Everything posted by கிருபன்
-
வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் காவற்துறை மா அதிபராக ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன கடமைகளை பொறுப்பேற்றார்.
கடமைகளை பொறுப்பேற்றார்! adminNovember 20, 2025 வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் காவற்துறை மா அதிபராக ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன இன்றையதினம் வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார். காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவற்துறை மா அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ சர்வமத வழிபாடுகளுடன் ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றார். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவற்துறை அதிபராக இருந்த திலக் தனபால வட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவற்துறை அதிபராக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய சிரேஸ்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார். குறித்த நிகழ்வில் மாவட்ட பிரதிப் காவற்துறை மா அதிபர், சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர்கள் உள்ளிட்ட காவற்துறை உயர் அதிகாரிகள், காவற்துறை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன இதற்கு முன்னர் காவற்துறை தலைமையகம் மற்றும் வட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் பதவிகளில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/222847/
-
தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் காலமானார்!
தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் காலமானார்! adminNovember 20, 2025 தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றைய தினம் காலமானர். ஆனந்தசுதாகரின் மனைவி 2018 ஆம் ஆண்டு கணவரின் பிரிவால் நோயுற்ற நிலையில் மரணமானார். இதனால் அநாதரவாக நிர்க்கதியாகநின்ற பிள்ளைகளை வயதான காலத்திலும் பராமரித்து வந்த பேத்தியாரான கமலா அம்மா (வயது 75) நோயுற்ற நிலையில், கடந்த சில தினங்களாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். “தகப்பன் வந்தால் பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு போயிடுவன் இவங்களும் விடுறாங்களில்ல என்னவாம் சொல்லுறாங்க .. ” என நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் , தனது உறவினர்களிடம் கேட்டவாறு இருந்தார் என உறவினர்கள் தெரிவித்துள்னர். ஆனந்தசுதாகரனின் மனைவி உயிரிழந்த நிலையில் , இறுதி சடங்கில் கலந்து கொள்ள சிறைச்சாலை வாகனத்தில் ஆனந்த சுதாகரன் அழைத்து வரப்பட்டு , மீண்டும் சிறைக்கு அழைத்து செல்ல தயாரான போது அவரது மகளும் அப்பாவுடன் செல்ல போகிறேன் என கூறி சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய ஒளிப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அதனை அடுத்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பொது மன்னிப்பில் ஆனந்தசுதாகரனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் இன்று 07 வருடங்கள் கடந்தும் மூன்றாவது ஜனாதிபதி பதிவுக்கு வந்த நிலையிலும் ஆனந்தசுதாகரன் விடுதலை இன்றி சிறையிலையே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/222844/
-
இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் பொலிஸாரிடம் சிக்கிய தடயங்கள்!
இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் பொலிஸாரிடம் சிக்கிய தடயங்கள்! யாழ்ப்பாணம் - வடமராட்சி கரணவாய், கூடாவளவு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் 29 வயதுடைய ராஜகுலேந்திரன் பிரிந்தன் என்றும் அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் நேற்றிரவு 12:00 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்ததுக்கு அமைவாக குறித்த இளம் குடும்பஸ்தர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரை பின்தொடர்ந்து சென்ற கொலையாளிகள் அவர் மீது கூரிய ஆயுதங்களினால் வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தப்பிக்க இளம் குடும்பஸ்தர் போராடிய தடயங்கள் உள்ளதாகவும் ஒரு குற்றவாளியின் ரீசேட்டின் ஒரு பகுதி கொல்லப்பட்டவரின் கையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சியும், ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேகநபர்கள் செல்லும் காட்சியும் அப்பகுதியில் உள்ள சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெளியே சென்ற மகனைக் காணவில்லையென தாயும், தந்தையும் தேடிச் சென்ற வேளை வீதியில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார். பெற்றோர் பருத்தித்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. உயிரிழந்தவரின் சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி குற்றத்தடுப்பு பொலிஸார், யாழ்.விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. https://newuthayan.com/article/இளம்__குடும்பஸ்தர்_கொலை_தொடர்பில்__பொலிஸாரிடம்_சிக்கிய_தடயங்கள்!#google_vignette
-
”திருகோணமலையை நேசிப்பவர்களுக்கு மட்டுமே திருகோணமலை சொந்தமாகும்” : ரொஷான் அக்மீமன
”திருகோணமலையை நேசிப்பவர்களுக்கு மட்டுமே திருகோணமலை சொந்தமாகும்” : ரொஷான் அக்மீமன திருகோணமலைக்கு வெளியே இருந்து வந்த சிறு குழுவொன்று திருகோணமலைக்குள் இனவாத மோதலை ஏற்படுத்த முயற்சித்தனர். இனவாத தீயால் எரிந்து இன்னும் அந்த காயங்களால் துடித்துக்கொண்டிருக்கும் திருகோணமலை மக்கள், அந்த முயற்சியை ஒன்றாக சேர்ந்து தோற்கடித்தனர். எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே நாம் இந்த தீயை அணைப்பதற்காக போராடினோம். எங்கள் ஆட்சியின் கீழ் மீண்டும் இனவாதம் என்ற தீயை எரிய அல்லது அதனை பயன்படுத்த ஒருபோதும் இடம் கொடுக்கமாட்டோம் என திருகோணமலை மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தெரிவித்தார். திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தையடுத்து திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சம்பந்தப்பட்ட பௌத்த துறவிகள், பொலிஸார், உள்ளிட்டவர்களுடனான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (18) ரொஷான் அக்மீமன தலைமையில் இடம்பெற்றது. இந்த கலந்துரைாடலின் பின்னரே பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித் அவர் மேலும் குறிப்பிடுகையில், சில பேர் இணைந்து செயல்படுத்த முயன்ற இனவாத அரசியலை தோற்கடிக்க தலையிட்ட திருகோணமலை மாவட்ட அனைத்து மூத்த பிக்குமார்கள் மற்றும் மத தலைவர்களுக்கு என் மரியாதைக்குரிய நன்றியை சமர்ப்பிக்கிறேன். அதேபோல், வெளியிலிருந்து வந்த சிறிய குழுவொன்று திருகோணமலையின் ஒற்றுமையைச் சிதைக்க முயற்சித்ததை உணர்ந்து அந்த தருணத்தில் அதற்கு எதிராக ஒன்றுபட்டு நின்ற திருகோணமலை மக்களைப் பற்றி நான் உண்மையிலே சந்தோசமடைகிறேன். மேலும் இந்த சம்பவத்தை இன மோதலாக மாற்ற முயன்ற இனவாத அரசியல்வாதிகளின் ஊக்குவிப்புகளுக்கு இரையாகாமல், அமைதியாக செயல்பட்ட சிங்கள, தமிழ் சகோதர சகோதரிகளின் செயல் குறித்து நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். திருகோணமலை என்பது ஒரு வானவில் போல அழகான நகரம். அதன் அழகு புலப்படும் தருணம் அனைத்து நிறங்களும் ஒன்றாகத் தெரிவதிலேயே உள்ளது. நேற்றுக் காலை, இந்தச் சம்பவம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இணைந்து நடத்திய கலந்துரையாடலி சில முடிவுகள் எட்டப்பட்டன, அதில் புத்தர் சிலையை விகாரைக்கு சொந்தமான குறித்த இடத்தில் வைப்பது, விகாரஸ்தானத்திற்குச் சொந்தமான பழைய கட்டிடங்கள் இருந்த நிலத்தை அடையாளம் கண்டு, உரிய வகையில் எல்லை குறியீடுகள் வைப்பது, அந்த நிலம் கடற்கரை பாதுகாப்பு மண்டலத்திற்கும் திருகோணமலை நகரம் நகர அபிவிருத்தி ஆணையத்திற்கும் உட்பட்ட பகுதியாக இருப்பதால், எந்தக் கட்டிடம் அமைக்க வேண்டுமானாலும், சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் சட்டப்பூர்வ அனுமதி பெற்று சட்ட பிரச்சினைகளை தவிர்ப்பது ஆகய முடிவுகள் எட்டப்பட்டன. திருகோணமலைக்கு தலைமை வழங்குவது என்பது உண்மையில் சவாலான பொறுப்பாகும். ஏனைய மாவட்டங்களிலிருந்து மாறுபட்டு, திருகோணமலையில் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழ்வதும் அனைத்து கலாச்சரத்தையும் பின்பற்றுவோரின் விதிமுறைகளையும் மதித்து செயல்பட வேண்டும் என்பதும் இதற்க்கு காரணமாகும். நாங்கள் கண்ட பழைய அரசியல் என்பது இனத்தின் படி மக்களை பிரித்து ஆழ்ந்த அரசியலாகும். ஆனால் அந்த ஆட்சி எமக்கு விட்டுச்சென்ற இனவாதத்தின் பின்விளைவுகளை நாங்கள் இன்னும் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் எங்கள் ஆட்சி சிங்கள, தமிழ், முஸ்லிம் என்று அல்லாமல், “திருகோணமலையின் மக்கள்” என்று அனைவரையும் மதிக்கும் ஆட்சியை தேர்ந்தெடுத்திருக்கின்றோம். அவர்களின் கலாச்சார அடையாளங்களில் வேறுபாடே ஏற்றுக்கொண்டு, எல்லா மதத்தையும் மதிக்கின்ற ஓர் தினசரி வாழ்வை நிலைநாட்டுவதே எங்கள் பயணமாகும். இந்த பாதையை தனிப்பட்ட அரசியல் நலத்திற்காக எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என தெரிவித்தார். https://www.samakalam.com/திருகோணமலையை-நேசிப்பவர/
-
நல்லூர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம்!
