Everything posted by கிருபன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளை ஞாயிறு 25 மே GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 67) ஞாயிறு 25 மே 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் GT எதிர் CSK ஐந்து பேர் மாத்திரம் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் 18 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் ஈழப்பிரியன் செம்பாட்டான் ஏராளன் நந்தன் அகஸ்தியன் சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 68) ஞாயிறு 25 மே 2:00 pm GMT டெல்லி - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH எதிர் KKR 15 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் 08 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு ஏராளன் நுணாவிலான் கிருபன் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரப் பையன்26 நிலாமதி வாதவூரான் ரசோதரன் தமிழ் சிறி குமாரசாமி கோஷான் சே அகஸ்தியன் இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 66வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் ஆட்டத்தில் சோபிக்கவில்லை என்றாலும், ஷ்ரெயஸ் ஐயரின் அதிரடியான அரைச் சதத்துடனும், ஜொஷ் இங்கிலிஸினதும், ஆட்டமிழக்காது 44 ஓட்டங்கள் எடுத்த மார்கஸ் ஸ்ரொயினதும் புயல்வேக ஆட்டங்களினாலும் 8 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் வெற்றி இலக்கைத் துரத்துவதற்காக தொடர்ச்சியாக வேகமாக் அடித்தாடினர். கருண் நாயரினதும், அரைச் சதம் அடித்த சமீர் ரிஸ்வியினதும் மின்னல் வேக ஆட்டங்களால் 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
- IMG_1064.jpeg
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெல்லி வெல்லுது.. நமக்கு முட்டை🥚🍳 போடுது😱
-
வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை!
வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை! adminMay 24, 2025 வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக பாராளுமன்றத்தின் குழு அறை 1 இல் நேற்று (23.05.25) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார். இதுவரை காலமும் வடக்கு மற்றும் கிழக்கில் நில உரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னைய அரசாங்கங்கள் மேற்கொண்ட திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன என்றும், காணிகளை சொந்தமாக வைத்திருப்பவர்களிடம் தங்கள் உரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதுடன், இதற்கு மக்களின் நம்பிக்கையை வெல்லும் முறையான வேலைத்திட்டம் தேவை என்றும் அவர்கள் தெரிவித்தனர். சில குழுக்கள் மோசடியாக நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்கும் என்று மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். பொதுமக்களின் சந்தேகங்களைப் போக்க முறையான வழிமுறையை அறிமுகப்படுத்தி, சட்டப்பூர்வ உறுதிப்படுத்தல்களுடன் மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது என்றும் மக்களின் நிலங்களை எந்த வகையிலும் கையகப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு எந்த எண்ணமும் இல்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அதன்படி, மக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்துரையாடிய பின்னர் எதிர்காலத்தில் ஒரு சரியான தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர், அதற்கான தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்கிரமசிங்க, மேலதிக அரச தலைமை வழக்குரைஞர் விக்கும் டி அப்ரூ, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், காணி பதிவுத் திணைக்களம், நில அளவைத் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், அரசாங்க அதிபர்கள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர். https://globaltamilnews.net/2025/215919/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை சனி 24 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 66) சனி 24 மே 2:00 pm GMT ஜெய்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS எதிர் DC 13 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா வாதவூரான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் டெல்லி கேப்பிட்டல்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் கந்தப்பு ஏராளன் ரசோதரன் நுணாவிலான் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 65வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர் இஷான் கிஷானின் மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் எடுத்த 94 ஓட்டங்களுடனும், அபிஷேக் ஷர்மா, ஹென்றிக் க்ளாஸன், அனிகெற் வேர்மா ஆகியோரின் கமியோ ஆட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஃபில் சோல்ற்றினதும் (62 ஓட்டங்கள்), விராட் கோலியினதும் (43 ஓட்டங்கள்) புயல்வேக ஆட்டத்தினால் ஆரம்பத்தில் வெற்றி இலக்கைத் துரத்துவதில் முன்னுக்கு நின்றாலும், இருவரினதும் விக்கெட்டுகள் பறிபோன பின்னர் வந்த வீரர்கள் நிலைத்து ஆடத் திணறியதால் இறுதியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 42 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
- IMG_0913.jpeg
-
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா?!
காயத்தோடு வடமராட்சி நவிண்டிலில் ஒரு வீட்டில் வன்னிக்கு வண்டி தயாராகும்வரை இருந்தார். தலைவரினதும் பொட்டரின் திறமைகளால்தான் தமிழன் என்று பெருமிதம் கொள்ளும் நிலை ஏற்பட்டது
-
