Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. திசைக்காட்டி எம்.பிக்கள் இருவர் மீது தாக்குதல்: விசாரணை ஆரம்பம் பிங்கிரியவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றை பார்வையிடச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை சுற்றி வளைத்த மக்கள் குழுவொன்று அவ்விருவர் மீதும் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில், திங்கட்கிழமை(30) பிற்பகல் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் ஆகியோர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆடைத் தொழிற்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடிவிட்டுச் செல்லவிருந்த போதே இந்தச் சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்.பி.க்கள் சென்ற இரு வாகனங்களையும் சுற்றிவளைத்த மக்கள், அவர்களையும் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆடைத்தொழிற்சாலையின் அதிகாரிகள் குழுவைச் சந்தித்து இருவரும் வெளியேற்ற முற்பட்ட போது, குழுவொன்று சுமார் அரை மணித்தியாலம் இருவரையும் சுற்றி வளைத்து ஆவேசமான வார்த்தைகளைக் கூறி அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன், வன்முறையில் ஈடுபடத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்ததால் எங்களை ஏன் இப்படி செய்கிறார்கள் என்று திட்டியதாக தெரிகிறது. சம்பவத்தின் பின்னர் பிங்கிரிய பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்று இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் பத்திரமாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எம்.பி.க்களின் ஓட்டுனர்கள் மீதும் கலவரக்காரர்கள் குற்றம் சாட்டியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி இது தொடர்பில் குளியாபிட்டிய பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்கவிடம் விஜேசிறி பஸ்நாயக்கவிடம் நடத்திய விசாரணையில், ஆடைத்தொழிற்சாலையின் தலைவர்களுடன் தாம் கலந்துரையாடிக்கொண்டிருந்த போது, ஆத்திரமடைந்த சிலர் தனது சட்டையின் காலரை இழுத்து தாக்கியதாகத் தெரிவித்தார். தன்னுடன் அங்கு சென்ற புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானையும் அந்த குழுவினர் துன்புறுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.tamilmirror.lk/செய்திகள்/திசைக்காட்டி-எம்-பிக்கள்-இருவர்-மீது-தாக்குதல்-விசாரணை-ஆரம்பம்/175-349556
  2. குறைந்த செலவில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் ! 77வது தேசிய சுதந்திர தினத்தை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் குறைந்த செலவில் கொண்டாட இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதேநேரம் கொண்டாட்டங்களை பார்க்க பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் கௌரவத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த நிகழ்வு, பெருமையுடனும், பிரமாண்டத்துடனும் கொண்டாடப்பட வேண்டும். இருப்பினும், நாட்டின் பொருளாதாரம் சரிவில் இருப்பதால், 77வது தேசிய சுதந்திர தினத்தை குறைந்தபட்ச செலவில் கொண்டாடுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டு நிகழ்வுக்காக, 107 மில்லியன் ரூபாய் செலவானதாகவும், இந்த ஆண்டு கொண்டாட்டங்களில், முடிந்தவரை செலவுகளைக் குறைப்பதை நோக்காக கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.[ஒ] https://newuthayan.com/article/குறைந்த_செலவில்_தேசிய_சுதந்திர_தின_கொண்டாட்டம்_!
  3. யாழ்ப்பாணத்தில் சயனைட் அருந்தி நகை உற்பத்தியாளர் உயிரிழப்பு! நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் சயனைட் அருந்தி நகை உற்பத்தியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த தேவதாஸ் திலீப்குமார் (வயது 50) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தரும் அவரது மகனும் கன்னாதிட்டி பகுதியில் உள்ள நகை உற்பத்தி செய்யும் இடத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் குறித்த நபர் இன்று வேலைக்காக சென்றிருந்தார். பின்னர் மகன் வேலைக்கு சென்றபோது அங்கு தந்தை மயக்கமடைந்து இருந்ததை அவதானித்தார். குறித்த விடயத்தை தாய்க்கு தெரியப்படுத்திய மகன், தாயை அழைத்து, மயக்கமடைந்த தந்தையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்ப்பித்தார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சயனைட் அருந்தியதால் அவரது மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. (ப) https://newuthayan.com/article/யாழ்ப்பாணத்தில்_சயனைட்_அருந்தி_நகை_உற்பத்தியாளர்_உயிரிழப்பு!
  4. யாழ். போதனா பணிப்பாளரின் வழக்கு; அர்ச்சுனா எம்.பி.க்கு கட்டாணை நீடிப்பு! யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் கூறிய விடயங்கள் உண்மையே என அர்ச்சுனாவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எஸ்.கனகசிங்கம் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை, மருத்துவர் சத்தியமூர்த்திக்கு எதிராக அவதூறான கருத்துக்களைப் பரப்புவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டாணையை நீதிமன்றம் நீடித்துள்ளது. வழக்காளியான மருத்துவர் சத்தியமூர்த்தி, இறுதி யுத்தம் முடிவடைந்த நிலையில் தடுப்புக் காவலில் இருந்தபோது அங்கு அவருக்கு நிகழ்ந்த துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனாவால் சொல்லப்பட்ட கருத்துக்கள், கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குள் நுழைந்து தவறான வார்த்தைப் பிரயோகங்களால் வாக்குவாதப்பட்டமை உள்ளிட்டவற்றுக்காக 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி மருத்துவர் சத்தியமூர்த்தியால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, எதிராளியான நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் கூறிய விடயங்கள் அனைத்தும் உண்மை எனவும், அவற்றை மன்றில் நிரூபிக்க தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்திக்கு எதிராக, அவதூறான கருத்துக்கள் தெரிவிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டாணையும் நீடிக்கப்பட்டுள்ளது. வழக்காளியான மருத்துவர் சத்தியமூர்த்தியின் சார்பில், கலாநிதி குருபரன் வழக்கில் முன்னிலையானார் என்பது குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/யாழ்._போதனா_பணிப்பாளரின்_வழக்கு;_அர்ச்சுனா_எம்.பி.க்கு_கட்டாணை_நீடிப்பு!
  5. அதுக்கெல்லாம் எக்ஸ்ட்றாவாக ஏதாவது கொடுத்தால்தான் உண்டு🤪 ஒரு காலத்தில திரிஷா குளிக்கிற வீடியோ ஒன்று ஓடியது. பார்த்திருப்பாரோ?😍😜
  6. 13வது திருத்தத்தை தமிழர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? December 30, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — பதின்மூன்றை துரதிர்ஷ்டம் வாய்ந்த இலக்கம் என்று சொல்வார்கள். அதனால் தான் இலங்கையின் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தை 37 வருடங்களாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கிறதோ தெரியவில்லை. அண்மையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது அவருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு புதுடில்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதின்மூன்றாவது திருத்தம் குறித்து எதையும் கூறிப்பிடத் தவறியதை அடுத்து அது குறித்து ஒரு சலசலப்பு ஏற்பட்டது. ஊடகங்களும் அரசியல் அவதானிகளும் காட்டிய அளவுக்கு தமிழ் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் அதில் அக்கறை காட்டவில்லை. இலங்கையின் முன்னைய ஜனாதிபதிகளுடனான செய்தியாளர்கள் சந்திப்பில் இலங்கை அரசாங்கம் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தவறாமல் வலியுறுத்திவந்த மோடி இந்த தடவை அதை தவிர்த்துக்கொண்டது பிரத்தியேகமான வித்தியாசமாக தெரிந்தது. ஆனால், இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மோடி கூறியிருப்பதால் பதின்மூன்றாவது திருத்தம் குறித்து கூறாதது ஒரு பிரச்சினை அல்ல என்றும் அரசியலமைப்புக்குள் தான் அந்த திருத்தமும் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். இந்திய பிரதமர் வேறு எந்த நாட்டினதும் தலைவர்களைச் சந்திக்கும்போது அவர்களிடம் தங்களது நாடுகளின் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துமாறு கேட்பதில்லை. சொந்த அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மற்றைய நாடுகளின் தலைவர்களுக்கு ஒரு நாட்டின் தலைவர் கூறவேண்டியதுமில்லை. ஆனால், இலங்கை ஜனாதிபதிகளிடம் இந்திய தலைவர்கள் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்பதற்கு 1987 ஜூலை இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பிறகு மாகாணசபைகளை அறிமுகப்படுத்துவதற்காக அரசியலமைப்புக்கு கொண்டு வரப்பட்ட 13 வது திருத்தம் மாத்திரமே காரணம். அதனால் ஜனாதிபதி திசாநாயக்க முன்னிலையில் அந்த திருத்தம் பற்றி குறிப்பிடுவதை மோடி தவிர்த்தமைக்கு ஒரு பிரத்தியேக காரணம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. தென்னிலங்கை அரசியல் சமுதாயம் மற்றும் மக்கள் மத்தியில் அந்த திருத்தத்துக்கு கடுமையான எதிர்ப்பு இருப்பதனால் அதைப் பற்றி கூறுவதன் மூலமாக ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு உள்நாட்டில் அசௌகரியத்தை ஏற்படுத்துவதற்கு இந்திய பிரதமர் விரும்பவில்லை என்று தோன்றுகிறது. இந்திய விரோத கடந்தகாலம் ஒன்றைக் கொண்ட ஜனதா விமுக்தி பெரமுனவின் ( ஜே.வி.பி.) தலைமையிலான இலங்கை அரசாங்கம் ஒன்று இந்தியாவுடன் சுமுகமான உறவுகளை வளர்ப்பதில் அக்கறை கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையை பழுதாக்குவதற்கு இந்திய அரசாங்கம் விரும்பவில்லை என்று தெரிகிறது. மோடி அவ்வாறு நடந்து கொண்டது இந்தியாவுடன் விவகாரங்களை கையாளுவதில் தங்களது அணுகுமுறைகளுக்கு கிடைத்த வெற்றி என்று ஜே.வி.பி. தலைவர்கள் சிலவேளை பெருமைப்படவும் கூடும். