Jump to content

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8740
  • Joined

  • Last visited

  • Days Won

    103

Everything posted by ரஞ்சித்

  1. இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள்.
  2. துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம்.
  3. உண்மை, நலன்களையல்ல, தமது பகுதிகளில் கட்டுப்பாட்டிற்குற்பட்ட அபிவிருத்தி. இது அனுமதிக்கப்பட்டதற்கான ஒற்றை காரணம், தமிழர்களுக்கெதிரான போரில் முஸ்லீம்களை தமிழர்களுடன் இணைய விடாது பிரித்தெடுத்து, தமிழரூகெதிரான போரில் அவர்களைப் பயன்படுத்தி தமிழ‌ர்களின் அபிலாஷைகளை முற்றாக அழிப்பதற்காகத்தான். 2009 வரை அரசின் செல்லபிள்ளைகளாக இருந்த ஹிஸ்புள்ளா, ரவூப் ஹக்கீம், பதிருதீன் ஆகியோர் இப்போது எங்கே? 2009 இற்குப் பின்னர் முஸ்லீம் அமைச்சர்கள் இருந்தபோதும் கூட அச்சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட களுத்துறை, உகணை உள்ளிட பிரதேசங்கள் மீதான வன்முறைகளை அவர்களால் தடுக்க முடிந்ததா? தமது சொந்தப் பைகளை நிரப்பி, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் செல்வம் ஏற்படுத்தியதை விட அவர்கள் முஸ்லீம் இனத்தின் நலன்களைக் காக்க செய்த நடவடிக்கைகள் என்ன? அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பகுதியில் தீகவாபியை அஷ்ரப்பின் காலத்திலேயே அரசு அடாவடியாக வளைத்துப் போட்டதே? அப்போது அஷ்ரப்பால் செய்ய முடிந்தது என்ன?
  4. அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய அரசியல்வாதிகளால் தமிழரின் நலனும், தேசமும் எவ்வாறு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒருமுறை நீங்கள் இங்கு பதிய முடியுமா? ஏன் கேட்கிறேன் என்றால், எந்த அரசு எமக்கான தீர்வைத் தரவில்லை என்று நாம் சொல்கிறோமோ, அதே அரசுடன் இணைந்து அதனைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்கள். தனக்கெதிராகப் போராடியபோது கொடுக்காத விடயங்களை, தன்னுடன் சேரும்போது கொடுத்துவிடும் என்கிறீர்கள். சரி, அப்படியே இருக்கட்டும். தேவநாயகம், இராசதுரை, டக்ளஸ், தொண்டைமான், கதிர்காமர், பிள்ளையான், கருணா, வியாழேந்திரன், அங்கஜன், மகேஸ்வரன் தம்பதிகள் போன்ற தமிழர்கள் அரசில் நேரடியாகவோ அல்லது கூட்டணிக் கட்சியாகவோ அங்கம் வகித்தவர்கள். இவர்களைத் தன்னுடன் வைத்துக்கொண்டதன் மூலம் சிங்களம் அடைந்த ஒரு பிரச்சார நண்மை என்னவென்றால் தமிழர்கள் எம்மோடு இருக்கிறார்கள், எமது கொள்கைகளை ஆதரிக்கிறார்கள், அவர்களது நலன்களை நாம் பாதுகாக்கிறோம் என்று கூறுகிறார்கள், ஒருசில தமிழர்கள் தான் முரண்டுபிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் என்று சர்வதேசத்தில் தனக்கு நற்சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடிந்தமைதான். ஆனால், இத்தமிழ் அரசியல்வாதிகளால் காக்கப்பட்ட தமிழர்களின் நலன்கள் என்ன? தொண்டைமான் கூட மலையக மக்களின் பல விடயங்களில் அரசுடன் விட்டுக்கொடுத்தே செல்ல வேண்டியதாயிற்று. அவர்களின் அன்றாட வாழ்க்கை நூற்றாண்டுகளாக இன்னும் அப்படியே கிடக்கிறது. ஏனைய தமிழ்த் தலைவர்கள் என்ன செய்தார்கள் என்று எமக்குத் தெரியும். இத்தனை தமிழ்த் தலைவர்களும் ஏறத்தாள அடிமைகளைப்போன்றே அரசில் ஒட்டியிருந்தார்கள். அப்படியிருக்க, இனிவரும் தலைமுறை சிங்கள அரசுடன் எவ்வாறான இணக்கப்பட்டுடன் செல்லாம் என்று கருதுகிறீர்கள்? இவர்களையும் தமது "தமிழ் நண்பர்களாக" அரசு சர்வதேசத்தில் காட்டாது என்பது என்ன நிச்சயம்?
