Everything posted by ரசோதரன்
-
சங்கீத கலாநிதி
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்......👍 எழுத்தாளர் சாரு (சாருநிவேதிதா) டி. எம். கிருஷ்ணா விவகாரத்தில் சற்று வித்தியாசமான ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றார். அதை நான் யாழ் களத்தில் வேறு ஒரு திரியில் பகிர்ந்திருந்தேன். https://charuonline.com/blog/?p=14482
-
ஒரு பொய்
😀....... மைக்கேல் பாவம், வேற எங்கேயாவது போய் பிழைத்துக் கொள்ளட்டும் என்று ஒரு நல்ல எண்ணமும், இந்தப் பயல் அங்கே போய் திரும்பவும் இங்கே செய்ததை தானே செய்யப் போகின்றான் என்ற ஒரு தயக்கமும் இருந்தது. பாவ உணர்வு வென்று விட்டது......🤣 நன்றிகள் ஏராளன்.
-
இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமா? இதன் பக்கவிளைவுகள் என்ன?
இந்த வகை உணவுக் கட்டுப்பாட்டு முறையால் இருதய நோய்கள் வருவதற்கான சாத்தியம் மிக அதிகமாக இருக்கலாம் என்று சமீபத்திய ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது: https://newsroom.heart.org/news/8-hour-time-restricted-eating-linked-to-a-91-higher-risk-of-cardiovascular-death
-
'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதா?’ - இசையுலகில் எதிர்ப்பு ஏன்?
டி. எம் . கிருஷ்ணா பற்றி எழுத்தாளர் சாரு (சாருநிவேதிதா) அவரது பக்கத்தில் எழுதியிருக்கும் கட்டுரை இது: ************** பாப் பாடகர் பாப் டிலனுக்கு 2016இல் இலக்கியத்துக்கான நோபல் விருது கிடைத்தது. அதேபோல் டி.எம். கிருஷ்ணாவுக்கும் இலக்கியத்துக்கான நோபல் விருது கிடைத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால், மேற்கத்திய நாடுகளில் இந்தியாவையும், ஹிந்து மதத்தையும் திட்டுபவர்களுக்கும் அவதூறு செய்பவர்களுக்கும் பெரிய மரியாதை கொடுக்கப்படுகிறது. இதை என் விஷயத்திலேயே கவனித்து விட்டுத்தான் சொல்கிறேன். வெளிப்படையாக எழுத முடியாது. நீங்களேதான் புரிந்து கொள்ள வேண்டும். இதை எழுதுங்கள், இப்படி எழுதுங்கள் என்றே சொல்கிறார்கள். நான் அதை ஏற்காவிட்டால் பிரசுரம் மறுக்கப்படுகிறது. கோவில்களில் க்ரூப் செக்ஸ் நடக்கிறது என்பது போல் எழுதினால் கொண்டாடுகிறார்கள். ஹிந்து மதத்தை எதிர்த்தால் எதிர்ப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று நான் எழுதினால் என் பெயர் நியூயார்க்கர் பத்திரிகையில் வரும். ”ஹிந்து மதத்தில் நாத்திகம் பேசினால் அதை யாரும் எதிர்க்க மாட்டார்கள், அத்தகைய நாத்திக வாதத்தையும் ஹிந்து மதம் ஏற்றுக் கொள்கிறது” என்று நான் எழுதினால் என்னை மேற்கத்தியர்கள் ஹிந்துத்துவா என்று சொல்கிறார்கள். இவ்வாறாகத்தான் பெருமாள் முருகன், அருந்ததி ராய், டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை மேற்கத்தியர்கள் கொண்டாடுகிறார்கள். விருதுக்காகவும் புகழுக்காகவும் அம்மாதிரியான இழிசெயலை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். பெருமாள் முருகனுக்கு நடந்ததேதான் இப்போது டி.எம். கிருஷ்ணாவுக்கும் நடக்கிறது. ஒரே வித்தியாசம், கிருஷ்ணாவை எதிர்ப்பவர்கள் பிராமணர்கள் என்பதால் எதிர்ப்பு வெறும் மென்மையான சொற்களால் மட்டுமே நடக்கிறது. பெருமாள் முருகனுக்கு நடந்தது போல் கொலை மிரட்டல் எல்லாம் இல்லை. ஆனாலும் மேற்கத்தியரைப் பொருத்தவரை எதிர்ப்பு எதிர்ப்புதான். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது கிடைத்ததைக் கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் யாருக்கும் இந்த விஷயம் தெரியாமல் போயிருக்கும். ஆனால் இந்த எதிர்ப்பின் காரணமாக, இது நியூயார்க்கருக்கும் நோபலுக்கும் போகும். இன்னும் சில தினங்களில் இந்த விஷயம் நியூயார்க்கரில் வருகிறதா இல்லையா என்று பாருங்கள். கிருஷ்ணாவுக்கு ஹிந்துத்துவா ஆட்கள் எதிர்ப்பு என்ற தலைப்புச் செய்தி நியூயார்க்கரில் வரும். இது நோபலின் கவனத்துக்குப் போகும். ஆனால் இந்த அளவுக்கு கிருஷ்ணாவுக்கு இசை தவிர வேறு எந்தத் தகுதியும் இல்லை. அவர் ஒரு அபூர்வமான இசைக் கலைஞர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த அபூர்வமான திறமையை அவருடைய நாத்திகவாதம் கொன்று