Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33803
  • Joined

  • Days Won

    157

Everything posted by கிருபன்

  1. வானத்திலிருந்து யாழ்ப்பாணத்தைப் பார்த்த மாணவர்கள்! - நிலாந்தன் சிறீலங்கா விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் “நட்பின் சிறகுகள்” என்ற தலைப்பில், 125 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை விமானப்படை முன்னெடுக்கின்றது. இதில் 73 பள்ளிக்கூடங்களை புனரமைக்கும் திட்டமும், பள்ளிக்கூடங்களுக்கு 73000 புத்தகங்களை வழங்குவதும் அடங்கும். ”நட்பின் சிறகுகளின்” ஒரு பகுதியாக இம்மாதம் ஆறாந் திகதியிலிருந்து பத்தாம் திகதி அதாவது இன்றுவரையிலும் யாழ் முற்ற வெளியில் – Air tattoo 2024 -எயார் டாட்டு 2024 என்ற பெயரில் ஒரு கல்வி மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி இடம்பெறுகிறது. இக்கண்காட்சியில் விமானப்படையினரின் செயற்பாடுகள் தொடர்பான தொழில்நுட்ப விளக்கங்களும் வான சாகசங்களும் இசை அணிநடைகளும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. அது ஒரு கல்வி மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி என்ற அடிப்படையில் பாடசாலைப் பிள்ளைகள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். விமானங்களின் இயக்கங்கள் தொடர்பாக மாணவர்கள் விளக்கம் தருகிறார்கள். மேலும் மாணவர்களுக்கு சிறிது நேரம் ஹெலிகொப்டரில் பயணம் செய்ய வாய்ப்புத் தரப்பட்டது. மாணவர்களும் உட்பட பெற்றோரும் ஏனையவர்களும் விருப்பத்தோடு உலங்கு வானூர்திகளில் ஏறிப் பயணம் செய்வதை காணக்கூடியதாக இருக்கிறது. வடக்கில் உள்ள வெவ்வேறு பாடசாலைகள் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகளுக்கு ஹெலிகொப்டரில் பறப்பதற்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதை விருப்பத்தோடு அனுபவித்தார்கள். வானத்திலிருந்து யாழ்ப்பாணத்தைப் பார்ப்பதில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கும். முதலாவது பறப்பு அனுபவம் அவர்களுக்குப் பரவசமூட்டக்கூடும். ஆனால் இதே வானத்தை அவர்களுடைய பெற்றோர்களும் பெற்றோர்களின் பெற்றோர்களும் பயத்தோடும் பிரார்த்தனைகளோடும் அண்ணாந்து பார்த்த ஒரு காலம் உண்டு என்பதை அவர்களுக்கு யார் சொல்லிக் கொடுப்பது? 15ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களுக்கு வானம் ஒரு மரணக் கூரையாக காணப்பட்டது. வானில் போர் விமானங்கள் தோன்றும்போது இந்த பிள்ளைகளின் பெற்றோரும் பெற்றோரின் பெற்றோரும் பதுங்கு குழிகளுக்குள் ஓடி ஒளித்தார்கள். அவ்வாறு பதுங்கு குழிகளுக்குள் புகலிடம் தேடிய சிலருக்கு பதுங்கு குழியே புதை குழியாகவும் மாறியதுண்டு. யுத்தம் வாழ்க்கையை விடவும் நிச்சயமானது போல தோன்றிய அக் காலகட்டத்தில் சிறீலங்காவின் வான் படை தமிழ் மக்கள் மீது குண்டுகளைப் போட்டது. வானத்தையும் காற்றையும் கிழித்துக்கொண்டு போர் விமானங்கள் தமிழ் மக்களின் தலைகளை நோக்கி குத்திப் பதிந்தன. பயணிகள் போக்குவரத்து விமானம் ஆகிய “அவ்ரோ” ரக விமானங்களில் இருந்து தொடங்கி சியா மாசற்றி; அன்ரனோவ்; புக்காரா; கிபிர்; சூப்பர்சோனிக்; மிக்; சீனத் தயாரிப்பான Y12 முதலாய் பல்வேறு நாட்டு தயாரிப்புகளும் தமிழ் மக்களின் இரவுகளையும் பகல்களையும் கனவுகளையும் குண்டுகளால் பிளந்தன. ஈழப் போரின் முதலாவது கட்டத்தின்போது பயன்படுத்தப்பட்ட அவ்ரோ என்று அழைக்கப்படும் பயணிகள் விமானம் பீப்பாய்க் குண்டுகள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்பட்ட குண்டுகளை வீசியது. சில சமயங்களில் பீப்பாய்களில் குண்டுகளுக்கு பதிலாக மனித மலம் நிரப்பப்பட்டிருந்தது. அப்படித்தான் சீனத் தயாரிப்பான Y12 விமானத்தை தமிழ் மக்கள் சகடை என்று அழைத்தார்கள். மெதுமெதுவாக மிக உயரத்தில் பறந்து போகும் அந்த விமானத்திலிருந்து எவ்வளவு பெரிய குண்டைப் போட முடியுமோ அவ்வளவு பெரிய குண்டு போடப்பட்டது. ஒரு குண்டு ஒரு பெரிய வீட்டை அப்படியே தரைமட்டமாக்கியது. ஈழப் போரின் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகளின் போது மிக நவீன குண்டு வீச்சு விமானங்கள் அரங்கினுள் பிரவேசித்தன. அவை காற்றையும் வானத்தையும் கிழித்துக்கொண்டு குத்தி பறந்து குண்டுகளை வீசின. சந்தைகள், சாவடிகள், பாடசாலைகள்,கோயில்கள்,தேவாலயங்கள் என்று பொதுசன இலக்குகளின் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். அல்லது உடல் உறுப்புகளை இழந்தார்கள். சொத்துக்களை இழந்தார்கள். குண்டு வீச்சு விமானங்கள் மட்டுமல்ல, கண்காணிப்பு விமானங்கள் அதாவது வேவு விமானங்களும் தமிழ் மக்களின் இரவுகளையும் பகல்களையும் வேவு பார்த்தன. நான்கு கட்ட ஈழப் போர்களின் போதும் வானில் வேவு விமானங்கள் நிரந்தரமாக ரீங்காரமிட்டபடி பறந்தன. குறிப்பாக இறுதிக்கட்டப் போரில் வானில் வேவு விமானங்கள் சூரியனைப் போல சந்திரனைப் போல நட்சத்திரங்களைப் போல நிரந்தரமாக காணப்பட்டன. சோளகக் காற்று பலமாக வீசும் காலங்களில் யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளில் பட்டங்கள் பறக்க விடப்படும். பிரம்மாண்டமான பட்டங்களில் விண் பொருத்தப்படும். காற்றில் விண் அதிரும் பொழுது ஒரு வித ரீங்கார ஒலியை எழுப்பும். யுத்தம் இல்லாத காலங்களில் சோழகக் காற்று வீசும் இரவுகளில் பட்டங்களின் விண் ஒலி வானத்தில் நிரந்தரமாக உறைந்து நிற்கும். அதுபோலவே யுத்த காலங்களில் வேவு விமானங்களின் ரீங்கார ஒலி வானில் நிரந்தரமாக உறைந்து நின்றது. இறுதி கட்டப் போரின் இறுதி நாளுக்கு பின்னரும் அது கேட்டது. சிறீலங்கா விமானப்படை தமிழ் மக்களை வீட்டுக்கும் பதுங்கு குழிக்கும் இடையே கிழிபட வைத்தது. போரில் குண்டுகளை, துண்டுப் பிரசுரங்களை வீசிய அதே வான் படை ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் நல்லூர் தேர்த் திருவிழாவில் பூக்களைத் தூவியது. அந்தப் போரில் பயன்படுத்தப்பட்ட தொழிநுட்பம் இப்பொழுது முற்ற வெளியில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு காலம் தமிழ் மக்களைக் கொல்லும் கருவிகளாக காணப்பட்டவை இப்பொழுது கண்காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டிருப்பது ஒரு மாற்றம்தான். காங்கேசந்துறை வீதியில் அமைந்திருக்கும் “ஃபொக்ஸ் ரிசோர்ட்ஸ்” என்று அழைக்கப்படுகின்ற விருந்தினர் விடுதியில் யுத்தகாலத்தில் வெட்டப்பட்ட பதுங்கு குழிகள் காட்சிக் கூடங்களாக மாற்றப்பட்டுள்ளன. அந்தக் கட்டிடம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் யாழ்ப்பாணம் இருந்த காலகட்டத்தில் அவர்களுடைய பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமையகமாக இருந்தது. அந்தக் கட்டடத்துக்கு கீழே பாதுகாப்பான பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் அக்கட்டிடத்தின் உரிமையாளர் அதை விருந்தினர் விடுதியாக மாற்றியுள்ளார். அங்கிருந்த பதுங்கு குழி ஞாபகச் சின்னமாக ஒரு “ஷோகேஸ் பீசாகப்” பேணப்படுகின்றது. அதன் சுவர்கள் செப்பனிடப்பட்டு, அழகாக்கப்பட்டு, அது ஒர் ஓவியக் கூடமாக, உல்லாசப் பயணிகளைக் கவரும் காட்சிப் பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது. அங்கே ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு காலம் துர்க்கனவாகக் காணப்பட்ட பதுங்குழி, இப்பொழுது ஃபொக்ஸ் விருந்தினர் விடுதியில் காட்சிப் பொருளாகப் பராமரிக்கப்படுகின்றது. அது ஒரு விருந்தினர் விடுதியின் விளம்பர உத்தி. ஆனால் முற்றவெளியில் நடப்பது என்ன? ஒரு காலம் தமிழ் மக்களின் தலைகளின் மீது மலத்தைக் கொட்டிய கொலைக் கருவிகளும் கொலை வாகனங்களும் இப்பொழுது முற்ற வெளியில் காட்சிப் பொருட்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. ஒரு தொகுதி யுடியூப்பர்கள் அதை ஒளி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த மாற்றம் மேலோட்டமானது என்பதுதான் இங்குள்ள பிரச்சினை. போர் ஒரு விளைவு. அது மூல காரணம் அல்ல. மூல காரணம் இன ஒடுக்குமுறையாகும். இன ஒடுக்குமுறை எங்கிருந்து வருகிறது? தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள மறக்கும் பொழுதுதான். தமிழ் மக்களின் தேசிய இருப்பை அழிக்க முற்படும்பொழுதுதான் இன முரண்பாடுகள் ஆயுத மோதலாக மாறின. எனவே போர் ஒரு விளைவு. இன ஒடுக்குமுறைதான் மூல காரணம். அது இப்பொழுதும் உண்டு. கண்காட்சியில் கலந்துகொள்ளும் படைப் பிரதானிகளின் பாதுகாப்புக்காக நடுப்பகல் வேளைகளில் பலாலி வீதி நீட்டுக்கும் பிரதான சந்திகளில் படையினர் நிறுத்தப்பட்டிருந்தார்கள். இக்கட்டுரை எழுதப்படுகையில், வெட்டுக்குநாறி மலையில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு தமிழ்மக்கள் போராட வேண்டியிருக்கிறது. இன முரண்பாடுகளை நீக்கும் விதத்தில் இனப்பிரச்சினைக்கு இன்றுவரையிலும் தீர்வு வழங்கப்படவில்லை. இப்போதுள்ள ஜனாதிபதி அதை வடக்கின் பிரச்சினை என்று வர்ணிக்கிறார். அவருக்கு முன்பிருந்த கோட்டாபய அதனை பொருளாதாரப் பிரச்சினை என்று வர்ணித்தார். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த 15 ஆண்டுகளின் பின்னரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. அவ்வாறு தீர்வு காணப்படுவதற்குரிய அரசியல் திடசித்தம் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பிடம் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே போரின் மூல காரணங்கள் அப்படியே இருக்கத்தக்கதாக, யுத்தவெற்றியின் நினைவுச் சின்னங்களைப் பேணும் ஒரு படைத்தரப்பு, தனது போர்க்கருவிகளையும் போர் வாகனங்களையும் காட்சிப் பொருட்களாக கண்காட்சியில் வைப்பது என்பது, போர் தொடர்பான கொடுமையான நினைவுகளை மறக்கச் செய்யும் உள்நோக்கமுடையது. மிலன் குந்தேரா கூறுவதுபோல “அதிகாரத்துக்கு எதிரான மனிதர்களின் போராட்டம் எனப்படுவது மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டமே” மாணவர்களுக்கு மறதிக்கு எதிரான ஞாபக சக்தி இருக்க வேண்டும். அது கற்றலுக்கு அவசியம். அதைவிட அவசியம் தமது சொந்த வரலாற்றை மறந்துவிடாமலிருக்க. ஈழத் தமிழர்கள் தாயகத்துக்கு வெளியே அதிக தொகையில் வாழும் நாடு கனடா. அங்கு இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அது தொடர்பான அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கோடு இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் ஒன்றை அந்த நாட்டின் அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கிறது. அதாவது அடுத்தடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகளுக்கு இனப்படுகொலை தொடர்பாக அறிவூட்டப்பட ஓர் ஏற்பாடு. ஆனால் தாயகத்தில் இனப்படுகொலை புரிந்ததாக தமிழ் மக்கள் குற்றம் சாட்டும் ஒரு படைத்தரப்பின் விமானங்களை தமிழ் மாணவர்களே “எங்களுடைய விமானங்கள்” என்று கூறுகிறார்கள். ஆயின்,தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்படுகின்றார்களா? https://www.nillanthan.com/6597/
  2. வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்க மறியல் வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று நேற்று (09) உத்தரவிட்டுள்ளது. சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது சப்பாத்துக் கால்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர். குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் இன்று மாலை முன்னிலைப்படுத்தினர். இதன்போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பாக சட்டத்தரணிகளான க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர். இது தொடர்பில் சட்டத்தரணி தி.திருஅருள் கருத்து தெரிவிக்கையில், வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தொடபில் மன்றுக்கு தெரிவித்தமையால் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காகவும் திகதியிடப்பட்டது எனத் தெரிவித்தார். குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்ற போது நீதிமன்றம் முன்பாக வேலன்சுவாமிகள், ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.samakalam.com/வெடுக்குநாறி-ஆதி-சிவன்-ஆ/
  3. கனடாவில் படுகொலை செய்யப்பட்ட ஆறு இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டது கனடாவில் படுகொலை செய்யப்பட்ட ஆறு இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளன. கனடாவிலேயே இடம்பெறும் இறுதிக்கிரியைகள் உயிரிழந்த ஆறு பேரின் இறுதிக் கிரியைகளும் அந்நாட்டிலேயே முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டடிருப்பதாக கனடாவிலுள்ள பௌத்த காங்கிரஸ் அமைப்பின் தலைவரும் ஒட்டாவா ஹில்டா ஜயவர்தனாராமய விகாரையின் விகாராதிபதியுமான நுகேகலயாகே ஜினாநந்த தேரர் தெரிவித்துள்ளார். கனடாவில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் விகாரை நன்கொடையாளர் சபையின் ஆதரவுடன் குறித்த ஆறு பேரின் இறுதிக்கிரியைகளையும் இடம்பெறும். இதற்கு அவர்களது குடும்பத்தாரும் விரும்பம் தெரிவித்துள்ளதாகவும் நுகேகலயாகே ஜினாநந்த தேரர் மேலும் தெரிவித்தார். கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்களான டிலந்திகா ஏகநாயக்க மற்றும் காமினி அமரகோன் ஆகியோரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சிலரை இறுதிச் சடங்குகளுக்காக கனடாவுக்கு அழைத்துவருவது தொடர்பில் கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சடலங்களை நாட்டிற்கு கொண்டுவர பெருந்தொகை பணம் செலவாகும் உயிரிழந்த ஆறு பேரின் சடலங்களை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு பெருந்தொகை பணம் செலவாகும் என தெரிவிக்கப்பட்டள்ளது. மேலதிக விசாரணைகள் காரணமாக இதுவரையில் சடலங்களை கனேடிய பொலிஸார் உரிய தரப்பினரிடம் கையளிக்வில்லை. விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், உயிரிழந்த ஆறு பேரின் இறுதிக் கிரியைகள் அவர்களின் உறவினர்களின் விருப்பப்படி மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://www.samakalam.com/கனடாவில்-படுகொலை-செய்யப்/
