-
Posts
8743 -
Joined
-
Last visited
-
Days Won
103
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by ரஞ்சித்
-
இராணுவ முஸ்த்தீபு இந்தியாவிற்கெதிராக தனது சகாவான பிரேமதாசவைக் களமிறக்கிய ஜெயார் அக்கால கட்டத்தில் ஜெயாருக்கு இருந்த ஒரே நோக்கம் இந்தியாவின் அழுத்தத்தை நிர்மூலமாக்கி இந்தியாவையும், இந்திராவையும் தற்காப்பு நிலையெடுக்கப் பண்ணுவதுதான். இந்தியாவைச் சீண்டுவதில் பெயர்பெற்றவராக விளங்கிய பிரேமதாச, ஜெயாரின் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டார். இருமுனை நடவடிக்கையினை பிரேமதாச மேற்கொண்டார். முதலாவது, இந்தியாவின் அனுசரணையின் ஊடாக முன்வைக்கப்பட்ட பிராந்திய சபைகளினூடான தீர்வினை உள்ளடக்கிய இணைப்பு "சி" யின் அடித்தளத்தைச் சிதைப்பது. இதனைச் செய்வதற்கு பாராளுமன்றத்தையும், ஊடகத்துறையினையும் அவர் களமாகப் பாவித்தார். பாராளுமன்றத்தில் அவர் மேற்கொண்ட பேச்சுக்களில் தமிழர்களுக்கு மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலான எந்தத் தீர்வையும் வழங்க அரசாங்கம் தயாராக இல்லையென்று கூறத் தொடங்கினார். மேலும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளைத் தவிர வேறு எதனையும் தமிழர்கள் கோரக் கூடாது என்றும் பேசி வந்தார். பிரேமதாசவின் இரண்டாவது முனை தமிழர்களுக்கு இந்தியா வழங்கிவரும் ஆதரவினைப் பலவீனப்படுத்தி ஈற்றில் முற்றாக அகற்றிவிடுவது என்பதாக இருந்தது. அதற்காக இந்தியாவிற்கு தொடர்ச்சியான தலைவலியைக் கொடுக்க அவர் முயன்றார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, "இலங்கை இறையாண்மையுள்ள சுதந்திரமான நாடு. ஆகவே, தனக்குத் தேவையானவற்றை தான் விரும்பும் நாடுகளில் இருந்து, தனக்கு உகந்த நேரத்தில் பெற்றுக்கொள்ளும் உரிமை அதற்கு இருக்கிறது" என்று இந்தியாவின் அழுத்தத்திற்கு தாம் அடிபணியப்போவதில்லை எனும் தொனியில் பேசினார். பின்னர், பங்குனி மாதத்தில் பாராளுமன்றத்தில் பேசும்போது, " நாம் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம். இந்தியா எம்மை அச்சுருத்துவதை அனுமதிக்கப்போவதில்லை. இதனை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நான் பிரகடனம் செய்கிறேன்" என்று பேசினார். மேலும், இந்தியா இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டு இயங்குவதாகக் குற்றஞ்சாட்டினார். இந்தியாவில் அது கைக்கொள்ளும் நடைமுறைக்கும், இலங்கையில் அது கைக்கொள்ளும் நடைமுறைக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக அவர் விமர்சித்தார். காஷ்மீரிலும், பஞ்சாப்பிலும் பயங்கரவாதத்தினை இரும்புக் கரம் கொண்டு அடக்கிவரும் இந்தியா, இலங்கையை அவ்வாறு செய்யவேண்டாம் என்று போதித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். "எமது குற்றச்சாட்டு என்னவென்றால், எமது நாட்டில் உள்ள மக்கள் கூட்டத்தினரை தமது நாட்டிற்குள் வரவழைத்து, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அவர்களைப் பயிற்றுவித்து, எமக்கெதிராகச் செயற்பட மீண்டும் எமது நாட்டிற்குள் இந்தியா அனுப்பிவைக்கிறது. இதுதான் எமது பிரச்சினை. இந்திய அரசாங்கத்திற்கெதிராகப் போராடிவரும் சீக்கியப் பிரிவினைவாதிகளை நாம் இலங்கைக்கு அழைத்து, பயிற்சியளித்து மீளவும் இந்தியாவிற்குள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட அனுப்பினால் இந்தியா என்ன செய்யும்? எங்களை இந்தியா அப்போது குற்றஞ்சாட்டியிருக்கும். ஆனால், நாம் ஒருபோதும் அதனைச் செய்யப்போவதில்லை. எமது நாட்டையோ அல்லது அல்லது எமக்குச் சொந்தமான எதனையோ பாவித்து எவரும் இந்த உலகில் உள்ள எந்த நாட்டிற்கும் எதிராகப் போரிடவோ அல்லது ஆக்கிரமிக்கவோ நாம் அனுமதிக்கப்போவதில்லை. அதுதான் எமது கொள்கை. அதேபோல், எந்தவொரு நாடும் எமக்கெதிராகச் செயற்படுவதை நாம் வெறுக்கிறோம். எமது கொள்கையினை மற்றையவர்களும் முன்மாதிரியாகப் பின்பற்ற வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்" என்று அவர் கூறினார். சித்திரை மாத ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் பேசிய பிரேமதாச, " தமிழ்ப் பயங்கரவாதிகளை எதற்காக இந்தியாவிற்கு வரவழைத்து ஆதரிக்கிறீர்கள்? எமது நாட்டை ஆக்கிரமித்து, கபளீகரம் செய்ய நீங்கள் விரும்பினால் அதை நேரடியாகச் செய்யுங்கள், பயங்கரவாதிகளின் பின்னால் ஒளிந்திருந்து செய்யாதீர்கள்" என்று அவர் இந்தியாவை நோக்கி விமர்சனத்தை முன்வைத்தார். பிரேமதாசவின் இந்தியாவுக்கெதிரான தாக்குதலும், இணைப்பு "சி" இற்கெதிரான விமர்சனமும் வைகாசி, ஆனி மாதங்களிலும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தது. இதே காலப்பகுதியில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கெதிரான தாக்குதலையும் அரசாங்கம் முன்னெடுத்திருந்தது. சர்வகட்சி மாநாட்டினை ஜெயார் நடத்தி வந்த விதமும், தம்மீதான தொடர்ச்சியாக அரச ஊடகங்கள் ஊடாக முன்வைக்கப்பட்டு வந்த விமர்சனங்களும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, அரசாங்கத்துடன் ஒத்துழையாமை எனும் நிலைப்பாட்டினை தாம் எடுக்கப்போவதாக அமிர்தலிங்கம் ஊடகங்களுக்கு அறிவித்தார். இதனால் ஜெயார் கடுங்கோபமுற்றார். ஜெயாருக்கும் முன்னணியினருக்கு வளரத் தொடங்கிய கசப்புணர்வை உள்ளூர ஆதரித்த புலிகள் ஆனி 28 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், தமிழர் தொடர்பான விடயங்களுக்குத் தாமே பொறுப்பானவர்கள் என்று தொனிப்பட அறிவித்தார்கள். "எம்மைப் புறக்கணித்திவிட்டு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் சமரசத்தில் ஈடுபடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. எமது இலட்சியத்தை அடையும் வகையில் தீர்வு அமையப்பெறாத விடத்து எமது ஆயுதப் போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்" என்று புலிகளின் அறிக்கை கூறியது. புலிகளின் உத்தியோகபூர்வ சஞ்சிகையான விடுதலைப் புலிகள் ஆடி மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில் "சர்வகட்சி மாநாடு தமிழர் பிரச்சினைக்கான தீர்வெதனையும் தரப்போவதில்லை. கடந்த 17 வருட கால சரித்திரம் அதனையே உறுதிப்படுத்துகிறது. சிங்களத் தலைவர்களுடன் பேசிவந்த பழைய தலைமுறை தமிழ் அரசியல்வாதிகள் தமது தலைமுடியினை இழந்ததுதான் கண்ட மிச்சம். ஆனால், அப்படியிருந்தும் பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழருக்கான தீர்வினை அடைந்துவிடலாம் என்கிற நம்பிக்கையினை மட்டும் அவர்கள் கைவிடத் தயாரில்லை". "புரட்சிகரமான புதிய தலைமுறை ஒன்று அரசியல் களத்திற்குள் வந்துவிட்டது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசாங்கத்தாலோ, அரசியல் நடிகர்களாலோ தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்துவிட முடியாது. தமிழர்களுக்கும் இவர்களுக்கு எந்தத் தொடர்பும் இனி இருக்கப்போவதில்லை. ஆகவே, தமீழிழ விடுதலைப் போராளிகளின் சரித்திரம் படைக்கப்போகும் சாகசக் களங்களை நாம் இனிமேல் தரிசிக்கப் போகிறோம். தமிழர்களின் புதிய பிரதிநிதிகள் அவர்களே. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் அல்லாமல், போராளி இளைஞர்களே இனிமேல் தமிழர்களின் கதாநாயர்களாகத் திகழ்வார்கள்" என்று கூறப்பட்டிருந்தது. தமது இறுதி முயற்சியாக சத்தியாகக் கிரகப் போராட்டத்தை கையிலெடுத்த முன்னணியினர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைப் பொறுத்தவரை அரசியல்க் களத்தில் தாமே இன்னமும் முக்கிய கதாப்பாத்திரங்கள் என்பதை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆகவே, 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை நிகழ்வின் முதலாம் வருட நினைவு தினத்தினை ஆடி 25 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வீரமாகாளியம்மண் கோயிலின் முன்பாக சத்தியாக்கிரக நிகழ்வு மூலம் அனுஸ்ட்டிப்பது என்று முடிவெடுத்தார்கள். இதுதொடர்பாக அமிர்தலிங்கம் வெளியிட்ட அறிக்கையில், "1983 ஆடி தமிழினக் கொலையினை துயருருதல், உண்ணாவிரதம் இருத்தல், பிரார்த்தனைகளில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதனூடாக அனுட்டிக்கப்போகிறோம். தமிழர்களுக்கான உரிமைகளை வன்முறையற்ற வழிகள் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாட்டில் நடத்தப்படவிருக்கும் போராட்டங்களின் ஆரம்பமாக இந்தச் சத்தியாக்கிரக நிகழ்வு அமையும்" என்று கூறியிருந்தார். இதுதொடர்பான விபரமான செய்திக்குறிப்பினை சிவசிதம்பரம் ஊடகங்களுக்கு வெளியிட்டார். "தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல்த் தீர்வுத் திட்டம் ஒன்றினை சர்வகட்சி மாநாடு தரப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டது என்று அவர் கூறினார். தமிழ் மக்கள் தாம் இழந்த உரிமைகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கான பொறுப்பினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடமே இன்னமும் கையளித்திருக்கிறார்கள். எம்மைப்பொறுத்தவரை இந்தப் பொறுப்பென்பது மிகவும் உன்னதமானது. இதனை அடைவதற்கு நாம் பல்வேறு வழிகளில் முயன்று வருகிறோம். பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், இருதரப்புச் சமரசங்கள் மூலமாகவும் பாராளுமன்றத்தில் பேசுவதன் ஊடாகவும் சர்வதேச அளவில் எமது மக்களின் பிரச்சினைகளை அறியச் செய்திருக்கிறோம். ஆனால், இவை எதுவுமே எமக்கான தீர்வினைத் தரவில்லை. உலகில் பலவீனமானவர்கள் முன்னெடுக்கவேண்டிய போராட்ட வழிமுறை குறித்து மகாத்மா காந்தி கற்பித்துச் சென்றிருக்கிறார். ஆடி 25 ஆம் திகதி நாமும் அவ்வழியில் பயணிப்போம். உண்மையான சத்தியாக்கிரகிகளாக நாம் மாறுவோம். இச்சத்தியாக்கிரக நிகழ்வு தமிழ் மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்துமாக இருந்தால், நாமே அந்த அவலங்களுக்கு முதலில் முகம் கொடுப்போம்" என்று அவரின் அறிக்கை கூறியது. முன்னணியினரின் சத்தியாக்கிரகத்தைக் கலைத்துப்போட்ட போராளிகள் 1984 ஆம் ஆண்டு ஆடி மாதம் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரகாளியம்மண் ஆலய முன்றலில் கூடிய அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் தலைமையிலான சுமார் 200 பேர் அடங்கிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும், ஆதவாளர்களும் நிலத்தில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபடத் தொடங்கினார்கள். மங்கையட்கரசி சுலோகங்களை பாடினார். புலிகள் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்களைச் சேர்ந்த சுமார் 200 இளைஞர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர். சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி அவர்கள் பல கேள்விகளை முன்வைத்தனர். "இவ்வளவு காலமும் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்? மக்களுடன் நிற்கவேண்டிய தருணத்தில், அவர்களைக் கைவிட்டு ஓடி ஒளிந்துவிட்டு இப்போது வந்து அவர்களின் முன்னால் வந்து உங்களைத் தலைவர்கள் என்று கூறிக்கொள்வது உங்களுக்கு அவமானமாகத் தெரியவில்லையா?" என்கிற கேள்விகளும், கேலிகளும் முன்னணியினரை நோக்கி அங்கு எழுப்பப்பட்டன. உண்ணாவிரதம் இருந்து உரிமைகளை வெல்லும் காலம் முடிவடைந்துவிட்டது என்று இளைஞர்கள் கூறினார்கள். பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வினைக் காணமுடியும் என்று இன்னமும் நம்புகிறீர்களா? என்று அவர்கள் முன்னணியினரைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார்கள். இப்போது துப்பாக்கிகள் சுடத் தொடங்கிவிட்டன என்பதை மறக்கவேண்டாம் என்று நினைவுபடுத்தினார்கள். தமிழர்களின் போராட்டம் இளைஞர்களின் கைகளுக்கு தற்போது வந்துவிட்டது என்று அவர்கள் எச்சரித்தார்கள். "தயவுசெய்து உங்களின் சத்தியாக்கிரகத்தை முடித்துவிட்டு இங்கிருந்து அகன்று செல்லுங்கள்" என்று அவர்கள் அறிவுருத்தினார்கள். சத்தியாக்கிரகத்தில் ஈடுப்பட்ட பலர் அங்கிருந்து விலகிச் சென்றார்கள். வெறும் 20 பேரே அங்கு தொடர்ந்தும் நின்றிருந்தார்கள். அவர்களை சூழ்ந்துகொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. புலிகளின் போராளிகளில் ஒருவரான திலீபன் மதியவேளை, 12 உணவுப் பொதிகளுடன் அங்கு வந்தார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தலைவர்களின் முன்னால் உணவுப் பொட்டலங்கள் வைக்கப்பட்டன. அவர்களின் அருகில் அமர்ந்துகொண்ட இளைஞர்கள் உணவுப் பொட்டலங்களை திறந்து அருந்த ஆரம்பித்தார்கள். இதனையடுத்து தமது உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு வருவதாக அறிவித்துவிட்டு, தோல்வியுற்றவராய் அங்கிருந்து அகன்று சென்றார் அமிர்தலிங்கம். சமாதான வழிகளிலான போராட்டம் முடிவிற்கு வர, ஆயுதங்கள் மூலமான போராட்டம் களத்திற்கு வந்துவிட்டிருந்தது.
-
பொது இணக்கப்பட்டிற்கான சாத்தியம் சர்வகட்சி மாநாட்டின் இரு குழுக்களும் இணைந்து தமது இறுதியறிக்கையினை பங்குனி 15 ஆம் திகதி ஜெயாரிடம் கையளித்தன. அதனை அனைத்துக் கட்சிகளின் முன்னிலையில் பங்குனி 20 ஆம் திகதி ஜெயார் வெளியிட்டார். தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்ட மூன்று முக்கிய விடயங்கள் மிக ஆளமாக கலந்தாலோசிக்கப்பட்டு, கட்சிகளுக்கிடையே நான்கு விடயங்கள் தொடர்பாக பொது இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார். அந்த நான்கு விடயங்களையும் அவர் பின்வருமாறு விளக்கினார், 1. அரசை நடத்துவதற்கான பொறிமுறை. அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் மக்களின் பங்களிப்பினை உறுதிசெய்வதற்காக மத்திய அரசாங்கத்தில் இருக்கும் அதிகாரங்களை பரவலாக்குவது. ஆனால், எந்தெந்த அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது என்பது குறித்த தீர்மானங்கள் இதுவரையிலும் எட்டப்படவில்லை. 2. உள்ளூர் ஆட்சி மன்றங்களின் மீள் உருவாக்கம். ஐக்கிய தேசியக் கட்சி, கிராம அலுவலகர் மட்டத்தில் கிராம மண்டலங்களையும், உதவி அரசாங்க அதிபர் மட்டத்தில் பிரதேச மண்டலங்களையும் தன்னிச்சையாக உருவாக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது. இந்த மண்டலங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய விதம் குறித்து இதுவரை ஆராயப்படவில்லை. 3. பிரஜாவுரிமையற்றவர்கள் எனும் நிலையினை இல்லாதொழிப்பது. மகா சங்கத்தினர் இதற்கான பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றனர். 4. இனவன்முறைகளும் பயங்கரவாதமும். வன்முறைகளுக்கான காரணங்களும், அனைத்து வகையான பயங்கரவாத நடவடிக்கைகளும் முற்றாக இல்லாதொழிக்கப்படுதல் அவசியம். ஜெயவர்த்தன குறிப்பிட்ட "பொது இணக்கப்பாடு" என்பதனை அமிர்தலிங்கம் நிராகரித்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைப் பொறுத்தவரை அப்படியொரு பொது இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாக இதுவரையில் தாம் அறியவில்லை என்று அவர் கூறினார். இதற்கு ஜெயார் அளித்த பதில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. "எனது தீர்மானமே பொது இணக்கப்பாடு" என்று அமிர்தலிங்கத்தைப் பார்த்துக் காட்டமாகக் கூறினார் ஜெயார். பின்னர் அங்கிருந்தவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சியையும் கொடுத்த ஜெயவர்த்தன, சர்வகட்சி மாநாட்டினை வைகாசி 9 ஆம் திகதிவரை தான் ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அமிர்தலிங்கம் மாநாட்டினை 7 வாரங்களுக்கு ஒத்திவைப்பதற்கான காரணத்தைக் கேட்டார். இதற்குப் பதிலளித்த ஜெயார், சர்வகட்சி மாநாட்டின் இரு குழுக்களும் தமது அறிக்கையினைத் தயாரிக்க 7 வாரங்கள் தேவைப்படுவதாகக் சர்வசாதாரணமாகக் கூறினார். இராணுவ நடவடிக்கைக்காக சர்வகட்சி மாநாட்டினை ஒத்திவைத்த ஜெயார் ஜெயார் சர்வகட்சி மாநாட்டினை வேண்டுமென்றே 7 வாரங்களுக்கு ஒத்திவைப்பதை உணர்ந்த அமிர்தலிங்கமும், குமார் பொன்னம்பலமும் , அதனை ஆட்சேபித்து கூட்டாக அவருக்கொரு கடிதத்தினை பங்குனி 23 ஆம் திகதி அனுப்பினார்கள். அக்கடிதத்தில் அரசாங்கம் மிகப்பெருமெடுப்பில் இராணுவ நடவடிக்கை ஒன்றை நடத்தத் திட்டமிடுவதாக தாம் அஞ்சுவதாகக் குறிப்பிட்டிருந்தனர். அக்கடிதம் பின்வருமாறு கூறுகிறது, "பயங்கரவாதத்தினை முற்றாக அழிக்கிறோம் என்கிற போர்வையில் தமிழர் தாயகமான வடக்கிலும் கிழக்கிலும் பெரும் எடுப்பிலான இராணுவ நடவடிக்கை ஒன்றினை அரசாங்கம் நடத்தப்போகின்றது என்கிற அச்சம் தமிழர்களின் மனதில் உருவாகியிருக்கிறது. இந்த இராணுவ நடவடிக்கைகளில் பெருமளவு அப்பாவிகள் கொல்லப்படவிருக்கிறார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்". இந்தக் கூட்டுக் கடிதத்தில் எழுப்பப்பட்டிருந்த அச்சம் நியாயமானது. ஜெயவர்த்தன உண்மையாகவே பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கை ஒன்றினைத் திட்டமிட்டு வந்தார். இஸ்ரேலில் இருந்து இராணுவ பயிற்சியாளர்களையும் , புலநாய்வு அதிகாரிகளையும் இந்த இராணுவ நடவடிக்கைக்காக அவர் தருவித்திருந்தார். தென்னாபிரிக்காவிலிருந்து இராணுவக் கவச வாகனங்களும், நவீன ஆயுதங்களும் பெருமளவில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. இத்தாக்குதல் நடவடிக்கைக்கென்று புதிதாக கஜபா ரெஜிமெண்ட் எனும் படைப்பிரிவும் உருவாக்கப்பட்டு வந்தது. தேசியப் பாதுகாப்பு அமைச்சராக லலித் அதுலத் முதலி நியமிக்கப்பட்டதோடு பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிடவேண்டும் என்கிற தெளிவான கட்டளையும், அதனை அடைவதற்கான அனைத்து அதிகாரங்களும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஜெயாரின் சவாலினை ஏற்ற புலிகள் அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட சவாலினை புலிகளும் ஏற்றுக்கொண்டார்கள். பங்குனி 24 ஆம் திகதி பருத்தித்துறையில் அமைந்திருந்த பொலீஸ் நிலையத்தைப் புலிகள் தாக்கினார்கள். பங்குனி 26 ஆம் திகதி இரு விமானப்படை வீரர்களைக் கொன்றார்கள். சித்திரை 9 ஆம் திகதி முதலாவது கார்க்குண்டுத் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டார்கள். அரச அடக்குமுறைக்கெதிராக பொதுமக்களை அணிதிரட்டி போராட்டங்களை மேற்கொண்டார்கள். ஆத்திர மேலீட்டினால் ஆரியகுளத்தில் அமைந்திருந்த நாகவிகாரையும் பொதுமக்களின் தாக்குதலுக்கு உள்ளானது. இவை அனைத்தும் ஜெயாரை கோபத்தின் உச்சிக்கே இட்டுச் சென்றிருந்தன. தன்மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது அதைவிடவும் பலமாகத் திருப்பித் தாக்குவதே ஜெயாரின் நடைமுறையாக இருந்துவந்தது. பழிவாங்குதலை அரசியலில் ஒரு கொள்கையாகவே அவர் கைக்கொண்டு வந்திருந்தார். ஆகவே, தமிழ்ப் போராளி அமைப்புக்களை, குறிப்பாகப் புலிகளை முற்றாக இல்லாதொழிப்பது என்று அவர் கங்கணம் கட்டினார். தமிழ் மக்கள் மீதான தனது இராணுவப் பழிவாங்கல் நடவடிக்கைக்கான புறச் சூழலை அவர் தனது கட்டுப்பாட்டில் இருந்த ஊடகத்துறையினைக் கொண்டு மிகக் கச்சிதமாக உருவாக்கத் தொடங்கினார். இதற்காக இரண்டுவகையான விடயங்களை அவர் மேற்கொண்டார். முதலாவது தமிழ்ப் போராளி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி முற்றாக அழிப்பது. இதனைச் செய்வதற்கு மிதவாதிகளான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் இனிமேல் தேவையற்றவர்கள் எனும் நிலையினை மக்களிடையே உருவாக்குவது. ஏனென்றால், போராளிகளைக் கட்டுப்படுத்தும் நிலையினை முன்னணியினர் அப்போது இழந்திருந்தனர். இந்திய சஞ்சிகையான இந்தியா டுடேயிற்கு சித்திரை 30 ஆம் திகதி ஜெயார் வழங்கிய செவ்வியில் முன்னணியிர் தேவை அற்றுப் போய்விட்டது என்று பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார். தென்னிலங்கையின் பல ஊடகக்ங்களுக்கு தான் கொடுத்து வந்த செவ்விகளின் மூலமாகவும், தான் கலந்துகொண்ட பல கூட்டங்களில் ஆற்றிய உரைகள் ஊடாகவும் ஜெயாரின் நிலைப்பாட்டினை நாட்டிற்கு நியாயப்படுத்தும் செயற்பாட்டில் லலித் அதுலத் முதலி ஈடுபட்டார். லங்கா கார்டியனின் மேர்வின் டி சில்வாவுக்கு வழங்கிய செவ்வியொன்றில், "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேசுவதில் என்ன பலன் இருக்கப் போகிறது?" என்ற கேள்வியை லலித் முன்வைத்தார். அதற்கான பதிலையும் தானே வழங்கினார், "அவர்களுடன் பேசுவதால் எந்தப் பயனும் எமக்குக் கிடைக்கப்போவதில்லை. அவர்கள் தமிழ் மக்களை இப்போது பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அவர்கள் பயங்கரவாதிகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். அரசாங்கம் பயங்கரவாதிகளுடன் ஒருபோதும் பேசாது" என்று அவர் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும், இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் ஜெயாரின் திட்டத்தினைத் தெளிவாகப் புரிந்துகொண்டனர். அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகனின் "பயங்கரவாத எதிர்ப்பு" நிலைப்பாட்டினை தனக்குச் சார்பாக ஜெயார் பாவிக்கத் தொடங்கியிருக்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டனர். தனக்குச் சார்பான நாடுகளின் உதவியினைக் கொண்டு தமிழ் ஆயுதப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிட ஜெயார் கங்க்கணம் கட்டியிருக்கிறார் என்பது அவர்களுக்கு நன்கு புரிந்தது. தான் பலமிழந்து போய்விட்டதை அமிர்தலிங்கம் உணரத் தலைப்பட்டார். சர்வகட்சி மாநாட்டில் பங்குனி 9 ஆம் திகதி சோபையிழந்து உரையாற்றிய அமிர்தலிங்கம் "எம்மை இந்த மாநாட்டிற்கு பேரம்பேசலில் ஈடுபட அழைத்தவரே எம்மீது வசைபாடி, எமது நம்பகத்தன்மையினை கேள்வி கேட்கும்போது, இம்மாநாடு கூட்டப்பட்டதற்கான உண்மை நோக்கம் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான சமரசத் தீர்வு ஒன்றினைக் காண்பதல்ல என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் உறுதியாக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார். மீண்டும் மீண்டும் குழுக்களை அமைத்து காலத்தைக் கடத்திய ஜெயார் ஜெயவர்த்தனா அரசியல்த் தீர்வில் நாட்டம் கொண்டிருக்கவில்லை என்பது வைகாசி மாதமளவில் இந்தியாவுக்கும், முன்னணியினருக்கும் தெளிவாகத் தெரிந்தது. சமாதான முயற்சிகளில் இருந்து அவர் பின்வாங்கத் தொடங்குகிறார் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டார்கள். வைகாசி 9 ஆம் திகதி பேசிய ஜெயவர்த்தனா தான் இரு குழுக்களை அமைப்பதாக அறிவித்தார். இதன்படி முதலாவது குழு அதிகாரப் பரவலாக்கத்திற்கான பொறிமுறை, வழங்கப்படும் அதிகாரங்கள் , அவற்றின் செயற்பாடுகள் குறித்து ஆராயும். இதற்கு பிரதமர் பிரேமதாச தலைவராக இருப்பார். இரண்டாவது குழு மக்களின் அவலங்கள் குறித்த நடவடிக்கைகளில் ஈடுபடும். கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கான சந்தர்ப்பங்களை அனைவருக்கும் சமமாகப் பகிர்வது, மொழி உரிமையினை நடைமுறைப்படுத்துவது ஆகியன குறித்து இக்குழு தீர்மானம் எடுக்கும். இதற்கு தேவநாயகம் தலைவராக இருப்பார். இதனையடுத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழ்க் காங்கிரஸ், கம்மியூனிஸ்ட் கட்சி ஆகியவை இதற்கான தமது அதிருப்தியை அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தியதோடு, இந்தக் குழுக்களுக்கான அமர்வுகளில் தாம் பங்கெடுக்கப்போவதில்லையென்றும், சர்வகட்சி மாநாடு மீள ஆரம்பிக்கும் வேளையில் தாம் அதில் கலந்துகொள்வதாகவும் அறிவித்தன. சர்வதேசத்தை ஏமாற்றவே முன்னணியினரை ஜெயார் பாவிக்கிறார் - போராளிகள் கூட்டத்தை ஒத்திவைத்துப் பேசிய ஜெயார், "இவ்விரு குழுக்களுக்கும் மிக முக்கியமான செயற்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வடக்கில் வாழும் பெருமளவு இளைஞர்கள் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியன தொடர்பாகச் செயற்படவிருக்கும் குழுமீது அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதிகாரப் பரவலாக்கம் என்பது சில அரசியட் கட்சிகளில் இருக்கும் சிலருக்கான தேவை மட்டுமே. கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் கவனம் செலுத்துவதென்பது எதிர்காலச் சந்ததியினரின் பெரும்பாலானவர்களுக்கு நாம் வழங்கும் உதவியாகும்" என்று கூறினார். ஜெயாரின் கருத்தினை தமிழ் இளைஞர்கள் எள்ளி நகையாடினார்கள். போராளி அமைப்புக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களை ஏளனமாகப் பேசினார்கள். "சர்வதேச சமூகத்தையும், மனிதவுரிமை அமைப்புக்களையும் ஏமாற்றுவதற்காகவே உங்களை ஜெயவர்த்தனா பாவித்து வருகிறார் என்று நாம் உங்களுக்கு முன்னரே கூறியிருந்தோம்" என்று அவர்கள் அமிர்தலிங்கத்தை விமர்சித்தார்கள். இதனை முன்னணியினர் பார்த்தசாரதியின் கவனத்திற்குக் கொண்டுசென்றபோது, "பொறுமையாக இருங்கள்" என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஜெயாரினால் அமைக்கப்பட்ட இக்குழுக்கள் வைகாசியில் ஐந்துமுறை கூடின. ஆனி 1 ஆம் திகதி நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்னணியினரும், தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரும் கலந்துகொண்டனர். இனப்பிரச்சினைக்கான இறுதியானதும் உறுதியானதுமான தீர்வினை உடனடியாக எடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமிர்தலிங்கம் இக்கூட்டத்தில் கேட்டுக்கொண்டார். மேலும், தமிழர் தாயகத்தில் அதிகரிக்கத் தொடங்கியிருந்த இராணுவ ஒடுக்குமுறைபற்றியும் சர்வகட்சி மாநாட்டின் கவனத்திற்கு அவர் கொண்டுவந்தார். அமிர்தலிங்கம் முன்வைத்த கோரிக்கையினை ஏறெடுத்தும் பார்க்கவும் ஜெயார் விரும்பவில்லை. அவர் அப்போதுதான் சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு இருவாரகால சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியிருந்தார். மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்திற்கான நடவடிக்கைகளை ஒழுங்குசெய்வதிலும் அவர் ஈடுபட்டிருந்தார். சீனாவிடமிருந்து பெருமளவு ஆயுதங்களைக் கோரியிருந்த ஜெயார், அவற்றைக் கொள்வனவு செய்வதற்கான நிதியினை ஜப்பானிடமும், தென்கொரியாவிடமும் கேட்டிருந்தார்.
