Jump to content

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8740
  • Joined

  • Last visited

  • Days Won

    103

Everything posted by ரஞ்சித்

  1. கவலை வேண்டாம், படித்தாயிற்று. இப்படித் தலையங்கம் போட்டுவிட்டு,படிப்பார்களோ தெரியாது என்றால் எப்படி? சிவப்பு உங்களுக்கானதல்ல, புரிந்தால்ச் சரி! அதுசரி, ஏன் உந்த வேலை உங்களுக்கு @!
  2. ஆனால், வேதனை என்னவென்றால், இதே இளையோரை அரசுடன் இணைந்து பொருளாதாரத்தில், தொழிநுட்பத்தில், கல்வியில், தொழில் வாய்ப்பில் தம்மைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற கோஷம் முன்வைக்கப்படுகிறது. அன்றைய கனகசுந்தரத்தையும், தேவநாயகத்தையும், ராஜதுரையையும் போல, இன்றைய டக்கிளஸையும், வியாழேந்திரனையும் இன்னும் சில இந்தியாதிகளையும் போல இனிவரும் இளையதலைமுறை அரசுடன் இணங்கிச் சென்று தமது எதிர்காலத்தை ஸ்த்திரப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. அரசை எதிர்த்தும் எதுவும் கிடைக்கவில்லை, அரசுடன் சேர்ந்து உங்களின் வழியைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்கிற கூப்பாடு.
  3. ஆப்கானிஸ்த்தானிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறியபோது நடந்த படுகொலைகளில் அரைவாசிக்கும் அதிகமானவை அமெரிக்க வீரர்களால் நடத்தப்பட்டவை 2021 ஆம் ஆண்டு ஆவணியில் அமெரிக்கப்படை அவசர அவசரமாக ஆப்கானிஸ்த்தானின் காபூல் விமான நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த பொழுது, அவர்களுடன் பணியாற்றிய ஆப்கானியர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் அமெரிக்கப் படைகளுடன் விமானம் ஏறித் தப்பித்துக்கொள்ள காபூல் விமான நிலையத்தைச் சுற்றி முற்றுகையிட்டு நின்றனர். இந்தச் சனக்கூட்டத்தை அவதானித்த ஐஸிஸ் பயங்கரவாதிகள், மக்கள் கூட்டத்திற்கு நடுவே தற்கொலைத் தாக்குதல் ஒன்றினை நடத்த பலர் கொல்லப்பட்டார்கள். இவர்களுள் 13 அமெரிக்கத் துருப்பினரும், 170 ஆப்கானியர்களும் அடங்கும். இத்தாக்குதல் குறித்த ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்திய இரு இராணுவ வல்லுனர்கள் கொல்லப்பட்ட அனைவரும் குண்டுத்தாக்குதலில் நேரடியாகவும், குண்டுச்சிதரல்களால் பின்னரும் கொல்லப்பட்டனர் என்றும், அமெரிக்கத் துருப்பினரின் துப்பாக்கித் தாக்குதலிலோ அல்லது இங்கிலாந்துத் துருப்பினரின் தாக்குதலிலோ கொல்லப்படவில்லை என்றும் விசாரணைகளை நிறைவுசெய்திருந்தனர். ஆனால், கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த ஆப்கானியர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், பலரின் உடல்களில் துப்பாக்கிச் சன்னங்களைத் தாம் பார்த்ததாகக் கூறியிருந்தனர். இதனையும் மறுத்த அமெரிக்க அரசாங்கம், துருப்பினர் வான் நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை மட்டுமே சுட்டதாகவும் மக்களை நோக்கியல்ல என்றும் கூறியிருந்தது. ஆனால், தற்போது கிடைத்திருக்கும் சாட்சியங்களின்படி, கொல்லப்பட்டவர்களில் அரைவாசிப் பேருக்கும் மேலானவர்கள் அமெரிக்கத் துருப்பினரின் நேரடித் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருப்பது தெரியவருகிறது. தாக்குதல் நடந்தவேளை தனது GO PRO கமெராவில் குறைந்தது 5 நிமிடங்களுக்கு மேலாக அங்கு நடந்தவற்றை ஒரு அமெரிக்க வீரர் படமாக்கியிருக்கிறார். அத்துடன் இன்னும் இரு வீரர்கள் அமெரிக்கத் துருப்புக்கள் மக்கள் மீது சுட்டதைத் தாம் கண்டதாகக் கூறுகிறார்கள். இவர்களை விடவும் காயமடைந்தவர்களையும் கொல்லப்பட்டவர்களையும் பரிசோதித்த மருத்துவர்கள் மீண்டும் ஒருமுறை இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இதுகுறித்த மேலதிக விபரங்களும், அந்த ஐந்து நிமிட நேர ஒளிப்படமும் சி என் என் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. https://edition.cnn.com/2024/04/24/world/new-evidence-challenges-pentagon-account-kabul-airport-attack-intl/index.html
  4. முதலில் பெறத் தெரியவில்லை, பெறத் தெரியவில்லை என்று கூறுவதன் மூலம், சிங்களவர்கள் நல்லவர்கள், கேட்கிற மாதிரிக் கேட்டால்த் தருவார்கள், எமக்குத்தான் கேட்கத் தெரியவில்லை, எம்மில்த்தான் பிழை என்று கூறுவதை நிறுத்துங்கள். ஏனென்றால், நீங்கள் எப்படிக் கேட்டாலும் அவர்கள் தரப்போவதில்லை. இணக்க அரசியலால் உந்தப்பட்டு கருத்தெழுதும் உங்களிடமிருந்து இதனைத்தவிர‌ வேறு எதனைத்தான் எதிர்பார்க்க முடியும்? இதை எப்படிச் செய்வதாக உத்தேசம்? அரசுடன் இணைந்தா? இதுவரை அரசுடன் இணைந்த தமிழ் அரசியல்வாதிகளைக் காட்டிலும் பெரிதாக வேறு எதனைச் சாதித்து விடப்போகிறீர்கள்? இதற்கும் தமிழ் மக்கள் தமது இருப்பை பாதுகாத்துக்கொள்வதற்கும் இடையே இருக்கும் தொடர்பென்ன? கல்வி, வேலைவாய்ப்பு, தொழிநுட்பம், பொருளாதாரத்தில் தமிழ் மக்கள் சோபிக்கவில்லை என்று நினைக்கிறீர்கள் போல. எப்போதும்போலத் தமிழர்கள் இந்த விடயங்களில் நன்றாகவே செயற்படுகிறார்கள். காலத்திற்குக் காலம் கல்வியில், தொழிவாய்ப்பில் ஏற்ற இறக்கங்கள் வரலாம், ஆனால் நிரந்தரமாக வீழ்ந்ததில்லை. ஆனால், தமிழரின் பொருளாதாரமும், கல்வியும், வேலைவாய்ப்பும், தொழிநுட்பமும் அவர்களின் இருப்பைத் தக்கவைக்கப் போவதில்லை. ஏனென்றால், இவற்றிற்கும், அவர்களின் இருப்பிற்கும் தொடர்பில்லை. 1983 இலேயே தமிழர்களின் வாழ்க்கைத்தரம் கொழும்பிலும் பிற இடங்களிலும் எப்படி இருந்ததென்பதும், அவற்றினால்க்கூட‌ அவர்களை கறுப்பு யூலையில் இருந்து காப்பாற்ற முடியாமற்போனதென்பதையும் நீங்கள் மறக்கமாட்டீர்கள். யுத்த காலத்திலும் வடமாகாணமும், பிற்காலத்தில் கிழக்கு மாகாணமும் எப்படியிருந்தன‌ என்பது நாம் தெரியாதது அல்ல. இன்று புலம்பெயர் தமிழரிடையே இருக்கும் செல்வமும், அறிவும், தொழிநுட்பமும் தமிழரின் இருப்பை இலங்கையில் தக்கவைக்கப் போதுமானவையாகத் தெரியவில்லை. கோடீஸ்வரனனான சுபாஷ்கரன் கூட பிக்குகளின் காலில் வீழ்ந்தே வியாபாரம் செய்யவேண்டியிருக்கிறது. அவரால்க் கூட இருப்பைத் தக்கவைக்க முடியாது. தமிழர் மீதான கலவரங்களில் சிங்களம் முதலில் இலக்குவைப்பது அவர்களது பொறுளாதாரத்தை. பின்னர் கல்வி, வேலைவாய்ப்பு என்று தொடரும். இவை தமிழரின் இருப்பைத் தக்கவைக்கப் போதுமானவை அல்ல. வேண்டுமானால் தனி மனிதர்களாக, அடையாளத் துறப்பின் ஊடாக தமிழர்கள் சொந்த நலன்களைக் காத்துக்கொள்ளலாம். கதிர்காமரைப் போல, நீலனைப் போல. ஆனால், ஒரு இனமாக அவர்களால் முடியாது. தமது தொகுதிகளில் சில விடயங்களைச் செய்யலாம் என்பதற்காகவே அப்படி கூறினேன். ஆனால், எனது தெரிவு பாராளுமன்றப் பகிஷ்கரிப்புத்தான். இதன்மூலமே தமிழ் இனம் இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் தனக்கான உரிமைகளைப் பெறவோ, நலன்களைப் பாதுகாத்துக்கொள்ளவோ முடியாது என்கிற பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியும். இலங்கையின் ஒற்றையாட்சியியையும் பாராளுமன்றத்தையும் முற்றாகப் பகிஷ்கரிப்பதனூடாக தமிழர்கள் இன்று நடக்கும் அரசிடமிருந்து தம்மை அந்நியப்படுத்தியவர்களாக காண்பிக்க வேண்டும். தொடர்ச்சியான மக்களின் நடவடிக்கைகளே ஈற்றில் சர்வதேசத்தின் கண்களை ஈர்க்கும். ஆனால், இன்றிருக்கும் இணக்க அரசியல் செய்யும் நபர்களும், சலுகைகளின் பின்னால் திரியும் அவர்களின் ஆதரவாளர்களும், உணர்விழந்த மக்களும் இதனைச் செய்வார்களா என்பது கேள்விக்குறிதான். இறுதியாக, உணர்ச்சியற்றவை என்று எதுவும் இல்லை. நாம் இனமாக காக்கப்பட வேண்டும் என்பதும், இருப்பிற்காகப் போராடவேண்டும் என்பதும் கூட ஒரு உணர்வுதான். உணர்வற்றவர்கள் ஜடங்கள் என்று அழைக்க‌ப்படுவர், நீங்கள் எப்பிடி?
