Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. கிளிநொச்சி மாவட்ட எம்பி குறித்து அப்பகுதியின் செய்தியாளரின் விமர்சனம்! August 28, 2025 — கருணாகரன் — அரசியல் மோசடிகள் பலவிதமானவை. அத்தகைய மோசடிகளை, தவறுகளை, குற்றங்களை இழைத்தவர்கள் எல்லாம் இலங்கையில் தண்டனை பெறும் காலமொன்று உருவாகியுள்ளது. ‘அரகலய‘ என்ற மக்கள் எழுச்சி உருவாக்கிய வெற்றிகளில் இதுவும் ஒன்று. அதுவே ஆட்சிமாற்றம், அரசியல் மாற்றங்களைக் கொண்டு வந்தது. அத்தகைய விழிப்புணர்வும் எழுச்சியும் தமிழ்ச் சமூகத்திலும் நிகழ வேண்டும். நிகழும். அப்படி நிகழ்ந்தால்தான் மோசடிக்காரர்களும் பிற்போக்கானோரும் சமூக விரோதிகளும் விலக்கப்படுவார்கள், தண்டனைக்குள்ளாக்கப்படுவர். தமிழ்த் தரப்பில் அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு உள்ளாகிவருபவர் சிவஞானம் சிறிதரன். எத்தகைய கூச்சமும் தயக்கமும் இல்லாமல் தன் நெஞ்சறியப் பொய் சொல்வதிலிருந்து அடாத்தாக நடப்பது, ஏமாற்றுவது, மோசடி செய்வது எல்லாமே அவருக்குப் பெருங்கலை என்று பார்ப்பவர்களும் உண்டு. இதைப் பற்றிய கடுமையான விமர்சனங்கள் ஆயிரமாக இருந்தாலும் அதில் இதுவரையில் அவர் வெற்றிகளையே பெற்றுள்ளார். அதொரு தீராச் சுவையாக மாறியுள்ளது. அதனால் அதையே அவர் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறார். அந்தச் சுவை அவரை எல்லை கடந்து செல்ல வைக்கிறது என்று பார்க்கப்படுகின்றது. இதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. எளிய – அண்மைய உதாரணம், கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் பெண் நோயியல் மற்றும் மகப்பேற்றுச் சிறப்புப் பிரிவுக்கு (25.08.2025) சென்று, அதனுடைய இயங்கு நிலை பற்றிப் பேசியிருப்பதாகும். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அதைச் செய்வதற்கு அவருக்கு உரிமையும் தகுதியும் உண்டு. ஆனால், அதை அவர் செய்திருக்க வேண்டியது நேற்றல்ல. அதற்கு முன்பாகவே செய்திருக்கவேண்டும். அதற்கு முன்பு என்றால், பெண் நோயியல் மற்றும் மகப்பேற்றுச் சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு (திறந்து வைக்கப்பட்டு) ஓராண்டாகிய பின்னரும் அது இயங்காமலே உள்ளது. மட்டுமல்ல, பெண் நோயியல் மற்றும் மகப்பேற்றுச் சிறப்புப் பிரிவு இயங்காமல் இருப்பதைக் காரணம் காட்டி, அந்தப் பிரிவிலுள்ள சில உபகரணங்களை பிற மருத்துவனைகளுக்கு இடமாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதெல்லாம் சிறிதரன் இதைப்பற்றிப் பேச முன்வரவேயில்லை. அதைப் பற்றி அவருக்கும் தெரியாது. அவருடைய ஆட்களுக்கும் தெரியாது. அவர்களுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறையே இல்லை. இந்த நிலையில் மருத்துமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கம் 05.06.2025 இல் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனைச் சந்தித்து இந்தப் பிரிவின் நிலைமையை விளக்கிப் பேசியிருந்தது. அத்துடன் கண் சிகிச்சைக்குரிய நிபுணர் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தது. மட்டுமல்ல, Medical ward பற்றாக்குறையையும் எடுத்து விளக்கியது. பெண் நோயியல் மற்றும் மகப்பேற்றுச் சிறப்புப் பிரிவு புதிய தொகுதியில் இயங்கத் தொடங்கினால், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் மகப்பேற்று விடுதிகளை Medical ward களுக்கு வழங்க முடியும் என்பதையும் எடுத்துக் கூறியது. இதனை அடுத்து, ஆளுநர் அடுத்த வாரமே கிளிநொச்சி மாவட்டப் பொதுமருத்துவமனைக்கு நேரிற் சென்று குறித்த பிரிவைப் பார்வையிட்டு, பணிப்பாளருடனும் பேசியிருந்தார். கூடவே வடமாகாண சுகாதார செயலாளரும் பார்வையிட்டிருந்தார். ஆனாலும் நிலைமைகளில் உடனடிச் செயற்பாட்டு விளைவு கிட்டியிருக்கவில்லை. அல்லது தாமதங்கள் ஏற்பட்டன. அதற்குரிய தயார்ப்படுத்தல்களை அவர்கள் மேற்கொண்டிருக்கக் கூடும். செயற்பாடுகள் தாமதமடைய பிரச்சினைகள் வேறு விதமாக மாறத் தொடங்கின. ஏற்கனவே இயங்கி வருகின்ற மகப்பேற்றுப் பிரிவின் கட்டில்களே உக்கிச் சிதைவடைந்த கட்டத்துக்கு வந்திருந்தன. அத்துடன். கண் சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவு போன்றவற்றுக்கும் நிபுணர்கள் இல்லாமல் அதுவும் இயங்கா நிலைக்குள்ளாகி, நோயாளர்கள் சிரமங்களை எதிர்கொள்ளத் தொடங்கினர். இந்த நிலையில் நோயாளர் நலன்புரிச் சங்கம் தவிர்க்க முடியாமல் நோயாளரின் நிலை நின்று செயற்பட வேண்டிய கட்டத்துக்குத் தள்ளப்பட்டது. ஆகவே இவற்றை இயங்க வைப்பதற்கான அழுத்தங்களை – ஊக்கத்தை அளிக்க வேண்டும் என நோயாளர் நலன்புரிச் சங்கம் பல்வேறு தரப்புகளோடும் பேசி தொடர்ந்தும் முயற்சிகளை எடுக்கத் தொடங்கியது. அதேவேளை இதற்கான அழுத்தப் போராட்டமொன்றை 29.98.2025 வெள்ளிக்கிழமை காலை நடத்துவதற்குத் தீர்மானித்து, அதற்கான ஊடகவியலாளர் சந்திப்பை 22.08.2025 இல் நடத்தியது. இந்தச் செய்தி அன்று இணையத் தளங்களிலும் மறுநாள் பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தது. அத்துடன், இந்தப் போராட்டத்துக்கு மக்களின், மாவட்ட பொது அமைப்புகளின் ஒத்துழைப்பைக் கோரும் பிரசுரமொன்றையும் அச்சிட்டு விநியோகித்திருந்தது. திட்டமிட்டபடி அழுத்தப் போராட்டத்துக்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இதேவேளை மறுபக்கத்தில் இந்தப் பிரிவை இயங்க வைப்பதற்கான சிறப்புக் கூட்டமொன்றை 25.08.2025 பி.ப 5.00 மணிக்கு வடமாகாண ஆளுநர் ஏற்பாடு செய்திருந்தார். மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், யாழ் பல்கலைக்கழக மருத்துவத்துறைத் தலைவர், யாழ் போதானா மருத்துவமனைப் பணிப்பாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், குறித்த பிரிவுகளுக்கான சிறப்பு மருத்துவ நிபுணர் அணி, கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனைப் பணிப்பாளர், கிளிநொச்சிப் பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் போன்ற பல்வேறு தரப்பினருடன் நடத்துவதற்கு இந்த ஏற்பாட்டை அவர் செய்திருந்தார். இந்த நிலையில்தான் (இந்தத் தகவல்களை எல்லாம் எப்படியோ அறிந்து கொண்ட) சிறிதரன், திடீரென விழித்துக் கொண்டவராக மாவட்டப் பொதுமருத்துவமனைக்குச் சென்று (25.08.2025) குறித்த பிரிவைப் பார்வையிட்டு, இயங்க வைப்பது பற்றிப் பேசுவதாகப் படங் காட்டியிருக்கிறார். அதாவது தானே இந்த பெண் நோயியல் சிறப்பு மகப்பேற்றுப் பிரிவை இயங்க வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்கிறேன். தன்னுடைய முயற்சியின் விளைவாகத்தான் இனிமேற் காரியங்கள் எல்லாம் நடக்கப்போகின்றன என்ற விதமாக. இது தொடர்பாக சிறிதரனின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள்… சிறிதரனே முதன்முதலாக மின்சாரத்தைக் கண்டு பிடித்தவர், சிறிதரனே அவரே இந்தப் பூமியில் அதியற்புதமான விடயங்களை எல்லாம் செய்து கொண்டிருப்பவர் என்ற றேஞ்சில் உள்ளது. இது எவ்வளவு சிரிப்புகிடமானது? எத்தனை பெரிய ஏமாற்று? என்னமாதிரியான கோமாளித்தனம்? பெரிய அரசியல் மோசடி? எத்தகைய சிறுமை? இதொன்றும் சிறிதரனுக்குப் புதியது இல்லை. அவர் ஆசிரியராகக் கற்பித்தகாலத்திலிருந்தே இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறார் என்கின்றனர் அவருடன் கூடப் பணியாற்றியவர்கள். அதனால்தான் அவரால் ஒரு சிறந்த ஆசிரியராக எந்த மாணவராலும் எந்தப் பாடசாலையினாலும் நினைவு கூர முடியவில்லை எனவும் வாதிடுகின்றனர். அரசியலில் ஈடுபடத் தொடங்கிய பிறகு சிறிதரன் சொன்ன, சொல்லி வரும் பொய்களும் செய்த, செய்து வரும் ஏமாற்றுகள் அதிகம். இங்கே பிரச்சினை அதுவல்ல. ஏனென்றால் சிறீதரன் அப்படித்தான் (இவ்வாறான குணங்களுடன்தான்) இருக்கிறார். இருக்கப்போகிறார். அவருடைய ருசியும் வழியும் அதுவாகும். ஆனால் 2010 இலிருந்து இப்போது வரையான 15ஆண்டுகள், (நான்கு தடவை) பாராளுமன்றப் பிரதிநிதியாக இருப்பவர், தான் பிரதிநிதித்துவம் செய்து வருவதாகக் கூறும் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னேற்றத்துக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பு என்ன? கல்வித்துறையில் – மருத்துவத்துறையில் – விவசாய மேம்பாட்டுக்கு – சூழல் விருத்திக்கும் சூழல் பாதுகாப்புக்கும் – கடற்றொழில் விருத்திக்கு – பனை தென்னை வளத் தொழிலுக்கும் தொழிலாளர் நலனுக்கும் – பெண் தலைமைத்துவக் குடும்பத்தினரின் வாழ்க்கை உயர்வுக்கு -மாற்றுத் திறனாளிகளின் எதிர்காலத்துக்கு – விடுதலைப் புலிகளின் போராளிகளாகச் செயற்பட்டு – இன்று சிரமமான வாழ்க்கைச் சூழலை எதிர்கொண்டிருப்பவர்களின் வாழ்க்கைக்கு – பிிரதேசங்களின் அபிவிருத்திக்கு – இளைய தலைமுறையினரின் திறன் விருத்தி, தொழில் வாய்ப்புகளுக்கு – பண்பாட்டு வளர்ச்சிக்கு – வரலாற்றுத்துறைக்கு – இலக்கிய மேம்பாட்டுக்கு – சமூக வளர்ச்சிக்கு – இதில் எத்தகைய பங்களிப்புகளையும் வழங்கியதாகக் குறிப்பிட முடியாத நிலையில்தான் அவருடைய பிரதிநிதித்துவச் சிறப்பு உள்ளது. ஏற்கனவே பதவியில் இருந்த முருகேசு சந்திரகுமார், விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராஜா, அங்கயன் ராமநாதன், மனோ கணேசன், திகாம்பரம் போன்றோரின் நிதி ஒதுக்கீடு, செயற்திட்டங்களை தன்னுடைய வேலையாகவும் முயற்சியின் விளைவாகவும் கிடைத்ததாகவோ நடைபெற்றதாகவோ காட்டுவதே அவருடைய தந்திரோபாயமாக இருந்தது. மற்றும்படி சுயமாகச் சிந்தித்து, சரியாக ஒரு திட்டத்தை இனங்கண்டு, அதைச் செயலாக்கமாக மாற்றுவதற்கு அர்ப்பணிப்போடு சிறிதரனோ அவருடைய அணியினரோ முயற்சித்ததே இல்லை. அவர்களுடைய அரசியல் முதலீடுகளும் செயற்பாடுகளும் வாய்ப்பேச்சிலும் முகநூல் வம்பளப்பிலுமே கழிந்தது. சிறிதரனின் செல்வாக்குக்கு உட்பட்ட பிரதேச சபைகளினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள்தான் குறித்துச் சொல்லக் கூடியன. அவற்றில் பல இயங்கா நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அவற்றில் ஒன்று, ஆனையிறவு சந்தை வளாத்தில் நிர்மாணிக்கப்பட்ட கடைத்தொகுதிகள். மற்றது, பூநகரி வாடியடியில் கட்டி இடிக்கப்பட்ட சந்தை. அடுத்தது, கரடிப்போக்குச் சந்தியில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் போராளிகளுக்கான உதவி என்ற பேரில் கட்டி இடிக்கப்பட்ட கடைகள். இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால், எங்காவது, எவராவது ஒரு பிரச்சினையைப் பற்றிப் பேசினால் அங்கே ஓடோடிப்போய் தானே அதைப் பார்த்துச் சீர்ப்படுத்துகின்றவராக நிற்கிறார்; தோற்றம் காட்ட முற்படுகிறார். (இதற்காக சிலர் கையாட்களாக இருக்கிறார்கள் என்பதை இன்னொரு சந்தர்ப்பத்தில் காட்டலாம். அப்படியானவர்கள்தான் சிறிதரன் போன்றவர்களைக் காப்பாற்றுவதற்கும் தொடர்ந்து தீங்குகள் நடப்பதற்கும் காரணமானவர்கள். இதில் ஆசிரியராக இருப்பர் தொடக்கம் பல்வேறு நிலைகளில் உள்ளவர்கள் உண்டு). இது ஏன்? பதிலாக தானாகவே ஒன்றைக் கண்டு பிடிக்கவோ, ஒன்றைப் புதிதாகத் திட்டமிடவோ, ஒரு விடயத்தைச் செய்து முடிக்கவோ அவராலும் அவருடைய ஆதரவாளர்களாலும் முடியாதிருப்பது ஏன்? கிளிநொச்சி மாவட்டத்தில் அதி கூடிய காலம் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துக் கொண்டிருப்பவர் சிறிதரன். இந்தப் பதினைந்து ஆண்டு காலப்பகுதியில் எவ்வளவு சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி – உருவாக்கி வெற்றியடையச் செய்திருக்க முடியும்! குறைந்த பட்சமாக இரண்டு படை முகாம்களையாவது விலக்குவதற்குப் போராடியிருக்கலாம். அல்லது உண்மையைப் பேசி, சமூகங்களின் நல்லிணக்கத்தைப் பேணி, மக்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வைக் காண முயற்சித்திருக்கலாம். தான் படித்த, படிப்பித்த, வாழ்ந்த கிளிநொச்சி மாவட்டம் போரினால் முற்றாகவே அழிந்தது. அதை மீளக் கட்டியெழுப்பவும் அங்கே கல்வியை மேம்படுத்தவும் உழைத்திருக்கலாம். அப்படியெல்லாம் சிறிதரன் செயற்படவும் இல்லை. முயற்சிக்கவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் எல்லாவற்றையும் குழப்பிப் பாழ்படுத்தினார். அமைப்புகளையும் மக்களையும் தன்னுடைய அரசியலுக்காகப் பிளவுபடுத்தினார். எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், வர்த்தகர்கள் தொடக்கம் கோயில்களின் நிர்வாகம், கூட்டுறவு அமைப்புகள், விவசாய அமைப்புகள் எனச் சகலவற்றையும் பிளவுபட வைத்திருக்கிறார். கிளிநொச்சிக்கு வெளியே முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற அயல் மாவட்டங்களில் இந்த நோயில்லை. அங்கும் மாற்றுக் கருத்தாளர்கள், மாற்று அரசியற் சிந்தனையுடையோர், மறு அரசியற் தரப்பினர், அவற்றின் ஆதரவாளர்கள், மாற்று அணிகள் எல்லாம் உண்டு. ஆனால், அங்கே ஒரு ஜனநாயக அடிப்படை பேணப்படுவதுண்டு. விழுமியங்களுக்கான மதிப்புண்டு. கிளிநொச்சியில் அதெல்லாம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டாயிற்று. இங்கே பிரதேச சபைகளின் நூலகங்களில் கூட சாதி பார்ப்பதைப்போல வேறுபாடுகள் காட்டப்படுகின்றன. இதற்கு ஒத்து ஊதும் நிர்வாக அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது மிகக் கவலைக்குரியது. இதைக்குறித்து யாராவது கேள்வி எழுப்பினால் அவர்களை அவதூறு செய்து அடக்குவதற்கு முற்பட்டார் சிறிதரன். இதற்காக அவர் தன்னோடு ஒரு மூன்றாந்தரமான அணியொன்றை உருவாக்கியும் வைத்திருந்தார்; வைத்திருக்கிறார். இதெல்லாம் அவர் மீதான குற்றச்சாட்டுகளோ விமர்சனங்களோ மட்டுமல்ல, அவரைக் குறித்த உண்மையான விவரங்களாகும். இப்படியானவரை எப்படி தமிழரசுக் கட்சி தன்னுடைய அரசியற் பயணத்தில் அனுமதித்திருக்கிறது? சிறிதரனை மக்கள் ஆதரிப்பதால், தமிழரசுக் கட்சி அதற்கு – அந்த மக்கள் தெரிவுக்கு மதிப்பளித்து அனுமதித்துள்ளது – அதனால் அவரைக் கட்சியில் வைத்திருக்கிறது என்று சுமந்திரனோ அல்லது தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வேறு எவருமோ சொல்லலாம். கோட்டபாய ராஜபக்ஸவையும் மக்கள்தான் ஆதரித்தனர். மேர்வின் சில்வாவையும் விமல் வீரவன்ஸவையும்தான் ஆதரித்தனர். வாக்களித்தனர். அதற்காக அவர்கள் எல்லாம் சரியாகச் செயற்படும் ஆட்களா? மெய்யாகவே நாட்டுக்கும் சமூகத்துக்கும் நன்மையைத் தரக்கூடிய நபர்களா? சிறிதரனை முதன்மைப்படுத்தி மேடைகளில் ஏற்றிப் போற்றும் எழுத்தாளர்கள் இதைக்குறித்தெல்லாம் என்ன விளக்கம் சொல்ல முடியும்? இவர்கள் தாம் கொண்டுள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி, சிறிதரனை நெறிப்படுத்தலாம். பயனுள்ள பணிகளைச் செய்விக்கலாம். அந்தப் பொறுப்பு அவர்களுக்குண்டு. அல்லது அவரிடம் இவற்றைக் குறித்துக் கேள்விகளை எழுப்ப வேண்டும். எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் சமூகத்தின் பிரதிநிதிகளாவர். ஒரு வகையில் சமூகத்தை வழிப்படுத்துகின்றவர்கள், பண்படுத்துகின்றவர்கள். சமூக விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்டோர். என்பதால் இவர்களுக்கெல்லாம் இதில் பொறுப்புண்டு. சிறிதரனை ஆதரிக்கும் அமைப்புகள், உத்தியோகத்தர்கள், அதிகாரிகள், பிரமுகர்கள் எல்லோரும் இதைக் குறித்தெல்லாம் என்ன சொல்லப் போகிறார்கள்? ஆனால் ஒன்று, இவர்கள் எல்லோரும் இந்தத் தீமைக்கு – தவறுக்கு – ஏமாற்றுக்குப் பொறுப்பாளிகள்… அப்படி இவர்கள் பொறுப்பெடுக்கத் தவறினால் இந்தத் தவறுகள் பெருகிச் செல்லும். ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டம் அனைத்து நிலைகளிலும் மிகப் பின்தங்கியே உள்ளது. தவறுகளின் விளைவே அதுவாகும். அரசியற் பழிவாங்கல்களும் தனக்கு வேண்டியவர்களுக்குச் சார்பான நடவடிக்கைகளும் சமூகத்தையும் மாவட்டத்தையும் பின்தள்ளியுள்ளது. வேண்டுமானால் பழிவாங்கப்பட்டோரின் பட்டியலை சமர்ப்பிக்க முடியும். புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, மாவீரர்களின் தியாகத்தைச் சொல்லி அரசியல் லாபத்தை அறுவடை செய்கின்ற சிறிதரன் தரப்பு, மாவீர்கள் குடும்பங்களுக்கு ஆற்றிய பங்களிப்புகள் என்ன? புலிகளின் செயற்பாடுகளில், அவர்கள் உருவாக்கிய விழுமியங்களில் எவற்றைப் பின்பற்றுகின்றனர்? குறைந்த பட்சம் நான்கு இடங்களில் மரங்களையாவது உருப்படியாக நட்டிருக்கின்றனரா? பதிலாக மணலை அகழ்ந்தெடுப்பதும் மரங்களை – காடுகளை அழிப்பதும் சூழலைக் கெடுப்பதுமே நிகழ்த்தப்படுகின்றன. போதாக்குறைக்கு கிளிநொச்சியில் உள்ள சனத்தொகை ஒரு லட்சத்து எண்பது ஆயிரம். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மதுச்சாலைகளின் எண்ணிக்கை 20 க்கு மேல். இதைக்குறித்து ஒரு சொல் சிறிதரன் இதுவரையில் வெளியே பேசியதில்லை. பல பொதுக்காணிகள் (அரச காணிகள்) வசதி, அதிகாரம் படைத்தோரால் அபகரிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பற்றி மக்கள் பிரதிநிதி, மண் பற்றாளன் வாய் திறப்பதே இல்லை. இவையெல்லாம் சிறிதரனின் கோட்டைக்குள்தான் நடக்கின்றன. ஆனால், சிங்கம் கண்மூடித் தூங்குகிறது. (தொடரும்) https://arangamnews.com/?p=12284
  2. உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் - 23 பேர் பலி 29 Aug, 2025 | 08:48 AM உக்ரேன், ரஷ்யா இடையேயான போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். ஆனாலும், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரேன் மீது ரஷ்யா நேற்று தாக்குதல் நடத்தியது. உக்ரேன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு பகுதிகள் மீது ரஷ்யா ட்ரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும், 48 பேர் படுகாயமடைந்தனர். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டிஷ் அலுவலகங்கள் சேதமடைந்தன. https://www.virakesari.lk/article/223650
  3. வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் : வட, கிழக்கில் நாளை பாரிய கவனயீர்ப்பு போராட்டங்கள் 29 Aug, 2025 | 09:20 AM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு நாளை (30) சனிக்கிழமை வட, கிழக்கு மாகாணங்களில் பாரிய கவனயீர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் வருடாந்தம் வட, கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்படும். அதன் நீட்சியாக இம்முறையும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கி வடக்கிலும் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கி கிழக்கிலும் தனித்தனியாக இருவேறு கவனயீர்ப்புப்போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது இவ்வாறிருக்க தெற்கைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் பிரிட்டோ பெர்னாண்டோ தலைமையிலான காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் பிரதிநிதிகள், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதமர் ஹரினி அமரசூரியவிடமும், நீதியமைச்சிடமும், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திடமும் கொழும்பிலுள்ள சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரகங்களிடமும் இன்றைய தினம் கையளிக்கவுள்ளனர். மேலும் காணாமல்போனோர் விவகாரத்தின் தற்போதைய நிலைவரம் குறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் காணாமல்போனோர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வொன்றும் இன்று அலரி மாளிகையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223654
