Everything posted by ரஞ்சித்
-
இரண்டாம் பயணம்
யாழ்ப்பாணத்தை மாலை 5 மணியளவில் வந்தடைந்தோம். அங்கிருந்து சித்தி தங்கியிருந்த பாஷையூர் மடத்திற்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினேன். மறுமுனையில் பேசியவர் ஒரு கன்னியாஸ்த்திரி. "நீங்கள் யாருடன் பேசவேண்டும்?" என்று என்னைக் கேட்டார். சித்தியின் பெயரைக் கூறினேன். "சற்றுப் பொறுங்கள், அவரிடம் கேட்டுவிட்டு வருகிறேன்" என்று சென்றுவிட்டார். சுமார் 5 அல்லது 6 நிமிடங்கள் சென்றிருக்கும். மீண்டும் அவர் பேசினார், "தம்பி, அவாவால இப்ப வர ஏலாதாம், ஆறுதலாய் 8 மணிக்குப் பிறகு எடுக்கட்டுமாம்" என்று கூறினார். எனக்குப் புரிந்தது. சித்தியினால் பேசுமளவிற்கு தெம்பில்லை. அடிக்கடி அவரைச் சென்று பார்ப்பது கிட்டத்தட்ட ஒரு தொல்லையாகவே அவருக்கு மாறிப்போயிருந்தது. நேற்று மாலைதான் அவருடன் பேசிவிட்டு வந்தேன். சிலவேளை அதுபோதும் என்று கூட அவர் நினைத்திருக்கலாம். "பரவாயில்லை சிஸ்ட்டர், நான் நாளைக்கு மீண்டும் கொழும்பிற்குச் செல்கிறேன், அவருடன் ஆறுதலாய்த் தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லிவிடுங்கள்" என்று கூறிவிட்டுத் துண்டித்துக்கொண்டேன். பயணம் செல்லுமுன் அவருடன் பேசமுடியாது போனது சற்று வருத்தத்தைத் தந்தது. ஆனால் இரண்டு நாட்கள் அவருடன் இருந்து பேசிவிட்டேன். மற்றைய இரு சித்திமாரையும் கூட்டிவந்து அவரைக் காண்பித்துவிட்டேன். ஆகவே இப்போதைக்கு இது பரவாயில்லை என்று மனதை ஆறுதற்படுத்திக்கொண்டேன். இரவாவதற்கு இன்னும் சில மணிநேரம் மீதியாய் இருந்தது. யாழ்ப்பாணத்தில் சில பொருட்களை வாங்கவேண்டிய தேவை இருந்ததனால் மைத்துனரையும் கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில் இருக்கும் கடைத்தெருவிற்குச் சென்றேன். பனங்கட்டி, பனங்கற்காரம், கருவாடு என்று சில பொருட்களை வாங்கிக்கொண்டேன். உணவுப்பொருட்களை அவுஸ்த்திரேலியாவிற்குக் கொண்டுவருவதென்றால் அவற்றை நேர்த்தியாக காற்றுப்புகா பைகளில் அடைத்து, உணவுப்பொருளின் விபரம், காலாவதியாகும் திகதி போன்றவற்றையும் பொதிகளில் குறிப்பிடவேண்டும் என்பது கட்டாயம். அதுமட்டுமல்லாமல் உள்ளே கொண்டுவரும் பொருட்கள் பற்றி நீங்கள் தெரியப்படுத்துவதும் அவசியம். இல்லையென்றால் பொருட்களை எங்களுக்கு முன்னிலையிலேயே குப்பைத் தோட்டியில் கொட்டிவிடுவார்கள். தெரியப்படுத்தத் தவறுமிடத்து தண்டப்பணமும் கட்டவேண்டியிருக்கும். ஆகவே கடைக்காரரிடம் நான் கொள்வனவு செய்தவற்றை விபரமிட்டு பொதிசெய்து தருமாறு கேட்டபோது, "தம்பி ஒஸ்ட்ரேலியாவோ?" என்று அவர் கேட்டார். எப்படி தெரிந்துகொண்டீர்கள் என்று நான் கேட்கவும் "அங்கேயிருந்து வாற ஆக்கள் உப்பிடித்தானே கேக்கீனம்?" என்று சொன்னார். பொருட்களை வாங்கிக்கொண்டு மைத்துனரின் வீட்டை அடையும்போது இரவு 8 மணியாகிவிட்டிருந்தது. காலையில் மீண்டும் 5:45 மணிக்கு ரயில் ஏறவேண்டும். ஆகவே சின்னக்குளியலுடன் இரவுணவை முடித்தோம். அருமையான உழுத்தங்களி.பனங்கட்டி போட்டிருக்கலாம், சுவையே தனி. உண்டுவிட்டு மைத்துனருடனும் அவரது துணைவியாருடனும் பேசிக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் இறுதியுத்தகால அனுபவங்கள், இடைக்கிடையே உறவினர்கள் என்று சில விடயங்கள் பேசப்பட்டது. 