Everything posted by கிருபன்
-
ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம்
ரில்வினுக்கு எதிராக லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போராட்டம்! ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் புதிய புத்தர் சிலை விடயம் மற்றும் சிங்கள குடியேற்றங்களை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதேவேளை வீழ்ச்சியடைந்த நாட்டை ரணில்விக்ரமசிங்க கடடியழுப்பியதாக பலர் எண்ணுவதாகவும் . உண்மையிலேயே ரணில்விக்ரமசிங்க வீழ்ச்சியடைந்த நாட்டை கட்டியெழுப்பவில்லை என்பதுடன் மாறாக .அந்த நெருக்கடியை அவர் மக்கள் மீது சுமத்திச்சென்றதாக புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாடலின் போது மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார் லண்டன், வெம்பிளியில் புலம் பெயர் தமிழர் அமைப்பினால், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி போராட்டத்தினை முன்னெடுத்தனர். திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் மற்றும் சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்பட்டமை போன்றவற்றிற்கு மூல காரணமாக டில்வின் சில்வா செயற்பட்டார் என புலம்பெயர் தமிழர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். இந்தநிலையில், அந்த போராட்டத்தையும் மீறி டில்வின் சில்வா கூட்டத்திற்குள் நுழைய முற்பட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதி லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ரில்வின் சில்வா, நேற்று பிற்பகலில், லண்டன் – அல்பேட்டன் பகுதியில் உள்ள கட்டிடத்தில் புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாடியிருந்தார். அதற்காக அவர் பயணித்த வாகனத்தை மறித்தே புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். திருகோணமலையில் புதிய புத்தர் சிலை விடயம் மற்றும் சிங்கள குடியேற்றங்களை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எனினும் லண்டன் பொலிசார் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தி, ரில்வின் சில்வாவின் வாகனம் செல்வதற்கு வழியேற்படுத்திக் கொடுத்ததாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன https://www.samakalam.com/ரில்வினுக்கு-எதிராக-லண்ட/
-
நாமும் திருப்பி அடிப்போம் – கஜேந்திரகுமாருக்கு சீ.வி.கே எச்சரிக்கை
நாமும் திருப்பி அடிப்போம் – கஜேந்திரகுமாருக்கு சீ.வி.கே எச்சரிக்கை adminNovember 24, 2025 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், செயலாளர் கஜேந்திரனும் சொல்வது போல தமிழ் அரசுக் கட்சி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யவில்லை. நியாயமான விமர்சனத்தை ஏற்கலாம். துரோகம் ,காட்டிக்குடுப்பு, இனத்துரோகி என்ற வசனங்களை ஏற்க முடியாது. இனி எந்த தரத்தில் பதில் வருகிறதோ அதே தரத்தில் பதில் கொடுக்கப்படும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கூட்டுத் தலைமையாக பொது விடயங்களில் ஒன்றாகுவோம் என அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் தமிழ் தேசிய கட்சிகளுடன் கூட்டாக செயற்பட எல்லா கட்சிகளுடன் பேசினோம். எல்லோரின் வீடுகளுக்கும் தேடிப் போனேன். ஒருவரும் ஒத்துழைக்கவில்லை. பிரிக்கப்படாத நாட்டுக்குள் மீளப் பெற முடியாத அதிகாரப்பகிர்வில் சமஷ்டி கட்டமைப்பை கொண்ட எந்த பெயரைக் கொண்ட தீர்வையும் நாம் ஏற்க தயார். ஒற்றையாட்சியை ஏற்கவுமில்லை. சமஷ்டியை கைவிடவுமில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கஜேந்திரனும் சொல்வது போல தமிழ் அரசுக் கட்சி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யவில்லை. கடல் வத்தும் கடல் வத்தும் என கொக்கு குடல் வத்தி போக முடியாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தங்களுடன் பேசியிருக்கலாமே என்கிறார். மாகாண சபையை வேண்டாம் என சொல்பவரை எவ்வாறு அழைத்து செல்ல முடியும். அரசியல் தீர்வை அடைந்த பின்னர் ஏனைய பிரச்சினையை பார்க்கலாம் என்கிறார். அரசியல் தீர்வு வருவதற்குள் எல்லாம் முடிந்து விடும். இணைந்து செயற்படுவது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு அழைப்பு விடுத்தோம். அடுத்த மாத முற்பகுதியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் பேசப்போகிறோம். அதை ஒத்த அழைப்பை கஜேந்திரகுமாருக்கும் வழங்கினோம். பொது விடயத்தில் அரசியலமைப்பும் வரும் மாகாண சபையும் வரும். கொச்சைப்படுத்தும் கருத்துக்களை சொல்ல வேண்டாம் என்றோம். நாங்கள் அரசியலமைப்பு வரையோனும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்கிறார். கஜேந்திரகுமாருக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். அடக்கமாக பேச காரணம் ஒற்றுமையாக பயணிக்க விரும்புகிறோம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்மை தொடர்ச்சியாக விமர்சிக்க முடியாது. நியாயமான விமர்சனத்தை ஏற்கலாம். துரோகம் ,காட்டிக்குடுப்பு, இனத்துரோகி என்ற வசனங்களே இவர்களுக்கு தெரியும். மக்களுக்கு பதில் சொல்ல நாம் தயார்.சொல்லில் தொங்கி கொண்டு மக்களை ஏமாற்ற வேண்டாம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாகாண சபை வேண்டாம் என்று சொன்னால் நாம் ஒத்துப்போக முடியாது. கஜேந்திரகுமாருடன் சுமூகமான உறவை பேணவே விரும்புகிறோம். நீங்கள் அடிக்க வெளிக்கிட்டால் நாம் மென்மையாக திருப்பி அடிப்போம். எங்களுடைய வாக்கு வங்கி குறைந்து விட்டது தான். ஏன் உங்கள் வாக்கு வங்கி குறையவில்லையா? எங்களை நீங்கள் தாக்கியதால் தான் தேசிய மக்கள் சக்தி வளர்ந்தது. சமஷ்டியை கைவிடமாட்டோம் என ஜனாதிபதிக்கு முன்னாலேயே சொல்லி இருக்கிறோம். நான் இனி தேர்தல் கேட்கப் போவதில்லை. ஆனால் கட்சியில் கை வைத்தால் எந்த தரத்தில் பதில் வருகிறதோ அதே தரத்தில் பதில் கொடுக்கப்படும். ஒற்றுமையாக இனம் சார்ந்து ஒவ்வொரும் தங்கள் தளத்தில் இருந்து கொண்டு பொது விடயங்களில் ஒன்றாக பொது மையத்தில் இருந்து செயற்பட அழைப்பு விடுக்கிறேன். இதற்கு சாதகமாக பதிலளியுங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சாதகமாக பதிலளித்துள்ளது. கஜேந்திரகுமாரும் கடிதம் கிடைத்துள்ளதாக பேட்டி அளித்துள்ளார். கூட்டுத் தலைமையாக பொது விடயங்களில் ஒன்றாகுவோம். மக்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். இனியாவது தமிழ் தேசிய கட்சிகள் பொது விடயத்தில் இணைந்து பேச வேண்டும் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/222996/
-
அரசும் அரசாங்கமும்
அரசும் அரசாங்கமும் sudumanal அரசாங்கம் (government), என்பதும் அரசு (state) என்பதும் ஒன்றல்ல. தமிழ் ஊடகங்கள் அதை மாத்தி மாத்திப் பாவிப்பதால் பலரும் குழப்பமடைகிறார்கள். அரசின் நிகழ்ச்சி நிரலை மக்களிடம் கொண்டுசென்று செயற்படுத்தும் முக்கியமான நிர்வாக அலகுதான் அரசாங்கம். அரசாங்கத்துக்கும் அதன் தலைவர் அல்லது ஜனாதிபதிக்கும் அதிகாரங்கள் இருக்கிறதுதான். அவர்களுக்கான பலமாக அரசியல் யாப்பும் இருக்கிறது. அதன் எல்லைக்குள் அவர்கள் செயற்படுகிறபோது எந்தச் சிக்கலும் அரசு(state) க்கு இருப்பதில்லை. மக்கள் எழுச்சியும்கூட அப்படித்தான் கையாளப்படுகிறது. அரசின் இனவாதத்தை செவ்வனே செயற்படுத்திய ராஜபக்ச பரம்பரையை ஆட்டங்காணச் செய்த காலிமுகத் திடல் போராட்டத்தின் போது ராஜபக்சக்களை கைவிட அரசு தயாராக இருந்தது. புதிதாக அந்த இடத்தை நிரப்ப அரசியல்வாதிகள் உண்டு என அரசுக்குத் தெரியும். அரசமாளிகையை முற்றுகையிட்டு உள்ளே புகுந்து விளையாடுற எல்லைவரை -தனது இராணுவத்தை வாபஸ் பெறச் செய்து- போராட்டக்காரரை அனுமதித்தது. தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்திருந்து அந்தக் காட்சிகளை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதே போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தினுள் புக முயற்சித்த நேரத்தில், அந்த வன்முறை இயந்திரங்கள் கடுமையான தடுப்புகளைப் போட்டு வீரியமாக எதிர்கொண்டன. அதையும் உடைத்து அன்று போராட்டக்காரர் பாராளுமன்றத்தினுள் உள்நுழைந்திருந்தால் ஒரு படுகொலையோடு அந்தப் போராட்டம் முடிவடைந்திருக்கும் சாத்தியமே இருந்தது. அரசாங்கங்கங்கள் தேர்தலின் மூலம் மாறலாம். அரசு கட்டமைப்பு அரசாங்க மாற்றத்தோடு சேர்ந்து மாறாது. அது தனது தொடர்ச்சியை பேணியபடி இருக்கும். அரசு என்பது புலப்படும் மற்றும் புலப்படாத (visible & invisible) கட்டமைப்பைக் கொண்டது. அதன் வன்முறை இயந்திரங்களான இராணும் பொலிஸ், உளவுப்படை, நீதிமன்றம் போன்றவை புலப்படும் நிலையில் உள்ளவை. அரசின்; கருத்தியல் என்பது புலப்படாத நிலையில் இருப்பது. இந்த நிறுவனங்களில் பதவி மாற்றங்களை அரசாங்கம் நிகழ்த்தலாம். இந்த சில்லறை மாற்றங்கள் அரச கட்டுமானத்தையோ அதன் கருத்தியலையோ மாற்றாது. இலங்கையில் எல்லா அரசாங்கங்களும் அரச கட்டுமானத்தைப் போலவே அரச கருத்தியலையும் கையாள்வதில் இதுவரை பிசகின்றி சேர்ந்தே நடந்திருக்கின்றன. இந்த முட்டுச் சந்தியில்தான் என்.பி.பி அரசாங்கமும் விடப்பட்டிருக்கிறது. இதுவரையான அரசாங்கங்கள் இனவாதத்தைப் பேசிப் பேசியே ஆட்சியை அமைக்க இலகுவான வழியாக அதைத் தேர்ந்தெடுத்தார்கள். அரச கட்டுமானத்தின் கருத்தியல் பௌத்த மேலாதிக்கமாக கண்ணுக்குப் புலப்படாத அதிகாரத்துடன் செயற்பட்டு வருகிறது. ஓர் அரசின் மிக முக்கிய அங்கங்கள் மக்கள் திரளும், நிலமும், கருத்தியல் நிறுவனங்களும், வன்முறை இயந்திரங்களும் ஆகும். இவை எல்லாவற்றையும் நிர்வகிக்கும் நிறுவனமாக அரசாங்கம் இருக்கிறது என்றபோதும், அரசாங்கமானது அரசின் அதிகாரத்தை தடாலடியாக மீறிச் செயற்படுவது என்பது இலகுவானதல்ல. அரசு தனது மக்கள் திரளை ஒன்றிணைத்து இந்த மீறல்களை சுலபமாக எதிர்கொள்ள கருத்தியல் ஆயுதத்தை பயன்படுத்தும். இலங்கையைப் பொறுத்தவரை பெரும்பான்மையானவரை அதாவது சிங்கள மக்களை மொழி மற்றும் (பௌத்த) மத அடிப்படையில் ஒன்றிணைக்க இலகுவாக இருக்கிறது. சிங்கள மக்களில் மிகப் பெரும்பாலானோரும் பௌத்த மதத்தை கடைப்பிடிப்பது இன்னும் அதிகார சக்திகளுக்கு இலகுவாகப் போயிருக்கிறது. எனவே இனவாதம் என்பது மொழி, இனம் என்ற இரண்டு தளங்களிலும் செழிப்பாக இருக்கிறது. மொழியைப் பொறுத்தவரை “இலங்கையில் மட்டுமே சிங்கள மொழி இருக்கிறது. தமிழ் அப்படியல்ல. இந்தியாவில் பல கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். எனவே சிங்கள மொழியைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை எமக்கு உண்டு” என கிளம்ப ஒரு கருத்தியல் தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இலகுவாக மாறா நிலையிலுள்ள அரச கட்டுமானத்தை மாறும் நிலையிலுள்ள அரசாங்கங்கள் கையாள்வதற்கு அரசியல் யாப்புத்தான் ஒரு பாதையை திறந்து வைத்திருக்கிறது. இந்த அணுகுமுறைக்கு மக்கள் நலன்மேல் அக்கறையுடைய ஓர் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தோடு தன்னை முதலில் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. இன்றைய என்பிபி அரசாங்கம் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆனால் என்பிபி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்தும், அரசியல் சட்டத்தில் கைவைக்க தயங்குவதற்கான ஒரே காரணம் அரச வடிவத்தின் சிங்கள பௌத்த மேலாதிக்க கருத்தியல் வடிவம்தான். நீருக்குள் இறங்காமல் நீச்சல் பழக முடியாது. காலம் தேவைப்படலாம். முயற்சி அதைவிட முக்கியம் என்பதை என்பிபி அரசாங்கத்துக்கு சொல்லிவைக்கலாம். 