Everything posted by கிருபன்
-
தேசிய மக்கள் சக்திக்கோ தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவு இல்லை!; ஈ.பி.டி.பி. அதிரடி
தேசிய மக்கள் சக்திக்கோ தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவு இல்லை!; ஈ.பி.டி.பி. அதிரடி தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்க முயலும் தேசிய மக்கள் சக்திக்கோ, சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமில்லாத தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவில்லை என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், காத்திரமான எதிர்தரப்பாக உள்ளூராட்சி சபைகளை எதிர்கொள்ளவே கட்சி தீர்மானித்து இருப்பதாகவும் தெரிவித்தார். யாழ் ஊடக மையத்தி்ல் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எமக்கு வாக்களித்த அனைவருக்கும் முதலில் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த தேர்தல் முடிவுகள் எம்மை பொறுத்தவரையில் ஏமாற்றங்களையோ ஆச்சரியங்களையோ ஏற்படுத்தவில்லை. காரணம், வித்தியாசமான அரசியல் சூழலிலேயே நாங்கள் இந்த தேர்தலை எதிர்கொண்டிருந்தோம். எந்த விதமான அரசியல் அதிகாரங்களும் அற்ற நிலையில், எம்மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களும், எமது செயலாளர் நாயகம் கைது செய்யப்படப் போகின்றார் என்ற ஆதாரமற்ற வதந்திகளும் ஒரு புறம் பரப்பப்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறத்தில் வழமைபோன்று எமக்கு எதிரான சேறடிப்புக்களும் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த தேர்தலை எதிர்கொண்டிருந்தோம். இந்நிலையில் எமக்கு 20,000 இற்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இது எமது மக்கள் எமது வேலைத்திட்டங்களையும் எமது நடைமுறைச் சாத்தியமான அரசியல் அணுகுமுறைகளையும் ஆதரிக்கின்றார்கள் என்ற செய்தியையே வெளிப்படுத்தி இருக்கின்றது. அந்தவகையில், இந்த தேர்தல் முடிவினை பின்னடைவிலும் ஒரு வெற்றியாகவே நாங்கள் பார்க்கின்றோம். இந்நிலையிலே உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் எமது நிலைப்பாடு பற்றிய கேள்வி பல்வேறு தளங்களில் தற்போது பேசு பொருளாக காணப்படுகின்றது. எம்மை பொறுத்த வரையில், தேசிய மக்கள் சக்தியும், அதேபோன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தவிர்ந்த தரப்புக்கள் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க எமது ஒத்துழைப்பு அவசியம் எனக் கருதி எம்மை அணுகும் பட்சத்தில் அவை தொடர்பாக சாதகமாக பரீசிலிக்க தயாராக இருக்கின்றோம். அவ்வாறான தேவை ஏற்படாத பட்சத்தில், ஆரோக்கியமான எதிர்தரப்பாக உள்ளூராட்சி மன்றங்களில் தனித்துவமாக மக்கள் நலன்சார்ந்நு செயற்படுவதற்கு ஆர்வமாக இருக்கின்றோம். தேசிய மக்கள் சக்தி என்று சொல்லிக் கொள்ளுகின்ற ஜே.வி.பி. கட்சியினருக்கு ஆதரவு தெரிவிக்க மறுப்பதற்கு இனவாதமோ, இன ரீதியான சிந்தைகைளோ காரணம் இல்லை என்பதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எம்மை பொறுத்தவரையில், எமது மக்களுடைய அபிலாசைகளை வென்றெடுப்பதற்கும், எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை தீர்வுகாண்பதற்கும் தேசிய நல்லிணக்கம் அத்தியவசியமானது என்பதை உறுதியாக நம்புகின்றோம். அதற்காக கடந்த 35 வருடங்களாக தொடர்ச்சியாக உழைத்தும் வருகின்றோம். கடந்த காலங்களில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த தென்னிலங்கை அரசாங்கங்கள், எமது தேசிய நல்லிணக்க அணுகுமுறையின் அவசியத்தை புரிந்து கொண்டு சாதகமான தமது பிரதிபலிப்புக்களை வெளிப்படுத்தி வந்தன. ஆனால் தற்போதைய அரசாங்கத்தினரிடம் தேசிய நல்லிணக்கத்தின் அவசியம் பற்றிய புரிதல் கொஞ்சமும் இல்லை என்பதை அவர்களுடைய செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. அதுமாத்திரமன்றி, அனைவரும் இலங்கையர், எல்லோருக்கும் சமத்துவம் போன்ற வார்த்தைகள் மூலம், எமது தனித்துவங்களையும் அடையாளங்களையும் நீர்த்துப் போகச் செய்து, வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம், தமிழர்கள் தேசிய இனம் போன்றவற்றுக்கான அடிப்படைகளை இல்லாமல் செய்வதற்கான ஆழமான நிகழ்ச்சி நிரலோடு செயற்படுகின்றார்கள் என்ற சந்தேகத்தினையும் ஏற்படுத்துகின்றது. இந்நிலையிலேயே ஜே.வி.பி. யினருக்கு ஆதரவளிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளோம். அதேபோன்று, வெளிப்படைத் தன்மையோடு நடைமுறைச் சாத்தியமான அரசியலை முன்னெடுக்கின்ற தனித்துவமான அரசியல் தரப்பான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம், சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமில்லாமல், நடைமுறைச் சாத்தியமற்ற வெறும் வீராப்பு அரசியலை முன்னெடுத்து வருகின்ற தமிழ் தேசிய முன்னணியினருக்கு ஆதரவளிப்பதும் நடைமுறையில் சாத்தியமற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரைப் பொறுத்த வரையில் இப்போதுகூட கொள்கை ரீதியான உடன்பாடு கொள்கை ரீதியான கூட்டிணைவு என்று திரும்ப திரும்ப சொல்லி வருகின்றார்கள். அவர்களுடைய கொள்கை என்ன என்பது அவர்களுக்கே விளங்க வில்லை என்பதையே அவர்களின் செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக தூய நகரம் தூய்மையான நிர்வாகம் என்கிறார்கள். கடந்த மாகாண சபையிலே ஊழல் மோசடியில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டவர்களையும், கடந்த காலங்களில் நிதி நிறுவனம் நடாத்தி எமது மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் என்ற வலுவான குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டவர்களையும் இணைத்து வைத்துக் கொண்டு தூய்மையான நிர்வாகம் பற்றி பேசுகிறார்கள். ஒற்றையாட்சியையும் எக்கிய இராச்சியத்தினையும் நிராகரிக்கின்றோம் என்று கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்யாத கட்சிகளோடு ஒட்டவும் மாட்டோம் உறவாடவும் மாட்டோம் என்கிறார்கள். எக்கிய இராச்சியம் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்க ஆதரவு கொடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை அரவணைத்து உறவாடிக் கொண்டு, குறித்த அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு பங்களிப்பு செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்தனுடனும் செல்வம் அடைக்கலநாதனுடனும் டீல் பேசுகின்றனர். இன்னொமொரு வேடிக்கை என்னவென்றால், ஈ.பி.டி.பி. தமிழ் தேசிய பரப்பில் செயற்படாத கட்சியாம். எங்களோடு பேசுவது தங்களுடைய கொள்கைக்கு மாறான செயற்பாடாம். ஆனால்,ஈ.பி.ஆர்.எல்.எப். புளொட், ரெலோ, சமத்துவக் கட்சி உள்ளங்கிய ஜனநாயகக் தமிழ் தேசியக் கூட்டணியோடு பேசுவார்களாம். அவர்கள் தமிழ் தேசியப் பரப்பிலே செயற்படுகிறார்களாம் தமிழ் தேசியத்திற்கு புறம்பான தரப்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை அடையாளப்படுத்துகின்றவர்கள், 2015 ஆம் ஆண்டு வரையில் எமது கட்சியை வழிநடத்திய தலைவர்களுள் ஒருவரான தோழர் அசோக் என்று அறியப்பட்ட சந்திரகுமாருடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளை அமைக்க டீல் பேசுகின்றனர். மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களோடு இணக்க அரசியலில் ஈடுபட்டமையினால் ஈ.பி.டிபி. ஒட்டுக் குழுவாம். தென்னிலங்கை அரசாங்கத்தோடு இணக்க அரசியல் செய்கின்ற கட்சி ஒட்டுக் குழு என்றால், டி.எஸ் சேனநாயக்கா காலத்திலேயே இணக்க அரசியல் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தானே Most senior ஒட்டுக்குழு நீங்கள் தானே! இவ்வாறு தங்களுடைய செயலுக்கும் சொல்லுக்கும் சம்மந்தமில்லாமல் செயற்பட்டுக் கொண்டு, மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருந்து சுயலாப அரசியல் செய்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு ஆதரவளிப்பதும் சாத்தியமற்றது என்ற அடிப்படையிலேயே எமது தீர்மானம் அமைந்திருக்கின்றது https://akkinikkunchu.com/?p=324543
-
அமெரிக்கா - சவூதி அரேபியா இடையில் 142 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்து
அமெரிக்கா - சவூதி அரேபியா இடையில் 142 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்து Published By: Digital Desk 3 14 May, 2025 | 11:38 AM அமெரிக்காவில் இருந்து 142 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ ஆயுதங்களை சவுதி அரேபியா கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த முதலீடு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இருநாடுகள் இடையே உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக செவ்வாய்க்கிழமை (13) மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்றப்பின் ட்ரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய கிழக்குக்கு பயணம் இதுவாகும். இந்த விஜயத்தில் டொனால்ட் ட்ரம்ப்புடன் இலான் மஸ்க், ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், பிளாக்ராக் தலைமை நிர்வாக அதிகாரி லாரி ஃபிங்க் மற்றும் என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் உள்ளிட்ட பல வணிகத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்காவுக்கு சவுதி அரேபியாவை விட "உறுதியான நட்புறவு கொண்டோர்கள் வேறு யாரும் இல்லை". சிரியாவுக்கு எதிரான அனைத்து தடைகளும் நீக்கப்படும், தற்போது நாடு "சிறந்த வாய்ப்புடன்" முன்னேற வேண்டிய நேரம் இது எனக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எண்ணெய் வளம் மிக்க பொருளாதாரத்தை அதன் செயற்கை நுண்ணறிவு திறன்களை அதிகரிப்பதன் மூலம் பன்முகப்படுத்த ஆர்வமுள்ள சவுதி அரேபியாவை உயர்மட்ட நிர்வாகிகள் சந்திக்கின்றனர். ஹுவாங் இந்த விஜயத்தின் போது Nvidia தனது 18,000க்கும் மேற்பட்ட சமீபத்திய AI சிப்களை சவுதி நிறுவனமான Humain-க்கு விற்பனை செய்யும் என்று அறிவித்தார். https://www.virakesari.lk/article/214669
-
ஆனையிறவு உப்பள ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி போராட்டம்!