-
சமாதானப் பேச்சுக்களை நீர்த்துப்போகச் செய்யும் ஜெயாரின் சூழ்ச்சி தான் அகப்பட்டிருக்கும் சிக்கலில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள சிங்களப் பேரினவாதத்தின் வான்கதவுகளை அகலத் திறந்தார் ஜெயவர்த்தன. சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்று தமது பரிந்துரைகளை முன்வைக்க அரசியட் கட்சிகளுக்கு மட்டுமே விடுக்கப்பட்டிருந்த அழைப்பினை இனவாத, மதவாத அமைப்புக்களுக்கும் அவர் விஸ்த்தரித்தார். இதன்படி ஜெயார், மகா சங்கத்தின் உச்ச பீடத்தினையும், அகில இலங்கை பெளத்த காங்கிரஸ், அகில இலங்கை பெளத்த சம்மேளங்களின் ஒருங்கிணைப்பு, அகில இலங்கை இந்து காங்கிரஸ் மற்றும் கிறீஸ்த்தவ முஸ்லீம் மத அமைப்புக்களையும் தமது அரசியல்ப் பரிந்துரைகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஜெயாரின் இந்தச் செயலினை தமிழர்களும் இந்தியாவும் ஒரு சதியாகவே பார்த்தனர். சர்வகட்சி மாநாட்டின் நோக்கத்தை வலுவிழக்கப்பண்ணி, தமிழரின் நிலையினை மேலும் பலவீனப்படுத்தி, சிங்கள பெளத்த தேசியவாதத்தினை பலப்படுத்தும் கைங்கரியமாக இதனை அவர்கள் நோக்கினர். மகாசங்கத்தின் உச்ச பீடமும், ஏனைய பெளத்த சிங்கள அமைப்புக்களும் தமிழருக்கெதிரான கடும்போக்கு நிலையினைக் கைக்கொண்டன. சிங்களத் தீவிரவாதத்திற்கு பெளத்த பிக்குவான கலாநிதி ராகுல தேரை தலைமை தாங்கினார். இணைப்பு சி இயினை முற்றாக நிராகரித்த அவர், மாவட்ட அபிவிருத்திச் சபைகளைக் கூட தமிழர்களுக்கு வழங்கக் கூடாது என்று கூறினார். "மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நாம் இப்போது வழங்கினால், அவர்கள் அதனைக் கொண்டு தமது கனவான தமிழ் ஈழத்தை ஒருநாள் அமைத்துவிடுவார்கள். இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை" என்று அவர் பிரகடனம் செய்தார். சிங்கள பெளத்த இனவாதிகளை சர்வகட்சி மாநாட்டிற்குள் இழுத்துவிட்டதன் மூலம் ஜெயார் எதிர்பார்த்த கால அவகாசத்தை அவரால் பெற்றுக்கொள்ள முடிந்தது. இக்கால அவகாசத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலிய படையினரின் உதவியையும், வெளிநாட்டுக் கூலிப்படைகளின் உதவியையும் அவரால் பெற முடிந்தது. சர்வகட்சி மாநாட்டின் கால எல்லையைத் தொடர்ச்சியாக நீட்டித்துவந்த ஜெயார், ஒவ்வொரு அமர்விற்கும் இடையிலான கால இடைவெளியினையும் நீட்டித்துக்கொண்டார். சர்வகட்சி மாநாட்டினை இருகுழுக்களாகப் பிரித்து காலத்தை இழுத்தடித்த ஜெயார் சர்வகட்சி மாநாடு ஆரம்பித்த 7 ஆம் நளான தை 20 ஆம் திகதி பேசிய ஜெயார், இந்த மாநாடு இரு குழுக்களாகப் பிரிக்கப்படுவதாக அறிவித்தார். முதலாவது குழு அரசாங்கத்தின் அமைப்புக்கள் தொடர்பாகச் செயறபடும் அதேவேளை மற்றைய குழு தீவிரவாதத்தினை முற்றாக அழிப்பதில் ஈடுபடும் என்றும், ஆகவே இந்தக் குழுக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து மாநாட்டு உறுப்பினர்கள் தமது பரிந்துரைகளை முன்வைக்கலாம் என்றும் கூறினார். இக்குழுக்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் சில தினங்கள் நீண்டு சென்றன. முடிவில் பேசிய ஜெயார், இக்குழுக்கள் இரண்டினதும் நோக்கங்கள் ஒருபுள்ளியில் இணையவேண்டும் என்று கூறினார். இக்குழுக்களுக்குள் உள்வாங்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை மிகவும் அதிமனாதாகக் காணப்பட்டது. இவ்விரு குழுக்களையும் சேர்ந்த உறுப்பினர்களை தாம் எடுத்துக்கொண்ட தீர்மானங்கள் குறித்த அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு ஜெயார் பணித்தார். இவ்வறிக்கை உள்ளடக்கப்படவேண்டிய 7 பிரிவுகள் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது. 1. நாட்டின் இறைமையினையும், சுதந்திரத்தையும், ஒருமைப்பாட்டினையும் பாதுகாக்கும் பொறிமுறை. இப்பொறிமுறையூடாக அரசாங்கம் நாட்டின் அனைத்து இன மக்களும் நாட்டின் எந்தப் பகுதியிலும் சமாதானமான முறையில் வாழக்கூடியதும், எப்பகுதியிலும் சுதந்திரமாக தொழில் புரியக்கூடியதுமான சூழ்நிலையினை உருவாக்குவது. 2. அனைவருக்கும் கல்வியில் நீதியான சந்தர்ப்பங்களை வழங்குவது. 3. அனைவருக்கும் தொழில்வாய்ப்பில் நீதியான சந்தர்ப்பங்களை வழங்குவது. 4. காணிப்பிரச்சினையினைத் தீர்த்துக்கொள்ள பொறிமுறை ஒன்றை வகுப்பது. 5. நாட்டின் எந்த மூலையிலும் வாழும் ஒருவருக்குத் தேவையான பாதுகாப்பினை வழங்குவது. 6. பொருளாதார வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களை வழங்குவது. 7. ஏனைய விடயங்கள். சர்வகட்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை குலைத்து அதன் நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு ஜெயார் தொடர்ந்து செயற்பட்டு வந்தார். சர்வக்ட்சி மாநாட்டின் இரு குழுக்களுக்கும் அவர் வழங்கிய பணிப்புரையில் தமிழர்களின் உரிமைகள் மிகச் சாதுரியமாகத் தவிர்க்கப்பட்டிருந்தன. அதற்குப் பதிலாக தமிழர்களின் கவலைகள் குறித்துப் பேசலாம் என்கிற நிலையினை ஜெயார் ஏற்படுத்தியிருந்தார். இலங்கைத் தமிழர் சார்பாக இந்தியாவின் தலையீட்டினை முடக்கிய ஜெயார் சர்வகட்சி மாநாட்டின் இணைந்த குழு தை மாதத்தில் இரு தடவைகளும், மாசி மாதத்தில் மூன்று தடவைகளும் பங்குனியில் இரு தடவைகளும் கூடிப் பேசியது. ஆனால், இந்தக் கலந்துரையாடல்கள் எல்லாமே இலக்கற்று , எழுந்தமானமாக நடந்துகொண்டிருந்தன. சாமர்த்தியசாலியான தொண்டைமான், தமிழர்களின் அவலங்களில் முக்கியமானது அவர்கள் தமக்கென்று ஒரு தேசத்தைக் கொண்டிருக்காமைதான் என்று கூறியதோடு, முதலில் அதற்கு அனைவரும் சேர்ந்து தீர்வொன்றினைக் காணவேண்டும் என்று கோரினார். இச்சந்தர்ப்பத்திற்காக அதுவரையில் காத்திருந்த ஜெயாரும், இந்தியாவிற்கும், உலகிற்கும் சர்வகட்சி மாநாட்டின் ஊடாக தான் சிலவிடயங்களைச் சாதித்துவிட்டதாகக் காட்ட இந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொண்டார். பின்னர், மகா சங்கத்தின் தலைவர்களை தன்னுடன் பிரத்தியே சந்திப்பொன்றிற்கு ஜெயார் அழைத்தார். இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர்களின் நலன்குறித்து மட்டுமே இந்தியா சட்ட ரீதியாக இலங்கையில் தலையீடு செய்ய முடியும் என்று மகா சங்கத்தினரைப் பார்த்து அவர் கூறினார். ஆகவே, நாடற்ற இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு பிரஜாவுரிமையினை வழங்கிவிட்டால் இலங்கையில் இந்தியா தலையீடு செய்யும் உரிமை இல்லாதுபோய்விடும் என்று அவர் வாதிட்டார். மேலும், பிரஜாவுரிமையற்று வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் எண்ணிக்கை மிகச் சிறியதுதான் என்று அவர் தெரிவித்தார். மகாசங்கத்தினரும் அதனை ஏற்றுக்கொண்டனர். சர்வகட்சி மாநாட்டுத் தீர்மானங்களில் பெளத்த மகாசங்கம் செலுத்திய அதிகாரம் சர்வகட்சி மாநாட்டின் பேச்சாளராக லலித் அதுலத் முதலி நியமிக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு நாள் மாநாட்டின் முடிவிலும் அவர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். இப்பத்திரிக்கையாளர் சந்திப்புக்களுக்கு நானும் போயிருந்தேன். அன்றைய அமர்வில் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமையினைத் தீர்க்க மாநாட்டின் உறுப்பினர்கள் தீர்மானித்திருப்பதாகக் கூறினார். இதனை மாநாட்டின் முதலாவது பெரிய வெற்றியென்றும் புகழ்ந்தார். அவர் பேசிக்கொண்டிருக்கையில் பத்திரிக்கையாளர் கூட்டம் நடந்துகொண்டிருந்த அறையின் கதவு மெல்லத் திறந்தது. மகாசங்கத்தின் மகாநாயக்கர்கள் வெளியே நின்றிருப்பது அனைவருக்கும் தெரிந்தது. சிங்கள பெளத்தர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட கலாநிதி ராகுல தேரை எனும் பிக்கு பத்திரிக்கையாளர்களிடம் தாமும் பேச வேண்டும் என்று லலித் அதுலத் முதலியைப் பார்த்துக் கூறினார். லலித்தும் அதற்கு இணங்கினார். மகாசங்கத்தின் அதியுச்ச பீடத்தின் பரிந்துரைக்கு அமைய சர்வகட்சி மநாட்டு உறுப்பினர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினையினைத் தீர்த்துவைக்க ஏகமனதாகச் சம்மதித்துவிட்டதாக அறிவித்தார். ஆகவே, இலங்கை விவகாரத்தில் இந்தியா இனிமேல் தலையீடு செய்வதற்கு எந்த முகாந்திரங்களும் இல்லையென்றும் அவர் தீர்க்கமாகக் கூறினார். தொடர்ந்து பேசிய ராகுல தேரை, இலங்கைத் தமிழர்களின் எமது நாட்டின் பிரஜைகள். ஆகவே, அவர்கள் சார்பாக இந்தியா இலங்கையில் தலையீடு செய்ய எந்த உரிமையும் கிடையாது என்றும் வாதிட்டார். மகா சங்கத்தின் அதியுச்ச அமைப்பினால் விடுக்கப்பட்ட பரிந்துரை பின்வருமாறு கூறியது, "தம்மை இந்தியர்கள் என்று அழைத்துக்கொள்ளும் எந்தவொரு தனிநபரோ அல்லது குழுவோ எமது நாட்டில் இருக்க முடியாது. சிறிமா சாஸ்த்திரி ஆகியோரிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி அவர்களை அவர்களின் தாய்நாடான இந்தியாவிற்குத் திருப்பியனுப்பிவிடுவதன் ஊடாகவும், மீதமிருப்போருக்கு இலங்கைப் பிரஜாவுரிமையினை வழங்குவதன் ஊடாகவும் இதனை நாம் நிவர்த்திசெய்துகொள்ள முடியும். பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டிய இந்திய வம்சாவளித் தமிழர்களின் எண்ணிக்கை மகாசங்கத்தினர் எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாக இருந்தபோதிலும், அவர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமையினை வழங்கி, பிரச்சினையினைத் தீர்த்துவைக்க மகாசங்கத்தினர் தடைவிதிக்கப்போவதில்லை" என்று கூறியிருந்தது. இந்தியாவுக்குத் திருப்பியனுப்புவதற்காக அடையாளம் காணப்பட்டிருந்த தமிழர்களை திருப்பியனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கையினையும் மகாசங்கத்தினரின் இந்த பரிந்துரை கோடிட்டுக் காட்டியிருந்தது. 1964 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் சிறிமாவுக்கும் சாஸ்த்திரிக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி 975,000 இந்திய வம்சாவளித் தமிழர்களில் 600,000 பேரை இந்தியாவுக்குத் திருப்பியனுப்ப இருந்ததுடன் மீதி 375,000 பேருக்கும் இலங்கைப் பிரஜாவுரிமையினை வழங்க இலங்கை ஒத்துக்கொண்டிருந்தது. இந்தியப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கவென்று வழங்கப்பட்ட 15 வருட கால அவகாசத்தில் 504,000 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். மீதி 96,000 பேரும் நாடற்றவர்களாகவே இருந்தனர். ஆகவே தொண்டைமான், இந்திய பிரஜாவுரிமையற்றிருந்த 96,000 பேருக்கும் இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டிருந்தார். மகாசங்கத்தினர் இலங்கைப் பிரஜாவுரிமை வழங்க சம்மதித்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் இவர்கள் தான்.
