Everything posted by கிருபன்
-
யாழ் செல்கிறார் அநுர – புதிய திட்டங்களை ஆரம்பித்து வைப்பார்!
யாழில் கடவுசீட்டு அலுவலகத்தை நாளை ஜனாதிபதி திறந்து வைக்கிறார் யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்தினை நாளைய தினம் திங்கட்கிழமை காலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில் , அலுவலகத்தின் உள்கட்டமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க, யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம் வருகை தரும் ஜனாதிபதி காலை 08.30 மணியளவில் மையிலிட்டி மீன் பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். தொடர்ந்து , யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினை காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார். அதனை தொடர்ந்து , யாழ்.பொது நூலகத்தில் நடைபெறும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார். அதன் பின்னர் மதியம் 1.30 மணியளவில், மண்டதீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், தென்னை முக்கோண வலய பணிகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். https://akkinikkunchu.com/?p=339064
-
இந்திய பிரதமர் மோடி - உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை
இந்திய பிரதமர் மோடி - உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை 31 Aug, 2025 | 11:14 AM இந்திய பிரதமர் நரேந்திர மோடி மோடியிடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்திய பிரதமர் மோடி ஜப்பான், சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 29ம் திகதி ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அங்கு அந்நாட்டு பிரதமர் உள்பட முக்கிய தலைவர்களை சந்தித்தார். இதையடுத்து, இந்தியா , ஜப்பான் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2 நாட்கள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று இரவு சீனா சென்றார். அவர் சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும், நாளையும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிகதி புட்டின் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தி பிரதமர் மோடியிடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சீனா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரேன் - ரஷ்யா போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது போர் நிறுத்தம் தொடர்பான முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புட்டினை இந்திய பிரதமர் மோடி சந்திக்க உள்ள நிலையில் உக்ரேன் ஜனாதிகதி ஜெலன்ஸ்கியின் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/223817
-
சீன ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய பிரதமர் மோடி
சீன ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய பிரதமர் மோடி 31 Aug, 2025 | 11:29 AM ஜப்பானில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட இந்திய பிரதமர் மோடி, அங்கிருந்து சீனா புறப்பட்டார். சீனாவில் உள்ள தியான்ஜின் விமான நிலையத்துக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. தியான்ஜின் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் சீன ஜனாதிபதி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டுக்கு இடையே ஜின்பிங்கையும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினையும் இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசுவார். அப்போது இந்திய-சீனா-ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பு குறித்தும், உறவு குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும். முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு சீனாவில் நடந்த மாநாட்டில் இந்தியபிரதமர் மோடி கலந்து கொண்டார். இதையடுத்து 2019-ம் ஆண்டு சீன ஜனாதிபதி ஜின்பிங் இந்தியா வந்தார். அதன் பின்னர் இந்திய பிரதமர் மோடி சீனா செல்லவில்லை. இதனிடையே 2020-ம் ஆண்டு கல்வான் பகுதியில் சீனா-இந்தியா இடையே நடந்த தாக்குதலுக்கு பிறகு இருநாடுகளுக்கு இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய பிரதமர் மோடி, சீனாவுக்கு சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதித்துள்ள நிலையில் ரஷ்ய, சீன, இந்திய தலைவர்கள் ஒரே இடத்தில் கூடி பேசுவதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிரான புதிய வியூகம் ஒன்றை வகுக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/223819
-
அதிக நேரம் நிகழும் சந்திர கிரகணம் ; காணத்தவறாதீர்கள்
அதிக நேரம் நிகழும் சந்திர கிரகணம் ; காணத்தவறாதீர்கள் 31 Aug, 2025 | 03:51 PM செப்டம்பர் 7 ஆம் திகதி இரவு வானத்தில் முழு சந்திர கிரகணம் தோன்றுவதால், இலங்கையர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்களுக்கு பார்வையிடும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த அற்புதமான நிகழ்வு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுமையாகத் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் தலைவரும், வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளரும் ஆர்தர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். பூமி சூரியனை சுற்றி வரும் பாதையிலும், சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையிலும் சில நேரங்களில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும். அப்போது, சூரிய ஒளி பூமியில் விழுந்தாலும் சந்திரன் மீது விழாது. இதனால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சந்திர கிரகணம் நிகழும் நேரம் பின்வருமாறு, கிரகணம் ஆரம்பம் - இரவு 8:58 (செப்டம்பர் 7) பகுதி கிரகணம் ஆரம்பம் - இரவு 9:57 முழுமையான கிரகணம் - இரவு 11:01 அதிகபட்ச கிரகணம் - நள்ளிரவு 11:42 கங்கண கிரகணம் முடிவு - அதிகாலை 12:22 (செப்டம்பர் 8) பகுதி கிரகணம் முடிவு - அதிகாலை 1:26 கிரகணம் முடிவு - அதிகாலை 2:25 https://www.virakesari.lk/article/223852
-
அனுர பின்வாங்க முடியாத இடத்துக்கு வந்துவிட்டாரா ? - நிலாந்தன்
அனுர பின்வாங்க முடியாத இடத்துக்கு வந்துவிட்டாரா ? - நிலாந்தன் ரணில் வெளியில் வந்துவிட்டார். வைத்தியசாலையில் இருந்து வெளி வரும் போது கையில் அவர் வைத்திருந்த புத்தகம் தற்செயலானதா? அல்லது அவருடைய வழமையான பாணியா? அது முன்னாள் பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜெல்சின் எழுதிய Unleashed-கட்டவிழ்த்து விடுதல் என்ற புத்தகம். அதன் மூலம் ரணில் அரசாங்கத்துக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறாரா? அன்ரன் பாலசிங்கம் அவரை நரி என்று அழைத்தார். பாலசிங்கம் சொன்ன பல விடயங்களை தமிழர்கள் மறந்து விட்டார்கள். ஆனால் ரணிலைப்பற்றி அவர் சொன்னதை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறார்கள். ரணிலைக் கைது செய்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தியானது பின்வாங்க முடியாத ஒரு இடத்துக்கு வந்திருக்கிறது என்று சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறுகிறார். அவர் ஆங்கிலத்தில் “Crossing the Rubicon” என்ற சொற்றொடரைப் பாவித்துள்ளார். அது ஜூலியஸ் சீசரின் துணிகரமான, ஆனால் பின்வாங்க முடியாத ஒரு யுத்த நகர்வைக் குறிக்கும் சொற்றொடர். பின்வாங்க முடியாத ஒர் இடத்துக்கு என்பிபி முன்நகர்ந்திருக்கிறது என்று பொருள். தொடர்ச்சியாக நிகழும் கைது நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்த்தல் என்பிபி அதை நன்கு விளங்கி வைத்திருக்கிறது என்றே தெரிகிறது. தமிழ்த் தேசிய அரசியல் நோக்குநிலையில் இருந்து தேசிய மக்கள் சக்தி மீது விமர்சனங்கள் ஆயிரம் உண்டு. ஆனால் சிங்கள மக்களைப் பொறுத்தவரையிலும் அது சில மாற்றங்களைக் காட்டுகிறது என்பதைத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும். குறிப்பாக ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பொறுத்தவரை இதுவரை 70 க்கும் குறையாதவர்கள் கைது செய்யப்பட்டு விட்டார்கள். இவர்களில் அரசியல்வாதிகள், உயர் நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகள் படைப்பிரதானிகள், அரசியல் வாதிகளின் கைக்கூலிகளாக பாதாள உலகக் குற்றவாளிகள் போன்றவர்கள் அடங்குவர். ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்த பின் அதிலிருந்து பின் வாங்கினால், இப்பொழுது சீண்டப்பட்டிருக்கும், தற்காப்பு நிலைக்குத்-defensive-தள்ளப்பட்டிருக்கும் சிங்கள மேட்டுக்குடியும் எதிர்க் கட்சிகளும் பழிவாங்கும் உணர்ச்சியோடு அனுரமீது பாயும். அதாவது தாக்கும் நிலைக்கு-offensive- வளரக்கூடும். எனவே என்பிபி திரும்பிப்போக முடியாது. அப்படிப் போனால் அது எல்லாவிதத்திலும் தோல்வி. அதனால் ரணிலைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய தலைகளைக் கைது செய்வதன்மூலம் சிங்கள பௌத்த மேட்டுக்குடியை ஒருவித அச்சச் சூழலில், தற்காப்பு நிலையில் வைத்திருக்கலாம். ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதோடு சிங்கள பௌத்த உயர் குழாம் ஒன்று திரண்டு விட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் பின்வருமாறு கூறினார்…”கட்சி பேதமின்றி நாம் ஒன்றிணைய வேண்டும். இவை அனைத்தும் இணைந்து இறுதியில் எமது வீட்டுக் கதவைத் தட்டும். நாம் தற்பொழுது ஒன்றிணைந்து எதிர்கொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” இது சிங்கள பௌத்த உயர் குழாத்தின் அச்சத்தை பிரதிபலிக்கும் கருத்தாகும். ரணிலைக் கைது செய்வதன்மூலம் சிங்கள பௌத்த உயர் குழாமும் எதிர்க்கட்சிகளும் உஷார் ஆகிவிட்டன. இந்த அரசாங்கம் இப்படியே தொடர்ந்து முன் சென்றால் தங்கள் எல்லாரிலும் கைவைக்கக்கூடும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒன்று திரளும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இது ஒரு ஒத்திகைதான். இப்போதுள்ள சிங்கள பௌத்த உயர் குழாத்தில் ஒப்பீட்டளவில் மென் இலக்காக ரணில்தான் காணப்படுகிறார். அவருடைய தாய்க் கட்சி உடைந்துவிட்டது. அவர் ஒரு பலமான அணியாக இல்லை. உள்நாட்டில் அவர் அனேகமாக பலவீனமான ஒரு தலைவர்தான். அவர் தண்டு சமத்தாக, மிடுக்காக நிமிர்ந்து காட்சி தருபவர் அல்ல. தன்னை ஜனவசியம் மிக்க ஒரு தலைவராகக் கட்டி எழுப்ப வேண்டும் என்பதற்காக சிங்கள பௌத்த இனவாதத்தின் தீவிர நிலைகளுக்கு தலைமை தாங்குபவர் அல்ல. அல்லது சிங்கள பௌத்த கூட்டு உளவியலைக் கவரும் விதத்தில் ஆடை அணிகலன்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர் அல்ல. மாறாக அவர் தன் அரசியல் வாழ்க்கை முழுவதிலும் மேற்கத்திய உடுப்புகளோடுதான் காணப்பட்டார். மேற்கத்திய அறிவுவாதத்தின் வாரிசாகவும் தன்னை