Everything posted by பிழம்பு
-
இலங்கையில் பதிவு செய்யப்படாத இஸ்ரேலிய சமய கலாசார நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை - சுனில் செனவி
05 Jun, 2025 | 01:48 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கையில் இஸ்ரேல் இனத்தவர்களின் சமய மற்றும் கலாசார நிலையங்களென நான்கு நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த பதிவு கம்பனிகள் சட்டத்தின் கீழே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பதிவு செய்யப்படாமல் இருக்கும் ஏனைய சட்டவிரோத நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்போமென புத்தசாசன, சமய மற்றும் கலாாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எம்,பி. கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தனது கேள்வியில், இஸ்ரேல் இனத்தவர்களின் சமய மற்றும் கலாசார நிலையங்கள் இலங்கையில் தாபிக்கப்பட்டுள்ளனவா? அவை தாபிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் யாவை? அவற்றுக்கு சட்ட ரீதியாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என கேட்டிருந்தார். அதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், இலங்கையில் இஸ்ரேல் இனத்தவர்களின் சமய மற்றும் கலாசார நிலையங்கள் என பொத்துவில், எல்ல, வெலிகம மற்றும் திபிரிகஸ்யாய ஆகிய பிரதேசங்களில் தாபிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தாபிக்கப்பட்டுள்ள சமய மற்றும் கலாசார நிலையங்களில் பொத்துவில் மற்றும் திபிரிகஸ்யாய ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நிலையங்கள் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன. மற்ற இரண்டு நிலையங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பொத்துவில் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நிலையத்தை பதிவு செய்யாமல் இருப்பதற்கான காரணம் தெரியாது. கிராம சேவகர் அந்த பகுதியில் துறை பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், அதுதொடர்பில் தகவல் பெற்றுக்காெள்ள அங்கு யாரும் இருக்கவில்லை என்பதால் பொது மக்களிடமிருந்து தகவல் பெற்றுக்கொண்டிருக்கிறார். அதன்போது அவர்கள், இது தனியார் காணி என்றும். அதனால் அதனை பதிவு செய்யாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இஸ்ரேல் இனத்தவர்கள் சுற்றுலா பயணிகளாக இந்த பிரதேசத்துக்கு வந்தால். இந்த மத நிலையத்தில் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தற்போது அவர்கள் இலங்கையில் இருந்து சென்றுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவித்ததாக கிராம சேவகரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் திம்பிரிகஸ்யாய பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டடம் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும் மத நிலையமாகவோ நிறுவனமாகவோ பதிவு செய்யப்பட்டதில்லை. பூஜை வழிபாட்டுக்காக என தெரிவித்து இஸ்ரேல் இனத்தவர்கள் 4பேர் அங்கு தங்கி இருந்துடன் வெளிபிரதேசங்களில் இஸ்ரேல் இனத்தவர்கள் மத வழிபாட்டுக்காக சம்பந்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டுள்ள வெளிகம மற்றும் எல்ல நிறுவனங்கள், நிறுவனங்கள் பதிவு செய்யும் பதிவாளர் காரியாலயத்திலே 2024- 4-22ஆம் திகதி பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்றார். இதன்போது மேலதிக கேள்வி ஒன்றை எழுப்பி முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குறிப்பிடுகையில், கொழும்பு பிரதேசத்தில் தற்போது இரண்டு இடங்களில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. அதில் ஒன்று கொழும்பு, 7 ரெட் சினமனுக்கு முன்னால் இருக்கும் ரபாப் ஹவுஸ். தெஹிவளை அல்விஸ் பிளேஸிலும் ஒரு நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு நிலையங்களும் சட்ட பூர்வமானதல்ல என்றும் பதிவு செய்யப்படவி்ல்லை என்றும் பிரதமர் கடந்த டிசம்பர் மாதம் இந்த சபையில் தெரிவித்திருந்தார்.ஆனால் அந்த இரண்டு நிலையங்களும் அரசாங்கத்தின் பொலிஸ் மற்றும் விசேட அதிரடைப்படை பாதுகாப்புடனே செயற்பட்டு வருகின்றன. சட்ட ரீதியற்ற இந்த மத நிலையங்கள் தொடர்பில் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன? என கேட்கிறேன் என்றார். அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், இலங்கையில் நான்கு மதங்கள் இருக்கின்றன. அவற்றுக்கென திணைக்களங்கள் இருக்கின்றன. அவை பதிவு செய்யப்படுவதற்கான முறையொன்று இருக்கிறது.ஆனால் இஸ்ரேலுக்கு சொந்தமான இந்த கட்டடங்கள் கம்பனி சட்டத்தின் கீழே பதிலாகி இருக்கின்றன. அவ்வாறு பதிவு செய்யப்படும்போது ஹோட்டல் அல்லது சிற்றுண்டிச்சாலை வியாபார நிலையம் போன்ற வடிவமே இருக்கும். ஆனால் அங்கு வேறு விடயங்கள் இடம்பெறுவதையே காணக்கூடியதாக இருக்கிறது. இவற்றின் தகவல்களை சேகரிப்பதும் கடினமான விடயமாகும். அது தொடர்பான தகவல்களை நாங்கள் சேகரித்து வருகிறோம். அதேநேரம் இந்த நிலையங்களுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவே எனக்கு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கொழும்பு 7இல் உள்ள நிலையத்துக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை அகற்றப்பட்டுள்ள போதும் பொலிஸ் பாதுகாப்பு தற்போதும் வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான மத்திய நிலையங்கள் ஊடாக இஸ்ரேல் எமது நாட்டுக்குள் மறைமுகமாக நுழைந்திருக்கிறதா என்ற சந்தேகம் இருக்கிறது. நாடுகளுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்துகின்ற, மதங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கின்ற, காசாவில் இன அழிப்பை மேற்கொண்டுவரும் இஸ்ரேல் தொடர்பில் அரசாங்கம் ஏன் இலகுவான முறையில் நடவடிக்கை எடுக்கிறது? அத்துடன் இந்த சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்துக்கு என்னும் எவ்வளவு காலம் தேவைப்படுகிறது என கேட்கிறேன். அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், யூதர்கள் எமது நாட்டுக்கு மத நடவடிக்கைகளுக்குதான் வருகிறார்கள் என எங்களுக்கு உறுதியாக தெரிவிக்க முடியாது. அவர்கள் சுற்றுலா பயணிகளாகவும் நாட்டுக்குள் வருகிறார்கள். எனவே இந்த சட்ட விரோத கட்டிடங்கள் தொடர்பில் இருக்கும் பிரச்சினையை தீர்ப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். என்றாலும் சுற்றுலா பயணிகளாக அவர்கள் நாட்டுக்குள் வரும்போது, சுற்றுலா பயணிகளாக அவர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகளை நாங்கள் செய்துகொடுக்க வேண்டி ஏற்படுகிறது என்றார். இலங்கையில் பதிவு செய்யப்படாத இஸ்ரேலிய சமய கலாசார நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை - சுனில் செனவி | Virakesari.lk
-
ரயில் சாரதியின் சாதுரியத்தால் தடுக்கப்பட்ட பாரிய விபத்து !
