Everything posted by கிருபன்
-
தமிழர் விடுதலைக்கான துரோகக் கோட்பாட்டின் முடிவு
தமிழர் விடுதலைக்கான துரோகக் கோட்பாட்டின் முடிவு லக்ஸ்மன் இலங்கை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலையான பின்னர் முகிழ்த்த தமிழ்த் தேசிய விடுதலைக்கான சிந்தனாவாதக் கோட்பாடுகளுக்கு இதுவரையில் சரியான வடிவம் கொடுக்கப்படாத நிலை உள்ளதா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. ஏனெனில், அதன் நோக்கத்தை அடைவதில் உள்ள இதுவரையான இழுபாடுகளே அதற்குக் காரணமாகும். அந்த வகையில் தான் சுதந்திர இலங்கையில் தமிழர்களின் அபிலாஷையைத் தமிழ்த் தேசியம் எய்தவில்லை என்ற முடிவு கிடைக்கும். தமிழர்கள் எதிர்பார்க்கின்ற விடுதலையை, உரிமையை வென்றெடுப்பதற்காக அகிம்சைப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கம் பெற்ற ஜனநாயக அரசியல் கட்சிகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தன. அதன் தோல்வி காரணமாகத்தான் ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது. விடுதலை அமைப்புக்களின் தோற்றமும் தமிழ் மக்களின் அபிலாசை என்ற நோக்கத்தை அடைவதற்கான முயற்சியும் 80 வருடத்தை எட்டுகின்ற சுதந்திர இலங்கையில் கைகூடவில்லை. தமிழ் மக்களின் சுயநிர்ணய விடயத்தினை அடைந்து கொள்வதற்காக 32க்கும் மேற்பட்ட ஆயுதப் போராட்ட அமைப்புகள் தோற்றம் பெற்றிருந்த, ஆனால், விடுதலைப்புலிகள் அமைப்பினால் ஏனைய இயக்கங்கள் அழித்து ஒழிக்கப்பட்டதும், அவை துரோகிகளாகக் காட்டிக்கொடுத்தவர்களாக, கொலைகாரர்களாக பட்டங்கொடுக்கப்பட்டு தமிழ் மக்களிடமிருந்து விரோதிகளாக விலக்கி வைக்கப்பட்டனர். ஏனைய ஆயுத அமைப்புகள் இணைக்கப்பட்ட ஏற்பாடான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் தாங்கள் செய்தவைகள் அனைத்தும் தவறு என விடுதலைப் புலிகளால் வெளிப்படுத்தப்பட்டதான அறிவிப்பாகவே கொள்ளப்படலாம். அத்துடன் முடிந்து போனதாகவே அதற்கு அர்த்தமிருந்தாலும் விடுதலைப் புலிகளின் மௌனிப்பின் பின்னர் மீண்டும் அது கையிலெடுக்கப்பட்டது வேடிக்கையானது. ஏகாதிபத்திய சிந்தனையுடன் ஏனைய ஆயுத அமைப்புகளை முடக்குவதற்குக் கையாளப்பட்ட அதிகார வேட்கைகளும், அதற்காக உபயோகிக்கப்பட்ட ‘துரோகி’ என்ற பதப்பிரயோகமும், தமிழர் அரசியலை ஆக்கிரமித்து வழிப்படுத்தியிருந்தது. இதனால், அழிவுகளின் பாதையில் சொல்லொண்ணாத் துயரங்களின் மத்தியில் தமிழர்களைத் தள்ளியது. ஆயுதப் போராட்டத்தின் மௌனிப்பின் பின்னரும் கூட தமிழர் அரசியலில் இருந்தும், தமிழ் மக்களிடமிருந்தும் ‘துரோகி’ என்ற பதப் பிரயோகம் நீக்கப்படவில்லை. இன்று அப்பதப் பிரயோகம் தமிழர்களை, அவர்களின் அரசியல் இருப்பை நிர்க்கதியாக்கியுள்ளது என்ற கருத்துகள் உருவாகிவருவது இதற்கு எடுத்துக்காட்டு எனலாம். தங்கள் கருத்துக்கு முரணானவர்கள் அனைவரையும் ‘துரோகி’ என்னும் வரையறைக்குள் தள்ளி ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கு அர்த்தம் புரியாத வகையில் இந்த பாசிசச் சிந்தனாவாத எழுச்சியின் வடிவமான ‘துரோகி’ என்ற பதப் பிரயோகம் இன்றும் தமிழ் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு மிக்க ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழர்களுடைய நீண்ட விடுதலைப் பயணத்தில் அகிம்சாப் போராட்டத்திலும் சரி, ஆயுதப் போராட்டத்திலும் சரி அதன் பின்னரான தமிழ் மக்களின் விடுதலைக்கான ஜனநாயக அரசியல் கட்சிகளின் உருவாக்கத்திலும் சரி, ஜனநாயகத்திற்கு முரணான வகையில் கருத்தியல் வாதங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல், சகித்துக்கொள்ள முடியாமல் துரோகிகள் பட்டங்களை வழங்கியிருக்கின்றது. இது தனிநபர் துரோகச் சிந்தனைகள் மூலம் தங்கள் அரசியல் இருப்புக்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக வெறும் வார்த்தை ஜால அரசியலால் நகர்த்தப்படுவது வேடிக்கையானது. தமிழரின் பெயரால், தமிழ் இனத்தின் விடுதலையின் பெயரால், அரசியல் கசாப்புக் கடை நடத்தும் இன்றைய தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்கள் அனைவரையும் கருத்தியல் தெளிவும், கருத்தியல் சிந்தனையும், விமர்சன அரசியல் பற்றிய கோட்பாடுகளை ஆராயாமல் மறுதலிக்கும் போலித் தனமான நிலைப்பாடுடையவர்களாக வரலாற்றில் மாற்றிவருகிறது. இதை நிரந்தரமானதாகப் பதித்துக் கொள்வதற்குத் தூண்டப்படுகிறது. இது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள், விடுதலை இருப்பு, உரிமைகள் என ஒவ்வொன்றையும் சிதைத்து சின்னா பின்னப்படுத்தி வெறுமனே கதிரை அரசியல் அதிகார வர்க்கச் சிந்தனையின் பால் தமிழ் மக்களை மூழ்கடித்துள்ளது. ‘துரோகி’ என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியாமல், எத்தகைய கருத்தியல் யதார்த்தங்களையும் ஆராயாமல், தமக்குத் தாம் முடியாதவற்றை ‘துரோகம்’ என்றும், எதிர்வாதம் புரிபவர்கள் மீது நடைமுறை யதார்த்தங்களுக்குப் புறம்பான வகையில் கருத்தியல்களை முன்வைத்து பொது வெளிகளில் தனிநபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதே நேரத்தில், தேர்தல் காலங்களில் ‘துரோக’ அரசியல் மூலம் மிக மோசமான முறையில், ஒட்டுக் குழுக்கள், மண்டையன் குழு, அடிவருடிகள் பாசிசவாதிகள், பயங்கரவாதிகள், கொலைகாரர்கள், கடத்தல் காரர்கள், உரிமைகளை நிராகரிப்பவர்கள், சோரம் போனவர்கள் என்ற மாயாஜால வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டு மக்களைக் குழப்பி, தமிழ் மக்களின் காதுகளில் பூச்சுற்றி, கடுக்கன் பூட்டி தமிழ் விடுதலை அரசியல் அலங்கோலப்படுத்தப்படுகின்றது. விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யுத்த மௌனிப்புக்குப் பின்பு கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்பட்டது, அது சிதையச் சிதைய கை காட்டுவதற்கு யாருமற்றவர்களாகத் தமிழர்கள் அரசியல் பொது வெளியில் அரசியல் அனாதைகளாக விடப்பட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இன்னமும் கூட்டமைப்பு இருப்பதாகவும் அதற்கான சின்னம் வீடு என்றுமே பெரும்பாலான தமிழ் மக்கள் நம்புவதுதான். யுத்த மௌனிப்பின் பின் உருவான அரசியல் பொது வெளியை தம்வசப்படுத்திக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, விடுதலைப் புலிகள் ஆயுதத்தை (துரோகி) கொண்டு மேற்கொண்ட வேலையைச் செய்யத் தொடங்கி தமிழர் அரசியல் மீது தமிழ் மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் சூழ்நிலையைத் தோற்றுவித்திருக்கின்றனர். போர் முடிந்து 16 ஆண்டுகளின் பின்னரும், நாம் எதையும் சாதிக்கவில்லை. அரசியல் அபிலாஷையை அடைவதில் ஒரு இம்மியும் நகரவில்லை என்பது புரிந்திருந்தாலும், சர்வதேசத்திடம் முறையிடுவோம், இந்தியாவிடம் முறையிடுவோம், மூன்றாம் தரப்பிடம் பேசுவோம், மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும், மேற்குலகமே அங்கீகரி எனப் பல்வேறு கோசங்களைத் தொடர்ச்சியாகத் தமிழ் மக்களுக்குக் கூறிக்கொண்டு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழர் உரிமையின் பெயரால் ஒருவரை ஒருவர் தேர்தல் காலங்களில் தாக்கி எழுதும், பேசுவதும், துண்டுப்பிரசுர விநியோகமும் நடைபெறுகிறது. துரோகிகளுடன் கூட்டே இல்லையெனச் சபித்து மக்களை அணி திரட்டுகின்றனர். ஆனால், தேர்தல் முடிந்த பின்னர் தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க ஓரணியில் செல்வோம் என்ற கருத்துகள் வெளிப்படுகின்றன. அதிகாரத்தைத் தக்கவைக்க எந்தப் பிசாசுகளுடனும் கூட்டுச் சேர்வதற்குத் தயார் என்கின்ற இந்தக் கருத்தியல் முரண் எதற்கு என்பதே இந்த இடத்தில் கேள்வியாகும். இத்தகைய போலித்தனமான அரசியல் மூலம், தமிழ் மக்களின் விடுதலையை இத் தலைமைகளால் வென்று கொடுக்க முடியுமா. இது எத்தனை காலத்திற்குத் தமிழர்களுடைய விடுதலைக்கான அரசியலாக இருக்கும் என்பதும் புரியாத புதிராக மாறுகிறது. இவ்வாறு தமிழர்களுக்கான விடுதலைப் போராட்ட அரசியலை ஒரு முடிவுக்குக் கொண்டு வராமல் தொடர்ச்சியாக இழுத்தடித்து வருவதிலேயே ஈடுபட்டுவரும் தமிழ்த் தேசிய அரசியல் தரப்பினர் காலப்போக்கில் காணாமலாக்கப்படுவதே நடைபெற்றாக வேண்டும். எனவே, எவ்வித ஆவணமுமற்ற, திட்டமில்லாத, வாய்ச்சவாடல் விடும் இந்தத் தலைமைகள் தங்கள் அதிகாரங்களைத் தக்கவைப்பதில் சிந்திப்பார்களாக இருந்தால் தமிழர்கள் பலிக்கடாவாகி தீர்வின்றி, அடுத்த தலைமுறைக்கும் ஆறாத வடுவாக உரிமைப் போராட்டத்தை நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வடிவமாகக் கொண்டு நகர்த்தி விடுவர். எனவே இந்த நிலைமை மாற்றமடைய வேண்டுமாயின், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான தீர்மானத்தின் அடிப்படையில், தமிழர்களுக்கான வேலைத் திட்டத்தை ஒரு பொது வரைபின் மூலம் முன் நகர்த்திச் செல்ல வேண்டும். அதற்கு எவரும் தயாரில்லாத நிலை தொடர்ந்தால், சிங்களத் தேசியம் தமிழ் மக்கள் மட்டில் எவ்வித கவலையும் கொள்ளாது என்பதுடன், தமிழர்கள் வெறுமனே குரைப்பவர்களே. அவர்கள் கடிப்பவர்கள் அல்ல என்ற முடிவையும் நிரந்தரமாக்கிக் கொள்ளும். உள்ளொன்றும் புறம் ஒன்றும் வைத்து தமக்குள்ளே குத்து வெட்டுக்கள் செய்வதும் கூட்டுக்குள்ளேயே கூட்டுச் சதி செய்து கூட்டுக்களை ஏமாற்றுவதும். “ஆறு கடக்கும் மட்டும் அண்ணன் தம்பி ஆற்றைக் கடந்தால் நீ யாரோ நான் யாரோ” என்று தங்கள் தங்கள் இருப்புக்களைப் பாதுகாப்பது தமிழர் நாம் கண்ட வரலாறு. இருந்தாலும், வரலாறு கற்றுத்தந்த பாடங்களை அனுபவங்களாகக் கொள்ளாத சமூகம் அழிந்து போகவேண்டியதும் வரலாற்றின் கட்டாயம். இதில் தமிழர்கள் விதிவிலக்கானவர்களா? இனிவரும் காலங்களிலேனும் விட்டுக் கொடுப்பும், விண் பிடிவாதமின்மையும், வெளிப்படைத்தன்மையும், தமிழரின் தமிழ்த் தேசிய அரசியல் அபிலாசை ஒன்றே இலக்கென்றும் நகரும் தமிழ்த் தேசிய அரசியலைக் காண்போம். ஏமாற்றுகளிலிருந்து வெளியேறி, இருப்பதில் ஒன்று என்ற சிந்தனையிலிருந்து விடுபட்டு,அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலிலேனும் மக்கள் தெளிவுடன் முடிவுக்கு வருதல் நடைபெறட்டும். அரசியல் கட்சியை, அரசியல்வாதிகளை வழிப்படுத்துவதும் மக்களின் வேலை என்றவகையில் தமிழ்த் தேசிய அரசியல் வழிக்கு வரட்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழர்-விடுதலைக்கான-துரோகக்-கோட்பாட்டின்-முடிவு/91-358040
-
பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா காலமானார்!
மாலினி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி மறைந்த பிரபல நடிகை மாலனி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். மாலினி பொன்சேகாவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்திற்கு நேற்று (25) மாலை சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட சக கலைஞர்களுடன் சுமூகமாக உரையாடிய ஜனாதிபதி, இலங்கை சினிமாவின் ஒரு அடையாளமாகத் திகழ்ந்த பிரபல நடிகை மாலனி பொன்சேகாவின் மறைவுக்காக கலைத்துறையில் உள்ள அனைவருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மற்றும் பலர் கலந்து கொண்டனர். https://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மாலினி-பொன்சேகாவின்-பூதவுடலுக்கு-ஜனாதிபதி-அஞ்சலி/46-358018
-
உக்ரேன் மீது ரஷ்யா வான் தாக்குதல்: புடின் மற்றும் செலன்ஸ்கியை விமர்சித்த ட்ரம்ப்
புட்டினுக்கு பைத்தியம்: டிரம்ப் காட்டம் உக்ரேன் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக இரவு நேரத்தில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. இந்நிலையில், ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எதிர்வினை ஆற்றியுள்ளார். குறிப்பாக ரஷ்ய ஜனாதிபதி புதினை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். “ரஷ்யாவின் புட்டின் உடன் சிறந்த நட்பு ரீதியான உறவை நான் கொண்டுள்ளேன். இப்போது அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தேவையின்றி பலரை கொல்கிறார். காரணமே இல்லாமல் உக்ரேன் நாட்டின் பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அவரது செயல் எனக்கு அறவே பிடிக்கவில்லை. இந்தப் போக்கு ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வித்திடும்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியையும் ட்ரம்ப் சாடியுள்ளார். “அவரது வாய் பேச்சுதான் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது. அவர் அமைதியாக இருப்பது நல்லது” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரேன் மீது ரஷ்யா உக்கிர தாக்குதல்: ஒரே இரவில் 367 ட்ரோன்களை ஏவி உக்ரேன் முழுவதும் மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. 2022 தொடங்கிய உக்ரேன் ரஷ்யா போரில் நடந்திருக்கும் மிகப் பெரிய வான்வழித் தாக்குதலாக இது அமைந்துள்ளது. ரஷ்யாவின் இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். கீவ், கார்கிவ், மைக்கோலைவ், டெர்னோபில் மற்றும் கிமெல்னிட்ஸ்கி என பரவலான அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே உக்ரேன் விமானப்படை 267 ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. என்றாலும், உக்ரைனுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் உள்பட உள்கட்டமைப்புகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்றது முதல் ரஷ்யா - உக்ரேன் போர் நிறுத்தம் குறித்து பொதுவெளியில் பேசி வருகிறார். ‘யுத்தம் இல்லாத உலகம் வேண்டும்’ என்பது ட்ரம்ப் கருத்தாக உள்ளது. போர்நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்ய கடந்த வாரம் துருக்கியில் ரஷ்யா மற்றும் உக்ரேன் இடையே நடந்த நேரடி பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று நேரடி பேச்சுவார்த்தை ஏதும் இல்லை ரஷ்ய தரப்பு தெரிவித்தது. இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்தது. அதே நேரத்தில் ரஷ்யா மீதான தடைகள் மற்றும் வரிகளை அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அச்சுறுத்திய நிலையில், இதுவரை அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/படடனகக-பததயம-டரமப-கடடம/50-358050
-
யாழில் பெருந்தொகை பணம் மோசடி!
யாழில் பெருந்தொகை பணம் மோசடி! யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் குடும்ப பெண்ணிடம் வெளிநாடு அனுப்புவதாக கூறி 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடை சேர்ந்த ரமேஷ் பிரேமா என்னும் குடும்ப பெண்ணிடம் அவரது கணவரை கனடா அனுப்புவதாக கூறி பெண் ஒருவர் 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை 2023ம் ஆண்டு பெற்றுள்ளார். அதன் பின் அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன் தாம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த குடும்ப பெண் காசு பரிமாற்றம் செய்யப்பட்டமைக்கான அனைத்து ஆதாரங்களுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததன் பிரகாரம், 2024ஆம் ஆண்டு சந்தேக நபருக்கு கிளிநொச்சி நீதிமன்றம் பயணத்தடை விதித்து பிடியாணை பிறப்பித்திருந்தது. குறித்த பெண் சந்தேக நபர் மருதங்கேணி பொலிஸாரின் உதவியுடன் நேற்று செம்பியன்பற்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் குறித்த நபர் அதே பகுதியில் பலரிடம் மோசடி செய்தமை தெரியவந்துள்ளது. சந்தேக நபரை இன்று கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்த மருதங்கேணி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன் தன்னுடைய பணத்தை மோசடி செய்த குறித்த பெண்ணிடம் இருந்து தனக்குரிய பணத்தை மீள பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்ட குடும்ப பெண் பொலிஸாரை கேட்டுக் கொண்டுள்ளார்.[ஒ] https://newuthayan.com/article/யாழில்__பெருந்தொகை_பணம்_மோசடி!
-
இலங்கையில் சிக்குன்குனியா – பிரித்தானியா பயண எச்சரிக்கை
இலங்கையில் சிக்குன்குனியா – பிரித்தானியா பயண எச்சரிக்கை இலங்கையில் சிக்குன்குனியா நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரித்தானியா அரசாங்கம் தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, இலங்கை செல்லும் பிரித்தானிய பிரஜைகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. மே 23ஆம் திகதி தனது பயண எச்சரிக்கையை புதுப்பித்துள்ள பிரித்தானியா அரசாங்கம் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த 20 ஆண்டுகளில் பதிவாகாத அளவில் இலங்கையில் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் சிக்குன்குனியா நோய் பரவல் அதிகரித்துள்ளதாக வைரஸ் தொடர்பான நிபுணர் வைத்தியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார். எக்ஸ் பதிவொன்றின் ஊடாக இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த நோய் பரவலுக்குக் காரணமான வைரஸ் திரிபுகள் குறித்து தமது குழுவினர் முழு மரபணு பரிசோதனை நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.samakalam.com/இலங்கையில்-சிக்குன்குனி/
-
வவுனியாவில் விபத்து; கணவன் பலி; மனைவி, மகன், மாமனார் படுகாயம்
ஓமந்தையில் விபத்து – இந்திய துணைத்தூதரக அதிகாரி பலி! உயிரழந்தவர் யாழ் பல்கலை விரிவுரையாளரின் கணவர்! adminMay 26, 2025 கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை (26.05.25) 4.30க்கு ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் காரின் சாரதி உயிரிழந்துள்ளார். காரில் பயணித்த மூன்று பயணிகள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. காரை ஓட்டிச் சென்றவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தந்தை, தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காரில் பயணம் செய்துள்ளனர், மேலும் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் உட்பட இருவர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் 50 வயது மதிக்கத்தக்க யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா (கரவெட்டி தற்போது நல்லூர்) என தகவல் வெளியாகி உள்ளது இந்நிலையில், சம்பவம் குறித்து ஓமந்தை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://globaltamilnews.net/2025/216001/
-
ACTC – ITAK பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக்கட்சிகளுக்கு DTNA ஆதரவு!
