Jump to content

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8740
  • Joined

  • Last visited

  • Days Won

    103

Everything posted by ரஞ்சித்

  1. சிங்கள பாதாள உலக சமூகவிரோதிகளை புலிகள் என்று செய்தி புனையும் ஒரு ஊடகத்தின் உரிமையாளர், அதுவும் பெளத்த பிக்குகளின் முன் எண்சாண் உடம்பை சுருக்கி, நாணிக்கோணி நின்று விருது வாங்கிய அவர் தனது பொருளாதாரப் பலத்தின்மூலம் தமிழருக்கான உரிமைகளை வாங்கித் தருவார் என்று நம்புவோமாக.
  2. கிறிஸ்த்தவ மதத்தில் சாதிப்பாகுபாடு இல்லையோ ஜஸ்டின்? குறைந்த சாதியென்பதற்காக ஆலயத்தின் வாயிலுக்கு வெளியே நிற்கவேண்டும், ஆலய சுற்றுப்பிரகாரங்களில் சிலைகளைத் தூக்கிச் செல்வதை அனுமதிக்க முடியாது, வாசகம் , மன்றாட்டு வாசிக்க முடியாது, வெள்ளாளர் இல்லாத சுவாமியென்றால் அவரின் பிரசங்கம் நடக்கும்போது ஆலயத்திற்கு வெளியே சென்றுவிடுவோம், என்னதான் படித்தாலும், இவர்களை எங்களுக்குத் தெரியாதா? உவன் கோவியன், பள்ளன், நளவன்........இவை எல்லாமே வெள்ளாள கிறீஸ்த்தவர்களின் வாய்களில் இருந்து வந்தவைதானே? கரவெட்டியில் பெரிய வெள்ளாள கிறீஸ்த்தவச் சமூகம் ஒன்றிருக்கிறது. சில ஆலயங்களில் அவர்களின் ஆதிக்கம் அப்பட்டமாகத் தெரியும். 80 களில் வேற்றுச் சாதியைச் சேர்ந்த பலர் படிப்பில் முன்னோக்கிச் செல்ல, அவர்களில் பலர் அரச தொழில்கள், குருமார்கள், கன்னியாஸ்த்திரிகள் என்று நல்ல நிலைக்கு வந்துகொண்டிருந்தார்கள். இதைப்பொறுக்க முடியாத வெள்ளாளக் கிறீஸ்த்தவர்கள் இவர்களை அழைக்கும் போது இவர்களின் சாதிப்பெயரைச் சொல்லியே அழைத்தார்கள். இந்த வக்கிரம் எவ்வளவு தூரத்திற்குச் சென்றதென்றால் பலர் கூடிநின்ற புகையிரத நிலையமொன்றில் வேற்றுச் சாதியைச் சேர்ந்த கணக்காளர் ஒருவரை, "கோவியப் பூரணத்தின்ர மகன் எல்லோ நீர்?" என்று அழைத்தார்கள். அங்கு நின்ற மக்கள் கூட்டம் அவரைப் பார்த்த விதம்பற்றி இன்றும் அவர் கவலையுடன் பேசுவார். சைவ‌மதம் சாதி வேற்றுமை பார்க்கிறது என்று குறைகூறிவிட்டு, கிறீஸ்த்தவர்களாக மதம் மாறியபின் அங்குவந்தும் அதையேதான் செய்கிறோம். அப்படியிருக்க ஏன் சைவமதம் மட்டுமே சாதிவேற்றுமை பார்க்கிறது என்று கருத்தியலை முன்வைக்கிறோம்? தமிழரின் எல்லா மதத்திலும் சாதிவேற்றுமை இருக்கிறது. இன்று நேற்றல்ல, பல்லாண்டுகளாக அது இருக்கிறது. மதவேற்றுமைகள், சாதிவேற்றுமைகள், பிரதேச வேற்றுமைகள் என்று அனைத்தையும் தகர்த்தெறிந்தே தலைவர் உன்னதமான விடுதலைப் போராட்டம் ஒன்றினை நடத்தினார். இன்று சாதிய வேற்றுமைகளைக் களைந்துவிட்டுத்தான் அரசியல் பேசமுடியும் என்றாலோ அல்லது விடுதலை குறித்து செயற்படலாம் என்றாலோ அது நடக்கப்போவதில்லை. ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் சாதியத்தைக் களைவதைத்தவிர அதற்கு மாற்று வழியில்லை. சாதியக் களைவும், விடுதலைக்கான போராட்டமும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும்.
  3. இலங்கையை ஆக்கிரமிக்க இந்திரா காந்தி விரும்பாதது ஏன்? இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் மென்மையான போக்கு தமிழ்நாட்டில் கடுமையான அதிருப்தியைத் தோற்றுவித்து வருவதை இந்திரா உணரத் தலைப்பட்டார். ஆகவே வேறு வழியின்றி ஜெயவர்த்தனவுடன் தொடர்புகொண்டு அழுத்தம் கொடுக்க எண்ணிய அவர் ஆவணி 17 ஆம் திகதி மீண்டும் அவரை தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டார். ஜெயாருடன் பேசும்போது இந்தியா ராணுவ ரீதியில் இலங்கையில் தலையிட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுத்து வருவதாகக் கூறினார். ஆகவே, தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகுறித்த பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிப்பதன் மூலமே தமிழ்நாட்டின் உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று ஜெயாரிடம் கூறினார் இந்திரா. இதற்காக தனது பிரத்தியேக ஆலோசகரான பார்த்தசாரதியை இலங்கைக்கு அனுப்பிவைப்பதாகவும், தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதில் இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவர் உதவுவார் என்றும் தெரிவித்தார். இந்திராவின் தொலைபேசி அழைப்பு வந்தபோது இலங்கையில் இருந்த இந்தியப் பத்திரிக்கையாளர் ஒருவருக்குச் செவ்வியொன்றினை வழங்கிக்கொண்டிருந்தார் ஜெயார். இந்திரா பார்த்தசாரதியின் பெயரைப் பரிந்துரைத்தபோது தன்னைப் பேட்டி கண்டுகொண்டிருந்த இந்தியப் பத்திரிக்கையாளரைப் பார்த்து, "யார் இந்தப் பார்த்தசாரதி?" என்று ஜெயார் கேட்டார். அவர் 73 வயதுடைய, பிரதமருக்கு வெளிவிவகாரங்கள் தொடர்பாக ஆலோசகராக இருப்பவர் என்றும், அரசாங்கத்தின் கொள்கை வகுக்கும் ஆணைக்குழுவின் முக்கிய உறுப்பினர் என்றும், சென்னையைத் தளமாகக் கொண்டியங்கும் ஆங்கிலப் பத்திரிக்கையான ஹிந்து குழுமத்தின் குடும்ப உறுப்பினர் என்றும் பதில் வந்தது. மறுநாள் , ஆவணி 18 ஆம் திகதி லோக்சபாவில் பேசிய இந்திரா, "நேற்று, நான் மீண்டும் இலங்கையின் அதிபர் ஜெயவர்த்தனவுடன் தொலைபேசியில் உரையாடினேன். ஜெயவர்த்தனவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு எனது தூதுவரையும் இன்னும் சில அதிகாரிகளையும் அனுப்புவதாக அவரிடம் கூறினேன். எனது கோரிக்கைகளை ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டார். அதன்படி, எமது மூத்த இராஜதந்திரியான சிறி ஜி.பார்த்தசாரதி அவர்களை முக்கியமானதும், சிக்கலானதுமான இந்த நடவடிக்கைக்காக வருகிற வாரம் கொழும்பிற்கு அனுப்பிவைக்கவுள்ளேன்" என்று கூறினார். கோபாலசாமி பார்த்தசாரதி தற்போது எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால், வங்கதேசப் பிரச்சினையின்போது தனது இராணுவத்தை அனுப்பி அம்மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்த இந்திராவை, இலங்கையில் தனது இராணுவத்தை அனுப்பமுடியாமல்த் தடுத்தது எது? என்பதுதான். தனது எதிரியான பாக்கிஸ்த்தானைப் பலவீனப்படுத்த வங்கதேசப் பிணக்கில் இராணுவ ரீதியில் தலையீடு செய்யவேண்டிய தேவை இந்திராவுக்கு இருந்தது. வங்கதேசத்தை விடுவித்ததன் மூலம் ஏக காலத்தில் இந்தியாவின் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வரக்கூடிய இராணுவ தாக்குதல்களை கிழக்கில் நிரந்தரமாகவே தடுத்துவிடக்கூடிய சந்தர்ப்பம் இந்தியவுக்கு இந்தியாவுக்குக் கிடைத்தது. ஆகவேதான் இந்தியா கிழக்கு பாக்கிஸ்த்தானைப் பிரித்தெடுத்து வங்கதேசத்தை உருவாக்க உதவியது. ஆனால், இலங்கையினை ஆக்கிரமிப்பதன் மூலம் இந்தியாவின் தென்பகுதியின் பாதுகாப்புப் பலவீனப்படும் நிலை இருந்தது. ஆகவேதான், இந்திரா அதனை எப்படியாவது தவிர்க்க முடிவெடுத்தார். இந்திராவின் பாதுகாப்பு ஆலோசகர்கள் இலங்கை தொடர்பாக பின்வரும் விளக்கத்தினை அவருக்கு வழங்கியிருந்தார்கள், "நீங்கள் இலங்கையில் ஈழம் எனும் தனிநாட்டை உருவாக்க உதவினீர்கள் என்றால், இலங்கையில் இரு நாடுகளான சிறிலங்காவும், ஈழமும் இருக்கும். ஈழம் எனும் தமிழ்ப் பிரதேசம் இந்தியாவுக்கு நட்பாக இருந்தாலும், சிறிலங்கா எனும் நாடு இந்தியாவின் நிரந்தர எதிரியாக மாறிவிடும். அதன்பின்னர் இந்தியாவுக்கு எதிரான வெளிநாடுகள் சிறிலங்காவைத் தமது தளமாகப் பாவிப்பதற்கு அது கதவுகளைத் திறந்துவிடும். இது இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு அச்சுருத்தலாக மாறும். இலங்கையில் இந்தியாவுக்கெதிரான நாடுகள் களம் அமைப்பதனைத் தடுக்கவேண்டுமென்றால், இலங்கை ஒருநாடாக இருப்பதிலேயே அது தங்கியிருக்கிறது. ஆகவே, இலங்கை மீது இராணுவ நடவடிக்கை எதனையும் எடுக்கவேண்டாம்" என்று அவர்கள் இந்திராவுக்கு ஆலோசனை வழங்கினர். இதனையடுத்து இந்திரா அரசியல் விவகார ஆணைக்குழு, அரசியல்க் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருடன் தனது ஆலோசகர்கள் வழங்கிய அறிவுருத்தல்கள் தொடர்பாக தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொண்டார். இந்தக் கலந்துரையாடல்கள் மற்றும் இவற்றின் மூலமான முடிவுகள் குறித்து அரசியல் ஆய்வாளரான கலாநிதி பாபனி சென் குப்தா கூறுகையில் "இவையே இந்திராவின் போதனைகள் அல்லது பிராந்தியப் பாதுகாப்புக் குறித்த இந்திராவின் போதனைகள்" என்று நாளடைவில் அழைக்கப்படலாயின என்று கூறுகிறார். குப்தா மேலும் கூறுகையில், தென்னாசியாவின் நாடொன்றில் இடம்பெறும் உள்நாட்டு விவாகரங்கள் எதிலும் தலையிடுவதில்லை எனும் கொள்கையினையே இந்தியா கொண்டிருக்கிறது. மேலும், வேறு நாடுகளும் இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை இந்தியா எதிர்க்கிறது. இந்தியாவின் நலன்களுக்கு பாதகத்தினை ஏற்படுத்தும் வகையில் இப்பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாட்டிலாவது வெளிநாடொன்று தலையிடுமாக இருந்தால் இந்தியா அதனை ஒருபோதும் சகித்துக்கொள்ளப்போவதில்லை. ஆகவே, இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் சென்று இப்பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாடும் வெளிநாடொன்றில் இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொள்வதையும் இந்தியா சகித்துக்கொள்ளாது. ஆனால், தென்னாசியாவில் உள்ள எந்தவொரு நாடாவது உள்நாட்டில் நடக்கும் தீவிரமான பிணக்கொன்றினைத் தீர்ப்பதற்காகவோ அல்லது மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்திற்குச் சவால்விடும் வகையிலான கிளர்ச்சியை அடக்கவோ தன்னைச் சுற்றியிருக்கும் தென்னாசிய நாடுகளிடமிருந்து, குறிப்பாக இந்தியாவிடமிருந்து உதவியினைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறான சூழ்நிலைகளின்போது குறிப்பிட்ட அந்த நாட்டின் அரசாங்கம்,இந்தியாவைத் தவிர்த்து பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளிடம் உதவியினைக் கோருவது இந்தியாவிற்கு எதிரான, அதன் நலன்களுக்குப் பாதகத்தினை விளைவிக்கும் செயற்பாடுகளாக இந்தியாவினால் கருதப்படும். இந்தியா இலங்கை விவகாரத்தில் இராணுவ ஆக்கிரமிப்பில் ஈடுபடாமைக்கான காரணம், அப்பிராந்தியத்தில் இலங்கை இராணுவ உதவிகோரிய நாடுகள், இலங்கையில் தலையிடக்கூடாதென்றும், தானும் தலையிடப்போவதில்லையென்றும் கூறியிருந்தது. இந்தியாவின் கோரிக்கையினை மீறி எவராவது தலையிட்டால் இந்தியா அதனைப் பொறுத்துக்கொள்ளாது என்றும் மிரட்டியிருந்தது. ஆகவேதான், பேச்சுவார்த்தைகளுக்கான நல்லெண்ண உதவிகளைத்தவிர வேறு எதனையும் தமிழர்களுக்குச் செய்வதற்கு இந்தியா முன்வரவில்லை. சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் (1990) கொழும்பில் நடைபெற்ற வெளிவிவகாரக் கொள்கைகளுக்கான கருத்தரங்கில் பேசப்பட்ட ஒரு விடயம் குறித்து இங்கே குறிப்பிட விரும்புகிறேன் . ஜெயவர்த்தன‌ அரசாங்கத்தின் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் முயற்சிகளை எதிர்கட்சித் தலைவரான அநுர பண்டாரநாயக்க கடுமையாக விமர்சித்திருந்தார். "நீங்கள் ஆயுதங்களைக் கேட்டீர்கள், ஆனால் எதனையுமே உங்களால் பெற்றுக்கொள்ளமுடியவில்லை" என்று அவர் கூறினார். இடைமறித்த அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி, "ஆம், நாங்கள் ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தியா எமது முயற்சிகளை முட்டுக்கட்டை போட்டு முறியடித்துவிட்டது. நாம் ஆயுதங்களைக் கேட்ட நாடுகளைத் தொடர்புகொண்ட இந்தியா, "நாம் இலங்கையை ஆக்கிரமிக்கப்போவதில்லை, ஆகவே நீங்கள் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கவேண்டிய எந்தத் தேவையும் இல்லை" என்று கூறியிருந்தது. இந்திய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளவே ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயன்றோம், ஆனால் இந்தியா எம்மை ஆக்கிரமிக்கப்போவதில்லையென்று எமக்கு தெரிந்ததன் பின்னர் அந்த நாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவேண்டிய தேவை எமக்கு இல்லாமல்ப் போய்விட்டது" என்று கூறினார். 1983 ஆம் ஆண்டின் ஜூலை இனக்கலவரங்களே தமிழரின் விடுதலைப் போராட்டத்திலும், இலங்கையின் சரித்திரத்திலும் முக்கிய திருப்பங்களாக இருந்தன. அதேபோல, ஆவணி மாதத்தின் முதல் 17 நாட்களும் எதிர்காலத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் அனுபவிக்கக் கூடிய சுதந்திரத்தின் அளவைத் தீர்மானித்தன என்று கூற முடியும். இந்தச் சுதந்திரம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினால் கட்டுப்படுத்தப்பட்டது மட்டுமன்றி, இந்திராவின் போதனைகளின் அடிப்படையில் தமிழர்களுக்கான தீர்வாக இந்தியா முன்னெடுத்த செயற்பாடுகளாலும் தீர்மானிக்கப்பட்டது என்றால் அது மிகையில்லை.