05 Jun, 2025 | 03:31 PM பாணந்துறையிலிருந்து மருதானைக்கு இன்று வியாழக்கிழமை (5) காலை, புறப்பட்ட ரயில் எண் 328, தானியங்கி ஒளி சமிக்ஞை 171 ஐ நெருங்கியபோது, ரயில் செல்வதற்கான பச்சை சமிக்ஞை காட்டப்பட்ட போதும் எதிரில் அதே தண்டவாளத்தில் ரயில் (S-11 சிவப்பு ரயில்) ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ரயில் சாரதியில் சாதுரியத்தால் பாரிய விபத்தொன்று தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பான சமிக்ஞைகளை பொருத்துமாறு கோரி ரயில் சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே தொழிற்சங்க செயலாளர் தெரிவித்தார். பாணந்துறைக்கும் மொரட்டுவைக்கும் இடையிலான சமிக்ஞை கோளாறு குறித்த தகவல் கிடைத்துள்ளது. விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சிக்கலை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நாட்டின் மிகவும் பரபரப்பான ரயில் மார்க்கங்களில் கரையோர மார்க்கமும் ஒன்றாக இருப்பதால் குறிப்பாக இந்த சம்பவத்தையடுத்து பயணிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். ரயில் சாரதியின் சாதுரியத்தால் தடுக்கப்பட்ட பாரிய விபத்து ! | Virakesari.lk
-
சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி
05 Jun, 2025 | 04:40 PM (எம்.நியூட்டன்) சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது என யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் செ.பிரணவன் தெரிவித்தார். உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு கருத்துகள்களை முன்வைக்கையில் அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்களிடையே உயிர்கொல்லி போதை மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது.சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது. உயிர்கொல்லி போதை மாத்திரையை வடக்குக்கு கொண்டு வரும் மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்திடமிருந்து அந்த மாத்திரைகள் விநியோகிக்கும் சங்கிலியை கண்காணித்து சோதனை செய்தாலே இதனை இலகுவாக கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றார். சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி | Virakesari.lk
-
மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் சமர்பிப்பு
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் தனிநபர் பிரேரணையாக மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் வியாழக்கிழமை (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் வழிமொழிந்தார். பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி கடந்த மே 22 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அந்த வர்த்தமானி அறிவித்தலில் 2017ஆம் ஆண்டில் செப்டம்பர் 21ஆம் திகதி வலுவிலிருந்த 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தோ்தல்கள் சட்டத்தின் ஏற்பாடுகள் 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கச் சட்டத்தினால் அதற்குச் செய்யப்பட்ட திருத்தங்கள் எவ்வாறிருப்பினும், 2017 செப்டம்பர் 22 ஆந் திகதியிலிருந்து தொடங்குகின்றதும் இந்த சட்டம் நடைமுறைக்கு வருகின்ற திகதி வரைக்குமான காலப்பகுதியின்போது செய்யப்பட்ட ஏதேனும் செயலுக்குப் பங்கமின்றிஇ அத்தகைய செயல் 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்கச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு ஒவ்வாதனவாகவிராத அளவுக்குஇ இச்சட்டம் வலுவுக்குவருகின்ற திகதியிலிருந்து பயனுறுவதாக நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் நேற்றையதினம் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் சமர்பிப்பு | Virakesari.lk
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் - டக்ளஸ்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன் சார்ந்து பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே டக்ளஸ் இதனைத் குறிப்பிட்டார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். அலுவலகத்துக்கு வருகை தந்த சிவஞானம், வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் - டக்ளஸ் | Virakesari.lk
-
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழ். பண்ணை கடற்கரையில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!!
2025ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது கடந்த 30 ஆம் திகதி முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது. இதனடிப்படையில் யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் அதிகார சபையின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. இதன்பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம் பிரிக்கபட்டு தூய்மைப்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ்.மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ். மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ். பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழ். பண்ணை கடற்கரையில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!!
-
புதிய கூட்டானது சுமந்திரன் மீதான முன்னணியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே - கீதநாத் தெரிவிப்பு!
வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய ஆணையை முன்னணி, சுயநல அரசியல் லாபங்களை மட்டுமே மையப்படுத்தி, சுமந்திரன் எதிர்ப்பு அரசியலாக மாற்றுவது தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கான பாரிய துரோகம் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இடையிலான புதிய கூட்டு குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தெற்கில் அனைத்து தேசிய கட்சிகளும் இணைந்து இந்த பித்தலாட்ட அரசாங்கத்திற்கு எதிராக அணி திரண்டு நிற்கும் போது, தமிழ் தேசியக் கட்சிகள் மட்டும் ஏன் ஓர் அணியில் சேர்ந்து செயல்பட முடியாது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர்; 2025ம் ஆண்டின் உள்ளுராட்சி சபைத்தேர்தல், அதற்கு முன்னரான இரண்டு தேர்தல்களின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களின் வெளிப்பாடாக அமைந்ததுடன், மக்கள் தமது மேலான ஆணையை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வழங்கியிருந்தனர். மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் மக்களுக்கான சேவையினை செய்வதற்குப் பதிலாக வாக்குகளை பெற்றுக்கொண்ட கட்சிகள் தனிப்பட்ட அரசியல் பகையை மட்டும் பிரதானப்படுத்தி செயற்படுவது தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கான பாரிய துரோகம். குறிப்பாக அண்மையில் புதிதாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இடையிலான புதிய கூட்டு, கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இதுவரை பேசி வந்த கொள்கைக்கு முற்றிலும் மாறான ஒன்று என்பதுடன், கஜேந்திரகுமார் தரப்புக்கு இருக்கும் சுமந்திரன் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக்கொள்ளும் ஒரு நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடிகிறது. தமிழ் மக்கள் கொடுத்த ஆணையை, இவ்வாறான தனிப்பட்ட எதிர்ப்பு அரசியலாக வெளிப்படுத்துவதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தெற்கில் அனைத்து தேசிய கட்சிகளும் இணைந்து இந்த பித்தலாட்ட அரசாங்கத்திற்கு எதிராக அணி திரண்டு நிற்கும் போது, தமிழ் தேசியக் கட்சிகள் மட்டும் ஏன் ஓர் அணியில் சேர்ந்து செயல்பட முடியாது? எனவே, தமிழ் மக்களை மையப்படுத்திய அரசியல் சேவையில் ஓர் அணியாக ஈடுபடுவதே மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் எதிர்பார்க்கும் ஒன்றாக காணப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார். புதிய கூட்டானது சுமந்திரன் மீதான முன்னணியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே - கீதநாத் தெரிவிப்பு!
-
குருந்தூர் மலையில் கைதான விவசாயிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன் போராட்டம்
04 Jun, 2025 | 01:07 PM யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (04) பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் "மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலியா, இந்த மண் எங்களின் சொந்தமண், பண்பாட்டு இனப்படுகொலையை நிறுத்து, குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், இனப்படுகொலை இராணுவமே வெளியேறு, தமிழரின் நிலம் தமிழருக்கே சொந்தம், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை" என கோஷமிட்டு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். குருந்தூர் மலையில் கைதான விவசாயிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன் போராட்டம் | Virakesari.lk
-
தமிழரசு கட்சியின் புதிய தலைவர் எதிர்வரும் வழக்குத் திகதியில் தனது பதிலியை சமர்ப்பிக்க வேண்டும் - நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு
04 Jun, 2025 | 01:37 PM (துரைநாயகம் சஞ்சீவன்) தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜாவின் மறைவுக்குப் பின்னர் அவருக்குப் பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அவரை இந்த வழக்கிலே முதலாவது எதிராளியாக பதிலீடு செய்துகொள்வதற்கே இன்றையதினம் குறித்த வழக்கு அழைக்கப்பட்டிருந்தது. அதற்கான ஆவணங்களை வழக்காளி, மன்றிலே சமர்ப்பித்திருக்கின்றார். புதிய தலைவர் சி.வி.கே.சிவஞானத்திற்கு இந்த வழக்கு தொடர்பான அறிவித்தல் கொடுத்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தன்னுடைய பதிலியை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என இன்றைய வழக்கிலே நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை சில நாட்களுக்கு முன்னர் சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தான் கட்சி உறுப்பினர் எனவும் இந்த வழக்கிலே தன்னை இடைபுகு மனுதாரராக சேர்த்துக் கொள்ளும்படியாகவும் ஒரு விண்ணப்பம் செய்திருக்கின்றார். இந்த வழக்கானது சென்ற வருடம் பெப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டு யாராவது வழக்கிலே அக்கறை உள்ளவர்கள் வழக்கிலே இணைந்து கொள்வதானால் 2024 பெப்ரவரி 29ஆம் திகதிக்கு முன்னதாக மன்றுக்கு வர வேண்டும் என்று பத்திரிகைகளிலே அறிவித்தலும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒன்றரை வருடங்கள் கழித்து தன்னை இடைபுகுமனுதாரராக சேர்த்துக் கொள்ளுமாறு சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் விண்ணப்பித்திருக்கின்ற காரணத்தினாலே நாங்கள் பலர் அதற்கு எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தோம். எனினும் சில எதிராளிகளின் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் எந்த எதிர்ப்பும் இல்லை அவர் சேர்த்துக் கொள்ளப்படலாம் என கூறியிருந்தார்கள். குறிப்பாக சிறிதரன், குகதாசன் மற்றும் யோகேஸ்வரன் சார்பிலே ஆஜரான சட்டத்தரணிகள் இந்த சந்தர்ப்பத்திலேயும் அவரை சேர்த்துக் கொள்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறியிருதார்கள். சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தன்னுடைய மனுவிலே இந்த வழக்கானது இழுபட்டுக் கொண்டு செல்கின்ற காரணத்தினாலே காலம் போய்க் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேதான் தன்னை இணைத்துக் கொள்ளும்படியாக தன்னுடைய மனுவின் 9ஆம் 10ஆம் பந்திகளிலே சொல்லியிருக்கின்றார். ஆகவே அதை மேற்கோள்காட்டி நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம். அவரை சேர்த்துக் கொள்வதா?, இல்லையா? என்ற விசாரணையே ஒரு வருடம் இழுபடும் இது வழக்கை இழுத்தடிப்பதற்கான ஒரு முயற்சி. எனவே அந்த இடைபுகுநரை மனுவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்ற எங்களுடைய ஆட்சேபனைக்காக வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தவணையிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் சி.வி.கே.சிவஞானமும் தன்னுடைய பதிலியை அணைக்க வேண்டியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். தமிழரசு கட்சியின் புதிய தலைவர் எதிர்வரும் வழக்குத் திகதியில் தனது பதிலியை சமர்ப்பிக்க வேண்டும் - நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு | Virakesari.lk