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது! adminMay 23, 2025 மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் பீடாதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் காவற்துறையினரால் செய்யப்பட்டுள்ளார். அம்பாறை, உஹன காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவத்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் ஒருவரின் இரண்டு குழந்தைகளை முச்சக்கர வண்டியில் பாதுகாப்பற்ற முறையில் காவற்துறையினர் அழைத்துச் சென்றதாக கூறப்படும் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேரர் காவல் நிலைய வளாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டதை அடுத்து இந்தக் கைது நடந்தது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். https://globaltamilnews.net/2025/215893/
-
எட்டாவது திரை - தெய்வீகன்
எட்டாவது திரை - தெய்வீகன் அடைமழை பொழிவது எல்லாத் திரைகளிலும் தெரிந்தது. ஒரு சில துளிகள் கமராக்களின் கண்களில் தெறிந்து விழுந்து வீங்கிப் பின் வடிந்தன. நகரத்தின் வாகன நெரிசல் பெரும்பாலும் அத்தனை திரைகளிலும் நிறைந்திருந்தது. எனக்கருகிலிருந்த தொலைத்தொடர்பு ரேடியோ கருவண்டு போல அவ்வப்போது இரைந்து முனகியது. பாதுகாப்பு அதிகாரிகளின் குரல்கள், அந்த ரேடியோவில் விழுவதும் ஓய்வதுமாயிருந்தன. களத்திலிருந்து உத்தியோகத்தர்கள் அறிவித்த சங்கேதக் குரல் வழியான செய்திகளுக்குப் பதில் கொடுத்தேன். அதனை பதிவேட்டில் நேர விவரத்தோடு எழுதினேன். “Spring Street Security vehicle moving” கட்டுப்பாட்டு அறையிலுள்ள பெருந்திரைக்கு மேலுள்ள மணிக்கூட்டில் சரியாக மாலை ஐந்து மணி காண்பித்தது. முன்னைய இரவுப் பணியின் சோம்பலை பகல் தூக்கம் ஓரளவு துடைத்தெடுத்திருந்தாலும், மிதமான அசதி உடம்பில் இன்னும் மீதமிருந்தது. கட்டுப்பாட்டு அறைக்குள் வருவதற்குச் சற்று முன்னர், தயாரித்த சூடான தேனீர், ஆவியை எந்தியபடி மேசையில் வீற்றிருந்து உற்சாகமளித்தது. மெல்பேர்ன் நகரின் கிரிக்கெட் மைதானத்திற்கு முன்னாலுள்ள அத்தனை கமராக்களும் காட்சிகளின் துரிதத்தை எனது கண்களுக்குள் வார்த்தபடியிருந்தன. கமரா 1 – ஜொலிமென்ற் ரயில் நிலைய வாயில் கமரா 2 – புல்மென் ஹோட்டல் வாயில் கமரா 3 - ஸ்பிறிங்க வீதி (தெற்கு நுழைவாயில்) கமரா 4 – திறைசேரிப்பூங்கா நுழைவாயில் கமரா 5 – திறைசேரிப்பூங்கா விருந்தினர் மேடை கமரா 6 – திறைசேரிப்பூங்கா நிகழ்வரங்கு கமரா 7 – ட்ராம் தரிப்பிடம் - இலக்கம் 174 மெல்பேர்ன் பெருநகரின் பாதுகாப்பிற்காகப் பல்லாயிரக்கணக்கான கமராக்கள், ஒவ்வொரு மூலையிலும் பொருத்தப்பட்டிருந்தாலும், நகர் மையத்திலுள்ள ‘அக்மி’ மண்டபத்தின் கட்டுப்பாட்டு அறையில் எட்டுக் கமராக்களின் வழியாக, கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியிலுள்ள பகுதியின் வெளிக்கள நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான மெல்பேர்ன் நகர் கவுன்ஸிலின் பிரதான உத்தியோகத்தர்களில் ஒருவனாக நான் பணியாற்றி வந்தேன். என் முன்னாலிருக்கும் இந்த எண்-திரைகள் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தின் சுற்றாடலில் பொருத்தப்பட்டிருக்கும் கமராக்களின் வழியான காட்சிகளை நேரடியாகத் தருபவை. நகரின் மத்திய பிரதான தெருக்கள், அங்காடிகளுடன் ஒப்பிடும்போது நெரிசல் மிக்கவை இல்லாவிட்டாலும், இந்தக் கமராக்கள் ஒவ்வொரு நொடியும் புதிய காட்சிகளை திரைக்கு அனுப்பிக்கொண்டிருப்பவை. மெல்பேர்ன் எனும் பெரு நகரின் ஒரு துண்டை, இந்தக் கமராக்களின் வழியாகக் காவல் காக்கும் நான், இருளுக்குள் ஒளி மேயும் பசு. வாழ்வின் அசதியான காலங்கள் என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்த நாட்களில் இந்த வேலையில் இணைந்தேன். பதினைந்து வருடங்களை நிறைவுசெய்துவிட்டேன். திரைகளுடன் நானும் என்னுடன் இத்திரைகளும் பேசுகின்ற முடிவுறாப் பயணமாய் இந்தப் பணி ஆண்டுக் கணக்கில் விரிந்து பரந்தது. பின் அந்திப்பொழுதில் நகர் கலையும் மணித்துளிகளை நரைவிழுந்த இந்தத் திரைகள் ஆக்ரோஷமாகக் காண்பிக்கும். இந்தக் கமராக்களின் கண்களையும் அவற்றின் களைப்பையும்கூட நான் அறிவேன். இந்தப் பெருந்திரையின் முன்னால் இரவெனும் இனிய புலர்வுக்காகத் தினமும் காத்திருப்பேன். தவிர்க்கப்பட்டத் தெருக்களில் தரித்து நிற்கும் வாகனங்களை அகற்றும்படி களத்தில் பணிசெய்யும் அதிகாரிகளுக்குத் தகவல் சொல்வேன். காட்சிகளில் ஏதாவது புதிராய் நிகழ்ந்தால், அவற்றை எழுதிவைப்பேன். அவற்றின் தன்மை குறித்து மேலதிகாரிகளிடம் தகவல் சொல்வேன். இரவுச் சோதனைகளை மேற்கொள்ளும் களப்பணியாளர்களின் தகவல்களை எழுதிவைப்பேன். களத்திலுள்ள பணியாளர்கள் தொடர்ச்சியாக ரேடியோ மூலம் எனக்கு அனுப்புகின்ற தகவல்களைக் குறிப்பதும், தேவையேற்படும்போது பதிலளிப்பதும், அவர்களைக் குறிப்பிட்ட இடங்களுக்கு நகர்த்தும் அறிவுறுத்தல்களை அனுப்புவதுமாக - ஒரு கட்டுப்பாட்டு அறையிலிருந்து கொண்டு அலைவரிசைகளில் சஞ்சரிக்கும் அரூப அடையாளம் நான். கட்டடக் காடுகளுக்கு இடையில் பூத்திருக்கும் இந்தப் பெருநகரின் ஒவ்வொரு இரவும் புதிய இரவே. அவை முன்னைய இரவோடு ஒத்திருப்பதில்லை. இந்த இருளின் பெரு நடனம் மந்தகாசமானது. அடர் இருளில் ஒளித்திவலைகளாய் இடர்படும் மனிதர்களின் அழகும் வித்தியாசமானது. திரையில் காணும் அவர்களது அவசரமற்ற அசைவுகளையும் நிதானத்தையும் வியப்பேன். இருளுக்கு அவர்கள் அழிக்கும் மதிப்பையும் இருளால் அவர்கள் அடையும் அச்சத்தையும் கண்டு ரசிப்பேன். திறைசேரிப்பூங்காவில் ஓங்கி நிற்கும் ஒலிவ் மரங்களின் அசைவும், வீதி விளக்குகளின் அசையாமையும், நேரம் தவறாத ரயில் - ட்ராம் வண்டிகள் என நகரில் இடர்படும் வாகனங்கள் என்று சகல காட்சிகளும் என்னைச் சலிப்பின்றித் தாலாட்டுபவை. திரை ஒளியில் பூக்கின்ற என் விழிகள் இரண்டும் ஒவ்வொரு இரவையும் பத்திரமாய் ஏந்தும். பகல் பொழுதில் தூங்கும். மனிதர்கள் எனக்கு எப்போதும் திரையில் மாத்திரம் தோன்றும் உறவுடையவர்கள். என் தனிமையான வாழ்வுக்குத் தூரமானவர்கள். வீட்டிலிருந்து காரில் கிளம்பும்போதும் மனிதர்கள் கண்ணாடிக்கு வெளியில் தெரிபவர்கள். அவர்களுக்கான எனது பெறுமதி அவர்களது உருவங்கள் மாத்திரமே. இரவுப் பணியை ஆரம்பிக்கும்போது மாத்திரம், பகல்பணியை முடித்து வெளியேறும் ஹரால்ட்டைச் சந்திப்பேன். அவனைப் பார்க்கும்போது