-
பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையிழந்த தமிழர்கள் மூன்று படிப்பினைகள் 1984 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வகட்சி மாநாட்டிலிருந்து மூன்று முக்கிய படிப்பினைகளை தமிழ் மக்கள் கற்றுக்கொண்டார்கள். சிங்கள மக்களும், பெளத்த மத குருக்களும் ஒருபோதுமே தமிழர்களின் அபிலாஷைகளை வழங்க விரும்பப்போவதில்லை, சிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களின் பிரச்சினையினை அரசியல் ரீதியாகத் தீர்ப்பதற்கான எந்த விருப்பமும் இல்லை, தமிழ் மக்களின் பாதுகாப்பும், நலன்களும் தமிழ்ப் போராளிகளின் ஆயுத பலத்திலேயே தங்கியிருக்கிறது ஆகிய மூன்றுமே அந்தப் படிப்பினைகளாகும். 1984 ஆம் ஆண்டு தை மாதம் 10 ஆம் திகதி பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பெரும் எடுப்புடன் சர்வகட்சி மாநாடு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் ராணுவப் பாதுகாப்புடன் மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை மண்டப வாயிலில் நான் சந்தித்தேன். மாநாடு குறித்த அமிர்தலிங்கத்தின் எண்ணங்கள் குறித்து அவரிடம் வினவினேன். "சர்வகட்சி மாநாடு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும், தமிழரைப் பொறுத்தவரையில் ஒரு திருப்புமுனையாக அமையும்" என்று மிகுந்த நம்பிக்கையோடு அவர் பதிலளித்தார். சர்வகட்சி மாநாட்டின் மீது அமிர் பெருத்த நம்பிக்கை வைத்திருந்தார். மாநாட்டின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு முடிந்தபின்னர் என்னுடன் பேசிய அமிர், "ஜெயவர்த்தன விசாலாமான புன்னகையோடு என்னை மாநாட்டிற்கு வரவேற்றார்" என்று மகிழ்வுடன் கூறினார். அருகிலிருந்த சிவசிதம்பரமோ, "அவ்வளவும் நஞ்சு" என்று விரக்தியுடன் கூறினார். ஆனால், மாநாட்டின் அரம்ப நாள் அன்றே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் எல்லோருமே சிவசிதம்பரத்தின் கூற்றையே பிரதிபலித்தனர். தமிழர்களை ஜெயார் முற்றாகக் கைவிட்டு விட்டதாக அவர்கள் உணர்ந்தனர். சர்வகட்சி மாநாட்டினை ஜெயார் நடத்துவதே சிங்களவர்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளத்தான் என்று அவர்கள் உணரத் தலைப்பட்டனர். மாநாட்டினை ஆரம்பித்துவைத்து முதலாவதாகப் பேசிய ஜெயார், மாநாட்டின் உண்மையான குறிக்கோள் எதுவென்பதை தனது பேச்சில் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டார். "முதலாவது நாம் எமது நாட்டின் இறையாண்மையினையும், சுதந்திரத்தையும் எவ்விலை கொடுத்தாவது காத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக நாட்டின் ஒருமைப்பாடு இதுவரை இருப்பதுபோல தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். மூன்றாவதாக, பிரிவினைவாதத்தினையும் வன்முறையினையும் முற்றாக அழிக்க அனைத்து அரசியற் கட்சிகளும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்" என்று அவர் கூறினார். ஒற்றையாட்சி நாட்டிற்குள் வாழ்வதை தமிழர்கள் முற்றாக எதிர்த்தே வந்திருந்தனர். ஆனால், நாட்டைத் தொடர்ந்தும் ஒற்றையாட்சிக்குள் ஒன்றுபட்ட நாடாக வைத்திருப்பதுதான் மாநாட்டின் முக்கிய குறிக்கோள் என்று ஜெயார் கூறியதன் மூலம் வெளிப்படையாகவே தமிழரின் கோரிக்கையினை நிராகரித்திருந்தார்.மேலும், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தீர்வாக எதனையும் அவர் முன்வைக்க விரும்பவில்லை. அத்துடன், இணைப்பு "சி" இல் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை அடிப்படையாக வைத்தே முன்னணியினை இந்த மாநாட்டில் பங்கெடுக்கிறார்கள் என்று தெரிந்தும் அது பற்றிப் பேசுவதையும் அவர் முற்றாகத் தவிர்த்தார். ஜெயாரரின் பேச்சைக் கேட்ட அமிர்தலிங்கம் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார். பேச்சுவல்லமை கொண்ட தமிழ்க் காங்கிரஸின் உறுப்பினர் குமார் பொன்னம்பலமோ இணைப்பு "பி" மற்றும் இணைப்பு "சி" பற்றிக் கேள்வியெழுப்பியதுடன், "இந்த ஆவணங்களை தயாரித்தது யார்?" என்று கேள்வியெழுப்பினார். அதற்கு சாதுரியமாகப் பதிலளித்த ஜெயரவர்த்தன, "ஓ, அவையா? அவைதான் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவிருந்த ஆரம்ப ஆவணங்கள்" என்று கூறினார். "அப்படியானால், அவற்றினைத் தயாரித்தது யார்?" என்று குமார் பொன்னம்பலம் மீண்டும் கேட்டார். "மாநாட்டின் செயலாளரே அதனைத் தயாரித்தார்" என்று ஜெயார் பதிலளித்தார். அதற்கு நகைச்சுவையாகப் பதிலளித்த குமார் பொன்னம்பலம், "மாநாட்டிற்கென்று ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட ஆவணங்கள் எல்லாமே பெற்றொர்கள் என்றால், இணைப்பு சி மட்டும் அநாதைப் பிள்ளையாக நிற்கிறது" என்று முணுமுணுத்தார். இடைமறித்த தொண்டைமானோ இணைப்பு "சி" இனை தான் இந்த மாநாட்டிற்கான ஆவணமாகக் கருதுவாதகத் தெரிவித்தார். மாநாட்டில் கூட்டாகப் பேச முன்வந்த தமிழ்த் தலைவர்கள் மாநாட்டின் முதல் சில நாட்கள் கட்சித் தலைவர்கள் தமது ஆரம்ப அறிக்கைகளை பேச ஒதுக்கப்பட்டிருந்தன. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தை மாதம் 18 ஆம் திகதி தாம் செயற்பட வேண்டிய முறைகுறித்து கூடிப் பேசினார்கள். அதன்படி அமிர்தலிங்கம், குமார் பொன்னம்பலம், தொண்டைமான் ஆகியோ இணைப்பு சி இயினை முற்றாக ஏற்றுக்கொள்வதுடன் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சுயாட்சி பொறுந்திய பிராந்தியங்களை தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைத்து பேசி அழுத்தம் கொடுப்பதென்று முடிவாகியது. தை 19 ஆம் திகதி இந்த மூன்று தலைவர்களினாலும் அழுத்தம் கொடுத்துப் பேசப்பட்ட விடயங்கள் இணைப்பு சி இல் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை முற்றாக நடைமுறைப்படுத்துவதாகவே இருந்தது. அமிரின் மாநாட்டு உரை அமிர்தலிங்கமே முதலாவதாகப் பேசினார். "இணைப்பு சி இல் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே நாம் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கிறோம். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் எமது அவலங்களையும், பிரச்சினைகளையும் முற்றாகத் தீர்க்கப் போதுமானவையாக இல்லாதபோதும், அதனை அடிப்படையாக வைத்து தொடர்ந்தும் பேரம்பேசலில் ஈடுபடலாம் என்கிற எண்ணத்திலேயே இங்கு வந்திருக்கிறோம்" என்று பேசினார். தனது ஆரம்ப உரையினை அமிர் இரு பாகங்களாக வகுத்திருந்தார். முதலாவது பகுதியில் தமிழர்கள் சரித்திர காலம் தொட்டு வடக்குக் கிழக்கில் தம்மைத்தாமே ஆண்டு வந்த தனித்தன்மையான தேசத்து மக்கள் என்று கூறினார். 1619 இல் போர்த்துக்கேயரினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழரின் தேசம் பின்னர் ஒல்லாந்தராலும், அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயரினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடந்தது என்றும் அவர் கூறினார். அதுவரை தனித்தனியாக இருந்த தமிழ்த் தேசத்தையும், சிங்கள தேசங்களையும் 1833 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நிர்வாகத் தேவைக்காக ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து தமிழர்களையும் சிங்களவர்களையும் சமமான இனங்களாக நடத்தினார்கள் என்றும் அவர் விளக்கினார். ஆனால், 1948 இல் நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் சிங்களவர்களால் தமிழர்கள் இரண்டாம்தர மக்களாக நடத்தப்பட்டதோடு, வஞ்சிப்பிற்கும் உள்ளானார்கள் என்று கூறினார். பின்னர் தமிழர் மீது நடத்தப்பட்ட சிங்களவர்களின் புறக்கணிப்பையும், வஞ்சகத்தையும் தொடர்ச்சியாகப் பட்டியலிட்டுக் கூறினார். தனது பேச்சின் இரண்டாவது பகுதியில் தமிழர்கள் இழக்கப்பட்ட தமது உரிமைகளுக்காக நடத்திய அகிம்சை வழி ஜனநாயகப் போரட்டங்களின் சரித்திரத்தைப் பட்டியலிட்டார் அமிர்தலிங்கம். மேலும், தமிழரின் ஜனநாயகவழிப் போராட்டங்களை அரசும், சிங்களக் காடையர்களும் வன்முறைகளைப் பாவித்து மிருகத்தனமாக அடக்கிய வரலாற்றையும் அவர் பட்டியலிட்டார்.தமிழர்கள் மீதான சிங்களவர்களின் வன்முறையே தமிழர்கள் தமது பாதுகாப்பினையும், நலன்களையும் இருப்பினையும் பாதுகாத்துக்கொள்ள தனிநாட்டைத் தவிர வேறு வழியில்லை எனும் எண்ணும் நிலைக்குத் தள்ளிச் சென்றதாக அவர் கூறினார். தனிநாட்டிற்கு மாற்றீடான, வடக்குக் கிழக்கில் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் தீர்வொன்று முன்வைக்கப்படுமிடத்து தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட தமிழர்கள் தயாராக இருப்பதாகக் கூறினார் அமிர்தலிங்கம். குமார் பொன்னம்பலத்தின் உரை குமார் பொன்னம்பலம் அடுத்ததாகப் பேசினார். தமிழர்களின் கோரிக்கை தனிநாடுதான் என்று அவர் கூறினார். மொத்தத் தமிழினமும் தனிநாட்டுக் கோரிக்கையின் பின்னால் அணிதிரண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால், சிங்களவர்களைப் போன்று பாதுகாப்புடனும், நலன்கள் விட்டுக் கொடுக்கப்படாமலும், சுய கெளரவத்துடனும், சம பங்காளிகளாக சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமிடத்து தமிழர்கள் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் குமார் கூறினார். ஏனைய கட்சிகளிடமிருந்து இணைப்பு சி இற்குக் கிடைத்த ஆதரவு பின்னர் பேசிய தொண்டைமானும் அப்துள் அஸீஸும் இணைப்பு சி இல் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வாக இருக்கும் என்று தாம் நம்புவதாகக் கூறினர். இடதுசாரிகளான லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் கம்மியூனிஸ்ட் கட்சி ஆகியனவும் இணைப்பு சி இனை வரவேற்றிருந்தன. அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் மாகாண சபைகளை அமைப்பதை தமது கட்சி ஆதரிக்கும் என்று கூறியது. இணைப்பு சி இற்கு மாநாட்டில் பங்கெடுத்த பெரும்பாலான கட்சிகள் ஆதரவளிக்க ஆரம்பித்ததையடுத்து ஜெயாரும் பிரேமதாசவும் கலக்கமடைந்தனர். இந்த சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வகையான அசெளகரியத்திற்கு முகம் கொடுத்தது என்பதனை தை மாதம் 25 ஆம் திகதி பிரேமதாச வழங்கிய உரை சுட்டிக் காட்டியிருந்தது. மேலுழுந்தவாரியாகப் பேசிய பிரேமதாச, எந்தவொரு முடிவிற்கு முன்வராதும் பிடிகொடுக்காத வகையிலும் பேசினார்.
-
தானே அமைத்த சர்வகட்சி மாநாட்டினைக் குழப்ப பெளத்த மகா சங்கத்தை நாடிய ஜெயவர்த்தன தில்லியில் தான் ஒத்துக்கொண்ட பரிந்துரைகளை கைகழுவி விட ஜெயார் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளும், ஆனால் ஜெயாரை நிர்ப்பந்தித்து அவற்றை மீள சர்வகட்சி மாநாட்டில் கலந்தாலோசிக்க பார்த்தசாரதி மேற்கொண்ட முயற்சியும் சர்வகட்சி மாநாட்டின் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகங்களை மாநாடு ஆரம்பிக்கு முன்னரே ஏற்படுத்தியிருந்தன. இதனால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மிகுந்த வருத்தம் அடைந்திருந்தது. மேலும் எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி மற்றும் சிங்கள இனவாதக் கட்சியான மகஜன எக்சத் பெரமுன ஆகியனவவும் இதுகுறித்துக் கடும் அதிருப்தியை வெளியிட்டு வந்தன. தை மாதம் 7 ஆம் திகதி கூடிய சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இணைப்பு "சி" குறித்து ஜெயாரிடம் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தது. பல மத்திய குழு உறுப்பினர்களைப் பொறுத்தவரை ஜெயார் தம்மை ஏமாற்றவே முனைகிறார் என்று நம்பினர். கூட்டத்தின் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சிறிமா, "எனது கோரிக்கையின் பின்னரே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை சர்வகட்சி மாநாட்டிற்கு அழைத்த ஜெயார், தானே அதுபற்றி தீர்மானம் எடுத்ததாக கூறினார். தற்போது அனைத்துக் கட்சிகளும் தமது பரிந்துரைகளை சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கவேண்டும் என்று கேட்கிறார். ஆனால், அவரது ஐக்கிய தேசியக் கட்சி இதுவரையில் தனது பரிந்துரைகளை முன்வைக்கவில்லை. நாம் முன்வைக்கும் பரிந்துரைகளின்படி தமிழர்களுக்கு பிராந்திய சபைகளை வழங்கிவிட்டு பின்னர் எதிர்க்கட்சியின் கோரிக்கையின்படியே நான் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கினேன் என்று கூறப்போகிறார். ஆகவே, முதலில் ஜனாதிபதியும் அவரது கட்சியும் தமது பரிந்துரைகளை முன்வைக்கட்டும்" என்று கூறினார். எதிர்க்கட்சித் தலைவரான அநுர பேசுகையில், "பார்த்தசாரதியுடன் தானே செய்துகொண்ட ஒப்பந்தத்தை பின்னர் செய்யவில்லை என்று ஜெயார் கூறியிருப்பதன் மூலம், அவர் பார்த்தசாரதியை மட்டும் முட்டாளாக்க எத்தனிக்கவில்லை, முழு நாட்டையுமே முட்டாளாக்க முனைந்திருக்கிறார்" என்று கூறினார். வழமை போலவே சுதந்திரக் கட்சியை வீழ்த்த ஒரு திட்டத்தை வைத்திருந்தார் ஜெயார். பெளத்த உச்ச பீடமான மகா சங்கத்துடன் கூட்டமொன்றினை தை 8 ஆம் திகதி ஜெயார் நடத்தினார். நாட்டிலுள்ள உயர் பெளத்த பிக்குகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். அஸ்கிரிய பீடத்தின் பலிபானே சந்தானந்த மகா நாயக்க தேரை, மதிகே பன்னசீக தேரை, தெலெல்ல தம்மானந்த தேரை, வல்பொல ராகுல தேரை, கென்பிடிகெதர ஞானவன்ச தேரை, பெல்லாவில விமலரத்ண தேரை மற்றும் மாதுலுவே சோபித தேரை ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய பெளத்த பிக்குகள் என்பதுடன் இவர்கள் அனைவரும் மிகத் தீவிரமான சிங்கள பெளத்த இனவாதிகள் என்பதும் குறிப்பிடத் தக்கது. கூட்டத்தில் பேசிய தேரைகள் அனைவரும் தாம் இணைப்பு "சி" யினை எதிர்ப்பதாகவும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலதிகமாக எதனையும் தமிழர்களுக்கு வழங்க அரசாங்கம் முயலும் பட்சத்தில் தாம் அதனைத் தடுத்து நிறுத்திவிடப்போவதாகவும் எச்சரித்தனர். தை மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லை எனும் அறிவிப்பினை சுதந்திரக் கட்சியும், மகஜன எக்சத் பெரமுன கட்சியும் தை மாதம் 8 ஆம் திகதி அறிவித்தன. தாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இணைப்பு "சி" குறித்த விபரங்களை ஜெயார் வழங்கத் தவறியமையை தமது பங்கேற்காமைக்கான காரணமாக அவை முன்வைத்திருந்தன. யாழ்ப்பாணம் சென்ற அமிர் தலைமையிலான குழுவிற்கு நேர்ந்த அவமானம் சமாதான முயற்சிகளுக்கான ஒரு படிக்கல்லாக கருதப்பட்ட சர்வகட்சி மாநாட்டினைக் குழப்ப சிங்கள கடும்போக்குவாதிகளை ஜெயார் உசுப்பிவிட்டிருக்க, ஏற்படவிருக்கும் வன்முறைகச் சுழலில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்ள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டனர். தை மாதம் 8 ஆம் திகதி தமது ஆதரவாளர்களைச் சந்திப்பதற்காக அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோர் யாழ்ப்பாணம் சென்றனர். சர்வகட்சி மாநாட்டில் பங்கெடுக்கக் கூடாது எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் அவர்களை யாழ்ப்பாணத்தில் வரவேற்றன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அவர்கள் சென்றபோது மாணவர்கள் அவர்களைநோக்கி கூச்சல் எழுப்பத் தொடங்கினர். அமிர்தலிங்கத்திற்கும் அவரது சகக்களுக்கும் யாழ்ப்பாணத்தில் கிடைத்த வரவேற்புப்பற்றி கொழும்பின் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் மகிழ்வுடன் செய்தி வெளியிட்டன. அமிர்தலிங்கத்திற்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பிற்கு அவர் பொறுத்தமானவர்தான் என்று அவை எள்ளி நகையாடின. ஆனால், யாழ்ப்பாண மக்கள் எக்காரணத்திற்காக முன்னணியின் தலைவர்களை அவ்வாறு வரவேற்றார்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. இதுகுறித்த செய்தியொன்றினை வெளியிட்ட தி ஐலண்ட் பத்திரிக்கை தை மாதம் 10 ஆம் திகதி அமிர்தலிங்கம் சர்வக்ட்சி மாநாட்டில் பங்கேற்பது போன்ற கேலிச் சித்திரத்தையும் வரைந்திருந்தது. அக்கேலிச் சித்திரத்தில் அமிர்தலிங்கம் தலைமையில் ஆயுதம் தரித்த போராளிகள் மாநாட்டு மண்டபத்தில் நுழைவது போன்று வரையப்பட்டிருந்தது. சென்னையில் அமிர்தலிங்கத்திடம் கோரிக்கையொன்றினை விடுத்திருந்த போராளிகள், அவரை சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டிருந்தன. ஆனால் கொழும்பிலோ, சிங்களப் பத்திரிக்கைகள் போராளிகளை சர்வகட்சிக் கூட்டத்திற்கு தலைமைதாங்கி அழைத்துவருவதாக கேலிச் சித்திரம் வரைந்து மகிழ்ந்தன. சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள அமிர்தலிங்கம் விரும்பியமையினாலேயே யாழ்ப்பாணத்தில் மக்கள் அவர் மீது தமது அதிருப்தியைக் காண்பித்திருந்தார்கள். ஆனால், சிங்களவர்களின் பத்திரிக்கைகளோ அமிர்தலிங்கம் போராளிகளை கூட்டத்திற்கு அழைத்துவர யாழ்ப்பாணம் சென்றிருப்பதாக செய்தியும், கேலிச் சித்திரமும் வெளியிட்டிருந்தன. தமிழர்களின் பிரச்சினை குறித்து எவ்வகையான புரிதலினைச் சிங்களப் பத்திரிக்கைகள் கொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். யாழ்ப்பாணத் தமிழர்கள் முன் நாயகனாகவிருந்து துரோகியாக மாறிய அமிர்தலிங்கம் சர்வகட்சி மாநாடு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நான் அமிர்தலிங்கத்தைச் சந்தித்தேன். டெயிலி நியூஸ் பத்திரிக்கை சார்பாக மாநாட்டு நிகழ்வை செய்தியாக்க நான் அங்கு சென்றிருந்தேன். யாழ்ப்பாணத்தில் தமக்கு நேர்ந்த அவமானம் குறித்து அவர்கள் வருத்தத்துடன் காணப்பட்டனர். "எனது வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கான நாயகனாக நான் வாழ்ந்திருக்கிறேன். ஆனால், தற்போது அவர்கள் என்னை துரோகி என்று அழைக்கிறார்கள். அவர்கள் போகவிருக்கும் பாதை எனது மக்களுக்கு அழிவையும், துன்பங்களையும் கொண்டுவரப்போகிறது. அதைத் தடுக்கவே நான் முயல்கிறேன். இந்த முயற்சியில் ஜெயவர்த்தன எனக்கு உதவுவார் என்று நான் நம்பவில்லை. என்னைப் பலவீனப்படுத்தி, போராளிகளை பலமாக்கி, பின்னர் இராணுவ ரீதியில் அவர்களை முற்றாக அழித்துவிடவே அவர் கங்கணம் கட்டியிருக்கிறார்" என்று அமிர்தலிங்கம் என்னிடம் வருத்தத்துடன் கூறினார். ஜெயவர்த்தனவின் திட்டமும் அதுதான். தனது திட்டத்தினை நிறைவேற்றிக்கொள்ளவே சர்வகட்சி மாநாட்டினை அவர் பயன்படுத்த முடிவெடுத்தார். இத்திட்டத்திற்காக சுமார் ஒருவருட காலத்தை அவரால் பெற்றுக்கொள்ள முடிந்தது. தை மாதம் 10 ஆம் திகதி முதல் மார்கழி 21 வரை சர்வகட்சி மாநாடு தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு எதனையும் வழங்காது அவரால் இழுத்துச் செல்லப்பட்டது. இக்காலத்தில் தனது இராணுவத்தை அவர் பலப்படுத்தினார். தமிழர் தாயகத்தில் பாரிய அளவில் சிங்கள குடியேற்றங்களை முடுக்கிவிட்டார்.
-
இந்தியாவின் அழுத்தத்தினையடுத்து சர்வகட்சி மாநாட்டில் ஜெயார் முன்வைத்த பரிந்துரைகள் இணைப்பு - சி தில்லியில் கலந்தாலோசிக்கப்பட்ட பரிந்துரைகள் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் இணைப்பு "சி" எனும் பெயரில் அனுப்பப்பட்டது. தில்லியில் இடம்பெற்ற முத்தரப்பு பேச்சுக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இணைப்பு "சி" பரிந்துரைகள் சர்வகட்சி மாநாட்டில் கலந்தாலோசிக்கப்படவென முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளான இவை, இலங்கையின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையினையும் பாதிக்காத வகையில் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது. சர்வகட்சி மாநாடில் பேசப்படப்போகும் விடயங்கள் இப்பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இடம்பெற்றிருந்தன. 1. ஒரு மாகாணத்திற்குள் அமைந்திருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் ஒரு பிராந்திய சபையாக ஒருங்கிணைவதற்கு அந்தந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் சம்மதமும், அம்மாவட்டங்களில் நடத்தப்படும் சர்வஜன் வாக்கெடுப்பும் அவசியமாகும். 2.வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளில் ஏதாவது ஒன்று உறுப்பினர்களின் விலகினால் ஸ்தபிதம் அடையுமிடத்து, அம்மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்ட அபிவிருத்திச் சபைகளுடன் குறிப்பிட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை இணைத்துக் கொள்ளப்படலாம். 3. உத்தேச பிராந்தியம் ஒவ்வொன்றும் விரும்பினால் தமக்கான பிராந்திய சபை ஒன்றினை உருவாக்கிக்கொள்ள முடியும். இப்பிராந்தியத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட கட்சியின் உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி இப்பிராந்தியத்தின் முதலமைச்சராக நியமிப்பார். இப்பிராந்தியத்தின் அதிகார சபைக்கான அமைச்சர்களை முதலைமைச்சரே நியமிப்பார். 4. நாட்டின் இறையாண்மை, பூகோள ஸ்திரத்தன்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நாட்டின் அபிவிருத்தி உள்ளிட்ட, பிராந்திய அதிகார சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாத ஏனைய விடயங்கள் யாவும் ஜனாதிபதியினதும், பாராளுமன்றத்தினதும் பொறுப்பில் இருக்கும். 5. பிராந்தியங்களின் செயற்பாடுகளுக்கான கொள்கைகளை அப்பிராந்தியங்களே உருவாக்க முடியும். பிராந்தியங்களுக்கான சட்டம் ஒழுங்கு, சமூக பொருளாதார அபிவிருத்தி, கலாசார விடயங்கள், நிலக் கொள்கை ஆகிய விடயங்கள் ஆகியவை பிராந்திய சபைகளினால் உருவாக்கப்படும். 6. மேலும், பிராந்தியங்களுக்கான வரி அறவிடல், சேவைகளுக்கான கட்டணம், பிராந்திய அபிவிருத்திக்கான கடன்களை மக்களுக்கு வழங்குதல், இக்கடன்களுக்கான நிதியுதவியை மத்திய அரசிடமிருந்து ஒழுங்குசெய்தல் ஆகியவை பிராந்திய சபைகளால் மேற்கொள்ளப்படும். மத்திய அரசினால் நியமிக்கப்படும் பிரதிநிதிகளால் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் பகிர்ந்தளிக்கப்படும் நிதியின் அளவு பரிந்துரைக்கப்படும். 7. பிராந்தியங்கள் தமக்கான உயர் நீதிமன்றங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். நாட்டின் அரசியலமைப்பு மற்றும் மேல்முறையீடு தொடர்பான விடயங்களை உச்ச நீதிமன்றம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். 8. ஒவ்வொரு பிராந்திய சபையும் தமக்கான அதிகாரிகள் மற்றும் பொதுச் சேவை அலுவலர்களை அப்பிராந்தியத்தில் இருந்து நியமிக்கும். வேறு பிராந்திய சபைகளில் வதியும் அதிகாரிகள் அலுவலர்களையும் ஒரு பிராந்திய சபை சேவைக்கு அமர்த்திக் கொள்ளலாம். பொதுச் சேவைக்கான ஆட்சேர்ப்பிற்காகவும், ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காகவும் பிராந்திய சபைகள் தாம் உருவாக்கும் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உதவியை நாட முடியும். 9. நாட்டின் சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப இராணுவத்திற்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கடமையில் அமர்த்தப்படும் பொலீஸ் உத்தியோகத்தர்கள் இப்பிராந்தியங்களின் சனத்தொகை விகிதாசாரத்திற்கு அமைவாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள். 10. திருகோணமலை துறைமுகத்தினை மத்திய அரசினால் அமைக்கப்படும் துறைமுக அதிகார சபை பொறுப்பில் வைத்துக்கொள்ளும். துறைமுகமும் அதுஅமைந்திருக்கும் பிரதேசமும் துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டில் இருப்பதோடு இச்சபைக்கு வழங்கப்படவிருக்கும் அதிகாரங்கள் பற்றி விரிவாக பின்னர் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும். 11. நிலப்பங்கீடு தொடர்பான தேசியக் கொள்கை ஒன்று அமைக்கப்படுவதோடு, இதன் அடிப்படையிலேயே குடியேற்றங்களை அரசாங்கம் முன்னெடுக்கும். பாரிய அபிவிருத்தித் திட்டங்களைத் தவிர்த்து ஏனைய குடியேற்றத் திட்டங்கள் அனைத்துக்குமான நிலப் பங்கீடு அந்தந்த பகுதிகளின் இன விகிதாசாரத்திற்கு அமைவாகவும், ஏற்கனவே இருக்கும் இனப்பரம்பலினை பாதிக்காத வகையிலும் மேற்கொள்ளப்படும். 12. அரசியலமைப்பிற்கு அமைவாக உத்தியோகபூர்வ மொழியான சிங்களமும், தேசிய மொழியான தமிழும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அமுல்ப்படுத்தப்படும். இதேவகையான சட்டங்கள் தேசிய கீதம், தேசியக் கொடி ஆகியவற்றிற்கும் நடைமுறைப்படுத்தப்படும். 13. சர்வகட்சி மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களை அரசியல் யாப்பில் இணைத்துக்கொள்வதற்காகவும், இது தொடர்பான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவும் ஆணைக்குழு ஒன்று ஏற்படுத்தப்படும். இதற்குத் தேவையான செயலகத்தினையும், சட்ட அலுவலக வசதிகளையும் மத்திய அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும். 14. சர்வகட்சி மாநாட்டில் தீர்மானிக்கப்படும் விடயங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட மந்திரி சபையினாலும், ஏனைய கட்சிகளின் தீர்மானம் எடுக்கக் கூடிய அமைப்புக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்படுவதற்காக முன்வைக்கப்படும்.