  4. வெடுக்குநாறி மலையில் குடிநீர் எடுத்துச்சென்ற உழவு இயந்திரம் விபத்து - இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி Vhg மார்ச் 09, 2024 வெடுக்குநாறி மலையில் குடிநீர் எடுத்துச்சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் காயமடைந்த ஒருவர் நெடுங்கேணி வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வருகை தந்த மக்களுக்கு குடிநீர் வழங்க பொலிஸார் மறுப்பு தெரிவித்தமையால் அங்கு பொலிஸாருக்கும் , பக்தர்களுக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. குடி நீர் எடுத்துச் செல்ல இடையூறு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் சிவராத்திரி வழிபாடுகள் காலை முதல் இடம்பெற்றது. இதன்போது காலை முதல் வீதி தடைகளைப் போட்டிருந்த பொலிஸார் ஆலய வளாகத்திற்குள் குடி நீர் எடுத்துச் செல்ல இடையூறை ஏற்படுத்தியிருந்தனர். இந்நிலையில் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்ட குடி நீர் தாங்கி பொலிஸாரால் 3 கிலோமீற்றருக்கு முன்னரே தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து குடிநீர் இன்றி அவதிப்பட்ட சிறுவர்கள், பக்தர்களுக்காக அருகில் உள்ள ஆற்றில் இருந்து நீர் பெற்ற போதும் அதனையும் அவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் குடி நீர் இன்றி மக்கள் அவதிப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், மற்றும் ஆலய பக்தர்கள் குடிநீர் தாங்கியுடன் வந்த உழவு இயந்திரத்தை ஆலயத்திற்குள் விடுமாறு பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் குடிநீரை விடுமாறு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து மாலை மூன்று மணியளவில் குடிநீரை வழங்க பொலிஸார் இணங்கியுள்ளனர். இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட குடிநீரையும் பொலிஸார் மாலை ஆறு மணியளவில் குடிநீர் தாங்கியை திறந்து வெளியேற்றியுள்ளனர். இந்நிலையில், விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் https://www.battinatham.com/2024/03/blog-post_44.html
  5. இலங்கை துணை தூதரகத்துக்கு முருகன் சென்றுவர அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு March 8, 2024 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகனுக்கு கடவுச்சீட்டு பெறுவதற்கான நேர்காணலுக்காக இலங்கைத் துணை தூதரகம் சென்று வர அனுமதி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி அவரது மனைவி நளினி சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றம் 7 பேரையும் விடுவித்தது. இந்த நிலையில், இலங்கை குடிமகன் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் எனது கணவர் முருகன் தங்கவைக்கப்பட்டுள்ளார். லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால், அனைத்து நாடுகளுக்கும் செல்வதற்கான கடவுச்சீட்டு வழங்க கோரி இருவரும் விண்ணப்பித்திருந்தோம். நேர்காணலுக்காக ஜனவரி 30 ஆம் திகதி அழைக்கப்பட்டோம். என்னுடைய நேர்காணல் முடிந்துவிட்டது. இந்த நேர்காணலில் கலந்துகொள்ள அனுமதிக்காததால், கணவர் முருகன், இலங்கை துணை தூதரகம் அழைத்தபோது ஆஜராக முடியவில்லை. திருச்சி முகாமில் உள்ள மோசமான சூழல் காரணமாக ஏற்கெனவே ஒரு மாதத்தில் 2 பேர் இறந்துள்ளனர். எனவே, என்னுடைய கணவருக்கு எதுவும் நடப்பதற்கு முன்பாக, நாங்கள் இருவரும் மகளுடன் சேர்ந்துவாழ விரும்புகிறோம். எனவே எனது கணவர் முருகன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அங்கு சென்று வருவதற்கு பாதுகாப்பு தேவைப்படும்பட்சத்தில், உரிய பாதுகாப்பு வழங்க பொலிஸாருக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். https://www.ilakku.org/இலங்கை-துணை-தூதரகத்துக்க/
  6. ரணிலின் தெரிவு இதுதான்! குழப்பத்தில் ராஜபக்ஷக்கள் – அரசியல் ஆய்வாளா் யதீந்திரா March 8, 2024 இலங்கையில் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. முக்கியமான நகா்வுகளைப் பாா்க்க முடிகிறது. பொலிஸ் அதிகாரம் இல்லாத அதிகாரப் பகிா்வு தொடா்பில் பேசப்போவதாக ஜனாதிபதி அறிவித்திருக்கின்றாா். தோ்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் ராஜபக்ஷக்கள் குழம்பிப்போயுள்ளாா்கள். இந்த நிலையில், இன்றைய தாயகக் களத்தில் அரசியலில் என்ன நடைபெறுகின்றது என்பதை ஆராய்கின்றாா் அரசியல் ஆய்வாளரும், பத்திரிகையாளருமான யதீந்திரா! கேள்வி – பொலிஸ் அதிகாரத்தைத் தவிா்துவிட்டு 13 ஆவது திருத்தத்தின் மூலமாக அதிகாரப் பரவலாக்கல் தொடா்பாக சிறுபான்மையினக் கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை ஒன்றுக்கு தான் தயாராக இருப்பதாகவும், அடுத்த வாரத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெறும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றாா். இந்த வேளையில் இவ்வாறான அறிவிப்பை அவா் எதற்காக வெளியிட்டிருக்கின்றாா்? பதில் – ஜனாதிபதி இதற்கு முன்னரும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடா்பாகப் பேசத் தயாா் என கூறியிருந்தாா். அதனைவிட, கடந்த வருடத்தில் சுதந்திர தினத்துக்கு முன்னதாகத் தீா்வைக் காணப்போவதாகவும் கூறியிருந்தாா். ஆனால், எதுவுமே நடைபெறவில்லை. இப்போது ஜனாதிபதித் தோ்தல் நடைபெறப்போவது உறுதியாகியிருக்கும் சூழலில், அந்தத் தோ்தலில் அவா் போட்டியிடப்போவதும், உறுதியாகியிருக்கின்ற பின்னணியில் இந்தக் கருத்தை அவா் வெளியிட்டிருக்கின்றாா். ஆனால், ஜனாதிபதித் தோ்தல் நடைபெறும் வரையில் அவ்விதம் ஆக்கபுா்வமான விடயங்கள் எதுவும் நடைபெறப்போவதில்லை. இப்போது, பொலிஸ் அதிகாரம் இல்லாத 13 ஆவது திருத்தம் தொடா்பாகப் பேசப்போவதாகச் சொல்வதெல்லாம் தோ்தலை இலக்காகக் கொண்ட உத்தியாக மட்டுமே இருக்க முடியும். ஏனெனில், பறிக்கப்பட்ட அதிகாரங்களுடன் அதிகாரப் பரவலாக்கலை வழங்குதென்பது தற்போதுள்ள சூழ்நிலையில் வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை. ஜனாதிபதித் தோ்தல் நெருங்கிவரும் நிலையில், பல்வேறு தரப்புக்களின் ஆதரவையும் பெற வேண்டிய நிலையில் இருக்கும் ரணில் விக்கிரமசிங்க, நிச்சயமாக அவற்றைச் செய்யப்போவதில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை. தமிழ் மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அவா் இவ்வாறான கருத்துக்களை வெளியிடலாம். இதன்மூலம் மற்றவா்களைவிட சில விடயங்களைச் செய்வதற்கான விருப்பத்துடன் தான் இருப்பதாக – அது குறித்து தமிழ்க் கட்சிகளுடன் பேசத் தயாராக இருப்பதாகவும் தமிழ் மக்களுக்குக் காட்டிக்கொள்வதற்காகத்தான் இவ்வாறான கருத்துக்களை அவா் சொல்வதாகத்தான் நான் நினைக்கிறேன். கேள்வி – சிங்களத் தேசியவாதக் கட்சி ஒன்றின் தலைவரான உதய கம்மன்பிலவும், 13 ஆவது திருத்தத்தின் இருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்குவதற்கான அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்திருக்கின்றாா். இவ்விடயத்தில் அவரது இலக்கு என்ன? பதில் – இதுவும் தோ்தலை இலக்காகக்கொண்ட ஒரு நகா்வுதான். கம்மன்பில போன்ற தேசியவாதிகள் நீண்ட காலமாகவே இவ்வாறு 13 க்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருபவா்கள்தான். குறிப்பாக வட, கிழக்கு இணைப்பு, பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் போன்வற்றைத் தொடா்ச்சியாக எதிா்த்து வந்துள்ளாா்கள். ஆனால், கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலைத் தொடா்ந்து தென்பகுதியில் இவா்களுடைய செல்வாக்கு பெருமளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இவா்கள் அனைவரும் கோட்டாபயவின் துாண்களாகச் செயற்பட்டவா்கள். அதனால், கோட்டாபயவின் வீழ்ச்சியின் ஒரு அங்கமாகத்தான் இதனையும் பாா்க்க வேண்டும். இந்த நிலையில் மீண்டும் ஒரு தோ்தல் நெருங்கிவரும் பின்னணியில் சிங்கள மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை உயா்த்திக்கொள்வதற்கும், தங்களை மீண்டும் பலப்படுத்திக்கொள்வதற்குமான ஒரு உத்தியாகத்தான் இந்த விடயங்களை அவா்கள் கைகளில் எடுக்கின்றாா்கள். 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் இனநெருக்கடிக்குத் தீா்வைக் காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே அறிவித்திருந்த ஒரு நிலையில்தான் பௌத்த பிக்குகள் 13 ஆவது திருத்தத்தின் நகலை எரிப்பது போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தாா்கள். இப்போது தோ்தல் நெருங்கிவரும் சந்தா்ப்பத்தில் பொலிஸ் அதிகாரம் இல்லாத 13 ஆவது திருத்தம் என்ற கருத்தை உதய கம்பன்பில போன்றவா்கள் முன்வைக்கின்றாா்கள். அவ்வாறு முன்வைப்பதற்கு பிரதான காரணம் இந்தத் தோ்தல் காலத்தில், வீழ்ச்சியடைந்திருக்கும் தமது ஆதரவுத் தளத்தை உயா்த்திக்கொள்வதுதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவது. அதேவேளையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்துவதும், ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் தனித்து செயற்பட முடியாது என்ற நிலையை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாக இருக்கலாம். முக்கியமாக, இலங்கை – இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலம் முதல் இவ்வாறான கருத்துக்களைத்தான் சிங்கள தேசியவாதிகள் முன்வைத்து வருகின்றாா்கள். இந்திய மேலாதிக்கத்தின் ஒரு நீட்சியாகவே இது உள்ளது என இவா்கள் பிரசாரங்களையும் முன்னெடுத்து வந்துள்ளாா்கள். தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கை அதிலிருந்து மீள்வதற்கு இந்தியாவைத்தான் பெருமளவுக்கு நம்பியுள்ளது. இந்த நிலையில், இந்திய அழுத்தங்களுக்கு உட்பட்டு இந்த 13 போன்றவற்றை ரணில் விக்கிரமசிங்க தமிழா்களுக்கு வழங்கிவிடுவாா் என்பது போன்ற கருத்துக்களை சிங்கள மக்களிடம் கோண்டு செல்வதன் மூலம், தமது செல்வாக்கை உயா்த்திக்கொள்ளலாம் என்று சிங்களத் தேசியவாதிகள் சிந்திக்கின்றாா்கள். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலுக்கான நகா்வுகள் முன்னெடுக்கப்கடும் நிலையில், ரணில் விக்கிரமசிங்க எந்தக் கட்சியின் சாா்பில் போட்டியிடுவாா் என்பதில் குழப்பமான கருத்துக்களே வருகின்றன. உங்களைப் பொறுத்தவரை அவா் எந்தக் கட்சியில் போட்டியிடுவாா்? பதில் – என்னுடைய அவதானிப்புக்களைப் பொறுத்தவரையில் ரணில் விக்கிரமசிங்க ஒரு கட்சியின் சாா்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றே தெரிகின்றது. அவா் ஒரு சுயாதீன வேட்பாளராகக் களமிறங்குவதற்கான வாய்ப்புக்களே இருப்பதாகத் தெரிகின்றது. ஏனெனில், ஐ..க.வின் சாா்பில் அவா் போட்டியிட்டால், ஏனைய கட்சிகளைச் சாா்ந்தவா்கள் இவரை ஆதரிக்கமாட்டாா்கள். அதேவேளையில், ரணில் வெகுஜன கவா்ச்சி – வசீகரம் மிக்க ஒரு தலைவரல்ல. கடந்த காலங்களில் அவரால் ஜனாதிபதித் தோ்தல்களில் வெற்றிபெற முடியவில்லை. தனித்து சிங்கள வாக்குகளால், அவரால் வெல்லவும் முடியாது. ஆனால், இந்தப் பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்ளக்கூடிய ஆளுமையுள்ள ஒருவா் இவா்தான், இவரை விட்டால் யாரும் இல்லை என்ற ஒரு கருத்துள்ளதைப் பயன்படுத்திக்கொண்டு, தோ்தலில் வென்றுவிட முடியும் என்ற உபாயத்துடன்தான் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவதாகத் தெரிகின்றது. ஆனால், இந்த வியுகத்தில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால், இவா் ராஜபக்ஷக்களுடன் இணைந்திருப்பது போன்ற ஒரு தோற்றம் இருப்பதால், ராஜபக்ஷக்களை எதிா்க்கும் எந்தவொரு தரப்பும் இவரை ஆதரிக்காது. இந்தப் பின்னணியில் ஐ.தே.க.வினரும் இவருக்கு வாக்களிக்க வேண்டும், மொட்டுக் கட்சியினரும் இவருக்கு வாக்களிக்க வேண்டும் ஏனைய தரப்பினரும் இவருக்கு வாக்களிக்க வேண்டும் ஏனைய சிறுபான்மையினரும் இவருக்கு வாக்களிக்க வேண்டுமானால், ஒரு சுயாதீன வேட்பாளராகவே இவா் போட்டியிட வேண்டியிருக்கும். கேள்வி – பொதுஜன பெரமுன தமது வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை. இந்தத் தோ்தலில் அவா்கள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பாா்கள்? பதில் – அரசியலில் அசைக்க முடியாதவா்கள் என்ற அவா்களுடைய நிலை இப்போது வீழ்ச்சியடைந்துவிட்டது. உடனடியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது அவா்களைப் பொறுத்தவரை சாத்தியமானதல்ல. அதனால், அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது அவா்களுடைய நீண்டகால இலக்காக இருந்தாலும், தம்மைப் பாதுகாப்பது என்பதுதான் அவா்களுடைய உடனடியான தேவை. தம்மைப் பாதுகாக்கக்கூடிய ஒருவா் அதிகாரத்தில் இருப்பதைத்தான் அவா்கள் விரும்புவாா்கள். அப்படிப் பாா்க்கப்போனால், சஜித் பிரேமதாஸவோ, அநுரகுமாரவோ ஜனாதிபதித் தோ்தலில் வெற்றிபெற்றால், அது ராஜபக்ஷக்களுக்கு நெருக்கடியைக் கொடுப்பதாகவே இருக்கும். அவா்களுடைய எதிா்காலத்தைக் கேள்விக்குறியாக்கும். ஆனால், ரணில் ஜனாதிபதியானால், தமது அரசியலுக்கு அவா் நெருக்கடிகளை ஏற்படுத்தமாட்டா் என்ற நம்பிக்கை ராஜபக்ஷக்களுக்கு உள்ளது. அதனால், ரணில் ஜனாதிபதியாக வருவதைத்தான் அவா்கள் விரும்புவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளது. https://www.ilakku.org/ரணிலின்-தெரிவு-இதுதான்-க/
