Everything posted by ரஞ்சித்
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
எனது நோக்கம் இதுதான். எம் கண்முன்னே நடக்கும் சிங்கள பெளத்த செயற்பாடுகளின் சூட்சுமத்தை நாம் பார்க்கத்தவறிவிடுகிறோம். எம்மை இன்று பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் சிலரின் இணக்க அரசியலினாலும், தேசியத் துறப்பினாலும் மக்கள் அரசியலில் இருந்து விலகிவருகிறார்கள், அல்லது நடக்கும் சூட்சுமத்தைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். நான் மக்களைத் துரோகிகளாக ஒருபோதும் நினைத்ததுமில்லை, எழுதியதுமில்லை. இது தவறாக என்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. 25/11/2023
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
80 களில் தேசியத்திற்கு எதிராகச் செயற்பட்டார்கள் என்று பல ஜனநாயக அரசியல்வாதிகளை புலிகள், டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் என்று பல அமைப்புக்கள் மண்டையில் போட்டன. மறுக்கவில்லை. . ஆனால், ஜனநாயகவழியில் எமது அரசியலைச் செய்யக் கூடிய சூழ்நிலை 2009 இற்குப் பின்னர் எமக்குக் கிடைத்தது. புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று தமிழர்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள் அரசியலில் பாரிய பங்கினைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இன்று செய்துகொண்டிருப்பது என்ன? கடந்த 15 வருட காலத்தில் அவர்களால் தமிழினம் அடைந்துகொண்டவை என்ன? கடந்த 15 வருட காலத்தில் சிங்கள மயமாக்கலினை அவர்களால் எவ்வளவு தூரத்திற்குத் தடுக்க முடிந்தது? பல கட்சிகளைக் கொண்ட தமிழர்களின் ஒரே தெரிவாகவிருந்த கூட்டமைப்பு இன்று ஒற்றைக்கட்சியாகவும், அக்கட்சி இரண்டாக உடைந்து செயற்படுவதற்கே நீதிமன்றத் தடை வந்திருப்பதற்கும் யார் காரணம்? இதற்குக் கூட புலிகள் மண்டையில் போட்டதுதான் காரணம் என்கிறீர்களா? இல்லையே? கூட்டமைப்பை உருவாக்கியவர்களே புலிகள் தானே? தாமே உருவாக்கியவர்களை, தாம் அழிக்கப்பட்டு 15 வருடங்களின் பின்னரும் அவர்களால் மண்டையில் போடமுடியுமா என்ன? எமது ஜனநாயக அரசியல்வாதிகளின் கையாலாகத்தனத்தை இன்னும் எவ்வளவு காலத்திற்கு புலிகளின் மண்டையில் போடுதலால்த்தான் நான் இந்த நிலைக்கு வந்தோம் என்று கூறிக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்? நான் பொதுமக்களைத் துரோகிகள் என்று எண்ணவுமில்லை, அப்படி எழுதவுமில்லை. அவர்களின் இனம்சார்ந்த அரசியல் சூனியமாக்கப்பட்டு, எமது இருப்புக் குறித்த பிரக்ஞையற்ற அரசியல் ஒன்று அவர்கள் மேல் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. இதனை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள் இல்லையென்பதே எனது வருத்தம்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
இதுவும் தவறான கணிப்பே. வெசாக் பந்தலைப் பார்க்கப்போனவர்கள் இணக்க அரசியல் பேசுவதாகவும், தேசிய நீக்கம் செய்வதாகவும், இலங்கையராக இணைவதாகவும் நான் எங்கே கூறினேன்? அப்படிப் பேசிப்பேசியே இன்றைய தலைமுறையினை இன்றிருக்கும் அரசியல்வாதிகளும், நடுநிலைவாதிகளும், இணக்கவாதிகளும் மாற்றி வைத்திருக்கிறார்கள் என்றுதான் ஆதங்கப்படுகிறேன். மக்கள் தாமாக இணக்க அரசியலும், தேசிய நீக்கமும், சரணாகதி அரசியலும் செய்யப்போவதில்லை. அரசியல்வாதிகள் அவ்வாறு செய்வதாலேயே உங்களின் அரசியலும் வேண்டாம், நீங்களும் வேண்டாம் என்று மக்கள் ஒதுங்கிப் போகிறார்கள். இன்றிருக்கும் அரசியல் மயமற்ற தன்மையினை உருவாக்கியவர்கள் இந்த அரசியல்வாதிகள்தான்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
நீங்கள் என்னை முற்றாகத் தவறாகவே ஆரம்பத்திலிருந்து கணித்து எழுதுகிறீர்கள். எனது ஆதங்கம் யாழ்ப்பாணத்தில் இன்றிருக்கும் இளைய தலைமுறை அரசியல் மயப்படுத்தப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்குள் உருவான இந்தத் தலைமுறை எமது அவலங்கள் குறித்தோ, அரசியல்த் தேவைகள் குறித்தோ சரியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. இன்னும் சில வருடங்களின் பின்னர் முள்ளிவாய்க்காலும் பலருக்கு மறந்துபோகும். எமது தாயகத்தில் ஆக்கிரமிப்பாளனினால் இறக்கிவிடப்படும் வானவேடிக்கைகள் மட்டுமே மனதில் நிறைந்திருக்கும். இதனைச் சுட்டிக் காட்டவே நான் இவ்வாறு எழுதுகிறேன். இவர்கள் எல்லோருமே ஒரே மக்களாக இருக்கலாம். வாதிடவில்லை. எனக்கிருந்த கேள்வி, சில நாட்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் அழுது புரண்ட மக்களால் சிங்கள பெளத்த வேடிக்கை நிகழ்வையும் தரிசிக்க முடியுமா என்பதுதான். அது கடிணமாக இருக்கும் என்பதாலேயே அப்படி நினைத்து எழுதினேன். அது சரியாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். இதுகுறித்து வாதிடத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
நிச்சயமாக இல்லை. ஒரு பகுதியினர் தமது இழப்புக்களுக்காக வருந்தும்போது, அதுகுறித்த பிரக்ஞையில்லாமல் சமூகத்தின் இன்னொரு பகுதி வளர்ந்து வருகிறது என்பதைத்தான் நான் கூற வந்தேன். அவர்களை நான் எதற்காகத் துரோகிகளாக்கவேண்டும்? அப்படி அவர்கள் என்ன துரோகம் செய்துவிட்டார்கள்? அவர்கள் ஆக்கிரமிப்புப் படையினை ஆதரிக்கிறார்கள் என்று நான் எழுதியதாகக் கூறுகிறீர்கள். எங்கே அப்படி எழுதினேன் என்பதைக் காட்ட முடியுமா? திருத்திக் கொள்கிறேன். நான் கூற வந்தது ஆக்கிரமிப்புப் படையின் சூட்சுமத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான். அவர்களின் இந்த அரசியல் தெளிவற்ற மனநிலையினைத்தான் நான் விமர்சிக்கிறேன். எவ்வளவு தவறான கருத்து. ஆரியகுளத்தில் விடுப்புப் பார்க்கச் சென்றவர்களை துரோகிகளாகக் காட்டி அவர்களை மண்டையில் போடவேண்டும் என்று நான் சொன்னேனா? ஏன் இப்படி எழுதுகிறீர்கள்? ஆக்கிரமிப்புப் படையினருக்கு ஆதரவாக இருந்து, சொந்த இனத்தின் இருப்பை அழித்தவர்களை மண்டையில் போட்டபோது நீங்களும், நானும் சரியென்றுதான் வாதிட்டோம். ஆனால், ஆரியகுளத்தில் வேடிக்கை பார்த்தவர்கள் ஆக்கிரமிப்புப் படைக்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள் என்று நான் எங்கு எழுதினேன்? அப்படியிருந்தால் திருத்திக்கொள்கிறேன்.
-
நம்பிக்கையை இழந்து செல்லும் தமிழ்ச்சமூகம்
அட, இதை இன்னுமாடா சொல்லிக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்? 2009 இற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எல்லா அரசுகளுடனும் சமாதனாம் குறித்துப் பேசிக்கொண்டுதானே வருகிறோம்? அரசுகள், பிறநாட்டு அரசுகள், சர்வதேச அமைப்புக்கள் என்று தமிழர்கள் பேசாத இடம் என்று ஒன்றிருக்கிறதா? தமிழர்கள் சமாதானக் கதவினை இறுக மூடிவைத்திருக்கிறார்கள் என்று இவருக்கு யார் சொன்னது? இல்லாத காரணத்தைக் கண்டுபிடித்து அரசியல் பந்தி எழுதுகிறார் என்று நினைக்கிறேன்.
-
நம்பிக்கையை இழந்து செல்லும் தமிழ்ச்சமூகம்
இதுதான் உண்மையான காரணமா? கண்ணுக்கு முன்னால் இருக்கும் ஒற்றைக் காரணத்தை விட்டிவிட்டு இல்லாத காரணம் ஒன்றை ஏன் இவர் தேடுகிறார்? அரகலய சிங்களவர்களால் தமது பொருளாதார பிரச்சினைகளுக்காக நடத்தப்பட்ட ஒரு எதிர்ப்பு. தமிழர்கள் சிங்கள அரசிற்கெதிரான போராட்டம் ஒன்றைச் செய்வதைக் கனவிலும் நினைக்க முடியுமா? காணாமலாக்கப்பட்டவர்கள், காணி விடுவிப்பு என்று சில நடத்தும் போராட்டங்களே நசுக்கப்படும் நிலையில், அரகலய போன்றதொரு போராட்டத்தைத் தமிழர்கள் நடத்தினால் அரசு என்ன செய்யும் என்கிற விவஸ்த்தை வேண்டாமா? அதுசரி, அந்த அரகலயவைக் கூட அரசு எப்படி அடித்து துரத்தியது என்பதாவது இந்த பத்தி எழுத்தாளருக்குத் தெரியுமா? ஆக, பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பே நல்லிணக்கத்தையும் ஆரம்பிக்க வேண்டும். சரி, என்ன செய்யலாம் என்பதையாவது இவர் கூறுவாரா? அரசுடன் நல்லிணக்கமாகப் போய்க்கொண்டே அதன் ஆக்கிரமிப்பை எப்படித் தடுப்பது என்பதையாவது இவர் கூறுவாரா? அரசு செய்யும் என்று தமிழர்கள் ஒருபோதுமே நம்பியிருக்கவில்லை. தம்மைத்தாமேதான் பார்த்துக்கொள்கிறார்கள்.