ACTC – ITAK பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக்கட்சிகளுக்கு DTNA ஆதரவு! adminMay 26, 2025 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சிகள் பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக்கட்சிகள் ஆட்சி அமைக்கவே ஆதரவு என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று (25.05.25) இடம்பெற்ற பின்னர் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள சபைகள் தொடர்பாக ஆராய்நதோம். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியப் பரப்பில் இருக்கும் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும் என்று உறுதியான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் 106 ஆசனங்களை வடக்கு – கிழக்கு பகுதிகளில் பெற்ற ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏனைய தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது எனவும் பல்வேறு சபைகளில் ஏனைய தமிழ் கட்சிகளான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக்கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குவதாகவும் தீர்மானித்துள்ளாம். வடக்கு கிழக்கில் அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்பன ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தீர்மானித்துள்ளோம். இரண்டு முறை தமிழரசுக் கட்சியுடன் இது டெர்பில் பேசியுள்ளோம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியுடனும் பேசியுள்ளோம். அந்த அடிப்படையை வைத்து தான் பேசினோம். தமிழ் கட்சிகளுடன் தான் நாம் பேசியுள்ளோம். ஏனைய தேசிய கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவது என தீர்மானம் இல்லை, ஆனால் ஆட்சி அமைக்கும் கட்சிகளுக்கு அவர்கள் ஆதரவு வழங்கினால் அது அந்த கட்சியின் நிலைப்பாடு எனத் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/216004/
-
வவுனியாவில் விபத்து; கணவன் பலி; மனைவி, மகன், மாமனார் படுகாயம்
மிகவும் அதிர்ச்சியானதும் துயரம் மிகுந்ததுமான தகவல். எமது ஹாட்லிக் கல்லூரி வகுப்பு நண்பன் ஐயர் பிரபா அண்மையில்தான் வட இந்தியாவிலுள்ள புனித இந்து ஆலயங்களையும், புனித நதிகளின் சங்கமங்களையும் தரிசித்த பதிவுகளை முகநூலில் போட்டுக்கொண்டிருந்தார். இப்படி ஓர் கோரமான விபத்தில் சிக்கி உயிரை இழந்தார் என்பதை ஏற்க மனம் துணியவில்லை. ஆழ்ந்த அஞ்சலிகள். காயப்பட்ட ஐயர் பிரபாவின் மனைவியும் சக பயணிகளும் விரைந்து குணமடையவேண்டும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை திங்கள் 26 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 69) திங்கள் 26 மே 12:00 pm GMT ஜெய்பூர்- பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் PBKS எதிர் MI இருவர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 21 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் ஈழப்பிரியன் சுவி மும்பை இந்தியன்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆயுஷ் மாத்ரேயின் 17 பந்துகளில் புயல்வேகத்தில் பெற்ற 34 ஓட்டங்களுடனும், டெவால்ட் ப்ரெவிஸின் 23 பந்துகளில் மரண அடியில் பெற்ற 57 ஓட்டங்களுடனும், டெவொன் கொன்வேயின் அதிரடியான 52 ஓட்டங்களுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை வேகமாக அடித்தாடி துரத்த விக்கெட்டுகள் அடுத்தடுத்துச் சரிய ஆரம்பித்தன. சாய் சுதர்சன் மாத்திரம் அதிரடியாக 41 ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் எல்லோரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறியதால், இறுதியில் 18.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களுடன் சுருண்டது. முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 83 ஓட்டங்களால் வெற்றியீட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே மின்னல்வேகத்தில் அடித்தாடினர். அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் 32 ஓட்டங்களும், ட்ராவிஸ் ஹெட் 40 பந்துகளில் 76 ஓட்டங்களும், ஹென்றிக் க்ளாஸன் ஆட்டமிழக்காது 39 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் என மைதானம் எங்கும் பந்தைச் சிதறிடித்துப் பெற்ற 105 ஓட்டங்களுடனும், பிற வீரர்களின் கமியோ ஆட்டங்களுடனும் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து ஐபிஎல் போட்டிகளில் மூன்றாவது அதிஉச்ச ஓட்ட எண்ணிக்கையான 278 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் மிகவும் சவாலான வெற்றி இலக்கை அடைய அடித்தாட ஆரம்பித்தபோது விக்கெட்டுகள் வேகமாக விழ ஆரம்பித்தன. சுனில் நாரைனின் 16 பந்துகளில் 31 ஓட்டங்களும், மனிஷ் பாண்டேயின் அதிரடியான 37 ஓட்டங்களும், ஹர்ஷித் ராணாவின் 34 ஓட்டங்களும் வெற்றி இலக்கிற்கு கிட்டவும் போகப் போதவில்லை. இறுதியில் 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 168 ஓட்டங்களுடன் சுருண்டது. முடிவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 110 ஓட்டங்களால் வெற்றியீட்டியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 8 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: இறுதி நிலையில் நிற்கும் @Ahasthiyan க்கு விமோசனம் கிட்ட வாய்ப்பு குறைவாகவே உள்ளது!
- IMG_1159.jpeg
-
ஒரு தீவு இரு நினைவு நாட்கள் - நிலாந்தன்
ஒரு தீவு இரு நினைவு நாட்கள் - நிலாந்தன் கடந்த 18ஆம் தேதியும் 19 ஆம் தேதியும் இலங்கைத் தீவில் இரண்டு மக்கள் கூட்டங்கள் இருப்பதனை மீண்டும் உணர்த்திய அடுத்தடுத்த நாட்கள். 18 ஆம் திகதி தமிழ் மக்கள் இன அழிப்பை நினைவு கூர்ந்தார்கள். 19ஆம் திகதி சிங்கள மக்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடினார்கள். பதினெட்டாம் திகதியை நோக்கி அந்த வாரம் முழுவதும் தமிழ் மக்கள் ஊர் ஊராக, சந்தி சந்தியாக கஞ்சி காய்ச்சிக் கொடுத்தார்கள். 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் கூடினார்கள்; உருகி அழுதார்கள். அடுத்த நாள் கொழும்பில் அரசாங்கம் யுத்த வெற்றியைக் கொண்டாடியது. காலையில் அரசுத் தலைவர் உடல் வழங்காத படை வீரர்கள் தங்கியிருக்கும் இடத்துக்குச் சென்று அவர்களைக் கௌரவித்தார். அதன்பின் படைத் தளபதிகளோடு போய் யுத்த வெற்றி வீரர்களின் நினைவுச் சின்னத்தைத்த தரிசித்தார். நாட்டின் ஒரு பக்கத்தில் தமிழ் மக்கள் துக்கத்தை அனுஷ்டித்த அடுத்த நாள் நாட்டின் தலைநகரில் சிங்கள மக்களும் அவர்களுடைய பிரதானிகளும் வெற்றியைக் கொண்டாடினார்கள். கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளர் எழுதியது போல “மே பதினெட்டு கொல்லப்பட்டவர்களின் தினம்; மே பத்தொன்பது கொன்றவர்களின் தினம் “. பதினெட்டாம் திகதி பெரும்பாலான தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்கள் முள்ளிவாய்க்காலில் கூடியிருந்தார்கள்.19ஆம் திகதி பெரும்பாலான சிங்களத் தலைவர்கள் தமது வெற்றி நாயகர்களைப் போற்றி அறிக்கை விட்டார்கள். பதினெட்டாம் தேதி தமிழ் மக்கள், உணவு ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட ஒரு யுத்தத்தின் நினைவாக கஞ்சியைப் பகிர்ந்தார்கள். முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தின் முன் பூக்களை வைத்து அஞ்சலித்தார்கள். அதே நாளில் யுத்த வெற்றி வீரர்களின் நினைவுச் சின்னத்தின் முன் “பிவிதுறு ஹெல உரிமை”யின் செயற்பாட்டாளரான பெண் ஒருவர் சிறப்பு அதிரடிப்படை வீரருக்கு ஒரு ரோஜாப் பூவை பரிசளித்தார். பதினெட்டாம் தேதி முள்ளிவாய்க்காலில் கூட்டுத் துக்கமும் கூட்டுக் காயங்களும் கூட்டு இழப்பும் கூட்டு அவமானமும் கண்ணீராய் பெருகி ஓடின. 19ஆம் திகதி கொழும்பிலும் ஏனைய தென்னிலங்கை தலைநகரங்களிலும் கூட்டு வெற்றி கொண்டாடப்பட்டது. 18 ஆம் தேதி தமிழ் அரசியல்வாதிகள் தமது மக்களின் கூட்டுத் துக்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்கள். அதே நாளிலும் அடுத்த நாளும் சிங்கள அரசியல்வாதிகள் யுத்த வெற்றியைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது செய்தியில் ஓரிடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்… “சண்டை பிடிப்பது நமக்கு புறத்தியானது அல்ல. நாங்கள் சமர்க் களத்தில் சுய கட்டுப்பாடு உடையவர்கள். எங்களுக்கு நன்றாகத் தெரியும் சண்டை என்றால் என்ன? யாருடன் என்று? மகத்தான மன்னர்களான துட்டு கெமுனு, வளகம்பா,தாது சேனன்,விஜயபாகு ஆகிய மகத்தான மன்னர்கள் அந்நிய படையெடுப்பாளர்களை தோற்கடித்து வெற்றியை உறுதிப்படுத்திய நிலம் இது. பிரிட்டிஷ்காரர் டச்சுக்காரர் போர்த்துக்கீசர் போன்ற கொலனித்துவ சக்திகளுக்கு எதிராக தேசபக்தர்கள் சமர் புரிந்த நிலம் இது. வீரபுரான் அப்பு கெப்பிட்டிபொல போன்ற நாயகர்களும் பௌத்த துறவிகளும் மேலாதிக்க சக்திகளுக்கு எதிராக எழுந்த நிலம் இது.நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதற்காக ஆயிரக்கணக்கான வீரம் மிகுந்த யுத்த நாயகர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்து 30 ஆண்டுகால கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த நாடு இது.” அதாவது அவர் சுட்டிக் காட்டும் உதாரணங்கள் அந்நியப் படைகளுக்கு எதிரானவை. அதாவது தமிழர்களையும் அவர் அந்நியராகத்தான் பார்க்கிறார்? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச “தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிடமிருந்து தாயகத்தை விடுவித்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்” என்று தனது செய்தியில் கூறியுள்ளார். தாயகத்தின் நீட்சியும் அகட்சியுமாகக் காணப்படும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் குறிப்பாக கனடாவில் அண்மையில் ஒரு இன அழிப்பு நினைவகம் திறக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு வெளியே அதிக தொகை தமிழர்கள் வாழும் இடம் கனடா.அங்கே அந்த நினைவுத் தூபியை திறந்து வைத்து உரை நிகழ்த்திய பிரம்டன் நகர மேயர் பின்வருமாறு சொன்னார் “இன அழிப்பு நடந்தது என்பதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொழும்புக்கு திரும்பி போய் விடுங்கள்” என்று. ஆனால் கொழும்பிலிருந்து கொண்டு நாமல் ராஜபக்ச அதற்கு எதிராகக் குரல் கொடுத்தார்.முன்னாள் வெளியுறவு அமைச்சரும் இந்நாள் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தும் கூறுகிறார்கள், நாட்டில் இன அழிப்பு நடக்கவில்லை என்று. முள்ளிவாய்க்காலில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் கூறுகிறார்கள் நடந்தது இன அழிப்பு என்று. கனடாவிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் வாழும் தமிழர்கள் கூறுகிறார்கள் அது இன அழிப்பு என்று. “பொறுப்புக்கூறலுக்கும், உண்மை, நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளைக் கனடா தொடர்ந்தும் ஆதரித்து வருகிறது” என்று கனேடியப் பிரதமர் மார்க் கார்ணி தனது செய்தியில் கூறியுள்ளார். அவருடைய செய்தியில் இனஅழிப்பு என்ற வார்த்தையைப் பிரயோகித்திருக்கிறார்.கனேடிய கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர், “இலங்கையில் இடம்பெற்றது இன அழிப்பு. ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்களை ஒருபோதும் மறக்கக்கூடாது” என்று கூறியுள்ளார். அதாவது தமிழ் மக்களும் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளின் அரசியல்வாதிகளும் கூறுகிறார்கள், நடந்தது இன அழிப்பு என்று. அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் கூறுகிறார்கள் அது இன அழிப்பு இல்லை என்று.இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறுகிறார்…இன அழிப்பு என்று கூறினால் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று. மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது என்ன தெரிகிறது? இச்சிறிய தீவில் இரண்டு வகை நினைவுச் சின்னங்கள் உண்டு. இரண்டு மக்கள் கூட்டங்கள் உண்டு. இரண்டு வேறு அரசியல் அபிப்பிராயங்கள் உண்டு. இரண்டு வேறு தேசங்கள் உண்டு. இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிரான அபிலாசைகளோடும் இருவேறு அரசியல் நிலைப்பாடுகளோடும் காணப்படுகின்றன. ஆனால் அரசுத் தலைவர் அனுர வெற்றி வீரர்களின் சின்னத்தை முன்னிறுத்தி பின்வருமாறு கூறியுள்ளார் “இந்த நினைவிடத்தின் முன் நாம் நின்று அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துவது என்பது மீண்டும் ஒரு மோதல் ஏற்பட இடமளிக்காமல்,வெறுப்பு நிறைந்த சமூகத்திற்குப் பதிலாக, சகோதரத்துவம் அன்பு மற்றும் நல்லிணக்கம் நிறைந்த சமூகத்தை உருவாக்கத் தயார் என்று உறுதி மொழியை எடுப்பதற்காககும்” என்று. அந்த நினைவுச் சின்னமே நல்லிணக்கத்திற்கு எதிரானது. ஒரு இனத்தின் வெற்றியைக் கொண்டாடுவது.நாடு இப்பொழுதும் வென்றவர்கள் தோற்றவர்கள் என்று இரண்டாகதான் நிற்கிறது. நாட்டின் வடக்கில் முள்ளிவாய்க்காலில் மற்றோர் நினைவுச் சின்னம் உண்டு.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக வந்த ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் ஒருவர்கூட அந்த நினைவுச் சின்னத்துக்கு வரவில்லை. அங்கே ஒரு பூவைக்கூட வைக்கவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்களின் வாக்குகளை எந்த சஜித்துக்கு சுமந்திரன் சாய்த்துக் கொடுத்தாரோ அந்த சஜித்தோ அவருடைய கட்சிப் பிரமுகர்களோ அந்த நினைவுச் சின்னத்துக்கு வரவில்லை.அங்கே ஒரு பூவைக்கூட வைக்கவில்லை. ஆனால் சுமந்திரன் கொழும்பில் மே 18ஐ நினைவு கூர்ந்த பொழுது, சஜித் யுத்த வெற்றியைப் போற்றி அறிக்கை விட்டிருந்தார். சிங்களத் தலைவர்கள் எப்பொழுதும் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய வாக்காளர்களுக்கு உண்மையாக இருக்கிறார்கள்.ஆனால் தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் அப்படியிருக்கிறார்கள்? நாடாளுமன்ற தேர்தலிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற அனுர 19 ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ செய்தியில் பின்வருமாறு கூறியுள்ளார்…”நாம் முழுமையான வெற்றியாளர்கள் அல்ல. நாட்டில் சமாதானத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே நாம் முழுமையான வெற்றியாளர்களாக மாற முடியும்.எனவே அச்சமின்றி சமாதானத்துக்காக எடுக்கக்கூடிய ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்க நாம் தயாராக இருக்கிறோம்…. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன்மூலம் தாய்நாட்டின் முழுமையான சுதந்திரத்தை நாம் பெறவில்லை..” கடந்த 16 ஆண்டுகளில் ஒரு பேருண்மையை ஒப்புக்கொண்ட முதலாவது அரசுத் தலைவர் அவர். 2009 மே மாதம் தாங்கள் பெற்ற வெற்றி முழுமையானது அல்ல என்பதனை அவர் ஒப்புக் கொள்கிறார். போரில் வெற்றி பெற்ற பின்னரும் நாட்டில் சமாதானத்தை உருவாக்க முடியவில்லை என்பதனை அவர் ஏற்றுக் கொள்கிறார். அதுதான் உண்மை. தமிழ் மக்களுக்குச் சமாதானம் இல்லையென்றால் சிங்கள மக்களுக்கும் சமாதானம் இல்லை.இந்தப் பிராந்தியத்துக்கும் சமாதானம் இல்லை.16 ஆண்டுகளின் பின்னரும் வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் இடையே இரண்டாகப் பிளவுண்டிருக்கும் இலங்கைத் தீவு. https://www.nillanthan.com/7420/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கு இன்று நாலு புள்ளிகள் நிச்சயம்😄
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@நந்தன் ஐ இன்று @புலவர் ஐயா சென்னை மீதான விசுவாசத்திற்காக கைவிட்டுவிட்டார்😁
-
ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்