  7. சர்வதேச, உள்நாட்டு சதியை எதிர்கொள்ள என்னால் முடியாமற்போனது : ”ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை அகற்றுவதற்கான சதி” நூலில் கோட்டா தெரிவிப்பு வைராக்கியம் கொண்ட சர்வதேச சக்திகளும் ஒரு சில உள்நாட்டு தரப்பினரும் தம்மை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்காக வன்முறையுடன் கூடிய எதிர்ப்புகளையும் நாசகார செயற்பாடுகளையும் வகுத்து, அதற்கான நிதியுதவிகளை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று வெளியிட்ட தனது நூலில் தெரிவித்துள்ளார். ”ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை அகற்றுவதற்கான சதி” என்ற பெயரிலான இந்த நூல் நேற்று காலை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வைராக்கியம் கொண்ட சர்வதேச சக்திகளும் ஒரு சில உள்நாட்டு தரப்பினரும் தம்மை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை, அவர்களின் நடவடிக்கைகளை நிறுத்த மாட்டார்கள் என்பதை தாம் அறிந்திருந்ததாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்களை பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில், முன்னெடுக்கப்பட்டு வந்த அரசியல் சதி மற்றும் நாசகார செயல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தாம் இராஜினாமா செய்ததாகவும் அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். தாம் பதவி விலகக்கூடாது என வலியுறுத்திய பிரதான சர்வதேச வல்லரசு ஒன்றும் இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அந்த சர்வதேச வல்லரசு இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கான எந்தவொரு நடவடிக்கைக்கும் தயாராகி இருந்ததை செயற்பாட்டு ரீதியில் நிரூபித்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவ்வாறான நிலையிலும் மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்காக தாம் பதவி விலகியதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். ”ஒரு சில வல்லரசு நாடுகள் ஜனநாயகம் மற்றும் சட்டவாட்சியின் காவல் தெய்வங்களை போன்று உலக அரங்கில் தம்மை காண்பிக்கின்றன. ஜனநாயகம், சட்டவாட்சியை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு அபிவிருத்தி அடைந்து வரும் அனைத்து நாடுகளிலும் சம்பளம் பெறும் செயற்பாட்டாளர்கள் வலையமைப்பொன்றை அந்த நாடுகள் பராமரிக்கின்றன. உண்மையில் அவர்கள் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு பதிலாக தமது தேவைகளையே நிறைவேற்றிக்கொள்கின்றனர்” என அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். தம்மை பதவியிலிருந்து அகற்றுவதற்காக அரங்கேற்றப்பட்ட சம்பவங்கள் சிலவற்றையும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது நூலில் எழுதியுள்ளதுடன், மிரிஹானையிலுள்ள தனது வீட்டிற்கு முன்பாக 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கை அவ்வாறாதொரு சம்பவம் எனவும் கூறியுள்ளார். ”இரவு 8 மணியளவில் பெங்கிரிவத்த வீதியை நெருங்கிய பேரணியில் குறிப்பிடத்தக்களவானவர்கள் இணைந்திருந்தனர். இந்த அனைத்தும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா , பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளை அதிகாரிகள் கொழும்பு சங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். நடப்பதை நான் ஷவேந்திரவுக்கும் கமலுக்கும் கூறினேன். ஷங்ரிலா ஹோட்டலில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் சுரெஷ் சலே மிரிஹானவிற்கு வந்தார். அவர் வருகின்றபோது அந்த இடத்தில் சுமார் நூறு ஆர்ப்பாட்டக்காரர்கள் மாத்திரமே இருந்தனர். எனினும், அங்கிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவ அதிகாரிகளுக்கு செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பில் எவரும் ஆலோசனை வழங்கியிருக்கவில்லை. அந்த இடத்தில் இருந்து சலே – ஷவேந்திரவுக்கும் கமாலுக்கும் வீடியோ அழைப்பை ஏற்படுத்தி அங்கு வந்திருந்தவர்களை காண்பித்தாலும் அவர்களை கலைப்பதற்கான ஆலோசனை உயர்மட்ட அதிகாரிகளிடமிருந்து கீழ்மட்டத்திற்கு வரவில்லை” என அவர்விபரித்துள்ளார். இராணுவத்தளபதி , பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி , பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் மறுநாள் முற்பகல் 10.30 மணியளவிலேயே தமது இல்லத்திற்கு வருகை தந்ததாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, இராணுவ தலைமையகத்தில் இருந்த நடவடிக்கை நிலையத்தை கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்கு மாற்றுமாறு 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் திகதி கோட்டாபய பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்னவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மே மாதம் 9 ஆம் திகதி இரவு அலரி மாளிகையில் இருந்த முன்னாள் பிரதமர் உள்ளிட்ட குழுவினரை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக இராணுவத்தினரை வரவழைக்கும் போது ஏற்பட்ட சீரற்ற அனுபவம் காரணமாக அனைத்து பாதுகாப்பு பிரதானிகளையும் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து நடவடிக்கை நிலையத்தை அங்கிருந்து செயற்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி தனது நூலில் கூறியுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி பாதுகாப்பு செயலாளர் , முப்படைத் தளபதிகள் , பொலிஸ்மா அதிபர், அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் இந்த நிலையத்தில் இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனினும், மக்கள் கொழும்பிற்கு வருவதைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமற்போனதாகவும் அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். ”அனைத்து பிரவேச மார்க்கங்களையும் தடுப்பதனூடாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பிற்கு வருவதை தடுப்பதே அரசாங்கத்தின் திட்டமாக இருந்தது. எனினும், இத்தகைய வீதித்தடைகள் எந்த ஒரு இடத்திலும் ஸ்தாபிக்கப்படவில்லை என்பதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் எவ்வித இடையூறும் இன்றி ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்தனர்” என அவர் தெரிவித்துள்ளார். தாம் பதவி விலகும் சந்தர்ப்பத்தில் ஏற்பட்டிருந்த எரிபொருள் , எரிவாயு பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது நூலில் தெரிவித்துள்ளார். ”மூழ்கும் கப்பலிலிருந்து நான் தனியாக தப்பிச் சென்றதாக ஒரு சில குழுவினர் கூறினாலும் நான் இராஜினாமா செய்யும்போது இலங்கை ஒருபோதும் மூழ்கிக்கொண்டிருக்கவில்லை. 2022 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் என்னை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக நாடு பெருந்தொற்றிலிருந்து மீள்வதற்கு ஆரம்பித்திருந்த சந்தர்ப்பத்தில் மூலோபாய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச, உள்நாட்டு சதியை எதிர்கொள்ள என்னால் முடியாமற்போனது. நான் இன்னும் இரண்டு வருடங்கள் ஆட்சியில் நீடிப்பதற்காக ஒரு உயிரையேனும் இழப்பது அர்த்தமற்ற செயலாக இருந்தது” எனவும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/294889
  8. கோத்தாவின் புத்தகத்துக்கு எகிறிய கிராக்கி! (புதியவன்) முன்னாள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவினால் எழுதப்பட்ட “என்னை அரச தலைவர் பதவியில் இருந்து வெளியேற்ற சதி” என்ற புத்தகத்தின் முதல் கையிருப்பு நேற்று (07) முற்றாக விற்று தீர்ந்ததாக விஜித யாப்பா பதிப்பகத்தின் தலைவர் விஜித யாப்பா தெரிவித்தார். சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களும் தமது புத்தகக் கடைகளில் இருந்து புத்தகத்தை வாங்கியதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் எம்.பி.க்கள் மற்றும் அரசியல்வாதிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நூலின் பிரதான விற்பனையாளர் தமது நிறுவனம் எனத் தெரிவித்த விஜித யாப்பா, மேலும் ஒரு தொகுதி அச்சிடப்பட்ட புத்தகங்களை விற்பனை செய்ய இன்று (08) கொண்டுவரவுள்ளதாக தெரிவித்தார். இந்நூலை வாங்குவதற்கு நாடளாவிய ரீதியில் உள்ள புத்தகக் கடைகளில் இருந்து பல ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார். “புத்தகத்திற்கு அதிக கிராக்கி உள்ளது. எதிர்பார்த்ததை விட வேகமாக விற்பனையாகிறது” என்றும் தெரிவித்திருந்தார். (ஏ) https://newuthayan.com/article/கோத்தாவின்_புத்தகத்துக்கு_எகிறிய_கிராக்கி!
  9. கனடா தலைநகர் ஒட்டாவாவில் 4 குழந்தைகள் உட்பட 6 இலங்கையர்கள் வெட்டிக்கொலை. UPDATED: உயிரிழந்தவர்களில் 5 பேர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். 35-year-old Darshani Banbaranayake Gama Walwwe Darshani Dilanthika Ekanyake. Seven-year-old Inuka Wickramasinghe. Four-year-old daughter Ashwini Wickramasinghe. Two-year-old Rinyana Wickramasinghe. Two-month-old Kelly Wickramasinghe. தர்ஷனி பண்டாரநாயக்கா / ஏகநாயக்க (மனைவி – 35 வயது) இனுக்கா விக்கிரமசிங்க (மகன் 7 வயது) அஷ்வினி விக்கிரமசிங்க (மகள் 4 வயது) றினாயனா விக்கிரமசிங்க (மகள் 2 வயது) கெலி விக்கிரமசிங்க (மகள் 2 மாதம்) கணவன் தனுஷ்கா விக்கிரமசிங்க (மதுரங்கா) உயிர் தப்பியிருந்தும் கை விரல்கள் மற்றும் ஒரு கண்ணில் காயங்களுண்டாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறியப்படுகிறது. குடும்ப நண்பரான 40 வயதுடைய அமரக்கூன் முபியயான்செல (40-year-old Amarakoonmubiayansela Ge Gamini Amarakoon) (காமினி) என்பவரும் இச்சமபவத்தின்போது கத்திக்குத்துக்கு உள்ளாகி மரணமடைந்திருக்கிறார். 19 வயதான ஃபெப்ரியோ டி-சோய்சா (Febrio De-Soyza), முதல் தரத்தில் கொலை செய்ததாக ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளார். அவர் கனடாவில் மாணவராக இருந்ததாக நம்பப்படும் இலங்கைப் பிரஜை என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் கைதுசெய்யப்பட்டார். நான்கு குழந்தைகள் உட்பட ஆறு பேர் புதன்கிழமை இரவு பார்ஹேவனில் (Barrhaven, Ottawa) உள்ள பெரிகன் டிரைவில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்ததை ஒட்டாவா காவல்துறை வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது. புதன் இரவு 11 மணிக்கு (March 06, 2024) 911 அழைப்புகளுக்கு பதிலளித்ததாக போலீசார் கூறுகின்றனர். இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது , தாய் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்குடும்பம் வெவ்வேறு காலங்களில் கனடாவுக்கு வந்தவர்கள் எனவும் கடைக் குழந்தை கனடாவில் பிறந்தவரெனவும் தெரியவருகிறது. சம்பவம் நடைபெற்ற வீடு இக்குடும்பத்திற்குச் சொந்தமானதெனவும் 2013 இலிருந்து இவ்வீடு அவர்களுக்குச் சொந்தமாக இருக்கிறதெனவும் வீட்டு பதிவுகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். “பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று போலீசார் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை. ஆனால் அவர்கள் இலங்கை பிரஜைகளின் குடும்பம் என்று ஒட்டாவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இறந்தவர்கள் இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் வீட்டு பேஸ்ட்மென்டில் (Basement) வாடகைக்கு குடியிருந்த சிங்கள இளையராலேயே இந்த கொலை நடந்ததாகவும் தெரியவருகின்றது. கனடாவின் அல்கோனிகின் கல்லூரியின் (Algonquin College) மாணவரே இந்த படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் எனவும் இறுதியாக கடந்த 2023ம் ஆண்டில் இவர் கல்லூரிக்கு சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://www.torontotamil.com/sinhala-srilankan-family-six-people-dead-including-four-children-ottawa-canada/#google_vignette
  10. முல்லையில் 8 ஆம் திகதி பெரும் போராட்டம்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் அறிவிப்பு (ஆதவன்) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் பெரும் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை எதிர்வரும் 8ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளனர் என்று முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி ம.ஈஸ்வரி நேற்றுத் தெரிவித்தார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தங்கள் உறவுகளை வெளிப்படுத்தவும் விடுவிக்கவும் வலியுறுத்தி மேற்கொண்டுவரும் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. "நாளை 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் முன்னெடுக்கப்படுகின்றது. தற் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை கள் பேரவையின் அமர்வு நடைபெற்று வருகின்றது. இலங்கையில் பெண்களாகிய நாம் இன்னமும் எமது உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கின்றோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக நடத்தப்படவுள்ளது. அதேநேரம் கொக்குத்தொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்புதை குழி தொடர்பாகவும் விரைவான தீர்வு வேண்டும்" என்றும் ம.ஈஸ்வரி மேலும் தெரிவித்தார். (ஏ) https://newuthayan.com/article/முல்லையில்_8_ஆம்_திகதி_பெரும்_போராட்டம்!
