Everything posted by பிழம்பு
-
உழவு இயந்திரத்தை கொண்டு கரைவலை இழுப்பதற்கு அனுமதி கோரி இரகசிய கடிதம் - ஆழியவளையில் முறுகல் நிலை!
யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைக்குள் உழவு இயந்திரத்தை பாவித்து கரைவலை தொழில் புரிவது தடை செய்யப்பட்ட போதிலும் தொடர்ந்து உழவு இயந்திரத்தை பாவித்து நபர் ஒருவர் தொழில் புரிந்துவருவதால் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்; கடந்த 2024ஆம் ஆண்டு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைப் பகுதிக்குள் மனித வலுவற்று உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் புரிவது தடை செய்யப்பட்டு பொதுச்சபையாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆயினும் பொதுச்சபையினதும், நீரியல்வளத் திணைக்களத்தினதும் சட்டதிட்டங்களை மீறி அப்பகுதியில் நபர் ஒருவர் அடாத்தாக உழவு இயந்திரத்தை பாவித்து தொடர்ந்து கரைவலை தொழில் புரிந்துவருவது மீனவர்கள் இடையே முறுகல் நிலையை உண்டுபண்ணி வருகின்றது. பொதுச்சபையின் தீர்மானத்தை மீறி ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் இரகசியமான முறையில் குறித்த கரைவலை சம்மாட்டிக்கு உழவு இயந்திரத்திற்கு அனுமதி பெற்றுக் கொடுப்பதற்காக நீரியல் வளத்திணைக்கள அதிகாரிக்கு கடிதம் எழுதியது அம்பலமாகியுள்ளது. செயற்பாட்டில் இருந்த ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க செயலாளர் பதவியில் இருந்து விலகிச் சென்றதால் கடந்த பொதுச்சபை கூட்ட தீர்மானத்தில் செயலாளர் ஒருவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்தார். தேர்தல் காலமாக இருப்பதால் தேர்தல் முடியும்வரை தற்பொழுது தெரிவு செய்யப்பட்ட செயலாளருக்கு படகு பதிவு செய்தல், படகு விற்பனை, அங்கத்தவர்களுக்கு வங்கி கணக்கு பதிவு செய்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு கடிதம் வழங்கவே பொதுச்சபையால் அனுமதிக்கப்பட்டது ஆயினும் ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் மிக இரகசியமான முறையில் மீனவர்களின் தீர்மானத்தை மீறி உழவு இயந்திரத்திற்கு அனுமதி கோரி நீரியல்வளத் திணைக்களத்திற்கும், பாதுகாப்பு கோரி மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகத்தினரின் அண்மைக்கால செயற்பாடுகள் தமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால் நிர்வாகம் அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டுமென அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர் அப்பகுதி மீனவர்களின் தீர்மானத்தை மீறி இரகசியமான முறையில் சட்டவிரோதமாக உழவு இயந்திரத்திற்கு அனுமதி கோரி கடிதம் எழுதிய ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க செயலாளர், தலைவர் ஆகியோர் மீனவர்கள் இடையே இடம்பெறும் முறுகல் நிலைக்கு பொறுப்பென அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். உழவு இயந்திரத்தை கொண்டு கரைவலை இழுப்பதற்கு அனுமதி கோரி இரகசிய கடிதம் - ஆழியவளையில் முறுகல் நிலை!
-
தெரு நாய்களை அகற்றுமாறு அரசாங்கம் சுற்றறிக்கை ; விலங்குகள் நல அமைப்புகளும் ஆர்வலர்களும் போராட்டம்
03 Apr, 2025 | 05:20 PM இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது, வீதியைச் சூழவுள்ள பகுதிகளில் இருந்து தெரு நாய்களை அகற்றுமாறு இலங்கை அரசாங்கம் சுற்றறிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கு விலங்குகள் நல அமைப்புகளும் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விலங்குகள் நலனுக்கு எதிரானது, நெறிமுறையற்றது, விலங்குகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது மற்றும் நீண்டகால மனித - நாய் மேலாண்மை திட்டங்களை மீறுகிறது என்று தெரிவித்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், இலங்கையில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் விலங்கு உரிமை ஆர்வலர்களின் குழுவான RARE Sri Lanka, இன்று வியாழக்கிழமை (03) கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. தெரு நாய்களை அகற்றுமாறு அரசாங்கம் சுற்றறிக்கை ; விலங்குகள் நல அமைப்புகளும் ஆர்வலர்களும் போராட்டம் | Virakesari.lk
-
மார்ச் மாதத்தில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை
2025 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 229,298 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 722,276 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 118,315 ஆகும். இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து 93,568 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 69,705 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 50,201 சுற்றுலாப் பயணிகளும்,சீனாவிலிருந்து 39,513 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 43,366 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 27,353 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இதேவேளை, கடந்த ஜனவரி மாதத்தில் 252,761 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரி மாதத்தில் 240,217 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை | Virakesari.lk
-
இலங்கையில் வரவேற்பை பெறும் விந்தணு தானம்
கொழும்பு காசல் மகப்பேற்று மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கி ஏற்கெனவே ஆறு பெண்களுக்கு உதவியுள்ளதாகவும் விந்தணு தானம் குறித்து தேவையான தகவல்களை நாங்கள் வழங்குகிறோம் என்றும் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அஜித் குமார தண்டநாராயணா தெரிவித்துள்ளார். டெய்லி மிரருக்கு அளித்துள்ள செவ்வியின்போதே அவர் அதனை குறிப்பிட்டள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, இலங்கையில் மலட்டுத்தன்மையுடன் இருக்கும் தம்பதிகளுக்கு உதவுவதில் இது ஒரு பெரிய படியாகும். சமீபத்தில் திறக்கப்பட்ட விந்தணு வங்கி, ஏற்கெனவே விந்தணு தானத்திற்கு சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்களை பதிவு செய்துள்ளனர். இந்த முயற்சியின் மூலம் சுமார் 200 மலட்டுத்தன்மை கொண்ட பெண்கள் உள்ளனர் குழந்தை பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். "இந்த விந்தணு வங்கியின் முக்கிய குறிக்கோள், மலட்டுத்தன்மையுடன் போராடும் பெற்றோருக்கு குழந்தைகளைப் பெற உதவுவதாகும். விந்தணுவை தானம் செய்ய விரும்புவோர் பல மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், விந்தணு தானம் குறித்து மருத்துவமனை தினமும் தொலைபேசி விசாரணைகளைப் பெறுவதாகவும் ஆர்வமுள்ளவர்களுக்கு தேவையான தகவல்களை நாங்கள் வழங்குகிறோம் என்றும் கூறினார். Tamilmirror Online || இலங்கையில் வரவேற்பை பெறும் விந்தணு தானம்
-
யாழில், கடவுசீட்டு பிராந்திய அலுவலகம்
இலங்கையில் அதிகளவான மாவட்டங்களைக் கொண்டுள்ள வடமாகாணத்தில் தற்போது வவுனியா மாவட்டத்தில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு விடயஞ்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வவுனியா பிராந்திய அலுவலகத்திற்குப்பயணம் செய்வதற்கு அதிக நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. வடமாகாண மக்கள் அதிகளவில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளமையால், அவர்களுக்கான துரித சேவைகளை வழங்குவதற்காக குடிவரவுமற்றும் குடியகல்வுதிணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிப்பது பொருத்தமானதென, 2025.01.31 அன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்மொழியப்பட்டுள்ள யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் இம்மாதத்திலேயே நிறுவுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. Tamilmirror Online || யாழில், கடவுசீட்டு பிராந்திய அலுவலகம்
-
யாழ் ராணியின் ஒருங்கற்ற ரயில் சேவையால் பயணிகள் பெரும் அந்தரிப்பு!