11 மணியானதும் மாமியிடமும் விடைபெற்றுக்கொண்டு தூங்கச் சென்றேன். கால 4 மணிக்கு தூக்கம் கலைந்துவிட்டது. வழமைபோல அமைதியாகக் காலைக்கடன்கள், புறப்படுவதற்கான ஆயத்தப்படுத்தல்கள் என்று கிரமமாக ஈடுபடலானேன். நான் தயாராகும் சத்தம் கேட்டிருக்கவேண்டும். மைத்துனரும் துணைவியாரும் எழுதிருந்தார்கள். அங்கே நான் அருந்தும் கடைசிக் கோப்பியுடன் வீட்டில் இருந்தவர்களுக்கு விடைகொடுத்து, மைத்துனரின் மோட்டார் சைக்கிளில் ஏறி யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை வந்தடைந்தேன். ஓரளவிற்குச் சன நெரிசல் காணப்பட்டது. ஆனால், சரியான பெட்டியில் ஏறி ஆசனத்தில் அமர்வது சிரமமாக இருக்கவில்லை. கொண்டுவந்த பொருட்களைக் காட்டிலும் அதிகளவு பொருட்களை கொண்டு செல்கிறேன் என்பது பைகளைத் தூக்கித் தலைக்கு மேலால் உள்ள தட்டுக்களில் வைக்கும்போது புரிந்தது. நண்பன் ஜெயரட்ணமும் அதே புகையிரதத்தில் கொழும்பு செல்வதுபற்றிக் கூறியிருந்தமையினால், பைகளை வைத்துவிட்டு அவரைத் தேடிக் கண்டுபிடித்தேன். எனது பெட்டியில் இன்னொரு மூலையில் அவரது இருக்கை. அவருக்கருகில் இன்னொருவர் அமர்ந்திருந்தார். எனக்கருகில் இருந்த ஆசனம் காலியாகவே இருந்தமையினால், ஜெயரட்ணம் அங்கே வந்து அமர்ந்துகொள்ள நண்பனை மீண்டும் காணக் கிடைத்த கிடைத்த மகிழ்ச்சியில் கொழும்பு நோக்கிய புகையிரதப் பயணத்தை ஆரம்பித்தேன். மிக்க நன்றி அல்வாயான் !!!
-
இரண்டாம் பயணம்
சரி, பயணத்திற்கு வரலாம். வட்டுவாகல்ப் பாலத்தினூடாக முல்லைத்தீவு நோக்கிச் செல்லத் தொடங்கினோம். பாலத்தின் முள்ளிவாய்க்கால் கரையில் பிரபல சிங்கள பெளத்த இனக்கொலையாளியும் போர்க்குற்றவாளியுமான கோத்தாபய ராஜபக்ஷ என்பவனின் பெயரில் அமைக்கப்பட்ட கடற்படை முகாம் காணப்பட்டது. அதன் வாயிலில் ஆக்கிரமிப்பாளர்கள் அகம்பாவத்துடன் நின்றுகொண்டு அப்பாலத்தால் போய்வருவோரை நோட்டம் விட்டபடி இருந்தனர். அப்பகுதியை வாகனத்தில் இருந்தவாறே காணொளி எடுத்துக்கொண்டிருந்த என்னைக் கண்ட சாரதி, "அண்ணை, கமராவை ஒளியுங்கோ, கண்டாங்கள் எண்டால் பிரச்சினை" என்று கூறவும், சடாரென்று கீழே பதித்துக்கொண்டேன். பாலத்தின் மறுகரையில் இன்னொரு சோதனைச் சாவடி. ஆயுதங்களுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாகனங்களை மறித்துக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். எம்மையும் கேட்டார்கள். முல்லைத்தீவிற்குப் போகிறோம், யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறோம் என்று கூறிய பின்னர் போக விட்டார்கள். அப்படியே முல்லைத்தீவு நகரைச் சுற்றி வந்தோம். ஒருகாலத்தில் தமிழர்களின் இராச்சியமாக, பலப்பிரதேசமாக இருந்த எமது தாயகத்தின் முக்கிய நகரம் ஒன்று சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் அகப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதைப் பார்த்தபோது ஆற்றாமையும், கோபமும் ஒருங்கே வந்தது. வரும் வழியில் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் சிங்களப் பேய்கள் கட்டிவைத்திருக்கும் வெற்றிச் சின்னத்தைப் பார்க்க வாகனம் நின்றது. மைத்துனர் படங்களை எடுத்துக்கொண்டு என்னைப் பார்த்து, "அண்ணை, நீங்கள் இதைப் படம் எடுக்கேல்லையோ?" என்று கேட்டார். "ஏன் சுவி, எங்களை அழிச்சு, அடிமைப்படுத்தினதை அவன் சாதனையாகக் கட்டிவைச்சிருக்கிறான், அதை ஏன் நான் பாக்கவேண்டும்?" என்று கேட்டேன். அவர் புரிந்துகொண்டார். "இல்லையண்ணை, வந்ததுக்கு சும்மா எடுத்துவைக்கலாம் எண்டபடியால் கேட்டன்" என்று கூறிச் சமாளித்தார். அப்பக்கமே நான் திரும்பவில்லை. எதற்கு திரும்பவேண்டும், எதற்குப் பார்க்கவேண்டும், எதற்குப் படமெடுக்க வேண்டும்? கொல்லப்பட்டது எனது மக்கள், அழிக்கப்பட்டது எனது போராட்டம், ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது எனது தாயகம், இந்த லட்சணத்தில் எம்மை ஆக்கிரமித்து நிற்பவனின் சாதனையினை எதற்காகக் நான் கொண்டாடவேண்டும்? ஆகவேதான் அந்த மிருகங்களின் அடையாளங்களை எங்கு செல்லினும் நிராகரித்து வருகிறேன். முல்லைத்தீவைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த வழியினால் மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம். வட்டுவாகல்ப் பாலத்தைக் கடந்து முள்ளிவாய்க்காலுக்குள் ஏறி அப்படியே சென்ற வழியில் திரும்பி வந்தோம். போகும்போது இருந்த உற்சாகம் எல்லோரையும் அப்போது