  4. பொருளாதார பலமே எம்மை மீட்க வழி என்று எழுதப்படும் மொக்கைத்தனமான கருத்துக்களைச் சகிக்க முடியவில்லை. தனக்கு இலாபம் தரக்கூடிய ஒரு சில தமிழ் பண முதலைகளைச் சிங்களம் வளைத்துப்போடும். இவர்கள் பெருந்தொகைப் பணத்தை வாரியிறைத்தே சிங்களத்திடம் கெளரவத்தினைப் பெற்றுக்கொள்கிறார்கள். இவர்களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகளுக்கும் தமிழரின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தமிழரின் பணத்தைக் கொண்டு இழக்கப்பட்ட உரிமைகளையோ, இழக்கப்பட்ட தாயகத்தையோ, கொல்லப்பட்டவர்களுக்கான நீதியையோ பெற்றுக்கொள்ளலாம் என்று சிலர் கனவு காண்பது அவர்களுக்கிருக்கும் கிரகிப்புத் திறனைப் பொறுத்தது. பணம் கொடுத்து உரிமை வாங்கலாம் என்று கனவுகாணும் சிலருக்கு ஒரு விடயத்தை சொல்ல விரும்புகிறேன், 1983 ஆம் ஆண்டு ஆடி 25 ஆம் திகதி தலைநகரின் புறக்கோட்டை மற்றும் பிரதான வீதி, கெய்ஸர் வீதி, கதிரேசன் ஆகிய வீதிகளிலிருந்த தமிழருக்குச் சொந்தமான மொத்த வியாபார நிலையங்கள், நகைக் கடைகள், புடவைக்கடைகள் என்று இலக்குவைத்து அழிக்கப்பட்டன. இதற்கான காரணம் இலங்கையின் அரிசி மொத்த விற்பனை வியாபாரத்தில் 90 வீதமானவை தமிழரின் கைகளிலேயே இருந்தது. மீதி 10 வீதத்தைச் சோனகர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அதே போல நகை வியாபாரத்தில் ஏறக்குறைய 100 வீதம் இலங்கைத் தமிழர்கள் மற்றும் இந்தியத் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. புடவை வியாபாரமும் தமிழர்களின் கட்டுப்பாட்டில் அன்று இருந்தது. பொருளாதாரத்தில் தமிழர்கள் மிகவும் பலமான நிலையில் இருந்தார்கள். பல தமிழ் மொத்த வியாபாரிகளும், நகைக்கடை உரிமையாளர்களும் வாழைத்தோட்டச் சண்டியனான பிரேமதாசவுக்கு மாதம் தோறும் கப்பமாகப் பெரும் பணம் (உதயா நகை வியாபாரம் முதற்கொண்டு) கொடுத்து தமது வியாபாரங்களைப் பாதுகாப்பாக நடத்திவந்தார்கள். பல தொழில் அதிபர்கள் ஆயிரக்கணக்கான சிங்களவர்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுத்திருந்தார்கள். அரசாங்கம் பெருமளவு வரிப்பணத்தை தமிழர்களின் தொழில்களூடாகப் பெற்றுவந்தது. ஆனால், ஆடி 25 ஆம் திகதி இவை அனைத்தும் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. ஏனென்றால், தமிழரின் பொருளாதார பலத்தினை அழிப்பதே சிங்களத்தின் உண்மையான நோக்கம். வாசிக்கத் தெரிந்தவர்கள் 83 கலவரத்தில் பிரேமதாச, லலித் அதுலத் முதலி, சிறில் மத்தியூ, ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ், காமிணி போன்றோர் தமிழரின் பொருளாதார பலம் அழிக்கப்படவேண்டும் என்றே செயற்பட்டனர், இவர்களை ஜெயார் எப்படி வழிநடத்தினார் என்பதை ஒருமுறை படித்துப் பார்ப்பது உதவியாக இருக்கும். மாதாமாதம் கப்பம் கட்டிய நகைக்கடைக்காரர்கள் கூட வெறும் ஷொப்பிங் பையுடந்தான் யாழ்ப்பாணத்திற்குக் கப்பல் ஏறினார்கள். அன்றிருந்த தமிழர்களின் பணபலம் அவர்களைக் காக்கவில்லை. அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவில்லை, அவர்களின் தாயகத்தைக் காக்கவில்லை, கொல்லப்படுபவர்களையும் காணாமலாக்கப்பட்டவர்களையும் மீட்டுத்தரவில்லை. ஏனென்றால், தமிழரின் பொருளாதாரத்தை அழித்து தம்மிடம் கையேந்த வைப்பதற்காகவே தமிழரின் பணத்தை, முதலீட்டை, வியாபாரத்தை அழித்தார்கள். போதாதென்று தமிழரின் அழிக்கப்பட்ட வியாபா நிலையங்களை, அவற்றின் கட்டடங்களை அரச ஆதரவுடன் பொறுப்பெடுத்துச் சிங்களவர்களுக் கையளித்தார்கள். 83 இனவழிப்பில் தமிழர்களுக்குச் சொந்தமான ஒன்றரை இலட்சம் தொழில் நிலையங்கள், வியாபார நிலையங்கள், வீடுகள் என்பன முற்றாக எரிக்கப்பட்டிருந்தன. இவை அனைத்துமே இலங்கையின் பொருளாதாரத்திற்கு உதவியவைதான். ஆனால், தமிழரின் பொருளாதாரப் பலத்தை அழிக்கவேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகவே இவை அழிக்கப்பட்டன. இவை அழிக்கப்படும்போது ஒரு கணம் ஏனும் சிங்களம் யோசிக்கவில்லை. அல்லது, இவற்றை வைத்திருந்ததால் மட்டுமே தமிழர்களால் தம்மைக் காத்துக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் பணம் தருவார்களாம், அதனைக்கொண்டு தமிழரின் உரிமைகளை வாங்கிவிட முடியுமாம். இந்த வீணர்களிடம் நான் கேட்கும் ஒரு கேள்வி என்னவென்றால், எவ்வளவு பணம் கொடுத்தால் உங்களுக்கு உரிமை தருவதாக சிங்களவன் கூறியிருக்கிறான்? உங்களின் இழக்கப்பட்ட தாயகத்திற்கு நீங்கள் பேசியிருக்கும் விலையென்ன? கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதிக்குப் பேசியிருக்கும் விலையென்ன? அரகலய காலத்தில் புலம்பெயர் தமிழரின் பணத்தின் மூலம் பேரம் பேசலாம் என்று கதை எழுந்தது. உடனேயே சிங்களம் சுதாரித்துக்கொண்டு அவர்கள் வந்து முதலிடலாம், அரசியலில் செல்வாக்குச் செலுத்த முடியாது. இந்த நாட்டை எப்படி நடத்துவதென்பது சிங்கள பெளத்தர்களின் கைகளிலேயே இருக்கிறது என்று தெளிவாகச் சொல்லியது. உங்களை பொருளாதாரத்தில் பலவீனமாக்கி, தம்மிடம் கையேந்தும் நிரந்தர நிலையை அவன் உருவாக்க நினைக்கிறான். இந்த லட்சணத்தில் உரிமைகளுக்கு பணம் கொடுத்து வாங்கலாம் என்கிற கனவு ! இரத்திணச் சுருக்கம், நன்றி குறூசோ!
