Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே அக்கராயன் பகுதி வருகிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்ட எழில்மிகுந்த சாலையும் இப்பகுதியிலேயே இருக்கிறது. பிற்பகல் 3 மணியளவில் அக்கராயனில் அமைந்திருக்கும் நண்பனின் குடும்பத்திற்குச் சொந்தமான கமத்தினை அடைந்தோம். 90 ஏக்கர்கள் வயற்காணியும், தோட்டக்காணியும் கொண்ட பாரிய காணித்தொகுதி அது. நண்பனின் சகோதரர்கள் அனைவருக்கும் இங்கே காணித்துண்டுகள் அவர்களது தந்தையினால் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. வயல்கள் விதைக்கப்பட்டிருந்தன. அண்மையில் பெய்த கடும் மழையினால் வயல்களுக்குள் வெள்ளம் நிற்பது தெரிந்தது. நண்பனின் கமத்தில் பணிபுரிவோர் அடுத்த மழை ஆரம்பிக்கும் முன்னர் மருந்தடிக்கும் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறே தோட்டக் காணிகளில் தென்னை மரங்களும் பழம் தரும் மரங்களும் காணப்பட்டன. சூரிய வெளிச்சம் நிலத்தில் விழுவதே அரிதாகும் அளவிற்கு அக்காணி சோலைபோன்று காட்சியளித்தது. மரமுந்திரிகை, தேக்கு மரங்களும் வரிசைக்கு நேர்த்தியாக நடப்பட்டிருந்தது. நண்பனின் சகோதரகள் அடிக்கடி இங்கு வந்து தங்கிச் செல்வதுண்டு, குறிப்பாக வெளிநாட்டில் வசிப்போர். விருந்தாளிகள் வந்தால் தங்குவதற்கென்று சகல வசதிகளுடனும் கூடிய விருந்தினர் மாளிகை ஒன்றினை அவர்கள் கட்டியிருந்தார்கள். மேற்கத்தைய பாணியில் அமைக்கப்பட்ட குளியல் அறைகள், கழிவறைகள், விருந்தினர் மண்டபம், படுக்கையறைகள் என்று நகரப்பகுதியில் இருந்து தொலைவாக அமைந்திருக்கும் ஒரு விவசாயக் கிராமத்தில் இவ்வாறான வசதிகளுடன் கூடிய விருந்தினர் மாளிகையினைக் காண்பது அருமையே. இந்த விருந்தினர் தங்குமிடத்தைப் பராமரிக்கவும், வயற்காணிகளையும், தோட்டக்காணிகளையும் பராமரிக்கவும் என்று சில பணியாளர்கள் இங்கே வசித்துவந்தனர். அவர்களுக்கென்று தனியான வீடுகளும் அங்கே கட்டப்பட்டிருந்தன. நாம் செல்லும் வழியில் கிளிநொச்சி நகரில் இருந்த அங்காடியொன்றிலிருந்து மீன்கள் சிலவற்றையும், இறால்களையும் வாங்கிச் சென்றிருந்தோம். நண்பனின் விருந்தினர் தங்குமிடத்தைப் பராமரிக்கும் அம்மா ஒருவர் அவற்றைத் துப்பரவு செய்து சமைக்கத் தொடங்கினார். சற்று ஓய்வெடுத்தபின், கமத்தில் இருந்த கிணற்றில் குளித்துவிட்டு சுற்றவர இருக்கும் காணிகளைப் பார்ப்பதற்கு நடந்துசென்றோம். நண்பனின் சகோதர்களின் காணிகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவை. சிலவற்றில் எல்லைகளே காணப்படவில்லை. இடையிடையே செல்லும் குறுக்கு வீதிகள் அவற்றை பிரித்துச் சென்றபோதும், அவை அனைத்துமே ஒரே பணியாளர்களால் பராமரிக்கப்பட்டு வந்தன. இக்காணிகளில் இருந்த பனை மற்றும் தேக்கு மரங்களில் மயில்கள் இருப்பதைக் கண்ணுற்றேன். மயில் இங்கு அடிக்கடி காணப்படும் ஒரு பறவை. அப்பகுதியில் எங்கேயோ ஒரு மூலையில் இருந்து மயில் அகவுவது கேட்டுக்கொண்டே இருக்கும். அக்காணிகளை அண்டிய வீடொன்றிற்குச் சென்றோம். நன்கு பரீட்சயமானவர்கள். அவ்வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவன் சண்டைக்கு வளர்க்கும் வெள்ளடியான் சேவல்களை வைத்திருந்தார். குறைந்தது 80 இலிருந்து ‍ 100 வரையான சேவல்களும், குஞ்சுகளும் அவரிடம் இருந்தன. தமக்குள் சண்டைபிடிக்கும் சேவல்களைத் தனியாகப் பிடித்து அடைத்து வைத்திருந்தார்கள். இப்போதும் சண்டைக்கு சேவல்களை வளர்க்கும் வ‌ழக்கம் இருக்கிறதா என்று கேட்டபோது, ஆம், ஆட்கள் வந்து வாங்கிச் செல்வார்கள். கறிக்கும் எடுப்பது உண்டு என்று அந்த இளைஞன் கூறினார். அப்படியே காணிகளிருந்து வெளியே வந்து வீதிக்கு ஏறினோம். அதுதான் ராசா அண்ணை மரம் நட்டு வளர்த்த வீதி. வீதியின் ஒரு எல்லையிலிருந்து மற்றைய எல்லைக்கு நடந்து சென்று சுற்றவர இருக்கும் வயற்காணிகளைக் கண்டு களித்தோம். இடையிடையே புகைப்படங்கள், செல்பிகள். வீதிக்குச் சமாந்தரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்காலுக்கு மேலாக சீமேந்தினால் பாலம் ஒன்றைக் கட்டியே நண்பனின் வீட்டிற்குச் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அக்கட்டிலிருந்து சிறிது நேரம் பழங்கதை பேசினோம். சிறிதுநேரம் பேசிக்கொண்டிருக்கப் பசியெடுத்தது. நாம் கொண்டுவந்திருந்த மீன், இறால் என்பவற்றைக் குழம்பாக வைத்திருந்தார் அந்த அம்மா. அவற்றுடன் கரட் சம்பலும், உருளைக்கிழங்குக் கறியும் பரிமாறப்பட்டது. வீட்டுக்கிணற்றில் ஆசைதீர குளித்த குளியலும், தோட்டக்காணிகளைச் சுற்றிவர நடந்த நடையும் களைப்பினையும் பசியினையும் ஒருங்கே ஏற்படுத்தியிருக்க வயிறார உண்டோம். தோட்டத்தில் காய்த்த பப்பாளிப்பழமும், வாழைப்பழமும் கொண்டுவந்தார்கள். சிறிது நேரத்தில் களைப்பு மிகுதியால் தூங்கிப்போனோம்.
  2. காலை 8 மணியிருக்கும். தான் கூறியதுபோலவே மைத்துனரின் வீட்டு வாயிலில் நண்பனது கார் வந்து நின்றது. "வெளிக்கிட்டியாடா?" என்று நண்பன் தொலைபேசியில் கேட்டான். "ஓம், வாறன்" என்று சொல்லிவிட்டு மைத்துனரின் வீட்டிலும் விடைபெற்று கிளம்பினேன். ஆனைப்பந்தியூடாக, பலாலி வீதியை குறுக்கறுத்து பருத்தித்துறை வீதியில் ஏறினோம். பருத்தித்துறை வீதியில் நல்லூருக்கு அண்மையில் ஒரு அசைவக உணவகம். காலைச்சாப்பட்டிற்காக வண்டியை நிறுத்தி வாங்கிக்கொண்டோம். சுடச்சுட பட்டீஸும், ரோல்ஸும். அருமை. ஒரு பை நிறைய வாங்கிக்கொண்டு வந்தான். பயணம் முழுதற்கும் என்று யோசித்திருக்கலாம். மீண்டும் பலாலி வீதியில் வண்டி ஏறியது. தின்னைவேலி, பாமர்ஸ் ஸ்கூல், கோண்டாவில்ச் சந்தி, டிப்போவடி என்று நான் சிறுவயதில் தவழ்ந்து திரிந்த வீதிகளும் ஊர்களும் நண்பனது வாகனத்தில் பயணிக்கும்போது சடுதியாகத் தோன்றி மறைந்தது போலவும், வீதிகள் சுருங்கிவிட்டது போலவும் ஒர் உணர்வு. இந்தவிடங்கள் எல்லாவற்றிலும் நிறையவே நினைவுகள் கலந்திருக்கின்றன. பசுமரத்தாணி போல என்று சொல்வார்களே? அதுபோல. என்றும் பசுமையான நினைவுகள். எளிதில் எழுத்தில் வடித்துவிடமுடியாதவை. ஆதலால் தொடர்ந்து செல்கிறேன். சிட்னியிலிருக்கும் நண்பர் ஒருவரது தகப்பனாரைப் பார்ப்பதே உரும்பிராய்ப் பயணத்தின் நோக்கம். ஊரில் பிரபல வர்த்தகரான அவர் அண்மைக்காலமாகச் சற்று சுகயீனமற்று இருந்தார். அவரது உடல்நிலை குறித்த கவலைகள் நண்பருக்கு இருந்து வருகின்றன‌. ஆகவே நான் யாழ்ப்பாணம் போகிறேன் என்று கேள்விப்பட்டதும், "ஒருக்கால்ப்போய் அப்பாவையும் பார்த்துவிட்டு வரமுடியுமா?" என்று கேட்டபோது ஆமென்றேன். டிப்போவடி தாண்டியதும் வரும் சிற்றொழுங்கையில் வீடு. விசாலமான இரண்டுமாடிக் கட்டடம். ஒழுங்கையினிரு மரங்கிலும் கமுக மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்க, வீட்டைச் சுற்றி சோலைபோன்று மரங்கள் நடப்பட்டிருந்த அமைதியான அழகான வீடு. நண்பன் தான் வாகனத்திலேயெ இருப்பதாகக்கூறிவிட நான் உள்ளே சென்றேன். என்னை முதன்முதலாகப்பார்ப்பதால் அவர் அதிகம் பேசவில்லை. பலவீனமாகத் தெரிந்தார். சிறிதுநேரம் மட்டுமே அவரால் வெளியில் வந்து அமர்ந்துகொள்ள முடிந்தது. "தம்பி, எனக்கு இப்படி கனநேரம் இருக்கேலாது, நான் உள்ளுக்கை போகப்போகிறேன், இருந்து தேத்தண்ணி ஏதாச்சும் குடிச்சுப்போட்டு போம்" என்று சொன்னார். "இல்லை அங்கிள் உங்களை பார்க்கத்தான் வந்தேன். நீங்கள் உள்ளுக்கைபோங்கோ, முடிந்தால் கொழும்பு போகுமுன் இன்னொருமுறை வந்து சந்திக்கிறேன்" என்று கூறிவிட்டுக் கிளம்பினேன். உரும்பிராயிலிருந்து பலாலி வீதியூடாக கோண்டாவில்ச் சந்திநோக்கிச் சென்றோம். அங்கிருந்து இடதுபுறம் திரும்பி இருபாலை, பின்னர் செம்மணிப் பகுதியூடாகச் சென்று கண்டிவீதியில் ஏறினோம். செம்மணி பற்றி 80 களிலும் 1995 இலும் நாம் கேள்விப்பாடிருக்கிறோம். புளொட் அமைப்பின் ஆரம்பகால உள்வீட்டுப்பிரச்சினைகளின்போதும் பின்னர் கிருசாந்தி குமாரசாமி மற்றும் அவரது தாய், சகோதரர், உறவினர் ஆகியோரின் படுகொலைகளின் போதும் இப்பெயர் தமிழர்களுக்கு மிகுந்த பரீட்சயமாகிப்போனது. செம்மணிச் சுடலையூடாக வரும்போது, "இதுதான் மச்சான் செம்மணிச் சுடலை, இங்கதான் கிருசாந்தியையும் மற்ற ஆக்களையும் கொண்டு புதைத்தவங்கள்" என்று நண்பன் கூறிக்கொண்டு வந்தான். கண்டிவீதிவழியாக பூநகரி நோக்கித் திரும்பி பயணிக்கத் தொடங்கியது நண்பனின் வாகனம். பூநகரி என்று கேள்விப்படும்போதெல்லாம் 1993 இல் புலிகள் நடத்திய தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையும் நாகதேவந்துறை என்கிற பெயரும் என்னால் தவிர்க்கமுடியாமல் மனதில் வந்துபோகிறது. பூநகரியின் புதிய பாலத்தினூடு வரும்போது இருவகையான உணர்வுகள். முதலாவது தமிழ்மக்களின் பயணம் இப்பகுதியில் சற்று இலகுவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது, எம்மீதான இனக்கொலை புரிந்தவர்கள் கட்டியிருக்கும் இப்பாலத்தில் நாம் பயணிக்கிறோம் என்பது. மக்களுக்கு இப்போது எது தேவையானதோ, அது இருந்தால்ப் போதும் என்று மனதை ஆறுதல்ப்படுத்திக்கொண்டேன். மப்பும் மந்தாரமுமாக இருந்த அந்த முற்பகல் வேளையில், சனநடமாட்டம் இல்லாத அப்பாதையில் நண்பன் 130 - 140 வேகத்தில் வாகனத்தைச் செலுத்திக்கொண்டு சென்றான். சிறுவயதில் இருந்தே காரோட்டுவதில் நன்கு பரீட்சயமானவன். ஆகவே, அவனது திறமையில் முழு நம்பிக்கை வைத்து இருக்கையில் அட்டை போல ஒட்டிக்கொண்டேன். பாலம் கடந்து இருமருங்கிலும் அண்மையில் பெய்த வெள்ளத்தில் வழிந்தோடாது இன்னும் மிச்சமாய் இருக்கும் நீர் வீதியின் ஓரங்களில் தரித்து நிற்க, பனை வடலிகளும், பற்றைகளும் செழித்து வளர்ந்து நிற்க, நன் இதுவரை வந்திராத தாயகத்தின் ஒரு பகுதியூடாகச் சென்றுகொண்டிருந்தேன், நண்பனின் அனுக்கிரகத்தில். யாழ்ப்பாணத்தில் நான் வாழ்ந்த 7 வருடங்களில் குடாநாட்டைத் தவிர வேறு எந்தப் பகுதிகளுக்கும் சென்றது கிடையாது. அதற்கான தேவையும் அப்போது இருந்ததில்லை. ஆகவே, தாயகத்தில் கிட்டத்தட்ட 90 வீதமான பகுதிகள் நான் வாழ்நாளில் பார்க்காதவை. எனவேதான் அக்கராயன் நோக்கிய பயணத்தில் எல்லாமே புதிய இடங்களாக எனக்குத் தெரிந்தது. நாவற்குழி - கேரதீவு - மன்னார் வீதியிலிருந்து விலகி கிளிநொச்சி நோக்கிப் பயணித்தோம். இந்த வீதியின் இருமருங்கிலும் தெரிந்த இயற்கை அழகு அபரிமிதமானது. சிட்னியில் சில இடங்கள் பார்க்கும்போது அழகாக இருப்பதாகத் தோன்றும். ஆகா ஓகோ என்று செயற்கையாகப் புகழ்ந்துந்துகொள்கிறோம் என்றுகூட நினைப்பதுண்டு. ஆனால், தாயகத்தில் இருக்குமிந்த அழகையெல்லாம் பார்க்க மறந்துவிட்டோமே என்று பெரிய ஏக்கம் வந்துபோனது. அத்துடன் நான் இங்கு இருக்கப்போவது ஓரிரு நாட்களுக்கு மட்டுமே என்று நினைத்தபோது ஏக்கமும் சேர்ந்துகொண்டது. தாயகத்தில் வாழும் மக்கள்பேறுபெற்றவர்கள் என்று நான் நினைப்பதற்கு இந்த இயற்கை அழகும் இன்னொரு காரணம். ஒருவாறு கிளிநொச்சி நகரை அடைந்தோம். நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று மாவீரர் நாள். கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியிலும், அவ்வீதியிலிருந்து கனகபுரம், அக்கராயன் நோக்கிச் செல்லும் வீதியிலும், வீதியின் மேலாகக் கம்பீரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த வளைவுத் தோரணம் "மாவீரர் நாள் 2023" என்று சொல்லிற்று. ஆக்கிரமிப்பாளனின் ஏதோவொரு படைத் தலைமையகம் முன்னால் இருக்க, மாவீரர் நாள் அனுஷ்ட்டிக்கப்படும் கொட்டகைகளும், வளைவுகளும், தோரணங்களும் அப்பகுதியெங்கிலும் சிவப்பு மஞ்சள் வர்ணத்தை அள்ளித் தெளித்திருந்தன‌. எமது விடுதலை வீரர்களை அழித்துவிட்டோம், எச்சங்களையும் தோண்டி எறிந்துவிட்டோம் என்று ஆக்கிரமிப்பாளன் கொக்கரித்து வந்தபோதும் மக்களின் மனங்களில் அவர்கள் இன்னும் வாழ்கிறார்கள் என்பதற்கு நான் அன்று பார்த்த காட்சிகள் சாட்சியம். மாவீரர் நாள் வளைவுகளூடாக நாம் பயணிக்கும்போது அவற்றை முடிந்தளவு படமாக்கிகொண்டேன். "மச்சான் , கவனம், பாத்தெடு. உன்ர போனை நோண்டினாங்கள் என்டால் பிரச்சினை வரலாம்" என்று நண்பன் கூறவும், "உவ்வளவு சனம் நிண்டு அவனுக்கு முன்னாலை உதைச் செய்யுது?" என்று கேட்டேன். "ஆருக்குத் தெரியும், பிரச்சினை குடுக்கிறதெண்டால் குடுப்பாங்களடா" என்று பதில் வந்தது. கிளிநொச்சியிலிருந்து அக்கராயன் போகும் வீதியில்த்தான் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் வருகிறது. நாம் அவ்விடத்தை அடையும்போது மாலையாகிவிட்டிருந்தது. மாவீரர் துயிலும் இல்லம் ஆக்கிரமிப்பாளனினால் அழிக்கப்பட்டபோது மாவீரர் கல்லறைகள் தோண்டப்பட்டு, நடுகற்கள் உடைத்தெறியப்பட்டிருந்தன. ஆனால், தொடர்ந்து வந்த வருடங்களில் அப்பகுதி மக்கள் துயிலும் இல்லத்தைப் புணரமைத்து, நடுகற்களைச் சேகரித்து ஒரு மலைபோல குவித்து வைத்திருந்தார்கள். அக்குவியலின் அடிவாரத்திலிருக்கும் இன்னும் முற்றாக உடையாத நடுகற்களில் மாவீரரது பெய‌ர்கள் உச்சரித்துக்கோன்டிருந்தன. இவற்றோடு அந்தத் துயிலும் இல்லம் எங்கும் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கவென தென்னங்கன்றுகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. அப்பகுதியெங்கும் வீதிகளும், வளைவுகள் மஞ்சள் சிவக்கு நிறக் கொடிகளில் அலங்கரிக்கப்பட்டிருக்க, தேசம் எழுச்சி பெற்று நின்ற‌து போன்ற உணர்வு. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல வாயிலில் பெருத்த சனக்கூட்டம். நிகழ்வுள் ஆரம்பிக்கப்பட இன்னும் பல மணித்தியாலங்கள் இருக்கவே மக்கள் பெருவாரியாக அப்பகுதிக்கு வந்துகொண்டிருந்தார்கள். மழை தூரத் தொடங்கியிருந்தது. ஆனால் மக்கள் வெள்ளமும் குறையவில்லை. அக்கூட்டத்தைப் படமெடுக்கவென ஒரு சிலர் வீதியின் எதிர்க்கரையில் நின்றுகொண்டிருந்ததைக் காணக்கூடியதாய் இருந்தது. அவர்கள் எமது மக்களில்லை என்பதும் தெளிவாகத் தெரிந்தது. எனது தம்பியின் பூதவுடலும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலேயே விதைக்கப்பட்டதாக அறிந்தேன். துயிலும் இல்லத்தைக்கடந்து கார் மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும்போது அவனுக்காகவும் இன்னும் மரணித்த ஆயிரமாயிரம் மாவீரகளுக்காகவும் மனம் வேண்டிக்கொண்டது. இப்போதைக்கு இதைத்தவிர வேறு என்னதான் செய்ய முடியும் என்னைப்போன்றவர்களா? உங்கள் கனவுகள் வீண்போகாது என்று மனதிற்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேன். வீண்போகக்கூடாது.
