Everything posted by பிழம்பு
-
3 BHK விமர்சனம்: சரத்குமார், சித்தார்த் ஆதிக்கத்தில் மிடில் கிளாஸ் வாழ்வியல் அனுபவம் எப்படி?
சொந்த வீடு என்பது மிடில் கிளாஸ் மனிதர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க பலரும் கடன் வாங்கி, வாழ்நாள் முழுக்க உழைத்து ஓடாய் தேய்கின்றனர். எல்லா தரப்பு மக்களுடனும் எளிதாய் ‘கனெக்ட்’ ஆகும் ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர் ஸ்ரீகணேஷ் அதை உணர்வுபூர்வமாக ஆடியன்ஸுக்கு சொன்னாரா என்பதை பார்க்கலாம். மனைவி, இரண்டு குழந்தைகள் அடங்கிய ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் தலைவர் வாசுதேவன் (சரத்குமார்). ஃபேக்டரி ஒன்றில் அக்கவுன்டன்ட்டாக வேலை பார்ப்பவர் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சொந்த வீடு வாங்குவதற்காக சேமிக்கிறார். தொடர்ந்து வாடகை வீடுகளாக மாறிக் கொண்டிருக்கும் அந்தக் குடும்பமே சொந்த வீடு கனவில் இருக்கிறது. மனைவி சாந்தி (தேவயாணி) முறுக்கு சுட்டு கணவனுக்கு உதவுகிறார். தொடர்ந்து தோல்விகளை மட்டுமே பார்த்து வரும் மகன் பிரபு (சித்தார்த்) கல்லூரி முடிந்து ஓர் ஆலையில் வேலைக்கு செல்கிறார். அண்ணனை பெரிய பள்ளி, கல்லூரியில் படிக்க வைப்பதற்காக அரசு பள்ளியில் படிக்கும் மகள் ஆர்த்தி (மீதா ரகுநாத்). இப்படி வாழ்நாள் முழுக்க ‘அட்ஜஸ்ட்’ செய்து வாழும் இந்த குடும்பத்தின் சொந்த வீடு கனவு நனவானதா என்பதே ‘3பிஹெச்கே’ படத்தின் திரைக்கதை. ‘8 தோட்டாக்கள்’ மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீகணேஷின் மூன்றாவது படம். மிக எளிமையான ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதை முடிந்தவரை அலுப்பு தட்டாமல் பல இடங்களில் நெகிழ வைத்தும், சுவாரஸ்யத்துடனும் தந்திருக்கிறார். படத்தின் முதல் காட்சியிலேயே தேவையற்ற அறிமுகங்கள் இன்றி கார்த்தியின் வாய்ஸ் ஓவரில் ‘சிம்பிள்’ ஆக கதைக்குள் நுழைந்த விதம் சிறப்பு. அடுத்த காட்சிகளில் கதையின் முக்கிய நோக்கம், கதாபாத்திரங்களின் தன்மைகள் ஆகியவை ஆடியன்ஸின் மனதில் பதிந்து விடுகிறது. இதுவே படத்துடன் மிக இலகுவாக ஒன்றவைத்து விடுகிறது. லேசாக பிசகினாலும் சீரியல் போல ஆகிவிடக் கூடிய கதைக்களத்தில் கடைசி வரை நெளியவிடாமல் வைத்திருப்பது நடிகர்களின் நடிப்பு. படத்தின் ஹீரோ சந்தேகமே இன்றி சரத்குமார்தான். ஒரு மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனாக மிக இயல்பான நடிப்பு. சொந்த வீடு கனவை எப்போதும் சுமந்து திரியும்போதும், தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ள முதலில் தயங்கி, பின்னர் காலத்தின் கட்டாயத்தால் வேறு வழியின்றி மாற்றத்துக்கு தயாராகும் காட்சிகளில் மனதை கவர்ந்து விடுகிறார். முதல் முழுக்க சரத்குமார் ஆதிக்கம் என்றால் இரண்டாம் பாதி முழுக்க சித்தார்த்துக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. அவரும் தன் கதாபாத்திரத்தின் கனத்தை உணர்ந்து பொறுப்புடன் நடித்திருக்கிறார். பள்ளி மாணவனாக வரும் காட்சிகளில் எல்லாம் உடலை குறுக்கி நம்பகத்தன்மையை கூட்டியிருக்கிறார். ஒவ்வொரு பருவத்திலும் அவரது முகத்திலும், நடிப்பிலும் காட்டும் வெரைட்டி ரசிக்க வைக்கிறது. ’குட் நைட்’ படத்துக்குப் பிறகு மீதா ரகுநாத்துக்கு இது முக்கியமான கதாபாத்திரம். அண்ணனுக்காக தன்னுடைய தேவைகளை குறைத்து கொள்ளும் இடங்களில் நடிப்பில் மிளிர்கிறார். கன்னடத்தில் ‘சப்த சாகரடாச்சே எல்லோ சைடு பி’ படத்தில் நடித்த சைத்ரா மற்றொரு ஆச்சர்யம். சில காட்சிகளே வந்தாலும் நடிப்பில் உள்ளத்தை கொள்ளை கொள்கிறார். படத்தில் தேவயாணி கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. வெறுமனே கணவருக்கு ஆறுதல் சொல்ல மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். படத்தின் இன்னொரு பலம் அம்ரித் ராம்நாத்தின் பின்னணி இசை. நெகிழ வைக்கும் காட்சிகளுக்கு அவரது இசை பெரிதும் கைகொடுத்திருக்கிறது. பாடல்களில் ‘கனவெல்லாம்’, ‘துள்ளும் நெஞ்சம்’ பாடல்கள் சிறப்பு. தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸின் ஒளிப்பதிவு நேர்த்தி. மிடில் கிளாஸ் குடும்பத்தினர் அனைவருக்குமே சொந்த வீடு கனவு இருக்கும்தான். ஆனால் அதற்காக சொந்த வீடு இல்லையென்றால் வாழவே முடியாது என்பதைப் போல குடும்பத்தில் உள்ள அனைவரும் அழுது வடிந்துகொண்டே இருப்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. ஒரு காட்சியில் தன் தம்பி சுப்பு பஞ்சுவிடம் சென்று வீடு வாங்க கடன் கேட்கிறார் சரத்குமார். அப்போது ஓர் இடத்தில் சொந்த வீடு தான் மரியாதை என்று ஒரு வசனம் வருகிறது. கடன் வாங்கி சொந்த வீடு வாங்குவதில் அப்படி என்ன மரியாதை? அதே போல தன்னுடைய கனவை எந்நேரமும் தன் மகன் சித்தார்த் மீது திணித்துக் கொண்டே இருக்கிறார் சரத்குமார். இரண்டாம் பாதியில் அதை அவர் உணர்வதை போன்ற காட்சிகளை இன்னும் பார்வையாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்லி இருக்கலாம். பெற்றோரின் வற்புறுத்தலால் தனக்கு விருப்பமில்லாத துறையை தேர்வு செய்து படித்து, அந்த துறையிலேயே வேலைக்கு செல்லும் சித்தார்த் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் உதறிவிட்டு வீட்டிலேயே தனக்கு பிடித்த துறையை படித்து வேலைக்கு செல்வதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். அந்த காட்சிகளில் எந்தவொரு அழுத்தமும் இல்லை. க்ளைமாக்ஸ் காட்சி இழுத்துக் கொண்டே போவதைப் போன்ற உணர்வை தவிர்த்திருக்கலாம். மேற்சொன்ன சில குறைகளை தாண்டி எந்தவித மேற்பூச்சுகளும் இல்லாமல் மிடில் கிளாஸ் குடும்பங்கள் படும் சிரமங்களை, கனவை நிறைவேற்ற சந்திக்கும் போராட்டங்களை நெகிழ்ச்சியுடன் காட்சிப்படுத்திய விதத்தில் இந்த ‘3பிஹெச்கே’வை வரவேற்கலாம். 3 BHK விமர்சனம்: சரத்குமார், சித்தார்த் ஆதிக்கத்தில் மிடில் கிளாஸ் வாழ்வியல் அனுபவம் எப்படி? | 3BHK Movie review - hindutamil.in
-
பாடசாலை சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லாமையால் மாணவன் கவனயீர்ப்பு போராட்டம்!