-
யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில்
யாழ்ப்பாண நகரில் இயங்கும் பிரபல பாடசாலைகளுக்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து பெருமளவு பணம் வந்து சேர்கிறது. அரசாங்கப் பாடசாலைகளானாலும்கூட, இவை தமக்கான தேவைகளை புலம்பெயர் தமிழர்கள் (முன்னாள் மாணவ மாணவிகள்) ஊடாகவே பெற்றுவருகிறார்கள். சில பாடசாலைகளில் தேவைக்கு அதிகமான வசதிகள் செய்யப்பட்டும் வருகின்றன. ஆனால், யாழ்ப்பாணக் குடாநாட்டில் பிந்தங்கிய நிலையில் இன்னும் பல பாடசாலைகள் இருக்கின்றன. அண்மையில்க் கூட வடமாராட்சி கிழக்கு, தென்மாராட்சியின் ஒரு சில பகுதிகளில் ஒரு சில பாடசாலைகள் சரியான உதவியின்றி பூட்டப்படும் நிலையில், மாணவர்கள் இருந்து படிப்பதற்கு வசதிகளற்ற நிலையில் இருப்பதைக் காண முடிந்தது. இவ்வாறே, வன்னி, மட்டக்களப்பு என்று கவனிப்பாரின்றிக் கிடக்கும் பல பாடசாலைகள் இருக்கின்றன. செல்வச் செழிப்புடன் நகர்களில் இயங்கும் பாடசாலைகள் இவ்வாறு வசதிகளற்றுக் கிடக்கும் உள்ளூர்ப் பாடசாலைகள் ஒவ்வொன்றினைத் தத்தெடுத்தால் என்ன? அவர்களும் எமது பிள்ளைகளே.
-
வெளிவருகிறது பொன்சேகாவின் போா் குறித்த நுால் – பல உண்மைகள் வெளிவரும் எனத் தகவல்
இவர் மட்டும் புதிதாக என்ன சொல்லிவிடப்போகிறார்? புலிகளைக் கொன்றோம், வென்றோம், ஒரு கையில் ஐ நா மனிதவுரிமை சாசனத்தையும், மறு கையில் துப்பாக்கியையும் ஏந்திப் போரிட்டோம், ஒரு பொதுமகனும் சாகவில்லை, மனிதாபிமானப் போர் நடத்தினோம், போர்க்குற்றங்கள் என்கிற பேச்சிற்கே இடமில்லை...... இன்னொரு போர்க்குற்றவாளி எழுதும் தனது புழுகல் உரை!
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
யாழ்ப்பாணத்தில் வெசாக் கூடுகளைப் பார்க்கப்போன தமிழர்களை முள்ளிவாய்க்காலில் அழுத தமிழர்களுடன் ஒப்பிட்டு விமர்சித்தேன். அப்படி விமர்சிப்பதால் நான் அவர்களைத் துரோகிகள் பட்டியலில் சேர்த்துவிட்டதாக நிழலி நினைக்கிறார். அவ்வளவுதான்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
யாழ்ப்பாணத் தமிழர்களை அரசியலில் இருந்து ஒதுங்கவைத்திருப்பது இன்றைய அரசியல்வாதிகளின் செயற்பாடுகள்தான் என்று நான் எழுதும்போது, நான் அவர்களைத் துரோகிகள் என்று கூறுகிறேன் என்று நீங்கள் கருதினால் நான் என்ன செய்வது? முள்ளிவாய்க்காலில் இனவழிப்பிற்கு நீதிகேட்டு அழும் தமிழர்களையும், நாகவிகாரையில் வேடிக்கை பார்க்கும் தமிழர்களையும் நான் ஒப்பிட்டால், நான் அவர்களைத் துரோகிகளாகப் பார்க்கிறேன் என்று நீங்கள் நினைப்பது உங்களின் விருப்பம், அதிலும் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. தமிழர்களாக ஒன்றிணையுங்கள், சேர்ந்தே போராடலாம் என்று நானழைப்பது உங்களைப்பொறுத்தவரையில் அவர்களை நான் துரோகிகளாக பார்க்கிறேன் என்று பட்டால், மன்னித்துக்கொள்ளுங்கள், அது எனது நோக்கமில்லை. மேய்ப்பாரின்றி அநாதைகளாக நிற்கிறோம். இதுதான் எனது ஆதங்கம். முடிந்தால் புரிந்துகொள்ளுங்கள். எனக்கு நேராகவே எழுதலாம், மூன்றாம் மனிதர் போன்று ஏன் பொதுவாக எழுதுகிறீர்கள்?
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழர்கள் முன்வைத்த நான்கம்சக் கோரிக்கையினை முற்றாக நிராகரித்த அரசாங்கமும், பேச்சுவார்த்தைகளிலிருந்து விலக முடிவெடுத்த தமிழர்களும் இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் தான் முதலாவது கட்டப் பேச்சுக்களுக்கு அனுப்பிய குழுவையே ஹெக்டர் ஜயவர்த்தனவின் தலைமையில் ஜெயார் அனுப்பிவைத்தார். தமிழர் தரப்பில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. டெலோ அமைப்பின் மோகனுக்குப் பதிலாக கொழும்பு நீதிமன்றத்தில் தங்கத்துரையின் விடுதலைக்காக போராடிய சட்டத்தரணி நடேசன் சத்தியேந்திரா கலந்துகொண்டார். சட்டத்தரணி நடேசன் சத்தியேந்திரா ஆவணி 12 ஆம் திகதி இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் ஆரம்பமாகின. தாம் தயாரித்துக் கொண்டுவந்த அறிக்கையினை ஹெக்டர் படித்தார். " அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான எமது புதிய ஆலோசனைகளை உங்களுக்கு முன்வைக்குமுன், இலங்கையில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தமிழ் மக்கள் குழுவை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு அமைப்புக்கள் முன்வைத்த நான்கு அடிப்படை அம்சக் கோரிக்கைகள் குறித்த இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவது எனது கடமை" என்று அவர் ஆரம்பித்தார். இலங்கையரசின் இந்த ஆரம்ப அறிக்கையே தமிழர் தரப்பினை சினங்கொள்ள வைத்தது. பேச்சுக்களில் கலந்துகொள்ளும் தமிழ்ப் பிரதிநிதிகள் இலங்கையின் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று முதலாம் கட்டப் பேச்சுக்களில் தான் முன்வைத்த வாதத்தினை ஹெக்டர் மீளவும் எழுப்பினார். முதலாம் கட்டப் பேச்சுக்களின்போது , தனது தரப்பே இலங்கையிலிருக்கும், தமிழர்கள் உட்பட அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவம் செய்வதாகவும் அவர் வாதிட்டிருந்தார். ஹெக்டரின் இந்த கூற்றிற்கு ஆட்சேபணை தெரிவித்து தமிழர் தரப்பு வெளிநடப்புச் செய்ய எத்தனித்தவேளை, "இங்கு வந்திருக்கும் தமிழர் தரப்பை அரசியல் தீர்விற்காக பேச்சுக்களில் ஈடுபடக்கூடிய தரப்பாக தன்னால் ஏற்றுக்கொள்ளவியலும்" என்று சமாளித்திருந்தார். ஹெக்டரின் இந்த சமாளிப்பு அதிதீவிர சிங்கள மக்களிடையே கடுமையான எதிர்ப்பினைச் சம்பாதித்திருந்தது. தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல்த் தீர்வில் அவர்களால் முன்வைக்கப்பட்ட நான்கு அடிப்படை அம்சக் கோரிக்கைகளும் இடம்பெறவேண்டும் என்கிற கோரிக்கையினை ஹெக்டர் தனது நீண்ட ஆரம்ப உரையினூடாக முற்றாக நிராகரித்தார். முதலாவதாக, இலங்கைத் தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் கூறினார். தமிழர்களைத் தனித்துவமான தேசிய இனம் என்று அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர்கள் தனிநாடொன்றிற்கு உரியவர்கள் என்பதனையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிவிடும் என்று அவர் கூறினார். அரசால் அதிகபட்சமாக செய்யக்கூடியது, இலங்கையில் வாழும் பல்வேறு மக்கள் கூட்டங்களில் தமிழர்கள் தனித்துவமான ஒரு மக்கள் கூட்டம் என்று ஏற்றுக்கொள்வது மட்டும் தான் என்று கூறினார். மேலும், இலங்கையில் வாழும் இனக்குழுமங்களில் ஒன்றான தமிழர்கள் எதிர்நோக்கும் உரிமைப் பிரச்சினைகள் குறித்து தனது குழு பேசுவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், "அரசியற்சட்டத்திற்கு உட்பட்ட வகையில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான ஆணைக்குழுவொன்றினை எம்மால் உருவாக்க இயலும். தேவையென்றால், சிறுபான்மையினருக்குத் தேவையானளவு பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான சபை ஒன்றையும் எம்மால் ஏற்படுத்தித் தர முடியும்" என்றும் கூறினார். இரண்டாவதாக, தமிழரின் தாயகம் என்று ஒரு பிரதேசம் அடையாளப்படுத்தப்படவேண்டும் என்கிற கோரிக்கையினையும் தாம் முற்றாக நிராகரிப்பதாக அவர் கூறினார். தமிழர்களின் தாயகம் என்று ஒரு பகுதி அடையாளப்படுத்தப்பட்டால், இலங்கையில் தமிழர்களுக்கென்று தனியான பிரதேசமொன்றினை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் அரசிற்கு வந்துவிடும் என்றும், இதனை ஒருபோதும் அரசு ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறினார். தமிழர்களின் இந்தக் கோரிக்கை நாட்டின் எல்லாவிடங்களும், எல்லாப்பகுதிகளும் நாட்டில் வாழும் அனைத்து இனமக்களுக்கும் பொதுவானவை எனும் கோட்பாட்டிற்கு முற்றிலும் முரணானது