Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. அமரசிறி : கருணாகரன் 01 உளநல மருத்துவர் மேகதாஸ் ஒரு புதன்கிழமை என்னை அழைத்திருந்தார். அவரிடம் சென்றபோது இளைய மருத்துவ அணியினருக்கு உளநிலை விரிவுரை நடந்து கொண்டிருந்தது. அது முடியட்டும் என்று அங்கேயிருந்த புத்தக அடுக்கிலிருந்து புத்தகங்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். மாணவர்களில் சிலர் பாடங்களைக் கடந்து என்னைப் பார்ப்பதாக உணர்ந்தேன். அதைக் கண்டு கொள்ளாத மாதிரிப் புத்தகங்களிலேயே கவனம் செலுத்துவதாகப் பாவனை செய்தேன். இருந்தாற்போல ஒரு மாணவன், “சேர், உடலுறவுக்கும் உளவியலுக்கும் உள்ள தொடர்பு என்ன?” என்ற கேள்வியை மேகதாஸிடம் கேட்டான். என்னுடைய பார்வை சட்டென, துடிப்பான அந்த மாணவன் யார் என அறிய விழைந்தது. அந்தக் கூட்டத்தில் அவனை அடையாளம் காண முடியவில்லை. எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். மூன்று மாணவர்கள் அதற்கு மாறாக சற்று அமைதியாக இருந்தனர். மேகதாஸ் மிக அமைதியான முறையில், “வெரிகுட் குயிஸென்ஸ். உங்களுக்கு நல்ல மூட் இல்லை என்றால், உங்களால் எதையுமே செய்ய முடியாது. அது முத்தமிடுவதாக இருந்தாலென்ன, புத்தகம் வாசிப்பதாக இருந்தாலென்ன?“ என்று என்னைத் திரும்பிப் பார்த்தார். ஒரு கணம் அதிர்ந்து விட்டேன். என்னையும் கவனித்துக்கொண்டிருக்கிறார் மேகதாஸ். மாணவர்கள் மெல்லச் சிரித்தனர். இந்த மாதிரிக் கேள்விகளை மேகதாஸ் எத்தனையோ தடவை எத்தனையோ பேரிடமிருந்து எதிர்கொண்டிருக்கக் கூடும். மாணவர்கள் உற்சாகமாகத் தொடங்கி விட்டனர். மாணவர்கள் உற்சாகமாகினால்தான் கற்பித்தலைச் சுலபமாகவும் சிறப்பாகவும் செய்ய முடியும். விரிவுரை மண்டபம் கலகலத்தது. நான் தொடர்ந்து அவர்களுடைய சூழலுக்குள் நிற்க விரும்பவில்லை. கையில் எடுத்த புத்தகத்தோடு முன்னே இருந்த வரவேற்பாளர் பகுதிக்குச் சென்று புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். வெளியே மழை மெதுவாகத் தூறிக் கொண்டிருந்தது. அதனால் வெக்கை இல்லை. எனக்கு எதிரில் இன்னொரு பெண் ஆழமாக யோசித்தபடி எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு நாற்பது வயதிருக்கலாம். இளமையில் கவர்ச்சியான – களையான தோற்றத்தில் இருந்திருப்பாள். இப்போதும் அவளிடம் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது. மருத்துவ உதவிக்குத்தான் வந்தாளா? அல்லது வேறு ஏதாவது ஆலோசனைகளுக்காக இருக்குமா? அல்லது என்னை அழைத்ததைப்போல ஏதோ ஒரு காரணத்துக்காக அவளையும் மேகதாஸ் அழைத்திருப்பாரா? என்று ஒரு கணம் அவளைப் பற்றிய எண்ணம் வந்தது. ‘அவள் எதற்காக வந்தால்தான் நமக்கென்ன?’ என்று புத்தகத்தின் மீது கவனம் செலுத்தத் தொடங்கினேன். இரண்டு பக்கத்தை வாசிப்பதற்கிடையில் மேகதாஸ் வந்து “ஹலோ!“ சொன்னார். நிமிர்ந்து பார்த்தேன். அந்தப் பெண் எழுந்து நின்றாள். “நீங்கள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேணும்” என்று எனக்குச் சொல்லி விட்டு, ”நீங்கள் வாருங்கோ” என்று அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றார். என்னால் புத்தகத்தைத் தொடர்ந்து படிக்க முடியவில்லை. ‘எதற்காக என்னை வரச்சொல்லியிருப்பார்?‘ என்று மீண்டும் கேள்வி எழுந்தது. இன்னும் ஒரு ஐந்தோ பத்தோ நிமிடங்களுக்குள் இந்தக் கேள்விக்கான பதில் கிடைத்து விடும். ஆனாலும் மனதில் அவசரமும் அந்தரமும். ஒரு வாரத்துக்கு முன்பு மேகதாஸ் தொலைபேசியில் அழைத்து, தன்னுடைய பணியிடத்தில் வந்து சந்திக்க முடியுமா? அல்லது வாய்ப்பான நேரமொன்றைச் சொன்னால், தானே வந்து என்னைச் சந்திப்பதாகச் சொன்னார். “அவசரமென்றால், நானே வருகிறேன்” என்றேன். “அவசரமொன்றுமில்லை. ஆனால், அவசியம். முடியுமென்றால், அடுத்த புதன்கிழமை காலையில் என்னுடைய இடத்தில் சந்திக்கலாம்” என்றார். அன்றிலிருந்து ஒரு கிழமையாக இந்த அந்தரிப்பு. பத்து நிமிடங்களில் அந்தப் பெண் வெளியேறிச் சென்றாள். இன்னும் அவளுடைய முகத்தில் அதே ஆழமான யோசனை கனத்த இருளாகப் படிந்து கிடந்தது. “நீங்கள் உள்ளே போகலாம்” என்றார் மேகதாஸின் உதவியாளர். நான் சென்று, மேகதாஸின் முன்னே இருந்தேன். சிரிக்கும் குழந்தைகளின் ஓவியங்களும் பறவைகளின் படங்களும் சுவரில் மாட்டப்பட்டிருந்தன. பறவைகளை மேகதாஸ்தான் படம்பிடித்திருப்பார் என்று தோன்றியது. மேகதாஸ் உளநல மருத்துவர் மட்டுமல்ல, ஒளிப்படங்களையும் ஆர்வத்தோடு பிடிப்பவர். அவருடைய படங்களில் இரண்டு எங்கள் வீட்டிலும் சட்டமிடப்பட்டு வரவேற்பறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. “உங்களிடமிருந்து ஒரு உதவியை எதிர்பார்க்கிறேன். உங்களால் அதைச் செய்ய முடியும். நீங்கள் ஒரு பத்திகையாளராக இருப்பதால், இதைப் புரிந்து கொள்ள முடியும்“ என்றார். ஒருவாரமாக அலைய வைத்த கேள்வி போதாதென்று இப்பொழுது இன்னொரு புதிரா? “சொல்லுங்கள்” நிமிர்ந்து, ஒரு கணம் என்னைக் கூர்ந்து பார்த்த மேகதாஸ், “உங்களுக்கு ஒரு கதையைச் சொல்வேன். அதை நீங்கள் செய்திக் கட்டுரையாகவோ கதையாகவா ஏதோ வகையில் எழுதிப் பிரசுரிக்க வேணும். அதை நான் சிங்கள மொழியில் யாரையாவது கொண்டு மொழிபெயர்த்துக் கொள்வேன். ஒருவரைப் பற்றிய தகவலை அறிய விரும்புகிறேன். அவருக்கு ஒரு சேதியையும் சொல்லலாம். அதற்காக” என்றார். ‘உளநல மருத்துவர், புலனாய்வாளராக மாறி விட்டாரா?’ என்றொரு எண்ணம் வந்தது. நிச்சயமாக ஏதோ ஒரு முதன்மையான காரணம் இல்லாமல் மேகதாஸ் இப்படிக் கேட்கமாட்டார். எதுவாகவும் இருக்கட்டும். கொஞ்சம் பொறுத்திருந்தால் எல்லாம் தெரிந்து விடும். சரியென்றேன். “தேநீர் குடிக்கலாமா? என்றால், நாங்கள் வெளியே போகலாம். கடற்கரைக்குப் போவோம்” என்றவர், என்னுடைய பதில் சம்மதமாக இருக்கும் என்று வெளியே வந்து காரை இயக்கினார். ஏறிக் கொண்டேன். கார் புறப்பட்டது. மேகதாஸ் கதையைச் சொல்லத் தொடங்கினார். 02 “டொக்ரர், நான் யார் என்று தெரியவில்லை. ப்ளீஸ்.. முதல்ல நான் யாரென்று சொல்லுங்கோ டொக்ரர், நான் யாரெண்டு எனக்குத் தெரியவேணும். அதைத் தெரியிற வரைக்கும் என்னால் ஒன்றைப் பற்றியும் சிந்திக்க முடியவில்லை..” என்று சொல்லிக் கொண்டு ஒரு முன்னிரவில் வந்தான் ஞானச்செல்வன். அவனுடைய மகள் அருநிலாவே அவனை அழைத்து வந்தாள். சிலருடைய இந்த மாதிரியான குழப்பங்களுக்கு அவர்களுடைய ஆழமனதில் உறைந்து போயிருக்கும் கடந்த கால நினைவுகள் ஒரு காரணமாக இருப்பதுண்டு. பலரும் தங்களுடைய எல்லாச் செயல்களைப் பற்றியும் சீரியஸாகச் சிந்திப்பதில்லை. ஏதோ செய்கிறோம் என்ற அளவில் எல்லாற்றையும் செய்து கொண்டு போய்விடுவார்கள். சிலரால் அப்படிச் செய்ய முடியாது. அவர்கள் ஒரு சிறிய செயலுக்கும் தங்களுடைய பொறுப்பு என்ன என்பதைப் பற்றி ஆழமாகச் சிந்திப்பார்கள். அது அவர்களுடைய உளத்தின் அமைப்பாகும். உளம் என்பது, பல்வேறு நிலைகளால் கட்டமைவது. அதைப்பற்றி நாம் இங்கே விரிவாகப் பேச முடியாது. ஆனால், அப்படியான மென்மையான உள அமைப்பைக் கொண்டவர்களால், ஒரு சிறிய கடையை வைத்துக் கூட வியாபாரம் செய்ய முடியாது. வியாபாரத்தில் தந்திரம் முக்கியம். எதிரே நிற்கின்ற நுகர்வாளரிடம் அவருக்குத் தெரியாமல், முகத்தில் எந்தச் சலனத்தையும் காட்டாமல் எவ்வளவு தந்திரம் செய்ய முடியுமோ, அதைச் செய்தால்தான் அந்தத் தொழிலில் லாபமீட்ட முடியும். முன்னேறலாம். அதற்கான உளநிலை இல்லை என்றால், இரவு தூங்கக் கூட முடியாது. ஒவ்வொரு முகங்களும் வந்து அலைக்கழிக்கும். ‘கூடிய விலைக்குப் பொருளைக் கொடுத்து விட்டோமா? அவரை ஏமாற்றி விட்டோமா?‘ என்ற கவலைகள் அலைக்கழிக்கும். இப்படிச் சிந்திப்பவர்களால் எப்படிக் கடையை நடத்த முடியும்? ஞானச்செல்வன் அப்படியான ஒரு பேர்வழி…“ சொல்லிக் கொண்டே காரை, கடற்கரையோரத்தில் தேநீர் விடுதியின் முன்பாக நிறுத்தினார். நான் எதையுமே பேசவில்லை. மேலும் கேட்பதற்குத் தயாராகினேன். மேசையில் ஒலிப் பதிவானையும் நோட்டுப் புத்தகத்தையும் தயார்ப்படுத்தி வைத்தேன். “ஓ.. ஞானச்செல்வன் யாரென்று உங்களுக்கு நான் சொல்லவில்லை. மன்னிக்க வேணும். அவனே சொல்வதைப்போல அவன் யார் என்று எனக்கும் குழப்பமாகத்தான் உள்ளது. ஆனால், அவன் முன்பு ஒரு போராளியாக இயக்கத்தில் இருந்திருக்கிறான்…” என்றபடி தேநீருக்கு ஓடர் கொடுத்தார் மேகதாஸ். அலைகளின் தீவிரமற்ற பரவைக் கடற்கரையின் ஒலியற்ற சூழலே சத்தமாக இருப்பதாகத் தோன்றியது. இடையிடையே சோளகக் காற்று சீறிக்கொண்டு வந்து, மணலில் புதைந்து கிடக்கும் சிப்பித் துண்டுகளையும் கரையோரத்தில் நிற்கும் பனைகளையும் விளையாடுவது போல் தொட்டுச் சென்றது. நான் கடலையும் கரைநீளத்தையும் அந்தத் தேநீர் விடுதிச் சூழலையும் ஒரு பரவிய பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தேன். காதும் சிந்தனையும் மேகதாஸிடமிருந்தன. பரிமாறுபவர் தேநீரைக் கொண்டு வந்து மேசையில் வைத்து விட்டு, எங்களைப் பார்த்தார். அவரைப் பார்த்து மெல்லிய தலையசைப்போடு மேகதாஸ் பற்களை வெளிப்படுத்தாமலே புன்னகைத்தார். இருவருக்குமிடையில் ஒரு சிநேகமான அறிமுகம் ஏற்கனவே இருப்பதாகத் தோன்றியது. “ஏதாவது தேவையென்றால் அழைக்கிறேன்” என்றார் மேகதாஸ். பரிசாரகர் சென்று விட்டார். ”ஞானச்செல்வனை என்னுடைய அறைக்கு அழைத்து வந்தது அவரது மனைவியின் கண்ணீர் நிறைந்த கெஞ்சல்கள்தான். அன்று நான் அறையின் சுவரில் வெண்மையும் பச்சையும் கலந்த மென் வண்ணத் திரைச் சீலையை அமைத்திருந்தேன். அறை அமைதியாக இருந்தது. ஜன்னல் வழியாக வெளியே உள்ள பச்சைக் கிளைகள் தெரிந்தன. கண்களில் ஆழமான பொறுமையையும், வாழ்க்கையின் கடினமான பாறைகளையும் உடைத்தெறியும் ஆற்றலை வெளிப்படுத்தும் உறுதியையும் வைத்திருந்தேன். “ஞானச்செல்வன், உங்களுக்கு இங்கே இருக்க விரும்பினால் இருக்கலாம், பேச விரும்பினால் பேசலாம். பேச விரும்பாவிட்டால், வெறுமனே அமர்ந்திருக்கலாம். பாடல்களைக் கேட்கலாம். புத்தகம் வாசிக்கலாம். உங்களுக்கு எது விருப்பமோ அதைச் செய்யுங்கள்” என்றேன். தேநீர் அருந்தக் கூடிய மாதிரித் தேநீர்க் குடுவையையும் குவளையும் அருகில் வைத்திருந்தேன். கூடவே சில பழங்களையும். அருகே ஒரு சிறிய மலர்க் கூடையும் பேனாவும் நோட்டுப்புத்தகமும். ஞானச்செல்வன் மௌனமாக இருந்தான். முதல்நாள் இப்படிக் கடந்தது. நான் ஞானச்செல்வனின் மனைவியை தெம்பூட்டினேன். மிகவும் கவலையோடும் குழப்பத்திலும் இருந்தார். அவரைச் சமாதானப்படுத்துவதே கடினமாக இருந்தது. “கவலைப்படாதீர்கள்.. எல்லாம் சரியாகும். ஆனால், அதற்கான காலமொன்று வேண்டும். அதுவரை நீங்கள் பொறுத்திருக்க வேண்டும். அவரை என்னிடம் விடுங்கள்” உத்தரவாதம் கொடுத்து, ஆறுதற்படுத்தி அனுப்பி வைத்தேன். வாரங்கள் கடந்தன. ஞானச்செல்வன் சில சமயங்களில் என்னுடைய அறையில் அல்லது எங்கள் பயனர் விடுதியில் அமர்ந்திருப்பான். சில சமயங்களில் நீண்டநேரமாக எதையோ பார்த்துக் கொண்டு அல்லது எதையோ யோசித்துக் கொண்டு நின்றுகொண்டிருப்பான். சிலவேளை போராட்ட காலக் கதைகளைப் பேசிக்கொண்டிருப்போம். அந்தக் கதைகளைச் சொல்லும்போது சிலவேளை உற்சாகமாக இருப்பான். சில வேளை சேர்ந்து இடையில், கதையை நிறுத்திக் கொண்டு அமைதியாகி விடுவான். ஒரு நாள், மழை வெளியே சலசலப்புடன் பெய்து கொண்டிருந்த நேரம். அந்த வார்த்தைகள், நீண்ட காலமாக அடைத்து வைத்திருந்த அணையின் வழியாக, ஒரு சிறிய கசிவுபோல் வெளிப்பட்டன. “நான் ஒரு மனிதனைக் கொன்றேன்,” என்றான் ஞா. செ. அவனுடைய குரல் உடைந்து, வேறு யாருடையதைப்போலவோ இருந்தது. முகத்தைத் திரும்பி யன்னலுக்கு வெளியே எங்கோ பார்த்தான். நான் எதுவும் பேசவில்லை. எந்த விதமான உணர்ச்சிகளையும் காட்டிக் கொள்ளாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவனுடைய மனதுக்குள்ளிருந்து குத்திக் கொண்டிருந்த முள்ளைக் கண்டு விட்டேன். அறையில் பல்லியொன்று பூச்சியொன்றை வேட்டையாடுவதற்காக பதுங்கிக் கொண்டிருந்தது. அதை அறியாமல் பூச்சி, வெளிச்சத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. நான் மெல்ல எழுந்து மேசையின் மறு பக்கத்துக்கு வந்தேன். “…அவர் ஒரு ஆசிரியர். அவருக்கு மனைவி இருந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தாள்” கதை வெளியே வரத் தொடங்கியது. முதலில் துண்டு துண்டாக. பின்னர், வெள்ளம் போல். பேருந்து, விசாரணை… கெஞ்சல், காடு, துப்பாக்கிச் சூடு… எல்லாம் வெளியே வந்தன. ஞானச்செல்வன் அழுதான். முதலில் மெதுவாக. சட்டென உடைந்து பெருஞ் சத்தத்தோடு. அவன் அப்படி அழுததே இல்லை. நான் கவனித்துக் கொண்டேயிருந்தேன். நான் நீதித்துறையின் நீதிபதி அல்ல; மனித மனதின் தோட்டக்காரர். எனக்குத் தெரியும் பயிரின் தன்மைகளைப் பற்றி. ” ஞானச்செல்வன் ” என்றேன் மெதுவாக. ஆதரவாகத் தலையை வருடினேன். என்னுடைய கைகளை இறுகப் பிடித்தான். ஒரு குழந்தையாக அந்தக் கணத்தில் அவன் மாறியிருந்தான. 03 “ஞானச்செல்வன் இயக்கத்தில் இருந்தபோது ஒருநாள், உளவாளி ஒருவர் பேருந்தொன்றில் யாழ்ப்பாணத்துக்குச் சென்று கொண்டிருப்பதாகத் தகவல் வந்தது. அந்தத் தகவலைச் சொன்னதே, அந்தப் பேருந்தினுடைய சாரதிதான். தகவலின்படி பேருந்தை வழியில் மறித்து, அந்த நபரைக் கைது செய்து விட்டார்கள். கைது செய்யப்பட்டவரை விசாரணைக்கு அனுப்பப்பட்டபோதுதான் உளவாளி என்று சந்தேகிக்கப்பட்டவரை ஞானச்செல்வன் பார்த்தான். பெயர் அமரசிறி. சிங்களவர். மெலிந்து, ஒடுங்கிய முகம்! துக்கம் நிரம்பியதைப்போன்ற கண்கள். நிச்சயமாக அவர் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்று பட்டது ஞானச்செல்வனுக்கு. அவனும் அந்தமாதிரியான ஒரு தோற்றத்தில்தான் இருந்தான். அது வறுமையும் ஏழ்மையும் உருவாக்கிய முகம். அமரசிறியைப் பல கோணங்களில் விசாரணை செய்தார்கள். அமரசிறியின் பெயர் முழுவதும் ஞானச்செல்வனுக்குத் தெரியாது. சிங்களவர்களுடைய பெயர்கள் சற்று நீளமானவை. ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ஸ, அநுரகுமார திசநாயக்க, சந்திரிகா குமாரதுங்க பண்டார நாயக்க, குமாரதிஸ்ஸ கமகே என்ற மாதிரி. குடும்பப் பெயர்களும் சேர்ந்திருக்கும். அதிலிருந்தே அவர்கள் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்று அறியலாம் என்பார்கள். விசாரணையின்போது அமரசிறி தன்னுடைய முழுமையான பெயரைச் சொல்லியிருக்கக் கூடும். அதை அங்கே இருந்த யாரோ குறிப்பெடுத்தது போலொரு ஞாபகம். அதெல்லாம் சம்பிரதாயமாகத்தான். அந்த விவரத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்யப்போகிறோம் என்று அப்போது அவன் நினைத்தான். யாருக்குத்தான் அதைக் காட்ட? காட்டித்தான் என்ன ஆகும்? ஆனால், அமரசிறி என்ற பெயர் மட்டும் நினைவில் தங்கி விட்டது. அதைவிட அமரசிறியின் அந்த முகம் இன்னும் அப்படியே ஞானச்செல்வனின் நினைவில் உள்ளது. சரியாகச் சொன்னால், அந்த முகம்தான் அமரசிறியின் பெயரை அப்படியே நினைவாக வைத்திருக்கிறது. வடக்கிற்கு வருவதற்கு அமரசிறி எப்படித் துணிந்தார் என்று ஞானச்செல்வனுக்குப் புரியவே இல்லை. அந்த நாட்களில் வடக்கிற்குச் சிங்களவர்கள் வருவது பெரும்பாலும் குறைந்திருந்தது. குறைந்திருந்தது என்ன, இல்லை என்றே சொல்லலாம். அதிகாரிகள் மட்டத்தில் வருவோரைத் தவிர, பிறர் வருவதைக் குறைத்துக் கொண்டனர். நாடு சந்தேகங்களின் விளைநிலமாகி விட்டதல்லவா! வடக்கிலே இருந்த சிங்களவர் என்றால், அது இராணுவம், கடற்படை, விமானப்படை என்ற முப்படையினர்தான். இன்னொன்றாக இருந்தால் அது உளவுப் படை மட்டுமே. “யாழ்ப்பாணத்துக்குச் சிங்கள ஆட்கள் வருவதில்லை என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று அமரசிறியிடம் கேட்பதற்கு விரும்பினான். அவனுக்குச் சிங்களம் தெரியாது. சிங்களம் தெரிந்திருந்தாலும் விசாரணை செய்யும் அதிகாரம் அவனுக்கில்லை. விசாரணை செய்த பொறுப்பாளர், ‘இங்கே ஏன் வந்தாய்? எங்கே போக வந்தாய்? எப்படி வந்தாய்? எங்கே தங்குவதற்குத் திட்டமிட்டிருந்தாய்? யாரைச் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் இருந்தன? உனக்கு யாரையெல்லாம் தெரியும்? எப்போது திரும்பிச் செல்வதற்கு எண்ணியிருந்தாய்?..“ இந்தக் கேள்விகளைத்தான் அமரசிறியிடம் மறுபடி மறுபடி கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு முன்பு, அமரசிறியின் சொந்த ஊர், குடும்ப விவரங்கள், தொழில், படித்த பாடசாலை, அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள்? அரசியல் ஈடுபாடு என்ன? பழக்கமான அரசியல்வாதிகள்? படைகளில் யாராவது உறவினர், நண்பர்கள் இருக்கிறார்களா? போன்ற விவரங்கள் கேட்டுப் பதிவு செய்யப்பட்டது. அமரசிறி எதுவும் பேசவில்லை. அவர் எல்லாவற்றையும் முன்பே பல தடவை சொல்லி விட்டார். திடீரெனக் கன்னத்தில் விழுந்த அறையினால் தடுமாறி, அப்படியே பக்கவாட்டில் சரிந்து விழுந்தார். எழுந்து நிற்கச் சிரமப்பட்டார். இவ்வளவுக்கும் அவருக்கு வயது 45 க்குள்தான் இருக்கும். தொடர்ந்து நான்கு ஐந்து அடிகள் விழுந்தன. எதிர்க்கவே முடியாத விதியொன்று தன்னைச் சுற்றி இறுக்கியிருக்கிறது என்று அவர் உணர்ந்திருக்க வேண்டும். கண்கள் மிரட்சியுற்று, கருணைக்காக அலைந்தன. அவரிடமிருந்து ஒரு சிறிய எதிர்ப்பும் எழவில்லை. “என்னுடைய நண்பரைப் பார்க்க வந்தேன். யாழ்ப்பாணத்துக்கு வரக்கூடாது என்று எனக்குத் தெரியாது. தமிழ் ஆட்கள் அங்கே – கொழும்புக்கு எல்லாம் வருகிறார்கள். அப்படித்தான் நானும் யாழ்ப்பாணத்துக்கு வந்தேன். முன்பும் வந்து போயிருக்கிறேன். தயவு செய்து என்னை நம்புங்கள். நீங்கள் விரும்பினால், என்னுடைய நண்பருடைய வீடிருக்கும் இடத்துக்கு நான் உங்களை அழைத்துப் போவேன். அப்போது அவர்கள் என்னைப் பற்றி சொல்வார்கள். அப்பொழுது என்னைப் புரிந்து கொள்ளுவீர்கள்..“ அவருடைய குரல் உடைந்து வேறொன்றாக ஆகிவிட்டிருந்தது. சற்றுமுன்னிருந்த குரல் வேறு. இது வேறு. ஆனால், அதே கேள்விகளே அவரிடம் திரும்பத்திரும்பக் கேட்கப்பட்டன. அமரசிறி நடுங்கும் குரலில் பதிலளித்தார். தான் ஒரு ஆசிரியர் என்றும், தனது நண்பரைப் பார்க்க வந்ததாகவும் அதுதான் உண்மை என்றும் திரும்பவும் அதையே சொன்னார். அவரது வார்த்தைகள் முழுமையாக இல்லை. பயத்தால் திக்கித் திணறிய வார்த்தைகளாகச் சிதைந்திருந்தன. அந்த வார்த்தைகளுக்கு எந்த எடையும் இல்லை. ஒரு கட்டத்தில் அமரசிறி கெஞ்சினார். தன்னுடைய மனைவியின் பெயரும் முகவரியும் சொல்லி, ‘அவளுக்கு ஒரு கடிதமென்றாலும் போட்டு விடுங்கள். அவளுக்கு ஒரு தகவலையாவது சொல்லி விடுங்கள். இல்லையென்றால், அவர்கள் தன்னை எங்கெல்லாமே தேடி அலைந்து சிரமப்படுவார்கள். வீட்டில் அமைதியற்றுப் போய் விடும். வீட்டில் இருக்கும் இரண்டு பசு மாடுகளை அவளால் தொடர்ந்து பராமரிக்க முடியாது. அதற்கிடையில் நான் செல்ல வேண்டும்…” என்று கெஞ்சினார். அவருடைய மனைவியின் பெயரிலிருந்து விசாரணை திசை மாறியது. தன்னுடைய மனைவியின் பெயர் சிலேன் என்றார் அமரசிறி. பொதுவாக சிங்களப் பெண்களுக்கு அப்படியொரு பெயர் இருப்பதாக விசாரணையாளர் அறிந்திருக்கவில்லை. ஞானச்செல்வன் கூட அப்படியொரு பெயரைத் தன் வாழ்நாளில் கேள்விப்பட்டதில்லை. அந்தப் பெயர் சற்றுப் புதினமாகவும் வித்தியாசமாகவும் பட்டது. இலங்கையைச் ‘சிலோன்‘ என்றும் குறிப்பிடுவதுண்டு. தமிழாட்கள் இலங்கைநாயகம், இலங்கைநேசன், இலங்கைநாதன், இலங்கைநாயகி, லங்காநேசன் என்றெல்லாம் பெயர் வைத்திருக்கிறார்களே, அப்படியொரு பெயராக இதுவும் இருக்கலாம் என்று நினைத்தான் ஞானச்செல்வன். இந்தப் பெயரெல்லாம் தமிழீழம் கிடைத்தால் காலியாகி விடும் என்றொரு எண்ணமும் சிரிப்போடு அவனுக்கு வந்தது. “அதென்ன, உன்னுடைய மனைவிக்கு வித்தியாசமான ஒரு பெயராக இருக்கிறது? நீ வைத்துக் கொண்ட காதற்பெயரா? அல்லது உண்மையிலேயே அவளுடைய பெயர் அதுதானா? சிங்களவர்களும் முஸ்லிம்களும் தங்களுடைய இன மத அடையாளங்களைக் கடந்து பெயர் வைப்பது குறைவு. அப்படித்தான் வேதக்காரர்கள் என்ற கிறிஸ்தவர்களும். அப்பிடியிருக்க இது என்ன புதிசா சிலேன்?” என்று கேட்டார் விசாரணையாளர். அவருக்குச் சிங்களம் தெரியும் என்பது மட்டுமல்ல, இயக்கத்துக்கு வருவதற்கு முன்பு கொழும்பில் படித்து, சிங்களப் பகுதிகளில் வேலை செய்தவர். ஆகவே அவரை இந்த மாதிரியான அறிவு விசயத்தில் லேசில் ஏமாற்ற முடியாது. அமரசிறி அழும் நிலையிலிருந்தார். “அது அவளுடைய பெயர்தான்“ என்றார். குரல் தளர்ந்து உடைந்தது. விம்மியடியே சொன்னார், “அவள் ஒரு பறங்கியினத்துப் பெண். நாங்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். நான் இனம், மதம், மொழி எல்லாவற்றையும் கடந்தவன்… அவளும் அப்படித்தான்… “ “ஓ.. அப்படியா சொல்கிறாய்? அப்ப நாங்களும் இனம், மதம், மொழி எல்லாத்தையும் கடக்க வேணும் என்று சொல்கிறாயா?” என்று கேட்டார் விசாரணையாளர். இப்படியொரு கேள்வியை அமரசிறி எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவருடைய கண்கள் காட்டின. ஞானச்செல்வன் கூட இந்தக் கேள்வியால் சற்று மிரண்டுதான் போனான். அமரசிறி சற்று நேரம் அமைதியாக இருந்தார். பிறகு மெல்ல, தடுமாறியபடி சொன்னார், “தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நாங்கள் மட்டும் அப்படி இருக்கிறோம். எல்லாம் பொதுவாக இருக்கட்டும் என்று. அது எங்கட விருப்பம். அப்படி இருப்பது அங்கே எங்களுடைய ஊரிலும் பிரச்சினையாகத்தானிருக்கு. நீங்கள் எங்களை மன்னிக்க வேணும். எல்லாரும் ஒரே மாதிரி இருக்க முடியாதுதான்…“ என்றார். “ஆனாலும்..” என்று எதையோ சொல்ல முயன்றார். அதற்குள் – “எங்களுக்கு உபதேசமா பண்ணுகிறாய்? நீ ஆசிரியரா? மணிக்கூட்டு வியாபாரியா? எங்களுக்கு வாத்தியார் வேலை பார்க்கிறாயா? அல்லது மணிக்கூட்டு வியாபாரியாகத் தலையைச் சுற்றுகிறாயா?” மிரட்டும் தொனியில் வந்த இப்படியொரு கேள்வியை அமரசிறியின் வாழ்க்கையில் எந்த மாணவரும் (அவர் ஆசிரியராக இருந்திருந்தால்) கூடக் கேட்டிருக்கவே மாட்டார்கள். அமரசிறி அதிர்ச்சியடைந்து விட்டார். கண்கள் அச்சத்தில் மிரண்டு பிதுங்கின. கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமல் இருந்தவர், மெதுவாக, அனுங்கும் குரலில் தயங்கித் தயங்கிச் சொன்னார், “நான் ஆசிரியர்தான். அதைப்போல மணிக்கூடு வியாபாரியும்தான். ஆசிரியர் வேலை கிடைப்பதற்கு முன்பு, மணிக்கூடு வியாபாரம்தான் செய்தேன். அதை விட்டு விட விரும்பவில்லை. என்னுடைய இளமைக்காலத்தில், வறுமையில் சோறு தந்த தொழில் அது. அதனால், அதை விட்டு விடாமல் சிறிய அளவில் அதைச் செய்து வருகிறேன் என்னை நம்புங்கள். இது சத்தியமான வார்த்தைகள்…“ “நன்றாகத்தான் கதை விடுகிறாய். இதையெல்லாம் நாங்கள் நம்புவதற்கு நாங்கள் என்ன இழிச்சவாயன்களா? இதை நம்புவதற்குத்தான் இயக்கம் கட்டி வைச்சிருக்கிறோமா?” சந்தேகமே ஒரு தீர்ப்பாக மாறிக் கொண்டிருப்பதை அமரசிறி உணர்ந்திருக்க வேண்டும். அதை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பது, அங்கிருந்த விளக்கொளியின் மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது. எல்லாவற்றையும் ஞானச்செல்வன் ஆர்வத்தோடும் சற்றுப் பதறும் உள்ளத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தான். இந்த மாதிரி விசாரணைகளைப் புத்தகங்களில் படித்திருக்கிறான். சில படங்களிலும் பார்த்ததுண்டு. இப்பொழுது அதையெல்லாம் நேரில் பார்ப்பது மட்டுமல்ல, தானும் அதில் ஒருவராக இருப்பது பெருமையாகவும் ஒருவகையான த்ரிலாகவும் இருந்தது. “ஐயா