04 Jul, 2025 | 04:06 PM வவுனியாவில் மாணவன் ஒருவன் தன்னை பாடசாலையின் கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லவில்லை என தெரிவித்து வலயக்கல்வி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பாடசாலையால் இன்று வெள்ளிக்கிழமை (04) திருகோணமலை மாவட்டத்திற்கு கல்விச்சுற்றலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மாணவர்களிடம் இருந்து முன்னமே பணம் அறவிடப்பட்டுள்ளது. குறித்த மாணவனும் சுற்றுலாவிற்கான பணத்தினை வழங்கியுள்ளார். இருப்பினும் இன்றையதினம் காலை சுற்றுலாவிற்கு செல்வதற்கு மாணவன் தயாரான நிலையில் மாணவனை அழைத்துச்செல்ல முடியாது என அதற்கு பொறுப்பான ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கவலையடைந்த மாணவன் தனது பெற்றோருடன் வலயக்கல்வி அலுவலகம் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தான். இதனையடுத்து, வலயக் கல்வி அதிகாரிகள் பாடசாலை நிர்வாகத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி மாணவனை சுற்றுலா அழைத்துச்செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியிருந்தனர். இதனையடுத்து மாணவன் தனது போராட்டத்தை கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாடசாலை சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லாமையால் மாணவன் கவனயீர்ப்பு போராட்டம்! | Virakesari.lk
-
சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா தொடக்க நிகழ்வு; மக்கள் அவதானம்!
'சிட்டி ஒப் ட்ரீம் ஸ்ரீலங்கா'வின் பிரமாண்ட திறப்பு விழாவுக்கு டிக்கெட்டுகள் இல்லை ; தனிப்பட்ட அழைப்புகள் மாத்திரமே. 04 Jul, 2025 | 04:11 PM கொழும்பில் 'சிட்டி ஒப் ட்ரீம் ஸ்ரீலங்கா'வின் பிரமாண்ட திறப்பு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஷாருக் கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில், இந்த திறப்பு விழாவுக்கு போலி டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுவது தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, சிட்டி ஒப் ட்ரீம் ஸ்ரீலங்காவின் நிர்வாகம் உத்தியோகபூர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்த திறப்பு விழா நிகழ்வில் தனிப்பட்ட அழைப்பிதழ் வழங்கப்பட்டவர்கள் மாத்திரமே பங்கேற்க முடியும். திறப்பு விழா தொடர்பாக டிக்கெட்டுகளை வழங்கவோ, விநியோகிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ மூன்றாம் தரப்பினருக்கு அதிகாரம் இல்லை என ஏற்பாட்டாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். “உத்தியோகபூர்வமற்ற போலி டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், இந்த டிக்கெட்டுகளை வாங்குவதை தவிர்க்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஏதேனும் துல்லியமான தகவல்களை பெற்றுக்கொள்ள தங்கள் உத்தியோகபூர்வ தொடர்பு வழிகள் ஊடாக அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 'சிட்டி ஒப் ட்ரீம் ஸ்ரீலங்கா'வின் பிரமாண்ட திறப்பு விழாவுக்கு டிக்கெட்டுகள் இல்லை ; தனிப்பட்ட அழைப்புகள் மாத்திரமே | Virakesari.lk
-
எல்.எம்.டி. சஞ்சிகையின் "அதிகம் விரும்பப்படும் வர்த்தக நாமங்கள் " பட்டியலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முதலிடம்
03 Jul, 2025 | 11:13 AM எல்.எம்.டி. சஞ்சிகையின் "அதிகம் விரும்பப்படும் வர்த்தக நாமங்கள் " பட்டியலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. பொரும்பாலான பயணிகளின் மனதை வென்ற நம்பகமான விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை காணப்படுகிறது. LMD வர்த்தக சஞ்சிகையின் விரும்பத்தக்க அதிக தரம் கொண்ட விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை காணப்படுகிறது. சஞ்சிகை ஊடாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் சேவைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து நாடளாவிய ரீதியில் உள்ள பல மக்கள் அறிந்து கொண்டனர். LMD என்பது இலங்கையின் பிரபல வர்த்தக சஞ்சிகையாகும். பயணிகளுக்கு நம்பகமான சேவையை வழங்குவது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை பெருமை கொள்கிறது. ஒவ்வொரு பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை மதித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது சேவையை வழங்குகின்றது. ஸ்ரீலங்கன் விமான சேவையானது ஐரோப்பா, இந்திய துணைக் கண்டம், மத்திய கிழக்கு, தூர கிழக்கு மற்றும் ஓசியானியா ஆகியவற்றிற்கு ஒவ்வொரு வாரமும் சுமார் 300 தடவைகள் விமான சேவைகளை வழங்குகின்றது. இது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் முன்னேற்றம் மற்றும் சேவையை இது எடுத்துக்காட்டுகிறது. உலகளாவிய ரீதியில் உள்ள பயணிகளின் விரும்பத்தக்க விமான சேவையாக ஸ்ரீலங்கன் விமான சேவை காணப்படுகின்றது. எல்.எம்.டி. சஞ்சிகையின் "அதிகம் விரும்பப்படும் வர்த்தக நாமங்கள் " பட்டியலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முதலிடம் | Virakesari.lk
-
ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல் ; சுமார் 67,000 பன்றிகள் பாதிப்பு
03 Jul, 2025 | 02:24 PM நாட்டில் ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இந்நோய் கொடிய வைரஸ் நோய் தாக்கத்தினால் சுமார் 67,000 பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அராசங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சிப் பொருட்களைப் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியே கொண்டு செல்வதற்கு முற்றாக தடை தடை விதித்தல் உட்பட கடும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில்,மேல், ஊவா, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் உட்பட பல மாகாணங்களில் இந்த வைரஸ் நோய் வேகமாகப் பரவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வைத்தியசர கொத்தலாவல சுட்டிக்காட்டினார். இந்த நோய் 100 சதவீதம் இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமை 95 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ச்சியான விழிப்புணர்வு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவலை தடுக்க பண்ணையார்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். "பதிவு செய்வதன் ஊடாக உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்தவும் எதிர்கால இழப்புகளைக் குறைக்கவும் எங்களுக்கு உதவுகிறது" என தெரிவித்துள்ளார். ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல் ; சுமார் 67,000 பன்றிகள் பாதிப்பு | Virakesari.lk
-
இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வராமல் பாதுகாக்கவேண்டியது இந்திய வெளிவிவகார அமைச்சரின் கடமை - அன்ரனி சங்கர்
