கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  19,802
 • Joined

 • Days Won

  73

Everything posted by கிருபன்

 1. கொரோனாவிலிருந்து முதியோர்களை பாதுகாப்போம் : முதியோர் செயலகம் வழங்கும் ஆலோசனைகள் கொவிட் 19 வைரசு நாட்டில் பரவுவதன் மூலம் வயதில் முதிர்ந்த நபர்கள் இந்த வைரசு மூலம் பாதிப்புக்குள்ளாவதை தடுப்பதற்கு அமைவாக , தேசிய முதியோர் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு அமையும். கொவிட் 19 பரவுவதையடுத்து கூடுதலான அனர்த்தத்தை எதிர்கொள்ளும் குழுவினராக வயதில் கூடியவர்கள் மற்றும் சிறுபிள்ளைகள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். அடையாளங்காணப்பட்டுள்ள பின்புலத்தின் கீழ் இந்தக் குழுவினரை வைரசிலிருந்து மிகவும் முக்கியமாக பாதுகாக்கும் தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கமைவாக, இலங்கையில் சுமார் 30 இலட்சம் பேரைக்கொண்ட முதியோர் சமூகத்தை கொவிட் 19 வைரசிலிருந்து பாதுகாப்பதற்காக பொறுப்புடன் செயற்பட வேண்டும். இதில் , இலங்கை முதுமை நோய் மருத்வர் வைத்திய விஞ்ஞான சங்கத்தின் தலைவர் டாக்டர் திருமதி பத்மா குணரத்ன அவர்களினால் கொவிட் 19 வைரசு பரவுவதை தொடர்ந்து அதிலிருந்து முதியோரை பாதுகாப்பதற்காக கீழ்கண்ட ஆலோசனைகளை உள்ளடக்கிய செய்தியொன்றை விடுத்துள்ளார். வீடுகளிலுள்ள முதியோரைப் போன்று அரச மற்றும் தனியார் பிரிவினால் நடத்தப்பட்டுவரும் முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர் கீழ்கண்ட ஆலோசனைகளை கடைபிடிக்க வேண்டும். 01. இந்த வைரசு முதியோரான உங்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதினால் ஏனையோருடன் நெருங்கிய தொடர்புகொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள் 02. வைத்தியசாலை சிகிச்சைக்காக செல்வதை குறைத்து உங்களது மருந்தை ஏனையோரின் மூலம் அருகிலுள்ள மருந்தகங்களில் பெற்றுக்கொண்டு முறையாகப் பயன்படுத்துங்கள் 03. தற்பொழுது கைகளை சவர்க்காரத்தைப் பயன்படுத்தி அடிக்கடி கழுவிக்கொள்ளுங்கள் (விசேடமாக பணப்பாவணை மற்றும் வெளியிடங்களுக்கு சென்று வந்த பின்னர்) 04. ஏனையோருடன் உரையாடும் பொழுது ஆகக்குறைந்து 3 அடி இடைவெளி தூரத்தை கடைபிடியுங்கள் 05. பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினரை அரவணைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் 06. இருமும் பொழுதும் தும்மும்பொழுதும் வாய் மற்றும் மூக்கை பாதுகாப்பாக மூடிக்கொள்ளவும் 07. புதியவர்களைவ வீட்டுக்கு அழைத்தல் மற்றும் கூட்டமாக கூடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் 08. அவசிய விடயத்திற்காக வீட்டிலிருந்து வெளியில் செல்லும் போது முகக்கவசங்களை அணிந்து கொள்ளுங்கள் 09. எப்பொழுதும் கொதித்தாரிய நீரை பயன்படுத்துவதுடன் குளிர்பானங்களை அருந்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் 10. மனதை எப்பொழுதும் அமைதியாக வைத்திருங்கள். சுகமான நித்திரை மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள். இதற்கு மேலதிகமாக வயது பிரிவுகளுக்கு அமைய நோக்கும் பொழுது வயதானவர்களுக்கு இந்த நோய் தொற்றும் சதவீதத்தில் 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு 15 சதவீதமும் 70 தொடக்கம் 79 வயதுக்குட்பட்டவர்களுக்கு 9சதவீதமும் , 60 – 69 வயதிற்குட்பட்டவர்களுக்கு 3.8 சதவீதமும் என்ற ரீதியில் இருக்கக்கூடும். இதற்கமைவாக , இந்த நிலை தணியும் வரை வயதானோர் மேற்கண்ட ஆலோசனைகளை கடைபிடித்து தமது இருப்பிடங்களில் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தேசிய முதியோர் செயலகம் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/கொரோனாவிலிருந்து-முதியோ/
 2. சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள 214 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் -யாழ். அரசாங்க அதிபர் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரின் மனைவி மூலம், சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள 214 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.சுவிஸ் பாஸ்டரை சந்தித்து பேசிய போது கொரானா தொற்றுக்கு உள்ளாகிய நபரின் மனைவியான சமுர்த்தி உத்தியோகத்தர், சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவை வழங்கியுள்ளதால் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் மற்றும் அந்த சமுர்த்திக் கொடுப்பனவை பெற்றவர்கள் என அத்தனை பேரையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மேலும் தெரிவித்துள்ளார். தாவடிப் பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான நபரின் மனைவி சமுர்த்தி உத்தியோகஸ்தராவார். அவர் அண்மையில் 214 சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கியுள்ளார். எனவே அவரிடம் இருந்து சமுர்த்தி கொடுப்பனவினை பெற்றுக் கொண்ட பயனாளிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அடையாளம் காணப்பட்ட நபர்களை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கை உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(15) http://www.samakalam.com/uncategorized/சண்டிலிப்பாய்-பகுதியில்/
 3. பிரித்தானியா முடக்கப்பட்ட பின் முதல் நாளில் வெளிவந்த புள்ளி விபரங்கள் – இறப்பு 422 – பாதிப்பு – 8077… March 24, 2020 பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்றய புள்ளிவிவரங்களின்படி பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என 6,650 பேர் உறுதிப்படுத்தப்பட்டிருந்தனர். இந்தநிலையில் இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 8,077 ஆக உயர்ந்துள்ளது என NHS அறிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 335 பேராக உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் 87 பேர் பலியாகி இறப்பு எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது. #பிரித்தானியா #முடக்கப்பட்ட #இறப்பு #கொரோனா http://globaltamilnews.net/2020/139157/
 4. Times of India ஐ நம்புவீர்கள் என்றால் கூகிளில் தேடியபோது கிடைத்தது. அள்ளிச் சாப்பிட்டால் என்பதைக் கவனியுங்கள். https://recipes.timesofindia.com/articles/health/10-harmful-effects-of-garlic-that-you-should-know/photostory/64355960.cms?picid=64355972 ஈரலுக்குக் கூடாதாம் Heartburn வரலாம் வயிற்றோட்டம் வரலாம் மிச்சம் சாப்பிட்டு பார்த்துத்தான் சொல்லலாம்
 5. மீசையையும் இடைக்கச்சையின் சைஸையும் பார்த்தால் தமிழன் மாதிரித்தான் இருக்கு
 6. இல்லை. எனது நண்பர் ஒருவர் அக்கம்-பக்கம் முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார். அதில் நானும் எழுதுவதுண்டு.
 7. கொரோனா நம்மை அண்டாது என்றுதானே பலர் நினைக்கின்றார்கள்!
 8. காயமே இது பொய்யடா !! - புனைவுச் செய்திகளை தவிருங்கள் அன்பான “அறிவுள்ள” தமிழ்ப் பெருங்குடி மக்களே !!! தமிழன் மட்டும்தான் எல்லாவற்றுக்கும் முன்னோடி என “தமிழேண்டா” என்று காலரைத் தூக்கிவிடும் ஏழாம் அறிவுள்ள உங்களில் சிலரின் அலப்பறை தாங்கமுடியவில்லை. உங்களுக்கு என்னதான் பிரச்சினை? பொய்யான செய்தி பரப்புவதற்கு ஒரு அளவில்லையா? எத்தனை தரம் சொன்னாலும் எத்தனை விதமாக சொன்னாலும் ....! முடியலடா சாமி !!! என் நண்பன் சொன்னான் இந்த எமனேறும் பரிகளுக்கு சுயபுத்தியும் கிடையாது, சொல்புத்தியும் கிடையாதென்று. அது உண்மையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இத்தாலி அதிபர் அழுகிறார் என்று பிரேசில் அதிபர் எப்பவோ அழுத படத்தை போடுகிறார்கள். ஜஸ்டின் ரூடோவின் மனைவி வைத்தியசாலையில் இருந்து மக்களுக்கு அறிவுரை சொல்கிறார் என்று வேறு யாரோ பெண்ணின் வீடியோவைப் பகிர்கிறார்கள். அந்த நாடு மருந்தைக் கண்டுபிடித்துவிட்டது, இந்த நாடு கண்டுபிடித்து விட்டது என்ற ஆதாரமற்ற பதிவுகளை பாராட்டிச் சீராட்டுகிறார்கள். அமெரிக்கரின் கால் படாத கியூபாவிலும் வடகொரியாவிலும் ஒருவருக்கும் கொரோனா வரவில்லை என்று சதிக் கோட்பாடு நிறுவுவோர் இன்னொரு புறம். தொண்டைக்குள் நான்கு நாட்கள் கொரோனா வாடகை தராமல் குடியிருக்குமாம். அதன்பிறகு வாஸ்து சரியில்லை என்று முடிவெடுத்து நுரையீரலுக்கு குடிபெயர்ந்து விடுமாம். தொண்டையில் குடியிருக்கும்போதே அடிக்கடி நீர் குடித்தால் கொரோனா கால் வழுக்கி வயிறுக்குள் விழுந்து விடுமாம். அதன்பிற வயிற்றில் உள்ள அமிலத்தில் மூழ்கி இறந்துவிடுமாம். இன்னும் சிலர், உப்பு வினிகருடன் வெதுவெதுப்பான நீரால் வாய் கொப்புளித்தால் சூடும் எரிச்சலும் தாங்காமல் கொரோனா வெளியே எகிறிக் குதித்து ஓடிவிடுமாம். தங்கத் தமிழ்நாட்டினர் தம் பங்குக்குக் உள்ளியைத் தின்னச் சொல்கிறார்கள். பேரூந்துகளுக்கும் வேப்பிலை அடிக்கிறார்கள். உள்ளிக்கு பல மருத்துவ குணங்கள் உள்ளனதான். அதற்காக உள்ளியை அள்ளிப் பச்சையாகச் சாப்பிட்டால் வேறு உடல் உபாதைகள் வரும் என்பதை மறக்க வேண்டாம். இரு நாட்களுக்கு முன்னர் திடீரெண்டு ரஷ்ய அதிபர் எண்ணூறு சிங்கங்களை ரோடில அவிழ்த்து விட்டிட்டாராம். அதனால சனம் பயத்தில வீட்டுக்குள்ளயே இருந்திட்டுதாம். முதலில் புடின் அவ்வளவு சிங்கத்தையும் இவ்வளவு நாளும் எங்கே வைத்திருந்தார் என்று யாருமே கேட்கவில்லை. ரஷ்யாவில் அவ்வளவு சிங்கங்கள் இருக்கின்றனவா என்றும் யோசிக்கவில்லை. என்னுடைய நாட்டிலையும் ஒருத்தர் அதை நம்பி இங்கேயும் சிங்கங்களை ரோட்டில விடவேணும் எண்டு சொல்லுறார். அது பொய்யான செய்தியென்று நான் சொன்னதும் அவர் அப்படியே ஷாக் ஆயிட்டார். தலையும் சுத்திச்சுதோ தெரியேல்ல. சொன்னவர் சிங்கத்துக்கு எங்கே போவார் என்றும் தெரியவில்லை. நடிகர் சூர்யாவைக் கேட்பாரோ என்றும் எனக்கு சந்தேகம் வந்தது. இப்பிடியான பொய் செய்திகளைப் பரப்புவோர் தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே, மற்றவர்களை பயமுறுத்துகிறார்கள் அல்லது முட்டாளாக்குகிறார்கள். தவறான ஆலோசனையை தம் நண்பர்களுக்கு வழங்குகிறார்கள். நண்பர்களே, உங்களுக்கு ஒரு செய்தி கிடைத்தால், அது உண்மைதானா என்று தேடிப்பாருங்கள். அனுப்பியவரிடமே இதற்குரிய ஆதாரம் என்னவென்று கேளுங்கள். கொரோனா பரவுவதை மட்டுமல்ல, இது தொடர்பான வதந்தி பரவுவதையும் தடுப்போம்.!
