Jump to content

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8740
  • Joined

  • Last visited

  • Days Won

    103

Everything posted by ரஞ்சித்

  1. ஈழத்தமிழரின் போராட்டத்திற்கான தனது வெளிப்படையான ஆதரவினை தனது அரசியலின் பிரதான மூலதனமாக இட்டு சீமான் செய்துவரும் செயற்பாடுகள் ஈழத்தமிழரைப் பொறுத்தவரை எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்திவருவதை சீமானை ஆதரிப்பவர்கள் உணர்ந்துகொள்கிறார்களோ என்று எனக்குத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக்கழகத்தையும் அதனோடு இணைந்த திராவிடக் கட்சிகளையும், மத்தியில் ஆட்செய்த காங்கிரஸ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸையும் சீமான் மிகவும் காரசாரமாக விமர்சித்து வருகிறார் . ஈழத்தமிழினத்திற்கு கருநாநிதியும் அவரது கட்சியும் செய்த துரோகமும், தமிழினக்கொலையில் காங்கிரஸ் கட்சிக்கு கருநாநிதி கொடுத்த ஆதரவும் சிமானினால் ஒவ்வொரு மேடையிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இந்த விமர்சனங்கள் தற்போது சீமானினால் மட்டுமன்றி அவரது ஆதரவாளர்கள், கட்சி அங்கத்தவர்கள், சமூக வலையொளி ஆதரவாளர்கள் என்று பலராலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 2009 வரை மதில்மேற் பூனையாக இருந்த தி.மு.க மற்றும் அதனை ஆதரித்து வரும் வி.சி.க, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல பெரியாரிஸ்ட் கட்சிகள் தற்போது சீமானை எதிர்க்கிறோம் என்கிற போர்வையில் ஈழப்போராட்டத்தினையும், போராட்டத்தினை முன்னெடுத்த தலைமையினையும், புலிகளையும், மொத்தத்தில் ஈழத் தமிழ் இனத்தையுமே தமது எதிரிகளாகப் பாவித்து விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் பெரியாரிஸ்ட்டுக்களினால் பரப்பட்டப்படு வரும் மிகவும் கீழ்த்தரமான விமர்சனங்கள் எமது போராட்டம் அழிக்கப்பட்டதும், தலைமை கொல்லப்பட்டதும் சரியானதுதான் என்று நியாயப்படுத்தி வருகின்றன. இக்கட்சிகளின் தலைவர்கள் சிலரே தலைவர் பிரபாகரனை "முட்டை போண்டா" என்று வெளிப்படையாகக் கிண்டலடிப்பதும், "நாயைப்போல சுட்டுக் கொன்று நந்திக்கடலில் வீசினோமே, போய்ப் பொறுக்கீட்டு வாங்கடா" (சுந்தரவள்ளி) என்று பேசுவதும், "பிழைக்கப் போன இடத்தில் நாடு கேட்டால் சிங்களவன் சும்மா இருப்பானா?" என்று இனக்கொலையினை நியாயப்படுத்துவதும், தலைவரையும் போராளிகளையும் தூஷண வார்த்தைகளால் வைது ஆதரவாளர்களிடையே கரகோஷம் பெறுவதும் ( தி.மு.க வின் பிரசண்ணா) நடக்கிறது. நேற்று நடைபெற்ற திலீபனின் நினைவு நாள் கீச்சகப் பதிவுகளில் கருத்துப் பகிர்ந்த பல திரவிட இயக்க ஆதரவாளர்கள் திலீபனின் தியாகத்தை எள்ளி நகையாடியதும், தலைவரை ஏக வசனத்தில் வைது, "திலீபனைக் கொன்றுவிட்டு நட்சத்திர ஹோட்டலில் விருந்துண்டவண்டா உன் தலைவன்" என்று எழுதுவதும் நடக்கிறது. ஒரு தி.மு.க ஆதரவாளர் தலைவரின் நிர்வாணமான உடலின் மீது அவரது பிறப்புறுப்பில் புலிக்கொடியேற்றி, "இப்போது போதுமாடா?" என்று தனது வெறியைத் தீர்த்துக்கொண்டதும் நேற்று நடந்தது. கொளத்தூர் மணி, வீரமணி, சுபவீரபாண்டியன், சுந்தரவள்ளி, திருமாவளவன் ஆகிய பெரியாரிஸ்ட்டுக்கள் இன்று சீமானைத் தாக்குவதற்காக எமது விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வருகிறார்கள். சீமானினால் தமிழ்த் தேசியம் குத்தகைக்கு எடுக்கப்பட்டதனால், அவர்கள் இன்று தமிழ்த்தேசியத்திற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்திருப்பதோடு, சீமானைத் தாக்குவதற்காக அவர் முன்னிலைப்படுத்தி அரசியல் செய்யும் எமது விடுதலைப் போராட்டத்தையும், தலைமையினையும் தரக்குறைவாகப் பேசுகிறார்கள். சிமானை எதிர்க்கும் திராவிட அரசியல் இன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தலைமையினையும் இகழும் அரசியலாக தமிழ்நாட்டில் மாறிவிட்டிருக்கிறது. 2009 இற்குப் பின்னர் தமிழ்நாட்டில் பல எதிரிகளை சீமானின் அரசியல் ஏற்படுத்தி விட்டிருக்கிறது. இன்று தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் குறித்த பிரக்ஞையற்று பல தமிழர்கள் அல்லது தெலுங்கு வம்சாவளியினர் இருப்பதற்குக் காரணமும் சீமானின் அரசியலும், அவரது அரசியலுக்கெதிரான திராவிட அரசியலும்தான் என்றால் அது மிகையில்லை. தமிழ்நாட்டு சாதாரண மக்களின் அரசியல் அறிவும், அரசியலில் அவர்களுக்கு இருக்கும் தெளிவும் என்னைப்பொறுதவரை மிகவும் மேலோட்டமானது. வெள்ளித்திரைகளில் வலம்வரும் கதாநாயகர்களில் தமது தலைவனைத் தேடும் அரசியல் சூனியங்களாகவே பெரும்பாலான தமிழ்நாட்டு மக்கள் இன்னமும் வாழ்கிறார்கள். சினிமாக் கதாநாயகனுக்கும், நாயகிக்கும் கோயில் கட்டி வணங்கும் தலைமுறையினர் தமிழ்நாட்டில் இன்றிருக்கிறார்கள். இவ்வாறான ஒரு தலைமுறையினர் உயிர்வாழ்தலுக்காக நாம் புரிந்த போராட்டத்தினைக் கொச்சைப்படுத்துவதும், போராட்டத்தினை வழிநடத்திய தலைவரையும் போராளிகளையும் கொச்சைப்படுத்துவதும், எமது அவலங்களை நியாயப்படுத்துவதும் சகித்துக்கொள்ள முடியாதவை. எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்த எந்த அருகதையுமற்றவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்கள். ஒரு போத்தல் சாராயத்திற்கும், பிரியாணிப் பொட்டலத்திற்கும் விலைபோகும் கூட்டம் எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசும் நிலையினை ஏற்படுத்தியதே சீமானின் அரசியல்தான். தனது அரசியல் நலனுக்காக ஈழத்தமிழனின் போராட்டத்தை, அவனது அவலத்தை தெருவில் இழுத்துவிட்டு, தமிழ்நாட்டு அரசியல் ஞானசூனியங்களினால் கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட வழிவகுத்துக் கொடுத்தவர் சீமான். ஆகவே, இவரது அரசியலை ஆதரிக்கும் எந்த ஈழத் தமிழனும் இதுகுறித்துச் சிந்திப்பது நல்லது.
  2. சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா? இன்று தமிழ்நாட்டில் ஈழத்தமிழரின் அவலங்களை, அவர்கள் மீது நடத்தப்பட்ட இனக்கொலையினை அப்பட்டமாக பொதுவெளியில் மிகவும் வெளிப்படையாகப் பேசிவருபவர் சீமான் மட்டும் தான் என்பதில் எவருக்கும் ஐய்யமிருக்க வாய்ப்பில்லை. இன்றுவரை தமிழ்நாட்டில் இருந்த அரசியல்வாதிகளில் மிகவும் வெளிப்படையாக இலங்கையினையும், இந்தியக் காங்கிரஸையும் நேரடியாகவே ஈழத்தமிழர் படுகொலையின் சூத்திரதாரிகள் என்று சீமான் குற்றஞ்சாட்டுவதுபோல வேறு எவருமே செய்ததில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ள தமிழ் இன உணர்வுள்ளவர்களிடையே எமது போராட்டம் பற்றியும், தலைமை பற்றியும், எம்மீது நடத்தப்பட்ட படுகொலைகள் பற்றியும் சீமான் பல விடயங்களை எடுத்துச் சென்றிருக்கிறார். எமது போராட்டம் பற்றிய தெளிவான விளக்கத்தினைக் கொண்டிருக்காத பலர் இன்று சீமானினால் அறிவூட்டப்பட்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் நல்ல விடயங்களே. கேள்வி என்னவென்றால், தனது அரசியல் மூலம் சீமான் அடைய நினைப்பது என்ன? அல்லது, தமிழ்நாட்டில் சீமானினால் அடையக் கூடிய அதியுச்ச‌ பதவி/அதிகாரம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதற்கப்பால் வேறு இருக்கிறதா? ஒரு பேச்சிற்கு சீமான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிடுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். அந்த அதிகாரத்தைக் கொண்டு சீமான் எமக்குச் செய்யக் கூடியது என்ன? அது, எம்.ஜி.ஆரோ அல்லது கருநாநிதியோ (1980 களின் ஆரம்பத்தில் அவர் இருந்த நிலைப்பாட்டின் அடிப்படையில்)முதலமைச்சர்களாக இருந்த காலத்தில் செய்ய முடிந்தவற்றைக் காட்டிலும் எந்தளவிற்கு வேறுபட்டதாக இருக்கும்? புலிகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவளித்த எம்.ஜி.ஆர் தனது பங்காளியாக மத்தியில் ஆட்சிசெய்த இந்திராவையோ அல்லது ரஜீவையோ அழுத்தம்கொடுத்து தமிழருக்கு நீதியான தீர்வொன்றினை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்ததா? புலிகள் இந்தியாவில் தடைசெய்யப்படாத, ராஜீவின் மரணத்திற்கு முற்பட்ட காலத்திலேயே எமக்கு வெளிப்படையாக ஆதரவு தந்த (சீமானைப் போல் இல்லாதுவிட்டாலும், ஓரளவிற்கு) எம்.ஜி.ஆர் இனால் செய்யமுடியவில்லையென்றால், தற்போது புலிகள் மீதான தடையும் ராஜீவைக் கொன்றவர்கள் என்கிற அவப்பெயரும், தமிழினப் படுகொலையில் இந்தியாவின் நேரடிப் பங்கும் தெளிவாகிவிட்ட சூழ்நிலையில் சீமானினால் எமக்கு தரக்கூடிய தீர்வென்ன? மத்திய அரசு மீது சீமான் செலுத்தப்போகும் (முதலமைச்சர் ஆகியபின்னர்) அழுத்தம் எவ்வாறிருக்கும்? என்னைப்பொறுத்தவரை, தமிழ்நாட்டில் சீமான் செலுத்தக்கூடிய அரசியல் செல்வாக்கு குறுகியது. தமிழ்நாட்டின் பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கு அவர் இன்னமும் நீண்டகாலம் காத்திருக்கவேண்டியிருக்கும். முதலமைச்சர் ஆகியபின்னரும் அவர் மத்திக்குக் கொடுக்கப்போகும் அழுத்தம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. அந்த மட்டுப்படுத்தப்பட்ட அழுத்ததினைப் பாவித்து தமிழருக்கான நியாயமான, கெளரவமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாது.
  3. ஈராக்கிலும், லிபியாவிலும் அன்று இருந்த ஆட்சியை (சர்வாதிகாரத்தனமாக இருந்தாலும் கூட) நீக்கி தமது பொம்மைகளை நிறுத்தியவர்கள் மேற்குலக நாடுகளே. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்றவர்கள். ஈராக்கில் சதாம் இருக்கும்வரை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அங்கு தலையெடுக்க அவர் விடவில்லை. ஆனால், தமது நண்பனான சவுதி அரேபியாவையும், கூடவே குவைத்தையும் காப்பாற்றி எண்ணெய் வளத்தைத் தொடர்ந்து பேண ஈராக்கில் அமெரிக்கப்படை தரையிறங்கியது. பின்னர் சதாம் அகற்றப்பட, அமெரிக்காவைத் தாக்குகிறோம் என்கிற பெயரில் உலகில் இருந்த அனைத்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்பட்ட ஈராக்கில் நுழைந்தன. அல்கொய்டா மட்டுமல்லாமல் ஐஸிஸ் அமைப்பும் இந்தப் பிண்ணனியிலேயே ஈராக்கில் முகாம் அமைத்தன. ஆனால் என்ன, இன்று அமெரிக்காவும் ஈராக்கை விட்டு வெளியேறியாயிற்று, சதாமையும் கொன்றாயிற்று. ஆனால், அமெரிக்காவின் பரம வைரி ஈரான் இப்போது ஈராக்கினுள் புகுந்து அரசைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.சதாம் இருந்திருந்தால் இஸ்லாமிய அடிப்படைவாதமும் வந்திருக்காது, ஈரானும் அங்கு நுழைந்திருக்காது. லிபியாவில் சர்வாதிகாரியான கடாபியை அழித்ததன் மூலம் அந்நாட்டை இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போர்க்களமாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போன நாடாகவும் மேற்குநாடுகள் மாற்றியிருக்கின்றன. ஏட்டிக்குப் போட்டியான குழுக்களின் கைகளில் அகப்பட்டுச் சிதைந்து கொண்டிருக்கும் லிபியாவில் அபிவிருத்தியென்பதோ, மக்கள் நலத் திட்டங்கள் என்பதோ எப்படிச் சாத்தியம்? சரித்திரம் காணாத‌ மழை பெய்தே இந்த அழிவு ஏற்பட்டிருப்பினும், நிவாரணப் பணிகளை சரிவரச் செய்வதற்கு நிலையான அரச இயந்திரம் ஒன்று அங்கில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோமா? அந்த நிலையான அரச இயந்திரம் இல்லாமற்போனமைக்கு யார் காரணம்? சிரியாவிலும் இதனையே மேற்குலகு செய்யப் பார்த்தது. சர்வாதிகாரி ஆசாத்திற்கு சர்வாதிகாரி புட்டினின் உதவி கிடைத்ததனால் அந்நாடு தற்போதும் ஏதோ ஒருவகையான அரச செயற்பாட்டினைக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரிகளை அழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதென்பதெல்லாம் சரிதான். ஆனால், சர்வாதிகரிகளை அழித்தபின்னர் நாட்டை அடிப்படைவாதிகளின் கைகளில் விட்டு விட்டு இருந்தவற்றையும் இழந்து நிற்கும் மக்களை நட்டாற்றில் விட்டுச் சென்றது சரியா? சர்வாதிகாரிகளை அகற்றினீர்கள் என்றால் அந்நாடுகளில் ஜனநாயகம் நிலைபெற்று, மக்களாட்சி பலம்பெறும்வரை நின்று உதவியிருக்க வேண்டாமோ? இந்த வாதம் இங்கு செல்லாது. உக்ரேனில் இருப்பது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனநாயக வழி ஆட்சி, சர்வாதிகார ஆட்சியல்ல. தனது நாட்டு மக்களுக்குத் தேவையான வசதிகளை இன்றிருக்கும் முறையான உக்ரேன் அரசு செய்தே வருகிறது. அந்த மக்களாட்சியை அகற்றி தனது பொம்மை ஒன்றை அங்கே கொழுவேற்றி அழகுபார்க்கவே சர்வாதிகாரி புட்டின் விளைகிறான். ஆக, உக்ரேன் சீர்குலைக்கப்படுவது புட்டினாலேயே அன்றி மேற்குலகினால‌ல்ல.