எனக்கு விநோதமாக இருக்கும். நான் திரைகளில் பார்க்கும் மனிதர்களுக்கு சற்று விநோதமானவனாக, பெரிய மூக்கும் வீங்கிய காதுகளும் உடையவன் அவன். அவனது கண்கள் மிகவும் அகன்றவை. அவன் அருகில் நிற்கும்போது சிலவேளைகளில் அச்சமாகவுமிருக்கும். இவன் ஏன் கமராக்களில் தெரிபவர்களைப்போல இயல்பானவனாக இல்லை என்றெண்ணுவதுண்டு. வாரத்தில் ஆறு நாட்கள் இரவுப்பணி செய்யும் ஒருவனுக்கும் இந்த மானிட ஆராய்ச்சி தேவையற்றது என்று என்னை நானே சமாதானம் செய்துகொள்வேன். ஆனால், எனது இருளில் இதழ் விரிக்கும் ஏழு கமராக்களும் எனக்கு ஏழு வகையான உலகைப் படைக்க வல்லவை. இந்த அறை எனக்கு ஒரு கருந்தடாகம் போன்றது. என் முன்னால் மலர்ந்திருப்பவை ஏழு கரு மலர்கள். ஒரு கமரா மாத்திரம் கரிய திரை. அது இயங்குவதில்லையா, அல்லது அதன் கண்களின் முன்னால் ஏதாவது நிரந்தர மறைப்பா? கடந்த பதினைந்து வருடங்களில் எத்தனையோ தடவைகள் எனது மேலாளரிடம் கேட்டுவிட்டேன். கவலைப்படவேண்டியதில்லை என்பதுதான் பதிலாகக் கிடைத்தது. அந்த எட்டம் திரை என் இரவுக்கு அப்பாலுள்ள ஏதோ மர்மமானது என்று விட்டுவிட்டேன். 2017 ஆம் ஆண்டு ஜூன் ஏழாம் திகதி. எனது பதினைந்து வருட நிறைவில் - தொடர் இரவுப் பணியைப் பாராட்டி – கட்டாயப் பணி ஓய்வு அறிவிக்கப்பட்டது. அது எனது உடல்நலத்தைக் கருத்திற்கொண்ட மேலிடத்தின் முடிவு. பணி செய்யும்போது வழங்கப்பட்ட அதேயளவு பணம் ஓய்வூதியமாக அறிவிக்கப்பட்டது. எனது பணியின் நேர்த்தியும் நேர்மையும் மெச்சப்பட்டது. ஆனால் என் உலகினால் அதனை ஓய்வாக ஏற்கமுடியவில்லை. நான் ஒரு புதிய இருளுக்குப் புலம்பெயர்ந்தேன். அங்கேயும் விழித்திருந்தேன். புத்தகங்கள் படித்து எனக்குள் புதிய திரைகளைத் திறந்தேன். என் முன்னால் கமராக்களற்ற இரவு எனக்கு அச்சத்தைத் தந்தது. நிகரில் நான் கண்ட இரவின் கருமை எரிச்சலாயிருந்தது. என் வீட்டின் ஜன்னலின் வழி தெரிந்த புதிய இருளை நாள்தோறும் காணப் பயின்றேன். இரவெல்லாம் அதில் புதிய வாசம் கிளர்ந்தது. என் படுக்கை அறையைத் தழுவிச் சரிந்திருக்கும் தைல மரக்கிளைகளின் அசைவுகளை கட்டிலில் உட்கார்ந்து பார்த்தேன். அவை திறைசேரிப்பூங்காவிலுள்ள கமராக்களில் தெரிந்த சிறிய கிளைகளைவிட மிகப்பெரியவை. விசித்திரமான ஒலிகளை எழுப்பக்கூடியவை. போகப்போக, பின் அந்திப்பொழுதில் தூக்கம்விட்டு எழுந்தபோது, நான் பல நாட்களாகக் காணாத ஜொலிமென்ற் ரயிலின் நினைவுகளால் தொந்தரவானேன். ஸ்பிறிங்க வீதியில் நேரம் தவறாது ஊர்ந்து வரும் ட்ராம் வண்டியின் முகத்தைக் காணாது துயருறத் தொடங்கினேன். சிறிய கை - கால்களை வீசியெறிந்து நகரிலோடும் மனிதர்களைக் காணாது எனது நினைவுகள் கொந்தளிக்கத் தொடங்கின.. அனைத்தும் என் முன்னால் திரண்ட காட்சிகளாய் கூடி நில்லாதது பெரும் களைப்பை ஏற்படுத்தியது. இரவு எனக்குள் கோபங்களால் கூடுகட்டத்தொடங்கியது. இரவின் வாசத்தை நுகர்வதற்காக, நடுநிசி தாண்டிய பிறகு வீட்டிலிருந்து இறங்கி வெளி வீதியில் கருமை அடர்ந்த பாதையில் நடைபோனேன். காலடியில் மிதிபட்ட சருகுகளின் சத்தம் முதலில் அச்சமூட்டின. மரங்களின் அசைவும் அதில் வளைந்து வீழ்ந்த காற்றும் அரியண்டமாயிருந்தது. இரவுக்குருவியொன்று தீடீரென்று வெட்டி வெட்டிக் கத்திக்கொண்டு தலைக்கு மேல் பறந்துபோனது. உடல் நடுங்கிப்போனேன். தூரத்தில அடர்ந்த வெளிச்சமும் மின்கம்ப ஒளிவிளக்குகளும் தெரிந்தன. ஜீரணிக்க மறுத்த ஒளிப்பந்துகள் பெருந்திரளாய் நெஞ்சை அழுத்தின. மீண்டும் வீட்டை நோக்கி நடந்தேன். வழி காட்டும் ஏழு திசைகளுமற்ற ஒரு வெட்டவெளியில் நான் நின்றுகொண்டிருப்பதாக உணர்ந்தேன். அன்றிரவு கண்ட அடர் வெளிச்சம் வெளியே செல்வதற்கு பயங்கர அச்சத்தைத் தந்தது. அந்த நினைவிலிருந்து மீண்ட ஒருவாரத்தின் பிறகு, பின்னிரவுப்பொழுதில் மீண்டும் நடைபோனபோது அவளைக் கண்டேன். எனது வீட்டுக்கு அடுத்த தெருவிலிருந்து பிரியும் சிறு ஒழுங்கையிலுள்ள இரண்டு மாடிக் கட்டடத்தின் வெளி விறாந்தையில் தற்செயலாக அவள் எதிர்ப்பட்டாள். அவள் மெல்லிய வெளிச்சத்தில் ஒல்லியான உடலை அசைத்து அசைத்து தன் நினைவை நெட்டுருக்கும் இசையோடு நடனமாடிக்கொண்டிருந்தாள். அவளை எனக்குக் காண்பித்த சிறு வெளிச்சம் அந்த வீட்டில் எங்கிருந்து ஒளிர்ந்தது என்று தெரியவில்லை. ஆனால், அது அவளுக்கென அளவாக உருவான ஒளியின் ஒத்தடம். நான் பணியிலிருந்து ஓய்வடைவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், ஐந்தாவது கமராவில் ஒரு நாளிரவு திறைசேரி விருந்தினர் மேடையில் கண்ட அழகிய பெண்ணின் முகத்தை ஒத்திருந்தது அவள் சாயல். அன்று அவள் அந்த விருந்தினர் மேடையில் தனியாக இருந்தாள். மங்கிய ஒளியில் அங்குமிங்கும் மெதுவாக நடந்தாள். நீண்ட யோசனையில் ஆழ்ந்தவளாகத் தெரிந்தாள். எனக்கு நல்ல ஞாபகமிருக்கிறது. அன்றிரவு நான் வேறு எந்தத் திரையையும் பார்க்காமல், அவள் மீது லயித்திருந்தேன். ஒரேயொரு திரையில் மாத்திரம் ஒளிர்ந்துகொண்டிருந்த அவளது உருவம், அதுவரை நானறியாத புது ரேகைபோல் ஒருகணம் எனக்குள் பதிந்தது. திடீரென அவள் மறைந்துபோனாள். என் கண்கள் அவசர அவசரமாக மிகுதி அனைத்துத் திரைகளைப் பாய்ந்து பாய்ந்து தேடின. எங்கேயும் காணவில்லை. எட்டாவது கருந்திரைக்குள் வீழ்ந்துவிட்டாளா? எப்படிப் பார்ப்பது? இதயம் வேகமாக அடித்தது. அவள் மறைந்துவிட்டாள். அங்கு மறைந்தவள் இங்கெப்படித் தோன்றினாள். வீட்டிற்கு மிக அருகில் சென்றேன். அவள் தன்னை மறந்து தொடர்ந்து நடனமாடியபடியே இருந்தாள். ஒளி விரல் தீண்டிய இருளின் இதழ்கள்போல நாணிச் சரிந்தாள். பின் எழுந்தாள். அவள் அசைவில் இசை அசைந்தது. மெல்லிய விரல்கள் சூடிய கைகளைத் தலைக்கு மேல் அசைத்து அசைத்து, அபிநயத்தோடு ஆடினாள். மெல்ல மெல்ல அவ்விசை எனக்குள்ளும் கேட்கத் தொடங்கியது. கரகரப்பில்லாமல் தொடர்ச்சியாக இசைக்கும் மெல்லிய ஒலி. இரவின் கருமையை ஒளியெனும் சிறு வாளால் ஓசையின்றிச் சீவுகின்ற அசாத்தியமான ஒலி. ரேடியோக்களின் இரைச்சலினால் துருப்பிடித்திருந்த எனது செவித்திரைகளை ஊடுருவிய அவ்வொலி, பாறைகளில் வழுக்கி