வடக்கின் பிரதான ரயில் சேவைகளுள் ஒன்றான யாழ் ராணியின், ஒழுங்கற்றதும் பலவீனமானதுமான சேவைகள் காரணமாக தாம் பாதிக்கப்படுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையிலிருந்து காலை 6 மணிக்கு சேவைகளை ஆரம்பிக்கும் யாழ் ராணி, அனுராதபுரத்தை காலை 10:30 மணியளவில் சென்றடையும். அதன் பின்னர் மாலை 2:30 மணியளவில் அனுராதபுரத்தில் இருந்து புறப்படும் சேவையானது மாலை 6:30 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும். அரச அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரின் நேர அட்டவணையுடன் தொடர்புடைய ரயில் சேவையாக இருப்பதால், அவர்களில் பலர் இந்த ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த ஒரு மாதமாக முன்னறிப்புகள் இல்லாமல் ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்படுவதால் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அத்துடன் ரயில் சேவைகளில் நேரதாமதங்களும் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் காங்கேசன்துறை ரயில்நிலைய பொறுப்பதிகாரியுடன் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் தெரிவித்ததாவது: வடக்கில் தற்போது ஒரேயொரு இயந்திரமே சேவையில் ஈடுபட்டு வருகின்றது. ஆதலால்தான், சேவையில் தாமதங்கள் ஏற்படுகின்றன. விரைவில் இந்தப் பிரச்சினைகள் சீர்செய்யப்படும் - என்றார். ஒருங்கற்ற ரயில் சேவையால் பயணிகள் பெரும் அந்தரிப்பு!
-
மாகாணசபை தேர்தல்கள் இந்த வருடம் இல்லை - அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ
02 Apr, 2025 | 08:59 AM (செ.சுபதர்ஷனி) இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் இவ்வருடம் வேறு எந்த தேர்தலும் இடம்பெறாது. உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் மாகாணசபை தேர்தல் இடம்பெறும். எனினும் இவ்வருடம் தேர்தல் இடம்பெறாது. தேர்தலை நடத்த தேர்தல் சட்ட விதிமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளமையால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை (01) பாணந்துறையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தால் அரசியல் தலைவர்கள் எவருக்கும் வாகன பேமிட் வழங்கப்பட மாட்டாது. அரசியல் தலைவர்களுக்காக வழங்கப்படும் சலுகைகளை குறைப்பதே எமது நோக்கம். அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் பணிபுரிவதற்கு அத்தியாவசியமான வளங்கள் வழங்கப்படும் அதனைக் கொண்டு கடமையாற்றுங்கள். நாட்டின் பொருளாதாரம் ஸ்த்திர நிலையை அடையும் வரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அரச வாகனங்கள் வழங்கப்பட மாட்டாது. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்றம் அமைதியாக செயற்படுகிறது. இந்த அரசியல் கலாசாரமே நாட்டின் அபிவிருத்திக்கு சிறந்த அடித்தளமாக உள்ளது. நாட்டை மறுசீரமைப்பதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒரு தேசிய கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் செயல்படுவது அவசியம். ஆகையால் அத்திட்டத்தின் படி பாணந்துறை மட்டுமல்லாது அனைத்து உள்ளூராட்சிப் பிரிவுகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும். இம்முறை தேர்தலில் சுமார் 70 சதவீத மக்களின் வாக்குகளால் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற செய்யுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுகிறேன். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற மாட்டார் எனக் கூறிய நபேரே பொதுமக்களால் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்குமாறு நாம் கோரவில்லை. எனினும் மக்கள் எம்மை வெற்றிப்பெறச் செய்தனர். அதிகூடிய ஆசனங்களை கைப்பற்றிய கட்சியாக வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக அது பதிவாகியுள்ளது. அதேபோல் உள்ளூராட்சி பலதையும் எமக்கு பொதுமக்கள் அளிபார்கள் என்ற நம்பிகையுள்ளது. இது மிகவும் அவசியம். நாள்தோறும் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் இவ்வருடம் வேறு எந்த தேர்தலும் இடம்பெறாது. உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் மாகாணசபை தேர்தல் இடம்பெறும். எனினும் இவ்வருடம் தேர்தல் இடம்பெறாது. தேர்தலை நடத்த தேர்தல் சட்ட விதிமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளமையால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். இவ்வருடம் மாகாணசபை தேர்தல் இடம்பெறாது - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ | Virakesari.lk
-
பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மாருக்கு இலங்கை நிதியுதவி
02 Apr, 2025 | 04:18 PM பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மாருக்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி வழங்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. அதன்படி, மியன்மாரில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களுக்காக 10 இலட்சம் டொலர்களை நிதியுதவியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று புதன்கிழமை (02) தெரிவித்துள்ளார். பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மாருக்கு இலங்கை நிதியுதவி | Virakesari.lk
-
10ஆவது குழந்தைக்கு தாயானார் 66 வயது பெண்
பெண்ணொருவர் தனது 66-வது வயதில் 10-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த அலெக்சான்ட்ரா ஹில்டெப்ரான்ட் (66) பெர்லின் சுவர் அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 1970-களில் முதல் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து 8 குழந்தைகளை பெற்றார். 50 வயதை கடந்த பிறகும் குழந்தைகளை பெற்று வந்தார். அனைத்து குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலமே பிறந்தன. இதில் முதல் குழந்தையான ஸ்வெட்லானாவுக்கு 46 வயதாகி விட்டது. 9-வது குழந்தையான கதரினாவுக்கு 2 வயதாகிறது. இந்நிலையில், அலெக்சான்ட்ரா தனது 66-வது வயதில் 10-வது குழந்தையை கடந்த 19-ம் திகதி பெற்றெடுத்தார். ஆண் குழந்தையான அதற்கு பிலிப் என பெயரிட்டுள்ளார். இத்தனைக்கும் இயற்கைவழியில்தான் இவர் கருத்தரித்திருக்கிறார். இதுகுறித்து அலெக்சான்ட்ரா கூறும்போது, “சத்தான உணவுகளை சாப்பிடுகிறேன். தினமும் ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்கிறேன். 2 மணி நேரம் ஓடுகிறேன். புகை மற்றும் மது பழக்கம் இல்லை. கருத்தடை சாதனங்களை பயன்படுத்தியதே இல்லை” என்றார். இந்தப் பெண் இவ்வளவு அதிக வயதில் குழந்தை பெற்றுக் கொண்டது ஒன்றும் புதிது அல்ல. கடந்த 2023-ம் ஆண்டு உகாண்டாவைச் சேர்ந்த சபினா நமுக்வாயா என்ற பெண், 70-வது வயதில் ஐவிஎப் மூலம் இரட்டை குழந்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. Tamilmirror Online || 10ஆவது குழந்தைக்கு தாயானார் 66 வயது பெண்
-
வீதி மின் விளக்குகளுக்கு ரூ.620 மில்லியன் நிலுவை இருளில் மூழ்குமா வடக்கு...