70 வருட இனவாத கருத்தியலில் கட்டப்பட்டு தொடர்ச்சியுறும் அரசாங்க பாரம்பரியத்திலிருந்து, தாம் சொல்வதுபோல தம்மை என்பிபி யினர் எவ்வாறு முறித்துக் கொள்ளப் போகிறார்கள். இதை அவர்கள் நேர்மையாக முன்வைக்கும் பட்சத்தில், அது அவர்களிடமிருந்து செயல் வடிவத்தைக் கோருகிறது. இனவாதமற்ற, மதவாதமற்ற ஓர் நாட்டை கட்டியமைப்போம் என்ற அவர்களின் குரல் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்தார்கள். இந்தக் குரலையும் மேவிய என்பிபி யின் குரலானது ஊழலையும் போதைவலையமைப்பையும் தகர்த்து இல்லாமலாக்குவோம் என்பது. அதுவே இன்று நடைமுறையில் பரபரப்பாக செயற்படுகிறது. இனவாத ஒழிப்புக்கான நடைமுறையல்ல. அதிகாரப் பகிர்வு என்பது பற்றி பேசவே தயங்குகிற சூழல் அவர்களது. “சட்டம் எல்லோருக்கும் பொதுவானது, எல்லோரும் சம உரிமை கொண்ட மக்கள், எல்லா பிரதேசங்களும் சமமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்” என்றெல்லாம் பொதுமையாகப் பேசுவது அரச இனவாதக் கட்டமைப்புக்கோ அதன் கருத்தியல் நிறுவனங்களுக்கோ எந்த அச்சத்தையும் விளைவிக்காது. இவற்றை நடைமுறைப் படுத்துகிறபோது தான், அவர்கள் சட்டையைக் கொழுவிக் கொண்டு களமாடப் புறப்படுவார்கள். உண்மையில் என்பிபி தான் பேசுபவற்றை நடைமுறையாக்க தயாராகுமானால், சிங்கள முற்போக்கு சக்திகளோடு தமிழ் முஸ்லிம் மலையக மக்களும் அதற்கு உந்துதலாகவும் ஆதரவாகவும் செயற்பட வேண்டும். அல்லது அரசாங்கத்தை படிப்படியாக இனவாதத்துக்கு எதிரான செயல் வடிவத்துள் தள்ள அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை எதிர்நிலையில் நின்று செய்வது சாத்தியமில்லை. வெளியில் அரசாங்கத்தை மீண்டும் இனவாத அலகால் கௌவிப் பிடிக்க அலையும் வல்லூறுகள் இந்த 70 வருடமும் மாறிமாறி ஆட்சி நடத்திய இனவாதிகள் என்பதை கவனம் கொள்ள வேண்டும். இதற்கான பக்குவமோ, முதிர்ச்சியோ, அரசியல் சிந்தனையோ, அணுகுமுறையோ தமிழ் முஸ்லிம் மலையக கட்சிகளுக்குக் கிடையாது. அவர்களுக்கு அரசியல் என்பது பழக்க தோசம். அது பேரினவாதத்தை எதிர்க்கும் சிறுபான்மை (எதிர்)இனவாத மனக்கட்டமைப்பிலிருந்து எழுவது. அதுவே திருகோணமலை புத்தர் விவகாரத்தில் என்பிபி தமிழ் எம்பிக்களை பதவி விலக வேண்டும் என பழுத்த தமிழ் அரசியல்வாதியான சுமந்திரனை சொல்ல வைக்கிறது. இனப்படுகொலையை செயற்படுத்திய மகிந்த பரம்பரையோடு ஒத்துழைக்கக் கூட தயாராக இருக்கிறார்கள் அவர்கள். நாட்டின் இனவாத பிரச்சினையை இவர்கள் அணுகுகிற அழகு இது. எனவே என்பிபி அரசாங்கம் அதிகாரப் பகிர்வு குறித்தான விடயத்துக்கு மட்டுமல்ல, இந்த பௌாத்த மேலாதிக்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் அரசியல்யாப்பில் திருத்தங்களை கொண்டுவர முயல வேண்டும். இவ்வாறான பிரச்சினைகளை சட்ட நுணுக்கங்கள் மூலம் வரையறுக்க வேண்டும். உதாரணமாக சுவிஸில்ஒரு ஊரில் ஒரு பாதையை போட அல்லது பாலத்தைக் கட்டக் கூட அந்த பிரதேச மக்களிடம் வாக்கெடுப்பின் மூலம் அபிப்பிராயம் பெறப்படுகிறது. அதை அங்கீகரிக்கவோ மறுக்கவோ அந்த மக்களுக்கு உரிமை இருக்கிறது. அதை மீறி அரசாங்கம் செயற்படாது. இவ்வாறான நடைமுறை மூலம் காணி ஆக்கிரமிப்புகள் புத்தர் பயிரிடல் என்பவற்றை -இன மத எல்லையைத் தாண்டி- சட்ட ரீதியில் அணுக முடியும். இதற்கு மதச் சார்பின்மையான அரசாங்கமாக இருத்தல் முக்கியமானது. மதம் எளிய மனிதர்களுக்கான ஆத்ம பலத்தைத் தரலாம். ஆனால் அதுவே ஆன்மீக நிலையிலிருந்து அதிகார நிலைக்கு மாறுகிறபோது பெரும் ஆபத்து நிகழ்கிறது. அதே எளிய மக்களை அதன் கருத்தியலால் ஒன்றிணைத்து மனிதவிரோத செயல்களை செய்ய முடிகிறது. இந்தியாவில் சங்கிகளும், இலங்கை மியன்மார் போன்ற இடங்களில் காவிகளையும் இந்த போர்க்களங்களில் காண முடியும். எனவே அரச கட்டமைப்பின் கருத்தியலாக இருக்கும் பௌத்த மேலாதிக்க கருத்தியலை என்பிபி அரசாங்கள் அரசியல் சட்ட திருத்தங்களினூடாக அணுக தயாராக வேண்டும். அதற்கு என்பிபி தயாராக இருக்கிறதா என்ற கேள்வி முக்கியமனானது. தயாராகுமெனின், அதற்கு பக்கபலமாக தமிழ் முஸ்லிம் மலையக அரசியல்வாதிகளும் மக்களும், சிங்கள முற்போக்குவாதிகளும் செயற்பட வேண்டும். இச் சந்தர்ப்பத்தை அவர்கள் தவறவிடக் கூடாது. பலஸ்தீனப் பிரச்சினை குறித்து மட்டுமல்ல, ட்றம்பின் வரிப்போர், நெத்தன்யாகுவின் மனிதவிரோதம் என்பவற்றுக்கு எதிராக உலக நாடுகளில் பலவற்றிலும் இளஞ் சந்ததி சளைக்காத போராட்டங்களையும் குரலையும் எழுப்பி வருகிறது. அவளவுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி இளைஞர் சமூகத்திடம் மேலோங்குகிற உலக சூழல் தோன்றியிருக்கிறது. ஆனால் இவளவு காலமாக தொடர்ச்சியுறும் மக்கள் விரோத இனவாத செயற்பாடுகளை எதிர்க்க சிங்கள சமூகம் உட்பட எல்லா இன இளஞ் சந்ததிகளும் தயாராக இருக்கிறதா? இருக்குமெனின், இலங்கையில் இனவாதத்தை பலவீனமாக்கும் மாற்றத்தை நிகழ்த்த அரசாங்கங்கள் மறுபுறத்தில் நிர்ப்பந்திக்கப்படும் இயங்குநிலை உருவாகும். இதில் தமிழ் முஸ்லிம் மலையக மக்களுக்கும் பங்கு உண்டு என்பது மட்டுமல்ல முக்கியமாக, இளஞ் சந்ததியிடம் சிந்தனை மாற்றம் செழுமையுறுவதும் அவசியமானது. சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இனவாதத்தால் கட்டமைக்கப்பட்ட அரச வடிவமும் அதை செவ்வனே செய்து இனவாத்தை வளர்த்துவிட்ட அரசாங்கங்களும் என தொடர்ந்த இரு கட்சிகளின் மேலாதிக்க பாரம்பரியத்துக்கு வெளியே மூன்றாவது கட்சியாக ஜேவிபி யை மேலே கொணர்ந்ததும் இளஞ் சந்ததியின் காலிமுகத் திடல் போராட்டம்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவ்வாறு மேல்நிலைக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு வரலாற்று முறிவை பழங்கஞ்சி அரசியலால் அணுக முடியாது. இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முற்படும் இனவாத கும்பலோடு கூட்டுச் சேரும் அரசியல் களங்கள் நிராகரிக்கப்பட வேண்டியது. https://sudumanal.com/2025/11/18/அரசும்-அரசாங்கமும்/#more-7497
-
நீரில் மிதக்கும் பனிக்கட்டி? - நிலாந்தன்
நீரில் மிதக்கும் பனிக்கட்டி? - நிலாந்தன் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் மாமியார், கடந்த புதன்கிழமை,கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் இயற்கை எய்தினார். ஆனந்த சுதாகரனின் பிரிவினால் நோயாளியாகிய அவருடைய மனைவி 2018ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவருடைய தாயார் கமலாதான் பேரப்பிள்ளைகளைப் பராமரித்து வந்தார். அவரும் இப்பொழுது இறந்து விட்டார். ஆனந்த சுதாகரன் 17 ஆண்டுகளாகச் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான திருமதி.லக்மாலி அண்மையில் கொழும்பில் நடந்த ஊடக விவாத நிகழ்ச்சியொன்றில் பின்வருமாறு வாதிட்டதை முகநூல் பதிவொன்றில் காண முடிந்தது. ”சிறையில் இருப்பவர்கள் அரசியல் கைதிகள் அல்லர். நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள். தலதா மாளிகை சம்பவம் உட்பட பாரிய குற்றச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள். தமிழ் மக்கள் இதனை விளங்கிக் கொண்டுதான் இப்போது எமது அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர். ” சிறையில் இருப்பவர்கள் தண்டிக்கப்பட்ட கைதிகள் என்று கூறுவதன்மூலம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று லக்மாலி கூறுகிறார். அதாவது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள் என்று பொருள். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கப் போவதாக கடந்த ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்பாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால் இன்றுவரையிலும் அதை அவர்கள் செய்யவில்லை. இப்பொழுது அந்தச் சட்டத்தைத் திருத்தி ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வரப் போவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டம் எனப்படுவது தமிழ் மக்களின் அரசியல் எதிர்ப்பை பயங்கரவாதமாக சட்ட வியாக்கியானம் செய்து சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வதற்கான ஒரு சட்டச்சூழலை எப்பொழுதும் பேணுவது. அதாவது தமிழ்மக்களின் எதிர்ப்பை பயங்கரவாதமாகச் சித்தரிக்கக்கூடிய வாய்ப்புகளை எப்பொழுதும் பேணுவது. இந்தவிடயத்தில் கடந்த காலங்களில் இலங்கைத்தீவை ஆண்டு வந்த மேட்டுக்குடி அரசியல்வாதிகளின் அதே அணுகுமுறையைதான் தேசிய மக்கள் சக்தியும் கொண்டிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா? அரசியல் கைதிகளின் விடயத்தில் மட்டுமல்ல, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அகற்றுவதில் மட்டுமல்ல, தொல்லியல் விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழுவை நியமித்தபோது மட்டுமல்ல, திடீரென்று முளைக்கும் புத்தர் சிலைகளைக் கையாளும் விடயத்திலும் என்.பி.பி அரசாங்கமானது முன்னைய மேட்டுக்குடி அரசியல்வாதிகளைப் போலவே சிந்திக்கிறது என்பதைத்தான் கடந்த வாரம் திருக்கோணமலையில் நடந்த புத்தர் சிலை விவகாரம் நமக்குக் காட்டுகிறதா ? திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் எனப்படுவது சிலையிலிருந்து தொடங்கவில்லை. அது அந்தச் சிலை வைக்கப்பட்ட காணிக்குள் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த ஒரு ரெஸ்ரோரண்டில் இருந்து தொடங்குகிறது. அந்த ரெஸ்ரோரன்ட் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருக்கிறது என்று அதில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் தரப்புகளும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சித்த ஒரு பின்னணியில், கடந்த வாரத்துக்கு முதல் வாரம் அந்த ரெஸ்ரோரண்டின் மையப் பகுதியை வைத்துக்கொண்டு ஏனைய பகுதிகளை அகற்றுவதற்கு அங்கிருந்த பௌத்த மதகுரு ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் ஒப்புக்கொண்டபடி நடக்காமல் அந்த விடயத்தை உணர்ச்சிகரமான விதத்தில் திசைதிருப்பும் நோக்கத்தோடு புத்தர் சிலையை உள்ளே கொண்டு வந்திருக்கிறார். அதாவது சட்டவிரோதக் கட்டுமானம் ஒன்றை அகற்றுவதைத் தவிர்ப்பதற்கு புத்தர் சிலை ஒரு திசை திருப்பும் கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது சட்டவிரோதமானது என்பதனால்தான் போலீசார் முதலில் அதனை அகற்றினார்கள். ஆனால் அதே போலீசார் அந்த சிலையை மீண்டும் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் போலீசார் சட்டவிரோதமான ஒரு சிலையை சட்டபூர்வமானது ஆக்கியிருக்கிறார்களா? புத்தர் சிலைக்கு ஒரு சட்டம்; தமிழ் மக்களுக்கு இன்னொரு சட்டம். ஏற்கனவே திருமலை மறை மாவட்டத்தின் ஆயர் இதுபோன்ற விடையங்களை முன்வைத்துத்தான் இலங்கைத் தீவில் இரண்டு சட்டங்கள் இருக்கின்றனவா என்று கேட்டிருந்தார். புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கும் காணிக்குள் காணப்படும் ரெஸ்ரோரண்டை அகற்ற வேண்டும் என்று போராடி வருபவர்களில் இப்பொழுது தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ரொஷான் அக்கீமனவும் ஒருவர். அந்த வளவிலிருந்து குறிப்பிட்ட கட்டுமானத்தை அகற்றக்கோரி போராடியவர்கள் மத்தியில் அவர் முன்பு காணப்பட்டார். ஆனால் இப்பொழுது எல்லாத் தரப்புக்களையும் சமாளிக்கப் பார்க்கிறார். அவர் மட்டுமல்ல திருகோணமலையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் உதவி வெளிவிவகார அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரவும் எல்லாத் தரப்புக்களையும் சமாளிக்க முயல்கிறார். அவர் பதவி விலக வேண்டும் என்று சுமந்திரன் கேட்கிறார். ஆனால் சிலையை வைத்து இனவாதத்தைக் கிளப்பும் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டவர் சுமந்திரன். அதற்குப் பிராயசித்தமாக அவரும் தன் பொறுப்புகளைத் துறக்க வேண்டும். 2015இல் ஆட்சிக்கு வந்த ரணில் மைத்திரி அரசாங்கத்தில் சஜித் பிரேமதாசவின் பொறுப்பின் கீழ்தான் புத்தசாசன அமைச்சு காணப்பட்டது. அக்காலகட்டத்தில்தான் தையிட்டியில் விகாரையைக் கட்டத் தொடங்கினார்கள். நாடு முழுவதும் ஆயிரம் விகாரைகளைக் கட்டுவதற்கு 500 மில்லியன் ரூபாயை ஒதுக்குவோம் என்று சிங்கள மக்களுக்கு வாக்குறுதி அளித்தவர்களில் சஜித்தும் ஒருவர். எனவே அப்படிப்பட்ட சஜித்தை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்குமாறு கேட்ட சுமந்திரன் இப்பொழுது அருண் ஹேமச்சந்திர ராஜினாமாச் செய்ய வேண்டும் என்று கேட்கிறார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனக்கு முன்னிருந்த ஆட்சிகளில் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டும்போது சுட்டிக்காட்டும் வேறுபாடுகளில் ஒன்று, தாங்கள் இனவாதத்துக்கு தலைமை தாங்கவில்லை என்பது. ஆனால் இக்கட்டுரையில் ஏற்கனவே கூறப்பட்டதுபோல,அரசியல் கைதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டம், தொல்லியல் விவகார ஆலோசனைக் குழு,புத்தர் சிலைகள் போன்ற விடயங்களில் இந்த அரசாங்கத்துக்கும் முன்னைய அரசாங்கங்களுக்கும் இடையில் வித்தியாசங்கள் உண்டா? புத்தர் சிலையை வைத்து எதிர்க்கட்சிகள் இனவாதத்தைக் கிளப்புகின்றன அதன் மூலம் நுகேகொடவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களை திரட்டும் உணர்ச்சிகரமான அரசியல் சூழலை உருவாக்க முயற்சிக்கின்றன என்று அரசாங்கம் எதிர்க்கட்சிகளைக் குற்றம் சாட்டியது. எதிர்க்கட்சிகளை இனவாதக் கட்சிகள் அல்லது இனவாதத்தை வைத்துப் பிழைத்த கட்சிகள் என்று குற்றச்சாட்டும் இந்த அரசாங்கமானது,தான் இனவாதி அல்ல என்பதனை நிரூபிப்பதற்கு கடந்த ஓராண்டுக்கு மேலான காலத்தில் என்ன செய்திருக்கிறது ? தாங்கள் இனவாதிகள் அல்ல என்று கூறிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. நடைமுறையில் தாங்கள் இனவாதத்திற்கு எதிரானவர்கள் என்பதை நிரூபிக்கத் தேவையான அர்ப்பணிப்பும் துணிச்சலும் அவர்களிடம் உண்டா என்பதுதான் இப்பொழுதுள்ள கேள்வி. இனவாதிகள் தலையெடுக்கக்கூடாது என்றால் இந்த அரசாங்கத்தை எப்படியாவது பாதுகாக்கவேண்டும். இந்த அரசாங்கம் தோல்வியுற்றால் இனவாதிகள் மீண்டும் தலையெடுத்து விடுவார்கள் என்று அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள், குறிப்பாக யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள சில விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது ஒன்றும் புதிய தர்க்கம் அல்ல. இந்த நாட்டை இதுவரையிலும் ஆண்ட இனவாதக் கட்சிகள் மத்தியில் ஒப்பீட்டளவில் லிபரல்களாகத் தோன்றும் பலரும் அப்படித்தான் கூறிவந்தார்கள். அதாவது இனவாதத்தை தோற்கடிப்பதற்கு குறிப்பிட்ட லிபரல் அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று. ஆனால்,யதார்த்தத்தில் என்ன நடந்தது என்றால்,வெளிப்படையான இனவாதத்துக்கு எதிராக முகமூடி அணிந்த இனவாதம் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஒரு தந்திரமாகவே அது காணப்பட்டது. இதன் மூலம் முகமூடி அணிந்த இனவாதம் தமிழ்,முஸ்லிம் வாக்குகளையும் கைப்பற்றிக் கொண்டது. “அரகலய” போராட்டம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் அந்தப் போராட்டத்தின் பின்னணியில் நின்ற