ஆனையிறவு உப்பள ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி போராட்டம்! 14 May, 2025 | 10:35 AM ஆனையிறவு தேசிய உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் தற்போதுள்ள பொது முகாமையாளர், முகாமைத்துவ பிரிவினர், உதவி முகாமையாளர், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் எம்மை பழிவாங்குவது போல் செயற்படுகின்றனர். எமக்கு உரிய வகையில் வேலைகளை வழங்குவதில்லை. எமக்கான மருத்துவ வசதிகள் உப்பளத்தில் இல்லை. குடிநீர் பிரச்சினை காணப்படுகிறது. குடிநீரை வெளியே உள்ள தாங்கியில் இருந்துதான் உள்ளே எடுத்து செல்ல வேண்டும். முற்பகல் 10 மணியானதும் நாங்கள் எடுத்துச் செல்லுகின்ற குடிநீரோ அல்லது தாங்கியில் உள்ள குடிநீரோ மிகவும் சூடாகி காணப்படும், ஆகையால் நாங்கள் அதனை குடிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இந்த மாதம் தொடங்கி இதுவரை எமக்கு 4 நாட்களே வேலை வழங்கப்பட்டது, 10 நாட்கள் வேலை இல்லாமலே இருக்கின்றோம். இதைவிட இந்த மாதம் வேலை செய்யாத ஊழியர்கள் கூட காணப்படுகின்றனர். மனித வலு இருக்கும்போது இயந்திரவலுவை பயன்படுத்துகின்றனர். வேலை செய்யும் எமக்கு சீருடைகளோ, பாதுகாப்பு கவசங்களோ வழங்கப்படுவதில்லை. ஒரு ஊழியர் உப்பளத்தில் வேலை செய்யும்போது இறந்தால்கூட எமது பணத்தில் தான் அவரது சடலத்தை கொண்டு செல்ல வேண்டும், அவரது கண்ணீர் அஞ்சலி பத்திரிகைகள் கூட எமது பணத்தில் தான் வெளியிட வேண்டுமே தவிர நிறுவனம் எமக்கு எந்தவிதமான கொடுப்பனவுகளையும் வழங்காது. இந்த உப்பளத்தை திறந்து வைக்கும் போது 8ஆயிரம் ரூபா பெறுமதியான உலருணவு பொதி வழங்குவதாக அமைச்சர் கூறினார், ஆனால் எமக்கு பின்னர் வழங்கப்பட்டது 800 ரூபா பெறுமதியான உலருணவுப்பொதியே. அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே அளவான போனஸ் கொடுப்பனவே வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறை காணப்படுகிறது. ஆனால் இங்கு எமது வரவினைப் பார்த்து, மிகவும் குறைந்த போனஸ் தொகையே கொடுப்பார்கள். வேலைக்கு வராதது எமது பிழை அல்ல. எமக்கு சுழற்சி முறையிலான வேலையையே வழங்குகின்றனர் ஆகையால் நாங்கள் எப்படி ஒழுங்காக வேலைக்கு வருவது? எமக்கான ஒரு தொழிற்சங்கத்தை இயங்க விடுவதில்லை. ஊழியர்களின் நலனுக்காக யாராவது குரல் கொடுத்தால் அவரை பிடித்து அடித்து வெளியே துரத்துங்கள் என கூறுவார்கள். இது அரச நிறுவனம் போல் இல்லாது முதலாளித்துவத்துடன் கூடிய தனியார் நிறுவனம் போலவே செயற்படுகிறது. ஒரு நாள் 5 ஊழியர்களின் உழைப்பு மட்டும் போதும் இங்கு வேலை செய்கின்ற அனைத்து ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை கொடுப்பதற்கு. அவ்வளவு இலாபம் ஈட்டும் உப்பளமாகவும், இலங்கையின் மிகவும் பெரிய உப்பளமாகவும் இந்த உப்பளம் காணப்படுகிறது. ஊழியர்களின் நலனுக்காக யாராவது அதிகாரி இங்கு குரல் கொடுத்தால் உடனே அவரை இடமாற்றம் செய்கின்றனர். பல வருடங்கள் இங்கு பணியாற்றியவர்களுக்குக் கூட மதிப்பதில்லை. இங்கு பணிபுரியும் முகாமையாளர் உள்ளிட்ட பலர் உப்பு தொடர்பான அடிப்படை அறிவற்றவர்களாகவே காணப்படுகின்றனர். ஏற்கனவே இங்கு பணியாற்றியவர்களின் அனுபவங்களை கூட அவர்கள் கேட்பதில்லை. அப்படி கூறினாலும் அதனை தட்டிக்கழிக்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பினை ஹம்பாந்தோட்டை, மன்னார், புத்தளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று அங்கு வைத்து பொதியிட்ட பின்னர் மீண்டும் எமது பகுதிகளுக்கு கொண்டுவந்து விநியோகம் செய்கின்றனர். இதனால் இரண்டு போக்குவரத்து செலவு காரணமாக உப்பின் விலையை அதிகரித்து விற்பனை செய்கின்றனர். எமது பகுதியில் விளையும் உப்பினை இங்கேயே வைத்து பொதியிடக்கூடிய வசதி இருந்தும் ஏன் வெளி மாவட்டம் கொண்டு செல்ல வேண்டும்? மழை பெய்தால் எம்மை வேலைக்கு வரவேண்டாம் என கூறுகின்றனர். ஆனால் மழை பெய்தாலும் இங்கே செய்வதற்கு பல வேலைகள் உள்ளன. ஒரு தொழிற்சாலைக்கு இலாபம் வரும்போது நாங்கள் வேலை செய்கின்றோம், அதுபோல அந்த அந்த தொழிற்சாலைக்கு நஷ்டம் ஏற்படும்போதும் அந்த தொழிற்சாலை அதனை தாங்கிக்கொண்டு எமக்கு வேலையை வழங்கத் தான் வேண்டும். ஆனால் இங்கே அவ்வாறான நடைமுறைகள் காணப்படுவதில்லை. ரஜ உப்பு என்ற பெயரை மாற்றம் செய்து ஆனையிறவு உப்பு என்ற பெயரில் மாற்றியதாக கூறுகின்றனர். ஆனால் இதுவரை பொதி செய்த உப்பு பைகளில் ரஜ உப்பு என்றே காணப்படுகிறது. ஆனையிறவு உப்பு என்ற பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. பெண் ஒருவர் தினமும் 65 அந்தர் (3250 கிலோ) உப்பு அள்ள வேண்டும் என கூறி அவர்களை மிகவும் கொடுமைப்படுத்துகின்றனர். இலாபத்தை பகிர்ந்து அளிப்பதாக அமைச்சர் கூறியிருந்தார் ஆனால் அதனை பகிர்ந்து வழங்குவதற்கு யாரும் தயாராக இல்லை, அந்த இலாபத்தை எமக்கு பகிர்ந்தளிக்கின்றனர் இல்லை. இந்த கவனயீர்ப்பில் ஈடுபட்டபோது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் எங்களை கதைப்பதற்கு உள்ளே அழைத்தனர். இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உள்ளிட்ட ஊழியர்களும் உள்ளே சென்றோம். ஆனால் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. உள்ளே சென்று கலந்துரையாடியபோது அவர்கள் எங்களது பிரச்சினைகளை கருத்தில் கொள்ளவில்லை. நாங்கள் மண்வெட்டி பிடி திருடினோம், உப்பு திருடினோம் என்று பொய்யான குற்றச்சாட்டு கூறுகின்றார்களே தவிர எமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது போல் தெரியவில்லை. இது பார்ப்பதற்கு வெளியே ஒரு தேசிய உப்பளமாக காணப்பட்டாலும் பல பிரச்சினைகள் உள்ளன. எனவே இதற்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும் என தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/214661
-
இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை- அலி சப்ரி
இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை- அலி சப்ரி Published By: Rajeeban 14 May, 2025 | 10:51 AM இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு, இனப்படுகொலை கல்விவாரம் அனுசரிப்பு போன்றவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார் சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது. இலங்கையின் ஒற்றுமை மற்றும் கௌரவம் நல்லிணக்கத்திற்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு குடிமகன் என்ற அடிப்படையில் கனடாவின் ஒன்டாரியோவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு இனப்படுகொலை கல்வி வாரம் அனுசரிப்பு போன்ற விடயங்களால் நான் திகைப்பும்; கவலையுமடைந்துள்ளேன். ஒரு விடயத்தை நான் தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றேன், இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை.அந்த கூற்று ஆதாரமற்றது மாத்திரமல்ல மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. எந்தவொருசர்வதேச நீதிமன்றமும் இலங்கையை இதுவரை இனப்படுகொலை குற்றவாளியாக கண்டறியவில்லை. இலங்கையில் நடந்தது துன்பகரமான ஆனால் கனடா உட்பட 30 க்கும் அதிகமான நாடுகளில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பினருடனான மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கான இராணுவநடவடிக்கை. அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எந்த சமூகத்திற்கும் எதிரானது இல்லை. போரின் போது அப்பாவிகள் ஒவ்வொருவரினதும் உயிரிழப்பு மனவேதனையை ஏற்படுத்தினாலும்,மோதலை இனப்படுகொலை என சித்தரிப்பது உண்மையை சிதைப்பது மாத்திரமல்லாமல்,அவமதிப்பை ஏற்படுத்துகின்ற ஒரு விடயம். கனடாவில் இ;டம்பெறும் இந்த செயற்பாடுகள்,நமது கள யதார்த்தங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ளன. மேலும் வாக்குவங்கியை நோக்கமாக கொண்ட இவ்வாறான நடவடிக்கைகளினால் பழைய காயங்கள் மீண்டும் கிளறப்படலாம்.மேலும் ஒரு தேசமாக காயங்களை ஆற்றுவதில் அடைந்துள்ள முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம். https://www.virakesari.lk/article/214664
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
தமது அணி வீரர்களை நாடு திரும்புமாறு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவிப்பு! தமது அணி வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை கூறியுள்ளது. இந்த ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் தென்னாபிரிக்காவிலிருந்து மொத்தம் 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். எனினும், அவர்களில் 8 பேர், எதிர்வரும் ஜூன் 11 முதல் லோர்ட்ஸில் ஆரம்பமாகும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உடனான ஆரம்ப ஒப்பந்தத்தில், இந்தியன் ப்ரீமியர் லீக் இறுதிப் போட்டி 25 ஆம் திகதி நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையின் படி ஜூன் மாதம் 3ஆம் திகதியே ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் 30 ஆம் திகதி லண்டனுக்குப் புறப்பட வேண்டியுள்ளமையினால், தமது வீரர்கள் 26 ஆம் திகதிக்கு முன்னர் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தெரிவிக்கிறது. அதற்கமைய, இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்றுள்ள தென் ஆபிரிக்க வீரர்களில் Corbin Bosch, Wiaan Mulder, Marco Jansen, Aiden Markram, Lungi Ngidi, Kagiso Rabada, Ryan Rickelton ஆகியோர், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிக்கான தென்னாபிரிக்க அணியில் இடம்பெற்றுள்ளனர். https://www.hirunews.lk/tamil/405288/தமது-அணி-வீரர்களை-நாடு-திரும்புமாறு-தென்னாபிரிக்க-கிரிக்கெட்-சபை-அறிவிப்பு
-
அர்ச்சுனா எம்பிக்கு புள்ளி வைத்த அரச தரப்பு: சபையில் வெடித்தது புதிய சர்ச்சை!
அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனு - இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று (14) நீதியரசர்களான மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்த, அதனை எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது. இந்த மனு சமூக செயற்பாட்டாளர் ஓஷலா ஹெராத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmanjjdr700e9qpbsgsmy6u9m
-
உலகின் ஏழ்மையான ஜனாதிபதி காலமானார்
உலகின் ஏழ்மையான ஜனாதிபதி காலமானார் உலகின் மிகவும் ஏழ்மையான ஜனாதிபதி என்று அறியப்பட்ட, லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி ஜோஸ் முஜிகா காலமானார். இறக்கும் போது அவருக்கு 89 வயதாகும். இடதுசாரி அரசியல்வாதியான முஜிகா, பல முற்போக்கான சமூக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய ஒரு தலைவராக இருந்தார். அவர் ஒரு சமூக ஆர்வலர் என்றும் அறியப்படுகிறார். முஜிகாவின் மரணத்தை உருகுவேயின் தற்போதைய ஜனாதிபதி யமண்டு ஓர்சி உலகுக்கு அறிவித்தார். 'அவர் ஒரு உண்மையான தலைவர்.' ஒரு நேர்மையான நண்பர். அவர் உருகுவே மக்களின் இதயத்துடிப்பு. "சரி, விடைபெறுகிறேன்," முன்னாள் ஜனாதிபதிக்கு ஓர்சி ஒரு புகழாரமும் சூட்டினார். முஜிகா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தான் ஒரு புற்றுநோய் நோயாளி என்றும், இனி வாழ அதிக காலம் இல்லை என்றும் 2024 ஆம் ஆண்டு செய்தியாளர்களிடம் முஜிகா கூறினார். முஜிகா சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. கியூபப் புரட்சியால் ஈர்க்கப்பட்ட முஜிகா, 1960களில் ஆயுதம் ஏந்திய இடதுசாரி கெரில்லா போராளி ஆவார். அந்த நேரத்தில், உருகுவே மாநிலம் இராணுவ ஆட்சியின் கீழ் இருந்தது. இராணுவத்தால் கைது செய்யப்பட்ட முஜிகா, 15 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். அதாவது, பல்வேறு வகையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டார். உருகுவேயின் ஜனாதிபதியாக முஜிகா 2009 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார், 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். முஜிகா 2010 முதல் 2015 வரை ஜனாதிபதியாக பணியாற்றினார், அந்தக் காலத்தில் உருகுவேயின் பொருளாதாரம் ஒரு ஏற்றத்தை சந்தித்தது. அவர் அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்கள் பலரின் பாராட்டையும் பெற்றன. உருகுவே மக்கள், தாங்கள் இதுவரை சந்தித்த ஜனாதிபதிகளிலேயே மிகவும் பணிவானவர் ஜோஸ் முஜிகா என்று நம்புகிறார்கள். ஏனென்றால், ஜனாதிபதியாக இருந்தபோதும், முஜிகா ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக கிராமப்புறத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வந்தார். இறக்கும் வரை, முஜிகா ஒரு பழைய மற்றும் பாழடைந்த வோக்ஸ்வாகன் காரைப் பயன்படுத்தி வந்தார். முஜிகாவைப் போலவே, இந்த வோக்ஸ்வாகனும் உலகில் பிரபலமானது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/உலகின்-ஏழ்மையான-ஜனாதிபதி-காலமானார்/50-357329
-
நான்கு இளைஞர்கள் கடலில் மூழ்கி பலி
நான்கு இளைஞர்கள் கடலில் மூழ்கி பலி எஸ்.சதீஸ் நீர்கொழும்பு- வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (13) இடம் பெற்றதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். நான்கு இளைஞர்களும் ஒன்றாக இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கடலலையில் அள்ளுண்டு சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து வென்னப்புவ பொலிஸார், கடற்படையினரின் உதவியோடு நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். சடலங்களாக மீட்கப்பட்ட மூவர் பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றுமொரு நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர். உதயகுமார் ஸ்ரீதரன் (வயது 17), ஸ்ரீகாந்த் சரண் ராஜ் (வயது 19), ஸ்ரீகாந்த் அஜித் குமார் (வயது 18) மற்றும் யூசுப் (வயது 27) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன. சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் ஸ்ரீகாந்த் சரண் ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித் குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் எனவும் உதயகுமார் ஸ்ரீதரன் உறவினர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். நான்கு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வென்னப்புவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.tamilmirror.lk/மலையகம்/4-இளைஞர்கள்-கடலில்-மூழ்கி-பலி/76-357332
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: 10 பேரடங்கிய குழு நியமனம் கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை National Child Protection Authority தனி விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அதிகாரசபையின் தலைவர் திருமதி பிரீத்தி இனோகா ரணசிங்க, இதற்காக பத்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பதினைந்து வயது சிறுமி ஒருவர், பாடசாலை ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதால், மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார். அதன்பின்னர் தனியார் வகுப்பிலும் அந்த மாணவிக்கு மன உளைச்சல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாணவி உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். https://www.tamilmirror.lk/செய்திகள்/கடடஞசன-மணவ-வவகரம-10-பரடஙகய-கழ-நயமனம/175-357336
-
உலக சதுரங்கப் போட்டியில் இணுவில் சிறுமிக்கும் இடம்! நிதி அனுசரணைக்கு தந்தை கோரிக்கை
உலக சதுரங்கப் போட்டியில் இணுவில் சிறுமிக்கும் இடம்! நிதி அனுசரணைக்கு தந்தை கோரிக்கை இணுவில் பகுதியை சேர்ந்த தர்சன் கஜிசனா என்ற சிறுமி, 8 வயதுக்குக்கு உட்பட்டோருக்கான உலக சதுரங்க சம்பியன்ஷிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார். இது தொடர்பில் அவருடைய தந்தை நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது: எட்டு வயதுக்குட்பட்ட உலக சதுரங்க சம்பியன்ஷிப் போட்டிக்கு எனது மகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் அல்பேனியாவில் நடைபெற்ற மேற்காசிய இளையோர்களுக்கான தொடரிலும் எனது மகள் விளையாடக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், நிதி அனுசரணை இல்லாத காரணத்தால் அதில் எனது மகள் கலந்துகொள்ளவில்லை. கடந்த வருடம் தேசிய ரீதியாக நடைபெற்ற சதுரங்க போட்டியில் முதலிடத்தை பெற்று, இலங்கையின் 8 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் உத்தியோகபூர்வ வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பாடசாலைகள் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டு சர்வதேச வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார். மேலும் கடந்த டிசெம்பர் மாதம் உலகளவிலான ரப்பிட் செஸ் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தில் காணப்பட்டார். எனவே தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் எமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்கு நிதி தேவையாகவுள்ளது. நிதி அனுசரணையாளர்கள் ஆதரவு வழங்கும் பட்சத்தில் எனது மகள் மேலும் பல போட்டிகளில் பங்குபற்றி எமது மண்ணுக்கு பெருமை சேர்ப்பார் - என்றார். https://newuthayan.com/article/உலக_சதுரங்கப்_போட்டியில்_இணுவில்_சிறுமிக்கும்_இடம்!_நிதி_அனுசரணைக்கு_தந்தை_கோரிக்கை
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல் நிறுத்தம் - முடிவுக்கு வரும் ராணுவ நடவடிக்கைகள்
போர் நிறுத்தம்.. நாடு நாடாக போய் பெருமிதம் பேசும் டொனால்ட் டிரம்ப்- நெருக்கடியில் மத்திய அரசு! 14 May 2025, 9:32 AM இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த முயற்சிகள் குறித்து அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பெருமிதம் தெரிவித்து வருகிறார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாக கேள்வி எழுப்பி வரும் நிலையில் டிரம்ப்பின் பெருமித பேச்சால் மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக Operation Sindoor ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர்ச் சூழல் உருவானது. இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளும் 4 நாட்களாக இடைவிடாமல் தாக்குதல்கள் நடத்தின. இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையீட்டால் இருநாடுகளும் தாக்குதல்களை நிறுத்திவிட்டன. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தை டொனால்ட் டிரம்ப்தான் முதலில் அறிவித்தார். இதனையடுத்தே இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் அதிகாரப்பூர்வமாக தாக்குதல்கள் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன. இந்தியாவைப் பொறுத்தவரையில் 3-வது நாடு ஒன்றின் தலையீட்டை எப்போதும் அனுமதிப்பது இல்லை. ஆனால் பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை மத்திய அரசு ஏன் அனுமதித்தது? என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனால் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக மத்திய அரசு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதும், பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமான படைதளத்தில் போர் வீரர்களிடையே உரையாற்றிய போதும் எதுவுமே விளக்கம் தரவில்லை. இந்த பின்னணியில் சவுதி அரேபியா சென்ற டொனால்ட் டிரம்ப், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை தாமே நிறுத்தியதாக மீண்டும் பெருமிதத்துடன் பேசி இருக்கிறார். இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தங்களை முன்வைத்தே இந்த போர் நிறுத்தத்தை தாம் செயல்படுத்தியதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், செல்லும் நாடுகளில் எல்லாம் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்துக்கு தாமே காரணம் என இடைவிடாமல் பேசி வருவது மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. https://minnambalam.com/ceasefire-trump-claims-glory-while-indian-government-faces-heat/
-
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணு ஆயுதப் போர் மூண்டால் என்ன நடக்கும்?