வடக்கு மாகாணத்தில் 63 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்காக வருடமொன்றுக்கு 620 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்தப்படவேண்டும். இந்தக் கட்டணம் இன்னமும் செலுத்தப்படாது நிலுவையிலுள்ளது என்று இலங்கை மின்சாரசபையின் வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். வடக்கிலிலுள்ள பெரும்பாலான வீதிகளில் அண்மைக்காலமாக வீதி மின்விளக்குகள் இரவு வேளைகளில் ஒளிராதுள்ளமை தொடர்பாகவும், அதனால் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்பாகவும் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஆரம்பகாலத்தில் வீதி விளக்குகள் மின்சாரசபையால் பொருத்தப்பட்டு, அதற்குரிய பராமரிப்புகள் மற்றும் மின்சாரப் பட்டியல் பணத்தை ஒவ்வொரு மின் பாவனையாளர்களும் செலுத்துகின்ற மின்பட்டியலில் சிறுதொகையை மேலதிகமாக அறவிடப்பட்டு செலுத்தப்பட்டது. எனினும் வீதி விளக்குகள் பொருத்தப்படாத பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இதனால் பாதிக்கப்படுவதாலும், உள்ளூராட்சி சபைகள் தமது சபை எல்லைக்குட்பட்ட மக்களிடம் வரி வசூலிப்பதாலும் உள்ளூராட்சிசபைகள் மின்சாரசபை ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் பெற்று வீதி விளக்குகளை பொருத்துதல், பராமரித்தல் மற்றும் மின் கட்டணங்களை செலுத்தும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. தற்போது வடக்கு மாகாணத்தில் பொருத்தப்பட்டுள்ள 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விளக்குகளுக்கு வருடம் ஒன்றுக்கு 620 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்தவேண்டும். இந்தக் கட்டணத்துக்கான மின்பட்டியல் மின்சாரசபையால் உள்ளூராட்சி சபைகளுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றபோதிலும் பல்வேறு காரணங்களைக் கூறி இதுவரையில் வடமாகாணத்தில் உள்ள எந்த உள்ளூராட்சி சபையும் மின்கட்டணத்தைச் செலுத்தவில்லை– என்றார். வீதி மின் விளக்குகளுக்கு ரூ.620 மில்லியன் நிலுவை இருளில் மூழ்குமா வடக்கு...
-
முஸ்லீம் இளைஞனின் கைது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாததடைச்சட்டத்தை துஸ்பிரயோகம் செய்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது- சுவஸ்திகா
முஸ்லீம் இளைஞன் கைதுஇஸ்ரேல் தொடர்பாகவும் பாலஸ்தீனம் தொடர்பாகவும் அரசாங்கம் வேறு வேறு நிலைப்பாட்டை கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது- ராஜ்குமார் ரஜீவ்காந் 31 Mar, 2025 | 05:12 PM ருஸ்டி என்ற இளைஞனை கைதுசெய்த பின்னர் அரசாங்கம் அவருக்கு எதிரான சாட்சியங்களை தேடியலைகின்றது போல தோன்றுகின்றது என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந்முஸ்லீம் இளைஞன் கைது அரசாங்கத்தின் இஸ்ரேல் தொடர்பான பாலஸ்தீனம் தொடர்பான நிலைப்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார் செய்தியாளர்மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. பயங்கரவாத தடைச்சட்டம் என்பது இலங்கையில் சமான்ய மக்களின் கருத்துசுதந்திரத்தை தடைசெய்து அரசாங்கம் சந்தேகப்படுபவர்களை குற்றவாளிகளாக்கி தண்டனைகளை வழங்கிக்கொண்டிருந்த சட்டம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இந்த ருஸ்டி என்ற நபரின் கைது, அதன் பின்னர் அரசு வெளியிட்ட ஊடக அறிக்கை,மிகவும் பாரதூரமான விடயங்களை எங்களிற்கு சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக அரசாங்கம் அவரை கைதுசெய்த பின்னர் அவருக்கான சாட்சியங்களை தேடி அலைவது போல எங்களிற்கு தோன்றுகின்றது. அரசாங்கத்திடம் போதிய சாட்சியங்கள் இருந்தால் அவரைநீதிமன்றத்தில் சமர்ப்பித்து அவரை தடுத்துவைப்பதற்கான ஆணையை நீதிமன்றத்தின் ஊடாக பெறமுடியும்,அப்போதுதான் அவராலும் தான் குற்றம்சாட்டப்பட்டவர் இல்லை என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கமுடியும். எனவே ஒரு தரப்பே யார் குற்றவாளி என தீர்மானிக்கின்ற இந்த சட்டத்தினால் இத்தனை காலம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்பதை நீங்கள் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும், குறிப்பாக முஸ்லீம் சமூகத்தை எடுத்துக்கொண்டால், வைத்தியர் ஷாபி அவர்கள் கட்டாய கருத்தடை செய்கின்றார் அவர் ஒரு தீவிரவாதி என தெரிவித்து அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்தார்கள் , இந்த கைதின் போது விமல்வீரவன்ச உதயகம்மன்பில போன்ற பலரும் பல ஊடகங்களும், அவர்தீவிரவாதி என அனைத்து தரப்பும் குற்றம்சாட்டியிருந்தது அதன் பின்னர் அவர் குற்றம்சாட்டப்பட்ட அனைத்து விடயங்களில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் எத்தனை ஆண்டுகள் அவரது வாழ்க்கை சிறையில் கழிந்தது அவருக்கு மாத்திரமல்ல அவரது குடும்பத்திற்கும் சமூக்திற்கும்,இந்த விடயத்தால் ஒரு பாரிய சிக்கல் ஏற்பட்டது.பாரிய இனமுறுகலை இது தோற்றுவித்தது , எனவேஅவசரப்பட்டு தீவிரவாதி என முத்திரை குத்துவதாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்வதாலும் இன முறுகல்கள் இங்கு அதிகரிக்கின்றன என்பதை அரசாங்கம் இங்கு புரிந்துகொள்ளவேண்டும். இதேபோல ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்ற சட்டத்தரணி சாதாரண தொண்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காரணத்தினால்,பயங்கரவாத நிறுவனங்களில் இருந்து பணம் வாங்குகின்றார் என்ற அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டார். அவரின் கைதின் பின்னர் கட்டார் சரிட்டி என்கின்ற தொண்டு நிறுவனம் தீவிரவாத நிறுவனமாக பட்டியல் இடப்படுகின்றது.