச்சிய' முன்மொழிவு என அடையாளப்படுத்தப்படுவதுடன், அது ஒற்றையாட்சி அரசைக் குறிக்கிறது. இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிடம் ஒருமித்த இலங்கைக்குள் சிங்கள மற்றும் தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்கக் கூடியவாறான சமஷ்டி கட்டமைப்பு தொடர்பான எமது முன்மொழிவுகளை சமர்ப்பித்தோம். இலங்கை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் உதவிக்கரம் தீட்டியதன் ஊடாக பெரும்பான்மையான சிங்கள மக்கள் மத்தியில் இந்தியா நன்மதிப்பைப் பெற்றிருக்கிறது. எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு உட்பட்ட முன்மொழிவுகளை நிராகரிப்பதற்கும், அதற்குப் பதிலாகத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கூடியவாறான சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்கும் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது. https://www.hirunews.lk/tamil/390819/தமிழ்-மக்களுக்கு-அவசியமான-ஆதரவினை-இந்தியா-வழங்கவேண்டுமெனக்-கோரிக்கை
  15. மன்னார் மறை மாவட்ட ஆயராக அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் adminDecember 14, 2024 மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். -மன்னார் மறைமாவட்ட ஆயராக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டு,அச் செய்தியை திருத்தந்தையின் இலங்கைக்கான பிரதிநிதி ஊடாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை க்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (14) மாலை 4.15 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட அறிவிப்பை அறிவித்தார்.இதன் பேராலயத்தின் மணியோசை எழுப்பப்பட்டது.இதன் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர்,மறைமாவட்ட அருட்தந்தையினர், அருட்சகோதரிகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டிருந்தனர். -மன்னார் மறைமாவட்டம் உருவாகி 43 வருடங்களை கடக்கும் நிலையில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த முதல் ஆயராக அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தனது 75 வது வயதில் ஓய்வு பெற்றுச் செல்ல உள்ள நிலையில் மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/209278/
  16. மேம்பட்ட பல வசதிகளுடன் காங்கேசன்துறை நாகை படகுசேவை ஜனவரியில் மீள ஆரம்பம்! adminDecember 15, 2024 காங்கேசன்துறைக்கும் நாகைப்பட்டினத்துக்கும் இடையிலான படகுசேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறுநாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின் தலைவரும், காங்கேசன்துறை, நாகைப்பட்டனம் படகுசேவை முதலீட்டாளருமான பொன்னுசாமி சுந்தர்ராஜ் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (15.12.24) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், “எமது பிறதொரு நிறுவமான சுபம் நிறுவனம் காங்கேசன்துறை, நாகைப்பட்டினத்துக்கு இடையிலான படகுசேவையில் முதலீடுகளைச் செய்துள்ளது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த படகுசேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதும் காலநிலை முன்னெச்சரிக்கையின் காரணமாக தற்காலிகமாக சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இம்மாதம் 23ஆம் திகதி வங்களா விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக்குவதற்கான நிலைமைகளும் உள்ளன. இதனால் 19ஆம் திகதி மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடாகியிருந்த படகு சேவையை சிறிய காலத்திற்கு ஒத்திவைத்துள்ளோம். இந்நிலையில் எதிர்வரும் ஜனவரியில் மீண்டும் காங்கேசன்துறைக்கும் நாகைப்பட்டனத்துக்கும் இடையிலான படகுசேவை ஆரம்பிக்கப்படவுள்ளதோடு இதனை சுபம் நிறுவனமே நேரடியாக கையாளப்போகின்றது. நாங்கள் படகுசேவையை கடந்த மூன்று மாதகாலத்தில் முன்னெடுத்த போது சிறுசிறு சறுக்கல்களும் காணப்பட்டுள்ளன. எனினும் அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்புக்களுடன் சிறப்பாக எமது சேவையை கடந்த காலத்தில் முன்னெடுக்க முடிந்திருந்தது. மீள படகுசேவை ஆரம்பிக்கப்படும்போது, சில மேம்பட்ட வசதிகளை