-
அமிர்தலிங்கத்தை சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கோரிய ஆயுத அமைப்புக்களும், பங்கெடுக்க அழுத்தம் கொடுத்த இந்தியாவும் தில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமிர்தலிங்கம், ஜெயார் தான் வழங்கிய வாக்கிலிருந்து பின்வாங்கிவிட்டார் என்று குற்றம் சுமத்தினார். தமது கட்சியைப் பொறுத்தவரையில் ஈழக் கோரிக்கை தொடர்பாக உறுதியாகவே இருப்பதாகக் கூறினார். ஈழத்திற்கு மாற்றான , நிகரான தீர்வொன்று முன்வைக்கப்படுமிடத்து தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிடத் தாம் தயாராக இருக்கிறோம் என்பதை ஆரம்பத்திலிருந்தே தமது கட்சி வலியுறுத்திவருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அழைப்பிதழின் இரண்டாவது இணைப்பில் குறிப்பிடப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இணைப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு என்பதனையும் தாம் எற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறினார். சென்னையில் போராளிகளைச் சந்திப்பதற்காகக் கூட்டம் ஒன்றினை நடதத் திட்டமிட்டார் அமிர். சர்வகட்சி மாநாட்டில் தான் பேசிய விடயங்கள் குறித்து அவர்களுடன் தான் பேச விரும்புவதாக அவர் கூறியிருந்தார். ஆனால், எந்த ஆயுத அமைப்பும் அமிரின் கோரிக்கைக்குப் பதில் வழங்கவில்லை. மூன்றாம் தரப்பினரூடாக அமிருக்குப் பதிலளித்த போராளி அமைப்புக்கள் அமிர் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதை தாம் எதிர்ப்பதாக மட்டும் கூறியிருந்தார்கள். "அங்கு போய் எந்த விடயத்தைப் பற்றிக் கலந்தாலோசிக்கப் போகிறீர்கள்? தனிநாட்டினை விட்டுக் கொடுக்கிறோம் என்பதனையா?" என்று அவர்கள் கோபத்துடன் கேட்டிருந்தார்கள். அமிர்தலிங்கம் சர்வகட்சி மாநாட்டிறகுச் செல்லக்கூடாது என்று மீண்டும் ஒருமுறை அவர்கள் கோரினார்கள். பார்த்தசாரதியின் அழுத்தத்திற்கு அடிபணிந்த ஜெயார் தை மாதம் 3 ஆம் திகதி கொழும்பு வந்திருந்த பார்த்தசாரதி அன்று மாலை ஜெயாரைச் சந்தித்தார். தில்லியில் இந்திரா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட விடயங்களுக்கு அமைவாக சற்று அதிகாரம் மிக்க தொனியிலேயே பாரத்தசாரதி ஜெயாருடன் பேசினார். இந்திராவுடனான பேச்சுக்களில் ஜெயார் ஒத்துக்கொண்ட விடயங்களை அவர் பின்னர் கைவிட்டதற்கான காரணங்களாக அமெரிக்க ஜெனரலான வோல்ட்டர்ஸின் வருகை, புதிய ஆயுதக் கொள்வனவுகள், வெளிநாட்டுக் கூலிப்படையினரின் உதவிகள் ஆகியவையே அமைந்திருந்தனவா என்று பார்த்தசாரதி ஜெயாருடனான பேச்சுக்களின்போது வினவியிருந்தார். தமிழர்களின் பாதுகாப்பும், நலன்களும் பாதுகாக்கப்படும்வரை அவர்கள் தமது தனிநாட்டிற்கான கோரிக்கையினைக் கைவிடப்போவதில்லை என்று ஜெயாரிடம் தெரிவித்தார் பார்த்தசாரதி. ஒன்றிணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மகாணங்களில் தமிழர்கள் சுயாட்சி அதிகாரத்தை கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே அவர்களின் பாதுகாப்பும் நலன்களும் உறுதிப்படுத்தப்படும் என்றும், இப்பிரதேசத்திற்கு வெளியே வாழும் தமிழர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதும் அவசியம் என்றும் அவர் மேலும் எடுத்துரைத்தார். பார்த்தசாரதியின் கடுமையான பேச்சுக்களின் பின்னர் விட்டுக் கொடுப்பினை மேற்கொள்ள முனைந்த ஜெயார், தனக்கும் பார்த்தசாரதிக்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சுக்களின் சாராம்சத்தை இணைப்பு "சி" எனும் தலைப்பில் வெளியிட்டார். மறுநாளான, தைமாதம் 4 ஆம் திகதி அமிர்தலிங்கத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட பார்த்தசாரதி அவரை உடனடியாக கொழும்பிற்கு வருமாறு அழைத்தார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் மற்றும் தங்கத்துரை ஆகிய முன்னணியின் தலைவர்கள் கொழும்பை வந்தடைந்தனர். விமான நிலையத்திலிருந்து புறக்கோட்டையில் அமைந்திருந்த தப்ரொபேன் விடுதிக்கு ராணுவ அணியினரின் பாதுகாப்புடன் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். விடுதியில் இரண்டாவது மாடியில் அவர்கள் தங்குவதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன. அவர்களுக்குப் பாதுகாப்பாக இராணுவ அணியொன்று அங்கு நிலை நிறுத்தப்பட்டது. கொழும்பை வந்தடைந்தவுடன் அவர்கள் பார்த்தசாரதியைச் சந்தித்து உரையாடினார்கள். அங்கு பேசிய பார்த்தசாரதி முன்னணியினர் கட்டாயம் சர்வகட்சி மாநாட்டில் தொடர்ந்தும் பங்கெடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மாநாட்டில் தமக்குத் தேவையான அனைத்துக் கோரிக்கைகளையும் அவர்கள் எழுப்ப வேண்டும் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார். ஜெயாரை இலங்கைக்குக் கிடைத்த மிகப்பெரிய சாபம் என்று வர்ணித்த அமிர்தலிங்கம் முன்னணியின் தலைவர்களை நான் தப்ரொபேன் விடுதியில் சென்று சந்தித்தேன். அமிர்தலிங்கம் சோபையிழந்து காணப்பட்டார். தாம் கடும் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது தமக்குக் கவலையினை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார். "இந்த நாடு எத்துணை கேவலாமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். இந்த நகரத்தின் வீதிகளில்த்தானே நாம் இரவு பகலாக நடந்து திரிந்தோம்?" என்று அவர் சோகத்துடன் கூறினார். பின்னர் என்னைப் பார்த்து, "எனக்குப் பின் எதிர்க்கட்சித் தலைவராக வந்த அநுரா எப்படி இருக்கிறார்?" என்று வினவினார். மேலும், "சர்வகட்சி மாநாட்டில் சுதந்திரக் கட்சி பங்கெடுக்குமா?" என்றும் கேட்டார். நான் இதுகுறித்து அனுராவிடம் இரு தினங்களுக்கு முன்னர் கேட்டுக்கொண்டதாக அமிரிடம் கூறினேன். என்னிடம் பதிலளித்த அநுர, "தான் எடுக்கும் முடிவினை நடைமுறைப்படுத்த துணிவற்ற ஒரு மனிதரை நான் எப்படி நம்பமுடியும்?" என்று கேட்டிருந்தார். ஜெயாரை நம்ப முடியாமைக்கான காரணங்களை அநுரா மூன்று சம்பவங்களை முன்வைத்து விளக்கியிருந்தார். முதலாவது, பார்த்தசாரதியுடனான தனது ஒப்பந்தத்தை தான் செய்யவில்லை என்று மறுதலித்தமை. இரண்டாவது, இணைப்பு இரண்டில் தானே வெளியிட்ட பரிந்துரைகளை இந்தியாவின் அழுத்தத்தினால் தான் செய்யவில்லை என்று மறுதலித்தமை. மூன்றாவது, சர்வகட்சி மாநாட்டிற்கு முன்னணியினரை அழைக்க அச்சப்பட்டிருந்த ஜெயார், சிறிமா துணிவாக, "அவர்களை அழையுங்கள்" என்று கூறியபின்னரே உத்தியோகபூர்வமாக முன்னணியினரை அழைக்க முன்வந்தமை. நான் கூறிய கருத்தினைக் கேட்டுக்கொண்ட அமிர் சிரிக்கத் தொடங்கினார். "ஜெயார் ஒரு ஏமாற்றுப் பேர்வழி. அவர் பார்த்தசாரதியை எப்படி ஏமாற்றினார் என்பதைப் பார்த்தீர்கள் தானே? பார்த்தசாரதியுடனான ஒப்பந்தத்தில் கைய்யொப்பம் இடுவதை சாதுரியமாகத் தவிர்த்துக்கொண்ட ஜெயார், பின்னர் அவ்வொப்பந்தத்தில் கையொப்பமிடவில்லையென்பதால், அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு எனக்குக் கிடையாது என்று கூறினாரே? இந்த நாட்டின் மேல் விழுந்த மிகப்பெரிய சாபம் ஜெயவர்த்தன" என்று அமிர் கூறிமுடித்தார். சிங்கள மக்களிடையே இருந்து தமிழரின் அவலங்கள் குறித்த உண்மையான பிரக்ஞை ஏற்படும்வரை தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியாது என்று அமிர்தலிங்கம் என்னிடம் கூறினார். மேலும் இந்த நாடு எதிர்கொள்ளும் அடுத்த சாபம் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையே இருக்கும் போட்டிதான் என்றும் அவர் கூறினார். "இக்கட்சிகளுக்கிடையிலான எதிர்ப்புணர்வு இன்று ஒரு போட்டியாகவே மாறிவிட்டது. தமிழர்களின் விரக்திக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இக்கட்சிகள் இரண்டிற்கும் இடையே இருக்கும் போட்டி மனப்பான்மைதான்" என்றும் அவர் கூறினார்.
-
இந்த யுத்தம் தொடர்பான எனது அடிப்படை புரிதலில் மாற்றமில்லை மருதர். உக்ரேன் இறையாண்மையுள்ள ஒரு நாடு. ரஸ்ஸிய நடத்துவது ஆக்கிரமிப்பு என்பதில் நான் சிறிதும் சந்தேகம் கொள்ளவில்லை. எனது அக்கறையெல்லாம் இருபக்கமும் நடக்கும் அழிவுதான். அதானால்த்தான் இந்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்கிறேன். இந்த யுத்தத்தைப் பாவித்து தமது சொந்த நலன்களை அடைந்துகொள்ள விரும்பும் மேற்குலகாகட்டும், அல்லது ரஸ்ஸியாவிற்கு ஆயுதம் விற்கும் வடகொரியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளாகட்டும், இவை எதுவுமே ஆக்கிரமிக்கப்படும் உக்ரேனியர்களுக்காகவோ அல்லது கொல்லப்படும் ரஸ்ஸிய வீரர்களுக்காகவோ அனுதாபப்படவில்லை. பல வியாபாரிகளின் நலன்களுக்காகவும், ஒரு அதிகாரி வெறி பிடித்த சர்வாதிகாரிக்காகவும் அப்பாவி உக்ரேனியர்களும், ரஸ்ஸிய வீரர்களும் மாண்டு வருகிறார்கள்.
-
சர்வகட்சி மாநாட்டு அழைப்பிதழில் ஜெயார் செய்த தில்லுமுள்ளும் அதிலிருந்து அவர் மீள செய்துகொண்ட பகீரதப் பிரயத்தனமும் சர்வகட்சி மாநாட்டிற்கு தனக்கு வந்த அழைப்பிதழில் இரண்டாவது இணைப்பாக வந்திருந்த விடயங்களைப் பார்த்தபோது அமிர்தலிங்கம் வருத்தமடைந்தார். உடனடியாக தில்லியில் இருக்கும் பார்த்தசாரதியுடன் தொடர்பு கொண்டார். அவருடன் சினத்துடன் பேசிய அமிர்தலிங்கம், "கிழட்டு நரி தனது வேலைகளை மறுபடியும் ஆரம்பித்து விட்டது" என்று பார்த்தசாரதியிடம் கூறினார். தனிநாட்டிற்கான கோரிக்கையினைக் கைவிடவேண்டும் என்கிற கோரிக்கையினை முதலாவது கோரிக்கையாக ஜெயார் இட்டிருக்கிறார் என்று அவர் கூறினார். "போராளிகளை எமக்கெதிராகத் திருப்பிவிடவே இதனை அவர் செய்கிறார்" என்று அவர் கூறினார். மேலும், தில்லியில் தன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை சர்வகட்சி மாநாட்டில் பேசப்படப்போகும் விடயங்களின் பட்டியலில் ஜெயார் சேர்க்கவில்லை என்பதையும் அமிர் பார்த்தசாரதியிடம் சுட்டிக் காட்டினார். ஜெயார் புதிய பரிந்துரைகளை தன்பாட்டிற்குப் பட்டியலிட்டிருந்தார். முத்தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை முழுவதுமாக மாற்றி, வலுவிழக்கச் செய்தே தனது புதிய பரிந்துரைகளை ஜெயார் வரைந்திருந்ததை அமிர் கண்டுகொண்டார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இணைப்பது தொடர்பாக தில்லியில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு இரு பகுதிகளைக் கொண்டிருந்தது. முதலாவது பகுதியில் இரு மாவட்ட அபிவிருத்திச் சபைகள், பொதுவாக எவ்வாறு இணைத்து பிராந்திய அலகாக மாற்றிக்கொள்ள முடியும் என்பது பற்றிப் பேசியிருந்தது. இதன்படி சம்பந்தப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை உறுப்பினர்களின் சம்மதத்தினூடாகவும், அச்சபைகளில் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பினூடாகவும் அவை இணைத்துக்கொள்ளப்படலாம் என்றும் கூறியிருந்தது. ஆனால், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு இச்சரத்தில் விதிவிலக்களிக்கப்பட்டிருந்தது. இந்த மாகாணங்களில் அமையும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளில் உறுப்பினர்கள் பதவி விலகுவதனால் மாவட்ட அபிவிருத்திச் சபைகளில் ஒன்று செயலற்றுப் போகுமிடத்து, அச்சபை அம்மாகாணங்களில் மீதமிருக்கும் சபைகளுடன் இணைத்துக்கொள்ளப்பட முடியும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், முன்னணியினருக்கு ஜெயார் அனுப்பிவைத்த அழைப்பிதழின் இரண்டாவது இணைப்பில் மேற்குறிப்பிட்ட விதிவிலக்கினை முற்றாக அகற்றியிருந்தார். மேலும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையே நாடு முழுவதற்கும் அமுல்ப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தில்லியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை ஜெயார் மறுதலித்து, புதிதாக தனது திட்டங்களை அறிமுகப்படித்தியிருக்கும் சூழ்நிலையில் இதுகுறித்துப் பேசுவதற்காக முன்னணியினரை தில்லிக்கு வருமாறு பார்த்தசாரதி அழைத்தார். அன்று மாலையே தில்லிக்குப் பயணமான அமிரும், சிவசிதம்பரமும் பார்த்தசாரதியையும் நரசிம்மராவையும் மாலை சந்தித்ததுடன் அன்றிரவே இந்திரா காந்தியையும் சந்தித்தனர். ஜெயாரின் சூட்சுமம் பற்றிக் கேள்விப்பட்டபோது இந்திரா மிகுந்த கோபமடைந்தார். தனக்குக் கொடுத்த வாக்கிற்கு எதிராகச் சென்று, தன்னை ஜெயார் அவமானப்படுத்தியிருப்பதாக இந்திரா கருதினார். "நீங்கள் கவலைப்பட வேண்டாம், நான் இதனைப் பார்த்துக்கொள்கிறேன்" என்று அவர் முன்னணியினரிடம் கூறினார். இந்திரா உடனடியாக இரு விடயங்களைச் செய்தார். அன்றிரவே, மார்கழி 30 ஆம் திகதி, ஜெயாரை தொலைபேசியில் அழைத்த இந்திரா ஜெயாரின் மாற்றத்தால் தமிழர்களும் முன்னணியினரும் மிகுந்த கவலை அடைந்திருப்பதாகக் கூறினார். இதனைச் சரிசெய்வதற்கு பார்த்தசாரதியை உடனடியாக கொழும்பிற்கு அனுப்பத் தான் எண்ணியுள்ளதாக அவர் கூறினார். இதுகுறித்து தனது மந்திரி சபையில் பேசிய ஜெயார், பார்த்தசாரதியின் கொழும்பு வருகையினை தான் வரவேற்பதாக இந்திராவிடம் கூறினார். போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்க முடிவெடுத்த இந்திராவும், அலட்டிக்கொள்ளத பிரபாகரனும் மறுநாள், மார்கழி 31 ஆம் திகதி தனது உயர்மட்ட அதிகாரிகளை தில்லியில் கூட்டமொன்றிற்கு அழைத்தார் இந்திரா. வெளிவிவாகர அமைச்சர் நரசிம்மராவ், வெளியுறவுச் செயலாளர் ரஸ்கோத்ரா, பார்த்தசாரதி, இலங்கை தொடர்பான விடயங்களைக் கையாளும் காவோ, சங்கரன் நாயர் மற்றும் சக்ஸேனா ஆகியோர் கூட்டத்தில் பிரசன்னமாகியிருந்தனர். இரு முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன. முதலாவது வெளிவிவகாரத்துறை தொடர்ந்தும் சமரச பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது. இரண்டாவது இலங்கை தொடர்பான தனது நடவடிக்கைகளை ரோ மேலும் விஸ்த்தரிப்பது. இரண்டாவது தீர்மானத்திற்கு அமைவாக ரோவிற்கு மேலதிக நிதி இலங்கை தொடர்பான விடயங்களை விஸ்த்தரிக்க ஒதுக்கப்பட்டது. மேலும், தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்களை வழங்குமாறும் ரோ பணிக்கப்பட்டது. போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்களை வழங்க இந்திரா எடுத்துக்கொண்ட தீர்மானம் பற்றி போராளிகள் அறிந்துகொண்டபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தமது அமைப்புக்களில் பயிற்சிகளுக்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்குமாறும் ரோவினால் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். போராளிகளுக்கு முதன்முதலாக இந்திய ஆயுதங்கள் வழங்கப்பட்ட நிகழ்வினை ஈரோஸ் அமைப்பின் அருளர் எனப்படும் அருட்பிரகாசம் இவ்வாறு பகிந்துகொண்டார். "நாம் மிகுந்த மகிழ்சிக்குள்ளானோம். நிலைமை மாறிவருவதை நாம் உணர்ந்துகொண்டோம். எல்லோருமே மிகுந்த மகிழ்ச்சியுடனும் , உற்சாகத்துடனும் காணப்பட்டார்கள்" என்று கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில் ரஸ்ஸியாவில் தயாரிக்கப்பட்ட புத்தம்புதிய துப்பாக்கிகள் பெட்டிகளில் வந்திறங்கியதாகக் கூறினார். புலிகளும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. புலிகளின் மூத்த தலைவர்களும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். குறிப்பாக, கிட்டு மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ஆனால், பிரபாகரனுக்கு இந்த ஆயுத வழங்கல் நிகழ்வு அதிகம் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கவில்லை. "நாம் எமக்கென்று சொந்தமாக ஆயுதங்களை வெளியே வாங்கத் தொடங்கவேண்டும்" என்று அவர் தனது போராளிகளைப் பார்த்துக் கூறினார். "ஏன் வாங்கவேண்டும், இந்தியாதான் எமக்குத் தேவையானளவு ஆயுதங்களைத் தருகிறதே?" என்று கிட்டு பிரபாகரனைப் பார்த்துக் கேட்டார். தனது முடிவிற்கு இரு காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன். "எமக்குத் தரும் ஆயுதங்களின் மூலமாக எம்மைக் கட்டுப்படுத்த இந்தியா முயலும். தனது கொள்கை முடிவுகளை எம்மைப் பாவிப்பதன் மூலம் இந்தியா அடைந்துகொள்ள நிச்சயமாக முயற்சிக்கும். அதாவது, நாம் எமது இலட்சியமான தமிழ் ஈழத்தை அடைவதை இந்தியா தடுத்துவிடும்" என்று பிரபாகரன் கூறினார். இரண்டாவது காரணமாக பிரபாகரன் முன்வைத்த விடயம் தனித்துவமானது. "இந்தியா எல்லாப் போராளி அமைப்புக்களுக்கும் ஒரேவகையான ஆயுதங்களையே கொடுத்து வருகிறது. ஆனால், நாம் தனிச்சிறப்பானவர்களாகவும், மற்றைய அமைப்புக்களைக் காட்டிலும் திறமையானவர்களாகவும் திகழவேண்டுமானால், எமக்கென்று வேறு ஆயுதங்களை நாம் இப்போதே கொள்வனவு செய்துகொள்ளவேண்டும் என்று கூறினார். பிரபாகரனின் வாழ்க்கையில் முக்கிய மைல்க்கல்லாகக் கருதப்படும் 1984 ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட இந்த தீர்மானம் அமைந்திருந்தது. இதுகுறித்து பின்னர் பார்க்கலாம். ஜெயாரின் சூட்சுமம் சர்வகட்சி மாநாட்டிற்கான அழைப்பும், அதனுடனான இணைப்புக்களும் கொழும்பில் வெளிவந்தன. இலத்தரணியல் சாதனங்களும், பத்திரிக்கைகளும் இச்செய்தியை வெளிக்கொண்டுவந்திருந்தன. சர்வகட்சி மாநாட்டின் செயலாளராக நியமிக்கப்பட்ட பீலிக்ஸ் டயஸ் அபயசிங்க மார்கழி 30 ஆம் திகதி பத்திரிக்கை அறிக்கையொன்றினை வெளியிட்டார். "இணைப்பு இரண்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துக்கள் எவையும் அரசாங்கத்தாலோ அல்லது வேறு எந்த அரசியற் கட்சியினாலுமோ முன்மொழியப்பட்டவை அல்ல. சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டு பரிந்துரைக்கப்படும் விடயங்கள் மட்டுமே பின்னர் அரசாங்கத்தினாலும், ஏனைய கட்சிகளினாலும் கருத்தில் எடுக்கப்படும்" என்று அவ்வறிக்கை கூறியது. அபயசிங்கவின் அலுவலகம் கொழும்பிலுள்ள பத்திரிகைக் காரியாலயங்களைத் தொடர்பு கொண்டு தனது அறிக்கையினை பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டது. மேலும், மாநாட்டிற்கான அழைப்பிதழையும், இணைப்புக்களையும் வெளியிட ஜனாதிபதி விரும்புவதாகவும் அலுவலகம் கூறியது. இந்திரா காந்தியின் தொலைபேசி அழைப்பினையடுத்தே தான் வெளியிட்ட இணைப்பின் சரத்துக்களை உடனடியாக இல்லையென்று மறுதலிக்கும் நிலைமைக்கு ஜெயாரையும் அவரது அரசாங்கத்தையும் தள்ளியிருந்தது. தில்லியில் இந்திராவுடனும், பார்த்தசாரதியுடனும் தான் செய்துகொண்ட இணக்கப்பாட்டிலிருந்து தன்னை சாதுரியமாக விலத்திக்கொண்ட ஜெயார், இறுதியில் தன்னிச்சையாக வெளியிட்ட அழைப்பிதழின் இணைப்பில் குறிப்பிட்ட விடயங்களிலிருந்தும் தன்னை அந்நியப்படுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தில்லியில் தான் செய்துகொண்ட இணக்கப்பாட்டிற்கு பெளத்த பிக்குகளிடமிருந்து வந்த கடுமையான எதிர்ப்பினையடுத்து அதிலிருந்து ஜெயார் பின்வாங்கி தன்னை அந்நியப்படுத்தியிருந்தார். தில்லியில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் தான் கையொப்பம் இடாமையினால், அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தனக்குக் கிடையாது என்று பெளத்தர்களிடம் அவர் கூறினார். ஆனால், தில்லி ஆவணத்தில் தானாகவே முன்வந்து கையொப்பம் இட ஜெயார் முயன்ற விடயம் வெளித்தெரிய ஆரம்பித்தபோது, "அது எனது பரிந்துரைகள் அல்ல, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரே அதனை முன்வைத்தனர்" என்று கூறி தப்பிக்க முயன்றார். தனது இரட்டை வேஷத்தை மிகவும் சாதுரியமாக 1984 ஆம் ஆண்டு சித்திரை 30 ஆம் திகதி இந்தியா டுடே சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியிலும் ஜெயார் கையாண்டார். ஜெயாரின் இரட்டை வேசத்தை சர்வகட்சி மாநாட்டில் போட்டுடைத்த அமிர்தலிங்கம் வைகாசி 9 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டில் அமிர்தலிங்கம் வெளியிட்ட அறிக்கையில் ஜெயார் கூறுவதுபோல தில்லியில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தனது கட்சியினால் முன்வைக்கப்படவை அல்ல என்று முற்றாக மறுதலித்தார். முத்தரப்பினாலும் மேற்கொள்ளப்பட விடயங்களை காலக்கிரமமாக விபரித்தார் அமிர்தலிங்கம். ஆடி 28 மற்றும் மார்கழி 30 ஆம் திகதி ஜெயாருடனான இந்திராவின் தொலைபேசி அழைப்புக்கள், பார்த்தசாரதியுடன் ஜெயார் மேற்கொண்ட மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகள் என்று நடந்த விடயங்களை விளக்கியதுடன், தில்லியில் முத்தரப்பினாலும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ஜெயார் முற்றாக ஏற்றுக்கொண்டதை இந்திராவும் பார்த்தசாரதியும் தன்னிடம் உறுதிப்படுத்தியதாகவும் சர்வகட்சி மாநாட்டில் வெளிப்படையாகத் தெரியப்படுத்தினார். தானே தன்னிச்சையாக வெளியிட்ட அழைப்பிதழின் இணைப்புக்களிடமிருந்து தன்னை ஜெயார் அந்நியப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையினை இந்திரா மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தியயிருந்ததை முன்னர் குறிப்பிட்டிருந்தேன். அதே அழைப்பில் இன்னொரு விடயத்தையும் இந்திரா குறிப்பிட்டிருந்தார். அதுதான், இரண்டாவது இணைப்பினை ஜெயார் மீளப்பெற்றுக்கொள்ளாதவிடத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லை என்பது. ஆகவே, இந்த இணைப்பில் குறிப்பிடப்பட்ட விடயங்களை சர்வகட்சி மாநாட்டின் செயலாளரே தனக்குத் தெரியாமல் இணைத்துவிட்டார் என்று கூறி ஜெயார் தப்பிக்க வேண்டியதாயிற்று.