விழுகின்ற சிறு நதியாய் எனக்குள் நிறைந்து குளிர்ந்தது. திடீரென அங்கு ஒரு இருள் வீழ்ந்தது. எதையும் காணமுடியவில்லை. மேலே அழகிய கருஞ்சுடராய் அசைந்துகொண்டிருந்தவளைக் காணவில்லை. அவளின் பின்னால் நாணத்தோடு ஒளிர்ந்துகொண்டிருந்த மெல்லிய வெளிச்சம் அணைந்துவிட்டது. இசையும் அஸ்தமித்துவிட்டது. என்னைச் சூழ இருட்டிருந்தது. என்னைப் பின்தொடர்ந்து வந்த இருட்டு எங்கேயும் வியாபித்திருந்தது. அவள் எங்கே? அவளை இரண்டாவது தடவையும் தவறவிட்டுவிட்டேனா? மறுபடியும் எட்டாம் திரைக்குள் அவள் வீழ்ந்துவிட்டாளா? எனக்காக ஒரு கணம் - ஒரேயொரு கணம் - இவ்வுலகு ஒரு துளி வெளிச்சம் தாராதா? அண்ணாந்து பார்த்தபோது, அருகிலிருந்த கம்பத்தில் ஒரு கமரா என்னையே உற்றுநோக்கியபடியிருந்தது. "கலைமுகம்” இதழின் 2025 - ஜனவரி - மார்ச் பதிப்பில் இச் சிறுகதை வெளியானது. https://www.theivigan.co/post/10017?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR57gaY84h7_qVGGUphN678Y6GsJ__YhKIGRLn4xgNEJTGXD-yZ4PyPX31Ck4w_aem_mctltdFu3dl1rkZqRBtwng
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கடத்தல் வழக்கில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் இருக்கும், பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரக்காந்தனின் அடிப்படை உரிமைகள் மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அத்துடன் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரன் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிள்ளையான் கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் 90 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் தாம் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டதன் ஊடாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அவர் உயர் நீதிமன்றில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதியரசர்களான மகிந்த சமயவர்தன மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது. இதன்போது குறித்த மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள நீதியரசர்கள் குழாம் தீர்மானித்து அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=325668
-
கொழும்பில் அதிகாரத்தை கைப்பற்ற கடும் போட்டி – பிரபா கணேசன் அரசாங்கத்திற்கு ஆதரவு
கொழும்பில் அதிகாரத்தை கைப்பற்ற கடும் போட்டி – பிரபா கணேசன் அரசாங்கத்திற்கு ஆதரவு May 23, 2025 10:44 am கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் படையை ஆதரிக்க அஞ்சல் பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தேசிய கூட்டணி முடிவு செய்துள்ளது. நேற்று (22) கூடிய கட்சியின் செயற்குழு இந்த முடிவை எடுத்ததாக கட்சித் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்தார். மேலும் கருத்துக்களை வெளிப்படுத்திய அவர், எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதியும் தனது கட்சியினரை அழைத்ததாகக் கூறினார். இருப்பினும், தனது கட்சி கொழும்பு மாநகர சபை மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும், எனவே தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் கொழும்பு மாநாகர சபையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றிருந்த் போதிலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்றிருக்கவில்லை. இதனால் ஆட்சியை கைப்பற்ற ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி எழுந்துள்ள நிலையில், உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஏனைய சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள. இதில் ஏற்கனவே பல தரப்பினர்களும் ஆளும் கட்சிக்கு ஆதரளிக்க முன்வந்துள்ள நிலையில், தற்போது அஞ்சல் பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தேசிய கூட்டணியும் ஆளும் கட்சியை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. இந்தக் கூட்டணியின் தலைவர் பிரபா கணேசன், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/power-struggle-in-colombo-support-for-praba-ganesan-government/
-
இலங்கை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை - IMF அறிவிப்பு
இலங்கை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை - IMF அறிவிப்பு கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி, IMF இன் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் நான்காவது மீளாய்வுடன் தொடர்புடைய ஊழியர் மட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தது. அதன்படி, இலங்கை தொடர்பாக IMF இன் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் நான்காவது மீளாய்வுடன் தொடர்புடைய ஊழியர் மட்ட ஒப்பந்தத்திற்கு இணைந்ததாக, IMF இன் நிறைவேற்று சபையின் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதற்காக இலங்கை IMF இன் ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என அதன் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசெக் சுட்டிக்காட்டியுள்ளார். இவர் இதனை, வாராந்திர IMF தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார். குறித்த நிறைவேற்று சபை ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இலங்கை நிறைவேற்ற வேண்டிய முக்கியமான இரண்டு விடயங்களை வலியுறுத்திய ஜூலி கொசெக், மேலும் கூறுகையில், செலவுகளை ஈடுகட்டும் வகையில் மின்சார விலை நிர்ணயத்தை மீண்டும் நிறுவுவது மற்றும் தானியங்கி மின்சார விலை சரிசெய்வு முறைமையின் உரிய செயல்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmb06bfbt00sxqpbszzq1y0b2
-
சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாயின் சடலம் மீட்பு
சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாயின் சடலம் மீட்பு adminMay 22, 2025 மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (22) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சிப்பாய் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த சம்பவமானது அச்சங்குளம் கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்ட கடற்படையின் கண்காணிப்பு காவலரணில் இன்று காலை 10. மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. முதல் கட்ட விசாரணைகளுக்காக சம்பவ இடத்திற்கு சென்ற முருங்கன் காவல்துறையினா் , தடயவியல் நிபுணர்கள் பார்வையிட்ட பின்னர் மன்னார் மாவட்ட நீதிபதி சென்று சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளின் பின்னர் இன்று மாலை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. உயிரிழந்த கடற்படை சிப்பாய் 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிய வருகிறது. குறித்த கடற்படை சிப்பாய் வங்காலை மற்றும் அச்சங்குளம் கடற்படை முகாமில் பணியாற்றி உள்ளார் எனவும் தெரியவருகின்றது. இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.மேலதிக விசாரணைகளை காவல்துறையினா் முன்னெடுத்து வருகின்றனர் https://globaltamilnews.net/2025/215869/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை வெள்ளி 23 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 65) வெள்ளி 23 மே 2:00 pm GMT லக்னோ - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB எதிர் SRH 18 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் ஐந்து பேர் மாத்திரம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி பிரபா செம்பாட்டான் வாதவூரான் ரசோதரன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் சுவைப்பிரியன் கந்தப்பு ஏராளன் நுணாவிலான் எப்போதும் தமிழன் இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 64வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர்கள் சூறாவளி போன்று பந்துகளை மைதானத்தின் எல்லைக் கோட்டைத் தாண்டி தொடர்ச்சியாக அடித்தாடியதாலும், மிச்சல் மார்ஷின் 64 பந்துகளில் எடுத்த 117 ஓட்டங்களுடனும், நிக்கொலஸ் பூரனின் ஆட்டமிழக்காது 27 பந்துகளின் எடுத்த 56 ஓட்டங்களுடனும் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 235 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்கள் சவாலான வெற்றி இலக்கை எட்டும் நோக்கில் வேகமாக அடித்தாட முயன்றபோது நட்சத்திர ஆரம்பத் துடுப்ப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழந்து டக்அவுட்டுக்குத் திரும்பினர். ஷாருக்கான் 29 பந்துகளில் 57 ஓட்டங்கள் எடுத்திருந்தாலும் வெற்றி இலக்கை அடையக் கூடிய ஓட்ட விகிதத்தில் தொடர்ச்சியாக ஆடாததால் இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 33 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
- IMG_0912.jpeg
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நேற்றைய போட்டியின் பின்னர் அணிகளின் நிலைகள்:
- IMG_0907.jpeg
-
அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுராவின் மனச்சாட்சியும்
அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுராவின் மனச்சாட்சியும் May 21, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) ஆரம்பிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமையுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைந்தன. காலஞ்சென்ற என். சண்முகதாசன் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சீனச்சார்பு) வாலிபர் இயக்கத்தின் ஒரு முக்கிய தலைவராக விளங்கிய ரோஹண விஜேவீர முரண்பாடுகள் காரணமாக கட்சியில் இருந்து விலகி 1965 மே 14 ஆம் திகதி ஜே.வி.பி. யை தாபித்தார். அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரு தடவைகள் ஆயுதக்கிளர்ச்சிகளை முன்னெடுத்து இரத்தக் களரிகளை கடந்து வந்த ஜே.வி.பி. ஜனநாயக அரசியலில் பிரவேசித்த பிறகு அதன் ஐந்தாவது தலைவரான அநுரா குமார திசாநாயக்கவின் தலைமையில் தேசிய மக்கள் சக்தி என்ற புதிய அவதாரமாக கடந்த வருடம் ஆட்சியதிகாரத்துக்கு வந்தது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவசியமான 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறாமல் திசாநாயக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிக்கு வந்த போதிலும், இரு மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது. இலங்கை அரசியல் வரலாற்றில் அரசாங்கத்தை அமைத்த முதல் இடதுசாரி கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜே.வி.பி. அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஆறு தசாப்தங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்னர் இதே காலப்பகுதியில் மூண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் கிளர்ச்சியே தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வருவதற்கு வசதியான அரசியல் நிலைவரத்துக்கு வழிவகுத்தது. தெற்காசியாவில் நேபாளத்துக்கு பிறகு ஆயுதக் கிளர்ச்சி செய்த அரசியல் இயக்கம் ஒன்று ஜனநாயக தேர்தல் மூலம் அதிகாரத்துக்கு வந்த இரண்டாவது நாடாக இலங்கை விளங்குகிறது. தலைமறைவாக இயங்கிய புரட்சிகர இயக்கம் என்ற நிலையில் இருந்து மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஆளும் கட்சி என்ற நிலைக்கான ஜே.வி.பி.யின் பயணம் இலங்கையின் அரசியல் நிலக்காட்சியை மாற்றியமைத்தது. அதன் வெற்றி நாட்டின் அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புடைபெயர்வை பிரதிபலித்தது. இத்தகைய ஒரு பின்புலத்தில், ஏழு மாதகாலமாக பதவியில் இருந்தவரும் நிலையில் ஜே.வி.பி. அதன் 60 வது வருட நிறைவை கடந்த வாரம் கொண்டாடியது. கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற பேரணியில் ஜனாதிபதி திசாநாயக்க ஜே வி.பி. ஒரு அரசியல் சக்தியாக தொடருவதற்கு மனச்சாட்சி, துணிச்சல் மற்றும் நடைமுறை அரசியல் அறிவு ஆகியவை முக்கியமான பாத்திரத்தை வகித்தன என்று குறிப்பிட்டிருந்தார். தனது கட்சியின் கொந்தளிப்பான பயணம் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் முக்கிய கவனத்துக்குரியவையாக இருக்கின்றன. “ஜே.