பின்னர் ஒரு வருடத்தின் பின்னர் அது பயங்கரவாதஅமைப்பல்ல என அரசாங்கம் நீக்குகின்றது.பின்னர் இவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுகின்றார். இப்படியே தீவிரவாதி என்பதும் இல்லை என்பதும் குறிப்பிட்டகாலப்பகுதியிலே அவர்களுடைய வாழ்க்கை, நீதிமன்றத்திலும் சிறைச்சாலைகளிலும் கழிவதும் சமூக ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதும்,இந்த வரலாறுகளை நாங்கள் அவதானித்துக்கொள்ளவேண்டும். இதுபோல ரம்சிராசீக் உட்பட பல முஸ்லீம் இளைஞர்கள் குற்றங்கள் எதிலும் ஈடுபடாமல் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுதண்டிக்கப்பட்டிருந்தார்கள். இதுபோல ஆருரன் உட்பட பல அரசியல்கைதிகள் 15 வருடங்களின் பின்னர் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். எனவே குற்றமற்றவர்களிற்கு எவ்வாறு தண்டனையை வழங்க முடியும் என்ற விடயம் ஊடாகாவே இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினை நாங்கள் அணுகவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் இந்த நாட்டில் இருக்ககூடாது என்பதை நாங்கள் மீண்டும்மீண்டும் வலியுறுத்துவதற்கான ஒரே காரணம்,குற்றவாளிகள் தப்பித்தால் கூட நிரபராதிகள் தண்டனைக்கு உள்ளாக கூடாது என்பதே. இன்னொருவிடயத்தை நீங்கள் அவதானித்து பார்த்தால் தெரியும் ஞானசார தேரர் விமல் வீரவன்ச உதயகம்மன்பில சுமணதேரர் போன்றவர்கள் மிக மோசமான இனவாதத்தினை கக்கி,சமூகங்களிற்கு இடையில் குழப்பங்களை ஏற்படுத்தி சீர்குலைவுகளை ஏற்படுத்தி,சில நேரங்களில் கலவரங்களை உண்டுபண்ணக்கூடிய பேச்சுக்களை பேசி,கொலை செய்வேன் என்ற பேச்சுக்களை பேசி எல்லாம் சாதாரணமாக எந்த சட்டத்தின் கீழும் கைதுசெய்யப்படவில்லை. எனவே அவர்களின் செயற்பாட்டிற்கும் ஒரு விடயமும் தமிழ் முஸ்லீம் மக்களின் கருத்திற்கு ஒரு விடயம் என கையாளப்படுவதும் மிக மோசமானது. மேலும் முஸ்லீம் இளைஞன் கைது அரசாங்கத்தின் இஸ்ரேல் தொடர்பான பாலஸ்தீனம் தொடர்பான நிலைப்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகின்றது. முஸ்லீம் இளைஞன் கைதுஇஸ்ரேல் தொடர்பாகவும் பாலஸ்தீனம் தொடர்பாகவும் அரசாங்கம் வேறு வேறு நிலைப்பாட்டை கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது- ராஜ்குமார் ரஜீவ்காந் | Virakesari.lk
-
இலங்கை தமிழ் அகதியின் மகளுக்கு இந்திய குடியுரிமையை வழங்குவது குறித்து மத்திய அரசாங்கம் ஆராயவேண்டும்-சென்னை உயர் நீதிமன்றம்
31 Mar, 2025 | 01:04 PM சென்னை: இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பித்த விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக கூறி ரம்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் கடந்த 1984 ம் ஆண்டு உள் நாட்டு போர் காரணமாக சரவணமுத்துஇ தமிழ்செல்வி தம்பதியர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தனர். பின் வெளிநாட்டவருக்கான மண்டல பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கோவையில் பல ஆண்டுகளாக தங்கியுள்ளார் இந்நிலையில் கடந்த 1987 ஆம் ஆண்டு கோவையில் அத்தம்பதியருக்கு ரம்யா என்ற பெண் குழந்தை பிறந்துஇ அக்குழந்தை கோவையிலேயே பள்ளிப்படிப்பை முடித்து கோவையை சேர்ந்தவரை திருமணம் செய்து 37 ஆண்டுகள் கோவையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இந்தியாவில் தொடர்ந்து தங்கி இருக்க பதிவை புதுப்பிக்க அணுகிய போதுஇ சரவணமுத்துஇ தமிழ்செல்வி தம்பதியரின் பதிவை புதுப்பிக்க மறுத்ததுடன் 1987 ஜூலைக்கு பிறகு பிறந்தவர் இந்தியாவில் பிறந்தவர் என்ற அடிப்படையில் மட்டும் இந்திய குடியுரிமை கேட்க முடியாது எனக்கூறி ரம்யாவின் இந்திய கடவுச்சீட்டை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. இதனிடையே இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பித்த விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக கூறி ரம்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் இளமுகில் ஆஜராகி வாதிட்டார். பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மனுதாரர் இலங்கைக்கு சென்று ஆவணங்களை பெற்று இந்தியாவுக்கு வரும்படி கூறுவது தேவையில்லை என்றும் இந்தியாவில் பிறந்து இந்தியரை மணந்து 37 வருடமாக வாழ்ந்து வருவதை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் குடியுரிமை கோரி அவர் விண்ணப்பம் அளிக்க மனுதாரரை அனுமதிக்க வேண்டும் என மத்திய உள்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். அந்த விண்ணப்பம் மீது சட்டப்படி பரிசீலிக்க வேண்டும் என்றும் அந்த விண்ணப்பித்தின் மீது மத்திய அரசு முடிவெடுக்கும் வரை இந்தியாவில் இருந்து மனுதாரரை வெளியேற்ற கூடாது எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார். இலங்கை தமிழ் அகதியின் மகளுக்கு இந்திய குடியுரிமையை வழங்குவது குறித்து மத்திய அரசாங்கம் ஆராயவேண்டும்-சென்னை உயர் நீதிமன்றம் | Virakesari.lk
-
உள்நாட்டில் இடம்பெற்ற போர் குறித்து உள்நாட்டு மக்களின் பங்களிப்புடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க