  5. பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கப்போவதில்லை என்று இந்தியாவிற்குக் கூட்டாக அறிவித்த போராளி அமைப்புக்கள் ஈழத்தேசிய விடுதலை முன்னணி கூட்டாக வெளியிட்ட அறிக்கை - 29 ஆனி 1985 இலங்கையுடன் சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதில்லை என்கிற தீர்மானத்தை அறிவித்தல் நான்கு முன்னணி விடுதலைப் போராட்ட அமைப்புகளான, ஈழத்தேசிய விடுதலை முன்னணியினராகிய‌ நாம், இலங்கையரச‌ படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் பாரதூரமான யுத்தநிறுத்த மீறல்களால் பூட்டானில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதில்லை என்கிற தீர்மானத்திற்கு வந்திருக்கிறோம். எமது தாயகத்தில் சுமூகமான நிலைமையினை ஏற்படுத்த நாம் விதித்த நிபந்தனைகளை ஏற்றுகொள்ள மறுத்துள்ள நிலையில், இலங்கை இராணுவம் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக அட்டூழியங்களைப் புரிந்து வருகிறது. எமது மக்கள் தொடர்ந்து இராணுவ வன்முறைகளுக்கு முகம்கொடுத்து, அரச பயங்கரவாதமும், அச்சமும், பாதுகாப்பின்மையும் எமது பூர்வீகத் தாயகத்தில் நிலவும் சூழ்நிலையில் இலங்கையரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம். எமது மக்களுக்கெதிரான இராணுவ அட்டூழியங்களை கட்டவிழ்த்து விட்டிருப்பதன் மூலம், இலங்கையரசு இந்தியாவிற்குக் கொடுத்த வாக்குறுதியான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதற்கு ஏற்ப யுத்தநிறுத்தத்தினை சரியான முறையில் கடைப்பிடிப்போம் என்பதனை அப்பட்டமாக மீறியிருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்த்தம் வகிக்கவும், பேச்சுக்களின்போது உதவியினை நல்கவும், பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெறும் எனும் உத்தரவாதத்தையும் தந்திருக்கும் இந்தியாவை நன்றியுணர்வுடன் பாராட்டும் அதேவேளை, குறிப்பிட்ட காலத்திற்கு அனைத்துவிதமான ஆயுதச் செயற்பாடுகளையும் முடிவிற்குக் கொண்டுவந்து, இலங்கையரசாங்கம் தமிழருக்கு நிரந்தரமான அரசியல்த் தீர்வை பேச்சுவார்த்தை மேசையில் முன்வைப்பதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுக்க நாம் விரும்புகிறோம். சுமூகமான சூழ்நிலையினை ஏற்படுத்தும் முகமாக நாம் சில நிபந்தனைகளையும் இத்தால் முன்வைக்கிறோம். பின்வரும் விடயங்களை இலங்கையரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம், 1. இராணுவத்தை முகாம்களுக்குள் அழைத்துக்கொள்ளுதல் 2. வாகன நடமட்டாத்திற்கெதிரான தடையினை விலக்கிக் கொள்ளுதல். 3. அவசரகாலச் சட்டத்தினையும், ஊரடங்கு உத்தரவினையும் விலக்கிக் கொள்ளுதல். 4. கடற்கண்காணிப்பையும், தடைசெய்யப்பட்ட வலயங்களையும் விலக்கிக்கொள்ளுதல். 5. வடக்குக் கிழக்கில் ஆயுதமயமாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல். 6. அனைத்து அரசியற் கைதிகளையும் விடுதலை செய்தல். யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 10 - 12 வாரங்கள் வரையான காலப்பகுதிக்குள் இலங்கையரசாங்கம் இனப்பிரச்சினையினைத் தீர்க்க நிரந்தரமான தீர்வொன்றினை முன்வைக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். தீர்க்கமான தீர்வொன்றினை அடிப்படையாக வைத்தே பேச்சுக்களில் நாம் பங்குபற்ற முடியும் என்பதையும் தெளிவாகச் சொல்லியிருந்தோம். தமிழரின் பிரச்சினைக்கான கெளரவமான தீர்வொன்றைத் தருவதாக கூறிக் காலங்காலமாக தமிழரை தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் ஏமாற்றிய வரலாற்றின் பின்னணியிலேயே நாம் அந்த நிலைப்பாட்டிற்கு வந்திருந்தோம். தம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்களை தாமே கிழித்தெறிந்த சிங்கள அரசுகள் ஒப்பந்தங்களை நிறைவேற்றாது ஏமாற்றிய வரலாறே எம்முன்னால் இன்று இருக்கிறது. இந்தியாவின் மத்தியஸ்த்தத்தினூடாக எமது கோரிக்கைகளுக்கு ஆரம்பத்தில் இணங்கிய இலங்கையரசாங்கம், தற்போது எமது இணக்கப்பாடு இன்றியே ஒரு தலைப்பட்சமாக ஆவனி 18 ஆம் திகதியிலிருந்து யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. அப்படியிருந்தபோதிலும், நாம் அந்த யுத்தநிறுத்தத்தினை ஏற்றுக்கொண்டு, இலங்கையரசாங்கம் பேச்சுக்களுக்கான சாதகமான சூழ்நிலையினை ஏறப்டுத்தும் என்கிற நம்பிக்கையில், நாமும் வன்முறைத் தவிர்ப்பினைக் கடைப்பிடித்து வருகிறோம். யுத்த நிறுத்த திட்டத்திற்கேற்ப, நாம் அதனை நேர்த்தியாகக் கடைப்பிடித்து வருகையில், இலங்கையரசாங்கம் இடைவிடாது தனது இராணுவ அட்டூழியங்களை அப்பாவித் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டு படுகொலைகளிலும், துன்புறுத்தல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இராணுவத்தினர் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டதற்கு முரணாக, தமது முகாம்களை விட்டு வெளியே வந்து சோதனைகளிலும், தேடியழிக்கும் நடவடிக்கைகளிலும் இப்போதும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகரித்திருக்கின்றன. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல பகுதிகளிலும் இரவுவேளைகளில் தேடியழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினரும், கடற்படையினரும், பொலீஸாரும் தமிழ் மக்களின் வீடுகள் மீது தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதுடன், அப்பாவித் தமிழர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களிலும், தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்புணர்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார் மாவட்டத்தில் பல அப்பாவித் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். மன்னார், முருங்கன் மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளில் கைதுசெய்யப்பட்டுப் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்களின் உடல்கள் அடையாளம் காணமுடியாதவாறு இராணுவத்தினரால் எரியூட்டப்பட்டு வருகின்றன. திருகோணமலை மாவட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழ் அகதிகள் யுத்த நிறுத்ததையடுத்து எரித்துச் சாம்பலாக்கப்பட்ட தமது வீடுகளுக்குத் திரும்பியவேளை அவர்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தி மீண்டும் விரட்டியடித்திருக்கிறது இராணுவம். தமது காணிகளில் இருந்து அறுவடைகளை எடுத்துக்கொள்ளச் சென்ற விவசாயிகள் கூட இராணுவத்தால் கடுமையாகத் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கம் தான் கடற்கண்காணிப்பையும், கடற் தடையினையும் விலக்கிக்கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரும் எமது மீனவர்கள் கடற்படையினரால் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் தொழிலுக்குச் செல்லவே அவர்கள் அஞ்சுகிறார்கள். அவசரகாலச் சட்ட விதிகளையும், மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கெதிரான‌ தடையினையும் விலக்கிக்கொள்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளபொழுதிலும், இராணுவத்தினர் வீதித் தடைகளை ஏற்படுத்தி எமது மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு தடைபோட்டு வருகிறார்கள். மேலும், ஊரடங்குச் சட்டம் தற்போதும் இராணுவத்தினரால் அமுல்ப்படுத்தப்பட்டே வருகிறது. அத்துடன், இலங்கையின் பல்வேறு சிறைகளிலும், இராணுவ முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 2,000 இற்கும் அதிகமான தமிழ் அரசியல்க் கைதிகளை அரசாங்கம் இதுவரை விடுதலை செய்யவில்லை. மேலும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சரினால் விடுக்கப்பட்டிருக்கும் மூர்க்கத்தனமானதும், போர்க்குணம் மிக்கதுமான அறிக்கையில், சுமூகமான சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டு ஈழத்தேசிய விடுதலை முன்னணியினரால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெளிப்படையாக பிரகடணம் செய்திருக்கிறார். இதனூடாக, சுமூகமான சூழ்நிலையினை ஏற்படுத்துவதற்கான யுத்த நிறுத்தத்தில் இதயசுத்தியுடன் ஈடுபட விரும்பவில்லை என்பதை இலங்கை அரசாங்கம் நிரூபித்திருக்கிறது. எமது வேண்டுகோளான தமிழரின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைத் தரும் ஆலோசனைகளை பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக முன்வைய்யுங்கள் என்பதனை இலங்கையரசாங்கம் முற்றாக நிராகரித்திருக்கிறது. அதற்குப் பதிலாக, பயனற்ற கருத்துப் பரிமாற்றத்திற்குள்ளும், பிரச்சினைகளை முன்கொண்டுவருவோம் என்கிற போர்வையில் முடிவில்லாத‌ வட்ட மேசை கூட்டங்களுக்குள்ளும் எம்மை இழுத்துவிட இலங்கையரசு முயன்று வருகிறது. அடுத்ததாக‌, உத்தேசப் பேச்சுவார்த்தைகளில், "ஆயுததாரிகளுக்கான" வழிகாட்டியாகவும், தமிழ் மக்களின் அரசியல்த் தலைமையாகவும் தம்மை தாமே வரிந்துகொண்டிருக்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டிற்கெதிரான எமது கருத்தினையும் இத்தால் பதிவுசெய்கிறோம். ஒரு அரசியல் அமைப்பாக, தமிழ் மக்களின் நம்பகத்தன்மையினையும், ஆதரவையும் இழந்திருக்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர், பேச்சுவார்த்தைகளில் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாகக் கலந்துகொள்வதை