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணு ஆயுதப் போர் மூண்டால் என்ன நடக்கும்? – பகுதி 1 13 May 2025, 6:52 PM 2025ஆம் ஆண்டு (ஆராய்ச்சிக்காக ஒரு கற்பனை), பயங்கரவாதிகள் இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்குகிறார்கள். டிசம்பர் 2001இல், இந்திய நாடாளுமன்றத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த முறை தாக்குதல்களில் இந்திய அரசாங்கத்தின் பல உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஜனவரி 2002இல் நடந்ததுபோல, இரு தரப்பினரும் நாடுகளுக்கு இடையிலான எல்லையிலும் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியிலும் தங்கள் படைகளைத் திரட்டி நிறுத்துகிறார்கள். இரு பக்கமும் நிலவும் அதீதப் பதற்றங்கள் காரணமாக மோதல்கள் வெடிக்கின்றன. இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள். இந்திய அரசாங்கம் பல தலைவர்களை இழந்ததால், இந்திய ராணுவம் தானாகவே செயல்பட முடிவுசெய்கிறது. டாங்கிகள் மூலம் பாகிஸ்தானுக்குள் எல்லையைக் கடந்து, காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு எனப்படும் நடைமுறை எல்லையைக் கடந்து செல்கிறது. பாகிஸ்தான் ஜெனரல்கள் பீதியடைந்து, வலிமை வாய்ந்த இந்தியப் படைகளின் படையெடுப்பை முறியடிக்க ஒரே வழி அணு ஆயுதங்கள்தான் என்று முடிவு செய்கிறார்கள். அணு ஆயுதப் போரின் முதல் நாளில், அவர்கள் 10 போர்க்களத்தில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய சக்தி குறைந்த அணுகுண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொன்றும் 5 கிலோ டன்கள் கொண்டவை.(ஹிரோஷிமாவில் வீசப்பட்ட குண்டின் பாதிக்கும் குறைவான சக்தி கொண்டவை). தங்கள் எல்லைகளுக்குள், குறைந்த உயரத்தில் இந்திய டாங்கிகள் மீது அவற்றை வெடிக்கச் செய்கின்றனர். இரண்டாவது நாளில், பாகிஸ்தான் மேலும் 15 அணு ஆயுதங்களைப் பயன்படுத்திய பிறகு, பாகிஸ்தான் இராணுவ இலக்குகளை அணு ஆயுதங்களால் தாக்கினால்தான் அது போரை நிறுத்தும் என்று இந்தியர்கள் கருதுகிறார்கள். இந்தியர்கள் பாகிஸ்தான் பயன்படுத்தியதைப் போன்ற 20 அணு ஆயுதங்களை வான்வழியில் வெடிக்கச் செய்கிறார்கள். இரண்டு பஹவல்பூரில் உள்ள பாகிஸ்தான் காரிஸன் மீதும், 18 பாகிஸ்தான் விமானநிலையங்கள், அணு ஆயுதக் கிடங்குகளுக்கு மேலேயும் வெடிக்கின்றன. தொலைதூரப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட பாகிஸ்தானின் ஆயுதங்களைப் போலல்லாமல், இவை மிகப்பெரிய அளவில் நெருப்பைப் பற்றவைக்கின்றன. 1945இல் அமெரிக்கா குண்டுவீசிய பின்னர் ஹிரோஷிமாவில் நடந்ததுபோலவும், 1906இல் சான் பிரான்சிஸ்கோவில் பூகம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயின் விளைவாக நடந்ததுபோலவும் பெருமளவிலான புகை மேல் வளிமண்டலம் வரை உயர்கிறது. இந்தியாவின் தாக்குதல் பலனளிக்கவில்லை. பாகிஸ்தான் தனது அணு ஆயுதத் தாக்குதல்களை நிறுத்துவதற்குப் பதிலாக, மூன்றாம் நாளில் 30 வான்வழித் தாக்குதல்களை – இந்திய நகரங்களில் உள்ள காவற்படைகள் மீது 20, நகர்ப்புறங்களில் உள்ள இந்தியக் கடற்படைத் தளங்கள், விமானநிலையங்கள் மீது 10 – பயன்படுத்துகிறது. இந்தியத் துருப்புக்கள்மீது மேலும் 15 அணு ஆயுதங்களை ஏவுகிறது. நகர்ப்புறங்களில் அமைந்துள்ள 10 பாகிஸ்தான் கடற்படை, இராணுவம், விமானப்படை தளங்கள்மீது இந்தியா அணு ஆயுதத் தாக்குதல்களை நடத்துகிறது. இனி போரை நிறுத்த முடியாது. இரு தரப்பிலும் கோபம், பீதி, தவறான தகவல் தொடர்பு, முன்னரே தீர்மானிக்கப்பட்ட முடிவுகள் ஆகியவை போருக்கான எரிபொருள்களாகின்றன. அடுத்த மூன்று நாட்களில், பாகிஸ்தான் தனது ஆயுதக் களஞ்சியத்தின் மீதமுள்ள பகுதியைப் பயன்படுத்துகிறது, 120 ஆயுதங்கள் இந்திய நகரங்களை அழிக்கின்றன; இந்தியா மேலும் 70 வான்வழித் தாக்குதல்களுடன் பதிலளிக்கிறது. ஆனால் தன் ஆயுதக் களஞ்சியத்தில் 100 ஆயுதங்களை மீதி வைத்திருக்கிறது. ஒருவேளை சீனா தன்னைத் தாக்கத் தொடங்கினால் அதை எதிர்கொள்வதற்காக அவற்றை வைத்திருக்கிறது. ஆனால், இந்திய அணு ஆயுதக் களஞ்சியம் பாகிஸ்தானுடனான போரைத் தடுக்கத் தவறிவிட்டது என்னும் சோகமான யதார்த்தத்தை அது கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அது பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றது. மிகப்பெரிய சுற்றுச்சூழல் தாக்கங்களை உருவாக்கவிருக்கிறது. உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களை, ஏன் பில்லியன்களைக்கூட பாதிக்கக்கூடிய பஞ்சங்களை ஏற்படுத்தும். நாங்கள் முன்வைக்கும் இந்தக் கற்பனையான சூழ்நிலையில்250 நகர்ப்புற இலக்குகளின் இருப்பிடங்களைப் படம் 1 காட்டுகிறது. [படம் 1. இந்தியா–பாகிஸ்தான் அணு ஆயுதப் போர் நடக்கும் நிலையில் நகர்ப்புற இலக்குகள். வெவ்வேறுநிறங்கள் போரின் வெவ்வேறு நாட்களைக் குறிக்கின்றன. முதல் நாளில் எந்த நகர்ப்புற இலக்கும்தாக்கப்படுவதில்லை. அடர்த்தியான நகர்ப்புறங்களில், சில புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைகின்றன. எடுத்துக்காட்டாக பாகிஸ்தானின் தெற்கு கடற்கரையில் உள்ள கராச்சியில்.] அணு ஆயுதப் போர் நிகழ்வது சாத்தியமா? காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்திய, பாகிஸ்தான் துருப்புக்களுக்கிடையே மோதல் ஏற்படும் என்று கற்பனை செய்வது கடினம் அல்ல. ஆனால், இதுபோன்ற மோதலால் இரு நாடுகளும் அணு ஆயுதப் போரைத் தொடங்க வாய்ப்பில்லை. பாகிஸ்தானைப் போல அல்லாமல், முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற அறிவிக்கப்பட்ட கொள்கையை இந்தியா கொண்டுள்ளது. “வழக்கமான” போர் முறைகள் தோல்வியடைந்தால், தன்னைத் தற்காத்துக்கொள்ளத் தேவைப்பட்டால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று பாகிஸ்தான் கூறியிருக்கிறது. இந்த நாடுகள் நான்கு வழக்கமான போர்களை (1947, 1965, 1971, 1999) நடத்தியுள்ளன. இந்தியா – பாகிஸ்தான் போர், 1971 1947இல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு கணிசமான உயிரிழப்புகளுடன் பல மோதல்களைச் சந்தித்தன. 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில், காஷ்மீரில் நடந்த சண்டையைத் தொடர்ந்து இந்தியா வான் வழியில் பாகிஸ்தானுக்குள் நுழைந்தது. இந்திய விமானங்களில் ஒன்று பாகிஸ்தானுக்குள் சுட்டுவீழ்த்தப்பட்டது. நல்வாய்ப்பாக விமானி உயிர் பிழைத்தார். மேற்கொண்டு போர் எதுவும் இல்லாமல் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். ஆனால் இந்த நல்வாய்ப்பு எப்போதும் இருக்குமா? 2019, ஆகஸ்டில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. அதற்கு எதிரான போராட்டங்களைத் தடுக்க இந்தியப் படைகள் மாநிலத்தை முடக்கிவைத்தன. இன்றுவரை அங்கே நிலைமை பதற்றமாகவே உள்ளது. இந்தியா இப்பகுதியை இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைக்கக்கூடும். அவை உள்ளூர் அரசாங்கங்களுக்குப் பதிலாக மத்திய அரசாங்கத்தால் நேரடியாக நிர்வகிக்கப்படக்கூடும். பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையேயான அணு ஆயுதப் போரால் இந்நாடுகளிலும் உலக அளவிலும் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆராய, நாங்கள் அத்தகைய போரின் சாத்தியமான விளைவுகளை, அது எவ்வாறு தொடங்கலாம் என்பதற்கான அனுமானத்துடன் ஆராய்ந்தோம். மோதலின் தொடக்கம் அல்லது அதிகரிப்புக்கு எந்த ஒரு தரப்பின்மீதும் பழி சுமத்துவது எந்த வகையிலும் எங்கள் நோக்கமல்ல. இரு தரப்பிலும் மோசமான முடிவுகள் எடுக்கப்படாமல் அத்தகைய மோதல் நிகழாது. இரு நாட்டிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள், பீதி, தகவல் தொடர்பு இழப்பு, அமைப்புகளைக் கண்காணிப்பதில் தொழில்நுட்பத் தோல்விகள், ஹேக்கிங் அல்லது மறு தரப்பு ராணுவத்தின் செயல்களைத் தவறாகப் புரிந்துகொள்வது ஆகியவற்றால் இந்த மோதல் அதிகரிக்கக்கூடும். ஆராய்ச்சிக்காக நாங்கள் முன்வைக்கும் கற்பனையான சூழலின்படி 2025ஆம் ஆண்டில் அணு ஆயுதப் போர் நடக்கிறது. இரு நாடுகளும் சுமார் 250 அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. பாகிஸ்தான் தனது அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தும். சீனாவிடமிருந்து வரக்கூடிய தாக்குதல்களுக்கு எதிராகத் தற்காத்துக்கொள்ள இந்தியா தன்னிடத்தில் இருப்பவற்றில் 100 அணு ஆயுதங்களைச் சேமித்துவைக்கும். இந்தியா அணு ஆயுதங்களைத் தயாரித்ததற்கு முதன்மையான காரணம் சீனாதான். இந்த அணு ஆயுதப் பரிமாற்றத்தின் நேரடி விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும்; 50 முதல் 125 மில்லியன் மக்கள் இறப்பார்கள் (ஒரு மில்லியன் = 10 இலட்சம்) என்று எங்கள் குழு மதிப்பிட்டுள்ளது. பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் 15, 50 அல்லது 100 கிலோ டன்களைக் கொண்டிருக்குமா என்பதைப் பொறுத்துச் சாவு எண்ணிக்கை மாறலாம். (ஒரு கிலோ டன் என்பது 1,000 டன் TNTயின் வெடிக்கும் சக்திக்குச் சமம்.) இந்திய, பாகிஸ்தான் சமூகங்களுக்கு இதன் விளைவுகள் மோசமானதாக, நீண்ட காலம் நீடிக்கக்கூடியதாக இருக்கும். பல முக்கிய நகரங்கள் பெருமளவில் அழிந்துபோய், வாழத் தகுதியற்றவையாகிவிடும். காயமடைந்த மில்லியன் கணக்கான மக்களுக்குக் கவனிப்பு தேவைப்படும். மின்சாரம், போக்குவரத்து, நிதி உள்கட்டமைப்பு ஆகியவை சீரழிந்து சின்னாபின்னமாகும். இந்தியா-பாகிஸ்தான் அணு ஆயுதப் போரினால் காலநிலையின் மீது ஏற்படும் விளைவுகள் துணைக்கண்டத்துடன் அல்லது ஆசியாவுடன் நிற்காது. அந்த விளைவுகள் மிகப்பெரியதாகவும் உலகளாவியதாகவும் இருக்கும். (கட்டுரையின் அடுத்த பகுதி நாளை) கட்டுரையாளர்கள் : ஆலன் ரோபோக் – அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் புகழ்பெற்ற பேராசிரியராக உள்ளார். ஓவன் பி. டூன் – அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் துறையிலும், வளிமண்டல மற்றும் விண்வெளி இயற்பியலுக்கான ஆய்வகத்திலும் பேராசிரியராக உள்ளார். சார்லஸ் ஜி. பார்டீன் – அமெரிக்காவின் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையத்தில் உள்ள வளிமண்டல வேதியியல் அவதானிப்புகள் மற்றும் மாடலிங் ஆய்வகத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக உள்ளார். லில்லி சியா – அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் ஆராய்ச்சியாளராக உள்ளார். ஹான்ஸ் எம். கிறிஸ்டென்சன் – வாஷிங்டன், டி.சி.யில் உள்ள அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பில் அணு தகவல் திட்டத்தின் இயக்குநராக உள்ளார். மேத்யூ மெக்கின்சி – அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் உள்ளஇயற்கை வள பாதுகாப்பு கவுன்சிலில் (NRDC) அணுசக்தி, காலநிலை மற்றும் எரிசக்தி திட்டத்தின் இயக்குநராக உள்ளார். ஆர். ஜே. பீட்டர்சன் – அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ளார். செரில் எஸ். ஹாரிசன் – அமெரிக்காவின் டெக்சாஸ் ரியோ கிராண்டே வேலி பல்கலைக் கழகத்தின் பூமி, சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார். நிக்கோல் எஸ். லவென்டுஸ்கி – கடல்சார் ஆய்வாளர் மற்றும் அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக உள்ளார். ரிச்சர்ட் பி. டர்கோ – அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நன்றி: டெய்லர் அண்ட் ஃபிரான்சிஸ் ஆன்லைன் தமிழில்: தேவா https://minnambalam.com/what-happend-if-india-pakistan-nuclear-war-start/
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
”பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு… கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து” : தலைவர்கள் வரவேற்பு! 13 May 2025, 8:10 PM பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் இன்று (மே 13) உத்தரவிட்டது. இதனை கட்சி பேதமின்றி தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மனதார வரவேற்று, நீதிமன்ற தீர்ப்பை பாராட்டி வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று நினைத்தாலும் மனம் பதைபதைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது நடந்த பெண்களுக்கு எதிரான இந்தக் கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம். குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை அன்று எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.கழகம், மக்களின் துணையோடு முறியடித்ததே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்க காரணம். விசிக தலைவர் திருமாவளவன் : பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு என்பது கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து. விசிக மனப்பூர்வமாக வரவேற்கிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு 9 பேரும் குற்றவாளிகள் என்ற தீர்ப்பு ஆறுதலை தருவதாக இருக்கிறது. இந்தியாவில் இப்படி ஒரு கூட்டு பாலியல் குற்றம் நடந்திருக்காது என்ற அளவிற்கு மோசமான சம்பவம் பொள்ளாச்சியில் நடந்தது. சட்டத்தின் படி அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டால் தான் கூட்டுப் பாலியலில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு அச்சம் ஏற்படும். தவெக தலைவர் விஜய் : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை வழங்கி, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். எனவே, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை நீண்ட காலமாக நடத்தி நீட்டிக்காமல், விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். ராணுவத்தில் நம் பெண்கள் வீர தீரத்துடன் சாதித்ததைக் கொண்டாடும் இக்காலத்தில், மகளிரின் பாதுகாப்பில் அரசு மட்டுமின்றி ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட்டு, பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் இனியாவது எவ்வித சமரசமுமின்றி உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் : பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகக்கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கில் புலன்விசாரணை நடத்திய சிபிஐ, நீதிமன்றத்தில் விசாரணையை கையாண்ட அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோரின் பணிகள் பாராட்டத்தக்கவை. இந்த வழக்கில் 48 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் கூட பிறழ்சாட்சியாக மாறாமல் கடைசி வரை தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது பாராட்டப்பட வேண்டியதாகும். இந்த வழக்கில் அழிக்கப்பட்ட மின்னணு ஆவணங்களை மீட்டெடுத்து குற்றவாளிகள் தப்பிவிடாமல் தடுத்த அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இப்போது நீதிகிடைத்திருக்கிறது என்றாலும் இது தாமதிக்கப்பட்ட நீதிதான். 6 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் போதிய எண்ணிக்கையில் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் இல்லாததுதான். இந்த வழக்கை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம் கூட சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு மிகவும் தாமதமாகத் தான் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.85 லட்சம் இழப்பீடு போதுமானது அல்ல. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ரூ. 8 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை மட்டும் தான் இழப்பீடு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குற்றவாளிகளிடம் சிக்கி பல ஆண்டுகள் கொடுமையை அனுபவித்த அவர்கள், அதன்பின் கடந்த 6 ஆண்டுகளாக கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உலகமே பாராட்டக்கூடிய ஒரு அதிரடி தீர்ப்பைக் கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்து இருப்பதைத் தேமுதிக சார்பாக வரவேற்கிறோம். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்க ஒரு விஷயம். அதுமட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பும் நீதிக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை தீர்ப்பைக் கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இந்த வழக்கை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு இனி வருங்காலங்களில் இளைஞர்கள் இது போன்ற தவறுகளை செய்யாமல் கண்ணியதோடு இருக்க வேண்டும் என்பதற்கு இந்த தீர்ப்பு சான்றாக இருக்கிறது. கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பைத் தேமுதிக சார்பாக வரவேற்கிறோம். தமாக தலைவர் ஜி.கே.வாசன் : பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை செயல் மிருகத்தனமானது. தமிழகத்தையே தலைக்குனிய வைத்த சம்பவம். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை என்ற நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்க தீர்ப்பு. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என்ற ரீதியிலே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தவறான கண்ணோட்டத்தோடு பெண்களை பார்ப்பவர்களுக்கும், சிந்திப்பவர்களுக்கும் இத்தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம் இழப்பீடு அறிவித்து இருப்பதையும், குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையை வழங்கியிருப்பதையும் தமிழ் மாநில காங்கிரஸ் வரவேற்கிறது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் : பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. நாம் அனைவராலும் போற்றி வணங்கப்பட வேண்டிய பெண்களிடம் ஈவு இரக்கமின்றி மிகக் கொடூரமான முறையில் நடந்து கொண்ட மிருகக் குணம் படைத்தவர்களுக்கு கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பை வரவேற்கும் அதே நேரத்தில், அதற்கு இணையாக தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறும் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருப்பதை இனியாவது உணரவேண்டும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் : 2019-ல் தமிழகத்தையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம், குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. 2019 பிப்ரவரியில் அம்பலத்திற்கு வந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் வலுவான போராட்டங்களை நடத்திய பின்புலத்தில் இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவினர் அதில் சம்பந்தப்பட்டிருந்ததும் துவக்க கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இது தாமதத்தையும், பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அச்சத்தையும் உருவாக்கி இருந்தது. இதற்கு எதிரான போராட்டங்கள் பெரும் வீச்சோடு நடந்த பின்னரே 16 மாத காலத்திற்குப் பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். கூட்டு பாலியல் வன்கொடுமை, தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் 9 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்து இருக்கிறார். அதிமுக நிர்வாகி அருளானந்தம் என்பவரும் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவர். இந்த தீர்ப்பு பாலின வன்முறைக்கு எதிரான போராட்டங்களுக்கு கிடைத்துள்ள வெற்றி. பாதிக்கப்படும் பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடியதுமாகும். இந்த வழக்குகளில் அழிக்கப்பட்ட ஆதாரங்கள் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டது பாராட்டத்தக்கது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் வழக்கின் இறுதிக் கட்டம் வரை உறுதியாக நின்று, சவால்களை எதிர்கொண்டு உறுதியாக சாட்சியம் அளித்தது என்பதும் போற்றுதலுக்குரியதாகும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அல்லது அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி அக்குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளித்திட வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் : கடந்த 2019 பிப்ரவரி மாதம் நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்தாக்குதல் மத்திய புலனாய்வு துறை விசாரணை அதிகாரியின் விசாரணையும், சாட்சியங்களையும், ஆவணங்களையும் நீதிமன்ற விசாரணையில் நிலைநாட்டி, குற்றத்தை உறுதி செய்த முறை பாராட்டத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை, குற்றவாளிகளின் மனிதத் தன்மையற்ற ஈனச் செயலை நீதிமன்றத்தில் நிலைநாட்டியதை போற்றிப் பாராட்டுகிறோம். குற்றவாளிகள் மீது முன்வைக்கப்பட்ட 76 குற்றச்சாட்டுகளில் 66 குற்றங்களை உறுதி செய்து, நிலைநாட்டிய விசாரணை அதிகாரிகள், சாட்சியளித்தவர்கள், இவைகளை தக்க முறையில் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, குற்றங்களை நிரூபித்த மத்திய புலனாய்வு துறை வழக்கறிஞர் ஆகியோருக்கு நன்றி பாராட்டி வாழ்த்துகிறோம். பாலின சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் கோவை மகளிர் நீதிமன்றம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ 85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியிருப்பது, போராடும் பெண்களுக்கு வாளும், கேடயமுமாக உதவி சிறப்புப் பெறும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் : பல பெண்களின் வாழ்வை சீரழித்து, தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து, அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மிகவும் வரவேற்பிற்குரியது. பெண்கள் பாதுகாப்பை உருக்குலைக்கும் குற்றவாளிகள் நீதியின் பிடியில் இருந்து என்றும் தப்பிக்க முடியாது என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் விதமாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. பாதிக்கப்படும் பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் முன்னுதாரண தீர்ப்பு இது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், போக்சோ வழக்குகளும் தற்போது தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், குற்றமிழைக்க முற்படும் கயவர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இத்தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன். நீதியை நிலைநாட்ட போராடிய அனைவருக்கும், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய மாண்புமிகு நீதிமன்றத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை : தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேல், துணிச்சலாகப் போராடி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தந்துள்ள பாதிக்கப்பட்ட சகோதரிகள் அனைவருக்கும், இந்தத் தீர்ப்பு ஓரளவாவது மன ஆறுதல் அளிப்பதாக அமையும் என்று நம்புகிறேன். இந்த வழக்கில் நியாயம் கிடைக்கப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிரான வழக்குகளில், தாமதமின்றிச் செயல்படவும், அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்முறைக்கும், விரைவாக நியாயம் கிடைக்கவும், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். https://minnambalam.com/tn-political-leaders-welcome-pollachi-case-verdict/
-
குமுதினி படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
குமுதினி படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! adminMay 14, 2025 குமுதினி படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளைய தினம் வியாழக்கிழமை நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படவுள்ளது. மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலயம், மாவிலித்துறை சவேரியார் ஆலயம், மற்றும் தேவசபை ஆலயம் என்பவற்றில், படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆத்மா சாந்திக்கான வழிபாடுகள் சம நேரத்தில் காலை 08 மணிக்கு இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து காலை 9.00 மணிக்கு மாவிலித்துறைமுகப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டோர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. 1985.05.15 அன்று காலை பல கனவுகளுடன் நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி குமுதினி படகில் பயணித்தவர்கள் உயிர் நடுக்கடலில் பறிக்கப்பட்டு நான்கு தசாப்த்தங்கள் கடந்து நினைவுகூரும் நினைவு அஞ்சலி நிகழ்வுகளின் போது அனைவரும் கலந்துகொண்டு படுகொலையானவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்குமாறு நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் https://globaltamilnews.net/2025/215471/
-
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு 15 ஆம் திகதி ஆரம்பம்!
