Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. அவன் சுகயீனமுற்று இருப்பதாகத் தெரிந்து சில மாதங்களாக அவன் பற்றி விசாரித்து வருகிறேன். அவனது சகோதரனுடனான எனது நாளாந்த பேச்சுக்களில் அவனும் நிச்சயம் இடம்பெறுவான். சிலவேளைகளில் நம்பிக்கையுடன் அவன் பேசும் போது, "கடவுளே அவன் தப்பிவிடவேண்டும்" என்று மனதிற்குள் நினைப்பதுண்டு. வேலைத்தளத்தில் பலருக்கு அவன் முன்மாதிரியாகத் தோன்றியவன். வாழ்வினை மகிழ்ச்சியாக வாழும் வெகுசிலரில் அவனும் ஒருவனாக இருந்திருக்கிறான். எவ்வளவுதான் நம்பிக்கைகள் இருந்தாலும், யதார்த்தம் என்று இருக்கிறதல்லவா? அதுதான் அவனது பேச்சுக்களில் அடிநாதமாக இருக்கும். ஒவ்வொருநாளும் எமது பேச்சுக்களின் முடிவில், "நாம் மனதளவில் தயாராகி வருகிறோம், அம்மாவையும் அப்பாவையும் நினைக்கும்போதுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது" என்று கூறி முடிப்பான். அவனுக்கும் இரண்டு பெண்பிள்ளைகள். அவனது சகோதரனுடன் மிகவும் நெருக்கமானவர்கள் என்று அவன் அடிக்கடி சொல்லியிருக்கிறான். அவனது இழப்பு பலருக்கு பாரிய அதிர்ச்சியினையும் சோகத்தனையும் வழங்கவிருக்கிறது. இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னராக இருக்கலாம். என்னிடம் வந்து, "அண்ணாவை பலியேடிவ் கெயருக்கு மாற்றவேண்டும் என்று வைத்தியர்கள் பேசுகிறார்கள். அவனுக்குக் கொடுக்கவேண்டிய மருந்தின் அளவை நான்கு மடங்காக்கியும் பார்த்தாயிற்று, ஆனால் புற்றுநோய் கேட்பதாக இல்லை. அது தன்பாட்டில் வளர்ந்துகொண்டிருக்கிறது. அவனால் இப்போது கொடுக்கும் மருந்தின் அளவைத் தாங்க முடியாது, ஆகவே சிறிது சிறிதாக அதனைக் குறைத்து அவனது இறுதி நாட்களில் அவன் விரும்பியபடி வாழ நாம் விடப்போகிறோம்" என்று கூறிவிட்டு, "இனிவரும் நாட்களில் நான் அடிக்கடி லீவு எடுக்கவேண்டி இருக்கும், அனுமதி தருவாயா?" என்று கேட்டான். மனமுடைந்து போய்விட்டேன். "என்ன கேட்கிறாய், நீ போகும்போது சொல்லிவிட்டுப் போ, முன் அனுமதி எதுவும் வேண்டாம், அண்ணாவையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள், தவறாமல் என்னையும் உனது வட்டத்திற்குள் வைத்துக்கொள்" என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றேன்.
  2. ஒரு ஆறு அல்லது ஏழு மாதங்கள் இருக்கலாம். வழமை போல எனது பணித்தளத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பணியாளர்களுடன் பேசுவது போல அன்று பேசிக்கொண்டு வந்தேன். அவனது இளைய சகோதரனைப் பார்த்துப் பேசலாம் என்று போனபோது எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இயல்பாகவே குறும்புத்தனம் மிக்க அவனது சகோதரனின் முகம் வாடியிருந்தது. பணி ஆரம்பிக்கும் முன்னர் நடக்கும் கூட்டத்தில் அவனது முகத்தைக் கவனித்தேன், வழமையான புன்னகை இருக்கவில்லை. ஆகவேதான், "ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?" என்று கேட்டேன். சிறிது நேரம் மெளனத்திற்குப் பின்னர், மூச்சினை ஆளமாக இழுத்துக்கொண்டு பேசினான். "அண்ணாவுக்குச் சற்றுச் சுகமில்லை" என்று அவன் கூறவும், "அப்படியென்ன சுகமில்லை, மருந்தெடுத்தால்ப் போயிற்று" என்று நான் சர்வ சாதாரணமாகக் கூறினேன். "இல்லை, அவன் சில நாட்களாகவே அடிக்கடி கோபப்படுகிறான். எவருடனும் பேச விரும்புகிறான் இல்லை. நாங்கள் அவனை அப்படிப் பார்த்ததில்லை". என்று கூறினான். "சரி, வைத்தியரிடம் அழைத்துச் சென்றீர்களா?" என்று கேட்க, "ஆம், அழைத்துச் சென்றோம். அவனுக்கு மூளையில் கட்டியொன்று இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். பெரும்பாலும் அது புற்றுநோயாக இருக்க வாய்ப்பிருக்கிறது" என்று கூறிவிட்டு அமைதியானான். அவனது கண்கள் கலங்கியிருந்தன. எனக்கோ எதுவுமே சொல்லத் தெரியவில்லை. "இல்லை, அப்படியிருக்காது. உனது அண்ணனன் சிறந்த உடற்பயிற்சியாளன், திடகாத்திரமானவன், அவனுக்கு புற்றுநோய வரச் சந்தர்ப்பமில்லை" என்று அவனை ஆசுவாசப்படுத்தினேன். ஆனால், அவனுக்குத் தெரியும் நான் சொல்வது வெற்றுச் சமாதானம் தான் என்பது. நாட்கள் செல்லச் செல்ல அவனது உடல்நிலை மோசமாயிருக்க வேண்டும். அவனது சகோதரன் அடிக்கடி லீவு எடுக்கத் தொடங்கினான். "அண்ணாவை ஒவ்வொரு வைத்தியராகக் கூட்டிச் செல்கிறோம். அவனது உடல்நிலை மோசமாகிக்கொண்டு போகிறது. புற்றுநோயென்று உறுதிப்படுத்தி விட்டார்கள். சத்திர சிகிச்சை மூலம் அகற்றும் கட்டத்தை அவன் தாண்டி விட்டான். கீமோ (கதிர்வீச்சு ரீதியிலான‌ சிகிச்சை) ஆரம்பித்திருக்கிறோம். உயிர் பிழைப்பதற்கான சாத்தியப்படு மிகவும் குறைவென்றாலும், எம்மாலான அனைத்தையும் அவனுக்காகச் செய்துகொண்டிருக்கிறோம்...."இப்படி ஏதாவது ஒரு மனம் நொருங்கிப்போகும் செய்தியும், சாத்தியமே அற்ற நம்பிக்கை தொக்கு நிற்கும் வசனங்களும் அவனிடமிருந்து அவ்வபோது வந்து போகும்.
  3. நான் பணிபுரியும் தொழிற்சாலையிலிருந்து அவன் ஏறக்குறைய 100 கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் இன்னொரு கிளையில் பணிபுரிய ஆரம்பித்திருந்தான். இயல்பாகவே நட்பாகவும், மிகுந்த தோழமையோடும் பழகும் அவனுக்கு போகுமிடமெல்லாம் நண்பர்களை உருவாக்கிக்கொள்வதென்பது கடிணமானதாக ஒருபோதும் இருந்ததில்லை. ஏதாவது பயிற்சிநெறிக்காக அவனது தொழிற்சாலைக்குச் செல்லும்போது வணக்கம் சொல்லிக்கொள்வோம். அவனது சகோதரன் என்னுடைய அணியில் பணிபுரிவதால் இடைக்கிடையே அவன் குறித்து விசாரித்துக்கொள்வேன். எமக்குள்ளான பிரச்சினைகள் குறித்து அவன் தனது இளைய சகோதரனுக்குச் சொல்லியிருக்கலாம். ஆகவே, நான் அவனுடன் பேசும்போது சில விடயங்கள் குறித்து என்னிடம் கேட்பான் அவனது இளைய சகோதரன். இப்படியே கழிந்துசென்ற சில வருடங்களில் அவன் ஒரு வியட்நாமியப் பெண்ணை மணமுடித்துவிட்டான் என்றும், தொழிற்சாலைக்கு அருகிலேயே, கடற்கரையினை அண்டிய வீடொன்றில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான் என்றும் அறிந்தபோது சந்தோசமாக இருந்தது. தனக்குப் பிடித்த இடத்தில், பிடித்த பெண்ணுடன் மகிழ்வாக வாழ்வதென்பது எல்லோருக்கும் கிடைக்கக் கூடியது அல்லவே, அதுதான் அந்த மகிழ்ச்சி என்று வைத்துக்கொள்ளுங்கள்.
  4. மன்னிக்க வேண்டும், வேலையில் நிற்கிறேன், பின்னேரம் தொடரலாமா?
  5. 2012 இலிருந்து 2015 வரையான காலப்பகுதியில் அவன் எமக்குப் பொறுப்பாகவிருந்தான். எமக்குத்தான் அவனுடன் பேசப் பிடிக்கவில்லையாயினும், அவன் என்றும்போல சகஜமாகவே பழகினான். சிறிது காலம் செல்லச் செல்ல அவன் மீதிருந்த வெறுப்பும், கோபமும் மறையத் தொடங்கியது. அவனுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்கிற நிலை வந்தபின்னர் வேறு வழி தெரியவில்லை எனக்கு. மற்றைய இரு இந்தியர்களும் அவனை சிறிதும் சட்டை செய்யவில்லை, அவனுக்கும் அது நன்றாகவே புரிந்தது. அனுபவத்தாலும், அறிவிலும் நாம் அவனைக் காட்டிலும் சிறந்தவர்கள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும், ஆகவே அவனும் அவர்களது நடத்தைபற்றிக் கண்டும் காணாதவன் போலச் சென்றுவிடுவான். அவனுடன் ஓரளவிற்கேனும் பேசுபவன் என்கிற ரீதியில் என்னுடன் வந்து அவ்வப்போது பேசுவான். அவ்வாறான வேளைகளில் அவனது இன்னொரு பக்கம் குறித்த விடயங்கள் சிலவற்றை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. மலையேறுதல், ஸ்கேட் போர்டிங் எனப்படும் மட்டைகளில் ஓடுதல் போன்ற விளையாட்டுக்கள் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன. ஆசியாவின் உணவை விரும்பிச் சாப்பிடும் அவனுக்கு ஆசியப் பெண்களையும் பிடிக்கும் என்பதும் எனக்குத் தெரியவந்தது. தொழிற்சாலையின் வினைத்திறன் அதிகரிக்கும் செயற்பாடுகளில் அவன் எடுத்த முயற்சிகளுக்கு என்னாலான உதவிகளை வழங்கினேன். அவனோடு தொடர்ந்தும் முரண்பட்டுக்கொண்டு பயணிப்பதில் பயனில்லை என்பதும் புரிந்தது. தொழிற்சாலையின் வருடாந்த கிறிஸ்துமஸ் நிகழ்வுகள், ஏனைய கொண்டாட்டங்களில் அவன் கலந்துகொள்வான். நானும் அடிக்கடி அங்கு சமூகமளிப்பதால் அவனது வேலைக்குப் புறம்பான வாழ்வுபற்றியும் அறிய முடிந்தது. சில காலம் எமது தொழிற்சாலையில் இருந்துவிட்டு இதே நிறுவனத்தின் இன்னொரு தொழிற்சாலைக்கு மாற்றலாகிப்போனான் அவன். அவனது வளர்ச்சிபற்றி எனக்குள் இருந்த பொறாமையோ, அல்லது வெறுப்போ அப்போது முற்றாக மறைந்திருக்க, அவன் பற்றி அவ்வப்போது பேசிக்கொள்வதுடன் அவன்பற்றிய எனது சிந்தனைகள் நின்றுபோகும். மாதத்தில் ஒருமுறையாவது எமது தொழிற்சாலைக்கு வருவான். வந்தால், அனைவருடனும் சிரித்துப் பேசுவான். தவறாமல் என்னிடம் வந்து "எப்படியிருக்கிறாய் நண்பா?" என்றுவிட்டுச் சிரிப்பான். "இருக்கிறேன், நீ எப்படி?" என்று கேட்பேன். "உனக்குத் தெரியும்தானே என்னைப்பற்றி? எதனையும் சீரியசாக எடுக்கமாட்டேன். வாறது வரட்டும் , பார்க்கலாம் என்று இருக்கிறேன்" என்று சொல்வான். அவனது இளைய சகோதரன் அப்போது எமது தொழிற்சாலையில் பணிபுரியத் தொடங்கியிருந்தான். எனது அணியில் அவன் இடம்பெற்றிருந்ததால், அவனது சகோதரன் பற்றி அடிக்கடி கேட்டுக்கொள்வேன்.