என்னை விட்டு விடுங்கள். நாங்கள் எளியவர்கள். யாருக்கும் தீங்கு நினைக்காதவர்கள். அதுதான் சொன்னேனே, நான் இன, மத, ஜாதி உணர்வே இல்லாதவன் என்று. எனக்கொரு சிறிய குடும்பம் இருக்கு. என்னை நம்பிய மனைவியும் ஒரு சின்ன மகளும். இன்னொரு குழந்தை பிறக்கப்போகிறது… எங்களுக்கு நீங்கள்தான் கருணை தர வேண்டும்… தயவு செய்யுங்கள்…. எங்களுக்கு சொந்தத்தில் கூட ஆதரவில்லை… ” அமரசிறி காலில் விழுந்து மன்றாடினார். விசாரணையாளரின் முகம் மாறியது. ஒரு கணம் யோசித்தார். எழுந்து உள்ளே சென்றார். ஞானச்செல்வன் அமரசிறியைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். அவருடைய முகத்தில் சற்று ஆறுதல் உணர்வு ஏற்படுவதைப்போலத் தெரிந்தது. தன்னுடைய வார்த்தைகள் தன்னைக் காப்பாற்றக் கூடும் என்று அவர் எண்ணியிருக்கலாம். தன்னிடம் ஒப்புதல் வாக்குமூலத்தைக் கோருகிறார்களா? அல்லது தன்னுடைய உண்மைகளை அறிய விரும்புகிறார்களா? என்று புரிந்து கொள்ள முடியாத குழப்பம் அமரசிறிக்கு ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்திருக்கக் கூடும். உண்மைகளைச் சொல்வதற்கே அவர் விரும்பினார். அதையே சொல்ல முடியும். மறைப்பதற்குத் தன்னிடம் எதுவுமே இல்லை என்று எண்ணினார்! ஆனால், எவ்வளவுதான் சொன்னாலும் அவர் சொல்லும் உண்மைகள் சந்தேகிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன. அதை வலுவாக்குவது எப்படி என்று அமரசிறிக்குப் புரியவேயில்லை. எதையும் நிதானமாகச் சிந்திக்கக் கூடிய நிலையில் அந்தச் சூழலும் இருக்கவில்லை. ஆனாலும் தன்னை, தன்னுடைய வார்த்தைகளே – தன்னுடைய சொற்களே – விடுதலை செய்யும். அல்லது தண்டனைக்குள்ளாக்கும் என்று மட்டும் அவருக்குப் புரிந்தது. இரண்டும் எப்படி வேறுபட்டுள்ளன? அதை எப்படி அறிவது என்று புரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். மீண்டும் விசாரணையாளர் அமசிறியின் முன்னே வந்தபோது, அமரசிறியின் கண்களில் ஒரு ஆவல் தொனித்தது. அமைதியாக, சற்று நிதானமாக இருந்தார் விரணையாளர். அமரசிறிக்கு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் கொடுக்கும்படி சொன்னார். ஞானச்செல்வன் உடனேயே தண்ணீரையும் கிண்ணத்தையும் கொண்டு வந்து வார்த்துக் கொடுத்தான். அதை வாங்கி மடமடவென்று குடித்தார் அமரசிறி. இரண்டு கிண்ணங்களைக் குடித்து முடித்த பின், வாயைத் துடைத்துக் கொண்டு நிலத்தைப் பார்த்துக் குனிந்தபடி இருந்தார். நன்றியுணர்சி கண்களில் மின்னியது. அவர் சற்று அமைதியடைந்திருப்பதாக சுவாச மூச்சுக் காட்டியது. அந்த ஒலியைத் தவிர, வேறு சத்தமேதும் சில நொடிகள் அங்கே கேட்கவில்லை. விசாரணையாளர் சட்டெனக் கேட்டார், “நீ இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறாய்?” அமரசிறியின் முகம் அப்படியே கறுத்து உறைந்தது. அந்த மெல்லிய உடல் நடுங்கத் தொடங்கியது. கைகளை எடுத்துக் கும்பிட்டார். வார்த்தைகள் வரவில்லை. கண்ணீரே வடிந்தது. மனிதர்களைக் கும்பிடுவதைப்பற்றி ஞானச்செல்வனுக்கு அவனுடைய தந்தையார் சொல்லும் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. வரவேற்று வணக்கம் சொல்லும்பொழுது கைகளைக் கூப்புவது, பெரியோர்களை வணங்கி மதிப்பளிக்கும்போது கூப்புவது, சபையில் மதிப்புக்காக வணக்கம் செலுத்தும்பொழுது கூப்புவது… ஆனால், இப்படி ஒருநிலையில் மனிதர்களைக் கும்பிடுவதற்குக் கைகளைக் கூப்புவதைப் பற்றித் தந்தை சொன்னதில்லை. கைகளைக் கூப்பியபடியே அமரசிறி சொன்னார்: “ஐயா என்னுடைய சிறிய குடும்பத்தைக் காப்பாற்றுங்கள். நாங்கள் ஆதரவு குறைந்தவர்கள். நான் மீண்டும் சென்றால்தான் என்னுடைய குடும்பம் பாதுகாப்பாக இருக்கும். நான் ஊருக்கே திரும்பிச் சென்று விடுகிறேன். அதற்கு உதவுங்கள். உங்களுக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.. எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த வார்த்தைகள் சத்தியத்தின் வார்த்தைகள்..” விசாரணையாளர் மேலே அண்ணாந்து பார்த்துச் சிரித்தார். அங்கே நின்ற மற்ற இரண்டு போராளிகளும் சிரித்தனர். ஞானச்செல்வனுக்குக் குழப்பமாக இருந்தது. அமரசிறி உண்மையானவரா? அவர் சொல்வதெல்லாம் உண்மைதானா? அல்லது விசாரணையார் சொல்வதைப்போல நம் எல்லோருக்கும் கதை விட்டுக் கொண்டிருக்கிறாரா? விசாரணையாளர் என்ன முடிவை எடுக்கப்போகிறார்? இயக்கம் என்ன தீர்ப்பை வழங்கப் போகிறது? அல்லது அது வேறு ஏதாவது நடவடிக்கையை எடுக்குமா? அமரசிறி விடுதலை செய்யப்பட்டு, வீட்டுக்கே சென்று விடுவாரா? “உனக்கு உன்னுடைய குடும்பம் முக்கியம். எங்களுக்கு எங்களுடைய போராட்டம் முக்கியம். நீ மனைவியின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கிறாய்? நாங்கள் எங்களுடைய இனத்தின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கிறம்? நீ இனம், மதம், மொழி எல்லாத்தையும் மறந்திருக்கிறாய்? ஆனால், உன்ரை குடும்பத்தையும் மனைவியையும் மறக்கவில்லை. நாங்கள், எங்கட குடும்பங்களையும் உறவுகளையும் மறந்திருக்கிறம். ஆனால், இனத்தையும் மண்ணையும் மறக்கவில்லை. அதிகமாக நேசிக்கிறம்… ” இந்தச் சமன்பாட்டைக் கேட்டு, கூடவே இருந்த போராளிகள் மகிழ்ச்சியில் பூரித்தனர். ஞானச்செல்வனுக்குள்ளும் ஒரு நியாய ஒளி பிறந்தது போலவே இருந்தது. விசாரணையாளர் சரியாக – நீதியாகத்தான் நடந்து கொள்கிறார் என்று தோன்றியது. இயக்கம் என்றால் என்ன சும்மாவா? பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளுமா? பொறுப்பில்லாமல் ஒருவருக்கு இப்படியான ஒரு வேலையைக் கொடுக்குமா? 04 ஞானச்செல்வனுக்கு அங்கே கொடுக்கப்பட்ட பணி, அமரசிறிக்கு உணவு, தண்ணீர் போன்றவற்றைக் கொடுப்பதும், அவரைக் கண்காணித்துக் கொள்வதுமாகும். மலசலத்துக்கு அழைத்துக் கொண்டு போய் வருவதற்கு அவனோடு ஜோதி என்ற இன்னொரு போராளியையும் இணைத்து விடப்பட்டது. இவரும்தான் மாறி மாறி அமரசிறியைக் கண்காணித்துக் கொள்ள வேண்டும். அமரசிறியின் அறையில் படுத்துக் கொள்ள வேண்டும். படுத்துக் கொள்ள வேண்டும் என்றால், சேர்ந்து தூங்குவதல்ல. விழிப்பாக – எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜோதிக்குச் சிங்களத்தில் பேசத் தெரியும். மலையகப் பகுதியான நாவலப்பிட்டியிலிருந்து வந்து இயக்கத்தில் சேர்ந்தவன். ஊரிலிருக்கும்போதே சிங்களவர்களுடன் பேசிப் பழகியவன். அமரசிறியிடம் ஜோதிதான் ஏதாவது பேசுவான். அமரசிறியும் ஜோதியிடம்தான் எதையாவது கேட்பார். ஆனால், எல்லாமே அளவோடுதான். தேவையில்லாத பேச்செல்லாம் கிடையாது. இயக்கம் என்றால் கடுமையான கட்டுப்பாடு என்பதைச் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்றில்லை அல்லவா! ஞானச்செல்வன் அமரசிறியைக் கூர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தான். அவனுடைய ஊரிலுள்ள பபூன் சிவம் அண்ணையைப்போன்ற தோற்றம். அண்ணன் தம்பி என்று சொல்லலாம். சிவம் அண்ணை, நாடகங்களிலோ கூத்துகளிலோ பபூனான வரும்போது மட்டுமல்ல, வேலை செய்கிற இடத்தில், கடைத்தெருவில், கள்ளுத் தவறணையில், தேநீர்க்கடையில் என எங்கே இருந்தாலும் கலாய்த்துக் கொண்டிருப்பார். அமரசிறி இங்கே, ஒரு பழைய சிலையைப்போல அமைதியாக உறைந்து போயிருக்கிறார். இரண்டு பேருக்கும் சிறிய வேறுபாடுகள். அதை ஒப்பிட்டுப் பார்த்தான் ஞா.செ. சிவம் அண்ணை சற்றுக் கறுப்பு. அமரசிறி பொது நிறம். சிவம் அண்ணை எப்போதும் சிரித்துப் பம்பலடித்துக் கொண்டிருப்பார். அமரசிறி, முழு அமைதி. சிலவேளை அவருடைய ஊரில், அப்படிப் பகடி கதைக்கும் ஆளாகவும் இருக்கக் கூடும். ஆனால், அப்படித் தெரியவில்லை என்றும் எண்ணிக் கொண்டான். சிவம் அண்ணைக்கு காகக் கருமையில் அடர்த்தியான தலைமுடி. அமரசிறிக்கு முன்வழுக்கை. ஊரில் அதை ஏறுநெற்றி என்பார்கள். இருவருக்கும் உள்ள ஒற்றுமை ஒல்லியான தோற்றமும் யாரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் முகமும். சுருக்கமாகச் சொன்னால், தங்களைக் கவனித்துக் கொள்ளாத, கவனித்துக் கொள்ளத் தெரியாத மனிதர்களைப்போலிருந்தார்கள். ‘இப்படியான ஒராள், எப்படி உளவாளியாக இருக்க முடியும்?‘ ஞானச்செல்வனால் நம்ப முடியாமலிருந்தது. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. உளவாளிகள் எத்தனையோ வேடங்களில் வருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறான். அவன் பார்த்த படங்களில் கூட ஆச்சரியப்படும்படியாக மாறு வேடங்களில் உளவாளிகள் வந்து அதிரடிகளைச் செய்வார்கள். எல்லாவற்றையும் விட இயக்கங்கள் ஒவ்வொன்றும் வகை தொகையில்லாமல் ஏராளம் உளவாளிகளைப் பிடித்து மண்டையில் போட்டிருக்கிறார்கள். அரசாங்கமும் தாராளமாக உளவாளிகளை உருவாக்கி விட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. உளவாளிகளை எப்படியோ இயக்கங்கள் அச்சொட்டாக அடையாளம் கண்டு விடுகின்றன. அதற்கான அறிவும் பயிற்சியும் எப்படித்தான் கிடைத்ததோ தெரியவில்லை. ஞானச்செல்வன் பயற்சி பெற்றபோது அரசினுடைய ஒடுக்குமுறை, இனவாத அரசியல், அதனால் மக்களுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புகள், அரசியல் என்றால் என்ன? விடுதலை அரசியல் எப்படியானது? மக்கள் பணியின் தன்மைகள், உலகப் போராட்டங்கள், போராட்ட இலக்கியங்கள், பற்றியெல்லாம் வகுப்பெடுத்திருக்கிறார்கள். உளவாளிகளைப் பற்றிப் பெரிதாகப் பேசியதில்லை. இப்பொழுது உளவாளிகளைப் பிடித்து விசாரணை செய்து கொண்டிருக்கிறோம். இதெல்லாம் எப்படி நடக்கிறது? என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதைப்பற்றி ஜோதியிடம் கேட்டபோது, “அடேய், போராட்டம் வளர்ந்து கொண்டிருக்கு. அதுக்கேற்ற மாதிரி இந்த மாதிரி விசயங்களிலயும் வளர்ச்சி இருக்கும். நீ ஒரு உயிருக்காக யோசிக்கிறாய்! நாங்கள் நூறுபேரைப் பாதுகாக்க வேணும் தெரியுமா? போராட்டம் என்றால் இப்படித்தான்டா. சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி முடிவு எடுக்க வேண்டியிருக்கும். புத்தகப் படிப்பு வேறு. போராட்ட நடைமுறை வேறு..” என்றான் உறுதியாக. ஜோதியைப் பொறுத்தவரை, இயக்கம் என்ன சொல்கிறதோ, அதைச் செய்வதே தன்னுடைய கடமை – பொறுப்பு என்பதுதான் சரி என்ற எண்ணமுள்ளவன். அது சரியோ, தவறோ, அதற்கெல்லாம் இயக்கமே பொறுப்பு. தான் இயக்கத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவன். அதனுடைய கொள்கையை ஏற்றுக் கொண்டவன். அதற்கு நேர்மையாக விசுவாசமாக இருக்க வேண்டும். தவறினால் தப்பு. அவ்வளவுதான். “பயிற்சி முகாமிலும் இப்போதும் ஒவ்வொரு நாளும் இயக்கத்துக்கும் தலைமைக்கும் விசுவாசமாக இருப்பதாகத்தானே சத்தியப்பிரமாணம் செய்து கொள்கிறோம். பிறகென்னடா உனக்குக் குழப்பம்?” ஜோதி இந்த வார்த்தையோடு இந்தப் பேச்சை முடித்து விட்டான். அதற்குப் பிறகு ஞானச்செல்வன் எதையும் பேசவில்லை. ஜோதியின் இடத்தில் வேறு யாராவது இருந்தால், ஞானச்செல்வனைப்பற்றி, மேலிடத்தில் போட்டுக் கொடுத்து விடுவார்கள். “ஆள் தேவையில்லாமல் குழம்பிற மாதிரி இருக்கு” என்ற இந்த ஒரு வரிச் சேதிபோதும், ஞானச்செல்வத்தை தூர வைத்து விடுவார்கள். ஜோதி அப்படியானவனில்லை. அதை விட ஜோதியின் மீது ஞானச்செல்வத்துக்கு நல்ல பிடிப்புண்டு. ‘சிங்களவர்களும் தமிழர்களும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். அப்படி ஒரே மாதிரி இருக்கிற ஆட்கள் ஏன் இப்படி ஆளாளுக்கு அடிபடுகிறார்கள்?..‘ என்று யோசித்தான். ஊரில சாதி வேறுபாடிருக்கிற மாதிரி, இதுவும் ஒரு வேறுபாடுதான். இதில வெளிப்படையாக அரசியலும் அதிகாரமும் இருக்கிறதால், இப்படி ஆயுதங்களால் மோதிக் கொள்கிறார்கள் போலிருக்கு என்று, தனக்குள்தானே அதற்கு விடையையும் கண்டது மாதிரிச் சொல்லிக் கொண்டான்“. 05 நிறுத்தி விட்டு, என்னைக் கூர்ந்து பார்த்தார் மேகதாஸ். எப்போதா முடிந்து போன, ஏதோ ஒரு விடயத்தை – ஒரு நிகழ்ச்சியை – இப்பொழுது நாங்கள் பேச வேண்டிய, ஆராய வேண்டிய தேவை என்ன? என்று எனக்குப் புரியவில்லை. “போர் முடிந்து விட்டது. போரில் ஈடுபட்டவர்களில் மாண்டவர்கள் போக, மிஞ்சியவர்கள் வேறு வாழ்க்கைக்குச் சென்று விட்டனர். படைக்கலன்கள் காட்சிப் பொருட்களாகி விட்டன. அல்லது எங்கோ துருப்பிடிக்கின்றன. ஆனால், இந்த மாதிரி ஆட்கள்…! “இப்ப நாங்கள்தான் இந்த மாதிரியான ஆட்களையும் அவர்களுடைய பிரச்சினைகளையும் தலையிலே வைக்க வேண்டியிருக்கிறது. பாருங்கள் எவ்வளவு சுமை? உங்களுக்கு ஏதாவது தேவையா? நான் இன்னொரு கோப்பி எடுக்கப்போகிறேன்” என்றார் மேகதாஸ். “எனக்குப் போதும்“ சொல்லி விட்டு மேகதாஸ் சொல்வதைக் கேட்பதற்கு ஆவலாக இருந்தேன். “அமரசிறி எங்கேயோ ஒரு சிங்கள ஊரில் படிப்பிப்பதாகச் சொன்னார். விஞ்ஞான ஆசிரியர். திருமணமாகியவர். மனைவியும் ஒரு மகளும் உண்டு. கர்ப்பவதியாக இருக்கிறார் என்றார். அவ்வளவுதான் ஞானச்செல்வனுக்கு அமரசிறியைப் பற்றி நினைவில் உள்ள விவரங்கள். அந்தப் பயங்கரமான நாட்களில் அமரசிறி யாழ்ப்பாணத்துக்கு வந்தது வீண் காரியம். என்னவொரு முட்டாள்தனமான வேலை? அப்படி வந்தவர் ஏன் எங்கட இயக்கத்தில்தான் மாட்டுப்பட வேணும்? அப்பொழுது எத்தனையோ இயக்கங்கள் இருந்தன. உளவாளிகளைத் தேடிப் பிடிக்கிறதுக்காகவே உருவாக்கப்பட்டதைப்போலச் சில இயக்கங்கள் இருந்தன. எப்படியாவது ஒவ்வொரு நாளும் யாரோ ஒரு உளவாளி கைது செய்யப்பட்டிருப்பதாகச் சொல்வார்கள். அல்லது எங்காவது ஒரு உளவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகச் செய்திகள் வரும். அவனுடைய இயக்கம் இந்தமாதிரியான வேலைகளில் பெரிய ஆர்வமோ, அனுபவமோ சுறுசுறுப்போ கொண்டதில்லை. சரியாகச் சொன்னால், இப்படி இரண்டு மூன்று சம்பவங்கள்தான் அவனுடைய இயக்கத்தில் நடந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறான். ஒன்றேயொன்றை மட்டுமே நேரில் பார்த்திருக்கிறான். அதிலும் அவனும் சம்மந்தப்பட்டதாகி விட்டது. ஞானச்செல்வனால் இன்றும் அதைச் சரியாக யூகிக்க முடியவில்லை. ‘மெய்யாகவே தன்னுடைய நண்பரைச் சந்திப்பதற்காகத்தான் அமரசிறி வந்தாரா?‘ அப்படித்தானே விசாரணையின்போது சொன்னார். ஆனால், அவர் வைத்திருந்த பையில், அவருடைய உடைகளோடு, ஒரு சிறிய நோட்டுப் புத்தகமும் பத்துப்பன்னிரண்டு மணிக்கூடுகளும் இருந்தன. அந்த மணிக்கூடும் அவருடைய மனைவியின் பெயரும்தான் இயக்கத்துக்கு மேலும் சந்தேகத்தை உருவாக்கியது. ஆசிரியர் ஒருத்தர் இப்படி போகக் கடினமான இடத்துக்கு றிஸ்க் எடுத்து, மணிக்கூடுகளைக் கொண்டு வந்து வியாபாரம் செய்வாரா? இந்தக் கோணத்திலிருந்தே சந்தேகம் முளைத்து, தீர்ப்புக்கான பாதை உருவாகியது. அவருடைய நோட்டுப்புத்தகத்தில் சிங்களத்தில் எழுதப்பட்ட ஏதோ சில குறிப்புகளும் ஒன்றிரண்டு கவிதைகளும் எழுதப்பட்டிருந்தன. சிங்களம் தெரிந்த விசு மாஸ்ரரிடம் (அவர்தான் ஞானச்செல்வனுக்குப் பயிற்சி ஆசிரியர்களில் ஒருவராக இருந்தவர். அதனால் அவரை விசு மாஸ்ர் என்று போராளிகள் அழைத்தார்கள்) அதைக் கொடுத்துப் படிக்கச் சொன்னபோது சொன்னார், அந்தக் கவிதைகள் கூட மழைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் நாட்களைப் பற்றி ஒன்றும் மலைகள் உயரும் என ஒன்றும் இருந்ததாம். அமரசிறி தேடிவந்த நண்பரின் விவரத்தை இயக்கம் எடுத்துக் கொண்டு, அந்த நண்பர் யார்? என்று விசாரித்தது, அவர் குறிப்பிட்ட நண்பர் இரண்டு மாதங்களுக்கு முன்பே குடும்பத்தோடு யாழ்ப்பாணத்தை விட்டுப் போய்விட்டதாக அயலில் உள்ளவர்கள் சொன்னார்கள். அப்போது அப்படிப் பல குடும்பங்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தன. அவருடைய பின்னணியை இயக்கம் ஆராய்ந்தபோது, அவரும் ஒரு ஆசிரியர்தான். அதோடு அவர் ஒரு தொழிற்சங்கவாதியும் என்று சொன்னார்கள். ஆனால், ஊரில் மதிப்புள்ளவர் என்று சொல்லப்பட்டது. அதற்கு மேல் இயக்கத்திற்கு அவரைப் பற்றி அறிய வேண்டியிருக்கவில்லை. அந்த நண்பரை எப்படித் தெரியும் என்று அமரசிறியிடம் திரும்பத்திரும்பக் கேட்கப்பட்டபோது. “நாங்க இரண்டு பேரும் ஒன்றாக ஆசிரியப் பணி எடுத்தோம்” என்றார். “அவர்தான் இப்பொழுது இங்கே, யாழ்ப்பாணத்திலேயே இல்லையே!” என்றார் விசாரணையாளர். “அப்படியா? அதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், அவரிடம் முன்பும் வந்து போயிருக்கிறேன். அவருடைய குடும்பத்தினருக்கு என்னை நன்றாகத் தெரியும். இப்பொழுது அவரைப் பார்த்துப் போக வந்திருந்தேன். அவர் இருந்தால் என்னைப் பற்றிச் சொல்லியிருப்பார்” “அவர்களும் இல்லை‘ என்றபோது, அதற்கு மேல் என்ன செய்வதென்று அவருக்குப் புரியவில்லை. தானொரு சிக்கலான பொறியில் மாட்டுப்பட்டு விட்டேன் என்பதை மட்டும் புரிந்து கொண்டார். அமரசிறியின் கண்கள் கலங்கி, ஒளியிழந்தன. அவர் எதையோ சொல்ல முயன்றார். அதற்கிடையில் விசாரணையாளர் சென்று விட்டார். முடிவு அன்றிரவே வந்தது. பொறுப்பாளர் கையசைத்தார். ஒரேயொரு வார்த்தை. ஒரு சொல். ம். அது வெறும் வார்த்தை அல்ல. கட்டளை. அதை நிறைவேற்றுவது கடமை. அதுதான் இயக்கத்தின் நடைமுறை. 00 நள்ளிரவு. இயக்கத்தின் கட்டளையை நிறைவேற்றுவதற்கே அத்தனைபேரும் தயாராக இருக்கிறோம் என்ற உணர்வோடு ஐந்து பேர், அமரசிறியை ஒரு உழவு இயந்திரத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்கள். காட்டு வழியில் உழவு இயந்திரம் போய்க் கொண்டிருந்தது. ஞானச்செல்வனே, அதை ஓட்டினான். பின்னால், இழுவைப் பெட்டியில் அமரசிறியோடிருந்தவர்கள், அவரை எதுவோ எல்லாம் கேட்டார்கள். ஏதேதோ வார்த்தைகள். அது பம்பலான பயணத்தைப்போலிருந்தது. ஆனால், ஆக்ரோஷமான கோபத்தோடுதான் எல்லோரும் இருந்தார்கள். அமரசிறி முனகிக் கொண்டிருந்தார். “எங்களுக்கா கதை விடப்பாக்கிறாய்… பார், எப்படி வந்து மாட்டினாய் என்று… உன்னுடைய தவறுக்காக உன்னுடைய குடும்பத்தையும் இழந்து, இப்ப உன்ரை உயிரையும் விடப்போகிறாய்…நீ எவ்வளவு பொய் சொன்னாலும் உண்மை என்னவென்று எங்களுக்குத் தெரியும்“ என்றான் குமரேஸ். கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்த அமரசிறி, முன்னே குனிந்து அவர்களுடைய காலில் முத்தமிட்டு, எதையோ சொன்னார். இல்லை இல்லை, எதையோ சொல்ல முயன்றார். குரல் எழவேயில்லை. அனுங்கிய தொனி மட்டுமே கேட்டது. தான் ‘அப்படியானவன் இல்லை. உண்மையான ஒரு ஆசிரியர்தான்.. நான் உண்மைச் சொல்கிறேன். நீங்கள் பொய்யை விரும்புகிறீர்கள்‘ என்ற மாதிரி மறுத்துத் தலையை ஆட்டினார். யாரும் அதை நம்பத் தயாராக இருக்கவில்லை. “உளவாளிகள் ஒருபோதும் உண்மையைச் சொல்வதுமில்லை. உண்மையை ஏற்றுக் கொள்வதுமில்லை. அவர்கள் தங்களையும் விட தங்களுடைய உயிரையும் விட தங்கள் எசமானுக்குத்தான் விசுவாசமானவர்கள்..“ என்றான் அருள். “நாங்கள் உயிரைக் கொடுத்துப் போராடுகிறோம். எங்களுக்கென்ன விசரா, அரசாங்கத்தோடயும் ஆமியோடயும் சண்டை பிடிச்சுச் சாவதற்கு? எங்கட சனங்களை கொழும்பிலயும் கண்டியிலயும் உயிரோட எரிச்சதெல்லாம் தெரியுமாடா உனக்கு? அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?“ என்று கேட்டான். அமரசிறி முனகிக் கொண்டேயிருந்தார். எதையும் கேட்கும் நிலையில் அவரில்லை. அவருடைய புலன்கள் எதையும் ஏற்கும் நிலையிலும் இருக்கவில்லை ஏற்கனவே விசாரணையின்போது அவருடைய எலும்புகளில் பாதி உடைந்து விட்டது. கன்னத்தில் விழுந்த அறைகளால் காது ஏற்கனவே செயலிழந்தது போலாகி விட்டிருந்தது. உடல் வீங்கி, கறுப்பும் சிவப்புமான தழும்புகளால் நிறைந்து கிடந்தது. இருக்கவே முடியால் அவதிப்பட்டார். அப்படியே பெட்டியில் மல்லாக்காக விழுந்தார். காலில் ஒருவன் நசித்தான். அந்த உடல் மெல்ல ஆடியது. அந்த இறுதி நிகழ்வு இன்னும் ஞானச்செல்வனின் நெஞ்சில் குத்திக் கொண்டிருக்கிறது. காட்டுக்குள் ஒரு இடத்தில் அமரசிறி மண்டியிட்டிருந்தார். அவர் கண்களில் இருந்து நீர் வழிந்தோடியது. அவர் தன் தாயின் பெயரை முனகினாரா? அல்லது மனைவியின் பெயரைத் தேடினாரா? மகளைத்தான் நினைத்தாரா? ஞானச்செல்வனுக்கு நிச்சயமாக நினைவில்லை. ஆனால் அவர் கண்களில் தவித்துக் கொண்டிருந்த அந்த மொழியற்ற வேண்டுதல், அந்த மனிதாபிமானத்திற்கான மன்றாட்டு… அது தான் இன்றும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. அருள் துப்பாக்கியை உயர்த்தினான். அமரசிறி, தன் மரணத்தை உணர்ந்து, ஒரு பிரார்த்தனை செய்பவரின் அமைதியோடு கண்களை மூடிக்கொண்டார். ஒரு சப்தம். அதுதான் மரணத்தின் முத்திரை. மரணச் அமைதி. மரண அமைதி என்றால், அதுதான் என்பதை ஞானச்செல்வன் முழுதாக அந்தக் கணத்தில்தான் புரிந்து கொண்டான். அதற்காக இயக்கத்துக்கு நன்றி சொல்ல வேண்டும்போல அந்தக் கணத்திலும் அவனுக்குத் தோன்றியது. ஆனாலும் இதென்ன அபத்தம்? என்று தன்னையே கேட்டுக் கொண்டான். யாரும் எதுவும் பேசவில்லை. ஞானச்செல்வனுக்கு எல்லாமே திகிலாக இருந்தது. ஒரு கொலையை, இப்படியான மரணத்தை அன்றுதான் இத்தனை நெருக்கமாகக் கண்களால் பார்த்தான். இதயம் பயங்கர வேகத்தில் அடித்தது. அமரசிறியின் முகத்தில் டோர்ச் லைற்றின் ஒளியைப் பாய்ச்சினான் அருள். நெற்றியிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. கலைந்த தலைமுடியில் இரத்தம் உறைந்து கொண்டிருந்தது. கண்கள் மேல் நோக்கிச் சொருகியிருந்தன. உடல் ஒரு கணம் அசைந்த பின் இனித் துயரும் வலியும் இல்லை என்றமாதிரி அடங்கியது. இருளும் காற்றும் காடும் தவிர, அங்கே வேறு எதுவுமே இல்லை. நட்சத்திரங்கள் கூட இல்லை. மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. விறகு கட்டைகளைப் போட்டு, எண்ணையை ஊற்றி, காவேலையில் தீயை மூட்டிப் பற்ற வைத்தபின் வண்டி புறப்பட்டது. ஞானச்செல்வன் திரும்பிப் பார்க்கவில்லை. ட்ரக்ரை ஓட்டும்போது அந்தத் தீயின் வெம்மை முதுகை ஒரு கணம் தொட்டது. அது விதி. அது போராட்டம். அது அவசியம். இப்படித்தான் அவன் நினைத்தான். 06 போர் முடிந்து, ஞானச்செல்வனும் இராணுவத்தினரிடம் சரணடைந்தபோது அவனுக்கு முன்னே விசாரணைப்புத்தகம் திறக்கப்பட்டது. படையினரைக் கையெடுத்துக் கும்பிட்டான். அந்தக் கணத்தில் அமரசிறியின் முகம் சட்டென மனதில் மின்னலாகத் தோன்றியது. கும்பிட்ட அந்தக் கைகள்.. அவனுடைய உடல் அவனை அறியாமல் நடுங்குவதை உணர்ந்தான். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. ஞானச்செல்வனுக்கும் இயக்கத்துக்குமான தொடர்பு, அவனுடைய கடந்தகாலப் பணிகள், அவன் பங்குபற்றிய தாக்குதல்கள், நடந்த சம்பவங்கள் எனப் பலவற்றையும் விசாரித்தனர். உண்மையும் பொய்யும் கலந்து எதையெல்லாமோ சொன்னான். அமரசிறியைப் பற்றி அவன் எதுவுமே சொல்லவில்லை. அவர்களும் அதைப்பற்றி எதையும் கேட்கவில்லை. அதெல்லாம் அவர்களுக்கு தெரியதல்லவா! அமரசிறியே தன்னை விசாரிப்பதைப்போல ஒரு கணம் தோன்றியது ஞானச்செல்வனுக்கு. இது என்ன விதி? மனதில் ஏற்பட்ட பதட்டத்தினால், உடல் வியர்த்தது. கடுமையாக முயன்று தன்னைக் கட்டுப்படுத்திச் சுதாரித்துக் கொள்வதற்கு முயற்சித்தான். அவனுடைய உடலும் முகமும் மாறியிருப்பதை எதிரே இருந்த விசாரணையாளர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர். எத்தனையோ நாட்கள், எத்தனையோ தடவை, எதையோவெல்லாம் சொல்லி, அந்த விசாரணையை ஒருவாறு முடித்துக் கொண்டான். இரண்டு ஆண்டுகள் தண்டனைக்காலம். அது முடிந்து விடுதலையாகி வந்த பின்பு, இப்பொழுது ஒரு அமைதியான, சாதாரண வாழ்க்கைக்கு மாறினால்… அமரசிறி… ஒருநாள் கொழும்பில், ‘காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம்‘ என்று, அவன் சென்று கொண்டிருந்த தெருவில் ஒரு போராட்ட அணி வழியை மறித்தது. பேருந்திலிருந்து எட்டிப் பார்த்தபோது, பெண்களும் குழந்தைகளும் கூட அதிலிருந்தனர். அன்னையர்களின் தோற்றத்தில் முதிர்ந்த பெண்கள். கவனித்துப் பார்த்தான். அதிகமாகச் சிங்களவர்களாகவே தெரிந்தனர். தமிழ்ப்பகுதிகளிலும் இந்த மாதிரி அடிக்கடி காணாமலாக்கப்பட்டோரின் போராட்டங்கள் நடப்பதுண்டு. அதைப்போலக் கொழும்பிலுமா? ‘இதில் அமரசிறியின் மனைவியும் இருக்கக் கூடுமோ! அமரசிறியை இன்னும் தேடிக் கொண்டிருப்பார்களா? அவருடைய மகளுக்கே இப்பொழுது 40 வயதுக்கு மேலிருக்குமே..! தந்தை எங்கே என்று அவளும் தேடுவாளா?’ அவனுடைய உடல் ஒரு கணம் அப்படியே குளிர்ந்து விட்டது. எங்கேயிருந்து, எப்படி அமரசிறி தன்னைப் பின்தொடர்கிறார் என்று அவனுக்குத் தெரியவே இல்லை. இவ்வளவுக்கும் அமரசிறியைப் பற்றி அதிகமாகச் சிந்தித்தது தானாத்தானிருக்கும் என்று கூட எண்ணினான். அதுதான் தன்னுடைய தவறாக இருக்குமோ? எதையும் அந்தந்தச் சூழலில், அப்படி அப்படியே எடுத்துக் கொண்டு, அதை அங்கேயே விட்டு விட வேண்டும். இப்படித் தூக்கிச் சுமப்பதுதான் பிரச்சினையா? அமரசிறியின் நினைவுகள் திடீரென வந்து கொண்டிருப்பது போய், அந்த நினைவுகளால் மூடப்பட்டு விடுவேனோ என்று பயந்தான் ஞா. செ. யுத்தம் முடிந்து விட்டது. அமரசிறியின் கதை முடிந்து நாற்பது வருடங்கள் கழிந்து விட்டன. ஒரு முள் கிடந்து குத்துவதைப்போல, அமரசிறியின் நினைவுகள் வந்து கொண்டேயிருக்கின்றன. ஏன் அந்த நினைவுகள் வருகின்றன? உண்மையில் அவருடைய கதை இன்னும் முடியவேயில்லையா? அவனுக்கு எதுவுமே புரியவில்லை அமரசிறியின் சம்பவத்துக்குத் தான் மட்டும்தான் பொறுப்பாளியா? அது இயக்கத்தின் பொறுப்பு அல்லவா? இயக்கத்தில் தான் ஒரு உறுப்பினன் மட்டுமே. இயக்கம் இட்ட கட்டளையை நிறைவேற்றும் அணியில் இருந்தேன். அதை மீற முடியாது? மீறினால்…! ‘நான் மட்டும் அமரசிறியைப் பற்றி ஏன் இன்னும் நினைக்க வேண்டியிருக்கிறது? அந்தச் சம்பவத்தோடிருந்தவர்களில் மூன்றுபேர் சாவடைந்து விட்டார்கள். யுத்தம் அவர்களைப் பலியெடுத்து விட்டது. போராட்டம் அவர்களைத் தன்னுள் கொண்டு விட்டது. ஜோதியைப் பற்றித் தகவலே இல்லை. இயக்கம் இன்றில்லை. மிஞ்சியிருக்கும் தனக்கு மட்டும் ஏனிந்த வதை?‘ அவனுக்குப் புரியவேயில்லை. எங்கேயாவது ஒரு சிங்களவரின் குரலைக் கேட்டால், அவனுடைய காதுகளில் அமரசிறியின் கடைசி முனகல் ஒலி கேட்பதைப் போலிருக்கிறது. அமரசிறியை எரித்த இடத்துக்குப் போய்ப் பார்க்கலாமா? என்று கூட ஒரு தூக்கமில்லாத இரவில் யோசித்தான். ஆனால், அதனால் என்ன பயன்? என்று அடுத்த கணமே தோன்றியது. தான் ஒரு கொலையாளியா? அல்லது ஒரு போராளியா? குழப்பத்தின் ஆழக்குழியில் திணறினான். உண்மையிலேயே அமரசிறி உளவாளிதானா? அப்படி உளவாளியாக இருந்தாலும் அதற்கு அந்தத் தண்டனை சரியானதா? அவர் உளவாளி இல்லை என்றால்…? அந்தத் தண்டனை? அந்தத் தீர்ப்பு? ஞானச்செல்வனுக்கு தலை வலித்தது. அமரசிறியினுடைய பிள்ளைகள், மனைவி எல்லாம் என்ன செய்திருப்பார்கள்? இப்பொழுது எங்கே இருப்பார்கள்? அவர் இல்லை என்ற பிறகு ஊரை விட்டு வேறு எங்கேனும் போயிருப்பார்களா? அவர்கள் அமரசிறியை எங்கே எல்லாம் தேடியிருப்பார்கள்? காணாமல் போனார் அல்லது காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் இப்படி எதிலாவது பதிவு செய்திருப்பார்களா? இப்பொழுது அமரசிறியைப் பற்றி என்ன முடிவோடு இருப்பார்கள்? இனிமேல் அவர் வரவே மாட்டார் என்று முடிவெடுத்துக் கொண்டு தங்களுடைய வாழ்க்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்களா? அவருடைய ஊருக்குப் போய்ப் பார்க்கலாம் என்றாலும் அது எந்த ஊர் என்பது அவனுடைய நினைவில் இல்லை. தன்னுடைய ஊரைப் பற்றி அமரசிறி ஏதோ சொல்லியிருந்தார். அதெல்லாம் எப்போதோ மறந்து விட்டது. ஒரு கணவனை, ஒரு தந்தையின் வாழ்க்கையை தான் பறித்து விட்டேன் என்று ஞானச்செல்வன் எண்ணினான். ஒரு ஆசிரியரைக் கொன்று விட்டேன். அந்த மனிதனின் கனவுகள், அன்பு, விருப்பங்கள், பயங்கள்… அனைத்தையும் ஒரே நொடியில் இல்லாமலாக்கி விட்டோம். இல்லையே! அது அன்றைக்குத் தேவையாக இருந்தது. அது தவிர்க்கவே முடியாததாக இருந்தது. அதற்கு நான் மட்டும் பொறுப்பாளி அல்ல. அது இயக்கத்தின் கட்டளை. அதைச் செய்தேன். அதை நான் மட்டும் செய்யவில்லை. அதை இயக்கமாகவே செய்தோம். இயக்கம் இன்று இல்லை. ஆகவே அந்தக் கதையும் அதோடு முடிந்து விட்டது. அமரசிறியின் கதையும் முடிந்து விட்டது. அது ஒரு போராட்டத்திற்காக நடந்தது. அப்படி எத்தனையோ நடந்திருக்கு? இப்படியே மாறி மாறித் தன்னுடைய மனதுக்குள் ஆயிரம் தடவை பெரிய விவாதங்களை எல்லாம் நடத்திப் பார்த்து விட்டான் ஞா. செ. ஆனால், புதிது புதிதாக கேள்விகள் கூர்முனையோடு வந்து குத்திக் கொண்டேயிருக்கின்றன. எத்தனையோ போர்க்களங்களை எதிர்கொண்டவனுக்கு இந்தப் போர்க்களத்தை எதிர்கொள்ள முடியாமலிருந்தது ஆச்சரியந்தான். இயக்கம் என்றால் ஒருவரைக் கொல்வதற்கு அதிகாரம் உண்டா? அந்த அதிகாரத்தை அது எங்கேயிருந்து பெற்றது? எப்படிப் பெற்றது? யார் அதை வழங்கியது? அதைத் தீர்மானிக்கும் பொறிமுறை என்ன? இயக்கம் என்ற பேரில் ஒவ்வொருக்கும் உள்ள பொறுப்புகளும் அதிகாரமும் எப்படி உருவாகியது? இயக்கம் இல்லை என்ற பிறகுதானே இராணுவம் எங்களைக் கைது செய்தது? அதற்குப் பிறகு நடந்த விசாரணைகள், வழங்கப்பட்ட தண்டனை எல்லாமே இயக்கத்தின் பேரில்தானே நடந்தன? அப்படியென்றால் இயக்கம் இன்னும் இருக்கிறதா? நமக்குத் தெரியாமலே இன்னொரு வடிவத்தில் அது உள்ளதாக எல்லோரும் நம்புகிறார்களா? இயக்கம் இல்லாது விட்டாலும் இயக்கத்தின் பேராலான அச்சமும் இந்த மாதிரி வேதனைகளும் நீள்வது ஏன்? இயக்கம் இன்றில்லை என்றாலும் இன்னும் அதனுடைய பொறுப்பேற்றல்கள் மிஞ்சிக்கிடக்கின்றனவா? அரசாங்கமும் அரசியல்வாதிகளும் கூட இயக்கத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இல்லாத இயக்கத்தைப் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? இல்லாத இயக்கத்துக்குத் தடைதான் ஏன்? உலகமெல்லாம் இன்னும் அதற்குத் தடையைப் போட்டிருக்கிறார்களே! ஞானச்செல்வனால் எதையுமே தீர்மானிக்க முடியவில்லை. எல்லாமே குழப்பமாக இருந்தன. எந்தக் குழப்பத்துக்கும் ஒரு தெளிவிருக்கும் என்று சொல்வது நினைவில் வந்தாலும், அவன் தேடிய அளவில் அப்படியொரு தெளிவைக் காண முடியவில்லை. ஞானச்செல்வன், தன் கைகளைப் பார்த்தான். இந்தக் கைகள்தான் துப்பாக்கியைப் பிடித்தன. இந்தக் கைகள்தான் இன்று மகளுக்கு சாப்பாடு பரிமாறுகின்றன. மனைவியைத் தழுவி அணைக்கின்றன. இந்த இரண்டு கைகளும் ஒரே மனிதனுடையவைதான் என்பதை அவனால் ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருந்தது. தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கு ஒருவரும் இல்லை. அது தன்னுடைய குற்றம்தானா? தான்தான் இப்படி எண்ணித் தவறாக குழம்பிக் கொண்டிருக்கிறேனா? இயக்கம் இப்போது ஒரு கனவு. அதனுடைய நடவடிக்கைகளும் கனவாகி விட்டன. அது முடிந்துபோன கனவா? முடியாத கனவா? ‘மிஞ்சிய நான்…’ இதையெல்லாம் தன்னுடைய மனைவியோ அல்லது மகளோ புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று அவன் நினைத்தான். அதை விட, அவர்களுக்கு இதையெல்லாம் சொன்னால், குடும்பத்தின் பிரச்சினைகள், குழப்பங்கள் உருவாகி, வீடே – குடும்பமே சிதைந்து விடுக்கூடும் என்ற கவலை ஏற்பட்டது. அன்று கொழும்பில் பேருந்திலிருந்து இறங்கி அமரசிறியின் மனைவியை அல்லது பிள்ளையைத் தேடியிருக்கலாமோ என்றுகூட ஒரு எண்ணம் வந்தது. ஆனால், அதுதேவையில்லாத பல பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடும். அதைச் செய்ய முடியாது. “உங்கள் மகனை, உங்கள் கணவனை, உங்கள் தந்தையை நாம் கொன்று விட்டோம்” என்று சொல்ல முடியுமா? அது மன்னிப்புக்கு மாறாக மேலும் பிரச்சினையைத்தான் தரும். முடிவற்ற வலியைத்தான் தரும். அவர்களை எப்போதாவது சந்திக்க நேர்ந்தாலும் நான் உண்மையைச் சொல்லவே முடியாதா? இதை எண்ணும்போது அவனால் தாங்கவே முடியவில்லை. எல்லாப் பக்கமும் இருளால் சூழப்பட்டதைப்போல மயக்கம் வந்தது. அமரசிறி ஒரு பெயரில்லாதபுள்ளியாக, போரின் புள்ளிவிவரங்களில் மறைந்துவிட்டார் என்று நம்பியதெல்லாம் பொய்யாகி விட்டதாகத் தோன்றியது அவனுக்கு. ஒன்றுமே மறையவில்லை. எல்லாம் அதனதன் இடத்தில் அப்படியேதான் உள்ளன. அணைக்கப்படாத நெருப்பாக. உள்ளே தணலைக் கொண்டு, சாம்பலின்மேலே நடக்கிறோம் என்று எண்ணினான். அப்படியே பின்னிரவில் தூங்கிப்போனான். 07 ஒரு ஞாயிற்றுக் கிழமை. “வெளியே எங்காவது போகலாமா அப்பா” என்று ஞானச்செல்வனைக் கேட்டாள் மகள். ”ம்… போகலாம்… நீயே சொல், எங்கே போகலாம் என்று” “என்னுடன் வாருங்கள்” தந்தையை அழைத்துக் கொண்டு அவள் வெளியே சென்றாள். கோவில் வீதியில் நடந்து, கடற்கரை முக்கில் திரும்பியபோது, மகள் கேட்டாள், “என்னப்பா ஆச்சு உங்களுக்கு? கொஞ்ச நாளாக ஒரு மாதிரியாக இருக்கிறீங்கள்? உடம்புக்கு ஏதாவது..?” “நானும் இதைக் கேட்கத்தான் இருந்தேன். ஒழுங்காகச் சாப்பிடுவதுமில்லை. சரியாகப் பேசுவதும் இல்லை. என்ன பிரச்சினை?..” என்றாள் மனைவியும். கடற்கரைக்கு மறுபக்கமாக இருந்த விளையாட்டரங்கில் இளைஞர்கள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். ‘கவலையில்லாத மனிதர்கள். அப்போது இந்த வயதில் நான்…’ ஞானச்செல்வன் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். ‘அந்த வயதில் நடந்தவைதானே இந்த வயதில் முள்ளாகி நிற்கின்றன..‘ “என்னப்பா… என்னாச்சு உங்களுக்கு?” மகள் அருநிலா ஞானச்செல்வனிடம் மீண்டும் கேட்டாள். ஞானச்செல்வன் அருநிலாவைப் பார்த்தான். அமரசிறியே கண்ணில் தெரிந்தார். ‘அமரசிறியின் மகள் எப்படியிருக்கிறாளோ? அவளுடைய வாழ்க்கை? சிலேனுக்கு என்ன நடந்தது? அவள் தன்னுடைய கணவனைத் தேடி எத்தனை நாட்கள் காத்திருப்பாள்? எத்தனை இரவுகள் அமைதியின்றி கழித்திருப்பாள்?’ ஞானச்செல்வன் தனக்குள் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். ‘நீ அவனை மட்டும் கொல்லவில்லை. ஒரு தாயின் நம்பிக்கையைக் கொன்றாய். ஒரு குழந்தையின் விதியை மாற்றிவிட்டாய்..’. கண்களில் நீர் திரண்டது. தந்தையின் கண்களிலிருந்து நீர் வடிவதை, தந்தை ஏதோ ஆழ்ந்த துயரத்தில் இருப்பதைக் கண்டு அருநிலா குழம்பி விட்டாள். பதறி, “என்னாச்சு அப்பா? சொல்லுங்கோ, என்ன நடந்தது? உடம்புக்கு ஏதாவது… ப்ளீஸ் அப்பா.. டொக்ரைப் பார்க்கலாமா?..“ பதறியபடி ஞானச்செல்வனின் கைகளைப் பிடித்தாள். அவனுடைய உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்ததும் அருநிலாவுக்கும் மனைவிக்கும் மேலும் பதட்டமாகி விட்டது. 00 ஞானச்செல்வனுக்கு உடலில் எந்த நோயும் இல்லை என்று சொன்னார் டொக்ரர். “இல்லை டொக்ரர், அப்பா முந்திய மாதிரி இல்லை. சரியாகச் சாப்பிடுகிறாரில்லை. சரியாகப் பேசுகிறாரில்லை. ஒழுங்காகத் தூங்குவது கூட இல்லை. முழுமையாகவே மாறிவிட்டார்… எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. நீங்கள்தான் அப்பாவை நோர்மலுக்குக் கொண்டு வரவேணும் டொக்ரர்… ப்ளீஸ்..” அழுதாள் அருநிலா. ஞானச்செல்வனுக்கு என்னவெல்லாம் நடக்கிறது மனைவிக்குப் புரியவில்லை. “பார்க்கலாம். கவலைப்பட வேண்டாம்“ என்று சொல்லி அனுப்பினார் டொக்ரர். அவருக்கும் குழப்பமாகவே இருந்தது. நிலைமையில் பெரிய மாற்றமோ முன்னேற்றமோ ஏற்படவில்லை. சில நாட்கள் வலு உற்சாகமாக இருப்பான் ஞானச்செல்வன். சந்தைக்குப் போய் வருவான். வளவில் இருக்கும் வேலைகளைச் செய்வான். நண்பர்களோடு சிரித்துப் பம்பலடித்துக் கதைப்பான். வீட்டில் சமையல் செய்து நண்பர்களை அழைத்து விருந்து கொண்டாடுவான். ஒழுங்காக வேலைக்குப் போவான். உற்சாகச் சென்று குளத்தில் நீச்சலடிப்பான். பூமரங்களை ஒழுங்காக வெட்டி நீரூற்றிப் பராமரிப்பான். இருந்தாற்போல எல்லாமே குழம்பி, ஸ்தம்பித்து விடும். யாரோடும் பேச மாட்டன். எதைப் பற்றிக் கேட்டாலும் ஒன்றில் எரிச்சலோடு சினந்து விழுவான். அல்லது அறையைப் பூட்டிக் கொண்டு பேசாமல் படுத்து விடுவான். இதுதான் ஆகப் பெரிய பிரச்சினை. அறையைப் பூட்டிக் கொண்டு படுத்தான் என்றால், இரண்டு மூன்று நாட்களுக்குத் திறக்கவே மாட்டான். உண்மையில் இதைப் பார்த்து மனைவியும் மகள் அருநிலாவும் நன்றாகப் பயந்தே விட்டார்கள். ஒருநாள் ஞானச்செல்வனை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றாள் அருநிலா. ஞானச்செல்வன் கோயிலுக்கே செல்வதில்லை. இயக்கத்திலிருந்தபோதே அந்தப் பழக்கம் விட்டுப் போனது. பழக்கம் விட்டுப்போனதென்ன, இயக்கத்திலிருக்கும்போது கடவுளே விட்டுப் போய் விட்டார். “கடவுளை நீங்கள் கைவிட்டதால்தானே இந்தளவு பிரச்சினைகளும்… இனியாவது கோயிலுக்கு வந்து கடவுளைக் கும்பிடுங்கோ…” என்று சினந்தாள் மனைவி. அவள் சினந்துதான் அப்படிச் சொன்னாளா? தன்மீதான கரிசனையினால்தான் சொன்னாளா என்று ஞானச்செல்வனுக்குப் புரியவில்லை. எப்படிச் சொன்னால்தான் என்ன? எதையும் ஏற்கவோ விடவோ கூடிய நிலையில் அவனில்லை. அவனைப் பொறுத்தவரையில் போன கடவுள் போனதுதான். கோயில் என்பதென்பதெல்லாம் நம்மைத் தேற்றிக் கொள்வதற்கான ஓரிடம். அவ்வளவுதான். ஆனாலும் மகளுடைய, மனைவியினுடைய விருப்பத்தை மறுக்கவில்லை. அவளுக்காகச் செல்வோம் என்று சென்றான். ஞானச்செல்வனால் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. தான் வெளியே ஓரிடத்தில் நிற்பதாகச் சொல்லி, நின்று கொண்டான். தான் செய்த பாவம், தான் ஏற்றுக்கொள்ளும் தண்டனை, கோவிலுக்கு வெளியேதான் இருக்கிறது. அது தன்னோடு நிழலாகவும் நெருப்பாகவும் தொடருகிறது. அது தீராத வரைக்கும், அதைத் தீர்க்காத வரைக்கும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் வாழும் ஒரு நரகம் என்று பட்டது. நான்காவது மாதம் என்னிடம் அழைத்து வரப்பட்டான் ஞானச்செல்வன்“ என்று சொல்லி நிறுத்தினார் மேகதாஸ். நான் எதுவும் பேசாமல், பேசமுடியாமல் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மேகதாஸ் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். கண்களைத் திருப்பி மேகதாஸைப் பார்த்தபோது அவர் கடலைப் பார்த்தார். நாங்கள் சில நிமிடங்கள் எதையும் பேச முடியாமல் இருந்தோம். மழை விட்டிருந்தது. வண்டிகளும் சனங்களும் விரைந்து கொண்டிருந்தனர். “நாங்கள் போகலாமா?” என்று கேட்டார் மேகதாஸ். இருவருமாக காரில் ஏறினோம். கடற்கரைச் சாலையில் வண்டி போய்க்கொண்டிருந்தது. என்னிடம் ஏராளம் கேள்விகள் இருந்தன. ஆனால், ஒன்றைக் கூட கேட்க நான் விரும்பவில்லை. எல்லாவற்றையும் அவர் சொல்லி முடிக்கட்டும் என்று அமைதியாகவே இருந்தேன். “ஞானச்செல்வனின் கதை முழுவதும் வெளியான பிறகு, சொன்னேன்: “நீங்கள் ஒரு கொலையாளி என்று உங்களை எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் சொல்லும் கதையே, உங்களுக்குள் இன்னொரு மனிதன் இருப்பதைச் சொல்கிறது. அது ஒரு இன்னொரு மனிதன், அந்த நொடியிலும் வருத்தப்பட்டவன். இப்பொழுதும் வருத்தப்படுகின்றவன். இவ்வளவு காலத்துக்குப் பிறகும் அமரசிறியை, அவருடைய மனைவியின் பெயரை நினைவில் வைத்திருப்பவன் யார்? நிச்சயமாக ஒரு கொடூரமான கொலையாளி அதைச் செய்ய மாட்டான். அவன் மறந்துவிடுவான். நீங்கள் நினைவில் வைத்திருப்பது உங்களுடைய உயர்ந்த குணமாகும். இந்த உயர்ந்த குணத்திற்காக நீங்கள் மகிழ்ச்சியடையலாம்…. ஆனால் அந்த நினைவு உங்களின் சிறைச்சாலையாகிவிட்டது. அதிலிருந்து நீங்கள் மீள வேணும்….“ ஞானச்செல்வன் நிமிர்ந்து என்னைப் பார்த்தான். இதுவரை அவன் இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கவில்லைப் போலும். “நீங்கள் செய்த செயல்…” நான் சற்று நிறுத்தி அவனைப் பார்த்தேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். “உங்களுக்கு என்ன வேதனை என்றால், உங்களால் ஆரம்பத்திலிருந்தே அமரசிறியின் கைதையும் விசாரணையையும் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் ஏற்றுக்கொள்வதில் ஏதோ ஒரு தயக்கம் இருந்திருக்கிறது. உங்களால் அந்தச் சூழலில் எதையும் தீர்மானிக்க முடியாமல் போய் விட்டது. நீங்கள் அப்பொழுது ஒரு முதிராத இளைஞன், ஒரு கருத்தியலில் மூழ்கி, ஒரு அமைப்பின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, செயற்பட வேண்டிய ஒரு வாழ்க்கையைத் தேர்வு செய்தவர். அந்த இளைஞனும் நீங்கள்தான். அந்த இளைஞனின் அன்றைய வாழ்க்கையும் உங்களுடையதுதான். ஆனால் அவன் மட்டும் நீங்கள் அல்ல. இப்போதுள்ள நீங்களும் நீங்கள்தான்” ஞானச்செல்வன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் ஒரு முழு வாழ்நாளின் சோர்வு இருந்தது. அந்தச் சோர்வை வெளியேற்ற வேண்டும் என்று விரும்பினேன். “இதோ பாருங்கள் ஞானச்செல்வன், ஒரு படையினனை அல்லது அரச அதிகாரியை எடுத்துக் கொள்வோம். அவர் தன்னுடைய கடமையைத்தான் செய்ய வேண்டும். அவருக்கு முக்கியமானது ரூஸ்ல் அன்ட் றெகுலேஸன்ஸ். அதை அவரால் மீற முடியாது. அப்படி மீறினால் அது அந்த நிர்வாக ஒழுங்குக்கும் அவற்றின் நடைமுறைக்கும் தவறாகும். சில சந்தர்ப்பங்களில் ரூஸ்ல் அன்ட் றெகுலேஸனுக்கு அப்பால் மனிதாபிமானத்துடன் ஏதாவது செய்யலாம். அது விதிவிலக்கு. கட்டளையும் கடமையும் அமைப்புகளில் தவிர்க்க முடியாதவை. நீங்கள் செய்தது அதுதான். அரசு, அமைப்புகள் எல்லாம் தாங்கள் கொண்டிருக்கும் விதியையே சரியென வலியுறுத்தும். நீங்கள் அமைப்பின்றின் பிரதிநிதியாக – உறுப்பினராக இருந்திருக்கிறீர்கள். அங்கே நீங்கள் சுயமாகச் செயற்படவோ தனித்துத் தீர்மானம் எடுக்கவோ முடியாது… அமைப்பின் தீர்மானமாகவே எதையும் செய்யலாம். இதைப் புரிந்து கொள்ளுங்கள். அன்று நீங்கள் அமரசிறியைத் தப்பிச் செல்ல விட்டிருந்தால், உங்களுக்கு அமரசிறியின் தண்டனையே வழங்கப்பட்டிருக்கும்…“ ஞானச்செல்வன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். இதைப் பற்றி அவன் சிந்திக்க வேண்டும் என்பதற்காக “சற்றுப் பொறுத்திருங்கள். நான் கொஞ்சம் வெளியே சென்று வர வேண்டும்” சொல்லிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினேன். அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தபோது ஞானச்செல்வன் எதையோ எழுதிக்கொண்டிருந்தான். நான் எதுவும் பேசாமல் என்னுடைய வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் எழுதுவதை நிறுத்தி, சற்று அமைதியாக இருந்த பின் சொன்னான்: “அது பிசாசின் வேலைதான் டொக்ரர். ஒரு மனிதன் எப்படி இன்னொரு மனிதனை…கையில் ஆயுதம் இல்லாத ஒருவனை… ஒரு தந்தையை… ஒரு கணவனை… ஒரு வகுப்பறையில் சமன்பாடுகளைக் கற்பித்திருக்கக் கூடிய ஆசிரியரை… அப்படி ஒரு காட்டில் நிறுத்தி…” அவனுடைய குரல் தழுதழுத்தது. “அது மனிதன் அல்ல. அது மனிதனுக்குள் மறைந்து கிடக்கும் ஒரு பிசாசு. அந்தப் பிசாசுதான் அன்று என் உடலில் நுழைந்து, என் மனதைக் கல்லாக்கி, கைகளைக் கட்டுப்படுத்தி… அது நான் அல்ல” அவன் தன் கைகளை வெறுப்புடன் பார்த்தான். “இந்தக் கைகள்… இவை என்னுடையவை அல்ல. அந்த நாளில், அவை ஒரு பிசாசுக்கு சொந்தமானவை. ஆனால் இன்று… இன்று இவை என்னுடையவை. இந்தக் கைகள்தான் என் மகளுக்கு உணவு பரிமாறுகின்றன. இந்தக் கைகள்தான் என் மனைவியின் கையைப் பிடிக்கின்றன. இந்தக் கைகளே அமரசிறியின் உயிரையும் எடுத்தன. எப்படி? ஒரே சோடிக் கைகள்…இப்படியெல்லாம்? எப்படி இரண்டு முற்றிலும் மாறான உலகங்களை நான் தொட முடியும்?” நான் அவனையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். நீரின் ஆழத்துள் தத்தளித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அவனை மீட்டு விடலாம். “அமரசிறிக்கு நொடிநேர வேதனையும் வலியும் துக்கமும். எனக்கோ வாழ்நாள் வலி… அதை நான் அனுபவிக்க விரும்புகிறேன் டொக்ரர்.” ஞானச்செல்வனின் வார்த்தைகள், அறையில் ஒரு பிரார்த்தனை போல், ஒரு சாபத்தின் வலியைப் போல் ஒலித்தன. அவன் அழுதான். அது ஒரு ஆணின் மெல்லிய, உடைந்த அழுகை. மனிதாபிமானத்தின் அஸ்திவாரங்கள் உடைந்து போகும்போது எழும் ஒலி. “அழுதும் இந்த வலியை என்னால் போக்க முடியவில்லை” என்று முனகினான். அவனது தோள்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. நான் எழுந்து சென்று அவனுடைய தோள்களை ஆதரவாகத் தடவினேன். அவன், தன்னுடைய தலையை என்னுடைய இடுப்பில் சாய்த்துக் கொண்டு விம்பி அழத் தொடங்கினான். “கண்ணீர் ஒரு ஆறு டொக்ரர். ஆனால் என் குற்ற உணர்ச்சி ஒரு கடல். அது என் கண்ணீர் ஆறுகளை எல்லாம் விழுங்கி விடுகிறது. அவை அங்கே மோதி, கரைந்து, மறைந்து போகின்றன” குலுங்கிக் குலுங்கி அழுதான். நான் மௌனமாக இருந்தேன். சில நேரங்களில், வார்த்தைகள் ஒரு பரிவான பட்டுத்துணியைப் போல் தோன்றும், ஒரு ஆழமான காயத்தை இதமாக மூட முயலும். ஆனால் இன்று, வார்த்தைகள் மிகவும் சிறியவையாக, சிறிய காற்றுக்கும் பறந்து விடக் கூடிய துகள்களைப்போல இருந்தன. நான் வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தேன். ஞானச்செல்வனின் வேதனைக்கு ஒரு சாட்சியாக, ஆறுதலாக இருப்பதே ஒரே சிகிச்சையாக இருந்தது. வேதனையின் ஆழத்திலில் கொதித்துக் கொண்டேயிருந்த உண்மை வெளிப்பட்டு மெதுவாகப் பாய முற்படுகிறது. “எனக்கு கடவுளின் மீது நம்பிக்கை இல்லை. ஆனால், இயற்கையின் மீதும் மனிதர்களின் மீதும் நம்பிக்கை உண்டு. எல்லையற்ற அன்புண்டு. ஆனால், அதைப் பொய்யாக்கி விட்டது என்னுடைய வாழ்க்கை. நான் ஒரு மனிதனையே நம்பவில்லை என்றால்… அதற்கு என்ன அர்த்தம். பல லட்சம் பேரின்மீது, என்னுடைய இனத்தின் மீது எல்லையற்ற அன்பு வைத்திருப்பதாக நம்பிய நான், இன்னொரு மனிதனின் மீது நம்பிக்கை வைக்க முடியாமல் போனது ஏன்? அவன் வேறு இனத்தவன் என்ற ஒரே காரணம்தானா? அந்த ஒரு காரணம், ஒருவனுக்கு மரணத்தைக் கொடுக்கக்கூடிய அளவுக்கு உள்ளதா? இதுதான் எனக்கு விளங்கவே இல்லை. அப்படியென்றால், எது உண்மையான அன்பு.? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. முன்பு புரிந்தவை, சரியாகத் தெரிந்தவை எல்லாம் ஏன் இப்பொழுது குழப்பமாக இருக்கின்றன? என்னில் தவறா? அல்லது காலத்தால், நிலைமை மாற்றங்களால் ஏற்பட்ட சூழலின் விளைவா? ப்ளீஸ்.. டொக்ர். இதற்கொரு பதில் சொல்லுங்கள்…” அவனுடைய குரல் வறண்டு, வெறுமையாக இருந்தது. “நான் கடவுளின் குழந்தையாக இருந்திருந்தால்… அப்படிப் பிசாசின் வேலையைச் செய்திருக்க மாட்டேன்” நான் மெல்லச் சிரித்தேன். ”நீங்கள் கடவுளை நம்பவில்லை என்றால், பிசாசையும் நம்ப முடியாது. ஒன்று இல்லை என்றால் மற்றதும் இல்லை. ஒன்றிருந்தால், மற்றதும் உண்டு. அப்படியென்றால், என்னதான் உங்களுக்குள் இருந்தது என்கிறீர்கள்? அப்படித்தானே! அதுதான் அமைப்பு – இயக்கம், அதனுடைய கொள்கை, கோட்பாடு, அது விதித்த விதிமுறை என்று சொன்னேனே! அது உங்களுடைய இயக்கத்திற்குள் மட்டுமல்ல, எந்த அமைப்புக்குள்ளும் இருக்கும். அரசுக்குள்ளும் அது உள்ளது. அதைத்தான் அதிகாரம் என்று சொல்கிறோம். உங்களுக்குள் இருந்தது, நீங்கள் இருந்த அமைப்பின் அதிகாரம். அது அன்று கடவுளாக இருந்தது. இப்பொழுது அது உங்களுக்குப் பிசாசாகத் தெரிகிறது. அதிகாரம்தான் கடவுள், அதுதான் பிசாசும். ஒரு படைச் சிப்பாயை எடுத்துக் கொள்ளுங்கள் ஞானச்செல்வன். அவனுடைய வீட்டில் அவன் ஒரு தாய்க்கு மகன். மனைவிக்கு கணவன். பிள்ளைகள் இருந்தால் தந்தை. ஆனால், படையில் இருக்கும்போது அவன் இதெல்லாம் இல்லை. அவன் படையின் ஆள். படை விதிக்கும் கட்டளையை அவன் நிறைவேற்ற வேண்டும். படைக்கு அரசு உத்தரவிடும். அப்பொழுது அவன் அரசின் கட்டளையை நிறைவேற்றும் கருவி. அதை மறுக்க முடியாது. அப்பொழுது உங்களுக்கு அவன் ஒரு எதிரியாக மாறி விடுகிறான். கொலையாளியாகவும் மாறுகிறான். ஆனால், படைத்தரப்பும் அரசும் அவனை வீரனாகவே கருதும். நீங்கள் அவனைக் கொலையாளியாகப் பார்ப்பீர்கள். இங்கே எது உண்மை? இரண்டும் உண்மை அல்லவா! ஒரு மனிதர் இருக்கும் சூழல்தான் அவரை, அவருடைய அடையாளத்தை மாற்றுகிறது… புரிகிறதா?