நல்லூர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம்! adminNovember 19, 2025 தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம் செய்து வைக்கப்படும் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது தாய் மண்ணுக்காக தம் உயிர்களை அர்பணித்தவர்களுடன் மாமனிதர்களையும் நாட்டுபற்றாளர்களையும் மற்றும் பல ஆவணப்படுத்தல்களையும் கொண்டு அமைக்கின்றது இம்முறை நல்லூர் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. தலைமுறைகள் கடந்து வாழும் எம் மாவீரச் செல்வங்களின் நினைவாலயத்திற்கு உங்கள் இளைய தலைமுறையினரையும் அழைத்து வந்து வரலாற்றினைக் கடத்துங்கள்.உங்கள் மனப்பதிவுகளைப் பதிந்து விட்டுச் செல்லுங்கள் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. அதேவேளை நினைவாலயத்தை அமைக்கும் பணிகள் தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞரணியால் முழு வேகத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழில் தொடரும் மழை காரணமாக நினைவாலயம் அமைக்கப்படும் பகுதிக்குள் வெள்ள நீர் உட்புகாத வகையில் , மண் மூடைகள் அடுக்கப்பட்டு , மண் நிரவப்பட்டு வருகிறது. https://globaltamilnews.net/2025/222813/
-
போதைப்பொருளுடன் கைதான பிரபல தவில் வித்துவான்
போதைப்பொருளுடன் கைதான பிரபல தவில் வித்துவான் adminNovember 18, 2025 யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிரபல தவில் வித்துவான் கைது செய்யப்பட்டுள்ளார் . இணுவில் பகுதியை சேர்ந்த தவில் வித்துவான் , யாழ் நகர் பகுதியில் போதைப்பொருளுடன் நடமாடுவதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரசிய தகவலின் அடிப்படையில் குறித்த வித்துவானை கைது செய்து சோதனையிட்ட வேளை அவரது உடைமையில் இருந்து 490 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை காவல்துறையினா் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , குறித்த நபருக்கு போதைப்பொருளை யாழ் . நகர் பகுதியில் வைத்து விற்பனை செய்த நபர் தொடர்பில் விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் , அந்நபரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர் https://globaltamilnews.net/2025/222809/
-
யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
-
மாவீரர் நாள்: கேள்விகளும் பதிலும் — கருணாகரன் —
மாவீரர் நாள்: கேள்விகளும் பதிலும் November 17, 2025 — கருணாகரன் — ஈழப்போராட்டம் எதிர்பார்த்த விடுதலையையும் அரசியல் முன்னேற்றத்தையும் தராமல் முடிந்து விட்டது. இதுபெருந்துயரமே. ஆனால், அது உண்டாக்கிய நினைவலைகள் ஓயவில்லை. எந்தப்போராட்டத்திலும் இத்தகைய நிலையிருக்கும். அதில் ஒன்று, போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த வீரர்களின் நினைவாகும். அதைத்தமிழ் மக்கள் மாவீரர்நாளாக ஒவ்வாரு ஆண்டும் நவம்பர் 27 இல் நினைவு கூருகிறார்கள். இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கிய மரபாகும். இந்த மரபு இன்று விடுதலைப்புலிகள் இயக்கம் நடைமுறையில் இல்லாத போதும், உலகங்கும் உள்ள தமிழ் மக்களால் தொடரப்படுகிறது. இது வியப்புக்குரிய ஒன்று. ஏனென்றால், குறித்த இயக்கம் இல்லாத போதும் அந்த இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு நடைமுறையை மக்கள் பின்பற்றுகிறார்கள் – தொடருகிறார்கள். இதற்குக் காரணங்கள் சில உண்டு. 1. தங்களுடைய விடுதலைக்காகப் போரடி மரணத்தைத் தழுவிய போராளிகள் பற்றிய உணர்வும் மதிப்பும் மக்களிடம் நீங்காமல் உள்ளது. இதனால் அவர்களை எப்படியும் நினைவு கொள்ள வேண்டும் என்ற உணர்வு மக்களில் பெரும்பாலானவர்களிடம்உண்டு. மாவீரர் நிகழ்வுகளின் அடிப்படைகளில் ஒன்று இதுவாகும். 2. இன்னொரு தரப்பினருக்கு ஒரு வகையில் இதுவொரு குற்றவுணர்ச்சியும் கூட. வாழும் வயதில், தங்களுடைய இளமையை போராட்டத்துக்கென அர்ப்பணித்துச் செயற்பட்டு, இறுதியில் மரணத்தையும் தழுவிக் கொண்ட போராளிகளை நினைக்கும்போது, தங்களுக்காகப் போராடியவர்கள் சாவடைந்துவிட்டனர். ஆனால், நாமோ எல்லாவற்றைக் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சி இவர்களைக் குடைந்து கொண்டேயிருக்கிறது. இதை நீக்குவதற்கு குறைந்தபட்சம் இத்தகைய நினைவு கூருதல்களைச் செய்து தங்களை ஆற்றுப்படுத்திக் கொள்கிறார்கள். அதனால், குறைந்த பட்சம் இந்த நிகழ்விலேனும் பங்கு பற்றவேண்டும் என்று எண்ணுகிறார்கள். 3. போராடி மரணத்தைத்தழுவிக் கொண்டோரின் பெற்றோர், உறவினர், நண்பர்கள், சக தோழதோழியரால் நினைவு கொள்ளப்படுதல். இது கூடி வாழ்ந்தவர்களை அஞ்சலித்தல் என்பதாகும். இவர்கள் நேர்மையான முறையில் அஞ்சலி செலுத்துகின்றனர். 4. அரசியற் காரணங்களுக்காக அல்லது தங்களுடைய அரசியல் நலனுக்காக மாவீரர் என்ற பெயரைப் பயன்படுத்திக்கொள்வதும் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதும் அதில் பங்கேற்பதுமாக நடப்பது. அதாவது, இவர்களால் மக்களுக்கெனத் தியாகம் எதையும் செய்யமுடியாது. தம்மை அர்ப்பணித்து தேசத்துக்கான பணிகளைச் செய்வதற்கும் இயலாது. மற்றவர்களின் தியாகங்களைக் கூறி, பிழைக்க மட்டுமே முடியும். அடிப்படையில் இது ஒரு பிழைப்புவாத அரசியலாகும். 5. இந்த மரணங்களின் பெறுமதி எத்தகையது? இப்படி நினைவு கொள்வதன் அடிப்படைகள் என்ன? இவ்வாறு நினைவு கொள்வதன் மூலமாக நாம் எடுத்துக் கொள்ளும் அரசியல் தொடர்ச்சியும் வளர்ச்சியும் எவ்வாறானது? நினைவுகொள்ளப்படும் (நினைவுகூரப்படும்) மறைந்த வீரர்களுடைய கனவுகளை எப்படி நிஜமாக்குவது- நிறைவேற்றுவது? உண்மையான நினைவுகூருதல் என்பது என்ன? அது எவ்வாறு அமைய வேண்டும்? என்பதைப் பற்றிய கேள்விகளோ சிந்தனையோ எதுவுமே இல்லாமல், ஏதோ நடக்கிறது. அதில் நாமும் சேர்ந்து நிற்போம் என்ற மாதிரிக் கலந்து கொள்வது. இதுபோலப் பல காரணங்கள் உண்டு. இவ்வாறான காரணங்களால்தான் வெவ்வேறு அணிகளால் அல்லது பல அணிகளால் மாவீரர்நாள் கொண்டாடப்படுகிறது – அனுஸ்டிக்கப்படுகிறது. அவரவர் தத்தமது தேவைகளுக்காக மாவீரர் நாளைக் கொண்டாடுகின்ற – அனுஸ்டிக்கின்ற – ஒரு நிலை உருவாகியுள்ளது. அதாவது இது உருவாகிய தேவையும் சூழலும்வேறு. இன்று பின்பற்றப்படும் தேவையும் சூழலும் வேறு. ஈழப்போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை மதித்துப் போற்றவேண்டும் என்றால், அவர்களுடைய கனவுகளுக்கும் நடைமுறைகளுக்கும் நேர்மையாக – விசுவாசமாக இருக்க வேண்டும். இதனுடைய அர்த்தம், அவர்கள் கொண்டிருந்த அதே அரசியலை இன்றும் மேற்கொள்வது என்பதல்ல. அது நடைமுறைச் சாத்தியமும் இல்லை. அந்த அரசியல் நிலைப்பாடு இன்றைய காலத்துக்குப் பொருத்தமானதும் அல்ல. ஆனால், தாம் தேர்வுசெய்கின்ற அல்லது பிரகடனப்படுத்துகின்ற அரசியலுக்காக – அதை நடைமுறைப்படுத்துவதற்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் பண்பாடும் உளநிலையும் துணிச்சலும் இருக்கவேண்டும். அதுவே நேர்மையானது. அதையே நாம், தம்மை அர்ப்பணித்த போராளிகளுக்குச் செய்கின்ற நேர்மையான மதிப்பார்ந்த அஞ்சலியாகும். அவ்வாறில்லை என்றால், அவர்களுடைய பெயரைவைத்துப் பிழைக்கும் பிழைப்புவாத அரசியலைச் செய்வதாகவே அமையும். இதேவேளை, அனைத்து இயக்கப்போராளிகளுக்கும் என ஒரு பொது நாளினைத் தெரிவுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் இந்த இடத்தில் இணைத்துப் பார்ப்பது பொருத்தமாகும். ஏனென்றால், ஈழ விடுதலைக்காகப் போராடி, மரணத்தைத் தழுவியவர்கள் அனைவரும் மதிப்புக்குரியவர்களே. அப்படியாயின் அவர்கள் அனைவரையும் உள்ளடக்கி, ஒரேநாளில் நினைவு கொள்ளலாம். அது விடுதலைப் புலிகளின் மாவீர்ர் நாளான நவம்பர் 27 ஆகவும் இருக்கலாம். அல்லது பிறிதொரு நாளாகவும் இருக்கலாம். அப்படி ஒரு பொதுநாள் ஏற்றுக்கொள்ளப்படுமாக இருந்தால், அது அரசியல் ரீதியாகவும் நினைவு கூரலின் அடிப்படையிலும் சிறியதொரு முன்னேற்றத்தைத் தரக் கூடும். இதற்கும் அப்பால் இந்த நினைவுகூரல் இப்பொழுது – அதாவது எந்த இயக்கமும் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் இல்லாத சூழலில் – நடப்பதற்கான காரணத்தை நாம் அர்த்தமாக்குவதாக இருந்தால், அதைக் குறித்து ஆழமாகச்சிந்திக்க வேண்டும். அப்படிச் சிந்திக்கும்போதுதான் இந்தச்சடங்குத்தனமான, சம்பிரதாயமான நினைவு கூரல் என்ற அர்த்தக் குறைவான நடைமுறை மாறி, புதியபோக்கொன்று அர்த்தபூர்வமாக விளையும். 1989 இல் மாவீர்ர் நாளை விடுதலைப் புலிகள் இயக்கம் மரணத்த போராளிகளை நினைவுகூரும் விதமாக அனுஸ்டிக்கத்தொடங்கியது. அதற்காக அது தன்னுடைய அமைப்பிலிருந்து முதல் சாவடைந்த போராளியான சத்தியநாதன் என்ற சங்கர் மரணித்த நவம்பர் 27 ஆம் நாளையும் அந்த நேரத்தையும் தேர்வு செய்தது. அதுவே இப்பொழுது மாவீரர் நாளாக பின்பற்றப்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகளின் வளர்ச்சியும் அது தேர்ந்தெடுத்த ஆயுதப்போராட்ட வடிவமும் நேரடியாகவே ஒரு யுத்தத்தை விரித்தது. அப்படி விரிவடைந்த யுத்தம், பல நூற்றுக் கணக்கில் ஏன் சில சந்தர்ப்பங்களில் ஆயிரக்கணக்கிலான போராளிகளின் உயிரைக்கோரியது. இப்படி பல நூறு பேர் யுத்த களத்தில் மடியும்போது, அது மக்களிடையே ஒரு பெரும்கலக்கத்தையும் கேள்வியையும் எழுப்பக் கூடும். முடிவற்ற சாவு என்பது இழப்பு உணர்வையே ஏற்படுத்தக் கூடியது. அரசியல் தீர்வோ, யுத்த முடிவோ அல்லாமல் யுத்தம் நீண்டு செல்லும்போது இந்த உணர்வு மேலும் அதிகரிக்கும். அதுவும் ஈழத்தமிழர்கள் ஒரு சிறிய இனம்மட்டுமல்ல, சிறிய பிரதேசத்திற்குள்ளேயே வாழ்கின்றவர்கள் என்பதால் அதிகரித்த மரணங்களை போராட்டத்தில் சந்திக்கும் போது, அது மக்களின் உளநிலையில் குழப்பங்களையும் போராட்டத்தைத் தொடர்வதில் தயக்கத்தையும் உண்டாக்கும். இப்படியே இந்த யுத்தம் சென்றுகொண்டிருந்தால், கூடிச்செல்லும் மரணங்களைக் குறித்த கேள்விகளும் தயக்கமும் குழப்பமும் எழுந்து போராட்டத்துக்கு எதிரான மக்கள் அலையாக – இயக்கத்துக்க எதிரானபோக்காக மாறக் கூடும் என்று சிந்திக்கப்பட்டதன் விளைவே, மாவீரர்நாளாகும். களத்தில் மடிந்த போராளிகளை மகத்தான வீர்ர்களாக, வரலாற்று நாயகர்களாக, விடுதலையின் வித்துகளாக, மண்ணின் முத்துகளாக சித்திரிப்பதன் மூலம் உங்களுடைய பிள்ளையோ கணவரோ, சகோதரரோ வெறுமனே சாவைத் தழுவிக்கொள்ளவில்லை. அவர்களுடைய சாவுக்கொரு மகத்துவமும் பெறுமதியும் உண்டு. அதற்கொரு வரலாற்று முக்கியத்துவம் உள்ளது என்ற உணர்வு நிலையைக் கட்டமைப்பது. இதற்கு தமிழ் வரலாற்றிலிருந்து வீர மரணத்தைத் தழுவிக்கொள்ளும் பெருமிதப் பாடல்கள்(சங்க இலக்கியம்) உதவின. இதைப் புலிகளின் ஆதரவுப்புலவர்களும் பேராசிரியர்களும் தமிழ்மொழி அறிஞர்களும் நிறைவேற்றி உதவினர். புறநானூற்றுப் பாடல்களில் வரும் நடுகல் பண்பாடு, முறத்தினால் புலியை