கைவிட்டிருந்தது. எவரும் அதிகம் பேசவில்லை. இடையிடையே கடந்துசெல்லும் ஊர்கள் குறித்து எனது கேள்விகளும் அதற்கான மைத்துனரின் பதில்களையும் தவிர அதிகமாகப் பேசவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் நுழைந்தபோது கடும் பசி. எங்காவது வாகனத்தை நிறுத்திச் சாப்பிடலாம் என்று எண்ணியவாறு வீதியின் ஓரத்தில் இருந்த கடைகளைப் பார்த்துக்கொண்டே வந்தோம். சாவகச்சேரிப் பகுதியில் பிரதான வீதியின் வலப்புறத்தில் பழமையான ஆனால் அழகிய வீடொன்றில் வீட்டில் சமைத்த உணவுகளை பரிமாரிவருவதாக முகப்புத்தகத்தில் மைத்துனரின் மகன் பார்த்திருக்கிறார். ஆகவே அங்கு செல்வதாக முடிவெடுத்தோம். அப்பகுதியை அடைந்ததும் வாகனத்தை வீட்டின் முற்றத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். மழை பெய்யத் தொடங்கியிருந்தது. கொத்து ரொட்டி, பிரைட் ரயிஸ் (Fried Rice) என்று ஆளாளுக்கு விரும்பியதை ஓடர் கொடுத்தோம். 15 - 20 நிமிடங்களில் ஆவிபறக்க உணவு கொண்டுவந்து பரிமாறப்பட்டது. சுவையானதாக இருந்தது. ஆனால், யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் இங்கு விலை அதிகமாக இருப்பதாக அவர் கூறினார். பரவாயில்லை, பசிக்கு வயிராற உண்ண, சுவையான உணவு. சற்று அதிகம் என்றாலும் திருப்தியாக இருந்தது. கட்டணத்தைச் செலுத்துவிட்டி மீண்டும் வாகனத்தில் ஏறிக்கொண்டோம். சாதுவான தூறளில் யாழ்ப்பாணம் நோக்கி வாகனத்தைச் செலுத்தத் தொடங்கினார் சாரதி.
-
இரண்டாம் பயணம்
முள்ளிவாய்க்காலில் இருந்து பரந்தன் முல்லைத்தீவு வீதிக்குச் சமாந்தரமாக கடற்கரையினை அண்மித்ததாக ஒரு சிறிய மண்வீதி செல்கிறது. இவ்வீதியின் இருபக்கத்திலும் இருந்த பற்றைக்காணிகளில் பல்லாயிரம் மக்கள் தமதுயிரைக் காத்துக்கொள்ள தஞ்சம் அடைந்திருந்தார்கள். கடற்கரையினை அடையும் பகுதியுடன் இவ்வீதி முடிவிற்கு வருகிறது. இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் குறித்து சில வலைத்தள பதிவாளர்கள் விலாவாரியாக எடுத்துரைத்திருக்கிறார்கள். அந்நாட்களில் பனைமரங்கள் சிலவிருந்த பகுதிக்குக் கீழாகத் தஞ்சம் அடைந்த மக்களை நோக்கி சிங்கள பெளத்தர்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பலரின் நினைவுகள் ஒரு காணொளி ஒன்றில் பகிரப்பட்டிருந்தன. அந்தப் பனைமரம், அப்பதிவில் குறிப்பிட்டதுபோலவே இன்னமும் அங்கு நிற்கின்றது. நாம் அப்பாதையால் பயணிக்கும்போது இருவர் மோட்டார் சைக்கிளில் எதிர்ப்புறமிருந்து வந்தார்கள். எங்கே போகிறீர்கள் என்று தமிழில் கேட்டார்கள். ஒரு இடமும் இல்லை, இடம்பார்க்க வந்தோம் என்று கூறினோம். இதற்குமேல் போகமுடியாது, பாதை இத்துடன் முடிகிறது, திரும்பிச் செல்லுங்கள் என்று கூறிவிட்டுத் தம் வழியில்ப் போனார்கள். அவர்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். சுத்தத் தமிழில் பேசினார்கள். அப்பகுதியைச் சுற்றிச் சுற்றி வாகனத்தில் வலம் வந்தோம். மைத்துனர் தானும் தனது குடும்பமும் இறுதி நாட்களில் அப்பகுதியில் தஞ்சம் அடைந்திருந்த சில பகுதிகளைத் தேடிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு இடத்தையும் பார்த்தபோது, "இங்கதான், இங்கதான்" என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். அவரது மனோநிலை எனக்குப் புரிந்தது. இறுதியாக முள்ளிவாய்க்காலை விட்டு நீங்க மனமின்றி எமது பயணத்தைத் தொடர்ந்தோம். மீண்டும் அதே பரந்தன் முல்லைத்தீவு வீதியில் வாகனம் ஏறியது. குறுகலான வீதி, ஆனாலும் வாகனம் ஓரளவிற்கு ஓடக்கூடிய விதத்தில் பராமரிக்கப்பட்டிருந்தது. இடதுபுறம் முள்ளிவாய்க்கால், வலது புறம் நந்திக்கடல். சற்றுத் தொலைவில் அழகாக வர்ணம் பூசப்பட்டிருந்த வற்றாப்பளை அம்மன் கோயில். இவற்றினைக் கடந்துசெல்லும்போது மைத்துனர் தனது நினைவுகளைப் பகிரத் தொடங்கினார். இராணுவத்தை தாம் நேருக்கு நேராக, ஒரு சில நூறு