நீலாசோதையன் என்னும் துணைத்தெய்வம் தி. செல்வமனோகரன் October 12, 2024 | Ezhuna அறிமுகம் மனிதகுலம் ஏனைய உயிரினங்களில் இருந்து வேறுபட்டு தனி அடையாளங்களோடு – பகுத்தறிதலோடு இயங்கத் தொடங்கிய இனக்குழுமக் காலந்தொட்டு வீரம் – போர் என்பன தவிர்க்க முடியாதவையாகி விட்டன. தனக்காக மட்டுமன்றி இனக் குழுவுக்காகப் போராடுதலும் இன்றியமையாததாயிற்று. தமக்காகப் போராடி உயிர்நீத்த தலைவனை அல்லது வீரனை அவ்வவ் இனக்குழு மக்கள் போற்றினர். இனக்குழுவின் பகையை வெல்லல், வேட்டை, குழுவின் தேவைகளை நிறைவேற்றல், பகை விலங்குகளைக் கொல்லுதல் – வெல்லுதல் என ‘வீரன்’ சாகசம் காட்ட பல சந்தர்ப்பங்கள் காத்துக் கிடந்தன. காலங்காலமாக அவர்களது வீரம் கதை கதையாகக் கூறப்பட்டது. அதன் வழி நீத்தார் வழிபாடு, முன்னோர் வழிபாடு, நினைவுக்கல் அல்லது நடுகல் வழிபாடு உருவாயிற்று. இயற்கையான போராட்ட வாழ்வில் தொழில் வழி மனித இனக்குழுக்கள் உருவாயின. தம்மை, தம் இனக்குழுவைக் காத்த தலைவனும் வீரனும் அவ்வவ் மக்களால் போற்றப்பட்டனர். காலப்போக்கில் அவர்கள் குழுவின் – குலத்தின் தெய்வமாக்கப்பட்டனர். குலதெய்வம் உருவாயிற்று. வீரவேங்கையிலிருந்து தலைவன் வரை இவ்வழிபாடு நிகழ்த்தப்பட்டதாயினும் அவரவர் வீரபராக்கிமங்களுக்கும் அவரவர் பற்றிய கதைகளுக்கும் காலச்சூழலுக்கும் ஏற்ப அவர்கள் காலங்கடந்தும் வழிபடப்பட்டனர். அது குலமரபாக பரம்பரைகள் பல கடந்தும் நீடித்தது. ஒரு கட்டத்தில் வாய்மொழி மரபுக் கதைகள் இழை அறுந்தறுந்து போக கதைகள் அற்ற, காரணம் தெரியாத, ஆனால் மரபுவழி நம்பிக்கையால் வழிபடப்படும் தெய்வங்களாக அது மாறத் தொடங்கியது. குல ஏற்றத்தாழ்வுற்ற மக்களின் சாதிய நீக்கவுணர்வின் வழியும் பிற்காலப் பகுத்தறிவு வாதத்தின் வழியும் இவ்வழிபாடுகள் கைவிடப்பட்டன அல்லது காரணம் தெரியாத மூட நம்பிக்கைகளாகக் கருதப்பட்டன. ஆனால் இத்தெய்வங்களின் பத்ததிகளும் வாய்மொழி வழக்காறுகளும் அந்த நிலத்தின் சுதேச வரலாற்றை எழுத பெரிதும் உதவ வல்லன என்ற வரலாற்றுச் செய்தி முக்கியமானதாகும். இவ்வாறு மறக்கப்பட்டு வருகின்ற – வீர வரலாற்றை உடைய துணைத்தெய்வமே நீலாசோதையன் எனும் தெய்வமாகும். நாட்டார் தெய்வம் பற்றிய எழுநா எழுத்துகள் பற்றி உரையாடிய பின் நண்பர் – கிழக்குப் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைத் தலைவர் – கலாநிதி வாமன், நீலாசோதையன் பற்றி எமக்குத் தெரிவித்ததோடு நின்றுவிடாமல் புன்னைச்சோலை பூசாரியையும் அறிமுகப்படுத்தி வைத்தார். இதன்வழி உருவான அருட்டுணர்வால் மாணவ நண்பர்கள் சு. தாரங்கன், எஸ். அபிக்ஷனா, ஈ. நவிசா மற்றும் யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை முகாமைத்துவ உதவியாளர் நண்பர் விஜிகரன் ஆகியோரின் உதவியுடன் இதற்குரிய கள ஆய்வில் ஈடுபட்டோம். நீலாசோதையன் ஈழத்தில் நின்று நிலவுகின்ற குலதெய்வங்களுள் ஒன்று பெரியதம்பிரான். சலவைத் தொழிலாளர்களின் குலதெய்வம் இது. தக்கன் சிவனை அழைக்காது செய்த யாகத்தில் யாக புருக்ஷனாகத் தோன்றியவன் பெரியதம்பிரான் என்றும், யாகத்தை அழிக்கத் தோன்றிய சிவனின் அம்சமான வீரபத்திரர் தக்கனின் தலைகிள்ளி ஏனைய தேவர்கள் உள்ளிட்டவர்களை துவம்சம் செய்ததைக் கண்டு அஞ்சியோடியவர்களில் ஒருவனே பெரியதம்பிரான். அவ்வாறு ஓடிப்போனவன் குளத்தங்கரையொன்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த சலவைத் தொழிலாளி ஒருவனிடம் தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டினான். அத்தொழிலாளியும் துவைக்கப் பயன்படுத்தும் பெரிய ஜாடியை அவன் மேல் கவிழ்த்து மூடிவிட்டான். அவனைத் தேடி வந்த வீரபத்திரரைச் சிறிது தேற்றி தான் பெரியதம்பிரானை ஒளித்து வைத்த வரலாற்றை உரைத்தான். அவனது சாமர்த்தியத்தைப் பாராட்டிய வீரபத்திரர் சாடிக்குள் உள்ளவனே உங்கள் குலதெய்வம் என்றும் அவன் உங்கள் பிணி, துன்பம் முதலியவற்றை நீக்க வல்லான் என்றும் கூறிச் சென்றார். அன்று தொட்டு சலவைத் தொழிலாளிகளின் (வண்ணார் – கட்டாடியார்) குலதெய்வமாகப் பெரியதம்பிரான் விளங்கி வருகின்றார் என்பது பொதுநிலைக் கருத்தாகும் (கனகரத்தினம், இரா. வை., 2016). யாகத்திலிருந்து எழுந்த யாக புருக்ஷனைக் காட்டி “இவர் யார்?” என தேவர்கள் வினாவ, பிரம்மா “எம் தம்பிரான் பெரியதம்பிரான்” எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது (நேர்காணல்: கிருக்ஷ்ணபிள்ளை புவனேசராசா. புன்னைச்சோலை, மட்டக்களப்பு). புன்னைச்சோலை காளிகோயில் பூசாரியான கி. புவனேசராசா (யோகன் ஐயா) சாடி கொண்டு மூடிய கதையை மறுத்து, தலையில் கட்டி இருந்த சால்வையை (சால் – சால்வை) அவிட்டு பாதையின் குறுக்கே போட்டு அதனைத் தாண்டிச் செல்ல முடியாதபடி செய்ததாகவும் இதுவே ‘சால்வை தாண்டுதல்’ சம்பிரதாயமானதாயும் கூறுகிறார். மேலும் பெரியதம்பிரானுக்கு பூஜை செய்து வழிபடுமாறு கூறியபோது “தீட்டுத் துணியை அன்றாடம் தொடும் நான் எவ்வாறு பூசை செய்ய இயலும்” என காளியன் கேட்டதாகவும் “உன் குலத்தோர்க்குத் தீட்டேதும் இன்று தொட்டு இல்லை” எனக் கூறியதாகவும் யோகன் பூசாரியும் மறவன்புலோ ஆனந்தரஞ்சனும் கூறுகின்றனர். அத்தோடு இவ்வரம் பெற்ற காளியன் “இவ்வரம் தந்த நீ எதிர்ப்பூசைக்கு இவ்வாலயத்தில் இருக்க வேண்டும்” என வேண்டியதாகவும் அவரும் சம்மதித்து வரம் தந்ததாகவும் கூறப்படுகிறது. அத்தோடு புன்னைச்சோலை யோகன் பூசாரி “சிவனுக்கழைப்பில்லாத யாகத்தில், யாக குண்டத்தில் இருந்து சிவனின் அம்சமான பெரியதம்பிரான் தோன்றியிருக்க முடியாது என்றும் அதனை சிவனின் இன்னொரு அம்சமான வீரபத்திரர் கொல்வதற்குத் துரத்துவாரா என்றும் கூறி, ஆகவே பெரியதம்பிரான் விக்ஷ்ணுவின் அம்சம்” என்கின்றார். இத்தர்க்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. அதேநேரம் துரத்திச் சென்றது வீரபத்திரரல்ல சனீஸ்வரன் எனத் தனிக் கதையை மறவன்புபுலவு ஆனந்தரஞ்சன் (செல்லக்கிளி) முன்வைக்கின்றார். இந்தப் பெரியதம்பிரான் இருக்குமிடமெல்லாம் இவரோடு இருக்கும் தெய்வம் நீலாசோதையன். நீலன் அவரது பெயர் என்றும், சோதையன் என்பது சாதிப்பெயர் என்றும் கூறப்படுகின்றது. சோதையன் என்பது குளம் வெட்டும் மக்களைக் குறிக்கும். அவர்களின் தெய்வம் நீலாசோதையன். குளத்தில் சலவைத் தொழில் செய்பவர்களான வண்ணார், கட்டாடியார் ஆகிய இரு சாதிகளினதும் கலப்பின் வழி ஒரு கோயிற் தெய்வங்களாகி, பின் சோதையர் குலம் அருக, பெரியதம்பிரான் முதன்மைத் தெய்வமாகியிருக்கலாம். யாழ்ப்பாணத்துப் பெரியதம்பிரான் பூசாரிகள் பலரும் (ஏழாலை பெரியதம்பிரான் பூசாரி, இருபாலை பெரியதம்பிரான் பூசாரி தவிர) இரண்டும் ஒருவரையே குறிக்கின்றது என்கின்றனர்; மறுபெயர்கள் என்கின்றனர். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இரு தெய்வமும் இணைத் தெய்வங்களாகக் கருதப்பட்டு, பெரியதம்பிரான் கோயில் எனக் கூறப்பட்டாலும், ஒரே சடங்கு – வழிபாட்டுத் தெய்வங்களாகவே அவை சுட்டப்படுகின்றன. ஈழத்துப் பெரியதம்பிரான் கோயில் மரபில் தெய்வமாடி பெரியதம்பிரானை முன்னுறுத்தி சொற்ப நேரமே கலையாடுவதும் நீலாசோதையனாகவே பெரிதும் தெய்வமாடுவதையும் அவதானிக்க முடிகின்றது. யாழ்ப்பாண மரபில் இரு தெய்வங்களுக்குமான தனிக் கதைகள் அருகிவிட்டன. பெரியதம்பிரானே குலதெய்வமாக – பெருந்தெய்வமாக மேலெழுந்து நிற்கின்றார். கிழக்கிலங்கையில் இன்றும் நீலாசோதையனுக்கு தனியிடம் வழங்குதல் குறிப்பிடத்தக்கது. நீலாசோதையன் பற்றிய கதைகள் இலங்கையில் ஆதி மாமலையில் பிறந்து மகர மாமலையில் வளர்ந்து தம்பளம் மலையில் (தம்பதெனிய – சிகிரியா ஆக இருக்கலாம்) பெரியதம்பிரான் முடி சூட்டுகின்றார். இவரை வளர்த்தவர் ‘சிறுக்கியன்’ இராசா எனப்படுகிறார். பெரியதம்பிரானது புத்திசாலித்தனம் கண்டு வியந்த இராசா, சோதிடத்தில் வல்ல அந்தணரை அழைத்து இவரது வாழ்வைக் கணிக்கச் சொல்கின்றார். தக்கன் யாகம் நடத்தப்பட்ட காலத்தில் எல்லாக் கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் நின்றது போல இவரது பிறப்புக் காலத்திலும் நின்றதனால் ‘720’ காதவெளி தூரம் ஒரு குடையின் கீழ் ஆளுவார்; கருடக்கொடி, வெண்சங்கு, வெண் முத்துமாலை தரித்து (இவை பிற்கால வைணவ – விக்ஷ்ணு அடையாளங்கள் என்பது கவனிக்கத்தக்கது) ஆட்சி செய்வார் எனக் கணித்தனர்; அதுவே நடந்தது. பராக்கிரமம் மிக்க அரசனானான். இவர் பிறந்த அதே நேரத்தில் வலவை (உடவளவ) அரசாட்சிப் பிரதேசத்தில் நீலன் – யசோதை எனும் சலவைத் தொழிலாள தம்பதியினருக்கு ஒரு மகவு பிறந்தது. அதுவே நீலாசோதையன். இத் தம்பதியினர் அரண்மனையில் வாழ்பவர்களின் ஆடைகளை சலவை செய்து கொடுப்பவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். ஒரு நாள் தாயுடன் நீலாசோதையனும் அரண்மனைக்குச் சென்றான். தாய், மகனை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு அரண்மனைக்குள் சென்றாள். மகன் நின்ற இடத்துக்கருகே அரசனின் உடற்பயிற்சிக்கூடம் இருந்தது. அங்கு அரசன் பயிற்சி செய்யும் ‘1000’ துலாம் நிறையுடைய தண்டாயுதம் இருந்தது. அந்தளவு நிறையுடைய தண்டாயுதத்தைத் தூக்குவார் அரசனைத் தவிர யாருமில்லை. நீலாசோதையன் அத் தண்டாயுதத்தைத் தூக்கி எறிந்தான். அது மறுதிசையில் விழுந்தது. அவன் தாயுடன் வீட்டுக்குச் சென்று விட்டான். உடற்பயிற்சிக் கூடத்துக்கு வந்த அரசன் உரிய இடத்தில் தண்டாயுதம் இல்லாததையும் வேறு திசையில் அது இருப்பதையும் கண்டு காவலர்களை வினாவி நடந்ததை அறிந்தான்; நீலாசோதையனை அழைப்பித்தான்; பரீட்சித்தான். அவன் பராக்கிரமம் கண்டு மகிழ்ந்து நண்பனுமாய் மந்திரியுமாய் ஆக்கிக் கொண்டான். ஒரு பொழுது இருவரும் வடதிசை நோக்கி, நகரச் சோதனை சென்றபோது பெண்ணின் அழுகுரல் ஒன்று கேட்டது. நீலாசோதையன் அத்திசையில் ஒரு பெண் சிறுவெளிச்சத்தில் இருந்து அழுவதைக் கண்டு நடந்ததை வினாவினார். “மதுரை இராசா, உங்கள் இராசாவைக் கொலை செய்து விட்டான்” என அறிவித்துவிட்டு அங்கிருந்த “6000 ஆண்களைக் கைது செய்து, கொண்டு சென்று விட்டான்” எனக் கூறி அழுதாள். அவர்களை மீட்க அரசனும் நீலாசோதையனுமாக ‘60’ குமாரர்களைத் திரட்டி படையெடுத்துச் சென்று நந்தூர்க் கடலில் (இது முல்லைத்தீவு நந்திக் கடலாக இருக்கலாம்) தரித்து நின்றனர். இவர்களிடம் மரக்கலங்கள் இருக்கவில்லை. நாள் செல்லச் செல்ல படைவீரர்கள் மெல்ல மெல்லத் தத்தம் வீடு திரும்பினர். எஞ்சியவர் அரசனும் மந்திரியுமே. கோபங்கொண்ட நீலாசோதையன் தண்டாயுதத்தால் கடலை அடிக்க கடல் பிரிந்து வழி விட்டது. தொடர்ந்து தண்டாயுதத்தால் அடித்து அடித்து அக்கரையை சென்றடைந்தனர். தண்டாயுத்தால் கடலை அடித்து பாதை ஏற்படுத்தியவர் பெரியதம்பிரான் என்று பாண்டிருப்பு பூசாரி வே. கணபதிப்பிள்ளை கூறுகிறார் (கனகரத்தினம், இரா. வை., 2016). அரசன் அரண்மனைக்குள் உட்புக, நீலாசோதையனோ குஞ்சரப்பந்தி புகுந்து (யானைகள் கட்டுமிடம்) யானையை யானையால் அடித்துக் கொன்றான். நேரே உட்புகுந்த அரசனின் பராக்கிரமத்தைக் கண்ட மதுரை இராசா அரியணையில் ஒரு ஓரத்தில் உட்கார, அதில் அரசன் உட்கார்ந்து தண்டாயுதத்தைத் தன் மடியில் வைத்து அதன் நுனியை மதுரை இராசாவின் மடியில் வைத்தான். கனம் தாங்காது மதுரை இராசா தவிக்கும்போது யானைகள் கொல்லப்படும் சேதியை காவலன் உரைக்கின்றான். மதுரை இராசா இறுதியில் இவர்களிடம் மன்னிப்புக் கேட்டு செல்வமும் அளித்து வழியனுப்புகின்றான். அரசனும் நீலாசோதையனும் 6000 பேரை மீட்டதோடு 12,000 மக்களைச் சிறை பிடித்து இலங்கை மீண்டனர். அனுராதபுரக் காட்டை வெட்டி 12,000 பேரையும் குடியமர்த்தினர். இதனாலேயே பெரியதம்பிரான் பத்ததிப் பாடல்களில் ‘அனுராதபுரி அரசே’ எனும் விளிப்புக் காணப்படுகிறது. இக்கதையின் பெரும்பகுதி இரா.வை. கனகரத்தினம், புன்னைச்சோலை காளியம்மன் பூசாரி யோகன் ஐயா உள்ளிட்டவர்களால் ஒரே மாதிரியாகவே கூறப்படுகின்றது. அதேவேளை யோகன் ஐயா அந்த அரசன் கஜபாகு மன்னன் என்றும் அவன் கி.பி 2 ஆம் – 3 ஆம் நூற்றாண்டுக்குக்குரியவன் என்றும் கூறுகின்றார். ஆயினும் இதற்கான ஆதாரத்தைத் தேடுதல் கடினமாகவே உள்ளது. அதேவேளை ஆலய பூசகர் இறந்திருந்ததை அறிந்து குளக்கோட்ட மன்னன் கோணேசர் கோயிலைத் தரிசிக்க குதிரையிலேயே வந்த போது, சுரங்க மண்டபம் தரிசித்ததாகவும் சிவ நடனத்தைக் கண்டு தன்னிலை மறந்து நின்றதாகவும், இதனால் பக்தி மேலிட்ட மன்னன் கோயிலைப் புனரமைத்துப் பணியாளர்களை நியமித்ததாகவும், சம்பூர் – தோப்பூர் முதலிய இடங்களில் இந்தியாவிலிருந்து குடிகளை அழைத்து வந்து குடியேற்றியதாகவும் கோணேசர் கல்வெட்டு (வடிவேல் இ., (பதி), 1995) கூறுகின்றது. அக்குடிகளின் வம்சத்தினர் இன்றும் வாழ்கின்றனர். அதேபோல கோணேசர் கல்வெட்டு, அரசன் கந்தளாய்க் குளத்தை அமைத்து நீலாசோதையன் பொறுப்பில் விட்டதாகக் கூறுகின்றது (கோணேசர் கல்வெட்டு, 28). மேலும் அப்பாடலில், “எட்டிசை மண்வெட்டிக் கொண்டே ஏழரைச் சுற்றாம் மரத்தை இனதா வெட்டி தட்டி ஒரு காலாலே எற்றி அது வீழ முன்னம் தரணி மீதில் ஒட்டி ஒரு குளம் சமைத்து ஆங்கு உறுநீரும் கொண்டு அருளையுற்ற வீரன் அட்டதிக்கும் புகழ்ந்தருளும் நீலாசோதையன் படையும் அரசர்மாரும்” என நீலாசோதையனின் வீர பராக்கிரமம் கூறப்பட்டுள்ளது. வேதியன் ஒருவன் இந்திய தேசத்தைத் தன் மந்திர வலிமையால் அடிமையாக்கி, பின் இலங்கையை அடிமையாக்க வந்தான் என்றும், அதனால் சில பேய்களை ஏவினான் என்றும், நீலாசோதையன் அவற்றை எதிர் கொண்டழித்ததாகவும் கூறப்படுகிறது. அதேவேளை அவ்வேதியன் இராமாயணத்து வாலியைப் போல தன்னெதிரே நின்று போரிடுபவரின் பாதி சக்தியைப் பெற்றுவிடும் ஆற்றல் உள்ளவன். ஆகவே நீலாசோதையன் காளியனிடம் (சலவைத் தொழிலாளி) அடைக்கலம் புக, அவன் சாடியினுள் புகச்செய்தான். இதனையே யோகன் பூசாரி ‘சால் – சால்வை’ எனப் பொருள்கொண்டு குளத்தினுள் நீலாசோதையனை மூழ்கியிருக்க வைத்து, சால்வையைக் குறுக்கே போட்டு அவ்வழி செல்லாது வேதியனை தடுத்து அப்பால் செல்ல வைத்தான் என்கிறார். வேதியன் அப்பால் செல்லும்போது மறைந்திருந்த நீலாசோதையன் விஸ்வரூபம் கொண்டு தண்டாயுதத்தால் தாக்கி வேதியனைத் தந்திரமாகக் கொன்றான் எனப்படுகிறது. ஆயினும் வேதியன் ஏவிய கம்பளி வைரவர், ஊத்தைக்காளி முதலான பன்னீராயிரம் துக்ஷ்ட சக்திகள் நின்றன. அவை மக்களைத் தாக்காத வண்ணம் நீலாசோதையன் இன்றுவரை காப்பதாக நம்பப்படுகின்றது (நேர்காணல் :யோகன் ஐயா, புன்னைச்சோலை காளி கோயில் பூசாரி). இக்கதை மரபில் இருந்து சற்று மாறுபட்டு வேதியன் ஒருவன் தன் நாட்டை சலவைத் தொழிலாளர் ஆள்வதா எனக் கருதி மந்திர சக்தியால் பேய், காளி உள்ளிட்ட துக்ஷ்ட சக்திகளை ஏவியதாகவும் அதனை எதிர்கொள்ள முடியாமல் தந்திரமாக சலவைத் தொழிலாளியின் உதவியுடன் நீலாசோதையன் அவனைக் கொன்றதாகவும் கூறப்படுகின்றது (கனகரத்தினம்,இரா. வை., 2016). அதேவேளை மந்திர சக்தியின் மூலவரான (குரு) மாகாமுனி பரசுராமர் நீலாசோதையனிடம் இத் துக்ஷ்ட சக்திகளுக்கு அவற்றைக் கட்டுப்படுத்த உரிய அவிர்ப்பாகம் வழங்குமாறு கூறினார் எனவும் அதன் வழி நின்றே இன்றும் ‘நோர்ப்பெறிதல்’ சடங்கு எனும் சடங்கு நிகழ்த்தப்படுதலையும் அறியமுடிகிறது. நீலாசோதையன் வழிபாடு இலங்கைக்கே உரிய தெய்வ வழிபாடாகும். நீலாசோதையன் காவியம் (ஏறத்தாழ 65 பாடல்கள்) இத்தெய்வம் பற்றி விரிவுற உரைக்கிறது. வீரபத்திர காவியம், பெரியதம்பிரான் காவியம், வண்ணார் பத்ததி, கட்டாடிமார் பத்ததி, கோணேசர் கல்வெட்டு முதலியனவும் நீலாசோதையன் பற்றி உரைக்கின்றன. ஏழாலை பெரியதம்பிரான் கோயிலில் பொங்கல் அன்று நிகழும் கிரியாமுறையின் போது பாடும் பாடல்கள் 200 வருடங்களுக்கு மேலான ஏடொன்றில் உண்டு. அதில் பிள்ளையார் துதி, சுப்பிரமணியர் துதி, தேவி துதி என்பவற்றுக்கு அடுத்ததாக நீலாசோதையன் துதி காணப்படுகின்றது. அதில், “தாருலகில் நீலவண்ண ணாகத் தோன்றித் தவமுனிவர் சாபமது தீர வந்து பேருலகில் சிவன் தன்னைப் போற்றி செய்து பெரிய தெய்வமென்பதொரு பேரினாலே சீருலவு கொன்றை யந்தர் சிறந்த நாதன் சிவவரு வில்லா வளமை செப்புங்கோயில் பாரலகில் திருநீலா சோதையன் தான் பரிந்துயில் கொல்பவர் வினைகள் தீர்ப்பாம்” எனவுள்ளது. மேலும் பலிமுறைப் பாடலிலே “நீலா சோதை யனையும் பவள நாடு திறை கொண்ட தம்பிரானே” எனவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நீலாசோதையன் அமைவிடங்கள் மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரியதம்பிரான் ஆலயங்களில் நீலாசோதையன் பரிவாரத் தெய்வமாக, சடங்கில் மட்டும் உருவகிக்கப்படும் தெய்வமாக, பெரியதம்பிரானாக அமைந்திருக்கின்றார். மட்டக்களப்பு மாவட்டத்தில் புன்னைச்சோலை போன்ற இடங்களில் அமைந்துள்ள காளி கோயில்களில் நீலாசோதையனுக்குத் தனியிடமுண்டு. அங்கு நிரந்தரக் கட்டடமுமுண்டு. சில கோயில்களில் சடங்கு காலங்களில் தற்காலிகப் பந்தலமைத்து வழிபட்ட பின், சடங்கு முடிந்த பின் அப்பந்தலை அகற்றி விடுவர். பல ஆலயங்களில் சூலமும், சில ஆலயங்களில் உருவங்கள் அற்றும் இருக்கின்றன. நீலாசோதையனுக்கு உருவம் இல்லை. கல், சூலம் என்பவற்றால் குறி வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது. பெரும்பாலும் திறந்த மண்டபத்தில் மந்திரத்தால் உருவகிக்கப்படும் தெய்வமாகவே உள்ளது. விதிவிலக்காக கோட்டைமுனை ஆலயத்தில் பெரியதம்பிரானுக்கும் நீலாசோதையனுக்கும் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன என இரா.வை. கனகரெத்தினம் குறிப்பிடுகிறார். மட்டக்களப்பு – புன்னச்சோலையில் நீலாசோதையனுக்கு சிறு கோவிலுண்டு. இதில் வேல் வைக்கப்பட்டுள்ளது. “தக்கனது யாகத்தில் அவதரித்து அதிரமாமலையில் சோழ குலம்தனில் பூமிதனில் வந்து வரு பெரியதம்பிரானும் நீலா சோதையனும் ஒன்றாய் இருபேரும் பொய்யாமலே வளர்ந்து காளியர் குலம் தனில் மெய்யான தெய்வமாய் மானிலத்தோர் அக்கரைப்பற்று பதிதனில் ஆலமர நிழல் தனில் கோயில் கொண்டமர்ந்தாய் யாகேஸ்வர பெரிய தெய்வமே போற்றி போற்றி” என்னும் பாடல் அக்கரைப்பற்றில் உள்ள நீலாசோதையன் பெரியதம்பிரான் கோவில் பற்றிக் குறிப்பிடுகிறது. யாழ்ப்பாணத்தில் ஏழாலையில் சாடியடி, நீலாசோதையன் கோயில், பெரியதம்பிரான் கோயில் என்பன தனித்தனியேயுள்ளன. இருபாலையில் உள்ள பெரியதம்பிரான் கோயிலில் மூலக் கோயிலுக்கு எதிரில் நீலாசோதையனுக்கு ஆலமரத்தடியில் நிரந்தரக் கட்டடமுண்டு. நீலாசோதையனுக்கு கைதடி பெரியதம்பிரான் கோயிலில் யாககுண்டத்துக்கு முன்பே ஆகமக் கோயிலில் தம்ப மண்டபம் இருக்கக்கூடிய இடத்தில் பெரிய சூலமுண்டு. அதனை நீலாசோதையன் என்கின்றனர். இது மூலாதார கணபதிக்குச் சமமான அந்தஸ்து எனப்படுகிறது. இத்தெய்வத்தை நீலாசோதைய வைரவர் எனவும் குறிப்பிடுகின்றனர். சடங்கு முறைகள் பொதுவாக நீலாசோதையன் இருக்கும் பெரியதம்பிரான் ஆலயங்களில் புதன், சனிக்கிழமைகளில் விளக்கு வைக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் இன்று வசதிக்கேற்ப ஏனைய நாட்களிலும் விளக்கு வைக்கப்படுகின்றது. இக்கோயிலில் பழைய ஐதீகக் கதையின் நம்பிக்கையின் படி சலவைத் தொழிலாளர்களாலேயே பூசை செய்யப்படுகிறது. தைப்பொங்கல், சித்திரைப் பொங்கல் என்பவற்றோடு பங்குனி, புரட்டாதி மாதங்களில் வளர்ந்துப் பொங்கலும் நடைபெறுகின்றது. “ஆலயத்து மணிமுற்றை தடர்ந்து வளர்த்தோங்கும் அருகு நிறை பூவரசின் ஒரு மலர் வேண்டி பாலனழும் போது தாயார் பறித்தீய பறந்த கரம் வழங்கதை பான்மை தரு செய்து சீதமொடு புரட்டாதி தோறும் அதில் செம்மையோடு குளிர்த்தியுடன் பூசனை புரியும் தேவர்களும் ஏற்ற வயல் பதிலாழும் எம்பிரான் பெரிய தம்பிரானே” (தகவல்: உக்ஷ்திரா தினேக்ஷ் சங்கர், தெல்லிப்பழை) பெரியதம்பிரானுக்கு வழங்கும் அதே சடங்கு, பூசை நீலாசோதையனுக்கும் நிகழ்த்தப்படுகின்றது. ஏழாலை பெரியதம்பிரான் ஆலயத்தில் சித்திரைப் பொங்கல் சடங்கில் பூசாரி வாய் கட்டிப் பூசை செய்கின்றார். சித்திரை வருடப் பிறப்பின் பின்னான புதன்கிழமை ஆரம்பமாகி அடுத்துவரும் புதன் இரவு பெரும் பொங்கல் இடம்பெறும். மாதம்தோறும் மடை வைத்தல் ஆவணி மாதக் கடைசிப் புதன் நடைபெறும். பெரிய மடையுடன் முடிவுறும். பொங்கலுக்கு இரு நாட்களுக்கு முன்பு வாழைக்குலை பழுக்கப் போடுதல் சடங்கு நடைபெறும். சித்திரை மாத முதல் புதன்கிழமை கமுகு மரம் நடப்பட்டு கொடியேற்றமும் நடைபெறும். இவ்வாலயத்தின் ஆரம்பப் பூசை சாடியடியில் நடைபெறும். ஆலயத்தில் இருந்து 250 மீட்டர் தூர அளவில் மருத, அரச மரங்கள் சூழ சிறிய மண்டபம் உண்டு. கன்னிமார், நாச்சிமார் வழிபாடு இங்கு நடைபெறும். நீலாசோதையன் ஆலய முன்றிலில், நீலாசோதையன் துதி படிக்கப்பட்டு சிறு பொங்கல் நடைபெறும். முதல் நாள் மற்றவர் அறியா வண்ணம் நேர்ந்து கட்டிய இழையினை அவிழ்த்து அப்பொருட்களைப் பொங்கல் பண்டங்களாகக் கொண்டு, பொங்கிப் படைத்து அதன் ஒரு பகுதியை பூசாரியும், உதவியாட்களும், வளர்ந்துக்குரியவர்களும் உணவாக உட்கொள்வர். இது கட்டாயமானது; உரிமை சார்ந்தது. இதன் பின்பே பெரியதம்பிரானுக்கு மடைப்பண்டம் எடுத்தல் நடைபெறும். மடைப்பண்டங்கள் யாவற்றையும் நீலாசோதையன் ஆலயத்தின் முன்றலில் வைத்து பூஜை செய்து வழங்கிய பின் பெரியதம்பிரான் ஆலயத்திற்கு கொண்டு செல்வர். அங்கு உரிய சடங்குகள் நடைபெற்றபின் மடை பரவப்படும். பல்வேறு