விரட்டிய பெண், நெற்றியில் வீரத்திலகமிட்டுப் போர்க்களத்துக்கு அனுப்பிய அன்னை போன்ற கதையாடல்கள் விடுதலைப்புலிகளின் ஊடகங்களில் மீட்டெடுத்துப் புதுமைப்படுத்தப்பட்டன. இதன்மூலம் சாவடையும் போராளிகளுடைய உறவுகளுக்கும் தோழர்களுக்கும் ஒருவிதமாக ஆறுதலையும் அவர்கள் திருப்திப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு நிறைவையும் கொடுப்பதாக உணர வைப்பதாகும். அதாவது இந்தச் சாவுகளுக்கு அர்த்தமும் பெறுமதியும் உண்டென நம்பவைப்பது. இத்தகையதொரு வரலாற்றுக்காரணம், போராடும் அல்லது போர் செய்யும் தரப்புக்கு அவசியம் தேவை. இதையே இன்னொரு பரிமாணத்தில் – இன்னொரு கோணத்தில் அரசும்செய்தது. அது படைகளின் உளநிலையையும் அவர்களுடைய உறவுகளின் உளத்தை ஆற்றுப்படுத்தவுமாக. இதை இலங்கை அரசு மட்டுமல்ல, உலகளாவிய அளவில் அனைத்து அரசுகளும் செய்கின்றன. போரில் பலியாகும் வீரர்களைப் போற்றி, தேசிய வீரர்களாக மகத்துவப்படுத்தும் உத்தி இது. ஆனால், அந்த வீரர்கள் இன்னொரு தளத்தில் – எதிர்த்தரப்பில் – அழிவையும் சேதங்களையும் உண்டாக்கியோராகவே இருப்பர். இது பற்றித் தனியாகச் சிந்திக்கவேண்டும். இன்று சூழல் முற்றாகவே மாறி உள்ளது. இது போர் முடிந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகிய சூழல். விடுதலையைப் பெற்றுத்தரும் என்று நம்பப்பட்ட போராட்டம் அதற்கு மாறான விதத்தில் பெரும் பின்னடைவோடு முடிந்திருக்கும் காலம். போராட்டத்தில் வெற்றிகிட்டும் என்ற எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் இல்லாதொழிந்த சூழல். என்பதால் இப்பொழுது புதிய அரசியல் முன்னெடுப்புகளும் அதற்கான வழிமுறைகளும் கண்டறியப்பட வேண்டிய நிலை. இந்தச் சூழலில், கடந்த காலத்தின் அரசியல் அடையாளங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றும்போது, அதை எத்தகைய அடிப்படையில் பின்பற்றுவது? அதனுடையபெறுமதி என்ன? அதற்கான இன்றைய தேவை என்ன? உணர்வைத் திருப்திப்படுத்தத்தான் நம்முடைய அரசியல் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது மரணித்த வீரர்களின் கனவுக்கு நேர்மையாகவும் விசுவாசமாகவும் அறிவுபூர்வமாகச் செயற்பட்டு, விடுதலையை நோக்கிய அரசியலை முன்னகர்த்துவதா? என்ற கேள்விகள் எழுகின்றன. இப்பொழுது மாவீரர் நிகழ்வுகளை நடத்தும்போது அல்லது போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும்போது நாம் மனதிற்கொள்ள வேண்டியது, எதிர்கால அரசியலைக் குறித்த சிந்தனைகளை, வெற்றிகரமான செயல் வடிவமாக்குவது எப்படி என்பதாகவே இருக்க வேண்டும். அதையே ஒவ்வொரு போராளியும், மரணித்த ஒவ்வொரு வீரரும் தங்களுடைய கனவாக, விருப்பாகக் கொண்டிருந்தனர். அப்படியாயின் இதனை எவ்விதம் முன்னெடுப்பது? யார் முன்னெடுப்பது? என்றகேள்விகள் மேலும் எழுகின்றன. ஏனென்றால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு தரப்பும் தாம் சொல்வதே சரி. அதுவே நிஜம் என்றே முடிவற்று வாதிடப்படுகிறது. இந்தச் சூழலில் எத்தகைய நிலைப்பாட்டை, எத்தகைய கருத்து நிலையை ஏற்றுக் கொள்வது? அல்லது எந்தத் தரப்பை அங்கீகரிப்பது என்ற குழப்பம் மக்களுக்கு உண்டு. முதலில் நடைமுறை ரீதியாகச் சாத்தியப்படக் கூடிய அரசியலை முன்னெடுப்பவர்களையே மக்கள் ஆதரிக்க வேண்டும். அவர்களே வெற்றியின் நாயகர்கள். அவர்களே பொறுப்பான முறையில் சிந்திக்கிறார்கள். அவர்களுக்கே மக்களுடைய வலியும் சுமையும் புரிகிறது. அவற்றைக் குறித்து அவர்களே ஆழமாக உணர்கிறார்கள். அவர்களுக்கே பிராந்திய, சர்வதேச அரசியல், பொருளாதார அசைவுகளைப் பற்றிய – அவற்றின் யதார்த்தத்தைப் பற்றிய புரிதல் உண்டு. என்பதால் அவர்களே மரணித்த வீர்களின் கனவுக்கு விசுவாசமாக உள்ளனர். ஒப்பீட்டளவில் அவர்களே இதற்கு நேர்மையாளர்கள். இவற்றைப்பற்றி அக்கறைப் படாமல் வெறும் வார்த்தைகளால் மாண்டவீரர்களைப் போற்றிப்புகழ்பவர்கள், அந்த வீரர்களையும் அவர்களுடைய கனவையும் தமது அரசியல் நலக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே இவர்கள் மாவீரர்களுக்கு, அவர்களை நினைவு கூருதலுக்கு எதிரானவர்களாகும். என்பதால், இந்தக் கயவர்களை எதிர்த்து, நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் சிந்திப்பவர்களின் – செயற்படுவோரின் வழியில்திரள்வதும் அந்தப் போக்கைப்பலப்படுத்துவதும் அவசியமாகும். அதுவே மாவீரர்களுக்கு அல்லதுபோராட்டத்தில் மரணத்ததோழர்களுக்கு செலுத்தும்உண்மையான அஞ்சலியாகும். அதேவேளை மாவீர்ர்களைப் போற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, அந்த வீரர்களின் கனவுக்கும் உணர்வுக்கும் மாறாக உள்ளோர் வியாபாரிகள், வரலாற்று மூடர்கள், எதிரிகள், சமூக – மக்கள் விரோதிகள் என்பதை மக்களுக்குத் தெளிவுறச் சொல்ல வேண்டும். இவர்களை எதிர்ப்பதும் அம்பலப்படுத்துவதும் மாவீரர்களுக்கு செய்கின்ற அஞ்சலி. அவர்களுக்குச் செலுத்துகின்ற மதிப்பாகும். என்பதால் வரலாறு, ஒரு மாறுதலுக்கான காலக்கட்டத்தில் நின்று இந்தக் கேள்விகளை – இந்தச் சிந்தனையை எழுப்புகிறது. நாம் என்ன செய்யப்போகிறோம்? என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை. ஆகவே விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாத சூழலில் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த மாவீரர் நாள், இன்றைய சூழலில் எத்தகைய பெறுமானத்துக்குரியது? அதனுடைய எதிர்கால விளைச்சல் என்னவாக இருக்கவேண்டும்? ஒரு காலகட்டத்து விடுதலைப் போராளிகள் என்று கருதப்பட்டோரின் கனவுகளுக்கு இன்று எத்தகைய மதிப்பு வழங்கப்படுகிறது? இதை நாம் எப்படிச் சீராக்கி முன்னெடுப்பது? என்பதே இந்த மாவீர்ர் நாள் சிந்தனைகளாகவும் நடைமுறைகளுக்கான கேள்விகளாகவும் இருக்கட்டும். https://arangamnews.com/?p=12440
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
திருகோணமலை சம்பவத்தை அரசாங்கம் முறையாக கையாள வேண்டும்: இராதாகிருஸ்ணன் வலியுறுத்தல் November 18, 2025 திருகோணமலை சம்பவத்தை அரசாங்கம் முறையாக கையாள வேண்டும். இதனை ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்து தமிழர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்பு இலங்கையில் இனவாதம் மதவாதம் என்பன இல்லாமல் அனைவரையும் சமனாக மதிக்கின்ற அதே நேரம் அனைவருக்கும் சட்டமும் நீதியும் பொதுவானது என்ற வகையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்திருந்தது. ஆனால் திடீரென திருகோணமலையில் ஒரு இரவில் புத்தர் சிலைவைப்பு, அதற்கு பொலிசாரின் எதிர்ப்பு, தடியடி, சிலை அகற்றல், மீண்டும் அதே பொலிசாரின் பாதுகாப்புடன் சிலையை பிரதிஸ்டை செய்தமை என்பன ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த விடயத்தில் அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை இன்று பலரும் முன்வைக்கின்றார்கள். இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் பேசப்பட்டது. தற்போது இது சர்வதேச விடயமாக மாறியுள்ளது. எனவே அரசாங்கம் இதற்கான முறையான தீர்வை வழங்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதனை விடுத்து இனவாதிகளுக்கு செவி சாய்த்து நீங்களும் கடந்த காலத்தில் இருந்த அரசாங்கத்தைப் போல ஒரு இனவாத அரசாங்கமாக மாறிவிட வேண்டாம். தவறு எங்கு நடந்தாலும் சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எனவே, இந்த விடயத்தை அரசாங்கம் சரியாக கையாளாவிட்டால் சர்வதேச ரீதியாக பல பாதிப்புகள் ஏற்படலாம். இதன் மூலம் தற்பொழுது மிகவும் வேகமாக வளர்ந்த வருகின்ற உல்லாசத்துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர் கூறியுள்ளார். https://www.ilakku.org/the-government-should-properly-handle-the-trincomalee-incident/
-
கொள்கைகளுக்காக அஞ்சலிப்போம்
கொள்கைகளுக்காக அஞ்சலிப்போம் லக்ஸ்மன் “எமது நாட்டு மக்களின் நீண்ட கால கனவாகக் காணப்பட்ட தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசியல் ரீதியாக எமக்கு பல நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால், இனி இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமில்லை. எந்த விதத்திலும் மதவாதச் செயற்பாடுகள் எழுச்சி பெறுவதற்கும் இடமளியோம். நாம் போதுமென்ற அளவில் இனவாதத்தினால் பாதிப்பைக் கண்டிருக்கிறோம். ஆறுகள் நிறைய கண்ணீரை கண்டிருக்கிறோம். இன்று நாட்டில் ஒவ்வொருவர் இடையிலும் குரோதமும் சந்தேகமும் அதிகளவில் வலுப்பெற்றுள்ளது. பொருளாதாரம், ஜனநாயகம் என்று பல வகையில் இருக்கலாம். ஆனால், இனி எவரும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத போராட்டங்களை முன்னெடுக்க இடமளியோம் என்று உறுதியளிக்கிறேன்” என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது முதலாவது அக்கிராசன உரையில் தெரிவித்திருந்தார். அது அவருடைய பொது நிலைப்பாடாகும். ஆனால், அதில், உட்பொதிகை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் போராட்டமாகவே இருந்தது. இலங்கையைப் பொறுத்தவரையில் கார்த்திகை மாதம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் அன்னியராக்கப்பட்டமை, ஜே.வி.பியின் கார்த்திகை வீரர்கள் நினைவு போன்ற பல விடயங்களுக்கு முக்கியமானது. தமிழர்களைப் பொறுத்தவரையில், இது மாவீரர் வாரம். ஆனால், பாதுகாப்புத் தரப்பினர் இதனை மாவீரர் மாதமாகவே கொள்வார்கள். கார்த்திகை தொடங்கினாலே தகவல்களைச் சேகரிப்பார்கள், வடக்கு, கிழக்கில் எந்த அமைப்பு, தனிப்பட்ட நபர்கள், யாரெல்லாம் மாவீரர் தினத்துக்கான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்ற தகவல்களைத் திரட்டுவார்கள். கடந்த வருடங்களில் செயற்பட்டவர்களைக் கண்காணிப்பார்கள். இது வழமையாகவே நடைபெற்று வருகின்ற விடயம். யுத்த காலத்தில் பாதுகாப்புத் தரப்பினர் மிகுந்த அச்சத்துடன், இந்த வேலையைச் செய்து கொண்டிருந்தனர். ஏனெனில், புலிகள் எங்கு வருவார்கள், எப்போது தாக்குதல் நடத்துவார்கள் என்ற அச்சம். அதே நேரத்தில், புலிகளின் பகுதிகளுக்கு தமிழ் மக்கள் செல்லும் போதும், திரும்பும் போதும் அவர்களுக்கும் விசாரணைகள், கைது, மரண அச்சங்கள் இருந்தன. ஆனால், யுத்தம் மௌனத்திற்கு வந்த பின்னர் இருந்த ஒவ்வொரு ஆட்சியிலும் ஒவ்வொரு விதமாக நிலைமை இருந்து வந்தது. 