Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. ரணிலுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சையை தேசிய வைத்தியசாலையில் செய்வதற்காக காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு முடியாவிடின் தனியார் வைத்தியசாலைக்கு சென்று அதைச் செய்யும் வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளதாகவும் அவர் கூறினார். “அவரது இதயத்தில் சில சிக்கல்கள் உள்ளன. விரைவில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தினால் நல்லது. பிணை வழங்கப்பட்டதால் அறுவை சிகிச்சைக்காக அவர் விரும்பும் வைத்தியசாலைக்கு செல்லலாம். தேசிய வைத்தியசாலையில் காத்திருப்பு பட்டியல் சில நேரங்களில் சுமார் 3 ஆண்டுகள் ஆகும். எனவே, அவர் தனது சொந்த செலவில், விரும்பும் வைத்தியசாலையில் அதை விரைவாகச் செய்ய முடியும். தற்போது, அவருக்கு கரோனரி தமனிகளில் அடைப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு நீரிழப்பும் உள்ளது. அந்த நிலை படிப்படியாக சரி செய்யப்பட்டு வருகிறது. அந்த நேரத்தில், அவரது இருதயம் பலவீனமாக இருப்பதைக் கண்டறிய முடிந்தது. அதை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.” என்றார். https://www.samakalam.com/ரணிலுக்கு-உடனடியாக-இருதய/
  2. தமிழரசு கட்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு! ஆட்சேபனையின் ஒரு பகுதி ஆங்கிலத்திலும் அதன் மறு பகுதி தமிழிலும் சமர்ப்பிப்பு! adminAugust 27, 2025 வலி. வடக்கு பிரதேச சபையின் தமிழரசு கட்சியின் உறுப்பினரான தன்னை கடிதம் மூலம் கட்சியின் பொது செயலாளர் இடைநிறுத்தியமையை சவாலுக்கு உட்படுத்தி யாழ் . மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்டதாக கூறி வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் ராசேந்திரம் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து சுமந்திரனால் கடிதம் ஒன்றின் மூலம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து குறித்த பிரதேச சபை உறுப்பினர், சுமந்திரன் தன்னை எந்த அடிப்படையுமற்று மத்தியக்குழுவின் தீர்மானம் எதுவுமின்றி கட்சியில் இருந்து தன்னிச்சையாக நீக்கியதாக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். கடந்த தவணை குறித்த வழக்கில் முன்னிலையான தமிழரசு கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் ஆகியோர் குறித்த வழக்கு தாக்கல் செய்ததே தவறு என தமது ஆட்சேபனையினை எழுத்துமூலம் தாக்கல் செய்திருந்தனர். குறித்த ஆட்சேபனைக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தமது பதில் ஆட்சேபனையை பிரதேச சபை உறுப்பினர் தாக்கல் செய்திருந்தார். அதில் குறித்த கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனையானது ஒரு பகுதி ஆங்கிலத்திலும் அதன் மறு பகுதி தமிழிலும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை சட்டத்திற்கு புறம்பானது, யாழ்ப்பாணத்தில் நீதி நிர்வாக மொழி தமிழ் ஆகையால் முழுமையாக தமிழிலேயே ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட வேண்டும் என பிரதேச சபை உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்சேபனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. https://globaltamilnews.net/2025/219646/
  3. பொது இடத்தில் வெற்றிலை துப்பியவருக்கு 5ஆயிரம் தண்டம்! adminAugust 27, 2025 பருத்தித்துறையில் வெற்றிலை மென்று பொது இடத்தில் துப்பிய நபருக்கு நீதிமன்று 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. பருத்தித்துறை மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவர் சந்தையில் வெற்றிலை மென்று , பொது இடத்தில் துப்பிய குற்றச்சாட்டில் , அவருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது மன்றில் முன்னிலையான வியாபாரி தன் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை எச்சரித்த மன்று 5ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. https://globaltamilnews.net/2025/219638/
  4. சாவகச்சேரி நகர சபை, பிரதேச சபைகளில் சைக்கிள் கட்சியினரை வெளியேற்ற வழக்கு! சாவகச்சேரி நகர சபைக்கும், சாவகச்சேரி பிரதேச சபைக்கும் தெரிவு செய்யப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களின் தேர்வுகளை இரத்துச் செய்து, அவர்கள் போட்டியிட்ட வட்டாரங்களில் அடுத்த நிலையில் இருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களைச் சபையின் உறுப்பினர்களாக அறிவிக்கக் கோரி தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சூசைதாசன் முன்னிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுமார் ஒன்றரை மணி நேரம் வாதாடி முன்வைத்த சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்டு எதிர்த் தரப்புக்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்க நீதிபதி கட்டளையிட்டார். மேற்படி இரு உள்ளூராட்சி சபைகளிலும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பெண் உறுப்பினர்கள் அந்தந்த சபைகளில் போட்டியிடுவதற்கான தகமையற்றவர்கள், தகுதியீனம் உடையவர்கள் என உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. அந்தத் தீர்ப்பின்படி மேற்படி இரு பெண் உறுப்பினர்களும் அந்தந்தச் சபைகளின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறத் தகுதியற்றவர்கள் எனக் காணப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட இரு வேட்புமனுக்களிலும் இருக்க வேண்டிய பெண் உறுப்பினர்களின் விகிதாசாரம் குறைந்து அந்தப் பட்டியல்களே தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை இழந்து விட்டன எனத் தற்போது மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அது தொடர்பான விளக்கங்களை செவிமடுத்த நீதிபதி அதன் அடிப்படையில் எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். சாவகச்சேரி பிரதேச சபைக்குப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியின் 23 வேட்பாளர்களும் சாவகச்சேரி நகர சபைக்குப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியின் 16 வேட்பாளர்களும் இந்த மனுக்களில் மனுதாரர்கள் ஆவர். இரண்டு சபைகளிலும் போட்டியிட்ட மற்றைய கட்சிகள் அனைத்தினதும் வேட்பாளர்கள் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். அதன்படி சாவகச்சேரி பிரதேச சபை தொடர்பான வழக்கில் 225 பேரும், சாவகச்சேரி நகர சபை தொடர்பான வழக்கில் 151 பேரும் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டங்களின்படி இத்தகைய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால், அந்த வழக்கு முதல் தடவை நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தினத்தில் இருந்து ஆறு மாதங்களுக்குள் வழக்கு விசாரித்து முடிவுறுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த இரு வழக்குகளும் காலம் இழுபடாமல் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம். மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன், பெனிஸலஸ் துஷான் ஆகியோரும் மன்றில் ஆஜராகினர். https://akkinikkunchu.com/?p=338425
  5. காசா மாணவர்கள் பிரித்தானியாவில் கல்வி கற்க அனுமதி 26 Aug, 2025 | 10:57 AM காசாவில் உள்ள சுமார் 40 மாணவர்கள் நிதியளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு எதிர்வரும் வாரங்களில் பிரித்தானியாவுக்கு வரவழைக்கும் திட்டங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. செவனிங் திட்டத்தின் கீழ் (Chevening scheme) புலமைப் பரிசில்கள் ஊடாக ஒன்பது மாணவர்களுக்கு காசாவை விட்டு வெளியேற உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செவனிங் திட்டம் என்பது, சர்வதேச மாணவர்கள் ஓராண்டு முதுகலைப் பட்டப்படிப்பைப் படிப்பதற்காக, பெருமளவில் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் கல்வி திட்டம் ஆகும். ஏனைய தனியார் திட்டங்கள் மூலம் முழுமையாக நிதியளிக்கப்பட்ட புலமைப் பரிசில்கள் கிடைத்த சுமார் 30 மாணவர்களுக்கு உதவுவதற்கான திட்டங்களுக்கும் உள்நாட்டு செயலாளர் அனுமதி அளித்துள்ளதாக பிபிசிக்கு தகவல் கிடைத்துள்ளது. 2023-ல் ஹமாஸ்-இஸ்ரேல் போர் ஆரம்பித்த பின்னர், பிரித்தானியாவில் கல்வி கற்பதற்கு காசாவை விட்டு வெளியேறும் முதல் மாணவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள். இருப்பினும், ஒவ்வொரு மாணவரும் அப்பகுதியை விட்டு வெளியேற இஸ்ரேல் அனுமதி அளிக்க வேண்டும். காசாவில் இஸ்ரேல் அதன் போர் தொடர்பான சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால், செப்டம்பர் மாதம் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரித்தானியா கூறியதிலிருந்து இஸ்ரேலுடனான உறவுகள் மோசமடைந்துள்ளன. மேலும், ஒரு போர் மண்டலத்திலிருந்து மாணவர்களை வெளியேற்றுவதில் கணிசமான சவால்களும் இருக்கும். விசா பயோமெட்ரிக் சோதனைகளுக்காக அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு மூன்றாவது நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். உள்நாட்டு அலுவலக வட்டாரம் ஒன்று இந்தத் திட்டத்தை "சிக்கலானதும் சவாலானது" என்று விவரித்தாலும், மாணவர்கள் பிரித்தானியாவில் தங்கள் இடங்களைப் பெற வேண்டும் என உள்நாட்டு செயலாளர் "தெள்ளத்தெளிவாக" தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் இருந்து அனுமதி பெற்ற 80-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மாணவர்கள் சார்பாக அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் மற்றும் பிறர் பல மாதங்களாக மேற்கொண்ட பரப்புரையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சமீபத்திய முடிவின் கீழ் சுமார் 40 மாணவர்கள் சேர்க்கப்பட்டாலும், நிதி உதவி இல்லாத மற்ற மாணவர்களும் உள்ளனர். https://www.virakesari.lk/article/223370