  5. சீமேந்துத் தொழிற்சாலை அமையக் கூடாது என்று அப்பகுதி மக்கள் போராடுவது அரசியல் விடயமா? எப்படி? ஒரு சீமேந்துத் தொழிற்சாலை அமைவதால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அறிந்திருக்கிறீர்களா? இல்லையென்றால், காங்கேசந்துறைத் தொழிற்சாலையைச் சுற்றியிருந்த பல நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் ஏன் இன்று தரிசாகக் கிடக்கின்றன என்று சென்று பாருங்கள். அப்பகுதிகளில் காணப்படும் பாரிய அகழிகளால் ஏற்பட்டிருக்கும் சூழல் நாசத்தைச் சென்று பாருங்கள். குறுகிய கால வேலைவாய்ப்பிற்காகவும், வருமானத்திற்காகவும் ஒரு பிரதேசத்தினை நாசமாக்குவதைத் தடுக்க அப்பிரதேச மக்கள் போராடுவதை அரசியல் என்று கொச்சைப்படுத்த வேண்டாம்.
  6. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? நேற்று நண்பர் ஒருவரின் வீட்டிற்கு பிறந்தநாள் ஒன்றிற்காகச் சென்றிருந்தேன். சுமார் 8 - 9 ஆண்களும், அதேயளவு பெண்களும், பெருமளவு சிறுவர்களும் இருந்தார்கள். வழமைபோல ஆண்கள் வட்டமாக அமர்ந்துகொண்டு பேச, பெண்களும் அவ்வாறே செய்தார்கள். நடுவில் சிறுவர்கள் தமது விளையாட்டுத் துப்பாக்கிகளோடு ஓடித்திரிய வீடு அமர்க்களமாகியிருந்தது. இளையராஜா பாடல்கள், அக்காலத்தில் எமக்குத் தெரியாமலிருந்த இன்னும் சில இசையமைப்பாளர்கள் , அநிருத்தின் சிட்னி இசை நிகழ்ச்சி என்று ஆரம்பித்து சில படங்கள் குறித்த விமர்சனம் என்று நீண்டு, அரசியலுக்குள் நுழைந்தது சம்பாஷணை. அங்கிருந்தவர்களில் பல தரப்பினர் இருந்தனர். புலிகளை ஆதரிப்பவர்கள், நடுநிலையாளர்கள், விமர்சிப்பவர்கள் என்று மூன்று வகையினர். நடுநிலைவாதிகள் அநேகமான வேளைகளில் அரசியலைப் பேச ஆரம்பிப்பார்கள். அங்கும் இன்றி, இங்கும் இன்றி அவர்களின் பேச்சுக்கள் இருக்கும். புலிகளை ஆதரிப்பவர்கள் அதிகம் பேசுவதில்லை. விமர்சிப்பவர்கள் எப்போதாவது சம்பாஷணையில் தமக்கான தருணங்கள் வரும்போது கலந்துகொள்வார்கள். நேற்றும் அதுதான் நடந்தது. கருணாவின் பிளவு குறித்து ஆரம்பித்த சம்பாஷணை, டி.பி.எஸ்.ஜெயராஜ் குறித்து நீண்டபோது, அவர் அணமையில் கொழும்பு டெயிலி மிரர் பத்திரிக்கையில் எழுதிய "கிழக்கை இழந்த கருணாவும், ஈழத்தைப் பறிகொடுத்த பிரபாகரனும்" என்கிற கட்டுரை குறித்து பேசப்பட்டபோது, நான் தலைப்பைப் பார்த்துவிட்டு கடந்து சென்றுவிட்டேன் என்று கூறவும் நடுநிலைவாதியான ஒருவர், "அது எப்படி கடந்து செல்வீர்கள்? உள்ளே என்ன இருக்கிறது என்று படிக்காமலேயே விமர்சிப்பீர்களா? தலைவர் கூட இறுதிவரை அவரது கட்டுரைகளை இன்னொருவர் மொழிபெயர்க்க அறிந்துகொண்டுதான் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். நானோ, "அவர் புலிகள் குறித்து அவதூறாகவே எழுதிவருகிறார், அவரின் வாசகர்கள் பெரும்பாலும் சிங்களவர்களே, அவர்களை மகிழ்விக்கவே அவர் இவ்வாறான கருத்துக்களைத் தொடர்ந்து எழுதுகிறார்" என்று கூறினேன். இதில் மெதுவாக சம்பாஷணை சூடேறத் தொடங்கியிருந்தது. இடையிடையே சிலர் இதுகுறித்த தமது கருத்துக்களை கூறினார்கள். இடையில் யாழ்ப்பாணம் சென்று வந்த ஒருவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்தபோது, நாவற்குழியில் கட்டப்பட்டிருக்கும் விகாரை பற்றியும் பேசினார். யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது என்ற வளைவிற்குப் பின்னால் தெரிவது பெளத்தர்களின் விகாரை என்று அவர் கூறி வேதனைப்படும்போது, உண்மைதான், அங்கு கிட்டத்தட்ட 148 சிங்களக் குடும்பங்களும் குடியேறியிருக்கிறார்கள் என்றுய் கேள்விப்பட்டேன் என்று கூறினேன். இங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. டி.