அமைப்புகளில் ஒன்றாகிய முன்னிலை சோசிலிச கட்சியின் தலைவராகிய குமார் குணரட்ணத்தோடு உரையாடக் கிடைத்தது. சுமார் 5 மணித்தியால உரையாடல். அந்த உரையாடலின் ஒரு கட்டத்தில் அவர் சொன்னார்,தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்ள முடியாது; சமஸ்டியை ஒரு வெளிப்படையான தீர்வாக முன்வைக்க முடியாது என்ற பொருள்பட. நாங்கள் இதை வெளிப்படையாக உங்களுக்குச் சொல்கிறோம். ஆனால் ஜேவிபி அதை வெளியில் சொல்லாமல் அரசியல் செய்கிறது. அவர்கள் அதை வெளிப்படையாகச் சொன்னால் தென்னிலங்கையில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள் என்று. இந்த விடையத்தில் முன்னைய லிபரல் அரசாங்கங்களைப் போலவே என்பிபியும் இனவாதத்தை எதிர்த்துத் தியாகம் செய்யத் தயாரில்லை என்பதைத்தான் கடந்த ஓராண்டுக்கு மேலான அவர்களுடைய ஆட்சிக் காலம் நிரூபித்திருக்கிறது. அதாவது இனவாதத்தை எதிர்த்து நின்று அழிய அவர்கள் தயாராக இல்லை. மாறாக இனவாதம் அருட்டப்பட்டுவிடும் என்று கூறி தமிழ் எதிர்ப்பைத் தணிக்கப் பார்ப்பார்கள். இதைத்தான் லிபரல் இனவாதிகளும் செய்கிறார்கள்; சில வெளிநாட்டுத் தூதரகங்களும் செய்கின்றன. சந்திரிகா “வெண்தாமரை” இயக்கத்தைத் தொடங்கி சமாதானத்துக்கு சிங்கள மக்களைத் தயார்படுத்தப் போவதாகக் கூறினார். ஆனால் அந்த இயக்கம் நடைமுறையில் படையினருக்கும் படையினரின் குடும்பங்களுக்கும் தொண்டு செய்யும் ஒரியக்கமாகவே மாறியது. என்பிபியின் அடித்தளமாகக் காணப்படும் ஜேவிபியில் உறுப்பினராக இருந்து, பின்னர் விலகிச் சென்ற ஒருவர் கூறுவார், ”மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படையான இனவாதி. ஆனால் ஜேவிபி சமூக நீதியின் பின் பதுங்கும் இனவாதி”என்று. இக்கூற்று பிழையானது என்பதை நிரூபிப்பதற்குக் கிடைத்த கடந்த ஓராண்டுக்கு மேலான காலத்தை ஜேவிபி பயன்படுத்தவில்லை. எனவே இதற்கு முன்பு ஆட்சிசெய்த லிபரல் முகமூடி அணிந்த, ஆனால் இனவாதத்துக்கே தலைமை தாங்கிய ஆட்சியாளர்களைப் போலவே என்பிபியும் அதே குட்டையில் ஊறிய மட்டைதானா ? எனது நண்பர் ஒருவர் யாழ்ப்பாணத்தின் சில புத்திஜீவிகளைப்பற்றிச் சொல்லும்போது ஒர் உதாரணத்தை எடுத்துக்காட்டுவார். ”நீரில் மிதக்கும் பனிக்கட்டிகள்” என்று. அதாவது அவர்களும் யாழ்ப்பாணிகள்தான். ஆனால் தங்களை முற்போக்கானவர்களாகக் காட்டிக்கொண்டு கொஞ்சம் மேலே மிதப்பார்கள். நீரில் மிதக்கும் பனிக்கட்டியைப் போல. ஆனால் பனிக்கட்டியும் நீரும் அடிப்படையில் ஒரே பண்பிலிருந்து வந்தவைதான். இது இப்பொழுது என்பிபிக்கும் பொருந்துமா? https://www.nillanthan.com/7950/
-
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –19 : அதிர்ச்சியூட்டி இருண்ட பக்கங்களில் வெளிச்சம் பாய்ச்சும் திகில் நாவல் தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –19 | பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் (Bret Easton Ellis) எழுதிய ‘அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) புத்தகம் அதிர்ச்சியூட்டி இருண்ட பக்கங்களில் வெளிச்சம் பாய்ச்சும் திகில் நாவல் அ. குமரேசன் புத்தகக் கடைக்காரர்கள் பிளாஸ்டிக் தாளில் சுற்றி வேறு ஏதோவொரு பொருள் போலக் கொடுப்பார்கள். வாடிக்கையாளர்கள் அப்படியே வேறு ஏதோவொரு பொருள் போல எடுத்துச் செல்வார்கள். அந்த அளவுக்குக் கவனத்தோடு விற்கப்பட்டது, எச்சரிக்கையாக கொண்டுசெல்லப்பட்டது ஒரு நாவல். காரணம் ஆஸ்திரேலிய நாட்டின் பல மாநிலங்களில் அதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா, ஜெர்மனி, நியூஜிலாந்து உள்ளிட்ட நாடுகளில் புத்தக விற்பனைக்குக் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. பொதுவான வன்முறை மன நிலையையும், குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான கொடூரங்களையும் நியாயப்படுத்துகிறது, அத்தகைய வன்மங்கள் மீது ஒரு கவர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று எதிர்மறை விமர்சனங்கள் மேலோங்கின. ஆனால், இலக்கியவாதிகளின் தொடர்ச்சியான விவாதங்கள், வாசகர்களின் வரவேற்பு உள்ளிட்ட ஆதரவுகளால் தடைகள் விலக்கப்பட்டன. இன்று, “வாசக சமூகத்தை ஈர்த்த செழுமையான படைப்பு” என்ற அடையாளத்தைப் பெற்று, உலகின் பல பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது. அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) புத்தகம் பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் எழுதிய ‘அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) என்ற புத்தகம் பற்றி தகவல் தொகுப்புப் பெட்டகமாகிய விக்கிபீடியா, செயற்கை நுண்ணறிவுக் கருவியாகிய ஜெமினி இரண்டும் தருகிற தகவல்கள் கவனிக்கத் தக்கவை. தீவிரமான அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளை ஒரு வன்மமான நையாண்டிக்கு உட்படுத்தும் “கறுப்பு நகைச்சுவை” வடிவத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் 1991இல் வெளியானது. 1980ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் நியூயார்க் நகர வாழ்க்கையோடு இணைந்ததாக ஒரு பணக்கார இளைஞனின் உளவியல் சிக்கல்களைக் கதையாக்கியிருக்கிறார் எல்லிஸ். குறிப்பாக பெரு முதலாளித்துவப் பங்குச் சந்தை வேட்டைக் களமான வால் ஸ்ட்ரீட், அதில் புரையோடிப் போயிருக்கும் மோசடிகள், அது கட்டமைக்கும் நுகர்வுக் கலாச்சார நிலவரங்கள், அதனால் பரவியிருக்கும் சமூகப் போலித் தனங்கள், தனி மனிதருக்கு ஏற்படும் எதிர்மறையான உளவியல் தாக்கங்கள் ஆகியவற்றை நாவல் துணிச்சலாகப் பேசுகிறது. வால் ஸ்ட்ரீட் சந்தையின் பெரு நிறுவனங்களின் பங்குகள் விற்பனையால் “பேராசை பெருநன்மை” என்ற மனப்பான்மை வளர்க்கப்பட்டிருப்பதை நாவல் கடுமையாகச் சாடுகிறது. மனிதர்கள் அவர்கள் பயன்படுத்தும் ஆடைகள், கார்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருள்கள், புழங்குகிற பணக்கார உணவகங்கள் என்ற நிறுவன விற்பனை அடையாளப் பெயர்களில்தான் (பிராண்ட்) மதிப்பிடப்படுகிறார்கள். மனித உணர்வுகளும் உறவுகளும் அற்பமானவையாகத் தள்ளப்படுகின்றன. சமூகப் பொறுப்பைப் பொறுத்த மட்டில் கார்ப்பரேட் உலகத்தின் உள்ளீடற்ற மேலோட்டத் தன்மையை நாவல் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது என்றும் திறனாய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். நாவலில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளும் பாலியல் துன்புறுத்தல்களும் விரிவாக, அதிர்ச்சியளிக்கும் வகையில், அப்படிப்பட்ட கொடுமைகள் மீது ஒரு ரசனையை ஏற்படுத்தும் விதத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்று பெண்ணுரிமைக் கருத்தாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தனிமனிதர்களை சமுதாயம் கொடியவர்களாக மாற்றுவதைத்தான் எழுத்தாளர் இவ்வாறு சித்தரித்திருக்கிறார் என்று நாவலின் ஆதரவாளர்கள் விளக்கமளித்தார்கள். இன்றளவும் இந்த விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் (Bret Easton Ellis) எழுதிய ‘அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) புத்தகம் கதையின் நாயகன் சித்தரிக்கப்படும் விதமும் விமர்சிக்கப்பட்டது. அவன் உண்மையிலேயே குற்றங்களைச் செய்கிறானா அல்லது குற்றங்களைச் செய்வது போன்ற மனதின் மாயக் கற்பனையில் மூழ்கி, அவனே அதை நம்புகிறானா என்று புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே நம்பகத் தன்மையில்லாத கதையாடலாகவும், உண்மை வாழ்க்கை நடப்புடன் இணையாததாகவும் நாவல் அமைந்திருக்கிறது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். அப்படியில்லை, முதலாளித்துவம் திணிக்கிற நுகர்வுக் கலாச்சாரம் மனிதர்களை உண்மை நடப்புச் சூழல்களிலிருந்து துண்டித்துவிடுகிறது, அதைத்தான் நாவல் பிரதிபலிக்கிறது என்கிறார்கள் ஆதரவாளர்கள். நாவலை வெளியிட ஒப்பந்தம் செய்திருந்த நிறுவனம், அதன் உள்ளடக்கம் காரணமாக ஒதுங்கிக்கொண்டது. வெறொரு பதிப்பகம் வெளியிட்டது. அமெரிக்க நூலகங்கள் சங்கத்தால் 1990களில் அதிகமாகத் தடை செய்யப்பட்ட புத்தகங்களில் ஒன்றாக இது இடம் பிடித்தது. எல்லிஸ்சுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இத்தகைய நிகழ்வுகள் உலகப் புத்தகச் சமூகத்தின் கவனத்தைப் பெற்றன. அப்படி என்னதான் இருக்கிறது என்று அறியும் துறுதுறுப்போடு, புத்தகப் படிகளைக் கடத்தி வரச்செய்து பல நாடுகளின் வாசகர்கள் படித்தார்கள். படிப்படியாகத் தடை நீர்த்துப்போனது. கதை என்னவெனில்… 1989 ஆம் ஆண்டில் வால் ஸ்ட்ரீட் வணிகம் உச்சத்தில் இருக்கிறது. பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பேட்மேன் ஒரு முதலீட்டு வங்கியில் ஊழியராக வேலை செய்கிறான். அவன் பகல் நேரங்களில் வால் ஸ்ட்ரீட் உயரடுக்கு வட்டத்தில் பளபளப்பான வாழ்க்கையை வாழ்கிறான். இரவில் ஈவிரக்கமற்ற கொலைகளையும், பாலியல் அத்துமீறல்களையும், சித்திரவதைகளையும் செய்கிறான். தனது சகாக்களுடன் வெள்ளிக்கிழமை இரவுகளில் கோகெய்ன் எடுத்துக்கொள்கிறான். மற்றவர்களின் ஆடைகளை விமர்சிக்கிறான். நாகரிகமாக இருப்பது பற்றி ஆலோசனைகள் கூறுகிறான். நடத்தை விதிகள் குறித்துக் கேள்வி கேட்கிறான். அவனுக்கும் இன்னொரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த எவலின் எனும் பெண்ணுக்கும் அவனுடைய விருப்பத்தை விசாரிக்காமலே, திருமணத்தை நிச்சயிக்கிறார்கள் பணக்காரப் பெற்றோர்கள். தனது சகோதரனுடனும் மறதிநோயாளியான தாயுடனும் தகராறு செய்கிறான். ஒருநாள், சக ஊழியர்களில் ஒருவனான ஓவன் என்பவனைக் கொலை செய்கிறான் பேட்மேன்.. பிறகு ஓவனுடைய வீட்டைக் கைப்பற்றி, தன்னிடம் சிக்குகிறவர்களை அங்கே அழைத்து வந்து கொல்கிறான். தனது செயல்களின் மீது கட்டுப்பாட்டை இழக்கும் பேட்மேன் முற்றிய உளவியல் சிக்கலுள்ளவனாக (சைக்கோ) மாறுகிறான். சாதாரண கத்திக் குத்துகளில் தொடங்கி, நீண்ட நேர பாலியல் வல்லுறவு, சித்திரவதை, உடல் உறுப்புச் சிதைவு, கொல்லப்பட்டவர்களின் உடல் சதையை அறுத்து உண்ணுதல், சடலத்துடன் உடலுறவு என்று அவனுடைய உளவியல் நிலை கொடூரமாகச் சீர்குலைகிறது. பல சமயங்களில் தனது கொடூரச் செயல்களை வெளிப்படையாகத் தனது சக ஊழியர்களிடம் கூறுகிறான். ஆனால் அவர்கள் அதை நம்ப மறுக்கிறார்கள். கொலை, மரண தண்டனை என்று அவன் சொல்வதை, வால் ஸ்ட்ரீட் வர்த்தகத்தோடு இணைந்த “நிறுவன இணைப்பு”, “கையகப்படுத்துதல்” என்ற பொருளில் சொல்வதாக எடுத்துக்கொள்கிறார்கள். நிலைமை முற்றிக்கொண்டே போகிறது.தெருவில் சீரில்லாமல் சுற்றுகிறவர்களைக் கொல்கிறான். அவனைப் பிடிப்பதற்கு அதிரடிப்படையினர் ஹெலிகாப்டரில் அனுப்பப்படுகிறார்கள். பேட்மேன் தப்பி ஓடி தனது அலுவலகத்தில் ஒளிந்துகொள்கிறான். ஹரோல்ட் கார்ன்ஸ் என்ற தனது வழக்குரைஞருடன் தொலைபேசியில் தொடர்புகொள்கிறான். தொலைபேசியை அவர் எடுக்காத நிலையில் அதன் பதிலனுப்புக் கருவியில் தனது எல்லா குற்றங்களையும் சொல்ல்ப் பதிவு செய்கிறான். அந்தக் கொலை வீட்டுக்கு மறுபடியும் போகிறான். அங்கே அவன் ஏற்கெனவே இரண்டு பாலியல் தொழிலாளர்களைக் கொன்று சிதைத்திருந்தான். அழுகிய உடல்களை எதிர்பார்த்துச் செல்கிறவன் அந்த வீடு முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்துத் திகைக்கிறான். துர்நாற்றம் வீசுமானால் அதை மாற்றுவதற்குக வாச மலர்கள் நிரப்பப்பட்டிருகின்றன. வீட்டு மனை வணிக முகவர் ஒருவர், பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்து அந்த வீட்டைப் பார்க்க வந்ததாகக் கூறுகிறார். உண்மையில் அப்படி எந்த விளம்பரமும் இல்லை. அந்த வீட்டை விட்டு வெளியேறுமாறும் மீண்டும் வர வேண்டாம் என்றும் அந்த முகவர் பேட்மேனிடம் கூறுகிறார். விலை மதிப்புமிக்க அந்த வீட்டின் விற்பனை வாய்ப்பு குறையாமல் இருப்பதற்காகக் கட்டட உரிமையாளர்களால் தூய்மைப்படுத்தப்பட்டு, கொலைகள் மறைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. பேட்மேன் விசித்திரமான மாயத் தோற்றங்களை அனுபவிக்கத் தொடங்குகிறான். ஒரு உணவுத் துணுக்கிற்குள் தன்னை யாரோ நேர்காணல் செய்வதாக, ஒரு பூங்கா இருக்கை உயிர் பெற்று எழுந்து துரத்துவதாக, ஐஸ்கிரீம் பெட்டிக்குள் மனித எலும்புத்துண்டு கிடப்பதாக… இப்படியெல்லாம் மாயையான நிகழ்வுகளை அனுபவிக்கிறான். வழக்குரைஞரைத் தொடர்பு கொள்ளும் பேட்மேன், அவருடைய தொலைபேசி இயந்திரத்தில் பதிவு செய்திருந்த வாக்குமூலம் பற்றிக் கேட்கிறான். அவரோ அதை ஒரு வேடிக்கை என்று கருதிச் சிரிக்கிறார். வழக்குரைஞர் கார்ன்ஸ் தன்னோடு இப்போது தொடர்புகொண்டிருப்பவன் உண்மையான பேட்மேன் அல்ல என்றும், அவனுக்கு இப்படிப்பட்ட குற்றங்களைச் செய்யும் துணிவு கிடையாது என்றும் கூறுகிறார். பேட்மேனும் நண்பர்களும் ஒரு புதிய விடுதியில் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருப்பதோடு நாவல் முடிவடைகிறது. அங்கே எல்லோரும் பொருளாதார வெற்றிதான் உண்மையான மகிழ்ச்சி என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சியில் அமெரிக்க அரசுத் தலைவர் பதவியேற்பு விழா மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. , பல்வேறு எழுத்துருக்களுடன் கூடிய ஒரு விளம்பரப் பலகையில் “இது வெளியேறும் வழியல்ல” என்று எழுதப்பட்டிருக்கிறது. நுகர்வுக் கலாச்சாரச் சூழல்களிலிருந்து அவனோ, அவன் உருவாக்கிய கொலைச் சூழல்களிலிருந்து மற்றவர்களோ தப்பித்து வெளியேறிவிட முடியாது என்று அந்த வாசகம் உணர்த்துகிறது. பெயர்க் காரணம் நாவலை எழுதிக்கொண்டிருந்தபோது ஒரு பத்திரிகையாளர் எல்லிஸ்சிடம் அதன் தலைப்பு பற்றிக் கேட்டிருக்கிறார். 