Jump to content

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8742
  • Joined

  • Last visited

  • Days Won

    103

Everything posted by ரஞ்சித்

  1. காலையுணவு அருந்தியபின் கிளிநொச்சியிலிருந்து மீண்டும் பரந்தன் நோக்கிப் பயணித்தோம். பரந்தனிலிருந்து வலதுபுறம் திரும்பி, பரந்தன் முல்லைத்தீவு வீதியில் முரசுமோட்டை நோக்கி வண்டி பயணித்தது. எனது மைத்துனர் புலிகளின் கட்டுமாணப் பிரிவில் வீதி வேலைகளில் சம்பளத்திற்கு பணிபுரிந்ததனால் புலிகள் பின்வாங்கிச் சென்ற பகுதிகளுடு மக்களோடு மக்களாக அவரும் தனது குடும்பத்தை இழுத்துக் கொண்டு சென்றார். ஆகவே, இந்த வீதியில் அமைந்திருக்கும் மக்கள் அவலங்களால் நிறைந்த ஊர்கள் ஒவ்வொன்றிலும் அவர் சிலகாலமாவது வாழ்ந்திருக்கிறார். அவலங்களை அனுபவித்திருக்கிறார். அதனால், தாம் ஆங்காங்கு தங்கியிருந்த ஊர்கள் வந்தபோது வாகனத்தை நிறுத்தி அவ்விடங்களைப் பார்வையிடத் தொடங்கினார். நானும் அவருடன் அவ்விடங்களை தரிசித்தேன். போரின் வடுக்கள் சிறிது சிறிதாக மறைந்துப்போய், வாழ்வு மீளவும் சாம்பலில் இருந்து பூக்க ஆரம்பித்திருந்தது. சிலவிடங்கள் அடையாளமே மாறிப்போயிருந்தது அவருக்கு. வீதியின் ஓரத்தில் 15 வருடங்களுக்கு முன்னர் இருந்த சில கட்டடங்களை, அடையாளங்களை அவர் தேடினார், எவையுமே அங்கு இருக்கவில்லை. முரசுமோட்டை, புளியம்பொக்கனை, குமாரசாமிபுரம், உடையார்கட்டு, வல்லிபுனம், புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், கரைய முள்ளிவாய்க்கால் என்று பல இடங்களில் அவரும் அவரது குடும்பமும் இடம்பெயர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். சிலவிடங்களில் ஓரிரு நாட்கள் மட்டுமே தங்கியிருந்து மறுபடியும் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். எங்கெங்கு வெளிகள் காணப்பட்டனவோ அங்கெல்லாம் மக்கள் வெள்ளம் இருந்ததாக அவர் கூறினார். கையில் கிடைத்த தகரம், ஓலை, சீலைகள், பிளாத்திக்குப் பைகள் என்று ஏதோவொன்றை எடுத்து மறைவு வைத்து, கூட்டத்தோடு கூட்டமாக குடும்பங்கள் வாழ்ந்திருக்கின்றன. இவ்வாறு மக்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகள் மீது கடுமையான எறிகணை மற்றும் விமானக் குண்டுவீச்சு, துப்பாக்கிச் சன்னங்கள் என்று தாக்குதல் நடத்தப்பட்டபோது பலர் உயிரிழந்தும், இன்னும் பலர் காயப்பட்டும் இருந்திருக்கின்றனர். கொல்லப்பட்டவர்கள் அவ்விடத்திலேயே கைகளால் மண் தோண்டி புதைக்கப்பட, காயப்பட்டவர்களில் வயதானவர்கள் அவர்களின் சொந்தங்களாலேயே கைவிடப்பட்டு சென்றதை மைத்துனர் கண்ணுற்றிருக்கிறார். வண்டி ஆனந்தபுரத்தைத் தாண்டியதும், பரந்தன் முல்லைத்தீவு வீதியிலிருந்து கடற்கரை நோக்கிச் செல்லும் வழியில் இடதுபுறமாக பயணிக்க ஆரம்பித்தது. ஏனென்றால், கண்டல்த் தாவரங்களும், வெளிகளும் இருக்கும் இப்பிரதேசத்திலேயே பெருமளவு மக்கள் உயிரைக் காக்க அடைக்கலம் புகுந்திருந்தனர். முக்கியமாக இப்பகுதியில் பனக்கூடல்களுக்கு மத்தியில் புதுமாத்தளன் இந்து ஆலயம் அமைந்திருக்கிறது. இப்பகுதியில் பெருமளவு மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர். இவ்வாறு தஞ்சம் அடைந்தவர்களில் மைத்துனரின் குடும்பமும் அடங்கும். மக்கள் இப்பகுதியில் அடைக்கலமாகி இருப்பது