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் : நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பிலும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கஜேந்திரகுமார எம்.பி முன்வைத்த விடயம் தொடர்பில் விசேட கவனத்தை செலுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், துரிதமாக விசாரணைகளும் முன்னெடுக்கப்படும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பிலும் உங்களால் முன்வைக்கப்பட்டுள்ள விடயத்தின் முக்கியத்துவத்தை உணர்கின்றேன். அதன்படி இது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கின்றேன் என்றார். செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் : நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன | Virakesari.lk
-
வடக்கு காணி விவகாரம் : ஒரு வாரமாகியும் இரத்துக்கான வர்த்தமானி பிரசுரிக்கப்படவில்லை; நடவடிக்கை இன்றேல் சட்டமறுப்புப் போராட்டமே வழி - சுமந்திரன்
(நா.தனுஜா) அரசாங்கத்தினால் வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், இன்னமும் அதற்குரிய வர்த்தமானி பிரசுரிக்கப்படவில்லை. இரத்துச் செய்வது குறித்த வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வெளியிடப்படாவிடின், ஒத்திவைக்கப்பட்ட சட்டமறுப்புப் போராட்டத்தை ஆரம்பிப்பதைத் தவிர தமக்கு வேறு தெரிவுகள் இல்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார். வட மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அரசாங்கத்தின் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2430 இலக்க வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த வர்த்தமானி அறிவித்தலை முழுமையாக வாபஸ் பெறவேண்டும் எனக் கோரி வலுப்பெற்ற எதிர்ப்பை அடுத்து, அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதனை இரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதாக அரசாங்கம் அறிவித்திருப்பதன் காரணமாக கடந்த மாதம் 30ஆம் திகதி வட, கிழக்கில் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த பாரிய சட்டமறுப்புப் போராட்டம் மற்றும் ஹர்த்தாலை ஒத்திவைப்பதாகவும், இரத்து செய்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெகுவிரைவில் வெளியிடப்படாவிடின், அப்போராட்டம் முழுவீச்சில் முன்னெடுக்கப்படும் எனவும் சுமந்திரன் ஏற்கனவே எச்சரித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி புதன்கிழமை (4) கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன், 'காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதாக கடந்த மாதம் 27ஆம் திகதி அரசாங்கம் அறிவித்தது. நாம் விதித்த காலக்கெடுவுக்கு முன்னைய நாள் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் ஒரு வாரம் கடந்தும், இன்று வரை அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை. வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வெளியிடப்படாவிடின், சட்டமறுப்புப் போராட்டத்தை ஆரம்பிப்பதைத் தவிர எமக்கு வேறு தெரிவுகள் இருக்காது' எனத் தெரிவித்துள்ளார். வடக்கு காணி விவகாரம் : ஒரு வாரமாகியும் இரத்துக்கான வர்த்தமானி பிரசுரிக்கப்படவில்லை; நடவடிக்கை இன்றேல் சட்டமறுப்புப் போராட்டமே வழி - சுமந்திரன் | Virakesari.lk
-
பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வரும் பாரிய விமானம் - கொழும்பு மக்களுக்கு கிடைக்கும் விசேட வாய்ப்பு
03 Jun, 2025 | 01:22 PM ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய ஏர்பஸ் A330- 200 விமானம் நாளை 4 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது. பிரான்ஸிலிருந்து வரும் இந்த விமானம், கொழும்பின் கடற்கரையோரப் பகுதியில் 1,500 அடி உயரத்தில் தாழ்வாக பறந்து தரையிறங்கவுள்ளது. மொரட்டுவை கடற்கரைப் பகுதியில் இருந்து கொழும்பு போர்ட் சிட்டியின் தெற்கு முனையம் வரை, காலை 8 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் குறுித்த விமானம் தாழ்வாகப் பறக்கும் காட்சிகளை அவதானிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிட்டியுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவையை வலுப்படுத்தும் மற்றும் ஆதரிக்கும் முகமாக புதிய விமானம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தாழ்வாகப் பறந்து இலங்கையில் தரையிறங்கவுள்ள புதிய ஏர்பஸ் விமானம் ! | Virakesari.lk
-
யாழில் பொலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வுக்கான நடைபவனி நடைபெறவுள்ளது
இலங்கையில் பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைபவனி வியாழக்கிழமை (05) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற ஊடக சந்திப்பில் நடைபவனி ஏற்பாட்டாளர் சேவ் ஏ லைஃப் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சுதர்சிகா தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பொலித்தீன் பாவனையால் இன்று மானுடர்கள் மட்டமல்லாது விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள் என அத்தனை உயிரினங்களின் வாழ்வியலும் கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக ஒரு நாள் பாவனை பொலித்தீன் பைகள், பிளாஸ்ரிக் குவளைகள், பிளாஸ்ரிக் போத்தல்கள் உள்ளிட்டவற்றை மக்கள் பாவனையில் இருந்து இல்லாதொழிப்பது அவசியமாகும். ஆனாலும் ஆபத்து என்று தெரிந்தும் பாவனையாளர்கள் அந்த பாவனையில் இருந்து விடுபடுவதாக தெரியவில்லை. சில பொலித்தீன்கள் ஒன்று மண்ணுள் புதையும் போது அது உக்கலடைய 1000 ஆண்டுகள் செல்கின்றன. இதனால் பல்வேறு தாக்கங்களை உயிரினங்கள் எதிர்கொள்ள நேரிடுகின்றது. அந்தவகையில் பொலித்தீன்களால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்துவது சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். அதனடிப்படையில் நாம் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டமானது வியாழக்கிழமை (05) காலை 7.30 மணிக்கு யாழ் பொது நூலக பின் நுழைவாயில் அருகே ஆரம்பிக்கப்பட்டு யாழ் நகர் ஊடாக பிரவேசித்து நூலகத்தின் பிரதான நுழைவாயில் வரை நடைபவனி நிறைவு பெறவுள்ளது. இதில் மாணவர்கள் பொதுநல விரும்பிகள் என பலரும் கலந்து நிகழ்வை வலுப்படுத்தி விழிப்புணர்வின் நோக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல ஒத்துழைக்க வேண்டும் என்றனர். யாழில் பொலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வுக்கான நடைபவனி நடைபெறவுள்ளது - சேவ் ஏ லைஃப் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் | Virakesari.lk