  4. கிளிநொச்சியில் விபத்து - இரு இளைஞர்கள் உயிரிழப்பு 29 Aug, 2025 | 10:52 AM கிளிநொச்சி ஏ-09 வீதியின் பரந்தன் விவசாயப் பண்ணைக்கும் கரடிப்போக்கு சந்திக்கும் அண்மித்த பகுதியல் டிப்பர் வாகனம், பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றின் பின்னால் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து இன்று வெள்ளிக்கிழமை (29) அதிகாலை 5.15 மணிக்கு கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றுடன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதி, அதே திசையில் பின்னால் சட்டவிரோத கசிப்பினை கொண்டு வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து எற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/223656
  5. முல்லைத்தீவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள மூதாட்டியின் மரணம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 84 வயது வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண், மூங்கிலாறு பகுதியில் உள்ள வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அறிந்த மக்கள், புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார், சடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்ட பின்னர், உடற்கூறு பரிசோதனைக்குப் பின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். உயிரிழந்தவர், கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 84 வயதுடைய கோபாலன் குண்டுமணி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், குறித்த காணியை விலைக்கு வாங்கி, சிறு கைத்தொழில் செய்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது கொலையா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பிடத்தக்க விடயமாக, இதே மூங்கிலாறு பகுதியில், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட அதே வீட்டிலேயே இந்தச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. மேலும், சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில், வெட்டுக்காயங்களுடன் மற்றொரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. இவ்வாறான தொடர் சம்பவங்கள் முல்லைத்தீவு மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. முல்லைத்தீவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள மூதாட்டியின் மரணம்முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 84 வயது வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
  6. ‘மிஸ்டர் கிளீன்’ இமேஜை சிதைக்கும் சதி முருகானந்தன் தவம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது இலங்கை அரசியலில் கொதி நிலையை உருவாக்கியுள்ளதுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-என்.பி.பி. அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தி விட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஜே .வி.பி.-என்.பி.பி. அரசாங்கத்தின் ஆளுமைத்திறனையும் அரசியல் அனுபவத்தையும் மக்கள் நம்பிக்கையையும் கேள்விக்குட்படுத்தி அரசியல் பழிவாங்கலில் ஈடுபடும் ஒரு சாதாரண அரசாங்கமாகவே அருவருப்புடன் பார்க்க வைத்துள்ளது. “சட்டம் அனைவருக்கும் சமம்.முன்னாள் ஜனாதிபதியாகவிருந்தாலும் தவறு செய்திருந்தால் சட்டம் பாயும்’’என ஜே .வி.பி.-என்.பி.பி.அரசாங்கம் பீற்றிக்கொண்டாலும் அவ்வாறு பீற்றிக்கொள்வதற்கு அவர்களுக்கு தகுதியுண்டா என்பது முதல் கேள்வி. ஏனெனில் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடைவதற்குள்ளேயே இந்த அரசின் அமைச்சர்கள் சிலர் ஊழல்,மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுக்குள்ளான நிலையில் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. ஜே .வி.பி.-என்.பி.பி.அரசாங்கம் அமைந்தவுடன் சபாநாயகராக நியமிக்கப்பட்ட அசோக சபுமல் ரன்வல நாட்டையும் மக்களையும் சொந்தக்கட்சியையும் ஏமாற்றி ‘’போலி கலாநிதிப் பட்டம்’’சமர்ப்பித்த நிலையில் அது அம்பலமாகி அவர் பதவி விலகியபோதும் அவர் மீது இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் அரசாங்கத்தினால் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமன்றி ரில்லியன்,பில்லியன் கணக்கில் பண மோசடி செய்தவர்கள், கணக்கு வழக்கின்றி செலவு செய்தவர்கள், வெளிநாடுகளில் வைப்பிலிட்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் அமைச்சர்கள் பலர் இருக்கின்றனர். கடந்த காலத்தில் ஊழல், மோசடி, லஞ்சம், கடத்தல், காணாமல் ஆக்குதல், படுகொலை செய்தல் இவ்வாறு பல்வேறுபட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பலர் வெளியில் சுதந்திரமாக இருக்கின்றனர் .இவர்கள் மீதும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறானவர்களையெல்லாம் விட்டு விட்டு தனிப்பட்ட செலவு ஒன்றினை பொதுச் செலவாக காட்டி இருக்கின்றார் அதாவது அவரது மனைவியின் ஒரு பட்டமளிப்பு விழாவுக்கு பிரிட்டனுக்கு சென்ற போது அதற்காக ஒரு கோடியே 66 இலட்சம் ரூபா செலவு செய்திருக்கின்றார் என்பதற்காகவே முன்னால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டிருக்கின்றார். இந்த அற்பத்தனமான குற்றச் சாட்டில் ‘’மிஸ்டர் கிளீன்’’ என அழைக்கப்படும் முன்னால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ததன் பின்னணியில் அரசியல் வன்மமும் அரசியல் பழிவாங்கலும் மட்டுமே உள்ளது. பட்டலந்தை வதைமுகாம் சூத்திரதாரி, மத்தியவங்கி பிணமுறி மோசடியில் தொடர்புபட்டவர் , உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறியவர் என்ற குற்றம்சாட்டுகளுக்குள்ளான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அந்த குற்றச் சாட்டுக்கள் எவை தொடர்பிலும் கைது செய்யாது . ‘’ஒரு கோடியே 66 இலட்சம் ரூபா தனிப்பட்ட செலவு செலவு செய்திருக்கின்றார்’’ என்ற குற்றச்சாட்டில் கைது செய்தமை ‘’மிஸ்டர் கிளீன்’’என்ற அவரது இமேஜை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உண்மையில் குற்றம் செய்தவரா என்பதற்கான எந்த விளக்கம் கோரல்கள், எதுவுமின்றி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உத்தியோகபூர்வ பயணமாக அமெரிக்காவுக்கு சென்று திரும்பும் போது லண்டன் ஊடாக வந்த அவர் உத்தியோகபூர்வ அழைப்பொன்றை ஏற்று இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டதுடன், பல்கலைக்கழக உபவேந்தரின் 25 வருட பூர்த்தி இராபோசன விருந்து நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார். இதற்கான ஆதராங்கள் இருக்கின்ற போதும், முறையான பொலிஸ் விசாரணைகள் இன்றி அந்த விசாரணைகள் முடிவு செய்யப்படாமல் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் வெள்ளிக்கிழமையில் திடீர் கைதை மேற்கொண்டுள்ளனர். வெள்ளிக்கிழமை கைது செய்தால் சனி ஞாயிறு தினங்களில் நீதிமன்றங்கள் செயற்படாது, ஆகவே ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு இரு நாட்களுக்காவது சிறையில் இருக்க வேண்டும் என்று நன்கு திட்டமிட்டே வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்கவை விசாரணைக்கு திகதி குறிப்பிட்டு அழைத்து கைது செய்து நீண்ட நேரத்தின் பின்னரே நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கும் திடீர் மின்தடையை ஏற்படுத்தி நீதிமன்ற நடவடிக்கையினை தாமதப்படுத்தி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்குவதனை தடுத்து விளக்கமறியலில் வைத்தனர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஜே .வி.பி.-என்.பி.பி. அரசாங்கத்தில் ஜே .வி.பி.அமைச்சர்கள் மட்டுமே பெரிதாக வீராப்பு பேசிக்கொண்டிருக்கின்றனர் .என்.பி.பி. அணியினர் அடக்கியே வாசிக்கின்றனர்.இதனால்தான் ஜே .வி.பி.யின் பெலவத்தை தலைமையகத்தின் தேவைக்காகவே இந்தக் கைது இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரு முன்னாள் ஜனாதிபதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி . ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்ட பின்னரே ஒரு கருத்து முன்வைத்துள்ளார். அதுவரையில் அவர் வாய் திறக்கவில்லை. அதுமட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச , மைத்திரி பால சிறிசேன , கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீதும் பல குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில் அவர்களையெல்லாம் விட்டு விட்டு ராஜபக்சக்களினால் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்ட நாட்டை மீட்டெடுத்த,அதன்மூலம் தற்போது ஜே .வி.பி. -என்.பி.பி. அரசாங்கம் பெரிதாக சிக்கலின்றி நாட்டை முன்னெடுத்தது செல்லக்கூடிய நிலையை ஏற்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்துள்ளமை பட்டலந்தை வதைமுகாமில் பலியான தமது தோழர்களுக்காக பழிதீர்க்கும் அரசாங்கத்தின் ஒரு நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகின்றது. அப்படியானால் பட்டலந்தை வதை முகாம் வழக்கு தொடர்பில் கைது செய்திருக்கலாமே என்ற கேள்விகள் எழும். அப்படி அந்த வழக்கில் கைது செய்தால் அது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் எனக் கருதப்படும் . உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் கைது செய்தால் தமது அண்டவாளங்களும் தண்டவாளம் ஏறி விடும், மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் கைது செய்ய முடியாது என்பதால்தான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அரச பணத்தை தனிப்பட்ட ரீதியில் செலவிட்ட குற்றச்சாட்டில் கைது செய்து அவரை அவமானப்படுத்தி பழி தீர்த்துள்ளனர். ஆக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம் இலங்கை வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவரை சிறிய குற்றச்சாட்டுக்காகவே கைது செய்த அரசு என்ற வரலாற்று பதிவை ஜே .வி.பி.-என்.பி.பி.அரசு பதிவு செய்துள்ள நிலையில் அரச அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து அரசியலமைப்பு சர்வாதிகாரத்தின் மூலம் ‘’மிஸ்டர் கிளீன்’’என அரசியல் எதிரிகளினால் கூட மதிக்கப்படும் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்து அரசியல் பழி தீர்த்த மோசமான ஓர் அரசாங்கம் என்ற வரலாற்று பதிவையும் ஜே .வி.பி.-என்.பி.பி.அரசாங்கம் பதிவு செய்துள்ளது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மிஸ்டர்-கிளீன்-இமேஜை-சிதைக்கும்-சதி/91-363673