பி.எஸ்.ஜெயராஜின் அபிமானியான அவர், "சிங்களவர்கள் 83 இற்கு முன்னரும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருக்கிறார்கள், அரச வேலைகள், தனியார் வேலைகள், வியாபாரங்கள் என்று வாழ்ந்தவர்கள், அவர்கள் மீள யாழ்ப்பாணத்திற்கு வருவதில் ஒரு பிரச்சினையுமில்லை. சண்டை ஆரம்பித்ததால் விட்டுச் சென்றவர்கள், தற்போது வருகிறார்கள். நீங்கள் கொழும்பில் சென்று வாழ்வதில்லையா? அதுபோலத்தான் அவர்களும் வடக்குக் கிழக்கில் வாழ்கிறார்கள்" என்று கூறினார். எனக்கு அது சரியென்று படவில்லை. "கொழும்பில் சிங்களவர்கள் கூறும் விலைக்கு அதிகமாகக் கொடுத்து, காணிகளை வாங்கி வீடுகளை கட்டுவதும், வாங்குவதும், வடக்குக் கிழக்கில் அரச இராணுவத்தின் உதவியுடன் தமிழர்களைக் கொன்றுவிட்டோ, அடித்துத் துரத்திவிட்டோ அடாத்தாகக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறுவதும் ஒன்றா? சிங்களக் குடியேற்றவாதிகளை ஆயுதமயப்படுத்தி, கூடவே பாதுகாப்பிற்கென்று இராணுவ முகாம்களையும் அமைத்து, சிறுகச் சிறுக தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதும், தமிழர்கள் கொழும்பில் வாழ்வதும் ஒன்றா? கொழும்பில் புலிகள் முகாம் அமைத்துத் தமிழர்களை ஆயுததாரிகளாக்கி, சிங்களவர்களை கொன்றோ அல்லது விரட்டியோ ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறார்களா? என்று சற்றுச் சூடாகவே கேட்டுவிட்டேன். அவர் மெளனமாகிவிட்டார். எதுவும் பேசவில்லை. "நான் கூறவந்ததைக் கேட்காமலேயே நீங்கள் டென்ஷன் ஆகிவிட்டீர்கள்" என்று மட்டும் கூறினார். ஆத்திரப்பட்டதற்காக வருந்தினேன். ஆனால், இக்கேள்வி அடிக்கடி நடுநிலைவாதிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு இவர்கள் கேட்பது தமிழர் தாயகத்தில் சிங்கள ஆக்கிரமிப்பினை நியாயப்படுத்திவிடுவதாக எனக்குப் படுகிறது. இந்த வேறுபாட்டினை இவர்களால் புரிந்துகொள்ள முடியாமற்போனது எங்கணம்? இதுபற்றிய உங்கள் கருத்தென்ன?
  7. ஈரான் மீதான பதில்த் தாக்குதல்களைத் திட்டமிடுவதற்கான அனுமதியினை இஸ்ரேலிய அமைச்சரவை யுத்தக் கவுன்சிலுக்கு வழங்கியிருப்பதாகத் தெரியவருகிறது. அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ஒஸ்ட்டின், இஸ்ரேலுக்கு விடுத்த வேண்டுகோளில் ஈரான் மீதான பதிலடி குறித்து தமக்கு அறியத்தருமாறு கேட்டிருக்கிறார். அமெரிக்க அதிபருக்கும் இஸ்ரேலிய பிரதமருக்கும் இடையில் உரையாடல் ஒன்று தற்போது நடந்துகொண்டிருக்கிறது.
  8. ஈஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஈரானிய ட்ரோன் வகையைச் சேர்ந்த ஒன்று குவைட் விமானச்சேவை தனது பறப்பின் பாதைகளை மாற்றி, தாக்குதல் நடக்கும் பகுதியை விலத்திச் செயற்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேலியப் பிரதமர் நெட்டென்யாகுவுடன் வெகு விரைவில் இத்தாக்குதல் குறித்துப் பேசப்போவதாக வெள்ளை மாளிகை அறிவித்திருக்கிறது. மேலும் தேசியப் பாதுகாப்புக் கவுன்சிலுடன் பைடன் தற்போது பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறார் என்று அது கூறுகிறது. இதற்கிடையில் தான் பதவியில் இருந்திருந்தால் இவை எதுவுமே நடந்திருக்காது என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார். ஈரானியத் தாக்குதலில் தமது தளம் ஒன்று சிறிய சேதத்திற்கு உள்ளானதாக இஸ்ரேல் கூறுகிறது.