-
தவறுதான், ஏற்றுக்கொள்கிறேன்.
-
ரஸ்ஸியாவுக்குக் கடுமையான இழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதேயளவு இழப்புக்கள் உக்ரேன் பக்கத்திலும் ஏற்பட்டிருக்கின்றன. இந்த வீணான போரின்மூலம் ரஸ்ஸிய வல்லரசின் ராணுவ பலம் பலவீனப்பட்டிருக்கும் அதேவேளை உக்ரேனின் பல கட்டுமானங்கள் நிரந்தரமாகவே ரஸ்ஸியாவால் அழிக்கப்பட்டிருக்கின்றன. போர் நீண்டு முடிவின்றிச் செல்கிறது. ரஸ்ஸியா தானாகவே விரும்பி நிறுத்தினால் ஒழிய இப்போர் நிற்கப்போவதில்லை. உக்ரேனினால் ரஸ்ஸியாவை தனது நாட்டிலிருந்து விரட்டும் பலம் எப்போதுமே இருக்கப்போவதில்லை. மேற்குலகின் உதவிகள் வற்றத் தொடங்கியிருக்கும் இவ்வேளை, தனது எதிர்த்தாக்குதல் இன்னமும் வீரியம் இழக்கவில்லை என்பதைக் காட்ட செலென்ஸ்கி படாத பாடு படுவது தெரிகிறது. தேவையற்ற அநியாய யுத்தம். நிறுத்தப்பட வேண்டும். ரஸ்ஸியாவும் உக்ரேனும் வீம்பிற்குப் போரிடுவதை நிறுத்தி இரு நாட்டு மக்களும் நிம்மதியாக வாழ வழி விடவேண்டும்.
-
சர்வகட்சி மாநாடு - ஜெயவர்த்தனவின் சூழ்ச்சி சர்வகட்சி மாநாட்டிற்கான அழைப்பு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு வந்து சேரும்வரைக்கும் அனைத்து விடயங்களும் சிற்ப்பாக நடந்துவருவது போன்ற தோற்றப்பாட்டினையே உருவாக்கியிருந்தது. மக்கள் விடுதலை முன்னணி, நவ சம சமாஜக் கட்சி ஆகிய கட்சிகள் ஜெயாரினால் தடைசெய்யப்பட்டிருந்ததையடுத்து ஏனைய அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வந்த ஜெயார், தான் தில்லியில் நடத்திய பேச்சுக்கள் குறித்து அவர்களுக்கு விளக்கியதுடன், அவைகுறித்த ஒருமித்த கருத்தினை ஏற்படுத்தவே தான் சர்வகட்சி மாநாட்டினை கூட்டவிருப்பதாக கூறத் தொடங்கினார். அரசியல்க் கட்சித் தலைவர்களை சந்தித்து வந்த அதேவேளை பல பெளத்த மதகுருக்களின் அமைப்புக்களையும் அவர் சந்திக்கத் தவறவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் தம் பங்கிற்கு சில சந்திப்புக்களை மேற்கொண்டனர். எம்.ஜி.ஆர், கருநாநிதி உட்பட பல தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைச் சந்தித்த அவர்கள் ஜெயவர்த்தனவுக்கும் பாரத்தசாரத்திக்கும் இடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு குறித்து விளக்கமளித்தனர். மேலும், ஆயுத அமைப்புக்காளான புலிகள், புளொட், டெலோ, ஈரோஸ் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடமும் இதுகுறித்துப் பேசினர். அதிகாரம் கொண்ட பிராந்திய அலகுகள் மற்றும் அவற்றுக்குக் கொடுக்கப்படவிருக்கும் மிகக்குறைந்த அதிகாரங்கள் குறித்த தமது கடுமையான அதிருப்தியினை போராளி அமைப்புக்கள் முன்னணியினரிடம் தெரிவித்தனர். இதன்பின்னர், போராளி அமைப்புக்கள் இந்த முயற்சிகளுக்கான தமது எதிர்ப்பினை முன்னணியின் தலைவர்களிடம் முன்வைத்தனர். குறிப்பாக, பிரபாகரன் தனது விமர்சனத்தில் "தமிழ் மக்களின் ஆணையினை நிராகரிக்க முன்னணியினருக்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்று வாதிட்டார். போராளிகளைச் சமாதானப்படுத்த எத்தனித்த அமிர்தலிங்கம், ஜெயவர்த்தனவுடன் தாம் சமரசம் செய்யவேண்டி வந்தமைக்கான காரணங்களை முன்வைக்கத் தொடங்கினார். அவர் முன்வைத்த முக்கிய மூன்று காரணங்களும் பின்வருமாறு அமைந்திருந்தன, 1. இந்திரா காந்தியின் அழுத்தத்தினாலேயே தாம் சமரசத்தில் ஈடுபட வேண்டி வந்தது. 2. சிங்களவர்கள், தமிழர்களுக்கு ஒருபோதும் நியாயமான தீர்வினைத் தரமாட்டார்கள் என்பதனை உலகிற்குக் காட்ட இச்சந்தர்ப்பத்தைப் பாவிப்பதோடு, தமிழர்களின் விடுதலைக்கு ஆயுதப் போராட்டமே சரியானது என்பதை நியாயப்படுத்த சர்வகட்சி மாநாட்டினைப் பாவிப்பது. 3. தமிழர்கள்மீது அரசு நடத்திவரும் படுகொலைகளை வெளிக்கொணரவும், தமிழர்கள் எதிர்நோக்கும் அவலங்களை உலகறியச் செய்யவும் சர்வகட்சி மாநாட்டினைக் களமாகப் பாவிப்பது. ஆனால், அமிர்தலிங்கம் முன்வைத்த இக்காரணங்கள் எவற்றையும் போராளி அமைப்புக்கள் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஜெயவர்த்தனவை நம்பவேண்டாம் என்று போராளி அமைப்புக்கள் அமிர்தலிங்கத்தை எச்சரித்தன. தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ளவே ஜெயவர்த்தன சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டுவதாக அவர்கள் கூறினர். தமிழ்ப் போராளி அமைப்புக்களை முற்றாக அழித்துவிடவே அவர் முயல்கிறார் என்றும் அவர்கள் வாதாடினர். 1983 ஆம் ஆண்டு மார்கழி 21 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல்க் கட்சிகளின் மாநாடு ஒன்றினை ஜெயார் கூட்டினார். பின்வரும் அரசியற் கட்சிகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். இலங்கை சுதந்திரக் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி, கம்மியூனிஸ்ட் கட்சி, மகஜன எக்சத் பெரமுன, தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்பனவே அக்கட்சிகளாகும். இக்கூட்டத்தினை இரு முக்கிய விடயங்கள் குறித்த அவர்களின் கருத்தினை அறிந்துகொள்ளவே தான் நடத்துவதாகக் கூறினார். முதலவாது விடயம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேச்சுக்களை மீளவும் ஆரம்பிப்பது. இவ்விடயத்தில் கட்சிகள் தமது சம்மதத்தினைத் தெரிவித்தன. சுதந்திரக் கட்சியின் குழுவிற்குத் தலைமை தாங்கிய சிறிமா, "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பேச்சுக்களுக்கு அழைக்கப்பட வேண்டும் என்பதனை நாம் தொடர்ச்சியாகக் கூறியே வந்திருக்கிறோம்" என்று பதிலளித்தார். இரண்டாவது விடயம் சர்வகட்சி மாநாடு நடத்துவதற்கான இடம், காலம், பேசப்படும் விடயங்கள் குறித்ததாக அமைந்தது. சுமார் 90 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சர்வகட்சி மாநாட்டினை 1984 ஆம் ஆண்டு தை மாதம் 10 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்துவதென்று கலந்துகொண்டவர்களால் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்க் காங்கிரஸைச் சேர்ந்த குமார் பொன்னம்பலம் கூட்டத்தில் பேசும்போது, "தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை அடைந்துகொள்வதற்கு சர்வகட்சி மாநாட்டிற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?" என்று ஜெயாரைப் பார்த்து வினவினார். பொன்னம்பலத்திற்குப் பதிலளித்த ஜெயார், தை மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கும் சர்வகட்சி மாநாடு தொடர்ச்சியாக 10 நாட்கள் நடைபெறும் என்றும், சுமார் 30 மணித்தியாலங்களுக்கு நடக்கப்போகும் கலந்துரையாடல்களின் மூலம் தீர்வொன்றினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தான் நம்புவதாகவும் கூறினார். சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்படவிருக்கும் விடயங்கள் குறித்து பேசப்பட்டபோது, இந்தியாவில் ஜெயார் மேற்கொண்ட பேச்சுக்களின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து சிறிமா ஜெயாரிடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜெயார், தில்லியில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து 10 நாட்களில் தான் பேசுவதாகக் கூறினார். பின்னர் நீலன் திருச்செல்வத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜெயார், சர்வகட்சி மாநாட்டிற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை அழைக்க தான் முடிவெடுத்திருப்பதாகக் கூறினார். இதனையடுத்து சென்னையில் அறிக்கையொன்றினை வெளியிட்ட அமிர்தலிங்கம் ஜெயாரின் இம்முடிவு குறித்த தமது கட்சியின் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பது எவ்வாறு என்கிற கேள்வி எழுந்தபோது சிக்கலொன்று உருவாகியது. சர்வகட்சி மாநாட்டின் செயலாளரான பீலிக்ஸ் டயஸ் அபயசிங்கவிடம் பேசிய நீலன் திருச்செல்வம், சென்னையிலிருக்கும் அமிர்தலிங்கத்திற்கு அழைப்பினை நேரடியாக அனுப்பலாம் என்று ஆலோசனை வழங்கினார்.ஆனால், முன்னணியினருடன் பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை என்கிற அமைச்சரவை தீர்மானம் இன்னமும் நடைமுறையில் இருப்பதனால், சென்னைக்குத் தனது பிரதிநிதியொருவரை நேரடியாக அனுப்பி அமிர்தலிங்கத்திடம் அழைப்பினை வழங்குவதை அரசு விரும்பவில்லை. இவ்வேளையில் மார்கழி 30 ஆம் திகதி தில்லிக்குப் பயணமாகும் ஏற்பாடுகளில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சத்வால் ஈடுபட்டிருந்தார். முன்னணியினருக்கான அழைப்பினை வழங்குவது குறித்த சிக்கலின்போது உதவுவதற்கு அவர் முன்வந்தார். தில்லிக்கான தனது பயணத்தின்போது சென்னையில் தரித்துச் சென்ற சத்வால், சர்வகட்சி மாநாட்டிற்கான அழைப்பினை அமிர்தலிங்கத்திடம் கையளித்துச் சென்றார். சர்வகட்சி மாநாட்டிற்கு அமிர்தலிங்கத்திற்கு அனுப்பப்பட்ட அழைப்பில் இரு சேர்க்கைகள் அடங்கியிருந்தன. முதலாவது சேர்க்கையில் பகிரங்கமாக வெளியிடப்பட்ட ஐந்து ஆவணங்கள் அடங்கியிருந்தன. அவற்றுள் முதலாவது ஆவணம் ஆடி இனக்கொலை முடிவுற்ற ஒரு சில நாட்களின் பின்னர் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நரசிம்ம ராவின் விஜயம் குறித்து வெளியிடப்பட்ட அரச ஊடக அறிக்கை. இரண்டாவது, ஜெயாரின் விசேட தூதராக இந்தியா சென்ற அவரது சகோதரரான இன்னொரு ஜெயவர்த்தன, சண்டே ஒப்சேர்வர் பத்திரிகைக்கு ஆவணி 14 ஆம் திகதி வழங்கிய செவ்வி. மூன்றாவது ஆவணம், பார்த்தசாரதியுடன் ஆவணி 25 முதல் 29 வரையான நாட்களில் இலங்கை அரசாங்கம் முதன்முதலாக நடத்திய பேச்சுக்கள் தொடர்பாக ஜனாதிபதிச் செயலகம் வெளியிட்டிருந்த அறிக்கை. நான்காவது ஆவணம் கார்த்திகை மாதத்தில் பார்த்தசாரதியுடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் தொடர்பாக ஜனாதிபதிச் செயலகம் வெளியிட்ட அறிக்கை. ஐந்தாவது ஆவணம் தில்லியிலிருந்து திரும்பியபின்னர் மார்கழி முதலாம் திகதி ஜெயார் வெளியிட்ட அறிக்கை என்பனவாகும். அழைப்பிதழின் இரண்டாவது இணைப்பு பின்வரும் தலையங்கத்தைக் கொண்டிருந்தது. சர்வகட்சி மாநாட்டில் பேசப்படும் விடயங்களை தீர்மானித்துக்கொள்ள பின்வரும் விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதன்படி பின்வரும் 14 விடயங்களை இரண்டாவது இணைப்பு கொண்டிருந்தது, 1. தனிநாட்டிற்கான கோரிக்கையினை முற்றாகக் கைவிடுவது. 2. ஒரு மாகாணத்திற்குள் அமைந்திருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை அம்மாகாணத்தில் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாகவும் அம்மாகாண சபை உறுப்பினர்களின் சம்மதத்தினூடாகவும் இணைத்துக்கொள்வது. 3. பிராந்திய சபைகளைக் கொண்டிருக்கும் பிராந்தியங்களில் பெரும்பான்மைப் பலத்தினைக் கொண்டிருக்கும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியினால் அப்பிராந்தியத்தின் முதல்வராக நியமிக்கப்படுவார். அவரால் அமைக்கப்படும் பிராந்திய சபை உறுப்பினர்களுடன் இணைந்து அவர் செயற்படுவார். 4. மத்திய அரசிடமிருந்து பிராந்திய சபைக்கு வழங்கப்படாத எந்த அதிகாரமும் ஜனாதிபதியினாலும், பாராளுமன்றத்தாலும் பொறுப்பேற்கப்பட்டிருக்கும். நாட்டின் இறையாண்மை,ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வளர்ச்சி, அபிவிருத்தி ஆகியவை தொடர்ந்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். 5. பிராந்திய சபைகளுக்கு வழங்கப்படவிருக்கும் பொறுப்புக்கள் பற்றி இனிமேல்த்தான் தீர்மானம் எடுக்கப்படும். இவ்விடயங்கள் தொடர்பாக தகுந்த சட்டங்களை இயற்றுவதற்கு அப்பிராந்தியங்களுக்கு அதிகாரம் தரப்படும். வரி அறவிடுதல், கட்டணங்களை அறவிடுதல், மத்திய அரசாங்கத்திடமிருந்து கடன்களை பெற்றுக்கொள்ளுதல் ஆகிய விடயங்களுக்கு பிராந்திய சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படும். 6. திருகோணமலைத் துறைமுகத்தினை மத்திய அரசாங்கமே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். 7. பிராந்தியங்களில் உயர் நீதிமன்றங்கள் செயற்பட அதிகாரம் கொடுக்கப்படும் அதேவிடத்து உச்ச நீதிமன்றம் நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும் மேலான, அரசியலமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்ட அதிகாரத்தைக் கொண்டிருக்கும். 8. பிராந்தியங்களில் கடமையில் ஈடுபடுவோருக்கும், வேறுபகுதிகளிலிருந்து அப்பிராந்தியத்தில் கடமைக்கு வருவோருக்கும் பிராந்திய யாப்பின்படி அதிகாரம் வழங்கப்பட்டிருக்கும். 9. பிராந்தியத்திற்குள் ஆட்சேர்ப்பிற்கும், ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கும் என்று பொதுமக்கள் சேவைகள் ஆரம்பிக்கப்படும். 10.அரச சேவைகளிலும், முப்படைகளிலும் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப பணியமர்த்தல்கள் நடைபெறும். 11.பிராந்தியத்தின் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப பிராந்தியத்திற்கான பொலீஸ் படைப்பிரிவிற்கு பணியாளர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். 12. காணிப் பங்கீடு தொடர்பாக தேசியக் கொள்கையொன்று வரையறுக்கப்படும். 13. உத்தியோகபூர்வ மொழியான சிங்களம், தேசிய மொழியான தமிழ் ஆகியவை தொடர்பாக அரசியல் யாப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவதோடு தேசிய கீதம், தேசியக் கொடி தொடர்பாகவும் மாற்றங்கள் உள்வாங்கப்பட்டு யாப்பில் சேர்த்துக்கொள்ளப்படும். 14. அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்ட எதிர்ப்பினை அனைத்துக் கட்சிகளும் முன்னெடுக்க வேண்டும். என்று அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.
-
ராணுவத்தைப் பலப்படுத்த சர்வகட்சி மாநாடு நடத்திய ஜெயாரும், தமிழ் ஈழத்தைக் கைவிட்ட அமிர்தலிங்கமும் அமிர்தலிங்கம் எதிர்பார்த்ததைப் போலவே அவர் தில்லியில் இருந்து சென்னை திரும்பும் போது கடுமையான எதிர்ப்பினைச் சந்திக்க நேர்ந்தது. வடக்குக் கிழக்கினை இணைப்பதை ஜெயாரின் திட்டம் முற்றாக நிராகரித்திருந்தமையினால் ஆயுத அமைப்புக்கள் அதனை கடுமையான எதிர்த்திருந்தன. தமிழ் மக்களையும், அவர்களின் ஒரே கோரிக்கையான தமிழ் ஈழத்தையும் அமிர்தலிங்கம் பலிகொடுத்துவிட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். இதற்குப் பதிலளித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர், ஜெயார் முன்வைத்திருக்கும் யோசனைகள் வடக்குக் கிழக்கு இணைந்த பிரதேசத்தை தனி அலகாக ஜெயார் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், வடக்குக் கிழக்கில் நீதிமன்ற மொழியாக தமிழ் மொழியினை ஏற்றுக்கொள்ள அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் வாதாடத் தொடங்கினர். 1983 ஆம் ஆண்டு மார்கழி 1 ஆம் திகதி கொழும்பு திரும்பிய ஜெயவர்த்தன பின்வரும் பத்திரிகை அறிக்கையினை வெளியிட்டார், பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டிற்காக நான் புது தில்லி சென்றிருந்தபோது தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தியுடன் பேசினேன். தில்லியிலிருந்து நாடு திரும்புவதற்கு முன்னர் இப்பிரச்சினை குறித்து இலங்கையைச் சேர்ந்த பல அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டேன். இந்திரா காந்தியின் விசேட தூதுவரான பார்த்தசராதியும் இலங்கைக்குத் தான் மேற்கொண்ட பல விஜயங்களின்போது இதுகுறித்து என்னுடன் பேசியிருந்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் மீளவும் பேச்சுவார்த்தைகளை எனது அரசாங்கம் ஆரம்பிப்பதற்கு நிபந்தனையாக அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையினை முற்றாக கைவிட்டு விடவேண்டும் என்கிற கோரிக்கையினை எனது அரசாங்கம் முன்வைத்திருந்ததது என்பதை நான் தொடர்ச்சியாகக் கூறிவந்திருப்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆகவே, எனது நிபந்தனையை ஏற்று, தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை எட்டுவதற்காக தமது தனிநாட்டுக் கோரிக்கையினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் கைவிட்டு விட்டனர் என்பதனை மகிழ்வுடன் இத்தருணத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். மேலும், இலங்கையின் ஒருமைப்பாட்டினையும், இறையாண்மையினையும், சுதந்திரத்தையும் இந்தியா முழுமையாக ஏற்றுக்கொள்கிறது என்பதையும், இலங்கை பிளவுபடுவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்பதையும் இவ்விஜயத்தின்போது இந்தியாவின் பிரதமர் என்னிடம் உறுதயளித்தார் எனும் செய்தியையும் இத்தருணத்தில் மகிழ்வுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். கடந்த கார்த்திகை மாதம் கொழும்பில் என்னுடன் திரு பார்த்தசாரதி அவர்கள் மேற்கொண்ட பல பேச்சுவார்த்தைகளில் கலந்துரையாடப்பட்ட பல விடயங்கள் குறித்து தில்லியில் அவர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேசினார். அப்பேச்சுக்களின்போது முன்னணியினர் தெரிவித்த பதில்களையும் அவர் பெற்றுக்கொண்டார். நான் முதலாவதாக இப்பிரச்சினை குறித்து அனைத்து அரசியல்க் கட்சிகளினதும் தலைவர்களிடமும் கலந்துரையாடுவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்யவிருக்கிறேன். அதன் பின்னர், பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்கப்பட்டிருக்கும் பல ஆலோசனைகளை இக்கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பிவைத்து அவைகுறித்து அவர்கள் தெளிவான விளக்கத்தினை அடைந்துகொள்ள கால அவகாசம் ஒன்றினை வழங்கி, தக்க தருணத்தில் சர்வகட்சி மாநாட்டினை அழைத்து இதுகுறித்து அனைவரும் பேசக் கூடிய களம் ஒன்றினை உருவாக்கவிருக்கிறேன். என்று அவ்வறிக்கையில் கூறியிருந்தார். இதன் பின்னர், தனது இராணுவத்தினருக்கான ஆயுத தளபாடக் கொள்வனவுகளை முடுக்கிவிட்ட ஜெயவர்த்தன, அதற்கான கால அவகாசத்தைக் கணக்கிட்டு, சர்வகட்சி மாநாட்டினை ஒழுங்குசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தொடங்கினார். சர்வகட்சி மாநாடு எனும் போர்வைக்குள் கால அவகாசத்தை எடுத்துக்கொண்ட ஜெயார், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிடும் கைங்கரியங்களில் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினார்.