  7. தோற்றுப் போனது ஹர்த்தால் லக்ஸ்மன் வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிரான நிலைப்பாடுகள் காணப்பட்டாலும் காலம், சூழல் அறிந்து சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை தமிழரசுக் கட்சியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவருடைய சகாக்களும் நிச்சயம் புரிந்து கொண்டிருப்பார்கள். ஹர்த்தால் என்கிற கடையடைப்பு அகிம்சைப் போராட்டங்களின் இறுதி வடிவமாகவே கருதப்படுகிறது. கடுமையான பொது எதிர்ப்பாக இருக்கின்ற ஹர்த்தாலை விடவும் தமது எதிர்ப்பை வேறு எப்படிக் காண்பிப்பது என்கிற நிலையில்தான் ஹர்த்தால் கையில் எடுக்கப்படுவது வழமை. குசராத்தியைதாய்மொழியாகக் கொண்ட காந்தி, பிரித்தானிய அரசுக்கு எதிராக அதிகம் ஹர்த்தாலை பயன்படுத்தியிருக்கிறார். அதிலிருந்துதான் இந்த ஹர்த்தால் தமிழ் உள்ளிட்ட தெற்காசிய மொழிகளிலும் பரவியதாக பதிவுகள் குறிப்பிடுகின்றன. இவ்வகையான வேலைநிறுத்தம் பங்களாதேசம், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பரவலாக கடைபிடிக்கப்பட்டு வரும் போராட்ட உத்திகளில் ஒன்று என்ற வகையில் நமது நாட்டில் கடந்த காலங்களில் அடிக்கடி நடைபெற்ற ஒன்றாக இருந்திருக்கிறது. இலங்கையில் ஆயுத யுத்தம் நடைபெற்ற காலங்களில் விடுதலைப் புலிகளால் இந்த ஹர்த்தால் அடிக்கடி அறிவிக்கப்படுவது வழமை. அவ்வேளைகளில், கடைப்பிடிக்கப்பட்ட ஹர்ததாலுக்கும் இப்போதைய நிலைக்கும் நிறையவும் வித்தியாசம் இருக்கிறது. அன்றைய காலங்களில் கடுமையான அழுத்தம் உடைய அச்சத்துடனேயே நடைபெற்றிருந்தது. இருந்தாலும், மக்களால் ஏதோ ஒருவகையில் உரிமை சார்ந்த பிரச்சனைகள் மீதான எதிர்பார்ப்பில் உணர்வு பூர்வமாகவே அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. ஆயுத யுத்த மௌனிப்புக்குப் பின்பு ஹர்த்தால் தமது தேவைகளை நிவர்த்தி செய்து கொண்டே பொது மக்கள் ஆதரவு கொடுத்தார்கள். ஹர்த்தால் வெறுமனே தமிழ் மக்களின் போராட்ட வடிவமாக மாத்திரம் இருக்கவில்லை. அது ஒரு பொதுவான விடயமே. அதற்கான அழைப்பு விடுப்பவர்கள் முடிவில் வெற்றி என அறிவித்தாலும் நடைபெற்றது, அனைவரும் அறிந்த விடயம் அது இருப்பதால் யாரும் சீர் தூக்கிப் பார்ப்பதில்லை. 2022ஆம் ஆண்டு மே மாத ஆரம்பத்தில் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த ‘அரகலய’ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சுகாதாரம், போக்குவரத்து, ரயில், மின்சாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகள் உட்பட 2000க்கும் மேற்பட்ட குழுக்கள் அடங்கிய சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து ஒரு பொது அடைப்பு என்கிற ஹர்த்தாலை நடத்தின. அரசு, அரசினுடைய இயந்திரத்தை இயக்க முயன்றிருந்தாலும் அரசின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றே சொல்லாம்.நாட்டின் ஜனாதிபதியாக இருந்த கோட்டபாய ராஜபக்‌ஷ மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று அந்தக் ஹர்த்தால் நடத்தப்பட்டு இருந்தது. ‘அரகலய’ போராட்டத்தின் பலனாக அரசாங்கம், ஜனாதிபதி கோட்டபாய பதவி விலகல், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி இவ்வாறு பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. 2022இல் நடைபெற்ற ஹர்த்தாலானது 1953ஆம் ஆண்டில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட முழு ஹர்த்தாலுக்கு பின்னர் நடைபெற்ற நாடு தழுவிய ஹர்த்தாலாக பார்க்கப்பட்டது, 1953ஆம் ஆண்டு ஹர்த்தால் காரணமாக அப்போதைய பிரதமர் டட்லி சேனநாயக்க பதவி விலகியிருந்தார். இவ்வாறு பெரும் முடிவுகளுக்கு இலங்கையில் மாத்திரமல்ல, உலகின் வேறு நாடுகளிலும் ஹர்த்தால்கள் காரணமாக இருந்திருக்கின்றன. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில், யுத்த மௌனிப்புக்குப் பின்னர் 2015, 2017, 2018 என ஹர்த்தால்கள் தமிழ்ப் பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. இவை தமிழ் மக்களின் அடிப்படை உரிமை பிரச்சினை, அடக்குமுறைகளுக்கு எதிராக நடத்தப்பட்டிருக்கின்றன. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கிழக்கில் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் ஏற்பாட்டில் ஒன்று நடைபெற்றது. இந்தக் ஹர்த்தாலானது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் கூட்டத்தொடரை இலக்காகக் கொண்டு சர்வதேசத்தின் நேரடித்தலையீட்டினைக் கோரியும், பொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கூடாது எனகோரியும் ஹர்த்தாலுடன், கவனயீர்ப்பு பேரணியும் நடத்தப்பட்டு இருந்தது. அதேபோன்று, 2020ஆம் ஆண்டுச் செப்டெம்பரிலும் இந்திய இராணுவத்திற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இலங்கை அரசாங்கம் நீதிமன்றத்தின் ஊடாகத் தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. 2023 ஒக்டோபர் மாதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (புளோட்), தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன இணைந்து ஒற்றுமையாக ஒரு அறிவிப்பை விடுத்திருந்தன. அது இவ்வாறுதான் இருந்தது “நாட்டில் தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் அநீதிகளையும், நீதி மறுக்கப்படுவதையும் உலகத்தின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரும் நோக்குடனும், எமது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அவற்றில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதைக் கண்டித்தும் மயிலத்தமடு - மாதவணை மேய்ச்சல் தரையை ஆக்கிரமித்து இருப்போரை வெளியேற்றக் கோரியும், எமது தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் எனப்படும் ஒரு பொது முடக்கத்திற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகளாகிய நாம் ஒன்றிணைந்து அழைப்பு விடுக்கின்றோம்”. இந்தக் ஹர்த்தால் வெற்றிகரமாக நடைபெற்றது என்று சொல்லாம். வடக்கு, கிழக்கை தளமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு வழங்கியிருந்தன. அதேநேரத்தில், தமிழ் மக்கள் அரசியல் போராட்டம், அகிம்சை, ஹர்த்தால், கடையடைப்பு, பகிஷ்கரிப்பு என்று வன்முறை சாராததாகவே தமிழ் மக்களது போராட்டங்கள் இருந்தது. அவற்றின் பலனின்மையால் மிதவாத தலைமை இளைஞர்களிடம் கைமாறியபோது, ஆயுதப் போராட்டமாக மாறியது மட்டுமல்லாமல், நாட்டில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டது. அது 2009 மே 18 முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது. அதன் பின்னர்த் தமிழ் மக்களின் அரசில் வழிநடத்தல் அரசியல் தலைவர்களிடம் கைமாறியது. ஆயுதப்போராட்டம் நடைபெற்ற காலங்களிலும் ஹர்த்தால்கள் நடைபெற்றிருந்தாலும், முன்னர் நடந்தது போல வட கிழக்கில் மீண்டும் ஹர்த்தால் கடையடைப்பு, பகிஸ்கரிப்புகள் ஆரம்பித்தன. அவற்றினால் பலனேதுமில்லை என அரச தரப்புகள் கூறிக் கொண்டாலும், நடைபெற்றது என்னவோ உண்மையானதே. இதற்கிடையில் தான் கடந்த 18ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிவிப்பாக வெளிவந்த ஹர்த்தால் தொடர்பாக நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது. இந்தக் ஹர்த்தாலானது எழுந்தமானமாக, எந்தவொரு ஆராய்வும் இன்றி, திட்டமிடப்படாத வகையில் எடுக்கப்பட்டது என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. முதலில் ஒகஸ்ட் 15ஆம் திகதி என அறிவிக்கப்பட்டது. பின் அன்றைய தினம் மடு மாதா திருத்தலத்தின் வருடாந்த திருவிழா என வெளிப்படுத்தப்பட்டதும் பின்னர் 18ஆம் திகதியாக மாற்றப்பட்டது. எவ்வாறாக இருந்தாலும், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் பொருத்தமற்றதாக ஆகிப்போனது. முல்லைத்தீவில் நடைபெற்ற சம்பவமானது திடீரென நடைபெற்ற ஒன்றல்ல. வழமையான செயற்பாட்டின் எதிரொலியே. ஆனாலும், பாதுகாப்புத் தரப்பும், அரசாங்கமும் உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கியிருந்தன. அது ஒருவகையில் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், அதிகப்படியான இராணுவப் பிரசன்னம் இவ்வாறான நிலைமைகளை தோற்றுவிக்கும் என்பது தான் யதார்த்தம். எது எப்படி சொல்லப்பட்டாலும், வடக்கில் கிழக்கில் ஹர்த்தால் தோற்றுப் போனது. பிசுபிசுத்து போனது, வெற்றி பெறவில்லை என்பதே நிலைமை. இந்த நிலைமை எதனால் ஏற்பட்டது. இதனை எவ்வாறு சீர் செய்வது எவ்வாறு என்பது பற்றி இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆராய்ந்தாக வேண்டும் என்பது போல, தமிழ் மக்களும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். ஒற்றுமையாக ஒருமித்த முடிவுடன் தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டிய விடயத்தில் எதேச்சதிகாரம் ஒன்றுக்கும் பிரயோசனம் அற்றது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஆனால், இந்தத் தடவை நடைபெற்ற ஹர்த்தால் பிசுபிசுப்புடன் முடிந்திருந்தாலும் வெளி உலகிற்கும் அரசாங்கத்திற்கும் ஒரு செய்தி கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இது நாட்டுக்கு நல்ல சகுனம் அல்ல என்றெல்லாம் கருத்து வெளியிட முனையும் தமிழ் அரசியல் தரப்பினர் ஹர்த்தால் தோற்றுப் போனது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தோற்றுப்-போனது-ஹர்த்தால்/91-363604