தெரிந்ததும் இப்பகுதி நோக்கிக் கடுமையான விமானக் குண்டு வீச்சும், எறிகணைத்தாக்குதலும் நடத்தப்பட்டபோது பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். கொல்லப்பட்டவர்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டெடுக்கும் பணியில் மைத்துனரும் ஈடுபட்டிருக்கிறார். கடற்கரை நோக்கிப் பயணித்த நாம், கரையில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி மணலில் நடந்தோம். தூரத்தே சாலை தெரிந்தது. கடற்புலிகளின் பாரிய முகாம் சாலைப்பகுதியிலேயே இருந்திருக்கிறது. இந்த முகாமைக் கைப்பற்ற இராணுவம் கடுமையாகச் சண்டையிட்டபோதும் பலத்த இழப்புக்களைச் சந்தித்ததாக அவர் கூறினார். ஈற்றில் கடற்புலிகள் இம்முகாமைக் கைவிட்டுப் போக, இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டது. இப்பகுதியில் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டதோடு, இங்கு அவரின் அனுபவங்களையும் அவர் என்னோடு பகிர்ந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து அம்பலவன் பொக்கனை, வலைஞர் மடம், இரட்டை வாய்க்கால் ஆகிய பகுதிகளை கடற்கரைச் சாலையூடாகவே வலம் வந்தோம். அம்பலவன் பொக்கனை பகுதியில் வெற்றுக் கடற்கரை வெளியில் மக்கள் கூடாரங்களை அமைத்து தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். ஒருபுறம் கடலில் இருந்து ஏவப்படும் எறிகணைகள், மறுபுறம் வானிலிருந்து பொழியப்படும் குண்டுகள், இன்னொருபுறம் முல்லைத்தீவுப் பகுதியில் இருந்து கனரக இயந்திரத் துப்பாக்கிகள் உமிழும் ரவைகள் என்பவற்றிற்கு மத்தியில் ஏந்த நம்பிக்கையும் அற்றும் உயிரை மட்டுமே கையில் ஏந்திக்கொண்டு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இப்பகுதியிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதாக அவர் கூறினார். கொல்லப்பட்டவர்களை அருகில் இருந்த பற்றைகளுக்குள் இழுத்துச் சென்று போட்டுவிட்டு, ஒற்றை அழுகையுடன் கடமை முடித்தோரும் அங்கு இருந்திருக்கிறார்கள். காயப்பட்டவர்களுக்கு மயக்க மருந்தின்றி கடற்கரையிலேயே அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது. இரத்தப்போக்கினால் கொல்லப்பட்டவர்களும் அதிகம் இருந்திருக்கிறார்கள்.
  2. அது கரணவாயேதான். அது எனது அம்மமாவின் வீடு. நீங்கள் எப்படி அங்கே?
  3. காலை 7 மணியளவில் முல்லைத்தீவு நோக்கி எம்மை அழைத்துச் செல்வதற்கான வாகனம் வந்து சேர்ந்தது. வாகனத்தின் சாரதிக்கு அருகில் மைத்துனரின் மகன் அமர்ந்துகொள்ள நானும் மைத்துனரும் பின் இருக்கைகளில் வசதியாக அமர்ந்துகொண்டோம். வாகனம் கண்டிவீதியூடாக கிளிநொச்சி நோக்கிப் பயணித்தது. வழிநெடுகிலும் முள்ளிவாய்க்கால் குறித்த பேச்சுத்தான். உணர்ச்சிகள் கொந்தளிக்கப் பேசுவதும் பின்னர் அமைதியாவதும் மீண்டும் பேசுவதுமாக கண்டிவீதியில் ஓடிக்கொண்டிருந்தோம். வீதியோரங்களில் அவ்வப்போது தவறாமல் கண்களையும் மனதையும் புண்படுத்திய இராணுவ முகாம்களைக் கடந்துசென்றபோது இயல்பாகவே எழும் ஆற்றாமையும், விரக்தியும் பேச்சுக்களில் கோபமாகக் கொப்புளித்தது. இவர்கள் ஏன் இங்கு இருக்கிறார்கள்? எனும் கேள்வி திரும்பத் திரும்ப மனதிற்குள் வந்துபோனது. கொடிகாமத்திலிருந்து பச்சிலைப்பள்ளி வரையான பகுதியில் இராணுவ முகாம்களும் அவற்றோடு அவர்களின் விவசாய