வி.பி.யின் வரலாறு பூராவும் எமது மனச்சாட்சியே எமக்கு சரியான பாதையை காட்டியது. மனச்சாட்சியே எதிர்காலச் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கும் எமக்கு துணிச்சலை கொடுத்தது. எமது மனச்சாட்சியின் காரணமாகவே உயர்ந்தவர்கள் என்று கருதப்பட்ட சகலரையும் விடவும் நாம் மேம்பட்டு நிற்கிறோம். எமது மனச்சாட்சியின் அடிப்படையிலேயே நாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். “துரோகங்களுக்கு மத்தியிலும் கூட எமது மனச்சாட்சியின் அடிப்படையில் பணியாற்றுவோம் என்ற உத்தரவாதத்தை மக்களுக்கு நாம் வழங்குகிறோம். மற்றைய எந்தவொரு அரசியல் முகாமிடமும் இல்லாத வெல்லமுடியாத துணிச்சல் எமது கட்சியிடம் இருக்கிறது. குறைபாடுகளையும் தவறுகளையும் ஒத்துக்கொண்டு எம்மைத் திருத்திக் கொள்வதற்கு போதுமான துணிச்சல் எம்மிடம் இருக்கிறது. சொல்லொணா இடர்பாடுகளுக்கும் சிக்கல்களுக்கும் மத்தியில் பணியாற்றுவதற்கான துணிச்சல் எம்மிடம் இருக்கிறது. “எமது அரசியல் பயணத்தை நிறுத்துவதற்கு வழிவகுத்த பல சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால், பயணத்தை இடைவிடாமல் தொடருவதற்கு எமக்கு துணிச்சல் இருந்தது. கொந்தளிப்புகளின் ஊடாக எமது கட்சியின் வெற்றிக்கு துணிச்சலே வழிவகுத்தது. அத்தகைய வலிமை வேறு எந்த கட்சியிடமும் கிடையாது. எமது முகாம் வெற்றியை நோக்கிய பயணத்தை தொடருவதற்கு நடைமுறை அறிவும் முக்கியமான ஒரு பாத்திரத்தை வகித்தது. வெற்றி தொலைவில் இருப்பதாக தோன்றிய ஒரு நேரத்தில் அதைச் சாதிப்பதற்கு நடைமுறை அறிவு எமக்கு உதவியது. “சவால்களை எதிர்நோக்கவேண்டி வந்தாலும் கூட கொந்தளிப்புக்கு மத்தியிலும் கப்பல் சரியான பயண இலக்கை அடையும். எமது கட்சியின் உறுப்பினர்கள் பெரும் கொடுமைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளானார்கள். எமது கட்சி மனிதகுலத்தின் நன்மைக்காக தியாகங்களைச் செய்த வரலாற்றைக் கொண்டது. உண்மைக்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயாராயிருப்பதால், எமது முகாம் வெல்ல முடியாத ஒரு சக்தியாக மாறியிருக்கிறது. வெற்றிக்காக சளைக்காமல் பணியாற்றுவதற்கு நாம் தயாராயிருக்கிறோம்” என்று ஜனாதிபதி கூறினார். ஜனாதிபதி கூறியதை சுருக்கமாகச் சொல்வதானால், மனச்சாட்சியும் துணிச்சலும் நடைமுறை அறிவுமே ஜே.வி.பி.யின் வெற்றியின் தூண்கள். இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது ஜே.வி.பி. அதிகாரத்துக்கு வரக்கூடியதாக இருந்தது உண்மையிலேயே ஒரு வரலாற்று சாதனை என்பதை மறுக்க இயலாது. ஆனால், அது இன்று எந்தளவுக்கு இடதுசாரி இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை பின்பற்றுகின்றது என்ற ஒரு முக்கிய கேள்வி இருக்கிறது. முதன்முறையாக ஆட்சியதிகாரத்துக்கு வந்த ஒரு இடதுசாரிக் கட்சி என்ற வகையில் ஜே.வி.பி. தலைமையிலான அரசாங்கத்தின் ஏழு மாதகால நிருவாகத்தை அதன் முழுமையான செயலாற்றலையும் மதிப்பிடுவதற்கு அளவுகோலாக பயன்படுத்ததுவது பொருத்தமானதல்ல. ஆனால், அதன் இதுவரையான ஆட்சி எதிர்காலத்தில் அது மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் எந்தளவுக்கு வல்லமையைக் கொண்டதாக செயற்படும் என்பதை மதிப்பிடுவதற்கு ஓரளவுக்கு போதுமானது எனலாம். இலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் போன்று நாட்டின் சகல இனமக்களினதும் சகல பிராந்தியங்களினதும் பெருமளவு ஆதரவுடன் வேறு எந்தவொரு அரசாங்கமும் முன்னர் பதவிக்கு வந்ததில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர ஏனைய மாவட்டங்களில் கூடுதலான ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியதைப் போன்று முன்னர் எந்தவொரு தென்னிலங்கை கட்சியும் சாதித்துக் காட்டியதில்லை. நாடு தழுவிய ஆணையை தாங்கள் பெற்றிருப்பதாக ஜனாதிபதி திசாநாயக்கவும் அரசாங்க தலைவர்களும் எப்போதுமே பெருமையாகக் கூறுவதற்கு தவறுவதில்லை. ஆனால், தங்களுக்கு கிடைத்திருப்பது ஒரு பல்லின சமூகத்தின் ஆணை என்பதை மானசீகமாகப் புரிந்து கொண்டு அரசாங்க தலைவர்கள் எந்தளவுக்கு சகல சமூகங்களையும் அரவணைக்கும் ஒரு ஆட்சிமுறையை முன்னெடுப்பதில் நாட்டம் காட்டுகிறார்கள் என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது. இந்த இடத்தில் தங்களது அரசியல் பயணத்தை வழிநடத்தியதாக ஜனாதிபதி திசாநாயக்க கூறும் மனச்சாட்சி குறித்து நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. பாரம்பரியமான இடதுசாரி இயக்கத்தின் மீதான அதிருப்தியும் 1960 களின் நடுப்பகுதியில் ஜே.வி.பி.யின் தோற்றத்துக்கு ஒரு முக்கியமான காரணி என்று கூறப்படுவதுண்டு. அதே போன்று பாரம்பரியமான அதிகார வர்க்க அரசியல் கட்சிகள் மீதான மக்களின் வெறுப்பே அறுபது வருடங்களுக்கு பிறகு ஜே.வி.பி.யை ஆட்சியதிகாரத்துக்கு கொண்டுவந்திருக்கிறது. இந்த ஆறு தசாப்த காலகட்டத்தில் நாட்டைச் சின்னாபின்னப்படுத்திய முக்கியமான சகல நெருக்கடிகளில் இருந்தும் முறையான படிப்பினையை பெற்றுக் கொண்டவர்களாக ஜே.வி.பி.