என்றும், தாம் விரும்பிய நாட்டின் எப்பகுதியிலும் குடியேற முடியும் என்கிற தனிமனித உரிமைக்கு அது முரணானது என்றும் அவர் வாதிட்டார். மேலும், தமிழர்களுக்கான தாயகம் என்று ஒரு பகுதி அடையாளப்படுத்தப்பட்டு விட்டால், நாட்டில் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் குடியேற்றத்திட்டங்கள் இதனால் பாதிப்படைந்துவிடும், நிறுத்தப்பட்டு விடும் என்றும் அவர் கூறினார். வேண்டுமானால், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் இனிவரும் காலங்களில் நடக்கப்போகும் குடியேற்றங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை தரமுடியும், ஆனால் ஏனைய இனங்களும் இப்பகுதிகளில் குடியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். மூன்றாவது கோரிக்கையான தமிழர்களின் சுய நிர்ணய உரிமையினை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையினை அவர் அடியோடு நிராகரித்தார். காலணித்துவ ஆட்சியின் கீழ் வாழும் மக்கள் கூட்டத்திற்கு மட்டுமே இந்த சுய நிர்ணய உரிமை எனும் கோட்பாடு பாவிக்கப்படும் என்று அவர் வாதிட்டார். சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடுகளில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு சுய நிர்ணய உரிமையினை அனுபவிக்கும் வாய்ப்புக்கள் கிடையாது என்று அவர் கூறினார். இறுதியாக, தமிழ் மக்களின் பிரஜாவுரிமை குறித்து கோரிக்கை முன்வைக்க தமிழர் தரப்பினருக்கு இருக்கும் சட்டபூர்வத் தன்மை குறித்து அவர் கேள்வியெழுப்பினார். சர்வகட்சி மாநாட்டில் அரசாங்கம் நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமையினைக் கொடுக்க ஆவன செய்யும் என்று கூறியிருக்கிறதே? இந்திய வம்சாவளி மக்களின் உண்மையான பிரதிநிதிகளுடன் இதுகுறித்து அரசு பேசிக்கொள்ளும், நீங்கள் அதுகுறித்துக் கேள்விகேட்கமுடியாது என்று அவர் கூறினார். தனது ஆரம்பப் பேச்சினை பின்வரும் அதிரடி அறிவிப்புடன் ஹெக்டர் ஜெயவர்த்தன நிறைவுச் செய்தார். "திம்புப் பேச்சுக்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒப்பந்தம் பின்வரும் நிலைமை ஏற்பட்டால் மட்டுமே நிறைவேற்றப்படும், 1. எல்லா ஆயுத அமைப்புக்களும் தமது அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் கைவிடவேண்டும் 2. இலங்கையில் இயங்கும் அனைத்து ஆயுத அமைப்புக்களும் தமது ஆயுதங்களையும், தளபாடங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். 3. இலங்கையிலும், அதற்கு வெளியிலும் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து பயிற்சி முகாம்களையும் உடனடியாக மூடிவிட வேண்டும். 4. சாதகமான சூழ்நிலை இருந்த காலத்தில் இன்று அகதிகளாக்கப்பட்டிருப்போர் எந்தெந்த இடங்களில் வாழ்ந்தார்களோ, அந்த இடங்களுக்கு அவர்கள் இடைஞ்சலின்றி திரும்ப ஆவன செய்யப்பட வேண்டும். 5. அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளவாறு, ஒவ்வொரு இன மக்களும் தமது மதத்தைச் சுதந்திரமாக வழிபட அனுமதியளிக்கப்படவேண்டும் என்பதுடன், வன்முறையில் பாதிக்கப்பட்ட மத வணக்கத் தலங்கள் திருத்தியமைக்கப்படும். 6. அரசாங்கம் முன்வைக்கும் முன்நிபந்தனைகளை ஆயுத அமைப்புக்கள் ஏற்றுகொண்டாலன்றி அவர்களின் குற்றச்செயல்களுக்கான பொதுமன்னிப்பு என்பது தரப்பட மாட்டாது. இவற்றின் அடிப்படையில் மட்டுமே எந்த இணக்கப்பாடும் அமையவேண்டும் என்பதுடன், நாட்டில் அமைதியும் ஏற்படுத்தப்பட முடியும்" என்று பேசி முடித்தார். லோரன்ஸ் திலகர் ஹெக்டர் ஜெயவர்த்தன முன்வைத்த நிபந்தனைகளை நேரடித் தொலைபேசியூடாக கோடாம்பக்கத்தில் இரகசிய இடமொன்றில் தங்கியிருந்த பாலசிங்கத்திடம் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினர் லோரன்ஸ் திலகர் அறியத் தந்தார். இதனை சேலம் பயிற்சி முகாமில் இருந்த பிரபாகரனிடமும், ஏனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களிடமும் பாலசிங்கம் தெரியப்படுத்தினார். இதனையடுத்து பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகுவது என்று போராளிகளின் தலைவர்களால் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. இதனைச் செய்வதற்கு சரியான தருணத்தை அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.- யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
இது நேற்று தையிட்டியில் தமிழர்களின் காணியில் சட்டவிரோதமான முறையில் இராணுவமும், பிக்கு ஒருவனும் அமைத்துவரும் விகாரையினை எதிர்த்துப் போராடும் ஒரு சில தமிழ் மக்கள். ஒரு அரசியற் கட்சியையும், சில பத்து மக்களையும் தவிர இது ஒரு பிரச்சினையாக யாழ்ப்பாணத் தமிழர்களுக்குத் தெரியவில்லை. இதுகுறித்துக் கேட்டால், "தீவிர கண்ணாடி போட்டுப் பார்த்தால், இப்போராட்டங்களுக்கு ஆள்த்திரட்டவும் சிரமப்பட வேண்டி வரும்" என்று எச்சரிக்கைகள். இந்த மக்களை நீங்கள் திரட்டத் தேவையில்லை. தாமாக தமது உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் இன்னமும் எம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்களுக்கு இது ஆச்சரியமாகத் தெரியலாம், ஆனால் அதுதான் உண்மை. நாக விகாரையில் வேடிக்கை பார்க்கக் கூடிய கூட்டமெங்கே, இந்த மக்கள் எங்கே?- யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
நாவற்குழியில், திருகோணமலையில், தையிட்டியில் இதே இராணுவம் தான் விகாரையினைக் கட்டியது. நாவற்குழி விகாரைக்கு முதன்முதலான சமய அனுட்டானங்களை ஆரம்பித்து வைத்தவனே சவேந்திர சில்வாதான். இன்று, வடக்குக் கிழக்கில் ஆக்கிரமித்து நிற்கும் எல்லா இராணுவ, கடற்படை, விமானப்படை, பொலீஸ் முகாம்களுக்குள்ளும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அடாத்தாக விகாரைகளைக் கட்டிவருவதும் அதே இராணுவம்தான். மாங்குளத்தில் கட்டப்பட்ட விகாரையினைச் சுற்றிச் சிங்களக் கிராமமும், நாவற்குழியில் சிங்களக் கிராமமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. சாதாரண சிங்கள வியாபாரிகளும், மக்களும் இல்லாததால்த்தான் இராணுவம் பண்டிகை நடத்தியது, மென்பானம் கொடுத்தது என்று எழுதுகிறீர்களே? ஆக்கிரமிப்பை நடத்துவது இராணுவம். அதன்பின்னரே சாதாரண மக்களும், வியாபாரிகளும் கொண்டுவந்து இறக்கப்படுவார்கள். வடக்குக் கிழக்கு பூகோள இணைப்பை உடைத்தெறிய மணலாற்றில் 80 களில் உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களுக்குப் பாதுகாப்பாக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. பின்னர், அந்த இராணுவ முகாம்களைச் சுற்றி மென்மேலும் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். முகாம்களுக்கு சிங்கள மக்கள் பாதுகாப்பு, சிங்கள மக்களுக்கு முகாம்கள் பாதுகாப்பு என்று அன்று அரசு திட்டமிட்டுக் குடியேற்றம் செய்தது, இன்றும் அப்படித்தான். உங்களுக்குப் புரியாது. எழுதினால், என்னை மனநலம் குறைவானவன் என்று எழுதுகிறீர்கள். ஏதோ செய்துவிட்டுப் போங்கள்.- யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
இதுதான் அடிப்படை. இது பலருக்குப் புரிவதில்லை. அறைக்குள் இருக்கும் யானையினைப் பார்க்க பலருக்கு முடிவதில்லை. கேட்டால் தீவிரக் கண்ணாடி போட்டுப் பார்க்கிறோம் என்று எங்களைக் கூறுகிறார்கள். சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுப்பெற்று, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதிகிடைத்து, தமிழர்கள் கெளரவமாகவும், சுயமரியாதையாகவும், சுதந்திரமாகவும் வாழும் நிலை வரட்டும். பின்னர் இரு சகோதர இனங்களாக, இரு சமத்துவ இனங்களாக அவன் வெசாக்கை எமது தாயகத்திலும், நாம் எமது பொங்கலை அவனது தாயகத்திலும் கொண்டாடலாம்.- யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