 9. கொரோனாவால் உலகம் அழியப் போவதில்லை ஆர். அபிலாஷ் டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலனின் யுடியூப் பேட்டி மற்றும் சன் டிவி சிறப்பு நேர்காணலைப்பார்த்தேன் - “நாளைக்கே உலகம் அழிஞ்சிருங்க” என கையை உதறும் டாக்டர்களைப் போலஅன்றி தெளிவாக நிதானமாகப் பேசுகிறார். பவித்ரா அமெரிக்காவில் பலவருடங்களாககொரோனா வைரஸ்கள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கியவர். அவரிடம்சமூகவலைதளங்கள் வழி மக்களிடம் பரவி வரும் பல குழப்பங்கள் குறித்து கேள்விகள் பலகேட்டார்கள். அவற்றில் ஒன்று கொரோனா எந்தளவுக்கு ஆபத்தானது என்பது. அதற்கு அவர்சொன்ன பதில் முக்கியமாகப் பட்டது: 1) கொரோனா என்பது ஒரு புதிய வைரஸ் அல்ல. Covid-19 எனும் இந்த வைரஸானது ஏற்கனவே(70 வருடங்களாக) மனிதர்களிடம் இருந்து வரும் கொரோனாவின் ஒரு புதிய ஜென்மம் மட்டுமே. இது நுரையீரலை பாதிக்கும்; அதனால் சளி, ஜுரம் போன்ற நோய்க்குறிகள் ஏற்படும். இதேகாரணத்தாலே இது பரவுவது எளிது. கொரோனாவின் ஒரே ஆபத்து அது சுலபத்தில் வேகமாய்பரவும் என்பது மட்டுமே. அதைத் தாண்டிப் பார்த்தால் அது மற்றொரு சளி / ஜுரம் ஏற்படுத்தும்வைரல் தொற்று மட்டுமே. அதாவது கொரோனா பீதி தோன்றுவதற்கு முன்பும் நமக்கு சளித்தொல்லை ஏற்பட்டிருக்கும்இல்லையா, அதுவும் மூன்றில் ஒன்று கொரோனாவால் ஏற்பட்டது தான், ஆனால் என்ன அதுகோவிட்-19 வகை கொரோனா இல்லை என்பது தான் வித்தியாசம். இப்போது பரவி வருவது சற்றுவீரியம் கொண்ட ஒரு தூரத்து உறவு வைரஸ் மட்டுமே அன்றி அது உலகை அழிக்கக் கிளம்பி வந்தஒரு படுபயங்கர கிருமி அல்ல. ஏற்கனவே நமக்குப் பரிச்சயமான ஒரு கிருமி தற்போது ஒரு முகமூடிபோட்டுக்கொண்டு புதிய ஆயுதங்களுடன் வந்திருக்கிறது. அந்த ஆயுதங்களும் ஒன்றும் அணுஆயுதம் அல்ல. இது தான் அடுத்த முக்கிய கருத்து. 2) மக்களில் 96.5% பேர்களை இந்த கொரோனா வைரஸ் கொல்லாது. 3.5% மக்கள் தாம் சாவின்விளிம்புக்குத் தள்ளப்படுவார்கள். இந்த 3.5% கூட ஏற்கனவே ஆரோக்கியம் இல்லாதவர்கள் தாம். குறிப்பாக வயோதிகர்கள். வயோதிகர்களில் பல வியாதிகள் கொண்ட, சுலபத்தில் பல தொற்றுகள்பெறும் வாய்ப்புள்ள, தொற்று வியாதி வந்தால் அதை சமாளிக்கும் தற்காப்புத்திறன் அற்றவர்கள். அதாவது நூறு பேரில் மூன்று நான்கு பேர்கள் சாவார்கள் எனப் பொருளில்லை - இதைத் தான்நாம் கவனிக்க வேண்டும்; நூறு பேரில் ஏற்கனவே மோசமான உடல்நிலையுடன் இருக்கிற 3.5% பேர் தாம் சாவின் விளிம்புக்குத் தள்ளப்படுவார்கள். யோசித்தால், இத்தகைய பலவீன உடல்நிலைகொண்டவர்கள் எந்த ஒரு வைரல் தொற்று வந்தாலும் மரணிக்கக் கூடியவர்களே. நீங்களேகவனித்திருப்பீர்கள், மழைக்காலத்தில் வைரல் ஜுரம் பரவும். அப்போது வயதாகி பலபிரச்சனைகளுடன் போராடி படுக்கையில் ஓய்வெடுக்கும் ஆட்கள் திடீரென ஜுரம் வந்து இறந்துபோவார்கள். மழை / பனிக்காலத்தில் வயசாளிகள் இறந்து போவது போலத் தான் கொரோனாகாலத்தில் அவர்கள் இறக்கப் போகிறார்கள். இப்போது கொரோனா பீதியின் போது இத்தகையமரணங்கள் காக்காய் அமர்ந்து பனம்பழம் விழுந்ததைப் போல ஆகி விடுகிறது. கோவிட்-19 வழக்கமான ஒரு வைரஸ் தான் என்றால் ஏன் இப்படி பரபரப்படைகிறோம்? ஏன்அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்? இது ஒரு புதிய வைரஸ் என்பதால் இதற்கான மருந்தோ தடுப்பு மருந்தோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆக, அரசாங்கங்கள் உலகம் முழுக்க பீதி அடைந்து மக்களைத் தனிமைப்படுத்திவியாதி பரவுவதை தடுக்க முயல்கின்றன. ஊடகங்கள் இதை ஊதிப்பெருக்கி கொரோனா பயத்தைஅதிகப்படுத்துகின்றன. வாட்ஸ்-ஆப் பார்வர்டுகள் இந்நிலையை இன்னும் மோசமாக்குறது. ஆகஅரசின் நடவடிக்கைகளும் ஊடகங்களும் தாம் கொரோனா பீதிக்கு காரணமே ஒழிய பெருமளவுமக்கள் இதனால் பலியாகியுள்ளதால் அல்ல. யார் கவலைப்பட வேண்டும்? ஆஸ்துமா நோயாளிகள், புற்றுநோய் உள்ளவர்கள், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை பண்ணிக்கொண்டவர்கள், கட்டுப்படுத்தாத ரத்த சர்க்கரை கொண்டவர்கள், வேறுபல தீவிரநோய்த்தாக்குதலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் நிச்சயம் கவலைப்பட வேண்டும். யார் அதிகம் கவலைப்பட வேண்டாம்? குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கும் கொரோனா வந்தால் பெரிதும் பாதிக்காது. அவர்கள்பாதுகாப்பாக இருப்பார்கள். ஏன் கொரோனா அவர்களிடம் மட்டும் கருணையுடன் இருக்கிறதுஎன்பதை விஞ்ஞானிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. யார் கவலைப்பட வேண்டாம்? நம்மில் ஆரோக்கியமானவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஒரு சில நாட்கள் தும்மல், ஜுரம்என ஏற்பட்டு கொரோனா நம்மிடம் பிரியாவிடை பெற்று அடுத்தவர்களிடம் சென்று விடும். அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்? வாட்ஸ்-ஆப்பை அடுத்து வரும் சில வாரங்களுக்கு படித்து மண்டை குழம்ப வேண்டாம். ஏப்ரல் மாதத்தில் இருந்து நாம் வேலைக்குத் திரும்புவது நல்லது. இல்லாவிட்டால் ஏற்கனவேநிர்மலா சீத்தாராமன் அழித்து முடித்த இடத்தில் இருந்து கொரோனா பீதி நம் பொருளாதாரத்தைபுல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கி விடும். http://thiruttusavi.blogspot.com/2020/03/blog-post_23.html
 10. கொரோனா யுத்தம்: தலைமையின்றி தடுமாறும் தமிழக அரசு! மின்னம்பலம் ராஜன் குறை உலகையே அச்சுறுத்தி நிலைகுலைய வைத்திருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலின்போது துரதிர்ஷ்டவசமாக தமிழகம் தலைமைப்பண்பற்ற பலவீனமான மனிதரால் ஆளப்படுவது பெரும் வருத்தத்திற்குரியது, விபரீதமானது. கடந்த சில தினங்களாக தமிழக அரசின் அறிக்கைகளும், நடவடிக்கைகளும் எந்த வித தெளிவும், தொலைநோக்கும் தலைமைப்பண்புமற்ற தடுமாற்றங்களையே காட்டுகின்றது. பிரச்சினைகளை சற்றே விரிவாகக் காண்போம். அதற்குமுன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த சில அடிப்படைத் தகவல்களை நாம் கவனிக்க வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தமிழக அரசியல் எந்த வித தலைமைப் பண்புமின்றி, அதற்கான ஒரு ஆற்றலோ அல்லது அருகதையோ இருப்பது குறித்த எந்த தடயமும் இன்றி முதலமைச்சர் ஆனவர் ஒருவர் உண்டென்றால் அது எடப்பாடி பழனிசாமி மட்டுமே. அதற்கு முன்னாள் குறுகிய காலம் பதவி வகித்த ஜானகி ராமச்சந்திரனை வேண்டுமென்றால் மற்றொரு முன்னுதாரணமாகக் கூறலாம். ராஜாஜி, காமராஜ், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய அனைவரும் கட்சி அரசியலில் ஈடுபட்டு, மக்கள் திரள்களை தங்கள் ஆளுமையால் கவர்ந்து அவர்கள் ஆதரவைப் பெற்று முதல்வர் பதவி ஏற்றவர்கள். ஓ.பன்னீர்செல்வம் கூட நிதியமைச்சராக இருந்து ஜெயலலிதாவிற்கு பினாமியாக மட்டும் முதல்வரானவர். எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு சசிகலா பினாமியாக பதவியேற்றவர். பின்னர் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தூண்டுதலால் அந்த சசிகலாவிற்கே துரோகம் செய்தவர். முதல்வராவதற்கு முன்னாள் இப்படி ஒரு அமைச்சர் இருக்கிறார் என்பதே தெரியாத அளவு நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை அமைச்சராக ஆறாண்டுகள் பணியாற்றியுள்ளார். 1989 ஆம் ஆண்டு முதன்முதலாக ஜெயலலிதா அணியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவர். எதற்காக அவருடைய வரலாற்றையும், அவர் முதல்வரான விதத்தையும் நினைவு கூறவேண்டியுள்ளது என்றால், இந்த பேராபத்து சூழ்ந்த காலத்தில் தமிழக அரசு எவ்வித தெளிவுமில்லாமல் தடுமாறுவதை புரிந்துகொள்ளத்தான். அரசியலில் பக்குவப்படாத, தலைமைப்பண்பற்ற மனிதர்கள் முதலமைச்சராக பதவி வகிப்பது ஆபத்தானது அவரால் எந்தவொரு தீர்க்கமான முடிவையும் எடுக்க முடியவில்லை. சில முக்கிய உதாரணங்களைப் பார்ப்போம். பள்ளி, கல்லூரி விடுமுறை எதற்காக? கொரோனா தொற்று இந்தியாவில் பரவத்தொடங்கியவுடன் மார்ச் 10, 11 தேதிகளிலிருந்தே பலவிதமான எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கின. கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் சர்வதேச கருத்தரங்கங்கள் போன்றவற்றை ரத்து செய்தார்கள். ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இதன் தாக்கம் கடுமையாகத் தொடங்கியவுடன் இந்தியாவிலும் அந்த நாடுகளிலிருந்து வந்தவர்கள், அங்கே சென்று வந்தவர்கள் தொற்றுடன் வந்திருக்கும் சாத்தியம் புலப்படத் தொடங்கியது. உடனே பள்ளி கல்லூரிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை விடப்பட்டது. பொதுவாகவே எந்த ஒரு பதட்டமான சூழலிலும் சிறுவர்கள், இளைஞர்கள் பாதுகாப்பு கருதி முதலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது வழக்கம். சமூக இயக்கத்தின் முக்கிய கேந்திரங்கள் அவை. பாதுகாக்கப் பட வேண்டியவை. இங்கேயே எடப்பாடி அரசு தன் தடுமாற்றத்தை தொடங்கியது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டாலும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்ல வேண்டும் என்று கூறியது. இந்த நோயின் தன்மை என்ன, எதற்காக விடுமுறை என்பதைக் குறித்து எந்த புரிதலும் இல்லாததால்தான் ஒரு நிலபிரபுத்துவ மனப்பான்மையில் வகுப்புகள் இல்லாவிட்டாலும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் வரவேண்டும் எனக் கூறியது. மாணவர்களுக்கு வரக்கூடிய தொற்று ஆசிரியர்களுக்கு வராதா என்ன? அதிலும் குறிப்பாக கல்லூரி ஆசிரியர்கள் பலரும் அவர்களே வெளிநாடுகளுக்கு சென்று வந்ததற்கோ அல்லது சென்று வந்தவர்களை சந்திப்பதற்கோ அதிக வாய்ப்புகள் உள்ளவர்கள். நானறிந்த தமிழக கல்லூரி ஒன்றில் இருபது பேராசிரியர்கள் உள்ள துறையில் எட்டு பேர் வெளிநாடு சென்று வந்தவர்களை கடந்த பத்து தினங்களில் சந்தித்துள்ளார்கள். இவர்களில் யாருக்கு தொற்று ஏற்பட்டிருந்தாலும் அந்த இருபது பேருக்கும் அவர்கள் மூலம் மேலும் பலருக்கும் பரவ ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இவர்கள் சென்ற ஒருவாரம் கல்லூரிக்கு வந்ததால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. ஆபத்து மட்டும்தான். அதே போல வகுப்புகள் இல்லாமல் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்குச் செல்வதால் என்ன பயன் என்பதிலும் தெளிவில்லை. இவர்கள் பலரும் பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துபவர்கள். தேவையில்லாமல் இவர்களை தொற்றுக்கு ஆட்படுத்தியும், இவர்கள் மூலம் தொற்று பரவவும் வழிவகை செய்தது தமிழக அரசு. அத்தியாவசிய தேவைகள் என்ன? அத்தியாவசிய தேவைகள் என்பவை என்ன? அவற்றை மக்கள் பெறுவதற்காக இயங்க வேண்டிய வசதிகள் என்ன என்பதைக் குறித்த எந்த விரிவான புரிதலையும் தமிழக அரசு கொண்டிருக்கவில்லை என்பதே கடந்த வார நடவடிக்கைகளை பார்க்கும்போது புரிகிறது. ஒன்று தமிழகத்தில் தொற்றே இல்லை என்று முடிவு செய்ய வேண்டும். அல்லது தொற்று தோன்றுகிறது, பரவுகிறது என்றால் அதற்கான நடவடிக்கைகள் என்ன என்பதில் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். தமிழகம் தாறுமாறாக தான்தோற்றித்தனமான முடிவுகளையே எடுக்கிறது. கிராமப்புற சந்தைகளை மூடுகிறது; நகர்ப்புற அங்காடிகளை அனுமதிக்கிறது. டாஸ்மாக் வருவாயை தன் இருப்பிற்காக சார்ந்துள்ள அரசு, மதுபானக் கடைகளை மூடுவதற்கு தயாராக இல்லை. தொற்று பரவத் தொடங்கினால் மதுபானக் கடைகள் மிகப்பெரிய தொற்று மையங்களாக மாறும் என்பது வெளிப்படையானது. அதைவிட பெரிய பிரச்சினை, அன்றாடக் கூலியை நம்பி வாழ்பவர்கள் வருமானம் பாதிக்கப்பட்ட நிலையில் பழக்கத்தின் காரணமாக தொடர்ந்து குடிப்பது அவர்கள் குடும்பங்களை கடுமையாக பாதிக்கும் என்பதை ஒரு அரசு உணர வேண்டும். மக்கள் செய்யும் தொழில்கள் என்ன, எவையெல்லாம் தேக்கமடையும், அதனால் அவர்கள் எவ்வகையான பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்பதையெல்லாம் குறித்து எந்த தீவிர ஆலோசனையும் தமிழக அரசு செய்வதாகத் தெரியவில்லை. அண்டை மாநிலங்களில் நடப்பது என்ன? கேரளாவில் பினராயி விஜயன் மொத்த இந்தியாவிற்கும் வழிகாட்டியாக நடவடிக்கை எடுத்துள்ளார். வருவாய் இழப்பை ஈடுசெய்ய, பொருளாதார பாதிப்புகளை சரிசெய்ய இருபதாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதி கூட கிடையாது கேரளா. ஆனால் பினராயி விஜயனால் துணிச்சலாக முடிவெடுக்க முடிகிறது. பள்ளி விடுமுறையானதால் மதிய உணவை வீட்டிற்கே கொண்டு தர முடிவு செயதுள்ளது கேரளா. ஆந்திராவின் இளம் முதலமைச்சர் ஜெகன்மோகன் கூட வருவாய் இழப்பை ஈடு செய்யும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பினராயி விஜயனும், ஜெகன்மோகனும் தலைமைப்பண்புடனும், ஆட்சியாளர்கள் போலவும் பேசுகிறார்கள். ஆனால் எடப்பாடி பிரதமர் மோடியின் வாயையே பார்த்துக்கொண்டுள்ளார். அவர் எதையெல்லாம் அறிவிக்கிறாரோ அதைமட்டும் காப்பியடித்தால் போதும் என அடிமை மனப்பான்மையில் செயல்படுகிறார். இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவா? பொதுவாக இரவு நேரத்தில் ஊர் அடங்கித்தான் இருக்கும். ஏனெனில் மனிதர்கள் இரவில் உறங்குவதையும், பகலில் பல்வேறு தொழில்களில் ஈடுபடுவதையும் பழக்கமாக வைத்துள்ளார்கள். கொரோனாவை எதிர்கொள்ள பொதுவாக அனைத்து தொழில்களையும், பொருளாதார நடவடிக்கைகளையும் நிறுத்துவதா என்ற குழப்பத்தில் பிரதமர் மோடி விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று ஊரடங்கு உத்தரவை பதினான்கு மணி நேரத்திற்கு அறிவித்தார். அதாவது காலை ஏழு முதல் இரவு ஒன்பது மணி வரை மக்களாக எங்கும் வெளியில் செல்லாமல் ஊரடங்கை கடைபிடிக்கும்படி கூறினார். ஒரு நாள் இதைச் செய்வதால் கொரோனா பரவலை தடுக்க முடியாது என்றாலும், ஒரு மன ரீதியான தயாரிப்பு நடவடிக்கையாக இதை எடுத்துக்கொள்ளலாம் என்றே பலரும் கருதினர். இதைத் தொடர்ந்து பல பகுதிகளில் மார்ச் 31 வரை முழு ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லியில் 31 ஆம் தேதிவரை ஊரடங்கை அறிவித்துள்ளார். எடப்பாடி அரசு ஒரு விநோதமான காரியத்தை செய்துள்ளது. பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கை நீட்டித்து ஞாயிறு இரவு ஒன்பது மணிமுதல் திங்கள் காலை ஐந்து மணி வரை ஊரடங்கை அறிவித்துள்ளார். இதன் பொருள் என்ன என்று எவ்வளவு யோசித்தாலும் புரியவில்லை. இரவு நேரத்தில் மக்கள் என்ன செய்துவிடப் போகிறார்கள்? ஏன் ஊரடங்கு? அதுவும் ஏன் ஓர் இரவு மட்டும்? பதினொரு, பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்சைகள் இப்படி திங்கள் காலை ஐந்து மணி வரை ஊரடங்கை நீடித்த அரசு, திங்கள் காலை பதினொரு, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் அறிவித்தபடி நடைபெறும் என்று கூறியுள்ளது. இது போன்ற ஒரு பொறுப்பற்ற, அறிவீனமான செயல்பாடு எதுவும் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. உண்மையாக பிரச்சினையின் தீவிரத்தை புரிந்துகொண்டு செயல்படும் அரசு எப்படி பொதுத்தேர்வுகளை இத்தகைய சூழ்நிலையில் நடத்த முடியும் என புரியவில்லை. ஏன் ஏப்ரல் மாதமோ, மே மாதமோ தேர்வை நடத்த முடியாதா? என்ன குடி முழுகிப் போய்விடும்? அது மட்டுமல்லாமல் அனைத்து மாநில தலைமைச்செயலர்களும் கூடி ஆலோசித்து பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அறிவிக்க முடிவு செய்துள்ளார்கள். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஆனால் அரசு சென்னையில் ஐம்பது சதவீத பேருந்துகள் இயங்கும் என்று கூறுகிறது. பொதுத்தேர்வுகளை நடத்துகிறது. கோழியின் தலையை துண்டித்த பிறகு அதன் உடல் விலுக், விலுக்கென்று துள்ளித் திரியும். இதன் காரணமாக ஆங்கிலத்தில் சரியான தலைமையின்றி, ஒருங்கிணைப்பின்றி, தாறுமாறாக செயல்படுவதை “ஹெட்லெஸ் சிக்கன்” அதாவது “தலையற்ற கோழி” போல சுற்றி வருவதாகக் கூறுவார்கள். தமிழக அரசு அப்படித்தான் செயல்படுகிறது. https://minnambalam.com/public/2020/03/23/17/Corona-war-TamilNadu-government-to-stumble-without-leadership