மடைகள் எல்லாத் தெய்வங்களுக்கும் வைக்கப்படும். பூசை நடைபெற்ற பின் மடையேற்றலுக்கான பாடல் நடைபெறும். பத்ததியின் ‘கெசபலி சாந்தி’ படிக்கும்போது படிமத்தானாகிய பூசாரி கலையாடுவார். மடை மீது தண்ணீர் தெளிப்பார். பின்னர் பலிக்குரிய குங்குமம் கலந்த அல்லது மஞ்சள் கலந்த அரிசியை எடுத்து எட்டுத்திக்கும் கைமாறி வீசுவார். கொழுத்தப்பட்ட விளக்குத்திரிகளை அவ்வாறே கைமாறி வீசுவார். இது மட்டக்களப்பில் நிகழும் ‘நோர்ப்பெறிதலுக்கு’ (நோர்ப்புச் சடங்கு) சமமானதாகும். இதுவே ஆகமக் கோவில்களில் எட்டுத்திக்குப் பலியாக வளர்ந்திருக்கலாம். இதன்பின் கண்ணூறு கழித்தல், வழிவெட்டல், கொடியிறக்கம் முதலிய சடங்குகள் தம்பிரான் கோயிலில் நடைபெறும். கொடி இறக்கிய பின் ஞாயிறு பொங்கல் நடைபெறும். இது நீலாசோதையன் ஆலய முன்றிலில் நடைபெறும். பொங்கல் வேள்வியில் தாம் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை மன்னித்து சகல நன்மைகளும் தருமாறு நீலாசோதையனை வேண்டுவர். “காய்ந்தவர் முகத்தினில் கல்லெறியாய் சிரித்தார் முகத்தினில் சீதேவியாய் பகைத்தார் முகத்தினில் பதிகமாய் அவ்வடியார் கையைப் பிடித்துக் கரையேற்றிக் கொள்ள வேணும் நீலாசோதையனே நல்லதம்பிரானே” (பூசாரி, சின்னத்தம்பி பஞ்சலிங்கம் {சோமுஐயா}) எனப் பலவாறு வேண்டி வழிபடலுடன் பொங்கல் நிறைவுறும். இருபாலை கோட்டயபுரத்து பெரியதம்பிரான் ஆலயப் பூசாரி கந்தையா சின்னராசாவும் கைதடி பூந்தோட்டம் பெரியதம்பிரான் ஆலயத் தலைவர் மதிகாந்தனும் நீலாசோதையனை கிருக்ஷ்ணராகவே தாம் கருதுவதாகக் கூறுவதும், ஏழாலை பெரியதம்பிரான் ஏடு ‘நீலவண்ணத்தான்’ என நீலாசோதையனை வர்ணிப்பதும் சுற்றியுரைக்கத்தக்கது. பெரியதம்பிரான் ஆலயங்களில் நீலாசோதையன் தவிர காளி, அம்மன், கன்னிமார், நாச்சிமார், காத்தவராயன், முனி, மாடன், கிங்கிலியர், நாகதம்பிரான், வீரபத்திரர், வைரவர், விநாயகர், முருக தெய்வங்களும் பரிவார மூர்த்திகளாக அமைந்துள்ளனர். புன்னைச்சோலை காளி கோயிலில் சடங்குகளின் முடிவில் ஆயுதங்களை நீலாசோதையனிடம் ஒப்படைத்தல் சடங்கு நடைபெறுதல் நீலாசோதையன் வீரனாக விளங்குகிறதை தெளிவுபடுத்துகின்றது. மட்டக்களப்பில் நீலாசோதையன் உள்ள ஆலயங்களில் ‘நோர்ப்புச் சடங்கு’ நடைபெறுகின்றது. தெய்வத்தன்மை இல்லாத தீய சக்திகளுக்காக பால், பழம், சோறு, கறி போன்றவற்றை (சில இடங்களில் மடைப்பண்டத்தில் ஒரு பகுதியை) ஆலயத்தைச் சுற்றி எறிவர். புன்னைச்சோலை காளி கோயிலில் இச் சடங்கு இன்றும் நடைபெறுகிறது. ஏறாவூர் காளிகோயில் ‘நோர்ப்புக் கட்டுதல்’ நடைபெறுகிறது. அதனை உண்ணக் கொடுப்பர்; எறிவதில்லை. முடிவுரை நீலாசோதையன் வழிபாடு பெரியதம்பிரான் வழிபாட்டுடன் பிரிப்பின்றிக் கலந்துவிட்டது. இது இரு சாதிகளின் கலப்புருப் பண்பாட்டின் வழியும் அமைந்திருக்கலாம். அன்றி காவியம், கோணேசர் கல்வெட்டு வழி கஜபாகு – குளக்கோட்ட மன்னன் அவனது மந்திரி – படைத்தளபதி நீலாசோதையன் பற்றிய தொன்மம் வழி எழுந்த வீர – முன்னோர் வழிபாடாகவும் இருக்கலாம். இக்கதையில் வரலாறும், நம்பிக்கையும், புனைவும் கலந்து நிற்பதை அவதானிக்க முடிகிறது. எது எவ்வாறாயினும் சலவைத் தொழிலாளர்களின் குலதெய்வ வழிபாட்டுடன் இணைந்த துணைத் தெய்வமாகவே இன்று நீலாசோதையன் அடையாளப்படுத்தப்படுகின்றார். பெரியதம்பிரான், நீலாசோதையன் ஆகியோரை விக்ஷ்ணுவின் அம்சங்களாக பூசாரிகள் கூறியிருப்பது முக்கியமானது. இது ஈழத்து வைணவ மரபு பற்றிய ஆய்வுக்கான கதவை அகலத் திறக்கிறது. ‘நீலாசோதையன் பெரியதம்பிரான்’ எனும் மறவன்புலவு ஆலயம் இரண்டும் ஒன்றான கதையின், மேலாண்மையின் கதையாடலுக்கான சாட்சியாகிறது. அவ்வாலயத்தைச் சேர்ந்த ஆனந்தரஞ்சன், 1990 களுக்கு முன் தங்களது பட்டி மாடுகளுக்கு முதுகில் ‘நீ’ (நீலாசோதையன்) எனும் எழுத்தும் தொடையில் பெரிய வட்டமும் (குளம்) அதனுள் சிறு நீள் சதுரமும் (சலவைக்கல்) பொறிக்கப்பட்டு இருந்ததாகக் கூறினார். இது சாதியம், தெய்வம், கால்நடை வளர்ப்பியல், விவசாயம் என்பன பற்றிய விடயங்களை ஆவணப்படுத்துகின்றது. அரசனும் நீலாசோதையனும் மரக்கலமற்று நின்றமை அக்கால அரசுகளின் நிலை, படை பலம், அரசு – மக்கள் தொடர்பு பற்றிய பல புதிய உரையாடல்களை ஆரம்பிக்க உதவுகின்றன. நீலாசோதையன் இலங்கையின் வரலாறு மற்றும் சமூகவியல் சார்ந்த பல்வேறு பரிணாமங்களை உடைய உரையாடல்களுக்கான திறவுகோல் ‘தெய்வமாக’ அமைந்துள்ளது. https://www.ezhunaonline.com/a-sub-deity-called-nilasothaiyan/
-
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 7 | ‘லொலிடா’ (Lolita) நாவல் Bookday01/04/2025 தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 7 | ‘லொலிடா’ (Lolita) நாவல் ஒரு சிறுமியின் மீது காமமுற்றவன் கதை அ. குமரேசன் ‘லொலிடா’ என்ற இந்த நாவலுக்கு ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார் ஜான் ரே ஜூனியர் என்ற உளவியலாளர். உளவியல் நூல்களின் தொகுப்பாளருமான அவர், சிறையில் இதய நோயால் இறந்துபோன ஒரு கைதியின் நினைவுக் குறிப்புகள் இந்தப் புத்தகமாக உருவாகியிருக்கிறது என்கிறார். ஹம்பர் ஹம்பர் (ஆங்கில எழுத்துகளின்படி ஹம்பர்ட், உச்சரிப்பின்படி ஹம்பர்) என்ற புனைப் பெயர் சூட்டிக்கொண்டவனான அந்தக் கைதி தன்னுடைய கதையை சொல்லத் தொடங்குகிறான். நாவலுக்குள் நேரடியாகச் செல்லாமல் எதற்காக அந்த முன்னுரையிலிருந்து தொடங்க வேண்டும்? காரணம் அந்த முன்னுரை நாவலின் முதல் அத்தியாயம்! உளவியலாளர் ஒரு கற்பனைப் பாத்திரம்! விளாதிமிர் நபோக்கோவ் (Vladimir Nabokov) ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறி இறுதிக் காலத்தில் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தவரான எழுத்தாளர் விளாதிமீர் நபோகோவ் (Vladimir Nabokov) (1899–1977) இப்படியொரு புதிய உத்தியோடு நாவலை 1955இல் எழுதியிருக்கிறார். தி டிஃபென்ஸ்(பாதுகாப்பு), தி டெஸ்பெய்ர் (மனக்கசப்பு), இன்விடேஷன் டு எ பிஹெட்டிங் (தலையை வெட்டுவதற்கு அழைப்பு), தி கிஃப்ட் (அன்பளிப்பு), என்சான்ட்டர் (வசீகரன்), சைன்ஸ் அன் சிம்பல்ஸ் (குறிகளும் சின்னங்களும்), பேல் ஃபயர் (வெளிறிய நெருப்பு)ஆகிய நாவல்கள் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியவர் நபோகோவ். ‘லொலிடா’ வெளியானபோது பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, அன்றைய சோவியத் யூனியன், ஆஸ்திரேலியா, கனடா, அர்ஜன்டைனா, தென்னாப்பிரிக்கா, நியூஜிலாந்து உள்பட பல நாடுகளில் தடை செய்யப்பட்டது. அமெரிக்க அஞ்சல் துறை இந்த நாவலை யாராவது யாருக்காவது அனுப்பினால் பட்டுவாடா செய்ய மாட்டோம் என்று அறிவித்தது. இந்தத் தடைகளுக்குக் காரணங்களாக பாலியல் உறவுகள் பற்றிச் சித்தரிக்கிறது, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் மீது ரசனையை ஏற்படுத்துகிறது, சமூக ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாடுகளுக்கும் எதிரான கருத்துகளைப் பரப்புகிறது என்றெல்லாம் கூறப்பட்டது. இலக்கிய உலகத்தினர், பத்திரிகையாளர்கள், சமூக அக்கறையாளர்கள் கடுமையான எதிர்ப்பையும் விமர்சனத்தையும் வெளிப்படுத்தினார்கள். தடை விலக்கப்பட்டது. ‘டைம்ஸ்’ ஏடு உலகின் சிறந்த 100 நாவல்கள் பட்டியலில் இதனைச் சேர்த்தது. மாடர்ன் லைப்ரரி, லே மோண்டி, போக்லுபென் ஒர்ல்ட் லைப்ரரி, தி பிக் ரீட் உள்ளிட்ட அமைப்புகளும் முக்கியமான நாவல்களின் வரிசையில் இது இணைவதாக அறிவித்திருக்கின்றன. பல முறை நாடக ரசிகர்களையும், இரண்டு முறை திரைப்பட ரசிகர்களையும் வந்தடைந்த லொலிடா யார்? கதைக்களம் ஹம்பர் ஹம்பர் என்ன குற்றத்துக்காக அவன் கைது செய்யப்பட்டான் என்று முன்னுரையில் தெரிவிக்கப்படவில்லை. அவனுடைய உண்மைப் பெயரும் கடைசி வரையில் குறிப்பிடப்படவில்லை. நீதிமன்ற நடுவர்களுக்கு ஒரு வாக்குமூலமாக அவன் எழுதிய நினைவுக் குறிப்புகள் அவனுடைய பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, தனிப்பட்ட இழப்பு, அதை ஈடுசெய்வதாக எண்ணி ஏற்படுத்திக்கொண்ட பாலியல் ஈர்ப்பு ஆகியவற்றைத் தெரிவிக்கின்றன. அத்துடன் அரசியல்–சமூகச் சூழல்களையும் பேசுகின்றன. 1910ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ஆங்கிலேயத் தாய்க்கும் சுவிட்சர்லாந்துத் தந்தைக்கும் பிறந்த ஹம்பர் சிறார் பருவத்தில் அனபெல் லீ என்ற சிநேகிதி மீது ஈர்ப்பு கொள்கிறான். நச்சுக் காய்ச்சலால் அனபெல் அந்த வயதிலேயே இறந்து விடுகிறாள். இந்தப் பிரிவால் மனதளவில் வெகுவாகப் பாதிக்கப்படும் ஹம்பருக்கு 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளின் மீது வெறித்தனமான பாலியல் மோகம் வளர்கிறது. தனது மன இச்சைகளை நிறைவு செய்கிறவர்கள் என்று நினைக்கும் சிறுமிகளை அடையாளப்படுத்த அவனாகவே “நிம்பெட்” (கிட்டத்தட்ட ‘காமதேவதை’ என்று பொருள்) என்று புதிய சொல்லை உருவாக்குகிறான். பட்டப் படிப்புக்குப் பிறகு பிரெஞ்சு இலக்கிய ஆசிரியராக வேலைக்குச் சேர்கிறான். இக்காலத்தில் அவன் மனநல மருத்துவமனைகளுக்கு அடிக்கடி போக வேண்டியதாகிறது. வலேரியா என்ற பெண்ணுக்கும் அவனுக்கும் திருமணம் நடக்கிறது. சிறிது காலத்தில் அவள் அவனிடமிருந்து விலகிவிடுகிறாள். இரண்டாம் உலகப் போர் சூழல்கள் உருவாகின்றன. அவன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்கிறான். 37 வயதில், அவன் அமெரிக்காவில் நியூ இங்கிலாந்து என்று குறிப்பிடப்படும் வட்டாரத்தில் தங்கி அமைதியாகத் தனது எழுத்துப் பணியில் மூழ்க எண்ணி வீடு தேடுகிறான். ஒரு வீட்டின் உரிமையாளரான சர்லோட் தன் வீட்டிற்குக் குடிவர விடுக்கும் அழைப்பை மறுக்க எண்ணுகிறான். ஆனால் அவளுடைய மகளான டோலெரெஸ் என்ற 12 வயதுச் சிறுமியைக் காண்கிறபோது அவளைத் தன் சிறுவயதுக் காதலியான அனபெல்லின் மறு உருவமாகக் கருதுகிறான். வீட்டிற்குக் குடி வருகிறான். பழகுகிறான். அவளை ‘லொலிடா’ (Lolita) (கவர்ச்சிக் கட்டழகி) என்று செல்லமாக அழைக்கிறான். அவளைத் தொடுவது, உரசுவது என்று தன் பாலியல் இச்சையைத் தணித்துக்கொள்ள ஹம்பர் முயல்கிறான். பள்ளியின் கோடை முகாமுக்காக அவள் சென்றபோது, சர்லோட்டிடமிருந்து அவனுக்கு ஒரு கடிதம் வருகிறது. அவன் மீது தனக்கிருக்கும் காதலை வெளிப்படுத்தும் சர்லோட், அவன் தன்னை மணக்க வேண்டும் அல்லது வெளியேற வேண்டும் என்று கெடு வைக்கிறாள். டோலெரெஸ்சின் வளர்ப்புத் தந்தையாக இருப்பதால் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை ஊகிக்கும் ஹம்பர் சம்மதிக்கிறான்.. திருமணத்திற்குப் பிறகு, சர்லோட்டுக்குப் போதை மருந்து கொடுக்கவும், டோலெரெஸ் திரும்பி வந்ததும் அவளையும போதையில் ஆழ்த்திப் பாலியல் உறவுகொள்ளவும் ஹம்பர் திட்டமிடுகிறான். தற்செயலாக ஹம்பரின் குறிப்பேட்டைப் படிக்கும் படிக்கும் சர்லோட் அவனுடைய உண்மை நோக்கங்களைக் கண்டுபிடிக்கிறாள். அதில் எழுதியிருப்பவை உண்மையல்ல, அடுத்த நாவலுக்கான குறிப்புகள்தான் என்று அவன் கூறுவதை ஏற்க மறுத்து, மகளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். கடிதத்தை அஞ்சல் நிலையத்தில் சேர்க்கச் செல்கிறபோது சாலை விபத்தில் மரணமடைகிறாள். ஹம்பர் கோடை முகாமுக்குச் சென்று, டோலெரெஸ்சைப் பார்த்து, அவளுடைய தாய் கடுமையான உடல்நலப் பிரச்சினையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகச் சொல்லி அழைத்துப் போகிறான். ஒரு பணக்கார விடுதியில் அறையெடுத்துத் தங்க வைக்கிறான். அவளுடைய பானத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுக்கிறான். அவள் தூக்கத்தில் விழும் வரையில் விடுதிக்குள் சுற்றிவரக் கிளம்புகிறான். மையக் கூடத்தில் ஒரு ஆசாமியைப் பார்க்கிறான். அவனுக்கு இவனுடைய திட்டம் தெரிந்திருப்பது போல இருக்கிறது. அறைக்குத் திரும்பி வரும் ஹம்பர், தூக்க மருநது வேலை செய்யாததையும் அவள் விழித்திருப்பதையும் காண்கிறான். திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போகிறது. மறுநாள் பேசிக்கொண்டிருக்கும்போது டோலெரெஸ், முகாமில் இருந்தபோது வயதில் மூத்த பையனுடன் தனக்கு உறவு ஏற்பட்டதைச் சொல்கிறாள். ஹம்பர் அவளைக் கட்டாயப்படுத்தி வன்புணர்கிறான். பின்னர் அவளிடம் சர்லோட் இறந்துவிட்டதைத் தெரிவிக்கிறான். அவளை அழைத்துக்கொண்டு பல இடங்களுக்கும் பயணம் செய்கிறான். சிறுமியான அவளை நிறையப் பணம் கொடுத்தும் உளவியலாகக் கட்டுப்படுத்தியும் தன் இச்சைக்கு உட்படுத்துகிறான். நன்றாகக் கவனித்துக்கொள்ளவும் செய்கிறான்.அதே வேளையில் வெளி இடங்களுக்குப் போகக்கூடாது என்று தன் பிடியிலேயே வைத்திருக்கிறான். வேறொரு நகருக்குக் குடிவருகிறார்கள். அங்கே அவளைப் பெண்கள் பள்ளியில் சேர்க்கிறான். தன்னை அவளுடைய தந்தை என்று காட்டிக்கொள்கிறான். தலைமையாசிரியர், அவன் அவளைப் பழைய காலத்துப் பெற்றோர்கள் போலக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது சரியல்ல என்கிறார். ஆகவே பள்ளி நாடகத்தில் அவள் நடிக்க ஹம்பர் சம்மதிக்கிறான். நாடகத்தின் தலைப்பு, அவன் சந்தேகித்த அந்த மர்ம நபர் இருந்த விடுதியின் பெயராகவே இருப்பதைக் கவனிக்கிறான். நாடக நிகழ்வுக்கு முந்தைய இரவில் டோலெரெஸ் வெளியே ஓடுகிறாள். தேடிச் செல்லும் ஹம்பர் அவள் ஒரு கடையில் ஐஸ் கிரீம் சோடா குடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அவள் மீண்டும் ஒரு நீண்ட சாலைப் பயணம் போக விரும்புவதாகச் சொல்கிறாள். அவனுக்கு உற்சாகமாக இருக்கிறது என்றாலும், பயணத்தின்போது தங்களை யாரோ பின்தொடர்வது போல சந்தேகம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் உடல் நலம குன்றுகிற அவளை மருத்துவமனையில் சேர்க்கிறான். மறுநாள் அங்கே போகிறபோது. அவள் குணமாகி, தன் மாமாவுடன் போய்விட்டதாக மருத்துவமனையில் கூறுகிறார்கள். எங்கே தேடியும் அவளை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 17 வயது டொலரெஸ்சிடமிருந்து ஹம்பருக்கு ஒரு கடிதம் வருகிறது. தனக்கு ரிச்சர்ட் என்பவனுடன் திருமணமாகிவிட்டது என்றும், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்து, சிரமமாக இருப்பதால் பணம் அனுப்பி வைக்குமாறு கேட்டு எழுதியிருக்கிறாள். ஒரு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அவளுடைய வீட்டுக்குச் செல்கிறான். அவள் அவனிடம், அந்த மர்ம நபர், நாடக எழுத்தாளர் க்ளேர் கில்டி என்றும், அவன்தான் பல இடங்களில் தங்களைப் பின்தொடர்ந்தவன் என்றும் கூறுகிறாள். மருத்துவமனையிலிருந்து தன்னை அழைத்துச் சென்றது அவன்தான், சில மாதங்கள் சேர்ந்து வாழ்ந்த பிறகு அவனுடைய ஆபாசப்படத்தில் நடிக்க மறுத்ததால் தன்னைக் கைவிட்டுவிட்டு ஓடிவிட்டான் என்றும் தெரிவிக்கிறாள். . கில்டி, அவளை அவனுடைய ஆபாசத் திரைப்படத்தில் நடிக்க மறுத்ததற்காகக் கழித்துவிட்டதாகவும் விளக்குகிறாள். ரிச்சர்டிடம் ஹம்பர் அவளுடனான தன் உறவை மறைத்துத் தகப்பனாகவே அறிமுகப்படுத்திக்கொள்கிறான். ஊர் திரும்புகிறவன், மதுப் பழக்கத்திற்கு அடிமையான ரீட்டா என்ற பெண்ணுடன் வாழ்கிறான். கொலைக் குற்றத்திற்காகக் கைது செய்யப்படுகிறான். ஹம்பர், நீதிமன்ற நடுவர்களுக்கான கடிதத்தில், “எனக்கு லொலிடா (Lolita) மீது காமம் மட்டுமல்லாமல் ஆழ்ந்த காதல் இருப்பதையும் இந்தக் கணத்தில்தான் உணர்கிறேன்,” என்று எழுதியிருக்கிறான். அவளைத் தன்னோடு வந்துவிடுமாறு அழைத்தபோது அவள் வர மறுத்துவிட்டதையும், தன் கட்டுப்பாட்டில் இருந்த, அவளுக்குச் சேர வேண்டிய, அவளுடைய தாயின் பணத்தையெல்லாம் அவளிடமே ஒப்படைத்துவிட்டுத் திரும்பியதாகவும் கூறுகிறான். அந்த கில்டியைத் தேடிச் சென்று போதையோடு இருந்தவனைச் சுட்டுக்கொன்றதாகவும் தெரிவித்திருக்கிறான். தனது நினைவுக் குறிப்புகளை டோலெரெஸ் உயிர்வாழும் வரையில் பொதுவில் வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறான். சிறைவாசத்திலேயே ஹம்பர் மரணமடைந்துவிட்டதையும், டோலெரெஸ் பிரசவத்தின்போது உயிரிழந்ததையும் நாவலின் “முன்னுரை” ஏற்கெனவே தெரிவித்திருக்கிறது. கருத்துகள் முதலில் குறிப்பிட்ட விமர்சனங்களை நாவல் கடந்துவிட்டது. ஆயினும், சிறைக் கைதி தன் கதையைத் தானே சொல்கிற நடையில் எழுதப்பட்டிருப்பதால் இந்த நாவல் டோலெரெஸ் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களின் இயல்புகள், சூழல்கள், மனநிலைகள் பற்றிப் பேசவில்லை என்ற இலக்கியத் திறனாய்வு சார்ந்த கருத்துகள் வந்துள்ளன. சமூக வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து எழுதியிருக்கிறார் நபோகோவ் என்று பாராட்டும் பகிரப்பட்டிருக்கிறது. பல்வேறு மொழிகளில் இருந்து எடுக்கப்பட்ட சொல் விளையாட்டுகள், நுட்பமாக இரட்டைப்பொருள் தரும் சொல்லாடல்கள், ஒரே சொல்லின் எழுத்துகளை வேறு பொருள் தரும் வகையில் மாற்றியமைப்பது ஆகிய நயங்களைத் திறனாய்வுகள் சுட்டிக்காட்டியிருப்பதைத் தெரிவிக்கிறது ‘விக்கிபீடியா’. அந்த ”நிம்பெட்” என்ற சொல் பின்னர் அகராதிகளில் இடம் பிடித்ததாம்! இன்று ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத்தக்க குற்றத்தை நாவல் நியாயப்படுத்தவில்லை, மாறாக இப்படிப்பட்டவர்கள் இருப்பதை அடையாளம் காட்டுகிறது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. எழுதியவர் : அ. குமரேசன் https://bookday.in/books-beyond-obstacles-vladimir-nabokovs-lolita-novel-oriented-article-written-by-a-kumaresan/
-
மாகாணசபைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் — வீரகத்தி தனபாலசிங்கம் —
மாகாணசபைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் May 25, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்த மாத முற்பகுதியில் நடைபெற்ற தேர்தல்களுக்கு பிறகு உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் நிலையில் மாகாணசபை தேர்தல்களை பற்றி பேசுவது பொருத்தமற்றதாக தோன்றலாம். ஆனால், உள்ளூராட்சி தேர்தல்கள் சுமார் இரண்டரை வருடங்கள் தாமதிக்கப்பட்ட அதேவேளை மாகாணசபை தேர்தல்கள் ஏழு வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கின்றன. உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சி காரணமாக மாகாணசபை தேர்தல்களை தற்போதைக்கு நடத்துவதில் அரசாங்கம் அவசரம் காட்டாது என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. அரசாங்கம் மாத்திரமல்ல, எதிர்க்கட்சிகளும் கூட மாகாணசபை தேர்தல்களை விரைவில் சந்திப்பதற்கு விரும்பப் போவதில்லை. அதனால், அந்தத் தேர்தல்களை நடத்துமாறு தென்னிலங்கை அரசியல் கட்சிகளிடமிருந்து அரசாங்கத்துக்கு நெருக்குதல் வரப்போவதில்லை. அதேவேளை, வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளும் பல வருடங்களாக தாமதிக்கப்படும் மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்தி மாகாணங்களின் நிருவாகத்தை மக்களினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருவதில்லை. இந்திய தலைவர்கள் கொழும்பு வருகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களுடனான சந்திப்புகளில் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலை கொடுக்குமாறு வேண்டுகோள் விடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அரசாங்கத்துடன் நேரடியாக அதைப் பற்றி கவனம் செலுத்துவதில்லை. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த வருட இறுதியில் புதுடில்லிக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் மாகாணசபை தேர்தல்களையும் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதே வேண்டுகோளை கடந்த ஏப்ரலில் கொழும்புக்கு விஜயம் செய்த வேளையிலும் முன்வைத்தார். அவருக்கு எந்த பதிலையும் வெளிப்படையாக கூறாத ஜனாதிபதி திசாநாயக்க மாகாணசபை தேர்தல்கள் குறித்து தற்போது எத்தகைய நிலைப்பாட்டில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் இப்போது பெரும்பாலும் தேசிய இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து பேசுவதில்லை. சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகள் தொடர்பில் தனது அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்படக்கூடிய எந்தவொரு நடவடிக்கையும் தென்னிலங்கை தேசியவாத சக்திகளை தங்களிடமிருந்து அன்னியப்படுத்திவிடக் கூடாது என்பதில் மாத்திரமே அவர் எச்சரிக்கையாக இருக்கிறார் என்று தெரிகிறது. இத்தகைய ஒரு பின்புலத்தில், தென்னிலங்கையை சேர்ந்த இரு சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் ஒரு முன்னாள் இராஜதந்திரியும் மாகாணசபைகள் குறித்து அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் முக்கிய கவனத்துக்குரியவையாக இருக்கின்றன. மாகாணசபை தேர்தல்களை அரசாங்கம் விரைவில் நடத்த வேண்டும் என்று இடையறாது வலியுறுத்திவரும் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா மக்களினால் தெரிவு செய்யப்படும் மாகாணசபைகளை வலுப்படுத்துவதன் மூலமாக அதிகாரப் பகிர்வுக்கு புத்துயிரளிக்க வேண்டும் என்றும் மாகாணசபைகள் பயனுறுதியுடைய முறையில் செயற்படுவதற்கு தடையாக இருக்கும் ஆளுநர்களின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்றும் எழுதியிருந்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டதை போன்ற அமைச்சர்கள் மட்டத்திலான இன்னொரு குழுவை மாகாண ஆளுநர்களின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்க வேண்டும் என்றும் தேசிய சமாதானப் பேரவை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. உண்மையில் இந்தக் கோரிக்கை தமிழ்க் கட்சிகளிடம் இருந்தே வந்திருக்க வேண்டியதாகும். தற்போது இந்திய வெளியுறவுச் செயலாளராக இருக்கும் விக்ரம் மிஸ்றி பல வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் பிரதி இந்திய உயர்ஸ்தானிகராக பதவி வகித்த நாட்களில் அவருடனான சந்திப்பு ஒன்றின்போது தமிழ் ஊடகவியலாளர்கள் ஆளுநர்களுக்கு இருக்கும் அளவுகடந்த அதிகாரங்கள் காரணமாக மாகாண முதலமைச்சர்களினால் பயனுறுதியுடைய முறையில் செயற்பட முடியவில்லை என்றும் மாகாணசபைள் மூலமாக தமிழ் மக்களால் எந்த பயனையும் அடைய முடியாமல் இருக்கிறது என்றும் கூறினார்கள். அதற்கு பதிலளித்த அவர் ஆளுநர்களின் அதிகாரங்களில் கணிசமானவற்றை முதலமைச்சர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் அரசியல்வாதிகள் முன்வைத்து அழுத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறினார். ஏன் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை எனறும் அவர் கேட்டார். ஆளுநர்களின் அதிகாரங்களை குறைக்க வேண்டியதன் அவசியத்தை கலாநிதி ஜெகான் பெரேரா வலியுறுத்தியிருக்கும் நிலையில், விக்ரம் மிஸ்றி கொழும்பில் அன்று தெரிவித்த கருத்தை நினைவுபடுத்துவது பொருத்தமானது. பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து உள்ளூராட்சி தேர்தல்களில் மீண்டு விட்ட தமிழ்க் கட்சிகள் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு தடையாக இருக்கும் விடயங்களை பாராளுமன்றத்தின் மூலமாக அகற்றி விரைவாக அந்த தேர்தல்களை நடத்த வேண்டும் என்று ஒன்றிணைந்து அரசாங்கத்தைக் கோருவதே தற்போதைய தருணத்தில் விவேகமான செயலாக இருக்கும் என்று முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜெயதிலக கூறியிருக்கிறார். அந்த கோரிக்கைக்கு தென்னிலங்கையிலும் சர்வதேச சமூகத்திலும் ஆதரவைப் பெறக்கூடியதாக இருக்கும் என்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலான எந்தவொரு பேச்சுவார்த்தையும் புதிதாக தெரிவு செய்யப்படும் மாகாணசபைகளுக்கும் ஜனாதிபதி திசாநாயக்கவின் நிருவாகத்துக்கும் இடையிலானதாகவே இருக்க முடியும் என்றும் அவர் உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பின்னரான சூழ்நிலைகள் குறித்து எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறு மாகாண சபைகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெறக்கூடிய பேச்சுவார்த்தைகளின் விளைவுகளை சர்வகட்சி வட்டமேசை மகாநாடு ஒன்றில் சமர்ப்பித்து நீண்டகால அடிப்படையிலான அரசியல் தீர்வொன்றை நோக்கிப் பயணிக்க முடியும் என்பது தயானின் கருத்தாக இருக்கிறது. அரசியலமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியலமைப்பு தொடர்பாக முடிவற்ற பேச்சுவார்த்தைகளை நடத்துவது சிங்கள அரசியல் அதிகார வர்க்கம் கவனத்தை திசைதிருப்புவதற்கு காலங்காலமாக கடைப்பிடித்து வருகின்ற ஒரு அணுகுமுறை என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கும் தயான் அத்தகைய ஒரு பொறியில் தமிழ்க் கட்சிகள் விழப்போகின்றனவா என்று கேள்வியெழுப்புகிறார். தேசிய இனப்பிரச்சினைக்கு இடைக்காலத் தீர்வைக் கண்டு அதில் இருந்து நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்பது குறித்து பேசிவரும் தமிழ்க்கட்சிகள் அதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகள் குறித்து சிந்திப்பதில்லை. சாத்தியமாகக்கூடியதும் இந்தியாவினதும் சர்வதேச சமூகத்தினதும் ஆதரவைப் பெறக்கூடியதுமான இடைக்கால ஏற்பாடுகள் குறித்து தமிழ்க்கட்சிகள் அக்கறை செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்களின் கருத்துக்கள் இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றன. உள்ளூராட்சி தேர்தல்களைப் போன்று மாகாணசபை தேர்தல்களையும் கலப்பு தேர்தல் முறையில் நடத்துவதற்காக பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு நிறைவடையாமல் இருக்கும் எல்லை நிர்ணயச் செயன்முறைகள் மாகாணசபை தேர்தல்களுக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. எல்லை நிர்ணயச் செயன்முறைகள் நிறைவுசெய்யப்பட்டால் அல்லது முழுமையாக விகிதார பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு சட்டத்தை திருத்தினால் மாத்திரமே மாகாணசபை தேர்தல்களை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். இரத்நாயக்க சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அதை ஆட்சேபித்து அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கும் சிவில் சமூகச் செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான குசல் பெரேரா தற்போதைய சட்டக்கட்டமைப்பை ஆணைக்குழுவின் தலைவர் தவறாக வியாக்கியானம் செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார். எல்லை நிர்ணயச் செயன்முறைகள் நிறைவு செய்யப்படாவிட்டாலும் கூட மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு ஆணைக்குழுவுக்கு எந்த தடையும் கிடையாது என்று பெரேரா வாதாடுகிறார். சட்டத்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு அல்லது எல்லை நிர்ணயச் செயன்முறையை நிறைவுசெய்வதற்கு பாராளுமன்றம் தவறுவதனால் தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணசபைகள் தேர்தல் சட்டம் செல்லுபடியற்றதாகப் போய்விடுவதில்லை என்று தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் பெரேரா, புதிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்ட பிறகு சபாநாயகர் கைச்சாத்திடும் வரை, நடைமுறையில் உள்ள சட்டங்கள் செல்லுபடியாகக் கூடியவை என்பது அனைவருக்கும் தெரிந்ததே என்றும் ஆணைக்குழு மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசின் எந்த நிறுவனத்திடமிருந்தும் அனுமதியைப் பெறவேண்டிய தேவை இல்லை என்றும் கூறியிருக்கிறார். தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் ஒரு சிலரிடமிருந்தாவது இத்தகைய கோரிக்கைகளும் கருத்துக்களும் வருகின்ற அதேவேளை தமிழர் தரப்பில் அரசியல்வாதிகளிடமிருந்தோ அரசியல் ஆய்வாளர்களிடமிருந்தோ மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் மாகாணசபைகளின் நிருவாகங்களை மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அக்கறை வெளிப்படுவதில்லை என்பது ஒரு விசித்திரமான அம்சமாகும். மாகாணசபைகளின் மூலமாகவோ அல்லது 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமாகவோ தேசிய இனப்பிரச்சினைக்கு நிலைபேறான அரசியல் தீர்வொன்றைக் கண்டுவிட முடியும் என்று இந்த கட்டுரையாளர் நம்புவதாக எவரும் கருதவேண்டியதில்லை. ஆனால், போரின் முடிவுக்கு பிறகு 16 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட தமிழ் மக்கள் பெருமளவக்கு ஒரு அரசியல் வெற்றிடத்தில் இருப்பதால் அவர்களின் பிரச்சினைகளை கையாளுவதற்கான அணுகுமுறையை எங்கிருந்து தொடங்குவது என்ற தெளிவு தமிழ் அரசியல் சமுதாயத்திடம் இல்லை என்பதை எவரும் மறுக்க முடியாது. வடக்கு, கிழக்கில் தமிழர்கள் தென்னிலங்கையைச் சேர்ந்த தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடாது என்று கூறிக்கொண்டு உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ்க்கட்சிகள் கூடுதலான வாக்குகளைப் பெற்றுவிட்டதால் நிலைவரத்தில் எந்த மாற்றமும் வந்துவிடவில்லை. தங்களுக்கு கிடைத்த வாக்குகள் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியவாத அரசியல் இலட்சியத்தை கைவிடவில்லை என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டதாக தமிழ் அரசியல்வாதிகள் திருப்தியடைந்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்ப் பகுதிகளில் உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் அவர்களால் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு இன்னமும் வரமுடியவில்லை. தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கக்கூடாது என்பதில் மாத்திரம்தான் அவர்களால் ஒன்றுபட்டு நிற்கமுடிந்தது. உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பிறகு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.ஏ. சுமந்திரன் வடமாகாண சபை தேர்தலில் தனது கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதில் தனக்கு இருக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தினார். அது தொடர்பாக ஊடக சந்திப்பில் தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திடம் செய்தியார்கள் கேட்டபோது மாகாணசபை தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பதே தெரியாமல் இருப்பதால் முதலமைச்சர் வேட்பாளர் பற்றி பேசுவது அவசியமற்றது என்று அவர் பதிலளித்தார். மாகாணசபை தேர்தலைப் பற்றிக்கூட பேச வேண்டாம் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கேட்டுக்கொணடார். யாழ்ப்பாணத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த வாரம் நேர்காணல் ஒன்றை வழங்கிய சிறீதரனிடமும் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது குறித்து சுமந்திரன் வெளியிட்ட விருப்பம் தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் சுமந்திரன் பற்றி சில விமர்சனங்களை முன்வைத்ததுடன் மாகாணசபை தேர்தல்கள் விரைவில் நடத்தப்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். எல்லை நிர்ணயம் தொடர்பிலான சட்ட இழுபறியை அதற்கு சிறீதரன் ஒரு காரணமாகவும் சொன்னார். முதலமைச்சராக யார் போட்டியிடுவது என்பது தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பிறகு தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம். ஒரு அரசியல்வாதி என்ற வகையில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு சுமந்திரன் விரும்புவதிலும் தவறில்லை. தமிழரசு கட்சி தற்போது அவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகின்ற நிலையில், அவருக்கு எதிராக அனேகமாக சகல தமிழ்க்கட்சிகளும் செய்த படுமோசமான பிரசாரங்களுக்கு மத்தியிலும் வடக்கில் குறிப்பாக குடாநாட்டில் மக்கள் தமிழரசு கட்சிக்கே கூடுதலாக வாக்களித்திருக்கிறார்கள். அதனால், அவர் மீதான வெறுப்புப் பிரசாரங்களை தமிழ் மக்கள் தற்போது எவ்வாறு நோக்குகிறார்கள் என்ற ஒரு கேள்வி எழுகிறது. உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழரசு கட்சிக்கு கிடைத்த வெற்றி முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கலாம் என்ற நம்பிக்கையை சுமந்திரனுக்கு கொடுத்திருக்கலாம். அது வேறு விடயம். ஆனால், சிவஞானமும் சிறீதரனும் செய்தியாளர்கள் சுமந்திரன் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது தேர்தல்கள் தற்போதைக்கு நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறுவதை விடுத்து முதலமைச்சர் வேட்பாளர் பிரச்சினைக்கு அப்பால் மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்தவேண்டும் என்று அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுப்போம் என்றுதான் கூறியிருக்க வேண்டும். அத்தகைய அரசியல் பக்குவத்தை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. தனிப்பட்ட ஆளுமை மோதல்களுக்கு அப்பால் மக்களின் நலன்களில் அக்கறை காட்டும் மனோபாவம் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகளிடம் கிடையாது. தங்களுக்கு விருப்பம் இல்லாதவர்கள் பதவிக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் இருக்கும் என்றால் மாகாணசபை தேர்தல்களே வேண்டாம் என்றுகூட எமது அரசியல்வாதிகள் கூறிவிடுவார்கள் என்று அல்லவா எண்ண வேண்டியிருக்கிறது. https://arangamnews.com/?p=12044
-
NPP யின் தடுமாற்றங்கள்: குழப்பங்களும் வரலாற்றுப் பொறுப்பும் — கருணாகரன் —
NPP யின் தடுமாற்றங்கள்: குழப்பங்களும் வரலாற்றுப் பொறுப்பும் May 24, 2025 — கருணாகரன் — மிகச் சிறப்பான மக்கள் அங்கீகாரத்தையும் அரசியல் ஆணையையும் பெற்றிருக்கும் NPP, தீர்மானங்களை எடுப்பதில் குழப்பத்துக்கு – தடுமாற்றத்துக்கு- உள்ளாகியிருப்பது ஏன்? இன்றைய இலங்கையில் அனைத்துச் சமூகத்திலும் ஜனவசியம் மிக்க ஒரே தலைவராக இருக்கிறார் அநுரகுமார திசநாயக்க. ஆனாலும் அந்த மக்களுடைய நம்பிக்கைகளை நிறைவேற்ற முடியாதிருப்பது எதற்காக? NPP க்குப் பின்னிருக்கும் அல்லது அநுரகுமார திசநாயக்குவுக்குப் பின்னுள்ள சக்திகள் எவை? யாருடைய நிகழ்ச்சி நிரலில் NPP இயங்குகிறது? அல்லது அநுரகுமார திசநாயக்க இயங்குகிறார்? ஜே.வி.பி தவிர்ந்த வெளிச்சக்திகளின் பின்னணியோ பிடியோ இல்லாமல் தனித்துச் சுயாதீனமாக NPP இயங்குவதாக இருந்தால், அந்த அடையாளம் என்ன? இவ்வாறான கேள்விகள் NPP அரசாங்கத்தைக் குறித்தும் அநுரகுமார திசநாயக்கவைக் குறித்தும் எழுகின்றன. இவ்வாறான கேள்விகள் எழும் என்பதை NPP யும் புரிந்து கொள்ள வேண்டும். அநுரகுமார திசநாயக்கவும் புரிந்து கொள்ள வேண்டும். NPP யின் ஆதரவாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். 