  5. ஈழத்தமிழரின் அவலங்களை தன‌து அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த நினைத்த கருநாநிதி இந்திய சுதந்திரதின விழாவில் இந்திரா ஆற்றிய உரையும், அமிர்தலிங்கத்திற்கு அளிக்கப்பட்ட கெளரவமும் ஜெயாரைக் கோபத்தின் உச்சிக்கே இட்டுச் சென்றது. ஆகவே, தனது அரச ஊடகங்களை இந்திராவிற்கெதிராகவும், இந்தியாவுக்கெதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்குமாறு பணித்தார். ஜெயாரின் ஆணைப்படி அரச ஊடகங்கள் இந்திராவின் நம்பகத்தன்மையினையும் அவரது பக்கச்சார்பின்மையினையும் வெகுவாகக் கேள்விகேட்டு விமர்சித்திருந்தன. இந்தியாவைச் சண்டியர் என்று விளித்த இந்த ஊடகங்கள் சிறிய நாடான இலங்கையின் கைகளை மடக்கி வைக்கப் பார்ப்பதாக குற்றம் சுமத்தின. அமிர்தலிங்கத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு மரியாதையினையும், இந்திரா காந்தியின் காட்டமான உரையினையும் அவை வெகுவாக விமர்சித்தன. ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ தனது நிலைப்பாட்டில் சற்றுத் தளர்வுப் போக்கினைக் கடைப்பிடிக்க விரும்பியது. தில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமிர்தலிங்கம், "இந்திரா காந்தியுடனான பேச்சுக்களின் பின்னர் நிலைமை மாறிவிட்டது" என்று தெரிவித்தார். இந்தியாவின் நல்லெண்ண உதவிகளின்மூலம் அடிப்படை மாற்றங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன என்று அவர் கருத்து வெளியிட்டார். மேலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அமிர்தலிங்கம் கூறினார். அரசாங்கமானது தனிநாட்டிற்கு நிகரான சாத்தியப்படக்கூடிய மாற்றுத்தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் தமது தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட்டு விட்டு அதனைப் பரிசீலிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார். காத்திரமான மாற்றுத்தீர்வொன்றினை அரசு முன்வைக்கும் பட்சத்தில், தாம் அதனை தமிழ் மக்களிடம் எடுத்துச் சென்று அவர்களை அதற்கு இணங்கவைக்கப்போவதாகவும் அவர் கூறினார். மாற்றுத்தீர்வு எப்படி இருக்குமென்று கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், அது சமஷ்ட்டி அடிப்படையிலான , தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய தீர்வாக அமையவேண்டும் என்று கருத்து வெளியிட்டார். அப்படியான மாற்றுத்தீர்வொன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் இந்தியா கட்டாயம் ஒரு தரப்பாக தீர்வுவிடயத்தில் பங்களிப்புச் செலுத்தவேண்டும் என்றும் கூறினார். நல்லிணக்க உதவிகளைச் செய்யும் நிலையிலிருந்து செயற்றிறன் கொண்ட மூன்றாவது தரப்பாக இந்தியா தன்னை முன்னகர்த்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு உதாரணமாக சர்வதேச பிணக்குகளளில் அமெரிக்காவின் மத்தியஸ்த்தத்துடன் இடம்பெற்ற காம்ப் டேவிட் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா அளிக்கும் பங்கிற்கு நிகராக தமிழரின் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு இருக்கவேண்டும் என்று அவர் கூறினார். மேலும், இலக்கு ஒன்று எட்டப்படுவதற்கு இந்தியா உத்தரவாதம் வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால், அமிர்தலிங்கம் முன்வைத்த அனைத்துப் பரிந்துரைகளையும் ஜெயார் முற்றாக நிராகரித்தார். ஊடகங்களுக்குப் பேசிய ஜெயார், இந்தியா அடக்கி வாசிப்பதே இப்போதைக்குத் தேவையானது என்று கூறினார். தேவைப்பட்டால் நாம் இந்தியாவின் மத்தியஸ்த்தத்தினை நாடுவோம், இப்போதைக்கு வேண்டாம் என்று அவர் கூறினார். தில்லியிலிருந்து திரும்பிய அமிர்தலிங்கத்தை உணவெழுச்சியினால் உந்தப்பட்ட தமிழ்நாடு வரவேற்றது. "ஈழத்திற்கான யாத்திரை" எனும் பெயரில் நெடுமாறனினால் ஆவணி 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட‌ பேரணி தோல்வியில் முடிவடைந்தது. ஆனாலும், 8 நாட்களாக, 1700 கிலோமீட்டர்கள் தூரம் நடைபவணியாக வந்த 5,000 ஈழ ஆதரவாளர்களின் முயற்சியினால் மொத்தத் தமிழ்நாடுமே உணர்வுகொண்டு எழுந்து நின்றது. ஈழத்தில் பாதிக்கப்பட்டுவரும் தமது உறவுகளுக்காக உணர்வுடன் திரண்ட ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் இந்தப் பேரணியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது உணர்வினை வெளிப்படுத்தினர். பிரபாகரனை நேசித்த மக்களைக் கொண்டவையும், அவர் சிறிதுகாலம் வாழ அடைக்கலம் கொடுத்தவையுமான‌ இரு பழமை மிக்க நகரங்களான மதுரைக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலேயே இந்தப்பேரணி நடைபெற்றிருந்தது. பிரபாகரனுடன் நெடுமாறன் ‍ 80 களின் இறுதிப்பகுதியில் ஒரு தொகை மீன்பிடிப் படகுகள் மூலம் பாக்கு நீரிணையைக் கடந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்வதே நெடுமாறனின் நோக்கமாக இருந்தது. கொழும்பும், தில்லியும் நெடுமாறனின் இந்த முயற்சியினால் கடுமையான நெருக்கடியச் சந்தித்தன. தனது சிறிய கடற்படையை உசார்ப்படுத்திய ஜெயார், பாக்கு நீரிணையைக் கடக்கும் படகுகள் அனைத்தையும் தடுத்துவிடும்படி ஆணையிட்டார். இது தேவையற்ற மோதலை உருவாக்கிவிடும் என்று அஞ்சிய தில்லி, நெடுமாறனின் முயற்சியைத் தடுத்து நிறுத்தியது. எம் ஜி ஆருடன் பேசிய இந்திரா காந்தி, நெடுமாறன் யாழ்ப்பாணத்திற்குச் செல்வதை நிறுத்தும்படி கோரினார். நெடுமாறனுக்கு மீன்பிடிப் படகுகளை வழங்குவதைத் தடுத்ததன் மூலம் அவரின் முயற்சியை முறியடித்தார் எம்.ஜி.ஆர். தனது காவல்த்துறையைக் கொண்டு தமிழ்நாட்டின் கரையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகளை அகற்றினார். இந்தியாவின் சுதந்திர தினமான ஆவணி 15 ஆம் திகதி இராமேஸ்வரத்தின் கரையை வந்தடைந்த நெடுமாறனின் பேரணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் யாழ்ப்பாண செல்வதற்கென்று இரு ஓட்டை விழுந்த‌ படகுகள் மட்டுமே அக்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அவற்றின் ஒன்றில் ஏறிக்கொண்ட நெடுமாறன், அதன் உரிமையாளரைப் பார்த்து படகினை யாழ்ப்பாணம் நோக்கிச் செலுத்துமாறு கோரினார். நெடுமாறனின் கோரிக்கயினை வேண்டாவெறுப்பாக ஏற்றுக்கொண்ட அந்த உரிமையாளரினால் கடலில் சிறிது தூரம் மட்டுமே செல்ல முடிந்தது. படகின் அரைப்பகுதிக்கு நீர் நிரம்பிவிட, வேறு வழியின்றி படகு மீண்டும் கரையை வந்தடைந்தது. தனது முயற்சியைத் தடுத்து நிறுத்தியது எம்.ஜி.ஆர் என்பதை நெடுமாறன் உடனடியாக உணர்ந்துகொண்டார். ஆத்திரம் மேலிட, "எம்.ஜி.ஆரே இதனைச் செய்ததது. என்னைக் கைது செய்யுங்கள், கைதுசெய்யுங்கள்" என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற பொலீஸாரைப் பார்த்துக் கோபத்துடன் கத்தினார் நெடுமாறன். கருநாநிதியும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.அன்பழகனும் தமிழ்நாட்டில் பெருகிவந்த ஈழ ஆதரவு சூழ்நிலையினை தமக்குச் சார்பாகப் பாவிக்க எண்ணினர். ஆகவே, தமிழ்நாட்டுச் சட்டசபையில் தாம் வகித்த பதவிகளைத் திறந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கப்போவதாகக் கூறினர். ஆனால், தொழிநுட்பக் கோளாறுகள் இருப்பதாகக் கூறி அவர்கள் இருவரினதும் இராஜினாமாக் கடிதங்களை ஏற்றுக்கொள்ள சபாநாயகர் மறுத்துவிட்டார். ஆனால், சட்டசபை அமர்வுகளை புறக்கணித்து வந்த இவர்கள் இருவரும், இந்திய மத்திய அரசு வங்கதேசப் பிரச்சினையில் வங்காளிகளுக்குச் சார்பாக நடந்துகொண்ட போதும், ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கு தனிநாடு காண உதவவில்லை என்று குற்றஞ்சாட்டினர். தமிழர் பிரச்சினை தொடர்பாக தில்லிக்குப் போதிய அழுத்தத்தினைக் கொடுக்கவில்ல என்று எம்.ஜி.ஆரையும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். தி.மு.க வுக்குச் சார்பான பத்திரிக்கைகள், எம்.ஜி. ஆர் ஒரு மலையாளி என்பதாலும், இலங்கையின் கண்டியில் பிறந்ததாலும் அவர் ஈழத்தமிழருக்கு அனுதாபம் காட்டவில்லை என்று எழுதியிருந்தன. தன்மீதான விமர்சனத்தினால் ஆத்திரப்பட்ட எம்.ஜி.ஆர் சர்வகட்சி மாநாடு ஒன்றினைக் கூட்டி தில்லிக்கு அழுத்தம் கொடுக்க எண்ணினார். தி.மு.க இக்கூட்டத்தைப் புறக்கணித்திருந்தது. ஆனால், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றதோடு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தில்லி தலையிடவேண்டும் என்று கோரி தீர்மானம் ஒன்றினையும் நிறைவேற்றியது. அமிர்தலிங்கம் ஆவணி 16 ஆம் திகதி சென்னைக்குத் திரும்பினார். சென்னை திரும்பியதும் முதலமைச்சர் எம்.ஜி.ஆரைச் சென்று சந்தித்தார். பின்னர் கருநாநிதியைச் சந்திக்க விரும்பினார். ஆனால், தன்னைச் சந்திக்கும் முன்னர் எம்.ஜி.ஆரை அமிர்தலிங்கம் சென்று சந்தித்தமை கருநாநிதிக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, தன்னைச் சந்திக்கவேண்டும் என்று அமிர்தலிங்கம் கேட்டபோது, தான் திருச்சியில் மூன்றுநாட்கள் தங்கியிருப்பதால், தன்னால் அமிர்தலிங்கத்தைச் சந்திக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டார். ஆகவே, திருச்சிக்குச் சென்ற அமிர்தலிங்கம் கருநாநிதியைச் சந்தித்து அவரைச் சாந்தப்படுத்தினார்.