காட்டிக்கொள்ள முற்பட்டார். ராஜபக்சக்களை போலன்றி ஏன் அனுரவை போலன்றி எல்லா பேரரசுகளையும் சமதூரத்தில் வைத்திருக்கக்கூடிய தந்திரசாலியாகவும் கெட்டிக்காரராகவும் அவர் காணப்பட்டார். ஆனால் அவருடைய கெட்டித்தனங்கள் சிங்கள மக்களைக் கவரவில்லை. சிங்கள மக்களைக் கவர்வதற்கு ராஜபக்சக்களிடம் நிறைய இருந்தது. ரணிலிடம் குறைவாகவே இருந்தது. அதனால்தான் அவர் அநேகமாக தேர்தல்களில் தோற்கடிக்கப்படும் ஒரு தலைவராக காணப்பட்டார். எனினும் உள்நாட்டில் அவர் பலவீனமாக தலைவராக இருந்த பொழுதும், அனைத்துலக அளவில் அவர் ஒரு பலமான ஒரு பிம்பத்தை கட்டியெழுப்பி வைத்திருந்தார். மேற்கத்திய தலைநகரங்களிலும் சரி ஐநா, ஐஎம்எஃப் போன்ற உலகப்பொது நிறுவனங்களிலும் சரி அவருக்கு கவர்ச்சி அதிகம். இவ்வாறு உள்நாட்டில் கவர்ச்சி குறைந்த ஒருவரை ஒரு மென் இலக்கை முதலில் கைது செய்ததன்மூலம் அனுர ஒத்திகை ஒன்றைச் செய்தார் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இது எதிர்காலத்தில் நிகழப்போகும் கைது நடவடிக்கைகளுக்கான ஒத்திகை. அதேசமயம்,ஏற்கனவே இளைய ராஜபக்சவாகிய சசீந்திர ராஜபக்ச கைது செய்யப்பட்டிருக்கிறார். நேற்று அவருடைய விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருக்கிறது. மூத்த ராஜபக்சங்களில் கையை வைத்தால் எதிர்ப்பு பலமாக இருக்கலாம் என்று தேசிய மக்கள் சக்தி சிந்திக்கின்றது. மூத்த ராஜபக்ஷக்களில் கைவைத்தால் அது இனவாதத்தை மேலும் முன்னிலைக்கு கொண்டு வரும். யுத்த வெற்றி வாதம் மீண்டும் பலமடையக்கூடும். அதனால்தான் பரீட்ச்சார்த்தமாக சஷீந்திரவில், ரணிலில் கை வைத்திருக்கிறார்கள். அது இன்னொரு வகையில் பழைய பகையை, கணக்கைத் தீர்ப்பது. அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்த அமைச்சர் பிமல் ரட்டநாயக்க கூறினார் ரணிலை 40 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்து இருந்திருக்க வேண்டும் என்று. அது 40ஆண்டுகளுக்கு முந்திய ஜேவிபியின் கணக்கு. ஜேவிபியின் இரண்டாவது போராட்டத்தை கொடூரமாக நசுக்கியது யுஎன்பி. அப்பொழுது ரணில் அரசாங்கத்தில் ஒரு பிரதானி. எனவே அந்தக் கணக்கைத் தீர்க்க வேண்டிய தேவை ஜேவிபிக்கு இருந்தது. ஆனால் இந்த இடத்தில் மேலும் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். ஜேவிபிக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்படவில்லை. அது ஒரு குற்றச்சாட்டாகவே இல்லை. பிமல் ரட்டநாயக்க யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டிக்காட்டிய, தமிழ் மக்களுக்கு எதிரான நூலக எரிப்பு போன்ற குற்றங்களுக்காகவும் அவர் கைது செய்யப்படவில்லை. அரச வளங்களை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தியதற்காகத்தான் அவர் மீது வழக்கு. போர்க்குற்ற வழக்கு அல்ல. அவரைக் கைது செய்வதன் மூலம் எதிர்காலத்தில் அவரைப் போன்ற முன்னாள் ஜனாதிபதிகளும் உட்பட ஏனையவர்களைக் கைது செய்வதற்கான ஒரு பரிசோதனையை என்பிபி செய்து பார்த்தது என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த பரிசோதனைக்குள் இதுவரை போர்க் குற்றங்கள் அடங்கவில்லை. உள்நாட்டில் ரணில் தேர்தல் கவர்ச்சி குறைந்த தலைவராக இருந்த காரணத்தால் அவரை ஒரு மென் இலக்கு என்று தீர்மானித்து கைது செய்திருக்கலாம். ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுவிட்டன. சிங்கள பௌத்த உயர் குழாம் மீண்டும் ஒன்று திரளுகிறது. ”தேசிய மக்கள் சக்தியை வீட்டுக்கு அனுப்புவதற்கான பலமான கூட்டணியை உருவாக்குவதற்கு அரசாங்கமே அடிக்கல் நாட்டியிருக்கிறது”என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார். சாலிய பீரிஸ் கூறியதுபோல திரும்பிவர முடியாத ஒரு இடத்துக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்திருக்கின்றது. எனவே அவர்கள் தொடர்ந்தும் துணிச்சலாக ரிஸ்க் எடுத்து ஊழலுக்கு எதிராக முன்போனால் மட்டும்தான் தமையும் காத்துக் கொள்ளலாம் எதிர்த்தரப்பையும் பலவீனப்படுத்தலாம். அதேசமயம் இந்தக் கைது நடவடிக்கையால் தமிழ் தரப்புக்கு ஏற்பட்டிருக்கும் சாதக பாதக விளைவுகள் என்ன? ரணில் கைது செய்யப்பட்ட காலம் எதுவென்று பார்க்க வேண்டும். அடுத்த ஜெனீவா கூட்டத்துடருக்கு சில கிழமைகளுக்கு முன் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஒரு முன்னாள் ஜனாதிபதியைக் கைது செய்யும் அளவுக்கு இலங்கைத்தீவின் உள்நாட்டு நீதி பலமாக உள்ளது என்று அனைத்துலக அரங்கில் எடுத்துக் கூறுவதற்கு அது அனுரவுக்கு உதவும். ரணில் மேற்கு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் அதிகம் இசைவானவர். இலங்கைத் தீவில் மேற்கு நாடுகளின் அனுசரணையோடு முன்னெடுக்கப்பட்ட இரண்டு சமாதான முயற்சிகளில் அவர்தான் அரச பங்காளி. முதலாவது சமாதான முயற்சி நோர்வையின் அனுசரணையோடு கூடிய சமாதான முயற்சிகள். இரண்டாவது சமாதான முயற்சி, 2015ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். இந்த இரண்டிலும் ரணில்தான் சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தினார். அவருடைய காலத்தில்தான் மேற்கின் நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக சமாதான முயற்சிகள் அல்லது நல்லிணக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே மேற்கு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் ஐ.எம் எப்பிற்கும் வாலாயமான ஒரு தலைவரை சில நாட்கள் தடுத்து வைத்ததன் மூலம் அனுர அரசு உள்நாட்டு நீதி தொடர்பில் ஒரு புதிய தோற்றப்பாட்டைக் கட்டியெழுப்ப முற்படுகின்றது. ஏற்கனவே ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது உள்நாட்டு நிதியை வெளிநாட்டு உதவிகளோடு பலப்படுத்துவது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். அதன்பின் அவர் வெளியிட்ட திருத்தப்படாத அறிக்கையிலும் அதே கருத்தை பிரதிபலித்திருந்தார். ஐநா புதிய அரசாங்கத்துக்கு வாய்ப்புகளை வழங்கலாம் என்று தெரிகிறது. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில்,உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்கு ரணில் கைது அரசாங்கத்துக்கு உதவும். இது தமிழ் தரப்பின் நிலைமையை ஐநாவில் மேலும் பலவீனப்படுத்தும். ஐநாவின் பொறுப்புக்கூறல் செய்முறையின் பங்காளியாக இருந்த ஒருவரே கைது செய்யப்படும் அளவுக்கு இலங்கைத்தீவின் உள்நாட்டு நீதி பலமாக உள்ளது என்று அரசாங்கம் ஜெனிவாவில் கூறப்போகிறது. இந்த விடயத்தில் அண்மையில், இன அழிப்புக்கு அனைத்துலக விசாரணையைக் கேட்டு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்று திரண்டிருப்பது சமயோசிதமானது; பொருத்தமானது. எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் ரணிலைக் கைது செய்தமை என்பது சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை பலப்படுத்துகிறது. அதேசமயம் எதிர்க் கட்சிகளை ஒன்று திரட்டியுள்ளது. உலக அளவிலும் உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்கு அது உதவக் கூடும். இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றுதிரளும் சிங்கள பௌத்த உயர் குழாமும் எதிர்க் கட்சிகளும் எப்படிப்பட்ட சவால்களை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப் போகின்றன என்பதுதான் நாட்டின் எதிர்காலத்தையும் தேசிய மக்கள் சக்தியின் எதிர்காலத்தையும் ஐநாவில் தமிழர் விவகாரம் நீர்த்துப் போவதற்கான வாய்ப்புக்களையும் தீர்மானிக்கும். https://www.nillanthan.com/7697
-
கோட்டாபய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைப்பு
கோட்டாபய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைப்பு adminAugust 31, 2025 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியமை தொடர்பாக முன்னாள் காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன் அளித்த வாக்குமூலம் தொடர்பிலேயே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது போதிலும் அவர் அழைக்கப்பட்ட திகதி குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2025/219865/
-
ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது
ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது adminAugust 31, 2025 யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த நபரை கைது செய்யாது தவிர்க்க 20 இலட்ச ரூபாய் இலஞ்சம் வாங்க முற்பட்ட மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மூவர் காவல்துறையினரினால் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் மாதகல் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இளைஞன் ஒருவர் மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தரினால் கைது செய்யப்பட்டார். கைதில் இருந்து குறித்த நபரை விடுவிக்க , 30 இலட்ச ரூபாய் பணம் இளைஞனிடம் லஞ்சமாக கோரியுள்ளனர். அதற்கு இளைஞன் சம்மதிக்காது , 20 இலட்ச ரூபாய் கொடுப்பதற்கு சம்மதித்ததை அடுத்து , இளைஞனை விடுவித்து , சங்கானையில் உள்ள மதுவரி திணைக்கள அலுவலகத்திற்கு வந்து பணத்தினை தருமாறு கூறி சென்றுள்ளனர். அதனை அடுத்து , தன்னிடம் லஞ்சம் கோரிய விடயம் தொடர்பாக இளைஞன் காங்கேசன்துறை பிரிவு குற்றத்தடுப்பு காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளார். காவல்துறையினர் குறித்த இளைஞனுடன் சிவில் உடையில் மதுவரி திணைக்களத்திற்கு சென்று , இளைஞனை ஒரு தொகை பணத்தினை கொடுக்க வைத்து , பணத்தினை பெற முயன்ற மூன்று அதிகாரிகளையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும் மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறையின ர் இலஞ்சமாக கொடுக்க முற்பட்ட ஒரு தொகை பணத்தினை சான்று பொருளாக மன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் https://globaltamilnews.net/2025/219869/
-
ஹவுதி அரசின் பிரதமர் வான்வழித் தாக்குதலில் பலி
ஹவுதி அரசின் பிரதமர் வான்வழித் தாக்குதலில் பலி செய்திகள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் பகுதியின் பிரதமர் அஹமட் அல்-ரஹாவி கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சனாவில் நடந்த தாக்குதலில் அவரும் சில அமைச்சர்களும் கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று (30) அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்னர். 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் ஹவுதி தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமராக அஹமட் அல்-ரஹாவி பணியாற்றி வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன. https://adaderanatamil.lk/news/cmeyg4k0r004co29neegq34bb
-
அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு மத்தியில் சீனா செல்லும் மோடி : ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதிகளை சந்திக்கிறார் !
அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு மத்தியில் சீனா செல்லும் மோடி : ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதிகளை சந்திக்கிறார் ! 30 Aug, 2025 | 10:48 AM அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதிகளை சந்திக்கவுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானில் இருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (30) சீனாவுக்கு விஜயம் செய்கின்றார். அமெரிக்க அரசாங்கம் அண்மையில் இந்தியப் பொருட்களுக்கு 50 வீத வரி விதிப்பை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்குவதே இந்த உயர் வரி விதிப்பிற்கான காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில், ஜப்பான் பயணத்தை நிறைவு செய்துகொண்டு இந்தியப் பிரதமர் மோடி இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) சீனா செல்கிறார். அங்கு, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கவுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) நடைபெறும் இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, அவர் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' பக்கத்தில் பயணத்திற்கு முன்பே பதிவிட்டிருந்தார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு எதிராக வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ள நிலையில், சீனாவில் நடைபெறும் ஷாங்காய் உச்சி மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதால், இது டிரம்ப்புக்கு எதிரான ஒரு வலுவான கூட்டமைப்பாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பிரதமர் மோடியும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கும் கலந்துகொள்வது டிரம்ப்புக்கு ஒரு வலுவான செய்தியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-சீனா உறவில் ஒரு புதிய அத்தியாயம் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா-சீனா எல்லைப் பகுதியான கால்வனில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இரு நாடுகளும் மீண்டும் ஒன்றிணையத் தொடங்கியுள்ளன. கடந்த மார்ச் மாதம் சீன ஜனாதிபதி இந்திய அரசாங்கத்திற்கு அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்து ரகசிய கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மீண்டும் வலுவடையத் தொடங்கியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக சீனாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். கடந்த ஜூலை மாதம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா சென்று சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை சந்தித்தார். கடந்த வாரம் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த தொடர் பயணங்கள் மூலம் இரு நாடுகளும் உறவை புதுப்பித்து, அமைதிக்கு வழி வகுக்கின்றன. இந்தியாவின் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பை சீனா வெளிப்படையாகவே விமர்சனம் செய்து வருகிறது. இந்த சூழலில், பிரதமர் மோடியின் சீன விஜயம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஷாங்காய் மாநாட்டில் பிராந்தியப் பிரச்சனைகளைத் தாண்டி, அமெரிக்காவின் வரிவிதிப்பு விவகாரம் குறித்து முக்கியமாகப் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா, சீனா மற்றும் தற்போது இந்தியா என மூன்று நாடுகளின் தலைவர்களும் சந்திப்பதால், இது உலக அரசியலின் போக்கையே தீர்மானிக்கக்கூடிய ஒரு மாநாடாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/223754
-
பாலஸ்தீன ஜனாதிபதி, 80 பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை ரத்து செய்தது அமெரிக்கா
பாலஸ்தீன ஜனாதிபதி, 80 பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை ரத்து செய்தது அமெரிக்கா 30 August 2025 பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் 80 பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை அமெரிக்கா ரத்துச் செய்துள்ளது. இந்த நிலையில், அடுத்த மாதம் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தடை செய்யப்பட்டுள்ளார் என்பதை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், விசாக்களை மறுப்பது அல்லது ரத்து செய்வது என்ற அமெரிக்காவின் நடவடிக்கை அந்தந்த அரசாங்கங்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான "உறவுகளைப் பொருட்படுத்தாமல்", நியூயோர்க்கில் வெளிநாட்டு அதிகாரிகள் வருகை அமெரிக்காவால் தடைபடாது என்று கோடிட்டுக் காட்டும் ஐக்கிய நாடுகளின் ஆவணத்துடன், இந்த விசா ரத்து நடவடிக்கை இணங்குகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று பிபிசி கூறுகிறது. அமைதி முயற்சிகளை குறைமதிப்புக்கு உட்படுத்தியதற்காகவும், "பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஒருதலைப்பட்சமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்று கோரியதற்காகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். எனினும் டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக, இந்த அமர்வின் போது, பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு பிரான்ஸ் தலைமை தாங்குவதால் இந்தத் தடை வந்துள்ளதாக கருதப்படுகிறது முன்னதாக, ஐக்கிய நாடுகளுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர், நாட்டின் தூதுக்குழுவின் தலைவராக, நியூயார்க்கில் நடைபெறும் நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தில் அப்பாஸ் கலந்து கொள்வார் என்று கூறியிருந்தார். https://hirunews.lk/tm/417351/us-cancels-visas-of-palestinian-president-80-palestinian-officials
-
கேப்பாப்புலவு மக்களின் காணியை கோரிய விமானப்படை
கேப்பாப்புலவு மக்களின் காணியை கோரிய விமானப்படை செய்திகள் முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் உள்ள 0.5 ஹெக்டயர் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை தமது தேவைக்காக விமானப்படையினர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கோரியிருந்தனர். இதற்கு, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஏற்கனவே படையினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகளைச் சுட்டிக்காட்டி, இக்கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது எதிர்ப்பை அடுத்து, நேற்று (29) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விமானப்படையினருக்கு காணி வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டது. ரவிகரன் தனது கருத்தில், “ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், விமானப்படை மீண்டும் இக்காணிகளைக் கோருவது பொருத்தமற்றது. கேப்பாப்புலவில் இன்னும் 190 ஏக்கர் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. மக்கள் தொடர்ந்து போராட்டங்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். யுத்தம் முடிந்து ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாகியும், விமானப்படையினர் மக்களின் காணிகளை அபகரித்து யாருடன் போர் செய்யப்போகின்றனர்? எனவே, இக்காணிகளை விமானப்படைக்கு வழங்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது,” எனக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விமானப்படையினருக்கு காணி வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmexjjmlv003sqplp8xkhyrpm
-
முன்னாள் ஜனாதிபதி இருவரை கைது செய்ய நடவடிக்கை!
முன்னாள் ஜனாதிபதி இருவரை கைது செய்ய நடவடிக்கை! முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரால் பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய பல சம்பவங்கள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. ஊழல் மற்றும் மோசடிக்கு எதிராக போராடும் பல சிவில் சமூக அமைப்புகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த அமைப்புகள் சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் பெற்றுள்ளன. அந்தத் தகவல்களை பயன்படுத்தி தொடர்புடைய முறைப்பாடுகளை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது வழக்கறிஞர்கள் அதற்கான தகவல்களை பகுப்பாய்வு செய்து வருகின்றனர். அவற்றில், மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட தலையீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல கட்டுமாணங்களும், கோட்டபாய ராஜபக்ஷவால் மேற்கொள்ளப்பட்ட பல மோசடிகளும் அடங்கும். இது குறித்து கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, “இது போன்ற முறைப்பாடுகள் தகவலுடன் சமர்ப்பிக்கப்பட்டால், முறையான விசாரணைகளை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன். சந்தேகநபர் முன்னர் வகித்த பதவிகள் அத்தகைய சட்டச் செயல்பாட்டில் பொருத்தமானவை அல்ல” என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்மசிங்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இதுவாகும். இவ்வாறான நிலையில் எந்தவொரு ஜனாதிபதியும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் முன்னாள் ஜனாதிபதிகள் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/முன்னாள்_ஜனாதிபதி_இருவரை_கைது_செய்ய_நடவடிக்கை!#google_vignette
-
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு - மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்க நடவடிக்கை!
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு - மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்க நடவடிக்கை! இலங்கையில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக காணாமல் போனவர்களுக்கு மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இலங்கையின் வடக்கு கிழக்கில் மட்டுமன்றி தென்னிலங்கையிலும் கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான நபர்கள் காணாமல் போயுள்ளனர். அவ்வாறான நபர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து தகவல்களை அறிந்து கொள்ள முடியாமல் அவர்களின் உறவினர்கள் நீண்ட காலமாக துயரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 25 வருடகாலத்துக்கும் மேலாக காணாமல் போயுள்ள நபர்கள் தொடர்பில் அவர்கள் இறந்து விட்டதாக கருதப்பட்டு மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் மூலம் அவர்களின் உறவினர்களின் துயரங்களை குறைத்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்று அரசாங்கம் கருதியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதேவேளை, 10,000 க்கும் மேற்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் வலுக்கட்டாயமாகக் காணாமல் போதல்கள் தற்செயலான சம்பவங்கள் அல்ல. அவை குற்றங்கள் என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/காணாமல்_ஆக்கப்பட்டோருக்கு_-_மரண_அத்தாட்சிப்_பத்திரம்_வழங்க_நடவடிக்கை!
-
கிளிநொச்சி மாவட்ட எம்பி குறித்து அப்பகுதியின் செய்தியாளரின் விமர்சனம்!