1980கள் வாக்கில் பல திரையரங்குகளும் கடைகளும் கொண்ட ஒரு பன்முக வளாகத்திற்குச் சென்றிருந்தாராம். ஒரு திரையரங்கப் பெயர்ப் பலகையில் பெரிய எழுத்துகளில் “அமெரிக்கன் சைக்கோ” (American Psycho) என்று ஒட்டப்பட்டிருந்ததாம். விசாரித்தபோது, “அமெரிக்கன் ஆந்த்தெம்“ (அமெரிக்க நாட்டுப்பண்), “சைக்கோ 3” (உளவியல் கொடூரன் 3) என்ற இரண்டு திரைப்படங்களின் தலைப்புகளைச் சேர்க்க முடியாததால், இரண்டு சொற்களை எடுத்துக்கொண்டு “அமெரிக்கன் சைக்கோ” (American Psycho) என்று ஒட்டியதாகச் சொன்னார்களாம்! “அதைப் பார்த்ததும் எனக்கு ‘பூம்!,’ என்று தோன்றியது. நான் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் புத்தகத்திற்கு அதுதான் தலைப்பு,” என்று கூறினார் எல்லிஸ். இலக்கியத் திறனாய்வளரான ஜெஃப்ரி டபிள்யூ. ஹண்டர், “பெருமளவுக்கு முதலாளித்துவத்தின் மேலோட்டத்தனமான சமூகப் பொறுப்பையும் அதன் கொடிய கூறுகளையும் பற்றிய விமர்சனமே இந்த நாவல். கதைமாந்தர்கள் பெரும்பாலும் பொருள்சார் ஆதாயங்களிலும் வெளித்தோற்றங்களிலும்தான் அக்கறை காட்டுகின்றனர். இந்தக் கூறுகள் “மேம்போக்குத்தனம்” உச்சம் பெறுகிற ஒரு பின்நவீனத்துவ உலகின் அடையாளங்களே. அதுதான் பேட்மேன் போன்றோர் மற்ற மனிதர்களையும் வெறும் பண்டங்களாக நினைக்க வைக்கிறது,” என்று பதிவிட்டிருக்கிறார். நாவலின் ஒரு கட்டத்தில் பேட்மேன் ஒரு பெண்ணின் சதையை உண்ணும்போது, “எனது செயல்கள் உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை நான் உணர்ந்தாலும் இந்தப் பெண், இந்த உடல், இந்த சதை எதுவுமே ஒன்றுமில்லை என்று எனக்கு நானே நினைவூட்டிக் கொள்கிறேன்,” என்று குறிப்பிடுகிறான். அடையாளச் சிக்கல்கள் இளைஞர்களின் மனக்குழப்பங்கள், சமூகச் சீர்கேடுகள், நுகர்வுக் கலாச்சாரத்தின் பாதக விளைவுகள் உள்ளிட்ட நிலைமைகளைத் தனது படைப்புகளின் கருப்பொருட்களாக எடுத்துக்கொள்கிறார் நையாண்டி எழுத்தாளரும் திரைக்கதையாளருமான பிரெட் ஈஸ்டன் எல்லிஸ். 1964இல் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரில் பிறந்தவரான எல்லிஸ் 1980களிலும் 90களிலும் மாறுபட்ட கலைப் பார்வைகளோடு முன்னணியில் இருந்த ‘இலக்கிய பிராட் பேக்’ என்ற இளம் எழுத்தாளர்கள் குழுவிலும் அங்கம் வகித்தார். அமெரிக்க இளைஞர்கள் போதைப் பொருட்களின் பிடியில் சிக்கியிருப்பதைக் கூறும் ‘லெஸ் தேன் ஜீரோ’, அதன் இரண்டாம் பாகமான ‘இம்பீரியல் பெட்ரூம்ஸ்’’ ஆகிய நாவல்களையும் சில ‘தி இன்ஃபார்மர்ஸ் என்ற சிறுகதைத் தொகுப்பையும், வாழ்க்கைப் பயண நினைவுக் குறிப்பு நூல்களையும் எழுதியிருக்கிறார். லெஸ் தேன் ஜீரோ, தி ரூல்ஸ் ஆஃப் அட்ராக் ஷன், தி இன்ஃபார்மர்ஸ், அமெரிக்கன் சைக்கோ (American Psycho) ஆகிய கதைகள் திரைப்பட வடிவமெடுத்துள்ளன. எடுத்துச் சொல்லப்படும் உண்மை நிலைமைகளாலும், அப்பட்டமான சித்தரிப்புகளாலும் வாசகர்களுக்கு அதிர்ச்சியைத் தருகிற போதிலும், பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் தனது சர்ச்சைக்குரிய படைப்புகளின் மூலம், ஆழ்ந்த விமர்சனங்களை முன்வைத்து, நவீன அமெரிக்க சமூகத்தின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறார் என்று இலக்கிய உலகினர் சான்றளிக்கின்றனர். https://bookday.in/books-beyond-obstacles-series-19-about-bret-easton-ellis-american-psycho-written-by-a-kumaresan/#google_vignette
-
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு
பகைவனுக்கும் அருள்வாய்! மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா தமிழாக்கம் : கார்த்திக் பணிவே உயர்வைத் தரும் பீமன் பிறக்கும் பொழுதே அதிக வலுவுடன் பிறந்தவன். அவன் வளர வளர அவனது தேகமும், தேகத்தின் வலிமையையும் பெருகியது. அதற்கேற்றாற்போல் அவனது பெருமையும் பரவத் துவங்கியது. ஒருவரது பெருமை அதிகம் பரவினால் அவருக்கு சிறிதளவாவது அகந்தை வரும். பீமனுக்கும் தனது வலிமை குறித்து அகந்தை இருந்தது. வனத்தில் வசித்து வந்த சமயத்தில், ஒருமுறை தனியாக காட்டில் சென்று கொண்டிருந்தான் பீமன். அடர்ந்த வனத்தின் குறுகிய பாதைகளில் அவன் சென்றுகொண்டிருந்த பொழுது அவனது பாதையை மறித்த வண்ணம் தனது நீந்தல் வாலை நீட்டிய வண்ணம் ஒரு வயதான குரங்கு ஒன்று உறங்கிக் கொண்டிருந்தது. பீமன் வந்த சப்தத்தை கேட்டு விழித்த அந்தக் குரங்கு அவனை உற்றுப் பார்த்து “புகழ் பெற்ற வீரன் பீமன் அல்லவா நீ? உன்னை வணங்குகிறேன்” எனக் கூறியது. குரங்கு பேசுவதைக் கேட்டு வியந்த பீமன் “நான் யாரென நீ தெரிந்து வைத்திருப்பதில் சந்தோசம் அடைகிறேன். நான் யாரென தெரிந்து கொண்டாய் அல்லவா? இப்பொழுது உன் வாலை நகர்த்திக் கொண்டு எனக்கு வழி விடு. உன்னை போன்ற உயிரினத்தை தாண்டி செல்வது என்னை போன்ற வீரனுக்கு அழகல்ல” என கூறினான். “ஓ பீமா! எனக்கு வயதாகி விட்டது. மேலும், நோய் வாய்ப்பட்டுளேன். எனவே தயைக் கூர்ந்து நீயே என் வாலை நகர்த்தி விட்டு செல்வாயாக” என அவனைக் கேட்டது. பீமன், அந்த குரங்கின் வாலை தொட அசூயை பட்டு, தனது இடது கை சுண்டு விரலால் அதன் வாலை நகர்த்த முயன்றான். ஆனால், அதன் வால் ஒரு அங்குலம் கூட நகரவில்லை. அதைக் கண்டு வியப்படைந்தாலும், அதை மறைத்துக் கொண்டு தன் இடது கையால் அதை நகர்த்த முயன்றான். அப்பொழுதும் அதன் வால் அகல மறுத்தது. பல யானைகளின் பலம் கொண்டவன் என புகழப்பட்ட பீமனுக்கு அது மிகப் பெரிய அவமானமாக இருந்தது. இருந்த பொழுதும், இம்முறை தனது இரு கரங்களையும் கொண்டு அதன் வாலை தூக்கி நகர்த்த முயன்றான். அவன் பலமுறை பலவிதமாய் முயற்சித்தும் இம்மி கூட அசையவில்லை. அப்பொழுதுதான் தன்னுடன் பேசிக்கொண்டிருப்பது சாதாரண குரங்கில்லை என்பது அவனது சிற்றறிவுக்கு புரிந்தது. அவனது அகந்தை முற்றிலும் அழிந்த நிலையில் “பலவானே! யார் நீங்கள்? உங்களின் சுய ரூபத்தை எனக்கு காட்டுவீர்களாக! என்னை இனியும் சோதிக்க வேண்டாம்!” எனப் பணிவாக வேண்டினான். அவனின் பணிவான வேண்டுதலைக் கேட்ட குரங்கு தனது வேடத்தைக் களைந்தது. பீமனை சோதிக்க குரங்கின் வடிவில் வந்தது வாயு புத்திரனான ஹநுமானே! “பெருமையைக் கை விடு! இறைவனிடம் சரண் அடை! நீ வெற்றிப் பெறுவாய்! என்னுடைய முழு பலமும் பாண்டவர்களுக்கு கிட்டும்! அர்ஜுனன் தேர் கொடியில் நான் வீற்றிருப்பேன்!” என ஹனுமான் அவனை ஆசிர்வதித்தார். பகைவனுக்கும் அருள்வாய்! பாண்டவர்களின் வனவாசத்தில் இருந்த சமயத்தில் ஒரு பிராமணர், அரசன் திருதிராஷ்டிரனை பார்க்க சென்றார். வந்த பிராமணரை வரவேற்று அவருக்கு உபசாரங்கள் செய்த அரசன் பாண்டவர்களின் நலம் பற்றி அவரிடம் விசாரித்தான். அவரும் வனவாசத்தின் பொழுது பாண்டவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை விவரித்து, எவ்வாறு அர்ஜுனன் சிவனிடம் இருந்து பாசுபதாஸ்திரத்தை பெற்றான் என்பதைப் பற்றியும், வனத்தில் அவர்களுக்கு பிரச்சனை வரும் சமயங்களில் எல்லாம் எவ்வாறு பீமன் காப்பாற்றுகிறான் என்பதை பற்றியும் விவரித்தார். பாண்டவர்கள் படும் கஷ்டங்களை கேட்ட மன்னனின் மனம் தடுமாறியது. அதே நேரத்தில், கௌரவர்களும், கர்ணனும் அவர்களுக்கு கிடைத்த திவ்ய அஸ்திரங்களை பற்றி கேட்டு மனம் குமைந்தனர். பாண்டவர்களின் வனவாசம் முடிய குறுகிய காலமே இருந்ததால் அவர்களை எப்படியாவது சூழ்ச்சியில் சிக்கவைத்து மீண்டும் வனவாசத்திற்கு அனுப்புவதில் சகுனியும் மற்றவர்களும் குறியாக இருந்தனர். எனவே இந்தமுறை அவர்களே நேரில் செல்ல நினைத்து பாண்டவர்கள் அப்பொழுது தங்கி இருந்த காம்யக வனத்திற்கு அருகில் இருந்த த்வைதவனத்திற்கு செல்ல முடிவெடுத்தனர். நேராக அரசனிடம் சென்று த்வைதவனத்தில் ஆநிரைகளை கணக்கெடுக்க செல்ல அனுமதி வேண்டினர். அவர்களின் உண்மை நோக்கம் அறிந்த மன்னர் முதலில் அனுமதிக்க மறுத்தாலும், அவர்களின் தொடர் வேண்டுகோளால் வேறு வழியின்றி அனுமதித்தார். அவர் அனுமதி கிடைத்தவுடன், துரியோதனன், சகுனி, கர்ணன், துச்சாதனன் மற்றும் தன் படைகள் சூழ த்வைதவனத்திற்கு விரைந்தான். அங்கே வந்தவுடன் ஏரிக்கு அருகே பாண்டவர்கள் முகாம் அமைந்துள்ளதாக தகவல் கிடைக்க, தங்கள் முகாமையும் அங்கேயே அமைக்க துரியோதனன் உத்தரவிட்டான். அவனது உத்தரவை ஏற்று அங்கே சென்று கூடாரங்கள் அமைக்க முயன்றனர். ஆனால் அங்கே இருந்த கந்தர்வர்களின் படை அவர்களை விரட்டி அடித்தது. தங்கள் முயற்சியில் தோற்ற வீரர்கள் திரும்ப சென்று துரியோதனனிடம் முறையிட்டனர். தன் வீரர்கள் துரத்தி அடிக்கப்பட்டதில் கோபம் கொண்ட துரியன், தன் நண்பர்களையும் படையையும் அழைத்துக் கொண்டு கந்தவர்களை எதிர்த்து சண்டையிட சென்றான். கௌரவர்களுக்கும் கந்தவர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. கந்தவர்களின் தெய்வீக அஸ்திரங்களை கௌரவர்களால் சமாளிக்க இயலவில்லை. ஒரு கட்டத்தில் அவர்களின் தாக்குதலை எதிர்கொள்ள இயலாத கர்ணன் போர்க்களத்தில் இருந்து ஓட்டம் பிடித்தான். துரியோதனன் எதிரிகளிடம் தனியாக சிக்கிக் கொள்ள, கந்தர்வர்கள் அவன் தலைமுடியை பிடித்து இழுத்து தங்கள் தலைவனிடம் கொண்டு சென்றனர். பல கௌரவ வீரர்கள் அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்து பாண்டவர்களின் கூடாரத்திற்கு சென்று யுதிஷ்டிரனிடம் முறையிட்டனர். அதை கேட்ட பீமன், அவர்களுக்கு இது தேவைதான். இதை நாம் கண்டுகொள்ள வேண்டாம் எனக் கூறினான். மற்ற அனைத்து சகோதரர்களும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பின் , தர்மனின் கட்டளைப்படி , அர்ஜுனன், நகுலன், சகாதேவன் புடை சூழ கந்தவர்களை எதிர்க்க பீமன் சென்றான். இரு தரப்பினரிடையே கடுமையான யுத்தம் துவங்கியது. கந்தர்வர்கள் தங்களிடம் இருந்த அனைத்துவிதமான திவ்ய அஸ்திரங்களை கொண்டு பாண்டவர்களை எதிர்க்க, அர்ஜுனனோ அவர்களின் ஆயுதங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கினான். இதை கண்டு வியந்த கந்தர்வர்கள் தங்கள் தலைவனிடம் சென்று முறையிட அங்கே வந்தான் சித்ரசேனன். சித்ரசேனனை கண்டு அர்ஜுனன் வியந்தான். அர்ஜுனன் இந்திரனின் சபைக்கு சென்ற சமயத்தில் அவனது நடன குருவாக இருந்தது சித்ரசேனனே. நீண்ட நாள் கழித்து சந்தித்த இருவரும் மகிழ்ந்து நலம் விசாரித்தனர். அதற்கு சித்ரசேனன் “துரியோதனன், தனது நண்பர்களுடன் இணைந்து உங்களுக்கு தொந்தரவு தரப்போவதாக அறிந்தோம். அதனால் இந்திரன் என்னை படைகளும் இங்கே அனுப்பி உங்களுக்கு பாதுகாப்பு தரக் கூறினார்” என தான் வந்த நோக்கத்தை விளக்கினான். பின், அவர்களிடம் இருந்து துரியனையும் மற்றவர்களையும் விட்டுவிட்டு தர்மரிடம் அழைத்து சென்றான் அர்ஜுனன். துரியோதனனுக்கு அறிவுரை கூறியப் பிறகு அவனை விடுவித்து அஸ்தினாபுரத்திற்கு திரும்பி செல்ல அறிவுறுத்தினான் தர்மன். https://solvanam.com/2025/07/13/பகைவனுக்கும்-அருள்வாய்/
-
ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்
மாதா கோயில் அம்மன் தி. செல்வமனோகரன் அறிமுகம் உலக அரங்கில் முதன்மை பெற்ற வழிபாடுகளில் ஒன்றாகப் பெண் தெய்வ வழிபாடு காணப்படுகின்றது. இயற்கை மீதான அச்சம், வியப்பு என்பவற்றின் வழிவந்த வழிபாடு, தெய்வம் எனும் கருத்துரு என்பவற்றின் வழியும் இனக்குழு, நிலம், கலை என்பவற்றின் வழியும் பல்தெய்வ வழிபாடுகள் உருவாக்கம் பெற்றன. அவற்றுள் பெண் தேவதையாக, அம்மனாக, கன்னியாக, குழந்தையாக எனப் பலவாறு வழிபடப்பட்டாள். உலகில் தோன்றிய பெரும்பாலான சமயங்கள் பெண் தெய்வ வழிபாட்டைக் கொண்டிருந்தன. தெய்வங்கள் இயல்பிறந்த ஆற்றல்களை உடையன. அதேவேளை நாட்டார் தெய்வங்கள் மனிதர்களைப் போல ஆசாபாசங்களை உடையனவாக மனித நடத்தைகளைக் கொண்டனவாக அமைந்திருந்தன. அவை பற்றிய கதைகள் இதனை வலுப்படுத்துகின்றன. பிற்காலப் பெருந்தெய்வங்கள் பரிபூரணத்துவம் பெற்ற பரம்பொருள்களாகக் கருதப்பட்டன. ஆனால் நாட்டார் தெய்வங்கள் ஆவி, உயிரி, மானா, குறி, முன்னோர் போன்ற வடிவங்களில் இருந்தன; இனக்குழுமவியலின் தெய்வமாகப் போற்றப்பெற்றன. குறித்த இனக்குழுமத்தின் தெய்வத்தை மற்றைய இனக்குலத்தவர் அறிந்திருந்தனர் எனக் கூறுவதற்கில்லை. அறிந்திருந்தாலும் வணங்கினர் எனக் கூற முடியாது. அவரவர் தெய்வம் அவரவர்க்கானது. அது அவரது நம்பிக்கையாகும். காலவோட்டத்தில் வலுவுள்ளன நிற்க, ஏனையவை அருகிப்போயின. நாகரிகம், மேனிலையாக்கம் எனும் மனப்பாங்குகள் நாட்டார் தெய்வங்கள் அருகிச்செல்ல பெரிதும் காரணமாகி நிற்கின்றன. ஆயினும் தம் குலதெய்வம் என்ற நம்பிக்கையூற்று வற்றிப்போகாத சமூகம் அல்லது இனக்குழுமம் இன்றும் நாட்டார் தெய்வங்களை – குல தெய்வங்களை ஏதோ ஒரு வகையில் பற்றிப்பிடித்து நிற்கின்றன. சமூக, கால மாற்றத்தின் வழி சிற்சில மாற்றங்கள் நிகழ்ந்திருப்பினும் அவை தம் அடிக்கட்டுமானத்தில் மாற்றமின்றி நிற்கின்றன. பாரம்பரிய வழிபாட்டுமுறைகளின் வழி வழிபடப்படுகின்றன. தெய்வவழிபாடுகள், சமயவியற்புலத்தில் மட்டுமின்றி, சமூகவியல், மானிடவியல், இனவரைவியல் ஆகிய ஆய்வுப்புலங்களுக்கும் முக்கியமான தரவுகளைக் கொடுக்கின்றன. குறிப்பாக, ஒரு சமூகத்தின் பொருளாதாரம், அரசியல் அமைப்பு, மொழிப்பயன்பாடு, உணவுப்பழக்கம், தொழில்கள் போன்ற கூறுகளின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கும், அந்தச் சமூகத்தின் தொன்மை மற்றும் சமூக அசைவியக்கங்களை அலசுவதற்கும் இவ்வழிபாடுகள் பெரிதும் உதவுகின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் அம்பன் எனும் கிராமத்தில் இன்றும் நின்று நிலவும் தெய்வமாக ‘மாதா கோயில்’ அம்மன் காணப்படுகின்றது. அம்பனைத் தன் பிறந்த ஊராகக்கொண்ட சமூகவியலாய்வாளர், எழுத்தாளர் திரு.