மீட்டர்கள் தொலைவில் கண்டதாக அவர் கூறினார். தாம் தஞ்சம் அடைந்திருந்த பகுதியில் தன்னுடன் இன்னும் ஆயிரக்கணக்கானோர் வட்டுவாலக்ப் பாலத்தைக் கடந்து முல்லைத்தீவு நோக்கிச் செல்வதற்காக மெதுமெதுவாக நடந்துசெல்லும்போது பதிவாக நிலைஎடுத்துக்கொண்ட இராணுவத்தினர் தாம் இருந்த பகுதிநோக்கி கனரக இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டுக்கொண்டிருந்ததாக அவர் கூறினார். தாம் இனிமேல் இப்பகுதியில் இருக்க முடியாது. மீதமாயிருக்கும் அனைவரையும் உள்ளே வந்தவுடன் கொன்றுவிடுவார்கள், ஆகவே சாவரினும் பரவாயில்லை, பாலத்தின் அடுத்த பக்கத்திற்குப் போய்விட வேண்டும் என்கிற ஒற்றை எண்ணம் மனதில் இருக்க, மக்களோடு மக்களாக கையில் குழந்தைகளையும் சுமந்துகொண்டு பொழுது புலராத அவ்வேளையில் தாம் ஓடத் தொடங்கியதாக அவர் கூறினார். தம்முடன் கூட வந்த பல குடும்பங்களில் சிலர் ஓடிக்கொண்டிருக்கும்போதே சூடுபட்டுக் கீழே விழ, அவர்களை விட்டுவிட்டு அக்குடும்பங்கள் பாலம் நோக்கி ஓடிக்கொண்டிருந்ததை மைத்துனர் பார்த்திருக்கிறார். இராணுவத்தினரின் கடுமையான துப்பாக்கித் தாக்குதலுக்ககு முகம்கொடுத்து இறந்து வீழ்ந்தவர்கள் விழ, மீதியாக ஓடிக்கொண்டிருந்தோர் வட்டுவாகல்ப் பாலத்தின் முள்ளிவாய்க்கால்க் கரையினை அடைந்திருக்கிறார்கள். இப்போது இராணுவத்தை மிகக் கிட்டத்தில் அவர்களால் பார்க்க முடிந்தது. ஆயிரக்கணக்கான இராணுவத்தினர், முள்ளிவாய்க்கால் நோக்கி முன்னேற ஆயத்தமாக நிற்க, வட்டுவாகல்ப் பாலத்தின் இடப்புறமாகவும் வலப்புறமாகவும் ஆயிரக்கணக்கில் பிணங்கள் மிதந்துகொண்டிருப்பதை அப்போதுதான் மைத்துனர் கண்ணணுற்றிருக்கிறார். "இந்தப் பக்கமும், அந்தப்பக்கமும் ஒரே பிணக்குவியல் அண்ணா, பொம்மைகளைக் குப்புறப் போட்டுத் தண்ணிக்குள்ள தள்ளின மாதிரி, சிவந்து போய் ரோஸ் நிறத்தில இருந்தது. எப்ப செத்த சனங்களோ தெரியாது, கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் பிணங்கள்" என்று அவர் கூறினார். யுத்தத்தில் சிதைந்துபோய்க் கிடந்த வட்டுவாகல்ப் பாலத்தின் மீது பெருந்திரளான மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிநோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். பாதையின் அகலம் போதாமையினால் பலர் கழுத்தளவு நீரிற்குள் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள். இராணுவத்தினரின் பகுதிக்குள் வந்ததும் வெளியான இடமொன்றில் அவர்கள் இருத்திவைக்கப்பட்டார்கள். புலிகளுடன் முரண்பட்டு, இராணுவத்துடன் இணைந்துகொண்ட முன்னாள் போராளிகள் பலரை தான் அங்கு கண்டதாக மைத்துனர் கூறினார். அடிக்கடி ஒலிபெருக்கியில் பேசிய அவர்கள், "இயக்கத்தில ஒரு நாள் வேலை செய்த ஆக்களெண்டாலும் கையை உயர்த்திக்கொண்டு வந்திருங்கோ, விசாரிச்சுப்போட்டு விட்டுவிடுவம். நாங்களாப் பிடிச்சமெண்டால் தெரியும்தானே?" என்று மிரட்டல்கள் அவர்களால் விடுக்கப்பட்டன. இதனையடுத்து மக்களோடு மக்களாக நின்ற பல போராளிகள் கைகளை உயர்த்திக்கொண்டு முன்னால் செல்ல, அவர்களை இராணுவத்தினர் தனியாக அழைத்துச் சென்றதைத் தான் கண்டதாக அவர் கூறினார். மைத்துனர் இயக்கத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர் அல்ல. வீதிப் புணரமைப்பு வேலைகளில் சம்பளத்திற்காக வேலை பார்த்தவர். ஆகவே, இயக்கத்தில் ஒருநாள் பணிபுரிந்தவர்கள் என்றாலும் முன்னால் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டபோது அவர் தெரியாததுபோல் இருந்துவிட்டார். அன்று மைத்துனர் அடையாளம் கண்ட போராளிகள் பலர் உயிருடன் இல்லை. ஆனால், அவர்களை இராணுவம் அழைத்துச் சென்றதை அவர் கண்டிருக்கிறார். மைத்துனரைப் போல அக்காலை வேளையில் அப்பகுதியில் தடுத்துவைக்கப்பட்ட பல்லாயிரம் மக்களும் இதனைக் கண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் சாட்சியங்களை எவரும் கேட்கப்போவதில்லை.