“ என்னையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான் ஞானச்செல்வன். திடீரென எழுந்து மேசையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப்போத்தலில் இருந்து நீரை ஊற்றி, இரண்டு குவளை நீரைக் குடித்தான். குடித்த பின்னும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன. கண்களைத் துடைத்துக்கொண்டு, வெளியே எங்கோ, எதையோ வெறித்துப் பார்த்தான். அது பார்வையல்ல. ஆழ்ந்த யோசனை? அதற்குள் ஆயிரம் எண்ணவோட்டங்களிருக்கும். குழப்பங்களின் விளைநிலமாக இருக்கிறான். இது தெளியும்போது அவனுடைய மனதில் ஒரு அழகான புன்னகை மலர் பூக்கும். நான் தேநீரை இருவருக்குமாகத் தயாரித்துக் கொண்டு அவனைக் கூர்ந்து பார்த்தேன். காற்று மெதுவாக வீசி, திரையை அசைத்தது. திரை விலக, ஜன்னலின் வழியே ஊடுருவிய வெளிச்சம் அவனுடைய பாதி முகத்தில் விழுந்தது. அவனது கண்களில் ஒரு வெறித்தனமான நம்பிக்கையின்மை மின்னியது. தேநீரை அவனிடம் கொடுத்துக் கொண்டு சொன்னேன்: “நீங்கள் உங்களை இரண்டாகப் பிரித்துக் கொள்கிறீர்கள். ‘அன்றைய ஞானச்செல்வன் வேறு. ‘இன்றைய ஞானச்செல்வன் வேறு. அன்று நீங்கள் அமைப்பொன்றின் கருவி. இன்று நீங்கள் ஒரு தந்தை, ஒரு கணவன். ஆனால் உண்மையில்… இரண்டும் நீங்கள்தான்” “அப்படியென்றால், நான் என்ன? ஒரு மனிதனா? அல்லது…?” ஞானச்செல்வனின் குரலில் ஒரு வேண்டுதல், கேள்வி, குழப்பத்திலிருந்து தெளிய வேணும் என்ற ஆவல் இருந்தது. “அன்று நீங்கள் அமைப்பொன்றின் கருவி. மன்னிக்கவும். அமைப்பில் உங்களுடைய பெயர் என்ன?..” “திருஞானம் என்ற என்னுடைய வகுப்பு ஆசிரியரின் பெயரைச் சுருக்கி, திரு என்று வைத்தேன்” நான் மேலும் கீழுமாகத் தலையை அசைத்து அதை ஏற்றேன். “டொக்ரர், இதுதான் எனக்கு ஆகப் பெரிய வேதனையும் அவமானமாகவும் இருக்கு. பயிற்சி முகாமில் உங்களுக்கு விருப்பமான பெயரைச் சொல்லுங்கள் என்றார்கள். நான் என்னுடைய வகுப்பு ஆசிரியரின் பெயரைச் சொன்னேன். அவர் எனக்கு மிக விருப்பமானவர். அந்தப் பெயரை வைத்துக் கொண்டு இப்படியொரு வேலையைச் செய்திருக்கிறேன் என்றால்…. ச்சீ…!” “ஆனால், நீங்கள் இப்பொழுது?” – கேட்டு, நிறுத்தினேன். ஞானச்செல்வன் என்னை ஊடுருவிப்பார்த்தான். அந்தப் பார்வையை நீங்கள் எளிதில் எதிர்கொள்ள முடியாது. அத்தனை உக்கிரமாக இருந்தது. “ஒரு மனிதனுக்குள்… ” என்று மென்மையாகவும் உறுதியாகவும் தொடர்ந்து சொன்னேன். “அதாவது, மனிதனுக்குள்ளேயே மிகச் சிறந்ததும் மிகக் கீழானதும் உள்ளது. நம் அனைவருக்குள்ளுமே இது உண்டு. பிசாசு வெளியில் இருந்து வருவதில்லை. அது நமக்கு உள்ளேயே இருக்கிறது. கடவுளும் நமக்குள்தான் இருக்கிறார். இரண்டுக்கும் ஒவ்வொரு குணம். ஒவ்வொரு இயல்பு. நாம் அவற்றுக்கு ஏதோ ஒரு பெயரை இட்டுக் கொள்கிறோம். கொள்கை, கோட்பாடு, அமைப்பு, கடவுள், பிசாசு… நம்முடைய பயம், கோபம், தீவிரவாதம், நம்பிக்கை, அன்பு, கருணை, எதிர்பார்ப்பு, விருப்பம்… ஆசை ஆகியவற்றில் இருந்துதான் இரண்டும் பிறக்கின்றன. நீங்கள் சொல்லும் அந்தப் பிசாசை அன்று வென்றுவிட்டீர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் இன்று, அதனோடு போராடுகிறீர்கள். அந்தப் போராட்டமே, நீங்கள் ஒரு மனிதன் என்பதற்கான சான்று.” “கடவுள்?” ஞானச்செல்வன் கேட்டான். அவனுடைய குரலில் ஒரு ஆர்வம் துடித்தது. எனக்கு உற்சாகம் ஏற்படத் தொடங்கியது. இனி ஞானச்செல்வனோடு உரையாடலாம். பாதை திறந்து விட்டது. “கடவுள்…” சிரித்தேன். “ஒருவேளை, கடவுள் என்ற நம்பிக்கை நம்மை, நமது சொந்த தேர்வுகளுக்கு ஆளாக்குகிறது. நாம் தவறு செய்யாமல் தடுக்க முயற்சிக்கிறது. சிலவேளை ஏதோ ஒரு வகையில் அதுவே அனுமதிக்கிறது. பிறகு, அந்தத் தவறுக்குப் பிராயச்சித்தமாக மன்னிப்பைக் கடவுளிடம் கோருகிறோம். அந்த நம்பிக்கையிடம் மன்றாட்டத்தைச் சமர்ப்பிக்கிறோம். அந்த நம்பிக்கைதான் நம்மை குற்றத்திலிருந்தும் குற்றவுணர்விலிருந்தும் விடுவிக்கிறது. ஆனால் அது நமக்கு வழங்கும் மெய்யான பரிசு, மனச் சான்று ஒன்றுதான். அந்த மனச் சான்றின் வலிதான் உங்கள் தண்டனை. ஆனால் அதுவே, உங்கள் மனிதத்தன்மையையும் நிரூபிக்கிறது. ஒரு பிசாசுக்கு – எதிர்நம்பிக்கைக்கு மனச் சான்று இருக்காது. உங்களுக்கு இருக்கிறது. அதனால்தான் நீங்கள் இங்கே, இந்த வேதனையில், அமர்ந்திருக்கிறீர்கள்” ஞானச்செல்வன் மெல்லத் தலையை அசைத்தான். அவனுடைய கண்களில் ஒரு சிறி தீப்பொறி பற்றியது. அவனது நம்பிக்கையின்மை முழுமையான இருள் அல்ல. அது ஒரு வெறுமையான வானம். அந்த வெறுமையில், ஒரு நட்சத்திரம் மின்னியது மனச் சான்றாக. “நான்… நான் இந்த வலியை அனுபவிக்க வேண்டும்” என்று ஞானச்செல்வன் சொன்னான். ஆனால் இப்போது அதில் ஒரு வகையான மரியாதை இருந்தது. “இது என் சாவுக்குரிய தண்டனை. ஆமாம், அமரசிறி ஒரு நொடியில் செத்தார். ஆனால் அவர் ஒவ்வொரு நாளும், என் நினைவுகளில் மீண்டும் பிறக்கிறார். அவர் வாழ்கிறார். நான்தான்… நான் தினசரி சாகிறேன். ஒவ்வொரு நாளும் ஒரு மரணம். மரணத்தினால்தான் இந்த மரணத்தை வெல்ல முடியும்… டொக்ரர்…” அன்று நாங்கள் இருவரும் இப்படியே நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ஞானச்செல்வனுக்குப் பசியெடுத்து, அவன் சாப்பிட வேண்டும் என்று சொல்லும் வரையில் உங்களுடைய உரையாடல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அன்று, என்னுடைய அறையில் இருந்து ஞானச்செல்வன் வெளியேறியபோது, இன்னும் வேதனையில்தான் இருந்தான். ஆனால் அந்த வேதனை, ஒரு குழப்பமான புயல் அல்ல. அது ஒரு கனமான, ஆனால் தெளிவான மழையைப்போல் இருந்ததை உணர்ந்தேன். எனக்குச் சிறிது மகிழ்ச்சி ஏற்பட்டது. போகும்போது ஒரு கேள்வியை என்னிடம் கேட்டான்: “இப்பொழுதும் என்னுடைய இயக்கம் இருந்திருந்தால் இந்தக் கொலைகளை எல்லாம் எப்படிப் பார்த்திருக்கும் டொக்ரர்? இயக்கம் என்னை எப்படிக் கைண்டிருக்கும் சொல்லுங்கள்? நான் போராளியா? குற்றவாளியா? துரோகியா?…” உன்னுடைய கேள்வியை ஏற்றுக்கொள்கிறேன் என்பதைப்போல நான் கண்களை மூடிக் கொண்டு மேலும் கீழுமாகத் தலையை மட்டும் ஆட்டினேன். அப்படியே கண்களால் சைகை காட்டினேன், அதைப் பற்றிப் பிறகு பேசலாம் என்று. ஒரு கணம் என்னைக் கூர்ந்து பார்த்து விட்டு, படபடவெனப் படியிறங்கிச் சென்றான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னால் அன்று சரியாகத் தூங்க முடியவில்லை. பசிக்கவும் இல்லை. இரண்டு குவளை நீரைக் குடித்து விட்டு, கடற்கரையில் நீண்ட தூரம் நடந்தேன். மாலை வெயில் மறைந்து மெல்லிய கீற்றாகப் பிறை தெரிந்தது. மூன்றாம் பிறை. 08 ஞானச்செல்வனிடம் என்ன மாதிரியான மாற்றங்கள் தெரிகின்றன என்று அருநிலாவையும் அவனுடைய மனைவியையும் தனித்தனியாக அழைத்துக் கேட்டேன். ”முன்பை விட கொஞ்சம் நன்றாகத் தூங்குகிறார். கோபப்படுவது குறைவு. ஆனால், கடுமையாக யோசிக்கிற மாதிரி இருக்கிறது” என்றார் மனைவி. அவரிடம் பயமும் பதட்டமும் இன்னுமிருந்தது. ”நீங்கள்தான் அவருக்கு மிக நெருக்கமாக – மிக அருகில் இருப்பவர். ஆகவே உங்களால்தான் அவரை மிக்க் கூர்மையாக அவதானிக்க முடியும். அவருடைய மாற்றங்களையும்…” “நான் அவருக்கு அருகில் இருக்கிறேன் என்பது உண்மைதான் டொக்ரர். ஆனால், மனதால் அவர் வேறு எங்கோதான் இருக்கிறார்” “இந்தப் பதிலை நான் எதிர்பார்த்தேன். அப்படித்தான் இருக்கும். அவரே மீண்டும் சொன்னார்: “டொக்ரர், உங்களிடம் வந்து போவது அவருக்கு ஏதோ ஆறுதலாக இருக்கு. அதை விரும்புகிறார். அதொரு மாற்றமல்லவா!…” “ம்” “நாங்கள் என்ன செய்ய வேணும்?” ”நீங்கள் அவரை எதுவும் கேட்க வேண்டாம். அவர் தனக்கு விரும்பியதைச் செய்யட்டும். ஒரு கொஞ்சக் காலத்தில் எல்லாம் சரியாகலாம். மாற்றங்கள் எப்போதும் நிகழும்… கண்காணித்துக் கொள்ளுங்கள். மாத்திரைகளைத் தவறாமல் போட்டுக் கொள்ள வையுங்கள்” அவரைச் சமாதானப்படுத்தி விட்டு, மகள் அருநிலாவுடன் பேசினேன். ஞானச்செல்வனிடம் நிறைய மாற்றங்கள் இருப்பதாகச் சொன்னாள். தனக்கு மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் இருக்கிறது என்றாள். இளைய தலைமுறை என்பதால், எதையும் பொஸிட்டிவ்வாக எடுத்துக் கொள்ளும் இயல்பு வந்திருக்கலாம். முதல் தலைமுறையைப்போல கவலைகளைக் கட்டிக் கொண்டு அழுவதற்கு அவர்கள் தயாரில்லை. ஞானச்செல்வனை எப்படிக் கையாள்வது? அடுத்து என்ன செய்வது என்றொரு வரைபடத்தை மனதில் வரைந்து கொண்டேன். இந்தமாதிரிச் சூழல்களில் ஒரு வரைபடம் போதாது. மாற்றுப்படங்களும் வேண்டும். அவற்றையும் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தேன். எனக்கே இது ஒரு பயிற்சியாகவும் பாடமாகவும் இருந்தது. எந்தத் தொழிலிலும் பயற்சிக்கான இடமுண்டு அல்லவா! கவலையும் உற்சாகமும் மாறி மாறி வந்தன. மறுநாள் நானே ஞானச்செல்வனை தொலைபேசியில் அழைத்தேன். “இன்று என்னிடம் வர முடிந்தால், நாங்கள் வெளியே ஓரிடத்துக்குப் போகலாம். நீங்களும் அந்த இடத்தைப் பார்க்கலாம்… உங்களுக்குப் பிடிக்கக் கூடும்” என்றேன். “வருகிறேன்” – சொன்னபடியே வந்து சேர்ந்தான். ஏற்கனவே நான் தயாராக இருந்தபடியால் உடனேயே புறப்பட்டோம். செல்லும் வழியில், தன்னுடைய போராட்ட கால அனுபவங்களையும் அதில் சம்மந்தப்பட்ட கதைகளையும் (சம்பவங்களையும்) ஒவ்வொரு இடங்களோடும் தொடர்புபடுத்திச் சொல்லிக் கொண்டே வந்தான் ஞா.செ. வண்டி கிழக்குத் திசையில் சூரியனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. காலை வெயில் முகத்தில் அடிக்காமல் ‘சண் காட்’ ஐ கீழே இறக்கி விட்டேன். ”இடங்கள் என்பது என்ன? நினைவுகளின் இருப்பிடமா? இதைப்பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?” என்று கேட்டேன் அவனிடம். சில நிமிடங்கள் எதுவுமே பேசவில்லை அவன். வண்டி விரைந்து கொண்டேயிருந்தது. இடங்கள் நகர்ந்து கொண்டேயிருந்தன. மெதுவாகத் திரும்பி என்னைப் பார்த்து மெல்லியதாகச் சிரித்தான். “உண்மைதான் டொக்ர்ர், இடங்கள் நினைவுகளின் இருப்பிடம்தான்” “ஒரு இடத்தைப் பற்றி ஏராளம் நினைவுகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நினைவுகள். ஆகவே அது பல நினைவுகளின் கூட்டை, சங்கமிப்பைக் கொண்டுள்ளது. நினைவுகளின் படிகமாக ஒவ்வொரு இருப்பிடங்களும் உள்ளன, இல்லையா?” ஆமென்பதுபோலத் தலையசைத்தான். கண்கள் குழந்தையின் வியப்புடன், மேலும் அறியும் ஆர்வத்தில் ஒளிர்ந்தன. “ஓ… ஒரு இடத்துக்கு ஆயிரமாயிரம் நினைவுகளின் அடுக்குகள் இருக்கும் அல்லவா டொக்ரர்?” எனக்கு உற்சாகம் ஏற்பட்டது. ஞானச்செல்வன் புதிய பாதையில் நடக்கத் தொடங்கி விட்டான். இப்பொழுது அவனொரு புதிய குழந்தை. இது அந்தக் குழந்தையின் புதிய நடை. இந்த வழியில் அவனை நடத்திச் செல்ல வேண்டும். “அப்படித்தான் மனிதர்களுக்குள்ளும் ஆயிரமாயிரம் நினைவுகளிருக்கு. சரியாகப் பார்த்தால் நினைவுகளின் அடுக்குத்தான் மனிதர்கள்…” அவனுடைய முகம் மலர்ந்தது. ஒரு கணம்தான். சட்டென அதில் ஏதோ நிழலாடியிருக்க வேண்டும். இருண்டது. நானே தொடர்ந்தேன், “ஞானச்செல்வன், நினைவுகளின் சங்கமமாக, அடுக்காக, கூட்டாக இடங்கள் இருந்தாலும் நினைவுகளால் மட்டும் இடங்கள் இருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. அங்கே மரங்கள், வீடுகள், கடல், பாதைகள், கடைகள், வயல், வெளி, மனிதர்கள், விலங்குகள், பறவைகள் இப்படி ஏதோ எல்லாம் இருக்கும். எல்லாம் இணைந்திருப்பதே இடங்கள். அப்படித்தான் மனிதரும். அவர்கள் தனியே நினைவுகளால் மட்டும் ஆனவர்கள் அல்ல. நினைவுகள் ஒரு பகுதி மட்டுமே. அதற்கு அப்பால், அவர்களுக்கு பசி, தாகம், காதல், மகிழ்ச்சி, துக்கம், கொண்டாட்டம், இழப்பு, உறவு, பரிவு, பயணம், தூக்கம், வேலை, படிப்பு, கனவு, இலட்சியம், வீடு, புத்தகம், கட்டில், மனைவி, பிள்ளைகள், சொத்து, வழக்கு, கணக்கு, நம்பிக்கை, நம்பிக்கையின்மை, சரி, பிழை பற்றிய எண்ணங்கள்.. இதெல்லாம் இணைந்த வாழ்க்கை என எவ்வளவோ இருக்கு. இதெல்லாம் இணைந்ததே மனிதர்கள். நீங்களும் அப்படித்தான். நானும் அப்படித்தான். இந்தா எங்களுக்கு முன்னேயும் பின்னேயும் சென்றுகொண்டிருக்கிறார்களே அவர்கள், தனியே நினைவுகளுடன் மட்டும்தான் போகிறார்களா? அல்லது நினைவுகளில்தான் வாழ்கிறார்களா?” சொல்லி விட்டு, சற்று அமைதியாகி, வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தேன். ஞானச்செல்வன் வெளிச் சூழலை வேடிக்கை பார்ப்பது தெரிந்தது. எனக்கு உள்ளுர மகிழ்ச்சி பொங்கியது. ஆஹா… குழந்தை நடக்கத் தொடங்கி விட்டது. “நாங்கள் வந்த வழியில் ஏராளம் கதைகளைச் சொல்லிக் கொண்டு வந்தீர்களல்லவா! அவை உங்களுடைய நினைவுகளில் இருக்கும் கதைகள், சம்பவங்கள்….அதனோடு இணைந்திருந்த மனிதர்கள் மட்டும்தான். ஆனால் அவை மட்டும்தான் அந்த இடங்கள் இல்லை என்றேன் அல்லவா. அதைப்போலத்தான் உங்களுடைய மனதில் நினைவுகளாக இருப்பவை மட்டும்தான் நீங்களும் இல்லை. உங்களைப்பற்றி என்னிடத்திலும் உங்களுடைய மனைவி, மகள், நண்பர்கள், உங்களைத் தெரிந்த ஒவ்வொருவரிடத்திலும் இருக்கின்ற உங்களைப் பற்றிய எண்ணங்கள், அபிப்பிராயங்கள், நம்பிக்கைகள், உணர்வுகள், நினைவுகள் எல்லாமும் இணைந்த்துதான் நீங்களும். உங்களுக்கும் பசியும் தாகமும் தூக்கமும் மகிழ்ச்சியும் கனவும் வலியும் உண்டு….” “அந்தக் கனவுதான் டொக்ரர் எனக்குப் பிரச்சினை. எனக்கு கனவே வேண்டாம். கனவுதான் என்னை அலைக்கழித்தது. இப்பவும் கனவுதான் அலைக்கழிக்கிறது… அது மட்டும் வேண்டாம் டொக்ரர், அது ஒரு பேய்…” சட்டென்று என்னை இடைமறித்தான். எழுந்து இரண்டு அடி வைத்த குழந்தை விழுந்து விட்டது. ஆனாலும் அது மீண்டும் எழும். விழுந்தும் எழுந்தும் மீண்டும் அது நடக்கும். நடந்தே தீரும். ஆனால் அது எப்படி? எப்பொழுது என்றுதான் தெரியவில்லை. வண்டி சென்று கொண்டேயிருந்தது. எங்கே செல்கிறோம் என்று ஞானச்செல்வன் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை. பிரதான வீதியிலிருந்து உள்ளுர் வீதிக்குள் நுழைந்தோம். பிரதான வீதியிலிருந்து உள் வீதிக்குள் நுழையும்போதே சூழலில் மாற்றங்கள் தெரியும். சட்டென்று பரபரப்புக் குறைந்து விடும். அப்படியே மூன்று கிலோ மீற்றர் வந்து ஒரு பழைய கோட்டையின் முன்பாக வண்டியை நிறுத்தினேன். இயக்கச்சிக் கோட்டை. 1690 களில் ஒல்லாந்தரால் கட்டப்பட்டது. அந்தக் கோட்டையும் அதனுடைய சூழலும் ஏற்கனவே ஞானச்செல்வனுக்குத் தெரிந்திருந்தது. வண்டியிலிருந்து இருவரும் இறங்கினோம். “இந்தக் கோட்டையைப் பாருங்கள். பாசி படிந்து கிடக்கிறது. பாசி கோட்டையின் சுவர்களில் மட்டுமல்ல. அதனுடைய மதிப்பிலும் வரலாற்றிலும்தான் படிந்து கிடக்கிறது. இப்பொழுது இது கோட்டை இல்லை. கோட்டை இருந்த அடையாளமாகச் சிதறிக் கிடக்கும் எச்சங்கள். ஆனாலும் இவை கோட்டையை நினைவுபடுத்துகின்றன அல்லவா! இதை இனி என்னதான் செய்தாலும் அதே பழைய நிலைக்கு – அதே பயன்பாட்டுக்கு – கொண்டு வரமுடியுமா? முடியாது. ஆனால், நானூறு ஆண்டுகளுக்கு முன், இது எப்பிடியிருந்திருக்கும்? அப்பொழுது இதனுடைய மதிப்பு? அன்று இது அதிகாரத்தின் சின்னமாக இருந்திருக்கும். இந்தச் சுற்றயலிலோ அல்லது அதற்கு வெளியிலோ உள்ள மக்களை இது எப்படியெல்லாம் கட்டுப்படுத்தியிருக்கும்? அவர்களின் மீது எப்படி அதிகாரம் செலுத்தியிருக்கும்? அன்றைய அந்த மனிதர்கள் இன்று உயிர்த்து வந்தால் என்னவெல்லாம் சொல்வார்கள்? வரலாறு எல்லாவற்றையும் எல்லோரையும் இடம்மாற்றி வைக்கிறது. குற்றவாளிகளையும்தான். நாம் எல்லோரும் சிலவேளை நம்மால் நிர்ணயிக்க முடியாத பகடையாட்டத்தின் காய்களாகவே இருக்கிறோம். சிலவேளை நம்மை நாம் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். சிலபோது நம்மைச் சூழல் கட்டுப்படுத்தும். அல்லது இழுத்துச் சென்று விடும். ஆற்றில் நீந்தும்போது நம்முடைய உடல் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும். சிலவேளை ஆறு தன்னுடைய கட்டுப்பாட்டில் நம்மை எடுத்துக் கொள்ளும். அப்பொழுது நாம் அதன் போக்கில் இழுத்துச் சென்று விடுவோம்…“ நாங்கள் பேசிக் கொண்டே கோட்டையின் இடிபாடுகளிருந்த கிழக்குப் பக்கமாகச் சென்றோம். கோட்டைச் சுவரைத் தன்னுடைய பிடிக்குள் வைத்திருந்தது புளியமரம். நான் அதைப் படமெடுத்தேன். ஞானச்செல்வன் அதைப் பார்த்தான். அவனுக்கு நான் பிடித்துக் கொண்ட படத்தைக் காட்டினேன். ”பாருங்கள், ஒரு கோட்டையை, அதனுடைய வரலாற்றை, இன்று இந்தப் புளியமரம்தான் ஆள்கிறது”. இதை நான் எதேச்சையாகத்தான் செய்தேன். ஆனால், ஞானச்செல்வனுக்கும் எனக்கும் அது ஏதோ ஒரு முக்கியமானதொரு செய்தியைச் சொல்வதைப்போலிருந்தது. ஆர்வத்தோடு தொலைபேசியை வாங்கிப் பார்த்தான். கண்கள் வியப்பில் ஆழ்ந்தன. முகம் ஆச்சரியத்தில் மலர்ந்தது. “எதற்கும் நிரந்தரமான அர்த்தமென்றில்லை. எல்லாமே மாறிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் என்னைச் சந்திப்பீர்கள் என்று எப்போதாவது எண்ணினீர்களா? அல்லது நான்தான் உங்களைச் சந்திப்பேன் என்று நினைத்தேனா? எல்லாம் எப்படியோ நடக்கின்றன! நாளை நாம் எங்கோ போவதென்று திட்டமிடலாம். திட்டமிட்டபடி நாளை ஒரு வேலையைச் செய்யலாம். அல்லது ஒரு பயணத்தைக் கூட வைத்துக் கொள்ளலாம். ஆனால், எப்போதும் அப்படித் திட்டமிட்டபடி நடக்கும் என்று சொல்ல முடியாது. வாழ்க்கை என்பது கடுமையான சூத்திரம். அதே அளவுக்கு எளிமையானதும் கூட. உங்களுடைய இயக்கம் இன்றிருந்தால், நீங்கள் இப்பொழுது எப்படி இருந்திருப்பீர்கள்? புரிந்து கொண்டால் எதுவுமே கடினமில்லை. புரிந்து கொள்ளவில்லை என்றால் எல்லாமே கடினம். எல்லாமே இருள்தான், ஞானச்செல்வன்” காலை பத்து மணியளவில் என்பதால் அந்தப் பகுதி ஒளிமயமாக இருந்தது. ஒளியிழிந்த வரலாற்றின் மீது ஒளி பாய்ச்சுவதைப்போல சிதைவுகள் இருந்தன. கோட்டைக்குள் பனைகள் வளர்ந்து ஒரு சிறிய கூடலே உருவாகி விட்டது. “இந்தப் பனைகள் ஒரு சேதியைச் சொல்லுதல்லவா! பாருங்கள் டொக்ரர்” நான் பனங்கூடலைப் பார்த்தேன். கோட்டையின் மையப் பகுதி மேடாக இருந்தது. அதற்குக் கீழே, மேற்கில் வீதியோரமாக இருந்தது பனங்கூடல். முப்பது பனைகளுக்கு மேலிருக்கும். பனங்கூடலோடு ஒட்டியதாக கோட்டைச் சுவர் நீண்டு சென்றது. இடையில் கொத்தளமும் அதற்கு அருகில் அகழியும் இருந்தன. அகழிக்குள் இருளும் பாசியும் கலந்து நிரம்பிக் கிடந்தன. ஞானச்செல்வன் எதைச் சொல்கிறான் என்று எனக்குப் புரியவில்லை. ‘பனைகள் என்ன சேதியைச் சொல்கின்றன?’ அங்கே வருமாறு நான் சொல்லியிருந்த சிவநேசன் அந்த நேரம் வந்து கொண்டிருந்தான். “பனைகளா?“ “ஆமாம், இந்தப் பனைகள் எங்களுடைய மண்ணின் அடையாளமல்லவா! எத்தனை ஆண்டுகள் சென்றாலும் இது எங்கள் மண். நாங்கள் இந்த மண்ணில் முளைக்கும் பனைகள் என்று சொல்கின்றன அல்லவா! அந்நியரின் கோட்டை அழிந்து விட்டது. பனைகள் வளர்ந்து நிற்கின்றன. இந்த இடத்தில் முன்பு நின்ற பனைகளை அழித்து, இந்தக் கோட்டையை ஒல்லாந்தர்கள் கட்டியிருக்கலாம். ஆனால் இன்று? கோட்டை இல்லை. மீண்டும் பனைகள் எழுந்து நிற்கின்றன…” வரலாறு என்பது இப்படித்தானிருக்கும். நிறங்களை அது மாற்றிக் கொண்டேயிருக்கும். ‘கைவிடப்பட்ட இடத்தில் அல்லது சிதைவுற்ற இடத்தில் இந்த மாதிரி, அந்தச் சூழலுக்குரியவை எழுந்து கொள்ளும். அதுதான் சூழலின் ஆட்சியாகும்’. நான் எதுவுமே சொல்ல விரும்பவில்லை. இப்பொழுது ஞானச்செல்வனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் முக்கியமானது. ஞானச்செல்வனை ஆமோதிப்பதாகத் தலையசைத்தேன். அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சிவநேசன் கிட்ட வந்து விட்டான். “வா, சிவா, நாங்கள் கொஞ்சம் நேரத்தோட வந்து விட்டோம். இவர் எனக்கு வேண்டியவர். ஞானச்செல்வன். இடங்களைப் பார்ப்பதில் கொஞ்சம் விருப்பம். ஒவ்வொரு இடங்களைப் பற்றியும் ஏராளம் கதைகளை வைத்திருக்கிறார்” என்றேன், ஞானச்செல்வனைப் பார்த்து. ஆளையாள் பார்த்து, இருவரும் புன்னகைத்துக் கைகளைக குலுக்கிக் கொண்டனர். சிவா, இந்த ஊர்க்காரன். இங்கே வரும்போதெல்லாம் சிவாவை நான் அழைப்பதுண்டு. வாய்ப்பாக இருந்தால் தவறாமல் வந்து விடுவான். இந்தக் கோட்டையைப் பற்றி அவனிடம் ஆயிரம் கதைகளுண்டு. ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகச் சொல்வான். வரலாற்றுச் சின்னங்களுக்கு அப்படியொரு இயல்பிருக்குமோ என்னவோ! ஞானச்செல்வனுக்குச் சிவா கோட்டையைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தான். அதைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். நான் கோட்டை வளாகத்தை பல்வேறு கோணங்களில் ஒளிப்படங்கள் எடுத்தேன். அவர்களையும்தான். இந்த இடத்தை முன்பும் பல தடவை படங்களாக்கியிருக்கிறேன். ஒவ்வொரு முறை படம் எடுக்கும்போதும் ஏதோ மாற்றங்கள் இருப்பதாகத் தோன்றும். சிலவேளை கோணங்களில். சிலபோது ஒளியிலும். நேரங்களும் பருவ காலங்களும் வேறுபடும்போது காட்சிகளும் வேறுபடுவதைப் பார்ப்பதில் ஒரு சுவாரசியம் உண்டு. இந்தப் பழக்கம் எனக்கு வந்தது சோமிதரனிடமிருந்து. அவன் கமெரா இல்லாமல் எங்குமே செல்வதில்லை. கமெராவுடன் கூடிப் பிறந்ததைப்போல கமெராவும் கையுமாகவே எப்போதுமிருப்பான். எல்லாவற்றையும் எப்போதும் படமாக்கிக் கொண்டேயிருக்கும் கண்களும் கைகளும். அவனுக்குள்ளிருக்கும் ஆவணமாக்கல் உணர்வுதான் அப்படிச் செய்கிறதோ என்னவோ! காலை வெயிலில் ஞானச்செல்வன் மிகப் பிரகாசமாக ஒளிர்ந்தான். அவனை அப்படியொரு தோற்றத்தில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. அப்படியே ஐந்தாறு படங்களை எடுத்தேன். பழைய, சிதைந்து கிடக்கும் கோட்டையில் புதிய ஒளியாக ஞானச்செல்வன் இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு என்னுள்ளே மகிழ்ச்சி பொங்கி வந்தது. கண்களை மூடிச் சுவாசத்தை ஆழமாக உள்ளிழுத்தேன். இதயம் மலர்ந்து விரிந்தது. அங்கிருந்து புறப்பட்டு மூவரும் சுண்டிக்குளத்துக்குச் சென்றோம். ஊர் முடிந்து வெளிகளும் பற்றைகளுமான இடம் விரிந்து கொண்டிருந்தது. சிவநேசனும் ஞானச்செல்வனும் நெடுங்கால நண்பர்களைப்போலப் பேசிக் கொண்டு வந்தனர். வழியில் போக்கறுப்பு என்றொரு ஊர் வந்தது. தனித்து விடப்பட்டதைப்போலவோ தள்ளி வைத்ததைப்போலவோ ஒழித்து வைத்ததைப்போலவே அந்த ஊர் இருந்தது. பனையும் காடும் சுற்றியிருக்க, தூரம்தூரமாக வீடுகள். எண்ணிப் பார்த்தாலும் இருபது வீடுகளுக்குள்தான் இருக்கும். ஒரு சிறிய பாடசாலை. ‘ஐம்பது ஆண்டுக்கும் மேலாக அப்படியேதானிருக்கிறது’ என்றான் சிவநேசன். தங்களுடைய ஊருக்கு யாராவது புதிதாக வந்தால், கிராமவாசிகள் ஒரு கணம் நின்று பார்ப்பார்கள். இது எல்லாக் கிராமங்களிலும் ஒரு வழக்கமாகவே உள்ளது. காலம் இவர்களைத் தீண்டுவதில்லைப் போலும். தமிழ்சினிமாவில் வருகின்ற காட்சிகள் என் நினைவில் வந்தன. எங்களுடைய கிராமத்தில் இளவயதில் நானும் அப்படித்தானிருந்தேன். ஊருக்கு யாராவது வண்டியில் வந்தால், அந்த வண்டியின் பின்னால் ஓடிப் போகும் நினைவுகள் வந்தபோது என்னையறியாமலே சிரிப்பு வந்தது. “ஊருக்கும் வளர்ச்சியில்லை. பள்ளிக்கூடத்துக்கும் வளர்ச்சியில்லை. பாருங்கள், ஒழுங்காக ஒரு தெருக்கூட இந்தச் சனங்களுக்கில்லை. மின்சாரம் மட்டும் எப்படியோ வந்திருக்கிறது. அதுவும் பல நூற்றாண்டுகளைக் கடந்து இப்போதுதான். எதுவுமே இல்லாமல் இந்தச் சனங்களால் வாழமுடியும் என்று எல்லோரும் முடிவெடுத்திருக்கிறார்கள்போல. இளைய தலைமுறையினால் அப்படி இருக்க முடியாதல்லவா! அவர்கள் இப்பொழுது இந்த ஊரைப் பற்றிக் கதைக்க வெளிக்கிட்டிருக்கிறார்கள். அதிலயும் ஏராளம் பிரச்சினைகள்…“ என்று நீண்ட கதையொன்றைச் சொல்லிக் கொண்டு வந்தான் சிவநேசன். ஞானச்செல்வனுக்கும் அந்த ஊரைத் தெரியும். போராட்டத்தின்போது அங்கும் வந்திருக்கிறான். ஆனால், சிவநேசன் சொல்லும் சங்கதிகளைப் பற்றித் தெரியாது. ஞானச்செல்வனும் நானும் சிவநேசனை வியப்போடு பார்த்தோம். “தங்களுடைய ஊரின் நிலைமையைப் பற்றிக் கதைக்கப்போகும் இடங்களில் எல்லாம் அந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, ஊரின் பெயரைப் பற்றித்தான் பேசுகிறார்களாம். ‘என்ன இது போக்கறுப்பு!’ இப்படியொரு பெயரில் ஒரு ஊர் இருக்கிறதா? அப்ப, உங்களைப் போக்கறுப்பார், போக்கறுந்துபோவார்… என்றெல்லாம் சொல்லலமா?” என்று கூட ஒரு அதிகாரி பகடி பண்ணியிருக்கிறார். இதனால், அந்த அதிகாரியோடு பெடியள் பெரிய சண்டையே போட்டிருக்கிறார்கள்… ஆகவே தங்களுடைய ஊரின் பெயரை மாற்ற வேணும் என்று இளைய தலைமுறை போராடுகிறது. மூத்த தலைமுறைக்கோ தங்களுடைய ஊரின் அடையாளமே இந்தப் பெயர்தான். அந்தப் பாடசாலையின் பெயரைப் பாருங்கள். அரை நூற்றாண்டைக் கடந்து விட்டது. அதையெல்லாம் மாற்றலாமா? எங்களுடைய பிறப்புப் பத்திரத்தில் கூட, பிறந்த இடம் போக்கறுப்பு என்றே பதியப்பட்டுள்ளது. அடையாள அட்டையிலும் அப்படித்தான். ஊரின் பெயரை மாற்றினால், எங்களுடைய தலையெழுத்தும் மாறிப் போய் விடுமே?” என்று அவர்கள் மறுக்கிறார்கள். அதிகாரிகளும் அப்படித்தான் சொல்கிறார்கள். ஊரின் பெயரை உங்களுடைய விருப்பத்தின் படியெல்லாம் மாற்றி விட முடியாது. அதெல்லாம் பெரிய வேலை. அதற்கு அரசாங்கத்தினுடைய ஒப்புதலைப் பெற வேண்டும். அதற்கு அரசாங்கம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அரசாங்கத்துக்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது. அதையெல்லாம் பார்ப்பதற்கே அதற்கு நேரமில்லை. இதையா பார்க்கப்போகிறது. பேசாமல், இந்தப் பெயரிலேயே ஊர் இருக்கட்டும். போக்கறுப்பு என்றால் என்ன? நன்றாகத்தானே இருக்கிறது என்று சிரிக்கிறார்கள். அவர்கள் சிரிப்பதாகத் தெரியவில்லை. தங்களைப் பார்த்து இளிக்கிறார்கள் என்று கவலைப்படுகிறார்கள் இளைஞர்கள்…“ ‘இளைஞர்களின் நிலையே இது என்றால், அங்குள்ள இளைய பெண்களின் நிலை எப்படியிருக்கும்?’ என்று நினைத்தேன். இந்தக் கதையைக் கேட்கும்போது எனக்கு ஆச்சரியமாகவும் துக்கமாகவும் இருந்தது. “உலகத்தில் என்ன மாதிரியெல்லாம் பிரச்சினைகள் இருக்கின்றன! இந்தச் சனங்களை என்னதான் செய்யச் சொல்கிறார்கள்?” என்று கேட்டான் ஞா.செ. இப்படியொரு கேள்வியைத்தான் ஞானச்செல்வனிடம் எதிர்பார்த்தேன். அவனுடைய வலியைக் குறைத்து, அவனைச் சமனிலைப்படுத்துவதற்கு இப்படி அவன் சிந்திப்பது நல்லது. “அதைக் கூடச்சொல்ல மாட்டார்கள்” என்று ஞானச்செல்வனுக்குச் சிவா பதிலளித்தான். ”இதுக்கு என்ன செய்யலாம் சிவா” என்று கேட்டேன். “என்னதான் செய்ய முடியும்? கொஞ்சம் வசதியான ஆட்களும் கொஞ்சம் படித்தவர்களும் ஊரை விட்டுப் போய் விட்டார்கள். நூற்றாண்டுகளைக் கடந்த கிராமத்தில் இருபது வீடுகளுக்குள்தான் இருக்கின்றன என்றால், அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?” எனக்கும் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. ஞானச்செல்வன் கிராமத்தையே பார்த்துக் கொண்டு வந்தான். ஊர் ஆட்கள் எங்களை வேடிக்கை பார்க்கிறார்கள். நாங்கள் அவர்களை வேடிக்கை பார்க்கவில்லை என்றாலும் அவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டு சென்றோம். சுண்டிக்குளத்துக்குப் போகும் வழியில் பூனைத்தொடுவாயில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் வண்டியை நிறுத்தி விட்டுப் படங்களைப் பிடிக்க ஆரம்பித்தேன். பறவைகள் சரணாலயத்திலிருந்து காற்றில் பறவைகளின் இசைக்குரல்கள் கலந்து, ஒரு இயற்கையான சங்கீதம் போல் ஒலித்தது. நீரின் மேற்பரப்பில் வெள்ளைக் கொக்குகளும் கூழைக்கிடாக்களும் நடந்து சென்றன. வானத்தில் பறவைகளின் கூட்டம் எழுந்தும் மிதந்தும் சுழன்றும் ஒரு மாபெரும் வித்தைக் களம் உருவாகியிருந்தது. மரக்கிளைகளிலும் புல்வெளிகளிலும் பல வண்ணப் பறவைகள். பறவைகளைக் கலவரப்படுத்தாமல், பசுமையான தழைத்த காட்டுப்பகுதியைச் சுற்றி அமைந்துள்ள ஏரியின் ஓரமாக நடந்து சென்றோம். ஞானச்செல்வனைக் கவனித்தேன். கண்கள் வியப்பால் விரிந்தன. அவனுடைய மனது லேசாகி விட்டது என்பதைக் கண்கள் காட்டின. சிவநேசனும் ஞானச்செல்வனும் அமைதியாக நடந்து செல்கிறார்கள். அவர்கள் ஏரியின் ஓரத்தில் அமர்ந்தனர். நீரில் பறவைகளின் எதிரொளி தெரிந்தது. எல்லாவற்றையும் படம் பிடித்தேன். அவர்களுக்கு அருகில் வந்து, “இந்தப் பறவைகள் சரணாலயம் ஒரு சிகிச்சை மையம்போல் உள்ளது. இங்கே, காயம்பட்ட பறவைகளும் குணமாகின்றன. எங்கிருந்தோ வந்திருக்கும் பறவைகள் எல்லாம் பாதுகாப்பைப் பெறுகின்றன. ஆனால் மிக முக்கியமான விஷயம்… இங்கே, ஒவ்வொரு பறவையும் தனது குரலைத் தனித்து ஒலிக்கிறது. ஒவ்வொன்றும் தனித்தும் கூட்டமாகவும் பறக்கின்றன. எதுவும் அவற்றின் குரலைப் பறித்துவிடவில்லை. சிறகுகளையும்தான்..” என்றேன். நான் சொன்னதைப் புரிந்து கொள்ளக்கூடிய அவதானத்தைச் சிவநேசனிடம் காணவில்லை. ஆனால் ஞானச்செல்வன், அதைப்புரிந்து கொள்வதைப்போலச் சொன்னான், “டொக்ரருக்கு எங்கே சென்றாலும் சிகிச்சையும் அதைப்பற்றிய சிந்தனையும்தான்..” ”அதிலே என்ன தப்பு?“ “தப்பொன்றுமில்லை. இங்கேயும் பறப்பதற்குச் சிரமப்படும் பறவைகளைப் பற்றி நீங்கள் சிந்திப்பதைச் சொன்னேன்” நான் சிரித்துக் கொண்டு, கையில் ஒரு சிறிய இறகை எடுத்து, “இந்த இறகைப் பாருங்கள். இது ஒரு காட்டுப் புறாவின் இறகு. இதில்… (சற்று ஒளியில் பிடித்துப் பார்த்து) நீலம், பச்சை, சாம்பல் நிறங்களின் கலவை உள்ளது. ஆனால், ஒரு பறவையின் வாழ்க்கை இதில் எழுதப்பட்டிருக்கிறது. காற்றின் தொடுகை, மழைத்துளி, சூரிய ஒளி எல்லாம் இதில் உண்டு. இதே இறகு, வேட்டைக்காரனின் கைக்குப் போனால்? காற்றிலே உதிர்ந்தால்? கலைஞரின் கைகளுக்குப் போனால்? அவர் அதிலுள்ள அழகை, வர்ணத்தைப் பார்ப்பார். ஒரே இறகு. வெவ்வேறு உலகங்கள்” இப்படியே பேசிக்கொண்டு மீதிப் பொழுதைப் பறவைகளுடன் முடித்தோம். வரும் வழியில் சிவநேசன் இறங்கிக் கொண்டான். இறங்கும்போது வத்தகைப் பழங்களை வண்டியில் ஏற்றி விட்டான். அதில் பாதி ஞானச்செல்வனுக்கு என்ற கட்டளை. திரும்பி வரும்போது சிவனேசனைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்தான் ஞானச்செல்வன். ஏராளம் கதைகளைத் தெரிந்து வைத்திருக்கிறார்’ என்று வியந்தான். மிக உற்சாகமாக இருந்தான். 09 நாங்கள் சுண்டிக்குளம் போய்த்திரும்பிய இரண்டாவது சனிக்கிழமை காலை ஆறு மணிக்கு அவசரமான தொலைபேசி அழைப்பு. அருநிலா. “வணக்கம். நலமாக உள்ளீர்களா?“ என்று சொல்வதற்கிடையில் “டொக்ரர், அப்பாவை நீங்கள் அவசரமாகப் பார்க்க வேணும். உங்களிடம் எப்போது அழைத்து வரலாம்?” என்று பதட்டப்பட்டாள். ”ஏன், என்ன ஆயிற்று? நேற்றுக் கூட என்னோடு பேசினாரே!” என்றேன். என்ன நடந்திருக்கும் என்று ஆழமாகச் சிந்தனையோடியது. “நேற்றிரவு ஒரு ஆளை வீட்டுக்கு அழைத்து வந்தார். அவர் ஒரு ஓவியர். வரும்போது எங்களுக்கு அவர் ஓவியர் என்று தெரியாது. ஆனால், இரவு அப்பாவும் அந்த ஆளும் சேர்ந்து யாரோ ஒரு மனிதரை ஓவியமாக வரைந்து கொண்டிருக்கிறார்கள். அப்பா சொல்லச் சொல்ல அந்த ஆள், வரைந்து கொண்டேயிருக்கிறார். இரவு அவர்கள் தூங்கவே இல்லைப் போலிருக்கிறது. பின்னிரவில் நான் தூங்கி விட்டேன். அவர்களும் பிந்தித்தான் தூங்கியிருக்கிறார்கள். இந்தா, இப்ப கூட மறுபடி அந்த உருவத்தை வரைவதிலேயே மும்முரமாக இருக்கிறார்கள்… அப்பா அப்படியில்லை. இப்படித்தான் வரும் என்று ஏதோ எல்லாம் சொல்கிறார்…” எனக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. ஞானச்செல்வனைத் தொலைபேசியில் அழைக்கலாமா என்று யோசித்தேன். வேண்டாம். இப்பொழுது அவனைக் குழப்ப வேண்டாம். நான் நேரில் சென்று பார்க்கலாமா? என்றால், அதுவும் சரியாகத் தோன்றவில்லை. “நீங்கள் எதுவுமே பேச வேண்டாம். எதுவும் கேட்கவும் வேண்டாம். அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுங்கள். அப்பா உணராத வகையில் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள். ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். அம்மாவிடமும் சொல்லுங்கள்…” என்று அருநிலாவுக்குச் சொன்னேன். சரியென்று சொன்னாள். ஆனால், அவள் பதகளித்துக் கொண்டிருப்பதாகப்பட்டது. என்னதான் நடக்கிறது என்று கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம்’ என்று என்னுடைய பணிகளில் மூழ்கி விட்டேன். இடையில் இரண்டு தடவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அருநிலாவிடம் என்ன சேதி என்று விசாரித்தேன். “தங்களுடைய வேலையில் மும்முரமாக இருவரும் இருக்கிறார்கள்“ என்றாள். ஒரு தடவை அவளே அழைத்தாள். அப்பொழுது அவர்கள் வெளியே எங்கோ சென்று விட்டார்களாம். வரைந்த ஓவியத்தைப் பற்றிச் சொன்னாள். “அதைப் படம் பிடித்து அனுப்ப முடியுமா?“ என்று கேட்டேன். அப்படியே அனுப்பினாள். 10 அன்று மாலையே என்னிடம் ஞானச்செல்வன் வந்தான். வந்தவுடன், கைபேசியைத் திறந்து ஒரு படத்தைக் காட்டினான். அமரசிறி. நடந்தது இதுதான். இருந்தாற்போல அமரசிறியின் நினைவு வந்தபோது, அவரை வரைந்து பார்க்கலமா? என்று முயற்சித்திருக்கிறான் ஞா.செ. ஆனால், ஞா.செவுக்கு ஓவியம் வரையத் தெரியாது. அவனுடைய கைகள் துப்பாக்கியையும், போர்க்களத்தின் கடினமான பணிகளையும் செய்து பழகியவை. ஒரு பென்சிலின் மென்மையான தொடுதலை, ஒரு காகிதத்தின் மீது ஒரு ஆன்மாவின் உருவத்தை வரைவதை விட, அவை வேறு விதமாகப் பழக்கப்பட்டவை. ஆனால் ஒரு வேதனையான அவசியம், அவனைத் தூண்டியது. அமரசிறியின் உருவம் நினைவில் மங்கலாகிக் கொண்டிருக்கிறது. முதலில் தெளிவாக இருந்த அந்த முகம், இப்போது ஒரு கலங்கிய நீர்த்துளி போலாகி விட்டது. காலப்போக்கில் ஆவியாகி மறைந்து விடும். மனதில் இருந்து குலைந்து விடுவதற்கு முன்பாக அதை வரைந்து பார்த்தால் என்ன என்று தோன்றியிருக்கிறது. ஒரு பென்சிலும், ஒரு ஸ்கெட்ச் புத்தகமும் வாங்கிக் கொண்டு, இரவு நேரங்களில், மற்றவர்கள் தூங்கும்போது, மேசையின் முன் அமர்ந்து, முயற்சி செய்து பார்த்தான். ம்ஹூம்.. முகத்தை வரைந்தால், அது வேறு ஏதோ ஒன்றைப் போல வந்தது. ஒரு முகத்தின் சுற்று. அது நீள் சதுரமாக இருந்தது. அமரசிறியின் முகம் ஒடுங்கியதாக, நீள்வட்டமாக இருந்தது. அழித்தான். அடுத்த முயற்சி. முன் வழுக்கை விழுந்த பெரிய நெற்றி. அதை நினைவில் வைத்து வரைந்தான். அது அகலமாக மாறியது. அவன் வரைந்த நெற்றி, ஒரு வெற்றுக்கூடு போல் தோன்றியது. தாள்களைக் கிழித்துக் கசக்கிக் கசக்கி எறிந்தான். எப்படியோ முயன்று ஒரு நடுத்தர வயது முகச் சாயலில் ஒரு உருவத்தை வரைந்தான். ஆனால், அது அமரசிறியே இல்லை. படத்தை வரைய வரைய அமரசிறியின் அந்த நாட்கள் கண்ணில் எழுந்தன. பயணத்தின் களைப்பில் கசங்கிச் சுருண்ட சட்டை. சிறிய ஒரு பை. அதை அவர் மடியில் வைத்திருந்த விதம். மெலிய கூனல் போல முன்சாய்வாக இருந்த தோற்றம். நடுங்கிக் கொண்டிருந்த கைகள்… சட்டென்று ஞானச்செல்வனுக்கு ஒரு யோசனை வந்தது. யாராவது ஒரு ஓவியரைக் கொண்டு வரைந்து பார்க்கலாமா? ஆனால், அதற்கு அமரசிறியை அவருக்குத் தெரியாதே… ! அது பயத்தையும் உண்டு பண்ணியது. அமரசிறியின் கதையை இன்னொருவருக்குச் சொல்ல வேண்டுமா? அப்படிச் சொல்லாமல், அமரசிறியின் தோற்றத்தைப் பற்றிச் சொல்லி, ஓவியத்தை வரையச் செய்யலாம் என்று தோன்றியது. அப்படித்தான் இந்த ஓவியரை ஞானச்செல்வன் தேடிக்கண்டு பிடித்துக் கொண்டு வந்திருக்கிறான். இரவும் பகலுமாக ஓவியர் வரைந்த படம், நேரடியாக ஒருவரின் அடையாளமாக இல்லாமல், மங்கிய ஒரு மனித உருவமாக இருந்தது. ஆனாலும் அது அமரசிறியை மீண்டும் உருவாக்கியது போலிருந்தது. இது ஒரு புனர் உருவாக்கமா? என்று அவனுக்குப் புரியவில்லை. நினைவில் இருந்த ஒருவரை காகிதத்தின் மீது மீண்டும் உருவாக்கும் முயற்சி. ஆனால், ஞானச்செல்வனுக்கு அது ஓரளவு நிறைவாக இருந்தது. அந்த உருவத்தின் கண்கள், ஞானச்செல்வனை நேராகப் பார்க்கவில்லை, தூரத்தைப் பார்ப்பது போல் இருந்தன. ஒரு புன்னகையற்ற, ஆனால் கடினமற்ற முகம். ஞானச்செல்வனின் கண்கள் நீரில் மூழ்கின. இது வலி. ஆனால் இது ஒரு தெளிவான வலி. இது ஒரு குழப்பமான நினைவு அல்ல. ஞானச்செல்வன் என்னிடம் கெஞ்சினான். “உதவி செய்யுங்கள், டொக்ரர். தயவு செய்து நினைவுகளை அழிப்பதற்கு… அல்லது மறக்க வைப்பதற்கு… எந்த மருந்தும், எந்த சிகிச்சையும் இல்லையா? நீங்கள் செய்ய முடியும் என்று சொல்லுங்கள். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு உதவுங்கள். அந்த ஒரு நாளின் நினைவுகளை மட்டும் எடுத்து விடுங்கள். மீதியுள்ள என் வாழ்நாள் முழுவதும், நான் எந்த வலியையும் தாங்கிக் கொள்கிறேன். ஆனால் அந்த ஒரு நாளை… அழியுங்கள்.” நான் ஒரு ஆழமான பெருமூச்சை விட்டேன். இது அவன் பல முறை கேட்ட கேள்வி. ஆனால் ஒவ்வொரு முறையும், அது ஒரு புதிய காயத்தின் வலியைக் கொண்டுவரும். “ஞானச்செல்வன், நீங்கள் உங்கள் வலியைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள். அமரசிறியின் குடும்பத்தின் வலியைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்” அவனிடம் ஒரு கனத்த மௌனம். மெதுவாகச் சொன்னான், “நான்… அவருடைய மனைவி, குழந்தைகள்… அவர்களைப் பற்றி நினைக்க முடியவில்லை. அது மிகவும்… கனமாக இருக்கிறது” “கனம்தான். ஆனால் அந்தக் கனத்தைத் தூக்காமல், உங்கள் வலி முழுமையாக விடைபெறாது. வலி என்பது ஒரு விளக்கு. அது உங்களை மட்டும் ஒளி வீசிப் பார்க்கச் சொல்வதில்லை; அது பாதிக்கப்பட்டவர்களின் இருளையும் ஒளி வீசிப் பார்க்கச் சொல்கிறது. உங்களிடம் நான் விவாதிக்கவில்லை. ஆனால், உங்களுடைய வலியிலிருந்தும் வேதனையிலிருந்தும் நீங்கள் விடுபட விரும்புகிறீங்கள். அது சரி. ஆனால், நான் ஒரு மருத்துவர் என்ற நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அனைருக்கும் நான் குணமாக்கலைச் செய்யத்தான் நினைக்க வேண்டும்” அவன் பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு மெல்லிய இசையை அந்த அறையில் படர விட்டேன். “நான் உங்களை மட்டும் குணப்படுத்த முடியாது, ஞானச்செல்வன். ஒரு காயத்தின் ஒரு பகுதியை மட்டும் குணப்படுத்த முடியாது. முழுக் காயமும் ஆற வேண்டும். அமரசிறியின் குடும்பமும் இந்தக் காயத்தின் ஒரு பகுதி. நீங்கள் புரிந்து கொள்ளக் கூடியவர்… “ ஞானச்செல்வனின் மனம் இப்போது இரண்டு கறைகளைப் பற்றிச் சிந்தித்திருக்க வேண்டும். ஒன்று, தன் செயலின் கறை. மற்றது, அந்தச் செயலால் படிந்த பிறருடைய வாழ்வின் கறை. முதல் கறையை அழிக்க முடியும். இரண்டாவது கறையை? ஒரு சிறிய மௌனத்திற்குப் பிறகு, கையில் இருக்கும் தேநீர் கோப்பையை உற்றுப் பார்த்தவாறு சொன்னேன், “ஞானச்செல்வன், நாம் ஒருவரைக் காயப்படுத்தும்போது… அந்தக் காயம் எங்கே நின்று விடுகிறது என்று நினைக்கிறீங்கள்?” “என்ன சொல்கிறீங்கள்?” – குழப்பத்துடன் கேட்டான். “ஒரு கல்லை நீரில் எறிகிறோம். கல் மட்டும் தானே மூழ்கும்? அலைகள் எங்கே செல்கின்றன?” ஞானச்செல்வன் சற்று யோசித்த பின் சொன்னான், “அலைகள்… எல்லாத் திசையிலும் பரவும்” “ஆம். பரவும். நாம் பார்க்க முடிந்த தூரம் வரைக்கும். பிறகு நம்மால் பார்க்க முடியாத தூரம் வரைக்கும்.” அவனுடைய கண்களில் பலவிதமான உணர்வுகள் பிரதிபலிப்பதைக் கண்டேன். காற்றில் ஆடும் ஒரு மரத்தின் கிளைகளைச் சுட்டிச் சொன்னேன், “அந்த மரத்தைப் பாருங்கள். ஒவ்வொரு இலையும் ஒரு பச்சை நெருப்பு. அது விழுந்தால்…? அதனுடைய விழுதுகள் நிலத்தைத் தொடும்? அதன் நிழல் விழுகிறது. அந்த நிழல்படும் இடமெல்லாம், ஒரு சிறு குளிர்ச்சி, ஒரு வெளிர் இருள்… அது மரத்தின் கையெழுத்து. ஒருவர் இல்லாமல் போனால்… அவரின் நிழல் எங்கே போகிறது? அந்த நிழல் படாத இடங்களில், திடீரென்று வெப்பம் அதிகமாகத் தெரியவில்லையா?” ஞானச்செல்வன் கண்களை மூடிக்கொண்டான். கைகள் அவனை அறியாமல் நெஞ்சில் குவிந்தன. உண்மையின் முன்னே அவன் சரணடைகிறான். உண்மையைத் தொழுகிறான். மெல்லக் கண்ணைத் திறந்தபோது, ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து அதில் சுடரேற்றி, பாதியில் அணைத்தேன். “இதைப் பாருங்கள். இதில் இப்பொழுது சுடர் இல்லை. ஆனால்… இந்த மெழுகு இன்னும் வெப்பமாக இருக்கிறது. அது சுடரை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறது. சுடர் எரிந்த இடம் மட்டுமல்ல… வெளிச்சம் வீசிய இடங்களும் இன்னும் அந்த வெளிச்சத்தைத் தேடிக்கொண்டிருக்கும். ஒளியை இழந்தவர் யார்? ஒளியைப் பார்த்தவர்கள் அனைவரும் அல்லவா!” முகத்தை ஒருவிதமான உணர்ச்சிப் படிமாக வைத்துக் கொண்டு அவன் மெழுகுவர்த்தியைப் பார்த்தபடி கேட்டான், “அப்படியென்றால்… நான் அந்த மெழுகுவர்த்தியின் நெருப்பா? இல்லை… நான் அதை அணைத்த காற்றா? அல்லது… நான் அந்த வெளிச்சத்தை இழந்த இருளா?” மெதுவாக மெழுகுவர்த்தியை மறுபடியும் ஏற்றிக் கொண்டு சொன்னேன், “இப்போது இந்தப் புதிய சுடரைப் பாருங்கள். இது முந்தைய சுடரின் நினைவை எரிக்கிறதா? இல்லை. அதன் இருட்டை வெளிச்சமாக்கித் தருகிறதா? ஒருவேளை. ஒவ்வொரு சுடரும், தன் முன்னோடியின் இருளைத் தன் ஒளியின் அங்கமாக ஏற்றுக்கொள்கிறது. உங்களின் வலி… அது ஒரு தனி மெழுகுவர்த்தியின் கனம் அல்ல. அது, நீங்கள் இணைந்திருக்கும் அந்தப் பெரிய இருளாகும். அதேவேளை அதுதான் சுடரும் ஒளியுமாகும்” அவன் ஆழ்ந்து கேட்டுக் கொண்டிருந்தான். “ஞானச்செல்வன்!” என்று அவர் மென்மையாகத் தொடங்கினேன். “நீங்கள் கேட்பது மனிதநேயமானது. அளவுக்கதிகமான வலி. ஆனால்… நினைவுகளை அழிப்பது சாத்தியமில்லை. அப்படி ஒரு மருந்து இல்லை. நினைவுகளை அழிக்கவே முடியாது. அவை நம்மோடுதான் இருக்கும்.” அவனின் முகம் இருண்டது. கடைசித் தீப்பொறியும் அணைந்தது போலிருந்தது. “ஆனால், நாம் அந்த நினைவுகளுடன் எப்படி வாழ்கிறோம் என்பதை மாற்ற முடியும். நாம் அவற்றின் அர்த்தத்தை மாற்ற முடியும்” “அர்த்தமா? ஒரு கொலைக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?” “அது தான் நம்முடைய பணி, ஞானச்செல்வன். இப்போதுவரை, அந்த நினைவு உங்களுக்கு ஒரு சவக் குழியாக இருந்தது. நீங்கள் அதில் தினமும் குதித்து, அமரசிறியுடன் ஒன்றாக புதைந்து கொண்டீர்கள். ஆனால் நாம் அதை ஒரு நினைவுச் சின்னமாக மாற்ற முடியுமா என்று யோசிக்கலாம். அது ஒரு கல்லறை அல்ல, ஒரு நினைவகம்” “அது எப்படி?” ஞானச்செல்வனின் குரலில் சிறிது ஆர்வம் தொனித்தது. “நீங்கள் அந்த நினைவை ஒரு உணர்வுபூர்வமான கற்றலாக மாற்றலாம். ஒவ்வொருமுறை அந்த நினைவு வந்தாலும், அது உங்களுக்கு இப்படிச் சொல்லும்: ‘இனி ஒருபோதும் எந்த மனிதனையும் ஒரு இலக்காகப் பார்க்காதே. இனி ஒருபோதும் வன்முறையைத் தீர்வாகக் கருதாதே’ என்று. அந்த நினைவு இப்போது உங்கள் வலியின் மூலமாக, உங்களை ஒரு அமைதியின் தூதுவனாக மாற்றுகிறது. அது ஒரு சாபம் அல்ல, ஒரு அழைப்பு” ஞானச்செல்வன் ஆழமாக யோசித்தான். “நினைவுகளை நாம் அழிக்க முடியாது. ஆனால் நாம் அவற்றின் கதையை மாற்ற முடியும். ‘நான் ஒரு கொலையாளி’ என்ற கதையை. ‘நான் ஒரு மனிதன். நான் ஒரு பயங்கரமான தவறு செய்தேன். இல்லை தவறு என்று கருதக் கூடிய இடத்தில் இருந்தேன். இப்போது அதிலிருந்து கற்று, மற்றவர்களைக் காக்க முயல்கிறேன்’ என்ற கதையாக மாற்ற முடியும். முதல் கதை உங்களைக் கொல்லும். இரண்டாவது கதை, உங்களை வலுப்படுத்தும், மற்றவர்களுக்கு உதவும்” அவன் நீண்ட நேரம் மௌனமாக இருந்தான். கண்ணீர் வழிந்தோடியது, ஆனால் இப்போது அது வெறும் வலியின் கண்ணீர் அல்ல; அது ஒரு நல்ல கசிவு. ஒரு விடுவிப்பின் தொடக்கம். “அப்படியானால்… நான் அந்த நினைவிலிருந்து விடுபட முடியாது” “இல்லை. ஆனால், நீங்கள் அதை உங்கள் பின்னால் வைக்க முடியும். ஒரு கனவு காண்பவன் தன்னுடைய கனவுகளை மறக்க முடியாது. ஆனால், அந்தக் கனவுகளிலிருந்து கற்று, ஒரு புதிய நாளைத் தொடங்க முடியும். நீங்கள் செய்ய வேண்டியது அதுதான். உங்கள் கனவிலிருந்து நீங்கள் எழுந்திருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் விழித்திருக்கிறீர்கள். இப்போது, அந்தக் கனவு உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கிறது. அந்தப் பாடத்தை, நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மூலம் மற்றவர்களுக்குக் கற்பிக்கிறீர்கள்” ஞானச்செல்வன் இருக்கையிலிருந்து எழுந்து வெளிவாசலில் வந்து நின்றான். “மறதி ஒரு தப்பிப்பு அல்ல. அது ஒரு வகையான ஆன்மீக மரணம். நினைவு வலியைத் தரலாம். இருந்தாலும்…. அதுதான் வாழ்க்கையின் அடையாளம்” “”நான்… நினைவுகளோடு வாழ கற்றுக்கொள்கிறேன் டொக்ரர். அதற்கு முயற்சிக்கிறேன்” “அதுதான் வலிமை, ஞானச்செல்வன். வலியைத் தாங்கும் வலிமை. அதுவே உண்மையான தைரியம்” ஞானச்செல்வன் எதுவும் சொல்லாமல் வெளியே சென்றான். அவனை அழைத்து ஒரு பூங்கொத்தையும் பழங்கள் உள்ள பொதியையும் கையில் வைத்தேன். என்னை ஒரு கணம் ஆழ்ந்துபார்த்தான். என்னுடைய கைகளை எடுத்து முத்தமிட்ட பின் படியிறங்கினான். என்னுடைய கைகளில் அவனுடைய கண்ணீர்த்துளி விழுந்தது. நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னொரு பயனர் வந்தார். அவரைக் கவனித்தேன். ஞானச்செல்வன், இன்னொரு புதிய போரைத் தொடங்க வேணும். அது நினைவுகளுக்கு எதிரான போர் அல்ல. நினைவுகளோடு இணைந்து வாழும் போர். அது ஒரு நிறைவு. ஒரு தொடக்கம். 