நிலங்களும் தெரிந்தன. கொல்லப்பட்டவர்கள் போக, விரட்டியடிக்கப்பட்ட தமிழர்களின் காணிகளில் ஆக்கிரமிப்பு இராணுவம் அடாத்தாகத் தங்கியிருப்பது மட்டுமன்றி தமிழரின் நிலவளத்தைச் சுரண்டிக்கொண்டும் இருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனையிறவை நாம் அடைந்தபோது இடதுபுறத்தில் ராணுவ முகாமை ஒட்டி மண்டபம் போன்றதொரு கட்டடம் காணப்பட்டது. முற்பகுதியில் இராணுவத்தின் சிற்றுண்டிச்சாலை அமைந்திருக்க தென்பகுதியில் இருந்து வந்திருந்த சிங்களவர்கள் பலர் அப்பகுதியில் அமர்ந்திருந்து உணவு உட்கொள்வதும், இன்னும் ஒரு பகுதியினர் தமது இராணுவ வெற்றியின் அடையாளத்தைப் பார்வையிடுவதுமாக இருந்தனர். எமது வண்டியைக் கண்டதும் தடைமுகாமில் வீதியோரத்தில் நின்ற ஆக்கிரமிப்பாளன் மறித்தான். சாரதியிடம் "எங்கே போகிறீர்கள்?" என்று கொச்சைத் தமிழில் கேட்டான். கிளிநொச்சி என்று சொன்னதும் அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பார்த்துக்கொண்டே "எத்தனைபேர் போகிறீர்கள்?" என்று கேட்டான். நால்வர் என்றதும் சரி என்று வழிவிட்டான். "வழமையாகவே மறிப்பார்களோ?" என்று நான் கேட்டபோது, "இல்லை, மாவீரர் நாள் முடிந்த கையோடு கெடுபிடி அதிகமாக இருக்கிறது" என்று சாரதி சொன்னார். ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி நோக்கிய பயணம் மனதிற்கு கடும் அழுத்தத்தைத் தந்தது. இப்பகுதிகளை மீட்டெடுக்க மாவீரர் கொடுத்த உயிர்க்கொடையும், போராளிகளின் இழப்புக்களும் இன்று வீண்போய்விட்டதே என்கிற ஆதங்கம் மனதில் தவிர்க்கமுடியாமல் வந்துபோனது. கிளிநொச்சியை அடையும்போது காலையுணவை அங்கே உட்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். சாரதியும் அம்மாச்சி உணவகத்தினருகே வீதியோரத்தில் வண்டியை நிறுத்தினார். அக்காலை வேளையிலும் உணவகம் மக்களால் நிரம்பியிருந்தது. நியாயமான விலைக்கு தரமான சைவ உணவு. அப்பம், புட்டு, இடியப்பம், தோசை என்று அனைத்து வகை உணவுகளும் உடனுக்குடன் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. சமூகத்தின் அனைத்து மட்டத்திலிருந்தும் மக்கள் அங்கே உணவருந்திக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. அப்பம், புட்டு, இடியப்பம், தோசை என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றாக ஓடர் செய்து உண்டோம். சுடச்சுட பரிமாறப்பட்ட உணவு பசிக்கு அமிர்தமாக இருந்தது. உணவை முடித்துக்கொண்டு இஞ்சி போட்ட தேநீர் அருந்தினோம். பணத்தைச் செலுத்திவிட்டு உணவகத்திற்குள்ளேயே இருக்கும் பனம்பொருள் விற்கும் சிறிய கடையில் சத்துமாவும், ஒடியல்மாவும் வாங்கிக்கொண்டேன். தாயகத்தில் வாழும் பெண்களால் தயாரிக்கப்பட்டவை என்பதால் விசேடமாக இருக்கும் என்பது எனது எண்ணம். அதுமட்டுமல்லாமல் அவர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.
