கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  20,224
 • Joined

 • Days Won

  73

Everything posted by கிருபன்

 1. மகிந்த ராஜபக்சவின் அழைப்பை TNA ஏற்றுக்கொண்டது… May 2, 2020 பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அழைப்பை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டு்ளதாக, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளும் என, யாழ்ப்பாணம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் மூன்று கட்சிகளின் தலைவர்களும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்துரையாடி இந்த முடிவுக்கு வந்ததாகவும், மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இரா.சம்பந்தனுடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/2020/142066/
 2. தமிழகத்தின் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள்! மின்னம்பலம் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் தீவிர கொரோனா பாதிப்பு கொண்ட சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடையும் நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத் துறை, நாடு முழுவதும் உள்ள 733 மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக பிரித்து புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 133 மாவட்டங்கள் சிவப்பு மண்டத்தில் இடம்பிடித்துள்ளன. உத்தர பிரதேசத்தில் 19, மகாராஷ்டிராவில் 14 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம்பிடித்துள்ளன. மூன்றாவது இடத்தில் 12 மாவட்டங்களுடன் தமிழகம் உள்ளது. பெருநகரங்களான மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், புனே, சென்னை, பெங்களூரு,அகமதாபாத் ஆகியவை சிவப்பு மண்டலங்களில் இருக்கின்றன. மே 3ஆம் தேதிக்குப் பிறகு இப்பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். ஆரஞ்சு மண்டலங்களில் ஒரளவு தளர்வுகள் இருக்கலாம் எனவும், பசுமை மண்டலங்களில் தளர்வுகள் நீக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 319 மாவட்டங்கள் பசுமை மண்டலமாக உள்ளன தமிழகத்தில் சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிப்பேட்டை, விருதுநகர், திருவாரூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களும் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தேனி, தென்காசி, நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம், கோவை, கடலூர், சேலம், கரூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், திருநெல்வேலி, நீலகிரி, சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, தருமபுரி ஆகிய 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாக அறியப்பட்டுள்ளன. ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பு ஏற்படாததால் தமிழகத்தில் ஒரே மாவட்டமாக கிருஷ்ணகிரி மட்டும் பச்சை மண்டலமாக உள்ளது. https://minnambalam.com/politics/2020/05/01/49/red-orange-green-zone-districts-in-tamilnadu
 3. இன ரீதியாக இலக்குவைத்து பிரசாரங்கள் ; தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு - ஹக்கீம் விசனம் கொவிட் - 19 தொற்று நோய் நிலைமை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதோடு, இன ரீதியாக இலக்குவைத்து ஒரு சமூகத்தின் மீது பழி சுமத்தும் வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், நாட்டில் குறிப்பாக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருபதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடும் விசனம் தெரிவித்துள்ளார். உலகெங்கும் அனுஷ்டிக்கப்படும் மே தினம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இஸ்லாம் தொழிலாளர்களின் உரிமைகளை சரிவர வழங்கியிருப்பதனால், முஸ்லிம் காங்கிரஸ் ஆண்டு தோறும் மே தினத்தைக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொள்ளவில்லை. கொவிட் -19 நோய்த் தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் தொழிலாளர்கள் தொழில் வாய்ப்பின்மை, பணிக் குறைப்பு, சம்பளம் வழங்கப்படாமை போன்ற பல்வேறு காரணிகளால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில்கூட அரசாங்கத்திடம் மானியம் கேட்டு குரல் எழுப்பும் நிலைமைக்கு தொழிலாளர்கள் ஆளாகியுள்ளனர். இலங்கையைப் பொறுத்தவரை கொவிட் -19 விவகாரம் கையாளப்படும் விதம் நிலைமையை மிகவும் சிக்கலாக்கியுள்ளது. அரசியல் உள்நோக்கங்களோடு, நோய் பரவல் பற்றிய அச்ச உணர்வு மேலோங்கியுள்ளதாகத் தோன்றுகிறது. மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டிருக்கின்றார்கள். பல மாவட்டங்களில் அவர்களது நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டபோதிலும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை உட்பட சில மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு ஏறத்தாழ ஒன்றரை மாதங்களாக நீடிக்கப்பட்டிருப்பதன் விளைவாக அன்றாடம் தொழிலுக்குச் செல்வோரும், நாளாந்தம் கூலித் தொழில் புரிவோரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக முஸ்லிம்கள் செறிவாக வசிக்கும் அக்குறணை, அட்டுலுகம போன்ற பிரதேசங்களில் ஓரிருவர் கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டதற்காக, அவ்வாறான பிரதேசங்களிலிருந்து ஏராளமானோர் தனிமைப்படுத்தல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அக்குறணையில் 22 கிராம சேவகர் பிரிவுகளில் வசிப்போர் முடக்கப்பட்டுள்ளதனால் அங்குள்ளோரின் வாழ்வாதாரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் தனவந்தர்கள் வழங்கிவரும் நிவாரண உதவிகளைத் தவிர அரசாங்கத்தினால் உரிய கவனஞ் செலுத்தப்படவில்லை. நாட்டில் பொதுவாக அரசாங்கத்தினால் வழங்கப்படுவதாகக் கூறப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவுக்காக அப்பாவி பொதுமக்கள் தங்களது தன்மானம், சமூக அந்தஸ்து என்பனவற்றை இழந்து நீண்ட வரிசைகளில் கால் கடுக்க தவம் கிடக்க வேண்டிய நிலைமை ஊடகங்களில்கூட சர்வசாதாரணமகக் காண்பிக்கப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் சர்ச்சைக்குள்ளாகி சட்டம் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடிக்குள் நாடு சிக்குண்டுள்ள நிலையில் கொவிட் - 19 நோய் நிலைமையை அரசியல் உள்நோக்கங்களுடனும், இனவாதச் சிந்தனையுடனும் தொடர்ந்து அணுகுவது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பையே சீர்குலைத்துவிடும் அபாயத்தை ஏற்படுத்தும். அத்துடன் தொழில் இழப்பு வேலையில்லாத் திண்டாட்டம் என்பவற்றின் விளைவாக பொதுமக்களின் வாழ்வாதாரம் முன்னெப்போதும் இல்லாதவாறு பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தென்படுகின்றன https://www.virakesari.lk/article/81104
 4. தொழில் இழப்பால் மாற்றுத்தொழிலில் ஈடுபடும் சிகை அலங்கரிப்பாளர்கள் தற்போதைய சூழ்நிலையில் பலதரப்பட்டவர்களும் தமது தொழிலை இழந்துவரும் நிலையில் வவுனியா மாவட்ட சிகை அலங்கரிப்பாளர்களும் வேறு வருமான வழிகளை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் மாறாஇலுப்பை கிராமத்தில் வசிக்கும் 218 குடும்பங்களில் பலரது பிரதான தொழில் சிகை அலங்கரிப்பாகும். எனினும் தற்போதைய நிலையில் சலூன்கள் மூடப்பட்டுள்ளமையால் தமது அன்றாட தொழிலை இழந்து வாழ்வாதாரத்திற்கு பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமது குடும்பத்தின் அன்றாட தேவைகளை மேற்கொள்ளும் பொருட்டு சிறு தோட்ட செய்கையில் தற்போது ஆர்வம் செலுத்தி வருகின்றனர். எனினும் இவர்கள் அன்றாட வருமானத்தினை அடிப்படையாகக் கொண்டு தமது ஜீவனோபாயத்தினை செய்து வந்தமையால் தற்போது சிறு தோட்டச்செய்கையை செய்வதற்கும் போதுமான நிதி வசதிகள் இன்றி பல்வேறு கஸ்டத்திற்கு மத்தியில் தோட்டச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/81106
 5. மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்தியமை தொடர்பில் மணிவண்ணனிடம் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் விசாரணை May 01, 20200 கடந்த வருடம் நவம்பரில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்தியமை தொடர்பில் பயங்கரவாதத் தடைப் பொலிஸார் நேற்று நண்பகல் கொக்குவிலில் உள்ள சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளருமான மணிவண்ணனிடம் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட இந்த விசாரணையில் அவரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்து சென்றனர். நேற்று நண்பகல் கொக்குவிலில் உள்ள மணிவண்ணனின் வீட்டுக்குச் சென்று அவரை விசாரணைக்கு உட்படுத்தினர். கடந்த வருடம் நவம்பரில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்தியமை தொடர்பிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.(15) http://www.samakalam.com/செய்திகள்/மாவீரர்-நாள்-நினைவேந்தலை/
 6. வடமாகாண ஆளுநர் மருத்துவ விடுமுறை ? May 1, 2020 வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ், மூன்று மாத மருத்துவ விடுப்புக் கோரியுள்ளார் என்று அறிய முடிகிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் இந்த அனுமதியை அவர் கோரியுள்ளார். இன்று மே முதலாம் திகதி தொடக்கம் வரும் மூன்று மாதங்களுக்கு அவர் இந்த விடுப்பைக் கோரியுள்ளார். என ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது. அத்துடன், ஆளுநரின் பணிகளை ஒழுங்குபடுத்தி நிர்வாகத்தை முன்னெடுக்க வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் ஆகியோரைக் கொண்ட குழுவை அனுமதிக்குமாறும் ஆளுநர் தனது கடிதத்தில் கேட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேறொரு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண பதில் ஆளுநராக மூன்று மாதங்களுக்கு நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ், அண்மைக்காலமாக கொழும்பிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திலிருந்தே பணிகளை முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #வடமாகாண #ஆளுநர் #மருத்துவவிடுமுறை http://globaltamilnews.net/2020/141944/
 7. கொரோனா வைரஸ்: உங்கள் உயிரைக் காக்கும் கை கழுவும் பழக்கம் - தவிர்த்தால் என்னாகும்? Getty Images கடந்த வருடம் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் தொகுப்பாளரான ஹெக்செத், தான் 10 ஆண்டுகளாக கை கழுவவில்லை எனக் கூறியிருந்தார். 2015ஆம் ஆண்டு பிரபல நடிகை ஜெனிஃபர் லாரென்ஸ் தான் கழிவறை சென்று வரும்போது கை கழுவியதில்லை என்று கூறினார். ஹெக்செத் மற்றும் ஜெனிஃபர் தாங்கள் நகைச்சுவைக்காக அவ்வாறு கூறியதாக ஒப்புக்கொண்டனர். ஆனால் சிலர் நேரடியாகவே தாங்கள் அவ்வளவாக கை கழுவுவதில்லை என ஒப்புக்கொள்கின்றனர். 2015ல் வடக்கு கரோலினா பகுதியின் குடியரசு கட்சியின் உறுப்பினரான தாம் டில்லிஸ், உணவு விடுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அடிக்கடி கை கழுவதுதான் விதிமுறைகளை மதிப்பதன் சிறந்த உதாரணம் எனக் கூறினார். இன்னும் 10 ஆண்டுகளில் கழிவறைக்கு சென்று விட்டு திரும்ப வரும்போது, கை கழுவாமல் வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஓர் ஆய்வு கூறுகிறது. 2015ல் எடுத்த ஓர் ஆய்வின்படி கழிவறைக்கு செல்வோரில் 26.2% பேர் மட்டுமே கைகளை சோப்பால் கழுவுகின்றனர். உதாசீனப்படுத்தப்படும் சிறிய பழக்கம் இது ஒரு சிறிய பழக்கம் என தோன்றலாம். ஆனால் நாங்கள் இதற்காக 25 வருடங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இன்னும் இப்பழக்கம் குறைவாகத்தான் இருக்கிறது, என்கிறார் லண்டன் சுகாதாரம் மற்றும் பாரம்பரிய மருத்துவ கல்லூரியிலிருந்து பொது சுகாதார நிபுணர் ராபர்ட் ஆங்கர். Getty Images ஏழ்மை மிக்க நாடுகளில், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் சோப்பு வாங்க வசதியின்மையை ஒரு காரணமாக கூற முடியும். பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளில் 27% மக்களுக்கு மட்டுமே இந்த சோப்பு போன்ற பொருட்கள் கிடைக்கிறது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப்பின் கணக்குப்படி 3 பில்லியன் மக்கள் தங்கள் வீட்டில் சோப்பு போன்றவை இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் வளர்ந்த நாடுகளில் கூட 50% பேர்தான் இதை கழிவறைக்கு சென்று வந்த பின் பயன்படுத்துகின்றனர். உயிரைக்காக்கும் கண்டுபிடிப்பு 1850இல் இருந்து எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் இந்த கை கழுவும் பழக்கத்தால் மனிதனின் சராசரி ஆயுள் கூடுகிறது என நாம் தெரிந்து கொள்ளலாம். இதனால் நாம் இதை உயிரைக் காக்கும் ஒரு பழக்கமாக பார்க்க வேண்டும். இந்த சிறிய பழக்கம் பெருந்தொற்று மற்றும் பெரிய பிரச்சனைகளை நம்மிடம் வராமல் காக்கிறது. 2006ல் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் தொடர்ந்து கைகளை நன்கு கழுவும் பழக்கமுடையவர்களுக்கு சுவாசக் கோளாறு வருவதற்கு 6 % முதல் 44 % சதவீதம் வரை வாய்ப்புகள் குறைகிறது என கூறப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்று பரவும் விகிதத்தை அறிவதற்கு அந்தந்த நாட்டின் கை கழுவும் பழக்கத்தைக் கணக்கில் எடுத்து கொள்ளுதல் ஒரு நல்ல முறையாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சிலர் சானிடைசர்களுக்காக நிறைய பணத்தை செலவு செய்ய தயராகும்போதும் சிலர் சோப் பயன்படுத்த மறுக்கிறார்கள். Getty Images கழிவறைக்கு சென்று கை கழுவாமல் இவ்வாறு திரும்புவதற்கு சோம்பேறித்தனம் மட்டும் காரணமாக அமைவதில்லை. சில மனரீதியான காரணங்களும் மக்களை கைகழுவுவதிலிருந்து தடுக்கிறது. மனிதனின் கற்பனைத்தனமான நம்பிக்கை, சாதாரணமாக இருப்பது போல் நினைக்க வைப்பது மற்றும் அருவருப்படையக் கூடிய எல்லை ஆகியவையும் கை கழுவுவதைத் தடுக்கிறது. வளர்ந்த நாடுகளில் கை கழுவது பல நேரங்களில் தவிர்க்கப்பட்டாலும், அப்பழக்கம் இல்லாதவர்கள் அவ்வளவாக நோய்வாய்ப்படுவதில்லை என்பதே கை கழுவும் பண்பின் பிரச்சனை என்கிறார் ஆங்கர். நேர்மறையான நம்பிக்கை நேர்மறையான நம்பிக்கை மிக முக்கிய காரணம். அடுத்தவர்களுக்கு தவறாக நடப்பதை விட நமக்கு குறைவாகவே தவறுகள் நடக்கும் என்ற நம்பிக்கை மக்களை கை கழுவும் பழக்கத்திலிருந்து விலக்கி வைக்கிறது. இந்த நம்பிக்கை உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடம் பரவி உள்ளது. இது நமக்கு நடக்கவுள்ள கெட்ட விஷயங்களைப் பற்றிய நமது கணிப்பை தவறாக்கும். இந்த கற்பனை எண்ணம்தான் புகை பிடித்தலின் அடிப்படையாக இருப்பது அல்லது அதிகம் செலவாகும் க்ரெடிட் கார்டுகளை வாங்கத் தூண்டுவது போன்றவற்றிக்கு காரணமாக அமையும். இது கை கழுவ வேண்டாம் என மக்களை தடுக்கவும் செய்யும். இது செவிலியர்களுக்காக படித்து கொண்டிருக்கும் மாணவர்களிடம் பார்க்கலாம். அவர்கள் தங்களுக்கு தெரிந்த நல்ல சுத்தமான பழக்கங்கங்களை சற்று மிகையாக கூறுவதை பார்க்க முடியும். உணவை கையாள்கிறவர்களிடமும் இதைப் பார்க்க முடியும். அவர்கள் தங்களால் அடுத்தவர்கள் சாப்பிடும் உணவு கெடலாம் என்பதை தவறாக கணிப்பார்கள். சமூக கட்டுப்பாடு கை கழுவதலில் மனரீதியான காரணங்கள் உள்ளது என்பதன் மிகப்பெரிய அடையாளம் பல்வேறு இடங்களில் மற்றும் கலாசாரங்களின் பின்பற்றப்படும் கையை சுத்தமாக வைத்திருக்கும் முறையே ஆகும். Getty Images 63 நாடுகளிலிருந்து 64,002 பேரிடம் செய்த ஓர் ஆராய்ச்சியின் படி கழிவறைக்கு சென்று கை கழுவுதல் தன்னிச்சையாக அவர்கள் செய்யக்கூடிய ஒரு பழக்கம். இதை சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் நெதர்லாந்தில் பாதிக்கும் குறைவானோரே ஒப்புக்கொண்டனர். ஆனால் சௌதி அரேபியாவில் 97 சதவீதம் பேர் இது அவர்களின் வாடிக்கை என ஒப்புக்கொண்டனர். ஆண்களைவிட பெண்கள் அதிகம் கை கழுவுகிறார்கள் ஓர் ஆய்வு கூறுகிறது. பிரிட்டனில் உள்ள ஒரு மோட்டார் சர்வீஸ் நிலையத்தில் பெண்கள் இரு மடங்கு அதிகமாக கைகளைக் கழுவுகின்றனர் என ஆங்கர் கண்டறிந்துள்ளார், கோவிட்-19 பெருந்தொற்று வந்தபோதிலும் 65% சதவீத பெண்கள் மற்றும் 52% சதவீத ஆண்கள் மட்டுமே தங்கள் கைகளைக் கழுவுகின்றனர். சமுதாய பழக்கங்களினால் கூட கை கழுவும் பழக்கத்தில் வேறுபாடு இருக்கலாம் என ஆங்கர் விவரிக்கிறார். பொது இடங்களில் வெவ்வேறு கழிவறைகளை ஆணும் பெண்ணும் பயன்படுத்துவர். இரு பாலித்தனவருக்கும் தனிப்பட்ட முறைகள் இருக்கும். அதேபோலதான் வெவ்வேறு குழுக்களுக்கும் தனிப்பட்ட சமுதாய நடை முறைகள் இருக்கும். பகுத்தறிவும் அனுபவமும் கைகழுவும் பழக்கத்துக்கு பின்னால் இருக்கும் மன ரீதியான காரணங்களை கண்டறிவதில் விஞ்ஞானிகள் இவ்வளவு தீவிரமாக இருக்க ஒரு முக்கிய காரணம் இது உயிர் சம்பந்தபட்ட விஷயம் என்பதாகும். அதுவும் குறிப்பாக மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு மிக முக்கியமான ஒன்று. பல ஆண்டுகள் உயிரைக்காக்கும் தொழிலை கற்கும் மருத்துவ பணியாளர்கள் வைரஸ்கள் மற்றும் பேக்டீரியாக்கள் பரவாமல் தடுக்கும் மிக முக்கிய அடிப்படை பழக்கத்தை விட்டுவிடுகின்றனர். சில சமீப கால கண்டுபிடிப்புகள் அதிர்ச்சயளிக்கும் வகையில் உள்ளது. உதாரணமாக 2019ல் சௌதி அரேபியாவில் உள்ள க்யூபேக் மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவ பணியாளர்கள் 33% மட்டுமே கைகளை கழுவுகின்றனர் என ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டது. சௌதி அரேபியாவில் கைக் கழுவும் பழக்கம் அடிக்கடி இருக்கும்போதும் மருத்துவ பணியாளர்கள் அதை சரியாக செய்வதில்லை. ஆனால் பொது மக்களின் பார்வையில் அனைத்து மருத்துவ பணியாளர்களும் தவறானவர்களாகத் தெரிவதில்லை. இந்த வருடம் மார்ச் மாதம் நடந்த ஆய்வின்படி பகுத்தறிவு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. பிரேசிலில் நடந்த ஆய்வு ஒன்றில் அதிக பகுத்தறிவு கொண்டவர்கள் சமூக விலகலை அதிகம் கடைப்பிடிக்கிறார்கள் மற்றும் கைகளை அதிகம் கழுவுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்: முறையாக கை கழுவுதல் எவ்வாறு? அருவருப்பு அருவருப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. உணவில் புழு இருப்பதை பார்த்தவுடன் நம்மை அறியாமல் நாம் அதை தவிர்த்துவிடுவோம். அதேபோல் ரயிலில் ஓர் அசுத்தமான இடத்தை பார்த்தவுடன் சுவாசத்தை கட்டுப்படுத்தி கொள்வோம். இந்த அருவருப்பு உணர்வு நம்மை பல இடங்களில் காப்பாற்றுகிறது என்கிறார் உளவியல் நிபுணர் டிக் ஸ்டீவன்சன். விலங்கியல் பூங்காவில் தங்களது மலத்தை தாங்களே சாப்பிடும் மனித குரங்கு கூட அடுத்த விலங்கின் உடல் திரவத்தை தொடாது. அருவருப்பு என்பது நம்மை காப்பாற்றிக்கொள்ள மனிதர்களிடம் மட்டும் இருப்பதில்லை. விலங்குகளிடமும் இருக்கும். இந்த அருவருப்பு நம்மை அரசியல் முடிவுகள் கூட எடுக்க வைக்கும். மிகவும் அருவருப்பு படக்கூடிய மக்கள் பெரும்பாலும் பழமைவாதிகளுக்கே ஓட்டு போடுவார்கள். அதேபோல் ஒரு பாலுறவை ஏற்று கொள்வது, மற்ற நாட்டு மக்களை ஏற்று கொள்வது போன்றவைகளும் அருவருப்பின் அடிப்படையில்தான் முடிவாகும். அருவருப்பு அதிகம் உள்ளவர்கள் நீண்ட நேரம் குழாய் முன்னால் நின்று கைக்கழுவதை விரும்ப மாட்டார்கள். ஹைட்டி மற்றும் எத்தியோபியாவில் மக்களின் அறிவு மற்றும் விழிப்புணர்வைக் காட்டுலும் அருவருப்பு உணர்வே அவர்களை கைகளை கழுவ வைக்கிறது என நடத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. தூய்மையாக வைத்து கொள்வது கடந்த சில வாரங்களாக அனைத்து தரப்பினரும் கை கழுவதைப் பற்றி நிறைய கருத்துகளைக் கூறியுள்ளதை பார்க்க முடியும். பிரபலங்கள் அனைவரும் கைகளை எப்படி கழுவ வேண்டும் என்பதை விளக்கி காணொளி வெளியிட்டுள்ளதையும் பார்க்க முடியும். ஆனால் கை கழுவும் பழக்கம் அதிகம் இல்லாத நபரை எவ்வாறு இந்த பழக்கத்திற்குள் கொண்டுவருவது? கை கழுவும் பழக்கத்தை வித்தைபோல் இல்லாமல் அவர்களுக்குள் நாம் அருவருப்பை விதைத்தாலே போதுமானது. 2009ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெக்வாரி பல்கலைகழகத்தில் ஸ்டீவன்சன் மாணவர்களை வைத்து ஆய்வு ஒன்றை நடத்தினார். மாணவர்களிடம் அவர்கள் கைக்கழுவும் பழக்கம் மற்றும் அருவருப்பு குணத்தைப் பற்றி கேட்டனர். பின்னர் அவர்களை ஒரு கல்வி தொடர்பான காணொளி, ஒரு போராட்ட காணொளி மற்றும் ஓர் இயற்கை சம்பந்தபட்ட காணொலி ஆகியவற்றிலிருந்து ஒன்றை பார்க்க கூறினார். ஒரு வாரம் கழித்து அவர்கள் அனைவரையும் மீண்டும் அழைத்து ஆன்டிபேக்டீரியல் டிஷ்யூ மற்றும் கைகளை கழும் ஜெல் இருக்கும் இடத்திற்கு வரக் கூறினார். அவர்கள் சில அருவருக்கதக்க வீடியோக்களை பார்க்கவைக்கப்பட்டார்கள். பின்னர் ஒரு தட்டிலிருந்து திண்பண்டத்தை எடுத்து சாப்பிட கூறினார். யாரும் சாப்பிடவில்லை. இந்த ஆய்வின் மூலம் அருவருப்பை தூண்டும் காட்சிகள் பார்த்தால் அவர்கள் கைகளை நன்கு கழுவுவார்கள் என கண்டறியப்பட்டது. நல்ல பழக்கம் ஒரு விஷயத்தை நடைமுறைப்படுத்தும்போது அது நமக்கு பழக்கம் ஆகி விடுகிறது. இப்போது நாம் கொரோனா தொற்றின் காலக்கட்டத்தில் உள்ளோம். ஆனால் இந்த கை கழுவும் பழக்கத்தை நாம் விடாமல் வைத்திருப்போமா எனபதே கேள்வி என்கிறார் ஆங்கர். கோவிட்-19 உண்டாக்கும் விளைவு என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இனி எந்த பிரபலமும் தாங்கள் வெகு நாட்களாக கை கழுவவில்லை என சொல்லமாட்டார்கள். https://www.bbc.com/tamil/science-52447775
 8. தனது அனுபவங்களை, வரலாற்று நினைவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். போராட்டத்திற்கு முன்னரும் பின்னரும் சாதியம் எப்படி இருந்தது என்ற வரலாற்றை அறிய இந்நூலை படிப்பது நல்லது.
 9. ஹாலிவுட் விரும்பாத உண்மைக் கதை – கொரோனாவிடம் தொற்றுப் போன அமெரிக்கா !: வரதன் 04/29/2020 இனியொரு... ஹாலிவுட் படங்களைப் பொறுத்தவரை அமெரிக்கா தோற்கடிக்காத ஒரு நபரோ, நாடோ, உயிரோ இந்த பூமியில் மட்டுமல்ல, நமது பால்வெளி மண்டலத்திலே கூட இல்லை. அமெரிக்க நாயகர்கள் செய்யாத சாகசம் இல்லை. இருப்பினும் ஒரு வைரஸ் நிஜ அமெரிக்காவை நிலைகுலைய வைத்துவிட்டது. அந்த நிலைகுலைவிற்கு காரணம் ஏழை நாடுகளில் கூட இருக்கும் பொது சுகாதாரக் கட்டமைப்பு அங்கே இல்லை என்பதுதான். இலாபத்தை இலட்சியமாக வரித்திருக்கும் ஒரு சுகாதார அமைப்பின் தோல்வியை அமெரிக்க கொரோனா வைரஸ் நெருக்கடி நிரூபித்திருக்கிறது. அமெரிக்காவின் பிரம்மாண்டமான இராணுவ புள்ளிவிவரங்கள் உருவாக்கியிருக்கும் வலிமையை கோவிட் 19 விவரங்கள் கலைத்துப் போட்டுவிட்டன வல்லரசு அமெரிக்காவின் பிரம்மாண்டமான இராணுவ புள்ளிவிவரங்கள் உருவாக்கியிருக்கும் வலிமையை கோவிட் 19 விவரங்கள் கலைத்துப் போட்டுவிட்டன. உலகளாவிய மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்தை கொண்டிருக்கும் அமெரிக்கா, உலகளாவிய கோவிட் 19 தொற்றுகளில் 32 சதவீதத்தைக் கொண்டிருக்கிறது. அதாவது உலக அளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மக்களில் மூன்றில் ஒருவர் அமெரிக்கராக இருக்கிறார். போலவே உலக கொரோனா மரணங்களின் 32 சதவீதத்தை அமெரிக்காவே வைத்திருக்கிறது. கொரோனா வைரஸ் தோன்றிய நாடான சீனா, அமெரிக்காவை விட நான்கு மடங்கு மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும் கொரான தொற்று மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவோடு ஒப்பிடும் போது பத்தில் ஒரு பங்கையே கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பேரழிவு அமெரிக்கா முழுவதும் தாண்டவமாடுகிறது. குறிப்பாக நியூயார்க் நகரத்தை பாருங்கள்; இறந்தவர்களை ஏற்றிக் கொண்டு ஏராளமான குளிர்சாதன சுமையுந்துகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. மருத்துவ சிகிச்சை கிடைக்க வழியில்லாமல் நூற்றுக்கணக்கான மக்கள் தமது இல்லங்களில் இறந்து கொண்டிருக்கிறார்கள். சவக்கிடங்கின் தேவை அதிகரித்துக் கொண்டே போவதால் சமூகக் கல்லறைகளில் எண்ணிறந்த உடல்கள் சேமிக்கப்படுகின்றன. பிபிஇ எனப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், வெண்டிலேட்டர்கள், டயாலிசிஸ் எந்திரங்கள் போன்றவைகளின் பற்றாக்குறை நெருக்கடியோடு மருத்துவத் துறை பணியாளர்கள் பணியாற்ற வேண்டியிருக்கிறது. ஒரு முறை மட்டும் பயன்படுத்த வேண்டிய முகமூடி மற்றும் கவச ஆடைகளை மீண்டும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது நியூயார்க் நகரில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், அவரும் பிற சுகாதரத்துறை நிபுணர்களும் எதிர்கொள்ளும் சிரமங்களை பட்டியலிடுகிறார். ஒரு முறை மட்டும் பயன்படுத்த வேண்டிய முகமூடி மற்றும் கவச ஆடைகளை மீண்டும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. சில நேரம் இவை இல்லாமலும் பணியாற்றுகிறார்கள். சில இடங்களில் தொற்றிலிருந்து பாதகாத்துக் கொள்ள பெரிய குப்பை பைகளை அணிந்து வேலை செய்கின்றனர். மருத்துவமனைகளில் இருக்கும் ஊழியர் பற்றாக்குறை, அது ஏற்படும் மன அழுத்தம், மருத்துவமனைகளின் பொது அரங்குகள் மற்றும் உணவகங்களை கூட நோயாளிகளுக்கான படுக்கைகளை போட்டு பயன்படுத்த வேண்டிய நிலை, மருத்துவமனை நிர்வாகங்கள் வென்டிலேட்டர்களை வாங்குவதற்கு காட்டும் தயக்கம் போன்றவற்றையும் அந்த மருத்துவர் பட்டியிலிடுகிறார். அமெரிக்காவின் மருத்துவத் தோல்வி என்பது டிரம்பையும் தாண்டியது. பரவலாகி அழிவை ஏற்படுத்தும் தொற்று நோய் மற்றும் சரிந்து வரும் பொருளாதார நெருக்கடிகள்…. என இரட்டை நெருக்கடிகள் அமெரிக்க மக்களை சூழ்ந்துள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், நிதி உதவியையை வழங்கவும் துரிதமான மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாக டிரம்ப் நிர்வாகத்தை குறை கூறுவது எளிது. உண்மையில் நெருக்கடிகளின் வேர்கள் டிரம்பின் காலத்திற்கு முன்பே ஆழப் புதைந்து விட்டன. எந்த ஒரு அதிபராக இருந்தாலும் அவரது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா தொற்று நோய் பேரிடர் காலத்தில் மோசமாகித்தான் போயிருக்கும். ட்ரம்ப் முட்டாள் போல பேசுகிறார். ஹாலிவுட் ஹீரோக்களின் அமெரிக்க பெருமிதத்தை வெட்டித்தனமாக பீற்றுகிறார். ஆரம்பத்தில் கொரோனா வைரசால் பெரிய பாதிப்பு இல்லை என்றார். பின்னர் பாதிப்பு ஏற்பட்ட பிறகு சீன வைரஸ் என்று சீனாவின் மீது பழி போட்டார். பின்னர் உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்தினார். இவையெல்லாம் டிரம்ப் எனும் ஒரு தனிநபரின் பிரச்சினை போன்று புரிந்து கொள்வது தவறு. அமெரிக்காவின் மருத்துவத் தோல்வி என்பது டிரம்பையும் தாண்டியது. தற்போதைய பேரழிவு பெருமளவில் இருப்பது ஏன்? ஏனெனில் அமெரிக்க சுகாதரத் துறை இந்த பேரழிவை தடுக்கும் வலிமையற்றது. அது துண்டு துண்டாக உடைந்து போயிருக்கிறது – மையப்படுத்தப்படவில்லை, அது பாரபட்சமானது – சமத்துவமானது அல்ல, அது பெருநிறுவனங்களில் இலாபத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது – மக்களின் நலனுக்காக அல்ல. கொரோனா தொற்று நோய்க்கு முன்னரே மற்ற மேற்கத்திய செல்வந்த நாடுகளை ஒப்பிடும் போது தடுத்திருக்க கூடிய இறப்புகளின் எண்ணிக்கை அமெரிக்காவில் மிக அதிகம். அதாவது மருத்துவ சிகிச்சை இருந்தால் அந்த இறப்புகளை தவிர்த்திருக்கலாம். மேலும் 2014-ம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்கர்களின் சராசரி ஆயுட் காலம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அமெரிக்கர்களின் ஆரோக்கியம் பற்றிய விதி முற்றிலும் இலாபத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கும் சந்தையின் விதிக்கு உட்பட்டது. அமெரிக்க சுகாதரத் துறையின் ஒவ்வொரு அங்கத்தை எடுத்துக் கொண்டாலும் அது மற்ற வளர்ந்த நாடுகளை விட இரண்டு மடங்கு செலவு பிடிக்கும் கட்டுமானத்தையே கொண்டிருக்கிறது. ஐரோப்பாவில் ஒரு சிகிச்சை ஆயிரம் டாலர் என்றால் அமெரிக்காவில் அது 2000 டாலர். அந்த அளவுக்கு அமெரிக்கர்களின் ஆரோக்கியம் பற்றிய விதி முற்றிலும் இலாபத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கும் சந்தையின் விதிக்கு உட்பட்டது. அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் இருந்தாலும் அங்கே ஆரோக்கியம் என்பது சந்தையின் பிடியில் மட்டுமே இருக்கிறது. சந்தையின் பிடிமானம் என்பது உங்களது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. சான்றாக மகப்பேறியல், குழந்தை மருத்துவம் போன்ற அத்தியாவசிய துறைகளில் வருமானம் அதிகம் இல்லை என்பதால் பல தனியார் மருத்துவமனைகள் அத்துறைகளை மூடி விட்டு இலாபம் அதிகம் வரும் இதயவில் மற்றும் எலும்பியல் போன்ற துறைகளுக்கு அதிக முக்கியத்துவத்தை தருகின்றன. ஒட்டு மொத்தமாக திவாலடையும் அமெரிக்க மக்களை எடுத்துக் கொண்டால் மூன்றில் இரண்டு பங்கு திவால் நிலைமைகளை மருத்துவமனைகளின் கட்டணங்களே உருவாக்குகின்றன. இப்போதும் கூட அமெரிக்காவில் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் சுகாதாரக் காப்பீடு இல்லாமல் இருக்கின்றனர். கொரோனா தொற்று அதிகமாகிய கடந்த ஐந்து வாரங்களில் வேலையின்மை நலத்திட்ட பலன்களை பெற இரண்டு கோடியே அறுபது இலட்சம் அமெரிக்கர்கள் முதன்முறையாக பதிவு செய்திருக்கின்றனர். அவர்களிலும் ஐம்பது இலட்சம் பேர் மருத்துவ காப்பீடுகளை இழந்தவர்கள். காப்பீடு இல்லாத அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஜூன் மாத இறுதிக்குள் ஒரு கோடியே முப்பது இலட்சமாக உயரும் என மதிப்பிடப் பட்டிருக்கிறது. மேலும் சுகாதாரக் காப்பீட்டை வைத்திருக்கும் மக்களும் தங்கள் காப்பீட்டு சலுகைகளை பெறுவதற்கு முன்பு ஆயிரக்கணக்கான டாலர்களை செலவழிக்க வேண்டியிருக்கும். இதனால் அவர்களாலும் மருத்துவ கட்டணங்களை சமாளிக்க இயலாது. சுகாதாரத் துறை காப்பீடுகளை ஒரு நபர் கொண்டிருந்தாலும் அவர் சிகிச்சைக்காக எங்கும் போக இயலாத நிலையும் அமெரிக்காவில் இருக்கிறது. கடந்த 45 ஆண்டுகளில் அமெரிக்க மக்கள் தொகையில் பத்து கோடி அதிகரித்திருந்தாலும் மருத்துவ படுக்கைகள் ஆறு இலட்சமாக மட்டுமே சுருங்கியிருக்கிறது. இலாபம் இல்லை என்பதற்காக பல ஊரக மருத்துவமனைகள் மூடப்பட்டிருக்கின்றன. தற்போது ஊரகப் புறங்களில் இருக்கும் 1 ,844 மருத்துவமனைகளில் சுமார் 453 மருத்துவமனைகள் மூடுவதை நோக்கிய அபாயத்தில் இருக்கின்றன. நகரங்களிலோ வறியவர்களுக்காக நூறு ஆண்டுகளாக சிகிச்சை அளித்த மருத்தவமனைகள் எல்லாம் இரக்கமின்றியே மூடப்பட்டிருக்கின்றன. இந்த இடங்கள் ஆடம்பர இல்லங்களை கட்டும் ரியல் எஸ்டேட் துறைகளுக்கோ இல்லை இதர வணிக பயன்பாடுகளுக்கோ மாற்றப்பட்டிருக்கின்றன. அமெரிக்க சுகாதரத் துறைக்கு தேவைப்படும் பொருட்கள் உபகரணங்களின் விநியோகச் சங்கிலி எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதை கோவிட் 19 அம்பலப்படுத்தியிருக்கிறது. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாத தொடக்கம் வரை கொரோனா அறிகுறிகளோடு மக்கள் மருத்துவமனைகளுக்கு சென்றாலும் அவர்களை சோதிப்பதற்கு அங்கே போதிய கருவிகள் இல்லை. அந்த சோதனைக் கருவிகளை உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து வாங்குவதை விட தானே தயாரிக்கலாம் என அமெரிக்க முடிவு செய்தது. மேலும் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் ஆடை, உபகரணங்களுக்கும் அங்கே கடும் தட்டுப்பாடு. இத்தகை மருத்துவ உபகரணங்களின் விலைகளை மருந்து நிறுவனங்கள் 1000 சதவீதம் உயர்த்தியிருப்பதால் இவற்றை பெறுவதற்கு மாநிலங்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. எரியும் வீட்டில் பிடுங்கும் வரை ஆதாயம் என்ற நிலைதான் இந்த ஆயிரம் சதவீத கட்டண உயர்வுக்கு காரணம் என்றால் அந்த நாட்டை எப்படி யாரால் காப்பாற்ற முடியும்? இப்போதைய கொரோனா நெருக்கடி நிலை நாடு முழுவதும் மொத்த அமெரிக்கர்களுக்குக் கிடைக்க வேண்டிய மேம்பட்ட மருத்துவத்திற்கான தேவை முன்னெப்போதையும் விட பலமாக இருக்கிறது. ஒருவேளை முன்னரே அனைவருக்கும் மருத்துவ பாதுகாப்பை வழங்கியிருந்தால் இப்போது எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியிருக்காது. அப்படி இருந்தால் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு அமெரிக்கரும் பணம் தேவைப்படாமலேயே பாதுகாக்கப்பட்டிருப்பார்கள். ஊடக செய்தி ஒன்றின் படி கடந்த மார்ச் மாதத்தில் செவிலியர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுக்காக சிகிச்சையையும், பரிசோதனையையும் செய்ய முயன்றார். மருத்துவமனையில் சேர்க்கப்படாமேலேய முதல் கட்ட செலவுகள் மட்டும் அவருக்கு 35,000 டாலர் ஆகியிருக்கிறது. ஆம் இப்படித்தான் மூன்றில் இரண்டு பங்கு தனிநபர் திவால்கள் மருத்துவக் கட்டணங்களை முன்னிட்டு அங்கே நடக்கிறது. உலகில் எந்த வகையான சுகாதாரக் கட்டமைப்புகள் வெற்றி பெறுகின்றன? பாதுகாப்பு, மையத் திட்டமிடல், இலாபத்தை முன்னிறுத்தாமல் மக்களின் ஆரோக்கியத்தை முன்வைக்கும் அணுகுமுறை ஆகியவையே கொரானவை உலக அளவில் எதிர் கொள்ள தேவையானதாகும். அதனால்தான் இத்தகைய கட்டமைப்பு கொண்ட நாடுகள் சில அவை அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டிருப்பினும் தொற்றின் பவரலை கட்டுப்படுத்தும் பணியினை சிறப்பாகவே செய்கின்றன. அமெரிக்காவில் அனைவருக்குமான மருத்துவம் இருந்திருந்தால் மருத்துவமனைகள் தமது கதவுகளை அனவருக்கும் திறந்தே வைத்திருக்கும். போலவே இலாபம் தராத ஆனல் மக்களுக்கு தேவைப்படும் பல்வேறு மருத்துவத் துறைகளையும் மூடியிருக்காது. மேலும் பெரும் முதலீட்டு நிறுவனங்கள் மருத்துவமனைகளை வாங்குவதும் இலாபம் இல்லையென்றால் அவற்றை மூடுவுதம் கூட நடந்திருக்காது. அதே போன்று மத்திய அரசு மருந்துகளையும், மருத்துவப் பொருட்களை மொத்தமாக மலிவாக கொள்முதல் செய்வதற்கும், மாநிலங்களுக்குத் தேவையானதை அளிப்பற்கும் கூட வாய்ப்பிருந்திருக்கும். ஏலப் போர்களும், விலைவாசி உயர்வும் மருத்துவத் துறையில் பேயாட்டம் போட்டிருக்காது. ஒரு நிபுணரது மதிப்பீட்டின் படி அமெரிக்காவின் அடுத்த குளிர்காலம் நோய்த்தொற்று காரணமாக இன்னும் மோசமாக இருக்கும். உலகளவில் கொரானா நோய்த் தொற்றின் சர்வதேசப் பரவலை சீனா, தென்கொரியா, கியூபா, வெனிசூலா போன்ற நாடுகள் சிறப்பாகக் கையாண்டிருக்கின்றன. காரணம் அந்த நாடுகள் மையப்படுத்தப்பட்ட திட்டத்தையும் மக்கள் நல சுகாதாரத் துறைகளையும் கொண்டிருப்பதுதான். அமெரிக்காவிலோ சந்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களும்தான் சுகாதாரத் துறையில் கோலேச்சுகின்றன. எனவே கொரானாவால் கொல்லப்பட்ட அமெரிக்கர்களை விட முதலாளித்துவத்தால் கொல்லப்பட்ட அமெரிக்கர்கள் அங்கே அதிகம். இதுதான் ஹாலிவுட் படங்கள் மூலம் இந்த பிரபஞ்சத்தையே நடுநடுங்க வைத்த அமெரிக்காவின் உண்மைக் கதை! http://inioru.com/hollywood-coronavirustruestory/
 10. இர்பான் கான்: மிகச்சிறந்த நடிகரின் மறைவு! April 29, 2020 - சந்தோஷ் · சினிமா செய்திகள் தேர்ந்த கதாப்பாத்திரங்கள் மூலம் எப்போதும் உலக மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருந்த இர்பான் கான் மரணமடைந்தார் என்ற செய்தி பலரை சோகக் கடலில் மூழ்கியிருக்க செய்திருக்கிறது. தன்னுடைய அசாத்திய நடிப்பின் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்று பல ஹாலிவுட் படங்களில் நடித்த இர்பான் கான் இன்று காலை(29.04.2020) மரணமடைந்தார். 1967ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்த இர்பான் கான் இளம் பிராயத்திலே தன் தந்தையை இழந்தார். கிரிக்கெட், நாடகத்துறை என்று பல துறைகளில் ஆர்வம் கொண்டிருந்த இர்பான் கடைசியாக தஞ்சமடைந்தது சினிமாத்துறையில். தான் ஏற்றுகொண்ட கதாபாத்திரத்திற்கு மிகையாக ஒரு துளி நடிப்பைக்கூட இர்பானிடமிருந்து எதிர்பார்த்திடமுடியாது. துல்லியமான நடிப்பு, முறையான கதாபத்திர தேர்வு, சக நடிகர்களை நேசிக்கும் நல்ல மனிதர் என்று அவருடைய வளர்ச்சி வெகு சில நாட்களிலே பாலிவுட் சினிமாக்களில் உச்சத்தை தொட்டது. தொடக்க காலகட்டத்தில் பல நேர்மறை கதாப்பாத்திரங்களில் நடித்துவந்த இர்பான் நாளடைவில் மெல்ல மெல்ல எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு பேர்போனவராக உருமாறினார். தன்னுடைய மிரட்டும் கண்கள் மூலம் கதைக்குத் தேவையான நடிப்பை எந்தவித அலட்டல்களும் இல்லாமல் மிகச் சிறப்பாக வெளிப்படுத்த தெரிந்த இர்பானுக்கு பல உலக சினிமாக்களில் இருந்து வாய்ப்புகள் வந்தவண்ண இருந்தன. சலாம் பாம்பே, ஹாசில், மக்பூல், பான் சிங் தோமர், லன்ச் பாக்ஸ், ஹைதர், பிக்கூ என இந்திய சினிமாவின் பல முக்கிய திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். அதுமட்டுமில்லாமல் ஸ்லம்டாக் மில்லினியர், தி அமேஸிங் ஸ்பைடர் மேன், லைஃப் ஆஃப் பை, ஜூராஸிக் வேல்டு, இன்ஃபெர்னோ போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில்தான் இர்பான் கானுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு எண்டோகிரைன் புற்றுநோய் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வினோதமான புற்றுநோய் ரத்தத்தில் உள்ள ஹார்மோன்களை பாதித்து கொஞ்ச கொஞ்சமாக ரத்த செல்களைப் அழிக்கும். 53 வயதான இர்பான் கான் கடந்த இரண்டு வருடங்களாக இந்த புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென்று மும்பை கோகிலா பென் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் மறைவையொட்டி பல திரைப் பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இர்பான் கானின் மறைவு இந்திய சினிமாவில் ஒரு சிறந்த நடிகருக்கான வெற்றிடத்தை உருவாகியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது https://uyirmmai.com/செய்திகள்/சினிமா/இர்பான்-கான்-மிகச்சிறந்/