  6. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திக்க ஆசைப்படுகிறார் ஜனாதிபதி டிரம்ப் ! 26 Aug, 2025 | 10:30 AM வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்திக்க விரும்புவதாகவும், இந்த ஆண்டுக்குள் அந்த சந்திப்பு நிகழலாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தென் கொரியாவின் புதிய ஜனாதிபதி லீ ஜே மியுங் உடன் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது டிரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி லீ ஜே மியுங் வெள்ளை மாளிகைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தென் கொரியாவில் தேவாலயங்கள் தொடர்பான சோதனைகளைக் குறிப்பிட்டு, அங்கு ஒரு "துடைப்பு அல்லது புரட்சி" நடப்பதாக டிரம்ப் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். ஆனால், சந்திப்பின் போது, ஜனாதிபதி லீ, டிரம்ப்பை பெரிதும் புகழ்ந்து பேசியதையடுத்து, டிரம்ப் தனது முந்தைய கருத்தை "ஒரு தவறான புரிதல்" என்று கூறி நிராகரித்தார். வட கொரிய விவகாரத்தில் லீயின் அணுகுமுறையும் தனது அணுகுமுறையும் ஒரே மாதிரியானவை என டிரம்ப் நம்புவதாகக் கூறினார். மேலும், கிம் ஜாங் உன்னின் சகோதரியைத் தவிர வேறு எவரையும் விட தனக்கு நன்றாகத் தெரியும்" என்று டிரம்ப் குறிப்பிட்டார். டிரம்ப் "அமைதியைக் காப்பவர் அல்ல, அமைதியை உருவாக்குபவர்" என்று தென்கொரிய ஜனாதிபதி லீ புகழ்ந்தார். மேலும், "நீங்கள் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திப்பதையும், வட கொரியாவில் டிரம்ப் டவர் கட்டப்படுவதையும், அங்கு நீங்கள் கோல்ஃப் விளையாடுவதையும் நான் எதிர்பார்க்கிறேன்" என்று லீ குறிப்பிட்டார். தன்னுடைய சந்திப்புக்குப் பின்னர் ஆற்றிய உரையில், வட கொரியா ஆண்டுக்கு 10 முதல் 20 அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யக்கூடும் என்றும், அமெரிக்காவைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும் கொண்டிருக்கலாம் என்றும் லீ எச்சரித்தார். அமெரிக்கப் படைகளின் இருப்பிற்காக தென் கொரியாவிடம் இருந்து அதிக நிதியுதவியை டிரம்ப் கோரினார். மேலும், அமெரிக்காவின் இராணுவத் தளம் அமைந்துள்ள நிலத்தின் உரிமையை அமெரிக்கா எடுத்துக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். தென் கொரியாவின் இடதுசாரி தலைவர்களுக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தும் ஒரு கருத்தாகக் கருதப்படுகிறது. தென் கொரியாவின் புதிய ஜனாதிபதியான லீ ஜே மியுங் வட கொரியாவுடனான உறவுகளை மேம்படுத்த முயற்சித்து வருகிறார். அவர், வட கொரியாவுடனான இராணுவ எல்லையில் ஒலிபெருக்கிகளில் ஒலிபரப்பப்படும் கிம் எதிர்ப்பு செய்திகளை நிறுத்துவது போன்ற சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். இந்த சந்திப்பு, தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து விவாதிக்க ஒரு முக்கியமான தளமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223377
  7. அடுத்த ஆண்டு வடக்கு மாகாண சபைக்கு அதிக நிதி ஒதுக்கம்: வாழ்வதரத்தை உயர்த்தும் திட்டங்களை தயார் செய்யுமாறு ஆளுநர் பணிப்பு 26 Aug, 2025 | 10:27 AM வடக்கு மாகாண சபைக்கு அடுத்த ஆண்டு அதிகளவான நிதி ஒதுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை இப்போதே தயார் செய்யுமாறும் பணித்தார். மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் திங்கட்கிழமை (25) நடைபெற்றது. அதன்போது, மகளிர் விவகார அமைச்சு, சமூகசேவைகள் திணைக்களம், தொழிற்றுறை திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு என ஒவ்வொரு திணைக்களத்தினதும் திட்டங்களின் முன்னேற்றங்கள் விரிவாக ஆராயப்பட்டன. நிதி ஆணைக்குழு, அடுத்த ஆண்டுக்குரிய திட்டங்களை இந்த ஆண்டிறுதிக்குள்ளேயே அனுமதிப்பதாகத் தெரிவித்துள்ளமை சிறப்பான விடயம் எனக் குறிப்பிட்ட ஆளுநர், விரைவாக திட்டங்களை அடையாளம் காணவேண்டும் என்றும் தெரிவித்தார். அத்துடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் விளைவுகள் என்ன என்பதையும் அதை முன்னிறுத்தியே திட்டங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலன், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆகியோரும், சமூகசேவைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் லு.தனுஜா, தொழிற்றுறை திணைக்களத்தின் பணிப்பாளர் செ.வனஜா, கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் அகல்யா சேகராஜா, கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் பா.அபிராமி கட்டடங்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்தினதும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/223376
  8. ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது - சிறைச்சாலைகள் ஆணையாளர் 26 August 2025 தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (ஊடகம், திறன்கள், தொழில்துறைகள்) ஜகத் வீரசிங்கவிடம், எமது செய்தி சேவை வினவிய போது, ”மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பெரும்பாலும் சாத்தியமில்லை” என்று தெரிவித்தார். அவருக்கு மேலும் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதால், அந்தச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார். இருப்பினும், சூம் (Zoom) தொழில்நுட்பம் மூலம் ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வந்தால், அது தொடர்பாகத் தேவையான வசதிகளை வழங்கச் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்று ஜகத் வீரசிங்க மேலும் தெரிவித்தார். https://hirunews.lk/tm/416623/ranil-wickremesinghe-cannot-be-produced-before-the-fort-magistrates-court-commissioner-of-prisons
  9. கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு கொழும்பில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பொது ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவித இடையூறுகளையும் தடுக்கவும் நகரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் (OIC) அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. ஏதேனும் வன்முறை ஏற்பட்டாலோ அல்லது சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராகவோ சட்ட நடவடிக்கை எடுக்க தெளிவான அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன, கூடுதலாக, எந்தவொரு அமைதியின்மைக்கும் விரைவாக பதிலளிக்க கலகத் தடுப்புப் படைகள் மற்றும் கூடுதல் பொலிஸ் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. https://www.tamilmirror.lk/செய்திகள்/கலகம்-தடுக்கும்-படைகள்-குவிப்பு/175-363499
  10. நான்கு காணொலிகளில் ரணில் கைதுக்கு விளக்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விளக்கமறியல் தொடர்பாக நான்கு விளக்கக் காணொலிகளை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த விளக்கங்கள் ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் வெவ்வேறு கோணங்களில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. சமூகவியல் விளக்கத்தை களனி பல்கலைக்கழக மக்கள் தொடர்புத் துறைத்தலைவர் மனோஜ் ஜிந்தாச வழங்கியுள்ளார். மத மற்றும் நல்லிணக்கக் கண்ணோட்டத்தை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஓமரே புண்யசிறிதேரர் வழங்கியுள்ளார். சட்ட விளக்கத்தை மூத்த சட்டக்கல்வியலாளர் பேராசிரியர் பிரதிபா மகாநாமஹேவா வழங்கியுள்ளார். அதேநேரம் ஊடக மற்றும் சமூகவியல் கண்ணோட்டத்தை ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன வழங்கியுள்ளார். https://newuthayan.com/article/நான்கு_காணொலிகளில்_ரணில்_கைதுக்கு_விளக்கம்
  11. 108 தம்பதியினருக்கு இலவச திருமணம்! adminAugust 25, 2025 யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்யத முடியாத நிலையில் உள்ள 108 தம்பதியினருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக சங்க தலைவர் இ ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின் , நிதியுதவியில் , 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது . தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு , 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி திருமணம் நடாத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இந்த 108 தம்பதியினரையும் , யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாகவே தெரிவு செய்தோம். அன்றைய திருமண நிகழ்வில் கலந்து கொண்டு 108 தம்பதியினரையும் வாழ்த்தி , அன்று மதியம் ஆலயத்தில் நடைபெறவுள்ள மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார். https://globaltamilnews.net/2025/219610/