 11. தமிழகம் முழுவதும் 144 தடை: மாவட்ட எல்லைகள் மூடப்படுகிறது! மின்னம்பலம் தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணியிலிருந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 9 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை மற்ற மாவட்டங்களில் இருந்து தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. கொரோனா மேலும் பரவாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு வருகிறது. இந்த நிலையில் சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 23) கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மத்திய அரசால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து மற்றும் பொது போக்குவரத்து நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு நாளை மாலை 6 மணி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இதுதொடர்பாக 144 தடை சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர்கள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, “அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, மகிழுந்துகள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது. மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர்த்து மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் தவிர அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது. அத்தியாவசிய துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது” என்றும் தெரிவித்த முதல்வர், வீடுகளில் இல்லாமல் விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் நலன் கருதி பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்கும். அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும், “தடை உத்தரவு நாட்களில் பணிக்கு வர முடியாத நிலையில் உள்ள ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது. உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் போக்குவரத்துக்கும், விற்பனைக்கும் எந்தத் தடையும் இல்லை. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான ஆணை வெளியிடப்படும். கொரோனா நோய் பரவுவதை தடுக்க அரசு எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். https://minnambalam.com/public/2020/03/23/40/tamil-nadu-government-announced-144-section-state
 12. வைரஸ் அச்சத்தினால் வன்முறை – கொலம்பிய சிறையில் 23 பேர் பலி கொலம்பியாவின் சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் உள்ள சிறையிலேயே இந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. கொரோனா அச்சம் காரணமாக சிறைக்கைதிகள் சுகாதாரமான இடங்கள் தங்களிற்கு அவசியம் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக 23 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர். சுpறைச்சாலைக்குள் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதையும் காயமடைந்தவர்களையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. வைரசிற்கு மத்தியில் நாங்கள் நாய்கள் போல கைவிடப்பட்டுள்ளோம் என சிறையில் உள்ள ஒருவர் தெரிவிப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. கொலம்பியா முழுவதும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை இது சுகாதாரத்துடன் தொடர்புடைய பிரச்சினையல்ல என தெரிவித்துள்ள கொலம்பியாவின் சுகாதார துறை அமைச்சர் எந்த கைதியும் தொற்றிற்குள்ளாகவில்லை,அதிகாரிகள் சிறைச்சாலை ஊழியர்கள் எவருக்கும் நோய் பாதிப்பில்லை என தெரிவித்துள்ளார். கொலம்பியா செவ்வாய்கிழமை முதல் முடக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த வன்முறைகள் வெடித்துள்ளன. இதேவேளை வன்முறைகள் உயிரிழப்புகள் குறித்த செய்திகள் வெளியானதும் சிறையில் உள்ளவர்களின் குடும்பத்தவர்கள் பலர் சிறைக்கு வெளியயே பதட்டத்துடன் குழுமியுள்ளனர். இந்த நிமிடத்தில் யாரு உயிருடன் உள்ளார் யார் கொல்லப்பட்டுள்ளார் என தெரியவில்லை என 23 யுவதியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/78462
 13. கொரோனா தொற்றிய முதலாவது இலங்கையர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய முதலாவது இலங்கையரான சுற்றுலா பயணிகள் வழிகாட்டி அந்த நோய் முற்றாக குணமடைந்து அங்கொடை ஐ.டி.எச் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி சென்றுள்ளார். இன்றைய தினம் அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி சென்றதாக சுகாதார அதிகாரிகள் தெரிபித்துள்ளனர். இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் குழுவொன்றுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இந்த மாத ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து அவர் கடந்த 20 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதுடன் தற்போது அவர் தற்போது முற்றாக குணமடைந்துள்ளார். இதற்கு முன்னர் இங்கு கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட சீனப் பெண்னொருவரும் பூரண குணமடைந்து நாடு திரும்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/கொரோனா-தொற்றிய-முதலாவது/
 14. கொரோனா – இந்தியாவில் 80 மாவட்டங்களை முடக்க அரசு உத்தரவிட்டுள்ளது… March 23, 2020 கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் 80 மாவட்டங்களை முடக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க மத்திய அரசின் அமைச்சரவைச் செயலர், பிரதமரின் முதன்மைச் செயலர் ஆகியோர் மாநிலங்களின் தலைமைச் செயலர்களுடன் காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினர். பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த சுய ஊரடங்கு அழைப்புக்கு மக்கள் தாங்களாக முன்வந்து பெருமளவில் ஆதரவு அளித்ததாக, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் அப்போது தெரிவித்தனர். கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முயற்சியாக, அத்தியாவசியத் தேவை அல்லாத பயணிகள் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள், மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்துக்குத் தடை உட்பட, பல்வேறு கட்டுப்பாடுகளை வரும் மார்ச் 31 வரையில் நீடிக்க வேண்டிய அவசர அவசியம் இருப்பதாக இந்தக் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது. விரிவான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட அல்லது அதுதொடர்பான மரணங்கள் உறுதி செய்யப்பட்ட 80 மாவட்டங்களிலும் அத்தியாவசிய சேவைகள் செயல்பாட்டுக்கு மட்டுமே அனுமதி அளிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நிலைமையை மதிப்பீடு செய்து அதற்கேற்ப மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை நீடித்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மத்திய அரசு முடக்க உத்தரவிட்ட 80 மாவட்டங்களில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்த மூன்று மாவட்டங்களில் எவையெல்லாம் செயல்படலாம். எவையெல்லாம் செயல்படாது என்ற விவரத்தை தமிழக அரசு தனியாக அறிவிக்கும். அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்படும். http://globaltamilnews.net/2020/138983/
 15. கொரோனா – இலங்கையில் மீண்டும் ஊரடங்கு நீடிப்பு – புதிய அட்டவனை வெளியாகியது… March 23, 2020 இன்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை ஆறு மணி வரை மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. குறித்த பகுதிகளில் 26ஆம் திகதி வியாழக்கிழமை பகல் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை ஆறு மணிக்கு நீக்கப்படவுள்ளது. குறித்த எட்டு மாவட்டங்களிலும் நாளை பகல் 12 மணியிலிருந்து 27ஆம் திகதி வௌ்ளிக்கிழமை காலை ஆறு மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் 27ஆம் திகதி நண்பகல் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது. மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து நாடளாவிய ரீதியில் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சுற்றுலாப் பயணிகளை ஆங்காங்கே அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற காலப்பகுதியில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாய செய்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. விவசாய மற்றும் வர்த்தக துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் இந்த விடயங்களை முறையாக நிருவகிக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2020/138989/
 16. மன்னார் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் உட்பட 59 பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் March 23, 2020 வெளிநாடுகளில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வந்த 42 பேர்கள் தங்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதோடு, மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 17 பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேசச் செயலாளர்களுக்கு இடையில் இன்று திங்கட்கிழமை(23) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அவசர கலந்துரையாடல் இடம் பெற்றது. இதன் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, பிரதேசச் செயலாளர்களின் அறிக்கைகளின் படி வெளிநாடுகளில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வந்த 42 பேர்கள் தங்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு,மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 17 பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வைத்திய,சுகாதார அதிகாரிகளின் கண்ணாணிப்பில் உள்ளனர். அவர்களுக்கான உணவு பொருட்களும் பிரதேச செயலாளர்கள் ஊடாக வழங்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தளம் பகுதியில் இருந்து மாந்தை மேற்கு பகுதியில் வருகை தந்த 87 பேர்களும், மன்னார் நகரிற்கு வருகை தந்த 34 பேர்களும்,முசலி பகுதியில் வருகை தந்துள்ள 49 பேர்களும், மடு பகுதியில் உள்ள 6 பேர்களும் தற்போது பொது சுகாதார பரிசோதகர்களின் காண்காணிப்பில் உள்ளனர். இதன் போது நாளைய தினம் செவ்வாய்க்கிழமை(24) மன்னார் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்ற போது மக்களின் தேவைகள் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் பிரதேசச் செயலாளர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள வெதுப்பகங்களில் மக்களுக்கு தேவையான வெதுப்பக பொருட்களை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் மக்கள் சிரமம் இன்றி பெற்றுக்கொள்ளுதல், மாவட்டத்தில் உள்ள சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன் போது மன்னார் நகர்,பேசாலை,மாந்தை மேற்கு,மடு ஆகிய பகுதிகளில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் மக்களுக்கு வழங்கக்கூடிய வகையில் அத்தியாவசிய பொருட்கள் காணப்படுகின்றது. எனினும் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் சதொச விற்பனை நிலையம் இல்லாமை தொடர்பிலும்,முசலியில் உள்ள சதொச விற்பனை நிலையத்தில் எவ்வித பொருட்களும் கையிருப்பில் இல்லாமை தொடர்பாகவும் ஆராயப்பட்டது. இதன் போது நானாட்டான் மற்றும் முசலி பிரதேச மக்களுக்காக அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்து வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள மொத்த வியாபார நிலையங்கள் சில்லறை வியாபார நிலையங்களுக்கு பொருட்களை பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும் இவ்விடையங்களில் பிரதேசச் செயலாளர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுது. சதொச விற்பனை நிலையங்களில் பொருட்களை மட்டுப்படுத்தி அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் பகிர்ந்து வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு,பிரதேசச் செயலாளர்களுக்கு கண்டிப்பான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அத்தியாவசிய உணவுப்பொருட்களை அசௌகரிங்கள் இன்றி பெற்றுக்கொள்ள பிரதேசச் செயலாளர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். குறித்த கலந்துரையாடலில் பிரதேசச்செயலாளர்கள்,மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் ,மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரி,சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது #மன்னார் #வெளிநாடுகளிலிருந்து #தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் #சதொச http://globaltamilnews.net/2020/138997/
 17. வறுமைக்கோட்டிற்குற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்க மன்னார் நகர சபை தீர்மானம் March 23, 2020 மன்னார் நகர சபை பிரிவில் கூலித்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைக்க உள்ளதாக மன்னார் நகர சபையின் முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார். -இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் இன்று(23) கருத்து தெரிவிக்கையில்,,, -நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை தொடர்பாகவும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (23) காலை 11 மணியளவில் மன்னார் நகர சபையில் இடம் பெற்றது. -நகர சபை உறுப்பினர்கள், காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டிரந்தனா. இதன் போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலை காரணமாகவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும் மக்கள் வெளியில் நடமாட முடியாத அச்ச நிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பாக ஆராயப்பட்டது. குறிப்பாக ஊரடங்குச் சட்டமும் அமுல் படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்னார் நகர சபை பிரிவில் நாளாந்தம் கூலித்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள், பெண் தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். -இந்த நிலையில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அடிப்படை வசதி இல்லாத குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை நாளை (23) செவ்வாய்க் கிழமை முதல் வழங்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.என தெரிவித்தார். இதே வேளை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள காமன்ஸ் கட்டிடத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றுள்ளவர்களை கொண்டு வந்து சிகிச்சை வழங்க உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளை மன்னார் நகர சபை உறுப்பினர்களாகிய நாம் ஏற்றுக் கொள்ள போவதில்லை. நகர சபையின் தலைவர்,உறுப்பினர்கள் ஆகிய நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளர்கள் இனம் காணப்படும் பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தடுப்பு மையமாக பயன்படுத்த அனுமதிக்க முடியும். ஆனால் வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வருகின்றவர்களையும், வெளி நாட்டவர்களையும் இங்கு அழைத்து வந்து சிசிச்சை வழங்க அனுமதிக்க மாட்டோம்.அவ்வாறு மீறி செயற்படும் பட்சத்தில் மக்களுடன் இணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.என அவர் மேலும் தெரிவித்தார். #வறுமைக்கோட்டிற்குற்பட்ட #பாதிக்கப்பட்ட #உலர்உணவு #மன்னார் #நகரசபை http://globaltamilnews.net/2020/139010/
 18. நண்பர் கொழும்பானுக்கும் முனிவர்ஜீ ஆகிய தனிக்காட்டுராஜாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
 19. நம் முன்னோர் மட்டுமல்ல எல்லா இன முன்னோர்களும் பட்டறிவு மூலம் நோய் நொடிகளிலிருந்து தப்ப வழிவகைகளைக் கண்டார்கள். சில வேலை செய்தன; பல வேலை செய்யவில்லை. தமிழன் மட்டும்தான் எல்லாவற்றுக்கும் முன்னோடி என்பது உலகில் மற்ற முன்னேறிய இனங்கள் எப்படி வாழ்ந்தன என்பது பற்றிய புரிதல் இல்லாமையால்தான். எளிய சுகாதார முறைகளை எல்லோரும் கைக்கொள்கின்றார்கள். சாதாரண மக்களை அவற்றை பின்பற்ற வைக்க அம்மாள் வருத்தம் என்று ஒரு வெருட்டல் வைத்தார்கள். கொரோனா வைரஸை பெரியம்மை, சின்னம்மைக்கு தடுப்பூசி கண்டுபிடித்ததுபோல புதிதாக ஒன்றைக் கண்டுபிடிப்பதன் மூலம்தான் எதிர்காலத்தில் இல்லாமல் செய்யமுடியும். வீட்டுக்குள் இருக்கும் சமூக விலகல் என்பது தொற்றுப்பரவலை குறைத்து வைத்தியசேவைகளின் நெருக்கடியை குறைக்கவே ஒழிய கொரோனாவை முற்றாக ஒழிக்க அல்ல! இறுதியாக, தமிழர்கள், சிங்களவர்கள், இந்தியர்கள் கைலாகு கொடுக்காமல் கைகூப்பி வணக்கம் சொல்வதுபோல், சீனர்களும் கைலாகு கொடுப்பதில்லை. தாய்வான் ஜனாதிபதி பாரம்பரிய முறையில் சனல்4 Jon Snowக்கு வணக்கம் சொல்வதைப் பாருங்கள். Taiwanese president Tsai Ing-wen demonstrating social distancing through use of a traditional Chinese greeting (fist & palm) instead of shaking hands in response to the COVID-19 pandemic.