 11. ஜெயமோகனின் “பத்துலட்சம் காலடிகள்” சிறுகதையை வாசிப்பது எப்படி?- ராஜன் குறை April 30, 2020 - ராஜன் குறை · இலக்கியம் ஓளசேப்பச்சன் கதாபாத்திரம் ரொம்ப குடிக்கிறது. தொடர்ந்து ஏப்பம் விடுகிறது. பலரையும் ஏசுகிறது. யாரையும் பேசவிடாமல் அதுவே பேசிக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற பாத்திரங்களை ஜெயமோகன் கொஞ்சம் கட்டுக்குள் வைக்க வேண்டும். கதை சொல்லியையும் அந்த பாத்திரத்திற்கு எதிரே உட்கார வைத்த பிறகு சும்மா ஏப்பம் விடுவதை எண்ணிக்கொண்டிருந்தால் சரியாக வராது. ஒளசேப்பச்சனின் அபத்தமான கருத்துக்களை மறுத்து ரெண்டு வார்த்தை பேச வேண்டும். ஒளசேப்பச்சன் உளறுவதையெல்லாம் குறிப்பெடுத்து பதிவுசெய்வதற்கா கதைசொல்லி மற்ற பாத்திரங்களுடன் உட்கார்ந்திருக்கிறான். பாருங்கள், அந்தப் பாத்திரம் மோடியை ஃபூயரர் என்று சொல்கிறது. நல்லவேளையாகப் போயிற்று. ஃபூயரரை பாஜககாரர்களுக்கு ரொம்ப பிடிக்கும். பெருமிதமாக உணர்வார்கள். மாற்றாக கதைசொல்லியையும், எலி ராஜவையும் நோக்கி வசவை பொழிவதைப் போல மோடியைப் பற்றியும் சில வசவுகளைச் சொன்னால் என்ன ஆவது? ஜெயமோகன்தானே சங்கிகளுக்கு பதில் சொல்லவேண்டி வரும்? நம் வீட்டில் பார்ட்டி வைத்தாலே யாராவது சலம்பல் கேஸ் மரியாதைக்குரிய நண்பர்களை புண்படுத்திவிட்டால் நாம் தான் மன்னிப்புக் கேட்கிறோம். நமக்கென்று ஒரு பொறுப்பு இருக்கிறதல்லவா? அப்போது என் கதையில் கதாபாத்திரம் பேசினால் நான் என்ன செய்வது என்று எல்லா நேரத்திலும் கேட்க முடியாது. சில கூற்றுக்களை கதைக்குள்ளேயே மறுத்திருந்தால் கூட பிரச்சினையிருக்காது. பொறுப்புள்ள எழுத்தாளர்கள் அதைத்தான் செய்வார்கள். பத்துலட்சம் காலடிகள் கதையின் பிரச்சினை ஜாதி, அழகு குறித்த பேச்சு மட்டும் இல்லை. அது சற்றே தீவிரமான மானுடவியல் தர்க்கம் சார்ந்தது. எனவே இந்தக் கட்டுரையும் விரிவாகவும் சீரியசாகவும் அமைவது தவிர்க்க இயலாதது. கதையைப் படிப்பது போல ஜாலியாக இருக்காதுதான். கொஞ்சம் ஆராய்ச்சியாகத்தான் இருக்கும். ஜெயமோகன் வெளிப்படுத்தும் மனோபாவம் அவருக்கு மட்டுமே உரியதில்லை என்பதால் நாம் அதை விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தத்தான் வேண்டும். ஜெயமோகனின் கட்டுரைகள் பலவற்றை கறாராகவும், கடுமையாகவும் விமர்சித்து, கண்டித்து எழுதியுள்ளேன். ஜெயமோகன் எழுத்துக்கள் குறித்த விமர்சனம் விஷ்ணுபுரம் நாவலிலிருந்துதான் துவங்கியது. அந்த ஆங்கில கட்டுரை புரூஃப் பார்க்கப்பட்ட நிலையில் பத்திரிகை நின்றுவிட்டது. இருபதாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் இப்போது மீண்டும் தமிழில் விரிவாக எழுதவேண்டும். மற்றபடி அவ்வப்போது படித்து வருகிறேன் என்றாலும் அவர் புனைவெழுத்து எதற்கும் விமர்சனம் எழுதும் சந்தர்ப்பம் அமைந்ததில்லை. புனைவெழுத்துக்களை தொடர்ந்து படிக்கவும் சாத்தியமாகவில்லை. இப்போது எழுதி வரும் கதைகளிலும் பலவற்றில் இதே ஒளசேப்பச்சனும், இந்த நண்பர்கள் குழுவும் இடம்பெறுவதாகத் தெரிகிறது. நான் அவற்றை படிக்கவில்லை. அவ்வப்போது நான் படித்த அளவில் ஜெயமோகன் புனைவுகளுக்கும், அரசியலுக்கும் பொதுவான தத்துவார்த்த அடித்தளம் இருக்கிறது என்பதுதான் என் எண்ணம். பத்துலட்சம் காலடிகள் சிறுகதையில் விஷ்ணுபரம் போலவே அதை மீண்டும் இனம் காண முடிகிறது. இந்த விமர்சனக் கட்டுரையை எழுத முடிவு செய்ய அது ஒரு காரணம் மற்றொரு காரணம், கதையை குறித்து முகநூலில் கண்ட பதிவுகள். அவற்றில் ஒருவகையான பதிவுகள் பிரமிப்பையும், பாராட்டுதல்களையும் கொண்டவை. ஜெயமோகன் கொரோனா ஊரடங்கு துவங்கியதிலிருந்து தொடர்ந்து சிறுகதைகள் எழுதி தனது தளத்தில் வெளியிட்டு வருகிறார். அதில் வேறு எந்த கதையும் என் பார்வைக்கு எட்டியவரை முகநூலில் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டு கொண்டாடப்படவில்லை. அதே சமயம் இந்த கதையில் வரும் “ஜாதிப்படிநிலையில் கீழே செல்லச் செல்ல அழகு குறையும்” என்ற கூற்றிற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. அதையொட்டி ஜெயமோகனும், பிறரும் சில விளக்கங்களை கூறினர். இந்த இரண்டு முரண்பட்ட எதிர்வினைகளும் பரிசீலனைக்கு உரிய விஷயங்களாக இருந்ததும் இந்த கட்டுரையை எழுத முனைவதற்குக் காரணம் எனலாம். கூடியவரை சுருக்கமாகவும், நேரடியாகவும் எழுத எண்ணுகிறேன். கட்டுரையை நான்கு பகுதிகளாக பிரித்துக்கொள்வோம். கதையாடல் தர்க்கம், துப்புத்துலக்குதலின் தர்க்கம், மானுடவியல் தர்க்கம், அழகும்-இனக்கலப்பும், ஆகியவை அந்த நான்கு பகுதிகள். கதையாடல் தர்க்கம் கதைசொல்லி உட்பட ஐந்து பேர் கொச்சியில் கடலோரம் அமர்ந்து நாட்டுச் சாராயம் சாப்பிடுகிறார்கள். அப்போது நடக்கும் உரையாடலில் விரியும் கதைதான் பத்து இலட்சம் காலடிகள். அந்த கதையைச் சொல்வது ஒளசேப்பச்சன் என்ற பாத்திரம். பாண்டித்தமிழ் எழுத்தாளன் என்றும், திருவாதாங்கூர் நாயரென்றும் அழைக்கப்படும் கதைசொல்லி மையமான பேசுபொருள் ஒன்றை, கடலில் செல்லும் பத்தேமாரி என்ற கப்பலை சுட்டுகிறார். மற்றபடி ஒளச்சேப்பன் சொன்னான், ஒளசேப்பச்சன் ஏப்பம் விட்டான் என்று சில இடைக் குறிப்புகளைத் தருவதுடன் அவர் பங்களிப்பு முடிந்துவிடுகிறது. குமாரன் மாஸ்டர், ஸ்ரீதரன், எலி ராஜு ஆகியோரும் கருதத்தக்க எந்த இடையீடும் செய்வதில்லை. ஒளசேப்பச்சனுக்கு உரையாடல் தூண்டலாக இருக்கிறார்கள் என்பதற்கு மேல் அவர்களைக் குறித்துச் சொல்ல எதுவும் இல்லை. கதைசொல்லி உட்பட அவர்கள் யாரது உணர்வுகளும், சிந்தனைகளும் வெளிப்படுவதும் இல்லை. இதனால் பெரும்பாலும் ஒளசேப்பச்சன் என்ற பாத்திரமே கதைசொல்லியாக மாறிவிடுகிறது. அவர் பத்தேமாரி என்ற கப்பலை மாப்பிள்ளை கலாசிகள் கட்டுவதை குறித்து பேசத் துவங்கி அவர்கள் சமூகக் கட்டமைப்பின் உள் ஒழுங்கை தான் உணர்ந்து கொண்ட ஒரு தருணத்தை சாங்கோபாங்கமாக கூறி முடிப்பதுதான் கதை. பத்து இலட்சம் காலடிகளை இணைத்து ஆற்றலை ஒருமுகப்படுத்தி வெளிப்படுத்தும்போது ஒரு அடிகூட தவறிவிடக்கூடாது என்று முத்தாய்ப்பாக அவர் சொல்லி முடிப்பதில் கதையின் தலைப்பு பெறப்படுகிறது. முதலில் இந்த கதைசொல்லி என்றால் என்ன என்பதை வரையறுத்துவிட வேண்டும். கதை என்பது ஒரு மொழிதல் என்பதால் அதை நிகழ்த்துவது யார் என்பது கேள்வி. அதை நிகழ்த்துவது எழுத்தாளர் என்று நினைப்பது தேவையற்றது. கதையை தன்னிலை குரலாக ஒலித்தாலும் (ஃபர்ஸ்ட் பெர்சன் நேரேடிவ் எனப்படுவது), அசரீரியாக ஒலித்தாலும் அந்த குரல் கதைசொல்லியின் குரல்தான்; எழுத்தாளரின் குரல் அல்ல. சில சமயம் கதைசொல்லி முக்கிய பாத்திரமாக ஒரு குறிப்பிட்ட பெயருடன் கூட இருக்கலாம். பத்து இலட்சம் காலடிகள் சிறுகதையின் உள்ளே நிகழும் கதையை தன்னுடைய அனுபவமாகச் சொல்வது ஒளசேப்பச்சன் என்பதால், அவரே பெருமளவு கதைசொல்லியாக இருக்கிறார். ஒளசேப்பச்சன் கதைசொல்லியாகவும், கதாபாத்திரமாகவும் மாறி மாறி இருப்பது முக்கியமான பிரச்சினை அல்ல. ஏனெனில் பொதுவாக எந்த ஒரு கதையிலும் இயங்குவது கதைசொல்லியின் (narrator) குரல்தான். எழுத்தாளன் ஒரு நோக்குநிலையை, ஒரு சிந்தனையின் சாத்தியத்தை கதைசொல்லியின் குரலின் மூலம் வெளிப்படுத்துவதாகக் கொள்ளலாம். அதனால் பிரதியின் நோக்கத்தை, அந்த நோக்கம் பிரதியில் செயல்படுவதை ஆராய வேண்டுமே தவிர, ஆசிரியர் யார், எதனால் எழுதுகிறார், அவருடைய நோக்கம் என்ன என்று ஆராய்வது தேவையில்லை. அதே சமயம் ஒரு எழுத்தாளர் தொடர்ந்து பல பிரதிகளை எழுதும்போது, அவற்றினை இணைத்துப் பார்ப்பதும் அதன் மூலம் அவரது சில பார்வைகள் என்பவற்றை தொகுத்துக்கொள்வதும் சாத்தியம்தான். அந்தந்த படைப்புகளின் கதைசொல்லிகளை கடந்து எழுத்தாளனின் பெயரே ஒரு பார்வையின், நோக்குநிலையின் சுட்டுதலாக மாறத்தான் செய்யும். ஜெயமோகன் போல புனைவற்ற கட்டுரைகளை, சமகால நிகழ்வுகள், அரசியல் குறித்து எழுதும் ஒருவரை அவரது பல்வேறு எழுத்துக்கள் மூலமும் தொகுத்து அடையாளம் காண்பதும் தவிர்க்க இயலாதது. ஏனெனில் எழுத்தோ, பேச்சோ மொழி எப்போதுமே சொல்லும் செயல்தான் (speech act). அந்த செயல்பாட்டை சமூகத்தில் நிகழ்த்துவது எழுத்தாளர்தான். இது ஏற்படுத்தும் சமூக பொறுப்பிலிருந்து எழுத்தாளரை சமூகங்கள் முற்றிலும் விடுவிப்பதில்லை. அது சாத்தியமா என்பதும் கேள்வியே. தணிக்கை செய்யாமல் இருப்பது நல்லது; தடை செய்யாமல் இருக்கவேண்டும். ஆனால் பொறுப்பேற்கவேண்டும் என்று எதிர்பார்க்கத்தான் செய்வார்கள். ஒளசேப்பச்சன் என்ற நபர் சாராயம் குடித்துவிட்டு கூறும் கதையில் நிகழும் முரண்கள், சிக்கல்களை இந்த கதையின் சிக்கல்களாகத்தான் பார்க்க முடியுமே தவிர, அந்த கதாபாத்திரத்தின் பொறுப்பு என்று சொல்லமுடியாது. ஏனெனில் இந்த ஒரு பாத்திரத்தின் தொடர்ந்த பேச்சைத்தவிர, அதன் வர்ணனைகள், தகவல்கள், கூற்றுக்களைத் தவிர கதையில் வரும் பிறர் கூறுவதெல்லாம் பொருட்படுத்தத் தக்கதாக இல்லை. இதையும் கூட பலவீனம் என்று கிரியேட்டிவ் ரைட்டிங் வகுப்பெடுக்கும் ஆசிரியர் ஒருவர் கூறலாம். ஏனெனில் கதையில் கதாபாத்திரங்கள் இருந்தால் அவர்கள் சிறிய பங்களிப்பாவது செய்ய வேண்டும். அரங்க மேடையில் ஒரு பொருள் இருந்தால் அது நாடகத்திற்கு பயன்பட வேண்டும் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள். ஜெயமோகனுக்கு ஒரு நல்ல எடிட்டர் தேவை. ஏனெனில் அவர் மன எழுச்சி, உணர்வெழுச்சி ஆகியவற்றை நம்பி எழுதுகிறார். அவற்றையே சொற்களில் கடத்துகிறார். அதனால் கதையில் கணிசமான சிறு பிழைகள் மலிகின்றன. துரதிர்ஷ்டவசமாக அதை அவருக்கு யாரும் சுட்டிக்காட்டுவதும் இல்லை என்று தோன்றுகிறது. விமலாதித்த மாமல்லன் சில கதைகளை ஒரு இரக்கமற்ற எடிட்டரை போல கூர்ந்து பார்த்து பல பிழைகளை சுட்டிக் காட்டியிருந்தார். ஆனால் அவர் ஆவேசமான எள்ளலுடன் செய்ததால் உரிய கவனம் பெறாமல் போயிருக்கலாம். உதாரணமாக ஒரே ஒரு தருணத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கதைசொல்லி பத்தேமாரியை ஒளசேப்பச்சனுக்கு சுட்டிக்காட்டும் தருணம். கடலில் சென்றுகொண்டிருந்த பெரிய படகொன்றைச் சுட்டிக்காட்டி “இத்தனை பெரிய படகு… அதுவும் மரத்தாலானது… இதையெல்லாம் இப்போது கட்டுகிறார்களா?”என்றேன். நினைத்தது போல ஔசேப்பச்சன் அந்தப்பக்கமாக திரும்பினான். “அதன்பெயர் பத்தேமாரி… அரேபியப்பெயர்… தெரியாதவர்கள் அதை உரு என்கிறார்கள். உரு என்றால் பெரிதாகக் கட்டி எழுப்பிய ஒன்று என்று பொருள்… அது கடலில் தொலைவில் அப்படி தெரிகிறது. கடல்மேல் எல்லாமே சிறியவைதான். அதை நீ கரையில் வைத்துப் பார்க்கவேண்டும். ஒரு ஐந்துமாடி கட்டிடம் அளவுக்கு இருக்கும்.” கதைசொல்லியே “இத்தனை பெரிய படகு” என்று சுட்டும்போது, ஒளச்சேப்பச்சன் “அது கடலில் தொலைவில் அப்படி தெரிகிறது. கடல்மேல் எல்லாம் சிறியவைதான்” என்று மறுமொழி கூறுவது இடறலாக இருக்கிறது. “அது கடலில் தொலைவில் இருக்கும்போதே அப்படி தெரிகிறது. அதை நீ கரையில் வைத்து பார்த்தால்…” என்று சொன்னால் சரியாக இருக்கும். அல்லது கதைசொல்லி “அந்த படகு” என்று மட்டும் சொல்லியிருக்கலாம். இந்த உரையாடல் முரண் பெரிய பிழை இல்லை. கதையின் ஓட்டத்தில் யார் கண்ணிலும் படாது போகலாம். ஆனால் கூர்ந்த வாசிப்பை பழக்கமாகக் கொண்டவர்களுக்கு நெருடும். ஒளசேப்பச்சனை கற்பனை செய்து கொள்வதே கடினமாக இருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் காவல்துறையில் டிஎஸ்பி ஆக இருந்தவர் இப்போது உயர் பதவியில் இருப்பார், ஓய்வு பெரும் வயதில் இருப்பார் அல்லது ஒய்வு பெற்றிருப்பார். அவரை கதைசொல்லி உட்பட அனைவரும் ஏக வசனத்தில் கூப்பிடுகிறார்கள். ஒருவேளை அனைவரும் அவர் வயதையொத்த சகாக்களாக இருக்கலாம். ஆனால் அப்படி ஒரு சித்திரம் மனதில் உருவாக மறுக்கிறது. அதற்கான குறிப்புகள் எதுவும் கிடைப்பதில்லை. வயதுக்கேற்ற மரியாதையை தரும்படி “ர்” விகுதியை பயன்படுத்தியிருந்தால் அந்த கதாபாத்திரம் பேசும் கனமான அனுபவங்களுக்கு பொருத்தமாக இருந்திருக்கலாம். குமாரன் மாஸ்டர் மட்டும் “ர்” விகுதியுடன் குறிப்பிடப்படுகிறார். வயது சார் தடுமாற்றம் 29 வயது கிருஷ்ணன் எம்பிராந்திரியை இளைஞன் என்பதா, பையன் என்பதா என்பதிலும் இருக்கிறது. சடலம் இளைஞனுடையதாக இருக்கிறது. ஆளைக் கண்டுபிடிக்கும்போது பையனாகி விடுகிறான். தகவல் பிழைகளையும் தவிர்க்க வேண்டும். போர்த்துகீசியர் கடலாதிக்கம் பதினாறாம் நூற்றாண்டா, பதினேழாம் நூற்றாண்டா; 1872 ஆம் ஆண்டில் அவத்தில் நவாபே கிடையாது என்பன போன்ற விவரங்களையும் யாராவது சரிபார்த்து எடிட் செய்யவேண்டும். அவத் நவாப்கள் குரூரமானவர்கள் என்று எழுதும்போது கடைசி நவாப் வாஜித் அலி ஷா குறித்து வரலாறு என்ன சொல்கிறது, கிழக்கிந்திய கம்பெனி ஏன் அவரை ஆளத்தகுதியற்றவர் என்று சொன்னது, சத்யஜித் ரேயின் சத்ரன்ஜ் கே கிலாடியில் அவர் எப்படி வெளிப்படுகிறார் என்பதையும் நினைவுகூர வேண்டும். இது எதுவுமே பெரிய பிரச்சினை இல்லைதான். ஆனால் எதற்காக பிழையாக எழுத வேண்டும் என்பதும் ஒரு கேள்விதான். வாசகர் மனதில் இந்த பிழைகள் விதைகளாக விழும் வாய்ப்புகள் அதிகம். இது போன்ற பிழைகளை சுட்டுவதை விமர்சனம் என்று நான் கருதுவதில்லை என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். இதையெல்லாம் சுட்டியதற்கே காரணம் எப்படி உணர்வெழுச்சி என்பதை மட்டுமே நம்பி கதையாடல் இயங்குகிறது என்பதை கவனிக்கத்தான். ஜனரஞ்சக இலக்கியம் இப்படித்தான் உணர்வெழுச்சியை மையமாகக் கொண்டு இயங்கும். வாசகரின் உழைப்பைக் கோரும் எழுத்து சற்றே அடர்த்தியினையும், கவனமான நுண் அடுக்களையும் கொண்டிருப்பது அவசியம். சிறிய வாக்கியங்களால் கட்டப்படும் நேர்ச்சுட்டு நடை உணர்ச்சிகளை நேரடியாகக் கடத்துவது வாசகர்களை சுலபமாகக் கவர்வதை புரிந்துகொள்ள முடிகிறது. உதாரணம்: “அந்த சட்டங்கள் மெல்ல அதிரும். மிகமெல்ல. அவற்றில் நின்றால் நம் காலில் ஒரு சின்ன மின்சாரம் பாய்ந்த அதிர்வு ஏற்படும், அவ்வளவுதான்.” துப்புத்துலக்குதலின் தர்க்கம் கிருஷ்ணன் எம்பிராந்திரியின் கொலை வழக்கில் முக்கிய அங்கம் வகிப்பது விலையுயர்ந்த துருக்கித் தொப்பி. அந்த தொப்பியின் சரிகை இழை ஒன்று அவனது அழுகிய பிணத்தின் விரலில் ஒட்டியிருப்பதால்தான் மாப்பிள்ளைமாரின் கலாசாரத்தின், அவர்களது அளப்பெரிய செயலாற்றலின், கட்டுமானத்திறனின் ரகசியத்தை அல்லது அந்தராத்மாவை ஒளசேப்பச்சனால் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது துப்புத்துலக்குதலின் இலக்காக இறுதியில் வெளிப்படுவது கிருஷ்ணன் நம்பூதிரியை யார் கொன்றார்கள் என்ற விடையைக் காண்பது அல்ல. அது எந்த முக்கியத்துவமும் இல்லாத ஒரு பிற்சேர்க்கைதான். அந்த ஜரிகை நூலும், அது இருந்த விலையுயர்ந்த துருக்கித் தொப்பியும் தான் கிருஷ்ணன் எம்பிராந்திரி மங்களூர் வருவதற்கும், கொல்லப்படுவதற்கும் பின்புலமான காரணங்கள். அந்த காரணங்களின் மூலம் கிடைக்கும் மானுடவியல் தரிசனம்தான் துப்புத்துலக்கலின், கதையின் உண்மையான விளைபொருள். கிருஷ்ணன் எம்பிராந்திரியை பணத்திற்காக கொன்ற ஒரு சில்லறைத் திருடனை, கிரிமினலை கண்டுபிடிப்பதிலும், கைது செய்வதிலும் எந்த முக்கியத்துவமும் இல்லை. விசாரணையின் துவக்கமே அசாத்தியமாகத்தான் இருக்கிறது. “அழுகி, வயிறு உப்பி, கண்கள் பிதுங்கிய சடலம்” ஒன்றின் புகைப்படத்தைக் காட்டி இந்த நபரை பார்த்திருக்கிறீர்களா என்று போலீஸ் மங்களூரில் விசாரிக்கிறது. எப்படியோ ஏழு மாதம் கழித்து பணம்பூரில் ஒரு ஓட்டல் சர்வர் அந்த போட்டோவில் உள்ள அழுகி, கண்கள் பிதுங்கிய முகத்தை துல்லியமாக அடையாளம் காண்கிறான். பர்சை மறந்துவைத்துச் சென்றுவிட்டு பிறகு வந்து வாங்கிச்சென்ற, தனக்கு இருபது ரூபாய் டிப்ஸ் கொடுத்த நபரென்று சரியாகச் சொல்லி விடுகிறான். அதைத்தொடர்ந்து பணம்பூர் பகுதியில் விசாரித்ததில் மற்றொமொரு ஓட்டலில் வேலை செய்யும் பையனும் அந்த முகத்தை இனம் கண்டு அவன் அந்த ஓட்டலில் தங்கியிருந்ததை உறுதிசெய்வதுடன், தங்கியிருந்த அறை எண் 2A என்றும் கச்சிதமாகக் கூறிவிடுகிறான். ஹோட்டல் ரிஜிஸ்டரில் அந்த அறையில் தங்கிய நபர் கொடுத்த போலி விலாசம் வேலையை சுலபமாக்கி விடுகிறது. மூன்றே வாரங்களில் அந்த அழுகிய பிணம் வடகரையில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் பூசாரியாக இருந்த கிருஷ்ணன் எம்பிராந்திரி என்று கண்டுபிடித்து விடுகிறார்கள். அடுத்து தெரியவேண்டியது கிருஷ்ணன் எம்பிராந்திரியை எப்படி இறந்தான் அல்லது யார் கொன்றார்கள் என்பதுதான். உள்ளபடி சொன்னால், விசாரணை இந்த தருணத்தில் சரியான திசையில்தான் சென்றது. கிருஷ்ணனை கொன்றது மங்களூரின் கிரிமினல்களில் ஒருவன் என்று இறுதியில் அறிகிறோம். ஒளசேப்பச்சன் சொன்னது “ஏற்கனவே மங்களூர் ரயில்நிலையம், பஸ்ஸ்டாண்ட் பகுதிகளின் எல்லா பொறுக்கிகளையும் குட்டித்திருடர்களையும் துப்புரவாக விசாரித்திருந்தோம். அவர்கள் எவரும் அவனைப் பார்த்ததே இல்லை என்றார்கள். அத்தனைபேரையும் மீண்டும் வரவழைத்து மேலும் கடுமையாக விசாரித்தோம். ஒரு வாரத்தில் ஒன்று தெரிந்தது, அவர்கள் எவரும் அவனைப் பார்க்கவில்லை. லாக்கப்பில் ஏராளமான மலமூத்திரம் விழுந்ததுதான் மிச்சம்.” இவ்வளவு கடுமையான விசாரணையில் மங்களூரின் கிரிமினல்களில் ஒருவன் நாலு இலட்சம் ரூபாய் சம்பாதித்திருந்தால், அதன் பின் காணாமல் போயிருந்தால் அது குறித்து தெரிய வந்திருக்கவே வாய்ப்பு அதிகம். அனால் அப்படி நடந்திருந்தால் குற்றவாளியை கண்டுபிடித்த பிறகு, கிருஷ்ணனை ஏன் கொன்றார்கள், ஜரிகை இழை விரலில் எப்படி வந்தது என்ற கேள்விக்கு முக்கியத்துவம் இல்லாது போயிருக்கலாம். கொலையாளியையே பிடித்துவிட்டால், அவனும் குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டால் பிற பின்னணித் தகவல்களுக்காக மெனக்கெட முடியுமா என்பது கேள்விதான். கிருஷ்ணனிடம் எவ்வளவு பணம் இருந்தது என்று அந்த கிரிமினல் கூறியிராவிட்டால், குறைத்துக் கூறியிருந்தால் மேலும் வழக்கில் சுவாரசியமற்றுத்தான் போகும். ஜரிகை இழையும், தொப்பியும் முக்கியத்துவம் இழந்து போகும். இங்கேதான் பிரதியின் நோக்கம் ஒன்று உருவாகிறது. கிருஷ்ணன் கொலை, மங்களூர் கிரிமினலை பிடிப்பதுடன் முடிந்துவிட்டால் ஒளசேப்பச்சனின் அப்துல்லா விசாரணை, மாப்பிள்ளை சமூகம் பற்றிய தரிசனம் எல்லாம் சாத்தியமில்லாமல் போயிருக்கும். அதனால்தான் ஒளசேப்பச்சன் சம்பிரதாயமாக குட்டித் திருடர்களை, பொறுக்கிகளை சித்தரவதை செய்தாலும் அவர்களுக்கும் கிருஷ்ணன் கொலைக்கும் தொடர்பில்லை என்றே எண்ணுகிறார். ஜரிகை இழை இருந்த தொப்பி போட்டவர்தான் கொன்றிருக்க வேண்டும் என அனுமானிக்கிறார். அதன் அடிப்படையில்தான் கிருஷ்ணனை கொன்றது அப்துல்லாவா என்ற ஐயம் பிரதியுனுள் உருவாக முடிகிறது. ஒளசேப்பச்சன் வார்த்தைகளில் இந்த ஐயம் இப்படியாக வெளிப்படுகிறது: “அந்தப்பையனுக்கும் எம்.ஏ.அப்துல்லா சாகிபுக்குமான உறவு என்ன? அதைமட்டும் இணைத்தாகவேண்டும். முதலில் ஒரு விஷயத்தை விசாரித்தேன். கிருஷ்ணன் இறந்த அன்று எம்.ஏ..அப்துல்லா எங்கிருந்தார்? அன்று அவர் கோழிக்கோட்டில் அவருடைய ஆஸ்பத்திரியின் வார்டு ஒன்றை திறக்க வந்திருந்த உள்ளூர் எம்.எல்.ஏ மற்றும் டி.எம்.ஓவுடன் இருந்தார். அதற்கு எல்லா சான்றுகளும் இருந்தன. சட்டென்று ஒருவாசல் மூடியது.” இதில் என்ன பெரிய வேடிக்கை என்றால் எம்.ஏ.அப்துல்லாவே கிருஷ்ணனை மங்களூர் நேத்ராவதி ஆற்றின் கரையில் சென்று கொன்றிருப்பார், அதுவும் மறக்காமல் அந்த விலையுயர்ந்த துருக்கி தொப்பியையும் அணிந்து கொண்டு கொலை செய்யச் சென்றிருப்பார் என்னும் சாத்தியம்தான். அவ்வளவு பெரிய பணக்காரர், மாப்பிள்ளைமார் சமூகத்தையே கட்டில் வைத்திருப்பவர், கிருஷ்ணன் என்ற ஏழை இளைஞனைக் கொல்ல தொப்பி போட்டுக்கொண்டு அவரே நேரிலா செல்வாரா? அவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை நடத்தும் அவருக்கு ஒரு அடியாள் கூட இல்லாமல் போய்விடுவானா என்ன? எந்த வாசல் ஒளசேப்பனுக்கு திறந்திருந்தது? எது மூடியது? அப்துல்லா கிருஷ்ணனை கொல்லும்போது கிருஷ்ணன் போராடி, அப்போது அவர் தொப்பியை கையால் பற்றி, அதன் ஒரு ஜரிகை அவன் விரலில் சுற்றிக்கொண்டது என்பதுதானே அந்த வாசல்? அதனால்தானே அந்த நேரத்தில் அவர் எங்கே இருந்தார் என்று விசாரிக்கிறார் ஒளசேப்பச்சன்? அந்த மூடிய வாசலை மனதில் நினைத்துக்கொண்டேதான் இருக்கிறார் ஒளசேப்பச்சன். அதனால்தான் அப்துல்லாவின் மகன் ஹாஷிம் அந்த தொப்பியை அணிந்திருந்தான் என்று ராதாமணி சொன்னதும் பெரும் அதிர்ச்சியடைகிறார். “நான் ஒருகணம் என்னையே எண்ணி சலித்துவிட்டேன். என்ன முட்டாள்தனம். எம்.ஏ.அப்துல்லா சாகிபின் மகன்களும் அதே தொப்பிதான் போடுகிறார்கள் போலும். அதை நான் எண்ணிப் பார்க்கவே இல்லை.” இதில் என்ன முட்டாள்தனம் என்பதுதான் கேள்வி. அப்துல்லாவிற்கு ஒரு அலிபி, அந்த நேரத்தில் அவர் எங்கிருந்தார் என்பதற்கு இருக்கிறது. அதனால் வாசல் மூடியது. அவர் மகனும் அதேபோல தொப்பி அணிந்தவன் என்பதால் புதிய வாசல் திறக்கிறது. ஹாஷிம் மங்களூருக்கு தொப்பி அணிந்து சென்று கிருஷ்ணனை கொன்றிருக்கலாம் என்பதுதான் அது. அவ்வளவு பெரிய பணக்காரரின் மகன் நேரடியாகப் போய் அதைச்செய்வானா, அல்லது ஆட்களை விட்டுச்செய்வானா? எதனால் ஒளசேப்பச்சன் தன்னை நொந்துகொள்ள வேண்டும்? தொப்பியும், அதன் சரிகை இழையும் எந்த தர்க்க பலமும் இல்லாமல்தான் கதையில் வருகின்றன. முதலில் ஹாஷிம் தான் பிரேமை கொண்டுள்ள ஒரு மணமான பெண்ணின் இல்லத்திற்கே சென்று அவளை தன்னை மணக்கும்படி மன்றாடும்போது, துருக்கி தொப்பியை அணிந்து செல்வானா என்பதே கேள்வியாகத்தான் இருக்கிறது. அதை கழற்றி காரில் வைத்துவிட்டு செல்ல மட்டானா என்ன? அது பிறர் கவனத்தை ஈர்க்காதா? அந்த சந்திப்பின் அந்தரங்கத்தன்மைக்கு குறுக்கீடாக இருக்கதா? இதுவே சரியாகப் பொருந்தவில்லை என்றாலும், ஒருவேளை எல்லா நேரங்களிலும் தொப்பி அணிவது பழக்கம் என எடுத்துக்கொள்ளலாம். மணமான பெண்ணிடம் உறவுக்காக மன்றாட சென்றாலும், கொலை செய்யச் சென்றாலும் கூட மாப்பிள்ளைமார்களின் தலைவர்கள் அதை அணியாமல் செல்ல மாட்டார்களோ என்னவோ. ஏதோ அதீத உணர்ச்சியில் அதை எடுக்க மறந்து ஹாஷீம் சென்று விட்டான் என்றும் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு அடுத்த நிகழ்வு மேலும் குழப்பமானது. கிருஷ்ணன் அந்த தொப்பியை ஹாஷிமையோ, அப்துல்லாவையோ மிரட்டுவதற்கான ஒரு ஆதாரமாக கருதுவது அதீதமானது. ஒருவர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்தார் என்பதற்கு ஆதாரமாக மூன்றாம் நபர் அவரது தொப்பி தன்னிடம் இருப்பதை காட்ட முடியுமா என்ன? அந்த தொப்பியை நான் வெளியே சென்ற போது பொது இடத்தில் மறந்துவிட்டு வந்துவிட்டேன் என்றோ அந்த தொப்பி காணாமல் போய்விட்ட ஒன்று என்றோ அப்துல்லா/ஹாஷிம் கூறினால் அந்த தொப்பி எதற்கு சாட்சியமாகும்? குற்றம் நடந்த இட த்தில் அது கிடைத்தால் கூட ஐயத்திற்கு முகாந்திரம் இருக்கும். கிருஷ்ணன் போன்ற ஏழை பூசாரி தொப்பியை கையில் வைத்துக்கொண்டு தன் குற்றச்சாட்டிற்கு அதை ஆதாரமாகக் காட்டினால் சிரிக்க மாட்டார்களா? தொல்லைக்கு உள்ளான பெண்ணே கொண்டுவந்து காட்டினால் கூட, வேறு சாட்சியங்களின்றி, முகாந்திரமின்றி தொப்பி மட்டுமே சான்றாக எடுபடாது. ஆனால் கிருஷ்ணன் அந்த தொப்பியை வைத்துக்கொண்டு மிரட்ட செல்வதுடன், கொலை செய்யப்பட்டு இறக்கும் தருவாய் வரை பத்திரமாக வைத்துக்கொண்டுள்ளான். அந்த பெண்ணோ மாலிக் தினார் வம்சத்து எம்.ஏ.அப்துல்லாவின் குடும்ப செல்வாக்கை நினைத்து அதைக் குறித்து பேசவே அஞ்சுபவள். அவள் ஏன் தொப்பியை கடன் தொல்லையால் ஊரை விட்டு போகும் கிருஷ்ணனிடம் கொடுக்கிறாள் என்பது அதைவிட புதிரான கேள்வி. அவனிடம் மொத்த கதையையும் வேறு சொல்லி இருக்கிறாள். அவனிடம் தொப்பியையும் கொடுத்தால் அதை வைத்துக்கொண்டு ஏதாவது பிரச்சினை செய்வான் என அவள் யூகிக்க மாட்டாளா என்ன? உனக்கெதற்கு அந்தத் தொப்பி என்று கேட்க மாட்டாளா? ஆனாலும் கொடுக்கிறாள். ஒளசேப்பச்சனுக்கு சந்தேகம் வருகிறது. கிருஷ்ணன் ஹாஷிமை சந்தித்தானா இல்லையா? சந்தித்திருந்தால், அந்த தொப்பியை கொடுத்து பணம் வாங்கியிருந்தால் அந்த தொப்பி ஏன் அவனிடம் தொடர்ந்து இருந்தது? இந்தக் கேள்வியை இறுதியாக அப்துல்லாவிடமே கேட்கிறார் ஒளசேப்பச்சன். அப்துல்லா நேரடியாகவே தன் மகனின் வேலையாளிடம் விசாரித்து விடுவதால் கிருஷ்ணன் தொப்பியை ஆதாரமாகக் காட்டுவதற்கு தேவையேற்படவில்லை. உன்னிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்றெல்லாம் கேட்காமலேயே இரண்டு இலட்சம் கேட்டவனிடம், நாலு இலட்ச ரூபாய் கொடுத்து விடுகிறார். அதை கிருஷ்ணன் எம்பிராந்திரி விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக கொடுக்கவில்லை. ஒரு ஷத்திரியன் பிராமணனுக்குத் தரும் தட்சிணையாகக் கொடுக்கிறார். எனவே ஆதாரங்களைப் பற்றியெல்லாம் அவருக்குக் கவலையில்லை. அப்போதும் ஒரு கேள்வி இருக்கிறது. நாலு இலட்ச ரூபாய் கிடைத்த பிறகு அந்த கிரகம் பிடித்த தொப்பியை தூக்கி எறிந்துவிடலாமே? அதை எதற்கு சாகும் வரை கையில் வைத்திருந்தான் கிருஷ்ணன்? அந்தத் தொப்பியை கைப்பற்றி ஹாஷிமை சந்தித்து மிரட்ட விரும்பிய கிரிமினல்கள்தான் கிருஷ்ணனை கொன்றிருக்க வேண்டும் என அப்துல்லா யூகிக்கிறார். அதனால் தொப்பிதான் ஒரு வகையில் கிருஷ்ணனின் மரணத்திற்கு காரணம், கிருஷ்ணன் அந்த தொப்பியை தூக்கி எறிந்திருந்தால் ஒருவேளை சாகாமலும் இருந்திருக்கலாம் என்பது அவர் உருவாக்கும் யூகம். கிருஷ்ணன்தான் அப்பாவி பிராமணன் என்றால், ஒரு தொப்பியை வைத்துக்கொண்டு அப்துல்லா சாகிப் குடும்பத்தை மிரட்டலாம் என்று நினைக்கும் அளவிற்கா கிரிமினல்களும் முட்டாள்களாக இருப்பார்கள்? எந்த குற்றத்தின் தடையம் அல்லது சான்று அந்த தொப்பி? ஆனால் இந்த தொப்பிக்கு ஒளசேப்பச்சன் கொடுக்கும் முக்கியத்துவமும் அபாரமானதுதான். அவருக்கு அந்த ஒற்றை சரிகையிழையை வைத்துக்கொண்டு கோர்ட்டில் எதையும் நிறுவ முடியாது என்று தெரியும். அவரே அதைச் சொல்கிறார். ஆனாலும் அப்துல்லா பம்பாயில் துணி வாங்கும் கடைக்கு தானே நேரில் சென்று, அந்த தொப்பி ஒன்றை அங்குள்ள சிப்பந்தியை சரிகட்டி வாங்கி, அதை ஃபாரன்சிக் லாபில் வேறு கொடுத்து கிருஷ்ணன் கையில் இருந்த சரிகை இழை அந்த தொப்பியில் இருப்பது போன்றதுதான் என்று சரிபார்த்துக்கொள்கிறார். ஒளசேப்பச்சனுக்கு தனிப்பட்ட முறையில் அப்துல்லாவிற்கும் கிருஷ்ணனுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று தெரிய வேண்டும் என்பதற்காக அந்த அளவு முயற்சி எடுக்கிறார். இப்படி தொப்பி தர்க்கபலமில்லாத ஒரு பயன்பாட்டிற்கு ஆளாவதில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது. அது ஒரு குறிப்பான் (signifier) அல்லது தெளிவற்ற தொடர்மக் குறி (Rehmatic Indexical synsign) என்பதுதான் அது. குறியியக்கம் குறித்து அதிகம் இப்போதைக்கு எழுதப் போவதில்லை. வேறோரு சந்தர்ப்பத்தில் விரிவாகவே எழுதுவேன். இப்போதைக்கு அந்தக் குறி என்ன செய்கிறது என்பதை அறிந்தால் போதும். அது இந்தக் கதைக்குள் வந்ததே அப்துல்லா செய்த மற்றொரு கொலையை நாம் அறிந்துகொள்ளத்தான். அதிலும் முழுவதும் நாடகீயமாக, ஒளசேப்பச்சன் கடலில் நிற்கும் படகு ஒன்றில் அந்தி நேரத்தில் பேரழகனும், ஒரு சுல்தானைப் போல கம்பீரமானவருமான அப்துல்லாவின் வாயாலேயே அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, மாப்பிள்ளைகளின் சமூகக் கட்டமைப்பின் ஆழத்தை புரிந்துகொள்வதற்காகத்தான் அந்த தொப்பி கதைக்குள் வந்தது. அந்த குறியின் செயல்பாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் மற்றொரு சங்கதியை கவனம் கொள்ள வேண்டும். அப்துல்லா, ஒரு மணமான பெண்ணின் மீது காதல் கொண்டு அவளை தொந்திரவு செய்த தன் இளைய மகனை தண்டிக்க முடிவு செய்கிறார். அதிக பட்ச தண்டனையான மரண தண்டனை. ஏனெனில் இது போன்ற அத்துமீறல்களை அனுமதித்தால் அது எங்கே சென்று நிற்கும் என்று தெரியாது என்பதால் அந்த கடுமையான தண்டனை. மூத்த பிள்ளைகளின் சம்மதத்துடன் அதை செய்கிறார். அநேகமாக கிருஷ்ணன் வந்து சென்றவுடனேயே அதனை செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் வெறும் கொள்ளைக்கூட்டத் தலைவர் இல்லை; சமூகத்திற்கு தன் மகன் என்ன ஆனான் என்று ஒரு தகவல் சொல்லாமல் அவனை போட்டுத்தள்ள முடியாது. அதுவும் அப்துல்லா சமூகத்தில் பரவலான தொடர்புகள் உள்ளவர், எம்.டி வாசுதேவன் நாயரை வாடா, போடா என்று கூப்பிடக் கூடியவர். பொது சமூகத்தில் நடமாடிக் கொண்டிருந்த அவர் மகன் திடீரென காணாமல் போனால் அதற்கு ஒரு விளக்கம் சொல்லத்தான் வேண்டும். மேலும் மத வழக்கப்படி சடங்குகளும் செய்ய வேண்டும். அதனால் அந்த கொலையை விபத்து என்று நம்பகமாக ஜோடித்திருப்பார். அதை பொதுவில் அறிவித்தும் இருப்பார். அவ்வாறு நடந்திருந்தால் ராதாமணி ஹாஷிம் என்றவுடன் முகமது ஹாஷிம் என்று முழுப்பெயரையும் சொல்லும் அளவு விசாரித்து வைத்திருக்கும் ஒளசேப்பச்சன் ஹாஷிம் மரணமடைந்த தகவலை நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். ராதாமணியும் ஊடகம் வழியாக அறிந்திருக்க வாய்ப்பு அதிகம். ஆனால் துப்புத்தலக்கல் நாடகீயமாக முடிவதற்கு இந்த யதார்த்த உலக தர்க்கமெல்லாம் உதவாது. கிளைமாக்ஸ் களைகட்ட வேண்டும் அல்லவா? அப்போதுதானே வாசகர்கள் புல்லரிப்பார்கள்? ஒளசேப்பசனிடம் நடந்தவற்றையெல்லாம் அப்துல்லா கூறி முடித்தவுடன் ஒளசேப்பச்சன் எதற்கும் ஹாஷிமை சந்தித்து தகவல்களை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று கூறுகிறார். ஏனெனில் கிருஷ்ணனை கொன்றவர்களிடம் தொப்பி இருக்கலாம். அவர்கள் ஹாஷிமை தொடர்பு கொண்டிருக்கலாம் என்று ஒளசேப்பச்சன் நினைக்கிறார். தொப்பியின் பயணம் தொடர்கிறது. அப்போதுதான் அப்துல்லா அது இயலாது என்கிறார். ஏன் என்றால் படகின் தரையை காட்டி ஹாஷிம் கடலாழத்தில் இருக்கிறான் என்கிறார். ஒளசேப்பச்சன் பதறிப்போகிறார். நீங்கள் கொன்றீர்களா என்று கேட்டதற்கு அப்துல்லா சலனமின்றி ஆம் என்கிறார். ஒளசேப்பச்சன் அவன் குழந்தை மனதுனடன் இருந்ததாக ராதாமணி கூறியதைச் சொல்கிறார். அதற்கு அப்துல்லா அது தனக்கு தெரியுமென்றும் ஆனாலும் பிரச்சினை நெறி தொடர்பான விஷயம் என்று சொல்கிறார். இங்கும் ஒன்றை கவனிக்கவேண்டும். அப்துல்லா அவன் கடலில் தவறி விழுந்து இறந்துவிட்டான் என்று ஒளசேப்பசனிடமும் கூறியிருக்கலாம். ஆனாலும் அவராகவே தான் கொன்றதை தெரிவிக்கிறார். இது எங்களுக்குள் நடக்கும் விஷயம். போலீஸ் தலையிடும் வழக்கம் இல்லை என்றும் சொல்கிறார். இது கதையின் தர்க்கத்திற்கு மிக முக்கியமானது. ஏனெனில் அந்த தொப்பி இறையாண்மைக் குறி. ஹாஷிம் அதன் அதிகாரத்தை, சமூகக் கட்டுக்கோப்பை சமரசம் செய்யும்போது விலகி நகரும் தொப்பி என்ற இறையாண்மைக் குறியின் பயணம் இறுதியில் அவன் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது வெளிப்படும்போது மீண்டும் உறுதிப்பட்ட இறையாண்மையில் நிறைவடைகிறது. அதாவது புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்து விடுகிறது. “சுல்தானின் வாள் வழிப்பறிக்கு பயன்படக் கூடாது” என்று அப்துல்லா கூறும்போதும், எங்களுக்குள் நடப்பதான அந்தக் கொலை விஷயத்தில் போலீஸ் தலையிடுவதில்லை என்று கூறும்போதும், இறையாண்மை தெளிவாக சுட்டப்படுகிறது. அதாவது அவர் சமூகத்தில் அவர் வைத்ததுதான் சட்டம். இந்திய அரசின் பொது சட்ட த்திற்கு கட்டுப்பட மாட்டார்கள். எனவே அவர் ஒரு இறையாண்மையுள்ள சுல்தான்தான். அதன் பிறகு அப்துல்லா அவர் கேட்பதற்காக படே குலாம் அலிகான் இசைத்தட்டுகளை எடுத்து வைத்திருப்பதைக் கூறுகிறார். இன்று ஏழாம் நிலவு என்றும், அதற்கு சந்திரகெளன்ஸ் ராகம் பொருத்தமானது என்றும் கூறுகிறார். விருப்பமிருந்தால் கேட்கலாம் என்று ஒளசேப்பச்சனிடம் கூறிவிட்டு இசைக்கச் செய்கிறார். நிச்சலனமாக அமர்ந்து கேட்கிறார். இதுதான் துப்புத் துலக்கின் உச்சம். இங்குதான் அந்த விலையுயர்ந்த துருக்கித் தொப்பியின், இறையாண்மைக் குறியீட்டின் பயணம் முழு நிறைவடைகிறது. ஒரு மிகப்பெரிய உள் ஒழுங்கு, சமூகக் கட்டுமானம் நிச்சலமனமாக செய்யப்படும் கொலையில்தான் நிலைபெற்றிருக்கிறது. உணர்ச்சியால் செய்யப்படும் அற்பக் கொலையல்ல. தண்டனையிலிருந்து தப்புவதற்காக செய்யப்படும் கொலையல்ல. நெறிமுறை காப்பதற்கு செய்யப்படும் பற்றற்ற கொலை. அதை அனுபவபூர்வமாக படகில் ஒயின் அருந்தியபடி, அந்தி நேரத்தில் படே குலாம் அலி கான் கேட்டுக்கொண்டே ஒளசேப்பச்சன் கேட்டால்தான் அதன் வலிமை, அநாதியான மானுட நாடகத்தின் அடர்த்தி புரியும். கொல்லாமல் தர்மத்தை காக்க முடியாது. ஒரு யதார்த்தமான துப்புறியும் கதையாக இதில் வெளிப்படும் தர்க்கரீதியான பலவீனங்கள் எல்லாம் இந்த ஒரு மாபெரும் மானுடவியல் தர்க்கத்தை வலிந்து புனைந்து வெளிப்படுத்தத்தான். அதுதான் பத்துலட்சம் காலடிகளின் மகத்தான இசைவு, விசை, இசை எல்லாம். பிரம்மாண்டமான ஒத்திசைவை சாத்தியமாக்க, அதற்கான ஒழுங்கை கட்டுமானத்தை உறுதிசெய்ய, இரக்கமின்றி கொலை செய்யலாம் என்பதுதான் அந்த தர்க்கம். மானுடவியல் தர்க்கம் மானுடவியலாளர் ராபர்ட் லோயி இரண்டு அமெரிக்க பழங்குடியினருக்கு இடையேயிலுள்ள ஒரு அணுகுமுறை வேறுபாட்டை சித்தரிப்பதை தெல்யூஸ் குறியியக்க செயல்பாட்டை விளக்க எடுத்தாள்கிறார். குரோ என்ற இனத்தைச் சேர்ந்த மனிதன் தன் மனைவி மாற்றானுடன் உறவு கொண்டால் அவள் முகத்தைக் கிழிப்பான். ஹோபி என்ற இனத்தைச் சேர்ந்த மனிதன் அதே நிகழ்வை எதிர்கொண்டால் அமைதியாக விலகிச் சென்று தன் கிராமம் பஞ்சத்தாலும் பசியாலும் பீடிக்கப்பட வேண்டுமென பிரார்த்தனை செய்வான் என்று கூறுகிறார் லோயி. கிரோ இனத்தவர் நாடோடி வேட்டைக்காரர்கள். ஹோபி மக்கள் நிலையான விவசாயம் செய்யும், அரசுருவாக்கம் செய்கின்ற மக்கள். குரோ இனத்தவனுக்கு மனைவி செய்யும் காரியம் அவனுடைய உடனடி பிரச்சினை; அவனுக்கு அது கோபத்தையும், பொறாமையையும் ஏற்படுத்துகிறது. அவளை தாக்குகிறான். ஹோபி இனத்தவனுக்கு அது பொது ஒழுங்கையே சீர்குலைக்கும் பிரச்சினை. தெய்வக்குற்றம். ஊரே அதனால் அழிந்துபடவேண்டும் என்பது அவன் எதிர்பார்ப்பு. ஒருவர் பிறழ்வுச் செயல், மொத்த சமூகத்தின் பிரச்சினையாகிறது. இது ஒரு பாரனாய்ட் மனநிலை. ஒரு சிறு தவறு பெருகி, மொத்த ஒழுங்குமே சீர்குலைந்துவிடும் என்பது ஒரு அதீதமான சிந்தனை; மனோவியாதி. அப்துல்லா சாகிபின் நியாயம் அத்தகையதுதான். கல்யாணமாகாத இளைஞன், குழந்தைபோல மனநிலை கொண்டவன், திருமணமான பெண்ணிடம் மையல் கொள்கிறான். அந்த பெண்ணிடம் போய் தன்னை மணக்குமாறு கேட்கிறான். அவளுக்கு கணவனுடன் வாழத்தான் விருப்பம். இதை வேறு ஒருவன் வந்து அந்த இளைஞனின் தகப்பனிடம் கூறுகிறான். கூப்பிட்டு கண்டித்து, தேவையானால் இரண்டு அடி போட்டு, நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்துவைத்தால் பிரச்சினை முடிந்தது. அந்த பெண்ணை அவன் பலாத்காரம் செய்துவிடவில்லை. ஆசைப்பட்டதற்காக, அவளை பின்தொடர்ந்து, உறவுக்கு அழைத்து தொந்திரவு செய்ததற்காக அவனை கொன்றே விட வேண்டுமா என்ன? அப்படியென்ன சாம்ராஜ்யம் சரிந்து விடப் போகிறது? சுல்தானின் வாளை வழிப்பறிக்கு பயன்படுத்தக் கூடாது என்கிறார் ஹாஜி அப்துல்லா. தப்புதான் என் கிறான் ஒளசேப்பன். அதற்கு அப்துல்லா “தொடங்கிவிட்டால் பிறகு நிறுத்தவே முடியாத தப்பு. என் காலத்தில் அது தொடங்காது” என்கிறார். இப்படிப்பட்ட ஒரு கொலையை பத்து இலட்சம் காலடிகள் கதையாடல் எப்படி நியாயப்படுத்துகிறது, கொண்டாடுகிறது என்பதுதான் கதையின் முக்கியமான பிரச்சினை. கதை கொண்டாடவில்லையே, ஒளசேப்பச்சன் நீ என்ன நினைக்கிறாய் என்று கதைசொல்லியிடம் கேட்கிறானே என்றெல்லாம் அப்பாவித்தனமாக கேட்பவர்கள் இருப்பார்கள். கதைசொல்லிக்கு என்ன சொல்வது என்றே தோன்றுவதில்லை. “அவர்கள் மனநிலை எனக்குப் புரியவில்லை; அவர்கள் வேறு யுகத்தைச் சேர்ந்தவர்கள்” என்று கூறிவிடுகிறான். அதாவது அப்துல்லாவுடையது போன்ற அப்பழுக்கற்ற தர்மம் கலியுகத்தில் சாத்தியமில்லை என்ற பொருளில் கூறுகிறானோ என்னவோ. இங்கேதான் ஒளசேப்பச்சனின் இறுதிக் கூற்று, கதையின் தலைப்பு விளக்கம் வருகிறது. கிருஷ்ணன் மரணத்தை விசாரிப்பது அவன் யார் என்பதை அடையாளம் கண்டதுடன் முட்டுச்சந்தில் நின்ற பிறகு, அவனை மங்களூரில் மாப்பிள்ளைகளோ, வேறு கட த்தல் குழுக்களோ கொல்லவில்லை என்று தெரிந்து பிறகுதான் ஒரு புதிய திறப்பு கிடைக்கிறது ஒளசேப்பச்சனுக்கு. அதற்குக் காரணம் கிருஷ்ணன் இறப்பதற்கு பதினோரு நாட்களுக்கு முன்னால் நிகழ்ந்த பெருமண் ரயில் விபத்து. அந்த விபத்தில் கொல்லம் அருகிலுள்ள அஷ்டமுடிக்காயலின் பாலத்திலிருந்து தடம் புரண்ட ரயில் பெட்டிகள் காயலில் விழுந்துவிட்டன. அவற்றை கிரேன் வைத்து எடுக்க முடியவில்லை. ஆனால் இருபது பேரின் உடல்கள் அந்த பெட்டிகளின் அடியில் சிக்கியுள்ளன. அதனால் அவற்றை எடுக்க முடியுமா என்று பார்க்க ரயில்வே ஜெனரல் மேனேஜர் அர்விந்த் திரிபாதி, ஒளசேப்பச்சனின் நண்பர் வருகிறார். கிரேன்களை காயலின் கரைக்கு கொண்டு சென்று நிறுத்தி அந்த பெட்டிகளை எடுப்பது மிகவும் கடினம்; பெருஞ்செலவு. அதனால் கோழிக்கோட்டில் உள்ள மாப்பிள்ளை கலாசிகளுக்கு அந்த பெட்டிகளை பாரம்பர்ய முறையில் எடுத்துத் தரும் திறன் இருக்கிறது என்று கேள்விப்பட்டு அவர்களை பார்க்கப் போகிறார் திரிபாதி. ஒளசேப்பச்சனும் அவருடன் செல்கிறார். அவர்களிடம் நேரடியாக ஒப்புதல் பெற முடியாததால் அவர்கள் தலைவர் யாரென்று விசாரிக்கும்போதுதான் எம்.ஏ.