நாம் முற்றாக எதிர்க்கிறோம். யுத்த நிறுத்தத்தினை அமுல்ப்படுத்துகிறோம் என்று கூறிய பின்னரும் எம்மக்கள் மீது சிங்கள இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான அட்டூழியங்கள் குறித்து வாய்மூடி மெளனமாக இருக்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர், ஈழத் தமிழர்களுக்கான ஏக பிரதிநிதிகளாக ஒருபோதும் இருக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இவர்களின் தற்போதைய செயற்பாடுகள், பேச்சுவார்த்தைகளின் போது இவர்கள் எடுக்கப்போகும் முடிவுகள் குறித்துக் கடுமையான சந்தேகங்களை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான கெளரவமானதும், கண்ணியமானதுமான நிரந்தர அரசியல்த் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையில் நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று எமது முன்னைய அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தோம், அதனையே இப்போதும் நாம் கூறுகிறோம். இந்தியா, இலங்கையரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், பேச்சுவார்த்தைகளுக்கான சுமூகமான சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டு யுத்த நிறுத்ததை முழுமையாகக் கடைப்பிடிக்கும்படி கோரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு அரசியல்க் குழு ‍- தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழ‌ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழீழ விடுதலை இயக்கம் புரட்சிகர நிர்வாகக் குழு - ஈழப் புரட்சிகர முன்னணி
  6. ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களில் சிறீ சபாரட்ணமே தன்னைக் கொல்ல முயற்சிக்கக் கூடும் என்று கருதிய பிரபாகரன் திம்புப் பேச்சுக்களில் தாம் பங்கேற்பதற்கு ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தயக்கம் காட்டிவந்தவேளை, இந்தியாவுடனும், இலங்கையரசாங்கத்துடனும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் காட்டிய நெருக்கமும், ஒத்துழைப்பும் அவர்களைச் சீற்றங்கொள்ள வைத்தது. இந்தியாவைப் பகைத்துக்கொள்ளாமல், ஜெயார் விரித்திருக்கும் சமாதானப் பொறிக்குள் இருந்து எப்படியாவது வெளியே வந்துவிட வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரோ பேச்சுவார்த்தைகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் செயற்பட்டுக்கொண்டிருந்தனர். ஆகவே, அதிகாரங்களற்ற மாவட்ட சபைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு ஒன்றினூடாக தீர்வொன்றினைக் காண்பதில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் காட்டிய ஈடுபாடும், அக்கறையும் போராளிகளின் தலைவர்கள் மத்தியில் தம்மை தட்டிக்கழிக்கும் முன்னணியினரின் கைங்கரியம் எனும் தோற்றப்பாட்டினை ஏற்படுத்தியிருந்தது. சந்திரிக்கா, விஜய குமாரதுங்க, ஒஸி அபயகுணசேகர, பத்மநாபா, கேதீஸ்வரன் - சூளைமேடு, சென்னை 1986 ஆனி 28 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் நடத்திய நீண்ட கலந்துரையாடல்களின்போது திம்புப் பேச்சுக்கள் தொடர்பான தமது நிலைப்பாடு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வகிக்கப்போகும் பாகம் மற்றும் யுத்த நிறுத்தம் குறித்துப் பேசினர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. பாதியில் மின்சாரம் அற்றுப்போகவே, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் கேதீஸ்வரன் விளக்கொன்றைப் பற்றவைத்துக்கொண்டார். "அண்ணை, அதனை அணைத்துவிடுங்கள்" என்று பிரபாகரன் அவரைப் பார்த்துக் கூறினார். தான் எங்கே நின்றிருக்கிறார் என்பதை எவரும் அறைந்துவிடக் கூடாதென்பதில் அவர் உறுத்கியாகவிருந்தார். மின்சாரம் தடைப்பட்டவுடன், தனது இருக்கையிலிருந்து குத்தித்தெழுந்த பிரபாகரன், அருகிலிருந்து சுவரோரம் சென்று நின்றுகொண்டு, தனது கைத்துப்பாக்கியினைக் கையில் எடுத்துக்கொண்டார். இந்தச் சம்பவம் குறித்துப் பிந்நாட்களில் என்னிடம் பேசிய ரமேஷ், பிரபாகரன், சபாரட்ணத்தின் பின்னாலேயே நின்று கொண்டதாகவும், அன்று கூட்டத்தில் இருந்தவர்களில் சபாரட்ணம் மட்டுமே தன்னைக் கொல்ல எத்தனிக்கக் கூடும் என்று பிரபாகரன் கருதியிருந்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால், சில நிமிடங்களிலேயே மின்சாரம் மீண்டும் கிடைத்தது. "இது சாதாரண மிந்துண்டிப்புப் போல இருக்கிறது" என்று கூறிக்கொண்டே பிரபாகரன் தனது இருக்கையில் மீண்டும் சென்று அமர்ந்துகொண்டார். புலிகளின் அலுவலகத்தில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் கூடியபோது இடம்பெற்ற இன்னொரு மின்சாரத் துண்டிப்புக் குறித்தும் ரமேஷ் என்னிடம் விபரித்திருந்தார். மின்சாரம் துண்டிக்கப்பட்டவுடன், அங்கிருந்த‌ மின்பிறப்பாக்கி உடனடியாகவே இயங்கத் தொடங்கியது. "பிரபாகரன் தனது பாதுகாப்புக் குறித்து மட்டுமே அக்கறை கொண்டவரல்ல, எந்தச் சூழ்நிலைக்கும் தன்னைத் தயாராக வைத்திருப்பதிலும் கவனம் கொண்டவர்" என்று ரமேஷ் மேலும் கூறினார். சிறீ சபாரட்ணம் ஆனி 28 ஆம் திகதி நடைபெற்ற ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் கூட்டத்தில், பிரபாகரனின் கருத்தின்படி, பேச்சுவார்த்தைகளில் இருந்து முடிந்தவரையில் விரைவாக வெளியேறிவிட வேண்டும் என்று அனைவரும் ஒத்துக்கொண்டனர். மேலும், ஜெயவர்த்தனவின் அரசாங்கம் மீது குற்றம் ஒன்றினைத் தம்மால் நிரூபிக்க முடியும் தறுவாயில், பேச்சுக்களில் இருந்து வெளிநடப்புச் செய்வதாகவும் அவர்கள் முடிவெடுத்தனர். தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான கால அவகாசத்தினைப் பெற்றுக்கொள்ளவே ஜெயவர்த்தன பேச்சுக்களை நடத்த ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பதைப் பிரபாகரன் தொடர்ச்சியாகவே கூறிவந்தார். ஆகவே, ஜெயவர்த்தனவின் தந்திரத்தை அவரது தந்திரத்தினாலேயே தாம் வீழ்த்தவேண்டும் என்றும் பிரபாகரன் ஏனைய தலைவர்களிடம் கூறினார். ஆகவே, பேச்சுக்களில் தாம் பங்கேற்கவியலாது என்பதை இந்தியாவிடம் தெரிவிப்பதற்கான திட்டம் ஒன்றினை அவர்கள் உருவாக்கினார்கள். இந்தியாவிற்கு தாம் வழங்கவிருக்கும் ஒன்றிணைந்த அறிக்கையில், இலங்கை இராணுவத்தினரின் தொடர்ச்சியான யுத்த நிறுத்த மீறல்களைக் காரணமாக அவர்கள் காட்டியிருந்தனர். ஆகவே, பேச்சுவார்த்தை மேசையில், பங்களிப்பில்லாத ஒரு தரப்பாக மட்டுமே செயற்படப் போவதாகவும், பேச்சுக்களுக்கான அத்தியாவசிய அடிப்படையான ஒரு தரப்பு என்கிற காரணத்திற்காகவும், சிங்களவர்கள் ஒருபோதும் தமிழருக்கு நீதியான‌ தீர்வொன்றினைத் தரப்போவதில்லையென்பதை உலகிற்குக் காட்டவுமே தாம் பேச்சுக்களில் பங்கெடுக்கப்போவதாகவும் இந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டனர். போராளிகளால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள இலங்கையரசு மறுத்தமையே தமிழீழத்திற்கான அடிக்கல் என்று பிரபாகரன் ஏனையவர்களிடம் தெரிவித்தார். அன்றைய கூட்டத்தில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் திம்புப் பேச்சுக்களில் பங்குபற்றக் கூடாது என்றும் போராளிகள் முடிவெடுத்தனர். போராளிகளின் இணைந்த அறிக்கை பாலசிங்கத்தால் தயாரிக்கப்பட்டு சந்திரசேகரனூடாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
  7. இலங்கை இராணுவம் யுத்தநிறுத்த மீறல்களில் ஈடுபட்டிருக்க, அரசாங்கத்திற்கு கொழும்பில் நற்சான்று வழங்கிய தர்மலிங்கமும் ஆளாளசுந்தரமும் பிரபாகரன் தனது கரங்களைப் பலப்படுத்த தமிழ் மக்கள் தனக்கு உதவ வேண்டும் என்று கேட்டிருந்த நிலையில், மக்களின் ஆதரவினை இழந்துவிட்டிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ தனது முன்னைய அரைசியல்த் தலைமை எனும் பதவியினை மீளப்பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியது. சென்னையிலிருந்து அது வெளியிட்ட அறிக்கையில் தமிழ் மக்கள் சார்பாகவே தாம் பேச்சுக்களில் பங்கெடுக்கப்போவதான பாவனையுடன் கூறியிருந்தது. அறிக்கையின் ஒரு பகுதியில், "தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கும் அதேவேளை பேச்சுவார்த்தை மேசையில் "ஆயுததாரிகளுக்கான" வழிகாட்டியாகவும் தாம் செயற்படப்போவதாக" வும் அது கூறியிருந்தது. 