ந. மயூரரூபனின் வழிகாட்டலில் என்னோடு வழமைபோல ஆய்வு ஆர்வலர் திரு. கோ. விஜிகரனும் இணைந்து இந்தத் தெய்வம் பற்றிய களப்பணியினை மேற்கொண்டோம். மாதா கோயில் அம்மன் ஈழத்துத் தமிழ்ச்சூழலில் புழக்கத்தில் இல்லாத ஒரு வழிபாடு அம்பன் பகுதியில் காணப்படுகிறது. அதுவே மாதா கோயில் அம்மன் வழிபாடு. மாதா கோயில் என்பது ஈழத்தைப் பொறுத்தவரை கிறிஸ்தவ மேரி மாதாவின் கோயிலாகவே சுட்டப்படுகிறது. எவ்வாறு ‘வேதக்காரர்’ என்பது சைவர்களைச் சுட்டாது கிறிஸ்தவர்களையே சுட்டுகின்றதோ, அதுபோலவே மாதா கோயிலும் றோமன் கத்தோலிக்கக் கோயிலை சுட்டுவதாகவே அமைந்துள்ளது. அதிலும் விசேடம் என்னவெனில் கிறிஸ்தவ மாதா கோயில்கள் பொதுக்கோயிலாகவே பெரும்பாலும் அமைந்திருக்கும். மாதா சொரூபத்தை சிலர் வீடுகளில் வைத்திருப்பர். ஆனால் அம்பன் கிராமத்தில் வீட்டுவளவிலும் தனித்த இடத்திலும் சிறு மாதா கோயில் கட்டப்பட்டு வழிபடப்படுகின்றது. இது சற்று நூதனமாகவே இருந்தது. ஆதலால் மாதா கோயில் அம்மனை ஆய்வுக்கெடுத்துக் கொண்டோம். கிறிஸ்தவ மாதா கோயிலா? ஈழத்தில் காலனியகால ஐரோப்பியர் வருகையோடு றோமன் கத்தோலிக்கம் அரச மதமாக உட்புகுகிறது. அதேசமயம் சுதேச சமயங்கள் ஒடுக்கப்பட்டு கோயில்கள் யாவும் இடித்தழிக்கப்படுகின்றன. கற்கோயில்கள் இல்லாது ஒழிக்கப்பட்டன. ஐரோப்பியரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய ஒல்லாந்தர்களும் சுதேச சமய ஒடுக்குமுறையை மட்டுமல்லாது, றோமன் கத்தோலிக்கத்தின் மீதும் ஒடுக்குமுறையை கையாண்டு அவர்களது கோயில்களையும் இடித்தழித்தனர். புரட்டஸ்தாந்து தேவாலயங்களைக் கட்டினர். ஒல்லாந்தரின் ஆட்சியின் இறுதியில் 1890களில் சைவக் கோயில்கள் கட்டப்பட்டன. அதன்பின் கத்தோலிக்கத் தேவாலயங்களும் கட்டப்பட்டன. பிரித்தானியராட்சியில் கிறிஸ்தவ ஆதி நூலான பைபிள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படுகின்றது. அக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட மொழிபெயர்ப்புகள் யாவற்றிலும் சமஸ்கிருதச் சொற்கள் விரவியிருந்ததை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. வேதாகமம், மாதா, பிதா, சுதன், கர்த்தர் என இதனை உதாரணப்படுத்தலாம். இந்துக்களின் பெண் தெய்வ வழிபாடு அம்மனின் வழிபாடாகச் சுட்டப்பட்டது. பெண் தெய்வத்தை அம்மன், அம்மா, ஆச்சி, நாச்சியார், கன்னிமார் எனப் பல பொதுச்சொற்களால் சுட்டி வழிபடும் வழக்கமே இருந்துள்ளது. அதேவேளை கிறிஸ்தவ பெண் தெய்வமான மேரியை மேரியன்னை, மேரி மாதா எனச் சுட்டும் வழக்கம் தமிழர் மத்தியில் காணப்பட்டு வந்துள்ளது. இச்சொற்பிரயோகங்கள் ஈழத்தில் தெளிவான சமயப்பிரிநிலைச் சொற்களாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தென்னாசிய நாடுகளில் மாதா கோயில் இந்திய சாக்த மதத்தவரின் 64 சக்திபீடங்களில் ஒன்றாகவும், முதலானதாகவும் வர்ணிக்கப்படும் ‘ஹிங் குலாஜ்’ மாதா சக்திபீடக் கோயில் தற்போது பாகிஸ்தானின் பலூகிஸ்தான் மாகாணத்தில் லஸ்பெலா மாவட்டத்தில் ஹிங்கோர் தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது. ஹிங்குலி – முன்வகிடுக் குங்குமப்பொட்டு அல்லது செந்தூரம் எனப்படுகிறது. மகாசக்தி பீடேஸ்வரி தெய்வமாக வீற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இந்துக் கோயில் ‘மாதா கோயில்’ என்றே கூறப்படுகிறது. அதேபோல நேபாளத்தில் உள்ள அம்மன் கோயிலும் ‘பதிவரா மாதா கோயில்’ என்று சுட்டப்படுகிறது. கால்நடை (ஆடு) வளர்ப்புடன் இணைந்த தெய்வ வழிபாடாக இது காணப்படுகிறது. இது ஆசைகளின் தெய்வம் என்றும், இங்கு வரும் அடியவர் ஆசைகளை நிறைவேற்றுவதனால் இப்பெயர் பெற்றதென்றும் கூறப்படுகின்றது. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானேர் மாவட்டத்தில் ‘ஹர்ணி மாதா கோயில்’ காணப்படுகிறது. இங்கு வழிபடுதெய்வம் துர்க்கை. இது எலிக் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. ஹரியானா மாநிலத்தில் ‘பர்வானூ சீதள மாதா கோயில்’ எனும் அம்மன் கோயில் காணப்படுகிறது. பாகிஸ்தானின் கராச்சியில் 50 வருடப் பழமை வாய்ந்த கோயில் 19.07.2023 இல் இடிக்கப்பட்டதாக பரபரப்பாகப் பேசப்பட்டமை யாவரும் அறிந்ததே. அது ‘மாரி’ மாதா கோயில் ஆகும். அண்மைக்காலத்தில் இந்திய ராஜஸ்தான் மாநிலத்தில் ‘சதி மாதா’ கோயிலும் உத்தரப்பிரதேசத்தில் ‘கொரோனா மாதா’ கோயிலும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வட இந்தியப் பண்பாட்டில் மாதா கோயில் என்பது இந்துக்களின் அம்மன் வழிபாட்டைக் குறிப்பதையும், இக்கோயில்கள் பெரும்பாலும் மலைப்பிரதேசங்களில் அமைந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. ஈழத்துத் தமிழ்ச்சூழல் இதற்கு மாறானது. தமிழகத்திலும் ஈழத்திலும் மாதா எனும் சமஸ்கிருதச் சொல்லின் சமயரீதியிலான தற்காலப் பொதுப்பயன்பாடு கிறிஸ்தவ மேரி மாதாவைக் குறிப்பதாகவே அமைந்துள்ளது. அம்பன் கிராமத்து மாதா கோயில் அம்மன் வடமராட்சி அம்பன் கிராமத்தில் ஐந்து அம்மன் மாதா கோயில்கள் காணப்படுகின்றன. அவற்றுள் பழமையானது கிழக்கு அம்பன் பிரதேசத்தில் திருமதி தெய்வயானை வீரபாகு (வயது 82) அவர்களின் வீட்டில் உள்ளது. ஏனைய கோயில்களிலும் இந்த வீட்டில் உள்ள கோயில் தனித்துவமானதாக அமைந்துள்ளது. தனது அம்மம்மா காலத்திற்கு முன்பிருந்தே இந்த மாதா கோயில் வழிபாடு இருந்து வருவதாகவும் ஆரம்பத்தில் திறந்தவெளியிலும் பின்பு ஓலைக்கொட்டிலிலும் இருந்த தெய்வத்திற்கு, சிறிய சீமெந்துக் கட்டடம் அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது. மாதா கோயில் என அழைப்பது ஏன் என வினவியதற்கு, யாவருமே தெரியாது என்று பதில் கூறினர். தொடக்ககால வரலாறு, இவ்வழிபாடு வந்தமுறை போன்ற எந்த வினாக்களுக்கும் அவர்களுக்கு விடை தெரிந்திருக்கவில்லை. மாதா கோயில் நூறு வருடத்திற்கு மேற்பட்டது என்ற வரியைக் கவனத்தில் கொண்டு சில அனுமானங்களுக்கு நாம் வரலாம். ஒல்லாந்தராட்சிக் காலத்தில் சுதேசிகளின் வணக்கமுறைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மீறி வழிபடுதல் தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. இதற்குச் சுதேசிகள் சில மாற்றுத்திட்டங்களை முன்வைத்திருந்தனர். யாழ்ப்பாண நாட்டாரியல் வழிபாட்டில் கல், சூலம் என்பன அதிக செல்வாக்குப் பெறுவன. சூலத்தை வழிபடும் காலத்தில் ஒல்லாந்தரோ, அன்றி அவர்களுக்குக் காட்டிக்கொடுப்பவரோ வரின், சூலத்தின் மடிந்திருந்த இருகரைக் கம்பிகளையும் நேராக்கி விடுவர். அது சிலுவைபோல காட்சியளிக்கும். அதுபோல கற்களை புல், குழை, இலை போன்றவற்றால் மறைத்து விடுவர். அவ்வாறு செய்யமுடியாது பிடிபட்ட சந்தர்ப்பம் ஒன்றில் கல் வைத்து வழிபட்ட அம்மனை மாதா எனக் கூறியிருக்கலாம். ஏதோ ஒரு தேவையின் பொருட்டு அம்மனை மாதா எனக் கூறி வழிபட்டிருக்கலாம். கிறிஸ்தவச் சமூகத்தின் செல்வாக்கு அல்லது உதவி பெறுதற் பொருட்டு மாதா கோவில் எனும் சொல் புழக்கத்திற்கு வந்திருக்கலாம். மாதா என்பது அன்னை – அம்மன்; ஆகவே அம்மனை மாதா என அழைத்தல் தமது உரிமை, அது கிறிஸ்தவத்திற்குரியதல்ல என்ற எண்ணத்தினாலும் இப்பெயர் இடப்பட்டிருக்கலாம். மத நல்லிணக்க உணர்வினால் இவ்வாறு சுட்டியிருக்கலாம். இக்கோயில்கள் இருக்கும் இந்தவூரின் பெயர் அம்பன் எனப்படுகிறது. அதற்குத் தெளிவான காரணமெதுவும் கூறப்படவில்லை. அம்மன் – அம்பன் எனப் பேச்சுவழக்கில் திரிந்திருக்கலாம். இத்தெய்வ வழிபாட்டின் சிறப்பே ஊர்ப்பெயராக மாறியிருக்கலாம். ஈழத்தில் மாதா கோயில் என ஒரு சைவக் கோயில் யாழ்ப்பாணம் காரைநகர் கள பூமியில் இருக்கின்றது (பாலேந்திரன்,ச. ஆ., 2002, காரைநகர் தொன்மையும் வன்மையும், பாலாவோடை அம்மன் பதிப்பகம், காரைநகர்). காலனிய காலத்தில் சைவ வழிபாடு தடை செய்யப்பட்டிருந்த சூழலில் அம்மனை வழிபட்டு வந்ததாகவும், அந்நியர்கள் அக்கோவிலை உடைப்பதற்கு வருகை தந்தபோது மாதா சொரூபத்தை வைத்து வழிபட்டு அந்தக் கோயிலைக் காப்பாற்றியதாகவும், ஆதலால் அதனை மாதா கோயில் என்று அழைப்பதாகவும் அதன் உரிமையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். இந்தக் கோயிலுக்கும் முத்துமாரியம்மன் கோவிலுக்கும் இடையில் ஒரு தொடர்பு உண்டு என்றும், முத்துமாரியின் தாய் தான் மாதா என்றும் சொல்லுகிற வழக்கமும் அங்கு உண்டு. இந்த வழிபாட்டு மரபு அம்பன் மாதா கோவில் அம்மன் வழிபாட்டில் இருந்து வேறானது என்பதனால் இந்த ஆய்வில் அக்கோயிலைப் பற்றி விரித்துரைக்கவில்லை. தெய்வவுரு மாதா கோயில் அம்மனுக்கு உருவம் இல்லை. ‘கல்’ வைத்தே வழிபடப்படுகின்றது. தொன்மைக் கோயிலான வீரபாகு அவர்களின் வீட்டில் உள்ள அம்மனின் கல், வெள்ளைக் கல்லாகக் காணப்படுகிறது. சங்கொன்றின் நுனிப்பகுதியில் காணப்படும் சுருள் போன்ற அமைப்பில் கூம்புருவமாக ஒரு சாண் அளவுக்குட்பட்டதாகக் காணப்படுகிறது. சங்ககாலத்தில் அடி பெருத்து நுனி சிறுத்த கறுப்பு நிறத்தாலான கந்து, நந்தா விளக்கேற்றி வழிபடப்பட்டதை இவ்வடிவம் ஞாபகப்படுத்துகிறது. ஏனைய நான்கு கோயில்களிலும் கருங்கல்லாலான கூம்புருவக்கற்களே வைத்து வழிபடப்படுகின்றன. பரிவாரத் தெய்வங்களும் கூம்புருவக்கற்கள் வைத்தே வழிபடப்படுகின்றன. வீரபாகு வீட்டுக் கோயிலிலுள்ள வெள்ளைக்கல்லின் சுருள்க்கரையில் சிதைவு ஏற்படத் தொடங்கியுள்ளதெனினும், அது தனித்துவமான ஏனைய மாதா கோயில்களில் உள்ள கல்லைவிடச் சிறப்பானதாக அமைந்துள்ளது. கோயில் அமைப்பு நாட்டார் தெய்வ வழிபாடுகள் பொதுவெளியில் மரத்தடி, குளத்தடி, கிணற்றடி போன்ற இடங்களில் அமைந்திருப்பது வழக்கம். அதுபோலவே இக்கோயில்களும் பொதுவெளியில் ஆரம்பிக்கப்பட்டன. இன்றும் திருமதி பானுமதி குணசிங்கம் அவர்களின் இல்லத்தில் சீமெந்துப்பீடம் அமைத்து, நடுவில் அம்மனும் நான்கு பரிவாரத் தெய்வங்களுமாக கூரையின்றி அமைந்து காணப்படுகிறது. திருமதி வீரபாகு தெய்வயானை, வன்னியசிங்கம் கனகநாதன், திருமதி பானுமதி குணசிங்கம் ஆகியோரின் காணிகளில் அமைந்துள்ள கோயில்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய எல்லாக் கோயில்களும் சீமெந்துக் கட்டடங்களாலான கூரையை உடைய சிறிய கோயில்களாக அமைந்துள்ளன. முதற்கோயில் மட்டும் மேற்குத்திசையை நோக்கியிருக்க ஏனையவை கிழக்குத்திசையை நோக்கியவையாக அமைந்துள்ளன. அவற்றுள் சாஸ்திர முறைப்படி – சோதிடர் ஆலோசனைப்படி கட்டப்பட்டவையும் உண்டு. மாதா கோயில் அம்மன் பற்றிய கதைகள் இந்த அம்மனுக்கு உருவமில்லையெனினும் வீட்டவருக்கு ஒரு விடயம் சொல்வதற்கோ, சிக்கலைத் தீர்ப்பதற்கோ இத்தெய்வத்தை வேண்டின், அதனை உடனடியாக நிறைவேற்றும். பொழுது சாய்ந்ததன்பின் (இருட்டியபின்) கோயிலடிக்கு யாரும் செல்வதில்லை என்றும், இரவில் கிழவி ரூபத்தில் (வயதுபோன பெண்) வெள்ளை உடுப்பு உடுத்தவளாக உலாவுவாள் என்றும், எதிரில் வந்து ஏதும் சொல்லிவிட்டுப் போவாள் என்றும் திருமதி தெய்வயானை வீரபாகு (வயது, 82) கூறினார். திருமதி பானுமதி குணசிங்கம், வீட்டின் மேற்குப்புற அலம்பல் வேலியை அகற்றி எல்லை அமைக்கும்போது இக்கோயிலையும் எடுத்துவிட்டார். இக்கோவிலுக்கு முன்பு விளக்குவைத்த வெளிநாட்டில் உள்ள அண்ணாவின் கனவில் இத்தெய்வம் தோன்றியதாகவும், அவர் அடுத்தநாள் கோயிலில் என்ன செய்தீர்கள் எனக்கேட்டு, நடந்ததை அறிந்து, கோயிலை மீள அமைக்கக் கூறியபடி இக்கோயிலை அமைத்ததாகவும் திரு.