அப்துல்லா சாகிபை சந்திக்க நேர்கிறது. அவர் உதவி செய்ய இணங்கி கலாசிகளிடம் அந்த பணியை மேற்கொள்ளச் சொல்கிறார். அவர்களும் மர உருளைகள், புளிமர தடிகள், கற்றாழை நார் கயிறு ஆகியவற்றை வைத்துக்கொண்டு, மரங்களாலேயே கிரேன் போன்ற அமைப்பை உருவாக்கி அந்த ரயில் பெட்டிகளை மந்திரம் போல மேலே எடுத்துத் தந்துவிட்டார்கள். பத்திரிகைகளிலெல்லாம் அந்த பாரம்பர்ய தொழில்நுட்பத்திறன் குறித்த அதிசயமான தகவல் வெளியானது. இரயில் பெட்டிகளை எடுக்கும் நிமித்தமாக அப்துல்லாவை சந்தித்த போதுதான் அவர் துருக்கித் தொப்பி அணிந்திருப்பதை பார்க்கிறார் ஒளசேப்பச்சன். அதிலிருந்துதான் நாம் ஏற்கனவே தொகுத்துக்கொண்ட இரண்டாம் கட்ட விசாரணை தொடங்குகிறது. இரயில் பெட்டிகள் வெளியே வந்தது போல கிருஷ்ணன் கொலையின் இணைநிகழ்வான ஹாஷிம் கொலையின் உண்மையும் ஒளசேப்பச்சனுக்குத் துலங்குகிறது. ஹாஷிமை அப்துல்லா கொன்றது சரியா என்ற கேள்வியுடன், அவர் கலாசி மாப்பிள்ளைகளின் தலைவர் என்பதும் இணைந்திருக்கிறது. பத்தேமாரி என்ற அற்புதமான மரக்கலத்தை கட்டும் மரபு வழி தொழில்நுட்பமும், கடலில் மூழ்கிய கப்பலையோ அல்லது காயலில் மூழ்கிய இரயில் பெட்டிகளையோ வெளியே எடுக்கும் மரபான தொழில்நுட்பமும் அறிந்தவர்கள் மாப்பிள்ளை கலாசிகள். அந்த மரபான அறிவிற்கும், திறனிற்கும் அவர்களின் சமூக கட்டுக்கோப்பிற்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் ஹாஷிமிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நினைக்கும்போதெல்லாம் ஒளசேப்பச்சனுக்கு மாப்பிள்ளை கலாசிகள் இரயில் பெட்டிகளை மேலே இழுத்ததுதான் நினைவுக்கு வருகிறது. அவருடைய முத்தாய்ப்பான வார்த்தைகள் இவை: “நான் அதைப்பற்றி ஆயிரம் தடவையாவது நினைத்துப்பார்த்திருக்கிறேன்” என்றான் ஔசேப்பச்சன் அப்போதெல்லாம் மாப்பிளாக் கலாசிகள் ரயில்வே வேகன்களை தூக்கிய காட்சிதான் நினைவுக்கு வரும். மூத்த உஸ்தாத் என்னிடம் சொன்னார், ஆயிரத்துக்கு ஆயிரம் கால்வைப்புகள், அவ்வளவுதான் என்று. ஆயிரம் பெருக்கல் ஆயிரம். பத்துலட்சம் காலடிகள். ஆனால் அதில் ஒன்று, ஒன்றே ஒன்று, தவறாகப் போய்விட்டால் அவ்வளவுதான். தவறு பெருகிப்பெருகி கப்பல் மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும்.” ஒரு நபரின் ஒழுக்கப் பிறழ்வு ஒரு மாபெரும் சமூக ஒத்திசைவையே குலைத்துவிடும். அதனால் மரண தண்டனை என்பதே அந்த அமைப்பை காப்பாற்ற முடியும். இங்கே தொழில்நுட்ப அறிவு, செயல்திறன் பூடகப் படுத்தப் பட்டு, அதீத கற்பனாவாதத்திற்குள் மூழ்குகிறது. யதார்த்தத்தில் பத்து இலட்சம் காலடியில் ஒரு காலடி தவறானால் ஒன்றுமே நிகழாது என்றுதான் கூறவேண்டும். அதிகபட்சம் போனால் மேலே இழுக்கப்படும் கப்பல் ஓரடி சறுக்கி கீழே போகலாம். அதை சுலபத்தில் சரி செய்துகொள்ள முடியும். ஆனால் ஒரே ஒரு காலடி தவறானால் பத்து இலட்சம் காலடிகளும் பயனற்றுப் போய்விடும் என்ற விபரீதமான கற்பனையே கதையின் தலைப்பாக மாறுகிறது. சமூக ஒழுங்கு குறித்த இத்தகைய மிகையான சித்திரங்களே பல்வேறு கலாசார ஒடுக்குமுறைக்கும் அடிப்படையாக விளங்குகின்றன. ஜாதீய கலாசாரம் உட்பட. இரக்க சுபாவமும், மென்மையான குணமும் கொண்ட ஒரு பார்ப்பன மூதாட்டி தன் பிள்ளை பார்ப்பனரல்லாத நண்பனை அழைத்து வரும்போது தனியான கோப்பையில் காப்பி கொடுப்பது கூட மிகப்பெரிய சமூக ஒழுங்கை காக்கிறோம் என்ற எண்ணத்தில்தானே தவிர, தனிப்பட்ட எந்த விரோதமும் வெறுப்பும் அந்த விருந்தாளி மீது அந்த அம்மையாருக்குக் கிடையாது. ஜாதி ஆணவக் கொலைகளும் சமூக ஒழுங்கை காக்கத்தானே நடைபெறுகின்றன. பெற்ற மகளையே கொல்கிறார்கள். இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலைத்த விவசாய சமூகமாக மாறுவது, வேலைப்பிரிவினையின் மூலம் பல்வேறு தொழில்கள் செய்பவர்கள் உருவாகி, அவர்களின் ஒருங்கிணைப்பினை சாத்தியமாக்குவது, கிராமங்களையும், சந்தைகள் நிகழும் நகரங்களையும் ஒருங்கிணைத்து நாடுகளாக மாறுவது, அனைத்தையும் ஒழுங்கமைக்க அரசு உருவாவது, கடவுள் கருத்தாக்கம் வலுப்பெற்று அனைவரும் வழிபடும் தெய்வங்களும், கோயில்களும் உருவாவது என மானுடவியல் வரலாற்றுப் பரிமாணங்கள் குறித்து நிறைய விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. இவை அனைத்திலும் மையமாக இருப்பது இப்படி சமூக ஒழுங்கை உருவாக்குவதற்கும், தனி மனித ஒழுக்கத்திற்கும் உள்ள தொடர்பை வரையறுப்பது. அதாவது தன்னிலைகளை தகவமைப்பது. அதே கோணத்தில் பரிசீலிக்கக் கூடியதுதான் ஆற்றல்கள் தொகுக்கப்படுவதும், ஆற்றல் தொகுப்பு அதிகாரமாக வெளிப்படுவதும். ஆங்கிலத்தில் ஆற்றல், அதிகாரம் இரண்டுமே பவர் என்ற வார்த்தையால்தான் குறிக்கப்படுகின்றன. ஒரு மனிதனின் நடவடிக்கைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு தனி மனித ஒழுக்கமாக பரிணமிக்கிறது. அவனது ஆற்றல்கள் செதுக்கப்பட்டு திறனாக மாறுகிறது. ஒழுங்கெல்லாம் ஒருங்கிணைந்து சமூக ஒழுங்காக மாறுகிறது. திறனெல்லாம் தொகுக்கப்பட்டு சமூக ஆற்றலாக மாறுகிறது. சமூக ஒழுங்கும், ஆற்றலும் இணைந்து அதிகாரமாக மாறி, அதிகார வலைப்பின்னல் உருவாகி, அதனை ஒருங்கிணைக்கும் புள்ளியாக ஆதிக்க மையங்கள் உருவாகின்றன. இதெல்லாம் பெளதிக விதிகள் போலவோ, வேதியியல் செயல்பாடுகள் போலவோ நிகழ்ந்துவிட்டால் அதில் எதுவும் பிரச்சினை இருக்காது. ஆனால் மானுட செயல்பாடுகள் அப்படியிருப்பதில்லை. ஒவ்வொரு மானுட உடலும் தனக்கென ஒரு நினைவுசேகரமும், அதனால் உருவாகும் புலன் அனுபவமும், புரிந்துணர்வும் கொண்டிருப்பதால் தனித்துவம் என்ற ஒரு சாத்தியம் ஏற்படுகிறது. மானுட செயல்பாடுகள் அதனால் தேர்வின் அடிப்படையில் நிகழ்வதை தவிர்க்க முடிவதில்லை. தேர்வு என்று சொல்லும்போது அது எப்போதுமே அறிந்தே செய்யும் தேர்வாக உணரப்படுவதில்லை. ஒரு உணர்ச்சியாக, உந்துதலாக நிகழ்க்கிறது. அதன் காரணம் நினைவுசேகரத்தின் செயல்பாடு முழுவதும் தன்னுணர்வுடன் நிகழ்வதில்லை. விருப்பு, வெறுப்புகள் அகாரணமாக உருவாகின்றன. இச்சைகள், விழைவுகள் தீர்மானகரமாகத் தோன்றுகின்றன. இதுவே மனிதர்களின் இச்சா சக்தியாக இருக்கிறது. அது அவர்களுக்கு ஆற்றலையும் வழங்குகிறது. அதனால் குரோ இனத்தவனும், ஹோபி இனத்தவனும் முற்றிலும் வேறுபட்ட எதிர்வினைகளை செய்ய நேர்கிறது; இயல்கிறது. இந்தப் பின்னணியில்தான் மானுடவியல் சிந்தனையின் அடிப்படை முரணாக மொத்தத்துவ நோக்கும், தனித்துவ நோக்கும் உருவாகின்றன. ஒவ்வொரு தத்துவ மரபும், சிந்தனை மரபும் மொத்தத்துவ நோக்கையும், தனித்துவ நோக்கையும் எப்படி இணைக்கின்றன என்பதைப் பொறுத்தே பொதுமையா, பன்மையா என்ற புரிதல் சார்ந்த தேர்வுகளும் உருவாகின்றன. மானுடவியல் எழுத்து, இனவரைவியல் எப்போதுமே இனங்களின் குணங்களை பொதுமைப்படுத்தியே வந்துள்ளது. மேலே சொன்ன உதாரணத்தில் கூட குரோ இனத்தவன் இப்படி செயல்படுவான், ஹோபி இனத்தவன் இப்படி செயல்படுவான் என்று சொல்லும்போது அந்த இனங்களின் குணாதிசயங்கள் சாராம்சப் படுத்தப் படுகின்றன. இருவேறு எதிர்வினைகளின் சாத்தியங்களை சுட்டுவதற்கே இந்த உதாரணம் கையாளப்படுகிறதே தவிர, அதில் தொக்கியுள்ள சாராம்சவாத நோக்கை ஆதரிப்பதற்காக இல்லை. எல்லா குரோ இனத்தவர்களும் இப்படித்தான் என்றோ, எல்லா ஹோபி இனத்தவர்களும் இப்படித்தான் என்றோ கருத முடியாது. கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக மானுடவியல் சிந்தனை தான் ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளாக பின்பற்றிய பொதுமைப்படுத்தும் சாராம்சவாத சிந்தனையை விமர்சித்து, சுயபரிசீலனை செய்துவருகிறது. இவ்வகையான பொதுமை குணாதிசயங்களை சாராம்சப்படுத்துவதை தங்களுடைய இனவரைவியல் எழுத்து செய்து வருகிறது என்பதை கடும் சுய விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஆனால் சாராம்சவாதம் பொதுப்புத்தியின் அங்கமாகவும் இருந்து வருகிறது. எல்லா மனிதர்களுமே அத்தகையை பார்வைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். மானுடவியல் தன் இனவரைவியல் பழக்கத்தை விமர்சித்துக் கொண்டாலும், பொதுப்புத்தி சார்ந்த பேச்சுக்கள் சுலபத்தில் மாறுவதில்லை. அதற்கு முக்கியக் காரணம், ஒரு குறிப்பிட மானுட தொகுதி, வாழும் பிரதேசத்தாலோ, மொழியாலோ, ஜாதியாலோ, மதத்தாலோ அடையாளமாகும் ஒரு தொகுதி ஒரு சில பழக்க, வழக்கங்களை பின்பற்றுவதும், சின்னங்கள், கலாசார அடையாளங்கள், கலாசார வெளிப்பாடுகள் ஆகியவற்றை பின்பற்றுவதும் ஆகும். உணவுப் பழக்க வழக்கங்கள், ஆடை அணியும் பழக்கங்கள் போன்றவை உருவாக்கும் பொது அடையாளம் மற்ற எல்லா சாராம்சப்படுத்தலுக்கும் வழி வகுக்கின்றன. அதனால் ஃபிரெஞ்சுக்காரர்கள் இப்படிப்பட்டவர்கள், ஜெர்மானியர்கள் இப்படிப்பட்டவர்கள் என்றெல்லாம் ஏராளமான பேச்சு வழக்குகள் உண்டு. தேசிய சாராம்சவாதம், தேசிய குணாதிசயங்கள் என்ற பெயரில் பெருகியது. இவையெல்லாமே இனவெறுப்பையும், வன்முறையையும் சுலபத்தில் தோற்றுவிக்கக் கூடியவை. ஜெர்மனியில் கேஸ் சேம்பர்களை தோற்றுவித்தன. ஒளசேப்பச்சன் தன் பேச்சில் பல்வேறு ஜாதிகளை, மத அடையாளங்களை சாராம்சப்படுத்திப் பேசி கேலி செய்கிறார். இது ஒரு சமூக யதார்த்தம் என்பதில் ஐயமில்லை. அப்படித்தான் பலரும் பேசுவார்கள். எல்லா ஜாதியினரையும், சமூக அடையாளங்களையும் கிண்டல் செய்வது என்பது சகஜம்தான். ஆனால் அந்த கிண்டலுடன் இணைந்து மாப்பிள்ளை கலாசிகளின் கைவினை அறிவை, தொழில்நுட்ப ஆற்றலை மிகவும் பூடகமான ஒரு கலாசார சாராம்சமாக ஒளசேப்பச்சன் மாற்றுவதும், அதை ஆயிரம் ஆண்டு மரபின் தொடர்ச்சி என்பதும், அதை அவர்கள் சமூக கட்டுமானத்துடன் இணைப்பதும், அந்த கட்டுமானத்தை காப்பதற்கு ஒழுங்கு மீறும் ஒரு இளைஞனை கொன்றே விடலாம், மரண தண்டனை வழங்கலாம் என்பதும் சாராம்சவாத வன்முறையின் உச்சத்திற்கே மானுடவியல் தர்க்கத்தை கொண்டு செல்கிறது. சமகால மானுடவியல் கடுமையாக விமர்சிக்க விரும்பும் போக்கு இது. ஏன் ஒரு பாரம்பர்ய செய்முறை அறிவு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ரகசிய சொத்தாக இருக்க வேண்டும்? அதை ஏன் அவர்கள் பிறருடன் பகிர்ந்துகொள்ள முடியாது? கலாசிகளுடன் ஆசாரிகள் வேலை செய்தாலும் அவர்களுக்குள் ஏன் ஒருவர் திறன் மற்றவர் அறிய முடியாததாக இருக்க வேண்டும்? அல்லது பிறர் ஏன் அதை கற்க முடியாது? அதற்கும் சமூகம் அரசியல் ரீதியாக கட்டுப்படுத்தப்படுவதற்கும் என்ன தொடர்பு? ஏன் சமூகத்தின் ஒத்திசைவு, கூட்டு செயல்திறன், பாரம்பரிய அறிவுபேணல் ஒரு கொலையை நியாயப்படுத்த பயன்பட வேண்டும்? இந்த கேள்வியை நாம் தொடர்ந்து செல்லும்போது அதிச்சியளிக்கும் இன்னொரு முரணை நாம் இந்தக் கதையில் காண முடியும். அது என்னவென்றால் மாப்பிள்ளைகளின் தொழில்திறன், சமூகக்கட்டுக்கோப்பு எல்லாம் கடந்த காலத்து நினைவா, அல்லது நிகழ்கால உண்மையா என்பதில் உருவாகும் முரண்தான் அது. ஒளசேப்பச்சன் அவர்கள் திறனை அறிந்துகொள்வது, அவர்கள் காயலில் மூழ்கிய ரயிலை எடுத்துத் தருவது 1989 ஆம் ஆண்டு. அப்போது அவர்கள் ஒரு பத்தேமாரியை கட்டி முடிக்கும் நிலையில் இருக்கிறார்கள். மேலும் 2014 ஆம் ஆண்டுகூட மற்றொரு பத்தேமாரியை கடலில் இறக்கியுள்ளார்கள். ஒளசேப்பச்சன் அவர்கள் கட்டுமானத் திறனின், பாரம்பரிய அறிவின் ரகசியமான சமூக கட்டுமானத்தையும், அதன் ஆதாரமாக விளங்கும் மாப்பிள்ளைகள் தலைவரின் சுல்தான் போன்ற இறையாண்மைப்பண்பையும், அவர் அளிக்கும் இறக்கமற்ற மரண தண்டனையையும் தெரிந்துகொள்வதும் 1989 ஆம் ஆண்டுதான். அதாவது கலாசி மாப்பிள்ளைகளின் சாராம்ச குணாதிசயம் நிகழ்காலத்தில் வெளிப்படும் ஒன்றுதான். ஏதோ ஒரு காரணத்தால் கதையாடல் அதை கடந்த காலத்து விஷயமாகக் கூறுகிறது. கதையின் துவக்கத்தில் பத்தேமாரி குறித்து கதைசொல்லி ஒளசேப்பச்சனிடம் கேட்கும்போது இப்போதும் அவற்றை கட்டுகிறார்களா என்று கேட்கிறான். இப்போதெல்லாம் அதிகம் கட்டுவதில்லை என்று சொல்லும் ஒளசேப்பச்சன் அதற்கான சில புறவயமான காரணங்களை சொல்கிறான். இப்போது அவற்றிற்கு மார்க்கெட் இல்லை என்பதால் வணிகரீதியாக கட்டுவதில்லை என்கிறான். ஒரு அரபு ஷேக் ஆசைப்பட்டு கேட்டதால் 2014இல் ஒரு சிறிய படகை கட்டினார்கள் என்கிறான். ஒரு கலைப்பொருளுக்கான மதிப்புதான் அதற்கு என்கிறான். ஏனெனில் முழுவதும் கைகளாலேயே கட்டப்படுவதால் அதிக காலம் பிடிக்கும் என்பதாகக் கூறுகிறான். இது முற்றிலும் புரிந்துகொள்ளக் கூடிய யாதார்த்தம். கப்பல்கட்ட பிரத்யேகமான ஸ்டீலும், படகுகள் கட்ட ஃபைபர் கிளாஸ் வரையும் பயன்பாட்டிற்கு வந்த பிறகு எதற்காக மரத்தாலான பத்தேமாரிகளை கையாலேயே செய்யப் போகிறார்கள். இந்த புறவயமான காரணங்களுடன் நிறுத்தாமல் ஒளசேப்பச்சன் ஒரு அகவயமான கலாசார காரணத்தைக் கூறுகிறார். அங்கேதான் கதை சூடுபிடிக்கிறது. கலாசி மாப்பிள்ளைகள் கப்பல் கட்டுவதற்குத் தேவையான முக்கியமான ஒன்று இன்றில்லை என்கிறான். பீடிகை போட்டு நிறுத்தி பின்னர் கூறுகிறார். பிறகு “மாப்பிளைகளின் சமூக அமைப்பு” என்றான். “அது மிகமிக உறுதியான நெறிகளால் ஆனது. தலைமையும் துணைத் தலைமையும் குட்டித்தலைமைகளும் வட்டாரத் தலைமையும் எல்லாம் உள்ள பெரிய அமைப்பு அது. குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாக அது உறுதியாகச் செயல்பட்டிருக்கிறது. அதை ஒரு தொழில் கூட்டமைப்பு என்று சொல்லலாம். ஒரு கல்விநிறுவனம் என்றும் சொல்லலாம். இஸ்லாமுக்குள் ஒரு துணைச்சாதி அல்லது துணைச்சமூகம் என்றும் சொல்லலாம். ஆனால் அது மெல்லமெல்ல இல்லாமலாகியது. ஏன் அப்படி மாப்பிளைகளின் சமூக அமைப்பு இல்லாமல்போய்விட்டது என்று கதைசொல்லி கேட்டவுடன் பதினேழாம் நூற்றாண்டிலிருந்து துவங்கி பல்வேறு காரணங்களை சொல்கிறார். 1. போப்பூர் துறைமுகத்தின் அழிவு. போப்பூர் துறைமுகம் அழிந்து கோழிக்கோடு துறைமுகம் மேலெழுந்து வந்துவிட்டதாலும், சாலியார் ஆற்றில் அணைகள் கட்டப்பட்டுவிட்டதால் ஆழம் குறைந்துவிட்டதாலும் மாப்பிள்ளைகள் தொழில் நலிந்துவிட்டது. 2. போர்ச்சுகல்காரர்களும், பின்னர் பிரட்டிஷ்காரர்களும் மாப்பிள்ளைகளின் கடல் ஆதிக்கத்தை பதினேழாம் நூற்றாண்டுமுதல் ஒடுக்கிவிட்டார்கள். 3. பிரிட்டிஷாரின் ஆங்கிலக் கல்வி மாப்பிள்ளைகளின் மரபான கல்வியை ஒழித்துவிட்டது. 4. கிலாஃபத் இயக்கத்துடன் வந்த சீர்திருத்த இஸ்லாம், மாப்பிள்ளைகளின் தனித்தன்மையை அழித்து இஸ்லாம் மதத்தில் இணைத்துவிட்டது . ஆனாலும் இத்தனை தாக்கங்களுக்குப் பிறகும் மழைவிட்டாலும் தூவானம் விடாததுபோல, ஆயிரம் ஆண்டுகால மரபு சற்றே எஞ்சியிருக்கிறது. அந்த எச்சத்தைதான் மாப்பிள்ளை கலாசிகள் ரயில்வே பெட்டியை காயலிலிருந்து வெளியே எடுத்ததிலும், சுல்தான் போன்ற அப்துல்லாவின் உணர்ச்சியற்றை இறையாண்மைக் கொலையிலும் ஒளசேப்பச்சன் கண்டு புல்லரித்தது. தூவானமே இப்படியென்றால் மழை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து வாசகர்களும் புல்லரிக்கலாம். கதைசொல்லி அதை ஒரு அனக்கிரானிசமாக, கால வழுவாகத்தான் பார்க்கிறான். வேறு யுகத்து சமாச்சாரம் என்கிறான். எப்படிப்பட்ட மரபுகளின் பொற்காலம் காணாமல் போய்விட்டது என்ற ஏக்கப் பெருமூச்சும் விடாமல் இருக்க முடியாதோ என்று தோன்றுகிறது. ஜெயமோகனின் சமூக ஒழுங்கு குறித்த அரசு மையவாத சிந்தனைக்கு அவர் எழுத்துக்களில் ஒரு தொடர்ச்சி உண்டு. மறைந்து மறையாத கலாசி மாப்பிள்ளைகளின் தொழில்நுட்பத் திறன் இந்த கதையின் ஒரு உருவகம்தான். அவர் எழுத்தில் வேறு உருவகங்களையும் பார்க்கலாம். விஷ்ணுபுரத்தின் அதிகார அமைப்பின் குரூரத்தை, போலித்தனத்தை அழிக்க நினைக்கும் மகா காசியபனின் ஆட்கள் அவர்களை ஒத்த மனநிலையுள்ள சிற்பியை விஷ்ணுபுரத்தின் மையக் குறிப்பானான விண்ணை முட்டும் கோபுரத்தின் உச்சிக்கு செல்ல வழிவகுப்பார்கள். அவனுக்கு எந்த மூலக்கல்லை உருவினால் கோபுரம் தகர்ந்துபோகும் என்று தெரியும். ஆனால் அங்கே சென்ற சிற்பி கோபுரத்தின் மேல் மாடத்தின் தரையில் எறும்புகள் தாமரை வடிவில் கோலம் போடுவதை காண்பான். அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வான். ஏன் என்ற கேள்வி மட்டும் ஒலிக்கும். மானுட இயக்கத்தின் சூட்சமமே பிரம்மாண்ட ஒத்திசைவுதான். சர்வாதிகாரமோ, ஏமாற்றோ ஆதிக்க மையங்கள் தொடர்ந்து வாழ்வை ஒருங்கிணைப்பதை தவிர்க்க முடியாது. அதற்காக சில கொலைகள், வன்முறைகளும் தேவைப்படத்தான் செய்யும். அந்த கொலைகளை தவிர்க்க நினைத்தால் ஒழுங்கின்மைதான் பெருகும். வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் என்கெளண்டரில் கொல்லப்பட்ட போதும் இதே கருத்தைத்தான் ஜெயமோகன் எழுதியிருந்தார். “பொது ஒழுங்கா? மனித உரிமை மீறலா?” என்று ஒரு இன்றியமையாத தேர்வு இருப்பதாகக் கூறியிருந்தார். பொது ஒழுங்கு தேவையென்றால், மனித உரிமைகளை மீறித்தான் ஆகவேண்டும். அதனால்தான் தேவை இருக்கிறதோ இல்லையோ, சிறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களையும் போக்கிரிகளையும் லாக்கப்பில் போட்டு மலமூத்திரம் வரும் வரை அடிப்பது போலீஸின் உளவியல் தேவையாக இருப்பதை ஒளசேப்பச்சன் சொல்கிறார். என்ன செய்வது யதார்த்தம், சார், யதார்த்தம். மனித மனதின் ரகசிய நாடகங்கள்தான் என்னே. ஓயினோ சாராயமோ குடித்து விட்டு படே குலாம் அலிகான் கேட்டால் சரியாகிவிடும். அழகாக ஒரு சூரிய அஸ்தமனம் இன்னம் ஆன்மாவின் ஆழத்தையே தொடும். ஒளசேப்பச்சனிடம் அப்துல்லா ஹாஷிம் மரணத்தின் ரகசியத்தை கூறும்போதும், அதை ஒளசேப்பச்சன் கதைசொல்லியிடம் கூறும்போதும் பின்னணியில் சூரியன் அஸ்தமிக்கிறது. அழகு முக்கியம். அழகும், இனக்கலப்பும் பத்துலட்சம் காலடித் தடங்கள் கதையில் அழகு முழுமையாக விகசித்து நிற்பது ஹாஜி எம்.ஏ.அப்துல்லா சாகிப்பின் உருவத்தில்தான். முதல்முறை அவரை பார்த்தபோதே ஒளசேப்பச்சன் விரிவாக வர்ணித்துவிடுகிறார். “எம்.ஏ. அப்துல்லா சாகிப், என்ன ஒரு தோற்றம்! செக்கச்சிவந்த நிறம். அடர்த்தியான தாடி, அதில் ஓரிரு வெள்ளிநரை. சதுரமுகம், கூர்மையான அராபிய மூக்கு. வரைந்ததுபோன்ற புருவங்கள். மலர்ந்த அழகான கண்கள். தொப்பை கிடையாது. நிமிர்ந்த உயரமான உடல். அவருக்கு சமானமான அழகன் என இன்னொரு ஆணை நான் பார்த்ததே இல்லை. மம்மூட்டிக்கு ஒரு பத்து மார்க் குறைத்தால் சேர்த்துக்கொள்ளலாம்” இந்த வர்ணனை இரண்டாம் சந்திப்பின்போது மேலும் உறுதிப் படுகிறது. “அதே அழகான சிரிப்பு. துல்லியமான வெண்பற்கள். மெல்லிய பனிப்படலம் போன்ற கண்ணாடி.” பின்னர் கிருஷ்ணன் வந்துபோனதையெல்லாம் சொல்லி விளக்கும்போது ஒளசேப்பச்சன் முழுவதுமாக வசீகரிக்கப்பட்டு விடுகிறார். “அவர் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு அராபிய தங்ஙள் போல, ஒரு சூஃபி போல, ஒரு சுல்தான்போல. மீண்டும் அதே எண்ணம், என்ன ஓர் அழகு.” இப்படி அழகின் பரிபூரண வடிவமாக அப்துல்லா இருக்கிறார் என்றால் அதற்கு அவரது வம்சமும், அவருடைய சமூக அந்தஸ்த்தும் பொருத்தமாக இருக்கிறது. “நான் எம்.ஏ.அப்துல்லா சாகிப் பற்றி தோண்டத் தொடங்கினேன். அவருடைய அன்றாட வாழ்க்கை, அவருடைய பழக்க வழக்கங்கள், அவருடைய ரசனை. அபாரமான மனிதர் அவர். மிக ஆசாரமான முஸ்லீம். கூடவே மிகப்பெரிய கலை ரசிகர். ஷாஜகான் சக்கரவர்த்தி அப்படித்தான் இருந்திருப்பார். கஸல் இசையில் பித்து கொண்டவர். மாதம் ஒரு உஸ்தாதாவது வட இந்தியாவிலிருந்து வந்து அவருடைய மாளிகையில் பாடுவார். கவிதை, இலக்கியம் எல்லாவற்றிலும் ஈடுபாடு. தகழி சிவசங்கரப்பிள்ளையின் நண்பர். வைக்கம் முகமது பஷீர் இவரை ‘மிஸ்டர் மே’ என்றுதான் அழைத்திருந்தார்.எம்.டி.வாசுதேவன் நாயரை இவர் வாடா போடா என அழைப்பார்.” இவர் அழகு இனக்கலப்பின் விளைவா? இருக்கலாம்; ஆனால் அது வெகுகாலம் முன்னால் அரேபியாவே “வெள்ளை ஆரிய இனமும்” “கறுப்பு காப்டிக்” இனமும் கலந்தபோது உருவான அழகாகத்தான் இருக்க வேண்டும். இந்தியாவின் மேற்குக் கடற்கரையை பொறுத்தவரை அவர் மாலிக் தினார் வம்சம். “ஹாஜி எம்.ஏ.அப்துல்லாவின் கட்டுப்பாட்டில்தான் அன்று கோழிக்கோடு இருந்தது. அவர் அரேபியாவில் இருந்து கோழிக்கோட்டுக்கு வந்த மாலிக் தினார் இப்னு அவர்களின் வம்சம் என்கிறார்கள். கோழிக்கோட்டின் மாபெரும் கடல்வீரர் குஞ்ஞாலி மரைக்காயரின் கொடிவழியை சேர்ந்தவர். மாலிக் தினார் இலவச ஆஸ்பத்திரி, மாலிக் தினார் பள்ளிக்கூடம் என்று ஏகப்பட்ட தர்மநிறுவனங்கள்.” அவருடைய மூக்கு மட்டும் அரேபியக் கூர்மையுடன் அமைந்தது அல்ல. அவர் முகத்தின் நரம்புகள் கூட. “நான் அவர் முகத்தை பார்த்திருந்தேன். அதே புன்னகை, அதே தெளிந்த விழிகள். எத்தனை உறுதியான நரம்புகள் என்ற வியப்பே எனக்கு ஏற்பட்டது. தலைமுறை தலைமுறையாக தீயும் ரத்தமும் கண்ணீரும் கண்டவர்களுக்கு உரியவை” ஒருவரது நரம்பில் பல தலைமுறை அனுபவங்கள் பதிவாகியிருக்கும் என்னுமளவு அவர் கலப்பற்ற அரேபிய ரத்தக்காரர் என்று நாம் புரிந்துகொள்ளலாம். மேற்குக்கடற்கரையில் நிகழ்ந்த இனக்கலவை பரிசோதனைக்கும் இவர் அழகுக்கும் தொடர்பு கிடையாது. ஏனெனில் அது ஒரு தகுதியான மனிதருக்கு வாய்த்திருக்கும் அழகு. எங்கே அழகு பிரச்சினையாகிறது என்றால் அது பேரழகாக மத்தியதர, ஏழைக் குடும்பங்களில் அது திடீரென்று பளிச்சிடும் போதுதான். அழகின் விளைநிலமாகிய அரச அல்லது பணக்கார வர்க்கத்தில் தோன்றாமல் சாதாரண மத்தியதர குடும்பத்தில் தோன்றும்போதுதான் அதற்கான காரணம் இனக்கலவை என்று நினைக்க வேண்டியிருக்கிறது. தகுதியற்ற இடத்தில் தோன்றும் இந்த அழகு ஆபத்தானது. ராதாமணியின் புகைப்படத்தை போலீஸ் அனுப்பிய ஃபைலில் பார்த்துவுடன்தான் ஒளசேப்பச்சனுக்கு இது தோன்றுகிறது. “நடுத்தரச் சூழலில், ஏழைக்குடும்பத்தில் சிலசமயம் பேரழகிகள் பிறந்துவிடுவார்கள். நம்பவேமுடியாத அளவுக்கு பேரழகிகள். அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையே அமையமுடியாது. அவர்கள் மிகமிக ஆற்றல் கொண்ட எவருக்காவது ஆசைமனைவியாகவேண்டும், அவனுடைய சந்தேகத்தையும் சித்திரவதையையும் தாங்கிக்கொண்டு வாழ்ந்து மடியவேண்டும். இல்லாவிட்டால் செல்வாக்கானவர்களால் வேட்டையாடப்பட்டு சீரழியவேண்டும். முச்சந்தியில் கிடக்கும் செத்த எலிபோல. எல்லா காக்காயும் கொத்திக்கிழிக்கும்.” பாதுகாக்க சுல்தானின் வாள் இல்லாவிட்டால் அழகு மிக ஆபத்தானது. மேற்குக்கடற்கரையில் இப்படி மெண்டல் விதிப்படி திடீரென பேரழகு பொறுத்தமில்லாத வர்க்கத்தில் ஏன் தோன்றுகிறது என்பதை விளக்கத்தான் ஒளசேப்பச்சன் ஒரு இனக்கலப்பு வரலாற்றை கூறுகிறார். “மேற்குக் கடற்கரையில் அரேபியர், போர்ச்சுக்கீசியர் வந்திருக்கிறார்கள். ஆகவே அற்புதமான கலவைகள் இங்கே நிகழ்ந்துள்ளன. இங்குள்ள எல்லா சாதிகளிலும் எல்லா மதங்களிலும் இனக்கலவை அடையாளங்கள் உண்டு. நீலக்கண்கள் சாதாரணம். கொங்கணிபிராமணர்கள், மாத்வ பிராமணர்கள், இஸ்லாமியர்கள், நாயர்கள், நம்பியார்கள் எல்லாருமே கலவைக்குருதி கொண்டவர்கள்தான். உண்மையில் சாதிப்படிநிலை கீழே செல்லச்செல்ல கலவை குறைந்து அழகும் குறையும்.” சாதிப்படிநிலையில் கீழே செல்லச்செல்ல கலவை குறையுமென்றால் கலப்பு குறையும் என்பதுதான். ஏன் இப்படி கலவை குறைய வேண்டும்? அதற்கும் ஒரு திறப்பு இருக்கிறது. கிருஷ்ணன் வந்து ஹாஷிம் விஷயத்தை சொன்னவுடன், அப்துல்லா ஹாஷிம் வேலைக்காரன் அஸிஸை கூப்பிட்டு விசாரிக்கிறார். அவன் நடந்ததை சொல்கிறான். ஹாஷிம் அந்த பெண்ணை மணக்க விரும்புவதை சொல்கிறான். அப்போது அப்துல்லா அந்தப் பெண் என்ன சொல்கிறாள் என்று கேட்கிறார். ஆஸிம் அந்தப் பெண் கணவனுடன் வாழவே விரும்புகிறாள். ஹாஷிமை ஏற்கவில்லை என்று கூறுகிறான். பிறகுதான் ஹாஷிம் கொல்லப்படுகிறான். ஏன் அப்துல்லா அப்படிக் கேட்டார்? ஒருவேளை அந்தப் பெண்ணும் ஹாஷிமை விரும்புகிறாள் என்றால், அந்தப் பெண்ணுக்கு மணவிலக்கு செய்வித்து, மதமாற்றம் செய்து மகனுக்கு மணமுடித்திருப்பாரோ? சாத்தியம்போலத்தான் தெரிகிறது. ஏன், ராதாமணியே கூட தன்னை மணம் செய்துகொள்ளச் சொல்லி ஹாஷிம் அழுதபோது பதட்டத்தில் அவனை விரட்டி விட்டாளே தவிர, பின்னால் நினைத்துப் பார்க்கும்போது அவன் உண்மையான காதலை உணராமல் இருக்க முடியவில்லை. அவன் வெறும் உடல் இச்சைக்காக அவளை அணுகவில்லை. அப்துல்லாவின் மகனான ஹாஷிமும் அவர் அழகில் கொஞ்சமாவது இருப்பானில்லையா. அவரது பண்பும் அவனிடம் இருக்கிறது. இனக்கலவை நிகழ்வதால் பேரழகு உருவாகிறது என்றால், இனக்கலவையே அழகால்தான் நிகழும் என்றும் இந்த கதையின் தர்க்கத்தில் சுட்டப்படுகிறது. ஜாதிப்படிநிலையில் கீழே செல்லசெல்ல எல்லோரும் உழைப்பாளிகளாகவும், வறியவர்களாகவும்தானே இருப்பார்கள். அதனால் இனக்கலப்பில் விடுபட்டுப் போகிறார்கள் என்றுதான் கதையின் தர்க்கத்தை புரிந்துகொள்ள முடிகிறது. இனக்கலப்பு என்பது அழகும், அழகும் இணைந்து பேரழகு உருவாகும் சூத்திரம் என்றும் கூறலாம். உதாரணமாக அரேபிய ஷத்திரிய அழகும், பார்ப்பன அழகும். பார்ப்பனர்கள், நாயர்கள் போன்ற ஜாதிகளிலெல்லாம் கலப்பு நடந்துள்ளது என்று சொன்னால் அவர்கள்தானே கோபிக்க வேண்டும் என்று வேறு சிலர் நினைக்கிறார்கள். இனக்கலப்பில் என்ன இழிவு இருக்கிறது என்று தெரியவில்லை. அக்பர் ஜோதா பாயை மணந்தார் என்று படமெடுத்தால் யாராவது கோபிக்கிறார்களா என்ன? சமூக அந்துஸ்துள்ள கலப்பு கெளரவமானதுதான். ஒளசேப்பச்சன் கூறும் இந்த விளக்கம் இந்திய பொதுப்புத்தி சாதித்துள்ள, உலகளவில் நிறவெறி சாதித்துள்ள மிகப்பரவலான பொதுப்புத்தியின், அழகின் வரையறையின் வெளிப்பாடு என்பதை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது. எம்.ஜி.ஆரின், ஜெயலலிதாவின் தோலின் நிறத்தை வியந்து பேசும் எளிய மக்களை நானே அறிவேன். ரோஜாப்பூ மாதிரி இருக்கிறார், தங்கம் போல் ஜொலிக்கிறார் என்று மாய்ந்துபோவார்கள். கருப்பாக பிறந்த பெண்கள் கருமை நிறக் கண்ணனை நோக்கி பாடி, உன்னை ஏற்றுக்கொள்பவர்கள் என்னை ஏன் விலக்குகிறார்கள் என்று சினிமாவில் கதறுவார்கள். சிவந்த நிறமும், தோலின் மினுமினுப்பும், தகதகப்பும் பல தலைமுறைகள் சுகவாசத்தில் சாத்தியாமவது என்பதும் பொதுப்புத்திதான். இந்த வரையறையின்படி அழகானவர்களே அந்துஸ்துள்ளவர்கள்; அதிகாரத்தில் உள்ளவர்களாக இருப்பதும் இதனால் இயல்பாகிவிடும். அவர்களே பண்பாளர்களாகவும் இருப்பார்கள். சமூக ஏற்றத்தாழ்வை மறு உற்பத்தி செய்வதில், காட்சிரூபமாக பொதுமைப்படுத்துவதில், அழகு குறித்த கருத்தாக்கம் முக்கிய பங்கு வகிப்பது நாம் அறிந்துதான். பெருவாரியான மக்களை ஏற்றுக்கொள்ள வைப்பதில், நினைவிலி மனதின் பகுதியாக்குவதில் அழகு குறித்த கருத்தாக்கம் பெற்றுள்ள வெற்றிக்கு இணையானது எதுவுமில்லை. எத்தனை மால்கம் எக்ஸ் தோன்றினாலும் சுலபத்தில் மாறக்கூடியதாகவும் இல்லை. இலக்கியத்திலும் இந்த அழகு காலம் காலமாக நிலைநிறுத்தப்பட்டுதான் வந்துள்ளது. நா. பார்த்தசாரதியின் நாயகர்களின் பாதங்கள் ரோஜா நிறமாக இருப்பதைக் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அவரே பாதங்களை அப்படி பராமரிப்பார் என்றுகூட சொல்லக் கேள்வி. இலக்கியத்தின் பணி என்பது பொதுப்புத்தி மனநிலையை அனுசரித்து, வலுப்படுத்தி மகிழ்வதா, அல்லது அதன் வன்முறையிருலிருந்து சிந்தனையை விடுவிப்பதா என்ற கேள்வி முக்கியமானது. பொதுப்புத்தியின் விமர்சனமற்ற சாராம்சவாத எண்ணங்களை அனுசரித்து, நுட்பமாக உள்ளடக்கி சுவாரசியமான தத்துவார்த்த மூலாம் பூசி விற்பது ஒரு திறமைதான். அதுதான் இலக்கியமா என்பதை வாசகர்களின் விமர்சனப் பார்வைதான் முடிவு செய்யவேண்டும். பிரதியின் வாசிப்பின்பம் என்பது அதன் மலிவான கவர்ச்சியாக, ஆங்கிலத்தில் சொன்னால், seduction ஆக இருக்கக் கூடாது. அந்த இன்பம் விமர்சன சிந்தனையின் தகிப்பின் மூலம் உருவாக வேண்டும். படைப்பு எந்த விமர்சனத்தையும் கடந்து சிந்தனையை முன்னெடுக்க வேண்டும். அதற்கு நேரெதிராக பொதுப்புத்தியின் விபரீத எண்ணங்களை வலுப்படுத்தும் பத்துலட்சம் காலடிகளை பாசிசப் பிரதி என்று சொல்வதில் தவறில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. https://uyirmmai.com/இலக்கியம்/ஜெயமோகனின்-பத்துலட்சம்/
 12. பத்துலட்சம் காலடிகள் - ஜெயமோகன் ஔசேப்பச்சன் சொன்னான். “இன்றைக்கு நிறைந்த வெள்ளிக்கிழமை. புனித அந்தோணியார் புண்யவாளனுக்கு உரிய நாள் இது. திரிசந்தியாநேரம் வேறு.ஆகவே என்னைப்போன்ற சத்யவிசுவாசியான மார்த்தோமாக்காரனுக்கு இந்நேரம் மிகமிகப் புனிதமானது.” “ஆமாம்” என்று குமாரன் மாஸ்டர் சொன்னார். “இனிமையான கடற்காற்று வீசிக்கொண்டிருக்கும் இந்த அழகான வேளையில் இதைக் கொண்டாடும் பொருட்டு நாற்றமடிப்பதும் பாவத்திலாழ்த்துவதும் அனைத்துக்கும் மேலாக வெள்ளைக்காரப் பெண்களை நினைவில் கொண்டுவருவதுமான அன்னியநாட்டு மதுவகைகளை தவிர்த்து, நம்முடைய சொந்த கொச்சியில் அழகான இயற்கைசூழ்ந்த சாண்டித்துருத்தில் நம்முடைய சொந்த அவறாச்சன் சொந்தமாக வாற்றி எடுத்த தூய்மையான நாட்டுச்சாராயத்தை அருந்தி ஆன்மிக மேன்மையை அடைவதுதான் சிறந்தது என்று நினைக்கிறேன், அல்லேலூயா!” அவன் கண்ணாடிக்கோப்பையை தூக்கியதும் மற்றவர்கள் “ஆமேன்!” என்றபடி தாங்களும் தூக்கினார்கள். “ஈஸோமிஸிஹாய்க்கு ஸ்துதி!” என்று ஔசேப்பச்சன் பெருமூச்சுவிட்டான். “நல்ல சாராயம், அவறாச்சன் நல்ல விசுவாசியான மார்த்தோமா கிறிஸ்தவன். முன்பு புனித தோமாஸ்லீகா கொச்சி மரைன் டிரைவில் பைபிளுடனும் சிலுவையுடனும் வந்து இறங்கியபோது…” ஸ்ரீதரன் “மார்க்ஸிஸ்டுகள் போய் அட்டிமறிக்கான கூலியை வாங்கியிருப்பார்களே!” என்றான். “சேச்சே அவர் கொண்டுவந்தது சிறிய சிலுவை. அவர் அதை தன் கழுத்தில் மாட்டியிருந்தார்”. என்றான் ஔசேப்பச்சன் “அதை இந்த அவறாச்சனின் மூதாதையான ஒருவர் பார்த்து அது என்ன என்று கேட்டிருக்கிறார். அவறாச்சனின் தந்தையின் தந்தை கழுத்தில் முருக்குமரத்தில் செதுக்கிய ஒரு குச்சி தொங்கியது. அது குளிகன் என்ற தெய்வத்திற்கு உரியது. கொந்தை என்று சொல்வார்கள். குளிகன் சாராயத்தின் தெய்வம். உள்ளூரில் வாற்றுசாராயம் காய்ச்சுபவர்கள் சாராயம் திரியாமல் சரியாக முறுகி வரும் பொருட்டு அணிவது. அதை ஒரு கையால் பிடித்துக் கொண்டு ஆலாலோகுளிகா என்று கூவியபடி கிண்டினால்தான் ஊறல் மனம்கனிந்து சாராயத்தை வெளிவிடத்தொடங்கும். மகனே பாண்டித்தமிழ் எழுத்தாளா, இந்த சாராயம் என்பது என்ன? அது ஒரு தெய்வம்… எல்லா தெய்வங்களும் சாக்கடைபோன்ற கலீஜில் இருந்து எழுபவை…. உங்கள் விஷ்ணுகூட திரிந்த பாலில் இருந்துதானே வந்தார்?” நான் அதை லாகவமாக கடந்து “தோமாஸ்லீகா என்ன சொன்னார்?” என்றேன். “தான் அணிந்திருப்பது சீமைக்கொந்தை என்று தோமாஸ்லீகா சொன்னார். அதை அணிந்துகொண்டு காய்ச்சினால் சாராயத்தில் திராட்சைப் பழத்தின் மணம் வரும் என்று சொல்லி தன் கையிலிருந்த குப்பியை முகர்ந்துபார்க்கச் சொன்னார். அதை முகர்ந்து பார்த்த அவறாச்சனின் மூதாதை மெய்ஞான அனுபூதியை அக்கணமே அடைந்து உடனே அந்த சீமைக்கொந்தையை மாட்டிக்கொண்டார். இவ்வாறாக மார்த்தோமா மதம் என்ற தூய்மையான மதம் இங்கே கால்கோள் கொண்டது” என்றான் ஔசேப்பச்சன் “ஆகவேதான் நாங்கள் எங்கள் மதத்தை ஸ்பிரிச்சுவல் என்கிறோம்.” நான் “மட்டாஞ்சேரியில் தானே தாமஸ் வந்தார்?” என்றேன். “அது வேறு வரலாற்றுநூலில் உள்ளது. வரலாறு வளரும்போது வரலாற்றுநூல்களும் வளர்கின்றன. நமது புண்ணியபாரதத்தின் வரலாற்றை நம்முடைய சொந்த பாரதிய ஜனதாவின் பொன்னுதம்புரான் ஹெய்ல் ஃப்யூரர் வளர்த்துக்கொண்டிருக்கும் இந்த புண்ணியமான காலகட்டத்தில்…” நான் பேச்சை மாற்றி “இந்த துருத்துகளிலெல்லாம் சாராயம் காய்ச்சுகிறார்கள் இல்லையா?” என்றேன் “இங்கே சாராயம் வாற்றுதல் ஒரு பண்பாடு… இல்லை ஒரு மதம்” என்றான் ஸ்ரீதரன். “நான் என்ன சொன்னேன்? ஆலாலோகுளிகா என்று சொல்வதை அவறாச்சனின் மூதாதையர் ஆலேலூயா என்று மாற்றிக்கொண்டார்கள்… அதைக் குடிக்கவந்த என்னுடைய மூதாதையான ஒச்சப்பன் நாயர் குடித்து வாறாகி அப்படியே ஔசேப்பச்சனாக மாறிவிட்டார். இவ்வாறாக இந்த புனிதமான திரவம் இங்கே உருவாக ஆரம்பித்தது. மகனே, இந்த கேரள கிறிஸ்தவம் என்றால் என்ன? அது நல்ல உள்ளூர் சரக்கு…வீரியம் மிகுந்தது. பால் சகரியா ஒருமுறை சொன்னார்…” “நாம் சுரியானி கிறிஸ்தவர்களைப்பற்றி இப்போது பேசவேண்டாம்… தெய்வத்தின்மேல் ஆணையாக வேண்டாம்!” என்றான் ஸ்ரீதரன். “சுரியானிகளில் பால் சக்கரியா ஒரு தேவன், அதாவது லூசிஃபரைப்போல வீழ்ச்சியடைந்த தேவன்.” “அப்படியென்றால் போஞ்ஞிக்கரை ராஃபியை பற்றி பேசலாமா?” என்றான் ஔசேப்பச்சன். “அவர் யார்?” “அந்தக்காலத்தில் அற்புதமான கதைகளை எழுத முயன்றவர்” என்றான் ஔசேப்பச்சன் “பாவம், ஒன்றுகூட சரியாக வரவில்லை. ஆனால் அவருக்கு பொன்குந்நம் வர்க்கிமேல் கடுமையான பொறாமை இருந்தது. ஏனென்றால் அவரும் அற்புதமான கதைகளை எழுத ஆசைப்பட்டவர், நடக்கவில்லை. இரு கிறிஸ்தவர்கள் ஒருவரை ஒருவர் வசைபாடும்போது மேலே கர்த்தாவின் சபையில் ஒரு மணியோசை எழுகிறது என்பார்கள்…” ஔசேப்பச்சன் ஏப்பம் விட்டு “அங்கே நிலைக்காத இடியோசைபோல எப்போதுமே மணிச்சத்தம்தான்… தேவதைகள் எல்லாம் ரொம்பகாலம் முன்னாலேயே செவிடாகிவிட்டனர் என்று புனித ஆமோஸ் புண்ணியவாளன் சொல்லியிருக்கிறார்” “நாட்டுச்சாராயம் என்பது சனாதன தர்மம்…புளிக்குந்தோறும் இனிப்பது. தாய்மதம் திரும்பிய ஔசேப்பச்சனுக்கு வாழ்த்துக்கள்” என்றான் எலி ராஜு. எலி என்றபெயரில் அவன் எழுதிய கதைக்குப்பின் அந்தப்பெயர் அமைந்தது. அது ஓர் எலியின் சுயசரிதம். நான் பேச்சை வேறெங்காவது கொண்டுபோக ஆசைப்பட்டேன். ஏற்கனவே நாட்டு சாராயம். இதில் கிறிஸ்தவ இந்து விவாதம் என்றால் பாத் டப்பில் எண்ணையை ஊற்றி நிறைத்து உள்ளேபடுத்து உடலுறவு கொள்ளும் ஒரு தாய்லாந்து முறை உண்டு என ஔசேப்பச்சன் முன்பு சொன்னது போலத்தான். “நடவடிக்கைகள் நீண்டு நீண்டு செல்லும், பொன்னுமகனே, இலக்கு எட்டப்படாது.” கடலில் சென்றுகொண்டிருந்த பெரிய படகொன்றைச் சுட்டிக்காட்டி “இத்தனைபெரிய படகு… அதுவும் மரத்தாலானது… இதையெல்லாம் இப்போது கட்டுகிறார்களா?”என்றேன். நினைத்தது போல ஔசேப்பச்சன் அந்தப்பக்கமாக திரும்பினான். “அதன்பெயர் பத்தேமாரி… அரேபியப்பெயர்… தெரியாதவர்கள் அதை உரு என்கிறார்கள். உரு என்றால் பெரிதாகக் கட்டி எழுப்பிய ஒன்று என்று பொருள்… அது கடலில் தொலைவில் அப்படி தெரிகிறது. கடல்மேல் எல்லாமே சிறியவைதான். அதை நீ கரையில் வைத்துப் பார்க்கவேண்டும். ஒரு ஐந்துமாடி கட்டிடம் அளவுக்கு இருக்கும்.” “முழுக்க மரம்தான் அல்லவா?” என்றேன். “முழுக்க முழுக்க மரம்…ஒரு ஆணிகூட கிடையாது. ஆப்புகள்தான் எல்லாமே. ஆகவே நூறு ஆண்டுகள் சாதாரணமாக ஓடும்…இப்போது மாலத்தீவுக்கு மங்களூரிலிருந்து போய்க்கொண்டிருக்கும் பத்தேமாரிகளில் இருபது உருப்படிகளாவது நூறாண்டு கடந்தவை.” “இங்கே செய்கிறார்களா?” என்றேன். இங்கே நம் சொந்த கோழிக்கோட்டில் போப்பூரில் செய்கிறார்கள். அதைச்செய்பவர்களுக்கு மாப்பிள்ளைக் கலாசிகள் என்று பெயர். உள்ளூர் தச்சர்களுடன் இணைந்து அதைக் கட்டுகிறார்கள். கலாசிகள் என்றால் தச்சர்கள், வேலைக்காரர்கள். அவர்கள் இஸ்லாமுக்கு முன்பிருந்தே அரேபியாவுடன் தொடர்பு உடையவர்கள். சோழர்களின் காலத்தில்தான் பெரிய அளவில் வளர்ந்தார்கள். பதினேழாம் நூற்றாண்டில் பீரங்கிகளுடன் ஐரோப்பியப் படகுகள் வந்து மேற்குக்கடற்கரையை கைப்பற்றிக் கொள்வது வரை அரபிகடலே அவர்களுக்குச் சொந்தமானதாக இருந்தது…. அரபிக்கடல் நம் வீட்டுமுற்றம் என்று ஒரு மாப்பிள்ளைப்பாட்டு சொல்கிறது. அப்போது அவர்கள் இந்த மரக்கலம் கட்டும் கலையை பயின்றார்கள். இது பார்க்க ஒரு கோப்பை போல இருக்கிறது. நீ ஒன்றை கவனிக்கவேண்டும். ஒரு நல்ல புயலின்போது இந்தப் பத்தேமாரியின் பள்ளையின் மேல் வந்து அறையும் ஓர் அலைக்கு பத்து டன் எடை வரை இருக்கும்… பத்து டன்! ஒரு பலகை கொஞ்சம் விலகி இடைவெளிவிட்டால் அதன் வழியாக உள்ளே பீரிடும் தண்ணீர் ஒரு டன் எடையுள்ள பொருளை தூக்கி வீசும் ஆற்றலுடன் இருக்கும்… ஒருமணிநேரத்தில் பத்தேமாரி நீரில் மூழ்கிவிடும்” ஔசேப்பச்சன் கடைசி மிடறை விழுங்கி “தீயை கொண்டுவந்து வைத்திருக்கிறான் அவறாச்சன். யகோவாவே திரவ வடிவில் எழுந்து வந்ததுபோல இருக்கிறது” என்றான். “சொல்லு ஔசேப்பச்சா” என்றேன். “அதாவது என்ன சொல்கிறேன் என்றால் என்று ஔசேப்பச்சன் ஏப்பம் விட்டான் “யோசித்துப்பார், எட்டு டன் எடையை தாங்கும் மரப்பலகை உண்டா? எத்தனை தடிமனாக போட்டாலும்?” “இல்லை” என்றேன். “பிறகு எப்படி அடிதாங்குகிறது?” “எப்படி?” “கணக்கு மச்சானே கணக்கு… அதெல்லாம் தமிழில் கதை எழுதும் திருவிதாங்கூர் மூட நாயர்களுக்கு புரியாது… குமாரன் மாஸ்டர் , இதைக் கேளுங்கள். திருவிதாங்கூர் நாயர் என்று எப்படி ஜானம்மை கண்டுபிடிக்கிறாள் தெரியுமா? முடிச்சையோ ஹூக்கையோ அவிழ்க்கும் கணக்கு தெரியாமல் தடுமாறி கத்தி தேடுவார்கள்.” ”கணக்குதெரிந்த ஒரே திருவிதாங்கூர் நாயர்தான் இருந்தார்’ என்றார் குமாரன் மாஸ்டர் “பழைய திருவிதாங்கூர் பேஷ்கார் பி.சங்குண்ணி மேனன். எல்லா கணக்குகளையும் விரல்விட்டு எண்ணுவார். பாவம் ஒருகணக்குகூட சரியாக வரவில்லை.” “ஏன்?” ”அவருக்கு ஒருகையில் ஆறுவிரல்’ என்றார் குமாரன் மாஸ்டர் ‘‘அதன்பின் அது சங்குண்ணிக் கணக்கு என்று தனி வகையாக அரசாணையால் அங்கீகரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் திருவிதாங்கூருக்கு அந்தககாலத்தில் படெஜெட் போட்டார்கள். அது எப்போதுமே மிச்ச பட்ஜெட் தெரியுமா? அவர் போனபிறகுதான் கம்மி பட்ஜெட் ஆரம்பித்தது.” “நீ சொல்… என்ன கணக்கு?” என்றான் ஸ்ரீதரன். “அதாவது” என்று ஔசேப்பச்சன் ஏப்பம் விட்டான். “என் உட்பகுதியே ஒட்டுமொத்தமாகப் பொசுங்கிவிட்டது என்று நினைக்கிறேன். புகை வருகிறது…. இப்போது என் இதயம் சேக்ரட் ஹார்ட் போல எரிந்துகொண்டே இருக்கிறது.” “சொல்கிறாயா இல்லையா?” “அதாவது…” என்றான் ஔசேப்பச்சன். “அதன் வடிவத்தின் முதல் அம்சம் அதன் வளைவு. வளைந்த பரப்பு மிகச்சிறப்பாக எடைதாங்கும் என்று தெரிந்திருக்குமே… அரேபியர்களின் கட்டிடக்கலையே வளைவுகளால் ஆனதுதான்…” “அவர்கள் வளைவுகளை ரசிப்பவர்கள்” என்றான் ஸ்ரீதரன். ஆமாம் வெறும் செங்கல்லைக் கொண்டே அவர்கள் வளைவுகளை அமைத்து மிகப்பெரிய கூரை கொண்ட டோம்களை கட்டியிருக்கிறார்கள். பீஜப்பூரில் உள்ள கோல்கும்பாஸ் மசூதியை நீ பார்க்க வேண்டும். அது பெரிய மைதானம் போல இருக்கும். மேலே வானம் போல வளைந்த கூரை. வெறும் செங்கல் அடுக்கி கட்டியது. உத்தரம் கழுக்கோல் சட்டம் ஏதுமில்லை. ஏனென்றால் வளைவுதான்… வளைந்த பரப்பு ஒன்றையொன்று கவ்விக்கொண்டு அப்படியே நிலைகொள்வது. ஆகவேதான் பரம காருணிகனாகிய கிறித்தவர்களின் பிதா வானத்தை வளைவாக படைத்தார். ஔசேப்பச்சன் தொடர்ந்து சொன்னான். பத்தேமாரியின் அனைத்து இடங்களும் வளைவாகவே இருக்கும். துல்லியமான அழகான வளைவு. அந்த வளைவை உள்ளே பல்லாயிரம் மரச்சட்டங்கள் தாங்கியிருக்கின்றன. ஒரு பத்தேமாரிக்குள் சென்று பார்க்கவேண்டும் நீ. அதன் அடிப்பகுதி முழுக்க குறுக்கும்நெடுக்குமாக மரச்சட்டங்கள். தடிமனானவை அல்ல. நம் தொடையளவு வருபவை, அவ்வளவுதான். ஆனால் ஆயிரக்கணக்கில். முற்றிய புளியமரத்தால் செய்யப்படுபவை அந்த சட்டங்கள். இப்போது தேக்கு போடுகிறார்கள். அவற்றை மேலே நின்று பார்த்தால் ஒரு பெரிய வலை போல தெரியும். அல்லது விறகுக்குவியல்போல. அள்ளி அள்ளி வைத்து சேர்த்து பொருத்தி நிறுத்தியிருக்கிறார்கள் என்று தோன்றும், அப்படி அல்ல. மிகமிக நுட்பமான கணக்குகள் அதற்கு உண்டு. அந்தக் கணக்குகள் எல்லாம் பாடல்களாக அவர்களிடம் இருக்கின்றன. கிழட்டு உஸ்தாத்களுக்கு அவை தெரியும். ஆனால் அவர்களுக்கு இந்தக் கணக்குதான் தெரியும், ஒரு காலிச்சாயா இரண்டு பருப்பு வடைக்கு கணக்கு கேட்டால் கைவிரல்களை மடக்குவார்கள், மூச்சுவாங்கும். அவர்களின் கணக்கு பாட்டு வடிவில் இருக்கும் ‘ஒந்நுதொட்டு மூநல்லோ யா அல்லா- ஒந்நில்கொண்டது எண்பதல்லோ! மூநில் நிந்நது நாப்பதல்லோ யா ரஹ்மான்- மூநும் கூட்டி முப்பதல்லோ’ இந்தமாதிரி. இது சும்மா நான் பாடுவது. ஆனால் கேட்டால் இப்படி இருக்கும். நீளநீளமாக போகும். அந்த அமைப்பை ஒரு அறிவியல் என்று சொல்லமாட்டேன். அறிவியல் என்றால் அதற்கு தியரி இருக்கும். இது வெறும் அனுபவ ஞானம். எப்படி சிலந்தி வலைபின்ன கற்றுக் கொண்டதோ, தூக்கணாங்குருவி கூடுகட்ட கற்றுக் கொண்டதோ அப்படி. பல்லாயிரம் பேரின் பலநூறாண்டுக்கால கூட்டு அறிவால் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வந்தது அந்த அறிவு. தனியொருவருக்கு அது முழுமையாகத் தெரியாது. எந்த நூல்களிலும் அது இல்லை. ஆனால் கூட்டாக மாப்பிளைப் பண்பாட்டில் அது இருந்து கொண்டும் இருக்கிறது. அந்த சட்டங்களின் அமைப்பை இன்றைய அறிவியலின் சொற்களைக் கொண்டு இப்படிச் சொல்லலாம். எடைபரவல். வெளியே அறையும் அலையின் அடியின் எடையை இந்த சட்டங்கள் பகிர்ந்து பகிர்ந்து பகிர்ந்து இல்லாமலாக்கிவிடுகின்றன. நான் கடலில் செல்லும்போது பத்தேமாரியின் இந்த சட்டங்களுக்குள் சென்றிருக்கிறேன். அந்த சட்டங்கள் மெல்ல அதிரும். மிகமெல்ல. அவற்றில் நின்றால் நம் காலில் ஒரு சின்ன மின்சாரம் பாய்ந்த அதிர்வு ஏற்படும், அவ்வளவுதான். “அங்கே போகமுடியுமா?” என்றான் எலி. மச்சானே, அதுதான் மாப்பிள்ளைகள் இரவு உறங்கும் இடம்… அங்கே இருந்து சாராயம் குடிப்பது மிகச்சிறந்த அனுபவமாக இருக்கலாம். காமம் அதைவிடச் சிறப்பாக இருக்கலாம். ஏனென்றால் கடலின் அதிர்வும் கூடவே இணைகிறது. ஆனால் மாப்பிள்ளைகளுக்கு ரசனை கிடையாது. அவர்கள் அதையெல்லாம் அனுமதிப்பதில்லை. “அரசிகர்கள்” என்றார் குமாரன் மாஸ்டர். ”நான் அந்தச் சட்டங்கங்களைப் பார்த்து வியந்து வியந்து நின்றிருக்கிறேன். ஒரு பத்தேமாரி அலையில் சென்று பாறையில் நூறுமைல் வேகத்தில் முட்டினால்கூட பெரிய உடைவு உருவாகாது. இத்தனைக்கும் வெளிப்பக்க மரம் ஆறு இஞ்சு கனம்தான் இருக்கும். தேக்கு மரத்தால் செய்கிறார்கள். பழையகாலத்தில் அயினி மரத்தால் செய்தார்கள்” என்றான் ஔசேப்பச்சன். “இப்போது செய்கிறார்களா?” பத்தேமாரிக்களை இப்போது வணிகரீதியாகச் செய்வதில்லை என்று நினைக்கிறேன். சிறிய படகுகளைச் செய்கிறார்கள். ஆனால் இன்றைக்கு அவற்றுக்கும் மார்க்கெட் இல்லை. ஆனால் ஓர் அரபு ஷேக் கேட்டார் என்று கடைசியாக 2014 வாக்கில் ஒன்றை கடலில் இறக்கினார்கள். பத்தேமாரிகள் இன்றைக்கு ஒருவகை ஆடம்பரங்கள். ஆறன்முளை கண்ணாடி போல ஒரு வகையான கலைப்பொருட்கள் அவை. ஏனென்றால் பெரும்பாலும் கையாலெயே செய்யப்படுகின்றன. அதோடு பத்தேமாரிக்களை செய்ய மிகமிக அவசியமான ஒன்று இன்றைக்கு இல்லாமலாகிவிட்டது.” என்ன என்று நாங்கள் கேட்கவில்லை. ஔசேப்பச்சன் நாடக இடைவெளிக்காக சற்றே சாராயம் விட்டு குடித்து நிதானமாக ஏப்பம் விட்டான். பிறகு “மாப்பிளைகளின் சமூக அமைப்பு” என்றான். “அது மிகமிக உறுதியான நெறிகளால் ஆனது. தலைமையும் துணைத் தலைமையும் குட்டித்தலைமைகளும் வட்டாரத் தலைமையும் எல்லாம் உள்ள பெரிய அமைப்பு அது. குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாக அது உறுதியாகச் செயல்பட்டிருக்கிறது. அதை ஒரு தொழில் கூட்டமைப்பு என்று சொல்லலாம். ஒரு கல்விநிறுவனம் என்றும் சொல்லலாம். இஸ்லாமுக்குள் ஒரு துணைச்சாதி அல்லது துணைச்சமூகம் என்றும் சொல்லலாம். ஆனால் அது மெல்லமெல்ல இல்லாமலாகியது. கால யவனிகைக்குள் சென்றது”. அந்த சொல்லை விரும்பிய ஔசேப்பச்சன் கையை தூக்கி “கால யவனிகை… அதாவது காலமாகிய யவனிகை!” என்றான். “காலத்தை துணியால் திரையாக ஆக்கி…” ஏப்பம் விட்டு “நல்ல தீ போன்ற சாராயம்!” என்றான். “ஏன்?” என்றேன். பலகாரணங்கள் முதல் விஷயம், போப்பூர் துறைமுகத்தின் அழிவு. அருகே கோழிக்கோடு துறைமுகம் மேலெழுந்து வந்தது. போப்பூர் பழையபாணி துறைமுகம். அன்றெல்லாம் துறைமுகங்கள் ஆற்றின் அழிமுகத்தில் அமைந்திருக்கும். கடலோதம் ஏற்பட்டு நீர் உள்ளே வரும்போது கப்பல்கள் ஆற்றுக்குள் நுழையும், துறைமேடைகளுக்கு வந்து சேரும். அணைகள் வந்ததும் ஆறுகளில் நீர் குறைந்தது. அழிமுகங்கள் மணல்மேடுகளாக மாறின. போப்பூர் சாலியார் ஆற்றங்கரையில் இருந்தது. அந்த ஆறு இன்று ஆழமானதுதான், ஆனால் அன்று பெரிய கலங்கள் உள்ளே செல்லும் அளவு இருந்திருக்கிறது. அதோடு போர்ச்சுக்கல்காரர்களும் பிறகு பிரிட்டிஷ்காரர்களும் மாப்பிள்ளைகளை ஒடுக்கினார்கள். ஆயிரத்தி எழுநூறு முதல் இருநூறாண்டுகள் பிரிட்டிஷ்காரர்கள் மாப்பிள்ளைகளை அழித்து ஒழிக்க போரிட்டிருக்கிறார்கள். குஞ்ஞாலி மரைக்காயர், வாரியங்குந்நத்து ஹாஜி போன்ற பெரிய பெரிய கடலோடிகள் எல்லாம் பிரிட்டிஷாரால் அழிக்கப்பட்டார்கள். மாப்பிள்ளைகளின் கடல் ஆதிக்கம் அழிந்தது. மாப்பிள்ளைகள் வேறுவேறு வேலைகளுக்குச் சென்றார்கள். சிறுவணிகர்களானார்கள். அதோடு அந்த சமூகக்கட்டமைப்பு உடைய தொடங்கியது. பிரிட்டிஷார் அளித்த ஆங்கிலக்கல்வி அவர்களின் மரபான கல்வியை அழித்தது. ஒரு குழந்தை மாப்பிள்ளைகளின் மரபுக்கல்வியையும் பிரிட்டிஷாரின் பள்ளிக்கல்வியையும் ஒரே சமயம் கற்றுக்கொள்வது என்பது சாத்தியமே அல்ல.