  4. இலங்கையை ஆக்கிரமிக்குமாறு கோரிய எம்.ஜி.ஆரும் அவரை வழிக்குக் கொண்டுவந்த இந்திராவும் ரோ அமைப்பு உருவாக்கப்பட்ட நாள்முதலே இலங்கை தொடர்பான விடயங்களை அது கையாளத் தொடங்கியது. வங்கதேச உருவாக்கத்தில் பாக்கிஸ்த்தானுடனான போரின் பின்னர் கொழும்பில் தனது செயற்பாடுகளைப் பலப்படுத்தியது ரோ. இந்தியாவுடனான போரின்போது பாக்கிஸ்த்தானிய குண்டுவீச்சு விமானங்கள் கொழும்பில் தரையிறங்கி எரிபொருள் நிரப்பும் வசதிகளை இலங்கையரசு செய்து கொடுத்தபோதும், அமெரிக்காவின் கப்பற்படை இலங்கையை அண்மித்த இந்துசமுத்திரத்தினூடாக பிரவேசித்தபோதும் தனது தென்கோடியின் பாதுகாப்புப் பலவீனப்பட்டிருப்பதை இந்திரா உணர்ந்துகொண்டிருந்தார். அன்றிலிருந்து இந்தியா கொழும்புமீது தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொண்டே வந்தது. இந்தியாவின் கொழும்பு மீதான இந்தக் கண்காணிப்பென்பது 1977 ஆம் ஆண்டு ஜெயார் ஜனாதிபதியாகப் பதவியேற்று அமெரிக்காவின் பக்கம் சாயத் தொடங்கியதும் இன்னமும் அதிகமானது. இப்படியான பின்னணியிலேயே 1983 ஆம் ஆண்டு தமிழர் மீதான இனவன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டது. கிரிஷ் சந்திரா சக்சேனா 1983 ஆம் ஆண்டு ஜூலையில் தமிழர் மீதான படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது ரோ வின் துணை இயக்குனரான மத்தியு ஏபிரகாம் கொழும்பிலேயே நின்றிருந்தார். கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் அமைந்திருந்த இந்தியத் தூதுவராலயத்திற்கு ஆடி 25 ஆம் திகதி காலை அவர் காலி வீதியால் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அவரைத் தமிழர் என்று எண்ணிய சிங்களக் காடையர்கள் அவரை வழிமறித்துத் தாக்கத் தொடங்கினர். அவர் பயணம் செய்த கார் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டு எரிக்கப்பட்டது. காரினுள் இருந்து வெளியே இழுத்து வீசப்பட்ட அவர்மீது காடையர்கள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர். தான் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தவேள, "நான் தமிழன் அல்ல, நான் ஒரு இந்தியன்" என்று அவர் அலறத் தொடங்கினார். அவர் ஒரு இந்தியர் என்பதை அறிந்துகொண்டதும் அவர்மீதான தமது தாக்குதலை சிங்களக் காடையர்கள் மேலும் உக்கிரமாக நடத்தத் தொடங்கினர். இத்தாக்குதலின்போது மத்தியூ மிகவும் கடுமையான காயங்களுக்கு உள்ளானார். தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விரிவான அறிக்கையொன்றினை அவர் தில்லிக்கு அனுப்பிவைத்தார். அப்போது ரோவின் இயக்குநராக இருந்த சக்சேனா, மத்தியூ தனக்கு அனுப்பிவைத்த தாக்குதல் தொடர்பான அறிக்கை மற்றும் தமிழ்நாட்டில் எழுந்துவந்த உணர்வெழுச்சியான சூழ்நிலை தொடர்பான அறிக்கை ஆகியவற்றினை இந்திரா தலைமையில் நடைபெற்ற உயர் பாதுகாப்புக் கூட்டமொன்றில் சமர்ப்பித்தார். இதற்கு மேலதிகமாக இந்திய புலநாய்வுத்துறையின் (அமைப்பு 1) தகவல்களும் அங்கே விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் இந்தியாவின் சமாதானத் தூதுவர் பார்த்தசாரதியும் பிரசன்னமாகியிருந்தார். இந்த உயர் பாதுகாப்பு கூட்டத்தின் நோக்கமே தமிழ்நாட்டில் உருவாகிவரும் உணர்வெழுச்சியான சூநிலையினை எவ்வாறு தடுப்பது அல்லது ஆற்றுவது என்பதாகவே இருந்ததாக இக்கூட்டத்தில் அன்று பங்கேற்றிருந்த அதிகாரியிருவர் என்னிடம் தெரிவித்தார். "பதற்றமான சூழ்நிலையினால் ஏற்படப்போகும் பாதிப்பைக் குறைப்பதுதான் எமது ஒரே நோக்கமாக இருந்தது. தான் புதிதாக சேர்த்துக்கொண்ட தமிழ்நாட்டின் பங்காளிக் கட்சியான அ.தி.மு.க வின், குறிப்பாக எம்.ஜி.ஆரின் அரசியல் இருப்பையும், தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு இருக்கும் அரசியல்த் தளத்தைத் தக்கவைத்துக்கொள்வதுமே இந்திராவின் கரிசணையாக அன்று இருந்தது" என்று அவர் கூறினார். தமிழ்ப் போராளிகளைப் பயிற்றுவித்து அவர்களுக்கு ஆயுத உதவிகளை வழங்கி இலங்கையினுள் அனுப்பிவைக்கும் தனது முடிவு உறுதியாக்கப்பட்டதும் இந்திரா அதனை உடனடியாக தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு அறியத் தந்தார். ஜெயவர்த்தனவைக் கையாள தான் எடுத்திருக்கும் இருவழிக் கொள்கை பற்றியும் எம்.ஜி.ஆரிடம் அவர் விளக்கினார். ஜெயவர்த்தனவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் அதேவேளை தமிழ்ப் போராளிகளைத் தாம் பயிற்றுவிக்கப்போவதாக இந்திரா கூறியபோது எம்.ஜி.ஆர் இதற்கு தனது அதிருப்தியை வெளியிட்டார். போராளிகளைப் பயிற்றுவித்து அவர்களுக்கு ஆயுத உதவிகளை வழ‌ங்குவது மட்டுமே தமிழ்நாட்டுத் தமிழர்களைத் திருப்திப்படுத்திவிடாது என்று அவர் இந்திராவுடன் தர்க்கித்தார். இலங்கையை ஆக்கிரமித்து தமிழர்களைக் காக்குமாறே தமிழ்நாட்டுத் தமிழர்கள் கோருகிறார்கள் என்று இந்திராவிடம் அவர் கூறினார். "சரி, நீங்கள் கோருவதுபோல் நாம் இலங்கையை ஆக்கிரமிப்பதாகவே வைத்துக்கொள்வோம், அப்படியானால் தெற்கில், சிங்களவர்கள் மத்தியில் வாழும் தமிழர்களின் நிலை என்னாகும்?" என்று அவர் எம்.ஜி.ஆரிடம் வினவினார். தமிழ்நாடு, சேலம் மாவட்டம், களத்தூர்க் கிராமத்தில் இயங்கிய புலிகளின் பயிற்சிப் பாசறை 1985 புலிகளின் சிறுமலை பயிற்சிப் பாசறை , திண்டுக்கல் மாவட்டம் 1985 பின்னர், காமிணி திசாநாயக்கவின் அண்மைய உரையொன்றினை மேற்கோள் காடிய இந்திரா, "நாம் இலங்கையை ஆக்கிரமித்தால் இலங்கை இராணுவம் தமிழர்களைக் கொல்லும், குறிப்பாக பெண்களையும் சிறுவர்களையும் அது வேட்டையாடும். இதை தமிழ்நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்" என்று அவர் எம்.ஜி.ஆரிடம் கோரினார். (தனது தொழிற்சங்க கூட்டமொன்றில் ஆவணியில் பேசியிருந்த காமிணி திசாநாயக்க, "இந்தியா எம்மீது ஆக்கிரமிப்பை மேற்கொள்ள குறைந்தது 24 மணித்தியாலங்களவது எடுக்கும். அந்த 24 மணித்தியாலத்தினுள் அனைத்துத் தமிழர்களையும் நாம் கொன்றுவிடலாம்" என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது). இதனையடுத்து இந்திராவின் சிந்தனையினை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர், தனது நெருங்கிய சகாவான மின்சார வளத்துறை அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை அழைத்து இந்திராவின் கருத்தினை மக்களிடையே பிரச்சாரப்படுத்தும்படி பணித்தார். வைகாசி 2000 இல் சென்னையிலிருந்து வெளிவரும் நியூஸ் டுடே எனும் பத்திரிக்கையில் இந்த நிகழ்வு குறித்த‌ பதிவொன்றினை வெளியிட்டிருந்தார். தனது விசேட புலநாய்வுப் பிரிவின் அதிகாரிக‌ளை அழைத்த இந்திரா தனது மறைமுக வழியான தமிழ்ப் போராளிகளைப் பயிற்றுவித்து ஆயுதம் வழங்குவது எனும் திட்டத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்த திட்டம் ஒன்றினை வகுக்கும்படி பணித்தார். இந்த அமைப்போ இலங்கைப் பிரச்சினையினைக் கையாள்வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பல்ல. ஜூலை இனக்கலவரம் ஆரம்பிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னரே இந்த அமைப்பு இந்திராவால் உருவாக்கப்பட்டிருந்தது. 1983 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியிலேயே இதனை அவர் உருவாக்கியிருந்தார். விசேட புலநாய்வு அமைப்பு என்கிற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு இந்தியாவின் பஞ்சாப், காஷ்மீர், ராஜஸ்த்தான், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் நடந்துவந்த பிரச்சினைகளைக் கையாள்வதற்காகவே உருவாக்கப்பட்டிருந்தது. இந்த விசேட புலநாய்வு அமைப்பு காவோ எனும் அதிகாரியினால் வழிநடத்தப்பட்டது. பிரதமரின் செயலக இயக்குநர் சங்கரன் நாயர் மற்றும் ரோவின் இயக்குநர் சக்சேனா ஆகியோர் இந்த விசேட புலநாய்வுப் பிரிவிற்கு உதவிபுரிந்து வந்தனர்.
  5. ஜெயாரை பேச்சுவார்த்தை மேசைக்கு வரவழைக்கவே ஆயுதப் போராட்டம், தனிநாட்டிற்காக அல்ல ‍ - இந்திரா போராளிகளுக்கு இராணுவப் பயிற்சியினை வழங்கும் இந்திராவின் மறைமுகமான திட்டத்திற்கு உறுதியான நோக்கம் ஒன்று இருந்தது. தமிழ்ப் போராளி அமைப்புக்களிடமிருந்து இந்திரா எதிர்பார்த்த ஒரே விடயம் ஜெயவர்த்தனவை பேச்சுவார்த்தை மேசைக்குத் தள்ள வைப்பதே அன்றி அதற்கு மேல் வேறு எதுவும் இல்லை. இந்தத் திட்டத்தின் பிரதான திட்டமிடலாளர்களில் ஒருவர் சென்னையிலிருந்து வெளிவரும் புரொன்ட் லைன் சஞ்சிகைக்கு செவ்வியொன்றினை வழங்கியபோது, "ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஜெயவர்த்தனவை பேச்சுவார்த்தை முயற்சிக்குக் கொண்டுவர முடியும் என்று இந்திரா நம்பியதாலேயே தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு இராணுவப் பயிற்சியினை வழங்கும் முடிவினை எடுத்தார். தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியதன் ஒரே நோக்கம் இலங்கை அரசாங்கத்தின் தலையினைக் கொய்வதல்ல, மாறாக தமிழர்களின் பின்னால் இந்தியா எனும் பெரிய சக்தி இருக்கிறது எனும் செய்தியினை இலங்கை அரசாஙத்திற்கு உணர்த்தவே" என்று கூறினார். பெரும்பாலான போராளி அமைப்புக்களின் தலைவர்கள் இந்தியாவின் இந்தக் கொள்கை பற்றி அறிந்தே இருந்தார்கள். பிரபாகரன் இதுகுறித்து மிகத் தெளிவான பார்வையினைக் கொண்டிருந்தார். புலிகளின் அரசியல் தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம் புரொண்ட் லைன் சஞ்சிகைக்குப் பேட்டியளித்தபோது, "இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் ஒரே நோக்கம் இலங்கையரசாங்கம் தனது அழுங்குப் பிடியில் இருந்து இறங்கி வந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்வரை போராளிகள் ஊடாக ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வது. அவ்வாறு இலங்கையரசு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டதும், போராளிகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புவது" என்று கூறினார். புலிகளின் தலைவர்கள், சிறுமலை பயிற்சி முகாம், திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு, 1985 ஆம் ஆண்டு ‍ வே.பிரபாகரன் (இடமிருந்து 3 ஆவது), பொட்டு அம்மான்(வலதுபுறமிருந்து முதலாவது) தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு இராணுவப் பயிற்சியினை வழங்கவும், ஆயுதங்களைக் கொடுக்கவும் திட்டத்தினை வரையுமாறு மூன்றாவது புலநாய்வு அமைப்பைப் பணித்த இந்திரா, உடனடியாக இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துமாரும் உத்தரவிட்டார். இந்தியாவில் ஏற்கனவே இருவேறு புலநாய்வு அமைப்புக்கள் இயங்கிவந்த நிலையில், இந்திராவினால் புதிதாக அமைக்கப்பட்ட நாத்தின் அமைப்பு "மூன்றாவது அமைப்பு" என்று அழைக்கப்படலாயிற்று. இந்தியாவின் முதலாவது புலநாய்வுச் சேவையான புலநாய்வுப் பிரிவு 1953 ஆம் ஆன்டிலிருந்து இலங்கையினுள், இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் எனும் போர்வையில் இயங்கி வருகிறது. 1968 ஆம் ஆண்டு சீக்கியப் பிரிவினைவாதப் போராளிகளுக்கு பாக்கிஸ்த்தான் உளவுப்பிரிவு பயிற்சியும் ஆயுதமும் வழங்க ஆரம்பித்ததை இந்திய புலநாய்வுத் துறை (முதலாவது அமைப்பு) கண்டுபிடிக்கத் தவறியதையடுத்து அதன்மீதான நம்பிக்கையினை இந்திரா இழந்திருந்தார். காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுடன் இரு போர்களில் ஈடுபட்டிருந்த பாக்கிஸ்த்தான், சீக்கியர்கள் தனிநாடு ஒன்றினை உருவாக்க உதவுவதன் மூலம் இந்தியாவைப் பலவீனப்படுத்த கங்கணம் கட்டியிருந்தது. இதனைத் தடுப்பதற்கு செயலில் இறங்கிய இந்திரா அமெரிக்க, இங்கிலாந்து புலநாய்வுப் பிரிவுகளுக்கு நிகரான புலநாய்வுக் கட்டமைப்பொன்றினை உருவாக்குமாறு தனது பாதுகாப்பு ஆலோசகராக அப்போது பணியாற்றி வந்த ரமேஷ்வர் நாத் காவோ வைப் பணித்தார். இந்தியாவின் இரண்டாவது புலநாய்வுப் பிரிவான ரோ 1968 ஆம் ஆண்டு இந்தியாவின் வெளியகப் புலநாய்வுப் பிரிவாக உருவாக்கப்பட்டது. அதன் ஆரம்பகால நோக்கமே பாக்கிஸ்த்தானிலிருந்து வரும் அச்சுருத்தலைச் சமாளிப்பதுதான். பிற்காலத்தில், ஜெயவர்த்தனவின் அரசாங்கம் அமெரிக்காவின் பக்கம் சாயத் தொடங்கியதையடுத்து ரோவின் பார்வை இலங்கை மீதும் திரும்பியது. பிரதம மந்திரியின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே ரோ அமைப்பு இயங்கியது. காவோ இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். ரோவின் கட்டமைப்பும், செயற்பாடுகளும் பாராளுமன்றத்திடமிருந்தும் மறைக்கப்பட்டு இருந்தன. கட்டுப்பாடற்ற வளங்கள் அதற்கு வழங்கப்பட்டன. 1971 ஆம் ஆண்டு இடம்பெற்ற வங்கதேசப் பிரச்சினையில் ரோ மிக முக்கியமான பங்கொன்றினை ஆற்றியிருந்தது. வங்கதேசத்தின் பலமான முக்திபாகினி ஆயுத அமைப்பு உட்பட பல போராளி அமைப்புக்களுக்கு ரோ ஆயுதப் பயிற்சியினை வழங்கியது. தற்போது 8000 ஆண் , பெண் உளவாளிகளைக் கொண்ட பெரும் உளவுக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் ரோ, சுமார் 40 சர்வதேச நாடுகளில் இயங்கி வருகிறது. மிக அண்மைக்காலமாக ஆப்கானிஸ்த்தானில் இயங்கும் தலிபான்கள் மற்றும் அல்‍கொய்தா தீவிரவாதிகள் குறித்த புலநாய்வுத் தகவல்களை அமெரிக்கா தலைமையில் நடைபெறும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் நடவடிக்கைக்கு ரோ வழங்கிவருகிறது. ஆப்கானிஸ்த்தானில் இயங்கும் தீவிரவாதிகளின் முகாம்கள் தொடர்பான வரைபடங்கள், தீவிரவாதத் தலைவர்களின் புகைப்படங்கள், பாக்கிஸ்த்தானிற்குள் செயற்பாட்டுவரும் தீவிரவாதிகளின் முகாம்கள், அல்கொய்தா அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லாடனின் நடமாட்டங்கள் மற்றும் அவரது தாக்குதல்த் திட்டங்கள் குறித்த தகவல்களையும் ரோ அமைப்பு அமெரிக்க புலநாய்வு அதிகாரிகளுக்கு வழங்கிவருகிறது.