-
ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் ; பேரழிவை தடுக்குமாறும் கோரிக்கை
03 Jun, 2025 | 03:19 PM வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் எமது கடல் வளத்தினையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இலங்கைக் கடற் பரப்புக்குள் எல்லைத் தாண்டியதும், சட்டவிரோதமானதுமான இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் தொழில் செயற்பாடுகள் காரணமாக எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களும், கடல் வளமும் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இத்தகைய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நாமும் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தும், அவை முழுமை பெறவில்லை. தற்போது மீனினங்களின் இனப் பெருக்கக் காலம் என்பதால் இந்திய மீனவர்கள் எமது கடற் பரப்புக்குள் தொழில் நிமித்தம் வருவதில்லை. இது ஒவ்வொரு வருடமும் நிகழ்வதாகும். அந்த வகையில் இந்த வருடம் இக்காலகட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொடங்கி எதிர்வரும் 15ஆம் திகதி முடிவடைகின்றது. இந்த காலகட்டம் முடிவடைந்த நிலையில் - அதாவது எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர் ஆயிரக் கணக்கிலான இந்திய இழுவை மடி வலைப் படகுகள் இலங்கை கடற் பரப்புக்குள் நிச்சமயாக வரும். எனவே, இவ்விடயம் தொடர்பில் தங்களது அவதானத்தைச் செலுத்தி, ஒரு பக்கத்தில் இது தொடர்பிலான இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளை இந்திய அரசுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். மறு பக்கத்தில் இலங்கையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டும், இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் இலங்கைக் கடற் பரப்பிற்குள்ளான செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் ; பேரழிவை தடுக்குமாறும் கோரிக்கை | Virakesari.lk
-
மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் மூன்றாம் கட்ட பணிகளை ஆரம்பிக்க தீர்மானம்
03 Jun, 2025 | 04:31 PM (எம்.மனோசித்ரா) யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் மூன்றாம் கட்ட பணிகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறித்த துறைமுக அபிவிருத்தி பணிகள் மூன்றாம் கட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கட்டத்தின் கீழ் வடமாகாணத்திலுள்ள மீனவ சமூகம், கிழக்கு மற்றும் தென் மாகாணத்திலிருந்து வருகைதரும் மீன்பிடிப் படகுகளுக்கான நீர், மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய வசதிகள், மீனவர்களுக்குத் தேவையான வலை தயாரிக்கும் வசதிகள், ஏலவிற்பனை மண்டப வசதிகள் மற்றும் வான்வழிச் செய்திப் பரிமாற்ற வசதிகள் போன்றவற்றை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் மூன்றாம் கட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள தரையில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுமானங்களை மேற்கொள்வதற்கும், கருத்திட்டக் காலப்பகுதியை 2027 வரைக்கும் நீடிப்பதற்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் மூன்றாம் கட்ட பணிகளை ஆரம்பிக்க தீர்மானம் | Virakesari.lk
-
கிருஷாந்தி குமாரசாமி படுகொலை: குற்றவாளிகளின் மனு தள்ளுபடி
கிருஷாந்தி குமாரசாமி கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஐந்து குற்றவாளிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக மேல்முறையீடு செய்ய செவ்வாய்க்கிழமை (03) மறுத்துவிட்டது. நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க, அச்சலா வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு மனுவை தள்ளுபடி செய்ய முடிவு செய்தது. முதல் குற்றவாளியான சோமரட்ண ராஜபக்ஷ உள்ளிட்ட மனுதாரர்கள், தாங்கள் பல ஆண்டுகளாக மரண தண்டனையில் இருப்பதால் நிவாரணம் கோரினர். அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாவிட்டால், ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் அல்லது அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று அவர்கள் மனுவில் கோரியிருந்தனர். அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்த ஜனாதிபதி வழக்கறிஞர் மனோகர டி சில்வா, மனுதாரர்கள் தங்கள் சமர்ப்பிப்புகளில், மரண தண்டனை விதிக்கப்பட்டு நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்படுவது கொடூரமானது மற்றும் மனிதாபிமானமற்றது என்றும், இதன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் கூறினர். சிறைச்சாலை ஆணையர் நாயகம் சார்பாகவும், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் சட்டமா அதிபர் சார்பாகவும் ஆஜரான மூத்த துணை சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க, பல ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்பினார். ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது ஜனாதிபதியின் விருப்பப்படி மட்டுமே உள்ளது என்றும், எந்தவொரு குற்றவாளியும் அதை சட்டப்பூர்வ உரிமையாகவோ அல்லது உரிமையாகவோ கோர முடியாது என்பதும் சட்டமா அதிபர் எழுப்பிய முக்கிய ஆட்சேபனைகளில் ஒன்றாகும். விண்ணப்பம் காலக்கெடுவுக்கு உட்பட்டது என்றும், மனுதாரர்கள் சுத்தமான கைகளுடன் நீதிமன்றத்தை அணுகத் தவறிவிட்டனர் என்றும் சட்டமா அதிபர் வாதிட்டார். இந்த ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்டே உயர்நீதிமன்ற மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு, அடிப்படை உரிமைகள் மனுவை மறுத்துவிட்டது. 1990களின் பிற்பகுதியில் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கிருஷாந்தி குமாரசாமி வழக்கு, ஒரு பாடசாலை மாணவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மூவரை இராணுவத்தினர் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை உள்ளடக்கியது. 1998 ஆம் ஆண்டு ட்ரயல்-அட்-பார் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளையும் உறுதி செய்து, அவர்களின் மேல்முறையீட்டையும் தள்ளுபடி செய்தது. Tamilmirror Online || கிருஷாந்தி குமாரசாமி படுகொலை: குற்றவாளிகளின் மனு தள்ளுபடி