  6. ஒரு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் சென்றிருக்கலாம், 2012 என்று ஞாபகம். எமக்கு அடுத்த நிலைக்கான பதவி ஒன்று வெற்றிடமாகவ வரவே நானும் இன்னும் இரு இந்தியர்களும் அந்த நிலைக்கு விண்ணப்பித்தோம். 6 வருடங்களாக அந்தத் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதால் அனுபவமும், தேர்ச்சியும், ஆங்கிலத்தில் ஓரளவிற்குச் சரளமாகப் பேசும் வல்லமையும் வந்து சேர்ந்துவிட்டதால், நேர்முகப்பரீட்சையில் இலகுவாக சித்தியடைந்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன். நேர்முகப் பரீட்சை நாள். வீட்டில் நான் செய்த தயார்ப்படுத்தல்களும், என்னைவிட வேறு எவரும் இந்தப் பதவிக்குத் தகுதியற்றவர்கள் இல்லை என்கிற அகம்பாவமும் ஒன்றுசேர நேர்முகப் பரீட்சையினை எதிர்கொண்டேன். ஆனால், அங்கும் ஒரு சிக்கல் இருந்தது. எனது அணியில் எனக்கு சற்று மேலான பதவியில் இருந்து பின்னர் மேற்பதவியொன்றில் பணிபுரிந்த ஒருவனும் நேர்முகப் பரீட்சைக்கான மூன்று தேர்வாளர்களில் ஒருவனாக இருந்தான். அவனுடன் அடிக்கடி நான் முரண்பட்டுக்கொண்டது நினைவில் வந்து போகவே அன்று காலையில் இருந்த அகம்பாவம் முற்றாகக் களைந்துபோக, எச்சரிக்கையுணர்வு மனதில் குடிபுகுந்து கொண்டது. நேர்முகத் தேர்வு கடிணமானதாக இருக்கவில்லை எனக்கு. எல்லாமே தெரிந்த விடயங்கள் தான். முடிந்தவரையில் மிகவும் நீண்ட பதில்களை அளித்தேன். "போதும் அடுத்த கேள்விக்குப் போகலாம்" என்று தேர்வாளர்களே இடைமறித்த சமயங்களும் இருந்தது. சுமார் 45 நிமிடங்கள் பேசியிருப்பேன், மிகுந்த நம்பிக்கையுடன், தேர்வு அறையினை விட்டு வெளியே வந்தேன். மறுநாள் என்னுடன் அதே பதவிக்கு விண்ணப்பித்த இரு இந்தியர்களையும் சந்தித்தபோது, என்னைப்போலவே தாமும் சிறப்பாகச் செய்ததாகக் கூறியபோதும் எனக்குள் இருந்த நம்பிக்கை சிறிதும் அசையவில்லை. ஆனால், அன்று மாலையே திடீரென்று மனதில் இடி வீழ்ந்தது போலாகிவிட்டது. நாம் விண்ணப்பித்த அதே பதவிக்கு அவனும் விண்ணப்பித்திருந்தான் என்பதும், அவனும் மிகவும் திறமையாக நேர்முகத் தேர்வைச் செய்தான் என்பதும் எனக்குத் தெரிய வந்தது. நம்பமுடியவில்லை. "இது எப்படிச் சாத்தியம்? நாம் விண்ணப்பிக்கும் பதவி எம்மைப்போன்ற அனுபவம் உள்ளோருக்கானது. இவனோ சின்னப் பையன், எமது அனுபவத்துடன் ஒப்பிடும்போது, மிகக் குறைந்த அனுபவத்தைப் பெற்றிருந்தவன். இவனை நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருக்கவே கூடாது" என்று மனம் சொல்லியது. அடுத்தவாரம் நேர்முகத் தேர்வின் முடிவுகள் வெளிவரவே நாம் மனமுடைந்து போனோம். எவரும் எதிர்பார்க்காதிருக்க, அவனுக்கு அந்தப் பதவியினை நிர்வாகம் கொடுத்தது மட்டுமல்லாமல் அவனையே எமக்குப் பொறுப்பான மேலாளனாகவும் ஆக்கியது. பெருத்த கோபமும், அதிர்ச்சியும், எரிச்சலும் வந்து மனதில் குடிகொண்டது. இந்தியர்களையும், இலங்கையனான என்னையும் வேண்டுமென்றே தவிர்த்து தமது இனத்தவனை பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள் என்று எமக்குள் பேசத் தொடங்கினோம். இது ஓரளவிற்கு உண்மை என்பதை பின்வந்த நாட்களில் எம்மால் உணரக் கூடியதாக இருந்தது. அவனுக்குப் பதவியுயர்வு கொடுத்து சில மாதங்களின் பின்னர் நேர்முகத் தேர்வில் தேர்வாளனாகக் கலந்துகொண்டவனுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. தென்கொரியாவைச் சேர்ந்தவன். அங்கு பிறந்திருப்பினும் மிகச் சிறிய வயதிலேயே அவுஸ்த்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்துவிட்டவன். இயல்பான இனவாதி. குறிப்பாக இந்தியர்களையும், இலங்கையர்களையும் வெளிப்படையாகவே வெறுப்பவன். என்னுடன் பேசிக்கொண்டிருக்கும்போது எதேச்சையாக, "அவனை நாம் தான் அப்பதவியில் அமர்த்தினோம். அப்பதிவியே அவனுக்காக உருவாக்கப்பட்டதுதான். அவனை இன்னும் மேல்நோக்கி எடுத்துச் செல்வதே எமது நோக்கம்" என்று மிகச் சாதாரணமாகக் கூறினான். "அப்படியானால் எமது நிலை என்ன?" என்று சற்றுக் கோபத்துடன் கேட்டேன். "உனது நிலையா? நீயும் அவனும் ஒன்றா?" என்று அவன் என்னிடம் கேட்டான். அதன் பின்னர் என்னிடம் கூறுவதற்கு எதுவுமே இருக்கவில்லை.
  7. 2007, நான் அத்தொழிற்சாலையில் இணைந்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகியிருந்தது. என்னைப்போலவே இங்குவந்து, தம்மை நிலைநிறுத்திக்கொள்ள பல இந்தியர்களும், இலங்கையர்களும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம். வெள்ளை நிறத்தவரின் தொழிற்சாலை, வேலைத்தளத்தில் அணியின் மேலாளர்களில் இருந்து அதியுயர் நிர்வாகத் தலைவர்கள் எல்லோருமே வெள்ளை நிறத்தவர்கள். அவர்களுடன், அவர்கள் பேசும் மொழியினையும், பேசும் சங்கேத வார்த்தைகளும் விளக்கமேயின்றிக் கேட்டுக்கொண்டு, அருகில் இருப்பவன் சிரித்தால், நாமும் சிரித்துக்கொண்டு, வேலைத்தளத்தில் சமூகப் படிகளில் நாம் ஏறலாம் என்று நினைத்திருந்த காலம். எனது வேலைத்தள அணியில் 20 பேர் இருந்தோம். எமது மேலாளர் ஒரு வெள்ளையினத்தவர். சுவிட்ஸர்லாந்தில் பிறந்து, இங்கு வளர்ந்தவர். சிலவேளைகளில் அவர் பேசுவதைக் கிரகிப்பதற்குள் அவர் அடுத்த வசனத்தைத் தொடங்கிருப்பார். புரிந்துகொள்வதற்குச் சிரமப்பட்டுக்கொண்டே பணிபுரிந்த காலம். சிலவேளைகளில் நாம் அவர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே ஆறுதலாய்ப் பேசுவர்கள். அதுகூட சிலவேளை சிரமாகத் தெரிந்தது. என்ன உலகமடா இது என்று சலித்துக்கொண்ட பொழுதுகள். ஆனால், அணியிலிருந்த வெள்ளையர்களை விட நம்மவர் வேலைகளில் சுறுசுறுப்பானவர்கள். ஊரில் கஸ்ட்டப்பட்டு வேலை தேடி, அதனைத் தக்கவைத்துக்கொள்ள அதைவிடக் கஸ்ட்டப்பட்டு வேலை செய்யும் எமக்கு இங்குள்ள வேலை கடிணமானதாகத் தெரியவில்லை. ஆகவே, வேலையென்றால் கூப்பிடுங்கள் இலங்கையர்களையும் இந்தியர்களையும் என்று வெள்ளையர்களே அவ்வப்போது பேசுவது கேட்கும். கடிண உழைப்பாளிகள் என்கிற பெயரும் எமக்கு இருந்தது. அதனால், வழமை போலவே மேலாளரின் செல்லப்பிள்ளைகள் யாரென்பதில் எமக்குள்ப் போட்டி ஏற்படுவதுண்டு. எம்மிடம் வேலை வாங்கலாம் என்று அவர் எண்ணி வந்தபோதிலும், நாம் அதனை ஒரு கெளரவமாக பார்க்க ஆரம்பித்தோம். ஆகவே, எம்மைத்தவிர வேறு எவரும் மேலாளரின் மதிப்பிற்கு பாத்திரமாயிருப்பது எமக்கு எரிச்சலைத் தரும். அந்தக் காலமொன்றில்த்தான் அவன் வந்தான். என்னை விட வயதில் சிறியவன். 26 அல்லது 27 வயதிருக்கலாம். மிகவும் திடகாத்திரமானவன். வெள்ளையினத்தவன். சுருள் சுருளான மயிர்க்கற்றைகள் பொன்னிறத்தில் வளர்ந்திருக்க தனது பெயர் சொல்லி ஒருநாள்க் காலையில் அணியின் கூட்டத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டான். அவன் பற்றி மேலாளர் அறிமுகம் கொடுத்தபோது மனதிற்குள் சிறிய எரிச்சல். "எமக்கெல்லாம் இந்த அறிமுகம் கொடுத்தார்களா, இல்லையே? இவனுக்கு மட்டும் எதற்கு இந்த அறிமுகம்?" என்கிற கேள்வி. விடை எமக்குத் தெரியவில்லை. அணியில் பணிபுரிந்தவர்களில் கீழ்மட்ட வேலைகள், இடைநிலை வேலைகள், உயர் நிலை வேலைகள் என்று மூன்று பிரிவுகளாகாப் பிரிக்கப்பட்டிருந்தோம். இடைநிலை வேலைகளை பெரும்பாலும் இந்தியர்களும் இலங்கையர்களும் செய்துகொள்ள கீழ்மட்ட வேலைகளையும் உயர் மட்ட வேலைகளையும் வெள்ளையர்களே பார்த்துக்கொண்டார்கள். அவனும் கீழ்மட்டத்திலிருந்தே ஆரம்பித்தான். எமக்குக்கீழ் இருக்கிறான் என்பதால் அவன் பற்றி அதிக அக்கறை காண்பிப்பதை நாம் மறந்துவிட்டோம். ஆனால், அடிக்கடி அணிக் கூட்டங்களில் அவனின் பெயர் அடிபடும். அவனது பெயரை அணியின் மேலாளர் உச்சரிக்கும்போது வியப்பும், எரிச்சலும் ஒருங்கே வந்து போகும். ஆனாலும் அவன்குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்று இருந்துவிட்டோம். நாட்கள் செல்லச் செல்ல அவன் அணியில் முக்கியமானவர்களில் ஒருவனாகிப் போனான். கூட்டங்களில் அவன் பேசுவதை மேலாளர் உன்னிப்பாகக் கேட்பது புரிந்தது. அவன் ஈடுபட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து அவர் அடிக்கடி பெருமையுடன் பேசும்பொழுதுகளில் அதே எரிச்சல் வந்து போகும். ஆனால், அவன் குறித்த எமது பார்வைகள் தவறானவை என்பதை அவன் தொடர்ச்சியாக நிரூபித்து வந்தான். இலங்கையில் பொறியியல் படித்துப் பட்டம் பெற்றவன் என்கிற பெருமையும், இங்கிருக்கும் வெள்ளைக்காரனை விடவும் நாம் படித்தவர்கள் என்கிற எண்ணமும் அவனை எம்மிலும் கீழானவனாகப் பார்க்கத் தூண்டியது எமக்கு. அதனாலேயே அவனின் திறமைகளை ஏறெடுத்தும் பார்க்க நாம் நினைக்கவில்லை. ஆனால் எமது எண்ணங்களையும், பெருமைகளையும் அவன் மிக இலகுவாக உடைத்துக்கொண்டே எம்மை நோக்கி வந்துகொண்டிருந்தான். ஒருநாள் திடீரென்று கீழ்மட்ட அணியில் இருந்த அவனை எமது, அதாவது நடுத்தர வர்க்க அணியில் கொண்டு வந்து இணைத்தார் மேலாளர். எமக்கோ தூக்கிவாரிப் போட்டது. "இது எப்படித் தகும்? நாம் படித்தவர்கள் இல்லையா? பண்ணைகளில் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு நின்றவனை எம்மோடு, சரிக்குச் சமமாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். வெள்ளைக்காரன் என்பதால்த்தானே இதுவெல்லாம்?" என்கிற எண்ணம் தலையில் ஏறி அமர்ந்துகொள்ள அவன் மீது தேவையில்லாமல் எரிச்சலை வாரியிறைக்கத் தொடங்கினோம். ஆனால், அவனுக்குத்தான் நாம் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறோம் அல்லது எமக்குள் என்ன பேசிக்கொள்கிறோம் என்பதுபற்றி எதுவும் தெரியாதே? அவனோ எம்மிடம் மிகவும் சகஜமாகப் பழகினான். சில வேளைகளில் எம்மிடமே வந்து சில விடயங்களை எப்படிச் செய்யலாம் என்று கூடக் கேட்பான். விரும்பாதுவிடினும் கூட, அவன் கேட்கும்போது நாம் உதவியிருக்கிறோம். அவனும் நன்றியுடன் சென்றுவிடுவான். சில காலத்தின் பின்னர் இந்தியர்கள் மற்றும் இலங்கையர்கள் என்று கிட்டத்தட்ட ஒரே காலப்பகுதியில் வேலையில் இணைந்தவர்களுக்கு அணியில் மேல்த்தட்டுப் பிரிவில் பதவி உயர்வு கிடைத்தது. அவ்வாறு பதவி உயர்வு கிடைத்துச் சென்றவர்களில் நானும் ஒருவன். மூன்று அல்லது நான்கு வருடங்கள் இருக்கலாம். 2010 வாக்கில் அவனையும் பதவியுயர்வு கொடுத்து எமக்குச் சமனானவனாக ஆக்கி அழகுபார்த்தது நிர்வாகம். இத்தனைக்கும் அவன் எம்மை வெறுக்கவில்லை. நிர்வாகத்திற்கு நெருக்கமானவன் என்பதைத்தவிர அவனை நாம் வெறுப்பதற்கு வேறு எந்த காரணங்களும் எமக்கு இருக்கவில்லை. அவன் குறுகிய காலத்தில் காட்டிய அதீத வளர்ச்சி எமக்குள் அச்சத்தை ஏற்படுத்தியிர்ந்தாலும் கூட, அவன் எமக்குப் போட்டியாக வரலாம் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.