2009இல் விடுதலைப் புலிகளுடனான ஆயுத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் மாவீரர் நிகழ்வுகளுக்கான செயற்பாடுகள் தமிழர்களின் பிரதேசங்களில் குதிரைக் கொம்பாகவே இருந்தது. தடை உத்தரவுகள், மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், நெருக்கடிகள், கைதுகளாக இருந்தன. அவற்றினையும் மீறி, ரகசியமாக நிகழ்வுகள் ஒருவாறு நடந்து விட்டாலும், அதன் பின்னரும் கைதுகள், விசாரணைகள் நடைபெற்றிருந்தன. பின் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்க காலத்தில் நிலைமை சற்று மாறியிருந்தாலும், முழுமையாக இருக்கவில்லை. அதன் பின்னர் வந்த கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. அப்போது, கொவிட்- கொரானா காரணமாக காட்டப்பட்டு கைதுகள், நெருக்குதல்கள் நீதிமன்ற தடைய உத்தரவுகள் இருந்தன. பின்னர் உருவான ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்திலும் பாதுகாப்புத் தரப்பினர் தமிழ் மக்களுக்குச் சாதகமான வேறு முறைகளைக் கையாண்டிருந்தனர். இப்போது, கடந்த காலத்தில் நாட்டைக் கைப்பற்ற இரண்டு முறை ஆயதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு தோற்றுப்போன, தமது தலைவர் உட்பட பலரையும் பலிகொடுத்த ஒரு போராட்ட இயக்கமான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம். கடந்த வருடம் ஆட்சி பீடம் ஏறியபோது, கொஞ்சம் பாதுகாப்புத் தரப்பினருடைய பிரச்சினைகள் இருந்தாலும், இவ்வருடம் கெடுபிடிகள் எதுவுமின்றி மாவீரர் தினத்துக்குரிய ஏற்பாடுகள் வடக்குக் கிழக்கில் நடைபெறுகின்றன. ஆனால், சிறியளவுக்கான அச்சத்தினைத் தமிழர்கள் வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு நம்பிக்கை மாத்திரம் அவர்களிடம் இப்போது இருக்கிறது. ஜே.வி.பியின் கார்த்திகை வீரர்கள் தின நிகழ்வு. கடந்த 13ஆம் திகதி கொழும்பு விகாரமகாதேவி திறந்தவெளி அரங்கில் ஜே.வி.பியின் 36ஆவது கார்த்திகை வீரர்கள் நினைவேந்தல் நடைபெற்றது. இதில் அக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மலர் அஞ்சலி செலுத்தினார். ஒரு போராட்ட இயக்கத்தின் கொள்கைக்காக மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஒரு உளப்பூர்வமான நிறைவுதான் அதனை ஒவ்வொரு வருடத்திலும் உணர்பவர் அவர். அந்தவகையில், தங்களுடைய கொள்கைகளுக்காக மணரத்தைத் தழுவிக் கொண்ட மாவீரர்களை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நினைவு கூருகின்ற ஆத்மார்த்த முன்வருதலானது மாவீரர் தினமாகும். ஆனால், எழுச்சிமிகு நாளாக வடக்கு கிழக்கில் நிகழ்வெடுக்கப்படுகின்ற இந்த மாவீரர் வாரத்தில் தமிழர்களின் அரசியல் தரப்புகள் கொண்டுள்ள நிகழ்ச்சி நிரல்களால் பிரச்சினைகள் எழுந்துவருவது தமிழ் மக்கள் மத்தியில் கவலைகளையும், குழப்பங்களையும் உருவாக்கி வருகிறது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் பல்வேறு முக்கியப்படுத்தல்கள், நினைவுபடுத்தல்கள், கௌரவிப்புகள் இருந்து வருகின்றன. முக்கியமாக அன்னை பூபதி, தியாகி திலிபன் ஆகியோர் இந்திய இராணுவத்திற்கெதிராக உண்ணா நோன்பிருந்து தங்களது உயிர்;களைத் தியாகம் செய்திருந்தார்கள். இப்போது அவர்களுடைய தியாகங்கள் நம்மவர்களாலேயே எள்ளிநகையாடுகின்ற அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.வடக்கு, கிழக்கு மக்களின் தேசிய நிகழ்வுகளாக உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்படவேண்டிய நிகழ்வுகள் அரசியல் போட்டியும், தனிப்பட்ட சுய லாபங்களுக்கானதாக மாறி வருகின்றன. தனிப்பட்ட கோபதாபங்கள், வெறுப்புகளைத் தமிழ்த் தேசியத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்களாகப் பயன்படுத்துகின்றனர். சிலவேளைகளில் இது தமிழ்த் தேசியத்தைப் பாதிக்கின்ற விடயங்களாக உணராமல் இவ்வாறு நடைபெறுகின்றதாகக்கூடக் கொள்ளலாம். அதேநேரத்தில், தமிழர்களின் அரசியல் மயப்படுத்தலில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே உருவாகியிருக்கின்றன என்றும் கொள்ளலாம். தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட தினமாக நினைவு கூரப்படுகின்ற மே-18 நிகழ்வுகளும் அரசியல் சுய லாபத்திற்காக நடத்தப்படுகின்ற ஒன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது. அது மக்களை அரசியல் மயப்படுத்தாதிருப்பதன் பலாபலனே. அதே நேரத்தில் தமிழ் மக்களின் சுய நிர்ணயப் போராட்டமானது ஏன் தொடங்கப்பட்டது, அதன் அரசியல் வரலாறு என்ன, பட்டறிவுகள் எவ்வாறானது. அதன் பாதிப்புகள் எத்தகையது. அதற்கானஅடுத்த கட்டம் என்ன, உலக மயமாதலால் எவ்வாறான விளைவுகள் தமிழர்களின் போராட்டத்திற்கு ஏற்படும் போன்ற விடயங்கள் சரியான முறையில் அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தப்பட்டதா, கடத்தப்படுகிறதா?, அதற்கான வேலைத்திட்டங்கள் செய்யப்படுகின்றனவா போன்றவைகள் ஆராயப்படவில்லை. அதனாலேயே தமிழர்களுக்கான அரசியலை செய்யவென புறப்பட்டவர்கள், கட்சிகளும்கூட தமக்கென ஒவ்வொரு வழிகளில் சென்று கொண்டிருப்பதற்கான காரணமாகும். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களின் அரசியல் வரலாறுகளிலிருந்து மாற்றத்தினை ஏற்படுத்துகின்ற மாதமாக இந்த கார்த்திகை மாதம் இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகும். இந்தஎதிர்பார்ப்பு நிறைவேறுவதற்கான அரசியலைச் முன் நகர்த்துவதற்குத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் முயலாமல் இருப்பது உண்மையிலேயே அவர்களின் இயலாமையாகக்கூட இருக்கலாம். தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வினை நிச்சயப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களாகத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், கட்சிகள் மாறாதவரையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையான சுயநிர்ணய உரிமை என்கிற இலக்கு நிறைவேறப்போவதில்லை. இதற்காக தமிழ்த் தேசிய அரசியலைச்செய்துவருகின்ற தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்குள் உள்ள விட்டுக்கொடுக்க முடியாத விடயங்களைப் பொதுக் கலந்துரையாடல்களுக்குட்படுத்தி தமிழ்த் தேசியத்துக்கான பொது நிலைப்பாட்டுக்கு வருதலே சிறப்பாகும். நாட்டுக்குள் சிங்கள மக்களிடம் காணப்படுகின்ற புலிகளின் மீளுருவாக்கம் நடைபெற்றுவிடும் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் தொடங்கிவிடும், மாவீரர் தினம் அதற்கான வழியைத் தோற்றுவித்துவிடும் என்ற அச்சம் தமிழ் மக்கள்மா வீரர் நினைவுகூரலை நடத்துவதில் தடைகளை ஏற்படுத்துவதாக இருந்து வருகிறது. அதற்கு வடக்கு கிழக்கில் இருக்கின்ற பாதுகாப்புத் தரப்பினரும் ஒருவித காரணமாகும். இவ்வாறான சூழலை உருவாக்குவதற்கான எந்தவித ஏதுக்களும் இல்லையானாலும் ஆரம்பத்திலிருந்தான அவர்களின் அச்சம் அதனைச் செய்யத் தூண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும், அதற்காக அவர்கள் முன்வைக்கப்படுகின்ற காரணங்கள் உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் புறம்பானதாக இருப்பது வேடிக்கை. மொத்தத்தில், ஆயதக்கிளர்ச்சியில் ஈடுபட்டு மோசமான முறையில் அடக்கப்பட்டுத் தோற்றுப் போய் அரசியல்வழியில் நாட்டைக் கைப்பற்றியிருக்கின்ற ஜே.விபி. கைக்கொண்ட மக்களை அரசியல்மயப்படுத்தும் செயற்பாடு தமிழ்களுக்கும் முன்னுதாரணமாகும். இந்த அரசியல் மயப்படுத்தலை செய்யாதவரையில் தமிழர்களின் அரசியல் அபிலாசை ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை. இதற்கான உறுதிபூணலை இந்தக் கார்த்திகையிலேனும் தமிழ் அரசியல் தரப்பினர் மேற்கொண்டாக வேண்டும். இதுவே கொண்ட கொள்கைக்காக உயிர்நீத்த ஒவ்வொருவருக்கும் செய்கின்ற சரியான அஞ்சலியாக இருக்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொள்கைகளுக்காக-அஞ்சலிப்போம்/91-368071
-
யாழ். பல்கலைக்கழகத்தின் இலக்கு மக்களைச் சென்றடையவேண்டும்! - கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம்
யாழ். பல்கலைக்கழகத்தின் இலக்கு மக்களைச் சென்றடையவேண்டும்! கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் தெரிவிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உண்மையான இலக்கை அடையவேண்டுமானால் அதனை ஒரு சமூக நிறுவனமாக மாற்றியாக வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மக்களைச் சென்றைடைகின்றபோது தான் சிறந்த மாற்றத்தைப் பெறமுடியும் என்று கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம் தெரிவித்துள்ளார். பருத்தித்துறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்ப் பெயர்த்தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழின் ஒரு அடையாளமாகும். அது ஒரு சமூக நிறுவனமாக மாற்றப்படவேண்டும். அவ்வாறு அது ஒரு சமூக நிறுவனமாக மாற்றப்படும் போதுதான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் குறிக்கோள் உண்மையான இலக்கினை அடைய முடியும். ஆனால் இன்று அந்தநிலை மாறி வெறுமனே ஒரு கல்வி நிறுவனமாக, ஆய்வுகளைச் செய்கின்ற நிறுவனமாக அந்த ஆய்வுகளை உலகளாவிய ரீதியில் பரப்பி விட்டு நிலைகொள்ளாமல் இருக்கக் கூடிய நிறுவனமாக அதுமாறியிருக்கிறது. இந்த மாற்றத்தை நாங்கள் தொடர்ந்தும் அனுமதிக்கமுடியாது. ஆகவே யாழ்ப்பாணப் பல்கலைக் ழகத்தை சமூக நிறுவனமாக மாற்றவேண்டும். உருவாக்கப்படவேண்டும். அதனுடைய வகிபங்கு என்பது அந்தப் பிரமாணத்தைப் பெறவேண்டும் என்றார். https://newuthayan.com/article/யாழ்._பல்கலைக்கழகத்தின்_இலக்கு_மக்களைச்_சென்றடையவேண்டும்!
-
யாழில். அதிக மழை – 14 பேர் பாதிப்பு 04 வீடுகள் சேதம்!
யாழில். அதிக மழை – 14 பேர் பாதிப்பு 04 வீடுகள் சேதம்! adminNovember 18, 2025 கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணத்திலையை அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் , மழையினால் 14 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும், யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை பதிவான மழை வீழ்ச்சியில் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 101.7 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. அதேவேளை மழை காரணமாக 04 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் பாதிப்படைந்துள்ளனர். அவர்களின் நான்கு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன மேலும் கடந்த நாட்களாக யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் மழை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமையுடன் குறைவதற்கான சாத்தியங்கள் உள்ள போதிலும், எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் மழையானது 27 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடற் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் சூறாவளிக்கான எச்சரிக்கைகள் விடப்படாத நிலையில் மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் கடற் தொழில் நடவடிக்கைகளின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/222776/
-
தமிழரின் தனித்துவத்தைக் காப்பதற்கு மாகாணசபை அதிகாரங்கள் அவசியம்; நீதியரசர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு!
