கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே.
நாகாசல ... திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியவரே,
வேலவ ... வேலாயுதக் கடவுளே,
நாலு கவி த்யாகா ... நாலு விதக் கவிகளை பாடும் திறமையைத்
தந்தவரே,
சுரலோக சிகாணியே ... தேவலோகத்திற்கு சிகாமணியாக
விளங்குபவரே,
என் கிளை கூடி ... என் சுற்றத்தார் ஒன்று கூடி,
கூகா என அழ ... கூகா என ஓலமிட்டு அழும்படிக்கு,
போகா வகை ... இறந்து போகாத வண்ணம்,
மெய்ப் பொருள் போசியவா ... உண்மையான பொருளை
அடியேனுக்கு உபதேசித்த அற்புதந்தான் என்னே
செங்கோட்டு வேலவனே, கவிபாடும் திறமையை எனக்கு அளித்தவனே,
தேவ லோகத்தின் மணியானவனே, நான் இந்த உடலை விடும் போது
என் சுற்றத்தார்கள் அனைவரும் கூடி, நான் மரண யாத்திரைக்கு போகும்
இந்த அவல நிலை மாறும்படி எனக்கு உண்மைப் பொருளை
உபதேசித்தது என்ன அதிசயம்.