கடைசியாக இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்கள். கிலாஃபத் இயக்கத்துடன் அவை இங்கே வந்து வலுப்பெற்றன. அவை இஸ்லாமை ஒற்றைப்படையான ஒரே மதமாக ஆக்கின.மாப்பிள்ளைகளின் தனிப்பண்பாடு தவறானது என்றும் ஆசாரவிரோதம் என்றும் கருதப்பட்டது. அவ்வளவுதான், ஒரு ஆயிரம் ஆண்டுக்காலம் மரபு அழிந்தது.ஆனாலும் பெருமழையின் தூவானம் எளிதில் நின்றுவிடுவதில்லை. நான் மாப்பிள்ளைகளின் கணக்குகளை நேரில் காண வாய்த்தது. முப்பதாண்டுகளுக்கு முன்பு. அது ஒரு காலம். “ஔசேப்பச்சன் கதைக்கு வந்துவிட்டான்… ” என்றான் ஸ்ரீதரன் “அவனுடைய வீரதீர சாகசங்கள்… அவன் வென்றெடுத்த களங்கள்… பெண்கள் உட்பட” “டேய் நாயரே, நீ வந்தால் நக்கினோமா குடித்தோமா என்று இருக்கவேண்டும். சத்யகிறிஸ்தியானிகளை பற்றிபேசினால் இங்கே ரத்த ஆறு ஓடும்” என்றான் ஔசேப்பச்சன் “தோமாஸ்லீகா இங்கே வந்தது நாயர்களிடம் பேச்சு கேட்பதற்காக இல்லை.” “ஸ்ரீதரா, நீ பேசாமல் இரு… சொல்லு ஔசேப்பச்சா.” “அதாவது இது நடந்தது மங்களூரில், 1988 ல். மிகச்சரியாக தேதியைச் சொல்கிறேன், ஜூலை 19 ஆம்தேதி. எப்படி நினைவிலிருக்கிறது என்றால் 1988 ஜூலை 8 ஆம்தேதிதான் கேரளத்தையே உலுக்கிய பெருமண் ரயில் விபத்து நடந்தது.”. “ஆமாம், நினைவிருக்கிறது” என்று குமாரன் மாஸ்டர் சொன்னார். “1988 ஜூலை மாதம் எட்டாம்தேதி மதியம் பெங்களூரிலிருந்து திருவனந்தபுரம் செண்டிரலுக்கு போய்க்கொண்டிருந்தது ஐலண்ட் எக்ஸ்பிரஸ்” என்று ஔசேப்பச்சன் சொன்னான். “ஜூலை மாதம் என்றால் கேரளத்தில் தென்மேற்கு மழை வலுவடைந்திருக்கும் காலம். மதியம் ஒன்றேகால் மணிக்கு ரயில் கொல்லம் பெரிநாடு பக்கத்திலுள்ள அஷ்டமுடிக்காயலின் மேல் ரயில்வே பாலத்தில் மெல்லச் சென்றுகொண்டிருந்தது. என்ன நடந்தது என்று தெரியாது. ரயில் தடம்புரண்டது. பொதுவாக ரயில்கள் தடம்புரண்டால் கவிழ்ந்து அங்கேயே கிடக்கும். அதுவும் பாலத்தின்மேல் மிகமெல்லச் செல்லும்போது தடம்புரண்டு நின்றிருக்கவே வாய்ப்பு ஆனால் எஞ்சினை ஒட்டிய பதினான்கு பெட்டிகள் காயலில் தூக்கி வீசப்பட்டன. அவை அறுபதடி ஆழத்தில் மூழ்கிச்சென்றன.” “நல்லவேளையாக அங்கே அருகிலேயே மன்றோ துருத்து என்னும் கடலோரக் கிராமம் இருக்கிறது. அங்கிருந்து தேர்ந்த நீச்சல்வீரர்களான மீனவர்கள் வந்து உயிரைப்பணயம் வைத்து காயலில் பாய்ந்தனர். நம்பமுடியாத அளவுக்கு உயிர்கள் காப்பாற்றப்பட்டன. கொல்லம் நேவி காம்பிலிருந்து டைவர்கள் அரைமணிநேரத்திற்குள் வந்தனர். அவர்களாலும் பலர் காப்பாற்றப்பட்டனர். ஆனாலும் நூற்றி ஐந்துபேர் இறந்தனர். இருநூறுபேர் காயமடைந்தனர்.” “ஒரு டொர்னடோ அங்கே அடித்திருக்கலாம் என்றார்கள் இல்லையா?” என்று குமாரன் மாஸ்டர் கேட்டார். அப்படி சொன்னார்கள். ஆனால் விசாரணைக்கமிஷன் அப்படி உறுதியாகச்சொல்லிவிட முடியாது என்றே சொன்னது. இன்றைக்கும் பெருமண் விபத்து ஒரு மர்மம்தான். சரி, நான் சொல்ல வருவது அதுவல்ல. என் கதை மங்களூரில் நடந்தது. நான் அப்போது அங்கே கிரைம் பிராஞ்ச் டிஎஸ்பி. டிஐஜி அஃபோன்ஸோ ரொசாரியோவின் தலைமையில் வேலை. குடி, பெண்கள், ஞாயிறுதோறும் பாவமன்னிப்பு. மச்சானே வாழ்க்கை அற்புதமாகச் சென்றுகொண்டிருந்தது என ஔசேப்பச்சன் தொடர்ந்தான். அன்றைக்கு மங்களூரில் நேத்ராவதி ஆற்றின் அழிமுகத்திலுள்ள மணல்மேட்டில் ஒரு சடலம் ஒதுங்கியது. அழுகி, வயிறு உப்பி, கண்கள் பிதுங்கிய சடலம். வயிற்றில் ஊறும் வாயுக்களால் பலூன் ஆக மாறி மிதந்து அலைகளில் கரையொதுங்குவது இந்த பிணங்களுக்கு பிடித்தமான வழக்கம். மாஸ்டர், புத்தர் சொல்லியிருக்கிறார் அல்லவா? கடல் பிணங்களை திருப்பித் தந்துவிடுகிறது என்று? “புத்தர் அப்படி நிறைய சொல்லியிருக்கிறார். அவர் எங்கே கடலைப்பார்த்தார்?. பிகாரில் ஏதோ ஏரியைச் சொல்லியிருப்பார்.. நீ கதையைச் சொல்லுடா நஸ்ரானி.” “சரி, சொல்கிறேன்” என்றான் ஔசேப்பச்சன். “அது ஓர் இளைஞனின் சடலம்.இருபதுக்குமேல் வயது. சிவந்த நிறம். சின்ன உடல். உடலில் காயம் ஏதுமில்லை. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டிலும் காயம் எதுவும் காட்டப்படவில்லை. நுரையீரலில் நீர் நிறைந்திருந்தது. ஆகவே மூழ்கிச்செத்தான் என்பதுதான் முடிவு.” அது வழக்கம்தான், ஏனென்றால் மங்களூரில் நேத்ராவதிக்குமேல் உள்ள ரயில்வே பாலம் மிகமிக நீளமானது. அங்கிருந்து ஒருபக்கம் ஆற்றையும் மறுபக்கம் கடலையும் பார்ப்பது மிக அழகான காட்சி. அதைப்பார்க்க ஒவ்வொருநாளும் அங்கே பலர் நடந்துசெல்வார்கள். மது அருந்திவிட்டுச்செல்பவர்களோ விளிம்புகளில் ஏறிநின்று வேடிக்கை பார்ப்பவர்களோ தவறிவிழுவதுண்டு. திடுமென ரயில் வருவதைக்கண்டு பாய்பவர்களும் உண்டு. அங்கே பலவகையான நீரோட்டங்கள் உள்ளன. உடல்கள் சென்று மாட்டிக்கொள்ளும் மணல்மேடுகள் நீருக்குள் புதிது புதிதாக உருவாகிக்கொண்டே இருக்கும். ஆண்டுக்கு சராசரியாக முப்பது உயிர் அங்கே போவது வழக்கம். அவ்வாறுதான் அந்த வழக்கும் முடிந்திருக்கும். ஆனால் ஒரு சின்ன சந்தேகம் எழுந்தது, இதெல்லாம் குற்றவழக்குகளில் அடிக்கடி நிகழும். குற்றங்களிலும் சரி ,அவை கண்டுபிடிக்கப்படுவதிலும் சரி ,கடவுளுக்கு ஓர் இடமுண்டு என்று நாங்கள், மெய்ஞானிகளான சத்ய கிறிஸ்தியானிகள், நம்புவதற்கான காரணம் இதுதான். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் ஒரு சின்ன விஷயத்தை பதிவுசெய்யலாமா வேண்டாமா என்று டாக்டருக்கே சந்தேகம். எஸ்.ஐயிடம் அதைக் கேட்டார். எஸ்.ஐக்கும் சந்தேகம், அவர் என் வரை கொண்டுவந்தார். சந்தேகம் முதலில் வந்தது போஸ்ட்மார்ட்டம் உதவியாளராகிய முகமது அப்துல் காதர் என்ற மம்முக்காவுக்கு. அவர் மிகவும் மூத்தவர். போஸ்ட்மார்ட்டத்தில் உதவத்தொடங்கி நாற்பதாண்டுக்கால அனுபவம் கொண்டவர். அவர் ஒரு சின்னவிஷயத்தை கண்டுபிடித்தார். பிணத்தின் வலக்கையின் சுட்டுவிரலில் ஒரு மெல்லிய நூல் இருந்தது. ஏதோ ஆடையிலிருந்து வந்தது. சரிகைபோல மின்னும் பட்டு நூல் அது. அந்த இளைஞன் அணிந்திருந்த ஆடையிலிருந்து வந்தது அல்ல அது. அவன் விழுந்தபோது அள்ளிப்பற்றிய எந்த இடத்திலும் அந்த நூல் இல்லை. அது வேறு எவருடையவோ ஆடையிலிருந்து அவன் கையில் வந்தது. மரணத்தருவாயில் அவன் அந்த ஆடையை அள்ளிப்பிடித்திருக்கிறான். அந்த ஆடைக்குரியவன் யார், அவன் இவனை தள்ளிவிட்டானா? தவறிவிழுந்தான் என்றால் உடனிருந்த அவன் ஏன் அதை போலீஸுக்கோ பிறருக்கோ தெரிவிக்கவில்லை? அப்படியென்றால் இது கொலையா? மம்முக்கா இன்னொன்றும் சொன்னார். மிகவும் தயங்கி, தன்னுடைய ஒரு பொதுவான ஐயமாக. “அந்த நூல் பட்டுச்சரிகையால் ஆனது. அது பொதுவாக இஸ்லாமியர் அணியும் துருக்கித் தொப்பியில் உள்ளது. மிக விலையுயர்ந்த தொப்பிகள் அவை. அவற்றை இஸ்லாமியர் அல்லாத பிறர் பயன்படுத்துவதில்லை” என்றார். அங்கிருந்து வழக்கு தொடங்கியது. அந்த நூலை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பதிவுசெய்து கொண்டேன். சந்தேகமரணம் என்று குறித்துக் கொண்டேன். இறந்தவன் யார் என்று விசாரிக்கலானேன். கேரளம், கர்நாடகம் இரு மாநிலங்களிலும் காணாமல் போனவர்கள் பற்றிய புகார்கள் அனைத்தையும் விசாரித்தோம். அதை முதலாண்டு, மேலும் முந்தைய இரண்டு ஆண்டுகள், மேலும் முந்தைய ஐந்தாண்டுகள் என்று விரித்துக்கொண்டே சென்றோம். காணாமலானவர்களின் பட்டியலில் அவன் இல்லை. என் சீனியர் ரொசாரியோ அப்போது இல்லை, டெல்லியில் சிபிஐயில் ஒர் அசைன்மெண்டுக்காக சென்றிருந்தார். அவர் போலீஸின் எண்ணிக்கையே அதன் முதல் பலம் என்பார். நான் அவர் சொன்னபடி போலீஸின் எண்ணிக்கையை நம்பினேன். மிகமிக விரிவாக வலையை விரித்தேன்.அன்றைய வழக்கம் போட்டோவுடன் போலீஸே ஒவ்வொரு இடமாகச் சென்று விசாரிப்பதுதான். இன்றைக்குபோல சிசிடிவி எல்லாம் இல்லை. பஸ்ஸ்டாண்டுகள், ரயில்நிலையங்கள், ஓட்டல்கள், டீக்கடைகள், வெற்றிலைபாக்குக் கடைகள், மதுக்கடைகள் என அந்த விசாரணை வளர்ந்து செல்லும். சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ முடிந்தவரை அதிகமான பேரிடம் நேரில் கேட்பதுதான் ஒரே விசாரணைமுறை, அது மிக வெற்றிகரமான முறை, நம்புங்கள். பொதுவாக இந்தமாதிரி பரபரப்பான இடங்களில் எல்லாம் முகங்கள் வந்தபடியே இருக்கும். ஆகவே எந்த முகமும் எவர் நினைவிலும் பதிந்திருக்காது. இரண்டே விஷயங்களை நம்பித்தான் இந்த விசாரணை. ஏதாவது ஒரு சிறிய விஷயம் நடந்து அதனூடாக அந்த முகம் எவர் நினைவிலாவது பதிந்திருக்கலாம். அல்லது சிலருக்கு இயல்பாகவே முகங்களை நினைவுபடுத்திக்கொள்ளும் திறன் இருக்கும். மிக அசாதாரணமான திறன் கொண்டவர்கள் உண்டு. தர்மஸ்தலாவில் ஒரு ஓட்டல் உரிமையாளர் அவர் ஓட்டலில் சாப்பிட்ட அத்தனை முகங்களையும் நினைவில் வைத்திருப்பார், எத்தனை ஆண்டுகளானாலும் சொல்வார். அவர் அதற்கு முயற்சி செய்வதே இல்லை. அது அவருக்கு ஒரு மனநோய் போல. ஒருமாதம் வரை வலை விரிந்துசென்றது. இந்தவலையை விரிப்பதில் ஒரு மெதடாலஜி உண்டு. முதலிலேயே நுணுக்கமாக விசாரிக்க மாட்டோம், அது நேரவிரயம். முதலில் சரசரவென மங்களூரின் முக்கியமான இடங்களில் பொதுவாக விசாரிப்போம். அதாவது மீன் துள்ளும் மையங்களில் மட்டும் தூண்டில் போடுவது போல. அதன்பின் அடுத்த சுற்று கொஞ்சம் விரிவாக, மொத்த மங்களூரையும் கணக்கில்கொண்டு விசாரிப்போம். அதை சுற்றுவலை வீசுவது என்போம். எல்லாரிடமும் கேட்போம். மூன்றாம்சுற்று மிக நுணுக்கமாக அணுவணுவாக விசாரிப்பது. அதாவது மடிவலை வீசுவது. அதில் நெத்திலி குப்பை எல்லாம் மலைமலையாகச் சேரும். ஆராய்ந்து எடுக்கவேண்டும். அதிலும் ஒன்றும் சிக்கவில்லை என்றால் நேரடிவிசாரணையை நிறுத்திவிடுவோம். அத்தனைபோலீஸ்காரர்களும் அந்த முகத்தை நினைவில் வைத்திருக்கவேண்டும் என்று சொல்வோம். அவர்கள் தேடிக்கொண்டே இருக்கவேண்டும், அவர்களை அறியாமலேயே தேடல் நடக்கவேண்டும். யாரை எதன்பொருட்டு விசாரித்தாலும் ஒரு கேள்வி இதைப்பற்றியும் இருக்கவேண்டும். அது பல மாதங்கள், பல ஆண்டுகள் அப்படியே நீளமுடியும். ஒரு இயந்திரம் ஓடுவதுபோல நாம் நிறுத்துவது வரை அது இயங்கிக்கொண்டே இருக்கும். தேடலின் பரப்பு, நுணுக்கம் எவ்வளவு முக்கியமோ அதேபோல கால அளவும் முக்கியம். நுணுக்கம், பரப்பு, காலம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று பெருக்கிக்கொள்ளும்போது மிகவிரிவான வெளி உருவாகிறது. அதில் நாம் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் கூடிக்கூடி வருகின்றன. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுகூட கண்டுபிடித்திருக்கிறோம். இந்தப்பையன் யார் என்று ஏழுமாதம் கழித்து கண்டுபிடித்தோம். அவன் பணம்பூர் கடற்கரையில் ஓர் ஓட்டலில் சாப்பிட்டிருக்கிறான், அங்கே அவனுடைய ஒரு பர்ஸை மறந்துவிட்டுவிட்டான். சர்வர் எடுத்து கல்லாவில் கொடுத்திருந்த அந்த பர்ஸை திரும்பி வந்து வாங்கிச் சென்றிருக்கிறான். சர்வருக்கு இருபதுரூபாய் டிப்ஸ் கொடுத்திருக்கிறான். அந்தப் பர்ஸில் பணம் ஏதும் இல்லை. அந்த சர்வர் அவன் போட்டோவை அடையாளம் கண்டான். அது வேறு ஒரு திருட்டு வழக்கு விசாரணையின்போது தற்செயலாக நடந்தது. பணம்பூரைச் சுற்றி விசாரணையை மீண்டும் தொடங்கினோம். மீண்டும் எண்ணிக்கையின் வலிமையை நம்பிய தேடல்தான். எல்லா கடைகளிலும் ,எல்லா ஓட்டல்களிலும், எல்லா விடுதிகளிலும், எல்லா வீடுகளிலும் விசாரித்தோம். இரண்டுவாரம் கழித்து பணம்பூர் அருகே ஒரு சிறிய ஓட்டலில் அவன் தங்கியிருந்ததைக் கண்டுபிடித்தோம். அந்த ஓட்டலின் உரிமையாளரால் அவனை நினைவுகூர முடியவில்லை. ஆனால் அங்கிருந்த ஒரு பையனின் நினைவில் அவன் இருந்தான். அவன் தங்கியிருந்த அறையையும் பையன் நினைவில் வைத்திருந்தான். 2A. அதைக்கொண்டு ரிஜிஸ்டரில் அவன் பதிவுசெய்த விலாசத்தைக் கண்டுபிடித்தோம். அது போலி விலாசம். ஆனால் போலிவிலாசங்களேகூட மிகமிகச் சிறந்த தகவல்கள்தான். எவரானாலும் முழுக்கமுழுக்க கற்பனையான போலி விலாசத்தை கொடுக்கமுடியாது. எந்தப் போலிவிலாசத்திலும் பெரும்பகுதி உண்மையாகவே இருக்கும். உண்மையான விலாசத்தை கொஞ்சம் மாற்றியிருப்பார்கள். காந்திநகரை நேரு நகர் என்றும் ஏ.கே.ஜி நகர் என்றால் இ.எம்.எஸ் நகர் என்றும் மாற்றும் அளவுக்குத்தான் மக்களின் கற்பனை ஓடும். காஞ்சாங்காடு என்றால் நீலேஸ்வரம் என்று எழுதியிருப்பார்கள். அதுவும் ஒரு ரிஜிஸ்டரில் சரசரவென பெயர் எழுதி விலாசம் நிரப்பும்போது கைபோன போக்கில் எழுதுவார்கள். அப்போது கலைமகள் கையருகே வந்து நின்றிருக்க வாய்ப்பில்லை. அவன் எழுதிய விலாசத்தில் தலைச்சேரி என்று இருந்தது. ஆகவே கண்ணூர் முதல் வடகரை வரை உள்ள இடங்களை வட்டமிட்டோம். மீண்டும் தேடல், இம்முறை எளிதாகவே கண்டுபிடித்துவிட்டோம். மூன்று வாரங்களில். அவன் வடகரையைச் சேர்ந்தவன். அங்கே ஒரு சிறு பகவதிகோயிலில் பூசை செய்திருந்த எம்பிராந்திரிப் பையன். பெயர் கிருஷ்ணன். வயது 29. பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு கோயிலில் பூசைசெய்ய தொடங்கினான். அது தேவஸ்வம் போர்டின் கோயில் அல்ல, ஊர்க்காரர்களின் ஒரு டிரஸ்டால் நிர்வகிக்கப்படுவது. ஆகவே மிகக்குறைவான சம்பளம். அருகே அவனுக்கு சொந்தமாக மிகப்பழைய வீடும் பன்னிரண்டு செண்ட் நிலமும் இருந்தது.அவனுக்கு அம்மாவும் தங்கையும் மட்டும்தான். அம்மா வீட்டிலிருந்தே முறுக்கு பலகாரங்கள் செய்து டீக்கடைகளுக்கு கொடுத்தனுப்பி கொஞ்சம் சம்பாதித்துக்கொண்டிருந்தாள். தங்கை சமையலில் உதவினாள். அவன் அவர்களிடம் பூசாரி வேலையில் வருமானமே இல்லை, ஆகவே வேலைதேடி மும்பை செல்வதாகச் சொல்லி கிளம்பியிருக்கிறான். அங்கே ஏதாவது ஓட்டலில் வேலை தேடிக் கொள்வது அவனுடைய நோக்கம். அவனுக்கு உள்ளூரில் நிறைய கடன் இருந்தது என்று அவன் அம்மா சொன்னாள், ஆனால் எவ்வளவு கடன் என்று தெரியவில்லை. கடன்தொல்லைக்கு பயந்துதான் ஊரைவிட்டுக் கிளம்பியிருக்கிறான். அவன் சென்றபின் தகவலே இல்லை. அவர்கள் அவன் கடிதம் அனுப்புவான் என்று காத்திருந்தனர், அவன் வராமலானபோது துயருற்றனர், ஆனால் அவனை தேடவேண்டும் என்றோ அதற்கு போலீஸில் சொல்லவேண்டுமென்றோ அவர்களுக்குத் தோன்றவில்லை. அப்படி புகார் செய்யலாம் என்ற தகவலே பெரும்பாலும் மக்களுக்கு தெரிந்திருப்பதில்லை. ஆக, ஒரு சித்திரம் உருவானது. வேலைதேடி மும்பை செல்லும் வழியில் மங்களூருக்கு வந்திருக்கிறான். அங்கே கொல்லப்பட்டிருக்கிறான். திருட்டாக இருக்கும் என்று முதல் எண்ணம் வந்தது, அவனிடம் பணம் இருந்திருக்கலாம். அல்லது பணம் இருக்கிறது என்னும் எண்ணத்தை உருவாக்குபவனாக இருந்திருக்கலாம். ஏற்கனவே மங்களூர் ரயில்நிலையம், பஸ்ஸ்டாண்ட் பகுதிகளின் எல்லா பொறுக்கிகளையும் குட்டித்திருடர்களையும் துப்புரவாக விசாரித்திருந்தோம். அவர்கள் எவரும் அவனைப் பார்த்ததே இல்லை என்றார்கள். அத்தனைபேரையும் மீண்டும் வரவழைத்து மேலும் கடுமையாக விசாரித்தோம். ஒரு வாரத்தில் ஒன்று தெரிந்தது, அவர்கள் எவரும் அவனைப் பார்க்கவில்லை. லாக்கப்பில் ஏராளமான மலமூத்திரம் விழுந்ததுதான் மிச்சம். அது எனக்கு முன்னமே தெரிந்திருந்ததுதான். அந்தப் பட்டுநூல் குல்லாய் இஸ்லாமியர்களில் வசதியானவர்கள் போடுவது. ஆகவே அந்தப் பொறுக்கிகள் அதைச் செய்திருக்க வாய்ப்பில்லை. அந்த திசையில்தான் நான் புலனாய்வை எடுத்துச் சென்றுகொண்டிருந்தேன். ஆனால் எந்த ஒரு வாய்ப்பையும் விட்டுவைக்கக் கூடாது என்று ரொசாரியோ சொல்வதுண்டு. ஒன்றை முழுமையாக ஆராய்ந்தபின் அதை கடந்துவிடவேண்டும். ஆனால் ஒரு சின்ன வாய்ப்பை மிச்சம் வைத்திருக்கவும் வேண்டும். மேலும் போலீஸ் காரர்களுக்கு ரௌடிகளை சவட்டி எடுப்பதற்கான வாய்ப்புகளை அவ்வப்போது அளிக்கவும் வேண்டும். பணத்தால் மட்டும் மனிதனுக்கு மகிழ்ச்சி வந்துவிடுவதில்லை என்று செயிண்ட் கிரிகோரியோஸ் புண்யவாளன் சொல்லியிருக்கிறார் இல்லையா?. அறுதியாக கொலையின் சுட்டிமுள் மங்களூர் காசர்கோடு பகுதியின் கடல்தலைவர்களை நோக்கி வந்து நின்றது. தொண்ணூறு சதவீதம் அது கள்ளக்கடத்தல்காரர்களால் செய்யப்பட்டதுதான். ஆனால் இந்த மேற்குக்கடற்கரைப் பகுதியின் கடத்தல் தொழிலுக்கு பலநூறாண்டுக்கால வரலாறு உண்டு. அதைச் செய்பவர்கள் அதிலேயே சரித்திரகாலம் முதல் வாழ்ந்துவரும் மிகப்பெரிய குடும்பங்கள். பெரும்பாலும் மாப்பிளாக்கள். கொஞ்சம் பந்த்கள், பந்த்களில் ஒருசிலர் மதம் மாறி ஆல்வாக்களாக அறியப்பட்டனர். அப்போது மெட்டால கிருஷ்ணப்ப ரை பெங்களூருக்கு இடம் மாறிவிட்டார். கடலோரம் அவருடைய மருமகன் மெட்டால கோவிந்த ரையும், மகன் எரடால சிவப்ப ரையும்தான் கள்ளக்கடத்தல் தொழிலைச் செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்கும் மாப்பிளாக்களுக்கும் இடையே மிகப்பெரிய போட்டியும் சண்டையும் நடந்துகொண்டிருந்தது. மங்களூர் மாப்பிளாக்களில் சீமேனி அப்துல் ரஹ்மான் ஹாஜி காலமானபிறகு அவருடைய மகன் சீமேனி அப்துல் நஜீப் சாகிப் அவருடைய சாம்ராஜ்யத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தார். நேத்ராவதியின் கரையிலிருந்த கடற்கரையில் பிலாந்தறையில் முகமது இப்ராஹீம் ஹாஜி ஆட்சி செலுத்தினார். இன்னொரு பகுதி கொண்டால நாரணப்ப ஷெட்டியின் ஆட்சியில் இருந்தது. நேத்ராவதி ஆற்றின் கரையில் படகுத்துறைகளை அமைத்திருந்தவர்கள் வெலந்தரா சந்திரா ஷெட்டி, பெண்டால ராமப்ப ரை ஆகியோர். சீமேனி குழுவைச் சேர்ந்த மணக்காடு குஞ்ஞிமுகமது, கொரம்பத்து அப்துல் சலீம், கொரண்டியில் அப்துல் நாஸர் என்று மூவர் நேத்ராவதியில் படகுத்துறைகளை வைத்திருந்தனர். அவர்களில் மாப்பிள்ளைகள் எவரோதான் கிருஷ்ணன் எம்பிராந்திரியைக் கொன்றிருக்கவேண்டும். ஆனால் எதற்காக? ஒரு பகவதி கோயில் சாந்திக்காரன், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒரு சாமானிய இளைஞன், எப்படி இவர்களின் கொலைப்பட்டியலில் வந்தான்? அன்றைய மாப்பிள்ளைகளைப் பற்றிச் சொன்னால்தான் உங்களுக்கு புரியும். கள்ளக்கடத்தல் அவர்களின் தொழில், பூர்விகர்கள் செய்துவந்தது. அரசும் சட்டமும் அதை குற்றமாக நினைத்தாலும் அவர்களுக்கு அது குற்றம் அல்ல. அதற்காக கொலை செய்வது போரின் ஒரு பகுதி. அவர்கள் நூறு தலைமுறைகளாக போர்வீரர்கள். ஆனால் சிலநெறிகள் அவர்களுக்கு உண்டு. ஒன்று, திருடமாட்டார்கள். அது அவர்களுக்கு ஹராம். எதிரியின் சொத்தே ஆனாலும் கைவைப்பதில்லை. இரண்டு, மது போதைப்பொருள் இரண்டையும் கடத்தமாட்டார்கள், அதுவும் அவர்களுக்கு ஹராம். கடத்தல் தங்கம், எலக்டிரானிக் பொருட்கள், கொஞ்சமாக ஆயுதங்கள்; அவ்வளவுதான்.மூன்று, பெண்களையும் குழந்தைகளையும் எந்நிலையிலும் கொல்லவோ கடத்தவோ மாட்டார்கள். நான்கு, ஆனால் முக்கியமானது, அவர்கள் எந்நிலையிலும் சாமானிய மக்களின் வாழ்க்கையுடன் உரசிக்கொள்வதில்லை. அவர்களின் குழுவைச்சேர்ந்தவர்கள் சாமானியர்களுடன் எதன்பொருட்டும் மோதமாட்டார்கள். ஒரு சாமானியக் குடிமகன் சரக்கு போட்டுவிட்டு அவர்களை அடித்தால்கூட பேசாமல் ஒதுங்கி போய்விடுவார்கள். கைத்தவறுதலாக அவர்களில் ஒருவனை ஒரு சாமானியன் கொலை செய்துவிட்டால்கூட எங்களிடம் வந்து சட்டநடவடிக்கை எடுக்கத்தான் சொல்வார்கள், அவர்களே ஒன்றும் செய்யமாட்டார்கள். ஆகவே அந்தக் கடற்கரையில் அத்தனை பெரிய குற்றவுலகம் இருப்பது சாமானியர்களுக்கு தெரியவே தெரியாது. சொல்லப்போனால் அந்த குற்றவுலகம் சாமானியர்களுக்குப் பெரிய பாதுகாப்பு. சில்லறைத் திருடர்கள் ரவுடிகள் எல்லாம் பயந்தே இருப்பார்கள். அதோடு கடைசியாக இன்னொன்றையும் சொல்லவேண்டும். அவர்கள் பிராமணர்கள் மேல் அபாரமான பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர்கள். இந்த மாப்பிள்ளைகள் ஸக்காத் மரபை கறாராக கடைப்பிடிப்பார்கள். அவர்கள் சேர்க்கும் பணத்தில் நாற்பதில் ஒரு பகுதி, அதாவது இரண்டரை சதவீதம் ஆண்டுதோறும் பிறருக்கு கொடையாக அளிக்கப்படும். அதை இஸ்லாமியர்களுக்கு கொடுக்கவேண்டும் என நினைக்கமாட்டார்கள். ஏழைகள் எவருக்கானாலும் கொடுப்பார்கள். உறவினர்களுக்கு கொடுப்பது ஸக்காத்தில் வராது. ஆகவே அவர்களில் பலர் மிகச்சிறந்த இலவச மருத்துவமனைகளை நடத்தினர். ஆண்டுதோறும் ஏராளமான கல்வி நிதியுதவிகளைச் செய்தனர். சீமேனி ஹாஜி அப்துல் ஹமீத் அறக்கட்டளை நடத்தும் சீமேனி மருத்துவமனை இந்தியாவிலேயே நல்ல இலவச மருத்துவமனைகளில் ஒன்று. ஆகவே ஒர் அப்பாவி குடிமகனை, அதுவும் பிராமணனை, அவர்கள் எதன்பொருட்டும் கொன்றிருக்க வாய்ப்பில்லை. அவன் எதற்வது சாட்சியாக ஆனாலும்கூட, அவனே அவர்களை மிரட்டினாலும்கூட அதைச் செய்யமாட்டார்கள். அது அவர்களுக்கு பெரிய ஹராம். அப்படியென்றால் என்ன நடந்திருக்கும்? போலீஸுக்கும் கள்ளக்கடத்தல் குழுக்களுக்கும் நடுவே நெடுங்காலமாக ஒரு புரிந்துணர்வு உண்டு. இது நீண்ட குற்றவரலாறுள்ள எந்த இடத்திலும் காலப்போக்கில் உருவாகி வந்திருக்கும். போர்செய்யும் ராணுவங்கள் நடுவே உருவாகும் புரிந்துணர்வுபோல. அல்லது காட்டில் புலிகள் மூத்திரச் சொட்டுவிட்டு எல்லை வகுத்துக்கொள்வதுபோல. எங்களுக்கு நடுவே வக்கீல்கள் இருந்தனர். பந்த்களுடன் பேசுவதற்கு டி.எஸ்.பத்மநாப ஷெனாய் என்ற வழக்கறிஞர் இருந்தார். மாப்பிள்ளைகளுடன் பேச கோழிக்கோட்டிலிருந்து வந்தவரான எம்.ஏ..நிஸார் என்னும் வழக்கறிஞர். நான் இருவரையும் வீட்டுக்குச் சென்று பார்த்தேன். அந்தக்கொலையில் கள்ளக்கடத்தல் அமைப்புகளுக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று கேட்டேன். பந்த்கள் எவ்வகையிலாவது கிருஷ்ணன் எம்பிராந்திரியை அறிந்திருக்கிறார்களா? மாப்பிள்ளைகள் எதற்காகவேனும் அவரைக் கொலை செய்தார்களா? தவறிப்போய் செய்திருந்தால் ஒரு குற்றவாளியை அவர்களே அளித்தால் போதும், கேஸை முடித்துவிடலாம். நான்கு நாட்களில் டி.எஸ்.பத்மநாப ஷெனாய் தகவல் சொன்னார், அவர்கள் எவரும் கிருஷ்ணனைப் பார்க்கவே இல்லை. ஒருவாரம் கழித்து எம்.ஏ..நிஸார் சொன்னார், இல்லை அந்தக் கொலையுடன் மாப்பிள்ளைகளுக்குச் சம்பந்தமே இல்லை. கொலைச்செய்தியை பேப்பரில் வாசித்ததுமே அதை அவர்கள் விசாரித்து ஆராய்ந்துவிட்டார்கள். அவர்களில் எவரும் செய்யவில்லை. அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்று எனக்குத்தெரியும். ஆகவே ஒன்றும் செய்வதற்கில்லை, கேஸ் ஏறத்தாழ முடிந்துவிட்டது. நீண்டகாலத்திற்குப்பிறகு நினைத்துக்கொள்கிறேன், சுவரில்முட்டி நின்றுவிட்ட வழக்குகளைத்தான் ஞாபகம் வைத்திருக்கிறோம். ஏனென்றால் சுவரில்முட்டி நிற்பது என்பது மானுட சாத்தியங்களின் கடைசி எல்லை. அப்போது கடவுள் புன்னகை செய்கிறார். ஒரு சின்ன க்ளூவை போட்டுப் பார்க்கிறார். பயல் அதை பிடித்துக்கொள்கிறான என்று மேலிருந்து வேடிக்கை பார்க்கிறார். ஆனால் நாம் சீதை போல கிருஷ்ணா என்று கையை தூக்கிவிடவேண்டும். “சீதை அல்ல, பாஞ்சாலி” என்றேன். “பாஞ்சாலியையா அனுமான் தூக்கிக்கொண்டு போனான்?” என்று ஔசேப்பச்சன் சந்தேகமாகக்கேட்டான். “தூக்கிக்கொண்டு போனவன் அனுமன் அல்ல. தூக்கிக்கொண்டு போகப்பட்டவள் பாஞ்சாலியும் அல்ல.” “வேறு யார்?” “தூக்கிக்கொண்டு போனவன் ராவணன். தூக்கப்பட்டவள் சீதை” “அதைத்தானே நானும் சொன்னேன்?” “டேய் விடு, நஸ்ரானிக்கு எதற்கு ராமாயணம்? அவனுக்கு பைபிளே தெரியாது” “என்ன பிரச்சினை? நான் சரியாகத்தானே சொன்னேன்.” “இந்தப்பேச்சை இப்படியே விடுவோம்.” “பைபிள் தெரியாது என்று சொன்ன நாய் ஏது?” “பைபிள் உனக்கு எதற்கு? நீ சத்யவிசுவாசியாகவே உள்ளே இருந்து கொந்தையுடன் வந்தவன்… டேய் நஸ்ரானி, மிச்சத்தை சொல்லு.” “அதாவது கடவுள் என்னைப் பார்த்து புன்னகைத்தார். எப்படி என்றால் நாம் மரைன் டிரைவ் சாலையில் பைக்கில் போகும்போது அழகான பெண் நம்மைப்பார்த்து தெரிந்தவள்போல சிரிப்பாள், நாம் கடந்துவந்துவிடுவோம். அதன்பிறகு அவள் யார் என்று மண்டையை உடைத்துக்கொண்டு வீணாய்ப் போவோம் அல்லவா, அதைப்போல” என்றான் ஔசேப்பச்சன். “எப்படி?” என்றேன். “சொல்கிறேன்” என்று ஔசேப்பச்சன் தொடங்கினான். “நான் சொன்னேனே, பெருமண் விபத்து. அதையும் இந்தக் குற்றத்தையும் எப்படி என் மனதுக்குள் இணைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிந்து கொண்டால் மேலும் விளங்கும்”. பெருமண் விபத்து நடந்து ஓராண்டுக்குமேல் ஆகியிருக்கும். ரயில்வேயில் ஜெனரல் மானேஜராக வேலை பார்க்கும் என் நண்பன் அர்விந்த் திரிபாதி மங்களூர் வந்திருந்தான். அவன் என் பேட்ச்மேட். போலீஸிலிருந்து அங்கே சென்றவன். மங்களூரில் ஒரு இன்ஸ்பெக்ஷன். அது முடிந்து கோழிக்கோடு செல்வதாகச் சொன்னான். அவன் சொன்ன காரணம் ஆர்வமூட்டியது. அவன் அங்கே மாப்பிள்ளைக் கலாசிகளைச் சந்திக்கச் செல்கிறான். பதினான்கு ரயில்பெட்டிகள் நீருக்குள் விழுந்து கிடந்தன இல்லையா? அவற்றை வெளியே எடுக்க பலவாறாக முயன்றனர். உள்ளே இருபதுக்கும் மேற்பட்ட சடலங்கள் பெட்டிகளுக்கு அடியில் மாட்டிக்கொண்டிருந்தன. அந்த மனிதர்களின் உறவினர்கள் அவர்களை வெளியே எடுக்க விரும்பினார்கள். அவர்களுக்குரிய இறுதிச்சடங்குகள் அப்போதுதான் முறையாக செய்யமுடியும். ஆனால் பெட்டிகளை எடுப்பது மிகப்பெரிய செலவுள்ளதாக இருந்தது. நீருடன் அவை பல டன் எடைகொண்டவையாக ஆயின. அந்த எடையை தூக்குவதற்கு மிகப்பெரிய கிரேன்கள் தேவை. கொச்சி துறைமுகத்திலிருந்து கிரேன் நிபுணர்கள் வந்து பார்த்தனர். பாலத்தில் கிரேன் நிற்காது, அந்த எடையை தாங்காது. கரையில் சேற்றுப்பரப்பு, கிரேனை நிறுத்தமுடியாது. அதற்கு மிகப்பெரிய சிமிண்ட் மேடை ஒன்றைக் கட்டவேண்டும். அதவாது பத்தடி உயரமும் நாற்பது அடி நீளமும் இருபது அடி அகலமும் கொண்ட மேடை. அதை அங்கே நிறுத்தவேண்டும் என்றால் முப்பதடி ஆழத்தில் அஸ்திவாரம் அமைக்கவேண்டும். நடக்கிற காரியமா? அதோடு கிரேன்களை கழற்றி ரயிலில் தனித்தனி பகுதிகளாகக் கொண்டுவந்து இணைக்கவேண்டும். மொத்தச் செலவு சிலகோடிகள். அதற்கு ரயில்வேயிடம் பணமில்லை. அப்போதுதான் அர்விந்த் மாப்பிள்ளைக் கலாசிகளைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவர்களிடம் மிகமிகக் குறைவான செலவில் கடலுக்குள் மூழ்கிய பத்தேமாரிகளை வெளியே எடுக்கும் தொழில்நுட்பம் இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் அது சில பழைய பிரிட்டிஷ் பதிவுகளில் இருந்தது. கோழிக்கோட்டைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. கேரள இதழாளர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை. அது ஒரு தொன்மம்தான், இன்றைக்கு அப்படி எவரும் இல்லை என்றே சொன்னார்கள். ஆனால் அர்விந்துக்கு வெள்ளைக்காரர்கள் அப்படி காணாததைக் கண்டதாக எழுதமாட்டார்கள் என்று ஆழமான நம்பிக்கை. ஏனென்றால் 1872ல் ஒரு வெள்ளைக்காரன் எழுதிய டிஸ்டிரிக்ட் மானுவலில் அர்விந்தின் கொள்ளுத்தாத்தா சதானந்த் திரிபாதி அவத் நவாபுக்கு கூட்டிக்கொடுத்து அமைச்சரான தகவல் இருக்கிறது. அர்விந்த் தனிப்பட்டமுறையில் கிளம்பி வந்திருந்தான். மலையாளம் பேசுவதற்காக என்னை கூடவே வரும்படி அழைத்தான். எனக்கும் மங்களூரை விட்டு எங்காவது ஒழிந்தால் நல்லது என்ற எண்ணம் இருந்தது. நல்ல பச்சை மலையாளம் செவியில் விழவேண்டும். முடிந்தால் செம்மீன், சிப்பி, கொஞ்சு, நண்டு கறியுடன் குடிக்க வேண்டும். எங்காவது விழுந்து கிடந்து கம்யூனிசத்தை நல்ல நாலு வார்த்தை தெறி சொல்ல வேண்டும். ஆகவே நானும் கிளம்பிச் சென்றேன். கோழிக்கோட்டில் நாங்கள் ரயில்வே கெஸ்ட் ஹவுஸில் தங்கினோம். அங்கிருந்து பத்தேமாரிகளை தயாரிக்கும் இரண்டு இடங்களைச் சென்று பார்த்தோம். அதைப்பற்றி நான் விரிவாகச் சொல்லப்போவதில்லை. அது மாப்பிள்ளைகளும் உள்ளூர் ஆசாரிகளும் இணைந்து செய்யும் ஒரு பெரிய வேலை. ஒரு தொழிற்சாலை செய்யவேண்டிய வேலையை சாதாரண ஓலைக்கூரைபோட்டு இழைப்புளியும் கொட்டுவடியும் வைத்துக்கொண்டு லொட்டு லொட்டு என்று செய்துகொண்டிருப்பார்கள். பக்கத்தில் பாதிமுடிந்த பத்தேமாரி ‘எப்படா முடிப்பீங்க’ என்பதுபோல பரிதாபமாக நின்றிருக்கும். மாப்பிள்ளைகளிடம் ஒரு கணக்கு இருக்கிறது. ஆசாரிகளிடம் இன்னொரு கணக்கு இருக்கிறது. இருவரும் அதை பரிமாறிக்கொள்வதில்லை. கடைசியில் பூதம் எழுந்ததுபோல பத்தேமாரி முளைத்து வந்துவிடும். வெறும் மரம்தான் என்றாலும் ஏறத்தாழ முந்நூறு டன் எடைகொண்டது ஒரு சராசரி பத்தேமாரி. அதை பத்துபேர் கொண்ட மாப்ளாக்கூட்டம் உந்தி கடலுக்குள் ஏற்றிவிடுவார்கள். மணல்தரையில் தண்டவாளம் போல இரண்டு தடிகளை வைப்பார்கள். நன்றாக பாலீஷ் செய்யப்பட்ட தடிகள். அவற்றின்மேல் பத்தேமாரி ஏற்றப்படும். நெம்புகோல்கள் வடங்கள் பயன்படுத்தி உந்துவார்கள். அப்படியே வாத்துபோல சறுக்கி நீரில் இறங்கிவிடும். நீரிலிருந்தும் அதேபோல கன்றுக்குட்டியை அழைப்பதுபோல இழுத்து எடுத்துவிடுவார்கள். நாங்கள் சென்றபோது ஒரு மாபெரும் பத்தேமாரி கட்டப்பட்ட நிலையில் இருந்தது. அது கடலில் இறங்க ஓராண்டு ஆகும் என்றார்கள். எங்கள் தேவையைச் சொன்னோம். நாங்கள் சொன்னதுமே அவர்களின் கண்களில் எச்சரிக்கை எழுந்தது. ஏன் அந்த தயக்கம் என்று எனக்கு உடனே புரிந்தது. நான் வா என்று அரவிந்தை கூட்டிக்கொண்டு திரும்பிவிட்டேன். அங்கே சொல்லவேண்டியவர் சொல்லாமல் ஒன்றும் நகராது என்று எனக்குத்தெரியும். அங்கே தலைமை மாப்பிள்ளை யார் என்று விசாரித்தேன். ஹாஜி எம்.ஏ.அப்துல்லாவின் கட்டுப்பாட்டில்தான் அன்று கோழிக்கோடு இருந்தது. அவர் அரேபியாவில் இருந்து கோழிக்கோட்டுக்கு வந்த மாலிக் தினார் இப்னு அவர்களின் வம்சம் என்கிறார்கள். கோழிக்கோட்டின் மாபெரும் கடல்வீரர் குஞ்ஞாலி மரைக்காயரின் கொடிவழியை சேர்ந்தவர். மாலிக் தினார் இலவச ஆஸ்பத்திரி, மாலிக் தினார் பள்ளிக்கூடம் என்று ஏகப்பட்ட தர்மநிறுவனங்கள். அவர் நாற்பதாண்டுகளாக கோழிக்கோடு கடற்கரையின் உஸ்தாத். போப்பூர் முழுக்கமுழுக்க அவருடைய ஆட்சியில்தான் இருந்தது. துறைமுகத்திலும் அவருடன் எவரும் மோதுவதில்லை. அவருக்கு அரசியல் இல்லை. உள்ளூரில் எவருடனும் மோதல் இல்லை. ஆகவே அவர் இருப்பதே அவருடன் நாம் போய் முட்டிக்கொள்ளாதவரை தெரியாது. நான் மங்களூரில் நிஸாரை அழைத்து இங்கே எம்.ஏ.அப்துல்லாவுடன் எப்படிப் பேசுவது என்று கேட்டேன். அவர் கோழிக்கோட்டில் வக்கீல் அப்துல் ஷமீரை அறிமுகம் செய்தார். அவரே ஃபோனில் பேசியபின் நான் ஷமீரை சென்று பார்த்தேன். ஷமீர் வழியாக எம்.ஏ.அப்துல்லாவுடன் பேச ஏற்பாடாகியது. சாகிபின் கடலோர விருந்தினர் மாளிகையில் எங்களுக்கு ஒரு விருந்து அளிக்கப்பட்டது. இதோபார், நீ மாப்பிளைகளின் விருந்தைச் சாப்பிடாதவரை நீ விருந்தையே சாப்பிட்டதில்லை என்று பொருள். ஆனால் ஒன்று, முதலையின் பல்லும் ஓநாயின் வயிறும் இல்லாவிட்டால் கஷ்டம். எம்.ஏ. அப்துல்லா சாகிப், என்ன ஒரு தோற்றம்! செக்கச்சிவந்த நிறம். அடர்த்தியான தாடி, அதில் ஓரிரு வெள்ளிநரை. சதுரமுகம், கூர்மையான அராபிய மூக்கு. வரைந்ததுபோன்ற புருவங்கள். மலர்ந்த அழகான கண்கள். தொப்பை கிடையாது. நிமிர்ந்த உயரமான உடல். அவருக்கு சமானமான அழகன் என இன்னொரு ஆணை நான் பார்த்ததே இல்லை. மம்மூட்டிக்கு ஒரு பத்து மார்க் குறைத்தால் சேர்த்துக்கொள்ளலாம். எம்.ஏ.அப்துல்லா உரையாடல் நிபுணர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அன்றுதான் கண்டேன். அடுக்கடுக்காக மாப்பிள்ளை நகைச்சுவைகள். மாப்பிள்ளைப் பாட்டுக்கள். நான் ’மாப்பிளை ராமாயணத்’தை அப்போதுதான் முதல்முறையாகக் கேட்கிறேன். நீ கேட்டிருக்க மாட்டாய். கோழிக்கோடு மோயீன்குட்டி பாகவதர் இயற்றிய பகடிக் காவியம். முதல் காட்சியில் ராவணன் தன் இருபது கன்னங்களுக்கும் ஒவ்வொன்றாக செல்ஃப் ஷேவிங் செய்துகொள்கிறான். இன்னும் நிறைய இருக்கிறது. இந்த எழுத்தாள ஸ்வானன் வேண்டாம், இவன் தமிழில் எதையாவது எழுதிவிட்டால் மதக்கலவரம் ஆகிவிடும். பிறகு நானே சொல்கிறேன். சிரித்து உருண்ட நாள் அது. கடைசியில் எங்கள் கோரிக்கையை சாகிப் ஏற்றுக்கொண்டார். அவரே மாப்பிள்ளைக் கலாசிகளின் இரண்டு தலைவர்களை அழைத்து எங்களுக்கு அறிமுகம் செய்தார். தனியாக அமர்ந்து விரிவாகப் பேசினோம். மிகச்சாதாரணமாக “ரயில்பெட்டி தானே எடுத்து தருகிறோம்” என்றார்கள். அர்விந்த் வடக்கத்தி ஆள், ஜாக்கிரதையானவன். “எக்கச்சக்கமாக பணம் கேட்கப் போகிறார்கள் டூட், நான் ஓர் அளவுக்குமேல் கொடுக்கமுடியாது” என்று என்னிடம் ஆங்கிலத்தில் சொன்னான். “முப்பது லட்சம் வரை நான் போவேன்… அதற்குமேல் என்றால் வேண்டாம், சொல்லிவிட்டேன். பிறகு பிரச்சினை ஆகக்கூடாது.” நான் முதிய கலாசியிடம் “ரேட் என்ன உஸ்தாத்?” என்று நயமாகக் கேட்டேன். “பார்த்து சொல்லுங்கள். சர்க்காரிடம் பணம் குறைவு.” உஸ்தாத் சுருங்கிய முகம் மேலும் சுருங்க கண்ணைச் சுருக்கி, கைவிரல் ஓட்டி எண்ணி கணக்கிட்டு “பன்னிரண்டாயிரம் ரூபாய்… இதில் ஒரு பைசா குறையாது” என்று கறாராகச் சொல்லிவிட்டார். “ஆளுக்கா?” என்றேன். “இல்லை மொத்தம்!” என்றார் உஸ்தாத் “இதில் டீ காப்பி செலவு தனி…” நான் சொன்னபோது அர்விந்த் “பன்னிரண்டாயிரம் ரியாலா?” என்றான். “இல்லை டாலர். டேய், அவர்கள் ரூபாயையே அடிக்கடி கண்ணில் பார்ப்பதில்லை என நினைக்கிறேன்” என்றேன். “பதினான்கு பெட்டிகளும் அறுபதடி ஆழத்தில் சேற்றில் கிடக்கின்றன, தெரியுமே?” என்றான். “நான்குமுறை சொல்லிவிட்டேன், அவர்கள் புத்திசாலிகள். தெரிந்துதான் சொல்கிறார்கள்.” அர்விந்த் அப்போதே அட்வான்ஸ் கொடுத்துவிட்டான். திரும்பும்போது “டேய், நீ சரியாகச் சொன்னாயா? அவர்கள் கடைசியில் ரயில்பெட்டியா, எங்களிடம் தீப்பெட்டி என்றல்லவா சொன்னார்கள் என்று சொல்லிவிடப்போகிறார்கள்” என்றான். “இனிமேல் பேசினால் உன்மேல் பிராந்தியை ஊற்றி பற்றவைப்பேன்” என்றேன். அதன்பின் அவன் அடங்கினான். வடக்கத்தி பிராமணர்கள் மரணபயம் உடையவர்கள். ஏனென்றால் அவத் நவாபுகள் குரூரமானவர்கள். நான் அன்று ஏதோ ஓர் அமைதியின்மையை அடைந்தேன். நிலைகொள்ளமாலெயே இருந்தேன். நிறைய குடித்தேன். தூங்கி எழுந்தால் உள்ளம் அப்படியே சுருங்கி— “உன் வழக்கமான உவமை வேண்டாம். இது சின்னப்பிள்ளைகளும் இருக்கும் இடம்.” “சரி” என்றான் ஔசேப்பச்சன். கலாசிகள் அவர்கள் சொன்னபடி ரயில்பெட்டிகளை எடுத்துக் கொடுத்துவிட்டார்கள். அதைப்பற்றி நிறைய எழுதப்பட்டுவிட்டது. உலகமே திரும்பிப்பார்த்த நிகழ்வு அது. பிபிசி அதை ஆவணப்படுத்தியிருக்கிறது என நினைக்கிறேன். மாப்பிள்ளைகளிடம் எந்த நவீனக்கருவிகளும் இல்லை. அவர்களே கொண்டுவந்த தடிகளை ஊன்றிச் செய்த நெம்புகோல் அடிப்படை கொண்ட நாட்டுக் கிரேன்கள் இரண்டு. தோவர் என்று சொல்லப்படும் தண்டவாளம் போன்ற மரத்தாலான அமைப்பு. மரத்தாலான உருளைகள்.பலூக்கள் எனப்படும் உறுதியான புளிமரத்தடிகள். கற்றாழைநாரை பின்னி முறுக்கி உருவாக்கப்பட்ட கயிறுகள், அவ்வளவுதான். இவ்வளவுதான் அவர்களின் கருவிகள். அதை எப்படி அவர்கள் எடுத்தார்கள் என்று நான் விளக்கினால் உங்களுக்கு புரியாது. ஏனென்றால் நான் நேரில் சென்று கண்ணால் பார்த்தேன், எனக்கும் புரியவில்லை. நீரில் மூழ்கிச்சென்று வடங்களை ரயில்பெட்டிகளில் கட்டினார்கள். வடங்களை கரையில் நின்று இழுத்தார்கள். கரையில் அமர்ந்திருந்த உஸ்தாத் ஒரு மரப்பலகை முழவில் கழியால் அடித்து தாளம் எழுப்புவார். தாளத்திற்கு ஏற்ப அவர்கள் இழுப்பார்கள் அந்த வடம் கரையில் அறையப்பட்டிருந்த வெவ்வேறு தறிகளில் சுற்றிக் கட்டப்படும். இப்படி இஞ்ச் இஞ்சாக இழுப்பார்கள். அந்த கிரேனால் அரைக்கால் இஞ்ச் தூக்குவார்கள். மீண்டும் இழுப்பார்கள். கரையில் சில உருளைகளை வைத்து அவற்றில் கயிற்றை கட்டி சுழற்றுவார்கள். அதற்கெல்லாம் மிகக்கூர்மையான கணக்குகள் இருந்தன. கடைசியில் ரயில்பெட்டி அதுவே எழுந்து வருவதுபோல கரைநோக்கி வந்தது. உருளைமேல் அமர்ந்தது. அப்படியே இழுத்து கரையில் நிறுத்தினார்கள். அந்த உத்தி என்ன என்று சொல்கிறேன். டம்ப்ளர் நீருக்குள் கிடக்கிறது. நம்முடைய கிரேன்கள் தண்ணீருடன் அப்படியே தூக்குகின்றன. அவர்கள் அதை கீழேயே சரித்து நீரைக்கொட்டிவிட்டு தூக்குகிறார்கள். அதோடு மிகமெல்ல இஞ்ச் இஞ்சாக இது நடைபெறுகிறது. ஆகவே இழுவிசை ஆயிரக்கணக்கான யூனிட்டுகளாக உடைக்கப்படுகிறது. இருநூறு டன் எடைகொண்ட தூக்குவிசையை ஒருலட்சம் இழுப்புகளாக ஆக்கினால் ஒர் இழுப்பின் எடை என்ன?” “என்ன?” “நீயே சொல்.. நான் கணக்கில் வீக்” என்றான் ஔசேப்பச்சன். “சரி, அது போகட்டும். நம்முடைய வழக்கு என்ன ஆயிற்று?” அதற்குத்தான் வருகிறேன். பெருமண்ணில் இருக்கும்போது எனக்கு ஒரு வெளிச்சம் வந்தது. கடவுள் உருட்டியதை நான் பிடித்துக்கொண்டேன். அந்த பட்டுச்சரிகை நூல்! ஹாஜி எம்.ஏ.அப்துல்லா ஒரு துருக்கித் தொப்பி வைத்திருந்தார். தவிட்டுநிறத் தொப்பி. ஆனால் ஒருவகையான பொன்மினுப்பு கொண்டது. அந்த நூல் அதில் உள்ளதுதான். ஆதாரம் ஏதுமில்லை, ஆனால் ஓர் உள்ளுணர்வு. நான் எம்.ஏ.அப்துல்லா சாகிப் பற்றி தோண்டத் தொடங்கினேன். அவருடைய அன்றாட வாழ்க்கை, அவருடைய பழக்க வழக்கங்கள், அவருடைய ரசனை. அபாரமான மனிதர் அவர். மிக ஆசாரமான முஸ்லீம். கூடவே மிகப்பெரிய கலை ரசிகர். ஷாஜகான் சக்கரவர்த்தி அப்படித்தான் இருந்திருப்பார். கஸல் இசையில் பித்து கொண்டவர். மாதம் ஒரு உஸ்தாதாவது வட இந்தியாவிலிருந்து வந்து அவருடைய மாளிகையில் பாடுவார். கவிதை, இலக்கியம் எல்லாவற்றிலும் ஈடுபாடு. தகழி சிவசங்கரப்பிள்ளையின் நண்பர். வைக்கம் முகமது பஷீர் இவரை ‘மிஸ்டர் மே’ என்றுதான் அழைத்திருந்தார்.எம்.டி.வாசுதேவன் நாயரை இவர் வாடா போடா என அழைப்பார். சாகிப்பின் உடைகள் மும்பையில் தயாராகி வந்தன. மும்பை சுல்தான் அகமது பாஷா ஆண்ட் கம்பெனியில். நான் மும்பை சென்று அந்தக்கடையை பார்த்தேன். இஸ்லாமிய ஷெர்வானி, கமீஸ் வகையறாக்களுக்கு புகழ்பெற்ற கடை. அங்கேதான் சாகிபின் உடைகள் தைக்கப்பட்டன. அங்கே இருந்த உதவியாளர்களை பணம் கொடுத்து கவர்ந்து சாகிப் அணியும் துருக்கிபாணி தொப்பிகளில் ஒன்றை எடுத்து வந்தேன். அதை ஃபாரன்ஸிக் லேபில் கொடுத்து ஆராய்ந்தேன். பிணத்தின் கையில் இருந்த அந்த நூல் அதேபோன்ற துருக்கித்தொப்பியில் உள்ளதுதான். அது நீதிமன்றத்தில் நிற்கும் சாட்சியமெல்லாம் அல்ல. ஆனால் எனக்கு சந்தேகத்தை உறுதிசெய்ய போதுமானது. அந்தப்பையனுக்கும் எம்.ஏ.அப்துல்லா சாகிபுக்குமான உறவு என்ன? அதைமட்டும் இணைத்தாகவேண்டும். முதலில் ஒரு விஷயத்தை விசாரித்தேன். கிருஷ்ணன் இறந்த அன்று எம்.ஏ..அப்துல்லா எங்கிருந்தார்? அன்று அவர் கோழிக்கோட்டில் அவருடைய ஆஸ்பத்திரியின் வார்டு ஒன்றை திறக்க வந்திருந்த உள்ளூர் எம்.எல்.ஏ மற்றும் டி.எம்.