-
இரண்டாம் பயணம்
கடற்கரையினை அண்மித்ததாகச் செல்லும் சிறிய வீதிவழியாக எமது வாகனம் பயணத்தைத் தொடர்ந்தது. வலைஞர்மடம் பகுதியிலிருந்து குறுகிய பாதை வழியாக மீண்டும் பரந்தன் முல்லைத்தீவு பாதைக்கு ஏறி சிறிய தூரம் ஓடியபின்னர் இடதுபுறமாகத் திரும்பி முள்ளிவாய்க்காலை அடைந்தோம். நான் பார்க்க வந்தது இந்த இடத்தைத்தான். என் உறவுகள் பல்லாயிரக்கணக்கில் சிங்கள இராணுவ மிருகங்களால் பலியிடப்பட்டதும் இந்த இடத்தில்த்தான். இந்தவிடத்தை காணொளிகளில் பார்க்கும் ஒவ்வொரு கணமும் மிகுந்த வலியை எனக்கு ஏற்படுத்தும். ஆனாலும், நாம் ஏன் சோர்ந்து வீழ்ந்துவிடக்கூடாது என்பதற்கும் இதே முள்ளிவாய்க்காலே எமக்குக் காரணமாகவும் அமைந்திருக்கும். அதைவிடவும் ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்திற்காகவும் தம்மை அர்ப்பணித்த லட்சக்கணக்கான மக்களினதும் இறுதிவரை தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களினதும் ஆன்மாக்கள் இப்பகுதியின் காற்றில் பரவியிருப்பதாக நான் உணர்கிறேன். ஆகவே தான் அந்த ஆன்மாக்களுக்கு எனது இறுதிவணக்கத்தைச் செலுத்த இங்குசெல்லவேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நாம் வாகனத்தை வீதி முடிவடையும் இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கிக்கொண்டோம். முன்னிரவு பெய்த மழையால் நிலம் சற்று ஈரமாக இருந்தது. மணல் நிறைந்த மைதானம் போன்று காட்சியளித்த அப்பகுதியின் மத்தியில் சீமேந்தினால் கட்டப்பட்ட சிறிய நினைவுச் சின்னம் தெரிந்தது. அதனை நோக்கி நடக்கத் தொடங்கினோம். சுமார் 200 - 300 மீட்டர்கள் பக்க நீளத்தைக் கொண்ட சதுரவடிவ மைதானமாகக் காட்சியளித்தது அப்பகுதி. ஒருபுறம் பற்றைகளும், பனைமரங்களும் காணப்பட, இன்னொரு புறம் சில வீடுகள் தெரிந்தன. மக்கள் இப்போது அங்கு வாழத் தொடங்கியிருக்கலாம். இனம்புரியாத நிசப்தம் அங்கு நிலவியது. எந்தச் சத்தமும் இன்றி அமைதியாகக் கிடந்தது அந்தப் பகுதி. இற்றைக்கு 15 வருடங்களுக்கு முன் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஓலங்களையும், அழுகுரல்களையும் இடைவிடாது கேட்ட அந்தப் பூமி இப்போது அமைதியாகக் கிடந்தது. மணற்றரையூடாக நினைவுச் சின்னம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள். நான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடியிலும் எத்தனை உறவுகள் கொல்லப்பட்டிருக்கலாம்? எத்தனை உறவுகள் போராடி மடிந்திருக்கலாம்? எத்தனை பெண்களை சிங்கள மிருகங்கள் கடித்துக் குதறியிருக்கலாம்? சாவரும் வேளையில் அந்த உறவுகள் முகங்கொடுத்த அவலங்கள் எப்படி இருந்திருக்கும் ? என்று பல கேள்விகள் மனதில் எழ முள்ளிவாய்க்கால் பலிப்பீடத்தின் மத்திநோக்கி நடந்துகொண்டிருந்தோம். மைத்துனரின் மகனுக்கும், சாரதியாக வந்த இளைஞருக்கும் இப்பகுதி குறித்த பிரக்ஞை எவ்வளவு தூரத்திற்கு இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், எனக்கும் மைத்துனருக்கும் மனதில் எழுந்த எண்ணங்களைச் சொல்லில் வடித்துவிடமுடியாது. அப்பகுதியில் இறங்கியதுமுதல் மைத்துனர் தனது கையடக்கத் தொலைபேசியில் அப்பகுதியை ஒளிப்படமாக எடுக்கத் தொடங்கினார். அப்பகுதியில் கையில் குழந்தைகளைச் சுமந்துகொண்டு உயிர்காக்க ஓடிக்கொண்டிருந்த பொழுதுகள் அவரது நினைவிற்கு வந்திருக்கலாம். ஆகவே தான் எடுத்துக்கொண்டிருந்த ஒளிப்படத்துடன் பின்னணியில் தனது நினைவுகளையும் அவர் பகிர்ந்துகொண்டிருந்தார். நானும் ஒளிப்படம் எடுக்கத் தொடங்கினேன். இறுதி யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரான காலத்திலும் முள்ளிவாய்காலில் சிங்கள மிருகங்களால் நிகழ்த்தப்பட்ட மனித நாகரீகத்திற்கு முரணான படுகொலைகளை, அட்டூழியங்களை நான் அறிந்துகொண்ட வகையில் அந்த