31 Mar, 2025 | 11:57 AM உள்நாட்டில் போர் நடந்தபோது, படைத் தரப்பாலும், விடுதலை புலிகளாலும், புலிகளுக்கு எதிராக வடக்கை மையப்படுத்தி செயல்பட்ட அமைப்புகளாலும் பல்வேறு முரணான செயல்பாடுகள் இடம்பெற்றன. இவை பொய்யல்ல. போர் ஒன்றின்போது அவ்வாறு (மனித உரிமைகள், விதிகள் மீறல்) இடம்பெறும். இது குறித்து உள்நாட்டில் உள்நாட்டு மக்களின் பங்களிப்புடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார் “மாகாண சபை முறைமை குறித்து இந்தியா எமக்குக் கூற வேண்டிய அவசியம் கிடையாது. எனினும், நாம் உறுதியளித்தபடி மாகாண சபை தேர்தலை நடத்துவோம்” என்றும் அவர் கூறியுள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) தனியார் விடுதி ஒன்றில் சந்தித்த வேளை ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், உள்நாட்டில் போர் நடந்தபோது, படைத் தரப்பாலும் விடுதலை புலிகளாலும் புலிகளுக்கு எதிராக வடக்கை மையப்படுத்தி செயல்பட்ட பல அமைப்புகளாலும் பல்வேறு முரணான செயல்பாடுகள் இடம்பெற்றன. இவை பொய்யல்ல. போர் ஒன்றின்போது அவ்வாறு ( மனித உரிமைகள், விதிகள் மீறல்) இடம்பெறும். இது தொடர்பில் உள்நாட்டில் உள்நாட்டு மக்களின் பங்களிப்புடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். சில நாடுகளால் விதிக்கப்படும் தடைகளால் இந்தப் பிரச்னையை தீர்க்க முடியும் என நான் நினைக்கவில்லை. இதனால் நாட்டில் உள்ள இனவாதிகளுக்கே சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தருவது நல்ல விடயமாகும். அவர் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார். திருகோணமலையில் சூரிய மின் திட்டம், வடக்கு ரயில் பாதைக்குரிய சமிக்ஞைகள் பொருத்தப்படுதல் ஆகியவற்றை ஆரம்பிப்பதற்காகவே அவர் வருகை தரவுள்ளார். மாகாண சபை முறைமை என்பது உள்நாட்டுப் பிரச்னையாகும். அதனை இந்தியா எமக்குக்கூற வேண்டிய அவசியம் கிடையாது. மாகாண சபை முறைமையை நடைமுறைப்படுத்துவோம் என நாம் எமது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்தவுடன் பெரும்பாலும் இந்த வருடத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கிறோம். நாம் ஏற்கனவே மக்களுக்கு உறுதியளித்துள்ளோம். ஆகையால், அதனை இந்தியாவுடன் கலந்துரையாட வேண்டிய தேவை கிடையாது. நான் அறிந்த வரையில் 13ஆவது திருத்தம் தொடர்பில் எமது ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையே நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை - என்றும் கூறினார். உள்நாட்டில் இடம்பெற்ற போர் குறித்து உள்நாட்டு மக்களின் பங்களிப்புடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க | Virakesari.lk
-
பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும்
யாழ். விமான நிலையத்தை 06 மாதங்களுக்குள் அபிவிருத்தி செய்வோம் - சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தினை ஆறு மாத கால பகுதிக்குள் அபிவிருத்தி செய்து , சர்வதேச விமான நிலையத்தில் இருக்க வேண்டிய அத்தனை வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுப்போம் என சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை (30) யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு நேரில் சென்று விமான நிலையத்தின் விஸ்தரிப்புகள் தொடர்பிலும், அதன் சேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இது சர்வதேச விமான நிலையம். இங்கு குறைந்தளவான விமான சேவைகள் இடம்பெறுவதனால் , குறைந்தளவான பயணிகளே வருகை தருகின்றனர். பயணிகள் உள்ளே வருவதற்கும் , வெளியேறுவதற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். விமான நிலையத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து மிக விரைவில் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வோம். விமான ஓடுபாதைகளை விஸ்தரிக்க வேண்டிய தேவை உள்ளது. அதேபோல நிரந்தர கட்டடங்களையும் அமைக்க வேண்டும். இதனை ஒரு சர்வதேச விமான நிலையமாக மாற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். ஆறு மாதங்களுக்குள் இந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக நிச்சயம் மாற்றியமைக்கப்படும் என மேலும் தெரிவித்தார். யாழ். விமான நிலையத்தை 06 மாதங்களுக்குள் அபிவிருத்தி செய்வோம் - சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் | Virakesari.lk
-
பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு
பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு - மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு. 31 Mar, 2025 | 05:07 PM யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி , சித்திரவதை புரிந்தமையால் மாணவனின் காது கேட்கும் திறன் குறைவடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார். மகன் மீதான தாக்குதல் சம்பவம் மற்றும் சித்திரவதை ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , மகனின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் மாணவனின் தந்தை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவன், நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 27 ஆம் திகதி வியாழக்கிழமை பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தனியார் மாணவ விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அம்மாணவனையும் வேறு சில புதுமுக மாணவர்களையும் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாக்கிய சிரேஷ்ட மாணவர்கள், தலைக்கவசத்தாலும் தாக்கியுள்ளனர். தாக்குதல் காரணமாக மயக்கமடைந்த மாணவனுக்கு கட்டாயப்படுத்தி பனடோல் பருக கொடுத்து, தனியார் விடுதியிலிருந்து துரத்தி விட்டுள்ளனர். பின்னர், குறித்த மாணவன் கூகுள் வரைபட உதவியுடன் தனது பல்கலைக்கழக விடுதிக்குச் சென்று அங்கிருந்து அம்புலன்ஸ் மூலமாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். தாக்குதல் மற்றும் சித்திரவதைக்குள்ளான நாத்தாண்டியா பகுதியை சேர்ந்த மாணவன் ஒரு காது கேட்கும் திறனை இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக நீதியானதும், சுதந்திரமானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உடலளவிலும், உளரீதியாகவும் பாதிக்கப்பட்ட தனது மகனுக்குப் பாதுகாப்பளிக்குமாறும் கோரியுள்ள தந்தை, பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு - மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Virakesari.lk