ஓவுடன் இருந்தார். அதற்கு எல்லா சான்றுகளும் இருந்தன. சட்டென்று ஒருவாசல் மூடியது. சின்னச் சோர்வுதான். புலனாய்வில் இது ஒரு சிக்கல். ஒரு கற்பனையை நாம் ரொம்பவே வளர்த்துவிடுவோம். அது பலூன்போல உடைந்துவிடும். ஆனால் அதற்காக கற்பனையை வளர்க்காமலும் இருக்க முடியாது கற்பனை வழியாகவே நாம் பல ஊகங்களைச் சென்றடைகிறோம். அதில் ஒன்றுதான் உண்மையாக ஆகிறது. நான் அந்தச் சோர்வை உந்தி அகற்றிக் கொண்டேன். ரொசாரியோ வழக்கமாக அந்தச் சந்தர்ப்பத்தில் சொல்வார் ‘சரி, உண்மையான இடத்தை நோக்கிச் செல்வதற்கான இன்னொரு வாய்ப்பு கடவுளால் அளிக்கப்பட்டிருக்கிறது’ என்று. நான் அதை என் டைரியில் நாலைந்து முறை எழுதினேன். இனி எம்.ஏ.அப்துல்லாவின் பக்கமிருந்து விசாரணையை கொண்டுசெல்லவேண்டியதில்லை. மறுபக்கமிருந்து கொண்டுசெல்லலாம். அந்தப்பையனின் வாழ்க்கையின் எல்லா விஷயங்களையும் ஆராய்ந்தேன். கதை இப்போது முழுக்கமுழுக்க கோழிக்கோட்டுக்கு மாறிவிட்டது. கோழிக்கோட்டில் எனக்கு நெருக்கமானவர் இன்ஸ்பெக்டர் மாதவன்நாயர். அவருக்கு நான் பல உதவிகள் செய்திருக்கிறேன். அவர் எனக்கு தேடுவதற்கு சற்றே வழிவிட்டும் உதவிசெய்தார். கிருஷ்ணன் எம்ப்ராந்திரிக்கு கோழிக்கோடுக்கான தொடர்புகள் என்ன? ஒரு புள்ளியை மையப்படுத்தி தேடினால் தேடல் முடிவில்லாமல் பெருகும். ஆனால் ஒருபுள்ளியை இன்னொரு புள்ளியுடன் தொடர்புபடுத்தித் தேட ஆரம்பித்தால் தேடல் மிகமிக எல்லையுள்ளதாக ஆகிவிடுகிறது. இது புலனாய்வில் பெரிய மர்மம் உடைய பொன்விதி. கிருஷ்ணன் எம்பிராந்திரி என்று தேடினால் மிகப்பெரிய கோடு. கிருஷ்ணன் எம்பிராந்திரியும் கோழிக்கோடும் என்ற கோடு மிகச்சிறியது. அதன் எல்லா புள்ளிகளையும் எட்டே நாளில் தெளிவாக்கிக்கொண்டோம். கோழிக்கோடு வடகரைக்கு மிக அருகேதான். அடிக்கடி வந்துபோகும் இடம்தான். ஆனால் அவன் ஒரு பூசாரி. மிகச்சிறிய உலகில் வாழ்பவன். அவன் கோழிக்கோடுக்கு அடிக்கச் செல்வதில்லை. அவனுக்கு சினிமா பார்க்கும் வழக்கமெல்லாம் இல்லை. அவனுடைய கோயிலுக்கு வந்து செல்லும் வாய்ப்புள்ள ஊர்வட்டத்தில் ஒன்பது பேர் கோழிக்கோட்டுடன் நெருக்கமான தொடர்புள்ளவர்கள். அவர்களில் மூவர் ஆசிரியர்கள். ஒருவர் மாநில அரசின் ஊழியர். ஒருவர் பேக்கரியில் வேலைபார்க்கிறார். எஞ்சியவர்கள் பெட்டிக்கடைக்காரர்கள், கோழிக்கோடு சந்தைக்குச் செல்பவர்கள். அவர்களில் கோயிலுக்கு வருபவர்கள் எவர் என்று மேலும் குறுக்கினோம். எஞ்சியவர் ராதாமணி. அவர் கோழிக்கோட்டுக்கு வெளியே ஏலத்தூர் என்னும் ஊரில் ஆசிரியை. அங்கே அவருடைய கணவருடனும் ஒரு குழந்தையுடனும் வசிக்கிறார். அவருடைய சொந்த ஊர் வடகரைதான். ஊருக்கு வந்தால் அவர் பகவதி கோயிலுக்கு வந்து வழிபட்டு போகும் வழக்கம் உண்டு. அதெல்லாமே எந்த அர்த்தமும் இல்லாத தேடல்கள்தான். சொல்லப்போனால் நான் ராதாமணியைச் விசாரிக்க பதினைந்துநாள் ஆர்வமே காட்டவில்லை. அதில் ஒன்றும் தேறாது என்று தோன்றியிருந்தது. ஆனால் ராதாமணியின் கருப்புவெள்ளை புகைப்படத்தை மாதவன்நாயர் அனுப்பிய ஃபைலில் பார்த்தேன். ஒருகணம்தான், என் மூளை பற்றி எரியத் தொடங்கிவிட்டது. இத்தகைய வழக்குகளை நான் நிறையவே பார்த்திருக்கிறேன். நடுத்தரச் சூழலில், ஏழைக்குடும்பத்தில் சிலசமயம் பேரழகிகள் பிறந்துவிடுவார்கள். நம்பவேமுடியாத அளவுக்கு பேரழகிகள். அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையே அமையமுடியாது. அவர்கள் மிகமிக ஆற்றல் கொண்ட எவருக்காவது ஆசைமனைவியாகவேண்டும், அவனுடைய சந்தேகத்தையும் சித்திரவதையையும் தாங்கிக்கொண்டு வாழ்ந்து மடியவேண்டும். இல்லாவிட்டால் செல்வாக்கானவர்களால் வேட்டையாடப்பட்டு சீரழியவேண்டும். முச்சந்தியில் கிடக்கும் செத்த எலிபோல. எல்லா காக்காயும் கொத்திக்கிழிக்கும். நான் ராதாமணியை அழைத்துவரச்செய்தேன். வந்தபோதே அவள் கலங்கியிருந்தாள். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக நான் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்குச் சென்று அவருடைய அறையில் அமர்ந்திருந்தேன். கல்வி அலுவலரின் பியூனை ராதாமணியின் பள்ளிக்கு அனுப்பி அவளை வரச்சொன்னேன். பியூனுக்கு நான் போலீஸ் என்று தெரியாது. ஆனால் ஆனால் அவள் எப்படியோ ஊகித்துவிட்டாள். அவள் அதை எதிர்பார்த்திருந்திருக்கலாம். அவள் உள்ளே நுழைந்தபோது நான் மூச்சை இழுத்துவிட்டேன். என் பார்வையை அலைமோதாமல் வைத்துக்கொள்ள மிகவும் கஷ்டப்பட்டேன். அவளை பேரழகி என்று எப்படிச் சொல்கிறேன்? இதோபார், இந்த மேற்குக் கடற்கரை என்பது இனக்கலவையின் சோதனைச்சாலை. உலகமெங்கும் வெவ்வேறு இனங்கள் கலந்த இடங்களில்தான் பேரழகிகள் உருவாகியிருக்கிறார்கள். உதாரணமாக இத்தாலி. அது ஆசிய ஐரோப்பிய இனங்களின் கலவை நிகழ்ந்த நிலம். லத்தீன் அமெரிக்கா இன்னொரு உதாரணம். அரேபியா அதற்கும் முன்பே வெள்ளை ஆரிய இனமும் காப்டிக் கறுப்பினமும் கலந்து உருவானது. காக்டெயிலே இனியது என்று பிரெஞ்சுக்காரன் சும்மாவா சொல்கிறான். அவன்கள் ரசிகன்கள்! மேற்குக் கடற்கரையில் அரேபியர், போர்ச்சுக்கீசியர் வந்திருக்கிறார்கள். ஆகவே அற்புதமான கலவைகள் இங்கே நிகழ்ந்துள்ளன. இங்குள்ள எல்லா சாதிகளிலும் எல்லா மதங்களிலும் இனக்கலவை அடையாளங்கள் உண்டு. நீலக்கண்கள் சாதாரணம். கொங்கணிபிராமணர்கள், மாத்வ பிராமணர்கள், இஸ்லாமியர்கள், நாயர்கள், நம்பியார்கள் எல்லாருமே கலவைக்குருதி கொண்டவர்கள்தான். உண்மையில் சாதிப்படிநிலை கீழே செல்லச்செல்ல கலவை குறைந்து அழகும் குறையும். ராதாமணி எப்படி இருந்தாள்? சற்றே குண்டான ஐஸ்வரியா ராய், போதுமா? வந்து அமர்ந்ததுமே நடுங்கிக்கொண்டிருந்தாள். “சொல்” என்று கூர்மையாகச் சொன்னேன். கைகூப்பினாள். “எனக்கு எல்லாமே தெரியும். எனக்குத் தேவை உன்னுடைய தரப்பு என்ன என்பது மட்டும்தான், சொல்” என்றேன். அவள் விம்மி அழுதாள். அழுது முடிக்கும்வரை காத்திருந்தேன். ஆனால் நீண்டநேரம் விசும்ப விட்டுவிடக்கூடாது, அப்போது யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். நான் மீண்டும் கூர்மையாக “சொல்” என்றேன். அவள் விசும்பிக்கொண்டே இருந்தாள். ஓர் அதிர்ச்சி இல்லாமல் தொடங்க மாட்டாள். நான் உரக்க “கிருஷ்ணனை கொலைசெய்தது நீயா உன் கணவனா?” என்றேன். அவள் திடுக்கிட்டு “இல்லை சார்! இல்லை சார்!” என்றாள். “எங்களுக்கு ஒன்றுமே தெரியாது சார். அவன் ஏன் மங்களூர் போனான் என்றே தெரியாது சார்.” “அவனைத் தெரியும் இல்லையா?” “ஆமாம் சார், தெரியும்.” ‘‘சொல்.” “அவனிடம் நான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன் சார். அவன் என் தம்பி போல…ஊரில் இருக்கும்போது அடிக்கடி கோயிலுக்குப் போவேன். அவன் அன்பாகப் பேசுவான். முதிர்ச்சியாக ஆலோசனைகள் சொல்வான். ஆகவே அவனிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்.” “என்ன சொன்னாய்?” “அந்த தொல்லைகளைப் பற்றி.” “யாருடைய தொல்லைகள்?” அவள் பேசாமல் நின்றாள். “சொல்.” அவள் உதடுகளை கடித்துக்கொண்டாள். “எல்லாம் எனக்கு தெரியும். உன் வாயால் வரவேண்டும். சொன்னால் உன்னை விட்டுவிடுவேன். இல்லாவிட்டால் ஜெயில்தான்.” “சொல்லமுடியாது சார். நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள்… எனக்கு எந்தப் பின்னணியும் இல்லை.” “நீ யாரை பயப்படுகிறாய் என்று தெரியும். நீ கோர்ட்டில் வந்து சாட்சி சொல்லவேண்டியதில்லை. நீ இங்கே என்னிடம் என்ன சொன்னாய் என்று நான் எங்கும் பதிவும் செய்யமாட்டேன். உன்னிடம் எவர் கேட்டாலும் நீ ஒன்றுமே சொல்லவில்லை என்று சொல்லிவிட்டால் போதும். உனக்கு ஒன்றுமே தெரியவில்லை என்றுதான் சொன்னாய் என்று சொல்லிவிடு.” “அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.” “அதை தவிர்க்கத்தான் நான் வழி சொல்கிறேன். ஆனால் என்னிடமிருந்து நீ தப்பமுடியாது. உடனே உன்னையும் உன் கணவனையும் கைதுசெய்வேன்.பேப்பரில் செய்தி வரும்.” “நான் ஒன்றுமே செய்யவில்லை சார்.” “அதை நான் உறுதிப்படுத்தவேண்டும் என்றால் நீ உண்மையைச் சொல்லவேண்டும்… நீ உண்மையைச் சொன்னால் உனக்கு போலீஸின் பாதுகாப்பாவது உண்டு. சொல்லாவிட்டால் போலீஸும் எதிரி, அவர்களும் உன்னை பாதுகாக்கமாட்டார்கள்.” “சார்!” என்று சொல்லி மீண்டும் அழுதாள். நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். திரும்பத்திரும்ப. அது ஒரு வழிமுறை. ஒருபக்கம் ஒரு வழியை திறந்து காட்டுவது. மற்ற எல்லா வழிகளையும் தர்க்கபூர்வமாக மூடிக்கொண்டே இருப்பது. அவள் வந்துதான் ஆகவேண்டும். ஆனால் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். நிறைய சொற்கள் உதவியானவை. அவை கேட்பவரின் மூளையை சலிப்படையச் செய்கின்றன. அவள் சிந்திக்கமுடியாமலாக்குகின்றன. நான் சொல்லிச்சொல்லி முடிக்காமலேயே சென்றுகொண்டிருக்க அவள் மூச்சு இரைக்க முனகி நிமிர்ந்தாள். “சொல்” என்றேன். “அவன் என் பின்னால் வந்தான் சார்.” “யார்?” “அவன், ஹாஜி எம்.ஏ.. அப்துல்லாவின் மகன்.” “அவன் பெயர் என்ன?” “ஹாஷிம் என்று நினைக்கிறேன்…” “முகமது ஹாஷிம்.. ” “ஆமாம்.” “சொல்.” “அவன் என்னை ஒருமுறை சாலையில் பார்த்துவிட்டான். அதன்பின் என் பின்னால் வருவான்… என் பின்னால் அவனுடைய பெரிய கருப்பு கார் வந்துகொண்டிருக்கும். அவன் பைக்கில் என் வீட்டுக்கு முன் வந்து நின்று என்னைப் பார்ப்பான். என் பள்ளிக்கூட வாசலுக்கு வந்து காத்து நிற்பான்.” “சொல்.” “அவனுடைய வேலைக்காரன் ஒருவன் என்னிடம் வந்து அவன் என்னை விரும்புவதாகச் சொன்னான். அவன் பெயர் அப்துல் அஸீஸ். நான் ஹாஷிமுடன் அவர்களுடைய கடலோர பங்களாவுக்குச் சென்று ஒருநாள் தங்கமுடியுமா என்று கேட்டான். ஒருலட்சம் ரூபாய் தருகிறேன் என்றான் நான் காறித்துப்பி திட்டி அனுப்பினேன்.” “ம்.” “அதன்பிறகும் அவன் வந்து பேசினான். விடவே இல்லை. மீண்டும் மீண்டும் பேசினான். எத்தனை திட்டினாலும் அவனுக்கு பொருட்டே இல்லை. நிறைய பணம் தருகிறேன் என்றான். பதினைந்து லட்சம் வரை சொன்னான். ” “பதினைந்து லட்சம்?” என்னால் அப்போது இவளுக்கென்ன கிறுக்கா என்றுதான் நினைக்கத் தோன்றியது. ஏனென்றால் நாங்கள் நஸ்ரானிகள் பிஸினஸ்காரர்கள். “ஆமாம். வீடுவாங்கி தருகிறேன், எஸ்டேட் எழுதித்தருகிறேன் என்று அசீஸ் சொன்னான். வைரநகைகளை கொண்டுவந்து காட்டினான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பலநாட்கள் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் இருந்தேன். அசீஸ் என் வீட்டுக்கே வந்தான். கணவனை விட்டுவிட்டு வந்தால் ராணிமாதிரி இருக்கலாம் என்றன். மங்களூரிலோ மும்பையிலோ பெரிய வீடும் காரும் தருவதாகச் சொன்னான்.” “ஓக்கே.” “கடைசியில் அந்தப் பையனே நேரில் வந்தான்.” “ஹாஷிம்?” “ஆமாம், என்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்றான். அவனுக்கு என்னைவிட நான்கு வயது குறைவு. திருமணம் ஆகவில்லை. என்னை மதம் மாற்றி அதிகாரபூர்வ மனைவியாகவே ஆக்கிக்கொள்கிறேன் என்று சொன்னான். அவனுடைய அப்பா அம்மா அண்ணாக்கள் எல்லாரையுமே சமாதானம் செய்து ஒப்புக்கொள்ள வைப்பேன் என்றான்.” “நீ என்ன சொன்னாய்?” “அவன் காலில் விழுந்து அழுதேன். என்னை விட்டுவிடும்படி கெஞ்சினேன்.” “அவன் மிரட்டினானா?” “இல்லை அவனும் அழுதான். என்னை மறக்கவே முடியவில்லை என்றான். என்னை அடையாவிட்டால் செத்துவிடுவேன் என்றான்.” “நீ என்ன சொன்னாய்?” “அவனை திட்டி வெளியேபோ நாயே என்று சொன்னேன். இல்லை இல்லை என்று கூவியபடி அவன் என்னை பிடிக்கவந்தான். பலவந்தம் செய்வதற்காக அல்ல.அழுதபடி பிடிக்க வந்தான். நான் வெறிகொண்டு அவனை பிடித்து தள்ளினேன். மலலந்து விழுந்தான். கையிலிருந்த எல்லாவற்றையும் எடுத்து அவன்மேல் வீசினேன்.அவன் எழுந்து வெளியே சென்றான். அவன் போனபிறகும் நான் வெறியுடன் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தேன். அதன்பிறகு அமர்ந்து அழுதேன்.” “பிறகு?” “அதன்பிறகு அறையைப் பார்த்தேன். ஒரே உடைசல்களாக கிடந்தது. எல்லாவற்றையும் எடுத்து அடுக்கினேன். அப்போதுபார்த்தால் ஒரு தொப்பி கிடந்தது. அவனுடைய தொப்பி.”. நான் எழுந்துவிடப்பார்த்தேன். “துருக்கித் தொப்பியா? ”என்றேன். புகைப்படத்தைக் காட்டி “இதேபோன்றதா?” என்றேன். “ஆமாம்” நான் ஒருகணம் என்னையே எண்ணி சலித்துவிட்டேன். என்ன முட்டாள்தனம். எம்.ஏ.அப்துல்லா சாகிபின் மகன்களும் அதே தொப்பிதான் போடுகிறார்கள் போலும். அதை நான் எண்ணிப் பார்க்கவே இல்லை. “அந்த தொப்பி எங்கே?” “அதை எடுத்து வெளியே போடலாம் என்று நினைத்தேன். ஆனால் எவருக்காவது தெரிந்துவிடும் என்று தோன்றியது. ஆகவே எடுத்து சமையலறையில் ஒரு பெட்டிக்குள் போட்டு வைத்தேன்.” “பிறகு என்ன சொன்னாய்?” “உடம்பு சரியில்லை, அம்மாவைப் பார்க்கப்போகிறேன் என்று ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு வடகரைக்குச் சென்றுவிட்டேன். ஆறுநாட்கள் அங்கேயே இருந்தேன். ” “அப்போது கிருஷ்ணனைப் பார்த்தாய் இல்லையா?” “ஆமாம், அவனிடம் ஏற்கனவே இந்த தொந்தரவைப் பற்றிச் சொல்லியிருந்தேன். என் கணவரிடம் சொல்லலாமா என்று கேட்டேன். சொல்லவேண்டாம், சொன்னால் அவர் உன்மேலும் சந்தேகப்பட வாய்ப்புண்டு என்றான். அது உண்மை, என் கணவர் எப்போதும் என்னை சந்தேகப்படுபவர். ஆண்கள் யாராவது என்னிடம் பேசினாலே வீட்டுக்கு வந்து அடிப்பார். வயதானவர்கள் பேசினால்கூட…” “அன்று நடந்ததை கிருஷ்ணனிடம் விரிவாகச் சொன்னாய் இல்லையா?” “ஆமாம்.” “அதன்பிறகு?” “திரும்பி வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்தபோது கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன்.” “ஹாஷிமிடமிருந்து ஏதாவது தொந்தரவு வந்ததா?” “இல்லை… எந்தத் தொந்தரவும் இல்லை. நான் அவன் ஏதாவது செய்வான் என்று ஒருவாரம் எதிர்பார்த்தேன். வீட்டிலேயே இருந்தேன். அவன் வரவில்லை. அதன்பின் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தேன் இன்னொரு வாரம் கடந்தபின் எல்லாம் சரியானதுபோல இருந்தது.” “அப்போது கிருஷ்ணன் வந்தான்?” “ஆமாம்.” “என்ன சொன்னான்?” “மும்பைக்குப் போவதாகவும், அங்கே வேலைதேடப்போவதாகவும் சொன்னான்.” “அவனுக்கு இங்கே ஒன்றரை லட்சம்ரூபாய் வரை கடன் இருக்கிறது, தெரியுமா?” என்றேன். “தெரியும்” என்றாள். “அவனுக்கு அங்கே சம்பளமே இல்லை. குடும்பத்தை நடத்தவே வழியில்லை. அவ்வப்போது என்னிடமும் கடன் வாங்கியிருக்கிறான்… கடன் தாளமுடியாமல்தான் ஊரைவிட்டுச் சென்றான். கடன்காரர்கள் அவனை கடுமையாக மிரட்டினார்கள். ஒருநாள்கூட ஊரில் இருக்கமுடியாத நிலை.வீட்டுப்பத்திரம் இன்னொருவரிடம் இருந்தது. அறுபதாயிரம் கடன்கொடுத்த ஒருவர் வட்டியோரு எண்பதாயிரம் ரூபாய் கொடுக்கவில்லை என்றால் வீட்டுக்கு வந்து முற்றத்தில் இழுத்து போட்டு அடிப்பேன், வேட்டியை உருவிவிடுவேன் என்றெல்லாம் மிரட்டினார். ஆகவேதான் அவன் பயந்து கிளம்பினான்.” “உன்னிடம் பணம் கேட்டான் இல்லையா?” “ஆமாம். ஆனால் என்னிடம் பணம் இல்லை. என் நகை ஒன்றுகூட கையில் இல்லை. என் கணவர் எல்லாவற்றையும் கோ-ஆப்பரேட்டிவ் பேங்கில் முந்தைய மாதம்தான் அடகுவைத்திருந்தார். வீடுகட்ட ஒரு சிறிய நிலம் வாங்க திட்டமிருந்தது. என்னிடம் அறுபது ரூபாய் மட்டும்தான் இருந்தது. அது மட்டும்தான் இருக்கிறது என்றேன். அவனிடம் வெறும் எட்டுரூபாய்தான் இருந்தது.” “பிறகு?” “அவன் அழுதான். என்ன செய்வது எங்கே செல்வது என்றே தெரியவில்லை என்றான். நானும் அழுதேன். பிறகு அவன் திடீரென்று என்னிடம் அந்த துருக்கித் தொப்பி உன்னிடமிருக்கிறது இல்லையா, அதைத் தா என்று கேட்டான்.” “நீ கொடுத்தாயா?” “ஆமாம்.” நான் பெருமூச்சுவிட்டேன். “தொப்பியை வாங்கி பையில் வைத்துக்கொண்டு அவன் கிளம்பிவிட்டான்.” “அந்த தொப்பியை வைத்து அவன் என்ன செய்வதாக இருந்தான் என்று உனக்கு தெரியுமா?” “அப்போது தெரியவில்லை, பிறகு தெரிந்தது.” “என்ன?” அவள் உதடுகளை கடித்துக்கொண்டு அமைதியாக இருந்தாள். “சொல்.” “அவன் ஹாஷிமை மிரட்டுவதற்காகச் சென்றிருக்கலாம்.” “ஹாஷிமை அவன் சந்தித்தானா?” “தெரியாது.” “ஹாஷிம் பிறகு உன்னை சந்தித்தானா?” “இல்லை.” “அவன் ஹாஷிமை சந்தித்தால் அவன் பையில் அந்த தொப்பி எப்படி இருந்திருக்கமுடியும்? அவன் அந்த தொப்பியுடன் மங்களூர் வரைச் சென்றிருக்கிறான்.” “எனக்கு தெரியாது.” “சரி, நீ போகலாம்.” “சார், எனக்கு ஒன்றும் ஆகாதே? எனக்கு குழந்தை இருக்கிறது.” “ஒன்றும் ஆகாது.” அவள் மேலும் ஒருகணம் தயங்கி “சார்” என்றாள். “சொல்.” “அவன் கிருஷ்ணனைக் கொன்றிருக்கமாட்டான்” என்றாள். “யார்?” “ஹாஷிம்.” “ஏன் சொல்கிறாய்?” “சார், அவனும் நல்ல பையன்தான். அடம்பிடிக்கும் சின்னக்குழந்தை என்றுதான் தோன்றியது. பெரும் பணக்காரவீட்டுக் குழந்தை. நினைத்ததை எல்லாம் அடைந்தவன். அவனுக்கு இன்னொருவரின் மனநிலை புரியவில்லை. இன்னொருவரின் வாழ்க்கைச் சூழ்நிலையும் தெரியாது. ஆனால் அவன் சின்னக்குழந்தை.” “சின்னக்குழந்தைகள் கொலைசெய்யும்… பார்த்ததில்லையா? சிறிய பூச்சிகளை..” அவள் கண்களில் கண்ணீர் வந்ததைக் கண்டேன் “ஹாஷிமுக்கு கிருஷ்ணன் ஒரு சின்ன பூச்சிதான்” என்றேன். “இல்லைசார், எனக்குத்தெரியும்…” நான் அவள் கண்களைப் பார்த்தேன். “அவன் மேல் அனுதாபம் இருக்கிறதா?” என்றேன். அவள் என் கண்களை நேருக்குநேர் பார்த்தாள் முற்றிலும் வேறு ஒருத்தியாகத் தெரிந்தாள். “ஆமாம்” என்றாள். “இல்லை காதலா?” “தெரியவில்லை… ஆனால் அவன் கண்களில் இருந்தது என்மேல் அவன் கொண்ட பிரியம்… அப்படி ஒரு பிரியத்தை நான் எவரிடமும் பார்த்ததே இல்லை… எல்லாரும் மாமிசத்தைப் பார்க்கும் நாய் போலத்தான் என்னைப் பார்ப்பார்கள்.” நான் புன்னகைத்தேன். “அவன் கொல்லமாட்டான் சார்.” “அவன் உன்மேல் கொண்டிருந்தது தூய்மையான காதல் என்றால் அதற்காக அவன் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாமே?” “ஆமாம், என் வீட்டு வாசலில் வந்து நிற்கலாம். எனக்காக தற்கொலைகூடச் செய்துகொள்ளலாம். ஆனால் அவன் என்னை கவரமுயன்றதை மட்டும் ஒளிக்கமாட்டான். அதைவைத்து மிரட்டுபவனைக் கொல்லமாட்டான்.” “நீ ஹாஷிமை எதிர்பார்க்கிறாயா?” அவள் கண்கள்! தோழர்களே, கதையெழுதும் பாதிமலையாளிப் பாண்டியே, ஒன்று தெரிந்துகொள். சிலசமயங்களில் மனித மனதை நேருக்குநேராகப் பார்த்து நாம் நடுங்கிவிடுவோம். அவள் உறுதியான குரலில் சொன்னாள். “ஆமாம், என் வாழ்க்கையில் நான் எனக்கு மட்டுமான இனிமையாக நினைப்பது அதை மட்டும்தான். என் மரணநாள் வரை அவனை நினைத்திருப்பேன்.” அவள் சென்றபின் என்னால் நெடுநேரம் ஒன்றுமே தோன்றவில்லை. ஏதேதோ எண்ணியபடி அமர்ந்திருதேன். மேற்கொண்டு என்ன செய்வது? கிருஷ்ணன் சென்று ஹாஷிமை பிளாக்மெயில் செய்தானா? பணம் வாங்கினான் என்றால் அந்த தொப்பி எப்படி அவனிடமிருந்தது? பணம் வாங்கவில்லை என்றால் எதற்காக மங்களூர் சென்றான்? எப்படி மேற்கொண்டு விசாரிப்பது என்று தெரியவில்லை. ஒருநாள் முழுக்க கோழிக்கோட்டில் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். கடைசியாக ஒன்று தோன்றியது, எம்.ஏ.அப்துல்லாவிடமே நேரில் கேட்பதுதான் சரி. எந்நிலையிலும் அவர் பொய்சொல்பவர் அல்ல. அவருடைய சிரிக்கும் முகம் நினைவுக்கு வந்தது. அழகன் என்று அந்நிலையிலும் என் மனம் மலர்ந்தது. வக்கீல் அப்துல் ஷமீர் வழியாக எம்.ஏ.அப்துல்லா சாகிபை தனியாகச் சந்திக்கவேண்டும் என்று செய்தி அனுப்பினேன். ஒரு கேஸ் விஷயமாக என்றும் தெரிவித்திருந்தேன். அவர் வரச்சொல்வதாக அப்துல் ஷமீர் சொன்னார். சாகிபின் உதவியாளர் அப்துல் காதர் வந்து என்னை கூட்டிச்சென்றான். இம்முறை அவரை கடலுக்குள் நின்றிருந்த பெரிய ஆடம்பரப் படகில் சந்தித்தேன். அவர் அங்கே வேறு ஒரு சந்திப்பை முடித்துவிட்டு எனக்காக காத்திருந்ந்தார். முகம் மலர இருகைகளையும் விரித்தபடி வந்து என்னை ஆரத்தழுவி வரவேற்றார். முகமன்கள் சொல்லி அமரச்செய்தார். வழக்கமான நலம்விசாரிப்புகள். நான் கேஸ் விஷயமாக சந்திக்க வந்திருப்பதாக முன்னரே சொல்லியிருந்தேன். அது கிருஷ்ணன் விவகாரம் என்றும் அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அவர் முகத்தில் எந்த மாறுபாடும் இல்லை. அதே அழகான சிரிப்பு. துல்லியமான வெண்பற்கள். மெல்லிய பனிப்படலம் போன்ற கண்ணாடி. நான் விஷயத்துக்கு சென்றேன். “சாகிப், நான் ஒரு கேஸை விசாரிக்க வந்திருக்கிறேன். ஒரு கொலைக்கேஸ். அது நீங்கள் செய்த கொலை என்றால்கூட மறைக்கமாட்டீர்கள் என்று தெரியும்.” “ஆம், என் வாழ்நாளில் நான் எவரிடமும் எதையும் மறைத்ததில்லை” என்று சாகிப் சொன்னார். “சாகிப், கிருஷ்ணன் எம்பிராந்திரி என்று ஓர் இளைஞன் மங்களூரில் கொல்லப்பட்டு கிடந்தான். அவனை நீங்களோ உங்கள் ஆட்களோ கொன்றீர்களா?” “இல்லை” என்றார் சாகிப். “சரி, நீங்கள் அவனைச் சந்தித்தீர்களா?” “ஆமாம்” என்று அவர் அதே புன்னகையுடன் சொன்னார். “எங்கே? எப்போது என்று நான் அறிந்துகொள்ளலாமா?” “அவன் இறந்த தேதி என்ன சென்ற ஆண்டு ஜூலை 19 அல்லவா?” “ஆமாம்.” “அதற்குநான்குநாட்களுக்கு முன் ஜூலை 15 ஆம் தேதி அவனை நான் சந்தித்தேன்.” “அதாவது அவன் வடகரையில் இருந்து கிளம்பிய மறுநாள்.” “ஆமாம்.” “எப்படிச் சந்தித்தீர்கள்?” “அவன் என் மகனை தேடி என் வீட்டுக்கே வந்தான். சாதாரணமாக அப்படி எவரும் அங்கே வரமாட்டார்கள். அவன் பிராமணன், ஆகவே எதற்கும் அவன் பயப்படவேண்டியதில்லை என்று அறிந்திருந்தான். என் உதவியாளர் ஹாஜி முஸ்தபா அங்கிருந்தார். அவன் ஹாஷிமைச் சந்திக்கமுடியாது என்று அவர் சொன்னபோது அப்படியென்றால் சாகிபை சந்திக்கிறேன் என்றான். அவருக்கு அவன் என்ன கிறுக்கனா என்று சந்தேகம். அப்படி அவரைச் சந்திக்கமுடியாது என்று முஸ்தபா சொன்னார். அவன் உரக்க என்னை இப்போது சந்திக்கவில்லை என்றால் நாளை அவர்கள் இருவரும் போலீஸை சந்திக்கவேண்டியிருக்கும் என்றான்.” நான் புன்னகைத்தேன். அவரும் புன்னகைத்து “முஸ்தபா எனக்கு ஃபோன் செய்து சொன்னார். அவனை என்னிடம் அனுப்பும்படிச் சொன்னேன். அவர் ஏதோ குழம்பிப்போன பிராமணர் என்று தெரிந்திருந்தது. சமாதானம் செய்து அனுப்பலாம் என்று நினைத்தேன்.” “குழம்பிப்போன பிராமணனேதான்.” “அவர் வந்ததுமே என்னிடம் உரக்க பேச தொடங்கினார். என்னை மிரட்டவேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவருக்குப் பழக்கமில்லை. ஆகவே கூச்சலிட்டார். அத்துடன் அவர் மிகவும் அரண்டிருந்தார். அவரால் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. என் மகன் ஹாஷிம் ஒரு சாதாரணப் பெண்ணை கெடுக்க முயன்றதாகவும், அவள் அவனை அடித்துத் துரத்திவிட்டதாகவும், அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் சொன்னார். இந்துப்பெண்களை முஸ்லீம்கள் கெடுப்பதை வெளியே சொன்னால் கலவரம் உருவாகும் என்றார்.” அவர் மிக இயல்பான முகத்துடன் உணர்ச்சிகள் இல்லாமல் அதைச் சொல்லிக்கொண்டிருந்தார். எவருடைய கதையையோ சொல்பவர் போல. “நான் அவரை அமரும்படிச் சொன்னேன். என்ன பிரச்சினை என்று கேட்டேன். அவர் மீண்டும் என்னையும் என் மகனையும் ஜெயிலுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டினார். விஷயத்தைச் சொல்லுங்கள் திருமேனி என்றேன். அதற்குப்பிறகுதான் அவர் கொஞ்சம் நிதானமடைந்து ராதாமணியை ஹாஷிம் பின் தொடர்ந்து சென்றதையும் மிரட்டியதையும் சொன்னார். கடைசியில் வீட்டுக்குள் சென்றே பலாத்காரம் செய்ய முயன்றதாகச் சொன்னார்.” நான் அவர் முகத்தை பார்த்திருந்தேன். அதே புன்னகை, அதே தெளிந்த விழிகள். எத்தனை உறுதியான நரம்புகள் என்ற வியப்பே எனக்கு ஏற்பட்டது. தலைமுறை தலைமுறையாக தீயும் ரத்தமும் கண்ணீரும் கண்டவர்களுக்கு உரியவை. “நான் அவரிடம் பொறுத்திருக்கும்படிச் சொன்னேன். எழுது மாளிமையின் பின்பக்க அறைக்குச் சென்று ஹாஷிமின் வேலைக்காரன் அஸீசை அழைத்து வரச்சொன்னேன். அவன் வந்ததும் அவனிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். அவன் நடுங்கினான். என்னிடம் எதையும் எவரும் மறைக்கமுடியாது என்று அவனுக்குத் தெரியும். ராதாமணியை ஹாஷிம் பின்தொடர்ந்ததும் கவரமுயன்றதும் உண்மைதான் என்றான். ஆனால் பலாத்காரம் செய்ய முயலவில்லை, உண்மையிலேயே அவன் அவள்மேல் பித்தாக இருக்கிறான். அவளை எப்படியாவது அடையவேண்டும் என்று நினைக்கிறான். அவளை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கனவுகாண்கிறான் என்று சொன்னான்.” “நான் ஒன்றுமட்டும் கேட்டேன், அந்தப்பெண் என்ன சொல்கிறாள் என்று. அவள் ஹாஷிமை விரும்பவில்லை, தன்னை தன் கணவனுடன் வாழ விடும்படி கெஞ்சி அழுதாள் என்றான். சரி போ என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டு கிருஷ்ணன் எம்பிராந்திரி இருந்த அறைக்கு வந்தேன்” என்று சாகிப் தொடர்ந்தார். “கிருஷ்ணன் எம்பிராந்திரி பதற்றத்தில் இருந்தார். அவரால் அந்த தருணத்தின் அழுத்தத்தைக் கையாள முடியவில்லை. அறைக்குள் எழுந்து நின்று சுற்றிக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் ஓடிவந்து விசாரித்தீர்கள் அல்லவா? நான் சொல்வது உண்மைதான் அல்லவா? என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்றார்”. நான் அவரை மீண்டும் அமரச்செய்தேன். ’சரி, இனி என் மகன் எந்த தொந்தரவும் செய்யமாட்டான்’ என்றேன். ’ஆனால் செய்த தொந்தரவுக்கு என்ன பதில்?’ என்று கிருஷ்ணன் எம்பிராந்திரி கூவினார். அ’வளிடம் அவன் மோசமாக நடந்தான், பலாத்காரம் செய்ய முயன்றான். இதுதான் புகழ்பெற்ற மாலிக் தினார் வம்சத்தின் குணமா? ஏழைப்பெண்களை துரத்தி கற்பழிப்பதா குஞ்ஞாலி மரைக்காயரின் வழிவந்தவர்களின் வேலை? ஹாஜி எம்.ஏ. அப்துல்லா சாகிப் என்றால் நெறிதவறாத தெய்வம் என்று சொல்கிறார்களே இதுதானா அது’ என்று கூவிக்கொண்டே இருந்தார்.” “நான் அவரை மீண்டும் மீண்டும் சமாதானம் செய்தேன்.’சரி, இதை அப்படியே மறந்துவிடச்சொல்லுங்கள் அந்தப்பெண்ணிடம். இனி அவள் கவலையே படவேண்டாம் என்று சொல்லுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்’என்றேன்.’அவள் விட்டாலும் நான் விடமாட்டேன்’என்றார் கிருஷ்ணன் எம்பிராந்திரி. ’‘சரிஉங்களுக்கு என்னவேண்டும்?” என்று கேட்டேன். அப்படி சட்டென்று கேட்டபோது அவர் திணறிவிட்டார். ஒன்றும் சொல்லமுடியவில்லை. மிகவும் கள்ளமற்ற மனிதர். பதற்றத்துடன் மூச்சுவாங்கினார். அதன்பின் இரண்டுலட்சம் ரூபாய் வேண்டும் என்றார்” சாகிப் சொன்னார். “அவனுக்கு இருந்த கடன் அவ்வளவுதான்” என்றேன். “ஆமாம், அது எனக்கு உடனே தெரிந்தது. நான் எழுந்துசென்று நான்கு லட்சம் ரூபாய் கொண்டுவந்து கொடுத்தேன். அதை ஒரு தாம்பாளத்தில் வைத்து கூடவே ஆப்பிள் வெற்றிலை பூ ஆகியவை வைத்து அவரிடம் நீட்டினேன்.”திருமேனி, தாங்கள் என்னை மிரட்டியதனால் நான் இதைத்தரவில்லை. என்னை எவரும் மிரட்ட முடியாது. தாங்கள் ஒரு பூஜ்யபிராமணன், நான் எளிமையான ஷத்ரியன், ஆகவே இதை காணிக்கையாகத் தருகிறேன், ஏற்றுக்கொண்டு என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வாதம் செய்யவேண்டும் ”என்று சொன்னேன். சட்டென்று பணக்கட்டை மட்டும் எடுத்துக்கொண்டார். அதை பையில் போட்டுக்கொண்டு ஒரு வார்த்தைகூட சொல்லாமல் வெளியே ஓடினார்.” “அவர் போவதை நான் பின்னால் நின்று பார்த்தேன். தவறுசெய்துவிட்டோம் என்ற எண்ணம் வந்தது. அவரால் அந்தப் பணத்தை மறைக்கமுடியாது. எங்காவது ரௌடிகளிடம் மாட்டிக்கொள்ள வாய்ப்பு. அந்தப்பணத்தை அவர் வீட்டுக்குக் கொண்டுசென்று கொடுத்திருக்கவேண்டும்…பணம் ஆற்றல் மிக்கது, ஆனாலும் அவர் வீட்டுக்கு திரும்புவார் என்று நினைத்தேன். ஏனென்றால் கூடுதலாக இரண்டு லட்சம் இருக்கிறது. அவர் கடன்களை அடைத்த பிறகும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கமுடியும். ஆனால் நான்குநாட்கள் கழித்து செய்தி வந்தது, அவர் மங்களூரில் கொல்லப்பட்டுவிட்டார் என்று. என்ன நடந்தது என்று புரிந்தது. அவர் கையில் பணமிருப்பதைக் கண்டு அவரைக் கொன்றிருக்கிறார்கள். ஒன்றும் செய்வதற்கில்லை. எனக்கு கொஞ்சம் குற்றவுணர்ச்சிதான்…” “சாகிப், நான் முதலில் வந்து பார்த்தபோதே இதை நான் விசாரிப்பது உங்களுக்குத் தெரியுமா?” சாகிப் சிரித்து “நன்றாகத் தெரியும்… கிருஷ்ணனின் கையில் இருந்த பட்டுநூலைப்பற்றியும் தெரியும். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் நகலை வரவழைத்து படித்துப்பார்த்தேன்.” “நான் விரைவாக நெருங்கிவிட்டேன் இல்லையா?” “ஆமாம், ஆனால் ரொசாரியோ இன்னும் விரைவாக வந்திருப்பார்” என்று அவர் சிரித்தார்.“அவர் அந்த பட்டுநூலை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் சேர்த்திருக்க மாட்டார். ஆனால் அதைத் தொடர்ந்து என்னை வந்து சேர்ந்திருப்பார். அந்தவகையான தொப்பி போடுபவர்கள் யார் என்று மட்டும் பார்த்திருப்பார். என்னை அடையாளம் கண்டபின் கிருஷ்ணன் யார் என தேடியிருப்பார். அது எளிய வழி”. நான் “ஆமாம், இப்போது புரிகிறது” என்றேன். “ஒருபொருளை பார்ப்பதற்கு அதை மூடியிருக்கும் மூடியைத்தான் முதலில் திறக்கவேண்டும்” என்றார் சாகிப். இன்றுவரை நான் என் புலனாய்வில் ஒரு மாறாத நெறியாக கொண்டிருக்கும் ஆப்த வாக்கியம் அது. “சாகிப், நான் ஒன்று கேட்கிறேன். அவன் ஏன் மங்களூர் சென்றான்? அந்த தொப்பியை ஏன் உங்களிடம் காட்டவில்லை?” என்று நான் கேட்டேன். “அது மனித மனம்தானே? இங்கே நான் அவருக்கு சட்டென்று பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டேன்.அந்த தொப்பியை வைத்து மிரட்டவேண்டிய தேவையே வரவில்லை. அவரும் பணத்தைக் கண்டதும் சட்டென்று வெளியே ஓடிவிட்டார். வெளியே சென்று கோழிக்கோடு ரயில்நிலையத்தை அடைந்ததும் அவர் தெய்வத்திற்கும் சாத்தானுக்கும் நடுவே மாட்டிக்கொண்டிருக்கலாம்.” “எப்படி?” “பணம் மாம்மன் என்ற தெய்வம், அது சாத்தானின் படைவீரர்களில் ஒன்று. வியர்வை சிந்தி அதை ஈட்டவேண்டும். அல்லது ரத்தமும் கண்ணீரும் சிந்தி ஈட்டவேண்டும். வியர்வையும் ரத்தமும் கண்ணீரும் நாம் அல்லாவுக்கு அளிக்கும் விலை, அதற்கு பதிலாக அவர் நமக்கு செல்வத்தை அளிக்கிறார்.அவ்வாறு ஈட்டப்பட்ட செல்வத்தை அல்லா காப்பாற்றுவார். அல்லாவுக்கான விலையை அளிக்காமல் வரும் செல்வம் சாத்தானுடையது. அவனிடமிருந்து நாம் தப்பமுடியாது. ஆகவேதான் நான் எவருக்குமே சும்மா பணத்தை கொடுப்பதில்லை. கல்வியோ மருத்துவமோ கொடுப்பேன். திருமணம் செய்துவைப்பேன். பணம் கொடுப்பதில்லை. பணம் கொடுப்பது ஒருவனை சாத்தானிடம் தள்ளிவிடுவது.” அவர் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு அராபிய தங்ஙள் போல, ஒரு சூஃபி போல, ஒரு சுல்தான்போல. மீண்டும் அதே எண்ணம், என்ன ஓர் அழகு. “அவர் ரயில்நிலையத்தில் நின்றிருக்கையில் இரண்டு வாய்ப்புகள் இருந்தன. பணத்துடன் வடகரைக்குச் சென்றிருக்கலாம். குடும்பத்திற்கு உதவியிருக்கலாம். தேவையென்றால் ராதாமணிக்கும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம். ஆனால் அந்தக்கணம் சாத்தான் அவருக்குள் இருந்து ஆழத்தில் புளித்து நாறும் கனவுகளை வெளியே எடுத்தான்.” நான் “ஆம்” என்றேன். “அவை இல்லாத மனித மனமே இல்லை.ஆகவேதான் பணமுள்ளவன் ஒவ்வொரு கணமும் தன்னை அல்லாவின் பாதையில் அமைக்க போராடிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. பணமில்லாதவன் இன்னும் துரதிருஷ்டமானவன். அவன் தன்னுடைய ஏழ்மையால் கட்டுண்டிருப்பவன் தான் என்று நினைப்பவன். உலகமே மகிழ்ச்சியாகக் கொண்டாடிக்கொண்டிருக்க தான் மட்டும் மண்ணில் புதைக்கப்பட்டிருப்பதாக பொருமுபவன். அவனுக்கு பணம் வந்தால் அவனை அது பைத்தியம் ஆக்கிவிடும்.” நான் புன்னகைத்தேன். “அவர் மங்களூர் சென்றார். அங்கே எங்கோ தங்கி அவர் விரும்பிய சிலவற்றைச் செய்திருக்கலாம். ஆனால் அவருக்கு அதற்கான வழிகள் அவருக்கு தெரியாது. பணத்தை அள்ளி வீசியிருக்கலாம். முன்பின் தெரியாதவர்களிடம் தொடர்பு வைத்திருக்கலாம்.” “ஆம், அதுவே வாய்ப்பு” என்றேன். “அவரிடம் அந்த தொப்பி இருப்பதை அவர்கள் கண்டிருக்கலாம். அதை வைத்து ஹாஷிமை தனியாகச் சந்தித்து மிரட்டி மேலும் பணம் பறிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்காக ஆலோசனை செய்வதாகச் சொல்லி அவரை மங்களூர் பாலத்திற்கு அழைத்துவந்திருக்கிறார்கள். அங்கே அந்த தொப்பியை பிடுங்கிக்கொண்டு அவரை துரத்திவிட முயன்றிருக்கிறார்கள். அல்லது கொல்லும் நோக்கமேகூட இருந்திருக்கலாம். தொப்பிக்கான சண்டையில் அவர் அதை பிடித்திருக்கிறார். கையில் ஒரு நூல் மட்டும் எஞ்சியது. கீழே ஆற்றில்விழுந்து மூழ்கி இறந்தார்” என்றார் சாகிப். நான் பெருமூச்சுவிட்டேன். படகு மெல்ல ஊசலாடிக்கொண்டிருந்தது. அரபிக்கடலின் நீர் ஆழ்ந்த நீலநிறம் கொண்டது. மாலைவேளையில் சட்டென்று கருமைகொண்டுவிடும். சூரியன் செந்நிறக்கொந்தளிப்பாக மேற்கே விழுந்துகொண்டிருந்தது. கடல்காற்றில் அதுவரை இருந்துவந்த நீராவியின் வெம்மை குறைந்து குளிர் அடித்தது. “இனிமையான காற்று…. மக்கள் ஊட்டி கொடைக்கானல் என்று மலைகளுக்குச் செல்கிறார்கள். எனக்கு கடல்காற்றின் இனிமை வேறு எங்கும் இல்லை என்று தோன்றும். கொஞ்சம் உப்புக்காற்று நுரையீரலில் இருந்தால்தான் தூக்கமே வரும்” என்றார் சாகிப். “ஆமாம், நானும் மங்களூர் வந்தபின் கொஞ்சம் பழகிவிட்டேன். கடல்காற்றில் புகையும் தூசியும் இல்லை, தூய்மையானது” என்றேன். “நீங்கள் ஒயின் சாப்பிட விரும்பினால் சாப்பிடலாம். எங்களுக்குத்தான் மது ஹராம்” என்றார். நான் புன்னகைத்தேன். அவர் கைகாட்டினார். வந்து பணிந்த ஏவலனிடம் மெல்லிய குரலில் பேசினார். ஹென்றி ஜாயேர் வைன் வந்தது. நான் கோப்பையை கையிலெடுத்தேன். துளித்துளியாக உறிஞ்சி அதன் கசப்பை நாவில் நிறுத்தினேன். ஒயின் நம்மை ஒரு சீமானாக எண்ணச்செய்கிறது. அதைவிட ஜெண்டில்மேனாக கற்பனைசெய்துகொள்ளச் செய்கிறது.நான் சொகுசாக, நிம்மதியாக உணர்ந்தேன். கால்களை நீட்டி இயல்பாக ஆனேன். புன்னகைத்தேன். கடல் அலைகளை மகிழ்ச்சியுடன் பார்த்தேன். மனதில் கடலின்னக்கரே போணோரே என்ற பாடல் எழுந்தது. அந்த மெட்டு என்னை சற்றே துக்கம் கொண்டவனாக்கியது. மெல்லிய துக்கம் ஒயினுக்கு மிக உகந்த கலவை. நாம் மேலும் சொகுசாக, மேலும் ஓய்வாக, மேலும் ஜெண்டில்மேன் ஆக உணர்கிறோம். “சாகிப் இது என் தொழில்சார்ந்த உதவி, நீங்கள் விரும்பினால் செய்யலாம். கட்டாயமில்லை. கிருஷ்ணனைக் கொன்ற கும்பல் அன்றே மங்களூரிலிருந்து சென்றிருக்கவேண்டும். ஆனால் அவர்களிடம் ஹாஷிமின் தொப்பி இருந்தது. அதை அவர்கள் பயன்படுத்தாமலிருக்க வாய்ப்பே இல்லை. அவர்கள் ஹாஷிமை அணுகினார்களா, ஏதேனும் பேரம் பேசினார்களா?” என்றேன். “நான் ஹாஷிமிடம் ஓர் அரைமணிநேரம் பேசவேண்டும்.” “அவனிடம் பேசமுடியாது.” “ஏன்?” “அவன் இல்லை.” “எங்கே இருக்கிறார்?” அவர் காலடியை காட்டி “இந்த அரபிக் கடலின் ஆழத்தில்” என்றார். நான் கைகள் நடுங்க எழுந்துவிட்டேன். பின்னர் கோப்பையை டீபாயில் வைத்தேன். “சாகிப், நீங்களா?” என்றேன். “நானேதான். அவனுடைய மூத்தவர்களின் சம்மதத்துடன்” என்றார். “இது எங்களுக்குள் நடக்கும் விஷயம். இதில் போலீஸ் தலையிடும் வழக்கம் இல்லை.” “ஆமாம்” என்று அமர்ந்துகொண்டேன். அவர் முகத்தில் அதே புன்னகை, இமைகூட சுருக்கமில்லை. அதே முழுமலர்வு. “சாகிப், ஏன் அதைச் செய்தீர்கள்? அந்தப்பெண்ணே சொன்னாள், அவன் ஒரு குழந்தை என்று. ஒரு பொம்மையை விரும்புவதுபோல அவளை விரும்பியிருக்கிறான். அடம்பிடித்திருக்கிறான்.” “அது எனக்குத் தெரியும். அவன் என் செல்லக்குழந்தை. அவனைப்பற்றி எனக்கு மேலும் தெரிவதற்கு ஒன்றும் இல்லை”என்றார் சாகிப் “ஆனால் இது எங்கள் நெறி. இதை யாரும் எந்நிலையிலும் மீறமுடியாது. நானேகூட மீறமுடியாது. மீறாமலிருக்கும்வரைத்தான் இதெல்லாம் இருக்கும்… ஒரு சிறிய பிழைக்குக் கூட இங்கே இடமில்லை.” “அவன் ஒரு குழந்தை…என்ன இருந்தாலும்…” “ஆமாம்,இது சுல்தான்களுக்குரிய உடைவாள். இதை வழிப்பறிக்கு பயன்படுத்தக்கூடாது.” “தப்புதான்” என்றேன். “தொடங்கிவிட்டால் பிறகு நிறுத்தவே முடியாத தப்பு. என் காலத்தில் அது தொடங்காது” அவர் கடலை நோக்கி அமர்ந்திருந்தார். கண்ணாடிச் சில்லுகளில் அலைகள் தெரிந்தன. நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு கண்களை மூடிக்கொண்டு நெடுநேரம் இருந்தேன். கண்களை மீண்டும் திறந்தபோது வானம் இருட்டியிருந்தது. சூரியனின் கடைசி வண்ணங்கள் எஞ்சியிருந்தன. சாகிப் எழுந்து கொண்டு என்னிடம் “உஸ்தாத் படே குலாம் அலி கான் பிளேட்டுகள் இரண்டு எடுத்து வைத்தேன், இன்றைக்காக. இன்று ஏழாம்நிலவு. ஏழாம்நிலவுக்குரிய ராகம் சந்திரகௌன்ஸ். உங்களுக்கு ஆர்வமிருந்தால் கேட்கலாம்…” நான் அவர் முகத்தைப் பார்த்தேன். அதே புன்னகை, அதே தெளிந்த அழகிய விழிகள். அவர் மலர்மேல் மலரை வைப்பது போல இசைத்தட்டின்மேல் ஊசியை வைத்தார். கரிய முத்துப் பளபளப்புடன் எல்பி ரிக்கார்ட் பிளேயர். அது ஓடத்தொடங்கியது. உஸ்தாதின் பித்துப்பிடிக்கச் செய்யும் குரல் எழுந்தது. அது மனிதக்குரல் அல்ல. மலை,கடல்,தீ,வானம், காற்று போன்ற ஏதோ அமானுடப் பேருருவின் குரல். சாகிப் நாற்காலியில் அமர்ந்துகொண்டார். கைகளை கோத்து மார்பில் வைத்தார். கண்களில் கனவு எழுந்தது. பதின்பருவத்து இளைஞனுக்குரிய உருகும் முகம். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.ஔசேப்பச்சன் சொன்னான். மச்சானே, அது ஒரு அபூர்வமான நாள். ஒருபோதும் வாழ்க்கையை அறிந்துகொள்ள முயலக்கூடாது என்று நமக்குத் தோன்றுமே அப்படிப்பட்ட ஒரு நாள் அது. மரைன் டிரைவின் கடல் அலைகள்மேல் சூரியன் அணைந்துகொண்டிருந்த சிவப்பு தளதளத்தது. மிகமிக மெல்ல நிகழ்வது அந்த அணைதல். ஒரு பெரிய நீர்த்துளி திரண்டு சொட்டி உதிர்ந்து மறைவதுபோல. ஆனால் கடைசியில் சில கணங்கள் மிக விரைவானவை. நான் ஔசேப்பச்சனை பார்த்துக்கொண்டிருந்தேன். ஔசேப்பச்சன் சொன்னான். கிருஷ்ணன் எம்பிராந்திரி தங்கிய அந்த ஓட்டலில் அதேநாட்களில் அருகில் இருந்த அறையில் தங்கியவர்களின் தகவல்களை சேகரித்தோம். அவர்களில் ஒருவன் மங்களூரின் கிரிமினல்களில் ஒருவன். அவன்தான் கிருஷ்ணன் எம்பிராந்திரியை கொன்று பணத்துடன் சென்றவன். அவனிடம் அந்த தொப்பி இருக்கவில்லை. அது அந்த கைகலப்பின்போது கடலில் விழுந்துவிட்டது. அவனை தொடர்ந்து சென்றோம். அவன் பணத்துடன் கோவா சென்றான். அங்கே குடித்து சீரழிந்தான். அவனை அடித்துப்போட்டு பணத்தை பிடுங்கிச்சென்றார்கள் வேறு திருடர்கள். நாங்கள் அவனை கைதுசெய்தபோது அவன் பிச்சைக்கார குடிகாரனாக இருந்தான். ஆனால் நாங்கள் அந்தக்கதையை அதற்குமேல் கேட்க விரும்பவில்லை. எலி எழுந்துகொண்டு “நான் டின்னர் ரெடியா என்று பார்க்கிறேன்” என்றான். ஔசேப்பச்சன் என்னிடம் “நீ என்ன நினைக்கிறாய், சாகிப் செய்தது சரியா?” என்றான். “என்ன சொல்ல? அவர்களின் மனநிலை எனக்குப் புரியவில்லை” என்றேன் “அவர்கள் வேறு ஒரு யுகத்தைச் சேர்ந்தவர்கள்.” “நான் அதைப்பற்றி ஆயிரம் தடவையாவது நினைத்துப்பார்த்திருக்கிறேன்” என்றான் ஔசேப்பச்சன் “அப்போதெல்லாம் மாப்பிளாக் கலாசிகள் ரயில்வே வேகன்களை தூக்கிய காட்சிதான் நினைவுக்கு வரும். மூத்த உஸ்தாத் என்னிடம் சொன்னார், ஆயிரத்துக்கு ஆயிரம் கால்வைப்புகள், அவ்வளவுதான் என்று. ஆயிரம் பெருக்கல் ஆயிரம். பத்துலட்சம் காலடிகள். ஆனால் அதில் ஒன்று, ஒன்றே ஒன்று, தவறாகப் போய்விட்டால் அவ்வளவுதான். தவறு பெருகிப்பெருகி கப்பல் மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும்.” எலி வந்து “பீஃப் பொரியல் ரெடி” என்றான். ஔசேப்பச்சன் “கொண்டுவாடா மரக்கழுதை” என்றான். *** https://www.jeyamohan.in/130497/#.XqsA3C_TVR4