ஒளிப்படத்தில் பின்னணியில் பதிந்துகொண்டேன். ஆனால், எம்மைப்போல பலர் இந்த பகுதியைப் படமாக்கியிருப்பதுடன் அவலங்களையும் பதிந்திருக்கிறார்கள் என்பதால் எனது ஒளிப்படம் குறித்து நான் இங்கு தனியாகப் பதியவேண்டிய தேவையில்லை என்று நினைக்கிறேன். நீண்டநேரம் அப்பகுதியில் நின்றிருந்தோம். சுற்றிச் சுற்றி நடந்து அப்பகுதியினை அண்மித்துக் காணப்பட்ட இடங்களை, பற்றைகளை, பனைமரக் கூடல்களைப் பார்வையிட்டோம். மேல்மணலைத் தட்டிவிட்டுப் பார்த்தால் உடைந்த மட்பாண்டங்கள், அலுமினிய கோப்பைகள், எவர்சில்வர் பாத்திரங்கள், கிழிந்த உடைகள், செருப்புக்கள் என்று பல பொருட்கள் அப்பகுதியெங்கும் இன்னமும் பரவிக் கிடக்கின்றன. இவை எல்லாமே எமது உறவுகளால் அவர்களின் இறுதிக் கணங்களில் பாவிக்கப்பட்டவை. இவற்றுக்கு உணர்வுகளும், பார்வையும் இருந்திருந்தால் எம்மக்கள் பட்ட துன்பங்களை இன்று சாட்சியாகச் சொல்லியிருக்கும். ஆனால், சாட்சியங்கள் எதுவுமற்ற பாரிய இனக்கொலையொன்றினை சிங்கள பெளத்த தேசம் எம்மீது கட்டவிழ்த்து விட்டது என்பதே உண்மை. இறுதியாக முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தினைச் சிலமுறை சுற்றிவந்துவிட்டு அதன் முன்னால் நின்று படமெடுத்தேன். இது எனக்காக நான் எடுத்துக்கொண்டது. அநியாயமாகக் கொல்லப்பட்ட எனது உறவுகளைப் பார்க்கவந்தேன் என்பதை எனக்கு நானே அவ்வபோது சொல்லிக்கொள்ள எடுத்துகொண்டது, எதனையும் விளம்பரப்படுத்தவல்ல.
-
ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்
உண்மை. ஆனால், இனிமேல் ஈரானின் நிலைகள் மீது நேரடியான தாக்குதல்களை அமெரிக்கா நடத்துவதற்கும் சாத்தியம் இருக்கிறது. இது பரந்த மத்திய கிழக்குப் போராகத்தான் விரிவுபடுத்தப்படுகிறது என்று நினைக்கிறேன்.
-
ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்
ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம் நேற்று ஜோர்தான் சிரியா எல்லையில் நிலைகொண்டிருந்த அமெரிக்கத் இராணுவம் மீது அப்பகுதியில் இயங்கிவரும் ஈரானின் ஆதரவுபெற்ற தீவிரவாத அமைப்பொன்று நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் இன்னும் 30 பேர்வரையில் காயப்பட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டிலிருந்து இப்பகுதியில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க இராணுவத்தினர் ஐஸிஸ் பயங்கரவாத அமைப்பிற்கெதிராகவும், போதைவஸ்த்து நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானினால் வழங்கப்பட்ட தற்கொலை ட்ரோன் வகையினைச் சேர்ந்த ட்ரோன் ஒன்று அமெரிக்கப் படையினரின் பிரதான தங்குமிடப் பகுதியில் தரையிறங்கி வெடித்துச் சிதறியதாகவும் இதனாலேயே இவ்விழப்புக்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஹமாஸ் தீவிரவாத அமைப்பு ஐப்பசி 7 ஆம் திகதி நடத்திய பயங்கவாதத் தாக்குதலுக்குப் பின்னர் நேரடியாக யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத்தினர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்களை விடவும் மேலும் அமெரிக்க சீல் விசேட படைகளின் இரு உறுப்பினர்கள் மத்திய கிழக்கில் கடல் விபத்தொன்றில் அண்மையில் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இஸ்ரேல் ஹமாஸ் யுத்தத்தினை காசாவிற்குள் மட்டுப்படுத்திவிட அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகளை இவ்வாறான தாக்குதல்கள் பரந்த மத்திய கிழக்குப் போராக மாற்றிவிடக் கூடியன என்று கருதப்படுகிறது. இத்தாக்குதலையடுத்து ஈரான் மீது நேரடியான தாக்குதல்களை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கைகள் அமெரிக்க செனட்டர்களால் முன்வைக்கப்படத் தொடங்கியிருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.