 20. தவளையும் இளவரசனும் - ஜெயமோகன் இரவில் பேரழகியான இளவரசியாக இருந்தவள் விடிந்ததும் தவளையாக மாறிய கதையை நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒரு படக்கதைப் புத்தகத்தில் வாசித்தேன். கடைசிப்பக்கத்தில் அந்தப் பச்சைத்தவளையைக் கண்டதும் எனக்கு வாந்தி வந்து உடல் உலுக்கியது. ஏனென்றால் நான் அந்தத் தவளையை மணந்த இளவரசனாக என்னை கற்பனை செய்துகொண்டிருந்தேன். மியான்மாரின் மேய்க் ஆர்க்கிபெலகோவுக்கு மேலும் எண்பது கிலோமீட்டர் தொலைவில் தனியார் சுற்றுலா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கௌங்கையின் என்னும் இந்தச் சிறிய தீவின் ஆடம்பரக் குடிலின் அறைக்கு வெளியே புலரிவெளிச்சம் கடல் அலைகளின் மேல் அற்புதமாக ததும்பிக்கொண்டிருக்க, சுவர்கள் ஒளியலைகளாக அசைய, திரைச்சீலைகள் மலரிதழ்கள்போல வண்ணம் பொலிந்துகொண்டிருக்க நான் என் போர்வையை விலக்கி கைகளைத் தூக்கி சோம்பல்முறித்துக்கொண்டு நேற்று இரவெல்லாம் என்னுடன் உறவாடிய பர்மிய அழகியைப் பார்த்து “குட்மார்னிங்”என்று சொன்னபோது அவள் அறையிலிருந்த கண்ணாடித் தொட்டியில் நீந்திய மீன்களில் ஒன்றை கையால் பிடித்து அப்படியே தூக்கி துள்ளத்துள்ள வாயிலிட்டு முறுக்கு போல மென்று தின்றபடி என்னைப் பார்த்து புன்னகைத்து ‘மார்னிங்” என்றாள். நான் குமட்டி மடங்கிவிட்டேன். கையால் வாயை அழுத்தியபடி ஒலிகளை எழுப்பினேன். அவள் அதை விழுங்கிவிட்டு அருகிலிருந்த கூஜாவிலிருந்து நீரை கண்ணாடி கோப்பையில் ஊற்றி என்னருகே கொண்டுவந்து நீட்டி “என்ன ஆயிற்று…?தண்ணீர் குடி” என்றாள். நான் “இல்லை, பரவாயில்லை” என்றேன். “என்ன ஆயிற்று?” “குமட்டல்” “நேற்று அந்த மார்ட்டினி உனக்கு ஒத்துக்கொள்ளவில்லை” “அதில்லை” “உனக்கு ரத்த அழுத்தம் உண்டா?” “இல்லை”என்றபின் நான் கழிப்பறை நோக்கி ஓடினேன். வாந்தி நின்றுவிட்டது என்று தோன்றியது, வயிறு அமைதியாக இருந்தது. கழிப்பறை முன் சென்று நின்று கண்ணாடியில் என்னை பார்த்தேன். சற்றுமுன் பார்த்த காட்சியின் நினைவு எழ பிளிறலோசையுடன் வாந்தி எடுத்தேன். என் உடல் குலுங்கியது. கண்ணீர் வழிந்தது. மூக்கிலிருந்தும் நீர் வழிந்தது. “என்ன ஆயிற்று? டாக்டர் தேவையா?” அவள் வாசலுக்கு அப்பால் நின்று கேட்டாள். நான் “வேண்டாம்” என்றேன். “நீ நேற்று எதையுமே சாப்பிடவில்லையே!” என்றாள். நான் சைவ உணவுக்காரன். அதை விடுதிக்காரனுக்குப் புரியவைக்க என்னுடைய முழு மொழித்திறனையும் காட்டினேன். ஓவியம் நடனம் ஆகிய கலைகளில் உள்ள திறமையையும் காட்டியபின் ஒரு கோப்பை பாலும் ஓரிரு ரொட்டித்துண்டுகளும் காய்கறிகளும் பழத்துண்டுகளும் சாப்பிட்டேன். அவள் அங்கிருந்த எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டாள். “இதெல்லாமே அசைவமா?”என்று கேட்டேன். “அசைவம் என்றால்?” “விலங்குகள்” அவள் “இல்லை” என்றாள். “மீன்கள் உண்டு. பூச்சிகள்கூட உண்டு” அப்போதே எனக்கு ஒரு சிறுபதற்றம் ஏற்பட்டது. ஆனால் உலகில் ஒவ்வொரு பகுதியிலும் உணவுப்பழக்கம் ஒவ்வொரு வகை. சில இடங்களில் புழுக்கள் கூட உணவு. “இங்கே புழுக்களை உண்கிறார்களா?” “ஆம், சோகோ புழுக்கள் சுவையானவை” அவை என்ன வகை புழுக்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்குள் பேரொலியுடன் இசையை ஆரம்பித்துவிட்டார்கள். மியான்மாரில் அப்போதும் போனிஎம் தான் மோஸ்தர். ராரா ரஸ்புடின். அவள் இடையை அசைத்து மென்மையாக நடனமாடியபடியே சாப்பிட்டாள். மிகச்சிறிய உடம்பு. பின்னாலிருந்து பார்த்தால் ஒரு சிறுமி என்று சொல்லிவிடலாம். அல்லது சிறுவன் என்று. குட்டையாக வெட்டப்பட்ட தலைமயிர். குறுகிய தோள்கள், குறுகிய பின்பக்கம், சீனப்பொம்மை போல. ஆனால் சீனர்களுக்கும் இவர்களுக்கும் நிறைய வேறுபாடு. இவள் நிறம் சீனர்களைப்போல பளீர் வெண்மை இல்லை. கொஞ்சம் மங்கலான பீங்கான் நிறம். கண்களும் உதடுகளும் கொஞ்சம் பெரியவை. சீனமொழி அளவுக்கு மூக்கோசை இல்லாத மொழி. இரவு நான் அவளிடம் கேட்டேன் ‘நீ எந்த இனக்குழுவைச் சேர்ந்தவள்?” ‘அது எதற்கு?” என்றாள். “இல்லை, சும்மா” ‘நீ என்னை கல்யாணமா செய்துகொள்ளப் போகிறாய்?” ‘அய்யய்யோ!”என்றேன். “ஏன்? என்ன பதற்றம்?” “ஊரில் என் அம்மா எனக்கு பெண்பார்க்கிறார்… அம்மாவை நினைத்துக்கொண்டேன்” “அம்மாவா உனக்கு பெண் பார்க்கிறாள்?” “ஆமாம்…” ‘அவளா முடிவுசெய்வாள்?” “ஆமாம்” “உன் அம்மா உன் பெண்ணுடன் படுத்துப் பார்ப்பாளா என்ன?” நான் கோபத்துடன் “வாயை மூடு!” என்றேன். “சும்மா வேடிக்கைக்காக கேட்டேன்” ‘இதுவா வேடிக்கை… முட்டாள்தனம்” ‘பையனுக்கு அம்மா பெண்பார்ப்பது முட்டாள்தனம் இல்லையா?” ‘அது எங்களூர் வழக்கம்…” “எல்லாருமேவா?” “ஆமாம், பெரும்பாலும்” “என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை” “அது அப்படித்தான். எனக்கு நிறைய வேலைகள். நிறைய பயணங்கள். எனக்குப் பொருத்தமான பெண்ணை தேடிக் கண்டுபிடிக்கும் அளவுக்கு என்னிடம் நேரம் இல்லை” அவள் தன் ஆடையைக் கழற்ற கையை பின்னால் கொண்டுபோனாள். பின்னர் என்னைப் பார்த்து “நீ பின்னால் திரும்பிக்கொள்” என்றாள். “ஏன்? நான் உன்னை பார்த்தாலென்ன?” “பர்ர்க்கலாம். ஆனால் ஆடை கழற்றும்போது பார்க்கக்கூடாது” ‘இதென்ன ஆச்சரியமாக இருக்கிறது” “அது அப்படித்தான்… எங்கள் வழக்கம்… கண்ணை மூடு” நான் கண்ணை மூடினேன். அவள் ஆடையைக் கழற்றும் ஓசை மென்மையான ரகசியமாக ஒலித்தது. அது அத்தனை கிளர்ச்சியானது என்று நான் உணர்ந்திருக்கவில்லை. அவள் ஓடிவந்து மெத்தையில் பாய்ந்து என்னை கட்டிக்கொண்டாள். என் உதடுகளில் முத்தமிட்டாள். “நீ இனிமையானவன்” “நீயும்” அவள் உதடுகள் இரண்டு சிறு மொட்டுகள் போல. மார்புகள் இரு சிறு பித்தளைக் கதவுக்குமிழிகள். “நீ இதுவரை பெண்ணை கண்டுபிடிக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது” ‘நான் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டேன். மணமுறிவு” “ஓ… அவள் யார்?” “என் ஊர்க்காரிதான்…” ‘அம்மா பார்த்துவைத்தவளா?” “ஆமாம். அப்போது அப்பாவும் இருந்தார். என் ஊர், என் இனக்குழு, எங்களுக்கு நன்றாகத் தெரிந்த குடும்பம். படிப்பு, பொருளாதாரச் சூழல் எல்லாமே பொருத்தமானவை. அதோடு ஜாதகம்… நீ கேள்விப்பட்டிருப்பாய். எங்களூரில் பிறந்ததுமே ஒரு சோதிடக்கணிப்பைச் செய்து எழுதி வைப்பார்கள். மனிதர்கள் பொருந்தினால் போதாது, அதுவும் பொருந்தவேண்டும். எனக்கு எட்டு பொருத்தங்களும் இருந்தன” ‘நீங்கள் எத்தனை ஆண்டு சேர்ந்து வாழ்ந்தீர்கள்? நான் கேட்கக்கூடாது என்றால் மன்னித்துவிடு” “நான்கு ஆண்டுகள்.. ஒரு குழந்தை. பெண்குழந்தை. அவளை நான் இப்போதும் அடிக்கடி சந்திக்கிறேன். அட்லாண்டாவில் இருக்கிறாள்” அவள் “துயரமானது” என்றாள். “அவளுக்கு மறுபடியும் திருமணம் ஆகிவிட்டது. அமெரிக்கன். வெள்ளையன்” “மகிழ்ச்சியாக இருக்கிறாளா?” “தெரியவில்லை” “அதைத்தானே நீங்கள் முதலில் பார்ப்பீர்கள்?” “மகிழ்ச்சியாகத்தான் இருக்கவேண்டும். அவளுக்கு முன்னரே அவனுடன் தொடர்பு இருந்திருக்கிறது. மணமுறிவுக்கு மறுவாரமே அவர்கள் மணந்துகொண்டார்கள். அப்போதுதான் எனக்கு தெரியும்” அவள் சிரித்தாள். “பெண்கள் புத்திசாலிகள்” நான் அவளை உடலுடன் சேர்த்துக்கொண்டேன். மிகச்சிறிய உடல். “நீ சிறுவனைப் போல் இருக்கிறாய்” “நானும் அதைத்தான் நினைத்தேன். நீங்களெல்லாம் ஏன் இத்தனை பெரிதாக இருக்கிறீர்கள்… பெரிய கை, பெரிய வயிறு… விரல்கள் கூட பெரிது… உன் கைகளை பார்த்தால் இரண்டு சிறுவர்கள் பக்கமாக நிற்பதுபோலிருக்கிறது” “பர்மியப் பெண்கள் எல்லாருமே பீங்கான் பொம்மைகள் போலிருக்கிறீர்கள்” ”அப்படியா?” என்றாள். எங்கள் குரல்கள் கசங்கிக்கொண்டிருந்தன. “உங்கள் உடல்கள் பிளாஸ்டிக் போல தோன்றுகின்றன” “உங்கள் உடல்களில் ஏன் இத்தனை முடி?” அவள் என் மார்பின் முடியைப் பிடித்து “இங்கே குரங்குகளுக்குத்தான் இத்தனை முடி” என்றாள். நான் அவளை செல்லமாக தோளில் அறைந்தேன். அதன் பின் அவள் கழிப்பறை சென்றாள். நான் கைநீட்டி கண்ணாடிக் கோப்பையை எடுத்து ஒரு விரற்கடை மார்ட்டினி விட்டுக்கொண்டேன். அவள் வெளியே வந்து “நீ ஏற்கனவே குடித்துவிட்டாய்”என்றாள். நான் கோப்பையுடன் சாய்ந்துகொண்டு “மார்ட்டினி இதமானது” என்றேன். “உன் அம்மா இப்போதும் அதேபோல பொருத்தங்கள் பார்க்கிறாரா?” “ஏன் திடீரென்று? கழிப்பறையில் அதைத்தான் நினைத்துக்கொண்டிருதாயா?” அவள் சிரித்தபோது மேலும் சிறுமியாக ஆனாள். “ஆமாம்” என்றாள். “அம்மா நினைக்கிறாள், சென்றமுறை ஜாதகம் பார்த்தவர் ஏதோ மறைத்துவிட்டார் என்று. ஆகவே இன்னும் சரியாக பொருத்தம் பார்க்கிறாள். அத்தனை பொருத்தமும். ஒன்றுகூட குறையாமல்” “முதல் பொருத்தமாக என்ன பார்ப்பார்கள்?” “பெண் கன்னியாக இருக்கவேண்டும்” “கன்னி என்றால்? கிறித்தவ தெய்வம்தானே?” “இல்லை. எவருடனும் உடலுறவு கொள்ளாதவள்” “ஏன்?” “அது ஒரு வழக்கம்” “எத்தனை வயதுவரை?” “திருமணம் வரை” “அடடா” “எத்தனை ஆண்டுகளாக?” “என்ன?” உன் முந்தைய மனைவி எத்தனை ஆண்டுகள் உடலுறவு இல்லாதவளாக இருந்தாள்?” “பதினொன்று” “அய்யோ!” என்று வாயைப்பொத்தி கண்களால் சிரித்தாள். “உனக்கு என்ன வயதாகிறது?” “நாற்பத்திரண்டு” “அப்படியா? எனக்கு வெளியூர்க்காரகளின் வயதை கணக்கிடவே முடிவதில்லை” “எனக்கு உங்களூரில் சிறுமி கிழவி என இரண்டே வேறுபாடுகள்தான் தெரிகின்றன” அவள் சிரித்துக்கொண்டு வந்து படுத்து என் கையிலிருந்த மார்ட்டினியை வாங்கிக்கொண்டாள். “உன் இனக்குழுவினர் எங்கே இருக்கிறார்கள்?” என்றேன். “வட மியான்மாரில். ஐராவதிக்கரையில் எங்கள் ஊர்கள் இருக்கின்றன” “அங்கெல்லாம் அரசாங்கமே இல்லை என்பார்கள்” ‘பெரும்பாலும் இனக்குழுத்தலைமைகள்தான்… எந்த நவீன வசதிகளும் இல்லை. படகில் போய் அதன்பின் ஒற்றையடிப்பாதையில் காடுவழியாக செல்லவேண்டும்…என் ஊரை அடைய பதினெட்டு கிலோமீட்டர் நடக்கவேண்டும். இருபக்கமும் அடர்ந்த காடு…வழிதவறினால் கண்டுபிடிக்கவேமுடியாது” “உலகிலேயே இங்கேதான் இத்தனை அடர்ந்த காடு இருக்கிறது என நினைக்கிறேன்” “காட்டை வெட்டி கடத்த வழியே இல்லை. ஐராவதிக்கரை காடுகள் கொஞ்சம் அழிக்கப்பட்டிருக்கின்றன. என் ஊர் ஊரே இல்லை… காட்டுக்குள் கொஞ்சம் மூங்கில்குடில்கள். அதைத்தான் ஊர் என்கிறோம்” “விவசாயம் செய்வதில்லையா?” “எங்கள் இனக்குழு விவசாயம் செய்வதில்லை…வேட்டையும் உணவை சேகரிப்பதும்தான்… எங்கள் காட்டில் எல்லாவகை உணவுகளும் உள்ளன” “ஆச்சரியம்தான்… நீ எப்படி நகரத்திற்கு வந்தாய்?” “என்னை ஒரு ஏஜென்ஸி கூட்டிவந்தது. எட்டுவயதிலேயே அவர்களுடன் வந்துவிட்டேன்” “ஏஜென்சியா? எதற்கு” “இதற்குத்தான்… அவர்கள்தான் எனக்கு ஆங்கிலம் சொல்லித்தந்தார்கள். உடை அணியவும் பழகவும் கற்றுத்தந்தார்கள்” நான் அவளை அணைத்து அவள் கழுத்தில் முத்தமிட்டு “நான் உன்னை புண்படுத்திவிட்டேனா?” என்றேன். “இல்லை… இதெல்லாம் எல்லாரும் கேட்பதுதானே?” “ஆனால்…” என்றபின் “கஷ்டம்தான் இல்லையா?”