1984 ஆம் ஆண்டு மார்கழியில் ஏற்பட்ட சர்வகட்சி மாநாட்டின் தோல்வியினையடுத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை இலங்கையரசாங்கமும், இந்தியாவும் முன்னிலைப்படுத்துவதைத் தவிர்த்தே வந்திருந்தமையினால், திம்புப் பேச்சுவார்த்தையினூடாக தமக்கும் ஒரு வகிபாகம் கிடைத்திருப்பதாக முன்னணி எண்ணியது. பெரும்பாலான முன்னணியின் தலைவர்கள் சென்னைக்குத் தப்பிச் சென்றிருந்தவேளை, யாழ்ப்பாணத்தில் அப்போதுவரை தங்கியிருந்த முன்னாள் உடுவில்த் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கத்துடனும், கோப்பாய்த் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஆளாளசுந்தரத்துடனும் தொலைபேசியில் தொடர்புகொண்ட அமிர்தலிங்கம் கட்சியினை உயிர்ப்பிக்கும் நடவடிக்கைகளில் உடனடியாக இறங்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், அவர்களை உடனடியாகக் கொழும்பிற்குச் சென்று, அரசினதும் எதிர்க்கட்சியினதும் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, அரசியல்த் தீர்வினை அடைவதற்கான அரசியலமைப்பு மாற்றங்கள் குறித்து கலந்தாலோசிக்குமாறும் பணித்தார். வி தர்மலிங்கம் ஆளாளசுந்தரமும், தர்மலிங்கமும் கொழும்பிற்குச் சென்றிருந்தவேளை புதிய இந்தியத் தூதுவர் டிக் ஷிட்டையும், யுத்த நிறுத்தம் குறித்தும், பேச்சுவார்த்தை குறித்தும் இலங்கையரசாங்கத்துடன் பேசுவதற்காக அப்போது கொழும்பிற்கு வந்திருந்த இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் பண்டாரியையும் சந்தித்துப் பேசினார்கள். ஆளாளசுந்தரம் பேச்சுவார்த்தையினை நடத்துவதற்கான இடமாக இந்தியா பரிந்துரை செய்திருந்த மலைகளைக் கொண்ட நாடான பூட்டானை ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டார். மேலும், இந்தியா பரிந்துரை செய்த ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் நான்கு போராளி அமைப்புக்கள், புளொட் அமைப்பு மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஆகியோர் பேச்சுக்களில் தமிழர் தரப்பாகக் கலந்துகொள்வதையும் ஜெயார் ஏற்றுக்கொண்டார். ஜெயாருடன் பேசிய பண்டாரி, ஒவ்வொரு போராளி அமைப்பும் இரு பிரதிநிதிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அனுப்பி வைக்கும் என்றும் கூறினார். அடுத்ததாக, பேச்சுவார்த்தையின் முதலாம் கட்டத்தின் ஆரம்ப நாளாக இந்தியா முன்வைத்த ஆடி 8 ஆம் திகதியினையும் ஜெயார் ஏற்றுக்கொண்டார். கொழும்பிலிருந்து தில்லி திரும்பும் வழியில் சென்னையில் தரித்துச் சென்ற பண்டாரி, அங்கு எம் ஜி ஆரையும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களையும் சந்தித்துவிட்டுச் சென்றார். தாம் கொழும்பில் நின்றிருந்தவேளை அறிக்கையொன்றினை வெளியிட்ட ஆளாளசுந்தரமும், தர்மலிங்கமும், அரசாங்கத்தின் தலைவர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதில் உறுதியாக இருப்பதாக தம்மிடம் கூறியிருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், யுத்தநிறுத்தத்தினை நேர்மையாகவும், நீதியுடனும் கடைப்பிடிக்கப்போவதாக அரசாங்கம் தம்மிடம் உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தனர். அவர்களின் அறிக்கை வெளிவந்துகொண்டிருந்தபோதே இராணுவத்தினரும், பொலீஸாரும் தேடியழிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்துகொண்டிருந்தனர். கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பாவித்து ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டனர். யுத்தநிறுத்தம் அமுலுக்கு வந்ததையடுத்து தமது சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பிய திருகோணமலை மாவட்டத் தமிழர்கள் இராணுவத்தினரால் மீண்டும் அடித்து விரட்டப்பட்டனர். மேலும், மீனவர்களின் மீதான கடற்படையின் அடாவடித்தனங்களும் என்றும்போல தொடர்ச்சியாகவே நடைபெற்று வந்தன. ஆனால், இந்த யுத்த நிறுத்த மீறல்கள் குறித்த எந்த கண்டிப்புகளும் இன்றி, யுத்தநிறுத்தம் தொடர்பாக இலங்கையரசாங்கம் நேர்மையுடன் செயற்படப்போவதாக தம்மிடம் உறுதியளித்திருக்கிறது என்று ஆளாளசுந்தரமும், தர்மலிங்கமும் கொழும்பிலிருந்து வெளியிட்ட அறிக்கை கூறியது. அமிர்தலிங்கம், சம்பந்தன், சிவசிதம்பரம் ஆகியோர் சென்னைக்கும் தில்லிக்கும் இடையே அடிக்கடி பறந்து இந்திய அதிகாரிகளுக்கும், இலங்கையதிகாரிகளுக்கும் இறுதித் தீர்விற்காக அரசியலமைப்பு ரீதியாகச் செய்யப்பட வேண்டிய மற்றங்கள் குறித்து உதவி வழங்கிக்கொண்டு வந்தனர். இந்தியாவின் பிரதம வழக்குரைஞர் கே. பரஸ்வரத்துடன் ஆனி மாதத்தில் ஜெயாரின் சகோதரன் H.W. ஜெயவர்த்தன நடத்திய பேச்சுக்களையடுத்து, ஒற்றையாட்சி யாப்பினைப் பாதிக்காத வகையில் மாவட்ட சபைகளை பலப்படுத்துவது குறித்த வேலைத்திட்டங்களில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக பரஸ்வரம் அமிர்தலிங்கத்துடன் தொடர்புகொண்டபோது, இலங்கைக்கும், இந்தியாவிற்கும் உகந்தவகையில் அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகளில் அமிர்தலிங்கமும் ஏனைய முன்னணியின் தலைவர்களும் அவருக்கு உத‌வினர்.
  8. யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை குறித்து போராளிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் விளக்கமளித்த தலைமைகள் எமது இலட்சியத்தை நாம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை ‍- தலைவர் பிரபாகரன் போராளிகள் யுத்தநிறுத்தத்தினைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். தொடர்ந்து வந்த நாட்களை தாம் எதற்காக யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதனை தமது போராளிகளுக்கு விளங்கப்படுத்துவதற்காகப் பாவித்தனர். "யுத்த நிறுத்தமும் திம்புப் பேச்சுவார்த்தையும்" என்ற தலைப்பில் ஈ.பி.ஆர்.எல் எப் அமைப்பு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டிருந்தது. உலகத்தையும், இந்தியாவையும் ஏமாற்றவென்று ஜெயார் அணிந்திருக்கும் போலிச் சமாதான முகத்திரையினைக் கிழிக்கவே ஈழத் தேசிய விடுதலை முன்னணி யுத்த நிறுத்தத்திலும், பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட இணங்கியிருப்பதாக அது தெரிவித்திருந்தது. டெலோ வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் ஜெயவர்த்தனவின் சமாதான நாடகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தவே தாம் இந்தியாவின் பேச்சுவார்த்தைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கூறியிருந்தது. ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் ஒரு அங்கமாக இல்லாவிட்டாலும் கூட, புளொட் அமைப்பு, இலங்கையரசால் வெளியிடப்பட்டிருக்கும் தன்னிசையான யுத்த நிறுத்த அறிவிப்பு ஒரு அரசியல் நயவஞ்சகம் என்று வர்ணித்திருந்தது. தனது கையொப்பத்துடன் பிரபாகரன் ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டார். யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான எமது நிலைப்பாடு எனும் தலைப்பில் அது வெளியிடப்பட்டிருந்தது. "இந்த யுத்த நிறுத்தத்தின் மூலமும், பேச்சுவார்த்தைகள் ஊடாகவும் கெளரவமான நிரந்தரத் தீர்வு ஒன்று எட்டப்படும் என்று நான் நினைக்கவில்லை. கடந்த 35 வருடங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பான கசப்பான பாடத்தினை நாம் கற்றிருக்கிறோம்". "நான் உங்களுக்குத் தர விரும்பும் உத்தரவாதம் என்னவென்றால், நாம் இந்த சமாதானப் பொறியில் அகப்பட்டு விட மாட்டோம் என்பதைத்தான். எமது பிரச்சினைக்குச் சாதகமான தீர்வொன்றினை இலங்கையரசாங்கம் ஒருபோதும் தரப்போவதில்லை என்பதை நான் நன்கு அறிவேன். முதலாவதாக, இந்தியாவின் விருப்பத்தின்படி வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சமஷ்ட்டி அடிப்படையில் அதிகாரங்களை வழங்குவதைக் கூட இலங்கையரசாங்கம் விரும்பவில்லை. இரண்டாவது, சமஷ்ட்டி அடிப்படையில் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கினால் அவர்கள் நாட்டைப் பிரித்துவிடுவார்கள் என்கிற தவறான அபிப்பிராயத்தை சிங்கள மக்களின் மனங்களில் சிங்களத் தலைவர்கள் ஆளமாக விதைத்துவிட்டார்கள். பெரும்பான்மையான சிங்கள மக்கள் அதனை நம்புகிறார்கள். மேலும், சிங்கள இனவாதிகள் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த தனித் தமிழ்ப் பிராந்தியம் ஒன்று உருவாவதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை". "ஆக, பழைய கள்ளான மாவட்ட சபைகளும், பிராந்திய சபைகளுமே சிங்கள அரசினால் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்கப்படப் போகின்றன‌. இவ்வாறான வேகாத தீர்வுகளை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை". "நாம் ஒரு சுதந்திரம் மிக்க மக்கள் கூட்டமாக, கண்ணியமும் சுய கெளரவமும் கொண்டவர்களாக, சமாதானத்துடன் வாழ வேண்டுமானால், அது சுதந்திர தமிழ் ஈழ நாட்டில் மட்டும்தான் சாத்தியமாகும். நான் என் மக்களுக்கு உறுதிபடக் கூறிக்கொள்வது ஒன்றைத்தான், எமது இலட்சியமான தமிழ் ஈழத்தை நாம் அடைந்துகொள்ளும்வரை எமது சுதந்திரப் போராட்டம் தொடர்ந்து நடக்கும்". "மேலும், இந்தியாவின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்துவரும் அதேவேளை எமது இறுதி இலக்கான சுதந்திரத் தமிழ் ஈழத்தை அடையுமட்டும் நாம் ஓயப்போவதில்லை என்பதையும் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்". "என்னிடம் இருக்கும் போராளிகளின் பலத்தையும், எமது போராளிகளிடத்தில் இருக்கும் இலட்சியம் மீதான ஓர்மத்தையும் கொண்டு நாம் எமது இலட்சியத்தின் பாதையில் சரியாகவே சென்று கொண்டிருக்கிறோம் என்பதை என்னால் கூறமுடியும். தமிழ் மக்கள் தங்களின் ஆதரவினை எனக்குத் தொடர்ந்தும் வழங்கி வரும் பட்சத்தில் , நாம் எமது இலட்சியத்தை அடைவதை உலகில் உள்ள எந்தச் சக்தியாலும் தடுத்துவிட முடியாது என்றும் கூறிக்கொள்ள‌ விரும்புகிறேன்".