  3. சிசிலியாஸ் கொன்வென்ட்டில் 80 களில் கணிதம் படிப்பித்தவர்.
  4. காசாவில் மயானங்களை கனரக வாகனங்கள் கொண்டு உழுது அழிக்கும் இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸ் தீவிரவாதக் குழுவினர் மீதான காசா யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை பதினாறு மயானங்களை இஸ்ரேலிய இராணுவ அழித்து நாசம் செய்திருப்பதாகத் தெரியந்திருக்கிறது. இவ்வாறு அழிக்கப்பட்டுள்ள மயானங்களின் நினைவுக் கற்கள் புரட்டப்பட்டு, குழிகள் தோண்டப்பட்டு, மனித எச்சங்களும் வெளியே எடுத்து விச்சப்பட்டிருப்பதை அமெரிக்காவின் சி.என்.என் செய்திச்சேவை ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டிருக்கிறது. இறுதியாகக் கான் யூனிஸ் பகுதியில் அமைந்திருந்த மயானத்தை அழித்து, புதைகுழிகளைத் தோண்டிய இஸ்ரேலிய இராணுவம் இஸ்ரேலியர்களை ஹமாஸ் இங்கு ஒளித்து வைத்திருக்கலாம் என்பதனால் மயானத்தை அழிக்கவேண்டி வந்ததாகக் கூறியிருக்கிறது. யுத்தத் தாங்கிகளையும், கனரக வாகனங்களையும் பாவித்தே இந்த மயானங்கள் இஸ்ரேலினால் அழிக்கப்பட்டிருக்கின்றன. காசாவினுள் இஸ்ரேலிய இராணுவம் புகுந்ததிலிருந்து மாயானங்களை அழிக்கும் கைங்கரியம் மிகவும் திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்டு வருவதை சி என் என் வைத்திருக்கும் ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. சர்வதேச சட்டங்களின்படி மதத் தலங்களை அழித்தல், மயானங்களை அழித்தல் ஆகியவை குற்றங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலின் இக்குற்றம் போர்க்குற்றம் ஆவதற்கான அனைத்து இலக்கணங்களையும் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. மயானங்களை ஹமாஸ் அமைப்பு இராணுவத் தேவைகளுக்காகப் பாவிப்பதால் அவையும் தனது இராணுவத்தின் முறையான இலக்குகள்தான் என்று இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் நியாயப்படுத்தியிருக்கிறார். கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் இந்த மயானங்களில் புதைத்திருக்கலாம் என்பதனாலேயே அனைத்து மயானங்களும் தோண்டப்படுவதாகவும் அவர் கூறினார். அவ்வாறு தோண்டியெடுக்கப்படும் உடல்கள் இஸ்ரேலியர்களினுடையவை அல்ல என்று உறுதிப்படுத்துப்படுமிடத்து அவை மீளவும் அங்கேயே புதைக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார். ஆனால், சி என் என் பெற்றுக்கொண்ட ஏனைய விபரங்களின்படி, மயானங்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் தரைமட்டமாக உழப்பட்டு, அங்கே இராணுவத் தாங்கிகளும், ஆட்டிலெறித் தளங்களும் நிறுவப்பட்டு யுத்தத்திற்காகப் பாவிக்கப்பட்டு வருவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மயானங்களைச் சுற்றி பாரிய மதில்கள் அமைக்கப்பட்டு இராணுவ ஏவுதளங்களாக இவை மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், ஒரேயொரு மயானம் மட்டும் அப்படியே இருந்தது. அங்கே முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களில் கொல்லப்பட்ட கிறீஸ்த்த‌வர்கள், யூதர்கள், மேற்குநாட்டவர்களின் கல்லறைகள் காணப்பட்டன. ஆகவே, அதனை இஸ்ரேலிய இராணுவம் அப்படியே விட்டு விட்டது. மரணித்தவர்களுக்கான மரியாதையினை தாம் வழங்குவதாகக் கூறிய பேச்சாளர், எதற்காக மயானங்களின் மீது தமது யுத்தத் தாங்கிகளும், ஆட்டிலெறித் தளங்களும் நிறுத்தப்பட்டிருக்கின்றன என்று கேட்டபோது எதனையும் கூற மறுத்துவிட்டார். இவற்றைப் பார்க்கும்போது நினைவிற்கு வருவது ஒரு விடயம்தான். தாயகத்தில் எமது செல்வங்களின் கல்லறைகள் சிங்கள மிருகங்களால் உழப்பட்டு, மாவீரர்களின் திருமேனிகள் தூக்கி வெளியே எறியப்பட்டு, எமது கல்லறைகளின் மீது சிங்களப் பேய்கள் இராணுவத் தளங்களை அமைத்து இறுமாப்புடன் எம்மை இன்றுவரை ஆக்கிரமித்து வைத்திருப்பதுதான். 1980 களில் இஸ்ரேலியப் பயங்கரவாதிகள் சொல்லிக்கொடுத்த மிருகத்தனத்தை சிங்களப் பேய்கள் எம்மீது கட்டவிழ்த்துவிட்டன. இன்றோ சிங்களப் பேய்கள் 2009 இல் இருந்து செய்து வருபவற்றை இஸ்ரேலிய பயங்கரவாதிகள் பாலஸ்த்தீனத்தில் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
  5. யாழ்ப்பாணத்துக்கான எனது பயணத்தின் ஒற்றை நோக்கமே சித்தியைப் பார்ப்பதும், அவருடன் ஒவ்வொரு நாளும் சில மணிநேரங்களைச் செலவிடுவதும் தான். ஆனால், அது சாத்தியப்படாது என்பது அவருடனான முதலாவது சந்திப்பிலேயே என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவரால் அதிகம் பேச முடியவில்லை. அவரது உடல்நிலை அதற்கு இடம்கொடுக்கவில்லை. அதற்கு மேலாக, அவரை அவரது அறையிலிருந்து வெளியே அழைத்துவருவதற்கு அவருக்கு உதவி தேவைப்பட்டது. பிறரை எந்தவிதத்திலும் சிரமப்படுத்தக் கூடாது என்று நினைப்பவர் அவர், ஆகவே தன்னைப் பார்க்க வருவோரிடத்தில் நீங்கள் அலைக்கழிய வேண்டாம், இடைக்கிடை வந்தால்ப் போதும் என்று கூறியிருக்கிறார். அடுத்தது, மிகுந்த பலவீனமான நிலையில் இருப்பதால் அவரால் ஓரளவிற்கு மேல் சக்கர‌நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்துகொள்ளவும் முடியாது. 30 - 40 நிமிடங்களுக்கு மேல் அவரால் அங்கிருப்பதே கஸ்ட்டமாகத் தெரிந்தது. அவரைப் பார்ப்பதற்காகவே நான்கு நாட்கள் யாழ்ப்பாணத்தில் நிற்க முடிவெடுத்திருந்தேன். எனது மொத்தப் பயணத்தினதும் காலம் வெறும் 7 நாட்கள்தான். ஒவ்வொருநாளும் போய் அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாதென்று நினைத்தேன். இடையில் இருக்கும் இரண்டு நாளில் யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என்று ஒரு ஆசை. 1988 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முதலாக யாழ்ப்பாணத்தின் தெருக்களில் யாழ்ப்பாணத்தவர்களில் ஒருவனாகச் சுற்றப்போகிறேன் என்பதே மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன் என்று தெரியவில்லை, திடீரென்று முழிப்பு வந்தது. நேரம் 5 மணிதான். இனித் தூங்க முடியாது, மைத்துனரோ நல்ல நித்திரை. அக்குடும்பத்தில் ஆறுபேர். பாடசாலைக்குச் செல்வோர், வேலைக்குச் செல்வோர் என்று அனைவருமே காலை வேளையில் அவசரப்பட்டு ஆயத்தப்படுவார்கள். ஆகவே, அவர்களின் நேரத்தை வீணடிக்காது, சிரமம் கொடுக்காது எனது காலைக் கடன்களை முடிக்க எண்ணினேன். அதன்படி 5:30 மணிக்கு குளித்து முடித்து வீட்டின் வரவேற்பறையில் இருந்த கதிரையில் அமர்ந்தபடி நேற்றைய உதயனைப் படிக்கத் தொடங்கினேன். மைத்துனரின் வீட்டில் இருந்த ஒரு சில நாட்களில் என்னைக் கவர்ந்த இன்னொரு விடயமும் இருக்கிறது. அருகில் இருக்கும் சிறிய கோயிலில் இருந்து காலை 5:45 மணிக்கு மணியோசையும் அதனைத் தொடர்ந்து ஒலிக்கும் சுப்ரபாதமும். அமைதியான அந்தக் காலை வேளையில், மனதிற்கு ஆறுதலைத் தரும் அந்த இசையயைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். இருந்த மூன்று நான்கு நாட்களில் அதனை முற்றாக அனுபவித்தேன். இந்த அமைதியும், பரவசமும் எங்கும் இல்லை. ஏனையவர்கள் ஒருவர் பின் ஒருவராக எழத் தொடங்கினார்கள். மைத்துனரின் மனைவி சுடச் சுட கோப்பி கொடுத்தார். அருந்திவிட்டு மாமியோடும் மைத்துனரோடும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருக்க காலையுணவு வந்தது. அவர்கள் என்னைக் கவனித்துக்கொண்ட விதம் அருமை. தமது வீட்டில் ஒருவனாக என்னையும் நடத்தியது பிடித்துக்கொண்டது. நிற்க, முதலாவது நாளில் நான் சந்தித்த முக்கியமான இன்னொருவரைப் பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன். நண்பனுடன் யாழ்ப்பாணத்தைச் சுற்றி வந்துகொண்டிருக்கும்போது, ராசா அண்ணையைப் (நண்பனின் மூத்த சகோதரர், எனக்கும் நெருங்கிய நண்பர்) பற்றிக் கேட்டேன். "இருக்கிறாரடா, பாக்கப்போறியோ?" என்று கேட்டான். "உங்களுக்கு நேரமொருந்தால்ப் போகலாம்" என்று நான் கூறவும், ராசா அண்ணையைப் பார்க்க ஆரியகுளத்திற்கு வாகனத்தை ஓட்டினான். ராசா அண்ணை சற்று மெலிந்து காணப்பட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரிலும் சிறிய மாற்றங்கள். ஆனால் அதே புன்சிரிப்பும், அன்பான வார்த்தைகளும். சில நிமிடங்கள் ஆளையாள் சுகம் விசாரித்துக்கொண்டோம். "உங்களைப்பற்றிச் சிறிய கதையே எழுதினேன் அண்ணை" என்று நான் கூறியபோது, "என்னைப்பற்றி எழுத என்ன இருக்கிறது?" என்று கூறிச் சிரித்தார். சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தார். உரும்பிராயில் இருக்கும் சபரிமலை ஆலயத்திற்கு தனது வேலைத்தளத்தில் பணிபுரியும் ஒரு இளைஞனுடன் போகவிருந்தவரை நாம் நிறுத்திவைத்துப் பேசிக்கொண்டிருந்தோம். சுடச்சுட கோப்பியும் வடையும் கொடுத்தார். அதிகநேரம் அவரைக் காத்திருக்க வைக்க விரும்பவில்லை. "நான்கு நாட்கள் நிற்கிறேன், இன்னொருநாள் வந்து ஆறுதலாகப் பேசலாம்" என்று கிளம்பி வந்துவிட்டோம். சரி, பழையபடி இன்றைய நாளுக்கு வரலாம், ஒரு 7:30 - 8 மணியிருக்கும். நண்பன் தொலைபேசியில் வந்தான். "மச்சான், இண்டைக்கு என்ன பிளான் உனக்கு?" என்று கேட்டான். "ஒண்டுமில்லை, சில நண்பர்களைப் பார்க்க வேண்டும். உரும்பிராயில் எனது நண்பர் ஒருவரின் தகப்பனாரைச் சென்று சந்திக்க வேண்டும். இப்போதைக்கு அவ்வளவுதான்" என்று கூறினேன். "சரி, பின்ன வா அக்கராயனுக்குப் போவம். நானும் கமத்துக்குப் போய் ஒரு மாசமாகுது, ஒண்டு இரண்டு மாத்து உடுப்பும் கொண்டுவா, அங்க இண்டைக்கு இரவு நிண்டு வருவம்" என்று கூறினான். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. நண்பன் அடிக்கடி அக்கராயனில் உள்ள கமம் பற்றிப் பேசியிருக்கிறான். கொழும்பில் இருந்த காலங்களில் கமத்திலிருந்து வருவோரைக் கண்டு நான் பேசியிருக்கிறேன். ராசா அண்ணையும், நண்பனும் அக்கராயன் பற்றி அந்நாட்களில் பேசும்போது நானும் அங்கிருந்திருக்கலாம் என்றும் எண்ணியிருக்கிறேன். அந்த அக்கராயனைக் காணச் சந்தர்ப்பம் இப்போது வந்திருக்கிறதென்றால் எனது மகிழ்ச்சிபற்றிக் கேட்கவும் வேண்டுமா? இந்த அக்கராயன் பற்றிக் கூறவேண்டும். வன்னியில் இருக்கும் பச்சைப் பசேல் என்கிற விவசாயக் கிராமங்களில் ஒன்று அக்கராயன். 13 ஆம் நூற்றாண்டில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களைக் கலைத்துவிட்டு இப்பகுதியை தமிழ் மன்னனான அக்கராயன் ராசன் ஆண்டுவந்ததால் இதனை அக்கராயன் என்று அழைக்கிறார்கள். 70 ஆம் ஆண்டுகளில் இப்பகுதியில் தங்கி நின்று விவசாயம் செய்வதற்கு பொதுமக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. கமம் செய்வதற்கு 10 ஏக்கர்களும், வீடுகட்டி தோட்டம் செய்வதற்கு 5 ஏக்கர்களும் என்று மொத்தமாக 15 ஏக்கர்கள் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தன. அக்காலத்தில் இலங்கையிலிருந்து மலேசியாவுக்கு வேலை நிமித்தம் சென்று வாழ்ந்தவர்கள் நாடுதிரும்பத் தொடங்கியிருந்தார்கள். அவ்வாறு மலேசியாவிலிருந்து நாடுதிரும்பிய நூறுபேருக்கும் அக்கராயனில் இந்த 15 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. அப்படி மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பங்களில் ஒன்று எனது நண்பன் ஜெயரட்ணத்தின் குடும்பமும். அவர்கள் பிற்காலத்தில் இன்னும் பல நிலங்களைப் பணம் கொடுத்தும் வாங்கியிருந்தார்கள். அவர்களின் குடும்பத்திற்கு மட்டுமே இப்பகுதியில் கிட்டத்தட்ட 90 ஏக்கர்கள் நிலம் சொந்தமாக இருக்கிறது. அக்கராயனில் ஜெயரட்ணத்தின் குடும்பத்தாரின் காணிகள் இருக்கும் பகுதியை ஊடறுத்து ஒரு அழகான சாலை செல்கிறது. வன்னியில் இருக்கும் மிகவும் ரம்மியமான சாலைகளில் முதன்மையானது அது. அப்பகுதிக்குச் சென்று அதனைக் காட்சிப்படுத்தாத யூடியூப் பதிவாளர்கள் இல்லையென்று சொல்லுமளவிற்கு மிகவும் பிரபலமானது. அதற்கான காரணம் இந்தச் சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்து பாதையினை மூடிக் குடைபோல காத்துநிற்கும் மரங்களும், சாலையின் ஒருபுறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் தெரியும் பச்சைப் பசேல் என்ற வயற்காணிகளும் மறுபுறம் தெரியும் தென்னை மற்றும் கமுகு மரத் தோட்டங்களும்தான். இச்சாலையினைப் பலர் சொர்க்கத்தின் வாசற்படி என்று கூறவும் கேட்டிருக்கிறேன். இதில் விசேசம் என்னவென்றால், சாலையை அணைத்து வளர்ந்து நிற்கும் மரங்களை வைத்தது வேறு யாருமல்ல, அதே ராசா அண்ணைதான். சுமார் 600 மீட்டர்கள் தூரத்திற்கு சாலையின் இருபக்கமும் இந்த மரங்களை அவர் நட்டிருக்கிறார். 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானபோது, நாட்டிற்கு அமைதி திரும்பிவிட்டதாக நினைத்து பலர் நற்காரியங்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். அப்படி இறங்கியவர்களில் ஒருவர் ராசா அண்ணை. அக்கராயனில் தமது கமம் இருந்த பகுதியூடாகச் செல்லும் சாலையின் இரு பக்கத்திலும் மரங்களை அவர் நட்டார். அவ்வாறு நட்டுக்கொண்டுவருகையில் இந்தியா ராணுவம் எம்மீதான தாக்குதலைத் தொடங்கியிருந்தது. இந்திய வல்லாதிக்கம் வன்னியை ஆக்கிரமித்த காலத்திலும் ராசா அண்ணையின் மர நடுகை தொடர்ந்து நடந்துவந்தது. அப்படியான‌ ஒரு நாளில் ராசா அண்ணையை இந்திய ராணுவம் தாக்கியது. புலிகள்மீதான ஆத்திரம் வீதியில் மரம் நட்டவர் மீது பாய்ந்தது. ஆனால், அவர் அன்று செய்த இந்த நற்காரியத்தின் பலனை இன்று அப்பகுதி மக்களும், அப்பகுதிக்கு வருவோரும் அனுபவிக்கிறார்கள். தனது நோக்கம் கனகபுரத்திலிருந்து அக்கராயன் முழுவதற்குமான வீதியின் இரு புறத்திலும் மரங்களை நடுவதுதான் என்று அண்மையில் கூறியிருந்தார். அவரது முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.
  6. அவர் இருப்பது பாஷையூர் திருக்குடும்பக் கன்னியாஸ்த்திரிகள் மடம். அவரது பெயர் சிஸ்ட்டர் கிறிஸ்டபெல். யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் கணித ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றியவர். பின்னர் வன்னியில் உளநலம் பாதிக்கப்பட்டோருக்கான மனோதத்துவ நிபுணராக இறுதிவரை பணிபுரிந்தவர். தற்போது ஓய்வெடுத்திருக்கிறார்.