  12. கிடைக்காது என்று தெரிந்திருந்தும் நோபல் சமாதானப் பரிசுக்கு ஆசைப்படும் டொனால்ட் ட்ரம்ப் August 23, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — 1900 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட நோபல் பவுண்டேசன் அதற்கு அடுத்த ஆண்டில் இருந்து நோபல் சமாதானப் பரிசை வழங்கி வருகிறது. 124 வருட வரலாற்றில் அந்த பரிசு இதுவரையில் 97 பேருக்கும் 20 அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களில் அமெரிக்க ஜனாதிபதிகள், துணை ஜனாதிபதிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் அடங்குவர். தியோடர் ரூஸ்வெல்ற் ( 1901 — 1909), வூட்ரோ வில்சன் (1913 — 1921) மற்றும் பராக் ஒபாமா (2009 — 2017) ஆகியோரே பதவியில் இருந்த வேளையில் நோபல் சமாதானப் பரிசைப் பெற்ற அமெரிக்க ஜனாதிபதிகளாவர். ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான போரை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தமைக்காகவும் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதில் தீவிரமான அக்கறை காட்டியதற்காகவும் 1906 ஆம் ஆண்டில் ரூஸ்வெல்ற்றுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னோடியாக அமைந்த நாடுகள் கழகத்தை (League of Nation) அமைத்தமைக்காக 1919 ஆம் ஆண்டில் வூட்ரோ வில்சனுக்கும் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச இராஜதந்திரத்தையும் மக்களிடையே ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கு முயற்சிகளை முன்னெடுத்தமைக்காக ஒபாமாவுக்கு அவர் பதவிக்கு வந்த 2009 ஆம் ஆண்டிலேயே அந்த பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒருவருக்கும் முன்னாள் துணை ஜனாதிபதி ஒருவருக்கும் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1981 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த ஜிம்மி கார்ட்டருக்கு சர்வதேச நெருக்கடிகளுக்கு சமாதானத் தீர்வுகளைக் காண்பதற்கும் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மேம்படுத்துவதற்கும் அயராத முயற்சிகளை முன்னெடுத்தமைக்காக 2002 ஆம் ஆண்டில் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது. பில் கிளின்டனின் இரு பதவிக்காலங்களிலும் (1993 — 2001) துணை ஜனாதிபதியாக இருந்த அல் கோருக்கு காலநிலை மாற்றம் குறித்து செய்த ஆய்வுகளுக்காகவும் அவை தொடர்பிலான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பியமைக்காகவும் 2007 ஆம் ஆண்டில் அந்த பரிசு கிடைத்தது. அது தவிர, ஹென்றி கீசிங்கர் உட்பட நான்கு அமெரிக்க இராஜாங்க அமைச்சர்களும் நோபல் சமாதானப் பரிசைப் பெற்றனர். ஆனால், அவர்களில் எவருமே தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைப் போன்று நோபல் சமாதானப் பரிசைப் பெறுவதற்காக தாங்களாகவே ஆதரவைத் திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டதாக நாம் இதுவரையில் அறியவில்லை. உலகின் பல்வேறு பாகங்களிலும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்தமைக்காக சமாதானப் பரிசைப் பெறுவதற்கான தகுதி தனக்கு இருக்கிறது என்று அவரே கூறிவருகிறார். கடந்த ஜனவரியில் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக வந்த பிறகு ஐந்து மாதங்களில் ஐந்து சர்வதேச போர்களை தடுத்து நிறுத்தியதாக கடந்த வாரம் கூறிய ட்ரம்ப் உக்ரெயினில் தொடரும் போருக்கு முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மீது குற்றம் சுமத்தினார். உலக நாடுகள் மீது அடாவடித்தனமாக வரிகளை விதித்து வருவதால் சர்வதேச அரங்கில் சர்ச்சைக்குரிய ஒரு பிரபல்யத்தை பெற்றிருக்கும் ட்ரம்ப் கடந்த மாதம் நோர்வேயின் நிதியமைச்சர் ஜெனஸ் ஸ்ரொல்ரன்பேர்க்குடன் வரிவிதிப்புகள் குறித்து தொலைபேசியில் பேசியபோது நோபல் சமாதானப் பரிசை பெறுவதற்கு தான் விரும்புவதாக கூறியதாக நோர்வே பத்திரிகைகள் கடந்த வாரம் செய்திகளை வெளியிட்டிருந்தன. அமெரிக்க நிதியமைச்சர், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி உட்பட வெள்ளை மாளிகையின் பல்வேறு அதிகாரிகளும் தன்னுடன் பேசியதாக ஸரொல்ரன்பேர்க் ஊடகங்களுக்கு கூறினார். இந்திய — பாகிஸ்தான், இஸ்ரேல் — ஈரான், தாய்லாந்து — கம்போடியா, ருவாண்டா — கொங்கோ ஜனநாயக குடியரசு, சேர்பியா — கொசோவா, எகிப்து — எதியோப்பியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஆறு மோதல்களை ஜனாதிபதி ட்ரம்ப் முடிவுக்கு கொண்டுவந்ததாக வெள்ளைமாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிற் சில தினங்களுக்கு முன்னர் கூறினார். மாதத்துக்கு ஒரு சமாதான உடன்படிக்கையும் போர்நிறுத்தமும் செய்யப்படுவதற்கான வெற்றிகரமான மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்ட ஜனாதிபதிக்கு நோபல் சமாதானப் பரிசை வழங்குவதற்கு காலம் தாமதித்துவிட்டது என்றும் அவர் கூறினார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் மூண்டமோதலுக்கு முடிவைக்கட்டியதாக ட்ரம்ப் உரிமை கோருகின்ற போதிலும், இந்தியா அதை நிராகரிக்கின்றது. தெற்காசியாவின் இரு அணுவாயுத நாடுகளும் தனது கோரிக்கையை அடுத்தே மோதலை நிறுத்தியதாக அவர் இதுவரையில் பல தடவைகள் கூறியிருக்கிறார். தனது தலையீடு இல்லாதிருந்திருந்தால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் அணுவாயுதப் போராக மாறியிருக்கும் என்று கடந்த வியாழக்கிழமை கூட ட்ரம்ப் கூறினார். இரு நாடுகளினதும் இராணுவ உயர் மட்டங்களுக்கு இடையிலான நேரடித் தொடர்பாடல்களை தொடர்ந்தே நான்கு நாள் மோதல்கள் நிறுத்தப்பட்டதாக இந்தியா திரும்பத் திரும்பக் கூறுகின்ற போதிலும், பாகிஸ்தான் ட்ரம்பின் கூற்றை இதுவரையில் மறுதலிக்கவில்லை. பதிலாக, “மோதல்களின்போது தீர்க்கமான இராஜந்திர தலையீட்டைச் செய்து முக்கியமான தலைமைத்துவத்தை வழங்கியதற்காக” நோபல் சமாதானப் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதியின் பெயரை பிரேரிக்கப் போவதாக ஜூன் மாதம் பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்தது. இராணுவத் தளபதி அசீம் முனீருக்கும் ட்ரம்புக்கும் இடையில் நடந்த சந்திப்புக்கு பின்னரே அந்த அறிவிப்பை பாகிஸ்தான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக, ஜூலை மாதம் அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு நோபல் சமாதானப் பரிசுக்கு ட்ரம்பின் பெயரை பிரேரித்து நோபல் கமிட்டிக்கு தான் அனுப்பிய கடிதத்தை அவரிடம் கையளித்தார். எல்லைத் தகராறு காரணமாக தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் ஜூலையில் மூண்ட ஐந்து நாள் மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்த போர்நிறுத்தத்துக்கு காரணகர்த்தாவாக இருந்த அமெரிக்க ஜனாதிபதியை சமாதானப் பரிசுக்கு நியமித்திருப்பதாக கம்போடிய பிரதமர் ஹுன் மனெற் ஆகஸ்ட் 7 ஆம் திகதி அறிவித்தார். முன்னாள் சோவியத் குடியரசுகளான ஆர்மேனியாவுக்கும் அசெர்பைஜானுக்கும் இடையில் மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக நீடித்துவந்த மோதல்ளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஆகஸ்ட் 8 வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் ஏற்பாடு செய்த “சமாதான உச்சிமகாநாட்டில்” இரு நாடுகளின் தலைவர்களும் நோபல் சமாதானப் பரிசுக்காக அவரின் பெயரை கூட்டாக நியமிப்பதாக உறுதியளித்தனர். தனது நாட்டுக்கும் அசெர்பைஜானுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த ட்ரம்பை தவிர வேறு எந்த தலைவரினாலும் முடிந்திருக்காது என்று கூறிய ஆர்மேனிய பிரதமர் நிக்கோல் பாஷின்யான், நோபல் சமாதானப் பரிசுக்காக பிரேரிப்பதற்கு கடிதவரைவு ஏதாவது கைவசம் இருந்தால் உடனடியாகவே அதில் கையெழுத்திடுவதாக ட்ரம்பிடம் நகைச்சுவையாக கூறியதாக ஊடகங்கள் கூறின. ருவாண்டாவுக்கும் கொங்கோ ஜனநாயக குடியரசுக்கும் இடையில் பல தசாப்தங்களாக நீடித்த மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்க ஜனாதிபதி வகித்த பாத்திரத்துக்காக அவரின் பெயரை சமாதானப் பரிசுக்கு நியமனம் செய்யும் யோசனைக்கு அந்த இரு நாடுகளின் தலைவர்களும் ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். இதுவரையில் ஐந்து நாடுகளின் தலைவர்கள் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். சமாதானப் பரிசுக்காக செய்யப்பட்ட உண்மையான உத்தியோகபூர்வ நியமனங்கள் அந்தரங்கமாகவே வைக்கப்பட்டிருக்கும் என்பதால் நோர்வே நோபல் கமிட்டியின் காலக்கெடுவுக்கு (2025 ஜனவரி 31) முன்னதாக ட்ரம்பின் பெயர் நியமிக்கப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த வருடத்துக்கான பரிசுகள் குறித்து ஆராய்வதற்காக நோபல் கமிட்டி பெப்ரவரி 28 ஆம் திகதி நடத்திய முதலாவது கூட்டத்தின் போது அதன் உறுப்பினர்கள் மேலதிக பெயர்களை பட்டியலில் சேர்த்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. காலக்கெடுவுக்கு முன்னதாகவே ட்ரம்பின் பெயர் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக சில அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. நோபல் சமாதானப் பரிசை பெறுபவர்களின் (ஒருவர் அல்லது அதற்கும் அதிகமானவர்கள்) பெயர்கள் அக்டோபர் 10 ஆம் திகதி அறிவிக்கப்படும். அந்த பரிசை வழங்கும் நிகழ்வு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் டிசம்பர் 10 ஆம் திகதி நடைபெறும். அமெரிக்க ஜனாதிபதியை சமாதானப் பரிசுக்கு நியமனம் செய்திருக்கும் நாடுகளின் குறிப்பாக ருவாண்டா, இஸ்ரேல், கபோன், அசெர்பைஜான் மற்றும் கம்போடியா ஆகியவற்றின் தலைவர்கள் எதேச்சாதிகார ஆட்சியாளர்களாக, இராணுவ ஆட்சியாளர்களாக அல்லது சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களாக இருப்பதால், அவர்களுடைய ஆதரவு நோபல் கமிட்டியின் தெரிவில் எதிர்மறையான தாக்கத்தைச் செலுத்தும் எனலாம். மத்திய கிழக்கில் காசா பள்ளத்தாக்கில் இடம்பெறுகின்ற போர்க் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் ( International Criminal Court ) பிடியாணை பிடிக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய பிரதமரை வெள்ளைமாளிகை வரவேற்று விருந்தோம்புகிறது. காசாவில் தொடருகின்ற பாலஸ்தீன இனப்படுகொலைக்காக இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் (Internatiinal Court of Justice ) வழக்கும் தொடுக்கப்பட்டிருக்கிறது. பாலஸ்தீன இனப்படுகொலையை நிறுத்துவதற்கு இஸ்ரேலை நிர்ப்பந்திப்பதற்கான சகல வல்லமையும் இருக்கின்ற போதிலும், எதையும் செய்யாமல் நெதான்யாகுவை ட்ரம்ப் மேலும் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார். அமெரிக்க மண்ணில் இருந்துகொண்டு இந்தியாவுக்கு எதிராக அணுவாயுத எச்சரிக்கையை செய்வதற்கு ட்ரம்ப் அனுமதிப்பதை நோபல் கமிட்டி கவனத்தில் எடுக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அவதானிகள் கூறியிருக்கிறார்கள். இந்தியாவின் பிரபலமான பத்திரிகையாளர்களில் ஒருவரான சேஷாத்ரி ஷாரி நேற்றைய தினம் ‘த பிறின்ற்’ இணையத் தளத்தில் பின்வருமாறு