முன்னெடுத்துள்ளோம். முக்கியமாக சுற்றுலாப்பயணிகளை அதிகரிக்கும் நோக்கத்தில் பயணக்கட்டணங்களை மாற்றியமைத்துள்ளோம். தற்போது இருவழிக் கட்டணமாக 9700 இந்திய ரூபா அறவிடப்படுகின்றது. அதனை நாம் 8500இந்திய ரூபாவாக மாற்றியமைப்பதோடு பத்து கிலோகிராம் எடையுடைய பொதியையும் இலவசமாகக் கொண்டுவர முடியும். மேலதிகமாக அதிக எடையுடைய பொதிகளை கொண்டுசெல்வதாக இருந்தால் அதற்கான மேலதிக கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது. அதற்கான தொகைகள் எமது உத்தியோகபூர்வமான இணைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணப்பொதிகளுக்கான முற்பதிவுகளை இணையத்தின் ஊடாக மட்டுமே மேற்கொள்ள முடியும் அதேநேரம், நாகைப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் அதிகாலையிலேயே வருகை தருவதாலும், அதேபோன்று காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் முற்பகலில் பயணத்தை ஆரம்பிப்பதாலும் அவர்களுக்கான உணவுத்தேவையை பூர்த்திசெய்வதில் நெருக்கடிகள் இருந்தன. இதனால் நாம் காலையில் இட்லி, பொங்கல், போன்ற உணவுகளையும் நண்பகலில் மரக்கறி புரியாணி போன்ற மாறுபட்ட உணவுகளையும் பயணக்கட்டணத்துக்கு உட்பட்டதாகவே வழங்கவுள்ளோம். அதேபோன்று, நேரடியாக வருவிக்கப்பட்ட பசும்பாலை பயன்படுத்தி தேநீர் மற்றும் கோப்பி ஆகியவற்றையும் குளிர்பாணங்களையும் இலவசமாக வழங்கவுள்ளோம். மேலும், வரிச்சலுகையுடன் பொருட்கள் விற்பனை நிலையமொன்றையும் நாம் படகில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ளது. சுபம் நிறுவனம் நேரடியாகவே படகுசேவையை கையாளுவதன் காரணமாக பயணச்சீட்டுக்கள் மற்றும் குறுகிய பயணத்திட்டங்களை மையப்படுத்திய புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. sailsubham.com என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இணையத்தளத்தில் குறுகிய பயணத்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. உதாரணமாக, இரண்டு இரவு மூன்று பகல் தங்குமிட மற்றும் உள்ளக போக்குவரத்து வசதிகளுடன் காணப்படுகின்றது. இதற்கான தொகை இந்திய ரூபாவில் 15ஆயிரமாக காணப்படுவதோடு இலங்கை ரூபாவில் 50ஆயிரம் வரையில் இருக்கின்றது. இவ்விதமான திட்டங்கள் நடுத்தர பயணிகளை மையப்படுத்தியதாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாணம் இயற்கை வளங்கள் நிறைந்ததாக காணப்படுகின்றது. பிரசித்திபெற்ற சமயத்தலங்கள், வரலாற்று இடங்கள், கலாசார முக்கியத்துவ பகுதிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட சிறப்புக்களை கொண்டிருக்கின்றன. சுற்றுலாப்பயணிகளை இந்தப்பகுதிகள் மிகவும் கவர்ந்தவையாக இருக்கின்றன என்பதை எம்மால் உறுதியாகக்கூற முடிகின்றது. ஆகவே குறைந்த செலவில் சுற்றுலாப்பயணிகள் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளதோடு தொடர்ச்சியான படகுசேவையை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். https://globaltamilnews.net/2024/209293/
  17. தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்! நிலாந்தன் "ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்" adminDecember 15, 2024 கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கிளிநொச்சி தொண்டமான் நகரில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தனக்கு முன்னால் நின்ற இளைஞரிடம் கேட்டிருக்கிறார் “யாருக்கு வாக்களிக்கப் போகிறாய்?” “ஊசிக்குத்தான்” என்று இளைஞர் பதில் சொல்லியுள்ளார். “ஊசிக்கா?” இவர் திரும்பக் கேட்க, “ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்” என்று அவர் சிரித்துக் கொண்டு பதில் சொல்லியுள்ளார். உண்மை. அர்ஜுனா சிரிக்க வைக்கிறார். கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து, வைத்தியசாலையின் பணிப்பாளரோடு அவர் வாக்குவாதப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் ஒரு சபை குழப்பி போல நடந்துகொண்டார். இவற்றைப் பார்த்துச் சிரிக்கும் ஒவ்வொரு தமிழரும் அர்ஜுனாவை மட்டும் பார்த்துச் சிரிக்கவில்லை. தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஏனென்றால் அவருக்கு வாக்களித்தது தமிழ் மக்கள்தான். தமிழரசியல், குறிப்பாக ஆயுதப் போராட்ட அரசியல் அதிகம் சீரியஸானது. ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான கடந்த 15 ஆண்டு கால அரசியலிலும் சீரியஸ் அதிகம். கலகலப்பு, பம்பல்,சிரிப்பு குறைவு. கடந்த 15 ஆண்டுகளாக அவ்வாறு அரசியலை சிரிக்கும் விடயமாக மாற்றும் கார்ட்டூனிஸ்டுகள் குறைந்த ஒரு தமிழ்த் தேசியப் பரப்பில் அர்ஜுனா ஒரு “கார்ட்டூன் கரெக்ராக”, “கரிக்கேச்சராக” -(caricature) அதாவது கேலிச்சித்திரமாக மேலெழுந்துள்ளார். அவர் எல்லாவறையுமே கரிக்கேச்சர் ஆக்கிவிடுகிறார். தன்னையும் சேர்த்து. அவர் மருத்துவ நிர்வாகத் துறைக்குள் வேலை செய்தவர். ஒரு போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதென்றால், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற ஒழுங்குமுறை தெரியாதவராக இருக்க முடியாது. அதை அவர் மாகாண நிர்வாகத்துக்கு ஊடாக அணுகியிருக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சுக்கூடாக அணுகியிருக்கலாம். இரண்டையும் அவர் செய்யவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக தனக்கு மக்கள் அதிகாரம் கிடைத்திருப்பதாக அவர் கருதுகிறார். அது அதிகாரம் அல்ல. அது ஒரு பொறுப்பு. அந்தப் பொறுப்பை உணர்ந்து அவர் நடப்பதாகத் தெரியவில்லை. இதனால் அரச அதிகாரிகள் மீதும் திணைக்களங்களின் மீதும் அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அவற்றின் கனதியை இழக்கின்றன. அரச உயர் அதிகாரிகளும் திணைக்களங்களும் கேள்விக்கு அப்பாற்பட்டவை அல்ல. அர்ச்சுனா கேட்கும் கேள்விகளை ஒரு பகுதி மக்கள் ரசிக்கிறார்கள்; ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். ஆனால், அக்கேள்விகளை எனது முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதுபோல, அர்ச்சுனா “மிஸ்ரர்.பீனின்” பாணியில் கேட்கும்போது அக்கேள்விகள் அவற்றின் சீரியஸ்தனத்தை இழந்துவிடுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அவர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்து கொண்ட விதம், அவருக்கும் மருத்துவர் சத்தியமூர்த்திக்கும் இடையிலான முரண்பாடு, அவருக்கும் அரச உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் போன்றவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது, அவர்,யாருக்கும் பொறுப்புக்கூறத் தேவையில்லாத ஒருவராகத் தன்னை கருதுகிறாரா என்று கேள்வி எழுகிறது. அர்ஜுனாவை மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கும் சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள,ஆங்கில ஊடகங்களும் அவருக்கு வாக்களித்த தமிழ் மக்களைத்தான் மறைமுகமாக விமர்சிக்கின்றன. தென்னிலங்கையிலும் மேர்வின் டி சில்வாக்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சுயேச்சைகள் அல்ல. கட்சித் தலைமைக்குக் கீழ்ப்பட்டவர்கள். ஆனால் அர்ஜுனா யாருக்கும் கட்டுப்படாத, யாரையும் பொருட்படுத்தாத ஒருவரா? மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்றில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படிப் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதனை அவருக்கு யார் கற்றுக் கொடுப்பது? அல்லது அவர் யாரிடமிருந்தாவது கற்றுக்கொள்ளத் தயாரா? ஒன்றில் சபை நாகரீகம் தெரிய வேண்டும். அல்லது வெட்கம்,அவையடக்கம் இருக்க வேண்டும். இவை எவையுமே இல்லாத ஒருவரை ஏன் தமிழ் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அல்லது அவரைப்போன்ற ஒருவரைத் தெரிந்தெடுக்கும் அளவுக்கு தமிழ்மக்களை நிர்பந்தித்த காரணிகள் எவை? அர்ஜுனா தற்செயலாக மேலெழவில்லை. விபத்தாக மேலெழவில்லை. அவர் தெரிந்தெடுக்கப்படுவதற்கான அகப்புற நிலைமைகளை உருவாக்கிய காரணிகள் உண்டு. தமிழ் அரசியல் சமூகம் அவற்றை ஆராய வேண்டும். தலைமைத்துவ வெற்றிடம்; தங்களுடைய சின்னச்சின்ன அன்றாடப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்க யாராவது வேண்டும் என்று தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் சிந்தித்தமை; தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஐக்கியமின்மை, அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் வெறுப்பும் ; தமிழ்த் தேசியக் கட்சிகள் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளைக் கவனிக்கத் தவறியமை ; சமூக வலைத்தளங்களால், யூரியூப்களால் ஊதிப் பெருப்பிக்கப்படும் பிம்பங்கள்….