03 Jul, 2025 | 04:46 PM இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வருகை தராமல் பாதுகாக்கவேண்டியது அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் கடமை என நாங்கள் கருதுகிறோம். எனவே, இவற்றை கருத்தில்கொண்டு எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் எமது கடல் வளத்தை பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்டத் தலைவர் அன்ரனி சங்கர் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (3) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட பிராந்திய மீனவர்களின் பாரிய பிரச்சினையாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை காணப்படுகின்றன. ராமேஸ்வரத்தில் இடம்பெற்ற கச்சத்தீவு மீட்பு போராட்டம் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சரினால் கூறப்பட்ட விடயம் குறித்தும் அதற்கான தக்க பதிலடியை கடற்றொழில் அமைச்சர் வழங்கியுள்ளார். எமது கடற்றொழில் அமைச்சர் வழங்கிய பதிலை நாங்களும் கூற விரும்புகிறோம். இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடல் பரப்பில் அத்துமீறி நுழைந்து எமது கடல் வளத்தை நாசப்படுத்துவதும், இராமேஸ்வரம் மீனவ சங்கங்கள் இலங்கைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தச் சொல்வதும் கால அவகாசத்தை கோருவதாகவும் காணப்படுகிறது. இந்திய மீனவர்கள் சட்ட விரோதமான கடற்றொழிலையே செய்கின்றனர். இதனை முற்றுமுழுதாக நிறுத்த வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் வழங்கும்போது அதற்கான பல்வேறு விடயங்களை இலங்கை விட்டுக் கொடுத்துள்ளது. எமது மீனவர்களின் பிரச்சினை வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்டதாக காணப்படுகிறது. இலங்கை வட பகுதி மீனவர்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். எமது மீனவர்களின் வயிற்றில் அடிக்கிற செயற்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும். இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வருகை தராமல் பாதுகாக்கவேண்டியது ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் கடமை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே, இவற்றை கருத்தில் கொண்டு எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல், எமது கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வராமல் பாதுகாக்கவேண்டியது இந்திய வெளிவிவகார அமைச்சரின் கடமை - அன்ரனி சங்கர் | Virakesari.lk
-
நாய்க்கடி அதிகரிப்பு : நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் விழிப்புணர்வு இன்மைக்கும் தொடர்பு
03 Jul, 2025 | 05:40 PM நாட்டில் நாய்க்கடி அதிகரிப்பதற்கு, அதிகரித்து வரும் நாய்களின் எண்ணிக்கை மற்றும் கால்நடைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி பொதுமக்களிடம் புரிதல், போதிய கல்வி அறிவு மற்றும் விழிப்புணர்வு இன்மையே முக்கிய காரணம் என பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என்.எம்.என். தர்ஷனி திசாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள என்.எம்.என். தர்ஷனி திசாநாயக்க, 2000 ஆம் ஆண்டு முதல் சுகாதார அமைச்சு ரேபிஸ் வைரஸ் எனப்படும் விசர் நாய் கடி நோயை ஒழிக்க நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விசர் நாய் கடி கட்டளைச் சட்டத்தின் படி, தெருநாய்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களைப் பிடிக்கவோ அல்லது கருணைக்கொலை செய்யவோ அதிகாரிகள் ஒரு காலத்தில் அனுமதிக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார். மனிதர்களுக்கு விசர் நாய் கடி நோய் ஏற்படுவதை தடுக்க சுகாதார அமைச்சு முக்கிய பங்காற்றி வருகிறது என்றாலும் கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டங்கள் உள்ளிட்ட விசர் நாய் கடி கட்டுப்பாட்டிற்கான பொறுப்பு கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் (DAPH) கீழ் வருகிறது. 2000 முதல் 2006 ஆம் ஆண்டு வரை, அரசாங்கக் கொள்கையின்படி நாய்களைப் பிடிக்கும் நடைமுறை இடைநிறுத்தப்பட்டது. அதற்குப் பதிலாக, நாய்களின் எண்ணிக்கையை நிர்வகிக்க சுகாதார அமைச்சு கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஒரு கட்டத்தில், கால்நடை இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த டெப்போ - புரோவெரா ஊசியைப் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது, ஆனால் இந்த முயற்சி பின்னர் நிறுத்தப்பட்டது. தற்போது, சுகாதார அமைச்சு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 33,000 நாய்களுக்கு கருத்தடை செய்கிறது. இருப்பினும், நாய்களின் எண்ணிக்கையை முறையாகக் கட்டுப்படுத்த இந்த எண்ணிக்கையை ஆண்டுக்கு குறைந்தது 100,000 ஆக அதிகரிக்க வேண்டும். இந்த நடவடிக்கை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டும். தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக, சரியான குப்பைகள் அகற்றப்பட வேண்டும். வீதியோரங்களில் குப்பைகளை கொட்டுவதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். கால்நடைகளின் நடத்தை தொடர்பில் குறிப்பாக சிறுவர்களுக்கு பொது விழிப்புணர்வு மற்றும் கல்வி அறிவை அதிகரிக்க வேண்டும். நாய் கடியில் இருந்து எவ்வாறு தடுப்பது என்பதை பொது மக்கள் கற்றுக்கொள்வதும், நாய்கள் ஏன் கடிக்கக்கூடும் என்பதற்கான காரணங்களைப் புரிந்துகொள்வதும் மிக அவசியம். இது சம்பந்தமாக, கால்நடை பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு மற்றும் கல்வித் திட்டங்களில் கல்வி அமைச்சு தீவிர நாட்டம் காட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். நாய்க்கடி அதிகரிப்பு : நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் விழிப்புணர்வு இன்மைக்கும் தொடர்பு | Virakesari.lk
-
செம்மணி மனித புதைகுழிகள் - பிரிட்டிஸ் அரசாங்கம் ஆழ்ந்த கவலை
03 Jul, 2025 | 05:40 PM செம்மணி மனித புதைகுழிகள் குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ளதாக பிரிட்டிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கேள்வியொன்றிற்கான எழுத்து மூல பதிலில் பிரிட்டிஸ் அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் பொறுப்புக்கூறலி;ற்கான பிரிட்டிஸ் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வெளியிட்டுள்ள வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கதெரின் வெஸ்ட் செம்மணியில் மனித புதைகுழி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகளிற்கான பொறுப்புக்கூறலிற்கு பிரிட்டன் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி உட்பட பலரை சந்தித்து உரையாடியதை நினைவுகூர்ந்துள்ள அவர் இலங்கையில் காணாமல்போனவர்களிpன் உறவுகளுடன் பிரிட்டிஸ் தூதரகம் நெருக்கமான தொடர்புகளை பேணுகின்றது என தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழிகள் - பிரிட்டிஸ் அரசாங்கம் ஆழ்ந்த கவலை | Virakesari.lk
-
யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞன் திடீரென உயிரிழப்பு!
03 Jul, 2025 | 07:14 PM யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நண்பர்களுடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது காரணமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார். குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றிரவு மதுபானம் அருந்திக்கொண்டிருந்த நிலையில் குறித்த இளைஞனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன்போது உடனிருந்த நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவரது நண்பர்களில் சிலர் தலைமறைவாகிய நிலையில் சுன்னாகம் பொலிஸார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞன் திடீரென உயிரிழப்பு! | Virakesari.lk
-
பிரபல அரசியல்வாதிகள் இருவர் கைது?
அரசியலில் பிரபலமடைந்த அரசியல்வாதிகளில் இருவர், இரண்டு நாட்களுக்குள் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்து அதிர்ச்சியான நடவடிக்கைளில் ஈடுபட்ட இருவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் இவ்விருவரும் கைது செய்யப்படவுள்ளனர் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் இவ்விருவரும் கைது செய்யப்படவுள்ளனர் என்றும், இலஞ்சம் ஊழல் பற்றி இவ்விருவருக்கு எதிராகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. Tamilmirror Online || பிரபல அரசியல்வாதிகள் இருவர் கைது?