விட்டது. யோசித்துப் பாருங்கள். தியாகராஜர் ராமா ராமா என்று உருகுகிறார். அந்த உருக்கத்தை ஒரு நாத்திகரால் எப்படி தன் குரலிலும் ஆன்மாவிலும் கொண்டு வந்து பாட முடியும்? அவர் பெருமாள் முருகனையும் பாரதிதாசனையும்தான் பாட முடியும். இவர்கள் ரெண்டு பேரும் வாக்கேயக்காரர்களா, சொல்லுங்கள்? மேற்கத்தியர்கள் ஒரு agenda வைத்திருக்கிறார்கள். அந்த அஜண்டாவுக்குப் பொருந்தி வருபவர்களை அவர்கள் கொண்டாடுகிறார்கள். கிருஷ்ணாவுக்குக் கிடைக்கப் போகும் சர்வதேச விருதுகளையும் மரியாதையையும் பொருத்திருந்து பாருங்கள். இன்னொரு முக்கியமான விஷயம். கிருஷ்ணா சேரிகளுக்குப் போய் கர்னாடக இசை கற்றுக் கொடுப்பதில் ஒரு சாதியத் திமிர் இருக்கிறது. பொருளாதார ரீதியாகத்தான் சேரிவாழ் மக்கள் கீழ் நிலையில் இருக்கிறார்களே தவிர கலாச்சார ரீதியாக அல்ல. உயர்குடியிடம் என்னென்ன கலாச்சார விழுமியங்கள் இருக்கின்றனவோ அவை அனைத்தும் சேரியிலும் இருக்கின்றன. ஆனால் கிருஷ்ணா அவர்களைத் தன்னை விடத் தாழ்ந்தவர்களாக நினைக்கிறார். அதனால்தான் தன்னை கலாச்சார ரீதியாக உயர்ந்த இடத்தில் வைத்துக்கொண்டு சேரி மக்களிடம் கர்னாடக சங்கீதத்தை எடுத்துக்கொண்டு போகிறார். இது ஒரு கலாச்சார வன்முறை. கைலி கட்டிக்கொண்டு கர்னாடக சங்கீதம் பாடுவது போல் கிருஷ்ணாவுக்கு ‘தில்’ இருந்தால் கானா பாடல்களைக் கற்றுக் கொண்டு கானா பாட வேண்டும். கடவுளை நம்பும் “மூடர்கள்” இயற்றிய கீர்த்தனைகளை அவர் இனிமேல் பாடக் கூடாது. கர்னாடக சங்கீதம் கையில் இருப்பதால் அவர் சேரி மக்களை விட கலாச்சார ரீதியாக உயர்ந்தவர் என்று அர்த்தம் இல்லை. தன்னுடைய ‘கலாச்சாரத்தை’ அவர் சேரி மக்களிடம் திணிப்பது பச்சையான வன்முறை. உண்மையிலேயே அவருக்கு சேரி மக்கள் மீது அக்கறை இருந்தால் அவர் கானா பாடல்களைப் பாட வேண்டும். முதலில் உங்களுடைய சாதிய ஐவரி டவரிலிருந்து கீழே இறங்கி வாருங்கள், கிருஷ்ணா. தலித்துகளுக்குப் பூணூல் மாட்டி விடுவதல்ல, உங்களுடைய சாதித் திமிரை முதலில் கழற்றி வைப்பதுதான் நீங்கள் நம்பும் முற்போக்கு வாழ்க்கையின் முதல் படி. https://charuonline.com/blog/?p=14482
-
நாமக்கல்: பட்டியலின சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுத்த விவகாரம் - உண்மையில் என்ன நடந்தது?
நாமக்கல் தினமும் இன்று சந்தையில் கோழி முட்டையின் மொத்த விலை விபரம் என்ன என்று சொல்லும் போது செய்திகளில் இருக்கும். இப்பொழுது சில நாட்களாக சாதிய கொடுமைகளுக்காகவும் செய்திகளில் வந்து கொண்டிருக்கின்றது. திமுக கூட்டணியில் நாமக்கல்லில் கொமதேக (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) போட்டியிடுகின்றது. முதலில் சூரியமூர்த்தி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சாதி மற்றும் ஆணவக்கொலை சம்பந்தமான இவரின் சில பேச்சுகளால் இவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. இவருக்கு பதிலாக இப்பொழுது மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
-
கார்பன் வெளிச்சம்
🤣........ சில காலம் அது ஒரு பைத்தியமாக இருந்தது. சினிமா பைத்தியம்.....🤣.....நல்லவேளை, பின்னர் அது தெளிந்துவிட்டது.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
கீழடியும், வேங்கை வயலும் அருகருகே தான் இருக்கின்றன. பேசும் பெருமையும், செய்யும் கொடுமையும் ஒன்றாக இருப்பது தான் அங்கே யதார்த்தம் போலும். 'சமூக நீதி' தான் தங்களின் பெரும் சாதனை என்று சொல்வார்கள். ஒரு மாதத்திற்கு முன் கூட அங்கே வயலில் வேலை செய்தவர்களுக்கு சிரட்டையில் தேநீர் கொடுத்ததாக ஒரு பிரச்சனை பேசப்பட்டது. தனிப்பட்ட ரீதியிலும் இவர்கள் பலருடன் எனக்கு ஓரளவு நல்ல பழக்கம் இருக்கின்றது. நீண்ட காலமாக இவர்களுடன் வேலை செய்கின்றேன். இவர்களில் பெரும்பாலானவர்கள் எதையும் கை விட்டு, புது உலகம் ஒன்றை ஏற்றுக் கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. அநேகமான நேரங்களில் நான் யார், என்ன ஆள் என்று அறியவே முயல்கின்றனர்.....🫣