  4. கார்த்திகை 29. நான் இலங்கைக்கு வந்த காரணங்களில் இரண்டாவது முக்கியமானது. முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம். 2009 வைகாசியிலிருந்து முள்ளிவாய்க்கால் எனும் பெயர் எனது மனதில் மிக ஆளமாகப் பதிந்துவிட்டது. எனது இனத்தின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இனக்கொலையும், எமது ஒரே நம்பிக்கையாகவிருந்த போராட்டம் முற்றாக அழிக்கப்பட்டதும், தாயக விடுதலைக்கான கனவு முற்றாகக் கலைந்துபோனதும் இந்த இடத்தில்தான். பல்லாயிரக்கணக்கான எனது சொந்தங்களின் குருதி வழிந்து உறைந்துபோனதும் இந்த மணற்றரையில்த்தான். ஆகவே, முள்ளிவாய்க்கால் என்கிற பெயர் உச்சரிக்கப்படும் ஒவ்வொரு கணமும் மனதில் தாங்கொணாத் துயரும், ஏமாற்றமும், விரக்தியும் வந்துசேர்ந்துவிடும். காணொளிகள் மூலம் முள்ளிவாய்க்காலைப் பார்க்கும்போது அப்பகுதியில் இருந்து காற்றோடு காற்றாகக் கலந்து மாவீரரினதும், மக்களினதும் ஆன்மாக்களை மனம் தேடும். அவர்களின் உயிர் கடற்காற்றோடு கலந்து இன்னும் அங்கேயே இருப்பதாக மனம் நினைக்கும். ஆகவே அந்தவிடத்தைப் போய்ப்பார்த்துவிடவேண்டும் என்பது எனது நெடுநாள்த் தவம். ஆகவேதான் இலங்கை நோக்கிய எனது அண்மைய பயணத்தை அதற்காகத் தேர்ந்தெடுத்தேன். இலங்கைக்கான பயணம் ஓரளவிற்கு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முள்ளிவாய்க்கால் பயணத்தை மைத்துனர் மூலம் ஒழுங்குசெய்திருந்தேன். தனது வேலைக்கு லீவு போட்டுக்கொண்ட அவர் தனது இளைய மகனையும் அப்பயணத்திற்கு அழைத்திருந்தார். இப்பயணத்தில் மைத்துனரும் பங்குகொள்வதற்கு அவருக்கென்றொரு காரணமும் இருந்தது. மைத்துனரும் அவரது குடும்பமும் 2009 ஆம் ஆண்டு வைகாசி 17 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, முகாமில் வதைபட்டு சில மாதங்களின் பின்னர் வெளியே வந்தவர்கள். 2008 இலிருந்து 2009 வரையான படுகொலைகளையும் இறுதி இனக்கொலையினையும் நேரடியாகக் கண்டு மரணத்துள் வாழ்ந்து மீண்டவர்கள். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவந்தபோதும் இனக்கொலையின் ரணங்களும், அவலங்களின் அதிர்வுகளும் அவர்களை மீண்டும் அப்பகுதிக்குச் செல்வதைத் தடுத்தே வந்திருந்தன. ஆனால், நான் இப்பயணம் குறித்து அவரிடம் கேட்டபோது அவரும் வர ஒத்துக்கொண்டார். மேலும், தனது பிள்ளைகளுக்கும் நடத்தப்பட்ட அவலங்கள் குறித்த பதிவுகளை புரியவைப்பதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாகவும் அவர் பாவிக்க நினைத்தார்.
  5. உண்மையாகவா? அப்படியானால் நீங்கள் கரவெட்டியில் வாழ்ந்திருக்க வேண்டும்
  6. 5:30 மணியளவில் பாசையூரை அடைந்தோம். ஆட்டோச் சாரதியை வீதியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு சிஸ்ட்டர் அன்ராவை பார்க்க கட்டடத்தின் உள்ளே நுழைந்தோம். எங்களை விருந்தினரை வரவேற்கும் அறையில் அமரச் சொல்லிவிட்டு அவரை சில நிமிடங்களின் பின்னர் அழைத்து வந்தார்கள். என்னுடன் வந்த மற்றைய இரு சித்திகளும்கூட சிஸ்ட்டர் அன்ராவை பல மாதங்களுக்குப் பிறகுதான் காண்கிறார்கள். ஆகவே, அவருடன் இருந்து பேச ஆரம்பித்தோம். ஒவ்வொருவராக எங்களிடம் விபரங்களைக் கேட்கத் தொடங்கினார் அவர். சில விடயங்களைப் பற்றிப் பேசியபோது அவருக்கு அதுகுறித்த நினைவுகள் எதுவும் இருக்கவில்லை. ஆகவே, முதன்முறையாகக் கேள்விப்படுவதுபோல‌ நாம் கூறியவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர பேச்சில் ஈடுபடும் ஆர்வம் நேரம் செல்லச் செல்ல குறைவடைவது தெரிந்தது. சிறிது நேரத்திற்குப் பின்னர் என்னுடன் வந்த சித்திமாருடன் நான் பேசிக்கொள்ள சிஸ்ட்டர் அன்ரா அமைதியாக எங்கள் மூவரையும் பார்த்துக்கொண்டிருந்தார். ஏன் அமைதியாகவிருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சிரிப்பைத் தவிர