  8. இஸ்ரேலியப் பயங்கரவாதிகளின் வழிகாட்டலில் தமிழின அழிப்பை முன்னெடுத்த ஜெயாரும் லலித் அதுலத் முதலியும் இறுதியுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைப் பலியிட இஸ்ரேலினால் வழங்கப்பட்ட கிபிர் கொலைக்கருவி தம்மீது நடத்தப்பட்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளின் பின்னால் இஸ்ரேலின் மறைகரம் இருப்பதை யாழ்ப்பாணத் தமிழர்கள் அறிந்துகொண்டனர். பாலஸ்த்தீனர்களை ஒடுக்குவதில் இஸ்ரேலியர்கள் கடைப்பிடித்த அதே அனுகுமுறையினையே ஜெயவர்த்தன - லலித் குழுவும் பாவித்து வருகின்றது என்பதை அவர்கள் உணரத் தலைப்பட்டனர். தமிழர்களைப் போலவே இந்தியாவும் அதனை நன்கு உணர்ந்து கொண்டது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் இலங்கைக்குள் செயற்படுவது தனக்குச் சவாலான விடயமாகக் கணித்த இந்தியாவின் ரோ, தனது சொல்லிற்குக் கட்டுப்பட்ட சில தமிழ்ப் போராளி அமைப்புக்களிடம் யுத்தத்தை கொழும்பிற்கும், இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்த்தரிக்குமாறு கோரியதாக இவ்வமைப்புக்களின் உறுப்பினர்கள் பின்னாட்களில் என்னிடம் தெரிவித்தனர். புலிகள் இந்தியாவின் திட்டத்தை மறுக்க, ஈரோஸ் அமைப்பு அதனைச் செய்வதற்கு ஒப்புக்கொண்டது (என்னிடம் இந்த விடயத்தை கூறியவர் போராளி அமைப்பொன்றில் முக்கிய உறுப்பினராக இருந்ததுடன் இலங்கை அரசுடனும் இந்தியாவுடனும் நெருங்கிய தொடர்புகளையும் பின்னாட்களில் ஏற்படுத்திக் கொண்டவர். தான் கூறிய விடயம் வெளியே தெரியவருமிடத்து தனக்கு அது ஆபத்தாக முடியலாம் என்று அஞ்சியதால் தனது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று என்னைக் கேட்டிருந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் அவர் கொல்லப்பட்டு விட்டார் (2005)). இக்காலத்தில் பார்த்தசாரதி இலங்கையில் இருந்தார். புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதியிலும், ஐப்பசி மாதத்தின் ஆரம்பத்திலும் பல வெளிநாட்டுச் செய்திச் சேவைகளின் ஊடகவியலாளர்கள் கொழும்பில் முகாம் அமைத்துத் தங்கியிருந்தனர். இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்படும் எண்ணிக்கை பல உலக செய்திச் சேவைகளின் கவனத்தை ஈர்த்திருந்ததனால் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களைச் சேர்ந்த பல செய்தி நிறுவனங்கள் இலங்கையில் நடக்கும் அக்கிரமங்களை உடனுக்குடன் வெளியே கொண்டுவர ஆவலாக இருந்தன. தென்னாசியாவின் கொலைக்களம் என்று அக்காலத்தில் அறியப்பட்ட இலங்கை குறித்து இந்தியாவிலிருந்த பி.பி.சி யின் செய்தியாளர் மார்க் டல்லி எழுதுகையில், "உலகிலேயே மிகவும் காட்டுமிராணடித்தனமான, ஒழுக்கக் கட்டுப்பாடுகள் எதனையும் கொண்டிராத இராணுவம்" என்று இலங்கை இராணுவத்தை வர்ணித்திருந்தார். 1978 ஆம் ஆண்டு முதல் 1997 வரையான 18 வருடங்களில் ஓரிரு நாட்களைத் தவிர பெரும்பான்மையான நாட்களில் டெயிலி நியுஸ் செய்திகளுக்காக மந்திரிசபைச் செய்தியாளர் மாநாட்டில் தவறாமல் கலந்துகொண்டிருக்கிறேன். அப்படியான சந்தர்ப்பங்களில் பல வெளிநாட்டுச் செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. 1984 ஆம் ஆண்டின் புரட்டாதி மற்றும் ஐப்பசி மாதங்கள் பெருமளவு வெளிநாட்டுச் செய்தியாளர்களை நாட்டிற்குள் தருவித்திருந்தது. 1984 ஆம் ஆண்டின் ஆவணி 27 ஆம் திகதி வெளிவந்த நியூஸ் வீக் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையின் வடக்குக் கிழக்கில் இலங்கை ராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்ட தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் அப்பாவிகள் என்று எழுதியிருந்தது. ஓரிரு பொதுமக்களைத் தவிர கொல்லப்பட்டவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் தான் என்று இலங்கையரசாங்கம் செய்துவரும் பிரச்சாரத்தைச் சாதாரண சிங்கள மக்களே நம்ப மறுத்தனர் என்று அவ்வறிக்கை கூறியது. தமிழர்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான சிங்களவர்கள் கூட ஜெயவர்த்தன சமாதான வழிமுறைகளில் தமிழரின் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காணப்போவதில்லை என்பதை நம்புவதாகவும் அவவறிக்கை மேலும் கூறியது. வோஷிங்க்டன் போஸ்ட் பத்திரிக்கை யாழ்ப்பாணத்தில் இராணுவத்தால் நடத்தப்பட்டுவரும் படுகொலைகள் குறித்து எழுதுகையில், "இரவு வேளைகளில் யாழ்நகரம் பேய்நகரம் போல் காட்சியளிக்கிறது. தம்மீதான போராளிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்கலாக அப்பாவிகளை இராணுவம் கொன்றுவருகிறது. நாட்டின் அதிபர் ஜெயவர்த்தன, அரசியல் தீர்வில் ஆர்வமுள்ளவர் போல்த் தோன்றவில்லை. தமிழரின் பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வொன்றினை வழங்கவே அவர் முயல்வதுடன், அதனை தமிழர்களை அச்சமூட்டிச் சரணடைய வைப்பதன் மூலம் செய்ய எத்தனிக்கிறார்" என்று எழுதியது. மும்பாயிலிருந்து வெளிவரும் பிரபலப் பத்திரிக்கையான பிலிட்ஸ் அதன் ஆவணி 18 ஆம் நாள் இதழில் யாழ்ப்பாணத்திலும், முல்லைத்தீவிலும் காணப்படும் சூழ்நிலை குறித்து எழுதியிருந்தது. பின்னர் இந்தச் சூழ்நிலைகளை ஆசிரியர் தலையங்கமாக இட்டு செய்தியொன்றினையும் வெளியிட்டது. யாழ்ப்பாணத்தின் கரையோரக் கிராமங்கள் மீது இராணுவமும் கடற்படையும் தொடர்ச்சியான செல்த் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும் நோக்குடன் அம்மாவட்டத்தில் உள்ள தமிழ்க் கிராமங்களை இராணுவம் அழித்து வருகிறது. இப்புராதன தமிழ்க் கிராமங்களை அழித்துத் தரைமட்டமாக்க இராணுவத் தாங்கிகளும், நிலங்களை மட்டமாக்கும் கனரக உபகரணங்களும் அரசால் பாவிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலும் தன் சொந்த நாட்டு மக்களையே கொல்வதற்காக விமானக் குண்டுவீச்சுக்கள் நடத்தப்பட்டதில்லை. என்று எழுதியிருந்தது. மேலும், இந்தியா சீக்கியத் தீவிரவாதிகளுக்கெதிராகப் போராடுவது போன்றதே இலங்கை தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கெதிராகப் போராடுவதும் என்ற இலங்கையின் பிரச்சாரத்தைக் கேலி செய்த இப்பத்திரிக்கை, "இலங்கையில் இருப்பது ஒரு பயங்கரவாதம் மட்டும்தான். அடிப்படை மனிதவுரிமைகளுக்காகப் போராடும் அப்பாவிகளைக் கொன்றுகுவிக்கும் அரச பயங்கரவாதமே அது" என்று அப்பத்திரிக்கை எழுதியிருந்தது. ஜெனீவாவுக்கான இந்திய தூதுக்குழுவும் இதேவகையான விமர்சனங்களை இலங்கை அரசாங்கம் மீது வைத்திருந்ததும் குறிப்பிடத் தக்கது. (மேலதிக வாசிப்புக்களுக்கு : 2009 இறுதி யுத்தத்தில் இஸ்ரேல் ஆற்றிய பங்கு குறித்து தி டிப்லொமட், அல்ஜசீரா மற்றும் தி எலெக்ட்ரோனிக் இன்டிபாடா எழுதிய கட்டுரைகளின் இணைப்புக்கள்) https://thediplomat.com/2023/07/israels-role-in-sri-lankas-dirty-war/ https://electronicintifada.net/content/israel-advises-sri-lanka-slow-motion-genocide/12644 https://www.aljazeera.com/opinions/2023/6/27/israeli-complicity-in-sri-lanka-war-crimes-must-be-investigated https://www.greenleft.org.au/content/israel-advises-sri-lanka-slow-motion-genocide
  9. என்ன செய்வது? வரலாறு தெரியாத மூடக்களுக்கு யாராவது வரலாற்றை எழுதித்தான் ஆகவேண்டி இருக்கிறது. இன்றிருக்கும் அடக்குமுறையும், ஆக்கிரமிப்பும் சுதந்திரத்திற்குப் பின்பிருந்தே இருந்து வந்தது என்பதும், அதனாலேயே தமிழர்கள் ஆயுதமேந்தினார்கள் என்பதும் இந்த வீணர்களுக்கும், சந்தர்ப்பவாதிகளுக்கும் தெரியப்போவதில்லை. மேற்குலக மயக்கத்தில், மத அடிப்படைவாதத்தின்பால் உந்தப்பட்டு, அடக்குமுறையாளர்களுக்கு ஒத்தூதி அப்பாவிகளின் விடுதலைக்கான போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று எள்ளி நகையாடும் கோடரிக் காம்புகள் ஒரு இனத்தின் இருப்புக் குறித்துப் பேசும் எந்த அருகதையும் அற்றவர்கள். மற்றையவர்களுக்கு அரசியற்பாடம் எடுப்பதை இந்த அற்பர்கள் முதலில் நிறுத்தட்டும்.