போன்ற பல காரணங்களின் விளைவு அவர். அவருக்கு விழுந்த வாக்குகள் சுமந்திரன், கஜேந்திரகுமார் உட்பட முக்கிய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு விழுந்த வாக்குகளைவிட அதிகம். அவர் தன்னுடைய கலகத்தைத் தொடங்கியது சாவகச்சேரி ஆஸ்பத்திரியில். அந்த ஆஸ்பத்திரி வாசலில் இருந்து சிறிது தூரத்தில்தான் ரவிராஜின் சிலை உண்டு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சாவகச்சேரி மக்கள் ரவிராஜின் நினைவுகளை விடவும் அர்ஜுனாவின் நேரலைகளுக்கு அதிகம் வாக்களித்திருக்கிறார்கள். ரவியின் சிலை கண்ணீர் விடுவதுபோல உங்களுக்கு தோன்றவில்லையா? என்று மனோகணேசன் என்னிடம் கேட்டார். அர்ஜுனாவின் சுயேச்சைக் குழுவுக்கு வாக்களித்தது மொத்தம் 27,855 பேர். யாழ்ப்பாணத்தில் விழுந்த செல்லுபடியாகும் வாக்குகளின் தொகை மொத்தம் 358,079. இதில் 8.56விகிதத்தினர் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். “அது ஒரு சிறிய தொகைதான். ஆனால் அந்தத் தொகை அடுத்தடுத்த தேர்தலில் பல மடங்காகப் பெருகும் ஆபத்தை எப்படித் தடுப்பது?” என்று மூத்த,ஊடகச் செயற்பாட்டாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். தேசமாகத் திரட்டப்படாத மக்கள் எதிர்காலத்திலும் அர்ஜுனாக்களைத்தான் தெரிவுசெய்யப் போகிறார்கள் என்று நான் அவருக்குச் சொன்னேன். சமூக வலைத்தள ஊடகச் சூழலும், குறிப்பாக யுரியுப்பர்களும் அந்தச் சிறிய தொகையை பெரிய தொகையாக மாற்றுவதை எப்படித் தடுப்பது? யூரியூப்பர்களின் காலத்தில் தேசத்தைத் திரட்டுவதற்கான புதிய, படைப்புத்திறன் மிக்க உபாயங்களைத் தமிழ்த் தேசியவாதிகள் கண்டுபிடிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை முன்நிறுத்தி, தமிழ் மக்களைத் தேமாகத் திரட்ட முயன்ற தரப்புகளுக்கு எதிராக சில யூரியுப் வெறுப்பர்கள் (haters) தனிப்பட்ட தாக்குதல்களை நடாத்தினார்கள். தமிழக எழுத்தாளர் தொ.பரமசிவன் வெறுப்பர்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்… ” இப்ப எழுதும் சிலரின் எழுத்தை வாசித்தால் வெறுப்புதான் முழுமையாய் வெளிப்படும். எதிர்ப்பை வெளிப்படுத்துவது தவறல்ல. வெறுப்பு என்பது இரு காரணங்களால் வெளிப்படுவது. ஒன்று இயலாமை; மற்றொன்று பொறாமை. இதற்கு மருந்தே கிடையாது”. தமிழ்த் தேசியப் பரப்பில் அவ்வாறு மருந்து கொடுத்துக் குணப்படுத்த முடியாத வெறுப்பர்கள் தொகை அதிகரித்து வருகின்றது. கட்சிகளுக்குள்ளும் கட்சிகளுக்கு வெளியிலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் வெறுப்பர்கள் பெருகி வருகிறார்கள். இவ்வாறு கட்சிகளாலும் ஊடகங்களாலும் வெறுப்பர்களாலும் சிதறடிக்கப்படும் ஒரு மக்கள் கூடத்தைத் திரட்டத் தவறிய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் எப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்கினார்கள்? அது தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஒரு தண்டனை. அதே சமயம் அர்ஜுனாவுக்கு தமிழ் மக்கள் வழங்கிய வெற்றியை எப்படிப் பார்ப்பது? அது தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிய தண்டனையா? நிலாந்தன் https://www.nillanthan.com/7018/
  18. புகைப்படத்துடன் விடைபெற்ற மஹிந்தவின் 116 பாதுகாப்பு அதிகாரிகள் ! Shana முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த 116 மேலதிக பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று தமது கடமைகளை நிறைவுறுத்திக் கொண்டு வெளியேறியுள்ளனர். அதற்கமைய, நேற்றைய தினம் குறித்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியுடன் இறுதி புகைப்படத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தது. இதன் ஒரு கட்டமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேறியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காகப் பிரதான பாதுகாப்பு அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் சாரதிகள் உள்ளிட்ட 60 பேர் மாத்திரமே பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். கவலையான மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுப்பதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்த முக்கிய அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். பல வருடங்களாக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். உணவு பரிசோதகர்கள் கூட பாதுகாப்பு கடமைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதுவரை 116 பாதுகாப்பு அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு கடமைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதற்கான உரிய தெளிவுபடுத்தல்களை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் பதவி விலக்கப்பட்டமையின் பின்னணியில் ஏதேனும் சூழ்ச்சி இருக்கின்றதா? என்பது சந்தேகம் எழுவதாக சட்டத்தரணி மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார். https://www.battinews.com/2024/12/116_14.html
  19. பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை! வடக்கு ஆளுநர் December 14, 2024 “பதவிகள் சேவை செய்வதற்காக வழங்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு சரியான சேவைகளை வழங்க வேண்டும். இல்லாவிடின் அந்தப் பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை”- இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தின் நிறுவுநர் நாளும் பரிசளிப்பு நிகழ்வும் பாடசாலையின் ஏழூர் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை பாடசாலை அதிபர் இ. கணேசானந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர், சாதனை படைத்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசில்களை வழங்கினார். ஆளுநர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நாங்கள் கல்வி கற்ற காலத்துக்கும் தற்போதைய காலத்துக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அன்று எங்களின் பாடசாலை அதிபர்தான் மேலதிக நேர வகுப்புகளை எடுத்தார். அவர்களைப்போன்ற ஆசிரியர்கள்தான் இன்றும் எங்களுக்கு முன்னுதாரணமான ‘கதாநாயகர்களாக’ இருக்கின்றார்கள். அன்றைய காலத்தில் நாம் தனியார் கல்வி நிலையங்களுக்கு கூட செல்வதில்லை. அதற்கான தேவைப்பாடு ஏற்படவில்லை. கல்வியால்தான் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். கிராமத்தின் அபிவிருத்தியோ, எதுவாகினும் கல்வியால் அந்த மாற்றங்களை உருவாக்க முடியும். அதேநேரம், கல்வியில் எவ்வளவு உயர்ந்து விளங்கினாலும் நாங்கள் பண்புள்ளவர்களாக இல்லாவிட்டால் எம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். உயர் பதவியிலிருந்தாலும் பண்பு இல்லாவிட்டால் யாரும் எம்மை மதிக்க மாட்டார்கள். பதவி வரும் போது பணிவு வரவேண்டும். இன்றைய மாணவ சமுதாயத்துக்கு பணிவு, இரக்கம், அன்பு என்பவற்றை ஆசிரியர்கள் கூடுதலாக போதித்து அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றவேண்டும். ஆசிரியர்கள் அன்றைய காலத்தில் எமக்கு அடித்தால் நாம் வீட்டில் சென்று சொல்வதற்குப் பயப்படுவோம். ஏனென்றால் வீட்டிலும் மீண்டும் அடி விழும். ஆனால், இன்று அது தலைகீழாகிவிட்டது. ஆசிரியர்கள், மாணவர்களை தண்டிப்பது என்பது அவர்களை எதிரியாகக் கருதி அல்ல. அவர்களின் வளர்ச்சிக்காகவே தண்டிக்கின்றனர். இன்று தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பதற்கே எல்லோரும் தயங்குகின்றனர். அந்தளவு தூரத்துக்கு பயம். நமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கிப்போகின்றனர். அதேபோல, வீதிகளில் குப்பை போடுகின்றனர். 1970 ஆம் 1980 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணம்தான் மிகத் தூய நகரம். இன்று மிக குப்பையான நகரமாக மாறியிருக்கின்றது. மோட்டார் சைக்கிள்களில், கார்களில் வந்து குப்பைகளை கொட்டிவிட்டு செல்கின்றனர். வீதியிலும், வாய்க்காலிலும் குப்பை போடுவது நாங்கள்தான். வீதிகளையும், வாய்க்கால்களையும் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுவதும் நாங்கள்தான். பின்னர் வெள்ளம் வந்துவிட்டது என்று கத்துவதும் நாங்கள்தான். எங்களின் மனநிலை மாறவேண்டும். இளமையில் – இந்த மாணவர்களிடத்தில் சரியான பழக்க வழக்கங்களை – விழுமியங்களை ஆசிரியர்கள் விதைக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் சிறந்த சமூகத்தை கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும். நாம் மற்றவருக்கு உதவவேண்டும். அப்படிச் செய்தால் எமக்கு பல மடங்கு திருப்பிக்கிடைக்கும். இந்தப் பழக்கங்களை மாணவர்களிடத்தில் வளர்த்தெடுக்க வேண்டும். எதிர்காலச் சிற்பிகளான மாணவர்கள் சமூகத்தில் கல்வியறிவுடன் சிறந்த ஒழுக்கத்துடன் வளரவேண்டும். ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்”- என்றார். https://eelanadu.lk/பதவியில்-இருப்பதில்-அர்த/