-
இனப்படுகொலை நினைவு தினம்: யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரின் 'கொடூர வதை முகாம்கள்'
ஆரம்பத்தில் சுற்றியிருந்த முஸ்லீம் நாடுகளுடன் சேர்ந்து இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து அழிப்பதாகப் பாலஸ்த்தீனர்கள் போரிட்டாலும் கூட இன்று நடப்பது தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள, தாம் முற்றாக ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்துக்கொள்ள நடக்கும் போராட்டம் மட்டுமே என்பதுதான் எனது வாதம். ஈழத்தமிழர்களினதும், பாலஸ்த்தீனர்களினதும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டபோதிருந்த நோக்கங்கள் வேறு வேறாக இருப்பினும்கூட 2009 இல் எம்மீது நடத்தப்பட்ட இனக்கொலைக்கு நிகரான இனக்கொலை இன்று பாலஸ்த்தீனர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.
-
வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய இராணுவம்
வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய இராணுவம் காசாவில் இஸ்ரேலியப் பயங்கரவாதிகள் நடத்திவரும் திட்டமிட்ட இனக்கொலையில் மிக அண்மையில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த , யுத்தத்தில் எவ்விதத்திலும் பங்கேற்றிருக்கத பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். தீவிரவாதக் குழுவான ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான போரில் அகப்பட்டு கடுமையான அவலங்களைச் சந்தித்துவரும் பாலஸ்த்தீன மக்கள் தமதுயிரைக் காத்துக்கொள்ள முடிந்தவகையில் இப்பகுதியிலிருந்து வெளியேற முயன்று வருகிறார்கள். அவ்வாறான ஒரு முயற்சியில் தனது பேரக்குழந்தையின் கைகளைப் பிடித்தவாறு சுமார் 15 முதல் 20 வரையான பெண்கள் சிறுவர்கள் கொண்ட மக்கள் கூட்டமொன்றை இஸ்ரேலின் முன்னரங்கு நோக்கி கைகளில் வெள்ளைக்கொடியினை ஏந்தியவாறு வந்த வயோதிபப் பெண்னொருவரை சுமார் 200 மீட்டர்கள் தூரத்தில் நின்ற இராணுவத் தாங்கியிலிருந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். இன்னொருவிடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமது சகோதரரைப் பார்வையிட இன்னும் மூவரை அழைத்துக்கொண்டு இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியொன்றினுள் வெள்ளைக்கொடியுடன் சென்ற நபரை வெகு அருகில் இருந்து இஸ்ரேலியத் தாங்கி சுட்டுக் கொல்கிறது. அவரது வெள்ளைக்கொடி அவரது குருதியில் முற்றாகத் தோய்ந்திருக்கிறது. இன்னொரு சம்பவத்தில் உங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெள்ளைக்கொடியுடன் வெளியே வாருங்கள் என்று இஸ்ரேலிய இராணுவத்தால் அழைக்கப்பட்டபோது, அதனை உண்மையென்று நம்பி வெள்ளைக்கொடியுடன் வெளியே வந்தவர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்திக் கொல்கிறது. இத்தாக்குதல்களின் ஒளிப்படங்கள் சி.என்.என் தொலைக்காட்சியில் விலாவாரியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொல்லப்பட்ட மக்களுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருக்கும் இஸ்ரேலிய மிருகங்களின் தாங்கிகளும் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பார்க்கும் போது 2009 இல் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தபோது கொல்லப்பட்ட பலநூற்றுக்கணக்கான புலிகளின் அரசியல்த் துறைப்போராளிகளும், பொதுமக்களும் நினைவிற்கு வருகின்றனர். அன்று நடந்தது அப்பட்டமான போர்க்குற்றமும் இனவழிப்பும் தான் என்பதில் சந்தேகம் இல்லை. இன்று இஸ்ரேலின் இனவழிப்பைச் சரியென்று வாதிடும் குரூரர்களுக்கு இது சமர்ப்பணம். https://edition.cnn.com/2024/01/26/middleeast/hala-khreis-white-flag-shooting-gaza-cmd-intl/index.html#:~:text=The IDF has repeatedly claimed,raising questions about those efforts.