  9. யுத்த நிறுத்த ஆலோசனைகளில் இந்தியா விட்ட தவறுகளும், போராளிகளின் பரிந்துரைகளும் ஒருதலைப்பட்சமாக யுத்தநிறுத்தத்தினைக் கடைப்பிடிக்கப்போவதாக லலித் அதுலத் முதலி வானொலியில் அறிவித்தபோது, தமது அரசாங்கம் எதுவித நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் அறிவித்திருந்தார். மேலும், பயங்கரவாதிகளுடன் அரசு எந்தவித இணக்கப்பாட்டிற்குள்ளும் இதுகுறித்துச் செல்லத் தேவையில்லை என்றும் அவர் அறிவித்திருந்தார். லலித் அதுலத் முதலி ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன மிகத் தந்திரமான பொறியினை வைத்திருப்பதாகத் தெரிவித்தார். இந்தியாவிற்கும், போராளிகளுக்கிடையே பிரிவினை ஏற்படுத்தி, போராளிகளை சர்வதேசத்தில் வன்முறையில் ஆர்வம் கொண்ட பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதே ஜெயாரின் நோக்கம் என்று அவர் கூறினார். மேலும், ஒரு தலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தினை அறிவித்ததன் ஊடாக, போராளிகள் அதனை நிராகரிப்பார்கள் என்றும், தமது சொந்த நிபந்தனைகளை அமுல்ப்படுத்த வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பார்கள் என்றும், இதனூடாக இந்தியாவின் கோபத்திற்குப் போராளிகள் ஆளாகலாம் என்பதும் ஜெயாரின் எதிர்ப்பார்ப்பாகும் என்றும் பிரபாகரன் கூறினார். "நாம் இந்தப் பொறியில் அகப்பட்டு விடக் கூடாது. நாம் கவனமாகவும், மிகுந்த அவதானத்துடனும் செயற்பட வேண்டும். நாம் இந்தியா முயற்சிக்கும் யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளை அனுசரித்துச் செல்வோம், ஆனால் அதனுள் இருக்கும் குறைகளை அவ்வப்போது சுட்டிக் காட்டலாம். இந்தியாவின் விருப்பத்திற்கேற்ப யுத்த நிறுத்தத்தையும், பேச்சுவார்த்தையினையும் ஏற்றுக்கொள்வதன் ஊடாக இந்தியாவின் அபிமானத்தை நாம் வெல்லலாம். அதேவேளை, இராணுவத்தினரின் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து நாம் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யவும் வேண்டும்" என்றும் அவர் கூறினார். பிரபாகரனின் திட்டத்தினை ஈழத் தேசிய விடுதலை முன்னணியினர் ஏற்றுக்கொண்டனர். இந்தியாவின் முயற்சிகளில் காணப்பட்ட மூன்று முக்கிய குறைகள் குறித்து இந்தியாவின் கவனத்திற்குக் கொண்டுவர அவர்கள் முடிவெடுத்தார்கள். அவையாவன, 1. தமிழ் மக்கள் மீதான, குறிப்பாக வடக்குக் கிழக்கின் எல்லையோரத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் மீதான இராணுவத்தினர், ஊர்காவல்ப்படையினர், ஆயுதம் தரித்த சிங்கள மக்கள் ஆகியோரின் தாக்குதல்களில் இருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இந்தியாவினால் முன்வைக்கப்பட்டிருக்கும் யுத்த நிறுத்த ஆலோசனைகளில் பகுதி 2 மற்றும் 3 ஆகியவை புதிய சிங்களக் குடியேற்றங்களை நிறுத்திவைப்பது குறித்தும், அவைமீதான தாக்குதல்களை போராளிகள் நிறுத்தவேண்டும் என்றும் சொல்கிறது. ஆனால், இராணுவத்தினர் தமது சோதனை நடவடிக்கைகளை செய்ய அனுமதிப்பதன் மூலம் அவர்கள் முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் எல்லையோரங்களில் அமைந்திருக்கும் தமிழ்க் கிராமங்கள் மீது தாக்குதல்களை நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2. அதுவரை தமிழ் மக்களின் ஆயுத விடுதலைப் போராட்டத்தினூடாகக் கிடைக்கப்பெற்ற வெற்றியான தமிழர் தாயகத்தின் சில பகுதிகளில் இயங்கிவந்த அரசின் பொலீஸ் நிலையங்களை அகற்றி, அரசின் சட்டம் ஒழுங்கினை தடுத்த முயற்சிகள் யுத்த நிறுத்தத்தின் ஊடாக முற்றாக இல்லாதொழிக்கப்ப‌ட்டிருக்கிறது. "போர்க்களத்தில் தாம் இழந்தவற்றை யுத்த நிறுத்தத்தின் ஊடாக மீளப் பெற்றுக்கொள்ளப் பார்க்கிறார்கள்" என்று பிரபாகரன் குறிப்பிட்டார். 3. யுத்த நிறுத்த ஆலோசனைகள் ஜெயாருக்குத் தேவையான கால அவகாசத்தை வழங்கியிருக்கிறது. யுத்த நிறுத்தத்தினையடுத்து வரவிருக்கும் அரசியல்த் தீர்விற்கான பேச்சுக்களை கால வரையின்றி இழுத்தடிப்பதனூடாக தனது இராணுவத்தை மீளக் கட்டியமைத்து இறுதி இராணுவத் தீர்விற்கான முஸ்த்தீபுகளில் அவர் ஈடுபட சந்தர்ப்பத்தை இந்தியாவின் ஆலோசனை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தமிழர்கள் சிங்கள அரசுகளுடன் செய்துவந்த அரசியல் பேச்சுவார்த்தைகளின் சரித்திரம் என்று ஒன்றிருக்கிறது. இவை எல்லாவற்றிலும் சிங்கள அரசுகள் நடந்துகொண்ட விதம் என்று ஒன்றிருக்கிறது. ஆகவே, இந்தியாவிடம் இதுகுறித்து விளக்கி, ஜெயவர்த்தன தனது அரசியல்த் தீர்வுகுறித்த ஆலோசனைகளை பேச்சுவார்த்தைகளின்போது முன்வைக்கவேண்டும் என்கிற அழுத்தத்தினை இந்தியா வழங்கவேண்டும் என்று கோருவது என்று பிரபாகரன் கூறினார். சந்திப்பின் முடிவில், இந்தியாவின் ஆலோசனைகளில் தாம் கண்டறிந்த தவறுகளை எழுத்துவடிவில் ஒரு அறிக்கையாகத் தயாரிக்கும்படி பாலசிங்கத்தை அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதன்பின்னர் போராளிகளுக்கிடையே யுத்தநிறுத்தம் குறித்து உருவாகி வந்த அதிருப்தியினை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆராய்ந்தார்கள். முதலாவதாக, தமது போராளிகளிடத்தில் தாம் தமிழ் ஈழம் எனும் இலட்சியத்தைக் கைவிடவில்லை என்று கூறுவதாக முடிவெடுத்தார்கள். அடுத்ததாக, யுத்த நிறுத்தத்தினையும், பேச்சுவார்த்தையினையும் சிங்கள அரசின் உண்மையான முகத்தினை இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் தோலுரித்துக் காட்டவே தாம் பாவிக்கப்போவதாக போராளிகளிடத்தில் கூறுவது என்றும் முடிவெடுத்தார்கள். அன்டன் பாலசிங்கம் தயாரித்த அறிக்கை பின்வருமாறு அமைந்திருந்தது, ஆனி 18, 1985 ஆம் திகதிக்கு அமுலிற்கு வரும் யுத்த நிறுத்த ஆலோசனைகள் தொடர்பான எமது இணைந்த அறிக்கை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினால் இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளிடம் இவ்வறிக்கை கையளிக்கப்படுகிறது தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்புக்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் யுத்த நிறுத்தத்தினைக் கொண்டுவருவதற்காக இந்திய அரசாங்கம் முன்வைத்திருக்கும் யோசனைகளை மிகவும் கவனமாக நாம் ஆராய்ந்திருக்கிறோம். யுத்த நிறுத்தத்தினை செயற்படுத்த இந்தியா எடுத்திருக்கும் முயற்சிகளையும், மத்தியஸ்த்தராக பங்கெடுக்க அது எடுத்திருக்கும் நடவடிக்கைகளையும், உத்தரவாதத்தினையும் பாராட்டும் அதேவேளை, தமிழரின் பிரச்சினைக்கான நிரந்தரமான அரசியல்த் தீர்வினை இலங்கை அரசாங்கம் முன்வைக்கத் தேவையான சமாதானமான சூழ்நிலையினை உருவாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் யுத்தநிறுத்த ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதென்று எமது ஒருங்கிணைந்த அமைப்பு ஒத்துக்கொண்டு கையொப்பம் இடுகிறது. குறிப்பிடப்பட்ட காலத்திற்கு எமது ஆயுத நடவடிக்கைகளை நாம் நிறுத்திக்கொள்ளச் சம்மதம் தெரிவிக்கும் அதேவேளை, யுத்தநிறுத்த அலோசனைகளில் முன்வைக்கப்பட்டிருக்கும் சில விடயங்கள் தமிழர்களை பலவீனமான நிலைக்கு இட்டுச் செல்லப்போகின்றது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். ஆகவே, இவற்றினை நிவர்த்திசெய்வதற்கான சில ஆலோசனைகளை நாம் முன்வைக்க விரும்புகிறோம். யுத்த நிறுத்த ஆலோசனைகளின் முதலாவது பகுதியை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், பகுதி 2 இல், போராளிகள் செய்யவேண்டியவை எனும் பகுதியில், "புதிய சிங்களக் குடியிருப்புக்களை அரசு நிறுத்திவைக்கும் அதேவேளை, இந்த குடியேற்றங்கள் மீது தாக்குதல் நடத்துவதையோ, வடக்குக் கிழக்கில் சிங்கள, தமிழ் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதையோ போராளிகள் நிறுத்த வேண்டும்" என்று கோரப்பட்டிருக்கிறது. இங்கு எமக்கிருக்கும் கவலை என்னவெனில், யுத்த நிறுத்தக் காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீது சிங்கள இராணுவத்தினரும், ஆயுதமயமாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றவாசிகளும் நடத்தவிருக்கும் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையோ அல்லது அவ்வாறான தாக்குதல்கள் நடக்கமாட்டாது எனும் உத்தரவாதத்தையோ ஆலோசனைகள் வழங்கவில்லை என்பதுதான். இந்தியா முன்வைத்திருக்கும் ஆலோசனைகளில் இவைகுறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லையாயினும், இலங்கை இராணுவமும், ஆயுதமயமாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றவாசிகளும் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக நடத்திவரும் தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் முற்றாக நிறுத்தவேண்டும் என்று இந்தியா இலங்கை அரசிடம் கோரவேண்டும் என்று நாம் பரிந்துரை செய்கிறோம். யுத்த நிறுத்தத்தின் முதலாவது கட்டத்தில் இவ்வாறான தாக்குதல்களில் அப்பாவித் தமிழர்கள் படுகொலைசெய்யப்படுவது தொடருமாக இருந்தால் அவற்றினை மிகக் கடுமையான யுத்த நிறுத்த மீறல்களாக நாம் கருதவேண்டி வரும். பகுதி 2, பந்தி