00 இலங்கையின் சீரழிந்த அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் சக்தியாகவே -மாற்றுச் சக்தியாகவே NPP ஐ மக்கள் பார்த்தனர்; இன்னமும் பார்க்கின்றனர். மக்கள் மட்டுமல்ல, வெளியுலகமும் அப்படித்தான் எதிர்பார்க்கிறது. NPP யும் அப்படிச் சொல்லித்தான் அதிகாரத்துக்கு வந்தது. குறிப்பாக முறைமையில் மாற்றம் (System Change) செய்வதாக. முறைமையில் மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே நடைமுறையில் மாற்றம் ஏற்படும். இதனால்தான் முறைமையில் மாற்றம் செய்வதற்கான அதிகார பலத்தை, மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் மூலம் NPPக்கு மக்கள் கொடுத்தனர். இல்லையெனில் 60 ஆண்டு வரலாற்றில் அப்படியொரு வெற்றியை NPP யோ JVP யோ பெற்றிருக்க முடியாது. இதனை JVP யும் NPP உம் புரிந்து கொள்வது அவசியம். ஆகவே முறைமை மாற்றத்தின் (System Change) மூலம் நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வையும் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பையும் NPP செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், முறைமை மாற்றத்தை (System Change) செய்வதற்குத் தயக்கம் கொள்கிறது NPP. அப்படியென்றால் இதைச் செய்யக் கூடிய ஆற்றல் NPP க்கு இல்லையா? அல்லது அதிகாரத்துக்கு வந்த பிறகு முறைமை மாற்றத்தை NPP விரும்பவில்லையா? அல்லது முறைமை மாற்றம் (System Change) தொடர்பாக NPP க்குள் குழப்பங்களும் இழுபறிகளும் நிகழ்கின்றனவா? NPP க்குள் குழப்பங்கள் நிகழ்கின்றன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. என்பதால்தான் ஜனாதிபதியின் கருத்துகளுக்கும் நிலைப்பாட்டுக்கும் மாறான முறையில் அமைச்சர்களின் கருத்துகளும் நடவடிக்கைகளும் உள்ளன. ஜனாதிபதி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்போடு உள்ளதாகக் காட்டுகிறார். அநுரவின் உரைகளும் முயற்சிகளும் இதைச் சொல்கின்றன. அவரிடம் நிதானமும் மென்போக்கும் யதார்த்தத்தைப் புரிய வைக்கும் முனைப்பும் உள்ளது. பௌத்த பீடங்களுடன் அநுரகுமார நெருக்கத்தைக் காட்டுவது கூட தன்னுடைய கடினமான நோக்கினை நிறைவேற்றுவதற்கான ஒரு வகையான அரசியல் உத்தியாகவே படுகிறது. அதாவது தனக்கும் சிங்கள பௌத்தத்துக்கும் இடையில் இடைவெளி இருப்பதாக அந்தத் தரப்பினர் உணரக் கூடாது. அப்படி உணர்ந்தால் அது தன்னுடைய மாற்று அரசியலை – முறைமை மாற்றத்தோடு கூடிய அரசியலை மேற்கொள்வதற்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தக் கூடும் எனக் கருதியே பௌத்த பீடங்களுடன் நெருக்கத்தைக் காட்டுவதாக தெரிகிறது. ஏறக்குறைய பிரதமர் ஹரிணியும் இந்த அலைவரிசையில்தான் உள்ளார். NPP யின் முகமே பிரதானமாக இவர்கள்தான். ஆனால், அரசாங்கத்தரப்பிலுள்ள ஏனையவர்கள் (NPP யின் ஏனைய ஆட்கள்) JVP யின் அடையாளத்தையே பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் இன்னும் இனவாதச் சிந்தனையிலிருந்து விடுபடவில்லை. என்பதால்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணும் உளநிலை (கரிசனை) NPP க்கு இல்லை என்பதை அமைச்சர்கள் வெளிப்படையாகவே தெரிவித்து வரும் கருத்துகள் சொல்கின்றன. இது எவ்வளவு கவலைக்கும் வெட்கத்துக்கும் உரியது! இனவாதத்தைத் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கும் வரையில் JVP யினால் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியவில்லை. இனவாதத்துக்கு வெளியே வந்து NPP யாக அது முகம் காட்டியபோதுதான் அதற்கு அங்கீகாரமும் அதிகாரமும் கிடைத்தது. தமிழ் பேசும் மக்களுடைய ஆதரவை NPP பெற்றதும் இனவாதமற்ற போக்கை அது கொண்டிருக்கிறது என்றபடியாற்தான். JVP யினர் NPP யைப் பிடித்துப் பின்னோக்கி இழுப்பதற்குக் காரணம், அவர்கள் இயல்பில் இனவாத சிந்தனையில் ஊறியவர்கள் என்பதே. ஆனால், அதிலிருந்து விலகி, மீறி வரவேண்டும் என்பதே வரலாற்றின் நிபந்தனையாகும். ஆனாலும் இந்த விடயத்தில் கடந்த கால ஆட்சியாளர்களின் வழித்தடத்திலேயே NPP யும் பயணிக்க முயற்சிக்கிறது. அல்லது NPP ஐ அப்படிப் பயணிக்க வைக்க JVP முயற்சிக்கிறது. தன்னுடைய நிறைவேற முடியாதிருந்த நீண்டகாலக்கனவுகளை NPP யின் மூலம் நிறைவேற்றுவதற்கு JVP விரும்புகிறது. அதனால் அது NPP யில் அழுத்தத்தைப் பிரயோகிக்க முயற்சிக்கிறது. என்பதால்தான் NPP க்குள் குழப்பங்களும் தடுமாற்றங்களும் நீடிக்கின்றன. NPP க்குள் குழப்பங்களும் தடுமாற்றங்களும் உள்ளவரை அதனால் முறைமை மாற்றத்தை (System Change) மட்டுமல்ல மக்கள் எதிர்பார்க்கின்ற எதையும் செய்யவே முடியாது. இதுதான் இப்போது NPP மீதான விமர்சனங்களாகவும் நம்பிக்கையீனமாகவும் மேற்கிளம்புகின்றன. இதொரு புறமிருக்க, தமிழ் பேசும் சமூகத்தினர் நம்பிக்கை கொள்ளக் கூடிய அளவுக்கு NPP யின் எந்தச் செயற்பாடுகளும் அமையவில்லை. பதிலாக அவர்களுடைய நம்பிக்கையைச் சிதைக்கும்படியாகவே அமைச்சர்களின் பேச்சுகளும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் உள்ளன. இதனால்தான் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது தமிழ் பேசும் மக்களிடம் NPP க்கான ஆதரவில் இறக்கம் நிகழ்ந்தது. ஆனால், பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த ஆதரவையும் விட உள்ளுராட்சித் தேர்தலில் கூடுதலான ஆதரவு கிட்டும் என்றே NPP எதிர்பார்த்தது. இதற்காக வடக்குக் கிழக்கு மற்றும் மலையகமெங்கும் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் எனப் பலரும் கிராமங்களுக்குக் கூடச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் 17 சபைகளையும் NPP யே கைப்பற்றும் என்று அமைச்சர் சந்திரசேகரன் உள்பட NPP பலரும் வெளிப்படையாகவே சொன்னார்கள்; நம்பினார்கள். ஆனால், ஒரு சபையைக் கூட NPP யினால் கைப்பற்ற முடியவில்லை. (இதற்குப் பிரதான காரணம் அமைச்சர் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் போன்றோரின் பொறுப்பற்ற அதிகாரத்தனமான பேச்சுகளும் கேலிக்குரிய நடத்தைகளுமாகும் என்று சொல்கிறார்கள் வடக்கிலுள்ள NPP ஆதரவாளர்கள்). வடக்கில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் வெவ்வேறு விதமாக NPP மீதான கேள்விகள் எழுந்துள்ளன. இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை NPP க்கு. இதனால்தான் தாம் ஆட்சியமைக்கக் கூடிய சபைகளில் தாம் ஆட்சியமைப்பதற்கு யாராவது இடையூறு விளைவித்தால் – இடைஞ்சலாக இருந்தால் –கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஜனாதிபதி நிதானமிழக்க நேர்ந்தது. இந்த நிதானமிழப்பை NPP யின் அமைச்சர்கள் பலரிடத்திலும் கூடக் காண முடிகிறது. அவர்கள் நிதானமிழந்தால் அவர்களுக்கும் NPP க்கும்தான் நட்டம்; பாதிப்பு. மக்களுக்கும் பாதிப்புண்டுதான். ஆனால், அவர்கள் வரலாற்றின் ஓட்டத்தில் இன்னொரு மாற்றத்துக்காக முயற்சிப்பார்கள். ஒரு காலம் ராஜபக்ஸக்களை ஏற்றுக் கொண்ட மக்கள், இன்னொரு காலச் சூழலில் அவர்களை விரட்டி அடித்த்தைப்போல, NPP யை விட்டு விட்டு இன்னொரு சக்தியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். ஆகவே மக்களைத் தம்மோடு வைத்துக் கொள்வதா இல்லையா என்பதை NPP தான் முடிவு செய்ய வேண்டும். மக்களைத் தம்முடன் வைத்துக் கொள்வதென்றால், அவர்களுடைய நியாயமான தேவைகளை நிறைவேற்ற வேண்டும். நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். இதற்கு முறைமை மாற்றம் (System Change) அவசியம். அதைச் செய்வதற்கு காலம் தாழ்த்தவே கூடாது. காலம் தாழ்த்தினால் எதிர்த்தரப்புகள் பலமடையும். இலங்கை போன்ற நாடுகளில் எளிதாக மாற்றத்தை உருவாக்கி விட முடியாது. அதற்கான வரலாற்றுச் சூழல் எப்போதும் அமைவதல்ல. NPP அது கிடைத்துள்ளது. நாட்டுக்கும் அது வாய்த்திருக்கிறது. இப்பொழுது – கடந்த ஆறு மாதங்களுக்குள்ளேயே -எதிர்த்தரப்புகள் தம்மைச் சுதாகரித்துக் கொண்டு மேலெழத் தொடங்கி விட்டன. மறுவளத்தில் NPP எதிர்த்தரப்புகளின் அரசியல் அழுத்த்ததிற்குப் பணியும் நிலையில் உள்ளது. தடுமாற அல்லது குழம்பத் தொடங்கி விட்டது. அதனால்தான் லால்கந்த, விஜித ஹேரத், ஹந்துன் நெத்தி போன்றவர்களெல்லாம் இனவாதத்தைத் தூக்க முற்படுகிறார்கள். இனவாதத்தைத் தூக்கினால்தான் ஆட்சியில் நீடிக்க முடியும் என்று நம்புகிறார்கள். இனவாதத்தை தமது அரசியலாக – அரசியல் முதலீடாகக் கொண்டு அரசியல் நடத்திய சுதந்திரக் கட்சி, ஐ.தே.க மற்றும் ராஜபக்ஸக்களின் பெரமுன போன்ற சக்திகளை வரலாறு புறமொதுக்கித் தோற்கடித்து விட்டது. மட்டுமல்ல, இனவாதத்தை அரசியல் மூலதமாக்கியதால்தான் அந்தக் கட்சிகள் தோற்றதோடு, நாடும் அழிவடைந்தது. பல்லாயிரம் மக்கள் உயிரிழக்க நேர்ந்தது. பல்லாயிரம் பேர் அங்கவீனர்களாயினர். பெருமளவு சொத்துகளும் இயற்கை வளமும் அழிந்தது. நாடு தாங்கவே முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது. அந்திய சக்திகளிடத்திலும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றின் கால்களில் விழ வேண்டியேற்பட்டது. வரலாறு இதை JVP க்கும் NPP க்கும் மக்களுக்கும் தெளிவாக உணர்த்தியுள்ளது. இதை JVP – NPP புரிந்து கொள்ளத் தவறினால் இவர்களும் வரலாற்றின் குப்பைக்குள்தான் வீசப்படுவர். முடிவாக, அரசியலமைப்பு மாற்றம் உள்பட அனைத்திலும் திருத்தங்களை NPP தாமதிக்காமல் செய்ய வேண்டும். இலங்கையில் இப்போதுள்ளது காலனித்துவ ஆதிக்கச் சிந்தனைமுறையும் கட்டமைப்புகளுமேயாகும். இதை மாற்றியமைப்பதைப் பற்றி அரசாங்கமும் எதிர்த்தரப்புகளும் சிந்திக்க வேண்டும். அதாவது காலனித்துவச் சிந்தனையிலிருந்தும் கட்டமைப்புகளிலிருந்தும் (Decolinize) விடுபட வேண்டும். இதற்கான ஒரு புதிய அரசியற் பண்பாட்டைக் கொண்ட முன்னெடுப்பும் அதற்கான கட்டமைப்பும் அவசியமாகும். எதிர்ச்சக்திகள் ஏற்படுத்தும் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் மீறி எழுந்து, நாட்டுக்குத் தேவையானதை, சரியானதைச் செய்வதே அரசியல் ஆளுமையின் பணியாகும். அநுரகுமார திசநாயக்க அந்தத் தலைமைப் பாத்திரத்தை வகிக்க வேண்டும். அதற்கான அங்கீகாரத்தை மக்கள் அவருக்கு வழங்கிருக்கிறார்கள். மக்களுடைய ஆணைக்கும் அங்கீகாரத்துக்கும் மதிப்பளிப்பதே ஜனாதிபதிக்கான முதற்கடமை. அதற்குப் பின்புதான் அவர் தன்னுடைய கட்சிக்கான இடத்தை அளிக்க வேண்டும். கட்சியைத் திருப்திப்படுத்துவதற்காக மக்கள் வழங்கிய வாய்ப்பையும் அங்கீகாரத்தையும் பாழடிக்கக் கூடாது. வரலாறு எப்போதும் ஒரு சுழலுக்குள் நிற்பதில்லை. அப்படி நின்றிருந்தால் உலகில் முன்னேற்றமோ வளர்ச்சியோ, மாற்றமோ ஏற்பட்டிருக்காது. ஒரு காலம் மேற்கு நாடுகளில் மிக மோசமான பிற்போக்குத்தனமும் வெறித்தனமும் இருந்தது. விளைவாகப் பெரும் போர்கள் கூட நடந்தன. பேரழிவுகள் ஏற்பட்டன. அதிலிருந்து படித்துக் கொண்ட பாடங்களின் அடிப்படையில்தான் அவர்கள் முன்னேற்றத்தை அடைந்தனர். மாற்றங்களை உருவாக்கினர். எனவே NPP செய்ய வேண்டியது அறுவைச் சிகிச்சையே தவிர, புண்ணைத் தடவிக் கொடுத்தல் அல்ல. அதாவது தற்காலிக சுகமளித்தல் அல்ல. JVP யின் உருவாக்கம், அதனுடைய 60ஆண்டுகால அரசியல் முன்னெடுப்பு, NPP யின் 10ஆண்டுகால அரசியல் எல்லாம் System Change ஐ அடிப்படையாகக் கொண்ட அரசியல் மாற்றம் – ஆட்சி மாற்றமே. மக்களின் ஆணையும் அதற்கானதே. அதைச் செய்யவில்லை என்றால் எதற்காக NPP? ரணில், மைத்திரி, சஜித் போன்றவர்கள் போதுமே. அவர்களுடைய போதாமை – தவறுகளுக்கு – மாற்றுத்தானே அநுரவும் NPP யும். https://arangamnews.com/?p=12041
-
கரி ஆனந்தசங்கரியின் பதவி ஏற்பு நிகழ்வு
கரி ஆனந்தசங்கரியின் பதவி ஏற்பு நிகழ்வு கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரியின் பதவி ஏற்பு நிகழ்வு மிகவும் அழகான முறையில் நேற்று நடைபெற்றது அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான தரப்பு வெற்றி பெற்ற நிலையில் புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மார்க் கார்னி 28 அமைச்சர்களை அமைச்சரவை பதவிகளுக்கும், மேலும் 10 பேரை வெளியுறவுச் செயலாளர்களாகவும் நியமித்துள்ளார். அந்தவகையில் பொது பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹரி ஆனந்தசங்கரி முன்னதாக பல அமைச்சரவை அமைச்சுபதவிகளை வகுத்துள்ளார். இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி கடந்த 2015 ஒக்டோபர் 19 இல் நடைபெற்ற கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக பாராளுமன்றம் சென்றார். முன்னதாக சுதேச உறவுகளுக்கான அமைச்சராகவும் 2025 மார்ச் 14 முதல் நீதி அமைச்சராகவும், கனடிய சட்டமா அதிபராகவும் பணியாற்றி வருகிறார். கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள் சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார். மேலும், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://akkinikkunchu.com/?p=325957
-
2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்; அரசியல்வாதிகள் வந்தால் கட்டிப்போடுவோம் என பொதுமக்கள் சீற்றம்
2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்; அரசியல்வாதிகள் வந்தால் கட்டிப்போடுவோம் என பொதுமக்கள் சீற்றம் கனகராசா சரவணன் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பாலம் உடைந்து வீழ்ந்துள்ளது. இதனால் 2 வருடமாக மட்டக்களப்புக்கும் மகிழவெட்டுவான் பிரதேசத்துக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதையடுத்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் பிரயாணம் செய்ய முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோகி வருவதாகவும் இதுவரை அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். மகிழவெட்டுவான் நரிப்புதோட்டம், கல்குடா, நெல்லூர் பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு செல்லும் பிரதான வீதியிலுள்ள மகிழவெட்டுவான் பாலம் கடந்த 2023 டிசம்பர் மாதம் உடைந்து வீழ்ந்துள்ளது.இதனால் மட்டக்களப்பு நகருக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் நகரில் இருந்து அந்த பிரதேசத்துக்கு செல்லும் பொது போக்குவரத்து பஸ் வண்டி பாலம் ஊடாக செல்ல முடியாது.அந்த பாலம் வரை சென்று நிறுத்தப்பட்டதும் பயணிகள் பஸ் வண்டியில் இருந்து இறங்கி பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், பொதுமக்கள் மூட்டை முடிச்சுக்களுடன் பல்வேறு கஷ்டங்கள் மத்தியில் நடந்து பாலத்தை கடந்து சென்று அங்கிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரம் வரை சுட்டெரிக்கும் வெய்யில் கொட்டும் மழைக்கு மத்தியில் நடந்து பாடசாலைக்கு மற்றும் வீடு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் குறித்த பிரதேசங்களுக்கு மக்கள் ஆயித்தியமலை ஊடாக சுமார் 20 கிலோமீற்றர் தூரம் சுற்றி பிரயாணிக்க வேண்டியுள்ளதுடன், இந்த உடைந்த பாலத்தை புனரமைக்காது அதற்கு அருகில் சுமார் 35 இலட்சம் ரூபா செலவில் தற்காலிகமாக ஒரு பாலத்தை அமைத்தனர். அதுவும் மழை வெள்ளத்தினால் உடைந்து பிரயாணிக்க முடியாமல் உள்ளது. இந்த நிலையில் மக்கள் நகரில் இருந்து குறித்த பிரதேசங்களுக்கோ அந்த பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு பிரயாணிக்க வவுணதீவு, ஆயித்தியமலை ஊடாக சுமார் 20 கிலோமீற்றர் தூரம் சுற்றி பயணிக்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்து இதுவரை எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த பாலம் உடைந்து வீழ்ந்ததால் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது அன்றாட அடிப்படை தேவைகளை பூர்தி செய்ய முடியாது பல்வேறு அசௌவ்கரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இது தொடர்பாக அரசியல்வாதிகளுக்கு தெரிந்தும் தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வந்த அரசியல்வாதிகள் கூட இதுவரை இந்த பிரதேசத்தில் வாழும் சுமார் 3ஆயிரம் குடும்பங்களின் அடிப்படை வசதியான இந்த போக்குவரத்தை கூட செய்யாது பாராமுகமாக இருக்கின்றனர்.எனவே இந்த பாலத்தை புனரமைக்காது எந்த அரசியல்வாதிகள் வந்தாலும் , அவர்களை பிடித்து பாலத்தில் கட்டிபோடுவோம். அவ்வாறே அரச அதிகாரிகளும் செயற்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை நகரின் பிரதான பஸ் நிலையத்தில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்படும் பஸ்வண்டியில் பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர்கள் உரிய நேரத்துக்கு கடமைக்கு சென்று கைவிரல் அடையாளம் இட முடியாததையடுத்து அவர்களுக்கு அரை நாள் லீவு ஏற்பட்டுவருகின்றதாகவும் உரிய நேரத்துக்கு கடமைக்கு செல்லமுடியாது கஸ்டங்களை கடந்த இரண்டு வருடங்களாக எதிர் நோக்கி வருவதாகவும் பாடசாலை முடிந்ததும் 1.30 மணிக்கு அங்கிருந்து புறப்படும் பஸ்வண்டியை பிடிக்க ஏனைய ஆசிரியர்களின் மோட்டார் சைக்கிளில் அல்லது நடந்து பாலம் வரை வரவேண்டியுள்ளது என ஆசிரியர்கள் கடும் கவலை தெரிவித்தனர். https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/318335
-
நோர்வே ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு ; தடைக்காலம் தொடர்வதாக அரசாங்கம் விளக்கம்
நோர்வே ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு ; தடைக்காலம் தொடர்வதாக அரசாங்கம் விளக்கம் 25 May, 2025 | 09:55 AM (லியோ நிரோஷ தர்ஷன்) நோர்வே நாட்டு ஆய்வுக் கப்பலான டாக்டர் ப்ரிட்ஜோப் நான்சன் என்ற ஆய்வுக்கப்பல் இலங்கை விஜயத்திற்கு அனுமதி கோரிய நிலையில், அந்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதை மையப்படுத்தி ஏற்பட்ட புவிசார் அரசியல் நெருக்கடி மற்றும் இராஜதந்திர அழுத்தங்கள் என்பவற்றின் அடிப்படையில் குறுகிய காலத்திற்கு ஆய்வுக் கப்பல்களுக்ககு தடைக்காலம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடைக்காலத்தை மேற்கோள்காட்டியே நோர்வே ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். டாக்டர் ப்ரிட்ஜோப் நான்சன் கப்பலானது நோர்வேயின் ஆராய்ச்சிக் கப்பலாகும். குறிப்பாக கடல்சார் ஆய்வுக் நடவடிக்கைகளில் சிறப்ப பணியாற்றியுள்ள இந்த கப்பலானது, பலதுறை ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடலுக்கடியில் தானியக்க வாகனங்களைப் பயன்படுத்துவது உட்பட சிக்கலான, பல்துறை ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதில் டாக்டர் ப்ரிட்ஜோப் நான்சன் ஆய்வுக் கப்பல் முக்கியத்துவம் பெற்றதாகும். ஆபிரிக்கா, ஆசியா மற்றும் நோர்வே கடல் பரப்புகளில் பணியாற்றியுள்ள இந்த ஆய்வுக் கப்பல் இலங்கை விஜயத்திற்கு அனுமதி கோரியுள்ளது. எனினும் இலங்கை வருவதற்கு அனுமதி கோரும் உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைக்காலத்தை மேற்கோள்காட்டி அனுமதி மறுக்கப்படுகின்றது. குறிப்பாக இலங்கை கடற்பரப்புக்குள் வரும் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை கடந்த டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த தடையை ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் விதித்திருந்தது. ஆனால் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக்கு வருவதால் ஏற்பட கூடிய இராஜதந்திர நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் பொதுவானதொரு மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேராத் தலைமையிலான சிறப்பு குழுவை ஜனாதிபதி அநுரகுமார நியமித்துள்ளார். இந்த குழுவின் பணியானது உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களை இலங்கைக்குள் அனுமதிப்பதாயின் மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறைகளை கவனத்தில் கொண்டு நிலையான ஒரு செயல்பாட்டு செயல்முறையை அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதாக உருவாக்குவதாகும். ஆனால் அவ்வாறான பொதுவானதொரு மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறையை இதுவரையில் அரசாங்கம் வெளிப்படுத்த வில்லை. மாறாக சீன ஆய்வுக்கப்பல்கள் வருவதை கண்டித்து இந்தியா கடுமையான இராஜதந்திர அழுத்தங்களை இலங்கைக்கு கொடுத்து வருகிறது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் தொடக்கம் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவி வகிக்கும் தற்போது வரையில் சீன ஆய்வுக்கப்பல்களை இலங்கைக்குள் அனுமதிக்கப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்திய கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கிறது. இவ்வாறானதொரு நிலையிலேயே நோர்வேயின் டாக்டர் ப்ரிட்ஜோப் நான்சன் என்ற ஆய்வுக்கப்பலுக்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது https://www.virakesari.lk/article/215606
-
வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை!