-
செம்மணிப் புதைகுழி விவகாரம்; செயற்கை நுண்ணறிவால் விசாரணைகள் சீர்குலைவு
செம்மணிப் புதைகுழி விவகாரம்; செயற்கை நுண்ணறிவால் விசாரணைகள் சீர்குலைவு கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்படும் என்புச் சிதிலங்கள் மற்றும் சான்றுப் பொருள்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவுப் படங்கள், குற்றவியல் விசாரணைகளை சீர்குலைக்கின்றன என எச்சரிக்கப்பட்டுள்ளது. செம்மணிப் புதைகுழியில் சமீப நாள்களாக பல்வேறு மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த இரு நாள்களாக மனிதச் சிதிலங்களுக்கு மேலதிகமாக புத்தகப்பை, வளையல்கள். பாதணிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாக வைத்து செயற்கை நுண்ணறிவின் உதவுடன் போலியானதும் கற்பனையானதுமான படங்களை இணையப் பயநர்கள் உருவாக்குவதுடன் அவற்றை சமூகவலைத் தளங்களில் பரவவும் விட்டுள்ளனர். இந்தச் செயற்பாடுகள் குற்றவியல் விசாரணைகளை சீர்குலைக்கின்றன. அத்துடன், விசாரணைகளின் நோக்கங்களில் அல்லது செல்நெறிகளில் வலிந்து தலையீட்டையும், திசைதிருப்பலையும் ஏற்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகின்றது. இதையடுத்தே, இவ்வாறான ஒளிப்படங்களைப் பகிர்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், செயற்கை நுண்ணறிவுப் படங்களால் உண்மையாகப் பாதிக்கப்பட்டவரின் உரு அடையாளங்கள் மாற்றப்படும் ஆபத்து இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு ஒளிப்படங்களின் உண்மையை ஆராயாமல் அவற்றை உண்மையென நம்பி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று உரையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. செம்மணிப் புதைகுழி விவகாரம்; செயற்கை நுண்ணறிவால் விசாரணைகள் சீர்குலைவு
-
செம்மணி மனித புதைகுழியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 38 எலும்புக்கூடுகளில் குறைந்தது 10 சிறுவர்கள், குழந்தைகளுடையதென சந்தேகம் !
02 Jul, 2025 | 10:02 AM இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் இருந்து, ஒரு குழந்தையின் எலும்புக்கூடு போல் தோன்றும் ஒரு எலும்புக்கூடுக்கு அருகில், நீல நிறத்தில் ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்ட ஒரு நீல நிறப் பை, ஒரு சிறிய பொம்மை, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் ஒரு செருப்பு கண்டெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம் செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் இருந்து இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 38 எலும்புக்கூடுகளில், குறைந்தது 10, சிறுவர்கள் அல்லது குழந்தைகளுடையது என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடுகள் அடங்குமென ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது நீதிமன்றத்தால் குற்றம் நடந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. "ஏற்கனவே ஒரு பையுடன் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு, நாள் முழுவதும் தோண்டப்பட்டு முழுமையாக மீட்கப்பட்டது," என பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில், புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்யும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் குறிப்பிடுகின்றார். ஜூலை முதலாம் திகதிக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட 33 மனித எலும்புகளுக்கு மேலதிகமாக ஐந்து மனித எலும்புகள் அடையாளம் காணப்பட்டாலும், எலும்புகள் பின்னிப் பிணைந்திருப்பதாகத் தோன்றுவதால் சரியான எண்ணிக்கையைக் கூற முடியாது என அவர் மேலும் கூறினார். "முழு நாள் அகழ்வுப் பணியில் சுமார் ஐந்து ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த எலும்புக்கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும் எண்ணிக்கையை சரியாக குறிப்பிட முடியாது. குழப்பமாக காணப்படுகிறது." தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவால் அடையாளம் காணப்பட்டு, மனித எலும்புகள் இருக்கக்கூடிய இடங்களாக நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்யும் பணிகள், திங்கட்கிழமை (01) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாக சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 1990 களில் செம்மணி அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த சட்ட வைத்திய அதிகாரி கிளிபர்ட் பெரேரா அகழ்வு பணிகளை பார்வையிட்டதோடு, அகழ்வாராய்ச்சிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் அகழ்வாராய்ச்சி தொடர்பான பழைய தகவல்களைப் பற்றி விவாதித்ததாகவும் சட்டத்தரணி ரணிதா குறிப்பிடுகின்றார். செம்மணிப் பகுதியில் முன்னூறு முதல் நானூறு வரையிலான புதைகுழிகள் இருப்பதாக, செப்டம்பர் 7, 1996 அன்று பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக இலங்கை இராணுவத்தின் நான்கு உறுப்பினர்களுடன் சேர்ந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச, கொழும்பு உயர் நீதிமன்ற சாட்சிக்கூண்டில் இருந்தவாறு தெரிவித்திருந்தார். 1999 ஆம் ஆண்டு அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட 15 உடல்களில், இரண்டு உடல்கள் 1996 இல் காணாமலாக்கப்பட்ட இளைஞர்களின் உடல்கள் என அடையாளம் காணப்பட்டன. எஞ்சிய 13 உடல்கள் குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. எலும்புக்கூடுகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அகழ்வாராய்ச்சிகள் மே 15 ஆம் திகதி தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பமானது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 38 எலும்புக்கூடுகளில் குறைந்தது 10 சிறுவர்கள், குழந்தைகளுடையதென சந்தேகம் ! | Virakesari.lk
-
நிபந்தனைகள் இன்றியே இலங்கைக்கு உதவுகிறோம்; பதிலுக்கு நாங்கள் எதையும் கேட்பதில்லை - இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
02 Jul, 2025 | 01:22 PM ரொபட் அன்டனி இந்தியா இலங்கையின் மிகவும் நம்பகமான நண்பராகவும், மிகவும் நம்பத்தகுந்த பங்காளியாகவும் உள்ளது என்பதை தெரிவிக்கிறோம். நிபந்தனை இல்லாமல் நாங்கள் உதவிகளை செய்கிறோம். பதிலுக்கு நாங்கள் எதையும் கேட்பதில்லை. நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை வளர்ப்பதிலும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் நீடித்த உறவுகளை உருவாக்குவதிலும் இலங்கையின் உதவி மட்டுமே எங்களுக்குத் தேவையாகும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இன்று நாம் இதுவரை கண்டிராத மிகச் சிறந்த உறவைக் கொண்டிருக்கிறோம் என்று நான் உறுதியாக கூறுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை வந்துள்ள இந்திய பெரு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கான வரவேற்பு நிகழ்வு கொழும்பு ஐ.டி.சி. ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே உயர்ஸ்தானிகர் இதனை குறிப்பிட்டார். இலங்கை வந்துள்ள சஞ்சீவ் பூரி தலைமையிலான இந்தியாவின் பெரு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் குழு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது. ஜனாதிபதி, பிரதமர், வலுசக்தி அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து முதலீட்டு சந்தர்ப்பங்கள் குறித்து ஆராய்ந்துள்ளனர். இந்நிலையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் மேலும் உரையாற்றிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இலங்கையில் நல்ல அறிகுறிகளைக் காட்டும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இது வெறும் அரசாங்கம் மட்டுமல்ல. இந்தியாவின் பரந்த சமூகமும், வணிகங்களும் அதன் ஒரு பகுதியாக, ஒரு தேசிய முயற்சியாக எங்கள் முயற்சிகளை ஆதரிக்கின்றன. இந்த பிரதிநிதிகள் குழு மிக விரிவான துறைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், நமது உறவின் கிட்டத்தட்ட அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கியிருப்பதற்காகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஆறு மாதங்களாக எமது உறவில் நாம் கண்ட மிகப் பெரிய வெற்றிகளின் பின்னணியில்தான் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. கடந்த டிசம்பரில் ஜனாதிபதி அனுர குமார இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்துடன் இது தொடங்கியது. அவர் பதவிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு விஜயம் அதுவாகும். அதைத் தொடர்ந்து ஏப்ரலில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் மிக