  7. "இண்டைக்கு கார்த்திகை விளக்கீடு மச்சான், வீட்டிலை மரக்கறி, எங்க சாப்பிடப் போகிறாய்?" என்று கேட்டான். "எனக்கு மரக்கறி பிரச்சினையில்லை" என்று நான் கூறவும். "இல்லை, பிள்ளைகளுக்கும் மரக்கறியெண்டால் இறங்காது, வா கொத்து ஏதாவது சாப்பிடுவம், அப்படியே பிள்ளைகளுக்குக் எடுத்துக்கொண்டுவரலாம்" என்று நண்பன் கூறவும், சரியென்றேன். அவனது வீட்டிலிருந்து கச்சேரி நோக்கிப் போகும் வழியில், வைத்தியசாலை வீதியில் யு.எஸ் ஹோட்டல் என்று ஒரு அசைவக உணவகம் இருக்கிறது. சில மாடிகளைக் கொண்ட அக்கட்டிடத்தின் முதலாவது மாடியில் உணவகமும் அதற்கு மேல் நிகழ்வுகளுக்கான மண்டபமும் இருக்கிறது. கட்டடத்தின் முன்னால் வாகனத்தை நிறுத்திவிட்டு, அருகிலிருந்து மற்றைய உணவகங்களைப் பார்த்துக்கொண்டு வரும்போது நண்பனின் அலுவலக மேலாளர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சிங்களவர், யாழ்ப்பாணத்தில் வசிப்பவர். தென்பகுதி அரசியல்வாதிகள், அமைச்சர்களோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர். நண்பனைக் கண்டதும் சத்தமாகச் சிங்களத்தில் பேசினார். நண்பனுடன் அவர் பேசிக்கொண்டிருக்க, அப்பகுதியைச் சுற்றி நோட்டமிட்டேன். அந்த உணவகங்களின் முன்னாலும் பல சிங்களவர்களைக் காணக் கிடைத்தது. வான்கள், கார்கள் என்று ஓரளவிற்கு வசதிபடைத்த தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்கள் என்பது தெரிந்தது. அவரிடம் பேசும்போது, "இப்பகுதியில் ஓரளவிற்கு நல்ல கொத்து எங்கு வாங்கலாம்?" என்று நண்பன் கேட்கவும், "ஏன், யு.எஸ்ஸை முயற்சி செய்து பாருங்கள், அல்லது இன்னும் இரண்டு மூன்று இடங்கள் எனக்குத் தெரியும்" என்று அந்தச் சிங்களவர் கூறினார். நான் திகைத்துப் போனேன். ஒரு சிங்களவர் யாழ்ப்பாணத்தில் நல்ல உணவு கிடைக்கும் இடங்களை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் என்றால், அவர்கள் எவ்வளவு தூரத்திற்கு அங்கு ஒற்றிவிட்டார்கள் என்பது புரிந்தது. அவர் கூறியவாறே யு.எஸ் உணவகத்திற்குச் சென்று ஆட்டுக் கொத்தும், கோழிக்கறியும் கேட்டோம். இடையே குடிப்பதற்கு ஜிஞ்சர் பியரும் கேட்டோம். சாப்பாடு அருமை. குளிர்ந்த சோடாவோடு சேர்த்து உண்ணும்போது அமிர்தமாக இருந்தது. அந்த உணவகத்தில் பணிபுரிந்தவர்கள் யாழ்ப்பாணத்துத் தமிழர்களாக இருக்கலாம், ஆனாலும் பேச்சு வழக்கில் வேறுபாடு தெரிந்தது. மிகவும் மரியாதையாகவும், பணிவாகவும் நடந்துகொண்டார்கள். அடிக்கொருமுறை சேர் என்று அழைத்தார்கள். நண்பன் இக்கடைக்கு அடிக்கடி வந்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். சாப்பிட்டு முடிந்ததும் அதற்கான கட்டணத்தையும், பணியாளருக்கான "சந்தோசப் பணத்தையும்" நண்பனே கொடுத்து (நான் கொடுக்கிறேன் என்று நான் கூறியும் பிடிவாதமாக மறுத்து, உனக்கு செலவுசெய்ய நான் சந்தர்ப்பம் ஒன்றைத் தருவேன், அப்போதுச் செய்தால்ப் போதும் என்று கூறிவிட்டான்) பிள்ளைகளுக்கும் தேவையான உணவினை வாங்கிக்கொண்டு மறுபடியும் வீடு வந்தோம். இரவு ஒன்பதரை ஒன்பதே முக்கால் ஆகுகையில் மீண்டும் என்னை மைத்துனரின் வீட்டின் முன்னால் இறக்கிவிட்டான் நண்பன். நான் உள்ளே போகும்வரை அப்பகுதியிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு காத்து நின்றான். கேட் உட்பகுதியால் பூட்டப்பட்டிருந்தது. வெளியிலிருந்து அதனைத் திறக்க என்னால் முடியவில்லை. பலமாக கேட்டினைத் தட்டிப் பார்த்தேன், எவரும் வீட்டிற்கு வெளியே வரவில்லை. நண்பன் இன்னமும் அங்கு நிற்பது தெரிந்தது, "நீங்கள் போங்கோ, நான் கோல்பண்ணிப் பார்க்கிறேன்" என்று கூறி அவனை அனுப்பிவைத்தேன். ஆனாலும் வீட்டிலிருந்து எவரும் வெளியில் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. நான் தட்டிய சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் தனது கார்த்திகை விளக்கீட்டினை வீதிக்கு வந்துபார்ப்பது போல பாசாங்கு செய்துகொண்டு என்னை யாரென்று நோட்டம் விடுவது எனக்குத் தெரிந்தது. தோளில் பாரிய பையொன்று தொங்க, முன்பின் தெரியாத ஒருவர் பக்கத்து வீட்டின் முன்னால் இரவு 10 மணிக்கு நிற்கிறார் என்றால் சந்தேகம் வரத்தானே செய்யும்? சயன்ஸ் சென்ட்டர் எனும் பிரபல டியுஷன் நிலையத்திற்கு மிக அருகிலேயே மைத்துனரின் வீடு. இரவு வகுப்பு முடிந்து மாணவர்களும் போயாயிற்று. வீதியில் வெளிச்சம் இருந்தாலும் எப்போதாவது அவ்வீதியூடாகச் செல்லும் மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டியைத் தவிர ஆளரவம் மிகவும் குறைவான வீதியது. என்னடா செய்யலாம்? இப்படியே காலை மட்டும் வீதியில் நிற்கவேண்டி வந்துவிடுமோ என்று ஒரு பக்கம் யோசனை. ஆனால், எவராவது சந்தேகத்தின் பேரில் என்னைப் பொலீஸில் போட்டுக்குடுத்தால் என்னசெய்வது என்கிற பயமும் உள்ளுக்குள் இருந்தது. ஆனால் ஒரேயொரு ஆறுதல், மைத்துனர் வேலை முடிந்து 10:30 மணிக்குத்தான் வீடுவருவார். அவர் வரும்வரை காத்திருக்கலாம் என்று அப்படியே வீதியில் நின்றுகொண்டேன். அதிஸ்ட்ட‌வசமாக மைத்துனரின் மனைவி வீட்டின் முன்கதவினைத் திறந்துபார்க்கவும், நான் பலமாக அவரை அழைத்து, "கேட்டை ஒருக்கால் திறவுங்கோ" என்று கேட்டேன். "அடகடவுளே, எவ்வளவு நேரமாய் உதிலை நிக்கிறியள்?" என்று கேட்டார். நானும், "இப்பத்தான், ஒரு அரைமணித்தியாலம் இருக்கும்" என்று கூறிச்சிரித்தேன். "கேட்டைத்திறந்து வந்திருக்கலாமே?" என்று கேட்கவும், திறக்க முயற்சித்தேன் ஆனால் முடியாமற்போய்விட்டது என்று கூறவும் சிரித்துவிட்டார். மறுபடியும் அலங்கார குமுழைத் திருகிக்கொண்டு நின்றிருக்கிறேன் என்பது புரிந்தது. குளித்துவிட்டு மாமியுடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பழைய கதைகள், நீண்டகால தொடர்பில்லாத உறவினர்கள், எவரெவர் இப்போது எங்கிருக்கிறார்கள் என்கிற கேள்விகள் என்று சம்பாஷணை தொடர்ந்தது. மைத்துனர் இரவு 10:30 இக்கு வந்ததும் இரவுணவு அருந்திவிட்டு, வீட்டின் மண்டபத்தில் பாய் தலையணையுடன் படுத்திருந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். இரவு 12:30 - 1 மணிக்குத் தூங்கியிருப்போம் என்கிற நினைவு. யாழ்ப்பாணத்தில் எனது முதலாவது நாள் நிறைவிற்கு வந்தது.
  8. பாஷையூரிலிருந்து நாம் படித்த பாடசாலையான பத்திரிசியார் கல்லூரி வழியால் சென்றோம். பழைய நினைவுகள் வந்து போயின. நான் படிக்கும் காலத்தில் இருந்த உயர் வகுப்புக்கள் இருந்த பகுதி முற்றாக காணாமற்போயிருந்தது. பாடசாலையின் மத்திய வகுப்புக்கள் இருந்த பகுதிக்கு அதனை மாற்றியிருப்பதாக நண்பன் சொன்னான். ஒரு சில கட்டடங்களைத்தவிர 80 களில் இருந்ததுபோன்றே அப்பகுதி தெரிந்தது. அப்படியே சேமக்காலை வீதிவழியாக கடற்கரை வீதிக்கு வந்து அங்கிருந்து யாழ்ப்பாணம் பண்ணைப்பகுதி நோக்கிச் சென்றோம். அப்பகுதியில் பாரிய மாற்றம் ஏதும் இல்லை. சின்னக்கடைக்கும் பண்ணைப்பகுதிக்கும் இடையில் இராணுவ முகாம் ஒன்று இருந்தது. சிறியதுதான், ஆனாலும் அவர்களின் பிரசன்னம் நன்றாகவே தெரிந்தது. அப்படியே புதிதாகக் கட்டப்பட்டுவரும் யாழ்ப்பாண மாநகரசபைக் கட்டத்தையும் பார்த்துக்கொண்டே பண்ணைப்பகுதிக்கு வந்தோம். சுற்றுலாத்தளம் போல் மிகவும் சுறுசுறுப்பாகவும் மக்கள் நிறைந்தும் காணப்பட்டது. கோட்டையின் பின்பகுதியில் தெற்கிலிருந்து சிங்கள மக்களை கொண்டுவந்த பஸ்வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்க, அதில் வந்தவர்கள் அப்பகுதியில் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். கொத்துரொட்டிக் கடைகள், சிற்றுண்டிக் கடைகள், ஐஸ் கிறீம் கடைகள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட் கடைகள் என்று அப்பகுதியெங்கும் மக்கள் அலைமோதிக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்தவர்களில் தமிழர்களைவிடவும் சிங்களவர்களே அதிகமாகக் காணப்பட்டார்கள். யாழ்ப்பாணத்தைச் சென்று பார்ப்பதென்பது அவர்களைப்பொறுத்தவரையில் விருப்பமான ஒரு பொழுதுபோக்கு என்றே நினைக்கிறேன். நான் யாழ்ப்பாணம் வந்த ரயிலில்க் கூட பெருமளவு சிங்களவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்தார்கள். பலவிடங்களில் இவர்களின் பிரசன்னம் இருந்தது. பண்ணையிலிருந்து ஊர்காவற்றுறை நோக்கிச் செல்லும் பாதையில் கடற்படை முகாமிற்கு சற்று முன்னர் வாகனத்தை நிறுத்திக்கொண்டோம். இறங்கி, இருபக்கமும் தெரிந்த இயற்கை அழகை மாலைச் சூரியன் மங்கும் வேளையில் படமெடுத்தேன். ரம்மியமாகவிருந்தது. இதேபகுதியை பலமுறை யூடியூப் தளத்தில் பலர் பதிவேற்றியிருக்கிறார்கள். மிகவும் அழகான‌ பகுதி. என்னைப்போலவே வேறு சிலரும் அப்பகுதியில் நின்று படமெடுப்பது தெரிந்தது. அன்று கார்த்திகை விளக்கீடு. யாழ்நகரெங்கும் வீடுகளின் முன்னால் விளக்குகள் ஏற்றப்பட்டு மிகவும் அழகாகத் தெரிந்தது. நண்பனின் வீட்டிற்குச் சென்றோம். அவனது வீட்டிலும் பிள்ளைகள் விளக்கீடு வைத்திருந்தார்கள். வீட்டின் முன்னால், முற்றத்தில், மதிலின் நீளத்திற்கு என்று பல விளக்குகள். யாழ்ப்பாணத்தில் நான் வாழ்ந்த காலத்தில் பார்த்ததற்குப் பின்னர் இன்றுதான் விளக்கீட்டினை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஊரை விட்டு எப்போதுமே நீங்கியதில்லை என்கிற உணர்வு ஒருகணம் வந்துபோனது. ஊரில் வாழ்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.கைலாசபிள்ளையார் கோயிலுக்குப் பின்னால் அவனது வீடு. கோயிலின் சுற்றாடல் என்றால் கேட்கவும் வேண்டுமா? அப்பகுதி விளக்கீட்டில் தெய்வீகமாகக் காட்சியளித்தது. பின்னர் அவனது பிள்ளையை வகுப்பிலிருந்து கூட்டிவர கட்டப்பிராய்ப் பகுதிக்குச் சென்றோம். போகும்போது நல்லூர்க் கோயிலூடாக செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. என்னைப்பொறுத்தவரை நல்லூரே யாழ்ப்பாணத்தின் அடையாளம் என்று எண்ணுவதுண்டு. கோயிலின் கம்பீரமும், அழகும் என்னைக் கவர்ந்தவை. அதனைப் பார்க்கும்போதே மனதிற்கும் இனம்புரியாத சந்தோசமும், பெருமையும் ஒருங்கே வந்துபோகும். இரவு விளக்கு வெளிச்சங்கள் கோயிலை இன்னும் அழகுபடுத்த, காரில் பயணித்தவாறே சில படங்களையெடுத்தேன். நாளை மாவீரர் நாள். நல்லூர் திலீபன் நினைவிடத்தில் பாரிய பந்தல்கள் இடப்பட்டு மக்கள் அப்பகுதியில் கூட்டமாக நின்று மாவீரர் நாள் ஒழுங்குகளைச் செய்துகொண்டிருப்பது தெரிந்தது. பந்தலின் முன்னால் நூற்றுக்கணக்கான மோட்டார்சைக்கிள்கள். இளைஞர்கள் விருப்புடன் வந்து அப்பகுதியில் பணிகளில் ஈடுபட்டிருந்ததைப் பார்க்கும்போது மக்களின் மனோநிலை எப்படியிருக்கிறதென்பது புரிந்தது. கட்டப்பிராயில் பருத்தித்துறை வீதியிலேயே வகுப்பு நடைபெற்றது. வாகனத்தை வீதியோரத்தில் நிறுத்திவிட்டு சில நிமிடங்கள் காத்திருந்தோம். அந்த இரவு வேளையிலும் பருத்தித்துறை வீதி மக்களும் வாகனங்களும் நிறைந்து காணப்பட்டது. குறுகலான வீதி, ஆனாலும் இருபுறமும் செல்லும் வாகனங்கள் வேகத்தைக் குறைக்காது, இலாவகமாக வீதியின் இடதுபக்கமும், வலதுபக்கமுமாக மாறி மாறி ஓட்டிக்கொண்டிருந்தார்கள். இவர்களுக்கிடையே மோட்டார்சைக்கிள்கள், முச்சக்க வண்டிகள், நடந்துசெல்லும் மனிதர்கள் என்று ஒரே கலேபரம். நண்பனின் பிள்ளை வகுப்பு முடிந்து வந்ததும், அவரை ஏற்றிக்கொண்டு மீண்டும் வீடு வந்தோம்.
  9. மாலை 5:30 இலிருந்து 6 மணிக்குள் பாஷையூரிலிருக்கும் ஓய்வுபெற்ற கன்னியாஸ்த்திரிகளைப் பராமரிக்கும் இல்லத்திற்குச் சென்றோம். பாஷையூர் அந்தோணியார் கோயிலில் இருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில் உயர்ந்த மதில்களாலும் தென்னை மரங்களாலும் சூழப்பட்ட கட்டடம் அது. வாயிற்கதவு பூட்டப்பட்டிருந்தது. திறக்கத் தெரியவில்லை. குமுழியைத் திருகித் திருகிப் பார்க்கிறேன், முடியவில்லை. நண்பன் காரில் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, "கூப்பிட்டுப் பாரடா" என்று சொல்லவும், கொஞ்சம் சத்தமாக கேட்டைத் தட்டினேன். உள்ளிருந்து பெண்ணொருவர் வந்து திறந்துவிட்டார். அலங்காரத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் குமிழையையே இவ்வளவு நேரமும் திருகியிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். "நீங்கள் போட்டு வாங்கோ, நான் ஆட்டொ பிடித்து போய்க்கொள்கிறேன்" என்று நண்பனைப் பார்த்துக் கூறினேன். "இல்லை, நீ முடிச்சுக்கொண்டுவா. நான் நிக்கிறன். இண்டைக்கு உன்னோட யாழ்ப்பாணம் சுத்துறதுதான் வேலை" என்று அன்புடன் கட்டளையிட்டான். சரியென்று கூறிவிட்டு கட்டடத்தினை நோக்கி நடந்தேன். உள்ளே சென்றதும் என்னை அமரச் சொல்லிட்டு யாரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். சித்தியின் பெயரைச் சொன்னேன், சிட்னியில் இருந்து வருகிறேன் என்றும் கூறினேன். இருங்கள், வந்துவிடுவா என்று கூறப்பட்டது. ஒரு சில நிமிடங்கள் போயிருக்கும், சித்தி வந்தார். சக்கர நாற்காலியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். நான் அவரை ஐந்து வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். உருவமே மாறி, நலிந்து, தோல் சுருங்கி, மிகவும் பலவீனமான நிலையில் இருந்தார். பேசுவதே அவருக்குக் கடிணமாக இருந்தது. சிறிதுநேரம் அவரை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, "எப்படி அன்ரா இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். சிறிய புன்முறுவல், "83 வயதில் இருக்கும் ஒருவர் எந்தளவு சுகநலத்துடன் இருக்கமுடியுமோ, அந்தளவு சுக நலத்துடன் இருக்கிறேன்" என்று சொன்னார். "அப்படித் தெரியவில்லையே?" என்று கேட்டேன். அதற்கும் ஒரு புமுறுவல். பல விடயங்களை அவர் மறந்திருந்தார். அவர் தொடர்பாக நான் கூறிய விடயங்களை அதிசயத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். "அப்படியெல்லாம் நடந்ததா?" என்று அடிக்கடி கேட்டார். எனது அன்னை, தம்பி, அக்கா என்று நெருங்கிய உறவுகள் தொடர்பாக அவருக்கு நினைவு இருக்கிறது. ஏனையவர்கள் தொடர்பாக அவர் அதிகம் பேசவில்லை. ஆனால், நான் பேசுவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். இடையிடையே எனது குடும்பம் பற்றி கேட்பார், ஒரே பதிலைச் சொல்லுவேன். ஒருசில நிமிடங்களின் பின்னர் அதே கேள்விகள், நானும் சலிக்காமல் அதே பதில்களைக் கூறுவேன். நான் திருமணம் முடித்ததைக் கூட அவர் மறந்திருந்தார். அடிக்கடி, "முடிச்சிட்டீரா, எத்தனை பிள்ளைகள்?" இதுதான் அவர் அடிக்கடி கேட்ட கேள்விகள். சிறிது நேரம் பேசிவிட்டு அமைதியானார். "என்ன, பேசாமல் இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். "ஒன்றுமில்லை, நீர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன், பல யோசனைகள்" என்று கூறினார். மீண்டும் அதே மெளனம். அவர் வலியினால் அவஸ்த்தைப்படுவது தெரிந்தது. ஒரு 35 - 40 நிமிடங்கள் வரை பேசியிருப்போம். அதன்பின்னர் அவரால் தொடர முடியவில்லை. "கஸ்ட்டமாக இருக்கிறதோ, அறைக்குத் திரும்பப் போகிறீர்களோ?" என்று கேட்டேன். "ஓம், கனநேரம் இதில இருக்க ஏலாது, நாரி நோகுது" என்று சொன்னார். கொண்டுவந்த சில பொருட்களை அவரிடம் கொடுத்துவிட்டு, அவரது சக்கர நாற்காலியை மெது மெதுவாக உருட்டிக் கொண்டு உள்ளேயிருக்கும் மண்டபம் போன்ற பகுதிவரை செல்ல‌, அங்கிருந்த பெண்ணொருவர், "இனி விடுங்கோ அண்ணா, நாங்கள் அவவைக் கூட்டிச் செல்கிறோம்" என்று சொன்னார். நான் சித்தியிடம் விடைபெற்றுத் திரும்ப, அவரிடம் யாரோ, "ஆரது சிஸ்ட்டர்?" என்று கேட்பதும், "அது என் அக்காவின் மகன், அவுஸ்த்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறான்" என்று அவர் கூறுவதும் கேட்டது. வாயிலில் காரில் பொறுமையுடன்ன் காத்திருக்கும் நண்பனை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
  10. இவன் யாரை தனது எதிரியென்று சொல்கிறான்? தமிழ் மக்களையோ? தமிழினத்திற்குத் துரோகம் இழைத்து, எதிரியுடன் நின்று தமிழர்களையே ஆயிரக் கணக்கில் கொன்றாயே, அந்தத் தமிழர்களையா சொல்கிறாய்? இன்னுமாடா உன்னை தமிழ்ச் சனம் நம்பும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?