  6. இந்திய சுதந்திரதின விழாவில் விசேட அதிதியாக வரவேற்பளிக்கப்பட்ட அமிர்தலிங்கம் இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுக்களின்போது ஏற்பட்ட தோல்விகளையடுத்தே தமிழ் மக்கள் தனிநாட்டிற்கான கோரிக்கையினை முன்வைத்தார்கள் என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார் அமிர்தலிங்கம். 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத்தீர்மானத்தின் அடிப்படையில் பிரிந்துசெல்வதென்று முடிவெடுத்திருந்தபோதிலும், ஜெயாருடன் பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்வுகாண்பதற்கு தமிழர்கள் தீவிரமாக முயன்று வந்ததாக அவர் கூறினார். ஆயுத அமைப்புக்களின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் எனும் தீர்வினை ஏற்றுக்கொள்ள தாம் முன்வந்திருந்ததாகவும் அவர் கூறினார். ஆனால், அதிகாரங்களோ, போதிய நிதிவளமோ அற்றநிலையில் மாவட்ட சபைகள் பிரியோசனமற்ற ஒரு தீர்வென்பதை தாம் உணர்ந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.மாவட்ட சபைகளுக்கான அதிகாரத்தையும், நடத்துவதற்கான நிதியையும் கேட்டபோது நாம் தாக்கப்பட்டோம் என்றும் அவர் மேலும் கூறினார். இந்தியாவும், சர்வதேச சமூகமுமே இன்று எம்மைக் காக்கமுடியும் என்று பத்திரிக்கையாளர்களைப் பார்த்துக் கூறினார் அமிர். ஜெயவர்த்தன மீதும் அவரது அரசாங்கத்தின் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கையினை முழுமையாக இழந்துவிட்டோம். அவர்களுடன் பேசுவதில் இனிப்பயனில்லை. தமிழர்களை அழிக்கவே அவர்கள் காத்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார். ஆவணி 14 ஆம் திகதி அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் சம்பந்தனும் இந்திராகாந்தியைச் சென்று சந்தித்தனர். இந்திராவின் ஆலோசகர் கோபாலசாமி பார்த்தசாரதி மற்றும், இந்திராவின் செயலாளர் பி. சி. அலெக்ஸாண்டர் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். இலங்கையில் நிலவும் சூழ்நிலை குறித்து இரண்டுமணி நேரம் அவர்கள் பேசினார்கள். பின்னர், தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அத்தீர்வில் இந்தியா வகிக்கப்போகும் பாத்திரம் குறித்தும் பேசப்பட்டது. தமிழர்களின் பிரச்சினை தொடர்பான சுருக்கமான சரித்திரத்தை இந்திராவுக்கு விளக்கினார் அமிர். அகிம்சை வழியில் தந்தை செல்வாவினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களும் அதன் தோல்வியும் அவருக்கு உணர்த்தப்பட்டது. தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் வாழ்வதே இன்று அவர்கள் முன்னாலிருக்கும் உடனடித் தேவை என்று அவர் கூறினார். "சுய அதிகாரம் மிக்க சமஷ்ட்டிக் கட்டமைப்பு ஒன்றினையே நாம் கோரினோம். அது மறுக்கப்பட்டதனாலேயே தனிநாட்டிற்கான கோரிக்கையினை முன்வைத்தோம்" என்று அவர் கூறினார். தமிழரின் பிரச்சினை தொடர்பான இந்தியாவின் கொள்கைகளை இந்திரா முன்வைத்தார். இலங்கையைப் பிரிப்பதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று அவர்களிடம் திட்டவட்டமாகக் கூறினார் . ஒன்றுபட்ட இலங்கைக்குள், தனிநாட்டிற்குக் குறைவான சுய ஆட்சி உள்ள பிராந்தியங்கள் எனும் அடிப்படையில் தமிழர்கள் தீர்வொன்றினைக் கோரமுடியும் என்று அவர்களிடம் கூறினார் இந்திரா. "உங்களின் முதலாவது கோரிக்கையான சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வுக்கே செல்லுங்கள், இந்தியா உங்களுக்கு ஆதரவாக நிற்கும்" என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடம் தெரிவித்தார். என்னுடன் பின்னர் பேசிய சம்பந்தன், இலங்கையின் தமிழர் ‍- சிங்களவர் பிணக்கில் இந்தியா எத்தரப்பையும் ஆதரிக்காது என்று இந்திரா தம்மிடம் உறுதிபடக் கூறியதாகச் சொன்னார். சிங்களவர்களின் நலன்களைப் பாதிக்காதவகையில் தமிழர்களுக்கு நியாயமான தீர்வொன்றினை வழங்குவது மட்டுமே இந்தியாவால் செய்யக்கூடியதும், செய்யவிரும்புவதும் என்று இந்திரா அமிர்தலிங்கம் தலைமையிலான‌ குழுவினரிடம் கூறியிருக்கிறார். இலங்கையில் சுய கெளரவத்துடனும், பாதுகாப்புடனும் தமிழர்கள் வாழ்வதை உறுதிப்படுத்த தன்னால் முயற்சியெடுக்க முடியும் என்றும் இந்திரா கூறியிருக்கிறார். பெரும்பான்மையினரான சிங்களவர்களின் நலன்களைப் பாதிக்காத வகையிலேயே இதனைச் செய்யவேண்டியிருக்கும் என்று அவர் இப்பேச்சுக்களின்போது வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இந்தியாவின் இந்த பரிந்துரைகளை உடனடியாகவே ஏற்றுக்கொண்ட அமிர்தலிங்கம், வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்திசெய்யப்பட்டாலே போதும் என்று இந்திராவிடம் தெரிவித்தார். தமிழர்களின் அபிலாஷைகள் என்று தந்தை செல்வாவின் சமஷ்ட்டிக் கட்சியினால் அறியப்பட்ட விடயங்களை 1956 ஆம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற சமஷ்ட்டிக் கட்சியின் மாநாட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறிய அமிர்தலிங்கம் அதுகுறித்து இந்திராவுக்கு விளங்கப்படுத்தினார், தமிழர்களுக்கான தேசம், தமிழர்களுக்கான தாயகம், சுயநிர்ணய உரிமை மற்றும் குடியுரிமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே தமிழர்களின் அபிலாஷைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் விளங்கப்படுத்தினார். பின்னர் ஜெயார் தூதனுப்பிய ஹெக்டர் ஜயவர்த்தனவுடனான தனது பேச்சுக்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடம் விளங்கப்படுத்தினார் இந்திரா. மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்த ஜெயவர்த்தன இணங்கியிருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார் அவர். ஆனால், இத்திட்டம் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யப் போதுமானது அல்ல என்று ஹெக்டரிடம் ஏற்கனவே இந்திரா தெரிவித்திருந்தார். அதனையடுத்து ஏனைய தீர்வுகள் குறித்து ஆராய ஜெயார் இணங்குவதாக இந்திராவிற்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே மீண்டும் அனைத்துக் கட்சி மாநாடொன்றினைக் கூட்டப்போவதாக ஜெயார் அறிவித்திருந்தார். இதன் பின்னணியில், ஜெயார் உத்தேசித்திருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க விரும்புகிறீர்களா என்று அமிர் தலைமையிலான தூதுக்குழுவினரைப் பார்த்துக் கேட்டார் இந்திரா. இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், மன்னாரில் நடைபெற்ற த.ஐ.வி. மு யினரின் வருடாந்த மாநாட்டில் இலங்கையரசாங்கத்துடன் இனிமேல் பேசுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டதாகக் கூறினார். எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அவர் ஒவ்வொரு முறையும் கூறுவார், ஆனால் அவற்றினை ஒருபோதுமே அவர் நடைமுறைப்படுத்த மாட்டார் என்று ஜெயார் குறித்து இந்திராவிடம் கூறினார் அமிர்தலிங்கம். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஜெயவர்த்தனவுடன் 11 மாதங்களாகத் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தைகளை ஜெயவர்த்தன எப்படி தனக்குச் சார்பாகக் கையாண்டார் எனும் விடயத்தை இந்திராவுக்குத் தெரியப்படுத்தினார் அமிர். "கடந்த காலத்தில் இலங்கையரசுடன் செய்துகொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் அனைத்தையும் அவர்கள் கைவிட்டு விட்டதால், அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையினை நாம் முற்றாக இழந்துவிட்டோம்" என்று அமிர் கூறினார். பதிலளித்த இந்திரா, தானும் ஜெயவர்த்தனவை நம்புவதில்லை என்று தெரிவித்தார். ஆனால், பேச்சுவார்த்தைகளுக்காக ஜெயார் விடுக்கும் அழைப்பினை தமிழர்கள் தவறவிடக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். "நான் முன்னர் கூறியதுபோல, இப்பிரச்சினைக்கான தீர்வு பேச்சுவார்த்தை மேசையினூடாகவே எட்டப்பட முடியும்" என்று மீண்டும் கூறினார் இந்திரா. இந்திராவின் நிலைப்பாட்டைப் பாராட்டிய அமிர்தலிங்கம், பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்கான இணக்கத்தினைத் தெரிவித்தார். அமிர்தலிங்கத்தின் திடீர் மனமாற்றத்தையும், பேச்சுக்களில் கலந்துகொள்ளும் இணக்கத்தையும் இந்திரா பாராட்டினார். மறுநாளான ஆவணி 15 இல் நடந்த இந்திய சுதந்திர தின விழாவில் சிறப்பு அதிதியாக அமிர்தலிங்கத்தை அழைத்தார் இந்திரா. இந்தியாவின் செங்கோட்டைக்கு கெளரவமாக அழைத்துச் செல்லப்பட்ட அமிர்தலிங்கம், வெளிநாட்டு அரச அதிபர்களுக்கு இணையான வவேற்பினையும், உபசரிப்பையும் பெற்றுக்கொண்டார். அங்கு கலந்துகொண்ட அரச அதிபர்களில் அமிர்தலிங்கம் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். செங்கோட்டையிலிருந்து இந்திய நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்திரா இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக சிங்களவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளைக் கடுமையாகக் கண்டித்தார். அது ஒரு இனக்கொலை என்று அவர் வர்ணித்தார். தமிழர்கள் சுயகெளரவத்துடனும், பாதுகாப்பாகவும் வாழ இந்தியா உதவும் என்றும் கூறினார்.
  7. அப்படியில்லை அண்ணா, இந்திரா கூட சிங்களவர்களின் நலன்களைப் பாதிக்காத வகையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள்த்தான் தீர்வொன்றினைக் கோரமுடியும் என்று அமிர்தலிங்கத்திற்குக் கூறியிருக்கிறார்.
  8. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளைத் தீர்க்க விரும்பிய இந்திரா ஜெயார் தூதனுப்பிய ஹெக்டர் ஜெயவர்த்தனவின் விஜயத்தின் பின்னர் இரு நாட்டு அதிகாரிகளும் இணைந்து அறிக்கையொன்றினை வெளியிடுவதென்று முடிவாகியது. இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட‌ இந்திய அதிகாரிகள், "ஒன்றுபட்ட இலங்கைக்குள்" தமிழருக்கான தீர்வொன்றையே பிரதமர் இந்திரா கோருவதாக குறிப்பிடச் சொன்னார்கள். சுதாரித்துக்கொண்ட இலங்கையதிகாரிகள், "ஒன்றுபட்ட" இலங்கை எனும் பதத்தினை நிராகரித்து "ஓற்றை நாடான" எனும் பதத்தினை பாவிக்கக் கோரினர். நிலைமை சிக்கலடைவதை அவதானித்த இலங்கைக் குழுவின் தலைவர் ஹெக்டர், தன்னுடன் வந்திருந்த அதிகாரிகளை அடக்கி வாசியுங்கள், இந்திராவின் வாயால் நாம் விரும்பாத சொற்களை வரப்பண்ணாதீர்கள் என்று கட்டுப்படுத்தினார். இந்திரா தனது எண்ணத்தை கூறும் அதிகாரத்தை நாம் கேள்விகேட்கக் கூடாது என்று கூறினார் அவர். இதனை ஜெயாரின் ஆலோசகரான பேர்ணாட் திலகரட்ணவும் ஆதரித்தார். அன்று மாலை இந்தியப் பாராளுமன்றத்தில் இந்திரா உரையாற்றினார். ஜெயாரின் விசேட பிரதிநிதி ஹெக்டர் இந்தியா வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். அவருடனான பேச்சுக்களில் இலங்கையில் நடந்துவரும் சம்பவங்கள் குறித்த இந்திய மக்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கரிசணை குறித்து தான் தெரிவித்ததாக கூறினார். மேலும், தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வினை ஆராய ஜெயவர்த்தன ஆடி மாதத்தில் கூட்டவிருந்த சர்வகட்சி மாநாடு குறித்தும் பேசிய இந்திரா, அம்மாநாடு நடவாது போனமை குறித்தும் குறிப்பிட்டார். "அவர்கள் என்னிடம் முன்வைத்த தீர்வுக்கான யோசனைகளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர்களிடம் தெரிவித்தேன். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து இந்தியா முன்வைக்கும் பரிந்துரைகளை ஆராய இலங்கை ஆயத்தமாக இருப்பதாக என்னிடம் கூறினார்" என்று தெரிவித்தார். இந்திரா காந்தி "பேச்சுவார்த்தைகள் ஊடாக தமிழ் மக்களும் அரசாங்கம் சுமூகமான தீர்வுகுறித்துக் கலந்துரையாட முன்வரவேண்டும் என்று நான் எனது விருப்பத்தை அவர்களிடம் தெரிவித்தேன். இப்பேச்சுவார்த்தைகள் வெற்றியளிப்பதற்கான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யக் காத்திருப்பதாகவும் அவர்களிடம் கூறினேன். இரு நாடுகளுக்கும் இருக்கும் பாரம்பரிய உறவு முறையினை அடிப்படையாகக் கொண்டு இந்தியா செய்ய விரும்பு உதவிகள் குறித்த நன்றியை இலங்கை ஜனாதிபதி என்னிடம் தெரிவித்திருக்கிறார். எமது உதவிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்" என்றும் தெரிவித்தார் ஆவணி 12 ஆம் திகதி லோக்சபாவில் இந்திரா வெளியிட்ட அறிக்கை இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டின் அடிப்படையினைத் தெளிவாகக் காட்டியிருந்தது. இந்திராவின் அறிக்கயில் குறிப்பிடப்பட்டிருந்த அடிப்படை இலக்கணங்கள் இவ்வாறு இருந்தன, 1. பிரிக்கப்படாத, ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே தமிழருக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும். 2. வழங்கப்படும் தீர்வு தமிழர்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்துபவையாக இருக்க வேண்டும். மேலும், வெளி மத்தியஸ்த்தத்தின் உதவியினூடாகவே தீர்வு எட்டப்படல் வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்திரா காந்தியின் காலத்திலிருந்தே ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தும் தீர்வு காணப்படல் வேண்டும் என்றே இந்தியா தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. ஜெயார் அனுப்பிய பிரதிநிதி இலங்கை மீண்டபோது பல அமைச்சர்கள் இந்திராவினால் பாவிக்கப்பட்ட "ஒன்றுபட்ட இலங்கை" எனும் பதத்திற்கெதிரான தமது கடுமையான ஆட்சேபணையினை வெளியிட்டார்கள். குறைந்தது "ஒன்றுபட்ட இலங்கை" எனும் பதத்தினைப் பாவிக்கும்போது இலங்கையின் கரிசணைகளையாவது அறிக்கையினுள் உள்வாங்கியிருக்க வேண்டும் என்று அவர்கள் விமர்சித்தார்கள். ஆனால், தனது முடிவில் தீர்க்கமாக நின்ற ஹெக்டர், இந்தியாவின் கொள்கைகளை அவர்கள்தான் முடிவெடுக்கமுடியும், இலங்கையர்கள் அல்ல என்று கூறிவிட்டார். தமிழர் மீதான அரச ஆதரவுடனான தாக்குதல் முடுக்கிவிடப்பட்ட நாளான ஆடி 25 ஆம் திகதி அமிர்தலிங்கமும் ஏனைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வவுனியாவில் நின்றிருந்தார்கள். மன்னாரில் நடைபெற்ற தமது வருடாந்த மாநாட்டில் இலங்கையரசுடன் பேரம்பேசலில் ஈடுபடுவது இல்லை என்று முடிவெடுத்தார்கள். வவுனியாவில் இருக்கும்போது ஆவணி 29 ஆம் திகதி இந்திராவிடமிருந்து அமிர்தலிங்கத்திற்குச் செய்தியொன்று வந்திருந்தது. "இந்தியாவுக்கு வாருங்கள், உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம்" என்பதே இந்திராவிடமிருந்து வந்த அந்தச் செய்தி. ஆனால், அமிர்தலிங்கத்தால் வவுனியாவை விட்டு வெளியேற முடியவில்லை. வழியில் சிங்களவர்கள் அவரை அடையாளம் கண்டுவிட்டால் அவர் கொல்லப்படுவது உறுதி எனும் நிலைமை காணப்பட்டது. ஆகவே, இந்தியத் தூதர் சத்வால் ஊடாக தான் இந்தியா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துதருமாறு அவர் கேட்டுக்கொண்டார். அமிர்தலிங்கம் மட்டுமல்லாமல் அவருடன் சிவசிதம்பரமும், சம்பந்தனும் கூடவே தில்லிக்குப் பயணமாவதற்கான ஏற்பாடுகளை சத்வால் செய்துகொடுத்தார். ஆவணி 6 ஆம் திகதி வவுனியாவில் கூடிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட ஆறாவது திருத்ததினூடான இலங்கைக்குள் தனியான நாடொன்றினை உருவாக்க முயலமாட்டோம் என்கிற சத்தியப்பிரமாணத்தை செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்தனர். ஆனால், அரச அதிகாரிகளான தமிழர்கள் இச்சத்தியப்பிரமாணம் குறித்து தமது விருப்பத்தின்படி முடிவெடுக்கலாம் என்று கூறிவிட்டனர். இந்த விடயம் புலிகளின் உயர்பீடத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை என்று பிரபாகரன் கருதினார். இச்சத்தியப்பிரமாணம் எந்த அர்த்தமும் கொண்டிருப்பதாக அவர் நினைக்கவில்லை. புதிய அரசியலமைப்பின் மேல் சத்தியப்பிரமாணம் செய்யும் தமிழ் அதிகாரிகள் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதை எதுவும் தடுக்கப்போவதில்லை என்று அவர் கூறினார். இச்சத்தியப்பிரமாணத்தை ஒரு பிரச்சினையாக்குவதன் மூலம் அரச அதிகாரிகளும் அவர்களது குடும்பங்களும் ஏற்கனவே முகம்கொடுத்துவரும் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக இன்னொரு பிரச்சினையாக இதனை உருவாக்க வேண்டாம் என்று அவர் கூறினார். தெற்கில் பணிபுரிந்துவந்திருந்த பல தமிழ் அதிகாரிகள் கலவரத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. "எமது முடிவுகள் மூலம் அவர்களை வீதியில் நாம் எறிந்துவிடக் கூடாது" என்று அவர் உறுதியாகக் கூறினார். கந்தசாமி பத்மநாபா ஆனால், பத்மாநாபாவின் அமைப்பான ஈ.பி.ஆர்.எல் எப் வித்தியாசமான நிலைப்பாட்டினை எடுத்தது. சிங்கள அதிகாரத்துக்கெதிரான தமிழரின் நிலைப்பாட்டை அடையாள வழியிலாவது தமிழர்கள் காட்டவேண்டும் என்று பத்மநாபா கூறினார். அரசின் ஆறாவது திருத்தச் சட்டத்தின்மேல் சத்தியப்பிரமாணம் செய்து பதவியை நீடிக்க வேண்டிய தேவை அதிகாரிகளுக்கு இல்லை என்று அவர் வாதிட்டார். ஈரோஸ் மற்றும் புளொட் அமைப்புக்கள் இதுகுறித்து எந்த முடிவினையும் எடுக்க மறுத்துவிட்டன. இவ்வமைப்புக்களின் தலைவர்கள் அப்போது தமிழ்நாட்டில் தங்கியிருந்தனர். பத்மநாபாவின் முடிவினை ரமேஷ் தலைமையில் சிறிய போராளிக் குழுவொன்று நடைமுறைப்படுத்தியது. இந்தக் குழுவில் இருந்த ஏனையவர்களின் பெயர்கள், சுபத்திரன், மோகன், சுதன், குமார், இந்திரன் மற்றும் இளங்கோ. அரச அலுவலகங்களுக்குள் நுழைந்த இவர்கள் அங்கிருந்த ஆவணங்களைக் கிழித்தெறிந்தார்கள். ஒரு பொலீஸ் ஜீப் உடபட சில அரச வாகனங்களை அவர்கள் எரியூட்டினார்கள். ஆனால், ஈ.பி.ஆர். எல். எப் இன் அரசுக்கெதிரான இந்தச் செயற்பாடுகள் எந்த விளைவினையும் ஏற்படுத்தவில்லை. தமிழ் அதிகாரிகளைப் பொறுத்தவரையில் தமது பணிகளைத் தக்கவைப்பதே முக்கிய கரிசணையாக இருந்தது. லேக் ஹவுஸ் நிறுவனமும் தமது ஊழியர்களை ஆறாவது திருத்தச் சட்டத்தின் மீது சத்தியப்பிரமாணம் எடுக்கும்படி கேட்டிருந்தது. எனது படிவத்தில் கையொப்பமிட்டு எனது ஆசிரியரிடம் கையளித்தேன். கையொப்பமிட்ட எவருமே அதன்பின்னர் இந்த சத்தியப்பிரமாணம் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மிகக்கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் அமிர்தலிங்கம் கொழும்பை வந்தடைந்தார். மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்னிருக்கையில் அமர்ந்தே அவர் கொழும்பு வந்து சேர்ந்தார். கொழும்பில், இந்தியத் தூதரக அதிகாரிகளினால் அவர் பொறுப்பெடுக்கப்பட்டார். ஆவணி 11 ஆம் திகதி அவர் சென்னைக்குப் பயணமானார். அமிர்தலிங்கத்தை வரவேற்கவென தில்லியிலிருந்து வந்திருந்த இந்திய உள்நாட்டு விவகார அமைச்சர் பி.வெங்கடசுப்பையா மற்றும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் கே. எஸ். பாஜ்பாய் ஆகியோர் சென்னையில் அமிரைச் சந்தித்தனர். எதிர்க்கட்சியான ஜனதாக் கட்சியின் இரா செழியனும் அங்கு இருந்தார். சென்னையில் அன்றிரவு தங்கிய அமிர்தலிங்கம் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனையும் தி.மு.க வின் தலைவர் மு கருநாநிதியையும் சென்று சந்தித்தார். மறுநாளான ஆவணி 12 ஆம் திகதி சென்னையிலிருந்து தில்லிக்கு விமானத்தில் கிளம்பிச் சென்றார். ஹைதரபாத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவும் அமிருடன் பயணத்தில் இணைந்துகொண்டார். விமானத்தில் பயணித்தவாறே அமிரும் நரசிம்மராவும் சம்பாஷணையில் ஈடுபட்டனர். தில்லியில் விமான நிலைய கேட்போர் கூடத்தில் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினை ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த நரசிம்மராவோ, அமிரை அங்கே அழைத்துச் சென்றார். கூடிநின்ற பத்திரிகையாளர் முன்னிலையில் அமிர் பேசினார்.
  9. தானியேலின் புத்தகம் என்றே நினைவு. போராளிகள் காத்திருக்கின்றனர் என்கிற நாவலைப் படித்திருக்கிறேன். அருமையான படைப்பு. தமிழ் மீனவர்களுக்கும் அத்துமீறி குடியேற முயலும் சிங்கள மீனவர்களுக்கும் இடையிலான கதை. எனக்குப் பிடித்திருந்தது. தமிழ்த் தேசியச் சிந்தனை அந்த நாவலில் தெரிந்தது. மற்றும்படி அவர் தலித்தா இல்லையா என்றும் தெரியாது, அப்படியிருந்தாலும் எனக்குப் பிரச்சினையில்லை, அவரது எழுத்து என்னைக் கவர்ந்திருந்தது, அதுதான் எனக்கு முக்கியம். மற்றும்படி தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள், தனி ஈழம் வேண்டுமா இல்லையா என்பதை தானியேலின் மகன் தனது கருத்தாகச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஈழம் வேண்டுமா இல்லையா என்று மக்களிடம் சுதந்திரமான கருத்துக்கணிப்பு வைத்தாரா இவர்? பிறகு எப்பிடி 90 வீதமானோர் வேண்டாம் என்று இவரிடம் கூறினார்கள்? தந்தை செல்வாவுக்கு சந்திரகாசன் எனும் மகன் இருந்தார். தந்தை செல்வா ஈழத்தமிழருக்காக இறுதிவரை உழைத்தவர். சந்திரகாசனோ இந்தியாவுக்காக உழைத்தவர். தானியேலையும் அவரது மகனையும் எண்ணும்போது ஏனோ தந்தை செல்வாவும் சந்திரகாசனும் மனதில் வந்துபோகிறார்கள்.
  10. யாரைக் கேட்கிறீர்கள்? அருண் சித்தாத்தையா? அவன் ஆரம்பத்தில் கூட்டமைப்பில் சேர்ந்து உறுப்பினராக மாற ஆசைப்பட்டவனாம். ஆனால், அதிலிருந்த ஒரு சிலரின் எதிர்ப்பினால் அவனுக்கு உறுப்பினராகும் சந்தர்ப்பம் கிடைக்காது போய்விட்டது. இதனால், யாழ்ப்பாண உயர்சாதியினரை எதிர்க்கிறேன் என்று கூறிக்கொண்டு மொத்தத் தமிழ்த் தேசியத்தையும் எதிர்க்கத் தொடங்கியவன். இவனை பின்னர் அங்கஜன் ராமனாதன் யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்குக் கொண்டுவந்தார். எனது தேர்தலுக்கு நீ பிரச்சாரம் செய், உனது தமிழ்த்தேசிய எதிர்ப்பிற்கு நான் மேடை அமைத்துத் தருகிறேன் என்பதே அங்கஜனால் சித்தார்த்துக்கு கொடுக்கப்பட்ட பணி. பின்னர், இலங்கை ராணுவத்தின் புலநாய்வுத்துறையுடன் இவனுக்கு நெருக்கமும், பிற்காலத்தில் மகிந்த, கோத்தாபாய ஆகியோரின் அறிமுகமும் கிடைத்தது. டிபெண்டர் ரக ராணுவ வாகனம், மெய்ப்பாதுகாவலர்கள் என்று பல வசதிகள் இவனுக்குச் செய்துகொடுக்கப்பட்டிருந்தன. மகிந்தவை அடிக்கடி தனது கடவுள் என்று இவன் கூறியிருக்கிறான். இன்றுவரை, வடக்குக் கிழக்கில் அச்சமின்றி தமிழ்த்தேசியத்தை எதிர்த்து இவனால் பிரச்சாரம் செய்யக் கூடியதாக இருப்பதற்கான காரணம் இவன் பின்னாலிருக்கும் அரசியல் செல்வாக்குத்தான். ஆவா குறூப் எனும் அமைப்பின் தலைவனும் இவனே என்றால் நம்புவீர்களா?