- White flag palastenians shot dead.png
-
இரண்டாம் பயணம்
அம்பலவன் பொக்கனையிலிருந்து கடற்கரைச் சாலையூடாக வலைஞர் மடம் பகுதிக்கு வந்தோம். அண்மையில் பெய்த கடும் மழையினால் அப்பகுதியெங்கம் வெள்ளம் தேங்கி நின்றிருந்தது. இப்பகுதியில் பெரும்பாலான வீடுகள் இன்னமும் இடிந்த நிலையிலேயே காணப்படுகின்றன. நிலங்கள் மக்களின் பாவனையின்றி இருப்பதால் பாரிய பற்றைக்காடுகளாக வளர்ந்திருக்கின்றன. வெகு சிலரையே இங்கு காண முடிந்தது. இனக்கொலையாளிகளான சிங்களப் பேரினவாத மிருகங்களின் படங்களைத் தாங்கி நிற்கும் போரின் சாட்சிகளான வலைஞர் மடக் கட்டிடங்கள் இப்பாதையினால் பயணித்து வலைஞர் மடம் (முள்ளிவாய்க்காலுக்கு உட்பட்ட இன்னொரு பகுதி) பகுதியை வந்தடைந்தோம். இப்பகுதியில் காணப்பட்ட இரு கட்டடங்கள் இனக்கொலையில் முக்கிய பாத்திரத்தை வகித்திருக்கின்றன. மைத்துனரின் குடும்பமும் இடப்பெயர்வின்போது இப்பாகுதியில் பனைமரங்களுக்குக் கீழ் மறைப்புக்கட்டி வாழ்ந்திருக்கின்றது. இக்கட்டடங்களில் இருந்து சுமார் 50 மீட்டர்கள் தூரத்திலேயே அவரது குடும்பம் தஞ்சம் அடைந்திருந்தது. அக்காலத்தில் இப்பகுதியெங்கும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்பட்டதாக அவர் சொல்கிறார். இப்பகுதியிலும் ஆயிரக்கணக்கானோர் இராணுவத்தால் பலியிடப்பட்டனர். தற்காலிக வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டிருந்த இக்கட்டடங்களுக்குள் காயங்களோடு கொண்டுவந்து சேர்க்கப்பட்ட பலர் மருந்தின்றியும், கடுமையான இரத்தப்போக்கினாலும் இறந்துபோயினர். தான் அங்கிருந்த ஓரிரு நாட்களில் மட்டும் இக்கட்டடங்களுக்கு முன்னால் கிடத்திவைக்கப்பட்டிருந்த உடல்களின் எண்ணிக்கை பல நூறுகளைத் தாண்டும் என்று தனது நினைவுகளைப் பகிரும்போது கூறினார். கொல்லப்பட்டவர்களின் பிணங்களிலிருந்து வீசியவாடை அப்பகுதி முழுதையும் ஆக்கிரமித்திருந்தது. கொல்லப்பட்டவர்களைப் பற்றி எவரும் அதிகம் அக்கறை கொண்டிருக்கவில்லை. உயிருடன் மீதமாயிருப்போர் தமதுயிரைக் காத்துக்கொள்வதில் மட்டுமே அக்கறை காட்டினர். மரணம் என்பது மலிந்த பொருளாகிவிட்டிருந்தது என்று அவர் கூறினார்.
- Valainjar Madam 2.png
- Vlainjar Madam 1.png
-
இரண்டாம் பயணம்
முல்லைத்தீவு நோக்கிய பயணத்தில் நான் கண்ட இன்னொரு முக்கியமான இடம் புலிகளால் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்த தேக்கங்காடு. காட்டுவளத்தைக் காக்கவும், எதிர்காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்கென்றும் புலிகளால் தாயகத்தின் சிலவிடங்களில் இவ்வாறான காட்டு வளர்ப்பு முன்னெடுக்கப்பட்டு வந்தது. இச்சாலையூடாகப் பயணிக்கும்போது இதனழகைத் தரிசிக்க முடியும். ஆனால், இன்று இத்தேக்கங்காடுகளை வெட்டி விற்பதற்கு தெற்கிலிருந்துந்து வரும் வியாபாரிகளுக்கு அரசாங்கம் அனுமதி கொடுத்திருப்பதாக சாரதி கூறினார். அதன்படி இக்காட்டின் ஒருபகுதி தற்போது வெட்டப்பட்டு வருகிறது. இதன் முழு நீளத்திற்கும் வீடியோப் பதிவொன்றினைச் செய்திருந்தேன். இக்காட்டின் மத்தியில், பரந்தன் முல்லைத்தீவு வீதியில் பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவப்போது இவ்வீதியால் பயணிப்போரை மறித்து விசாரிப்பதும் நடக்கும். எனது ஒளிநாடாவிலிருந்து எடுக்கப்பட்ட படம் கீழே. பரந்தன் முல்லைத்தீவு பாதையிலிருந்து கண்டல் வழியாகக் கடற்கரை நோக்கிச் செல்லும்போது இறுதி யுத்தத்தின் இனக்கொலை நாட்களின் அவலங்களைத் தன்னகத்தே அமிழ்த்தி வைத்திருக்கும் சிலவிடங்கள் வருகின்றன. அவற்றுள் முக்கியமானது புதுமாத்தளன் பகுதி. துரதிஸ்ட்டவசமாக அப்பகுதியில் இடம் பார்க்கும் அவதியில் படமெடுக்கமுடியாது போய்விட்டது. ஆனால் அம்பலவன் பொக்கனைப் பகுதியில் நின்று, நிதானித்து சில படங்களையும், ஒளிப்படங்களையும் பதிவுசெய்துகொண்டோம். அவற்றுள் சில கீழே. அம்பலவன் பொக்கனைப் பகுதியில் கடற்கரையினை அண்மித்ததாக சிறிய பற்றைகள் காணப்படுகின்றன. இப்பகுதியில் அகோர பல்குழல்த் தாக்குதலிலும், விமானக் குண்டுவீச்சிலும் கொல்லப்பட்ட பலரை இவ்வாறான பற்றைக்காடுகளுக்குள் மக்கள் கைகளால் மணலைத் தோண்டிப் புதைத்திருக்கிறார்கள். காயப்பட்டவர்களுக்கு இப்பகுதியில் வைத்தே அறுவைச் சிகிச்சை மயக்கமருந்தின்றி நடைபெற்றிருக்கிறது. இப்பகுதியில்த் தோண்டிப் பார்த்தால் கொல்லப்பட்ட மக்களின் எச்சங்கள் இன்னும் இருக்கும் என்று மைத்துனர் கூறினார்.
- Vadduvaakal Bridge
- PTK Town
- Teak Plantation Mullaitivu
- Nanthikkadal
- Nanthikkadal 2
- Mullivaykkaal 1
- Mullaitivu school
- Mullivaaykkaal 2
- Chalai beach
- Ambalavan Pokkanai temple
- Ambalavan Pokkanai bushes
- Ambalavan Pokkanai beach