கொழும்பில் வேடிக்கையாக வெசாக் பார்க்கப்போவதற்கும், யாழ்ப்பாணத்தில் வெசாக் பார்க்கப்போவதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. வடக்குக் கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் விகாரைகள் என்னைப்பொறுத்தவரை ஆக்கிரமிப்பின் அடையாளங்கள் தான். உடனே இணக்க அரசியல் எழுதுவோர் ஓடிவாருங்கள், "அதெப்படிச் சொல்வீர்கள், கொழும்பில் கோயில் இல்லையா? ஆடித்தேர் இழுக்கவில்லையா?" என்று கேட்டுக்கொண்டே. எல்லாம் இருக்கிறது, ஆனால், தமிழினம் சிங்கள இனத்தை ஆக்கிரமித்து கொழும்பில் நிற்கவில்லை. ஆனால், யாழ்ப்பாணத்திலோ, வடக்குக் கிழக்கில் எந்தவிடத்திலுமோ நடப்பது சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புத்தான். இந்த ஆக்கிரமிப்பினை எம்மால் வேடிக்கை வினோதமாகத்தான் பார்க்க முடிகின்றதென்றால் பிழை ஆக்கிரமிப்பாளனில் இல்லை. சுமந்திரனுக்கோ அங்கஜனுக்கோ யாழ்ப்பாணத்தில் விழுந்த வாக்குகளுக்கும், 2010 இல் சரத் பொன்சேகாவிற்கு விழுந்த வாக்குகளுக்கும் இடையே எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. இவர்களுக்கு ஏன் தாம் வாக்களிக்கவேண்டும் என்கிற கேள்வியோ, வாக்களிப்பதால் உருவாகப்போகும் விளைவுகள் குறித்தோ யாழ்ப்பாணச் சமூகம் அக்கறைப்படுவதாகவும் நான் நினைக்கவில்லை. தம்மை இன்றைவரை ஆக்கிரமித்து நிற்கும் ஒரு சமூகத்தின் எந்த வாக்காளருக்கு நாம் வாக்களிக்கலாம், எவருக்கு வாக்களிக்காது விட்டால் நாம் விரும்பும் ஒரு சிங்கள வேட்பாளருக்கான ஆதரவு குறைந்துவிடும் என்று கவலைப்படும் நிலைக்குத் தமிழ்ச் சமூகம் வந்துவிட்டிருப்பதும் சிங்களவர்களின் பிழையில்லை. தையிட்டியில் (இன்றும் நடக்கிறது) அடாத்தாக தமிழர் நிலங்களில் விகாரை கட்டும்போதும், குருந்தூர் மலையில் சிவலிங்கத்தை உடைத்தெறிந்து அப்பகுதியை பெளத்த பூமியென்று நிறுவும்போதும், நாவற்குழியில் இனக்கொலையாளியொருவனால் விகாரை திறந்துவைக்கப்பட்டபோதும், திருகோணமலையில் தமிழர் தாயகப்பகுதியில் புதிதாக விகாரை கட்டி எழுப்பும்போதும் வெறுமனே ஓரிரு மக்களும், செயற்பாட்டாளர்களும் மட்டுமே அங்கு நின்று ஆர்ப்பரிப்பதும் யாருடைய பிழை? ஏன், அந்தப் பகுதிகளில் வாழும் மக்களில் ஓரிருவரைத் தவிர, மொத்தத் தமிழர்களுக்கும் இது பிரச்சினையாகத் தெரியாது போனதெப்படி? இதை எழுதவேண்டியிருப்பதே யாழ்ப்பாணத்து தமிழர்களின் இன்றைய அரசியல்க் கையறு நிலையினைச் சுட்டிக்காட்டத்தான். தமிழர்களின் இருப்பைத் தக்கவைப்பதற்கான தேவை யாழ்த்தமிழர்களுக்கு இல்லாமற்போனதெப்படி? காணி விடுவிப்புப் போராட்டம், அரசியற்கைதிகளின் விடுதலைப் போராட்டம் என்பவற்றிற்கு வந்து "குவியும்" ஆயிரமாயிரம் தமிழர்கள் இனிமேல் வராது போய்விடுவார்கள் என்கிற நியாயமான கவலை சிலருக்கு !!! நான்கைந்து பாதிக்கப்பட்ட மக்களும், இன்றுவரை தமது காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெற்றோரையும் தவிர எத்தனை "ஆயிரம்" தமிழ் மக்கள் இப்போராட்டங்களில் வந்து குவிகிறார்கள்? இந்தத் தேவையற்ற எச்சரிக்கை ஏன்? நீங்கள் போராடுவதற்கும் எமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அம்மக்களை நிர்க்கதியாக விட்டு விட்டு சமூகத்தின் பெரும்பான்மையான மீதிப்பேர் வேடிக்கை நிகழ்வுகள் உட்பட தமது நாளாந்த வாழ்க்கையினைப் பார்க்கச் செல்லவில்லையா? இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி எச்சரிக்கை வேறு விடுக்கிறீர்கள்? அரசியல்மயப்படுத்தப்படாத, அல்லது அரசியலில் தேசிய நீக்கம் செய்யப்பட்டுவரும் யாழ்ப்பாணச் சமூகத்திடமிருந்து இதனைத்தவிர வேறு எதனையும் எதிர்பார்க்கமுடியாது. சில தினங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் வந்து இணைந்துகொண்ட தமிழ் மக்களுக்கும் நேற்று நாகவிகாரையைச் சுற்றி ஓடியோடி "வேடிக்கை" பார்த்த தமிழர்களுக்கும் இடையே வித்தியாசம் நிச்சயம் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ளுங்கள். "தமிழ்த்தேசியம் என்று ஊரில் வாய்திறந்தால் அடிதான் விழும்" இந்த நிலை வரக் காரணம் என்ன? ஐம்பதினாயிரம் போராளிகளும், ஒன்றரை இலட்சம் மக்களும் ஏன் மடிந்தார்கள்? இன்று யாழ்ப்பாணத்தான் கூறுவது போல எமக்கேன் தேவையற்ற பிரச்சினை, அது பிரச்சினை உடையவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று அவர்கள் அனைவரும் இருந்திருக்கலாமே? அவர்கள் தம்மை தேசியத்திற்குள் ஈடுபடுத்திக்கொள்வதற்கான தேவை ஒன்று இருந்ததுதானே? அது இன்றும் இருக்கிறதுதானே? பிறகேன் தேசியம் கதைத்தால் அடிவிழும் என்கிற பயம்? அப்படி நிலை ஏற்பட யார் காரணம்? புலிநீக்கம் செய்கிறோம், தேசிய நீக்கம் செய்கிறோம், இணக்க அரசியல் செய்கிறோம், அடையாளம் துறக்கிறோம், சுயவிமர்சனம் செய்கிறோம், தேசிய நீரோட்டத்தில் இணைகிறோம் என்று பேசிப்பேசியே ஒரு சமூகத்தை அரசியல் கோமா நிலைக்குக் கூட்டிச் சென்றது யார்? இதைக்கேட்டால் "தீவிர கண்ணாடி போட்டுப் பார்த்தால் அடிதான் விழும் " என்கிறீர்கள். முதலில், யாழ்ச் சமூகம் உட்பட, மொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் அரசியல் மயப்படுத்தி, ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சிகளை முன்னெடுங்கள். உங்களின் நடுநிலை, இணக்க, தேசிய நீக்க அரசியலால் பிரிந்துபோய், நமக்கேன் தேவையில்லாத வேலை என்று இருக்கும் சமூகத்தை தூக்கியெழுப்புங்கள். ஏனென்றால், சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ்மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளைக் காட்டிலும் பலமடங்கு பிரச்சினைகள் அவர்களின் முன்னால் இன்றைக்கு இருக்கின்றன. தனது ஆக்கிரமிப்பினை சிங்களம் கட்டுப்பாடின்றி, தட்டிக் கேட்போர் இன்றி மிகச் சுதந்திரமாக முன்னெடுத்து வருகிறது. கண்ணாடி ஏதுமின்றி குருடர்களாக, அரசியலில் அநாதைகளாக, திக்கற்றவர்களாக, செல்லும் வழிதெரியாது நடுவீதியில் நிற்பவர்களாக தமிழர்களை வெகுவிரைவில் நீங்கள் கொண்டுவந்து விட்டுவிடுவீர்கள். இப்படிப் போனதன் விளைவே முள்ளிவாய்க்காலுக்கும், கார்த்திகை 27 இற்கும் செல்லும் மக்களுக்கும், நாகவிகாரையில் வெசாக் பார்த்து இன்புற்று, தம்மைக் கொன்றொழித்த மிருகங்களுடன் "சகஜமாகக் கூடிக் குலவும்" இன்னொரு மக்கள் கூட்டத்திற்கும் இடையே நிரந்தரமான இடைவெளி ஒன்று உருவாவதற்குக் காரணம் .- யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகை குவிந்த தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்தில், நக விகாரையைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் இராணுவம் வெசாக் பண்டிகையினை வெகு கோலகலமாகக் கொண்டாடி வருகிறது. முழுக்க முழுக்க சிங்களத்தில் பதாதைகள், சிங்கள பெளத்த பாடல்கள், வீதி ஒழுங்குகளில் இராணுவம், வீதியோரக் கடைகளில் சிங்களவர்கள் என்று முற்றாக சிங்கள பூமியாக மாறியிருந்த தமிழர்களின் கலாசாரத் தலைநகரை முண்டியடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்தது தமிழினம். ஐந்து நாட்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் பலியிடப்பட்ட ஒன்றரை இலட்சம் மக்களின் நினைவினை கண்ணீர் மல்க அனுசரித்த தமிழினத்தின் இன்னொரு பகுதி, அவ்வாறு அழித்தவன் நடத்தும், அவனது சொந்த இன, மத நிகழ்வை கண்டுகளிக்க அவதிப்பட்டு ஓடுகிறது. இலங்கையர்களாக இணைவோம், அடையாளம் துறப்போம், தேசியம் பேசோம் என்று கூவுபவர்கள் வரிசையில் வாருங்கள், வந்து வையுங்கள்.- பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நோர்வே தமிழீழத்தை அங்கீகரிக்குமா?