-
’எம்.ஏ. சுமந்திரன் - கஜேந்திரகுமார் நாளை பேச்சு’
மூன்று கட்சிகளும் இணைந்து பேசுவோம்; சித்தார்த்தனிடம் சுமந்திரன் தெரிவிப் 29 May, 2025 | 06:31 PM (நா.தனுஜா) அகில இலங்கை தமிழ் காங்கிரஸுடனான இன்றைய சந்திப்பின் பின்னர் தேவையேற்படின் இலங்கைத் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து கலந்துரையாடமுடியும் என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸுக்கும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணிக்கும் இடையில் புதன்கிழமை (28) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது வட, கிழக்கு மாகாணங்களில் உள்ளுராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. அதனையடுத்து புதன்கிழமை (28) இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து மீண்டும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது தமக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்து சித்தார்த்தன் பிரஸ்தாபித்தார். அதனைத்தொடர்ந்து வியாழக்கிழமை (30) தமக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவிருப்பதாகவும், அதன் பின்னர் தேவையேற்படின் மூன்று கட்சிகளும் இணைந்து கலந்துரையாடமுடியும் எனவும் சுமந்திரன் கூறியதாக சித்தார்த்தன் கேசரியிடம் தெரிவித்தார். அதேவேளை உள்ளூ ராட்சிமன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோருடன் நேற்றைய தினம் தான் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியதாக சுமந்திரன் குறிப்பிட்டார். மூன்று கட்சிகளும் இணைந்து பேசுவோம்; சித்தார்த்தனிடம் சுமந்திரன் தெரிவிப்பு | Virakesari.lk
-
தமிழரின் தொன்மை கூறும் கீழடி ஆய்வறிக்கையை கேள்வி எழுப்பும் இந்திய தொல்லியல் துறை - என்ன நடக்கிறது?
‘கீழடி அறிக்கையை வெளியிடுவதில் அக்கறை காட்டவில்லை என்பது கற்பனை’ - தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கீழடி அகழாய்வுப் பணி | கோப்புப் படம் புதுடெல்லி: கீழடி அறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அக்கறை காட்டவில்லை என்பது ஒரு கற்பனைக் கதை என்றும், இது வேண்டுமென்றே துறையை தவறாக சித்தரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது என்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை விளக்கம் அளித்துள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கை வெளியீடு குறித்து ஊடகங்களின் ஒரு பகுதியினரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட செய்திக் கட்டுரைக்கு எதிராக இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையானது தலைமை இயக்குநரின் பெயரில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களின் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு அகழ்வாராய்ச்சிப் பணியிலும் அதிக நேரம், ஆற்றல் மற்றும் பணம் செலவிடப்படுவதால், இந்த அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இல்லையெனில் அகழ்வாராய்ச்சிப் பணியின் அடிப்படை நோக்கம் நிறைவேற்றப்படாமலேயே இருக்கும். ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டில், அகழ்வாராய்ச்சியாளர்களால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அவை பல்வேறு துறை நிபுணர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவர்கள் அறிக்கைகளை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். துறை வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு மாற்றங்கள் அகழ்வாராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக வெளியீட்டிற்காக மீண்டும் சமர்ப்பிக்கப்படுகின்றன. பின்னர் இவை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் நினைவுக் குறிப்புகளாக வெளியிடப்படுகின்றன. கீழடி அறிக்கையிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. அதில் அறிக்கை நிபுணர்களுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. அதன்படி, கீழடியின் அகழ்வாராய்ச்சியாளரால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு அறிக்கையில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கான நிபுணர்களின் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் தற்போதுவரை திருத்தத்தை மேற்கொள்ளவில்லை. ஊடகங்களின் ஒரு பகுதியில் பரப்பப்படும் செய்தி தவறாக வழிநடத்துகிறது. இது உண்மைக்குப் புறம்பானது மற்றும் முற்றிலும், கடுமையாக மறுக்கப்படுகிறது. ஒரு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்தின் முக்கியத்துவத்தை தலைமை இயக்குநரும் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவன அதிகாரிகளும் புரிந்துகொள்கின்றனர். ஆனால் அனைத்து அறிக்கைகளும் வெளியீட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு முறையான ஆய்வு, திருத்தம், சான்று வாசிப்பு மற்றும் வடிவமைப்பு தேவையாக உள்ளது. கீழடி அறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அக்கறை காட்டவில்லை என்பது ஒரு கற்பனைக் கதையாகும். இது வேண்டுமென்றே துறையை தவறாக சித்தரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. ஊடகங்கள் ஒரு விஷயத்தின் நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு, அதிலும் தொல்லியல் போன்ற தொழில்நுட்ப விஷயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து, வெளியிடுவதற்கு முன் முழுமையான புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுமாறு இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘கீழடி அறிக்கையை வெளியிடுவதில் அக்கறை காட்டவில்லை என்பது கற்பனை’ - தொல்பொருள் ஆய்வு நிறுவனம் | ASI is uninterested in publication of Keeladi report is a figment of imagination: ASI - hindutamil.in