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு உள்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு முயற்சியுமே வெற்றி பெற்றதில்லை. இந்தியாவின் தலையீட்டின் விளைவாக கொண்டுவரப்பட்ட காரணத்தினால் மாத்திரமே இன்று வரையில் மாகாண சபைகள் முறை நீடிக்கிறது. ஆனால், இந்தியாவின் இடையறாத வலியுறுத்தல்களுக்கு மத்தியிலும் கூட 13 வது திருத்தம் உகந்த முறையில் நடைமுறைப் படுத்தப்படாமல் இருப்பதை இலங்கை அரசாங்கங்கள் உறுதி செய்துகொண்டன. அதனால் இந்தியாவுக்கு அண்மைக்காலமாக 13 வது திருத்தம் குறித்த அரைகுறையான அக்கறையும் கூட இனிமேல் இல்லாமல் போகுமேயானால், பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியிலும், இலங்கை அரசியலமைப்பில் இருக்கின்ற ஒரேயொரு அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடும் கூட இல்லாமல் போகக்கூடிய ஆபத்தை உணர்ந்தவர்கள் மோடியின் செயல் குறித்து விசனத்தை வெளிப்படுத்துகிறார்கள். புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் வரை மாகாணசபைகள் முறை தொடர்ந்து இருக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால், அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. முன்று வருடங்களுக்கு பிறகு கொண்டு வரவிருப்பதாக அரசாங்கம் கூறுகின்ற புதிய அரசியலமைப்பில் மாகாணங்களுக்கான அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடு ஒன்றை உள்ளடக்குவதில் மெய்யான அக்கறை காட்டப்படுமா? மாகாணமே அதிகாரப்பரவலாக்கல் அலகாக தொடர்ந்து இருக்குமா? தற்போது 13 வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களாவது முழுமையாக புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுமா? அவ்வாறு உள்வாங்கப்படுவதை உறுதிசெய்யக்கூடிய அரசியல் வல்லமை தமிழ்க் கட்சிகளிடம் இருக்கிறதா? இந்தியா அதை வலியுறுத்துமா? இவை விடைவேண்டி நிற்கும் முக்கியமான கேள்விகள். இந்தியாவின் தலையீட்டின் விளைவாக கொண்டுவரப்பட்டதன் காரணத்தால் இன்று வரை நீடிக்கும் 13 வது திருத்தம் முற்றாக இல்லாமல் செய்யப்பட்டால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் புதியதொரு அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாட்டை கொண்டு வருவதற்கு அரசாங்கத்தை இணங்க வைக்கக்கூடிய அல்லது நெருக்குதல் கொடுக்கக்கூடிய அரசியல் வல்லமை வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளிடம் இருக்கிறதா? பதின்மூன்றாவது திருத்தம் தொடர்பில் இதுவரையில் தமிழ்க்கட்சிகளின் அணுகுமுறைகளின் விளைவாக இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது தமிழர் பிரச்சினையில் இந்தியா கொழும்புக்கு எந்தவிதமான நெருக்குதலையும் இனிமேல் கொடுக்கக்கூடிய சாத்தியத்தை எதிர்பார்க்கமுடியாது. தமிழர் பிரச்சினை தொடர்பில் ஒன்றிணைந்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு ஐக்கியப்படுமாறு இந்தியா இடையறாது விடுத்துவரும் வேண்டுகோளையும் தமிழ்க் கட்சிகள் கரிசனையுடன் நோக்கவில்லை. இலங்கையில் தனது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை பேணிக்காப்பதற்கு பயன்படுத்தக்கூடிய ஒன்றாக தமிழர் பிரச்சினையை கருதும் நிலையில் இந்தியா இனிமேலும் இல்லை என்பதற்கான தெளிவான அறிகுறிகள் தெரிகின்றன. இது இவ்வாறிருக்க, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சகல சமூகங்களையும் அரவணைக்கும் வகையிலான ஒரு அரசியல் அணுகுமுறை குறித்து பொதுப்படையாக பேசுகின்றதே தவிர, அதிகாரப்பரவலாக்கம் குறித்து தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இது தொடர்பில் இலங்கையின் முக்கியமான அரசறிவியல் நிபுணர் பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட அண்மையில் தெரிவித்த ஒரு கருத்து முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். ” இந்தியாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிகாரப்பரவலாக்கல் செயன்முறையையும் தாராளவாத சிந்தனையுடையவர்கள் முன்வைக்கும் நல்லிணக்கச் செயன்முறையையும் தேசிய மக்கள் சக்தி தவிர்த்து ஒதுக்குகிறது. இனங்களுக்கு இடையிலான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அதன் அரசியல் நிகழ்ச்சித்திட்டம் ‘தோல்வி கண்ட’ கடந்தகால முயற்சிகளின் ஒரு தொடர்ச்சியாக நோக்கப்படுவதை தேசிய மக்கள் சக்தி விரும்பவில்லை என்றே தோன்றுகிறது” என்று அவர் கூறினார். 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததை தொடர்ந்து மூண்ட சர்ச்சைகளின் போது ஒரு கட்டத்தில் அநுரகுமார திசாநாயக்க அந்த திருத்தம் தங்களது பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்று தமிழ் மக்கள் நம்பினால் அதை ஏற்றுக்கொள்வதில் தேசிய மக்கள் சக்திக்கு பிரச்சினை எதுவுமில்லை என்று கூறினார். பிரதமர் ஹரிணி அமரசூரியவும் கூட அரசியலமைப்பில் நீண்டகாலமாக இருந்துவரும் 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினார். ஆனால் எதிர்ப்புகள் தீவிரமடையத் தொடங்கியதும் அவர்கள் அதைப் பற்றி பேசுவதை தவிரத்துக் கொண்டார்கள். ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனங்களில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவும் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி குறிப்பிட்டார்கள். ஆனால் ஜனாதிபதி திசாநாயக்க தனது விஞ்ஞாபனத்தில் அதைப்பற்றி எதையும் கூறாமல் 2015 — காலப்பகுதியில் மைத்திரி — ரணில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை தொடர்ந்து முன்னெடுத்து நிறைவு செய்து பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணப்போவதாக வாக்குறுதியளித்தார். தேசிய மக்கள் சக்தி அதன் விஞ்ஞாபனத்தில் 13 வது திருத்தத்தை தவிர்த்திருந்தது குறித்து விமர்சனங்கள் கிளம்பியபோது அது குறித்து கருத்து வெளியிட்ட சுமந்திரன் நல்லாட்சி அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையின்போது அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் 13 வது திருத்தத்துக்கும் அப்பால் செல்வது குறித்து ஆராயப்பட்டதால் அந்த திருத்தம் பற்றி ஜனாதிபதி குறிப்பிட வேண்டிய தேவை இருக்கவில்லை என்று கூறினார். ஆனால், மூன்று வருடங்களில் புதிய அரசியலமைப்பு வரும் வரை மாகாணசபைகள் முறை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்று அரசாங்கம் கூறிக் கொண்டிருந்தால் மாத்திரம் போதாது. அந்த இடைப்பட்ட காலத்தில் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதுடன் 13 வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை சாத்தியமானளவுக்கு நடைமுறைப்படுத்துவதே சிறுபான்மைச் சமூகங்களின் அபிலாசைகள் விடயத்தில் ஓரளவுக்கேனும் நம்பகத்தன்மையை பெறுவதற்கு ஒரே வழி. மாகாணசபைகளையோ அல்லது 13 வது திருத்தத்தையோ இல்லாமல் செய்வதற்கு இந்தியா ஒருபோதும் கொழும்பை அனுமதிக்காது என்ற நம்பிக்கை தமிழ்க் கட்சிகளுக்கு இருந்து வந்திருக்கிறது . ஆனால், ஜனாதிபதி திசாநாயக்கவுடனான செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி 13 வது திருத்தத்தை பற்றி குறிப்பிடுவதை தவிர்த்ததன் மூலமாக மறைமுகமாக தெரிவிக்கப்பட்ட செய்தியை தமிழ்க் கட்சிகள் விளங்கிக் கொண்டனவோ தெரியவில்லை. நீணடகாலத்துக்கு பிறகு இந்திய — இலங்கை கூட்டறிக்கையிலும் தமிழர் பிரச்சினை சம்பந்தமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த கருத்துக்களை கட்டுரையாளர் எக்ஸ் சமூக ஊடகத்தில் சில தினங்களுக்கு முன்னர் பதிவுசெய்தபோது அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது பிரதிபலிப்பை வெளியிட்டிருந்தார். “ஒற்றையாட்சியின் கீழ் எந்த அதிகாரப்பரவலாக்கத்துக்கும் இடமில்லை என்று நீதிமன்றங்கள் திரும்பத்திரும்ப கூறியிருக்கும்போது 13 வது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தல் எவ்வாறு இடம்பெறும் என்பதை கூறுங்கள். அதிகப் பெரும்பான்மையான தமிழர் 13 வது திருத்தத்தை அரசியல் தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. அரசியல் தீர்வுக்கான தொடக்கப்புள்ளியாகக் கூட அந்த திருத்தம் ஒருபோதும் இருக்க முடியாது. அதைப் பற்றி பேசுவதை இந்தியா நிறுத்தினால் மிகுந்த மகிழ்ச்சியடையும் ஒருவனாக நான் இருப்பேன். ” இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையில் தமிழர்களின் சார்பில் இந்தியா கைச்சாத்திட்டது என்பது முக்கியமானது. அந்த உடன்படிக்கையில் தமிழர்களுக்கு நம்பிக்கை இருக்கும் வரை அவர்களின் சார்பில் தலையீடு செய்யவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு உண்டு என்று நான் நினைக்கிறேன். ஆனால், இன்றைய சூழ்நிலையில் உடன்படிக்கை பொருத்தமற்றது என்று இந்தியா உணருகின்றது என்றால் அது முற்று முழுதாக வேறுபட்ட ஒரு விடயம். எவ்வளவு விரைவாக அதை நாம் அறியமுடியுமோ அவ்வளவுக்கு அது நல்லது” என்று அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவுசெய்திருக்கிறார். இந்த பதிவு 13 வது திருத்தம் பற்றி இந்தியா இனிமேலும் பேசுவதை அவர் விரும்பவில்லை என்பதை காட்டுகிறது. ஆனால், சமஷ்டி முறையின் அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கான தமிழர்களின் கோரிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவைச் சந்தித்த கஜேந்திரகுமார் இது தொடர்பில் பேசினார். அத்துடன் அரசாங்கம் கொண்டு வரக்கூடிய புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சிமுறைக்குள் தமிழ் மக்களின் அபிலாசைகள் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதை இந்தியா உறுதி செய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். கஜேந்திரகுமாரின் இந்த விருப்பத்தையும் கோரிக்கையையும் தமிழர்களில் எவர்தான் எதிர்க்கப்போகிறார்? ஒற்றையாட்சி நீக்கப்பட்டு இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு கிடைக்கும் என்றால் அதை விடவும் இலங்கை தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு என்ற இருக்கப்போகிறது? ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதையும் வெறுமனே இந்தியாவிடமும் சர்வதேச சமூகத்திடமும் கோரிக்கையை மாத்திரம் விடுப்பதன் மூலம் அதைச் சாதிக்க முடியுமா என்பதையும் அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சமஷ்டி முறையின் அடிப்படையிலான அரசியல் தீர்வைக் கோரும் தமிழ்க் கட்சிகளிடம் அதை அடைவதற்கான அரசியல் தந்திரோபாயமோ செயற்திட்டமோ இருக்கிறதா? வழிமுறையைப் பற்றி எந்தவிதமான முன்யோசனையும் இன்றி முன்னைய தமிழ்த் தலைவர்கள் தனிநாட்டுக் கோரிகைையை முன்வைத்ததன் விளைவை அல்லவா இன்று இலங்கை தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். 13 வது திருத்தத்தைக் கூட இதுகாலவரை நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் இலங்கை அரசாங்கங்களிடம் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை சந்தித்த ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியபோது கஜேந்திரகுமாரும் அங்கு இருந்தாரோ தெரியவில்லை. புதிய பாராளுமன்றத்தில் இருக்கும் வடபகுதி உறுப்பினர்களில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்டவராகவும் மிகுந்த விவாதத் திறமையுடன் காத்திரமான பங்களிப்பைச் செய்யக்கூடிய ஆற்றலையும் அறிவையும் கொண்டவராகவும் விளங்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதுகாலவரையான தங்களது கோட்பாட்டுப் பிடிவாதமான அரசியல் அணுகுமுறை மூலமாக தங்களது குறிக்கோளில் எந்தளவுக்கு முன்னோக்கி நகரக்கூடியதாக இருந்திருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது பயனுடையதாக இருக்கும். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் 13 வது திருத்தத்தை மாத்திரமல்ல, அதற்கு பின்னரான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சகல சமாதான முயற்சிகளையும் தீர்வு யோசனைகளையும் நிராகரிப்பதற்கு அவர் தரப்பில் “வலுவான காரணம்” இருந்தது. அதாவது ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனது இலக்கை அடையமுடியும் என்று அவர் நம்பினார். பல வருடங்களாக அரசாங்கப் படைகளுக்கு சவால் விடுக்கக்கூடியதாக ஆயுதமேந்திய இயக்கம் ஒன்று அவரிடம் இருந்தது. இறுதியில் உள்நாட்டுப்போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்றது வேறு விடயம். ஆனால், இன்று தமிழ்க் கட்சிகளிடம் என்ன பலம் இருக்கிறது? குறைந்தபட்சம் தமிழ் மக்களின் சார்பில் ஐக்கியப்பட்டு ஒன்றிணைந்த நிலைப்பாடொன்றை முன்வைப்பதற்கு கூட தமிழ்க் கட்சிகளினால் இயலாமல் இருக்கிறது. தமிழ் மக்களும் இந்த கட்சிகளிடமிருந்து தூர விலகிக்கொண்டிருக்கிறார்கள். ஐக்கியப்பட்டு செயற்படாத காரணத்தினால் தான் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்க்கட்சிகளை தமிழ் மக்கள் வெறுப்பதாக அவற்றின் தலைவர்கள் நினைக்கிறார்கள் போலும். அது மாத்திரம் காரணமல்ல. போரின் முடிவுக்கு பின்னரான காலகட்டத்தில் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு நடைமுறைச் சாத்தியமானதும் விவேகமானதுமான அணுகுமுறைகளை தமிழ்க்கட்சிகள் கடைப்பிடிக்காமல் வெறுமனே தேசியவாத சுலோகங்களை உச்சரித்துக் கொண்டிருந்ததால் அவற்றின் மீது மக்கள் வெறுப்படைந்தார்கள் . நீண்டகால அரசியல் தீர்வு குறித்து நெடுகவும் பேசிக்கொண்டிருப்பது சுலபம். ஆனால் மக்கள் எதிர்நோக்குகின்ற உடனடிப் பிரச்சினைகளை கையாளுவதில் அக்கறை காட்டாமல் அவ்வாறு பேசிக் கொண்டிருந்தால் மக்களிடம் இருந்து அன்னியப்படவேண்டி வரும். தங்களுக்கு அதுவே நேர்ந்தது என்பதை தமிழ்க் கட்சிகள் விளங்கிக் கொண்டனவோ தெரியவில்லை. இன்று தமிழ் மக்கள் மத்தியில் தங்கள் குரலுக்கு மீண்டும் இடம்தேட வேண்டிய ஒரு பரிதாப நிலையில் தமிழ்க்கட்சிகள் இருக்கின்றன. இனப்பிரச்சினை தீர்வு குறித்து எந்தவிதமான வாக்குறுதியையும் வழங்காத தென்னிலங்கை கட்சியொன்றை ஆதரித்ததன் மூலம் தமிழ் மக்கள் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு கனதியான செய்தியொன்றைக் கூறியிருக்கிறார்கள். தமிழ் அரசியல்வாதிகளில் பலர் மக்களிடமிருந்து தாங்கள் தனிமைப்பட்டதைப் பற்றி சிந்திக்காமல் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள குறிப்பிட்ட சில சக்திகளைத் திருப்திப்படுத்தும் அரசியல் வழிமுறைகளில் அக்கறை காட்டுகிறார்கள். அண்மையில் கனடாவுக்கு சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரனும் சண்முகம் குகதாசனும் அந்த நாட்டில் இலங்கை தமிழரசு கட்சியின் கிளைகளை திறக்க வேண்டிய அவசியம் குறித்து பேசினார்கள். வடக்கு, கிழக்கில் தமிழரசு கட்சியின் எத்தனை கிளைகள் துடிப்பாக இயங்குகின்றன என்பதை அவர்கள் முதலில் சிந்தித்துப் பார்க்கவேண்டும். 13 வது திருத்தம் போதுமானது என்று யாரும் வாதிடவில்லை. தமிழர் அரசியல் சமுதாயம் அதன் வரலாற்றில் மிகவும் மோசமாக பலவீனமடைந்து சிதறுப்பட்டிருக்கும் நிலையில் அதுவும் இல்லாமல் போனால் நிலைமை என்ன? அந்த திருத்தத்தை காப்பாற்றாமல் மேலும் கூடுதலான அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடுகளைப் பற்றியோ அல்லது சமஷ்டித் தீர்வு பற்றியோ பேசுவதில் உண்மையில் அர்த்தமில்லை. அந்த திருத்தத்தை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்ற தென்னிலங்கை சக்திகளை வலுப்படுத்தக்கூடிய நிலைப்பாடுகளை எடுப்பதில் உள்ள ஆபத்தை தமிழ்க் கட்சிகள் புரிந்துகொண்டு கற்பனாவாத அரசியல் உலகத்தில் இருந்து தமிழ்க்கட்சிகள் நிஜ உலகிற்கு இறங்கி வரவேண்டும். அரசாங்கம் மூன்று வருடங்களில் கொண்டு வரவிருப்பதாக கூறுகின்ற புதிய அரசியலமைப்பில் மாகாணசபைகள் 13 வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களும் உள்ளடக்கப்பட வேண்டுமானால் முதலில் தமிழர் “அவை”தங்களுக்கு வேண்டுமென்று உறுதியாக நிற்கவேண்டும். தமிழ்கள் வெறுக்கின்ற ஒரு ஏற்பாட்டை அரசியலமைப்பில் உள்ளடக்கவேண்டும் என்று அரசாங்கத்துக்கு என்ன தேவை? தமிழர்களும் சிங்களவர்களும் வேறுபட்ட காரணங்களுக்காக வெறுக்கின்ற ஒரு ஏற்பாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதற்கு இந்தியாவுக்கு என்ன தேவை? தற்போதைய நிலைவரம் வேண்டிநிற்பதற்கு இணங்க நிதானமாகச் சிந்தித்து செயற்படுவதற்கு இனிமேலும் தவறினால் இறுதியில் இலங்கை தமிழ் மக்கள் எதையுமே பெறமுடியாத ஒரு மக்கள் கூட்டமாக விடப்படும் ஆபத்து இருக்கறது. ( ஈழநாடு) https://arangamnews.com/?p=11586
  7. சதித்திட்டத்தின் மூலம் எங்கள் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது – நாமல் ராஜபக்ச December 30, 2024 1:23 pm ஒவ்வொரு ஜனாதிபதியின் கீழும் ஜனாதிபதி நிதியை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தில் எவருக்கும் ஜனாதிபதி நிதி வழங்கப்படவில்லை எனவும், அந்த நிதியை யாரும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட கட்சிக்கு பதிலாக பல வேட்பாளர்கள் கட்சி மாறியுள்ள நிலையில் புதிய வேட்புமனுக்களை கோருவது நல்லது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கீழ் வேட்புமனு தாக்கல் செய்த பலர் தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தற்போதுள்ள வேட்புமனுக்களின் கீழ் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு சதித்திட்டத்தின் மூலம் பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. அப்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் நமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையச் செய்யும் அளவிற்கு சூழ்ச்சி செய்தன. அப்போது ரணிலை ஜனாதிபதியாக நியமித்தோம். ரணிலின் வேலைத்திட்டத்தையே இந்த அரசாங்கம் நடத்துகின்றது. ஒரு அமைச்சர் அல்லது அரசியல் தொடர்புள்ள ஒருவர் ஜனாதிபதி நிதியில் இருந்து பணம் செலவழிப்பதாக கூறப்படுவதுடன், இதுவரை ஜனாதிபதி நிதியத்தினால் உதவி செய்யப்பட்ட ஏனையவர்களின் பெயர்களையும் வெளியிட வேண்டும். இதன்படி, ஒவ்வொரு ஜனாதிபதியின் கீழும் ஜனாதிபதி நிதியை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும். எங்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் வழங்கப்படவில்லை. அதிலிருந்து நாங்கள் பணத்தை எடுப்பதும் இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://oruvan.com/our-government-was-overthrown-through-a-conspiracy-namal-rajapaksa/
  8. தவறு என்று ஒத்துக்கொள்ளாதவர் நஷ்ட ஈடு கொடுப்பாரா? அஜர்பைஜான் பயணிகள் விமான விபத்து-நஷ்டஈடு வழங்குமாறு அஜர்பைஜான் ஜனாதிபதி கோரிக்கை! கஜகஸ்தானில் அஜர்பைஜான் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதற்கு ரஷ்யாவிடம் நஷ்டஈடு வழங்குமாறு அஜர்பைஜான் ஜனாதிபதி இலம் அலியேவ் கோரியுள்ளார். விபத்தில் காயமடைந்த பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கும், விபத்தால் சேதமடைந்த நிலத்திற்கும் ரஷ்யா இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அத்துடன் இதற்கு காரணமானவர்கள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார் இதேவேளை கடந்த புதன்கிழமை, கஜகஸ்தானில் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=305448
  9. உலக வல்லரசின் வீழ்ச்சியை உறுதிப்படுத்திய ஆண்டாக கடந்து செல்லும் 2024 – வேல்ஸில் இருந்து அருஸ் December 30, 2024 மனித வரலாற்றில் மிக அதிக நாடுகளில் தேர்தல்கள் இடம்பெற்ற ஆண்டாக இந்த வருடம் கடந்து செல்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கின்ற 70 இற்கு மேற்பட்ட நாடுகளில் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது உலக மக்கள் தொகையில் அரை பங்குக்கு மேற்பட்ட மக்கள் தமது வாக்குபலத்தை பயன்படுத்தியுள்ளதுடன், பல நாடுகளில் தேர்தல்கள் இன்றியே ஆட்சி மாற்றங்களும் இடம் பெற்றுள்ளன. சிரியாவில் அரசு கைப்பற்றப்பட்ட அதே சமயம் ஜேர்மனி அரசும் வீழ்ந்தது. மறுபுறமாக தென்கொரிய அதிபரும் தனது பதவியை இழந்தார், அதற்கு முன்னர் பங்களாதேசத்தின் ஹசீனா அரசு வீழ்த்தப்பட்டது, மேலும் ஈரானின் அதிபர் உலங்குவானூர்தி விபத்தில் கொல்லப்பட்டதால் அங்கும் தேர்தல் மூலம் புதிய அதிபர் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். ஜோர்ஜியா மற்றும் வெனிசுலாவில் இடம் பெற்ற தேர்தல்களை அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், மோல்டோவில் இடம்பெற்ற தேர்தலையும் மீண்டும் நடத்துமாறு கூறி தமக்கு சார்பான அரசை அவர்கள் நிறுவியுள்ளனர். மேலும் தேர்தல்கள் இடம்பெற்ற நாடுக ளில் மிக முக்கிய நாடுகளான ரஸ்யாவில் பூட்டீன் மீண்டும் பதவிக்கு வந்ததுடன், அமெரிக்காவிலும், பிரித்தானியாவிலும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள் ளது. பிரான்ஸிலும் நாடாளுமன்றத்தின் பெரும் பான்மையை அரசு இழந்துள்ளது. இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி அரசு தனது பெரும் பான்மை பலத்தை இழந்து பலவீனமான அரசி யல் உருவாகியுள்ளது. இலங்கையில் பல தசாப் தங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரண்டு பிரதான காட்சிகளும் அரசியலில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளன. அதாவது பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த ஆண்டாக இந்த ஆண்டு கடந்து சென்றாலும், போர் விரிவாக்கம் பெற்றுச் செல்லும் ஆண்டாகவும் இந்த ஆண்டு திகழ்ந்துள்ளது. உக்ரைன்-ரஸ்ய போர் மேலும் தீவிரமடைந்ததுடன், தற்போது ரஸ்யாவின் வெற்றி உறுதி என்ற நிலைக்கு களமுனை மாற்றம் பெற்றுள்ளது. எனினும் இந்த ஆண்டு முடிவுறும் போது அந்த போர் தனது மூன்றாவது ஆண்டுக்குள் நுழையப்போகிறது. ஆனால் அந்த போர் உலகில் ஏற்படுத்திய பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் பல, இதுவரையில் உக்ரைன் போருக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலக கூட்டணி நாடுகள் 340 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளன. ஆனால் உக்ரைன் செலுத்திய விலைகள் மிக அதிகம். போர் ஆரம்பிக்கும் போது 43 மில்லியன் மக்கள் கொகையை கொண்ட அந்த நாட்டில் தற்போது 