இது நோர்வே அரச பிரமுகர் ஒருவரின் வெளிப்படையான கருத்து. பலஸ்த்தீன, இஸ்ரேல் பிணக்கிற்கு இரு நாடுகள் என்கிற வழியில், பரஸ்பரம் ஒற்றுமையாக வாழ்கின்ற இரு சுதந்திர நாடுகள் எனும் தீர்வை முன்வைப்பதாகவும், சுதந்திரப் பலஸ்த்தீனத்தை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் கூறுகிறார். எமக்கான நீதியினை, ஒரு காலத்தில் எமது பிரச்சினையில் சமாதானத் தரகர்களாக செயற்பட்டவர்கள் என்கிற அடிப்படையில் நாம் கேள்வி கேட்கலாம். பதில் வரப்போவதில்லை, ஆனால் படிப்பவர்களுக்கு இதுகுறித்த தெளிவாவது கிடைக்கும்.- பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நோர்வே தமிழீழத்தை அங்கீகரிக்குமா?
- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நவீன பெளத்த சிங்கள இனவாதியாக தன்னை உருமாற்றிக்கொண்ட லலித்தும், இலங்கை முன்வைக்கும் தீர்வினை ஏற்றுக்கொள்ளும்படி தமிழ்த் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுத்த இந்தியாவும் ஜயவர்த்தன அரசியல் சூட்சுமம் மிக்க தந்திரசாலி . தமிழர்கள் தனது செயற்பாடுகளில் நம்பிக்கைகொள்ளும் வகையில் அவர்களுக்கு ஒரு முகத்தையும், தெற்கில் இனவாதமேற்றப்பட்ட சிங்களவர்களைத் திருப்திப்படுத்த தனது இன்னொரு முகத்தையும் காட்டி வருபவர். இந்தியாவையும், சர்வதேசத்தையும், உதவி வழங்கும் நாடுகளையும் மகிழ்விக்க தமிழர்களுடன் பேசுவதாகக் காட்டிக்கொள்ளும் அதேவேளை, தனது அமைச்சரவையிலேயே சில அதிதீவிர சிங்கள இனவாதிகளைத் தூண்டி, சிங்கள தீவிரவாதக் கருத்துக்களை உமிழப்பண்ணுவதன் மூலம் சிங்களத் தீவிரவாதிகளின் ஆதரவினையும் தன்பக்கம் வைத்துக்கொண்டிருப்பவர். இவை எல்லாவற்றையும் சூட்சுமமாகச் செய்துவிட்டு, தன்னை ஒரு நேர்மையான, நீதியான அரசியல்த் தலைவராகக் காட்டிக்கொள்வதும், தனது அமைச்சரவையிலிருக்கும் சில இனவாதக் கழுகுகளின் கட்டுப்பாட்டில் தான் சூழ்நிலைக் கைதியாக சிறைவைக்கப்பட்டிருப்பதாகக் காட்டுவதும் அவருக்குக் கைவந்த கலை. இதனை மிக இலகுவாக, ஜெயாருடனான தனது முதலாவது சந்திப்பிலேயே இந்தியப் பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் அடையாளம் கண்டுகொண்டார். 1984 ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சந்திப்பில், தனது அமைச்சரவையில் இருக்கும் சில இனவாதக் கழுகுகளின் அழுத்தம் இல்லாதுபோகுமிடத்து தமிழர்களின் பிரச்சினையினை தன்னால் இலகுவாகத் தீர்த்துவைக்கமுடியும் என்று ஜெயார் கூறியிருந்தார். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் கல்கி இதழில் இச்சந்திப்புக் குறித்து எழுதும்போது ஜெயாரை சிறந்த நடிகர் என்று அனித்தா குறிப்பிட்டிருந்தார். நான் முன்னர் குறிப்பிட்டதுபோல, பிரபாகரனும் ஜெயார் குறித்து மிகவும் தெளிவான பார்வையினைக் கொண்டிருந்தார். இலங்கை அரசாங்கத்தின் மிகவும் பலம்வாய்ந்த ஒரே நபர் ஜெயார் என்றும், இனவாதக் கழுகுகள் என்று ஜெயார் குறிப்பிடும் தீவிரவாத அமைச்சர்களை ஜெயாரே உருவாக்கினார் என்பதையும் பிரபாகரன் அறிந்தே வைத்திருந்தார். என்னைப்பொறுத்தவரை பிரபாகரனினது ஜெயார் குறித்த அனுமானம் சரியானதுதான். ஜெயவர்த்தன, அரசியல் சதுரங்கத்தில் பல சாதுரியமான திருப்பங்களை எடுத்திருந்தாலும்கூட இறுதியில் அவர் தோற்கவேண்டியதாயிற்று. தான் அரசாண்ட இறையாண்மையுள்ள நாட்டிற்குள் பிரபாகரன் தனக்கான நிழல் அரசொன்றினை ஆள்வதை தான் இறக்குமுன்னரே ஜெயாரால் தரிசிக்க வேண்டியதாயிற்று. 1977 ஆம் ஆண்டில் சிறில் மத்தியூவை சிங்கள இனவாதிகளின் வீரனாக ஜெயார் முன்னிறுத்தினார். தமிழ் மக்களுக்கெதிரான, குறிப்பாக அமிர்தலிங்கத்திற்கும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் எதிரான கடும்போக்கு நிலைப்பாட்டினை எடுக்கும் சிங்கள இனவாதியொருவர் ஜெயாருக்குத் தேவைப்பட்டார். தமிழர்கள் மீதும், அமிர்தலிங்கம் மீது பாராளுமன்றத்தின் சிறில் மத்தியூ முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு அமிர் பதிலளித்தவேளை, சிறில் மத்தியூ நடந்துகொண்டவிதம் குறித்து முன்னைய அத்தியாயங்களில் நான் விளக்கியிருந்தேன். அமிர் ஒருமுறை என்னுடன் பேசும்போது, சிறில் மத்தியூவை தான் அமைச்சரவையில் வைத்திருப்பதன் ஒற்றை நோக்கம் சிங்கள இனவாதிகளைத் தன்பக்கம் வைத்திருப்பதுதான் என்று ஜெயார் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்திருந்தார். ஜெயாருடன் பேசும்போது, "எம்மைத் தொடர்ச்சியாக உங்களின் அமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் தாக்கிப் பேசும்போது உங்களின் அரசிற்கு நாம் எப்படி ஆதரவு தருவது?" என்று அமிர் வினவியபோது, "நீங்கள் அவரைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. எனது அரசாங்கம் உங்களுடன் சேர்ந்து செயற்பட்டு வருவதால் சிங்கள தீவிரவாத மக்களிடையே எனது அரசிற்கெதிரான உணர்வு உருவாகிவருகிறது. அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே சிறில் மத்தியூவை அப்படிப் பேசச்சொல்லியிருக்கிறேன்" என்று ஜெயார் பதிலளித்திருக்கிறார். சிறில் மத்தியூவின் சமூக அந்தஸ்த்தும், அவரது குலமும் தனக்கு எப்போதும் ஒரு சவாலாக வரப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்துகொண்டபின்னரே அவரை சிங்கள இனவாதிகளின் வீரனாக உருவகப்படுத்தினார் ஜெயார். மத்தியூவை ஒரு கருவியாக மட்டுமே பாவித்துவந்த ஜெயார், இனிமேல் அவரால் அரசியலில் தனக்கு இலாபம் ஏதும் வரப்போவதில்லை என்கிற நிலை உருவாகியபோது மிக இலகுவாக அவரைத் தூக்கியெறிந்தார். 1985 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் சிறில் மத்தியூ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்டபோது எவருமே ஜெயாரைக் கேள்விகேட்கவில்லை. இது, ஜெயாரினால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி எவ்வளவு தூரத்திற்கு அவரில் தங்கியிருந்தது என்பதனையும், தனக்கென்று தனியான அரசியல்ப் பின்புலம் அதற்குக் கிடையாதென்பதையும் தெளிவாகச் சுட்டிக் காட்டிற்று. மத்தியூவின் வெளியேற்றத்திற்குப் பின்னர், அவரது தொழிலைச் செய்ய ஜெயாருக்கு இன்னொருவர் தேவைப்பட்டது. அதற்குப் பொறுத்தமானவராக லலித்தை அவர் தேர்ந்தெடுத்தார். லலித்துடனான எனது அனுபவங்களின்பொழுது, அவர் எவ்வளவு தூரத்திற்கு ஜெயவர்த்தனவில் தங்கியிருந்தார் என்பதையும், ஜெயாரின் ஊதுகுழலாகவே அவர் செயற்பட்டு வந்தார் என்பதையும் மிகத் தெளிவாக உணர்ந்துகொண்டேன். இதனை உறுதிப்படுத்த என்னால் பல சந்தர்ப்பங்களை உதாரணமாகக் காட்டவியலும். 1984 ஆம் ஆண்டில் நடைபெற்று வந்த சர்வகட்சி மாநாட்டின் ஒருநாள் தனது உரையினை முடித்துக்கொண்டு என்னுடன் பேசிய லலித், மாநாட்டு உறுப்பினர்கள் ஜெயாரினால் முன்வைக்கப்பட்ட "ஆங்கிலத்தையும் உத்தியோகபூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளுதல்" எனும் ஆலோசனையினை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறினார். ஆகவே, டெயிலி நியூஸிற்காக நான் வழங்கும் செய்தியறிக்கையில் இதற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு அவர் என்னைப் பணித்தார். ஆனால், 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி ஆங்கில மொழி இணைப்பு மொழியாக மட்டுமே பாவிக்கப்பட முடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய மாநாட்டு நிகழ்வுகள் முடிவடைந்து நான் பத்திரிகைக் காரியாலயத்தை வந்தடைந்தபோது, எனது ஆசிரியர் மணிக் டி சில்வா, லலித் என்னிடம் மிகவும் முக்கியமான செய்தியொன்றினை வழங்கியிருப்பதாகத் தொலைபேசியில் கூறினார் என்று தெரிவித்தார். நான் மணிக்கிடம் லலித் கூறிய விடயம் பற்றித் தெரிவித்ததோடு, பத்திரிகைக்கும் அதனைச் செய்தியாகத் தயாரித்தேன். மறுநாள் அதுவே நான் எழுதியவகையில் தலைப்புச் செய்தியாக வெளிவந்திருந்தது. அன்று மாலை நான் லலித்தைச் சந்தித்தபோது, தனது செய்தியை நான் பத்திரிக்கையில் எழுதினேனா என்று கேட்கும்படி ஜெயார் தன்னைப் பணித்திருந்ததாகக் கூறினார். அதற்கு தான் இவ்வாறு ஜெயாருக்குப் பதிலளித்ததாக லலித் என்னிடம் தெரிவித்தார், "உங்களுக்கு அது மிகவும் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும், ஆகவேதான் அதனைச் செய்தியாக்கும்படி கொடுத்தேன்". தனது செய்திகுறித்து ஜெயார் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும் லலித் என்னிடம் கூறினார். செளமியமூர்த்தி தொண்டைமான் லலித் இலட்சிய உறுதி கொண்டவர். ஜெயவர்த்தனவிற்குப் பின்னர் தானே நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று அவர் விரும்பினார். அவரது பிரதான எதிரியான காமிணி திசாநாயக்கவும் ஜெயாருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது லலித்திற்குத் தெரியும். ஆகவே, காமிணியை ஓரங்கட்டி, முன்னிற்கு வருவதற்கு லலித்திற்கு இருந்த ஒரே வழி ஜெயார் விரும்பியவாறு சிங்களக் கடும்போக்குவாதியாக தன்னை வரிந்துகொள்வதுதான். ஜெயாரின் தந்திரங்கள் குறித்து தொண்டைமான் பலதடவைகள் என்னிடம் கூறியிருக்கிறார். மத்தியூ கட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டபோது இதேவகையான கருத்தையே தொண்டைமான் தயான் ஜயத்திலக்கவிடமும், எஸ்.