கிளிநொச்சி மாவட்ட எம்பி குறித்து அப்பகுதியின் செய்தியாளரின் விமர்சனம்! August 28, 2025 — கருணாகரன் — அரசியல் மோசடிகள் பலவிதமானவை. அத்தகைய மோசடிகளை, தவறுகளை, குற்றங்களை இழைத்தவர்கள் எல்லாம் இலங்கையில் தண்டனை பெறும் காலமொன்று உருவாகியுள்ளது. ‘அரகலய‘ என்ற மக்கள் எழுச்சி உருவாக்கிய வெற்றிகளில் இதுவும் ஒன்று. அதுவே ஆட்சிமாற்றம், அரசியல் மாற்றங்களைக் கொண்டு வந்தது. அத்தகைய விழிப்புணர்வும் எழுச்சியும் தமிழ்ச் சமூகத்திலும் நிகழ வேண்டும். நிகழும். அப்படி நிகழ்ந்தால்தான் மோசடிக்காரர்களும் பிற்போக்கானோரும் சமூக விரோதிகளும் விலக்கப்படுவார்கள், தண்டனைக்குள்ளாக்கப்படுவர். தமிழ்த் தரப்பில் அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு உள்ளாகிவருபவர் சிவஞானம் சிறிதரன். எத்தகைய கூச்சமும் தயக்கமும் இல்லாமல் தன் நெஞ்சறியப் பொய் சொல்வதிலிருந்து அடாத்தாக நடப்பது, ஏமாற்றுவது, மோசடி செய்வது எல்லாமே அவருக்குப் பெருங்கலை என்று பார்ப்பவர்களும் உண்டு. இதைப் பற்றிய கடுமையான விமர்சனங்கள் ஆயிரமாக இருந்தாலும் அதில் இதுவரையில் அவர் வெற்றிகளையே பெற்றுள்ளார். அதொரு தீராச் சுவையாக மாறியுள்ளது. அதனால் அதையே அவர் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறார். அந்தச் சுவை அவரை எல்லை கடந்து செல்ல வைக்கிறது என்று பார்க்கப்படுகின்றது. இதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. எளிய – அண்மைய உதாரணம், கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் பெண் நோயியல் மற்றும் மகப்பேற்றுச் சிறப்புப் பிரிவுக்கு (25.08.2025) சென்று, அதனுடைய இயங்கு நிலை பற்றிப் பேசியிருப்பதாகும். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அதைச் செய்வதற்கு அவருக்கு உரிமையும் தகுதியும் உண்டு. ஆனால், அதை அவர் செய்திருக்க வேண்டியது நேற்றல்ல. அதற்கு முன்பாகவே செய்திருக்கவேண்டும். அதற்கு முன்பு என்றால், பெண் நோயியல் மற்றும் மகப்பேற்றுச் சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு (திறந்து வைக்கப்பட்டு) ஓராண்டாகிய பின்னரும் அது இயங்காமலே உள்ளது. மட்டுமல்ல, பெண் நோயியல் மற்றும் மகப்பேற்றுச் சிறப்புப் பிரிவு இயங்காமல் இருப்பதைக் காரணம் காட்டி, அந்தப் பிரிவிலுள்ள சில உபகரணங்களை பிற மருத்துவனைகளுக்கு இடமாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதெல்லாம் சிறிதரன் இதைப்பற்றிப் பேச முன்வரவேயில்லை. அதைப் பற்றி அவருக்கும் தெரியாது. அவருடைய ஆட்களுக்கும் தெரியாது. அவர்களுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறையே இல்லை. இந்த நிலையில் மருத்துமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கம் 05.06.2025 இல் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனைச் சந்தித்து இந்தப் பிரிவின் நிலைமையை விளக்கிப் பேசியிருந்தது. அத்துடன் கண் சிகிச்சைக்குரிய நிபுணர் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தது. மட்டுமல்ல, Medical ward பற்றாக்குறையையும் எடுத்து விளக்கியது. பெண் நோயியல் மற்றும் மகப்பேற்றுச் சிறப்புப் பிரிவு புதிய தொகுதியில் இயங்கத் தொடங்கினால், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் மகப்பேற்று விடுதிகளை Medical ward களுக்கு வழங்க முடியும் என்பதையும் எடுத்துக் கூறியது. இதனை அடுத்து, ஆளுநர் அடுத்த வாரமே கிளிநொச்சி மாவட்டப் பொதுமருத்துவமனைக்கு நேரிற் சென்று குறித்த பிரிவைப் பார்வையிட்டு, பணிப்பாளருடனும் பேசியிருந்தார். கூடவே வடமாகாண சுகாதார செயலாளரும் பார்வையிட்டிருந்தார். ஆனாலும் நிலைமைகளில் உடனடிச் செயற்பாட்டு விளைவு கிட்டியிருக்கவில்லை. அல்லது தாமதங்கள் ஏற்பட்டன. அதற்குரிய தயார்ப்படுத்தல்களை அவர்கள் மேற்கொண்டிருக்கக் கூடும். செயற்பாடுகள் தாமதமடைய பிரச்சினைகள் வேறு விதமாக மாறத் தொடங்கின. ஏற்கனவே இயங்கி வருகின்ற மகப்பேற்றுப் பிரிவின் கட்டில்களே உக்கிச் சிதைவடைந்த கட்டத்துக்கு வந்திருந்தன. அத்துடன். கண் சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவு போன்றவற்றுக்கும் நிபுணர்கள் இல்லாமல் அதுவும் இயங்கா நிலைக்குள்ளாகி, நோயாளர்கள் சிரமங்களை எதிர்கொள்ளத் தொடங்கினர். இந்த நிலையில் நோயாளர் நலன்புரிச் சங்கம் தவிர்க்க முடியாமல் நோயாளரின் நிலை நின்று செயற்பட வேண்டிய கட்டத்துக்குத் தள்ளப்பட்டது. ஆகவே இவற்றை இயங்க வைப்பதற்கான அழுத்தங்களை – ஊக்கத்தை அளிக்க வேண்டும் என நோயாளர் நலன்புரிச் சங்கம் பல்வேறு தரப்புகளோடும் பேசி தொடர்ந்தும் முயற்சிகளை எடுக்கத் தொடங்கியது. அதேவேளை இதற்கான அழுத்தப் போராட்டமொன்றை 29.98.2025 வெள்ளிக்கிழமை காலை நடத்துவதற்குத் தீர்மானித்து, அதற்கான ஊடகவியலாளர் சந்திப்பை 22.08.2025 இல் நடத்தியது. இந்தச் செய்தி அன்று இணையத் தளங்களிலும் மறுநாள் பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தது. அத்துடன், இந்தப் போராட்டத்துக்கு மக்களின், மாவட்ட பொது அமைப்புகளின் ஒத்துழைப்பைக் கோரும் பிரசுரமொன்றையும் அச்சிட்டு விநியோகித்திருந்தது. திட்டமிட்டபடி அழுத்தப் போராட்டத்துக்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இதேவேளை மறுபக்கத்தில் இந்தப் பிரிவை இயங்க வைப்பதற்கான சிறப்புக் கூட்டமொன்றை 25.08.2025 பி.ப 5.00 மணிக்கு வடமாகாண ஆளுநர் ஏற்பாடு செய்திருந்தார். மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், யாழ் பல்கலைக்கழக மருத்துவத்துறைத் தலைவர், யாழ் போதானா மருத்துவமனைப் பணிப்பாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், குறித்த பிரிவுகளுக்கான சிறப்பு மருத்துவ நிபுணர் அணி, கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனைப் பணிப்பாளர், கிளிநொச்சிப் பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் போன்ற பல்வேறு தரப்பினருடன் நடத்துவதற்கு இந்த ஏற்பாட்டை அவர் செய்திருந்தார். இந்த நிலையில்தான் (இந்தத் தகவல்களை எல்லாம் எப்படியோ அறிந்து கொண்ட) சிறிதரன், திடீரென விழித்துக் கொண்டவராக மாவட்டப் பொதுமருத்துவமனைக்குச் சென்று (25.08.2025) குறித்த பிரிவைப் பார்வையிட்டு, இயங்க வைப்பது பற்றிப் பேசுவதாகப் படங் காட்டியிருக்கிறார். அதாவது தானே இந்த பெண் நோயியல் சிறப்பு மகப்பேற்றுப் பிரிவை இயங்க வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்கிறேன். தன்னுடைய முயற்சியின் விளைவாகத்தான் இனிமேற் காரியங்கள் எல்லாம் நடக்கப்போகின்றன என்ற விதமாக. இது தொடர்பாக சிறிதரனின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள்… சிறிதரனே முதன்முதலாக மின்சாரத்தைக் கண்டு பிடித்தவர், சிறிதரனே அவரே இந்தப் பூமியில் அதியற்புதமான விடயங்களை எல்லாம் செய்து கொண்டிருப்பவர் என்ற றேஞ்சில் உள்ளது. இது எவ்வளவு சிரிப்புகிடமானது? எத்தனை பெரிய ஏமாற்று? என்னமாதிரியான கோமாளித்தனம்? பெரிய அரசியல் மோசடி? எத்தகைய சிறுமை? இதொன்றும் சிறிதரனுக்குப் புதியது இல்லை. அவர் ஆசிரியராகக் கற்பித்தகாலத்திலிருந்தே இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறார் என்கின்றனர் அவருடன் கூடப் பணியாற்றியவர்கள். அதனால்தான் அவரால் ஒரு சிறந்த ஆசிரியராக எந்த மாணவராலும் எந்தப் பாடசாலையினாலும் நினைவு கூர முடியவில்லை எனவும் வாதிடுகின்றனர். அரசியலில் ஈடுபடத் தொடங்கிய பிறகு சிறிதரன் சொன்ன, சொல்லி வரும் பொய்களும் செய்த, செய்து வரும் ஏமாற்றுகள் அதிகம். இங்கே பிரச்சினை அதுவல்ல. ஏனென்றால் சிறீதரன் அப்படித்தான் (இவ்வாறான குணங்களுடன்தான்) இருக்கிறார். இருக்கப்போகிறார். அவருடைய ருசியும் வழியும் அதுவாகும். ஆனால் 2010 இலிருந்து இப்போது வரையான 15ஆண்டுகள், (நான்கு தடவை) பாராளுமன்றப் பிரதிநிதியாக இருப்பவர், தான் பிரதிநிதித்துவம் செய்து வருவதாகக் கூறும் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னேற்றத்துக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பு என்ன? கல்வித்துறையில் – மருத்துவத்துறையில் – விவசாய மேம்பாட்டுக்கு – சூழல் விருத்திக்கும் சூழல் பாதுகாப்புக்கும் – கடற்றொழில் விருத்திக்கு – பனை தென்னை வளத் தொழிலுக்கும் தொழிலாளர் நலனுக்கும் – பெண் தலைமைத்துவக் குடும்பத்தினரின் வாழ்க்கை உயர்வுக்கு -மாற்றுத் திறனாளிகளின் எதிர்காலத்துக்கு – விடுதலைப் புலிகளின் போராளிகளாகச் செயற்பட்டு – இன்று சிரமமான வாழ்க்கைச் சூழலை எதிர்கொண்டிருப்பவர்களின் வாழ்க்கைக்கு – பிிரதேசங்களின் அபிவிருத்திக்கு – இளைய தலைமுறையினரின் திறன் விருத்தி, தொழில் வாய்ப்புகளுக்கு – பண்பாட்டு வளர்ச்சிக்கு – வரலாற்றுத்துறைக்கு – இலக்கிய மேம்பாட்டுக்கு – சமூக வளர்ச்சிக்கு – இதில் எத்தகைய பங்களிப்புகளையும் வழங்கியதாகக் குறிப்பிட முடியாத நிலையில்தான் அவருடைய பிரதிநிதித்துவச் சிறப்பு உள்ளது. ஏற்கனவே பதவியில் இருந்த முருகேசு சந்திரகுமார், விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராஜா, அங்கயன் ராமநாதன், மனோ கணேசன், திகாம்பரம் போன்றோரின் நிதி ஒதுக்கீடு, செயற்திட்டங்களை தன்னுடைய வேலையாகவும் முயற்சியின் விளைவாகவும் கிடைத்ததாகவோ நடைபெற்றதாகவோ காட்டுவதே அவருடைய தந்திரோபாயமாக இருந்தது. மற்றும்படி சுயமாகச் சிந்தித்து, சரியாக ஒரு திட்டத்தை இனங்கண்டு, அதைச் செயலாக்கமாக மாற்றுவதற்கு அர்ப்பணிப்போடு சிறிதரனோ அவருடைய அணியினரோ முயற்சித்ததே இல்லை. அவர்களுடைய அரசியல் முதலீடுகளும் செயற்பாடுகளும் வாய்ப்பேச்சிலும் முகநூல் வம்பளப்பிலுமே கழிந்தது. சிறிதரனின் செல்வாக்குக்கு உட்பட்ட பிரதேச சபைகளினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள்தான் குறித்துச் சொல்லக் கூடியன. அவற்றில் பல இயங்கா நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அவற்றில் ஒன்று, ஆனையிறவு சந்தை வளாத்தில் நிர்மாணிக்கப்பட்ட கடைத்தொகுதிகள். மற்றது, பூநகரி வாடியடியில் கட்டி இடிக்கப்பட்ட சந்தை. அடுத்தது, கரடிப்போக்குச் சந்தியில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் போராளிகளுக்கான உதவி என்ற பேரில் கட்டி இடிக்கப்பட்ட கடைகள். இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால், எங்காவது, எவராவது ஒரு பிரச்சினையைப் பற்றிப் பேசினால் அங்கே ஓடோடிப்போய் தானே அதைப் பார்த்துச் சீர்ப்படுத்துகின்றவராக நிற்கிறார்; தோற்றம் காட்ட முற்படுகிறார். (இதற்காக சிலர் கையாட்களாக இருக்கிறார்கள் என்பதை இன்னொரு சந்தர்ப்பத்தில் காட்டலாம். அப்படியானவர்கள்தான் சிறிதரன் போன்றவர்களைக் காப்பாற்றுவதற்கும் தொடர்ந்து தீங்குகள் நடப்பதற்கும் காரணமானவர்கள். இதில் ஆசிரியராக இருப்பர் தொடக்கம் பல்வேறு நிலைகளில் உள்ளவர்கள் உண்டு). இது ஏன்? பதிலாக தானாகவே ஒன்றைக் கண்டு பிடிக்கவோ, ஒன்றைப் புதிதாகத் திட்டமிடவோ, ஒரு விடயத்தைச் செய்து முடிக்கவோ அவராலும் அவருடைய ஆதரவாளர்களாலும் முடியாதிருப்பது ஏன்? கிளிநொச்சி மாவட்டத்தில் அதி கூடிய காலம் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துக் கொண்டிருப்பவர் சிறிதரன். இந்தப் பதினைந்து ஆண்டு காலப்பகுதியில் எவ்வளவு சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி – உருவாக்கி வெற்றியடையச் செய்திருக்க முடியும்! குறைந்த பட்சமாக இரண்டு படை முகாம்களையாவது விலக்குவதற்குப் போராடியிருக்கலாம். அல்லது உண்மையைப் பேசி, சமூகங்களின் நல்லிணக்கத்தைப் பேணி, மக்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வைக் காண முயற்சித்திருக்கலாம். தான் படித்த, படிப்பித்த, வாழ்ந்த கிளிநொச்சி மாவட்டம் போரினால் முற்றாகவே அழிந்தது. அதை மீளக் கட்டியெழுப்பவும் அங்கே கல்வியை மேம்படுத்தவும் உழைத்திருக்கலாம். அப்படியெல்லாம் சிறிதரன் செயற்படவும் இல்லை. முயற்சிக்கவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் எல்லாவற்றையும் குழப்பிப் பாழ்படுத்தினார். அமைப்புகளையும் மக்களையும் தன்னுடைய அரசியலுக்காகப் பிளவுபடுத்தினார். எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், வர்த்தகர்கள் தொடக்கம் கோயில்களின் நிர்வாகம், கூட்டுறவு அமைப்புகள், விவசாய அமைப்புகள் எனச் சகலவற்றையும் பிளவுபட வைத்திருக்கிறார். கிளிநொச்சிக்கு வெளியே முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற அயல் மாவட்டங்களில் இந்த நோயில்லை. அங்கும் மாற்றுக் கருத்தாளர்கள், மாற்று அரசியற் சிந்தனையுடையோர், மறு அரசியற் தரப்பினர், அவற்றின் ஆதரவாளர்கள், மாற்று அணிகள் எல்லாம் உண்டு. ஆனால், அங்கே ஒரு ஜனநாயக அடிப்படை பேணப்படுவதுண்டு. விழுமியங்களுக்கான மதிப்புண்டு. கிளிநொச்சியில் அதெல்லாம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டாயிற்று. இங்கே பிரதேச சபைகளின் நூலகங்களில் கூட சாதி பார்ப்பதைப்போல வேறுபாடுகள் காட்டப்படுகின்றன. இதற்கு ஒத்து ஊதும் நிர்வாக அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது மிகக் கவலைக்குரியது. இதைக்குறித்து யாராவது கேள்வி எழுப்பினால் அவர்களை அவதூறு செய்து அடக்குவதற்கு முற்பட்டார் சிறிதரன். இதற்காக அவர் தன்னோடு ஒரு மூன்றாந்தரமான அணியொன்றை உருவாக்கியும் வைத்திருந்தார்; வைத்திருக்கிறார். இதெல்லாம் அவர் மீதான குற்றச்சாட்டுகளோ விமர்சனங்களோ மட்டுமல்ல, அவரைக் குறித்த உண்மையான விவரங்களாகும். இப்படியானவரை எப்படி தமிழரசுக் கட்சி தன்னுடைய அரசியற் பயணத்தில் அனுமதித்திருக்கிறது? சிறிதரனை மக்கள் ஆதரிப்பதால், தமிழரசுக் கட்சி அதற்கு – அந்த மக்கள் தெரிவுக்கு மதிப்பளித்து அனுமதித்துள்ளது – அதனால் அவரைக் கட்சியில் வைத்திருக்கிறது என்று சுமந்திரனோ அல்லது தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வேறு எவருமோ சொல்லலாம். கோட்டபாய ராஜபக்ஸவையும் மக்கள்தான் ஆதரித்தனர். மேர்வின் சில்வாவையும் விமல் வீரவன்ஸவையும்தான் ஆதரித்தனர். வாக்களித்தனர். அதற்காக அவர்கள் எல்லாம் சரியாகச் செயற்படும் ஆட்களா? மெய்யாகவே நாட்டுக்கும் சமூகத்துக்கும் நன்மையைத் தரக்கூடிய நபர்களா? சிறிதரனை முதன்மைப்படுத்தி மேடைகளில் ஏற்றிப் போற்றும் எழுத்தாளர்கள் இதைக்குறித்தெல்லாம் என்ன விளக்கம் சொல்ல முடியும்? இவர்கள் தாம் கொண்டுள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி, சிறிதரனை நெறிப்படுத்தலாம். பயனுள்ள பணிகளைச் செய்விக்கலாம். அந்தப் பொறுப்பு அவர்களுக்குண்டு. அல்லது அவரிடம் இவற்றைக் குறித்துக் கேள்விகளை எழுப்ப வேண்டும். எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் சமூகத்தின் பிரதிநிதிகளாவர். ஒரு வகையில் சமூகத்தை வழிப்படுத்துகின்றவர்கள், பண்படுத்துகின்றவர்கள். சமூக விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்டோர். என்பதால் இவர்களுக்கெல்லாம் இதில் பொறுப்புண்டு. சிறிதரனை ஆதரிக்கும் அமைப்புகள், உத்தியோகத்தர்கள், அதிகாரிகள், பிரமுகர்கள் எல்லோரும் இதைக் குறித்தெல்லாம் என்ன சொல்லப் போகிறார்கள்? ஆனால் ஒன்று, இவர்கள் எல்லோரும் இந்தத் தீமைக்கு – தவறுக்கு – ஏமாற்றுக்குப் பொறுப்பாளிகள்… அப்படி இவர்கள் பொறுப்பெடுக்கத் தவறினால் இந்தத் தவறுகள் பெருகிச் செல்லும். ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டம் அனைத்து நிலைகளிலும் மிகப் பின்தங்கியே உள்ளது. தவறுகளின் விளைவே அதுவாகும். அரசியற் பழிவாங்கல்களும் தனக்கு வேண்டியவர்களுக்குச் சார்பான நடவடிக்கைகளும் சமூகத்தையும் மாவட்டத்தையும் பின்தள்ளியுள்ளது. வேண்டுமானால் பழிவாங்கப்பட்டோரின் பட்டியலை சமர்ப்பிக்க முடியும். புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, மாவீரர்களின் தியாகத்தைச் சொல்லி அரசியல் லாபத்தை அறுவடை செய்கின்ற சிறிதரன் தரப்பு, மாவீர்கள் குடும்பங்களுக்கு ஆற்றிய பங்களிப்புகள் என்ன? புலிகளின் செயற்பாடுகளில், அவர்கள் உருவாக்கிய விழுமியங்களில் எவற்றைப் பின்பற்றுகின்றனர்? குறைந்த பட்சம் நான்கு இடங்களில் மரங்களையாவது உருப்படியாக நட்டிருக்கின்றனரா? பதிலாக மணலை அகழ்ந்தெடுப்பதும் மரங்களை – காடுகளை அழிப்பதும் சூழலைக் கெடுப்பதுமே நிகழ்த்தப்படுகின்றன. போதாக்குறைக்கு கிளிநொச்சியில் உள்ள சனத்தொகை ஒரு லட்சத்து எண்பது ஆயிரம். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மதுச்சாலைகளின் எண்ணிக்கை 20 க்கு மேல். இதைக்குறித்து ஒரு சொல் சிறிதரன் இதுவரையில் வெளியே பேசியதில்லை. பல பொதுக்காணிகள் (அரச காணிகள்) வசதி, அதிகாரம் படைத்தோரால் அபகரிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பற்றி மக்கள் பிரதிநிதி, மண் பற்றாளன் வாய் திறப்பதே இல்லை. இவையெல்லாம் சிறிதரனின் கோட்டைக்குள்தான் நடக்கின்றன. ஆனால், சிங்கம் கண்மூடித் தூங்குகிறது. (தொடரும்) https://arangamnews.com/?p=12284
-
உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் - 23 பேர் பலி
உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் - 23 பேர் பலி 29 Aug, 2025 | 08:48 AM உக்ரேன், ரஷ்யா இடையேயான போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். ஆனாலும், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரேன் மீது ரஷ்யா நேற்று தாக்குதல் நடத்தியது. உக்ரேன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு பகுதிகள் மீது ரஷ்யா ட்ரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும், 48 பேர் படுகாயமடைந்தனர். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டிஷ் அலுவலகங்கள் சேதமடைந்தன. https://www.virakesari.lk/article/223650
-
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி 30ஆம் திகதி வடக்கு, கிழக்கில் போராட்டம் ஏற்பாடு
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் : வட, கிழக்கில் நாளை பாரிய கவனயீர்ப்பு போராட்டங்கள் 29 Aug, 2025 | 09:20 AM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு நாளை (30) சனிக்கிழமை வட, கிழக்கு மாகாணங்களில் பாரிய கவனயீர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் வருடாந்தம் வட, கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்படும். அதன் நீட்சியாக இம்முறையும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கி வடக்கிலும் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கி கிழக்கிலும் தனித்தனியாக இருவேறு கவனயீர்ப்புப்போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது இவ்வாறிருக்க தெற்கைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் பிரிட்டோ பெர்னாண்டோ தலைமையிலான காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் பிரதிநிதிகள், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதமர் ஹரினி அமரசூரியவிடமும், நீதியமைச்சிடமும், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திடமும் கொழும்பிலுள்ள சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரகங்களிடமும் இன்றைய தினம் கையளிக்கவுள்ளனர். மேலும் காணாமல்போனோர் விவகாரத்தின் தற்போதைய நிலைவரம் குறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் காணாமல்போனோர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வொன்றும் இன்று அலரி மாளிகையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223654