  8. 41,000 பிராங்க் திருட்டு; கைதான அனைவருக்கும் விளக்கமறியல் உத்தரவு! வடமராட்சி அல்வாய் பகுதியைச் சேர்ந்த சுவிஸ் பிரஜையிடம் இருந்து, 41 ஆயிரம் பிராங்கை (இலங்கை மதிப்பில் ஒன்றரைக் கோடி ரூபாவுக்கும் அதிகம்) திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அல்வாய் கிழக்கு, அத்தாயைச் சுவிஸ் பிரஜையான வயோதிபர் தனது 41 ஆயிரம் சுவிஸ் பிராங் நோட்டுகளை தனது வீட்டில் வைத்திருந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் பார்த்தபோது அவை காணாமற்போயிருந்தன. இதுதொடர் பில் நெல்லியடிப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார். அந்த வீட்டில் வேலை செய்தவர் உள்ளிட்ட 9 சந்தேகநபர்களை கைது செய்ததுடன் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேற்படி சுவிஸ் பிராங்கை பகுதிபகுதியாகத் திருடி ஆடம்பரச் செலவு செய்தமை தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டு, நேற்றுமுன்தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதே. அனைவரையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். திருடப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/41,000_பிராங்க்_திருட்டு;_கைதான_அனைவருக்கும்_விளக்கமறியல்_உத்தரவு!
  9. யாழ். மாவட்டத்தில் உள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை பொதுநிர்வாக அமைச்சர் தெரிவிப்பு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பதவிநிலை உத்தியோகத்தர்கள், சாரதிகள், அலுவலக உதவியாளர் போன்றவற்றுக்கான ஆளணி வெற்றிடங்கள் அரசாங்கத்தால் நிரப்பப்படும் என்று பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரட்ண தெரிவித்துள்ளார் . யாழ்ப்பாண மாவட்டத்தின் தேவைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றத்தை ஆராயும் கூட்டம் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச். எம்.எச்.அபயரட்ண, அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார, மேலதிகச் செயலாளர் நிஷாந்த, யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், மாவட்டச் செயலகப் பதவிநிலை உத்தியோகத்தர்கள். பிரதேச செயலாளர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தபோதே உள்ளூராட்சி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- யாழ்.மாவட்டத்தில் இயற்கை வளங்கள் உள்ளன. வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது நிலவசதி பற்றாக்குறையாகவுள்ளது. ஆகையால் இருக்கின்ற நில வளங்களைத் திறமையாகப் பயன்படுத்தவேண்டும். அதன் மூலமே உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியும். அபிவிருத்தித் திட்டங்களுக்கு விடுவிக்கப்பட்ட நிதியை இந்த ஆண்டுக்குள் முழுமையாகப் பயன்படுத்துவதைச் சவாலாக ஏற்றுச் செயற்படுத்தவேண்டும். இனம், மதம், மொழி கடந்து சகோதரத்துவத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றிணைந்து செயற்படவேண்டும் -என்றார். கூட்டத்தில் மாவட்டச் செயலர், பிரதேசசெயலர்கள் முன்வைத்த கோரிக்கைகள் சாதகமாகப் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/யாழ்._மாவட்டத்தில்_உள்ள_ஆளணி_வெற்றிடங்களை_நிரப்புவதற்கு_நடவடிக்கை
  10. 108 ஜோடிகளுக்கு திருமணம் adminAugust 28, 2025 யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத நிலையில் இருந்த 108 ஜோடிகளுக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின் , நிதியுதவியில் , 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு , 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டது இந்த 108 தம்பதியினரும் , யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாகவே தெரிவு செய்யப்பட்டனர். https://globaltamilnews.net/2025/219730/ https://www.facebook.com/share/v/1AS7LQ8zPH/?mibextid=wwXIfr
  11. இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலம்- 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுப்பு! adminAugust 28, 2025 கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை (28.08.25) அன்று மாலை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் திருமதி தெசீபா ரஜீபன் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் அடையாளம் காணப்பட்ட பல இடங்கள் தோண்டப்பட்டு வருகின்றன. கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா- பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அம்பாறை மாவட்ட காரைதீவு பகுதியை சேர்ந்த சந்தேக நபர் குறித்த பகுதிக்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அவர் கடந்த காலங்களில் திருக்கோவில் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு சிம் விற்பனை முகவராக செயற்பட்ட அருளானந்தன் சீலன் என்பவரை கடத்தி படுகொலை செய்து குறித்த இடத்தில் புதைத்திருப்பதாக அரசு சாட்சியாக மாறி குற்றப்புலனாய்வு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். இதன் போது குறித்த பிரதேசத்தை சுற்றி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது டன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உட்பட பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் காவற்துறையினர் விசேட அதிரடிப்படையினர் தடயவியல் காவற்துறையினர் என பலரும் பிரசன்னமாகியிருந்தனர். கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா-பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அனோசியஸ் சுரேஷ் கண்ணா எனப்படும் யூட் எனும் சந்தேக நபர் ஏற்கனவே கடந்த மாதம் ஜூ (31.07.25) அன்று குறித்த பொது மயானத்திற்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்து செல்லப்பட்டு இருந்தார். எனினும் குறித்த நபர் வாக்கு மூலத்திற்கமைய திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட பொது மயானத்தில் தேடுதல் மற்றும் தோண்டப்பட்ட பின்னர் எதுவும் கிடைக்காத காரணத்தினால் குறித்த செயற்பாடுகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டன.பின்னர் மற்றுமொருவரின் வாக்கு மூலத்திற்கமைய இன்று மற்றொரு இடமான தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. https://globaltamilnews.net/2025/219717/
  12. போலி ‘like’ காட்டி தமிழக மக்களை ஏமாற்றியுள்ள விஜய் August 28, 2025 1:42 pm தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், அண்மையில் மதுரையில் நடத்திய மாநாட்டில் எடுத்து செல்பி காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த காணொளி ஒரு கோடிக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றிருந்ததாக பரப்பப்பட்ட செய்தி போலியானது என தமிழகத்தின் பிரபல யூடியுபர் மாரிதாஸ் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் மக்களை ஏமாற்றும் பல உத்திகளை கடைப்பிடித்து வருவதாக கூறியுள்ள மாரிதாஸ், அப்பட்டமாக மக்களை ஏமாற்று பணியில் விஜய் இறங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். குறித்த காணொளி பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோர் பகிரும் இன்ஸ்டாகிராம் காணொளிக்கு நிகராக மக்களை சென்றடைந்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் மத்தியில் போலி செய்திகளை பகிர்ந்துள்ளதாக மாரிதாஸ் கூறியுள்ளார். குறித்த காணொளியை இன்ஸ்டாகிராமில் ஒரு கோடி பேர் வரை லைக் செய்துள்ளனர். ஆனால், அவர்களில் 1 சதவீதமானவர்கள் மாத்திரமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் ஏனையவர்கள் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று அவர் புலனாய்வு செய்து வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் விஜய் யாரென தெரியாதவர்கள் எவ்வாறு அவரது காணொளிக்கு லைக் செய்ய முடியும் என கேள்வியெழுப்பியுள்ள அவர், விஜய் தமிழகத்திலா வடமாநிலங்களிலா கட்சி நடத்துகிறார் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். லைக்களை பெற்றுக்கொடுக்கும் இணைய நிறுவனங்களுக்கு பணம் செலுத்து இவ்வாறு லைக்களை நடிகர் விஜய் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மாரிதாஸ், இது முற்றிலும் தமிழக மக்களை ஏமாற்றும் செயல்பாடு எனக் கூறியுள்ளார். https://oruvan.com/vijay-has-deceived-the-people-of-tamil-nadu-by-showing-fake-likes/