  11. தமிழினத்தில் காணப்படும் சாதிய வேற்றுமைகள் சைவர்களாக இருந்தவர்களை வேற்று மதங்கள் சிறுகச் சிறுக தமக்குள் உள்வாங்குவதற்கு ஒரு காரணமாக அமைந்திவிடுகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், சாதியம் மட்டுமே சைவர்களாக இருந்தவர்களை மதம் மாற்றியிருக்கிறது என்று சொல்ல முடியாது. ஏனென்றால், வெள்ளாலரில் பெருந்தொகையான கிறிஸ்த்தவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் வேலைவாய்ப்பு, கல்விவசதி ஆகியவற்றுக்காக மாறியவர்கள், சிலர் கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளானவர்கள். ஆகவே, எழுந்தமானமாக சாதிய வேற்றுமைகள் மட்டுமே காரணம் என்று கூறிவிடமுடியாது. ஆனால், சாதியவேற்றுமைகளுக்காக வேற்று மதம் நாடிப்போவோர் இன்னமும் இருக்கிறார்கள். சரி, சைவத் தமிழர்கள் கிறீஸ்த்தவர்களாக மாறுவதற்கும் பெளத்தர்களாக மாறுவதற்கும் இடையே இருக்கும் வேறுபாடு என்ன? தமிழ்க் கிறீஸ்த்தவர்கள் அடிப்படையில் தமிழர்கள். ஆகவே, தமிழர்களின் அடையாளங்களும், கலாசார விழுமியங்களும், மொழியும், தமிழரின் தனித்தன்மையும் கிறீஸ்த்தவர்களாகிய மாறிய தமிழர்களால் பேணப்படும், குறைந்தது வடக்குக் கிழக்கிலும், கொழும்பிலும் வாழும் தமிழர்கள் மத்தியில் கிறீஸ்த்தவ மாற்றம் தமிழர் எனும் அடையாளத்தை சிதையச் செய்யாது என்பதே எனது கருத்து. நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம் ஆகிய பகுதிகளில் முன்னர் சைவர்களாக இருந்த தமிழர்கள் கிறிஸ்த்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் தமிழ் மொழி அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டபோது முழுச் சிங்களவர்களாக மாறிப்போனார்கள். இதேவைகையான மாற்றம் ஒன்றே இன்று சைவர்களாக இருந்து பெளத்த மதத்தினை தமக்கே தெரிந்த காரணங்களுக்காக தழுவிக்கொள்வோருக்கும் நடக்கவிருக்கிறது. இவ்வாறு ஆரம்பத்தில் மதமாற்றம் செய்யப்படும் தமிழர்கள், பெளத்த சிங்களவர் எனும் இனத்தினுள் மிக இலகுவாக உள்வாங்கப்படும் அபாயம் பற்றியே பேச வேண்டியிருக்கிறது. தமிழினத்தின் மீது இனக்கொலை ஒன்றினை கட்டவிழ்த்து விட்டிருக்கும் சிங்கள பெளத்தர்கள், தமிழினத்தினுள் தமது மதத்தினைத் தழுவிக்கொண்டுள்ள சிறிய மக்கள் கூட்டத்தினை எவ்வளவு காலத்திற்கு தமிழர்களாக இருக்க அனுமதிப்பார்கள் என்கிற கேள்வி எழுகிறது. தமிழரில் வேறு எவரைக் காட்டிலும், சொந்த இனத்தின் மதத்தைத் திறந்து, இனத்திற்குள்ளேயே அந்நியர்களாகப் பலவீனமான நிலையில் இருக்கும் இவர்களை மிக இலகுவாக சிங்கள பெளத்தம் உள்வாங்கிவிடும். இந்த புதிய பெளத்த தமிழர்களுடன் பெரும்பான்மை பெளத்த சிங்களவர்கள் கலப்பில் ஈடுபடுவது இலகுவானது. இனக்கலப்பு ஏற்படும்போது, தமிழரின் தனித்தன்மை அவர்களின் இதயப்பகுதியான வடக்கிலோ அல்லது கிழக்கின் மட்டக்களப்பிலோ நடக்க சந்தர்ப்பம் இருக்கிறது. கலப்பினைத் தொடர்ந்து, பெண்கொடுத்து, பெண்ணெடுத்தோர், உறவினர்கள் எனும் பெரும்பான்மை சிங்கள பெளத்த மக்கள் கூட்டம் இப்பகுதியில் குடியேற வாய்ப்பிருக்கிறது. இது ஆரம்பத்திலேயே தடுக்கப்படவில்லையென்றால், தமிழர்கள் என்கிற அடையாளம் இன்று வடக்குக் கிழக்கில் நகரங்களுக்கு மட்டுமே ஒடுங்கிவிட்ட மீதித் தமிழர்களுடன் மட்டுமே சுருங்கிவிடும் என்பதுடன், இவ்வாறு சுற்றிவளைக்கப்படும் தமிழர்களை காலவோட்டத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பெளத்தம் ஏப்பம் விட்டுவிடும். தமிழ் பெளத்தர்கள் ஆதிகாலத்தில் இருந்தமையினை அக்காலத்து தமிழ் மன்னர்களின் ராச்சியங்களும், அதிகாரமும் தொடர்ச்சியாகப் பேண வைத்தது. ஆனால், இன்று தமிழருக்கென்று அதிகாரமோ, அதிகாரத்திற்குட்பட்ட நிலப்பரப்போ கிடையாது. ஆகவே, தமிழ் பெளத்தர்கள் எனும் கருதுகோள் இக்காலத்திற்குச் சாத்தியமற்றது.
  12. ஜெயார் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கையினை நிராகரித்த இந்திரா அனைத்துக் கட்சி மாநாட்டில் ஜெயார் முன்வைக்கவிருப்பதாக ஹெக்டர் கூறிய ஐந்து விடயங்களும் பின்வருமாறு இருந்தன, 1. மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட அனைத்துச் சட்டங்களும் முழுமையாக வழங்கப்படும். 2. அரசியலமைப்பில் தமிழும் தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்படும் 3. வன்முறைகளைக் கவிடுவதாக தமிழர்கள் உறுதியளிக்குமிடத்து அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படும் 4. பயங்கரவாத நடவடிக்கைகளைத் தமிழர்கள் நிறுத்திக்கொள்ளுமிடத்து அவர்களுக்கெதிராக முடுக்கிவிடப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளும் நிறுத்திக்கொள்ளப்படும். 5. பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக விலக்கிக்கொள்ளப்படும் இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு மேலதிகமாக, தமிழர்கள் தமது தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிடுமிடத்து அவர்களுடன் பேசுவதற்கு ஜனாதிபதி ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிட்ட ஹெக்டர், சிறைச்சாலைகளில் தடுத்துவைகப்பட்டிருப்போரை விடுதலை செய்யவும் ஐக்கிய தேசியக் கட்சியின் 1977 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் அவர் விரும்புவதாவும் குறிப்பிட்டார். இவற்றையெல்லாம் கேட்டுவிட்டு பேசத் தொடங்கிய இந்திரா, அரசாங்கம் முன்வைத்த ஐந்து அம்சத் திட்டங்கள் தமிழர்களின் அபிலாஷைகளைத் திருப்திசெய்யப் போதுமானவையாக இருக்கும் என்று தான் நினைக்கவில்லை என்று ஹெக்டரைப் பார்த்துக் கூறினார். அதற்குப் பதிலளித்த ஹெக்டர், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மேம்படுத்த முன்வைக்கப்படும் ஆலோசனைகளை செவிமடுப்பதற்கு தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக இந்திராவிடம் கூறினார். ஹெக்டரிடம் பேசிய இந்திரா, தமிழர்களால் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் ஜெயவர்த்தனவின் அரசாங்கம் பேசுவது அவசியம் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த ஹெக்டர், தனிநாடு எனும் கோரிக்கையினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் கைவிடாதவரை அவர்களுடன் பேசுவதில்லை எனும் நிலைப்பாட்டில் தமது அரசாங்கம் இருப்பதாகத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த இந்திரா, தமிழர்களுடன் பேசும் விடயத்தை தம்மால் செய்யமுடியும் என்று கூறினார். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த ஹெக்டர், தான் ஜனாதிபதி ஜெயாருடன் இதுகுறித்துப் பேசிய பின்னரே கருத்துக் கூற முடியும் என்று கூறினார். பேச்சுக்களின் முடிவில் இந்திராவின் ஆலோசகர் நரசிம்மராவ் மற்றும் கோபாலசாமி பார்த்தசாரதி ஆகியோருடன் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரங்களை மேம்படுத்துவதுகுறித்து ஹெக்டர் ஆலோசிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆவணி 12 ஆம் திகதி இந்திராவுடன் இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களில் ஈடுபட்ட ஹெக்டர், இந்தியா பரிந்துரைத்த ஆலோசனை உதவிகளை ஏற்றுக்கொள்ள ஜனாதிபதி ஜெயார் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். சரித்திர காலம் தொட்டு இரு நாடுகளுக்கு இடையே இருக்கின்ற நெருங்கிய உறவின் அடிப்படியில் இந்திரா செய்ய முன்வந்திருக்கும் உதவிகளுக்காக தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாக ஜெயவர்த்தன தன்னிடம் தெரிவித்ததாக ஹெக்டர் இந்திராவிடம் கூறினார். மேலும், இந்தியாவின் அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற குழு இலங்கைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவேண்டும் என்கிற ஜெயாரின் கோரிக்கையினை இந்திராவிடம் முன்வைத்தார் ஹெக்டர். பேச்சுவார்த்தையின் முடிவில் இந்திரா பின்வருமாறு கூறினார், "தற்போது மிகவும் அவசியாமானது என்னவென்றால் பதற்றத்தினைத் தணித்து, நம்பிக்கையினை ஏற்படுத்துவதுதான். சம்மந்தப்பட்ட‌ அனைத்துத் தரப்பினரும் எவ்வித அச்சமும் இன்றி, ஒருவரில் ஒருவர் நம்பிக்கை கொண்டு, பரஸ்பர புரிந்துணர்வுடன் தமக்கிடையே இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலையொன்று உருவாகவேண்டும் என்பதே எனது விருப்பம்" என்று கூறினார். மேலும், ஹெக்டருடனான பேச்சுவார்த்தைகள் குறித்து தனது பாராளுமன்றத்தில் தான் பேசவிருப்பதாகவும், இலங்கை ஏதாவது விடயம் தொடர்பாக இந்தியப் பாராளுமன்றத்திற்கு கூறவிரும்பின், அதுகுறித்தும் தன்னால் பேசமுடியும் என்றும் கூறினார்.
  13. தனது தம்பியை இந்திராவிடம் தூதனுப்பிய ஜெயார் ஜெயாருடன் தொலைபேசியில் பேசிய இந்திரா, ஆவணி 5 ஆம் திகதி காலை பாராளுமன்றத்தில் விவாதித்து சட்டமாக்கிய ஆறாவது திருத்தம் குறித்துப் பேசினார். இத்திருத்தச் சட்டத்தின் மூலம் அனைத்துக் கட்சி மாநாட்டில் தமிழர்கள் பங்குபற்றுவதே கடிணமாகிவிட்டிருப்பதாகக் கூறிய அவர், தீர்வுதொடர்பாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் இலங்கையரசு பேசுவதற்கான ஒழுங்குகளை இந்தியா செய்துகொடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இதற்குச் சம்மதித்த ஜெயார், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் தீர்வு தொடர்பாகப் பேசுவதற்கு தனது விசேட பிரதிநிதியாக தனது இளைய சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவை ஓரிரு வாரங்களில் அனுப்புவதாக உறுதியளித்தார். மேலும், தனது சகோதரர் பிரசித்திபெற்ற வழக்கறிஞர் என்றும், அரசியல் யாப்பில் வித்தகர் என்றும் புகழுரைத்தார். அன்று மாலை இந்திய பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் கலையும் மாலை வேளையின்போது ஜெயாருடனான தனது தொலைபேசி உரையாடல் குறித்து இந்திரா உறுப்பினர்களுக்கு அறியத் தந்தார். அங்கு பேசிய இந்திரா, இலங்கையின் ஜனாதிபதி ஒரு வார காலத்திற்குள் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தில் சமாதானம் ஆகியவற்றை தமிழருக்கான தீர்வினூடாக அடைவது குறித்து ஆராய விசேட பிரதிநிதி ஒருவரை அனுப்பவுள்ளதாகக் கூறினார். ஆவணி 11 ஆம் திகதி தில்லியைச் சென்றடைந்த ஹெக்டர் ஜெயவர்த்தன, இந்திரா காந்தியுடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். ஆவணி 11 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பொழுது, அண்மையில் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையடுத்து இந்திய மக்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மிகுந்த கவலை கொண்டிருப்பதாக இந்திரா காந்தி ஹெக்டர் ஜெயவர்த்தனவிடம் தெரிவித்தார். இந்தியா எப்போதும் இவ்வாறான வன்முறைகள், படுகொலைகள், பாகுபாடுகளுக்கெதிராகக் குரல் கொடுக்கும் என்று எடுத்துரைத்த இந்திரா, தம்மைக் காக்க வழியின்றி இருக்கும் அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார். பின்னர், இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிரதேச ஒருமைப்பாடு போன்றவற்றை இந்தியா மதிக்கிறது என்று இந்திரா ஹெக்டர் ஜெயவர்த்தனவிடம் உறுதியளித்தார். "இந்தியா இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் ஒருபோதும் தலையிடப் போவதில்லை. ஆனாலும், இரு நாட்டிலும் வசிக்கும் மக்கள் சரித்திர காலம் தொட்டு கலாசார தொடர்புகளைக் கொண்டுள்ளதனால், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுடன் நெருக்கமான பிணைப்புக்களைக் கொண்டிருப்பதனால், அங்கு நடக்கும் சம்பவங்கள் குறித்து இந்தியா பேசாமலிருக்க முடியாது" என்று கூறினார் இந்திரா. இதற்குப் பதிலளித்த ஹெக்டர், நிலைமைகள் வேகமாக வழமைக்குத் திரும்பிவருவதாகவும், பெரும்பாலான அகதிகள் தமது வீடுகளுக்குத் திரும்பியிருப்பதாகவும் கூறினார். மேலும், வீடுகளை இழந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் பிரச்சினைகள் குறித்து தமது அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். வன்முறைகளின்போது அழிக்கப்பட்ட தமிழர்களின் சொத்துக்களை கைய்யகப்படுத்தவென அரசு அமைத்த அதிகார சபையினை தமிழரின் சொத்துக்களை மீள கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என்று இந்திராவிடம் கூறினார் ஹெக்டர். தமிழர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அரசு கையகப்படுத்தி சிங்களவர்களுக்குக் கொடுத்துவருவதாக வந்த செய்திகளை வெறும் வதந்திகள் என்று புறக்கணித்தார் அவர். தொடர்ந்து பேசிய இந்திரா, பிரதமரின் தேசிய துயர் துடைப்பு நிதியத்தின் ஊடாக பத்து மில்லியன் ரூபாய்களை இந்திய அரசு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்க விரும்புவதாக ஹெக்டரிடம் கூறினார் . மேலும், இதற்கு மேலதிகமாக பொதுமக்களின் நன்கொடைக‌ளும் வந்து குவிந்துகொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். "தற்போதிருக்கும் அவலநிலைக்கான உடனடி நிவாரணங்களை வழங்கும் அதேவேளை, தமிழ்ச் சமூகத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த, அவர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவுசெய்ய, நிரந்தரமான தீர்வுபற்றிப் பேசுவதை கால தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும்" என்று அவர் ஹெக்டரைப் பார்த்துக் கூறினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், ஜனாதிபதி ஜெயார் இதுதொடர்பாக ஏற்கனவே செயலில் இறங்கியிருப்பதாகக் கூறினார். இவ்வாறான முயற்சி வெற்றியளிப்பதற்கு, அனைத்து மக்கள் கூட்டத்தையும் ஜனாதிபதி அவர்கள் அரவணைத்துச் செல்லவேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார். அதன்பின்னர், தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றினை எட்டுவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஜெயார் முன்வைக்கவிருக்கும் ஐந்து அமசத் திட்டம் குறித்து இந்திராவிடம் விபரித்தார்.