என்றேன். “இல்லை” என்றாள். ‘உண்மையில் கஷ்டமே இல்லை. எங்கள் இனக்குழுவில் இதைவிட கஷ்டம். அத்தனை ஆண்களும் பாலியல் வன்முறை செய்வார்கள். அதற்காக மாறி மாறி அடித்துக்கொள்வார்கள். கடைசியில் வலிமையானவர் நம்மை தூக்கிக்கொண்டுபோய் அவர் மட்டும் பாலியல் வன்முறை செய்வார்… அதைத்தான் திருமணம் என்கிறார்கள்.பெரும்பாலும் அவர் வயதானவராக இருப்பார். அவருக்கு விசுவாசமாக இருக்கவேண்டும். ஆகவே மற்ற ஆண்களைக் கண்டாலே ஒளிந்துகொள்ளவேண்டும்… சிறுவயதிலேயே கர்ப்பம் தரிக்கவேண்டும்… அதன்பின் பிள்ளைகள்….பிள்ளைகளை நாம்தான் வளர்க்கவேண்டும். ஆண்கள் பிள்ளைகளுக்கு எதுவுமே தரமாட்டார்கள். அவர்களுக்கு உணவு அளிக்க நாம் மிகக் கடுமையாக உழைக்கவேண்டும். கணவரிடம் அடிவாங்கவேண்டும்.அத்தனை பேரிடமும் கடுமையாக அடிபடவேண்டும்… எங்கள் பெண்கள் நாற்பது வயதுகளில் மிகமிகக் கிழவியாக ஆகிவிடுவார்கள். அவர்கள் உடம்பெல்லாம் வடுக்களாக இருக்கும்” “ஊரில் உனக்கு யார் இருக்கிறார்கள்?” “யாருமில்லை… என் அம்மா செத்துவிட்டாள். நான் இரண்டுமுறைதான் அங்கே சென்றிருக்கிறேன்” எனக்கு கண்கள் சுழற்றிக்கொண்டு வந்தது. “தூங்கு” என அவள் சொன்னாள் “நீ தாலாட்டு பாடு” “தாலாட்டா உனக்கா?” “ஏன் உன் மொழியில் தாலாட்டு இல்லையா?” “உண்டு…” “தெரியுமா?’ “தெரியாமலிருக்குமா?” “பாடு” அவள் என் தலையை தட்டி பாட ஆரம்பித்தாள். விதவிதமான வெண்கலப் பாத்திரங்களில் தட்டிய ஓசை போலிருந்தது. நான் பல் தேய்த்துவிட்டு வந்தபோது அவள் என்னிடம் “உனக்கு கஷ்டமாக இருக்கிறது என்றால் நாம் டாக்டரை பார்க்கலாம்… இங்கேயே தங்கும் டாக்டர் உண்டு” “தேவையில்லை…” என்றேன். “காபி சொல்லவா?” என்றாள். “சொல்” என்றேன். காபி வந்தது. அவளுக்கு டீ. சீனி பால் எதையும் போடாமல் குடித்தாள். “நீ காபி சாப்பிட மாட்டாயா?” “ஒரே ஒருமுறை சாப்பிட்டேன்… குமட்டல்” “என் அம்மா காபியால்தான் வாழ்கிறாள்” ‘நீங்கள் சாப்பிடும் காபி இன்னமும் குமட்டல்… பாலே எனக்கு பிடிக்காது. நான் ஒரே ஒருமுறைதான் பாலை சாப்பிட்டிருக்கிறேன்… அது…” “என்ன?” “குமட்டல்” “ஏன்?” “அது சீழ் போல என்று எனக்கு தோன்றும்” என்றபின் என் காபியை பார்த்து “என்னை மன்னித்துவிடு” நான் கோப்பையை திரும்ப வைத்துவிட்டேன். “என்னை மன்னித்துவிடு” “நான் ஏன் வாந்தியெடுத்தேன் தெரியுமா?” “ஏன்?” “நீ பச்சைமீனை சாப்பிடுவதை பார்த்தேன்” “அப்படியா? உங்களூரில் சாப்பிட மாட்டீர்களா?” “இல்லை. மீன் சாப்பிடுபவர்கள்கூட சமைத்துத்தான் சாப்பிடுவார்கள்” “மீன்களும் புழுக்களும் ஏற்கனவே சமைக்கப்பட்டவை” என்றாள். “மீண்டும் சமைத்தால் சுவை போய்விடும்” “அய்யய்யோ!” “ஏன் நீ மீன் சாப்பிடுவதில்லை?” ‘உயிர்களை சாப்பிடக்கூடாது” “செடிகளுக்கும்தான் உயிர் இருக்கிறது… சொல்லப்போனால் உயிரில்லாதவற்றைத்தான் சாப்பிடக்கூடாது. என் இனக்குழுவில் கிழவர்களும் கிழவிகளும் உப்பைக்கூட சாப்பிடமாட்டார்கள்” நான் பெருமூச்சுவிட்டேன். “நான் சொல்வது எதையாவது நீ புரிந்துகொள்வாய் என்று தோன்றவில்லை” என்றேன். ‘ஆனால் நீ சொல்வது எல்லாமே ஆச்சரியமாக இருக்கிறது” நான் எழுந்துகொண்டேன். “கடற்கரைக்கு வருகிறாயா?” “ஆமாம், நானும் சொல்லவேண்டும் என நினைத்தேன்” குறிய ஆடைகளை அணிந்துகொண்டு கடற்கரைக்கு சென்றோம். அது தனியார் கடற்கரை. மிகத்தூய்மையான வெண்மணல். மிகமிகத் தூய்மையான நீலப்பளிங்கு நீர்ப்பரப்பு. கடற்கரையை ஒட்டியே பச்சைக்கோட்டை போல அடர்ந்த காடு ஆரம்பமாகிவிட்டிருந்தது. அவள் “வா!” என்றாள். “எனக்கு நீந்தத்தெரியாது” “உண்மையாகவா?” ‘நீச்சல்குளத்தில்கூட நீந்த மாட்டேன்” “அய்யோ!” என்றாள். வாயைப்பொத்தியபடி சிரித்தாள். “ஏன்?” ‘நீந்தத்தெரியாத ஆணை இப்போதுதான் பார்க்கிறேன்” நான் சிரித்தேன். ‘நீந்துவதை நினைத்தாலே பயம்… நான் முயற்சி செய்தேன். கல்தூண் போல அப்படியே உள்ளே போய்விட்டேன்” “ஏன் நீந்தக் கற்கவில்லை? ஆற்றை எப்படி கடப்பாய்? “நான் சென்னை என்ற நகரில் ஒரு அப்பார்ட்மெண்டில் வளர்ந்தேன். நான் பார்த்த தண்ணீரெல்லாம் குழாயில்தான்” “நீ ஐராவதியை பார்த்ததுண்டா?” ‘ஆமாம், அது ஆறே இல்லை என்று தோன்றும். ஏரியே ஆறுபோல நீளமாக இருப்பதுபோல…எவ்வளவு பெரிய ஆறு” “நான் அதில் பெருவெள்ளத்தில் நீந்துவேன்” ‘நீந்துவது எனக்கு பறப்பதுபோல… நினைத்தே பார்க்கமுடியவில்லை” “எங்களூரில் நீந்துவது என்று எதை சொல்வார்கள் தெரியுமா?” “எதை?” “அதை” என்றாள் சிரித்தபடி. “ஏய்!” என்று அவள்மேல் மணலை அள்ளி வீசினேன். பற்கள் ஒளிவிட சிரித்தபடி ஓடி கடல் அலைமேல் பாய்ந்தாள். குதிரைமேல் ஏறிக்கொள்வதுபோல அலைமேல் அமர்ந்து எழுந்து அப்பால் மறைந்தாள். நான் அவளை பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். மீண்டும் ஓர் அலையில் பாய்ந்து எழுந்தாள். பறவை வானிலெழுவதுபோல கைகளை விரித்திருந்தாள். சிரிப்பை அப்போதும் பார்க்கமுடிந்தது. அலைக்குமேல் ஒரு சிறிய மஞ்சள்பறவை தொற்றித்தொற்றி பறப்பதுபோலத் தெரிந்தாள். ஒரு பெரிய நீர்த்திவலை போல தெறித்தாள். அவளும் கடலும் சேர்ந்து சிரித்துக்கொண்டிருப்பதுபோலத் தோன்றியது. குட்டையான உடலும் சுருண்ட கொம்புகளும்கொண்ட நான்கு மான்கள் காட்டிலிருந்து கடற்கரை நோக்கி வந்தன. நான் திகைப்புடன் எழுந்துகொண்டேன். கடலோரம் மான் என்பதை கற்பனைசெய்யவே முடியவில்லை அவை என்னை செவி விடைத்துப் பார்த்தன. நான் கையைச் சொடுக்கியபோது உடல் அதிர்ந்தன. கையைச் சொடுக்கிச் சொடுக்கி அவற்றுடன் விளையாடினேன். ஒரு கணத்தில் அவை அம்புகள் போல பாய்ந்து ஓடி மறைந்தன. மணலின் வெண்பரப்பில் சிறிய எழுத்துக்களால் ஆன ஒரு நீண்ட வரி போல அவற்றின் காலடித்தடங்கள். அவள் நீர் சொட்ட கரைக்கு வந்தாள். மூச்சுவாங்க ஓடி என்னருகே வந்து “வா கடலுக்கு” என்றாள். “அய்யோ…” என்றேன். “ஒருவாரம் என்னுடன் இரு… உனக்கு நான் கடலில் பறப்பது எப்படி என்று சொல்லித் தருகிறேன்” ”நான் நாளை காலை கிளம்புகிறேன்” “அமெரிக்காவுக்குத்தானே?” “ஆமாம்… இங்கே என் தொழில்முறை பயணம்” அவள் “இங்கே எவருமே இல்லை… எதற்காக இந்த உடை?” என்றாள். இரட்டை நீச்சலுடையைக் கழற்றி மணலில் வீசினாள். ஆடையற்ற உடலுடன் ஒரு சிறிய குருவி போலிருந்தாள். தாவி மீண்டும் அலைக்குமேல் பாய்ந்தெழுந்தாள். அவள் அலைகளில் ஆடுவதை பார்த்துக்கொண்டிருந்தேன். நீண்டதூரம் போகிறாளா? அவளை எச்சரிக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவளை என் குரல் அடையாது. மான்கள் மீண்டும் வந்தன. இம்முறை அவை என் கைசொடுக்குக்கு அஞ்சவில்லை. செவிகள் மட்டுமே அசைந்தன. கடற்கரையில் அவை என்ன செய்கின்றன என்று பார்த்தேன். உப்புநீரை நக்கிக்கொண்டிருந்தன. அவள் கரைக்கு வந்தாள். “மான்கள்!” என்றாள். “அவை என்னை பயப்படவில்லை. நான் சைவ உணவுக்காரன்” “உன்னை மரங்களும் செடிகளும் பயப்படும்’ என்றாள். நாங்கள் மீண்டும் விடுதி நோக்கி சென்றோம். “உன் முன்னாள் மனைவி நீந்துவாளா?” “ஏன் அவளைப்பற்றி?” “இல்லை, அவளைப் பற்றி நினைவு வந்தது. அவள் உனக்கு நீச்சல் கற்றுத்தந்திருக்கலாமே?” “அவளுக்கும் நீச்சல்தெரியாது” “உண்மையாகவா?” “அவளும் அப்பார்ட்மெண்டில் வளர்ந்தவள். அதோடு எங்கள் பெண்களின் உடலும் நீச்சலுக்கு உரியவை அல்ல… அவை எடைமிக்கவை. அவர்களின் கைகளும் தொடைகளும் பருத்தவை” “ஆம், இங்கே இந்தியப்பெண்களை பார்த்திருக்கிறேன். அப்படித்தான் இருக்கிறார்கள்” “அதோடு அவர்கள் பொது இடங்களில் உடலைக் காட்ட மாட்டார்கள். ஆடை நனைந்தாலே கூசிவிடுவார்கள்” “ஏன்?” “அது ஒரு மனப்பழக்கம்” “அவர்கள் பருமனாக இருப்பதனாலா?” “ஆம்” என்று சிரித்தேன். வேறுவழியில்லை. காலையுணவுக்கே சீவப்பட்ட பன்றி, வேகவைக்கப்பட்ட செம்மறியாடு, அரைத்து உருட்டப்பட்ட கோழி, பொரித்த இறால், சுட்ட மீன் என உயிரினங்கள் ஏராளமாக இருந்தன. நான் சுற்றிப்பார்த்தபின் பாலாடைக்கட்டியை எடுத்துக்கொண்டேன். “இதையா சாப்பிடுகிறாய்?” “ஆமாம்” “இந்த நாற்றமே எனக்கு பிடிக்காது” என்றாள். “அழுகிய மாமிசம் போலிருக்கிறது…நாங்கள் எந்த மாமிசத்தையும் புதிதாகவே சாப்பிடுவோம். எங்கள் ஊரில் ரத்தம் நின்றுவிட்ட இறைச்சியைக்கூட சாப்பிட மாட்டார்கள்” நான் யோகர்ட் எடுத்துக்கொண்டேன். “அய்யோ… இது பழைய புண்ணின் சீழ்” “சீ அந்தப்பக்கமா போ” “சரி சொல்லவில்லை” “நீ வேண்டுமென்றால் விலகிப்போய் நின்று சாப்பிடு” “இல்லை, பரவாயில்லை” என்றாள். நான் அமர்ந்துகொண்டு “இன்று எனக்கு ஒரு கதை நினைவுக்கு வந்தது. தவளையும் இளவரசனும்… ஓர் இரவு இளவரசனின் அரண்மனைக்கு ஓர் இளவரசி வருகிறாள். பேரழகி. இரவில் அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். காலையில் அவள் தவளையாக மாறிவிடுகிறாள்” அவள் சிரித்து “என்னையா சொல்கிறாய்?”