-
கிளிநொச்சியில் விபத்து - இரு இளைஞர்கள் உயிரிழப்பு
கிளிநொச்சியில் விபத்து - இரு இளைஞர்கள் உயிரிழப்பு 29 Aug, 2025 | 10:52 AM கிளிநொச்சி ஏ-09 வீதியின் பரந்தன் விவசாயப் பண்ணைக்கும் கரடிப்போக்கு சந்திக்கும் அண்மித்த பகுதியல் டிப்பர் வாகனம், பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றின் பின்னால் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து இன்று வெள்ளிக்கிழமை (29) அதிகாலை 5.15 மணிக்கு கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றுடன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதி, அதே திசையில் பின்னால் சட்டவிரோத கசிப்பினை கொண்டு வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து எற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/223656
-
முல்லைத்தீவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள மூதாட்டியின் மரணம்
முல்லைத்தீவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள மூதாட்டியின் மரணம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 84 வயது வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண், மூங்கிலாறு பகுதியில் உள்ள வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அறிந்த மக்கள், புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார், சடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்ட பின்னர், உடற்கூறு பரிசோதனைக்குப் பின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். உயிரிழந்தவர், கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 84 வயதுடைய கோபாலன் குண்டுமணி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், குறித்த காணியை விலைக்கு வாங்கி, சிறு கைத்தொழில் செய்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது கொலையா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பிடத்தக்க விடயமாக, இதே மூங்கிலாறு பகுதியில், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட அதே வீட்டிலேயே இந்தச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. மேலும், சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில், வெட்டுக்காயங்களுடன் மற்றொரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. இவ்வாறான தொடர் சம்பவங்கள் முல்லைத்தீவு மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. முல்லைத்தீவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள மூதாட்டியின் மரணம்முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 84 வயது வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
-
‘மிஸ்டர் கிளீன்’ இமேஜை சிதைக்கும் சதி
‘மிஸ்டர் கிளீன்’ இமேஜை சிதைக்கும் சதி முருகானந்தன் தவம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது இலங்கை அரசியலில் கொதி நிலையை உருவாக்கியுள்ளதுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-என்.பி.பி. அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தி விட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஜே .வி.பி.-என்.பி.பி. அரசாங்கத்தின் ஆளுமைத்திறனையும் அரசியல் அனுபவத்தையும் மக்கள் நம்பிக்கையையும் கேள்விக்குட்படுத்தி அரசியல் பழிவாங்கலில் ஈடுபடும் ஒரு சாதாரண அரசாங்கமாகவே அருவருப்புடன் பார்க்க வைத்துள்ளது. “சட்டம் அனைவருக்கும் சமம்.முன்னாள் ஜனாதிபதியாகவிருந்தாலும் தவறு செய்திருந்தால் சட்டம் பாயும்’’என ஜே .வி.பி.-என்.பி.பி.அரசாங்கம் பீற்றிக்கொண்டாலும் அவ்வாறு பீற்றிக்கொள்வதற்கு அவர்களுக்கு தகுதியுண்டா என்பது முதல் கேள்வி. ஏனெனில் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடைவதற்குள்ளேயே இந்த அரசின் அமைச்சர்கள் சிலர் ஊழல்,மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுக்குள்ளான நிலையில் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. ஜே .வி.பி.-என்.பி.பி.அரசாங்கம் அமைந்தவுடன் சபாநாயகராக நியமிக்கப்பட்ட அசோக சபுமல் ரன்வல நாட்டையும் மக்களையும் சொந்தக்கட்சியையும் ஏமாற்றி ‘’போலி கலாநிதிப் பட்டம்’’சமர்ப்பித்த நிலையில் அது அம்பலமாகி அவர் பதவி விலகியபோதும் அவர் மீது இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் அரசாங்கத்தினால் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமன்றி ரில்லியன்,பில்லியன் கணக்கில் பண மோசடி செய்தவர்கள், கணக்கு வழக்கின்றி செலவு செய்தவர்கள், வெளிநாடுகளில் வைப்பிலிட்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் அமைச்சர்கள் பலர் இருக்கின்றனர். கடந்த காலத்தில் ஊழல், மோசடி, லஞ்சம், கடத்தல், காணாமல் ஆக்குதல், படுகொலை செய்தல் இவ்வாறு பல்வேறுபட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பலர் வெளியில் சுதந்திரமாக இருக்கின்றனர் .இவர்கள் மீதும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறானவர்களையெல்லாம் விட்டு விட்டு தனிப்பட்ட செலவு ஒன்றினை பொதுச் செலவாக காட்டி இருக்கின்றார் அதாவது அவரது மனைவியின் ஒரு பட்டமளிப்பு விழாவுக்கு பிரிட்டனுக்கு சென்ற போது அதற்காக ஒரு கோடியே 66 இலட்சம் ரூபா செலவு செய்திருக்கின்றார் என்பதற்காகவே முன்னால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டிருக்கின்றார். இந்த அற்பத்தனமான குற்றச் சாட்டில் ‘’மிஸ்டர் கிளீன்’’ என அழைக்கப்படும் முன்னால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ததன் பின்னணியில் அரசியல் வன்மமும் அரசியல் பழிவாங்கலும் மட்டுமே உள்ளது. பட்டலந்தை வதைமுகாம் சூத்திரதாரி, மத்தியவங்கி பிணமுறி மோசடியில் தொடர்புபட்டவர் , உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறியவர் என்ற குற்றம்சாட்டுகளுக்குள்ளான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அந்த குற்றச் சாட்டுக்கள் எவை தொடர்பிலும் கைது செய்யாது . ‘’ஒரு கோடியே 66 இலட்சம் ரூபா தனிப்பட்ட செலவு செலவு செய்திருக்கின்றார்’’ என்ற குற்றச்சாட்டில் கைது செய்தமை ‘’மிஸ்டர் கிளீன்’’என்ற அவரது இமேஜை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உண்மையில் குற்றம் செய்தவரா என்பதற்கான எந்த விளக்கம் கோரல்கள், எதுவுமின்றி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உத்தியோகபூர்வ பயணமாக அமெரிக்காவுக்கு சென்று திரும்பும் போது லண்டன் ஊடாக வந்த அவர் உத்தியோகபூர்வ அழைப்பொன்றை ஏற்று இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டதுடன், பல்கலைக்கழக உபவேந்தரின் 25 வருட பூர்த்தி இராபோசன விருந்து நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார். இதற்கான ஆதராங்கள் இருக்கின்ற போதும், முறையான பொலிஸ் விசாரணைகள் இன்றி அந்த விசாரணைகள் முடிவு செய்யப்படாமல் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் வெள்ளிக்கிழமையில் திடீர் கைதை மேற்கொண்டுள்ளனர். வெள்ளிக்கிழமை கைது செய்தால் சனி ஞாயிறு தினங்களில் நீதிமன்றங்கள் செயற்படாது, ஆகவே ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு இரு நாட்களுக்காவது சிறையில் இருக்க வேண்டும் என்று நன்கு திட்டமிட்டே வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்கவை விசாரணைக்கு திகதி குறிப்பிட்டு அழைத்து கைது செய்து நீண்ட நேரத்தின் பின்னரே நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கும் திடீர் மின்தடையை ஏற்படுத்தி நீதிமன்ற நடவடிக்கையினை தாமதப்படுத்தி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்குவதனை தடுத்து விளக்கமறியலில் வைத்தனர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஜே .வி.பி.-என்.பி.பி. அரசாங்கத்தில் ஜே .வி.பி.அமைச்சர்கள் மட்டுமே பெரிதாக வீராப்பு பேசிக்கொண்டிருக்கின்றனர் .என்.பி.பி. அணியினர் அடக்கியே வாசிக்கின்றனர்.இதனால்தான் ஜே .வி.பி.யின் பெலவத்தை தலைமையகத்தின் தேவைக்காகவே இந்தக் கைது இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரு முன்னாள் ஜனாதிபதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி . ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்ட பின்னரே ஒரு கருத்து முன்வைத்துள்ளார். அதுவரையில் அவர் வாய் திறக்கவில்லை. அதுமட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச , மைத்திரி பால சிறிசேன , கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீதும் பல குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில் அவர்களையெல்லாம் விட்டு விட்டு ராஜபக்சக்களினால் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்ட நாட்டை மீட்டெடுத்த,அதன்மூலம் தற்போது ஜே .வி.பி. -என்.பி.பி. அரசாங்கம் பெரிதாக சிக்கலின்றி நாட்டை முன்னெடுத்தது செல்லக்கூடிய நிலையை ஏற்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்துள்ளமை பட்டலந்தை வதைமுகாமில் பலியான தமது தோழர்களுக்காக பழிதீர்க்கும் அரசாங்கத்தின் ஒரு நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகின்றது. அப்படியானால் பட்டலந்தை வதை முகாம் வழக்கு தொடர்பில் கைது செய்திருக்கலாமே என்ற கேள்விகள் எழும். அப்படி அந்த வழக்கில் கைது செய்தால் அது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் எனக் கருதப்படும் . உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் கைது செய்தால் தமது அண்டவாளங்களும் தண்டவாளம் ஏறி விடும், மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் கைது செய்ய முடியாது என்பதால்தான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அரச பணத்தை தனிப்பட்ட ரீதியில் செலவிட்ட குற்றச்சாட்டில் கைது செய்து அவரை அவமானப்படுத்தி பழி தீர்த்துள்ளனர். ஆக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம் இலங்கை வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவரை சிறிய குற்றச்சாட்டுக்காகவே கைது செய்த அரசு என்ற வரலாற்று பதிவை ஜே .வி.பி.-என்.பி.பி.அரசு பதிவு செய்துள்ள நிலையில் அரச அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து அரசியலமைப்பு சர்வாதிகாரத்தின் மூலம் ‘’மிஸ்டர் கிளீன்’’என அரசியல் எதிரிகளினால் கூட மதிக்கப்படும் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்து அரசியல் பழி தீர்த்த மோசமான ஓர் அரசாங்கம் என்ற வரலாற்று பதிவையும் ஜே .வி.பி.-என்.பி.பி.அரசாங்கம் பதிவு செய்துள்ளது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மிஸ்டர்-கிளீன்-இமேஜை-சிதைக்கும்-சதி/91-363673