  11. புகையிரதம் முழுவதும் சிங்களவர்கள். ஓரிரு தமிழர்கள். பேச்சிற்குக் கூட தமிழர் ஒருவரை அருகில் காண முடியவில்லை. எப்போதாவது இருந்துவிட்டு தமிழில் பேசுவது கேட்கும், அதுவும் சில சொற்கள்தான். வெளிநாட்டிலிருந்து வரும் தமிழர்களைக் கூடக் காணவில்லை. ஆனால், சிங்களவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். பல குடும்பங்கள் யாழ்ப்பாணம் செல்வது தெரிந்தது. யாழ்ப்பாணாத்தில் பார்க்கப்போகும் இடங்கள், இதுவரை எத்தனை முறை யாழ்ப்பாணம் வந்தாயிற்று என்கிற விபரங்கள் அவர்களிடையே பகிரப்பட்டன. அடிக்கடி வந்திருப்பார்கள் போலும். சிலர் இராணுவத்தினரின் குடும்பங்களாக இருக்கலாம். சுமார் 3200 ரூபாய்கள் கொடுத்து குடும்பங்களாக அடிக்கடி வந்துபோவதென்பது சாதாரண சிங்கள மக்களைப் பொறுத்தவரை சற்றுக் கடிணமாகவே இருக்கலாம். ஆனால், நீங்கள் இராணுவத்தினரின் குடும்பத்தவர் என்றால் ஒருவருடத்திற்கு குறைந்தது இருமுறையாவது குடும்பமாக யாழ்ப்பாணத்திற்கு இலவசமாக வரமுடியுமாம். இடையிடையே வடை, பழங்கள், தேநீர் என்று விற்றார்கள். பலருக்கு தமிழும் தெரிந்திருந்தது. ரயிலில் இருக்கும் சிற்றுண்டிச் சாலையாக இருக்கவேண்டும், ஊதா நிறத்தில் மேற்சட்டையணிந்து காலையுணவும், மதிய உணவும் விற்று வந்தார்கள். இரு முட்டை ரோல்களை வாங்கி உண்டேன், பசிக்குப் பரவாயில்லை போல இருந்தது. புளியங்குளம் புகையிரத நிலையத்தில் சுமார் 40 நிமிடங்கள் வரை மறித்து வைத்திருந்தார்கள். பின்னால் வரும் இன்டர்சிட்டி புகையிரதத்திற்கு இடம் கொடுக்க வேண்டுமாம். ஒற்றைத் தண்டவாளத்தில் யாழ்ப்பாணம் செல்வதால் வரும் பிரச்சினை. மைத்துனனுக்கும் நண்பனுக்கு மாறி மாறி தொலைபேசி அழைப்புக்களை எடுத்தேன். நண்பனைத் தொடர்புகொள்ள முடியவில்லை. மைத்துனனுடன் பேசி ரயில் 3 மணிக்குத்தான் யாழ்ப்பாணத்தை வந்தடையும் என்று கூறினேன், "வாங்கோ, மகனை அனுப்பி வைக்கிறன்" என்று மைத்துனன் கூறினார். வன்னியூடாக ரயில் செல்லும்போது யன்னல்வழியாக நிலங்களைப் பார்த்துக்கொண்டே வந்தேன். இனந்தெரியாத வலியும் பெருமூச்சூம் என்னை ஆட்கொண்டது. இங்கே அவர்கள் இருந்திருக்க வேண்டும், அவர்கள் கால்பட்ட தடங்களும், அவர்கள் குருதிசிந்திப் போரிட்ட இடங்களும் அவர்களின்றி அநாதரவாகக் கிடப்பது போலத் தோன்றியது. இத்தனை இடங்களை மீட்க எத்தனை ஆயிரம் உயிர்களைப் பலிகொடுத்தோம், இன்று எல்லாமே வீணாகிப்போய், அநாதைகளாக நாமும் எமது தேசமும் இருப்பது கண்டு வேதனைப்பட்டேன். இருபுறமும் அவ்வப்போது தெரிந்துமறைந்த ஆக்கிரமிப்பின் அடையாளங்களான படைமுகாம்களும், தலைமையகங்களும், வீதியோரங்களில் நேர்த்தியாக மெழுகப்பட்டு, எமது தேசத்தை ஆக்கிரமித்த களிப்பில் கம்பீரமாக வர்ணப் பூச்சில் காணப்பட்டன. ஆனையிறவின் பிற்பகுதியூடாகச் செல்லும்போது தெரிந்த சிங்கள பெளத்த தேசம் எம்மீது கொண்ட வெற்றியின் அடையாளமான சிங்கள பெளத்த இராணுவ வீரன் ஒருவனின் சிலையும், அதனைப் பார்வையிடவென இன்றும் வந்துசெல்லும் கூட்டம் கூட்டமான சிங்களவர்களும், அப்பகுதியில் இராணுவம் அமைத்திருக்கும் உணவு விடுதியும் கண்ணில்ப் பட்டது. விரக்தியும், வெறுப்பும், வேதனையும் ஒருங்கே பற்றிக்கொள்ள முகத்தினை வேறுபக்கம் திருப்பிக் கொண்டேன். ஒருவாறு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தது புகையிரதம். இறுதிப்பெட்டிக்கு முன்னால் உள்ள பெட்டி எனது. பொதிகளை இறக்கிக்கொண்டு இறங்கினேன். இனம்புரியாத சந்தோஷம், எங்கள் ஊர் என்று ஆனந்தம். முன்னால் மெதுமெதுவாகச் செல்லும் பயணிகளைத் தவிர்த்து, கடந்து, வாயிலில் நின்ற ஊழியரிடம் பயணச் சீட்டைக் கொடுத்துவிட்டு வெளியில் வந்தேன். முன்னால் யாழ்ப்பாணம் சிரித்துக்கொண்டு நின்றது. மூன்று மூன்றரை மணியிருக்கும், வெய்யில் தகதகத்துக்கொண்டிருந்தது. புகையிரத நிலையம் முன்னால் வாகனங்களும் மோட்டார் சைக்கிள்களும் வந்திறங்குவோரை ஏற்றிச் செல்லக் காத்திருக்கின்றன. என்னைக் கூட்டிச்செல்ல மைதுனரின் மகன் வருவான் என்று நானும் காத்திருக்கத் தொடங்கினேன். நிலையத்தின் முன்னால் உள்ள வட்ட வடிவ மலர்த்தோட்டத்தின் வேலியின் மேல் சாய்ந்துகொண்டு யாழ்ப்பாணத்திற்கு வரும் பயணிகளை அவதானித்துக்கொண்டிருந்தேன். நண்பன் அழைப்பில் வந்தான். "ம‌ச்சான், சொறியடா வர ஏலாமல்க் கிடக்கு, இண்டைக்கு மட்டும் உன்ர மச்சானின்ர வீட்டில தங்கு, நாளையிலிருந்து என்ர பொறுப்பு" என்று கெஞ்சுவது போலக் கேட்டான். "இல்லை ஜெயரட்ணம், நான் மைத்துனரின் வீட்டில் தங்குகிறேன், அவர்களுக்கும் சந்தோசம், நீங்கள் கரைச்சல்ப்பட வேண்டாம்" என்று கூறினேன். "இல்லையில்லை, நாளையில இருந்து என்ர பொறுப்பு" என்று கூறிவிட்டுத் துண்டித்தான். சில நிமிடங்கள் சென்றிருக்கும், ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன், ஸ்கூட்டர் ஒன்றில் அமர்ந்தபடி, கையில் இன்னொரு ஹெல்மெட்டுடன் என்னைப் பார்த்துக்கொண்டு, வாயில் சிறிய புன்னகையுடன் நிற்பது தெரிந்தது. அருகில்ப் போய், "நீங்கள் சுவியின்ர மகனோ?" என்று கேட்டேன். "ஓமோம்" என்று சிரித்துக்கொண்டே தலையசைத்தான் மைத்துனரின் இளைய மகன். "சரி, வாங்கோ போவம்" என்று அவன் கூறவும், பைகளில் ஒன்றை ஸ்கூட்டரின் அடிப்பகுதியிலும் மற்றையதை எனது மடியிலும் வைத்துக்கொண்டு கன்னாதிட்டி வீதியில் இருக்கும் மைத்துனரின் வீட்டிற்குச் சென்றோம். போகும் வழியெல்லாம் இதயத்துடிப்பு அடங்க‌ மறுத்துவிட்டது. இந்த வாகன‌ நெரிசலுக்குள் எப்படித்தான் ஓட்டுகிறார்களோ என்று அதிசயத்துடன் பார்த்துக்கொண்டு வந்தேன். வீட்டையடைந்ததும் முதலாவதாக மாமியைச் சந்தித்தேன் (தகப்பனாரின் சிறிய தங்கை, சிறியவயதில் எங்களை பார்த்துக்கொண்டவர், அன்பானவர்). என்னைக் கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அவருக்கு. அப்படியே அவர் முன்னால் கதிரையில் இருந்துகொண்டு நெடுநேரம் பேசினேன். பல விடயங்கள் இருந்தன பேசுவதற்கு. மைத்துனரின் மனைவி அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர். நான் வருவது தெரிந்து வேளைக்கு வேலையினை முடித்து வந்திருக்க வேண்டும். வீட்டில் சமைத்த உணவு பரிமாறப்பட்டது. அருமையான சுவை, நெடுங்காலத்திற்குப் பின் யாழ்ப்பாணத்தில் வீட்டுச் சாப்பாடு சாப்பிட்ட‌ திருப்தி. அவர்களுடன் ஓரிரு மணிநேரமாவது பேசிக்கொண்டிருந்திருப்பேன். நண்பன் மீண்டு தொலைபேசியில் வந்தான், "மச்சான், வாசலில நிக்கிறன், சொல்லிப்போட்டு வா, வெளியிலை போவம்" என்று கூறினான். எனது "சித்தியைப் போய்ப் பார்க்க முடியுமா?" என்று கேட்டேன். "அதுக்கென்ன, வா போவம்" என்று சொன்னான். உடனே வீட்டினுள் சென்று சித்திக்கென்று கொண்டுவந்த சில பொருட்களை அள்ளி ஒரு பையில் போட்டுக்கொண்டு கொழும்புத்துறை நோக்கிக் கிளம்பினோம்.
  12. கொழும்பு செல்லும் விமானம் சற்றுச் சிறியது. பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள். இந்தியாவிலிருக்கும் பெளத்த யாத்திரீகர் தலம் ஒன்றிற்குச் சென்றுவருகிறார்கள் என்று தெரிந்தது. சில முஸ்லீம்கள், ஒரு சில தமிழர்கள். இரண்டரை மணித்தியாலப் பயணம் என்றாலும், இரவுணவும், குடிக்க மென்பான‌மும் தந்தார்கள். ஓரளவிற்கு மரியாதையுடன் பேசினார்கள். கட்டுநாயக்காவில் இறங்கியதும் பல்வேறு உணர்வுகள். முதலில் பயம், பின்னர் எமக்கு நடந்த அநீதிகள், அதைத் தொடர்ந்து எமது அழிவுகளின் மேல் கட்டப்பட்டிருக்கும் இலங்கையின் கோட்டை கொத்தளங்கள் என்றெல்லாம் நினைவிற்கு வந்துபோனது. இலங்கைக்கு வந்தாயிற்று, அவர்கள் சொல்வதன்படியே ஆடவேண்டும். உணர்வுகளை மூட்டையாகக் கட்டி வைத்துவிடு என்று மனம் சொல்லியது. ஆகவே அப்பாவியாக சுங்க அதிகாரிகளின் பக்கம் சென்றேன். கடவுச்சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு எதுவுமே பேசாமல் பதிந்து தந்தான் ஒருவன். நன்றி என்று சொல்லிவிட்டு பொதியை எடுக்கும் பகுதிக்குச் சென்றேன். சில நிமிடங்களில் பொதி வந்து சேர்ந்தது. எடுத்துக்கொண்டே வெளிச்செல்லும் பகுதி நோக்கிச் செல்கையில் எனக்கு முன்னால் சென்ற இளைஞன் ஒருவனை விமானப்பட வீர‌ன் ஒருவன் விசாரிப்பது தெரிந்தது. ஆகவே, அவன் பின்னால் எனது நேரத்திற்காகக் காத்து நின்றேன். அவனை அனுப்பிவிட்டு என்னைப் பார்த்தான். கடவுச்சீட்டை அவனிடம் கொடுத்தேன், வாங்கிப் பார்த்துவிட்டு நீ போகலாம் என்று சொன்னான். வெளியே வந்தேன். வெளியில் சித்தப்பா. கண்டதும் கைலாகு கொடுத்து வரவேற்றார். அவர் ஒழுங்குசெய்திருந்த வாடகை வண்டியில் பொதிகளை ஏற்றிக்கொண்டு அவரது வீடு அமைந்திருக்கும் கொட்டகேன நோக்கிச் சென்றோம். யாழ்ப்பாணாத்திற்குப் போகுமுன் ஒருநாளை கொழும்பில் கழிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். அதன்படி அக்காவைச் சென்று சந்தித்தேன். மதிய உணவு, ஷொப்பிங் என்று சில மணிநேரங்கள் சென்றது. பின்னர் யாழ்ப்பாணம் செல்வதற்காக சில பொருட்களைக் கொள்வனவு செய்தேன். பற்பசை, பல்துலக்கி, சவர்க்காரம், டியோட்ரண்ட், ஷேவிங் ரேஸர் இப்படி இந்தியாதிகள். பின்னேரம் தூக்கம். காலையில் 4 மணிக்கு எழுந்தாயிற்று. புகையிரதம் 5:45 மணிக்கு புறக்கோட்டையிலிருந்து கிளம்பிவிடும், தவறவிடக் கூடாது என்று சொல்லிக்கொண்டேன். அந்தக் காலை வேளையில் கொழும்பு சுறுசுறுப்பாகவே இருந்தது. இதேவகையான பல காலை வேளைகளில் கொழும்பின் பல தெருக்களில் அலைந்து திரிந்த காலம் ஒன்றிருந்தது. என்னுடன் பிளட்போம் சீட்டை எடுத்துக்கொண்டு சித்தப்பாவும் உள்ளே வந்தார். இன்னும் நேரம் இருந்தது. உள்ளே அலைமோதியது கூட்டம். எங்குதால் செல்கிறார்களோ தெரியவில்லை, கூட்டம் கூட்டமாகச் சிங்களவர்கள் பயணிக்கிறார்கள். எம்மைச் சிங்களவர்கள் என்று எண்ணி சிலர் வந்து தாம் போகவேண்டிய புகையிரதம் எந்த பிளட்போமுக்கு வரும் என்றும் கேட்டார்கள். மேலே தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த அட்டவணையினைப் பார்த்து முடிந்தவரையில் அவர்களுக்குக் கூறினோம். எமது புகையிரதத்தை இன்னும் காண‌வில்லை. ஆனால் இன்னொரு பிளட்போமுக்கு யாழ்ப்பாணம் செல்லும் யாழ்தேவி வந்திருந்தது. பெருத்த கூட்டம் ஒன்று அதனுள் அவசரப்பட்டு ஏறுவது தெரிந்தது. நாம் நிற்பது சரியான பிளட்போம தானா என்று சித்தப்பாவைக் கேட்டேன். எனது பற்றுச் சீட்டை வாங்கிக்கொண்டு ரயில் அதிகாரியொருவரிடம் அவர் வினவினார். நீங்கள் யாழ்தேவிக்கு பணம் செலுத்தியிருக்கிறீர்கள். அது வந்துவிட்டது. இன்டர் சிட்டி மட்டுமே இங்கு வரும், அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது என்று கூறினார். அவசர அவசரமாக பொதிகளை இழுத்துக்கொண்டு படிகளால் ஏறி யாழ்தேவி பிளட்போமிற்குள் இறங்கி புகையிரதத்தினுள் நுழைந்துவிட்டோம். ஒருவாறு இருக்கை தேடி அமர்ந்து, சித்தப்பாவிற்குக் கைகாட்டி அனுப்பிவைத்தேன். புகையிரதம் நகரத் தொடங்கியது.