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
கமல்ஹாசன் கூறியது யாரும் மறுக்க முடியாத உண்மை: சீமான் விருதுநகர்: “கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராடும்போது, தமிழகத்தில் அவருக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காதது ஏன்?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விருதுநகரில் இன்று (மே 29) நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சீமான் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. கமல்ஹாசன் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராடும்போது, தமிழகத்தில் அவருக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காதது ஏன்? தமிழக முதல்வராக இருந்துகொண்டு, கர்நாடக தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், கர்நாடகாவுக்கு எதிராக எப்படி கருத்து கூறுவார்” என்று கூறினார். முன்னதாக, இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார். விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், “கன்னட நடிகர் ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் (கர்நாடகாவில்) இருக்கும் என்னுடைய குடும்பம். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்” என தெரிவித்தார். இதையடுத்து, கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர் மன்னிப்பு கேட்காவிடில் ‘தக் லைஃப்’ படத்துக்கு தடை விதிக்கப்படும் என அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி எச்சரிக்கை விடுத்தது கவனிக்கத்தக்கது. கமல்ஹாசன் கூறியது யாரும் மறுக்க முடியாத உண்மை: சீமான் | What Kamal Haasan said is a truth that no one can deny: Seeman - hindutamil.in
-
சமையல்காரர் போட்டியில் கஸ்தூரி ராமேஸ்வரன் பதக்கங்களை அள்ளினார்
26வது "எக்ஸ்போ குளினெய்ர்" சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 04 தங்கப் பதக்கங்கள், 03 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களை வென்ற மூன்று சமையல்காரர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தை வியாழக்கிழமை (29) அதிகாலையில் வந்தடைந்தனர். இந்தப் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில், மே.21 முதல் 23 ஆம் திகதி வரை நடைபெற்றது, இதில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். சமையல்காரர் கஸ்தூரி ராமேஸ்வரன் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களை வென்றார். அவர் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் மற்றும் அந்தப் பகுதியில் சமையல்காரர் படிப்புகளை வழங்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதேபோல், நீர்கொழும்பில் வசிக்கும் எஃப். நிலுஃபா, இந்தப் போட்டியில் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றார். அவர் நீர்கொழும்பில் ஒரு சமையல் பயிற்சி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதேபோல், இந்தப் போட்டியில் எம்.ஆர்.எஃப். ஃபஸ்லியா 02 தங்கப் பதக்கங்களையும் 01 வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். அவர் கொழும்பில் வசிப்பவர், அதே பகுதியில் சமையல் பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர்கள் மூவரும் முதல் முறையாக இதுபோன்ற ஒரு சர்வதேச போட்டியில் பங்கேற்று இத்தகைய வெற்றிகளைப் பெறுவது சிறப்பு. மூவரும் ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் G9-587 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வியாழக்கிழமை (29) அதிகாலை 04.30 மணிக்கு வந்தடைந்தனர், மேலும் அவர்களது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அடங்கிய ஒரு பெரிய குழுவும் அவர்களை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். Tamilmirror Online || சமையல்காரர் போட்டியில் கஸ்தூரி ராமேஸ்வரன் பதக்கங்களை அள்ளினார்
-
தனித்தமிழர் வாழும் கல்லாற்றில் புத்தர் சிலையா ?
வி.ரி.சகாதேவராஜா மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித் தமிழ் மக்கள் முழுமையாக வாழ்கின்ற கல்லாற்றில் புத்தர் சிலை தொடர்ந்து நிலை கொண்டிருப்பது முறையாகுமா? தேவையா? அது இன சௌஜன்யத்தை, நல்லிணக்கத்தை பாதிக்கும். எனவே அச்சிலை அகற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மா.நடராஜா தெரிவித்தார். கல்லாற்றில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்... பெரிய கல்லாறு பாலத்தின் அருகே பிரதான வீதியில் இராணுவ சூழல் இருந்த காலகட்டத்தில் இந்த புத்தர் சிலை ஒரு தனியார் காணியில் வைக்கப்பட்டிருக்கின்றது . சின்னவத்தை பிரதேச பிக்கு ஒருவரினால் இந்த சிலை அடாத்தாக அந்த காணியிலேயே வைக்கப்பட்டதாக அறிகிறேன். அந்த காலகட்டத்திலே இராணுவம், பொலிஸார் ஆட்சி நிலவிய காலம் என்ற காரணத்தினால் பொது மக்களாலோ ஏனைய அரசியல் வாதிகளாலோ எதுவும் செய்ய முடியாத ஜனநாயக மற்ற ஒருசூழ்நிலை இருந்தது . ஆனால், இன்று சகல இன மக்களையும் அனுசரித்து சாதி, இன,மத பேதம் இல்லாமல் ஊழல் ஒழிப்போம் என்று வந்த அரசாங்கம் ஆட்சியில் உள்ளது. எனவே, முழு தமிழ் மக்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் வாழ்கின்ற இந்த கல்லாற்றில் அதுவும் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்பாக தனியார் காணியில் அடாத்தாக வைக்கப்பட்டது. இன்று அங்கு எந்த பௌத்தர்களும் இல்லை. வணங்குவதற்கு கூட யாருமில்லை. இன்று அது அங்கு அவசியமா? என்ற கேள்வி எழுகின்றது. இது தொடர்பாக இந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் வாய்திறப்பதாகவும் இல்லை . எதற்கெல்லாமோ குரல் எழுப்புகிறார்கள். ஆனால், எமது உரிமையோடு இருப்போடு மண்ணோடு கூடிய இந்த விஷயத்தை கண்டும் காணாமல் இருக்கிறார்கள். இதேபோல் உகந்தமலையிலும் புத்தர் சிலை முளைத்துள்ளது. இந்துவாகப் பிறந்த புத்த பகவான் எந்த இடத்திலும் தன்னை கொண்டு இப்படி ஏனைய இன வேறிடத்தில் நிறுத்தி இன உறவை சீரழிக்குமாறு கூறவில்லை .உகந்த மலையில் அதே செயல்பாடு தான் தொடர்ந்திருக்கிறது. எனவே, நல்லிணக்க அரசாங்கம் இதை கவனத்தில் கொண்டு இவ்வாறு தனித் தமிழர்கள் வாழ்கின்ற இடங்களில் இருக்கின்ற இந்த புத்தர் சிலைகளை அகற்ற வேண்டும் என்று அன்பாக வேண்டிக் கொள்கிறேன் என்றார். Tamilmirror Online || தனித்தமிழர் வாழும் கல்லாற்றில் புத்தர் சிலையா ?