-
வடக்குக் கிழக்கை இணைப்பதை மறுத்த ஜெயாரும், அதனைத் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடிவெடுத்த அமிர்தலிங்கமும் இந்தியாவில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டிற்குப் பின்னர் இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்த கோவாவிற்கு தலைவர்கள் விடுமுறையினைக் களிக்கச் சென்றனர். ஜெயவர்த்தனவுடனானான தனது சம்பாஷணைகளைத் தொடர்வதற்காக பார்த்தசாரதியும் கோவாவிற்குச் சென்றிருந்தார். இச்சம்பாஷ்ணைகளில் அதிகாரம் மிக்க அலகுகள் குறித்தும், இவ்வலகுகளுக்கு பகிர்ந்தளிக்கக் கூடிய அதிகாரங்கள் குறித்தும் அவர் விளக்கினார். ஆனால், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் அலகுகள் எனும் கருத்தினை எதிர்த்த ஜெயார், அலகுகளுக்காக அதிகாரங்களை மேம்படுத்துவது குறித்துச் சிந்திக்கலாம் என்று தெரிவித்தார். எப்படியிருந்தாலும், பேச்சுக்களை மேலும் இழுத்தடிப்பதற்கான இன்னொரு வழிமுறையினை அவர் முன்வைத்தார். அதுதான் சர்வகட்சி மாநாடு. பார்த்தசாரதியினால் முன்வைக்கப்படும் அதிகாரம் மிக்க அலகுகள் எனும் தீர்வினை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையில் அனைத்துப் பகுதிகளில் இருக்கும் அரசியற்கட்சிகளையும் ஒரு மேடைக்கு அழைத்து, அவர்களுடன் கலந்தாலோசித்து, அவர்கள் அனைவரினதும் சம்மதத்தினைப் பெறுவது அவசியம் எனத் தெரிவித்தார். இதனை பார்த்தசாரதியும் ஏற்றுக்கொண்டார். தனது முயற்சி வெற்றியளிப்பதாகக் கருதிய பார்த்தசாரதியும், ஜெயாரை மேலும் சில தினங்கள் தில்லியில் தங்கிச் செல்லுமாறு வேண்டிக்கொண்டார். மேலும், இந்திராவைச் சந்திப்பதற்கான ஜெயாரின் சம்மதத்தையும் பார்த்தசாரதி பெற்றுக்கொண்டார். கார்த்திகை 29 ஆம் திகதி பொதுநலவாய அமைப்பு நாடுகளின் கூட்டம் நிறைவுபெற்றது. அன்றிரவு தனது இறுதி முயற்சியை செய்ய எண்ணினார் பார்த்தசாரதி. ஜெயவர்த்தன தங்கியிருந்த விடுதிக்கு நீலன் திருச்செல்வத்தையும், தொண்டைமானையும் அழைத்துச் சென்றார் . அங்கு பரந்துபட்ட அதிகாரப் பரவலாக்கலுக்கான தனது திட்டத்தை முன்வைத்தார். மகாணசபை அதிகாரப் பரவலாக்கம் அல்லது பிராந்திய அதிகாரப் பரவலாக்கம் என்பன ஜெயார் முன்வைக்க விரும்பும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளைக் காட்டிலும் தமிழரின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய உகந்தவை என்று அவர் கூறினார். "அதிகாரத்தையும் வளங்களையும் மேம்படுத்துவதற்கு இவ்வகையான தீர்வே உகந்ததாக இருக்கும். தனிநாடு எனும் தீர்வை முன்வைக்கும் தமிழருக்கு அதற்கு மாற்றான, உகந்த தீர்வொன்றினை முன்வைப்பது அவசியமாகும்" என்று அவர் வாதிட்டார். லங்கா கார்டியன் பத்திரிக்கையில் பின்னாட்களில் எழுதிய நீலன் அன்று ஜெயவர்த்தனவின் விடுதியில் நடந்த சம்பாஷணை குறித்து பின்வருமாறு எழுதுகிறார். "ஜெயவர்த்தன களைத்துப் போய் சோர்வாகக் காணப்பட்டார். பார்த்தசாரதி முன்வைத்த அதிகாரம் மிக்க அலகுக்கான மாதிரியினை சலனமின்றி பார்த்துக்கொண்டிருந்தார். அங்கு நடப்பவை குறித்து அக்கறையற்றுக் காணப்பட்ட ஜெயார், தனக்கு விளக்கமளிக்கப்பட்டுக்கொண்டிருந்த விடயங்கள் குறித்து தெளிவான சிந்தனையினைக் கொண்டிருந்தவர் போன்று எனக்குத் தெப்படவில்லை. அன்றைய சம்பாஷணைகள் முடிந்து பார்த்தசாரதியுடன் நாம் அங்கிருந்து மீளும்போது, "எனக்கு 73 வயதாகிறது, தொண்டைமானுக்கு 70 வயது. அந்த மனிதருக்கோ 80 ஐத் தாண்டிவிட்டது. அவரது வயது அவர்மீது கடுமையான அழுத்தத்தினைக் கொடுக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று எம்மிடம் அவர் தெரிவித்தார். ஆனால், ஜெயவர்த்தனா எவராலும் மதிப்பிப்பட முடியாத, புதிராகவே தெரிந்தார். நாம் அன்றிரவு பேசிய விடயங்கள் குறித்து அவர் தொடர்ச்சியாக சிந்த்தித்து வந்ததோடு மறுநாளே மாகாணசபைகளை உருவாக்குவது குறித்து சம்மதமும் தெரிவித்திருந்தார்". கார்த்திகை 30 ஆம் திகதி மீண்டும் ஜெயாரைச் சந்தித்த பார்த்தசாரதி, நீலன், மற்றும் தொண்டைமான் ஆகியோர் முன்னிரவு தம்மால் பிரஸ்த்தாபிக்கப்பட்ட மாகாணசபை அலகுகள் குறித்து வினவினர். அன்று காலை ஜெயார் உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் காணப்பட்டதாக நீலன் என்னிடம் தெரிவித்தார். பார்த்தசாரதி தன்னிடம் தெரிவித்த சிபாரிசுகள் குறித்து தான் நீண்டநேரம் சிந்தித்ததாக ஜெயார் கூறியிருக்கிறார். "உள்நாட்டில் இதற்குக் கடுமையான எதிர்ப்புக்கள் கிளம்பலாம். ஆனாலும், மாகாணசபைகளை அமைக்க நான் தீர்மானித்துவிட்டேன்" என்று ஜெயார் அவர்களிடம் கூறினார். "மிகத் துணிவான இந்த முடிவினை எடுத்ததற்காக நான் ஜனாதிபதியைப் பாராட்டினேன்" என்று தொண்டைமான் என்னிடம் தெரிவித்தார். அப்போது, சர்வகட்சி மாநாட்டில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பங்குபற்றுவதில் இருக்கும் சிக்கல் குறித்து பாரத்தசாரதி தனது கரிசணையை முன்வைத்தார். முன்னணியினரையும் ஜெயார் சர்வகட்சி மாநாட்டிற்கு அழைக்கவேண்டும் என்று அவர் கோரினார். அதற்குப் பதிலளித்த ஜெயார், பிரிவினைவாதத்தைக் கைவிடும்வரைக்கும் முன்னணியினருடன் பேசுவதில்லை என்பது அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட முடிவு என்று கூறினார். அதன்பின்னர் பேசிய பார்த்தசாரதி, முன்னணியினரும் அரசாங்கத்துடன் பேசுவதில்லை எனும் முடிவில் இருப்பதாகக் கூறினார். "அரசாங்கமும் முன்னணியினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதே அவசியமானது" என்று பார்த்தசாரதி கூறவும், தான் இவ்விடயத்தை சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்போவதாக ஜெயார் பதிலளித்தார் தமக்கிடையே ஒத்துக்கொள்ளப்பட்ட மாகாணசபைகள் முறையிலான தீர்வுகுறித்த நகலை ஜெயாரிடம் அவர்கள் மூவரும் முன்வைத்தனர். அதனை வாங்கிக் கவனமாகப் படித்தார் ஜெயார். அதனைப் படித்துவிட்டு பார்த்தசாரதியைப் பார்த்து பின்வருமாறு வினவினார் ஜெயார், "இதில் நான் எங்கே கைய்யொப்பம் இடுவது?". அதற்குப் பதிலளித்த பார்த்தசார்தி, "இது ஒரு ஒப்பந்தம் அல்ல, நகல் மட்டுமே. ஆகவே, இங்கு கைய்யொப்பங்கள் தேவையில்லை" என்று கூறினார். கார்த்திகை 30 ஆம் திகதி மாலை இந்திராவைச் சென்று சந்தித்தார் ஜெயார். பேசப்பட்டு வந்த மாகாணசபை முறைபற்றி அவர்கள் கலந்துரையாடினர். பேசுவார்த்தைகளில் காணப்பட்ட முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த இந்திரா, வடக்கும் கிழக்கும் இணைந்த ஒற்றையலகு ஒன்று உருவாவதே சரியானது என்று கூறினார். இதனை ஆட்சேபித்த ஜெயார், கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் பெரும்பான்மையாக வாழ்வதாகவும், கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைக்கப்படும் பட்சத்தில் இச்சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களின் எதிர்காலம் அச்சுருத்தலுக்கு உள்ளாகும் என்றும் கூறினார். மேலும், தனது ஆதரவாளர்களின் நம்பிக்கையினை தான் இழப்பது ஆபத்தானது என்றும் கூறினார். ஆகவே, தன்னால் மாகாணசபைகளை மட்டுமே அமைக்க முடியும் என்றும், தேவையேற்படின் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும், தமிழ்த் தலைமை விரும்பினால் வடக்குக் கிழக்கு இணைப்பினை சர்வகட்சி மாநாட்டில் முன்வைத்து தமக்கான ஆதரவினைத் திரட்டிக்கொள்ளட்டும் என்றும் மேலும் தெரிவித்தார். ஜெயார் கொடுத்த வாக்குறுதியினால் இந்திரா திருப்தியடைந்தார். "இறுதித் தீர்விற்கான முதற்படியாக இது அமையட்டும்" என்று அவர் கூறினார். மாகாணசபை திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவாதத்தினை இந்திராவுக்கு ஜெயார் வழங்கினார். வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுவது குறித்த ஜெயாரின் கருத்து அமிர்தலிங்கத்தைப் பொறுத்தவரையில் உவப்பானதாக இருக்கப்போவதில்லை என்று இந்திரா தெரிவித்தார். ஆனாலும், அமிர்தலிங்கத்தையும் இத்திட்டத்தினுள் உள்வாங்க தான் முயலப்போவதாகத் தெரிவித்த இந்திரா, இலங்கையினை எக்கட்டத்திலும் பிரிக்க இந்தியா அனுமதிக்கப்போவதில்லை என்றும், இலங்கையின் இறையாண்மை, பூகோள உறுதிப்பாடு, சுதந்திரம் ஆகியவற்றை இந்தியா வெகுவாக மதிப்பதாகவும் ஜெயாரிடம் உறுதிபடத் தெரிவித்தார். பின்னர் முன்னணியின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன், நீலன் திருச்செல்வம் ஆகியோரையும் தொண்டைமானையும் இந்திரா சந்தித்தார். தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் உத்தேச தீர்வுத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அவர்களை வேண்டிக்கொண்டார் அவர். இதனையடுத்து இத்திட்டத்தினை ஏற்றுக்கொள்வதாகச் சம்மதம் தெரிவித்த அமிர்தலிங்கம், வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாது போகுமிடத்து தமிழர்களின் ஏகோபித்த எதிர்ப்பினை தாம் சந்திக்க நேரும் என்றும் இந்திராவிடம் தெரிவித்தார்.
-
பார்த்தசாரதியின் வருகை பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கிறார் என்றும் தன்னை ஏமாற்றப்பார்க்கிறார் என்றும் இந்திரா காந்தி தன்னைப்பற்றிக் காட்டமாக வெளியிட்ட கருத்துக்கள் ஜெயாரைக் கலவரமடையச் செய்யவில்லை. அவரது திட்டமே அதுதான். அத்திட்டத்தின்படி பாரத்தசாரதியை மீண்டும் கொழும்பிற்கு வந்து இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு ஜெயார் அழைத்தார். கார்த்திகை 7 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்த பார்த்தசாரதி, ஜெயார், காமிணி திசாநாயக்கா மற்றும் லலித் அதுலத் முதலி ஆகியோருடன் தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்தினார். இவர்களுடனான பார்த்தசாரதியின் பேச்சுக்கள் பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழர்கள் தங்களைத் தாமே ஆளக்கூடிய, அதிகாரம் மிக்க பிராந்தியங்களை உருவாக்குவது தொடர்பாகவே அமைந்திருந்தது. தமிழர்கள் தனிநாடு ஒன்றே தீர்வு எனும் நிலைக்கு வந்திருப்பதால் அரசு முன்வைக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் எனும் தீர்வினை தமிழர்கள் தமது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று ஜெயாரிடமும் அவரது அமைச்சர்களிடம் தெரிவித்தார் பார்த்தசாரதி. கார்த்திகை 10 ஆம் திகதி நிறைவுபெற்றிருந்த பார்த்தசாரதியின் இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களின் நோக்கமே மாகாணம் ஒன்றிற்குள் இரண்டு அல்லது அதற்கு மேலதிகமான மாவட்ட அபிவிருத்திச் சபைகளை உள்ளடக்குவதற்கான ஜெயாரின் சம்மதத்தினைப் பெற்றுக்கொள்வதுதான். ஆனால், இப்பேச்சுக்களை கால அவகாசம் எடுக்கும் நோக்கத்திற்காகவே பாவிக்க நினைத்த ஜெயார், மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் இணைப்பை அம்மாவட்டங்களில் சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துவதன் மூலமாகவும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் உறுப்பினர்களின் சம்மதத்தின் மூலமாகவும் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று கூறினார். ஜெயாரின் பரிந்துரைகளை கார்த்திகை 10 ஆம் திகதி ஜனாதிபதிச் செயலகப் பிரிவு அறிக்கை வடிவில் வெளியிட்டது. இப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நாட்டில் நிலவும் வன்முறைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்று ஜனாதிபதி கருதுவதாகவும் அவ்வறிக்கை கூறியது. மேலும், தமிழர்கள் இப்பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு பிரிவினைவாதத்தினைக் கைவிட்டு விடவேண்டும் என்றும், திருகோணமலைத் துறைமுகத்தை இலங்கையின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் விட்டுவிடவேண்டும் என்றும் ஜெயார் எதிர்பார்ப்பதாகவும் அவ்வறிக்கை கூறியது. இரண்டிற்கு மேற்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளை மாகாணம் ஒன்றிற்குள் இணைப்பதற்கு ஜெயார் இணங்கியிருப்பதாக நினைத்த பார்த்தசாரதி, அது ஒரு சாதகமான விளைவு என்று கருத்துப்பட பிராந்திய அதிகாரசபைகளுக்கான தனது விருப்பத்தினை வெளிப்படுத்தி தனியான அறிக்கையொன்றினை வெளியிட்டார். "ஒன்றுபட்ட இலங்கைக்குள், தகுந்த அதிகாரங்களைக் கொண்ட பிராந்திய அலகுகளை உருவாக்குவது குறித்தே இப்பேச்சுக்கள் அமைந்திருந்தன" என்று அவரது அறிக்கை கூறியது. ஆனால், ஜெயாரின் திட்டத்தினை போராளி அமைப்புக்கள் தெளிவாகப் புரிந்திருந்தன. "ஜெயாரின் காலம் கடத்தும் தந்திரமே இந்தப் பரிந்துரைகள்" என்று புலிகள் அமைப்பு இதனைச் சாடியிருந்தது. மேலும், ஜெயாரின் பொறிக்குள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அகப்பட்டு விடக்கூடாதென்று எச்சரித்திருந்ததுடன், தனிநாடு எனும் தமது கோரிக்கை பேரம்பேசலுக்கு அப்பாற்பட்டது என்றும் கூறியது. இந்திராவைச் சந்தித்த ஜெயார் பொதுநலவாய நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள் இந்தியா சென்றிருந்த ஜெயாரை தன்னை வந்து சந்திக்குமாறு கேட்டிருந்தார் இந்திரா. தனது சகோதரருடன் கார்த்திகை 21 ஆம் திகதி தில்லி பயணமானார் ஜெயார். வெளிவிவகார அமைச்சர் ஹமீதும் ஏனைய அதிகாரிகளும் இருநாட்களுக்கு முன்பாகவே தில்லிக்குப் பயணமாகியிருந்தனர். இவர்களுடன், பார்த்தசாரதியின் அழைப்பினை ஏற்று தொண்டைமானும் தில்லிக்குப் பயணமாகியிருந்தார். அதே காலப்பகுதியில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் தில்லிக்கு அழைத்திருந்த இந்திரா, இலங்கையில் நிலவும் சூழ்நிலை குறித்தும், தமிழர்களின் அப்போதைய நிலைப்பாடு குறித்தும் தனக்கு விளக்கமளிக்குமாறு கோரியிருந்தார். ஆகவே, அமிர்தலிங்கம், சம்பந்தன், சிவசிதம்பரம் ஆகியோர் சென்னையிலிருந்து தில்லிக்குப் பயண்மாகியிருந்தனர். இவர்களுடன் இணைந்துகொள்ள கொழும்பிலிருந்து கலாநிதி நீலன் திருச்செல்வமும் சென்றிருந்தார். முன்னணியினருக்கான அழைப்பு ஜெயாரை ஆத்திரப்பட வைத்திருந்ததுடன், போராளி அமைப்புக்களை அசெளகரியத்திற்கும் உள்ளாக்கியிருந்தது. ஆகவே, வழமைபோலவே இந்தியா மீதும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினார் ஜெயார். அமிர்தலிங்கத்திற்கு அரசுத் தலைவர் ஒருவருக்கு நிகரான அந்தஸ்த்தை இந்தியா கொடுத்திருப்பது குறித்து இலங்கையின் அரச ஊடகங்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைதிருந்தன. மேலும், இந்திரா காந்தி தமிழர்களுக்குச் சார்பாகச் செயற்பட்டு வருவதாகவும் அவை குற்றம் சுமத்தின. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் அரசியல் நிலைப்பாட்டினைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் நோக்கில் பார்த்தசாரதி அவர்களுடன் கார்த்திகை 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்தினார். அவருடன் பேசிய முன்னணியின் தலைவர்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைப்பது, தமிழ்பேசும் காவல்த்துறையினை அமைப்பது ஆகிய இருவிடயங்களில் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் தயாரில்லை என்று தெரிவித்தனர். பார்த்தசாரதி பின்னர் தொண்டைமானையும் சந்தித்துப் பேசினார். அரசுத்தலைவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த தில்லியின் அசோகா விடுதியில் ஜெயாரைச் சந்தித்தார் பார்த்தசாரதி. ஜெயாரின் பரிந்துரைகளுக்கான முன்னணியின் பதிலை ஜெயாரிடம் அவர் விளக்கினார். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இணைத்து மாகாணங்கள் ஒன்றிற்குள் உள்வாங்குவதான ஜெயாரின் பரிந்துரையினை முன்னணியினர் ஏற்றுக்கொண்டிருப்பதாக அவர் ஜெயாரிடம் கூறினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் இணைப்பென்பது மாகாணம் ஒன்றிற்கு வெளியேயும் பரவுவதற்கான சம்மதத்தினையும் முன்னணியினர் கோரியிருந்தனர். மேலும், திருகோணமலைத் துறைமுகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதை முன்னணியினர் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், ஆனால் துறைமுகப் பகுதியின் எல்லைகள் சரியான முறையில் நிர்ணயிக்கப்படவேண்டும் என்று கோரியிருப்பதாகவும் பார்த்தசாரதி ஜெயாரிடம் தெரிவித்தார். அதன் பின்னர், முன்னணியினர் ஜெயாரின் பரிந்துரைகளுடன் முரண்படும் விடயங்கள் குறித்து பார்த்தசாரதி அவரிடம் விளக்கினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இணைப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துவதை முன்னணியினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும், தமிழ் பொலீஸ் படையொன்றினை உருவாக்குவது குறித்த முன்னணியின் கோரிக்கையினையும் அவர் ஜெயாரிடம் முன்வைத்தார். அம்பாறை மாவட்ட மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான பொறுப்பினை அம்மக்களிடமே விட்டுவிடுவதாக முன்னணி கூறியிருப்பதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். முன்னணியினரின் நிலைப்பாட்டிற்கு ஜெயவர்த்தன வழங்கிய பதில் 1. மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான இணைப்பினை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி நடத்தலாம், ஆனால் மாகாணங்களுக்கு வெளியே இணைப்பு பரவுவதனை அனுமதிக்க முடியாது. 2. வடக்குக் கிழக்கு மகாணங்களை ஒருபோதுமே இணைக்க அனுமதிக்க முடியாது. 3. தமிழ் பொலீஸ் படையினை அமைக்க அனுமதிக்க முடியாது. ஆனால், குறிப்பிடத் தக்க சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரங்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு தரப்பட முடியும். தமது வேண்டுகோள்களுக்கு ஜெயார் வழங்கிய பதிலை பார்த்தசாரதியூடாக அறிந்தபோது அமிர்தலிங்கம் கோபமடைந்தார். "வடக்குக் கிழக்கு மாகாணங்களின் இணைப்பிலோ, தமிழ் பொலீஸ் படையின் உருவாக்கத்திலோ எம்மால் எதனையும் விட்டுக் கொடுக்க முடியாது" என்று பார்த்தசாரதியிடம் தெரிவித்தார் அமிர். "இவற்றில் விட்டுக்கொடுப்புக்களை நான் மேற்கொண்டால், சென்னைக்குத் திரும்பிச் செல்வதே எனக்கு இயலாது போய்விடும்" என்று அவர் கூறினார். கொதித்துப்போயிருந்த அமிர்தலிங்கத்தை ஆசுவாசப்படுத்த பார்த்தசாரதிக்கு அதிக நேரம் தேவைப்பட்டிருந்தது. பேச்சுக்களின் பலவீனமான நிலையினை உணர்ந்துகொள்ளத் தலைப்பட்ட பார்த்தசாரதி, தனது நடைமுறையினை மாற்றத் தலைப்பட்டார். அதன்படி, இந்திரா காந்திக்கும் ஜெயவர்த்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்றை அவர் ஏற்படுத்தினார். பொதுநலவாய நாடுகளின் அரசுத் தலைவர்களின் மாநாடு நடக்கும் நாளுக்கு ஒருநாள் முன்னதாக, கார்த்திகை 23 ஆம் திகதி இச்சந்திப்பு இடம்பெற்றது. ஜெயாரிடம் பேசிய இந்திரா, ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை அரசாங்கத்தை தான் முழுமையாக ஆதரிப்பதாகவும், இலங்கையைப் பிரிக்கும் எந்த முயற்சியினையும் தான் முற்றாக எதிர்ப்பதாகவும் கூறினார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய தீர்வு ஒன்றினைப் பற்றிச் சிந்திக்குமாறு அவர் ஜெயாரைக் கேட்டுக்கொண்டார். தமிழ் அகதிகளால் இந்தியா எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வு தொடர்பாகவும் ஜெயாரிடம் அவர் விளக்கினார். இந்திராவுக்குப் பதிலளித்த ஜெயார், தன்பக்க நியாயங்களைக் கூறினார். தமிழர்களை இலங்கையினை கட்டுப்படுத்திவிடுவார்கள் என்று சிங்களவர்கள் பயப்படுவதாக அவர் கூறினார். தமிழர்களுக்கு அதிக அதிகாரங்களைக் கொடுக்க சிறிமா முயல்வதால், தனது அரசியல் பலம் ஆட்டங்கண்டுள்ளதாகவும் அவர் கூறினார். பொதுநலவாய மாநாடு கார்த்திகை 24 ஆம் திகதி ஆரம்பமானது. மாநாட்டில் பேசிய ஜெயார், இந்திராவை வேண்டுமென்றே சீண்டிப் பேசினார். மகாத்மா கந்தியுடனும், நேருவுடனும் தான் மேற்கொண்ட பேச்சுக்களை நினைவுகூர்ந்த ஜெயார், அவர்களை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். காந்தியின் அகிம்சையினையும் நேருவின் பக்கச்சார்பின்மையினையும் தாம் விருப்பத்துடன் கடைக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். "நீண்டகாலம் வாழும் வரம் எனக்குக் கிடைத்தால், எமது மக்கள் எவருக்கும் அடிபணியாது வாழும் நிலையினை உருவாக்குவேன். இலங்கையில் அனுக்குண்டு ஒன்று வெடித்தால் அங்கிருக்கும் 15 மில்லியன் மக்களும் இறக்கலாம். இலங்கையினை ஆக்கிரமிக்க எவர் நினைத்தாலும், அங்குவாழும் 15 மில்லியன் மக்களும் போரிட்டுச் சாவார்களே அன்றி, அடிமைகளாக வாழ மாட்டார்கள்" என்று இந்தியா தனது நாட்டை ஆக்கிரமிக்கப் பார்க்கிறது எனும் தொனிப்பட பேசி முடித்தார். தொண்டைமான் மறுநாள் இந்திரா காந்தியைச் சென்று சந்தித்தார். ஜெயவர்த்தனவின் பேச்சினை மேற்கோள் காட்டிப் பேசிய தொண்டைமான், "ஜெயார் உங்களின் தகப்பனாரை வெகுவாகப் பாராட்டிப் பேசினார், உங்களுக்கு அது பூரண திருப்தியைத் தந்திருக்கும் என்று நினைக்கிறேன்" என்று கூறினார். தொண்டைமானின் பேச்சைக் கேட்ட இந்திரா கோபத்தில் வெடித்தார். "அந்த வயோதிபர் எனது தந்தையைப் புகழவில்லை. நான் எனது தகப்பனாரைப் போழ ஆட்சிசெய்யவில்லை என்று முழு உலகிற்கும் கூறி எள்ளி நகையாடுகிறார்" என்று கூறினார். மார்கழியில் அமெரிக்கா சென்றிருந்த இந்திரா, நியு யோர்க் நகரில் வாழும் இலங்கைத் தமிழர்களுடன் பேசிய இந்திரா ஜெயாரின் பேச்சுக் குறித்து பிரஸ்த்தாபித்தார். "நான் விரும்பினால் உடனடியாகவே இலங்கை மீதான ஆக்கிரமிப்பை நடத்த முடியும், ஆனால் சிங்களவர்கள் மத்தியில் பாதுகாப்பின்றி வாழும் மலையகத் தமிழர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதனாலேயே தயக்கமாக இருக்கிறது" என்று அவர் கூறினார்.