  14. முஸ்லீம்களின் பேச்சுவழக்கில் பேசுகிறான். நச்சுப்பாம்பு !
  15. ஓ, அது வேறையா? அது எப்போது நடந்தது? இராவணன் முஸ்லீம் என்று ஒரு பகுதி சொல்லிக்கொண்டு திரியுது.
  16. இது ஒரு ஆபத்தான நிகழ்வு என்றுதான் என்னால் பார்க்க முடிகிறது.தமிழர்கள் பெளத்தர்களாக மாறுவது என்பது சிங்கள மயமாக்கலின் ஒரு படிதான். மிக விரைவிலேயே இந்த தமிழ் பெளத்தர்கள் சிங்கள இனத்திற்குள் உள்வாங்கப்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது. ஏனென்றால், இவர்களை தமிழ் சமுதாயம் ஒதுக்கும் நிலை ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் இவர்கள் முழுவதுமாகவே சிங்களவராகும் நிலை உருவாகும். ஆக, யாழ்ப்பாணத்தின் இதயப்பகுதியிலேயே முன்னர் தமிழர்களாவிருந்து பின்னர் சிங்கள பெளத்தர்களாக மாறிய சமுதாயம் ஒன்று எதிர்காலத்தில் இருக்கும். இவர்களுக்கு சிங்கள அரசுகள் செய்யப்போகும் சலுகைகளைத் தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் மேலும் தமிழர்களும் பெளத்தத்தினைத் தழுவலாம். உள்ளிருந்தே அரிக்கப்பட்டு, பலவீனப்பட்டுப்போகும் நிலையினை மெதுவாக தமிழினம் அடைந்துகொண்டிருக்கிறது. அதுசரி, அருண் சித்தார்த்தைக் காணோம்?
  17. சரியாக ஒருவருடத்திற்கு முன்னர், சீன ராணுவக் கப்பல் வருவதற்கு ஒரு நாளைக்கு முன்னர் இந்தியா இலங்கைக்கு கரையோர ரோந்து விமானம் ஒன்றினை அன்பளிப்பாக வழங்கியிருந்தது. தற்போது, இன்னொரு சீன ராணுவக் கப்பல் வருவதற்கு சரியா ஒரு நாளைக்கு முன்னர், தான் முன்னர் வழங்கியிருந்த ரோந்துவிமானத்தைப் பிரதீயீடு செய்வதற்காக இன்னொரு புதிய விமானத்தை இந்தியா வழங்கியிருக்கிறது. இந்தியாவின் இராஜதந்திரம் ஒன்றுதான். சீனாவைக் காட்டிலும் இலங்கைக்கு நெருக்கமாக இருப்பதன் மூலம் சீனாவை எட்டத்தில் வைத்திருப்பது. ஆனால் என்ன, இலங்கைக்கோ சீனாவைத்தான் பிடித்திருக்கு. ஆனாலும், இந்தியாவின் நன்கொடைகளையும் அது மறுப்பதில்லை. https://www.sakshipost.com/news/sri-lanka-thanks-india-helping-protect-airspace-sea-219747
  18. ஜெயாருடன் இரண்டாவது முறையாகவும் பேசிய இந்திரா ஆறாம் திருத்தச் சட்டத்தின் மூலம் இரண்டு உடனடி விளைவுகள் ஏற்பட்டன. முதலாவதாக, இந்திரா காந்தி தனது இரண்டாவது தொலைபேசி அழைப்பினை 6 ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டு 12 மணித்தியாலங்களுக்குள் ஜெயாருடன் ஏற்படுத்தியிருந்தார். இரண்டாவது, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஆவணி 6 ஆம் திகதி எடுத்த தீர்மானத்தில் பாராளுமன்றத்தை விட்டு விலகி இந்தியாவில் அடைக்கலமாவது என்று தீர்மானித்தனர். இந்த விளைவுகள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் கடுமையான தாக்கத்தினையும், தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய திருப்பத்தையும் ஏற்படுத்தின. இந்த விளைவுகளும் ஜெயாரின் இளைய சகோதரரான ஹெக்டர் வோல்ட்டர் ஜெயவர்த்தன்வுடனான இந்திராவின் பேச்சுவார்த்தைகளும் தமிழர்களின் பிரச்சினைக்கான அடித்தளத்தினை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், இதன்மூலம் ஏற்படுத்தப்பட்ட தீர்வு தொடர்பாக இந்தியா இன்றுவரை உறுதியாகவே இருந்து வருகிறது (2005). ஹெக்டர் வோல்ட்டர் ஜெயவர்த்தன‌ ஒரு வெள்ளிக்கிழமை, ஆவணி 5 ஆம் திகதி இந்திரா காந்தி ஜெயாரை இரண்டாவது முறை தொலைபேசியில் தொடர்புகொண்டார். அவரது தொலைபேசி அழைப்பிற்கு இரு நோக்கங்கள் இருந்தன. முதலாவது இந்தியாவே பிராந்தியந்தின் வல்லரசென்று ஜெயாரை உணரவைப்பது. இரண்டாவது, தமிழரின் பிரச்சினைக்கான தீர்வினைத் தேடுவதில் இந்தியாவுக்கான பங்கினை உறுதிப்படுத்திக்கொள்வது. தனது வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவை ஒருவாரத்திற்கு முன்னர் வரவேற்று அவருடன் கலந்துரையாடியதற்காக ஜெயாருக்கு நன்றி தெரிவித்தார் இந்திரா. மேலும், இலங்கையில் மீண்டு சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட ஜெயார் எடுத்துவரும் முயற்சிகளை அவர் பாராட்டினார். மேலும், பிராந்தியத்தில் அமைதியை பேணுவது அவசியம் என்று ஜெயாரிடம் கூறிய இந்திரா, தமிழருக்கான தீர்வினை வழங்குவதன் ஊடாகவே பிராந்தியத்தின் அமைதியினை உறுதிப்படுத்தவியலும் என்றும் கூறினார். தமிழருக்கான தீர்வினை உருவாக்குவதும், இலங்கையில் ஸ்திரத்தன்மையினை உருவாக்குவதுமெ இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு அவசியமானது என்று அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இந்திராவிற்குப் பதிலளித்த ஜெயார் தமிழரின் பிரச்சினைக்கான தீர்வினைக் கண்டறியும் நோக்கத்தில் தான் ஏற்கனவே ஈடுபட்டிருப்பதாகவும் ஆடி 20 ஆம் திகதி தான் சர்வகட்சி கூட்டமொன்றினைக் கூட்ட எத்தனித்ததாகவும் பின்னர் அக்கூட்டம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கலவரங்கள் ஆரம்பித்துவிட்டதாகவும் கூறினார். ஆவணி 3 ஆம் திகதி அமைச்சரவையில் தனது உரையினை மேற்கோள் காட்டி ஜெயார் பேசினார்.
  19. ஆறாம் திருத்தச் சட்டத்தினைப் பாவித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை பாராளுமன்றத்தில் இருந்து ஓரங்கட்ட முயன்ற ஜெயார் இந்த விவாதத்தின்போது அமிர்தலிங்கமோ அல்லது ஏனைய த.ஐ.வி.மு தலைவர்களோ பாராளுமன்றத்தில் இருக்கவில்லை. அவர்கள் அவ்வேளை வவுனியாவில் இருந்தார்கள். அவர்களது கட்சியின் வருடாந்த மாநாடு ஆடி 21 முதல் 23 வரை மன்னாரில் நடக்க ஏற்பாடாகியிருந்து. பின்னர் ஜூலை 25 ஆம் திகதி வவுனியாவில் நடத்துவதென்று முடிவாகியிருந்தது. நாட்டில் தமிழர் மீதான தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்ததையடுத்து அவர்கள் ஆவணி 10 ஆம் திகதிவரை வவுனியாவிலேயே தங்கியிருந்தனர். அமிர்தலிங்கத்திற்கோ அல்லது சிவசிதம்பரத்திற்கோ கொழும்பிற்குத் திரும்பிச் செல்வதற்கு வீடுகள் இருக்கவில்லை. அமிர்தலிங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லம் ஜூலை 25 ஆம் திகதியும், சிவசிதம்பரத்தின் இல்லம் ஜூலை 24 ஆம் திகதி இரவும் எரியூட்டப்பட்டிருந்தன. சிவசிதம்பரத்தின் மனைவியும் பிள்ளைகளும் தமது வீட்டு மதிலினால் ஏறி அயலவர்களின் வீட்டில் தஞ்சம் புகுந்து பின்னர் அகதிகள் முகாமிற்குச் சென்றிருந்தனர். 10 ஆம் திகதி தனது நெருக்காமன நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து கொழும்பு திரும்பிய அமிர்தலிங்கம் மறுநாளே சென்னைக்குக் கிளம்பிச் சென்றார். சென்னைக்குக் கிளம்பும் முன்னர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு எழுதிய கடிதத்தில் இலங்கையில் தாக்கப்பட்டுவரும் தமிழரைக் காக்க ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையினை அனுப்பிவைக்க வேண்டும் என்று கோரிவிட்டே விமானம் ஏறினார். ஜெயார் கொண்டுவந்த ஆறாவது திருத்தத்திற்கு எதிராகப் பேசிய ஒரே அமைச்சர் தொண்டைமான் மட்டுமே. அமிர்தலிங்கத்தையும் த.ஐ.வி.மு கட்சியையும் அவர் ஆதரித்துப் பேசினார். இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றினை எட்டுவதற்கு அமிர்தலிங்கம் மேற்கொண்ட பல முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். அவரின் முயற்சிகளைச் சாதகமான முறையில் பரிசீலிக்கத் தவறியமைக்காக சிங்களத் தலைமையினை அவர் கண்டித்தார். ஆறாவது திருத்தத்தினை அமுலாக்குவதன் மூலம் த.ஐ.வி. மு கட்சியினர் அரசுக்கெதிரான தமது நிலைப்பாட்டினை மேலும் தீவிரமாக்குவார்கள் என்றும் தொண்டைமான் அரசாங்கத்தை எச்சரித்தார். தமிழர்களின் பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் உண்மையாகவே விரும்பினால் தமிழ் மிதவாதிகளுடன், குறிப்பாக த.ஐ.வி.மு யினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். "நீங்கள் த.ஐ.வி.மு கட்ட்சியினரைத் தடைசெய்து, அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திலிருந்து விலகும்படி அழுத்தம்கொடுத்தபின்னர் யாருடன் தமிழரின் பிரச்சினை குறித்துப் பேசபோகிறீர்கள்? த.ழி.வி.மு அணியினரைத் தடைசெய்வதும் தமிழரை தடைசெய்வதும் ஒன்றுதான் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளவில்லையா?" என்றும் அரசாங்கத்தைப் பார்த்து தொண்டைமான் கேட்டார். மலையகத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் என்கிற ரீதியில் தொண்டைமான் அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார். அவ்வறிக்கையில் தமிழர் மீதான தாக்குதல்கள் மிகவும் திட்டமிட்ட ரீதியிலேயே நடைபெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார். அவரது அறிக்கையின் ஒரு பகுதி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது, "எமது எண்ணத்தின்படி, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட காடையர் கும்பல்கள் வன் முறைகள், தாக்குதல்கள், கொள்ளையிடல்கள், தீவைப்புக்கள் ஆகிய நாசகார செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தன. தமிழர்கள் மீது நாசகாரத் தாக்குதல்களை மேற்கொண்டுவந்த இந்தக் கும்பல்கள் மிகவும் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் தமது அக்கிரமங்களை செயற்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்ததோடு, இக்குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து முற்றான விலக்கினை கொண்டிருந்ததையும் காண் முடிந்தது". பாராளுமன்றத்தில் உறுப்பினராகவிருந்த ஒரேயொரு கம்மியூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சரத் முத்துட்டுவேகம‌ பேசுகையில், தமிழர் மீதான தாக்குதல்கள் அனைத்தும் அரச ஆசீர்வாதத்துடனேயே நடத்தப்பட்டதாகக் கூறினார். "அரசாங்கத்தின் அனைத்துக் கருவிகளும் இந்த வன்முறைகளில் பாவிக்கப்பட்டன. நான் கெளரவ அமைச்சர் தொண்டைமானைப் பார்த்துக் கேட்கிறேன், இந்த அக்கிரமங்களில் ஈடுபட்ட கும்பல்கள் சுதந்திரமாகவும், தடுப்பாரின்றியும் வீதிகளில் வலம்வந்ததாகக் கூறினீர்களே, அவர்கள் இடதுசாரிக் கட்சியினரின் உறுப்பினர்களா என்பதைக் கூறமுடியுமா? அப்படியில்லையென்றால், அவர்கள் வேறு யாராவதா? அவர்களை அதிகாரத்தில் உள்ளவர்கள் வழிநடத்தியிருந்தார்களா? உங்களது அறிக்கையின் உண்மையான அர்த்தத்தினை இந்தச் சபையில் நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று உங்களைத் தாழ்மையுடன் கேடுக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார். சுமார் 13 மணிநேர விவாதத்திற்குப் பின்னர் ஆவணி 5 ஆம் திகதி காலை 4 மணிக்கு ஆறாம் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்று மாலை 4 மணிக்கு இரண்டாவது முறையாக இந்திரா காந்தி ஜெயாருடன் தொலைபேசியில் உரையாடினார். பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை எச்சரிக்கும்வகையில் வெளிவிவகார அமைச்சர் ஹமீத் அவர்கள் ஆடி 27 மற்றும் ஆவணி 3 ஆம் திகதிகளில் கூறிய விடயங்களை இந்திரா காந்தி ஜெயாருடனான தொலைபேசி அழைப்பில் குறிப்பிட்டார். இவ்விரு நாட்களிலும் பாராளுமன்றத்தில் பேசிய ஹமீத் அவர்கள் ஆறாம் திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதன் மூலம் த.ஐ.வி. மு அணியினரை பாராளுமன்றத்தை விட்டு வெளியே தள்ள அரசு முயல்வதாகவும், இது இந்தியாவை உள்நாட்டு விவகாரங்களில் இழுத்துவிட்டு தமிழருக்கான தீர்வினை வழங்குவதில் இந்தியாவின் அழுத்ததத்தினை அரசு எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்திருந்தார். ஆனால், த.ஐ.வி.மு யினர் ஆறாம் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்கும் முன்பே இந்தியா தமிழர் பிரச்சினை தொடர்பாக இலங்கையில் தலையிட வேண்டியதாயிற்று. ஆறாம் திருத்தச் சட்டத்தினை ஒட்டி த.ஐ.வி.மு அணியினர் தமது தீர்மானத்தை ஆவணி 6 ஆம் திகதி எடுத்தனர்.