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத திரிபு சொல். திராவிடம் என்ற வார்த்தை தமிழ் இலக்கியங்களில் இல்லை. அது தென்னகத்து பிராமணர்களை குறிக்க சமக்கிருத அறிஞர்கள் மனு ஸ்மிரிதி , பிரஸ்னோத்தர ரத்னமாலிக்கா போன்ற சமக்கிருத இலக்கியங்களில் பயன்படுத்திய சொல். ஆதி சங்கரர் மண்டல மிஸ்ரா வுடன் வாது புரிகையில் தன்னை "திராவிட சிசு" என்று அறிமுகம் செய்கிறார். அதைப்போலவே ஆதி சங்கரர் திருஞான சம்பந்தரை (இவரும் ஒரு பிராமணர்) சுட்டுகையில் திராவிட சிசு என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். நால்வரில் மற்றவர்களை அப்படி சொல்லவில்லை. மனு ஸ்ம்ரிதி தமிழர்களை சுட்ட சோழர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளது , திராவிட என்ற வார்த்தையை அது தென்னகத்து பிராமணர்களை குறிக்க பயன்படுத்துகிறது. நான் பல இடங்களில் சொன்ன உதாரணம் தான் மட்டை பந்து ஆட்டக்காரர் ராகுல் திராவிட் , மயிலை சமக்கிருத கல்லூரி பேராசிரியர் டாக்டர் மணி திராவிட் சாஸ்திரிகள் இவர்கள் அனைவரும் பிராமணர்கள் , திராவிட் என்பது அவர்கள் காலம்காலமாக பயன்படுத்தி வந்த குடும்ப பெயர். பிராமணர்களை பொதுவாக பஞ்ச திராவிட என்றும் பஞ்ச கௌட என்றும் இரு கூறுகளாக பிரிப்பர். இதில் பஞ்ச திராவிட என்பது தென்னகத்து பிராமணர்களை குறிக்கிறது, பஞ்ச கௌட வட பிராமணர்களை குறிக்கிறது. திராவிட மேட்ரிமோனி என்று பிராமணர்களுக்கான தெலுங்கானாவில் பதிவு செய்த இணையங்களும் உள்ளன. ராபர்ட் கால்டுவேல் என்ற மொழியியல் அறிஞர் பின்னாளில் தமிழ் மொழிக்குடும்பங்களை சுட்ட தமிழ் மொழி அல்லாத ஒரு பெயரை வைக்கும் எண்ணத்தில் சமக்கிருதத்திலிருந்து "திராவிட" என்ற பதத்தை எடுத்து தவறாக தமிழ் மொழி குடும்பத்தை சுட்ட பயன்படுத்தினார். இதையே நீதிக்கட்சிக்கு பெயர் மாற்றம் செய்யும் வேளையில் கிஆபெ விசுவநாதன் உள்ளிட்ட தலைவர்கள் பெரியாரிடம் வற்புறுத்தியும் 'தமிழர் கழகம்' என்று வைக்காமல் 'திராவிடர் கழகம்' என பெயர் மாற்றினார். திராவிடம் என்பது எந்த மாநிலமும் அங்கீகரிக்காத ஒரு போலி பெயர் , தமிழர்களை தமிழர் அல்லாதவர்கள் ஆள பயன்பட்ட ஒரு முக மூடி அவ்வளவே ! திராவிடம் என்ற ஒரு இனமோ, மொழியோ , பண்பாடோ தமிழர்களிடம் இருந்ததில்லை , இது வேற்று மொழி பேசுபவர்களால் தங்கள் அடையாளத்தை மறைக்க தமிழர்களை ஏய்க்க பயன்படுத்தப்பட்ட ஒரு போலிச்சொல். தமிழனை தமிழன் என்று நேரடியாக சுட்டாமல் போலி முகமூடி அவனுக்கு எதற்கு ? , சாதியை திராவிடம் ஒழித்துவிட்டதா இல்லை மறுத்து தான் விட்டதா ? , வன்னியருக்கு உள் ஒதுக்கீடு என்று விக்கிரவாண்டி தேர்தலுக்காக பேசியது திமுக தானே ? பிறகு எப்படி சாதி மறுத்த தமிழர்கள் திராவிடர்கள் என்றானார்கள் ? , அளந்து விடுவதை எல்லாம் நம்ப இது நைனா நாயக்கர்கள் காலமல்ல , தகவல் தொழில் நுட்பக்காலம். சமூக நீதி காக்கிறதா திராவிடம் … எங்கே ? இதுவரை ஒரு பொதுத்தொகுதியில் ஒரு ஆதி தமிழரையாவது நிறுத்தி இருப்பார்களா திராவிடர்கள் ? எத்தனை பெண்களுக்கு, இசுலாமியருக்கு இடம் கொடுத்துள்ளீர்கள் ?, பிறகு என்ன பம்மாத்து பேச்சு இது? ஆரியத்தை தமிழர்களை விட வேறு யாரும் வரலாற்றில் இதுவரை எதிர்த்தது கிடையாது , ஆரியத்திற்கு அடிபணியாத ஒரே மொழி இனம் அது தமிழினம், ஆரிய படைக்கடந்த நெடுஞ்செழியன் , செங்குட்டுவன் என்று அந்த வரிசை நீள்கிறது. ஆரியத்தை எதிர்க்க திராவிடம் வந்தது என்பது ஒரு பழைய பம்மாத்து, ஆரியம் திராவிடத்தின் பங்காளி, "ஆரியமும் திராவிடமும் ஒன்னு இதை அறியாதவர் வாயிலே மண்ணு". ஆரியத்தை தமிழர்கள் தான் 2000 வருடங்களாக எதிர்த்து வந்துள்ளனர் , தமிழை மிதித்து ஆரியர்களை கோயில்களில் அனுமதித்து தெலுங்கையும், சமக்கிருதத்தையும் தலையில் வைத்து ஆடியது நாயக்கர்கள், தங்கள் பெயருக்கு முன் ‘வருணாசிரம தர்மங்கனுபாலித்த’ என்ற பட்டத்தைப் போட்டுக்கொண்டனர், இவர்கள் வழி வந்த திராவிடர்கள் தான் சாதியை ஒழிக்கப்போகிறார்களா, சமூக நீதி சமத்துவத்தை நிலை நாட்டப்போகிறார்களா ? அரசியலுக்காக திராவிடம் என்ற திரிந்த போலி வட வார்த்தை தமிழர்களுக்கு தேவை இல்லை , தமிழர்களை தமிழர் என்றே அழைப்போம்! , தமிழ் மொழிக் குடும்பம் என்றும் தமிழர் நாகரீகம் என்றே அழைப்போம்! , திராவிட என்ற முகமூடி தமிழர்களுக்கு தேவையில்லை! தமிழன் தமிழனே!