20 மில்லியன் மக்களே எஞ்சியுள்ளனர். ஏனையவர்கள் நாட்டை விட்டு வெளி யேறிவிட்டனர், போரில் இதுவரையில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட உக்ரைன் படையினர் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளதாக தெரி விக்கப்படுகின்றது. நேட்டோ படையினரின் நவீன ஆயுதங்கள் எவையும் களமுனையில் மாற்றங்களை கொண்டுவரவில்லை. இந்த களமுனை தோல்விகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசியலை ஆட்டம் காணவைத்துள்ளது. ஒரு நூற்றாண்டு உலக வல்லரசாக திகழ்ந்த அமெரிக்காவின் நிலையும் இந்த ஆண்டுடன் வீழ்ச்சியை காண ஆரம்பித்துள்ளது. கடந்த 15 வருடங்களாக அமெரிக்கா தனது அரசியல் ஆளுமையை உலகில் இழக்க ஆரம்பித்திருந்தாலும் இந்த வருடம் தான் அது அதிகம் வெளித்தெரிய ஆரம்பித்துள்ளது. தனது வீழ்ச்சியை தடுப்பதற்காக உலகில் உள்ள பல வலிமையற்ற நாடுகளை தண்டிக்க அமெரிக்கா முனைந்து நிற்பதையும் அவதா னிக்க முடிகின்றது. உதாரணமாக 100 பில்லியன் டொலர்களை வரிச்சலுகையாக பெறும் கனடாவை தனது மாநிலமாக பிரகடனப்படுத்த அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முற்பட்டுள்ளதும், 300 பில்லியன் டொலர்களை வரிச்சலுகையாக பெறும் மெக்சிக்கோவை ஆக்கிரமிப்பேன் என அவர் மிரட்டியதும் போக, தற்போது டென்மார்க்கின் ஆளுமையில் உள்ள 57,000 மக்கள் தொகையை கொண்ட ஜேர்மனியை விட 6 மடங்கு அதிக பரப்பளவைக் கொண்ட ஆனால் அதில் 80 விகிதம் பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கிறீன்லாட்டை கைப்பற்றுவேன் எனவும், 1977 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் 1999 ஆம் ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து பனாமாவுக்கு வழங்கப்பட்ட கால்வாயை மீண்டும் கைப்பற்று வேன் என ட்ரம்ப் தெரிவித்ததும் அமெரிக்காவின் இயலாமையை காண்பிக்கின்றது. ஏனெனில் டிறம்பினால் கூறப்பட்ட இந்த நாடுகள் அனைத்தும் பலவீனமானவை, வீழ்ந்துவரும் தனது சாம்ராஜ்ஜியத்தை தூக்கி நிறுத்து வதற்காக அமெரிக்கா மிகவும் பலவீனமாக இலக்குகளை தேடுகின்றது. சீனாவிடம் இழந்து வரும் சந்தை வாய்ப்புக்களை ஈடுகட்ட தனது நட்புநாடுகளை நோக்கி அது தனது ஆயுதத்தை திருப்ப முற்பட்டுள்ளது. கிறீன்லான்டில் உள்ள தங்கம், வெள்ளி, செப்பு மற்றும் யூரேனியம் போன்ற தாதுப்பொருட்கள், எரிபொருட்களுடன், ஆட்டிக் பகுதி மீதான ஆளுமைக்கு அது முக்கியம் என்பதால் தனது பொருளாதார மற்றும் படைத்துறை விரிவாக்கத்திற்கு அதனை தெரிவுசெய்துள்ளது அமெரிக்கா. பனாமா கால் வாயும் அப்படியானது தான். ஓன்பது உறுப்பு நாடுகளைக் கொண்ட பிறிக்ஸ் அமைப்பு இந்த ஆண்டின் முடிவுடன் மேலும் 9 பங்காளி நாடுகளையும் கொண்ட அமைப்பாக விரிவாக்கம் பெற்றுள்ளது. அதாவது உலகின் மக்கள் தொகையில் அரை பங்கு மக்கள் தொகையை கொண்ட நாடுகளின் கூட்டணியாக அது பலமாகியுள்ளதுடன், இதுவரையில் உலகினை ஆட்சி செய்த பொருளாதார வல்லமை கொண்ட ஜி-7 நாடுகளின் கூட்டணியைiயும் அது பின்தள்ளியுள்ளது. பிறிக்ஸின் வளர்ச்சி, ரஸ்யாவை படைத் துறை மற்றும் இராணுவ ரீதியில் பலவீனப்படுத்த மேற்குலகம் மேற்கொண்ட முயற்சியின் தோல்வி, சீனாவின் பொருளாதாரத்தை முடக்க மேற்கொண்ட முயற்சியின் தோல்வி என்பன அமெரிக்காவிற்கு அச்சத்தை கொடுத்துள்ளது. அதனை இந்த வருடம் நன்றாக உணர்த்தியுள்ளது. உக்ரைனில் ரஸ்யா பெறும் வெற்றி என்பது அதன் விரிவாக்கமாகவும், ஐரோப்பாவின் வீழ்ச்சியாகவும் மேற்குலகம் பார்க்கின்றது. அது அமெரிக்காவின் உலக ஆழுமையை தகார்ப் பதுடன், அதற்கு மாற்றீடான ஒரு பலமான அணியை உருவாக்கிவிடும் என மேற்குலகம் அஞ்சுகின்றது. எனவே கிறீன்லான்ட், பனாமா, கனடா, மெக்சிகோ என தனது விரிவாக்கம் தொடர்பில் அமெரிக்கா சிந்தித்துவருகையில், காசா, லெபனான், சிரியா என இஸ்ரேல் தனது விரிவாக்கத்தை மேற்கொண்டுவருகின்றது. ஆபிரிக்க கண்டத்தில் இந்த வருடம் ரஸ்யா மேற்கொண்ட விரிவாக்கமும், அங்கிருந்து அமெரிக்க மற்றும் பிரான்ஸ் நாடுகள் வெளியேறிய தும், பூகோள அரசியலில் முக்கியமானவை. அதனை ஈடுசெய்வதற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் அவசரமாக மேற்கொள்ளும் நகர்வுகள் தற்போதைய உலக ஒழுங்கை சீர்குலைத்துள்ளதே தவிர, அதனை ஈடுசெய்வதற்கு ஏற்றவையல்ல. உதாரணமாக சிரியாவின் வீழ்ச்சியை உடனடியான வெற்றியாக இஸ்ரேலும், அமெரிக் காவும், துருக்கியும் பார்த்தாலும், முற்றாக உட்கட்டுமானங்களை இழந்த அந்த நாட்டை ஆரம்பத்தில் இருந்து கட்டியெழுப்புவது என்பது தற்போதைய பொருhளாதா சுமைகளை மேலும் அதிகப்படுத்தும் என்பதுடன், மத்திய கிழக்கின் பாதுகாப்பையும், உறுதித்தன்மையையும் அது நிரந்தரமாக சீர்குலைத்துள்ளது என்பது தான் உண்மை. உக்ரைனில் ரஸ்யா போரை வென்றால் அது மத்தியகிழக்கில் தனது கவனத்தை திருப்பும் என்பதும் உண்மை. காசாவில் ஆரம்பமாகிய போர் ஒரு வருடத்தை கடந்தும் பயணிக்கின்றது. ஹிஸ் புல்லாக்களின் தலைமைப்பீடத்தை ஆழித்து, ஹமாஸின் தலைவர்களை படுகொலை செய்த போதும் இஸ்ரேலினால் போரை வெல்ல முடிய வில்லை. உலகம் பார்த்து நிற்க 46,000 மக்களை படுகொலை செய்த இஸ்ரேல் உலகின் அத்தனை சட்டவிதிகளையும் மீறியுள்ளது. அதனை மேற்குலக நாடுகள் அனுமதித்தது என்பது அல்லது நிறுத்த முற்படாதது என்பது இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக நாடுகளால் அதிலும் குறிப்பாக மேற்குலக நாடுகளால் உருவாக்காக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதாபிமான மற்றும் மனித நேய அமைப்புக்களின் கட்டமைப்புக்கள் அனைத்தும் சிதைந்துபோன ஆண்டாக இந்த வருடத்தை பார்க்கலாம். அமெரிக்காவினால் பயங்கரவாதியாக அறி விக்கப்பட்டு, அவரின் தலைக்கு 10 மில்லியன் டொலர்கள் பரிசு அறிவிக்கப்பட்ட ஒருவரை அதே அமெரிக்கா தலமையிலான மேற்குலக நாடுகள் ஜனநாயகப் போராளியாக தமது நலன்களுக்காக மாற்றியதும், மேகுலகம் மீதான எஞ்சியிருந்த நம்பிக்கையையும் உலகநாடுகளில் கேலிக்கூத்தாக்கியுள்ளதுடன், இதுவரையில் பயங்கரவாதம் என்ற சொற்பதத்தை மேற்குலக நாடுகள் தம்மை ஏமாற்ற பயன்படுத்தியதாகவும் உலகம் உணர்கின்றது. அதாவது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, பொருளாதாரத்தினாலும், போரினாலும் அதிகம் பாதிக்கப்பட்ட ஆண்டாக இந்த ஆண்டு கடந்து செல்வதுடன், உலக அமைதிக்காக உருவாக்கப்பட்ட அமைப்புக்களும் தமது வேடம் கலைந்து நிற்கின்ற ஆண்டாகவும் இந்த ஆண்டு தன்னை முடித்துக்கொள்கின்றது. https://www.ilakku.org/உலக-வல்லரசின்-வீழ்ச்சிய/
  10. புலம்பெயர் உறவுகளின் கவனத்திற்கு…! Vhg டிசம்பர் 30, 2024 தமிழ்த்தேசிய கொள்கையின் அடிப்படையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக 83, சிவில் அமைப்புகள், 7, தமிழ்த்தேசியகட்சிகள், அனைத்து புலம்பெயர் அமைப்புகளும், யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, முன்னாள் போராளிகள், தமிழ் மக்கள் எல்லோரும் என்னை தமிழ் தேசிய கொள்கையின் அடிப்படையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக நிறுத்தி அந்த கொள்கைக்காக 226343, வாக்குகளை பெற்று தமிழ் தேசிய உறுதிப்பாட்டை நிருபித்தேன் ஆனால் என்னை (28/12/2024) ஆம் திகதி தமிழரசுக்கட்சி மத்தியகுழு கூட்டத்தில் கட்சியில் இருந்து விலக்கியதாக சுமந்திரன் கூறுகிறார். அப்படியானால் தமிழரசுகட்சி தமிழ்தேசிய கொள்கைக்கு எதிரான கட்சி என்பதை நிருபித்துள்ளனர். எனவே இதையிட்டு தமிழ் பொதுவேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்து இரவு பகலாக பிரசாரம் செய்த புலம்பெயர் உறவுகள், அமைப்புகள் இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? தமிழ்தேசிய கொள்கைக்காக ஒட்டுமொத்த தமிழ்தேசிய அமைப்புகள் எடுத்த முடிவும், அந்த முடிவுக்காக தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட நான் துரோகியா? இல்லை சிங்கள சஜீத்பிரமதாசாவை ஆதரித்த தமிழரசுக்கட்சி சுமந்திரன் குழு தியாகியா? சகல புலம்பெயர் உறவுகளிடம் இருந்து உங்கள் பதிலை எதிர்பார்கிறேன். பா.அரியநேத்திரன் 28/12/2024 வட்சப் 0773277774 https://www.battinatham.com/2024/12/blog-post_176.html
  11. மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தர்கள் போராட்டம்! 30 Dec, 2024 | 12:50 PM மட்டக்களப்பு மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் இன்று (30) மட்டக்களப்பு காந்தி பூங்கா சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் கோறைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு பகுதி கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்களை கைது செய்யக் கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் ஒருவரும் தாக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர்கள் தங்களது கடமைகளை அச்சுறுத்தலின்றி மேற்கொள்ள வேண்டியும், தாக்கியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/202528
  12. வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி! யாழ்.மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கம் நடாத்திய 6 ஆவது வடக்கு மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகன் மற்றும் பெண் உடலமைப்பு அழகி ஆகிய போட்டிகள் யாழ்ப்பாணத்தில் நேற்றுமுந்தினம் (28) இடம்பெற்றன. வட மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகனுக்காக இடம் பெற்ற போட்டியில், வவுனியா DFC உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட சத்தியசீலன் பிரதீப் முதலாம் இடத்தைப் பெற்று வட மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகனாக தெரிவு செய்யப்பட்டார். இந்தப் போட்டியில், இரண்டாம் இடத்தை மன்னார் TSP உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட லியோன் ஜோயல் பெற்றுக்கொண்டார். மூன்றாம் இடத்தை வவுனியா JRP உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட சுகுமார் ரன்சித்குமார் பெற்றுக்கொண்டார். இதேவேளை, பெண்கள் உடலமைப்பு அழகிகளுக்காக நடத்தப்பட்ட போட்டியில், வவுனியா DFC உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட ஜோசப் ஜோன்சன் தவச்செல்வி வட மாகாண பெண் உடலமைப்பு அழகியாக தெரிவு செய்யப்பட்டார். இந்தப் போட்டியில்,இரண்டாம் இடத்தை நியூ கெல்த் பிற்னஸ் சார்பாகப் போட்டியிட்ட மோனிஷா மகேந்திரராஜா பெற்றுக் கொண்டார். மூன்றாவது இடத்தை நோத் சென்ரர் உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட ஜெயபாணி ஜெகநாதன் பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடப்பட்டது. (ப) https://newuthayan.com/article/வடக்கு_மாகாண_ரீதியில்_நடைபெற்ற_ஆணழகன்_மற்றும்_பெண்ணழகி_போட்டி!