11 அன்றைய நாளை ஞானச்செல்வன் மறப்பதா இல்லையா என்பது அவனுக்குத் தீராத குழப்பமாகவே இன்னும் இருந்தது. என்னுடன் பேசும்போது சரியென்று தோன்றுகிறது. பிறகு அவை சரிதானா என்ற கேள்வியாக மாறுகின்றன. அந்த நினைவுகள் ஆழமாக, ஒரு ஒலியற்ற படமாக, அவனுடைய மனதின் உட்பரப்பில் பதிந்துவிட்டன. திரைச்சீலை காற்றில் விலகும்போது பளிச்செனத் தெரியும் காட்சியாக சட்டென அந்த நினைவு மேலெழுகிறது. மறுநாள் மாலை வந்தான். அன்று பயனர்கள் இருவரோடு இருந்தேன். அவர்கள் செல்லும் வரையில் காத்திருந்தான். அவர்களை அனுப்பி விட்டு அவனையும் அழைத்துக் கொண்டு பூங்கா வரைக்குமாக நடந்தேன். “டொக்ரர், உங்களை நான் நன்றாகச் சிரமப்படுத்துகிறேன். இப்படியே இருக்க முடியாது….” ஞானச்செல்வனின் குரலில் ஒரு புதிய வகையான தீவிரமும் உறுதியும் இருந்தது. இது வெறும் வலி அல்ல; இது ஒரு தத்துவ ரீதியான, வரலாற்று ரீதியான பிரச்சினை. அந்தப் பிரச்சினையிலிருந்தே இந்த வார்த்தைகள். இந்தக் கேள்விகள்… அவன் தனது கடந்த காலத்தின் கற்பனையான நீதிமன்றத்தில் நின்று கொண்டிருந்தான். நான் மெதுவாகத் தொடங்கினேன். ஒவ்வொரு வார்த்தையையும் மிகக் கவனமாகச் சொன்னேன். “ஞானச்செல்வன், உங்கள் இயக்கம் அதை ஒரு தியாகம் என்று பார்ப்பது நிச்சயம். ‘பெரிய நோக்கிற்காக, சிறிய தியாகங்கள் அவசியம். ஒரு சந்தேகத்துக்குரியவரின் மரணம், தமது போராட்டத்தின் அவசியத்தை உறுதி செய்கிறது என்றுதான் பார்க்கும். அப்படிப் பார்த்தால் அதில் அமரசிறி ஒரு தவிர்க்க முடியாத ‘இலக்கு’. ஒரு புள்ளிவிவரம். உங்கள் செயல், போராட்டத்திற்கான பணி. அது ஒரு இனத்திற்கான ‘தேசியக் கடமை’. அவர்கள் உங்களை ஒரு வீரன் என்று கருதியிருப்பார்கள்” அந்த வாதங்களைக் கேட்பது போல் ஞானச்செல்வன் கண்களை மூடிக்கொண்டான்.. “அவர்கள் என்னை இப்போது எப்படிப் பார்ப்பார்கள்?” அவனுடைய குரல் ஒலிக்கும் கண்ணாடியைப் போல் நடுங்கியது. “நான் ஒரு குற்றவாளியா? ஒரு துரோகியா?” “நீங்கள் ஒரு மனிதன்” – மென்மையாகச் சொன்னேன். “அமைப்புகளுக்குப் பொதுவாகவே உள்ள ஒரு பெரிய பிரச்சினை, தங்களுடைய தீர்மானத்துக்கு மாற்றாகச் சிந்திப்பது. அதைப் பரிசீலனை செய்யும் அளவுக்கு ஒருவர் வளர்ந்தால்.. நல்லது. ஆனால், அது எளிதல்ல. ஜனநாயகம் என்பது நாம் சொல்வதைப்போல எளிய ஒன்றல்ல. அது மிகக் கடினமான ஒரு கத்தி. அதைக் கையாள்வதற்கு நிதானமும் சாதுரியமும் உறுதியும் வேண்டும். அவர்களின் பார்வையில், நீங்கள் வேறு ஒரு அடையாளமாகவே இருப்பீர்கள்.. ஏனென்றால் நீங்கள் அவர்களின் மிக முக்கியமான விதியை மீறிவிட்டீர்கள் ‘எதிரியை மனிதனாகக் கருதாதே. கருதினால் நீ அமைப்பின் விதியில் செயற்பட முடியாது. கீதை சொல்வதும் இதுவேதான்” “அப்போது நான் செய்தது சரி… இப்போது அது தவறு. நேரம் மாறியதால், நீதி மாறிவிட்டதா? அப்படியானால், நீதி என்பது என்ன? ஒரு கடிகாரத்தின் கைகள் சுட்டும் திசையா?” ஒரு சிக்கலான கேள்வியின் முன்னே நின்றேன். “ஞானச்செல்வன், நீதி மாறவில்லை. நீங்கள் மாறிவிட்டீர்கள். அதுதான் வளர்ச்சி. ஒரு குழந்தை, ஒரு பொம்மையை உடைப்பது சரி என்று நினைக்கும். ஒரு வயது வந்தவன் செய்தால் அதே செயலை வன்முறை என்று பார்க்க முடியும். பொம்மை மாறவில்லை. செயல் மாறவில்லை. அதைப் பார்க்கும் பார்வை தான் மாறியுள்ளது. “அந்தக் காலத்தில், உங்களுக்கு ஒரு சித்திரம் கொடுக்கப்பட்டது. அதில் ‘நாம்’ எதிர் ‘அவர்கள்’ என்று இருந்தது. ‘நாம்’ நல்லவர்கள். ‘அவர்கள்’ கெட்டவர்கள். நீங்கள் இப்போது அந்தச் சித்திரத்தைக் கிழித்து, அதன் பின்னால் உள்ள உண்மையான மனிதனை, உண்மையைப் பார்க்க முயற்சிக்கிறீர்கள். அது வலிக்கும். ஏனென்றால், நீண்ட காலமாக நம்பியிருந்த ஒரு உண்மையைச் சந்தேகிப்பது, உண்மையல்ல என்று கண்டுபிடிப்பது எல்லாம் ஒரு பூகம்பம் போன்றது” ஞானச்செல்வன் தன் தலையை இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டான். “எனக்கு எதுவுமே புரியவில்லை டொக்ரர் ப்ளீஸ்… என் வாழ்க்கையின் அர்த்தமே என்ன? நான் எதற்காகப் போராடினேன்? நான் யார்?” அந்தக் கேள்வி, என்னுடைய இதயத்தை உருக்கியது. இது ஒரு மனிதன், தன் வாழ்க்கையின் கட்டுமானம் முற்றிலும் இடிந்து விழுந்த பிறகு, தன் அடித்தளத்தைத் தேடுவதுபோல் இருந்தது. “நீங்கள் போராடியது… ஒரு கனவுக்காக” நான் மெதுவாகச் சொன்னேன். “ஒரு நியாயமான, மரியாதைக்குரிய வாழ்க்கைக்காக. ஆனால் போர், கனவுகளைக் கொல்கிறது. அது உங்கள் கனவையும் கொன்றுவிட்டது. நீங்கள் இப்போது உணர்வது, அந்த இழப்பை…“ நான் தொடர்ந்தும் சொன்னேன்: “நீங்கள் யார்? நீங்கள் ஒரு போராளி. நீங்கள் சந்தர்ப்பத்தால் ஒரு குற்றவாளி. நீங்கள் ஒரு தந்தை. நீங்கள் ஒரு கணவன். நீங்கள் ஒரு மனிதன். நீங்கள் இவை அனைத்தும்தான். நாம் ஒரே ஒரு அடையாளமாக இருக்க முடியும் என்று நினைப்பது ஒரு பைத்தியக்காரத்தனம். வாழ்க்கை அவ்வளவு எளிதல்ல. நீங்கள் ஒரு உளமாறான செயலுடன் சேர்ந்திருக்க நேர்ந்த அல்லது அவ்வாறான ஒரு சூழலில் இருக்க வேண்டியிருந்த ஒரு நல்ல மனிதர். உங்களுக்குள் இருக்கும் போராளி, குற்றவாளி இருவரும் ஒருவருக்கொருவர் போராடுவார்கள். ஆனால் உங்களுக்குள் இருக்கும் தந்தையும் கணவனும். அவர்கள்தான் உங்களை மனிதனாக வைத்திருக்கிறார்கள்.” ஞானச்செல்வன் பதிலளிக்கவில்லை. நீண்டநேரம் மௌனமாக அமர்ந்திருந்தான். கண்ணீர் வற்றிவிட்டது. வார்த்தைகள் வற்றிவிட்டன. ஒருவேளை, அந்த மௌனத்தின் மத்தியில்தான், தெளிவான பதில் கிடைக்கக்கூடும். அவன் திரும்பி என்னை நேராகப் பார்த்தான். அவனுடைய கண்களில், ஒரு புதிய, வலிமையான வெறுமை இருந்தது. ஒரு புயல் கடந்துச் சென்ற பின்னரான அமைதியைப்போல. “எனக்கு இப்போது புரிகிறது… எனது கேள்விகளுக்கு பதில்கள் இல்லை என்று. நான் என்னுடன் வந்த காயங்களைக் கொண்டுதான் நடக்க வேண்டும்” நான் புன்னகைத்தேன். இது ஒரு வெற்றியின் புன்னகை. ஒரு போரை வெல்லும் புன்னகை அல்ல. ஒரு போருடன் வாழக் கற்றுக்கொள்ளும் புன்னகை. “அதுதான் உண்மை ஞானச்செல்வன். இது தான் வாழ்க்கை. நாம் எல்லோரும் காயங்களுடன் தான் நடக்கிறோம். சில காயங்கள் வெளியில் தெரியும். சில காயங்கள் உள்ளே. ஆனால் நாம் நடக்கிறோம். மற்றும் நாம் நடப்பதால்தான், நாம் மனிதர்கள்” 12 நான் என்னுடைய அலுவலகத்தில் உட்கார்ந்து, ஞானச்செல்வனின் கோப்பைப் பார்த்துக்கொண்டிருந்தேன். கோப்பின் வெளிப்புறம் காலியாக இருந்தது. ஆனால் உள்ளே, ஒரு மனிதனின் உள்மனம் கிழிந்து போன துண்டுகளாக இருந்தது. ஒவ்வொரு சந்திப்புக்குப் பிறகும், அவன் சில நிமிடங்கள் தனியாக அமர்ந்து, தான் சொன்ன கதையின் பாரத்தைத் தாங்க முயலுவான். என்னுடன் பேசுவதன் மூலம் பாரத்தை இறக்குகிறானா, இன்னும் ஏற்றிக் கொள்கிறானா என்று எனக்குச் சரியாகப் புரியவில்லை. நான் அமரசிறியின் குடும்பத்தைத் தேடிப் பார்க்கலாமா என்று யோசித்தேன். அது என்னுடைய வேலை இல்லை. ஆனாலும் அதொரு பொறுப்பு என்று தோன்றியது. அப்படிச் செய்தால், ஞானச்செல்வனுக்கும் ஆறுதலாக இருக்கும். அமரசிறியின் குடும்பத்துக்கும் உதவக் கூடும் என்று எண்ணினேன். ஆனால், அது சில சிக்கல்களையும் தரலாம். எதற்கும் எச்சரிக்கையோடு முயற்சிக்கலாம் என்று தோன்றியது. அதற்காகவே உங்களை அழைத்தேன்” என்றார் மேகதாஸ். ‘இது ஒரு கொலை மட்டுமல்ல, விடுதலைக்கான எத்தனிப்பும்தான்’ என்று எண்ணினேன். ஒரு முடிவற்ற சிதைவும்தான். 000 கருணாகரன் கருணாகரன் ஈழத்தில் நன்கு அறியப்பட்ட தமிழ்க்கவிஞர். எழுத்தாளர், சுயாதீன ஊடகவியலாளர், இதழாளர், பதிப்பாளர், விமர்சகர், ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற போராளி எனப் பல தளங்களில் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் இயங்கி வரும் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் மிகப் பரவலான அறிமுகத்தையும், விமர்சனத்தையும் கண்டவை https://akazhonline.com/?p=11045
  2. மலையக மக்களின் காணி உரிமை: மலையகத்திலா அல்லது வடக்கு – கிழக்கிலா? Veeragathy Thanabalasingham December 23, 2025 Photo, Sakuna Miyasinadha Gamage இயற்கையின் சீற்றம் அண்மையில் மலையகத்தில் ஏற்படுத்திய பேரழிவையடுத்து மலையக தமிழ் மக்களை குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடியேற வருமாறு தமிழ் அரசியல்வாதிகள் சிலர் விடுத்த அழைப்பு ஒரு தீவிரமான விவாதத்தை மூளவைத்திருக்கிறது. மலையகத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் துனபங்களை கேட்டறிந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அந்த மக்களைப் பாதுகாப்பான முறையில் வேறு இடங்களில் குடியேற்றுவது குறித்து பேசினார். மண்சரிவு ஆபத்து இல்லாத மலையகப் பகுதிகளில் அந்த மக்களை குடியேற்றுவதற்கான சாத்தியங்கள் குறித்து அரசாங்கத்துடன் பேசப்போவதாக கூறிய மனோ கணேசன் மலையகத்தில் போதியளவில் காணிகளைப் பெறமுடியாமல்போகும் பட்சத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடியேறுவதற்கு முன்வருவீர்களா என்று அவர்களை நோக்கி கேள்வியெழுப்பினார். அங்கு நின்றவர்களில் பெரும்பாலானவர்கள் அதற்குத் தயாராக இருப்பதாகப் பதிலளித்தனர். இயற்கை அனர்த்தத்தினால் படுமோசமாக பாதிக்கப்பட்டு வீடு வாசல்களை இழந்து நிராதரவாக நின்ற அந்த மக்கள் உடனடியாக அவ்வாறு கூறுவது இயல்பானதே. ஆனால், அந்த ஒரு மக்கள் கூட்டத்தினரின் பதிலை மாத்திரம் அடிப்படையாக வைத்து மலையக மக்கள் தங்களது பாரம்பரியமான வாழ்வாதாரங்களளையும் வாழ்க்கை முறையையும் துறந்தெறிந்துவிட்டு பெருமளவில் வடக்கு, கிழக்கில் குடியேறுவதற்கு விரும்புகிறார்கள் என்று கருதமுடியாது. பாதிக்கப்பட்ட மக்களுடனான மனோ கணேசனின் அந்தச் சந்திப்புக்கு ஊடகங்கள் பிரதானமாக, சமூக ஊடகங்கள் பெரும் முக்கியத்துவத்தை கொடுத்தன. அதையடுத்து இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மலையக தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கில் தாங்களாக வந்து குடியேற விரும்பினால் அதை வரவேற்பதாகவும் அதற்கான உதவிகளைச் செய்யத் தயாராயிருப்பதாகவும் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் மலையகத்தில் பாதுகாப்பற்ற பகுதிகளில் வாழும் தமிழ் மக்களை கிழக்கில் குடியேறவருமாறு அழைத்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) பொதுச்செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் மலையக மக்கள் தமிழ்ப்பகுதிகளில் குடியேறுவதற்கு ஆதரவையும் உதவியையும் வழங்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். மலையக தமிழ் மக்கள் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதற்தடவை அல்ல. இலங்கையின் சனத்தொகையில் வேறு எந்த பிரிவினரை விடவும் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்துவரும் தோட்டத்தொழிலாளர்கள் காலங்காலமாக மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குப் பாதுகாப்பான வாழ்வை உறுதிசெய்வதற்கு ஒருபோதுமே அரசாங்கங்கள் பயனுறுதியுடைய திட்டங்களை முன்னெடுத்ததில்லை. அத்தகையதொரு சமூகம் பேரழிவை மீண்டும் சந்தித்து நிராதரவாக நிற்கும் இடர்மிகுந்த ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இந்த தமிழ் அரசியல்வாதிகள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியதையும் வடக்கு, கிழக்கில் வந்து குடியேறுமாறு அழைப்பு விடுத்ததையும் நிச்சயம் வரவேற்க வேண்டும். திடீரென்று ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தை அடுத்து உருவான வேதனை மிகுந்த சூழ்நிலையில் பாதுகாப்பாக வாழ்வதற்கு இடமில்லை என்று மலையக மக்கள் கூறும்போது அவர்களை வரவேற்க வேண்டியது தங்களது கடமை என்று கூறிய சுமந்திரன் காணிகளையும் வீடுகளையும் கொடுப்பது மாத்திரம் பிரயோசனமானதல்ல, அவர்களுக்கான வாழ்வாதாரங்களையும் உறுதிசெய்வது அவசியம் என்றும் குறிப்பிட்டார். அடுத்த கட்டமாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மனோ கணேசனுடன் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் மக்களை குடியேற்றும் இத்தகைய செயற்பாடுகள் குறித்து அரசாங்கத்துடனும் பேசவேண்டியிருக்கிறது என்றும் சுட்டிக் காட்டினார். அத்துடன், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த பலர் வடக்கு, கிழக்கில் தங்களது காணிகளை மலையக தமிழர்களுக்கு வழங்குவதற்கு முன்வருவதாக அறிவித்திருக்கிறார்கள் என்ற தகவலையும் சுமந்திரன் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். எது எவ்வாறிருந்தாலும், மலையக தமிழ் மக்கள் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படாதிருப்பதை உறுதிசெய்வதற்கான திட்டங்கள் அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் பிராந்தியங்களிலேயே பிரதானமாக முன்னெடுக்கப்பட வேண்டும். படிப்படியாக பாதுகாப்பான பகுதிகளில் குடியமர்த்தும் பரந்தளவிலான திட்டம் ஒன்றின் கீழ் அவர்களை சுயவிருப்பத்தின் பேரில் வடக்கு, கிழக்கிற்கு அனுப்புவதில் பிரச்சினை எதுவும் இல்லை. அத்தகையதொரு திட்டத்தை அரசாங்கத்தினால் மாத்திரமே முன்னெடுக்க முடியும். தேசிய மக்கள் சக்தி பெருந்தோட்டங்களில் வசிக்கும் தமிழ் மக்களின் காணி மற்றும் வீட்டுவசதி பிரச்சினைகள் குறித்து எத்தகைய நிலைப்பாட்டை கடந்த வருடத்தைய இரு தேசிய தேர்தல்களுக்கு முன்னதாக வெளிப்படுத்தியது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது அவசியமாகும். மலையக தமிழ்ச் சமூகம் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு 200 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், அவர்களின் உரிமைகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி 2023 அக்டோபர் 15ஆம் திகதி ஹட்டன் பிரகடனம் ஒன்றை வெளியிட்டது. அதில் காணி, வீட்டுப் பிரச்சினைகள் குறித்து பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது: ஹட்டன் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம் மலையகத் தமிழ் மக்களின் அடையாளத்தையும் உரிமைகளையும் அங்கீகரித்து அவர்களின் காணி, வீடமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று 2024 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேசிய மக்கள் சக்தி உறுதியளித்தது. ஆட்சியதிகாரத்துக்கு வந்தபிறகு கடந்துவிட்ட ஒரு வருடத்துக்கும் அதிகமான காலப் பகுதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலையக மக்களுக்கு வழங்கிய இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதை நோக்கி எந்தளவுக்கு கவனம் செலுத்தியிருக்கிறது என்பது முக்கியமான ஒரு கேள்வி. அண்மைய இயற்கை அனர்த்தத்தைத் தொடர்ந்து மலையக மக்களின் காணிப் பிரச்சினை மீது மீண்டும் கவனம் பெருமளவுக்கு திரும்பியிருக்கும் நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை தமிழ்க் கட்சிகள் கோரவேண்டும். அது தொடர்பில் அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுப்பதற்கான இயக்கம் ஒன்றை முன்னெடுப்பதில் மலையக தமிழ்க் கட்சிகளுடன் வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளும் இணைந்து கொள்ள வேண்டும். மலையக மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவது குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கவனத்துக்கு தான் கொண்டுவந்தபோது அவர் ‘காணி எங்கே இருக்கிறது?’ என்று தன்னிடம் கேட்டதாக மனோ கணேசன் கூறியிருந்தார். காணி எங்கே இருக்கிறது என்று தெரியாமலா ஜனாதிபதி மலையக மக்களின் காணியுரிமைப் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக வாக்குறுதியளித்தார் என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை. மலையக தமிழ் மக்கள் ஏற்கெனவே வடக்கில் குறிப்பாக, வன்னிப் பிராந்தியத்தில் குடியேறியிருக்கிறார்கள். கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்செயல்களுக்குப் பிறகு பாதுகாப்புத்தேடி குறிப்பிட்ட எண்ணிக்கையான மலையக மக்கள் வடக்கிற்கு குடிபெயர்ந்தார்கள். அவர்களின் இன்றைய எண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. தற்போது மலையக மக்களை வடக்கு, கிழக்கிற்கு வருமாறு அழைக்கும்போது ஏற்கெனவே அங்கு குடியேறியவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை பற்றிய ஒரு சரியான மதிப்பீடு அவசியம். வடக்கு, கிழக்கு மக்களுடன் சமத்துவமானவர்களாக வாழ்வாதாரங்களையும் ஏனைய வசதிகளையும் பாகுபாடின்றி அவர்களினால் பெறக்கூடியதாக இருக்கிறதா என்பதைப் பற்றி முதலில் சிந்திக்க வேண்டும். அதேவேளை, இன்றைய மலையக தமிழ் இளைய தலைமுறையினர் தங்களது சமூகத்தின் எதிர்காலம் குறித்து எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று இனிமேலும் அழைக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. மலையகத் தமிழர்கள் என்ற தனியான இனத்துவ அடையாளம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக இருக்கிறது. மலையக தமிழ்தேசியம் என்ற கோட்பாடு பற்றி பேசுபவர்களும் இருக்கிறார்கள். உண்மையிலேயே, மலையகத் தமிழ் மக்களுக்கு இலங்கையின் ஏனைய தமிழ்பேசும் சமூகங்களை விடவும் தனித்துவமான பிரச்சினைகள், தனித்துவமான வாழ்வாதாரங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் கலாசாரம் ஆகியவை இருக்கின்றன. வடக்கு, கிழக்கு தமிழர்கள் இன்று வெளிநாடுகளுக்கு பெரும் எண்ணிக்கையில் செல்வதைப் போன்று மலையகத் தமிழர்களும் இலங்கையின் வேறு பாகங்களுக்கு குடிபெயரத் தொடங்கினால் தங்களுக்கான உரிமைகளைக் கோரமுடியாதவாறு தனியான ஒரு சமூகம் என்ற அடையாளத்தை அவர்கள் இழந்து விடக்கூடிய ஆபத்து இருக்கிறது. அவர்களை நாட்டின் எந்தப் பாகத்திலும் குடியேற்றக்கூடிய ஒரு நாடோடிக் கூட்டமாக நோக்கக்கூடாது. தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தின் பிரதானமான பிரிவினராவர். நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக அந்த மக்கள் பல தலைமுறைகளாக உழைத்துவருகிறார்கள். அவர்களை இயற்கை அனர்த்த ஆபத்துக்கள் நிறைந்த பகுதிகளில் இருந்து வேறு இடங்களில் குடியமர்த்துவதாக இருந்தாலும் கூட, அதற்கான திட்டங்களை பிரதானமாக அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த பிராந்தியங்களுக்குள் முன்னெடுப்பதே பொருத்தமானதாகும். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டையில் உதவி அரசாங்க அதிபராக பதவிவகித்த ஆங்கிலேயரான லெனார்ட் வூல்வ் இலங்கையில் சமஷ்டி ஆட்சிமுறையை ஏற்படுத்தவேண்டியதன் தேவை குறித்து 1936ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பிய மகஜர் ஒன்றில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள், மலைநாட்டுச் சிங்களவர்கள், கரையோரச் சிங்களவர்களுக்கு என்று அலகுகளை விதந்துரைத்த அதேவேளை, தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழ்கின்ற மலையகத்தின் பகுதிகளை ஒன்றிணைத்து தனியான அலகை ஏற்படுத்தலாம் என்று கூறினார். மலையகத் தமிழர்கள் மற்றைய சமூகங்களைப் போன்று தங்களுக்கென்று தனித்துவமான உரிமைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒரு வெள்ளையரான காலனித்துவ அதிகாரி 90 வருடங்களுக்கு முன்னரே கூறினார் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், சுதந்திரத்துக்குப் பின்னரான முதல் இலங்கை அரசாங்கம் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கியது. அரைநூற்றாண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு குடியுரிமையையும் வாக்குரிமையையும் வென்றெடுத்த அந்த மக்கள் காணியுரிமைக்காகவும் ஏனைய வசதிகளுக்காகவும் எவ்வளவு காலத்துக்கு போராட வேண்டியிருக்குமோ யாரறிவார்? வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/12493
  3. இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்! 24 December 2025 நாட்டின் வடக்கு தொடருந்து மார்க்கம் இன்று (24) முதல் பயணிகள் தொடருந்து போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான யாழ்தேவி கடுகதி தொடருந்து சேவை இன்று முதல் அதன் வழக்கமான கால அட்டவணைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து காலை 6:40 க்குப் புறப்படும் தொடருந்து, பிற்பகல் 2:32 க்குக் காங்கேசன்துறை நிலையத்தைச் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காங்கேசன்துறையிலிருந்து முற்பகல் 10:30 க்குப் புறப்படும் தொடருந்து, மாலை 6:54 க்குக் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும் என தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இந்த தொடருந்தின் முதலாம் வகுப்பு (குளிர்சாதன வசதி) மற்றும் இரண்டாம் வகுப்புப் பெட்டிகளுக்கான ஆசன முன்பதிவு வசதிகளையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மட்டக்களப்பு வரையான கிழக்கு தொடருந்து மார்க்கத்தின் சேவைகளும் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணிக்கும் பயணிகள், காலை 6 மணிக்கு திருகோணமலை நோக்கிப் புறப்படும் தொடருந்தில் பயணித்து, கல் ஓயா சந்தி தொடருந்து நிலையத்தை அடைய வேண்டும். பின்னர் அங்கிருந்து மதியம் 12:40 க்குப் புறப்படும் இலக்கம் 6011 ஐ கொண்ட தொடருந்து ஊடாக மட்டக்களப்பைச் சென்றடைய முடியும். அதேநேரம், மட்டக்களப்பிலிருந்து காலை 5 மணிக்குப் புறப்படும் தொடருந்தில் கல் ஓயா சந்தி நிலையத்தை வந்தடைந்து, அங்கிருந்து கொழும்பு நோக்கிய தொடருந்தில் பயணிகள் தமது பயணத்தைத் தொடரலாம் என தொடருந்து திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு நோக்கிய தொடருந்து சேவை மட்டக்களப்புக்கான தொடருந்து சேவை https://hirunews.lk/tm/437350/from-today-you-can-travel-by-train-to-kankesanthurai-and-batticaloa
  4. தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு: தமிழக அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை 24 December 2025 இனப்படுகொலைக்கான நீதிவிசாரணையை நடத்தி தமிழீழத்துக்கு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ எனப்படும் வை.கோபால்சாமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி பேராசிரியர் ஜவாஹிருல்லா, திராவிட தமிழர் பேரவையின் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் கோவை இராமகிருஷ்ணன், மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தியாகு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மணியரசன், விடுதலை தமிழ்ப் புலிகளின் குடந்தை அரசன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் ஈரோடு பொன்னையன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், தமிழ்ப் புலிகள் கட்சி நாகை திருவள்ளுவன், இந்திய சமூக ஜனநாயகக் கட்சி கட்சித் தலைவர் நெல்லை முபாரக், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ் ஆகியோர் இந்த கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையை ஐக்கிய நாடுகள் சபை நடத்த வேண்டும் என்று வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வரான சி.வி விக்னேஷ்வரன் தீர்மானம் நிறைவேற்றினார். அத்துடன், தமிழக சட்டமன்றத்தில், சுதந்திரத் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பபட்டது. ஈழத் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையை இந்திய அரசும், உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என்று முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்கள் தீக்குளித்து மாண்டார்கள். இந்தப் பின்னணியை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும், இந்திய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும், உலக நாடுகளும் உணர்ந்து ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கான நீதி விசாரணையை நடத்த முன்வர வேண்டும் என்றும், சுதந்திரத் தமிழீழத்துக்கு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தமிழர் காணிகளில் குடியேற்றப்பட்டுள்ள அத்துமீறிய குடியேற்றங்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும், ஈழத்தமிழர் தாயகத்திலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அதற்கான ஆயத்த வேலைகளைச் செய்ய தமிழகத்தில் உள்ள தமிழர்களும், புலம்பெயர் வாழ் தமிழர்களும் கடமையாற்ற வேண்டும் என்று இந்தக் கூட்டறிக்கையின் வாயிலாக வலியுறுத்தப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/437352/referendum-for-tamil-eelam-joint-statement-by-tamil-nadu-political-parties