 13. விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்பு முனை கப்டன் லிங்கம்!  கப்டன் லிங்கம் சிங்காரவேல் செல்வகுமார் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:16.12.1960 வீரச்சாவு:29.04.1986 நிகழ்வு:யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு லிங்கத்தின் மறைவு விடுதலைப்போரில் திருப்புமுனை.! யாழ். மாவட்டத்தில் வைத்து ரெலோ துரோகக் கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் ஆகிய தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களை மீட்பதற்காக தலைமைப் பீடத்தினால் பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்ட வேளை யாழ். மாவட்டம் கல்வியங்காட்டில் உள்ள டெலோவின் தலைமையகத்தில் வைத்து 29.04.1986 அன்று ரெலோ கும்பலினால் கண்ணில் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட (படுகொலை செய்யப்பட்ட) தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கப்டன் லிங்கம் ஆகிய மாவீரரின் 34ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். லிங்கம் 16.12.1960ல் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இயற்பெயர் செல்வகுமார். இந்துக்கல்லூரியில், படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளரானார். 1980ம் ஆண்டில், 12ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது இயக்கத்தின் உதவியாளனாகச் செயல்பட ஆரம்பித்தார். எமது விடுதலை குறித்து சுவரொட்டிகளை ஒட்டுதல், சுலோங்களைச் சுவர்களில் எழுதுதல் போன்ற வேலைகளை ஆர்வத்துடன் செய்தார். விடுதலைப் போராட்டத்தில் மக்கள் அதிகம் ஈடுபாடு காட்டாத அவ்வேளையில் விடுதலைப் புலிகளை வேட்டையாட இரகசிய பொலிசார் மோப்பம் பிடித்துக் கொண்டிருந்த வேளையில் சுவரொட்டி ஒட்டுதல் போன்ற வேலைகளைக்கூட மிகவும் சிரமங்களுக்கிடையிலும், கைதாகும் ஆபத்துக் கிடையிலும் செய்தார். 1981ல் முழுநேர உறுப்பினரான லிங்கம் யாழ்ப்பாணத்தில் அரியாலை சனசமுக நிலையத்தில் உடற்பயிற்சிகளைப் பெற்றார். சிறந்த போர்வீரனாக வரவேண்டும் என்ற ஆர்வத்தில் ‘கராத்தே’ (தற்பாதுகாப்புக்கலை) பழகி பிரவுன் பட்டிக்குத் தகுதி பெற்றார். 1982ல் தலைவர் பிரபாகரனை லிங்கம் சந்தித்தபின் பிரபாகரனின் ஆகர்ஷிப்பில் அமிழ்ந்து போனார். அவருக்கும், இயக்கத்துக்கும் விசுவாசமாக நடப்பதே தன் கடமை என உணர்ந்து இயக்க வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டார். 1982ம் ஆண்டில் கடைசிப் பகுதியிலும், 1983ம் ஆண்டின் முதற்பகுதியிலும் வன்னிப் பகுதியில், ஒரு காட்டில் அவருக்கு இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கு சுடப்பழகிக் கொண்டார். கடுமையான பயிற்சிகளையும் மிகுந்த ஆர்வத்துடன் செய்தார். குறிதவறாது சுடுவதில் திறமையைக் காட்டினார். A.K சுரிகுழல் துப்பாக்கி அவருக்கு விருப்பமான ஆயுதம். தலைவர் பிரபாகரனுடன் போட்டி போட்டுக் கொண்டு துப்பாக்கி சுடுவதில் முனைந்து நிற்பார். 300 யார் உயரத்தில் பறந்து கொண்டிருந்த பருந்தொன்றினை தனது A.K சுரிகுழல் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியமை அவரது கடும் திறமைக்குச் சான்றாகும். சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட பல மோதல்களில் பங்கேற்றுக் கொண்டார். தாக்குதல்களின் போது முன்னின்று சண்டையிடுவார். ஜூலை 1983ல் திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் 13 இராணுவ வீரர்களைக் கொன்றொழித்த அத்தாக்குதலில் லிங்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. 1984ம் ஆண்டு மதுரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராக கடமையாற்றினார். அக்காலத்தில் அரசியல் பிரச்சாரத்தை திறம்பட நடத்தி, தமிழக மக்களுடன் மிகுந்த நல்லுறவை வளர்த்துக் கொண்டார். 1985ம் ஆண்டுக் காலத்தில் தமிழீழக் காடுகளில் இருந்த பயிற்சி முகாம் ஒன்றின் பொறுப்பாளராகச் செயற்பட்டார். அக்காலத்தில் விசேஷ பயிற்சி பெற்று விடுதலைப் புலிகளின் அதிரடிப்படைப் பிரிவு கப்டன் ஆனார். தலைவர் பிரபாகரனின் மிக நெருங்கியவர்களில் ஒருவராகவும், உதவியாளராகவும், மெய்க்காப்பாளராகவும் செயற்பட்டார். தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் தலைவர் நெடுமாறனும், பின்னர் பிரெஞ்சுப் பத்திரிகையாளர் இருவரும் தமிழர்படும் துன்பங்களையும், அரச பயங்கர வாதத்தையும் அறிந்து வர தமிழீழம் சென்றபோது அவர்களின் பயணப் பொறுப்பு லிங்கத்திடமே கொடுக்கப்பட்டது. லிங்கம் தமது கடமையை பூரணமாக நிறைவேற்றினார். லிங்கம் இயக்க உறுப்பினர்கள் ஒவ்வொருவருடனும் சகஜமாகப் பழகியிருந்ததால் எல்லோரும் அவரிடம் அன்பு கொண்டிருந்தனர். கடமை என்று வரும்போது கண்டிப்பானவராகி விடுவார். அப்படிக் காட்டிக்கொள்வதற்காக முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கடுகடுப்பாக பேச முயன்றாலும், வெகுளித்தனம் தான் வெளியே தெரியும். கடைசியாகத் கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டிலிருந்து சென்றபோது தனது தோழர்களைப் பிரிந்த வேளையில் கண்களில் நீர் வழிய விடைபெற்றார். புதியவர்கள் அக் காட்சியை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அவரைப் புரிந்தவர்கள் கேலி செய்து சமாதானப் படுத்தினர். கட்டையான தோற்றம், தீட்சண்யமான கண்கள்; தடிப்பான மீசை; மெதுவான, உறுதியான நடை; அவரது குட்டையான உருவம் குறித்து அவரது நண்பர்கள் கேலி செய்வார்கள். அவர்களுடைய உரையாடலுக்கிடையே ஏதாவது லிங்கம் கூற முனைந்தால் ‘நீ சின்னப் பொடியன்; அங்கால போ’ என்று வேடிக்கையாகக் கூறிச் சிரிப்பார்கள். நண்பர்களின் கேலிப் பேச்சுக்களை ரசிப்புடன் ஏற்றுக் கொள்வார். 27.04.1986 அன்று சிறிலங்காவின் கடற்படையுடன் மோதலில் ஈடுபட்ட மேஜர் அருணாவும் அவருடன் கூடச் சென்ற விடுதலைப் புலி வீரர்களும் தளம் திரும்பவில்லை. அவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக கருதிய தமிழீழ மக்கள் 28.04.1986 அன்று அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தமிழீழமெங்கும் தோரணங்கள் கட்டப்பட்டன. கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டன. மேடைகள் அமைத்து அருணாவின் படத்தை வைத்து மக்கள் வீரவணக்கம் செய்தனர். ஒலி பெருக்கிகள் அவரது வீரவரலாற்றை முழங்கின. எவரது தூண்டுதலுமின்றி மக்கள் எழுச்சி பெற்று தமிழீழ விடுதலைப்புலி வீரர்களுக்கு ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்தது கண்டு எரிச்சலடைந்தனர் டெலோவினர். 24.04.1986ல் கடலில் இறந்த டெலோ உறுப்பினர்களின் பொருட்டு மக்கள் எதுவித அனுதாபமும் தெரிவிக்கவில்லை. 29.04.1986 அன்று ஹர்த்தால் செய்து இறந்த தமது தோழர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு மக்களை பலவந்தப் படுத்தினர். இக்கட்டாய ஹர்த்தாலை மக்கள் ஏற்கவில்லை. தாம் ஒழுங்குசெய்த ஹர்த்தாலுக்கு மக்களிடமிருந்து எவ்வித ஆதரவும் இல்லாதது கண்டு ஆத்திரமடைந்தனர் டெலோவினர். தமது கோட்டையாகக் கருதிய கல்வியங்காட்டுப் பகுதியிலேயே மக்கள் விடுதலைப் புலிகளுக்கு அமோக ஆதரவளித்தது கண்டு புழுங்கிய டெலோவினர் மக்களைப் பயங்கரமாகத் தாக்கினர். அருணாவின் படம் வைத்திருந்த அஞ்சலி மேடைகளை உடைத்தெறிந்தனர். அருணாவினதும் மற்றும் தோழர்களினதும் படம் போட்ட சுவரொட்டிகளைக் கிழித்தெறிந்தனர். மக்கள் அராஜக வாதிகளினால் தாக்கப்படுவதைக் தடுக்கச் சென்ற மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் டெலோவால் கடத்தப்பட்டனர். கடத்திச் சென்று கொல்வது டெலோவினருக்கு கைவந்தகலை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய ஆலாலசுந்தரம். தர்மலிங்கம் ஆகியோர் டெலோவால் கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். திருச்சி அகதிகள் முகாமிலிருந்து 3 அகதிகள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்படனர். பேச்சு வார்த்தைக்கென அழைத்து வஞ்சகமாகக் கொல்வதில் வல்லவர்கள் டெலோவினர். டெலோவின் ராணுவத் தளபதியான தாஸையும் அவரது 3 தோழர்களையும் பேச்சுவார்த்தைக்காக யாழ்ப்பான வைத்தியசாலைக்கு அழைத்துச் சுட்டுக் கொன்றனர். வைத்தியசாலைகளைத் தாக்குதலுக்குள்ளாக்குவது சர்வதேச சட்டங்களுக்கு முரணான செயல். மனித நாகரீகத்துக்கே இழுக்கானது. அங்கு நின்ற ஒரு தாதி உட்பட பல நோயாளிகளுக்கு காயம் ஏற்பட்டதுடன். நீதிபதி ஒருவரும் கொல்லப்பட்டார். மறுநாள் இப்படுபாதகச் செயலை எதிர்த்து ஊர்வலம் சென்ற பொதுமக்கள் மீது டெலோவினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மூவர் இறந்தனர். மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் கொலை செய்யப்படலாம் என்று உணர்ந்த எமது தலைமைப்பீடம் பேச்சுவார்த்தை மூலம் அவர்களை விடுதலை செய்விப்பதற்காக லிங்கத்தை அனுப்பியது. சிறி சபாரத்தினமும் அவரது ஆட்களும் தங்கியிருந்த கல்வியங்காட்டில் உள்ள டெலோவின் தலைமையகத்திற்கு லிங்கம் ஆயுதமேந்தாது சென்றார். சமாதானத் தூதுவனாகச் சென்ற லிங்கம் துப்பாக்கியால் கண்ணில் சுடப்பட்டு படுபாதகமான முறையில் கொல்லப்பட்டார். லிங்கத்தின் வீரமரணம் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. போராட்டக் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்ற விடுதலைப்புலிகளின் முதுகில் குத்திக் கொண்டிருந்த டெலோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இரு மூத்த உறுப்பினர்கள் கடத்தப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டு விடுவார்கள் என்ற நிலையில் விடுதலைப் புலிகளை அழிக்க முற்பட்ட டெலோமீது தற்காப்பு யுத்தம் தொடுக்க வேண்டிய கட்டாயத்துக் குள்ளானார்கள் விடுதலைப்புலிகள். நாசகார சக்திகளில் கைப்பொம்மையாக, எதிர்ப்புரட்சி அமைப்பாக, விடுதலைப் போருக்கு முட்டுக்கட்டையாக செயல்பட்டு வந்தது டெலோ. மக்கள் விரோத நடவடிக்கைகளான கோவில் கொள்ளைகள், வாகனக் கடத்தல்கள் போன்றவற்றில் ஈடுபட்டு விடுதலைப் போராட்டத்தின் மீது மக்கள் வெறுப்புக் கொள்ளும்படி செய்தனர். இஸ்லாமிய மக்களைத் துன்புறுத்தி மதரீதியான சண்டைகளை தமிழ் மக்களிடத்தில் ஏற்படுத்தியவர்கள் இவர்கள்தான். சமூக விரோதக் கும்பலை வளர்ந்து அதற்குத் தலைமை தாங்கிய கொள்கையற்ற, பொறுப்பற்ற டெலோ தலைவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையின் போது சொந்த இரத்தத்தையே சிந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. இந்த நிலைக்கு காரண கர்த்தாக்களாக இருந்த டெலோ தலைமை தண்டிக்கப்பட்டபோது மக்கள் எமது செயலை ஆதரித்தனர்; பாராட்டினர்; ஒத்துழைத்தனர். டெலோவின் அழிவினால் தமிழீழப் போராட்டம் உறுதியான ஒரு தலைமையின் கீழ் மேலும் பல மடங்கு பலம் அடைந்திருந்திருக்கிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் தனித்த பெரும் சக்தியாக உருப்பெற்று சிறிலங்காவின் முப்படைத் தாக்குதல்களை முறியடித்து வெற்றி கண்டது இதன் நேரடி விளைவாகும். இதனை எதிரிகள் உட்பட உலகமே ஒத்துக் கொள்கிறது. சிங்கள இராணுவத்துடன் பொருதச் சென்ற லிங்கம் துரோகிகளால் கோழைத் தனமாகச் கொல்லப்பட்டார். தமிழீழப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கு காரணமாக நேற்றிருந்த லிங்கம் இன்றில்லை. நாளையும் அதற்கு அடுத்து வருகின்ற காலங்களிலும் லிங்கம் எமது வரலாற்றோடு வாழப் போகிறார். வெளியீடு :விடுதலைப்புலிகள் இதழ் https://www.thaarakam.com/news/126190
 14. ஆபாசப்பட விவகாரம் - காசி விரித்த வலையில் பள்ளி தோழி முதல் பெண் டாக்டர் வரை சிக்கியது எப்படி? பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்று நாகர்கோவில் காசி விவகாரம். பள்ளி மாணவிகள் தொடங்கி கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் என சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களிடம் அன்பாக பழகி காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஏமாற்றி வீடியோ எடுத்து பணம் பறித்து வந்த காசி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்துள்ளது தமிழக காவல்துறை. யார் இந்த காசி என்ற சுஜி? கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி என்ற சுஜி (26). இவர் இன்ஜினீயரிங் படித்துள்ளார். காசியின் தந்தை, அதே பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். கல்லூரி படிப்பு முடித்த காசி, தந்தைக்கு உதவியாக கடையில் இருந்து வந்தார்.இறைச்சி வியாபாரம் முடிந்த பின்பு சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.பெண்ணியம் குறித்தும், பெண்களின் நலன் பற்றியும் பல கருத்துக்களை பதிவிடுவார். பார்ப்பதற்கு கட்டுமஸ்தான உடலமைப்பு, சிவப்பு நிறம், ஆடம்பரமான ஆடைகள், விலை உயர்ந்த பைக்கில் இருப்பது போன்ற போட்டோக்கள், வீடியோக்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பெண்கள் பலர் காசியை காதலித்துள்ளனர். அந்த பெண்களை மயக்கும் விதமாக காசி அவ்வப்போது போட்டோக்கள், டிக் டாக் வீடியோக்கள் என பதிவிட்டு வந்துள்ளார். இவர் இளம்பெண்களுடன் தனிமையில் நெருக்கமாக இருப்பதை ஆபாச வீடியோவாக பதிவு செய்து பணம் சம்பாதித்துள்ளார். இதே போல் சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் பணிபுரிந்த பெண் மருத்துவரிடம் பழகி அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற போது மருத்துவர் அளித்த புகாரில் கைதாகி நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பள்ளி தோழியிடம் இருந்து தொடக்கம் காசியின் பள்ளி தோழி ஒருவர் விமான பணிப்பெண்ணாக உள்ளார். இருவரும் நாகர்கோவிலில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் படித்துள்ளனர். சென்னையில் விமான பணிப்பெண்ணுக்கான படிப்பில் இருந்தபோது மீண்டும் காசியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதை தனக்கு சாதகமாக்கிய காசி, அப்பெண் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்துகொண்டு, அந்த பெண்ணுடன் தனிமையில் இருப்பதை விளையாட்டாக வீடியோ எடுப்பது போல் வீடியோவும் எடுத்துள்ளார் காசி. ஒரு நாள் திடீரென தனது அம்மாவுக்கு புற்றுநோய் உள்ளதாகவும்; அதற்கு மருந்து வாங்க வேண்டும் என்று 1.50 லட்சம் பணமும், 16 கிராம் தங்க நகைகளையும் வாங்கியுள்ளார். அதே போன்று பல காரணங்களைச் சொல்லி அடிக்கடி அந்த பெண்ணிடம் பணம் பெற்றுள்ளார். குறிப்பிட்ட சில நாட்களுக்கு பின் காசி அந்த பெண்ணுக்கு போன் செய்வதை நிறுத்தி கொண்டதுடன் அவருடைய தொடர்பையும் தவிர்த்து வந்துள்ளார். காசியால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், காசியிடம் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார்.பணத்தை திருப்பிக்கேட்டால்,நாம் இருவரும் இருந்த அந்தரங்க வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதை தொடர்ந்து செய்வதறியாது தவித்த அந்த பெண், தற்போது காசி காவல்துறையினரிடம் சிக்கியது தெரிந்ததும் காசி மீது புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து தனது கருத்தை வீடியோவாக பதிவு செய்து அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். டாக்டரின் கருத்துக்கு எதிராக கருத்து விடியோ பதிவு செய்து வந்துள்ளார் காசி.இவ்வாறு தனக்கு எதிராக கருத்து சொன்ன பெண் மருத்துவரிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். அந்த மருத்துவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருக்கமாகியுள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அப்போது இருவரும் நெருக்கமாக இருப்பதை காசி படம் எடுத்துள்ளார்.தனது குடும்ப உறுப்பினருக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி கொஞ்சம் கொஞ்சமாக பெண் மருத்துவரிடமிருந்து ஒரு லட்சம் இரண்டு லட்சம் என ஆறரை லட்சம் ரூபாய் வரை காசி பெற்றுள்ளார். காசி சிக்கியது எப்படி? ஒரு முறை இருவரும் நேரில் சந்தித்து கொண்டபோது காசியின் செல்போனை பெண் மருத்துவர் எடுத்து பார்த்துள்ளார். அப்போது காசி பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் செல்போனில் இருந்துள்ளன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் டாக்டர், காசியிடம் இருந்து விலகத் தொடங்கினார். ஆத்திரமடைந்த காசி, தினசரி பெண் மருத்துவரை பணம் கேட்டு அதிகமாக தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளார். பெண் மருத்துவர் பணம் தர மறுத்ததையடுத்து பணம் தராவிட்டால் இருவரும் தனிமையில் இருந்த அந்தரங்கப் படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். ஆனால் பெண் டாக்டர் எந்த மிரட்டலுக்கும் பயப்படவில்லை எனவே, கடந்த புதன்கிழமை காசி தனது போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றில் பெண் மருத்துவர், கன்னியாகுமரி விடுதியில் தங்கியிருந்த போது ரகசிய கேமராவில் எடுத்த அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டுள்ளார். NURPHOTO இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் மருத்துவர், உடனடியாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்யிடம் ஆன்லைனில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் காசியிடம் நடத்திய விசாரணையில் பெண் டாக்டரை மிரட்டியதை போன்று பணத்திற்காக பல பெண்களை மிரட்டி ஏமாற்றியது தெரிய வந்ததையடுத்து காசி மீது நாகர்கோவிலில் உள்ள இரு காவல்நிலையங்களில் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காசியை சிறையில் அடைத்தனர். கிடுக்குபிடி விசாரணை போலீசார் நடத்திய விசாரணையில் பல பெண்களை காசி,ஏமாற்றியது தெரிய வந்தது. இந்த குற்றங்களை காசி ஒருவர் மட்டுமே செய்திருக்க வாய்ப்பு இல்லை என போலிசாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் காசியுடன் நெருக்கமாக இருந்த நண்பர்கள் சிலரிடம் போலிசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தி வருகின்றனர். போட்டோக்கள் மற்றும் வீடியோவில் காசியுடன் நெருங்கி பழகிய நண்பர்கள் மட்டுமின்றி, அவருடன் நெருக்கமாக இருக்கும் இளம் பெண்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அவர்களையும் விசாரித்து வாக்குமூலம் பெற தனி பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாதிக்கப்பட்டது போல், காசி தலைமையில் நாகர்கோவிலிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாக விசாரணை நடத்தி வரும் தனி பிரிவு போலிசார் தெரிவித்தனர். குமரியில் நடந்த இச்சம்பவம் குறித்து அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் லீமா ரோஸ் பிபிசி தமிழிடம் பேசுகையில் "இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் குமரி மாதர் சங்கம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் ஆன்லைனில் மனு அளித்தோம்". "சென்னையில் உள்ள மாதர் சங்கம் சார்பில் சென்னை காவல் உயர் அதிகாரிகளிடமும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மாதர் சங்கம் சார்பில் குமரி மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.". என்றார் லீமா ரோஸ். காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கதக்கது "இந்த வழக்கில் இதுவரை ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார் ஆனால் அவர் மட்டும் இதை தனியாக செய்திருக்கவாய்ப்பு இல்லை. இவனுக்கு பின்னால் அரசியல்வாதிகள், பணம்படைத்தவர்கள் இருக்க அதிக வாய்ப்பு உண்டு.எனவே அவனுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். 'இவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை, பெங்களூர்,குமரி என தமிழகம் உட்பட வெளி மாநிலங்களிலும் உள்ளதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்" என்றார். பொள்ளாச்சியை விட இது மிக மோசமானது 'குமரியில் நடந்துள்ள இந்த சம்பவம் பொள்ளாச்சியை விட மிக மோசமானது இதில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் பெயர் வெளியே வராத அளவு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்'. 'தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள எவரும் இம்மாதிரியான குற்றங்களை செய்யாமலிருக்க கடுமையான தண்டனை வழங்க வேண்டும்' என்கிறார் லீமா ரோஸ். லீமா ரோஸ் இந்த வழக்கு குறித்து குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் பிபிசி தமிழிடம் பேசுகையில் 'பல பெண்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் காசி கைது செய்யபட்டுள்ளார். காசி குறித்து தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது'. காசி மீது குண்டர் சட்டம் அவர் மேலும் கூறியதாவது, 'காசியிடம் இருந்து கைபற்றப்பட்ட லேப்டாப்,ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ்,மொபைல் போன,சிடி ஆகியவற்றை மாவட்ட காவல் சைபர் கிரைம் போலிசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை 50க்கும் அதிகமான வீடியோக்கள் கண்டுபிக்கப்ட்டுள்ளது. 'காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் எண்ணுடைய மொபைல் எண்ணான 94981 11103 க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிப்பவர்கள் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்' என்றார். மேலும் அவர் பேசுகையில் 'சமூக வலைதளங்களில் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் தெரியாத நபர்களிடம் ONLINE CHAT செய்ய வேண்டாம்'. 'இன்ஸ்டாகிராம், பேஸ்புக், போன்ற சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாதவர்கள் பதிவு செய்யும் புகைபடங்கள்,வீடியோக்களுக்கு லைக் போடும் போது கவனமாக இருக்க வேண்டும்.' 'காசி போன்ற நபர்கள் பெண்களை குறிவைத்து ஏமாற்றி வருகின்றனர் இப்படியான நபர்கள் பெண்களை தொடர்பு கொண்டு மிரட்டினால் தைரியமாக காவல்துறையிடம் புகார் கொடுங்கள் அல்லது நம்பிக்கையானவர்களிடம் தெரிய படுத்துங்கள்'. 'பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்;கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்'குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத். ஸ்ரீநாத் இந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து பிபிசி தமிழ் காசியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தது ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில், பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவிலை சேர்ந்த காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் பரிந்துரையின் பேரில் குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். காசியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை தொடர்பு கொள்ள பிபிசி தமிழ் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. அவர்கள் தரப்பு இது குறித்து விளக்கம் அளித்தவுடன், அந்த விளக்கம் பிரசுரிக்கப்படும. https://www.bbc.com/tamil/india-52482238
 15. தோழர் புரட்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
 16. தர்மரத்னம் சிவராம் : தான் மிகவும் நேசித்த நீதிக்கான போராட்டத்தில் அப்பா மரணித்தார் April 29, 2020 போர்ச் செய்தி ஆய்வாளரும் இருமொழி பத்திரிகையாளரும் சுதந்திர ஊடக இயக்கத்தின் முன்னோடியுமான தர்மரத்னம் சிவராம், தலைநகருக்கு அருகில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடந்த ஒன்றரை தசாப்தமாக நீதி பெற்றுக்கொடுக்கப்படாத நிலைமை நீடிக்கின்றது. அவரது மூன்று பிள்ளைகள் தகப்பனான சிவராம் தொடர்பில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் எழுதிய கட்டுரை, ஜே.டி.எஸ் லங்கா (JDSLanka) இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அப்பா மரணித்து இன்றுடன் 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன. இன்றுவரை அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் எவரும் குற்றவாளியாக காணப்படவில்லை.இது குறித்து நாங்கள் ஆச்சரியப்படவில்லை.எங்கள் குடும்பமும் நீதியை எதிர்பார்க்கவில்லை.அரச நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக எழுதுகின்ற ஊடகவியலாளர்களை ஸ்ரீலங்கா அரசு தொடர்ந்தும் இலக்குவைக்கின்றது. ஸ்ரீலங்காவில் காணாமல் ஆக்கப்பட்ட, தாக்கப்பட்ட அல்லது கொலை செய்யப்பட்ட ஏனைய பல ஊடகவியலாளர்களுக்கு பொறுப்புக்கூறாத குறைபாடு தொடர்ந்தும் நீடிக்கின்றது. எங்கள் அப்பாவின் உடல் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே வீசப்பட்டிருந்தது என்பது நாட்டின் ஊடக சுதந்திரத்தின் நிலை மற்றும் தம்முடன் உடன்படாதவர்களை மெளினிக்க செய்வதற்கு அரசு எந்த அளவிற்கும் செல்லும் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. அதிஷ்டவசமாக சிவில் யுத்த காலப் பகுதியிலும் அதன் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் தொடர்பான பதிலைத் தேடும் பலரை போல் அல்லாது, எங்கள் தந்தையின் உடலை மீட்டெடுக்க முடிந்தது. ஸ்ரீலங்காவில் வாழும் தமிழ் மக்களின் போராட்டத்தைப் பற்றி விவாதிக்காமல், எங்களது தந்தை பற்றி பேசுவது கடினம் என்பதுடன், சாத்தியமற்றது என்றே நாங்கள் உணர்கின்றோம்.போராதனை பல்கலைகழகத்தில் கல்வி கற்ற ஒரு இளைஞனாக ஸ்ரீலங்கா வாழ் தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளால் எமது தந்தை பாதிக்கப்பட்டார். அதன்விளைவாக தனது கல்வியை இடைநிறுத்த தீர்மானித்து, ஸ்ரீலங்கா அரசினால் கட்டமைப்பு ரீதியில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்தக் நோக்கத்திற்காக அவர் தனது வாழ்க்கையையும் எழுத்துக்களையும் அர்ப்பணித்தார். முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட வழிமுறையை வாழும் போது அவர் கண்டிருந்தால், அவர் எவ்வளவு மனமுடைந்திருப்பார் என்பதையும் அவரது பிள்ளைகளாகிய நாம் அடிக்கடி சிந்திக்கின்றோம். ஸ்ரீலங்கா அரசால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான அட்டுழீயங்கள், அவரின் மனமுடையச் செய்திருக்கும். அதனால் தான் எமது தந்தைக்கு மரியாதை செலுத்துவது மாத்திரமல்லாமல், யுத்தத்தின் போது தமது உயிரை நீத்த அனைவரையும் குறிப்பாக போரின் முடிவில் முள்ளிவாய்க்காலில் படுகாலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூர வேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணர்கின்றோம். தற்போதைய தருணத்தில் எங்களது தந்தைக்கான நீதி என்பது, முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களுக்கு ஸ்ரீலங்கா அரசு பொறுப்புக் கூற வேண்டும். ஆயுத முரண்பாட்டின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் தொடர்ந்தும் காணாமல் போயுள்ள தமது அன்புக்குரியவரிய தமிழர்களின் குடும்பங்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம். தொடர்ந்து இடம்பெயர்ந்துவாழும் குடும்பங்களுக்கும் வடக்கு கிழக்கில் அரச ஒடுக்குமுறையின் கீழ் வாழும் அனைவருக்கும் நீதி அவசியம். அவரின் பிள்ளைகளாக நாம், எங்களை பாதுகாத்து, எங்களுக்கு அடைக்கலம் கொடுத்து, சலுகை பெற்ற வாழ்க்கையை வழங்கிய மிகவும் அன்புக்குரிய தந்தையாக அப்பாவை நாம் நினைவில் வைத்துக்கொள்கின்றோம். பொருளாதார ரீதியாக சிரமப்படும் தனக்கு தெரிந்த மாணவர்களுக்கு நிதி உதவிகளையும் அவர் வழங்கியுள்ளார். இருப்பினும் அவரது குடும்பத்தை விடவும் தேவை உள்ளவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதும், தனது எழுத்துக்கள் மூலம் தனது மக்களின் இறையாண்மையை பாதுகாப்பது, அவரது மிக உயர்ந்த குறிக்கோளாக இருந்தது. பல்வேறு உயிர்அச்சுறுத்தல்களை எதிர்கொண்டபின்னரும் கூட வெளிநாட்டிற்கு குடிபெயர்வதற்கு மறுத்த அவர், தனது பணிகள் ஸ்ரீலங்காவிலேயே இடம்பெறும் எனவும் வாதிட்டிருந்தார். பின்நோக்கி பார்க்கும் போது, மிகவும் நேசித்த விடயத்தை செய்து, அப்பா மரணித்தமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.தமிழ் மக்களின் சுயாட்சிக்கான அவரது போராட்டம் ஒருநாள் நிதர்சனமாகும் என நம்புகின்றோம். வைஷ்ணவி சிவராம், வைதேகி சிவராம், சிவராம் அன்றூ சேரலாதன் http://globaltamilnews.net/2020/141892/
 17. பிரித்தானியாவில் கொரோனா உயிரிழப்பு 26,097 – முதன்முறையாக பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சமூகத்தில் ஏற்பட்ட இறப்புகள் உட்பட்ட புள்ளிவிவரங்கள் வெளியீடு April 29, 2020 பிரித்தானியாவில் இன்றுவரை கொரோனா வைரஸ் காரணமாக 26,097 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதன்முறையாக இன்று வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. முன்னதாக, ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை மட்டுமே அரசாங்கம் வெளியிட்டிருந்தது. முதன்முறையாக பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சமூகத்தில் ஏற்பட்ட இறப்புகள் உட்பட்ட புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று, மருத்துவமனை இறப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 21,678 ஆக இருந்த நிலையில் இன்று குறித்த எண்ணிக்கையை 4,419 ஆல் அதிகரித்துள்ளது இதனையடுத்து ஐரோப்பாவில் மிக அதிகமான இறப்பு விகிதங்கள் பிரித்தானியாவில் உள்ளதாக சுட்டிக்கட்டப்பட்டுள்ளது. இதேவேளை அடுத்த வாரம் பூட்டுதல் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்படும்போது சில சமூக தொலைதூர கட்டுப்பாடுகளை நீக்குமாறு வலியுறுத்தப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. #பிரித்தானியா #கொரோனா #உயிரிழப்பு #புள்ளிவிவரங்கள் http://globaltamilnews.net/2020/141884/
 18. கோவிட் 19: அரசாங்கத்திடம் பகிரங்கமாக எட்டுக் கேள்விகள் April 29, 2020 தமிழ் சிவில் சமூக அமையம் Tamil Civil Society Forum 29.04.2020 கோவிட் 19: அரசாங்கத்திடம் பகிரங்கமாக எட்டுக் கேள்விகள். ஒரு பொது சுகாதார அபாயக் காலப் பகுதியில் அவ்வபாயத்தை எதிர்கொள்வது தொடர்பில் பொதுத் தொடர்பாடல் (public communication) வெளிப்படையாகவும் (transparent) உண்மையாகவும் (accurate) இருத்தல் வேண்டும். பேரிடர் காலங்களில் அரசாங்கம் சொல்வதையும் செய்வதையும் குடிமக்களும் சிவில் சமூகமும் வெறுமனே நுகர்ந்து கொண்டு இருக்க முடியாது. சனநாயகம் என்பது பொது வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பின்பற்றப்பட வேண்டும். கேள்வி கேட்பது பேரிடர் காலங்களில் சுமையாகக் கருத்தப்படக் கூடாது. கோவிட் 19 அபாயத்தை முறையாக எதிர்கொள்ள – பொது நலனை முன்னிறுத்த கேள்விகள் கேட்கப்படுவது அவசியமானது. அந்த வகையில் பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்க வேண்டுமென நாம் கோருகின்றோம். 1. பொதுவாக உலகமெங்கும் ஊரடங்கை தளர்த்தும் அல்லது முடிவுக்கு கொண்டு வரும் உபாயமானது ((exit strategy) ) விஞ்ஞான ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூகத் தொற்று வீதம் (; (rate at which the virus is transmitted) ) கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பட்சத்தில் ஊரடங்கு தளர்த்தப்படலாம். அதாவது புதிதாக இனங்காணப்பட எதிர்பார்க்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அவர்களை பராமரிப்பதற்கு எம்மிடம் உள்ள பொது சுகாதார வளங்களோடு ஒப்பிடும் போது சமாளிக்கத்தக்கதாக அமையும் போதே ஊரடங்கு தளர்த்தப்படலாம் என்பது உலகளாவிய ரீதியில் ஊரடங்கை தளர்த்துவதற்கான அளவுகோலாக, நடைமுறையாக இருக்கின்றது. இலங்கையில் தற்போது சமூக தொற்று வீதம் என்ன? அது எம்மிடம் உள்ள பொது சுகாதார வளங்களோடு ஒப்பிடும் போது சமாளிக்கத்தக்கதாக அமைந்துள்ளதா? எந்த தரவுகளின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டது? 2. சமூகத் தொற்று வீதம் தொடர்பில் உண்மையான தரவுகளை பெற்றுக் கொள்ள பரிசோதனைகளை ((testing) ) அதிகரிக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது. இலங்கையில் செய்யப்படும் பரிசோதனைகளின் வீதம் அதிகரித்துள்ளதா? பரிசோதனைகளை செய்வதற்கான உபகரணங்களை (testing kits) ) வாங்குவதற்கு இலங்கை போதுமானளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதா? தொற்றுக்கான குணங்குறிகள் இல்லாதவர்களிடமும் பரிசோதனைகளை செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளதா? இல்லையெனில் உண்மையான தொற்றுவீதம் என்ன என்பதனை பொது சுகாதாரத் துறை எவ்வாறு கண்டறிகின்றது? 3. ஊரடங்கு 19.04.2020 அன்று பெரும்பாலான மாவட்டங்களுக்கு தளர்த்தப்பட்டது. ஊரடங்கை தளர்த்துவதற்கான திகதித் தெரிவு 20.04.2020 அன்று தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் திகதியை நிர்ணயிப்பதற்கான கூட்டத்தை இலக்கு வைத்து நிர்ணயிக்கப்பட்டதா? ஊரடங்கை உடனடியாக தளர்த்த வேண்டாம் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பரிந்துரை செய்திருந்தும் அதனை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை? 4. தொற்று மீள உச்சம் பெறாமல் தடுக்கும் குறிக்கோளை தக்க வைத்துக் கொண்டு மீண்டும் இயல்பு நிலைக்கு படிப்படியாக செல்ல அரசாங்கத்திடம் முறையாக திட்டம் உண்டா? அவசரப்பட்டு மே 11, 2020 அன்று பாடசாலைகளும் பல்கலைக்கழகமும் ஆரம்பிக்கப்படும் என அறிவித்தது (பிறகு பின் வாங்கியது) ஏன்? பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மீளத் திறக்கும் பட்சத்தில் அவற்றில் சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்த அரசாங்கத்தின் திட்டமென்ன? சமூக இடைவெளியை சாத்தியப்படுத்த தேவைப்படும் நிதி வளங்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதா? 5. இராணுவத்தினால் நடத்தப்பட்ட தனிமைப்படுத்தும் நிலையங்களில் பின்பற்றப்படும் நியமங்கள் என்ன? இராணுவத்தினால் தனிமைப்படுத்தும் நிலையங்களை எங்கு அமைப்பபது என்ற முடிவு பொது சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டல்ல் எடுக்கப்படுகின்றதா? இந்நிலையங்களை நடத்தும் பொறுப்பை பொதுச் சுகாதார உத்தியோகஸ்தர்களிடம் ஏன் விட முடியாது? இடர் காலப் பணி என்பதற்கப்பால் பொது சுகாதாரப் பிரச்சனையை கையாள, தலைமை தாங்க இராணுவத்தினருக்கு அதிகாரம் அளித்தது ஏன்? அவர்களுக்கு அது தொடர்பில் இருக்கும் பயிற்சி என்ன? 6. மீள தொற்றுக்கள் உத்வேகம் பெரும் சூழலில் மீள ஊரடங்கு ஒன்று தேவைப்படும் பட்சத்தில் நாளாந்த ஊதியம், மற்றும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்கள் பசியால் வாடாதிருக்க அரசாங்கத்தின் திட்டமென்ன? சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கிய கொடுப்பனவை தாண்டி பசி பட்டினியை கையாள அரசாங்கம் தயார் நிலையில் உள்ளதா? 7. ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு இது வரை என்ன? இதன் தாக்கம் எத்தகையது? அதை எதிர்கொள்ள அரசாங்கத்தின் திட்டமென்ன? 8. ஊரடங்கு உட்பட கோவிட் 19 தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் உரிய சட்ட முறை வழி செயற்படுத்தப்படாமைக்கு அரசாங்கம் கூறும் காரணம் என்ன? கோவிட் 19 வுக்கு செலவு செய்யப்படும் நிதி பாராளுமன்றினால் அங்கீகரிக்கப்படாமல் செலவு செய்யப்படுவது பொது நிதி கையாளுகை தொடர்பில் மோசமான முன்னுதாரணத்தை உருவாக்கி விடாதா? மேற்கண்ட கேள்விகள் உணர்த்துவது யாதெனில் கோவிட் 19ஐ எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் அரசியலை பிரதானப்படுத்துகின்றது என்பதையே ஆகும். மேற்படி கேள்விகளுக்கு அரசாங்கம் விடை பகர வேண்டும். கோவிட் 19 ஐ இது வரை எதிர்கொண்ட விதம் தொடர்பிலும் இனி எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ளவை தொடர்பிலும் விரிவான வெள்ளை அறிக்கையை அரசாங்கம்; பொது வெளியில் முன் வைக்க வேண்டும். (ஒப்பம்) (ஒப்பம்) அருட்பணி வீ. யோகேஸ்வரன் கலாநிதி. குமராரவடிவேல் குருபரன் இணைப் பேச்சாளர் இணைப் பேச்சாளர் தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் சிவில் சமூக அமையம் http://globaltamilnews.net/2020/141877/
 19. க.பொ.த. சாதாரணம் – சரியான முறையில் எதிர்கொள்வோம்! ======================================= இலங்கையில் மீண்டும் ஒருமுறை மாணவர்கள் பலருக்கு மகிழ்ச்சியையும் பலருக்கு கவலையையும் தரக்கூடிய சூழ்நிலை இப்போது. கல்விப் பொதுத் தராதரப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. வழமைபோல அனைத்துப் பாடங்களிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களைப் பலரும் பாராட்டித் தள்ளவும், பாடசாலைகள் தமது சாதனைப் பட்டியலை மீண்டும் தூக்கிப் பிடிக்கவும் இன்னொரு சந்தர்ப்பம் வந்துள்ளது. அதேபோல பிரபல பாடசாலைகள் தாம் பொறுக்கியெடுத்து வைத்துக்கொண்ட மாணவர்களின் சிறந்த பெறுபேறுகளை கல்வெட்டுகளில் பொறித்துக்கொள்வார்கள். ஊரெங்கும் தண்டோரா போட்டுச் சொல்வார்கள். அதே நேரம் இந்தப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளைப் பெறாத மாணவர்கள், அதையிட்டு அதிகம் வருந்தத் தேவையில்லை. உயர்கல்விக்குத் தேவையான பெறுபேறு கிடைக்காவிட்டால் மீண்டும் ஒருமுறை கவனமாகப் படித்து அடுத்த வருடம் அந்தப் புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் சிலரின் பெற்றோர் உங்களிடம் கோபப்படக் கூடும். அது தங்கள் பிள்ளை படித்தும் நல்ல பெறுபேறு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பெற்றோர் திட்டினால் மனம் கலங்கி விடாதீர்கள். அடுத்தமுறை உங்களை நிரூபித்துக் காட்டுங்கள். உங்கள் நண்பர்களுடன் ஒப்பிட்டோ, அல்லது நீங்கள் எதிர்பார்த்தபடி சிறந்த பெறுபேறுகள் கிடைக்கவில்லை என்றோ நினைத்து கவலைப்பட்டு விபரீத முடிவு எதனையும் தயவுசெய்து எடுத்துவிடாதீர்கள். எங்கள் ஒவ்வொருவர் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்கிறது என்பதை நம்புங்கள். இந்தப் பரீட்சை உங்கள் பிறப்புக்கான காரணத்தை அளவிடும் கருவியில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பெற்றோர்களே ! ---------------------------------- பெற்றோர்களே உங்கள் பிள்ளை நீங்கள் எதிர்பார்த்த பெறுபேறைப் பெறவில்லை என்று கவலைப்படுவதில் ஓரளவு நியாயமிருக்கிறது. ஆனால் அதற்காக பிள்ளையின்மேல் கோபப்படாதீர்கள். சாதாரண தரப் பரீட்சையில் அதிசிறந்த பெறுபேறுகளை எடுக்காத எத்தனையோ மாணவர்கள் உயர்தர பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகள் பெற்று தாம் விரும்பிய துறையில் கற்க பல்கலைகழகம் சென்றமை வரலாறு. கடந்த காலங்களில் கல்வி தொடர்பாக பெற்றோர் திட்டியமையால் சில பிஞ்சுகள் தற்கொலை செய்துகொண்டதை நீங்களும் அறிவீர்கள். உங்கள் கோபம் உங்கள் பிள்ளையை தவறான முடிவெடுக்க வைத்துவிட்டால் உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் துன்பப்படுவீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உறவுகள் நண்பர்கள் என்ன சொல்லுவார்கள் என்று நினைத்து மன உளைச்சல்பட வேண்டாம். அவர்களின் பிள்ளைகளின் பெறுபேற்றுடன் ஒப்பிட்டு உங்கள் பிள்ளைகளைத் திட்டவும் வேண்டாம். உங்கள் பிள்ளையின் முதலாவது நம்பிக்கைத் தூண்களே நீங்கள்தான். உங்கள் பிள்ளை குறைவான பெறுபேறோ பரீட்சையில் தோல்வியோ அடைந்திருந்தால் நீங்கள்தான் ஆறுதல் சொல்லவேண்டும். அடுத்தமுறை பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியப்படுத்த வேண்டும். இந்தப் பரீட்சை முடிவுகள் மட்டுமே உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது என்று நினைத்து விடவேண்டாம். அவர்கள் கல்வியில் முன்னேற வேறு வழிகளும் இருக்கின்றன. இறுதியாக மற்றவர் பிள்ளைகளின் பெறுபேறுகளை அறியத் துடிப்பவர்களுக்கு, தயவுசெய்து மற்றவர் எவ்வளவு பெற்றுக்கொண்டார்கள் என்பதை அறிய அவதிப்படாதீர்கள். உங்கள் உறவினரின் பிள்ளை நல்ல பெறுபேறு எடுத்தால் அவர்களே உங்களுக்கு அறிவிப்பார்கள். இல்லையெனில் பெறுபேறு குறைவு என்பதைப் புரிந்துகொண்ட அமைதியாக இருங்கள். குழந்தைகள் கல்வி தொடர்பாக பெற்றோரால் தண்டிக்கப்பட நீங்கள் காரணமாக இருக்காதீர்கள்.