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நிர்மலா சீதாராமன், குஷ்பு என்று இன்னும் சில பிரபலங்களும் இருக்கின்றனர். அவர்களையும் தமிழ்நாட்டில் இறக்கி விட முயற்சிப்பார்கள். தேர்தலில் தொகுதிகளை வெல்ல முடியா விட்டாலும், இரண்டாவது இடத்தில் வந்தால் இப்போதைக்கு அதுவே பெரிய வெற்றி என்று பாஜக நினைக்கின்றது போல.
-
புலம் பெயர்ந்த புகை
👍.... நீங்கள் ஓய்வெடுக்கும் பருவத்திற்கு வந்து விட்டீர்கள். ஓய்வெடுக்கும் பருவத்தில் ஓய்வெடுக்கக் கூடியதாக இருப்பது சிறப்பு. நான் இன்னும் ஒரு பத்து அல்லது பன்னிரண்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டும். இங்கு மருத்துவ காப்புறுதிக்காக என்றாலும் வேலை செய்து தானே ஆக வேண்டும்....🤣
-
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
நீங்கள் சொல்வது இங்கு நல்ல பொருத்தமே.... லாஸ் ஏஞ்சல்ஸில் அமெரிக்க மத்திய அரசின் செயலகம் (Federal Building) ஒன்றுள்ளது. அதைச் சுற்றி தினமும் இங்கு அமைதியான ஆர்ப்பாட்டங்கள் உலகில் உள்ள எல்லோராலும் நடத்தப்படும். சுற்றிவர இருக்கும் நடைபாதையில் நின்று கோஷங்கள் எழுப்பலாம், ஆனால் புல்லுக்குள் கால் வைக்கக்கூடாது... எவரும் கொடி பிடித்தும் நான் பார்த்ததில்லை. அது ஒரு சட்டமாக, ஒழுங்காகக் கூட இருக்கலாம். இஸ்ரேலியர்கள் ஒரு பக்கம் நின்று கோஷம் போடுவார்கள், பலஸ்தீனியர்கள் இன்னொரு பக்கத்தில் நின்று கோஷம் போடுவார்கள். கொடிகள் இல்லாததால், பல சமயங்களில் எங்களால் யார் யார் எவர் எவர் என்று கண்டு பிடிக்கிறது என்பது இயலாத காரியம். 2009ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னும், தமிழ் மக்கள் ஒரு பக்கமும், சிங்கள மக்கள் இன்னொரு பக்கமும் நின்று கோஷங்கள் எழுப்பியிருக்கின்றார்கள். இலங்கைத் துணைத் தூதரகம் அருகிலேயே உள்ளது. அவர்கள் வந்து படம் எடுப்பார்கள். பின்னர் எங்காவது அது செய்தியாக வரும். அது ஒரு காலம்.
-
புலம் பெயர்ந்த புகை
😀... உங்களின் நிலை தான் எங்கள் எல்லோருடையதும். Peer Pressure என்று சொல்வது போல. இதில் இருந்து வெளியில் வருவதற்கே நிறைய சக்தி தேவைப்படுகின்றது...........🤣
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
பாமக கட்சி தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த வேட்பாளரை மாற்றி விட்டு, இப்பொழுது அன்புமணியின் மனைவியான சௌமியா அன்புமணியை புதிய வேட்பாளராக அறிவித்திருக்கின்றார்கள். பாஜக கட்சியினரின் அழுத்தமே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது. பாஜக தரப்பிலிருந்து அவர்களின் தமிழ்நாட்டு தலைவர்களும், பிரபலமானவர்களும் போட்டியிடும் அதே வேளையில் பாமக தரப்பிலிருந்து பாமக தலைவர்கள் எவரும் போட்டியிடாதது தங்களுக்கு சாதகமாக இருக்காது என்று பாஜக நினைத்திருக்கக்கூடும். வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்று காங்கிரஸையும், திமுகவையும் பாஜக குற்றம் சாட்டிக் கொண்டிருந்தது. பாஜகவின் கூட்டணியும் இன்று அதே பாதையில் தான்...........
-
புலம் பெயர்ந்த புகை
நாங்கள் புலம் பெயர்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஊரில் வாழ்ந்த காலத்தை விட, வெளியில் வாழ்ந்த காலமே அதிகம் என்றாகிவிட்டது. தெரிந்தவர்கள் பலர் வாழ்க்கை முடிந்து போகவும் ஆரம்பித்துவிட்டார்கள். என்னதான் வெளிநாடுகளில் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும், மனங்கள் என்றும் ஊரையும், அந்த நினைவுகளையுமே அசை போட்டுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் என்றும் புலம் பெயரவே இல்லை என்னும் அளவிற்கு ஊர் நினைவுகள் அப்படியே ஒட்டியிருக்கின்றன. சில வேளைகளில் பார்த்தால், உண்மையில் கடைசிப் புகை மட்டும் தான் புலம் பெயர்ந்தது, அந்தந்த நாடுகளில் கலந்து விடுகிறதோ என்று தோன்றுகின்றது. ******************** புலம் பெயர்ந்த புகை ---------------------------------- இங்கு வந்த நாங்கள் இப்பொழுது இறக்க தொடங்கி விட்டோம் கடைசியில் ஒரு இடு வீட்டில் ஒரு வாரம் விறைப்பாக கிடந்து அங்கிருக்கும் புகை போக்கியால் எரிந்த மெய் புகையாக போகின்றது நாளை வாழ்வோம் நாளை வாழ்வோம் இன்று ஓடுவோம் இன்றே தேடுவோம் என்றிருக்க வாழ்க்கை ஓடியே போக காலம் முடிந்து விடுகின்றது இன்றே ஏன் வாழக்கூடாது எவருக்கும் சொல்லத் தெரியவில்லை இன்று அவர் ஓடுகின்றார் ஆகவே இவரும் ஓடுகின்றார் இன்று அவர் வாங்குகின்றார் ஆகவே இவரும் வாங்குகின்றார் பின்னர் ஒரு நாளில் ஊர் மண்ணை போய் சேர மீண்டு வரும் சொர்க்கம் என்று எண்ணி எண்ணி இருக்க அந்த நாள் என்றும் வருவதில்லை திடீரென பெய்த மழையில் கொத்தாக குருவிகள் ஒதுங்கின வீட்டுக் கூரைக்குள் கிச் கிச் கீச்சென்று ஒன்றையொன்று தள்ளி இடம் பிடித்தன துளி விழுந்து துள்ளி ஓடி வந்தது வெளியே போன குஞ்சு ஒன்று அகமும் விழியும் இருந்தால் இந்த வாழ்க்கை சமமே இங்கும் அங்கும்.