  20. ரொனி டி மெல்லின் துரோகிகள் மத்தியூவின் பேச்சினைத் தொடர்ந்து ஜெயாரின் இன்னொரு இனவாத அமைச்சரான காமிணி ஜயசூரிய பேசினார். "அண்மையில் நடந்த வன்முறைகள் தன்னிச்சையாகவும், எழுந்தமானமாகவும் நடந்ததாகவும் நான் நம்பவில்லை. இது நீண்டகாலமாக வடக்குப் பயங்கரவாதிகள் எம்மீது தொடர்ச்சியாக திட்டமிட்ட ரீதியில் நடத்திவந்த அழிவுதரும் நாசகார தாக்குதல்களுக்கு பதிலடியாக சிங்கள மக்கள் நடத்திய தாக்குதல்களாகவே நான் பார்க்கிறேன்" என்று கூறினார். நிதியமைச்சர் ரொனி டி மெல்லின் பேச்சு இவர்களிடமிருந்து சற்று வேறுபட்டிருந்தது. வன்முறைகளினால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். வடக்கில் தனியான நாட்டிற்கு தூபமிடும் துரோகிகளுக்கும், வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லையென்று அவர் கூறினார். "இந்த நாட்டிற்கு அதிகமான அழிவினை ஏற்படுத்தியவர்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் இந்த நாட்டைப் பிளவுபடுத்த முனைபவர்களா அல்லது இந்த நாட்டின் பொருளாதாரத்தை அழித்தவர்களா என்று எனக்குப் புரியவில்லை. என்னைப்பொறுத்தவரை இவர்கள் இருவருமே துரோகிகள் தான், ஆகவே இவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்" என்று கூறினார். ஒன்று இரண்டு தனித்து ஒலித்த குரல்களைத்தவிர 13 மணித்தியாலங்கள் தொடர்ந்து நடந்த விவாதங்களில் தொடர்ச்சியாகப் பேசிய ஜெயாரின் அமைச்சர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும், அதன் தலைவரையும் துரோகிகள் என்று குற்றஞ்சாட்டியதுடன் தமிழ் இளைஞர்களைத் தவறாக வழிநடத்திவருவதாகவும் குற்றஞ்சாட்டினர். ஈழம் எனும் நச்சு விதையினை இளைய சமுதாயத்தின் மனங்களில் அவர்கள் விதைக்கிறார்கள் என்றும் கூறினர்.
  21. அது எப்படி அப்பன்? அந்த வழி என்னவென்று ஓரளவிற்கு யோசித்து வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன், அதை இங்கே பகிரலாமே? ஏனென்றால், இன்னுமொரு தமிழ் உயிர் போகாமல் எம்மால் எமது தாயகத்தைத் தக்கவைத்துக்கொள்வது சாத்தியமென்றால், நிச்சயமாக அவ்வழியே சிறந்த வழி. தமிழரின் தாயகத்தைச் சிறுகச் சிறுகக் கூறுபோட்டு கபளீகரம் செய்துவரும்வேளையில், அதை ஏனென்று கேட்கும் கடுகளவு துணிவும் இன்றி நடைபிணங்களாக அடிமைகளாக நமதினம் வந்துவிடும் என்று நினைக்கிறீர்கள். சரி, இந்த லட்சணத்தில், கத்தியின்றி, யுத்தமின்றி தனி ஈழம் எடுக்கலாம் என்று வேறு சொல்கிறீர்கள். தனி ஈழம் தேவையென்று இன்று கூறும் ஒரு சிலரும் நாளடைவில் வாய்மூடிப்போக, அதற்கான தேவையே இல்லாது போய்விடுமே? பிறகு ஏன் கத்தியின்றி, யுத்தமின்றி? ஆக, இன்னும் ஒரு 10 வருடங்கள் நாம் காத்திருக்க வேண்டும் என்கிறீர்கள். சரி, எம் ஜி ஆர் இருந்த காலத்தில் எமக்கிருந்த ஆதரவைக் காட்டிலும் அதிகமான ஆதரவினை இன்னும் 10 வருடத்தில் தமிழ் நாட்டில் பெற்றுவிடலாம் என்கிறீர்கள். சரி, அப்போது மீண்டும் அதே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் என்ன செய்யலாம்? இவை எல்லாவற்றையும் விட, சிங்களப் பயங்கரவாதிகள் இன்று நடத்திக்கொண்டிருக்கும் எமது தாயகத்தின் மீதான ஆக்கிரமிப்பை இன்னும் 10 வருடங்களுக்கு ஒத்திவைப்பார்களா? இன்னும் 10 வருடங்களில் மீதமிருக்கும் தாயகத்தின் எவ்வளவு பகுதிகளை சிங்களப் பயங்கரவாதம் ஏப்பம் விட்டிருக்கும்? ஒருவேளை சீமானை நம்பித்தான் 10 வருடம் என்கிறீர்களோ?அவருக்கு தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் ஆதரவைப் பார்த்த பின்புமா இந்த நம்பிக்கை? அப்பன், இப்போது யாரை நம்பியிருக்கிறீர்கள்? யாரைக் கைவிட்டீர்கள்? இப்போது நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் அந்த "புருஷன்" யார்? அப்படி சரியாக நடக்கிற விடயங்களைக் கூறுங்களேன், கேட்கலாம். ரணிலை ஆட்சிக்குக் கொண்டுவந்து, ராஜபக்ஷேக்களை ஆட்சியிலிருந்து இறக்கியதைத் தவிர வேறு என்னத்தை சர்வதேசம் செய்திருக்கிறது? தாயகத்தில் சிங்களப் பயங்கரவாதம் இன்று செய்துவருவது சர்வதேசத்திற்குத் தெரியாது என்று நினைக்கிறீர்கள், குறைந்தது அதனைத் தடுக்கவாவது என்ன செய்திருக்கிறார்கள் அவர்கள்? காணாமற்போனோர், அரசியற்கைதிகள், ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலங்களும், மத வழிபாட்டிடங்களும், தொடர்ச்சியான இராணுவப் பிரசன்னம் என்பவற்றிற்குப் பிறகும் கூட இன்றுவரை இராணுவ உதவிகள், கூட்டுப்பயிற்சிகள், கடனுதவிகள், இராணுவ உளவு விமானங்கள் என்று தொடர்ந்து சிங்களப் பயங்கரவாதம் சர்வதேசத்தால் பலப்படுத்தப்பட்டு வருகையில் எவ்வாறு எமக்குச் சாதகமான சூழ்நிலை சர்வதேசத்தில் ஏற்பட்டு வருவதாக உங்களால் எண்ணத் தோன்றுகிறது? எமது இனத்தின் மீது அக்கறை கொண்ட அனைவருமே இதனைச் செய்தோம் அப்பன். உண்மையாகவே இனத்தின் நலன்களுக்காக இயங்கியவர்கள் தலைமைக்கோ மாவீரருக்கோ ஒருபோதும் துரோகம் செய்ய நினைக்கப்போவதில்லை. அப்படி நினைப்பவர்களை காலம் எம் முன்னால் கொண்டுவந்து நிறுத்தும். கருணாவைப்போல, பிள்ளையானைப் போல, கே பீ யைப்போல, டக்கிளசைப் போல அவர்கள் முன்னால் வருவார்கள்.
  22. தலைவர் இருக்கிறார் அல்லது இல்லையா எனும் விவாதங்களுக்கப்பால், அவரோ அல்லது போராட்டமோ இப்போது தேவையா இல்லையா என்று ஒரு கேள்வி வருமாக இருந்தால், அதற்கு எம்மிடம் இருக்கும் பதில் என்ன? ஆயுதப் போராட்டமோ அல்லது வேறு வழியிலான போராட்டமோ இன்று தேவையில்லை என்று தமிழர்கள் உணர்கிறார்கள் என்றால் நாம் முற்றாக சரணாகதி நிலைக்கு வந்துவிட்டோம், எமது இருப்பினை முற்றாக இழக்கத் தயாராகிவிட்டோம், எமது இன, மத, கலாசார அடையாளங்கள் என்று அனைத்தையும் சிங்களத்தின் காலடியில் வைத்துவிட்டோம் என்பது பொருள். ஏனென்றால், ஒரு தெளிவான , நேர்மையான தலைமை எம்மிடம் இல்லாத நிலையில் நாம் எமது விடுதலை குறித்து இலக்கற்று, செயற்பாடிழந்து இருக்கிறோம். எம்மால் எமது விடுதலை குறித்த எந்த முயற்சிகளையும் முன்னகர்த்த முடியாத நிலையில் இருக்கிறோம். எமது இருப்பும், அடையாளமும், இன, மத கலாசார விழுமியங்களும் பாதுக்காக்கப்படுவதற்கான எந்தவித செயற்பாடுகளிலும் நாம் இன்று இல்லை. இவை எமக்கு காக்கப்படவேண்டும் என்றால், அதற்கான தெளிவான பாதையும், எம்மை முன்னின்று வழிநடத்த ஒரு தலைமையும் தேவை. தலைவர் இன்று உயிருடன் இருப்பது அவமானம், அகெளரவம் என்று பேசப்படுவது தமிழரின் போராட்டம் முற்றாக முடிந்துவிட்டது, தமிழர்கள் இனிமேல் போராடுவதற்கென்று எதுவுமில்லை என்கிற நிலைப்பாட்டிலிருந்து முன்னெடுக்கப்படுவது. ஆனால், தமிழர்கள் இன்னமும் விடுதலை குறித்த காத்திரமான இலக்குகளை அடையாத நிலையில், தலைவர் இருப்பது அவமானம் என்றோ அகெளரவம் என்பதோ நியாயமானதுதானா? போராட்டம் தொடரப்படவேண்டும் என்கிற நோக்கில் தலைமை பாதுகாக்கப்படுவதில் தவறு என்ன இருக்கிறது? இதை ஒரு விவாதத்திற்காகத்தான் கேட்கிறேன், தலைமை தப்பியிருப்பதில் தவறென்ன?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.