தமிழரின் தனித்துவத்தைக் காப்பதற்கு மாகாணசபை அதிகாரங்கள் அவசியம்; நீதியரசர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு! மாகாணசபைத் தேர்தல் மட்டுமே தமிழர்களுக்கு ஒரு சில பெற்றுக்கொடுக்கக்கூடியது. அது இல்லாவிட்டால் சிங்களவரிடம் இருந்து கிடைக்கப்போவது மாகாண சபை முறைமையிலும் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட ஒரு முறைமையே. இதனை வலியுறுத்த தமிழ்க்கட்சிகள் ஒற்றுமைப்படாது. இந்தியா அதுபற்றிப் பேசவில்லை எனக் கூறுவது மடமையே. இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபைத் தேர்தல்கள் வேண்டுமா? இல்லையா? என்று முதலில் முடிவெடுக்கவேண்டியவர்கள் தமிழ்த் தேசியக்கட்சிகளே. அவர்களுள் ஒற்றுமை இல்லாத போது இந்தியா அது பற்றிப் பேசாதிருப்பதை நாம் பிழையென்று கூறமுடியாது. முதலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுசேர்ந்து தற்போதைக்கு மாகாணசபைத் தேர்தல் உடனே நடத்தப்படவேண்டும் என்ற முடிவை எடுக்கவேண்டும். இன ரீதியாக இந்த நாட்டை ஆள நினைக்கும் ஒரு மனித அலகு தமது அதிகாரத்தைக் குறைக்கும் அளவுக்கு நடந்துகொள்வார்களா? என்று நாம் சிந்திக்கவேண்டும். மாகாணசபைகள் கலைக்கப்பட்டு ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு ஜனநாயக நாடு எனப்படும் இந்த நாட்டில், மாகாண சபைத் தேர்தல் முறைமை எவ்வாறு அமையவேண்டும் என்ற கேள்வியை எழுப்பி, தேர்தல்கள் ஏழு வருடங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெற்று எமது தனித்துவம் வலியுறுத்தப்படாவிட்டால் நாம் சிங்கள மேலாதிக்கத்தின்கீழ் தொடர்ந்திருக்க நேரிடும். காலக் கிரமத்தில் எமது தனித்துவம் அழிந்துபோய்விடும். சிங்களக் கட்சியொன்று வடக்கு-கிழக்கில் தேர்தல்களில் வெல்ல முடியாது என்று இறுமாப்புடன் சொன்ன எங்களுக்கு அண்மையில் நடந்த கதி என்ன? ஆகவே இருப்பதைக் கைவசம் வைத்து எமது உரிமைகளை விரிவுபடுத்திச் செல்வதே எமக்கிருக்கும் ஒரேயொரு வாய்ப்பு. எனவே இப்போதுள்ள நிலையில் மாகாணசபைத் தேர்தல் மட்டுமே தமிழர்களுக்கு ஒரு சில உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பது. அது இல்லாவிட்டால் சிங்களவரிடம் இருந்து கிடைக்கப்போவது மாகாணசபை முறைமையிலும் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட ஒரு முறைமையேயாகும் - என்றார். https://newuthayan.com/article/தமிழரின்_தனித்துவத்தைக்_காப்பதற்கு_மாகாணசபை_அதிகாரங்கள்_அவசியம்;
-
தீருவில் சதுக்கத்தில் மாவீரர்நாள் ஏற்பாடுகள்
தீருவில் சதுக்கத்தில் மாவீரர்நாள் ஏற்பாடுகள் மாவீரர் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் துப்புரவுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வல்வெட்டித்துறை தீருவிலில் அமைந்துள்ள குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவுச் சதுக்கத்தில் வருடா வருடம் மாவீரர்நாள் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வல்வெட்டித்துறை நகரசபைச் செயலாளரின் ஏற்பாட்டில் தீருவில் சதுக்கத்தில் சிறுவர் விளையாட்டுப் பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. இந்தச் செயற்பாட்டுக்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். அதனையடுத்து நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த சிறுவர் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு உபகரணங்களை அகற்றுவதற்கு வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளர் தவமலர் சுரேந்திரநாதன் அறிவுறுத்தலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தநிலையில் தீருவில் சதுக்க மைதானத்தில் துப்புரவு செய்யப்பட்டு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. https://newuthayan.com/article/தீருவில்_சதுக்கத்தில்_மாவீரர்நாள்_ஏற்பாடுகள்
-
தீர்வுக்கு வழி ? கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோவில் நடந்த ஒரு நிகழ்வு - நிலாந்தன்
தீர்வுக்கு வழி ? கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோவில் நடந்த ஒரு நிகழ்வு - நிலாந்தன் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் டில்கோ விருந்தினர் விடுதியில் ஒரு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. கலாநிதி குருபரனை பணிப்பாளராகக் கொண்ட சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாண கற்கை நிலை யத்தால் அந்த நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டது. இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் நிதி அனுசரணையோடு நடத்தப்பட்ட அந்த நிகழ்வில் 230க்கும் குறையாதவர்கள் பங்குபற்றினார்கள். பொதுவாக அது போன்ற நிகழ்வுகளில் அவ்வளவு தொகையினர் பங்குபற்றுவது குறைவு. ஆனால் அன்று மண்டபம் நிறைந்திருந்தது. மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் நடந்த அந்த நிகழ்வில், நான்கு அம்சங்கள் இருந்தன. முதலாவது மேற்சொன்ன சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான கற்கை நிலையத்தை அறிமுகப்படுத்துவது. இரண்டாவது, இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கைத் தீவில் இதுவரையிலும் இரண்டு சமூகங்களுக்கு இடையில் எழுதிக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களைச் சேகரிக்கும் டிஜிட்டல் தளத்தை அங்கு அறிமுகப்படுத்தியது. மூன்றாவது, மூத்த சட்டச் செயற்பாட்டாளர்,சட்டத்தரணி ரட்ணவேல் அவர்களுடைய உரை. நான்காவது,நான்கு தமிழ்த் தேசிய கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வு. நிகழ்வுக்கு தலைமை தாங்கிய குருபரன் அங்கு கூறியதுபோல தமிழ்த் தேசியப் பரப்பில் அவ்வாறான ஒரு சட்டச் செயற்பாட்டு நிறுவனம் உருவாக்கப்படுவது என்பது முக்கியமானது. தேச நிர்மாணத்தின் ஒரு பகுதி அது. தேசத்தை நிர்மாணிக்கத் தேவையான நிறுவனங்களை உருவாக்குவது. எவ்வளவுக்கு எவ்வளவு நிறுவன உருவாக்கிகள் ஒரு சமூகத்தில் தோன்றுகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்த சமூகம் திரட்சியுறும்;நொதிக்கும்; கூர்ப்படையும். அங்கு அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிற்றல் ஆவணக் காப்பகத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. முதலாவது இனப்பிரச்சினை தொடர்பில் இதுவரை தமிழ்த் தரப்பால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளின் தொகுப்பு.இரண்டாவது பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் என்பவற்றோடு தொடர்புடைய வழக்கு ஏடுகளை ஆவணப்படுத்துவது. சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான கற்கை நிலையமும் “நூலகம்” நிறுவனமும் இணைந்து மேற்படி ஆவணங்களைச் சேகரித்து ஆவணப்படுத்தியுள்ள்ளன. இதுவும் தேச நிர்மாணத்தில் ஒரு பகுதிதான். அந்த நிகழ்வில் நூலகம் நிறுவனத்தின் பிரதிநிதியும் உரை நிகழ்த்தினார். அது ஒரு முழுமையான தொகுப்பு இல்லை என்றும் அதில் ஈடுபாடு கொண்டவர்கள் தமது பங்களிபின்மூலம் அதை முழுமைப்படுத்த வேண்டும் என்றும் அங்கு கூறப்பட்டது. 1921ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரையிலுமான சுமார் 104ஆண்டு காலப்பகுதியில் தமிழ்த் தரப்பால் முன் வைக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனைகளும் இனப்பிரச்சினையோடு தொடர்புடைய உடன்படிக்கைகளும்,ஆவணங்களும் அங்கே எண்ணிம வடிவத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு நூற்றாண்டுக்கு மேலான காலப்பகுதிக்குரிய அந்த ஆவணங்களைத் தொகுத்துப் பார்க்கும்போது ஓர் அடிப்படைக் கேள்வி எழுகிறது. தமிழ் மக்கள் ஏன் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமது அபிலாசைகளை அடைய முடியாமல் இருக்கிறார்கள்? கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் தலைவர்கள் சரியாகவோ பிழையாகவோ பொருத்தமாகவோ,பொருத்தம் இன்றியோ ஏதோ ஒரு தீர்வு முன்மொழிவை முன்வைத்து சிங்களத் தலைவர்களோடு பேசியிருக்கிறார்கள். ஏதோ ஒர் இணக்கத்துக்கு வந்திருக்கிறார்கள். ஆவணங்களில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். அதன்மூலம்,தமிழ்மக்கள் இந்தச் சிறிய தீவுக்குள் எப்பொழுதும் ஒரு தேசிய இனமாக ஏனைய இனங்களுடன் இணைந்து வாழ்வதற்குத் தயாராக இருந்திருக்கிறார்கள் என்பது அந்த ஆவணங்களைத் தொகுத்து பார்க்கும் பொழுது தோன்றுகிறது. தமிழ்த் தரப்பு தீர்வுக்குத் தயாரில்லை;அது பகல் கனவுகளை தீர்வு மேசையில் வைக்கின்றது; அந்தப் பகல் கனவுகளை அடைவதற்காக முயற்சிக்கின்றது; யதார்த்தமாகச் சிந்திப்பதில்லை; அதைவிட முக்கியமாக தமிழ்த் தரப்பு ஒன்றாக இணைந்து தீர்வு முன்மொழிவுகளை மேசையில் வைப்பதில்லை…போன்ற பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளுக்கும் அந்த ஆவணத் தொகுப்பில் பதில் உண்டு. தமிழ்மக்கள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கைத் தீவில் இணைந்து வாழும் விருப்பத்தை வெளிப்படுத்தும் விதத்தில் தீர்வு முன்மொழிவுகளை முன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயுதப் போராட்ட காலகட்டத்திலும்கூட திம்பு கோட்பாட்டில் தொடங்கி இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை வரையிலும் தமிழ்மக்கள் தீர்வு முன்மொழிவுகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலான காலப்பகுதியில் அந்தத் தீர்வு முன்மொழிவுகளில் பெரும்பாலானவற்றை நிராகரித்தது அல்லது உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டது அல்லது வாக்குறுதிகளை முறித்துக் கொண்டது சிங்களத் தலைவர்கள்தான். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் சில யுத்த நிறுத்தங்களை முறித்ததற்காக தமிழ்த் தரப்பின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படலாம். ஆனால் தமிழ்மக்கள் தீர்வுக்குத் தயாரில்லை அல்லது தமிழ் மக்கள் பேச்சுவார்த்தைகளில் விசுவாசமாக இல்லை அல்லது தமிழ் மக்கள் பகல் கனவுகளை பேச்சுவார்த்தை மேசையில் வைக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் முழுவதும் உண்மையானவை அல்ல என்பதனை அந்த ஆவணத் தொகுப்பு எடுத்துக்கூறுகிறது. மேலும் அந்த ஆவணத் தொகுப்புக்கூடாக ஒரு விடயம் துலக்கமாக வெளித் தெரிகிறது. அந்த விடயத்தை அங்கு பேசிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமாரும் சுட்டிக்காட்டினார்.”இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்தை இணங்க வைப்பதில் கணிசமான தூரத்துக்கு எடுத்துச்சென்ற ஓர் ஆவணம் இந்திய-இலங்கை உடன்படிக்கை” என்று கஜன் சொன்னார். இதுவரையிலுமான இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில், சிங்கள பௌத்த அரசு கட்டமைப்புக்குள் இணைக்கப்பட்ட ஒரே தீர்வு முயற்சி என்பது இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழான பதின்மூன்றாவது திருத்தம்தான். சிங்கள பௌத்த அரச கட்டமைப்பின் ஒற்றை ஆட்சி பண்பை அது உடைக்கவில்லை என்ற காரணத்தால்தான் அந்த 13ஆவது திருத்தம் அங்கே இணைக்கப்பட்டது என்றும் கஜன் சுட்டிக்காட்டினார். அதாவது சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்புக்குள், யாப்புக்குள் இணைக்கப்பட்ட ஒரே தீர்வு முயற்சி அதுதான். ஆனால் அதுவும் கூட்டாட்சி பண்புடையது அல்ல. இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால்,அந்தத் தீர்வு முயற்சி அதாவது இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு கீழான 13ஆவது திருத்தம் என்பது எத்தகைய ஓர் அரசியல் சூழலில் யாப்புக்குள் இணைக்கப்பட்டது என்பதுதான். ஒருபுறம் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம். இன்னொரு புறம் இந்தியப் பேரரசின் ராணுவ அழுத்தம். 