எழுதியிருக்கிறார் ; “சிந்து நதியில் இந்தியா அணையொன்றை கட்டுவதற்கு துணிச்சல் கொள்ளுமானால், அணுவாயுத தாக்குதலை நடத்தப்போவதாக பாகிஸ்தான் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் அசீம் முனீர் எச்சரிக்கை செய்திருக்கிறார். ட்ரம்ப் நிருவாகத்தின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பலர் முன்னிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது மிகவும் ஆபத்தானது.” பாகிஸ்தான் ஒரு அணுவாயுத நாடு. நாம் அழிந்துகொண்டு போகின்றோம் என்று நினைப்போமேயானால், புதுடில்லியிடமிருந்து எமது இருப்புக்கு அச்சுறுத்தல் வருமானால் உலகின் அரைவாசியை எம்முடன் கொண்டு போவோம்” என்று முனீர் கூறியிருக்கிறார். “இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க மண்ணில் இருந்துகொண்டு வெளிநாட்டு இராணுவ தளபதியொருவர் அணுவாயுத அச்சுறுத்தலை விடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும். அத்தகைய பொறுப்பற்றதும் ஆபத்தானதுமான அச்சுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டபோது ட்ரம்ப் நிருவாகம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது. நோபல் சமாதானப் பரிசை வழங்கும் நோர்வேயின் நோபல் கமிட்டி இதை கவனத்தில் எடுக்க வேண்டும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப் உரிமை கோருவதை முனீரின் அச்சுறுத்தலும் பொய்யாக்கியிருக்கிறது.” முதலாவது பதவிக் காலத்தில் இருந்து ட்ரம்ப் தன்னை சமாதானத்துக்கான ஒரு மனிதராக வர்ணித்து வந்திருக்கிறார். ஜிம்மி கார்ட்டருக்கு பிறகு எந்தவொரு அமெரிக்கப் படைவீரரையும் வெளிநாட்டு மோதலுக்கு அனுப்பிவைக்காத முதல் ஜனாதிபதி தானே என்றும் அவர் பெருமை பேசுகிறார். அமெரிக்க ஜனாதிபதியாக தான் இருந்திருந்தால் இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதல் ஒருபோதும் இடம் பெற்றிருக்காது என்றும் அவர் கூறினார். ஆனால், கடந்த ஜனவரியில் மீண்டும் பதவிக்கு வந்தவுடன் டென்மார்க்கிற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய தீவான கிறீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக இராணுவ பலத்தைப் பயன்படுத்தும் சாத்தியத்தை நிராகராகரிக்க முடியாது என்று ட்ரம்ப் கூறினார். அத்துடன் பனாமா கால்வாயை அமெரிக்காவுக்கு சொந்தமாக்கப் போவதாக கூறிய அவர் அயல்நாடான கனடாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக்கும் யோசனை குறித்தும் பேசினார். எல்லாவற்றுக்கும் மேலாக, இனப்படுகொலைக்கு உள்ளாகியிருக்கும் பாலஸ்தீனர்களை காசாவில் இருந்து வேறு நாடுகளுக்கு அனுப்பிவிட்டு அந்த பள்ளத்தாக்கை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் உல்லாசக் கடற்கரையாக்கப் போவதாகவும் அவர் கூறினார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் சுமுகமான உறவுகளை வளர்த்துக்கொள்வதன் மூலமாக உக்ரெயின் போரை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்ற தவறான நம்பிக்கையில் ட்ரம்ப் உக்ரெயின் ஜனாதிபதி வொலாடிமிர் செலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து மிரட்டினார். அதேவேளை, ஐம்பது நாட்களில் போர் நிறுத்தத்துக்கு புட்டின் இணங்கவில்லையானால், ரஷ்யாவுக்கு எதிராக 100 சதவீத வரியை விதிக்கப்போவதாக அவர் அச்சுறுத்தினார். ஆனால், இறுதியில் தற்போது புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர ட்ரம்புக்கு வேறு மார்க்கம் இருக்கவில்லை. உக்ரெயினில் பிராந்தியங்களை சொந்தமாக்கிக் கொள்வதற்கான ரஷ்யாவின் விருப்பத்துக்கு அவர் இணங்கிவிடுவார் என்று ஐரோப்பிய நாடுகள் அஞ்சுகின்றன. புவிசார் அரசியல் நிலைவரம் பற்றிய சரியான தெளிவு இல்லாதவராக, உக்ரெயின் போருக்கு தனது நிபந்தனைகளின் அடிப்படையில் முடிவைக் காண்பதில் நாட்டம் கொண்டிருக்கும் ட்ரம்ப், செலன்ஸ்கியை தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்றமுறையில் கையாளலாம் என்று நம்புகிறார். இது இவ்வாறிருக்க, உலகளாவிய ரீதியில் ட்ரம்ப் தொடுத்திருக்கும் வரிப்போர் சர்வதேச வர்த்தக உறவுகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பின்தங்கிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகள் வேறு வழியின்றி அவரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ற முறையில் செயற்பட நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இலங்கையும் அத்தகைய ஆபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. வரிவிதிப்பை அவர் அமெரிக்க ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான புவிசார் அரசியல் அதிகாரமாக பயன்படுத்துகிறார். இலங்கை மீதான வரி தொடர்பாக அமெரிக்கா எடுத்த தீர்மானம் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்துடன் மாத்திரமல்ல, முழுமையான இருதரப்பு உறவுகளுடனும் சம்பந்தப்பட்டது என்று அண்மையில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாக்கவுக்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். பொருளாதார வல்லமை கொண்ட இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளையும் வரிவிதிப்பைக் காட்டி பயமுறுத்த அவர் முயற்சிக்கின்றார். தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் எட்டு மாதங்களில் அமெரிக்க ஜனாதிபதி கடைப்பிடித்த அணுகுமுறைகள் சட்டத்தின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றன. ஈரானுடன் அணுத்திட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த வேளையிலேயே அந்த நாட்டின் அணு மையங்கள் மீது குண்டுவீச்சுக்களை நடந்துவதற்கு ட்ரம்ப் உத்தரவிட்டார். ஒபாமாவுக்கு பதினாறு வருடங்களுக்கு முன்னர் நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டபோது “எதற்காக அவர் அந்த பரிசைப் பெற்றார் என்று எனக்கு தெரியவில்லை” என்று ட்ரம்ப் கேலி செய்தார். எதைச் சாதித்துவிட்டதற்காக ட்ரம்ப் தனக்கு சமாதானப் பரிசைப் பெறுவதற்கான தகுதி இருப்பதாக நம்புகிறார் என்று முழு உலகமுமே இப்போது கேட்கிறது. தனது மத்தியஸ்த முயற்சிகளின் மூலமாக முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாக ட்ரம்ப் பெருமையாக உரிமை கோரும் எந்தவொரு மோதலுமே மீண்டும் வெடிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. முழு உலகினதும் மனச்சாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கும் காசா அவலத்துக்கு முடிவுகட்ட இஸ்ரேலை வழிக்கு கொண்டுவருவதற்கு உருப்படியாக ட்ரம்ப் எதையாவது செய்தால், அவரின் நோபல் சமாதான பரிசு ஆசையில் ஒரளவு அர்த்தம் இருக்க முடியும். பட்டினி கிடக்கும் பாலஸ்தீனர்கள் உணவைப் பெறுவதற்கு நிவாரண நிலையங்களுக்கு வருகின்றபோது குழந்தைகள், பெண்கள், வயோதிபர் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் இஸ்ரேலியப் படைகளினால் தினமும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலிய சியோனிச அரசின் காவலனாக நிற்கும் ட்ரம்ப் சமாதான பரிசுக்கு எந்தவிதமான அருகதையும் இல்லாதவர். இப்போது மாத்திரமல்ல , ஏற்கெனவேயும் பல தடவைகள் அவர் அந்த பரிசக்கு தனக்கு கிடைக்கவில்லை என்று முறையிட்டிருந்தார். ஆனால், அது தனக்கு கிடைக்காது என்பதும் ட்ரம்புக்கு தெரியும். தான் எதைச் செய்தாலும் தனக்கு சமாதானப் பரிசை தரமாட்டார்கள் என்று தனது சமூக ஊடகத்தில் அவரே ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறார். வெள்ளைமாளிகையில் இஸ்ரேலிய பிரதமருடன் பெப்ரவரியில் நடத்திய சந்திப்பு ஒன்றின்போது “சமாதானப் பரிசைப் பெறுவதற்கு எனக்கு தகுதி இருக்கிறது. ஆனால், அவர்கள் எனக்கு ஒருபோதும் தரமாட்டார்கள்” என்று கூறினார். நோபல் பரிசுகளை தெரிவு செய்யும் ஐவர் கொண்ட கமிட்டியை நோர்வே பாராளுமன்றமே தெரிவு செய்கிறது. தனக்கு அந்த கமிட்டி பரிசைத் தராவிட்டால் ட்ரம்ப் நோர்வே மீது கடுமையான வரிகளை விதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. https://arangamnews.com/?p=12269
  13. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 15 பேர் பலி August 25, 2025 3:06 pm தெற்கு காசா பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சர்வதேச ஊடகங்களில் பணிபுரியும் நான்கு ஊடகவியலாளர்கள் உட்பட சுமார் 15 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நாசர் வைத்தியசாலையில் நடந்த தாக்குதலில் அதன் புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்ததாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ஏனைய மூவர் அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் மற்றும் என்பிசி ஆகியவற்றில் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேலிய இராணுவமும் பிரதமர் அலுவலகமும் உடனடி கருத்துக்களை வெளியிடவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. https://oruvan.com/15-killed-including-journalists-in-israeli-attack-on-gaza/