என்றாள். “ஆம்’ என்றேன். “எங்களூரில் ஒரு கதை உண்டு. ஏழை நா-வின் கதை. “என்ன? நா… அவள்பெயர் நா”. “ஓ!” “அவள் அழகே அற்றவள். ஆகவே அவளை எந்த ஆணும் விரும்பவில்லை. ஆகவே அவள் ஐராவதியில் மிதந்து வந்த ஒரு மட்கிய மரக்கட்டையை எடுத்துக்கொண்டாள். அதை தன் கணவன் என்று நினைத்தாள். பகலெல்லாம் அவளும் அந்த மரக்கட்டையும் சேர்ந்து நீந்துவார்கள். இரவில் அதை அருகே படுக்கவைத்துக்கொள்வாள். இரவில் நிலவு வந்தால் அந்த மரக்கட்டை அழகான ஆணாக மாறிவிடும்” “என்னை சொல்கிறாய்” “ஆம்” என்று சிரித்தாள். நானும் சிரித்தேன். சாப்பிட்டுவிட்டு மீண்டும் அறைக்கு சென்றோம். நான் அவளிடம் “நான் சென்றதுமே பனாமா போகவேண்டும்…” என்றேன். “நீங்கள் பணக்காரர்” என்றாள். “எல்லா இடங்களுக்கும் ஒரே பெட்டியை கொண்டுபோவதுபோல ஒரே ஆளுமையையும் கொண்டுபோகிறேன் என்று டாம் சொன்னான்” “ஆளுமை என்றால்?” நான் அவளுக்கு ஆளுமை என்றால் என்ன என்று விளக்கினேன். தனித்தன்மை, தனியடையாளம். நாடு, இனம், மொழி, குடும்பம், வேர். அவள் பொதுவாகப் புரிந்துகொண்டு “அதாவது நீங்கள் எப்படி நினைத்துக்கொள்கிறீர்களோ அது” என்றாள். மேற்கொண்டு சொல்லி புரியவைக்க முடியாது என்று தோன்றியது. “விடு” என்றேன். “எனக்கு பல விஷயங்கள் பிடிபடுவதில்லை” என்றாள். “எல்லாரும் அப்படித்தான். மனிதர்களால் அவர்களின் வட்டங்களை கடக்கவே முடிவதில்லை” “நான் எப்படியாவது மியான்மாரை விட்டு போய்விடவேண்டும் என நினைக்கிறேன். என் தோழி தாய்லாந்தில் இருக்கிறாள். வருகிறாயா என்று கேட்டாள்… ஆனால் அங்கே செல்வதென்றால் ஆறுமாதம் வாழ்வதற்கான பணத்துடன் போகவேண்டும். அங்கே நன்றாக வசதியாக தங்கிக்கொண்டு நல்ல ஆடைகள் அணிந்துகொண்டு வேலை தேடவேண்டும்” என் செல்பேசியில் அம்மாவின் அழைப்பு வந்திருந்தது. நான் அவளிடம் “அம்மா” என்றேன். “பேசு…நான் சத்தம்போட மாட்டேன்” அம்மா “ராஜு, எப்டிரா இருக்கே?” என்றாள். “நல்லா இருக்கேம்மா” “எங்கடா இருக்கே இப்ப?” “மியான்மார்லே. வேலைவிஷயமா வந்தேன்…” “மியான்மார்னா?” “பர்மா. பழைய பர்மா” “பர்மாவா… உங்க பெரிய தாத்தாகூட பர்மாவிலே இருந்தார். ஆயில் கம்பெனியிலே… அந்தக்காலம். யுத்ததிலே எல்லாம் போச்சு. அப்டியே திரும்ப வந்துட்டார்” “நீ எப்டி இருக்கே?” “எனக்கென்ன, இருக்கேன். சியாமளா வந்தா. அவ பையனுக்கு இந்த வருசம் பிளஸ்டூ பரீட்சை. கூடவே இருந்து படிக்கவைக்கவேண்டியிருக்கு. அதனாலே இனிமே ஜூன்லதான் வருவாளாம்… இங்க கோமதி இருக்கா. அப்பப்ப ஸ்விகியிலே வாங்கிக்கிறது.” “உடம்புக்கு ஒண்ணுமில்லியே?” ‘மூட்டுவலி இருக்குடா… அது இனிமே நான் போறப்ப சேர்ந்துதான் வரும்… வைகுண்டத்திலயும் கூட வருமோ என்னமோ… டேய் நான் எதுக்கு கூப்பிட்டேன்னா அந்த மாதவன் பொண்ண பத்தி சொன்னேன்ல?” “எந்த மாதவன்?” “ஆடிட்டர்டா… அவர் பொண்ணு லக்ஷ்மி… ஞாபகம் இல்லியா? போட்டோ ஜாதகம் எல்லாம் அனுப்பினேனே? ரோகிணி நட்சத்திரம்” “ஆமாமா… ஞாபகம் இருக்கு… கொஞ்சம் குண்டு” “ஆமா இப்ப எல்லா பொண்ணும் குண்டுதான். விசாரிச்சுட்டேன். எல்லா பொருத்தமும் இருக்குடா. நாலு ஜோசியர் பாத்தாச்சு. ஒரு பொருத்தம்கூட குறைவா இல்ல. பாக்கவும் உனக்கு அப்டி ஒரு ஜோடி. குடும்பமும் நம்மை மாதிரியேதான். அவ அண்ணன்கூட ஒருத்தன் பாஸ்டன்லேதான் இருக்கான்” “சரி” “நீ பாக்கணும்ல? நேர்ல பாக்க இப்ப வசதிப்படாது. நம்பர் அனுப்பறேன்.. ஸ்கைப்லேயே பாத்துக்க… புடிச்சிருந்தா பண்ணிக்கலாம்டா…நல்ல எடம். இத மாதிரி வராது” நான் “சரிம்மா, நான் சொல்றேன்” என்றேன். “எப்ப அமெரிக்கா போவே?” “நாளைக்கு கெளம்பறேன்” “போனபிறகு கூப்பிடு… ” செல்பேசியை வைத்தேன். அவள் சோபாவில் படுத்து டிவியை ஓசையில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். என்னிடம் “என்ன செய்தி? பெண் அமைந்துவிட்டாளா?”என்றாள். “எப்படி தெரியும்?” “தெரியும்” என்று சிரித்தாள். “எப்படி?” “அதெல்லாம் பெண்களுக்கு தெரியும்” என்று சிரித்துக்கொண்டு எழுந்து கைகளை விரித்து தழுவிக்கொள்ள அழைத்தாள். “மீ” என்று அழைத்தேன். “என்ன?” “அம்மா சொல்லும் பெண் சரிவர மாட்டாள்” “ஏன்? பொருத்தம் சரியில்லையா?” “இல்லை, எல்லா பொருத்தமும் இருக்கிறது…” “பின்னே?” “எல்லாமே பொருத்தம்… அதனால்தான்” அவள் என்னை புரியாமல் பார்த்தாள் “மீ, நான் உன்னை ஒன்று கேட்கலாமா?” “கேள்..” “நீ என்னுடன் அமெரிக்கா வருகிறாயா?” அவள் திகைத்துவிட்டாள். “அமெரிக்காவா?” என்று மூச்சொலியாகக் கேட்டாள் “ஆமாம். என்னுடன் வா. நாம் திருமணம் செய்துகொள்வோம்” “திருமணமா?” “ஆமாம்” அவள் திகைப்புடன் “உனக்கு என்ன கிறுக்கா?’ என்றாள். “ஆம்” அவள் குழப்பத்துடன் “வேண்டாம்” என்றாள். “இதுதான் சரியாக வரும் மீ” “ஏன்?” “எந்தப் பொருத்தமும் இல்லை” அவள் சிரித்துவிட்டாள். நான் கையை விரித்தேன். அவள் “ஊஊ!” என்று கூச்சலிட்டபடி பாய்ந்து என் கைகள் நடுவே விழுந்து என்னை இறுக அணைத்துக்கொண்டாள். நாங்கள் இதழ்கோத்துக்கொண்டோம். அவள் விலகி என்னை பார்த்தாள். சிறிய கண்களில் சிரிப்புடன் “தவளையும் மரக்கட்டையும்” என்றாள். சிரித்தபடி மீண்டும் அணைத்து முத்தமிட்டுக்கொண்டோம். *** https://www.jeyamohan.in/130219#.XnfEWS-nxR7
 21. Covid-19: கொரோனா வைரஸ் உருவாக்கிய புதிய சொல்லாடல்கள்: சுய தனிமைப்படுத்தல், சமூக விலகல் கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள விலங்குகள் சந்தையில் விற்கப்பட்ட வெளவால் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. சீனாவில் ஆரம்பித்து வெகுவேகமாக உலகம் முழுவதும் பரவி தற்போது ஐரோப்பாவில், குறிப்பாக இத்தாலியில், மையம்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பல ஆயிரக் கணக்கானவர்களைப் பலியெடுத்தும் இன்னும் பல்லாயிரக் கணக்கானவர்களை வதைத்தும் வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க முன்னரே அது மாறும் அளவுக்கு Pandemic ஆக உருவாகியுள்ள கொரோனா தொற்றுப்பரவரலைத் தடுக்கமுடியாமல் உலகநாடுகள் அனைத்தும் திணறுகின்றன. தொற்றுப்பரவரலைக் குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகளையும், சுகாதாரத்தைப் பேண கைகளைச் சுத்தமாகக் கழுவதுல் போன்ற எளிய வழிமுறைகளையும் கைக்கொள்ளுமாறு கோரிக்கைகள் வருகின்றன. ஆக சீனாவில் வெளவால் சாப்பிட்டதற்கு உலகமே இப்போது கையை நன்றாக சுத்தம் செய்து கழுவும் நிலை! பல நாடுகளில் மக்கள் பொழுதுபோக்க கூடுமிடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வீட்டிலிருந்து வேலைசெய்யக்கூடியவர்கள் வேலைத்தளத்திற்குப் போகவேண்டாம் என்று சிபார்சு செய்யப்படுகிறது. மக்கள் பீதியடைந்து வீடுகளில் உறைந்துள்ளனர். பல நகரங்கள் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாவண்ணம் lock-down ஆகியுள்ளன. இலண்டன் உட்பட பல ஐரோப்பிய நகரங்களில் பல வாரங்கள் வீடுகளுக்குள் இருக்கவேண்டி வரும் என்ற பீதியில் மக்கள் உள்ளனர். அதனால் பலர் பெருமளவு உணவுப் பொருட்களையும், toilet tissue போன்ற "அத்தியாவசியமான" வீட்டுப் பொருட்களையும் பெருமளவில் வாங்கி பதுக்கிக்கொண்டு நிலக்கீழ் எலிகள் போல வாழ ஆரம்பித்துள்ளனர். Munich இல் வசிக்கும் Austria நாட்டு நண்பர் ஒருவர் Update from the "bunker" என்று தன் அனுபவத்தை விலாவாரியாக எழுதியுள்ளார். பீதிக் கொள்முதல் (Panic Buying) தொடங்கியபோது தான் தனது கடைசி toilet roll இல் இருந்ததாகவும் ஒரு pack toilet roll வாங்க மூன்று நாட்கள் பிடித்ததாகவும் எழுதியிருந்தார். Toilet roll pack வாங்குமட்டும் எங்களைப் போல கழுவினாயா என்று கேட்டு பதில் எழுதியுள்ளேன் இலண்டனில் தினமும் பெரிய supermarketகளில் தீர்த்தக்கரையில் நிற்கும் கூட்டம் போல மக்கள் வரிசைகட்டி பொருட்கள் வாங்குவதைப் பார்த்து "crazy" என்று சொல்லிக்கொண்டே அவர்களுடன் வரிசையில் நானும் நிற்கின்றேன். வரிசையில் நிற்கும்போது இரண்டு மீற்றர் இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், இருமல், தும்மல் துளிகளிலிருந்து தப்புவதும் பெரும்பாடாக உள்ளது. தெரிந்தவர்களைக் கண்டால் அவர்களுக்கு அருகில் சென்று கதைக்கவேண்டி வருமே என்று காணாத மாதிரி நிற்கவும் வேண்டியுள்ளது. கொரோனாவுக்கு எந்த வயதோ, பாலோ பொருட்டில்லை. எல்லோரையும் தாக்கும். வயது முதிர்ந்தவர்கள் அதிகம் பலியாவதால் இளவயதினர் தப்பிவிடலாம் என்று அலட்சியமாக இருப்பது ஆபத்தானது. இளவயதினரின் மரணிக்கும் வீதம் குறைந்தாலும் இளவயதினர் கொரோனா வைரஸின் காவியாக இருந்து பலருக்கு தொற்றை ஏற்படுத்தலாம். அப்படி அன்புக்கினிய முதியோர்களுக்கு பரப்பி அவர்களின் ஆயுளைக் குறைத்து பரலோகம் அனுப்பவும் சந்தர்ப்பம் உள்ளது. இதனால் கொரோனா தொற்றுப்பரவலில் இருந்து எம்மைப் பாதுகாக்கவும், வைரஸ் பரவும் வேகத்தினை குறைக்கவும், அதன் மூலம் வைத்தியசாலைகளில் நிரம்பும் கொரோனாத் தொற்றுள்ள நோயாளர்களைக் குறைக்கவும் இரண்டு முக்கிய உத்திகளை அரசுகள் முன்வைக்கின்றன. 1. சுய தனிமைப்படுத்தல் (self-isolation) காய்ச்சல் (நெஞ்சிலும் முதிகிலும் சூட்டை உணர்தல்) , தொடர்ச்சியான புதிய இருமல் இருந்தால் அவை கொரோனா வைரஸின் தொற்றாக இருக்கலாம். ஆனால் தொற்றை உறுதிப்படுத்த வளங்கள் பற்றாக்குறையாக உள்ளதால் இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்கள் தமது வீடுகளில் சுய தனிமையில் இருக்கவேண்டும். தனியொருவராக வீட்டில் இருந்தால் குறைந்தது ஏழு நாட்களும், வேறு பலருடன் கூடி இருந்தால், எல்லோரும் பதினான்கு நாட்களும் சுயதனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும். ஒருவருக்கு காய்ச்சல், இருமல் தொடங்கி ஏழு நாட்கள் தாண்டியபின்னரும் குணமடையாமல் நிலமை இன்னமும் மோசமானாலே வைத்திய உதவியை நாடவேண்டும் என்று பிரித்தானிய அரசு சொல்கின்றது. சுய தனிமைப்படுத்தலுக்கு தயார்படுத்த நண்பர்கள், அயலார்களிடம் தொலைபேசி இலக்கங்களைப் பரிமாறி அவர்கள் மூலம் பொருட்களை வாங்கவும், அல்லது online shopping மூலம் வாங்கவும் முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு அரசு கேட்கின்றது. பிரித்தானியாவில் உள்ள பெரிய supermarketகளில் online shoppingக்கு slot book பண்ண முயன்றால் எதுவுமே கிடைக்கவில்லை. ஒரு supermarket இல் ஜூன் மாத இறுதிவரை slot இல்லை. இந்த இலட்சணத்தில் online shopping என்பது வயது முதிர்ந்தவர்களுக்கும், அன்றாடம் காய்ச்சிகளுக்கும், அரச கொடுப்பனவுகளில் இருப்பவர்களுக்கும் பொருத்தமானதல்ல. எனவே, நண்பர்கள், அயலார்கள் மூலம் ஒருவருக்கு ஒருவர் உதவுவதே உள்ள ஒரே வழி. பிற சமூகங்களுடன் ஒப்பிடும்போது தமிழர்கள் நண்பர்கள், உறவினர்கள் என்று நெருங்கிப் பழகுவதால் சுயதனிமைப்படுத்தலுக்குப் போகவேண்டி வந்தால் உதவுவதற்கு பலர் இருப்பார்கள் என்று நம்பலாம். 