  5. துருக்கியில் விமான விபத்து; லிபியாவின் இராணுவத் தலைவர் உட்பட 7 பேர் உயிரிழப்பு துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபியா ராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். உள்நாட்டுப் போர் நடந்து வரும் லிபியாவில், ஐநா சபை மற்றும் அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, தலைநகர் டிரிப்போலியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதை எதிர்க்கும் போட்டி அரசு, நாட்டின் கிழக்குப் பகுதியை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த அரசுக்கு ஆதரவாக ரஷ்யா, எகிப்து மற்றும் சில இஸ்லாமிய நாடுகள் உள்ளன. இந்த சூழலில், துருக்கியின் தலைநகரான அங்காராவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, லிபியாவின் ராணுவ தலைவர், நான்கு அதிகாரிகள் மற்றும் மூன்று பணியாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், லிபிய ராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கு காரணம் என லிபியா அதிகாரிகள் தெரிவித்தார். விமானம் புறப்பட்ட 40 நிமிடங்களில் தொடர்பை இழந்தது. பின்னர் அவசரமாக விமானத்தை தரையிறக்க முயற்சித்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது என துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்தார். https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/துருக்கியில்-விமான-விபத்து-லிபியாவின்-இராணுவத்-தலைவர்-உட்பட-7-பேர்-உயிரிழப்பு/50-370056
  6. அர்ச்சுனா எம்.பி. கைது யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று புதன்கிழமை (24) கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமநாதன் அர்ச்சுனா, நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றினால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் செவ்வாய்க்கிழமை (23) அன்று பிடியாணை பிறப்பித்தார். பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை, பொலிஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தமை மற்றும் சட்டவிரோதமாக வாகனத்தை நிறுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் செப்டெம்ப மாதம் 29ஆம் திகதி கைது செய்யப்பட்ட இராமநாதன் அர்ச்சுனா எம்.பி. பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/அர்ச்சுனா-எம்-பி-கைது/175-370065
  7. மாகாணசபைத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்குமாறு ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தல்! http://www.samakalam.com/wp-content/uploads/2025/12/Capture-2-300x201.jpg இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் ‘தித்வா’ சூறாவளியினால் வட, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் மற்றும் நிவாரண வழங்கல் செயற்பாடுகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டறிந்தார். அதற்குப் பதிலளித்த தமிழ்ப்பிரதிநிதிகள் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் 3000 க்கும் மேற்பட்ட கால்நடைகள் அழிவடைந்திருப்பதாகவும், திருகோணமலையிலும் இதனையொத்த நிலை பதிவாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். அதேபோன்று மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த அரசாங்கம், இன்னமும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ஜெய்சங்கரிடம் சுட்டிக்காட்டிய தமிழ்ப்பிரதிநிதிகள், மாகாணசபைத்தேர்தலைப் பழைய முறைமையில் நடாத்துவதற்கு ஏதுவாக இரா.சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை குறித்தும் எடுத்துரைத்தனர். அதுமாத்திரமன்றி மாகாணசபை முறைமையை நீக்கிவிட்டு, நிறைவேற்றதிகாரமுள்ள ஆளுநர் முறைமை உள்ளிட்ட வேறு முறைமைகளை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். எனவே இப்பேரனர்த்த சூழ்நிலையைக் காரணமாகக் குறிப்பிட்டு, அரசாங்கம் மாகாணசபைத்தேர்தல்களைப் பிற்போடுவதற்கு இடமளிக்கக்கூடாது என வேண்டுகோள்விடுத்த அவர்கள், ‘மாகாணசபைகள் என்பது இந்தியா பெற்ற பிள்ளை. நாங்கள் அதனை வளர்ப்பவர்கள் மாத்திரமே. எனவே அதனைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு இருக்கின்றது. ஆகவே மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்’ என்று வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது https://www.samakalam.com/மாகாணசபைத்-தேர்தலை-நடத்த/
  8. இலங்கைக்கான மீள் கட்டமைப்பு நிவாரணமாக 450 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் இந்தியா! டித்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீள் கட்டமைப்புக்கான திட்டமொன்றை இந்தியா அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இதனை தெரிவித்தார். இதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகை அடிப்படையிலான கடன் திட்டமாகவும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையாகவும் இலங்கைக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.samakalam.com/இலங்கைக்கான-மீள்-கட்டமைப/
  9. தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி காணி குறித்து வெளியிட்டுள்ள கருத்து! 22 Dec, 2025 | 11:24 AM (இராஜதுரை ஹஷான்) விட்டுக் கொடுப்பது பௌத்த தர்மமாகும். திஸ்ஸ விகாரைக்கு தேவையான காணியை வைத்துக் கொண்டு மிகுதி காணியை கோருபவர்களுக்கு, தமிழ் மக்களுக்கு வழங்கி பிரச்சினைக்கு தீர்வு காண்பது சிறந்ததாக அமையும் திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கிந்தொட்ட நந்தாராம தேரர் குறிப்பிட்டார். யாழ் - தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கிந்தொட்ட நந்தாராம தேரருக்கு அமரபுர ஸ்ரீ கல்யாணவங்ச நிகாய உத்தரலங்கா உப பிரதான சங்க நாயக்க பதவி ஞாயிற்றக்கிழமை (21) கொழும்பில் வைத்து வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பலர் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கிந்தொட்ட நந்தாராம தேரர், திஸ்ஸ விகாரையை அடிப்படையாகக் கொண்டு இன்னும் ஓரிரு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் பிரச்சினை தோற்றம் பெறாத வகையில் தீர்வு காண்பது மிகவும் சிறந்ததாக அமையும். சகல பிரச்சினைகளுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். இந்த பிரச்சினைக்கு இரு தரப்பு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண வேண்டும். விட்டுக் கொடுப்பது பௌத்த தர்மமாகும். விகாரைக்கு தேவையான காணியை வைத்துக் கொண்டு மிகுதி காணியை கோருபவர்களுக்கு, தமிழ் மக்களுக்கு வழங்கி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது சிறந்ததாக அமையும். திஸ்ஸ விகாரையை முன்னிலைப்படுத்தி தொடர்ச்சியான முரண்பாடுகள், பிரச்சினைகள் தோற்றம் பெறுவது முறையற்றது. இதற்கு உரிய தலைமைத்துவத்தின் ஊடாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு முரண்பாடற்ற வகையில் தீர்வு காண வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/234074
  10. புதிய கல்வி திட்டம் சமூகத்தை சீரழிக்கும் - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றச்சாட்டு 22 December 2025 அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் பாலியல் கல்வி பாடத்திட்டத்திற்குக் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஹங்வெல்ல, பஹத்கம புனித ஜோசப் தேவாலயத்தில் நேற்று (21) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோருக்கான அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார். ஆறு வயது முதலே மாணவர்களுக்கு பாலியல் கல்வியை அறிமுகப்படுத்தும் புதிய பாடத்திட்டம், சிறுவர் மனதில் தேவையற்ற மற்றும் 'இயல்புக்கு மாறான' விடயங்களைப் புகுத்துவதாக அவர் கவலை தெரிவித்தார். பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ விழுமியங்களால் கட்டியெழுப்பப்பட்ட இலங்கையின் கலாசாரக் கட்டமைப்பை இத்தகைய திட்டங்கள் சீர்குலைப்பதாக அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளிடமிருந்து நிதி உதவியைப் பெறுவதற்காக, நாட்டின் கலாசார விழுமியங்களை அரசாங்கம் அடகு வைக்கக் கூடாது என அவர் எச்சரித்தார். அரசியல் தலைவர்கள் தமக்குரிய எல்லைக்குள் நின்று செயற்பட வேண்டும் என்றும், குடும்பம் மற்றும் மத விழுமியங்களுக்கு முரணான விடயங்களில் தலையிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சிறுவர்களுக்கு மனித உரிமைகள் இருப்பதை ஏற்றுக்கொண்ட போதிலும், அந்த உரிமைகள் அவர்களை பெற்றோருக்கு எதிராகத் திருப்புவதற்கோ அல்லது குடும்பக் கட்டமைப்பைச் சிதைப்பதற்கோ பயன்படுத்தப்படக் கூடாது என கர்தினால் வலியுறுத்தினார். https://hirunews.lk/tm/437007/new-education-plan-will-destroy-society-malcolm-ranjith-alleges
  11. கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ஜெனரல் பலி கார் ஒன்றின் அடியில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் ரஷ்ய லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) உயிரிழந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வரோவ் ஆயுதப்படைகளின் நடவடிக்கை பயிற்சிப் பிரிவின் தலைவராக செயற்பட்டு வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் உக்ரைன் புலனாய்வுப் பிரிவினரின் ஈடுபாடு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உக்ரைன் இது குறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ரஷ்ய தலைநகரின் தெற்குப் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவ இடத்திற்கு விசாரணை அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. https://adaderanatamil.lk/news/cmjguuaos02zvo29nzfr3b689
  12. பெயரில் மட்டுமே மாற்றம் : ஆனால் ஆபத்து லக்ஸ்மன் தமது உரிமைகளுக்காகப் போராடும் தரப்புக்களை சிறைக்குள் தள்ளி, அச்சுறுத்தி, உரிமைகளை நசுக்க அரசால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ அல்லது அதனையொத்த எந்தவொரு சட்டத்தையோ முற்றாக எதிர்க்கின்றோம் என்ற நிலைப்பாடே தமிழ் மக்கள் மத்தியில் கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது. இந்த நிலையில்தான், “பயங்கரவாதமானது, அதன் பல்வேறு வடிவங்களிலும் வெளிப்படுத்தல்களிலும் நாடுகளினது சமுதாயத்தின் சமாதானத்துக்கும் பந்தோபஸ்துக்கும் ஒரு பாரிய அச்சுறுத்தலாக உள்ளதாதலாலும், அத்துடன் இலங்கையையும், அதன் மக்களையும், அவர்களின் ஆதனங்களையும் பயங்கரவாதச் செயல்களிலிருந்தும் தொடர்புபட்ட செயல்களிலிருந்தும் பாதுகாத்தல் இலங்கை அரசாங்கத்தின் முதன்மைக் கடமையொன்றாக உள்ளதாதலாலும் என்ற முன்னுரை அடியைக் கொண்டு பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டம் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் முன்னேற்றத்துக்காக எதனை முதலில் செய்யவேண்டும். எது இப்போது தேவையானது என்பதனைப்பற்றிய யோசனைகளின்றி சில விடயங்கள் இந்த ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியேற்பு முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதையாகப் பல அசம்பாவிதங்கள், அனர்த்தங்கள் நிகழ்கின்றன. இது அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டவைகள் இல்லையானாலும், மக்களது பிரச்சினை என்பது பொதுவானதாக இருந்து விடுகிறது. அனர்த்தத்தினை அரசியலாக்க முயற்சி நடக்கிறது. இராணுவத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நாட்டின் முன்னேற்றமே நோக்கம் என்று கூறிக் கொண்டு அரசியல் பழிவாங்கல்கள் நடைபெறுகின்றன என பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவற்றினை காதில் வாங்கிக் கொள்ளாது நடைபெற்று வருகின்ற செயற்பாடுகளின் ஒரு பகுதியாகவே தற்போது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய வகையில், பயங்கரவாதக் குற்றங்கள் எனும் பதத்துக்குப் பரந்துபட்ட வரைவிலக்கணம் வழங்கப்பட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்ற பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டத்தையும் பார்க்கலாம். இலங்கையை பொறுத்தவரையில், பிரித்தானியரிடமிருந்து கையளிக்கப்பட்டு சுதந்திரம் வழங்கப்பட்டதன் பின்னர், 70களில் நாட்டைக் கைப்பற்றிக் கொள்வதற்காக ஒரு ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. அடுத்தது வடக்குக் கிழக்கை தாயகமாக் கொண்ட தமிழ் மக்கள் தங்களுக்கான சுயநிர்ணயக் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை நடத்தினர். ஆரம்பத்தில் அது அகிம்சை வழியாக இருந்த போதிலும் அரசின் அடக்குமுறைகள், இராணுவ மயமாக்கல், நெருக்கடிகள் ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமாகின. அந்த ஆயுதப் போராட்டத்தினை அடக்குவதற்காக 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) கொண்டுவரப்பட்டது. இருந்தாலும், இதுவரையில் அச்சட்டம் நீக்கப்படவில்லை. கடந்த அரசாங்க காலங்களில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி தமிழ்த் தேசியத் தரப்பினர் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை விடுத்துவந்திருந்ததுடன், போராட்டங்களையும் நடத்தினர். அக் காலத்தில் நடைபெற்ற போராட்டங்களில் தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் ஆர்வத்துடன் பங்களிப்புச் செய்திருந்தனர். ஆனால் அந்த வேகம் இப்போது இல்லாமலிருப்பது கவலையளிப்பதாகத் தமிழ்த் தலைவர்கள் கருத்து வெளியிட்டுமிருந்தனர். இருந்தாலும் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 10 வருடங்களின் பின்னர், நாட்டில் நிகழ்ந்த ஈஸ்ர் குண்டுத் தாக்குதல்கள் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கான தேவையைத் தூண்டின. அப்போது பயங்கரவாத தடைச்சட்டம் முஸ்லிம்கள் மீது பாயத் தொடங்கியது. அதே நேரத்தில் கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்து வேளையில் நடைபெற்ற 'அரகலய' போராட்டம் சிங்களவர்களையும் அச்சட்டம் பதம்பார்க்க வழியைக் கொடுத்தது. அதுவரையில் பயங்கரவாத தடைச்சட்டம் பற்றிய கவலையேயின்றி இருந்து வந்த முஸ்லிம், சிங்கள மக்கள் தங்கள் மீது அச்சட்டம் பாய்ந்த வேளையில் விழித்துக் கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் மற்றும் அந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இன்றும் சிறைவாசம் அனுபவித்து வருபவர்கள் விடுவிக்கப்படாமைக்கு தென்பகுதியிலிருக்கும் புலிகளின் மீளுருவாக்கம் என்ற அச்சம் காரணமாக இருந்தது. இப்போதும் தொடர்கிறது. ஆயுதப் போராட்டம் ஆரம்பமாவதற்கான காரணிகளை அவ்வாறே வைத்துக்கொண்டு நாட்டில் அனைத்து மக்களிடமும் சமாதானத்தை ஏற்படுத்த முயல்வதும், நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களையும் ஏனைய மக்களையும் கிலிகொள்ளச் செய்து மீண்டுமொரு நெருக்கடி, ஆபத்து மிக்க சட்டத்தை உருவாக்குவதற்கு நடைபெற்றுவருகின்ற முயற்சி முறியடிக்கப்படவேண்டும் என்பது பெரும்பான்மையானவர்களின் எண்ணமாக இருந்தாலும் நடைபெறப் போகும் ஆபத்து தடுக்கப்படுமா என்பதுதான் சந்தேகமானது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிச்சயமாக எதிர்த்தே செயற்படுவோம். அது எந்தக் கட்சியாக இருந்தாலும் எதிர்த்தே செயற்படுவோம் என்ற நிலைப்பாட்டிலிருக்கும் தமிழ்த் தரப்பு தங்களது பக்க நியாயங்களைச் சொல்கின்றன. அமைப்புகள் ரீதியாவும், தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், கட்சிகளாகவும் கருத்துகள் வெளிவருகின்றன. அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் நீதியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே ஒரு மாத காலம் கருத்தறிய வழங்கியிருந்த போதிலும் தற்போது பெப்ரவரி 28ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. சட்டவரைவு குறித்து கடந்த ஒகஸ்ட் மாத்தில் அரசாங்கம் தகவல் வெளியிட்டிருந்த நிலையில் இப்போது வரைபு வெளியிடப்பட்டிருக்கிறது. இருந்தாலும் ஒருசிலருடைய கருத்து இது சரியான காலமா என்பதே. தித்வா சூறாவளியால் நாடு பாதிக்கப்பட்டு நெருக்கடி நிலை காணப்படுகிறது. இந்த நிலையில், இச்சட்டம் கொண்டுவருவதற்கு என்ன அவசியம் இருக்கிறது என்பது அதன் பொருள். பயங்கரவாதத்தடைச் சட்டத்திற்குப் பதிலீடாக முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அனைவராலும் எதிர்க்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் அரசைப்பாதுகாக்கும் சட்டமானது அச்சட்டங்களை விடவும் மோசமானதாகவே சொல்லப்படுகிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குப் பிரத்தியேக சட்டமொன்று தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்த 'தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்த போதிலும் ஆட்சிக்கு வந்த பின்னர் பிறி தொரு சட்டத்தின் ஊடாக பதிலீடு செய்ய முனைவது வாக்குறுதிகளை மீறும் செயலாகவே பார்க்கப்படுகிறது. எந்தவொரு சட்டமும் வெளிப்படையானதும் கலந்துரையாடலுக்குள்ளாக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சில விடயங்களை கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு ஒரு சட்டம் ஏற்படுத்தப்படுமாக இருந்தால், அதனை சகலரையும் உள்ளடக்கிய வெளிப்படைத்தன்மைவாய்ந்ததாகக் கொள்ள முடியாது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இந்த இடத்தில் பயங்கரவாத்தத தடைச்சட்டம் போன்றதொரு சட்டம் தேவையில்லை என்ற அழுத்தம் காணப்படுகின்ற வேளையில், இச்சட்டத்தை அரசாங்கம் ஏன் கொண்டுவர முயற்சிக்கிறது என்பதுதான் கேள்வி. இருந்தாலும், வழமைபோலவே முக்கியமான சட்டங்கள் கொண்டுவரப்படுகின்ற வேளைகளில் அது குறித்து பொதுமக்களுடக் கலந்துரையாடல்கள் நடத்தி, விளிப்புணர்வுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடும் சிவில் அமைப்புகளில் பெரும்பான்மையானவைகள் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பான வேலைகளில் இருக்கின்ற வேளையில் இச்சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களின் கருத்தறியும் செயற்பாடு சிறப்பாக நடைபெறுமா என்பதும் கலந்துரையாடலுக்கானதே. இந்நிலையில், சட்டமூலம் தொடர்பில் வெளியிடப்பட்டு வருகின்ற கருத்துக்களின் முக்கியமாக, சட்டமூலத்தை பொதுத்தளத்தில் பகிரங்கமாக வெளியிட்டமைக்குப் பாராட்டியுள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், கருத்துக்களை முன்வைப்பதற்கும், கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கும் மேலும் கால அவகாசத்தைச் கோரியிருக்கிறது. அத்தோடு, இந்த சட்டமூலமானது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விட முன்னேற்றகரமானதாக இருக்கின்றதா? எனும் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படக் கூடாது. மாறாக நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் இலங்கை கொண்டிருக்கும் சர்வதேச மனித உரிமைகள் சார் கடப்பாடுகளுக்கு அமைவாக அமைந்திருக்கின்றதா என்ற அடிப்படையில் மதிப்பிடவேண்டும். பயங்கரவாதத்தடைச் சட்டம் அரசியலமைப்பின் பிரகாரம் வரையப்பட்டது அல்ல என்பதையும், அதனை அடிப்படை உரிமைகள் சார் நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைப்பதற்கு ஆக்கப்பூர்வமான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இச் சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில், அரசாங் கத்தினால் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் வரைவில் முன்னைய திருத்தச் சட்டமூலங்களை விடவும் மோசமான விடயங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதை விடுத்து, அதனைப் பதிலீடு செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முற்றாக எதிர்ப்பதாகவும் கூறியிருக்கின்றார். ஒட்டு மொத்தத்தில், பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட்ட வேண்டுமென்ற வலியுறுத்தல்கள் வந்துகொண்டிருக்கின்ற வேளையில் பயங்கரவாதம் என்பதனை பயங்கரவாதத்திலிருந்து மாற்றி மேலும் மோசமானதொரு சட்டத்தை ஏற்படுத்த முனையும் அரசின் செயற்பாடு இடதுசாரித்தனம்தானா என்றே கேட்கத் தோன்றுகிறது. எது எவ்வாறானாலும், சர்வதேச தரநெறிகளினதும் நியமங்களினதும், உள்நாட்டுத் தேவைகளினதும் அடிப்படையின்மீது, பயங்கரவாதத்துக்கு எதிராகக் குற்றவியல் நீதியை நிருவகிப்பதற்கான பயனுள்ள முறைமையொன்றை வலுவுறுத்துவதனூடாக உள்நாட்டு மற்றும் சர்வதேச பயங்கரவாதத்தை இலங்கையில் அடியோடு அழிப்பதற்கும் தடுப்பதற்கும் உறுதி பூண்டு உருவாக்கப்படுகின்ற இச்சட்டத்தால் நாடு எப்பாடுபடப்போகிறதோ என்பதை எதிர்காலமே தீர்மானிக்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பெயரில்-மட்டுமே-மாற்றம்-ஆனால்-ஆபத்து/91-369951
  13. “சோத்துக்கு வழி இல்லாதவர்களா?” பளையில் கிராம சேவையாளருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்! adminDecember 22, 2025 பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வண்ணாங்கேணி, சஞ்சீவி நகர் மற்றும் ஆராதிநகர் கிராம மக்கள், தமது கிராம சேவையாளரின் பொறுப்பற்ற செயல்பாடுகளைக் கண்டித்து நேற்று (டிசம்பர் 21) பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். மக்கள் முன்வைக்கும் அதிரடிப் புகார்கள்: தனது அவல நிலையைத் தொலைபேசியில் விவரித்த பெண்ணொருவரிடம், “சோத்துக்கு வழி இல்லாதவர்களுக்கு சாமான் கொடுக்க முடியாது” என கிராம சேவையாளர் மிகக் கேவலமாகப் பேசியதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வெள்ள நீரை வெளியேற்ற குளத்தைப் புனரமைக்க ஏனைய அரசுத் தரப்புகள் அனுமதி அளித்தும், கிராம சேவையாளர் அதற்குத் முட்டுக்கட்டை போடுவதாகக் கிராம அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு முரணான செயல்? பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சென்று சந்திக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், குறித்த அதிகாரி மக்களை அலட்சியப்படுத்துவதுடன், ஏழை மக்களை இழிவுபடுத்துவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து வருடங்களுக்கும் மேலாக தொடரும் இந்த வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் “பொறுப்பான அரசாங்கம்” முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/224692/
  14. ஆசான் ஜெயமோகனின் வெண்முரசு தொடர் காவியம் இன்னும் வாசித்துக்கொண்டிருக்கின்றேன். 18 ஆம் நாள் போர் முடிந்து துரியோதனன் மனிதர்கள் நுழையாத காலகம் என்னும் அடர்காட்டினுள் ஒரு ஏரிக்குள் மறைந்திருக்கின்றான். அவனை ஒரு நாளுக்கு மேலாக தேடி கிருஷ்ணனுடன் வரும் பாண்டவர்கள் ஏரிக்குள் இருந்து துரியோதனனை வெளிவரச் செய்து பீமனுடனான கதைப் போருக்கு தயாராகும் இடத்தில் நிற்கின்றேன். துரியோதனன் 18ஆம் நாளிலா அல்லது 19ஆம் நாளிலா மரணமடைந்தான் என்பது மயக்கமாக உள்ளது. தொடர்ந்து மகாபாரதத்தைப் படிக்காமல் கிடைக்கும் இடைவெளியில் சிறுகதைகள், தத்துவங்களைப் படிக்கின்றேன். ஆனால் எல்லாம் புரிவதில்லை! படிப்பவற்றில் சிலவற்றைத்தான் யாழில் பதிவதுண்டு..😃
  15. வாகீசன் உமாகரனின் சகோதரர்! ஆய்வாளர் நிலாந்தன் ஒரு அலசல் எழுதியிருக்கின்றார்.