  14. யாழில் இராணுவ முகாம்களை அகற்றக் கோரி போராட்டம் August 25, 2025 3:28 pm யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி இன்றைய தினம் காலை போராட்டமொன்று இடம்பெற்றது. பருத்தித்துறை நகர சபை தவிசாளர் டக்ளஸ் போல் தலைமையில் பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை எட்டு மணிக்கு பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் இருந்து போராட்டம் ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் வழங்கப்பட்டது. வர்த்தகர்கள், பொதுமக்களை ஒன்றிணைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அரசியல்வாதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். பருத்தித்துறை துறைமுகப் பகுதி மற்றும் வெளிச்ச வீட்டடியில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி பொது அமைப்புகளை ஒன்றிணைத்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்துக்குச் சொந்தமான நிலம் மற்றும் தபால் நிலையத்துக்குச் சொந்தமான கட்டடம் என்பவற்றை ஆக்கிரமித்து பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் பெரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், தபால் நிலையம் பிறிதொரு கட்டடத்தில் இயங்கி வருவதுடன் பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தை பருத்தித்துறை நகருக்கு வெளியே இடம்மாற்றுவதற்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதனால், பருத்தித்துறை நகரின் முக்கிய அடையாளங்களான நீதிமன்றம், தபால் நிலையம், வெளிச்சவீடு ஆகியவற்றை அந்த அந்த இடங்களிலேயே உறுதிப்படுத்தும் வகையிலும், குறித்த பகுதிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ, கடற்படை முகாம்களை அகற்றுமாறு கோரியுமே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. https://oruvan.com/protest-demanding-the-removal-of-military-camps-in-jaffna/
  15. பிள்ளையானின் மற்றுமொரு சகா ஒருவர் மட்டக்களப்பில் கைது August 25, 2025 4:49 pm மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து பிள்ளையானின் மற்றுமொரு சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கையை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த ஏப்ரல் எட்டாம் திகதி பிள்ளான் என்றழைக்கப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன, முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சிஐடியினர் அவரது மட்டக்களப்பு காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் அந்த காலப்பகுதியில் கிரான் பகுதியில் இயங்கிவந்த ரி.எம்.வி.பியின் முகாமின் பொறுப்பாளராக இருந்து வந்துள்ள அந்தப் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பவரை சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் இருந்து வந்த சிஜடி யினரால் கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளது அவர் தெரிவித்தார். இதேவேளை பிள்ளையான் கைதை தொடர்ந்து அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான முன்னாள் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமார் கடந்த ஜூலை ஆறாம் திகதி திருக்கோவில் வைத்து அவரது சகாவான சசிதரன் தவசீலன் மட்டு சந்திவெளியில் வைத்தும் சிஐடியினர் கைது செய்தனர் அதனை தொடர்ந்து இனிய பாரதியின் முன்னாள் சாரதியான தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த செந்தூரனை கடந்த ஜூலை ஏழாம் திகதி தனியார் போக்குவரத்து பஸ் வண்டியை செலுத்திச் சென்ற நிலையில் கல்முனையில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பிரகாரம் யூலை (27) இனியபாரதியின் மற்றும் ஒரு சகாவான தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோயில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் கைது செய்யப்பட்டதுடன் பிள்ளையான் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடத்திய பிள்ளையானின் சகாவான காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் ஷகித் என்பவரை கடந்த 13ஆம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்ததுடன். கொழும்பில் இனியபாரதி நடாத்தி வந்ததாக கூறப்படும் வதைமுகாம் பொறுப்பாக இருந்த கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உட்பட இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/another-associate-of-pillaiyan-arrested-in-batticaloa/
  16. வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு - விசாரணை திகதி அறிவிப்பு 2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனுக்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம் இன்று (25) அறிவித்துள்ளது. இந்த மேன்முறையீட்டு மனுக்கள் பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய அமர்வின் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது. இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்திரணி, நீதிமன்றத்தின் முன் சாட்சியங்களை முன்வைத்ததுடன், வழக்கின் தமிழ் மொழி பெயர்ப்புகளைப் பெற நான்கரை ஆண்டுகள் வரை சென்றதாக சுட்டிக்காட்டினார். எனவே, மேன்முறையீட்டு விசாரணைக்கு, குறுகியகால திகதி ஒன்றை வழங்குமாறு பிரதிவாதி சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார். அதற்கமைய, பிரதிவாதிகளின் மேன்முறையீடு தொடர்பான மனுவை எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதியரசர்கள் அறிவித்துள்ளனர். 2015 மார்ச் 3 ஆம் திகதி பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் புங்குடுத் தீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்யா என்ற 18 வயது பாடசாலை மாணவி கடத்தி, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரதான குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என்றும், எனவே தங்களை இந்த வழக்கில் குற்றமற்றவர்கள் எனக் கருதி விடுவிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, சட்டத்தரணிகள் ஊடாக பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmeqvvwij0001qpfibjgjfyxv
  17. அம்மாவாகும் ரோபோக்கள் 2025 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:39 வாடகைத் தாய்க்கு பதிலாக, கர்ப்ப காலங்களில் ரோபோக்களை உருவாக்கி மனித குழந்தைகளைப் பெற்றெடுக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். குறித்த ரோபோக்களில் செயற்கை கருப்பையைப் பொருத்தி, ஒரு குழாய் மூலம் ஊட்டச்சத்துக்கள் செலுத்தப்படும் எனசீன விஞ்ஞானி ஜாங் கியூ இஃபெங் தெரிவித்துள்ளார். இருப்பினும் குறித்த தொழில்நுட்பம் மீது பல்வேறு நெறிமுறை சார்ந்த கேள்விகளும் எழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் குறித்த திட்டத்தை எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது. https://www.tamilmirror.lk/science-tech/அம்மாவாகும்-ரோபோக்கள்/57-363457
  18. வட்டுக்கோட்டையில் புதுப்பொலிவு பெறும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்! adminAugust 25, 2025 மிகத் தொன்மையான வழிப்பாட்டுத் தலமான வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயம் பல ஆண்டு காலம் கவனிப்பார் இன்றிக் காணப்பட்ட நிலையில் அதனை மீள் உருவாக்கம் செய்வதற்குரிய பணிகள் யாழ்ப்பாணம் மரவுரிமை அமையத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களின் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டடது. குறித்த பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தினை அடைந்து இருக்கும் நிலையில் மிக விரைவில் கும்பாவிஷேகம் நடாத்தி மக்களின் வழிபாட்டுத் தலாமாக்கப்படவுள்ளது. அமெரிக்காவில் வசிக்கின்ற கைதடியினைச் சேர்ந்த கலாநிதி சிவயோகநாதனின் மகளும் Meta நிறுவனத்தில் பணிபுரிகின்ற வருபவரான பாலயோகஸ்தினி சிவயோகநாதன் இவ்வாலயத்தை பழைய நிலைக்கு மீள் உருவாக்கம் செய்வதற்குரிய நிதியுதவியினை வழங்கியிருந்த நிலையில் குறித்த ஆலயம் மீள் எழுச்சி கண்டுள்ளது. குறித்த ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஸ்ட்டை செய்தல், எண்னைக் காப்பு சாத்தல், கும்பாவிஷேகம் தொடர்பான விபரங்கள் யாழ்ப்பாண மரவுரிமை மையத்தினரால் விரைவில் அறிவிக்கப்படும். எமது மரவுரிரைச் சின்னங்களினை பாதுகாத்து அதனை அடுத்த தலைமுறை தலைமுறை தலைமுறையாக கடந்த வேண்டும் என்ற எண்ணப்பாட்டுடன் 2021 ஆம் ஆண்டு அப்போதையை யாழ்.மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் காலத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மரவுரிமை அமையமானது, நல்லூர் இராஜதானியின் தோரண வாசல் மீள் உருவாக்கம், ஆனைக்கோட்டை அகழ்வாராய்ட்சி, போன்றவற்றினை நிறைவேற்றிய நிலையில் 400 வருடங்கள் பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயத்தின் மீள்உருவாக்கப் பணி யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் 3ஆவது செயற்றிட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/219590/
  19. சிறு பொறிகள் - நிலாந்தன் லட்சக்கணக்கானவர்கள் திரளும் நல்லூர்த் திருவிழாவின் ஒரு பகுதியாக “ஊருணி பாரம்பரிய ஆற்றுகைக் களம்” என்ற தலைப்பின் கீழ் ஒரு சிறு கலந்துரையாடல் களம் திறக்கப்பட்டது. ஊருணி என்பது திருக்குறளில் உள்ள ஒரு வார்த்தை. ஊரில் நீரை நுகரும் இடம் அவ்வாறு என்றழைக்கப்பட்டது. பத்தாம் திருவிழாவில் இருந்து தொடங்கி நல்லூர் வளாகத்துக்குள் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள புடவைக் கைத்தொழில் திணைக்கள வளாகத்தில் இக்கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. அங்கு நிலத்தடி நீரைப் பாதுகாப்பது தொடர்பான கண்காட்சியும் இடம்பெற்றது. பங்களிப்புடன் கூடிய ஆராய்ச்சிக்கூடாக வடக்கின் நீரைப் பாதுகாப்புக்கான அமைப்பும், வடக்கின் இளம் நீர் வாண்மையாளர்களும் இணைந்து முன்னெடுத்த மேற்படி கலந்துரையாடல்களில் வடக்கின் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்பை ஏற்படுத்தும் நோக்கிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. வடக்கின் இளம் நீர் வாண்மையாளர் அமைப்பு என்பது கடந்த ஐந்து வருடங்களாக இயங்கி வருகின்றது. பேராசிரியர் சிறீஸ்கந்தராஜாவின் தலைமையின் கீழ் இந்த அமைப்பு செயற்படுகின்றது. நல்லூர்த் திருவிழா வளாகத்தில் இடம்பெறும் இச்சந்திப்புகள் மிகச் சிறியவை. திருவிழாவுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களோடு ஒப்பிடுகையில் இந்த சந்திப்புகளில் கலந்துகொள்பவர்கள் மிகச்சிறிய எண்ணிக்கைதான். ஆனால் அவர்கள் விவாதிக்கும் விடயங்கள் யாழ்ப்பாணத்தின் உயிர் நிலைகளோடு சம்பந்தப்பட்டவை. அவை ஜனரஞ்சகமானவையோ அல்லது பெருந்திரளைக் கவர்பவையோ அல்ல. ஆனால் முழுச்சமூகத்தினதும் உயர்நிலையான அம்சங்கள் தொடர்பான