-
முஸ்லீம் இளைஞனின் கைது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாததடைச்சட்டத்தை துஸ்பிரயோகம் செய்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது- சுவஸ்திகா
31 Mar, 2025 | 05:17 PM முஸ்லீம் இளைஞனின் கைது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாததடைச்சட்டத்தை துஸ்பிரயோகம் செய்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என சட்டத்தரணியும் சமூக செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருளிங்கம் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இந்த இளைஞனின் கைதுக்கான பல காரணங்களை தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள இளைஞன் இஸ்ரேலியர்களிற்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களில் கருத்துவெளிப்பாட்டில் ஈடுபட்டான் என தெரிவிக்கின்றனர், இஸ்ரேலியர்களிற்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் என்றால் அது யூத எதிர்ப்பு. இந்த நாட்டில் வெறுப்பு பேச்சுக்கு எதிராக சட்டங்கள் உள்ளன, அந்த இளைஞன் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்திருக்கவேண்டும். நான் இவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நம்புகின்றேன் என தெரிவிக்கவில்லை ஆனால் அந்த இளைஞர் அவ்வாறு செயற்பட்டிருந்தால் குறிப்பிட்ட சட்டங்களின் கீழ் இந்த விவகாரத்தை கையாண்டிருக்கவேண்டும். வெறுப்பு பேச்சுக்காக மக்களை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதுசெய்கின்றீர்கள் என்றால் நாட்டில் அதிகளவான மக்களையும், நாடாளுமன்றத்தின் பல உறுப்பினர்களையும் இதற்காக கைதுசெய்யவேண்டும். வெறுப்பு பேச்சு என்பது தமிழர்கள் முஸ்லீம்களிற்கு எதிராக நாங்கள் கேள்விப்படாத விடயம் இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லீம்கள் எவ்வளவு குரோத பேச்சுக்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது என்பது எங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். அவ்வாறான வெறுப்பு பேச்சுக்களில் ஈடுபட்ட எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டனர் என்பது கேள்விக்குரிய விடயம். ஆகவே நாங்கள் மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஆபத்தினை பார்க்கின்றோம்,அது எவ்;வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது, அது எவ்வளவு தூரம் இந்த அரசாங்கத்தினாலும் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பதை காண்கின்றோம். முஸ்லீம் இளைஞனின் கைது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாததடைச்சட்டத்தை துஸ்பிரயோகம் செய்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது- சுவஸ்திகா | Virakesari.lk
-
துபாயிலிருந்து வந்தவரின் பணத்தைத் திருடி காதலியிடம் கொடுத்த வாடகை வாகன சாரதி கைது
துபாயிலிருந்து வந்தவரின் பணத்தைத் திருடி காதலியிடம் கொடுத்த வாடகை வாகன சாரதி கைது Published By: Digital Desk 2 31 Mar, 2025 | 05:49 PM துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நபர் ஒருவரின் கைப்பையில் இருந்து ஒன்பது இலட்சத்து நான்காயிரத்து நானூறு ரூபா பணத்தை திருடிய வாடகை வாகன சாரதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். இது தொடர்பில் தெரியவருவது, கடந்த சனிக்கிழமை (29) துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நபர் ஒருவர் விமான நிலையத்தில் இருந்து வாடகை வாகனம் ஒன்றில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். குறித்த நபர் தனது மடிக்கணினி அடங்கிய கைப்பையை தவறுதலாக வாடகை வாகனத்திலேயே விட்டுச் சென்றுள்ளார். பின்னர் குறித்த நபர் தனது மடிக்கணினி அடங்கிய கைப்பை தொடர்பில் குறித்த வாடகை வாகனத்தின் சாரதியிடம் கேட்டுள்ளார். இதன்போது சந்தேக நபரான வாடகை வாகனத்தின் சாரதி, அந்த கைப்பை தனது காரில் இருப்பதாகவும், அதனை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளார். பின்னர் குறித்த நபர் இன்று திங்கட்கிழமை (31) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று வாடகை வாகனத்தின் சாரதியிடம் இருந்து தனது மடிக்கணினி அடங்கிய கைப்பையை பெற்றுக்கொண்டு அதனை சோதனையிட்ட போது கைப்பையிலிருந்த 904,400 ரூபா பணம் காணாமல்போயிருப்பதை அறிந்துள்ளார். இதனையடுத்து குறித்த நபர் இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் வாடகை வாகனத்தின் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த பணம் வாடகை வாகன சாரதியின் காதலியிடம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சந்தேக நபரான வாடகை வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். துபாயிலிருந்து வந்தவரின் பணத்தைத் திருடி காதலியிடம் கொடுத்த வாடகை வாகன சாரதி கைது | Virakesari.lk
-
வீர தீர சூரன் பாகம் 2 விமர்சனம்:
ஒரே இரவில் இத்தனை மனிதர்கள், இத்தனை நிகழ்வுகள், இத்தனை பின்கதைகள் எனக் கதை சொல்லும் யுக்தியிலேயே புதுமையைக் கொடுத்துக் கவர்கிறார் இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார். குடும்பஸ்தனாகக் காதல் மனைவியுடன் சேட்டை, குடும்பத்தைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வதில் பதற்றம், எல்லாம் முடிந்துவிட்டது என்ற இடத்திலும் பயத்தைத் துளிகூட காட்டாத நெஞ்சுரம் எனப் பட்டையைக் கிளப்பி கமர்ஷியல் ரூட்டில் சிக்ஸர் அடித்திருக்கிறார் ‘சீயான்’ விக்ரம். குறிப்பாக, வசனங்களாகச் செல்லும் காட்சிகளில் அவர் போடும் ‘டேய்’ கூட அப்லாஸ் அள்ளுகிறது. காதல் கெமிஸ்ட்ரியில் ஹார்ட் வாங்கும் துஷாரா, "என்ன நடக்கிறது" என்று தெரியாமல் போராடும் இடத்தில் பலவித உணர்வுகளை அற்புதமாகக் கடத்தி, நடிப்பில் சபாஷ் வாங்குகிறார். சூது, வன்மம், சூழ்ச்சி என ராட்டினம் போலச் சுழலும் கதாபாத்திரத்தை, தன் நடிப்பு எனும் அச்சாணியைக் கொண்டு நிலை நிறுத்தி மிரட்டியிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. மகனைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் பிருத்வி, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும் சூரஜ் வெஞ்சரமூடு என இருவரும் வில்லனிசத்தில் போட்டிப் போட்டுக்கொண்டு ஸ்கோர் செய்திருக்கிறார்கள். இவர்களின் குடும்பப் பெண்களாக வரும் கதாபாத்திரங்களும் கோபத்தைத் தூண்டும் அளவில் படு ரியலான நடிப்பைக் கொடுத்து பாஸ் ஆகிறார்கள். பாலாஜி எஸ்.யூவின் குணச்சித்திர நடிப்பும் படத்துக்கு வலு சேர்க்கிறது. நிசப்தமான சூழலில் கேட்கும் கடிகார முள்ளின் ஒலியைப் போல, ‘திக் திக்’ திரில் உணர்வை தன் பின்னணி இசையில் கடத்தி, கதையோடு சேர்ந்து பயணிக்க வைத்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ் குமார். அதிலும் அந்த மாஸ் பி.ஜி.எம்., படம் முடிந்த பின்னரும் மனதில் நிற்கும் அளவுக்கான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பாடல்கள், திரைக்கதையின் போக்கைத் தொந்தரவு செய்யாமல் கடந்து போகின்றன. இரவு நேரத்தில் நடக்கும் கதைக்கு பக்காவான லைட்டிங், உணர்வுகளைத் துண்டிக்காத சிங்கிள் ஷாட் காட்சிகள் என நேர்த்தியான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். அதிலும் திருவிழாக் காட்சிகளில் கலை இயக்குநர் சி.எஸ். பாலசந்தரின் உழைப்பைப் பிரமாண்டமாகத் திரையில் கொண்டு வந்திருப்பது சிறப்பு. வீர தீர சூரன் பாகம் 2 திரைக்கதையின் 'பக் பக்' துடிப்பை முதல் பாதியில் அற்புதமாகக் கடத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே. ஆனால், இரண்டாம் பாதியின் பிளாஷ்பேக் பகுதியில் சற்றே கறாராகக் கத்திரி போட்டிருக்கலாம். ‘பீனிக்ஸ்’ பிரபுவின் துப்பாக்கிகள் தெறிக்கும் சண்டைக் காட்சியின் வடிவமைப்பு, படத்தின் முக்கிய ப்ளஸ்ஸாக அமைகிறது. அதிலும், துப்பாக்கிச் சூட்டில் தொடங்கி, கார் வெடித்துச் சிதறும் இடம் வரை தொடரும் காட்சி, சிறப்பான திரையாக்கத்துக்கு உதாரணம்; படக்குழுவின் உழைப்புக்குப் பாராட்டுகள். ஒரே இரவில் இத்தனை மனிதர்கள், இத்தனை நிகழ்வுகள், இத்தனை பின்கதைகள் எனக் கதை சொல்லும் யுக்தியிலேயே புதுமையைக் கொடுத்துக் கவர்கிறார் இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார். மனித மனங்களுக்குள் மண்டிக் கிடக்கும் வன்மத்தைப் பட்டாசாக மாற்றி, அதற்கு நீண்ட திரியை வைத்துக் கொளுத்திவிட்டது போல, 'எப்போது வெடிக்கும், எப்போது வெடிக்கும்' என்று எழுதப்பட்ட திரைக்கதை, இருக்கை நுனியில் கட்டிப்போடுகிறது. ஒருவித பதற்றமான சூழலிலேயே வைத்திருக்கும் திரையாக்கம், எந்த இடத்திலும் நம்மைக் கதை மாந்தர்களைவிட்டு விலகாத வண்ணம் பார்த்துக்கொள்கிறது. அதேபோல, நாயகனின் பாசத்தைப் பாடல் காட்சிகளின் மாண்டேஜிலேயே சொன்ன விதமும் ஹைக்கூ டச்! போலீஸ் என்கவுன்ட்டர், கஸ்டடி மரணம் ஆகிய முக்கிய பிரச்னைகளை சற்றே தொட்டிருந்தாலும், அதை இன்னும் ஆழமாகப் பேசியிருக்கலாம். வீர தீர சூரன் பாகம் 2 முன்கதையில் எஸ்.ஜே. சூர்யாவும் விக்ரமும் ஒரே அறைக்குள் பேசிக்கொள்ளும் இடம், போலீஸ் ஸ்டேஷன் கொலை என இரண்டாம் பாதியின் மாஸ் காட்சிகள் மண்டையில் ஒட்டிக்கொண்டாலும், அதன் நீளம் முதல் பாதியின் வேகத்துக்கு ஈடு கொடுக்கவில்லை. பழி வாங்கும் படலத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் டீல் பேசிக்கொள்ளும் போக்கு, ஆரம்பத்தில் திரைக்கதையின் வேகத்தை அதிகரிக்க உதவினாலும், இறுதியில் சற்றே அயர்ச்சியைத் தருகிறது. அதேபோல, இறுதிக் காட்சியில் அத்தனை கொடூரமான சம்பவங்கள் நடந்துகொண்டிருக்க, போலீஸ் காட்சிக்குள் வந்தும் பின்னர் காணாமல் போவது ஏன் என்பது புரியவில்லை.
-
தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்ய கோரியவர் கெஹலிய
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்லவின் ஆலோசனையின் பேரில், தரமற்ற மருந்துகளை வழங்குவதற்காக இந்திய மருந்து நிறுவனத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் முன் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் விசாரணைக்காக ஆஃப் கமிட்டியின் முன் அழைக்கப்பட்டபோது இந்த தகவல் தெரியவந்தது. அந்த மருந்துகளுக்கு செவெரிட் நிறுவனத்தைச் சேர்க்க செயலாளர் அறிவுறுத்தியதாகவும், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல செயலாளருக்கு அறிவுறுத்தியதாகவும் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் சப்ளையர் தொடர்பில் ஒரு முன்மொழிவை முன்வைத்ததாக தெரிவித்தார். 151 மருந்துகளும் 5278 அறுவை சிகிச்சை கருவிகளும் பற்றாக்குறையாக இருப்பதாக தகவல் உள்ளதா? என்று கோப் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர கேள்வி எழுப்பினார். Tamilmirror Online || தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்ய கோரியவர் கெஹலிய
-
யோகட் சாப்பிட பயன்படுத்தப்படும் மரக்கரண்டிகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி ?