ஆ. குணசிங்கம் (வயது, 60) கூறினார். யுத்த இடம்பெயர்வால் கைவிடப்பட்ட கோயிலை மீள ஆதரிக்கவில்லை. வீட்டில் நிறையப் பிரச்சினைகள் நடந்தன. கட்டுக்கேட்ட இடமெல்லாம் குலதெய்வத்தை ஆதரிக்குமாறு கூறினர். அதன்பின்பே மீளக் கோயில் அமைத்தோம். இப்போது பிரச்சினைகள் குறைந்துவிட்டன என திரு. வன்னிய சிங்கம் கனநாதன் (வயது, 72) குறிப்பிட்டார். இத்தெய்வத்தை வணங்கிய எவரும் இன்றுவரை இத்தெய்வ வழிபாட்டை நாட்டாரியல் பண்போடு அவ்வண்ணமே ஆதரித்து வருகின்றனர். கனவில் தோன்றி காட்சியளித்தல், கிழவி ரூபம், வெள்ளை ஆடை என்பன யாவரும் உரைக்கும் பொதுவிடயங்களாக உள்ளன. வழிபாட்டு முறைகள் இவ்வாலயங்களில் வெள்ளிக்கிழமைகளில் விளக்கு வைத்தல் நிகழ்கிறது. திருமதி தெய்வயானை வீட்டில் திங்கட்கிழமைகளில் விளக்கு வைக்கும் வழக்கமும் இருக்கிறது. விளக்கு வைக்கும் நாட்களில் வெற்றிலை, பாக்கு, பழம் என்பன படையல் வைக்கப்படுகின்றன. தைப்பொங்கல், சித்திரைப் பொங்கல், நவராத்திரி, திருவெம்பாவைக் காலங்களில் விசேட பூஜை, வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அயலிலுள்ளவர்களும் நேர்த்தி நிறைவேற்றும் நாட்களில் கலந்துகொள்கின்றனர். வருடத்தில் ஒரு நாள் மோதகப் பூசை நடைபெறும். விசேட தினங்களில் பொங்கல் பொங்கி, பலகாரங்கள் பல (வடை, மோதகம், முறுக்கு, பால்றொட்டி, சீனியரியாரம்…) வைத்து மா, பலா, வாழை, மாதுளை உள்ளிட்ட பழங்கள் படைத்துப் பூசை செய்யப்படுகிறது. இக்கோயில் பூசை ஆண்வழிச் சமூகத்தாலேயே நிகழ்த்தப்பட்டு வருகின்றது. வீட்டில் உற்பத்தியாகின்ற பொருள்களில் முதற் பொருளை (பழங்கள், தேங்காய், நெல்…..) இத்தெய்வத்துக்குப் படைத்தபின்பே பயன்பாட்டுக்கு எடுக்கும் வழக்கம் காணப்படுகின்றது. சமூக அடுக்கமைவு மேற்சுட்டிய ஐந்து மாதா கோயில்களும் வேளாள சமூகத்தவர்க்கானவை. அதிலும் குறித்த இரத்த பந்தம் உள்ள குடும்பங்களுக்கானவை. விவசாய நிலமும் ஆடு வளர்ப்பும் உள்ள பிராந்தியத்தில் உள்ளவை. இவற்றைவிட இதேபகுதியில் சிறுகுடி வேளாளரான பள்ளர் சமூகத்தவரிடம் ஒரு மாதா கோயில் இருப்பதை அறிந்து அங்கு சென்றோம். அக்கோயில் பூசாரியான வேலுப்பிள்ளை சசிகரன் (வயது, 41) அக்கோயில் பற்றிய விபரங்களைக் கூறினார். தன்னுடைய தாத்தா காலத்துக்கு (சிதம்பரம்) முற்பட்ட கோயில் என்றும், கல் வைத்து அம்மனை வழிபட்டனர் என்றும், 2000 ஆம் ஆண்டு வரை மாமனார் பூசை செய்து வந்ததாகவும், 2010 இல் யுத்தம் நிறைவுற்றதன்பின் வந்து பார்த்தபோது கோயில் முற்றாக சிதைந்திருந்தது என்றும், தான் தான் தற்போதைய கோயிலைக் கட்டி எழுப்பியதாகவும் கூறினார். ஆகமக் கோயில்களைப்போல கருவறை, முன்மண்டபம் உடையதாகவும் கல்லை அகற்றிக் கருங்கல்லாலான அம்மன் திருவுருவத்தை ஸ்தாபித்துக் கும்பாபிஷேகம் செய்ததாகவும், பரிவாரத்தெய்வமாக அண்ணமார் தெய்வம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். இங்கு ஆடிப்பூரம், கும்பாபிஷேக தின மணவாளக்கோல விழா, பங்குனி உத்தரம் என்பன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. விசேட தினங்களில் இவருக்குக் கலைவரினும் கட்டுச் சொல்வதில்லை. இவரின் அக்காவின் மகளே கலையாடி, கட்டுச் சொல்கிறார். முன்பு பில்லி சூனியம், வசியம், செய்வினை அகற்றல், பேய் – பிசாசு ஓட்டுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாகவும், தனது தாய் மந்திரவித்தையில் வல்லவர் எனவும், இவை அனைத்தையும் அவர் செய்ததாகவும் கூறினார். ஆனால், தாயார் விமர்சனத்துக்குள்ளானதினால், அதனைத் தொடர்ந்து தாம் பழகவில்லை என்றும் அவர் தெரிவித்தார். வீரபாகுவின் மகன் திரு.வீ. காந்தனும் பில்லிசூனியம், செய்வினை, வசியம் முதலான தீவினை நீக்கத்துக்காகவே இந்தத் தெய்வம் வழிபடப்படுகிறது எனக் கூறியமை இதனுடன் ஒத்துப்போகிறது. சில அவதானிப்புகள் மாதா கோயில் என்பது காலனித்துவத்தின் பேறாய் பயன்பாட்டு நிலையில் ஈழத்தில் இருந்து வந்திருக்கிறது. ஒடுக்குமுறைக்குப் பயந்து அல்லது அதற்கு எதிராக இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஈழத்துச் சைவ வாழ்வில் அம்மன் வழிபாட்டுடன் தொடர்புடைய இச்சொல், குறித்த பரம்பரையினரின் குலதெய்வத்தை அல்லது முன்னோர் வழிபாட்டைச்சார்ந்த ஒன்றென்றே கருத முடிகிறது. இப்பரம்பரையினரிடம் பணிபுரிந்த சிறுகுடி வேளாளர் இத்தய்வத்தின் திருவருளை வியந்தோ அல்லது வேளாளரை ஒத்தவராகத் தம்மைக் கருதியோ, அன்றி விசுவாசத்தாலோ இத்தெய்வத்தை தம் குடியிருப்புப்பகுதியில் உருவாக்கியிருக்கலாம். இன்றும் கோயில் தண்டலுக்கு வேளாளரிடம் செல்லும் வழக்கம் உண்டு என்று பூசாரி கூறியமை குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு கற்களால் குறிப்பிட்ட பிரதேசத்தில் (அம்பன்) இத்தெய்வவுரு வழிபடப்படுகிறது. வீட்டுவளவில் சிறுகோயில் வழிபாடாகக் காணப்படுகின்றது. சிறுகுடி வேளாளரின் கோயில் மேனிலையாக்கத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இது சாதிய நீக்கம் – தம்மைத் துறத்தல் சார்ந்த செயற்பாடாகவே பூசாரியின் உரையாடல் வழி புரிந்துகொள்ள முடிந்தது. வேளாண்மை, ஆடு வளர்ப்பு என்பவற்றில் அப்பகுதி மக்கள் ஈடுபடுவதை – அவர்கள் வேளாண்மையாளர்களாக இருப்பதனை அவதானிக்க முடிந்தது. நேபாளத்தில் உள்ள பதிவரா மாதா கோயிலும் ஆடு வளர்ப்புடன் தொடர்புபட்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தீவினைகளுக்கு எதிராகக் கோயிலமைத்து வழிபடப்படுகின்ற நேர்நிலைத் தெய்வம் இதுவாகும். பெண் தெய்வமெனினும் ஆண்வழிப் பூசாரிகளே பூசை செய்து வருகின்றனர். தாய்மையின் அடையாளமாக, தூய்மையின் சின்னமாக இத்தெய்வமிருத்தலை கிழவி ரூபம், வெள்ளை உடை எனும் சித்தரிப்புகள் புலப்படுத்துகின்றன. இந்தக் கோயில்கள் எதிலும் பலியிடலோ, மட்ச – மாமிசப் படையல்களோ இடம்பெறுவதில்லை. நிறைவுரை குலதெய்வ வழிபாடுகளில் ஒன்றாக அம்பன் பிரதேசத்து மாதா கோயில் அம்மன் வழிபாடு காணப்படுகிறது. இது சைவ வேளாளர் சமூகத்தின் வழிபாடாகும். மாதா எனும் சொல் அன்னையைக் குறிக்கும் எனினும், யாழ்ப்பாணத்தில் மாதா கோயில் என்பது கத்தோலிக்க கிறிஸ்தவ மேரி மாதா கோயில்களையே பொதுவில் சுட்டுகின்றன. ஆனால் இவை சைவக் கோயில்கள்; காலனிய ஆதிக்கங்களுக்குப் பயந்தோ, அன்றி எதிர்நிலை – நேர்நிலை எடுத்தோ இச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மாதா என்பது அன்னையே எனப் பொருள்கொண்டு இப்பெயரைச் சூட்டி இருக்கலாம். விவசாய நிலத்தோடு இணைந்து வேளாளர் மரபின் வீட்டுவளவில் இருக்கின்ற காவல் தெய்வம் இதுவாகும். தீவினைத் துன்பத்தில் இருந்து காக்கும் தெய்வம் இது. ஆரம்பத்தில் அம்மன் தெய்வத்துக்கான கல் மட்டுமே வைத்து வழிபடப்பட்டது. காலப்போக்கில் பிள்ளையார், முருகன் உள்ளிட்ட தெய்வங்களும் இணைத்து வழிபடப்பட்டன. பல்வகைக் கற்களால் இத்தெய்வ வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது. வேளாளரின் வழிபாடு சிறுகுடி வேளாளரிடம் சென்றமை அக்கால சமூக அடுக்கமைவை ஆதாரப்படுத்துகிறது. உணவுப் படையல் சமூக, பொருளாதார, பண்பாட்டு அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது. குறித்த பரம்பரையினரின் வழிபடு தெய்வம் எனினும், மாதா கோயில் என்ற குறிப்பு கால, தேச, வர்த்தமானம் கடந்த அர்த்தப்பாடுகளை உணர்த்தி நிற்கிறது. https://www.ezhunaonline.com/madha-kovil-amman/
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள். 22.11.2025 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025. "எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து,அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்கள். உயர்ந்து நிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்." தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள். அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! தமிழீழத் தேசிய இனத்தினது அடையாளமாகவும் அதன் தொன்மையானது பேரொளி கொள்ளும் எமது தேசவிடுதலையைத் தங்களுடைய உயிரினும் மேலாகக்கொண்டு, பூமிப்பந்திலே அதன் சுதந்திர அடையாளத்தை நிறுவிட பேரவாக்கொண்டு, தமிழீழத் தேசியத்தலைவரது சிந்தனையின் வழிநின்று அதில் தம்மையும் இணைத்து, வீரமிக்க மனவுறுதியோடு களம் பல கண்டு, வீரச்சாவினை அணைத்திட்ட அற்புதமான மாவீரர்களின் வரலாற்றுப் பாதையில் நாமும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். எங்கள் மாவீரர்களை நெஞ்சுருகி ,நெய் விளக்கேற்றி ,மலர் தூவி வணக்கம் செலுத்தும் தமிழீழத் தேசிய மாவீரர்நாளான 27 நவம்பர் 2025 இற்கான நிகழ்வுகள் எம்மை அண்மித்து வருவதையும், அதற்கான முன்னேற்பாடுகளோடு தாயக , தமிழ்நாடு மற்றும் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழ்ந்துவரும் அனைவரும் ஈடுபட்டுவருகின்றோம். மாவீரர்களின் பெற்றோர்களே, உரித்துடையோர்களே! ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழ மண்ணை மீட்டெடுக்கும் உன்னத விடுதலைப்போராட்டத்தில் ,உயர்ந்த ஈகமாக , தங்கள் உயிரீந்த மாவீரர்கள் விடுதலைத்தாகத்தோடு மீளாத்துயில் கொள்கின்றார்கள். தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையில் உருவான மாவீரர் பெற்றோர் ,உரித்துடையோர் மதிப்பளிப்பு இன்றும் தாயகத்திலும் புலம்பெயர்தேசங்களிலும் உணர்வெழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் ,இவ்வாண்டும் ஒவ்வொரு நாடுகளிலும் நடைபெறும் அம்மதிப்பளிப்பு நிகழ்வுகளில் மாவீரர்களின் பெற்றோர் , உரித்துடையோரைக் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் வேண்டிநிற்கின்றோம். தமிழீழம் என்ற இலட்சியத் தாகத்தைச் சுமந்து ,விழிமூடி துயிலும் ஆயிரமாயிரம் மாவீரர்களின் தியாகங்களைத் தாங்கி ,இவ்வாண்டின் மாவீரர் நாள் நிகழ்வுகளோடு தம்மை முழுமையாக ஒன்றித்து ஈடுபடத் தயாராகிவரும் உறவுகளே ,தமிழீழத்தின் மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தும் இனவாத சிங்கள அரச ஆக்கிரமிப்பாளர்களால் சிதைத்தழிக்கப்பட்ட போதிலும் அவர்களின் அடக்குமுறைகளையும் தாண்டி பல உயிர் அச்சுறுத்தல்களிற்கு மத்தியில் தாயகத்திலும் மற்றும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர்தேசங்களிலும் மக்கள் தமது பிள்ளைகளிற்கும் உரித்துடையோரிற்கும் வணக்கம் செலுத்தத்தயாராகி வருகின்றார்கள். இவ்வேளையில் ,புலம்பெயர்தேசங்களிலே வாழ்ந்துவரும் ஈழத்தமிழ் உறவுகள் ,பேரெழுச்சியுடன் மாவீரர்நாளில் திரள்வதே தமது வாழ்விடநாடுகளின் கவனத்தை உணர்வோடு ஈர்க்கும். எமது வீரவிடுதலை வரலாறு ,எம் மாவீரர்களின் இரத்தத்தாலும் வியர்வையாலும் உயிர்த்தியாகத்தாலும் பொறிக்கப்பட்டுள்ளது. சோதனை மிகுந்த நெருக்கடியான வரலாற்றுக் காலகட்டங்களில் பெரும் மலையாக நின்று தடைகளைத் தகர்த்து , எம்மைத் தலைநிமிரவைத்து , வையகத்தில் எம்மினத்திற்கான முகவரியைப் பெற்றுத்தந்தவர்கள் எமது மாவீரர்களே! இம் மாவீரர்களை நினைவேந்திடும் தேசிய மாவீரர்நாளான நவம்பர் 27இல் நெய்விளக்கேற்றி வணக்கம் செலுத்துவதோடு, தமிழீழம் விடுதலையடையும்வரை தொடர்ந்தும் போராடுவோமென உறுதிகொள்வோமாக! புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் மாவீரர் பணிமனை, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள். https://www.thaarakam.com/news/85db8301-a8f6-4c16-b1bd-65ced9188c48
-
சென்னைக்கு மாற்று அவயங்களை பொருத்த சென்றவர்கள் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினர்
சென்னைக்கு மாற்று அவயங்களை பொருத்த சென்றவர்கள் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினர் சனி, 22 நவம்பர் 2025 11:32 AM நவீன தொழில் நுட்பத்தினூடாக தயாரிக்கப்பட்ட மாற்று அவயவங்களை பொருத்திக் கொள்வதற்காக கடந்த 28 ஆம் திகதி யாழில் இருந்து சென்னை சென்ற அவயவங்களை இழந்த குழுவினர்களுக்கான மாற்று அவயவங்கள் பொருத்தப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் குறித்த குழுவினர் யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக இன்றைய தினம் சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளனர். யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில், கனடா வாழ் மக்களின் பங்களிப்புடன் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த இரண்டாவது தொகுதியினர் மாற்று அவயவங்கள் பொருத்திக் கொள்வதற்காக சென்னை சென்றிருந்தது. கனேடிய அரசு, கனடா வாழ் இலங்கை புலம்பெயர் மக்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் யாழ் பல்கலைக் கழகம் முன்னெடுக்கும் இந்த திட்டமானது வடக்கு கிழக்கில் அவயவங்களை இழந்து வாழும் மக்களின் மறுவாழ்வை மையப்படுத்தியதாக முன்னெடுக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் மாற்று அவயவங்கள் பொருத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயற்பாடுகளுக்காக வடக்கு கிழக்கை சேர்ந்த 32 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் கடந்த 18ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தனர். அவர்களே மாற்று அவயங்களை பொருத்திக்கொண்டு நாடு திரும்பியுள்ளனர் https://jaffnazone.com/news/52508
-
கடுகன்னாவ மண்சரிவு – உயரிழந்தோரின் எண்ணிக்கை 02 ஆக உயர்வு
கடுகன்னாவ மண்சரிவு – உயரிழந்தோரின் எண்ணிக்கை 02 ஆக உயர்வு November 22, 2025 4:35 pm பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 02 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மற்றுமொரு நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை, காயமடைந்த நால்வர் தற்போது மாவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது மண் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து காரணமாக, குறித்த வீதியின் கனேதென்ன சந்தியிலிருந்து கடுகன்னாவ வரையான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். கண்டி – கொழும்பு கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் ரம்புக்கனை – கலகெதர ஊடாக கண்டிக்கும், கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் இதே மாற்று வீதி ஊடாகவும் பயணிக்க முடியும். கம்பளை – கொழும்பு கம்பளையிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் கொழும்பிலிருந்து கம்பளை செல்லும் வாகனங்கள் மாவனெல்ல – ஹெம்மாத்தகம ஊடான மாற்று வீதியைப் பயன்படுத்த வேண்டும். அதிவேக நெடுஞ்சாலை கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் இயலுமானவரை அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். https://oruvan.com/kadukannawa-landslide-death-toll-rises-to-02/
-
கரூர் துயரத்துக்கு பின் முதல் நிகழ்ச்சி.. காஞ்சிபுரத்தில் நாளை விஜய் ‘சந்திப்பு’!