உரையாடல்கள். அவை சிறியவை. ஆனால் தொடர்ச்சியானவை. தொடர்ச்சியாக இருப்பதுதான் அவற்றின் பலம். மென்மையான நீர் ஒரு பாறையின் மீது தொடர்ச்சியாக ஓடும்போது அந்தப் பாறையில் ஒரு தடத்தை உருவாக்குகின்றது. பாறையோடு ஒப்பிடுகையில் நீர்த் தாரை மென்மையானது. ஆனால் அதன் பலம் தொடர்ச்சியாக ஓடுவதுதான். தொடர்ச்சிதான் அது மிக வலிமையான பாறையில் ஒரு தடத்தை உருவாக்க காரணம். அப்படித்தான் சிறிய,ஜனரஞ்சகமற்ற,பரபரப்பை,பிரபல்யத்தைத் தேடாத சிறிய முயற்சிகள் ஒரு சமூகத்தின் உயிர் நிலையான அம்சங்களில் தாக்கத்தைச் செலுத்துகின்றன. இதுபோன்று சிறுசிறு சந்திப்புகள், ஆனால் தொடர்ச்சியானவை எல்லாச் சமூகங்களிலும் இடம்பெறுகின்றன. பண்பாட்டுச் செழிப்புமிக்க எல்லாச்சமுகங்களிலும் இதுபோன்ற சிறிய ஆனால் சீரியஸான உரையாடல் களங்கள் இருக்கும். இக்கட்டுரையானது யாழ்ப்பாணத்து அனுபவத்தைத்தான் இங்கு பகிர்கிறது. யாழ்ப்பாணத்தில் மேற்கண்ட இளம் நீர் வாண்மையாளர்களைப் போல இலக்கியவாதிகள் ,துறைசார் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆங்காங்கே சிறிய அளவில் கூடி தமது துறைசார் விடயங்களை உரையாடும் பல்வேறு சந்திப்பிடங்கள் உண்டு. உதாரணமாக, அண்மையில் நடந்த யாழ்ப்பாணத்தின் இரண்டாவது சர்வதேச புத்தகச் சந்தையின் பின்ணியைக் குறிப்பிடலாம். யாழ் வர்த்தக தொழிற்துறை மன்றத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட இப்புத்தகத் திருவிழாவை முன்னின்று ஒழுங்கமைத்தவர் வசீகரன். ”எங்கட புத்தகங்கள்” என்ற பெயரில் ஒரு இடையூடாட்டக் களத்தை அவர் வைத்திருக்கிறார். யாழ்ப்பாணம் கந்தர்மடம்,அம்மன் வீதியில் ஒரு சிறிய வீட்டில் எங்கட புத்தகம் இயங்குகிறது. உள்ளூர் வெளியீட்டாளர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பானது புத்தக வெளியீடுகளையும் சிறிய சிறிய இலக்கிய கலந்துரையாடல்களையும் ஒழுங்கமைத்து வருகிறது. யாழ்ப்பாணத் திரைப்படக் கழகம் இப்பொழுது அதன் திரைப்படங்களை இங்கேதான் திரையிட்டு வருகின்றது. எங்கட புத்தகங்கள் அமைப்பின் சந்திப்புகள் அநேகமாக சிறியவை. ஆனால் தொடர்ச்சியானவை பெரும்பாலும் ஒரே முகங்கள்தான் அங்கே காணப்படுவதுண்டு. துறைசார்ந்த விடயங்களில் சீரியசாக சிந்திப்பவர்கள் ஆழமாக உரையாடுபவர்கள் எப்பொழுதும் சிறிய அளவினராகத்தான் இருப்பார்கள். சீரியஸானதற்கும் ஜனரஞ்சகமானதுக்கும் இடையிலான இடைவெளி தமிழில் மட்டுமல்ல உலகின் பல சமூகங்களிலும் ஆழமானது. குறிப்பாக காணொளிகளின் காலத்தில் சீரியஸுக்கும் ஜனரஞ்சகத்துக்கும் இடையிலான இடைவெளி என்பது பாரதூரமான விதங்களில் அகன்றுவிட்டது, ஆழமாகிவிட்டது. ஆனாலும் சீரியஸான விடயங்களை உரையாடுபவர்கள் சிறிய தொகையினர் எல்லா சமூகங்களிலும் எப்பொழுதும் கூடிக் கதைத்துக் கொண்டே இருப்பார்கள்.எங்கட புத்தகங்களைப் போலவே மற்றொரு அமைப்பு யாழ்ப்பாண திரைப்படக் கழகம் ஆகும். இது தொடர்ச்சியாக இயங்கி வரும் ஒரமைப்பு. மூத்த இலக்கியச் செயற்பாட்டாளராகிய யேசுராசா இந்த அமைப்பை இயக்கி வருகிறார். அண்மையில் சிறிய அளவில் சர்வதேச திரைப்பட விழா ஒன்றையும் அவர் ஒழுங்குபடுத்தியிருந்தார். வணிக நோக்கிலான திரைப்படங்களுக்கும் அப்பால் சீரியஸான கலைப் பெறுமதி கூடிய திரைப்படங்களை யாழ் திரைப்படக் கழகம் தொடர்ச்சியாக திரையிட்டு வருகிறது. படத்துக்குப் பின் அங்கே கலந்துரையாடல்களும் நடக்கும். அதுபோல மற்றொரு அமைப்பு அது யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து சற்று விலகி அமைந்திருப்பது. “தேசிய கலை இலக்கியப் பேரவை”. இதற்கும் நீண்ட தொடர்ச்சி உண்டு. சிறிய எண்ணிக்கையானவர்கள் ஒரு வீட்டில் கூடி, அரசியல் சமூகச் செயற்பாட்டாளர்களை அழைத்துக் கலந்துரையாடுகிறார்கள். மற்றொரு அமைப்பு யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பழம் ரோட்டில் அமைந்திருக்கிறது. கலாநிதி சிதம்பரநாதனால் நிர்வாகிக்கப்படும் “பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடம்” இதுவும் ஜனரஞ்சகமான ஒரமைப்பு அல்ல. ஆனால் சிறிய மற்றும் தொடர்ச்சியான சந்திப்புகளை, கலந்துரையாடல்களை ஒழுங்குபடுத்தும் ஓரமைப்பு. இதுபோன்று யாழ் நகரை அண்டிய கோவில் வீதியில் அமைந்திருக்கும் “சமகால கலை மற்றும் கட்டிடக்கலைவடிவமைப்புக்கான ஆவணக் காப்பகத்தைக் குறிப்பிடலாம். இது துறைசார்ந்த நிபுணர்களையும் தமது துறைகளில் பிரகாசிப்பவர்களையும் அழைத்து உரையாடும் ஒரு களம். இதை உள்ளூர் ஆளுமைகளும் கலந்து கொள்வார்கள் வெளிநாட்டவர்களும் வருவார்கள். அந்த அடிப்படையில் இந்த அமைப்பு உள்ளூர் பரிமாணத்தையும் அனைத்துலகப் பரிமாணத்தையும் கொண்டது. Sri Lanka Archive of Contemporary Art, Architecture & Design யாழ்ப்பாணம் நகரத்துக்கு வெளியே சற்று தொலைவில் சுழிபுரத்தில் ஓர் அமைப்பு உண்டு. “சத்தியமனை”. அரசியல் சமூகச் செயற்பாட்டாளர் ஆகிய சுப்பிரமணியத்தின் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு நினைவு நூலகம். இங்கேயும் சிறிய ஆனால் தொடர்ச்சியான சந்திப்புகள் அடிக்கடி இடம்பெறும். நகர்ப்புறங்களில் இருந்து விலகி ஒரு கிராமப்புறத்தில் சுழிபுரத்தில் அமைந்திருப்பது அதற்குள்ள மற்றொரு சிறப்பு. இதுபோலவே அரங்கச் செயற்பாட்டாளர் தேவானந்தாவின் “செயற் திறன் அரங்கு” என்ற அமைப்பும் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது. எங்கட புத்தகம் போல நம்மவர் முற்றம் என்று ஒரு அமைப்பும் செயற்படுகின்றது. அதுவும் கலை இலக்கிய அறிவியல் விவாதங்களை ஏற்பாடு செய்கின்றது. அண்மை ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் பிரசுரித்து வரும் “எழுநா” என்ற அமைப்பு திருநெல்வேலியில் ராமநாதன் வீதியில் இயங்கி வருகின்றது. ஈழக் கற்கைகள் சார்ந்த ஆய்வு நிறுவனம் இது. இவை சில உதாரணங்கள். தமிழ் பகுதிகளில் இயங்கும் எல்லா அமைப்புக்களையும் இக்கட்டுரை குறிப்பிடுகிறது என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. எனக்குத் தெரியாமலே பல்வேறு சந்திப்புகள் இடம்பெற முடியும். இப்பொழுது மட்டுமல்ல போர்க்காலங்களிலும் போர் கருக்கட்டிய காலங்களிலும் அதற்கு முன்னரும் பல தலைமுறைகளாக இதுபோன்ற சந்திப்புகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. பண்பாட்டுச் செழிப்புமிக்க ஒரு சமூகத்தில் இதுபோன்ற சந்திப்பிடங்களே சமூக நொதியங்கள். போர்க் காலத்தில் மார்க் மாஸ்டரின் வீடு ஒரு தொகுதி ஓவியர்களின் சந்திப்பிடமாக இருந்தது. அச்சிறிய வீட்டின் சிறிய முன் விறாந்தையில் சந்தித்த பலர் பின்னாளில் துறை சார்ந்து மேலுயர்ந்தார்கள். மற்றொரு வீடு சிரித்திரன் ஆசிரியர் சுந்தருடையது. “மில்க்வைற்” கனகராசா போன்றவர்கள் அங்கு வருவார்கள். சுந்தரைப் பார்ப்பதற்குத் தொடர்ச்சியாக பல துறைகளைச் சேர்ந்தவர்களும் வருவார்கள். நாடகத்துறையில் குழந்தை .ம.சண்முகலிங்கம், சிதம்பரநாதன் போன்றவர்களின் வீடுகளும் அவ்வாறான சந்திப்பிடங்களாக இருந்தன. சண்முகலிங்கம் மாஸ்ரரின் கல்வியியல் அரங்குகளில் நடித்த, சண்முகலிங்கத்தின் வீட்டில் அடிக்கடி சந்தித்த பலர் பின்னாளில் துறை சார்ந்து மேலெழுந்தார்கள். ஊர்காவல்துறை கரம்பனைச்சேர்ந்தவர் சபாரட்ணம் மாஸ்ரர். இடப்பெயர்வின் பின் யாழ்ப்பாணத்தில் அவர் வசித்த பொழுது அவரை அடிக்கடி சந்தித்த ஒரு இளைய தலைமுறை இருந்தது. மற்றது குகமூர்த்தியின் வீடு அல்லது ஏ.ஜே.கனகரட்ணா இருந்த வீடு. குகமூர்த்தி ஜனவசியம் மிக்க ஆள். இடது பாரம்பரியத்தில் வந்தவர். அதேசமயம் தமிழ்த் தேசியவாதிகளோடும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் வேலை செய்தவர். போர்க்காலத்தில் கொழும்பில் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர். ஏஜேயைத் தேடி வெவ்வேறு அரசியல் நம்பிக்கைகளைக் கொண்டவர்கள் வருவார்கள். இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் வருவார்கள். இயக்கங்களில் இருந்து விலகியவர்களும் வருவார்கள். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவர் மாத்தையாகவும் வருவார். பின்னாளில் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பைச் செய்தவர்களில் ஒருவராகிய ராஜன் கூலும் வருவார். தமிழ்த் தேசிய அரசியலின் பல்வகைமையைப் பிரதிபலித்த ஒரு வீடு அது. மற்றொரு வீடு நாவலர் வீதியில் அமைந்திருந்த ராஜசிங்கம் மாஸ்டர் வீடு. இயக்கங்கள் வளர்ச்சி அடையத் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இயக்கங்களுக்கு எதிரான விமர்சனங்கள் மேலெழுந்த காலகட்டம் வரையிலுமான கலந்துரையாடல் களமாக அந்த வீடு இருந்திருக்கிறது. மற்றொன்று மு.திருநாவுக்கரசு இருந்த வீடு. சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் அவருடைய வீட்டுக்குப் போவார்கள். இரவு பகலாக இருந்து கதைப்பார்கள். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் அரசியல் உரையாடல்கள் அதிகம் நிகழ்ந்த வீடுகளில் அதுவும் ஒன்று. அப்படித்தான் மற்றொரு பொது இடம், யாழ்.மறைக்கல்வி நிலையம். 2009க்குப் பின்னரான அதிகளவு அரசியல் சந்திப்புகள், கலந்துரையாடல்கள் நிகழ்ந்த இடங்களில் அது முக்கியமானது. மேற்கண்டவை சில உதாரணங்கள். ஈழத் தமிழ்ச் சமூகத்தைச் செதுக்கிய, தீர்மானித்த பலரைச் செதுக்கிய,உருத் திரட்டிய களங்கள் அவை. ஒருவகையில் பின்னாளில் மேலெழுந்த பல போக்குகள் கருகட்டிய இடங்கள் அவை. எதிர்காலத்தை நொதிக்க வைத்த சமூக நொதிப்பிடங்கள் அவை. போர்க்காலத்தில் பாதுகாப்பற்ற வீடுகளின்,சிறிய அல்லது பெரிய முன் விறாந்தைகளில்,ஒரு குவளை பால் இல்லாத வெறுந் தேனீரோடு உரையாடப்பட்ட பல விடியங்கள்தான் பின்னாளில் சமூகத்தின் உயிர்நிலையான விடயங்களைத் தீர்மானித்தன. இந்து சமயத்தில் சத்சங்கம் என்று கூறுவார்கள்.ஒரே ஆன்மீக நம்பிக்கையைக் கொன்றவர்கள் ஓரிடத்தில் கூடி கலெக்ரிவ்வாகப் பிரார்த்திப்பார்கள், தியானம் செய்வார்கள்.அந்தக் கலெக்ரிவிற்றிக்கு-கூடுகி செயற்பாட்டுக்கு ஒரு சக்தி உண்டு.அது தனித்தனிச் சக்திகளை ஒன்றாகக் கூட்டித் திரட்டும். திரட்டப்பட்ட கூட்டுச்சக்தி மகத்தான ஆக்க சக்தியாக மாறும். இவ்வாறு சிறு சந்திப்பிடங்கள் அல்லது சமூக நொதிப்பிடங்கள் போன்றன பின்வரப் போகும் சமூக ஓட்டங்களைத் தீர்மானிக்கின்றன. பரபரப்பின்றி, பிரசித்தமின்றி,சிறியதாக, சீரியஸானதாக, ஆனால் தொடர்ச்சியானவைகளாக இருப்பவை.உண்மையும் அர்ப்பணிப்பும் தொடர்ச்சியும்தான் அவற்றுடைய பலம். அந்த சிறிய பொறிகள்தான் பிற்காலங்களில் பெரும் சுவாலையாக வளர்கின்றன.நோபல் பரிசை வென்ற மானுடவியலாளராகிய மாக்ரட் மீட் அம்மையார் கூறுவது போல “உலகை மாற்றுவதற்கான அர்ப்பணிப்புள்ள ஒரு சிறிய குழுவின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். உண்மையில், அதுதான் இதுவரை நடந்திருக்கும் ஒரே விடயம்.” https://www.nillanthan.com/7669