  10. 1980 களில் இராணுவத்தின் அட்டூழியங்களை இனக்கொலை என்று அழைத்த இந்துவின் என்.ராம் 2009 இல் தமிழர்களையும், விடுதலைப் போராட்டத்தையும் அழித்தமைக்காக இனக்கொலையாளி ராஜபச்க்ஷவைப் போறிப் புகழும் அதே என்.ராம் தனது கடுமையான நிலைப்பாட்டிற்காக லலித் அதுலத் முதலி உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களால் பெரிதும் தேடப்பட்டவராக மாறினார். ஈழத்தமிழர் பிரச்சினையில் மிகுந்த ஈடுபாட்டுடன் முன்னர் எழுதிவந்தவரும் ஹிந்துப் பத்திரிக்கையின் ஆசிரியருமான என்.ராம், அதுலத் முதலியைப் பேட்டி கண்டார். அரசாங்கத்தின் அரசியல்ப் பேச்சாளரும், இராணுவப் பேச்சாளருமாக அதுலத்முதலியே அன்று செயற்பட்டு வந்தார். அத்துடன் சர்வகட்சி மாநாட்டின் உத்தியோகபூர்வப் பேச்சாளரும் அவராகவே இருந்தார். ராம் எழுதிய கட்டுரை புரட்டாதி 22 ஆம் திகதி ஹிந்துப் பத்திரிக்கையில் வெளிவந்திருந்தது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் கொழும்பில் இலண்ட் பத்திரிக்கை அதனை மீள்பிரசுரம் செய்திருந்தது. ராம் தனது பேட்டியினை இரு பகுதிகளாக வகுத்திருந்தார். முதலாவதாக சர்வகட்சி மாநாடு குறித்து லலித்திடம் வினவிய அவர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்னவென்றும் கேட்டார். சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒற்றைத்தீர்வு மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மட்டும்தான் என்று லலித் பிடிவாதமாகப் பதிலளித்தார். அதற்குமேல் தமிழர்களுக்கு எதனையும் கொடுக்க அரசாங்கத்தால் முடியாது என்றும் அவர் கூறினார். இதனை விடவும் அதிகமான அதிகாரங்களை தமிழருக்கு அரசு வழங்கினால், அரசு மக்களால் புறக்கணிக்கப்பட்டு செயலற்றுப்போக, அதிதீவிர சிங்களக் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும், அதன்பின்னர் தமிழருக்கான தீர்வு குறித்து எவருமே பேசமுடியாது போய்விடும் என்றும் அவர் எச்சரித்தார். தனது பேட்டியில் இரண்டாம் பகுதியில் எதேச்சாதிகாரத்துடன் செயற்பட்டுவரும் இராணுவத்தை அரசாங்கம் கட்டுப்படுத்தாது இருப்பது குறித்து ராம் லலித்திடம் கேட்டார். இராணுவத்தினரின் பழிவாங்கல்த் தாக்குதல்களை லலித் மறுக்கவில்லை, நடப்பது உண்மைதான் என்று ஒத்துக்கொண்டார். ஆனால், அந்தப் பழிவாங்கல்த் தாக்குதல்களை அவர் நியாயப்படுத்தினார். தமது சகாக்கள் கொல்லப்படும்போது அவர்கள் தமது கட்டுப்பாட்டை இழந்து பழிவாங்கல்த் தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கூறினார். இராணுவத்தினரைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு சாதாரண சட்ட நடைமுறைகளையோ அல்லது இராணுவ நீதிமன்றங்களையோ அமைத்து ஏன் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த முடியாது என்று ராம் கேட்டார். இக்கேள்விக்கு சட்டரீதியாகப் பதிலளித்த லலித், போதிய ஆதாரங்கள் இல்லாமல் குற்றஞ்சாட்டுவதென்பது சாதாரண சட்ட வழக்குகளுக்கு பொருந்தாது என்றும், இராணுவத்தினருக்கு சட்ட விலக்கல்களும், சிறப்புரிமைகளும் இருப்பதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய லலித், தாக்குதல் நடத்தப்படும் இடங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் முயல்வது குறித்து இராணுவத்தினருக்குத் தகவல் வழங்கத் தவறுவது பாரிய குற்றமாகும் என்றும் தெரிவித்தார். லலித்துடனான பேட்டியின் பின்னர் ஹிந்துப் பத்திரிக்கை தமது மூத்த செய்தியாளரான எஸ்.பார்த்தசாரதியை யாழ்ப்பாணத்தில் நிலவும் சூழ்நிலையினை அறிந்துவருமாறு அனுப்பியது. கொழும்பு வந்த பார்த்தசாரதி, யாழ்ப்பாணம் செல்லும் யாழ்தேவி புகையிரதத்தில் பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு புறக்கோட்டையில் இருந்து ஏறினார். 1984 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலையினை இரு பாகங்களாக ஐப்பசி 16 மற்றும் 18 ஆம் திகதிகளில் ஹிந்துவில் வெளியிட்டார். அந்த அறிக்கையில் இருந்து சில பகுதிகளை நான் இங்கு இணைக்கிறேன். குறிப்பாக 20 ஆண்டுகளுக்கு முன்னர் (2005 ஆம் ஆண்டின்படி) ஹிந்துப்பத்திரிக்கை இப்படுகொலைகளை "இனக்கொலை" எனும் பதத்தினைப் பாவித்து விளித்திருந்தது என்பதை வாசகர்கள் கவனித்தல் வேண்டும். "இராணுவத்தினரின் வன்முறைகளும், கலாசார இனக்கொலையும்" என்கிற தலைப்பில் இந்த அறிக்கை வெளிவந்திருந்தது. "யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் ஒற்றை ரயிலில் ஏறி அமர்ந்துகொண்ட இந்தச் செய்தியாளர், ரயில் தமிழர் பகுதிக்குள் சென்றதும் பயணிகள் அனைவரும் பதற்றத்துடன் காணப்பட்டதை உணர்ந்தார். இறுகிய முகத்துடன் காணப்பட்ட இராணுவ வீரர்கள் தமது துப்பாக்கிகளை சுடுவதற்கு ஆயத்தமாக கைகளில் ஏந்தி வைத்துக்கொண்டு, அப்பெட்டியெங்கும் நிரம்பிக் காணப்பட்டனர். இன்னொரு நாட்டினுள் நுழைவது போன்ற மனப்பான்மையுடன் செயற்பட்ட அந்த இராணுவ வீரர்கள் அப்பெட்டியில் இருந்த தமிழர்களை மிரட்டி அவர்களின் அடையாள அட்டைகளைப் பரிசோதித்துக்கொண்டிருந்தனர். மாலையாகி, ரயில் யாழ்ப்பாணத்தை அடைந்ததும் ரயில் பிளட்போமில் பெரிய சனக்கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், இவர்கள் எவரும் அங்கு நின்றிருந்த இராணுவத்தினரின் கழுகுப் பார்வையில் இருந்து தப்ப முடியவில்லை. யாழ்ப்பாண நகருக்கு முதன்முதலாக வரும் ஒருவருக்கு அந்த நகரம் இயல்பாகவும், அமைதியாகவும் இருப்பது போன்று தோன்றலாம். ஆனால், சில மணிநேரத்திற்குள் அந்த அமைதியும், இயல்புநிலையும் வெறும் மாயை என்பதும், அவற்றிற்குப் பின்னால் தொடர்ச்சியான பதற்றமும், அச்சமும் நிலவுவதும் தெரிந்துவிடும். வீதிகளில் சிறிய இடைவெளிவிட்டு நிரைகளாக இராணுவக் கவச வாகனங்களும், ட்ரக் வண்டிகளும் வேகமாக ரோந்துபுரிவதும், வீதியால் செல்லும் மக்களை உரசிக்கொண்டு போவதும் புரியும். தமது சொந்தத் தாயகத்தில், கைதிகள் போலத் தமிழ் மக்கள் அடையாள அட்டைகளைக் காவித்திரிய வேண்டும் என்று இராணுவம் வலியுறுத்தியிருக்கிறது, இதுவும் கிட்டத்தட்ட தென்னாபிரிக்கா போலத்தான் இருக்கிறது என்று அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் என்னிடம் கூறினார். உங்கள் பார்வைக்குத் தெரிவதை அப்படியே நம்பிவிடாதீர்கள், சாட்சியங்களுடன் அவற்றை கண்டு உணருங்கள் என்று பயம் கலந்த பதற்றத்துடன் இரகசியமாக என்னிடம் பேசினார் அந்த அரசாங்க அதிகாரி". புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதியிலும், இந்த மாதத்தின் ஆரம்பத்திலும் பார்த்தசாரதி யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்குச் சென்றுவந்தார். அப்பாவி மக்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை இராணுவம் நடத்திவருவதை பார்த்தசாரதி கண்டார். இவ்வாறான பல தாக்குதல் சம்பவங்கள் யாழ்க்குடா நாடெங்கும் பரவலாக நடந்து வந்தது. தாக்கப்பட்டு உயிர்தப்பியவர்களை அவர் பேட்டிகண்டபோது, "உங்களை எதற்காகத் தாக்குகிறார்கள்?" என்று வினவியபோது, "பையன்கள் கொள்ளையிட்டார்களாம், இராணுவ ஆயுதக் கிடங்குகளுக்குள் நுழைந்து ஆயுதங்களை எடுத்துச் சென்றார்களாம், நகைகளைத் திருடினார்களாம் என்று எங்கள் மேல் பழிவாங்கல்த் தாக்குதல்களை நடத்துகிறார்கள். ஆனால், இன்றுவரை அவ்வாறு செய்த பையன்களில் ஒருவரைத்தன்னும் அவர்களால் பிடிக்க முடியவில்லை. அப்பாவி இளைஞர்களை பிடித்துச் சென்று, கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்திக் கொல்கிறார்கள் அல்லது நடைபிணங்களாக வெளியே விடுகிறார்கள்" என்று அவர்கள் கூறினார்கள். பார்த்தசாரதி சென்ற இடமெல்லாம் இதே கதைதான் திரும்பத் திரும்ப மக்களால் அவருக்குச் சொல்லப்பட்டது. தம்மீதான போராளிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் முகமாக 18 வயதிலிருந்து 35 வயது வரையான இளைஞர்களை சுற்றிவளைத்துப் பிடித்துச் சென்று கடுமையான சித்திரவதைகளை அவர்கள் மீது நடத்துகிறார்கள். சுற்றியிருக்கும் வீடுகளையும் கடைகளை தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். சந்தைகளும், ஆலயங்களும் அவர்களுக்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு இடத்திற்குள்ளும் ஆழமாகச் செல்ல செல்ல, அப்பகுதியில் இராணுவம் புரிந்துவரும் அட்டூழியத்தின் அளவும், மக்கள் எதிர்கொண்ட அழிவுகளின் அளவும் தெளிவாக வெளித்தெரிய ஆரம்பிக்கும். ஒருவர் எங்கு சென்றாலும், ஏதோவொரு வீட்டில் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்காக சொந்தங்கள் அழுதுகொண்டிருப்பதும், சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்டுக் காணாமற் போன தமது பிள்ளைகளுக்காக‌ பெற்றோர்கள் அலறுவதும் கேட்டுக்கொண்டிருக்கும். குறைந்தது நூறு முறைகளாவது இராணுவம் தம்மீது மிகக் கொடூரமாகத் தாக்குதலில் ஈடுபட்டதென்பதை யாழ்ப்பாணத்து மக்கள் அவரிடம் சொல்லக்கேட்டர் அவர். யாழ்ப்பாணத்து மக்களால் சொல்லப்பட்ட இராணுவத்தினரின் பழிவாங்கும் தாக்குதல்ச் சம்பவங்களின் பட்டியல் முடிவின்றி நீண்டு சென்றுகொண்டிருந்தது. "ஆயுதம் தரிக்காத அப்பாவி ஆன்களும், பெண்களும், சிறுவர்களும் பல்லாயிரம்பேர் கொண்ட கனரக ஆயுதம் தரித்த சிங்கள இராணுவம் தம்மை யாழ்ப்பாணத்தில் முற்றுகை ஒன்றிற்குள் வைத்திருப்பதாக உணர்கிறார்கள். வங்கியொன்றில் முகாமையாளராகப் பணிபுரியும் ஒரு தமிழர் பார்த்தசாரதியிடம் பேசுகையில், வங்கியில் போராளிகள் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று நாம் முறையாக பொலீஸாரிடமோ இராணுவத்தினரிடமோ முறைப்பாடு செய்தாலும், அவர்கள் அன்று வரப்போவதில்லை. போராளிகள் அங்கிருந்து அகன்று சென்றபின்னர், மறுநாள், தமக்கு சேதம் ஏதும் ஏற்படப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்திவிட்டு அங்கு வருவார்கள். வந்ததும் அங்கிருக்கும் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கித் தாக்குதல் நடத்தி அப்பாவிகளைக் கொன்று குவிப்பார்கள்". "உங்களின் சகாக்களின் காயங்களுக்கு நாம் மருந்திட வேண்டுமென்றால், அப்பாவிகளைக் கொல்வதை நிறுத்துங்கள் என்று யாழ்ப்பாண வைத்தியசாலையின் வைத்தியர்கள் சிலர் இராணுவத்தைக் கடிந்துகொண்டபோதுதான் தமிழர்களைக் கொல்வதை அப்போதைக்கு, அவர்கள் நிறுத்தினார்கள்" என்று உயிர்தப்பிய இன்னொருவர் கூறினார். பொலீஸார் பயம் காரணமாக பொலீஸ் நிலையங்களுக்குள் முடங்கிவிட, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த சூழலில் சில சமூக விரோதிகள் தம் கைவரிசயினைக் காட்டவும் தயங்கவில்லை என்றும் மக்கள் கூறினார்கள்.
  11. தமிழரது போராட்டத்தின் நியாயமும், அவர்கள் மேல் நடத்தப்பட்ட அட்டூழியங்களையும் அறிந்திராத அற்பர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் எதையும் எழுதலாம். இப்பதர்களிடமிருந்து நான் எதிர்ப்பார்ப்பதற்கு எதுவும் இல்லை. தாம் எழுதுவதைத் தாமே வாசித்து இன்புறலாம், வாழ்த்துக்கள்!