கரூர் துயரத்துக்கு பின் முதல் நிகழ்ச்சி.. காஞ்சிபுரத்தில் நாளை விஜய் ‘சந்திப்பு’! 22 Nov 2025, 2:00 AM கரூரில் 41 பேர் பலியானதற்கு பிறகு தவெக தலைவர் நடிகர் விஜய் முதல் முறையாக நாளை நவம்பர் 23-ந் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் ஜேப்பியார் கல்லூரியில் 5 நாட்களாக தவெக தொண்டரணியினர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் இந்த பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். இப்பயிற்சியை பெறும் தொண்டரணியினருடன் விஜய் ஆலோசனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களையும் சந்தித்து விஜய் குறைகளைக் கேட்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளரிடம் தவெகவின் திருப்பெரும்புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் எஸ். கார்த்திக், பாதுகாப்பு கோரி கொடுத்த கடிதம்: வரும் 23-ந் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவரச்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காஞ்சிபுரம் மாவட்ட மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சிக்கு அம்மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு, அனுமதிக்கப்பட்டவர்களைத் தவிர வேறு யாருக்கும் உள்ளே வரவும், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் அனுமதி இல்லை. எனவே இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான பாதுகாப்புகளை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://minnambalam.com/after-karur-tragedy-vijay-to-visit-kanchipuram-tomorrow/
-
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்
உணர்வுபூர்வமாக மாவீரர் வாரம் ஆரம்பம்! மாவீரர் கல்வெட்டு திறப்பு! Vhg நவம்பர் 22, 2025 ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் தியாகச் சுடர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று (21.11.2025) யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது. இதையொட்டி, யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக, போராட்டத்தில் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று நேற்று (21.11.2025)மாலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. பெற்றோரின் பங்கேற்புடன் கண்ணீர்ப்பூ அஞ்சலி இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின் பொதுச் சுடரை, மாவீரர் ஒருவரின் உறவினர் ஏற்றி வைத்து, தியாக மைந்தர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பலரும் கண்கலங்க மலர்களைச் சமர்ப்பித்து அஞ்சலி செலுத்தினர். இந்தத் தியாக நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள், அரசியல் பிரதிநிதிகள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மாவீரர்களின் நினைவைப் போற்றினர். https://www.battinatham.com/2025/11/blog-post_22.html
-
மிஸ் யுனிவர்ஸ் 2025: அழகி பட்டத்தை வென்றார் மெக்சிக்கோவின் பாத்திமா போஷ்
மிஸ் யுனிவர்ஸ் 2025: அழகி பட்டத்தை வென்றார் மெக்சிக்கோவின் பாத்திமா போஷ் 22 Nov, 2025 | 01:26 PM மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்த பாத்திமா போஷ் 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். இந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டி, 74 ஆவது ஆண்டாக, தாய்லாந்தில் உள்ள இம்பாட் சேலஞ்சர் ஹால் இல் நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இதில் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு வெற்றியாளரான டென்மார்க் நாட்டைச் சேர்ந்த விக்டோரியா கஜேர் தீல்விக்கிடம் இம்முறை அழகி பட்டத்தை வென்ற மெக்சிக்கோவின் பாத்திமா போஷ் கிரீடத்தைப் பெற்றுக்கொண்டார். தாய்லாந்தின் வீனா பிரவீனர் சிங் இரண்டாம் இடத்தை பிடித்தார். பாத்திமா போஷின் வெற்றிக்கு சமூக வலைதளங்களில் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். போட்டிக்குப் பிறகு, சில தினங்களுக்கு முன்பு பாத்திமா போஷ் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. போட்டியின் மேற்பார்வையாளர் நவத் இட்சராகிரைஸ் அவர் மீது அவமரியாதை செய்ததாக கூறப்பட்டது. விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததற்காக அவர் பாத்திமாவை "முட்டாள்" என்று அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாத்திமா, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஏனைய போட்டியாளர்கள் இந்த நிலைமைக்கு கோபம் தெரிவித்தனர். ஊடகவியலாளர்களை சந்தித்த போது பாத்திமா போஷ் கூறியதாவது: "நவத் செய்தது மரியாதையான செயல் அல்ல. அவர் என்னை முட்டாள் என அழைத்தார். உலகம் இதை பார்க்க வேண்டும் என்பதற்காக உங்களிடம் சொல்கிறேன்" இந்த தைரியமான பேட்டி மெக்சிக்கோ ஜனாிபதி கிளாடியா ஷீன்பா உள்ளிட்டோரால் பாராட்டப்பட்டது. https://www.virakesari.lk/article/231106
-
யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்முகத் தேர்வு
யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்முகத் தேர்வு நிதர்ஷன் வினேத் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக கோரப்பட்ட விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைத்து விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் படி, யாழ். பல்கலைக்கழக பதிவாளருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் இருவரது விண்ணப்பங்கள் தொடர்பில் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் ஒருவர் சந்தேகம் எழுப்பியதால், இருவரது விண்ணப்பங்களையும் ஏற்றுக் கொள்வது தொடர்பில் பல்கலைக்கழகப் பதிவாளரால் மானியங்கள் ஆணைக்குழுவின் தெளிவுபடுத்தலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. அதன் படி, அந்த இருவரையும் துணைவேந்தர் தெரிவுக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்குமாறு மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவினால் வெள்ளிக்கிழமை (21) மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நான்கு பீடாதிபதிகள், இரண்டு முன்னாள் பீடாதிபதிகள் மற்றும் வெளிவாரி விண்ணப்பதாரி ஒருவர் உட்படத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்த ஏழு பேருக்குமான நேர்முகத் தேர்வு எதிர்வரும் டிசெம்பர் 7ஆம் திகதி நடைபெற உள்ள விசேட பேரவைக் கூட்டத்தில் இடம்பெறவுள்ளது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவின் பதவிக்காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந் நிலையில், துணைவேந்தர் தெரிவுக்கான மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கையின் பிரகாரம் பல்கலைக்கழக பேரவை செயலாளரினால் கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் கடந்த மாதம் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், சுற்றறிக்கைக்கு அமைவாக புள்ளிகளை வழங்குவதற்கான விசேட பேரவைக் கூட்டத்தை எதிர்வரும் டிசெம்பர் 7ஆம் திகதி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே விண்ணப்பித்திருந்த பேராசிரியர் ஒருவர் சுற்றறிக்கை நியமங்களை பூர்த்தி செய்துள்ளாரா? என்பது தொடர்பிலும், வெளியிலிருந்து விண்ணப்பித்த மற்றொருவர் போதிய ஆதாரங்களை இணைக்கத் தவறியமை தொடர்பிலும் எழுந்த ஐயப்பாடுகளை அடுத்து அது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆலோசனை கோரப்பட்டிருந்தது. அதை ஆராய்ந்த மானியங்கள் ஆணைக்குழு இருவரது விண்ணப்பங்களும் நியமங்களை பூர்த்தி செய்துள்ளதாகவும், இருவரையும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்குமாறும் வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/துணைவேந்தர்-பதவிக்கு-விண்ணப்பித்த-அனைவருக்கும்-நேர்முகத்-தேர்வு/175-368304
-
பாம்பு தீண்டிய நிலையில் பரீட்சை எழுதிய மாணவன்
பாம்பு தீண்டிய நிலையில் பரீட்சை எழுதிய மாணவன் யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவர் பாம்பு தீண்டிய நிலையில் மருத்துவ கண்காணிப்பில் பரீட்சை எழுதிய பின்னர் மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இராசயணவியல் பரீட்சை இடம்பெற்றது. பரீட்சைக்கு சென்ற துஸ்யந்தன் சாத்வீகன் என்ற மாணவன் பாடசாலைக்குள் சென்ற போது பாம்பு தீண்டியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவன் அதனைப் பொருட்படுத்தாது பரீட்சை மண்டபத்தில் இருந்த போது குருதிப் பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், பரீட்சை மேற்பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவசர சிகிச்சையின் பின்னர் ஆம்புலன்சில் மீண்டும் பாடசாலை கொண்டு செல்லப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் பரீட்சை எழுதியுள்ளார். பரீட்சை முடிவடைந்த பின்னர் மீண்டும் நோயாளர் காவு வண்டி மூலம் மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று சனிக்கிழமை இடம்பெறும் பரீட்சைக்கும் அவர் நோயாளர் காவு வண்டி மூலம் மூலம் பரீட்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/பாம்பு-தீண்டிய-நிலையில்-பரீட்சை-எழுதிய-மாணவன்/175-368312
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கையை வெளியிட அரசாங்கம் உறுதி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கையை வெளியிட அரசாங்கம் உறுதி! ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை விரைவில் வெளியிடுவதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக, அருட்தந்தை சிரில் காமினி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல்கள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், துறைசார் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த சந்திப்பின் பின்னர் அருட்தந்தை சிரில் காமினி ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் , குறித்த கலந்துரையாடலின் போது, மூன்று பிரதான விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாகவும் அருட்தந்தை சிரில் காமினி குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை மற்றும் அதற்கு பின்னரான நீதிமன்றின் நடவடிக்கைகளின் அவசியத்தை தாம் வலியுறுத்தியிருந்ததாக அவர் குறிப்பிட்டார். அதன்படி, இரண்டு வாரங்களுக்குள் இந்த யோசனையை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்ததாகவும் அருட்தந்தை கூறினார். அத்துடன், ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய, ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான இறுதி அறிக்கை, குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://newuthayan.com/article/உயிர்த்த_ஞாயிறு_தாக்குதல்_தொடர்பான__இறுதி_அறிக்கையை_வெளியிட__அரசாங்கம்_உறுதி!#google_vignette
-
கண்டியில் இருந்து யோகர் சுவாமி சமாதி கோவிலுக்கு சென்ற பிக்குகள்!
கண்டியில் இருந்து யோகர் சுவாமி சமாதி கோவிலுக்கு சென்ற பிக்குகள்! adminNovember 22, 2025 யாழ்ப்பாணம், கொழும்புத்துறை யோகசுவாமிகள் சமாதி திருக்கோயிலுக்கு கண்டியில் இருந்து வருகை தந்த 120 பெளத்த துறவிகள் மற்றும் அடியவர்கள் அங்கு நடைபெற்ற பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டனர். யோகசுவாமிகளின் வாழ்க்கை பற்றியும் அவரது போதனைகள் பற்றியும் நூல்களில் படித்ததாகவும், இந்த ஆத்ம ஞானியின் சமாதியை தரிசிக்க வேண்டும் என வந்ததாகவும் கூறினார்கள். அத்துடன் அங்கு யோகசுவாமிகள் வாழ்க்கை, போதனைகள் பற்றிய செய்திகளை மிகவும் பக்தி சிரத்தையுடன் கேட்டு மகிழ்ந்தனர். https://globaltamilnews.net/2025/222921/
-
யாழில். 21 நாட்களில் 208 பேருக்கு டெங்கு!