வெற்றிகரமான இலங்கை விஜயம் இடம்பெற்றது. புதிய அரசாங்கத்தால் இலங்கையில் வரவேற்கப்பட்ட முதல் தலைவர் இந்திய பிரதமர் மோடி என்பது, எமது பார்வையில், இருதரப்பு உறவின் மிக அத்தியாவசியமான தன்மையைப் பிரதிபலிக்கிறது. நாங்கள் 'அண்டை நாடுகள் முதலில்' என்ற கொள்கையைக் கொண்டுள்ளோம். ஆனால் இலங்கை சில விஷயங்களிலாவது 'இந்தியா முதலில்' என்பதை நிரூபித்துள்ளது. இது ஒரு மிக மிக நேர்மறையான அறிகுறியாகும். ஜனாதிபதியின் விஜயத்தின்போது வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை மற்றும் பின்னர் பிரதமரின் விஜயத்தின்போது கையெழுத்திடப்பட்ட பல ஒப்பந்தங்கள் மூலம் எமது உறவை முன்னோக்கிக் கொண்டு செல்ல ஒரு மிக மிக வலுவான அடிப்படை உள்ளது. இது உறவின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்தியுள்ளது. இணைப்பு, டிஜிட்டல்மயமாக்கல், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு ஆகியவை எமது உறவின் ஐந்து முக்கிய தூண்களாகும். இவற்றில் ஒவ்வொன்றும் முன்னேறியுள்ளன. ஒவ்வொன்றும் புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன. நாங்கள் இலங்கைக்கு மிக ஆழமாக அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 13 அல்லது 14 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 2022இல் நாங்கள் இலங்கைக்கு வழங்கிய அவசரகால உதவியின்போது வழங்கப்பட்ட கடன்களுக்கான மறுசீரமைப்பு இம்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியா இலங்கையின் மிகவும் நம்பகமான நண்பராகவும், மிகவும் நம்பத்தகுந்த பங்காளியாகவும் உள்ளது என்பதைத் தெரிவிக்கிறோம். நிபந்தனை இல்லாமல் இதை நாங்கள் செய்கிறோம். பதிலுக்கு நாங்கள் எதையும் கேட்பதில்லை. நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை வளர்ப்பதிலும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் நீடித்த உறவுகளை உருவாக்குவதிலும் உங்கள் உதவி மட்டுமே எங்களுக்குத் தேவையாகும். இந்த நன்மைகள் இலங்கைக்கு அதிகமாக இருந்தாலும் நாங்கள் பொருட்படுத்தமாட்டோம், ஏனென்றால் இலங்கை எமது சகோதர நாடு, இன்று நாம் இதுவரை கண்டிராத மிகச் சிறந்த உறவைக் கொண்டிருக்கிறோம் என்று நான் உறுதியாக கூறுவேன் என்றார். நிபந்தனைகள் இன்றியே இலங்கைக்கு உதவுகிறோம்; பதிலுக்கு நாங்கள் எதையும் கேட்பதில்லை - சந்தோஷ் ஜா | Virakesari.lk
-
அர்ச்சுனாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
02 Jul, 2025 | 03:35 PM இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை (02) அனுமதி வழங்கியுள்ளது. அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரி சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் என்பவரால் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மாயாதுன்ன கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மனுதாரர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி அசோக் பரன், “இராமநாதன் அர்ச்சுனா யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிந்தெடுக்கப்பட்ட காலப்பகுதியில் வைத்தியர் துறையிலிருந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்துள்ளார்.” “இதனால் அரசியலமைப்புச் சட்டத்தின்படி இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர் ” என சட்டத்தரணி அசோக் பரன் தெரிவித்துள்ளார். இருப்பினும், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்காக ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, தனது கட்சிக்காரர் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சம்பளம் இன்றி சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால், அவரை ஒரு அரசாங்க ஊழியராகக் கருத முடியாது என்றும் குறிப்பிட்டார். அதன்படி, அவர் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை என்று சட்டத்தரணி குறிப்பிட்டார். இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது. இதேவேளை, இந்த மனு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது. எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பது மற்றும் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்கப் போவதில்லை என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அர்ச்சுனாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு | Virakesari.lk
-
தமிழை விட சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு: சீமான் ஆவேசம்
சென்னை: “தமிழைவிட சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, இந்தியாவை இந்து நாடாக கட்டமைக்கும் ஓர் முயற்சியாகும்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 2014-25 வரையிலான ஆட்சிகாலத்தில் சமஸ்கிருத மொழியை பரப்ப ரூ.2,532.59 கோடியும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா ஆகிய 5 மொழிகளுக்கும் சேர்த்து வெறும் ரூ.147.56 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக தமிழுக்கு ஓராண்டு சராசரியாக ரூ.13 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்படும் நிதியைவிட 22 மடங்கு குறைவானது. இந்தியாவை இந்து நாடாகக் கட்டமைக்கவும், உலகமயமாக்கலின் மூலம் வணிகம் செய்வதற்கு ஏதுவாக ஒரு பொதுமொழியை உருவாக்கவுமே இவ்வகை முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் துளியளவும் பயனளிக்காது. மொத்தமாகவே 10 ஆயிரம் மக்கள் கூட பேசாத ஒரு மொழியை வளர்த்து மற்ற தேசிய இனங்களின் தாய்மொழியை அழிப்பதை எப்படி ஏற்பது? நம் நாட்டில் பிரிவினைவாதிகள் என்று யாரும் தனியாக இல்லை. ஒரு மொழியைத் திணித்து, ஒரு மொழியை வளர்ப்பதன் மூலம் நாட்டைத் துண்டாட நினைக்கும் ஆட்சியாளர்கள்தான் உண்மையான பிரிவினைவாதிகள். ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு என்று ஒவ்வொன்றாக ஒற்றைமயப்படுத்தி திணிக்கின்ற கொடுமை நீண்டகாலம் நிலைக்கப்போவதில்லை. எனவே அனைத்து மொழிகளுக்கும் சம அளவில் நிதி ஒதுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்” என்று சீமான் தெரிவித்துள்ளார். தமிழை விட சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு: சீமான் ஆவேசம் | Sanskrit is being allocated more funds than Tamil - Seeman - hindutamil.in
-
சகோதரனின் பாலர் பாடசாலை மகள் துஷ்பிரயோகம்: 68 வயதானவருக்கு 60 ஆண்டுகள் சிறை
தனது சொந்த சகோதரனின் பாலர் பாடசாலை மகளை இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக 68 வயதுடைய ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சபுவிதான 60 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூ. 30,000 அபராதம் விதித்தார், மேலும் பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 1 மில்லியன் இழப்பீடு வழங்கவும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். குற்றத்தின் மனிதாபிமானமற்ற தன்மை மற்றும் கொடூரத்தை வலியுறுத்தி, "இது ஒரு குழந்தைக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல, மனிதகுலத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செயல்" என்று நீதிபதி கூறினார். என்ன நடக்கிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு இளமையாக இருந்த குழந்தை, ஒரு முறை தனது தாயிடம், "அம்மா, அந்த 'ஹோல்மன் பாப்பா'வை மீண்டும் எங்கள் வீட்டிற்கு வர விடாதே" என்று கூறியதாக ஆதாரங்கள் வெளிப்படுத்தின, பின்னர் சாட்சி சாட்சியத்தின் மூலம் ஒரு அறிக்கை உறுதிப்படுத்தப்பட்டது. குற்றவாளி குழந்தையின் வீட்டிற்குள் நுழைந்து, யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையை தனது சொந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று குற்றத்தைச் செய்ததாக அரசு தரப்பு வெளிப்படுத்தியது. அதன்பிறகு, அவர் குழந்தையை மிரட்டி, நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும், அப்படிச் சொன்னால், இது மீண்டும் நடக்கும் என்றும் எச்சரித்தார். இந்த மிரட்டலின் விளைவாக, அந்தக் குழந்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மீண்டும் மீண்டும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளது. அனைத்து ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு, அரசு தரப்பு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்கை நிரூபித்துள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். Tamilmirror Online || சகோதரனின் பாலர் பாடசாலை மகள் துஷ்பிரயோகம்: 68 வயதானவருக்கு 60 ஆண்டுகள் சிறை
-
அத்துமீறும் இ.போ.ச ; செவ்வாயன்று வடக்கை முடக்கி போராட்டம்!
இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற கால அட்டவணைக்கு முரணான சேவை ஒன்றால் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இ.போ.ச தரப்பினரிடையே குழப்ப நிலை ஏற்பட்டது. இதையடுத்து சில நிமிடங்கள் வாகன நெரிசல் ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை சுமுகமாக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கருத்துத்தெரிவித்த வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்க தலைவர்; இன்று காலை யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்று குறித்த சாலை முகாமையாளரின் உத்தரவுக்கமைய சட்டவிரோத சேவையை வவுனியா நோக்கி முன்னெடுக்க முயன்றது. இதை அவதானித்த நாம் குறித்த சட்டவிரோத செயற்பாட்டை கண்டித்து அதை நிறுத்துமாறு வலியுறுத்தினோம். ஆனால் இ.போ.சவினர் அடாத்தாக சேவையை முன்னெடுக்க முயன்றனர். ஏற்கனவே இச்சட்டவிரோதம் குறித்து துறைசார் தரப்பினருக்கும் போக்குவரத்து அதிகார சபை, துறைசார் அமைச்சு, வடக்கின் ஆளுநர் ஆகியோரிடம் முறையிட்டிருந்ததுடன், பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்துள்ளோம் ஆனாலும் இதுவரை எந்தவொரு தீர்வுக் கிடைக்காத நிலையே காணபடுகின்றது. அத்துடன் இ.போ.ச அடாத்தாக சட்டத்துக்கு முரணாக செயற்படுவதுடன் தனியார் போக்குவரத்து சேவையை முடக்கவும் முயன்று விபத்துக்கள் ஏற்படுவதற்கும், முரண்பாடுகளை உருவாகுவதற்கும் வலிந்து இழுக்கின்றனர். எனவே, இவ்வாறான இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்தும், அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி தனியார் பேருந்துகளின் பாதுகாப்பான சேவையை உறுதி செய்வதற்காகவும் எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மகாணம் தழுவிய ரீதியில் முழுமையான சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துமீறும் இ.போ.ச ; செவ்வாயன்று வடக்கை முடக்கி போராட்டம்!
-
35 ஆண்டுகளுக்குப் பிறகு பலாலி இராஜராஜேஸ்வரி ஆலயத்திற்கு சுதந்திரமாக செல்வதற்கு இராணுவ அனுமதி
27 Jun, 2025 | 12:35 PM யாழ்ப்பாணம் பலாலியில் அமைந்துள்ள இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு, மக்கள் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரமாக சென்று வழிபட இராணுவ அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை (27) முதல் அமலுக்கு வந்துள்ளது. 1990ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி, உள்நாட்டு யுத்தம் காரணமாக பலாலி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் வெளியேறியிருந்தனர். அதன் பின்னர், பலாலி பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு, இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது. இதில் ஆலயம் இருந்த பகுதியும் அடங்கும். இராணுவம், ஆறு மாதங்களுக்கு முன்பு சுதந்திரமாக ஆலயத்துக்கு செல்வதற்கான அனுமதியை அறிவித்திருந்தாலும், கடந்த காலங்களில் மக்கள் விசேட நாள்களில் மட்டுமே கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் ஆலயத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது உயர் பாதுகாப்பு வலயத்தினுள் ஆலயத்திற்கு மாத்திரமாக செல்வதற்கென பிரத்தியேக பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை வழியாக வழிபாட்டுக்காக மட்டும் மக்கள் சென்று திரும்ப இராணுவ அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,கடந்த வருடம் மார்ச் 22ஆம் திகதி, பலாலி மற்றும் வயாவிளான் பகுதிகளில் உள்ள 234.83 ஏக்கர் விவசாய நிலங்களை மக்கள் பயன்பாட்டிற்காக விடுவித்திருந்தார். எனினும், உயர் பாதுகாப்பு வேலிகள் பின்நகர்த்தப்படாமல் அந்த நிலங்கள் அதே பாதுகாப்பு வலய எல்லைக்குள் காணப்பட்டதால், விவசாயிகள் நேரடியாக பயன்படுத்த முடியாமல், இராணுவ கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டபடி விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது, இராணுவம் இந்த பாதுகாப்பு வேலிகளை பின்நகர்த்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதால், விரைவில் விவசாய நிலங்களில் மக்கள் முழுமையாக சுதந்திரமாக விவசாயம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண மாவட்ட புதிய கட்டளை தளபதியாக பதவியேற்ற மேஜர் ஜெனரல் ராசிக குமார, வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை வியாழக்கிழமை (26) சந்தித்த போதே, இந்த வேலிகளை பின்நகர்த்தும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ஆளுநர் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு பலாலி இராஜராஜேஸ்வரி ஆலயத்திற்கு சுதந்திரமாக செல்வதற்கு இராணுவ அனுமதி | Virakesari.lk
-
சின்ன வெங்காய இறக்குமதி குறைப்பை வலியுறுத்தி அச்சுவேலி பத்தமேனி விவசாயிகள் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு
27 Jun, 2025 | 02:24 PM அச்சுவேலி பத்தமேனி பகுதியைச் சேர்ந்த சின்ன வெங்காய உற்பத்தியாளர்கள், நாட்டில் சின்ன வெங்காய இறக்குமதியை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஸ்ரீ மோகனிடம் மகஜர் ஒன்றை வெள்ளிக்கிழமை (27) கையளித்தனர். இது தொடர்பாக, யாழ். மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள், போராட்டத்தைத் தொடர்ந்து தங்களது கோரிக்கையை மகஜராக வழங்கினர். தொடர்ச்சியாக சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் வெங்காயத்திற்கு நிர்ணய விலை வழங்கப்படாததால் அதிக இழப்பை சந்திக்க நேரிட்டதாக தெரிவித்துள்ளனர். அதேவேளை, சின்ன வெங்காயத்தை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் வரையிலான காலப்பகுதியில், செலவுகள் அதிகமாக இருப்பதால், நிர்ணய விலைக்கு கீழ் விற்பனை செய்வது தங்களுக்கு பெரிய பாதிப்பாக உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து சின்ன வெங்காயத்தை அதிகளவில் இறக்குமதி செய்வது அவற்றின் விலையை குறைக்கச் செய்துள்ளதாகவும், இது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பெரிய தடையாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனவே, உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், சின்ன வெங்காய இறக்குமதியை கட்டுப்படுத்தி, உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்ய வேண்டும் எனக் கோரி அவர்கள் மகஜரை கையளித்துள்ளனர். சின்ன வெங்காய இறக்குமதி குறைப்பை வலியுறுத்தி அச்சுவேலி பத்தமேனி விவசாயிகள் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு | Virakesari.lk
-
சிரந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க கைது !