வேறு பதில் இல்லை. எனக்குப் புரிந்தது. அவரால் தொடர்ந்து அங்கே இருக்க முடியவில்லை. சரி, அவருக்கு இனிச் சிரமத்தைக் கொடுக்கக் கூடாது என்று எண்ணிவிட்டு, "உங்களை நாளைக்கு வந்து சந்திக்கலாமா?" என்று கேட்டேன். "ஏன், இண்டைக்குத்தானே வந்தனீர், ஏன் நாளைக்கும்?" என்று அவர் கேட்கவும், "அவன் நாளண்டைக்கு அவுஸ்த்திரேலியாவுக்குப் போயிடுவான் , இனி எப்ப வாறானோ தெரியாது. வந்து ஒருக்கால் பயணம் சொல்லிப்போட்டுப் போகட்டுமன், ஏன் வேணாம் எண்டுறீங்கள்?" என்று ஒரு சித்தி கூறவும், "அப்ப சரி, பின்னேரம் 5 மணிக்குப்பிறகு வாருமன்" என்று சொன்னார். அவரது நிலை எனக்குப்புரிந்தது. கன்னியாஸ்த்திரியாக இருந்த காலத்தில் க.பொ.த சாதாரண‌ தரம் வரை கணித ஆசிரியராக பல பாடசாலைகளில் பணிபுரிந்தவர். கற்பித்தல் முடிவடைந்த காலத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணம் திருக்குடும்பக் கன்னியாஸ்த்திரிகள் மடத்திற்குப் பொறுப்பாக இருந்தவர். மத நிகழ்வுகள், மக்கள் பணிகள், உளநலச் சேவைகள் என்று மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றியவர்.தேசியத்தின்பால் மிகுந்த பற்றுக்கொண்ட அவர் வன்னியில் போயிருந்து பல கிராமங்களில் புலிகளின் மருத்துவப் பிரிவு மற்றும் பொதுமக்கள் மனோவியல் சேவைகள் போன்றவற்றில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டவர். சி - 90 எனப்படும் மோட்டார் சைக்கிளில் எப்போதும் சுறுசுறுப்பாக வலம்வரும் அவர் தன்னால் நடக்க இயலாது போகும்வரை சமூகத் தொண்டில் ஈடுபட்டவர். 2002 இல் புலிகளுக்கும் ரணில் அரசிற்கும் இடையே இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது ஏ- 9 பாதை திறப்பு நிகழ்விற்காக இவரும் சென்றிருந்தார். ஆக, சமூகத்திற்காக இடைவிடாது தொண்டாற்றி, பலருக்கும் உதவிய தன்னால் இன்று தன்னைத்தானே பார்த்துக்கொள்ள முடியாமல் இருப்பதென்பது கவலையளிப்பதாகவே எனக்குப் பட்டது. தனது சாதாரண கடமைகளைச் செய்யவே இன்னொருவரின் உதவி தேவைப்படும் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீழ்ந்து ஏற்பட்ட காயத்தினையடுத்து பிறரின் உதவியுடனேயே கட்டிலில் அமரவும், எழுந்துகொள்ளவும், சக்கர நாற்காலியில் தன்னை ஏற்றி இறக்கவும் முடிகிறது என்றகிவிட்டபோது, தன்னைப் பார்க்க வருபவர்களை அடிக்கடி வரவேண்டாம் என்று அவர் கோருகிறார் என்பதும் புரிந்தது. ஆகவேதான் இன்று மாலையும் வந்துவிட்டு நாளையும் வரப்போகிறேன் என்று நான் சொன்னபோது அவரை அறியாமல் "ஏன்" என்று கேட்டுவிட்டார் என்பதையும் புரிந்துகொண்டேன், ஆகவே, முடிந்தால் வருகிறேன், இல்லையென்றால் தொலைபேசியில் அழைக்கிறேன் என்று கூறிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்று கிளம்பினோம். வெளியில் இன்னமும் மழை பெய்துகொண்டிருந்தது. எமக்காகக் காத்துநின்ற ஓட்டோச் சாரதியுடன் மீண்டும் பேச்சுக்கொடுத்துக்கொண்டே ஆரியகுளம் நோக்கிப் பயணமானோம். ஆரியகுளத்தை அடைந்ததும் சித்திமார் இருவருக்கும் பயணம் சொல்லி வழியனுப்பி வைத்துவிட்டு கண்ணாதிட்டியில் அஅமைந்திருக்கும் மைத்துனர் வீட்டிற்கு நடக்கத் தொடங்கினேன். மழை இன்னும் மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. நாளை வன்னிநோக்கிய பயணம் என்று மனம் சொல்லிக்கொண்டது.