  9. இஸ்ரேல் மீதான ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ஐ நா செயலாளர் கண்டித்திருப்பதுடன், உடனடியாக பதற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கைகளில் எல்லாத் தரப்புக்களும் ஈடுபடவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். சுமார் 200 இற்கும் மேற்பட்ட ட்ரோன்கள், பலிஸ்ட்டிக் ஏவுகணைகள், ஸ்க்ரூஸ் ஏவுகணைகள் எம்மீது ஏவப்பட்டிருக்கின்றன. பெரும்பாலானவற்றை எமது விமானப்படை இடைமறித்துச் சுட்டு வீழ்த்தியிருக்கின்றது என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் பேச்சாளர் டனியேல் ஹகாரி கூறியிருக்கிறார். இஸ்ரேலிய சியோன்ஸிட்டுக்களை ஆதரித்துவரும் பயங்கரவாத நாடான அமெரிக்கா தனது செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும். இஸ்ரேலினைத் தண்டிக்கும் தனது நடவடிக்கைகளுக்கும் தனது நலன்களுக்கும் எதிராக அமெரிக்கா செயற்படுமானால் ஈரானின் பயங்கரமான பதிலடியை அமெரிக்காவோ அல்லது அமெரிக்கா தளம் அமைத்திருக்கும் நாடுகளோ எதிர்நோக்க வேண்டி வரும் என்று அமெரிக்காவை ஈரான் எச்சரித்திருக்கிறது. ஸ்பெயினும், போர்த்துக்கலும் மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்க கோரிக்கை விடுத்திருக்கின்றன. ஜோர்தான் நாட்டின் தலைநகரான அம்மானில் வசிக்கும் மக்கள் தமது நகரின் மேலாக பறக்கும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பார்த்திருக்கிறார்கள். இவற்றுள் பல அவ்வானிலேயே இடைமறிப்பால் வெடித்திருக்கின்றன. இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலையடுத்து இருதரப்பும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சவுதி அரேபியா வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
  10. இஸ்ரேல் மீதான தாக்குதலில் அமெரிக்கா இலக்குவைக்கப்படவில்லையென்றே தெரிகிறது. தனது ஜெனரல்கள் மீதான தாக்குதலுக்குப் பழிவாங்கவேண்டிய கட்டாயம் ஈரானுக்கு. தனது மக்கள் முன்னால் தான் அவமானப்பட்டுவிடக்கூடாது என்கிற எண்ணத்திலேயே இத்தாக்குதலை அடையாளமாக நடத்தியிருக்கிறது ஈரான். அதுவும் சில மணிநேரத்திலேயே தாக்குதலை முடித்துக்கொண்டு, எச்சரிக்கையுடன் மெளனமாகிவிட்டது. இஸ்ரேலைத் தவிர மத்திய கிழக்கில் இருக்கும் அமெரிக்க துருப்புக்களைத் தாக்குவதைக் கூடத் தவிர்த்திருக்கிறது. ஆக, இத்தாக்குதலை நடத்தவேண்டிய கட்டாயம், ஆனால் தாக்குதலும் விஸ்த்தரிக்கப்படக் கூடாது என்கிற நிலை. பிரச்சினை என்னவென்றால், இஸ்ரேல் இதனை எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறது என்பதுதான். ஈரான் நேரடியாகத் தன்னைத் தாக்கும்வரை இஸ்ரேல் காத்திருப்பதாகவே பலரும் கூறிவந்த நிலையில், ஈரான் அதனை இஸ்ரேலிடம் கொடுத்திருக்கிறது.
  11. ஐ நா சாசனத்திற்கு உட்பட்ட வகையில் நடத்தப்பட்ட தற்காப்புத் தாக்குதலே இஸ்ரேல் மீது நாம் மேற்கொண்ட தாக்குதல் என்று ஈரான் தனது செயலை நியாயப்படுத்தியிருக்கிறது. சிரிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்கவே தனது இராணுவ வல்லுனர்கள் டமஸ்க்கஸிற்குச் சென்றிருந்தார்கள் என்றும், அவர்களையே இஸ்ரேல் நீதிக்குப் புறம்பான முறையில் கொன்றதாகவும் ஈரான் குற்றஞ்சாட்டியிருக்கிறது.
  12. இங்கிலாந்து வானுக்கு ஏவியிருக்கும் டைபூன் ரக தாக்குதல் விமானம் இஸ்ரேலிய வான்பரப்பில் காணப்படும் ஈரானிய ட்ரோன்கள்
  13. ஈரானிலிருந்து இஸ்ரேலிற்கான மிகக் கிட்டிய தூரம் 1600 கிலோமீட்டர்கள். இதனைக் கடக்க ஈரானிய ட்ரோன்களுக்கு சில மணிநேரங்கள் தேவைப்படலாம் என்று கூறப்படுகிறது. சில மணித்தியாலங்களுக்கு முன்னர் ஏவப்பட்ட ட்ரோன்கள் இப்போதுதான் இஸ்ரேல் வான்பரப்பிற்குள் நுழைந்திருக்கின்றன. பெரும்பாலானவற்றை ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறை சுட்டு வீழ்த்தியிருக்கிறது. இன்னும் சிலவற்றை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியிருக்கிறது. சில வீழ்ந்து வெடித்திருக்கின்றன. இத்தாக்குதலில் காயப்பட்ட இஸ்ரேலியச் சிறுவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தாக்குதலா அல்லது இடைமறிப்பா? டைபூன் ரக மிகையொலித் தாக்குதல் விமானங்களை வானுக்கு ஏவியிருக்கிறது பிரித்தானிய வான்படை. மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கெதிராக வரும் ஏவுகணைகள், ட்ரோன்கள் என்று அனைத்தையும் சுட்டு வீழ்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சந்தில சிந்துபாடக் காத்திருந்த அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸுக்கு சந்தர்ப்பம் ஒன்று கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்தபக்கம் ரஸ்ஸியாவும், வடகொரியாவும் தமது ஆயுதக் கிடங்குகளைத் திறந்துவைத்திருப்பார்கள் ஈரானுக்காக. சீனாவும் ஆயத்தப்படும் போலத் தெரிகிறது.