13வது திருத்தம் எனப்படுவது ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் விளைவு. அதேசமயம் இந்திய-இலங்கை உடன்படிக்கையின் கீழ் இந்திய அமைதி காக்கும் படையின் பிரசன்னத்தின் பின்னணியில்தான் அதுவும் சாத்தியமாகியது. அதுமட்டுமல்ல அந்தத் தீர்வில் தமிழ்மக்கள் கையெழுத்திடவில்லை. இலங்கையும் இந்தியாவும்தான் கையெழுத்திட்டன. அதாவது கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலான காலப்பகுதியில் இனப்பிரச்சினை தொடர்பில் உருவாக்கப்பட்ட தீர்வுகளில் சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பின் யாப்புக்குள் உள்வாங்கப்பட்ட ஒரே தீர்வு அதுதான். ஆனால் அதையும் 38ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசாங்கங்கள் அமுல்படுத்தவில்லை மட்டுமல்ல, அந்தத் தீர்வை எப்படி மேலும் தோலிருக்கச் சுளை பிடுங்கலாம் என்றுதான் சிந்தித்துச் செயல்பட்டிருக்கின்றன. அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையின் கீழ் கடந்த நான்கு தசாப்த காலத்துக்குள் உருவாக்கப்பட்ட ஒரு தீர்வு அது. ஆனால் அந்தத் தீர்வை அதாவது யாப்பின் அந்தப் பகுதியை நிறைவேற்றாமல் விடுவதற்குத்தான் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதுதான் கடந்த சுமார் நான்கு தசாப்த கால வரலாறு. கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலான காலப்பகுதியில் இலங்கைத் தீவில் இனப் பிரச்சினைக்காக எழுதிக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் இரண்டே இரண்டு உடன்படிக்கைகள்தான் ஒப்பீட்டளவில் நீண்டகாலம் நின்று நிலைத்தன. ஒன்று,இந்திய-இலங்கை உடன்படிக்கை.மற்றது, பிரபாகரன்-ரணில் உடன்படிக்கை. இரண்டு உடன்படிக்கைகளிலும் மூன்றாவது தரப்பின் பிரசன்னம் இருந்தது. இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பின்னணியில் இந்திய அமைதிகாக்கும் படை நாட்டுக்குள் இறக்கப்பட்டது. நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளில் ஸ்கண்டிநேவிய யுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழு நாட்டுக்குள் நின்றது. இந்த இரண்டையும் தவிர மூன்றாவதாகக் கூறக்கூடியது ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். ஆனால் இதில் ஐநா,அழுத்தத்தைப் பிரயோகிக்கின்ற அல்லது கண்காணிக்கின்ற ஒரு தரப்பாகச் செயற்படவில்லை. அதனால்தான் நிலைமாறு கால நீதியானது சுமந்திரன் கூறுவதுபோல”தோற்றுப்போன பரிசோதனையாக” முடிந்தது. அதைத் தோற்கடித்தது தமிழர்கள் அல்ல, சிங்களத் தரப்புத்தான். எனவே இப்பொழுது ஒரு தெளிவான சித்திரம் கிடைக்கிறது. தமிழ் மக்கள் போராடியதால்தான், பிராந்தியப் பேரரசாகிய இந்தியாவின் தலையீட்டினால்தான் பதின்மூன்றாவது திருத்தம்கூட சாத்தியமாகியது. தமிழ் மக்கள் போராடவில்லை என்றால் அதுவும் கிடைத்திருக்காது. கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோ விருந்தினர் விடுதியில் நடந்த சந்திப்பில் உரை நிகழ்த்திய சித்தார்த்தன் ஒரு விடயத்தைத் தெளிவாகச் சொன்னார். அனுரவும் உட்பட எந்த ஒரு சிங்களத் தலைவரும் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தர மாட்டார்கள் என்று. குறிப்பாக பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற தீர்வை முன்வைத்த சந்திரிக்கா 2009க்குப்பின் இந்திய ஊடகம் ஒன்றினால் நேர்காணப்பட்டபோது, என்ன சொன்னார் என்பதனை அவர் சுட்டிக்காட்டினார். பேட்டி கண்டவர் கேட்கின்றார், ”இப்பொழுது உங்களுக்குச் சந்தர்ப்பம் தரப்பட்டால் நீங்கள் முன்பு முன்வைத்த அந்த முன்மொழிவை நிறைவேறுவீர்களா?” என்று. அதற்குச் சந்திரிக்கா கூருகிறார் “Perhaps less”-“பெரும்பாலும் இல்லை”என்ற பொருள்பட.ஏனென்றால் இப்பொழுது விடுதலைப்புலிகள் இயக்கம் இல்லை என்பதால் என்றும் கூறியுள்ளார். மேலும் சித்தார்த்தன் ஒரு விடயத்தைச் சொன்னார். நிலைமாறு கால நீதியின் கீழ், புதிய யாப்பு ஒன்றை உருவாக்குவதற்காக உழைத்தபோது, உருவாக்கப்பட்ட குழுக்களில் ஒன்றில் அவரும் அங்கம் வகித்தார். அக்காலகட்டத்தில் சம்பந்தர் அடிக்கடி தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை வழங்குவார். “அடுத்த தீபாவளிக்குத் தீர்வு அடுத்த வருஷப்பிறப்புக்குத் தீர்வு” என்று சம்பந்தர் அடிக்கடி நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு வழங்கி வந்தார். ஒருமுறை சித்தார்த்தன் இதுதொடர்பாக சம்பந்தரிடம் கேட்டிருக்கிறார். எதற்காக அப்படிக் கூறுகிறீர்கள்? இதில் நாங்களும் சம்பந்தப்பட்டிருப்பதனால் மக்கள் எங்களிடமும் கேட்கிறார்கள், என்று. அதற்கு சம்பந்தர் சொன்னாராம், “இந்த யாப்புருவாக்க முயற்சியில் தமிழ்த் தரப்பின் பிரதிநிதியாக நான் ஈடுபட்டு வருகிறேன். இந்த முயற்சி வெற்றி பெறாது என்று நானே சொன்னால், பிறகு எதற்கு அதில் நான் ஈடுபடுகிறேன் என்று மக்கள் கேட்பார்கள். எனவே நான் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை வழங்க வேண்டியுள்ளது” என்ற பொருள்பட. இதைச் சொன்ன சித்தார்த்தன் மேலும் ஒரு விடயத்தைச் சொன்னார், அந்த முயற்சி வெற்றி பெறாது என்பது சம்பந்தருக்கும் தெரியும் என்று. அதாவது சம்பந்தர் தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாகப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வந்திருக்கிறார். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், சம்பந்தர் தனது மக்களுக்கு உண்மையைச் சொல்லவில்லை. மூன்றாவது தரப்பின் அழுத்தம் இல்லாமல் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு ஒரு தீர்வை நோக்கி வளையாது என்பதனை புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், 2016இல், மன்னாரில், ஆயர் இல்லத்துக்கு அருகே நடந்த,”தடம் மாறும் தமிழ்த்தேசியம்?”என்ற கருத்தரங்கில், நான் சம்பந்தருக்குச் சுட்டிக்காட்டினேன். அப்பொழுது சம்பந்தர் என்னை நோக்கி, தலையைச் சாய்த்து, மண்டைக்கண்ணால் பார்த்துக்கொண்டு அழுத்தம் திருத்தமான குரலில் சொன்னார் “சிங்களத் தலைவர்கள் ஒரு தீர்வைத் தர மாட்டார்கள் என்று கூறுவது வரண்ட வாதம்; வறட்டு வாதம்” என்று. ஆனால் எது வறண்ட வாதம் என்பதனை வரலாறு நிரூபித்தது. தந்தை செல்வா கலையரங்கின் கூரை பதிந்த அறைக்குள் சம்பந்தரின் உடல் தனித்துவிடப்பட்ட இரவில் வரலாறு தான் ஒரு கண்டிப்பான கிழவி என்பதை நிரூபித்தது. எனவே ஒரு நூற்றாண்டுக்கு மேலாகக் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், சித்தார்த்தன் கூறுவதுபோல, இப்போதுள்ள அனுரவும் உட்பட எந்த ஒரு சிங்கள தலைவரும் தமிழ் மக்களுக்குத் தாமாக முன்வந்து தீர்வைத் தர மாட்டார்கள் என்பதுதான். கஜேந்திரக்குமார் அங்கே சுட்டிக்காட்டியதுபோல,சிங்கள பௌத்த ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்புக்குள் இணைக்கப்பட்ட ஒரே ஒரு தீர்வு 13ஆ வது திருத்தம்தான். அதுகூட தமிழ்மக்களின் இரத்தத்தால் வரையப்பட்டது; இந்திய பேரரசின் அழுத்தம் இருந்தது. எனவே தமிழ் மக்கள் போராடவில்லை என்றால்,மூன்றாவது தரப்பு ஒன்றின் அழுத்தம் இல்லையென்றால் தமிழ் மக்களுக்கு இனியும் தீர்வு கிடைக்காது. இந்த இடத்தில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோவில் கூடிய கட்சிகளும் உட்பட எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் இரண்டு முக்கிய கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டும். முதலாவது கேள்வி, சமஸ்ரியை அடைவதற்கு தமிழ்க் கட்சிகளின் வழி வரைபடம் என்ன? இந்தக் கேள்வியை சில ஆண்டுகளுக்கு முன் விக்னேஸ்வரன் அப்பாவித்தனமாக கேட்டிருந்தார். அவரிடம் அதற்குப் பதில் இல்லை என்பதனால் அப்படிக் கேட்டிருந்தார். இரண்டாவது கேள்வி. மூன்றாவது தரப்பு ஒன்றின் அழுத்தம் இல்லாமல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு இல்லை என்பதே ஒரு நூற்றாண்டு காலமாக கற்றுக்கொண்ட பாடம். அப்படியென்றால் அந்த மூன்றாவது தரப்பை அணைத்து எடுப்பதற்கு தமிழ் மக்களிடம் உள்ள வழிவரைபடம் என்ன? https://www.nillanthan.com/7931/
-
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு? Veeragathy Thanabalasingham on November 14, 2025 Photo, Tamil Guardian அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் உருவாகுவதற்கு அரசியல் நிர்ப்பந்தங்களே காரணம். இலங்கை தமிழரசு கட்சிக்கு அவ்வாறு எத்தகைய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டதோ தெரியவில்லை. மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதற்கு அதன் தலைவர்கள் கடந்த வாரம் விருப்பத்தை வெளிப்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது. வவுனியா நகரில் நவம்பர் 5ஆம் திகதி தமிழரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் மத்தியில் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் சகிதம் உரையாற்றிய பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தங்களது கட்சியின் நிலைப்பாட்டை தெரியப்படுத்தியிருப்பதாகவும் அவர்கள் அதற்கு இணங்கி வந்தால் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படமுடியும் என்றும் கூறினார். அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டம் மீதான விவாதத்தில் தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக்குழு எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்தும் வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் மத்திய குழு கூட்டத்தில் பிரதானமாக ஆராயப்பட்டது என்று கூறிய சுமந்திரன் முதன்மையான தமிழ் அரசியல் கட்சி என்ற வகையில் தமிழரசு கட்சி மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளான தமீழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) ஆகியவையும் வேறு சில குழுக்களுமே ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியாக மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலமாக இயங்கிவருகின்றன. அவற்றின் தலைவர்களை நோக்கியே சுமந்திரன் இந்த அழைப்பை விடுத்திருக்கிறார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுடன் தலைவர் சிவஞானமும் தானும் ஏற்கெனவே கலந்துரையாடியிருப்பதாகவும் தாங்கள் தெரிவித்த நிலைப்பாடுகளை அவர்கள் ஏற்றுக் கொண்டால் முன்னரைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறிய சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனும் இது தொடர்பாக பேசலாமா என்று மத்திய குழுவில் ஆராயப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த அழைப்பை உடனடியாகவே வரவேற்ற ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் மீண்டும் இணைந்து செயற்படுவதற்கு தமிழரசு கட்சி முன்வைத்திருக்கும் முன்னிபந்தனைகள் எவை என்று தங்களுக்குத் தெரியவில்லை என்றும் இரு தரப்பினரும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக எந்தவிதமான பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என்றும் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நிபந்தனைகளை விதிப்பது ஏற்புடைதல்ல என்றும் அவர் கூறினார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய அமைப்பாக இயங்கி வருகிறது. தனியான யாப்பையும் சின்னத்தையும் கொண்டிருக்கும் அந்தக் கூட்டணி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏற்கெனவே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில் அந்தக் கூட்டணி செயற்பட்டு வருகிறது. ஆனால், அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மாகாண சபைகள் முறைமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கொண்டிருக்கும் நிலைப்பாடு காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அசௌகரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழரசு கட்சியின் அழைப்பை பிரேமச்சந்திரன் வரவேற்றிருப்பது இரு தரப்பினருக்கும் இடையிலான புரிந்துணர்வை மேலும் கேள்விக்கு உள்ளாக்குகிறது. அதேவேளை, இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைக்கு தமிழரசு கட்சி முன்னிபந்தனைகளை விதிப்பது