-
பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் அமீரின் திடீர் முடிவினை விமர்சித்த இயக்கங்கள் பேச்சுவார்த்தைகளில் மீளவும் ஈடுபடப்போவதாக அமிர்தலிங்கம் அறிவித்ததையடுத்து ஆயுத அமைப்புக்கள் அவர் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை வெளியிடத் தொடங்கின. தமிழ் மக்களின் இலட்சியத்திற்கெதிரான துரோகி என்று அவரை அழைக்கத் தலைப்பட்டன. தமிழர்களை ஏமாற்றவே ஜெயார் முயல்கிறார் என்று கூறிய இயக்கங்கள், அமிர்தலிங்கம், ஜெயாருடன் பேச்சுக்களில் ஈடுபடக் கூடாதென்று வற்புறுத்தின. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை முற்றாக நசுக்கிவிடும் நோக்கத்திற்காக தனது இராணுவத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கைக்கு கால அவகாசம் தேடவே ஜெயார் பேச்சுக்களை பயன்படுத்தப்போகிறார் என்று புலிகள் இயக்கம் சென்னையிலிருந்து அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தது. ஆகவே இச்சதிக்குத் துணைபோக வேண்டாம் என்றும் அமிர்தலிங்கத்தை புலிகளின் அறிக்கை கோரியிருந்தது. பிரபாகரனைச் சந்தித்த அமிர்தலிங்கம் ஆகவே, தனது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவதற்காக அமிர்தலிங்கம் பிரபாகரனைச் சந்தித்தார். ஒரு திட்டத்திற்கு அமையவே இந்திரா காந்தி செயற்பட்டுவருவதாக பிரபாகரனிடம் தெரிவித்தார் அமிர். அத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே ஜெயாருடனான பேச்சுக்களில் ஈடுபடுமாறு தன்னை இந்திரா கேட்டுக்கொண்டதாக அமிர் கூறினார். தனது நெறிப்படுத்தல்களுக்கு அமைவாகச் செயற்படுமாறு இந்திரா தன்னைக் கேட்டிருப்பதாக அவர் மேலும் கூறினார். தனது இக்கட்டான நிலையினைப் புரிந்துகொள்ளுமாறு அமிர் பிரபாகரனிடம் வேண்டிக்கொண்டார். ஆனால், அமிர் மீதான விமர்சனங்களை புலிகளோ அல்லது வேறு இயக்கங்களோ கைவிடவில்லை. பிரபாகரனைச் சென்று சந்தித்தமைக்காக அமிர்தலிங்கத்தைக் கடுமையாகச் சாடத் தொடங்கினார் ஜெயார். ஆயுத அமைப்பொன்றினை உருவாக்கிய அமிர்தலிங்கமும் அவரது புதல்வன் பகீரதனும் தமிழ் ஈழத் தேசிய இராணுவம் எனும் ஆயுத அமைப்பினை அமிரின் மகனான பகீரதன் ஆரம்பித்திருந்ததும் உண்மைதான். இந்தியாவின் ஆயுத மற்றும் பயிற்சி உதவிகளினூடாக ஆயுத அமைப்புக்கள் பலம் பெற்று விடும் என்றும், இதனால் தமிழர்களின் தலைமைக்கான போட்டியில் தாம் தோற்றுவிடக் கூடும் என்கிற அமிரின் அச்சத்தினாலேயே பகீரதனின் ஆயுத அமைப்பு உருவாக்கப்பட்டது என்றால் அது மிகையில்லை. மேலும், ஆயுத அமைப்புக்களுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்துவிடலாம் என்கிற அமீரின் அச்சமும் அவரது புதல்வனின் ஆயுத அமைப்பின் உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கென்று தனியான ஆயுத அமைப்பொன்றினை உருவாக்குவதே தமிழ் மக்கள் மீதான செல்வாக்கினைத் தக்கவைத்துக்கொள்ளவும், தலைமைப்பதவிக்கான போட்டியினை சமாளிக்கவும் ஒரே வழியென்று அமிர் நம்பினார். ஆகவேதான் தமது கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் ஆயுத அமைப்பொன்று இயங்கவேண்டும் என்று அமிர்தலிங்கமும், பகீரதனும் முடிவெடுத்தார்கள். இதன் அடிப்படையிலேயே பகீரதனால் தமிழ் ஈழத் தேசிய இராணுவம் என்கிற ஆயுத அமைப்பு உருவாக்கப்பட்டது. லண்டனில் உள்ள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் கிளை மூலம் சேர்க்கப்பட்ட நிதியினைக் கொண்டு மதுரையில் 13 ஏக்கர்கள் நிலம் பகீரதனால் தனது ஆயுத அமைப்பின் பயிற்சி நடவடிக்கைகளுக்கென்று வாங்கப்பட்டது. இந்த அமைப்பினர் அக்காலத்தில் ஆயுதங்கள் எவற்றையும் கொண்டிருக்காமையினால் அவர்களுக்கான பயிற்சித் திட்டம் ஒன்று அப்போது இருந்திருக்கவில்லை. ஆகவே, இவ்வமைப்பில் ஆரம்பத்தில் சேர்ந்துகொண்ட இளைஞர்களும் பிற்காலத்தில் விரக்தியடைந்து அவ்வியக்கத்திலிருந்து விலக ஆரம்பித்தார்கள். அமிர்தலிங்கத்தினாலும், பகீரதனாலும் ஆரம்பிக்கப்பட்ட ஆயுத அமைப்பின் மிகச்சிறிய ஆயுட்காலத்தின் சரித்திரம் இதுதான். இந்த ஆயுத அமைப்பினை ஏனைய அமைப்புக்கள் எள்ளி நகையாட ஆரம்பித்தன. "அகிம்சையே எமது மூச்சு, ஆயுதங்களைத் தூர எறியுங்கள் என்று கோஷமிடும் தலைவர்கள் தமக்கென்று ஆயுத அமைப்பொன்றினை உருவாக்குவது ஏன்?" என்று அவர்கள் கேள்வியெழுப்பினர். ஆகவே. பகீரதனால் எழுதப்பட்ட அக்கடிதங்களை அமிர்தலிங்கத்தை அரசியலில் ஓரங்கட்டும் நடவடிக்கைகளுக்கு ஜெயார் பாவித்தார். இரு தினங்களுக்குப் பின்னர், அதாவது புரட்டாதி 19 ஆம் திகதியன்று அதுவரையில் அமிர்தலிங்கத்தின்மீது முன்வைக்கப்பட்டு வந்த பிரச்சாரங்கள் திடீரென்று நிறுத்தப்பட்டன. புரட்டாதி 18 ஆம் திகதி தில்லியில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தன் ஆகியோருடன் இந்திரா காந்தி மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் மாநாடொன்றில் அவர் வெளியிட்ட மிகவும் காட்டமான அறிக்கையே விமர்சனங்கள் நிறுத்தப்படக் காரணமாகியது என்று எமக்கு சொல்லப்பட்டது. அந்த அறிக்கையில் இலங்கையில் மிகவும் அபாயகரமான சூழ்நிலை ஒன்று உருவாகி வருவதாக அவர் கூறியிருந்தார். அதற்கான காரணங்களாக பின்வருவனவற்றை அவர் முன்வைத்திருந்தார், 1. மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகப்பெரியளவிலான சிங்களக் குடியேற்றம் ஒன்று முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. 2. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பாராளுமன்றத்தில் தமது ஆசனங்களை இழந்து வருகின்றார்கள். 3. பேச்சுவார்த்தைகளை வேண்டுமென்றே இலங்கையரசு இழுத்தடித்து வருகிறது. ஆகவே, பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க தனது விசேட தூதுவர் பார்த்தசாரதியை கொழும்பிற்கு அனுப்பவிருப்பதாக இந்திரா தெரிவித்தார். பாராளுமன்ற ஆசனங்களை இழந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கமைய, இலங்கையின் ஒற்றையாட்சி நடைமுறையினை முழுதாக ஏற்றுக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள வேண்டும் அல்லது பதவிகளை அவர்கள் இழக்க நேரிடும் என்கிற அரசின் கட்டளையின்படி கார்த்திகை 4 ஆம் திகதி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை இழந்தார்கள். அதுவரை அமிர்தலிங்க்கம் வகித்துவந்த எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பதவியும் இதன்மூலம் காலியாகியது. 34 வயதே நிரம்பியிருந்த அநுர பண்டாரநாயக்க அமிர்தலிங்கம் வகித்துவந்த எதிர்க்கட்சித் தலைவர் எனும் பதவிக்குத் தெரிவானார். 1977 ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலில் தனக்குக் கிடைத்த ஆறில் ஐந்து பெரும்பான்மையினைப் பாவித்து ஆட்சி செய்துவந்த ஜெயார், அனுபவம் இல்லாத எதிர்க்கட்சித் தலைவர ஒருவரை எதிர்கொண்டதன்மூலம் பாராளுமன்றத்தின்மீதான தனது செல்வாக்கினை முழுமையாக்கிக் கொண்டார். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தகாலத்தில் தனக்கு அஞ்சி அடிபணிந்து நடக்கவேண்டும் என்று ஜெயார் எதிர்பார்த்தார். ஆனால், அது நடவாது போகவே அமிரின் அரசியல் இருப்பை எப்படியாவது அழித்துவிட கங்கணம் கட்டிச் செயற்பட்டு வந்தார் ஜெயார். நான் இத்தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில் கூறியவாறு, ஜெயார் தனது பிரதான அரசியல் எதிரியான சிறிமாவை அவரது சிவில் உரிமைகளைப் பறித்தும், அவரது மூன்று பிள்ளைகளுக்குள் பிரிவினையினை ஏற்படுத்தியும், சிறிமாவின் 8 பேர் அடங்கிய கட்சியை உடைத்தும் அரசியல் ரீதியில் அவரைத் தோற்கடித்திருந்தார். சிறிமாவின் புதல்விகளில் ஒருவரும், பிரபல சிங்களத் திரைப்பட நடிகரான விஜயவைத் திருமணம் முடித்திருந்தவருமான சந்திரிக்காவுக்கும், சிறிமாவின் ஒரே ஆண் மகனும், சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை எதிர்காலத்தில் ஏற்கும் கனவில் இருந்தவருமான அநுரவுக்கும் இடையில் பிரிவினையினை உருவாக்குவதில் ஜெயார் வெற்றி கண்டார். சந்திரிக்காவுக்கும் அநுரவுக்கும் இடையிலான பிரிவினை சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுவிற்குள்ளும் பிரிவினையினை உருவாக்கியது. 1981 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான மைத்திரிபால சேனநாயக்கவுடன் கட்சியில் இருந்து வெளியேறிய அநுர பண்டாரநாயக்க, தனது புதிய கட்சிக்கு சுதந்திரக் கட்சி - எம் என்று பெயரிட்டார். வெறும் மூன்றே உறுப்பினர்களை அவரது கட்சி கொண்டிருந்தபோதும்கூட அக்கட்சி உடனடியாக பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதுடன், அக்கட்சியின் வரவினை வெகுவாகப் பாராட்டிய ஜெயார், அக்கட்சியினை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியென்றும் அறிவித்தார். ஜெயாரின் இந்தச் சதியே அமிர்தலிங்கத்தின் எதிர்கட்சித் தலைவர் எனும் பதவி அநுரவுக்குக் கிடைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது.
-
இழுத்தடிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஜெயார் திட்டமிட்ட இருவழிக் கொள்கையில் இந்திராவின் இலங்கை தொடர்பான கொள்கையும் ஒத்துப் போகலாயிற்று. தமிழ்ப் போராளி அமைப்புக்களைப் பலப்படுத்துவதன் மூலம் தனது இந்திரா தனது முதலாவது திட்டத்தினை பூர்த்திசெய்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தார். அதாவது, பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழர்கள் தம்மைத்தாமே ஆளக்கூடிய அரசியல் முறை ஒன்றினை உருவாக்குவது என்பது. இதனை அடைவதற்காக ஜெயாரின் புதிய பாதையான அணிசேராக் கொள்கையினை உதறிவிட்டு இந்தியாவின் எதிரிகளுடன் பயணிப்பதை தடுக்கவேண்டும் என்பதே இந்திராவின் நோக்கமாக இருந்தது. ஆனால், இந்திராவின் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வினை அடைந்து கொள்ளுதல் எனும் முதலாவது வழியினை ஜெயார் தனக்கான நேர அவகாசத்தினைப் பெற்றுக்கொள்ளும் வழியாகப் பார்த்தார். இந்த அவகாசத்தினூடாக தனது இராணுவ இயந்திரத்தைப் பலப்படுத்திக்கொண்டு தமிழர்களின் தனிநாட்டிற்கான கனவினை முற்றாக அழித்துவிடுவதுடன் அதற்கான அடிப்படையினையும் முற்றாக இல்லாமல்ச் செய்ய அவர் எத்தனித்தார். ஆவணி 17 ஆம் திகதி மூன்றாவது முறையாக ஜெயாருடன் தொலைபேசியில் பேசியபோது இந்திரா தனது விசேட தூதுவரான கோபாலசாமி பார்த்தசாரதியை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வொன்றினை பேச்சுவார்த்தைகள் ஊடாக அடைய விரும்புவதாகக் கூறியிருந்தார். இதனை உடனடியாகவே ஜெயார் ஏற்றுக்கொண்டார். ஏனென்றால், அவரது இராணுவத்தைக் கட்டியெழுப்ப அவருக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. ஆகவே, பேச்சுவார்த்தைக்கான இழுத்தடிப்புக்களைச் செய்வதூடாக அதனைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் தீர்மானித்தார். ஆவணி 25 முதல் 29 வரையான நாட்களின் பார்த்தசாரதியுடனான தனது பேச்சுக்களில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை எனும் அதிகாரம் அற்ற நிர்வாக நடைமுறையினை, மீளவும் பிரதான தீர்வாக முன்வைத்தார். இவ்வாறு செய்வதன் மூலம் பேச்சுக்கள் காலவரையின்றி இழுபட வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், மாவட்ட அபிவிருத்திச் சபையூடான தீர்வு தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஒருபோதுமே தீர்க்கப்போவதில்லை என்று பார்த்தசாரதி திட்டவட்டமாக ஜெயாரிடம் கூறினார். ஆகவே, பேச்சுக்களில் சமாதானத் தூதராகச் செயற்பட்ட பார்த்தசாரதியின நம்பகத்தன்மையினைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான காரியங்களில் ஜெயார் ஈடுபலானார். நான் பணிபுரிந்து வந்த லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பத்திரிக்கைகள் ஜெயாரின் இந்த சேறுபூசும் வேலைக்கான பிரச்சார முன்னோடிகளாக செயற்பட ஆரம்பித்தன. இதன் நோக்கம் பாரத்தசாரதி உண்மையான சமாதானத் தரகர் அல்ல என்று சர்வதேசத்தின் முன்னால் காட்டுவதுதான். இந்த பிரச்சார நடவடிக்கையின் ஊடாக இரண்டு மாதங்களை ஜெயாரினால் இழுக்க முடிந்தது. ஆனால், இந்த இரு மாத காலத்தில் தமிழர்களும் தம்மைப் பலப்படுத்திக் கொண்டார்கள். துணிகரமான மட்டக்களப்பு சிறைச்சாலையுடைப்பு மற்றும் அமிர்தலிங்கத்தின் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கான வெற்றிகரமான சுற்றுப்பயணங்கள் ஆகியனவே தமிழர் தரப்பால் இக்காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் என்று கூறலாம். அமிர்தலிங்கம் தனது சுற்றுப்பயணங்கள் ஊடாக பெற்றுக்கொண்ட சர்வதேச விழிப்புணர்வினை அவர் பயங்கரவாதிகளை ஆதரித்து வருகிறார் என்று சர்வதேசத்தில் பிரச்சாரப்படுத்துவதன் மூலம் மழுங்கப்பண்ணலாம் என்று ஜெயார் எண்ணினார். பகீரதன் அமிர்தலிங்கம் ஆரம்பித்த ஆயுதக் குழு சந்தர்ப்பவசத்தால் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட 19 வயது நிரம்பிய பல்கலைக்கழக மாணவனான வள்ளுவன் இராஜலிங்கத்தை தனது பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஜெயார் பாவிக்க முனைந்தார். 1983 ஆம் ஆண்டு ஐப்பசி 7 ஆம் திகதி தலைமன்னாரில் வைத்து வள்ளுவன் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். அமிர்தலிங்கத்தின் இரண்டாவது புதல்வனான பகீரதனுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த தனது சகோதரியான மலர்வள்ளியை சென்னையில் இறக்கிவிட்டு மீண்டு தலைமன்னார் வழியாக இலங்கை திரும்பிக்கொண்டிருந்தார் வள்ளுவன். பகீரதனால் தனக்கு வழங்கப்பட்ட மூன்று கடிதங்களையும் வள்ளுவன் தன்னுடன் கொண்டுவந்திருந்தார். அவை தமிழில் எழுதப்பட்ட கடிதங்கள். அன்று இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரை தமிழில் இருக்கும் எந்த ஆவணமும் வைத்திருப்பவரைக் கைதுசெய்யப் போதுமானதாக இருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் இளைஞர் பேரவையின் தலைவரான மாவை சேனாதிராஜாவிற்கு பகீரதனால் எழுதப்பட்ட கடிதங்கள் பொலீஸாரின் கவனத்தை ஈர்ந்திருந்தன. பகீரதனால் அமைக்கப்பட்டு வந்த இராணுவக் குழு ஒன்று பற்றி அக்கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்த இராணுவ அமைப்பைனை உருவாக்க லிபிய அதிகாரிகளுடன் அமிர்தலிங்கம் நடத்திய பேச்சுக்கள் , பிரபாகரனுடன் அமிர்தலிங்கம் நடத்தியதாகக் கூறப்படும் சந்திப்புக்கள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, இக்கடிதங்களை அமிர்தலிங்கத்தின் மீது அவதூறு பரப்பும் பிரச்சாரங்களுக்காக அரசு பாவித்தது. தேசிய தொலைக்காட்சியில் பேட்டி காணப்பட்ட வள்ளுவன், பகீரதனால் தனக்கு வழங்கப்பட்ட கடிதங்களைப் படித்துக் காட்டுமாறு பணிக்கப்பட்டார். இப்பிரச்சாரங்களின் நோக்கம் அமிர்தலிங்கம் தமிழ்ப் பயங்கரவாதத்தின் பின்னால் நிற்கிறார் என்பதைக் காட்டுவதே. ஒருபுறம் அகிம்சை, காந்தீயம் என்று இடையறாது பேசிவரும் அமிர்தலிங்கம் இன்னொரு பக்கத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து, ஆதரிக்கிறார் என்று அரசு பிரச்சாரகர்கள் பேசத் தொடங்கினர். மேலும், பகீரதனால் அமைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஆயுதக் குழுவே வவுனியா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் புலேந்திரனைப் படுகொலை செய்ததாக அரசு குற்றஞ்சாட்டியது. வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தெவேளை புலேந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். பகீரதனால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றில், "புலேந்திரனின் கொலையினை தமது அமைப்பு உரிமை கோருவதாக " எழுதப்பட்டிருந்தது.ஆகவே, தனது பிரச்சாரத்திற்காக அரசு இதனைப் பாவித்துக்கொண்டது. ஆனால், புலேந்திரன் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினராலேயே கொல்லப்பட்டிருந்தார். ஆனால், இதனைத் தெரிந்துகொண்டும் பகீரதனின் ஆயுத அமைப்பின் மீதே பொலீஸார் கொலைக்கான பழியினைப் போட விரும்பினர். அதற்கு பகீரதனைன் கடிதம் அவர்களுக்கு உதவியது. வள்ளுவன் கைதுசெய்யப்பட்டு, தன்மீதான வன்மப் பிரச்சாரங்கள் அரசினால் முடுக்கிவிடப்பட்டிருந்தவேளை அமிர்தலிங்கம் லண்டனில் தங்கியிருந்தார். தன்மீதான குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்ததோடு, பகீரதனால் எழுதப்பட்டதாக அரசால் கூறப்படும் கடிதங்கள் போலியானவை என்றும் அவர் கூறினார். "புலிகளுடனோ அல்லது வேறு எந்த ஆயுதக் குழுவினருடனோ தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எதுவிதமான தொடர்புகளையும் பேணவில்லை" என்று லண்டன் பி.பி.ஸி இற்கு அவர் பேட்டியளித்தார். அவரது கட்சியும் அமிர்தலிங்கத்திற்கு ஆதரவாகக் களமிறங்கியது. ஐப்பசி 17 ஆம் திகதி சென்னையில் கூடிய அதன் அரசியற்குழு அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டது. "எமது கட்சி வன்முறைகள் அற்ற அரசியல் பாதையினையே பின்பற்றுகிறது என்பதனை மீளவும் உறுதிப்படுத்துகிறோம். ஆகவே, எமது கட்சியினை எந்தவொரு வன்முறைச் சமபவத்துனுடனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைத்துப் பேசுவதையோ, அல்லது எந்தவொரு வன்முறை அமைப்புக்களுடனும் இணைத்து பரப்பப்பட்டுவரும் வன்மப் பிரச்சாரங்களையோ முற்றாக நிராகரிக்கிறோம்" என்று அவ்வறிக்கை கூறியது. ஆகவே, அமிர்தலிங்கத்தின் மறுப்பையும், அக்கட்சியினரின் அரசியற்குழு வெளியிட்ட அறிக்கையினையும் பொய்யென்று நிரூபிக்க அரசாங்கம் மறுநாள் தகவல்த் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினை நடத்தியது. பகீரதனால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் மற்றைய இரு கடிதங்களையும் அரசு அங்கு காண்பித்தது. இவற்றுள் ஒரு கடிதம் ஜெயராஜா என்பவருக்கு முகவரியிட்டு அனுப்பப்பட்டிருந்தது. அதில் பகீரதனின் ஆயுதக் குழுவினரின் பயிற்சிக்காக மன்னாரில் கொள்வனவு செய்யப்பட்ட 13 ஏக்கர் காணி பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. பிரேம்குமார் என்பவருக்கு எழுதப்பட்ட மூன்றாவது கடிதத்தில், மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த தனது அமைப்பின் போராளிகளுக்கு எயர் ரைபிள்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக பகீரதனால் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கான இந்தியாவின் பயிற்சியினால் கலவரமடைந்த அமிர்தலிங்கம் இவற்றுள் உண்மை இல்லாமலும் இல்லை. பிரபாகரனை அமிர்தலிங்கம் சந்தித்ததும், அமிர்தலிங்கத்தின் மகனான பகீரதன் ஆயுத அமைப்பொன்றினை உருவாக்க முனைந்ததும் உண்மைதான். தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு இந்தியா பயிற்சியும் ஆயுதமும் வழங்க முடிவெடுத்திருப்பதை அறிந்த போது அமிர்தலிங்கம் வருத்தமடைந்தார். ஏற்கனவே ஆயுத அமைப்புகளோடு அவருக்கு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. 1982 ஆம் ஆண்டில் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஏற்றுக்கொள்வதென்று அமிர்தலிங்கம் எடுத்திருந்த முடிவினை அனைத்து ஆயுதக் குழுக்களும் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தன. மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தலில் அமிரின் கட்சியினர் பங்குபற்றியது ஆயுதக் குழுக்களுடன் நேரடி மோதலுக்கான சூழ்நிலையினை ஏற்படுத்தியிருந்தது. 1977 ஆம் ஆண்டு தமிழ் மக்களால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு வழங்கப்பட்ட தனிநாட்டிற்கான ஆணையினை அவர்கள் இழந்துவிட்டதாகவும், ஆகவே தமிழ் மக்களுக்கான அரசியல்த் தலைமை தற்போது ஆயுத அமைப்புகளிடமே வந்திருப்பதாகவும் அவர்கள் பிரச்சாரம் செய்திருந்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் எதிர்நோக்கியிருந்த சவால்கள், அமிர்தலிங்கம் இந்திரா காந்தியுடனான தனது பேச்சுக்களின் பின்னர், இந்தியாவின் மத்தியஸ்த்தத்துடன் இலங்கை அரசாங்கத்துடன் பேரம்பேசலில் ஈடுபடப்போவதாக தில்லியில் அறிவித்தபோது இன்னும் அதிகமானது. மன்னாரில் இடம்பெற்ற கட்சியின் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட விடயமான அரசுடன் பேச்சுக்களில் இனிமேல் ஈடுபடப்போவதில்லை எனும் தீர்மானத்தை தனது கட்சி கைவிடுவதாக அமிர்தலிங்கம் அறிவித்தார். "நிலைமை இப்போது மாற்றம் கண்டிருக்கிறது. பார்த்தசாரதியின் சமாதான முயற்சிகள் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வொன்றினை எட்டும் சாதகமான சூழ்நிலையொன்றினை ஏற்படுத்தியிருக்கிறது" என்று அமிர்தலிங்கம் அறிவித்தார்.