  6. போராளிகளுக்கான இராணுவப் பயிற்சி ஜெயவர்த்தனவை இந்திரா காந்தி எப்போதுமே கிழட்டு நரியென்றே அழைத்து வந்தார். இந்திராவைப் பொறுத்தவரை ஜெயவர்த்தனா நம்பப்படமுடியாதவராகக் காணப்பட்டார். ஜெயவர்த்தன தொடர்பான இந்திராவின் கணிப்பீடுகள் அவரது நெருங்கிய தோழியான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தகவல்கள் ஊடாக உருவாக்கப்பட்டது. ஏனென்றால், ஜெயவர்த்தனவின் அரசியல் சூழ்ச்சிகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டவர் சிறிமாவோ என்பது குறிப்பிடத் தக்கது. இதற்கு மேலாக, இந்திராவினால் புதிதாக அமைக்கப்பட்ட விசேட பாதுகாப்பு புலநாய்வுத்துறைப் பிரிவும் ஜெயார் குறித்த தகவல்களை இந்திராவுக்குத் தொடர்ச்சியாக வழங்கிவந்தது. அமைச்சரவையின் பாதுகாப்புச் செயலகம் என்று அறியப்பட்ட இந்த அமைப்பிற்கு "மூன்றாவது புலநாய்வு அமைப்பு" என்று இன்னொரு பெயரும் இருந்தது. ரமேஷ்வர் நாத் காவோ ஜெயவர்த்தனவை எப்போதும் நம்பமுடியாது என்பதை இந்திரா நன்கு உணர்ந்திருந்தார். ஆகவே, அவரை இரு வேறு வழிகளில் கையாள்வது என்று அவர் முடிவெடுத்தார். முதலாவது வெளிப்படையான இராஜதந்திர வழி. மற்றையது மறைமுகமான வழி. இராஜதந்திர வழி பற்றி முன்னைய அத்தியாயங்களில் நாம் பார்த்திருந்தோம். பேச்சுவார்த்தைகளுக்கு அணுசரணை வழங்குவதன் மூலம் தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு ஜெயவர்த்தனவை இராஜதந்திர ரீதியில் அழுத்துவதே அது. தமிழர்கள் மீதான தாக்குதல்களையடுத்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவோ ஜெயவர்த்தனவோடும், ஹமீதோடும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். பின்னர் இப்பேச்சுவார்த்தைகள் குறித்து இந்திராவிடம் பேசும்போது தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைக் காட்டிலும் அவர்களை இராணுவ ரீதியில் அடக்கி, அடிபணியவைப்பதிலேயே ஜெயாரின் அரசாங்கம் உறுதியாக நிற்பது தெரிகிறது என்று கூறியிருந்தார். இவ்வாறான மதிப்பீட்டையே இந்திராவின் புதிய புலநாய்வு அமைப்பின் அதிகாரியான கொழும்பில் தங்கியிருந்த ரமேஷ்வர் நாத் காவோவும் இந்திராவிடம் தெரிவித்திருந்தார். அமெரிக்கா, பாக்கிஸ்த்தான், இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்து ஜெயவர்த்தன ஆயுதங்களை கொள்வனவு செய்தமையானது இவர்களின் கணிப்பீடு சரியானதுதான் என்பதை உறுதிபடுத்தியிருந்தது. புதிய புலநாய்வு அமைப்பின் தலைவரான காவோவே இந்திராவின் தலைமைப் பாதுகாப்பு ஆலோசகராகவும் கடமையாற்றி வந்தார். ஜெயவர்த்தன எடுக்கும் எந்த ஒரு இராணுவத் தீர்வும் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுருத்தலை ஏற்படுத்தும் என்றும், அது இந்திராவுக்கு அரசியல் ரீதியிலான பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் நாத் இந்திராவிடம் கூறினார். பாதுகாப்பு அச்சுருத்தல் என்று அவர் குறிப்பிட்டது இலங்கையில் தமது சகோதரர்கள் மேல் நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் தமிழ்நாட்டு மக்கள் இறங்குவதால் ஏற்படக் கூடும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்தியா ராணுவ ரீதியாக இலங்கையில் தலையிட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுப்பெற்று வந்ததோடு, அவ்வாறு இந்தியா தலையிடாதவிடத்து தமிழ்நாட்டுத் தமிழர்களே நேரடியாக இவ்விடயத்தில் இறங்கும் அபாயம் இருப்பதாகவும் இந்திராவிடம் தெரிவிக்கப்பட்டது. அப்படியான தருணத்தில், தமிழ்நாட்டு மக்களின் உணர்வெழுச்சியை மத்திய அரசாங்கம் அடக்க முற்படும்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் தளம் பலவீனப்பட்டுப் போகும் என்றும் அவரிடம் கூறப்பட்டது. இவையனைத்தையும் விட முக்கியமாக இன்னொரு விடயம் நாத்தினால் இந்திராவிடம் முன்வைக்கப்பட்டது. அதுதான் இந்தியாவின் எதிரிகள் பெருமளவில் இலங்கையினுள் கால்பதிக்கும் சூழ்நிலை உருவாகிவருகிறது என்பது. அமெரிக்க, இங்கிலாந்து புலநாய்வு அமைப்புக்களுக்கு மேலதிகமாக பாக்கிஸ்த்தான் மற்றும் இஸ்ரேல் புலநாய்வு அமைப்புக்களும், இந்நாடுகளின் இராணுவ அதிகாரிகளின் பிரசன்னமும் இலங்கையினுள் உருவாகலாம் என்று இந்திராவின் ஆலோசகர்கள் அவரிடன் கூறினர். ஆகவே, இதனைத் தடுப்பதற்கான ஒரே வழி ஜெயவர்த்தன மீது இராஜதந்திர ரீதியிலான அழுத்தத்தினைப் பிரயோகித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வொன்றினை எட்டுவது. இது சாத்தியமற்றுப் போகும் பட்சத்தில் தமிழ் ஆயுதக் குழுக்களைப் பாவித்து ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவது. மூன்றாவது புலநாய்வு அமைப்பின் இருவழித் திட்டத்தினை இந்திரா முழுமையாக ஏற்றுக்கொண்டார். ஆவணி 17 ஆம் திகதி மூன்றாவது தடவை யாகவும் ஜெயவர்த்தனவுடன் தொலைபேசியில் பேசிய பின்னர், இந்த இருவழித் திட்டத்தினை உடனடியாக ஆரம்பிக்குமாறு தனது புலநாய்வு அதிகாரிகளை இந்திரா பணித்தார். தனது வெளிப்படையான இராஜதந்திர நகர்வுகளை செய்துவரும் அதேவேளை, மறைமுகமான நடவடிக்கைகளை முற்றாக மூடி மறைத்தது இந்திராவின் அரசாங்கம். இந்திரா காந்தியும், அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஓரிரு அதிகாரிகளும் மட்டுமே இந்த இரகசியத் திட்டம்பற்றிய தகவல்களை வைத்திருந்தனர்.
  7. தொண்டைமான் நடத்திய பத்திரிக்கையாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த தனது அமைச்சகத்தில் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினை தொண்டைமான் கூட்டினார். அவரது ஊடக ஆலோசகர் என்கிற வகையில் அம்மாநாட்டினை ஒழுங்குசெய்வதற்கு என்னையும், அவரது சட்டச் செயலாளரான அமரசிங்கம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் செல்லச்சாமியையும் அவர் அழைத்திருந்தார்.இந்த மாநாட்டினை ஒழுங்கு செய்ததன் நோக்கமே சிங்கள மக்களுக்கு இந்தியாவும் தமிழ்நாடும் அண்மையில் நடந்த தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் குறித்துக் கடுங்கோபத்தில் இருப்பதையும், பார்த்தசாரதியுடனனான பேச்சுக்களை மீண்டும் ஜெயவர்த்தன ஆரம்பிக்காத பட்சத்தில் இந்தியா இராணுவ ரீதியில் இலங்கையில் தலையிடும் எனும் செய்தியையும் சொல்வததுதான். தொண்டைமான் இதனைக் கச்சிதமாக நடைமுறைப்படுத்தினார். இந்த மாநாட்டில் பங்குகொண்ட பெரும்பாலான சிங்களப் பத்திரிக்கையாளர்கள் சினத்துடன் காணப்பட்டனர். இவர்களுள் பெரும்பாலானோர் தொண்டைமானின் மீது கடும் அதிருப்தி கொண்டிருந்தனர். தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான புளொட்டின் தலைவர் உமா மகேஸ்வரனைச் சந்தித்தது மற்றும் சிங்கள மக்களுக்கெதிராக தமிழர்களை ஒருங்கிணைப்பது ஆகிய குற்றச்சாட்டுக்களை அவர்மீது அவர்கள் சுமத்தினர். மேலும், இவற்றினைச் செய்ததன் மூலம் பாராளுமன்ற உறுப்பினரின் பொறுப்புணர்வைத் தட்டிக்கழித்து அவர் செயற்பட்டிருப்பதாகவும் அவர்கள் வசைபாடினர். இந்தியாவுக்கான தனது பயணம் குறித்த விளக்கத்தினை தொண்டைமான் வழங்கியபின்னர் அவரிடம் முன்வைக்கப்பட்ட முதலாவது கேள்வி இப்படி அமைந்திருந்தது. கேள்வி : தொண்டைமான் அவர்களே, நீங்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களையும், உமா மகேஸ்வரனையும் சந்தித்ததாகக் கூறியிருந்தீர்கள். ஆனால், தனிநாட்டுக் கோரிக்கையினை அவர்கள் கைவிடும்வரை முன்னணியினருடனோ அல்லது எந்தப் பயங்கரவாத அமைப்புடனோ பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை என்று அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அப்படியாயின், நீங்கள் அமைச்சரவைத் தீர்மானத்தை மீறிவிட்டீர்கள் என்று நாம் எடுத்துக்கொள்ளலாமா? தொண்டைமான் : நான் இந்தப் பயணத்தை அமைச்சரவை உறுப்பினராக மேற்கொள்ளவில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் என்கிற வகையிலேயே இப்பயணத்தை மேற்கொண்டேன். ஆகவே அமைச்சரவை உறுப்புரிமையினை மீறினேனா என்கிற கேள்விக்கு இங்கே இடமில்லை. கேள்வி : ஆனால், இந்தப் பிரச்சினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கோ அல்லது மலையகத் தமிழருக்கோ எந்த விதத்திலும் சம்பந்தப்படாத விடயமாயிற்றே? தொண்டைமான் : இது தமிழர்கள் சம்பந்த‌ப்பட்ட விடயம். நான் ஒரு தமிழன். கேள்வி : இந்தியப் பத்திரிக்கைச் செய்திகளின்படி நீங்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனும், பயங்கரவாத அமைப்புகளுடனும் அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கான பொது வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்குவது குறித்துப் பேசியிருக்கிறீர்கள், இது உண்மைதானா? தொண்டைமான் : பொதுவான வேலைத்திட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், நாம் பொதுவான இலக்குக் குறித்துப் பேசினோம். தீவிரவாத சிங்கள அமைப்புக்களும் அரசாங்கமுமே எம்மை இந்த நிலைக்கு இழுத்து வந்திருக்கின்றன. எமக்குப் பொதுவான ஒரு அடையாளத்தினைத் தந்தவர்களும் அவர்களே. 1948 ஆம் ஆண்டும் பெரும் எண்ணிக்கையான மலையகத் தமிழர்களை அரசு நாடற்றவர்களாக்கியது. 1956 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் மொழி உரிமையினை அப்போது இருந்த அரசு இரத்துச் செய்தது. தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் மூலம் தமிழர்களின் வாழ்தலுக்கான பாதுகாப்பு மறுதலிக்கப்பட்டிருக்கிறது. தமிழர்கள் பாதுகாப்பாகவும், உரிமைகளுடனும் வாழ்தல் என்பதே எமது பொது இலட்சியமாக மாறியிருக்கிறது. தமது பொது இலட்சியம் பற்றித் தமிழர்கள் கூடிப் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது ? மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் எம்மால் தீர்மானிக்கப்பட்டதற்கமைய இறக்கப்பட்ட தமிழ்ப் பத்திரிக்கையாளர் ஒருவர் இந்தியாவின் கோபம் குறித்த கேள்வியொன்றினைக் கேட்டார். கேள்வி : இங்கு நடந்த வன்முறைகள் குறித்த இந்தியாவின் பிரதிபலிப்பு எவ்வாறு அமைந்திருந்ததாக நீங்கள் உணர்கிறீர்கள்? தமிழர் மீதான வன்முறைகளை அவர்கள் எவ்வாறு நோக்குகிறார்கள்? தொண்டைமான் : கடந்த 40 வருடங்களில் இந்தியா இவ்வளவு தூரத்திற்கு உணர்வுரீதியாக எழுந்ததை நான் பார்க்கவில்லை. நான் சென்ற இடமெல்லாம் மக்கள் மிகுந்த கவலையுடனும், ஆத்திரத்துடனும் என்னுடன் பேசினார்கள். அரசாங்கத்தில் நான் தொடர்ந்தும் பங்காளியாக இருப்பது குறித்து அவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டார்கள். தமிழர்களை முற்றாக அடக்கி ஒடுக்கி, ஈற்றில் நசுக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பாகமே இந்தத் தாக்குதல்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதன்போது குறுக்கிட்ட சிங்கள பத்திரிக்கையாளர் ஒருவர் சென்னைக்கும் புது தில்லிக்கும் இடையே பிளவு ஒன்றினை உருவாக்கும் நோக்கில் கேள்வியொன்றினைக் கேட்டார். கேள்வி : திரு தொண்டைமான் அவர்களே, இந்த உணர்வு ரீதியான வெளிப்பாடு சென்னையில் மட்டும்தான் காணப்பட்டதா அல்லது தில்லியிலும் இது தெரிந்ததா? தொண்டைமான் : தமிழ்நாட்டிலேயே இந்த உணர்வு அதிகமாகக் காணப்பட்டதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், தில்லியில் அவர்கள் தமிழ்மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்துக் கவலை கொண்டிருக்கவில்லை என்று நீங்கள் கருதினால், நீங்கள் தவறிழைக்கிறீர்கள் என்று பொருள். ஏனென்றால், தில்லியிலும் கடுமையான ஆத்திரமும் கரிசணையும் இது தொடர்பாகக் காணப்படுகிறது என்பதே உண்மை. நான் தில்லியில் கேள்விப்பட்டது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவின் உயர் அதிகாரியொருவர் என்னுடன் பேசும்போது, "தமிழர்கள் மீதான படுகொலைகள் நடந்துகொண்டிருக்கும்போது அரசாங்கம் தனது கண்களை இறுக மூடிக்கொண்டிருந்ததாக நாங்கள் நம்புகிறோம். ஆகவே, தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிங்களவர்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தும்போது இந்திய மத்திய அரசும் கண்களை மூடிக்கொண்டிருப்பதே சரியான செயலாகும்" என்று என்னிடம் கூறினார். பின்னர் சில நொடிகள் மெளனமாக இருந்துவிட்டு தொண்டைமான் பின்வருமாறு கூறினார், "தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்ன சொல்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? சிங்களவர்கள் பூரணை நாட்களில் ஓய்வாக இருந்து மத வழிபாடுகளில் ஈடுபட்டுவிட்டு மறுநாளே படுகொலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். ஏனென்றால், ஆடி 23 ஆம் திகதி பூரணை நாள், மறுநாள் ஆடி 24 ஆம் திகதியே தமிழர்கள் மீதான படுகொலைகள் ஆரம்பித்தன" என்று அவர் கூறினார்.