  11. யாழ் வல்வெட்டித்துறை முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடை! adminMarch 7, 2024 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் எவ்வித அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் விடுத்த பணிப்புரைக்கு அமைய, ஆளுநரின் செயலாளரால் பருத்தித்துறை பிரதேச செயலாளருக்கு கடிதம் ஊடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், வல்வை முதியோர் இல்லம் எவ்வித வசதிகளும் இன்றியும் இதுவரை பதிவு செய்யாமலும் இயங்கியமை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வல்வை முதியோர் இல்லம் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் ‘அபயம்’ 24 மணித்தியால குறைகேள் வலையமைப்பிற்கு முறைப்பாடு கிடைத்தது. இந்த முறைப்பாடு தொடர்பில் பருத்தித்துறை பிரதேச செயலாளரிடமிருந்து பெறப்பட்ட கள விஜய அறிக்கை ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டது. விடயங்களை ஆராய்ந்த வடக்கு மாகாண ஆளுநர் குறித்த முதியோர் இல்லம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். https://globaltamilnews.net/2024/200991/
  12. யாழ் தையிட்டி விகாரை குறித்து மீண்டும் சர்ச்சை! adminMarch 7, 2024 யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு காணியைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் இராணுவம் களமிறங்கியுள்ள நிலையில் குறித்த விடயத்துக்கு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தையிட்டி விகாரையுள்ள 8.04 ஏக்கர் காணியை சட்டப்படி வழங்குமாறு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவுக்கு இராணுவம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய விகாரை அமைந்துள்ள பகுதியில் 21 ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் வசித்ததாகவும் தமிழ் மக்கள் தங்களுடைய காணி என்று உரிமை கோருவதை ஏற்க முடியாது. சிங்களவர்கள் வாழ்ந்த காணியில் தான் விகாரை அமைக்கப்பட்டுள்ளது என்று கூறும் இராணுவம், தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு சட்டப்படி காணி அனுமதியைக் கோரியுள்ளது. தையிட்டி விகாரை தொடர்பில் அண்மையில் தேசிய பாதுகாப்பு மேற்பார்வைக்குழுவில் ஆராயப்பட்டபோது கடும் எதிர்ப்பு காட்டப்பட்டநிலையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இரண்டு மணி நேரம் வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, சமல் ராஜபக்ஷ , தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன், காணி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண காணி ஆணையாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், நில அளவை நாயகம், பௌத்த பிக்குகள், சட்டத்தரணிகள், இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இதன்போது தையிட்டி விகாரை அமைந்துள்ள பிரதேசமான 8 ஏக்கர் நிலமும் விகாரைக்குரிய பிரதேசம், அங்கே 1960 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்த 406 சிங்கள மக்களுக்கு அது சொந்தமானது, இருந்தபோதும் சில தமிழ் மக்களும் உரிமை கோரு கின்றனர், விகாரை உள்ள 8 ஏக்கர் நிலத்தையும் சிங்கள மக்களோ அல்லது தமிழ் மக்களோ உரிமை கோர முடியாது, அது முழுமையாக விகாரைக்குரியது, அங்கே நிலம் இழக் கப்பட்டதாக எவராவது நிரூபணம் செய்தால் அதற்கு மாற்றுக் காணி வழங்கலாம் என பௌத்த சாசன அமைச்சு சார்பில் கலந்துகொண்டவர்களால் தெரிவிக்கப்பட்டது. இதன்போது கருத்துரைத்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன், தையிட்டியில் விகாரை அமைத்துள்ள விகாரையின் பௌத்த பிக்கு 2017 ஆம் ஆண்டு தெல்லிப்பழை பிரதேச செயலாளருக்கு எழுத்தில் விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தில் தனது 20 பரப்பு நிலத்தை அடையாளம் காட்டுமாறு கோரியிருந்தார். அதாவது 1956ஆம் ஆண்டு விகாரையின் பெயரில் ஒருவர் அனபளிப்பாக வழங்கிய உறுதி பௌத்த பிக்குவிடம் உள்ளது. அது அவர்களிற்கு உரித்தான நிலம் என நாமும் ஏற்றுக்கொள்கின்றோம். இதே நேரம் 2022 ஆம் ஆண்டு அப் பகுதி இராணுவ அதிகாரி விகாரை அமைந்துள்ள 8 ஏக்கர் நிலத்தையும் விகாரையின் பெயரில் ஆவணத்தை கோரி மீண்டும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திறகு விண்ணப்பித்துள்ளார். அவ்வாறானால் இதற்கான அளவீடு யாரால், யாரினுடைய அனுமதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப் பட்டது? தையிட்டியில் விகாரைக்குரிய 1.45 ஏக்கர் நிலம் மட்டுமே. 1956 ஆம் ஆண்டு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிலம் மட்டுமே விகாரைக்குரியது. இருந்தபோதும் அங்கே எந்தக் காலத்திலும் விகாரை இருந்த ஆவணங்களும் கிடையாது. இவை தவிர 13 தமிழ் குடும்பங்களிற்கு உரித்தான 6.54 ஏக்கர் நிலத்தையும் அபகரித்தே தற்போது 8 ஏக்கரில் விகாரை உள்ளது. அந்த 6.54 ஏக்கர் நிலத்தை நீங்கள் எவ்வாறு சுவீகரிக்க முடியும்? அது முழுமையான சட்ட மீறல் .அந்த 6.54 ஏக்கர் நிலமும் நில உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டே ஆக வேண்டும் என்றார். இதன்போது குறுக்கிட்ட இராணுவ அதிகாரி, அந்த நிலம் இராணுவ நில அளவையாளர்களால் அளவீடு செய்யப்பட்டு வரைபடம் வழங்கப்பட்டது எனப் பதிலளித்தபோது பெரும் சர்ச்சை ஏறபட்டது. மக்களிற்குச் சொந்தமான நிலத்தை இராணுவம் மூலம் அடாத்தாகப் பிடித்து வைத்துக்கொண்டு, அந்த நிலத்தை இராணுவமே அளவீடு செய்து, சுவீகரித்துத் தருமாறு கோருவது எந்தச் சட்ட ஏற்பாட்டில் உள்ளது? மக்களின் நிலத்தை அளவீடு செய்ய இராணுவத்திற்கு உரிமை கிடையாது. இவர்கள் யார் அதனை அளப்பதற்கு? – என நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் வேள்விகளை எழுப்பினார். அவ்வாறானால் அதனை நில அளவைத் திணைக்களம் அளவீடு செய்து சமர்ப்பியுங்கள் என சரத் வீரசேகர கோரிக்கை விடுத்தார். மக்களின் நிலத்தை அவர்களின் சம்மதம் அல்லது பகிரங்க அறிவித்தல் இன்றி அளவீடு செய்ய முடியாது என நில அளவைத் திணைக்கள நாயகத்தால் பதிலளிக்கப்பட்டது. இவற்றை ஆராய்ந்த குழு எழுத்தில் பதிலளிப்பதாக தெரிவித்து முடிவுகள் இன்றி கூட்டத்தை ஒத்திவைத்தது. https://globaltamilnews.net/2024/200984/
  13. போதமும் காணாத போதம் – 20 அவளும் நானும் முதன்முறையாக போகித்த போழ்து மழைபெருத்து இறங்கியது. அரவமற்ற இரவைத் துளிகள் பிளந்தொலித்தன. ஆவேசத்தின் வாசலில் வீசியடித்த காற்றிலும் சரீரங்களின் சுகச்சுருதி குலையாமல் வீற்றிருந்தது. அடங்காத குளிர் திசையெங்கிலும் திளைத்து தரித்தது. உயிர்த்து வீறிடும் உச்சத் தந்தியில் நறுமுகையின் கனம் தாங்கிக் கிடந்தேன். மழையின் நடுவே விழுந்து வளர்ந்தது மின்னல் எச்சம். அசதியிலும் நெரிந்து கிடந்தோம். அவிந்த புழுங்கல் அரிசியின் வாசனையைத் துளிர்த்தது ஊர்ந்திறங்கிய அவளது வேர்வை. நறுமுகை எழுந்து கூந்தல் முடிந்தாள். உடுப்புக்களைத் தேடியணிந்தாள். ஒளி குறைந்து மூலையில் தனித்திருந்த லாம்பையெடுத்து திரிதீண்டினாள். பேரொளியில் மூச்சின் நிறைவு சூழ்ந்தது. ஓயாமலும் தீராமலும் கிளர்ந்து பெருக்கும் மழையின் கனல் என்னிலேயே மூள்கிறது. நறுமுகையின் சரீரம் ஈகும் சுகந்தம் குருதிப் பூவென விரிகிறது. ததும்பிப் பெருகும் வெள்ளத்தின் ஓசையோடு நிலம் பிணைய, மீண்டும் நெளிந்து கிடந்து விழித்தோம் நம்பசி. கசியும் உடற்கிளையின் ஈரத்துடன் நறுமுகை கமழ்ந்திருந்தாள். கூடல் மகத்துவத்தின் தித்திப்பு. பசியமிழ்ந்த சர்ப்பம் போல் அசைந்தேன். நறுமுகையின் அதரங்கள் கனிந்து சிவந்தன. நீந்தி நீந்தி வளரும் மீன்தானோ காமம். எத்தனை சுழிப்புக்கள். எத்தனை உந்தல்கள். முயக்கத்தின் நரம்புகள் அலைகளாய் எழுந்து அதிர்ந்தன. “நீங்கள் எனக்கொரு புல்லாங்குழல் வாங்கித் தருவியளோ?” நறுமுகை கேட்டாள். “கொஞ்ச நேரத்துக்கு முன்பு, என்னை நீ புல்லாங்குழல் என்றாயே. அது பொய்யோ” கேட்டேன். “அதுவும் உண்மைதான்” “அடுத்த தடவை வருகிற போது, உறுதியாக புல்லாங்குழல் கொண்டு வருவேன்.” “அந்த அடுத்த தடவை, எப்ப வரும்?” “விரைவில் வரும்” என்று சொல்லி அவளிடமிருந்து விடைபெற்றேன். பிறகான நாட்கள் கடுமையான வேலைத்திட்டங்கள் இருந்தன. வீட்டிற்கு செல்லமுடியாமல் ஊர் ஊராகத் தங்கவேண்டியிருந்தது. மாதக்கணக்காக யாரையும் சந்திக்க முடியாமல் போயிற்று. மெல்ல மெல்ல வன்னிப்பெருநிலம் வதங்கிச் சுருண்டது. ஆக்கிரமிப்பாளர்களின் கொடும்பாதங்கள் முன்னேறி வென்றன. சமாதனத்திற்கான யுத்தம் என்றொரு நரகத்தின் இருள் எம்மில் இறங்கியது. ஊரை இராணுவம் ஆக்கிரமித்து நாட்கள் ஆகியிருந்தன. வீசப்பட்ட விதைகளைப் போல இடம்பெயர்ந்து சிதறியவர்களைத் தேடினேன். அம்மாவும் தம்பியும் சுகமாய் இருப்பதாக வழியில் கண்ட சொந்தக்காரர் சேதி சொன்னார். அவர்களிருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டுமென விரும்பினேன். ஆனால் தர்மபுரத்திலிருக்கும் என்னுடைய சிநேகிதனை ஏதோவொரு திருட்டுக் குற்றச்சாட்டில் காவல்துறை கைது செய்திருப்பதாக அறிந்து, அங்கு சென்றேன். அவன் மீது சந்தேகம் மட்டுமே இருப்பதாகவும் விசாரணை முடிந்து அனுப்பி வைப்பதாகவும் சொல்லிய காவல் அதிகாரியிடம் அவன் யாரெனச் சொன்னேன். சிநேகிதன் அடுத்தநாள் காலையில் விடப்பட்டான். அவனுடைய வீட்டிற்கு வந்த காவல் அதிகாரி, ஒத்துழைப்புக்கு நன்றியும் மன்னிப்பும் என்று வருத்தம் தெரிவித்தார். நான் தர்மபுரத்திலிருந்த மாவீரர் நினைவு மண்டபத்தில் நின்று வீதியில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தேன். அதுவொரு ஆசுவாசமான செயல். நகம் கடிப்பது போல, சிறு இளைப்பாறல். இடம்பெயரும் சனங்களின் நெருக்கமான வரிசை, வீழ்ச்சியின் நிமித்தமென்று உணர்ந்தேன். போர் விமானங்களின் அதிர்வொலிகள் வானிலிருந்து இறங்கின. அண்ணார்ந்து பார்த்தவர்கள் பலர். வீதியின் மருங்கிலிருந்த பதுங்குகுழிக்குள் பாய்ந்தவர் சிலர். பதிந்து இறங்கிய கிபிரின் கொஞ்சம் தூரத்தில் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. மூன்று போர் விமானங்கள் வீசிய ஆறுக்கு மேற்பட்ட குண்டுகளின் அதிர்வில் கிளைதரித்து நின்ற குருவிக்கூடொன்று கீழே விழுந்தது. வான் நோக்கி அலகுகளைத் திறந்து வைத்திருக்கும் குஞ்சுகளின் அப்பாவித்தனம் நினைத்து வருந்தினேன். எங்கள் குழந்தைகள் இந்தக் குருவிக்குஞ்சுகளா! போர் விமானங்களின் மிலேச்சத்தனமான தாக்குதலில் காயப்பட்ட பொதுசனங்கள் தர்மபுரம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர் என்ற செய்தியறிந்து ஓடினேன். ஒரு சிறுமியின் குடல் சூனியத்தின் பெருவெளியில் தொங்கியது. அவளுடைய மூச்சிலும் கசிந்து வழிந்தது குருதி. நான் அவளைத் தூக்கிச் செல்லும் போது உயிர் நீத்தாள். காயப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்க மருந்துகள் இல்லை. ஆனாலும் அறுவைச் சிகிச்சைகள் நடந்தன. மருத்துவமனையின் வாசலில் குவிக்கப்பட்டிருக்கும் உடலங்களைத் தாண்டி அதிவேகமாய் வந்தவொரு சிறிய வாகனத்திலிருந்து பெண்ணொருத்தி தூக்கி வரப்பட்டாள். அவளுடைய இரண்டு கால்களும் கந்தல் துணியைப் போல பிய்ந்திருந்தன. ரத்த வெடில் வயிற்றைக் குமட்டியது. அவளது கைகள் சோர்ந்து நிலத்தை தொட்டன. மருத்துவமனையின் தரையில் கிடத்தப்பட்டு அவளுக்கு சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன. கரும்புகையும் குருதிச்சேறும் அப்பியிருந்த அவளது முகத்தை துடைத்த பொழுதே நறுமுகை இவளென இனங்கண்டேன். நெஞ்சடைத்து மூச்சுக்குத் திணறினேன். அவள் பக்கமாய் ஓடிச்சென்று “என்ர நறுமுகை” என்று கதறினேன். துயரின் பாத்திரத்தில் நிறைக்கப்பட்ட பிச்சையா நம் நித்தியம்! நறுமுகை மயங்கிக்கிடந்தாள். ரத்தப்போக்கினை மருத்துவர்கள் கட்டுப்படுத்தினர் என்று நம்புவதற்கு இல்லை. அது முழுதும் தீர்ந்து போயிருந்தது. இரண்டு நாட்கள் கழித்து சுயநினைவுக்குத் திரும்பிய நறுமுகை என்னை அணைத்து முத்தமிட்டு என்னுடைய புல்லாங்குழல் எங்கேயென்று கேட்டாள். “நான் வாங்கி வைத்துவிட்டேன், இப்போது இல்லை” என்றேன். எப்போது உன் விரைவு வருமென்று கேட்டுப் புன்னகைத்தாள். தன்னுடைய இரண்டு கால்களும் அகற்றப்பட்டது தொடர்பாக நறுமுகையிடம் எந்தவித அரற்றலும் இல்லாமலிருந்தது. அவ்வப்போது காயத்தின் வலியால் கண்ணீர் சிந்தினாள். பகலும் இரவும் அவளுடனே அமர்ந்திருந்தேன். பசுமரமொன்று விறகென ஆவதைப் போல நறுமுகையை ஆக்கியது போரா? விதியா?. யாருக்காக யார் அழுவர். “உனக்கு ஒன்று சொல்லமறந்து விட்டேன். என் கால்களின் எலும்புகளில் புல்லாங்குழல் செய்து வாசிப்பதைப் போல, சில நாட்களுக்கு முன்னதாக ஒரு கனவு கண்டு மகிழ்ந்தேன். உடல் பிளந்து எலும்புகளை நொறுக்கிய குண்டுச் சிதறல்களின் குரூரக் குதூகலம் என் நினைவுகளில் வெடிக்கின்றது” என்றாள். அவளை இறுக அணைத்துக் கொண்டேன். கண்ணீருக்கு வந்தனை செய்யும் காலத்தின் வலியுறும் சடங்கில் கரைந்தோம். “உன் புல்லாங்குழலுக்காகவே உயிர் பிழைத்திருக்கிறேன். எப்போது தருவாய்?” “இடத்திற்குச் சென்று எடுத்து வரவேண்டும். நாளைக்கு செல்கிறேன்” என்றேன். “எனக்கு இரண்டு கால்களும் போய்விட்டதென்று மயக்கமடைவதற்கு முன்பாகவே தெரிந்துவிட்டது. நெருப்புத் திறந்து என்னை நோக்கி வருகையில் ஓடமுடியாமல் நிலத்தில் தளும்பிய குருதியின் மீது தத்தளித்தேன். அப்போது உன்னையே நினைத்தேன். நீயென்னை குருதிப் பூவென்று கூடலில் வியந்தாய் அல்லவா” என்று கேட்டு சிரித்தாள். நறுமுகை உருவம் அழிந்திருக்கிறாள். கதைகள் தீர்ந்து போகுமொரு யுகத்தின் பாதச்சுவட்டின் மீது அங்கவீனமாய் கிடத்தப்பட்டிருக்கிறாள். இருளின் வீறல்கள் பெருகி, வெறிக்கச் செய்யும் திகைப்புகள் விழிக்கூட்டில் திடுக்கிட்டு பதுங்கின. பிணத்தின் பிம்பமென நிலம் தவித்தது. நறுமுகைக்கு மருந்துகள் ஏற்றப்பட்டன. வெளிறிய அவளுடலில் தடமின்றி உள்ளிறங்கிய யுத்த நடுக்கங்களை வெட்டியெடுக்க முடியாது. நறுமுகைக்கு இளநீரும், தண்ணீரும் கொடுத்தேன். இடியப்பம் வாங்கிவந்து தாயார் தீத்திவிட்டாள். புல்லாங்குழலை எங்கே வாங்கமுடியும்? திசையறுந்து ரத்த நாளங்கள் அதிரும் ஊழ்வெளியில் புல்லாங்குழலைத் தேடி அலையும் பித்தன் நான். அதிகாலையிலேயே மருத்துவமனையிலிருந்து புறப்பட்டேன். ஈருருளியைப் பழுது பார்க்கவேண்டும். முன்னஞ்சில்லு அங்குமிங்கும் ஆடியது. தர்மபுரத்திலிருந்து விசுவமடு செல்லும் வழியிலிருந்த தேத்தண்ணிக் கடையில் சாயம் கூடவாப் போட்டு ஒரு தேத்தண்ணி என்றேன். வாங்கில் அமர்ந்திருந்து ஈழநாடு நாளேட்டினை அவதானமாக வாசித்துக்கொண்டிருந்தவர் “ பெடியள் என்ன செய்யப்போறாங்கள் எண்டு விளங்கேல்ல. இப்பிடி ஒவ்வொரு இடமாய் விட்டுவிட்டு பின்னால வந்தாங்கள் எண்டால், இவங்களை நம்பியிருக்கிற சனங்களுக்கு என்ன கதியோ” என்றார். ஆவி பறந்தது. தேத்தண்ணிக்கு கொஞ்சம் சீனி தேவைப்பட்டது. ஆனாலும் கசந்து குடித்தேன். புராதனச் சூரியன் கிழக்கில் எழுந்தான். பறவைகள் பகல் வானின் சிறகசைக்கும் நட்சத்திரங்கள். உதித்த பகலின் திருமுகப்பில் வன்னியின் வடிவுத் திமிர் உறக்கத் தியானம் முடித்தது. நறுமுகைக்கு ஒரு புல்லாங்குழலை எப்படியேனும் வாங்கிக் கொடுக்க வேண்டும். உடையார்கட்டு புலவர் மாமா வீட்டிற்கு அருகிலிருந்த இசை வித்துவானைச் சந்தித்து புல்லாங்குழல் வேண்டுமென்றேன். நான்கு புல்லாங்குழலை எடுத்து வந்து காட்டினார். பார்ப்பதற்கு வடிவான ஒன்றைத் தெரிவு செய்தேன். ஐயாயிரம் ரூபாய் என்றார். பேரம் பேசினேன். படிவதாயில்லை. அவ்வளவு காசு என்னிடமில்லை என்று கூறினேன். எப்போது ஐயாயிரம் ரூபாய் இருக்கிறதோ, அன்று வாருங்கள் தருகிறேன் என்றார். நறுமுகைக்கு நேர்ந்தவற்றைக் கூறி, அவளுக்காகத் தான் இதனை வாங்குவதாகவும் சொன்னேன். அதனாலென்ன காயப்பட்டிருப்பதாக சொல்லுகிறீர்கள் ஒரு ஐநூறு ரூபாய் குறைக்கிறேன் என்றார். என்னிடம் ஆயிரத்து இருநூறு ரூபாய் மட்டுமே இருக்கிறது என்றேன். வாய்ப்பில்லை என்று வழியனுப்பினார். அன்றிரவே தாவீது அண்ணாவின் வீட்டிற்குச் சென்றேன். எனக்கொரு புல்லாங்குழல் வேண்டும். அந்த வாத்தியக்காரன் இவ்வளவு விலை சொல்கிறான் என்று கடிந்தேன். தாவீது அண்ணா கடுமையான நிர்வாகப் பணி அழுத்தங்களில் இருந்தார். கிளிநொச்சி விடுபட்டால் எல்லாமும் போய்விடுமென இயக்கத்திலிருந்தவர்கள் பலர் அஞ்சியிருந்தனர். தாவீது அண்ணா எனக்கு உதவுவதாகக் கூறினார். ஆனால் நாளைக்கு காலையிலேயே தனக்கு பணியிருப்பதாகவும், முடித்துவிட்டு வருவதாகவும் கூறினார். நான் அங்கேயே தங்கியிருந்தேன். தாவீது அண்ணாவின் திருமணப் புகைப்படமொன்று பெரிய அளவில் ப்ரேம் செய்யப்பட்டிருந்தது. அண்ணியின் முகத்தில் செறிந்து இறங்கிய வடிவும் சந்தோசமும். அவள் வித்துடலாக இருந்தபோதும் இப்படித்தான் இருந்தாள். தலைவர் இரட்டை நாடி தெரிய புன்னகைத்தபடி மணமக்களோடு நின்றார். தாவீது அண்ணா இரவாகியும் வரவில்லை. அவர்களுக்கு இயக்க வேலைதான் முக்கியம். பிறகுதான் எல்லாமும். தாவீது அண்ணா அதிலும் மோசம். வீடு மறந்து இயக்கமே தவமென இருப்பவர். பத்து மணியிருக்கும் வாகனமொன்று வீட்டு வாசலில் நின்றது. அதிலிருந்து இறங்கிய போராளிகள் இருவர் வீட்டினுள் நுழைந்து ஆவணங்கள் சிலவற்றை எடுத்தனர். அவர்களிடம் சென்று “தாவீது அண்ணா இண்டைக்கு வரமாட்டாரா” என்று கேட்டேன். “இனிமேலும் வரவேமாட்டார்” என்றார். அய்யோ எனக்கு புல்லாங்குழல் வேண்டும். நறுமுகைக்கு என்ன பதில் சொல்வேன் என்ற பதற்றம் மட்டுமே சுழன்றடித்தது. “பெரிய பொறுப்பாளர் வீரச்சாவு என்கிறேன், நீ புல்லாங்குழல் வேண்டுமென அழுகிறாயே, உனக்கு தாவீது அண்ணாவின் மீது பாசமில்லையா” என்று போராளி கேட்டார். “பாசமிருக்கு. நீங்கள் சொன்ன செய்தி துயரத்தை தருகிறது. ஆனால் அவர் சாவதற்கு தயாரானவர். நறுமுகை அப்பிடியில்லை. அவளுக்கு கால்களிரண்டும் போய்விட்டது. அவளது புல்லாங்குழல் எரிந்துவிட்டது. தாவீது அண்ணாவிற்கு வீரவணக்கம். எனக்கு புல்லாங்குழல் வேண்டும். அவர் வாங்கித் தருவதாகச் சொல்லிவிட்டு போனவர். நீங்கள் அவரின் கனவுகளை, சத்தியங்களை பின் தொடர்பவர்கள் தானே. எனக்கு அந்த வாத்தியக்காரரிடமிருந்து புல்லாங்குழலை வாங்கித் தாருங்கள்” என்றேன். போராளியொருவர் கைதட்டிச் சிரித்தார். தாவீது அண்ணா வாகனத்தை விட்டு இறங்கி வந்தார். “ஏனடா நான் செத்துப்போனாலும் பரவாயில்லை. உன்ர ஆளுக்கு புல்லாங்குழல் வேணும். அப்பிடித்தானே” “உறுதியாய் அப்பிடித்தான் அண்ணா” என்றேன். என்னை இறுக கட்டியணைத்து உன்னோடு கதைத்து வெல்லமுடியாது என்றார். பையிலிருந்து புல்லாங்குழலை எடுத்துத் தருவித்து “உன்ர நறுமுகையிட்ட கொண்டு போய்க் குடு” என்றார். நள்ளிரவில் புறப்பட்டேன். வீதியில் சனங்களின் நடமாட்டம் பெரிதாகவில்லை. போராளிகளின் வாகனங்கள் நிமிடத்திற்கு நிமிடம் கடந்து போயின. போர்விமானங்களின் இரைச்சல் வானத்திலிருந்து இறங்கியது. ஈருருளியை நிறுத்தி மேல் நோக்கிப் பார்த்தேன். எதுவும் தெரியவில்லை. உக்கிரமான அதிர்வோடு இரவின் கனவு குலைந்தது. மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் தொடர்ந்தன. ஊகத்தில் திசையுணர்ந்தேன். விசுவமடு, வட்டக்கச்சி, நெத்தலியாறு, பிரமந்தனாறு இங்கே தான் எங்கேயோ என நினைத்தேன். வழியோரத்து மரங்களின் கீழே போராளிகள் சிலர் நின்று கொண்டிருந்தனர். போர் விமானங்களின் தாக்குதலை முறியடிக்கும் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்களது பாரத்தையும் சேர்ந்து சுமந்தது இரவு. பத்து நிமிடங்கள் கழித்து காயக்காரர்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் விரைந்து போயின. அழுகுரல்களால் நிறைந்த வழியில் தனியனாக நின்று கொண்டிருந்தேன். தெய்வமே! குழந்தைகளுக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்று வேண்டினேன். நான் நெத்தலியாற்றுப் பாலத்தை தாண்டும்போது வீதியில் நின்ற ஒருதொகைச் சனங்கள் “தர்மபுரம் ஆசுபத்திரியல தான் கிபிர் அடிச்சிருக்கு” என்றார்கள். அய்யோ! என் நறுமுகையென ஈருருளியை வேகங்கொண்டு உழக்கினேன். மருத்துவமனை எரிந்துகொண்டிருந்தது. போராளிகள் சனங்களுக்கு உதவிக்கொண்டிருந்தனர். “நறுமுகை… நறுமுகை…” என்று கதறியழுதபடி அனல் ஊற்றுக்குள் புகுந்தேன். அவள் கிடத்தப்பட்ட இடத்திலேயே இருந்தாள். தீயின் வெக்கையில் சிவந்திருந்தாள். அவளுடைய கைகளில் புல்லாங்குழலை வைத்தேன். நறுமுகை! உனக்காக வாங்கி வந்த புல்லாங்குழல். நீ இசையடி. என்னுயிரை நீ இசையடி நறுமுகை என்று சொன்னேன். அவளுடைய உதடுகள் திறவாமல் கிடந்தன. கண்கள் புல்லாங்குழலின் துளைகளைப் போல விழித்திருந்தன. யுத்தத்தின் எலும்புகள் நாம். எம்மைத் துளையிட்டு விரல் வைத்து அது ஊதுகிறது. எல்லாமும் சூனிய இரைச்சல். எல்லாமும் சூனியச் சுரம். குருதிப் பூவென விரிந்து தகிக்கும் இந்தத் தீ வெளியில் நறுமுகையை அணைத்துகொண்டு உதடுகளை முத்தமிட்டேன். புல்லாங்குழலிலிருந்து எழுந்தது அவளது நாதம். யுத்தம் தப்பி ஓடும் சாத்வீகத்தின் இழையை இசையால் நெய்தாள். “மனிதக் காயங்களில் எரியும் யுத்தம் நாதத்தினால் அழியும்” “யுத்தம் அழியட்டும் சகியே!” “என் குருதிக்காயத்தின் புல்லாங்குழல் துளைகளை மூடவும் திறக்கவும், யுத்தம் அழியும்” “யுத்தம் அழியட்டும் என் குருதிப் பூவே” என்றது நானா? நிலமா? யாரறிவார்! https://akaramuthalvan.com/?p=1837
  14. வெடுக்குநாறிமலை சிவராத்திரி வழிபாடுகளை குழப்ப முற்படும் விகாராதிபதி வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 8 ஆம் திகதி விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறான நிலையில், மின்பிறப்பாக்கி இயந்திரங்களை பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்துவதானால், நீதிமன்றில் அனுமதி பெறப்படவேண்டும் என நெடுங்கேணி பொலிஸாரால் ஆலயநிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து வவுனியா நீதிமன்றில், ஆலயநிர்வாகம் சார்பாக கடந்தவாரம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைகள் நேற்று மன்றில் இடம்பெற்றபோது, ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் செயற்படுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேவேளை, முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாராதிபதி, வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய மகா சிவராத்திரி நிகழ்வை குழப்பும் வகையில் செயற்பட்டு வருகிறார் என ஆலய நிர்வாக சபை உறுப்பினர் தமிழ்ச் செல்வன் குற்றஞ்சாட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/sri-lanka/2024/03/05/vedukunarimalai-viharadhipathi-tries-to-confuse-the-shivratri-worshippers
  15. சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்? அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில், அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவர் நேற்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு இணையாக, பலம் பொருந்திய கூட்டணியை உருவாக்க, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தலைமை விரும்புகிறது. அதாவது, தி.மு.க., ஆட்சியின் அதிருப்தி அலையை அறுவடை செய்ய வசதியாக, தன் தலைமையில் மெகா கூட்டணி அமைத்து, 20 தொகுதிகளை கைப்பற்றுவதற்கான தேர்தல் வியூகத்தை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வகுத்துள்ளார். அதன் அடிப்படையில், பா.ம.க., – தே.மு.தி.க., புதிய தமிழகம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போன்றவற்றிடம், கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சு நடத்தப்பட்டு உள்ளது. பா.ம.க.,விற்கு, தர்மபுரி, கடலுார், விழுப்புரம், ஆரணி, திருவண்ணாமலை உள்ளிட்ட ஆறு தொகுதிகளையும், கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளை, தே.மு.தி.க.,விற்கும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியையும், சமத்துவ மக்கள் கட்சிக்கு திருநெல்வேலி தொகுதியையும் ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், பா.ம.க., – தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளை தவிர, ஓட்டு வங்கி கூடுலாக வைத்துள்ள நாம் தமிழர் கட்சியையும் கூட்டணியில் சேர்த்தால், தி.மு.க., கூட்டணிக்கு இணையான பலத்தை, அ.தி.மு.க., அணி பெறும் என, பழனிசாமி நம்புகிறார். நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தை, தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால், பா.ஜ., மீது சீமான் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். பா.ஜ., வுக்கு எதிராக, தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்யவும் முடிவு செய்துள்ளார். இந்நிலையில், கூட்டணி தொடர்பாக, சீமான் தரப்பினரிடம் பழனிசாமி தரப்பினர் பேச்சு நடத்தினர். ‘இரு திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை’ என்று கூறி வந்த சீமானுக்கு, விவசாயி சின்னம் விவகாரத்தால், கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. எனவே, பழனிசாமியை சீமானின் குடும்ப உறுப்பினர்கள் இருவர் நேற்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சீமானுக்கு நெருக்கமானவரிடம் கேட்ட போது, ‘முதல் கட்டமாக 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுஉள்ளோம். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்றால், குறிப்பிட்ட சில தொகுதிகளில் உடன்பாடு வைக்கலாமா அல்லது 40 தொகுதிகளிலும் கூட்டணியா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில், ஆறு தொகுதிகள் தருவதற்கு பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், சீமான் முடிவு தான் இறுதியானது’ என்றார். https://akkinikkunchu.com/?p=270197