  14. இஸ்ரேலிய ஈரான் யுத்தத்தின்மூலம், பலஸ்த்தீன மக்களின் பிரச்சினை பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும். அம்மக்களின் அவலங்கள் உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு விடும். இஸ்ரேலோ, ஈரானோ இந்த யுத்தத்தில் வெல்லப்போவதில்லை. வெறும் அழிவுகள் மட்டும்தான் மிஞ்சப்போகிறது. பலஸ்த்தீன அரசினை அங்கீகரித்து, அவர்கள் மீதான ஆக்கிரமிப்பினை நிறுத்துவதுதான் இப்பிரச்சினைகளை முடிவிற்குக் கொண்டுவர ஒரே வழி. ஆனால், இஸ்ரேலிய அரசு இதற்கு ஒத்துக்கொள்ளப்போவதில்லை. மத்திய கிழக்கு தொடர்ந்தும் எரிந்துகொண்டே இருக்கப்போகிறது. இதன்மூலம் ஈரானைப் பலவீனப்படுத்த இவர்களால் முடியாது. ஏவப்பட்டவை ஏவுகணைகள் மட்டும்தான். அவற்றைச் சுட்டு வீழ்த்துவதுடன் இவர்களின் பணி முடிந்துவிடும்.
  15. "முதல் முறையாக ஈரான் தனது நாட்டிலிருந்து இஸ்ரேல் மீது தாக்கியிருக்கிறது. இது சரித்திரத்தில் முன்னர் இடம்பெறவில்லை. மேலும், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளும் பாவிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் தாக்குதலை எதிர்பார்த்திருந்தது என்பது உண்மைதான், ஆனால் இதைச் சமாளிக்க முடியுமா என்பது கேள்விக்குறி. இஸ்ரேல் மீது ஏற்படுத்தப்போகும் அழிவுகளை அடிப்படையாகக் கொண்டே இஸ்ரேலின் பதிலடி அமையும். அவர்களிடம் சில தாக்குதல் திட்டங்கள் இருக்கின்றன. ஈரானின் முக்கிய இலக்குகள் மீது அவர்கள் தாக்குவார்கள். நிச்சயம் அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவும்" என்று முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்புப் பேச்சாளர் பி பி சி இற்குக் கூறியிருக்கிறார். தனது டமஸ்க்கஸ் தூதரகம் மீதான தாக்குதலுக்காகவே இஸ்ரேல் மீது தாக்கினோம். தற்போது அந்த நடவடிக்கை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று ஐ நா விற்கான ஈரானின் நிரந்தரப் பிரதிநிதி கூறியிருக்கிறார். ஆனால், இஸ்ரேல் பதில்த் தாக்குதலில் ஈடுபடுமானால், அதன்மீது மிகக் கடுமையான தாக்குதலை ஈரான் நடத்தும் என்றும், நீதிக்குப் புறம்பான இஸ்ரேல் எனும் நாடு மீது தான் நடத்தும் தாக்குதல்களை அமெரிக்கா இடைமறிக்கக் கூடாது, விலகி நிற்க வேண்டும் என்றும் அமெரிக்காவை ஈரான் எச்சரித்திருக்கிறது.
  16. இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான் தனது இராணுவத் தளபதிகள் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பழிவாங்க, இஸ்ரேல் மீது ஈரான் தற்போது பல ட்ரோன்களைக் கொண்டு தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது. நூற்றிற்கு மேற்பட்ட ட்ரோன்களும், பலிஸ்ட்டிக் ஏவுகனைகளும் இத்தாக்குதலில் பாவிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் பதிலடித்தாக்குதலை ஆரம்பிக்கும்போது, அயல் நாடுகள் எவராவது இஸ்ரேலிய விமானங்கள் பறப்பதற்கு தமது வான்பரப்பை திறந்துவிட்டால் அந்த நாடுகளையும் தாக்குவோம் என்று ஈரான் எச்சரித்திருக்கிறது. ட்ரோன்கள் இன்னும் இஸ்ரேல் வந்து சேரவில்லை. இஸ்ரேல் அவற்றை அவதானிக்கின்றதாம். அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு உடவுவோம் என்று கூறியிருக்கிறது https://edition.cnn.com/middleeast/live-news/israel-hamas-war-gaza-news-04-13-24/index.html மத்திய கிழக்கில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புக்கள் இஸ்ரேலுக்கு உதவும் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. ஈரானைத் தோற்கடிப்போம் என்றும் அமெரிக்கா கூறியிருக்கிறது. மேலும், ஏவப்பட்ட ட்ரோன்களில் சிலவற்றை அமெரிக்கா இடைமறித்திருக்கிறது. இஸ்ரேலிய ஏவுகணை எதிர்ப்பு நிலை மீது ஹிஸ்புள்ளா ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலிய மக்களை பாதுகாப்பான பகுதிகள் என்று அறியப்பட்ட இடங்கள் நோக்கி நகருமாறு அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