  13. ஒருவாறு 13 மணித்தியாலங்களுக்குப் பின்னர் தில்லியில் இறங்கினோம். மிகவும் விசாலமான, நவீன விமானநிலையம். ஆனால், இறங்கியவுடன் முகத்தில் அறையும் துர்நாற்றம். பனிப்புகார்போன்று நகர் முழுவதையும் மூடிநின்ற புகை, சுவாசிக்கவே சிரமப்பட்டவர்கள் சில‌ர் இருந்தார்கள். குறைந்தது 4 முறைகளாவது இருக்கும், தில்லி விமான நிலையத்தைச் சுற்றிச் சுற்றி இறங்க வழி பார்த்துக்கொண்டிருந்தார் விமானி. இடைக்கிடையே தனது சிரமத்துக்கான காரணம் பற்றிக் கூறிக்கொண்டதுடன், 50 ‍- 100 மீட்டர்களுக்குமேல் எதையும் பார்க்கமுடியாது என்றும் கூறினார். அவரது சிரமம் அவருக்கு. கொழும்பில் பஸ்ஸிலிருந்து இறங்குவதற்கு அவதிப்படுவது போல இந்தியர்கள் இறங்கினார்கள். ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு, தலைகளுக்கு மேலால் பொதிகளை இறக்கிக்கொண்டு, ரொம்பவே அவதிப்பட்டார்கள். விட்டால் இன்னொரு விமானம் ஏறிவிடுவார்கள் போலிருந்தது. நானும் அந்தச் சிங்களவரும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்தோம். நாம் பரவாயில்லை போலிருக்கிறதே என்று எண்ணியிருப்பார். ஒருவாறு சுங்கப்பகுதிக்கு வந்தேன். சீருடை அணிந்த எல்லைப்படை வீரர்கள் எனது பொதிகளை ஸ்கானர் ஊடாகச் சோதித்தார்கள். போதாதற்கு "எல்லாவற்றையும் வெளியே எடு, உனது பொதியினுள் கண்டெயினர் இருக்கிறது" என்று ஒருவன் கோபமாகச் சொன்னான். இன்னுமொருவன் "போன், இடைப்பட்டி, சப்பாத்து, பணப்பை என்று எல்லாவற்றையும் எடுத்துவை" என்று சொல்ல, இன்னுமொருவன் பொதியை திற என்று சொல்ல திக்கு முக்காடிப்போனேன். ஆங்கிலம் பேசமாட்டார்களோ? சைகையிலேயே எல்லாம் நடந்தது. ஹிந்தியில் கேட்டான், "எனக்கு உனது பாசை தெரியாது" என்று சொன்னேன். அவனுக்குப் புரியவில்லை, எனது சித்திக்கு நான் எடுத்துச்சென்ற என்ஷுவர் மாப்பேணிகளையும், சிக்கன் சூப் கண்டெயினரையுமே அவன் கேட்கிறான் என்பது புரிந்தது. எனக்குத் தெரிந்த வழியில் அவனுக்கு புரியப்படுத்த முயன்றேன். இறுதியாக வெளியே எடுத்துத் திறந்து காட்டினேன். சரி, மூடி வை என்றான். ஒருவாறு அவர்களிடம் இருந்து தப்பித்து கொழும்பு செல்லும் விமானத்திற்குக் காத்திருக்கும் பகுதிக்குச் செல்லலாம் என்று எண்ணி, அப்பகுதி நோக்கி நடக்கத் தொடங்கினேன். அந்த விமானம் வருவதற்கு இன்னும் 5 மணித்தியாலங்கள் இருக்கிறது என்று கடிகாரம் சொன்னது. பெரிய விசாலமான விமான நிலையம். இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் என்று பெயர் (எங்கேயோ கேட்ட பெயர் மாதிரி இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா, அவவேதான்). ஆனால், திக்கு எது திசை எதுவென்று ஒருவருக்கும் சொல்லமாட்டார்கள் போல. சர்வதேசப் பயணிகளுக்கான பகுதி எதுவென்று அறிவதற்குள் களைத்துவிட்டேன். தெரியாமல் ஒரு பகுதிக்குள் நுழைந்துவிட்டேன். அங்கு ஒருவரும் இல்லை, ஒரேயொரு ஆயுதம் தாங்கிய எல்லைப்படை வீரரைத் தவிர. என்னைக் கண்டவுடன் உடனேயே கோபத்துடன் ஓடிவந்தார். ஹிந்தியில் ஏதோ கேட்டார். ஏன் இங்கே வந்தாய் என்று கேட்டிருக்கலாம். மெதுவாக காற்சட்டைப் பையில் இருந்த பாஸ்போட்டை அவருக்குக் காண்பித்து, சிட்னியிலிருந்து வருகிறேன், இலங்கை போக வேண்டும், வழிதெரியவில்லை என்று சைகையில் கேட்டேன். அங்கிருந்து கீழே செல்லும் படிகளைக் காட்டி, கீழே போ, அங்கு கூறுவார்கள் என்பதுபோல சைகையில் ஏதோ சொன்னார். புரிந்ததுபோல இறங்கத் தொடங்கினேன். ஒருவாறும் கொழும்பு செல்லும் விமானத்தின் பகுதிக்கு வந்தாயிற்று. இன்னும் நேரம் இருக்கிறது. சரி, கழிவறைக்குப் போகலாம் என்று எண்ணி, பயணப்பையினைத் தோளில்ப் போட்டுக்கொண்டு உள்ளே சென்றேன். இன்னும் ஊரில் இருக்கும் பழைய காலத்து மிஷனறி வகை கழிவறைகளை வைத்திருந்தார்கள். அருகில் தவறாது தண்ணீர் எடுக்கும் குழாயும், பக்கெட்டும். நவீன கழிவறைகளும் இருந்திருக்கலாம், நான் கவனிக்கவில்லை. உபாதையினைக் கழிக்க புதியது பழையது என்று பார்த்தால் முடியுமா? ஒருவாறு கொழும்பு விமானத்தின் பயணிகளை அழைத்தார்கள். ஒவ்வொருவராக கடவுச்சீட்டைப் பார்த்துவிட்டு விமானம் நோக்கி நடக்கச் சொன்னார்கள். அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டால், விமானத்தின் கத‌விற்கு ஒரு சில மீட்டர்கள் முன்னால் அதே எல்லைக்காவல் வீரர்கள். இரு ஆண்களும் ஒரு பெண்ணும். மனிதர்களை மரியாதையாக நடத்துவது என்றால் என்னவென்று அவர்களுக்கு யாராவது சொல்லிக் கொடுத்தால் நலம் என்று தோன்றியது. மிக மோசமாக நடந்துகொண்டார்கள். "ஏய், ஓ" என்று அதட்டல்கள். அவர்களது மொழி புரியாத ஒருவர் என்றால், சொல்லத் தேவையில்லை. என்னை அந்தப் பெண் படைவீரர் பரிசோதித்தாள். கடவுச்சீட்டை வாங்கிப் பார்த்துக்கொண்டே, பொதியைத் திற என்று கூறினாள். பொதியின் மேற்பகுதி அறுந்துவிட்டதால் என்னால் மழுமையாக அதனைத் திறக்க முடியவில்லை. முடிந்தவரையில் உள்ளே இருந்தவற்றை அவளுக்குக் காண்பிக்க முயன்றேன். "எங்கேயிருந்து வருகிறாய்?" என்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் வினவினாள். சிட்னி என்றேன். "எங்கே போகிறாய்?" என்று கேட்டாள், கொழும்பு என்று பதிலளித்தேன். பயணப்பொதிக்குள் இருக்கும் சொக்லெட் பெட்டிகளைக் கண்டுவிட்டாள், "இவற்றை யாருக்காகக் கொண்டுபோகிறாய்?" என்று கேட்டாள். பின் தானே "ஓ, பிள்ளைகளுக்கா?" என்று அவளே கேட்கவும் நானும் ஆமென்று விட்டேன். என்ன நினைத்தாளோ தெரியாது, "இல்லையில்லை, நீ எதனையும் திறந்துகாட்டவேண்டாம், உனது பிள்ளைகளுடன் விடுமுறையினை சந்தோஷமாகக் கொண்டாடு" என்றுவிட்டுப் புன்னகைத்தாள். பரவாயில்லை, ஒரு சில நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று தோன்றியது. அவளுக்குப் பலமுறை நன்றிகூறிவிட்டு விமானத்தின் உள்ளே சென்றேன்.
  14. பயண நாள். கார்த்திகை 24, காலை மனைவி விமான நிலையத்தில் இறக்கிவிட்டார். வழமையான விமான நிலைய சடங்குகளுக்குப் பின்னர் 58 ஆம் இலக்க வாயிலுக்குப் போகச் சொன்னாள் எயர் இந்தியா விமானப் பணிப்பெண். சில நூறு பேராவது இருக்கும். அப்பகுதியெங்கும் இந்தியர்கள். ஒருகணம் நான் நிற்பது சிட்னி விமானநிலையம்தானோ என்று எண்ணவைக்கும் வகையில் இந்தியர்களின் சத்தம். பெரும்பாலும் ஹிந்தி, இடையிடையே மலையாளம் அல்லது தெலுங்கு. தமிழ் மருந்திற்கும் இருக்கவில்லை. 10 மணிக்கு எம்மை விமானத்தினுள் அனுமதிக்கவேண்டும், 11 மணிவரை விமானம் ஆயத்தமாக இருக்கவில்லை. நின்ற பல நூற்றுக்கணக்கான இந்தியர்களையும் என்னையும் இரு வரிசைகளில் நிற்கச் சொன்னாள் இன்னொரு பணிப்பெண். முதலாவது வரிசை பணக்காரப் பயணிகளுக்கானது, பிஸினஸ் கிளாஸ். அதன்பின்னர் சிறு குழந்தைகளுடன் பயணிக்கும் குடும்பங்கள். சிலர் அதுவரை தம்முடன் நடந்துவந்த தம்து பிள்ளைகளை திடீரென்று இடுப்பில் தூக்கி வைப்பதையும் காண முடிந்தது. இறுதியாக, என்னைப்போன்ற‌ சாதாரணமானவர்களை அழைத்தார்கள். உள்ளே சென்று, இருக்கையின் இலக்கம் பார்த்து அமர்ந்துகொண்டேன். மூன்றிருக்கை அமைப்பில், ஒரு கரையில் எனது இருக்கை. எனதருகில் ஒரு இந்தியப் பெண்ணும் அவரது சிறிய வயது மகனும் அமர்ந்துகொண்டார்கள். சிறுவன் அருகிலிருந்து என்னை உதைந்துகொண்டிருந்தான். எதுவும் பேசமுடியாது, பேசாமல் இருந்துவிட்டேன். அப்பெண்ணினது கணவனும் இன்னொரு கைக்குழந்தையும் எமக்குப் பின்னால் உள்ள வரிசயில் அமர்ந்திருந்தார்கள். அக்குழந்தை தொடர்ச்சியாக அழுதபடி இருந்தது. இடைக்கிடையே அக்குழந்தையை அப்பெண் தூக்கியெடுப்பதும், கணவரிடம் கொடுப்பதுமாக அவஸ்த்தப்பட்டுக்கொண்டிருந்தாள். கணவன் விமானப் பணிப்பெண் ஒருத்தியிடம் ஏதோ சொல்லியிருக்க வேண்டும், என்னிடம் வந்து "சேர், உங்கள் இருக்கையினை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, அவர்களின் இருக்கையில் சென்று அமர முடியுமா?" என்று கேட்டாள். எனக்குப் புரிந்தது, "சரி, செய்யலாமே" என்று எழுந்து மாறி இருந்தேன். அதன்பின்னர் எவரும் என்னை உதைக்கவில்லை. நான் இருந்த வரிசையில் மூன்று இருக்கைகள். நான் யன்னலின் ஓரத்தில் அமர்ந்துகொண்டேன். நடுவில் எவரும் இருக்கவில்லை. மூன்றாவது இருக்கையில் ஒருவர் அமர்ந்துகொண்டார். இந்தியராக இருக்கமுடியாது. தமிழராக இருக்கலாம். சிலவேளை சிங்களவராகவும் இருக்கலாம், பேசவில்லை. 55 வயதிலிருந்து 60 வரை இருக்கலாம். கறுப்பான, மெலிந்த , சிறிய தோற்றம் கொண்ட மனிதர், தனியாகப் பயணம் செய்கிறார் போல. மதிய உணவு பரிமாறப்பட்டபோது, சலித்துக்கொண்டேன். நன்றாகவே இருக்கவில்லை. பாதி அவிந்தும், மீது அவியாமலும் இருந்தது உணவு. வேறு வழியில்லை, சாப்பிட்டே ஆகவேண்டும். அவசர அவசரமாக உள்ளே தள்ளிவிட்டு அவரிடம் பேச்சுக் கொடுக்கலாம் என்று எண்ணி, "நீங்கள் இந்தியரோ ?" என்று கேட்டேன். "இல்லை, இலங்கை" என்று கூறினார். "ஓ. அப்படியா, இலங்கையில் எங்கே?" என்று கேட்டேன். "கொழும்பு" என்று அவர் கூறினார். "நான் யாழ்ப்பாணம்" என்று கூறினேன். சிட்னியில் என்ன செய்கிறோம், எத்தனை வருடங்களாக வாழ்கிறோம் என்று சில விடயங்களைப் பகிர்ந்துவிட்டு மீண்டும் மெளனமானோம். அவர் தூங்கிவிட்டார். நானோ எனக்கு முன்னால் திரையில் தெரிந்துகொண்டிருந்த விமானத்தின் பறப்பின் பாதையினை வேறு வழியின்றிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
  15. சரி, போவதற்கான அனுமதி கிடைத்தாயிற்று. பயணச் சீட்டை வாங்கலாம் என்று பார்த்தால் எல்லாம் விலை. எனக்கு மட்டும்தானே, சொகுசு எவையும் வேண்டாம், என்னையும், இரு பொதிகளையும் கொண்டுசெல்ல எந்த விமானமாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்தேன். பார்த்துக்கொண்டு போனால் எயர் இந்தியாவே உள்ளவற்றில் மலிவானதாய் இருந்தது. அதற்கு அடுத்ததாக மலிவான எயர்லங்காவுக்கும் கிட்டத்தட்ட 500 டொலர்கள் வித்தியாசம். எதற்காக அவனுக்குக் கொடுக்க வேண்டும்? பேசாமல் இந்தியாவுக்கே போய் அங்கிருந்து கொழும்பிற்குப் போகலாம் என்று நினைத்து, அதனை வாங்கிவிட்டேன். பயணச் சீட்டு வாங்கியாயிற்று, ஆனாலும் பயணம் நடக்குமா என்பது இன்னமும் உறுதியில்லை. இறுதிநேரத்தில்க் கூட வீட்டில் சூழ்நிலை மாறலாம். பிள்ளைகள் ஏதாவது கூறலாம் என்று நினைத்து மூத்தவளிடம் "நான் தனியே போவதுபற்றி என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டேன். "நீங்கள் போகத்தான் வேணுமப்பா, அவ உங்களைப் பாத்தவ, போட்டு வாங்கோ, நாங்கள் சமாளிக்கிறம்" என்று சொன்னாள். அப்பாடா, பிள்ளைகள் ஓக்கே, அப்போ பயணிப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. சரி, யாழ்ப்பாணத்தில் எங்கே தங்குவது, கொழும்பில் எங்கே தங்குவது, பயணிப்பது எங்கணம் என்று அடுத்த விடயங்கள் தொடர்பான கேள்விகள். கொழும்பில் தங்குவதற்கு மனைவியின் சித்தியின் வீடு இருந்தது. என்னை ஒரு சில நாட்களுக்கு தம்முடன் தங்கவைப்பதில் அவர்களுக்குப் பிரச்சினையேதும் இல்லையென்று சொன்னார்கள். எனக்கும் நன்கு பரீட்சயமானவர்கள்தான், நானும் ஆமென்றுவிட்டேன். விமானநிலையத்திற்கு வந்து என்னை வரவேற்றது முதல், யாழ்ப்பாணத்திற்கான ரயில் சீட்டுக்களை முன்பதிவுசெய்து, அதிகாலை 5 மணிக்கு புறக்கோட்டை புகையிரத நிலையம் வந்து, ஓடி- ஏறி ஆசனம் பார்த்துத் தந்ததுவரை எல்லாமே சித்தப்பாதான். கடமைப்பட்டிருக்கும் சிலரில் அவருமொருவர். சரி, பயணத்திற்கு வரலாம். யாழ்ப்பாணத்தில் தங்குமிடம் பார்க்கவேண்டும். நண்பனிடம் கேட்டேன். "நீ பேசாமல் வா, நானெல்லோ இடம் ஒழுங்குபடுத்தித் தாரது" என்று சொன்னான். அவன் சொன்னால் செய்வான் என்பது தெரியும், ஆகவே மீண்டும் கேட்டுத் தொல்லை கொடுக்கவிரும்பவில்லை. பயணிப்பதற்கு முதல்நாள் அவனுக்கு குறுந்தகவல் அனுப்பினேன். "மச்சான், அறுவைச் சிகிச்சை ஒன்றிற்காக கொழும்பு வந்திருக்கிறேன், ஆறுதலாய் எடுக்கிறேன்" என்று பதில் வந்தது. அடக் கடவுளே, இப்போது என்ன செய்வது? வேறு இடமும் ஒழுங்குசெய்யவில்லையே, சரி போய்ப் பாப்பம் என்று கிளம்பிவிட்டேன். யாழ்ப்பாணத்தில் மைத்துனனின் வீடு இருக்கிறது, அவசரமென்றால் அங்கு தங்கலாம் என்று சொல்லியிருந்தான். ஆகவே, பரவாயில்லை என்று எண்ணிக்கொண்டேன். இந்தப் பயணத்தில் நான் செய்யவேண்டிய இரு முக்கிய விடயங்கள் என்று நான் நினைத்தவைகளில் முதலாவது சித்தியுடன் முடிந்தவரை அதிக நேரம் செலவிடுவது. மற்றையது வன்னிக்குச் செல்வது. குறிப்பாக கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு வரை 2009 இல் எமது மக்கள் இடம்பெயர்ந்து சென்ற பாதை வழியே நானும் செல்வது, முள்ளிவாய்க்காலில் இறங்கி வணங்குவது. இவைதான். வேறு எதுவுமே மனதில் இருக்கவில்லை.
  16. 2018 இன் பயணம் அதிக கனதிகளின்றி, குறைவான மனப்பதிவுகளுடன் முடிந்துவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஆனால் எனது கடந்த கார்த்திகை மாத இறுதிநாட்களின் பயணம் அப்படிப்பட்டதல்ல. எனது சித்தியின் உடல்நிலை கவலைக்கிடகமாக மாறிப்போனது. நினைவுக‌ள் குழம்பிப் போய், ஒரு சில விடயங்கள் மட்டுமே மனதில் இன்னும் எஞ்சி நிற்க, உடலாளும், மனதாலும் அவர் பலவீனமான நிலையில் இருந்தார். இருமுறை கால்தவறி வீழ்ந்துவிட்டதால் வயதான அவர் உடலில் சத்திரசிகிச்சை மூலம் தகடுகள் பொறுத்தப்பட்டு முறிவுகள் சரிசெய்யப்பட்டிருந்தது. நடக்கப்பதற்கான உடல்வலுவின்றி சக்கர நாற்காலியில் அவரைப் பராமரித்து வருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். பார்த்துவந்தவர்களில் ஒருசிலர் "உன்னைப்பற்றித்தான் அடிக்கடி கேட்கிறா, ஒருக்கால்ப் போய் பார்த்துவிட்டு வா" என்று கூறினார்கள். ஆகவே, போவதென்று முடிவெடுத்தேன், தனியாக ! அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. "கண்டறியாத அரசியல் எழுதுறியள், உந்த லட்சணத்தில ஊருக்குப் போகப்போறியளோ? போதாக்குறைக்கு பேர் வேறை போட்டு எழுதுறியள், அவங்கள் பிடிச்சால் என்ன செய்வியள்?" என்று கேள்விகளுடன் ஆரம்பித்து, "நீங்கள் தனியாக உல்லாசமாக ஊர் சுத்தப் போறியள், பச்சுலர்ஸ் பாட்டிக்குத்தானே போறியள்? அதுதான் எங்கள்மேல அக்கறை இல்லாமல், விட்டுப்போட்டுப் போறியள், நீங்கள் ஒரு சுயநலவாதி" என்பதுவரை பல தடங்கல்களும் நான் போகக்கூடாது என்பதற்கான காரணங்களும் முன்வைக்கப்பட்டன. நான் பிடிவாதமாக இருந்துவிட்டேன். "இல்லை, நான் போகத்தான் போகிறேன், பிள்ளைகளை நீங்கள் பாத்துக்கொள்ளுங்கோ" என்பதே எனது முடிவான பதில். அதன்பின் எவருமே எதுவும் பேசவில்லை. வீட்டில் அமைதி, சில நாட்களுக்கு. அவ்வப்போது மீண்டும் இதே சம்பாஷணை வரும், அதே கேள்விகள், அதே விளக்கங்கள், முடிவான எனது பதில். இப்படியே சில வாரங்கள் கரைந்துவிட்டன. இறுதியாக ஒரு சமரசம், "சரி, நீங்கள் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு வீட்டை நிற்கவேணும், அதுக்கு ஓமெண்டால் நீங்கள் போய்வரலாம்" என்று அனுமதி கிடைத்தது. எனக்கும் அது சரியாகப் பட்டது. ஆகவே சரி என்றேன்.