  16. டிரம்பிற்கு கறுப்பினத்தவர்கள் ஆதரவு என்பதை காண்பிப்பதற்கு போலி செயற்கை நுண்ணறிவு படங்கள் – டிரம்பின் ஆதரவாளர்கள் சர்ச்சை நடவடிக்கை போலியான செயற்கை நுண்ணறிவு படங்களை உருவாக்கி டிரம்பின் ஆதரவாளர்கள் கறுப்பின வாக்காளர்களை இலக்குவைத்துவருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு கறுப்பினத்தவர்கள் ஆதரவளிக்கின்றனர் என்ற உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் டிரம்புடன் கறுப்பினத்தவர்கள் காணப்படும் போலிவீடியோக்கள் படங்களை டிரம்பின் ஆதரவாளர்கள் உருவாக்குவது தெரியவந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. 2020 தேர்தலில் பைடன் வெற்றிபெறுவதற்கு கறுப்பினத்தவர்களின் ஆதரவு முக்கியமானதாக காணப்பட்ட நிலையில் டிரம்ப் தற்போது அவர்களின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளில் வெளிப்படையாக ஈடுபட்டுள்ளார். இவ்வாறான போலியான படங்கள் கறுப்பினத்தவர்களின் ஆதரவு டிரம்பிற்குள்ளது என்பதை காண்பிப்பதற்கு பயன்படுத்தப்படுவதாக பிளக்வோட்டர்ஸ் மட்டர் அமைப்பின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார் இவ்வாறான படங்கள் உண்மையானவை என நான் தெரிவிக்கவில்லை என இந்த படங்களை உருவாக்கி ஒருவர் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி டிரம்ப் ஆதரவாளர்கள் உருவாக்கும் போலி படங்கள் அமெரிக்க தேர்தலிற்கு முந்தைய புதிய போக்காக காணப்படுகின்றது. அமெரிக்க வாக்காளர்களே இவற்றை உருவாக்கி பயன்படுத்திவருகின்றனர். இவ்வாறான படங்களை உருவாக்கியவர்களில் மார்க்கை குழுவினர்களும் உள்ளனர் இவர்கள் டிரம்ப் கறுப்பின பெண்களுடன் காணப்படுவது போன்ற படத்தை உருவாக்கி முகநூலில் பதிவிட்டனர்.இந்த குழுவினரை ஒரு மில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கின்றனர். முதல் பார்வைக்கு அது உண்மையான படம் போல தோன்றினாலும் உற்றுப்பார்த்தால் பல உண்மைகள் புலனாகும். https://akkinikkunchu.com/?p=270254
  17. சாந்தனைத்தான் இழந்துவிட்டோம்; எஞ்சியோரையாவது காப்பாற்றுங்கள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சட்டத்தரணி புகழேந்தி மன்றாட்டம்.... உயிரோடு தாயிடம் அனுப்பிவைப்போம் என்ற நம்பிக்கையுடன் இருந்த நிலையில் இன்று சாந்தனை நாம் இழந்துவிட்டோம். எஞ்சிய மூவரையாவது காப்பாற்றுவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வரவேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த சட்டத்தரணி புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார். உடுப்பிட்டி கற்பகப் பிள்ளையார் ஆலய முன்றிலில் அவ்வூர் பொதுமக்களால் நேற்று நண்பகல் முன் னெடுக்கப்பட்டிருந்த சாந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து வருகைதந்த சட்டத்தரணி புகழேந்தி ஆற்றிய அஞ்சலி உரையின் போது இந்தக்கோரிக்கையை முன்வைத்திருந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- சாந்தனை எப்படியாவது காப்பாற்றித் தாயிடம் அனுப்பி வைப்போம் என்றே நம்பியிருந்தோம். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த சாந்தனின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு நினைவிழந்த நிலைக்குச் சென்றார். அந்த நிலையில் கூட எயார் அம்புலன்ஸ் மூலமாக கட்டுநாயக்கா ஊடாக அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். இருந்தும் அனைத்துப் போராட்டங்களும் பயனற்றுப்போகும் வகையில் அவர் உயிரிழந்தார். ஈழத்தில் இருக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு உடனடியாக வர வேண்டும். திருச்சி சிறப்பு முகாமில் உள்ள எஞ்சிய மூவரும் எவ்வாறான கொடும் சிறையில் இருக்கின்றார்கள் என்பதை நேரடியாகப் பாருங்கள். தமிழ் நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து, எஞ்சிய மூவரும் விரும்பிய இடங்களுக்குச் செல்வதற்கு உரிய அனுமதி கிடைக்கும் வரை அவர்களை தமிழ்நாட் டில் உள்ள உறவுகளிடம் கையளிக்குமாறு கோரிக்கை வையுங்கள். அது நடைபெற்றால் மட்டுமே அவர்களையாவது நாம் காப்பாற்ற முடியும். திருச்சி சிறப்பு முகாமில் உள்ள எஞ்சிய மூவரையும் காப்பாற்றி அவர்கள் விரும்பும் நாட்டுக்குச் சென்று அவர்களுடைய குடும்பத்துடன் நிம்மதியாக வாழவைப்பதற்கான சட்டப்போரட்டத்தை தமிழ்நாடு திரும்பிய கையோடு முழுவீச்சோடு முன்னெடுக்க உள்ளேன் - என்றார். சட்டத்தரணி புகழேந்தி, ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட சாந்தன், முருகன் உள்ளிட்டோரின் வழக்கு விடயங்களை 2005 ஆம் ஆண்டு முதல் எவ் விதக் கட்டணங்களும் வாங்காது இலவசமாக முன்னெடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/சாந்தனைத்தான்_இழந்துவிட்டோம்;_எஞ்சியோரையாவது_காப்பாற்றுங்கள்;
  18. நம்ம நண்பர்கள் (அவுஸ், கனடா, இங்கிலாந்து) ஓரிரு வருடங்களுக்கு முன்னர் சைக்கிள் ஓடினார்கள். Online மூலமாக பணம் சேர்த்தார்கள். http://www.ride4ceylon.com இந்தமுறை கண்டியில் இருந்து மானிப்பாய் வந்திருக்கின்றனர்.
  19. யாழில் நடந்த களியாட்டக் குழப்பங்களினால் புதிய டிக்டொக்டர்கள் உருவாகியது நல்லவிடயம்! நல்ல கிரியேட்டிவிட்டியுடன், யாழ்ப்பாண மண்ணில் இருந்தே பலர் வீடியோக்கள் போட்டிருந்தனர்!
  20. எனது சிறு குறிப்பு ஆசான் ஜெயமோகனின் தளத்திலும் வந்துள்ளது😃 https://www.jeyamohan.in/197234/ போருக்கு முன்… February 27, 2024
  21. சாந்தன்: இரண்டு ஆயுள் தண்டனைகள் ; இரண்டு பிரேத பரிசோதனைகள் - நிலாந்தன் சாந்தன் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர். பொதுவாக இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் ஆயுள் தண்டனை எனப்படுவது விடுமுறை நாட்களைக் கழித்து பார்த்தால் 15 ஆண்டுகள். சிறை, சிறப்பு முகாம் போன்ற இடங்களில் சாந்தன் தடுத்து வைக்கப்பட்டிருந்தது 33 ஆண்டுகள். அப்படிப்பார்த்தால் அவர் இரண்டு ஆயுள் தண்டனைகளை முடித்துவிட்டார். அதற்கு பின்னரும் அவர் தாயகம் திரும்புவதற்கு அனுமதிக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள சட்டச் செயற்பாட்டாளர்கள் தமிழக அரசைக் குற்றஞ்சாட்டுகின்றார்கள். இந்த விடயத்தில் தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகளும் பொறுப்புணர்ந்து செயல்படவில்லை. இந்திய மண்ணில் பாரதூரமான குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள், விடுவிக்கப்பட்ட பின் அவர்கள் இந்தியர்களாக இருந்தால் வீட்டுக்கு போகலாம். வெளிநாட்டவர்களாக இருந்தால் நாடு கடத்தப்படுவார்கள். அல்லது இந்தியாவில் அவர்களைப் பொறுப்பேற்கக்கூடிய உறவினர்கள் இருந்தால் அவர்களிடம் போகலாம். சாந்தன் தாயகத்துக்கு வர விரும்பினார். தன் தாயுடன் இறுதிக் காலத்தைக் கழிக்க விரும்பினார். அவரோடு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனையவர்கள் இப்பொழுதும் திருச்சி சிறப்பு முகாமில்தான். தண்டனைக் காலம் முடிந்த பின் விடுதலை செய்யப்ட்ட வெளிநாட்டவர்கள் அவர்களுடைய நாட்டுக்குத் திரும்பும் வரையிலும் அவ்வாறு தடுத்து வைக்கப்படுகின்றார்கள். விடுவிக்கப்பட்ட சாந்தன் நாட்டுக்குத் திரும்பினால் இலங்கைச் சட்டங்களின் பிரகாரம் அவருக்கு ஆபத்து ஏற்படுமா என்ற ஒரு பயம் அவருக்காக உழைத்த சட்டச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் காணப்பட்டது. நாட்டிலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி, உரிய அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக ஒரு பதிலை பெறுவது நல்லது என்றும் அவர்களிற் சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். ஆனால் அது தொடர்பாக எடுக்கப்பட்ட முயற்சிகள் எவையும் வெற்றி பெறவில்லை. தமிழ் அரசியல்வாதிகளில் ஒருவருக்கு அது தொடர்பாக எழுதப்பட்ட மின்னஞ்சலுக்குப் பதில் கிடைக்கவில்லை. சில அரசியல்வாதிகள் எங்கே, யாரிடம் அதைக் கேட்க வேண்டுமோ அங்கே கேட்காமல், சாந்தனின் வீட்டுக்கு போய் அவருடைய தாயாரைக் கண்டு படமெடுத்துக் கொண்டார்கள். இவ்வாறு சாந்தனை விடுவிப்பதற்கு யாரிடம் கதைக்க வேண்டும்? எங்கே போராட வேண்டும்? என்பது தொடர்பாக தமிழ் அரசியல் சமூகம் தெளிவற்றுக் காணப்பட்டது. அல்லது பொறுப்போடு நடந்து கொள்ளவில்லை. அல்லது மூத்த சட்ட மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளரான ஒருவர் கூறுவது போல அதற்கு வேண்டிய அரசியல் பெருவிருப்பம்-political will-அவர்களிடம் இருக்கவில்லை. திருச்சி சிறப்பு முகாமானது இதற்கு முன்னிருந்த சிறைகளை விடக் கொடுமையானது என்று அங்கு இருப்பவர்கள் கூறுகிறார்கள். அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரிகள் சிறப்பு முகாமுக்குள் இருந்தபடியே தமது வியாபாரத்தைத் தொடர்ந்தமை கண்டு பிடிக்கப்பட்டது. அதன்பின் முகாமில் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. அது அரசியல் கைதிகளையும் பாதித்தது. சாந்தனைப் போன்றவர்கள் ஏனைய கைதிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு தனியறைகளில் வைக்கப்பட்டார்கள். சுற்றிவரக் கண்காணிப்பு. உடற்பயிற்சி செய்ய முடியாது. அவர்கள் தடுத்து வைக்கப்பட்ட அறைகளோடு கழிப்பறைகளும் இணைக்கப்பட்டிருந்தபடியால் வெளியே நடமாடுவதற்கும் வரையறைகள் இருந்தன. சிறைக்குள் சாந்தன் பெருமளவுக்கு ஒரு சன்னியாசி போலாகிவிட்டார் என்று வழக்கறிஞர் ஒருவர் சொன்னார். பெருமளவுக்குத் தனித்திருப்பதாகவும் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டவர் போல காணப்பட்டதாகவும் அவர் சொன்னார். சிறப்பு முகாமில் அவர் சோறு சாப்பிடாமல் கஞ்சி மட்டும் தருமாறு கேட்பதாகவும் கூறப்பட்டது. சிறப்பு முகாமும் சாந்தனின் உடல் கெடுவதற்கு ஒரு காரணம். முடிவில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் ஒரு நிலை வந்த பொழுது மீண்டும் அவரது குடும்பத்தவர்கள் தமிழ்த் தேசிய அரசியற் சமூகத்தை அணுகினார்கள். அப்பொழுதும் தமிழ்த் தேசிய அரசியற் சமூகம் அதே மந்தத்தனத்தோடு பொறுப்பின்றி நடந்து கொண்டது. சாந்தனை நாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பான முடிவை இலங்கையில் எடுக்க வேண்டியது வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும்தான். சம்பந்தப்பட்ட அமைச்சுக்களோடு மிகவும் பிந்தித்தான், அதாவது அவர் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 14 மாதங்களின் பின்னர்; அதிலும் குறிப்பாக அவர் இறப்பதற்குச் சில கிழமைகளுக்கு முன்புதான் தொடர்பு கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த விடயத்தில் ஜனாதிபதியை, வெளி விவகார அமைச்சரை அணுகிய அதே காலப்பகுதியில் சாந்தனின் குடும்பத்தவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அணுகியிருக்கிறார்கள். மற்றொரு யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினராகிய அங்கஜனும் அதில் அக்கறை காட்டியிருக்கிறார். அதாவது சாந்தனின் விடயத்தில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, அதற்கு வெளியே உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரும் அரசாங்கத்தை அணுகியதன் விளைவாகத்தான் நாடு திரும்புவதில் சாந்தனுக்கு இருந்த தடைகள் அகற்றப்பட்டன. ஆனால், அப்பொழுது எல்லாமே பிந்திவிட்டது. விமானத்தில் பயணம் செய்ய முடியாத அளவுக்கு சாந்தன் நோயாளியாகி விடடார் என்று ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீன் ஒரு வழக்கறிஞரிடம் கூறியுள்ளார். முடிவில், சாந்தனின் உயிரற்ற உடலைத்தான் அவருடைய தாய்க்குக் காட்ட முடிந்தது. விடுதலை செய்யப்பட்ட பின்னரும் அவர் ஒரு கைதியாகவே இறந்தார். உயிருடன் இருக்கும் போது அவர் இரண்டு ஆயுள் தண்டனைகளை அனுபவித்தார். உயிர் பிரிந்தபின் அவருடைய உடலை இரண்டு தடவைகள் போஸ்மோர்டம் செய்திருக்கிறார்கள். முதலில் இந்தியாவில் பின்னர் இலங்கையில். சாந்தனுக்காக தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல் சமூகம் பெரிய அளவில் போராடவில்லை. இப்பொழுதும் சிறப்பு முகாம்களில் இருப்பவர்களை விடுதலை செய்யவதற்காக யார் போராடுகிறார்கள்? சாந்தனோடு சிறையில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பிரஜையாகிய பேரறிவாளனை விடுவிப்பதற்காக அவருடைய தாயார் அற்புதம்மாள் தொடர்ச்சியாகப் போராடினார். ஒரு தாயின் நிகரற்ற போராட்டங்களில் அதுவும் ஒன்று. கிழக்கில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த அன்னை பூபதியின் போராட்டத்தைப்போல அது முன்னுதாரணமானது. ஈழத் தமிழ் அரசியலில் தாயக களத்துக்கு வெளியே நடந்த ஓர் அன்னையின் மகத்தான போராட்டமாக அற்புதம்மாளின் 32 ஆண்டுகாலப் போராட்டம் காணப்பட்டது. சாந்தனை விடுவிப்பதற்காக அல்லது நாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழ் அரசியல் சமூகம் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய போராட்டம் எதையும் முன்னெடுத்திருக்கவில்லை. அது மட்டுமல்ல, சாந்தனை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தமிழ் அரசியல்வாதிகளிடம் பொருத்தமான அணுகுமுறைகள் இருக்கவில்லை. சாந்தனின் குடும்பம் சலிப்படைந்து, களைப்படைந்து, ஒரு விதத்தில் விரக்தியடைந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நோக்கிப் போனது. ஆனால் தமிழ் தேசியக் கட்சிகள் தங்கள் சொந்தக் கட்சிக்குள் பதவிப் போட்டி என்று வரும் பொழுது எப்படியெல்லாம் போராடுகிறார்கள்? கடந்த வாரம் தமிழ்த் தேசிய அரசியலின் இயலாமைகளை நிரூபித்த ஒரு வாரம். முதலாவது சாந்தனின் மரணம். இரண்டாவது தமிழரசுக் கட்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டமை. அங்கே அவர்கள் புத்திசாலித்தனமாக நடந்தார்களா இல்லையா என்பது வேறு கதை. கட்சிக்குள் வந்த பிணக்கை கட்சிக்குள்ளேயே தீர்க்க முடியவில்லை என்பது ஒரு பாரதூரமான தோல்வி. அதனைத் தீர்ப்பதற்கு கட்சிக்கு வெளியேயும் சிவில் சமூகங்கள் இல்லை என்பது மற்றொரு தோல்வி. கடந்த 15 ஆண்டு காலத் தோல்விகளுக்கு அந்தக் கட்சி பொறுப்பு என்ற படியால் அது அழியட்டும்; அதன் வாக்குகள் தென்னிலங்கைக் கட்சிகளுக்குப் போனால்கூட பரவாயில்லை என்று கருதுமளவுக்கு சில சிவில் சமூகப் பிரதிநிதிகள் காணப்படுகிறார்கள் என்பது அதைவிடத் தோல்வி. இது ஒரு தேர்தல் ஆண்டு. ஜனாதிபதித் தேர்தலில் தற்போதுள்ள நிலவரங்களின்படி அரச தரப்பு; எதிர்க்கட்சி; ஜேவிபி என்று மூன்று அணிகள் போட்டியிடக்கூடிய வாய்ப்புகள் தெரிகின்றன. தென்னிலங்கையில் படித்த நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் ஜேவிபி ஆதரவு அலை ஒன்று வீசுகிறது. அது வாக்குகளாக மாறுமா? இல்லையா?