  20. நல்லூர் ஆலயத்திற்கான மணல் தொடர்பான தீர்மானங்கள் வருத்தத்துக்குரியன – வடக்கு ஆளுநர் கவலை! adminAugust 24, 2025 எந்தவொரு விடயம் அழிக்கப்படுகின்றதோ அல்லது கால ஓட்டத்தில் மறைந்து செல்கின்றதோ அதைத்தக்க வைப்பதற்கும் அடுத்த சந்ததிக்கு ஒப்படைப்பதற்காகவும் தான் தினங்கள், அமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. அதைப்போலத்தான் நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் அமைப்பையும் நான் பார்க்கின்றேன். காலத்துக்கு தேவையான அமைப்பு. பொருத்தமான இடத்திலிருந்து பொருத்தமானவர்களால் தொடக்கப்பட்டு நடைபோடுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் அமைப்பின் பரிசளிப்பு நிகழ்வும் ஆண்டு விழாவும், நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (23.08.25) அமைப்பின் இணைத்தலைவரும் முன்னாள் பிரதம செயலருமான இ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பண்பாட்டு கலைக்கூடலின் மாணவர்களால் பண்ணிசை, கோலாட்டம் என்பன நடத்தப்பட்டன. அத்துடன் யாழ்ப்பாணம், வலிகாமம் வலயப் பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன. அத்துடன், முனைவர் திருநாவுக்கரசு கமலநாதனின் ‘பொழிலும் பொலிவும்’ நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. காலைக்கதிர் பத்திரிகைக்கு செல்வழி நயனம் விருதும் நிகழ்வில் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆளுநர் உரையாற்றுகையில், ஆன்மீகத்தில் ஈடுபாடு குறைந்து செல்வது மாத்திரமல்லாது ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது கூட குறைந்துள்ளது. ஆன்மீகம் வாழ்வியலுக்குத் தேவை. இன்று நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடம் செய்துள்ள பணி பாராட்டுக்குரியது. 5 ஆண்டுகளாக அவர்கள் இதைச் செய்து வருகின்றார்கள். இளம் பிள்ளைகளை இதில் அதிகளவு ஈடுபடுத்தி ஊக்கப்படுத்தியிருக்கின்றார்கள். நல்லூர் ஆலயத்திற்கான மணல் தொடர்பான தீர்மானங்கள் வருத்தத்துக்குரியன. யாழ்ப்பாணத்தின் அடையாளமாக நல்லூர் கந்தசுவாமி கோயிலே உலகம் எங்கு அடையாளப்படுத்தப்படுகின்றது. நாங்கள் யாழ்ப்பாண மண்ணிலே பிறந்தோம் என்று பெருமை கொள்ளுவதற்கும் அந்த நல்லூரே காரணமாக இருக்கின்றது. இன்று சைவத்துக்கும், தமிழுக்கும் பல தரப்புக்களாலும் உள்ளக, வெளியக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அந்த அழுத்தங்களிலிருந்து சைவத்தையும், தமிழையும் பாதுகாத்துக் கொள்வதற்கு இவ்வாறான அமைப்புக்கள் காலத்தின் தேவையாக சேவையாற்றுகின்றன, என ஆளுநர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் சா.சுதர்சன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். நாங்கள் எங்கள் கலாசாரம், அடிப்படை விழுமியங்களை கைவிடக்கூடாது. பிரதேச, மாவட்ட, மாகாண கலாசார விழாக்கள் பல கலைஞர்களுக்கான மேடை வாய்ப்புக்களை வழங்குகின்றன. இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுவதற்கு தொடர்ந்து ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதுடன் அதிகளவு கலைஞர்களை குறிப்பாக இளம் கலைஞர்களை மேடையேற்றவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வலி. மேற்கு பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டு பெருவிழா அராலி இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. அராலி வடக்கு முருகமூர்த்தி ஆலயத்திலிருந்து விருந்தினர்கள் கலாசார நடனங்களுடன் விழா நடைபெற்ற மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரால் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த கலைஞர்கள் 5 பேருக்கு காலைவாரிதி விருதும் வழங்கப்பட்டது. அங்கு உரையாற்றிய ஆளுநர், சிறுவர்களாக நாங்கள் இருந்த காலத்தில் பல்வேறு கலை நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் நடைபெறும். இன்று அவ்வாறு நடைபெறுவதைக் காண்பது அரிதாக உள்ளது. நாங்கள் எங்கள் கலாசாரம், அடிப்படை விழுமியங்களை கைவிடக்கூடாது. அடுத்த தலைமுறைக்கு அதை நாம் எடுத்துச் செல்லவேண்டும். எங்களுக்குரிய தனித்துவமான அம்சங்களை ஊடுகடத்த வேண்டும். இந்தப் பண்பாட்டு விழா ஊர் மக்களின் பங்கேற்புடன் நடைபெறுகின்றது. அதிகளவு மக்கள் ஆதரவளித்திருக்கின்றார்கள். நாங்கள் கலாசார ஊர்த்திப் பவனியுடன் அழைத்து வருகின்றபோது ஊர்மக்கள் அபரிதமான ஆதரவு வழங்கியதை நேரில் காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறுதான் விழாக்கள் நடத்தப்படவேண்டும். கலை, விளையாட்டு இரண்டிலும் இளம் சந்ததியின் பங்கேற்பை ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் கவனங்கள் சிதறவிடாது பார்த்துக்கொள்ளவேண்டும். எங்களால் முடிந்தவரையில் இதை நாம் செய்துகொள்வோம் என ஆளுநர் தெரிவித்தார். இந்த நிகழ்வில், வலி. மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் ச.ஜயந்தன் சிறப்பு விருந்தினராகவும், யாழ். மாவட்டச் செயலக சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் வி.சுகுணாலினி, அராலி இந்துக் கல்லூரி அதிபர் ந.சிவானந்தராஜா மற்றும் சிற்பக் கலைஞர் தி.விஜயசிறி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2025/219563/
  21. @பிரபா , எல்லாம் விளங்கியது என்று சொல்லமுடியாது. டேவிட் கள்ளப் பேரில் அசைலம் கேட்ட இராணுவ வீரன் என்று இறுதியில் தெரிந்தது. ஆனால் அவர் சிறுமிகளைச் சீரழித்தாரா என்று தெரியாது! ஷோபாசக்தி சொற்களைக் கொண்டு கதைகளைச் செதுக்குபவர் என்பதால் கவனமாகப் படிக்கவேண்டும்.
  22. காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு August 23, 2025 7:43 am மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின் வல்லுநர்கள் கூறியுள்ளனர். ” காசாவில் நிலவும் உணவு பஞ்சம் நிச்சயம் தடுக்கக்கூடிய ஒன்றுதான். இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக பாலஸ்தீனத்தின் அந்த பகுதிக்கு உணவு கொண்ட செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.” என்று ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தலைமை பொறுப்பில் உள்ள தாமஸ் தெரிவித்துள்ளார். இதை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், காசாவில் உணவு பஞ்சம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. காசாவில் பஞ்சம் என்பது ஹமாஸ் அமைப்பால் பரப்பப்பட்ட பொய்யின் அடிப்படையிலானது என பதிலடி கொடுத்துள்ளது. கடந்த 15-ம் திகதி நிலவரப்படி காசா நகரில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாத இறுதியில் காசா முனையின் டெய்ர்-எல்-பலாஹ் மற்றும் கான் யூனிஸ் பகுதியிலும் இந்த நிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. காசாவில் தினசரி ஐந்தில் ஒரு வீட்டிலும், மூன்றில் ஒரு குழந்தையிடமும், ஒவ்வொரு பத்தாயிரம் பேரில் இருவர் என பசி காரணமாகவும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் உயிரிழந்து வருகின்றனர் என ஐபிசி கூறியுள்ளது. கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதலை மிக தீவிரமாக்கியது. அதற்கடுத்த இந்த 22 மாதத்தில் மட்டும் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த சுமார் 62 ஆயிரத்து 192 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பொது மக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://oruvan.com/famine-in-gaza-500000-people-in-need/
  23. ரணில் ஏன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்? விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிகரித்த சர்க்கரை அளவு காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் நேற்று (22) இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விளக்கமறியலைத் தொடர்ந்து, நேற்று (22) இரவு பல அரசியல்வாதிகள் சிறைச்சாலைக்குச் சென்றனர். முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க மற்றும் பிரசன்ன ரணதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்டோர் ஆதரவாளர்கள் குழுவுடன் சிறைச்சாலைக்கு வந்தனர். இருப்பினும், அவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை, பின்னர் வெளியே காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.tamilmirror.lk/செய்திகள்/ரணில்-ஏன்-வைத்தியசாலையில்-அனுமதிக்கப்பட்டார்/175-363333