  17. நான் இறுதியாக ஊருக்குச் சென்றது 2018 இல். எனது சித்தியைப் பார்ப்பதற்காக அன்று சென்றிருந்தேன், கூடவே குடும்பமும். சித்தியைப் பற்றி முதல் ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். 1988 இல் எனது தகப்பனாரின் கொடுங்கரங்களிலிருந்து என்னை மீட்டு மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றவர். தன்னால் முடிந்தவரையில் எனக்கு உணவும், உறையுளும், கல்வியும் தந்தவர். அன்னைக்கு அடுத்த தானத்தில் இருப்பவர். என்மேல் உண்மையான அக்கறை கொண்டவர். ஆகவே, அவரது உடல்நிலை ஓரளவிற்கேனும் நல்லநிலையில் இருக்கும்போது பார்த்துவிட்டு வரலாம் என்கிற எண்ணத்தில், அதுவரை எனது 16 ஆண்டுகள் அஞ்ஞாதவாசத்தைக் கலைந்து சென்று வந்தேன். அந்தப் பயணம் பற்றி அதிகம் கூற எதுவும் என்னிடத்தில் இல்லை. சித்தியை ஊர்காவற்றுறையில் இருந்து அவர் இருந்த யாழ்ப்பாணம் கன்னியாஸ்த்திரிகள் மடத்தில் இருமுறை சென்று சந்தித்தோம். ஒரு சில நினைவுகளைத் தவிர பல நினைவுகளை அவர் தொலைத்திருந்தார். ஆனால், உடல் ஓரளவிற்குத் தாக்குப் பிடித்துக்கொண்டிருந்தது. அதிகம் பேசவில்லை. என்னையும் குடும்பத்தையும் நீண்டநேரம் பேச்சின்றிப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரைச் சென்று சந்தித்ததைத் தவிர அப்பயணத்தில் குறிப்பிடும்படியாக பல விடயங்கள் இருக்கவில்லை. எனது அன்னையின் இன்னும் மூன்று தங்கைகளை யாழ்ப்பாணத்தின் கரவெட்டி மற்றும் கொழும்பின் கம்பஹ ஆகியவிடங்களில் சென்று பார்த்தேன். எவருமே அதிகம் பேசவில்லை. சிலவேளை எனது குடும்பத்தை முதன்முதலில் பார்ப்பதால் வந்த சங்கோஷமாக இருக்கலாம். அவர்களை விடவும் நான் சந்தித்த வெகு சிலரில் எனது நண்பன் ஜெயரட்ணமும் அவனது சகோதரர் ராசா அண்ணையும் குறிப்பிடத் தக்கவர்கள். அவர்கள் பற்றியும் முன்னர் எழுதிவிட்டேன். அங்கிருந்த இரு வாரங்களில் மன்னாருக்கு ஒருநாள் சென்றுவந்தோம். இன்னொருநாள் காங்கேசந்துறைக்கும் கரவெட்டிக்கும் பயணம் இருந்தது. இடையில் நுவரெலியாவுக்குப் போனோம். குளிர், இதனைத்தவிர வேறு எதுவும் மனதில்ப் பதியவில்லை. நான் விரும்பிய இடங்களையும், மனிதர்கள் அனைவரையும் சந்திக்கும் சுதந்திரம் எனக்கு இருக்கவில்லை. பிள்ளைகளை விட்டு வெளியே செல்ல முடியாது, அவர்களும் வெளியே வரப்போவதில்லை. சித்திரை வெய்யில் காய்த்தெடுக்க வீட்டிலேயே இருந்துவிட்டார்கள். மேற்குநாட்டு வளர்ப்பு என்று கூறுவீர்கள், இருக்கலாம். என்னைப்போன்று இங்கிருந்து செல்லும் அனைத்துப் பெற்றொரும் முகம்கொடுக்கும் கேள்விகள் இவை, அதில் தவறுமில்லை.
  18. எனது கேள்விக்கு உங்களிடமிருந்து பதில் வரபோவதில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதற்கு பின்வருவன அல்லது அவற்றில் ஒன்று காரணமாக இருக்கலாம், 1. நான் கூறியதை அப்படியே ஏற்றுக்கொள்கிறீர்கள். அதாவது தமிழர்கள் இலங்கையர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது என்பது. 2. நான் கேட்கும் கேள்வி குறித்து உங்களுக்குப் புரிதல்/தெளிவு இல்லையென்பது. நன்றி
  19. எமது போராட்டம்பற்றி எந்தளவு தூரத்திற்கு தெளிவற்று இருக்கிறீர்கள் என்பதற்கு உங்களின் கருத்து சாட்சி. சம உரிமைக்கான, தாயக‌க் காப்பிற்கான, மொழிக்கான போராட்டம் என்பது சுதந்திரத்திற்குப் பின்னரான உடனடிக் காலத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அப்போது இந்தியா இவ்விடயத்தில் தலையிடவே இல்லை. 1983 இலிருந்துதான் இந்தியா எமது பிரச்சினையில் தலையிட ஆரம்பித்தது. அதற்கு வித்திட்டவர் இந்திரா. ஆனால், 1983 ஆம் ஆண்டின் இனக்கொலை தமிழர்கள் தனித் தேசத்திற்குச் சொந்தக்காரர்கள் என்பதையும், அவர்கள் தம்மை இலங்கையர்களாக அடையாளப்படுத்த முடியாது என்பதையும் தெளிவாக அவர்களுக்கு உணர்த்திற்று (உங்களுக்கு அந்த உணர்வு வரவில்லையென்றால் பிழை தமிழர்களில் அல்ல). 2009 இல் நடந்தவை உங்களுக்குத் தெரிந்திருந்தால் உங்களை நீங்கள் "இலங்கையர்" என்று கூறி மகிழ மாட்டீர்கள். இந்தியா தலையிட்டது தனது நலன்களை காத்துக்கொள்ளவே. அதற்கும் ஈழத்தமிழர்களின் அவலங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. நாம் இந்தியாவின் கைக்கூலிகள் அல்ல. எமது போராட்டம் இந்திய நலன்களுக்கான போராட்டம்தான் என்று நீங்கள் நம்பினால், அது உங்களின் அரசியல் அறிவை, எமது போராட்டத்தின் சரித்திரம் தொடர்பான புரிதலைக் காட்டி நிற்கிறது. அழிக்கப்பட்டது ஆயுதப் போராட்டம் மட்டும்தான். ஆனால், எமது இருப்பிற்கான, மொழிக்கான, தாயக‌க் காப்பிற்கான போராட்டமும் தேவையும் என்றுமில்லாதவாறு இன்று அதிகமாகவே இருக்கிறது. இதை புரிந்துகொள்ளாது, நாம் அனைவருமே இலங்கையர் என்று நீங்கள் கூறி மகிழ்வீர்களாக இருந்தால்,பிழை என்னில் இல்லை. இந்தியாவையும், தனிநாட்டிற்கான கோரிக்கையினையும், ஆயுதப் போராட்டத்தினால் ஏற்பட்ட அழிவினையும் தூக்கி ஓரத்தில் வைத்துவிட்டு, எனது கேள்விக்கு பதில் தாருங்கள். இலங்கையில் இன்று தமிழர்கள் சம உரிமையினைக் கொண்டு, தமது மொழிக்கான சம அந்தஸ்த்தினைக் கொண்டு, இராணுவ ஆக்கிரமிப்பின்றி, தமது தாயகம் காவுகொள்ளப்படாது, பெளத்த மயமாக்கப்படாது சிங்களவர்களுக்கு நிகரான சுதந்திரத்தைக் கொண்டு வாழ்கிறார்களென்று நம்புகிறீர்களா?
  20. இதில் எவர் பக்கமும் நான் சாய விரும்பவில்லை. ஆனால் இதுதொடர்பாக எனது கருத்தை மட்டும் எழுதிவிடுகிறேன். நாஜிகளின் கைகளில் அகப்பட்டு முற்றான இனக்கொலையினைச் சந்தித்தவர்கள் யூதர்கள். கிட்டத்தட்ட ஆறு மில்லியன் யூதர்கள் இரண்டாம் உலக யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள். அதுவரை உலகெங்கும் நாடற்றவர்களாக அலைந்துதிரிந்த அவர்களுக்கு இஸ்ரேல் எனும் தமது மூதாதையர் நாட்டில் மீண்டும் கால்பதிக்க இங்கிலாந்தின் தலைமையில் மேற்குலகு ஆதரவு வழங்கியது, இதற்கான காரணம் அவர்கள் முகம்கொடுத்த அழிவுகளும் துன்பங்களும்தான். நவீன இஸ்ரேலின் உருவாக்கத்தினையடுத்து, சுற்றியிருந்த அரபுநாடுகள் அதனை முற்றாக அழித்துவிட மேற்கொண்ட இருபெரும் யுத்தங்களின் போதும் (1967 ஆம் ஆண்டின் ஆறுநாள் யுத்தம், 1973 இன் யொம் கிப்புர் யுத்தம்) யூதரின் பக்கமே அரபுலகத்தைத் தவிர்த்த உலக அனுதாபம் இருந்தது. ஆனால், இஸ்ரேல் அதன்பின்னர் நடந்துகொண்ட முறை அந்த அனுதாபத்தினை சிறிது சிறிதாகக் குறைத்து ஈற்றில் மேற்கின் ஒரு சில நாடுகளின் ஆதரவு என்று சுருங்கிவிட்டது. இதற்கான முக்கியமான காரணம் பாலஸ்த்தீனத்தின்மீதும், அம்மக்கள் மீதும் இஸ்ரேல் நடத்திவரும் மூர்க்கத்தனமான ஆக்கிரமிப்பும், அடக்குமுறையும்தான். எமது தாயகத்தில் , எமது தாயக‌க் நிலத்தொடர்பை உடைத்தெறிந்து நடைபெற்றுவரும் இராணுவமயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் இஸ்ரேலின் ஆலோசனையின் பெயரில் நடத்தப்படுபவை என்றால் உங்களால் நம்பமுடியுமா? ஆனால், அதுதான் உண்மை. உலகெங்கும் சுயநிர்ணய உரிமை கோரிப் போரிடும் இனக்குழுமங்களுக்கெதிரான ஆக்கிரமிப்புகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் இஸ்ரேலின் மொசாட் உதவிவருவது வெளிப்படை உண்மை. சரி, அக்டோபர் 7 ஆம் திகதிக்குப் பின்னதான யுத்தத்திற்கு வரலாம். இஸ்ரேல் பாலஸ்த்தீனர்கள் மீது நடத்திவந்த அடக்குமுறைகளும் படுகொலைகளும் எந்தளவு தூரத்திற்கு மனித நேயத்திற்கு எதிரானதோ, அதற்கு எந்தவிதத்திலும் சளைத்ததல்ல ஹமாஸ் அக்டோபர் 7 இல் நடத்திய தாக்குதல். தமிழர்களின் நிலத்தொடர்பை ஊடறுத்து அமைக்கப்பட்ட இராணுவமயப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களும் ஹமாஸ் நடத்திய தாக்குதலும் பல விடயங்களில் ஒத்துப்போகின்றன. யூதர்களைக் கடத்திச் சென்றது, பாலியல் வன்புணர்வுகளுக்கு உள்ளாக்கியமை என்பதைத் தவிர புலிகளும் ஹமாஸும் நடந்துகொண்டது ஒரே வகையில்த்தான். கொல்லப்பட்டவர்களில் ஆயுதம்தரித்த குடியேற்றக்காரர்களும் அடக்கம், இரு சம்பவங்களிலும். நடக்கும் குடியேற்றங்களை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்பதே குடியேற்றங்கள் மீதான தாக்குதல்களின் நோக்கம். ஹமாஸின் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்தும் யுத்தம் முற்றான அழித்தொழிப்புடன் கூடிய ஒரு இனக்கொலைதான் என்பதில் சந்தேகம் இல்லை. போரிடும் தரப்புக்களுக்கு பின்னால் நின்று சாமரம் வீசும் ஈரான் ஆகட்டும், ஹூத்தீக்களாகட்டும், அமெரிக்காவாகட்டும், இவர்கள் எவருமே கொல்லப்படும் பாலஸ்த்தீனர்களுக்காகவோ கொல்லப்பட்ட யூதர்களுக்காகவோ உண்மையாக இரங்கவில்லை. பாலஸ்த்தீனர்களினதும், யூதர்களினதும் அவலங்களைப் பாவித்து தத்தமது தனிப்பட்ட இலாபங்களை அடைய விளைகிறார்கள். எமது போராட்டத்தில் இந்தியா ஒருபக்கமும் அமெரிக்கா இன்னொரு பக்கமும் சாய்ந்து செயற்பட்டது போல. போகிறபோக்கில் நீங்கள் ஈழத்தமிழரையும் தொட்டுவிட்டுச் செல்கிறீர்கள். இலங்கை இலங்கையர்களுக்குச் சொந்தமா? எல்லோரையுமே நீங்கள் கூறும் இலங்கை ஆட்சியாளர்கள் ஒன்றாக நடத்துகிறார்களா? அப்படி நடத்தியிருந்தால் நாம் தனிநாடு கேட்கவேண்டிய தேவை ஏன் வந்தது? எமது போராட்டம் தனிநபர்களால் தூண்டிவிடப்பட்ட தேவையற்ற போராட்டம் என்று கூறும் அளவிற்கு உங்களின் எண்ணம் சுருங்கக் காரணம் என்ன? அல்லது இதுதான் உங்களின் உண்மையான நிலைப்பாடா? நல்லது, வெளியே வந்திருக்கிறீர்கள்.
  21. கண்ணிவெடி யுத்தம் போராளிகளின் தாக்குதல்களின் மும்முரம் அரசாங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் வட கிழக்கில் அதிகரித்துவரும் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் என்கிற தலைப்பில் செய்திவெளியிட்டிருந்தது. மேலும், யாழ்ப்பாணம் செல்லும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் தமது பயணங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவ்வறிக்கை கேட்டுக்கொண்டது. யாழ்ப்பாணத்திற்கு மரக்கறிகளையும், தேங்காய்களையும் எடுத்துச் சென்ற பாரவூர்தியொன்று பயங்கரவாதிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்காகி சாரதியும், நடத்துனரும் கொல்லப்பட்டதாக அவ்வறிக்கை கூறியிருந்தது. ஆவணியின் இறுதிப்பகுதியில் புலிகளால் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல்கள் இராணுவத்தினருக்கு அச்சுருத்தலாகவும், சவாலாகவும் மாறியிருந்தன. ஆகவே, இதற்கு முகம் கொடுப்பதற்காக கண்ணிவெடிகளில் இருந்து இராணுவத்தினருக்குப் பாதுகாப்பு வழங்கக் கூடிய கவச வாகனங்களை தென்னாபிரிக்காவிலிருந்து அரசு கொள்வனவு செய்தது. இதற்கு மேலதிகமாக இராணுவ ரோந்துகளுக்கு முன்னர் வீதிகளை சோதனை செய்து, கண்ணிவெடிகளை முன்கூட்டியே கண்டறிந்து அகற்றும் நடவடிக்கைகளிலும் அரசு இறங்கியது. போராளிகளின் கண்ணிவெடித் தாக்குதல்களும், இராணுவத்தினரின் காப்பு நடவடிக்கைகளும் இருதரப்பினரதும் புத்திசாதுரியங்களுக்கிடையிலான போட்டியாக மாறியது. ஆவணி 24 ஆம் திகதி நடைபெற்ற இரு சம்பவங்கள் அக்காலத்தில் நிலவிய சூழ்நிலையினை விளக்கப் போதுமானவை. கண்ணிவெடிகளுக்குத் தாக்குப்பிடிக்கும் பவள் கவச வாகனத்தைப் புரட்டிப் போட்ட புலிகள் முதலாவது சம்பவம் கரவெட்டி மேற்கில் இருக்கும் கல்லுவம் மண்டான் பகுதியில் நடைபெற்றது. இப்பகுதியினூடாகச் செல்லும் பிரதான வீதியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக இராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்தது. இத்தகவலை வழங்கியவர்களே புலிகள்தான். ஆகவே, இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் அப்பகுதிக்குச் சென்று தமது தேடுதலை ஆரம்பித்தனர். கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்குப் பாதுகாப்பாக இன்னொரு தொகுதி இராணுவத்தினர் தென்னாபிரிக்க பவள் கவச வாகனங்களில் வந்திருந்தனர். கண்ணிவெடி புதைக்கப்பட்ட பகுதியின் மேலாக கவச வாகனம் ஏறியபோது குண்டு வெடிக்கவைக்கப்பட்டது. பவள் வாகனம் குடைசாய உள்ளிருந்த 8 இராணுவத்தினர் அவ்விடத்தில் பலியானார்கள். அதே நாளன்று நீர்வேலிப் பகுதியில் இவ்வாறான கண்ணிவெடி அகற்றும் பிரிவொன்றின்மீது புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் மேலும் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புரட்டாதி மாதமளவில் தமது கண்ணிவெடித் தாக்குதல் திறமையினை புலிகள் நன்கு வெளிப்படுத்தியிருந்தனர். இம்மாதத்தின் முதலாம் திகதி வடமாராட்சி திக்கம் பகுதியில் அவர்கள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் ஐந்து பொலீஸ் கொமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பழிவாங்க பொலீஸார் நடத்திய தாக்குதல்களில் அப்பகுதியில் பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டதோடு வீடுகளுக்கும், கடைகளுக்கும் தீவைக்கப்பட்டது. இருநாட்களுக்குப் பின்னர், புரட்டாதி 3 ஆம் திகதி வடமராட்சி, கிழக்குப் பருத்தித்துறைப் பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டுவந்த எட்டு மீனவர்களை ரோந்துவந்த கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். இஸ்ரேலிய பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களின் ஆலோசனைகள் மூலமாகவும், வெளிநாட்டு இராணுவ உதவிகள் மூலமாகவும் போராளிகளின் ஆயுதச் செயற்பாட்டினை வடக்கிற்குள் மட்டுப்படுத்திவிடலாம் என்று பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி நம்பிவந்தார். ஆனால், அவரின் நம்பிக்கையினைச் சிதைக்கும் விதமாக புரட்டாதி 10 ஆம் திகதி புலிகள் தமது கண்ணிவெடித் தாக்குதல்களை முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் விஸ்த்தரித்துக்கொண்டனர். புரட்டாதி 11 ஆம் திகதி வர்த்தக அமைச்சின் பத்திரிக்கையாளர் மாநாட்டில் பேசிய லலித், பயங்கரவாதம் கிழக்கிற்கும் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். "கிழக்கிற்கான பாதைகளை நாம் மூடிவருகிறோம். இதற்காக வடக்குக் கிழக்கு எல்லையோரங்களில் சிங்களக் கிராமங்களை நாம் உருவாக்கி வருகிறோம்" என்று அவர் கூறினார். இராணுவமயப்படுத்தப்பட்ட எல்லையோர சிங்களக் குடியேற்றங்களை இலக்குவைத்த புலிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் லலித் அதுலத் முதலியின் ஆலோசனையின் பேரில் நடத்தப்பட்டுவரும் இராணுவமயப்படுத்தப்பட்ட‌ சிங்களக் குடியேற்றங்கள் மீது தமது பார்வையைத் திருப்பினர் புலிகள். பாலஸ்த்தீனத்தில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுவரும் இஸ்ரேலிய அரசின் திட்டத்தினைனை நகலாகக் கொண்ட இராணுவமயமாக்கப்பட்ட இவ்வகைச் சிங்களக் குடியேற்றங்கள் திருகோணமலை முதல் முல்லைதீவு வரையான கரையோரப்பகுதிகளிலும், 1950 களில் அமைக்கப்பட்ட சிங்களைக் குடியேற்றமான பதவியாவுக்கும் பாரம்பரிய தமிழ்க் கிராமமான நெடுங்கேணிக்கும் இடையே தமிழ்ப் பிரதேசங்களுக்கிடையிலான நிலத்தொடர்பினை ஊடறுத்து அமைக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே அமைக்கப்பட்ட சிங்கள மீனவக் குடியேற்றங்களான கொக்கிளாய் நாயாறு ஆகியவற்றின் தொடர்ச்சியாகவும் விவாசாயக் குடியேற்றக்கிராமமான பதவியாவின் விஸ்த்தரிப்பாகவும் இவை உருவாக்கப்பட்டு வந்தன. இக்குடியேற்றங்களில் அமர்த்தப்பட்ட சிங்களவர்களுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டன. செம்மலைத் தாக்குதல் மாத்தையா தலைமையிலான 16 போராளிகள் அடங்கிய புலிகளின் அணியொன்று, முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதியில், முல்லைத்தீவு நகரிலிருந்து பத்துக் கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கும் செம்மலைக் கிராமத்தில் கண்ணிவெடியொன்றைப் புதைத்துவிட்டு இராணுவத்தினரின் வருகையினை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காலை 10:15 மணிக்கு ஜீப் வண்டி முன்னல் வர பின்னால் இரு ட்ரக்குகளில் இராணுவத்தினர் அப்பகுதிநோக்கி வந்துகொண்டிருந்தனர். முன்னால் வந்துகொண்டிருந்த ஜீப் வண்டி தம்மைக் கடக்கும்வரை பொறுமையாகக் காத்திருந்த புலிகளின் அணி, நடுவில் வந்துகொண்டிருந்த ட்ரக்கினை இலக்குவைத்து கண்ணிவெடியை இயக்கியது. ட்ரக் கண்ணிவெடியில் வெடித்துச் சிதற பின்னால் வந்த இரண்டாவது ட்ரக் வண்டியில் இருந்த இராணுவத்தினர் வெளியே குதித்துத் தாக்குதலில் ஈடுபட, புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சமர் மூண்டது. ஒருகட்டத்தில் தாக்குதலை முடித்துக்கொண்டு புலிகளின் அணி பின்வாங்கிச் சென்றது. இந்தச் சண்டையில் ஒன்பது இராணுவத்தினர் கொல்லப்பட மேலும் மூவர் காயமடைந்தனர். முல்லைத்தீவு முகாமிலிருந்து வந்த மேலதிக இராணுவத்தினர் அப்பகுதியை சல்லடை போட்டுத் தேடினர். இச்சண்டையில் நான்கு பயங்கரவாதிகளைத் தாம் கொன்றுவிட்டதாக கொழும்பில் அரசாங்கம் கோரியபோதும், புலிகள் அதனை மறுத்திருந்தனர். மேலதிக இராணுவத்தினர் அப்பகுதிக்கு வருமுன்னரே தமது அணி அப்பகுதியில் இருந்து வெளியேறிவிட்டதாக அவர்கள் அறிவித்தனர். கொக்கிளாயில் இராணுவத்தின்மேல் நடத்தப்பட்ட தாக்குதல் அப்பகுதியில் அரச ஆதரவுடன் குடியேறியிருந்த சிங்களவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. சிலர் தமது சொந்தக் கிராமங்களுக்கு திரும்பிச் செல்லத் தொடங்கினர். ஆனாலும், அப்பகுதியில் தான் முன்னெடுத்து வந்த இராணுவமயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றத்தை விஸ்த்தரிப்பதில் இருந்து அரசாங்கம் சிறிதும் பின்வாங்க விரும்பவில்லை.