அல்லது அதை கண்டு பயந்து ஏனைய வலதுசாரிக் கட்சிகள் தங்களுக்கு இடையே ஐக்கியத்துக்கு போகுமா? இல்லையா? என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். மேற்சொன்ன மூன்று தரப்புக்களும் போட்டியிட்டால், சிங்கள மக்களின் வாக்குகள் மூன்றாகப் பிரியும். அப்பொழுது தமிழ்த் தரப்பு ஒரு தீர்மானிக்கும் சக்தியாக மேலெழக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகும். ஆனால் அவ்வாறு அரசியல் களத்தில் துணிந்து புகுந்து விளையாடுவதற்கு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. உள்ளதில் பெரிய கட்சி நீதிமன்றம் ஏறத் தொடங்கிவிட்டது. மற்றொரு கட்சி தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துவிட்டது. அதாவது துணிந்து புகுந்து விளையாடத் தயாரில்லை. ஒரு பொது வேட்பாளரை நிறுத்தப் போவதாகக் கூறிய குத்து விளக்குக் கூட்டணி அதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறதே தவிர செயல்படுவதாகத் தெரியவில்லை. தமிழரசுக் கட்சி தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்காவிட்டால் குத்துவிளக்குக் கூட்டணி அந்தப் பரிசோதனையில் இறங்குமா? இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெல்லப்போகும் கட்சி அல்லது கூட்டு, அடுத்த ஆண்டு அனேகமாக பொது தேர்தலை வைக்கும். தொடர்ந்து மாகாண சபைத் தேர்தல், உள்ளுராட்சி சபைத் தேர்தல் போன்றன வைக்கப்படலாம். அதாவது வரும் இரண்டு ஆண்டுகளும் தேர்தல் ஆண்டுகளாக அமையக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது மக்கள் இயக்கம் எதுவும் இல்லை. இருப்பதெல்லாம் தேர்தல் கேட்கும் கட்சிகள்தான். அடுத்தடுத்து வரும் இரு தேர்தல் ஆண்டுகளை எதிர்கொள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளிடன் என்ன உபாயம் உண்டு? நிர்ணயகரமான ஒரு காலகட்டத்தில், அரங்கில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடிய தரப்புக்களை இந்தியாவும் அமெரிக்காவும் ஏனைய பேரரசுகளும் அணுகிக் கையாள முற்படும் ஒரு காலகட்டத்தில், அரங்கில் துணிந்து புகுந்து விளையாட வேண்டிய தமிழ்த் தரப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது? அரசியலில் துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகள்தான் ரிஸ்க் எடுக்கும். ரிஸ்க் எடுக்கும் தரப்புகள்தான் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைக்கும். தலைமை தாங்கும். துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகள்தான் வரலாற்றை உருவாக்குகின்றன. உட்கட்சிச் சண்டையை நீதிமன்றத்துக்கு கொண்டு போகும் கட்சிகள் வரலாற்றை உருவாக்குவதில்லை. அதுமட்டுமல்ல தேர்தல் வரும்பொழுது தமிழ்த் திரைப்படங்களில் கடைசி நேரத்தில் விசிலடித்துக் கொண்டு வரும் போலீஸ்போல அறிக்கை விடும் சிவில் சமூகங்களும் வரலாற்றைத் தீர்மானிப்பதில்லை. https://www.nillanthan.com/6582/
  22. அநுரகுமாரவின் இந்திய விஜயம்; ஜே.வி.பியின் இந்திய விரோத கடந்த காலத்தை பொருட்படுத்தாத மோடி அரசு Veeragathy Thanabalasingham on March 1, 2024 Photo, X, @DrSJaishankar தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் அவரது மூன்று தோழர்களும் ஐந்து நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியிருந்தார்கள். தங்களையும் கூட இந்திய அரசாங்கம் அழைத்துப் பேசவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகி வேண்டுகோள் விடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. அந்தளவுக்கு தேசிய மக்கள் சக்தி தலைவரின் இந்திய பயணம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்புடன் கூடிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தியா வழமையாக தமிழ் அரசியல் கட்சிகளுக்குப் புறம்பாக ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற பெரிய கட்சிகளுடனேயே ஊடாட்டங்களைச் செய்துவந்திருக்கிறது; ஆனால், தேசிய ஐக்கிய மக்கள் சக்தி போன்ற இடதுசாரிக் கட்சிகளை அழைத்துப் பேசியதில்லை. இந்திய, இலங்கை இடதுசாரி அரசியல்வாதிகள் அவர்களின் கட்சிகளின் மகாநாடுகளில் கலந்துகொள்வதற்காக பரஸ்பரம் விஜயங்களை மேற்கொள்வதுண்டு. அத்தகைய விஜயங்கள் குறிப்பிட்ட கட்சி வட்டாரங்களுக்கும் ஒரளவுக்கு ஊடக கவனிப்புக்கும் அப்பால் பெரிதாகக் அக்கறைக்குரியவையாக இருப்பதில்லை. ஆனால், இந்தத் தடவை தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களின் இந்திய பயணத்துக்கு அதிவிசேட முக்கியத்துவம் ஒன்று இருக்கிறது. திசாநாயக்கவையும் தோழர்களையும் இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைத்து இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறது. இலங்கை அரசியல் கட்சியொன்றின் தலைவர்களை இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைத்துப் பேசியிருப்பது அண்மைய தசாப்தங்களில் இதுவே முதற்தடவையாக இருக்கவேண்டும். திசாநாயக்கவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க, தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரும் இந்தியா சென்றிருந்தனர். அவர்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் மற்றும் வெளியுறவு செயலாளர் வினாய் மோகன் கவாட்ரா ஆகியோர் இலங்கையின் பொருளாதாரம், அரசியல் நிலைவரம், எதிர்கால அரசியல் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடியதாக செய்திகள் கூறின. திசாநாயக்கவுடனான சந்திப்புக்குப் பிறகு கலாநிதி ஜெய்சங்கர் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் “இலங்கையின் தேசிய மக்கள் சக்தியினதும் ஜனதா விமுக்தி பெரமுனவினதும் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி. இருதரப்பு உறவுகள், பரஸ்பர நலன்கள், இலங்கையின் பொருளாதாரச் சவால்கள், முன்னோக்கிச் செல்வதற்கான பாதை குறித்து நல்ல பேச்சுவார்த்தையை நடத்தினேன்” என்று குறிப்பிட்டிருந்தார். ஐந்து நாள் விஜயத்தின்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் உள்ள தென்னிந்திய மாநிலமான கேரளாவுக்கும் சுற்றுலாவை மேற்கொண்டு சிந்தனைக் குழாம்கள் உட்பட பல்வேறு தரப்புகளுடனும் கலந்துரையாடினார்கள். இவ்வருட பிற்பகுதியில் இரு தேசிய தேர்தல்களுக்கு இலங்கை தயாராகிவரும் நிலையில், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தன்னை அறிவித்திருக்கும் திசாநாயக்கவின் மக்கள் செல்வாக்கு பெருமளவுக்கு அதிகரித்திருப்பதாக தோன்றும் ஒரு நேரத்தில் இந்திய அரசாங்கம் அவரை அழைத்துப் பேசியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. இரு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சிக்கு பின்னரான அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் ஆதரவைப் பெருமளவுக்கு வளர்த்துக்கொண்ட கூட்டணியாக கட்சியாக தேசிய மக்கள் சக்தி விளங்குகிறது. அதன் தலைமைக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) பொதுக் கூட்டங்களிலும் ஊர்வலங்களிலும் மக்கள் பெருமளவில் அணிதிரண்டாலும் அந்த திரட்சி தேர்தல்களில் வாக்குகளாக மாறுவதில்லை என்ற ஒரு வரலாறு இருக்கிறது. ஆனால், அதே வரலாறு இனிமேலும் தொடரும் என்று கூறமுடியாது என்றே தோன்றுகிறது. மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஜனாதிபதி வேட்பாளரா திசாநாயக்கவே விளங்குவதாக கொழும்பை தளமாகக் கொண்டியங்கும் ‘சுகாதாரக் கொள்கைக்கான நிறுவனம்’ என்ற ஆய்வு அமைப்பு ஜனவரியில் செய்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்திருக்கிறது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 50 சதவீதமானவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கே வாக்களிக்கப்போவதாக கூறியிருக்கும் அதேவேளை, 33 சதவீதமானவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாகக் கூறியிருக்கிறார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெறுமனே 9 சதவீதமானவர்கள் மாத்திரமே ஆதரிப்பதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. இந்த பிந்திய ஆய்வு கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அமைக்கப்பட்ட சில மாதங்களில் நடைபெற்ற 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட திசாநாயக்க 3.1 சதவீத வாக்குகளையே பெறக்கூடியதாக இருந்தது. மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு தேசிய மக்கள் சக்தியின் ஆதரவு எவ்வளவுதான் அதிகரித்திருந்தாலும் திசாநாயக்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவேண்டுமானால் அவரின் வாக்குகள் அந்த மூன்று சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரிக்கவேண்டும். அது சாத்தியமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. எது எவ்வாறிருந்தாலும், இலங்கையின் இன்றைய அரசியல் நிலைவரத்துக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்தியை புதுடில்லிக்கு உத்தியோகபூர்வமாக அழைத்துப் பேசும் அளவுக்கு முக்கியமான அரசியல் சக்தியாக இந்திய அரசாங்கம் நோக்குகிறது என்பது தெளிவானது. இந்திய விரோத கடந்த காலம் ஜே.வி.பியைப் பொறுத்தவரை அதன் ஆரம்பம் முதலிருந்தே மிகவும் வெறித்தனமான இந்திய விரோதக் கொள்கையைக் கடைப்பிடித்த வரலாற்றைக் கொண்டிருக்கிறது. காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் என். சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்த ரோஹண விஜேவீர 1960 களின் பிற்பகுதியில் கட்சியில் இருந்து வெளியேறி புதிதாக அமைத்துக்கொண்ட ஜே.வி.பியின் கொள்கைகளில் இந்திய விரோதம் முக்கியமான ஒரு கூறாக இருந்தது. இலங்கையின் ஏனைய சமூகங்களின் தொழிலாளர் வர்க்கத்தினருடன் ஒப்பிடும்போது மெய்யான பாட்டாளி வர்க்கத்தினராக நோக்கக்கூடிய தமிழர்களான இந்திய வம்சாவளி மலையக தோட்டத்தொழிலாளர்களை இந்தியாவின் ஐந்தாம் படையென்றும் இந்திய விஸ்தரிப்புவாதத்தின் கருவிகள் என்றும் விஜேவீர வர்ணித்தார். மலையக பெருந்தோட்டங்களில் தேயிலைச் செடிகளை அகற்றிவிட்டு உருளைக் கிழங்கை பயிரிடுவது குறித்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. 1980 களின் பிற்பகுதியில் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையை ‘இரண்டாவது மலைநாட்டு உடன்படிக்கை’ (Second Upcountry Pact) என்று விஜேவீர வர்ணித்ததாக இலங்கையில் இந்தியாவின் தலையீடுகள் தொடர்பில் அவரின் சிந்தனைகள் குறித்து 2019ஆம் ஆண்டில் உதேனி சமன் குமார என்ற என்பவர் எழுதிய விரிவான கட்டுரையொன்றில் பதிவு இருக்கிறது. கண்டி பிரதானிகளுக்கும் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளுக்கும் இடையில் கைச்சாத்திப்பட்ட உடன்படிக்கையே இறுதியில் முழு இலங்கையும் பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் வருவதற்கு வழிவகுத்தது. அதுவே முதலாவது மலைநாட்டு உடன்படிக்கை எனப்படுகிறது. இந்தியாவுடனான சமாதான உடன்படிக்கையை இலங்கை முழுவதும் இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் வருவதற்கு வழிவகுக்கக்கூடியது என்று விஜேவீர சிங்கள மக்களுக்கு கூறினார் என்பதை இதில் இருந்து புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. அந்த சமாதான உடன்படிக்கையை அடுத்து இரண்டாவது ஆயுதக்கிளர்ச்சியை முன்னெடுத்த ஜே.