செம்மணியில் நாளை அகழ்வுப்பணி adminMay 14, 2025 யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில், மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் நாளைய தினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளன. கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பில் காவல்துறையினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டு அமைய, விடயத்தை காவல்துறையினர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதை, தொடர்ந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இதன்போது, மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கான் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, அங்கு அகழ்வாய்வு இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகின்றது. துறைசார் வல்லுநர் பேராசிரியர் சோமதேவ தலைமையில் இந்த ஆய்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன. பேராசிரியர் சோமதேவ கடந்த மூன்றாம் திகதியன்று மனிதச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்ட இடத்தில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/215481/
-
தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்! adminMay 14, 2025 கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டமைக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தமது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து இதற்கான எதிர்ப்பை அரசாங்கம் வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நினைவுச் சின்னம் திறக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கங்கள் குறித்தும் தாம் கவலையடைவதாக நாமல் தெரிவித்துள்ளார். உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் இலங்கையின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக எந்த இனப்படுகொலையும் நிரூபிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தவறான இனப்படுகொலை கதையை கனடா ஊக்குவிப்பதாகவும் கூறியுள்ளார். ‘அ மைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயல்படுவதற்குப் பதிலாக, சில குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகப் பிரிவினையைத் தூண்டி விட்டன.’ ‘பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குழுக்களை ஆதரிக்கும் கனடாவின் வரலாறு, உலகளாவிய பயங்கரவாதம் குறித்த அதன் நிலைப்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது’ என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். https://globaltamilnews.net/2025/215474/
-
'விழுதாகி வேருமாகி' - 2ம் லெப். மாலதி படையணி
இலவசமாக நூலைப் படிக்க https://padippakam.com/padippakam/document/ltte/Book/book00059.pdf
-
'விழுதாகி வேருமாகி' - 2ம் லெப். மாலதி படையணி
'விழுதாகி வேருமாகி' - 2ம் லெப். மாலதி படையணி முகநூல் குறிப்பு- இளங்கோ டிசெ கடந்த சில நாட்களாக வேறொரு உலகில் உலாவிக்கொண்டிருந்தேன். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பரும் எப்போது இதிலிருந்து வெளியே வருவாயெனக் கேட்டபடியிருந்தார். இந்த நூலை நான் 20 வருடங்களுக்கு முன் வன்னிக்குள் வாசித்திருக்கின்றேன். 600 பக்கங்களுக்கு மேல் நீளும் நூலென்பதால் அதையன்று முழுமையாக வாசிக்கவில்லை. ஆனால் கடந்த 20 வருடமாக அந்த நூலைத் தேடிக் கொண்டிருந்தேன். இப்போது வாசிக்கக் கிடைத்திருந்தது. அது விடுதலைப்புலிகளின் பெண்கள் அணியாகிய (2ம். லெப்.) மாலதி படையணியின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிக் கூறுகின்ற 'விழுதாகி வேருமாகி' என்கின்ற நூல். இந்த நூல் 1996 -2001 வரையான போராட்டக் காலத்தைப் பதிவு செய்கின்றது. 1995, சூரியகதிர் -01 மூலம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய இலங்கை இராணுவம், 1996 இல் வடமராட்சி/தென்மராட்சியைக் கைப்பற்ற சூரியக்கதிர்-02 நடவடிக்கையை எடுக்கின்றது. இந்தக் காலப்பகுதியிலே விதுஷா தலைமையிலான தனியே பெண்களைக் கொண்டமைந்த 'மாலதி படையணி' புலிகளால் கட்டியமைக்கப்படுகின்றது. மாலதி என்பவர் களத்தில் சாவடைந்த புலிகளின் முதல் பெண் போராளி. அவர் 1987 இல் கோப்பாயில் இந்திய இராணுவத்துடனான மோதலில் களச்சாவடைந்திருந்தார். அவரின் பெயரிலே புலிகளின் பெண்கள் அணி தொடங்கப்பட்டது. மாலதி படையணி தமது முதல் களப்பலியை தென்மராட்சியில் கொடுக்கின்றது. ஒருகுறிப்பிட்ட காலம்வரை மரபு இராணுவத்தைப் போன்று இலங்கை இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தபோராடிக் கொண்டிருந்த மாலதி படையணி வன்னிக்குள் உள்ளெடுக்கப்படுகின்றனர். விரும்பிய கொஞ்சப்பேர் மட்டும் கொரில்லாப் படையாக தென்மராட்சிப் பகுதிக்குள் உலாவத் தொடங்குகின்றனர். இவ்வாறு தொடங்கும் மாலதி படையணியின் களங்கள் வன்னிக்குள் விரிகின்றன. இதன் பின்னரே 1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவு முகாம் புலிகளால் தகர்க்கப்படுகின்றது. அது ஒயாத அலைகள் -01 எனப் பெயரிடப்படுகின்றது. அந்த முகாம் தாக்குதலில் பங்குபற்றிய மாலதி படையணி, பின்னர் A9 நெடுஞ்சாலையை வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்தை இணைக்க வைக்கத் தொடங்கிய ஜெயசுக்குறு (வெற்றி நிச்சயம்) நடவடிக்கையில் பல்வெறு முனைகளில் நின்று மாலதி படையணி சமர் புரிந்திருக்கின்றது. அவர்கள் மணலாற்றிலிருந்து மன்னார் வரை, புளியங்குளம் (கடும் சண்டை நடந்த அந்த இடம் அவர்களின் மொழியில் புரட்சிக்க்குளம்), ஒட்டுசுட்டான், மன்னன்குளம் என்று நாம் கற்பனையே செய்து பார்க்க முடியாத கொடும் களங்களில் முன்னணியில் நின்றிருக்கின்றனர். இந்த நூலின் முக்கியம் என்பது புலிகள் ஓயாத அலைகள்-01, 02 என்று முல்லைத்தீவு, கிளிநொச்சி பெரும் இராணுவ முகாங்களைத் தகர்த்ததையோ, அல்லது ஓயாத அலைகள் -03 என்று வன்னி பெரும் நிலப்பரப்போடு ஆனையிறவை வென்றதையோ, ஓயாத அலைகள் -04 எனப்பெயரிட்டு சாவகச்சேரி அரியாலை, நாகர்கோயில் என முன்னேறி செம்மணிப் பாலத்தடியில் நின்று இலங்கை இராணுவத்தின் யாழ் இருப்பையோ இறுக்கியதோ பற்றியதல்ல. போர் என்பது எப்படி நடக்கின்றது என்பது பற்றிய அசலான அனுபவங்களுள்ள போராளிகள் எழுதிய பதிவுகள் என்பதால்தான் இந்த நூல் மிக முக்கியமான நூலாக இருக்கின்றது. இந்தப் பெண்களோ சொல்வது போல, ஒவ்வொரு அத்தியாயங்களிலும் நீங்கள் ஒரு நாயகியைக் காண்பீர்கள். சிலவேளைகளில் ஒரு அத்தியாயத்திலே பல வீரநாயகிகளைக் காண்பீர்களென்று அவர்கள் சொல்வதைப் போல பல போராளிகளின் வீரத்தை/தியாகத்தைப் பார்க்கின்றோம். * ஒரு படையணியின் தோற்றத்தை, களத்தில் வெற்றி பெற்றத்தை/ முன்னேறும் எதிரியோடு எதிர்த்துப் போரிட்டதை மட்டுமின்றி இதை வாசிக்கையில் இந்தப் போரின் கொடுமைகளையும் நாம் பார்ப்பதுதான் என்னளவில் முக்கியமானது. நாங்கள் கடந்த காலத்தை ஒருபோதும் மாற்றிவிடமுடியாது. ஆனால் இன்னொரு போர் எந்தப் பொழுதிலும் எங்களுக்குத் தேவையற்றது என்பது ஒரு முன்னுதாரணமாக இதைப் பார்க்கலாம். எப்படி 96இல் சாவகச்சேரியில் இருந்து துரத்தப்பட்டார்களோ, அதேபோன்று ஓயாத அலைகள் -04 உடன் சாவகச்சேரிக்குள் நுழைந்து நிலங்களைத் தக்கவைத்துக் கொள்கின்றார்கள். ஒருவகையில் அது அவர்களின் நீண்டநாள் கனவு. ஆனால் தொடர்ச்சியான இராணுவ முன்னேற்றங்களால் பேரழிவுடன் மீளவும் யாழை விட்டுச் செல்வதோடு இந்த நூல் முடிகின்றது. இதை வாசித்து முடிக்கும்போது எப்படி ஒரு போர் நடக்கின்றது என்ற யதார்த்தம் முகத்திலறைந்து திகைக்க வைக்கும். இன்றும் போரை ஒரு வெற்றிக்களிப்பாகக் கொண்டாடுகின்றவர்களும், அதுபோல புலிகளின் என்றாலே எல்லாவற்றையும் வன்மமாக்கின்ற தரப்பும் பொறுமையுடன் இதை வாசிக்க வேண்டுமெனப் பரிந்துரை செய்வேன். ஏனெனில் வரலாற்றை மிகையாகப் புகழ்ந்தோ அல்லது இருட்டடிப்புச் செய்தோ நாம் கற்றுக்கொள்ளப் போவதில்லை. அப்படியான 'கற்றல்கள்' நமது தப்பித்தல்களுக்கும், தனிப்பட்ட விருப்புகளுக்கும் உதவுமே தவிர, வரலாற்றைக் கற்பதற்கு உதவப்போவதில்லை. வரலாறு என்பதை நாம் நினைத்தபடி மாற்றியமைக்க முடியாது என்பதற்கு இந்த நூலே நல்லதொரு உதாரணம். இந்த நூலில் பல தளபதிகளின் வார்த்தைகள் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும். விதுஷா, துர்க்கா, பால்ராஜ், தீபன், கருணா என்று. கருணாவின் தலைமையில் இருந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜெயந்தன் படையணியின் தீரத்தாலே பெரும் எடுப்பில் நடத்தப்பட்ட ஜெயசுக்குறு சமர் முறியடிப்பு பல முக்கிய களங்களில் நிகழ்ந்தது என்பதை நாமறிவோம். ஜெயசுக்குறு சண்டையின் பின் புலிகளே ஒப்புக்கொண்ட உண்மை இது. இப்போது கருணா புலிகளுக்கு 'துரோகி'யாகிவிட்டார். என்கின்றபோதும் அன்றைய வரலாற்று உண்மையை, கருணாவின் மேற்கோள்களை வரலாற்றின் எந்தப் பக்கத்திலிருந்தும் எடுத்துவிட முடியாது என்பதற்கு இந்த நூலே ஒரு சாட்சியாக நிற்கின்றது. * இந்த நூலில் போராளிகளைப் பற்றிய பல நுண்ணிய அவதானங்கள் வந்தபடியே இருக்கும். ஒரு போராளி வாசிப்பதில் அவ்வளவு ஆர்வமுடையவர். களத்தில் கொடுக்கப்பட்ட சாப்பாட்டைச் சுற்றி வருகின்ற பேப்பரையே கவனமாகப் பிரித்தெடுத்து வாசித்துப் பார்க்கின்றவர். எப்போதும் அவரது கால்சட்டைப் பொக்கெட்டுக்குள் ஒரு புத்தகம் இருக்கும் என்ற விபரிப்பு இருக்கும். இப்படி நம் நினைவுகளை விட்டகலாத போராளிகளே இந்த நூலில் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் வந்தபடியிருக்கின்றனர். போராட்டம் இயக்கங்கள் குறித்து, போராட்டம் நடத்திய விதம் குறித்து விமர்சனங்களை எவ்வளவு தீர்க்கமாக வைக்கின்றோமோ, அதையளவு இந்தப் போராளிகள் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் நாம் ஒவ்வொருபொழுதும் நினைவுகூரத்தான் வேண்டும். எவரெவரோ இன்றைக்கு இந்தப் போராட்டத்தை 'குத்தகை'க்கு எடுத்தமாதிரி போலிப் பெருமிதங்களில் எழுதியும்/பேசியும் கொண்டிருக்கும்போது, இந்த உண்மையான போராளிகளின் இரத்தமும் சதையுமான வாழ்க்கையை நாம் ஒவ்வொருவரும் வாசித்தல் அவசியம் என்பேன்.