மூன்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் "பொலீஸ் நிலையங்களை மீளத் திறத்தல்" எனும் ஆலோசனை குறித்த எமது கடுமையான அதிருப்தியினை இங்கே பதிவுசெய்ய விரும்புகிறோம். எமது நடவடிக்கைகளால் மூடப்பட்ட இந்த பொலீஸ் நிலையங்களின் ஊடாகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களைப் பாவித்து எம்மக்கள் மீதான "சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும்" நடவடிக்கைகளில் பொலீஸார் ஈடுபட்டிருந்தனர். எமது பிரதேசங்களில் அமுலாக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்களில் ஒன்றான‌ சட்டம் - ஒழுங்கு நடவடிக்கைகள் பரந்துபட்ட நிரந்தரமான அரசியல்த் தீர்வின் மூலமே தீர்மானிக்கப்பட வேண்டுமே ஒழிய கால வரையறைக்குட்பட்ட யுத்த நிறுத்தம் ஒன்றின் ஊடாக அல்ல என்பது எமது கருத்து. ஆகவே, இந்த ஆலோசனையினை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 10 இலிருந்து 12 வாரங்கள் வரையான காலப்பகுதிக்குள் நிரந்தரமான அரசியல்த் தீர்விற்கான பரிந்துரைகளை இலங்கையரசு கட்டாயம் முன்வைக்க வேண்டும் என்று நாம் கோருகிறோம். எமது பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரே பேச்சுவார்த்தைகளில் நாம் ஈடுபட முடியும் என்பதனை நாம் கூறிக்கொள்ள விரும்புகிறோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான நீதியான தீர்விற்காக தமிழர்கள் சிங்கள அரசாங்கங்களுடன் காலங்காலமாக செய்த அனைத்து ஒப்பந்தங்களும் சிங்கள அரசாங்களினாலேயே கைவிடப்பட்டு, தமிழர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே நாம் இந்த முடிவினை எடுக்க வேண்டியதாகிறது. மேலும், இனப்பிரச்சினைக்கான நீதியான தீர்வினை எட்டுவதைத் தடுக்கும் வகையில் பேச்சுக்களை காலவரையின்றி இழுத்தடிப்பதென்பது சிங்கள அரசாங்கங்கள் தொடர்ச்சியாகக் கைக்கொண்டு வரும் ஒரு அணுகுமுறை என்பதையும் இத்தருணத்தில் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஆகவேதான், விளைவுகள் எதனையும் தராத இன்னொரு பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் நாம் மீண்டும் ஏமாற்றப்படக் கூடாது என்பதற்காக, நிரந்தரமான அரசியல்த் தீர்விற்கான பரிந்துரைகளை அரசாங்கம் முன்வைத்தால் ஒழிய, பகுதி 4 இல் குறிப்பிடப்பட்டதன்படி பேச்சுக்களில் ஈடுபடுவதற்கு நாம் சம்மதிக்கப்போவதில்லை என்பதையும் கூறிக்கொள்கிறோம். மேலும், யுத்த நிறுத்த காலத்தை எந்தவிதத்திலும் நீட்டிப்பதில்லை என்று நாம் முடிவெடுத்திருக்கிறோம். அடுத்ததாக, பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தமிழர் பிரதிகள் குறித்து குறிப்பிடும் போது, நான்கு பலம்பொறுந்திய போராளி அமைப்புக்களின் கூட்டமைப்பினை வெறுமனே, "ஆயுததாரிகள்" என்றும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை, "தமிழரின் அரசியல்த் தலைமை" என்றும் குறிப்பிட்டதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறான தரப்படுத்தல்கள் எமது மக்களின் நலனிலும், பாதுகாப்பிலும் உண்மையான அக்கறை கொண்டு செயற்பட்டு வரும் எம்மீது தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்துவதோடு, எமது மக்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டு செயற்பட்டு வரும் தலைமைகள் என்கிற வகையில் நாம் எடுக்கும் முயற்சிகளையும் இவ்வாறான தரப்படுத்தல்கள் தடுத்துவிடும். இறுதியாக, யுத்த நிறுத்தத்தின் ஆரம்ப நாளான வைகாசி 18 இனை பிறிதொரு சாதகமான‌ நாளைக்குப் பிற்போடுமாறு கேட்டுக்கொள்கிறோம். யுத்த நிறுத்த ஆயத்தங்களைச் செய்வதற்கு எமக்கு இந்தக் கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆகவே, ஆடி 1 ஆம் திகதி (1985) இனை யுத்த நிறுத்தத்திற்கான ஆரம்ப நாளாக நாம் பரிந்துரை செய்கிறோம். எமது பரிந்துரைகளும், எதிர்‍ ஆலோசனைகளும் சாதகமான முறையில் பரிசீலிக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படும் என்றும் தாழ்மையுடன் எதிர்பார்க்கின்றோம். இப்படிக்கு தலைவர்கள், ஈழத்தேசிய விடுதலை முன்னணி : பிரபாகரன், பத்மநாபா, சிறீ சபாரட்ணம், பாலக்குமார் இந்தியாவின் ரோவினூடாக‌ தமது அறிக்கையினை பாலசிங்கம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார். வெளியுறவுத்துறையின் அறிவுருத்தலின் பெயரில், சில நாட்களின் பின்னர், ரோ அதிகாரி சந்திரசேகரன் பாலசிங்கத்துடன் தொடர்புகொண்டு போராளித் தலைவர்களின் அறிக்கை தொடர்பான இந்திய வெளியுறவுத்துறையின் கடுமையான அதிருப்தியை தெரிவித்தார். பாலசிங்கத்திடம் பேசிய சந்திரசேகரன், பேச்சுக்களை ஆரம்பிக்கு முன்னர் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றினை இலங்கை அரசாங்கம் முன்வைக்கவேண்டும் என்கிற ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் கோரிக்கை சாத்தியமற்றது என்று இந்திய வெளியுறவுத்துறை கருதுவதாகத் தெரிவித்தார். மேலும், யுத்த நிறுத்தத்தினை பிற்போடுவதற்கான கோரிக்கையினை இந்திய வெளியுறவுத்துறை முற்றாக நிராகரித்திருப்பதாகவும் அவர் கூறினார். ஒரு வார காலமாக அமுலில் இருக்கும் யுத்த நிறுத்தத்தினை பிற்போடுவதென்பதில் எந்தப் பொருளும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
  10. யுத்தநிறுத்தத்தினைத் தன்னிச்சையாக அறிவித்ததன் மூலம், தமிழரின் நிபந்தனைகளை உதாசீனம் செய்த சிங்கள அரசு யுத்த நிறுத்தம் 1985 ஆம் ஆண்டு ஆனி 18 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. தன்னிச்சையாக யுத்தநிறுத்தத்தை அறிவித்ததன் மூலம் லலித், தம்மை விட சாதுரியமாகச் செயற்பட்டிருப்பதை ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டனர். மேலும், இந்தியாவையும், சர்வதேசத்தையும் பகைத்துக்கொள்ளக் கூடாது என்கிற அழுத்தத்தினால் வேறு வழியின்றி போராளிகளும் யுத்தநிறுத்தத்தினை அனுட்டிக்கவேண்டியதாயிற்று. இலங்கையில் யுத்த நிறுத்தத்தை கொண்டுவந்தமைக்காகவும், பேச்சுவார்த்தைகளுக்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதற்காகவும் இந்தியாவை அமெரிக்கா, ரஸ்ஸியா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் பாராட்டியிருந்தன. பிரபாகரனுடன் அன்டன் பாலசிங்கம் ஆனால், இந்தியாவின் இந்த அழுத்தம் குறித்து போராளித் தலைவர்கள் மகிழ்ச்சியடையவில்லை. குறிப்பாக பிரபாகரன் இதுகுறித்து மிகுந்த அதிருப்தியடைந்திருந்தார். அரச படைகளுக்கெதிரான போராளிகளின் வெற்றிகரமான தாக்குதல் முன்னெடுப்புக்களும், மக்களின் ஏகோபித்த உற்சாகமும் இதன்மூலம் மழுங்கடிக்கப்படும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். யுத்தநிறுத்தத்தினை போராளிகள் எதிர்ப்பார்கள் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அதேவேளை, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஆதரவாளர்களால் இரகசியமாக நடத்தப்பட்டு வந்த விஷமப் பிரச்சாரத்தையும் அவர் அறிந்துகொண்டார். "நாம் ஜெயவர்த்தனவுடன் பேசுவதைத் தவறென்று கூறியவர்கள் இப்போது என்ன செய்யப்போகிறார்கள்?" என்பதே கூட்டணியின் ஆதரவாளர்கள் முன்வைத்த விமர்சனமாக இருந்தது. அதேவேளை, அரசாங்கமும் கடுமையான பிரச்சாரம் ஒன்றினைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது. சிங்கள ஊடகங்களில் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவந்த பிரச்சாரத்தில் பயங்கரவாதிகள் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதாலேயே யுத்தநிறுத்தத்திற்கு இணங்கியிருக்கிறார்கள் என்று அது சிங்கள மக்களிடையே கூறிவந்தது. மேலும், யுத்தநிறுத்தம் இராணுவத்தினருக்குப் பாதகமானது என்கிறை பிரமையினையும் அரசும் இராணுவமும் சிங்கள மக்களிடையே உருவாக்கி வந்தன. போராளிகளை அவமானப்படுத்த அரசு உருவாக்கிவரும் சூழ்நிலை பற்றிக் கலந்தாலோசிக்க ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களை அவசர சந்திப்பொன்றிற்கு அழைத்தார் பிரபாகரன். யுத்த நிறுத்தம் அமுலிற்கு வந்த ஒரு சில மணிநேரத்தின் பின்னர், ஆனி 18 ஆம் திகதி ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இரு முக்கிய விடயங்கள் அங்கு ஆராயப்பட்டன. முதலாவது யுத்தநிறுத்தம், இரண்டாவது போராளிகளுக்கிடையே உருவாகி வந்த யுத்த நிறுத்தம் தொடர்பான அதிருப்தியும் அமைதியின்மையும். தன்னிச்சையான யுத்த நிறுத்தத்தினை லலித் அதுலத் முதலி அறிவித்ததன் மூலம் தம்மை ஓரங்கட்டியிருப்பதை அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மேலும், யுத்த நிறுத்தத்திற்கு முன்னர் தாம் முன்வைத்த அனைத்து நிபந்தனைகளையும் தன்னிச்சையான அறிவிப்பின் மூலம் அரசு முற்றாக நிராகரித்திருப்பதையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். இந்திய வெளியுறவுத்துறைக்கு போராளிகள் முன்வைத்திருந்த யுத்த நிறுத்தம் தொடர்பான நிபந்தனைகள் ஊடகங்களுக்குக் கசிந்திருந்தன. அதன்படி, படிப்படியாக யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டும், மாவட்ட ரீதியில் உருவாக்கப்படும் கண்காணிப்பு கட்டமைப்புக்கள் ஊடாக அரசால் மேற்கொள்ளப்படும் யுத்த நிறுத்த மீறள்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட மேலும் சில நிபந்தனைகள் போராளிகளால் இந்தியாவுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தன. ஈழத்தேசிய முன்னணியினால் முன்வைக்கப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கான நிபந்தனைகள் வருமாறு, அரசால் செய்யப்பட வேண்டியவை 1. ஊர்காவல்ப்படை, சிவிலியன் பாதுகாப்பு படை, தொண்டர் படை ஆகிய துணை ராணுவக் குழுக்கள் கலைக்கப்பட்டு, ஆயுதங்கள் களையப்பட வேண்டும். 