  7. வல்லை வெளியிலிருந்து நெல்லியடி நோக்கி ஓடிக்கொண்டிருந்தது மினிபஸ். வழியெங்கிலும் நான் சைக்கிளில் ஓடித்திருந்த இடங்கள். அன்றைய தென்னோலையினாலும், பனையோலையினாலும் வேயப்பட்ட பதிவான கூரைகளைக்கொண்ட பழைய பலசரக்குக் கடைகளும், சைக்கிள் திருத்தும் நிலையங்களும் மறைந்துவிட்டன. வீதியின் இருமரங்கிலும் சீமேந்தினால் கட்டப்பட்ட கடைகள் முளைக்கத் தொடங்கியிருந்தன. மூத்தவிநாயகர் கோயில் புதிய வர்ணத்தால் பூசப்பட்டு அழகாகக் காட்சியளித்தது. நாவலர் மடத்திலிருந்து நெல்லியடிச் சந்திவரையான பகுதி நன்றாக அபிவிருத்தியடைந்திருந்தது. புதிய கடைகள், வங்கிகள் என்று சுறுசுறுப்பான பகுதியாக மாறியிருந்தது. நெல்லியடிச் சந்தியில் என்னை இறக்கிவிட்டார்கள். "இறங்கின உடனே ஓட்டோவில ஏறிப்போடாதை, கனக்கக் காசு சொல்லுவாங்கள். மகாத்மா தியெட்டர் மட்டும் நடந்துவந்து அங்கையிருந்து ஓட்டோ பிடி" என்று சித்தி கூறியது நினைவிற்கு வரவே நடக்கத் தொடங்கினேன். கடைவீதிகளில் சனம் அலைமோதியது. யாழ்ப்பாணத்திற்குப் பிறகு அதிக சனநடமாட்டம் உள்ள பகுதிகளில் நெல்லியடியும் ஒன்றென்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு ஐந்து அல்லது ஆறு நிமிட நடையில் மகாத்மா தியெட்டருக்கு அருகில் வந்தாயிற்று. வரிசையாக நின்ற மூன்று ஓட்டோக்களில் முதலாவதாக நின்றவரிடம் "உச்சில் அம்மண் கோயிலடிக்குப் போக எவ்வளவு எடுப்பீங்கள்" என்று கேட்டேன். சாரதிக்கு 35 வயதிருக்கும். வலதுகை மணிக்கட்டுடன் வெட்டப்பட்டிருந்தது. இடதுகையினால் ஓட்டோவைச் செலுத்திவருகிறார் போலும். "உச்சில் அம்மண் கோயிலுக்குக்கிட்டவோ அல்லது அதுக்கு முதலோ?" என்று கேட்டார். சித்தியின் பெயரைச் சொன்னபோது புரிந்துகொண்டார். "ஏறுங்கோ அண்ணை, 400 ரூபா தாங்கோ" என்றார். வழியில் பேசிக்கொண்டே போனோம். கையில் என்ன நடந்தது என்று கேட்டேன். சிரித்துக்கொண்டே, "நான் முன்னாள்ப் போராளியண்ணை, தீபன் அண்ணையின்ர குறூப்பில இருந்தனான். சண்டையில் கை போட்டுது. முகாமில இருந்து வெளியில வந்துட்டன். உங்கட தம்பி (சித்தியின் மகன்) எங்களோட‌ கொஞ்சக்காலம் இருந்தவர்" என்று கூறினார். இறுதிப்போர்க்கால நிகழ்வுகள் சிலவற்றை அவர் சொன்னபோது வலித்தது. மிகுந்த அன்புடன் அவர் பேசியது பிடித்துப்போயிற்று. என்னைப்பற்றிக் கேட்டார். 2018 இற்குப்பிறகு இப்போதுதான் வருகிறேன் என்று கூறினேன். பேசிக்கொண்டே வீடு வந்தோம். ஆயிரம் ரூபாயைக் கொடுத்தேன். "சில்லறை இல்லையோ அண்ணை?" என்று கேட்க‌, "மிச்சம் வேண்டாம், வைச்சுக்கொள்ளும்" என்று சொன்னபோது, நன்றியண்ணை என்று சொன்னார். அவரின் கதையினைக் கேட்கும்போது அழுகை வந்தது. இவ்வாறானவர்களையல்லவா நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்? என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். இவர்போல் இன்னும் எத்தனைபேர் எமது சமூகத்தில் இருக்கிறார்கள்? எம்மை நம்பியல்லவா எமக்காகப் போராடப் போனார்கள்? இன்று அவர்களின் நிலையென்ன? அவரை வழியனுப்பி வைத்துவிட்டு அம்மம்மாவின் வீட்டினுள் நுழைந்தேன். எனது வருகையைப் பார்த்துக்கொண்டிருந்த சித்தி, "ஓட்டோவுக்கு எவ்வளவு குடுத்தனீ?" என்று கேட்டார். "நானூறு கேட்டு ஆயிரம் குடுத்தேன்" என்று கூறினேன். "உனக்கென்ன வருத்தமே? ஏன் அவ்வளவு குடுத்தனீ?" என்று கேட்க, "இல்லை, அவர் முன்னாள்ப் போராளி சித்தி, கையும் இல்லை, பாவமாக் கிடக்கு" என்று