  8. ஈழத்திற்கு மாற்றீடான தீர்வை முன்வைத்தால் தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிடத் தயார் ‍- அமிர்தலிங்கமும் உமா மகேஸ்வரனும் லெப்டினன்ட் ஜெனரல் வேர்னன் வோல்ட்டர்ஸ் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் நிபுணராக விளங்கிய லெப்டினன்ட் ஜெனரல் வேர்னன் வோல்ட்டர்ஸ் எனும் இராணுவ அதிகாரியை ஜெயவர்த்தனவைச் சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் அனுப்பிவைத்தார். இந்திரா காந்தி அமிர்தலிங்கத்தைச் சந்தித்த ஐப்பசி 17 ஆம் திகதிக்கு சில நாட்களுக்குப் பின்னர் அமெரிக்காவின் ராணுவ அதிகாரி இலங்கைக்குப் பயணமானார்.அமெரிக்காவின் மூலோபாயத் திட்டமிடல் மற்றும் உளவு அமைப்பின் திறமையான அதிகாரி என்று போற்றப்பட்ட வேர்னன் வோல்ட்டர்ஸ், ஜனாதிபதி ரீகனுக்காக பல நடவடிக்கைகளை வெற்றிகரமாகச் செய்தவர் எனும் மரியாதையினைப் பெற்றிருந்தவர். ஆகவே, இந்தியாவின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கக் கூடிய இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளின் சூத்திரதாரியே இந்த அதிகாரிதான் என்று இந்திய அதிகாரிகள் கருதினர். ஜெயவர்த்தனவுடன் பல மணிநேர தனிப்பட்ட உரையாடல்களில் வேர்னன் வோல்ட்டர்ஸ் பங்குகொண்டார். பிற்காலத்தில் ஜெயவர்த்தனவின் சுயசரிதையினை எழுதிய கே.எம்.டி சில்வா மற்றும் ஹவார்ட் ரிக்கின்ஸ் ஆகியோருடன் பேசும்போது இந்தியாவுடனனான தொடர்பாடல்களுக்கான பாதை அமெரிக்காவைப் பொறுத்தவரை மிகவும் குறுகலானது என்று தான் ஜெயாரிடம் கூறியதாகத் தெரிவித்திருந்தார். ஜெயவர்த்தனவின் சுயசரிதையில் மேலும் சில தகவல்களை வோல்ட்டர்ஸ் வழங்கியிருந்தார். ஜெயாருடனான ஆலோசனைகளின்போது தான் தமிழ்ப் பிரிவினைவாதிகளுடனும், இந்தியாவுடனும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்படி ஜெயாரிடம் கேட்டுக்கொண்டதாக வோல்ட்டர்ஸ் கூறியிருந்தார். மேலும், இலங்கையின் நிலைமைகள் மேலும் மோசமடைந்துசென்றால், இந்தியா இராணுவ ரீதியில் தலையிடுவதற்கான சாத்தியம் இருப்பதாக தான் ஜெயாரிடம் தெரிவித்ததாகவும் கூறினார். ஆனால் ஜெயாரை ஆசுவாசப்படுத்தவே தனது உயர் இராணுவ அதிகாரியை அமெரிக்கா அனுப்பி வைத்ததை இந்தியா நம்ப மறுத்தது. இந்த அதிகாரியின் வருகை குறித்து அன்றைய இந்தியத் தூதுவர் ஜே.என்.டிக்ஷித் பின்வருமாறு தனது சுயசரிதைப் புத்தகத்தில் எழுதுகிறார், "தமிழ்ப் போராளிகளுக்கு இந்தியாவில் வழங்கப்பட்டுவரும் பயிற்சிகள், ஆயுத உதவிகள் குறித்து வோல்ட்டர்ஸ் ஜெயவர்த்தனவிடம் விலாவாரியாக விபரித்தார். மேலும், இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தொடர்பாடல் முகவராகச் செயற்பட அமெரிக்கா விரும்புவது குறித்தும் பேசினார். இஸ்ரேலிடமிருந்து இராணுவத் தளபாடங்களையும், புலநாய்வு உதவிகளையும் இலங்கை பெற முயன்று வருகிறது. மேலும், இந்தியா தொடர்பான புலநாய்வுத் தகவல்களைச் சேகரிக்க இலங்கையினை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளமாகப் பாவிப்பதும் வோல்ட்டார்ஸின் இன்னொரு நோக்கமாகும். அத்துடன் இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளின் முன்னாள் இராணுவ வீரர்களை இலங்கை இராணுவத்தில் கூலிப்படையினராக உள்வாங்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அவர் ஒத்துக்கொண்டார். இந்த விபரங்களை இலங்கையிலிருக்கும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் ஊடாகவும் வோஷிங்க்டனில் இருக்கும் தகவலறிந்த வட்டாரங்கள் ஊடாகவும் உறுதிப்படுத்தியிருக்கிறது" என்று எழுதுகிறார். ஐப்பசி 17 ஆம் திகதி அமிர்தலிங்கத்துடனான சந்திப்பினையடுத்து ஊடகங்களிடம் பேசிய இந்திரா, இலங்கையில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை இழக்கும் அபாயகரமான சூழ்நிலை உருவாகி வருவதாகக் கூறினார். தாம் ஒத்துக்கொண்ட விடயங்களிலிருந்து பின்வாங்கும் இலங்கையரசு, பேச்சுவார்த்தைகளை வேண்டுமென்றே பிற்போட்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டினார். ஆகவே, பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கும் பொருட்டு தான் பார்த்தசாரதியை மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்போவதாகக் கூறினார். இந்திரா காந்தி இந்த அறிவிப்பினை வெள்கியிட்டவேளை, பார்த்தசாரதியை இரண்டாவது தடவையாக பேச்சுக்களுக்கு அழைக்கும் முடிவினை ஜெயார் எடுத்திருக்கவில்லை. ஆனால், இந்தியத் தூதுவர் சத்வால் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஹமீதைத் தொடர்புகொண்டு இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களுக்கு பார்த்தசாரதியை ஜெயவர்த்தன அழைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். வோல்ட்டர்ஸின் அறிவுரைக்கு அமைவாக, பாரத்தசாரதியை இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களுக்கு அழைக்க ஜெயவர்த்தன சம்மதித்தார். பார்த்தசாரதியை இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களுக்கு அழைக்கும்படி தொண்டைமானும் ஜெயாரிடம் கேட்டுக்கொண்டிருந்தார். பார்த்தசாரதியின் அழைப்பின்பேரில் தொண்டைமான் ஐப்பசி 10 திகதியிலிருந்து 20 ஆம் திகதிவரை இந்தியாவுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்த நாட்களில் தொண்டைமான் இந்திரா காந்தி, நரசிம்ம ராவோ, எம்.ஜி.ஆர், கருநாநிதி மற்றும் புளொட் தலைவர் உமா மகேஸ்வரன் ஆகியோரைச் சந்தித்தார். மேலும், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோருடனும் தொடர்ச்சியான கலந்தாலோசனைகளில் அவர் ஈடுபட்டார். இந்திரா காந்தி, நரசிம்ம ராவோ மற்றும் பார்த்தசாரதி ஆகியோருடனான தொண்டைமானின் பேச்சுவார்த்தைகள் முக்கியமானவையாகக் காணப்பட்டன. இனப்பிரச்சினை தொடர்பாக தொண்டைமான் காத்திரமான பங்கின ஆற்றவேண்டும் என்று இந்திரா தன்னிடம் கோரியதாக அவர் என்னிடம் கூறினார். தமிழர்களை பிரித்தாளும் ஜெயாரின் சதிக்கெதிராக தமிழர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்று இந்திரா தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார். தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒரு அமைப்பாக ஒன்றிணையும் முயற்சிக்கு தான் ஆதரவளிக்க ஒத்துக்கொண்டதாகவும் அவர் கூறினார். மேலும், ஈழத்திற்கு மாற்றீடான, அதேவேளை தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய தீர்வுகுறித்தும் இந்திரா தன்னிடம் வினவியதாகவும் கூறினார். "ஒன்றிணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களில், தம்மைத்தாமே ஆள்வதற்கான தீர்வொன்றினை வழங்கும் பட்சத்தில் தமிழர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள்" என்று தான் இந்திராவிடம் கூறியதாக அவர் என்னிடம் தெரிவித்தார். தனது பரிந்துரையினை வரவேற்ற இந்திரா இதுகுறித்து அனைவருடனும் தொடர்ந்து பேசுமாறு தன்னை கேட்டுக்கொண்டதாகவும் கூறினார். "நான் இதனையே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாகவும் வரிந்து கொண்டேன்" என்று அவர் மேலும் கூறினார். இந்திராவிடம் தான் பேசிய விடயங்கள் தொடர்பாக தில்லியில் தன்னைச் சந்தித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் மற்றும் சென்னையில் தன்னைச் சந்தித்த உமா மகேஸ்வரன் ஆகியோரிடம் தொண்டைமான் பேசினார். தொண்டைமானின் நிலைப்பாடு தொடர்பாக அமிர்தலிங்கமும் உமா மகேஸ்வரனும் திருப்தி தெரிவித்திருந்தார்கள். உமா மகேஸ்வரனுடனான தனது சந்திப்பை பலரும் அறியும்வகையில் நடத்த தொண்டைமான் விரும்பினார். இச்சந்திப்புக் குறித்து சென்னைப் பத்திரிக்கையாளர்களுக்கு அறியத்தந்த தொண்டைமான், சந்திப்பின் பின்னர் பத்திரிக்கையாளர் மாநாடு ஒன்றினையும் ஒழுங்கு செய்தார். உமா மகேஸ்வரன் எனும் போராளித் தலைவரை ஜெயாரின் அரசாங்கத்தின் அமைச்சர் என்கிற வகையில் அல்லாமல், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்கிற வகையிலேயே தான் சந்தித்ததாகக் கூறினார். ஈழத்திற்கு மாற்றீடான தீர்வினை இலங்கையரசு முன்வைக்குமிடத்து அதனை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக உமா தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறினார். மேலும், ஈழத்திற்கு மாற்றீடான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை இலங்கையரசு முன்வைக்குமிடத்து, ஈழக் கோரிக்கையினைக் கைவிட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். ஐப்பசி 22 ஆம் திகதி இலங்கை திரும்பிய தொண்டைமான், மறுநாள் ஜெயாரைச் சந்தித்து தில்லியிலும் சென்னையிலும் இனப்பிரச்சினை குறித்து நிலவும் சூழ்நிலையினை விலாவாரியாக விளக்கினார். தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை கொண்டுவர பார்த்தசாரதியை மீளவும் பேச்சுக்களுக்கு அழைக்குமாறு ஜெயாரைக் கேட்டுக்கொண்டார். மிதவாத தமிழ்த் தலைமைகளும், உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பும் ஈழத்திற்கு மாற்றீடான தீர்வொன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிடத் தயாராக இருப்பதாக ஜெயாரிடம் கூறினார் தொண்டைமான். ஒன்றிணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சுயாட்சியுள்ள கட்டமைப்பு ஒன்றே தமிழர்கள் எதிர்பார்க்கும் ஈழத்திற்கு மாற்றீடான தீர்வாக இருக்கும் என்று ஜெயாரிடம் அவர் தெரிவித்தார்.