  12. பஸ்வண்டிப் படுகொலைகள் கடந்த அத்தியாயங்களில் தாக்கிவிட்டு மறையும் தந்திரத்திலிருந்து விடுபட்டு, நின்று சண்டையிடும் கெரில்லாக்கள் எனும் நிலைமைக்கு புலிகள் இயக்கத்தை பிரபாகரன் மாற்றிய சந்தர்ப்பங்கள் குறித்தும் அது எவ்வாறு முதலாவது ஈழப்போராக பரிணமித்தது என்பது குறித்தும் எழுதியிருந்தேன். இந்த மாற்றம் 1984 ஆம் ஆவணி மாதம் 4 ஆம் திகதில் கடலில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பிரபாகரனின் ஊரான வல்வெட்டித்துறை மீது இராணுவமும், கடற்படையும் சேர்ந்து நடத்திய கொடூரமான பழிவாங்கல்த் தாக்குதல்களுடனும் ஏக காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களுடனும் ஆரம்பமானது. இராணுவத்தினரின் பழிவாங்கல்த் தாக்குதல்களுக்கான பதிலை ஆவணி 5 ஆம் திகதி நெடியகாடு பகுதியில் பொலீஸ் கொமாண்டோக்கள் மீது தாக்குதல் நடத்தி பொலீஸ் அத்தியட்சகர் ஜயசுந்தர உட்பட 8 பொலீஸாரைக் கொன்றதன் மூலமும், ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத்தைத் தாக்கி பொலீஸ் பரிசோதகர் கணேமுல்லை உட்பட இன்னும் ஏழு பொலீஸரைக் கொன்றதன் மூலமும் புலிகள் கொடுத்தார்கள். தமது சகாக்களின் இழப்புகளுக்கான பழிவாங்கல்த் தாக்குதல்களில் இராணுவத்தினர் ஈடுபடத் தொடங்கினர். யாழ்ப்பாணத்தில் பொதுமக்களைக் கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கிய இராணுவத்தினர், தனியார் கட்டடங்களுக்கும் தீவைத்தனர். யாழ்ப்பாணத்தில் ரோந்துவந்த இராணுவக் கவச வாகனம் மீது புலிகள் கிர்னேட் தாக்குதலை நடத்தி பெற்றொல்க் குண்டுகளை அதன் மீது வீசியபோது அது சேதமடைந்தது. புலிகளுடன் இணைந்துகொண்ட பொதுமக்கள் வீதிகளை அடைத்து மூடியதன் மூலம் இராணுவத்தினரின் போக்குவரத்தினைத் தடுத்தனர். அதிலிருந்து நிலைமை மோசமாகத் தொடங்கியது. வவுனியாவின் பொலீஸ் அத்தியட்சகர் ஆதர் ஹேரத் புலிகளால் கொல்லப்பட்டபோது பொலீஸார் பல பொதுமக்களை சுட்டுக் கொன்றனர். சுண்ணாகப் பொலீஸ் நிலையப் படுகொலையும், நாவற்குழியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் இராணுவத்தால் இழுத்துச் சென்று சுட்டுக்கொல்லப்பட்டமையும் தமிழ் மக்களைப் பெரிதும் ஆத்திரம் கொள்ள வைத்தது. மேலும் மன்னாரில் இராணுவத்தினரின் ரோந்து அணிமீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலுக்கு பழிவாங்கும் தாக்குதல்களை இராணுவத்தினர் மேற்கொண்டபோது மக்கள் புரட்சியின் பிரதேசம் விரிவடையத் தொடங்கியது. வல்வெட்டித்துறை மற்றும் ஊர்காவற்றுரை பொலீஸ் நிலையங்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள், கரவெட்டி, நீர்வேலி, பருத்தித்துறை, கொக்கிளாய் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல்களுக்கு இராணுவத்தினர் மிகவும் மூர்க்கத்தனமான பழிவாங்கல்த் தாக்குதல்களை பொதுமக்கள் மேல் கட்டவிழ்த்து விட்டனர். ஹாட்லீக் கல்லூரி 2008 பருத்தித்துறை நகருக்கு அண்மையாக அமைந்திருக்கும் திக்கம் பகுதியில் பொலீஸார் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 5 பொலீஸார் கொல்லப்பட்டனர். இதற்குப் பழிவாங்க இராணுவம் நடத்திய தாக்குதலில் 16 பொதுமக்கள் அப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர். வடமாராட்சியின் புகழ்பூத்த கல்லூரியான ஹாட்லீக் கல்லூரிக்குள் நுழைந்த இராணுவத்தினர் சுமார் 100 ஆண்டுகள் பழமையான கல்லூரி நூலகத்தையும், இரசாயண ஆய்வுகூடத்தையும் எரித்து நாசமாக்கினர். கல்லூரி மாணவர்களை தூண்டிவிடும் நோக்கில் கல்லூரி வாயிலில் வேண்டுமென்றே பொலீஸ் கொமாண்டோக்களின் சோதனைச் சாவடியொன்று அமைக்கப்பட்டது. இதனையடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்துப் பாடசாலைகளிலுமிருந்த மாணவர்கள் இப்பொலீஸ் நிலையத்தை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு தமிழ் மக்கள் அனைவருமே இராணுவத்திற்கும், பொலீஸாருக்கும் எதிரான நிலைப்பாட்டினை எடுக்க ஆரம்பித்தனர். சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கம் பருத்தித்துறையில் பொதுமக்கள், இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டமையினைக் கண்டித்திருந்தார். அதற்கு ஏளனமாகப் பதிலளித்த லலித் அதுலத் முதலி, "யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது என்று அமிர்தலிங்கத்திற்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டிருந்தார். "தமிழர்கள் அமிர்தலிங்கத்தையும் அவரது சகாக்களையும் முற்றாக நிராகரித்து விட்டார்கள்" என்றும் லலித் கூறினார். தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வந்த தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை கண்டித்து, அதுகுறித்து விளக்கமளிக்குமாறு சர்வதேச அழுத்தம் லலித் அதுலத் முதலி மீது பிரயோகிக்கப்பட்டு வந்தது. தனது வாதத் திறமையினை வைத்து இவ்வகையான சவால்களை அவர் எதிர்கொள்ளத் தொடங்கினார். "சுண்ணாகம் சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரை விமானப்படையினர் சுட்டுக் கொன்றது எதற்காக?" என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஜெரமி கோர்பின் லலித்திடம் வினவியபோது, "சந்தையின் கூரையின் மீதிருந்த பயங்கரவாதிகளை விமானப்படையினர் வானிலிருந்து சுடும்போது சன்னங்கள் கூரையினைத் துளைத்துக்கொண்டு வியாபாரிகள் மேல் பாய்ந்திருக்கலாம்" என்று பதிலளித்தார். ஜெரமி கோர்பின் வல்வெட்டித்துறையில் புலிகளுடனான கடற்சண்டையின் பின்னரும், நெடியகாட்டில் கண்ணிவெடித் தாக்குதலில் பலமான இழப்புக்களைச் சந்தித்ததன் பின்னரும் கடலில் இருந்து வல்வெட்டித்துறை, பருத்தித்துறை ஆகிய பகுதிகள் நோக்கி கடற்படையினர் பீரங்கித் தாக்குதல்களை தொடர்ச்சியாக‌ நடத்திவந்தனர். திக்கம் பகுதியில் மேலும் இழப்புக்களை பொலீஸார் சந்தித்ததையடுத்து இப்பீரங்கித்தாக்குதல்களின் வீரியம் அதிகரித்துக் காணப்பட்டது. கரையோரக் கிராமங்கள் மீது கடலில் இருந்து பீரங்கித் தாக்குதல் நடத்துவதென்பது அன்றாட நிகழ்வாகிப்போனது. புரட்டாதி முதாலம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை பருத்தித்துறையில் கத்தோலிக்க மதகுரு ஒருவர் அன்றைய நாள் திருப்பலியை ஒப்புக்கொடுக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கையில், திடீரென்று கடற்படையினர் கடலில் இருந்து பீரங்கித் தாக்குதலை ஆரம்பித்தனர். இத்தாக்குதலில் ஆலயமும், குருவானவரின் தங்கும் அறையும் சேதமடைந்தது. ஆலயத்திற்கு அருகில் இருந்த பல வீடுகளும் சேதமடைந்தன. புரட்டாதி 15 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் செருப்புத் தைக்கும் தொழிலாளியான தங்கத்துரையின் குடிசையின் முன்னால் செல் வீழ்ந்து வெடித்ததில் தலையில் குண்டுச் சிதறல்கள் பட்டு மனைவி அவ்விடத்திலேயே உயிர் துறக்க, தங்கத்துரை நிரந்தரமாகவே அங்கவீனரானார். இராணுவத்தினர் ரோந்து சுற்றும் கவச வாகனங்களில் இருந்தும் பீரங்கித் தாக்குதல்கள் மக்கள் மனைகள் மீது கண்மூடித்தனமாக நடத்தப்பட்டது. இத்தாக்குதல்களில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டபோது பலர் அங்கவீனர்களாயினர். மக்களின் அன்றாட வாழ்வும் முடங்கிப் போனது. 1984 ஆம் ஆண்டு புரட்டாதி 10 ஆம் திகதி கொக்கிளாயில் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் ஒன்பது இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மறுநாள் சம்பவ இடத்திற்குச் சென்ற இராணுவத்தினர் வீதிகளில் தென்பட்ட நான்கு தமிழர்களைச் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புலிகள் என்று இராணுவத்தின்னர் அறிவித்தபோது, மறுத்த புலிகள், அவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்று கூறியிருந்தனர். பஸ் படுகொலையும் கூட்டுப் பாலியல் வன்புணர்வுகளும் - 11, புரட்டாதி 1984 அதேநாள், புரட்டாதி 11 ஆம் திகதி இரவு, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பஸ்வண்டியை 46 பயணிகளுடன் கடத்திச் சென்ற இராணுவத்தினர், 60 வயதுச் சாரதி உட்பட 17 பேரைச் சுட்டுக் கொன்றனர். இப்படுகொலை தொடர்பான விடயங்களை யாழ்ப்பாணத்துப் பத்திரிக்கைகள் விலாவாரியாக செய்தியுடன் விளக்கியிருந்தன. ஈழநாடு பத்திரிக்கை இப்படுகொலையில் உயிர் தப்பிய 29 வயதுடைய கிறிஸ்ட்டோபர் பஸ்டியாம்பிள்ளை ஆனந்தராஜாவை பேட்டி கண்டிருந்தது. அப்பேட்டியின் குறிப்பிடப்பட்ட விடயங்கள் வருமாறு, "நான் எனது சித்தியுடன் கொட்டாஞ்சேனையில் வாழ்ந்து வருகிறேன். யாழ்ப்பாணம் செல்வதற்காக தனியார் கடுகதி பஸ்வண்டியில் இரவு 8 மணிக்கு கொழும்பு, புறக்கோட்டையில் ஏறினேன். அவ்வண்டியில் 46 பயணிகளும், இரு சாரதிகளும் இருந்தனர். அவர்களுள் ஒருவர் தமிழர், மற்றையவர் சிங்களவர். பயணிகளில் 10 இலிருந்து 15 வரையானவர்கள் பெண்கள். அவர்களில் இருவர் இளவயதுப் பெண்கள். அதிகாலை 2 மணிக்கு தேனீர் அருந்துவதற்காக றம்பாவ‌ எனும் இடத்தில் வண்டி நிறுத்தப்பட்டது. அதுவரை வண்டியை சிங்களச் சாரதி ஓட்டிவந்திருக்க, அப்போதுதான் தமிழ்ச் சாரதி ஓட்டும் பொறுப்பினை எடுத்திருந்தார். வவுனியாவிற்கு இன்னும் 10 கிலோமீட்டர்களே இருக்க வீதியோரத்தில் நின்ற‌ ஐந்து இராணுவத்தினர் வண்டியை மறித்தார்கள். அவர்கள் அனைவரும் திடகாத்திரமானவர்களாக இருந்ததுடன், ஒருவர் மட்டுமே சீருடையினை அணிந்திருந்தார். அவர்கள் மறிக்கவே, சாரதியும் வண்டியை நிறுத்தினார்". "பஸ்வண்டியில் ஏறிக்கொண்டதும், சீருடையில் காணப்பட்ட இராணுவத்தினன், "பஸ்வண்டியில் பயங்கரவாதிகள் எவராவது இருக்கிறார்களா என்று தாம் சோதனை செய்யவேண்டும்" என்று கூறினான். அவர்கள் அனைவரும் நிறைபோதையில் இருப்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள் குண்டுகள் ஏற்றப்பட்டுத் தயார் நிலையில் இருந்தன. அவர்களில் ஒருவன் தமிழர்களைக் கேவலமாகத் திட்ட ஆரம்பித்தான். "சிங்கள இராணுவத்தினரைக் கொன்றுவிட்டு விலைமாதர்களுக்குப் பிறந்த தமிழர்கள் சொகுசு பஸ் வண்டிகளில் பயணிக்கிறீர்களா" என்பது போன்ற மிகக் கேவலமான தூஷண வார்த்தைகளை அவன் பாவித்துத் திட்டினான். "முறைதவறிப் பிறந்த தமிழர்கள் எமது பொலீஸ் காரர்களில் எட்டுப் பேரை இன்றிரவு கொன்றிருக்கிறீர்கள், அதற்குப் பழிதீர்க்க உங்கள் அனைவரையும் நாம் இப்போது கொல்லபோகிறோம்" என்று அவன் கர்ஜித்தான்". "எனக்கு நடுங்கத் தொடங்கியது. பதற்றமாகிப் போனது. நான் பிரார்த்திக்கத் தொடங்கினேன். தமிழ்ச் சாரதியை வாகனத்தை விட்டு இறங்குமாறு சீருடையில் நின்ற இராணுவத்தினன் கட்டளையிட்டான். அதற்கு இணங்க மறுத்த சாரதி, "பயணிகளின் பாதுகாப்பு எனக்கு முக்கியமானது" என்று பணிவுடன் பதிலளித்தார். உடனேயே அவரை துவக்கின் பின்புறத்தால் அவன் கடுமையாகத் தாக்கினான். தான் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது அவர் "முருகா, முருகா, இந்த மக்களையெல்லாம் காப்பாற்று" என்று பலத்த குரலில் கத்தத் தொடங்கினார். பஸ்ஸைவிட்டு