-
மொங்கோலியாவில் மிக கடுமையான குளிர்காலம்; ஐந்து மில்லியன் விலங்குகள் உயிரிழப்பு
மொங்கோலியாவின் வரலாறே மிகக் கடுமையான காலநிலைகளால் ஆனது. கொடுங்கோல் சக்கரவர்த்தியான ஜெங்கிஸ்கான் மங்கோலியப் பேரரசை உருவாக்குவதற்கு அவர்களின் கடும் காலநிலையும் ஒரு காரணம்.
-
ஈஸ்டர் தாக்குதலை யார் மேற்கொண்டது என்பது எனக்குத் தெரியும் – மைத்திரி
சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்கு ஒரு சர்வதேச விசாரணை தேவை என்று பாதிக்கப்பட்டவர்கள் பலகாலமாக கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். உள்ளூரிலேயே எல்லாம் தெரிந்த ஒருவர் இருப்பது இப்போது தான் எங்களுக்கு தெரியுது.....😀 எத்தனை குத்துக்கரணங்கள் தான் இவர்கள் எல்லோரும் அடிப்பார்கள்.....🫣
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஒரு கட்சியை அல்லது வேட்பாளரை மக்கள் முன்னரே தேர்ந்தெடுத்து விடுகின்றார்கள் என்பது ஏறக்குறைய எல்லா நேரங்களிலும் உண்மையே. ஒரு 'அலை', உதாரணம் ராஜீவ் காந்தியின் மரணம், இருந்தால், எல்லோரும் அந்த அலையில் இழுபடுவார்கள், மற்ற கட்சிகள் என்ன இலவசங்களை வழங்கினாலும். அப்படி எதுவும் இல்லாவிட்டால், தேவர் இன மக்கள் யாருக்கு வாக்குப் போடுவார்கள், கவுண்டர் இன மக்கள் யாருக்கு போடுவார்கள் என்பது போன்ற முடிவுகள் முன்னரேயே தீர்மானிக்கப்பட்டதுதான். நடுநிலை வாக்காளார்கள் கொஞ்சமே. கட்சிகளும், என்னதான் சமூக நீதி பேசினாலும், வேட்பாளர்கள் தெரிவில் கிட்டத்தட்ட சாதிக் கட்சிகள் போன்றே நடக்க வேண்டிய சூழல் அங்கே. கமலின் மையம் கட்சி கூட ஒரு தடவை மக்களுக்கு இலவச டார்ச் லைட் கொடுக்க முற்பட்டார்கள்.....🤣
-
நானும் ஒரு அடிவிட்டன்
நன்றாக இருக்கின்றது, அல்வாயன்.......🤣 அடிதடிகளுக்கு பஞ்சம் இருந்ததேயில்லை அங்கே. அல்வாய், வதிரிப் பகுதிகளில் அந் நாட்களில் டயமண்ட்ஸ், பொம்மேர்ஸ், மனோகரா என்று கழகங்கள் இருந்ததாக ஞாபகம். ரட்ணசிங்கம் மாஸ்டர் பள்ளிக்கூடத்தில் எங்களின் பயிற்றுவிப்பாளாராக இருந்தார். தர்மேந்திரா பள்ளிக்கூட அணியில் கலக்கிக் கொண்டிருந்தார்.