 20. மேல் வரிசையில் இடமிருந்து வலமாக இரண்டாவது Shane Warne! மேல் வரிசை ஐந்தாவது பாகிஸ்தானிய சுழல்பந்து வீச்சாளர் Mushtaq Ahmed. கீழ் வரிசையில் இடமிருந்து வலமாக கடைசியாக உள்ளவர் Mitchell Johnson. மற்றவர்களை அடையாளம் காண மேலதிக clues தேவை. குறைந்தது எந்த நாட்டினர் என்று சொன்னால் தேடலாம்
 21. ஈழத்து நாடக கலைஞர். ஏ.ரகுநாதன்!….முல்லைஅமுதன். ஈழத்தின் நாடக,திரைப்பட வரலாற்றில் மறந்திவிடமுடியாத மாபெரும் கலைஞன் ஏ.ரகுநாதன் என்பதில் மாற்றுக்கருத்தேதுமில்லை. வாழ்நாளில் சாதனைகளை நிகழ்த்திக்காட்டியவர்.05/05/1935இல் மலேசியாவில் பிறந்தாலும்,தன் சிறுபராயம் தொட்டே யாழ்ப்பாணம் நவாலியில் தன் தாயுடன் வாழ்ந்துவந்தார்.தனது கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியில் பயின்றார்.நாடகக் கலைக்குப் பேர்போன மானிப்பாய்,நவாலியில் தன் ஆர்வத்தை வெளிப்படுத்த மானிப்பாய் இந்துக் கல்லுரி பெரிதும் உதவியது. நானும் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் பயின்ற காலத்தில் கல்லூரி இல்லங்களிடையே நடைபெறும் நாடகப்போட்டிகளில் மத்தியஸ்தராக,பார்வையாளராக,சிறப்பு விருந்தினராக வந்து நம்மைப்போன்றவர்களை ஊக்குவித்ததும் இன்றும் மறக்கமுடியாதது. சுந்தரர் இல்ல போட்டி நாடகமான ‘மூன்று துளிகள்’ கலைஞர் (அமரர்)நற்குணசேகரன் (1933 – 2020) இயக்கினார்.நாடக ஒத்திகையின் போதும், அதன் பின்னரும் நாடகம் பற்றிய பல அரிய விடயங்களைப் பகிரும் ஒரு நண்பராய் திரு.ஏ.ரகுநாதன் ஆனார்.கலை ஆர்வத்தில் தன் அரச பதவியே இராஜினாமச் செய்திருந்தார். கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் நாடகங்களை அரங்கேறிய அனுபவங்களைப் பலதடவைகள் என்னுடன் பகிர்ந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் லிபர்ட்டி பிலிம்ஸாரின் ‘உறங்காத உள்ளங்கள்’ திரைப்படத்தை ஆரம்பித்து அதற்கான சில காட்சிகளும் படமாக்கப்பட்ட சூழலில் அது தொடரமுடியாது போனது. ஏற்கனவே கடமையின் எல்லை,நிர்மலா,நெஞ்சுக்கு நீதி,தெய்வம் தந்த வீடு, புதிய காற்று போன்ற ஈழத்துத் திரைப்படங்களில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றிருந்தாலும் நாடகமே தன் மூச்சு என அடிக்கடி சொல்வார். கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் பாராட்டுடனும்,பயிற்சியுடனும் ‘தேரோட்டி மகன் உட்பட பல நாடகங்களில் நடித்தார்..தேரோட்டி மகன், சாணக்கியன், வேதாளம் சொன்ன கதை, அவனைக் கொன்றவள் நீ, சலோமியின் சபதம், பார்வதி பரமசிவம், ஆராவமுதா அசடா எனப் பல நாடகங்கள் பலரின் பாராட்டைப் பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 1966இல் வெளிவந்த கடமையின் எல்லை திரைப்படத்திற்குப் பிறகு 1968இல் நண்பர்களுடன் இணைந்து ‘நிர்மலா எனும் திரைப்படத்தைத் தயாரித்தார்.தமிழக திரைப்படங்களின் அனுபவம் மிக்க இவரின் நண்பரின் கைவண்ணமும் இணைய நல்லதொரு படமாக வெளிவந்தது.நல்ல விமர்சனங்களைப் பெற்றுத்தந்தாலும் நம்மவர்களின் தென்னிந்திய சினிமாமோகம் தயாரிப்பாளரின் கையைச் சுட்டுக்கொள்ளும் நிலைமை வந்தது.ஆனாலும் ரகுநாதனின் உற்சாகம் அதிகமாகவே ஏற்பட முனைப்புடன் செயல்பட்டார்.அதன் தொடர்ச்சியாகவே வி கே டி பொன்னுச்சாமியின் தயாரிப்பில் இலங்கையில் முதன் முதலில் சினிமாஸ்கோப் வடிவில் வெளிவந்த ‘தெய்வம் தந்த வீடு திரைப்படத்தை 1978இல் வெளியிட்டார்.ஆர்வமுள்ளவர்களை,அனுபவம் மிக்கவர்களை தேடிச்சென்று ஊக்கம் கொடுப்பதுடன்,தன்னுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் ஏற்படுத்தியவர். பலதிரைப்படங்கள் வெளிவரவிருந்த சூழல்,பல ஆரம்ப பூஜைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட படங்கள் எனச் சிறப்பான வெளிச்சம் வரவிருந்த சூழலில் தான் 83 ஜூலைக்கலவரம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது.வாழமுடியாத சூழலிலே புலம்பெயர்ந்தார். தமிழகத்தில் இருந்த காலங்களிலும் தன கலை முயற்சியை விடவில்லை. பின்,பாரிஸ் வந்துசேரவே,கலைகள்,கலைஞர்கள் சங்கமிக்கும் நாடாக பாரீஸ் இவருக்காகியமையினால்,நாடகம்,குறும்படங்கள்,திரைப்படங்கள் எனத் தொடர்ந்தார். அவற்றுள் இன்னுமொரு பெண், முகத்தார் வீடு, பேர்த்தி,நினைவு முகம், மௌனம்,தயவுடன் வழிவிடுங்கள், தீராநதி,மீளுதல்,தொடரும்,முள்ளும் மலராகும்,மாறுதடம்,பூப்பெய்தும் காலம்,தொடரும், அழியாத கவிதை,இனியவளே காத்திருப்பேன்(2012), WITNESS IN HEAVEN சாட்சிகள் சுவர்க்கத்தில் (2018)குறிப்பிடத்தக்கன. எனது வீட்டுக்கு வந்தபோது நிறையப் பேசிய பொழுதுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நமது கலைஞர்களை ஒன்றிணைத்து நீண்டது திரைத் தொடரை ஆரம்பிக்க இருப்பதாகச் சொன்னார்.லண்டன் ஈழவர் திரைக்கலை மன்றம்/ஈழவர் சினி ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் அமைப்பினரும் இணைந்து செயல்பட்டதால் அங்கும் ரகுநாதனைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.2009இற்குப் பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழலினால் ஈழவர் திரைக்கலை மன்ற செயல்பாடுகள் பற்றிச் சரிவரத்தெரியாததினால் ரகுநாதனைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.ஆனால் இடையே தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு பேசுவதுண்டு எனினும் பிரான்ஸ் செல்லும் காலங்களிலும் சந்திக்கும் சூழலும் ஏற்படவில்லை. எழுத்தாளர் விபரத்திரட்டு ஒன்றினை வெளியிடும் ஆர்வத்தில் தொடர்புகொண்டு சில தகவலைப் பெற்றுக்கொண்டேன். ஈழத்து நூல் கண்காட்சியினை ஆரம்பிக்கவென ஆயத்தங்களில் இறங்கியபோது முதலாவது வாழ்த்தைத் தெரிவித்திருந்தார்.அதனையொட்டி ஆரம்பிக்கப்பட்ட காற்றுவெளியில் அவரின் நேர்காணலை வெளியிடவேண்டும் என்கிற ஆதங்கத்தைச் சொல்லியிருந்தேன். முடியாதுபோயிற்று. இலங்கையிலிருந்தபோது எப்படி என்னுடன் பழகினாரோ அதே போலவே பழகினார்.காற்றுவெளி பற்றிப் பேசிய போதே இலங்கையில் நிழல்(1968) சஞ்சிகை நடத்தியதாகச் சொன்னார்.இதனை அறிந்திருக்கவில்லை.புனிதலிங்கத்தின் ‘திரை’ சஞ்சிகையே ஓரளவு திரையுலக செய்திகளைத் தந்ததாக அறிவேன்.இன்னும் வந்திருக்கலாம். பாரீஸ் வந்தபின் ‘பாரிஸ் முரசு’பத்திரிகைக்கு ஆசிரியாராக இருந்தததாகச் சொன்னார்.சில இதழ்களையும் பார்த்திருக்கிறேன் .பல அனுபவங்களைப் பெற்றவரான ரகுநாதனிடம் வழமையாக எல்லோரிடமும் கேட்பது போல அவ்வனுபவங்களைக் கொண்டு நாவலாக எழுதலாமே எனக் கேட்டிருந்தேன். பார்ப்போம் என்றார்.எனினும் ’ தமிழன்’ இதழில் கலை அனுபவங்களை ‘ஒரு ஒப்பனை இல்லாத முகம்’ எனும் பெயரில் எழுதியாகச் சொன்னார். அதே போல’எனக்காகப் பூக்கும்(1999)’ நாவலையும் தந்தார். திரைப்படத்திற்காக நினைத்திருந்ததை நாவலாக்கியதாவும் சொன்னார்.இன்னும் எழுதக்கூடிய அனுபவங்களைக் கொண்டிருந்தவரால் எழுதமுடியவில்லை என்றே நினைக்கிறேன். சிறுகதைகளும்,கவிதைகளும் எழுதியிருப்பாதாக அறியும் பட்சத்தில் அவரின் படைப்புக்களைத் தேடும் முயற்சியும் படைப்பாளர்களின் கைகளுக்கு வருகின்றது. .ஐரோப்பிய கலைஞர்களின் ஒருங்கிணைப்பில் ‘எந்தையும் தாயும்’,’தூண்டில்காரன்’ போன்ற நாடகங்களிலும் நடித்திருந்தார். பறாளையூர் பிறேமகாந்தனின் ரோஜாப்பூ இதழுடனும் தொடர்பில் இருந்தார்.தனது பங்களிப்பு இல்லையெனினும் அது நாடகமெனினும்,திரைப்படமெனினும் அதன் வெளியீட்டிற்கு உதவியாக இருந்திருக்கிறார் என அறியமுடிகிறது.வாடைக்காற்று திரைப்படத்திற்கும் அவ்வாறே உதவியவர் என அறியமுடிகிறது. நல்ல வாசிப்பாளரும் கூட.ஆனாலும் நாவல்களை,சிறுகதைகளைப் படமாக்கும் ஆர்வம் இல்லாதவராக இருப்பினும்,திரைக்கேற்ப கதைகள் இருப்பின் படமாகலாம் என்றும் சொல்லியிருந்தார். மானிப்பாய் இந்துக்கல்லூரியில் நிர்மலாவின் புதிய பிரதியை மாணவர்களுக்காக திரையிட்டார். நாடகத்திற்கான நடிப்பு,காட்சியமைப்பு,அதன் கட்டமைப்பு வேறு..திரைப்படத்திற்கான நடிப்பு,வடிவமைப்பு வேறு.அதனைக் கற்றுணர்ந்தவனே நல்ல நடிகனாக பிரகாசிக்க முடியும் என்பார். எனது நாடக முயற்சிக்கெல்லாம் ஆலோசனை தந்தவர்களில் பா.சத்தியசீலன்,வி.ரி.ஏ.விஷ்வா இவர்களுடன் கலைஞர்.ஏ.ரகுநாதனும் ஒருவர்.எழுத்தாளர்.அப்பச்சி மகாலிங்கம் அவர்களையும் அறிமுகம் செய்து தந்தார். இன்று இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கையில் வெகுதூரம் வந்துவிட்டோம் எனினும் இவர்களிடமிருந்து பெற்ற அனுபவமே கடந்துவந்த பாதைகளின் சுவடுகளாய் அமைந்தன என்பேன். வாழ்நாள் சாதனையாளரான கலைஞர்.ஏ.ரகுநாதன் இன்று நம்மிடையே இல்லை என்பது நெஞ்சம் கனக்கின்ற நாளாய் ஆகின்றது.வயதின் எல்லைகளும்,நோய்களும் உடலை அலைக்கழிக்கும் போது கனவுகளுக்கான ஆயுளும் குறைந்தே போகுமோ? எவ்வளவுதான் சாதித்திருந்தாலும்,எத்தனை உயரத்தின் உச்சிக்குப் போனாலும் ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் நிறைவடையாத கனவுகளும் இருந்திருக்கும். எனினும், கலைஞர்.ஏ.ரகுநாதன் நமது ஈழத்துக் கலை உலகின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் என்பதே உண்மை. கலையுலகின் வரலாற்றை இவர் பதிவுசெய்திருந்தார்.இவரின் வரலாற்றைக் காலம் பதிவு செய்யும்.ஈழத்தின் நாடக,திரைப்பட கலைஞர்களை மறந்துவிட்டதுபோல ரகுநாதனின் பணியை கலைஞர்கள் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும். முல்லைஅமுதன் 22/04/2020 https://akkinikkunchu.com/ஈழத்து-நாடக-கலைஞர்-ஏ-ரகுந/
 22. கலைஞர் ஏ. ரகுநாதன் மறைந்தார்!… முருகபூபதி. அஞ்சலிக்குறிப்பு: ஈழத்து தமிழ்த்திரைப்படங்களின் வளர்ச்சியின் ஊடாக ஒரு நினைவுப்பகிர்வு முருகபூபதி . இலங்கையின் மூத்த தமிழ் நாடக, திரைப்படக்கலைஞர் ஏ.ரகுநாதன் பிரான்ஸில் மறைந்தார் என்ற அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. சமீபகாலமாக உலகெங்கும் அச்சுறுத்திவரும் கண்ணுக்கு புலப்படாத எதிரி, எங்கள் தேசத்தின் கலைஞனையும் புலத்தில் காவுகொண்டுவிட்டது. இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு முற்பகுதியில் பாரிஸ் சென்றபோது, அங்கிருக்கும் நண்பர் எழுத்தாளர் ‘ ஓசை ‘ மனோகரனுடன் ரகுநாதனைப் பார்க்கச்சென்றேன். பாரிஸிலும் வைரஸின் தாக்கம் உக்கிரமடைந்தபோது, அங்கிருக்கும் கலை, இலக்கிய நண்பர்களிடம் ரகுநாதன் குறித்தும் விசாரிக்கத்தவறுவதில்லை. காரணம், அவர் கடந்த சிலவருடங்களாக சிறுநீரக உபாதையினால் தொடர்ந்து சிகிச்சைக்கு சென்று வந்துகொண்டிருந்தவர். கடந்த சில நாட்களாக நான் அடிக்கடி நினைத்துக்கொண்டிருந்த நண்பர் ரகுநாதனும் தற்போது நிரந்தரமாக நினைவுகளாகிவிட்டார் என்பதை கனத்த மனதுடன் உள்வாங்கிக்கொண்டு இந்தப்பதிவை எழுதுகின்றேன். அன்றைய தினம் எம்முடன் மனோகரனின் நண்பர் ஶ்ரீபாஸ்கரனும் உடன்வந்தார். அன்று, ரகுநாதன் எம்மைக்கண்டதும் மிகுந்த உற்சாகத்துடன் தான் சம்பந்தப்பட்ட நிர்மலா, தெய்வம் தந்த வீடு முதலான திரைப்படங்களில் ஒலித்த பாடல்களை பாடத்தொடங்கிவிட்டார். நண்பர்களைக்கண்டதும் அவர் உற்சாகமுற்றார். அவுஸ்திரேலியா சிட்னியில் கவிஞர் அம்பியின் 90 வயது விழா நடக்கவிருப்பது பற்றிச்சொன்னதும், பல விடயங்களை நனவிடை தோய்ந்தார். சிறுநீரக சிகிச்சைக்காக அடிக்கடி அவர் மருத்துவமனை சென்று வருகிறார் என்பதை அப்போதுதான் அறிந்தேன். நண்பர்களைக்கண்டதும் அவருக்கு வந்த உற்சாகத்தை எவ்வாறு வர்ணிப்பது? முதுமையிலும் தனிமையிலும் இருப்பவர்களுக்கு நண்பர்களின் சந்திப்புத்தான் சிறந்த ஊக்கமாத்திரை! அண்மையில் நான் எழுதிய உள்ளார்ந்த ஆற்றலுக்கு முதுமை தடையில்லை என்ற ஆக்கத்திலும் நண்பர் ரகுநாதன் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். அதனை அவர் பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை. இலங்கையில் தமிழ் சினிமா, நாடக வளர்ச்சிக்கு பாடுபட்ட ரகுநாதன், புகலிடத்திலும் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தியவர். வயதும் மூப்பினால் வரும் பிணிகளும் அவரை முடங்கியிருக்கச்செய்தாலும், நினைவாற்றலுடன் பல சம்பவங்களை அன்றைய தினம் நினைவுகூர்ந்தார். அவரது நெருங்கிய நண்பர் கவிஞர் அம்பியின் 90 விழா மலருக்கும் அவர் ஒரு ஆக்கம் எழுதியதும் அவரது துணைவியாரின் துணையினால் என்பதை பின்னர்தான் அறிந்தேன். கலைஞர் ரகுநாதனை நான் முதல் முதலில் சந்தித்தது நேற்று நடந்த நிகழ்வுபோன்று இன்னமும் எனது மனதில் பசுமையாக பதிந்திருக்கிறது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் ரகுநாதன், கொழும்பில் ஒரு அரசாங்கத் திணைக்களத்தில் பணியிலிருந்தார். ஒரு நாள் மதியம் நண்பர் மு.கனகராஜன் என்னையும் அழைத்துக்கொண்டு ரகுநாதனிடம் வந்தார். அங்கே கலைஞர் டீன்குமாரும் இன்னும் சிலரும் அச்சமயம் இலங்கையில் வெளியான ஒரு தமிழ்த்திரைப்படக்காட்சிகள் தொடர்பாக உரையாடிக்கொண்டிருந்தனர். அங்கே டீன்குமார்தான் அதிகமாகப்பேசினார். குறிப்பிட்ட படத்தைப்பற்றிய தமது கடுமையான விமர்சனங்களை மிகவும் கேலியாக முன்வைத்துக்கொண்டிருந்தார். ரகுநாதன் தமது ஆசனத்தில் அமர்ந்தவாறே மிகவும் அமைதியாகச்சொன்னார்:- “ நண்பர்களே எங்கள் நாட்டில் இன்னமும் தமிழ்த்திரைப்படத்துறையானது நாம் எதிர்பார்த்தவிதமாக வளர்ச்சியடையவில்லை என்பது உண்மைதான். அதற்கு தென்னிந்திய தமிழ்ப்படங்களின் வருகையும் ஒரு காரணம். எனினும் நாம் மேலும் மேலும் கடுமையாக இந்தத்துறையில் உழைக்கவேண்டும். அத்துடன் நாமும் தென்னிந்தியப்பாணியிலேயே படம் தயாரிப்பதை விடுத்து எமது நாட்டின் சூழலையும் எமது மக்களின் ஆத்மாவையும் பிரதிபலிக்கும் கதைகளை தெரிவுசெய்து தரமான படங்களை தயாரிக்கவேண்டும். தோட்டக்காரி இங்கு வெளியான முதலாவது தமிழ்த்திரைப்படம். இந்த நாட்டிலும் தமிழ்ப்படங்களை தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கையை எமக்கு ஊட்டிய படம். எனவே இந்த நம்பிக்கைகளை உள்வாங்கிக்கொண்டு நாம் தீவிரமாக உழைக்கவேண்டும்” அந்தச்சந்திப்பில் நான் எதுவுமே பேசவில்லை. அக்காலப்பகுதியில்தான் நான் எழுதத்தொடங்கியிருந்தேன். ரகுநாதனின் அலுவலகத்திலிருந்து வெளியே வரும்போது நான் நண்பர் கனகராஜனிடம் சொன்னேன்:- “ ரகுநாதனை இலங்கை கலையுலகம் காப்பாற்றவேண்டும். அவரை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.” ஆனால், எனது விருப்பம் நிறைவேறவே இல்லை. உள்ளார்ந்த கலை – இலக்கிய படைப்பாற்றல் மிக்க ஒருவர் இந்த பூமிப்பந்தின் எந்தத் திக்கிற்குச்சென்றாலும் தமது ஆற்றலை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார் என்பதற்கும் ரகுநாதன் மிகச்சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். அவரது நிர்மலா படத்தை நான் பார்த்திருக்கவில்லை. ஆனால் அதில் ஒலித்த ‘கண்மணி…ஆடவா.. ‘ என்ற பாடலும் அதற்கு அமைக்கப்பட்ட இசையும் இன்றும் எனது காதுகளில் ஒலித்துக்கொண்டுதானிருக்கின்றன. அவரது ‘தெய்வம் தந்த வீடு’ படத்தை கொழும்பில் செல்லமஹால் திரையரங்கில் பார்த்தேன். இந்தப்படத்திற்காகவே அந்த நிறுவனம் சினிமாஸ்கோப் (அகலத்திரை) திரையை உருவாக்கியிருந்தது. ஒரு இலங்கைப்படத்திற்காக பல திரையரங்குகளில் அவ்வாறு அகலத்திரைகள் உருவாக்கப்பட்டதும் அதுதான் முதல் தடவை என நினைக்கின்றேன். அன்றைய காலகட்டத்தில், இலங்கையில் தமிழ்ப்படங்களை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தயாரித்து வெளியிடும்போது பல திரையரங்குகளில் தமிழக முன்னணி நடிகர்களான சிவாஜி அல்லது எம்.ஜி.ஆரின் படங்களைத்திரையிட்டு எமது கலைஞர்களின் உழைப்பில் உருவான படங்களை ஓரம்கட்டிவிடும் கலாசாரம் இருந்தது. அதுமட்டுமல்ல சிலோன் தியேட்டர்ஸ், மற்றும் சினிமாஸ் லிமிட்டட் , எஸ்.பி. எம். சவுண்ட் ஸ்ரூடியோ முதலான ஸ்தாபனங்களின் உரிமையாளர்கள் ( செல்லமுத்து, குணரட்ணம், எஸ். பி. முத்தையா ) தமிழர்களாக இருந்தும் அவர்கள் தயாரித்து வெளியிட்ட படங்கள் சிங்களப்படங்களே. இவ்வாறு சிங்களத் திரைப்பட ரஸிகர்களை திருப்திப்படுத்திக்கொண்டிருந்த வர்க்கம், மறுபுறத்தில் தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களை தருவித்து போட்டிபோட்டுக்கொண்டு வருவாய் தேடியது. இலங்கையில் திரைப்படக்கூட்டுத்தாபனம் தோன்றும் வரையில் அந்த முதலைகள்தான் கொடிகட்டிப்பறந்தன. சரி, திரைப்படக்கூட்டுத்தாபனம் தோன்றிய பிறகாவது இலங்கையில் தமிழ்த்திரைப்படங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக முன்னெடுக்கப்பட்டதா? அதுவும் நடக்கவில்லை. இன்று திருட்டு வி.ஸி.டி யுகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இதற்கு எதிராக உலகநாயகனும் சூப்பர் ஸ்டாரும் மம்முட்டியும் மோகன்லாலும் அமிதாப்பச்சனுட்பட விஜய், சூரியா, அஜித், விவேக், வடிவேலு உட்பட பலரும் குரல்கொடுத்து வருகிறார்கள். ஆனால், அன்று இலங்கை தமிழ்த்திரைப்படத்தின் வளர்ச்சிக்காக யார்தான் குரல்கொடுத்தார்கள்? அன்று தமிழர்களுக்கு ஒரு தாயகம் வேண்டும் என்று சத்தம்போட்ட தமிழர் விடுதலைக்கூட்டணியினர் கூட குரல் கொடுக்கவில்லை. இந்தத்துறையை ஆதரிக்கவில்லை. அவர்கள் ஈழத்து இலக்கிய வளர்ச்சி குறித்தும் அக்கறைப்படாதவர்களாகத்தான் இருந்தார்கள். இந்தப்பின்னணிகளுடன்தான் நாம் கலைஞர் ரகுநாதனின் உழைப்பையும் அவரது கலைத்தாகத்தையும் பார்க்கவேண்டும். 1974 இல் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தேசிய ஒருமைப்பாட்டு மகாநாட்டை கொழும்பில் நடத்தியபோது அதற்கு முன்னோடியாக நாடுதழுவிய ரீதியில் பல சந்திப்புக்கூட்டங்களையும் கருத்தரங்குகளையும் நடத்தியது. அச்சமயம் கொழும்பு தப்ரபேன் ஹோட்டலில் கலைஞர்களுடனான ஒரு சந்திப்பு நிகழ்வும் நடத்தப்பட்டது. அதனை முன்னின்று நடத்தியவர் கலைஞர் ரகுநாதன். அவருக்கு இலங்கை தமிழ்த்தேசியத்திலும் நம்பிக்கை இருந்தது அதேசமயம் தேசிய ஒருமைப்பாட்டிலும் நம்பிக்கை இருந்தது. ஒரு நல்ல கலைஞன் சிறந்த படைப்பாளி அப்படித்தான் இருப்பான். பலரும் இச்சந்திப்பில் உரையாற்றினார்கள். ரகுநாதன் இலங்கையின் அனைத்து இனக்கலைஞர்களின் சார்பிலும் அதேசமயம் அவர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பாகவும் உரையாற்றினார். எமது குரல்கள் எப்படித்தான் ஒலித்தபோதிலும் அவை அரசின் காதுகளுக்கோ அதிகார வர்க்கங்களுக்கோ எட்டுவதில்லை. அல்லது எட்டுவதற்கு தாமதமாகலாம். எனினும் கலைஞர்களும் படைப்பாளிகளும் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுத்தே வந்திருக்கின்றனர். 1983 ஜூலை கலவரத்தின்போது கொல்லப்பட்ட பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் வெங்கட் பிறப்பால் தமிழராக இருந்தபோதிலும் அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் சிங்கள திரைப்படங்களே. சினிமாஸ் லிமிட்டட் ஸ்தபானத்தின் உரிமையாளர் குணரட்ணம் அவர்களின் வத்தளை ஹெந்தளையிலிருந்த விஜயா ஸ்ரூடியோ சிங்கள தீயசக்திகளினால் தீயிட்டு கொளுத்தப்பட்டபோது அங்கே இருந்த எண்ணிலடங்கா திரைப்படச்சுருள் பெட்டிகளும் எரிந்து சாம்பராகியது. இதனை அறிந்த சிங்கள திரைப்பட கலைஞரும் தமிழர்களின் அபிமானம் பெற்ற அரசியல் வாதியுமான விஜயகுமாரணதுங்கா வீட்டிலிருந்து உடுத்த உடையுடன் (சாரத்துடன்) விஜயா ஸ்ரூடியோவுக்கு ஓடிச்சென்றார். ஆனால் அந்தத் திரைப்படச்சுருள்களை அவரால் காப்பாற்ற முடியாதுபோய்விட்டது. அதிலே பல ஈழத்து சிங்கள, தமிழ்ப்படங்கள் உட்பட தென்னிந்தியப்படங்களும் தகனமாகி சாம்பராகிவிட்டன. இந்தப்பின்னணிகளுடனும் ரகுநாதனின் வாழ்வையும் பணிகளையும் நாம் பார்க்கவேண்டும். 1980 களில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ரகுநாதனின் கலைப்பணியைப்பாராட்டி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அது அவருடனான எனது இரண்டாவது சந்திப்பு. அப்பொழுதும் அவருடன் விரிவாக உரையாட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பின்னாட்களில் அவர் தமிழ்நாட்டுக்கும் அதன்பிறகு அய்ரோப்பிய நாடொன்றுக்கும் சென்றுவிட்டதாக அறிந்தேன். ஆனால், தொடர்புகள் இருக்கவில்லை. கலைத்தாகத்துடன் ஒரு நாடோடியாக தமிழகம் – ஐரோப்பா என அவர் அலைந்தபோதிலும் தமிழ்ப்படங்கள், குறும்படங்கள் தயாரிக்கவேண்டும் என்ற அந்தத் தாகம் மட்டும் அவரிடம் தணியவே இல்லை. தமது கலைத்தாகத்தை வற்றச்செய்யாமல் திரைப்படங்கள், குறும்படங்கள் தயாரிப்பதிலும் இயக்குவதிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொண்டிருந்தேன். கலையரசு சொர்ணலிங்கத்தின் பிரதம சீடராகவும் அவர் விளங்கினார். அதனை நன்றியுணர்வோடு என்றென்றும் நினைவுகூர்ந்தபடி இருப்பவர்தான் ரகுநாதன். தமது தெய்வம் தந்த வீடு படத்திலும் கலையரசு அவர்களை ஒரு காட்சியில் நடிக்கவைத்திருந்தார். இறுதியாக 2009 ஆம் ஆண்டு மெல்பனில் நடந்த குறும்படவிழாவுக்கு வருகைதந்த அவர், குறிப்பிட்ட குறும்பட அரங்கு நிகழ்ந்த மண்டபத்தில் என்னை நீண்ட காலத்துக்குப்பின்னர் சந்தித்து மார்போடு அணைத்துக்கொண்டார். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா.? அப்பொழுது அவர் தமது மானசீக குரு கலையரசு சொர்ணலிங்கம் அவர்களைப்பற்றிய விரிவான நூலொன்றையும் எனக்குத்தந்தார். உலகின் எந்த திக்கிற்குச்சென்றாலும் தமது குருவை மறக்காமல்தான் தமது ஒவ்வொரு பணிகளையும் ரகுநாதன் தொடருகிறார் என்பதும் பலருக்கும் முன்மாதிரியானது. ரகுநாதனை எனக்கு முதல் முதலில் அறிமுகப்படுத்திய நண்பர் மு.கனகராஜன் அதற்குச் சில வருடங்களுக்கு முன்னர் மஹரகம மருத்துவமனையில் மரணப்படுக்கையிலிருந்துகொண்டு தமது மனைவி அசுந்தாவிடம் ஒரு சிறிய காகிதத்தை கொடுத்திருக்கிறார். தாம் மரணித்தவுடன் தகவல் அனுப்புமாறு இரண்டு பேருடைய பெயர்களை அதில் எழுதியிருக்கிறார். அதில் ஓன்று ரகுநாதனுடையது. மற்றது எனது பெயர். குறிப்பிட்ட சிறுதுண்டு காகிதத்தை திருமதி அசுந்தா கனகராஜன் எனக்கு அனுப்பியிருந்தர். இந்தத்தகவலை அன்றைய மெல்பன் சந்திப்பின்போது ரகுநாதனுக்குச்சொன்னேன். அவர் கனத்துப்போன மனதுடன் கண்கலங்க இந்தச்சோகமான தகவலை ஏற்றுக்கொண்டார். தமிழ் இலக்கிய உலகின் ஜாம்பவான் ஜெயகாந்தன் தமிழ்த்திரைப்படத்துறையின் தரத்தை சற்று உயர்த்த முயற்சித்தார். தமது உன்னைப்போல் ஒருவன், சில நேரங்களில் சில மனிதர், யாருக்காக அழுதான், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், காவல் தெய்வம் முதலான படங்களின் மூலம் அவர் தரமுயர்த்தப்பாடுபட்டார். ஆனால், அவர் எதிர்பார்த்தவாறு தமிழ்த் திரையுலகம் இருக்கவில்லை. தமிழ்த்திரையுலகம் எதிர்பார்த்தவாறு அவர் இருக்கவிலை. அதனால் கௌரவமாகவே இந்தத்துறையிலிருந்து ஒதுங்கிக்கொண்டார். ஆனால், எமது கலைஞர் ரகுநாதனோ எத்தனையோ சோதனைகள், தடைகள், நட்டங்களை எதிர்நோக்கியவாறும் தொடர்ச்சியாக எதிர்நீச்சல் போட்டுக்கொண்டே வாழ்ந்தவர். கடந்த 2019 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற கவிஞர் அம்பியின் 90 ஆவது வயது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்வில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரிலும் ரகுநாதன் எழுதியிருக்கிறார். பிரான்ஸிலும் கொரோனோ வைரஸின் தாக்கம் அதிகரித்ததும் நானும் அம்பியும் ரகுநாதன் பற்றியே அடிக்கடி பேசக்கொண்டிருந்தோம்.. நண்பர்கள் ‘ஓசை’ ‘ மனோகரன் , ஐ.பி.சி. வானொலி எஸ்.கே. ராஜன், கனடா தமிழர் தகவல் எஸ். திருச்செல்வம் ஆகியோருடன் பேசும்போதும் ரகுநாதன் பற்றி கேட்டறியத்தவறவில்லை. “ இனிமேல் யாரிடமும் என்னை விசாரிக்காதே “ எனச்சொல்லிவிட்டு, எனது நீண்ட கால நண்பர் நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார். அன்னாரின் மறைவினால் வாடும் அவரது அன்புத்துணைவியார், மற்றும் குடும்பத்தினர் கலை, இலக்கிய நண்பர்களின் ஆழ்ந்த துயரத்தில் நானும் பங்கெடுக்கின்றேன். https://akkinikkunchu.com/கலைஞர்-ஏ-ரகுநாதன்-மறைந்த/
 23. சாத்தானின் கால்கள். - சாதனா தேவனின் முழுப் பெயர் தேவகாந்தன். என்னைக் காட்டிலும் பதினான்கு வருடங்கள் இளையவனான அவனை நான் ஏசு என்ற பெயரிலேயே அழைப்பதுண்டு. நானொரு எழுத்தாளன் என்பதாலும் என்னிடமிருக்கும் புத்தகங்களை இரவல் வாங்கிச் சென்று படிப்பதற்காகவும் வாரத்தில் மூன்று நாட்களாவது என்னைச் சந்திக்க அவன் வருவதுண்டு. ஏசு எப்போதெல்லாம் என் வீட்டுக்கு வருகிறானோ அப்போதெல்லாம் அவன் கையில் ஒரு திராட்சை ரசப் போத்தலிருக்கும். நாமிருவரும் அதை அருந்தியபடியே மணிக்கணக்காக இலக்கியம் பேசுவோம். நான் மௌனமாக ஏசுவையே கவனித்துக் கொண்டிருந்தேன். அவனுடைய உதடுகள் வழக்கத்துக்கு மாறாக இறுகியிருந்தன. உன்னிப்பாக அவதானித்தபோது அவன் உதடுகள் எதையோ உச்சரித்துக் கொண்டிருப்பதையும் கவனித்தேன். அவன் ஏதோ குழப்பத்திலிருக்கிறான் என்பதை யூகித்துக்கொண்ட நான், அவனாக வாய் திறந்து பேசும் வரை ஒரு சொல்லாகினும் நானாகப் பேசுவதில்லையெனத் தீர்மானித்துக் கொண்டேன். அது கோடை காலமென்பதால், நாங்களிருவரும், எனது அடுக்குமாடிக் குடியிருப்புக்குக் கீழிருந்த சிறிய தோட்டத்தில் இரண்டு ‘பிளாஸ்டிக்’ கதிரைகளைப் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தோம். சுற்றிலும் மரங்கள் இருந்தபடியால் நல்ல காற்றாகவும் இருந்தது. நான் என் இரண்டு கால்களையும் ஒன்றோடொன்று பொருத்தி வசதியாக நீட்டிக் கொண்டேன். அப்போது, என் தேகமானது அனிச்சையாக பின்னால் சாய்ந்து கொள்ளலாயிற்று. ஒருவாறாக, ஏசு, அன்றைய தனது வார்த்தையை “புதிதாக ஏதும் எழுதினீர்களா?” என்பதாக உதிர்த்துக்கொண்டான். நான் என்னுடைய புதிய கதை பற்றி அவனுக்குக் கூறினேன். கதை குறித்துச் சில விஷயங்களையும் சொன்னேன். எல்லாவற்றையும் மிகக் கூர்மையாகக் கேட்டுக் கொண்டிருந்தவன், “வழக்கம்போல் இக்கதையும் ரஷ்ய நிலப்பரப்பில் நிகழும் கதையோ” எனக் கேட்டான். நான் அது குறித்து அவனுக்கு ஏதும் சொல்லாமல் “அப்போது உன் உதடுகள் துடித்துக் கொண்டிருந்ததே” என்றேன். இவ்வளவு நேரமும் உடலைக் குறுக்கி அமர்ந்திருந்த ஏசு, நான் அப்படிக் கேட்டதும் தன் இரண்டு கைகளையும் கோர்த்தியவாறு நிமிர்ந்து உட்கார்ந்தான். “வரும் வழியில் ஒரு பிச்சைக்கார மனிதன்” என வேகமாகச் சொன்னான். ஏசு அப்படிச் சொன்னபோது அவன் உதடுகளில் ஒரு புன்னகை அரும்பி பின் மறைந்தது. நான் ஏதும் புரியாதவனாக “நீயும் கதை எழுதத் தொடங்கி விட்டாயா; ‘இது’ அதனுடைய தலைப்பா?” என்றேன். சிரித்துக் கொண்டான். அவன் அப்படிச் சிரித்தபோது அவன் மூக்கிலிருந்து விசுக்கென்ற சப்தத்தோடு மூச்சுக்காற்று இறங்கியது. சிறிது நேரம் எதுவுமே பேசாமல் தன் முழங்கையின் மூடியை தடவி விட்டுக் கொண்டிருந்தான் ஏசு. பின், கொண்டு வந்திருந்த திராட்சை ரசப் போத்தலை திறந்து ஆளுக்கு இரண்டு குவளைகளில் ஊற்றினான். தன்னுடைய குவளையை எடுத்து ஒரே மூச்சில் குடித்து முடித்தான். என்னையும் குடிக்கச் சொன்னவன், அந்தப் பிச்சைக்காரன் மட்டும் இப்போது என் கையில் கிடைத்தால் இந்தப் போத்தலை முழுவதுமாக அவன் குண்டிக்குள் அதக்கி விடுவேனென்று திராட்சை ரசப் போத்தலை சுட்டிக் காட்டியவாறு சொன்னான். எனக்கு அதற்கு மேலும் பொறுமை இல்லாமற் போகவே… சட்டென்று, “என்ன நடந்தது என்பதை முழுமையாக புரிவது போல் சொல்ல முடியுமா?” எனக் கேட்டேன். “விவகாரம் அவ்வளவு பெரிதல்ல” என்ற ஏசு ஒரு சிறிய மிகச் சிறிய கதையை எனக்குச் சொல்லலானான். கதை இதுதான். வழக்கம்போல் வேலை முடிந்து ஏசு என் வீட்டுக்கு வந்திருக்கிறான். வரும் வழியில், ஒரு ருமேனியப் பெண் அவனிடம், அட்டையில் பிரைடா கெய்லாவின் படம் அச்சிடப்பட்டிருந்த மாத இதழொன்றை வாங்கும்படிக்குச் சொல்லியிருக்கிறாள். இவன் இதழை உற்றுப் பார்த்துவிட்டு “இவ்விதழ் ஒரு வருடம் பழமையானது” என்றிருக்கிறான். பதிலுக்கு அந்த ருமேனியப் பெண், “நீ இந்த இதழை வாங்காவிடினும் பரவாயில்லை; ஒரு ஒரு யூரோ இருந்தால் கொடுத்துவிட்டுப் போ” என்றாளாம். கொடுக்க மறுத்த ஏசுவை பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அவளின் காதலன் கொடுமையான தூஷண வார்த்தைகளால் திட்டியிருக்கிறான். அப்போது சனம் பூராவும் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அதனால், தனக்குப் பெரும் லஜ்ஜையாகப் போய்விட்டதாகவும் கூறி… இறுதியில், ‘ஆஷ்லொக் பெனா’ என ஒரு ஜெர்மானிய வசை சொல்லை சொல்லி அந்த மிகச் சிறிய கதையை ஏசு முடித்துக்கொண்டான். எனக்குச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை. “போனால் போகிறது… ஒரு யூரோ தானே… கொடுத்திருக்கலாமே” என்றேன். ஒரு யூரோ என்று அவ்வளவு அசட்டையாகச் சொல்லி விட்டீர்கள்… ஆனால், அதை உழைப்பதற்காக நான் படும் பாடு இருக்கிறதே அது எனக்குத்தான் தெரியும்” என்றான். நான் எதுவும் சொல்லாமல் குவளையை எடுத்து முதல் மிடறு அருந்தினேன். பிறகு, ருமேனியாவிலிருந்து அகதிகளாக வருபவர்களை இங்கு யாரும் வேலைக்கு எடுப்பதில்லை என்றும் அப்படியே எடுத்தாலும் அவர்களை யாரும் நம்புவதுமில்லை என்றும் ஆகவே, அவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்; அவர்களுக்காகக் கருணை கொள்வதால் நாம் பெரிதாக ஒன்றையும் இழந்து விடப் போவதில்லை என்றும் கூறினேன். “நீங்கள் சொல்வது எனக்கும் தெரியும். ஆனால், இவர்களைப் போன்றோர்களுக்கு பணம் கொடுக்க என் மனம் ஒருபோதும் ஒப்பாது” என்றவன் மேலும் சொன்னான். “அவர்களை போன்றவர்கள் நாய்க்குச் சமனானவர்கள்.” நான் கையில் வைத்திருந்த குவளையையே பார்த்துக்கொண்டு அதில் ஒற்றை விரலால் தொடர்ச்சியாகத் தட்டிக் கொண்டிருந்தேன். அப்படித் தட்டும்போது எழும் ஒலியானது ஒரு சீரான இடைவெளியோடு என் காதுகளுக்குள் ஊடுருவியபடி இருந்தன. “அப்படியெனில் போனமாதம் நானுன்னிடம் நூறு யூரோக்கள் கேட்டபோது மறுப்பேதும் கூறாமல் உடனேயே தூக்கிக் கொடுத்தாயே…!” என்னை நேராகப் பார்த்து உடலை குறுக்கியவன் சற்றே குனிந்த வாக்கில் “நீங்களும் அவர்களும் ஒன்றா அண்ணன்… அத்தோடு நான் இப்படி இருப்பதற்கு காரணமே நீங்கள் தானே… அதை எப்படி நான் மறப்பேன்… நன்றி மறப்பது நன்றன்று அண்ணன்.” என்றான். அதன் பிறகு அவனுடன் அதைப் பற்றி நான் எதுவும் பேசவில்லை. அங்கலிக்கு எழுதிய ரேபாலியன் பற்றிக் கேட்டேன். இன்னும் பதினெட்டுப் பக்கங்கள் மிச்சமிருப்பதாகவும் சிலாகித்துப் பேசக்கூடிய அளவுக்கு ரேபாலியன் திறமான புத்தகமில்லையென்றும் சொன்னான். அதைவிட காப்ரியேல் கார்சியா மார்க்கோஸ் எழுதிய முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் நிரம்பவும் பிடித்திருக்கிறதெனவும் சொன்னான். எனக்கு லேசாகத் தலை சுற்றுவது போல் தோன்றியது. தலையை கழுத்துக்குப் பின்னால் சரித்து இருண்டிருந்த வானத்தைப் பார்த்தேன். ஒரு விமானம் மின்னி மின்னிச் செல்வதைக் கண்டேன். பிறகு, ஏசுவிடம், இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு கதை எழுதினேன்; அதை உன்னிடம் சொல்லலாமா? என்றேன். தாராளமாகச் சொல்லுங்கள்; உங்களிடம் கதை கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும் என்ற ஏசு கதை கேட்பதற்கு ஏதுவாகத் தன்னை கதிரையில் சரித்துக்கொண்டான். கால்களை முன்னுக்கு நீட்டிக் கொண்டு கைகளை கோர்த்துக்கொண்டு நான் கூறப் போகும் கதையைக் கேட்பதற்கு ஆயத்தமானான். கதையை நன்றாகக் கேள்! உனக்கு இந்தக் கதை புரியுமா என எனக்குத் தெரியவில்லை. கதையின் சாரம் குறித்து நானும் உனக்கு புரிய வைக்கப்போவதில்லை. ஆனால், கதையை நீ புரிந்து கொள்வதற்கு ஒன்றைச் சொல்லலாம். உன்னுடைய பிச்சைக்காரனின் கதைக்கும் இதற்கும் ஒரு சம்மந்தமுண்டு. இதற்கு மேல் கதை குறித்து எதுவும் சொல்ல மாட்டேன் என்றுவிட்டு பின்வருமாறு ஒரு கதையை நான் ஏசுவுக்கு கூறலானேன். 