  13. அகதிகளை சந்திக்க ஜனாதிபதியிடம் அனுமதி கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளின் நிலைமையை அறிந்து கொள்வதற்காக அவர்களைச் சந்திக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி எல். டி. பி.தெஹிதெனிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மியான்மரில் இருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர். கப்பலில் இருந்த 12 பணியாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்கள் முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த அகதிகளிடம் விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கடந்த 26ஆம் திகதி முலத்தீவு விமானப்படை முகாமுக்கு சென்றிருந்தனர். எவ்வாறாயினும், குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அனுமதியின்றி அகதிகளை பார்வையிட அனுமதி வழங்க முடியாது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அகதிகளை சந்திக்க எவருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் உத்தரவிட்டுள்ள நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கமைய குறித்த கோரிக்கைக்கு பதிலளித்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், புகலிடக் கோரிக்கையாளர்களை அணுகுவதற்கு அனுமதி வழங்குவது தமது திணைக்களத்தின் ஊடாக அன்றி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சரின் ஊடாகவே என தெரிவித்துள்ளது. குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் ஒருவரினால் வாய்மொழியாக இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டதாகவும், குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் இது தொடர்பில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. நீதிமன்ற உத்தரவின் மூலமோ அல்லது வேறு வகையிலோ தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்களை தொடர்ந்தும் பரிசோதிக்கும் அதிகாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. -(3) http://www.samakalam.com/அகதிகளை-சந்திக்க-ஜனாதிபத/
  14. பல கேள்விகளுடன் விடையின்றி இந்த மண்ணை விட்டுச் சென்ற யோகேந்திரநாதன் adminDecember 29, 2024 பல்துறை ஆளுமைமிக்க மூத்த படைப்பாளியும் ஊடகவியலாளருமான நா.யோகேந்திரநாதன் பல கேள்விகளுடன் விடையின்றி இந்த மண்ணை விட்டுச் சென்றமை ஈழ இலக்கியதுறைக்கு பெரும் இழப்பாகும் என யாழ் . ஊடக அமையம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈழத்தின் வலிகளை எழுத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்த பல்துறை ஆளுமைமிக்க மூத்த படைப்பாளியும் ஊடகவியலாளருமான நா.யோகேந்திரநாதன் (வயது 80) இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினர். அவரது இழப்பினை அடுத்து, யாழ் . ஊடக அமையம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பல கேள்விகளுடன் விடையின்றி இந்த மண்ணை விட்டுச் சென்றமை ஈழ இலக்கியதுறைக்கு பெரும் இழப்பாகும். அவரின் இழப்பில் யாழ்.ஊடக அமையம் தனது ஆழ்ந்த துயரினை அனைவருடனும் பகிர்ந்து கொள்கின்றது. யாழ்ப்பாணம் – வடமராட்சி கரணவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் கிளிநொச்சி – திருவையாறு தபாலகத்தின் உதவித் தபால் அதிபராகப் பணியாற்றியிருந்தார் 1960களில் நிலம் புலம் சார்ந்து எழுத்தின் மூலம் ஈழ உலகை வடிவமைக்கும் இலக்கியத் துறைக்குள் பிரவேசித்தார். இலங்கை வானொலியில் நாடக எழுத்தாளராக பணியாற்றிய அவர், போர்க்காலத்தில் புலிகளின் குரல் வானொலியில் நாடக எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் கடமையாற்றினார். உயிர்த்தெழுகை, உயிர் குடிக்கும் பறவைகள், சாம்பல் பறவைகள், காவல் வேலி போன்ற நாடகத் தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. கண்ணீர் மழலைகள், விடுதலை முழக்கம் உட்பட பல தொடர் நவீனங்களை எழுதிய அவர் பலநூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் படைத்துள்ளார். போர்க் காலத்தில் பல வீதி நாடகங்களையும் உருவாக்கியிருந்தார். 1993இல் ஈழநாதம் நாளிதழ் வன்னிப் பிராந்தியத்துக்கான பதிப்பை தொடங்கிய போது 1995 வரை அதன் ஆசிரியராகவும், யாழ்ப்பாணத்தில் வெளிவந்த “புதுவிதி” வார இதழின் கௌரவ ஆசிரியராகவும் பணியாற்றினார். யாழ்ப்பாணத்தில் வெளிவரும் பத்திரிகைகளில் சந்திரசேகர ஆசாத், யோகநாராயணன், விஷ்ணுபுத்திரன், அக்கினீஸ்வரன் என்ற புனை பெயர்களிலும் நா.யோகேந்திரநாதன் என்ற இயற்பெயரிலும் அரசியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். சமூக ஒடுக்குமுறையை வெளிப்படுத்தும் விதமாக இடிபடும் இரும்புக் கோட்டைகள் என்ற நாவலையும் இவர் படைத்திருந்தார். இவர் எழுத்திய 3 நாவல்கள் தேசிய ரீதியில் விருதுகளை வென்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கை வானொலியில் ஒலிப்பரப்பான காட்டு நிலா, என்ற வானொலி நாடகம் நூலாக வெளியாகியிருந்தது. தமிழ் மக்களின் விடுதலைப் போரை ஆவணமாக்கும் பெருமுயற்சியில் அளப்பரிய பங்காற்றிய அவர் போராட்ட வரலாற்றை மையமாகக் கொண்டு நீந்திக் கடந்த நெருப்பாறு, (முள்ளிக்குளத்திலிருந்து கிளிநொச்சிவரை), நீந்திக்கடந்த நெருப்பாறு (கிளிநொச்சியிலிருந்து புதுமாத்தளன் வரை), மரண மழையில் நீந்திக் கடந்த நெருப்பாறு என்ற நாவல்களைப் படைத்திருந்தார். கடும் சுகயீனத்தால் பாதிக்கப்பட்டிருந்த வேளையிலும் ஆனையிறவை வெற்றிகொண்ட வரலாற்றை வெளிப்படுத்தும் விதமாக 39 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு என்ற நாவலை அண்மையில் வெளியிட்டிருந்தார். யோகேந்திரநாதன் படைப்புத்துறை தவிர்த்து கூத்துக் கலைஞராக, அரங்க நாடக நடிகராக வீதி நாடகத் தயாரிப்பாளராக, வானொலி நாடக தயாரிப்பாளராக, குரல் வழங்குநராக, சிறந்த விமர்சகராக, பேச்சாளராக எனப் பல்துறை ஆளுமையாளராக மிளிர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இடது சாரிக் கொள்கையை மாறாத பற்றுடன் தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்றிய அவர் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக அளப்பரிய பங்காற்றினார். இதனால் பல்வேறு இன்னல்களுக்கும் அவர் முகம் கொடுத்திருந்தார். தனது கனதியான படைப்புகள் மூலம் தமிழ்த் தேசிய எழுச்சிக்கு வலுச் சேர்த்த அவர், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டார். யாழ்.ஊடக அமையம் தமிழ் தேசியத்தின் அர்ப்பணிப்பு மிக்க ஆளுமைகளை வாழ்நாளில் கௌரவிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் அவரின் ஊடக பணிக்காக விருது வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது என செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. (படக்குறிப்பு :- யாழ் . ஊடக அமையத்தினால் நா.யோகேந்திரநாதனுக்கு வழங்கப்பட்ட விருதினை மூத்த ஊடகவியலாளர் நா. வித்தியாதரன் வழங்கி வைக்கும் போது) https://globaltamilnews.net/2024/209770/
  15. பொதுமக்களை அச்சுறுத்திய பேருந்துக்கு எதிராக நடவடிக்கை December 29, 2024 07:48 pm யாழ்ப்பாணம் - பருத்தித்துறை 750 வழித்தடத்தில் நேற்று (28), சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த தனியார் பேருந்து உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேநாயகத்திற்கு அறிவித்துள்ளார். தனியார் பேருந்து மேற்படி வழித்தடத்தில் சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பாக சமூக ஊடகங்களில் காணொளிகள் பகிரப்பட்டிருந்ததுடன் அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு, வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவருக்கு வடக்கு மாகாண ஆளுநர் நேற்று அறிவுறுத்தியிருந்தார். இதற்கு அமைவாக முதல் கட்டமாக 29 sri 7911 என்ற தனியார் பேருந்தின் உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் சாரதி, நடத்துனர் மற்றும் சிற்றூர்தியின் உரிமையாளர் மேலதிக நடவடிக்கைக்காக உரிய ஆவணங்களுடன் அதிகார சபைக்கு சமூகமளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன் அறிவித்துள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=197994
  16. ஜிம்மி கார்டரின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல் December 30, 2024 11:22 am அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் தனது 100வது வயதில் காலமானார். தனது பதவிக் காலத்திற்குப் பின்னர் ஏனைய அமெரிக்க ஜனாதிபதிகளை விட நீண்ட காலம் வாழ்ந்தவர் இவராவார். மேலும், கடந்த 2002 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசையும் ஜிம்மி கார்ட்டர் பெற்றிருந்தார். ஜிம்மி கார்ட்டர் 1977 முதல் 1981 வரை அமெரிக்க ஜனாதிபதியாக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=198012
  17. புதிய இராணுவத் தளபதி நியமிப்பு December 30, 2024 12:20 pm புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவத் தளபதியாவார். மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாக செயற்பட்டு வந்தார். தற்போதைய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தனது இரண்டாவது சேவை நீடிப்புக்கு அமைய இன்று வரை சேவையாற்றி வந்தார். இதேவேளை, இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவும் நியமிக்கப்பட்டுள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=198015
  18. புதிய ஆண்டைத் திட்டமிடுவது - நிலாந்தன் இந்த ஆண்டில் என்ன கிடைத்ததோ அதிலிருந்துதான் அடுத்த ஆண்டு தொடங்கும். இந்த ஆண்டு என்ன கிடைத்தது? இரண்டு தேர்தல்கள் நடந்தன. இரண்டு தேர்தல்களின் விளைவாகவும் என்பிபி மிகப்பெரிய பலத்தோடு ஆட்சிக்கு வந்திருக்கிறது. இது முதலாவது. இரண்டாவது,ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்தப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்த் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்றார். கட்சிகளைக்கடந்து தமிழ்மக்களைத் தேசமாகத் திரட்டலாம் என்ற முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியது. மூன்றாவது,நாடாளுமன்றத் தேர்தலில்,தமிழ்மக்கள் மத்தியில் இருந்தும் என்பிபிக்கு ஆதரவு கிடைத்திருக்கிறது. அதன்மூலம் தமிழ்மக்கள் தங்களை இலங்கையராகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று என்பிபியின் தமிழ் ஆதரவாளர்கள் கூறத்தொடங்கி விட்டார்கள். நாலாவது,நாடாளுமன்றத்தில் தமிழ்மக்கள் ஒரு தேசமாக மேலும் மெலிந்து போயிருக்கிறார்கள். ஐந்தாவது,தமிழ்த் தேசியவாதம் பேசும் கட்சிகள் தமிழ்மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதிலும் வெற்றி பெறவில்லை;தங்களைக் கட்சிகளாகத் திரட்டுவதிலும் வெற்றி பெறவில்லை.ஒப்பீட்டளவில் அதிக ஆசனங்களை வென்ற தமிழரசுக் கட்சியானது நீதிமன்றத்தில் நிற்கிறது. எனவே ஒரு கட்சியாக அது தோல்வி யடைந்து விட்டது. ஆனால் தமிழ்மக்கள் வேறு வழியின்றி அதற்கு வாக்களித்திருக்கிறார்கள் இவைதான் இந்த ஆண்டில் தமிழ்மக்களுக்கு கிடைத்தவற்றுள் முக்கியமானவை.இவற்றின் தேறிய விளைவுகளே வரும் ஆண்டைத் தீர்மானிக்கும். தமிழ்மக்கள் ஒரு தேசமாக நாடாளுமன்றத்தில் மெலிந்து போயிருக்கும் ஓர் அரசியல் சூழலில் மூன்றில்இரண்டு பெரும்பான்மையை பெற்றிருக்கும் என்.பி.பி அரசாங்கம் இனப்பிரச்சினையை எப்படி அணுகும்? பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொட பின்வருமாறு கூறுகிறார்..” இந்தியாவால் அறிமுகப்படுத்தப்படட அதிகாரப் பரவலாக்கல் உரையாடலையும் என்பிபி தவிர்த்து ஒதுக்குகின்றது. ஐநாவின் முகவரமைப்புக்களினாலும் உள்ளூர் மற்றும் உலகளாவிய மனிதஉரிமைக் குழுக்களினாலும் ஊக்குவிக்கப்படும் முரண்பாடுகளுக்கான தீர்வு,நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் போன்றவற்றுக்கான லிபரல் போக்குடைய சமாதான உரையாடல்களையும் என்பிபி தவிர்த்து ஒதுக்குகிறது.” அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை பிராந்திய மற்றும் சர்வதேச மயநீக்கம் செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று உயாங்கொட கூறுகிறார். அதேசமயம் அண்மையில் இந்தியாவுக்குச் சென்ற ஜனாதிபதி அனுர அங்கு பின்வருமாறு பேசியிருக்கிறார்.”இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் ஒரு போதுமில்லாதவாறு வெளிப்படுத்தப்பட்ட மக்கள் ஆணை, எமது நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்பக்கூடிய அரசியல் மாற்றத்திற்கான விதைகளை விதைத்துள்ளது. வடக்கு,தெற்கு,கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளில் அமைந்துள்ள அனைத்து மாகாணங்களிலும் உள்ள பல்வேறு சமூகங்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் இந்த மக்கள் ஆணைக்கு பங்களித்தனர்.”அதாவது தமிழ்மக்களின் ஆணை தனக்கு உண்டு என்று ஜனாதிபதி கூறுகிறார். அதன்மூலம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆணை தனக்கு கிடைத்திருப்பதாக அவர் கூறவருகிறார். அவருடைய இந்திய விஜயத்தின் போது இந்தியா உத்தியோகபூர்வமாக 13ஆவது திருத்தத்தைப்பற்றி எதுவும் கூறவில்லை. பதிலாக யாப்பை முழுமையாக நிறைவேற்றுமாறுதான் கேட்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தல்களை வைக்குமாறும் கேட்கப்பட்டிருக்கிறது. 13இன் மீதான அழுத்தத்தை இந்தியா குறைத்திருப்பது ஒரு கொள்கை மாற்றமாக ஒரு பகுதி ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் கடந்த 15ஆண்டுகளிலும் இந்தியா 13ஐ அழுத்திக் கூறிவந்தாலும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த தேவையான அழுத்தங்களை கொழும்பின் மீது பிரயோகித்திருக்கவில்லை. இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவிடமிருந்து வரக்கூடிய அழுத்தங்கள் தொடர்பான பயம் சிங்களத் தலைவர்களுக்கு எப்பொழுதோ இல்லாமல் போய்விட்டது. நாட்டில் அதிகரித்துவரும் சீனாவின் பிரசன்னமானது சிங்களத் தலைவர்களின் பேர பலத்தை கூட்டியிருக்கிறது என்பதே உண்மைநிலை. கொழும்பை இறுக்கிப் பிடித்தால் அது சீனாவை நோக்கிச் சாய்ந்துவிடும் என்று ஏனைய தரப்புகள் பயப்படுவதை சிங்களத் தலைவர்கள் தமக்குரிய பேர வாய்ப்பாகக் கருதுகிறார்கள். தேர்தல் முடிந்த கையோடு வடக்கு கிழக்குக்கு வந்த முதலாவது தூதுவர் சீனத் தூதுவர்தான்.அவர் வழமையாக தமிழர்கள் மத்தியில் இனப்பிரச்சினை தொடர்பாக உரையாடுவதில்லை. ஆனால் இம்முறை வழமைக்கு மாறாக யாழ் ஊடக அமையத்தில் உரையாற்றும்போது தேர்தல் முடிவுகளை வரவேற்றுக் கதைத்திருக்கிறார். குறிப்பாக தமிழ்மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களித்ததை அவர் பாராட்டியிருக்கிறார். அதன்மூலம் அவர் சொல்லாமல் சொல்லவருவது என்னவென்றால், தமிழ்மக்கள் என்பிபி அரசாங்கத்தை நம்புகிறார்கள், எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியாவோ, ஐநாவோ, ஐரோப்பிய ஒன்றியமோ,அமெரிக்காவோ தலையிடுவதற்கான தேவைகள் குறைந்துவிட்டன என்பதுதான். இவ்வாறு பேராசிரியர் உயாங்கொடவும் சீனத்துதுவரும் கூறியவற்றைத் தொகுத்துப்பார்த்தால் கிடைக்கும் சித்திரம் மிகத்தெளிவானது. இனப்பிரச்சினையை பிராந்திய மயநீக்கம் அல்லது சர்வதேச மயநீக்கம் செய்ய முற்படும் சக்திகள் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் உற்சாகமடைந்திருக்கின்றன. ஆனால்,தேசிய இனப்பிரச்சினைகள் உள்நாட்டுப் பிரச்சினைகள் அல்ல. அவை சாராம்சத்தில் பிராந்திய மற்றும் அனைத்துலகப் பிரச்சினைகள்தான். உள்நாட்டுப் பிரச்சினை ஒன்றின் மீது வெளிச் சக்திகள் தலையீடு செய்யும்போதே தேசிய இனப்பிரச்சினைகள் பூதாகரமாகின்றன. எனவே எல்லாத் தேசிய இனப்பிரச்சினைகளுக்கும் அனைத்துலகத் தீர்வுதான் உண்டு. உள்நாட்டுத் தீர்வு கிடையாது. திம்புவில் தொடங்கி ஜெனிவா வரையிலும் அதுதான் இலங்கை இனப்பிரச்சினையின் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை அதன் பிரயோக வார்த்தைகளில் சொன்னால்,மூன்றாவது தரப்பு ஒன்றின் மத்தியஸ்தம் அல்லது அழுத்தம் இல்லாமல் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது. ஆனால் கடந்த 15ஆண்டுகால அனுபவங்களின் அடிப்படையில் சொன்னால்,தமிழ்த் தரப்பு பலவீனமடைந்து செல்லும் ஒரு பின்னணியில், மூன்றாவது தரப்பை இனப்பிரச்சினையில் இருந்து நீக்குவது ஒப்பீட்டளவில் இலகுவாகி வருகிறது. அதாவது,பேச்சுவார்த்தக்கான தமிழ்த் தரப்பின் பேரபலம் குறைந்து வருகிறது என்பதைத்தான் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் நிருபித்திருக்கின்றன. வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் அதேவிதமான தேர்தல் முடிவுகள் கிடைத்தால் தமிழ்மக்கள் ஒரு தரப்பாக மேலும் பலவீனப்படுவார்கள். அந்த வெற்றி தரும் உற்சாகத்தில் அரசாங்கம் ஒரு புதிய யாப்புக்கான தயாரிப்பு வேலைகளை முடுக்கிவிட முடியும். எனவே இன்னும் சில மாதங்களுக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால்,தமிழ்த் தரப்பு இப்பொழுதே திட்டமிட வேண்டும். தேர்தல் அறிவிக்கும் வரை காத்திருந்து தேர்தல் கால ஐக்கியங்களுக்கு போவதைவிடவும் தேர்தலுக்கு முன்னரே தமிழ்மக்கள் தங்களை ஐக்கியப்படுத்த வேண்டும்.இதை அதன் பிரயோக வார்த்தைகளில் சொன்னால்,தேர்தல் தேவைகளுக்காக ஐக்கியத்தை உருவாக்காமல் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஐக்கியத்தை,தேசத்தைத் திரட்டுவதற்கான ஐக்கியத்தைக் குறித்து தமிழ்க்கட்சிகள் சிந்திக்கவேண்டும். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான சிவில்சமூக யதார்த்தத்தின்படி கட்சிகளை அவ்வாறு ஒன்றிணைக்கும் வேலைகளில் சிவில்சமூகங்கள் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அரிதாகவே தெரிகின்றன. கட்சிகள் தங்களாக ஐக்கியப்பட வேண்டும். அந்த அடிப்படையில்தான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தீர்வை நோக்கிய ஐக்கியத்துக்கான முன்னெடுப்புகளைப் பார்க்கவேண்டும். அது ஒரு சுடலை ஞானம் தான். தேசமாக மெலிந்த பின் ஏற்பட்ட ஞானம். எனினும்,தேர்தல் முடிவுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் முன்னணி சிந்திக்குமாக இருந்தால் அதை வரவேற்கலாம். ஆனால் தமிழரசுக் கட்சிக்குள் வளர்ந்துவரும் உட்பகையானது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஐக்கியத்திற்கான அழைப்பை சவால்களுக்கு உட்படுத்தும். தமிழ்மக்கள் பேரவையின் முன்மொழிவின் அடிப்படையில் தீர்வு முயற்சிகளை எதிர்கொள்ள வேண்டும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்திருக்கிறது. ஆனால் சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துக்கள் அந்த அழைப்பை வரவேற்பவைகளாக இல்லை. சுமந்திரன் இப்பொழுதும் கட்சிக்குள் செல்வாக்கு மிக்கவர் போலவே காணப்படுகிறார். சிறீதரன் கட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாதவராகவும் காணப்படுகிறார். எனவே தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் தலைமைத்துவ முரண்பாடானது, புதிய யாப்புருவாக்க முயற்சிகளிலும்,உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. முன்னணியின் ஐக்கிய முயற்சிகளின் அடுத்த கட்டமானது, தமிழரசுக் கட்சியின் தலைமையை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதிலும் தங்கியுள்ளது. அது மட்டுமல்ல, ஜனநாயகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் ஒரு கூட்டாக என்ன முடிவை எடுக்கப்போகிறது? ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை முன்னுறுத்திய தமிழ்த்தேசியப் பொது கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் தமிழ்மக்கள் பேரவையின் முன்மொழிவை வரவேற்று எழுதப்பட்ட வாசகங்களை ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ள சில கட்சித் தலைவர்கள் நீக்குமாறு கேட்டார்கள்.அதற்கு அவர்கள் கூறிய காரணம் பேரவைக்குள் தாங்கள் இருக்கவில்லை என்பதாகும். இப்படிப்பட்டதோர் பின்னணியில், தமிழ்மக்கள் பேரவையின் முன்மொழிவின் அடிப்படையில் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் எந்தளவு தூரம் வெற்றி பெறும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றாலும் அது தேசத்தை திரட்டுவதற்கான ஒரு முழுமையான ஐக்கியமாக இருக்கமுடியாது. ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த அனுபவம் அத்தகையதே. தமிழ் மக்களை வாக்காளர்களாக,விசுவாசிகளாக,பக்தர்களாக, வெறுப்பர்களாகப் பிரித்து வைத்திருப்பது கட்சிகள்தான். அவ்வாறு பிரித்து வைத்திருந்ததன் தோல்விகரமான விளைவுகளினால் கட்சிகள் தங்களுக்கு இடையே ஏதாவது ஓர் ஐக்கியத்துக்கு போக முயற்சிக்கக்கூடும். ஆனால் அதுமட்டும் தேசத்தைத் திரட்ட உதவாது.அது ஒரு தொடக்கமாக இருக்கலாம்.தமிழ்ப்பொது வேட்பாளரை முன்நிறுத்திக் கிடைத்த அனுபவம் அதுதான். எனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தலும் ஆண்டின் முடிவிலும் நடந்த நாடாளுமன்றத் தேர்தலும் தமிழரசியலின் சீரழிவைக் காட்டின. எனினும் செப்டம்பர் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தல் கடந்த 15ஆண்டுகால தமிழ் அரசியலில் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது. தமிழ்மக்கள் எப்பொழுதும் தேசமாகத் திரள்வதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதே அந்தச் செய்தி. அதுதான் இந்த ஆண்டின் நற்செய்தியும்கூட. அந்த நற்செய்தியில் இருந்து திட்டமிட்டால் அடுத்த ஆண்டை ஒரு வெற்றி ஆண்டாக மாற்றலாம். https://www.nillanthan.com/7038/
  19. கட்சியின் வெற்றிடமான பதவியை நிரப்பும் அதிகாரம் மத்தியகுழுவிற்கே உள்ளது – எம்.ஏ.சுமந்திரன் December 29, 2024 12:09 pm கட்சியில் வெற்றிடமான பதவியினை நிரப்பும் அதிகாரம் யாப்பின் படி மத்தியசெயற்குழுவிற்கே உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்எ. சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதற்கு பூரண சுதந்திரம் இருக்கிறது. எனவே மாவை சேனாதிராஜா தனது பதவியில் இருந்து விலகுவதற்கு பூரண சுதந்திரம் இருந்தது. அதனை உபயோகித்து அவர் கடந்த ஒக்டோர்பர் மாதம் பதவி விலகுவதாக அறிவித்தார். கட்சியின் யாப்பின் பிரகாரம் ஒரு பதவி வெற்றிடமானால் அதனை நிரப்பவேண்டிய பொறுப்பு கடமை அதிகாரம் மத்தியசெயற்குழுவிற்கே இருக்கிறது. அதனை இன்று செய்துள்ளது. தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றம் இருப்பதாக அவர் வாய்மொழி ஊடகவோ எழுத்து மூலமாகவோ அறிவிக்கவில்லை. அவருக்கு தேவையான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எனவே அதன்பின்னரே கட்சி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று செயலாளர் அவருக்கு அறிவித்திருந்தார். இதேவேளை மாவை சேனாதிராஜா கட்சியின் பெருந்தலைவராக நியமிக்கப்பட்டார் என்று செய்திகள் வந்துள்ளன. அரசியல்குழு தலைவராக சம்மந்தன் அவர்களை நியமித்தபோதும் பெருந்தலைவர் என்றே அழைத்தோம். அவ்வாறு மாவைசேனாதிராஜாவை அழைப்போம் என நான் பிரேரித்திருந்தேன், ஆனால் யாப்பிலே அப்படி ஒரு பதவி இல்லை, எனவே யாப்பின்படி நாங்கள் செல்லவேண்டும் என்று சிறிதரன்கூறியதன் காரணத்தினால் பெருந்தலைவர் என்ற சொற்பதத்தை நாங்கள் உபயோகிக்கவில்லை. இதேவேளை சிவிகே சிவஞானம் பதில் தலைவராக செயற்படுவார் என்பது ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானம். அதற்கு எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. சில திருத்தங்கள் செய்யப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு தான் இணங்கவில்லை என்றவாறான கருத்தை சிவமோகன் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தருணத்தில் அவர்கூட்டத்திலே இருந்ததுடன் எதிர்ப்பு எதனையும் தெரிவிக்கவில்லை. கட்சியின் 75 வது வருடநிறைவை முன்னிட்டு, பவள விழாவாக அதனை கொண்டாடுவதற்கு மாவட்டம் தோறும் நினைவு கூட்டங்கள் செய்வதற்கு தீர்மானித்துள்ளோம். அதனை பெருவிழாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொண்டாட தீர்மானித்துள்ளோம். அதனையொட்டி மலர் ஒன்றும் பிரசுரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த மலர்குழுவிற்கு மாவைசேனாதிராஜா அவர்கள் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். விழாக்குழுவின் தலைவராக கட்சியின் பதில் தலைவராக செயற்பட்டுக்கொண்டிருக்கிற சிவிகே. சிவஞானம் அவர்களை நியமித்துள்ளோம். அதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்டகுழுவுடன் இணைந்து செய்வதாக என மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது” என்றார். https://oruvan.com/the-power-to-fill-a-vacant-position-in-the-party-lies-with-the-central-committee-m-a-sumanthiran/