2. சமூக விலகல் (social distancing) சமூக விலகல் என்பது புதிய சொல்லாடலாக இருப்பதால் தவறான அர்த்தமும் ஏற்பட வாய்ப்புண்டு. இணைய அரட்டை ஒன்றில் சமூக விலகல் என்ற சொல்லாடலைப் பாவிக்க, நண்பர் ஒருவர் "நாட்டில் எந்தப் பிரச்சினையை ஒழித்தாலும் யாழ்ப்பாணத்தின் மேலாதிக்கக் கொள்கையை அழிக்கவே முடியாது" என்று கடிந்துகொண்டார். இது ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை ஒதுக்கும் சமூக விலக்கல் அல்ல. மக்கள் தாங்களாகவே பிறரை சந்திக்காமல், பிறருடன் பழகாமல் விலகி இருப்பதுதான் சமூக விலகல். சமூக விலகலைப் பற்றி பிரித்தானிய அரசு என்ன சொல்கின்றது? கொரோனா வைரஸ் தொற்றுப்பரவரலைக் குறைப்பதற்கு மக்கள் ஒருவருடன் ஒருவர் பழகுவதைத் தவிர்க்கவேண்டும் என்று கேட்கின்றது. முக்கியமாக வயது முதிர்ந்தோர், குறிப்பாக 70 வயது தாண்டியோர், பலவீனமானவர்கள், உடல்நலக் குறைவு உள்ளோர், சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் வீடுகளில் இருக்குமாறும், அப்படியானவர்களை பிறர் சந்திப்பதை தவிர்க்குமாறும் சொல்கின்றது. மக்கள் ஒருவர் ஒருவரை சந்திப்பதைக் குறைக்க மக்கள் கூடுமிடங்களான உணவகங்கள், pubs, gyms, clubs எல்லாவற்றையும் மூடியுள்ளது. அத்துடன் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. சமூக விலகலில் கடைப்பிடிக்கவேண்டியவை: * கொரோனா வைரஸின் அறிகுறிகள் உள்ளவர்களை முற்றாகத் தவிர்க்கவேண்டும். * தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து இயன்றவரை வீடுகளில் இருக்கவேண்டும். * வீட்டிலிருந்து வேலைசெய்யக்கூடியவர்கள் மறு அறிவித்தல்வரை வீடுகளில் இருந்து வேலை செய்யவேண்டும். * பொது இடங்களில் கூடுவதும், களியாட்டங்களும், நண்பர்களுடான பொழுதுபோக்குகளும் தவிர்க்கவேண்டும். * நண்பர்கள், உறவினர்களுடன் தொலைபேசி, Skype போன்ற வீடியோ தொலைபேசும் தொழில் நுட்பங்களுடன் தொடர்பாடலைப் பேணவேண்டும். இந்த சமூக விலகல் காரணமாக உலகின் பல்வேறு நகரங்களில் ஆள் நடமாட்டமே இல்லை. இதில் பெரிய பெரிய சுற்றுலா தலங்களும் அடங்கும். பிரித்தானியாவில் தாய்மார்கள் தினமான இன்று (22-மார்ச்) வயது முதிர்ந்த தாய்மார்களை நேரடியாகச் சென்று காண்பதைத் தவிர்க்குமாறும், முடிந்தால் வீடியோ தொலைபேசி மூலம் உரையாடும்படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சமூக விலகல் காரணமாக கொரோனா வைரஸின் பரவல் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும் என்று யாரும் கூறவில்லை, ஆனால் மக்கள் ஒருவரையொருவர் சந்திப்பது குறைந்தால் கொரோனா வைரஸின் பரவலை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தலாம். இதன்மூலம் வைத்தியசேவைகளின் மீதான அழுத்தங்களைக் குறைக்கலாம். வைத்தியசேவைகள் மீதான அழுத்தம் கைமீறியதால்தான் இத்தாலியில் அதிக மரணங்கள் சம்பவித்தன என்பதையும் கவனிக்கவேண்டும். மனிதர்கள் அடிப்படையில் சமூக விலகலுக்கு பழக்கமற்றவர்கள். எனவே ஒருவரை ஒருவர் சந்திக்காமல் வீடுகளுக்குள் முடங்கியிருப்பதை பல வாரங்களுக்கு தாங்கிக்கொள்வார்களா என்பது தெரியவில்லை. அத்துடன் முடங்கியிருப்பது பொருளாதாரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தி, தனிப்பட்டவர்களின் வாழ்விலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆயினும் தடுப்பூசி மூலம் கொரோனாவிற்கு தீர்வு வர பல மாதங்கள் எடுக்கும் என்பதால், அதுவரை சமூக விலகல், சுய தனிமைப்படுத்தல், நன்றாக கைகளை சுத்தம் செய்வது போன்றவையே கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழிகளாக உள்ளன.
 22. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எனும் விடாது கறுப்பு ஆர். அபிலாஷ் நான் இங்கு அபத்தம் எனக் கூறுவது தனிநபர் சுகாதார நடவடிக்கைகளை அல்ல; கொரோனாவந்தாலும் வராவிட்டாலும் கைகளை சுத்தமாக வைத்திருப்பது, ஒரே துண்டை பலர்பயன்படுத்தாமல் இருப்பது, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது பொதுவாக நல்லதே. ஆனால்மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் மாதக்கணக்கில் இருந்தாக வேண்டும் என நமதுமருத்துவர்கள் சிலர் பரிந்துரைப்பது சுத்த பேத்தல் என்பேன். ஒன்று இது நடைமுறையில் ஏற்புடையது அல்ல. மக்கள் பரஸ்பரம் சந்திக்காமல் பேசாமல் நீண்டநாட்கள் இருந்தால் அது கடுமையான உளச்சிக்கல்களை ஏற்படுத்தும். சமூக இணக்கத்தைஒழிக்கும். அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். அடுத்து, எந்த ரத்த பரிசோதனையும்செய்யாமல் ஒருவேளை யாருக்கு வேண்டுமெனிலும் கொரோனா தொற்று இருக்கலாம் எனும்கற்பனையின் அடிப்படையில் இந்த முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்என மருத்துவர்கள் கோருவது ராத்திரியானால் ரத்தக்காட்டேரி உலவுகிறது, அதனால்பன்னிரெண்டு மணிக்கு மேல் வெளியே வராதீர்கள் என சில கிராமங்களில் நிலவும் நம்பிக்கையைபோல உள்ளது. WHO பரிந்துரைக்கும், ஐரோப்பிய நாடுகளில் எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் - வீட்டுக்குள்ளே மக்கள் பரஸ்பரம் தொடாமல் புழங்காமல் பல அடிகள் விலகி இருப்பது, வெளியிலும் யாரும் யாரிடத்தும் நெருங்காது வாழ்வது, நோய்த்தொற்று வெளியே தெரிந்தால்மக்கள் வெளியே வராதிருக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு போடுவது, வெளியே வந்தால் சிறை, அபராதம் போன்ற தண்டனைகள் - இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளுக்கு பொருந்திவராது என நம்புகிறேன். முதலில், இந்த தொற்று ஏற்பட்டால் அது வெளியே தெரிய மூன்று வாரங்கள் ஆகும். அதற்காகத்தான் இப்போது ஒரு மாதம் நிறுவனங்கள் தம் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும்படிகேட்கின்றன; கல்லூரி, பள்ளிகள் மூடப்படுகின்றன. இந்த ஒரு மாதத்தில் ஏற்கனவேநோய்த்தொற்றியவர்கள் புலப்பட ஆரம்பிப்பார்கள். அவர்களை, அவர்களிடம் புழங்கியவர்களை, அவர்கள் பயணித்த இடங்களில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை பண்ணி சிகிச்சைகொடுக்கலாம் என்பது திட்டம். ஆனால் இது ஒரு கற்பனையான கருதுகோளை முன்வைத்தநடவடிக்கை - அதாவது இம்மாத துவக்கத்தில் இருந்து நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும் எனும்ஒரு கருதுகோள். ஒருவேளை இந்த மாதத்தில் வெளிப்படாத சிலரின் உடம்பில் இன்னமும் வைரஸ்இருந்து கொண்டிருந்தால்? அது அடுத்த மாதம் வெளிப்பட்டால்? அடுத்த மாதமும் மக்களைவீட்டுக்குள் சிறைவைப்பார்களா? அதற்கு அடுத்த மாதமும் வைரஸ் இருப்பதாகத் தோன்றினால்அதற்கு அடுத்த மாதமும் சிறைவைப்பார்களா? அப்படி நடக்காது என்றாலும் கேட்கிறேன் - வைரஸ்தொடர்ந்து வெளிப்பட்டபடியே இருந்தால்? இதையெல்லாம் ஏன் கேட்கிறேன் என்றால் இந்த வைரஸ் குறித்து விஞ்ஞானிகளுக்கும்மருத்துவர்களுக்கும் மிக மிக சொற்பமாகவே இப்போதைக்குத் தெரியும். அதற்கான சிகிச்சை கூடசளி, ஜுரத்துக்கான சிகிச்சையான அறிகுறிகளை கட்டுப்படுத்துவது தானே ஒழிய வைரஸைஒழிப்பது அல்ல. ஆக மக்களை விட அதிகம் கைவிடப்பட்ட நிலையில் நமது மருத்துவர்களும், அவர்களை நம்பியிருக்கும் அரசு எந்திரமும் உள்ளது. ஆகையால் அவர்கள் பேயோட்டுக்கிறசாமியார்களைப் போல பேச ஆரம்பித்து விட்டார்கள்; “அந்த பயங்கரமான வைரஸ் நம்மைநோக்கி அதோ வந்து கொண்டிருக்கிறது; எல்லாரும் ஓடுங்க ஓடுங்க” என டிவி டிவியாகத்தோன்றி கையை ஆட்டி சொல்கிறார்கள். வைரஸாக வந்து சிலரைக் கொன்று விட்டு மறைந்துவிடும் என மருத்துவர்களும் ஆட்சியாளர்களும் நம்புகிறார்கள், பழைய காலத்தில் அம்மை பாதித்துமக்கள் சாகும் போது அது தெய்வகோபம் என நம்பியதைப் போல. இப்போது தெய்வகோபத்துக்குப்பதில் வைரஸின் கோபம். பலிகொடுக்கப்படும் ஜனங்களின் எண்ணிக்கையை முடிந்தளவுக்குகுறைக்கலாம் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இதெல்லாம் ஒரு கற்பனையின் அடிப்படையில் தான் நடக்கிறது - நம்மிடம் எந்தஆதாரபூர்வமான தகவல்களும் இல்லை; நாம் இன்னமும் மக்களிடம் ரத்த பரிசோதனை பண்ணிஅறியவில்லை. ஆக, பிரதமர் மோடியைப் பொறுத்தமட்டில் இந்தியாவின் 1326 மில்லியன்ஜனங்களும் கொரோனா வைரஸ் தொற்று கொண்டவர்களே. அத்தனை பேரையும் வீட்டுக்குள்பூட்டி வைக்கலாம் என்பது தான் அவருக்கு நம்முடைய மகத்தான மருத்துவர் குழு அளித்துள்ளபரிந்துரை என நினைக்கிறேன். அடக்கடவுளே! வரும் மாதங்களில் நம்மால் வேலைக்கு செல்லாமல் சோற்றுக்குப் பணமில்லாமல், வாடகைகொடுக்க வழியில்லாமல் சமாளிக்க முடியுமா? சத்தியமாக முடியாது. இந்த ஒரு மாத கட்டாயவிடுமுறை, கட்டாய சமூக விலக்கம் நமது பொருளாதாரத்துக்கு ஏற்படுத்துகிற பாரதூரமானவிளைவுகளில் இருந்து நாம் மேலெழ எவ்வளவு காலம் எடுக்கும்? மூன்று நான்கு அல்லது ஆறு ஏழுமாதங்கள் இந்த தேசத்தால் வேலையே இன்றி ஓய்வில் இருக்க முடியும் என நான் நம்பவில்லை. அப்படியான நடவடிக்கை மற்றொரு டீமானிடைசேஷனாக நம் முதுகெலும்பை உடைத்து விடும். ஓரளவு முன்னெச்சரிக்கையுடன் நாம் மீண்டும் உற்பத்தியிலும் வணிக பரிவர்த்தனைகளிலும்ஈடுபவடுவதே இப்போதைக்கு நலம். அதற்கு முன் இந்த ‘ஊழிக்கால’ பிரச்சார மருத்துவர்களின்வாயில் யாராவது பிளாஸ்திரியைப் போட்டு ஒட்ட வேண்டும். சமூக வலைதளங்களிலும் டிவியிலும்இவர்கள் செய்கிற அலப்பறைகள் தாங்கவில்லை. http://thiruttusavi.blogspot.com/2020/03/blog-post_21.html