  17. உங்களுக்குத் தனிநாடும் இல்லை சமஷ்ட்டியும் இல்லை. தமிழ்நாட்டில் போராளிகள் இயங்க விடமாட்டேன் - ‍ ரஜீவ் காந்தி பண்டாரியின் விஜயம் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்றில் வைகாசி 28 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தார் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி. இந்தியாவால் வரையப்பட்ட யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான நகலையும் அவர் தன்னுடன் கொண்டுவந்திருந்தார். அந்த நகல், சக்சேனாவுடன் ஜெயாரும், லலித்தும் நடத்தியை பேச்சுக்களின் அடிப்படையில் இந்திய வெளிவிவகார அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டிருந்தது. பண்டாரி நான்கு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். யுத்த நிறுத்தம், பேச்சுக்களில் ஈடுபடவிருக்கும் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குறித்த விபரம், அரசியல்த் தீர்விற்கான அடிப்படை மற்றும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும் நாள் ஆகியவையே அந்த நான்கு விடயங்களுமாகும். முதல் மூன்று விடயங்கள் குறித்து ஜெயாரும், லலித் அதுலத் முதலியும் பிடிவாதமான நிலைப்பாட்டில் இருந்தார்கள். அதுலத் முதலி, நகலில் இருந்த சொற்பிரயோகங்கள் குறித்து சர்ச்சைகளை எழுப்பிக்கொண்டிருந்தார். யுத்தநிறுத்தம் எனும் சொல் பாவிக்கப்பட்டதை அவர் ஆட்சேபித்தார். தமிழ் ஆயுத அமைப்புக்கள் தமக்கான பிரதேசம் ஒன்றினை வைத்திருக்காதவிடத்து யுத்த நிறுத்தம் என்கிற சொல் பாவிக்கப்படலாகாது என்றும், வன்முறை தவிர்ப்பு என்று அதனை மற்றவேண்டும் என்று தர்க்கித்தார். ஆனால் பண்டாரியோ லலித்தின் கோரிக்கையினை நிராகரித்தார். வடக்குக் கிழக்கில் அதிகரித்துவரும் போராளின் தாக்குதல்களின் பின்னால் இந்தியாவே இருக்கிறது என்று ஜெயார் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டினார். தமிழ் நாட்டிலிருந்து போராளிகளும் ஆயுதங்களும் இலங்கைக்குள் வருவதை இந்தியா தடுத்தாலே வன்முறைகள் குறைந்துவிடும் என்று அவர் கூறினார். ஆகவே, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஒரு நிபந்தனையாக பாக்கு நீரிணையூடாக போராளிகளும், ஆயுதங்களும் கடத்தப்படுவது முற்றாகத் தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இந்தவிடயத்தில் பண்டாரி விட்டுக்கொடுக்க முன்வந்தார். அடுத்ததாக நாட்டில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவது அரசாங்கத்தின் கடமையென்பதால், போராளிகளின் தாக்குதல்களால் மூடப்பட்ட பொலீஸ் நிலையங்கள் மீளத் திறக்கபட அரசாங்கத்திற்கு அனுமதி கொடுக்கப்பட வேண்டும் என்று கோரினார் ஜெயவர்த்தன. அதனையும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இணைத்துக்கொள்ள பண்டாரி சம்மதித்தார். ரஜீவ் காந்தி தமிழர் தரப்புப் பிரதிநிதிகளாக புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ மற்றும் புளொட் ஆகிய போராளி அமைப்புக்களும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் பங்குகொள்வார்கள் என்ற இந்தியாவின் பரிந்துரையினை ஜெயார் ஏற்க மறுத்தார். பயங்கரவாத குழுக்களுடன் பேசுவதில்லை என்கிற தீர்க்கமான முடிவினை தனது அரசாங்கம் எடுத்திருப்பதாக அவர் கூறினார். ஆயுத அமைப்புக்களுடன் பேசுவது அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதாக ஆகிவிடும் என்று அவர் தர்க்கித்தார். அதற்குப் பதிலளித்த பண்டாரி, அந்நியப்படுத்தப்பட்டுள்ள மக்கள் கூட்டம் ஒன்றின் அரசியல் அபிலாஷைகளை பேச்சுவார்த்தைகளூடாக தீர்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சட்டம், அங்கீகாரம் போன்ற‌ விடயங்கள் குறித்துப் பேசுவது பயனற்றது என்றும், தற்போதுள்ள நிலைமை அதனைக் கடந்து சென்றுவிட்டதாகவும் கூறினார். பஞ்சாப் மற்றும் அஸாமியப் பிரிவினைவாதப் போராளிகளுடன் ரஜீவ் காந்தி நடத்திவரும் பேச்சுக்களை இதற்கு உதாரணமாக முன்வைத்தார் பண்டாரி. அதன்பின்னர் போராளி அமைப்புக்களுடனும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனும் பேசுவதற்கு ஜெயார் ஒத்துக்கொண்டார். ஜெயாரின் இந்த இசைவை இந்தியாவின் இராஜதந்திரத்திற்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றி என்று ரஜீவும், பண்டாரியும் கிலாகித்து நின்றனர். ரஜீவ் காந்தியின் அழைப்பினை ஏற்று ஆனி 1 ஆம் திகதி அவருடன் பேச்சுக்களில் ஈடுபடுவதற்காக ஜெயவர்த்தன தில்லி சென்றார். ஜெயவர்த்தனவுடன் பேசும்போது