28 Mar, 2025 | 03:58 PM யோகட் சாப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் மரக்கரண்டிகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஹேமஜீவ கோட்டாபய தெரிவித்தார். மில்கோ நிறுவனத்தின் எதிர்கால திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யோகட்டுடன் வழங்கப்படும் கார்ட் போர்டு கரண்டிகளை குழந்தைகள் அதிக நேரம் வாயில் வைத்திருப்பதால் அந்த கரண்டி சிறிது நேரத்தில் உருகி விடுகிறது. அத்துடன் இந்த கார்ட் போர்டு கரண்டிகள் குறித்து வாடிக்கையாளர்கள் பல்வேறு முறைப்பாடுகளை அளித்துள்ளனர். இவற்றை கருத்தில் கொண்டு யோகட்டுடன் மரக்கரண்டிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் நாட்டில் இந்த மரக்கரண்டிகள் போதிய அளவு உற்பத்தி செய்யப்படாமையால், அவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. யோகட் சாப்பிட பயன்படுத்தப்படும் மரக்கரண்டிகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி ? | Virakesari.lk
-
துப்பாக்கிகள் எங்கள் கைகளில் திணிக்கப்பட்டன - பிள்ளையான்
28 Mar, 2025 | 05:50 PM பிறப்பாலும் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் என்ற அடிப்படையில் எங்களுடைய கைகளிலேயே துப்பாக்கிகள் திணிக்கப்பட்டன. அதற்கான காரணக் கதைகளைக் கூறாமல், எம்மை திரைப்படங்களில் வரும் வில்லன் கதாபாத்திரமாக சித்திரிப்பதற்கு முனைகின்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கல்குடா தொகுதியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு கிரான் ரெஜி மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், கிழக்கு தமிழர் கூட்டமைப்பு ஒரு உறுதியான அமைப்பாக கிழக்கு மாகாண அரசியல் சமூக பொருளாதார மேம்பாட்டின் ஆரம்பமாக மிளிர வேண்டும் என்று ஒரு நல்ல சிந்தனையோடு நாங்கள் கூடியிருக்கின்றோம். உள்ளூராட்சி மன்றங்களின் வெற்றி என்பது உள்ளூர் தலைவர்களை உருவாக்குவதற்கான வெற்றியாகும். உள்ளூர் அதிகார சபைக்காக போட்டியிடுபவர்கள் எண்ணங்களையும் சிந்தனைகளையும் உயர்த்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியிலேயே அமைந்திருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மிகவும் கவனமாக செயற்படவேண்டியுள்ளது. கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூவ் ஹக்கீம் இந்த மண்ணிலே சுமார் 40,000 ஏக்கரை பரிபாலனம் செய்வதற்காக கேட்கின்றார். ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் 70,000 ஏக்கரை நிர்வகிக்க வேண்டும் எனக் கேட்கின்றார். இவ்வாறுதான் பிரச்சினைகள் இருந்துகொண்டிருக்கின்றன. அதிகம் பேர் ஏன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும், கருணா அம்மானும் மீண்டும் சேர முடியாது எனக் கேட்டார்கள். அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்திருந்தோம். அது இப்போது சாத்தியமாகி இருக்கின்றது. காலம் தாழ்த்திய முடிவாக இருந்தாலும் சாலப் பொருத்தமான முடிவு எனப் பெரியவர்கள் கூறுகின்றார்கள். அதற்காக உழைத்தவர்தான் முற்போக்கு தமிழர் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன். கருணா அம்மானை பிரித்தானிய அரசாங்கம் தடை செய்திருப்பதானது எம்முடைய தோல்வி அல்ல, அது இந்த அரசாங்கத்தினுடைய இராஜதந்திர தோல்வியாகத்தான் என்னால் பார்க்க முடியும். அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தினுடைய தலைவிதியை மாற்ற வேண்டிய, கிழக்கு மாகாண மக்களை தூக்கி நிறுத்தவேண்டிய விடயங்கள் எல்லாம் எங்களுக்கு பொறுப்பாக்கப்பட்டு இருக்கின்ற விடயங்களாக உள்ளன. கருணா அம்மானோ அல்லது ஜூலை கலவரமோ எல்லாவற்றுக்கும் அடித்தளமிட்டவர்கள் யார்? 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை எடுத்தபோது அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை தேடி கற்றுக்கொள்ளுங்கள். விடப்பட்ட சொல்லாடல்களும் கருத்தாடல்களும்தான் அன்று எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தை தலைவர் ஆக்கியது. அவர்கள் பற்ற வைத்த நெருப்பு பெரும் தீப்பொறியாக பல இயக்க தலைவர்களை உருவாக்கி திட்டங்களையும் துவக்குகளையும் ஏந்துகின்ற நிலையை எங்களுடைய காலடிக்கு கொண்டு வந்தது என்றார். துப்பாக்கிகள் எங்கள் கைகளில் திணிக்கப்பட்டன - பிள்ளையான் | Virakesari.lk
-
தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு புதிய நண்பர்கள்
28 Mar, 2025 | 05:17 PM ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராச்சியத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கீரிப்பூனை ஜோடி ஒன்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராச்சியத்திலிருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வன விலங்குகள் சில கொண்டுவரப்பட்டன. இந்த வன விலங்குகள் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கால்நடை வைத்தியர்களால் சுமார் ஒரு மாத காலமாக பரிசோதனைக்குட்படுத்தட்ட நிலையில் அவற்றில் இருந்த கீரிப்பூனை ஜோடி ஒன்று தற்போது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 2 முதல் 6 வயது மதிக்கத்தக்க கீரிப்பூனை ஜோடி ஒன்றே இவ்வாறு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. Meerkat எனப்படும் இந்த கீரிப்பூனைகள் 15 வருடங்கள் உயிர் வாழும் என கூறப்படுகின்றது. இந்த கீரிப்பூனைகள் தென் ஆபிரிக்கா, போட்ஸ்வானா, நமீபியா ஆகிய நாடுகளில் பெரும்பாலும் காணப்படும். தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு புதிய நண்பர்கள் | Virakesari.lk
-
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
28 Mar, 2025 | 05:30 PM 2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 684,960 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 111,982 ஆகும். மேலும், ரஷ்யாவிலிருந்து 90,255 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 64,711 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 48,129 சுற்றுலாப் பயணிகளும்,சீனாவிலிருந்து 37,268 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 41,449 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 25,513 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! | Virakesari.lk
-
சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு
உண்மை. சிங்களம் தப்பிக்க தமிழர் தரப்பின் மேல் பழியை போடும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சரணடைய வந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றுள்ளனர். கோத்தா தான் இதற்கு உத்தரவு இட்டது. அத்துடன் பாலச்சந்திரன் இவர்களுடன் சேர்ந்து சரணடைய வரவில்லை. தலைவரின் நெருங்கிய உறவு ஒருவரால் இராணுவம் அனைத்தையும் முழுமையாக கைப்பற்றிய பின் அழைத்துவரப்படும் போது இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர் என்று தான் அறிந்தேன்.
-
குரங்குகளை ரந்தெனிகல நீர்த்தேக்க தீவில் விட 100 இலட்சம் ரூபா ஒதுக்கீடு - கே.டி.லால்காந்த
விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த மத்திய மாகாண சபை 100 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது. கண்டி மாவட்ட செயலகத்தில் கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமானது விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். கண்டி மாவட்டத்திலுள்ள குரங்குகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் திட்டத்தின்படி, ரந்தெனிகல நீர்த்தேக்கப் பிரதேசத்தை அண்மித்த தீவுப் பகுதியில் மேற்படி குரங்குகள் கொண்டு போய் விடப்படவுள்ளன. இதற்காக குரங்குகளைப் பிரித்தல், அவற்றை கூடுகளில் அடைத்து எடுத்துச் செல்லல் மற்றும் அவை விடப்படும் இடங்களில் தேவையான மின்சார வேலிகள் போன்றவற்றை அமைத்தல் முதலான பல்வேறு பணிகளுக்காக இந் நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குரங்குகளை ரந்தெனிகல நீர்த்தேக்க தீவில் விட 100 இலட்சம் ரூபா ஒதுக்கீடு - கே.டி.லால்காந்த | Virakesari.lk