2, முதலில், இடி இறங்கியதைப் போல் தான் சாத்தான் உணர்ந்தான். எதிராளி இரண்டாவது மூன்றாவது என விடாமல் தொடர்ச்சியாகக் குத்தியபோதுதான் அவனுக்கு நிஜம் விளங்கியது. கிடைத்த வாய்ப்பில், எதிராளியின் கையைப் பிடித்துக் கொண்ட சாத்தான், பலம் கொண்ட மட்டும் கால்களால் உதைந்து தள்ளினான். எதிராளி தன்னையிழந்து ஒரு வேகத்தோடு அப்பாற் சென்று விழுந்தான். சாத்தானின் மூக்கிலிருந்து வடிந்த இரத்தம் மேலுதட்டை அடைந்தபோது அவன் அதை நாக்கால் நீவித் துடைத்தான். வேர்வையோடு கலந்திருந்த இரத்தத்தின் ருசி அவனுக்கு அவஸ்தையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். முகத்தைச் சுளித்து காறி உமிழ்ந்தான். முதுகால் ஊர்ந்து பெருத்திருந்த மரமொன்றில் தன்னைச் சாய்த்து பலமாக மூச்சு வாங்கினான். அவனுடைய கன்னத்திலிருந்து இரத்தமானது வழிந்து கொண்டிருந்தது. தன் கன்னத்திலிருந்து ஏதோ வழிவது போல் படவே அந்த இடத்தை விரல்களால் தடவிக் கொண்டான். எரிந்தது. ‘ஸ்ஸ்ஸ்’ என்ற முனகளோடு விரலை எடுத்தவன் பிறகு மறுபடியும் அழுத்தினான். விரல்களில் பிசுபிசுத்த இரத்தத்தைச் சருகுகளில் தேய்த்துத் துடைத்தான். தேகம் முழுவதும் வலித்தது. கண்களை மூடி என்ன நடந்தது என்பதை நினைத்துப் பார்த்தபோது ஒரு பெரும் யுத்தம். எங்கும் பிசிறிய இரத்தமும், உடல் துண்டங்களும். காற்றில் பயங்கரமான இரத்த நெடி. குண்டுகள் வெடித்தபோது கற்கள் சிதறி சிறு துணுக்களாகி இவன் மேல் மழை பொழிவதைப் போல் பொழிந்தது. துப்பாக்கிகள் சுட்டுக்கொண்டபோது அவற்றின் முனையிலிருந்து மச்சள் நிறத்தில் தீக்கங்குகளும், ‘டப, டப’ சப்தங்களும் எழுந்தன. இவையாவும் ஒன்றன் பின் ஒன்றாக இடை வெட்டுவது மாதிரி சாத்தானுக்கு வந்து வந்து போயின. சட்டென்று கண்களைத் திறந்தான். பிறகு மறுபடியும் மூடினான். இப்போது அவன் மலையொன்றிலிருந்து உருள்கிறான். ஓங்கி வளர்ந்திருந்த மரங்களில் மோதுண்டுகிறான். கிளையொன்றைப் பற்றுவதற்குப் பிரயத்தனப்பட்டு என்னவெல்லாமோ செய்து… இறுதியில், அது முடியாமற் போகவே பதினாறு அடிகள் கொண்ட பள்ளத்துள் தன்னை விழுத்திக் கொள்கிறான். கண்களை திறந்தபோது தூரத்தில் எங்கேயோ – அநேகமாக அவன் பின்னாலிருந்து தான் – செல்லொன்று கூவி வெடிப்பது கேட்டது. தரை சிறிது அதிர்ந்ததாகவும் சாத்தானுக்குப் பட்டது. விழிகளை உருட்டி அப்பாற் பார்த்தான். தன் முகத்தைப் உடைத்துப் போட்டவன் அவனும் சோர்ந்து போய் கிடப்பதாய் சாத்தானுக்குப் பட்டது. எழுந்து சென்று அப்படியே அவன் கழுத்தை இறுக்கி முடியாமற் போனால் கல்லொன்றைத் தூக்கிப் போட்டாவது அவனைக் கொன்று போடலாமாயென்று நினைத்தான். ஆனால், தேக நோவு அவனைப் படுத்தியது. தாடையில் விண்னென்று வலிப்பது போலவும் பட்டது. மட்டுமல்லாமல், தன் முள்ளந்தண்டு உடைந்திருப்பதாகவும் அவன் நினைத்தான். கைகளை அசைக்க முடியாமல்… இருப்பினும், தன்னை வருத்தி கைகளை அசைக்க முற்படும்போதெல்லாம் அவனுள் பெரும் வலி புகுந்து அப்படிப் புகும்போது பெரும் குரலெடுத்துக் கத்தினான். அப்படியே உறங்கியும் போனான். சாத்தானுக்கு விழிப்பு வந்தபோது அதிகாலையாய் இருந்தது. கண்களை திறக்க முடியாத அளவுக்கு நோவுமிருந்தது. எதிராளி இப்போதும் அதே தினுசில்தான் படுத்திருந்தான். செத்து விட்டானா? சாத்தானுக்கு முதலில் அப்படித்தான் தோன்றிற்று. தன்னைத் தானே அசைக்க முற்பட்டான். முடிந்தது. அப்படியே சரிந்து முழங்கைகளால் தரையில் தேய்த்து முன்னேறினான். தன் உடலுக்குப் பின் பக்கமாயிருந்து ‘புஷ்ஷு, புஷ்ஷு’ என்று சப்தம் வரவே தலையைத் திருப்பி அது என்னவென்று பார்த்தான். உடல் முழுவதும் கருமையாயிருந்த ஒரு மெலிய பாம்பு சாத்தானையே பார்த்துக்கொண்டு படம் பிடித்தாடியது. சாத்தானுக்கு உடல் குறுகுறுத்ததைப் போல் பட்டது. மயிர்கற்றைகள் குத்திட்டு நின்றன. பாம்பையே வெறித்துப் பார்த்துக்கொண்டு அசையாமல் அப்படியே கிடந்தான். மெல்ல ஊர்ந்து வந்த பாம்பு அவன் உடலில் ஏறி அவன் மார்பில் நின்றுகொண்டு அவன் முகத்தைப் பார்த்து இரண்டாகப் பிளந்திருந்த தன் கருஞ் சிகப்பு நாக்கினை நீட்டி சப்தம் உண்டாக்கியது. சாத்தான் கண்களை இமைக்காமல் பாம்பையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இமைப் பகுதிலியிருந்து வியர்வைத் துளியொன்று உருவாகி கீழ் நோக்கி வழிந்தது. சாத்தானின் முகத்துக்கு நேராக தன் தலைப்பகுதியைக் நீட்டிய பாம்பு சிறிது நேரம் அப்படியே நின்று விட்டு பின், சட்டென்று தன் பின்னால் எடுத்துக்கொண்டது. பின், மறுபடியும் நீட்டி நாக்கினை அசைத்து சப்தம் எழுப்பியது. இம்முறை எப்படியும் தன்னைத் தீண்டி விடுமெனச் சாத்தான் நினைத்தபோது பாம்பானது தன் தலையை அவன் உதட்டுக்கு மேலாகக் கொண்டு சென்று அப்படியே அவன் முகத்தின் மேல் ஊர்ந்தது. சாத்தான் கண்களை மூடிக் கொண்டான். பாம்பின் கால்கள் அவன் முகத்தை உரசிச் சென்றபோது சாத்தானின் தேகத்திலுள்ள அத்தனை மயிர்களும் குத்திட்டு நின்றன. அருவருப்பாகவும், குறுகுறுப்பாகவும் உணர்ந்தான். பாம்பு சாத்தானின் தலையிலிருந்து இறங்கி அப்படியே ஊர்ந்து போனது. மூச்சு விடாமல் படுத்திருந்த சாத்தான், சிறிது நேரம் கழித்து, மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்த்தான். பாம்பைக் காணோம். கைகளால் தரையைத் தேய்த்து எதிராளியை நெருங்கியபோது எதிராளி இப்போதும் எவ்வித அசைவுமற்று அப்படியே கிடந்தான். சாத்தான் கையை நீட்டி ஒரு பதற்றத்தோடு எதிராளியை தொட்டபோது எதிராளி திடீரென்று உயிர் பெற்ற ஒரு தவளையை போல் விழித்துப் பார்த்தான். சாத்தானைக் கண்டதும் பதறிப்போய் தடதடவென்று எழுந்து கொண்டான். அவன் உதடுகள் வீங்கியிருந்தன. எதிராளி தன் வீங்கிய உதடுகளை விரலால் தேய்த்தபோது அதிலிருந்து லேசாக இரத்தம் கசிந்தது. இப்போது அவர்களிருவரும் எதிரெதிராகயிருந்த இரண்டு மரங்களில் தங்களை சாய்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். எதிராளிக்கு எல்லாம் புரிந்திருக்க வேண்டும். தன்னை முழுமையாகச் சாஸ்வதப்படுத்திச் சீராக மூச்சு விட ஆரம்பித்தான். மதியம் வரை அவர்களிருவரும் எதுவுமே பேசிக் கொண்டார்களில்லை. தனக்கு முன்னால் மரங்களுக்கு அப்பால் இரண்டு முயல் குட்டிகள் துள்ளிச் செல்வதைத் சாத்தான் கவனித்தான். ஓடிச் சென்று பிடிக்கலாமா என்று பட்டது. ஆனால், அது அத்தனை சுலபமில்லை என்பதால் அந்தச் சிந்தனையை கை விட்டான். இருந்தாலும், பசி அவனைப் படுத்தியது. இறுதியாக எப்போது சாப்பிட்டோம்? வாட்டிய இறைச்சித் துண்டொன்றும் அவித்த உருளைக்கிழங்கும் அவன் நினைவில் வந்தன. தனக்காக தன் நண்பன் அதை எடுத்து வந்ததையும் அவன் நினைவு கூர்ந்தான். அப்போது, எதிராளி, இவனிடம், பெயர் என்ன என்று கேட்டான். ஆரம்பத்தில், அதற்கு அதாவது, எதிராளியின் கேள்விக்கு பதில் சொல்ல சாத்தான் பிரியப்படவில்லை. நேரம் கிடைக்கும்போது எதிராளியுடன் மோதுண்டு அவனை விழுத்திவிடவே அவன் நினைத்திருந்தான். ஆனால், முந்தின தினம், அவனிடம் வாங்கிய அடி நினைவுக்கு வரவே ‘அது’ அத்தனை லகுவல்ல என்பதையும் அவன் தெரிந்தே வைத்திருந்தான். சில வினாடிகள் கழித்து, ஆனால் அப்போதும்கூட எதிராளியின் முகத்தைப் பார்க்க விரும்பாமல் வேறு எங்கேயோ பார்த்துக்கொண்டு சாத்தான் என்றான். தனக்கு முன்னால் இருப்பவன் தன்னோடு பேச விரும்பவில்லை என்பதை எதிராளி புரிந்து கொண்டான். அவனுக்குப் பெரும் லஜ்ஜையாகப் போயிற்று. நேற்று நான் உன் தாடையை உடைத்ததற்காக என்னை மன்னித்துவிடு; அதை நான் வேண்டுமென்று செய்யவில்லை; ஆனால், அப்போதிருந்த மனநிலையில் எனக்கு அதைத் தவிர வேறு வழியும் தெரியவில்லை என்றான். எதிராளி அப்படி வெளிப்படையாகப் பேசியது சாத்தானுக்கு அவன் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது. என் தாடையை பெயர்த்துவிட்டு… அதைச் சொல்லியும் வேறு காட்டுகிறாயா; எவ்வளவு தடிப்பு உனக்கு? என்று வாய்க்குள் புறுபுறுத்தான். அவன் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. தன்னுடைய பெயர் ஜீசஸ் என்றும் தான் குழந்தையாக இருக்கும்போது பார்ப்பதற்கு அச்சு அசலாக ஜீசஸ் போலவே இருந்ததாகவும் அதனாலேயே அந்தப் பெயரை தன் தாய் தனக்குச் சூட்டியதாகவும் சாத்தானிடம் கூறிய எதிராளி மேலும் சொன்னான். “உண்மையில், ஜீசஸும், சாத்தானும் ஒருவருக்கொருவர் எதிர் எதிரானவர்கள். முதலமானவர் நன்மைக்காகவும், இரண்டாமானவர் தீமைக்காகவும் செயற்படுகிறவர்கள். அதேபோன்று இங்கு நான் ஜீசஸாகவும் நீ சாத்தானாகவும் இருக்கிறோம். ஆனால், அதற்காக நான் உன்னை ஒருபோதும் சாத்தானென்று நினைக்கப் போவதில்லை. நீயும் என்னை ஜீசஸாக நினைக்க வேண்டிய கட்டாயமில்லை.” சாத்தான் விசுக்கென்று சிரித்துக்கொண்டான். இப்போது சாத்தானுக்கு எதிராளி மீது கோபத்தோடு சேர்ந்து ஏளனமும் கூடியிற்று. இல்லையென்றால் மாத்திரம் நான் உங்களை ஜீசஸ் என்று நினைத்துவிடுவேனாக்கும் என்றான். அவன் அப்படிச் சொன்னது எதிராளிக்கு ஒருமாதிரித்தான் இருந்தது. இருந்தாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் வேறொரு திசையில் பார்த்துக்கொண்டு உன்னுடைய சித்தம் எப்படியோ அப்படியே ஆகக் கடவது என்றான். சாத்தானின் தொடைப்பகுதியிலிருந்த காயத்திலிருந்து இரத்தம் கொட்டுவது நின்றிருந்தது. அவன் பிரயத்தனப்பட்டு எழுந்துகொள்ள முயன்றான். முடியாமற் போகவே மறுபடியும் உட்கார்ந்து கொண்டான். ஆனால், எதிராளிக்கு அவ்வளவு கஸ்டம் இருக்கவில்லை. தானும் எழுந்துகொண்டு சாத்தானையும் எழுப்பி விடும் பொருட்டு அவனுக்கு உதவ தன் கையை நீட்டினான். முதலில் நிராகரித்த சாத்தான், பின்பு தோல்வியை ஒப்புக்கொண்டு எதிராளியின் கையைப் பற்றிக்கொண்டு எழுந்தான். ஆனாலும், அவனுடைய இருதயமானது வஞ்சனையாலும், சினத்தாலும் பெருகிக் கொண்டிருந்தது. இப்போது, அவர்களிருவரும் வனாந்தரத்தில் ஆற்றுப்படுக்கை ஒன்றில் இருந்தார்கள். நதியின் இரு ஓரங்களிலும் மலர்கள் ஏதோ புதிதாகத் தோன்றியது போல் பூத்துக் குலுங்கின. தொடுவானம் மிக அருகில் இருப்பது போல் பட்டது. தூரத்தில் நீர்விழ்ச்சி ஒன்று பெரும் இரைச்சலாய் கொட்டிக்கொண்டிருந்தது. அப்போது, எதிராளி இதைப் பார்க்கும்போது ஜோர்தான் நதிக்கரை நினைவு வருகிறதென்றான். ஆற்றில் இறங்கி ஞானஸ்தானம் எடுத்துக்கொள்ளுங்கள் என்ற சாத்தான் மேலும் சொன்னான். “முதலில் இந்த வனாந்தரத்த்திலிருந்து எப்படி மீள்வது என்று யோசிப்போம். மற்றதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்! எதிராளி சாத்தான் கூறியதைச் செவிமடுத்தானில்லை. ஓடிச்சென்று ஆற்றில் குதித்தான். அப்படி அவன் குதித்தபோது நீர்த்திவலைகள் தெறித்தன. அவற்றில் கொஞ்சம் சாத்தானின் முகத்திலும் பட்டது. தன் முகத்தில் தெறித்திருந்த துளிகளை விரல்களால் வழித்துக்கொண்ட சாத்தான், இந்த ஜீசஸுக்கு பைத்தியம் பிடித்து விட்டதென்று வாய்க்குள் முணுமுணுத்தான். ஆற்றிலிருந்த எதிராளி தேகத்தை மல்லாக்கப் போட்டுக்கொண்டு கைகளை சவட்டி நீந்தினான். பின்பு, அப்படியே புரண்டு, அடியில் சென்று, நிலத்தைத்தொட்டு, ஒற்றை விரலால் கோடு கீறி… பின், ஆற்றின் வேறொரு மேற்புறத்தில் எழும்பினான். அப்போது, மத்யமகாலம் சாயங்காலமாய் மாறிற்று. இப்போது, எதிராளியும் சாத்தானும் மீன்கள் சிலவற்றைப் பிடித்து நெருப்பில் வாட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரே ஏற்கனவே வாட்டப்பட்டிருந்த சில மீன் துண்டுகளுமிருந்தன. அப்போது சாத்தான் அவ்மீன்களில் ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தான். அவனுக்குத் திருப்தியாய் படவே அதிலிருந்து ஒரு சதையை பிய்த்தெடுத்து வாய்க்குள் அதக்கிக் கொண்டான். “ஜீசஸ் மேல் அத்தனை நம்பிக்கையோ” என்றான். அவரை விடுத்து வேறு எவர் மீதும் அத்தனை நம்பிக்கை இல்லையென்றவன் மேலும் சொன்னான். “ஜாதி ஜாதியான பறவைகளும் ஜாதி ஜாதியான விலங்குகளும் சண்டையிட்டுக் கொள்வதில்லை; ஒரே ஜாதியாகிய மனுஷராகிய நாம் தான் சண்டையிட்டுக் கொள்கிறோம்” “யுத்தம் என்பதும் ஒரு மாதிரியான பசிதான்.” என்ற சாத்தான் இன்னொரு தசையை பிய்த்து வாய்க்குள் அதக்கிக்கொண்டான். அதை மென்று விழுங்கியவன் “அப்படியெனில், எதற்காக நீங்கள் இராணுவ வீரன் ஆகினீர்களாக்கும்” என்றான். “வேறு வழியில்லை; இளைஞனாக இருந்தபோது நகரம் நகரமாகச் சென்று பிரசங்கம் செய்தேன். எல்லோரும் என்னைப் பைத்தியம் என்றார்கள். சிலர், கற்களால் கூட வீசினார்கள். சிறிது காலம் கழித்து உண்மையிலேயே பைத்தியம் பிடித்தவனானேன். பெரும்பாலான நாட்களை பைபிளிலும், தேவாலயங்களிலும் கழித்தேன். அவையிரண்டும் என்னை சொஸ்தப்படுத்தலாயிற்று” என்ற எதிராளி இடையில் நிறுத்தி தானும் மீனொன்றைப் பிய்த்து அதன் தசையை உண்டான். உப்பும், எலுமிச்சைச்சாறும் இருந்தாலும் இன்னும் பிரமாதமாக இருக்குமென்றவன் மேலும் சொன்னான். “பிறகு போக்கற்று அலைந்தேன். மதகலோனாவை பெண் கேட்கச் சென்றபோது அவளின் தாய் இரண்டு வருடங்கள் இராணுவத்தில் இருந்துவிட்டு வா; பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்றாள்.” “நாட்டுக்காக வரவில்லை; பெண்ணுக்காக வந்திருக்கிறீர்கள்” என்ற சாத்தான் திடீரென்று, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு எதிராளி மீது பாய்ந்தான். தன்னை நோக்கி வந்த ஆபத்திலிருந்து மிக இலாவகமாகத் தப்பித்துக்கொண்ட எதிராளி, ஒருக்ஷணம், திக்கெற்று நின்றான். பிற்பாடு ஒரு நிலைக்கு வந்த அவன், ஒரு மூர்க்கத்தனத்துடன் சாத்தானோடு சண்டை பிடிக்கலாயினான். தன்னை நோக்கி வந்த சாத்தானை அவன் கையில் பற்றிக்கொண்டு வயிற்றில் முழங்காலால் உதைத்தான். பின்பு, அவன் கையிலிருந்த கத்தியைப் பறித்து அப்பால் எறிந்தான். விரல்களைப் பின்பக்கமாக நெரித்து அப்படியே அவனைச் சுற்றி முதுகுப் பக்கமாகக் கொடுத்தான். பின், தானும் சுற்றிக்கொண்டு சாத்தானை நிலத்தில் கிடத்தினான். மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவனைக் குறி பார்த்தான். ‘டுஸ், டுஸ்’ என்று வாயால் சப்தமெழுப்பி சுடுவது போல் பாவனை செய்தான். பிறகு இப்படிச் சொன்னான். “மனித மனங்களை அறிந்து கொள்ள முனையும் அந்தத் தருணம் சுவாரஸ்யமானது என்பதை நீ அறிவாயா? என்னைக் கொன்று விடுவதால் உனக்கு என்ன கிடைக்கப்போகிறது? இந்த வனாந்தரத்தில் உன்னுடைய எதிர்காலமுமல்லவா நிச்சயமற்றிருக்கிறது.” சாத்தானுக்குப் பெரும் லஜ்ஜையாகப் போயிற்று. எதிராளியின் முகத்தைப் பார்ப்பதற்குத் திராணியற்று வேறு எங்கேயோ பார்த்துக்கொண்டு எச்சில் உமிழ்ந்தான். தன்னை எழுப்பிவிடும் பொருட்டு எதிராளி நீட்டிய கையை பற்றிக்கொள்ள மனமில்லாமல் அப்படியே கிடந்தான். அப்போது, எதிராளி மேலும் சொன்னான். “என்னைக் கொல்வதுதான் உனக்குத் திருப்தி தருமாயின் இதோ இந்தத் துப்பாக்கியை எடுத்துக் கொள்! இக்க்ஷணமே என்னைக் கொன்று போடு…!” எதிராளி தன் துப்பாக்கியைத் தூக்கி சாத்தானின் மார்பில் எறிந்தான். பின், மரங்களோடு மரங்கலானான். பின், அப்பெருவுருவம் சிறுதுளியானது. பின், புள்ளியானது. சாத்தான் இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தபோது அப்புள்ளியானது தேய்ந்து மறைந்து போயிற்று. தன் தொடைப்பகுதியில் நான்கு இன்ச் அளவுக்கு கிழிந்திருந்த பகுதியை மருத்துவர், விரைப்பு மருந்து ஏதும் கொடுக்காமலே தைத்துக் கொண்டிருப்பதை சாத்தான் பற்களை பொறுமியபடிக்கு பார்த்துக் கொண்டிருந்தான். முதுகை நிமிர்த்தி தன் இரண்டு கைகளாலும் தொடையை இறுகப் பிடித்திருந்தவன்… பின்பு, கட்டிலில் சாய்ந்து படுத்துக் கொண்டான். அவனுக்கு மயக்கம் வருமாற் போல் தோன்றிற்று. அப்போது சாத்தானை நெருங்கிய படைவீரனொருவன் சிறிது நேர இளைப்பாறலுக்குப் பிறகு என்னுடன் வர முடியுமா என்றான். எதுவாக இருப்பினும் இரண்டு மணித்தியாலத்துக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்; ஏனெனில், நான் சிறிது உறங்க வேண்டுமென்ற சாத்தான் கண்களை மூடி அயர்ந்து போனான். விழிப்பு வந்த சாத்தானுக்கு நடக்க முடியாமலிருந்து. ஒற்றைக் காலால் மற்றக் காலை கெந்தியபடிக்கு நடந்தான். அவனுக்கு அகோரமாகப் பசி எடுத்தது. நேராகச் சமையலறைக் கூடத்துக்குச் சென்றவன், பசிக்கு அங்கிருந்த பயத்தங் களியை சாப்பிட்டும், தாகத்துக்குப் பன்றிக்கால் சூப்பையும் அருந்தினான். அப்போது, முன்னைய படைவீரன் அவனை நெருங்கி, இப்போது உங்களால் வர முடியுமா என்றான். சாத்தான் இராணுவச் சீருடையை அணிந்து கொண்டு அவனோடு கூட நடக்கலானான். அவ்வளவாக வெளிச்சமற்றிருந்த ஒரு சிறிய அறையில் கைகளும் கால்களும் கட்டப்பட்டவாறு எதிராளி தேகத்தைக் குறுக்கியவாறு கிடந்தான். அவன் முகமானது உடைக்கப்பட்டும், உடலானது பாலம் பாலமாய் வெடிக்கப்பட்டுமிருந்தன. சாத்தானுக்கு அக்க்ஷணம் திக்கென்றாயிற்று. அவன் எதுவும் பேசாமல் படைவீரனைப் பார்த்தபோது அவன், இவனிடம், உங்களை மீட்ட அதேநாளில், வனாந்தரத்தின் இன்னோர் மத்தியில் வைத்து இவரை நாங்கள் கைது செய்தோம் என்றான். அவன் மேலும் சொன்னான். “இப்போது இவரைக் கொலை செய்துவிடும்படிக்கு தளபதி எங்களுக்குக் கட்டளை ஒன்றை அனுப்பியுள்ளார். ஆகவே, இவரை மேற்கேயிருக்கும் வனாந்தரத்தின் மய்யத்துக்கு அழைத்துச் சென்று கொலை செய்துவிடும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறோம்” சாத்தான் எதிராளியின் அருகில் சென்று கால்களால் அமர்ந்துகொண்டு அவனை உற்றுப் பார்த்தான். அவன் முகம் முழுவதும் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவன் கண்கள் நேராக எதிராளியையே பார்த்துக்கொண்டும், கூடவே இரக்கத்துக்குரியவையாகவுமிருந்தன. அப்போது, முன்னைய படைவீரன் “எங்களுக்குப் போதிய அவகாசமில்லை; நாங்கள் சீக்கிரமாகவே இந்த முகாமைக் காலி செய்து கிளம்பியாக வேண்டும். ஆகவே, நீங்கள் இந்த மனிதரை உற்றுப் பார்ப்பதை விடுத்து வனாந்தரத்தின் மய்யத்துக்கு அழைத்துச் சென்று சூரிய அஸ்தமனத்துக்கு முன்னால் கொன்று விடுங்கள்” என்றான். சாத்தான் எதிராளியை முழந்தாழிடப் பணித்தபோது வனாந்தரம் முழுவதும் இருள் சூழத் தொடங்கியிற்று. காட்டு விலங்குகளும், காட்டுப் பட்சிகளும் பெரும் குரலெடுத்து அலறத் தொடங்கின. சர்ப்பங்கள் முழுவதும் சாத்தானை நோக்கியும் பறவைகளும், துள்ளித்திரியும் முயல்களும் எதிராளியை நோக்கியும் ஓடின. அப்போது, சாத்தான் எதிராளியிடம் “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்; நான் உங்களை கொலை செய்துவிடுவேனா அல்லது விட்டு விடுவேனா?” என்றான். “நிச்சயமாகக் கொலை தான் செய்வாய் !” “ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?, நேற்று என்னைக் கொலை செய்து விடுவதற்கான அத்தனை சாத்தியங்களிருந்தும் மாறாக என்னைக் கொலை செய்யாமல் விடுத்து, மன்னித்துப் போக விட்டீர்களல்லவா. ஆகவே….” “ஆகவே…” “ஆகவே, அதன் பிரதி பலனாக உங்கள் மன்னிப்புக்கு நன்றிக் கடனாக நானும் உங்களைக் கொலை செய்யமால் விட்டு விடுவேனென நீங்களேன் எண்ணவில்லை?” “ஏனெனில், நீ சாத்தான் அல்லவா…!” எதிராளி இப்படிக் கூறியதைக் கேட்ட சாத்தான் கைகளைக் கோர்த்துக்கொண்டு முன்னும் பின்னுமாக உசாத்தித் திரிந்தான். அவனுக்கு மண்டை கனப்பது போல் படவே புகை பிடித்தான். பின்பு, அதைக் காலில் போட்டு மிதித்தவன், தன்னுடைய ஆடைப் பையிலிருந்து வளையம் போன்றிருந்த ஒரு பொருளை வெளியில் எடுத்தான். அதுவொரு முட்கிரீடம். அந்த முட்கிரீடத்தை எதிராளியின் தலையில் வைத்து கீழ்கண்டவாறு சொன்னான். “ஏனெனில், நீங்கள் ஜீசஸ் அல்லவா…!” பின்பு, துப்பாக்கியை எடுத்தவன் ஏதோ நினைத்தவனாக அதை மறுபடியும் உள்ளே வைத்துக்கொண்டான். இப்போது, அவன் கையில் ஒரு சிறிய கூரான கத்தி இருந்தது. இதைக் கண்ணுற்ற எதிராளி தன் கடைசி வார்த்தையை மூன்று தடவைகள் கீழ்வருமாறு உதிர்த்துக்கொண்டான். “ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி” “ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி” “ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி” சாத்தான் தன் கையிலியிருந்த கத்தியை வைத்துக்கொண்டு ஒரு பன்றியின் தலையை அறுப்பது போல் எதிராளியின் கழுத்தைச் சரசரவென்று அறுக்கத் தொடங்கியபோது எதிராளியின் கழுத்திலிருந்து இரத்தமானது கொப்பளிக்கத் தொடங்கிற்று. எதிராளியின் தலையை கைகளில் ஏந்திக்கொண்டு சாத்தான் பெரும் குரலெடுத்து அந்த வனாந்தரமே அதிர்ந்துபோகும் படிக்கு எக்காளமிட்டுச் சிரித்தான். அப்போது, அந்த அடர்ந்த வனாந்தரத்தைக் கரு மேகங்கள் சூழ்ந்து கொண்டன. நிலம் அதிர்ந்து இரண்டாகப் பிளவுபட்டுப் போயிற்று. விலங்குகள் ஒன்றோடொன்று தங்களை இடித்துக்கொண்டும், பறவைகள், பட்சிகளாவன கடுமையான நிலத்து பகுதியில் தங்கள் அலகுகளையும், தலைகளையும் மோதி மோதியும் மாண்டு போயின. 3, நான் இந்தக் கதை முழுவதையும் ஏசுவிடம் சொல்லி முடித்தபோது அவன் எனக்குக் கேட்காதபடிக்கு எதையோ முணுமுணுத்தான். அவனுக்குக் கதை பிடிக்கவில்லையென்பது எனக்குத் தெரிந்து போயிற்று. அடிக்கடி உடலைக் குறுக்குவதும், பின் நிமிர்வதுமாக அவன் இருந்தான். திடீரென்று, ஒரு வேகத்தோடு எழுந்து கொண்டவன், அதெப்படி எதிராளியைச் சாத்தான் கொலை செய்யலாமென்றான். நான் எதுவுமே சொல்லாமல் மவுனமாக ஏசுவையே பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேர இடைவெளிக்குப் பின்பு, ஏன் கதை புரியவில்லையா என்றேன். ஏசு என்னுடைய இந்தக் கேள்விக்குப் பதிலேதும் சொல்லாமல் கொஞ்ச நேரம் உசாத்தித் திரிந்துவிட்டு மறுபடியும் கதிரையில் உட்கார்ந்து கொண்டான். “என்னயிருந்தாலும் சாத்தான் எதிராளியைக் கொலை செய்திருக்கக் கூடாது; ஏனெனில், எதிராளி அவனை மன்னித்து விட்டவன் அல்லவா?” “அது கிடக்கட்டும். சாத்தான் எதிராளியைக் கொலை செய்ததற்கு ஒரு காரணமிருக்கிறது. அதை உன்னால் கண்டுபிடிக்க முடிகிறதா?” இப்போது மறுபடியும் எழுந்துகொண்ட ஏசு மறுபடியும் உசாத்தித் திரிந்தான். என்னைப் பார்த்து ‘சைஸ’ என்றவன், அந்தக் காரணத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றான். “நீ தானே சொன்னாய் உங்களுடைய கதைகள் இலகுவில் புரிந்து கொள்ளப்படுகின்றன; வாசக இடைவெளியே இல்லையென்று. இதோ… இப்போது ஒரு கதை எழுதியிருக்கிறேன்! இந்தக் கதையின் பெயர் சாத்தானின் கால்கள். கதையில் எல்லாவற்றுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது; குறியீடுகளால் நிரம்பியிருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட சாத்தானின் கால்களுக்கு ஒரு கருவும் இருக்கிறது. ஆனால், மிக ஆழத்தில் ஒளிந்திருக்கிறது. ஒரு நல்ல வாசகன், எழுத்தாளன் எப்படி எழுதினாலும் அதன் அழகியலையும், கூறுகளையும் கண்டடைவான்.“ என்றுவிட்டு நான் ஏசுவையே கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். “என்னயிருந்தாலும் எதிராளியை சாத்தான் கொலை செய்திருக்கக் கூடாது. அப்படிச் செய்ததன் மூலம் அவன் நன்றி அற்றவன் ஆகிறான். சாத்தான் எதிராளியை மாத்திரம் கொலை செய்யவில்லை; தார்மீகத்தையும், அன்பையும், அறத்தையும் சேர்த்தே அவன் கொலை செய்திருக்கிறான்” என்ற ஏசு மேலும் சொன்னான். “குற்றவுணர்வு என்னும் பெரும் நரகத்திலிருந்து அவன் எப்படித் தப்புவிப்பான்?” “அப்படியெனில், எதிராளி சாத்தானை மன்னிக்கவில்லையென்று வைத்துக்கொள். அவன் இவனைக் கொலை செய்ய முற்படும்போது இவன் எப்படியோ தப்பித்து விடுகிறானென்றும் வைத்துக் கொள். இப்போது சாத்தானின் முறை. எதிராளி அவன் முன் மண்டியிட்டு இருக்கிறான். எந்தத் தயக்கமுமில்லாமல், குற்றவுணர்வுமில்லாமல் சாத்தான் அவனைக் கொன்று போட்டு விடலாமா? அவ்வாறெனில், சாத்தானின் இந்தச் செய்கையில் நீ குறிப்பிட்ட அறமும், தார்மீகமும் உள்ளதா?” “சர்வ நிச்சயமாக…!” “மொத்தக் கதையும் இந்த உன்னுடைய ‘சர்வ நிச்சயத்தில்’ ஆழப் புதைந்திருக்கிறது. தேடிக் கண்டடைந்து கொள் ஏசு. இப்போது நேரமாகி விட்டது; நாம் இன்னொரு நாள் சந்திக்கலாம்” நான் இப்படிச் சொன்னதும் ஏசுவுக்கு ஒரு மாதிரி இருந்திருக்க வேண்டும். என்னையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தவன், காலியாகியிருந்த வைன் போத்தலை உறையில் வைத்துச் சுற்றினான். பின்பு, என்னைப் பார்த்து, எல்லாவற்றையும் கண்டடைந்து விட்டு அதன் பின்னர் உங்களிடம் வருகிறேன் என்றான். அவன் போகும் திசையையே பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, திடீரென்று, இவனுடைய நூறு யூரோக்களை சீக்கிரமாகவே திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமென்ற சிந்தனை வரலாயிற்று. முற்றும். https://www.sathana.org/சாத்தானின்-கால்கள்/
 24. தலைவரின் திட்டத்தை, செவ்வனே செய்து முடித்த லெப் .கேணல் நிர்மா On Apr 28, 2020 “இந்தக் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கின்றதோ அன்றுதான் எமக்கு விடிவு பிறக்கும்” லெப். கேணல் திலீபனின் உரையைச் சுமந்த காற்று கோட்டையிலே கம்பீரமாக பறந்து கொண்டிருந்த புலிக்கொடியைத் தழுவி வீசியது. மகிழ்ச்சி, பெருமிதம், இன்னும் இனம் புரியாத உணர்வுகள் எல்லாம் கலந்த ஒரு உணர்வில் தமிழர்கள் ஊறிப்போயினர். ‘ஜீவன்’ கானகப் பாசறை வெற்றியைக் கொண்டாடியது. லெப். கேணல் மாதவி (பின்நாட்களில் கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி) யிடம் படையியற் பயிற்சியைப் பெற்றுக் கொண்டிருந்த மகளிர் படையணியின் அந்த அணிக்கு, தாம் பயிற்சி முடித்துப் போய் அடித்துத்தான் கோட்டையைப் பிடிப்போம் என்று சொல்லிச் சொல்லி பயிற்சி எடுத்த அந்த அணிக்கு வெற்றிக் களிப்பையும் மீறி கவலை வந்தது. “எப்போது எங்களுக்குச் சண்டை?” எல்லோர் மனதிலும் இதே கேள்விதான். “நீங்கள் வரப்போறீங்கள் எண்ட பயத்திலேயே அவன் ஓடி விட்டான்.” பயிற்சியாசிரியர்கள் கேலி செய்தனர். “நாங்கள் போக முதலே இப்பிடியெண்டால், போயிருந்தால் என்ன நடந்திருக்கும்” என்று வீரம் பேசிச் சமாளித்துக் கொண்டனர் லெப். கேணல் நிர்மா முதலான பயிற்சியாளர்கள் சண்டை ஒன்று வராமலா போகும் என்று தம்மை ஆறுதற்படுத்திக் கொண்டனர். அது இரண்டாம் இரண்டாம் ஈழப்போர்க் காலம். களங்கள் விரித்திருந்தன. பலாலிப் படைத்தளம் போராளிகளால் காவலிடப்பட்டது. கட்டுவன், வீமன்காமம் போன்ற பகுதிகளில் நிர்மாவும் நின்றார். இயல்பிலேயே ஆளுமையைக் கொண்டிருந்த நிர்மா ஆரம்பத்திலேயே சிறு அணியொன்றின் இரண்டாவது பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரிதும் பேசப்பட்ட எமது முதலாவது மரபு வழிமுறைப் போரான ஆனையிறவுத் தளம்மீதான ஆகாய கடல் வெளிச் சமருக்கும் அணியொன்றின் இரண்டாவது பொறுப்பாளராகவே போயிருந்தார். ஆனையிறவு எமது கையிலவிழாமல் தடுக்குமுகமாக வெற்றிலைக் கேணியில் தரையிறங்கி, ஆனையிறவு நோக்கி நகர்ந்த படையினரை வழிமறித்து வழிமறித்து நடந்த சண்டைகளின்போது புல்லாவெளியில் காயமடைந்தார். காயம் ஆறியதும் கண்ணி வெடிகள் தொடர்பான சிறப்புப் பயிற்சியில் கண்ணிவெடி அணியாகப் பயிற்சி முடித்து எமது அமைப்பின் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களால் வழங்கப்பட்ட சின்னங்களுடன் பணி செய்வதற்காய் வெளியேறினார். அதன் பின் தொடர்ந்த கஜபார எதிர் நடவடிக்கை (1992), பலவேகய – 02 எதிர் நடவடிக்கை (1992) என்றவாறாக அவரின் களங்கள் தொடர்ந்தன 1992இல் தொண்டமானாற்றி லிருந்து ஒட்டகப்புலம் வரையான 150 காவலரண்கள் தகர்ப்பு நடவடிக்கைக்கு முன்னரான ஒழுங்கமைப்புக்களின்போது பகல்நேர அவதானிப்புக்கென ஒரு பகுதி நிர்மாவிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இரவு நேரங்களில் எமது வேவு அணிகளுடன் முன்னகர்ந்து, தாக்குதல் அணிகள் உள்நுழையவுள்ள பாதைகளில் கிடக்கும் எதிரிகளின் கண்ணிகளை அகற்றுதல், பகலில் தொடர்ச்சியாக மழையில் நனைந்து வெயிலில் காய்ந்தவாறு அவதானித்தல், மறுபடி இரவு கண்ணிவெடி அகற்றல் என்று கடைசி ஐந்தாறு நாட்களிலும் ஓய்வேயில்லாத கடும் பணி இடையில் நிர்மாவின் அணியை வந்து பார்த்த நிர்மாவின் பொறுப்பாளர், எல்லோரையுமே பின்னணிக்குப் போய்க் குளித்துவிட்டு வருமாறு பணித்தார். பகல் நேர அவதானிப்புத்தானே என்று முழுப் பேருமே போகாமல் தன்னோடு ஒருவரை நிறுத்திக்கொண்டு ஏனையவர்களைக் குளிக்க அனுப்பினார் நிர்மா. சண்டை தொடங்க இன்னும் ஓரிரண்டு நாட்களே இருக்கும் போது தமது கவனக்குறைவால் ஏற்படப்போகும் சிறு தவறுகூட நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் அவர் மிகக் கவனமாகவே இருந்தார். நிலைமை சிக்கலில்லை என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு நிர்மாவுடையது. பலாலி விமானத் தளப் பகுதியினுள் பகலில் நடமாட்டம் கூடுதலாக இருப்பதால், சாப்பிடு வதற்குக்கூட மரத்தை விட்டு இறங்காமல் தொலைநோக்குக் கருவியால் அவதானித் தவாறே இருந்தார். சண்டை தொடங்கும்போது நிர்மாவுக்கு பின்னணியில் நின்று காயக்காரர்களை வெளியேற்றும் பணி கொடுக்கப்பட்டிருந்தது. நேரடியாகச் சண்டையில் தன் பங்கு இல்லை என்பது நிர்மாவால் ஏற்றுக்கொள்ளமுடியாததாக இருந்தது. இருளில் நகர்ந்து கொண்டிருந்த அணிகளுடன் சேர்ந்து நகரத் தொடங்கிய நிர்மாவை அவரின் பொறுப்பாளரின் கூர்மையான விழிகள் கண்டுகொண்டன. உடனடியாகவே ஆளைப் பின்னணிக்கு அனுப்பி விட்டார். சண்டை தொடங்கி முதற்தொகுதி காயக்காரர்களைப் பின்னணிக்கு நகர்த்திக கொடுத்து விட்டு காவும்குழு மறுமுறை முன்னணிக்கு நகர்ந்தபோது நிர்மா அவர்களோடு இணைந்து கொண்டார். 1993 இல் ஆனையிறவிலிருந்து ‘யாழ்தேவி’ நடவடிக்கையில் திருப்பி அனுப்பப்பட்ட வழியெங்கும் படையினர் விதைத்துச் சென்ற கண்ணிகளை அகற்றும் பணியில் நிர்மாவின் அணியும் ஈடுபட்டது. கண்ணிகளை அகற்றும்போது, வெடிக்காமல் விழுந்து கிடந்த எறிகணை களையும் அகற்றினர். எறிகணைகளைக் கையாளுவது வேறு தனியான அணியினரின் வேலையாக இருந்தபோதும், அது மக்கள் வாழ்ந்த பகுதி என்பதால் திடீரென வருகின்ற மக்களுக்கு ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்க்க முயன்றார் நிர்மா. தன் அணியினரைக்கூட அனுமதிக்காது தானே எறிகணைகளை அகற்றினார். வேலைகளைப் பார்வையிட வந்த பொறுப்பாளர் நிர்மாவை மிகவும் கண்டித்து, “வெடிக்காமல் கிடக்கும் எறிகணைகளை எடுக்க உங்களுக்கு அனுமதியே இல்லை” என்று கடுமையாகச் சொல்லும் வரை நிர்மா எறிகணைகளையும் சேர்த்தே அகற்றினார். அதன் பின் எறிகணைகளருகே அடையாளத்துக்காகத் தடிகளைக் குத்தி விட்டு, எழுதுமட்டுவாளிலிருந்து கறுக்காய் வரையான பகுதிக்குள் கண்ணிவெடிகளை அகற்றினார். ஆனால் அந்த வேலை முடிந்ததும் தானாகவே பொறுப்பாளரிடம் கேட்டு, வெடிக்காத எறிகணைகளை அகற்றும் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார். இதுதான் நிர்மா. தனக்குத் தெரியாது என்று எதையுமே விட்டு வைக்க எப்போதுமே அவர் விரும்பியதில்லை இதன் பின் பூநகரிப் படைத்தளம் மீதான “தவளை” நடவடிக்கையில் பங்கு கொண்டு, அங்கும் கண்ணிவெடிகளை அகற்றும் பணி செய்து இவரது பணியைப் பல களங்கள் வேண்டி நின்றன. “சூரியக்கதிர் – 01” எதிர் நடவடிக்கைக் களமுனையில் கண்ணிகளை விதைக்கும் பணியை இவரின் அணி செய்தது. அது மிகவும் நெருக்கடி மிகுந்த களம். ஒவ்வொரு நாளும் களமுனை இடம் மாறிக்கொண்டேயிருக்கும். சண்டையின் நிலைமைக்கேற்ப, சண்டையணிகளின் நகர்வுக்கேற்ப நிலக்கண்ணிகளை விதைப் பதும், வரைபடத்தில் குறிப்பதும், அணிகள் இடம் மாறும்போது அகற்றுவதும், மறுபடி விதைப்பதுமாக மிகச் சிரமமான பணி அது. கண்ணிவெடி அணியினரின் கைகள் காய்த்து விட்டிருந்தன. இடர்கள் நிறைந்த “சூரியக்கதிர் – 01” களமுனையில் நிர்மா காயமடைந்தார். காயம் ஆறிய பின் புதிய அணி ஒன்றுக்கு கண்ணிவெடிகள் பற்றிய பயிற்சிகளை வழங்கும் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில், சூரியக் கதிர் – 02 களம் நிர்மாவை அழைத்தது. மூன்றாம் அங்குலமாகத் தடவி ஆயிரம் ஆயிரம் கண்ணிகளை அகற்றி, பயமின்றி மக்கள் நடமாட வழிவகுத்த பெரும் பணியில் நிர்மாவின் பங்கு முக்கியமானது. வெற்றி நிச்சயம் எதிர் நடவடிக் கைச் சமர்முனையில் கண்ணி வெடிப் பிரிவின் பகுதிப் பொறுப்பாளராகப் பணியாற்றிய கடினமான அந்த நாட்கள்.. “ஓயாத அலைகள் – 02” கிளிநொச்சி மீட்பு நடவடிக்கையில் ஒரு வரையறுக் கப்பட்ட பகுதியின் கண்ணிவெடிப் பொறுப்பாளராகக் கடமையாற்றினார். எறிகணை வீச்சிலே தலையில் காயமடைந்தார். தொடர்ந்தும் எறிகணை வீச்சிலேயே நிர்மா காயமடைவதைத் தோழிகள் கேலி செய்தார்கள். “எறிகணைக்கு என்மேல் அத்தனை அக்கறை. அதுதான் தேடிவருகிறது.” என்று சிரித்தார் நிர்மா. விடுதலைப் புலிகள் மகளிர் படையணியோடு இருந்த கண்ணிவெடி அணி, பின் மாலதி படையணியின் கண்ணிவெடிப் பிரிவாகி, பின் 1999.04.28 இல் லெப். கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி மகளிர் அணியாகப் புதுத்தோற்றம் பெற்ற போது நிர்மா அந்த அணியின் 2வது பொறுப்பாளராக எமது தலைவர் திரு. வே.பிரபாகரன் அவர்களால் நியமிக்கப்பட்டார். லெப். கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி அணியை விரிவாக்கம் செய்யவென வந்திருந்த புதிய போராளி களின் தொடக்க படையியற் பயிற்சியையும், மேலதிக சிறப்புப் பயிற்சியையும் நேரடிப் பொறுப்பெடுத்துச் செய்தார். இன்று களமெங்கும் பரந்து நிற்கும் கண்ணிவெடி மகளிர் அணியின் அத்திவாரம் சின்னச்சின்ன விடயங்களில் கூட கவனமெடுத்து நிர்மா போட்ட அத்திவாரமே. பயிற்சி முடித்த புதிய அணி பணி செய்யப் புறப்பட்ட போது நிர்மா கண்ணிவெடி மகளிர் அணியின் நிர்வாகப் பொறுப்பாளராகப் பணி புரிந்தார். அலை மூன்றில் நாம் ஏறி, வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சிக்குள் படை நகர்த்தி எம் பலத்தை பகைவருக்கு உணர்த்திக் கொண்டிருந்த நாட்கள் அவை. களங்கள் அகல விரிந்திருந்தன. பளைப் பகுதியில் கண்ணிவெடி சார்ந்த வேலை களுக்குப் பொறுப்பாக நிர்மா நின்றார். ஓயாத அலைகள்- 01, 02, 03, 04 எல்லாவற்றிலுமே நிர்மாவின் பங்கு கணிச மாக இருந்தது. நாங்கள் அமைதியாக இருந்தோம். பகைவரோ பரபரப்பாக இருந் தனர். ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை நான்கு மாதங்கள் வரை பொறுமையாகநீடித்தோம். பகைவரோ போர் நிறுத்த மீறல்களிலேயே காலத்தை நீடித்தனர். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த அந்த நாளில், பகைவரின் பெரும் எடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையைத் தடுப்பதற்குத் தயாராக நாம் நின்றோம். அந்நிய நாட்டு நிபுணர்களின் ஆலோசனையோடும், அவர்கள் வழங்கிய ஆயுத, உபகரண உதவிகளோடும் சிறிலங்காப்படைத்தரப்பினர் ஆனையிறவில் சிங்கக் கொடி பறக்கவிடும் கனவோடு செய்த தீச்சுவாலை- 01 படை நடவடிக்கையை எமது பெரும் பலத்தால் மூன்றே நாளில் அணைத்தோம். படையினர் பலர் எறிகணைகளாலும் கண்ணிவெடிகளாலும் பெருமளவில் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்ததாகவும் படை அதிகாரிகள் தெரிவிக்கும் அளவுக்கு, களத்திலே நிர்மாவின் பங்கு பாரியது. இப்படி இப்படியெல்லாம் கண்ணிகளை விதைக்கு மாறு எமது தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்கள் தயாரித்த திட்டத்தை, தனது அணியினரை வைத்துச் செவ்வனே செய்து முடித்த நிர்மா, “எறிகணைகளாலேயே எப்போதும் காயமடைகின்ற நிர்மா, “எறிகணைக்கு என்மேல் அவ்வளவு அக்கறை . அதுதான் தேடி வருகிறது” என்று சிரிக்கின்ற நிர்மாவைத்தேடி அந்த எறிகணை, கடைசி எறிகணை வந்தது. “தீச்சுவாலை- 01” எதிர் நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்து, அணிகள் மீளமைக்கப்பட்டு, எரிந்த வேலிகளும் சிதைந்த காப்பரண்களும் போராளிகளால் திருத்தப்பட்டுக் கொண்டி ருந்த அந்த வேளையில் இந்தச் செய்தி வந்தது. நிர்மா எங்களோடில்லை. கிளி. சென்திரேசா மகளிர் கல்லூரி தனது பழைய மாணவியை, ஒரு கூடைப் பந்தாட்ட வீராங்கனையை இழந்தது. இழப்புக்கள் எப்போதுமே துயரத் தைத் தருபவை. ஆனால் உலகத்தில் எந்த ஒரு நாடும் இரத்தம் சிந்தாமலும், ஈகங்கள் புரியாமலும் விடுதலை பெற்றதில்லை. எமது தலைவர் அவர்கள் சொல் வது போல் மாவீரர்களது அற்புதமான இலட்சியவாழ்க்கை – அவர்களது அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள்- இவை எல்லாவற்றினதும் ஒட்டு மொத்த வெளிப்பாடாகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. நினைவுப்பகிர்வு: செந்தூர நிலா. -சுதந்திரப்பறவைகள் 2002 https://www.thaarakam.com/news/126163
 25. சக்கர நாற்காலியில் இருத்திய இன அழிப்புப் போர்: சாதித்து காட்டிய மாணவிகள் Last updated Apr 28, 2020 நடந்தது முடிந்த 2019 கல்வி சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகிய நிலையில் கல்விக்கு ஊனம் ஒருபோதும் தடையில்லை என்பதனை மாணவிகள் நிரூபித்துக்காட்டியுள்ளனர். இதில் உயிரிழை அமைப்பின் பயனாளிகள் பிள்ளைகள் 8 பேர் சித்தியடைந்துள்ளனர். இதில் விஷேசமாக எமது உயிரிழை அமைப்பின் பயனாளிகள் இருவர் தங்களது சக்கர நாற்காலிகளுடன் சென்று தங்களது கல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை என்பதனை நிருபித்துள்ளனர். 1.தன்னீருற்று மேற்கு முள்ளியவளையை சேர்ந்த கெங்காதரன் பவதாரனி இவர் கடந்த 2009ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தின் போது தனது முள்ளந்தண்டு பகுதியில் காயமடைந்து அன்றில் இருந்து தனது வாழ்க்கையை சக்கரநாற்காலியுடனே வாழ்ந்து வருபவர். 2.நாவலர் வீதி முதலாம் வட்டாரம் முள்ளியவளையை சேர்ந்த மதியழகன் விதுர்சிகா இவர் கடந்த 2009ம் ஆண்டு யுத்தத்தில் தனது முள்ளந்தண்டு பகுதியில் காயமடைந்து அன்றில் இருந்து இன்று வரை சக்கரநாற்காலியுடனே வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களது கல்வியை இடையில் விட்டுவிடாது தொடர்ந்து படித்து க.பொ.த. சாதாரண தரத்தில் மிகவும் சிறப்பாக சித்தியடைந்துள்ளனர். K.பவதாரணி- 8A,B, M.விதுர்ஷிகா- 6A,B,2C ஆகியோர் சிறந்த சித்திகளை பெற்றுள்ளானர்.இவர்கள் இருவரையும் பாராட்டி வாழ்த்துவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். விசேடமாக Lebara Foundation (LBR Foundation) தொடர்ந்தும் உயிரிழை அமைப்பின் பயனாளிகளின் பிள்ளைகளுக்கான கல்வி வளர்ச்சியில் முழுக்கவனம் எடுத்து இன்றுவரைக்கும் கல்வி செயற்திட்டத்திற்காக அர்ப்பணிப்போடு செயல்ப்பட்டு வருகின்றனர். இதேவேளை குறித்த மாணவிகளுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். https://www.thaarakam.com/news/126135