வி.பி. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணமுடியும் என்ற நம்பிக்கையில் மாகாண சபை முறையை ஆதரித்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலரை படுகொலை செய்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் கணவர் விஜய குமாரதுங்கவும் அவர்களில் ஒருவர். ஆனால், விஜேவீரவின் மறைவுக்கு பிறகு சில வருடங்கள் கழித்து ஜே.வி.பி. தேர்தல்களில் போட்டியிட்டு மாகாண சபைகளில் அங்கம் வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஜே.வி.பியும் அதன் நவீன அவதாரமான தேசிய மக்கள் சக்தியும் மாகாண சபை முறைக்கு வழிவகுத்த அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன. அந்த திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தனக்கு இருக்கும் விருப்பத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க கடந்த வருட முற்பகுதியில் வெளியிட்டபோது கடும்போக்கு சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத அளவுக்கு தேசிய மக்கள் சக்தி அதை எதிர்த்தது. ஆனால், தற்போதைய புவிசார் அரசியல் நிலைவரங்களுக்கு மத்தியில் ஜே.வி.பியின் இந்திய விரோதக் கடந்தகாலத்தை மோடி அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. தேசிய மக்கள் சக்தியும் அதன் இந்தியா தொடர்பிலான அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. இந்தியாவின் முக்கியமான ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான சென்னை இந்துவின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு கடந்த டிசம்பரில் திசாநாயக்க வழங்கிய நேர்காணலில் இலங்கையின் நெருங்கிய அயல்நாடான இந்தியா முக்கியமான அரசியல் மற்றும் பொருளாதார மையமாக மாறிவிட்டது என்றும் அரசியல், பொருளாதாரத் தீர்மானங்களை எடுக்கும்போது அவை இந்தியாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எப்போதும் கவனத்திற்கொண்டே செயற்படப்போவதாகவும் கூறினார். சீனாவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இந்திய விஜயத்தின் பின்னர் சீனாவை எவ்வாறு கையாளுவார்கள் என்பது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும். கடந்த வாரம் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரியவிடம் அவரது கட்சி வல்லரசுகளுடனான உறவுகளை எவ்வாறு கையாளும் என்று கேள்வியழுப்பப்பட்டது. அதற்கு அவர், “எமக்கு சிறப்பான முறையில் பொருத்தமாக அமையக்கூடிய நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையிலேயே நாம் எந்த நாட்டுடனும் விவகாரங்களைக் கையாளவேண்டும். சீனாவோ, இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அவர்களுக்கென்று ஒரு நிகழ்ச்சித்திட்டம் இல்லாமல் எம்முடன் விவகாரங்களைக் கையாள வரப்போவதில்லை. எமக்கென்று ஒரு நிகழ்ச்சித்திட்டம் இல்லாவிட்டால் அவர்களின் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரகாரமே நாம் செயற்படவேண்டியிருக்கும்” என்று பதிலளித்தார். சீனாவின் வியூகங்கள் பற்றிய அக்கறை இலங்கை உட்பட இந்து சமுத்திரத்தின் கரையோர நாடுகளில் சீனா அதன் செல்வாக்கைத் திணிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருக்கும் பினபுலத்தில், இந்திய வெளியுறவு அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் வெளியுறவுச் செயலாளரும் தங்களது நாட்டின் அக்கறைகளை தேசிய மக்கள் சக்தியின் தலைவரின் கவனத்துக்குக் கொண்டுவருவந்திருப்பார்கள் என்பது நிச்சயம். இலங்கையில் இந்தியாவின் நலன்கள் உறுதிசெய்யப்படுவதை ஆதரிக்கக்கூடிய மாற்றுக் கட்சியொன்றை புதுடில்லி தேடுவதன் அறிகுறியே தேசிய மக்கள் சக்திக்கு நீட்டப்பட்ட நேசக்கரமாகும் என்று இலங்கையில் சில அவதானிகள் உணருகிறார்கள். ஆனால், திசாநாயக்கவின் புதுடில்லி விஜயத்தை விக்கிரமசிங்க அரசாங்கம் முழுமையாக ஆதரிக்கிறது போன்று தெரிகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவருவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திட்டத்துக்கு தேசிய மக்கள் சக்தியின் ஒத்துழைப்பைப் பெறுவதில் ஜனாதிபதி அக்கறையாக இருக்கிறார். இது இந்திய நலன்களுடனும் ஒத்துப்போகக்கூடியது என்று கொழும்பை மையமாகக்கொண்டியங்கும் இந்தியப் பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான பி.கே. பாலச்சந்திரன் கூறுகிறார். பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டத்துக்கு சகல கட்சிகளினதும் ஒத்துழைப்பை நாடிநிற்பதாக நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்த பிறகு கொள்கைவிளக்க உரையில் விக்கிரமசிங்க கூறினார். தமிழர்களின் மனநிலை அதேவேளை, சமஷ்டி அரசாங்க முறையையோ அல்லது குறைந்தபட்சம் 13ஆவது திருத்தத்தையோ கூட ஆதரிக்காத தேசிய மக்கள் சக்தியுடனான இந்தியாவின் ஊடாட்டத்தை தமிழர்கள் விரும்பமாட்டார்கள் என்பது நிச்சயம். ஆனால், இந்தியாவுடன் ஆரம்பித்திருக்கும் நெருக்கம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுதொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்துவதற்கு உதவவும் கூடும் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுவதாகவும் பாலச்சந்திரன் கூறுகிறார். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய விவகாரங்கைளை திசாநாயக்க குழுவினருடன் இந்திய அதிகாரிகள் கலந்துரையாடியிருப்பார்கள் என்று பெரும்பாலும் எதிர்பார்ப்பதற்கில்லை. இது இவ்வாறிருக்க, இந்தியா நேசக்கரத்தை நீட்டியிருக்கும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தென்னிலங்கையில் உள்ள இந்திய விரோத அரசியல் சக்திகள் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுக்கத் தொடங்கியிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. பெரும்பாலான இலங்கையர்கள் எதிர்க்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு ஆதரவைப் பெறும் நோக்குடனேயே தேசிய மக்கள் சக்திக்கு இந்தியா அழைப்பை அனுப்பியதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறியிருக்கிறார். தங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி இந்தியா அந்த உடன்படிக்கையில் விரைவில் கைச்சாத்திடவிருக்கிறது என்று செய்தியாளர்களிடம் கூறிய வீரவன்ச, இலங்கையின் வர்த்தகத்தையும் தொழிற்சந்தையையும் இந்தியாவுக்கு திறந்துவிடுவதே அந்த உடன்படிக்கையின் நோக்கம். இலங்கையை தனது காலனி நாடாக மாற்றவிரும்பும் இந்தியா சகல அரசியல் கட்சிகளையும் பூனைக்குட்டிகள் போன்று கட்டுப்படுத்தி வைத்திருக்க விரும்புகிறது என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஸ்ரீலங்கா ரெலிகோமுடன் இந்தியா உடன்பாடு ஒன்றுக்கு வருவதற்கான சாத்தியம் இருக்கும் பின்புலத்திலேயே தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான அனில் ஹேவத்த நெத்திக்குமார கூறியிருக்கிறார். தேசிய மக்கள் சக்தி தலைவர்களின் இந்திய விஜயத்துக்கு எதிரான பிரசாரங்கள் தேசிய தேர்தல்களுக்கு இலங்கை தயாராகும் சூழ்நிலையில் புதிய இந்திய விரோத உணர்வு அலைக்கு வழிவகுக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக சில அவதானிகள் கருதுகிறார்கள். இலங்கையில் இந்திய முதலீடுகளுக்கு எதிராக குரலெழுப்பிவந்த தேசிய மக்கள் சக்தி இனிமேல் அத்தகைய முதலீடுகள் தொடர்பில் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்பதும் இந்திய விஜயம் தொடர்பில் தேசியவாத சக்திகளினால் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எவ்வாறு பதிலளிக்கும் என்பதும் முக்கியமான கேள்விகள். இந்திய விஜயம் தேசிய மக்கள் சக்திக்கும் அதன் தலைவர்களுக்கும் பிராந்திய மட்டத்தில் ஒரு பெரிய அரசியல் மற்றும் இராஜதந்திர வெற்றி என்று நோக்கப்படுகின்ற போதிலும், இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மிக முக்கியமான ஒரு அரசியல் சக்தியாக அவர்களை இந்தியா நோக்குவது எந்தளவுக்கு விவேகமானது, பொருத்தமானது என்ற கேள்வி பல மட்டங்களில் எழுப்பப்படுகிறது. வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/?p=11249
  23. “அன்னம்” சின்னத்தில் களம் இறங்க ரணில் திட்டம்? கட்சி சாா்பற்ற வேட்பாளராக போட்டி March 3, 2024 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுக் கூட்டணியில் ‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தனது நட்புக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசிய வேட்பாளராக போட்டியிடுவதே ரணில் விக்கிரமசிங்கவின் விருப்பமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க சார்ந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி தற்போது நிமல் லான்சா குழு மற்றும் பொதுஜன பெரமுன கட்சியைச் சிரேஷ்டர்கள் குழுவின் தலைமையிலான பல சிறு கட்சிகளின் ஆதரவைப் பெற திட்டமிட்டுள்ளது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் போன்றவர்கள் ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருங்கிய தொடர்புள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினா்கள் சிலரையும் தனது பக்கத்துக்குக் கொண்டுவரும் முயற்சியிலும் ரணில் தரப்பினா் ஈடுபட்ள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலமாக கட்சி சாா்பற்ற ஒரு வேட்பாளராககக் களமிறங்குவதற்குத்தான் அவா் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகின்றது. https://www.ilakku.org/அன்னம்-சின்னத்தில்-களம/
  24. பெருந்திரளானோரின் கண்ணீருடன் யாழ்ப்பாணம் நோக்கி பயணமாகும் சாந்தனின் பூதவுடல் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இன்று யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்லப்படுகின்றது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும்,பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து காலை 9 மணிக்கு மாங்குளத்திலும், காலை 10.30 இற்கு கிளிநொச்சியிலும் தொடர்ந்து 11.30 இற்கு இத்தாவில் பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,கொடிகாமம் ஊடாக பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டு பிற்பகல் 2 மணிமுதல் வல்வெட்டித்துறை தீருவிலில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றைய தினம் சாந்தனின் புகழுடல் காலை 8:00 மணிக்கு வவுனியா பழைய பஸ் நிலையத்தில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள அதே வேளையில் தொடர்ந்து காலை 9:00 மணிக்கு மாங்குளத்திலும் காலை 10:30 ற்கு கிளிநொச்சியிலும் அதனைத்தொடர்ந்து கொடிகாமம் ஊடாக புகழுடல் எடுத்துச்செல்லப்பட்டு பிற்பகல் 2: 00 மணி தொடக்கம் 3:00 மணி வரை வல்வெட்டித்துறை தீருவிலில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் என ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நாளைய தினம் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்த்து அனைத்து இடங்களிலும் கறுப்புக்கொடிகளை கட்டி தமிழ்த்தேசிய துக்கநாளாக அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை சாந்தனின் இறுதிக்கிரியை (திங்கட்கிழமை) நாளை காலை 10 மணிக்கு அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டியில் நடைபெறவுள்ளது. இந்த இறுதி கிரியையில் உறவினர்கள் ஊர் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு இடமளிக்குமாறு குடும்பத்தார் கேட்டுக்கொண்டுள்ளனர். https://akkinikkunchu.com/?p=270107
  25. மத்திய கல்லூரி பெண் அதிபர் நியமனம் இரத்து! மாதவன்) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக நியமன கடிதம் வழங்கப்பட்ட பெண் அதிபராக திருமதி செல்வ குணபாலனின் நியமனத்தை தற்காலிகமாக இடம் நிறுத்துவதாக கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரகரா எழுத்து மூலமான கடிதத்தை அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது செயலாளரினால் (22.02.2024) ல் திகதி இடப்பட்ட Ese/App/SLPS/04/11/2023 கடிதத்தின் பிரகாரம் மத்திய கல்லூரி அதிபராக நியமிக்கப்பட்ட உங்கள் நியமனத்தை தற்காலிகமாக இடை நிறுத்துவதாக தெரிவித்துக் கொள்கிறேன். பொதுச் சேவை ஆணைக்குழுவின் கீழ் நிறுவப்பட்ட கல்வி சேவை குழு வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம் கல்வி அமைச்சின் செயலாளர் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.(ப) https://newuthayan.com/article/மத்திய_கல்லூரி_பெண்_அதிபர்_நியமனம்_இரத்து!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.