-
கார்பன் வெளிச்சம்
சினிமாவுடன் வளர்ந்தோம். ஊர் தியேட்டர்களில் எந்தப் படம் வந்தாலும் பார்த்தோம். சில படங்களை, முக்கியமாக பல எம்ஜிஆர் படங்கள், பல தடவைகள் பார்த்தும் இருக்கின்றோம். இதில் சிலருக்கு தியேட்டர் மாடியில் உள்ள புரொஜெக்டர் அறைக்கு போகும் வாய்ப்பு கிடைத்தும் இருக்கும். ******* கார்பன் வெளிச்சம் ------------------------------- வெளிப்பாட்டு முடிந்து உள்பாட்டு ஓடி இரண்டு மணிகள் அடித்த பின் மின் வெளிச்சம் கலைந்து கும்மிருட்டு சூழ பளிச்சென்று வரும் கண்ணைக் கூசும் கார்பன் வெளிச்சம் திரும்பி மாடியைப் பார்த்தால் தூசி எழும்பி மிதக்கும் குவிந்திருந்து விரிந்து வெள்ளித்திரையில் கொட்டி கொட்டிக் கொண்டிருக்கும் கார்பன் வெளிச்சம் 'அபூர்வராகங்கள்' அந்த வயதிலும் அன்றே புரிந்தது ஆனால் விடையில்லை இன்றும் எல்லா காதலும் ஒன்றா நல்ல காதல் நல்லாவே இல்லை காதல் இதை சொல்லுபவர் யார் இரண்டு மனங்களையும் அறிந்த இன்னொரு மனம் இங்கு உண்டா இன்னொரு நாள் 'யாருக்காக அழுதான்' நாகேஷ் யாருக்காகவோ அழ பார்த்த நாங்கள் அவருக்காக அழுதோம் அன்றிலிருந்து இன்றுவரை உண்மை வேறொன்று எப்போதும் அது ஒளித்தே இருக்குது என்ற உண்மை விளங்க திருடனையும் திருடரென்று கள்வனையும் கள்வரென்று வாய் சொல்லுகின்றது இரண்டு புரொஜக்டர்கள் ஒரு மணியில் எரிந்து முடியும் கார்பன் குச்சி முடிய முன் அடுத்த புரொஜக்டரை அண்ணன் தயார் ஆக்கியிருப்பான் என்னைத் தொட விடான் எப்பவுமே சொல்வான் எனக்கு எதுவும் தெரியாது என்று புரொஜக்டர் அறை கொதிக்கும் நெருப்பாய் அப்பப்ப ரீல்கள் அறும் அவர்களும் கொதிப்பர் அரை செக்கனில் வெட்டி ஒட்டுவார்கள் பொசுங்கின ரீல்களை விழுந்த ரீல் துண்டுகள் என்னுடன் வீட்டிற்கு வரும் பெட்டியில் ஒட்டி வீட்டில் நான் படம் வெளியிட்டேன் அங்கேயே வேலை முன்னுக்கு போய் பின்னுக்கு வந்தேன் கார்பன் வெளிச்சம் ஒரு சதுர ஓட்டையால் என்னுடைய கண் மறு சதுர ஓட்டையால் திரையில் விழும் குருவாக கமலும் காளியாக ரஜனியும் அரச கட்டளையும் வசந்த மாளிகையும் துணிவென்று ஜெய்சங்கர் பணிவென்று சிவகுமார் அழகாக ஶ்ரீதேவி ஆர்ப்பாட்டமாக ஶ்ரீப்பிரியா பாவப்பட்டது சுஜாதா என்று என்னுடைய உலகத்தில் உதித்தவர்கள் எல்லோரும் கார்பன் வெளிச்சத்தில் உதித்தார்கள் அன்று திரை மாற்ற கணக்கெடுத்தனர் ஒரு நாள் பைதகரஸ் தேற்றம் அண்ணனும் அவர்களும் அறியாதது அறிந்து கணக்கை சொன்னேன் இன்னொரு கணக்கு சொன்னேன் அதையும் இன்னும் ஒன்று இன்னும் ஒன்று எல்லாம் சரி அதுவே எனக்கு நானே வைச்ச வெடிகுண்டு திரைமாற்ற வந்தவர் அடிக்காத குறை அண்ணனுக்கும் நண்பருக்கும் நல்லா படிப்பானடா படிக்க வையுங்கடா நாசமாய்ப் போனவங்களே திட்டித் தீர்த்தார் படித்தால் படி விட்டால் விடு ஆனால் தியேட்டர் பக்கம் வந்தாய்..... செத்தாய் என்றான் அண்ணன் செய்யக்கூடியவன் அவன் வெளிச்சத்தின் வெம்மை சுடவேயில்லை பின்னர் பின்னர் கார்பனும் நின்று போனது விஞ்ஞானம் வளர்ந்ததால் இந்நாளில் கூட கீற்றாக சூரியன் இலையால் விழ கார்பன் வெளிச்சமே கண்ணில் தெரிகின்றது.
-
ஒரு பொய்
(குறுங்கதை) ஒரு பொய் ---------------- 'இது மைக்கேல். இன்றிலிருந்து இவர் உங்களுடன் வேலை செய்யப் போகின்றார்' என்று மைக்கேலை ஒரு நாள் வேலையில் எனக்கு அறிமுகப்படுத்தினர். ஆரம்ப நல விசாரிப்புகளின் பின், மைக்கேலை அவனுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த மேசைக்கு கூட்டிச் சென்றேன். மைக்கேல் தனது தோள் பையிலிருந்து ஒரு பெட்டியை வெளியே எடுத்தான். அதனுள்ளே மெல்லிய ஈரமுள்ள கடதாசிகள் ஒரு கட்டாக இருந்தன. மேசை, கதிரை, அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் கணினி மற்றும் திரைகள் என்று எல்லாவற்றையும் அழுத்தமாக, சுத்தமாக துடைத்தான். அப்பொழுது தான் ஞாபகம் வந்தது, நாங்கள் இருவரும் இன்னும் கைகுலுக்கவில்லை என்று. நிரந்தரமாக பலர் வேலை செய்யும் அந்த நிறுவனத்தில் சில வேளைகளில் தற்காலிகமாகவும் சிலரை, வேலையின் அளவைப் பொறுத்து, வேலைக்கு எடுப்பார்கள். மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் என்று அவர்களுக்கு வேலை இருக்கும். அதை தாண்டியும் சிலர் இருப்பார்கள். இரண்டு பக்கங்களுக்கும் பிடித்துப் போக, நிரந்தரமாகவே அந்த நிறுவனத்தில் இணைபவர்களும் உண்டு. மைக்கேல் ஆறு மாத வேலைத் திட்டம் ஒன்றிற்காக