பாலகிருஷ்ணனிடம் கூறியிருக்கிறார். அன்றைய செவ்வி லங்கா கார்டியன் பத்திரிக்கையில் 1985 ஆம் ஆண்டு கார்த்திகை 15 ஆம் திகதி மீள்பிரசுரமாகியிருந்தது. கேள்வி : சிறில் மத்தியூவை அமைச்சரவையிலிருந்து நீக்கியதன் பின்னர், இனப்பிரச்சினைக்கு தீர்வொன்று எட்டப்படும் சாத்தியம் உருவாகியுள்ளதாகக் கருதப்பட்டது. ஆனால், அது இதுவரையில் நடைபெறவில்ல. சிறில் மத்தியூவை நீக்கிவிட்ட பின்னரும், தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கத் தடையாக இன்னும் சில கடும்போக்கு சிங்கள இனவாதிகள் அமைச்சரவையில் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? தொண்டைமான் : முதலாவதாக, சிறில் மத்தியூவை அமைச்சரவையிலிருந்து நீக்குவது தொடர்பாக அப்போது எடுக்கப்பட்ட முடிவு சரியானதென்று நான் நினைக்கவில்லை. அவரது பலம் மிக்க தொழிற்சங்கமான ஜாதிக்க சேவக சங்கமயவின் நடவடிக்கைகளால்த் தான் அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டர் என்றால், அது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால், இப்போது, எல்லாமே முடிந்துவிட்டபின்னர் அவரைப் பதவிநீக்கம் செய்வதன் மூலம் அடைந்துகொண்டது என்ன? தற்போது ஐக்கிய தேசியக் கட்சியினர் மட்டத்தில் பொதுவான அபிப்பிராயம் ஒன்று உருவாகிவருகிறது. அக்கட்சியின் அங்கத்தவர்கள் தமது சிங்களத் தேசியக் குரல் ஒன்று அடைக்கப்பட்டு விட்டதாக உணர்கிறார்கள், தமது கட்சியின் சிங்கள பெளத்த நிலைப்பாடு அற்றுப்போய்விட்டதாக உணர்கிறார்கள். ஆகவே, தமது கட்சி இன்னமும் சிங்கள பெளத்த தீவிரவாத நிலைப்பாட்டிலேயே இருக்கிறது என்று மக்களுக்குக் காட்டுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கப்போகிறார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில் இன்னும் அதிகமான பாதிப்பினை நாடு எதிர்கொள்ளப்போகிறது. ஒருபக்கம், சிறில் மத்தியூவை நீக்கியதன் மூலம் தமிழ் மக்களைத் தான் திருப்திப்படுத்திவிட்டதாக ஜனாதிபதி நினைக்கலாம். சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் தமிழ்மக்களின் அதிருப்திக்குக் காரணம் சிறில் மத்தியூதான் என்று நினைக்கலாம். ஆனால், என்னைப்பொறுத்தவரையில் சிறில் மத்தியூ அமைச்சரவையில் இருந்தாலென்ன இல்லாதுபோனாலென்ன, தமிழர்கள் அவர்குறித்துக் கவலைப்படப்போவதில்லை. அவர்களுக்குத் தேவையானதெல்லாம் தம்மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதிதான். ஆனால், சிறில் மத்தியுவை அமைச்சரவையிலிருந்து நீக்கியதனூடாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்கள பெளத்த நிலைப்பாடு உருக்குலைந்து போய்விட்டது என்று கவலைப்பட்டோருக்கு லலித் அதுலத் முதலியே புதிய சிங்கள பெளத்த வீரனாக தன்னை முன்னிலைப்படுத்தினார். இந்தியாவால் பரிந்துரை செய்யப்பட்ட "கடப்பாடற்ற" ஆலோசனைகள அனைத்தையுமே முற்றாக நிராகரித்ததன் மூலம் தனது புதிய அவதாரத்தை அவர் செயலில் காட்டினார். லலித் அதுலத் முதலியைக் கடும்போக்காளராகக் காட்டிய அதேநேரம், தன்னை நேர்மையான, நீதியான அரசியல்வாதியாகக் காட்டிக்கொண்டார் ஜெயவர்த்தன. இப்படிச் செய்வதன் மூலம் பண்டாரியை மிக இலகுவாக ஜெயாரினால் ஏமாற்ற முடிந்திருந்தது. கொழும்பிலிருந்து தில்லி திரும்பும் வழியில் பண்டாரி சென்னையில் தரித்துச் சென்றார். அங்கு தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களையும், முதலமைச்சர் ராமச்சந்திரனையும் அவர் ஆவணி 10 ஆம் திகதி சந்தித்தார். தனித்தனியாக இடம்பெற்ற இச்சந்திப்புக்களின்போது பண்டாரியுடன் டிக்ஷிட்டும் உடனிருந்தார். ராமச்சந்திரனுடன் அவருடைய இல்லத்தில் பேசிய பண்டாரி, முதலாம் கட்டப் பேச்சுக்களில் இலங்கையரசால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை மேம்படுத்த ஜெயவர்த்தன உறுதி தந்திருப்பதாக எம்.ஜி.ஆரிடம் தெரிவித்ததுடன், ஜெயாரினால் முன்வைக்கப்படவிருக்கும் புதிய ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளும்படி போராளி அமைப்புக்களுக்கு எம்.ஜி.ஆர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ராஜ் பவன் சென்னை 2021 சென்னையில் ஆளுநரின் வாசஸ்த்தலமான ராஜ் பவனில் தமிழ்ப் போராளிகளை பண்டாரி சந்தித்தார். ஏனைய ஈழத்தேசிய விடுதலை அமைப்பின் தலைவர்களுடன் பிரபாகரனும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். பாலசிங்கமும் பிரபாகரனுடன் சென்றிருந்தார். கொழும்பில் ஜெயவர்த்தனவுடனும் ஏனைய தலைவர்களுடனும் தான் நடத்திய சந்திப்புக்கள் குறித்து போராளிகளின் தலைவர்களுக்கு பண்டாரி அறியத் தந்தார். இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கு வரும்போது, இலங்கையரசின் பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவர் ஹெக்டர் ஜெயவர்த்தன மேம்படுத்தப்பட்ட ஆலோசனைகளுடன் வருவார் என்றும், ஆகவே அதனை உடனேயே நிராகரிக்காது, யதார்த்தத்தினை உள்வாங்கிப் பரிசீலிக்க வேண்டும் என்றும் போராளித் தலைவர்களிடம் அவர் வேண்டுகோளினை முன்வைத்தார். இலங்கையரசாங்கம் முன்வைக்கப்போகும் தீர்வினை தற்போதைக்கு ஏற்றுக்கொண்டு, காலப்போக்கில் அதனை மேம்படுத்துவது குறித்து போராளித்தலைவர்கள் சிந்திக்கவேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கினார். இச்சந்திப்பிற்கு முன்னதாக ஈழத்தேசிய விடுதலை முன்னணியினரின் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைவாக பிரபாகரனே முதலில் பேசினார். வழக்கம் போல அவர் தமிழில் பேச, பாலசிங்கம் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இலங்கையரசு தற்போது தரவிருப்பதாக பண்டாரி கூறும் தீர்வினை ஏற்றுக்கொண்டு, காலப்போக்கில் அதனை மேம்படுத்தும் திட்டத்தினை ஏற்கமுடியாது என்று பிரபாகரன் திட்டவட்டமாகக் கூறினார். சரித்திரத்தில் இவ்வாறான நீண்டகால மேம்படுத்தல்கள் தோல்வியிலேயே முடிவடைந்திருப்பதை அவர் எடுத்துக் காட்டினார். ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட காந்தியவாதியான எஸ்.ஜெ.வி.செல்வநாயகம் அவர்கள் 1956 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண்டுவரை இவ்வகையான நீண்டகால மேம்படுத்தல் முடிவினை எடுத்து தமிழரின் பிரச்சினையினைத் தீர்க்க முயன்றபோதும்கூட, அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தன என்று பிரபாகரன் வாதிட்டார். செல்வநாயகம் அவர்கள் பண்டாரநாயக்கவுடனும் பின்னர் டட்லியுடனும் இரு ஒப்பந்தங்களைச் செய்தார். ஆனால் அவையிரண்டையுமே அச்சிங்களத் தலைவர்கள் நிறைவேற்றத் தவறிவிட்டனர். தமிழர்களை பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்து, அவர்களின் உணர்வெழுச்சியை மழுங்கடித்து, ஈற்றில் அவர்களை விரக்தியடையச் செய்வதனையே சிங்களத் தலைவர்கள் தமது பாணியாகக் கடைப்பிடித்து வந்தனர். ஆகவே, முன்னைய தமிழ்த் தலைவர்கள் முயன்று தோற்றுப்போன ஒரு வழியில் மீண்டும் ஒரு முறை வீழ்ந்து தோற்றுப்போக ஈழத்தேசிய விடுதலை முன்னணி தயாராக இல்லை என்று பிரபாகரன் தெரிவித்தார். மேலும், 1977 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை (1985) தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரையும் ஜெயவர்த்தன இதே வழியிலேயே ஏமாற்றி வருகிறார் என்றும் பிரபாகரன் சுட்டிக் காட்டினார். தாம் ஜெயவர்த்தனவை நம்பவில்லை என்று பிரபாகரன் மீண்டும் அங்கே குறிப்பிட்டார். மேலும், திம்புவிற்குப் போகும்படி ஈழத்தேசிய அமைப்பினர் மீது இந்தியா கொடுத்த அழுத்தங்கள குறித்த தனது அதிருப்தியையும் அவர் அங்கே வெளிப்படுத்தினார். இந்தியாவை தனது சதிவலைக்குள் வீழ்த்தி தமிழரின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தவே ஜெயார் முயன்று வருகிறார் என்று பண்டாரியை