  16. 2026 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி விவரம்- தமிழக வீரர்கள் யார் யார்? 21 Dec 2025, 12:52 AM 2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று (டிசம்பர் 20) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் முனைப்பில் களமிறங்குகிறது. துணை கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2026-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி தொடங்கி மார்ச் 8-ந் தேதி வரை நடைபெறும். இந்தியா, இலங்கையில் இந்த போட்டிகள் நடைபெறும். இந்திய அணி வீரர்கள்: கேப்டன்: சூர்யகுமார் யாதவ் அபிஷேக் சர்மா சஞ்சு சாம்சன் திலக் வர்மா ஹர்திக் பாண்டியா சிவம் துபே அக்சர் படேல் ரிங்கு சிங் ஜஸ்பிரித் பும்ரா ஹர்ஷித் ராணா அர்ஷ்தீப் சிங் குல்தீப் யாதவ் வருண் சக்கரவர்த்தி வாஷிங்டன் சுந்தர் இஷான் கிஷன் சுப்மன் கில் இந்த உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். 2026 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் பங்கு பெறும் அணிகள்: குரூப் A: இந்தியா நமீபியா நெதர்லாந்து பாகிஸ்தான் அமெரிக்கா குரூப் B: ஆஸ்திரேலியா அயர்லாந்து ஓமன் இலங்கை ஜிம்பாப்வே குரூப் C: வங்கதேசம் இங்கிலாந்து இத்தாலி நேபாளம். மேற்கிந்தியத் தீவுகள் குரூப் D: ஆப்கானிஸ்தான் கனடா நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவும் இலங்கையும் போட்டி நடத்தும் நாடுகள் என்பதால் டி20 உலகக் கோப்பை தொடர்ல் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. ICC T20 உலகக் கோப்பை – சாம்பியன் பட்டியல் வரிசை நாடு / அணி மொத்த வெற்றிகள் வெற்றி பெற்ற ஆண்டுகள் 1 இந்தியா 2 முறை 2007, 2024 2 மேற்கிந்தியத் தீவுகள் 2 முறை 2012, 2016 3 இங்கிலாந்து 2 முறை 2010, 2022 4 பாகிஸ்தான் 1 முறை 2009 5 இலங்கை 1 முறை 2014 6 ஆஸ்திரேலியா 1 முறை 2021 https://minnambalam.com/2026-icc-mens-t20-world-cup-indian-team-squad-details/
  17. 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்- இன்று திமுக மா.செ.க்களுடன் ஸ்டாலின் ஆலோசனை 21 Dec 2025, 7:19 AM தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை SIR- இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. இதனடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வாக்காளர்கள் நீக்கம், மீண்டும் சேர்ப்பதற்கான நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க திமுகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வீடியோ கான்பரன்ஸ் மூலம் இக்கூட்டம் நடைபெற உள்ளது. https://minnambalam.com/97-37-lakh-voters-deleted-cm-stalin-to-hold-consultation-with-dmk-district-secretaries-today/
  18. கொஞ்சம் மாற்றங்கள் உள்ள இன்னோர் அலசல்.. தமிழ்நாட்டை நோக்கிச்சென்ற தமிழ்த்தேசியப் பேரவை - நிலாந்தன் “சென்னையில் திறவுகோல்” என்ற தலைப்பில் மு.திருநாவுக்கரசு, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் 2006ம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் அவர் இந்தியாவின் வெளியுறவு முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்றால் தமிழகம் பெருமெடுப்பில் கொந்தளிக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். அதாவது டெல்லியைக் கையாள்வதற்கான திறவுகோல் தமிழகத்தில்தான் உண்டு என்ற பொருள்பட கட்டுரையின் சாராம்சம் அமைந்திருந்தது. தமிழக வெகு சனங்கள் ஈழத் தமிழர்களுக்காகக் கொந்தளித்து எழுந்தால் இந்திய மத்திய அரசாங்கத்தின் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று கட்டுரை கூறுகிறது. இது எழுதப்பட்டது 18.11.2006 இல். அதாவது 2009 மே மாதத்துக்கு முன். இறுதிக்கட்டப் போரில் தமிழகம் நொதிக்கத் தொடங்கியது. எனினும் அதனை அப்போது இருந்த திமுக அரசாங்கம் மடை மாற்றியது என்றும், அதனால்தான் இறுதிக்கட்டப் போரில் இலங்கை அரசாங்கம் வெற்றி பெற முடிந்தது என்றும் ஒரு குற்றச்சாட்டு ஈழத்தமிழர்கள் மத்தியில் உண்டு. இக்குற்றச்சாட்டு காரணமாக கலைஞர் கருணாநிதியை இப்பொழுதும் விமர்சிக்கும் ஈழத் தமிழர்கள் உண்டு. இவ்வாறான குற்றச்சாட்டுகளின் பின்னணியில்,கடந்த 16 ஆண்டுகளாக தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையிலான உறவு பெருமளவுக்கு பலவீனமடைந்திருக்கிறது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்நாடு ஈழத் தமிழர்களுக்காக நொதிக்கவில்லை; கொந்தளிக்கவில்லை. தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் உருவாக்கப்பட்டமை, ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது இன அழிப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை போன்ற இரண்டு குறிப்பிடத்தக்க விடயங்களைத்தவிர கடந்த 16 ஆண்டுகளாக தமிழகம் ஈழத் தமிழர்களுக்காக நொதிக்கவில்லை. கடந்த 16 ஆண்டு கால ஈழத்தமிழர்களின் ஐநாமைய அரசியலில்,ஐநா கூட்டத்தொடர்களின்போது இந்திய மத்திய அரசாங்கம் 13ஆவது திருத்தத்தைத்தான் ஒரு தீர்வாக தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது. கடந்த ஐநா தீர்மானத்தின் போதும் அதுதான் நிலைமை. கடந்த 16 ஆண்டுகளிலும் இந்தியா ஐநாவில் ஒரு முறை மட்டும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. கடந்த பதினாறு ஆண்டுகளிலும் இந்தியாவை அதிக காலம் ஆட்சி செய்து வருகின்ற பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கத்தின் கீழ், ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் வெளியுறவு நிலைப்பாடுகளில் திருப்பகரமான மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை. ஐநாவில் இனப்பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் மாறாத நிலைப்பாடு அதைத்தான் உணர்த்துகின்றது. அவ்வாறு இந்திய மத்திய அரசின் நிலைப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தத் தக்க விதத்திலோ அல்லது ஈழத் தமிழர்களோடு தனது சகோதரத்துவத்தை நிரூபிக்கும் விதத்திலோ தமிழ்நாடு குறிப்பிட்டுச் செல்லக்கூடிய அளவுக்கு கொதிக்கவில்லை.கொந்தளிக்கவில்லை. 2009க்குப் பின் திமுகவுக்கு எதிராகவும் ஏனைய திராவிடக் கட்சிகளுக்கு எதிராகவும் “தமிழ் எதிர் திராவிடம்” என்ற துருவநிலை அரசியலை முன்னெடுக்கும் சீமான், தன்னை ஈழப் போரின் ஆகப் பிந்திய வாரிசாகக் காட்டிக்கொள்கிறார். ஆனால் அவரால் சில பேரணிகளை ஒழுங்குபடுத்தியதற்குமப்பால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முழுத் தமிழகத்தையும் ஸ்தம்பிக்க வைக்கும் விதத்தில் பேரெழுச்சிகளையோ ஆர்ப்பாட்டங்களையோ ஒருங்கிணைக்க முடியவில்லை. எனினும் ஈழத் தமிழர்கள் விவகாரம் தமிழகத்தில் தொடர்ந்தும் ஒரு பேசு பொருளாக அல்லது பேசப்பட வேண்டிய ஒரு விவகாரமாக இருந்து வருகிறது என்பதைத்தான் நடிகர் விஜய் அண்மையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தெரிவித்த கருத்துக்கள் காட்டுகின்றன. அதாவது தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச வேண்டிய அரசியல் சூழல் இப்பொழுதும் உண்டு. ஆனால் அது ஒர் உள்ளுறையும் சக்திதான். அதனை மகத்தான ஒரு மக்கள் சக்தியாக, எழுச்சியாக, கொந்தளிப்பாக மாற்ற சீமானால் முடியவில்லை. திராவிட இயக்கக் கட்சிகளும் அதில் ஆர்வம் காட்டவில்லை. தமிழ்நாட்டில் இறுதிக்கட்டப் போர் வரையிலும் 19க்கும் குறையாத தமிழர்கள் தீக்குளித்திருக்கிறார்கள். உலகில் வேறு எந்த ஒரு தமிழ்ச் சமூகமும் அவ்வாறு ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கவில்லை. ஒரு நீரிணையால் பிரிக்கப்படுகின்ற தமது சகோதர மக்களுக்காக அவ்வாறு அதிக தொகையினர் தீக்குளித்தமை என்பது தமிழகத்தில் மட்டுமே நடந்திருக்கிறது. நவீன அரசியலில் ஒப்புவமை இல்லாத போற்றுதலுக்குரிய தியாகம் இது. முதலாவது முள்ளிவாய்க்கால் நினைவாலயம் தமிழகத்தில் தஞ்சாவூர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான சசிகலாவின் கணவருடைய காணியில் கட்டப்பட்டது. தமிழ் இனஅழிப்புக்கு எதிராக உலகின் முதலாவது தீர்மானம் ஜெயலலிதாவின் தலைமையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. எனவே ஈழத் தமிழர்களுக்காக பல விடயங்களை முதலில் செய்தது தமிழகம்தான்; தீக்குளித்தது தமிழகம்தான். அப்படிப்பட்ட தமிழகம் கடந்த 16 ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறது. இப்படிப்பட்டதோர் பிராந்திய அரசியல் சூழலில்தான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையானது கடந்த வாரம் தமிழ்நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக ஒரு விஜயத்தை மேற்கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசியப் பேரவையில் பங்காளிகளாக இருக்கும் ஏனைய கட்சித் தலைவர்களும் தமிழகம் செல்வதற்குத் தயாராக இருந்ததாகத் தெரிய வருகிறது. ஆனால் ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், தவறாசா ஆகிய மூவரும் மருத்துவக் காரணங்களுக்காகப் பயணம் செய்யமுடியாத ஒரு நிலைமை தோன்றியதால் ஐங்கரநேசன் மட்டும் அந்தத் தூதுக்குழுவில் இணைந்தார். இத்தூதுக்குழுவானது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலினும் உட்பட ஏனைய கட்சித் தலைவர்களையும் மூத்த ஈழ உணர்வாளர்களும் சந்தித்திருப்பதாகத் தெரிய வருகிறது. 2009க்குப் பின்னர் தமிழ்நாட்டை நோக்கிச் சென்ற ஒப்பீட்டளவில் பெரிய தமிழ்த் தேசிய அரசியல் தூதுக்குழு இதுவெனலாம். ஏற்கனவே தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தனித்தனியாக பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை நோக்கித் தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகத் திரண்ட ஒரு சந்தர்ப்பம் சில ஆண்டுகளுக்கு முன் அரசியல் கைதியாகிய சாந்தனின் விடயத்தில் இடம்பெற்றது. சாந்தனை விடுவிக்கக்கோரி அப்போது இருந்த தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்தார்கள். அதன்பின் இப்பொழுது ஒரு தூதுக்குழு தமிழ்நாட்டுக்குச் சென்றிருக்கிறது. இத்தூதுக்குழு தமிழ் நாட்டுக்குச் சென்றிருக்கும் அதே காலப்பகுதியில் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவரைச் சந்திக்கவிருப்பதாகச் செய்திகள் வெளி வந்திருக்கின்றன. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் இவ்வாறு ஒரே சமயத்தில் பிராந்திய அரசியலைக் கையாள முற்படுவது வரவேற்கத்தக்கது. அரசியல் என்பது சாத்யக்கூறுகளின் கலை.பிராந்தியத்திலும் அனைத்துலக அளவிலும் காணப்படும் வாய்ப்புக்களை கெட்டித்தனமாகக் கையாளாமல் ஈழத் தமிழர்கள் அடுத்த கட்டத்துக்கு நகர முடியாது. கடந்த வாரம்,யாழ்ப்பாணத்தில் நடந்த மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய,தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளர்,யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தை அகற்ற வேண்டும், இங்கு சீனத் தூதரகத்தை கொண்டு வர வேண்டும் என்று கேட்டிருக்கும் ஒரு காலச்சூழலில்,கிழக்கைரோப்பாவில், உக்ரைன் நாடு நேட்டோவில் இணைவதில்லை என்ற முடிவை அறிவித்திருக்கும் ஒரு காலச் சூழலில், தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழ்நாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். https://www.nillanthan.com/8024/
  19. யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தை அழிக்காமல் விகாரமகாதேவி பூங்கா மாதிரி மாற்றலாம்.. ஆனால் மரங்களுக்குக் கீழே குடைக்குள் குலாவும் நிலையை உருவாக்கக்கூடாது!
  20. வேடன்;வாகீசன்;முருகப்பெருமான் - நிலாந்தன் சில மாதங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த வேடனின் Rap – ரப் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பரவின. இப்பொழுது வாகீசனின் பாடல். வேடன் யாழ்ப்பாணத்து தாய்க்கும் மலையாளத்து தகப்பனுக்கும் பிறந்தவர். வாகீசன் யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர். இருவருமே குறுகியகால இடைவெளிக்குள் தமிழ் சமூகவலைத் தளங்களில் லட்சக்கணக்கானவர்களைக் கவர்ந்திருக்கிறார்கள். வேடன் 2020ல் இருந்து பாடுகிறார். அவர் வாகீசனிடம் இருந்து வேறுபடும் இடங்களில் ஒன்று, அவர் அதிகம் ஒடுக்கப்படும் சமூகங்களின், மக்களின் குரலாக ஒலிப்பதுதான். அவருடைய முதலாவது முயற்சி “குரலவற்றவர்களின் குரல்” என்ற தலைப்பின் கீழ்தான் வெளிவந்தது. அவர் ஈழத் தமிழர்களின் அரசியலில் தொடங்கி சிரியா,பாலஸ்தீனம் என்று உலகளாவிய அரசியலைப் பேசும் பாடல்களைப் பாடியுள்ளார். அவருடைய முக்கியத்துவமே அவ்வாறான போராடும் மக்களின் குரலாக ஒலிப்பதுதான்.கரிய தேகம்;சீவப்படாத தலைமுடி; கழுத்தில் பெரிய உலோக மாலை; சில மேடைகளில் மேல் சட்டை இல்லாமலேயே காணப்படுகிறார். தனது உடல் மொழி, பாடல் வரிகள்,உச்சரிப்பு போன்ற எல்லாவற்றிலும் அவர் தன்னை ஒரு கட்டுடைப்பாளனாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வெளிக்காட்டுகிறார். எனினும் அவர் மீது பாலியல் வகைப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்டு. அவரால் பாதிக்கப்பட்டதாக கூறி பெண்கள் சிலர் நீதிமன்றங்களை நாடியிருந்தார்கள். அவை தமது புகழை மங்கச் செய்வதற்காக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என்று வேடன் தரப்பு கூறுகிறது. வாகீசன் வேடனை விடவும் வயது குறைந்தவர். எங்கே வேடனிடமிருந்து வித்தியாசப்படுகிறார் என்றால்,அவர் நேரடியாக புரட்சிகரமான விடயங்களைப் பாடுவதில்லை. ஜனரஞ்சகமான விடயங்களைத்தான் பாடுகிறார். ஆனால் அதிகம் பிரபல்யமடைந்த அவருடைய முருகன் பாடல் “காக்கும் வடிவேல்” முருக பக்திப் பாடல் மட்டுமல்ல அங்கே அரசியல் உண்டு. அந்தப் பாடலுக்கு மதப்பரிமாணம் மட்டுமல்ல. அரசியல் பரிமாணமும் உண்டு. அங்கே முருகன் மீட்பின் கடவுளாக, போராடும் மக்களின் தலைவனாக, போராடி தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை கட்டமைத்த தலைவனாகக் காட்டப்படுகிறார். அதில் மறைமுகமாக அரசியல் உண்டு. வேடனைப்போல வாகீசன் வெளிப்படையாக,நேரடியாக அரசியலைப் பாட முடியாத அரசியல் சூழலுக்குள் வாழ்பவர். வாகீசனின் முருகன் பாடலில் பாரம்பரிய இசைக் கூறுகளும் உண்டு. அது ஒரு ஹைபிரிட் பாடல். ரப் பாடலாகவும் இருக்கிறது. அதேசமயம் சாஸ்திரிய சங்கீதத்தின் கூறுகளும் உண்டு. அதன் கலப்பு வடிவம்தான் அதற்குள்ள கவர்ச்சி. வாகீசனைத் தூக்கிய பாடல் அது. அந்தப் பாடலில் உள்ள ஹைபிரிட்தனம்தான் அந்தப் பாடலைப் பரவலாக்கியது. இப்பொழுதும் அந்தப் பாடலுக்கு ஆடும் பெரும்பாலான தென்னிந்திய நடனக் கலைஞர்கள் அப்பாடலில் உள்ள மரபு இசை வகைப்பட்ட பகுதிக்குத்தான் ஆடுகிறார்கள். ரப் இசைக்கு அல்ல. ஒரு சமையல் நிகழ்ச்சியின் ஊடாக அதிகம் பிரபல்யமான அவருடைய தனித்துவம் எதுவென்றால், அசல் யாழ்ப்பாணத்து தமிழில் அவர் கதைப்பது. அதில் ஒருவித அப்பாவித்தனமான ஆர்வம் இருக்கும். அதேசமயம் வேரை விட்டுக் கொடுக்காத தனித்துவமும் இருக்கும். தமிழ்நாட்டில் வசிக்கும் அல்லது தமிழ்நாட்டுக்கு அடிக்கடி சென்றுவரும் ஈழத் தமிழர்கள் பெரும்பாலும் தமிழகத்தில் உரையாடும்போது அல்லது தமிழகத்தவரோடு உரையாடும்போது ஒரு தமிழ்நாட்டுக்காரரை போலவே பெரும்பாலும் உரையாடுவார்கள். முதலாவதாக தங்களுடைய தமிழ் அவர்களுக்கு விளங்க வேண்டும் என்ற கரிசனை. இரண்டாவதாக தன்னுடைய ஈழத்தமிழ் அடையாளம் காரணமாக வரக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்கும் தற்காப்பு உத்தி போன்ற பல காரணங்களினாலும் அவ்வாறு தமிழ்நாட்டு தமிழைக் கதைப்பதுண்டு.”டூரிஸ்ட் பாமிலி” திரைப் படத்தில் வருவதுபோல. ஆனால் வாகீசன் ஒரு ஜனரஞ்சக மேடையில் யாழ்ப்பாணத்துத் தமிழை பேசுகிறார். அந்தத் தமிழில் எழுதப்பட்ட வரிகளை இசைக்கிறார். அவருக்கு கிடைக்கும் பிரபல்யத்துக்கு அவருடைய தமிழும் ஒரு காரணம். அதைவிட முக்கிய காரணம் அவரைத் தூக்கிய பாடல் ஒரு முருக பக்திப் பாடலாக இருப்பது. அதில் அரசியல் வாடையும் இருப்பது. அந்தப் பாடலுக்குள்ள மதப் பரிமாணமும் அது திடீரென்று பெற்ற எழுச்சிக்கும் பிரபல்யத்துக்கும் ஒரு காரணம். அதற்கு இந்தியாவின் இப்போதுள்ள அரசியல் சூழல் மிகவும் அனுகூலமானது. கடவுளர்கள் ஏற்கனவே ரப் இசைக்குள் வந்துவிட்டார்கள். கிறிஸ்தவ ரப் பாடல்கள் ஏற்கனவே வந்து விட்டன. சிவன்,ஹனுமான் போன்ற கடவுளர்க்கும் ரப் பாடல்கள் உண்டு. தமிழ் பக்தி இலக்கிய மரபில்,அருணகிரிநாதரின் திருப்புகழில் ரப் சாயல் உண்டு. முருக பக்தி மரபில் ஏற்கனவே சுசீலா ராமன் என்ற பெண் இசையமைப்பாளர் தமிழ் முருக பக்திப் பாடல்களை ஆடலுக்கு ஏற்ப மீள உருவாக்கிப் பாடியிருக்கிறார். சுசீலா ராமன் இந்திய வேரிலிருந்து வந்த பிரத்தானிய இசையமைப்பாளர். பல்வேறு இசைப் பாரம்பரியங்களையும் கலந்து பரிசோதனை செய்தவர். ஏற்கனவே உள்ள முருக பக்தி பாடல்களை துள்ளிசையாக ரீமேக் செய்தவர். அவரும் தன் பாடலுக்கு ஒத்திசைவான கோலத்தோடு மேடையில் தோன்றுவார். அடங்காத சுருள் முடி. எப்பொழுதும் ஆடத் தயாரான நெகிழும் உடல். சுசீலா மேடையில் பரவசமாகி தன்னை மறந்து துள்ளிக்குதித்துப் பாடுவார். அவருடைய பாடல்கள் இப்பொழுது நமது உள்ளூர் கோவில்களில் ஒலிக்க விடப்படுகின்றன. கோவில் மேடைகளிலும் ஏனைய இசை மேடைகளிலும் நமது உள்ளூர் பாடகர்கள் அவற்றைப் பாடக் கேட்கலாம். புதிய தொழில்நுட்பமும் அந்தத் தொழில்நுட்பத்தின் கைதியாக உள்ள புதிய தலைமுறையும் ரசனைகளிலும் பாடல்களிலும் பக்தியை வெளிப்படுத்தும் விதத்திலும் மாற்றத்தை விரும்புகின்றது. இது ரசனை மாற்றத்தை, புதிய தொழில்நுட்ப வருகைகளால் ஏற்பட்டிருக்கும் லயமாற்றத்தை காட்டுவது. ஒரு தலைமுறை பக்திப் பாடல்களையும் ரப் இசையில் கேட்க விரும்புகிறது. அதே சமயம் தமிழ்நாட்டில் ஈழத்து உச்சரிப்பில் ரப் பாடலைக் கேட்கும் ரசிகர்களின் தொகை அதிகரிக்கின்றது.சமூக வலைத் தளங்களில் அலையும் ஒரு தலைமுறையின் இசை,அரசியல்,அறிவியல் தொடர்பான பார்வைகள் மாறிக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே “சரிகமப” நிகழ்ச்சியில் ஈழத்துப் பாடகர்கள் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள்.அதில் வணிக உள்நோக்கங்கள் இருக்கலாம். ஆனாலும் பாக்கு நீரிணையின் இரண்டு பக்கமும் உள்ள இரண்டு தமிழ்ச் சமூகங்களுக்கும் இடையிலான பிணைப்பு கடந்த 16 ஆண்டுகளாக அதிகம் சோதனைக்கு உள்ளாகியிருக்கும் ஓர் அரசியல், பண்பாட்டுப் பின்புலத்தில், ஈழத்துப் பாடகர்கள் தமிழக மேடைகளை நோக்கிச் செல்வது பிணைப்புகளைப் பலப்படுத்தும். சரிகமப மேடை என்பது அதிகபட்சம் ஜனரஞ்சக வணிக சினிமாவின் நீட்சியும் அகற்சியுந்தான். அங்கே மரபுகளை உடைத்துக் கொண்டு வெளியே வருவது குறைவு. ஆனால் ரப் இசை எப்பொழுதும் மரபுகளை உடைப்பதற்கான அதிகரித்த வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது. அதன் தொடக்கமே புரட்சிகரமானது. மேற்கில் அது எதிர்ப்பின் வடிவமாகத்தான் எழுச்சி பெற்றது. பாதிக்கப்பட்டவர்கள்,ஒடுக்கப்பட்டவர்கள்,நசுக்கப்பட்டவர்கள் தங்கள் குரலை வெளிக்காட்டும் இசை வடிவமாக அது மேலெழுந்தது. அங்கே இசை அல்லது தாள லயத்துடன் உச்சரிக்கப்படும் வரிகள் எதிர்ப்பின் கருவிகளாக மேல் எழுகின்றன. ஈழத் தமிழ் வேரில் பிறந்த வேடனும் வாகீசனும் இந்திய உபகண்டப் பரப்பை நோக்கி, பெருந் தமிழ்ப் பரப்பை நோக்கிப் பாடுகிறார்கள். சரிகமப மேடையில் ஈழத்துப் பாடகர்கள் பாடுகிறார்கள். ”டூரிஸ்ட் பமிலி” திரைப்படம் ஈழத் தமிழர்களை நோக்கிக் கேட்கிறது “உங்களை யார் அகதி என்று சொன்னது?” என்று. இவை யாவும் கடந்த 16ஆண்டுகளாக மெலிந்து போயிருக்கும் தமிழக-ஈழத் தமிழ்ப் பிணைப்புக்களை மீளக்கட்டி எழுப்புவதற்கான நம்பிக்கைகளைப் புதுப்பிக்கின்றன;பலப்படுத்துகின்றன. https://www.nillanthan.com/8018/
  21. பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ? ஞாயிறு, 21 டிசம்பர் 2025 04:09 AM யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக நம்பகரமாக தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவினுள் 12 பரப்பளவுக் காணியைக் கையகப்படுத்தி, அதில் 370 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டரங்கு ஒன்றை அமைப்பதற்கு கடந்த 23ஆம் திகதியன்று அடிக்கல் நடப்பட்டது. அந்நிலையில், பழைய பூங்காவில் நூற்றாண்டு காலப் பழமையான மரங்கள் காணப்படும் நிலையில் அவற்றை அழித்து உள்ளக விளையாட்டரங்கு அமைக்கக் கூடாது என வலியுறுத்தி கிருஷ்ணவேணி சிறிதரன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுதாரரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகி பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தும் வகையில், கடந்த 05ஆம் திகதி 14 நாட்களுக்கான கட்டாணை பெற்றிருந்தார். குறித்த 14 நாள்களைக் கொண்ட கட்டாணைக்காலம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இதன்போதே, கட்டாணை உத்தரவை நீடிப்பதற்கு நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார் வழங்கியுள்ள கட்டளையில் உள்ளதாவது: வழக்கானது தர்ம நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ், இரண்டுக்கும் குறையாத பயனாளிகள் சட்டமா அதிபரின் கையொப்பத்தைப் பெற்றே வழக்கைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்தக் கட்டாய தேவைப்பாடு பூர்த்தி செய்யப்படாமலேயே கட்டாணை பெறப்பட்டுள்ளது. முகத்தோற்ற அளவில் வழக்கொன்று இருப்பதாக மன்று திருப்தியடைந்து கட்டாணையை வழங்கியுள்ள போதிலும், வழக்கேட்டை முழுமையாக ஆராய்ந்ததில், வழக்காளிக்கு வழக்கொன்று உள்ளதாக என மன்று திருப்தியடைய முடியாத நிலை காணப்படுகின்றது. வழக்காளிக்கு வழக்கைக் கொண்டு நடத்துவதற்கு சட்ட அந்தஸ்து உள்ளதா என நிச்சயமற்ற நிலை நிலவுவதால் கட்டாணையை நீடிக்க வேண்டிய தேவை அற்றுப்போயுள்ளது- என்றவாறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து , தற்போது விளையாட்டரங்கினை துரித கெதியில் அமைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை பழைய பூங்காவினுள் எவ்வித கட்டுமானங்களும் யாழ்ப்பாண மாநகர சபையினால், அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடந்த புதன்கிழமை நடைபெற்ற சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://jaffnazone.com/news/53411
  22. 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிருங்கள் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண வலியுறுத்து 21 Dec, 2025 | 09:20 AM (நமது நிருபர்) 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று, நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்க வேண்டும் என்று லங்கா சமசமாஜக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். இலங்கையின் பழமையான மற்றும் முதன்மையான இடதுசாரிக்கட்சியான லங்கா சமசமாஜக், தனது 90ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் விசேட மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் முன்னெடுத்த விதாத்த வேலைத்திட்டத்தின்; மூலம் நாடு தழுவிய ரீதியில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட சிறு தொழில்முயற்சியாளர்களை உருவாக்கி, நவீன தொழில்நுட்பத்தைக் கிராமங்களுக்குக் கொண்டு சேர்த்த வெற்றியின் அனுபவத்தை பெருமையோடு கூறுகிறேன். இவ்வாறான உற்பத்தி சார்ந்த பொருளாதார முன்னெடுப்புகளே நாட்டின் தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கும், வேலையின்மைக்கும் தீர்வாக அமைய முடியும். இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்காக, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவராகத் நான் முன்னெடுத்த அதிகாரப் பகிர்வுத் திட்டங்கள் இன்றும் காலாவதியாகவில்லை. 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று, நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய ஒரு அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்குவதே சமசமாஜக் கட்சியின் நீண்டகால நிலைப்பாடாகும். பிரித்தானிய காலனித்துவக் காலத்தில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று 1950களிலேயே இக்கட்சி தீர்மானம் நிறைவேற்றிய வரலாற்றுத் தூரநோக்கை மீண்டும் நினைவூட்டுகின்றேன். தற்போதைய அரசியல் சவால்களை எதிர்கொள்ள இடதுசாரி சக்திகளின் ஒற்றுமை மிக அவசியமானது. 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பை உருவாக்குவதில் கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா ஆற்றிய வரலாற்றுப் பணியைப் போன்றே, தற்போதைய காலத்திலும் புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்க இடதுசாரிகள் கைகோர்க்க வேண்டும். 90 ஆண்டுகால அரசியல் அனுபவமும், நேர்மையும் கொண்ட லங்கா சமசமாஜக் கட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் தொடர்ந்து ஒலிக்கும் என்பதை இம்மாநாடு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியது என்றார். https://www.virakesari.lk/article/233967
  23. புதிய பயங்கரவாத்தடைச்சட்ட வரைவு: 2026 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் யோசனைகள் அனுப்பிவையுங்கள் நீதி அமைச்சர்ஹர்ஷன நாணயக்கார மக்களிடம் வேண்டுகோள் 21 Dec, 2025 | 09:26 AM (நா.தனுஜா) நீதியமைச்சின் இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் மேலும் கூறியிருப்பதாவது: இப்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கி, மனித உரிமைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் என்பன பாதுகாக்கப்படக்கூடிய வகையில் புதியதொரு சட்டம் கொண்டுவரப்படும் என நாம் ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்னர் வாக்குறுதியளித்தோம். அதற்கமைய புதிய சட்ட வரைவைத் தயாரிப்பதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அர்ஸகுலரத்ன தலைமையில் 17 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்தோம். அக்குழுவினர் சுமார் 11 மாதங்களாக அவ்வரைவைத் தயாரித்து என்னிடம் கையளித்தனர். அவ்வரைவு இப்போது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது நாடளாவிய ரீதியில் மிகுந்த கரிசனைக்குரிய சட்டம் என்பதனால், அதனை நேரடியாக அமைச்சரவையிலோ அல்லது பாராளுமன்றத்திலோ சமர்ப்பிக்காமல், முதலில் பொதுமக்களிடம் அபிப்பிராயம் கோரவேண்டியது அவசியம் என்று கருதுகிறோம். எனவே இப்புதிய சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/233968
  24. காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்! 21 Dec, 2025 | 12:58 PM வடக்கு ரயில் மார்க்கத்தில் காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, யாழ்ராணி ரயிலில் இருந்து காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகளின் நேர அட்டவணை பின்வருமாறு ; https://www.virakesari.lk/article/234005

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.