2. குடியேற்றங்களைப் பொறுத்தவரை முன்பிருந்த நிலை மீளக் கொண்டுவரப்பட வேண்டும். யுத்த நிறுத்த காலத்தில் தமிழர் தாயகத்தில் சனத்தொகைப் பரம்பலை மாற்றக்கூடிய நேரடியான, மறைமுகமான எந்த நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபடலாகாது. 3. இராணுவம் தமது முகாம்களுக்கு மீளச் செல்லவேண்டும். ரோந்துக்களோ, தேடியழிக்கும் நடவடிக்கைகளோ செய்யப்படலாகாது. 4. இராணுவம் புதிய முகாம்களை அமைக்க முடியாது. 5. வடக்குக் கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் வீதியோரச் சோதனைச் சாவடிகள் அகற்றப்படுவதுடன், தமிழர்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கான தடைகள் அகற்றப்பட வேண்டும். போராளிகளால் செய்யப்பட வேண்டியவை 1. துணை இராணுவக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டது. 2. ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் சிங்களக் குடியேற்றங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது. 3. முகாம்களுக்குள் இருக்கும் இராணுவத்தினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட மாட்டாது. வீதிகள், ரயில்த் தண்டவாளங்கள், பாலங்கள், கட்டிடங்கள் மீது கண்ணிவெடிகள் பொருத்தப்பட மாட்டது. 4. போராளிகளுக்கான புதிய முகாம்கள் அமைக்கப்பட மாட்டாது. 5. வீதிப்போக்குவரத்தைப் போராளிகள் தடைசெய்ய மாட்டார்கள். யுத்த நிறுத்த கணகாணிப்புக் குறித்துப் போராளிகள் முன்வைத்த ஆலோசனைகள், அரசாங்கம் செய்யவேண்டியவை 1. யுத்தநிறுத்த மீறல்களைக் கண்காணிப்பதற்கு சுயாதீனமான அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். யுத்த நிறுத்த மீறல்களை உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று விசாரிப்பதற்கென்று மாவட்ட ரீதியில் தமிழ்ப் பிரதிநிதிகளையும், அரச பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய அமைப்பு ஒன்று உருவாக்கப்படுதல் அவசியம். இவ்வமைப்பின் சுதந்திரமான நடமாட்டமும் உறுதிசெய்யப்பட வேண்டும். 2. சர்வதேச மன்னிப்புச்சபை அல்லது அதையொத்த சர்வதேச அமைப்பொன்று யுத்தநிறுத்த கண்காணிப்பாளர்களாக அமர்த்தப்படுவதுடன், அவகளை உள்ளடக்கிய அவதானிப்புக் குழு கைதிகளின் நலன்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வசதிகள் மற்றும் அவர்களின் விடுதலை தொடர்பான செயற்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும். 3. பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அதனையொத்த அவசரகாலச் சட்டங்கள் முழுமையாக நீக்கிக்கொள்ளப்பட வேண்டும். யுத்த நிறுத்தத்திற்கு முன்னரான காலத்தில் நடந்தவற்றை அடிப்படையாக வைத்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாகக் கைதுகள் மேற்கொள்ளப்படுவது நிறுத்தப்பட வேண்டும். 4. ஆனி 18 ஆம் திகதி வரை அரசால் கைதுசெய்யப்பட்டு, வழக்குகள் பதியப்படாது அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அனைத்துத் தமிழ் அரசியல்க் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். மேலதிக நிபந்தனைகள் 1. வெளிநாடுகளிலிருந்து இராணுவப் பயிற்சியாளர்களையும், கூலிப்படையினரையும், ஆயுதங்களையும் தருவிப்பது முற்றாக நிறுத்தப்பட வேண்டும். 2. இராணுவத்தினர் முகாம்களை விட்டு வெளியே வரும்போது ஆயுதங்கள் இன்றியே வரவேண்டும். 3. பொதுமக்கள் மீதான அனைத்துத் தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும், குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், தொழிற்சங்க அமைப்பினர் மீதான தாக்குதல்கள் ஆகியன‌ நிறுத்தப்பட வேண்டும். 4. பொதுமக்களுக்குச் சொந்தமான வீடுகள் , வியாபார நிலையங்கள், பொதுச் சொத்துக்கள், வர்த்தக நிறுவனங்களைத் தீயிட்டு அழிப்பது நிறுத்தப்பட வேண்டும். 5. தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபடுதல், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுதல், கடத்திச் செல்லுதல் ஆகிய செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். 6. தமிழருக்குச் சொந்தமான வாகனங்களை கடத்திச் செல்லுதல், தீவைத்து எரித்தல் ஆகியவை நிறுத்தப்பட வேண்டும். 7. தமிழ் மக்களின் வீடுகள் கடைகள் போன்றவற்றைச் சூறையாடுதல், கப்பம் அறவிடுதல், வியாபாரிகள் மீதான துன்புறுத்தல்கள் ஆகியவை நிறுத்தப்பட வேண்டும். 8. மீனவர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். 9. மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கெதிரான தடைகள் நீக்கப்பட வேண்டும், குறிப்பாகப் பெருந்தோட்டப்பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் நடமாட்டம் தடுக்கப்படலாகாது. 10. வெளிநாட்டு துணைப்படைகளான மொசாட், இங்கிலாந்தின் விசேட ஆகாய சேவைகள் படையணியின் பயிற்றுவிப்பாளர்களை நாட்டிற்குள் கொண்டுவருவது நிறுத்தப்பட வேண்டும்.
  11. தமிழரின் நலனில், அவர்களின் தாயகத்தின் காப்பில் உண்மையான அக்கறை கொண்டிருப்பவராக நீங்கள் இருந்திருந்தால் இப்படிக் கேட்டிருக்க மாட்டீர்கள். ஒன்றில் இவற்றால் உருவாக்கப்படும் தாக்கங்கள் குறித்த அறிவு இல்லாமலிருக்கலாம், அல்லது அவற்றால் வரும் அழிவுகள் குறித்த அக்கறை இல்லாமலிருக்கலாம்.
  12. அரசுடன் இணைவதால் எதனையும் செய்ய முடியும் என்று நினைக்கவில்லை. முடிந்தால் கருணாவோ, பிள்ளையானோ, வியாழேந்திரனோ, டக்கிளசோ தமிழ் மக்களின் நலன்காக்க செய்த விடயங்கள் என்னவென்று அவர்களிடம் கேளுங்கள். அவர்களால் இன்று நடக்கும் எந்த அத்துமீறளையும், ஆக்கிரமிப்பையும் தடுக்க முடியாது. அற்ப சலுககைகளைத் தவிர அவர்களால் அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடியவை எவையும் இல்லை. அவர்களுக்குக் கொடுக்கும் சில சலுகைகளைக் காரணம் காட்டி தமிழர் தாயகத்தில் தான் நடத்தும் பருத்துப் பெருகிவரும் குடியேற்றங்களுக்கான மெளனமான‌ ஆமோதிப்பை அவர்களிடமிருந்து அரசு பெற்றுக்கொள்ளும். ஆகவே, அரசுடன் சேர்வதால், அதனது ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டவர்களாக மாறிவிடுவோம். அரசுடன் இணையாதுவிட்டால் மட்டும் ஆக்கிரமிப்பு நடக்காதோ என்று கேட்கவேண்டாம், குறைந்தது எமது விருப்புடன் தான் நடத்துகிறோம் என்று அவர்கள் எம்மைப் பாவிக்க முடியாதல்லவா? அரசுடன் இணையாது, மாகாணசபைகளையோ அல்லது பாராளுமன்ற ஆசனங்களையோ நாம் கைப்பற்றி, அதனூடு கிடைக்கும் பணத்தினூடாக எமது பகுதிகளை அபிவிருத்தி செய்யலாம். இதற்காக அரசுடன் சேரவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. தமிழ்த் தேசியக் கட்சிகளிலோ அல்லது சுயேட்சையாகவோ இதனைச் செய்யலாம். அரசின் ஆக்கிரமிப்பிற்கெதிரான நிலைப்பாட்டுடன், தமது பிரதேச மக்களுக்கான நலன்களைச் செய்வது சாத்தியமே. ஆனால், இப்போதிருக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் நிலையினைப் பார்க்கும்போது அதற்கான சந்தர்ப்பம் இப்போதைக்கு இல்லையென்றே தெரிகிறது. எமது இருப்பும், நலன்களும் காக்கப்படவேண்டுமானால், பாராளுமன்றத்தைப் பகிஸ்க்கரித்து வெளியில் வரவேண்டும். இதன்மூலம் சர்வதேசத்திற்கு இன்றும் இங்கு நடக்கும் அக்கிரமங்கள் தெரியவரும். தமிழரசுக் கட்சி, பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் பலமுறை பாராளுமன்றப் பகிஷ்கரிப்பை முன்னர் நிகழ்த்தியிருந்தன. மக்களின் ஆதரவும் அன்று அவர்களுக்கு இருந்தது. ஒரேவிடயம் என்னவெனில், அனைவரும் ஒரு கட்சியில் அல்லது ஒரு முன்னணியில் இருந்தனர், ஒரு சிலரைத் தவிர. இன்று இது சாத்தியமா என்பது கேள்விக்குறியே. முடிவு : அரசுடன் இணைந்துபோவதால் தமிழரின் நலன் காக்கப்படாது. மாறாக தமிழர் தாயகத்தின் மீதான ஆக்கிரமிப்பிற்கும், தமிழர் நலன்களைப் பலவீனப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளுக்கும் நாமும் உடைந்தையாக இருப்போம்.
  13. அவ்வளவு தூரத்திற்கு அவர் பார்க்காமல் இதனைச் சொல்லியிருக்கலாம். அல்லது யாழ்ப்பாணத்தில் மட்டுமே (நாவட்குழியில்) குடியேறியிருக்கும் தமிழர்களைப் பற்றி மட்டும் அவர் பேசியிருக்கலாம். அப்படியிருந்தாலும்கூட, நாவட்குழிக் குடியேற்றமும் அரச ஆதரவுடனேயே நடந்துவருகிறது. அது அவருக்குப் புரிவதில்லை போலும். 83 இற்கு முன்னர் யாழ்ப்பாண நகரில் வேலைவாய்ப்பிற்காக, வியாபாரத்திற்காக வாழ்ந்த சிங்களவர்களைப் பற்றி மட்டுமே அவர் பேசுகிறார் என்றால், அவர் முழு நிலைமையினையும் பார்க்கவில்லையென்றே தோன்றுகிறது.