-
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து இன்று பாதயாத்திரையை தொடர்ந்த பக்தர்கள்!
29 May, 2025 | 04:57 PM கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரையினை மேற்கொண்டுள்ள குழுவினர், மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்துக்கு நேற்று வருகைதந்து, அங்கு தங்கியிருந்து, இன்று (29) காலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு, பின்னர், பாதயாத்திரையினை தொடர்ந்தனர். வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் விழாவினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பமான இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரையானது மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரத்தினை நேற்று (28) மாலை சென்றடைந்தது. மே மாதம் 1ஆம் திகதி தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து சிங்கராஜா ஜெயராஜா வேல்சாமி தலைமையில் இந்த பாதயாத்திரை ஆரம்பமானது. வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை ஆகிய 7 மாவட்டங்களையும் இணைத்து 55 நாட்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இந்த புனித பாதயாத்திரை இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாதயாத்திரை ஆகிறது. நேற்று மாலை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதந்த பாதயாத்திரை குழுவினர் அங்கு தங்கியிருந்து இன்று (29) காலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டு பாதயாத்திரையினை ஆரம்பித்தனர். எதிர்வரும் 20ஆம் திகதி உகந்தைமலை முருகன் ஆலயத்திலிருந்து யால காட்டுவழிப்பாதை திறக்கப்படும்போது அதன் ஊடாக பயணித்து 25ஆம் திகதி கதிர்காம கந்தன் ஆலயத்தினை சென்றடையவுள்ளதாக சிங்கராஜா ஜெயராஜா வேல்சாமி தெரிவித்தார். மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து இன்று பாதயாத்திரையை தொடர்ந்த பக்தர்கள்! | Virakesari.lk
-
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் ஆனால் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மற்றுமொரு சட்டம் அவசியம்-சிவில் சமூக பிரதிநிதிகளிடம் நீதியமைச்சர்
29 May, 2025 | 02:28 PM பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் ஆனால் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மற்றுமொரு சட்டம் அவசியம் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் புதிய சட்டம் அவசியமில்லை என சிவில் சமூக பிரதிநிதிகள் அவரிடம் விடுத்த வேண்டுகோளிற்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் இன்று நீதியமைச்சரை சந்தித்தனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆராயும் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட சமர்ப்பிப்பில் கையொப்பமிட்ட பிரதிநிதிகள் குழுஇ இன்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவைச் சந்தித்துஇ பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் புதிய பயங்கரவாதச் சட்டத்தால் அதை மாற்றக் கூடாது என்ற எங்கள் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. வரலாற்று ரீதியாக அரசாங்கம் தன்னை பாதுகாப்பதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்துள்ளது என்பதை இந்தக் குழு எடுத்துக்காட்டியது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீண்டகால தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்களில் சிலர் 15-16 ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அதுவரை அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் மேலும் அதை ஒரு புதிய பயங்கரவாதச் சட்டத்தால் மாற்றக் கூடாது என்றும் அவர்கள் அழைப்பு விடுத்தனர் - இந்த நிலைப்பாட்டையே ஜேவிபி பல வருடங்களாக பின்பற்றி வந்தது . குழுவின் அமைப்பையும் அவர்கள் விமர்சித்தனர் ஏனெனில் இது பெரும்பாலும் இராணுவ மற்றும் அரசு அதிகாரிகளைக் கொண்டுள்ளது மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவம் இல்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக நீதியமைச்சர் அமைச்சர் உறுதியளித்தார் ஆனால் வெளிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய மற்றொரு சட்டம் அவசியம் என்று அவர் தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் ஆனால் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மற்றுமொரு சட்டம் அவசியம்-சிவில் சமூக பிரதிநிதிகளிடம் நீதியமைச்சர் | Virakesari.lk
-
முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சந்திரன் கிராம வீடுகள் மக்களிடம் கையளிப்பு!
29 May, 2025 | 03:08 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'சந்திரன் கிராமம்' வீடுகள் கையளிப்பு நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் புதன்கிழமை (28) கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பில் நடைபெற்றது. குறித்த சந்திரன் கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த கையளிப்பு நிகழ்வில் இந்நிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நஷிமுதீன்,தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் அரவிந்த ஸ்ரீநாத், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், கிராம அலுவலகர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சந்திரன் கிராம வீடுகள் மக்களிடம் கையளிப்பு! | Virakesari.lk
-
முல்லைத்தீவில் குடிநீர் விநியோகம் திறந்து வைப்பு !
29 May, 2025 | 04:32 PM நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக புதன்கிழமை (28) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் பல்வேறு அபிவிருத்தித் திட்ட வேலைகளை திறந்து வைத்தார். இதில் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் கொக்குத்தொடுவாயில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் விநியோக நிலையத்தினை திறந்துவைத்ததுடன் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தினை சம்பிரதாயபூர்வமாக மக்களிடம் வழங்கி வைத்தார். குறித்த குடிநீர் திட்ட வேலைத்திட்டமானது 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் தற்போது அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தது. இந்தக் குடிநீர்த் திட்டமானது கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 1250 குடும்பங்களுக்கு வழங்கக்கூடியதுடன் திட்டத்தின் ஆரம்பத்தில் 250 குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கும் நடைமுறையில் நான்கு குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நஷிமுதீன், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய பொறியியலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், கிராம அலுவலகர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முல்லைத்தீவில் குடிநீர் விநியோகம் திறந்து வைப்பு ! | Virakesari.lk