பஞ்சாப்பிய, அஸாமியப் பிரிவினைவாதப் போராளிகளுடனனான தனது பேச்சுவார்த்தை அனுபவங்களை ரஜீவ் பகிர்ந்துகொண்டார். தமிழ் ஆயுத அமைக்களுடன் பேசுவதற்குச் சம்மதித்த ஜெயாரின் இசைவினை "துணிவான முடிவு" என்று ரஜீவ் பாராட்டினார். பதிலளித்த ஜெயார், அநுராதபுரம் மீதான தாக்குதலையடுத்து சிங்கள மக்கள் தமிழ் ஆயுத அமைப்புக்கள் மீது கடுங்கோபத்தில் இருப்பதாக க் கூறினார். ஆகவே, தான் தமிழ் ஆயுத அமைப்புக்களுடன் பேசப்போவது தெரிந்தால், சிங்கள மக்கள் தன்மீது அதிருப்தியடைவார்கள் என்றும், அதனைச் சமாளிக்க ரஜீவ் தனக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்காக, இருவிடயங்கள் குறித்து இந்தியா, இலங்கைக்குச் சார்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஜெயார் கூறினார். இப்படிச் செய்வதன் மூலம், இந்தியா தமிழ் மக்களுக்குச் சார்பாக நடந்துகொள்கிறது என்கிற எண்ணத்தில் இருக்கும் சிங்களவர்கள் தமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளலாம் என்று அவர் கூறினார். ஜெயார் ரஜீவிடன் முன்வைத்த இரு கோரிக்கைகளாவன, 1. தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு உதவுவதை இந்தியா முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும். 2. தமிழர்களின் அபிலாஷையான தனிநாட்டினை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. இவை இரண்டையும் ரஜீவ் உடனடியாகவே ஏற்றுக்கொண்டார். தனது விஜயத்தின் நோக்கத்தை நிறைவேற்றினார் ஜெயவர்த்தன. தொடர்ந்து பேசிய ஜெயார், பாக்குநீரிணையை இந்திய இலங்கைக் கடற்படைகள் கூட்டாக கண்காணிப்பதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் பயணிக்கும் போராளிகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார். இதற்குப் பதிலளித்த ரஜீவ், இதுகுறித்து தான் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தார். ஜெயாரின் விஜயத்தின் இரண்டாம் நாளான ஆனி 2 ஆம் திகதி, சூறாவளியினால் பாதிக்கப்பட்டிருந்த அயல்நாடான பங்களாதேசத்திற்கு அவரை அழைத்துச் சென்றார் ரஜீவ். தில்லியிலிருந்து டாக்காவிற்குச் செல்லும் வழியிலும், திரும்பி வரும் வழியிலும் இரு தலைவர்களும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து ஆராய்ந்தார்கள். இந்தப் பேச்சுக்களின்போது, அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகாக இலங்கையரசு முன்வைத்துவந்த மாவட்ட சபையினைக் கைவிட்டு மாகாண சபையினை ஜெயார் ஏற்றுக்கொள்ள வைப்பதில் ரஜீவ் வெற்றி கண்டார். ஜெயார் தான் போராளிகளுடனும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னண்னியினருடனும் பேசுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கூறினார். ஆனி 3 ஆம் திகதி ஜெயார் நாடுதிரும்பினார். ஜெயவர்த்தன தில்லியிலிருந்து புறப்படுமுன்னர் ஆறு பந்திகளைக் கொண்ட அறிக்கையொன்று இந்தியாவினால் வெளியிடப்பட்டது. அவற்றில் இரு முக்கியமான பந்திகள் இவ்வாறு கூறியிருந்தன, "இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கும், இறைமைக்கும் பங்கம் ஏற்படாத வகையில், அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல்த் தீர்வு ஒன்றினை அடைவதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் இணங்கியிருக்கிறார்கள்". "மேலும், அனைத்துவிதமான வன்முறைகளும் முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதிலும் இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வழமை நிலை உருவாக்கப்படுவதற்குத் தேவையான அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் கோரியிருக்கும் தமிழர்கள் தாமதமின்றி மீள நாடு திரும்புவதும் இதன்மூலம் ஏதுவாக்கப்படும்". தில்லியிலிருந்து ஜெயாரை வழியனுப்பி வைத்தபின்னர் பத்திரிகையாளர்களுடன் பேசினார் ரஜீவ். வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதனூடாகவே அரசியல்த் தீர்விற்கான சூழ்நிலையினை ஏற்படுத்த முடியும் என்று தாம் இருவரும் ஏற்றுக்கொண்டதாக‌ அவர் கூறினார். ஆகவே, தமிழ்நாட்டை தளமாகக் கொண்டு இலங்கையில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டுவரும் போராளி அமைப்புக்களின் செயற்பாடுகளைத் தான் முடக்கிவிடுவதற்குத் தீர்மானித்திருப்பதாகவும், பாக்கு