இறங்கும்படி வற்புறுத்தப்பட்ட அவரை, ஓடும்படி அவர்கள் பணித்தார்கள். அவரும் வீதியின் ஓரத்தில் இருந்த பற்றையொன்றினை நோக்கி ஓடத் தொடங்கினார். அவர் ஓடிக்கொண்டிருக்கும்போதே அவர் மீது ஒருவன் துப்பாக்கியால் சுட்டான், அவர் அவ்விடத்திலேயே இறந்து வீழ்ந்தார்". "அதன்பின்னர் பஸ்ஸிலிருந்த பயணிகளில் இளைஞர்களை அவர்கள் வெளியே இழுத்து எடுத்தார்கள். நான் எனது இருக்கையின் கீழ் பதுங்கிக் கொண்டேன். கீழே இறக்கப்பட்ட இளைஞர்களை ஓடும்படி கட்டளையிட்டு, அவர்கள் ஓடத் தொடங்கியதும் அவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கித்தாக்குதலை நடத்தினார்கள். அந்த இளைஞர்கள் அனைவரும் இறந்து வீழ்ந்தார்கள்". "பின்னர், நான் இருந்த இருக்கைப் பக்கம் வந்த ஒருவன் என்னை பிடித்து வெளியே இழுத்தான். தாம் வைத்திருந்த துப்பாக்கியின் பின்புறத்தால் என்னைச் சரமாரியாகத் தாக்கினார்கள். அவர்களில் ஒருவன் எனது முகத்தில் தான் அணிந்திருந்த பூட்ஸ் காலினால் பலமாக உதைந்தான். பஸ்ஸில் இருந்து வெளியே குதித்த நான் அதன் அடிப்பகுதியில் சென்று பதுங்கிக்கொண்டேன். அப்போதுதான் இன்னும் நான்கு பயணிகள் பஸ்ஸின் கீழ் பதுங்கியிருப்பது எனக்குத் தெரிந்தது". "என்னைக் கைவிட்டு விட்டு பஸ்ஸில் இருந்த இரு இளம் பெண்களிடம் அவர்கள் சென்றார்கள். நாம் மெது மெதுவாக பஸ்ஸின் அடிப்பகுதியில் இருந்து ஊர்ந்து சென்று அருகிலிருந்த காட்டிற்குள் ஒளிந்துகொண்டோம். அங்கிருந்து நீண்ட நேரம் நடந்து தமிழ்க் கிராமம் ஒன்றினை நாம் அடைந்தோம். அங்கிருந்து தப்பி வந்தோம்" என்று ஆனந்தராஜா கூறினார். இப்படுகொலையில் இருந்து உயிர் தப்பிய இன்னொருவர் 64 வயதுடைய கந்தையா பரமநாதன். பஸ்ஸில் நடந்த ஏனைய அநர்த்தம் குறித்து அவரிடம் பேட்டி காணப்பட்டது. கொழும்பில் தமிழர்கள் பெருவாரியாக வாழும் வெள்ளவத்தைப் பகுதியில் இருந்து தான் பஸ்ஸில் ஏறிக்கொண்டதாக அவர் கூறினார். "நான் றம்பாவ‌ பகுதியில் பஸ்ஸை விட்டு இறங்கவில்லை. நான் ஒரு இருதய நோயாளி. இராணுவத்தினர் பஸ்ஸில் ஏறிய வேளை நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன். யாரோ உரத்த குரலில் பேசுவது கேட்டு நான் விழித்துக்கொண்டேன். அவர்களில் ஐந்து பேர் இருந்தனர். ஒருவன் மட்டுமே சீருடையில் இருந்தான். மற்றைய நால்வரும் கட்டைக் காற்சட்டையும் டீ சேர்ட்டும் அணிந்திருந்தார்கள். அவர்கள் எல்லோருமே இராணுவத்தினர்தான் என்பதை நாம் புரிந்துகொண்டோம்". "அவர்கள் முதலில் சாரதியைச் சுட்டார்கள். பின்னர் இளைஞர்களைக் கொன்றார்கள். இளவயதுப் பெண்களையும், ஏனைய பெண்களையும் வெளியே இழுத்து எடுத்தார்கள். பெண்கள் ஓவென்று கதறியழவே நாம் உரத்த குரலில் சத்தமிடத் தொடங்கினோம். எம்மை அமைதியாக இருக்கும்படி அதட்டிய அவர்கள், இல்லாதுவிடில் அனைவரையும் சுட்டுக் கொன்றுவிடப்போவதாக மிரட்டினார்கள். பின்னர் பெண்கள் அனைவரையும் அவர்கள் பற்றைகளுக்குள் இழுத்துச் செல்ல நான் மயங்கிவிட்டேன்" என்று கந்தையா பரமநாதன் கூறினார். இக்கொடூரமான பஸ் படுகொலைகள் சென்னையில் தங்கியிருந்த முன்னணியின் தலைவர்களை கவலைப்படுத்தியிருந்தது. அனைத்துக் கட்சி மாநாடு புரட்டாதி 21 வரை பிற்போடப்பட்டது. அதன் இறுதிக் கூட்டமான புரட்டதி 3 ஆம் திகதி சந்திப்பில், அதிகாரப் பரவலாக்கலுக்கான அலகு குறித்து நெகிழ்வான தன்மையினை ஜெயார் காண்பித்திருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியினரும், பெளத்த மகா சங்கத்தினரும் மாவட்ட அபிவிருத்திச் சபைக்கு அதிகமாக எதனையும் தமிழர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று வாதிட்டு வந்த நிலையில், இந்தியா, மாகாணசபை வரை அலகு விஸ்த்தரிக்கப்படலாம் என்று எதிர்ர்வுகூறத் தொடங்கியது. அமிர்தலிங்கம் கடுமையான தொனியில் ஜெயாருக்கு தந்தியொன்றினை அனுப்பினார். "இராணுவம் அப்பாவிப் பஸ் பயணிகளைப் படுகொலை செய்யும்போது அதன் அரசாங்கத்துடன் நாம் எப்படிப் பேசுவது?" என்று அவர் கேள்வியெழுப்பியிருந்தார். முன்னணியினது விமர்சனத்தையடுத்து இந்தியாவும் ஜெயவர்த்தன மீது அழுத்தம் கொடுத்தது. சர்வதேச ஊடகங்களிலும் இச்செய்தி வெளிவந்தபோது வேறு வழியின்றி இப்படுகொலைகளை விசாரிக்க பொலீஸ் குழுவொன்றினை ஜெயார் அமைத்தார். படுகொலை நடைபெற்ற இடத்திற்குச் சென்ற பொலீஸ் குழு, சேதப்படுத்தப்பட்டு, அநாதரவாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பஸ் வண்டியையும், அருகில் இருந்த புதர்களுக்குள் பெண்கள் அணியும் ஆடைகள் ஆங்காங்கே வீசப்பட்டுக் கிடப்பதையும் கண்டனர். புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதியிலும், ஐப்பசி மாதம் முழுவதிலும் தமது கண்ணிவெடித் தாக்குதல்களை புலிகள் தொடர்ச்சியாக நடத்தி வந்தனர். புரட்டாதி மாதத்தின் 3 ஆம் வாரத்தில் நடந்த தாக்குதலில் இரு பொலீஸார் கொல்லப்பட்டனர்.புரட்டாதி 22 ஆம் திகதி கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அரச பேச்சாளர் தமிழ்நாடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயங்கரவாதிகளின் படகைக் கடற்படையினர் தாக்கி அழித்தபோது 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறினார்.
  13. வறுமையும், பதின்ம வயதுத் திருமணமும், விபச்சாரமும், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமும் தலைவிரித்தாடிய சிங்களக் குடியேற்றங்கள் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கென்ட் ‍ டொலர் பண்ணைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் கொக்கிளாய் ‍ நாயாறு குடியேற்றங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து மார்கழியில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் கலந்தாலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் தமிழர் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிங்களக் குடியேற்றங்களுக்கு பாதுகாப்பினை அதிகரிப்பது என்று முடிவுசெய்யப்பட்டது. இவ்வாறான பாதுகாப்புச் சபை கூட்டமொன்றில் பிரபல சிங்கள இனவாதியும் சிகல உறுமயவின் ஸ்த்தாபகருமாகிய எஸ்.எல்.குணசேகரவினாலும், இன்னொரு பெயர்பெற்ற இனவாதியான தவிந்த சேனநாயக்கவினாலும் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றினை பிரிகேடியர் டெனிஸ் ஹபுகள்ள எனும் அதிகாரி சபையிடம் கையளித்தார். வலி ஓயாவை இராணுவமயப்படுத்தும் ஆலோசனையினை வழங்கிய சிங்களப் பேரினவாதி எஸ் எல் குணசேகர‌ தொடர்ந்துவந்த சில வருடங்களில் வலி ஓயாவின் விரிவாக்கத்திற்கான அரசாங்கத்தின் கொள்கையில் பாரியளவு செல்வாக்குச் செலுத்திய இவ்வறிக்கை இரு முக்கிய விடயங்கள குறித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருந்தது. சிங்களக் குடியேற்றங்களுக்கு நடுவில் இராணுவ நிலைகளை அமைத்தல் மற்றும் குடியேற்றவாசிகளுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்குதல் என்பனவே அவையாகும். இக்கூட்டத்தில் பங்குபற்றிய ஜெயாரின் மகனும் ஆலோசகருமாகிய ரவி ஜெயவர்த்தன உடனடியாகவே இந்த ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டதுடன் சிங்களக் குடியேற்றக்காரர்களுக்கான ஆயுதப் பயிற்சியினையும் ஆரம்பித்து வைத்தார். அரசாங்கத்தின் இக்கொள்கையின் அடிப்படியில் வலி ஓயா முற்றான இராணுவமயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றமாக மாறியது. இப்பிரதேசத்தில் அமைக்கப்பட்ட சிங்களக் கிராமங்களுக்கான சிவில் நிர்வாகத்தை இராணுவம் பொறுப்பெடுத்துக்கொண்டது. கென்ட் பண்ணை அமைந்திருந்த இடத்திலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் தொலைவில் வலி ஓயா படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டது. இராணுவத்தின் முன்னாள் அதிகாரிகளின் தலைவராகக் கடமையாற்றிய பிரிகேடியர் ஜனக பெரேரா வலி ஓயாப் படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வலி ஓயாவில் அமைக்கப்பட்ட ஜனகபுர எனும் புதிய சிங்களக் கிராமம் அவரது பெயரை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டது. ஜனக பெரேராவின் மனவியின் பெயரை அடிப்படையாகக் கொண்டு கென்ட் பண்ணைப்பகுதி கல்யாணிபுர என்று அழைக்கப்பட அவரது மகனின் பெயரை அடிப்படையாகக் கொண்டு சம்பத்புர எனும் புதிய கிராமும் அப்பகுதியில் உருவாக்கப்பட்டது. போர்க்குற்றவாளி ஜனக பெரேரா வலி ஓயாவில் குடியேற்றப்பட்ட சிங்கள விவசாயிகளின் வாழ்வு முற்றான இராணுவ மயப்படுத்தலுக்கு உள்ளானது. இங்கு குடியேறிய குடும்பங்களிலிருந்து பல இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்துகொண்டதுடன், இப்பகுதியின் பெண்கள் பலரும் இராணுவ வீரர்களை மணம் முடித்துக்கொண்டனர். மனிதவுரிமைகளுக்கான பயாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு இப்பகுதி மக்களைப் பேட்டி கண்டிருந்தது. அவ்வாறான் பேட்டி ஒன்றில் தென்மாவட்டமான காலியின் பலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த தனபால என்பவரது குடும்பம் இப்பகுதியில் வாழ்ந்து வந்தது. ஆரம்பத்தில் மாதுரு ஓயாவுக்குக் குடியேற, திம்புலாகலை பிக்குவின் தலைமையில் சென்ற இவருக்கு இறுதியில் ஏமாற்றமே எஞ்சியது. பின்னர் மணலாறு வலி ஓயாவாக மாற்றப்பட அப்பகுதியில் உருவாக்கப்பட்ட சின்ஹபுர எனும் கிராமத்தில் அவருக்கு நிலம் ஒன்று வழங்கப்பட்டது. தமது வாழ்க்கை ஆபத்துக்கள் நிறைந்ததாக இருக்கிறது என்று அவர் கூறினார். பொதுமக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் கலந்தபடி இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. இரவு வேளைகளில் கடுமையான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்து கேட்டவண்ணம் இருப்பதாக அவர் கூறினார். காலம் செல்லச் செல்ல பல குடியேற்றவாசிகள் அங்கிருந்து வெளியேற ஆரம்பித்ததாக அவர் கூறினார். தொடர்ச்சியான இராணுவ மயப்படுத்தப்பட்ட சூழலில் , போர் அச்சத்திற்கு நடுவே வாழ விரும்பாது, தமது வீடுகளைக் காலி செய்துவிட்டு அவர்கள் வெளியேறியதாக அவர் கூறினார். ஆனால், தனது குடும்பத்தினால் வெளியேற முடியாதவாறு இராணுவத்திற்குள் உள்வாங்கப்பட்டுவிட்டதாக அவர் கூறினார். அவரது மகன் ஒருவர் இராணுவத்தில் இணைந்துகொள்ள, மூன்று புதல்விகளில் ஒருவர் அப்பகுதியில் பணிபுரிந்து வந்த இராணுவ வீரர் ஒருவரை மணம் முடித்துக்கொண்டதாக அவர் மேலும் கூறினார். அப்பகுதியெங்கும் தொடர்ச்சியான அச்சம் சூழ்ந்திருந்தது. புலிகள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தபடி இருந்தனர். இராணுவத்தினர் எதிர்பார்க்கத நேரத்தில் திடீரென்று அப்பகுதி மீது துணிகரமான தாக்குதல்களை அவர்களால் நடத்தக்கூடியதாக இருந்தது. இந்தச் சூழ்நிலையினை மனிதவுரிமைக்கான (யாழ்) பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது, பாடசாலைக்குச் செல்லும் சிறுவர்களிடம், கரும்பலகையினைப் பார்க்க வேண்டாம், அருகேயிருக்கும் காடுகளிலிருந்து