வந்திருந்தான். வேலையில் அவனின் இடத்தையும், பொருட்களையும் சுத்தப்படுத்துவதற்கு அதிகமாகவே நேரம் எடுத்துக் கொண்டாலும், மைக்கேல் வேலையில் மிகவும் திறமையானவனாக இருந்தான். அவனின் குடும்பம் நீண்ட நாட்களின் முன்னர் சோவியத் ஒன்றியத்தில் இருந்து இங்கு குடி வந்துள்ளனர். அவன் பெரும்பாலான பாடசாலை மற்றும் பல்கலை கல்வியை இங்கே அமெரிக்காவிலேயே கற்றிருந்தான். பொதுவாக என் அனுபவத்தில் நான் கண்ட ரஷ்யர்களுக்கு இருக்கும் அபரிதமான கணித ஆற்றல் அவனிடமும் இருந்தது. ஆனாலும், தான் ஒரு ரஷ்யன் இல்லை என்றும், தான் ஒரு உக்ரேனியன் என்றும் என்னிடம் ஒரு தடவை தெளிவாகச் சொன்னான். அப்பொழுது ரஷ்யா - உக்ரேன் சண்டை ஆரம்பித்திருக்கவில்லை, ஆனால் சோவியத் ஒன்றியம் உடைந்து, இவை இரண்டும் தனித்தனி நாடுகளாக இருந்த காலம் அது. ஒழுங்காக தினமும் நேரத்திற்கு வந்து, மிகவும் நன்றாக வேலை செய்து கொண்டிருந்த அவன் திடீரென இரண்டு நாட்கள் வேலைக்கு வரவில்லை. எங்களுக்கு அறிவிக்கவும் இல்லை. மூன்றாம் நாள் அவனை தொலைபேசியில் கூப்பிட்டேன். உடனேயே தொலைபேசியை எடுத்தவன், தன்னுடைய வீடு எரிந்து விட்டதாக சொன்னான். இங்கு வீடு எதுவும் எரிந்ததாக உள்ளூர் செய்திகளில் நான் பார்க்கவில்லை, ஆதலால் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எரிந்த எல்லா வீடுகளையும் செய்திகளில் காட்ட வேண்டும் என்றும் இல்லைத்தான். பின்னர் வீடு எரிந்திருப்பதை காட்டும் சில படங்களை எனக்கு அனுப்பினான். அதன் பின்னர் ஒரு வாரம் ஒழுங்காக வேலைக்கு வந்தான். அந்த ஒரு வாரமும் நன்றாக வேலை செய்தான். மீண்டும் இரண்டு நாட்கள் அவனைக் காணவில்லை. தற்காலிகமாக வேலைக்கு வருபவர்கள் வராத நாட்களில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கத் தேவையில்லை என்றாலும், நாங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலை நிறையவே இருந்தது. மைக்கேலின் திறமையைப் பார்த்து, அவனை வைத்தே அதில் பெரும் பகுதி ஒன்றை முடித்து விடலாம் என்றும் திட்டமிட்டிருந்தேன். அவன் ஒரு தடவை எங்களின் அடுத்த தளத்தில் ஒரு ரஷ்யர் வேலை செய்வதாகச் சொன்னான். நான் எனக்கு அவரை தெரியாது, உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டேன். அந்த மனிதனின் கண்களை தான் பார்த்ததாகவும், அதில் ஒரு தீராத கோபம் தெரிந்ததாகவும் அவன் சொன்னான். அந்தக் கோபம் ரஷ்யர்களுக்கு மட்டுமே உரியது என்றான். ரஷ்யாவிற்கும், உக்ரேனுக்கும் என்ன வித்தியாசம் என்று அன்று எனக்கு தெரியாது, இரண்டும் ஒன்றே எனக்கு அன்று. நான் ஏன் நீ வேலைக்கு வரவில்லை என்று கேட்க, இவர்களின் தீராத கோபத்தை என் மீது இறக்கி விடுவார்களோ என்று ஒரு யோசனையாகவும் இருந்தது. இந்த தடவை அவனின் கார் களவு போய் விட்டதாக சொன்னான். சில நாட்கள் தொடர்ந்தும் வேலைக்கு வராமல் தன்னுடைய காரை தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னான். அவனின் கார் ஒரு கறுப்பு நிற பிஎம்டபிள்யூ. ஒரு நாள் என்னை தொடர்பு கொண்டு, அவனின் காரை மெக்சிக்கோ எல்லைக்கு அருகே கண்டு பிடித்து விட்டதாகவும், தான் அடுத்த நாளிலிருந்து வேலைக்கு வந்து விடுவதாகவும் சொன்னான். அடுத்த நாளும் அவன் வேலைக்கு வரவில்லை. மீண்டும் அவனே தொடர்பு கொண்டான். இந்த தடவை தான் மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னான். என்ன நடந்தது என்றேன். கால் உடைந்து விட்டது என்றான். எப்படி உடைந்தது என்று கேட்டதிற்கு, தான் தன்னுடைய காரை காலால் அடித்ததாகவும், அப்பொழுது வலது கால் பாதம் உடைந்து போய் விட்டதாகச் சொன்னான். இதைச் சொல்லி விட்டு, தனக்கு தன்னுடைய காரின் மேல் கோபம் வந்ததால், காரை உதைத்ததாகச் சொன்னான். இது தான் தீராத கோபம் போல. அவன் இப்படியே ஏதாவது சொல்லி வேலைக்கு வராமலேயே இருந்தான். ஒரு நாள் அவனை வேலையில் இருந்து நிற்பாட்டுவதாக அவனுக்கு செய்தி அனுப்பினோம். சில மாதங்களின் பின்னர், ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். அவர் தனது பெயர், நிறுவனத்தின் பெயர் மற்றும் தனது பதவி பற்றிச் சொல்லிய பின், 'உங்களுக்கு மைக்கேலை தெரியுமா?' 'ஆ...., நல்லாவே தெரியும்' என்றேன் நான். 'மைக்கேல் எங்களின் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருக்கின்றார்.' 'நல்ல விடயம்.' 'உங்களை தான் ஒரு பரிந்துரையாளராக போட்டிருக்கின்றார். நான் உங்களிடம் சில தகவல்களை கேட்கலாமா?' 