நீரிணையூடாக ஆட்களும் ஆயுதங்களும் இலங்கைக்குக் கொண்டுசெல்லப்படுவதைத் தடுக்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதன்மூலம் வன்முறைகள் முடிவிற்குக் கொண்டுவரப்படும் என்றும், அதன்பிறகு இலங்கையரசாங்கமும் தமது இராணுவ நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளும் என்றும் ரஜீவ் கூறினார். "இலங்கையில் தனிநாடொன்றினை உருவாக்க போராடிவரும் தமிழ் கெரில்லாக்கள் இந்தியாவை அதற்கு ஒரு தளமாகப் பாவிப்பதை நான் இனிமேல் அனுமதிக்கமாட்டேன். அடுத்ததாக, இலங்கையில் தமிழர்கள் தமக்கென்று தனிநாடு ஒன்றினை எதிர்பார்க்க முடியாது. சமஷ்ட்டி முறையிலான தீர்வும் அவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இந்தியாவிலிருக்கும் மாநிலங்களையொத்த தீர்வொன்றினை அவர்கள் எதிர்பார்க்க முடியும்" என்று தீர்க்கமாகக் கூறினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களளைச் சந்தித்துவிட்டு தனது அலுவலகம் திரும்பிய ரஜீவ், தமிழ்நாட்டு முதலமைச்சரான எம்.ஜி.ஆருடன் தொலைபேசியில் பேசினார். ஜெயவர்த்தனவுடனான பேச்சுக்கள் பயனுள்ளதாக அமைந்திருந்தன என்று கூறிய ரஜீவ், இலங்கைத் தீவின் அரசியற் பிரச்சினைக்கான தீர்வொன்று எட்டப்படும் சூழ்நிலை விரைந்து உருவாகி வருகிறது என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டின் கல்வித்துறை அமைச்சராகவிருந்த இரா நெடுஞ்செழியன் தமிழக சட்டசபையில் எம்.ஜி.ஆருடன் ரஜீவ் காந்தி பேசிய விடயங்கள் குறித்து விபரித்ததுடன், தமிழரின் பிரச்சினைக்கு அரசியற் தீர்வொன்று எட்டப்படுவதற்கான சாத்தியம் உருவாகியிருப்பதாக ரஜீவ் காந்தி நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும், தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்தபின்னர், இலங்கையில் நடைபெற்றுவரும் வன்முறைகளை முடிவிற்குக் கொண்டுவரும் செயற்பாடுகளில் ரஜீவ் காந்தி இறங்குவார் என்றும் நெடுஞ்செழியன் தெரிவித்தார். ஆனி மாதத்தின் முதல் அரைப்பகுதியில் அமெரிக்காவிற்கும், ரஸ்ஸியாவிற்கு ரஜீவ் காந்தி உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டிருந்தார். ரொனால்ட் ரீகனுடனும், மிக்கெயில் கொர்பச்சேர்வுடனும் அவர் நடத்திய பேச்சுக்களில் இலங்கையில் நடந்துவரும் பிரச்சினை குறித்தும் பேசினார். ஆனி 18 ஆம் திகதி ரஜீவ் நாடு திரும்பினார். அதேநாள் இலங்கையில் யுத்தநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனி 3 ஆம் திகதி நாடுதிரும்பிய ஜெயார், கட்டுநாயக்க விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, இறுதியாக இந்தியா களநிலவரங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பதாகக் கூறினார். மேலும், இந்தியாவின் மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரங்களை ஒத்த அதிகாரங்களைத் தமிழர்களுக்கு தான் வழங்கவிருப்பதாகவும், ஆனால் அதிகாரப் பரவலாக்கலின் அலகு மாவட்டங்கள் தான் என்றும் கூறினார். சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கம், தில்லியில் இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து வழங்கிய அறிக்கை மற்றும் கட்டுநாயக்காவில் ஜெயார் வழங்கிய செவ்வி ஆகியவை குறித்து தனது கருத்தினைப் பதிவுசெய்தார். இருநாட்டுத் தலைவர்களும் இணைந்து வழங்கிய அறிக்கையினை வரவேற்ற அவர், "அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கான சூழ்நிலை ஏற்படுத்தவேண்டும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் கூறியதை நான் வரவேற்கிறேன். இந்தியா இப்பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கினை ஆற்றுவதன் மூலம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைப் பெற்றுத்தரவேண்டும்" என்று கூறினார். ஆனால், கட்டுநாயக்காவில் ஜெயார் தெரிவித்த மாவட்ட சபைகளே அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகுகள் என்பது தனக்கு ஏமாற்றமளிக்கிறது என்றும் கூறினார். தில்லியில் வெளியிடப்பட்ட இணைந்த அறிக்கையினைப் பாராட்டிய லலித், இந்தியாவின் நிலைப்பாட்டில் நல்ல மாற்றங்கள் தெரிகின்றது என்றும் புகழ்ந்தார்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.