  9. வொயிஸ் ஒப் அமெரிக்கா ‍ வானொலி அஞ்சல் நிலைய அமைப்பும் சர்ச்சையும் 1983 ஆம் ஆண்டு ஆவணி 13 ஆம் திகதி அமெரிக்காவுடன் புதியதொரு வானொலி பரிவர்த்தனை நிலையம் ஒன்றினை உருவாக்கும் ஒப்பந்தத்தில் இலங்கை கைசாத்திட்டமையானது இந்தியாவுக்குக் கடுமையான எரிச்சலையூட்டியது. பாரிய பரப்பளவில் பகிரப்படக்கூடிய 500 கிலோவொட் மற்றும் 250 கிலோவொட் சிற்றலைவரிசை டிரான்ஸ்மிட்டர்களை இவ்வொப்பந்தத்தின்மூலம் அமெரிக்கா இலங்கையில் நிர்மானிக்க வழிபிறந்தது. இப்புதிய வானொலி நிலையத்தினூடாக மொத்த இந்திய உபகண்டம், அரபுலகம், சீனாவின் சில பகுதிகள், சோவியத் ஒன்றியத்தின் மத்திய ஆசிய பகுதிகள், அப்கானிஸ்த்தான், ஈரான் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளுக்கு தனது வானொலிச் சேவையினை அமெரிக்காவினால் விஸ்த்தரிக்க முடிந்திருந்தது. இந்த வானொலி நிலையத்தை அமைப்பதன் மூலம் தனது பிரச்சாரத்தை அமெரிக்கா முடுக்கிவிட எண்ணியது. இந்த வானொலி நிலையத்தினை இலங்கையில் இருக்கும் இரண்டாவது அமெரிக்க இராணுவத் தளம் என்று இந்திரா வர்ணித்தார். அவரைப் பொறுத்தவரை திருகோணமலைத் துறைமுகம் இலங்கையில் இருக்கும் அமெரிக்காவின் முதலாவது தளமாகக் கருதப்பட்டது. ஆகவே, இதுதொடர்பான தனது அதிருப்தியினை இந்தியா இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் தெரியப்படுத்தியது. ஆனால் இந்தியாவின் அதிருப்தியினை நிராகரித்த இலங்கை வெளிவிவகார அமைச்சகம் இவ்வொப்பந்தம் 1951 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவுடன் வருடந்தோறும் புதுப்பிக்கப்பட்டுவரும் ஒப்பந்தமேயன்றி, புதிய ஒப்பந்தம் கிடையாது என்று அது கூறியது. இலங்கையின் நியாயத்தை ஏற்க மறுத்த இந்தியா அமெரிக்காவிற்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் சக்திவாய்ந்த ஒரே வானொலி நிலையம் இதுவே என்றும், இதன்மூலம் இப்பிராந்தியத்தில் இருக்கும் ஏனைய ஒலிபரப்பு நிலையங்களை இதனால் தடுக்க முடியும் என்றும், செய்மதிகளுடனான தொலைத் தொடர்பையும் இந்த நிலையம் முடக்கிவிடும் வல்லமையினைக் கொண்டிருப்பதாகவும் கூறியது. இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில். "அமெரிக்காவுக்கு வெளியே அமைக்கப்படவிருக்கும் இந்த வானொலி அஞ்சல் நிலையத்தின் மூலம் இந்திய உபகண்டத்தையும் அருகிலிருக்கும் பல நாடுகளையும் அதனால் இலகுவாக தனது பிரச்சார வீச்செல்லைக்குள் கொண்டுவரமுடியும்" என்று கூறியது. சோவியத் ஒன்றியமும் இந்த வானொலி நிலையம் குறித்து கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இந்தியா வெளியிட்ட அறிக்கை குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, அமெரிக்காவின் இரண்டாவது தளமே இந்த வானொலி நிலையம் எனும் இந்திரா காந்தியின் கூற்றுப்பற்றி அவரிடம் வினவப்பட்டது. அதற்குப் பதிலளித்த அப்பேச்சாளர், "அது சாதாரண இராணுவத் தளமன்று, அதனைக் காட்டிலும் ஆபத்தானது" என்று கூறினார். பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குத் தயாராகவே வந்திருந்த அவர், தான் கொண்டுவந்த வோஷிங்க்டன் போஸ்ட் பத்திரிகைச் செய்தியொன்றின் பிரதிகளை அங்கிருந்த பத்திரிக்கையாளர்களிடம் விநியோகித்தார். மரே மார்டர் எனும் பத்திரிக்கையாளரால் வழங்கப்பட்ட இந்தக் கட்டுரை "நிக்கொலொயிடிஸின் ஒப்பந்தம்" என்கிற தலைப்பில் எழுதப்பட்டிருந்தது. நிக்கொலொய்டிஸ் என்பவர் வொயிஸ் ஒப் அமெரிக்கா நிறுவனத்தின் உப தலைவர் என்பதுடன் "நாம் சாதாரண ஊடக நிறுவனம் அல்ல, எமது நோக்கமே பிரச்சாரம் செய்வதுதான்" என்றும் வெளிப்படையாகக் கூறிவந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. நிக்கொலெயிட்ஸின் அறிக்கையின்படி வொயிஸ் ஒப் அமெரிக்கா நிறுவனம் அது இயங்கும் பிராந்தியங்களில் உள்ள உள்நாட்டு மொழிகளிலேயே நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தது. அவ்வறிக்கையின் ஒரு பகுதி பின்வருமாறு கூறுகிறது, "இந்த நாடுகளில் ஆளும்வர்க்கத்திற்கும் சாதாரண மக்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டினை நாம் ஊக்குவிக்க வேண்டும். மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கும் உரிமைகள், மோசமான நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல்கள், மக்களின் தேவைகளுக்கு அரசுகள் முக்கியத்துவம் வழங்காமை, அடக்குமுறைகள், கலாசார வேறுபாட்டுப் பிணக்குகள், மத ரீதியிலான பிணக்குகள் குறித்து நிச்சயம் வொயிஸ் ஒப் அமெரிக்கா பேசும்" என்று கூறப்பட்டிருந்தது. ஆகவேதான், இந்திரா காந்தி இந்த உத்தேச வானொலி நிலையத்தினை அமெரிக்காவின் இரண்டாவது தளம் என்று கூறினார் என்று அப்பேச்சாளர் நியாயப்படுத்தினார். அமெரிக்காவின் சிந்தனைகளை, கொள்கைகளை இந்த வானொலி நிலையத்தினூடாக அமெரிக்கா பிரச்சாரப்படுத்தவிருப்பதால் இதனை ஒரு பிரச்சாரத் தளமாக இந்திரா கருதுகிறார் என்றும் அவர் பேசினார். ஆனால், இலங்கையரசு முழுமூச்சுடன் இந்த புதிய வானொலி அஞ்சல் நிலையக் கட்டுமாணப் பணிகளை முடுக்கிவிட்டது. இதற்கென நாத்தாண்டியாவின் இரணவிலப் பகுதியில் இருந்த 800 ஏக்கர்கள் பரப்பளவு கொண்ட தென்னந் தோப்பு ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. உள்ளூர்வாசிகளின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியிலும் கட்டுமாண முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையுடன் வொயிஸ் ஒப் அமெரிகா வானொலி அஞ்சல் நிலைய ஒப்பந்தத்தினைச் செய்துகொண்டதன் பின்னர் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் கஸ்பர் வெயின்பேர்கர் அவர்கள் 1983 ஆம் ஆண்டு ஐப்பசி முதலாம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்தார். வேறொரு நாட்டிற்கான பயணத்தின்போது தேநீர் அருந்துவதற்காகவே கஸ்பர் இலங்கை சென்றார் என்று அவரின் பயணத்தின் கனதியை குறைத்துக் காட்ட அமெரிக்கா முயன்றபோதும் கொழும்பில் இருந்த இந்திய உயர்ஸ்த்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகள் கூறும்போது, அமெரிக்காவிடம் இலங்கை கேட்ட இராணுவ உதவிகளை அமெரிக்கா இந்தியாவின் அழுத்தத்தினையடுத்து வழங்க மறுத்த விடயம் குறித்துக் கவலையடைந்திருந்த ஜெயவர்த்தனவை ஆறுதல்ப்படுத்தவே அவர் இலங்கை வந்ததாகக் கூறினர். கொழும்பில் கஸ்பர் தங்கியிருந்தபோது இலங்கையின் கோரிக்கையான இராணுவ உதவிகள் குறித்தும் ஆராயப்பட்டதாக இந்திய அதிகாரிகள் கூறினர். ஆனாலும், ஜெயவர்த்தன சலிப்படைந்து காணப்பட்டார். அவர் தொடர்ந்தும் அமெரிக்கா தன்னைக் கைவிட்டு விட்டதாகக் குற்றஞ்சாட்டியபடி இருந்தார்.
  10. சரியான கருத்து. இந்தத் திரியை நான் ஆரம்பித்ததே பிக்குவின் காலில் விழுந்த அல்லிராஜா மீது சேறு பூசவும், தேசியம் பேசும் ராஜ் ராஜரட்ணத்துக்கு வெள்ளையடிக்கவும் தான்.
  11. முதன்முதலில் கீச்சகத்திலேயே அல்லிராஜாவின் பணமோசடி விடயம் குறித்து அறிந்துகொண்டேன். அதுவும், கெகெலிய, அல்லிராஜா மற்றும் ஒரு பெண் தொடர்பான கீச்சகப் பதிவின் ஊடாகவே இது எனக்குத் தெரியவந்தது. மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் பேச முடியாது. அது அவரவர் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப நடப்பவை. அவர்களின் வாழ்க்கையில் நாம் இருந்தாலன்றி அதனைப் புரிந்துகொள்ளுதல் சாத்தியமமில்லை. ஆகவே, இதனைப் பதிந்ததன் மூலம் எவராவது தக்கப்பட்டிருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்து விடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
  12. லைக்காமொபைல் நிறுவனர் அல்லிராஜா பற்றிய சில உண்மைகள் https://www.buzzfeed.com/heidiblake/the-french-connection அண்மையில் லைக்கா மொபைல் உரிமையாளரும், பிரபல தொழில் அதிபருமான அல்லிராஜா சுபாஸ்கரன் இலங்கையில் முதலிட முன்வந்தது தொடர்பாகவும், அவர் சிங்களப் பேரினவாதிகளின் கால்களில் வீழ்ந்து ஆசிபெறுவது தொடர்பாகவும் இங்கு பேசப்பட்டது. அவரது நிறுவனம் மேற்கொண்டதாகக் கருதப்படும் பண மோசடிகள் குறித்து பல விபரங்களுடன் ஆய்வுக்கட்டுரை ஒன்று ஆங்கில இணையப் பதிவான"BuzzFeed" இல் வெளிவந்திருக்கிறது. இவ்வாறான பண மோசடிகளில் ஒன்று இவர் மகிந்த ராஜபக்ஷவின் பெருமளவு கறுப்புப் பணத்தினை மாற்றிக்கொடுத்தார் என்பதும் அடங்கும். மேலும், இவர் அமைச்சர் கெகெலிய ரம்புக்வெல்ல ஊடாக சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நல்லிணக்க அரசாங்கத்திற்கு அன்பளிப்பாக வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. முடிந்தவர்கள் படித்துப் பாருங்கள். கொசுறுத் தகவல் : அல்லிராஜாவின் காதலி (திருமணத்திற்கு அப்பாற்பட்ட) இப்போது அமைச்சர் கெகெலிய ரம்புக்வல்லவின் காதலியாக இருக்கிறாராம். இந்த விடயம் கீச்சகத்தில் பார்த்தது. புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வதால் உரிமைகள் கிடைக்கும் என்பதனை நான் நம்பவில்லை. அவ்வாறு முதலீடு செய்பவர்களின் உண்மையான நோக்கமும் அவர்களின் செயற்பாடுகளும் எப்படியானவை என்பதைக் காட்டவே இதனை இணைக்கிறேன்.
  13. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சனல் 4 விவரணப் படம் வெளியிடப்படவில்லை என்று உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது
  14. அவர் இயக்கத்தில் இணையும்போது சாதாரண போராளி. இன்று அவர் அதே இயக்கத்திற்கெதிராக இயங்கி ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் மரணத்திற்குக் காரணமாயிருப்பவர். அரசால் தமிழினத்திற்கெதிராக இறக்கி விடப்பட்டவர். இவரிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
  15. ஈஸ்ட்டர் குண்டுவெடிப்புக்களை ஒழுங்குசெய்தவர் இவர் என்று இன்றைக்கு சனல் 4 பேசப்போகிறது.
  16. இந்தியாவின் நலன்களுக்காக ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழருக்கான தீர்வினைத் தேடிய இந்திரா பார்த்தசாரதியின் முயற்சிகளை முறியடிக்க ஜெயவர்த்தன மேற்கொண்டுவந்த செயற்பாடுகள் அமிர்தலிங்கத்தையும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினையும் ஒரு மூலைக்குள் முடக்கிவிட்டன. ஐப்பசி மாதத்தில் ஐரோப்பாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமிர்தலிங்கத்தை எதிர்கொண்ட புலம்பெயர் தமிழர்கள் இந்திய மத்தியஸ்த்தத்தினூடாக இலங்கையரசுடன் பேசுவதற்கு அமிர்தலிங்கம் சம்மதம் தெரிவித்ததற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இலங்கையில் இராணுவ ரீதியில் தலையீடு செய்வதற்கு இந்திராவை வற்புறுத்தவில்லை என்று அமிர்தலிங்கம் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது. மேலும், ஜெயவர்த்தன தனது இராணுவத்தைப் பலப்படுத்தி இன்னொரு ஜூலைக் கலவரத்தினை கட்டவிழ்த்துவிட சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் அவர்மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஐப்பசி 17 ஆம் திகதி தனது ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய அமிர்தலிங்கம் தன்னைச் சந்தித்த புலம்பெயர் தமிழர்களின் உணர்வுகளை இந்திராவுடன் பகிர்ந்துகொண்டார். அதற்குப் பதிலளித்த இந்திரா அமிர்தலிங்கத்தையும் அவருடன் பயணித்த சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தன ஆகியோரையும் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், வேறு எதனையும் பேச அவர் மறுத்துவிட்டார். ஆனால், தமிழ்த் தலைவர்களைத் தனியாகச் சந்தித்த பார்த்தசாரதி, இந்தியாவின் உண்மையான கவலையினை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார். அயல்நாடுகளை அச்சுருத்தும் வல்லரசாக தான் கருதப்படுவதை இந்தியா விரும்பவில்லை. தென்னாசியாவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வல்லரசாக பார்க்கப்படுவதையே இந்தியா விரும்புகிறது. ஆகவே இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா கொண்டிருக்கும் ஒரே கொள்கை சமாதான முயற்சிகளுக்கான நல்லெண்ண உதவிகளை வழங்குவதுதான் என்று விளக்கிய பார்த்தசாரதி, இந்தியாவின் இந்த நல்லெண்ணம் சர்வதேசத்தில் திருப்தியினை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறினார். "தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதில் ஜெயவர்த்தனவுக்கு இந்தியா செய்துவரும் உதவிகளை எவரும் கேள்விகேட்க முடியாது. அதாவது, அவர்கள் எமது பிராந்திய வல்லமையினை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றே பொருள். எங்களுக்குச் சற்று அவகாசம் தாருங்கள், உங்களுக்கான உரிமைகளை நாம் பெற்றுத் தருவோம்" என்று அவர் கூறினார். ஐப்பசி 17 ஆம் திகதிய கூட்டத்தின்பின்னர் இந்திராவின் கரிசணை மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பாகக் குவிந்திருந்தது. முதலாவது, ஒன்றுபட்ட இலங்கையினுள் தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பது. தொடர்ச்சியான நீண்ட கலந்தாலோசனைகளின் பேறாக இரு விடயங்கள் அவரது கவனத்திற்க் கொண்டுவரப்பட்டன. அரசியலைப்பில் ஆறாவது சட்டத் திருத்தம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மற்றும் பார்த்தசாரதியின் முயற்சிகளை மீள முன்னெடுப்பது ஆகியவையே அவ்விரு விடயங்களும் ஆகும். ஆறாவது திருத்தத்தின் மேல் சத்தியப்பிரமாணம் செய்ய முன்னணியினர் தொடர்ந்தும் மறுத்தே வந்தனர். மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஐப்பசி 20 ஆம் திகதிக்குள் அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யாதவிடத்து அவர்கள் தமது பாராளுமன்றப் பதவிகளை இழக்கும் அபாயம் உருவாகியிருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தமது பாராளுமன்ற பதவிகளை இழப்பதென்பது தமிழர்களை இலங்கை அரசிடமிருந்து மேலும் அந்நியப்படுத்திவிடும் நிலையினை உருவாக்கியிருந்தது. ஆகவே இதனைத் தடுக்க பார்த்தசாரதியினூடாக தமிழர்களுக்கு நியாயமான தீர்வொன்றினை வழங்கவேண்டிய தேவை இந்திராவுக்கு இருந்தது. பார்த்தசாரதி தனது முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கு ஜெயார் மீது அழுத்தத்தினைப் பிரயோகிக்கவேண்டிய அவசியமும், அதனூடாக ஜெயாரே பார்த்தசாரதியை பேச்சுக்களுக்கு அழைக்கவைக்கும் சந்தர்ப்பங்களினை ஏற்படுத்தவேண்டிய தேவையும் இருந்தது. இந்திராவின் கரிசணைக்குக் கொண்டுவரப்பட்ட இரண்டாவது விடயம் மாதுரு ஓயா ஆக்கிரமிப்பு. அமிர்தலிங்கமே இந்த சிங்கள ஆக்கிரமிப்புக் குறித்து இந்திராவிடம் முதன்முதலில் அறியத் தந்திருந்தார். இதுகுறித்து பிறிதொரு அத்தியாயத்தில் பார்க்கலாம். எந்த மாதுரு ஓயா ஆக்கிரமிப்பை அன்று (1984) இந்தியா எதிர்த்ததோ, அதே மாதுரு ஓயாவில் இலங்கை விசேட படைகளுக்குப் பயிற்சியளிக்கும் இந்திய ராணுவம் - 2021 மூன்றாவது, இந்திராவின் வெளியுறவுக் கொள்கையின் பரிமாணங்கள். இந்தியாவுக்கெதிரான சக்திகளை இலங்கையில் அனுமதிப்பது இந்தியாவைப் பொறுத்தவரை தமக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே அது கருதியது. ஆகவேதான், இந்தியாவுக்கெதிரான நாடுகளிடமிருந்து இலங்கை ஆயுதக் கொள்வனவில் ஈடுபட முயன்றபோது இந்தியா இதுகுறித்து அதிக அக்கறை காட்டியது. இங்கிலாந்தும் அமெரிக்காவும் இந்தியாவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கு ஆயுதங்களை வழங்க தயங்கியபோதும், அமெரிக்கா இலங்கையைத் தனது செல்வாக்கு வட்டத்தினுள் வைத்திருக்கவே விரும்பியது.