மேலும் சிங்களம் உள்ளிட்ட வேறு மொழிகளில் இது மொழியாக்கப்பட்டு வருகையில் இந்தப் போராளிகள் பற்றிய பல எதிர்மறையான எண்ணங்கள் அவர்களிடையே உதிர்ந்து போகவும் கூடும். இறுதியாக இதற்கு முன்னுரை எழுதிய மாலதி படையணியின் தளபதியான விதுஷா சொல்வதைக் குறிப்பிட்டு இதை முடிக்கலாமென நினைக்கின்றேன்: "எழுதுமட்டுவாளிலிருந்த எமது முன்னணிக் காவலரண் பகுதி. நேரம் 4.30 ஆகிக் கொண்டிருந்தது. முன்னரங்கின் அருகிலிருந்த மைதானத்துக்கு ஒவ்வொரு அணிகளும் வந்து சேர்ந்து கொண்டிருந்தன. எல்லோரும் கலகலப்பாகக் கதைத்துச் சிரித்தபடி..சிலர் விளையாட, சிலர் சூட்டுப் பயிற்சிக்கென ஆயத்தமானார்கள். போர்க்காலத்தில் சிறு ஒலியைக் கூட எழுப்பமுடியாத, தலைநிமிர்த்தி நடக்கமுடியாத பகுதி அது. இது போர் நிறுத்தக் காலம் என்பதால் பதுங்கிச்சூடு, எறிகணை வீச்சு என்ற எந்தவித நெருக்கடியுமின்றி முன்னரங்கப் பகுதியே கலகலப்பாக இருக்கின்றது. ஒரு பனங்குற்றியில் அமர்ந்தவாறு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த என் மனம் திடீரென எங்கோ போனது. இந்த மைதானத்தில் நின்றிருக்கவேண்டிய பலரைக் காணவில்லை. அவர்கள் துயில் நிலங்களில் அமைதியாக இருக்கின்றார்கள். இவர்கள் புதிய தலைமுறையினர். இவர்களை உருவாக்கிவிட்டவர்களும், உருவாக்கியவர்களும், அவர்களை உருவாக்கியவர்களும் எனப் பலர், காலம் தமக்கிட்ட பணியை முடித்துத் தம்முடைய கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் எம்மிடம் தந்த நிறைவோடு உறங்குகின்றார்கள். மைதானத்தில் படையணிப் போராளிகளின் சத்தங்களும், அவர்களது சுடுகலன்கள் எழுப்பிய ஒலிகளும், நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்த ஊர்திகளின் இரைச்சல்களும் என்னை இந்த உலகுக்கு இழுத்து வரமுடியாமல் தோற்றுப் போயின." இதைவிட இந்தப் போர் தந்த துயரங்களைச் சொல்லிவிட முடியாது. இதற்கப்பால் அவர்களுக்கென்று தளராத நம்பிக்கையும், பெரும் கனவுகளும் இருந்தன. அதுவே அவர்களைத் தொடர்ந்து போராடச் செய்திருந்ததையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ******** https://www.facebook.com/share/p/1FaS5zR6AH/?mibextid=wwXIfr
-
பெற்ற பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த கொடூர தந்தை
பெற்ற பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த கொடூர தந்தை 13 May, 2025 | 10:15 AM யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் தனது பிள்ளைக்கு உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறமாகவும் இளவாலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 6 வயதான சிறுமி உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறியுள்ளது. குடும்பத்தினர் பிள்ளையை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். சிறுமிக்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. உணவூட்டிய தந்தை வீட்டை விட்டு தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தந்தையை கைது செய்ய இளவாலை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/214572
-
தமிழ் இனப்படுகொலை கல்விவாரம் தொடரும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது-விஜய் தணிகாசலம்
தமிழ் இனப்படுகொலை கல்விவாரம் தொடரும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது-விஜய் தணிகாசலம் Published By: Rajeeban 13 May, 2025 | 09:10 AM தமிழ் இனப்படுகொலை கல்விவாரம் தொடரும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது என ஒன்ராறியோவின் சுகாதார அமைச்சின் உளநலத்துறை இணை அமைச்சரும், ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதிக்கான மாநில சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை வாரம் குறித்த தனது சமூக ஊடகபதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்த வாரம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் , நான்கு வருடங்களிற்கு முன்னர் ஒன்டாறியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த வாரம் முழுவதும் தமிழ்சமூகத்தினரும் இளைஞர்களும் தமிழ் இனப்படுகொலையில் உயிர்பிழைத்தவர்களின் கதைகளை பகிர்ந்துகொள்வார்கள்.மேலும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அனுபவிக்கும் தலைமுறைகளிற்கு இடையிலான மனஉளைச்சல் குறித்து அறிந்துகொள்வார்கள். இனப்படுகொலை என்பது ஒரு நிகழ்;வால் குறிக்கப்படவில்லை.அது ஒரு செயல்முறை,ஒரு குழுவினரான மக்களை ,ஒழித்து அழிக்க அரசு தொடர்ந்து செய்யும்,தொடர்ச்சியான நடவடிக்கைகளின் வடிவம். மே2009ம் ஆண்டு தமிழர் இனப்படுகொலையின் உச்சமாக குறிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலி;ல் தமிழ் மக்களிற்கு உணவும் மருந்தும் மறுக்கப்பட்டமை,பாலியல் வன்முறைகள் கொலைகள், கடத்தல்கள் கொத்துக்குண்டுகள் குறித்த தெளிவான நினைவுகளுடன் நாங்கள் விடப்பட்டுள்ளோம். தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலை இன்னமும் தொடர்க்கின்றது,167,796 பேருக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலை தொடர்கின்றது. தமிழ் இனப்படுகொலை கல்விவாரத்தை அங்கீகரிப்பது ,நீடிக்கும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்கும். https://www.virakesari.lk/article/214571
-
தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது
தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனத்தினை உதாசீனப்படுத்துகின்ற, அலட்சியப்படுத்துகின்ற, தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையினை உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே நடந்துகொள்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல்கைதிகளுக்கான நீதியான நடவடிக்கைகள், தாயக நிலங்கள் விடுவிக்கப்படும் வரையில் இந்த நாடு முன்னேற்றகரமான நிலைக்கு செல்லமுடியாது என்ற விடயத்தினை அரசாங்கம் உணர்ந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பில் பெருமளவான மக்கள் கடத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட சத்துருக்கொண்டான் நினைவுத்தூபிக்கு அருகில் தமிழ் இன அழிப்பு வாரம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் கலந்துகொண்டார். இதன் போது கருத்து வெளியிட்ட அவர், “எங்கெங்கு தமிழர்கள் கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்டார்களோ அங்கு எல்லாம் இன அழிப்பு வார நிகழ்வுகள் நடைபெற்றுவருகினற்ன. இந்த சத்துக்கொண்டான் பகுதியிலே பாரிய படுகொலைகள் நடாத்தப்பட்ட வரலாறுகள் இருக்கின்றன. ஒரு இன அழிப்பு நோக்குடன் வடகிழக்கில் பல படுகொலைகள் நடாத்தப்பட்டதுடன் எமது விடுதலைப்போராட்டத்தினை நசுக்குவதற்காக பல இடங்களில் படுகொலைகள் நடாத்தப்பட்டிருந்தது. சத்துருக்கொண்டானின் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொண்டுசெல்லப்பட்டு படுகொலைசெய்யப்பட்டார்கள். இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அந்த விசாரணைகள் பின்னர் முடக்கப்பட்டது. இன்று இந்த அரசாங்கம் பட்டலந்த வதைமுகாம் விடயங்களை கையிலெடுத்து அது தொடர்பான விசாரணைகளை மீள முன்னெடுத்திருக்கும் அதேநேரம் வடகிழக்கில் பல இடங்களில் படுகொலைகள் நடைபெற்ற வரலாற்றின் சாட்சியங்களாகவும் ஆவனங்களாகவும் இருக்கின்றபோதிலும் அது தொடர்பான எந்த முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படாமல் தமிழ் மக்களை உதாசீனப்படுத்துகின்ற, அவர்களின் நியாயமான கோரிக்கையினை செவிமடுக்காத, தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழ்வதற்கான உறுதிப்பாடற்ற நிலையிலே அவர்களுக்கான நியாயமான உரிமைகள், அவர்களின் சுதந்திரமான வாழ்க்கைக்கான உறுதிப்பாடுகள் இல்லாத நிலையிலேயே சிங்கள பௌத்த தேசிய அரசுகள் நடந்துகொள்கின்றன. 