'நிச்சயமாக, நீங்கள் தாராளமாக கேட்கலாம்.' மைக்கேலின் தொழில்நுட்ப அறிவு, திறமைகள் பற்றியே எல்லா கேள்விகளும் இருந்தன. அதில் மைக்கேலிடம் எந்தக் குறையும் இருக்கவில்லை. உண்மையில் நான் பார்த்தவர்களில் அவன் மிகவும் திறமையானவன். கடைசி கேள்வி: 'மைக்கேல் திரும்பவும் உங்கள் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்தால், நீங்கள் அவனை வேலைக்கு எடுப்பீர்களா?' 'நிச்சயமாக எடுப்பேன்' என்றேன் எந்தத் தயக்கமும் இல்லாமல். இன்றைய உலகில் பொய் கூட ஒரு தயக்கமும் இல்லாமல் வருகின்றது.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு ------------------------------------------------- பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், கோவையில் அண்ணாமலை போட்டியிடுகிறார். தென்சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சில தினங்களாக நடந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 4 பேர் பாஜகவின் சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாஜக சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது. அதன்விவரம் பின்வருமாறு: தென் சென்னை: தமிழிசை சவுந்தரராஜன் கோவை : அண்ணாமலை கன்னியாகுமரி: பொன். ராதாகிருஷ்ணன் நெல்லை : நயினார் நாகேந்திரன் வேலூர் : ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக் கட்சி) மத்திய சென்னை: வினோத் பி.செல்வம் நீலகிரி(தனி தொகுதி): எல்.முருகன் கிருஷ்ணகிரி: சி.நரசிம்மன் பெரம்பலூர்: பாரிவேந்தர் (ஐ.ஜே.கே) ******************** அவர்களின் எல்லா தலைகளையும் களத்தில் இறக்கி விட்டிருக்கின்றார்கள்...............
-
மலையக பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க புதிய திட்டம் வகுக்கப்படும்! - வேலு குமார்
e-Kalvi என்று பொதுவாக சொல்லபடும் பல வடிவங்களும், முறைகளும் இப்போது அங்கு வந்துவிட்டன. ஏராளமான நலன்புரிச் சங்கங்களும், பழைய மாணவர் அமைப்புகளும் இவற்றிற்கு நிறைய நன்கொடைகள் மற்றும் ஆலோசனைகளும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும், பரீட்சை முடிவுகளில், குறிப்பாக ஒன்றிரண்டு பெரிய பாடசாலைகள் தவிர்ந்த மற்றைய பாடசாலைகளில், பெரிய மாற்றங்கள் ஏதாவது உண்டாகியிருப்பதாகத் தெரியவில்லை. மாணவர்களின் கவனம் வேறு எங்கோ சிதறுகின்றது போல.
-
கனடாவில் கார் களவு.
அயலவர் ஒருவர், தமிழ் நாட்டைச் சேர்ந்தவர், அன்று என்னுடன் வேலை செய்தவரும் கூட. 'ஏனப்பா நீ ஒரு துப்பாக்கி வாங்கக் கூடாது?' என்று ஒரு தடவை கேட்டார். அவரிடம் துப்பாக்கி இருந்தது. 'நீங்கள் தான் எல்லோரும் நல்லா சுடுவீர்களே' என்று இன்னும் மேலாலும் சொன்னார். அந்தளவிற்கு எல்லாம் எனக்கு துணிவில்லை என்று சொல்லி சமாளித்துவிட்டேன். உண்மையிலும் துணிவும் இல்லை. ஒரு துப்பாக்கியால் காவல் காக்கும் அளவிற்கு வீட்டிற்குள் என்ன பொருள் இருக்கிறது என்றும் தெரியவில்லை. அயலவர் வீட்டிற்கு ஒரு திருடன் ஒரு நாள் சொல்லி வைத்தது போலவே வந்தான். அயலவர் மேலே இருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். திருடன் மேலே போக, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். அவ்வளவு தான் நடந்தது, கிளிண்ட் ஈஸ்ட்வூட் படங்களில் வருவது போன்று எதுவும் நடக்கவேயில்லை. திருட வந்தவர் திருடிக் கொண்டு போய்விட்டார்..........😀
-
கனடாவில் கார் களவு.
EV மற்றும் Hydrogen எரிபொருள் உபயோகிக்கும் வாகனங்கள் தவிர்ந்த எல்லா வாகனங்களிலும் இது இருக்கும். சில வாகனங்களில் இலகுவாக வெட்டி எடுக்கக் கூடியவாறு வெளிப்பகுதியிலேயே இந்தப் பகுதி அமைந்திருக்கின்றது போல. பழைய வாகனங்களில் அதிக அளவு பிளாட்டினம் இருக்கலாம்....
-
கனடாவில் கார் களவு.
வாகனங்களில் பெட்ரோல்/டீசல் எரிவதால் வரும் நச்சுக் வாயுக்கள் CO, NO2 போன்றவறை நச்சுத்தனமை அற்ற அல்லது மிகவும் குறைந்த CO2, NO, N வாயுக்களாக மாற்றுவதற்கு இது துணை புரிகின்றது. பிளாட்டினம் பொதுவாக வேறு எந்த மூலகத்துடனும் சாதாரண நிலையில் தாக்கம் புரியாது, தங்கம் போன்று. அது இங்கு ஒரு ஊக்கியாக மட்டுமே தொழிற்படுகின்றது. சிறு வயதில் விஞ்ஞான பாடத்தில் விஞ்ஞான விளக்கம் என்று ஒரு கேள்வி வரும். அன்று அங்கு கார் பெரிய புழக்கத்தில் இல்லாததால், இந்தக் கேள்வி அங்கு பரீட்சையில் வரவில்லை.....😀