-
ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய ஜெயார் மேற்கொண்ட பயணங்கள் அலன் தம்பதிகளின் கடத்தல் நாடகத்தின் சூடு ஆறுமுன்னமே ஜெயார் தனது இராணுவத்திற்கான ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பயணங்களை மேற்கொண்டார். பீஜிங்கிலும், வோஷிங்டனிலும் வெளிப்படையாகவும் தனிப்பட்ட ரீதியிலும் ஆயுதங்களைத் தந்து உதவ வேண்டும் என்கிற கோரிக்கையினை அந்தந்த நாட்டு அதிகாரிகளிடம் முன்வைத்தார் ஜெயார். தமிழ் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதங்களையும், பயிற்சியையும் வழங்குவதன் மூலம் இலங்கையினைத் துண்டாட இந்தியா முயல்வதாகவும், இலங்கை மீது முற்றான ஆக்கிரமிப்பொன்றினை மேற்கொள்வதே இந்தியாவின் திட்டமென்றும் முறையிட்ட ஜெயார், இந்தியாவின் ஆக்கிரமிப்பைத் தடுத்து இலங்கையின் இறையாண்மையினைக் காத்திட தனது இராணுவத்திற்கு ஆயுத உதவிகளை கட்டாயம் சீனாவும் அமெரிக்காவும் வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். வைகாசி 20 ஆம் திகதி சீன ஜனாதிபதி லி சியான் நானுடன் பேசிய ஜெயார் இலங்கை மக்கள் முற்காலத்தில் இந்தியாவிலிருந்து வந்த ஆக்கிரமிப்புக்களை எதிர்கொண்டு வெற்றிபெற்றதாகவும், இனிமேலும் எந்த ஆக்கிரமிப்பையும் எதிர்த்துப் போராடப்போவதாகவும் கூறினார். "15 மில்லியன் மக்களை இந்திய ஆக்கிரமிப்பு கொன்றுவிடும்" என்று ஜெயார் பேசினார். "சில மூளை பிசகியவர்கள் ஆக்கிரமிப்புக் குறித்துப் பேசலாம், ஆனால் இலங்கை தனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ளும் சக்தியைக் கொண்டுள்ளது என்பதை சீனா நம்புகிறது" என்று சீன ஜனாதிபதி பதிலளித்தார். சீன அதிபரின் கூற்றிற்கு நன்றி தெரிவித்த ஜெயார், "இலங்கை போன்ற நாடுகளுக்கு சீனாவின் கொள்கை உற்சாகத்தைத் தருகிறது" என்று கூறினார். இலங்கைக்கு ஆயுதங்களை வழங்க சம்மதம் தெரிவித்தமைக்காக சீன ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ஜெயார் பின்னர் சீனப் பிரதமருடன் பேசும்போது தமக்குத் தேவையான ஆயுதங்கள் குறித்த விபரங்களை வெளியிட்டார். உள்நாட்டுப் பிரச்சியினைச் சமாளிக்க தமக்கு உதவி தேவைப்படுவதாகக் கூறிய ஜெயார், சீனாவினால் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 6 கரையோர ரோந்துப் படகுகளுக்காக தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், வடக்குக் கடற்பகுதியில் நடைபெற்றுவரும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களின் போக்குவரத்தையும், பயங்கரவாதிகளின் கடல் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்துவதற்கு தமக்கு மேலும் பல கரையோர ரோந்துப் படகுகள் தேவைப்படுவதாக அவர் கோரினார். ஜெயார் கேட்டுக்கொண்ட அனைத்துக் கோரிக்கைகளையும் தாம் வழங்கிவைப்பதாக சீனப் பிரதமர் சாஓ உறுதியளித்தார். அதன் பின்னர் சீன கம்மியூனிஸ்ட் கட்சியின் இராணுவ ஆணைக்குழுவின் தலைவரான டெங் சியாவோபிங் ஐச் சந்தித்தார் ஜெயார். அவரிடம் மேலும் ரோந்துப் படகுகளைத் தருமாறு கேட்டுக்கொண்டார். "பயங்கரவாதிகளிடமிருந்து எங்களைப் பாதுகாத்துக்கொள்ள பீரங்கிப் படகுகளைத் தாருங்கள். எமது வடக்குக் கரையிலிருந்து 20 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் இந்தியாவிலிருந்து எமது நாட்டுக்குள் அத்துமீறிப் பிரவேசிக்கும் இந்தியர்களையும், பயங்கரவாதிகளையும் தடுப்பதற்கு முன்னர் நீங்கள் எமக்குத் தந்து உதவிய பீரங்கிப் படகுகள் போன்று இன்னும் பல எமக்குத் தேவைப்படுகிறது" என்று அவர் கூறினார். புரட்டாதி 1983 இல் ஜெயார் சீனாவுக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்ட காலத்திலிருந்து இலங்கைக்கான ஆயுத உதவிகளை சீனா தொடர்ச்சியாக வழங்கியே வந்திருந்தது. ஆகவே, இம்முறை செல்லும்போது தனது இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களின் பட்டியல் ஒன்றினைத் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்த ஜெயார் அதனை டெங்கிடம் கையளித்து , ஆயுதங்களுக்கான பணத்தினை இலகுக் கடன் அடிப்படியில் செலுத்தும் வசதிகளைச் செய்து தருமாறும் வேண்டிக்கொண்டார். ஜெயாரின் இந்த ஆயுதக் கொள்வனவுப் பயணத்தின் பின்னர் 1984 ஆடியில் சீன விமானப்படை உயர் அதிகாரிகளின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்தது. அதன் பின்னர் 1985 ஆம் ஆண்டு ஆடியில் லலித் அதுலத் முதலியும் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றினை மேற்கொண்டு சீனா பயணமாகியிருந்தார். இதே காலப்பகுதியில் தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் ஜெயார் பயணங்களை மேற்கொண்டிருந்தார். இதன்மூலம் பொருளாதார ரீதியில் பெருமளவு உதவிகளை அவரால் பெற்றுக்கொள்ள முடிந்திருந்தது. ஆனியில் அமெரிக்காவுக்கு ஜெயார் மேற்கொண்ட பயணத்தின் மூலம் பெருமளவு ஆயுதங்களையும், இராணுவத் தளபாடங்களையும் இலங்கைக்குக் கொண்டுவர முடிந்தது. ஆனி 18 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ரீகனை வெள்ளை மாளிகையில் ஜெயார் சந்தித்தார். தமிழ்ப் போராளிகளை அடக்குவதற்கு அமெரிக்கா இராணுவ ரீதியில் தமக்கு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஜெயாரின் கோரிக்கையினைச் செவிமடுத்த ரீகன், ஜெயாரை அமெரிக்க உப ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோர்ஜ் ஷுட்ஸ், நிதிச் செயலாளர் மற்றும் அமெரிக்க உதவித்திட்டப் பணிப்பாளர் பீட்டர் மக்பேர்சன் ஆகியோருடன் பேசுமாறு கோரினார். ரீகன் குறிப்பிட்ட அதிகாரிகளுடன் பேசிய ஜெயார், புத்தளத்தில் அமைக்கப்பட்டுவந்த அமெரிக்க வானொலிச் சேவையின் அஞ்சல் நிலையக் கட்டுமாணப் பணிகள் குறித்தும், திருகோணமலைத் துறைமுகத்தினை அமெரிக்க கடற்படையின் பாவனைக்கு வழங்குவது குறித்தும் பேசினார். இப்பேச்சுக்களின்போது தாக்குதல் உலங்குவானூர்திகள் உள்ளிட்ட பெருமளவு அமெரிக்க ஆயுதங்களை இஸ்ரேல், தென்னாபிரிக்கா, பாக்கிஸ்த்தான் ஊடாக இலங்கைக்கு வழங்கும் ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின. சீனாவுக்கும், அமெரிக்காவுக்குமான தனது விஜயங்களை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில் இந்தியாவின் தலைநகர் தில்லியில் இந்திய அதிகாரிகளையும் ஜெயார் சந்திக்கத் தவறவில்லை. அங்கு இந்திய அதிகாரிகளிடம் பேசிய ஜெயார், தனது இராணுவத்திற்கான ஆயுத தளபாடங்களையும் பயிற்சிகளையும் இந்தியா விரிவாக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதே காலத்தில் லலித் அதுலத் முதலியும் உள்நாட்டில் முப்படைகளுக்குமான ஆட்சேர்ப்பினை பரந்தளவில் முடுக்கிவிட்டிருந்தார். தனது இராணுவ இயந்திரத்தை பெருப்பித்துப் பலப்படுத்த ஜெயாருக்கு அவகாசம் தேவைப்பட்டது. அதனை இந்திரா காந்தியின் சிறப்புத் தூதுவரான கோபாலசாமி பார்த்தசாரதியுடனான பேச்சுவார்த்தைகள் ஊடாகவும், உள்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினைத் தொடர்ச்சியாக நடத்துவதனூடாகவும் பெற்றுக்கொள்ள அவர் முனைந்தார்.
-
கருப்பு அக்டோபர், யாழ்ப்பாணம் முஸ்லிம்களுக்கு விடிவை தருமா?
ரஞ்சித் replied to colomban's topic in நிகழ்வும் அகழ்வும்
இஸ்ரேல் தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பகையுணர்வை ஏற்படுத்துமாறு சிங்களவருக்கு ஆலோசனை வழங்கவில்லை சிங்களம் தமிழரையும் முஸ்லீம்களையும் பீரித்தாளவில்லை, தமிழரின் விடுதலைப் போராட்டத்தினை அழிக்க முஸ்லீம்களைப் பாவிக்கவில்லை புலநாய்வுத்துறை, பொலீஸ், இராணுவம் என்று அரச படைகளில் முஸ்லீம்கள் ஆயிரக்கணக்கில் உள்வாங்கப்பட்டது வெறும் வேலைவாய்ப்பிற்காக மட்டுமே ஆரம்பத்தில் கூட்டணியினருடன் முஸ்லீம்கள் இருந்ததது எனும் சரித்திரம் பொய்யானது தமிழரின் மரபணுவில் இருக்கும் குரூரமே முஸ்லீம்களை அழித்தது, விரட்டியது. போதுமா?!!!!! -
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ரஞ்சித் replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
பலஸ்த்தீனத்திலும், லெபனனிலும் பயிற்சிக்காக பல ஆயிரங்களைக் கொடுத்து இயக்கங்கள் உறுப்பினர்களை அனுப்பி வைத்தன என்று நினைக்கிறேன். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பும், ஈரோஸும் தான் அவை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமக்கு சரியான ஆயுதங்களைக் கூடத் தர பலஸ்த்தீனர்கள் விரும்பவில்லையென்றும், தமது நேரத்தை முகாம்களிலேயே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கழித்தோம் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஒரு சில சந்தர்ப்பங்களில் இஸ்ரேலுடனான போர்க்களத்திற்கு இவர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள், ஆனால் வெகு சில சந்தர்ப்பங்களிலேயே நேரடிச் சண்டையில் ஈடுபடுத்தப்பட்டார்களாம். பலஸ்த்தீனர்களுடனான தமிழ்ப் போராளிகளின் நெருக்கம் ஜெயவர்த்தனவை இஸ்ரேலுடன் நெருக்கமாக்கியதாகவும், இதன்மூலமே இஸ்ரேலினை தமிழருக்கெதிராக பல தசாப்த்தங்களாக திருப்பிவிட சிங்களவர்களால் முடிந்தது என்று கூறுவோரும் இருக்கின்றனர். நான் அறிந்தவரையில் இஸ்ரேல் சிங்கள அரசுக்கும், தமிழ்ப் போராளிகளுக்கும் ஒரே நேரத்தில் ஆயுதங்களை விற்றிருக்கிறது. ஆனால், இலங்கை அரசுக்கான அதன் ஆயுத வியாபாரம் தமிழருக்கான ஆயுத விற்பனையினைக் காட்டிலும் பலநூறு மடங்கு என்பதும் கவனிக்கத் தக்கது. -
அலன் தம்பதிகளை விடுவிக்க நேரடியாக செயலில் இறங்கிய இந்திரா வெள்ளியன்று அதுலத் முதலி கொழும்பு மாநகரசபை கேட்போர் கூடத்தில் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினைக் கூட்டியிருந்தார். அந்த மாநாட்டிற்கு நானும் சென்றிருந்தேன். அலன் தம்பதிகள் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு தன்னால் நீண்ட மெளனத்தைத் தவிர சொல்வதற்கு வேறொன்றுமில்லை என்று கூறினார் அவர். தொடர்ந்து பேசிய அவர், இக்கடத்தல் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்க யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இரு அவதானிப்பு நிலையங்களைத் தாம் நிறுவியிருப்பதாகக் கூறினார். அதன் பின்னர் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஸ்கன்டிநேவிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மக்களை வடக்கிற்குச் செல்லவேண்டாம் என்று அறிவுருத்தினார். "இந்த நாடுகளில் வாழுகின்ற புலம்பெயர்ந்த தமிழர்களே இந்த நாட்டில் பயங்கரவாதாம் செயற்பட பணம் வழங்கி வருகிறார்கள்" என்று அவர் கூறினார். "தாம் வாழும் நாடுகளின் பிரஜைகளைக் கடத்துவதற்கு பயங்கரவாதிகளுக்கு அவர்களே பணம் கொடுத்து உதவுகிறார்கள்" என்றும் அவர் கூறினார். மேலும், இலங்கை இக்கடத்தல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார். "இக்கடத்தைல்ச் சம்பவம் இரு விடயங்களை இலங்கைக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சென்றிருக்கிறது. முதலாவது, அமெரிக்கா இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தழிக்க இலங்கைக்கு உதவ வேண்டும் என்பது. இரண்டாவது, இலங்கையில் செயாற்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு தமிழ்நாடே அடைக்கலம் கொடுத்து வருகிறது என்பது" என்று அவர் மேலும் தெரிவித்தார். இக்கருத்துக்கள் இந்தியாவை அவமானப்பட வைத்தன. அமெரிக்க உதவி ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் இந்தியாவுக்கான உத்தியோக பூர்வப் பயணத்தை வைகாசி 12 ஆம் திகதி ஆரம்பிக்கவிருந்த நேரத்தில் இரு அமெரிக்கர்களின் உயிர்கள் அச்சுருத்தலுக்கு உள்ளாகியிருந்தன. ஆகவே, இந்திரா காந்தி தனிப்பட்ட ரீதியில் இவ்விடயம் தொடர்பாகச் செயற்பட எண்ணினார். உடனேயே தொலைபேசியூடாக எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்ட இந்திரா "அலன் தம்பதிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதவாறு ஈ.பி.ஆர்.எல்.எப் இனரைப் பார்க்கச் சொல்லுங்கள்" என்று பணித்தார். எம்.ஜி.ஆரு உம் உடனடியாகவே இந்தச் செய்தியை பத்மநாபாவிடம் தெரிவித்தார். கே.பத்மநாபா றோ செயலில் இறங்கியது. அமெரிக்க தம்பதிகள் விடுவிக்கப்படவில்லையென்றால் ஈ.பி.ஆர்.எல். எப் இன் தலைவர்கள் அனைவரும் நாடுகடத்தப்படுவார்கள் என்று அவர்களை மிரட்டியது. சனிக்கிழமை அன்று ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர்கள் மீதான றோவின் அழுத்தம் மேலும் அதிகரித்தது. அகில இந்திய வானொலிச் சேவையின் சென்னை நிலையத்திலிருந்து "மனிதாபிமான ரீதியில் அலன் தம்பதிகளை விடுவியுங்கள்" என்கிற இந்திரா காந்தியின் கோரிக்கை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறையென்று தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வந்தது. அன்று மாலை இந்திய உளவுத்துறையினரிடமிருந்து பத்மநாபாவுக்கு வந்த கையொப்பம் இடப்படாத கடிதத்தில், "அலன் தம்பதிகளை விடுவியுங்கள், உங்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் நான் செய்து தருகிறேன்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கடத்தல்ச் சம்பவம் நடைபெற்று பல வருடங்களுக்குப் பின்னர் என்னுடன் பேசிய டக்கிளஸ் தேவானந்தாவும், ரமேஷும், இந்திரா காந்தியிடமிருந்து வந்த கடிதத்தின் பின்னரே அலன் தம்பதிகளை விடுவிப்பதற்கான முடிவினைத் தாம் எடுத்ததாகக் கூறினர். இந்திரா காந்தியைப் பலதடவைகள் சந்தித்திருந்த பத்மநாபா அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். சனிக்கிழமை பின்னிரவு வேளையில் அலன் தம்பதிகள் விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாண ஆயர் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் அங்கு வைத்து விடுவிக்கப்பட்டிருந்தனர். கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயத்தின் அதிகாரிகள் அலன் தம்பதிகளை 13 ஆம் திகதி கொழும்பிற்கு அழைத்துவந்ததுடன், மறுநாள் பத்திரிக்கையாளர் சந்திப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர். அமெரிக்கத் தகவல் தினைக்களக் கேட்போர் கூடத்தில் பல பத்திரிக்கையாளர் சமூகமளித்திருக்க அந்தக் கூட்டம் நடைபெற்றது. செய்திகளைச் சேகரிப்பதற்காக நானும் அங்கு சென்றிருந்தேன். மிகச் சரளமாகப் பேசிய ஸ்டான்லி தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் தயக்கமின்றி, வெளிப்படையாகப் பதிலளித்தார். பிக்கப் வாகனத்தின் பின்னிருக்கையில் முகத்தைத் தரையில் அழுத்தியபடி தம்மைப் படுக்கவைத்து அரைமணிநேரம் ஓட்டிச் சென்றதாக அவர் கூறினார். ஆனால், சிறிது நேரத்தின்பின்னர் தாம் ஒரே இடத்தைப் பலமுறை சுற்றிவந்துகொண்டிருப்பது தமக்குப் புலப்பட்டதாகவும், நீண்டதூரம் தம்மைக் கடத்திச் செல்வது போன்ற பிரமையினை ஏற்படுத்தவே அவ்வாறு அவர்கள் நடப்பதை தாம் உணர்ந்துகொண்டதாகவும் கூறினார். "உண்மையயைகச் சொல்லப்போனால், நாம் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு மிக அருகிலிருந்த வீடொன்றிலேயே நாம் தங்கவைக்கப்பட்டிருந்தோம் என நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறினார். தம்மை மிகவும் கண்ணியமாக அவர்கள் நடத்தினார்கள் என்று மேரி கூறினார். "நாம் ஒருபோதும் துன்புறுத்தபடவில்லை" என்று அவர் மேலும் கூறினார். தமிழ்ப் பிரிவினைவாதிகள் கொடூரமானவர்கள் என்பதனைக் காட்ட அவர்களிடமிருந்து ஏதாவதொரு செய்தியை எடுத்துவிடலாம் என்கிற நோக்கில் கொழும்பு ஊடகங்கள் துருவித் துருவி கேள்விகளைத் தொடுத்துக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. நாம் பயங்கரவாதிகள் இல்லையென்று தம்மிடம் அவர்கள் தெரிவித்ததாக மேரி கூறினார். "நாங்கள் விடுதலைப் போராளிகள், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நாம் போராடுகிறோம்" என்று அவர்கள் கூறினார்கள் என்று மேலும் அவர் தெரிவித்தார். "நாங்கள் பயங்கரவாதிகளாக இருந்திருந்தால் உங்களை கொன்றிருப்போம், மரியாதையாக நடத்தவேண்டிய தேவை எமக்கு இருந்திருக்காது" என்றும் அவர்கள் கூறியதாக அவர் தொடர்ந்தார். அலன் தம்பதிகளின் கடத்தல்ச் சம்பவம் இறுதியில் சுபமாக முடிந்தது. சில நாட்களின் பின்னர் அவர்கள் அமெரிக்காவுக்குத் திரும்பியிருந்தார்கள். ஆனால், இந்தக் கடத்தல்ச் சம்பவம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கசப்புணர்வினை ஏற்படுத்தியிருந்தது. அதுலத் முதலியும் பிரேமதாசவும் இதுகுறித்து இந்தியாவைத் தொடர்ச்சியாக விமர்சித்தே வந்தனர். மேலும் தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்குப் பயிற்சியளித்து, ஆயுதங்களைக் கொடுத்து இலங்கையைத் துண்டாட இந்தியா உதவிவருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். பிரேமதாசாவோ ஒருபடி மேலே சென்று பஞ்சாப்பில் பிரிவினை கோரிப் போராடும் சீக்கியர்களை அடக்கி ஒடுக்கும் இந்திய அரசு, இலங்கையில் பிரிவினை கோரிப் போராடும் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு உதவிவருவது நயவஞ்சகம் என்றும் தெரிவித்தார். இது இந்தியாவின் உணர்வுகளை வெகுவாகப் பாதித்திருந்தது. மேலும், சீக்கியப் பிரிவினைவாதிகளைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கும் இந்தியா தமிழ்ப் பிரிவினைவாதிகளை விடுதலைப் போராளிகள் என்று அழைப்பது நகைப்பிற்கிடமானது என்று அவர் தெரிவித்தார். பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரேமதாச, "அவர்கள் கொலைகாரர்கள், கடத்தல்க்காரர்கள், திருடர்கள் என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும்" என்று கூறினார். இப்பேச்சு இந்தியாவை ஆத்திரங்கொள்ள வைத்திருந்தது. "இலங்கையின் மக்களுக்கும், அரசாங்கத்திற்கு அளவுக்கதிகமான உதவிகளையும், நிவாரணங்களையும் வழங்கிவரும் நட்புநாடான இந்தியா மீது இலங்கையின் அரசியற்பிரமுகர்கள் மிகவும் அபாண்டமான முறையில் பழிசுமத்துவது அதிர்ச்சியையும் வேதனையினையும் அளிக்கிறது" என்று இந்தியா பிரேமதாசாவின் பேச்சுக் குறித்து கருத்துத் தெரிவித்தது.