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலே பொதுமக்கள் கொத்துக்கொத்தாக இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட சம்பவமானது தமிழினத்தினை இந்த நாட்டில் இல்லாமல்செய்வதற்கும், வடகிழக்கு தாயப்பகுதியில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை குறைத்து கையேந்தும் நிலையிலேயே நிர்க்கதியற்ற நிலையில் தமிழ் மக்கள் வாழவேண்டும், தமிழ் மக்கள் தமது உரிமைகளை இனிஒருபோதும் போராடி கேட்ககூடாது என்ற அடிப்படையிலே பல்வேறு திட்டமிட்ட படுகொலைகள் நடந்தேறியது. இந்த படுகொலைகளுக்கான நீதிநியாயம் கூட எந்தவகையான வழிகளிலும் கிடைக்கவில்லை. யுத்தம் மௌனிக்கப்பட்டு 16 வருடங்க்ள கடந்துள்ள நிலையிலும் நீதிநியாயத்திற்காக தமிழ் தேசிய சக்திகள் தமிழ் இனத்தில் பற்றுக்கொண்ட அமைப்புகள் முன்னெடுக்கின்றபோதிலும் அதற்கான எந்த அங்கீகாரத்தினையும் இந்த நாடுவழங்கவில்லை. இவ்வாறான செயற்பாடுகள் இந்த நாட்டில் நியாயமாக வாழமுடியும் என்ற நம்பிக்கையினை இல்லாமல்செய்துள்ளது. இன்று இந்த பொருளாதார நெருக்கடிக்கு கூட தமிழ் மக்கள் இரண்டாம் தரப்பாக அடக்கி ஒடுக்கப்படுதலே காரணமாக அமைந்திருக்கின்றது. இவற்றினை சிங்கள தேசிய இனம் புரிந்துகொள்ளாத நிலையில் இந்த நாடு சுபீட்சமான நாடாக மாறுவதற்கு எந்தவிதமான வாய்ப்புகளும் இல்லை. தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள், வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்கள், அரசியல்கைதிகளுக்கான நீதியான நடவடிக்கைகள், தாயக நிலங்கள் விடுவிக்கப்படும் வரையில் இந்த நாடு முன்னேற்றகரமான நிலைக்கு செல்லமுடியாது என்ற விடயத்தினை சிங்க அரசும் சிங்கள தேசிய இனமும் உணர்ந்துகொள்ளவேண்டும். ஒரு இனத்தின் விடுதலையானது,ஒரு இனத்தின்இருப்பானது மிக காத்திரமான முறையில் ஒரு அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படாவிட்டால் நாட்டில் மக்கள் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் வாழும் நிலையேற்படும். அந்தவகையில் 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட இன அழிப்புக்கு நீதிநியாயம் கிடைக்கவேண்டும். இந்த சம்பவங்கள் எமது அடுத்த சந்ததிக்கு கொண்டுசெல்லப்படவேண்டும். இவ்வாறான படுகொலைகளும் அடக்குமுறைகளும் கடந்தகாலத்தில் நடைபெற்றது என்பதை எதிர்கால சந்திக்கு கொண்டுசென்று எமது தமிழ் தேசியத்திற்கான தொடர்ச்சியான போராட்டத்தினையும் தமிழ் தேசிய விடுதலைக்கான போராட்டத்தினையும் எமது இளம் சந்ததிகள் தெரிந்துகொள்ளவேண்டும் அதன் முன்கொண்டுசெல்லவேண்டும்.” https://akkinikkunchu.com/?p=324334
-
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிட மாட்டோம் – கஜேந்திரகுமார்
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிட மாட்டோம் – கஜேந்திரகுமார் May 13, 2025 10:04 am பெரும்பாண்மையை பெறாத உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிடப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய பேரவையின் நிலைப்பாடுகள் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது குறிப்பிட்ட அவர், ‘ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கடந்த உள்ளுராட்சித் தேர்தலை தம் தனியே சந்திப்பதற்குத் தீர்மானித்திருந்தார்கள். தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தமிழ்த் தேசிய பேரவையுடன் தேர்தலுக்குப் பின்னர் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து கூறியிருந்தார்கள். அந்தப் பின்னணியில் நாம் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியுடன் பேசி கொள்கையளவில் ஓர் இணக்கப்பாட்டுக்கு வருவதன் ஊடாக அதன் பின்னர் தமிழரசுக் கட்சியுடனும் பேசும் நோக்குடன் அவர்களை அணுகியிருந்தோம். இந்நிலையில் தாம் தமது பங்காளிக் கட்சிகளுடன் பேசி ஒரு முடிவை அறிவிப்பதாக சொன்ன போதும் எமக்கு ஒரு முடிவும் அறிவிக்கப்படவில்லை. தமிழ்த் தேசிய பேரவை இத்தேர்தலில் பருத்தித்துறை நகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை ஆகிய மூன்று சபைகளில் அதிகூடிய வாக்குகளுடன் வென்றிருக்கிறோம். ஊர்காவற்றுறையில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் தமிழ்த் தேசிய பேரவை முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் இந்த நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறோம். ஏனைய சபைகள் குறித்து இதுவரை மற்ற கட்சிகளுடன் எவ்வித புரிந்துணர்வும் எட்டப்படாத நிலையில், குறித்த சபைகளில் பெரும்பான்மை ஆசனங்களை எடுத்த தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு கோரப்படும் சபைகளில் ஆதரவு வழங்குவது எனவும், ஆதரவு கோரப்படாத இடங்களில் தமிழ்த் தேசியக் கட்சிக்கலுக்கு எதிராக போட்டியிடாமல் இருப்பது எனவும் தீர்மானித்திருக்கின்றோம். இதேவேளை, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய பேரவை ஆகிய கட்சிகளுக்கு இடையில் கொள்கை ரீதியாக ஓர் இணக்கப்பாடு எட்டினால் ஒற்றுமை முயற்சியை ஒருதலைப் பட்சமாக முறித்துக்கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும்’ எனத் தெரிவித்தார். https://oruvan.com/we-will-not-contest-against-tamil-national-parties-gajendra-kumar/
-
நரேந்திர மோதி உரை: ராணுவ நடவடிக்கை பற்றி என்ன சொன்னார்? - நேரலை
Operation Sindoor- தீவிரவாதத்தை ஆதரித்தால் பாகிஸ்தான் நிச்சயம் ஒருநாள் அழிந்துவிடும்- மோடி எச்சரிக்கை 12 May 2025, 8:03 PM பாகிஸ்தானுக்கு எதிரான Operation Sindoor ராணுவ நடவடிக்கை தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றினார். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பின்னர் பிரதமர் மோடி முதல் முறையாக இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்: இந்தியாவின் ராணுவ பலத்தை கடந்த சில நாட்களாகவே நாம் வெளிப்படுத்தி வருகிறோம். நாட்டின் ராணுவ வீரர்களுக்கு தலைணங்குகிறேன்; தீரமிக்க ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு வீரவணக்கம். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை நாட்டின் தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் அர்ப்பணிக்கிறேன். இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கி உள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் அனைவருக்கும் பாராட்டுகள். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட மத அடிப்படையிலான தீவிரவாதத் தாக்குதல். இந்தத் தாக்குதல் தனிப்பட்ட முறையில் எனக்கு கடும் மனவலியைத் தந்தது. ஆபரேஷன் சிந்தூர் என்பது நீதியை நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கை பாகிஸ்தானின் பஹவல்பூர், முர்திகே பல்கலைக் கழகங்கள், சர்வதேச தீவிரவாதப் பல்கலைக் கழகங்களாகவே செயல்பட்டன; அவற்றை அழித்துள்ளோம். தீவிரவாதத்தை முற்றாக அழிக்க நமது ராணுவத்தினருக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள், டிரோன்கள் அனைத்தும் நமது வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்கப்பட்டுவிட்டன. ஆபரேஷன் சிந்தூர் என்பது ஒரு பெயர் மட்டுமல்ல.. நமது உணர்வுகளின் வெளிப்பாடு. தேசத்தின் நலனுக்காகவே ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை நாம் மேற்கொண்டோம். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை மட்டுமல்ல.. தீவிரவாதிகளின் நம்பிக்கைகளையும் இந்திய ராணுவம் தகர்த்து தரைமட்டமாக்கிவிட்டது. இந்தியாவின் அதிரடித் தாக்குதல்களால் பாகிஸ்தான் கதிகலங்கிப் போய்விட்டது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் பதிலடி நடவடிக்கை நியாயமானதே. பாகிஸ்தானில் உள்ள அனைத்து பயங்கரவாத முகாம்களும் தாக்கி அழிக்கப்பட்டுவிட்டன. இந்திய சகோதரிகளின் நெற்றித் திலகத்தை அழித்த தீவிரவாதிகள் பதுங்கி இருந்த முகாம்களை இந்திய ராணுவம் அழித்து தரைமட்டமாக்கிவிட்டது. நமது பள்ளிக் கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் நமது டிரோன்களும் ஏவுகணைகளும் துல்லியமாக தாக்குதல் நடத்தின. நமது தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல்தான் நம்மை தொடர்பு கொண்டது பாகிஸ்தான். தீவிரவாதத்தை ஒழிக்கும் கொள்கையாக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை இருக்கும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை, பாகிஸ்தானின் உண்மை முகத்தை உலகம் அறிய உதவி இருக்கிறது. தீவிரவாதிகளை ஆதரித்த பாகிஸ்தானின் உண்மை முகம் அம்பலப்பட்டுவிட்டது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் முக்கிய பங்களிப்பு செய்தன. இந்தியாவின் அதிரடியான கடுமையான நடவடிக்கையால் பாகிஸ்தான் அதிர்ந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலுக்கு இந்தியாவின் ,முப்படைகள் எப்போதும் தயாராக இருக்கும். இந்தியாவின் மொத்த பலமும் தீவிரவாதத்துக்கு எதிரானதாகவே இருக்கும் இந்தியாவால் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் இறுதி நிகழ்வில் பாகிஸ்தான் அதிகாரிகள் பங்கேற்றதை உலகம் பார்த்தது. தீவிரவாதத்தை ஆதரித்தால் பாகிஸ்தான் நிச்சயம் ஒருநாள் அழிந்துவிடும். அணு ஆயுத மிரட்டல்களுக்கு எல்லாம் இந்தியா ஒருநாளும் அச்சப்படாது வளர்ந்த இந்தியா என்ற கனவும் நிச்சயம் நிறைவேறும். பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை இந்தியா தற்காலிகமாகவே நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவின் முப்படையினரும் பாகிஸ்தானின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாகவே கவனித்து வருகின்றனர். பாகிஸ்தானையும் அதன் தீவிரவாதிகளையும் ஒருபோதும் பிரித்து பார்க்கவே மாட்டோம் இதுவரை பாகிஸ்தானுக்கு எதிரான போர்களில் இந்தியாதான் வெற்றி பெற்றுள்ளது தற்போதைய ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை, இந்திய வரலாற்றில் புதிய மைல் கல். பாகிஸ்தான் இருக்க வேண்டுமானால், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை நிறுத்திவிட வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். https://minnambalam.com/operation-sindoor-armed-forces-always-ready-for-action-against-pakistan-warns-pm-modi/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு இடத்தில் மட்டும் மாற்றினால் போதும். மிச்சம் எல்லாம் தானாகவே மாறிவிடும்😀
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சனிக்கிழமை மீண்டும் போட்டிகள் ஆரம்பிக்கின்றன. ஜூன் 03 இறுதிப் போட்டி!