கூறவும் அவர் அடங்கிவிட்டார். அம்மாவின் வீட்டின் பெயர் இராணி இல்லம். அதற்கொரு காரணம் இருக்கிறது. எனது அம்மாவுடன் சேர்த்து ஆறு பெண்களும் இரண்டு ஆண்களும் குடும்பத்திலிருந்தனர். எல்லாப்பெண்களுக்கும் இராணி என்ற சொல்லில்த் தான் பெயர் முடிவடையும். அன்னராணி, செல்வராணி, புஷ்ப்பராணி, யோகராணி, இதயராணி, கலாராணி என்று ஆறு ராணிகள். அதனால், ஐய்யா (அம்மாவின் தகப்பனார்) 1960 இல் அவ்வீட்டைக் கட்டும்போது இராணி இல்லம் என்று பெயர் வைத்துவிட்டார். அந்நாட்களில் அப்பகுதியில் கட்டப்பட்ட வீடுகளில் விசாலமானதும் அழகானதுமாக அவ்வீடு இருந்தது. கொழும்பில் எனது குடும்பம் வாழ்ந்த காலத்தில் மார்கழி விடுமுறைக்கு அங்கு வந்து தங்குவோம். எம்மைப்போன்றே யாழ்ப்பாணத்திற்கு வெளியே வாழ்ந்துவந்த அம்மாவின் சகோதரர்களும் அதேகாலப்பகுதியில் விடுமுறைக்கு வருவார்கள் அம்மம்மாவின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று பெரும் பட்டாளமே அவ்வீட்டில் நிற்கும். அம்மம்மாதான் எல்லோருக்கும் கட்டளை வழங்குவது. பாடசாலை ஆசிரியரான அவர் இயல்பாகவே கண்டிப்பானவர். ஆனால், அன்பானவர். வீட்டில் உள்ள சின்னக் கிணற்றில் துலாமரத்தினால் அள்ளிக் குளிப்பது ஒரு சுகம். மாமா எல்லாச் சிறுவர்களையும் வரிசையில் இருத்திவைத்து குளிக்கவைப்பார். "உனக்கு மூண்டு வாளி, எனக்கு நாலு வாளி" என்று போட்டி போட்டு மாமாவிடம் வாங்கிக் குளிப்போம். கடைசி வாளியை வார்க்கும்போது "சுகம், சுகம், சுகம்" என்று சொல்லிக்கொண்டே வார்ப்பார். ஏனென்றால், குளிர்தண்ணியில் குளிப்பதால் வருத்தம் ஏதும் வந்துவிடக்கூடாதென்பதற்காக அப்படிச் சொல்வது வழமையாம். அப்படியிருந்த வீட்டில் இப்போது சித்தி மட்டும் ஒற்றை ஆளாக வாழ்ந்துவருகிறார். அன்றிருந்த கலகலப்பும், மக்கள் கூட்டமும் அற்றுப்போய் வெறிச்சோடி அமைதியாகக் கிடந்தது எங்கள் அம்மாமாவின் வீடு. சிறுவயதில் வீட்டின் விறாந்தையில் இருந்து விளையாடிய இடங்களை ஆசையுடன் தொட்டுப்பார்த்தேன். மழைகாலத்தில் கப்பல்விட்டு விளையாடிய முன் விறாந்தை, பின்முற்றத்தில் பரந்து விரிந்து வளர்ந்து அப்பகுதியெங்கும் இலைகளையும் மாம்பிஞ்சுகளையும் கொட்டும் கிளிச்சொண்டு மாமரம் என்று ஒவ்வொரு இடத்தையும் மனம் தேடிப் பார்த்துக்கொண்டது. விறாந்தையில் போடப்படிருந்த வாங்கில் அமர்ந்தபடியே சித்தியுடன் பேசினேன். அவரை இறுதியாக 2022 புரட்டாதியில் அவுஸ்த்திரேலியாவில் பார்த்தேன். திருமண நிகழ்வொன்றிற்காக வந்திருந்தார். ஆகவே, சிட்னியில் இருக்கும் குடும்பங்கள் குறித்து நலம் விசாரித்தார். பின்னர் ஊர்க்கதைகள் மேடைக்கு வந்தன. ஒரு இரண்டு மணிநேரமாவது பேசியிருப்போம், "குளிச்சுப்போட்டு வா சாப்பிடுவம்" என்று கூறவும் பழைய நினைப்பில் கிணற்றில் துலாவினால் அள்ளிக் குளிக்கலாம் என்று போனால் துலாவைக் காணோம். "எங்கே சித்தி துலா?" என்று நான்கேட்க, "இந்தவயசில என்னால துலாவில அள்ளிக் குளிக்க ஏலுமே? உள்ளுக்கை வக்குக்கட்டியிருக்கிறன், மோட்டர் போட்டால் தண்ணிவரும், அங்கை போய்க்குளி" என்று சொன்னார். அங்கிருந்த வெய்யில்ச் சூட்டிற்கும், வியர்வைக்கும் குளிரான நீரில் அள்ளிக் குளித்தது உடலுக்கு மிகுந்த புத்துணர்ச்சியைத் தந்தது. ஆசைதீரக் குளித்தேன். குளித்து முடிந்து வந்ததும், அருகில் வசிக்கும் இன்னொரு சித்தியும் இணைந்துகொள்ள மதிய உணவு உட்கொண்டோம். சித்தியின் சமையல் அசத்தலாக இருக்கும். கோழி, ஆடு, கத்தரிப்பொரியல், இறால்ப்பொரியல், பருப்பு