அரசின் காணி அபகரிப்பு வர்த்தமானிக்கு எதிராக சுமந்திரன் சட்ட நடவடிக்கை! காணி அபகரிப்பு நோக்கத்துடன் 28.03.2025இல் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்வது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கைவிரித்தமையால் நாளை ஞாயிற்றுக்கிழமை நில உரிமையாளர்களைச் சந்தித்து சட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “வடக்கில் தமிழர்களின் நில இருப்பை உறுதிப்படுத்த, கடந்த மார்ச் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட, வடக்கு மாகாணத்தில் வவுனியா தவிர்ந்த நான்கு மாவட்டங்களில் 5,940 ஏக்கர் காணியை அரச காணியாக சுவீகரிக்கும் அரசின் வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக நாம் தொடர்ந்து ஆட்சேபனைகளைத் தெரிவித்திருந்தோம். மூன்று மாத காலத்தில் மக்கள் தமது காணிகளுக்கான ஆவணங்களைச் சமர்ப்பித்து உரித்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற அந்த நிலைப்பாட்டை அரசு மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தினோம். இவ்வாறான நிலையில் அரசு, காணி அமைச்சின் மூலம் ஒரு கடிதம் வெளியிட்டபோதும் அது சட்ட வலுவற்றதாகவே பார்க்கப்படும். பிரதமர் நேற்று வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தபோதும் ஓர் உறுதியான பதிலையோ அல்லது வர்த்தமானியை இரத்துச் செய்யும் நம்பிக்கையையோ வழங்காதமையால் நாம் அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராகவுள்ளோம். இதன் முதல் கட்டமாக 4 மாவட்டங்களிலும் அறிவிக்கப்பட்ட பிரதேசங்களின் நில உரித்தாளர்களுக்குத் தேவையான இலவச சட்ட உதவிகளை வழங்கும் வகையில் அந்த இடங்களுக்கே சட்டத்தரணிகள் குழாம் நேரில் வருகை தரவுள்ளது. இதற்கமைய நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு வெற்றிலைக்கேணி ரம்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் இந்தச் சட்ட உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதி மக்கள் இதில் பங்குகொள்ளலாம். இதேநேரம் ஏனைய மாவட்டங்களில் இடம்பெறும் பணிகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்” என்றார். https://www.samakalam.com/அரசின்-காணி-அபகரிப்பு-வர/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இங்கிலாந்து மைதானங்கள் இந்திய வீரர்களுக்கு சோதனை தருபவை. அனுபவமிக்க வீரர்கள் கூட திணறுவார்கள்.. இந்தமுறை இந்தியா நல்ல அடிவாங்கிக்கொண்டு திரும்பும்😄
-
போரின் பின்னரான அறம்: பறைதலும் பாடுதலும்
போரின் பின்னரான அறம்: பறைதலும் பாடுதலும் மீநிலங்கோ தெய்வேந்திரன் May 23, 2025 | Ezhuna இலங்கையின் சமகாலச் சூழலில் மூன்று விடயங்கள் தவிர்க்கவியலாமல் செல்வாக்குச் செலுத்துகின்றன. முதலாவது மூன்று தசாப்தகால யுத்தம்; இரண்டாவது போரின் முடிவின் பின்னரான இயங்கியல்; மூன்றாவது பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவுகளும். இவை மூன்றும் தன்னளவிலும், இலங்கைச் சமூகத்திலும் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் அனைத்தும் கவனிக்கப்படவுமில்லை, கருத்தில் கொள்ளப்படவுமில்லை. சமகாலத்தைப் பொருள்கொள்ளல் என்பது வெறுமனே அன்றாடக் கதையாடல்களுக்குரியவற்றுடனோ அல்லது பொதுப்புத்தியில் எப்போதும் நிலைத்திருக்கும் விடயப்பரப்புகளுடனோ மட்டும் நின்றுவிடுவதல்ல. இலங்கைச் சமூகப் படிநிலையில் நலிந்தோரின் கதைகள் சொல்லப்பட வேண்டும்; அதுசார் வினாக்கள் எழுப்பப்பட வேண்டும். இலங்கையின் சமகாலம் குறித்த பெரும்பான்மையான எமது உரையாடல்கள் கவனம் குவிக்கத் தவறும் விடயங்களையும் அமைதியாகக் கடந்து செல்லும் களங்களையும் ‘சமகாலத்தைப் பொருள்கொள்ளல்: கவனம்பெறா அசைவியக்கங்கள்’ எனும் இத்தொடர் பேசமுனைகிறது. தொடக்கக் குறிப்புகள் இலங்கையில் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. போருக்குப் பிந்தைய இக்காலப்பகுதியில் தமிழ்ச்சமூகம் எதிர்நோக்கிய முக்கிய சவால் அறம் பற்றியது. அது அரசியலில், ஆக்க இலக்கியத்தில், பொருளாதாரத்தில், அன்றாட சமூக அசைவியக்கத்தில் என அனைத்திலும் தாக்கம் செலுத்திய ஒன்றாக – இன்னும் சரியாகச் சொல்வதாயின் விமர்சனத்திற்குரியதாக – இருந்து வந்திருக்கிறது. ஒருவருக்கு அறமாகத் தெரிகின்ற ஒன்று இன்னொருவருக்கு அறமாகத் தெரிவதில்லை. ஒருவர் அறமற்றதாகக் கருதும் ஒரு செயலை இன்னொருவர் அறம் என்ற வியாக்கியானத்தோடு நியாயப்படுத்துகிறார். இதுவே போருக்குப் பிந்தைய கடந்தகால அனுபவமாகும். நாட்டின் வடக்குக் கிழக்கில் போருக்குப் பிந்தைய ஒன்றரைத் தசாப்தகாலத்தில் மேற்கொண்ட பல்வேறு களஆய்வுகளில் பல்வேறு தரப்பினர் பல்வேறு சூழ்நிலைகளில் அறம் என்கிற வினாவைத் தொடர்ச்சியாக எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதில் பெரும்பான்மையானவை அரசியல் அறம் சார்ந்த கேள்விகள். ஆனாலும் அதற்குமப்பால் சமூகம்சார்ந்த, பொருளாதாரம்சார்ந்த அற நிலைப்பாடுகள், விழுமியங்கள், நெறிமுறைகள் குறித்த வினாக்கள், விசாரணைகள் மக்களிடமிருந்து எழுந்துள்ளன. ஆனால் அவை கவனத்திற்குரியனவாக அமையவில்லை. அக்கேள்விகளை, விசாரணைகளை இக்கட்டுரை கவனத்திற்கொள்கிறது. இரண்டு கேள்விகளுடன் இதைத் தொடங்குவது பொருத்தம். போருக்குப் பிந்தைய சமூகங்களில் அறம்சார் சிக்கல்கள் ஏன் குறிப்பாக சர்ச்சைக்குரியதாகின்றன என்ற வினா முக்கியமானது. இரண்டாவது, அறம்சார் வேறுபட்ட வியாக்கியானங்கள் எவ்வாறு சமூகத்தின் மீள்எழுச்சியைப் பாதிக்கின்றன. இவ்விரண்டு வினாக்களும் சற்று விரிவான விளக்கத்தை வேண்டுவன. போருக்குப் பிந்தைய சமூகங்கள் பெரும்பாலும் கடுமையான மோதல்களின் காலகட்டங்களிலிருந்து உருவாகின்றன; உடைந்த சமூகங்கள், சிதைந்த நம்பிக்கை மற்றும் நீதி மற்றும் ஒழுக்கம் பற்றிய முரண்பாடான கதைகளை விட்டுச்செல்கின்றன. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட காரணிகளால் அறம் என்பது சிக்கலுக்குரியதாகிறது. இதற்கு அடிப்படையாக நான்கு காரணிகளை நாம் இனங்காணலாம். 1. தார்மீகத் தெளிவின்மை மற்றும் அதிர்ச்சி: போர் பெரும்பாலும் சரிக்கும் தவறுக்கும் இடையிலான கோடுகளை மங்கலாக்குகிறது; ஏனெனில் போர்க்காலங்களில் உயிர்வாழ்வது என்பது தனிநபர்களையும் குழுக்களையும் அமைதிக்கால நெறிமுறை விதிமுறைகளுக்கு முரணான செயல்களைச் செய்யக் கட்டாயப்படுத்தக்கூடும். எடுத்துக்காட்டாக, சியரா லியோன் உள்நாட்டுப் போரில் (1991–2002) குழந்தைப் போராளிகள் பாதிக்கப்பட்டவர்களாகவும் குற்றவாளிகளாகவும் இருந்தனர்; இது பொறுப்புக்கூறல் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளைச் சிக்கலாக்கியது. இலங்கை நிலவரத்தில் விடுதலைப்புலிகள் சிறுவர்களைப் போராளிகளாகப் பயன்படுத்தியமை, தற்கொலை குண்டுவெடிப்பு மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பு ஆகிய குற்றச்சாட்டுகள் அக அறச்சங்கடங்களை உருவாக்கியதால், போர் தார்மீகக் கோடுகளை மங்கச் செய்தது. அதே நேரத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை போன்ற அரசு அட்டூழியங்கள் அறம்சார் அவலத்தின் இன்னொரு பக்கத்தை எடுத்துரைத்தன. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாடு மற்றும் அரசாங்க வன்முறைக்கு இடையில் சிக்கிய தமிழ்ப் பொதுமக்கள், உயிர்வாழ்வினால் இயக்கப்படும் தார்மீக சமரசங்களை எதிர்கொண்டனர்; பொறுப்புக்கூறலைச் சிக்கலாக்கினர். 2. போட்டியிடும் கதையாடல்கள்: வெவ்வேறு குழுக்கள் – பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள் மற்றும் பார்வையாளர்கள் – நீதி மற்றும் பொறுப்புக் குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர். நிறவெறிக்குப் பிந்தைய தென்னாபிரிக்காவில், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் தண்டனை நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகளுடன் மறுசீரமைப்பு நீதியைச் சமநிலைப்படுத்துவதில் சவால்களை எதிர்கொண்டது, மன்னிப்புக்கும் பழிவாங்கலுக்கும் இடையிலான பதட்டங்களை எடுத்துக்காட்டுகிறது. இலங்கையில் தமிழ்ச் சமூகத்திற்குள், விடுதலைப் புலிகள் மீதான மாறுபட்ட கருத்துகள் – சிலரால் சுதந்திரப் போராளிகளாகவும், மற்றவர்களால் ஒடுக்குமுறையாளர்களாகவும் – அறம்சார் பதட்டங்களை உருவாக்குகின்றன. வெளிப்புறமாக, சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசின் ‘வெற்றி’ மற்றும் போர்க்குற்றங்களை மறுப்பது பற்றிய கதையாடல்கள் இதை இன்னொரு தளத்திற்கு நகர்த்துகின்றன. 3. வளப் பற்றாக்குறை: போருக்குப் பிந்தைய சமூகங்கள் பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட வளங்களை எதிர்கொள்கின்றன. புனரமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு அல்லது இழப்பீடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் கடினமான தேர்வுகளைக் கட்டாயப்படுத்துகின்றன. போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்பு சிங்களவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. தமிழ்ப் பகுதிகளில் நில அபகரிப்புகள், புத்த விகாரைகளின் கட்டுமானம் மற்றும் தொல்லியல்துறை மூலம் அரசு ஆதரவுடன் ‘சிங்களமயமாக்கல்’ மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்ச் சமூகங்களுக்கான வரையறுக்கப்பட்ட வளங்கள் பொருளாதார மீட்சிக்கு எதிராக நீதிக்கு முன்னுரிமை அளிப்பதைவிட அறம்சார் விவாதங்களை அதிகரிக்கின்றன. 4. நிறுவனரீதியான அவநம்பிக்கை: போர் பெரும்பாலும் நிர்வாகக் கட்டமைப்புகளை அழித்து, அறம்சார் முடிவெடுப்பதில் சட்டபூர்வமான தன்மை இல்லாத ஒரு வெற்றிடத்தை விட்டுச்செல்கிறது. குறிப்பாக போரின் முடிவு ஒரு தரப்புக்கு வெற்றியைத் தருகின்றபோது தோல்வியடைந்த தரப்பின் மக்கள்கூட்டம் நிறுவனரீதியாக ஒதுக்கப்படுகிறது. அதிகளவான இராணுவப் பிரசன்னம், கண்காணிப்பு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தன்னிச்சையான கைதுகள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை உள்ளிட்டவற்றைத் தமிழ்ச் சமூகம் எதிர்கொள்கிறது. இது அரசு நிறுவனங்கள் மீதான நம்பிக்கையைச் சிதைத்து, அறம்சார் நிர்வாகத்தை மழுப்பலாக்குகிறது. அகமுரண்பாடுகள்சார் அறம் 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகம், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில், ஆழமான அறம்சார் சவால்களை எதிர்கொண்டுள்ளது. போருக்குப் பிந்தைய சூழலில் தார்மீகத் தெளிவின்மை, போட்டியிடும் கதையாடல்கள் மற்றும் திட்டமிட்ட ஓரங்கட்டல் ஆகியவை பல்பரிமாணரீதியில் அறம் என்கிற விடயத்தை ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக மாற்றியுள்ளது. தமிழ்ச்சமூகத்தில் நிலவும் அக முரண்பாடுகளைப் புற முரண்பாடுகள் மேவியுள்ளதால், அகமுரண்பாடுகள் சார்ந்த விடயங்கள் பேசப்படுவது குறைவு. இந்த விடயங்கள் மூன்று முக்கியமான தளங்களில் சிக்கலானவை. இதனாலேயே தமிழ்ச் சமூகம் அறம்சார் அம்சங்களைச் சவாலுக்குட்படுத்தும் உள் முரண்பாடுகளுடன் போராடுகிறது: 1. விடுதலைப்புலிகளின் மரபு மற்றும் பொறுப்புக்கூறல்: விடுதலைப் புலிகளின் எதேச்சதிகாரத் தந்திரோபாயங்கள், எதிர்ப்பை அடக்குதல் மற்றும் அவர்களின் அரசியல் எதிராளிகளை – தமிழர்களை குறிவைத்தல் உட்பட்டவை ஒரு சிக்கலான சித்திரத்தை வழங்குகின்றன. இது அவர்களின் போராட்டத்தை மகிமைப்படுத்துவதற்கும் அவர்களின் துஷ்பிரயோகங்களை ஒப்புக்கொள்வதற்கும் இடையிலான அறம்சார் கேள்விகளை எழுப்புகின்றன. எடுத்துக்காட்டாக, 1980களில், போட்டியாளர்களான தமிழ்ப் போராளிக் குழுக்களை விடுதலைப்புலிகள் ஒழித்தது; இது சமூகத்திற்குள் தொடர்ந்து பிளவுகளை உருவாக்கியது. இந்த முரண்பாடுகள் ஒரு பகிரப்பட்ட அறம்சார் கட்டமைப்பைச் சுற்றி ஒன்றிணைவதற்கான முயற்சிகளைச் சிக்கலாக்குகின்றன. 2. சாதி மற்றும் பாலினம்: சாதிப் படிநிலைகள் மற்றும் ஆணாதிக்க விதிமுறைகள் போன்ற உட்சமூகக் கட்டமைப்புகள், அறம்சார் பதட்டங்களை உருவாக்குகின்றன. போருக்குப் பிந்தைய காலத்தில், தமிழ்ப் பெண்கள், குறிப்பாக முன்னாள் போராளிகள், களங்கம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, 49% பேர் பதட்டத்தையும் 42% பேர் மனச்சோர்வையும் அனுபவிக்கின்றனர். இது பெரும்பாலும் சமூக எதிர்பார்ப்புகளால் அதிகரிக்கிறது. தமிழ்ச் சமூகத்திற்குள் சாதி அடிப்படையிலான பாகுபாடு, ஒற்றுமையை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. அதேவேளை போருக்குப் பிந்தைய சமூகத்தில் சாதிய மீளெழுச்சி சிக்கலான சமூகக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. 3. புலம்பெயர்ந்தோர்/ உள்ளூர் முன்னுரிமைகள்: புலம்பெயர்ந்த தமிழரில் ஒரு தொகுதியினர், சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் இனப்படுகொலை அங்கீகாரத்தை வலியுறுத்துகின்றனர். ஆனால் உள்ளூரில் தமிழ் மக்கள் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருத்தாலும்கூட பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நில உரிமைகள் போன்ற உடனடித் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இந்த வேறுபாடு கவனத்திற்குரியது. இது யாருடைய நலன்கள் முக்கியமானவை, யார் யாருக்காகப் போராடுவது போன்ற அறம்சார் விவாதங்களை உருவாக்குகிறது. இந்தப் பின்புலம் மிகவும் முக்கியமானது. இம்மூன்று விடயங்களும் இன்றும் தமிழ் மக்களின் அறம்சார் செயலின்மைகளின் மையமாக உள்ளன. ஒரு சமூகமான எமது கடந்தகாலத்தை சுயவிமர்சன நோக்கில் பார்ப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்ற வினாவை இங்கு எழுப்புவது முக்கியமானது. போரின் முடிவின் 16 ஆண்டுகளின் பின்னர் ஈழத்தமிழரின் வாழ்வியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றதா என்பதை யோசித்தால் அரசியல் அரங்கிலும் பொருளாதார அரங்கிலும் அதற்கான பதிலைப் பெறுவது சிரமம் என்பதை நாமறிவோம். அதற்கப்பால் அறம்சார்ந்த சமூகமாக, அகமுரண்பாடுகளை அடையாளங்கண்டு ஏற்றுக்கொண்ட சமூகமாக நாம் இல்லை என்பதே இன்றைய முக்கிய சவாலாகும். இது விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் பேசுவதற்குச் சிரமமான சங்கடமான ஒரு விடயமாகும். தமிழ்த் தேசியத்தின் எதிர்காலமும் தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலமும் பற்றிய தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்குக் கடந்தகாலம் பற்றிய தெளிவான புரிதல் தேவை என்பதையும், விடுதலைப் புலிகளைப் பற்றிய விவாதங்கள் தவிர்க்க இயலாதன என்பதையும் நாம் ஏற்கவேண்டும். அதேவேளை நடந்து முடிந்த அனைத்தையுமே விடுதலைப் புலிகளின் சாதனைகளாகவோ மாறாக அவர்களது குற்றங்களாகவோ நோக்குகின்ற தன்மையினின்று விடுபடுவதும் முக்கியமானது. இது முக்கியமான ஒரு சமூகச் சவாலாகும். அறம் குறித்த பார்வைகள் இங்கு ஆழமான நேர்மையான பார்வையை வேண்டி நிற்கின்றன. விடுதலைப் புலிகளை போராட்டத்தின் மையச்சக்தியாக ஆக்கிய அகக் காரணிகளையும் புறக் காரணிகளையும் விளங்கிக் கொள்வது முக்கியமானது. தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையான பலவீனங்களை, மூர்க்கத்தனமான, நேர்மையற்ற நியாயப்படுத்தல்களைத் தவிர்த்து நோக்க வேண்டியுள்ளது. இதை வழிப்படுத்துவதற்கு அறம்சார்ந்த பார்வை முக்கியமானது. ‘இன ஒற்றுமை’ என்ற கருத்தாக்கம் விடுதலைப் புலிகளின் தோற்றத்திற்கு மிக முந்தியது. இது தமிழ்த்தேசிய அரசியலின் முக்கிய கருவியாகும். இது அகமுரண்பாடுகளை மறைத்து தமிழர் என்ற பொது இனத்துவ அடையாளத்துக்குள் அனைத்தையும் கரைக்கும் ஒரு தந்திரமாகவே செயற்பட்டது என்பது உண்மை. அதேவேளை மாற்று அரசியல் ஒன்று உருவாவதற்கெதிராகப் பழமைவாதம் ‘தமிழர் ஒற்றுமை’ என்ற கருவியைப் பலவாறாகவும் பயன்படுத்தி வந்துள்ளது. அதன்விளைவாக, மக்கள் அரசியல் என்ற கருத்தாக்கம் தமிழ் அரசியற் பரப்பில் வேரூன்றத் தவறியது. அதைவிடவும் சாதி, பால், பிரதேசம் என்பன சார்ந்த முரண்பாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அப்பிரச்சினைகளை இல்லை என மறுப்பதுடன் அவற்றைப் பற்றிப் பேசுவது தமிழ் மக்களைப் பிளவுபடுத்தும் என வாதிப்பதும் தமிழ்த் தேசியவாதிகட்கு வழமையாகிவிட்டது. அவற்றை மறுத்ததால் அவை இல்லாமல் போய்விடவில்லை. இன்று அவை, முன்பு நாம் அறிந்திருந்த அதேயளவு உக்கிரத்துடன் தொடருவதை நாம் அறிவோம். ஒரு தேசிய இனத்தின் விடுதலையை அதன் அக முரண்பாடுகளைப் புறக்கணித்து வெற்றிகரமாக முன்னெடுக்க இயலாது என்பதை இனியாவது நாம் உணர வேண்டும். தேசியத்தினுள் செயற்படும் உயர் வர்க்க, சாதிய, ஆணாதிக்க, பிரதேச மேலாதிக்கச் சிந்தனைகள் சரிவரக் கையாளப்படாதபோது, அவை ஏற்படுத்தும் விளைவுகள் போராட்டத்தை மட்டுமன்றித் தேசிய இன அடையாளத்தையும் கடுமையாகப் பாதிக்க இயலும் என்பது நம் கவனத்துக்குரியது. விடுதலைப் புலிகளின் போரின்போது தமது உயிர்களை ஈந்தோரும் வேறுபலவாறான தியாகங்களைச் செய்தோரும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைச் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளுமே. அவர்களது வர்க்கப் பின்னணியைச் சேர்ந்தோரே இன்று தமது வீடுகட்டும் நிலங்கட்கும் தொழில்கட்கும் மீள