யின் தலைவர்கள் தங்களது அரசாங்கத்தின் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் வகுக்க வேண்டும். அது விடயத்தில் அவர்களிடம் பாரிய கரிசனைப் பற்றாக்குறை காணப்படுகிறது. முறைமை மாற்றத்தையும் புதிய அரசியல் கலாசாரத்தையும் கொண்டுவரப் போவதாகவும் இனவாதத்தையும் மதத்தீவிரவாதத்தையும் மீண்டும் தலைகாட்ட அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறுவதை கேட்கும்போது இனிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், தீர்மானங்களை மேற்கொள்ளும் அரசாங்க அமைப்புகளுக்கு நியமனங்களைச் செய்வதற்கு கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறை தொடக்கம் சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகளை கையாளுவது வரை அரசாங்கத்திடம் ஆரோக்கியமான மனமாற்றத்தை காணமுடியவில்லை. மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த சிக்கலான தேசிய இனப்பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தியினால் குறுகிய காலத்திற்குள் தீர்வைக் கண்டுவிட முடியும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அந்த பிரச்சினைக்கு நாளடைவில் அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு முன்னைய அரசாங்கங்களை விடவும் வேறுபட்ட அணுகுமுறையை புதிய அரசாங்கம் கடைப்பிடிப்பதில் நாட்டம் காட்டும் என்பதற்கான எந்தவிதமான அறிகுறியையும் கூட காணமுடியாமல் இருப்பது கவலைக்குரியது. உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து இன்றுடன் சரியாக பதினாறு வருடங்கள் நிறைவுபெறுகின்றன. அந்த கொடிய போரின் விளைவாக வடக்கு, கிழக்கில் தோன்றிய பல்வேறு மனிதாபிமானப் பிரச்சினைகளை கையாளுவதில் கூட தேசிய மக்கள் சக்தியிடம் வேறுபட்ட ஒரு அணுகுமுறையைக் காணமுடியாமல் இருக்கிறது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்காக முன்னெடுக்கப்பட்ட இதுவரையான சகல முயற்சிகளையும் எதிர்த்துநின்ற ஒரு கடந்த காலத்தை ஜே. வி.பி. கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை காலமும் அந்த பிரச்சினை தொடர்பில் கடைப்பிடித்துவந்த கொள்கைகளிலும் அணுகுமுறைகளிலும் மாற்றங்களைச் செய்யாமல் புதிய அரசியல் கலாசாரம் பற்றி உரத்துப் பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? பாரம்பரியமாக தமிழ் தேசியவாத கட்சிகளுக்கு வாக்களித்துவந்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவற்றை பெருமளவுக்கு நிராகரித்து தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தார்கள். அந்த மக்களுக்கு எதிர்காலம் குறித்து ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி திசாநாயக்க சரியான சமிக்ஞையைக் காண்பிக்காததன் விளைவை உள்ளூராட்சி தேர்தல்களில் காணக்கூடியதாக இருந்தது. இந்த கருத்தை தமிழ்த் தேசியவாத அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் எல்லாவற்றையும் நிராயப்படுத்துவதாக வியாக்கியானம் செய்யத் தேவையில்லை. ஆனால், தென்னிலங்கையில் எதிர்ப்புகள் கிளம்பும் என்பதற்காக எவ்வளவு காலத்துக்குத்தான் இனப்பிரச்சினைக்கு நியாயபூர்வமான ஒரு அரசியல் தீர்வைக் காண்பது தொடர்பில் அரசாங்கங்களும் பெரும்பான்மையின சமூகமும் மாறாத நிலைப்பாட்டுடன் நியாயமற்ற முறையில் நடந்துகொள்ளப் போகின்றன? சிறுபான்மைச் சமூகங்களின் நியாபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக தென்னிலங்கைச் சமூகத்தில் காணப்படும் கடுமையான உணர்வுகளை மேலும் வலுப்படுத்தக்கூடிய அணுகுமுறைகளை அல்ல, இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டிய அவசியத்தை அந்த மக்களுக்கு உணர்த்துவதற்கும் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்குமான நடவடிக்கைகளிலலேயே தேசிய மக்கள் சக்தி இறங்க வேண்டும். அதற்கு முதலில் ஜே.வி.பி. தலைவர்கள் தங்களது பழைய நிலைப்பாடுகளை மாற்ற வேண்டும். இந்த இடத்தில் மீண்டும் மனச்சாட்சி குறித்து அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. தென்னிலங்கையில் கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகள் மீண்டும் வலுவான முறையில் வெளிக்கிளம்புவதற்கு சந்தர்ப்பங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பெரும்பான்மையினவாத அணிதிரட்டல்கள் இறுதியில் தென்னிலங்கைச் சமுதாயத்துக்கும் கூட பாதகமாக அமைந்த வரலாற்றுப் பாடத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களுக்கு சரியான பாதையைக் காட்டுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசியல் துணிச்சலை வெளிக்காட்ட வேண்டும். தங்களை வெற்றிக்கு வழிநடத்திய மனச்சாட்சி, துணிச்சல் மற்றும் நடைமுறை அறிவை இந்த விடயத்திலும் ஜனாதிபதியும் அரசாங்கமும் வெளிக்காட்ட வேண்டும். இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலைகாட்டுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று ஓயாமல் கூறிக்கொண்டிருக்கும் ஜனாதிபதி திசாநாயக்க மீண்டும் நாட்டின் இனப்பிளவின் இருமருங்கிலும் தேசியவாத அரசியல் உணர்வுகள் கூர்மையடையக்கூடிய சூழ்நிலை தோன்றியிருப்பதை கவனத்தில் எடுத்து மீண்டும் இனமோதல்களுக்கு வழிவகுக்கக்கூடிய நிகழ்வுப்போக்குகளை தடுப்பதற்கான தலையாய பொறுப்பைக் கொண்டிருக்கிறார். அதற்கு ஜே.வி.பி.யை வெற்றிக்கு வழிநடத்திய மனச்சாட்சி, துணிச்சல் மற்றும் நடைமுறை அறிவை பயன்படுத்த வேண்டும். கிடைக்கின்ற வரலாற்றுச் சந்தர்ப்பத்தை தவறவிட்ட தலைவர்களின் வரிசையில் அவரும் இணைந்துவிடக் கூடாது. https://arangamnews.com/?p=12035
-
உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சுட்டுக்கொலை
உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சுட்டுக்கொலை May 21, 2025 6:52 pm உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் ஆலோசகராக செயற்பட்டு வந்த ஆண்ட்ரி போர்ட்னோவ். அடையாளந் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள பாடசாலையொன்றிற்கு அருகில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் ஆண்ட்ரி போர்ட்னோவ். 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவராக பணியாற்றிய இவர், விக்டர் யானுகோவிச்சுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தார். விக்டர் யானுகோவிச் ஆட்சிக் காலத்தின்போது பெரும்பாலும் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஆண்ட்ரி போர்ட்னோவ் பின்பற்றி வந்தார். மேலும் உக்ரைனில் 2014 ஆம் ஆண்டு நடந்த மாபெரும் புரட்சியில் பங்கேற்ற போராட்டக்காரர்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றியதில் ஆண்ட்ரி போர்ட்னோவ் முக்கிய பங்காற்றினார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://oruvan.com/advisor-to-ukraines-former-president-shot-dead/
-
காங்கேசன்துறையில் 351 ஏக்கரில் கைத்தொழில் வலயம்!