  20. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அர்ச்சுனா; 1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பனை அபிவிருத்திச் சபை சார்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சுமத்திய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தவறும் பட்சத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் 1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்வதற்கு நான் சட்டத்தரணி ஊடாக தயாராகி வருகின்றேன் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் வி.சகாதேவன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அர்ச்சுனா இராமநாதன் எம்.பி மிகமோசமான முறையில் செயற்பட்டார். என்னுடைய உறவினர்கள் எவருமே பனை அபிவிருத்தி சபையில் இல்லை. என்னை வாயை மூடு என சொல்கின்றார். சபை நாகரிகம் இல்லாமல்அவர் இவ்வாறான விடயங்களை சொல்வது எமது சபையின் எதிர்காலத்தைப் பாதிக்கும். 95,000 ஆக இருந்த பனைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை இன்று 6000 ஆக குறைந்திருக்கின்றது. எதிர்வரும் வருடங்களில் 1500 பேர் வரையிலானோரே அனுமதிக்கு வந்துள்ளார்கள். 15000 பேரை கொண்டு வருவதற்கான முயற்சியை மேற்கொண்டு வரும்போது அர்ச்சுனா இராமநாதனின் நடவடிக்கை இந்த தொழிலை முற்றாக அழிக்கின்ற நிலைக்கு தள்ளும். டிசம்பர் மாதத்தில் செய்ய வேண்டிய வேலைக்காக கடந்த யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சில விடயங்களை செய்ய முயன்றபோது அர்ச்சுனாவின் குழப்பத்தால் செய்ய முடியவில்லை. அர்ச்சுனா இராமநாதன் எம்.பி.எல்லோரிடமும் கேள்வி கேட்டு குழப்பம் செய்வதன் மூலம் ஊடகத்தில் தலைப்பு செய்தியாக வர முயல்கிறார்.அர்ச்சுனாவை கட்டுப்படுத்த வேண்டிய தேவை அமைச்சர் சந்திரசேகருக்கு இல்லை.அர்ச்சுனா எம்.பி.கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்ற தேவை அவருக்கு இருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் இதனை செய்ய தவறினால் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்க வேண்டும். நமது அமைதி நிதானம் என்பதை பொருட்டாக கருதாமல் தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும். உண்மையில் அர்ச்சுனா அதிகாரிகளை கேள்வி கேட்பதற்கு முதல் தன்னை நோக்கி கேள்விகளை கேட்க வேண்டும். சாவகச்சேரி மக்கள் நம்பிக்கை அடிப்படையில் அர்ச்சனாவை எம்.பி.யாக அனுப்பி இருக்கின்றார்கள். அவர்களுக்கு உண்மையில் விசுவாசமாக நடக்கின்றாரா? அவர் முகப்புத்தகத்தில் வருகின்ற கருத்துக்களை வைத்து கொண்டு தன்னை பெரியாளாக கருதுகின்றார். உண்மையில் அவருடைய எம்.பி. பதவி என்பது ஊழலுக்கு எதிரான குரலுக்கு கிடைத்த பரிசாகும். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளங்களை முன்னேற்ற தடை ஏதும் இல்லை. ஆனால் இன்று அது நடந்து இருக்கின்றதா? உண்மையில் இந்த ஊடகங்கள் அர்ச்சுனாவை பார்த்து கேள்வி கேட்கின்ற நேரம் விரைவில் வரும். சஜித் பிரேமதாசாவுக்கு பின்னால் அர்ச்சுனா ஒளி ய முற்பட்டார். அது நடக்கவில்லை. தற்போது தேசிய மக்கள் சக்திக்கு பின்னால் ஒளி ய முற்படுகின்றார். என்னை யாரும் இந்த அரசியல் கட்சி தான் என்று சொல்ல மாட்டார்கள். என் மீது பல விமர்சனங்கள் உண்டு. விமர்சனங்களை கடந்து நான் ஆராய்ச்சி துறையில் விடுதலைப் புலிகளின் காலம் சிறப்பாக பல வேலைகளை செய்துள்ளேன். கட்சிக்குரிய ஆளாக செயல்படவில்லை. அதற்கு சான்றாகவே இந்த பதவியை தந்தார்கள். நான் ஜே.வி.பி.யின் தொழிற்சங்கத்திலும் அங்கத்தவராக இல்லை. பாராளுமன்ற அர்ச்சுனா எம்.பி.யின் அவதூறு பொய் கருத்துக்கள் மக்களைச் சென்றடைந்திருப்பதால் நான் மிகுந்த மன உளைச்சலுக்குள் பணியாளர்களுடன் தொடர்ந்து வேலைகளை முன்னெடுப்பதில் இக்கட்டான சூழலில் இருக்கின்றேன். எம்முடைய பனை அபிவிருத்திச் சங்கங்கள் இதனால் பாதிப்படைய போகின்றன. முழு விடயங்களுக்கும் அர்ச்சுனா எம்.பி. பதில் சொல்லி பொறுப்பு கூற வேண்டும். இதற்கான சட்ட ஆலோசனை பெற்றிருக்கின்றேன். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பனை அபிவிருத்திச் சபை சார்ந்து அர்ச்சுனா எம்.பி. சுமத்திய ஏதாவது ஒரு குற்றச்சாட்டையாவது நிரூபிக்க தவறும் பட்சத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கின்றேன். 1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்வதற்கு நான் சட்டத்தரணி ஊடாக தயாராகி வருகின்றேன். இனி இவ்வாறான விடயங்களை கூட்டங்களில் செய்வாராகவிருந்தால் பாரதூரமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றேன் – என்றார். https://akkinikkunchu.com/?p=305311
  21. மன்மோகன் சிங்கை அரசு அவமதித்துவிட்டது!” - இறுதிச் சடங்கு இட விவகாரத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு 29 Dec, 2024 | 09:59 AM புதுடெல்லி: “மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குக்கு இடம் ஒதுக்காமல், நிகம்போத் காட் எரியூட்டுத் தலத்தில் நிகழ்த்த வேண்டிய நிலையை உருவாக்கியதன் மூலம் அரசு அவரை முற்றிலுமாக அவமதித்துவிட்டது” என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய அன்னையின் மகத்தான புதல்வரும், சீக்கிய சமூகத்தின் முதல் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகளை நிகம்போத் காட்டில் நிகழ்த்த வேண்டிய நிலையை ஏற்படுத்தியதன் மூலம் தற்போதைய அரசு அவரை முற்றிலும் அவமதித்துள்ளது. அவர் 10 ஆண்டு காலம் இந்தியாவின் பிரதமராக இருந்தவர். அவரது பதவிக் காலத்தில் நாடு பொருளாதார வல்லரசாக மாறியது. அவரது கொள்கைகள் இன்னும் நாட்டின் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஆதரவாக உள்ளன. இதுவரை, அனைத்து முன்னாள் பிரதமர்களின் கண்ணியத்துக்கு மதிப்பளித்து, அவர்களின் இறுதிச் சடங்குகள் அங்கீகரிக்கப்பட்ட நினைவிடங்களில் நடத்தப்பட்டன. இதனால் ஒவ்வொரு நபரும் எந்தவித சிரமமும் இன்றி அஞ்சலி செலுத்தினர். டாக்டர். மன்மோகன் சிங் நமது உயரிய மரியாதைக்கும் தனி நினைவிடத்துக்கும் தகுதியானவர். தேசத்தின் இந்த மகத்தான மகனுக்கும் அவரது புகழ்பெற்ற சமூகத்துக்கும் அரசு மரியாதை காட்டியிருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குக்கு இடம் ஒதுக்காததன் மூலம் அரசு தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்திவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "டாக்டர் மன்மோகன் சிங் போன்ற ஒரு சிறந்த ஆளுமையின் தகனம் மற்றும் நினைவிடம் தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கம் தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அதன்பின், மக்களின் உணர்வுகளின் அழுத்தத்தால், பாஜக அரசு நினைவிடம் கட்ட எதிர்காலத்தில் இடம் ஒதுக்கப்படும் என அறிவித்தது. மரியாதைக்குரிய ஒரு நபரின் தகனத்தை எந்த விசேஷ இடத்திலும் நடத்தாமல் நிகாம் போத் மயானத்தில் இந்திய அரசு நடத்துகிறது. 2010-ல், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் இறந்தபோது, பாஜகவின் கோரிக்கை இன்றி, காங்கிரஸ் அரசு, அவரது குடும்பத்தினரிடம் பேசி, ஜெய்ப்பூரில் அவரது இறுதிச் சடங்குகளுக்காக உடனடியாக ஒரு சிறப்பு இடத்தை ஒதுக்கி, அங்கு நினைவிடம் கட்டப்பட்டது. 2012-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பால் தாக்கரேவின் மரணத்துக்குப் பிறகு, காங்கிரஸ் அரசு அவரது இறுதிச் சடங்குகளுக்காக மும்பை சிவாஜி பூங்காவில் ஒரு சிறப்பு இடத்தை ஒதுக்கியது. அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் காங்கிரஸ் எப்போதும் மரியாதையுடன் விடை அளித்துள்ளது. ஆனால், மன்மோகன் சிங் விஷயத்தில் பாஜகவின் இத்தகைய நடத்தை துரதிருஷ்டவசமானது" என்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/202427
  22. இலங்கை முன்வைக்கும் புதிய திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு ; சீன அறிவிப்பை தொடர்ந்து விசேட கலந்துரையாடல்களில் அரசாங்கம் 29 Dec, 2024 | 11:54 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சீன விஜயத்தின்போது இலங்கை முன்வைக்க விரும்பும் எந்தவொரு புதிய திட்டங்களுக்கும் முழு அளவிலான ஒத்துழைப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், முன்வைக்க உத்தேசிக்கப்படுகின்ற புதிய திட்டங்கள் குறித்து அரசாங்கத்துக்குள் விசேட பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் பல சர்ச்சைக்குரிய விடயங்களுடன் நிறைவடைந்தது. நாட்டுக்கு பாதகமான பல ஒப்பந்தங்களில் ஜனாதிபதி கைச்சாத்திட்டதாக பலரும் குற்றம் சுமத்திய போதிலும், அவ்வாறான தீங்கு விளைவிக்கும் ஒப்பந்தங்கள் எதிலும் கைச்சாத்திடவில்லை என அரசாங்கம் அறிவித்தது. இதன் காரணமாக இந்திய விஜயத்தை தொடர்ந்து ஜனாதிபதியின் அடுத்த சீன விஜயத்தையே பலரும் உற்று நோக்குகின்றனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 12ஆம் திகதி சீனா செல்லவுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஜனாதிபதியின் சீன விஜயத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. இதற்குக் காரணம், சீனாவை நோக்கிய ஒரு சார்பு தன்மை அரசாங்கத்திடமிருந்து வெளிப்பட தொடங்கியுள்ளதாக கொழும்பை தளமாக கொண்ட மேற்குலக இராஜதந்திர தகவல்கள் சந்தேகங்களை வெளியிட்டுள்ளன. அது மாத்திரம் அன்றி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் பின்னரே அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கை குறித்து ஒரு தெளிவான பார்வையை அனைவராலும் உணர முடியும். எவ்வாறாயினும் அண்மைய புவிசார் அரசியல் நிகழ்வுகளை நோக்கும் போது ஜனாதிபதியின் சீன விஜயம் மிகவும் விசேடமானதாக அமைகிறது. குறிப்பாக இந்த விஜயத்தை திட்டமிடுவதற்காக சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனை சம்மேளன தேசியக் குழுவின் உப தலைவர் கின் பொயோங் தலைமையிலான உயர் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்திருந்தது. இந்திய விஜயத்தை நிறைவு செய்து கடந்த 17ஆம் திகதி நாடு திரும்பிய ஜனாதிபதி அநுரவை, மறுநாள் காலை (18ஆம் திகதி) சீனப் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில், சீன விஜயத்தின் போது முன்வைக்க விரும்பும் எந்தவொரு புதிய திட்டங்களையும் நடைமுறைப்படுத்த சீனா அரசு தயாராக இருப்பதான செய்தி இதன் போது தெரிவிக்கப்பட்டது. இதுவரை எந்தவொரு ஜனாதிபதிக்கும் கிடைக்காத தனித்துவமான தீர்மானத்தை சீனா முன்வைத்துள்ள நிலையில், சீன விஜயத்தின்போது முன்வைக்க உத்தேசிக்கப்படுகின்ற புதிய திட்டங்கள் குறித்து கடந்த சில நாட்களாக அரசாங்கத்துக்குள் விசேட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், சீன விஜயத்தின்போது, தற்போது தடைப்பட்டுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை மற்றும் மீரிகம பகுதிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும், இம்முறை ஜனாதிபதியின் சீன விஜயத்தின்போது சீன அரசாங்கத்துக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட ஜனாதிபதி தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் சீன - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், துறைமுக நகர் முதலீடுகள், ஹம்பாந்தோட்டையில் உத்தேசிக்கப்படுகின்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சீன கப்பல் விஜயங்கள் உட்பட பல்வேறு இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து பரந்தளவில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/202441
  23. நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளியோம்! - அமைச்சர் சுனில் கடும் எச்சரிக்கை! இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்கமாட்டோம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "இன, மத வன்முறைகளைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் இன, மத ரீதியிலான சில பிரச்சினைகள் இருக்கின்றமை உண்மைதான். அவற்றுக்கு நாம் தீர்வு காண்போம். ஆனால், அந்தப் பிரச்சினைகளை ஊதிப்பெருக்கும் வகையில் - வன்முறைகளைத் தூண்டும் வகையில் எவராயினும் கருத்துக்களை வெளியிட்டால் அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்கமாட்டோம். வேரூன்றியிருந்த தேசிய இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறியதால்தான் வடக்கு - தெற்கு இடையேயான உறவு அறுந்தது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். அந்த நிலைமை மீண்டும் வர இடமளியோம். புதிய அரசமைப்பின் ஊடாகத் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்." - என்றார். https://newuthayan.com/article/நாட்டில்_மீண்டும்_இரத்த_ஆறு_ஓட_இடமளியோம்!_-_அமைச்சர்_சுனில்_கடும்_எச்சரிக்கை!