வரக்கூடிய ஆபத்துக்களைக் கவனமாகப் பார்த்துக்கொண்டிருங்கள் என்று கூறப்பட்டதாம். யாழ்ப்பாணத்துச் சிறுவர்கள் குண்டுவீச்சு விமானங்களுக்காக வானை அண்ணாந்து பார்ப்பதுபோல இச்சிறுவர்கள் காடுகளைப் பார்த்தபடி இருந்தார்கள். ஆனால், இவை வெறுமனே வெளியில்த் தெரியும் விடயங்கள் மட்டும்தான். ஆனால், இதனை விடவும், ஆளமான, மறைந்துகிடக்கும் விடயங்களும் இங்கு இருக்கின்றன. குறிப்பாக பொதுமக்கள் வாழிடங்களுக்கிடையே பரவிக் கிடக்கும் இராணுவ முகாம்கள்....... இப்பகுதியில் பல ஆண்களுடன் பேசியபோது, "எமக்கு இராணுவம் பாதுகாப்பு அளிக்கின்றதா அல்லது இராணுவ முகாம்களுக்கு நாம் பாதுகாப்புக் கவசங்களாக நிறுத்தப்பட்டிருக்கின்றோமா என்று எமக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள். இரவு வேளைகளில் முன்னணிக் காப்பரண்களுக்கு ரைபிள்களுடன் ஆண்கள் அனுப்பிவைக்கப்பட வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை இராணுவ வீரர்கள் பலாத்காரம் செய்துவந்தார்கள். அமந்த பெரேரா இப்பகுதியின் நிலைமை குறித்து விரிவான ஆய்வொன்றினைச் செய்திருந்தார். அவரது கருத்துப்படி வலி ஓயாவில் வாழும் சிங்களவர்கள் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு விட்டார்கள் என்று கூறுகிறார். இப்பகுதியின் நிர்வாகக் கட்டமைப்பு மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது. சிறுவர்களுக்கான கல்வி வசதிகள் மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்பட்டதுடன், மருத்துவ வசதிகளும் சீரற்றுக் காணப்பட்டன. முழுமையாக இயங்கும் மருந்தகமோ அல்லது சீரான போக்குவரத்து வசதிகளோ இப்பகுதியில் இன்னும் அமையப்பெறவில்லை என்று அவர் எழுதியிருந்தார். வலி ஓயாவில் வாழும் சிங்களக் குடியேற்றக்காரர்கள் மிகவும் வறுமையானவர்கள். பணம் தேவைப்படும்போதெல்லாம், குறிப்பாக நீர் இறைக்கும் இயந்திரங்களை வாங்க‌ கடனெடுப்பதைத் தவிர வேறு வழிகள் அவர்களுக்கு இருக்கவில்லை. அரசினதும், அரசு சாரா அமைப்புக்களினதும் உதவியிலேயே அவர்களது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. சமூகக் கட்டமைப்பும், வாழ்க்கைமுறையும் இப்பிரதேசத்தில் சீர்குலைந்து காணப்பட்டது. பதின்ம வயதுத் திருமணங்களும், சிறுவர் பாலியல் துஸ்பிரயோகமும் இப்பகுதியில் மிகவும் அதிகரித்துக் காணப்பட்டன. அமந்த பெரேராவின் அறிக்கையின்படி இப்பகுதியில் வைத்தியராகக் கடமையாற்றும் சரத் குமார கூறுகையில் 12 வயதுச் சிறுமிகள் கர்ப்பம் தரித்தபடி வைத்தியசாலைக் கொண்டுவரப்படுவது சாதாரண விடயமாகிவிட்டது என்று கூறுகிறார். பிள்ளைகளுக்கான சரியான வசதிகளைச் செய்துகொடுக்க முடியாமையும், அவர்களைப் பாதுகாப்பாக வைத்துப் பராமரிக்க முடியாமையும், பதின்ம வயதுத் திருமணங்கள் நடக்கக் காரணமாகிவிடுகின்றன. மேலும் பெருமளவான இராணுவ வீரர்களின் பாலியல்த் தேவைகளைப் பூர்த்தி செய்ய விபச்சாரத்தைப் இப்பகுதியின் பெண்கள் தொழிலாகச் செய்துவருவதாகவும், பாலியல்ப் பலாத்காரம் என்பது சாதாரணமாக நடக்கு விடயம் என்றும் வைத்தியர் சரத் குமார கூறியிருக்கிறார். வலி ஓயவில் வசிக்கும் பெண்களின் நாளாந்த வாழ்வில் விபச்சாரம் என்பது ஒரு அங்கமாகிவிட்டதாக அமந்த பெரேரா கூறுகிறார். இவ்வாறான பெண்களை இப்பகுதியில் சூழ்நிலைக்கான பாலியல்த் தொழிலாளிகள் என்று அழைக்கிறார்கள். அதாவது பணம் தேவைப்படும்போது மட்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டுக்கொள்வது. ரஞ்சனி என்கிற பெயரில் இப்பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரின் வாழ்க்கை குறித்து சில விடயங்கள் கீழே பகிரப்படுகிறது, ரஞ்சனி எனப்படும் 38 வயது பெண்ணொருத்திக்குப் பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். இரு குடும்பங்களை அவர் தனக்கு அரசிடமிருந்து மாதாந்தம் கிடைக்கும் 2200 ரூபாய்களை வைத்துக்கொண்டே சமாளித்து வருகிறார். ஊர்காவல்ப் படையில் பணிபுரிந்த வேளை கஜபாபுர பகுதியில் புலிகளின் மோட்டார் தாக்குதலில் கொல்லப்பட்டதற்காக மாதாந்த பணமாக அரசால் இந்த 2200 ரூபாய்கள் வழங்கப்பட்டு வந்தது. அவருக்கு இரு புதல்விகள். ஒருவருக்கு 19 வயது மற்றையவருக்கு 9 வயது. மூத்த மகள் 14 வயதில் திருமணம் முடித்துக்கொண்டார். அவரும் அவரது கணவரும் வீட்டில் வேலையின்றி வாழ்ந்துவருகிறார்கள். அவர்கள் இருவருக்கும் அவர்களது குழந்தைக்கும் ரஞ்சனியே உணவு வழங்கிப் பராமரித்து வருகிறார். உங்களுடைய மகளை இவ்வளவு சிறிய வயதில், வேலையற்ற ஒருவருக்கு ஏன் திருமணம் முடித்து வைத்தீர்கள்? என்று நாம் அவரைக் கேட்டோம். அவரால் சரியான பதில் ஒன்றினை வழங்க முடியவில்லை. "தன்னால் இனிமேல்ப் பாடசாலைக்குப் போக முடியாது, எனக்குத் திருமணம் முடித்து வையுங்கள் என்று ஒருநாள் என்னிடம் வந்து கூறினாள்", என்று அவர் எம்மிடம் கூறினார். "உங்களை இப்பகுதியில் உள்ள ஆண்கள் தமது இச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக அழைப்பதுண்டா என்று நாம் கேட்டபோது, அவரால் சிரிப்பதைத் தவிர வேறு எதனையும் கூற முடியாது போய்விட்டது. ஆனால், அவரது சிரிப்பு எமக்குப் பல விடயங்களைப் புரியவைத்தது. அவருக்கு வேறு தெரிவுகள் இல்லை. வீட்டில் உள்ளவர்களுக்கு உணவு வழங்க வேண்டுமானால் தனது உடலை விற்றால் மட்டுமே முடியும் என்கிற நிலை, ஆகவே அவரும் அதனை ஏற்றுக்கொண்டு வாழ்கிறார் என்பது புரிந்தது. மகாவலி அமைச்சினால் தீட்டப்பட்ட தந்திரமும், அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் வறுமையில் வாழ்ந்துவரும் இரு இனங்களுக்கும் மிகவும் பாரதூரமான இன்னல்களை ஏற்படுத்தி விட்டிருந்தது. ஆனால், இத்திட்டத்தினை உருவாக்கி, நடத்திய செல்வச் செழிப்புக்கொண்ட சிங்கள மேற்தட்டு தலைமைகள் கொழும்பில் என்றும்போல் இன்றும் ஆடம்பரமாகவே வாழ்ந்து வருகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை வலி ஓயாவுக்கான பயணம் என்பது ஒரு பொழுது போக்கு, உலங்கு வானூர்தியிலிருந்து சுற்றுலா செல்வதுபோல ஓரிரு மணிநேரத்தில் பார்த்துவிட்டுவரும் உல்லாசப் பயணம், அவ்வளவுதான். சிறுபான்மையின மக்களுக்கு சுயகெளரவம், மரியாதை, இனமானம் என்பவை இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ளத் தவறியமையே வறுமைக் கோட்டுக்குக் கீழான இந்நாட்டு மக்களை குடியேற்றங்கள் மூலம் பலியிட அவர்களைத் தூண்டியது. சனத்தொகையில் அதிகம் இருப்பதால் மட்டுமே பெரும்பான்மையினம் தன்னுடன் அதிகாரத்தையும், பலத்தையும் வைத்துக்கொள்ள முயலக் கூடாது. ஒவ்வொரு தனி மனிதனும் அடிப்படை மனிதவுரிமை, சுய கெளரவம், மரியாதை, சொத்து என்று அனைத்தையும் வைத்திருக்கும் உரிமையினைக் கொண்டிருக்கிறான். இந்த உரிமைகள் மறுக்கப்படும்போது அவன் அடக்குமுறைக்கெதிராக புரட்சி செய்வதற்கான சகல உரிமைகளையும் கொண்டிருக்கிறான்.
  14. இப்படியொரு குழுவினர் இருப்பது எனக்குத் தெரியாது. பாலஸ்த்தீனர்களது போராட்டம் நியாயம் என்று தெரியுமளவிற்கு எமது போராட்டம் நியாயமாகத் தெரியவில்லையோ? தமிழர்களுக்குள்த்தான் இவர்கள் இருக்கிறார்களா?
  15. கொக்கிளாய், நாயாறு சிங்கள மீனவக் குடியேற்றங்களும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட படுகொலைகளும் கொக்கிளாய் சிங்கள மீனவக் குடியேற்றம் ஒன்று மறுநாள், மார்கழி 1 ஆம் திகதி பெண்போராளிகள் அடங்கிய புலிகளின் அணி நாயாறு மற்றும் கொக்கிளாய் பகுதிகளில் அரச ஆதரவுடன் குடியேறியிருந்த சிங்கள மீனவக் கிராமங்கள் மீது தாக்குதல் ஒன்றினை நடத்தினர். சுமார் 15 கிலோமிட்டர்கள் இடையே அமைக்கப்பட்டிருந்த இக்குடியேற்றங்கள் மீதான தாக்குதலில் 59 சிங்கள மீனவக் குடியேற்றக்காரர்கள் கொல்லப்பட்டனர். திருகோணமலை முதல் முல்லைத்தீவு வரை கடற்கரைகளை அண்மித்து தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களின் வடக்கு எல்லையிலேயே கொக்கிளாயும் நாயாறும் அமைந்திருந்தன. இக்குடியேற்றங்களில் வசித்துவந்த பெரும்பாலான சிங்களவர்கள் நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். புலிகளின் தாக்குதலில் காயப்பட்ட சில சிங்களவர்கள் அருகிலிருந்த முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு உதவிகேட்டு ஓடியபோதே தாக்குதல் குறித்து இராணுவத்தினர் அறிந்துகொண்டனர். சிங்களக் குடியேற்றம் அமைந்திருந்த பகுதிக்குச் சென்ற இராணுவ வாகனம் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானது. அப்பகுதியில் சிங்களவர்களால் உரிமைகோரி நிறுவப்பட்டிருந்த கல்வெட்டுக்களும் புலிகளால் அழிக்கப்பட்டன. புலிகளின் இத்தாக்குதல்கள் எதிர்பாரா விதமாக இன்னும் பல சம்பவங்களுக்கு அடிகோலியிருந்தது. தமிழர் தாயகத்தில் சிங்கள அரசால் உருவாக்கப்பட்டிருந்த இக்குடியேற்றங்களில் வாழ்ந்துவந்த சிங்கள விவசாயிகளும், மீனவர்களும் அங்கிருந்து இடம்பெயரத் தொடங்கினர். சிங்கள மக்களிடையே முதலாவது அகதிகள் பிரச்சினையினை இத்தாக்குதல்கள் தோற்றுவித்தன. புலிகளின் தாக்குதல்களின் பின்னர் டொலர் பண்ணைக்குச் சென்ற நிவாரணப் பணியாளர்கள் அங்கு வாழ்ந்துவந்த சிங்களவர்கள் தமது உடைமைகளையும் எடுத்துக்கொண்டு பதவியா நோக்கித் தப்பிச் செல்வதாகத் தெரிவித்திருந்தார்கள். தாம் வாழ்ந்துவந்த குடியேற்றங்களில் இருந்து இராணுவத்தினர் விலக்கிக்கொள்ளப்பட்டமையினால் தொடர்ந்தும் அப்பகுதிகளில் வாழ அச்சப்படுவதாகவும், அதனாலேயே தாம் அங்கிருந்து தப்பிச் செல்வதாகவும் கூறியிருக்கின்றனர். இதனையடுத்து அப்பகுதிகளுக்கு அண்மையாக அமைக்கப்பட்டிருந்த பெளத்த விகாரைகளிலும் பாடசாலைகளிலும் சிங்கள அகதிகள் அடைக்கலம் புகுந்தனர். வலி ஓயாப் பகுதியில் குடியேற்றப்பட்டிருந்த சிங்கள கைதிகளுக்கு நிவாரணம் வழங்கச் சென்றவர்களில் ஹேர்மன் குணரட்ணவும் ஒருவர். இறையாண்மையுள்ள நாட்டை நோக்கி என்று தான் எழுதிய புத்தகத்தில் புலிகளின் தாக்குதல்களின் பின்னர் தான் கண்ட காட்சிகளை விபரித்திருந்தார். "நூற்றுக்கணக்கானோர் தமது மனைவிகளுடன், கைகளில் பிள்ளைகளையும் ஏனைய அவசியப் பொருட்களையும் ஏந்திக்கொண்டு அகதி முகாம்களுக்கு ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டேன்". இராணுவத்தினரும், சிறைக் கைதிகளும் மணலாற்றில் (தற்போதைய வலி ஓயா) பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழர்களை முற்றாக அங்கிருந்து விரட்டி விடும் நடவடிக்கைகளில் இறங்கினர்.