யாழில். 21 நாட்களில் 208 பேருக்கு டெங்கு! adminNovember 22, 2025 யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் சடுதியாக அதிகரித்து உள்ளதாகவும் கடந்த 21 நாட்களில் மாத்திரம் 208 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற டெங்கு கட்டுப்படுத்தல் விசேட முன்னாயத்த கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ் வருடம் டெங்கு தாக்கம் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சடுதியான அதிகரிப்பை காட்டுகிறது. இந்த அதிகாரிப்பை நாம் சாதாரண அதிகரிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது ஏனெனில் 2023 ல் யாழ் மாவட்டத்தில் சுமார் 3986 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 10 இறப்புக்கள் பதிவாகியது. அதேபோல் 2024 ஆம் ஆண்டு சுமார் 5000 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் 60 இறப்புக்கள் பதிவாகியது. இவ் வருடம் 2025 நவம்பர் மாத தொடக்கத்தில் 22 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாதம் முடிவுறாத நிலையில் 208 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவில் 11 டெங்கு நோயாளர்கள் அடையாளங்கள் காணப்பட்ட நிலையில் தற்போது 171 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 22 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது 151 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் ஐந்து நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது 142 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சங்கானைப் பிரதேச செயலகப் பிரிவில் 10 பேர் இனங்காணப்பட்ட நிலையில் தற்போது 80 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ள நிலையில் அனைவரும் தமது பொறுப்புகளை உணர்ந்து டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட செயலர், யாழ் மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இதுவரை இறப்புகள் பதிவாகவில்லை. டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் கழிவுகளை அகற்றும் போது தரம் பிரித்து உரிய முறையில் அகற்ற வேண்டும் . அதேபோல் உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள் தரம் பிரிக்காத கழிவுகளை எடுத்துச் செல்வதை தவிர்ப்பதோடு உரியவர்களே தரம் பிரித்து தருமாறு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் . யாழ் மாவட்டத்தில் இதுவரை சுமார் 1200 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். குறித்த கலந்துரையாடலில் வட மாகாண சுகாதார பணிப்பாளர் சமன்பத்திரன , பிரதேச செயலாளர்கள் , உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர் டெங்கு நோய் தாக்கம் https://globaltamilnews.net/2025/222925/
-
வடக்கு–கிழக்கு மாகாண ஆட்சியை ஆளுநரிடம் ஒப்படைத்தது ஜனநாயக விரோதம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்
வடக்கு–கிழக்கு மாகாண ஆட்சியை ஆளுநரிடம் ஒப்படைத்தது ஜனநாயக விரோதம் – சுரேஷ் பிரேமச்சந்திரன் November 21, 2025 வடக்கு கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன் பொருள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழரசு கட்சியினர் ஜனாதிபதியுடன் சந்தித்து பேசி இருக்கிறார்கள்.சில விடயங்களை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் சிலவற்றுக்கு அவகாசம் வேண்டுமென சொல்லி இருப்பதாக தெரிகிறது. ஜனவரி மாதத்தில் இருந்து ஒரு தீர்வு திட்டம் தொடர்பாக பேசலாம் எனக் கூறியிருக்கிறார். யுத்தம் நடந்த காலத்திலிருந்து யுத்தம் முடிந்ததற்கு பிற்பாடு வரை பல்வேறுபட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றிருக்கிறது. பல விடயங்கள் பேசிப்பேசி எதுவுமே நடைமுறைக்கு கொண்டுவரத சூழலே காணப்பட்டது. அரசாங்கம் திட்டவட்டமான முடிவுக்கு வரவேண்டும். மூன்று மாதம் நான்கு மாத காலத்திற்குள் பேசி அரசியல் யாப்புக்குள் அதை உள்ளடக்க முயல வேண்டும். தமிழர் தரப்புக்கு என்ன தேவை என்பதை தமிழ் கட்சிகளுக்குள் ஒருமித்த நிலைப்பாடு கொண்டு வரப்பட வேண்டும். இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ,தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவை வெவ்வாறு நிலைப்பாடுகளை எடுக்க முடியாது அரசாங்கத்துடன் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் தொடர்பாக பேசப் போகின்றோமாக இருந்தால் தங்களை தாய் கட்சி என்று சொல்லும் தமிழ் அரசுக் கட்சி ஏனைய சகல கட்சிகளை அழைத்து அவர்களோடு ஒரு முடிவுக்கு வரவேண்டும் புதிய அரசியல் யாப்பு வருவதாக இருந்தால் தமிழ் மக்களைப் பொருத்தவரையில் என்னென்ன விடயங்களை கொண்டதாக இருக்க வேண்டும் என்று முடிவுக்கு நாங்கள் வந்து அந்த முடிவின் அடிப்படையில் தான் அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளை செய்ய வேண்டும். எல்லை நிர்ணய ஆணைக்குழுவை நியமிக்கப் போவதாக சொல்கிறார்கள். எல்லை நிர்ணயத்திற்கு இன்னும் மூன்று நான்கு வருடங்கள் ஆகலாம். சாணக்கியன் கொண்டு வந்த திருத்தச் சட்டத்தை அவர்கள் நிராகரித்து விட்டார்கள். அது பாராளுமன்றத்தில் இருந்து குப்பையில் போடப்பட்டு விட்டது. பழைய முறையில் தேர்தல் நடத்தவும் அரசாங்கம் தயார் இல்லை. ஆனால் அவ்வாறு தயாராக இருந்தால் அடுத்த வருடமே தேர்தலை நடத்த முடியும். ஒரு பக்கத்தில் அரசாங்கம் விரும்பினால் எல்லை நிர்ணயக் குழு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்து செய்யலாம். ஆனால் பழைய மாதிரியான சட்டங்களின் கீழ் தேர்தலை நடத்தி மாகாண சபையை கொண்டு வர வேண்டும். மாகாண சபை வராத பட்சத்தில் அரசாங்கம் தான் விரும்பிய அனைத்தையும் ஆளுநர் ஊடாக செய்யும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபை இருக்கிற பொழுதே பௌத்த ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பலவற்றுக்கு எதிராக காத்திரமான செயற்பாடுகளை செய்யலாம். என்னைப் பொறுத்தவரையில் தமிழ் தரப்பில் இருக்கக்கூடிய அனைவரும் இணைந்து அரசாங்கத்திற்கு சொல்ல வேண்டியது நம்மைப் பொறுத்தவரை மாகாண சபை முறை கொண்டுவரப்பட்டது தமிழ் மக்களின் பிரச்சினை தீர்ப்பதற்காகவே. குறைந்தபட்சம் வடக்கு கிழக்குக்காவது மாகாண சபை தேர்தல் என்பது நடத்தப்பட வேண்டும். வடக்கு கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன் பொருள் – என்றார். https://www.ilakku.org/handing-over-the-governance-of-the-north-eastern-province-to-the-governor-is-undemocratic/
-
அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணியின் கூட்டம் இன்று!
அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணியின் கூட்டம் இன்று! தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிரான ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணி இன்று வெள்ளிக்கிழமை நுகேகொட நகரில் நடைபெறவுள்ளது. ‘மாபெரும் மக்கள் குரல்’ என்ற தொனிப்பொருளில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தப் பேரணி ஆரம்பமாகவுள்ளது. இதில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி பிவித்துறு ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் பல கலந்துகொள்வதற்கு திட்டமிட்டுள்ளன. இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ரஜபக்ஸ கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இந்த பேரணியில் பிக்குகள் உள்ளிட்ட பௌத்த அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்துகொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பின் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் இன்று நடைபெறவுள்ள பொதுக் கூட்டம் காரணமாக வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இப்பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் மற்றும் வருகை தரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இவ்வாறான விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். அதற்கமைய, பிற்பகல் 02.00 மணி முதல் கூட்டம் நிறைவடையும் வரை நுகேகொடை மேம்பாலத்திற்கு அருகிலுள்ள ஹைலெவல் சந்தியிலிருந்து நாவல வீதியின் நாவல சுற்றுவட்டம் வரையான பகுதியில் (ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கிற்கு முன்னால் உள்ள வீதி) வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்கும் வகையில் பின்வரும் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர். https://www.samakalam.com/அரசாங்கத்திற்கு-எதிராக-20/
-
யுத்தம் நிறைவடைந்தது 16 வருடங்கள் – மீள் குடியேற்றம் முழுமையடையவில்லை!
யுத்தம் நிறைவடைந்தது 16 வருடங்கள் – மீள் குடியேற்றம் முழுமையடையவில்லை! adminNovember 21, 2025 யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் முழுமைபெறாமலிருப்பது கவலையளிப்பதாக வீடமைப்பு நிர்மாண அமைச்சர் வைத்தியர் எச். எம். சுசில் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் எச். எம். சுசில் ரணசிங்ஹ தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்திலேயே அவ்வாறு தெரிவித்தார். கூட்டத்தில் , ஆரம்பத்தில் கருத்து தெரிவித்த மாவட்ட செயலர், வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஊடாக 1259 மில்லியன் ரூபா 2025 ஆம் ஆண்டுக்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டமைக்காக மாவட்ட மக்கள் சார்பாக அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், முடிவுறுத்தப்படாமல் இருக்கும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முழுமையாக்கப்படுவதற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்குமாறும் அதற்குரிய நிதி ஒதுக்கீடுகளை அடுத்த வருடம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அமைச்சு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதனை தொடர்ந்து அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் முழுமைபெறாமலிருப்பது கவலையளிகிறது, இவ்விடயத்தில் கவனமெடுக்குமாறு ஜனாதிபதி , என்னை தனிப்பட்ட ரீதியாக அறிவுறுத்தியுள்ளார். மேலும், இவ்வாண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், மீள்குடியேற்ற செயற்பாடுகள், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் சென்ற ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முழுமைப்படுத்தாத வீடுகள் தொடர்பாகவும் கவனமெடுக்கப்படும், இக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இக் கலந்துரையாடல் மேலதிக செயலர், மேலதிக செயலர் (காணி), யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதிப்பணிப்பாளர், தாளையடி நீர்வழங்கல் திட்டத்தின் திட்டப் பணிப்பாளர்,நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள், பிரதம கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட பொது முகாமையாளர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலக மீள்குடியேற்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2025/222887/
-
யாழில். 32 வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட உறுதி பத்திரங்கள்!
யாழில். 32 வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட உறுதி பத்திரங்கள்! adminNovember 21, 2025 வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான உறுதி பத்திரங்கள் 33 வருடங்களின் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்ஹவால், குருநகர் பகுதியை சேர்ந்த 19 பேருக்கு வீட்டு உறுதிகள் வழங்கப்பட்டன. குருநகர் பகுதியில் 1983ஆம் ஆண்டு கால பகுதியில் வீடமைப்பு அமைச்சினால் , வீடற்ற மக்களுக்கு என கட்டி கையளிக்கப்பட்ட வீடுகளுக்கான உறுதி பத்திரங்கள் , இது வரையில் வழங்கி வைக்கப்படாத நிலையில் , நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன், பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு அமைச்சரால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. https://globaltamilnews.net/2025/222871/
-
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் - ஜனாதிபதி
இனப்பிரச்சினைக்குத் தீர்வு அடுத்த ஆண்டில் கிட்டும்! தமிழரசுக் கட்சியிடம் ஜனாதிபதி அநுர உறுதி; அரசியற்கைதிகள் தொடர்பில் அவதானிப்பாராம் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான நடவடிக்கைகளை அடுத்த வருடம் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியினரிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவதானம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் எம்.ஏ.சுமந்திரன் பொதுச்செயலாளர் மற்றும் கட்சியின் 8 நாடாளுமன்ற உறுபினர்கள் கொண்ட குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்பட்டதுடன், அதற்கான நடவடிக்கை அடுத்த வருடத்தில் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதியால் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் ஆகியன அரசாங்கம் புதவிக்கு வந்து ஒரு வருடத்துக்குள் நடத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசங்கம் தெரிவித்திருந்த நிலையில், அது தொடர்பிலும் தமிழழசுக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இதன்போது, அந்த வாக்குறுதிகள் கணிசமானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மாகாணத் தேர்தல் உள்ளிட்ட மிகுதி விடயங்கள் விரைவில் செயற்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுர கூறியுள்ளார். அத்துடன் மாகாணத் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் முறைமை தீர்மானிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் ஜனாதிபதி அநுர சுட்டிக்காட்டியுள்ளார். அரசியற் கைதிகளின் விடயம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலர் சுமந்திரன் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுசென்றார். தேசிய மக்கள் சகதியின் தேர்தல் விஞ்ஞாபனத் அரசியற் கைதிகள் என்ற சொற்தொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆனால், அமைச்சர்கள் சிலர் அரசியற் கைதிகளே இல்லை என நாடாளுமன்றத்தில் கூறியுள்ளனர் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார். அத்துடன், அரசியற் கைதிகளின் விடயத்தில் விரைவாக கோரிக்கையையும் தமிழரசுக் கட்சி முன்வைத்துள்ளது. இதன்போது. இந்த விடயத்தில் அவதானம் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் திருகோணமலையில் புத்தர் சிலைவைக்கப்பட்ட விடயம் தொடர்பிலும் தமிழரசுக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. அங்கு எந்தக் காலத்திலும் புத்தர் சிலை இருக்கவில்லை. ஒரு விகாரை பக்கத்தில் இருந்திருக்கின்றது. அது சம்பந்தப்பட்ட ஒரு சின்னக் கட்டடம் அருகில் இருந்துள்ளது. அதைக் குளிர்பானம் விற்பனை செய்யும் நிலையமாக மாற்றினார்கள். அது அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டடம். அதனை அகற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவு இருந்தபோது, அதனை அகற்றாமல் தடுப்பதற்காக புத்தர் சிலை புதிதாகக் கொண்டு போய் வைக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, இது நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம் என்று தமிழரசுக் கட்சி ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றது. திரியாயில் இரண்டே இரண்டு பெளத்த குடும்பங்களுக்காக இரண்டு விகாரைகள் கட்டப்படுகின்றன. குச்சவெளி பிரதேசசெயலகத்தில் 38 விகாரைகள் புதிதாகக்கட்டப்படுகின்றன. பௌத்தர்கள் வாழும் இடத்தில், அவர்களுடைய வழிபாட்டுக்காக விகாரைகள் கட்டப்படுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது ஆனால் ஓர் ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கட்டுவதற்காக அப்படிச்செய்வது இனங்களுக்கு இடையில் எந்தவித நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் ஜனாதிபதியிடம் தமிழரசுக் கட்சி சுட்டிக்காட்டியது. அந்தக் கருத்துக்களையும் ஜனாதிபதி கேட்டறிந்ததுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமிழர்சுக் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் அவர்களிடம் குறிப்பிட்டுள்ளார். https://newuthayan.com/article/இனப்பிரச்சினைக்குத்_தீர்வு_அடுத்த_ஆண்டில்_கிட்டும்!
-
விடைத்தாளை அனுப்ப மறந்த அதிகாரிகள் – 21 மாணவர்களின் எதிர்காலம் “?”
விடைத்தாளை அனுப்ப மறந்த அதிகாரிகள் – 21 மாணவர்களின் எதிர்காலம் “?” adminNovember 20, 2025 நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சையின் விடைத்தாளை அனுப்ப மறந்த அதிகாரிகளினால் யாழ்ப்பாணத்தில் 21 மாணவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. நெல்லியடியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர பரீட்சையில் உயிரியல் பாடத்தின் முதலாம் பகுதி விடைத்தாள் அதிகாரிகளின் கவனக் குறைவால் திருத்தல் பணிக்காக அனுப்பி வைக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உயிரியல் பாடத்தில் 21 மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் , அவற்றினை ஒன்றாக கட்டி , ஏனைய காகித தாள்களுடன், சேர்த்து வைத்துள்ளனர். பின்னர் இரண்டாம் பகுதி விடைத்தாள்களை பெற்று , அவற்றினையும் ஒன்றாக சேர்ந்து கட்டிய பின்னர் , முதலாம் பகுதி மற்றும் இரண்டாம் பகுதி விடைத்தாள்களை திருத்தல் பணிக்காக அனுப்ப வேண்டிய வேளை , முதலாம் பகுதி விடைத்தாள்களை மறந்து , இரண்டாம் பகுதி விடைத்தாள்களை மாத்திரம் திருத்தல் பணிக்காக கையளித்துள்ளனர். மூன்று நாட்களின் பின்னர் , பரீட்சை மண்டபத்தில் காணப்பட்ட , காகித கட்டுக்களை மீள அடுக்கிய போதே , அதற்குள் உயிரியல் பாட விடைத்தாள்கள் காணப்பட்டமையை கண்டுள்ளனர். அவற்றினை மூன்று நாட்களின் பின்னர் திருத்தல் பணிக்காக அனுப்பிய போது , அதனை அதிகாரிகள் ஏற்க மறுத்துள்ளனர். இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்ட கல்வி திணைக்கள அதிகாரிகள் , அன்றைய தினம் பரீட்சை மண்டபத்தில் கடமையாற்றிய அனைவரையும் அங்கிருந்து நீக்கி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாதிக்கப்பட்ட 21 மாணவர்களுக்கும் அடுத்த கட்டம் என்ன தீர்வினை வழங்குவது என்பது தொடர்பில் பரீட்சை திணைக்களமே முடிவெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தவறினால் , எமது பிள்ளைகளின் எதிர்காலம் வீணாகி விட்டதே இதற்கு ஒரு நல்ல தீர்வினை வழங்க வேண்டும், என பெற்றோர் கோரியுள்ளனர். https://globaltamilnews.net/2025/222857/
-
வடக்கில் 12 இடங்களில் இராணுவத்தினரின் சிகை அலங்கரிப்பு நிலையம்!
வடக்கில் 12 இடங்களில் இராணுவத்தினரின் சிகை அலங்கரிப்பு நிலையம்! adminNovember 20, 2025 வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் 12 இடங்களில் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையத்தினை நடாத்தி வருமானம் ஈட்டி வருவதாக வடமாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. வடமாகாணத்திற்குட்பட்ட இடங்களில் இராணுவத்தினரால் வன்னி பகுதியில் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே நடாத்தப்பட்டு வருகின்றது என அமைச்சர் பிமல் ரத்நாயக்கா பாராளுமன்றில் தெரிவித்திருந்த விடயம் தொடர்பில் வடமாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் கடும் கண்டனத்தை வெளியிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், குறிப்பாக வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை தொண்டமானாறு வீதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் சிகை அலங்கரிப்பு நிலையம் இராணுவத்தால் நடாத்தப்பட்டு வருவதுடன். வவுனியாவில் பம்பைமடு இராணுவ முகாம், வவுனியா சிறைச்சாலைக்கு முன், இரட்டை பெரியகுளம் இராணுவ முகாம் மற்றும் பரிச்சங்குளம் இராணுவ முகாமிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் விசுவமடு புன்னைநீராவியடியிலுள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களம் இணைந்த கட்டளைத் தலைமையகத்திலும், முல்லைத்தீவில் முருகண்டி கால்நடை பயிற்சி கல்லூரியடி இராணுவ முகாம், முருகண்டி எரிபொருள் நிரப்பு நிலையம் அருகாமையுள்ள இராணுவ முகாம், அக்கராயன் முருகண்டி விஷேட படையணி இராணுவ முகாம் மற்றும் கோப்பாபுலவு கொண்டமடு வீதி 59 ம் படைப்பிரிவினுள் மூன்று சிகை அலங்கரிப்பு நிலையங்கள் நடாத்தப்பட்டு வருவதுடன் மன்னார் மாவட்டத்தில் கள்ளியடி இலுப்பைக்கடவை மற்றும் திருக்கேதீச்சரம் முள்ளிப்பள்ளத்திலும் இராணுவத்தினரால் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் இன்றுவரை நடாத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை நடாத்துவதால் சிகை அலங்கரிப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதாகவும் குறித்த நிலையங்களை மூடுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/222838/