என்று அட்டகாசப்படுத்தி வைத்திருந்தார். பசியொரு புறம், அவரது சமையலின் சுவை இன்னொருபுறம் என்று ஆகிவிட இருமுறை போட்டுச் சாப்பிடாயிற்று. மாம்பழம் வெட்டிவைத்திருந்தார். அதையும் ருசித்தாயிற்று. தொடர்ந்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். "இண்டைக்கு இங்கதானே நிற்கிறாய்?" என்று சித்தி கேட்கவும், "இல்லைச் சித்தி உங்களையும் மற்றச் சித்தியையும் கூட்டிக்கொண்டு சிஸ்ட்டர் அன்ராவைப் பாக்கப் போயிட்டு, நீங்கள் திரும்பி வாங்கோ, நான் யாழ்ப்பாணத்திலை நிற்கிறன்" என்று சொன்னேன். அவருக்கு அது அவ்வளவாக மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. "ஏன், நிக்கிறன் எண்டுதானே சொன்னனீ? இப்ப ஏன் இல்லையெண்டுறாய்?" என்று மீண்டும் கேட்டார். "இல்லைச் சித்தி, நாளைக்கு வன்னிக்குப் போறதெண்டு நெய்ச்சிருக்கிறன். இங்க நிண்டுட்டு நாளைக்குக் காலையில யாழ்ப்பாணம் போய் பிறகு வன்னிக்குப் போறதெண்டால் நேரம் காணாது. அடுத்த‌நாள் கொழும்புக்கும் போறன், குறை நெய்க்காதேங்கோ" என்று கூறினேன். அதன்பிறகு, "உன்ர" விருப்பம் என்று விட்டுவிட்டார். மாலை 4:30 மணிக்கு சித்தியின் வீட்டிற்கு அருகில் சொந்தப் பாவனைக்கென்று ஓட்டோ ஒன்றினை வைத்திருக்கும் நண்பர் ஒருவரை எம்மை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டோம். நண்பர் ஆதலால் யாழ்ப்பாணம் போய்வர 3500 ரூபாய்கள் மட்டுமே கேட்டார். நியாயமான விலைதான். கடும் மழை பெய்யத் தொடங்கியது. முன்னால் செல்லும் வாகனத்தைப் பார்க்க முடியாதளவிற்கு மழை. ஓட்டோவின் இருபக்கத்திலும் இருந்த ரப்பர் சீலையினை சாரதி இறக்கிவிட்டார். மெதுமெதுவாக யாழ்ப்பாணம் நோக்கிய எமது ஓட்டோப் பயணம் ஆரம்பித்தது. வழிநெடுகிலும் அவருடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டு வந்தேன். நான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்பதால் இடங்கள் குறித்து எனக்கு அவ்வளவாகத் தெரியாது என்று நினைத்திருக்கலாம். ஆகவே, வழியில் பலவிடங்களின் பெயர்களைக் கூறிக்கொண்டு வந்தார், நானும் தெரியாவர் போல்க் கேட்டுக்கொண்டு வந்தேன். ஊரில் உள்ள பிரச்சினைகள், அரசாங்கம், இளைஞர்கள் என்று பலவிடயங்கள் குறித்துக் கூறினார். கலியாணக் கொண்டாட்டங்கள், வெளிநாட்டுக் காசு படுத்தும் பாடு என்றும் அலசப்பட்டன. சித்திமார் இருவரும் அமைதியாக இருக்க நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே வந்தோம்.
  8. உக்ரேனிய போர்க்கைதிகளை ஏற்றிவந்த விமானத்தை ஏவுகணை ஏற்றிவந்ததாக எண்ணி உக்ரேன் சுட்டு வீழ்த்தியிருக்கிறது.இதே விமானத்தை ஆயுத தளபாடங்களை ஏற்றியிறக்கவும் ரஸ்ஸியா பாவித்தது. 1998 இல், லயன் எயர் விமானத்தை இராணுவத்தினர் தொடர்ந்து பாவித்து வந்ததால், அதனை தாயகப் பகுதிக்கு மேலால் பறக்கவேண்டாம் என்கிற புலிகளின் கட்டளையினை மீறிப் பறந்தபோது, லயன் எயர் 602 எனும் விமானம் புலிகளால் இரணைதீவுப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஆனால், வழமைக்கு மாறாக அன்று 48 தமிழ்ப் பயணிகள் விமானத்தில் இருந்திருக்கிறார்கள். என்றுதான் நினைக்கிறேன்
  9. மாவீரர் நாள் வளைவு கிளிநொச்சி மாவீரர் நாள் நினைவு இடம் அக்கராயன் மாவீரர் கொட்டகை கிளிநொச்சி உயர்ந்த மரம், அக்கராயன் ஜெயரட்ணத்தின் விருந்தினர் வீட்டின் வாய்க்காலின் மேலான சீமேந்துக் கட்டு
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.