  17. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் போராளிகளை முக்கியமான, தவிர்க்கமுடியாத சக்தியாக ஏற்றுக்கொண்ட அமிர்தலிங்கம் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஏதாவதொரு பொதுவான தளம் ஒன்றினைக் கண்டறிவதே தனது தலையாய கடமை என்று பார்த்தசாரதி தீர்மானித்தார். இந்தப் பொதுவான தளத்தினைக் கண்டறியும் தனது முயற்சியில் சில அரசியல்வாதிகளை அவர் சந்திக்க நேர்ந்தது. அமைச்சர்கள் தொண்டைமான், லலித் அதுலத் முதலி, காமிணி திசாநாயக்க, லங்கா சமசமாஜக் கட்சியின் கொல்வின் ஆர் டி சில்வா, பேர்னார்ட் சொய்சா, கம்மியூனிஸ்ட் கட்சியின் பீட்டர் கியுனுமென் ஆகியோரே அவர்கள். ஜெயவர்த்தனவுடனான மூன்றாவதும் இறுதியுமான சுற்றுப் பேச்சுக்களின்போது மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்துவது குறித்து மட்டுமே அவர்கள் பேசினார்கள். மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களைப் பலப்படுத்துவது குறித்தும் அப்போது ஆராயப்பட்டது. மேலதிகமாக‌ சந்திப்புக்களை நீங்களே ஒழுங்குசெய்யுங்கள் என்று பார்த்தசாரதியிடம் கூறிய ஜெயார், அதற்கான கால எல்லையினையோ அல்லது திகதியினையோ வழங்குவதைச் சாதுரியமாக மறுத்துவிட்டார். தில்லி திரும்பும் வழியில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ராமச்சந்திரைச் சென்று சந்தித்தார் பார்த்தசாரதி. அவ்வேளை பாரத்தசாரதியின் கொழும்பு விஜயம் தொடர்பாக தமிழக சட்டசபையில் மிகவும் காரசாரமான விவாதம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. தனது சட்டசபைப் பதவியை சில வாரங்களுக்கு முன்னர் இராஜினாமாச் செய்திருந்த தி.மு.க வின் கருநாநிதி, எம்.ஜி.ஆரின் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை முடுக்கிவிட்டிருந்தார். மக்கள் முன் பேசிய கருநாநிதி, ஜெயவர்த்தனவுடன் பேசுவதில் பயனில்லை, வங்கதேசப் பிரச்சினையில் இந்தியா தலையிட்டு தீர்த்து வைத்ததைப் போன்று இலங்கையிலும் தலையிட்டு தீர்வொன்றினை வழங்குவதன்மூலமே தமிழரைப் பாதுகாக்க முடியும் என்று கூறினார். ஆனால், இப்பிரச்சினையில் இந்திரா காந்தியின் நிலைப்பாட்டை ஆதரித்து நின்ற எம்.ஜி.ஆர், சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலமே இப்பிரச்சினைத் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினார். தமிழ்நாட்டுக் காவல்த்துறையின் புலநாய்வுப்பிரிவான கியூ பிராஞ்ச் எனப்படும் அமைப்பினை கருநாநிதியின் செயற்பாடுகள் குறித்துக் கண்காணிக்குமாறு பணித்த எம்.ஜி.ஆர், தமிழ் போராளி அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தித் தருமாறும் பணித்தார். அவர் கேட்டுக்கொண்டதன்படியே பொலீஸாரும் செய்துகொடுத்தனர். சிறி சபாரட்ணம் இலங்கையில் தமிழர் மீதான வன்முறைகள் வெடித்துக் கிளம்பியபோது தமிழ் போராளி அமைப்புக்களின் பிரசன்னம் தமிழ்நாட்டில் இருந்தது. நெடுமாறனுக்கும் அவரது கட்சியான காமராஜர் காங்கிரஸுக்கும் புலிகள் நெருக்கமாக இருந்தனர். பிரபாகரன் உட்பட புலிகளின் பெரும்பாலான தலைவர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தனர். சென்னையில் அவர்களுக்கென்று முறையான அலுவலகம் கூட அக்காலத்தில் இருக்கவில்லை. டெலோ அமைப்பு தி.மு.க கட்சிக்கு நெருக்கமாக இருந்தது. தமிழ்நாட்டில் அக்காலத்தில் தங்கியிருந்த டெலோ அமைப்பின் தலைவர் சபாரட்ணம் கருநாநிதியை அடிக்கடி சந்தித்துவந்தார். புளொட் அமைப்பு அ.தி.மு.க அமைச்சரான எஸ் சோமசுந்தரத்தின் ஊடாக எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தது. சென்னையில் தங்கியிருந்த உமாமகேஸ்வரன் தமிழ்நாட்டு அரசின் சலுகைகளை அனுபவித்து வந்ததோடு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் தங்கும் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு மேலதிகமாக தமிழ்நாட்டில் புளொட் அமைப்பின் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சிகளை வழங்க நிலங்களும் தமிழ்நாட்டு அரசினால் உமாமகேஸ்வரனுக்கு ஒதுக்கப்பட்டன. ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இயங்கிவந்த நக்சலைட்டுக்களுடன் , குறிப்பாக கோதண்டராமனின் மக்கள் போர்ப் படையினருடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி வைத்திருந்தது. அவ்வமைப்பின் தலைவர் பத்நாபா யாழ்ப்பாணத்திலேயே அக்காலத்தில் தங்கியிருந்தார். ஆந்திராவின் நக்சலைட்டுக்கள் ‍- மக்கள் போர்ப்படை பார்த்தசாரதி பின்னர் கருநாநிதியைச் சந்தித்தார். இலங்கையில் நிலவும் சூழ்நிலை பற்றி அவரிடம் விளக்கிய பார்த்தசாரதி, இலங்கையின் இனங்களுக்கிடையே சுமூகமான நிலையினைத் தோற்றுவிப்பதென்பது மிகவும் சிக்கலான, உணர்வுரீதியான பிரச்சினை என்று கூறினார். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நிதானத்துடனும், மிகுந்த பொறுப்புணர்வுடனும் இவ்விடயம் குறித்து பேசவும் செயற்படவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். "இங்கு உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லும் அங்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்" என்றும் அவர் எச்சரித்தார். கொழும்பில் தான் நடத்திய கலந்துரையாடல்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேசிய பார்த்தசாரதி, பிரதமர் இந்திரா காந்தியுடனான பேச்சுக்களுக்காக அவர்களை தில்லி வருமாறு அழைத்தார். இந்தச் சந்திப்பு புரட்டாதி 5 ஆம் திகதி இடம்பெற்றது. 1984 ஆம் ஆண்டு சர்வகட்சி மாநாட்டிற்காக கொழும்பு வந்திருந்த அமிர்தலிங்கம் என்னுடன் பேசும்போது, "அது ஒரு சுவாரசியமான, அறிவூட்டும் சந்திப்பாக அமைந்திருந்தது" என்று கூறியிருந்தார். இச்சந்திப்பின்போது இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையினை இந்திரா காந்தி மீளவும் உறுதிப்படுத்தியதாக அமிர் என்னிடம் கூறினார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அவர்கள் தம்மைத் தாமே ஆள்வதற்கான உரிமையினைத் தான் பெற்றுத்தருவேன் என்று தன்னிடம் உறுதியளித்ததாக அமிர் என்னிடம் கூறினார். "நீங்கள் உங்களின் தனிநாட்டுக் கோரிக்கையினை முற்றாகவே கைவிட்டு விடுங்கள்" என்று தம்மிடம் இந்திரா உறுதியாக கூறியதாகவும் அமிர் குறிப்பிட்டார். சுமார் இரண்டுமணிநேரமாக த.ஐ.வி மு தலைவர்களுடன் கலந்துரையாடிய இந்திராவும் அவரது ஆலோசகர்களான பார்த்தசாரதியும், அலெக்ஸாண்டரும், உலகில் வேறு பகுதிகளில் நடந்துகொண்டிருந்த விடுதலைப் போராட்டங்கள் பற்றி தமக்கு விளக்கமளித்ததாக அமிர் கூறினார். அந்த நாடுகளில் தீர்வுகளாக முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்தும், அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்தனர். இதன்போது அலெக்ஸாண்டர் இந்திய ஒன்றியப் பிராந்திய அமைப்புக் குறித்துப் பிரஸ்த்தாபித்திருக்கிறார். அதனை உடனடியாக நிராகரித்த இந்திரா, அது முடியாது, வேண்டுமென்றால் இந்தியாவின் மாநிலங்கள் அனுபவிக்கும் அதிகாரங்களை நாம் உதாரணமாகக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். த.ஐ.வி. மு தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்த இந்திரா, அதற்கு முதல்நாள் கருநாநிதி சென்னையில் ஆற்றிய உரையொன்றினை மேற்கோள் காட்டி, "உங்களின் தனிநாட்டுக் கோரிக்கையினால் இப்போது நடந்திருக்கும் விபரீதத்தைப் பார்த்தீர்களா? இனி, தி.மு.க வினரும் தனித்திராவிட நாடு கோரிப் போராடப் போகிறார்கள்" என்று கடிந்துகொண்டிருக்கிறார். கருநாநிதி தனது பேச்சில், "தி.மு.க கட்சி தனித் தமிழ்நாட்டிற்கான கோரிக்கையினை 1962 ஆம் ஆண்டு கைவிட்டிருந்தாலும் கூட, தனிநாட்டிற்கான தேவை இன்னமும் அப்படியே இருக்கிறது" என்று பேசியிருந்தார். இலங்கைத் தமிழர் தொடர்பாக இந்திரா காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லையென்றும் அவர் விமர்சித்திருந்தார். "தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்போது இங்கு ஒரு நாய்கூட ஏன் என்று கேட்கவில்லை" என்று கருநாநிதி பேசியிருந்தார். இந்திராவுடனான பேச்சுக்களின் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமிர்தலிங்கம் தனது கட்சி இந்திய மத்தியஸ்த்தத்துடன் இலங்கை அரசாங்கத்தோடு பேசும் என்று கூறினார். "பார்த்தசாரதியின் முயற்சியினால் தமிழரின் பிரச்சினைக்கான தீர்வொன்றினைக் காண்பதற்கான சாதகமான சூழ்நிலையொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது" என்றும் அமிர் கூறினார். "பேச்சுவார்த்தைகளுக்கான அனுசரணையாளர் எனும் நிலையிலிருந்து இந்தியா தன்னை செயற்பாடு மிக்க மத்தியஸ்த்தராக உயர்த்திக்கொள்ள வேண்டும்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் கொழும்பிலோ நிலைமை மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்திய மத்தியஸ்த்தத்தினை எப்படியாவது உதறிவிட ஜெயவர்த்தன உறுதிபூண்டிருந்தார். குறிப்பாக பார்த்தசாரதியின் முயற்சியைத் தடம்புரள வைப்பதே அவரது முதன்மையான நோக்கமாக இருந்தது. ஆகவே, வழமைபோல தனது கட்டுப்பாட்டிலிருந்த ஊடகத்துறையினை அவர் இதற்காக முடுக்கிவிட்டார். பார்த்தசாரதி மீது இருவகையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். முதலாவது, அவர் ஒரு தமிழர் ஆதலால் தமிழர்களுக்குச் சார்பாகவே அவர் முன்வைக்கும் தீர்வு இருக்கப்போகிறது என்பதால், நடுநிலையான, ஹிந்திபேசும் வட இந்தியர் ஒருவரை இந்திரா மத்தியஸ்த்தராக நியமிக்கவேண்டும் என்று கோரிக்கையினை முன்வைத்தார். இரண்டாவது, பார்த்தசாரதி முயன்றுவரும் தமிழர்களுக்கான சுயாட்சியுள்ள பிராந்தியசபைகளை சிங்களவர்கள் முற்றாக நிராகரித்துள்ளதனால் அதனைப் பற்றிப் பேச முடியாது என்று அவர் வாதிட்டார். சிங்களவர்கள் வழங்க தயாராக இருப்பது மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மட்டும்தான் என்றும் அவர் ஊடகங்களூடாக சமிக்ஞைகளை வெளியிட்டு வந்தார். இதற்கு மேலதிகமாக, தனது பிரதமரான பிரேமதாசாவை களத்தில் இறக்கிய ஜெயார், "மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலதிகமாக ஒன்றையும் கொடுக்கமாட்டோம்" என்கிற தொனியில் கடுமையான பிரச்சாரங்களையும் முடுக்கிவிட்டார். இந்தியாவின் மத்தியஸ்த்தத்தினைத் தடுக்க ஜெயார் மூன்றுவழி தடத்தினைக் கையாண்டார். அவற்றுள் ஒன்றுதான் பார்த்தசாரதி மீதான தாக்குதல்கள். இதுகுறித்து பின்னர்வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். இந்த அத்தியாயத்தில் இந்திரா காந்தி கைக்கொண்டிருந்த இரட்டை வழிமுறை குறித்துப் பார்க்கலாம். மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றத்தில் ஆயுதம் தரித்த சிங்களவர்களுடன் குடியேற்றத்திட்டத்தின் பிதாமகன் திம்புலாகல பிக்கு - 1984 அதில் முதலாவது பார்த்தசாரதியின் முன்னெடுப்புக்கள். பார்த்தசாரதி மீதான ஜெயாரின் விஷமத்தனமான தாக்குதல்கள், மட்டக்களப்பு சிறையுடைப்பு, தமிழ் மிதவாதிகளைப் பலவீனப்படுத்தும் ஜெயாரின் நடவடிக்கைகள், மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றம் ஆகியவை பார்த்தசாரதியின் முன்னெடுப்புக்கள் குறித்த அரசாங்கத்தின் கவனத்தையும், இந்தியா மற்றும் தமிழ்த் தலைமைகளின் கவனத்தையும் திசை திருப்பி விட்டிருந்தது.பார்த்தசாரதியின் முயற்சிகள் இவற்றினால் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தன. புரட்டாதி , ஐப்பசி ஆகிய மாதங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள் அமிர்தலிங்கம் உட்பட த.ஐ.வி.மு யினருக்கு ஒரு உண்மையினை உணர்த்தியிருந்தன. அதாவது தமிழ் மக்கள் மத்தியில் தமக்கிருக்கும் செல்வாக்கு படிப்படியாக தேய்ந்துவருவதுடன், போராளிகளுக்கான ஆதரவு தமிழ் மக்களிடையே அதிகரித்து வருகின்றது என்பதுமே அது. ஆகவே, தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைந்துகொள்வதில் தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கிருக்கும் முக்கியமானதும், தவிர்க்கமுடியாததுமான‌ பாத்திரத்தினை அமிர்தலிங்கம் உணரத் தொடங்கினார். ஐப்பசி மாதத்தின் இறுதிப்பகுதியில் அமிர்தலிங்கம் வெளியிட்ட அறிக்கையொன்றில் போராளி அமைப்புக்கள் தொடர்பாக அமிர்தலிங்கம் அதுவரையில் கொண்டிருந்த நிலைப்பாடு மாறத்தொடங்கியிருந்தது தெரிந்தது. இந்திய மத்தியஸ்த்துடன் பேச்சுக்களில் ஈடுபட ஜெயவர்த்தன விரும்பாத பட்சத்தில் தான் போராளிகளுடன் பேச வேண்டியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், "தமிழருக்கான தீர்வு குறித்து ஜெயவர்த்தன த.ஐ.