காங்கேசன்துறையில் 351 ஏக்கரில் கைத்தொழில் வலயம்! adminMay 21, 2025 காங்கேசன்துறையில் 351 ஏக்கரில் கைத்தொழில் வலயமாக பிரேரிக்கப்பட்ட பகுதியில் எதிர்கால முதலீடு மற்றும் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் அபிவிருத்தி தொடர்பாகவும், அதற்கான தொழில் வாய்ப்புக்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பாகவும் உலக வங்கியின் குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் விளக்கமளித்துள்ளார். உலக வங்கி குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை இன்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இக் கலந்துரையாடலில், விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் போன்ற துறைகளின் தற்போதைய நிலவரங்களும், வாழ்வாதாரத் துறைகளுக்கா தேவைப்பாடுகளும் உள்ளூர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி சந்தை வாய்ப்புக்கள் தொடர்பாக மாவட்ட செயலர் விளக்கமளித்தார். மேலும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான சுற்றுலாத் துறை அபிவிருத்தி தொடர்பில் விசேடமாக யாழ்ப்பாண கோட்டை மற்றும் பழைய கச்சேரியினை புனரமைத்து மரபுரிமை சுற்றுலா அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்கான அவசியத்தினையும் எடுத்துக்கூறினார். அத்துடன் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான நிலையான வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பான கோரிக்கைகளும், தெல்லிப்பளை காங்கேசன்துறையில் 351 ஏக்கரில் கைத்தொழில் வலயமாக பிரேரிக்கப்பட்ட பகுதியில் எதிர்கால முதலீடு மற்றும் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் அபிவிருத்தி தொடர்பாகவும், அதற்கான தொழில் வாய்ப்புக்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார். அதேவேளை தனியார் துறைகளின் அபிவிருத்தி மூலம் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்கமுடியும் எனவும், அதற்கான தனியார் துறைகளின் முதலீடுகளுக்கான தேவைப்பாடுகள் மற்றும் வசதி வாய்ப்புகள் தொடர்பாகவும், பலாலி சர்வதேச விமான நிலையத்தினை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தியின் அவசியம் தொடர்பாகவும் மாவட்ட செயலர் விளக்கமளித்தார். இக் கலந்துரையாடலினைத் தொடர்ந்து மாவட்ட செயலரின் கோரிக்கைக்கு அமைவாக பழைய கச்சேரியினை குழுவினர் பார்வையிட்டனர். இக் கலந்துரையாடலில் உலக வங்கி குழுவின் வதிவிடப் பிரதிநிதி விக்டர் அந்தோணிப்பிள்ளை, மாலைதீவு மற்றும் இலங்கைக்கான வதிவிட முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட செயற்பாட்டு அலுவலர் ஸ்றீபன் மசீங், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு அலுவலர் ருக்சினா குணரட்ன மற்றும் இணைந்த செயற்பாட்டு அலுவலர் மொகமட் கவீஸ் சைநூடீன் ஆகியோா் பங்குபற்றினார்கள். https://globaltamilnews.net/2025/215826/
-
காணிகள் சுவீகரிப்பு – வடக்கு – கிழக்கு நாடாளுமன்ற பிரதிநிதிகளை அழைத்தார் ஹரிணி!
காணிகள் சுவீகரிப்பு – வடக்கு – கிழக்கு நாடாளுமன்ற பிரதிநிதிகளை அழைத்தார் ஹரிணி! adminMay 22, 2025 வடக்கு மாகாணத்தில் உள்ள காணிகள் சுவீகரிப்பு தொடர்பில், மார்ச் மாதம் அரசால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து எழுந்திருக்கும் பிணக்குகள் தொடர்பில், பாராளுமன்றத்தில், வெள்ளிக்கிழமை (23) அன்று முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலே இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் (28.03.2025) திகதியிடப்பட்டு, 2,430 இலக்கமிடப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாத காலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அதனை உடனடியாக திரும்பப் பெறுமாறு அரசை வலியுறுத்தியுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்திருக்கும் முரண்பாடுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை பாராளுமன்றத்தில் தனது தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பில் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் வடக்கு மாகாணத்தின் காணிகளை நிர்ணயம் செய்வதற்காக இலக்கம் 2430 மற்றும் (28.05.2025) திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அந்த மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் காணி நிர்ணயம் தொடர்பாக பிணக்குகள் எழுந்துள்ளன. குறித்துக் கலந்துரையாடுவதற்காக 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை பாராளுமன்றத்தின் குழு அறை 01 இல் எனது தலைமையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு உங்களது பங்கேற்பினை மிகவும் கௌரவத்துடன் எதிர்பார்க்கின்றேன்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமிழ் மக்களின் காணிகளில் பிறிதொரு தரப்பினரைக் குடியேற்ற வேண்டிய தேவை எமக்கு கிடையாது என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மகிந்த மற்றும் ரணில் ஆகியோரை பார்த்த கோணத்தில் எங்களைப் பார்க்காதீர்கள், தேசிய நல்லிணக்கத்தை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். மக்களின் காணிகளை சுவீகரிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.வடக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று உறுப்பினர்கள் எம்முடன் இருக்கிறார்கள்.இவ்வாறான நிலையில், நாங்கள் ஏன் வடக்கு மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் செயற்பட வேண்டும்,? இந்த வர்த்தமானி தொடர்பில் தமிழ் பிரதிநிதிகள் பல விடயங்களை முன்வைத்துள்ளார்கள். தமிழ் மக்களின் காணிகளில் பிறிதொரு தரப்பினரைக் குடியேற்ற வேண்டிய தேவை எமக்கு கிடையாது. காணி பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு 9 மாகாணங்களையும் வரையறுத்து இந்த வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்துக்கு மாத்திரம் பிரத்தியேகமாகப் பிரசுரிக்கப்படவில்லை. காணி பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குக் காணி அமைச்சு மற்றும் சுற்றாடல் துறை அமைச்சு ஒன்றிணைந்து கூட்டுப் பத்திரத்தை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளது எனக் கூறியுள்ளார். https://globaltamilnews.net/2025/215843/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை வியாழன் 22 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 64) வியாழன் 22 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் GT எதிர் LSG 17 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் ஆறு பேர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வீரப் பையன்26 நிலாமதி பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ஏராளன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வாத்தியார் சுவி சுவைப்பிரியன் ரசோதரன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?