  13. இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வேண்டும் August 28, 2025 12:33 pm இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் HIV/STI தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஆணுறை பயன்பாடு குறித்து அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் பரிந்துரைத்துள்ளது. தற்போதைய பாடத்திட்டத்தில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்து, மாணவர்களுக்கு வயதுக்கு ஏற்ற, அறிவை வழங்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சின் தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் கூறியுள்ளது. முன்-வெளிப்பாடு தடுப்பு (PrEP), மற்றும் பிந்தைய-வெளிப்பாடு தடுப்பு (PEP) உள்ளிட்ட HIV/STI தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க சுகாதார அமைச்சின் தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் பரிந்துரைத்துள்ளது. தற்போது, அறிவியல் மற்றும் சுகாதாரம் மற்றும் உடற்கல்வி பாடப்புத்தகங்கள் குறிப்பிட்ட உயிரிமருத்துவ தடுப்பு முறைகளை விவரிக்காமல், “பொறுப்பான பாலியல் நடத்தை” மூலம் HIV ஐத் தடுக்க முடியும் என மட்டுமே குறிப்பிடுகின்றன என்று ஆலோசகர் வெனரியாலஜிஸ்ட் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார். ஆணுறை ஊக்குவிப்புக் குழுவின் சமீபத்திய மதிப்பாய்வின் பிரகாரம், இந்த விவரங்கள் இல்லாதது மாணவர்களுக்கு முக்கிய தடுப்பு உத்திகள் குறித்து போதுமான அளவு தகவல்களை அளிக்கவில்லை என்பதை தேசிய எய்ட்ஸ் கவுன்சிலின் IEC வலியுறுத்தியது,” என்று அவர் கூறியுள்ளார். 2024 உலகளாவிய பாடசாலை சுகாதார கணக்கெடுப்பின் (GSHS) கண்டுபிடிப்புகள் சீர்திருத்தத்தின் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 63% மாணவர்கள் மட்டுமே HIV அல்லது AIDS பற்றி கேள்விப்பட்டதாகக் கூறியுள்ளனர். 2016 இல் 77% ஆக இருந்த இந்த தரவு தற்போது சரிவை சந்தித்துள்ளது. HIV தொற்றைத் தவிர்ப்பது எப்படி என்று கற்பிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2016 இல் 67.1% ஆக இருந்தது. 2024 இல் வெறும் 44.2% ஆகக் குறைந்துள்ளது. பாலியல் உறவுகளில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட மாணவர்களில் 4.6% பேர், சரியான நேரத்தில் கல்வி கற்பதற்கான அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள். இந்த கவலைகளை நிவர்த்தி செய்ய, சுகாதார மேம்பாட்டு பணியகம் யுனெஸ்கோ வழிகாட்டுதல்களுடன் இணைந்து, வாழ்க்கையைக் கற்றுக்கொள்வோம் என்ற தலைப்பில் ஒரு புதிய விரிவான பாலியல் கல்வி (CSE) தொகுப்பை உருவாக்கி வருகிறது. ஓர் உயிரியல்-உளவியல் சமூக மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, இந்த திட்டம் மாணவர்கள் நடத்தை அபாயங்களை சந்திப்பதற்கு முன்பு வயதுக்கு ஏற்ற அறிவு மற்றும் திறன்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில், பாடசாலை சுகாதாரத் திட்டங்கள் 264, STD கிளினிக்குகளால் நடத்தப்பட்டுள்ளன. இது நாடு முழுவதும் 54,000 க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சென்றடைந்ததாக மருத்துவர் தர்மகுலசிங்க குறிப்பிட்டார். பாடத்திட்ட சீர்திருத்தத்துடன் ஆசிரியர் பயிற்சிக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். “ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஆலோசகர்கள் எச்.ஐ.வி தடுப்பு உத்திகள் குறித்த பயிற்சி பெற வேண்டும். இதனால் அவர்கள் நம்பிக்கையுடனும் நிலைத்தன்மையுடனும் பாடங்களை நடத்த முடியும்,” என அவர் மேலும் கூறினார். அதேவேளை , இந்த முன்னேற்றங்களுக்கு கல்வி அமைச்சு இன்னும் பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது. https://oruvan.com/awareness-about-condom-use-needs-to-be-included-in-sri-lankas-school-curriculum/
  14. சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்தார் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ரணில் கைதுக்கு ஓடிச்சென்று விடுவிக்க முயற்சிக்கும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்காக முயற்சிக்காது விலாங்கு மீன் போன்று செயற்படுவது அவரது சுயநலத்தையும் பெற்றுக் கொண்ட பணப்பெட்டிக்காகான விசுவாசத்தையும் காட்டுகின்றது. நல்லாட்சி காலத்தில் ரணிலுக்கு முண்டு கொடுத்து ஆட்சியில் நிழல் ஆட்சியாளர்களாக இருந்த இவர்கள் அன்றும் ரணிலைக் கொண்டு தமது தேவைகளையே நிவர்த்தி செய்து இலட்சாதிபதியாகினர். தற்போது ரணில் கைதானவுடன் அனைத்துக் கட்சியும் ஒன்று சேர்ந்து விடுதலைக்காக போராடுகின்றனர். இது ஊழல்வாதிகளான தமது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே இருக்கின்றது. அந்தவகையில் ரணிலின் விடுவிப்பில் அவரது நோயின் தன்மையே தாக்கத்தை செலுத்தியது. எனவே மக்களின் நலன்களையும் அவர்களது சொத்துக்களையும் யார் துஷ்பிரயோகம் செய்தாலும் அவர்களுக்கு இந்த ரணிலின் கைது பாடமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=338624
  15. செம்மணி செல்லவுள்ளார் ஜனாதிபதி? 28 Aug, 2025 | 10:51 AM யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் முதலாம் திகதி வருகை தரவுள்ள ஜனாதிபதி செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக சாத்தியங்கள் உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்தார். யாழில். புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது, ஊடகவியலாளர் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு முதலாம் திகதி ஜனாதிபதி வருகை தரவுள்ளார். மக்களின் காணிகள் மக்களிடமே கையளிக்கப்படும் என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும். அது ஜனாதிபதி வருகை தரும் நாள் அன்றோ , அதற்கு முதலோ பின்னரோ நடைபெறலாம். அதனை எப்ப என தற்போது உறுதியாக கூற முடியாது. ஆனாலும் காணிகள் விடுவிக்கப்படும் என்பது நிச்சயம். செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிடுவாரா என்பதனையும் தற்போது நிச்சயமாக கூற முடியாது. சில வேளைகளில் அவற்றை பார்வையிட சந்தர்ப்பம் உண்டு என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/223557
  16. களுத்துறை தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தின் பணிப்பாளராக வைத்தியர் நந்தகுமார் இன்று கடமையேற்பு 28 Aug, 2025 | 12:20 PM (எம்.நியூட்டன்) வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் கனகராஜா நந்தகுமார் இடமாற்றம் பெற்று, களுத்துறை தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தின் பணிப்பாளராக நேற்று புதன்கிழமை (28) கடமையேற்றுக்கொண்டார். வடக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு சுகாதார நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் பணியாற்றிய அனுபவம் மிகுந்த இவர் முன்னதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் என பல பதவிகளை வகித்துள்ளார். அத்துடன் இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சுகாதார நிர்வாகத்துறையில் கடமையாற்றியதோடு, 10 ஆண்டுகளுக்கு மேல் சிரேஷ்ட மருத்துவ நிர்வாகியாக சேவையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223564
  17. தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதி கோரி ஆலையடிவேம்பில் “நீதியின் ஓலம்” கையெழுத்துப் போராட்டம் 28 Aug, 2025 | 11:58 AM சர்வதேச நீதி கோரும் போராட்டமான 'நீதியின் ஓலம்' (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது கடந்த சனிக்கிழமை (23) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பமானது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நேற்று (27) மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் அநீதிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள சர்வதேச நீதி கோரிய பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் தர்மதாச ஆரியதாச மற்றும் பிரதி தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி, பிரதேச சபை உறுப்பினர்களான கதிகரன் (சீனு), சுமந்தி எம்.எஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவிக்கையில், இது, எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் செம்மணி போன்ற அவலங்களுக்கும் வீரமுனை, திராய்க்கேணி, உடும்பன்குளம், கல்முனை, காரைதீவு போன்ற பல இடங்களில் நடந்த படுகொலைகள் உட்பட பல சம்பவங்களுக்கும், தமிழர்கள் மீதான அடக்குமுறைகளுக்கும் சர்வதேச நீதிப் பொறிமுறைகள்தான் பொருத்தமானது. எனவே எமது மக்களும் அதைத்தான் கோருகிறார்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் மக்களின் கையெழுத்துகளுடனான கோரிக்கைகளை ஐ.நா மன்றத்திற்கு அனுப்புவதற்கானதே இந்த கையெழுத்துப் போராட்டம் எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/223565#google_vignette