  20. தையிட்டியில் பதற்றம்! பொலிஸார் – முன்னணி முறுகல் December 14, 2024 தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக்கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்தக் கட்சியினருக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் போக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அத்தோடு, பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி குவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் இன்று சனிக்கிழமை மாலை வரை போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையிலேயே இன்று மாலை முன்னணியினருக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருந்தபோது உரிய அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்தை அகற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. https://eelanadu.lk/தையிட்டியில்-பதற்றம்-பொ/
  21. யாழ் மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் இடையூறு adminDecember 14, 2024 யாழ் மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், அலுவலக அறையினை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவு செய்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக இன்றைய தினம் சனிக்கிழமை கீதநாத் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதி எனும் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு நடைமுறைகள் குறித்து ஆரம்பம் முதலே கரிசனை கொண்டுள்ளேன். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இதற்கு முன்பு செயற்பட்டவர்கள் யாழ் மாவட்ட செயலகத்தில் தமக்காக தேர்வு செய்த நிர்வாக/ அலுவலக அறை மற்றும் இன்னபிற விவகாரங்கள் தொடர்பாக எனது நிலைப்பாட்டையும் எதிர்ப்பையும் அழுத்தமாக வெளியிட்டுள்ளேன். அந்த வகையில், மாற்றம் எனும் எண்ணக்கருவுடன் மக்கள் ஆணையை பெற்ற தேசிய மக்கள் கட்சியில் இருந்து புதிதாக யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் இராமலிங்கம் சந்திரசேகர், பழைய தலைவர்கள் சிலரைப் போலவே மாவட்ட நிர்வாக கட்டமைப்புக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், மாவட்ட செயலகத்தின் மையத்தில் தனக்கான அலுவலக மையத்தைப் பெற்றிருப்பது மக்களும் நானும் அவர்களிடம் எதிர்பாராத ஒரு செயற்பாடு ஆகும். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தமக்கான அலுவலக மையத்தை அவர்கள் தேர்வு செய்வதற்கான இடம் சட்டத்தில் உண்டு என்றாலும், யாழ் மாவட்ட செயலகத்தின் வழமையான செயற்பாடுகள் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடம் ஒன்றை தேர்வு செய்ய முன்வருவார் என எதிர்பார்க்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமைக்கப்படவிருக்கும் SLPP ஆட்சியில் இந்த முறைமை முழுமையாக மாற்றப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகம் அரசியல் தலையீடுகளில் இருந்து முழு சுதந்திரம் வழங்கப்பட்டு , அதிகாரிகள் கௌரவமாகவும், பாரபட்சம் இன்றியும் அனைவருக்கும் சமனான சேவைகளை செயலகத்தினூடாக வளங்கப்பட ஆவண செய்வதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்காக வலுகட்டாயமாக ஓதுக்கப்பட்ட அந்த காரியாலம், மேலதிக அரசாங்க அரசாங்க அதிபருக்கான காரியாலயமாக காணப்படும் நிலையில், சிறீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்காலத்தில் குறித்த காரியாலயம் அந்தப் பதவியில் இருப்பவருக்கு மீள வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2024/209271/