வி. மு யினருடன் பேச விரும்பினால், அவர் முன்வைக்கும் தீர்வு விடுதலைப் புலிகளுக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டும்" என்றும் அவர் கூறினார். இதுவே போராளி அமைப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை முதன்மையான அமைப்பாக அமிர்தலிங்கம் ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பமாகும். அக்காலத்தில் புளொட் அமைப்பே போராளி அமைப்புக்களில் அதிகளவு உறுப்பினர்களைக் கொண்டிருந்ததுடன் டெலோ அமைப்பு இந்தியாவுக்கு நெருக்கமானதாகவும் காணப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது. அன்றிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கைத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் முன்னணி இயங்குசக்தியாக உருவெடுத்தது. இந்தச் சூழ்நிலை உருவாவதற்கு இந்தியாவும் இன்னொரு காரணம். இனிவரும் அத்தியாயத்தில் இந்திரா காந்தி செயற்படுத்தி வந்த இரண்டாவதும், மறைவானதுமான பாதையாகிய தமிழப் போராளி அமைப்புக்களுக்கான பயிற்சி மற்றும் ஆயுத உதவிபற்றிப் பேசலாம். தமிழர் மீதான கலவரங்களைத் தொடர்ந்து சில நாட்களில் இலங்கை சென்று திரும்பிய இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவோ இந்திரா காந்தியிடம் இலங்கைச் சூழ்நிலை குறித்து விளக்கியபோதே தமிழ் போராளி அமைப்புக்களுக்கு உதவுவது என்னும் முடிவினை இந்திரா எடுத்திருந்தார். இந்திராவுக்கு ஜெயவர்த்தன அனுப்பிய "காதல்த் தூது" இந்திராவை உடனடியாக இந்த இரண்டாவது பாதையினை எடுக்கத் தூண்டியிருந்தது. "கிழட்டு நரி" என்று இந்திராவினாலும் அவரது ஆலோசகர்களாலும் அழைக்கப்பட்ட ஜெயவர்த்தனவை அடிபணிய வைக்க ஒரேவழி அவரது அரசாங்கத்தை தடம்புரளச் செய்வதுதான் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். ஆகவே, ஜெயார் மீது அழுத்தத்தினைப் பிரயோகிக்க தமிழ்ப் போராளி அமைப்புக்களைப் பயனபடுத்தலாம் என்கிற முடிவிற்கு அவர்கள் வந்தார்கள். தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு தான் வழங்கும் பயிற்சி மற்றும் ஆயுத உதவிகளை அமிர்தலிங்கத்திற்கு இந்தியா மறைத்தே வந்திருந்தது. ஆனாலும், போராளிகள் ஆக்ரோஷத்துடன் செயற்பட்டுவருவதையும், ஜெயாரின் அரசாங்கம் தன்னையும் தனது கட்சியையும் பலவீனப்படுத்த பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருப்பதையும் அவர் அறிந்துகொண்டார். ஆகவேதான், புரட்டாதி 5 ஆம் திகதி தில்லிச் சந்திப்பிலிருந்து தமிழ்நாடு திரும்பியபோது செய்தியாளர்களிடம் பேசிய அமிர்தலிங்கம் போராளி அமைப்புக்கள் தமிழின விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கத் தொடங்கியிருப்பதாகவும், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வீரரான பகத்சிங் இனை ஒத்த பாகத்தினை அவர்கள் வகிப்பதாகவும் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். ஜெயவர்த்தன குறிப்பிடுவதுபோல தமிழ்ப் போராளிகள் பயங்கரவாதிகள் அல்ல என்று அவர் கூறினார். தமிழ் மிதவாதத் தலைவர்களை பலவீனப்படுத்தி அவர்களை அடிபணியவைப்பதும், தமிழ்ப் போராளி அமைப்புக்களை சர்வதேசத்தில் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து அவர்களை இராணுவ ரீதியில் முற்றாக அழிப்பதையுமே குறிக்கோளாகக் கொண்டு செயற்ப‌ட்டுவந்த ஜெயவர்த்தனவுக்கு அமிர்தலிங்கம் கொடுத்த பதிலடியாகவே அவரின் இந்தக் கூற்று அமைந்திருந்தது.
  18. தமிழர்களுக்கு மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலதிகமாக எதனையும் எனால்த் தரமுடியாது ‍ பாரத்தசாரதியிடம் திட்டவட்டமாகக் கூறிய ஜெயார் தமிழர்களின் சட்டபூர்வமான கோரிக்கைகளை, அவர்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யக்கூடிய தீர்வு நோக்கி ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தை அழுத்துவதற்காகப் பணிக்கப்பட்ட பார்த்தசாரதி உடனேயே செயலில் இறங்கினார். முதலாவதாக, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களை தில்லிக்கு அழைத்து அவர்களின் பக்க நியாயங்களைக் கேட்டறிந்தார். சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமிர்தலிங்கம் தமிழரின் பிரச்சினையில் இந்தியாவின் மத்தியஸ்த்தத்தை வரவேற்பதாகக் கூறியதுடன் இந்திரா காந்தி இந்தியப் பாராளுமன்றத்தில் பாவித்த சொற்பிரயோகமான "ஒன்றுபட்ட இலங்கைக்குள்" எனும் பதத்தை ஏற்றுக்கொள்வதில் தனக்கு ஆட்சேபனைகள் ஏதும் இல்லையென்றும் கூறினார். பிரிவினைக்கெதிரான இந்தியாவின் நிலைப்பாட்டினை தான் விளங்கிக்கொள்வதாகவும், ஆகவே இந்தியாவின் மத்தியஸ்த்தத்துடன் முன்வைக்கப்படும் மாற்றுத்தீர்வொன்றினைப் பரிசீலிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும், அதுவரையில் தனிநாட்டிற்கான கொள்கையினைக் கைவிடப்போவதில்ல என்றும் தெரிவித்தார். மேலும், தமிழர்கள் மீது மேலும் தாக்குதல்கள நடப்பதைத் தடுக்க இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பி உதவ வேண்டும் என்று வெளிப்படையாகவே இந்தியாவைக் கேட்டுக்கொண்டார். "தமிழர்கள் இலங்கையைக் கூறுபோட விரும்பவில்லை. சிங்களக் காடையர்களின் அக்கிரமங்களும், அரசாங்கத்தின் கொள்கைகளுமே இலங்கையைக் கூறுபோட எத்தனிக்கின்றன" என்று அமிர்தலிங்கம் கூறினார். "நாம் கேட்பதெல்லாம் தமிழர்களையும் சமவுரிமை உள்ள பிரஜைகளாக வாழவிடுங்கள் என்பதைத்தான்" என்ற் அவர் மேலும் கூறினார். பின்னாட்களில் என்னுடன் பேசிய அமிர்தலிங்கமும், நீலன் திருச்செல்வமும் பார்த்தசாரதியுடனான தமது கலந்துரையாடல்கள் பயனுள்ளதாக அமைந்ததாகக் கூறினார்கள். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் பேசிய பார்த்தசாரதி, "தற்போது தனிநாட்டிற்கான மாற்றுத்தீர்வுக்கு நீங்கள் இணங்கியிருக்கிறீர்கள், அப்படியானால் நீங்கள் எதிர்பார்க்கும் தீர்வின் அடிப்படைகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை நீங்கள் முன்வைக்கவேண்டும்" என்று கேட்டார். "அதனை தெளிவாகச் சொல்லுங்கள், அதுவே உங்களின் பேரம்பேசலின் நிலையாக இருக்கவேண்டும்" என்றும் கூறினார். பார்த்தசாரதி பேரம்பேசலின் அடிப்படைகளை இவ்வாறு வரையறை செய்தார், 1. தமிழர்கள் முன்வைக்கும் தீர்வு உள்நாட்டின் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்ததாக இருக்கவேண்டும், சூழ்நிலைகளின் உணர்வுகளால் உந்தப்பட்ட தீர்வாக அமையலாகாது. 2. தனிநாட்டுக் கோரிக்கையினைக் காட்டிலும் குறைவான நிலையினை அது கொண்டிருக்கும் அதேவேளை, தமிழர்களின் அபிலாஷைகளையும் அது பூர்த்திசெய்வதாக அமைதல் வேண்டும். 3. தமிழர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் உணர்வுரீதியாக கட்டமைக்கப்படலாகாது என்பதுடன், அவை சிங்களவர்களின் உணர்வுகளையும் பாதிக்காது அமைதல் அவசியம். 4. தமிழர்கள் முன்வைக்கும் தீர்வு இலங்கையின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பூகோள உறுதிப்பாடு ஆகியவற்றினை எந்தவகையிலும் பாதிக்கக்கூடாது. பார்த்தசாரதியின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட முன்னணியினர் இருநாட்களின் பின்னர் தமது தீர்வுடன் வந்து அவரை மீண்டும் சந்தித்தனர். ஆனாலும், அவர்கள் முன்வைத்த தீர்வு பார்த்தசாரதியைத் திருப்திப்படுத்தவில்லை. "பிராந்தியங்களின் ஒன்றியம்" என்று முன்னணியினர் பாவித்த சொற்பதத்தை பார்த்தசாரதி நிராகரித்தார். இச்சொற்பதம் முற்றான சமஷ்ட்டி அமைப்பொன்றினை நோக்கி செல்லும் சாத்தியத்தைக் கொண்டிருப்பதனால் சிங்களவர்கள் நிச்சயமாக இதனை எதிர்ப்பார்கள் என்று அவர் கூறினார். டட்லியுடனான செல்வாவின் பேச்சுக்களின்போது பிராந்தியங்கள் எனும் சொற்பதத்தினை டட்லி ஏற்றுக்கொண்டிருந்தமையினால், அதனையே முன்னணியினர் பாவிக்கவேண்டும் என்று அவர் கூறினார். பின்னர், முன்னணியினர் தமது உத்தேச தீர்வு நகலில் இருந்து "பிராந்தியங்களின் ஒன்றியம்" எனும் சொற்பதத்தினை நீக்க அழுத்தம்கொடுத்து அதனை நீக்கிவிட்டார். மேலும், இலங்கையின் இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு, ஒற்றுமை ஆகியவற்றினை மீறமாட்டோம் எனும் கூற்றினையும் முன்னணியினரை அழுத்தி நகலில் சேர்த்துக்கொண்டார். மேலும், முன்னணியின் தலைவர்களுடன் பேசிய பார்த்தசாரதி, தமிழர்கள் தமது பிராந்தியங்களின் விவகாரங்களில் மட்டுமே கரிச்ணை கொள்ளாது மத்திய அரசாங்கத்தின் விவகாரங்களிலும் பங்கெடுத்து தேசிய அபிவிருத்தியிலும் பங்களிப்பைச் செலுத்தவேண்டும் என்றும் கூறினார். அத்துடன் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற இராணுவம், பொலீஸ் மற்றும் பொதுச் சேவைகள் ஆகியவற்றிலும் தமிழர்களின் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப பிரதிநிதுத்துவத்தைக் கோரலாம் என்றும் அறிவுரை வழங்கினார். தனது அழுத்தங்களுக்கமைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தயாரித்துக் கொடுத்திருந்த "தமிழர்களின் கோரிக்கை" நகலை எடுத்துக்கொண்டு ஆவணி 25 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தார் பார்த்தசாரதி. அன்று மாலையே அவர் ஜெயவர்த்தனவைச் சென்று சந்தித்தார். ஜெயவர்த்தனவுடனான பேச்சுகளின்போது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் தான் மேற்கொண்ட பேச்சுக்கள் குறித்து விளக்கிய பார்த்தசாரதி, முன்னணியினர் தன்னிடம் கொடுத்திருக்கும் தமிழர்களின் பேரம்பேசலின் நிலை குறித்த உத்தேச நகல் குறித்தும் விபரித்தார். மேலும், தான் கொண்டுவந்த நகலை ஜெயாரிடம் கையளித்த பார்த்தசாரதி, அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தன்னிடம் அறியத்தருமாறும் கேட்டுக்கொண்டார். பார்த்தசாரதியிடம் பேசிய ஜயவர்த்தன, தமிழர்களுக்கிருக்கும் பிரச்சினை குறித்து 1977 ஆம் ஆண்டுத் தேர்தல்களின்போது தொண்டைமானின் உதவியுடன் இடம்பெற்ற‌ தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான பேச்சுக்களின்போதே தனது அரசாங்கம் அறிந்துகொண்டுவிட்டதாகக் கூறினார். ஆகவே, இப்பிரச்சினைகளைக் களையும் நடவடிக்கைகளினை தனது அரசாங்கம் நடமுறைப்படுத்திவருவதாக அவர் குறிப்பிட்டார். தமிழர்கள் மீதான ஜூலைக் கலவரத்தின் பின்னணியினை பார்த்தசாரதிக்கு விளக்கிய ஜெயார், இவற்றுக்கான மூல காரணம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும், தமிழ்ப் பயங்கரவாதிகளும், இடதுசாரிகளும்தான் என்று அவர் குற்றஞ்சாட்டினார். தானோ, தனது அரசாங்கமோ, நாட்டுமக்களோ நாடு பிரிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்துவதும், அவற்றினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் அப்பால் வேறு எந்த விட்டுக் கொடுப்பினையும் செய்ய தனது அரசாங்கம் தயாரில்லை என்று கூறிய ஜெயவர்த்தன, தனது அரசின் பேரம் பேசலின் நிலைகூட அதுதான் என்று உறுதியாக பாரத்தசாரதியிடம் கூறினார். ஜெயாருடனான சந்திப்பினையடுத்து, எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த சிறிமாவைச் சந்திக்கச் சென்றார் பார்த்தசாரதி. இலங்கையின் ஒருமைப்பாட்டை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறிய சிறிமா, சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றின்மூலம் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்கிற கருத்தையும் முற்றாக நிராகரித்தார். சிறிமாவைச் சந்தித்த பின்னர் இரண்டாவது முறையாகவும் ஜெயாரைச் சந்திக்கச் சென்றார் பார்த்தசாரதி. அவர் சிறிமாவைச் சந்தித்ததையும், சிறிமா அவரிடம் கூறியதையும் அறிந்துவைத்திருந்த ஜெயார், பார்த்தசாரதியைப் பார்த்து, "இப்போது, தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதுகுறித்த சிங்களவரின் நிலைப்பாட்டினைத் தெளிவாக உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார். அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் பொறுத்தவரையில் தமிழரின் பிரச்சினை தொடர்பாக ஒரே நிலைப்பாடிலேயே இருந்தார்கள். அதாவது, எக்காரணத்தைக் கொண்டும் இலங்கையின் ஒருமைப்பாட்டினை விட்டுக்கொடுக்க முடியாது என்பதே அது. இதுவே சிங்கள மக்களின் பேரம்பேசலின் அடிப்படையாகவும் இருந்தது. பார்த்தசாரதியிடம் பேசிய ஜெயார், "தமிழர்களுக்கு மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலதிகமாக வேறு எதனையும் நான் தரப்போவதில்லை, இதுவே எனது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு" என்று மீண்டும் உறுதியாகக் கூறினார். மேலும், "அரசியல் அமைப்பில் விசேட சரத்துக்களைச் சேர்ப்பதனூடாக தமிழர்களுக்குத் தீர்வெதனையும் வழங்குவதை சிங்கள‌ மக்கள் முழுமையாக எதிர்க்கிறார்கள். நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான திட்டங்களினூடாக மட்டுமே தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வையும் நாம் கண்டறிய வேண்டும்" என்றும் ஜெயார் பார்த்தசாரதியிடம் தெரிவித்தார். ஜெயவர்த்தனவின் நிலைப்பாட்டினைத் தெளிவாக உணர்ந்துகொண்ட பார்த்தசாரதி, ஆவணி 26 ஆம் திகதி தனது கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக நண்பரான பீட்டர் கியுனுமென்னைச் சந்தித்தவேளை தமிழரும் சிங்களவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று தாம் கருதும் விடயங்களில் மிகவும் வேறுபாடான நிலைப்பாட்டில் இருப்பதாகவும், தத்தமது நிலைப்பாடுக‌ள் குறித்து ஆளமான மனோவியாதியினால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறினார். "இவர்களுக்கிடையில் பொதுவான தளம் ஒன்றினை என்னால்க் காண முடியவில்லை" என்று தனது கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக நண்பர்களான டி சாரம் மற்றும் ராஜு குமாரசாமி ஆகியோருடன் பேசும்போது சலித்துக்கொண்டார்.