  18. வேலணையில் தீ! adminAugust 28, 2025 மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால், வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை உருவானது. இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளருக்கு அறியப்படுத்தியதை அடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்டதன் பிரகாரம் யாழ் மாநகர சபையின் தீயணைப்பி வாகனம் அப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடும் காற்றுக் காரணமாக பெரும் சுடர்விடு எரிந்த தீயை தீயணைப்பு படையினர் பலமணி நேரம் போராடிய கட்டுப்படுத்தினர். இதேநேரம் அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை பகுதியில் இருந்து அராலிச் சந்தி வரையான வயல் வெளிகளில் உள்ள புற்களுக்கு வருடவருடம் விசமிகள் தீமூட்டி வருவதும் அதை அணைப்பதும் தொடர்கதையாகி இருக்கின்ற நிலையில் குறித்த சட்டவிரோத செயலைச் செய்யும் விசமிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது பிரதேசத்தின் அதிகாரிகள் திணறிவருகின்றனர். பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள குறித்த பகுதிக்கு பருவ காலங்களில் வெளி நாடுப் பறவைகள் அதிகளவில் வருகை தரும் அவை தமது இனப்பெருக்கங்களை செய்வதும் வழமை. இவ்வாறு தீ வைக்கப்படுவதால் பறவைகள் சரணாலயமும் கேள்விக்குறியாக்கியுள்ளது இதேநேரம் இவ்வாறு தொடர்ச்சியாக புற்றரைகள் தீவைக்கப்படுவதால் அந்த புற்களை உணவாக கொள்ளும் கால்நடைகளும் உணவின்றி குடிமனைகளுக்கு செல்லும் நிலையும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/219693/
  19. யாழ் செல்கிறார் அநுர – புதிய திட்டங்களை ஆரம்பித்து வைப்பார்! adminAugust 28, 2025 ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க, யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 01ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க பயணம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி காலை 08.30 மணியளவில் மையிலிட்டி மீன் பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். தொடர்ந்து , யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினை காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார். அதன் பின்னர் மதியம் 1.30 மணியளவில், மண்டதீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். மறுநாள் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், தென்னை முக்கோண வலய பணிகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். https://globaltamilnews.net/2025/219695/
  20. வட- கிழக்கில் சர்வதேச நீதி கோரிய போராட்டம்; தமிழர் தேசமாக அணிதிரள்க – யாழ்.பல்கலை ஒன்றியம்! சர்வதேச நீதி கோரிய மாபெரும் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் இருந்து தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ். ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியிலே யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு தற்காலம் வரையிலும் பல்வேறுபட்ட ஆக்கிரமிப்புகளுக்கு தமிழர் தாயகமானது முகம் கொடுத்து வருவதுடன் அந்த காலப்பகுதியிலே எமது பல உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியாக இன்றளவும் அவர்களது உறவினர்கள் அவர்களை தேடிக் கொண்டிருக்கின்றனர். அதில் நிறைய தாய்மார்கள் இறந்தும் கூட இருக்கின்றனர். இன்றும் நம் மக்கள் வாழ்கின்ற நிலப்பகுதியில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கள், சிங்கள பௌத்தமயமாக்கல், தமிழர்களுடைய பூர்வீக காணிகள் விடுவிக்கப்படாமை என அதிகார ரீதியாக தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வருகின்றமையானது எங்கள் மக்களுக்கான நீதி இந்த நாட்டில் தொடர் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றமையையே குறிக்கின்றது. தமிழ் மக்கள் தங்கள் தாயக பகுதியில் அரசியல் கலாச்சார பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுவதையும் எமக்கான நீதி மறுக்கப்படுவதையும் நாம் உரத்துச் சொல்வதே போராட்டங்களின் தார்மீக நோக்கமாகும். இன்றளவும் தமிழர் நிலங்கள் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள்ளேயே இருக்கின்றன. வலிகாமம் கிழக்கு காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டு விடுவிக்கப்படாத நிலையிலேயே எங்கள் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த வேளையில் முத்தையன்கட்டு கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட இராணுவத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டமை அரசினுடைய சர்வாதிகாரத்தன்மையினையே வெளிப்படுத்துகின்றது. தமிழ் மக்கள் கேட்பதற்கு யாருமற்ற எதிலிகளாக சொந்த நிலத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். ஆட்சிக்கு வரும் முன் அரசியல் கைதிகளின் விடுதலையை பற்றி கதைத்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறி அரசியல் கைதிகளை விடுவிக்கமுடியாது என்று சொல்லியிருப்பது என்பது அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மையின்மையையே காட்டுகின்றது. கொக்குத்தொடுவாய் மற்றும் செம்மணி மனிதபுதைகுழிகளில் இருந்து தமிழ் சமூகத்தின் மீதான இனப்படுகொலை வெட்ட வெளிச்சத்துக்கு வருவது தெரிந்தும் எதுவித நீதியும் இதுவரை எட்டப்படவில்லை. மனித புதைகுழி பற்றி சமூகத்திற்கு வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் தங்கள் சொந்த நிலங்களுக்காக போராடுபவர்கள் புலனாய்வுத் துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் அதிகாரத்தின் அதி உச்ச கொடூர போக்கையே காட்டுகின்றது. இந்த வேளையில் வீதி எங்கும் தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதுவித நீதியுமற்று போராடி வருகின்றனர். யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் நீதிக்கான தவிப்புக்கள் தணியப்படவில்லை. அவர்களுக்கான நீதி மாறி மாறி வரும் எந்த ஒரு அரசாங்கத்தாலும் வழங்கப்படவில்லை வழங்கப்படாது. இதனாலேயே வரும் ஆவணி 30 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் தங்கள் பிள்ளைகளை தேடி சர்வதேச நீதி விசாரணை கோரி போராட முனைந்துள்ளனர். வடக்கில் கிட்டுப்பூங்காவிலிருந்து செம்மணி வரையிலும் கிழக்கில் கல்லடிப்பாலத்திலிருந்து காந்திப்பூங்காவரையிலும் சர்வதேச நீதிக்கான மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்;. யாழ். பல்கலைக்கழக மாணவர்களாக அவர்களது போராட்டத்திற்கு முற்றுமுழுதான ஆதரவினை வழங்குவதுடன் பக்கபலமாகவும் இருப்போம் என்று சொல்லிக் கொள்கின்றோம். வடக்கு கிழக்கு வாழ் தமிழர் தேசமாக போராட்டக் களத்திற்கு நாங்கள் அணி திரள வேண்டும் என்று கோரிக்கை வைப்பதுடன் இந்திய அரசியலில் ஆர்வம் செலுத்தும் எங்கள் தமிழ் இளந்தலைமுறையினர் எங்கள் மக்களின் பிரச்சினைகளில் பெரிதும் அக்கறையின்றி இருப்பது மனவருத்தத்திற்குரிய விடயமாகவே காணப்படுகின்றது. எனவே எங்கள் நிலத்தினுடைய அரசியலை புரிந்து கொண்டு எங்கள் மக்களுக்காக காணாமல் ஆக்கப்பட்ட எங்களுடைய உறவுகளுக்காக போராட்ட களத்திற்கு அனைவரும் ஒன்று கூடி வரவேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக கேட்டுக் கொள்கின்றோம் என மேலும் தெரிவித்தனர். https://akkinikkunchu.com/?p=338540
  21. நெல்லியடியில் வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் பணம் கொள்ளை ; 10 சந்தேகநபர்கள் கைது 27 Aug, 2025 | 11:10 AM வெளிநாட்டிலிருந்து வந்து நெல்லியடி பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவரின் சுமார் ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் பணம் கொள்ளையிட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (26) 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வெளிநாடொன்றிலிருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் நெல்லியடி பகுதியில் வசித்து வந்துள்ளார். அவர் தனது வீட்டில் வெளிநாட்டு நாணயதாள்கள் உள்ளிட்ட பணத்தினையும் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தனது பணம் காணாமல் போவதையறிந்து, இந்த விடயம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குறித்த நபரின் வீட்டில் வேலை செய்யும் இருவர் தொடர்பில் சந்தேகமடைந்து இருவரையும் கைது செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் போது, இருவரும் வெளிநாட்டு பணத்தினை வீட்டில் இருந்து சிறிது சிறிதாக கொள்ளையிட்டதாகவும், அந்த பணத்தினை நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் ஊடாக நெல்லியடி பகுதியில் உள்ள வங்கியொன்றில் வெளிநாட்டு பணங்களை இலங்கை ரூபாவிற்கு மாற்றியதாகவும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து, திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்டமை, திருடப்பட்ட பணத்தினை உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் மேலும் 08 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருடப்பட்ட பணத்தில் சுமார் 40 இலட்ச ரூபாய் பெறுமதியான பணத்தினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஏனைய பணத்தினை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/223472