  24. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும் - முழு விவரம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின. அதைத் தொடர்ந்து, மாணவி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது முதல் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது வரை பல விஷயங்கள் நடந்துள்ளன. இந்த வழக்கில் இதுவரை தெரிய வந்துள்ள தகவல்கள் என்ன? நீதிமன்ற விசாரணையின்போது என்ன நடந்தது? இதையொட்டி கடந்த சில தினங்களில் தமிழக அரசியலில் நடந்த சம்பவங்கள் யாவை? அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ன நடந்தது? சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23-ஆம் தேதியன்று மாணவி ஒருவர் இரவு உணவுக்குப் பிறகு, மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மறுநாள் காலையில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மாணவி அளித்த புகாரின் பேரில், அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபரை மாணவி அடையாளம் காட்டினார். டிசம்பர் 25-ஆம் தேதியன்று கைது செய்யப்பட்ட அந்த நபர் 37 வயதான ஞானசேகரன் என்றும், அவர் நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுக்கப்பட்டார். எஃப்.ஐ.ஆர். வெளியான விவகாரத்தில் என்ன நடந்தது? பின்னர் டிசம்பர் 26-ஆம் தேதியன்று காலையில், மாணவி அளித்த புகார் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது. மாணவிக்கு நடந்த அசம்பாவிதங்கள் பற்றிய விரிவான தகவல்கள் மட்டுமின்றி, அவரது பெயர், அலைபேசி எண், படிக்கும் பாடப்பிரிவு, முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்தன. சில தொலைக்காட்சி நிறுவனங்கள் அவரது தனிப்பட்ட விவரங்கள் தவிர்த்து, எந்தெந்தப் பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அடங்கிய எஃப்.ஐ.ஆரை ஒளிபரப்பின. ஆனால், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களின் பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வெளியிடக்கூடாது என்று சட்டங்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் இந்த விஷயம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. எஃப்.ஐ.ஆர் வெளியானது தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேசிய மகளிர் ஆணையத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதற்குப் பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "பாதிக்கப்பட்ட பெண்ணை முடக்க வேண்டுமென்று அரசு முயலவில்லை. அவர் மிகவும் துணிச்சலோடு முன்வந்து, அரசு மீது நம்பிக்கை வைத்துப் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது," என்றார். ''எஃப்.ஐ.ஆர் வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம், அது வெளியானது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது" என்று சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். இதற்கிடையே, காவல்துறையின் அலட்சியம் மட்டுமே இதற்குக் காரணம் என்று சமூக செயற்பாட்டாளர்கள் விமர்சித்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு தமிழ்நாடு காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் டிசம்பர் 28-ஆம் தேதியன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதோடு, உண்மை கண்டறியும் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டம் நடத்தியது ஏன்? மாணவிக்கு நேர்ந்த சம்பவத்தைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் புதன்கிழமையன்று பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர். 'மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை' எனக் கூறி அவர்கள் முழக்கம் எழுப்பினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பிரகாஷ், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பிரகாஷ் வெளியிட்ட விளக்கத்தில், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் எப்போதும் பணியில் உள்ளதாகவும், கண்காணிப்பு கேமராக்கள் இருந்தபோதும் விருப்பத்தகாத சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறினார். அதோடு, "இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில் பல்கலைக்கழக அளவில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது" எனக் குறிப்பிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் திமுகவை சேர்ந்தவரா? இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்டதாக கூறப்படும் பழைய புகைப்படம் ஒன்று வைரலானது. அதுகுறித்து டிசம்பர் 26ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதான ஞானசேகரன் திமுகவில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லை" என்று தெரிவித்தார். மேலும், ஞானசேகரன் திமுக நிர்வாகி என்று பரப்பப்படும் தகவல் பொய்யானது எனக் கூறிய அவர், "பொதுவாக மக்கள் அமைச்சர்களைச் சந்திப்பதைத் தடுக்க முடியாது. துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருடன் மக்கள் நின்று புகைப்படம் எடுப்பது சகஜம்தான்," என்று விளக்கமளித்தார். அதோடு, "தமிழ்நாடு முதல்வருக்கோ, திமுக அரசுக்கோ இந்த வழக்கை மறைப்பதற்கான அவசியம் இல்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவியின் வழக்கு பொள்ளாச்சி பாலியல் வழக்கைப் போல் இல்லை, தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும்," என்றும் கூறினார். இந்நிலையில் டிசம்பர் 28 அன்று தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்த அண்ணாமலை, "மாணவியை பாலியல் தாக்குதல் செய்த திமுக நிர்வாகி ஞானசேகரன் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் வெகு சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம்," என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு, குற்றம் சாட்டப்பட்ட நபர் "திமுகவை சேர்ந்தவர் என்பதை மறைக்க, இன்னும் எத்தனை நாட்களுக்குப் பொய் சொல்லி ஏமாற்றலாம் என்று திமுக அரசு நினைக்கிறது?" என்றும் விமர்சித்துள்ளார். சென்னை காவல்துறை அளித்த விளக்கம் என்ன? இந்த விவகாரம் தொடர்பாக டிசம்பர் 26-ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் அருண், "ஒரு குற்றவாளி எந்தக் கட்சியில் இருந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. அந்த நபர் மீது நடவடிக்கை எடுப்போம்" என்று உறுதியளித்தார். அப்போது சமூக ஊடகங்களில் எஃப்.ஐ.ஆர் வெளியானது பற்றி பதிலளித்த அவர், இத்தகைய வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை வெளியாகக்கூடாது என்றும் அது தவறும் என்றும் தெரிவித்தார். அது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய காவல் ஆணையர், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதேவேளையில், "எஃப்.ஐ.ஆர் இணையத்தில் பதிவேற்றப்பட்டதும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தகவல்கள் லாக் ஆவதில் தாமதமாகி இருக்கலாம். அந்த நேரத்தில் இதைப் பதிவிறக்கம் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருப்பார்கள்" என்று விளக்கினார். குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் குறித்துப் பேசிய ஆணையர், "இதுவரை நடைபெற்ற புலன் விசாரணையில் ஞானசேகரன் என்ற ஒருவர் மட்டுமே குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஞானசேகரன் மீது ஏற்கெனவே திருட்டு உள்பட 20 வழக்குகள் உள்ளன. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர்மீது எந்த வழக்கும் பதிவாகவில்லை. இதுபோல வேறு யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் தைரியமாக புகாரளிக்க முன்வர வேண்டும்," என்றார். தமிழ்நாடு அரசியலில் ஏற்பட்ட அதிர்வலைகள் யாவை? கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் தமிழக தலைநகரின் முக்கிய இடங்களில் ஒன்று. அங்கு இத்தகைய சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்துப் பேசிய மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், "இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார். இந்த விவகாரம் குறித்துப் பேசிய அண்ணாமலை, இதை வன்மையாகக் கண்டித்ததோடு சாட்டையடி போராட்டத்தையும் மேற்கொண்டார். டிசம்பர் 26ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்" என்று கூறினார். மேலும், டிசம்பர் 27 அன்று காலை 10 மணியளவில் கோயம்புத்தூரில் தனது வீட்டின் முன்பாக, அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் சில முறை அடித்துக்கொண்டார். அப்போது அங்கிருந்த பாஜக தொண்டர்கள் திமுகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தனது சாட்டையடி போராட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை தான் கையில் எடுத்துள்ள போராட்டம் வருங்காலத்தில் மிகவும் தீவிரமாகும் என்றார். "அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருக்கிறது. கல்வியின் தரம் சரியத் தொடங்கியுள்ளது. பொருளாதாரம் பின்தங்க ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் மீதான குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இன்று இந்தப் போராட்டத்தைத் வேள்வியாகக் கையில் எடுத்துள்ளோம்" என்றார். அதோடு 48 நாட்கள் விரதம் இருக்கவுள்ளதாகக் கூறியதோடு, திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியப் போவதில்லை என்றும் சூளுரைத்தார். நீதிமன்ற விசாரணையின்போது என்ன நடந்தது? Getty Images இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி, பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. டிசம்பர் 27ஆம் தேதி மாலை நடந்த விசாரணையின்போது, "வழக்கு விசாரணையில் இருக்கும்போதே காவல் ஆணையர் எப்படி கைதானவர்தான் குற்றவாளி என்ற முடிவுக்கு வந்தார்?" என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அதோடு பாதிக்கப்பட்ட மாணவியைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், "பெண்கள் ஆண்களுடன் பேசக்கூடாது, மாணவி அங்கு சென்றிருக்ககூடாது என்று கூறக் கூடாது. காதல் என்பது பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம்," எனக் கூறினர். எஃப்.ஐ.ஆர் வெளியானது குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மறுநாள்(டிசம்பர் 28) விசாரணையின்போது, எஃப்.ஐ.ஆர் வெளியானது குறித்து விளக்கமளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெளியாகிவிட்டதாக விளக்கமளித்தார். அதேவேளையில், இந்த விவகாரத்தில் 14 பேர் மீது விசாரணை நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. சர்ச்சையான காவல் ஆணையரின் செய்தியாளர் சந்திப்பு குறித்து விளக்கமளித்த அரசு தலைமை வழக்கறிஞர், இந்த வழக்கில் காவல்துறை யாரையும் பாதுகாக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தவே காவல் ஆணையர் செய்தியாளர்களைச் சந்தித்ததாக தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளது. 189 ஏக்கர் பரப்பிலான வளாகத்தில் 8 வழிகள் உள்ளன. வளாகத்தில் 988 கேமராக்கள் உள்ளன. அதில் 849 செயல்படுகின்றன. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகிறது," என்று தெரிவித்தார். அமைச்சர்களுடன் எடுத்த புகைப்படம் பற்றி நீதிபதிகள் கூறியது என்ன? இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணி, "குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் செல்வாக்கு நிறைந்த அரசியல் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்" என்றார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "ஒரு நிகழ்வில் நம்முடன் ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொள்வதை வைத்து முடிவுக்கு வரக்கூடாது. இது பொருந்தாத வாதம்" எனக் கண்டித்து, குற்றச் சம்பவம் குறித்து மட்டும் பேசுமாறு கூறினர். இறுதியாக, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு, மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்குமாறு மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் எவ்வளவு முக்கியமானது? கிண்டியில் சுமார் 180 ஏக்கர் பரப்பளவில் அண்ணா பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி. டெக், ஸ்கூல் ஆஃப் ஆர்கிடெக்சர் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 13,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வளாகத்தில் மூன்று விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. உயர்தர தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்வியை வழங்குவதன் மூலம் தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை வடிவமைப்பதில் அண்ணா பல்கலைக்கழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த 1978இல் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம், மாநிலத்தின் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்குப் பங்களிக்கும் திறமையான நிபுணர்களை உருவாக்கும் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வலுவான அடித்தளத்துடன், பரந்த அளவிலான இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை அண்ணா பல்கலைக்கழகம் வழங்குகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/clyvjw17px0o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.