  14. ஈழத் தமிழர்களின் நலன்களை விற்று தனது நலன்களைக் காப்பாற்றிக்கொள்ள எத்தனித்த இந்தியா பண்டாரியுடனான பேச்சுக்களின்போது சில விடயங்கள் குறித்து விளக்கங்களைத் தருமாறு ஜெயார் கோரினார், யுத்த நிறுத்தம் : போராளிகள் யுத்த நிறுத்தத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்று ஜெயார் கேட்க, போராளிகளைக் கலந்தாலோசிக்கமாலேயே பண்டாரி, போராளிகள் யுத்த நிறுத்தத்திற்கு ஆதரவு தருவார்கள் என்று உறுதியளித்தார். பேச்சுவார்த்தை : போராளிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என்று உறுதியளிக்க முடியுமா என்று ஜெயார் கேட்டபோது, ஆம், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று போராளிகளைக் கேட்காமலேயே உறுதியளித்தார் பண்டாரி. இதன்போது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேசுவதில் பயனில்லையென்றும் ஜெயார் கூறியிருந்தார். தில்லி திரும்பியதும் இந்தியாவின் யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான திட்டத்தினை போராளிகளுக்கும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் "இரகசிய ஆவணம்" எனும் பெயரில் பண்டாரி அனுப்பி வைத்தார். யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான இந்தியாவின் திட்டம் பின்வருமாறு, கட்டம் ஒன்று : ஆனி 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குள் செய்யப்பட வேண்டியவை அரசாங்கம் செய்ய வேண்டியவை 1. வீதிகளில் வாகனங்கள் ஆட்களையும் பொருட்களையும் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையினை நீக்குதல். 2. புதிய சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்திவைக்கப்படும். 3. உள்ளூர் அதிகாரிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் முன்னிலையிலேயே இராணுவத்தினர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவர். 4. கடற்கண்காணிப்பு வலயங்களை நீக்குதலும், இராணுவத்தினருக்கும் பொலீஸாருக்கும் மேலதிகமான ஆயுத தளபாடங்களை வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொள்வதை நிறுத்துதல். போராளிகள் செய்யவேண்டியவை 1. யுத்த தவிர்ப்பு வலயங்களை தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்துவதை நிறுத்துதல். 2. வடக்குக் கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சிங்கள் மற்றும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துதல். 3. வடக்குக் கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அமைந்திருக்கும் அரச அலுவலகங்கள், பொருளாதார இலக்குகள், தனியார் சொத்துக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துதல். 4. யுத்ததினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாட்டிற்கு வெளியே இருந்து ஆட்களையும், ஆயுதங்களையும் கொண்டுவருவதை நிறுத்துதல். கட்டம் இரண்டு : மூன்று வாரங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை அரசாங்கம் செய்யவேண்டியவை 1. பாதுகாப்புப் படையினர் ஊரடங்கு உத்தரவினை மீளப் பெற்றுக்கொள்வர். போராளிகள் செய்ய வேண்டியவை 1. இராணுவத்தினரினதும், பொலீஸாரினதும் ரோந்து அணிகள் மீதான தாக்குதல்களை நிறுத்துதல். 2. இராணுவ முகாம்கள், பொலீஸ் நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துதல். 3. வீதிகள், புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்கள் மீது கண்ணிவெடித் தாக்குதல்களை நடத்துவதை நிறுத்துதல். 4. ஆயுதங்களைக் காவித் திரிவதை நிறுத்துதல். கட்டம் மூன்று: இரண்டு வாரங்களில் செய்யப்பட வேண்டியவை 1. யுத்த நிறுத்தத்தினைக் கடைப்பிடித்தல். 2. மூடப்பட்டிருக்கும் பொலீஸ் நிலையங்களை மீளத் திறத்தல். சட்டம், ஒழுங்கு விடயங்களைப் பொலீஸார் பொறுப்பேற்றுக் கொள்வர். 3. வழக்குப் பதிவின்றி தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும். வழக்குப் பதிவுசெய்யப்பட்டவர்கள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, கலந்தாலோசனைகளின்பின்னர் விடுதலை செய்யப்படுவர். கட்டம் நான்கு (அரசியல்த் தீர்வு எட்டப்படுவதற்கான கால அவகாசம் குறிப்பிடப்படவில்லை) முக்கியமான பிரச்சினைகளில் எட்டப்படவேண்டிய அரசியல்த் தீர்வு குறித்த இரகசியப் பேச்சுவார்த்தைகள் அரசாங்கம், போராளிகள் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகியோருக்கிடையில் நடைபெறும். இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்றாவது நாடொன்றில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். பேச்சுவார்த்தைகளில் கலந்தாலோசிக்கப்படும் அனைத்து விடயங்களையும், பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகளையும் இரகசியமாக வைத்திருக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும். யுத்த நிறுத்தமும், பொது மன்னிப்பும் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து சரியாக மூன்று மாத காலத்திற்குள் அரசியல்த் தீர்விற்கான பலமான அடித்தளம் இடப்பட்டிருக்க வேண்டும். அரசியல்த் தீர்விற்கான அடித்தளம் இடப்பட்டதும், அரசாங்கத்திற்கும் தமிழர்களின் அரசியல்த் தலைமைக்கும், ஆயுத அமைப்புக்களுக்கும் இடையே வெளிப்படையானதும், நேரடியானதுமான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும். இந்தியாவினால் முன்வைக்கப்பட்டிருந்த ஆலோசனைகளை பிரபாகரன் அறிந்துகொண்டபோது கொந்தளித்துப் போனார். தமிழர்களின் நலன்களை விற்று தனது சொந்த நலன்களை இந்தியா பாதுகாத்துக்கொள்ளப் பார்க்கிறது என்று பாலசிங்கத்திடம் அவர் கூறினார். கட்டம் ஒன்று, சரத்து 4 இல், குறிப்பிடப்பட்டிருக்கும், ".....இராணுவத்தினருக்கும் பொலீஸாருக்கும் மேலதிகமான ஆயுத தளபாடங்களை வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொள்வதை நிறுத்துதல்" என்று கோருவதன் மூலம் இந்தியா தனது நலன்களைப் பாதுகாக்க முனைகிறது என்று அவர் கூறினார். இதனூடாக தனது இராணுவத்தினருக்கான பயிற்சிகள் என்கிற பெயரில் வெளிநாட்டு இராணுவ நிபுணர்களையும், கூலிப்படைகளையும் ஜெயவர்த்தன‌ இலங்கைக்குள் கொண்டுவருவதை இந்தியா தடுக்கப்பார்க்கிறது என்று அவர் கூறினார். இதனை அடைந்துகொள்வதற்காக ஈழத்தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தின் ஊடாக‌ இதுவரை காலமும் அடைந்திருக்கும் அனைத்து வெற்றிகளையும் இந்தியா தாரை வார்க்க விரும்புகிறது என்றும் அவர் கூறினார். இந்தியாவின் இந்தச் செயல் மூலம் தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதப் போராட்டத்தினை முற்றாகக் கைவிட நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதோடு, தமிழர்களின் ஆயுத வல்லமையினால் மூடப்பட்டிருந்த பொலீஸ் நிலையங்களை அரசாங்கம் மீளவும் திறக்கும் சந்தர்ப்பமும் இந்தியாவால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தமிழ் மக்களின் அரசியல்த் தலைமை என்று இந்தியா குறிப்பிடுவதையும், போராளிகளின் முயற்சியினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கான சூழல் ஏற்பட்டிருக்கும் தருணத்தில், அவர்களை வெறுமனே ஆயுத அமைப்புக்கள் என்று இந்தியா அழைப்பதையும் பிரபாகரன் விரும்பவில்லை. ஆனால், பிரபாகரன் அதிருப்தியடைந்த இன்னும் இரு விடயங்கள் இருந்தன. இலங்கை இராணுவத்தினரினதும், பொலீஸாரினதும் பழிவாங்கல்த் தாக்குதல்களிலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்கத் தேவையான சரத்துக்களை தனது ஆலோசனைகளில் சேர்த்துக்கொள்ள இந்தியா தவறியிருந்தது. மேலும், பேச்சுவார்த்தைகளை கால அவகாசமின்றி ஜெயவர்த்தன நீட்டித்துச் செல்வதற்கான சந்தர்ப்பத்தினையும் இந்தியா தனது ஆலோசனைகள் ஊடாக வழங்கியிருந்தது. ஆகவே, அரசியல்த் தீர்விற்கான பலமான அடித்தளம் ஒன்றினையும், அதனூடான நிரந்தரத் தீர்வையும் இலங்கை குறிப்பிட்ட காலத்திற்குள் முன்வைக்கவேண்டும் என்கிற நிபந்தனையினை இந்தியா கோரியிருக்க வேண்டும் என்றும் பிரபாகரன் கருதினார். இந்தியா முன்வைத்திருந்த ஆலோசனைகள் குறித்து பிரபாகரன் தனது அதிருப்திகளைத் தெரிவித்து வந்த நிலையில், லலித் அதுலத் முதலி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் செயலில் இறங்கினார். இலங்கையரசாங்கம் தனது படைகளை ஆனி 18 இலிருந்து யுத்த நிறுத்ததைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட்டிருப்பதாக அவர் அறிவித்தார். அவசர அவசரமாக இலங்கையரசாங்கம் யுத்த நிறுத்தத்தினை கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்ததன் உண்மையான நோக்கம், போராளிகள் யுத்த நிறுத்தத்திற்கான நிபந்தனைகளை முன்வைப்பதைத் தடுப்பதற்காகத்தான் என்பது இரகசியமல்ல. தேசியப் பாதுகாப்பு அமைச்சின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட லலித் அதுலத் முதலி, யுத்த நிறுத்தப் பிரகடணம் இரு தரப்பாலும் ஒன்றிணைந்து வெளியிடப்படப்படும் போது மட்டுமே இரு தரப்பு நிபந்தனைகளும் உள்வாங்கப்பட்டிருக்கும், ஆகவேதான், தன்னிச்சையாக இலங்கையரசாங்கம் இதனை அறிவித்தது, போராளிகளின் நிபந்தனைகளை நாம் இதன்மூலம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை என்றாகிவிடுகிறது என்று கூறினார். "இப்போது அவர்கள் தமது நிபந்தனைகளையும் தூக்கிக்கொண்டு நரகத்திற்குப் போகட்டும் (Let them go to hell with their conditions)" என்று ஆக்ரோஷமாகக் கூறினார் லலித் அதுலத் முதலி. பிரபாகரன் ஆட எண்ணிய ஆட்டத்தில் அவரைத் தோற்கடித்திருந்தார் லலித் அதுலத் முதலி. இதன்மூலம் பிரபாகரனும் ஏனைய போராளித் தலைவர்களும் யுத்த நிறுத்தத்தினை நிபந்தனியின்றி ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. எனது அறிவிற்கு எட்டிய வகையில், லலித் அதுலத் முதலி பிரபாகரனை வெற்றி கொண்டது இந்தத் தருணத்தில் மட்டும்தான் என்று நினைக்கிறேன். வடமாராட்சியில் இலங்கையரசால் நடத்தப்பட்ட ஒப்பரேஷன் லிபரேஷன் இராணுவ நடவடிக்கையின்போது கூட , தனது போராளிகளையும், ஆயுத தளபாடங்களையும் சேதமின்றி வன்னிக்குப் பிரபாகரன் நகர்த்தியிருந்தபோதும், அதுலத் முதலியும், அவரது தலைவரான ஜெயவர்த்தனவும் அதிர்ந்து போகும்வகையில் நெல்லியடி மத்திய கல்லூரி மீது பாரிய குண்டுத்தாக்குதல் ஒன்றினை பிரபாகரன் வெற்றிகரமாக நடத்தியிருந்தார். ஆனி 18 ஆம் திகதி காலை, ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் யுத்த நிறுத்தம் குறித்து முடிவெடுக்க மீளவும் ஒன்றுகூடினார்கள்.
  15. இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர். ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். ரஜீவுடன் சிதம்பரம் பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்". "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன், 1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது. 2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும். 3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும். 4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்" என்கிற பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள். போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார்.
  16. இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர். ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி, ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார். சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும், தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன) உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார். தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன். ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார். வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார், "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார். அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார். யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.