  22. இராணுவ நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல் இராணுவ அடக்குமுறைமீது கடுமையான அதிருப்தியில் இருந்த மக்களின் மனோநிலையினை தமக்குச் சார்பாக பயன்படுத்த போராளிகள் முற்பட்டனர், முக்கியமாக புலிகள் இச்செயற்பாட்டில் முன்னிலை வகித்தனர். இராணுவத்தினர் மீதும் பொலீஸார் மீதும் தமது தாக்குதல்களை அவர்கள் தீவிரப்படுத்தினர். மேலும், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கிவிட கண்ணிவெடித் தாக்குதல்களையும் கைக்கொள்ளத் தொடங்கினர். மன்னார் மாவட்டத்தில், பூநகரிப் பாதையில் அமைந்திருந்த தள்ளாடி இராணுவ முகாமின் இரவு நேர ரோந்தை எதிர்பார்த்து விக்டர் தலைமையிலான புலிகளின் குழுவொன்று காத்திருந்தது. ஆவணி 11 ஆம் திகதி அதிகாலை 4:30 மணிக்கு ஜீப் வண்டியிலும், ட்ரக்கிலும் ரோந்துவந்த இராணுவத்தினரின் அணிமீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாகனங்களில் பயணம் செய்துகொண்டிருந்த 13 இராணுவத்தினரில் 6 பேர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர், இன்னுமொருவர் காயப்பட்டார். வழமைபோல தம்மீதான தாக்குதல்களுக்கு பொதுமக்கள் மீது தனது பழிவாங்கல்த் தாக்குதல்களை இராணுவம் ஆரம்பித்தது. சிவில் உடையில் மன்னார் நகரத்திற்குள் நுழைந்த இராணுவத்தினர் தமிழருக்குச் சொந்தமான கடைகளையும் வீடுகளையும் எரிக்கத் தொடங்கினர். அடம்பன் பகுதியில் பொதுமக்களைத் தாக்கியதோடு வீடுகளையும் எரித்தனர். சிலவிடங்களில் முஸ்லீம் மக்களும் இராணுவத்தினரால் தாக்கப்பட்டனர். இந்த நாட்களில் மட்டும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை இருபது. கொல்லப்பட்டவர்களில் ஆறு இந்திய வம்சாவளித் தமிழர்களும் அடக்கம். அவர்களில் ஒருவர் ஒரு சில நாட்களில் இந்தியாவுக்குத் திரும்புவதற்காகக் காத்திருந்தவர். பொதுமக்கள் மீதான இராணுவத்தினரின் தாக்குதல்கள் குறித்து மன்னார் ஆயர் ஜெயவர்த்தனவிடம் முறைப்பாடு செய்திருந்தார். "ஆக்கிரமிப்பில் ஈடுபடும் இராணுவத்தினர் போன்று அவர்கள் தமது வழியில் அகப்பட்டவை எல்லாவற்றையும் அழித்து நாசம்செய்தபடி செல்கிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டார். மன்னாரில் இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட அழிவினை மதிப்பிட அமைச்சர் எச்.எம்.மொகம்மட் அங்கு சென்றிருந்தார். ஜெயாருக்கு அவர் வழங்கிய அறிக்கையில் மன்னாரில் எரிக்கப்பட்ட பெரும்பான்மையான கடைகளும் வீடுகளும் முஸ்லீம்களுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிட்டிருந்தார். தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மொகம்மட்டிடம் பேசுகையில், தள்ளாட்டி இராணுவ முகாமில் தங்கியிருந்த இஸ்ரேலிய உளவுப்பிரிவான மொசாட்டின் அதிகாரிகளே முஸ்லீம்கள் மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டதாகவும், வைகாசியில் கொழும்பில் இயங்கிவரும் மொசாட்டின் அலுவலகத்திற்கு முன்னால் முஸ்லீம்கள் சிலர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்குப் பழிவாங்கவே இது நடத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் கூட மன்னாரில் ஏற்படுத்தப்பட்ட அழிவினைப் பார்வையிடச் சென்றிருந்தனர். அப்போது கொழும்பில் நடந்துகொண்டிருந்த சர்வகட்சி மாநாட்டில் தான் கண்டவற்றை அமிர்தலிங்கம் அறிக்கை வடிவில் வெளியிட்டார். இராணுவத்தினரைப் பாவித்து அரசாங்கம் தமிழரை அழித்துக்கொண்டிருக்கும் நிலைமையில் தமிழருக்கான அரசியல்த் தீர்வுகுறித்துப் பேசுவது பயனற்றது என்று அவர் குறிப்பிட்டார். "தமிழ் மக்கள் இராணுவத்தினரால் நாள்தோறும் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு வருகையில் நாம் இங்கே அமர்ந்திருந்து எதுவுமே நடக்காதது போல பாசாங்கு செய்துகொண்டு இருக்க முடியாது" என்றும் அவர் கூறினார். இந்திரா காந்தியிடம் கோரிக்கையொன்றினை அன்று விடுத்த அமிர், "பல லட்சக்கணக்கான தமிழர்கள் இராணுவத்தினரின் கைகளில் அகப்பட்டு முற்றான இனக்கொலை ஒன்றினைச் சந்திக்கும் முன்னர் அவர்களை நீங்கள் காப்பாற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். இலங்கையில் தமிழர் மீது அதிகரித்துவரும் தாக்குதல்களையடுத்து தமிழ்நாடு, சென்னையில் தமிழர்கள், குறிப்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். தமிழர்களைக் காப்பாற்ற இலங்கையில் இந்தியா தலையீடு செய்யவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டப் பேரணிகளை அவர்கள் நடத்தினர். சென்னையில் அமைந்திருந்த இலங்கையின் துணைத் தூதுவராலயத்திற்கு பேரணியாகச் சென்ற மாணவர்களை பொலீஸார் குண்டாந்தடிப் பிரயோகம் செய்து கலைக்கவேண்டியதாயிற்று. சென்னையில் மேலும் இவ்வகையான போராட்டங்கள் நடைபெறலாம் என்று அஞ்சிய அன்றைய தமிழ்நாடு அரசு பாடசாலைகளுக்கும் கல்லூரிகளுக்கும் ஒருவார விடுமுறை அளிப்பதாக அறிவித்தது (அன்று எம்.ஜி.ஆர் செய்ததையே 2009 இல் கருநாநிதியும் செய்தார்). இத்தாக்குதல்களையடுத்து கொழும்பு மீது இந்திரா கடுமையான அதிருப்தி கொண்டார். அன்று புது தில்லியின் மனோநிலை குறித்து இந்துவின் செய்தியாளர் ஜி.கே.ரெட்டி பின்வருமாறு எழுதுகிறார், " தமிழர்கள் மீது அரசு நடத்திவரும் வன்முறைகளால் இந்திரா காந்தி தனது பொறுமையினை இழந்துவருகிறார்" என்று எழுதினார். ஆவணி 15 ஆம் திகதி செங்கோட்டையில் இருந்து இந்திய மக்களுக்கு ஆற்றிய சுதந்திர தின உரையில் இலங்கையரசை அவர் கடுமையாக எச்சரித்தார். கொழும்பு அரசாங்கம் தொடர்ச்சியாக தமிழர்களைக் கொன்றுவந்தால், இந்தியா வாளாவிருக்க முடியாது என்று அவர் கூறினார். இராணுவத்தினரினதும், பொலீசாரினதும் பழிவாங்கல் நடவடிக்கைகளால் போராளிகளின் செயற்பாட்டினைக் கட்டுப்படுத்த முடியவில்லை. டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்களும் செயற்பாட்டில் இறங்கலாயின. புலிகள் நடத்திவரும் தாக்குதல்களின் பிரமாண்டத்தைக் காட்டிலும் தாம் அதிகமாகச் செய்துவிட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். இராணுவத்தினரினதும், பொலீஸாரினதும் நகர்வுகள், அவர்களின் சிறிய முகாம்கள் ஆகியவற்றின் மீது மட்டுமே தாக்குதல்களை நடத்தி அவர்களை முகாம்களுக்குள் முடக்குவதையே அன்று புலிகள் செய்துவந்தனர். அவர்களின் இந்த முயற்சி பலனளித்திருந்தது.பல பகுதிகள் இதன்மூலம் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதோடு அப்பகுதிகளில் தமது நிர்வாகக் கட்டமைப்புக்களையும் புலிகள் 1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இருந்து செயற்படுத்த ஆரம்பித்திருந்தனர். ஆவணி 11 முதல் ஆவணி 14 வரையான நான்கு நாட்களில் மட்டும் புலிகள் இரு பொலீஸ் நிலையங்களைத் தாக்கியதோடு கண்ணிவெடித் தாக்குதல்களையும் நடத்தியிருந்தனர். ஆவணி 11, சனிக்கிழமை காலை இராணுவத்தினரின் சீருடையில் வந்த சுமார் 50 புலிகள் ஊர்காவற்றுரையில் இயங்கிவந்த பொலீஸ் நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இராஜாங்க அமைச்சின் பேச்சாளர் கூறுகையில் பொலீஸாரும் போராளிகளும் காலை 3:30 மணியில் இருந்து நேரடித் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டதாகவும், முடிவில் போராளிகளின் முயற்சி தோற்கடிக்கப்பட்டதாகவும் கூறினார். சண் மற்றும் பிற்காலத்தில் டெயிலி மிறர் பத்திரிக்கையின் ஆசிரியராகக் கடமையாற்றிய லலித் அழகக்கோன் ஊர்காவற்றுறை தாக்குதலை பின்வருமாறு விபரித்தார், "ஊர்காவற்றுறை பொலீஸ் நிலையத்தின்மீதும் தபால் அலுவலகத்தின்மீதும் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. காலை 3:30 மணியிலிருந்து தொடர்ந்து நான்கு மணித்தியாலங்கள் நடைபெற்ற நேரத் துப்பாக்கிச் சமரில் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்". ஆவணி 14 ஆம் திகதி, செவ்வாயன்று வல்வெட்டித்துறையில் அமைந்திருந்த பொலீஸ் நிலையம் மீதும் புலிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள். காலை 4:30 மணிக்கு பொலீஸ் நிலையத்திலிருந்த பாதுகாப்பு வெளிச்சம் மீது தாக்குதல் நடத்தி, அதனை செயலிழக்கப் பண்ணியதன் பின்னர் இருட்டில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. பொலீஸ் நிலையத்தின் முற்பகுதியை மட்டும் விட்டு விட்டு ஏனைய மூன்று பகுதிகளில் இருந்தும் பொலீஸ் நிலையத்தின் மீது கிர்னேட்டுக்களையும், பெற்றொல்க் குண்டுகளையும் எறிந்து அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இஸ்ரேலினால் பயிற்றப்பட்ட பொலீஸ் கொமாண்டோக்கள் உள்ளிருந்து நான்குதிசைகளிலும் கண்ணுக்குத் தெரியாத எதிரிமீது தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதல் சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது. இத்தாக்குதலில் சுமார் 50 பொலீஸார் கொல்லப்பட்டதுடன் கட்டடமும் கடுமையான சேதத்தினைச் சந்தித்தது. ஆனாலும், பொலீஸார் புலிகளின் தாக்குதலை முறியடித்து விட்டதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதேநாள் இரவு, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் ஆயுதப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவம் காரைநகரில் அமைந்திருந்த பாரிய கடற்படை முகாம் தொகுதி மீது துணிகரமான, பாரிய தாக்குதல் ஒன்றினை ஆரம்பித்தது. இன்று ஈ.பி.டி.பி யின் தலைவராக இருக்கும் டக்கிளஸ் தேவானந்தாவே அன்று மக்கள் விடுதலை இராணுவத்தின் தளபதியாக இருந்தார். தாக்குதல் நடத்தப்பட்ட வேளை அவர் சென்னையில் தங்கியிருந்தார். முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் மத்திய குழு உறுப்பினரும், தற்போதைய தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்தார். தோல்வியில் முடிவடைந்த ஈ.பி.ஆர்.எல்.எப் இன் காரைநகர் கடற்படை முகாம் மீதான தாக்குதல் மக்கள் விடுதலை இராணுவத்தின் யாழ்ப்பாணத் தளபதியான ரொபேர்ட் என்று அறியப்பட்ட சுபத்திரனினாலும் , சுரேஷ் பிரேமச்சந்திரனினாலும் காரைநகர் முகாம் மீதான தாக்குதலினை நடத்தும் முடிவு எடுக்கப்பட்டது. தாம் அண்மையில் பயன்படுத்தத் தொடங்கியிருந்த இரு புதிய வழிமுறைகளைப் பாவித்து இத்தாக்குதலினை நடத்தலாம் என்று அவர்கள் எண்ணினார்கள். தமிழ்நாடு கும்பகோணம் முகாமில் பயிற்றப்பட்டவரும், லெபனான் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டவருமான திருகோணமலையைச் சேர்ந்த சின்னவன் என்பவர் மோட்டார் உந்துகணை தொடர்பான பயிற்சியினைக் கொண்டிருந்தார். தனது இயக்கத்திற்காக மோட்டார்க் குண்டுகளையும் அவரே உள்ளூரில் தயாரித்துமிருந்தார். இதனைவிடவும், இயக்கத்தின் இன்னொரு உறுப்பினரான சுதன் எனப்படுபவரால் தயாரிக்கப்பட்ட உள்ளூர்க் கவச வாகனம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபடலாம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் நினைத்தது. மோட்டார்த் தாக்குதலை நடத்திவிட்டு பின்னர் முகாமின் முன்வாயில் ஊடாக கவச வாகனத்தை ஓட்டிச் செல்வதே அவர்களின் திட்டம். ஆனால், இரு திட்டங்களும் தோல்வியில் முடிவடைந்தன. அவர்கள் ஏவிய பெரும்பாலான மோட்டார்கள் வெடிக்கவில்லை. மேலும், அவர்களின் கவச வாகனமும் முகாமின் வாயிலிற்பகுதியில் செயலிழந்து நின்றுவிட்டது. ஆரம்பத்தில் முகாமின் பிற்பகுதிக்குப் பின்வாங்கிச் சென்றிருந்த கடற்படையினர், ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தாக்குதல் பிசுபிசுத்துப் போனதையடுத்து முகாமின் முற்பகுதி நோக்கி முன்னேறி கடுமையான எதிர்த்தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினர். கடற்படையினரின் பலத்த எதிர்த்தாக்குதலில் பல போராளிகள் கொல்லப்பட, கொல்லப்பட்ட தமது சகாக்களையும், காயப்பட்டவர்களையும் இழுத்துக்கொண்டு மீதிப்பேர் அங்கிருந்து பின்வாங்கிச் சென்றனர். இத்தாக்குதலில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினர் தமது முதலாவது பெண்போராளியை இழந்திருந்தனர். தனது 15 வயதில் மக்கள் விடுதலை இராணுவத்தில் ஷோபா என்கின்ற அந்தப் பெண்போராளி இணைந்திருந்தார்.