ஏற்புடையது அல்ல என்று கூறிய பிரேமச்சந்திரன் எதிர்கால தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிவித்த கருத்துக்கள் உண்மையில் முன்னிபந்தனைகள் போன்றே அமைந்திருக்கின்றன. முன்னைய கூட்டமைப்பில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் அந்தக் கருத்துக்களை அவர் முன்வைத்திருக்கிறார் என்பது வெளிப்படையானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகவோ அல்லது எந்தவிதமான யாப்பையும் கொண்டதாகவோ இருக்கவில்லை. மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்க வேண்டுமானால் அதற்கென்று தனியான யாப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன் அங்கத்துவ கட்சிகளின் தனித்துவத்தைப் பேணக்கூடியதாக இருக்க வேண்டும். தங்களை முதன்மையான அல்லது தலைமைத்துவ கட்சி என்று தமிழரசு கட்சி அழைத்துக்கொள்வதாக இருந்தாலும் கூட, சகல அங்கத்துவக் கட்சிகளையும் அரவணைத்து மெய்யாகவே புரிந்துணர்வுடன் கூட்டாகச் செயற்படுகின்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்கள் மகாநாட்டில் தெரிவித்தார். காலஞ்சென்ற மூத்த தமிழ்த் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தலைமையில் 2001ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போர்க் காலத்தில் சுயாதீனமான முடிவுகளை எடுத்துச் செயற்பட முடியவில்லை. அதற்கான காரணம் புரிந்து கொள்ளக்கூடியதே. விடுதலை புலிகள் இயக்கமே இலங்கை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று நாடாளுமன்றத்திலும் வெளியுலகிலும் குரல் கொடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு இயக்கம் போன்றே கூட்டமைப்பு செயற்பட்டது. உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பிறகு தமிழ் மக்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயம் ஒன்று இல்லாத சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் பலம் பொருந்திய ஒரு ஜனநாயக அரசியல் இயக்கமாக கட்டியெழுப்புவதற்கு சம்பந்தன் உட்பட தமிழ் அரசியல்வாதிகள் தவறியது குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. கஜேந்திரகுமாரின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2010 ஏப்ரல் பொதுத்தேர்தலின்போது கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது. பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். 2015 ஆகஸ்ட் பொதுத் தேர்தலின்போது கூட்டமைப்பில் போட்டியிட்ட போதிலும், 2017ஆம் ஆண்டு அதிலிருந்து வெளியேறியது. இரு கட்சிகளும் வெளியேற்றத்துக்கான தங்கள் தரப்பு காரணங்களை முன்வைத்தன என்ற போதிலும், தேர்தல் அரசியலும் அதற்கு ஒருகாரணி. கூட்டமைப்பில் இருந்து புளொட்டும் ரெலோவும் 2022ஆம் ஆண்டு வெளியேறின. உள்ளூராட்சி தேர்தல்கள் கலப்பு தேர்தல் முறையில் நடத்தப்படுவதன் காரணமாக கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டால் கணிசமான ஆசனங்களைக் கைப்பற்றலாம் என்றும் தேர்தலுக்கு பிறகு உள்ளூராட்சி சபைகளின் நிருவாகங்களை கூட்டாக அமைக்க அது வசதியாக இருக்கும் என்றும் தமிழரசு கட்சி முன்வைத்த யோசனையை அவ்விரு கட்சிகளும் ஆட்சேபித்தன. ஆனால், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அரசாங்க காலத்தில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறவில்லை. இறுதியாக தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே கடந்த மேமாதத்தில் அந்த தேர்தல்களை நடத்தியது. பல்வேறு அணிகளாகப் பிரிந்து நின்று போட்டியிட்ட தமிழ்க் கட்சிகள் உள்ளூராட்சி நிர்வாகங்களை அமைப்பதில் வடக்கிலும் கிழக்கிலும் எவ்வாறு நடந்துகொண்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. தற்போது அரசாங்கம் மாகாண சபை தேர்தல்களை அடுத்த வருடத்தில் நடத்துமா இல்லையா என்ற கேள்வி எழுந்திருப்பதற்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மீண்டும் செயற்படுவதற்கான விருப்பத்தை தமிழரசு கட்சி வெளிப்படுத்தியிருக்கிறது. சகல தமிழ்க் கட்சிகளையும் இணைத்து செயற்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் சுமந்திரன் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ்க் கட்சிகள் ஒரே நிலைப்பாட்டை முன்வைக்குமா என்ற கேள்வி எழுந்திருப்பதாக கூறியிருக்கிறார். கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்திடம் தமிழரசு கட்சி முன்வைத்த யோசனையை மற்றைய தமிழ்க் கட்சிகளுக்கு காண்பிக்கத் தீர்மானித்திருப்பதாகவும் அந்த யோசனைகள் தொடர்பில் அவர்கள் இணங்கிவந்தால் அதை பொதுநிலைப்பாடாக அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார். சகல தமிழ்க் கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவது நடைமுறையில் ஒருபோதும் சாத்தியமில்லை. ஆனால், பெரும்பான்மையான கட்சிகளை அரவணைத்து மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்குவதாக இருந்தாலும் கூட, கடந்த காலத்தில் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளை தோற்றுவித்த காரணிகள் மீண்டும் தலைகாட்டாமல் இருப்பதை உறுதி செய்வது முக்கியமானதாகும். பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்துக்கள் குறித்து தமிழரசு கட்சியின் தலைவர்களிடமிருந்து உடனடியாக பிரதிபலிப்பு எதுவும் வரவில்லை. அவர்களும் கடந்த காலத்தின் கூட்டமைப்பு அனுபவங்களை கருத்தில் எடுத்து மீண்டும் அநாவசியமான முரண்பாடுகள் தோன்றாமல் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டியது அவசியமாகும். மற்றைய தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை, தமிழரசு கட்சி மேலாண்மை செலுத்தும் மனோபாவத்துடன் நடந்துகொள்கிறது என்பதே பிரதானமான முறைப்பாடாக இருந்து வந்தது. எது எவ்வாறிருந்தாலும், மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதில் தமிழரசு கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் ஆர்வமும் அதற்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தரப்பில் இருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கும் நேர்மறையான பிரதிபலிப்பும் நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியவை. ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் காலந்தாழ்த்தாமல் விரைவில் தொடங்க வேண்டும். தமிழ்க் கட்சிகள் பல்வேறு அணிகளாகச் சிதறியிருப்பதால் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கான அணுகுமுறைகளைப் பொறுத்தவரை ஒருமித்த நிலைப்பாடுகளை எடுக்க முடியாமல் இருக்கிறது என்று தமிழ் மக்கள் நீண்ட நாட்களாகவே கவலையடைந்திருக்கிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் தேசிய மக்கள் சக்திக்கு அவர்கள் பெருமளவில் வாக்களித்ததற்கான காரணங்களில் அதுவும் ஒன்று. போரின் முடிவுக்குப் பின்னரான காலப்பகுதியில் சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கு ஏற்றமுறையில் விவேகமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான அரசியல் அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதில் தமிழ்க் கட்சிகள் அக்கறை காட்டவில்லை என்பது தமிழ் மக்களின் முக்கியமான மனக்குறை. வெறுமனே ஒன்றிணைந்து செயற்படுவது மாத்திரம் போதுமானதல்ல. நீண்டகால அரசியல் இலக்குகளைப் பற்றி மாத்திரம் பேசிக் கொண்டிருக்காமல் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளை கையாளுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். சுமந்திரன் கூறிய தகவல்களின் பிரகாரம் நோக்கும்போது தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைந்து தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு யோசனையை முன்வைப்பதே மீண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக செயற்பட வேண்டும் என்ற அக்கறையின் அடிப்படை நோக்கம் என்று தெரிகிறது. சகல தமிழ்க் கட்சிகளுமே ஒற்றையாட்சியை எதிர்ப்பதுடன் சமஷ்டி முறையின் அடிப்படையிலான அரசியல் தீர்வு ஒன்றையே தங்களது கொள்கையாகவும் கொண்டிருக்கின்றன. அதனால் ஒருமித்த நிலைப்பாட்டை முன்வைப்பதில் எந்த பிரச்சினையும் எழுவதற்கில்லை. அரசாங்கம் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை முன்னெடுக்கும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனையை தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து முன்வைப்பதற்கு புறம்பாக, அதற்கு முன்னரான காலப்பகுதியில் இடைக்காலத் தீர்வு தொடர்பில் குறிப்பாக, மாகாண சபைகள் முறைமையை பயன்படுத்துவதிலும் கருத்தொருமிப்புடன் செயற்பட வேண்டும். மாகாண சபைகள் முறையைப் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்க்கட்சிகள் பலவற்றின் மத்தியில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் அக்கறை மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற தமிழரசு கட்சியின் விருப்பத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமையும். மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்தவும் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்கக்கூடிய வெகுஜன ஜனநாயக அரசியல் இயக்கத்தை உடனடியாக முன்னெடுப்பது பரந்தளவில் தமிழ்க் கட்சிகளும் குழுக்களும் ஓரணியில் வருவதற்கு பெரும் உத்வேகத்தைக் கொடுக்கும். நடைமுறைச் சாத்தியமான இடைக்காலத் தீர்வுகளைப் பற்றி அக்கறைப்படாத எதிர்மறையான அரசியல் கலாசாரத்துக்கு தமிழர் அரசியல் சமுதாயம் விடைகொடுக்க வேண்டும். வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/12419
-
வெளியாகவுள்ள மதுபானசாலை அனுமதி மோசடி - சிக்கவார்களா தமிழ் அரசியல்வாதிகள்
வெளியாகவுள்ள மதுபானசாலை அனுமதி மோசடி - சிக்குவார்களா தமிழ் அரசியல்வாதிகள் ஞாயிறு, 16 நவம்பர் 2025 05:52 AM மதுபானசாலைகளுக்கான அனுமதி பத்திரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தினை தெரிவித்தார். மதுபானசாலைக்கான அனுமதி வழங்குபோது இரண்டு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி, முதலில் விலைமனு தாரர்கள் தெரிவு செய்தல் மற்றும் விலை மனுக்கள் கிடைத்த பின்னர் அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் வழிமுறைகளுக்கு அமைய அனுமதி வழங்கப்படும். விலை மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் முறையாக நிலையான கட்டணம் செலுத்தப்பட்டடுள்ளதா? தூரத்துக்கு அமைய அந்த பகுதியில் மதுபானசாலை அமைக்க முடியுமா? என்பது குறித்து ஆராயப்பட்டு மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்படும். அதன்படி, அரச அதிகாரிகளினால் இந்த விடயங்களில் எவ்வித தவறும் ஏற்படவில்லை என்றே நிதி அமைச்சின் செயலாளரினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். எனினும், விலை மனுதாரர்களை தெரிவு செய்யப்படும் போது ஏற்பட்டுள்ள மோசடி குறித்தே அரசாங்கம் பட்டியல் ஒன்றை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அதற்கமைய, விலை மனுதாரர்களை தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களின் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். https://jaffnazone.com/news/52296
-
சிறிதரனுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்!
சிறிதரனுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்! இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக முறைப்பாட்டை முன்வைத்த சிவில் அமைப்பின் சஞ்சீவ மஹவத்தவிடம், நேற்றையதினம் 6 மணித்தியாலங்களாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக, கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், தமக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் விசாரணைகளை எதிர்கொள்ள தான் தயார் என்றும் தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/சிறிதரனுக்கு_எதிராக_விசாரணை_ஆரம்பம்!