  22. யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் : ஈரானியத் தூதுவரை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா 27 Aug, 2025 | 11:30 AM அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்திற்கு எதிராக நடந்த தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம் என அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார். சிட்னி மற்றும் மெல்போர்னில் இடம்பெற்ற இரண்டு யூத விரோதத் தாக்குதல்களை ஈரான் அரசு திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பின்னணியில், அவுஸ்திரேலியா ஈரானியத் தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒரு வெளிநாட்டு தூதரை அவுஸ்திரேலியா நாடு கடத்துவது இதுவே முதல் முறை என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தாக்குதல்களின் பின்னணி அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (ASIO) திரட்டிய புலனாய்வுத்துறை தகவல்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபரில் சிட்னியில் உள்ள யூத உணவு நிறுவனம் ஒன்றின் மீதும், டிசம்பரில் மெல்போர்னில் உள்ள ஒரு யூத தொழுகைக்கூடத்தின் மீதும் நடத்தப்பட்ட தீ வைப்புத் தாக்குதல்களுக்கு ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) பின்னணியில் இருந்தது என அவுஸ்திரேலிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் இந்த தாக்குதல்களை "ஒரு வெளிநாட்டு நாடால் அவுஸ்திரேலிய மண்ணில் திட்டமிடப்பட்ட அசாதாரண மற்றும் ஆபத்தான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்" என்று வர்ணித்துள்ளார். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து, சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதே இந்தத் தாக்குதல்களின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார். ஈரான் - அவுஸ்திரேலிய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ஆரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தனது தூதரகத்தின் செயல்பாடுகளை அவுஸ்திரேலியா நிறுத்தி, அங்குள்ள தனது இராஜதந்திரிகளை வேறு நாட்டிற்கு இடமாற்றம் செய்துள்ளது. அத்துடன், ஈரானில் உள்ள அவுஸ்திரேலியர்கள் பாதுகாப்புடன் வெளியேற முடியுமானால் விரைவில் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது. பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க அவுஸ்திரேலியா அண்மையில் எடுத்த முடிவுக்குப் பழிவாங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்திற்கு எதிராக அதிகரித்துள்ள வெறுப்புத் தாக்குதல்களை இது வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. https://www.virakesari.lk/article/223473
  23. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான 50 வீத வரி இன்று முதல் அமுல் ! 27 Aug, 2025 | 09:57 AM அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு இன்று முதல் அமுலுக்கு வருகின்றது. அமெரிக்க ஜனாதிபதியாக nடானால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர், ஏனைய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை உயர்த்தி வருகிறார். அதன்படி அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது டிரம்ப், முதலில் 25 சதவீத வரி விதித்ததுடன் அந்த வரிவிதிப்பு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்தது. அத்துடன், ரஷ்யாவிடம் மசகு எண்ணெய், இராணுவ தளவாடங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு அபராதமாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு இன்று ( ஆகஸ்ட் 27) முதல் அமுலுக்கு வந்துள்ளது. எனவே,அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீதான வரிவிதிப்பு இன்று முதல் 50 சதவீதமாக அதிகரிக்கின்றது. இது குறித்து, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆகஸ்ட் 27 ஆத் திகதி (அதாவது இன்று) அதிகாலையில் இருந்து விற்பனைக்காக அமெரிக்காவிற்குள் இறக்குமதியாகும் மற்றும் அமெரிக்காவில் உள்ள களஞ்சியசாலைகளில் இருந்து விற்பனைக்காக வெளியேறும் இந்திய பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் வரிவிதிப்பு பொருந்தும். அதே சமயத்தில், 27 ஆம் திகதி அதிகாலைக்கு முன்பு கப்பலில் ஏற்றப்பட்ட இந்திய பொருட்கள், நடுவழியில் கப்பலில் வந்து கொண்டிருக்கும் பொருட்கள் ஆகியவற்றுக்கு 25 சதவீத கூடுதல் வரி பொருந்தாது. இருப்பினும், செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கு முன்பு அமெரிக்காவில் பயன்படுத்த அவற்றுக்கு ஒப்புதல் பெறுவதுடன், அமெரிக்க சுங்கத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரிவிதிப்பால், புடைவை, தைத்த ஆடைகள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், இறால், தோல், காலணி, விலங்கு பொருட்கள், இரசாயனங்கள், மின்சார எந்திர சாதனங்கள் ஆகிய துறைகள் பாதிக்கப்படும். ஆனால் மருந்து பொருட்கள், எரிசக்தி பொருட்கள், இலத்திரனியல் பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள் ஆகியவற்றுக்கு 50 சதவீத வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும். கடந்த ஆண்டு வர்த்தக மதிப்புப்படி, அமெரிக்காவுக்கு 4 ஆயிரத்து 820 கோடி டொலர் மதிப்புள்ள இந்திய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எனவே, அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால், 4 ஆயிரத்து 820 கோடி டொலர் மதிப்புள்ள இந்திய பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று இந்திய மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவை தவிர, பிரேசில் மட்டுமே 50 சதவீத வரியை எதிர்கொள்கின்றது. சீனா 30 சதவீத வரியையும், மியான்மர் 40 சதவீத வரியையும் எதிர்கொள்கின்றன. இந்திய பொருட்களுக்கு வரி உயர்வு அமுலுக்கு வரும் வேளையில், சீனாவுக்கும் 200 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது கடந்த ஏப்ரல் மாதம், சீன பொருட்கள் மீதான வரியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உயர்த்தினார். ஒருகட்டத்தில் 150 சதவீத வரி அளவுக்கு உயர்த்தினார். அதேபோல் சீனாவும் பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீதான வரியை அதே அளவுக்கு உயர்த்தியது. இருதரப்பிலும் வர்த்தக போர் வெடிக்கும் சூழ்நிலை உருவானது. பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிக வர்த்தக போர் நிறுத்தம் ஏற்பட்டது. சீனாவின் அரியவகை புவி காந்தங்கள் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தவும், அமெரிக்க தொழில்நுட்ப கட்டுப்பாடுகளை வாபஸ் பெறவும் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 55 சதவீதமாக சீனா குறைத்தது. சீன பொருட்கள் மீதான வரியை 32 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. இந்த தற்காலிக வர்த்தக போர் நிறுத்தம், நவம்பர் மாதத்துடன் நிறைவடைகின்றது. இந்த தற்காலிக வர்த்தக போர் நிறுத்தத்தை சீர்குலைக்கும் வகையில், சீனாவுக்கு இந்த பகிரங்க எச்சரிக்கையை தற்போது டிரம்ப் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/223461
  24. முத்துஐயன்கட்டு இளைஞன் உயிரிழப்பு ! இராணுவ சிப்பாய் நால்வருக்கும் கடும் நிபந்தனையில் பிணை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் நால்வரும் கடும் நிபந்தனையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 07.08.2025 அன்று முத்துஐயன் கட்டுப்பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் நால்வரை கைது செய்த ஒட்டுசுட்டான் பொலிஸார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை கடந்த 19.08.2025 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்ட இளைஞன் சார்பாக ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் மன்றில் பிரசன்னமாகிய நிலையில், இராணுவ சிப்பாய் நால்வரும் நேற்று வரை (26) விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். குறித்த வழக்கு நேற்று (26) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மூத்த சட்டத்தரணி கெங்காதரன், உயிரிழந்த பாதிக்கப்பட்ட இளைஞர் சார்பில் சமர்ப்பணங்களை முன்வைத்தார். இந்த வழக்கில் இராணுவ சிப்பாய்களுக்கான பிணைக் கோரிக்கை இராணுவத்தரப்பு சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட நிலையில், கடும் நிபந்தனைகளின் பின்னர் குறித்த இராணுவ சிப்பாய்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொருவரும் தலா மூன்று இலட்சம் ரூபா பெறுமதியிலான இரண்டு சரீரப்பிணைகளில் செல்ல அனுமதித்த நீதவான், சாட்சியங்களை அச்சறுத்தக்கூடாது என்றும் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாட்டு பயணங்கள் செல்ல முடியாது என்றும் உத்தரவிட்டார். குறித்த வழக்கு 30.09.2025 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/news/cmetjy21z001mo29ng7gvy3ks
  25. மண்டைதீவில் படுகொலையானவர்களின் நினைவேந்தல்! adminAugust 27, 2025 யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக ஊர்காவற்துறை பகுதியில் மாலை ஆரம்பமான நிகழ்வுகளை தொடர்ந்து , அராலி சந்தி , மண்கும்பான் பிள்ளையார் கோவிலடி ஆகிய இடங்களில் நிகழ்வுகள் இடம்பெற்று , இரவு மண்டைதீவில் பிரதான நிகழ்வுகள் இடம்பெற்றன. மண்டைதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களை மண்டைதீவு முதலாம் வட்டாரம் பகுதியில் உள்ள கிணறொன்றில் போடப்பட்டதாக கூறப்படும் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மூடப்பட்ட கிணற்றுக்கு முன்பாக பிரதான தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து , கிணற்றை சுற்றி தீபங்கள் ஏற்றப்பட்டு , மூடப்பட்ட கிணற்றின் மேல் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து , படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவரின் உருவ படங்கள் அவ்விடத்தில் வைக்கப்பட்டு , மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது https://globaltamilnews.net/2025/219648/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.