  24. தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Published By: Vishnu 23 Aug, 2025 | 12:52 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) காணிகள் விடுவிப்பு,காணாமல் போனவர்களுக்கு நீதி, தையிட்டி விகாரை பிரச்சினை உள்ளிட்ட அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உறுதியாகும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக தமிழரசுக் கட்சி எம்.பி சிவஞானம் ஸ்ரீதரன் வெள்ளிக்கிழமை (22) சபையில் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அவற்றை நடைமுறைப்படுத்துவது உறுதி. அந்த வகையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும். காணாமல் போனவர்களுக்கு நீதி, தையிட்டி விகாரை பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு , இரண்டு மாதங்களுக்குள் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். அரசியல் கைதிகள் விடுதலை போன்றவை தொடர்பிலும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தமிழ் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் அதற்காக அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் சிந்திக்கும்போதும் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக் குறியாகியிருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஏனென்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று நேற்றைய பிரச்சினையல்ல. அது காலங்காலமாக புரையோடிப் போயுள்ள பிரச்சினையாகும். அதனை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது ஒரு சிலர் கூறுவது போல இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் கேள்விக் குறியாகி இருக்கின்றன. தமிழ் மக்களின் நிலங்கள் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தொடர்பில் பாகுபாடுகள் காட்டப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே தற்போது தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகி யுள்ளது. 1981 ஆம் ஆண்டு நாட்டின் சனத்தொகை மதிப்பீட்டின்படி யாழ் மாவட்டத்தில் 8 இலட்சத்து 30 ஆயிரம் பேர் வாழ்ந்துள்ளார்கள். அந்த நிலை தொடர்ந்திருக்குமானால் இன்று 16, 18இலட்சம் மக்கள் அங்கு வாழ்ந்திருப்பார்கள். தற்போது அங்கு ஆறு இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்கின்றார்கள் என்பதே வேதனைக்குரிய விடயம். அன்று 11 பாராளுமன்ற உறுப்பினர்கள். இப்போது ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள். அடுத்து அதுவும் குறைவடையலாம். அந்த வகையில் அரசியல் ரீதியான இருப்பும் கேள்விக் குறியாகியுள்ளது. அந்த மக்களின் வெளியேற்றமே இந்த கேள்விக்குறிக்கான காரணம். கடந்த யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமின்றி காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள். அதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள். இதன் மூலமே பல்லாயிரக்கணக்கான மக்கள் இழக்கப்பட்டுள்ளார்கள். இப்போதும் மாணவர்கள், புத்திஜீவிகள் அங்கிருந்து வெளியேறும் மனநிலை அதிகரித்திருக்கின்றது. ஒரு காலத்தில் கல்வி ரீதியில் பெரும் முன்னேற்றமடைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் விளங்கியது. எனினும் கடந்த 10 வருடங்களைப் பார்க்கும் போது கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையே காணப்படுகிறது. இம்முறை அது ஒன்பதாவது இடத்திற்கு வந்துள்ளது. யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதும் அதன் வடுக்கள் ஆற்றப்படவில்லை. அதன் காரணமாகவே இவ்வாறான ஒரு பிரேரணையை ஸ்ரீதரன் எம்பி சபையில் முன் வைத்துள்ளார். இவ்வாறு மக்கள் வெளியேறுவார்களானால் இன்னும் சில காலங்களில் மக்கள் இல்லாத யாழ்ப்பாணமே இருக்கும். இந்த நிலைமையில் இருந்து அந்த மக்களை பாதுகாப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையே நாம் சிந்திக்கின்றோம். அதற்காகவே அரசாங்கம் வடக்கிற்கான துரிதமான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்மொழிந்துள்ளது. அந்த வகையில் பல திட்டங்கள் தற்போது வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. மூன்று தொழில்பேட்டைகளை அங்கு உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை, பரந்தன்,மாங்குளம் பகுதிகளில் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விமான நிலையம் துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்காலத்தில் இந்த நாட்டில் வாழலாம் என்ற நம்பிக்கை தரும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்களையே எமது அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இழக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமானால் வடக்கில் மக்கள் வாழவேண்டும். அதன் பின்னரே சுய நிர்ணய உரிமைக்காக போராடுவதா அல்லது தனி நாட்டுக்காக போராடுவதா என்பதை தீர்மானிக்க முடியும். அவர்கள் இலங்கையில் வாழுகின்ற மனநிலையை உருவாக்குவது அவசியமாகும் என்றார். https://www.virakesari.lk/article/223146
  25. விஜய் மக்களின் நம்பிக்கைக்கு தன்னை தகுதிபடுத்திக் கொள்வாரா? -சாவித்திரி கண்ணன் தமிழகத்தையே நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளது தவெக மதுரை மாநாடு. விஜய்யின் அபாரமான மக்கள் செல்வாக்கு கேள்விக்கிடமில்லாமல் நிருபணமாகியுள்ளது. தன்னெழுச்சியாக வந்த மக்கள் பெரும் திரள் ஒரு அரசியல் மாற்றத்தின் தேவையை உறுதிபடுத்துகிறது. அந்த தேவைக்கு தன்னை தகவமைத்துக் கொள்வாரா விஜய்? என்பதே கேள்வி? தற்போதைய தமிழகத்தில் பணம் கொடுக்காமல் இவ்வளவு பெரும் மக்கள் திரளை ஈர்க்கும் இன்னொரு அரசியல் தலைவர் கிடையாது என்பதல்ல, இதில் கால்வாசி கூட்டத்தைக் கூட காசு கொடுக்காமல் வரவழைக்கும் தலைவர்கள் இல்லை. மாலை நடக்கும் கூட்டத்திற்கு அதிகாலை தொடங்கி, தொண்டர்கள் சாரி,சாரியாக வருவது என்பதெல்லாம் இளைஞர்கள் ஒரு அரசியல் மாற்றத்தை ஆர்வத்தோடு எதிர்நோக்கி உள்ளதைத் தான் காட்டுகிறது. அதுவும் இளம் பெண்கள் அணி அணியாக திரண்டு வந்ததும், குடும்பங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்திருந்ததும் புதிய அரசியலுக்கான தேடல் மக்களிடம் இருப்பதைத் தான் காட்டுகிறது. ஒரு நடிகரை நம்பி இவ்வளவு கூட்டம் கூடுகிறதே.. என்ற கவலை பலரையும் போல எனக்கும் இருக்கிறது. அதே சமயம் இந்த தேவைக்கும், தேடலுக்கும் தற்போதைய தமிழகத் தலைவர்கள் யாருமே – கொள்கைத் தெளிவு, அனுபவ ஞானம் இருந்த போதிலும் – மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்கதக்க வகையில் நடக்கவில்லை.. என்ற கசப்பான யதார்த்ததையும் நாம் மறுதலிக்க முடியாது. சரி, விஜய்யின் பேச்சுக்கு வருவோம். ஒரே கல்லில் பல மாங்காய் அடிப்பதை போல, அவரது உரை அவரது அரசியல் ஆலோசகர்களால் வடிவமைத்து தரப்பட்டுள்ளது எனக் கருதுகிறேன். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், # திமுக எதிர்ப்பை வலுவாக வைப்பதன் மூலம், திமுக எதிர்ப்பு ஓட்டுகள் அதிமுக – பாஜக கூட்டணிக்கு போவதை தடுக்கிறார். # அதே சமயம் மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவர், பாஜக ஒரு பாசிச சக்தி, கொள்கை எதிரி என்றெல்லாம் மீண்டும், மீண்டும் அழுத்தமாக சொல்வதன் மூலமும், திமுக பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளது என்பதையும் சொல்வதால், திமுக கூட்டணியின் பாஜக எதிர்ப்பு ஓட்டையும் கணிசமாக அறுவடை செய்ய வாய்ப்புள்ளது. # ஊழல் எதிர்ப்பு, தமிழர் நலன் ஆகியவற்றைப் பேசி, கூட்டம் சேர்த்து காட்டி அண்டர்கிவுண்ட் டீலிங் செய்வது..என சீமானை டார்கெட் செய்ததன் மூலம் நாம் தமிழர் வாக்குகளையும் கணிசமாக சிதறடிக்கலாம். # எம்.ஜி.ஆரின் புகழ்பாடி அவரது வாரிசாக தன்னை காட்டுவதன் மூலம், அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளை பதம் பார்க்கிறார். # இவ்வளவையும் செய்ததோடு நிறுத்தாமல், விஜயகாந்தின் மண்ணில் நிற்பதை உணர்ச்சிபூர்வமாகச் சொல்லி, அவருடனான தன் உறவு பிணைப்பை சொல்லி, தேமுதிக வாக்கு வங்கியையும் தேய்த்து எடுக்கிறார். # திமுக ஆட்சியின் குறைகளை, பலவீனங்களை சுட்டிக் காட்டியது, பாஜகவுடன் நேரடியாக அதிமுகவும், மறைமுகமாக திமுகவும் ஊழல் காரணமாக அடிபணிந்து போவதையும் கூறுவதன் மூலம் உண்மையான பாஜக எதிர்ப்பாளனாக தன்னை நிறுவப் பார்க்கிறார். எல்லாம் சரி, முதலமைச்சர் ஸ்டாலினை இது வரை ”சார்” என்றே கூறி வந்தவர் ”அங்கிள்” என்று மீண்டும், மீண்டும் அழுத்தம் தந்து சொல்லியதை புரிந்து கொள்ள முடியவில்லை. அடுத்ததாக இவ்வளவு பெரிய மக்கள் செல்வாக்கு இருக்கும் ஒருவர், அதற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ள நேரத்தையும், உழைப்பையும் தராமல் இன்னும் தாமதம் காட்டுவதை புரிந்து கொள்ள முடியவில்லை. விஜய்யின் தவெக கட்சி பற்றி சமீப காலமாக அவரது கட்சியில் உள்ளவர்களும், அந்தக் கட்சியில் தொடர முடியாமல் வெகுவேகமாக வெளியேறி வருபவர்களும் பெற்ற கசப்பு அனுபவங்கள் விஜய் மீது பல கேள்விகளை எழுப்புகிறது. முக்கிய நிர்வாகிகளே விஜய்யை சந்திக்கவே முடிவதில்லை. புஸ்லி ஆனந்த் ஒருவரோடு மட்டுமே விஜய் தொடர்பில் உள்ளார். மாவட்ட அளவில், ஒன்றிய அளவில் கட்சி பொறுப்புக்கு வருபவர்கள் கணிசமாக லஞ்சம் கொடுத்தே கட்சி பொறுப்புகளை பெற முடிகிறது. பொறுப்புக்கு வருபவர்கள் சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை. ‘புஸ்லி ஆனந்திடம் பெட்டி பாம்பாக அடங்கி நடக்கும் வரை அங்கு தொடரலாம்’ என்பதே யதார்த்த நிலையாம்! சந்திக்கவே முடியாத விஜய்யை நம்புவதா? ‘நானே சகலமும்’ என்பதாக உள்ள புஸ்லி ஆனந்தை நம்புவதா? என்ற குழப்பம் அடிமட்ட நிர்வாகிகளிடம் பரவலாக காணப்படுகிறது. இதனால், புஸ்லி ஆனந்தை விழாவுக்கு அழைத்த நிர்வாகி ஒருவர், ‘வருங்கால முதல்வரே வருக’ என்று போஸ்டர் ஒட்டும் அளவுக்கு நிலைமை சென்று கொண்டுள்ளது. மேற்படி பிரச்சினைகளுக்கு விஜய் தீர்வு காணாத வரை, விஜய்யின் செல்வாக்கு வீழலுக்கு இரைத்த நீராகலாம். சினிமாவுக்கு அவர் தந்த நேரத்தை காட்டிலும், அதிக நேரத்தை அரசியலுக்கு முற்ற முழுக்க ஒதுக்கி, உரியவர்கள் எளிதாக சந்திக்கும் நிலையை உருவாக்கிக் கொள்ளவும், எல்லாவற்றுக்கும் ஒருவரை சார்ந்திருக்காமல் தானே நேரடியாக உண்மையான தொண்டர்களிடம், நிர்வாகிகளிடம் தொடர்பில் இருக்கவும் முடிந்தால் மட்டுமே அவர் நினைத்த இலக்கை அடைய முடியும். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/22554/tvk-vijay-madurai-conference/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.