27 Jun, 2025 | 02:51 PM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷவின் மனைவியின் சகோதரரும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். சிரந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க கைது ! | Virakesari.lk
-
பலாலி சந்தையை விடுவிக்க வேண்டும் ; வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
27 Jun, 2025 | 04:10 PM யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கன்னி அமர்வு ஞாயிற்றுக்கிழமை (27) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தவிசாளர் தனது தலைமை உரையில் தெரிவித்ததாவது, எங்களுடைய மக்கள் இன்னும் 2400 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் மீள் குடியேற்றப்படாமல் இருக்கின்றார்கள், அவர்களை மீள்குடியேற்றுவதற்காக எங்களுடைய சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதற்காக அனைவருடைய ஒத்துழைப்பும் தேவையாக இருக்கின்றது. எங்களுடைய பல உறுப்பினர்கள் கூட தமது சொந்த நிலங்களுக்கு திரும்பாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் தமது சொந்த நிலங்களுக்கு சென்று இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு நாங்கள் அவர்களுக்கான நிலங்களை பெற்றுக் கொடுப்பதோடு, அந்தப் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்தை தொடர்ந்து நடைபெறுகின்ற அபிவிருத்தி திட்டங்களையும் நாங்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. கடந்த ஏப்ரல் மாதம் மீள்குடியேற்ற அமைச்சினால் 182 மில்லியனுக்கும் மேற்பட்ட ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்த போதும் அதற்கான வேலை திட்டங்கள் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் இருக்கின்றது. எங்களுடைய சபையின் பக்கமும் ஒரு சில தவறுகள் இருக்கின்றன, அதற்கான மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்படாத நிலையில் இருக்கின்றது. நாங்கள் சபையை பொறுப்பெடுத்த பின்னர் அதனை விரைவு படுத்த வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது. தொடர்ந்து சபைக்கான நிலையியற் குழுக்கள் அமைக்கப்பட்டதோடு , தீர்மானங்களும் எடுக்கப்பட்டது. இதன்போது பிரதேச சபைக்கு சொந்தமான பலாலி சந்தையை விடுவித்து தருமாறு கோரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறித்த தீர்மானம் மாவட்ட இராணுவ தளபதிக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் எழுத்து மூலம் அனுப்பப்படும். அத்தோடு கடந்த 2023 ஆம் ஆண்டு விடிவிக்கப்பட்டுள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தை மீள அமைப்பதற்கு விரைவில் அதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் என்றார். பலாலி சந்தையை விடுவிக்க வேண்டும் ; வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம் | Virakesari.lk
-
ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கினை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளதாக இரா.சாணக்கியன் தெரிவிப்பு
27 Jun, 2025 | 05:04 PM படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை தொடர்பான வழக்கினை மீண்டும் தாக்கல்செய்யவுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் புதல்வர் ஜோசப்பரராஜசிங்கம் டேவிட் 20வருடங்களுக்கு பின்னர் வெள்ளிக்கிழமை (27) மட்டக்களப்புக்கு வருகைதந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராசிங்கத்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இதன்போது தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன்,பிரதி முதல்வர் டினேஸ் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் இதன்போது கலந்துகொண்டனர். புதூர் பகுதியில் உள்ள மயானத்தில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் நினைவுத்தூபியில் அவரின் மகன் மற்றும் பாராளுமுன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர்,பிரதி முதல்வர் சுடர் ஏற்றி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலைக்கு நீதிகோரி ஒவ்வொரு வருடமும் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணி போராட்டத்தினை நடாத்திவருகின்றது. ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் கொலையில் முக்கிய சந்தேகநபராக பிள்ளையான் அவர்கள் நல்லாட்சிக்காலத்திலே கைதுசெய்யப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து அவர் விடுதலைசெய்யப்பட்டார். அந்த விடுதலை பல சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. தென்னிலங்கையில் கூட நீதித்துறையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் வகையில் அசாத் மௌலானாவின் வாக்குமூலம் இருந்தது. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களம் அந்த வழக்கினை தள்ளுபடிசெய்து குற்றவாளி கூண்டிலிருந்து பிள்ளையானை நீக்கியிருந்தார்கள். ஆனால் காலம்மாறியிருக்கின்றது.அந்த படுகொலையினை செய்ததாக சந்தேகிக்கப்படும் ராஜபக்ஸ ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் தற்போது ஆட்சியில் இல்லை. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மீண்டும் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார். பிள்ளையான் கைதானது ஈஸ்டர் குண்டுத்தாக்குதலா அல்லது திரிபொலியுடன் இணைந்து மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் உட்பட ஏனைய கொலைகளைப்பற்றியா என்பது நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனாலும் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் சார்பில் அவரின் படுகொலை வழக்கினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கின்றோம். இது தொடர்பான விடயங்கள் சில மாதங்களுக்கு முன்னர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் குடும்பத்தினரின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கவேண்டும். என்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார். இங்கு மூடிமறைக்கப்பட்ட,நீதி மறுக்கப்பட்ட பல படுகொலைகளை விசாரணைசெய்யப்படவேண்டும். இரு தினங்களுக்கு முன்னர் ஐநா மனித உரிமை ஆணையாளர் வந்தபோது அவர் எங்களிடம் சில விடயங்களை தெரிவித்திருந்தார் அதாவது காணாமல்ஆக்கப்பட்டவர்கள்,படுகொலைசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சி பத்து விடயங்களை முன்வைக்குமாறு கூறியிருந்தார். இதன்போது நாங்கள் முதலாவதாக ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் விசாரணையை மீளஆரம்பிக்கவேண்டும்,ரவிராஜ் படுகொலை,திருகோணமலை மாணவர்களின் படுகொலைகள்டு, மாணர்கள் கடத்தப்பட்டமை, இறுதி யுத்த காலப்பகுதியில் நேரடியாக கையளிக்கப்பட்டு காணாமல்போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் தொடர்பில் தெரிவித்திருந்தேன். இதேபோன்று அனந்தி சசிதரனின் கணவரின் வழக்கு போன்ற பல்வேறுவிடயங்களை தெரிவித்திருந்தேன். நாங்கள் நீதிக்கான போராட்டத்தினை கைவிடமாட்டோம். ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரையில் நீதிகோரிய போராட்டத்தினை இலங்கை தமிழரசுக்கட்சி முன்னெடுக்கும் என்பதை அவரின் மகனுக்கு நாங்கள் உத்தரவாதமளிக்கின்றோம் என்றார். படுகொலை தொடர்பான வழக்கினை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளதாக இரா.சாணக்கியன் தெரிவிப்பு | Virakesari.lk
-
இந்திராகாந்தி பிறப்பித்த அவசரகால நிலையின் போது செய்யப்பட்ட உடன்படிக்கையே இன்று இந்திய மீனவர்கள் இலங்கையில் கைதுசெய்யப்படுவதற்கு காரணம் - ஜெய்சங்கர்