 23. கொரோனா: ராஜபக்சக்களுக்கு விழுந்த லொத்தர்? - நிலாந்தன் தேர்தல் ஆணையாளர் தேர்தல் திகதியை பிற்போட்டிருக்கிறார். இயற்கை அனர்த்தச் சூழல், அசாதாரண நிலைமை, அவசரகால நிலைமை போன்றவற்றைக் காட்டித் தேர்தல் திகதியை மேலும் பிற்போடலாம். ஆனால் அரசாங்கம் அந்தத் திகதியை அதிக காலம் பிற்போட விரும்பாது. கொரோனா வைரஸை எவ்வளவு கெதியாகக் கட்டுப்படுத்த முடியுமோ அவ்வளவு கெதியாகக் கட்டுப்படுத்தவே அரசாங்கம் முயலும். எனவே கொரோனாவை எவ்வளவு கெதியாகக் கட்டுப்படுத்தலாம் என்பதுதான் தேர்தலை எப்பொழுது நடத்தலாம் என்பதைத் தீர்மானிக்கும். ராஜபக்சக்கள் ராணுவக் கரம் கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்துவார்கள். ஏற்கனவே யுத்தத்தை வெற்றி கொண்டது போல அவர்கள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் ஏறக்குறைய ஒரு யுத்த நடவடிக்கை போல முன்னெடுக்க தேவையான முன் அனுபவமும் ராணுவப் பண்பும் அவர்களிடம் உண்டு. “எதேச்சாதிகார அரசுகளுக்கு கொரோனா வைரஸ் ஒரு சுவர்க்கம்” என்று மொஸ்கோவில் உள்ள ஒரு மேற்கத்தைய ராஜதந்திரி கூறியிருக்கிறார். முன்பு ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகிய உக்ரேனின் அதிபர் செலென்ஸ்கி பின்வருமாறு கூறியிருக்கிறார் “ஏனைய நாடுகளின் அனுபவம் எதைக் காட்டுகிறது என்றால் மென்மையும் சுதந்திரமும் கொராணா வைரஸின் நண்பர்கள் என்பதைத்தான். எனவே உக்ரேனியர்களின் உயிருக்கும் ஆரோக்கியத்துக்குமாக நாங்கள் கடுமையான உடனடியான பெரும்பாலும் அபகீர்த்தி குரிய நடவடிக்கைகளை எடுப்போம்.” சீனா-கொரோனாவை வெற்றி கொண்ட இலத்திரனியல் பதாதைகள் மேற்படி கூற்றுக்கள் ராஜபக்ச ஆட்சிக்கும் பொருந்தும். எப்படி அவர்கள் யுத்தத்தை வெற்றி கொண்டார்களோ அப்படியே கொரோனா வைரசையும் வெற்றிகொள்ளப் பார்ப்பார்கள். “பயங்கரவாதத்தின் மூலம் நாடு முழுவதையும் நிர்மூலமாக்கத் தயாரான தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு இல்லாதொழித்த எமக்குக் கொரோனா வைரஸ் சவால் அல்ல. அது இங்கு ஆட்கொண்டால் முற்றாக இல்லாதொழிப்போம்.” என்று கூறியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல. புலிகள் இயக்கமும் கொரோனா வைரசும் ஒன்றல்ல என்பது வேறு விடயம். ஆனால் கொரோனா வைரசை வெற்றி கொள்வது என்பது ராஜபக்சகளைப் பொறுத்தவரை தேர்தல் வெற்றிகளோடு தொடர்புடையது. இந்த வைரசை மிக விரைவாக அதிக சேதம் இன்றி வெற்றி கொள்வார்களாக இருந்தால் அடுத்தடுத்த தேர்தல்களில் அவர்களுக்கு அதைவிடச் சிறந்த பிரச்சாரம் இருக்காது. வைரஸ் பரவத் தொடங்கிய புதிதில் அது அரசாங்கத்துக்கு ஒரு தடையாகத்தான் காணப்பட்டது. ஏனெனில் ஜெனிவாக் கூட்டத் தொடரை முன்வைத்து ஓர் இன அலையை தோற்றுவித்து அதன்மூலம் அமோக வெற்றியைப் பெற அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். ஜெனிவா தீர்மானத்தை எதிர்ப்பது, ராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிரான அமெரிக்க பயண தடையை எதிர்ப்பது போன்றவற்றின் மூலம் அவர்கள் இன அலை ஒன்றை இலகுவாகத் உற்பத்தி செய்திருக்கலாம். ஆனால் கொரோனா வைரஸின் வருகை அந்த நிகழ்ச்சி நிரலை குழப்பி விட்டது. எனவேதான் வைரஸ் பரவுகிறதோ இல்லையோ அதுவரை பார்த்துக் கொண்டிருக்காமல் ஜெனிவாச் சூட்டோடு தேர்தலை வைத்துவிட அவர்கள் விரும்பினார்கள். அவ்வாறு அவர்கள் விரும்பியதற்கு முக்கியமான காரணம் எதிர்க்கட்சி பலமாக இல்லை என்பது. யூ.என்.பி இப்பொழுதும் உடைந்து போயுள்ளது. கட்சிக்குள் தலைமைத்துவ போட்டி முடிவுக்கு வரவில்லை. எனவே ஒரு தேர்தலை எதிர்கொண்டு ராஜபக்ஷக்களுக்கு பலமான எதிர்ப்பை காட்ட அக்கட்சியால் இப்பொழுது முடியாது. இது ராஜபக்ஷக்களுக்கு சாதகமான ஓர் அம்சம். கொரோனாவை முன்வைத்து தேர்தலை ஒத்தி வைத்தால் நிலைமைகள் ஒப்பீட்டளவில் மாறக்கூடும். புதிய நிலைமைகளுக்கு ஏற்ப யு.என்.பி தன்னை பலப்படுத்திக் கொள்ளுமாக இருந்தால் அது ராஜபக்ஷக்களுக்கு சவாலாக அமையலாம். எனவே ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றியின் அலை தொடர்ந்து வீசும் ஒரு காலகட்டத்தில் தேர்தலை வைப்பதே நல்லது. அதனால் தான் அரசாங்கம் தேர்தலை ஒத்தி வைக்க விரும்பவில்லை. எனவே யு.என்.பி தன்னை பலப்படுத்திக் கொள்வதற்கு இடையில் தேர்தலை வைப்பதற்கே அரசாங்கம் விரும்பியது. ஆனால் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தேர்தல் திகதியைப் பின் தள்ளி விட்டது. இனி அரசாங்கம் ஒரு யுத்தத்தை தொடங்க வேண்டும். அந்த யுத்தத்தில் அவர்கள் வென்று காட்ட வேண்டும். அந்த வெற்றி ஒன்றே அவர்களுக்கு போதும். தேர்தலில் கொத்தாக வாக்குகளை அள்ளலாம். எனவே இப்பொழுது உடனடியாக கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தை அவர்கள் தொடங்க வேண்டும். அதேநேரம் இப்போதுள்ள அசாதாரண சூழலை சாட்டாக வைத்து சாதாரண சிங்கள வாக்காளர்களை கவரும் விதத்தில் சலுகைகளையும் அறிவிக்கலாம். அப்படிப்பட்ட சலுகைகள் சிலவற்றை ஏற்கனவே அரசாங்கம் அறிவித்து விட்டது. பருப்புக்கும் மீன் ரின்னுக்கும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இவை சாதாரண ஜனங்களின் சாப்பாடுகள்.இந்த சலுகையானது சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் எடுபடும். இவ்வாறான சலுகைகளை அறிவித்து விட்டு ராஜபக்சக்கள் கொரோனா வைரசை எதிர்கொள்வார்கள், ஒரு சிவில் தன்மைமிக்க அரசு அரசாங்கம் இதுபோன்ற நெருக்கடிகளை கையாள்வதற்கும் ஒரு ராணுவ தனம் மிக்க அரசாங்கம் கையாள்வதற்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. ஒரு ராணுவப் பண்பு அதிகம் உடைய அரசாங்கம் அதிலும் குறிப்பாக படைத்தரப்புடன் மிக நெருக்கமான உறவை கொண்டிருக்கும் ஓர் அரசாங்கம் இது போன்ற நிலைமைகளை விரைந்து கையாள முடியும். “நாய் பிடிப்பது போல நோய்த் தொற்றுள்ளவர்களைத் துரத்திப் பிடிக்க ஓர் அரசாங்கம் துணிந்தால் இலகுவாகக் கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்” என்று ஒரு புலம் பெயர்ந்து வாழும் தமிழர் சொன்னார். இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட மேற்கத்தைய ராஜதந்திரியும் உக்ரேனின் ஜனாதிபதியும் சொல்ல வந்ததும் அதைத்தான். ராணுவப் பண்பு அதிகம் உடைய ஓர் அரசாங்கம் பெரும் தொற்று நோய்களையும் இயற்கைப் பேரழிவுகளையும் துணிச்சலாக எதிர்கொள்ளும். கிட்டத்தட்ட ஒரு யுத்தத்தை எதிர்கொள்வது போல அவர்கள் அந்த அசாதாரண சூழலை எதிர்கொள்வார்கள். சீனா அப்படித்தான் எதிர்கொண்டது. ஒருபுறம் சீனா துணிச்சலான முடிவுகளை எடுத்தது. இன்னொருபுறம் வரையறையின்றி காசை கொட்டியது. இதன் மூலம் நோய் பரவும் வேகத்தை அது கட்டுப்படுத்தியது. சிங்கப்பூரும் அப்படிதான் நிலைமைகளைக் கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்தது. 2003 இலிருந்து சார்ஸ் என்று அழைக்கப்படும் வைரஸ் சிங்கப்பூர் குடிமக்களை தாக்கியது. அதில் கிட்டத்தட்ட 33 பேர் கொல்லப்பட்டார்கள். சார்ஸ் வைரஸின் அடுத்த கட்டக் கூர்ப்பே கொரோனா என்று கூறப்படகிறது. சார்ஸ் வைரஸை வெற்றி கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் சிங்கப்பூர் கொரோனா வைரசையும் ஒப்பீட்டளவில் விரைவாக கட்டுப்படுத்தியிருக்கிறது. கிட்டத்தட்ட வடகொரியாவும் அப்படித்தான் நிலைமைகளை கையாண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மாறாக தென் கொரியா அவ்வாறு கையாளத் தவறியதன் விளைவாக அங்கே நோய்த்தொற்று அதிகமாகியது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. இப்பொழுது ராஜபக்சக்களும் அதைத்தான் செய்யப் போகிறார்கள். இலங்கை ஒரு தீவாக இருப்பது அவர்களுக்கு அனுகூலமானது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு பொறுப்பாக இராணுவத் தளபதி நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் கொரானாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகம் ராணுவத் தன்மை மிக்கதாக அவர்கள் வடிவமைக்க கூடும். ஏற்கனவே நோய்த் தொற்று உடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களுக்கான தனிமைப்படுத்தல் முகாம்களை குறிப்பாக தமிழ் பகுதிகளில் பெருமளவுக்கு படைத்தரப்பே கையாண்டு வருகிறது. கிட்டத்தட்ட 24 தனிமைப்படுத்தல் முகாம்கள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவற்றில் ஆறு முகாம்கள் தமிழ் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. அவையாவும் படைத்தரப்பின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. இவ்வாறான நடவடிக்கைகளின் முடிவில் ஒரு கட்டத்தில் கொரோனா வைரசை அரசாங்கம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தும் போது புகழனைத்தும் படைத்தரப்புக்கே சேரும். அதோடு ராஜபக்சக்களுக்கும் சேரும். எனவே ராஜபக்சக்கள் வைரசுக்கு எதிரான யுத்தத்தை ஒரு தேர்தல் பிரச்சாரமாக எடுத்துக் கொண்டு எதிர்கொள்வார்கள். இந்த யுத்தத்தில் அவர்கள் வெற்றி பெற்றால் அடுத்து வரும் எல்லா தேர்தல்களிலும் அந்த வெற்றியின் அலை வீசும். எனவே அவர்கள் இந்த யுத்தத்தை எப்படியும் வெல்லப் பார்ப்பார்கள். தேர்தல் பிரச்சாரத்துக்கு திறை சேரியிலிருந்து காசை எடுக்க முடியாது. அதை அவர்கள் தங்களுடைய கட்சி நிதியிலிருந்தோ சொந்தச் சேகரிப்பில் இருந்தோ தான் எடுக்க வேண்டும். ஆனால் கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்தை அரச பணத்திலேயே நடத்தலாம்.அரச வளங்களை கொட்டி அதைச் செய்யலாம். அக்காலகட்டத்தில் வழங்கப்படும் சலுகைகளுக்கான நிதியையும் திறை சேரியிலிருந்து எடுக்கலாம்.அதாவது அரச செலவிலேயே ஒரு தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கலாம். அப்படிப்பார்த்தால் கொரோனா வைரஸ் ராஜபக்ஷக்களுக்கு நன்மையைக் கொண்டு வந்திருக்கிறதா? சரியாக ஓராண்டுக்கு முன் இதே காலப்பகுதியில் ஈஸ்டர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது அதன் விளைவுகளை ராஜபக்சக்கள் வாக்குகளாக திரட்டி கொண்டார்கள். இப்பொழுது கொரோனா வைரஸ் கொண்டு வந்திருக்கும் சவால்களையும் அதன் விளைவுகளையும் ராஜபக்சக்கள் வாக்குகளாக திரட்ட போகிறார்களா? அதாவது முழு நாட்டுக்கும் தீங்காக காணப்படும் அம்சங்கள் ராஜபக்ச குடும்பத்திற்கு நன்மைகளாக முடிகின்றனவா? http://www.samakalam.com/செய்திகள்/கொரோனா-ராஜபக்சக்களுக்கு/