  22. தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை நிறைவேற்றம் December 14, 2024 02:01 pm தென்கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த இரண்டாவது குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று காலை இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி இரவு திடீரென இராணுவச் சட்டம் அமுலாக்கப்பட்டதன் அடிப்படையில் தென் கொரிய எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி யுன் சுக் யோலுக்கு எதிராக ஒரு குற்றப்பிரேரணையை கொண்டு வந்தன. எனினும், ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மக்கள் சக்தி கட்சியினர் வாக்கெடுப்பை புறக்கணித்து, பாராளுமன்றத்தை விட்டு வௌிநடப்பு செய்ததன் காரணமாக முதலாவது குற்றப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. நேற்று, இரண்டாவது முறையாக ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்தன. அங்கு தென்கொரிய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் தமது வாக்குகளை பயன்படுத்தியதோடு 204 உறுப்பினர்கள் பதவி நீக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். பதவி நீக்கத்திற்கு எதிராக 85 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. அதன்படி, தென்கொரிய அதிபர் யுன் சுக் யோலுக்கு எதிரான பதவி நீக்கம் இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, தற்போதைய ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கப்படுவதால், பிரதமர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார். https://tamil.adaderana.lk/news.php?nid=197286
  23. தலைவரும் கருணா அம்மானின் தவறுகளை அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காமல் விட்டு என்ன நடந்தது என்று சொன்ன வரலாற்றில் இருந்து படிக்கவேண்டாமா? அதிகாரிகளின், நிறுவனங்களின், மருத்துவமனைகளின் தவறுகளை சும்மா கேள்விமட்டும் கேட்டால் நிறுத்தமுடியாது. சட்டம், நீதிமன்றம் என்று பலவழிகள் இருக்கின்றது. அருச்சுனா மிகவும் மோசமாக ஒருவரை (இன்னும் பலரை) நடத்துவதைப் பார்த்தும் அவருக்கு முண்டுகொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும்!
  24. சபாநாயகரின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் December 14, 2024 01:52 pm http://s7.addthis.com/static/btn/v2/lg-share-en.gif சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்திருந்தார். தனது கல்வித் தகுதி தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள பிரச்சினை காரணமாக தற்போது அந்தத் தகுதிகளுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தனது கல்வித்தகுதி தொடர்பாக எந்த பொய்யான தகவலையும் தெரிவிக்கவில்லை என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=197284
  25. புதிய சபாநாயகர் தெரிவு எப்போது? December 14, 2024 08:41 am அசோக ரங்வலவின் ராஜினாமாவால் வெற்றிடமாகியுள்ள சபாநாயகர் பதவிக்கான புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், அன்றைய தினம் புதிய சபாநாயகர் நியமனம் தொடர்பான வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, பாராளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் பதவி விலகுவது இதுவே முதல் தடவை என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை சபாநாயகரால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடமோ அல்லது ஜனாதிபதியிடமோ வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். ராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு கிடைத்த பின்னர் சபாநாயகரின் இராஜினாமா கடிதம் தொடர்பில் ஜனாதிபதி தீர்மானம் எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சபாநாயகரின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டால், புதிய சபாநாயகரை மீண்டும் பாராளுமன்றம் தெரிவு செய்ய வேண்டும் எனவும், பொதுச் சட்டத்தின் கீழ் வாக்களித்து அல்லது நியமனம் மூலம் புதிய சபாநாயகரை தெரிவு செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=197262

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.