இயலாமல் அல்லற்பட்டுக்கிடப்போரில் பெரும்பாலானோராக உள்ளனர். இவை ஒவ்வொன்றும் ஆழமாகப் பேசப்படவும் விவாதிக்கப்படவும் வேண்டும். விடுதலைப் போராட்டம் என்பது அறம்சார்ந்தது என்ற புரிதலை நோக்கி நகர்தலும் அதை ஆழமாக விமர்சன நோக்கில் பார்க்கப் பழகுதலும் இன்றைய சூழலில் தவிர்க்கவியலாதது. சமூக அசைவியக்கங்களில் அறம்சார் கேள்விகள் போருக்குப் பிந்தைய ஈழத்தமிழ்ச் சமூகத்தின் அறம் குறித்த பார்வைகள் மிகவும் சிக்கலானவை. போரின் வீரமரபையும் விடுதலைப்போராட்டத்தையும் மையப்படுத்திய அறம்சார் பார்வை ஒருபுறமும், சமூகத்தின் பண்பாடு, மாண்பு, மானம், மரியாதை நோக்கிலான அறம்சார் பார்வை மறுபுறமுமாக கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஏராளமான வினாக்கள் எழுப்பப்பட்டு வந்துள்ளன. ஆனால் இவ்வினாக்கள் ஒரு விடயத்தைத் தொடர்ச்சியாகத் தவறவிடுகின்றன. அது களயதார்த்தம் பற்றியது; அம்மக்களின் வாழ்நிலை பற்றியது. நீண்டகாலமாகப் பழக்கப்பட்ட சிந்தனைமுறை பற்றியது. ஆழமாக ஊறிப்போன பண்பாட்டு வரைமுறைகள் பற்றியது. முன்னாள் போர் வலயங்களுக்கு மக்கள் மீளக்குடியேற்றப்பட்டு சில ஆண்டுகள் கடந்திருந்த நிலையில் கள ஆய்வுக்காக கிளிநொச்சியில் இருந்து அரச பேரூந்தில் பயணமொன்றை மேற்கொண்டிருந்தேன். ஒரு தரிப்பிடத்தில் பேரூந்து நின்றது. இரண்டு நடுத்தர வயதுப் பெண்கள் பேரூந்தில் முன்பக்கமாக ஏறினார்கள். அவர்களின் தோற்றம் ஏழ்மையை உறுதிசெய்தது. வாடி மெலிந்த தேகம், ஆனால் முகத்தில் நம்பிக்கையும் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளும் இருந்தன. யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தார்கள். எனக்குப் பின்னால் இரண்டு ஆண்குரல்களின் உரையாடலைத் தற்செயலாகக் கேட்கக் கிடைத்தது. அந்த உரையாடல் இவ்வாறு தொடர்ந்தது: “இதுகள் அடக்க ஒடுக்கமாக வீட்டில் இருந்திருக்கலாம். போராடப் போறம் என்று போய் எல்லாத்தையும் சீரழிச்சு இண்டைக்கு நடுத்தெருவில நிக்கிதுகள்.” “இவயின்ர அப்பா, அம்மாவைச் சொல்லோனும். அவையள் எல்லோ கண்டிச்சிருக்கோணும்”. “அப்படிச் சொல்லேலா, இவையளுக்கு அறிவெங்க போனது.” “இதுகள் இயக்கத்துக்குப் போகேக்க 16 வயதுகூட இராது”. “எல்லாம் முடிஞ்சுபோச்சு. இப்ப இவையளுக்கு யாருமில்லை”. இதற்கு மேல் அந்த உரையாடலைக் கேட்க மனமில்லாமல், அவ்விடத்தில் இருந்து எழுந்து பேரூந்தின் பின்னால் நடக்கத் தொடக்கினேன். அப்போது அக்குரல்களுக்கு உரியவர்கள் யார் என்பதை அறியும் நோக்கில் அவர்களை நோட்டமிட்டேன். அக்குரல்களிற்குரியவர்கள் கிட்டத்தட்ட 60 வயதை உடையவர்கள்; உள்ளூர்க்காரர்கள்; சாரமும் பழைய சேர்ட்டும் அணிந்திருந்தார்கள். அவர்களுக்கு இப்பெண்களை நன்கு தெரிந்திருந்தது என்பதையும் என்னால் உணர முடிந்தது. இந்நிகழ்வு அறம்சார் கேள்விகள் பலவற்றை எழுப்புகிறது. முதலாவது, இந்தப் பெரியவர்களின் விமர்சனத்தை எவ்வாறு எடுத்துக்கொள்வது. அந்தப் பெரியவர்கள் வெளிநபர்கள் அல்லர். அவர்களும் போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து, மீளக்குடியேறி அதேசமூகத்தில் வாழ்பவர்கள். அவர்களின் கருத்துகள்தான் அச்சமூகத்தின் பொதுக்கருத்து என்று எடுத்துக்கொள்வதா? அல்லது இரண்டு தனிநபர்களின் கருத்து என்று ஒதுக்கிவிடுவதா? விடுதலைப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு இருந்தது என்ற கருத்தை இந்த உரையாடல் தகர்க்கிறது. அவ்வாறு இருந்திருக்குமாயின், இவ்வாறான குரல்கள் எழுந்திருக்காதல்லவா? விடுதலைப் போராட்டம் குறித்த மக்களின் எண்ணவோட்டம் என்னவாக இருந்தது? இன்றும் பெண்கள் குறித்த எம்சமூகத்தின் பார்வை என்ன? இரண்டாவது, முன்னாள் போராளிகள் இவ்வாறு அனாதரவாய் விடப்பட்டமையை எவ்வாறு புரிந்துகொள்வது. உலகெங்கும் கோலாகலமாக ஈழத்தமிழர்கள் நிகழ்வுகளைச் செய்கிறார்கள். மாவீரர் தினங்கள், மே 18 எனப்பல நிகழ்வுகள் நடக்கின்றன. மில்லியன் கணக்கான பணம் சேர்க்கப்படுகிறது. ஆனாலும் வன்னி நிலப்பரப்பில் வாழும் ஒரு தொகுதி மக்கள் இவ்வாறு திக்கற்றவர்களாக விடப்பட்டிருப்பதை எவ்வாறு புரிந்து கொள்வது? இவ்விடத்தில் அறத்தின் அளவுகோல் என்ன? வன்னியில் ஒருதொகுதி மக்கள் அன்றாட வாழ்வுக்கே அல்லலுறும்போது, இவ்வாறான கொண்டாட்டங்கள் அறமா? அல்லது இரண்டையும் பிரித்துப் பார்க்க வேண்டுமா? பொறுப்புக் கூறவேண்டியவர்கள் புலம்பெயர்ந்த தனிமனிதர்களா? அமைப்புக்களா? அல்லது விடுதலைப்புலிகளின் கட்டமைப்புகளைத் தொடர்ந்து பேணுகிறோம் என்று அறிவித்துக் கொண்டவர்களா? இந்த உதாரணம் அறம்சார்ந்த அம்சங்களின் சிக்கல்தன்மையைப் புலப்படுத்துகிறது. அதேவேளை இந்தக் கேள்விகளுக்கு நாம் சமூகமாக முகம் கொடுத்தாக வேண்டும். இந்த மனநிலை ஈழத்தமிழரிடம் இல்லை என்று அப்பால் நகர்ந்துவிட முடியாதபடியே நிகழ்வுகள் நடக்கின்றன. அதை நாம் ஏற்றாக வேண்டும். போரின் வடுக்களைச் சுமந்த ஒரு சமூகத்தின் அடிப்படை அறம் யாது? அதன் அளவுகோல்கள் என்ன? அவை சரியானவையா? போன்ற பதிலில்லாக் கேள்விகள் இன்றும் எம்மிடமுண்டு. மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டபோது உயர் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வாழ்ந்துவந்த காலப்பகுதியில் அம்மக்கள் குறித்த ஏராளமான கதைகள் உலாவின. அவை கதைகள் என்பதைவிட நிகழ்வுகளின் பொதுமைப்படுத்தல்கள் என்று சொல்வது பொருத்தம். அவ்வாறான ஒரு கதைதான் ‘மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களில் வலுவற்றோர் இராணுவத்தால் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்’ என்பது. இந்தக்கருத்து பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக புலம்பெயர்தேசங்களில் இது பாரிய பேசுபொருளானது. இது மிகக்கொடுமையான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இதன் செயற்படு தன்மையைப் புரிந்துகொள்வது முக்கியம் என்று நினைத்தேன். எனது பணியிடத் தேவையின் பொருட்டு, இந்த விடயத்தை இன்னும் கொஞ்சம் விரிவாக, அதன் ஆழ – அகலங்களை விளங்கிக்கொள்வதற்காக வன்னிக்குச் சென்றேன். எனக்கு நன்கு பழக்கமான மனிதாபிமானப் பணியாளர்கள் பலரைச் சந்தித்தேன். அவர்கள் எல்லோரும் சொன்ன ஒரு விடயம், ‘இது பேசப்படுவதைவிட மிகச் சிக்கலான ஒன்று’. ஒற்றைப் பரிமாணத்தில் இதைப் பார்க்க முடியாது. அதேவேளை பலர் இது குறித்து விரிவாகப் பேசுவது சரியாக இராது என்று கருதினர். இன்னும் சிலர், இராணுவப் பிரசன்னத்தை அகற்றுவதற்கு இந்தக் கதையாடல் அவசியமானது, எனவே இப்போது சொல்லப்படுகின்ற அதேகதையாடல் தொடர வேண்டும் என்று விரும்பினர். பெரும்பாலானோரது கருத்து, ‘இந்த அதிர்ச்சி வைத்தியம் ஏற்படுத்தும் கவனயீர்ப்பு ஈழத்தமிழரின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்திற்கு முக்கியமானது’ என்பதாகும். அவர்கள் குறித்த விடயத்தை ஆழமாக ஆராயாமல் இப்படியே விட்டுவிடுவது நல்லது என்று கருதினர். சிலருக்கு அதில் மாற்றுக்கருத்து இருந்தது. உண்மை முக்கியமானது. அதேவேளை திரிக்கப்பட்ட உண்மை, நன்மையைவிடத் தீமையையே அதிகம் செய்யவல்லது என்று அவர்கள் கருதினர். ஒரு நண்பர் என்னிடம் சொன்னார், “நான் உங்களை இதனோடு தொடர்புடைய சிலரிடம் அறிமுகப்படுத்துகிறேன். அவர்களுடன் நீங்கள் பேசுங்கள். பிறகு நீங்களே முடிவெடுங்கள்.” அதன்படி பலருடன் பேசக் கிடைத்தது. அதில் ஒரு உரையாடல் மட்டும் இன்றும் மனதை உலுக்கும் ஒன்றாக இருக்கிறது. அதைமட்டும் இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன். அது வன்னியின் மத்தியில் அமைந்துள்ள ஒரு வீடு. அதை வீடு என்று சொல்வதைவிட தங்குவதற்காக அமைக்கப்பட்ட ஒரு தற்காலிக இருப்பிடம் என்று சொல்வது பொருத்தம். மரம், தடிகள், தகரம் கொண்டு அமைக்கப்பட்டது. அங்கு ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் இருந்தார்கள். அந்தப் பெண்ணுக்கு அவ்வளவு வயதல்ல. 25 வயதினைத் தாண்டியிருக்காது. அப்பெண் மிகவும் வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் பேசினார். வாழ்க்கை குறித்த அச்சவுணர்வு அப்பெண்ணிடம் இருக்கவில்லை. அப்பெண் சொன்னவற்றைச் சுருக்கமாகத் தருகிறேன்: “நான் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தேன். சண்டை மீண்டும் தொடங்கிவிட்டது. இயக்கம் மீண்டும் ஆள்சேர்க்கத் தொடங்கியிருந்தது. என்னையும் கூட்டிப்போய்விடுவார்கள் என்று அப்பா பயந்தார். கலியாணம் கட்டிவைத்தால் பாதுகாப்பு என்று கருதினார். எனக்குத் திருமணம் நடந்தது. எனது கணவர் சிறுவியாபாரமும் விவசாயமும் செய்துவந்தார். மெதுமெதுவாக இடப்பெயர்வுகள் தொடங்கின. திருமணமானவர்களையும் இயக்கத்தில் இணைக்கத் தொடங்கினர். அதிலிருந்து தப்புவதற்காக நான் கர்ப்பமானேன். எனது கணவரை அழைத்துச் சென்றுவிட்டார்கள். யுத்தம் நிறைவடைவதற்கு சில நாட்களுக்கு முன்பே அவர் திரும்பி வந்தார். நாம் ஒன்றாகப் பாதுகாப்புத்தேடி தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தோம். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எங்கள்மீது விழுந்த குண்டில் எனது கணவர், எனது அப்பா, அம்மா என எல்லோரும் கொல்லப்பட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக நான் உயிர்தப்பிவிட்டேன். எனது குழந்தையை முகாமில் பெற்றெடுத்தேன். என் அம்மாவுக்கு சொந்தமான நிலத்தில் மீளக்குடியமர்ந்தேன். தரப்பாள் வீடுதான். எனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. எனது பிள்ளையை யாரிடமும் விட்டுவிட்டு கனதூரத்திற்கு வேலைக்குப் போகவும் இயலாது. கொஞ்சக்காலம் நிறுவனங்களின் உதவியில் வாழ்ந்தேன். பின்னர் வறுமையில் வீழ்ந்தேன். எனக்கு எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை. ஆண்துணையற்ற பெண்ணாக குழந்தையோடு வாழ்வது மிகவும் பாதுகாப்பற்றது. எனது சமூகமே என்னை ஒதுக்கியது. எனது ஊர் ஆண்களே என்னை அணுகினார்கள். உதவி செய்வதாகச் சொன்னார்கள். ஆனால் அதன் பின்னால் இருந்த நோக்கம் இரகசியமானதல்ல. ஒவ்வொரு இரவும் அச்சத்துடனேயே கழிந்தது. யாராவது இரவில் வலுக்கட்டாயமாக வந்துவிடுவார்களோ என்ற பதட்டம் இருந்தது. எங்கள் ஊர் ஆண்கள் ஒருபுறம் என்றால் இராணுவச் சிப்பாய்கள் மறுபுறம். அவர்களின் பார்வையும் விசாரணைகளும்கூட உறுத்தலாய் இருந்தது. ஒருநாள் குழந்தையுடன் நான் நடந்துசெல்லும்போது, தற்செயலாக எமது பகுதிக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி என்னைக்கண்டார். என்னைப் பற்றி விசாரித்தார். குழந்தைக்கு உணவு வாங்கும்படி சிறுதொகைப் பணத்தைத் தந்துவிட்டுப் போனார். இப்போதும் அடிக்கடி அவர் என் வீட்டுக்கு வருகிறார். என்னை அவர்தான் பார்த்துக்கொள்கிறார். அவர் என்னிடம் வருவதால் ஏனைய இராணுவச் சிப்பாய்கள் என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. நலவிசாரிப்புகள் இல்லை. அவ்வளவு பயம். எங்கள் ஊர் ஆண்களின் சொறிச்சேட்டைகள் இல்லை. நான் இப்போதுதான் பாதுகாப்பாக உணர்கிறேன்.” இது ஆழமான அதேவேளை பேசப்படாத, பேசப்படவிரும்பாத ஒரு பேசுபொருளை உடையது. சமூக அறம், மானம், போன்ற மறைப்புகளுக்கு அப்பால் போரின் பின்னான சமூகங்களில் வாழ்வோரின் நித்திய போராட்டத்தின் ஒரு சிறுதுளிதான் இது. இந்த விடயத்தில் அறம்சார் உயர்நிலை என்ற பெயரில் அந்தப் பெண்ணைக் குற்றம் சொல்லமுடியமா? இதைப் பாலியல்தொழில் என்ற வரையறைக்குள் கொண்டுவர இயலுமா? அந்தப் பெண்ணையோ, அவரின் நடத்தையையோ மதிப்பிடும் அதிகாரத்தை யார் தந்தது? இவ்வாறு பல கேள்விகளைத் தொடர்ச்சியாக நாம் எழுப்பிய வண்ணமே இருக்கலாம். போருக்குப் பிந்தைய சூழலில் அறம் என்பது எவ்வளவு சிக்கலானது என்பதைப் புரிந்துகொள்ள மேற்சொன்ன இரு உதாரணங்களும் போதுமானவை. இந்தப் பின்புலத்திலேயே தமிழ்ச் சமூகத்தின் அறம் பாடுதல், அறம் பறைதல் ஆகிய இரண்டையும் நோக்கியாக வேண்டும். போருக்குப் பிந்தைய சூழலில், பல குழுக்கள் தங்களது கொடுமைகளை, நஷ்டங்களை மற்றும் நினைவுகளை தம்மோடு சுமந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஒருவரோ ஒரு குழுவோ “நாங்கள் அறமானவர்கள்” என்று கூறுவது மற்றவர்களுக்கு எரிச்சலையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தலாம். இது உணர்வுபூர்வமான எதிர்வினைகளை ஏற்படுத்தும். எனவே அறம்சார் உயர்நிலையை எடுப்பதென்பது சிக்கலானது. அதேவேளை இது பல சமயங்களில் அதிகாரமிக்கவர்களின் ‘மதிப்பீட்டுச் சிதைவான பார்வை’ (Biased perception) ஆக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்; இது நீதிக்கு எதிரானதாகவும் இருக்கலாம். போரினால் சிதறுண்ட சமூகங்களில் பலநிலை உண்மைகள் (Multiple truths) உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். போர்க்காலங்களில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஒவ்வொரு சமூகத்துக்கும், குழுவுக்கும் தங்கள் பார்வை இருக்கிறது. “நாங்கள்தான் நியாயம் பேசுகிறோம்” என்று ஒருபக்கம் சொல்வது, மற்ற உண்மைகளை நிராகரிப்பதாகவும், புறக்கணிப்பதாகவும் கொள்ளப்படும். “நாங்கள் அறத்தோடு இருக்கிறோம்” என்று ஒருவர் சொல்வது, உண்மையான வருத்தங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள முடியாத சூழ்நிலையை உருவாக்கும். இது சமூகப் பிணைப்பைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும். நிறைவுக் குறிப்புகள் மோதல்களால் பாதிக்கப்பட்ட பிளவுபட்ட சமூகங்களில் போருக்குப் பிந்தைய சூழலில் அறம்சார் நிலைப்பாட்டை எடுப்பதானது பல முக்கிய சவால்களைக் கொண்டது. போருக்குப் பிந்தைய சமூகங்களில், வெவ்வேறு குழுக்களுக்கு இடையே ஆழமான நம்பிக்கையின்மை இருக்கும். அறவிழுமியம்சார் நிலைப்பாடு எடுக்க முயல்பவர்கள், ஒரு தரப்பினரால் சந்தேகத்துடன் பார்க்கப்படலாம் அல்லது அவர்களது நோக்கங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். இது ஒரு தரப்பை மற்றொரு தரப்பிடமிருந்து மேலும் தனிமைப்படுத்தலாம். போருக்குப் பிந்தைய சமூகங்களில், அடிப்படைத் தேவைகளான உணவு, உறைவிடம், மற்றும் பாதுகாப்பு ஆகியன முன்னுரிமையாக இருக்கும். இதனால், உயர்ந்த அற நிலைப்பாட்டை எடுப்பது பல சமயங்களில் அடிப்படைத் தேவைகளையே கேள்விக்குட்படுத்தும். இந்நிலையில் அறமா? உணவா” என்ற கேள்வி எழும்போது, உணவே பிரதானம். இந்த நிலைப்பாட்டை எடுத்தவர்களை அறமற்றவர்கள் என்று சொல்ல முடியுமா? இலங்கைச் சூழலில் போருக்குப் பிந்தைய தமிழ்ச்சமூகம் மீது புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் ஒருபிரிவினர் வைக்கிற ஒரு குற்றச்சாட்டு, ‘இவர்கள் அனைத்தையும் விட்டுவிட்டார்கள், மாறிவிட்டார்கள், விடுதலைப் போராட்ட உணர்வற்றவர்கள்.’ இந்தப் பிரிவினர் சோறா, சுதந்திரமா? என்ற வினாவுக்கு சுதந்திரமே பிரதானம் என்பவர்கள். ஆனால் வன்னியில் மக்களைப் பொறுத்தவரை முதலில் சோறு. ஏனெனில் அன்றாட உயிர்வாழ்க்கையே அவர்களுக்குச் சவாலானதாக இருக்கிறது. மக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாதபோது, அறம்சார் உயர்ந்த நிலைப்பாடு எடுப்பது ‘பயனற்ற’ அல்லது ‘எதார்த்தமற்ற’ ஒன்றாகவே கருதப்படுகிறது. தமிழ்ச்சமூகமாக நாம் கேட்கவேண்டிய சில கேள்விகள் உண்டு. நாம் அறம்பாட முதல் இந்த வினாக்களுக்கு இதயசுத்தியுடன் பதில்தேட விளைவது பயனுள்ளது: போருக்குப் பிந்தைய இலங்கையில் தமிழ்ச் சமூகத்திற்கு, ஏன் அறம்சார் சிக்கல்கள் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றன? தமிழ்ச் சமூகத்தின் சமூக மற்றும் அரசியல் மீட்சிக்கு எவ்வகையான உள் மற்றும் வெளிப்புற அறப்பிரச்சினைகள் சவால் விடுகின்றன? தமிழ்ச் சமூகத்திற்குள் உள்ள அக முரண்பாடுகள் அறம்சார் நெறிமுறைகளை எவ்வாறு கேள்விக்குள்ளாக்குகின்றன? அறம்சார் முன்னுரிமைகளை வடிவமைப்பதில் நீதி, நல்லிணக்கம் மற்றும் வள ஒதுக்கீடுகள் எவ்வகையான பங்கை வகிக்கின்றன? தமிழ்ச் சமூகத்திற்குள் ஒற்றுமை மற்றும் குணப்படுத்துதலை வளர்ப்பதற்கு, தமிழ்ச் சமூகம் இந்த அறம்சார் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்? About the Author ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ள ஞாலசீர்த்தி மீநிலங்கோ தெய்வேந்திரன் அங்கு சர்வதேச அபிவிருத்தி ஆய்வுகள் முதுகலைத் திட்டத்தை வழிநடத்துகிறார். பூகோளத் தெற்கில் புதுப்பிக்கத்தகு சக்தி மாற்றங்களின் சமத்துவமும் நீதியும் சார் அம்சங்கள் பற்றிய அவரது ஆய்வு, புவிசார் அரசியலின் இயக்கவியல் மீதும்; துப்புரவான சக்தி மாற்றங்களை எய்தலில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் கொள்கைச் சவால்கள் மீதும்; குறிப்பான கவனஞ் செலுத்துகிறது. இவர் கற்பித்தல், திட்ட முகாமை, பொதுக் கொள்கை, சர்வதேச அபிவிருத்தி ஆகியவற்றில் இருபது வருடப் பணி அனுபவம் உடையவர். ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் மானுடப் புவியியலில் முனைவர் பட்டம் பெற்றவராவார். https://www.ezhunaonline.com/post-war-morality/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளை புள்ளிகள் வழங்க தாமதாகும்.. கேம்பிரிட்ஜ் பயணத்தால் வந்து சேர நள்ளிரவு ஆகும்! @நந்தன் ஐ இப்போதைக்கு அசைக்கமுடியாது என்பதால் பொறுமை காக்கலாம்😜