இந்தியாவில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆட்சியின் போது பிறப்பிக்கப்பட்ட அவசரநிலையின்போது கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையே இன்று இந்திய மீனவர்களை இலங்கைகைதுசெய்வதற்கு காரணம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கை காரணமாக இந்திய மீனவர்களிற்கு சில இடங்களில் மீன்பிடிப்பதற்கு இருந்த உரிமை தாரைவார்க்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் எமது மீனவர்கள் கைதுசெய்யப்படுவது குறித்து நாங்கள் கேள்விப்படுகின்றோம்,அவசரகாலநிலையின் போது கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையே இதற்கு காரணம் இந்த உடன்படிக்கை காரணமாக இலங்கை கடற்பரப்பின் சில பகுதிகளில் எங்கள் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உரிமை கைவிடப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். அக்காலப்பகுதியில் உண்மையான நாடாளுமன்றம் செயற்பட்டிருந்தால் நாடாளுமன்ற விவாதங்கள் இடம்பெற்றிருக்கும் இந்த முடிவு நிராகரிக்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ள அவர் அந்த உடன்படிக்கையின் விளைவுகளை இன்றும் தமிழ்நாட்டில் காணமுடிகின்றது என தெரிவித்துள்ளார். இந்திராகாந்தி பிறப்பித்த அவசரகால நிலையின் போது செய்யப்பட்ட உடன்படிக்கையே இன்று இந்திய மீனவர்கள் இலங்கையில் கைதுசெய்யப்படுவதற்கு காரணம் - ஜெய்சங்கர் | Virakesari.lk
-
அரச வைத்தியசாலைகளில் பல கருவிகள், உபகரணங்களுக்கு தட்டுப்பாடு : தனியாரிடம் வாங்கி வருமாறு நோயாளர்களுக்கு அறிவுறுத்தல் : வைத்தியர் சமல் சஞ்சீவ
Published By: Digital Desk 3 27 Jun, 2025 | 05:18 PM செயற்கை முழங்கால் மாற்று உபகரணங்கள் மற்றும் பிற அறுவை சிகிச்சை கருவிகள் போன்ற முக்கியமான மருத்துவப் பொருட்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கி வருமாறு சொல்வது, தற்போது பல அரச வைத்தியசாலைகளில் வழக்கமான விடயமொன்றாக மாறிவிட்டது. ஏனெனில் அவைகள் அதிகளவில் கையிருப்பில் இல்லை என சுகாதார தொழில் வல்லுநர்களின் தேசிய அமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இந்தப் பொருட்கள் பின்னர் அறுவை சிகிச்சைக்காக நேரடியாக அறுவை சிகிச்சை அறைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் உபகரணங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட விசேட வைத்திய நிபுணர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமான விடயம் ஒன்று இல்லை என அவர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சுகாதார அமைப்பில் உள்ள பாரிய சிக்கலை எடுத்துக்காட்டுகிறது எனவும், வைத்தியசாலைகளால் வழங்கப்பட வேண்டிய மருத்துவ உபகரணங்களுக்கு நோயாளிகள் அதிக அளவு பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் எனவும் குறிப்பிட்டார். தனியார் மருத்துவ நிறுவனங்களிடமிருந்து செயற்கை முழங்கால் கருவிகளை வாங்க நோயாளிகள் ரூபாய் 350,000 க்கும் அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பணம் செலுத்திய பின்னர் நிறுவன ஊழியர்கள் அறுவை சிகிச்சைக்காக உபகரணங்களை அறுவை சிகிச்சை தனியார் மருந்து நிறுவனங்களிடமிருந்து செயற்கை முழங்கால் கருவிகளை வாங்க நோயாளிகள் ரூ.350,000 க்கும் அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பணம் செலுத்திய பிறகு, நிறுவன ஊழியர்கள் அறுவை சிகிச்சைக்காக உபகரணங்களை அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், அண்மையில் அதே வைத்தியசாலையில் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை உபகரணங்களின் சட்டவிரோத விற்பனை தொடர்பான சம்பவத்துடன் வேறுபட்டதல்ல என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார். "ஏழை நோயாளிகளால் அறுவை சிகிச்சைகளுக்கு இவ்வளவு அதிகமான செலவுகளை தாங்கிக் கொள்ளமுடியாது". பல மாதங்களாக போதுமான அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்காததற்கு மருத்துவ வழங்கல் பிரிவை அவர் குற்றம் சாட்டினார். இது இந்த சட்டவிரோத மோசடிகள் தொடர அனுமதித்ததாக அவர் கூறினார். நாட்டின் இலவச சுகாதார முறையை மருந்து நிறுவனங்கள் இதுபோன்று தவறாகப் பயன்படுத்துவதை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது. சுகாதார அமைச்சு தனது பட்ஜெட்டை நிர்வகிக்கவும் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை முறையாக வழங்கவும் ஏன் தவறிவிட்டது என்பது குறித்து முழுமையான விசாரணையை தொடங்குமாறு அவர் ஜனாதிபதியை வலியுறுத்தினார். நாட்டின் பொருளாதார நிலைமை ஓரளவு முன்னேற்றம் கண்டிருந்தாலும், சுகாதார அதிகாரிகளின் சீரற்ற முகாமைத்துவம் காரணமாக சுகாதார அமைப்பில் உள்ள சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதையும் அவர் எடுத்துரைத்தார். இறுதியாக, தனிப்பட்ட இலாபத்திற்காக மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக உடனடியாக முறையான விசாரணையை ஆரம்பிக்குமாறு வைத்தியர் சஞ்சீவ ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அரச வைத்தியசாலைகளில் பல கருவிகள், உபகரணங்களுக்கு தட்டுப்பாடு : தனியாரிடம் வாங்கி வருமாறு நோயாளர்களுக்கு அறிவுறுத்தல் : வைத்தியர் சமல் சஞ்சீவ | Virakesari.lk
-
புதிய வகை ரத்த வகையைக் கண்டுபிடித்துள்ளதாக பிரான்சின் தேசிய ரத்த முகமை அறிவித்துள்ளது
Editorial / 2025 ஜூன் 26 , பி.ப. 01:21 - 0 - 52 இதுவரை இல்லாத முற்றிலும் புதிய வகை ரத்த வகையைக் கண்டுபிடித்துள்ளதாக பிரான்சின் தேசிய ரத்த முகமை அறிவித்துள்ளது. இந்த புதிய ரத்த வகையை இப்போது சர்வதேச ரத்த மாற்றச் சங்கமும் அங்கீகரித்துள்ளது. EMM-நெகடிவ் என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை உலகிலேயே ஒரே ஒருவருக்கு மட்டுமே இந்த வகை ரத்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதர்களிடையே ஓ பாசிட்டிவ், ஓ நெகடிவ், பி பாசிட்டிவ், பி நெகடிவ் என ஏகப்பட்ட ரத்த வகைகள் உள்ளன. எமர்ஜென்சி காலத்தில் ரத்தம் தேவைப்படும் போது உட்படப் பல சூழல்களில் இந்த ரத்த க்ரூப் முக்கிய தேவையாக இருக்கிறது. இதற்கிடையே இப்போது ஆய்வாளர்கள் முற்றிலும் புதிய வகை ரத்தத்தைக் கண்டுபிடித்துள்ளனர். குவாடா நெகடிவ் அல்லது EMM-நெகடிவ் என்று இதற்குப் பெயர் வைத்துள்ளனர். இதுவரை உலகில் இருக்கும் வேறு எந்தவொரு ரத்த வகையைப் போலவும் இது இல்லை. முற்றிலும் தனித்துவமான ரத்த வகையாக இது இருக்கிறது. கடந்த மாதம் வரை உலகிலேயே இவர் ஒருவருக்கு மட்டுமே இந்த ரத்த வகை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதன் மூலம் மிகவும் அரிதான ரத்த வகையாக குவாடா நெகடிவ் மாறியுள்ளது. குவாடா நெகடிவ் என்பது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ரத்தத்தின் பெயர். இந்த குவாடா நெகடிவ் வகையில் EMM ஆன்டிஜென் இருக்காது. இதன் காரணமாகவே இதை EMM நெகடிவ் என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த ஆன்டிஜென் பொதுவாகச் சிவப்பு ரத்த அணுக்களில் இருக்கும்.. மேலும் இது ஒரு High-incidence antigens ஆகும். உலகில் உள்ள கிட்டதட்ட அனைத்து மனிதர்களிடமும் இந்த வகை ஆன்டிஜென்கள் இருக்கும். அப்படி இருக்கும்போது இந்த நபரிடம் மட்டும் ஆன்டிஜென்கள் இல்லாதது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒரு ரத்த வகையைப் புதிதாக அங்கீகரிக்க பல்வேறு கண்டிஷன்களை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த புதிய ரத்த வகை அந்த அனைத்து கண்டிஷன்களும் பூர்த்தி செய்கிறதாம். மேலும், உலகில் இதுவரை 47 ரத்த வகைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் இது 48ஆவது ரத்த வகையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. Tamilmirror Online || ஒருவருக்கு மட்டுமே இருக்கும் புதிய ரத்த வகை French scientists discover new blood type in Guadeloupe woman - CBS News