-
பருத்தித் துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தை
பருத்தித் துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தை யாழ். பருத்தித்துறையில் உள்ள துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார். அண்மையில் தொழில்நுட்ப குழுவொன்றும் பருத்தித்துறைக்கு வந்து சென்றதாக அவர் குறிப்பிட்டார். அரசாங்கம் இந்த விடயங்களில் கவனம் செலுத்தவில்லை என ஏனைய தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார். இதேவேளை காங்கேசன்துறை துறைமுகம் என்பது வர்த்தக ரீதியில் இயங்குவதையும் சுட்டிக்காட்டினார். பலாலி விமான நிலையம் தற்போது நட்டத்தில் இயங்குவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனினும் அதனை நவீனமயமாக்கி வினைத்திறனான சேவையை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டார். பல மில்லியன் பணத்தை செலவழித்து மற்றுமொரு மத்தள விமான நிலையமாக பலாலியை மாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதனை படிப்படியாக செயற்படுத்தவுள்ளதாகவும் சந்திரசேகர் கூறினார். https://www.samakalam.com/பருத்தித்-துறைமுகத்தை-அம/
-
நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரிப்பு
பிரான்ஸுக்கு ஏற்றுமதி செய்தால் ஈரோவிலும் சம்பாதிக்கலாம்! நான் பாரிஸுக்குப் போனால் பிரெஞ்சு ரெஸ்ரோரண்டில் நத்தை சாப்பிடுவதுண்டு! அப்புறம் லாசப்பல் போனால் எவர்சில்வர் கப்பில் தேத்தண்ணியும், ஒரு வடையும் சாப்பிடுவதும் உண்டு🤪
-
நல்லூரில் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான பணி ஆரம்பம்
நல்லூரில் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான பணி ஆரம்பம் வெள்ளி, 14 நவம்பர் 2025 03:56 AM தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து நல்லூரில் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளன. மாவீரர் வாரம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில் குறித்த காணியில் ஆரம்ப கட்டப் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. இதன்போது யாழ். மாநகர மேயர், பிரதி மேயர், சபை உறுப்பினர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்றனர். நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உள்ள யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் கடந்த சில வருடங்களாக மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு காட்சிப்படுத்தலும், மாவீரர் நாள் நினைவேந்தலும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இந்த ஆண்டு அந்தப் பகுதியில் வழமையாக மாவீரர் நினைவேந்தல் பணிகளை முன்னெடுக்கும் தரப்புக்குப் போட்டியாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமக்கே குறித்த காணியை வழங்க வேண்டும் எனக் கோரி வந்தனர். ஒரு காணியை இரண்டு தரப்புக்கள் கோரியதால் அதை யாருக்கு வழங்குவது என்பதில் முடிவு எட்டப்படாத நிலை காணப்பட்டது. இதையடுத்து யாழ். மாநகர சபையின் கடந்த அமர்வில் கருத்துத் தெரிவித்த மாநகர மேயர் மதிவதனி விவேகானந்தராஜா, இம்முறை அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளையும் இணைத்து குறித்த காணியில் மாவீரர் நினைவேந்தலை முன்னெடுக்கப் போவதாக அறிவித்தார். இந்த யோசனையைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த யாழ். மாநகர சபையில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் உறுப்பினர்கள் வரவேற்றனர். இதையடுத்தே குறித்த காணியில் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்போது கருத்துத் தெரிவித்த மாநகர மேயரும், பிரதி மேயரும் "மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்." - என்று அழைப்பு விடுத்தனர். https://jaffnazone.com/news/52241
-
கனேடிய தம்பதியரை விமானத்தில் ஏற அனுமதி மறுத்த விமான நிறுவனம்: 7,000 டொலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு
கனேடிய தம்பதியரை விமானத்தில் ஏற அனுமதி மறுத்த விமான நிறுவனம்: 7,000 டொலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு கனடாவின் ஒன்ராறியோவில் வாழும் ஒரு இந்திய தம்பதியர் திருமணமாகி முதன்முறையாக வெளிநாடு சென்றிருந்த நிலையில், கனேடிய விமான நிறுவனம் ஒன்று அவர்களை மோசமாக நடத்தியுள்ளது. ஒன்ராறியோவில் வாழ்ந்துவரும் பார்வதி (Parvathy Radhakrishnan Nair) மிதுன் (Midhun Haridas) தம்பதியர், திருமணமாகி முதன்முறையாக டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் அவர்கள் விமான நிலையத்தில் சந்தித்த அனுபவம், அவர்கள் இவ்வளவு நேரம் செலவிட்ட இனிமையான நேரத்தை மறக்கச் செய்யும் அளவுக்கு மோசமாக இருக்கும் என அவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். கனடா திரும்புவதற்காக, Punta Cana சர்வதேச விமான நிலையத்தில் Air Transat நிறுவனத்தின் விமானத்தில் ஏறுவதற்காக தம்பதியர் செல்ல, அங்கு அவர்கள் வித்தியாசமாக நடத்தப்பட்டுள்ளார்கள். பார்வதி அங்குள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி, தன்னிடம் இந்திய பாஸ்போர்ட்தான் உள்ளது, கனேடிய பாஸ்போர்ட் இல்லை, தாங்கள் அதற்கென தனியான வரிசை எதிலாவது நிற்கவேண்டுமா என தனது சந்தேகத்தை வெளிப்படுத்த, அவர்களை தனியாக நிறுத்திய வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் ஒருவர், ஒரு சிவப்புக் கோட்டுக்கு பின்னால் நிற்கும்படி கூறியிருக்கிறார். மற்றவர்கள் ஒவ்வொருவராக விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட பார்வதி, மிதுன் தம்பதியர் மட்டும் அங்கேயே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். தாங்கள் வேண்டுமென்றே வித்தியாசமாக நடத்தப்படுவதை உணர்ந்த தம்பதியர், நடப்பதை வீடியோ எடுக்கத் துவங்க, அந்த வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் பார்வதியை திட்டியிருக்கிறார். தங்களிடம் பாஸ்போர்ட்டும் பயணச்சீட்டும் இருந்தும் ஏன் தங்களை மட்டும் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை என தம்பதியர் கேட்க, உங்களை விமானத்தில் ஏற அனுமதிக்கவேண்டுமானால் நீங்கள் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அழிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் அந்த அலுவலர். வேறு வழியில்லாமல் கடைசி நேரத்தில் ஏர் கனடா விமானம் ஒன்றில் விலை அதிகமான பயணச்சீட்டு வாங்கி தாமதமாக வீடு திரும்பியுள்ளனர் தம்பதியர். தாங்கள் சந்தித்த மோசமான விடயத்தை நீதிமன்றம் கொண்டு செல்ல முடிவு செய்த தம்பதியர், small claims court என்னும் நீதிமன்றத்தை அணுக, நடந்ததை அவர்கள் வீடியோ எடுத்ததற்காக Justice Marcel Mongeon என்னும் நீதிபதி அவர்களை பாராட்டியுள்ளார். இதுபோன்ற விடயங்களின்போது, வெறுமனே புகாரளிக்காமல், இதுபோல் வீடியோ ஆதாரங்கள் கொடுப்பதால், என்ன நடந்தது என்பதை நீதிபதி தனது கண்ணாலேயே பார்க்கமுடியும் என்றும் கூறியுள்ளார் நீதிபதி. அந்த வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் பார்வதி மிதுன் தம்பதியரை நடத்திய விதத்தைக் கண்ட நீதிபதி விமான நிறுவனத்திடம் விளக்கம் கேட்க, தம்பதியரால் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படுமென தாங்கள் எண்ணியதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்படி அவர்களால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்றால், வீடியோவை அழித்துவிட்டால் உங்களை விமானத்தில் ஏற அனுமதிப்பேன் என அந்த வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் எப்படிக் கூறினார்? வீடியோவை அழித்துவிட்டால் பாதுகாப்பு பிரச்சினை சரியாகிவிடுமா? அவர்கள் அதற்கு அடுத்தபடியாக ஏர் கனடா விமானத்தில் வீடு திரும்பியுள்ளார்களே, அவர்களால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்றால் ஏர் கனடா விமான நிறுவனம் அவர்களை எப்படி விமானத்தில் ஏற அனுமதித்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் நீதிபதி. ஆக, பார்வதி, மிதுன் தம்பதியருக்கு Air Transat விமான நிறுவனம் 7,000 டொலர்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார் நீதிபதி. https://akkinikkunchu.com/?p=348636
-
2026 ஆம் நிதியாண்டுக்கான இலங்கையின் 80 ஆவது வரவு - செலவுத் திட்டம்!
வரவு – செலவுத் திட்டம் 2026 : வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானம் November 14, 2025 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) பாராளுமன்றில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இத்தீர்மானம் குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இன்றைய வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது (Absenting from the vote) என கட்சி முடிவெடுத்துள்ளது என்று அறிவித்தார். 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், நவம்பர் மாதம் 7ஆம் திகதி பாராளுமன்றில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நிறைவடைவதையடுத்து இன்று மாலை வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இந்தத் தீர்மானம், இன்றைய பாராளுமன்ற அமர்வில் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/budget-2026-sri-lanka-tamil-government-party-decides-not-to-participate-in-the-vote/
-
நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரிப்பு
நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரிப்பு 14 Nov, 2025 | 12:51 PM யாழ்.மாவட்டத்தின் தீவக பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயுமாறு மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்ட விவசாய குழு கூட்டம் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் தலைமையில் வியாழக்கிழமை (13) இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடல் கடந்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்திருக்கிறது. குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரபாகரன் மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான தானியங்கள் மற்றும் மரக்கறிகளை நெடுந்தீவிலே உற்பத்தி செய்கிறார்கள். இந்நிலையில் ஆபிரிக்க நத்தைகளில் ஊடுருவல், அதிகளவான தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டால் அங்கு வாழ்கின்ற மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் பாரிய சிக்கல் நிலை ஏற்படுவதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்து போகும் துற்பாக்கியமும் ஏற்படும். குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் உள்ளடக்கிய குழு ஒன்றை உருவாக்கி குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/230332
-
”வடக்கு கிழக்கின் இன பரம்பலை மாற்றும் திட்டமிட்ட செயற்பாடுகளை கண்டிக்கின்றோம்” - கஜேந்திரகுமார்
”வடக்கு கிழக்கின் இன பரம்பலை மாற்றும் திட்டமிட்ட செயற்பாடுகளை கண்டிக்கின்றோம்” - கஜேந்திரகுமார் வடக்கு கிழக்கின் இன பரம்பலை மாற்றும் நோக்குடன் திட்டமிட்ட முறையில் அரசினால் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களை எதிர்க்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டம் மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது கஜேந்திரகுமார் எம்.பி மேலும் தெரிவிக்கையில், வடக்கின் குறிப்பாக மன்னாரின் விவசாயம் நீர்ப்பாசனம் போன்றவற்றை அபிவிருத்தி செய்கிறோம் என்கின்ற பெயரில் நடைமுறைப்படுத்த இருக்கும் திட்டம் இந்தத் திட்டத்தை முதலில் முன்மொழிந்தது கோத்தாபாய ராஜபக்சே அரசாங்கம் ஆகும். இந்த மல்வத்து ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தில் உண்மையில் ஆக பதினைந்தே பதினைந்து முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே( இந்த நீர்ப்பாசன திட்டத்தில் அவர்களின் வாழ்விடங்கள் நீரில் மூழ்குவதால்) பாதிக்கப்படக்கூடிய சந்தர்ப்பம் இருந்த நிலையில் , கோத்தாபாய் அரசாங்கம் அனுராதபுரத்தில் இருக்கின்ற 1500 சிங்கள குடும்பங்கள் இந்த நீர்ப்பாசன திட்டத்தினால் தமது வாழ்வை இழப்பார்கள் எனக் கூறி, அவர்களை வவுனியா தெற்கு செட்டிகுளம் பகுதியில் குடியமர்த்த முயன்றிருந்தது. அந்த நேரத்திலேயே இந்த நாங்கள் கடுமையாக எதிர்த்திருந்தோம். இப்போது அந்தத் திட்டத்தை JVP அரசு கையில் எடுத்திருக்கிறது. இதற்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழர்கள் ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல சிங்கள மக்கள் தாமாக விரும்பி வடக்கு கிழக்கில் வந்து குடியேறி, அந்த மண்ணின் மக்களோடு இயைந்து , தமது சுய விருப்பில் சுய உழைப்பில் வாழ விரும்பின் , அதை நாம் ஒருபோதும் எதிர்க்கப் போவதில்லை . நாம் எதிர்ப்பதெல்லாம், வடக்கு கிழக்கின் இன பரம்பரை மாற்றும் நோக்குடன் திட்டமிட்ட முறையில் அரசினால் (அரசின் உதவியுடன்) மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களையே என்றார். https://www.samakalam.com/வடக்கு-கிழக்கின்-இன-பரம்/