-
தோற்றுப் போனது ஹர்த்தால்
தோற்றுப் போனது ஹர்த்தால் லக்ஸ்மன் வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிரான நிலைப்பாடுகள் காணப்பட்டாலும் காலம், சூழல் அறிந்து சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை தமிழரசுக் கட்சியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவருடைய சகாக்களும் நிச்சயம் புரிந்து கொண்டிருப்பார்கள். ஹர்த்தால் என்கிற கடையடைப்பு அகிம்சைப் போராட்டங்களின் இறுதி வடிவமாகவே கருதப்படுகிறது. கடுமையான பொது எதிர்ப்பாக இருக்கின்ற ஹர்த்தாலை விடவும் தமது எதிர்ப்பை வேறு எப்படிக் காண்பிப்பது என்கிற நிலையில்தான் ஹர்த்தால் கையில் எடுக்கப்படுவது வழமை. குசராத்தியைதாய்மொழியாகக் கொண்ட காந்தி, பிரித்தானிய அரசுக்கு எதிராக அதிகம் ஹர்த்தாலை பயன்படுத்தியிருக்கிறார். அதிலிருந்துதான் இந்த ஹர்த்தால் தமிழ் உள்ளிட்ட தெற்காசிய மொழிகளிலும் பரவியதாக பதிவுகள் குறிப்பிடுகின்றன. இவ்வகையான வேலைநிறுத்தம் பங்களாதேசம், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பரவலாக கடைபிடிக்கப்பட்டு வரும் போராட்ட உத்திகளில் ஒன்று என்ற வகையில் நமது நாட்டில் கடந்த காலங்களில் அடிக்கடி நடைபெற்ற ஒன்றாக இருந்திருக்கிறது. இலங்கையில் ஆயுத யுத்தம் நடைபெற்ற காலங்களில் விடுதலைப் புலிகளால் இந்த ஹர்த்தால் அடிக்கடி அறிவிக்கப்படுவது வழமை. அவ்வேளைகளில், கடைப்பிடிக்கப்பட்ட ஹர்ததாலுக்கும் இப்போதைய நிலைக்கும் நிறையவும் வித்தியாசம் இருக்கிறது. அன்றைய காலங்களில் கடுமையான அழுத்தம் உடைய அச்சத்துடனேயே நடைபெற்றிருந்தது. இருந்தாலும், மக்களால் ஏதோ ஒருவகையில் உரிமை சார்ந்த பிரச்சனைகள் மீதான எதிர்பார்ப்பில் உணர்வு பூர்வமாகவே அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. ஆயுத யுத்த மௌனிப்புக்குப் பின்பு ஹர்த்தால் தமது தேவைகளை நிவர்த்தி செய்து கொண்டே பொது மக்கள் ஆதரவு கொடுத்தார்கள். ஹர்த்தால் வெறுமனே தமிழ் மக்களின் போராட்ட வடிவமாக மாத்திரம் இருக்கவில்லை. அது ஒரு பொதுவான விடயமே. அதற்கான அழைப்பு விடுப்பவர்கள் முடிவில் வெற்றி என அறிவித்தாலும் நடைபெற்றது, அனைவரும் அறிந்த விடயம் அது இருப்பதால் யாரும் சீர் தூக்கிப் பார்ப்பதில்லை. 2022ஆம் ஆண்டு மே மாத ஆரம்பத்தில் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த ‘அரகலய’ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சுகாதாரம், போக்குவரத்து, ரயில், மின்சாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகள் உட்பட 2000க்கும் மேற்பட்ட குழுக்கள் அடங்கிய சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து ஒரு பொது அடைப்பு என்கிற ஹர்த்தாலை நடத்தின. அரசு, அரசினுடைய இயந்திரத்தை இயக்க முயன்றிருந்தாலும் அரசின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றே சொல்லாம்.நாட்டின் ஜனாதிபதியாக இருந்த கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று அந்தக் ஹர்த்தால் நடத்தப்பட்டு இருந்தது. ‘அரகலய’ போராட்டத்தின் பலனாக அரசாங்கம், ஜனாதிபதி கோட்டபாய பதவி விலகல், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி இவ்வாறு பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. 2022இல் நடைபெற்ற ஹர்த்தாலானது 1953ஆம் ஆண்டில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட முழு ஹர்த்தாலுக்கு பின்னர் நடைபெற்ற நாடு தழுவிய ஹர்த்தாலாக பார்க்கப்பட்டது, 1953ஆம் ஆண்டு ஹர்த்தால் காரணமாக அப்போதைய பிரதமர் டட்லி சேனநாயக்க பதவி விலகியிருந்தார். இவ்வாறு பெரும் முடிவுகளுக்கு இலங்கையில் மாத்திரமல்ல, உலகின் வேறு நாடுகளிலும் ஹர்த்தால்கள் காரணமாக இருந்திருக்கின்றன. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில், யுத்த மௌனிப்புக்குப் பின்னர் 2015, 2017, 2018 என ஹர்த்தால்கள் தமிழ்ப் பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. இவை தமிழ் மக்களின் அடிப்படை உரிமை பிரச்சினை, அடக்குமுறைகளுக்கு எதிராக நடத்தப்பட்டிருக்கின்றன. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கிழக்கில் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் ஏற்பாட்டில் ஒன்று நடைபெற்றது. இந்தக் ஹர்த்தாலானது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் கூட்டத்தொடரை இலக்காகக் கொண்டு சர்வதேசத்தின் நேரடித்தலையீட்டினைக் கோரியும், பொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கூடாது எனகோரியும் ஹர்த்தாலுடன், கவனயீர்ப்பு பேரணியும் நடத்தப்பட்டு இருந்தது. அதேபோன்று, 2020ஆம் ஆண்டுச் செப்டெம்பரிலும் இந்திய இராணுவத்திற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இலங்கை அரசாங்கம் நீதிமன்றத்தின் ஊடாகத் தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. 2023 ஒக்டோபர் மாதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (புளோட்), தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன இணைந்து ஒற்றுமையாக ஒரு அறிவிப்பை விடுத்திருந்தன. அது இவ்வாறுதான் இருந்தது “நாட்டில் தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் அநீதிகளையும், நீதி மறுக்கப்படுவதையும் உலகத்தின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரும் நோக்குடனும், எமது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அவற்றில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதைக் கண்டித்தும் மயிலத்தமடு - மாதவணை மேய்ச்சல் தரையை ஆக்கிரமித்து இருப்போரை வெளியேற்றக் கோரியும், எமது தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் எனப்படும் ஒரு பொது முடக்கத்திற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகளாகிய நாம் ஒன்றிணைந்து அழைப்பு விடுக்கின்றோம்”. இந்தக் ஹர்த்தால் வெற்றிகரமாக நடைபெற்றது என்று சொல்லாம். வடக்கு, கிழக்கை தளமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு வழங்கியிருந்தன. அதேநேரத்தில், தமிழ் மக்கள் அரசியல் போராட்டம், அகிம்சை, ஹர்த்தால், கடையடைப்பு, பகிஷ்கரிப்பு என்று வன்முறை சாராததாகவே தமிழ் மக்களது போராட்டங்கள் இருந்தது. அவற்றின் பலனின்மையால் மிதவாத தலைமை இளைஞர்களிடம் கைமாறியபோது, ஆயுதப் போராட்டமாக மாறியது மட்டுமல்லாமல், நாட்டில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டது. அது 2009 மே 18 முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது. அதன் பின்னர்த் தமிழ் மக்களின் அரசில் வழிநடத்தல் அரசியல் தலைவர்களிடம் கைமாறியது. ஆயுதப்போராட்டம் நடைபெற்ற காலங்களிலும் ஹர்த்தால்கள் நடைபெற்றிருந்தாலும், முன்னர் நடந்தது போல வட கிழக்கில் மீண்டும் ஹர்த்தால் கடையடைப்பு, பகிஸ்கரிப்புகள் ஆரம்பித்தன. அவற்றினால் பலனேதுமில்லை என அரச தரப்புகள் கூறிக் கொண்டாலும், நடைபெற்றது என்னவோ உண்மையானதே. இதற்கிடையில் தான் கடந்த 18ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிவிப்பாக வெளிவந்த ஹர்த்தால் தொடர்பாக நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது. இந்தக் ஹர்த்தாலானது எழுந்தமானமாக, எந்தவொரு ஆராய்வும் இன்றி, திட்டமிடப்படாத வகையில் எடுக்கப்பட்டது என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. முதலில் ஒகஸ்ட் 15ஆம் திகதி என அறிவிக்கப்பட்டது. பின் அன்றைய தினம் மடு மாதா திருத்தலத்தின் வருடாந்த திருவிழா என வெளிப்படுத்தப்பட்டதும் பின்னர் 18ஆம் திகதியாக மாற்றப்பட்டது. எவ்வாறாக இருந்தாலும், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் பொருத்தமற்றதாக ஆகிப்போனது. முல்லைத்தீவில் நடைபெற்ற சம்பவமானது திடீரென நடைபெற்ற ஒன்றல்ல. வழமையான செயற்பாட்டின் எதிரொலியே. ஆனாலும், பாதுகாப்புத் தரப்பும், அரசாங்கமும் உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கியிருந்தன. அது ஒருவகையில் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், அதிகப்படியான இராணுவப் பிரசன்னம் இவ்வாறான நிலைமைகளை தோற்றுவிக்கும் என்பது தான் யதார்த்தம். எது எப்படி சொல்லப்பட்டாலும், வடக்கில் கிழக்கில் ஹர்த்தால் தோற்றுப் போனது. பிசுபிசுத்து போனது, வெற்றி பெறவில்லை என்பதே நிலைமை. இந்த நிலைமை எதனால் ஏற்பட்டது. இதனை எவ்வாறு சீர் செய்வது எவ்வாறு என்பது பற்றி இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆராய்ந்தாக வேண்டும் என்பது போல, தமிழ் மக்களும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். ஒற்றுமையாக ஒருமித்த முடிவுடன் தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டிய விடயத்தில் எதேச்சதிகாரம் ஒன்றுக்கும் பிரயோசனம் அற்றது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஆனால், இந்தத் தடவை நடைபெற்ற ஹர்த்தால் பிசுபிசுப்புடன் முடிந்திருந்தாலும் வெளி உலகிற்கும் அரசாங்கத்திற்கும் ஒரு செய்தி கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இது நாட்டுக்கு நல்ல சகுனம் அல்ல என்றெல்லாம் கருத்து வெளியிட முனையும் தமிழ் அரசியல் தரப்பினர் ஹர்த்தால் தோற்றுப் போனது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தோற்றுப்-போனது-ஹர்த்தால்/91-363604