  19. அருமை கோஷான். இது தொடர்பாக தொடர்ந்து விவாதிக்கலாம். நிழலி, மன்னிக்கவேண்டும். தனிமையில் உங்களைக் காயப்படுத்திவிட்டதாக உணர்கிறேன். தொடர்ந்து பேசலாம்.
  20. உண்மை. தனது வியாபாரத்திற்காக, தனது இலாபத்திற்காக எம்மை எரிக்கக் கொள்ளி எடுத்துக் கொடுத்தவர்களின் கால்களில் வீழ்ந்து வணங்குகிறார். எமது கலாசாரத்தில் இல்லாத இந்தச் செயலை தனது நவீன பொருளாதார அடிமைத்துவத்தினூடாக இவர் ஆரம்பித்து வைத்திருக்கிறார். இனிமேல் வரிசையாகப் பல தமிழ் முதலாளிகள் போய் விழுவார்கள். எல்லாம் பணம் பார்க்கும் அதே நோக்கம். இதில் தமிழனின் உரிமையும், இருப்பும், தியாகங்களும் அடிபட்டே போய்விட்டது!!! வாருங்கள், நீங்கள் பொருளாதாரப் பலத்தின்மூலம் பெற்றுக்கொண்டிருக்கும் உரிமைகளை வந்து பாருங்கள். உரிமைகளின் பட்டியல் 1. சிங்கள நாசதாரிகளான பெளத்த விஷ நாகங்களின் கால்களில் வீழ்ந்து நக்கும் உரிமை 2...................................... 3. .................................... 4. ....................................
  21. இலங்கை தொடர்பான இந்திராவின் இரட்டை வழிக் கொள்கை 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் கடைசி 10 நாட்களும், ஆவணி மாதத்தின் முதல்ப் 17 நாட்களும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கும், இலங்கையின் சரித்திரத்திற்கும் எந்தளவிற்கு முக்கியத்துவம் மிக்கதாக அமைந்ததோ அதேயளவு முக்கியத்துவத்தை ஆவணி மாதத்தின் இரண்டாவது பகுதியும் பெற்றுக்கொண்டது. அக்காலத்தில்த்தான் இந்திரா காந்தி இலங்கை தொடர்பான தனது இரட்டை வழிக்கொள்கையினை நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருந்தார். வெளிப்படையான இராஜதந்திர செயற்பாடுகள் மற்றும் தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கான மறைமுக ஆயுத உதவியும் பயிற்சிகளும் இக்காலப்பகுதியிலேயே தோற்றம்பெற்றன. இந்திராவின் இந்த இருவழி செயற்பாடுகளுக்கு எதிராக ஜெயாரும் தனது பாணியில் மூன்றுவழி காய்நகர்த்தல்களை இக்காலத்தில் செய்யத் தொடங்கினார். பேச்சுவார்த்தைகள் என்று காலத்தை இழுத்தடிப்பதன் மூலம் பலமான இராணுவ இயந்திரத்தைக் கட்டமைத்துக்கொள்வதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வது. தமிழ் மிதவாதிகளை தொடர்ந்தும் பலவீனப்படுத்துவது. தமிழ்ப் போராளிக் குழுக்களை அந்நியப்படுத்துவது. தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஒரு பயங்கவாதப் போராட்டமாக சர்வதேசத்தில் பிரச்சாரம் செய்வது. இறுதியாக தமிழ் ஈழத்தின் அடிப்படை பலப்பிரதேசத்தை இல்லாமலாக்குவது என்பனவே இந்திராவின் காய்நகர்த்தல்களை முறியடிக்க ஜெயார் முன்னெடுத்த செயற்பாடுகள் என்றால் அது மிகையில்லை. இந்திரா காந்தி தனது வெளிப்படையான இராஜதந்திர நகர்வினை ஆவணி 17 ஆம் திகதி தான் ஜெயாருக்கு மேற்கொண்ட தொலைபேசி அழைப்பினூடாக ஆரம்பித்துவைத்தார். பிரெஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியாவின் (Press trust of India) பத்திரிக்கையாளரான தர்மராஜா, ஜெயாரை செவ்விகாணும் குழுவில் அன்று இடம்பெற்றிருந்தார். இந்திரா, ஜெயாரை தொலைபேசியில் அழைத்தபோது ஜெயாரின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை, உணர்ச்சிகளை தம்மால் காணக்கூடியதாக இருந்ததாக அவர் கூறினார். "அந்த வயோதிபர் மிகுந்த சினத்துடன் காணப்பட்டார், ஆனால் இந்தியாவை அவரால் எதுவுமே செய்யமுடியாது என்கிற இயலாமை அவரின் முகத்தில் தெரிந்தது. தனது சினத்தையும், இயலாமையினையும் ஒன்றுகூட்டி பின்வருமாறு அவர் பேசினார், " நாம் ஒரு சிறிய நாடு. இவ்வாறான வெளிநாட்டு அழுத்தங்களுக்கு நாம் அடிபணிந்துதான் ஆகவேண்டும். எங்களைப்போன்ற சிறிய நாடுகள் எல்லாமே இவ்வாறான அழுத்தங்களுக்கு முகம்கொடுப்பதென்பதே அவர்களின் விதியாகிப் போய்விட்டது" என்று கூறினார்". அன்று அங்கு குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களைப் பார்த்து, "இந்திரா என்னுடன் பேசிய விடயத்தை பாராளுமன்றத்தில் கூறுவேன் " என்று கூறினார். அதன்படி அடுத்தவாரம் , புதன்கிழமை, ஆவணி 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இதுகுறித்துப் பேசினார். இந்தியா மத்தியஸ்த்தத்தில் ஈடுபடப்போகிறதென்று ஜெயார் கூறியவேளை அங்கிருந்த அமைச்சர்களான காமினி ஜயசூரிய, காமிணி திசாநாயக, பிரேமதாச மற்றும் ரஞ்சித் அத்தப்பத்து ஆகியோர் உடனடியாக அதனை எதிர்த்தார்கள். இவர்களுள் காமிணி ஜயசூரியவே மிகுந்த ஆவேசத்துடன் காணப்பட்டார். "நாம் இந்தியாவின் நல்லெண்ண மத்தியஸ்த்தத்தினை ஏற்றுக்கொள்வோமென்றால், நாம் கெளரவத்துடன் வீதிகளில் நடமாட முடியாது" என்று அவர் சினங்கொண்டு கூறினார். ஜயசூரியவின் பேச்சு ஜெயாரை உசுப்பேற்றியிருக்க வேண்டும், "முன்னாள்ப் பிரதமர் திருமதி சிறிமா பண்டாரநாயக்க இந்தியாவின் மத்தியஸ்த்தம் வேண்டும் என்று கோருகிறார். பயங்கரவாதிகளுடன் பேசுங்கள், பார்த்தசாரதியை அழைத்து ஆலோசனையில் ஈடுபடுங்கள் என்று அவர் கேட்கிறார். ஆனாலும் அவரால் வீதிகளில் தாராளமாக நடந்துசெல்ல முடிகிறதே?" என்று ஆவேசத்துடன் கேட்டார் ஜெயார். செல்லையா இராஜதுரை பிரேமதாதாச பேசும்போது தமிழரின் பிரச்சினை என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்றும், அதனை தம்மால் பார்த்துக்கொள்ளமுடியும் என்றும், இந்தியாவின் தேவையற்ற மத்தியஸ்த்தம் இலங்கையின் இறையாண்மையினை மீறும் செயல் என்றும் கூறினார். "நாம் நேரடியாகத் தமிழர்களுடன் பேசலாம், அவர்களின் பிரச்சினைக்கான தீர்வினை நாமே கண்டறியலாம். இந்தியா தலையிடுவதற்கு இங்கே எதுவும் இல்லை, அவர்கள் இதற்கு வெளியே இருப்பதே நல்லது" என்று கூறினார். பின்னர் பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்த அரசுத்தரப்பு தமிழர்களான தேவநாயகம் மற்றும் இராஜ‌துரை ஆகியோரைப் பார்த்து, "இங்கிருக்கும் இவர்களுடன் நாம் பேசி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம்" என்று கூறினார். பிரேமதாசா தம்மைப் பார்த்துக் கூறியதற்கு வேடிக்கையாகப் பதிலளித்த தேவநாயகம், "அப்படியானால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் கேட்பதைக் காட்டிலும் அதிகமாக நான் கேட்டுவிடுவேன்" என்று கூறினார். பாராளுமன்றத்தில் இந்திய மத்தியஸ்த்தத்திற்குத் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்த எதிர்ப்பினைச் செவிமடுத்துவிட்டு இறுதியாகப் பேசிய ஜெயார், தான் பாரத்தசாரதியின் விஜயத்திற்குச் சம்மதம் தெரிவித்து விட்டதாக சபையில் அறிவித்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான பேச்சுவார்த்தைகளை பார்த்தசாரதி இந்தியாவில் ஆரம்பித்துவிட்டார் என்று கூறிய ஜெயார், மறுநாள் அவர் இலங்கைக்கு வருகிறார் என்பதையும் கூறினார். பாரத்தசராதியை இந்திரா இந்த நடவடிக்கைகளுக்குத் தெரிவுசெய்வதற்கு சில காரணங்கள் இருந்தன. இந்திராவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆலோசகர் என்பதைவிடவும், பேரம் பேசலில் மிகச் சிறந்த இராஜதந்திரியாகவும் அவர் திகழ்ந்தார். பிணக்குகளின்போது சிறந்த தீர்வுகளை வழங்கிய அனுபவம், அரசியலமைப்பில் அவருக்கு இருந்த தேர்ச்சி, இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழராக அவரால் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து செயலாற்ற முடியும் என்பதுடன் தமிழகத் தலைவர்களும் அவரின் தீர்மானங்களை நிச்சயம் ஆதரிப்பார்கள் என்கிற காரணமும் இந்திராவுக்கு பார்த்தசாரதியே இதற்குப் பொறுத்தமானவர் என்று எண்ண வைத்திருந்தது. பார்த்தசாரதி இதற்கு முன்னர் காஷ்மீர், மிசோரம் மற்றும் வியட்நாமியப் பிணக்குகளின்போது தீர்வுகளை வழங்கும் அதிகாரியாகவும் செயற்பட்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
  22. அவர் தன்னுடைய சொந்த வியாபாரத்திற்காக வளைகிறார். தமிழரின் விடிவிற்கும் இந்த வளைதலுக்கு எந்தத் தொடர்பும் இல்லையென்பதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை.
  23. தமிழினத்திற்கு எதிராக செயற்படும் தமிழர்களை சிங்களம் எப்போதுமே தமது நாயகர்களாக அழகுபார்த்து ரசிக்கும் என்பது புதுவிடயமா என்ன? அன்றிலிருந்து இன்றுவரை தமது சொந்த இனத்திற்கு வஞ்சகம் செய்து சிங்களவருடன் கூடிக் குலாவிய தமிழர்களுக்கு சிங்களம் கொடுத்துவரும் மரியாதையினைப் பார்த்தீர்களென்றால் இவனுக்கு வழங்கப்பட்ட தேசமான்ய விருதுபற்றி நீங்கள் குழம்பத் தேவையில்லை. 2004 இல் இருந்து 2009 வரை கருணாவுக்கு சிங்கள ஆளும்வர்க்கமும், பெளத்த துறவிகளும், கல்விமான்களும் கொடுத்த மதிப்பும், சூட்டிய கெளரவப் பெயர்களையும் பார்த்தால் இவையெல்லாம் ஏன அவனுக்கு வழங்கப்படுகின்றன என்பது புரியும். இவன் போன்றவர்களை நாம் தூக்கிப் பிடித்து விருதுகள் வழங்காதவரை நாம் கவலைப்பட ஒன்றுமில்லை.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.