  23. போராளிகளுடன் இணைந்து செயற்பட்ட பொதுமக்கள் ஒட்டுசுட்டான் பொலீஸ் முகாம் மீதான தாக்குதலில் பரமதேவா முக்கியமான பாத்திரத்தினை வகித்திருந்தார். ஆகவே, அவரை கிழக்கு மாகாணத்தில் புலிகளின் நடவடிக்கைகளை முடுக்கிவிட பிரபாகரன் அனுப்பிவைத்தார். அடுத்துவந்த இரு மாதங்களுக்கு கிழக்கில் இராணுவத்தினருக்குத் தலையிடியைக் கொடுக்கும் நடவடிக்கைகளில் பரமதேவா ஈடுபட்டார். களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற தாக்குதல் முயற்சியொன்றில் அவர் மரணமடைந்தார். அவரது இழப்பு புலிகளை பெரிய அளவில் பாதித்திருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஐந்தாவது இரவாக மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றன. கடைகளை உடைத்துத் திறந்த இராணுவத்தினர் அவற்றைக் கொள்ளையிட்டதுடன், தீவைத்து எரித்தனர். வீதிகளிலும், வீடுகளிலும் இருந்த பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். போராளிகளும் தொடர்ச்சியாக இராணுவத்தினர் மீதும், பொலீஸார் மீதும் யாழ்ப்பாணத்து வீதிகளில் தாக்குதல்களை நடத்தி வந்தனர். இவ்வாறான தாக்குதல்களில் இராணுவத்தினரிடமிருந்து ஆயுதங்களும் வெடிபொருடகளும் அவர்களால் கைப்பற்றப்பட்டன. இடைக்கிடையே வாகனங்களும், பணமும் அவர்களால் கொள்ளையிடப்பட்டன. இதே காலப்பகுதியில் சமூகவிரோதிகளுக்கும், இராணுவத்தினருக்காக உளவுபார்த்தவர்களுக்கும் ஆங்காங்கே மின்கம்ப மரணதண்டனைகளும் வழங்கப்பட்டு வந்தன. காங்கேசந்துறைச் சீமேந்துத் தொலிற்சாலையிலிருந்து நான்கு துப்பாக்கிகள், குண்டுவெடிக்கவைக்கும் கருவிகள், ஜீப் வண்டி ஆகியவை போராளிகளால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. சுண்ணாம்புக் கற்களை அகழ்ந்து எடுக்கும் சுரங்கப்பகுதியில் பாறைகளை வெடிக்கவைத்து விட்டு , நான்கு ஆயுதம் தரித்த காவலாளிகள் பாதுகாப்பு வழங்க, பொறியியலாளர் ஏ. ஜேசுதாசன் மீதி வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு ஜீப் வண்டியில் வந்துகொண்டிருந்தார். திடீரென்று வாகனத்திற்கு முன்னால் வீதியில் குதித்த ஐந்து ஆயுதம் தரித்த இளைஞர்கள் ஜீப் வண்டியை மறித்தனர். பின்னர், ஜீப் வண்டியையும், காவலர்கள் வைத்திருந்த ஆயுதங்கள், ரவைகள், வெடிபொருட்கள் என்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்றனர். அவ்வாறே, வங்கிகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், அரச திணைக்களங்கள் ஆகியவற்றிலிருந்தும் போராளிகளால் ஆயுதங்களும், ரவைகளும் எடுத்துச் செல்லப்பட்டன. தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத்திற்கு வந்த நான்கு ஆயுதம் தரித்த இளைஞர்கள், கட்டடத்தின் கதவுகளை உடைத்துத் திறந்து அங்கிருந்த பணத்தையும், துப்பாக்கி ஒன்றையும் எடுத்துச் சென்றனர். இன்னொரு குழு பண்டைத்தரிப்பு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான கட்டடத்திலிருந்து பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த அரச திணைக்களம் ஒன்றிற்குள் புகுந்த இளைஞர் குழு ஒன்று காவலாளியை மிரட்டி அங்கிருந்த தட்டச்சுச் செய்யும் இயந்திரத்தையும், ரோனியோ இயந்திரத்தையும், காவலாளியின் துப்பாக்கியையும் எடுத்துச் சென்றது. ஒட்டுமொத்த யாழ்ப்பாணக் குடாநாடுமே கலவர பூமியாகக் காட்சியளித்தது. பொதுமக்களும் வீதிகளுக்கு இறங்கியிருந்தனர். தம்மால் எடுத்துவரக்கூடிய மரக்குற்றிகள், சீமேந்துத் தூண்கள், கற்கள் ஆகியவற்றை வீதிகளுக்குக் குறுக்கே இட்டு தடைகளை ஏற்படுத்தினர். சிலவிடங்களில் டயர்களும் வீதிக்குக் குறுக்கே போடப்பட்டு எரிக்கப்பட்டன. இராணுவ முகாம்களையும் , பொலீஸ் நிலையங்களையும் சூழவுள்ள வீதிகளில் இத்தடைகள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களை முடக்குவதே பொதுமக்களின் நோக்கமாக இருந்தது. பொதுமக்களால் ஏற்படுத்தப்பட்ட வீதித் தடைகளுக்கு அருகே போராளிகள் கண்ணிவெடிகளைப் புதைக்கத் தொடங்கினர். இவ்வாறான பதட்டமான சூழ்நிலையில் அரசுக்குச் சொந்தமான வங்கியொன்று இரு போராளிக் குழுக்களால் கொள்ளையிடப்பட்டது. ஸ்டான்லி வீதியில் அமைந்திருந்த இலங்கை வங்கியினைக் கொள்ளையிடும் நோக்கத்தில் பலநாட்களாக ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு அதற்கான நடவடிக்கைகளைத் திட்டமிட்டும் தகவல்களைச் சேகரித்தும் வந்திருந்தது. இன்னொரு சிறிய போராளி அமைப்பான தமிழீழ தேசிய விடுதலை முன்னணி எனும் அமைப்பும் இதே வங்கியைக் கொள்ளையிட நடவடிக்கைகளை எடுத்து வந்தது. பொதுமக்களின் எழுச்சியைப் பாவித்து அன்றிரவு ஸ்டான்லி வீதி வங்கியைக் கொள்ளையிடுவதே அந்த அமைப்பின் நோக்கம். அதற்காக இரு பாரவூர்திகளையும் ஒரு வான் ரக வாகனத்தையும் தமிழ் ஈழத் தேசிய விடுதலை முன்னணி கடத்திச் சென்றது. அந்த வாகனங்களில் அவ்வமைப்பின் போராளிகள் ஏறிக்கொண்டார்கள். வங்கிக்கொள்ளை விசாரணைகளின்போது சாட்சியங்கள் கூறுகையில் குறைந்தது 50 போராளிகளாவது அந்த வாகனங்களில் இருந்தார்கள் என்று கூறியிருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு உப இயந்திரத் துப்பாக்கியும் (எஸ் எம் ஜி) சில கிர்னேட்டுக்களும், சில சுழழ்த் துப்பாக்கிகளும் இருந்தன. வங்கியின் முன்னால் அமைந்திருந்த கதவினை உடைத்துத் திறந்த அவர்கள், உள்ளே நுழைந்து குண்டுகளை வெடிக்க வைத்தனர். வங்கியின் உட்பகுதியில் இருந்த பலமான கதவு குண்டுவெடிப்பினால் உடைந்து வீழ்ந்தது. பணமும், நகைகளும் பாதுகாப்பாக வைத்திருந்த ஒரு பெட்டகத்தை அவர்கள் எடுத்துச் சென்றார்கள். அத்துடன் உள்ளேயிருந்த ரைபிள்களையும் எடுத்துச் சென்றார்கள். ஆனால், ஏனைய நகைகளும் பணமும் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பான அறையினை அவர்களால் உடைக்கமுடியவில்லை. ஆகவே, நேரத்தை விரயமாக்காது தாம் வந்த வாகனங்களிலேயே தப்பிச் சென்றார்கள். இந்த வங்கிக்கொள்ளை பற்றி ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு அறிந்துகொண்டது. உழவு இயந்திரம் ஒன்றினை எடுத்துக்கொண்டு வங்கியை நோக்கிச் சென்றது அவ்வமைப்பின் குழு ஒன்று. வங்கிக்கொள்ளையினை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களின் உதவியுடன், மீதமாகவிருந்த நகைகளும் பணமும் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தை அவர்கள் எடுத்துச் சென்றனர். "எங்கள் பிள்ளைகளே எங்கள் காவலர்கள்" ஆவணி 6 ஆம் திகதி, அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டத்தினப் பாவித்து இராணுவம் தொடர்ச்சியாக அட்டூழியங்களில் ஈடுப‌ட்டு வந்தது. தம்மீதான போராளிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்குவதற்காக பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலை அது நடத்தி வந்தது. ஆனால், போராளிகளும் தொடர்ச்சியாக இராணுவத்தின் மீது தாக்குதல்களை நடத்தியே வந்தனர். அரசின் ஒடுக்குமுறையினால் ஏலவே பாதிக்கப்பட்டிருந்த தமிழர்களைப் பொறுத்தவரை தம்மைக் காக்கவேண்டிய இராணுவமும், பொலீஸும், கடற்படையும் தம்மீது தாக்குதல் நடத்தி, பலரைக் கொன்றும், சொத்துக்களைச் சூறையாடியும் வந்தமை கடுமையான அதிருப்தியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, இயல்பாகவே அவர்கள் போராளிகளின் பக்கம் சாயவேண்டிய நிலை ஏற்பட்டது. போராளிகளுக்கு, தாமாகவே முன்வந்து, விருப்புடன் தமிழர்கள் உதவும் சூழ்நிலை அங்கு உருவானது. போராளிகளுக்கான மக்களின் ஆதரவு பல்கிப் பெருகத் தொடங்கியது. "எங்கள் பிள்ளைகளே எங்கள் காவலர்கள்" எனும் மனோநிலை அனைவர் மனதிலும் ஆழமாக வேரூன்றிக்கொண்டது. அரச படைகளை, "சிங்கள இராணுவம், சிங்களப் பொலீஸ், அந்நியர்கள், ஆக்கிரமிப்பாளர்கள்" என்று தமிழர்கள் அழைக்கும் நிலை உருவானது. ஆவணி 6 ஆம் திகதி, யாழ்ப்பாணம் மக்கள் வங்கிக்கிளை தனது நாளாந்த அலுவல்களை ஆரம்பித்த வேளை மக்களோடு மக்களாக பத்து இளைஞர்கள் சுழழ்த் துப்பாக்கிகளுடன் உள்நுழைந்தனர். சிறிது நேரத்தின் பின்னர், 'நாங்கள் இங்கே குண்டுகளை வைத்திருக்கிறோம், அனைவரும் ஓடித் தப்புங்கள்" என்று அவர்கள் கூச்சலிட்டார்கள். அங்கிருந்த பொதுமக்கள், ஊழியர்கள், முகாமையாளர் என்று அனைவருமே வங்கியை விட்டு வெளியே ஓட ஆரம்பித்தார்கள். இந்தக் கலவரத்தில் அங்கிருந்த மூன்று காவலாளிகளிடமிருந்த துப்பாக்கிகளையும் குண்டுகளையும் அந்த இளைஞர்கள் பறித்துச் சென்றார்கள். வவுனியாவில் இடம்பெற்ற பழிவாங்கல்ப் படுகொலைகளும், கூட்டுப் பாலியல் வன்புணர்வும் வவுனியா நகரிலும் அன்று போராளிகளால் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. பொலீஸ் அத்தியட்சகர் ஆர்தர் ஹேரத் வழமைபோல தனது காரியாலயத்திற்குள் நுழைந்து தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார். அவரது மேசைக்குக் கீழே பொறுத்தப்பட்டிருந்த நேரம் குறித்து வெடிக்கும் குண்டு செயற்பட வைக்கப்பட, பொலீஸ் அத்தியட்சகர் உடல்சிதறி மரணமானார். புளொட் அமைப்பே இந்தக் குண்டினை வைத்திருந்தது. காந்தியம் அமைப்பில் அக்காலத்தில் செயற்பாடு வந்த சந்ததியாரே இக்குண்டுவெடிப்பைத் திட்டமிட்டு நடத்தியதாக கூறப்பட்டது. காந்தியம் தலைவர்கள் மீது பொலீஸார் நடத்திய அடாவ‌டித்தனம், இந்திய வம்சாவளித் தமிழர்களை காந்தியத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றியமை ஆகிய காரணங்களுக்காக பொலீஸார் மீது இத்தாக்குதலை புளொட் நடத்தியிருந்தது. ஹேரத் மரணிப்பதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் மாங்குளம் வாடி வீட்டில் அவரைச் சந்தித்தேன். லலித் அதுலத் முதலியின் விஜயத்தை செய்தியாக்குவதற்காக நான் அங்கு சென்றிருந்தேன். ஹேரத்தின் மரணத்திற்குப் பழிதீர்க்க இராணுவமும் பொலீஸாரும் செயலில் இறங்கினார்கள். வவுனியா நகரப்பகுதிக்கு வாகனங்களில் வந்திறங்கிய 25 பொலீஸார், அங்கிருந்த தமிழருக்குச் சொந்தமான அனைத்துக் கடைகளையும் அடித்து நொறுக்கியதுடன் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகமும் செய்தனர். நகரில் இயங்கிவந்த "வேல் கபே" எனும் உணவு விடுதிக்குள் நுழைந்த பொலீஸார் அதன் உரிமையாளரையும், உணவருந்திக்கொண்டிருந்த ஆறு பொதுமக்களையும் சுட்டுக் கொன்றனர். அன்றிரவு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தனியார் பேரூந்தொன்றில் பயணம் செய்த நான்கு தமிழ்ப் பெண்களை, பேரூந்தினை மறித்த விமானப்படடையினர் தம்முடன் இழுத்துச் சென்றனர். கூட்டாகப் பாலியல் வன்புணர்வுள்ளாக்கப்பட்ட அந்த நான்கு பெண்களும் பின்னர் விமானப்படையினரால் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டனர். மறுநாளான ஆவணி 7 ஆம் திகதி, வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் வழியில், நகரில் இருந்து மூன்று கிலோமீட்டர்கள் தொலைவில் கொல்லப்பட்ட மேலும் 10 தமிழர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், வழமைபோல பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட லியனகே, இத்தமிழர்கள் அனைவரும் போராளிக் குழுக்களுக்கிடையிலான மோதலில் அகப்பட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று கூறினார். மேலும், ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத் தாக்குதலுக்குப் பழிவாங்கிய பொலீஸார் சரித்திர முக்கியத்துவம் பெற்ற தம்பலகாமம் சிவன் கோயிலை இடித்து நொறுக்கியதுடன், பூசகரையும் அடித்து இழுத்துச் சென்றனர். சுண்ணாகம் பொலீஸ் நிலையப் படுகொலை ஆவணி 9 ஆம் திகதி, மொத்தத் தமிழினத்தையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய படுகொலையொன்று நடந்தேறியது. யாழ்ப்பாணப் பொலீஸ் நிலையத்திற்கு அடுத்ததாக, சுண்ணாகத்தில் அமைந்திருக்கும் பொலீஸ் நிலையமே வடபகுதியில் இருந்த பொலீஸ் நிலையங்களுக்குள் பெரியதாக இருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாக கைதுசெய்யப்பட்ட பல தமிழ் இளைஞர்கள் சுண்ணாகம் பொலீஸ் நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்கள். யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை வீதியில் அமைந்திருந்த இரண்டு மாடிகளைக் கொண்ட இப்பொலீஸ் நிலையம் மீது புதன்கிழமை டெலோ அமைப்பினர் நடத்திய தாக்குதல் முயற்சி பொலீஸாரினால் முறியடிக்கப்பட்டிருந்தது . ஆனால், புதன் இரவும் இன்னொரு தாக்குதல் முயற்சியில் டெலோ அமைப்பினர் இறங்கப்போகிறார்கள் என்கிற செய்தி பொலீஸாருக்குக் கிடைத்தது. பின்னாட்களில் நடந்த விசாரணைகளின்போது, அன்றிரவே சுண்ணாகம் பொலீஸார் யாழ்ப்பாணப் பொலீஸ் நிலையம் நோக்கிச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு யாழ்ப்பாணத்திற்குப் போகும் முன்னர், தாம் அடைத்துவைத்திருந்த இளைஞர்கள் அனைவரையும் ஒரு அறைக்குள் அடைத்துப் பொலீஸார் பூட்டினர். அந்த இளைஞர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்டும், கண்கள் மறைக்கப்பட்டும், அவர்கள் கூச்சலிடாதபடி வாய்களுக்குள் துணிகள் பொதிந்தும் அடைக்கப்பட்டார்கள். பின்னர், அவ்வறையின் கதவினை எவராவதுதிறக்க‌ எத்தனித்தால், அவ்வறையினை முற்றாக இடித்துத் தரைமட்டமாக்கக் கூடியவகையில் பாரிய குண்டொன்றைப் பொலீஸார் பொறுத்திவிட்டுச் சென்றார்கள். அன்று உயிர்தப்பிய சிலர் விசாரணைகளின்போது பேசுகையில், தம்மில் சிலர் ஒருவாறு கைக்கட்டுக்களையும், வாயில் அடைக்கப்பட்ட துணிகளையும் அகற்றிவிட்டு உதவி கோரிக் கூச்சலிட்டிருக்கிறார்கள். பொலீஸார் வெளியேறியபின்னர் அப்பகுதியில் குழுமிய பொதுமக்கள் உள்ளிருந்து வரும் கூச்சல்களைச் செவிமடுத்தவுடன், கதவினை உடைத்துத் திறக்க எத்தனித்திருக்கிறார்கள். இதன்போது கதவில் பொறுத்தப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இக்குண்டுவெடிப்பில் உள்ளே அடைக்கப்பட்டிருந்த இளைஞர்களும், உதவிக்கு வந்த பொதுமக்களுமாக குறைந்தது 20 பேர் அவ்விடத்திலேயே உடல்சிதறிக் கொல்லப்பட்டார்கள். பொலீஸாரினால் தடுத்துவைக்கப்பட்டு, பின்னர் திட்டமிட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களின் மரணங்களை கொழும்பு ஊடகங்கள் பின்வருமாறு தலைப்பிட்டு மகிழ்ந்தன, "பயங்கரவாதிகளின் தாக்குதலை பொலீஸார் முறியடித்து விட்டனர்". இப்படுகொலை பற்றிய பொய்ப்பிரச்சாரத்தை அவை முடுக்கிவிட்டிருந்தன. சண்டே ஒப்சேர்வர் தனது செய்தியில் பயங்கரவாதிகளின் தாக்குதலை பொலீஸார் முறியடித்து விட்டதாகவும், மேலதிக ஆளணி உதவி பொலீஸாரால் விடுக்கப்பட்டதாகவும் எழுதியது. மேலும், சுண்ணாகம் பொலீஸாரின் உதவி கோரலினையடுத்து யாழ்ப்பாணத்திலிருந்த ஏனைய பொலீஸ் நிலையங்களில் இருந்து பொலீஸார் விரைந்து சென்று சண்டையில் ஈடுபட்டதாகவும், கடுமையான சண்டையில் இருபதிற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அச்செய்தி கூறியது. நாவற்குழி படுகொலை மறுநாள், ஆவணி 10 ஆம் திகதி இரவு, குருதியை உரையவைக்கும் இன்னொரு கொடூரமான படுகொலை ஒன்று இராணுவத்தினரால் அரங்கேற்றப்பட்டது. 10 பேர் கொண்ட குடும்பம் ஒன்று கைதடியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி தனியார் வாகனமொன்றில் பயணம் செய்துகொண்டிருந்தனர். இவர்களுள் ஆறு பேர் குழந்தைகள். நாவற்குழி இராணுவத் தடைமுகாமின் அரணில் நின்ற‌ இராணுவத்தினர் அவ்வண்டியை மறித்தனர். முகாமின் அருகிலிருந்த ஆள் ஆரவாரம் அற்ற இடமொன்றிற்கு இழுத்துச் செல்லப்பட்ட அக்குழந்தைகளும் பெற்றோரும் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்படுகொலையினை அரச வானொலி பிரச்சாரப்படுத்திய விதம் தமிழ் மக்களை மேலும் ஆத்திரம்கொள்ள வைத்தது. "கைதடிப்பகுதியில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள் " என்று பொதுமக்களின்படுகொலை பிரச்சாரப்படுத்தப்பட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.