இந்த விரட்டியடிப்பு முன்னெடுக்கப்பட்ட விதத்தினை தமிழ்ச் செய்தியாளர்களும் சரித்திர எழுத்தாளர்களும் விளக்கமாகப் பதிவிட்டிருந்தனர். மிகவும் தந்திரமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் வாழிடங்களுக்குச் சென்ற இராணுவத்தினர் இப்பகுதி மீது தாக்குதல் ஒன்று நடத்தப்படப் போகிறது, ஆகவே உயிரைக் காத்துக்கொள்ள இங்கிருந்து ஓடுங்கள் என்று முதலில் எச்சரிப்பார்கள். தமது எச்சரிக்கையினை ஏற்றுக்கொள்ள மறுத்த தமிழர்கள் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்ட இராணுவத்தினர், அவர்களின் விலைமதிப்பான பொருட்களை சூறையாடியபின்னர் வீடுகளுக்குத் தீமூட்டினர். இளம்பெண்கள் இருந்த வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் அப்பெண்களை வெளியே இழுத்து வந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டனர். இவையெல்லாம் நடந்து முடிந்ததன் பின்னர் இப்பகுதி மீது பாரிய நேரடித் தாக்குதல் ஒன்றினை நடத்தி தமிழர்களை அங்கிருந்து முற்றாக விரட்டியடித்தனர். மணலாறு மற்றும் ஒதியாமலை ஆகிய தமிழ்க் கிராமங்களில் சிங்கள இராணுவத்தாலும், சிங்களக் குடியேற்றக்காரர்களாலும் படுகொலைசெய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை பலநூறுகளைத் தாண்டும் என்று வரலாற்று பதிவாளர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும், ஒதியாமலைப் படுகொலையில் 25 பெண்களும் சிறுவர்களும் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டமையும் பதிவாகியிருக்கிறது. பதவியாவில் ஆரம்பித்து சிறிபுரவாக முன்னெடுக்கப்பட்டு ஈற்றில் ஜனகபுர வரை விஸ்த்தரிக்கப்பட்டிருக்கும் சிங்களப் பேரினவாதிகளின் தமிழர் இதயபூமி மீதான வல்வளைப்பு திருகோணமலை மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருந்த பாரம்பரியமான தமிழ்க் கிராமம்தான் அமரவயல். இதற்கு அருகிலேயே சிங்களக் குடியேற்றக் கிராமமான பதவியா அமைக்கப்பட்டிருந்தது. அமரவயல் கிராமத்திற்கு நடந்த அனர்த்தமே முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்த பல பாரம்பரிய தமிழ்க் கிராமங்களுக்கும் நடைபெற்றிருந்தது. இக்கிராமம் அரசாங்கத்தால் முற்றாக கைவிடப்பட்டிருந்ததுடன், வயற்செய்கைக்கு மிகவும் உகந்த இடமான இப்பகுதியைக் கைப்பற்றுவதற்காக அயலில் குடியேறி இருந்த சிங்களக் காடையர்கள் தொடர்ச்சியாக முயன்று வந்தனர். இக்கிராமங்களுக்குள் அடிக்கடி புகுந்து வன்முறைகளில் ஈடுபட்ட காடையர்கள் இங்கு வசித்துவந்த தமிழ் மக்களை எப்படியாவது விரட்டிவிட முயன்று வந்தனர். மணலாறு எனும் புத்தகத்தை எழுதிய திரு விஜயரட்ணம் இக்கிராமத்திற்கு நடந்த அநர்த்தம் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல்கள் முடிவடைந்து மூன்று நாட்களின் பின்னர் அமரவயல்க் கிராமத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த தமிழ்க் கிராமங்களுக்கு இராணுவத்தால் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள், இல்லையேல் கொல்லப்படுவீர்கள் என்பதே அது. இதுகுறித்து விஜயரட்ணம் எழுதிய விபரங்கள் கீழே, "இராணுவத்தினரிடமிருந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கையினையடுத்து இங்கு வாழ்ந்துவந்த தமிழர்கள் தம்மால் எடுத்துச் செல்லக்கூடிய சில பொருட்களையும் சில உடுபுடவைகளையும் எடுத்துக்கொண்டு அயலில் இருந்த காட்டுப்பகுதிக்குள் தஞ்சம் புகுந்தனர். அந்த இரவு முழுவதும் காட்டிற்குள்ளேயே அவர்கள் மறைந்து இருந்தனர். திடீரென்று தமது கிராமமம் இருந்த திசையிலிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன. பின்னர் கிராமத்திலிருந்து வானை நோக்கித் தீபிழம்புகள் எழுவதை அவர்கள் கண்டனர். எரிந்துகொண்டிருந்த இதயத்தோடு அங்கிருந்து வெளியேறி முல்லைத்தீவில் அமைக்கப்பட்டிருந்த அகதிமுகாம் நோக்கி அவர்கள் நடக்கத் தொடங்கினர். அகதிமுகாமில் தஞ்சமடைந்த மக்களில் இளவயது ஆண்களும் பெண்களும் புலிகளுடன் இணைந்து தமது கிராமத்தை விடுவிக்க உறுதிபூண்டனர். அவர்களுக்கு வெற்றி இன்னமும் கிட்டவில்லை, ஆனால் அவர்கள் வெல்வார் என்பது நிச்சயம்". சி.குருநாதன் எனும் எழுதாளரும் "அகதிக் கிராமங்கள்" எனும் பெயரில் ஒரு தொடரினை தினக்குரல் பத்திரிக்கையில் 2002 இல் எழுதியிருந்தார்.இத்தொடரில் பல விடயங்களை அவர் குறிப்பிட்டிருந்தார். தமிழரின் பாரம்பரியக் கரையோரக் கிராமமான தென்னைமரவாடியில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து குருநாதன் பின்வருமாறு எழுதுகிறார். "மீனவக் குடியேற்றங்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள் நடைபெற்ற நாளுக்கு அடுத்தநாள், கொக்கிளாய் மற்றும் நாயாறுக் குடியேற்றங்களில் இருந்து பெருமளவு சிங்களக் குடியேற்றவாசிகளும் இராணுவத்தினரும் தென்னைமரவாடிக் கிராமத்தினுள் நுழைந்தனர். அவர்கள் அனைவரதும் முகங்களில் குரோதமும், தமிழர்களை அழிக்கவேண்டும் என்கிற வெறியும் காணப்பட்டது. தமிழர்கள் மீது பழிதீர்க்க வந்திருக்கிறோம் என்று கத்திக்கொண்டே அப்பகுதிக்குள் அவர்கள் நுழைந்திருந்தார்கள். துப்பாக்கிகள், வாட்கள், கத்திகள், கோடரிகள், இரும்புக் கம்பிகள் போன்ற ஆயுதங்களுடன் அவர்கள் தமிழர்களைத் தாக்க வந்திருந்தனர். சுமார் 200 தமிழ்க் குடும்பங்கள் தென்னைமரவாடி எனப்படும் பாரம்பரிய தமிழ்க் கிராமத்தில் அப்போது வாழ்ந்து வந்திருந்தனர். சிங்களவர்கள் ஆவேசத்துடன் அப்பகுதிநோக்கி வருவதைக் கண்டதும் தமிழர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி அருகிலிருந்த காடுகளுக்குள் ஓடி ஒளித்துக்கொண்டனர். தாம் தேடிவந்த தமிழர்களைக் காணமுடியாததால் அவர்களின் வீடுகளுக்கும் உடைமைகளுக்கும் தீவைத்துவிட்டு அங்கிருந்து சென்றது அந்தக் கும்பல். மறுநாளும் தமிழர்களைத் தேடி அந்தக் கும்பல் தென்னைமரவாடிக் கிராமத்திற்கு வந்தது. வீடுகளுக்குள் தமிழர்களைக் காணாததால் அருகிலிருக்கும் காடுகளுக்குள் அவர்களைத் தேடி நுழைந்தது. சில தமிழர்களைக் கண்டதும் அவர்களை வெளியே இழுத்துவந்து சுட்டுக் கொன்றது சிங்கள இராணுவம். தமிழ் இளைஞர்கள் வரிசையில் நிற்கவைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பெண்களை காடுகளுக்குள் இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வில் இராணுவத்தினரும் சிங்கள‌ மீனவர்களும் ஈடுபட்டார்கள். கொக்கிளாய் வாழ் தமிழர்கள் மீது இரு நாட்களில் இராணுவமும் சிங்கள மீனவர்களும் நடத்திய தாக்குதல்களில் 131 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். மூன்றாவது நாள், மார்கழி 4 ஆம் திகதி தென்னைமரவாடிக் கிராமத்தின் பூர்வ குடிகளான தமிழ் மக்கள் அங்கிருந்து பாதுகாப்புத் தேடி தமது பயணத்தை ஆரம்பித்தார்கள். நான்கு நாட்களாக காடுகளுக்குள் நடந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளைப் பகுதியை அடைந்தார்கள். அப்பகுதியில் தற்காலிகக் கொட்டகைகளை அமைத்துத் தங்கிக் கொண்டார்கள். தமது தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்ட பகுதிக்கு "பொன் நகர்" என்று அவர்கள் பெயரிட்டனர். அவர்கள் 18 வருடங்களுக்கு மேலாக இன்னமும் அங்கே வாழ்ந்து வருகிறார்கள்" (2002 இல் எழுதப்பட்ட தொடரின்படி). அமர வயலும் தென்னமரவாடியும் வலி ஓயாப் பகுதியிலிருந்து தமிழ் மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்ட பல கிராமங்களுக்குள் இரண்டு கிராமங்கள் ஆகும். புதிதாகக் குடியேற்றப்படும் சிங்களக் குடியேற்றக்காரர்களின் பாதுகாப்பிற்காக சுற்றியிருக்கும் அனைத்துத் தமிழ்க் கிராமங்களிலிருந்து தமிழர்களை விரட்டிவிட்டு அக்கிராமங்களை அழிப்பது என்பது அரசாங்கத்தின் கொள்கை போன்றே அன்று செயற்படுத்தப்பட்டது. 1984 ஆம் ஆண்டு மார்கழி 24 ஆம் திகதி இராணுவத்தினர் மீது கண்ணிவெடித் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதியெங்கும் ஒலிபெருக்கி அறிவித்தல் ஒன்றினை மேற்கொண்ட இராணுவத்தினர் கொக்கிளாய், கொக்கொத்துடுவாய், கருநாற்றுக் கேணி, காயடிக்குளம், கோட்டைக் கேணி ஆகிய கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் 24 மணி நேரத்திற்குள் அங்கிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று கட்டளையிட்டனர். 1984 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தின் முடிவில் இப்பகுதிகளிலிருந்து குறைந்தது 2,700 தமிழ்க் குடும்பங்கள் இராணுவத்தினரால் அச்சுருத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். இவற்றுள் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும், தென்னைமரவாடி கிராம சேவகர் பிரிவு திருகோணமலை மாவட்டத்திலும் அமைந்திருந்தன. 1984 மார்கழி முதல் 1985 தை மாத இறுதிவரை வரை இப்பகுதியில் நடத்தப்பட்ட தமிழ் மக்கள் மீதான படுகொலைகளின் சாராம்சம், ஓதியாமலை - ‍ மார்கழி 1, 1984 ‍- 27 தமிழர்கள் குமுழமுனை ‍- மார்கழி 2, 1984 - குறைந்தது 7 தமிழர்கள் செட்டிகுளம் - மார்கழி 2, 1984 - 52 தமிழர்கள் மணலாறு - மார்கழி 3, 1984 - குறைந்தது 100 தமிழர்கள் மன்னார் - மார்கழி 4, 1984 - 59 தமிழர்கள் கொக்கிளாய் - மார்கழி 15, 1984 - 31 பெண்களும், 21 சிறுவர்களும் அடங்கலாக 131 தமிழர்கள் முள்ளியவளை - தை 16, 1985 ‍- 17 தமிழர்கள் வட்டக்கண்டல் - தை 30, 1985 - 52 தமிழர்கள் (மேலதிக வாசிப்பிற்கு : https://tamilgenocidememorial.org/wp-content/uploads/2022/09/Massacres-of-Tamils-1956-2008.pdf) தென்னைமரவாடிப் படுகொலைகளின் பின்னர் உயிர்தப்பி வாழும் தமிழர்கள் (2004) 1988 ஆம் ஆண்டு ஊடகங்களுக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சம்பந்தன் வழங்கிய தகவலில் மகாவலி "L" வலயத்திலிருந்து 3,100 தமிழ்க் குடும்பங்கள் இராணுவத்தினராலும், சிங்களவர்களாலும் அடித்து விரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இவர்களுள் 2,910 குடும்பங்கள் வவுனியா மாவட்டத்திலிருந்தும், 290 குடும்பங்கள் வவுனியா மாவட்டத்திலிருந்தும் விரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தமிழரின் பூர்வீகத் தாயகத்தின் சுமார் 15 கிராமங்களில் இருந்து தமிழ் மக்கள் இவ்வாறு விரட்டப்பட்டிருந்தனர். இந்தக் கிராமங்களில் பெரும்பான்மமையானோர் கொக்குத்தொடுவாய் (861 குடும்பங்கள்), கருநாற்றுக் கேணி (370 குடும்பங்கள்), கொக்கிளாய் (507 குடும்பங்கள்) மற்றும் முகத்துவாரம் (1004 குடும்பங்கள்) ஆகிய கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். சம்பந்தனின் அறிக்கையின்படி தமிழ் மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்ட கிராமங்களின் பட்டியலொன்று வெளியிடப்பட்டது, கொக்கிளாய், கருநாற்றுக் கேணி, கொக்குத்தொடுவாய், நாயாறு, ஆண்டான்குளம் கணுக்கேணி, உத்தராயன் குளம் மற்றும் உதங்கை என்பனவாகும். மேலும் தமிழர்கள் பகுதியளவில் வெளியேற்றப்பட்ட கிராமங்களாக ஒதியாமலை, பெரியகுளம், தண்டுவன், குமுழமுனை (கிழக்கும் மற்றும் மேற்கு), தண்ணியூற்று, முள்ளியவளை, செம்மலை, தண்ணிமுறிப்பு மற்றும் அள‌ம்பில் ஆகியவை அடையாளம் காணப்பட்டன. இதேவகையான தமிழ் நீக்கச் செயற்பாடுகள் மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் காணப்பட்ட பாரம்பரிய தமிழ்க் கிராமங்களிலும் அரசால், இராணுவத்தினரின் துணைகொண்டு அரங்கேற்றப்பட்டு வந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.