பிரபாகரன் எச்சரித்தார். ரஜீவ் காந்தி மீதும், பண்டாரி மீதும் தாம் வைத்திருக்கும் மதிப்பின் நிமித்தம் இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்காக திம்புவிற்கு தமது முன்னணியினர் செல்வர் என்று கூறிய பிரபாகரன், அப்போதும்கூட தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வாக எதனையும் இலங்கையரசு முன்வைக்காது என்று தான் திடமாக நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், முதலாம் கட்டப் பேச்சுக்களின் இறுதியில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் வெளியிட்ட நான்கு அடிப்படை அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கிய தீர்வைத்தவிர வேறு எதனையும் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை திட்டவட்டமாக அவர் அறிவித்தார். பிரபாகரனின் பேச்சைக்கேட்டு பண்டாரி அதிருப்தியடைந்தார். கடுமையான நிலைப்பாட்டுடன் பேசாது, யதார்த்தத்திலிலிருந்து சிந்தியுங்கள் என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களைப் பார்த்து அவர் கூறினார். ஆனால், பிரபாகரனோ தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததுடன், எந்த விட்டுக் கொடுப்பிற்கும் தயாராக இருக்கவில்லை. பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் புளொட் அமைப்பினருடனும் தனியான சந்திப்புக்களை பண்டாரி மேற்கொண்டார். அவர்களும் ஜெயவர்த்தனவை தாங்கள் நம்பவில்லையென்றே பண்டாரியிடம் கூறினர். தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை லலித் அதுலத் முதலி முற்றாக நிராகரித்திருப்பதன் மூலம் இரண்டாம் கட்டப் பேச்சுக்களும் தோல்வியிலேயே முடிவடையப் போகின்றது என்பது புலனாகிறது என்று அவர்கள் பண்டாரியிடம் கூறினர். பண்டாரியிடம் பேசிய அமிர்தலிங்கம், "அரசாங்கம் முன்வைக்கவிருக்கும் பரிந்துரையின் அடிப்படையிலேயே எமது பதில் இருக்கும். அவர்கள் ஏற்கனவே முன்வைத்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளையே புதிய பூச்சுடன் மீளவும் முன்வைப்பார்களாயின் அதனை நிராகரிப்பதைத்தவிர எமக்கு வேறு வழிகள் இல்லை" என்று கூறினார். தமிழ்ப் பிரதிநிதிகளுடனான தனது சந்திப்புக்களின்போது அவர்களின் கருத்தைக் கேட்டு பண்டாரி கடுமையான அதிருப்தி அடைந்திருந்ததாக டிக்ஷிட் தனது புத்தகத்தில் எழுதுகிறார். தனது பதவிக்காலம் 1986 ஆம் ஆண்டு பங்குனியில் முடிவிற்கு வரும் நிலையில், அதற்கு முன்னர் பேச்சுவார்த்தையூடாக உடனடித் தீர்வொன்றினை எட்டுவதே பண்டாரியின் நோக்கமாக இருந்தது. ஆகவே, இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வொன்றினை எட்டுவதற்காக கடுமையான முயற்சிகளை அவர் மேற்கொண்டு வந்திருந்தார். டிக்ஷிட் தொடர்ந்தும் எழுதுகையில், "தமிழ்த் தலைவர்களுடனான தனது பேச்சுக்களின் விளைவாக பண்டாரி இலங்கைத் தமிழர்கள் மீது கடுமையான எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்திருந்தார். இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தமிழர்கள் அநாவசியமாக பிடிவாதம் பிடித்து வருவதாகவும் அவர் நம்பத் தலைப்பட்டார்" என்று எழுதுகிறார். அன்று மாலை, தனியாக இருக்கும்போது, டிக்ஷிட்டிடம் பேசிய பண்டாரி, "இந்தியாவால் வரையப்பட்ட "கடப்பாடற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்குக் கொடுத்தீர்களா ?" என்று வினவினார். "இல்லை, எனக்கு அவ்வாறு யாரும் பணிப்புரை வழங்கவில்லையே" என்று டிக்ஷிட் கூறவும், "நீங்கள் கொழும்பிற்குச் சென்றவுடன் அந்த நகலை செல்வநாயகத்திடம் கொடுங்கள்" என்று பண்டாரி கூறினார். அதிர்ச்சியடைந்த டிக்ஷிட், "செல்வநாயகம் இறந்துவிட்டார், நீங்கள் நீலன் திருச்செல்வத்தைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?" என்று கேட்கவும், எரிச்சலடைந்த பண்டாரி, " செல்வநாயகமோ, திருச்செல்வமோ, யாரிடமாவது கொடுங்கள். தென்னிந்தியர்களின் பெயர்கள் எல்லாம் ஒரேமாதிரியாகவே இருக்கின்றன" என்று சலித்துக்கொண்டே கூறினார். பண்டாரி பணித்தவாறே, இந்தியா தயாரித்த ஆலோசனைகளின் நகல் ஒன்றினை கொழும்பு திரும்பியதும் நீலனிடம் தந்தார் டிக்ஷிட். சென்னையில் தமிழ்த் தலைவர்களைச் சந்தித்து இலங்கையரசாங்கம் முன்வைக்கவிருக்கும் தீர்வினை ஏற்றுக்கொள்ளும்படி பண்டாரி அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், வவுனியாவிலும், திருகோணமலையிலும் நிலைமைகள் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தன. வவுனியாவில் பொலீஸ் வாகனம் ஒன்றின்மீது போராளிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் ஒரு பொலீஸ் உப பரிசோதகரும், நான்கு சாதாரண பொலீஸாரும் கொல்லப்பட்டனர். இதற்கான பழிவாங்கும் தாக்குதல்களை இராணுவத்தினர் வவுனியாவிலும் திருகோணமலையிலும் நடத்தினர். வவுனியாவில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதல்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் கடைகளையும், வீடுகளையும் தீயிட்டுக் கொளுத்தினர். இராணுவத்தினரின் பழிவாங்கும் தாக்குதல்களில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 21 பேர் காயமடைந்தனர். திருகோணமலையில் அகதிமுகாம் ஒன்றில் தங்கியிருந்த தமிழ் அகதிகள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.- மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி
அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம்.- வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லத் தடை
தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன? ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? - பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும் மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார். இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட். அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன், தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன் ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார். யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால் கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும் பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார். தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார். மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும் வழங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார். ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார். ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார். பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழக்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா. இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில் முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித். அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
முதலாம் கட்டத் திம்புப் பேச்சுக்கள் தோல்வியில் முடிவடையவில்லை என்பதை நிரூபிக்க பகீரதப் பிரயத்தனத்தில் இறங்கிய இந்தியா முதலாம் கட்டத் திம்புப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்த ஆடி 13, 1985 ஆம் திகதிக்கு மறுநாள், கொழும்பு கோட்டை பகுதியில் அன்று அமைந்திருந்த இந்திய உயர்ஸ்த்தானிகராலயத்தில் பத்திரிகை மாநாடொன்று நடைபெற்றது. டெயிலிநியூஸ் பத்திரிக்கை சார்பாக நானும் அங்கு சென்றிருந்தேன். அவ்வருடம் வைகாசி 26 ஆம் திகதி இந்தியாவின் தூதராக ஜே.என்.டிக் ஷிட் பதவியேற்றதன் பின்னர் அவர் நடத்தும் முதலாவது பத்திரிக்கையாளர் சந்திப்பு இது. சில நாட்களாக அவருடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பங்கள் எனக்குக் கிடைத்தமையினால், அவர் என்னுடன் சகஜமாகவே பேசிவந்தார். பிரபாகரன், ஜே.