-
நெல்லியடியில் வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் பணம் கொள்ளை ; 10 சந்தேகநபர்கள் கைது
41,000 பிராங்க் திருட்டு; கைதான அனைவருக்கும் விளக்கமறியல் உத்தரவு! வடமராட்சி அல்வாய் பகுதியைச் சேர்ந்த சுவிஸ் பிரஜையிடம் இருந்து, 41 ஆயிரம் பிராங்கை (இலங்கை மதிப்பில் ஒன்றரைக் கோடி ரூபாவுக்கும் அதிகம்) திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அல்வாய் கிழக்கு, அத்தாயைச் சுவிஸ் பிரஜையான வயோதிபர் தனது 41 ஆயிரம் சுவிஸ் பிராங் நோட்டுகளை தனது வீட்டில் வைத்திருந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் பார்த்தபோது அவை காணாமற்போயிருந்தன. இதுதொடர் பில் நெல்லியடிப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார். அந்த வீட்டில் வேலை செய்தவர் உள்ளிட்ட 9 சந்தேகநபர்களை கைது செய்ததுடன் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேற்படி சுவிஸ் பிராங்கை பகுதிபகுதியாகத் திருடி ஆடம்பரச் செலவு செய்தமை தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டு, நேற்றுமுன்தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதே. அனைவரையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். திருடப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/41,000_பிராங்க்_திருட்டு;_கைதான_அனைவருக்கும்_விளக்கமறியல்_உத்தரவு!
-
யாழ். மாவட்டத்தில் உள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை
யாழ். மாவட்டத்தில் உள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை பொதுநிர்வாக அமைச்சர் தெரிவிப்பு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பதவிநிலை உத்தியோகத்தர்கள், சாரதிகள், அலுவலக உதவியாளர் போன்றவற்றுக்கான ஆளணி வெற்றிடங்கள் அரசாங்கத்தால் நிரப்பப்படும் என்று பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரட்ண தெரிவித்துள்ளார் . யாழ்ப்பாண மாவட்டத்தின் தேவைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றத்தை ஆராயும் கூட்டம் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச். எம்.எச்.அபயரட்ண, அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார, மேலதிகச் செயலாளர் நிஷாந்த, யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், மாவட்டச் செயலகப் பதவிநிலை உத்தியோகத்தர்கள். பிரதேச செயலாளர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தபோதே உள்ளூராட்சி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- யாழ்.மாவட்டத்தில் இயற்கை வளங்கள் உள்ளன. வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது நிலவசதி பற்றாக்குறையாகவுள்ளது. ஆகையால் இருக்கின்ற நில வளங்களைத் திறமையாகப் பயன்படுத்தவேண்டும். அதன் மூலமே உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியும். அபிவிருத்தித் திட்டங்களுக்கு விடுவிக்கப்பட்ட நிதியை இந்த ஆண்டுக்குள் முழுமையாகப் பயன்படுத்துவதைச் சவாலாக ஏற்றுச் செயற்படுத்தவேண்டும். இனம், மதம், மொழி கடந்து சகோதரத்துவத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றிணைந்து செயற்படவேண்டும் -என்றார். கூட்டத்தில் மாவட்டச் செயலர், பிரதேசசெயலர்கள் முன்வைத்த கோரிக்கைகள் சாதகமாகப் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/யாழ்._மாவட்டத்தில்_உள்ள_ஆளணி_வெற்றிடங்களை_நிரப்புவதற்கு_நடவடிக்கை
-
108 தம்பதியினருக்கு இலவச திருமணம்!
108 ஜோடிகளுக்கு திருமணம் adminAugust 28, 2025 யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத நிலையில் இருந்த 108 ஜோடிகளுக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின் , நிதியுதவியில் , 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு , 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டது இந்த 108 தம்பதியினரும் , யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாகவே தெரிவு செய்யப்பட்டனர். https://globaltamilnews.net/2025/219730/ https://www.facebook.com/share/v/1AS7LQ8zPH/?mibextid=wwXIfr
-
இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலம்- 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுப்பு!
இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலம்- 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுப்பு! adminAugust 28, 2025 கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை (28.08.25) அன்று மாலை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் திருமதி தெசீபா ரஜீபன் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் அடையாளம் காணப்பட்ட பல இடங்கள் தோண்டப்பட்டு வருகின்றன. கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா- பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அம்பாறை மாவட்ட காரைதீவு பகுதியை சேர்ந்த சந்தேக நபர் குறித்த பகுதிக்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அவர் கடந்த காலங்களில் திருக்கோவில் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு சிம் விற்பனை முகவராக செயற்பட்ட அருளானந்தன் சீலன் என்பவரை கடத்தி படுகொலை செய்து குறித்த இடத்தில் புதைத்திருப்பதாக அரசு சாட்சியாக மாறி குற்றப்புலனாய்வு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். இதன் போது குறித்த பிரதேசத்தை சுற்றி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது டன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உட்பட பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் காவற்துறையினர் விசேட அதிரடிப்படையினர் தடயவியல் காவற்துறையினர் என பலரும் பிரசன்னமாகியிருந்தனர். கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா-பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அனோசியஸ் சுரேஷ் கண்ணா எனப்படும் யூட் எனும் சந்தேக நபர் ஏற்கனவே கடந்த மாதம் ஜூ (31.07.25) அன்று குறித்த பொது மயானத்திற்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்து செல்லப்பட்டு இருந்தார். எனினும் குறித்த நபர் வாக்கு மூலத்திற்கமைய திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட பொது மயானத்தில் தேடுதல் மற்றும் தோண்டப்பட்ட பின்னர் எதுவும் கிடைக்காத காரணத்தினால் குறித்த செயற்பாடுகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டன.பின்னர் மற்றுமொருவரின் வாக்கு மூலத்திற்கமைய இன்று மற்றொரு இடமான தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. https://globaltamilnews.net/2025/219717/
-
போலி ‘like’ காட்டி தமிழக மக்களை ஏமாற்றியுள்ள விஜய்
போலி ‘like’ காட்டி தமிழக மக்களை ஏமாற்றியுள்ள விஜய் August 28, 2025 1:42 pm தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், அண்மையில் மதுரையில் நடத்திய மாநாட்டில் எடுத்து செல்பி காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த காணொளி ஒரு கோடிக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றிருந்ததாக பரப்பப்பட்ட செய்தி போலியானது என தமிழகத்தின் பிரபல யூடியுபர் மாரிதாஸ் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் மக்களை ஏமாற்றும் பல உத்திகளை கடைப்பிடித்து வருவதாக கூறியுள்ள மாரிதாஸ், அப்பட்டமாக மக்களை ஏமாற்று பணியில் விஜய் இறங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். குறித்த காணொளி பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோர் பகிரும் இன்ஸ்டாகிராம் காணொளிக்கு நிகராக மக்களை சென்றடைந்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் மத்தியில் போலி செய்திகளை பகிர்ந்துள்ளதாக மாரிதாஸ் கூறியுள்ளார். குறித்த காணொளியை இன்ஸ்டாகிராமில் ஒரு கோடி பேர் வரை லைக் செய்துள்ளனர். ஆனால், அவர்களில் 1 சதவீதமானவர்கள் மாத்திரமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் ஏனையவர்கள் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று அவர் புலனாய்வு செய்து வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் விஜய் யாரென தெரியாதவர்கள் எவ்வாறு அவரது காணொளிக்கு லைக் செய்ய முடியும் என கேள்வியெழுப்பியுள்ள அவர், விஜய் தமிழகத்திலா வடமாநிலங்களிலா கட்சி நடத்துகிறார் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். லைக்களை பெற்றுக்கொடுக்கும் இணைய நிறுவனங்களுக்கு பணம் செலுத்து இவ்வாறு லைக்களை நடிகர் விஜய் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மாரிதாஸ், இது முற்றிலும் தமிழக மக்களை ஏமாற்றும் செயல்பாடு எனக் கூறியுள்ளார். https://oruvan.com/vijay-has-deceived-the-people-of-tamil-nadu-by-showing-fake-likes/