என். டிக் ஷிட் மற்றும் அமைதிப்படைத் தளபதி ஹர்க்கிரட் சிங் அன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு முன்னர் டிக் ஷிட்டை நான் சந்தித்துப் பேசினேன். இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளிடமிருந்து தனக்கு வந்த அறிவுருத்தலின்படியே தான் பத்திரிக்கையாளர் மாநாட்டினை நடத்துவதாகவும், திம்புப் பேச்சுக்கள் முறிவடையவில்லை, மாறாக தற்போதே ஆரம்பித்திருக்கின்றன என்கிற செய்தியை இலங்கை மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் தெரிவிக்கும்படி தன்னை அமைச்சு கேட்டிருப்பதாகவும் அவர் என்னிடம் கூறினார். "மிகக் கடிணமான பணியைச் செய்யவிருக்கிறேன், உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்" என்று அவர் என்னிடம் கூறினார். ஊடகங்களைக் கையாளவ்தில் திறமையான இராஜதந்திரி என்று அறியப்பட்டபோதிலும், அன்றைய பத்திரிக்கையாளர் மாநாடு டிக் ஷிட்டைப் பொறுத்தவரை கடிணமானதாகவே காணப்பட்டது. இப்பதவிக்கு வருமுதல் அவர் இந்திய வெளியுறவுத்துறையின் உத்தியோகபூர்வப் பேச்சாளராகக் கடைமையாற்றியவர். திம்பு விலிருந்து வரும் சில செய்திகளில் குறிப்பிடப்படுவது போலல்லாமல், திம்புப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாகவே அமைந்திருந்தன என்று அவர் தனது பேச்சினை ஆரம்பித்தார். சில வருடங்களாகவே இராணுவ மோதல்களில் ஈடுபட்டு வந்த இலங்கை அரசாங்கத்தையும், தமிழ்ப் போராளிகளையும் சமரசப் பேச்சுவார்த்தைகளுக்காக பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவந்தமையே ஒரு வெற்றிதான் என்று அவர் கூறினார். மேலும், தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் சில ஆலோசனைகளை முன்வைத்திருப்பதும், அதனை தமது அடிப்படை நான்கம்சக் கோரிக்கைக்கு ஏற்றவாறு மேம்படுத்தி வருமாறு தமிழர் தரப்புக் கோரிக்கை வைத்திருப்பதும் கூட ஒரு வெற்றிதான் என்றும் அவர் கூறினார். ஆக, இருதரப்பினரும் தமது நிலைப்பாட்டினைத் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதுடன், தொடர்ச்சியான பேரம்பேசலினூடாக இருதரப்பிற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தீர்வொன்றினைக் கண்டடைவதே இனிமேல்ச் செய்யவேண்டியது என்றும் அவர் கூறினார். மேலும், ஆவணி 12 ஆம் திகதி இரு தரப்பினரும் மீண்டும் கூடி பேச இணங்கியிருப்பதானது, பேச்சுக்களில் அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையினையே காட்டுகிறது என்றும் அவர் கூறினார். இரு தரப்பினரும் இணங்கிக்கொள்ளும் தீர்வொன்று நோக்கிச் செல்வதற்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஆனால், அன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பெரும்பாலான சிங்கள ஊடகவியலாளர்கள் முன்வைத்த கேள்விகள், தமிழர்களுடன் இலங்கையரசை நிர்ப்பந்தித்துப் பேச வைத்தமைக்காக இந்தியாவை விமர்சிப்பதாக அமைந்திருந்தனவே அன்றி திம்புப் பேச்சுக்களில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்ததாக அவை அமைந்திருக்கவில்லை. தமிழ்ப் பயங்கரவாதிகளைப் பயிற்றுவித்து, ஆயுதங்களைக் கொடுத்துவருவதாக அவர்கள் இந்தியாவைக் குற்றஞ்சுமத்தினர். அவர்களில் ஒருவர் டிக் ஷிட்டைப் பார்த்து "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு ஆயுதமும், பயிற்சியும் வழங்கியிருக்காவிட்டால் இன்று பேச்சுவார்த்தைகள் நடக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?" என்று கேட்டார். ஆனால், டிக் ஷிட்டோ அக்கேள்விக்குப் பதிலளிப்பதை நாசுக்காகத் தவிர்த்துக்கொண்டார். தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு இந்தியா ஆயுதங்கள் கொடுப்பதையோ அல்லது பயிற்றுவிப்பதையோ அவர் ஏற்றுக்கொள்ளவுமில்லை, நிராகரிக்கவுமில்லை. கடந்தகாலத்தில் நடந்தவை பற்றி விமர்சித்துக் கொண்டிருக்காது, எதிர்காலம் குறித்தே அனைவரும் சிந்திக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். "பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன, அவை தொடர்ந்து நடைபெறவேண்டும்" என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது. தமிழ்ப் பத்திரிக்கையாளர்கள் டிக் ஷிட்டிடம் யுத்த நிறுத்தம் நீடிக்கப்படுவது குறித்து வினவினர். இராணுவத்தினர் தமது தேடியழிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதனால், யுத்தநிறுத்தம் முறிவடையப்போகிறது எனும் தமிழர்களின் கவலை குறித்தே அவர்களின் கேள்விகள் அமைந்திருந்தன. தமிழ் மக்கள் மீது இராணுவத்தினர் கட்டவிழ்த்துவிட்டிருந்த தாக்குதல்கள் குறித்து அங்கே தமிழ்ப் பத்த்ரிக்கையாளர்களால் பிரஸ்த்தாபிக்கப்பட்டது. ஆகவே, யுத்தநிறுத்தம் முறிவடையாது என்கிற நம்பிக்கையினை முன்வைக்கவேண்டிய தேவை டிக்ஷிட்டிற்கு இருந்தது. "யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அது தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படும்" என்று அவர் கூறினார். ஆனால், அன்று மாலை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சென்னையில் கடுந்தொனியில் அமைந்த அறிக்கையொன்றினை வெளியிட்டனர். இராணுவத்தினர் தமிழ் மக்கள் மீதான தமது தாக்குதல்களைத் தொடர்ந்தால், தமது போராளிகளும் பதில்த் தாக்குதல்களில் ஈடுபட வேண்டி வரும் என்று அவர்கள் எச்சரித்தனர். ஆடி 20 ஆம் திகதி புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான துப்பாக்கிச் சமரில் இராணுவத்தினரில் ஒருவர் கொல்லப்பட்டார். ஆடி 25 ஆம் நாள், கறுப்பு ஜூலை இனக்கொலையின் இரண்டாவது நினைவேந்தலினை முன்னிட்டு வடக்குக் கிழக்கில் முற்றான கர்த்தாலைப் போராளிகள் கோரியிருந்தனர். போராளிகளின் வேண்டுகோள் மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. வீதிகளில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டதுடன், வெலிக்கடைச் சிறைச்சாலையில் கொல்லப்பட்ட 52 தமிழ் அரசியல்க் கைதிகளுக்கான நினைவேந்தலும் அனுஸ்ட்டிக்கப்பட்டது. வெலிக்கடையில் கொல்லப்பட்ட தமிழ் அரசியல்த் தலைவர்களுக்கான அஞ்சலியாக யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே போராளிகளால் குண்டுகளும் வெடிக்கவைக்கப்பட்டன. சிறிமாவோ பண்டாரநாயக்க நாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்தும், மக்களின் மனோநிலை குறித்தும் அறிந்துகொள்ள சிங்கள மற்றும் தமிழ்த் தலைவர்களுடனான பேச்சுக்களை டிக் ஷிட் அந்நாட்களில் ஆரம்பித்திருந்தார். ஆடி 16 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவியான சிறிமாவை அவர் சந்தித்துப் பேசினார். டிக்ஷிட்டுடனான பேச்சுகளின்போது தமிழர்களுடன் இணக்காபாடான தீர்வொன்றிற்கு வருவதற்கு ஜெயார் விரும்பாமையினால் பேச்சுவார்த்தைகள் விரைவில் முறிவடைந்துவிடும் என்று தான் நம்புவதாக சிறிமா கூறினார். மேலும், பழிவாங்கும் உணர்வுகொண்டவரான ஜெயார் வன்முறையில் மிகுந்த நாட்டம் கொண்டவர் என்றும் டிக்ஷிட்டிடம் சிறிமா தெரிவித்தார். "இராணுவ ரீதியில் தமிழர்களுக்குத் தீர்வொன்றை வழங்க அவர் முடிவெடுத்துவிட்டார். எக்காரணத்தைக் கொண்டும் அவர் அதிலிருந்து விலகப் போவதில்லை" என்றும் சிறிமா கூறினார். ஆடி 23 ஆம் திகதி அரசுதரப்புப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவைச் சந்தித்த டிக் ஷிட், அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை மேம்படுத்தும் சாத்தியப்பாடுகள் குறித்து வினவினார். அதற்குப் பதிலளித்த ஹெக்டர், நடப்பிலிருக்கும் அரசியலமைப்பின் வரம்புகளுக்கு உட்பட்டே தன்னால் பேரம்பேசலில் ஈடுபட முடியும் என்று கூறிவிட்டார். மேலும், அரசியலமைப்பிற்கு உட்பட்ட வகையில் சில திருத்தங்களைச் செய்ய தான் எத்தனிப்பதாக ஹெக்டர் டிக் ஷிட்டிடம் உறுதியளித்தார். ஹெக்டரின் பதிலையடுத்து ஆத்திரமடைந்த டிக் ஷிட், தமிழர்களின் போராட்டம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு எதிரானது என்றே பார்க்கப்படுவதாகக் கூறினார். ஒற்றையாட்சி முறையிலிருந்து சமஷ்ட்டி முறைக்கு மாற்றுவதற்காக அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்று தமிழர்கள் கோருகிறார்கள். ஆகவே, அது நடைபெறாதவிடத்து தனிநாட்டிற்கான தமது போராட்டத்தைத் தொடர்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியிருக்காது என்று ஹெக்டரிடம் அவர் தெரிவித்தார். "ஹெக்டர் ஜெயவர்த்தனவின் பதில் மரமாக இருந்தது. நாட்டின் அரசியலமைப்பிற்கு உட்பட்டே தன்னால் பேச்சுக்களில் பேரம்பேச முடியும் என்று அவர் கூறினார். "நீங்கள் இங்கு பேசுவது அரசியல் சார்ந்த விடயமாகும். இலங்கையரசாங்கமோ, பெளத்த பீடத்தினரோ, சிங்கள மக்களோ பங்குகொள்ளாத பேச்சுவார்த்தையொன்றில் தமிழர்களுடன் இதுகுறித்துப் பேச என்னால் பேசமுடியாது" என்று ஹெக்டர் என்னிடம் கூறினார்" என்று டிக் ஷிட் பின்னாட்களில் எழுதிய கொழும்பு அஸைன்மென்ட் எனும் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். - பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.